அகீதாவின் மொழி ரீதியான பொருளும் மேலும் மார்க்க அறிஞர்களிடத்தில் உள்ள பொருளும்

- அஷ்ஷைஃக் அப்துல்லாஹ் அல்-குஸைய்யிர் ஹஃபிதஹுல்லாஹ்

அகீதா (என்ற சொல்லின்) மொழி ரீதியான பொருள்:

(அகீதா எனும் வார்த்தையானது) இஃதகத, யஃதகிது எனும் வினைச்சொல்லிருந்து பெறப்பட்ட மஸ்தராகும் (தொழிற் பெயர்ச்சொல்லாகும்). 'அக்த்' எனும் (மூலவார்த்தையில்) இருந்து பெறப்படுகின்றது. அதனுடைய ('அக்த்' என்ற சொல்லுடைய பொருள்) : (ஒன்றை)  வலிமை மற்றும் தீர்க்கமுடன் கட்டுதல் என்பதாகும். மேலும் எவற்றிலெல்லாம் உறுதிப்பாடும், வலிமைத்தன்மையும் இருக்குமோ, அவற்றையும் குறிக்கும். 

எனவே தான் 'அக்த்' எனும் வார்த்தையானது, உடன்படிக்கைகள் மற்றும் ஒப்பந்தங்களிருந்துள்ள வியாபாரம், வாக்குறுதி, திருமணம் மற்றும் சத்தியம் போன்றவைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. ஊர் வழமை மற்றும் ஷரிஆவின் அடிப்படையில் இரு தரப்பினருக்கும் மத்தியில், இந்த ஒப்பந்தத்தினால் ஏற்படும் இணைப்பின் காரணமாக (இவ்வாறு பயன்படுத்தப்படுகிறது). மேலும் இவையன்றி வேறு எவற்றையெல்லாம், நிறைவேற்றுவது அவசியமாகுமோ (அவற்றிற்கும் பயன்படுத்தப்படுகிறது). 

அல்லாஹ் கூறுகின்றான்: 

﴿يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا أَوْفُوا بِالْعُقُودِ﴾ 

நம்பிக்கையாளர்களே! நீங்கள் (உங்கள்) உடன்படிக்கைகளை முழுமையாக நிறைவேற்றுங்கள். [அல்-மாயிதா:1]

அகீதா (என்ற சொல்லிற்கு) மார்க்க அறிஞர்களின் பயன்பாட்டிலுள்ள பொருள்: 

சந்தேகம்  ஊடுருவாத விதத்தில், ஒரு மனிதருடைய உள்ளமானது (எந்தவொரு விடயத்தில்) இருக்கமாக கட்டப்பட்டு, அதில்  உறுதிகொண்டு, மேலும் அதனை (ஒருவர் தன்னுடைய) மார்க்கமாக மற்றும் வழியாக எடுத்துக்கொள்வாரோ, அதுவே அகீதாவாகும்.

எனவே, அது புத்தியின் உறுதியான தீர்ப்பாகும், அல்லது எந்த ஒன்றின் மீது உள்ளம் இருக்கமாக கட்டப்பட்டிருக்குமோ (அத்தகையதாகும்), அல்லது நாட்டம், சொல், மற்றும் செயல் ஆகியவற்றிற்கு வழிவகுக்கக் கூடிய உறுதியான ஈமானாகும் ஆகும்.

அகீதா சரியாக அல்லது  தவறாக இருத்தல் (பற்றிய கூற்று):

ஒரு மனிதருடைய அகீதா என்பது: அவருடைய உறுதியான நம்பிக்கையாகும். அது எத்தகையதென்றால் அதன் மீது அவரது உள்ளம் இருகக் கட்டப்பட்டு, அதைக்கொண்டு அவருடைய புத்தி தீர்ப்பளிக்கும். மேலும் அதனை (தன்னுடைய) வழியாக, தான் பின்பற்றும் மார்க்கமாக அவர் எடுத்துக்கொள்வார் என்பது உறுதியாகிவிட்டது. இது (அந்த அகீதாவானது) சரியானதா அல்லது தவறானதா என்பதை கணக்கில் கொள்ளாமல் கூறப்படும் (வரையரையாகும்). 

இதன் காரணமாகவே, நம்பிக்கைகள் (அகாஇத்) மத்தியில் வேறுபாடு காட்டப்படுகின்றது. எனவே, (ஒரு அகீதா), அது சரியாக இருப்பது என்பதற்கு ஆதாரம் மற்றும் தெளிவான சான்று நிலைப்பெறுவதன் காரணத்தினால்  இது சரியான அகீதாவாகும் எனக் கூறப்படுகிறது. அல்லாஹ்விற்கு மட்டுமே உரித்தான மற்றும் அவனுக்கே அவசியமான விடயங்களில் அல்லாஹ்வின் தனித்துவத்தை ஈமான்கொண்டவர்களின் நம்பிக்கையைப் போன்றும், மேலும் அவனுடைய தனிப்பட்ட தன்மைகள் மற்றும் உரிமைகளில் உள்ள ஏதேனும் ஒரு விடயத்தில், அவனல்லாத மற்றவர்களை அவனுக்கு இணையாக்குவதின் அசத்தியத்தன்மையை நம்பிக்கைக் கொள்வது போன்றதுமாகும்.

மேலும் எது சத்தியத்திற்கு முரண்படுமோ, அதன் அசத்தியத்தன்மைக்கான ஆதாரம் நிலை பெறுவதால் அது அசத்தியமான கொள்கையாகும். வழிதவறிய கிறிஸ்துவர்கள் அல்லாஹ்தான் மர்யமின் மகன் அல்-மஸீஹ்(ஈஸா), அல்லது அல்லாஹ் (பிதா, சுதன், பரிசுத்த ஆவி ஆகிய இம்)மூவரில் ஒருவன் என்று நம்புவது, மேலும் இணை கற்பிப்போர் தங்களின் சிலைகளையும் (போலி) தெய்வங்களையும்,
அல்லாஹ்விடத்தில் (தங்களை) நெருக்கி வைக்கின்ற அல்லது அவனிடம் அவர்களுக்காக பரிந்துரை செய்கின்ற அல்லாஹ்வுடனான தெய்வங்கள் என்று நம்புவது, மேலும் தங்களை முஸ்லிம்கள் எனக் கூறிக்கொள்பவர்களில் சிலர், நல்லோர்களையும், அடக்கம் செய்யப்பட்டவர்களையும் அழைத்து பிரார்த்தித்து இணைக் கற்பிப்பதை, அல்லாஹ்விற்கு செய்யும் வணக்கமாகவும், (தங்களின்) தேவைகளை நிறைவேற்றுவதற்கான ஒரு காரணியாகவும் நம்புவது, மேலும் இதுபோன்ற திரிக்கப்பட்ட மார்க்கங்களும், அசத்தியமான கொள்கைகளுமாகும். இவற்றின் எண்ணிக்கையை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய மாட்டார்கள். 

சரியான இஸ்லாமியக் கொள்கை:

சரியான இஸ்லாமியக் கொள்கை என்பது: குர்ஆன், ஸுன்னாஹ் மற்றும் சஹாபாக்களின் இஜ்மா (ஏகோபித்த முடிவுகள்) ஆகிய இஸ்லாத்தின் அடிப்படைகள் சுட்டிக்காட்டியவையாகும். 

அது அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குமார்களையும், அவன் (இறக்கியருளிய) வேதங்களையும், அவனது தூதர்களையும், மறுமை நாளையும், மேலும் விதியின் நன்மை மற்றும் தீமையை உறுதியாக நம்பிக்கைக் கொள்வதாகும்.

மேலும் குர்ஆன் மற்றும் நபிகளார் ﷺ கொண்டு வந்த எல்லாவற்றையும், ஆதாரப்பூர்வமான ஸுன்னாஹ்வில் வந்திருக்கும் செய்திகள், மறைவானவைகள், விதி ரீதியிலான, ஷரீஅத் ரீதியிலான மற்றும் (மறுமையில் கிடைக்கும்) கூலி ரீதியிலான தீர்ப்புகள்,

மேலும் எவற்றில் முன் சென்ற நல்லோர்கள் (ஸலஃபுகள்) ஒருமித்த கருத்தில் இருந்தார்களோ அவை யாவற்றையும் ஈமான் கொள்வது, அவை எல்லாவற்றையும் கொண்டு அல்லாஹ்வுக்கு சரணடைவது, அது எதனை அவசியமாக்குமோ அவற்றைக் கொண்டு அல்லாஹ்வுக்காக அமல் செய்வது, மேலும் நபி ﷺ அவர்களுக்கு கீழ்ப்படிவது, அவரைப் பின்பற்றுவது (என இவை யாவுமே ஈமானுக்குள் அடங்கி விடும்).

எனவே அது (ஈமான்): மறைவானவற்றை உண்மைப் படுத்துவது, இறைவனை ஏகத்துவப்படுத்துவது மற்றும் (அவனுக்குத் தகாத விடயங்களை விட்டும் அவனைப்) பரிசுத்தப்படுத்துவது, அவன் மார்க்கம் ஆக்கியவற்றைக் கொண்டு அவனை வணங்குவது, இறை நிராகரிப்பு, இணை கற்பித்தல் மற்றும் பித்அத்துகளின் அசத்தியத்தன்மையை உறுதி கொள்வது, நிராகரிக்கின்ற, இணை கற்பிக்கின்ற மற்றும் (மார்க்கத்தில்) பித்அத்துகளை ஏற்படுத்துகின்றவர்களை விட்டு (வெறுத்து) விலகி விடுவது, (மறுமையில்) அவனைச் சந்திப்பது மற்றும் அவனது கூலியை உறுதியாக நம்பிக்கைக் கொள்வது ஆகியனவாகும்.

இஸ்லாமியக் கொள்கைக்குள் நுழைபவை:

இஸ்லாமிய கொள்கை உள்ளடக்கக் கூடியவைகள்: 

அல்லாஹ்விற்கு உரித்தான விடயங்களில் அவனை ஒருமைப்படுத்துவது மற்றும் (அவனது கண்ணியத்திற்கும் மகத்துவத்திற்கும்)
தகாத விடயங்களை விட்டும் அவனைப் பரிசுத்தப்படுத்துவதின் கடமை, 

இஸ்லாத்தின் தூண்கள், ஈமான் மற்றும் இஹ்ஸானின் அம்சங்களை நிலைநாட்டுவது, 

நபித்துவங்கள், வேதங்கள், கப்ரு வாழ்க்கை மற்றும் மறுமையின் (பல்வேறு) நிலைகள், மேலும் (இவை அல்லாத) மற்ற மறைவான விடயங்களை (ஈமான் கொள்வது), 

மேலும் (அல்லாஹ்வுக்காக) நேசம் மற்றும் பகைமைப் பாராட்டுவதை நிலைநாட்டுதல், 

ஸலஃபுஸ் ஸாலிஹீன்கள் (முன்சென்ற நல்லோர்கள்) மற்றும் ஏனைய இஸ்லாமிய மக்களை நோக்கிய கடமைகளை நிறைவேற்றுதல், 

பிற மதத்தவர்கள், பித்அத்வாதிகள் மற்றும் இவர்களைப் போன்று சத்தியத்திற்கு முரண்படக் கூடியவர்களுடன் (நடந்து கொள்ளும் விடயத்தில்) ஷரீஅத்தின் நிலைப்பாட்டை பற்றிக்கொள்வது (முதலியனவற்றையும் உள்ளடக்கும்).


அகீதா மற்றும் தவ்ஹீதிற்கு மத்தியிலுள்ள வேறுபாடு:

தவ்ஹீதைப் பொறுத்தவரையில், அது (அந்த வார்த்தையானது) மொழியில் 'வஹ்ஹத' எனும் வினைச்சொல்லுடைய தொழிற்பெயராகும். 'அஃப்ரத ஷைய்' என்றால், 'ஒரு விடயத்தை ஒருமையாக்கினான்' எனப் பொருள். அதாவது அவ்விடயமானது 'ஒன்று' என முடிவு கொள்வதாகும் அல்லது வணக்கத்திற்குத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை எனக் கூறுவது (போலாகும்). 

அறிஞர்களின் பயன்பாட்டிலுள்ள பொருளை பொறுத்தவரையில்:

 அல்லாஹ்வை ஒருமைப்படுத்துவது என்பது, 

(படைத்தல், ஆட்சிசெய்தல்,  நிர்வகித்தல் ஆகிய) ருபூபிய்யத்துடைய செயல்களைக் கொண்டும், உளூஹிய்யா (வணக்கத்திற்கு தகுதியானவனாக இருக்கும் விடயம்) அவசியம் ஆக்குகின்ற விடயங்களைக் கொண்டும், மேலும் (அவனுடைய) தாத் (ذات - உள்ளமை) , பெயர்கள், பண்புகள் மற்றும் செயல்கள் ஆகிய ஏனைய பரிபூரணங்களில், அவனுடைய தனித்துவத்தை நம்பிக்கை கொள்வது, 

குறைபாடுடைய பண்புகள், உதாரணம், இணைகள் மற்றும் நிகர்கள் ஆகியவற்றை விட்டும் அவன் பரிசுத்தமானவனாக இருப்பதை நம்பிக்கை கொள்வது, 

அடியார்கள், அவர்களின் செயல்களைக் கொண்டு அவன் மார்க்கமாக்கிய விதத்தில் அவனை ஒருமைப்படுத்துவது, 

இணை கற்பித்தல், பித்அத்கள், ஆகியவற்றை விட்டுவிடுவது, 

மேலும் அவற்றையும், அவற்றின்  மக்களையும் வெறுப்பது (என இவ்விடயங்கள் யாவுமே அல்லாஹ்வின் ஏகத்துவத்தில் அடங்கும்). 

எனவே தவ்ஹீதினாது, அகீதாவுடைய விடயங்களில் மிகவும் முக்கியமானதாகும். ஏனெனில், அது அல்லாஹ்வுக்கு உரித்தான விடயங்களை உறுதிப்படுத்துவது, அவனுக்கு தகாத விடயங்களை மறுப்பது, அவனுடைய ஷரீஅத்திற்கு ஏற்றவாறு அவனுடைய முகத்தை (மட்டுமே) நாடி அவனுடைய உரிமைகளை நிலைநாட்டுவது, மேலும் அதற்கு முரண்படக்கூடிய விடயங்களை விட்டும், அதற்கு முரண்படக்கூடிய (அதைக்கொண்டு) பொறுப்பு சாட்டப்பட்ட மக்களை விட்டும் விலகிக் கொள்வது ஆகியவற்றுடன் தொடர்புடையதாக இருக்கின்றது. 

அல்லாஹ் تعالى

அவனுடைய படைத்தல், ஆட்சி செய்தல், நிர்வகித்தல் ஆகிய ரூபூபிய்யத்தின் விடயங்களில் அவன் தனித்தவனாவான், அவனுக்கு எந்த இணையும் இல்லை,

அவனுடய இலாஹிய்யத்திலும் (வணக்கத்திற்கு தகுதி பெற்றிருத்தல்), வணக்க வழிபாட்டிலும் அவன் தனித்தவனாவான், அவனுக்கு எந்த நிகரும் இல்லை, 

அவனுடய பெயர்கள், பண்புகள் மற்றும் செயல்களில் அவன் தனித்தவனாவான், அவனுக்கு எந்தவொரு இணையோ, உதாரணமோ இல்லை மேலும் அவனுடைய அனைத்து சிறப்புத்தன்மைகளிலும் அவன் தனித்தவனாவான், அவனுக்கு எந்தவொரு ஒப்புமையும் இல்லை,

எனும் விடயங்கள் அதன் (தீனுல் இஸ்லாமின்) அடிப்படையாக இருப்பதினாலயே இஸ்லாமிய மார்க்கத்திற்கு "தவ்ஹீத்" எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

அகீதாவை குறிக்க தவ்ஹீத் (என்ற வார்த்தையை) அதிகமான இடங்களில், அதன் மகிமையை கவனத்தில் கொண்டுவரும் விதமாக பயன்படுத்துவது என்பது, ஒன்றை அதனுடைய தனித்தன்மைகளிலேயே மகத்தானதைக் கொண்டு பெயரிடுவதில் அமையும். ஏனெனில், அது (தவ்ஹீத்) என்பது அல்லாஹ்வை, அவனுடைய செயல்களை மற்றும் அவனது அடியார்கள் மீது அவனுக்கு இருக்கக்கூடிய உரிமைகளை அறிவது, அதனை சொல், செயல், மற்றும் நாட்டம் ஆகிவற்றில் முழுமைப்படுத்துவது, மேலும் அதற்கு முரணான, அதில் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய விடயங்களை விட்டும் விலகி இருப்பதுடன் தொடர்புடையதாக இருப்பது இதற்குக் காரணமாகும்.

-மக்தபாஹ் அஸ்ஸுன்னாஹ் வ அஸ்ஸலஃபிய்யாஹ், மேலப்பாளையம்.

أحدث أقدم