சுவனம் நுழைவிக்கும் அமல்கள்

بسم الله الرحمن الرحيم

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அஸ்ஸுன்னாவில் சுவனம் நுழைவிக்கக்கூடிய அமல்களை அதிகமாக அறிவித்துத் தந்துள்ளார்கள். அவைகளில் ஒரு சிலவற்றை இங்கு குறிப்பிடுகின்றேன்.

1. கலிமா மொழிதல் ஆதாரம்: நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: யார் லாஇலாஹ இல்லல்லாஹ்வை அதன் மூலம் அல்லாஹ்வுடைய முகத்தை நாடியவராகக் கூறுகிறாரோ அவருக்கு அல்லாஹ் நரகத்தை ஹராமாக்கிவிட்டான். (புஹாரீ,முஸ்லிம்)

2. ஸலாத்தை பரப்புதல்

3. உணவளித்தல்

4. உறவினர்களைச் சேர்ந்து நடத்தல்

5. இரவில் தொழுதல்

ஆதாரம்: நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: மனிதர்களே நீங்கள் ஸலாத்தைப் பரப்புங்கள், உணவளியுங்கள், உறவினர்களுடன் சேர்ந்து நடந்து கொள்ளுங்கள், மனிதர்கள் தூங்கும் வேளையில் தொழுது வாருங்கள், சாந்தியுடன் நீங்கள் சுவனம் நுழைவீர்கள். (இப்னுமாஜா)

6. அறிவைத் தேடல்

ஆதாரம்: நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: யார் ஒரு பாதையில் அறிவைத்தேடிச் செல்கிறாரோ அல்லாஹ் அவருக்கு சுவர்க்கத்திற்கான ஒரு பாதையை இலகுபடுத்துவான். (முஸ்லிம்)

7. ஒவ்வொரு தொழுகைக்குப் பிறகும் ஆயதுல்குர்ஸீ ஓதுதல்

ஆதாரம்: நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: யார் ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் ஆயதுல்குர்ஸீயை ஓதுகிறாரோ அவர் மரணிப்பதைத் தவிர அவரை சுவனத்தில் நுழைவதைவிட்டும் வேறொன்றும் தடுக்காது. (நஸாஈ)

8. இறையச்சம்

9. நற்குணம்

ஆதாரம்: நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் மனிதர்களை அதிகமாக சுவனம் நுழைவிக்கக்கூடியவற்றைப்பற்றி வினவப்பட்டது. அதற்கு அவர்கள் அல்லாஹ்வைப் பயப்படுவதும் நற்குணமுமாகும் என பதிலளித்தார்கள். (திர்மிதீ)

10. பாதையில் நோவினை தரக்கூடியவற்றை அகற்றுதல்

ஆதாரம்: நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: ஒரு பாதையில் கிடந்த மரக்கொப்பொன்றுக்கு அருகால் ஒரு மனிதர் கடந்து சென்றார். அப்போது அவர் அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் இதை முஸ்லிம்களுக்கு தீங்கிழைக்காமல் இருக்க நீக்குவேன் எனக்கூறினார். எனவே அவர் சுவர்க்கம் நுழைக்கப்பட்டார். (முஸ்லிம்)

11. நோன்பு

12. ஜனாஸாவைப் பின் தொடர்ந்து செல்லல்

13. ஏழைகளுக்கு உணவளித்தல்

14. நோய் விசாரித்தல்

ஆதாரம்: நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் உங்களில் யார் இன்று நோன்பாளியாக காலைப்பொழுதை அடைந்துள்ளார்? எனக்கேட்டார்கள். அதற்கு அபூபக்ர் (ரழியல்லாஹுஅன்ஹு) அவர்கள் நான் எனக்கூறினார்கள். உங்களில் யார் இன்று ஒரு ஜனாஸாவைப் பின்தொடர்ந்துள்ளார் என அவர்கள் (மீண்டும்) கேட்டார்கள். அதற்கு அபூபக்ர் (ரழியல்லாஹுஅன்ஹு) அவர்கள் நான் எனக்கூறினார்கள். உங்களில் யார் இன்று ஒரு ஏழைக்கு உணவளித்துள்ளார்? என அவர்கள் (மீண்டும்) கேட்டார்கள். அதற்கு அபூபக்ர் (ரழியல்லாஹுஅன்ஹு) அவர்கள் நான் எனக்கூறினார்கள். உங்களில் யார் இன்று ஒரு நோயாளியை நோய் விசாரித்துள்ளார்? என அவர்கள் (மீண்டும்) கேட்டார்கள். அதற்கு அபூபக்ர் (ரழியல்லாஹுஅன்ஹு) அவர்கள் நான் எனக்கூறினார்கள். அதற்கு நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: (இந்த) விடயங்கள் ஒரு மனிதரிடம் ஒன்று சேர்ந்தால் அவர் சுவர்க்கம் நுழைவார். (முஸ்லிம்)

15. வுழூச்செய்து இரண்டு ரக்அத்கள் தொழுதல் ..

ஆதாரம்: நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: யார் அழகான முறையில் வுழூச்செய்து பின்பு தன் உள்ளத்தாலும் முகத்தாலும் முன்நோக்கியவராக இரண்டு ரக்அத்கள் தொழுகிறாரோ அவருக்கு சுவர்க்கம் கட்டாயமாகிவிட்டது. (முஸ்லிம்)

16. வுழூச்செய்த பின் துஆ ஓதுதல்

ஆதாரம்: நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் அழகான முறையில் வுழூச்செய்து பின்பு அவர் தன்னுடைய வுழூவிலிருந்து நிறைவுபெறும்போது அஷ்ஹது அல்லாஇலாஹ இல்லல்லாஹ் வஹ்தகு லாஷரீகலகு வஅஷ்கது அன்ன முஹம்மதன் அப்துகு வரஸூலுகு எனக்கூறுகிறாரோ அவருக்கு சுவனத்தின் எட்டு வாயல்களும் திறக்கப்படும். அவைகளில் அவர் நாடியவற்றால் நுழைவார். (அபூதாவூத்)

17. சுபஹ், அஸர் தொழுகைகளை பேணிப்பாதுகாத்தல்.

ஆதாரம்: யார் இரு குளிர்த்தொழுகைகளான (சுபஹையும் அஸரையும்) தொழுகிறாரோ அவர் சுவர்க்கம் நுழைவார். (புஹாரீ, முஸ்லிம்)

18. ராதிபான (சுன்னத்) தொழுகைகளைப் பேணிப்பாதுகாத்தல்

ஆதாரம்: யார் (ராதிபான) 12 ரக்அத்களை இரவிலும் பகலிலும் தொடர்ந்து (தொழுது)வருகிறாரோ அவர் சுவனம் நுழைவார். (அவை) ளுகருக்கு முன் 4, பின் 2, மஃரிபுக்கு பின் 2, இஷாவுக்குப் பின் 2, பஜ்ருக்கு முன் 2 ஆகும்.

19. அநாதைகளைப் பராமரித்தல்

ஆதாரம்: நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்;: நானும் அநாதையைப் பராமரிப்பவனும் சுவர்க்கத்தில் இவ்வாறு இருப்போம். அவர்கள் சுட்டு விரலையும் நடுவிரலையும் சுட்டிக்காட்டினார்கள். (புஹாரீ)

20. உண்மை பேசுதல்

21. வாக்கை நிறைவேற்றல்

22. அமானிதத்தைப் பாதுகாத்தல்

23. கற்பைப் பாதுகாத்தல்

24. பார்வையைத் தாழ்த்துதல்

25. (நோவினை செய்வதை விட்டும்) கைகளைத் தடுத்துக்கொள்ளல்

ஆதாரம்: நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் உங்களிலிருந்து ஆறு விடயங்களை எனக்கு உத்தரவாதம் அளியுங்கள். உங்களுக்கு நான் சுவர்க்கத்தை உத்தரவாதம் அளிக்கிறேன். நீங்கள் பேசினால் உண்மை பேசுங்கள், வாக்களித்தால் நிறைவேற்றுங்கள், நீங்கள் நம்பப்பட்டால் அமானிதத்தை நிறைவேற்றுங்கள், உங்களுடைய கற்புகளைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள், உங்கள் பார்வையைத் தாழ்த்திக்கொள்ளுங்கள், (நோவினை செய்வதை விட்டும்) உங்கள் கரங்களைத் தடுத்துக்கொள்ளுங்கள். (அஹ்மத், இப்னுஹிப்பான்)

26. ஹஜ்

ஆதாரம்: நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்கு சுவர்க்கத்தை தவிர வேறு கூலியில்லை. (முஸ்லிம்) இன்னும், அதிகமான நன்மையான காரியங்கள் சுவனத்தில் எம்மை நுழைவிக்கும் என நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியிருக்கின்றார்கள். அவைகளைத் தேடிப்படித்து அவற்றை அமுல்படுத்தக்கூடியவர்களாக நாம் இருக்க வேண்டும்.

by: ABU HUNAIF MUHAMMAD HISHAM IBNU MUHAMMAD TOUFEEK
أحدث أقدم