சுத்தம் பற்றிய பாடம்

அல்‌-பிக்ஹ்‌ அல்‌-முயஸ்ஸர்‌ பி-லவ்‌இல்‌ குர்‌ஆன்‌, வஸ்ஸுன்னா நூலிலிருந்து

நூலாசிரியர்‌:
பிரபல்யமான உலமாக்களின்‌ ஒரு குழுவினர்‌ 

புகழனைத்தும்‌ ஏக வல்லவனாம்‌ அல்லாஹ்வுக்கே உரித்தாகட்டும்‌.

உள்ளடக்கம்:

தூய்மை மற்றும்‌ தண்ணீர்‌ உடைய சட்டங்கள்‌

பாத்திரங்கள்‌ தொடர்பான சட்டங்கள்‌

தேவையை நிறைவேற்றுவது மற்றும்‌ அதன்‌ ஒழுக்கங்கள்‌

பல்‌ துலக்குவது மற்றும்‌ இயற்கை விதிமுறைகள்‌

உளூ - அங்க சுத்தம்‌ செய்தல்

குஃப்‌ -காலுறை, தலைப்பாகை, காயத்தின்‌ மீது போடப்பட்டுள்ள கட்டுகள்‌ மீது மஸ்ஹ்‌ செய்வது

குஸ்ல்‌ - குளிப்பதின்‌ சட்டங்கள்‌

தயம்மும்‌

அசுத்தங்கள்‌ மற்றும்‌ அவற்றை (அசுத்தமடைந்தவற்றை) சுத்தம்‌ செய்கின்ற வழிமுறை

ஹைழ்‌ -மாதவிடாய்‌ நிஃபாஸ்‌ - பிரசவ உதிரப்போக்கு


பகுதி ஒன்று: சுத்தம்‌, நீரின்‌ சட்டங்கள்‌.

முதலாவது: சுத்தம்‌ என்றால்‌ என்ன? அதன்‌ முக்கியத்துவமும்‌, பிரிவுகளும்‌:

1. சுத்தத்தின்‌ முக்கியத்துவமும்‌ அதன்‌ பிரிவுகளும்‌:
சுத்தம்‌ தொழுகையின்‌ திறவுகோலாய்க்‌ காணப்‌படுவதோடு அதன்‌ முக்கியமான நிபந்தனைகளிலும்‌ ஒன்றாகும்‌.

சுத்தம்‌ இரு வகைப்படும்‌:

முதற்‌ பிரிவு: உளச்சுத்தம்‌ அதாவது இணைவைத்தல்‌ மற்றும்‌ பாவமான காரியங்களில்‌ இருந்தும்‌ அவற்றின்‌ பால்‌ இட்டுச்செல்லக்‌ கூடிய காரியங்களில்‌ இருந்தும்‌ எமது உள்ளத்தைத்‌ தூய்மைப்‌ படுத்திக்‌ கொள்ளல்‌. 

இது உடலைச்‌ சுத்தம்‌ செய்வதை விடவும்‌ முக்கியமானதாகும்‌, எனெனில்‌ இணைவைப்பதிலிருந்து விடுபடும்‌ வரை உடலின்‌ தூய்மையை உறுதிப்படுத்த முடியாது,

அல்லாஹ்‌ கூறுகின்றான்‌:
"நிச்சயமாகஇணைவைப்பவர்கள்‌ அசுத்தமானவர்களே “ (9:26).

இரண்டாம்‌ பிரிவு: உணரக்கூடிய சுத்தம்‌

2. சுத்தத்துக்கான வரைவிலக்கணம்‌: மொழி ரீதியில்‌:
தூய்மை, அதாவது அழுக்குகளிலிருந்தும்‌ தூய்மையாதல்‌ என்பதைச்‌ சுட்டிக்காட்டும்‌.

மார்க்க ரீதியில்‌ சுத்தம்‌ என்றால்‌, தொழுகைக்குத்‌ தடையாக இருக்கும்‌ சிறு தொடக்கு, பெருந்தொடக்கு போன்றவற்றிலிருந்து விடுபடுவதுடன்‌ உடல்‌, உடை, தரிப்பிடங்களில்‌ உள்ள அழுக்குகளை நீக்குவதனைக்‌ குறிக்கும்‌.

சிறு தொடக்கு, பெருந்தொடக்கிலிருந்து விடுபடுதல்‌ எனும்‌ போது, தொழுகைக்குத்‌ தடையாக இருக்கக்‌ கூடியது. அது பெருந்தொடக்கையாயின்‌ நீரைக்‌ கொண்டு உடம்பு முழுவதையும்‌ கழுவுவதையும்‌, சிறு தொடக்கையாயின்‌ வுழுவுடைய நிய்யத்துடன்‌ அதன்‌ உறுப்புக்களை நீரைக்‌ கொண்டு கழுவுவதையும்‌ குறிக்கும்‌.

அவ்வாறு இவற்றைச்‌ சுத்தம்‌ செய்ய நீர்‌ கிடைக்காத சந்தர்ப்பங்களில்‌ அதற்குப்‌ பகரமாக புளுதியுள்ள மண்ணைப்‌ பயன்படுத்திக்‌ கொள்ள வேண்டும்‌. (இது பற்றிய விளக்கம்‌ பின்னர்‌ தயம்மும்‌ பாடத்தில்‌ விவரிக்கப்படும்‌).

உணர முடியுமான சுத்தம்‌ இரண்டு வகைப்படும்‌:
உடலில்‌ ஏற்படக்கூடிய சில நிகழ்வுகளுக்காக சுத்தம்‌ செய்தல்‌, இது உடம்பு, உடை, இடம்‌ போன்றவற்றில்‌ ஏற்படக்‌ கூடியவை.

உடலில்‌ ஏற்படக்கூடிய நிகழ்வுகள்‌ எனும்‌ போது அதனை இரு பிரிவுகளாக பிரிக்கலாம்‌: சிறு தொடக்கு; இது வுழூ செய்வதைக்‌ கடமையாக்கக்‌ கூடியதாகும்‌. அடுத்தது பெருந்தொடக்கு; இது குளிப்பைக்‌ கடமையாக்கக்‌ கூடியதாகும்‌ .

1. அதனுடன்‌ உடல்‌, உடை, தரிப்பிடங்களில்‌ உள்ள அழுக்குகளை மூன்றாக வகைப்‌ படுத்தலாம்‌;

2. கட்டாயமாக நீரைக்‌ கொண்டு சுத்தம்‌ செய்ய வேண்டிய அழுக்கு

3. கட்டாயம்‌ சுரண்டி விட வேண்டிய அழுக்கு

4. கட்டாயம்‌ பூமியில்‌ தேய்த்து சுத்தப்படுத்தப்பட வேண்டிய அழுக்கு.

இரண்டாவது: சுத்தப்‌ படுத்தக்கூடிய நீரின்‌ தன்மை.

எல்லா வகையான அழுக்குகளிலிருந்தும்‌ தூய்மை யாக்க நீர்‌ அவசியமானதாகும்‌. அது தன்னில்‌ சுத்தமாக இருப்பதுடன்‌ பிறவற்றையும்‌ சுத்தப்‌ படுத்துகிறது. அதாவது இந்‌ நீர்‌ எதும்‌ கலக்காத இயல்பு நிலையிலே இருக்கும்‌ நீராகும்‌. அவை மழை நீராக, பனிக்கட்டியாக அல்லது பூமியில்‌ ஓடக்கூடிய ஆறுகள்‌ நதிகள்‌, ஊற்றுகளாக இருப்பினும்‌ சரியே. அல்லாஹ்‌ கூறுகின்றான்‌:

"நீங்கள்‌ சுத்தப்படுத்திக்‌ கொள்வதற்காக அவன்‌ உங்கள்‌ மீது வானிலிருந்து மழையைப்‌ பொழியச்‌ செய்தான்‌." (8:11).

மேலும்‌:

(மனிதர்களே!) நாம்‌ தான்‌ மேகத்திலிருந்து பரிசுத்தமான நீரை பொழியச்‌ செய்கின்றோம்‌.
(25:48).

மேலும்‌ நபி ஸால்லல்லாஹு அலைகி வஸல்லம்‌ அவர்கள்‌: (அல்லாஹ்வே! தண்ணீர்‌, பனிக்கட்டி, உறைபனி என்பன கொண்டு என்‌ பாவங்களில்‌ இருந்து என்னைத்‌ தூய்மைப்‌ படுத்துவாயாக) எனக்‌ கேட்பார்கள்‌

கடல்‌ நீர்‌ பற்றிக்‌ கூறும்போது: (அந்‌ நீர்‌ மிகச்‌ சுத்தமானது, அதில்‌ (வாழ்ந்து) மரணிக்கக்‌ கூடியவைகளும்‌ (உண்ண) ஆகுமாக்கப்‌ பட்டவைகளாகும்‌).

நீர்‌ அல்லா வினாகிரி, எரிபொருட்கள்‌, பழச்சாறுகள்‌ போன்ற திரவங்கள்‌ மூலம்‌ சுத்தம்‌ செய்ய முடியாது.

அல்லாஹ்‌ கூறுகிறான்‌:

தண்ணீரை நீங்கள்‌ பெறவில்லையெனில்‌ சுத்தமான மண்ணைக்‌ கொண்டு (தயம்மும்‌ செய்து கொள்ளுங்கள்‌). (5:6)

நீர்‌ அல்லாத ஏனைய திரவங்கள்‌ மூலம்‌ சுத்தம்‌ செய்ய முடியுமாக இருந்திருப்பின்‌ மண்ணுக்குப்‌ பதிலாக அல்லாஹ்‌ அவற்றையும்‌ குறிப்பிட்டிருப்பான்‌. .

மூன்றாவது: நீரில்‌ அசுத்தம்‌ கலத்தல்‌.

நீரில்‌ அசுத்தம்‌ கலந்து நீரின்‌ மூன்று பண்புகளில்‌ (நிறம்‌, மணம்‌, சுவை) ஏதாவது ஒன்று மாறிவிட்டால்‌ அந்நீர்‌ சொற்பமான அளவோ அதிகமோ) அசுத்தமாகி விடும்‌ என்பது ஏகோபித்த முடிவாகும்‌, 

எனவே அதனை அடுத்த பொருற்களை சுத்தப்படுத்துவதற்காகப்‌ பயன்படுத்தக்‌கூடாது, மேலும்‌ அது எவ்‌ வகையான அசுத்தத்தையும்‌ நீக்கவல்லதுமல்ல.

ஆனாலும்‌ நீரில்‌ அசுத்தம்‌ கலந்து அதன்‌ பண்புகளில்‌ (மணம்‌, நிறம்‌, சுவையில்)‌ எவ்வித மாற்றம்‌ ஏற்படாமல்‌, அந்த நீரின்‌ அளவும்‌ அதிகமாக இருந்தால்‌ அது அசுத்தமாகாது, அதனைக்‌ கொண்டு செய்யப்படும்‌ சுத்தமும்‌ நிறைவேறும்‌. ஆனாலும்‌ இவ்வகை நீரின்‌ அளவு குறைவாக இருந்தால்‌ அந்நீர்‌ அசுத்தமான தாகும்‌, அதனைக்‌ கொண்டு செய்யப்படும்‌ சுத்தம்‌ நிறைவேறமாட்டாது. அதிகமான நீர்‌ எனக்‌ கொள்வது: இரண்டு குள்ளதைன்கள்‌ அதாவது (160.5 லீடர்கள்‌), இதை விட குறைவான அளவைக்‌ கொண்டவை குறைவான நீராகவே கொள்ளப்படும்‌. அபூ ஸஈத்‌ அல்‌ குத்ரி ரழியல்லாஹு அன்ஹு, ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைகி வஸல்லம்‌ அவர்களைத்‌ தொட்டு அறிவிக்கிறார்கள்‌: (நிச்சயமாக நீர்‌ சுத்தமானது அதை ஒன்றும்‌ அசுத்தப்‌ படுத்தாது) (முஸ்னத்‌ அல்‌ இமாம்‌ அஹ்மத்‌ (15/3), அபூதாவூத்‌, அன்நாஸஈ, அத்திருமிதி.)

மேலும்‌ இப்னு உமர்‌ ரழியல்லாஹு அன்ஹு, ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்‌ அவர்கள்‌ கூறியதாக அறிவிக்கிறார்கள்‌:
(இரண்டு குள்ளதைன்‌ அளவு நீர்‌ இருப்பின்‌ அந்நீர்‌ அசுத்தமாகாது)” ஆதாரம்‌: அஹ்மத்‌, அபூ தாவூத்‌, திர்மிதி.

நான்காவது: நீருடன்‌ சுத்தமான பொருள்‌ ஒன்று கலத்தல்‌.

நீருடன்‌ சுத்தமான பொருளொன்று, (இலைகள்‌, சவர்க்காரம்‌, இலந்தை போன்ற சுத்தமான பொருட்கள்‌) கலந்து அதன்‌ மூலம்‌ நீரில்‌ எந்த மாற்றமும்‌ ஏற்படாமலிருந்தால்‌, அந்நீர்‌ சுத்தமானதாகும்‌. மேலும்‌ அதனைக்‌ கொண்டு அசுத்தங்கள்‌, சிறு தொடக்கு, பெருந்தொடக்கு போன்றவற்றையும்‌ சுத்தம்‌ செய்ய முடியும்‌ என்பதே சரியான கருத்தாகும்‌. அல்லாஹுத்‌ தஆலா கூறுகின்றான்‌:

"நீங்கள்‌. நோயாளியாகவோ, பிரயாணத்திலோ, மலஜலம்‌ கழித்தோ அல்லது பெண்ணைத்‌ தீண்டி இருந்த நிலையில்‌ (சுத்தம்‌ செய்து கொள்ள) நீங்கள் தண்ணீரையும்‌ பெற்றுக்‌ கொள்ளாத சமயம்‌ (தொழுகைக்கான நேரம்‌ வந்து விடுமேயானால்‌ அதற்காக நீங்கள்‌ தொழுகையைப்‌ பிற்படுத்த வேண்டியதில்லை.) சுத்தமான மண்ணைத்‌ தொட்டு உங்களுடைய முகங்களையும்‌ கைகளையும்‌ துடைத்து "தயம்மும்‌" செய்து கொள்ளுங்கள்‌. (4:43)

இவ்‌ வசனத்தில்‌ நீர்‌ என்ற சொல்‌ எல்லா வகையான நீரையும்‌ குறிக்கிறது. எனவே சுத்தமான நீருக்கும்‌, எதாவது ஒரு பொருள்‌ நீரில்‌ கலந்து அதில்‌ மாற்றம்‌ எதும்‌ நிகழாத நீருக்கும்‌ இடையில்‌ வித்தியாசம்‌ கிடையாது.

மேலும்‌ நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்‌ அவர்கள்‌ தனது மகளின்‌ ஜனாஸாவை குளிப்பாட்டும்‌ பெண்களுக்கு மூன்று அல்லது ஐந்து அல்லது நீங்கள்‌ தேவை உணரும்‌ பட்சத்தில்‌ அதை விட அதிகமாக நீர்‌ மற்றும்‌ இலந்தயை கலந்து குளிப்பாட்டுங்கள்‌ இறுதியாக கற்பூரம்‌ கலந்தும்‌ குளிப்பாட்டுங்கள்‌ எனக்‌ கூறினார்கள்‌ .

ஐந்தாவது: சுத்தமான ஒரு விடயத்துக்காக பயன்படுத்தப்‌பட்ட நீரின்‌ சட்டம்‌:

சுத்தத்துக்காக பயன்‌ படுத்தப்‌ பட்ட நீர்‌, வுழூ செய்யும்‌ போது உறுப்புக்களில்‌ இருந்து விழும்‌ நீர்‌, அதற்காகப்‌ பயன்படுத்தப்‌படும்‌ நீர்‌ தன்னில்‌  சுத்தமாகவும்‌, பிறரை சுத்தப்படுத்தக்‌ கூடியதாகவும்‌ இருக்கிறது என்பது சரியான கருத்தாகும்‌. எனினும்‌ நீரின்‌ மூன்று பண்புகளில்‌ எதுவும்‌ மாறக்கூடாது.

இந்நீர்‌ சுத்தமானது என்பதற்கான ஆதாரம்‌:

(நபி ஸல்லல்லாஹு அலைகி வஸல்லம்‌ அவர்கள்‌ வுழூ செய்தால்‌ (ஸஹாபாக்கள்‌) அந்த நீருக்காக போராடக்‌ கூடியவர்களாக இருந்தார்கள்‌), மேலும்‌ நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்‌ அவர்கள்‌ ஜாபிர்‌ ரழியல்லாகு அன்ஹு அவர்கள்‌ நோய்‌ வாய்ப்‌ பட்டிருந்த போது தான்‌ வுழூ செய்த நீரை அவர்‌ மீது ஊற்றினார்கள்‌. இந்நீர்‌ அசுத்தமாக இருப்பின்‌ அதனை நபியவர்கள்‌ அனுமதித்திருக்க மாட்டார்கள்‌. இன்னும்‌ நபி ஸல்லல்லாஹு அலைகி வஸல்லம்‌ அவர்கள்‌, அவருடைய தோழர்கள்‌ மற்றும்‌ மனைவிமார்கள்‌ நீர்‌ அருந்தக்‌ கூடிய சிறு பாத்திரத்தில்‌ வுழூ செய்யக்‌ கூடிய வர்களாகவும்‌, அண்டாப்‌ பாத்திரம்‌ போன்ற வற்றில்‌ குளிக்கக்‌ கூடியவர்களாகவும்‌ இருந்தார்‌கள்‌. இவ்வாறான சந்தர்ப்பங்களில்‌ பயன்‌ படுத்தப்படும்‌ நீர்‌ மீண்டும்‌ அப்பாத்திரத்திரத்தை அடையாமலில்லை.

ஒரு தடவை அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள்‌ ஜனாபதாக இருந்த வேளையில்‌ (நிச்சயமாக மூஃமின்‌ அழுக்காக மாட்டான்‌) என நபி ஸல்லல்லாஹு அலைகி வஸல்லம்‌ அவர்கள்‌ கூறினார்கள்‌.

ஆறாவது: மனிதர்கள்‌, மிருகங்கள்‌ அருந்தி விட்டு மீதமாகும்‌ நீர்‌.

முஸ்லிமாயினும்‌, காபிராயினும்‌ மனிதர்கள்‌ அனைவரும்‌ சுத்தமானவர்களே, இன்னும்‌ அவர்கள்‌ அருந்தி விட்டு பாத்திரங்களில்‌ எஞ்சும்‌ நீரும்‌ சுத்தமானது. அதோ போன்று தான்‌ பெருந்தொடக்கு, மாதவிடாய்‌ ஏற்பட்டவர்‌களுக்கும்‌. நபி ஸல்லல்லாஹு அலைகி வஸல்லம்‌ அவர்கள்‌ கூறினார்கள்‌: (நிச்சயமாக மூஃமின்‌ அழுக்காகமாட்டன்‌). ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள்‌ அறிவிக்கிறார்‌ கள்‌: தான்‌ மாதவிடாய்க்‌ காலத்தில்‌ பாத்திரத்தில்‌ நீர்‌ அருந்தும்‌ போது, அதை நபியவர்கள்‌ வாங்கி அவர்களுடைய வாயை ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள்‌ வாய்‌ வைத்த அதே இடத்தில்‌ வைத்துக்‌ குடிப்பார்கள்‌.

அத்துடன்‌ உண்பதற்கு ஆகுமாக்கப்பட்ட பிராணி மற்றும்‌ ஏனையவைகள்‌ அருந்தி விட்டு மிதமான நீரும்‌ சுத்தமானதாகும்‌.

அது போல்‌ (தண்ணீர்‌ அதிகமாக இருக்கும்‌ போது) உண்பதற்கு அனுமதிக்கப்‌ படாதவைகள்‌ அருந்தி விட்டு மீதமாக இருக்கும்‌ நீரும்‌ சுத்தமானது என்பது சரியான முடிவாகும்‌, என்றாலும்‌ நீரின்‌ அளவு குறைவாக இருந்து அந்நீரின்‌ பண்புகளில்‌ ஏதாவது ஒன்று மற்றமடையும்‌ பட்சத்தில்‌ அது அசுத்தமாகி விடும்‌.

நபி ஸல்லல்லாஹு அலைகி வஸல்லம்‌ அவர்களிடம்‌ அனுமதிக்கப்‌பட்ட மற்றும்‌ அனுமதிக்கப்‌ படாத மிருகங்கள்‌ அடிக்கடி நீர்‌ அருந்தக்‌ கூடிய இடங்களின்‌ நீரைப்‌ பற்றி கேட்கப்பட்ட போது: (நீர்‌ இரண்டு குள்ளதைன்‌ அளவு இருந்தால்‌ அது அசுத்தமாகாது), என்று உபதேசித்தார்கள்‌.

மேலும்‌ நபி ஸல்லல்லாஹு அலைகி வஸல்லம்‌ அவர்களிடம்‌ பூனை, அது நீர்‌ குடித்த பாத்திரங்களைப்‌ பற்றி கூறிய போது: (நிச்சயமாக பூனை அழுக்கான ஒன்றல்ல, மாறாக அது உங்களை சுற்றி வலம்‌ வரக்‌ கூடிய ஒன்றாகும்‌). பூனையைவவிட்டு பாதுகாப்பாக இருப்பது கடினமான ஒன்று, அவ்வாறே நாம்‌ பூனை குடித்த நீர்‌ அசுத்தம்‌ என்று எடுத்துக்‌ கொண்டால்‌ அதன்‌ மூலம்‌ பாத்திரங்கள்‌ அனைத்தையும்‌ சுத்தம்‌ செய்வதும்‌ கடினமானதாகும்‌. எனவே தான்‌ அதிலிருந்து இந்த உம்மத்துக்கு விதி விலக்கு அளிக்கப்‌ பட்டிருக்கின்றது. எனினும்‌ நாய்‌, பன்றிகளின்‌ எச்சம்‌ அசுத்தமானதாகும்‌.

நாயைப்பற்றி: நபி ஸல்லல்லாஹு அலைகிவஸல்லம்‌ அவர்கள்‌ கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள்‌ அறிவிக்கிறார்கள்:‌
(உங்கள்‌ பாத்திரங்களில்‌ நாய்‌ நாக்கை விட்டு நீர்‌ அருந்தினால்‌ அதனை ஏழு விடுத்தம்‌ கழுவி சுத்தம்‌ செய்ய வேண்டும்‌, அதில்‌ முதல்‌ முறை மண்ணைக்‌ கொண்டு சுத்தம்‌ செய்யுங்கள்‌) எனக்‌ கூறினார்கள்‌.

பன்றியைப்பற்றி அல்லாஹுத்தஆலா கூறும்‌ போது: இது அழுக்கானதும்‌, அசுத்தமானதும்‌ என்பதாக கீழ்வரும்‌ வசனத்தில்‌ கூறுகின்றான்‌:

செத்தவை, வடியக்கூடிய இரத்தம்‌, பன்றியின்‌ மாமிசம்‌ ஆகியவை நிச்சயமாக அசுத்தமாக இருப்பதனால்‌... (6:145)
 

இரண்டாம்‌ பகுதி: பாத்திரங்கள்‌

இதில்‌ தெளிவு பெற வேண்டிய விடயங்கள்‌: பாத்திரம்‌: நீர்‌ மற்றும்‌ எனைய பொருட்களைப்‌ பாதுகாக்க இரும்பு மற்றும்‌ ஏனைய மூலப்‌ பொருட்கள்‌ மூலம்‌ உருவாக்கப்‌ பட்டவை. இவை அடிப்படையில்‌ (மார்க்கத்தில்‌) அனுமதிக்கப்‌பட்டவையாகும்‌; அல்லாஹ்‌ கூறுகிறான்‌: 

(அவன்தான்‌ (பூமியையயும்‌) பூமியிலுள்ள அனைத்தையும்‌ உங்களுக்காகப்‌ படைத்தான்‌) 2:29.

தெளிவு ஒன்று: தங்கம்‌, வெள்ளி, அது போன்ற மூலப்‌ பொருட்கள்‌ மூலம்‌ தயாரிக்கப்பட்ட பாத்திரங்களை சுத்தத்துக்காகப்‌ பயன்படுத்தல்‌:

சுத்தமான அனுமதிக்கப்‌ பட்ட பாத்திரங்களை உண்ணல்‌, பருகல்‌, மற்றும்‌ ஏனைய பாவனைகளுக்காக பாவிப்பது அனுமதிக்கப்‌பட்ட ஒரு அம்சமாகும்‌, மேலும்‌ அப்பாத்திரம்‌ பெறுமதி கூடியதாக இருந்தாலும்‌ சரியே.எனினும்‌ தங்கம்‌, வெள்ளி என்பவற்றால்‌ செய்யப்பட்ட பாத்திரங்களைத்‌ தவிர, ஏனெனில்‌ இவை இரண்டிலும்‌: உண்ணல்‌ பருகலை இஸ்லாம்‌ குறிப்பாக தடை செய்து ஹராமாக்கி ஏனைய விடயங்களுக்காக ஆகுமாக்கியுள்ளது. நபி ஸல்லல்லாஹு அலைகி வஸல்லம்‌ அவர்கள்‌ கூறினார்கள்‌: (தங்கம்‌, வெள்ளியிலான பாத்திரங்களில்‌ பருக வேண்டாம்‌, மேலும்‌ அவற்றினால்‌ செய்யப்பட்ட தட்டுகளில்‌ உண்ணவும்‌ வேண்டாம்‌, ஏனெனில்‌ அது அவர்‌ (காபிர்‌) களுக்கு இவ்வுலகிலும்‌, உங்களுக்கு மறு சமையலும்‌ உண்டு) புஹாரி (5426), முஸ்லிம்‌ (2067) 

மேலும்‌ நபி ஸல்லல்லாஹு அலைகி வஸல்லம்‌ அவர்கள்‌ கூறினார்கள்‌: (தங்கம்‌ மற்றும்‌ வெள்ளிப்‌ பாத்திரங்களில்‌ அருந்துபவர்‌, அவரின்‌ வயிற்றில்‌ நரக நெருப்பு தான்‌ கொதிக்கிறது (புரளுகிறது) புஹாரி (5634) , முஸ்லிம்‌ (2065)

இந்த ஹதீஸ்‌ இவ்வகையான மூலப்‌ பொருட்களினால்‌ வடிவமைமக்கப்பட்ட பொருட்களில்‌ உண்ணல்‌, பருகல்‌ தான்‌ ஹராமாகும்‌, ஏனைய தேவைகளை நிறைவேற்றிக்‌ கொள்ளலாம்‌, மேலும்‌ சுத்தம்‌ செய்தலுக்கும்‌ பயன்படுத்தலாம்‌ எனபதையும்‌ சுட்டிக்காட்டுகிறது. இன்னும்‌ இத்தடை தங்கம்‌, வெள்ளி மாத்திரம்‌ கொண்டு தயாரிக்கப்‌ பட்ட பாத்திரங்கள்‌, அல்லது இவற்றின்‌ முலாம்‌ பூசப்பட்ட பாத்திரங்கள்‌, அல்லது இவற்றிலிருந்து சிறு பகுதியேனும்‌ சேர்க்கப்‌ பட்டு தயாரிக்கப்‌ பட்ட பாத்திரங்கள்‌ என்பன உள்ளடங்குகின்றன.

தெளிவு இரண்டு: தங்கம்‌, வெள்ளி கொண்டு ஒட்டப்பட்ட பாத்திரங்களின்‌ சட்டம்‌:

தங்கத்தைக்‌ கொண்டு ஒட்டப்பட்ட பாத்திரத்தைப்‌ பயன்படுத்துவது ஹதீஸ்களின்‌ அடிப்படையில்‌ முற்றாகத்‌ தடுக்கப்பட்டுள்ளது. என்றாலும்‌ அந்த இணைப்பு சிறிதளவு வெள்ளியைக்‌ கொண்டு இணைக்கப்‌பட்டிருந்தால்‌ அப்பாத்திரத்தைப்‌ பயன்படுத்த முடியும்‌ என்பது அனஸ்‌ ரழியல்லாஹு அன்ஹு அவர்களின்‌ அறிவிப்பின்‌ ஊடாகத்‌ தெளிவாகின்றது; (ரஸூல்‌ ஸல்லல்லாஹு அலைகி வஸல்லம்‌ அவர்களின்‌ பாத்திரங்களில்‌ ஒன்று உடைந்தது, வெடிப்பு ஏற்பட்ட பகுதியை வெள்ளியிலான சங்கிலியின்‌ ஒரு பகுதி மூலம்‌ அண்டை இட்டார்கள்‌ ) புஹாரி (3109).

தெளிவு மூன்று: காபிர்களின்‌ பாத்திரம்‌.

காபிர்களின்‌ பாத்திரம்‌ அடிப்படையில்‌ ஆகுமானதாகும்‌. இருந்தும்‌ அது சுத்தமற்றது என அறியப்பட்டால்‌ அதைதக்‌ கழுவும்‌ வரை பயன்படுத்தக்‌ கூடாது; இது அபூ ஸஹ்லபா அல்‌ ஹுஷனி ரழியல்லாஹு அன்ஹு அவர்களின்‌ அறிவிப்பின்‌ ஊடாகத்‌ தெளிவாகின்றது: அல்லாஹ்‌வின்‌ தூதரே; நாம்‌ வேதத்தையுடையவர்கள்‌ வாழும்‌ பகுதியில்‌ தான்‌ வாழ்கிறோம்‌, எனவே அவர்களின்‌ பாத்திரங்களில்‌ எமக்கு உண்ண முடியுமா? என்று நான்‌ வினவிய போது; நபியவர்கள்‌ கூறினார்கள்‌: ( அவற்றில்‌உண்ண வேண்டாம்‌, அவ்வாறு உங்களுக்கு அவற்றைத்தவிர வேறு பாத்திரம்‌ இல்லையெனில்‌ அதை சுத்தம்‌ செய்த பின்‌ அதில்‌ உண்ணுங்கள்‌) புஹாரி (5478) , முஸ்லிம்‌ (1930)

இன்னும்‌, சில பாத்திரங்கள்‌ சுத்தமானதா என அறியப்படாத இடத்து, உதாரணமாக: அப்பகுதியில்‌ வாழ்பவர்கள்‌ தடுக்கப்பட்ட உணவுகளை உண்ணக்‌ கூடியவர்களா? என்பது அறியப்‌படாதவிடத்து, அதைப்‌ பாவிப்பது ஆகுமானதாகும்‌. ஏனெனில்‌ நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்‌ அவர்களும்‌, அவரின்‌ தோழர்களும்‌; முஷ்ரிக்கான ஒரு பெண்ணுக்குரிய நீர்‌ சேகரிக்கும்‌ ஒரு பையில்‌ இருந்து வுளு செய்வதற்கான நீரைப்‌ பெற்றுக்‌ கொண்டார்கள்‌. மேலும்‌ அல்லாஹ்‌ வேதத்தை உடையவர்களின்‌ உணவை எமக்கு ஆகுமாக்கியுள்ளான்‌, எனவே அவர்கள்‌ அவர்களின்‌ பாத்திரங்களில்‌ தான்‌ எமக்குத்தருவார்கள்‌. அதே போன்று யஹூதிச்‌ சிறுவன்‌ ஒருவன்‌ நபி ஸல்லல்லாஹு அலைகிவஸல்லம்‌ அவர்களை; உரட்டியும்‌ கொழுப்பினால்‌ செய்யப்‌பட்ட ஆணமும்‌ உண்ண அழைத்த போது அதிலிருந்து உண்டார்கள்‌. அஹ்மத்‌ (3210,211)

தெளிவு நான்கு: இறந்த பிராணிகளின்‌ தோல்கள்‌ மூலம்‌ செய்யப்‌ பட்ட பாத்திரங்கள்‌ மூலம்‌ சுத்தம்‌ செய்தல்‌.

இறந்த பிராணிகளின்‌ தோல்‌ பதப்படுத்தப்பட்ட பின்பு அது சுத்தமாகும்‌, இன்னும்‌ அதைப்‌ பாவனைக்கு எடுப்பதும்‌ ஆகுமாக்கப்‌ பட்டது என்பதை நபி ஸல்லல்லாஹு அலைகி வஸல்லம்‌ அவர்களின்‌ பின்‌ வரும்‌ கூற்று மூலம்‌ தெளிவாகின்றது: (எந்தப்‌ பிராணியின்‌ தோலும்‌ பதப்‌ படுத்தப்பட்ட பின்‌ சுத்தமானதாகும்) திர்மிதி (1650) , முஸ்லிம்‌ (866). 

மேலும்‌, நபி ஸல்லல்லாஹு அலைகி வஸல்லம்‌ அவர்கள்‌ இறந்த ஒரு ஆட்டைக்‌ கடந்து செல்லும்‌ போது கூறினார்கள்‌: (இதனுடைய தோலை அவர்கள்‌ எடுத்து, பதப்படுத்தி அதன்‌ மூலம்‌ பிரயோசனப்‌ பட்டிருக்கக்‌ கூடாதா?) அதற்குச்‌ சொல்லப்‌ பட்டது: அது இறந்துள்ளது. அதற்கு நபியவர்கள்‌ கூறினார்கள்‌: (அதனுடைய மாமிசத்தைத்‌ தான்‌ அல்லாஹ்‌ ஹராமாக்கியுள்ளான்‌) முஸ்லிம்‌ (363), இப்னு மாஜா (3610), 

இது அறுப்பதற்கு ஆகுமாக்கப்‌ பட்ட பிராணிகள்‌ இறந்தால்‌ மட்டுமே ஒழிய மற்றவைகளுக்கு அல்ல. மேலும்‌ இவற்றின்‌ உரோமங்கள்‌ சுத்தமானதாகும்‌, இருந்தும்‌ அவற்றின்‌ மாமிசங்கள்‌ அசுத்தமாகும்‌, மேலும்‌ உண்பதற்கும்‌ ஹராமாகும்‌. 

அல்லாஹ்‌ கூறுகிறான்‌:
(ஆயினும்‌, செத்தவை, வடியக்கூடிய இரத்தம்‌, பன்றியின்‌ மாமிசம்‌ ஆகியவை நிச்சயமாக அசுத்தமாக இருப்பதனால்‌) 6:145.

பதமாதல்‌ என்பது: அத்தோலிலே உள்ள அழுக்குகளை நீர்‌, உப்பு அது போன்ற சுத்தப்படுத்தும்‌ பொருட்களைப்‌ பயன்படுத்தி சுத்தம்‌ செய்தலாகும்‌.

இருந்தும்‌ அறுப்பதற்கு அனுமதிக்கப்‌படாத பூனை போன்ற சுத்தமான பிராணிகளின்‌ தோல்கள்‌ பதப்‌படுத்தல்‌ மூலம்‌ சுத்தமாவதில்லை.

எனவே உண்பதற்கு ஹராமாக்கப்பட்ட பிராணிகளின்‌ தோல்கள்‌, அவை உயிரோடு இருக்கும்‌ போது சுத்தமாக இருந்தாலும்‌, அவை இறந்த பின்‌ பதப்படுத்தல்‌ மூலம்‌ சுத்தமாகாது.

இதன்‌ சுருக்கம்‌: உண்ண ஆகுமாக்கப்‌ பட்ட இறந்த பிராணிகளின்‌ தோல்கள்‌ பதப்படுத்தல்‌ மூலம்‌ சுத்தமாகிறது.

அதேபோன்று உண்ண ஆகுமாக்கப்படாத பிராணிகளின்‌ தோல்கள்‌ பதப்படுத்தல்‌ மூலம்‌ சுத்தமாவதில்லை.

தொடர்ச்சி.. இந்த நூலை படிக்கவும்
أحدث أقدم