மறுக்கப்படும் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள்



எஸ்.எச்.எம் இஸ்மாயில் ஸலபி

அல்குர்ஆனும் ஆதாரபூர்வமான ஹதீஸ்களுமே இஸ்லாத்தின் மூலாதாரங்களாகும். அல்குர்ஆனில் “அல்லாஹ்வைப் பின்பற்றுங்கள், அவனது தூதரையும் பின்பற்றுங்கள்” என அனேக ஆயத்துக்கள் கூறுகின்றன. அவனது தூதரைப் பின்பற்றுங்கள் என்ற கட்டளையைத்தான் ஹதீஸைப் பின்பற்றுதல் என நாம் புரிந்து செயற்பட்டு வருகின்றோம். இந்த வகையில் ஆதாரபூர்வமான ஹதீஸ்களை நம்புவதும் அவற்றை ஏற்று நடப்பதும் நபி(ஸல்) அவர்களது நபித்துவத்தை நம்புவதையும் அதை ஏற்றுக் கொள்வதையும் வெளிப்படையாகக் காட்டும் முக்கிய அம்சங்களாகும்.

இந்த அடிப்படையில் ஆதாரபூர்வமான ஹதீஸ்களை ஏற்க மறுப்பது நபித்துவத்தின் ஒருபகுதியை மறுப்பது போன்ற முக்கிய பிரச்சினையாக நோக்கப்பட வேண்டிய அம்சமாகும். இந்த அடிப்படையில் நாம் அலசப் போகும் அம்சம் அவசியமானதும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததுமாகும் என்பதை வாசகர்கள் முதலில் கவனத்திற் கொள்ள வேண்டும். 

தனிநபர் ஒருவர் மீது கொள்ளும் பற்றும், பாசமும், அவர் செய்த தியாகத்தின் மீதும், புரட்சியின் மீதும் கொள்ளும் காதலும் கண்ணியமும் நபித்துவத்தில் ஒரு பகுதி மறுக்கப்பட்டாலும் பரவாயில்லை என்கின்ற நிலைக்கு எம்மைக் கொண்டு சென்று விடக்கூடாது என்பதற்காகவும், கருத்து விமர்சனம் செய்வது அக்கருத்துடையவரின் கண்ணியத்தை மறுப்பதாகாது என்பதை தெளிவுபடுத்தவுமே இந்த முன்னுரையை வழங்குகின்றோம்.

ஹதீஸ்களை மறுப்போர்:
இஸ்லாமிய வரலாற்றில் ஹதீஸ்களை மறுப்போர் ஆரம்ப காலந்தொட்டே உருவாகி விட்டனர்.

சிலர் ஹதீஸ்களை முழுமையாக மறுக்கின்றனர். இவர்கள் இன்றுவரை “அஹ்லுல் குர்ஆன்” என்ற பெயரில் இயங்கிக் கொண்டிருக்கின்றனர். மற்றும் சிலர் குர்ஆனில் இல்லாத புதிய சட்டங்களைத் தரும் ஹதீஸ்களை மறுத்தனர். மற்றும் சிலர் “ஆஹாத்” எனும் வகை சார்ந்த ஹதீஸ்களில் ஹலால், ஹராம், அகீதா பற்றிப் பேசும் ஹதீஸ்களை மறுத்தனர். மற்றும் சிலர் அல்குர்ஆனுக்கு முரண்படுவதாகத் தோன்றும் ஆதாரபூர்வமான ஹதீஸ்களை மறுத்தனர். ஹவாரிஜ்கள், முஃதஸிலாக்கள் போன்றோர் இந்த வகையில் பல்வேறு ஹதீஸ்களை மறுத்து வந்தனர். நவீனகால அறிஞர்கள் பலரும் இந்தத் தவறில் வீழ்ந்துள்ளனர். முஹம்மத் அல் கஸ்ஸாலி எனும் இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பைச் சேர்ந்த அறிஞர் இவ்வகையில் பல ஹதீஸ்களைப் பகுத்தறிவு ரீதியில் ஆய்வு செய்து மறுத்துள்ளார். பாகிஸ்தான் ஜமாஅதே இஸ்லாமியின் ஸ்தாபகர் அபுல் அஃலா மவ்தூதி (ரஹ்) அவர்கள் குறித்தும் இத்தகைய விமர்சனங்கள் எழுந்துள்ளன. இவ்வாறே முஹம்மத் அப்துஹு போன்ற அறிஞர்களும் பல அறிவிப்புக்களை மறுத்துள்ளனர்.

இவர்களது ஹதீஸ் துறை சார்ந்த இத்தகைய விமர்சனங்கள் பாமர மக்களிடம் எந்தத்தாக்கத்தையும் எற்படுத்தவில்லை. இவர்களை நேசிக்கும் சகோதரர்களும் இவர்களது இத்தகைய கருத்துக்களை மக்கள் மன்றத்திற்குக் கொண்டுவரவில்லை. இவர்கள் சார்ந்த அமைப்பைச் சேர்ந்த பலரும் இவர்களின் இத்தகைய கருத்துக்களின் தாக்கத்திற்குக் கூட உட்படவில்லை. ஆயினும், தமிழ் உலகில் இத்தகைய கருத்துக்கள் பரவலாக பாமரர்கள் மத்தியிலும் கூட இடம் பிடித்ததற்கு இந்தக் கருத்தை முன்வைத்த அறிஞர் பி.ஜெய்னுலாப்தீன் உலவி அவர்களின் தனிப்பட்ட செல்வாக்கே காரணமாகும். 

இவர் கடந்த பல ஆண்டுகளாக குர்அன், சுன்னாவை மிகத் தீவிரமாகப் பிரச்சாரம் செய்துவருபவர். சமூக எதிர்ப்புக்கள் எதையும் கவனத்திற் கொள்ளாது துணிச்சலாக களப்பணி ஆற்றிவருபவர். சுமார் 20 வருடங்களாகத் தொய்வின்றித் தொடராகப் பணியில் ஈடுபட்டு வருபவர். அல்லாஹ் இவருக்கு வழங்கியிருக்கும் அபரிதமான நாவன்மை, வாதம் செய்யும் வலிமை, எதையும் எவரும் புரியும் வண்ணம் இலகுவாக விளக்கும் ஆற்றல் என்பன பாமர மக்களிடம் இவருக்குப் பெருத்த செல்வாக்கை ஏற்படுத்தியுள்ளது.

இதே வேளை வழிகெட்ட காதியானி போன்ற அமைப்புக்களுடன் அவர் விவாதம் செய்தமையும் அவர் நடத்தி வரும் “இஸ்லாம் ஓர் இனிய மர்க்கம்” நிகழ்ச்சியும் தவ்ஹீத் வட்டாரத்தையும் தாண்டி பெரியதோர் இமேஜை அவருக்கு ஏறங்படுத்தியுள்ளது. 

இந்த வகையில் இவரது கருத்துக்கள் உடனுக்குடன் பல்லாயிரம் மக்களைச் சென்றடைகின்றன. இவர் மீது மக்கள் அபரிமிதமான நம்பிக்கை வைத்திருப்பதால் அவர் கூறுவதுதான் சரி என்ற மனநிலைக்குக் கூட பலரும் வந்துள்ளனர். இந்த வகையில் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் பலவற்றை மறுக்கும் இவரது சிந்தனை தமிழ் பேசும் முஸ்லிம்கள் மத்தியில் பரவலாகத் தாக்கம் செலுத்தியுள்ளது. 

எனவே, இது குறித்த மாற்று விளக்கம் ஒன்றை மக்கள் மன்றத்திற்கு வைக்கும் தேவையுள்ளது. இந்த நோக்கத்தில்தான் இக்கட்டுரை வரையப்படுகின்றது.

அன்பான வேண்டுகோள்:
வாசகர்களிடம் அன்பான ஒரு வேண்டுகோளை முன்வைக்கின்றோம். நீங்கள் இந்தக் கட்டுரை முடியும் வரை நிதானமாக நடுநிலையோடு இதனை வாசிக்க வேண்டும். எவ்வளவோ தியாகங்கள் செய்த நபித்தோழர்கள், அறிஞர்கள், இமாம்களின் தவறான கூற்றுக்களைக் கூட மறுக்கத் துணிந்த நாம் ஒரு தனிநபர் அவர் எவ்வளவுதான் சேவை செய்திருந்தாலும் கூட அவரது கருத்துக்கள் தவறாக இருந்தாலும் மறுக்கக் கூடாது எனக் கருதுவது குராபிகளின் மனநிலையை விட மோசமானதாகும். 

எனவே, அவரது கருத்தை மறுக்கலாமா? இவரது கருத்தை மறுக்கலாமா? என மௌனம் காத்து உண்மையை மறைக்க முடியாது என்பதை வாசகர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். எனவே, நடுநிலையோடு முழுமையாக வாசித்து முடிவு செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம். 

புதிய கருத்து
அறிஞர் பி.ஜெய்னுலாப்தீன் 20 வருடங்களுக்கு மேலாக பிரச்சாரம் செய்து வந்தாலும் குர்ஆனுக்கு முரண்படும் ஆதாரபூர்வமான ஹதீஸ்களை மறுக்க வேண்டும் என்ற அவரது நிலையும் அவரது பிரச்சாரமும் அவரிடம் அண்மையில் ஏற்பட்ட மாற்றமாகும் என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆரம்ப காலப் பிரச்சாரத்தில் அவரிடம் இந்த நிலை இருக்கவில்லை. 

அவரது கருத்துக்கள் மறுக்கப்படும் போது அப்போது எதிர்க்காதவர்கள் இப்போது எதிர்க்கிறார்கள் என்றால் மார்க்கத்திற்காக அல்ல தனிப்பட்ட கோபத்திற்காக எதிர்க்கிறார்கள் என்று தப்புப் பிரச்சாரம் செய்யப்படுவதுண்டு. அது தவறு, இவரது இந்தக் கருத்து அவரது புதிய நிலைப்பாடு என்பதைத் தெளிவுபடுத்த வேண்டியுள்ளது.

அத்துடன் பல தவ்ஹீத் அழைப்பாளர்கள் கொள்கையில் இருந்து தடம் புரண்டுவிட்டதாகவும் அவர் மட்டுமே அன்றிலிருந்து இன்று வரை கொள்கையில் தடம் புரளாமல் உறுதியாக இருப்பதாகவும் பேசப்படுகின்றது. இது தவறு. ஹதீஸ் துறையில் அவரிடம்தான் தடம்புரள்வு ஏற்பட்டது என்பதையும் உணர்த்தும் கடமையில் இருப்பதால் இது குறித்து சிறிது விளக்க வேண்டிய அவசியமுள்ளது.

அறிஞர் பி.ஜெய்னுலாப்தீன் அவர்கள் காதியானிகளுடன் ஒரு விவாதம் செய்தார்கள். அந்த விவாதத்தின் மூலம் தமிழ் உலகில் காதியானிகளின் கொட்டம் அடக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ். இதற்காக அவருக்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளோம். இந்தக் காதியானிகளுடன் விவாதம் தொடர்பாகக் கடிதப் பரிமாற்றம் நடந்தது. அந்தக் கடிதங்கள். ‘காதியானிகளின் கல்லறைப் பயணம்’ என்ற தலைப்பில் 1988 அக்டோபர் அல் ஜன்னத் இதழுடன் இணைத்து வெளியிடப்பட்டது.

அப்போது காதியானிகள் இப்போது இவர் இருக்கும் நிலைப்பாட்டில் தான் இருந்தனர். அவர்கள் குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களை ஏற்க முடியாது என எழுத அதை மறுத்து பி.ஜெய்னுலாப்தீன் அவர்கள் பல இடங்களில் எழுதியிருக்கின்றார்கள்.
உதாரணமாக:
ஆதாரபூர்வமான ஸனதுகளுடன் உள்ள ஹதீஸ்கள் என்று ஏற்கப்படும் ஹதீஸ்களை எக்காரணம் கொண்டும் மறுக்கக் கூடாது.
இவ்வாறே 27-05-1988 தேதியிட்ட கடிதத்தில் இரண்டாவது அம்சமாக “திருக்குர்ஆனுக்கு ஹதீஸ் முரண்படும்” என்ற உங்கள் கூற்று ஏற்க முடியாது. ஆதாரபூர்வமான எந்த ஹதீஸையும் மறுக்கவே கூடாது என்பது எங்களின் நிலை. திருக்குர்ஆனுடன் எந்த ஆதாரபூர்வமான ஹதீஸ்களும் முரண்படுகின்றது என்று நீங்கள் கூறினால் முரண்படவில்லை என நாம் நிரூபிப்போம்………..” என்று குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு அந்தக் கடிதங்களில் பல இடங்களில் குர்ஆனுக்கு ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் முரண்படாது. சுமார் 50 ஹதீஸ்கள் அளவில் முரண்போல் தோன்றும் ஆனால் முரண் இல்லை என்று தான் அன்று கூறிவந்தார்.

இவ்வாறே 2001 ல் பி.ஜெய்னுலாப்தீன் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்ட சுனன் திர்மதி வெளியிடப்பட்டது. இந்த மொழிபெயர்ப்பில் ‘அல்குர்ஆனும் ஆதாரபூர்வமான நபிமொழிகளும்’ என்ற தலைப்பில் முழுமையாக ஹதீஸ்களை மறுப்பவர்களுக்கு அழகானதொரு மறுப்பை பி.ஜெய்னுலாப்தீன் அவர்கள் அளித்துள்ளார்கள்.

அதிலே ஹதீஸை மறுப்பவர்கள் நான்கு பிரதான காரணங்களை முன்வைத்து ஹதீஸ்களை மறுப்பவர்கள் குறிப்பிடுகின்றார்கள். அவையாவன:
1. ஹதீஸ்களில் முரண்பாடுகள் உள்ளன.
2. குர்ஆனுடன் ஹதீஸ்கள் முரண்படுகின்றன.
3. ஹதீஸ்களைப் பின்பற்ற வேண்டுமென்று கூறுவோர் பல கூறுகளாகப் பிரிந்து விட்டனர்.
4. குர்ஆனைப் போல் ஹதீஸ்கள் பாதுகாக்கப்படவில்லை.
என்றெல்லாம் காரணங்கள் கூறியே ஹதீஸ்களை நிராகரிக்கச் சொல்கின்றனர்.
ஹதீஸ்களைப் புறக்கணிக்க வேண்டும் என்பதற்கு இவர்கள் கூறும் இந்தக் காரணங்களை குர்ஆன் விசயத்திலும் கூற இயலும். இது பற்றி இங்கு விரிவாக அலசுவோம் என்று தொடர்கிறது அவ்விளக்கம். (சுனன் திர்மிதி நூல் அறிமுகம் A25)
மொத்தமாக ஹதீஸ்களை மறுப்பதற்குக் கூறப்பட்ட நான்கு காரணங்களில் மூன்றாவது காரணம் தவிர மற்றைய மூன்று காரணங்களையும் கூறி இன்று பி.ஜெய்னுலாப்தீன் அவர்கள் ஆதாரபூர்வமான ஹதீஸ்களை மறுக்கின்றார்.
இதில் அச்சப்பட வேண்டிய மற்றுமொரு அம்சமுண்டு. இந்த குறைகளைக் குர்ஆன் விசயத்திலும் கூற முடியம் என்று வேறு குறிப்பிட்டுள்ளார்கள். இது ஹதீஸுடன் மட்டும் நிற்குமா? குர்ஆனுக்கும் தாவுமா? என்று அச்சப்பட வேண்டியுள்ளது. இவர் இவ்வளவுடன் நின்று கொண்டாலும் இவருக்குப் பின்னால் இதே அடிப்படையில் வருபவர் குர்ஆன் விசயத்திலும் கூட ஐயம் எழுப்ப வாய்ப்புள்ளதையே இது எடுத்துக் காட்டுகின்றது. 

இதுவரை நாம் குறிப்பிட்டதிலிருந்து குர்ஆனுக்கு முரண்படும் ஆதாரபூர்வமான ஹதீஸ்களை மறுக்க வேண்டும் என்ற அவரது தவறான நிலைப்பாடு 2002க்குப் பின்னர்தான் அவரிடம் எற்பட்ட கொள்கைத் தடம்புரள்வே தவிர இருபது வருட பிரச்சாரத்தில் கிடையாது என்பதைப் புரிந்திருப்பீர்கள்.

அடுத்தாக ஆரம்பத்தில் குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களை மட்டும் குர்ஆனைப் பாதுகாப்பதற்காக மறுக்க வேண்டும் எனக் கூறியவர்கள் பின்னர் விஞ்ஞானத்திற்கு முரண்படுகிறது என்ற காரணத்தினாலும் ஹதீஸ்களை மறுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மறுக்கப்படும் ஹதீஸ்

சூனியம்:
தமிழ் உலகில் நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதாக வரும் ஆதாரபூர்வமான ஹதீஸே முதலில் மறுக்கப்பட்டது. பின்னர் அதற்கு விமர்சனம் எழுந்ததால் அதை நியாயப்படுத்த இன்னும் பல ஹதீஸ்கள் மறுக்கப்பட்டன.

ஆரம்பத்தில் பி.ஜெய்னுலாப்தீன் அவர்கள் பில்லி சூனியம் என்ற பெயரில் 2:102 வசனத்திற்கு விளக்கமாக ஒரு கட்டுரையை எழுதினார்கள். பின்னர் அது பில்லி சூனியம் என்ற பெயரில் தனிப் புத்தகமாக வெளிவந்தது.

அப்போது சூனியம் இருக்கின்றது. ஆனால் அதன் மூலம் நினைத்ததையெல்லம் செய்ய முடியாது. அல்லாஹ்வுடைய நாட்டம் இருந்தால் அதன் மூலம் பாதிப்பு ஏற்படும். சூனியத்தின் அதிகபட்ச பாதிப்பு கணவன்-மனைவிக்கிடையில் பிரிவை ஏற்படுத்துவது போன்ற கருத்துக்களை முன்வைத்து நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதைச் சரிகண்டு எழுதியிருந்தார். நபியவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதால் அவரது தூதுத்துவத்தில் அது எந்தப் பாதிப்பையும் எற்படுத்தவில்லை என்றும் எழுதியிருந்தார்.

பின்னர் நபி(ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டதாக வரும் ஹதீஸை பல்வேறு வாதங்களை முன்வைத்து மறுத்து வருகின்றார். அதேவேளை சூனியம் என்று ஒன்றில்லை. சூனியத்திற்கு எந்தத் தாக்கமுமில்லை என்று நேரடியாக குர்ஆனுக்கு முரணாகவே எழுதியும் பேசியும் வருகின்றார். இதைப் பார்க்கும்போது ஹதீஸ்கள் கூட குர்ஆனுக்கு முரண் என்பதற்காக அல்லாமல் தனது பகுத்தறிவிற்கு முரண்படுகிறது என்பதற்காகத்தான் மறுக்கப்பட்டு வருகின்றதோ என்ற ஐயம் எழுகின்றது. எனவே, முதலில் சூனியம் என்றதொன்று இருக்கின்றது. குர்ஆன் கூறும் சூனியம் வெறும் மெஜிக் அல்ல என்பது குறித்து நாம் தெளிவு பெறவேண்டியுள்ளது. அதன் பின்னர் நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்ட ஹதீஸ் சம்பந்தப்பட்ட வாதங்களையும் நோக்கலாம். 

அல்குர்ஆனும் சூனியமும்

அல்குர்ஆனில் சூனியம் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட பல பதங்களைக் காணலாம் “ஸிஹ்ரு” என்ற பதம் சுமார் 12 இடங்களிலும் “அஸ்ஸிஹ்ரு” 6 இடங்களிலும் “அஸ்ஸஹரது” என்பது 8 இடங்களிலும் “ஸாஹிர்” (சூனியக்காரன்) என்பது 7 இடங்களிலும் “அஸ்ஸாஹிர்” என்பது 2 இடங்களிலும் “அஸ்ஸாஹிரூன்” என்பது 1 இடத்திலும் “மஸ்ஹூரா” என்பது 3 இடங்களிலும் “அல்முஸஹ்ஹரீன்” என்பது 2 இடங்களிலும் இடம்பெற்றுள்ளன. 

இல்லாத ஒன்றைத்தான் அல்குர்ஆனில் இத்தனை இடங்களில் அல்லாஹ் குறிப்பிட்டுள்ளானா? 

சூனியம் பற்றி 2:102 வசனம் மிக விரிவாகப் பேசுகின்றது. அந்த வசனத்தின் அடிப்படையான சில அம்சங்களை இங்கே நோக்குவோம்.

‘(யூதர்களான) அவர்கள், சுலைமானின் ஆட்சியில் ஷைத்தான்கள் ஓதியதைப் பின்பற்றினர். சுலைமான் நிராகரிக்க வில்லை. மாறாக, ஷைத்தான்களே நிராகரித்து, மனிதர்களுக்கு சூனியத்தையும், பாபிலோனில் ‘ஹாரூத், மாரூத்’ என்ற இரு வானவர்கள் மீது இறக்கப்பட்டதையும் கற்றுக்கொடுத்தனர். ‘நாம் சோதனையாக இருக்கின்றோம். (இதனைக் கற்று) நிராகரிப்பாளனாக நீ ஆகிவிடாதே’ என்று அவ்விருவரும் கூறாது எவருக்கும் கற்றுக் கொடுத்ததில்லை. அவ்விருவரிடமிருந்தும் கணவன் மனைவிக்கிடையில் பிரிவினையை உண்டு பண்ணக் கூடியதைக் கற்றுக் கொண்டனர். அவர்கள் இதன் மூலம் அல்லாஹ்வின் அனுமதியின்றி ஒருவருக்கும் தீங்கிழைக்கக் கூடியவர்களாக இல்லை. அவர்கள் தங்களுக்கு எவ்விதப் பயனும் அளிக்காத, தங்களுக்குத் தீங்கிழைப்பதையே கற்றுக் கொண்டனர். மாறாக யார் இதை விலைக்கு வாங்குகிறாரோ அவருக்கு மறுமையில் எந்தப் பங்கும் இல்லை என்பதை உறுதியாக அவர்கள் அறிந்து வைத்திருக்கின்றனர். அவர்கள் அறிபவர்களாக இருந்தால், எதற்காகத் தம்மை விற்றார்களோ அது மிகவும் கெட்டதாகும். (அல்குர்ஆன் 2:102)

1. சூனியத்தைக் கற்றுக்கொடுப்பது நிராகரிப்பை எற்படுத்தும். ஏனெனில் ஷைத்தான் மனிதர்களுக்குச் சூனியத்தைக் கற்றுக் கொடுத்ததினால் காபிர்களானதாக இந்த வசனம் கூறுகின்றது.

2. சூனியத்தைக் கற்பதும் குப்ராகும். ஏனெனில், ஹாரூத், மாரூத் இருவரும் தம்மிடம் சூனியத்தைக் கற்க வருபவாகளிடம் நாங்களே சோதனையாக இருக்கின்றோம் நீங்கள் நிராகரித்து விடாதீர்கள் என்று கூறியுள்ளனர்.

3. அதன் மூலம் கணவன்-மனைவிக்கிடையே பிரிவினை உண்டுபண்ண முடியும்.

4. அதில் தீங்கு உண்டு. ஆனால் அல்லாஹ்வின் அனுமதியின்றி அவர்களால் யாருக்கும் எந்தத் தீங்கையும் சூனியத்தின் மூலம் செய்ய முடியாது.

5. சூனியத்தைக் கற்பது நன்மையளிக்காது. தீங்குதான் விளைவிக்கும்.

6. தங்களை விற்று சூனியத்தை வாங்கிக் கொண்டவர்களுக்கு மறுமையில் அழிவே.

இத்தகைய அடிப்படை அம்சங்களை இந்த வசனம் கூறுகின்றது. சூனியத்தின் மூலம் கணவன்-மனைவிக்கிடையே பிரிவினை உண்டுபண்ண முடியும் அல்லாஹ் நாடியால் அதன் மூலம் தீங்கு உண்டாகும் என்று தெளிவாகக் குர்ஆன் கூறும்போது பகுத்தறிவு வாதத்திற்கு குர்ஆனைவிட கூடுதல் முக்கியத்துவமளித்து சூனியத்தை முழுமையாக மறுக்கலாமா? 

சூனியத்திற்கு கோல்மூட்டுதல் என்று மொழியாக்கம் சொன்னால் கோல்மூட்டுவதற்காக யாராவது வகுப்பு வைப்பார்களா? அதைப் படிக்க மக்கள் போவர்களா? “ஸிஹ்ரு” என்பதற்கு மெஜிக் என அர்த்தம் செய்தால்
மெஜிக் பார்த்தால் கணவன்-மனைவிக்கிடையே பிளவு வருமா? மெஜிக்கைக் கற்பதும் கற்றுக் கொடுப்பதும் குப்ராகுமா?

மெஜிக் தான் சூனியம் என்றால் உங்களது மாநாடுகளில் மந்திரமா? தந்திரமா நிகழ்ச்சியிலே மெஜிக் கற்றுக் கொடுக்கப்படுகின்றதே இலட்சக் கணக்கில் மக்களைச் சேர்த்து மெஜிக்கைக் கற்றுக் கொடுத்து நீங்களும் காபிராகி அவர்களையும் காபிராக்கி அனுப்புகின்றீர்களா? சூனியத்தைச் ஷைத்தான் கற்றுக் கொடுத்ததாக குர்ஆன் கூறுகின்றது. சூனியம் என்பது மெஜிக்கைக் குறிக்கும் என்றால் அதைக் கற்றுக் கொடுக்கும் நீங்கள் யார்? ஏழு பெரும் பாவங்களைத் தவிர்ந்து கொள்ளுமாறு நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்களே! அதில் இரண்டாவதாக சூனியத்தைக் குறிப்பிட்டுள்ளார்கள். சூனியம் என்றால் மெஜிக் எனில், மெஜிக் பெரும் பாவமா? அந்தப் பெரும்பாவத்தைத்தான் இலட்சக் கணக்கானவர்களைச் சேர்த்து வைத்து நீங்கள் செய்கின்றீர்களா? 

நபி(ஸல்) அவர்கள் தவிர்ந்து விலகிக் கொள்ளுமாறு சொன்ன சூனியத்தை – மெஜிக்கை – நீங்கள் மாநாட்டில் செய்து நபி வழியை மீறுகின்றீர்களா? இவ்வாறெல்லாம் கேள்வி எழுப்பும்போது ஸிஹ்ரு – சூனியத்திற்கு மெஜிக் என புதிய மாற்று விளக்கம் கொடுப்பது ஏற்க முடியாதது என்பது தெளிவாகப் புலனாகும்.

இந்த வசனம் மிகத் தெளிவாக சூனியம் இருப்பதையும் அல்லாஹ் நாடினால் அதற்குத் தாக்கம் உண்டு என்பதையும் வெளிப்படையாகவே கூறுகின்றது. இதில் குர்ஆனையும் ஏற்றுக் கொள்பவர்களுக்கு இரண்டாம் கருத்துக்கு எள்ளளவும் இடமில்லை. 

மனோ இச்சையையும் பகுத்தறிவையும் வழிப்பட்ட முஃதஸிலாக்கள் போன்றவர்களே சூனியத்தை மறுத்திருக்கின்றனர். இது தொடர்பாக இன்னும் பல விளக்கங்களை நாம் பெற வேண்டியுள்ளது. 

இக்கட்டுரையை நிதானமாக நடுநிலையோடு வாசியுங்கள். சத்தியத்தை விட தனிநபரை நேசிக்கும் வழிகேட்டிலிருந்து விடுபட்டு வாசியுங்கள். கட்டுரைத் தொடர் முடியும் வரை முடிவு எடுக்காது உண்மையைத் தேடும் உணர்வுடன் வாசியுங்கள். சூனியம் இருக்கின்றது என்று நாம் கூறுவதை சூனியம் சம்பந்தமாக நடைபெறும் ‘ஷிர்க்’குகளையோ மூட நம்பிக்கைகளையோ நாம் ஆதரிக்கிறோம் என்று அர்த்தப்படுத்திக் கொள்ளாதீர்கள். இங்கு சூனியம் என்ற அம்சத்தை விட ஹதீஸ் மறுக்கப்படுவது என்ற அம்சமே பிரதானமானது என்பதைக் கவனத்திற் கொள்ளுங்கள். தர்க்கவியல் வாதங்களை விட பகுத்தறிவு கேள்விகளை விட ஹதீஸ் உயர்வானது என்ற இஸ்லாத்தின் அடிப்படையில் நின்று வாசியுங்கள்.

இதுவரை இதழில் தமிழ் உலகில் ஆதாரபூர்வமான ஹதீஸ்களை மறுக்கும் சிந்தனை பாமர மக்கள் மத்தியிலும் பரவலாகச் செல்வாக்குப்பெற்று வருவது குறித்தும், அதற்கு அடிப்படைக் காரணமாக அமைந்த சகோதரர் பி.ஜெய்னுலாப்தீன் அவர்களின் ஆற்றல்கள், வாத-வலிமை குறித்தும் பார்த்தோம். அத்துடன் இந்தச் சிந்தனை இவரிடம் அண்மையில் ஏற்பட்ட கொள்கைத் தடுமாற்றம் என்பது குறித்தும் ஆரம்பத்தில் இவர் இக்கருத்துக்கு மாற்றமாக எழுதி வந்ததையும் குறிப்பிட்டோம். அத்துடன் (2:102) வசனம் சூனியம் இருப்பதை உறுதி செய்கின்றது என்பது குறித்தும் சூனியத்திற்கு Magic எனப் பொருள் கொள்ள முடியாது என்பது குறித்தும் தெளிவாக நோக்கினோம். இந்த இதழில் அதன் தொடராக சூனியம் இருக்கிறது என்பதற்கான ஆதாரங்கள் சிலவற்றைப் பார்த்து விட்டு நபி(ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்ட ஹதீஸை மறுப்பதற்காக வைக்கப்படும் வாதங்களின் போலித்தன்மையை விரிவாக விளங்க முயற்சிப்போம்.

சூனியம் பற்றி விரிவாகப் பேசும் 2:102 வசனத்திற்கு அர்த்தம் செய்யும் போது பி.ஜெய்னுலாப்தீன் அவர்கள் மொழிபெயர்ப்பில் மிகப் பெரிய தவறிழைத்துள்ளார் என்பதை அறிந்த பின்னர்தான் இது குறித்து எழுதுவதும், பேசுவதும் மார்க்கக் கடமை என்ற உணர்வைப் பெற்றோம்.

“அல்ஜன்னத்” மாத இதழில் பி.ஜெய்னுலாப்தீன் அவர்கள் தொடராக குர்ஆன் விளக்கவுரை எழுதி வந்தார். குறிப்பாக குதர்க்கவாதிகளும், குழப்பவாதிகளும், இஸ்லாத்தின் எதிரிகளும் தவறாக விளக்கம் கொள்ளும் பல்வேறுபட்ட வசனங்களுக்குத் தெளிவான விளக்கங்களை வழங்கி வந்தார். அதில் 2:102 வசனமும் ஒன்றாகும். பில்லி-சூனியம் என்ற பெயரில் இக்கட்டுரை இடம்பெற்றது. அதன் பின் அது தனி நூலாகவும் வெளிவந்தது. இதன் பின்னர் 1995 இலும், 1997 இலும் இக்கட்டுரைகள் “திருக்குர்ஆன் விளக்கம்” என்ற பெயரில் தனி நூலாக வெளிவந்தது. அந்த நூலில் “ஸிஹ்ர்” எனும் சூனியக்கலை பற்றி மூன்று விதமான அபிப்பிராயங்கள் முஸ்லிம் அறிஞரிடையே நிலவுகின்றன. 

“ஸிஹ்ர்” என்று ஒன்று கிடையாது. அதனால் எந்த விதமான பாதிப்பையும் ஏற்படுத்த முடியாது.

“ஸிஹ்ர்” என்ற கலை மூலம் எது வேண்டுமானாலும் செய்யமுடியும். எத்தகைய பாதிப்பையும் ஏற்படுத்த முடியும்.

“ஸிஹ்ர்” எனும் ஒரு கலை உண்டு, அதன் மூலம் நினைத்ததையெல்லாம் செய்ய முடியாவிட்டாலும் சில பாதிப்புக்களை ஏற்படுத்த முடியும்.

இப்படி மூன்று விதமான அபிப்பிராயங்கள் நிலவுகின்றன. அவற்றில் முதலிரண்டு அபிப்பிராயங்களும் தவறானவை. மூன்றாவது அபிப்பிராயம் சரியானது என்பதை இவ்வசனம் விளக்குகின்றது.

கணவன்-மனைவியரிடையே பிரிவை உண்டாக்கும் செயலை அவ்விருவரிடமிருந்தும் மக்கள் கற்றுக்கொண்டார்கள். “ஸிஹ்ர்” எனும் கலை மூலம் எதுவுமே செய்ய முடியாது என்றிருந்தால், “கணவன்-மனைவியரிடையே பிளவை ஏற்படுத்தும்” என்று இறைவன் கூறியிருக்க மாட்டான் என்று பில்லி-சூனியம் பற்றி இஸ்லாத்தின் சரியான கண்ணோட்டத்தை விபரித்துச் செல்கிறார்.
(பார்க்க: “திருக்குர்ஆன் விளக்கம்” 1997, பக்:86-87)

இந்த சரியான நிலையில் அவர் இருக்கும் போது, அவர் எழுதிய “அல்ஜன்னத்” மாத இதழ் கட்டுரையிலும், “பில்லி-சூனியம்” என்ற தனி நூலிலும், “திருக்குர்ஆன் விளக்கவுரை” என்ற நூலிலும் 2:102 வசனத்திற்குச் செய்த மொழிபெயர்ப்பு, அவரது பிற்பட்ட தற்போதைய மொழிபெயர்ப்புக்கு முரண்படுகின்றது.

‘அல்லாஹ்வின் கட்டளையின்றி அவர்கள் எவருக்கும் எத்தகைய தீங்கும் (இதன் மூலம்) இழைக்க முடியாது.’ (“திருக்குர்ஆன் விளக்கம்” பக்:71)

இதன் மூலம், அதாவது சூனியத்தின் மூலம் சூனியக்காரர்கள் அல்லாஹ்வின் அனுமதியின்றி யாருக்கும் எந்தத் தீங்கும் செய்ய முடியாது என்கிறான். சூனியத்தின் மூலம் அல்லாஹ்வின் நாட்டம் இன்றி தீங்கிழைக்க முடியாது எனும் போது, அல்லாஹ் நாடினால் சூனியத்தின் மூலம் பாதிப்பு ஏற்படும் என்பதை இந்த வசனம் தெளிவாகக் கூறுகின்றது. எனினும், சூனியம் குறித்த சரியான நிலைப்பாட்டில் இருக்கும் போது வசனத்தை முழுமையாக மொழியாக்கம் செய்த பி.ஜெய்னுலாப்தீன் அவர்கள், தமது அல்குர்ஆன் மொழிபெயர்ப்பில், “பிஹி ” (அதன் மூலம், அதாவது சூனியத்தின் மூலம்) என்ற வார்த்தையையே மொழியாக்கம் செய்யாது விட்டு விட்டார்.

‘அல்லாஹ்வின் விருப்பமின்றி யாருக்கும் எந்தத் தீங்கும் அவர்களால் செய்யமுடியாது’ (2:102) – பி.ஜெய்னுலாப்தீன் தர்ஜுமா
இது தெரியாமல் நடந்தது என்று கூறலாமா? (அப்படி நடந்திருந்தால் அல்லாஹ் மன்னிக்கட்டும்) ஆரம்பத்தில் பல தடவை இந்த இடத்தைச் சரியாக மொழியாக்கம் செய்தவர் கருத்து மாறிய பின் ஒரு பதத்தையே தவற விடுகின்றார் என்றால்(?) வேண்டுமென்று விட்டிருக்கவே அதிக வாய்ப்புள்ளது.

தனது கருத்துக்கு மாற்றமாக இருக்கின்றது என்பதற்காக ஒரு சொல்லை விட்டு மொழிபெயர்க்கும் அளவுக்குப் பகுத்தறிவுவாதம் எல்லை தாண்டி விட்டதா? என்று சிந்தித்த போதுதான் மாற்றுக் கருத்தை மக்களிடம் வைக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தோம்.

இது தெரியாமல் நடந்த மொழி பெயர்ப்புத் தவறு என்றால், இத்தனை பதிப்புக்களிலும் எப்படித் திருத்தப்படாமல் விடப்பட்டது? எதையும் நுணுக்கமாக ஆய்வு செய்யும் பி.ஜெய்னுலாப்தீன் அவர்களின் ஆய்வுக் கண்ணுக்கு எப்படி அது தென்படாமல் போனது!? தர்ஜுமா குறித்த விமர்சனங்கள் எழுவதால் பி.ஜெய்னுலாப்தீன் தர்ஜுமாவை நுணுக்கமாக மீண்டும் மீண்டும் பார்த்திருக்க வேண்டும்!! அவருக்கோ, அவரது குழு ஆலிம்களுக்கோ இது எப்படித் தென்படாமல் போனது?

இமாம்களினதும், வழிகெட்ட பல பிரிவினர்களினதும் நூற்களை நுணுக்கமாக ஆராய்ந்து அவற்றில் உள்ள தவறுகளை அக்குவேறு-ஆணிவேறாக விபரிக்கும் பி.ஜெய்னுலாப்தீன் அவர்கள், தனது தர்ஜுமாவின் தவறு குறித்து கண்டுகொள்ளாதிருப்பது நியாயமா? தர்ஜுமாவில் ஏற்பட்ட தவறுகள் சிலவற்றை பி.ஜெய்னுலாப்தீன் திருத்தியுமுள்ளார்.

உதாரணமாக, 38:31 என்ற வசனத்தின் மொழிபெயர்ப்பில் ஆரம்பத்தில் بالعشي “பில் அஷிய்யி” (மாலையில்) என்ற சொல் இடம்பெற்றிருக்கவில்லை. பின்னர் வந்த பதிப்பில் அந்தத் தவறு திருத்தப்பட்டுள்ளது. முந்திய பிரதிகளை எடுத்தவர்கள் குர்ஆன் மொழிபெயர்ப்பில் ஒரு சொல் விடுபட்ட நிலையில்தான் குர்ஆனைப் புரிந்துகொள்வார்கள். இந்தத் தவறு திருத்தப்பட்டது ஊன்றிக் கவனிப்பவர்களைத் தவிர வேறு எவருக்கும் தெரியவராது. அடுத்தவர்களின் நூற்களில் காணப்படும் குறைகளை விளக்க நூற்கள், மாநாடுகள், பொதுக் கூட்டங்கள், தொடர் கட்டுரைகள் எனப் பல ஏற்பாடுகளைச் செய்யும் இவருக்கு இந்த வசனத்தில் விடப்பட்ட தவறு தற்செயலானது அல்ல என்றே எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது.

மூஸாவும், சூனியக்காரர்களும்:
மூஸா(அலை) அவர்களுக்கும், சூனியக்காரர் களுக்குமிடையில் பிர்அவ்ன் போட்டி வைக்கின்றான். அந்தப் போட்டி நிகழ்ச்சி சூனியம் என்று ஒரு கலை இருக்கின்றது அதன் மூலம் சில பாதிப்புக்களை அல்லாஹ் நாடினால் ஏற்படுத்த முடியும் என்பதை மிகத் தெளிவாகவே எடுத்துக் காட்டுகின்றது. 

அந்த சூனியக்காரர்கள் போட்டிக்கு வந்த போது அவர்களது சூனியத்தின் காரணமாக அவர்கள் போட்ட கயிறுகளும், தடிகளும் ஓடும் பாம்புகள் போன்று போலித் தோற்றமளித்ததாக அல்லாஹ் கூறுகின்றான்.

”நீங்கள் போடுங்கள்” என அவர் கூறினார். அவர்கள் போட்ட போது, மக்களின் கண்களை மயக்கி, அவர்களை அச்சமுறச் செய்தனர். இன்னும், பெரும் சூனியத்தை அவர்கள் கொண்டு வந்தனர். (7:116)

அடைப்புக்குறிப் பயன்பாட்டுப் பிழை:
சூனியக்காரர்கள் வித்தைகளைப் போடவில்லை. அவர்கள் கயிறுகளையும், தடிகளையும்தான் போட்டார்கள் என்பது தெளிவாகவே குர்ஆனில் கூறப்படுகின்றது.

‘அ(தற்க)வர், ‘இல்லை, நீங்கள் போடுங்கள்’ என்றார். அப்போது அவர்களது கயிறுகளும், அவர்களது தடிகளும் அவர்களுடைய சூனியத்தின் காரணமாக ஊர்ந்து வருவதைப் போல அவருக்குத் தோற்றமளித்தன.’ (20:66)

”நீங்கள் போடக்கூடியதைப் போடுங்கள்” என்று மூஸா அவர்களிடம் கூறினார்.
‘உடனே அவர்கள் தமது கயிறுகளையும் தமது தடிகளையும் போட்டனர். ‘பிர்அவ் னின் கண்ணியத்தின் மீது சத்தியமாக, நிச்சயமாக நாமே வெற்றியாளர்கள்’ என்றும் கூறினர்.’ (26:43-44)

எனவே, “அவர்கள் போட்ட போது” என்பதற்கு அடைப்புக்குறி போடவேண்டும் என்றால், “அவர்களது கயிறுகளையும், தடிகளையும் போட்ட போது” என்றே அடைப்புக்குறி போடவேண்டும். அதற்கு மாற்றமாகத் தனது கருத்தின் பக்கம் மக்கள் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் (வித்தைகள்) என பி.ஜெய்னுலாப்தீன் தனது தர்ஜுமாவில் அடைப்புக்குறி போட்டிருப்பது மற்றுமொரு தவறு என்று கூறலாம்.

”நீங்களே போடுங்கள்” என்று மூஸா கூறினார். அவர்கள் (தமது வித்தைகளைப்) போட்ட போது, மக்களின் கண்களை வயப்படுத்தினார்கள்.
(7:116) – பி.ஜெய்னுலாப்தீன் தர்ஜுமா
அல்குர்ஆன் தெளிவாகவே கயிறுகளையும் தடிகளையும் என்று கூறும்போது வித்தைகளைப் போட்டதாக வித்தியாசமான அடைப்புக்குறி எதற்கு?

சூனியம் மெஜிக் அல்ல:
அ(தற்க)வர், ”இல்லை, நீங்கள் போடுங்கள்” என்றார். அப்போது அவர்களது கயிறுகளும், அவர்களது தடிகளும் அவர்களுடைய சூனியத்தின் காரணமாக ஊர்ந்து வருவதைப் போல அவருக்குத் தோற்றமளித்தன. அப்போது மூஸா தனக்குள் அச்சத்தை உணர்ந்தார்.’ (20:66-67)

சூனியக்காரர்கள் கயிறுகளையும், தடிகளையும்தான் போட்டார்கள் அவர்கள் Magic செய்யவில்லை. Magic என்பது வெறும் தந்திரமாகும். Magic செய்வதென்றால் கயிற்றையும் வைத்திருக்க வேண்டும், பாம்பையும் வைத்திருக்க வேண்டும். கயிற்றைக் காட்டி விட்டுப் பாம்பைப் போடவேண்டும். கயிற்றைப் பாம்பாக்கியதாக மக்களை நம்பவைக்க வேண்டும். இவ்வாறுதான் Magic செய்வோர் ஒன்றும் இல்லாத(?) பெட்டிக்குள்ளிருந்து முயல், புறா போன்றவற்றை எடுக்கின்றனர்.

ஆனால் இவர்கள் கயிற்றையும், தடியையும் போட்டனர். அது வெறும் கயிறும், தடியும்தான். எனினும் அவர்களின் சூனியத்தின் காரணமாக மூஸா நபிக்கும், அந்த ஒட்டுமொத்த மக்களுக்கும் ஓடும் பாம்பு போல் போலித் தோற்றத்தை ஏற்படுத்தியது. இது அவர்களின் சூனியத்தின் மூலம் நிகழ்ந்ததாக குர்ஆன் குறிப்பிடுகின்றது.

இந்த நிகழ்ச்சி சூனியத்திற்கு ஒரு தாக்கம் உள்ளது என்பதை மிகத் தெளிவாகவே கூறுகின்றது! குர்ஆனை நம்பும் யாரும் சூனியத்தை இல்லை என்று கூறமுடியாது.

அல்லாஹ் நாடினால் சூனியத்தின் மூலம் இல்லாததை இருப்பது போன்ற போலி தோற்றத்தை ஏற்படுத்தலாம்.

கணவன்-மனைவிக்கிடையே பிளவை உண்டுபண்ணலாம்.
அல்லாஹ் நாடினால் அதன் மூலம் சூனியக்காரர்கள் பிறருக்குச் சில தீங்குகளை ஏற்படுத்தலாம் எனக் குர்ஆன் மிகத் தெளிவாகவே கூறுகின்றது.

குர்ஆனின் இந்த நிலைப்பாடு தனது பகுத்தறிவுக்குச் சரியாகப் படவில்லை அல்லது முறையாகப் புலப்படவில்லை என்பதற்காக சூனியமே இல்லை என்று மறுப்பது குப்ரை ஏற்படுத்தும் என்பதைச் சகோதரர்கள் கவனத்திற்கொண்டு இந்த வழிகேட்டிலிருந்து தம்மைத் தற்காத்துக்கொள்ளக் கடமைப்பட்டுள்ளனர். இதுவரை நாம் குறிப்பிட்டவை சூனியம் என்று ஒன்று உண்டு. அதன் மூலம் நினைத்ததையெல்லாம் செய்ய முடியாவிட்டால் கூட கணவன்-மனைவிக்கிடையே பிரிவினையை ஏற்படுத்தலாம். மனதில் மாயத் தோற்றத்தை ஏற்படுத்த முடியும். அல்லாஹ் நாடினால் சில தீங்குகளை ஏற்படுத்த முடியும் எனக் குர்ஆன் கூறுகின்றது. இப்படி இருக்க நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப் பட்டதாகக் கூறும் ஹதீஸ் எப்படிக் குர்ஆனுக்கு முரண்பட்டதாக இருக்கமுடியும்?

குர்ஆனுக்கு முரண்படுகின்றது என்று போலிக் காரணம் கூறி, பகுத்தறிவுக்கு முரண்படும் காரணத்தால் மறுக்கப்படும் சூனியம் பற்றிய ஹதீஸ் குறித்து செய்யப்படும் வாதங்களுக்கான விரிவான பதில்களைத் தொடர்ந்து நோக்குவோம்.

குர்ஆனுக்கு முரண்படும் ஆதாரபூர்வமான ஹதீஸ்களை மறுக்க வேண்டும் என்ற ஆய்வாளர் PJ-யின் நிலைப்பாடு, முன்னர் சூனியம் இருக்கிறது, நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது என்ற ஹதீஸை சரிகண்டேன். எனினும், மறு ஆய்வில் அது தவறு என்பதைப் புரிந்துகொண்டேன் என்ற விபரம் சொல்லப்படவேண்டும்.’ ஆனால், அப்படி எதையுமே சொல்லாமல் பில்லி-சூனியம் என்ற இரு புத்தகங்களும் ஒன்றுக்கு ஒன்று நேர்-முரணான கருத்தைத் தருகின்றன. இது நியாயம்தானா? மார்க்கத்தைத் தெளிவாகவும், துணிவாகவும், ஒழிவு-மறைவின்றியும் சொல்கிறார் என்பதற்காகத்தானே இவர் மீது பாசம் வைத்தோம்ள, அவரை நேசித்தோம். இவர் மீதுள்ள பாசத்தால் பலரைக் கோபித்தோம்.

நோன்பு துறக்கும் போது “தஹபல்லமஉ” துஆ ஓதவேண்டும் என ஆரம்பத்தில் கூறினோம். பின்னர், அந்த ஹதீஸ் பலவீனமானது என்று தெரிந்ததும் நாம் முன்னர் கூறியது தவறு என்று PJ பகிரங்கமாக அறிவித்தது போன்று சூனியம் பற்றி அறிவிக்காமல் ஏன் மாற்றம் மட்டும் கொண்டுவரப்பட்டது!

PJ-இன் இரண்டாவது சூனிய நூல், PJ அவர்களின் அல்குர்ஆன் தர்ஜமா விளக்கக் குறிப்பு இல-357 இன் மறுவடிவமாகும். தற்போது நாம் கையில் வைத்திருக்கும் நூல் 2005 ஆகஸ்டில் வெளியான மூன்றாவது பதிப்பாகும். தர்ஜமா குறிப்புடன் சில பின்னிணைப்புக்களைச் சேர்த்துள்ளார். (அந்த இணைப்பில் பல அகீதா ரீதியான தவறுகள் இருக்கின்றன. இந்த மறுப்பின் இறுதியில் அது பற்றியும் இன்ஷா அல்லாஹ்-விபரிக்கப்படும்.)
இந்த நூலில் PJ அவர்கள் 51:52, 7:107-109, 10:75-77, 26:31-35, 28:36, 51:38-39, 27:12-14, 40:24, 5:110, 61:6, 6:7, 10:2, 21:3, 28:48, 34:43, 37:14-15, 38:4, 43:30, 46:7, 54:2, 7:116, 20:66, 20:69 ஆகிய வசனங்களின் மொழிபெயர்ப்புக்களைப் போட்டுக்கொண்டு வருகிறார். இது PJ அவர்களின் வழமையான எழுத்து-நடைக்கு மாற்றமான முறையாகும். அவர் ஒரு வசனம் எழுதினால் இரண்டு பக்கங்களாவது விளக்கம் எழுதுவார். ஆனால், இங்கு வசனங்களாகவே எழுதிக்கொண்டு வருகின்றார்.

நிறைய வசனங்களை வைத்துத்தான் PJ இந்த முடிவுக்கு வந்துள்ளார் என்ற ஒரு மாயையை ஏற்படுத்தும் ஒரு தந்திரமாகவே இதைக் கொள்ள வேண்டியுள்ளது.

இவ்வளவு வசனங்கள் மூலமும் அவர் வைக்கும் ஒரே வாதம்: நபிமார்கள் செய்த அற்புதங்களை, சூனியம் என்று மக்கள் கூறியுள்ளனர். இதிலிருந்து சூனியம் என்றால் தந்திரத்தின் மூலம், வித்தையின் மூலம் மக்களை ஏமாற்றுவது என்பதுதான் அர்த்தம் என்பது உறுதியாகின்றது என்பதேயாகும்.

மக்கள் நபிமார்களின் அற்புதங்களை மட்டும் சூனியம் என்று கூறவில்லை. அவர்கள் கொண்டுவந்த வேதத்தையும் கூட சூனியம் என்றுதான் கூறினர்.

நம்மிடமிருந்து அவர்களிடம் உண்மை வந்த போது ”மூஸாவுக்குக் கொடுக்கப்பட்டது போன்றது இவருக்கும் கொடுக்கப்பட்டிருக்கக் கூடாதா?” எனக் கூறுகின்றனர். இதற்கு முன் மூஸாவுக்குக் கொடுக்கப்பட்டதை அவர்கள் மறுக்கவில்லையா? ”இரண்டும் ஒன்றையொன்று மிஞ்சும் சூனியங்களே” என்று கூறுகின்றனர். ”அனைத்தையும் நாங்கள் மறுக்கிறோம்” எனவும் கூறுகின்றனர். (28:48)

அவர்களிடம் உண்மை வந்த போது ”இது சூனியம். இதை நாங்கள் மறுப்பவர்கள்” எனக் கூறினர். (43:30)

இவர்களுக்கு நமது தெளிவான வசனங்கள் கூறப்பட்டால் தம்மிடம் வந்த சத்தியத்தை மறுப்போர், ”இது தெளிவான சூனியம்” என்று கூறுகின்றனர். (46:7)
எனவே, அற்புதம் அல்லாத விடயங்களையும் அவர்கள் சூனியம் என்று கூறியதிலிருந்து “சூனியம் என்றால் தந்திர வித்தை என்று மக்கள் விளங்கியிருந்தார்கள்” என்ற PJ-யின் வாதம் வலிமையற்றுப் போகின்றது. இதற்கு மற்றுமொரு சான்றையும் கூறலாம்.

”மர்யமின் மகன் ஈஸாவே! உம் மீதும், உமது தாய் மீதும் உள்ள எனது அருட்கொடையை நினைத்துப் பார்ப்பீராக! (ஜிப்ரீல் எனும்) ரூஹுல் குத்ஸைக் கொண்டு உம்மை நான் வலுவூட்டியபோது. தொட்டில் பருவத்திலும் வாலிபப் பருவத்திலும் நீர் மனிதர்களுடன் பேசியதையும், வேதத்தையும், ஞானத்தையும், தவ்றாத்தையும், இன்ஜீலையும் உமக்கு நான் கற்றுத் தந்ததையும் (எண்ணிப்பார்ப்பீராக.) களிமண்ணால் ஒரு பறவையின் தோற்றத்தைப் போல் என் அனுமதிப்படி நீர் உருவாக்கி, பின்னர் அதில் நீர் ஊதினீர். அப்போது, அது எனது உத்தரவுப் பிரகாரம் (உயிர் உள்ள) பறவையாக மாறியதையும், எனது உத்தரவுப் பிரகாரம் பிறவிக் குருடனையும் குஷ்டரோகியையும் நீர் குணப்படுத்தியதையும், என் உத்தரவுப் பிரகாரம் இறந்தோரை (மண்ணறைகளிலிருந்து உயிருடன்) நீர் வெளிப்படுத்தியதையும் (எண்ணிப்பார்ப்பீராக). தெளிவான சான்றுகளை நீர் அவர்களிடம் கொண்டுவந்த நேரத்தில், அவர்களில் நிராகரித்தோர், ‘இது தெளிவான சூனியத்தைத் தவிர வேறில்லை’ என்று கூறியபோது, உம்மை விட்டும் இஸ்ராஈலின் சந்ததியினரை நான் தடுத்ததையும் (எண்ணிப் பார்ப்பீராக!) என்று அல்லாஹ் கூறியதை (நபியே! நீர் எண்ணிப்பார்ப்பீராக!) (5:110)

இங்கே பிறவிக் குருடனையும், வெண்குஷ்டவாளிகளையும் ஈஸா(அலை) அவர்கள் குணப்படுத்துகின்றார்கள். அதைப் பார்த்த மக்கள் இது சூனியம் என்று கூறுகின்றனர். அவர்கள் இதை Magic என்றோ, வித்தை என்றோ கருதி கூறியிருக்க முடியுமா? கண் முன்னால் பார்வையிழந்தவன் பார்க்கிறான், தீர்க்க முடியாத வியாதி எனக் கருதப்பட்ட குஷ்டரோகம் குணம் பெறுகின்றது. இது எப்படி வித்தையாகும்? சூனியத்தை வித்தை என்று அவர்களோ குர்ஆனோ, ஹதீஸோ இஸ்லாமிய உலகமோ கூறவில்லை. அவர்கள் சூனியம் என்பது தீய சக்திகளின் உதவியால் செய்யப்படும் அறிவுக்குப் புலப்படாத ஒரு கலை என்றுதான் புரிந்திருந்தனர். இந்த அடிப்படையில்தான் நபிமார்கள் செய்த அற்புதங்கள், அவர்கள் கொண்டுவந்த வேதம் அனைத்தும் அல்லாஹ்விடமிருந்து வந்ததல்ல ஷைத்தானிடமிருந்து இவர்கள் பெற்றது. இவர்கள் ஷைத்தானிய சக்தி மூலம் தம்மை இறைத்தூதர்கள் என சாதிக்க முற்படுகின்றனர் என்ற கருத்தில்தான் நபிமார்கள், ரசூல்மார்கள் கொண்டுவந்த வேதமும் சூனியம் என்று விமர்சிக்கப்பட்டது.

இதனைப் பின்வரும் வசனமும் ஹதீஸும் உறுதி செய்கின்றன.

(குர்ஆனாகிய) இதைக்கொண்டு ஷைத்தான்கள் இறங்கவில்லை. அது அவர்களுக்குத் தகுதியுடையதுமன்று, அதற்கு அவர்கள் சக்திபெறவும் மாட்டார்கள். நிச்சயமாக அவர்கள் (இதை ஒட்டுக்) கேட்பதை விட்டும் தடுக்கப்பட்டுள்ளனர். (26:210-212)

நபி(ஸல்) அவர்கள் சுகயீனமுற்று ஓர் இரவு அல்லது இரண்டு இரவுகள் நின்று வணங்காதிருந்த போது ஒரு பெண் நபியவர்களிடம், ‘முஹம்மதே! உமது ஷைத்தான் உம்மைக் கை விட்டு விட்டான் எனக் கருதுகிறேன்.’ எனக் கூறினாள். அப்போதுதான் “உமது இரட்சகன் உம்மைக் கை விடவில்லை” எனக் கூறும் 93 ஆம் அத்தியாயம் அருளப்பட்டது. (புகாரி-4983)

குர்ஆனைக் கூட நபி(ஸல்) அவர்கள் ஷைத்தானிடமிருந்து பெற்று அறிவிப்பதாகவே காபிர்கள் எண்ணியுள்ளனர். இந்த அடிப்படையில்தான் வேதங்களையும் சூனியம் என்றனர் என்பதை இதன்மூலம் அறியலாம்.

நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம்
سحر رسول الله صلى الله عليه وسلم رجل من بني زريق يقال له لبيد بن الأعصم حتى كان رسول الله صلى الله عليه وسلم يخيل إليه أنه كان يفعل الشيئ وما فعله حتى إذا كان ذات يوم أو ذات ليلة وهو عندي لكنه دعا ودعا ثم قال يا عائشة أشعرت أن الله أفتاني فيما استفتيته فيه أتاني رجلاني فقعد أحدهما عند رأسي والآخر عند رجلي فقال أحدهما لصاحبه ما وجع الرجل فقال مطبوب قال ومن طبه قال لبيد بن الأعصم قال في أي شيئ قال في مشط ومشاطة وجف طلع نخلة ذكر قال وأين هو قال في بئر ذروان فأتاها رسول الله صلى الله عليه وسلم في ناس من أصحابه فجاء فقال يا عائشة كأن مائها نفاعة الحناء أو كأن رؤوس نخلها رؤوس الشياطين قلت يا رسول الله أفلا استخرجته قال قد عافاني الله فكرهت أن أثور على الناس فيه شرا فأمر بها فدفنت
(صحيح البخاري)

லஃபீத் இப்னுல் அஃஸம் என்ற பனூ ஸுரைக் கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு மனிதன் நபி(ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்தான். ஒன்றைச் செய்யாமலேயே செய்ததாக நபி(ஸல்) அவர்களுக்கு மாயத் தோற்றம் இதனால் ஏற்பட்டது. ஒரு நாள் அல்லது ஒரு இரவு அவர்கள் என்னிடம் இருக்கும் போது பிரார்த்திக் கொண்டே இருந்தார்கள். பின்னர், ‘ஆயிஷாவே! நான் தீர்வு கேட்டுக்கொண்டிருந்த விடயத்தில் அல்லாஹ் எனக்குத் தீர்வு சொல்லி விட்டான். இரண்டு மனிதர்கள் என்னிடம் வந்து ஒருவர் என் தலையருகிலும், மற்றவர் என் காலுக்கு அருகிலும் அமர்ந்தனர். அவர்களில் ஒருவர் மற்றவரிடம் ‘இவருக்கு என்ன?’ என்று கேட்க, மற்றவர் ‘இவர் சூனியம் செய்யப்பட்டுள்ளார்’ என்றார். ‘யார் செய்தது?’ எனக் கேட்ட போது, ‘லபீதிப்னுல் அஃஸம்’ எனக் கூறினார். ‘எதில் சூனியம் செய்யப்பட்டுள்ளது?’ எனக் கேட்ட போது ஆண் ஈத்தமரப் பாளையிலே சீப்பு, முடி என்பவற்றில்’ என மற்றவர் பதில் கூறினார். ‘எங்கே?’ எனக் கேட்ட போது, ‘தஃலான் கோத்திரக் கிணற்றில்’ என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள் தனது தோழர்கள் சிலருடன் அங்கே வந்தார்கள். பின்னர், (என்னிடம்) வந்த போது ‘ஆயிஷாவே! அந்தக் கிணற்றின் நீர் மருதோண்டி கலந்தது போன்று அல்லது அந்தக் கிணற்றருகில் இருந்த ஈத்த மரங்களின் கிளைகள் ஷைத்தானின் தலைபோன்று இருந்தது’ என்றார்கள். ‘அல்லாஹ்வின் தூதரே! அதை நீங்கள் வெளிப்படுத்திருக்கக் கூடாதா?’ என நான் கேட்டேன். அதற்கவர்கள், ‘அல்லாஹ் எனக்கு சுகமளித்துவிட்டான். இதன் மூலம் மக்கள் மத்தியில் தீமை பரவுவதை நான் வெறுத்தேன்’ எனக் கூறினார்கள். அந்தக் கிணற்றை மூடி விடுமாறு ஏவினார்கள் அது மூடப்பட்டது’ என ஆயிஷா (ரழி) அவர்கள் கூறுகின்றார்கள்.

(குறிப்பு:- நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதாக வரும் ஏனைய நபிமொழிகள் அனைத்தையும் “ஹதீஸ்களுக்கிடையே முரண்பாடு இருக்கின்றது” என்ற PJ-யின் வாதத்திற்கு மறுப்புக் கூறும் போது தரப்படும்.)

இந்த ஹதீஸை மறுக்கப் பல வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. இந்த வாதங்களுக்குரிய தெளிவான விளக்கங்களைத் தொடராக நோக்குவோம்.


பாதுகாக்கப்பட்ட நபி:

நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது என்ற ஆதாரபூர்வமான ஹதீஸை மறுப்போர் பின்வருமாறு வாதம் செய்கின்றனர்.

நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஹதீஸ் பல குர்ஆன் வசனங்களுக்கு முரண்படுகின்றது.

தூதரே! உமது இரட்சகனிடமிருந்து உமக்கு இறக்கிவைக்கப்பட்டதை எடுத்துரைப்பீராக! (அவ்வாறு) நீர் செய்யாவிட்டால் அவனது தூதுத்துவத்தை நீர் எடுத்துரைத்தவராகமாட்டீர். அல்லாஹ் உம்மை மனிதர்களிலிருந்து பாதுகாப்பான். நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்பாளர்களான கூட்டத்தாரை நேர்வழியில் செலுத்தமாட்டான். (5:67)

இந்த வசனம் மனிதர்களிடமிருந்து நபியை அல்லாஹ் பாதுகாப்பான் என்று உத்தரவாதப் படுத்துகின்றது. நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது என்றால் நபிக்கு அல்லாஹ் கொடுத்த பாதுகாப்பு எங்கே? அல்லாஹ் பாதுகாப்பான் எனும் போது நபிக்கு சூனியம் செய்ய முடியுமா? என்ற அடிப்படையில் வாதம் செய்கின்றனர்.

PJ அவர்களது தர்ஜுமா முதலாம் பதிப்பில் 357 ஆம் குறிப்பில் இந்த வசனத்தை முக்கிய சான்றாக அவர் முன்வைக்கின்றார். ஆரம்பத்தில் இந்த வசனம்தான் சூனிய ஹதீஸை மறுப்பதற்கு வலுவான வாதமாக முன்வைக்கப்பட்டது. இந்த வசனத்திற்கு இந்த ஹதீஸ் எங்கே முரண்படுகின்றது?

இந்த வாதத்திற்கு ஒரு வரியில் விடை கூறலாம்! அல்லாஹ் கூறியது போன்று நபி (ஸல்) அவர்கள் சூனியத்திலிருந்து பாதுகாக்கப்பட்டார்கள் என்றுதானே இந்த ஹதீஸ் கூறுகின்றது? இந்த வசனமும், ஹதீஸும் முரண்படவில்லையே! என்று கூறி விடலாம்.

உஹதுப் போரில் நபி (ஸல்) அவர்கள் தாக்கப்படவில்லையா? அவரது முகத்தில் இரத்தம் தோயவில்லையா?

கைபரில் யூதப் பெண், நபி (ஸல்) அவர்களுக்கு விஷம் கலந்த ஆட்டிறைச்சியை வழங்கினாள். நபி (ஸல்) அவர்கள் அதில் சிறிது சாப்பிட்டு விட்டார்கள். பின்னர், விஷம் கலக்கப்பட்ட செய்தி வஹீ மூலம் கிடைத்தது. அல்லாஹ் அவர்களைக் காத்தான்.

நபியவர்கள் தனது மரண வேளையில்,
يا عائشة ما أزال أجد ألم الطعام الذي أكلت بخيبر (صحيح البخاري(
நான் கைபரில் சாப்பிட்ட (விஷம் கலந்த) உணவின் வேதனையை இப்போது உணர்கிறேன். (புகாரி) என்றார்களே! அப்படியாயின் இந்த ஹதீஸ் 5:67 வசனத்திற்கு முரண்படுகின்றதா?

உண்மையில் 5:67 வசனத்தில் நபியைப் பாதுகாப்பதாக அல்லாஹ் உத்தரவாதம் அளிக்கின்றான். அந்த உத்தரவாதத்தின் அர்த்தம் என்னவென்றால் நபியை யாரும் கொல்ல முடியாது என்பதுதான். எனவே, கொல்ல முடியாது எனக் கூறும் குர்ஆன் வசனத்திற்குச் சூனியம் செய்யப்பட்டுப் பின்னர் பாதுகாக்கப்பட்டதாகக் கூறும் ஹதீஸ் எந்த வகையில் முரண்படுகின்றது? என்று சிந்தித்துப் பாருங்கள்.

கொல்ல முடியாது என்பதுதான் 5:67 வசனத்தின் கருத்து என நாம் கூறவில்லை. அந்த வசனத்தின் அர்த்தமும் அதுதான். அந்த வசனம் குறித்த பின்வரும் PJ அவர்களின் விளக்கத்தைப் பொறுமையுடன் படித்துப் பாருங்கள்.

“யாராலும் கொல்ல முடியாத தலைவர்:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அன்றைய சமுதாயத்தில் இருந்த அனைத்துத் தீமைகளையும் தைரியமாக எதிர்த்ததால் ஏராளமான எதிரிகளைச் சம்பாதித்து வைத்திருந்தனர். அவர்களை எப்படியாவது கொன்று விட வேண்டும் என்று பல வகையிலும் முயற்சிகள் நடந்தன. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கோட்டை, கொத்தளங்களில் ஒளிந்து கொண்டிருக்கவில்லை. குடிசையில் தான் வசித்தார்கள். வாயிற்காப்போன் யாரும் இருக்கவில்லை. வீதியில் சாதாரணமாக நடமாடினார்கள். உயிரைக் காக்க எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. எந்தக் கொள்கையிலும் சமரசம் செய்து கொள்ளவில்லை. போர்க் களங்களிலும் பங்கெடுத்து கொல்லப்படுவதற்கான வாய்ப்பை தாமாகவே எதிரிகளுக்கு வழங்கினார்கள். ஆனாலும் அவர்களை யாரும் கொல்ல முடியவில்லை. ‘உம்மை இறைவன் காப்பான்’ என்ற இந்த முன்னறிவிப்பு நிறைவேறியது. (திருக்குர்ஆன் 5:67)

இப்படி அறை கூவல் விட்டதை முறியடிப்பதற்காகவாவது எதிரிகள் அவரைக் கொன்றிருந்தால் இது பொய்யான மார்க்கம் என்று நிரூபித்திருப்பார்கள். ஆனாலும் இயலவில்லை. இது இறைவனது வார்த்தையாகவும், உத்தரவாதமாகவும் இல்லாதிருந்தால் அவர்கள் என்றோ கொல்லப்பட்டிருப்பார்கள். அவர்கள் கொல்லப்படாதது திருக்குர்ஆன் இறைவேதம் என்பதற்கான நிரூபணம். என்னை எவரும் கொல்ல முடியாது என்று அறிவித்து விட்டு, சர்வ சாதாரணமாக இன்றைய உலகில் எவரும் நடமாட முடியாது. அதுவும் தீய சக்திகளை எதிர்த்துப் போரிடுபவர் இப்படி அறிவித்தால் அடுத்த நாளே அவரது கதை முடிக்கப்பட்டு விடும். அன்றைய நிலையில் இவரைப் போல் சர்வ சாதாரணமாக எவ்விதப் பாதுகாப்பு ஏற்பாடுமின்றி மக்களோடு மக்களாக பழகும் ஒருவரை எளிதாகக் கொல்ல முடியும். ஆனாலும் தன்னைக் கொல்ல முடியாது என்று அறிவித்து தாம் கூறுவது இறை வாக்கு என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிரூபித்தார்கள்.”

இது ஆய்வாளர் PJ அவர்களின் தர்ஜுமா விளக்கக் குறிப்பின் 145 ஆவது இலக்கத்தில் இடம்பெறும் விளக்கமாகும். இந்த விளக்கத்தில் எத்தனை இடங்களில் கொல்ல முடியாது என்ற கருத்து கூறப்பட்டுள்ளது?

ஆய்வாளர் PJ அவர்கள் 5:67 வசனம் நபி(ஸல்) அவர்களைக் கொல்ல முடியாது என்றுதான் கூறுகின்றது என்பதை மிக மிகத் தெளிவாகத் தெரிந்துகொண்டே அந்த வசனத்திற்கு நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது என்று கூறும் ஹதீஸ் முரண்படுகின்றது என்று கூறியது நியாயமா? மார்க்கத்தில் பேணுதலைக் கடைப்பிடிக்கும் வழிமுறையாகுமா? வசனத்தின் அர்த்தத்திற்கே மாற்றமாக பேசலாமா? அல்லாஹ்வின் வார்த்தைக்கு அவன் நாடாத அர்த்தத்தைக் கற்பிக்கலாமா? என்பதை நடுநிலையோடு சிந்தித்துப் பாருங்கள்.

5:67 வசனம் சூனியம் பற்றிய கருத்தைக் கூறவில்லை என்று தெரிந்துகொண்டே அந்த வசனத்தை மக்கள் முன்வைத்துத் தன் மீது மக்களுக்கிருக்கும் நம்பிக்கை, தனக்கிருக்கும் வாதத்திறமை, பேச்சு ஆற்றல் மூலம் நபியவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டதாகக் கூறும் ஹதீஸிற்கு இது முரண்படுகின்றது என்று வாதிடுவது எந்த வகையில் நியாயம்?

இப்போது சூனியத்தை மறுப்பதற்கு இவர் வைக்கும் ஆயத்துக்களின் உண்மையான அர்த்தம், வாதங்களில் கூட இது ஐயத்தை ஏற்படுத்துகின்றதல்லவா?

சத்தியத்தைத் தேடும் எண்ணத்துடன் நடுநிலையோடு சிந்தித்தால் சூனியம் என்பது வெறும் தந்திர வித்தை என்ற தனது தவறான வாதத்தை வலுவூட்ட அவர் கையாளும் வசனங்களும் இதே அடிப்படையில்தான் தவறாகக் கையாளப்படுகின்றது என்பதைப் புரிந்து கொள்வீர்கள்.

அடுத்து, நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டது என்ற ஹதீஸ் குர்ஆனிலேயே சந்தேகத்தை உண்டுபண்ணுமா? என்பது குறித்து விரிவாக நோக்குவோம்.
நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்ட ஹதீஸை ஏற்றுக்கொண்டால் குர்ஆனின் நம்பகத் தன்மையில் அது சந்தேகத்தை ஏற்படுத்தி விடும் என்ற வாதத்தை முன்வைத்து பிஜே அவர்கள் அது பற்றிய ஸஹீஹான ஹதீஸை மறுக்கின்றார். அவர் முன்வைக்கும் வாதத்தின் போலித் தன்மையையும், அவர் தனக்குத் தானே முரண்படும் விதத்தையும், தனது வாதத்தை நிலைநிறுத்துவதற்காக ஹதீஸில் கூறப்பட்டதற்கு மாற்றமாக மிகைப்படுத்தும் அவரது போக்கையும், குர்ஆன் தொகுப்பு வரலாற்றில் குர்ஆனில் சந்தேகத்தை ஏற்படுத்தும் வண்ணம் அவர் கூறியுள்ள கருத்துக்கள் பற்றியும் இந்தத் தொடரில் விரிவாக அலசுவோம்.
பிஜே தர்ஜமா: பக்கம்-1296
‘நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டு அதன் காரணமாக அவர்களது மனநிலையில் பாதிப்பு ஏற்பட்டது, அந்தப் பாதிப்பு ஆறு மாதம் நீடித்தது, தாம் செய்யாததைச் செய்ததாகக் கருதும் அளவுக்கு அந்தப் பாதிப்பு அமைந்திருந்தது’ என்று மேற்கண்ட ஹதீஸ்களில் கூறப்படுவதை நாம் அப்படியே ஏற்பதாக இருந்தால் அதனால் ஏராளமான விபரீதங்கள் ஏற்படுகின்றன.
திருமறைக் குர்ஆனின் நம்பகத்தன்மைக்கு ஏற்படும் பாதிப்பு முதலாவது விபரீதமாகும். 
தமக்குச் சூனியம் வைக்கப்பட்டதின் காரணமாக தாம் செய்யாததைச் செய்ததாக நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள் என்றால் அந்த ஆறு மாத காலத்தில் அவர்களுக்கு அருளப்பட்ட வஹீ – இறைவேதம் – சந்தேகத்திற்குரியதாக ஆகிவிடும்.
தம் மனைவியிடம் இல்லறத்தில் ஈடுபட்டதைக் கூட நினைவில் வைத்துக்கொள்ள முடியாத அளவுக்கு நபிகள் நாயகம் (ஸல்) பாதிக்கப்பட்டிருந்தார்கள் என்றால் ‘இறைவனிடமிருந்து வஹீ வராமலேயே வஹீ வந்ததாகவும் அவர்கள் கூறியிருக்கலாம்’ என்ற சந்தேகத்தை இது ஏற்படுத்தும். ஆறு மாத காலத்தில் அவர்களுக்கு அருளப்பட்ட அனைத்துமே சந்தேகத்திற்குரியதாக ஆகிவிடும்.
எந்த ஆறு மாதம் என்ற விபரம் கிடைக்காததால் மதீனாவில் அருளப்பட்ட ஒவ்வொரு வசனமும் ‘இது அந்த ஆறு மாதத்தில் அருளப்பட்டதாக இருக்குமோ?’ என்ற சந்தேகத்தை ஏற்படுத்திவிடும்.
இஸ்லாம் உண்மையான மார்க்கம் என்பதற்கு இன்று நம்மிடம் உள்ள ஒரே அற்புதம் திருக்குர்ஆன் தான். திருக்குர்ஆனில் சந்தேகம் ஏற்படுத்தும் அனைத்தையும் நாம் நிராகரித்துத் தான் ஆக வேண்டும்.
பிஜே தர்ஜமா: பக்கம்-1296
சுட்டிக்காட்டப்பட்ட இப்பகுதியில் இடம்பெற்றிருக்கும் அடிப்படையான தவறுகளை ஒவ்வொன்றாக இனங்காணுவோம்:

தவறு – 01:
நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்ததனால் அவர் தாம்பத்தியத்தில் ஈடுபடாமலேயே ஈடுபட்டதாக போலித் தோற்றம் அவருக்கு ஏற்பட்டது. அதையும் அவர் அறிந்தே இருந்தார். அதனால் தான் அவர் தனது ஈடேற்றத்திற்காகப் பிரார்த்தித்தார். இதை மனநிலை பாதிப்பு என்று கூறமுடியாது. இந்தப் பதத்தின் மூலம் சூனியத்தால் நபி(ஸல்) அவர்களுக்குப் பைத்தியம் பிடித்ததாக ஹதீஸ் கூறுவதாகச் சித்தரிக்க முயற்சிக்கின்றார். அவரது அமைப்பின் அழைப்பாளர்கள் தமது உரைகள், உரையாடல்கள் மூலம் சூனியம் செய்யப்பட்டதால் நபி(ஸல்) அவர்களுக்குப் பைத்தியம் பிடித்ததாக ஹதீஸ் கூறுவதாகக் கூறியுள்ளனர். இது நபி(ஸல்) அவர்கள் மீது துணிந்து இட்டுக்கட்டும் இவர்களது இழிசெயலின் ஒரு பகுதி எனலாம்.

தவறு – 02:
தாம் செய்யாததைச் செய்ததாகக் கருதும் அளவுக்கு அந்தப் பாதிப்பு இருந்தது என்று முதல் பந்தியில் கூறி விட்டு அடுத்த பந்தியிலேயே ‘தமக்கு சூனியம் வைக்கப்பட்டதின் காரணமாக தாம் செய்யாததைச் செய்ததாக நபிகள் நாயகம்(ஸல்) கூறினார்கள் .. ஹதீஸின் கருத்தை மிகைப்படுத்தி, திரிபுபடுத்தியுள்ளார்.

தான் செய்யாததைச் செய்ததாகப் போலித் தோற்றம் (மாயை) நபியவர்களுக்கு ஏற்பட்டது என்றுதான் ஹதீஸ் கூறுகின்றது. தான் செய்யாததைச் செய்ததாக நபி(ஸல்) அவர்கள் கூறியதாக ஹதீஸ் கூறவே இல்லை. அப்படியிருக்க முதல் பந்தியில் கருதினார்கள் என்றும் இரண்டாம் பந்தியில் செய்யாததைச் செய்ததாகக் கூறினார்கள் என்றும் ஏன் நபி (ஸல்) மீது இட்டுக்கட்ட வேண்டும். ஹதீஸில் கூறப்படாத ஒரு கருத்தை ஏன் பொது மக்கள் மனதில் பதிக்க வேண்டும்? 

தனது தர்ஜமாவில் 1298ம் பக்கத்தில் இக்கருத்தை மேலும் வலுவூட்டுவதற்காக அழுத்தம் கொடுத்து பின்வருமாறு கூறுவது வேதனையானது. ‘முன்னுக்குப் பின் முரணாகப் பேசுகிறார். செய்ததைச் செய்யவில்லை என்கின்றார். செய்யாததைச் செய்தேன் என்கின்றார்…’ பக் (1298) நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதால் இப்படியான பாதிப்பு எல்லாம் ஏற்பட்டன என்று ஹதீஸில் இடம்பெறாத கருத்துக்களை ஹதீஸின் கருத்தாகப் புனைந்து, அவற்றைப் பெரிதுபடுத்தி, நபியவர்களது அந்த சூழ்நிலை பற்றித் தப்பெண்ணத்தை ஏற்படுத்தி குறிப்பிட்ட அந்த ஸஹீஹான ஹதீஸை மறுக்கும் மனநிலைக்கு மக்களைக் கொண்டுவர முயற்சிக்கின்றார். நியாயமாக விமர்சிப்பதாக இருந்தால் ஹதீஸில் கூறப்பட்டது குர்ஆனுக்கு முரண்படுகின்றது என்பதையல்லவா எடுத்துக்காட்ட வேண்டும். அதை விட்டு விட்டு ஹதீஸில் சொல்லப்படாத கருத்தைத் திணித்து நிரூபிக்க முனைவது எந்த வகையில் நியாயமானது என்பதைப் பொதுமக்கள் நடுநிலை நின்று நிதானமாகச் சிந்திக்க வேண்டும்.

இனி பி.ஜே அவர்களது நபியவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டது சம்பந்தமான ஹதீஸ்களை மறுப்பதற்காக முன்வைக்கும் வாதங்களை அலசுவோம்.

‘தம் மனைவியிடம் இல்லறத்தில் ஈடுபட்டதைக் கூட நினைவில் வைத்துக்கொள்ள முடியாத அளவுக்கு நபிகள் நாயகம்(ஸல்) பாதிக்கப்பட்டிருந்தார்கள் என்றால் -இறைவனிடமிருந்து வஹீ வராமலேயே வஹீ வந்ததாகவும் அவர்கள் கூறியிருக்கலாம்-‘ என்ற சந்தேகத்தை இது ஏற்படுத்தும்’ என்று எழுதியுள்ளார்.

திருக்குர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாறு என்ற பொதுத் தலைப்பில் ‘நபிகள் நாயகத்தின் உள்ளத்தில் …’ என்ற சிறு தலைப்பில் அவர் எழுதியதை அப்படியே கீழே தருகிறோம்.
நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுக்கு அவ்வப்போது திருக்குர்ஆன் அருளப்பட்டவுடன் அதை அவர்கள் தமது இதயத்தில் பதிவு செய்து கொள்வார்கள். இவ்வாறு பதிவு செய்து கொள்வதற்கு மற்றவர்களைப் போல் அவர்களும் ஆரம்பக் கட்டத்தில் மிகுந்த சிரத்தை எடுக்கலானார்கள். அது தேவையில்லை என்று திருக்குர்ஆன் மூலமாகவே அவர்களுக்குச் சொல்லப்பட்டது. (திருக்குர்ஆன் 75:16, 20:14)
‘திரும்பத் திரும்ப ஓதி மனனம் செய்வதற்காக நீர் முயற்சிக்க வேண்டாம். அதை உமது உள்ளத்தில் ஒன்று சேர்ப்பது நமது பொறுப்பு’ என்று திருக்குர்ஆன் கூறியது.
இன்னொரு வசனத்தில் ‘உமக்கு நாம் ஓதிக் காட்டுவோம், நீர் மறக்க மாட்டீர்’ (திருக்குர்ஆன் 87:6) எனவும் அல்லாஹ் உத்தரவாதம் அளித்தான்.
எனவே ஜிப்ரீல் என்ற வானவர் நபிகள் நாயகத்திற்கு அதிகமான வசனங்களைக் கூறினாலும் கூறிய உடனே ஒலி நாடாவில் பதிவது போல் அவர்களின் இதயத்தில் அப்படியே அவை பதிவாகி விடும்.
தனது தூதராக இறைவன் அவர்களை நியமித்ததால் அவர்களுக்கு இந்தச் சிறப்பான தகுதியை வழங்கியிருந்தான். எனவே இறைவனிடமிருந்து வந்த செய்திகளில் எந்த ஒன்றையும் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மறதியாக விட்டிருப்பார்கள் என்று கருதவே முடியாது.
திருக்குர்ஆன் நபிகள் நாயகத்தினுடைய உள்ளத்தில் இவ்வாறு பாதுகாக்கப்பட்டது.
ஜிப்ரீல்(அலை) அவர்கள் ஓத-ஓத ஒலிநாடாவில் பதிவது போல் நபியவர்களது உள்ளத்தில் அது பதியும்ள, அதை அவர் மறக்க மாட்டார். அவரது உள்ளத்தில் பதியும் பொறுப்பை அல்லாஹ் ஏற்றுக்கொண்டான் என்றெல்லாம் எழுதி விட்டுத் தன் மனைவியிடம் தாம்பத்தியத்தில் ஈடுபட்டதையே நினைவில் வைத்துக் கொள்ள முடியாதவர்ள, வஹீ வராமலேயே வஹீ வந்ததாகக் கூறியிருக்கலாமே! என்ற சந்தேகத்தை இது ஏற்படுத்தும் என்று கூறுவது எவ்வளவு பெரிய முரண்பாடு என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகின்றதல்லவா? 

‘வஹீ விஷயத்தில் மட்டும் உள்ளது உள்ள படி கூறினார்கள், மற்ற விஷயங்களில்தான் மனநிலை பாதிப்பு ஏற்பட்டது என்று சிலர் விளக்கம் கூறுகின்றனர். இந்த விளக்கம் நகைப்பிற்குரியதாகும்’ என்று தனது தர்ஜமாவில் (பக் 1298) குறிப்பிடுகின்றார்.

வஹீயைப் பாதுகாப்பதற்காக அல்லாஹ் உத்தரவாதம் அளித்துள்ளான். திருக்குர்ஆனில் எந்தத் தவறும் வராது (பார்க்க பிஜே குறிப்பு 351)

(நபியே! குர்ஆன் இறக்கப்படும் போது) அதற்காக நீர் அவசரப்பட்டு உமது நாவை அசைக்க வேண்டாம். நிச்சயமாக அதனை ஒன்றுசேர்ப்பதும் அதனை ஓதும்படி செய்வதும் எமது பொறுப்பாகும். (75:16-17)

(நபியே!) நாம் உமக்கு (குர் ஆனை) ஓதிக்காட்டுவோம். அல்லாஹ் நாடியதைத் தவிர நீர் மறக்கமாட்டீர். (87:6)

நிச்சயமாக நாமே இவ்வேதத்தை இறக்கியுள்ளோம். இன்னும் நிச்சயமாக நாமே அதனைப் பாதுகாப்பவர்களாவோம். (15:09)

(குறிப்பு: இந்த வசனத்திற்கு பிஜெ விளக்கக் குறிப்பு எழுதும்போது 143ம் குறிப்பில் குர்ஆன் எழுத்துப் பிசகாமல் பாதுகாக்கப்பட்டுள்ளது என்ற கருத்தைப் பதிவு செய்கிறார். தொகுக்கப்பட்ட வரலாற்றில் எழுத்துப் பிழை ஏற்பட்டதாக எழுதுகிறார்)

என்றெல்லாம் குர்ஆன் கூறுவதால் நபி(ஸல்) அவர்களுக்கு சூனியத்தின் மூலம் ஏற்பட்ட பாதிப்பு வஹீயுடன் சம்பந்தப்பட்டது அல்ல என்று கூறுவது எப்படி பிஜேயை நகைக்க வைத்தது என்பது புரியாத புதிராக இருக்கின்றது!

நபி(ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டதால் வஹீயிற்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. நபி(ஸல்) அவர்கள் வஹீ வராமலேயே வஹி வந்ததாகக் கூறியிருக்கலாமே! என்ற நகைப்புக்கிடமான வாதத்தை ஒரு வாதத்திற்காக ஏற்றுக்கொண்டால் கூட ஹதீஸை நம்புபவர்களுக்குக் குர்ஆனில் சந்தேகம் கொள்ள இடம் இல்லை.

ஏனெனில் ஒவ்வொரு வருடமும் ரமழான் மாதத்தில் ஜிப்ரீல்(அலை) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் வந்து அது வரை அருளப்பட்ட குர்ஆனை ஓதவைத்து சரி பார்ப்பார்கள். நபி(ஸல்) அவர்கள் மரணித்த ஆண்டில் இரு முறை மீட்டிப் பார்த்தார்கள் என ஹதீஸ் கூறுகின்றது.

(குறிப்பு: இந்த ஹதீஸில் கூட பிஜே தவறு விட்டுள்ளார். ஒவ்வொரு ஆண்டிலும் ஒரு முறை ஜிப்ரீல் என்ற வானவர் வந்து அந்த வருடத்தில் அருளப்பட்ட வசனங்களைத் திரும்ப நினைவுபடுத்தி, முறைப்படுத்தி, வரிசைப்படுத்திச் செல்வார். (பக்கம் 36) என்று ஹதீஸுக்கு மாற்றமாக ‘அந்த வருடத்தில்’ என்பதை இடைச் செருகல் செய்துள்ளார்.)

அவரது வாதத்தை அப்படியே ஏற்றுக்கொண்டால் கூட நபி(ஸல்) அவர்கள் வஹீ வராமலேயே வஹீ வந்ததாகக் கூறியிருந்தால் ஜிப்ரீல்(அலை) அவர்கள் வந்து மீட்டிப் பார்க்கும் போது, ‘இன்னின்ன வசனங்கள் நான் கொண்டு வராமல் நீங்களாகவே சேர்த்துள்ளீர்கள்’ என்று கூறி வஹீயைப் பாதுகாத்திருக்க மாட்டார்களா? அல்லது வஹியில் நபிக்கு தவறு எற்பட்டிருந்தால் அல்லாஹ் சுட்டிக் காட்டியிருக்கமாட்டானா?

குர்ஆன் இறைவேதம்தான் என்பதை முழுமையாக நம்புகின்ற இன்றைய மக்களின் நிலையிலிருந்துகொண்டு இவர்கள் இந்த விளக்கத்தைக் கூறுகின்றார்கள். (பக் 1298)

மார்க்கத்தைக் காஃபிர்கள் இப்படிக் கேட்பார்கள் என்ற மனநிலையிலிருந்து ஆய்வு செய்வதுதான் அவரது அண்மைக்கால புதிய நிலைப்பாடுகளுக்கு அடிப்படைக் காரணமாகும். எதைக் கூறினாலும் அது காஃபிர்களைத் திருப்திப்படுத்துமா? என்றுதான் சிந்திக்கின்றார்.

குர்ஆனில் தவறு இல்லை. அது நபி(ஸல்) அவர்களது உள்ளத்தில் ஒலிநாடாவில் பதிவது போல் பதியப்பட்டது என்ற பீ.ஜேயின் கருத்தைக் கூட காஃபிர்கள் ஏற்கும் வண்ணம் நிரூபிக்க முடியாதுதானே? இந்த இடத்தில் காபிர்கள் திருப்தியடையாத சில விடயங்கள் பற்றிய கேள்விகளை நாம் கேட்க விரும்புகின்றோம்.

நபி(ஸல்) அவர்களுக்கு மறதி ஏற்பட்டுள்ளது. 4 றக்அத்துடைய தொழுகையை இரண்டு றக்அத்திலேயே முடித்து விடுகின்றார்கள். துல்யதைன் என்பவர் நினைவூட்டிய பின்னர் கூட அது அவர்களுக்கு நினைவுக்கு வரவில்லை. துல்யதைன் கூறியதை ஏனைய நபித் தோழர்கள் உறுதிப்படுத்திய பின்னர்தான் அது அவர்களுக்கு நினைவில் வந்தது என ஹதீஸ் கூறுகின்றது.
(முஅத்தாஇ புகாரிஇ முஸ்லிம்இ அபூதாவூத்இ திர்மிதி)

நபி(ஸல்) அவர்களுக்கு மறதி ஏற்படும் என்பதையும், (18:24) ஏனைய நபிமார்களுக்கும் மறதி ஏற்பட்டுள்ளது (20:115, 18:73) என்பதையும் அல்குர்ஆன் உறுதி செய்கின்றது.

இதை வைத்து சாதாரண ஒரு மனிதர் உங்கள் நபிக்கு ஞாபக மறதி ஏற்பட்டுள்ளது. அவர் அல்லாஹ் அருளிய பல வசனங்களை மறதியாக விட்டிருக்கலாம். தொழுகையில் ஏற்பட்ட மறதியை துல்யதைன் நினைவூட்டினார். ஆனால்இ வஹீயில் ஏற்பட்ட மறதியை மனிதர்கள் நினைவூட்ட முடியாதல்லவா? எனவே இறக்கப்பட்ட பல வசனங்களை மறதியாக அவர் விட்டிருக்க வாய்ப்புள்ளதல்லவா? என்று கேட்டால் என்ன கூறுவது? இவ்வாறே தமது மனைவிமார்களின் திருப்திக்காக தேனை ஹராம் என நபி(ஸல்) அவர்கள் கூறியதைப் பின்வரும் வசனம் கண்டிக்கின்றது.

‘நபியே! உமது மனைவியர்களின் திருப்தியை நாடிஇ அல்லாஹ் உமக்கு ஆகுமாக்கியதை நீர் ஏன் தடைசெய்து கொள்கிறீர்? அல்லாஹ் மிக்க மன்னிப்பவன்ள, நிகரற்ற அன்புடையவன்.’ (66:01)

இதை வைத்து ஒரு காஃபிர் உங்கள் நபி மனைவிமாரைத் திருப்திப்படுத்துவதற்காக ஹலாலை ஹராம் என்று கூறியுள்ளார். மனைவியைக் கணவன் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கப் பல வழிகள் உள்ளன. மனைவியிடமே இப்படி நடந்துகொண்டவர் மக்களைத் திருப்பதிப்படுத்த எத்தனை ஹராம்களை ஹலாலாக்கினாரோ? எனவேஇ அவர் கூறிய குர்ஆன்-ஹதீஸ் இரண்டுமே சந்தேகத்திற்குரியவை என்று கூறினால் என்ன கூறுவது? அந்த வசனத்தைப் பொய்யானது என்பதா? அல்லது இந்த வாதத்தை ஏற்றுக்கொள்வதா?

எனவே, காஃபிர்கள் திருப்திப்படுவார்களா? என்பதை வைத்து நாம் குர்ஆன்-ஹதீஸை ஆராய முடியாது! சகோதரர் பிஜே அவர்களும் காஃபிர்களைத் திருப்திப்படுத்தும் விதத்தில் இஸ்லாத்தின் கருத்துக்களை திசைதிருப்பவோ அதன் கருத்துக்களுக்கு வலிந்து பொருளுரை செய்யவோ முடியாது என்பதை ஆணித்தரமாகக் கூறிக்கொள்கின்றோம்.

‘நபிகள் நாயகம்(ஸல்) காலத்தில் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் ஒவ்வொரு நடவடிக்கையைப் பார்த்துத்தான் அவர்கள் கூறுவது இறை வாக்கா? அல்லவா? என்பதை முடிவு செய்யும் நிலையில் மக்கள் இருந்தனர்.’ (பக் 1298) என்று தனது வாதத்திற்கு வலு சேர்க்க வரலாற்றையே மாற்றி எழுதுகின்றார்.

நபித் தோழர்களைப் பொறுத்தவரையில் நபி(ஸல்) அவர்கள் கூறும் அனைத்தையும் ஏற்கும் நிலையில் இருந்தனர். காஃபிர்களைப் பொறுத்தவரையில் நபி(ஸல்) அவர்கள் கூறும் அனைத்தையும் மறுக்கும் மனோ நிலையில் இருந்தனர். இதற்கு மாற்றமாக நபி(ஸல்) அவர்களது நடைமுறையை வைத்து, சொல்லும் செய்தியை எடை போடும் நிலை ஸஹாபாக்களிடம் இருக்கவில்லை. அப்படி இருந்தாலும் அது சூனியம் செய்யப்பட்ட ஹதீஸை மறுப்பதற்கான ஆதாரமாக அமையாது. ஏனெனில் நபி(ஸல்) அவர்களுக்குச் செய்யப்பட்ட சூனியத்தால் தாம்பத்தியத்தில் ஈடுபடாமலேயே ஈடுபட்டதாக அவர்கள் எண்ணினார்கள். அவ்வளவுதான்! இது வெளி உலகத்திற்குத் தெரியக் கூடிய சமாச்சாரம் அல்ல என்பது தெளிவு. அப்படியிருக்க அவரது குடும்பத்துடன் சம்பந்தப்பட்ட இந்த நிலை வஹீயில் சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கும் என்று வாதிட வரலாற்றையே புரட்ட வேண்டிய தேவை என்னவோ? ‘செய்யாததைச் செய்ததாகக் கூறும் ஒருவர் எதைக் கூறினாலும் அதைச் சந்தேகத்திற்குரியதாகத்தான் மக்கள் பார்ப்பார்களே தவிர, வஹீக்கு மட்டும் விதி விலக்கு என்று நம்பியிருக்க மாட்டார்கள்’ எனக் கூறித் தனது வாதத்தை முடிக்கின்றார். நபி(ஸல்) அவர்கள் செய்யாததைச் செய்ததாகக் கூறவில்லை என்பதை நாம் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளோம்.

குர்ஆனைப் பாதுகாக்கின்ற பொறுப்பை அல்லாஹ் எடுத்துக்கொண்டதாலும், ‘நாம் உமக்கு ஓதிக் காட்டுவோம்ள, நீர் அதனை மறக்கமாட்டீர்’ என அல்லாஹ் கூறுவதாலும், நபி(ஸல்) அவர்களது உள்ளத்தில் ஒலிநாடாவில் பதிவது போல் ஜிப்ரீல்(அலை) அவர்கள் வஹீயை இறக்கும் போது அது பதிவு செய்யப்பட்டு விடும் என்பதாலும் நபி(ஸல்) அவர்களுக்கு சூனியத்தின் மூலம் ஏற்பட்ட பாதிப்பு வஹீயைத் தாக்காது என்பதை ஏற்றுக்கொள்வது கடுகளவு ஈமான் உள்ளவர்களுக்கும் கஷ்டமான விஷயம் அல்ல. எனவே, நபி(ஸல்) அவர்களுக்கு இல்லறத்தில் ஈடுபடாமலேயே ஈடுபட்டதாக சூனியத்தின் மூலம் ஏற்பட்ட போலி உணர்வு(பிரக்ஞை)க்கும் வஹீக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதால் பிஜேயின் இந்தப் பிழையான வாதம் வலுவற்றுப் போய் விடுகின்றது. 

திருக்குர்ஆனில் சந்தேகம் ஏற்படுத்தும் அனைத்தையும் நாம் நிராகரித்துத்தான் ஆகவேண்டும். (பக் 1296) என்று கூறியே இவர் நபியவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டது தொடர்பான ஹதீஸ்களை மறுக்கும் தனது நிலையை நியாயப்படுத்தி வருகின்றார். குர்ஆனில் சந்தேகத்தை ஏற்படுத்தும் விதத்தில் இவர் செய்திருக்கும் சில விபரீதங்களை இங்கே தொட்டுக் காட்ட விரும்புகின்றோம்.

அல்குர்ஆனின் எழுத்துப் பற்றிப் பேசும் போது ‘எழுதுகின்ற எழுத்தர்கள் கவனக் குறைவாக சில இடங்களில் பிழையாக எழுதியுள்ளனர்’ (பக் 58) என்று குறிப்பிட்டு குர்ஆனில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளார்.

59 ஆம் பக்கத்தில் பிழையாக எழுதப்பட்ட இடங்கள் என்ற ஒரு பட்டியல் போட்டுள்ளார். இதனைத் தனியாக ஒரு இணையத் தளத்தில் சிலர் வெளியிட்டு குர்ஆனில் பிழைகள் உள்ளதாக இஸ்லாமிய மூதறிஞர் கூறுகின்றார் என தகவல் போடும் நிலை ஏற்பட்டுள்ளது..

தவறாக எழுதப்பட்ட இந்த வசனங்களை மனனம் செய்தவர்கள் சரியாகத்தான் மனனம் செய்தார்கள்.‘ (பக் 60) என்று எழுதிக் குர்ஆனில் வசனங்கள் தவறாக எழுதப்பட்டுள்ளன எனக் கூறிக் குர்ஆனில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளார்.

வசனங்களின் எண்கள் என்ற தலைப்பில் வசனங்களுக்குத் தவறாக எண்களை இட்டவர்கள் குறித்து கூறும் போதுஇ ‘மற்றவர்கள் குர்ஆனைப் பற்றி தவறான எண்ணம் கொள்வதற்கு நாம் காரணமாக ஆகிவிட்டோம் என்பதும் அவர்களுக்குத் தோன்றவில்லை’ (பக் 55) என எழுதுகிறார்.

7 வசனங்களையுடைய அத்தியாயம் எனக் குர்ஆன் கூறும் (15:87)) சூறதுல் பாத்திஹாவை 6 வசனங்களையுடையதாகக் கூறிக் குர்ஆனில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளார்.

அல்குர்ஆனின் அத்தியாயங்கள் பற்றி கூறும் போது சில அத்தியாயங்கள் 286 வசனங்கள் கொண்டதாகவும், சில அத்தியாயங்கள் மூன்றே மூன்று வசனங்களைக் கொண்டதாகவும் அமைந்திருப் பதாகக் கூறி விட்டு (பக் 46) 113 ஆவது அத்தியாயம் அல்ஃபலக்கையும், 109 ஆவது அத்தியாயம் அல்காஃபிரூனையும் ஒரு வசனங்களையுடைய சூறாக்களாகச் சித்தரித்து அல்குர்ஆனில் விளையாடியுள்ளார்.

இறுதியாகஇ இவரது இந்நிலையில் இவர் நியாயத்துடன் நடந்துகொள்ளவில்லை என்பதற்கு மறுக்க முடியாத ஒரு சான்றை முன்வைக்க விரும்புகின்றோம்.

மலக்குகள் ஆசா-பாசங்களுக்கு அப்பாற்பட்டவர்கள்ள, அல்லாஹ்வின் ஏவல்களை எடுத்து நடப்பதே அவர்களது பணி. அவர்கள் அல்லாஹ்வுக்கு மாறுசெய்ய மாட்டார்கள். இது ஸலபுஸ்ஸாலிஹீன்களான அஹ்லுஸ்ஸுன்னா ஜமாஅத்தினரினதும் உறுதியான நம்பிக்கையாகும். இந்த நம்பிக்கைக்கு மாற்றமாக பிஜே பின்வருமாறு எழுதியுள்ளார்.

மனிதனைப் படைப்பது பற்றி அல்லாஹ் கூறிய போது, ‘பூமியில் குழப்பம் விளைத்து இரத்தம் சிந்துபவர்களையா நீ படைக்கப் போகின்றாய்?’ என மலக்குகள் கேட்டதாகக் குர்ஆன் கூறுகின்றது. (2:30)

இது பற்றிப் பிஜே எழுதும் போது, 
‘முன்பு ஆட்சேபனை செய்த போது அவர்களுடன் ஷைத்தான் இருந்தான். மேற்கண்டவாறு ஆட்சேபனை செய்யுமாறு அவர்களை அவன் தூண்டி விட்டிருக்க முடியும்’ என்று எழுதியுள்ளார்.
(பார்க்க: தர்ஜமா-பக்கம்:1337, விளக்கக்குறிப்பு:395,
‘இஸ்லாத்தின் பார்வையில் சூனியம்’-பக்கம்:59)
இந்தக் கூற்று குர்ஆனுக்கு முரண்பட்டதாகும் அத்தோடு ஈமானுக்கும் வேட்டு வைக்கும் உளரலாகும். இந்த உளரலின் அடிப்படையில் நோக்கும்போது மலக்குகள் ஷைத்தானின் சூழ்ச்சிக்குள்ளாகலாம்ள, அவனது தூண்டுதலால் அல்லாஹ்வுக்கே ஆட்சேபனை செய்வார்கள் என்றால் ஷைத்தானுக்கு வழிப்படும் இயல்பும், அல்லாஹ்வுக்கு மாறுசெய்யும் இயல்புமுள்ள மலக்குகள் கொண்டு வந்த ஒட்டுமொத்த குர்ஆனிலும் சந்தேகம் வந்து விடுமே! இந்த வசனம் ஷைத்தானின் தூண்டுதலால் கொண்டு வரப்பட்டதாக இருக்குமோ? என்று ஒவ்வொரு வசனத்திலும் சந்தேகத்தை ஏற்படுத்தி விடுமல்லவா? பிஜேயின் இந்தத் தவறு பல விதத்திலும் அவருக்கு உணர்த்தப்பட்டுள்ளது. அப்படியிருந்தும் தனது தவறான அந்த வாதத்தை அவர் கைவிடாது ‘சூனியம்’ என்ற புதிய புத்தகத்திலும் அக்கருத்தைக் கூறியுள்ளார் என்றால், குர்ஆனைப் பாதுகாக்கவே அதற்கு முரண்படும் ஹதீஸ்களை மறுக்கின்றோம் என்ற அவரது வாதத்தை எப்படி நம்பமுடியும்?

‘ஹதீஸ் குர்ஆனில் சந்தேகத்தை உண்டுபண்ணினால் அதைத் தூக்கி வீசவேண்டும் எனக் கூறும் இவர், குர்ஆனில் அல்ல, மொத்த வஹீயிலேயே சந்தேகத்தை ஏற்படுத்தும் தனது உளரலை இது வரை ஏன் தூக்கி வீசவில்லை?

ஹதீஸ் ஆதாரப்பூர்வமான அறிவிப்பாளர் தொடருடன் வந்திருந்தாலும்இ அது குர்ஆனுக்கு முரண்பட்டால் ஏற்கக் கூடாது என்பதில் உறுதியைக் காட்டும் இவர் குர்ஆனுக்கு முரண்பட்ட தனது கூற்றை இது வரை தூக்கியெறியாதுள்ளாரே! ஆதாரப்பூர்வமான அறிவிப்பாளர் வரிசையுடன் வந்துள்ள ஹதீஸை விட ‘ஷைத்தான் தூண்டியதால் மலக்குகள் ஆட்சேபனை செய்திருக்கக் கூடும்’ என்ற இவரது உளரல் உயர்வாகி விட்டதா? ஹதீஸை விட மார்க்கத்திற்கு முரணான இவரது சுய விளக்கமும் முக்கியத்துவம் பெற்றவிட்டதா?

இது வரை நாம் கூறியதிலிருந்து நபி(ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டதால் ஏற்பட்ட பாதிப்புக்கும்இ வஹீக்கும் சம்பந்தமில்லை. அதனால் வஹீ பாதிக்கப்பட்டிருக்குமே! என்ற சந்தேகத்திற்கே இடமில்லை என்பதைத் தெளிவாகத் தெரிந்துகொண்டோம். அத்துடன் பிஜேயின் வாதங்கள் குர்ஆனுக்கும், ஸுன்னாவுக்கும் மட்டுமன்றி அவரது சொந்த விளக்கங்களுக்கே முரணாக அமைந்துள்ளது என்பதையும் அறிந்துகொண்டோம். 

நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டிருந்தால் அதைக் காஃபிர்கள் விமர்சனம் செய்திருப்பார்கள். அப்படி விமர்சனம் செய்ததாக எந்தத் தகவல்களும் இல்லை. எனவே, விமர்சனம் இல்லை என்பதே நபி(ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்படவில்லை என்பதற்கான சான்றாகத் திகழ்கின்றது என்ற அடிப்படையில் சகோதரர் நபியவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதாகக் கூறும் ஆதாரப்பூர்வமான ஹதீஸை மறுக்கின்றார்.

உள்ளதை வைத்து விமர்சனம் செய்வதுதான் நியாயமான விமர்சனமாகும். ஆனால், அவர் இந்த வாதத்தை பல்வேறுபட்ட மிகைப்படுத்தல்கள் செய்து ஹதீஸில் கூறப்படாத செய்திகளை மேலதிகமாக இணைத்தே வலுப்படுத்த முனைகிறார்.

எதிரிகள் விமர்சனம் செய்யாதது ஏன்?

    நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையும் அவர்கள் கொண்டு வந்த வேதத்தையும் பொய்யென நிலை நாட்ட எதிரிகள் கடும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர்.

    நபிகள் நாயகத்துக்குச் சூனியம் வைக்கப்பட்டு ஆறு மாத காலம் அவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டிருந்தால் எதிரிகள் இது குறித்து நிச்சயம் விமர்சனம் செய்திருப்பார்கள். (பக்:1298)

நபி(ஸல்) அவர்களுக்குச் செய்யப்பட்ட சூனியத்தால் மனைவியருடன் தாம்பத்தியத்தில் ஈடுபடாமலேயே தாம்பத்திய உறவில் ஈடுபட்டதாக நபி (ஸல்) அவர்களுக்குப் போலி உணர்வு ஏற்பட்டது! 6 மாதம் அல்ல, 6 வருடம் இந்த நிலை ஏற்பட்டால் கூட இதை எதிரிகள் விமர்சனம் செய்யமாட்டார்கள். விமர்சனம் செய்யவும் முடியாது! ஏனெனில், இது வெளி உலகுக்குத் தெரியும் சமாச்சாரமல்ல.

அவர்களுடனும், அவர்களது மனைவியருடனும் மட்டுப்படுத்தப்பட்ட பிரச்சினை இது! இதனை எப்படி எதிரிகள் விமர்சனம் செய்ய முடியும்? எனவே, சூனியம் செய்யப்பட்டிருந்தால் எதிரிகள் விமர்சனம் செய்திருப்பார்கள், விமர்சனம் செய்யாததினால் சூனியம் செய்யப்பட்டது என்பது பொய்யான தகவல் என அவர் வாதிடுவது எவ்வளவு தவறான கண்ணோட்டம் என்று சிந்தித்துப் பாருங்கள்!

காஃபிர்கள் விமர்சனம் செய்திருப்பார்களே! என்ற அர்த்தமற்ற-நியாயமற்ற-நபி(ஸல்) அவர்களுடைய சமூக வாழ்வில் சம்பந்தப்படாத சங்கதியை வைத்து, யூகம் செய்து, அந்த யூகத்தின் அடிப்படையில் ஆதாரபூர்வமான ஹதீஸை மறுப்பது எவ்வளவு தவறான அணுகுமுறை என்பதை நடுநிலையோடு சிந்தித்துப் பாருங்கள்!

அவர்களுக்கு இது குறித்த எவ்வித அறிவும் இல்லை. அவர்கள் வெறும் யூகத்தையே பின்பற்றுகின்றனர். நிச்சயமாக வெறும் யூகம் உண்மைக்கு எந்தப் பயனும் தராது. (53:28)

‘அவர்கள் வெறும் யூகத்தையும் தங்கள் மனம் விரும்புவதையுமே பின்பற்றுகின்றனர். நிச்சயமாக அவர்களது இரட்சகனிடமிருந்து நேர்வழி அவர்களிடம் வந்தே இருக்கின்றது.’ (53:23)

வெறும் யூகங்களைப் பின்பற்றுவது எந்த வகையிலும் சத்தியத்திற்கு துணை நிற்காது எனும் போது, யூகத்தின் அடிப்படையில் ஆதாரபூர்வமான ஹதீஸை மறுக்கும் இவரின் வாதத்தின் உண்மை நிலையை மக்கள் சிந்திக்க வேண்டும்.

மிகைப்படுத்தலும், இட்டுக்கட்டலும்:

    ‘முன்னுக்குப் பின் முரணாகப் பேசுகிறார், செய்ததைச் செய்யவில்லை என்கிறார், செய்யாததைச் செய்தேன் என்கிறார், இவர் கூறுவதை எப்படி நம்புவது?’ என்று நிச்சயம் விமர்சனம் செய்திருப்பார்கள். இந்த வாய்ப்பை நிச்சயம் தவற விட்டிருக்க மாட்டார்கள். (பக்:1298)

ஹதீஸில் சொல்லப்படாத செய்திகளைத் தானாகக் கற்பனை பண்ணி, நபி(ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டதால், அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதாகவும், செய்ததைச் செய்யவில்லையென்றும்-செய்யாததைச் செய்ததாகவும் கூறியதாகச் சித்தரிக்க முனைகின்றார். நபி(ஸல்) அவர்கள் குறித்தல்லவா பேசுகின்றோம் என்ற அச்சமோ, கண்ணிய உணர்வோ கொஞ்சம் கூட இல்லாது ஹதீஸை விமர்சிக்கின்றோம் என்ற எண்ணம் துளி கூட இன்றி இவ்வாறு சொந்தக் கருத்தை ஹதீஸின் கருத்தாக முன்வைக்கலாமா?

    இந்தப் பாதிப்பு ஓரிரு நாட்கள் மட்டும் இருந்து நீங்கியிருந்தால் அது எதிரிகளின் கவனத்திற்குச் செல்லாமல் இருக்க வாய்ப்புண்டு. ஆறு மாத காலம் நீடித்த இந்தப் பாதிப்பு நிச்சயம் மக்கள் அனைவருக்கும் தெரிந்திருக்காமல் இருக்க முடியாது.

    மக்களோடு மக்களாகக் கலந்து பழகாத தலைவர் என்றால் ஆறு மாத காலமும் மக்களைச் சந்திப்பதைத் தவிர்த்து இந்தக் குறையை மறைத்திருக்கலாம்.

    ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தினமும் ஐந்து வேளை பள்ளிவாசலில் தொழுகை நடத்தினார்கள். எந்த நேரமும் மக்கள் அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பை வழங்கியிருந்தார்கள். எனவே நபிகள் நாயகத்துக்கு மனநிலை பாதிப்பு ஏற்பட்டிருந்தால் எதிரிகள் அறிந்திருப்பார்கள். இதை மையமாக வைத்து பிரச்சார யுத்தத்தை நடத்தியிருப்பார்கள். (பக்:1298)

இல்லறத்தில் ஈடுபடாமலேயே ஈடுபட்டதாக எண்ணியது எதிரிகளுக்கு அல்ல, நபித் தோழர்களுக்கே தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை எனும் போது, எதிரிகளுக்குத் தெரிந்திருக்கும், அவர்கள் நிச்சயமாக விமர்சித்திருப்பார்கள் என்று கூறுவது அர்த்தமற்ற வாதமாகும். இந்தப் பந்தியிலும் இந்தப் பாதிப்பு நிச்சயமாக மக்கள் அனைவருக்கும் தெரிந்திருக்காமல் இருக்க வாய்ப்பு இல்லை என்ற யூகத்தையே அவர் முன்வைத்துள்ளார்.

5 வேளை அல்ல, 50 வேளை மக்களுக்குத் தொழுகையை நடத்தினாலும் அவருக்கு ஏற்பட்டதாக ஹதீஸ் கூறும் பாதிப்பு வெளி உலகுக்குத் தெரிவதற்கான வாய்ப்பே இல்லை எனும் போது, இவ்வாதம் அர்த்தமற்றுப் போகின்றது. இந்தப் பந்தியிலும் அவர் யூகத்தைத்தான் முன்வைக்கின்றார்.

6 மாதம் இந்தப் பாதிப்பு நீடித்தது என்ற அடிப்படையில்தான் இந்த வாதத்தையே வலுப்படுத்துகின்றார். ஆனால், சூனியம் 6 மாதம் நீடித்தது என்ற கால அளவு ஆதாரபூர்வமானதல்ல. எனவே, இந்தப்பாதிப்பு ஓரிரு நாட்கள் இருந்து நீங்கியிருந்தால் அது எதிரிகளின் கவனத்திற்குச் செல்லாமல் இருக்க வாய்ப்புண்டு என்ற அவரின் வாசகப்படியே அவரின் இந்த வாதம் அடிபட்டுப் போகின்றது.

    எனவே, நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்படவும் இல்லை. மனநிலை பாதிப்பு ஏற்படவும் இல்லை என்பது திட்டவட்டமாகத் தெரிகிறது.

பல யூகங்களை முன்வைத்து, சில மேலதிக கருத்துக்களையும் சேர்த்துக் கொண்டு இறுதி முடிவை மட்டும் திட்டவட்டமாகத் தெரிவித்து விடுகின்றார். பலவீனமான அறிவிப்பாளர்கள் பலர் ஒரு செய்தியைச் சொன்னாலும், அது பலவீனமானதுதான் எனக் கூறும் இவர், பல யூகங்கள் சேர்ந்து ‘திட்டவட்டமான உண்மை’ என்ற நிலையை அடையாது என்பதை அறியாதிருப்பது ஆச்சரியமாகவுள்ளது!

நல்லறிஞர்கள் ஏன் விமர்சனம் செய்யவில்லை:

எதிரிகள் விமர்சனம் செய்யாததற்கு நாம் விளக்கம் கூறி விட்டோம். இது நபி(ஸல்) அவர்களது குடும்ப விவகாரத்துடன் சம்பந்தப்பட்ட பிரச்சினை. எனவே எதிரிகளுக்கு இது தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. எனவே விமர்சித்திருக்க முடியாது என்பதே அந்த நியாயமான பதிலாகும்.

இப்போது நியாயமான ஒரு கேள்வியை முன்வைக்க விரும்புகின்றோம்.
இந்த ஹதீஸ் ஆதாரபூர்வமான அறிவிப்பாளர் தொடருடன் புகாரி, முஸ்லிம் உள்ளிட்ட பல்வேறுபட்ட அறிஞர்களின் நூற்களில் இடம்பெற்றுள்ளது. இந்த ஹதீஸ் இடம்பெற்ற நூற்களுக்கு விளக்கவுரைகளும் எழுதப்பட்டுள்ளன.

இந்த ஹதீஸ் முஸ்லிம் அறிஞர்கள் அனைவரும் அறிந்த மஸ்ஹூர்-பிரபலமான அறிவிப்பாகவும் திகழ்கின்றது.

நம்பத் தகுந்த நல்லறிஞர்கள் யாரும் ஏன் இந்த ஹதீஸை விமர்சிக்கவில்லை? அவர்கள் இந்த ஹதீஸை விமர்சிக்காதது இப்படி ஒரு நிகழ்ச்சி நடந்தது என்பதற்கான சான்றாகத் திகழ்கின்றதல்லவா?

அவர்கள், இந்த ஹதீஸ் குர்ஆனுக்கு முரண்படுவதாகக் கருதவில்லை, பகுத்தறிவுக்கு முரண்பட்டதாகக் கருதவில்லை.

சூனியம் பற்றிய குர்ஆனின் நிலைப்பாட்டிற்கு முரண்பட்டதாகக் கருதவில்லை, இந்த ஹதீஸை ஏற்றுக்கொண்டால் குர்ஆனில் சந்தேகம் ஏற்படும் என்று கருதவில்லை.

இப்படி இருக்க, இவருக்கு மட்டும் இப்படியெல்லாம் தோன்றுகின்றது என்றால் அவர்கள் அத்தனை பேரையும் அறிவிலிகள் என்பதா? குர்ஆன்-ஸுன்னாவைப் புரிந்துகொள்ளத் தெரியாதவர்கள் என்பதா? அல்லது இவர், தான் புரிந்துகொள்வதில் ஏதோ கோளாறு விடுகின்றார் என்று கருதுவதா? இதை ஒவ்வொரு கொள்கைச் சகோதரனும் நிதானமாகச் சிந்திக்க வேண்டும்.

காஃபிர்கள் விமர்சனம் செய்யவில்லை, எனவே, சூனியம் செய்யப்பட்டதாக வந்த ஹதீஸ் பொய் என்று கூறுவதா?

அல்லது முஸ்லிம் அறிஞர்கள் இந்த ஹதீஸை விமர்சிக்கவில்லை, எனவே, இந்த ஹதீஸ் உண்மையானது என்பதா? எது வலுவான நியாயமான வாதம்? என்பதைச் சிந்திக்க வேண்டும். இப்படிச் சிந்திக்கும் போது இவர் தவறான கோணத்தில் அணுகி பிழையான அடிப்படையில் விமர்சித்து, அர்த்தமற்ற வாதங்களை முன்வைத்து, அந்த ஹதீஸை மறுக்க முயல்வதைத் தெளிவாகத் தெரிந்துகொள்ளலாம்.

இந்த வாதத்திற்கு வலு சேர்க்க அவர் இன்னும் பல யூகங்களைத் துணை வாதங்களாக முன்வைக்கின்றார். அவற்றிற்கான விளக்கங்களையும் அறிந்துகொள்வது அவசியமாகும்.

இறைத் தூதர்களுக்கு அவர்கள் அல்லாஹ்வின் தூதர்கள்தான் என்பதை நிரூபிக்க அற்புதங்கள் வழங்கப்பட்டன என்பதை நிரூபிக்கவும், சாதாரண மனிதர்களை நபியாக ஏற்க மக்கள் மறுத்தனர் என்பதை விளக்கவும் அவர் பல குர்ஆன் வசனங்களை ஆதாரமாகக் காட்டுகின்றார். 17:94, 36:15, 26:186, 26:154, 25:7, 23:33, 23:47, 21:31, 3:184, 7:101, 35:25, 10:74, 10:13, 40:22, 9:76, 64:6, 40:50, 57:25 இவ்வளவு வசனங்களின் கருத்தையும் 1299-1301 பக்கங்களில் பதிவு செய்து இந்த முடிவு நிறைய வசனங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டது என்ற எண்ணத்தை மக்கள் மனதில் பதிக்கிறார். இவ்வளவு வசனங்களை வைத்தும் அவர் வைக்கும் வாதம் என்னவென்றால்….

    இந்த நிலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு யூதர்கள் சூனியம் வைத்து அவர்களையே மந்திர சக்தியால் முடக்கிப் போட்டிருந்தால் இறைத் தூதரை விட யூதர்கள் செய்து காட்டியது பெரிய அற்புதமாக மக்களால் கருதப்பட்டிருக்கும். (பக்:1301)

நபி(ஸல்) அவர்களுக்குச் செய்யப்பட்ட சூனியத்தால் அவர் முடக்கிப் போடப்பட்டதாக ஹதீஸ் கூறவில்லை. இது தேவையில்லாத மிகைப்படுத்தலாகும். தொடர்ந்து வரும் பந்திகளிலும் சூனியத்தால் நபி(ஸல்) அவர்கள் முடக்கப்பட்டதாகவும், வீழ்த்தப்பட்டதாகவும் சித்தரிக்கின்றார். இது ஹதீஸில் கூறப்படாததைக் கூறி, மிகைப்படுத்தி, அதன் பின் அந்த ஹதீஸை மறுக்கும் தவறான அணுகுமுறையாகும். இப்படி மிகைப்படுத்தினால்தான் மறுக்கும் மனநிலைக்கு மக்களைக் கொண்டு வரலாம் என்பதற்காக, அவர் மறுக்கும் எல்லா ஹதீஸ்களிலும் இந்த மிகைப்படுத்தும் தவறான போக்கைக் கைக்கொள்கின்றார்.

    இறைவனால் தேர்வு செய்யப்பட்டவரையே முடக்கிப் போட்டார்கள் என்றால் அன்று எத்தகைய விளைவுகள் ஏற்பட்டிருக்கும்?

    ‘நம்மைப் போன்ற மனிதராக இவர் இருந்தும் இவர் செய்து காட்டிய சில அற்புதங்களைக் கண்டு இறைத் தூதர் என்று நம்பினோம், இன்று அவரது மனநிலையையே பாதிக்கச் செய்து விட்டார்களே, இவரை விட யூதர்கள் அல்லவா ஆன்மீக ஆற்றல் மிக்கவர்கள்’ என்று அம்மக்களில் கணிசமானவர்கள் எண்ணியிருப்பார்கள்.

நபி(ஸல்) அவர்களுக்கு சூனியத்தால் ஏற்பட்ட பாதிப்பு அவர்களுக்கும், அவர்களது மனைவியருக்கும் மட்டும் தெரிந்த செய்தி என்று ஏற்கனவே நாம் விளக்கி விட்டோம். அத்துடன் சூனியம் செய்யப்பட்ட செய்தி அறியப்பட்ட பின்னர் கூட இந்த செய்தி மக்கள் மத்தியில் பரவி தீமை உருவாகி விடக் கூடாது என நபி(ஸல்) அவர்கள் விரும்பினார்கள்.

அத்தோடு நபி(ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்ட செய்தி அவர்களுக்கே இறுதியில்தான் தெரிந்தது. தெரிந்த உடனேயே பரிகாரமும் கிடைத்து விட்டது. இப்படித்தான் ஹதீஸ் கூறுகின்றது.

இப்படி இருக்க, நபி(ஸல்) அவர்களுக்கு யூதர்கள் சூனியம் செய்து நபியையே முடக்கிப் போட்டார்கள். எனவே, நபியை விட யூதர்களே ஆன்மீக ஆற்றல் பெற்றவர்கள் எனச் சிலர் எண்ணியிருப்பார்கள், இதை விமர்சித்திருப்பார்கள், இஸ்லாத்தை விட்டும் வெளியேறியிருப்பார்கள் என்று யூகத்தின் அடிப்படையில் கேள்வி எழுப்புவது எப்படி நியாயமாகும்?

அடுத்து, சூனியம் செய்த யூதர்களை ஆன்மீக ஆற்றல் மிக்கவர்கள் என்று எண்ணியிருப்பார்களாம்.

சூனியத்தை ஆன்மீகமாகவோ, அற்புதமாகவோ மக்கள் கருதவில்லை. அதைத் தீய சக்திகளின் துணையுடன் செய்யும் ஒரு தீய வேலையாகத்தான் மக்கள் கருதினர்.

இவர் குறிப்பிட்டுள்ள வசனங்களில்,

    அவர்களின் உள்ளங்கள் அலட்சியம் செய்கின்றன. ‘இவர் உங்களைப் போன்ற மனிதர் தவிர வேறு யார்? பார்த்துக்கொண்டே இந்த சூனியத்திடம் செல்கிறீர்களா?’ என்று அநீதி இழைத்தோர் மிகவும் இரகசியமாகப் பேசுகின்றனர் (21:3)

என்பதும் ஒன்றாகும்.

சூனியம் செய்வோரைச் சாதாரண மனிதர்களாகத்தான் அன்றைய மக்கள் கருதியுள்ளனர் என்பதை இந்த வசனம் தெளிவாக உணர்த்துகின்றது. எதையும் மிகைப்படுத்திப் பேசிப் பழகியதால், சூனியத்தையும் அற்புதம்-ஆன்மீகம் என்று மிகைப்படுத்தி, மறுக்கும் மனநிலைக்கு மக்களைக் கொண்டுவர முயற்சிக்கின்றார்.

    ‘இவர் செய்து காட்டிய அற்புதத்தை விட யூதர்கள் பெரிய அற்புதம் செய்து காட்டி விட்டார்கள். அற்புதம் செய்தவரையே மந்திர சக்தியால் வீழ்த்தி விட்டார்கள்’ என்று ஒருவர் கூட விமர்சனம் செய்யவில்லை. அதைக் காரணம் காட்டி ஒருவர் கூட இஸ்லாத்தை விட்டு விட்டு மதம் மாறிச் செல்லவில்லை.

    ‘எவ்வித சாதனத்தையும் பயன்படுத்தாமல் சீப்பையும், முடியையும் பயன்படுத்தி இறைத் தூதரை வீழ்த்தினார்கள்’ என்பது தவறான தகவல் என்பது இதிலிருந்து தெளிவாகின்றது.

இந்தப் பந்தியிலும் சூனியத்தின் மூலம் நபியவர்கள் வீழ்த்தப்பட்டதாகவும் ஒருவரும் விமர்சிக்கவில்லை, இஸ்லாத்தை விட்டும் வெளியேறவில்லை. எனவே, சூனியம் செய்யப்பட்டதாகக் கூறும் ஹதீஸ் பொய்யானது என்கிறார்.

நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதால், இல்லறத்தில் ஈடுபடாமலேயே ஈடுபட்டதாக நினைத்தார்கள். இது அவர்களது மனைவிமாரைத் தவிர வேறு எவருக்கும் தெரியவராது. எனவே எவரும் விமர்சிக்கும் நிலையோ, இதைக் காரணம் காட்டி இஸ்லாத்தை விட்டும் வெளியேறும் நிலையோ ஏற்பட வாய்ப்பு இல்லை.

அடுத்து, தனக்குச் சூனியம் வைக்கப்பட்டுள்ளது என்பது நபிக்கே இறுதியில்தான் தெரிய வந்தது. அப்படியிருக்க யூதர்கள் இவரை வீழ்த்தி விட்டனர் என மக்கள் விமர்சித்திருப்பார்கள், இவர் செய்த அற்புதத்தால் இவரை நம்பினால் யூதர்கள் இவரை விட பெரிய அற்புதத்தைச் செய்து விட்டார்களே என முஸ்லிம்கள் எண்ணி இருப்பர் என்ற வாதங்களும், யூகங்களும் அர்த்தமற்றவைகளாகும்.

    இறைத் தூதர்களுக்கு எதிராக இத்தகைய அற்புத சக்தியை எதிரிகளுக்கு வழங்கி, நம்பிக்கை கொண்ட மக்களை அல்லாஹ் நிச்சயம் தடம்புரளச் செய்திருக்க மாட்டான் என்பதால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டிருக்கவே முடியாது என்பதில் ஐயமில்லை.

எல்லா விடயத்திலும் யூகம் செய்தவர், தற்போது அல்லாஹ்வின் விஷயத்திலும் யூகம் செய்கிறார். அதுவும் பிழையான யூகம்!

முதலில் சூனியத்தை ஆன்மீகம்-அற்புதம் என்கிறார். சூனியத்தால் நபி(ஸல்) அவர்கள் முடக்கப்பட்டார்கள்-வீழ்த்தப்பட்டார்கள் என்று சித்தரிக்கின்றார். பின்னர், இறைத் தூதருக்கு எதிராக இத்தகைய அற்புத சக்தியை எதிரிகளுக்கு அல்லாஹ் வழங்கியிருக்க மாட்டான் என்ற யூகத்தை முன்வைக்கின்றார். முடிவை மட்டும் நபிகள் நாயகத்திற்கு சூனியம் வைக்கப்பட்டிருக்கவே முடியாது என்பதில் ஐயமில்லை என்று உறுதியாகக் கூறி விடுகின்றார். தனது கருத்தை மக்கள் மனதில் பதியவைக்க அவர் கையாளும் தந்திரங்களில் இதுவும் ஒன்று.

நபி(ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்ட ‘இஸ்ரா மிஹ்ராஜ்’ என்ற அற்புதமே பலரைத் தடம்புரளச் செய்துள்ளது. இது குறித்து அவரே பேசியுமுள்ளார். அப்படி இருக்கும் போது இப்படி வாதம் செய்வது நியாயமா?

‘தஜ்ஜால்’ எனும் இஸ்லாத்தின் மிகப் பெரிய எதிரிக்கு அல்லாஹ் பல அற்புதங்களை வழங்குவான். அவன் வானத்தைப் பார்த்து, ‘மழை பொழி’ என்றால் மழை பொழியும், அவனை ஏற்ற மக்களின் ஊர்கள் செழிப்படையும், ஏற்காதோரின் ஊர்கள் வரண்டு செழிப்பற்றுப் போகும் என்றெல்லாம் ஹதீஸ்கள் கூறுகின்றன. இஸ்லாத்தின் எதிரிக்கு அல்லாஹ் அற்புதத்தை(?) வழங்க மாட்டான் என்று எப்படிக் கூறமுடியும்? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் ஏதாவது சமாளிப்புப் பதில்களை அளிப்பது அவருக்குச் சாத்தியமானதே! எனினும், அவர் மறுக்க முடியாத அல்லாஹ்வின் விடயத்தில் அவர் செய்த யூகம் தவறானது என்பதை நிரூபிக்கத்தக்க சான்று ஒன்றை முன்வைக்க விரும்புகின்றேன்.

மூஸா(அலை) அவர்கள் தூர்சீனா மலைக்குச் செல்கின்றார்கள். ஹாரூன்(அலை) அவர்கள் சமூகத்திற்குத் தலைமை தாங்குகின்றார்கள். சாமிரி என்பவன் ஜிப்ரீல்(அலை) அவர்களின் காலடி மண்ணையும், நகைகளையும் ஒன்று சேர்த்து ஒரு காளைக் கன்றைச் செய்கிறான். அது மாடு கத்துவதைப் போன்று கத்துகின்றது.

அவன் அவர்களுக்குக் காளைக் கன்றின் உருவத்தை வெளிப்படுத்தினான். அதற்கு மாட்டின் சப்தமும் இருந்தது. உடனே, (மக்கள்) ‘இதுதான் உங்கள் இரட்சகனும், மூஸாவின் இரட்சகனும் ஆகும். ஆனால், அவர் மறந்து விட்டார்’ என அவர்கள் கூறினர்.’ (20:88)

(குறிப்பு: இந்த வசனத்தில் சாமிரி காளைக் கன்றைச் செய்ததும், (மக்கள்) ‘இதுதான் உங்கள் கடவுள், மூஸாவின் கடவுள்’ என்றனர் என்று குர்ஆன் கூறுகின்றது. ‘பகாலூ’-அவர்கள் கூறினார்கள் என்று இருப்பதை ‘கால’-அவன் கூறினான் என்ற அடிப்படையில் தவறான மொழியாக்கம் செய்துள்ளார்.)

அப்பொழுது மக்கள் காளைக் கன்றை வணங்குகின்றனர். ஹாரூன் நபி, ‘இதை வணங்காதீர்கள்’ என்று எவ்வளவோ எடுத்துச் சொல்கின்றார். மக்கள் அவரைக் கொலை செய்ய முற்படுகின்றனர். இந்த நிலையிலும் ஹாரூன் நபியால் இதற்கு மாற்றமாக அல்லது இதை மிகைக்கும் வண்ணம் அற்புதம் செய்து அவனைத் தோற்கடிக்க முடியவில்லை. இது குறித்து-‘கராமத் முஃஜிஸா’ பற்றிப் பேசும் போது இவரே விரிவாகவே பேசியுள்ளார்.

இங்கே எதிரிக்கு அல்லாஹ் அற்புதத்தை வழங்கியுள்ளான். நபிக்கு எதுவும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மக்கள் பலரும் தடம்புரண்டு, நபியையே எதிர்க்கும் நிலைக்குச் சென்றுள்ளனர். இப்படி இருக்க, இறைத் தூதர்களுக்கு எதிராக இத்தகைய அற்புத சக்தியை எதிரிகளுக்கு வழங்கி நம்பிக்கை கொண்ட மக்களை, அல்லாஹ் நிச்சயமாகத் தடம்புரளச் செய்திருக்க மாட்டான் என்ற இவரின் யூகம் குர்ஆனுக்கு முரண்பட்டது. அல்லாஹ்வின் விடயத்தில் குர்ஆனுக்கு மாற்றமாக இப்படி யூகம் செய்யும் அதிகாரத்தை இவருக்கு வழங்கியது யார்?

இந்தத் தவறான யூகத்தினதும், வாதத்தினதும் அடிப்படையில் நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதாகக் கூறும் ஹதீஸை மறுக்கும் அவரது வாதம் தவறானது என்பதை எவரும் எளிதில் உணரலாம்.

அடுத்து, சூனியம் வைக்கப்பட்டவர் அல்ல என்று குர்ஆன் கூறுகின்றது என்ற அடிப்படையில் அவர் வைக்கும் வாதத்தில் அவர் குர்ஆனுக்கும், அவரது சொந்த வாதங்களுக்கும் முரண்படும் விதத்தைத் தொடர்ந்து நோக்குவோம்.

முஹம்மத்(ஸல்) சூனியம் செய்யப்பட்டவர்?’

இஸ்லாத்தின் எதிரிகள் நபி(ஸல்) அவர்களை மஸ்ஹூர் – சூனியம் செய்யப்பட்டவர் என விமர்சித்துள்ளனர். அப்படி விமர்சித்தவர்களைக் குர்ஆன் அநியாயக்காரர்கள் என்று கூறுகின்றது. இதன் மூலம் அவர்களது விமர்சனம் அல்லாஹ்வால் மறுக்கப்பட்டுள்ளது. இப்படி இருக்க நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதாக ஹதீஸ் கூறுகின்றது. எனவே இந்த ஹதீஸை ஏற்றுக்கொள்ள முடியாது என்ற தோரணையில் வாதித்து சகோதரர் ஹதீஸை மறுக்கின்றார்.

இந்த வாதம் தவறானதாகும். இந்த வாதத்தை முன்வைப்பதன் மூலம் சகோதரர் தனக்குத் தானே முரண்படுகின்றார்.

சூனியம் என்றால் வெறும் சூழ்ச்சி, தந்திர வித்தை, மாயாஜாலம், மெஜிக் என்று விளக்கம் கூறி விட்டு இந்த இடத்தில் ‘மஸ்ஹூர்’ என்பதற்கு விளக்கமளிக்கும் போது அவருக்கு மாற்றுக் கருத்துடையவர்கள் கூறும் விளக்கத்தையே ஏற்றுக்கொண்டு வாதிப்பதன் மூலம் தனக்குத் தானே முரண்படுகின்றார்.

‘மஸ்ஹூர்’ – ‘சூனியம் செய்யப்பட்டவர்’ என்ற மொழிபெயர்ப்புக்கு அவரது விளக்கப்படி சூழ்ச்சிக்குள்ளானவர், மாயாஜால வித்தைக்குள்ளானவர், மெஜிக்குக்குள்ளானவர் என்றல்லவா அர்த்தமும் விளக்கமும் எடுத்திருக்க வேண்டும்? இந்த வாதத்தை முன்வைத்ததன் மூலம் அவர் சூனியம் என்ற ஒன்று இருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்கிறார்.

எனவே, இந்த வாதத்தை முன்வைத்ததன் மூலம் அவர் தனக்குத் தானே முரண்படுவதுடன் சூனியத்திற்கு வெறும் தந்திர வித்தை, மெஜிக், மாயாஜாலம் என்று இது வரை அவர் அளித்த அர்த்தமற்ற வாதத்தை அவரே தவறு என ஒப்புக்கொண்டவராகின்றார்.

அடுத்தது, இந்த இடத்தில் பயன்படுத்தப்பட்ட ‘மஸ்ஹூர்’ என்ற பதத்திற்கு மூன்று அர்த்தங்கள் அறபு மொழி அடிப்படையிலும் அல்குர்ஆன் விளக்கவுரையாளர்களின் வியாக்கியானங்களின் மூலமும் கொடுக்கலாம். அதில் எந்த அர்த்தத்தைக் கொடுத்தாலும் இந்த வசனங்களுக்கும் – நபி(ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டதாகக் கூறும் ஹதீஸுக்குமிடையில் எந்த முரண்பாடு எழாது. இதை அவரும் தெளிவாகவே விளங்கி வைத்துள்ளார்.

நபியே மனிதர்களிடமிருந்து உம்மைப் பாதுகாப்போம் (5:67) என்ற குர்ஆன் வசனம் ‘யாரும் நபியைக் கொல்ல முடியாது’ என்றே கூறுகின்றது என்பதைத் தெளிவாகத் தெரிந்துகொண்டே நபி(ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்ட ஹதீஸ் இந்த வசனத்திற்கு முரண்பட்டது என்று வாதிட்டது போல் இந்த வசனத்திற்கும் ஹதீஸுக்குமிடையில் எந்த முரண்பாடும் இல்லை என்பதை அறிந்துகொண்டே அவர் இந்த வாதத்தை முன்வைத்துள்ளார்.

இந்த வசனம் நேரடியாக நபி(ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்ய முடியாது என்பதைத்தான் கூறுகின்றது என்பதை அவர் தெளிவாகத் தெரிந்திருந்தால், இதையே முதல் வாதமாக வைத்து ‘வெட்டு ஒன்று துண்டு இரண்டு’ எனப் பிரச்சினையை முடித்திருப்பார். பல்வேறு வாதங்களை முன்வைத்து மக்கள் மனதில் குறித்த ஹதீஸ் குறித்து சந்தேகங்களை ஏற்படுத்தி, அதன் பின்னர் இந்த வாதத்தை முன்வைப்பதன் மூலம் இந்த வாதம் வலுவற்றது என்பதைப் புரிந்துகொண்டே இந்த வாதத்தை முன்வைத்துள்ளார் என யூகிக்கலாம். (இந்த யூகத்திற்கு வலுவூட்டுவதாக அவரது எழுத்து அமைந்துள்ளதைப் பின்னர் குறிப்பிடுவோம்.)

முரண்பாடு இல்லையே!
அல்குர்ஆனில் மஸ்ஹூரா – சூனியம் செய்யப்பட்டவர் என்ற வார்த்தை நபி(ஸல்) அவர்களைக் குறித்து காஃபிர்களால் இரு இடங்களிலும், மூஸா நபியைக் குறித்து பிர்அவ்னால் ஒரு இடத்திலும் பயன்படுத்தப் பட்டுள்ளது.

பிர்அவ்னும் மூஸா நபியும்:
நிச்சயமாக நாம் மூஸாவுக்குத் தெளிவான ஒன்பது அத்தாட்சிகளை வழங்கினோம். (தமது சமூகமாகிய) அவர்களிடம் அவர் வந்தபோது (என்ன நிகழ்ந்தது? என நபியே!) நீர் இஸ்ராஈலின் சந்ததியினரிடம் கேட்டுப்பாரும். ‘மூஸாவே! நிச்சயமாக சூனியம் செய்யப்பட்டவராக உம்மை நான் எண்ணுகிறேன்’ என்று பிர்அவ்ன் அவரிடம் கூறினான். (17:101)

பிர்அவ்ன் மூஸா நபியை சூனியம் செய்யப்பட்டவர் எனக் கூறியதைக் குர்ஆனோ, மூஸா நபியோ ஏற்றுக்கொள்ளவில்லை.

இதற்குப் பதில் கூறும் போது மூஸா(அலை) அவர்கள்,

‘வானங்கள் மற்றும் பூமியின் இரட்சகனே இவைகளைத் தெளிவான சான்றுகளாக இறக்கி இருக்கிறான் என்பதை நிச்சயமாக நீ அறிவாய். ‘பிர்அவ்னே! நிச்சயமாக நான் உன்னை அழிவுக்குள்ளாக்கப் படுபவனாகவே எண்ணுகிறேன்’ என (மூஸா) கூறினார்.’
(17:102)

மேற்படி வசனத்தின் மூலம் அவன் கூறியதை மறுத்ததுடன் அவன் அழிவுக்குள்ளாகக்கூடியவன் என்றும் மூஸா நபி கூறினார் என்பது தெளிவாகின்றது. எனினும் மூஸா நபி பின்னர் சூனியத்திற்குள்ளானார்கள் எனக் குர்ஆன் கூறுகின்றது. சூனியக்காரர்கள் கயிறுகளையும் தடிகளையும் போட்ட போது அவர்களது சூனியத்தின் காரணமாக அவை பாம்புகள் போன்று போலித் தோற்றத்தை ஏற்படுத்தின. மக்களுக்கு மட்டுமன்றி மூஸா நபிக்குக் கூட அவை பாம்பாகத் தென்பட்டன. அவர் அச்சமுற்றார். இதைக் குர்ஆன் உறுதி செய்கின்றது. (20:65-68)

பிர்அவ்ன் மூஸா நபியை சூனியம் செய்யப்பட்டவர் என்கின்றான்! அவன் சொன்னபடியே அவர் சூனியம் செய்யப்பட்டார். அதன் பாதிப்புக்குள்ளானார். இப்போது பிர்அவ்ன் சொன்னது சொன்னபடி நடந்தது என்று யாரும் கூறுவார்களா? மூஸா நபிக்கு சூனியத்தால் கயிறும், தடியும் பாம்பாகத் தென்பட்டது என்று கூறுவது பிர்அவ்னை உண்மைப்படுத்துவதாகுமா? குர்ஆனைப் பொய்ப்படுத்துவதாகுமா? குர்ஆன் குர்ஆனுக்கே முரண்படுகின்றதா?

இப்படி இருக்க அநியாயக்காரர்கள் நபியை சூனியம் செய்யப்பட்டவர் என்று கூறினர். நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது என்ற ஹதீஸை ஏற்றுக்கொண்டால் அது குறைஷிகளின் கூற்றை உண்மைப்படுத்துவதாகி விடும் என விவாதிப்பது எப்படி நியாயமாகும்?

பிர்அவ்னும், குறைஷிகளும் மற்றக் காஃபிர்களும் நபிமார்களைப் பார்த்துச் சூனியம் செய்யப்பட்டவர் என்று கூறியது வேறு அர்த்தத்திலாகும். ஹதீஸ் கூறும் செய்தி வேறு செய்தியாகும். இரண்டுக்குமிடையில் எந்த முரண்பாடும் இல்லை. அப்படி இருப்பதாகக் கூறினால் மூஸா நபியும் சூனியத்திற்குள்ளாகியுள்ளார் எனக் குர்ஆன் கூறுகின்றது. அதை நம்பக்கூடாது நம்பினால் குர்ஆனை மறுக்க நேரிடும். அல்லாஹ்வையும், மூஸா நபியையும் பொய்ப்பித்து பிர்அவ்னை உண்மைப்படுத்த நேரிடும் என்று கூறுவதாக அமைந்து விடும். இந்த ஒரு விளக்கமே இவரின் இந்த வாதத்தின் போலித் தன்மையை நிரூபிக்கப் போதிய சான்றாகும். எனினும், மேலதிக விளக்கத்திற்காக இந்த வசனங்கள் எங்கே? எந்தெந்த? அர்த்தங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதையும் இதன் உண்மையான விளக்கம் என்ன? என்பதையும் விரிவாக நோக்குவோம்.

சூனியம் செய்யப்பட்டவர்:
‘அல்லது ஒரு புதையல் இவருக்குக் கொடுக்கப் பட்டிருக்க வேண்டாமா? அல்லது அவருக்கு ஒரு தோட்டம் இருந்து, அதிலிருந்து அவர் உண்ண வேண்டாமா? (என்றும் கூறுகின்றனர்.) ‘நீங்கள் சூனியம் செய்யப்பட்ட ஒரு மனிதரையே பின்பற்றுகின்றீர்கள்’ என்று அநியாயக்காரர்கள் கூறுகின்றனர்.’ (25:08)

‘அவர்கள் உம்மிடம் செவியேற்கும் போது எதை செவியேற்கின்றார்கள் என்பதையும், ‘சூனியம் செய்யப்பட்ட மனிதரை அன்றி வேறு எவரையும் நீங்கள் பின்பற்றவில்லை’ என்று அநியாயம் செய்தோர் இரகசியம் பேசிக்கொள்வதையும் நாம் நன்கறிவோம்.’ (17:47)

இந்த இரு வசனங்களிலும் நபி(ஸல்) அவர்களையும் (17:101), மூஸா நபியையும் (26:153), ஷுஐப் நபியையும் (26:185) இதன் பன்மைப் பதம் ஸாலிஹ் நபியையும், குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த இடங்களில் இவர்களின் ஒட்டுமொத்தப் போதனைகளையும் சூனியத்தின் உளறல் என்ற அடிப்படையிலேயே இவ்வாறு கூறினர் என்பதை இந்த வசனங்களின் முன்-பின் வசனங்களை அவதானிக்கும் போது அறிந்துகொள்ளலாம்.

17:47 ஆம் வசனத்தில் அநியாயக்காரர்கள் நபியை சூனியம் செய்யப்பட்டவர் என்று கூறியதாக வருகின்றது. அதற்கு அடுத்து வரும் வசனங்களில்

‘எலும்புகளாகவும், உக்கிப்போனவர்களாகவும் நாம் ஆகிய பின்னர் நிச்சயமாக நாம் புதியதொரு படைப்பாக எழுப்பப்படுவோமா?’ என அவர்கள் கேட்கின்றனர். (17:49)

எனவே, நபி(ஸல்) அவர்களது போதனை சூனியத்திற்குள்ளானவனின் உளறல் என்ற அர்த்தத்திலேயே காஃபிர்கள் இப்படிக் கூறியுள்ளனர் என்பதை அறியலாம்.

25:8 ஆம் வசனத்திலும் நபி(ஸல்) அவர்களை மஸ்ஹூர்-சூனியத்திற்குள்ளானவர் எனக் கூறியதாக குர்ஆன் குறிப்பிடுகின்றது. அதற்கு முந்தைய வசனங்களைப் பார்த்தால் தூதுத்துவத்தை முழுமையாக மறுப்பதற்காகத்தான் இப்படிக் கூறினர் என்பதைப் புரியலாம்.

‘இது பொய்யே அன்றி வேறில்லை. இதனை இவரே இட்டுக்கட்டிக்கொண்டார். வேறு ஒரு கூட்டத்தினரும் இதற்காக அவருக்கு உதவி புரிந்துள்ளனர்’ என நிராகரித்தோர் கூறுகின்றனர். இதனால் அவர்கள் நிச்சயமாக அநியாயத்தையும் பொய்யையுமே கொண்டு வந்துள்ளனர்.

‘(இவை) முன்னோர்களின் கட்டுக்கதைகளாகும். இவற்றை இவரே எழுதச்செய்துகொண்டார். அது இவருக்குக் காலையிலும் மாலையிலும் படித்துக் காட்டப்படுகின்றது’ என்றும் கூறுகின்றனர்.

வானங்கள் மற்றும் பூமியின் இரகசியங்களை நன்கறிந்தவனே இதனை இறக்கி வைத்தான் என (நபியே) நீர் கூறுவீராக! நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையவனாகவும் இருக்கின்றான்.

அல்லது ஒரு புதையல் இவருக்குக் கொடுக்கப்பட்டிருக்க வேண்டாமா? அல்லது அவருக்கு ஒரு தோட்டம் இருந்து, அதிலிருந்து அவர் உண்ண வேண்டாமா? (என்றும் கூறுகின்றனர்.) ‘நீங்கள் சூனியம் செய்யப்பட்ட ஒரு மனிதரையே பின்பற்றுகின்றீர்கள்’ என்று அநியாயக்காரர்கள் கூறுகின்றனர். (25:4,5,6,8)

இவ்வாறே ஸாலிஹ்(அலை) அவர்களையும் இப்படி விமர்சித்தனர். அவர்களது சமூகத்திற்குத் தன்னை ஒரு இறைத் தூதர் என அவர் அறிமுகம் செய்து, போதனை செய்த போது அவரது தூதுத்துவத்தை முழுமையாக மறுக்கும் விதமாக,

அ(தற்க)வர்கள், ‘நீர் சூனியம் செய்யப்பட்டவர்களில் உள்ளவர்தாம்’ என்று கூறினர். (26:153)

இவ்வாறே ஷுஐப்(அலை) அவர்கள் தன்னை இறைத் தூதராக அறிமுகப்படுத்திப் போதனை செய்த போது,

அ(தற்க)வர்கள், ‘நிச்சயமாக நீர், சூனியம் செய்யப்பட்டவர்களில் உள்ளவர் தாம்’ என்று கூறினர். நீர் எம்மைப் போன்ற மனிதரேயன்றி வேறில்;லை. நிச்சயமாக உம்மை நாம் பொய்யர்களில் உள்ளவராகவே எண்ணுகின்றோம். (26:185-186)

இந்த அடிப்படையில் நோக்கும் போது நபிமார்களது முழுத் தூதுத்துவத்தை மறுப்பதற்காகவே சூனியம் செய்யப்பட்டவர்கள் என அவர்கள் கூறினர் என்பதை அறியலாம். இவர்கள் சூனியம் செய்யப்பட்டதனால் உளருகின்றனர் என அவர்கள் கூறினர்.

அவர்களின் இந்தக் கூற்றை மறுப்பது நபிக்குச் சூனியமே செய்ய முடியாது என்பதை மறுப்பதாகாது! நபி(ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்ட ஹதீஸை நம்புவது காஃபிர்களை உண்மைப்படுத்துவதாகவோ குர்ஆனைப் பொய்ப்படுத்துவதாகவோ ஒருபோதும் அமையாது. எனவே, நபி(ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஹதீஸிற்கும் இந்த வசனங்களின் போக்கிற்கும் எந்த முரண்பாடும் இல்லை.

இதைச் சகோதரர் தெளிவாக விளங்கியிருந்ததனால்தான் இதை முதல் வாதமாகவோ, இறுதி வாதமாகவோ வைக்கவில்லை. அத்துடன் சூனியம் செய்யப்பட்டவர் என்று என்ன எண்ணத்தில் காஃபிர்கள் கூறினர் என்பதை அவரே எழுதும் போது,

‘வேறு சில வேளைகளில் இவருக்கு யாரோ சூனியம் வைத்திருக்க வேண்டும் என்று விமர்சனம் செய்தனர். இவருக்குச் சூனியம் வைக்கப்பட்டு அதனால் மனநிலை பாதிக்கப்பட்டு உளறுகிறார் என்பது இந்த விமர்சனத்தின் கருத்தாகும்.’ (பிஜே தர்ஜமா பக்:1302)

காஃபிர்கள் கூறிய அர்த்தம் வேறு. அதைத்தான் குர்ஆனின் போக்கு கண்டிக்கின்றது என்பதைத் தெளிவாகத் தெரிந்துகொண்டே தவறான வாதத்தை முன்வைத்துக் குர்ஆனுக்கும் ஆதாரபூர்வமான ஹதீஸுக்குமிடையில் முரண்பாடு இருப்பதாகச் சித்தரிக்கும் இவரது தவறான போக்கையும் ஹதீஸ் மீதும், ஹதீஸ் நூற்கள் மீதும், கடந்த கால ஹதீஸ் கலை அறிஞர்கள் அனைவர் மீதும் சந்தேகத்தைத் தோற்றுவிக்கும் இவரது ஆபத்தான போக்கு குறித்தும் மக்கள் விழிப்புடனிருக்கக் கடமைப்பட்டுள்ளனர்.

இது வரை நாம் கூறிய விளக்கங்களும் சகோதரர் பிஜே தனது தர்ஜமாவில் குறிப்பிட்டுள்ள மேற்படி கூற்றும் இந்த வசனங்களின் அர்த்தம் வேறு, நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதாகக் கூறும் ஹதீஸின் அர்த்தம் வேறு என்பதைப் புரிந்துகொள்ளப் போதுமான சான்றுகளாகும். இருப்பினும் ‘மஸ்ஹூர்’ என்ற சொல்லுக்கு இன்னும் இரண்டு விளக்கங்கள் கூறப்படுகின்றன. அவையும் குர்ஆனினது போக்கையும், அறபு மொழியையும் அடிப்படையாகக் கொண்டு அறிஞர்களால் வழங்கப்பட்ட விளக்கங்களே! அந்த விளக்கங்கள் குறித்த பல்வேறுபட்ட குர்ஆன் விளக்கவுரை நூற்கள் பேசியுள்ளன. அவற்றையும் அறிந்துகொள்வது மேலதிக விளக்கத்திற்கு ஏற்றதாக இருக்கும் என எண்ணுகின்றோம்.

சூனியக்காரர் என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்ட ‘சூனியம் செய்யப்பட்டவர்’ என்ற பதம்:

அறபு மொழி வழக்கிலும் அல்குர்ஆனிய நடையிலும் செய்தவன் என்பதைச் செய்யப்பட்டவன் என்ற பதம் கொண்டு பயன்படுத்தும் நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

உதாரணமாக மூஸா(அலை) அவர்கள் ஒன்பது அத்தாட்சிகளைக் காட்டுகின்றார்கள். இது குறித்துக் குர்ஆன் கூறும் போது,

நிச்சயமாக நாம் மூஸாவுக்;குத் தெளிவான ஒன்பது அத்தாட்சிகளை வழங்கினோம். (தமது சமூகமாகிய) அவர்களிடம் அவர் வந்த போது (என்ன நிகழ்ந்தது? என நபியே!) நீர் இஸ்ராஈலின் சந்ததியினரிடம் கேட்டுப்பாரும். ‘மூஸாவே! நிச்சயமாக சூனியம் செய்யப்பட்டவராக உம்மை நான் எண்ணுகிறேன்’ என்று பிர்அவ்ன் அவரிடம் கூறினான்.
(17:101)

என்று கூறுகின்றது. ஒன்பது அத்தாட்சிகளை-அற்புதங்களைக் காட்டிய பின் மூஸா நபியைப் பார்த்துச் சூனியக்காரன் எனக் கூறுவானா? சூனியம் செய்யப்பட்டவன் என்று கூறுவானா? என்று கேட்டால் சூனியக்காரன் என்றுதான் கூறுவான் என்று யாரும் பதிலளிப்பர். சகோதரர் கூட அப்படித்தான் பதிலளிப்பார். அவர் அவரது தர்ஜமாவில் இதை எழுத்து மூலம் அளித்துமுள்ளார்.

‘நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் செய்து காட்டிய அற்புதங்களைக் கண்ட போது, ‘இவர் சூனியம் செய்கிறார்’ என்று சிலவேளை விமர்சனம் செய்தனர். (பக்:1302)

எனவே, அற்புதம் செய்தவரைப் பார்த்து مسحور சூனியம் செய்யப்பட்டவர் என்று கூறப்பட்டாலும் அதன் அர்த்தம் ساحر சூனியம் செய்பவர் என்பதுதான். இதை நான் எனது சொந்தக் கருத்தாகக் கூறவில்லை.

மூஸா நபி குறித்து மஸ்ஹூர்-சூனியம் செய்யப்பட்டவர் என்ற பதம் சூனியக்காரர் என்ற அர்த்தத்தில்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது என அறபு மொழியை அறிந்த அல்குர்ஆன் விளக்கவுரையாளர்கள் பலரும் குறிப்பிட்டுள்ளனர். உதாரணமாக,

002

பொருள்:
(மூஸாவே உன்னை நான் சூனியம் செய்யப்பட்டவராகக் கருதுகிறேன்.) இந்தப் பதம், ‘சூனியக்காரர்’ என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகின்றது. அல்லாஹ் மிகவும் அறிந்தவன்.  (தப்ஸீர் இப்னு கதீர்)

அல் பராஉ அவர்களும், அபூ உபைதா அவர்களும் இதன் அர்த்தம் ‘சூனியம் செய்யப்பட்டவர் என்பதல்ல, சூனியம் செய்பவர்’ என்பதுதான் என்று கூறுகின்றனர்.

003

பொருள்:

இன்னும் முஹம்மத் இப்னு ஜரீர் அவர்கள் ‘சூனியம் செய்யப்பட்டவர்’ என்பதன் அர்த்தம் ‘சூனியக் கலை பற்றிய அறிவைப் பெற்றவர். நீ செய்யக்கூடிய இந்த அதிசய செயல்கள் எல்லாம் உனது சூனியத்தால் செய்கிறாய் என்பது இதன் அர்த்தம் என்கின்றார்கள். (சுருக்கம் தப்ஸீர் பகவி)

அல்குர்ஆன் விளக்கவுரையாளர்களின் கூற்றை ஏற்றுக்கொள்ளாதவர்கள் அறபு மொழி வழக்கையாவது ஏற்றுக்கொள்வார்கள் என எண்ணுகின்றேன்.

அத்துடன் மூஸா நபி ஒன்பது அற்புதங்களைக் காட்டிய போது சூனியம் செய்யப்பட்டவர் என்று கூறியதாக ஒரு இடத்தில் வருகின்றது. மற்றொரு இடத்தில் தெளிவாகவே அத்தாட்சிகளைப் பார்த்த போது சூனியக்காரன் என்று கூறியதாக இடம்பெற்றுள்ளது.

(அனைவரும்) காணும் வகையில் அவர்களிடம் நமது அத்தாட்சிகள் வந்த போது, ‘இது தெளிவான சூனியமே’ என்று அவர்கள் கூறினர்.

இன்னும், அவர்களது உள்ளங்கள் அவற்றை உறுதியாக நம்பியிருந்தும், அநியாயமாகவும் ஆணவத்துடனும் அவற்றை அவர்கள் மறுத்தனர். குழப்பம் விளைவித்தோரின் இறுதி முடிவு என்னவாயிற்று? என்பதை (நபியே!) நீர் கவனிப்பீராக! (27:13-14)

‘அவர்கள் (இவர்) சூனியக்காரரும், பெரும் பொய்யருமாவார்’ எனக் கூறினர். (40:24)

இது போன்ற வாதங்களை முன்வைத்து ‘சூனியம் செய்யப்பட்டவர்’ என்பது அதன் அர்த்தம் அல்ல; ‘சூனியக்காரர்’ என்பதுதான் அதன் அர்த்தம் என்கின்றார்கள்.

இதற்கு மற்றுமொரு உதாரணத்தை இதே சூறாவில் காணலாம்.

‘குர்ஆனை நீர் ஓதினால் உமக்கும் மறுமையை நம்பிக்கை கொள்ளாதோருக்கும் இடையில், மறைக்கப்பட்ட ஒரு திரையை நாம் ஏற்படுத்தி விடுவோம்.’ (17:45)

இந்த வசனத்தில் حجابا مستورا (மறைக்கப்பட்ட திரை) என்ற பதம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இருந்தாலும் حجابا ساترا (மறைக்கும் திரை) என்பதுதான் இதன் அர்த்தம் என அல்குர்ஆன் விளக்கவுரைகள் கூறுகின்றன. இதைப் பின்வரும் கூற்று உறுதி செய்கின்றது.

001

‘செய்யப்பட்டவன்’ என்ற பதம், ‘செய்பவன்’ என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்படலாம் என்ற அறபு இலக்கண மரபுக்கு இவை ஆதாரமாக அமைகின்றன.

அல்குர்ஆனின் இலக்கிய நடை
இவ்வாறு கூறும் போது ஏன் அல்குர்ஆன் இந்த மொழி நடையைக் கடைபிடிக்க வேண்டும். வெறுமனே ஸாஹிர் என்றே கூறி விட்டுப் போகலாமே! என்ற ஐயம் பலருக்கு ஏற்படலாம். இது குறித்த சிறு விளக்கத்தைப் பெறுவது நல்லது.

அல்குர்ஆன் பொருளை மட்டுமன்றி அழகிய இலக்கிய நயம் கலந்த சொற்பயன்பாட்டிலும் கவனம் செலுத்துகின்றது. இந்த மஸ்ஹூர்-சூனியம் செய்யப்பட்டவர் என்ற பதம் பயன்படுத்தப்பட்ட ஆயத்துக்கு முந்தைய வசனங்கள் மஸ்ஹூரா என்ற சொல்லை ஒத்த ஓசை நயமுடையதாக அமைந்திருப்பதை அவதானிக்கலாம்.

நபி(ஸல்) அவர்களைக் குறித்து மஸ்ஹூரா என அவர்கள் கூறிய வசனத்திற்கு முந்தைய-பிந்திய வசனங்களின் முடிவை அவதானித்தால் இந்த உண்மையை அறியலாம். 17 ஆம் அத்தியாயத்தின் 33 ஆம் வசனம் மன்ஸூரா என்றும், 34 ஆம் வசனம் மஸ்ஊலா என்றும், 35 ஆம் வசனம் தஃவீலா என்றும், 36 ஆம் வசனம் மஸ்ஊலா என்றும், 37 ஆம் வசனம் தூலா என்றும், 38 ஆம் வசனம் மக்ரூஹா என்றும், 39 ஆம் வசனம் மத்ஹூரா என்றும், 40 ஆம் வசனம் அழீமா என்றும், 41 ஆம் வசனம் நுபூரா என்றும், 42 ஆம் வசனம் ஸபீலா என்றும், 43 ஆம் வசனம் கபீரா என்றும், 44 ஆம் வசனம் கபூரா என்றும், 45 ஆம் வசனம் மஸ்தூரா என்றும், 46 ஆம் வசனம் நுபூரா என்றும், 47 ஆம் வசனம் மஸ்ஹூரா, இவ்வாறு இலக்கிய நயத்துடனும் ஒத்த ஓசை நயத்துடனும் அமைந்திருப்பதை அவதானிக்கலாம். இவ்வாறே 25:8 வசனத்திற்கு முந்திய-பிந்திய வசனங்களும் ‘மஸ்ஹூரா’ என்ற ஓசை நயத்துடன் ஒன்றித்திருப்பதை அறியலாம். எனவே, அறபு இலக்கண விதிகளில் இடமிருப்பதாலும், அல்குர்ஆன் பயன்படுத்தியிருப்பதாலும், இந்த இடத்தில் ‘மஸ்ஹூர்’ என்ற பதம் பயன்படுத்தப்பட்டாலும் அது ‘ஸாஹிர்’ என்ற அர்த்தத்திலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி ‘சூனியக்கார மனிதனைத்தான்’ இவர்கள் பின்பற்றுகின்றனர் என்று அநியாயக்காரர்கள் கூறகின்றனர் என்பது அந்த வசனத்தின் விளக்கமாகும்.

அனைத்து இறைத் தூதர்களும் ‘சூனியக்காரர்கள்’ என எதிரிகளால் விமர்சிக்கப்பட்டுள்ளனர்.

‘இவ்வாறே, இவர்களுக்கு முன்பிருந்தோரிடம் எந்தத் தூதர் வந்த போதும், ‘(இவர்) சூனியக்காரர் அல்லது பைத்தியக்காரர்’ என அவர்கள் கூறாமல் இருந்ததில்லை.’ (51:52)

எனக் குர்ஆனும் கூறுகின்றது. இந்த அடிப்படையில் அர்த்தம் செய்யும் போது அந்த அர்த்தத்திற்கும், ஹதீஸிற்குமிடையில் எந்த முரண்பாடும் இல்லை என்பது தெளிவு. முன்னைய அர்த்தத்தின்படி சூனியம் செய்யப்பட்ட மனிதர் என்று அர்த்தம் செய்தாலும், காஃபிர்கள் கூறிய நோக்கத்திற்கும் இந்த ஹதீஸ் கூறும் அர்த்தத்திற்குமிடையில் பாரிய வேறுபாடு உள்ளது என்பதை ஏற்கனவே தெளிவுபடுத்தி விட்டோம்.

சந்தேக நிவர்த்தி:
‘மஸ்ஹூர்’ என்ற பதம் ‘ஸாஹிர்’ (சூனியக்காரர்) என்ற அர்த்தத்திலும் பயன்படுத்தப்படலாம் என்பதை அறபு மொழி வழக்கின் படியும் அல்குர்ஆன் ஒளியிலும் நாம் விளக்கியுள்ளோம். எனினும், அதற்கான காரணம் கூறும் போது ஓசை நயம், இலக்கிய நயம் குறித்துப் பேசியுள்ளோம். இதை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் குர்ஆனின் அடிப்படையிலும், குர்ஆன் விளக்கவுரைகளின் அடிப்படையிலும் நாம் கூறியதை மறுப்பதற்கு வாய்ப்பு இல்லை எனக் கருதுகின்றோம். இருப்பினும் அல்குர்ஆன் ஓசை நயம் குறித்துக் கவனம் செலுத்துகின்றது என்பதை நிரூபிக்கச் சிறியதொரு உதாரணத்தைத் தர விரும்புகின்றோம்.

அல்குர்ஆனில் மூஸா-ஹாரூன் ஆகிய நபிமார்கள் பற்றிக் கூறும் போது முதலில் மூஸா நபியையும், அடுத்ததாக ஹாரூன் நபியையும் குறிப்பிடப்படும். (2:248, 7:122) 10:75, 21:48, 23:45, 26:48, 37:114, 37:120) இவ்வாறு அனைத்து இடங்களிலும் மூஸா-ஹாரூன் என இடம்பெற்றிருக்க,

சூனியக்காரர்கள் சுஜூது செய்தவர்களாக வீழ்த்தப்பட்டு, ‘ஹாரூன் மற்றும் மூஸா வின் இரட்சகனை நாம் நம்பிக்கை கொண்டு விட்டோம்’ எனக் கூறினர்.
(20:70)

என மேற்படி வசனத்தில் மட்டும் ‘ஹாரூன் வ மூஸா’ என மாறி இடம்பெற்றுள்ளது. குறிப்பாக, 7:122, 26:48 ஆகிய வசனங்களும் இதே செய்தியைத்தான் பேசுகின்றது. எனினும், 20:70 இல் மட்டும் ஹாரூன் நபியின் பெயர் முற்படுத்தப்பட்டுள்ளது. ஏனெனில், இந்த வசனங்களுக்கு முந்திய வசனங்கள் அல்கா, தஸ்ஆ, மூஸா, அஃலா, அதா என இடம்பெறுவதால் இந்த ஓசை நயத்திற்கு ‘ஹாரூன்’ என்பதை இறுதியாக முடிப்பதை விட ‘மூஸா’ என்பதைக் கொண்டு வருவதே பொருத்தமாகும். இதே போல இதற்குப் பிந்திய வசனங்கள் அப்கா, துன்யா, அப்கா, யஹ்யா, உலா எனத் தொடர்கின்றன. இந்த இடத்தில் வழமை போன்று ஹாரூன் நபியின் பெயரை இறுதியில் போட்டால் ஓசை நயம் அடிபடுகின்றது. எனவே, ஓசை நயத்தைக் கருத்தில் கொண்டு ‘மூஸா’ என்ற பதம் இறுதியில் போடப்பட்டுள்ளது.

எனவே, நபி(ஸல்) அவர்களைச் சூனியம் செய்யப்பட்டவர் என்பதற்குப் பயன்படுத்தப்பட்ட அந்த இடத்தில் ‘சூனியம் செய்பவர்’ என்ற அர்த்தமுடைய ‘ஸாஹிர்’ என்ற பதம் பயன்படுத்தப்படாமல் ‘மஸ்ஹூர்’ என்ற பதம் பயன்படுத்தப்பட்டுள்ளது!

‘ஸாஹிர்’ என்பதற்குப் பகரமாக ‘மஸ்ஹூர்’ என்ற பதம் பயன்படுத்தப்பட்டிருப்பதை குர்ஆனின் மூலமே நாம் நிரூபித்திருப்பதால் இந்தக் காரணத்தை ஏற்றுக்கொள்ளாவிட்டால் கூட இந்த வாதத்தின் வலிமை குன்றாது என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.

உணவு உண்பவர்:
மஸ்ஹூர்-சூனியம் செய்யப்பட்டவர் என்ற வசனத்திற்கு அறபு மொழி அகராதியின்படி அல்குர்ஆன் விளக்கவுரையாளர்கள் பலரும் ‘மஸ்ஹூர்’ என்றால், ‘உணவு உண்பவர்’ என்ற விளக்கத்தினை அளித்துள்ளனர். தமிழ் மொழிக்கு இது புது விளக்கமாகத் தெரிந்தாலும், பல குர்ஆன் விளக்கவுரைகள் இது குறித்துப் பேசியுள்ளன.

004-5

நபி(ஸல்) அவர்களை அவர் மஸ்ஹூர்ரான மனிதர் என்று கூறினர். பிரபலமான கருத்தின்படி சூனியத்தைக் குறிக்கும் மற்றொரு கருத்தின்படி ‘ஸஹ்ர்’ என்றால் நுரையீரலைக் குறிக்கும். அதாவது, நீங்கள் முஹம்மதைப் பின்பற்றினால் உண்டு-குடிக்கக்கூடிய (சாதாரண) மனிதனைத்தான் பின்பற்றுகின்றீர்கள் என அவர்கள் கூறியுள்ளனர். (லபீத் இப்னு ரபீஆ எனும்) கவிஞனின் கூற்றும் இம்ரஉல் கைஸ் என்ற கவிஞனின் கவிதையும் இந்த மொழி நடைக்குச் சான்றாகும்.  (சுருக்கம்)

006

நுரையீரல் உள்ள ஒரு மனிதனைத்தான் நீங்கள் பின்பற்றுகின்றீர்கள். அவர் உண்கிறார்; பருகுகிறார்; உணவின் பாலும், பாணத்தின் பாலும் தேவையற்ற ஒரு மலக்கை நீங்கள் பின்பற்றவில்லை என்பதே இந்த வசனத்தின் அர்த்தமாகும். (குர்தூபி)

இவ்வாறே ‘மஸ்ஹூர்’ என்பதற்கு ‘உணவு உண்பவர்’, ‘சாதாரண மனிதர்’ என்ற கருத்து இருப்பதாகப் பல அறிஞர்களும் குறிப்பிட்டுள்ளனர். சில அறிஞர்கள் இந்தக் கருத்தை ஏற்க மறுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்ற கருத்தை அங்கீகரிக்கும் அறிஞர்கள் இவரும் எம்மைப் போலவே உணவு உண்ணக்கூடிய சாதாரண மனிதர் இவர் எப்படி இறைத் தூதராக இருக்க முடியும்? என்ற கருத்தில் நபித்துவத்தை மறுத்ததைச் சுட்டிக்காட்டுகின்றனர்.

26:153, 185 ஆகிய இரண்டு வசனங்களிலும் இந்தப் பதம் பயன்படுத்தப்பட்ட பின்னர், ‘நீரும் எம்மைப் போன்ற மனிதர்தான்’ என்று காஃபிர்கள் கூறியுள்ளனர். இதிலிருந்து ‘முஸஹ்ஹரீன்’ என்ற பதத்தை ‘சூனியம் செய்யப்பட்டவர்’ என்ற அர்த்தத்தில் அவர்கள் பயன்படுத்தவில்லை. ‘எம்மைப் போல உணவு உண்ணக்கூடிய சராசரி மனிதர்’ என்ற அர்த்தத்திலேயே பயன்படுத்தியுள்ளனர் என்பது புலனாகின்றது.

இவ்வாறு நோக்கும் போது, நபி(ஸல்) அவர்கள் குறித்து ‘மஸ்ஹூர்’ என்ற பதம் பயன்படுத்தப்பட்ட போதும் ‘இவரும் எம்மைப் போன்ற மனிதர்தானே’ என்ற இதே தோரனையில்தான் பேசப்படுகின்றது.

‘இத்தூதருக்கு என்ன நடந்தது? உணவு உண்கிறார்; கடை வீதிகளில் நடந்து திரிகின்றார். இவருடன் ஒரு வானவர் இறக்கப்பட்டு, அவர் இவருடன் எச்சரிக்கக் கூடியவராக இருக்க வேண்டாமா?’ என்றும் கூறுகின்றனர்.  (25:7)

என நபி(ஸல்) அவர்கள் உணவு உண்பவராக இருக்கிறார். அதுவும் கஷ்டப்பட்டு உண்பவராக எம்மைப் போலவே இருக்கின்றார். இப்படிப்பட்ட சராசரி மனிதர் எப்படி இறைத் தூதராக இருக்க முடியும்? என்ற அர்த்தத்தில்தான் உணவு உண்ணக்கூடிய ஒருவரைத்தான் நீங்கள் பின்பற்றுகின்றீர்கள் என அநியாயக்காரர்கள் கூறியதாகக் குர்ஆன் குறிப்பிடுகின்றது.

இந்த அடிப்படையில் நீங்கள் மஸ்ஹூரான ஒருவரைப் பின்பற்றுகிறீர்கள் என்ற வசனத்திற்குச் சூனியம் செய்யப்பட்டவர் அல்லது சூனியக்காரரை அல்லது உணவு உண்பவரை என்ற எந்த அர்த்தத்தை எடுத்தாலும் அந்த அர்த்தத்திற்கும் நபி(ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டதாகக் கூறும் ஆதாரபூர்வமான அறிவிப்புக்குமிடையில் எந்த முரண்பாடும் இல்லை என்பது தெளிவு.

இந்த வசனமும், ஹதீஸும் முரண்படுவதாகக் குர்ஆனுக்கு விளக்கம் எழுதிய எந்த அறிஞரும் கருதவில்லை. முற்கால அறிஞர்களில் (முஃதஸிலா போன்ற வழிகேடர்களைத் தவிர) எவரும் இந்த வசனம் அந்த ஹதீஸிற்கு முரண்பட்டதாகக் கருதவில்லை. அப்படி இருக்கும் போது இவருக்கு மட்டும் இந்த வசனங்களுக்கும், ஹதீஸிற்குமிடையில் முரண்பாடு இருப்பதாகத் தோன்றுகின்றது என்றால் அவர்கள் அனைவரும் குர்ஆனைத் தவறாகப் புரிந்துகொண்டார்கள் என்று கூறுவதா? அல்லது இவர் தான் புரிந்துகொள்வதில் ஏதோ தவறு விடுகின்றார் எனக் கருதுவதா? எது நடுநிலையான முடிவாக இருக்கும்? அவர்கள் அனைவருக்கும் தவறு வருவதற்கான வாய்ப்பை விட இவர் ஒருவருக்குத் தவறு வருவதற்கான வாய்ப்புத்தானே அதிகமாக உள்ளது?

இவர் இவரது விளக்கவுரையில் ‘அவர்கள் சூனியம் செய்யப்பட்டவர்’ என்று கூறியது நபிமார்களின் தூதுத்துவத்தையே முற்று-முழுதாக உளறல் என்று கூறுவதற்காகத்தான் என்று கூறியிருக்கும் போது, அப்படிக் கூறி விட்டு அந்த அர்த்தத்தில் கூறப்பட்ட குர்ஆன் வசனத்திற்கும், இந்த நபிமொழிக்கும் முரண்பாடு இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறதல்லவா? எனவே, இந்த ஹதீஸை ஏற்பது குறைஷிக் காஃபிர்களின் கூற்றை உண்மைப்படுத்துவதாக இருக்கின்றது என்ற தவறான வாதத்தின் அடிப்படையில் இந்த ஹதீஸை மறுப்பது தவறானதாகும் என்பது தெள்ளத்-தெளிவாகத் தெரிகின்றது.

அடுத்ததாக, இந்த ஹதீஸின் வார்த்தைப் பிரயோகங்களில் முரண்பாடு இருக்கின்றது என்ற அடிப்படையில் இந்த ஹதீஸை நிராகரிப்பது நியாயம்தானா? என்பதை ஆராய்வோம்.

ஹதீஸில் முரண்பாடா?
‘நபி(ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டது’ என்ற ஆதாரபூர்வமான அறிவிப்பை ‘அல்குர்ஆனுக்கு முரண்படுகின்றது’ என்று கூறி, சகோதரர் மறுத்து வருகின்றார். இவர் கூறும் காரணம் தவறானது என்பதை இதுவரை நாம் ஆராய்ந்தோம். ‘குறித்த இந்த ஹதீஸிற்குள்ளேயே முரண்பாடு இருக்கின்றது’ என்ற மற்றுமொரு வாதத்தையும் இந்த ஹதீஸை மறுப்பதற்குத் துணையாக முன்வைக்கின்றார்.

‘மேற்கண்ட செய்திகளின் அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்கள் என்று அறியப்பட்டாலும், அதில் கூறப்படும் கருத்துக்கள் குர்ஆனுக்கு எதிராக அமைந்துள்ளதாலும், அந்த அறிவிப்புக்களில் முரண்பாடு இருப்பதாலும் இதை நாம் ஏற்கக்கூடாது.’ (பிஜே தர்ஜமா பக்:1311)

இந்த அறிவிப்பில் காணப்படும் முரண்பாடுகள் என்ன என்பதை அவர் விவரிக்கும் போது ‘அப்புறப்படுத்தல்’ என்ற தலைப்பில் பின்வருமாறு கூறுகின்றார்.

    அப்புறப்படுத்தல்
    எந்தப் பொருட்களில் சூனியம் வைக்கப்பட்டதோ அந்தப் பொருட்களை அக்கிணற்றிலிருந்து அப்புறப்படுத்தி விட்டீர்களா என்று ஆயிஷா (ரலி) கேட்ட போது ‘அப்புறப்படுத்தவில்லை, அதனால் மக்களிடையே கேடுகள் ஏற்படும்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியதாக புகாரியின் 3268, 5763, 5766 ஆகிய ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது.

    ‘நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உடனடியாக அக்கிணற்றுக்குச் சென்று அப்பொருளை அப்புறப்படுத்தினார்கள்’ என்று புகாரியின் 5765, 6063 வது ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது.

    அப்பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டதாகக் கூறும் அறிவிப்பிலும் முரண்பாடு காணப்படுகிறது.

    நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்தக் கிணற்றுக்குச் சென்று அப்பொருளை அப்புறப்படுத்தியதாக, அப்புறப்படுத்தக் கட்டளையிட்டதாக புகாரியின் 5765, 6063 ஆகிய ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது.

    ஆனால் நஸயீயின் 4012 வது ஹதீஸில் ஆட்களை அனுப்பி வைத்து அதை அப்புறப்படுத்தியதாகவும், அப்புறப்படுத்திய பொருட்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கொண்டு வந்ததாகவும் உடனே அவர்கள் குணமடைந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. அஹ்மத் 18467 வது ஹதீஸிலும் இந்தக் கருத்து பதிவு செய்யப்பட்டுள்ளது.

    நபிகள் நாயகம் (ஸல்) அருகில் இரண்டு வானவர்கள் அமர்ந்து தமக்கிடையே பேசிக் கொண்டதாகவும் அதன் மூலம் தனக்குச் சூனியம் செய்யப்பட்டதை அறிந்து கொண்டதாகவும் நபிகள் நாயகம் (ஸல்) கூறியதாக புகாரி 6391வது ஹதீஸ் கூறுகிறது.

    நஸயீயின் 4012வது ஹதீஸில் ஜிப்ரீல் (அலை) வந்து ‘உமக்கு யூதன் ஒருவன் சூனியம் வைத்துள்ளான்’ என்று நேரடியாகக் கூறியதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
    (பிஜே தர்ஜமா – பக்:1310)

மேற்படி விளக்கத்தில் ஹதீஸில் இடம்பெற்றுள்ளதாக சகோதரர் பிஜே கூறும் முரண்பாடுகளை ஒரு முறை தொகுத்துப் புரிந்துகொண்டதன் பின்னர் அவற்றிற்கான விளக்கத்திற்குச் செல்வது நல்லது எனக் கருதுகின்றேன்.

(1) சூனியம் வைக்கப்பட்ட பொருட்களைக் கிணற்றிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டதாகவும், அப்புறப்படுத்தப்படவில்லை என்றும் ஹதீஸ் கூறுகின்றது. இது ஒரு முரண்பாடு. (என்பது அவர் வாதம்.)

(2) சூனியம் செய்யப்பட்ட செய்தியை இரண்டு வானவர்கள் வந்து தமக்குள் பேசியதன் மூலமாக நபியவர்கள் அறிந்துகொண்டதாகவும், ஜிப்ரீல்(அலை) அவர்கள் வந்து, ‘ஒரு யூதன் உமக்குச் சூனியம் செய்துள்ளான்’ என்று கூறியதாகவும் வருகின்றது.

(3) நபி(ஸல்) அவர்கள் தமது தோழர்களுடன் கிணற்றிற்குச் சென்று அந்தப் பொருட்களை எடுத்ததாகவும், நபியவர்கள் ஆள் அனுப்பி, அவர்கள் அப்பொருளை நபியவர்களிடம் எடுத்து வந்ததாகவும் இரு விதமான கருத்துக்கள் கூறப்படுகின்றன.

இந்த முரண்பாடுகளுக்குள் இணக்கம் காண்பது எப்படி? கூறப்பட்ட அனைத்து முரண்பாடுகளும் ஆதாரபூர்வமானவைதாமா? என்பதை ஆராய்வதற்கு முன்னர் இப்படி ஆய்வு செய்து ஹதீஸ்களை நிராகரிப்பது சரியான ஆய்வு அனுகுமுறை அல்ல என்பதை நாம் புரிந்துகொள்வது அவசியமாகும்.

பிழையான ஆய்வு:
ஹதீஸ்களை அறிவிக்கும் அறிவிப்பாளர்கள் சில போது தாம் கேட்டவற்றில் முக்கிய பகுதியை மட்டும் கூறினார்கள். சிலர் தாம் கேட்ட அதே வாசகத்தை அறிவிக்காமல் அந்தக் கருத்தைத் தனது வாசகத்தின் மூலம் அறிவிப்பர். இவ்வாறு அறிவிக்கும் போது சின்னச் சின்ன வார்த்தை வேறுபாடுகள் பெரும்பாலான, அதிலும் குறிப்பாக பெரிய ஹதீஸ்களில் இடம்பெறும் வாய்ப்புக்கள் உள்ளன. இந்த முரண்பாடுகள் ஹதீஸை மறுப்பதற்கான காரணமாக அமையக்கூடாது. அப்படியாயின் ஏராளமான ஹதீஸ்களை மறுக்க நேரிடும். இந்த சூனியம் குறித்த ஹதீஸை ஆயிஷா(ரலி) அவர்களிடமிருந்து உர்வா அவரிடமிருந்து ஹிஸாம் அவரிடமிருந்து 12 மாணவர்கள் செவிமடுத்து அறிவிக்கின்றனர். இந்தப் பன்னிரெண்டு பேரின் வார்த்தைப் பிரயோகத்தில் ஏற்படும் வித்தியாசங்கள் நியாயமானவை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

அடுத்து ஏற்கனவே நாம் குறிப்பிட்ட முரண்பாடுகளைச் சுட்டிக் காட்டி ஒன்றுக்கொன்று முரண்பட்டால் இரண்டுமே (ஆதாரமாக எடுக்க முடியாமல்) விழுந்து விடும் எனக் கூறி இரண்டையும் ஏற்கக் கூடாது என சகோதரர் வாதிக்கின்றார். இந்த வாதமும் தவறாகும்.

ஏனெனில் அனைத்து ஹதீஸ்களும் நபி(ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டது என்றே கூறுகின்றன. அதில் முரண்பாடு இல்லை. இவரின் வாதப்படி சூனியம் செய்யப்பட்ட பொருட்கள் எடுக்கப்பட்டதா? இல்லையா? எப்படி எடுக்கப்பட்டது? என்பதில்தானே முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இதை வைத்து முரண்பாடே ஏற்படாத சூனியம் செய்யப்பட்டது என்ற தகவலை எப்படி நிராகரிக்க முடியும்? சூனியம் செய்யப்பட்டது என்பது உறுதி. ஆனால், அது எடுக்கப்பட்டதா? இல்லையா? என்பதைத்தான் உறுதியாகக் கூறமுடியாது என்றல்லவா முடிவு செய்ய வேண்டும்?

இவரின் இந்த அனுகுமுறை மூலம் தவறான வழியில் ஆய்வு செய்து பிழையான முடிவை நோக்கிச் சென்றிருப்பது தெளிவாகின்றது.

குர்ஆனில் முரண்பாடா?
இது போன்ற முரண்பாடுகள் தோன்றும் போது உடன்பாடு காண முயற்சிக்க வேண்டும். எதிலும் குறை காணும் குணத்துடன் செயல்பட்டால் எல்லாமே பிழையாகத்தான் தென்படும். குர்ஆனில் முரண்பாடு இருப்பதாகத் தோன்றும். இதற்கு இவர் இந்த ஆய்வுக்குப் பயன்படுத்தியிருக்கும் சில வசனங்களையே உதாரணமாகத் தர விரும்புகின்றேன்.

    ‘அ(தற்க)வன், ”நீர் அத்தாட்சியைக் கொண்டு வந்திருப்ப(தாகக் கூறுவ)தில் உண்மையாளர்களில் உள்ளவராக இருந்தால் அதைக் கொண்டு வாரும்” என்றான்.

    அப்போது மூஸா தனது கைத்தடியைப் போட்டார். உடனே அது தெளிவான பெரியதொரு பாம்பாகி விட்டது.

    மேலும், தனது கையை (சட்டைப் பையிலிருந்து) வெளியில் எடுத்தார். உடனே அது பார்ப்பவர்களுக்கு (பளிச் சிடும்) வெண்மையாக இருந்தது.

    பிர்அவ்னின் சமூகத்திலுள்ள பிரமுகர்கள், ”நிச்சயமாக இவர் கற்றறிந்த சூனியக்காரர்” என்று கூறினர்.

    உங்களை, உங்களது நாட்டை விட்டும் வெளியேற்ற இவர் விரும்புகிறார். எனவே, நீங்கள் எதை ஆலோசனையாகக் கூறுகின்றீர்கள்? (என பிர்அவ்ன் கேட்டான்.)’ (7:106-110)

மேற்படி வசனங்கள் மூஸா நபி அற்புதங்களைச் செய்த போது இவர் கைதேர்ந்த சூனியக்காரர். இந்தச் சூனியத்தின் மூலம் உங்களது பூமியை விட்டும் உங்களை வெளியேற்ற இவர் விரும்புகிறார் என பிர்அவ்னின் சமுகத்தின் பிரமுகர்கள் கூறியதாகக் கூறுகின்றது.

    அ(தற்க)வன், ”நீர் உண்மையாளர்களில் இருந்தால் அதைக் கொண்டுவாரும்” எனக் கூறினான்.

    அப்போது அவர் தனது கைத்தடியைப் போட்டார். உடனே அது தெளிவான பெரியதோர் பாம்பாகி விட்டது.

    மேலும், தனது கையை (சட்டையிலிருந்து) வெளியில் எடுத்தார். உடனே அது பார்ப்பவர்களுக்குப் பளிச்சிடும் வெண்மையாக இருந்தது.

    அ(தற்க)வன், தன்னைச் சூழ இருந்த பிரமுகர்களிடம், ”நிச்சயமாக இவர் கற்றறிந்த ஒரு சூனியக்காரர்” என்று கூறினான்.

    தனது சூனியத்தின் மூலம் உங்களை உங்களது நாட்டை விட்டும் வெளியேற்ற இவர் விரும்புகின்றார். எனவே, நீங்கள் எதை ஆலோசனையாகக் கூறுகின்றீர்கள்? (என்றும் கேட்டான்.)’ (26:31-35)

மேற்படி வசனங்களில் இவர் சூனியக்காரர்; உங்களை உங்கள் பூமியிலிருந்து வெளியேற்ற விரும்புகின்றார் என்ன கட்டடையிடுகின்றீர்கள் என பிர்அவ்ன் கூறியதாகக் கூறுகின்றன.

இந்த வாசகங்களை பிர்அவ்ன் கூறினானா? பிர்அவ்னினது சமூகப் பிரமுகர்கள் கூறினார்களா? என்று கேள்வி எழுப்பி இரண்டும் ஒன்றுக்கொன்று முரண்படுகின்றது என்று கூறுவதா? அல்லது உடன்பாடு காணும் முயற்சியில் ஈடுபடுவதா? எது இஸ்லாமிய ஆய்வாக இருக்கும்? அல்லாஹ்வின் மீது நம்பிக்கையில்லாத குர்ஆனை நிராகரிக்கும் குணம் கொண்டவர்கள் இதை முரண்பாடாகப் பார்க்கலாம். முஃமின்கள் முரண்பாடாகப் பார்க்க மாட்டார்கள். அதே போன்று ஆதாரபூர்வமான ஹதீஸ்களை மறுக்கும் குணம் கொண்டவர்கள்தான் வார்த்தை வித்தியாசங்களை வைத்து ஹதீஸை மறுக்கும் மனோநிலைக்கு வருகின்றனர்.

‘அ(தற்க)வர், ”இல்லை, நீங்கள் போடுங்கள்” என்றார். அப்போது அவர்களது கயிறுகளும், அவர்களது தடிகளும் அவர்களுடைய சூனியத்தின் காரணமாக ஊர்ந்து வருவதைப் போல அவருக்குத் தோற்றமளித்தன.

அப்போது மூஸா தனக்குள் அச்சத்தை உணர்ந்தார்.

”அச்சம் கொள்ளாதீர். நிச்சயமாக நீர்தான் மேலோங்கி நிற்பீர்” என நாம் கூறினோம்.’ (20:66-68)

மேற்படி வசனங்கள் சூனியக்காரர்கள் கயிற்றையும், தடியையும் போட்டபோது அவை பாம்புகள் போன்று தென்பட்டன. அதைப் பார்த்து மூஸா நபி பயந்தார் என்று கூறுகின்றன.

‘அவர்கள் போட்ட போது, ”நீங்கள் கொண்டு வந்தது சூனியமே! நிச்சயமாக அல்லாஹ் அதை அழித்து விடுவான். நிச்சயமாக அல்லாஹ் குழப்பம் விளைவிப்போரின் செயலைச் சீர்செய்ய மாட்டான்’ என்று மூஸா கூறினார்.

குற்றவாளிகள் வெறுத்த போதும் அல்லாஹ் தன் வார்த்தைகளைக் கொண்டு சத்தியத்தை நிலை நாட்டியே தீருவான்.’ (10:81-82)

அவர்கள் மேற்படி வசனங்கள் கயிறுகளையும், தடிகளையும் சூனியக்காரர்கள் போட்ட போது மூஸா நபி துணிச்சலுடன், ‘இது சூனியம்; அல்லாஹ் இதை அழிப்பான்’ என்று கூறியதாகக் கூறுகின்றன.

சூனியக்காரர்கள் கயிறுகளையும், தடிகளையும் போட்ட போது மூஸா நபி பயந்தாரா? துணிச்சலுடன் பேசினாரா? என்ற கேள்விகளை எழுப்பி இந்த வசனங்களுக்கிடையில் முரண்பாடு கண்டால் குர்ஆனின் நிலை என்னவாகும்? என்று சிந்திக்க வேண்டும். எனவே, இந்தக் கோணத்தில் ஆய்வு செய்வது தவறு என்பதை நாம் அறிய முடிகின்றது. உடன்பாடு காணும் எண்ணமும், அதற்கான முயற்சியும் இருக்க வேண்டுமே தவிர முரண்பாடுகளைத் தேடி நிராகரிப்பதற்கான வழிகளைத் தேட முடியாது! நிராகரிப்பு நிலையிலிருந்து பார்த்தால் இது சரியாகத் தென்பட்டாலும், ஈமானிய மனநிலையிலிருந்து பார்க்கும் போது இது தவறாகத் தெரியும்.

தொடர்ந்து அவர் கூறும் முரண்பாடுகளின் உண்மை நிலை குறித்து ஆராய்வோம்!

சூனியம் செய்யப்பட்ட பொருட்கள் எடுக்கப்பட்டதா? இல்லையா?

கடந்த கால அறிஞர்கள் பலரும் இந்த முரண்பாட்டிற்கு(?) உடன்பாடு காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக ஸஹீஹுல் புகாரிக்கு விளக்கவுரை எழுதிய இமாம் இப்னு ஹஜர் அவர்கள் இது குறித்து எழுதியுள்ளார்கள்! அவர் அளித்த விளக்கத்தை நிச்சயமாக பிஜே அவர்கள் பார்த்திருப்பார்கள் என்றே எண்ணுகின்றேன். எனினும் ஹதீஸில் இல்லாத, ஆயிஷா(ரலி) அவர்கள் பயன்படுத்தாத வாசகங்களை இணைத்து, பிஜே எழுதி உடன்பாடு காண முடியாத வகையில் ஹதீஸின் மொழிபெயர்ப்பை அமைத்துள்ளார். இதுதான் பிரச்சினையைப் பூதாகரமாக்கியுள்ளது.

‘எந்தப் பொருட்களில் சூனியம் வைக்கப்பட்டதோ, அந்தப் பொருட்களை அக்கிணற்றிலிருந்து அப்புறப்படுத்தி விட்டீர்களா? என்று ஆயிஷா(ரலி) அவர்கள் கேட்ட போது, ‘அப்புறப்படுத்தவில்லை; அதனால் மக்களிடையே கேடுகள் ஏற்படும்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக புகாரியின் 3268, 5763, 5766 ஆகிய ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது எனக் குறிப்பிடுகின்றார்.’ ஆயிஷா(ரலி) அவர்களின் கேள்வியில் ‘கிணற்றிலிருந்து அப்புறப்படுத்தி விட்டீர்களா?’ என்ற வாசகம் இடம்பெறவில்லை. ஆனால், உடன்பாடு காண முடியாத சிக்கலையுண்டாக்குவதற்காகவே ‘கிணற்றிலிருந்து’ என்ற இல்லாத வாசகத்தை வேண்டுமென்றே இணைத்துள்ளார்.

இந்த வாசகம் ஹதீஸில் இல்லாத வாசகம் என்பதற்கு வேறு ஆதாரம் தேவையில்லை. அவரே இந்த ஹதீஸை இதே பகுதியின் முற்பகுதியில் மொழிபெயர்க்கும் போது

    ‘அதை அப்புறப்படுத்தி விட்டீர்களா?’ என நான் கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘இல்லை. எனக்கு அல்லாஹ் நிவாரணம் அளித்து விட்டான். மக்கள் மத்தியில் தீமையைப் பரப்பக் கூடாது என்று நான் அஞ்சுகிறேன்’ என்று கூறினார்கள். பின்னர் அந்தக் கிணறு மூடப்பட்டது.’
    அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி), நூல்: புகாரி 3268, (தர்ஜமா பக்கம் 1295)

அவரே செய்த இந்த மொழிபெயர்ப்பில் ‘கிணற்றிலிருந்து அப்புறப்படுத்தி விட்டீர்களா?’ என்ற வாசகம் இல்லை என்பதைக் கவனத்தில் கொள்ளவும். ஹதீஸில் இல்லாத அவர் மேலதிகமாகச் சேர்த்த ‘கிணற்றிலிருந்து’ என்ற வாசகத்தை நீக்கி விட்டு நாம் இந்த முரண்பாட்டுக்கு உடன்பாடு காணும் முயற்சியில் இறங்குவோம்.

நபி(ஸல்) அவர்கள் தமது தோழர்களுடன் சென்று சூனியம் செய்யப்பட்ட பொருட்களை எடுத்துப் பார்க்கின்றார்கள். பின்னர் ஆயிஷா(ரலி) அவர்களிடம் வந்து, தாம் கண்ட காட்சியை விபரிக்கின்றார்கள். ‘நீங்கள் அதை வெளிப்படுத்தவில்லையா?’ எனக் கேட்ட போது, ‘இல்லை. அல்லாஹ் எனக்கு சுகமளித்து விட்டான். மக்கள் மத்தியில் தீமை பரவுவதை நான் அஞ்சுகின்றேன்’ என்கின்றார்கள்.

‘நீங்கள் அதை வெளிப்படுத்தவில்லையா?’ என ஆயிஷா(ரலி) அவர்கள் கேட்டது, ‘கிணற்றிலிருந்து வெளியே எடுக்கவில்லையா?’ என்ற அர்த்தத்தில் கேட்கவில்லை. ‘இதை மக்கள் மத்தியில் வெளிப்படுத்தவில்லையா?’ என்பதே அந்தக் கேள்வியின் அர்த்தமாகும்.

ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸிலேயே

கிணற்றுக்குச் சென்று அதை வெளியில் எடுத்தார்கள் என்று கூறி விட்டு, ‘நீங்கள் வெளிப்படுத்தவில்லையா?’ எனக் கேட்கின்றார்கள் என்றால், ‘கிணற்றிலிருந்து வெளியில் எடுக்கவில்லையா?’ என்று கேட்க முடியாது. காரணம், எடுத்ததாக அவர்களே கூறுகின்றார்கள்.

அஹ்மதில் இடம்பெற்ற அறிவிப்பில்,

‘நீங்கள் அதை மனிதர்களுக்காக வெளிப்படுத்த வேண்டாமா?’ என்று கேட்டதாக இடம்பெற்றுள்ளது. எனவே, ‘வெளிப்படுத்தினார்கள்’ என்று வருவது கிணற்றிலிருந்து வெளியில் எடுத்ததைக் கூறுகின்றது; ‘வெளிப்படுத்தவில்லை’ என்பது மக்களுக்கு வெளிப்படுத்தவில்லை என்பதைக் கூறுகின்றது. இரண்டும் வேறு வேறு அம்சங்களாகும். இந்த வேறுபாடு குறித்து அறிஞர்கள் பேசியுள்ளனர். இதை அறிந்ததனால் இந்த வேறுபாட்டை மக்கள் புரிந்து உண்மையை உணர்ந்துகொள்ள இடமளிக்காத வகையில் ஆயிஷா(ரலி) அவர்களின் கேள்வியில் ‘கிணற்றிலிருந்து’ என்ற இல்லாத வாசகத்தை நுழைத்துள்ளார். இதன் மூலம் ‘எடுக்கப்பட்டது; எடுக்கப்படவில்லை’ என்ற இரு செய்தியும் ‘கிணற்றிலிருந்து எடுக்கப்பட்டது; கிணற்றிலிருந்து எடுக்கப்படவில்லை’ என ஹதீஸ் கூறுவதாகச் சித்தரித்துள்ளார். முரண்பாட்டைத் தானாக உண்டுபண்ணியுள்ளார்.

எந்தப் பொருட்களில் சூனியம் செய்யப்பட்டதோ, அந்தப் பொருட்களைக் கிணற்றிலிருந்து அப்புறப்படுத்தி விட்டீர்களா? என்று ஆயிஷா(ரலி) கேட்காத வாசகத்தை அவர்களது ஹதீஸில் நுழைத்தது பகிரங்க மோசடியாகும். இந்த இவரது மோசடியை நீக்கி விட்டால் ஹதீஸில் முரண்பாடு இல்லை என்பது புரிந்து விடும்.

அல்குர்ஆனின் 22:47, 32:5 ஆகிய வசனங்கள் அல்லாஹ்விடத்தில் ஒரு நாள் எமது கணிப்பின் படி ஆயிரம் வருடங்களுக்குச் சமனானது என்று கூறுகின்றது. 70:4 ஆம் வசனம் 50 ஆயிரம் வருடங்களுக்குச் சமனானது என்கின்றது. இது குறித்து பிஜே விரிவாக விளக்கமளிக்கும் போது விளக்கக் குறிப்பு 293 இல்;

‘ஆயிரமும், ஐம்பதாயிரமும் ஒன்றுக்கொன்று முரண்பட்டது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், இரண்டும் வேறு வேறு செய்திகளைக் கூறும் வசனங்கள் என்பதை விளங்கிக்கொண்டால் இதில் எந்த முரண்பாடும் இல்லை’ (பக்கம் 1249) என்று குறிப்பிடுகின்றார்.

இதே போன்று ‘வெளிப்படுத்தப்பட்டது’ என்பதும், ‘வெளிப்படுத்தப்படவில்லை’ என்பதும் முரண்பட்டது என்பதில் சந்தேகமில்லை. ஆனால், ‘வெளிப்படுத்தப் பட்டது’ என்பது கிணற்றிலிருந்து வெளிப்படுத்தப்பட்டது என்பதைக் கூறுகின்றது; ‘வெளிப்படுத்தப்படவில்லை’ என்பது அதை மக்கள் மத்தியில் வெளிப்படுத்தப்படவில்லை என்பதைக் கூறுகின்றது என்பதை விளங்கிக்கொண்டால் இதில் எந்த முரண்பாடும் இல்லை என்பது தெளிவாகி விடும்.

அடுத்து, நஸஈ அஹ்மதில் இடம்பெற்றுள்ள ஒரு அறிவிப்பு நேரடியாக இந்த ஹதீஸுடன் முரண்படுகின்றது.

ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ், இரண்டு மலக்குகள் வந்து உரையாடிய உரையாடல் மூலம் சூனியம் பற்றி நபி(ஸல்) அவர்கள் அறிந்ததாகக் கூற, ஸைத் இப்னு அர்கம்(ரலி) அவர்களது அறிவிப்பு, ஜிப்ரீல் வந்து நேரடியாகக் கூறியதாகக் கூறுகின்றது. அடுத்தது, ஏனைய ஹதீஸ்கள் நபி(ஸல்) அவர்கள் கிணற்றுக்குச் சென்று அப்பொருட்களை எடுத்ததாகக் கூற, நஸஈ அறிவிப்பு நபி(ஸல்) அவர்கள் ஆள் அனுப்பி அந்தப் பொருட்கள் அவரிடம் எடுத்து வரப்பட்டதாகக் கூறுகின்றது.

இவை முரண்பாடுகள்தான். இப்படி முரண்பட்டால் இரண்டில் எது உறுதியான அறிவிப்பு என்று ஆய்வு செய்ய வேண்டும். ஹதீஸ் துறையில் அறிவும், அனுபவமுமுள்ள சகோதரர் அதைச் செய்யாமல் இரண்டு ஹதீஸ்களையும் மோத விட்டு இரண்டையும் நிராகரிப்பது விசித்திரமானதாகும்.

பலவீனமான ஹதீஸை எடுத்து, பலமான அறிவிப்புடன் மோத விட்டு, பலமான ஹதீஸை மறுக்க முற்பட்டது அதை விட ஆச்சரியமாகும்.

அவர் குறிப்பிட்டுள்ள நஸஈ, அஹ்மத் அறிவிப்பில் இரண்டு குறைகள் உள்ளன.

(1) ‘அல் அஃமஸ்’ என்ற அறிவிப்பாளர் இதில் இடம்பெறுகின்றார். இவர் ஹதீஸ்களை அறிவிக்கும் போது அறிவிப்பாளர்களில் இருட்டடிப்புச் செய்யக் கூடிய முதல்லிஸ் ஆவார். இவர், ‘இன்னாரிடம் நான் கேட்டேன்’ என்று தெளிவாக அறிவிக்காமல் ‘அன் அனா’ என்று கூறப்படக் கூடிய விதத்தில் ‘அவர் மூலம்’ என அறிவித்தால் அவர் நேரடியாகக் கேட்காமலேயே அறிவித்திருக்க வாய்ப்பு உள்ளது. இந்த அடிப்படையில் அறிவிப்பாளரில் ஒருவரோ, இருவரோ விடுபட்டிருக்க வாய்ப்பு உள்ளது. இந்த அறிவிப்பில் இது ஒரு குறைபாடாகும். இவர் அறிவிப்பாளர் தொடரில் மோசடி செய்பவர் என்றாலும் மிக மோசமான அறிவிப்பாளர்களிடம் செய்தியைக் கேட்டு மோசடி செய்யும் குணம் கொண்டவரல்ல என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். ‘அஃமஸ்’ மூலம் அபூ முஆவியா அறிவிக்கும் ஹதீஸ்கள் ஏற்கப்படும். எனினும் இதில் மற்றுமொரு குறைபாடும் உள்ளது.

(2) அடுத்ததாக, யசீத் இப்னு ஹய்யான் என்பவர் இடம்பெறுகின்றார். இவர் தவறு விடக் கூடியவர்; முரண்பாடாக அறிவிக்கக் கூடியவர் என இப்னு ஹிப்பான்(ரஹ்) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

இந்த இரண்டு குறைபாடுகளால் இந்த ஹதீஸ் பலவீனமாகின்றது.

அது போக, சூனியம் பற்றிய ஹதீஸுடன் ஆயிஷா(ரலி) அவர்கள் நேரடியாகச் சம்பந்தப்பட்டவர்கள். ஆனால், இதன் அறிவிப்பாளர் யஸீத் இப்னு அர்கம் அவர்கள் அதனுடன் நேரடியாகச் சம்பந்தப்படாதவர்.

அடுத்ததாக நஸஈ, அஹ்மத் ஹதீஸ் ஆதாரபூர்வமான அறிவிப்பாளர்களின் ஹதீஸிற்கு முரணாக அமைந்துள்ளது. இப்படி இருக்க, பலவீனமான ஹதீஸின் கருத்தை முன்வைத்து சூனியம் ஹதீஸில் முரண்பாடு உள்ளது என சகோதரர் பிஜே வாதிப்பது எந்த வகையிலும் நியாயமற்றதாகும். இந்த ஹதீஸ் பலவீனமானது என்பதை அறியாமல் பிஜே இந்த வாதத்தை முன்வைத்திருக்கலாம் எனப் பிஜே மீது நல்லெண்ணம் வைக்கலாம். ஏனெனில், எத்தகைய அறிஞர்களுக்கும் தவறு நேரலாம். அல்லாஹ்வின் தூதரைத் தவிர மற்ற எவரும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்களல்ல. அந்த அடிப்படையில் நல்லெண்ணம் வைப்பதற்குக் கூடப் பிஜே செய்துள்ள ‘திருவிளையாடல்’ இடந்தராமல் போகின்றது.

‘113, 114 வது அத்தியாயங்கள்’ என்ற தலைப்பில் சூறதுன்னாஸ்-பலக் அத்தியாயங்கள் நபி(ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்ட போது அருளப்பட்டன என்ற கருத்தில் அமைந்த பலவீனமான அறிவிப்பை விமர்சனம் செய்யும் போது;

ஹதீஸை விமர்சனம் செய்வதற்கு அறிவிப்பாளர் தொடர் பற்றிப் பேசாமல், அப்துல் ஹமீத் பாகவி-நிஜாமுதீன் மன்பயீ இருவருக்கும் இடையிலுள்ள முரண்பாட்டை ஏன் கூறுகின்றார்? என்று ஆய்வு செய்த போது ஒரு உண்மை புலப்பட்டது.

ஹதீஸ்களுக்கிடையில் அதிக முரண்பாடுகள் இருக்கின்றன எனக் காட்டுவதற்காகப் பிஜே எடுத்து வைத்த நஸஈ-அஹ்மத் அறிப்பாளர் தொடரும், நபி(ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்ட போது இவ்விரு சூறாக்களும் அருளப்பட்டன எனக் கூறும் ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரும் ஒரே தொடராகும்.

அபூ முஆவியா, அஃமஸ், யசீதிப்னு ஹய்யான், ஸைத் இப்னு அர்கம் – இந்தத் தொடரில்தான் இரண்டு ஹதீஸ்களும் அறிவிக்கப்படுகின்றன. (ஒரேயொரு அறிவிப்பாளர் மட்டும் வேறுபடுகின்றார்.)

இதில் ஒன்றை ஏற்று பார்த்தீர்களா? ஹதீஸிற்கிடையில் முரண்பாடு இருக்கிறது. எனவே இரண்டு ஹதீஸ்களையும் ஏற்க முடியாது என வாதிட்டவர் அதே அறிவிப்பாளர் தொடரில் வந்த நாஸ்-பலக் அத்தியாயங்கள் அருளப்பட்டன என்ற ஹதீஸை மறுக்கின்றார். இரண்டுமே பலவீனமான அறிவிப்புகளாகும். தனது வாதத்துக்கு வலு சேர்க்க வேண்டுமென்றால் பலவீனமான ஹதீஸையும் எடுப்பேன் என்ற நிலைப்பாட்டை இதில் முன்வைக்கின்றார். தேவைப்பட்டால் ஹதீஸில் இல்லாததைச் சேர்த்து மக்கள் மனதில் ஐயத்தை ஏற்படுத்துவேன். தேவைப்பட்டால் குர்ஆனில் கூடச் சில வார்த்தைகளுக்கு அர்த்தம் செய்யாமல் விடுவேன் என்ற அவரது நிலைப்பாடும் உறுதி செய்யப்பட்டு விட்டது. இவர் சொல்லும் கருத்தை விட இவர் செல்லும் இந்தப் போக்குத்தான் ஆபத்தானது என்பதைப் பொது மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். இந்த இவரது போக்கு சமூகத்தை எங்கே கொண்டு போய் நிறுத்தப் போகின்றதோ என்ற அச்சம் கலந்த ஐயம்தான் இது குறித்து எழுதும் எண்ணத்தை ஏற்படுத்தியது.

சூனியம் – தொகுப்புரை
நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது என்று கூறும் ஆதாரபூர்வமான ஹதீஸை மறுப்பதற்காகச் சகோதரர் பீஜே முன்வைக்கும் வாதங்களுக்கான மறுப்பை இது வரை பார்த்தோம். இந்தத் தொடரின் இறுதி அங்கமாக அவரது ஆக்கத்தின் முடிவு குறித்தும், நமது கட்டுரையின் தொகுப்புக் குறித்தும் இத்தொடரில் நோக்குவோம்.

    ஹாரூத், மாரூத் என்பவர்களிடம் மக்கள் வந்து ஸிஹ்ரைக் கற்றுக் கொண்டதாக குறிப்பிடும் இறைவன், அதன் அதிகபட்ச விளைவு என்ன என்பதை நமக்கு அடையாளம் காட்டுகின்றான்.

    ஸிஹ்ர் எனும் கலை மூலம் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்த முடியும் என்றிருந்தால் அந்த மிகப்பெரிய பாதிப்பை இறைவன் இங்கே கூறியிருப்பான். அந்த மக்களும் அதனையே கற்றிருப்பார்கள்.

    கை, கால்களை முடக்க முடியும் என்றோ, ஒரு ஆளைக் கொல்ல முடியும் என்றோ இருந்திருந்தால் அதைத் தான் அம்மக்கள் கற்றிருப்பார்கள். அல்லாஹ்வும் அதைத் தான் சொல்லியிருப்பான்.
    ஸிஹ்ருடைய அதிகபட்ச விளைவு என்னவென்றால் கணவன் மனைவியரிடையே பிளவையும், பிரிவையும் ஏற்படுத்துவது தான் என்பது இதிலிருந்து புலனாகிறது.

ஆனால், மேற்படி பந்தியில் “ஸிஹ்ர்” இருக்கிறது, அதனால் நினைத்ததையெல்லாம் செய்ய முடியாது. அதற்குப் பாதிப்பு உண்டு. அதன் அதிகபட்ச பாதிப்பு கணவன்-மனைவியரிடையே பிளவை ஏற்படுத்துவது என்பதுதான் என்று ஏற்றுக்கொள்கின்றார்.

நாமும் சூனியத்தால் நினைத்ததையெல்லாம் செய்ய முடியும் என்று கூறவில்லை. சூனியத்தில் தீங்கு இருக்கின்றது. அதில் அதிகபட்சம்-குறைந்தபட்சம் எது என்று தெரியாது. சூனியத்தின் தாக்கத்தில் கணவன்-மனைவிக்கிடையில் பிளவை உண்டுபண்ணுவதும் ஒன்று. அது கூட அல்லாஹ் நாடினால்தான் நடக்கும் என்ற நம்பிக்கையில்தான் இருக்கின்றோம்.

மேற்படி அவரது பந்தியை வாசித்த வாசகர்கள் இதோ அவரது சூனியம் என்ற நூலிலும், தர்ஜமா 357 ஆம் குறிப்பிலும் ஆரம்பத்தில் கூறுவதைப் பாருங்கள்.

    ‘ஒரு மனிதன் இன்னொரு மனிதன் மீது எவ்வித சாதனங்களையும் பயன்படுத்தாமல் உடல் அளவிலோ, உள்ளத்திலோ பாதிப்பு ஏற்படுத்த முடியும்’ என்ற நம்பிக்கை அறியாத மக்களிடம் ஆழமாக வேரூன்றியுள்ளது.

மேற்படி பந்தியில் சாதனங்கள் இன்றி உள்ளத்திலோ, உடலிலோ பாதிப்பை ஏற்படுத்த முடியும் என்று நம்புவோர் அறியாத மக்கள் என்கின்றார். ஆனால் மேலே குறிப்பிட்ட பந்தியில் ‘ஸிஹ்ர்’ இருக்கிறது, அதிகபட்ச பாதிப்பு கணவன்-மனைவிக்கிடையில் பிளவை உண்டுபண்ணுவது என்கிறார். ஏன் இந்த முரண்பாடு?

    திருக்குர்ஆனிலும், நபிமொழிகளிலும் இந்தச் சொல் பயன்படுத்தப்பட்டுள்ள பகுதிகளை நாம் ஒவ்வொன்றாக ஆய்வு செய்தால் ஸிஹ்ர் என்பது பித்தலாட்டம், மோசடி, ஏமாற்றும் தந்திர வித்தை என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளதைச் சந்தேகமற அறிந்து கொள்ளலாம்.

இங்கே ‘ஸிஹ்ர்’ என்றால் பித்தலாட்டம் என்று கூறியவர், ஏற்கனவே குறிப்பிட்ட பந்தியில் ‘ஸிஹ்ர்’ ஒரு கலை என்கின்றார். ‘ஸிஹ்ர் என்ற கலையைப் போதிப்பது இறை மறுப்பாகும்…’ (தர்ஜமா பக்கம்:1338)

கணவன்-மனைவிக்கிடையே மூட்டி விடுவது கலையாகுமா? இதைக் கற்பிக்க வேண்டுமா? கணவன்-மனைவிக்கிடையே சந்தேகத் தீயை மூட்டி விடுவது குஃப்ராகுமா? என்றெல்லாம் நிதானமாகச் சிந்தித்தால் அவர் தனக்குத் தானே முரண்பட்டுப் பேசுவதை உணரலாம்.

    ‘உனக்கு இந்த நபர் இந்த மாதிரியான ஸிஹ்ர் செய்துள்ளார்’ என்று தெரிவித்து விட்டால் அதுவே ஒருவனைப் படுக்கையில் தள்ளிவிடப் போதுமானதாகும். இல்லாததை எல்லாம் இருப்பதாக எண்ண ஆரம்பித்து விடுவான்.

‘உனக்கு ஒருவர் சூனியம் செய்துள்ளார்’ என்று கூறுவதுதான் சூனியமா? இது ஒரு கலையா? இதை ஒருவரிடம் சென்று கற்க வேண்டுமா? அவரே சூனியத்தைக் கஷ்டமான கலை என்கின்றார். இப்படிக் கூறுவதும், கணவன்-மனைவிக்கிடையே மூட்டி விடுவதும் கஷ்டமான கலையா? என்று சிந்திக்கும் போது அவரது முரண்பாடு இன்னும் தெளிவாகப் புலப்படும்.

இந்தப் பந்தியை முடிவு செய்யும் போது சூனியம் என்பது உண்மையில் நிகழ்த்தப்படும் அதிசயமே என்று வாதிடுவது தவறு (பக்கம்:1313) என்று குறிப்பிடுகின்றார்.

சூனியம் என்பது உண்மையில் நிகழும் அதிசயமல்ல. கயிறும் தடியும் பாம்பாகாது பாம்பு போல் போலித் தோற்றத்தை உண்டுபண்ணுவதே ‘ஸிஹ்ர்’ என்கின்றோம். அவரின் இறுதிப் பகுதி ‘எமது கூற்றை’ ஏற்பதாக அமைந்துள்ளது. சுய சிந்தனையுடன் படித்தால் சூனியம் விடயத்தில் அவர் முரண்பட்ட தகவல்களைத் தருவதை அறியலாம்.

எனவே, ‘சூனியம்’ என்ற ஒன்று இருக்கிறது. அல்லாஹ் நாடினால் அதன் மூலம் சில பாதிப்புக்கள் கூட ஏற்படலாம். சூனியத்தைக் கற்பது, கற்பிப்பது, செய்வது, செய்ய வேண்டுவது, சூனியம் வெட்டுவதற்காக சூனியக்காரர்களிடம் செல்வது அனைத்துமே மார்க்கத்தில் தடை செய்யப்பட்ட அம்சங்களாகும். நபி(ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டதாகக் கூறும் ஹதீஸ் ஆதாரபூர்வமானது. அதை மறுக்க முடியாது, மறுக்கக் கூடாது. குர்ஆன்-ஸுன்னாவை ஏற்றுக்கொள்பவர்கள் அதை நம்புவது கட்டாயமாகும். அந்த நிகழ்ச்சிக்கும், குர்ஆனுக்குமிடையில் எந்த முரண்பாடும் இல்லை என்பது உறுதியாகும்.

முடிவுரை:
எமது தொடரில் இது வரை பல விடயங்களைச் சுட்டியுள்ளோம். வாசகர் நலன் நாடி அவற்றைச் சுருக்கமாகத் தொகுத்து வழங்குவது நல்லதெனக் கருதுகின்றேன்.

(1) ‘குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களை மறுக்க வேண்டும்’ என்ற அவரது கருத்து, அவரது அண்மைக்கால தடம்புரழ்வாகும். அவர் ஆரம்பத்தில் இதற்கு மாற்றமான கருத்தில் உறுதியான நிலைப்பாட்டில் இருந்தார்.

(2) சூனியத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை. நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதை ஏற்க முடியாது என்பதும் அவரது அண்மைக்கால தடம்புரழ்வாகும். அவர் ஆரம்பத்தில் இதற்கு மாற்றமாக எழுதியும், பேசியும் வந்துள்ளார்.

(3) அவர், ‘இஸ்லாத்தில் பில்லி-சூனியம்’ என்ற தலைப்பில் இரு நூற்களை எழுதியுள்ளார். ஒன்று, ‘சூனியம் இருக்கிறது. அதனால் நினைத்ததையெல்லாம் செய்ய முடியாவிட்டாலும், சில பாதிப்புக்களை ஏற்படுத்த முடியும்’ என்கின்றது. அடுத்த நூல் அதற்கு முரணாக அமைந்துள்ளது. ஒரே ஆசிரியர், ஒரே தலைப்பில் ஒன்றுக்கொன்று முரண்பட்ட இரண்டு நூற்களை வெளியிடுகின்றார். ஆனால், இரண்டாவது நூலில் நான் ஏற்கனவே மாற்றுக் கருத்தில் இருந்தேன். ஏற்கனவே நான் எழுதிய நூலின் கருத்திலிருந்து நான் மாறி விட்டேன் என்பதை குறிப்பிடாமல் விட்டது தவறாகும்.

(கருத்து மாறுவதை நாம் கண்டிக்கவில்லை. அவர் மாறி விட்டு, ‘நான் 20 வருடங்களாக இந்தக் கருத்தில் இருக்கின்றேன். எம்முடன் ஆரம்பத்தில் இருந்தவர்கள் கொள்கையில் தடம் புரண்டு விட்டனர்’ எனப் பொய்ப் பிரச்சாரம் செய்வதையே கண்டிக்கின்றோம்.)

(4) சூனியம் என்பது ‘மெஜிக்’ மட்டுமே என்ற கருத்துத் தவறானது. 2:102 ஆம் வசனம் சூனியத்தால் அல்லாஹ் நாடினால் பாதிப்பு உண்டு என்கின்றது. மெஜிக்கில் பாதிப்பு இல்லை. கணவன்-மனைவி பிரிவினையும் ஏற்படாது என்பதைச் சுட்டிக் காட்டியுள்ளோம்.

(5) சூனியம் என்றால் ‘கோள் மூட்டுதல்’ என்ற கருத்தும், அப்படி இருந்தால் கோள் மூட்டுவோர் தவறானதாகும். கணவன்-மனைவிக்கிடையே சந்தேகத் தீயை மூட்டுவோர் அனைவரும் காஃபிர்கள் என்று கூற நேரிடும். அடுத்து, கோள் மூட்ட யாரும் ‘வகுப்பு’ எடுக்க மாட்டார்கள். அதைப் போய்ப் படிக்கவும் மாட்டார்கள்.

(6) 2:102 வசனத்தில் “பிஹி” என்பதற்கு அர்த்தம் செய்யாமல் விட்டது தவறு.

அவரின் அல்குர்ஆன் மொழிபெயர்ப்பில் 17:14, 24:24 ஆம் வசனங்களில் ‘அல் யவ்ம்’ என்ற பதம் விடுபட்டது போன்றோ,

18:55 இல் “அந்நாஸ்” என்ற சொல் விடுபட்டது போன்றோ,

19:5 இல் “மில்லதுன்க” என்ற சொல் விடுபட்டது போன்றோ,

20:62 ஆம் வசனத்தில் “அம்ரஹும்” என்பதற்கு அர்த்தம் விடுபட்டது போன்றோ,

20:117 இல் “குல்னா” என்ற பதமும், 20:123 இல் “கால” என்ற பதமும் விடுபட்டது போன்றோ,

26:74 இல் “பல்” என்ற பதமும், 26:75 இல் “கால” என்ற பதமும் விடுபட்டதைப் போன்றோ,

39:23 இல் “கிதாபன்” என்ற பதத்திற்கு அர்த்தம் விடுபட்டதைப் போன்றோ,

22:84 ஆம் வசனத்தில் “மின் இந்தினா” என்ற சொல் விடுபட்டதைப் போன்றோ, இதைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது.

தர்ஜமா பக்கம் 1313-இல் ஒரு பக்கத்தில் ‘பிஹி’ க்கு அர்த்தம் இல்லை. அடுத்த பகுதியில் அவருக்குத் தேவைப்படும் இடத்தில் ‘பிஹி’க்கு அர்த்தம் இருக்கின்றது. இப்படிப் பார்க்கும் போது, “திட்டமிட்டே ‘பிஹி’ க்கு அர்த்தம் விடப்பட்டுள்ளதோ” என்று சந்தேகிக்க வேண்டியுள்ளது. (இந்த சந்தேகத்தின் பின்னர்தான் இது குறித்து எழுதுவதும், பேசுவதும் நம் மீது கடமை என்று உணர்ந்தோம்.)

(7) 20:66 ஆம் வசனத்தில் “சூனியக்காரர்கள் கயிறுகளையும், தடிகளையும் போட்டனர்” எனக் கூறப்படும் போது (தமது வித்தைகளைப் போட்டனர்) என அடைப்புக் குறி போட்டிருப்பது மக்களைத் திசை திருப்பும் தந்திரம் என்பதைச் சுட்டிக் காட்டியுள்ளோம்.

(8) ‘அல்லாஹ் உம்மை மனிதர்களிலிருந்து பாதுகாப்பான்’ (5:67) என்ற வசனத்தை நபி(ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்ய முடியாது என்பதற்கு ஆதாரமாக முன்வைப்பதன் மூலம் அவர் தனக்குத்தானே முரண்படுகின்றார். அவர் தனது தர்ஜமாவின் 357 ஆம் குறிப்பில், ‘இந்த வசனம் நபியை யாரும் கொல்ல முடியாது என்றுதான் கூறுகின்றது’ எனத் தெளிவாக விபரிக்கின்றார்.

(9) நபி(ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டதனால் குர்ஆனில் எந்தப் பாதிப்பும் ஏற்படாது. குர்ஆனைப் பாதுகாக்கும் பொறுப்பை அல்லாஹ் ஏற்றுக் கொண்டுள்ளான். நபியவர்களின் உள்ளத்தில் அதைப் பதியச் செய்யும் பொறுப்பையும் அவனே ஏற்றுள்ளான். இதை அவரே, “நபிகள் நாயகத்தின் உள்ளத்தில்…” என்ற தலைப்பில் தெளிவாக விபரித்துள்ளார். இந்த வாதத்தை முன்வைப்பதன் மூலமும் அவர் தனக்குத்தானே முரண்பட்டுள்ளார்.

(10) சூனிய ஹதீஸை மக்கள் மறுக்க வேண்டும் என்பதற்காக நபி முன்னுக்குப் பின் முரணாகப் பேசியது போன்றும், செய்ததைச் செய்யவில்லையென்றும், செய்யாததைச் செய்ததாகவும் கூறியது போன்று சித்தரிப்பது பாரிய மோசடியாகும் என்பதைச் சுட்டிக் காட்டியுள்ளோம்.

(11) “திருக்குர்ஆனில் சந்தேகத்தை ஏற்படுத்தும் அனைத்தையும் நாம் நிராகரிக்க வேண்டும்” கூறி விட்டு, “ஷைத்தானின் தூண்டுதலால் மலக்குகள் அல்லாஹ்விடம் ஆட்சேபனை செய்தார்கள்” என அவர் கூறுவது முழுக் குர்ஆன் மீதும் சந்தேகத்தை ஏற்படுத்தி விடும் என்பதைச் சுட்டிக் காட்டியுள்ளோம். மலக்குகள் பற்றிய அவரது இந்தக் கூற்று ஈமானுக்கு முரண்பட்டதாகும்.

(12) “நபி(ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டிருந்தால் எதிரிகள் விமர்சனம் செய்திருப்பார்கள்” என்ற வாதம் தவறானது. நபி(ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டது அவர்களுக்கே இறுதியில்தான் தெரிந்திருக்கும் போது மக்கள் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை. சூனியத்தால் ஏற்பட்ட பாதிப்புக் கூட குடும்ப வாழ்வுடன் சம்பந்தப்பட்டது என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளோம். இதே வேளை, இஸ்லாமிய அறிஞர்கள் இந்த ஹதீஸை விமர்சிக்காததே இது உண்மையான ஹதீஸ் என்பதற்கான சான்றாகும் என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளோம்.

(13) “சூனியம் செய்யப்பட்டவர்” என்று காஃபிர்கள் கூறியதைக் குர்ஆன் கண்டிப்பதை இந்த ஹதீஸை மறுப்பதற்கான ஆதாரமாக எடுக்க முடியாது. அவர்கள் நபி(ஸல்) அவர்களின் நபித்துவத்தையே “சூனியத்தின் உளரல்” என்ற கருத்தில் தான் கூறினார் என்று அவரே கூறி விட்டு, தனக்கு முரண்பட்டு அதை ஆதாரமாக முன்வைக்க முடியாது! அடுத்து, ‘சூனியமே இல்லை. அதற்குப் பாதிப்பும் இல்லை’ என்று கூறி விட்டு, நபி(ஸல்) அவர்களை “சூனியம் செய்யப்பட்டவர்” எனக் காஃபிர்கள் கூறியுள்ளனர். “இந்த ஹதீஸை ஏற்றால் காஃபிர்களை உண்மைப்படுத்தியதாகி விடும்” என அவர் கூறுவது அவருக்கே முரணானது என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளோம்.

(13) “மஸ்ஹூர்” (சூனியம் செய்யப்பட்டவர்) என ஃபிர்அவ்னால் விமர்சிக்கப்பட்ட மூஸா நபி சூனியத்திற்குள்ளாகியுள்ளார். கயிறும், தடியும் அவருக்கு பாம்புகளாகத் தென்பட்டன. இப்போது ‘ஃபிர்அவ்ன் கூறியது உண்மையாகி விடும்’ எனக் கூறி, குர்ஆனை நிராகரிக்க முடியுமா? என்பதை விபரித்ததுடன், “மஸ்ஹூர்” (சூனியம் செய்யப்பட்டவர்) என்பதற்கான மூன்று அர்த்தம் உள்ளது. எந்த அர்த்தத்தில் எடுத்தாலும் அதற்கும், ஹதீஸுக்குமிடையில் முரண்பாடு இல்லை என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளோம்.

(14) அடுத்து, சூனியம் குறித்த ஹதீஸில் எந்த முரண்பாடும் இல்லை. முரண்பாட்டைத் தோற்றுவிக்க ஹதீஸில் இல்லாத கிணற்றிலிருந்து என்ற வாசகத்தை ஹதீஸுக்குள் இடைச் செருகல் செய்து, அவர் செய்த திருகுத் தாளத்தைச் சுட்டிக் காட்டியுள்ளோம். அத்துடன் பலவீனமான ஹதீஸை எடுத்து, அது பலவீனம் என்று தெரிந்து கொண்டே ஹதீஸில் முரண்பாடு இருப்பதாகச் சித்தரித்த அவரது மோசடியையும் சுட்டிக் காட்டியுள்ளோம்.

(15) இறுதியாகச் சூனியத்தை ஒரு கலை என்றும், அதனால் பாதிப்பு உண்டு என்றும், அதிகபட்ச விளைவு கணவன்-மனைவிக்கிடையில் பிரிவினை ஏற்படுத்துவதுதான் என்றும் அவரே ஒப்புக் கொண்டதையும் சுட்டிக் காட்டியுள்ளோம்.

எனவே, அன்பான வாசகர்களே! அவர் மீதுள்ள பற்றை ஒரு பக்கம் வைத்து விட்டு, நாம் குறிப்பிட்ட அம்சங்களை நிதானமாகச் சிந்தித்துப் பார்த்து, அவரது இந்த வழிகேட்டிலிருந்து உங்களை விடுவித்துக்கொள்ள முயற்சியுங்கள். அவர் செய்த சேவைகள், தியாகங்களால் அவர் சொல்லும் அசத்தியம் சத்தியமாகி விடாது! அவர், தனது கருத்தை நிலைநிறுத்தக் கடைப்பிடிக்கும் மோசமான வழிமுறையும் சரியாகி விடாது! தியாகம், சேவை வேறு, சரி-பிழை வேறு. சரி-பிழையைக் குர்ஆன்-ஸுன்னாவே தீர்மானிக்கும். எனவே அவரது இந்த வழிகேட்டிலிருந்து மீண்டு வருமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றேன்.




Previous Post Next Post