நபி மொழிகளில் நவீன விஞ்ஞானம்

நாய் வாய் வைத்த பாத்திரங்களை ஏழு முறை கழுவுவது ஏன்?

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவரது பாத்திரத்தில் நாய் வாய் வைத்துவிட்டால் அவர் அதைக் கொட்டிவிட்டு ஏழு தடவை பாத்திரத்தைக் கழுவிக்கொள்ளட்டும்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : முஸ்லிம் 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நாய் வாய்வைத்துவிட்ட உங்களது பாத்திரத்தைச் சுத்தம் செய்யும் முறை யாதெனில், அதை ஏழு தடவை தண்ணீரால் கழுவுவதாகும். முதல் தடவை மண்ணிட்டுக் கழுவ வேண்டும்
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலிரி) நூல் : முஸ்லிம்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ''பாத்திரத்தில் நாய் வாய் வைத்துவிட்டால் ஏழு தடவை (தண்ணீரால்) கழுவிக்கொள்ளுங்கள். எட்டாவது தடவை மண்ணிட்டுக் கழுவுங்கள்''
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அல்முகஃப்பல் (ரலிரி) நூல் : முஸ்லிம் 

மேற்கண்ட ஹதீஸ்களில் நபி (ஸல்) அவர்கள் மிக முக்கியமான ஒரு வழிமுறையை நமக்கு கற்றுத் தருகின்றார்கள்.

அதாவது நம்முடைய பாத்திரங்களில் நாய் வாய் வைத்து விட்டால்:
அந்த நீரைக் கொட்டி விட வேண்டும்.
அந்தப் பாத்திரத்தை ஏழு தடவைகள் தண்ணீரால் கழுக வேண்டும்.
முதல் தடவை கழுவும் போதே அல்லது எட்டாவது தடவை கழுவும் போதோ மண்ணினால் கழுக வேண்டும்.

இது நபி (ஸல்) அவர்களின் சுன்னத் வழிமுறை என்பது மட்டுமில்லை. இஸ்லாம் ஒரு மதமல்ல . அது மனிதனுக் கேற்ற மார்க்கம் என்பதற்கும் மேற்கண்ட ஹதீஸ் சான்றாகத் திகழ்கிறது.

நபி (ஸல்) அவர்கள் நாய் வாய் வைத்த தண்ணீரை கொட்டச் சொல்கிறார்கள். அந்தப் பாத்திரத்தை பல தடவை தண்ணீராலும், மண்ணாலும் சுத்தம் செய்யச் சொல்கிறார்கள்.

இவ்வாறு ஏன் கட்டளையிட்டார்கள்? நாய் வாய் வைத்தால் என்ன? மண்ணை வைத்து ஏன் கழுக வேண்டும்? விஞ்ஞான அடிப்படையில் இறைத்தூதரின் இந்தப் போதனை சரியானதுதானா? என்பது போன்ற பல கேள்விகள் நமக்கு எழுகின்றன.

நபியவர்கள் வழிகாட்டுதல் நூறு சதவிகிதம் சரியானதே என்று இன்றைய நவீன விஞ்ஞானம் மெய்ப்பிக்கின்றது.

நாயின் உமிழ் நீர்:

நபி (ஸல்) நாய் வாய் வைத்த தண்ணீரை கொட்டச் சொல்கிறார்கள். தண்ணீரில் நாய் வாய் வைத்தால் அதனுடைய எச்சில் தண்ணீரிலே கலக்கின்றது. நாயின் எச்சிலில் மனிதனுக்கு அபாயகராமான நோய்களை ஏற்படுத்தக்கூடிய வைரஸ்கள் நிறைந்து காணப்படுகின்றன. இந்த வைரஸிற்கு ரேபிஸ் என்று பெயர்.

நாயின் உமிழ் நீரில் உள்ள இந்த ரேபிஸ் வைரஸ்கள் நாய் வாய் வைத்த தண்ணீரை நாம் அருந்துவதின் மூலம் நம்முடைய உடலிற்குள் சென்று விடுகின்றது.

அல்லது நம்முடைய உடலில் காயம் பட்ட இடத்தில் நாயின் உமிழ் நீர் பட்டாலோ, அல்லது நாய் வாய் வைத்த தண்ணீரை வைத்து நம்முடைய உடலை சுத்தம் செய்யும் போது நம்முடைய உடலில் உள்ள காயங்களின் மூலம் இந்த வைரஸ் நம்முடைய உடலிற்குள் செல்கிறது.
 
இதன் மூலம் ஏற்படும் நோய்க்கு ரேபிஸ் நோய் என்று பெயர். இந்த ரேபிஸ் வைரஸ் காயம் பட்ட இடத்தில் படிந்தவுடன் தசை இழைகளில் பன்மடங்கு எண்ணிக்கையில் பெருகுகிறது. சில நாட்கள் அல்லது வாரங்களுக்குள் வைரஸ் கடிபட்ட இடத்திலிருந்து நரம்பு வழியாக தன் இலக்கு உறுப்பான மூளையை நோக்கி நகர்கிறது. இவற்றின் பெருக்கக்காலம் என்பது பல காரணிகளைப் பொறுத்து வேறுபடுகிறது. அப்படிப்பட்ட காரணிகளாவன.

காயம் பட்ட இடம், காயம் பட்ட இடத்தில் பதியும் வைரஸின் அளவு, வைரஸின் நோய் உண்டாக்கும் தீவிரத் தன்மை, பாதிக்கப்பட்ட நபரின் நோய் எதிர்ப்புத் தன்மையின் நிலை மூளைக்கு அருகில் அதாவது தலை கழுத்து, முகம் அல்லது அதிகளவு நரம்புகளைக் கொண்ட உடலின் எந்த ஒரு கடைப்பகுதியில் கடிபட்டாலும் இவ்வைரஸ் குறைந்த காலத்தில் பெருக்கம் அடையும்.

இந்த ரேபிஸ் கிருமிகள் மனித உடலிற்குள் சென்ற 30 - 60 நாட்களுக்குள் வியாதி மனிதனிடம் வெளிப்படுகிறது. இந்த வைரஸ் மூளைக்குள் பரவி பல பகுதிகளைத் தாக்கி, நரம்பு மண்டலத்தையும் தாக்குகிறது. அதனால் உடலிலுள்ள பல தசைகளும் முறுக்கேறி இறுகுகின்றன. குரல் எழுப்பும் தசைகள் இறுகுவதால் இவர்கள் குரல் நாய் குரைப்பதைப் போலிருக்கும். விழுங்கு தசைகள் இறுகுவதால் தண்ணீர் அருந்தமுடியாமல் போகிறது. முதல் அறிகுறி ரேபிஸ் பைரஸ் படிந்த இடத்தில் வலி ஏற்படுகிறது. அடுத்தபடியாக உளச் சோர்வு (Depression) பயம் (apprehension) தூக்கமின்மை தோன்றுகிறது. அதற்குப் பின் ஏதாவது பருக முயலும்போது தொண்டைச் சுருக்கம் (Spasm) ஏற்படுகிறது. உமிழ்நீர் கூட விழுங்க முடியாமல் சிரமத்தை ஏற்படுத்தும். சில நேரங்களில் வாந்தியும் உண்டாகும். தண்ணீரைக் கண்டால் பயம் (Hydrophobia) மாய கற்பனைத் தோற்றம் (Hallucinalions), தண்டுவடச் செயலிழப்பு, மூச்சு செயலிழப்பு போன்றவற்றை ஏற்படுத்தி முடிவில் மரணத்தை ஏற்படுத்துகிறது.

இந்த நோய் முற்றினால் குணமாக்குவதற்கான மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

பொதுவாக ரேபீஸ் நோயின் அறிகுறியானது நரம்பு மண்டலத்தை பாதிக்கச் செய்தபின்னர் தான் கண்டறியப்படுகிறது அல்லது காணப்படுகிறது. எனவே நரம்பு திசுக்களில் உள்ள இந்த ராபிஸ் வைரஸை எந்த ஒரு நோய் எதிர்ப்பு பொருளும் சென்றடைவதில்லை. நரம்பு திசுவில் இவ்வைரஸ்கள் விரைவாக இனப்பெருக்கம் அடைந்து மரணத்தைத் தோற்றுவிக்கின்றன.

ஒரு மனிதனை நாய்கள் கடிக்கும் போதும் இந்த ரேபிஸ் கிருமிகள் உடலிற்குள் செல்வதால் இது போன்ற பாதிப்புகள் ஏற்படும்

இந்த பயங்கரமான நோய்களிலிருந்து நம்மை பாது காத்துக் கொள்ளக்கூடிய வழிமுறை நம்முடைய வீடுகளில் நாய்களை வளர்க்காமல் இருப்பதும் நாய் வாய் வைத்த எந்த ஒரு பொருளையும் சாப்பிடாமல் இருப்பதும் தான்.. இதோ அன்றே நபியவர்கள் கூறியிருப்பதைப் பாருங்கள்;

(நாய் மூலம் வேட்டையாடுவதைப் பற்றி) நான் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் ''வேட்டைக்காகப் பயிற்சி அளிக்கப்பட்ட நாயை நீங்கள் அனுப்பி வைத்து, அது (பிராணிகளைக்) கொன்று விட்டாலும் அதை நீங்கள் சாப்பிடலாம். (அந்தப் பிராணியை) நாய் சாப்பிட்டுவிட்டிருக்குமானால் அதை நீங்கள் சாப்பிடாதீர்கள். எனெனில் அது (அப்பிராணியை) தனக்காகவே வைத்துக்கொண்டுள்ளது'' என்று கூறினார்கள். நான், ''எனது நாயை வேட்டையாட அனுப்புகிறேன்; (அது வேட்டையாடித் திரும்பும்போது) அதனுடன் மற்றொரு நாயையும் காண்கிறேன் (இவ்விரண்டில் பிராணியைப் பிராணியைப் பிடித்தது எது என்று எனக்குத் தெரியாது. இந்நிலையில் என்ன செய்வது?)'' என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், நீ சாப்பிடாதே. ''நீங்கள் உங்கள் நாயைத்தான் பிஸ்மில்லாஹ் (அல்லாஹ்வின் பெயர்) கூறி அனுப்பினீர்களே தவிர மற்றொரு நாயை பிஸ்மில்லாஹ் கூறி அனப்பவில்லை'' என்று சொன்னார்கள். அறிவிப்பவர் : அதீ பின் ஹாத்திம் (ரலி) நூல் : புகாரி (175)

நாய்களுக்குப் பயிற்சி அளித்து வேட்டையாட அனுப்பினால் அந்த நாய் வேட்டையாடப் பட்ட பிராணியை தன்னுடைய பற்கள் நன்றாகப் பதியுமாறு கடிக்காது. இதன் காரணமாக நாயின் உமிழ் நீரிலுள்ள நோய் கிருமிகள் வேட்டையாடப்பட்ட பிராணியின் உடலிற்குள் செல்வதற்கு சாத்தியமில்லை.
அதே நேரத்தில் அந்த நாய் வேட்டையாடப்பட்ட பிராணியை சாப்பிட்டிருந்தால் அதை நாம் சாப்பிடக்கூடாது என நபியவர்கள் தடை விதிக்கிறார்கள்.

மேலும் பயிற்சி அளித்த நாயுடன் வேறொரு நாய் இருந்து எது வேட்டையாடியது என்ற சந்தேகம் ஏற்பட்டால் கூட நபியவர்கள் அதனை சாப்பிடக் கூடாது என்று நமக்கு கட்டளையிடுகிறார்கள்.

பிஸ்மில்லாஹ் கூறவில்லை என்ற காரணத்தை நபியவர்கள் கூறியிருந்தாலும் விஞ்ஞான அடிப்படையில் அதில் மேலும் பல நன்மைகள் இருப்பதை நாம் உணர்ந்து கொள்ள முடிகிறது.
மனித குலத்தின் நன்மைக்காக நபியவர்கள் வீடுகளில் நாய்கள் வளர்ப்பதை தடை செய்துள்ளார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நாயும் (உயிரினங்கள் சிலைகள் அல்லது) உருவப் படங்களும் உள்ள வீட்டினுள் (இறைவனின் கருணையைக் கொண்டு வரும்) வானவர்கள் நுழைய மாட்டார்கள். அறிவிப்பவர் : அபூ தல்ஹா (ரலி) நூல் : புகாரி (3225)

பாது காப்பிற்காவும் , வேட்டைக்காகவுமே தவிர நாய்களை விற்பதையும் , வாங்குவதையும் நபியவர்கள் தடுத்துள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள், நாய் விற்ற கிரயத்தையும் இரத்தத்தின் கிரயத்தை (குருதி உறிஞ்சி எடுப்பதற்கு பெறுகின்ற கூரியை)யும் தடைசெய்தார்கள்; வட்டி கொடுப்பதையும் தடை செய்தார்கள்! மேலும், உருவம் வரைபவனைச் சபித்தார்கள்!'' என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர் : அபீ ஜுஹைஃபா (ரலி) நூல் : புகாரி (2086)

பாத்திரங்களை மண்ணால் ஏன் சுத்தம் செய்ய வேண்டும்.?

நபி (ஸல்) அவர்கள் நாய் வாய் வைத்த பாத்திரத்தை 7 தடவைகள் நன்றாக தண்ணீரால் சுத்தம் செய்யுமாறு கூறிவிட்டு ஒரு தடவை மண்ணாலும் கழுக வேண்டும் என்று கூறுகிறார்கள்.

நபியவர்களின் இந்த வழிமுறையும் மிகவும் அறிவுப் பூர்வமானது. மனிதனுக்கு நன்மை தரக்கூடியது என்பதை இன்றை நவீன விஞ்ஞானம் மெய்ப்பிக்கிறது.

நாயின் எச்சிலில் உள்ள ரேபிஸ் வைரஸ்கள் அளவில் கூற இயலாத அளவிற்கு மிகவும் நூண்ணியமானவை ஆகும். இந்த வைரஸ்கள் எவ்வளவு நூண்ணியமாக இருக்கிறதோ அந்த அளவிற்கு அதனுடைய வீரியமும் இருக்கும். இந்த வைரஸ்களை அழிக்கக்கூடிய மூலங்கள் அதிகமாக மண்ணில் இருப்பதை நவீன விஞ்ஞானம் நிருபிக்கிறது.

பலவிதமான நோய்கிருமிகள் உடலில் உள்ள நிலையில் மரணித்தவர்கள் அடக்கம் செய்யப்பட்டபின் அந்த கிருமிகள் பூமியில் உயிரோடு இருப்பதில்லை. ஏனென்றால் மண்ணில் உள்ள சில மூலங்கள் அந்தக் கிருமிகளை அழித்து விடுகின்றன. இதனை பல முறை விஞ்ஞானிகள் ஆய்வு செய்வு நிரூபித்துள்ளனர்.

கிருமிகளை அழிக்கக்கூடிய டெட்ரா சைக்ளின், டெட்ராலைட் ஆகிய இரண்டு மூலங்களும் மண்ணில் உள்ள புழுதிகளில் உள்ளன. சாக்பீஸ் துகள்கள் எவ்வாறு மையோடு கலந்து விடுகிறதோ அது போன்று இந்த மூலங்கள் பாத்திரத்தின் சுவர்களில் நன்றாக பரவி அந்த கிருமிகளை அழித்து பாத்திரத்தை சுத்தப்படுத்துகிறது.


இரத்த ஓட்டத்தை கண்டுபிடித்தது யார்?

உணவு உட்கொள்ளப்பட்டவுடன், அது இரைப்பைக்கு (Stomach) சென்று பின்னர்குடல்களுக்குச் செல்கிறது. இவற்றில் நாம் உட்கொண்ட உணவுகளின் சத்துக்கள் உறிஞ்சப்பட்டு, சக்கைகள் வேறாகவும், சத்துப்பொருட்கள் வேறாகவும்பிரிக்கப்படுகின்றது. இந்த சத்துப்பொருட்கள் குடல்களிலுள்ள இரத்த நாளங்களின் (Blood Vessels of Intestine) வழியாக இரத்த ஓட்டத்தைச் (Blood Circulation) சென்றடைகிறது.

இந்த இரத்த ஓட்டம் நாம் உண்ட உணவின் சத்துப் பொருட்களை உடலின் பல்வேறு பாகங்களுக்கும் எடுத்துச் சென்று அந்த உறுப்புகள் சீராக இயங்குவதற்கு உதவுகிறது உடலில் ரத்தம் பயணம் செய்யும் தூரம் எவ்வளவு தெயுமா? ஒரு சுழற்சியில் (One Cycle) ரத்தம் பயணம் செய்யும் தூரம் ஒரு லட்சத்து 19ஆயிரம் கிலோமீட்டர்! ரத்தக் குழாய்களுக்குள் செல்லும்போது, அதன் வேகம் மணிக்கு 65 கிலோமீட்டர்! - மோட்டார்சைக்கிளின் சராசரி வேகத்தைவிட அதிகம்.  மாத்திரை சாப்பிட்டவுடன் தலைவலி அல்லது கால் வலியிலிருந்து நிவாரணம் கிடைப்பது எப்படி? மாத்திரை சாப்பிட்டவுடன், அதில் உள்ள மருந்துப் பொருள் ரத்தம் மூலம் வலி உள்ளஇடத்துக்குப் பயணம் செய்கிறது. வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.

உடலில் ரத்தம் பயணம் செய்யும்போது எடுத்துச் செல்வது என்ன? எல்லாத் திசுக்களும் ஆற்றலை எடுத்துச் செல்லும் முக்கியப் பணியை ரத்தம் செய்கிறது. கொழுப்புச் சத்து, மாவுச் சத்து, புரதம், தாதுப் பொருள்கள் வடிவத்தில் ஆற்றலை அது எடுத்துச் செல்கிறது. திசுக்கள் ஜீவிக்க ஆக்சிஜனை எடுத்துச் செல்வதும் ரத்தம் தான்.

ரத்த ஓட்டத்தின் முக்கியப் பணி என்ன? நுரையீரலில் இருந்து அனைத்துத் திசுக்களுக்கும் ஆக்சிஜனை ரத்தம் எடுத்துச் செல்லும். திரும்புகையில் திசுக்களில் இருந்து கார்பன் – டை ஆக்சைடைநுரையீரலுக்கு எடுத்துவந்து மூக்கு வழியே வெளியேற்றுவதும் ரத்தம்தான்.இவ்வாறு இரத்த ஓட்டத்தின் மூலம் நம்முடைய உட ற்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும் வண்ணம் படைத்த ரப்புல் ஆலமீன் அழகிய முறையில் படைத்துள்ளான்.

இப்படிப்பட்ட இந்த இரத்த ஓட்டம் மனிதனின் உடலில் உள்ளது என்பதை முதன் முதல் கண்டுபிடித்தவர் யார் ? உயிரினங்களின் இரத்த ஓட்டம் பற்றிய அறிவியலை இப்னு நஃபீஸ் என்பவரே முதன்முதலாக கண்டறிந்து கூறினார்.

இது நடந்தது குர்ஆன் இறக்கியருளப்பட்ட 600 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆகும். இவருக்கு 400 ஆண்டுகளுக்குப் பின்னர் வந்த வில்லியம் ஹார்வி என்பவர் இரத்த ஓட்டம் பற்றிய இந்த அறிவியலை மேலை நாடுகளுக்கும், உலக நாடுகளுக்கும் எடுத்துக்கூறி இதை பிரபல்யப்படுத்தினார். வில் யம் ஹார்வி என்ற அறிவியலாளர் பிறந்தஆண்டு கி.பி. 1578 ஆகும்.

ஆனால் இதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உடல் இரத்தம் ஓடிக் கொண்டிருக்கிறது என்ற உண்மைத் தகவலை அல்லாஹ்வின் தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த மனித சமுதாயத்திற்கு எடுத்துரைத்து விட்டார்கள். எப்படித் தெரியுமா?
இதோ இறைத்தூதர் எடுத்தியம்புவதைப் பாருங்கள்.

عَنْ عَلِيِّ بْنِ الْحُسَيْنِ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْمَسْجِدِ وَعِنْدَهُ أَزْوَاجُهُ فَرُحْنَ فَقَالَ لِصَفِيَّةَ بِنْتِ حُيَيٍّ لَا تَعْجَلِي حَتَّى أَنْصَرِفَ مَعَكِ وَكَانَ بَيْتُهَا فِي دَارِ أُسَامَةَ فَخَرَجَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَعَهَا فَلَقِيَهُ رَجُلَانِ مِنْ الْأَنْصَارِ فَنَظَرَا إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ أَجَازَا وَقَالَ لَهُمَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَعَالَيَا إِنَّهَا صَفِيَّةُ بِنْتُ حُيَيٍّ قَالَا سُبْحَانَ اللَّهِ يَا رَسُولَ اللَّهِ قَالَ إِنَّ الشَّيْطَانَ يَجْرِي مِنْ الْإِنْسَانِ مَجْرَى الدَّمِ وَإِنِّي خَشِيتُ أَنْ يُلْقِيَ فِي أَنْفُسِكُمَا شَيْئًا   رواه البخاري
ஸஃபிய்யா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : நபி (ஸல்) அவர்கள்பள்ளிவாச லில் (இஃதிகாஃப்) இருந்தார்கள். அவர்களுடன் அவர்களின் மனைவியரும் இருந்துவிட்டுத் திரும்பினர். அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னிடம், ”அவசரப்படாதே! நானும் உன்னோடு வருகிறேன்!” என்றார்கள். என் அறை உசாமாவின் வீட்டிற்குள் இருந்தது. நபி(ஸல்) அவர்கள் என்னுடன் வெளியே வந்தார்கள். அப்போது, அன்ஸாரிகளைச் சேர்ந்த இருவர் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்து, அவர்களைக் கூர்ந்து பார்த்துவிட்டுக் கடந்து சென்றனர். நபி(ஸல்) அவர்கள் அவ்விருவரையும் நோக்கி, ”இங்கே வாருங்கள்! இவர் (என் மனைவி) ஸஃபிய்யாவே ஆவார்!”எனக் கூறினார்கள். அவ்விருவரும் ”சுப்ஹானல்லாஹ்(அல்லாஹ் தூயவன்) அல்லாஹ்வின் தூதரே!” என்று (வியப்புடன்) கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், ”நிச்சயமாக ஷைத்தான் மனிதனின் இரத்தம் ஓடும் இடங்களிலெல்லாம் ஓடிக் கொண்டிருக்கின்றான் உங்கள் உள்ளங்களில் அவன் தவறான எண்ணங்களைப் போட்டுவிடுவான் என நான் அஞ்சினேன்” என்று தெளிவுபடுத்தினார்கள். நூல் : புகாரி (2038)

அல்லாஹ்வின் தூதர் படைத்த இறைவனிடம் இருந்து பெற்று அறிவித்த அற்புதத் தகவலைத்தான் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு வந்த வில்லியம் ஹார்வி என்ற அறிஞர் கண்டறிந்தார். வில்லியம் ஹார்வியின் ஆய்விற்கு துணைபுரிந்தது இப்னு நஃபிஸ் என்று முஸ்லிம் அறிஞரின் ஆய்வே ஆகும். முஸ்லிம் அறிஞரின் ஆய்விற்கு அடித்தளமாக அமைந்தது அல்லாஹ்வின் தூதரின் இறையறிவிப்பே என்பதில் எள்ளவும்சந்தேகமில்லை.


சாப்பிட்ட பின் விரல்களை சூப்ப வேண்டும் என்பது ஏன்?

உங்களில் ஒருவர் உணவு உண்டால் தனது விரல்களை சூப்பும்வரை அல்லது சூப்பப்படும் வரை துடைத்துக்கொள்ள (கழுவிக்கொள்ள) வேண்டாம் என முஹம்மது நபி(ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்:- இப்னு அப்பாஸ் (ரலி)    ஆதாரம்:- புகாரி, முஸ்லிம்
(சாப்பிட்ட பின்) விரல்களை சூப்பும் படியும் உணவுத்தட்டை வழித்துச் சாப்பிடும் படியும் முஹம்மது நபி (ஸல்) கட்டளையிட்டார்கள். அறிவிப்பவர்:- ஜாபிர் (ரலி)     ஆதாரம்:- முஸ்லிம்

நிச்சயமாக ஷைத்தான் உங்களில் ஒவ்வொருவருடைய காரியங்களின் போதும் சமூகம் தருகிறான். உணவு உண்ணும் போது கூட சமூகமளிக்கிறான். உங்களில் ஒருவரின் உணவு கவளம் கீழே விழுந்துவிடடால் அதனை எடுத்து அதிலுள்ள அசுத்தங்களை நீக்கிவிட்டு சாப்பிடட்டும். தனது விரல்களை சூப்பிக்கொள்ளட்டும். உணவில் எந்தப் பகுதியில் பரகத் உள்ளது என்பதை அவர் அறியமாட்டார் என முஹம்மது நபி(ஸல்) கூறினார்கள்.அறிவிப்பவர் : அனஸ்(ரழி)    ஆதாரம் : முஸ்லிம்

பரக்கத் என்றால் நம் புலனுக்குத் தெரியாத மறைமுக அருள் என்று பொருள்.

விரலைச் சூப்புவது இன்று அநாகரிகமாக பார்க்கப்படுகிறது. மேலைநாட்டவர்கள் சாப்பிடுவதற்கு கரண்டியைப் பயன்படுத்தி வருவதால் ஈர்க்கப்பட்டவர்கள் இதை அநாகரிகம் என்று சித்தரித்து விட்டனர்.

உண்பதற்கு கரண்டியைப் பயன்படுத்துவது மேலை நாட்டவரின் அநாகரிகத்தால் உருவாக்கப்பட்ட வழக்கமாகும்.

மேலை நாட்டவர்கள் நம்மைப் போல தினமும் குளிக்க மாட்டார்கள். மலம் கழித்தால் கூட துடைத்து விட்டு போவார்களே தவிர கழுவ மாட்டார்கள்.

பொதுவாக ஈரமான பொருளில் அல்லது திவரத்தில் விரல்கள் படும் போது விரல்களில் இருந்து ஒரு திரவம் சுரக்கும். அந்த திரவம் எளிதில் அப்பொருளை ஜீரணமாக்கிவிடும். என்பதால் விரல்களைச் சூப்புவது தான் சரியான உண்ணும் முறையாகும்.

அதை அறிந்து கொள்ள பெரிய ஆராய்ச்சியாளர்களிடம் நாம் கேட்கத் தேவையில்லை. நாமே பரிசோதனை செய்து அறிந்து கொள்ளலாம்.

ஒரு குழம்பைத் தயாரித்துக் கொள்ளுங்கள்.

அதை இரண்டு பாத்திரங்களில் ஊற்றுங்கள்.

ஒரு பாத்திரத்தில் ஏதாவது ஒரு கரண்டியைப் போடுங்கள்

இன்னொரு பாத்திரத்தில் உள்ள குழம்பில் சிறிது நேரம் விரலை வைத்து விட்டு எடுத்து விடுங்கள்.

விரலை விட்ட குழம்பு சில மணி நேரங்களில் நொதித்துப் போய் இருப்பதையும் கரண்டியைப் போட்ட குழம்பு நொதிக்காமல் இருப்பதையும் நீங்கள் காணலாம். இதை சமையல் கட்டில் உள்ள எல்லா பெண்களும் அறிவார்கள்.

உணவு நொதித்துப் போவதுதான் ஜீரணத்தின் ஆரம்ப நிலையாகும்.

மேலே உள்ள ஹதீஸ்களைப் பொறுத்தவரை  உணவு உட்கொள்ளும் போது கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குமுறைகளை முஹம்மது(ஸல்) அவர்கள் கற்றுத்தந்துள்ளார்கள். அதில் முக்கியமான ஒரு ஒழுங்கு முறையைத் தான் இங்கே எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. 

அதாவது உண்ணும் போது உணவு கவளங்கள் விழுந்துவிட்டால் அதனை எடுத்து அதில் பட்ட தூசிகளைத் தட்டி சாப்பிட்டு விட்டு விரல்களை சூப்பவேண்டும் அதன் பிறகு கைகளைக் கழுவிக்கொள்ள வேண்டும் என்று வலிறுத்தி கூறப்பட்டுள்ளது.

இஸ்லாத்தின் பூரணமான வாழ்க்கைத் திட்டத்தின் கீழ் 'சாப்பாடு ஒழங்கு முறையும்' வகுத்துத் தரப்பட்டுள்ளது என்பதை முதலில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். 

சாப்பிட்டபின் விரல்களை சூப்பிக்கொள்ளும் விடயத்தைப் பொறுத்தவரை 'கண்டிப்பான கட்டளையாக' எங்களுக்கு போதிக்கப்பட்டுள்ளது. இதனது தத்துவம் என்ன? உண்மை நிலை என்ன? என்பதை யாரும் கேள்வி கேட்டதில்லை. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி(ஸல்) சொல்கிறார்கள் நாங்கள் செய்கிறோம். நிச்சயமாக அந்த கட்டளையில் எங்களுக்கு நன்மை இருக்கிறது என்ற நிலையில் தான் அன்று முதல் இன்று வரை முஸ்லிம்கள் செயல்படுத்தி வருகிறார்கள். அத்துடன் சாப்பிட்ட பின் விரல்களை சூப்பவதனால் வயிறார சாப்பிட்ட திருப்தி ஏற்படுகிறது என்பதை மட்டும் எல்லோரும் புரிந்து கொள்கிறார்கள்.

இன்றைய விஞ்ஞான உலகம் உணவு சமிப்பாடடைவதற்கான வழிகளை ஆராயும் வேளையில் கண்டுபிடித்த மருத்துவம் என்னவெனில் ஷஷசாப்பிட்ட பின் விரல்களை சூப்புவது உணவு சமிபாடு அடைவதற்கான சிறந்த வழி என்பது தான். அதாவது சாப்பிட்ட பின் விரல் நுனிகளை சூப்பும் போது உணவு சமிபாடு அடைவதற்கான நொதியங்கள் சமிபாட்டுத் தொகுதியிலிருந்து சுரப்பது தூண்டப்படுவதனால் சமிபாடு இலகுவாக்கப்படுகிறது. என்று மருத்துவ உலகம் கூறுகிறது.

உணவு சமிபாடு அடையாதுவிட்டால்; ஏற்படக்கூடிய அவஸ்தைகளை நாம் அனுபவித்திருக்கிறோம், பார்த்திருக்கிறோம். சமிபாடு அடைவதற்கு இப்படியான ஓர் இலகு வழி இருப்பதைக் கண்டு உலகம் ஆச்சரியமடைகிறது.

சிலர் உணவு உண்ட பின் விரல்களை சூப்புவதை கேவலமாக கருதுகிறார்கள். யாராவது விரல் சூப்புவதைக் கண்டால் அசிங்கமான ஒரு காரியம் நடப்பது போல் பார்க்கிறார்கள். இன்னும் சிலர் கைகளினால் எடுத்து சாப்பிடுவதை விட கரண்டி, கராப்புகளால் எடுத்துச் சாப்பிடுவதை நாகரீகமான செயல் என கருதுகிறார்கள். போலி கௌரவத்தினாலும் அர்த்தமற்ற நகரீக செயல்களினாலும் மனிதன் நன்மைகளை விட கேடுகளை அதிகம் சம்பாதித்து வருகிறான்.

சாப்பாடு சமிபாடு அடையாது, அஜீரணம் ஏற்பட்டர்ல் அதற்காக ஆயிரக்கணக்கில் செலவிடுகிறான். சின்ன ஓர் காரியத்தை செய்ய மறுத்ததனால் பெரியதோர் அவஸ்தைக்கு ஆளாகுகிறான். விரல்களை சூப்புவதனால் மனித கௌரவத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. ஆரோக்கியமான வாழ்வுக்கு இதனை செய்தாக வேண்டும்.

இன்றைய மருத்துவ உலகம் கண்டறிந்த உண்மையை விஞ்ஞான வளர்ச்சியில்லாத அன்றைய காலத்திலேயே முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறியது தான் மிகப்பெரிய அதிசயம்! இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறிய வார்த்தைகள் வீணானவைகள் அல்ல. மருத்துவ உலகம் ஆய்வு செய்யக்கூடிய அதிசயங்கள் அவ்வார்த்தைகளில் இன்னும் புதைந்துள்ளன. 

எனவே சாப்பிட்ட பின் விரலைச் சூப்புவதால் விரலில் சுரக்கும் திரவம் உணவில் கலந்து அது எளிதில் ஜீரணமாகும் நிலைக்கு மென்மைப்படுத்துகிறது.


மனிதனின் உடலின் மண் தின்னாத பகுதி

4935 – حَدَّثَنِي مُحَمَّدٌ، أَخْبَرَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا بَيْنَ النَّفْخَتَيْنِ أَرْبَعُونَ» قَالَ: أَرْبَعُونَ يَوْمًا؟ قَالَ: أَبَيْتُ، قَالَ: أَرْبَعُونَ شَهْرًا؟ قَالَ: أَبَيْتُ، قَالَ: أَرْبَعُونَ سَنَةً؟ قَالَ: أَبَيْتُ، قَالَ: «ثُمَّ يُنْزِلُ اللَّهُ مِنَ السَّمَاءِ مَاءً فَيَنْبُتُونَ كَمَا يَنْبُتُ البَقْلُ، لَيْسَ مِنَ الإِنْسَانِ شَيْءٌ إِلَّا يَبْلَى، إِلَّا عَظْمًا وَاحِدًا وَهُوَ عَجْبُ الذَّنَبِ، وَمِنْهُ يُرَكَّبُ الخَلْقُ يَوْمَ القِيَامَةِ»

அபூ சாலிஹ் ஃதக்வான் அஸ்ஸம்மான்(ரஹ்) அறிவித்தார்
‘(உலக முடிவு நாளில் அனைத்தையும் அழிப்பதற்காகவும், பின்னர் அனைவரையும் எழுப்புவதற்காகவும் ஊதப்படும்) இரண்டு எக்காளத்திற்கும் (ஸுர்) மத்தியில் (இடைப்பட்ட காலம்) நாற்பது’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) கூறினார். (அபூ ஹுரைரா(ரலி) அவர்களின் நண்பர்கள்,) ‘(அபூ ஹுரைரா அவர்களே!) நாள்களில் நாற்பதா?’ என்று கேட்டனர். அபூ ஹுரைரா(ரலி), ‘(நான் அறியாததற்கு பதிலளிப்பதிலிருந்து) நான் விலம்க் கொள்கிறேன்’ என்று கூறினார்கள். (நண்பர்களான) அவர்கள், ‘நாற்பது மாதங்களா?’ என்று கேட்டனர். அதற்கும் ‘நான் விலம்க் கொள்கிறேன்’ என அபூ ஹுரைரா(ரலி) கூறினார். ‘ஆண்டுகள் நாற்பதா?’ என்று கேட்டனர். அப்போதும் அபூ ஹுரைரா(ரலி), ‘நான் விலம்க்கொள்கிறேன்’ என்று கூறினார்கள். பின்னர், ‘வானத்திலிருந்து அல்லாஹ் தண்ணீரை இறக்குவான். அப்போது (மண்ணறைக்குள் உக்கிப்போயிருக்கும் மனித சடலங்கள்) தாவரங்கள் முளைத்து எழுவதுபோல் எழுவார்கள். மனிதனிலுள்ள (உறுப்புகள்) அனைத்துமே (மண்ணுக்குள்) உக்கிக்போகாமல் இருப்பதில்லை. ஆனால், ஒரேயோர் எலும்பதை; தவிர! அதுதான் (முதுகந் தண்டின் வேர்ப் பகுதியிலிருக்கும்) உள்வால் எலும்பின் (அணுவளவு) நுனியாகும். அதை வைத்தே படைப்பினங்கள் (மீண்டும்) மறுமை நாளில் உருவாக்கப்படும்’ என்று மேலும் கூறினார்கள்.

மேற்படி நபிமொழி புகாரி முஸ்லிம் அபுதாவுத் போன்ற பல ஹதீஸ் நூற்களிலும் பல இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த எலும்பு பற்றிய வீடியோவைப் பார்க்க விரும்புபவர்கள் கீழ் காணும் இணைப்புக்குச் செல்லலாம்.


மனிதன் இறந்த பின் எத்தனை காலமானாலும் அவனது உடம்பிலிருக்கும் இந்த எலும்பு (உள்வால் எலும்பு (‪coccyx bone) முதுகுத்தண்டின் வேர்ப்பகுதி) அழியாது என இந்த நபிமொழி கூறுகின்றது. இதனை இன்றைய விஞ்ஞானம் உறுதி செய்துள்ளது.

ஜெர்மனி நாட்டை சேர்ந்த விஞ்ஞானி ‘ஹான்ஸ் ஸ்பீமேன்’ இதை தன்னுடைய ஆய்வுக்கூடத்தில் பல ஆயிரம் டிகிரி மூலம் கரிக்கவும் மற்றும் பல அமிலங்களைக் கொண்டு கரைக்கவும் முயற்சி செய்தார் முடியவில்லை. மனித உடலில் உள்ள அழிக்க முடியாத பகுதி இது என்பதை இந்த உலகுக்கு தன்னுடைய சோதனையின் மூலம் நிரூபித்தார். இதற்காக அவர் நோபல் பரிசினையும் பெற்றார்.

“அஜபுத்தனப்“ எனப்படும் இந்த அழியாத மனித எலும்பு பற்றி ஏராளமான ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. இவை தொடர்பில் அரபு மொழியில் செய்யப்பட்ட ஆய்வுகளை அறிய விரும்புபவர்கள் கீழ் கானும் இணையங்களை நாடலாம்.






இந்த ஆய்வின் மூலம் பல விடயங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நபிமொமி உண்மையானது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நபி (ஸல்) அவர்கள் உண்மையான இறைத் தூதர் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மனிதனின் உடலின் அழியாத இந்தப் பகுதி பற்றி 1400 வருடங்களுக்கு முன் வாழ்ந்த ஒருவர் அறிந்திருக்க வாய்ப்பே இல்லை. மனிதனைப் படைத்த இறைவனே அவருக்கு அறிவித்துக் கொடுத்திருந்தால் மட்டுமே அவருக்கு இது தெரிந்திருக்க முடியும்.
{ سَنُرِيهِمْ آيَاتِنَا فِي الْآفَاقِ وَفِي أَنْفُسِهِمْ حَتَّى يَتَبَيَّنَ لَهُمْ أَنَّهُ الْحَقُّ أَوَلَمْ يَكْفِ بِرَبِّكَ أَنَّهُ عَلَى كُلِّ شَيْءٍ شَهِيدٌ [فصلت: 53]

நிச்சயமாக இது உண்மை என்பது அவர்களுக்குத் தெளிவாகும் வரை பல பாகங்களிலும் அவர்களுக்குள்ளேயும் நமது அத்தாட்சிகளை அவர்களுக்குக் காட்டுவோம். நிச்சயமாக உமது இரட்சகன் யாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பது அவன் விடயத்தில் போதுமானதாக இல்லையா? (41:53)

மனிதனின் உடம்பிலேயே இந்த வேதம் உண்மையானது என்பதை உறுதிப்படுத்தத் தக்க அத்தாட்சிகளை நாம் வெளிப்படுத்துவோம் என்ற குர்ஆன் வசனமும் இங்கே உண்மைப் படுத்தப்படுகிறது.

மறுமை உண்டு மரணத்தின் பின் மனிதன் மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பப்படுவான் என்ற இஸ்லாத்தின் கொள்கையும் உறுதிப்படுத்தப்படுகிறது.

இச்சந்தர்ப்பத்தில் நமது சகோதரர்களின் சிந்தனைக்காக ஒரு செய்தியைப் பதிவு செய்ய விரும்புகிறேன்.

நமது சிந்தனைக்கும் அறிவுக்கும் எட்டாத நபிமொழிகளை மறுப்பது ஆபத்தானது என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம். இந்த ஹதீஸை தவறான கோணத்தில் அணுகினால் நிராகரிக்க முடியும். மண் இரும்பைக் கூட அழித்து விடும் போது மனிதனது எலும்பை அழிக்காது என்பது ஏற்கத் தக்கதாக இல்லை.

ஒரே கப்ரில் பலர் அடக்கம் செய்யப்படுகிறார்கள் இதுவரை எங்கும் இந்த எலும்பு அகப்படவில்லை. எலும்புகள் உக்கி மணணோடு மண்ணாகக் கலந்த பின்னரும் மனிதன் உயிர் கொடுத்து எழுப்பப்படுவானா என காபிர்கள் கேள்வி கேட்ட போது குர்ஆன் அதை மறுக்க வில்லை. பதில்தான் சொன்னது எனவே எழும்புகள் உக்கி மண்ணோடு மண்ணாக மாறிவிடும் என்பதைக் குர்ஆன் ஏற்றுக் கொள்கிறது.

இந்த ஹதீஸ் அதற்கு மாற்றமாக எலும்பின் ஒருபகுதியை மண் தின்னவே மாட்டாது என்கிறது எனவே இந்த ஹதீஸை ஏற்க முடியாது என யாராவது வாதிட்டிருந்தால் கூட அதையும் சிலர் ஆய்வு என்ற பெயரில் ஏற்றிருப்பார்கள். இப்படி வாதிட்டு இந்த ஹதிஸ் மறுக்கப்பட்டிருந்தால் என்ன நிலை என்று சிந்தித்துப் பாருங்கள்.

இன்று புரியாத சில விடயங்கள் நாளை உறுதிப்படுத்தப்படலாம். எனவே அறிவுக்குப்படவில்லை, நடைமுறைக்கு முரணாக இருக்கிறது, நிருபிக்க முடியவில்லை போன்ற போலிக் காரணங்களைக் கூறி ஹதிஸ்களை மறுப்பது ஆபத்தான வழி முறை என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

وَيَرَى الَّذِينَ أُوتُوا الْعِلْمَ الَّذِي أُنزِلَ إِلَيْكَ مِنْ رَبِّكَ هُوَ الْحَقَّ وَيَهْدِي إِلَى صِرَاطِ الْعَزِيزِ الْحَمِيدِ(6)34
எவர்களுக்குக் கல்வி ஞானம் அளிக்கப்பட்டுள்ளதோ, அவர்கள் உமக்கு உம்முடைய - இறைவனிடமிருந்து அருளப்பெற்ற (இவ்வேதத்)தை உண்மை என்பதையும், அது வல்லமை மிக்க, புகழுக்குரியவ(னான நாய)னின் நேர்வழியில் சேர்க்கிறது என்பதையும் காண்கிறார்கள்.(அல்குர்ஆன் 34 : 6) 

நவீன காலத்தில் பல்லாண்டுகள் ஆய்வு செய்து விஞ்ஞானம் கூறக்கூடிய ஒரு செய்தியை, தேர்ந்த மருத்துவர்கள் பல்லாண்டுகள் கற்றறிந்து மக்களுக்கு கூறும் விஷயங்களையெல்லாம் எவ்வித விஞ்ஞான வளர்ச்சியும் இல்லாத காலகட்டத்தில் எழுதப்படிக்கத் தெரியாத முஹம்மத் அவர்கள் கூறியுள்ளார்கள் என்றால் நிச்சயமாக இந்த வார்த்தைகள் முஹம்மத் அவர்களின் சொந்த வார்த்தைகள் அல்ல.

உண்மையான ஏக இறைவனிடமிருந்து பெற்று அறிவித்த வார்த்தைகள் தான். உண்மையில் இஸ்லாம்தான் உண்மையான மார்க்கம்.

திருக்குர்ஆன், மற்றும் திருநபி வழி நடப்பதில்தான் உண்மையான வெற்றியிருக்கிறது என்பதை உணர்ந்து வாழ்வோமாக.
أحدث أقدم