ஸஹீஹுல் புகாரி
அத்தியாயம் 7
அத்தியாயம் 7
தயம்மும்
அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...
அல்லாஹ் கூறினான்:
''நீங்கள் தண்ணீரைப் பெறவில்லையானால் சுத்தமான மண்ணைத் தேடி அதனால் உங்கள் முகங்களையும் கைகளையும் தடவிக் கொள்ளுங்கள்.'' (திருக்குர்ஆன் 05:06)
பகுதி 1
334. 'நாங்கள் ஒரு பயணத்தில் நபி(ஸல்) அவர்களுடன் சென்றோம். 'பைதாவு' அல்லது 'தாத்துல் ஜைஷ்' என்ற இடத்தை வந்தடைந்ததும் என்னுடைய கழுத்தணி அறுந்து (தொலைந்து)விட்டது. அதைத்தேடுவதற்காக நபி(ஸல்) அவர்களும் மற்றவர்களும் அந்த இடத்தில் தங்கினோம். நாங்கள் தங்கிய இடத்தில் தண்ணீர் இல்லை. அப்போது அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் சிலர் வந்து, '(உங்கள் மகளான) ஆயிஷா செய்ததை நீங்கள் பார்த்தீர்களா? நபி(ஸல்) அவர்களையும் மக்களையும் இங்கே தங்கச் செய்துவிட்டார். அவர்கள் தங்கிய இடத்திலும் தண்ணீர் இல்லை அவர்களுடனும் தண்ணீர் எடுத்து வரவில்லை' என்று முறையிட்டனர். அபூ பக்ர்(ரலி) (என்னருகே) வந்தபோது நபி(ஸல்) அவர்கள் தங்களின் தலையை என்னுடைய மடி மீது வைத்துத் தூங்கிக் கொண்டிருந்தார்கள். 'நபி(ஸல்) அவர்களையும் மக்களையும் தங்க வைத்துவிட்டாயே? அவர்கள் தங்கிய இடத்திலும் தண்ணீர் இல்லை அவர்களிடமும் தண்ணீர் இல்லை' என்று கூறினார்கள். அவர்கள் எதைச் சொல்ல அல்லாஹ் நாடினானோ அதையெல்லாம் சொல்லிவிட்டு, தங்களின் கையால் என்னுடைய இடுப்பில் குத்தினார்கள். நபி(ஸல்) அவர்களின் தலை என் மடியின் மீது இருந்ததால் நான் அசையாது இருந்தேன். நபி(ஸல்) அவர்கள் காலையில் விழித்தெழிந்தபோதும் தண்ணீர் கிடைக்கவில்லை. அப்போது அல்லாஹ் தயமத்தின் வசனத்தை அருளினான். எல்லோரும் தயம்மும் செய்தார்கள்.
இது பற்றிப் பின்னர் உஜைத் இப்னு ஹுளைர்(ரலி) 'அபூ பக்ரின் குடும்பத்தார்களே! உங்களின் மூலமாக ஏற்பட்ட பரக்கத்துக்களில் இது முதலாவதாக இல்லை. (இதற்கு முன்பும் உங்களின் மூலம் எத்தனையோ பரக்கத்துக்கள் ஏற்பட்டுள்ளன)' எனக் கூறினார். அப்போது நான் இருந்த ஒட்டகத்தை எழுப்பியபோது அதனடியில் (காணாமல் போன) என் கழுத்தணி கிடந்ததைக் கண்டோம்''என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
335. 'எனக்கு முன்னர் யாருக்கும் கொடுக்கப்படாத ஐந்து விஷயங்கள் எனக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. எதிரிகளுக்கும் எனக்குமிடையில் ஒரு மாத காலம் பயணம் செய்யும் இடைவெளியிருந்தாலும் அவர்களின் உள்ளத்தில் பயம் ஏற்படுத்தப்படுவதன் மூலம் நான் உதவப்பட்டுள்ளேன். பூமி முழுவதும் சுத்தம் செய்யத் தக்கதாகவும் தொழுமிடமாகவும் எனக்கு ஆக்கப்பட்டுள்ளது. என்னுடைய சமுதாயத்தில் தொழுகையின் நேரத்தை அடைந்தவர் (இருக்கும் இடத்தில்) தொழுதுகொள்ளட்டும்! போரில் கிடைக்கிற பொருள்கள் எனக்கு ஹலாலாக்கப்பட்டுள்ளன. எனக்கு முன்பு ஹலாலாக்கப்பட்டதில்லை. (மறுமையில்) சிபாரிசு செய்யும் வாய்ப்புக் கொடுக்கப்பட்டுள்ளேன். ஒவ்வொரு நபியும் தங்களின் சமூகத்திற்கு மட்டுமே நபியாக அனுப்பட்டார்கள். ஆனால், மனித இனம் முழுமைக்கும் நபியாக அனுப்பப்பட்டுள்ளேன்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.
பகுதி 2
தண்ணீரோ மண்ணோ கிடைக்க வில்லையானால் என்ன செய்வது?
336. 'ஆயிஷா (தங்களின் சகோதரி) அஸ்மாவிடமிருந்து ஒரு கழுத்தணியை இரவல் வாங்கியிருந்தார். அந்தக் கழுத்தணி காணாமல் போனது. இதை அறிந்த நபி(ஸல்) அவர்கள் ஒரு மனிதரை அனுப்பி அந்தக் கழுத்தணியைத் தேடி வருமாறு கூறினார்கள். தேடிப்போனவர் அதைக் கண்டெடுத்தார். தேடிப் போன அந்த இடத்தில் தொழுகையின் நேரம் வந்துவிட்டது. அவர்களிடம் தண்ணீர் இருக்கவில்லை. எனவே (உளுவின்றித்) தொழுதுவிட்டார். இதைப் பற்றி நபி(ஸல்) அவர்களிடம் முறையிட்டார். அப்போது அல்லாஹ் தயம்முடைய வசனத்தை அருளினான். அப்போது உஜைத் இப்னு ஹுளைர் என்பவர் ஆயிஷா(ரலி) அவர்களிடம் 'அல்லாஹ் உங்களுக்கு நற்கூலியைத் தருவானாக! அல்லாஹ்வின் மீது ஆணையாக நீங்கள் வெறுக்கக் கூடிய எந்த ஒரு விஷயம் உங்களுக்கு ஏற்பட்டாலும், அதை உங்களுக்கும் மற்ற முஸ்லிம்களுக்கும் நலமானதாக அல்லாஹ் ஆக்கி விடுகிறான்' என்று கூறினார்'' என உர்வா அறிவித்தார்.
பகுதி 3
''சொந்த ஊரில் தங்கியிருக்கும்போது தண்ணீர் கிடைக்காதிருந்து தொழுகையின் நேரம் போய்விடுமோ என அஞ்சினால் தயம்மும் செய்யலாம்'' என்று அதாவு கூறினார்கள்.
''ஒரு நோயாளியிடம் தண்ணீர் இருந்தும் அதை அவருக்கு ஊற்றிக் கொடுப்பவர் கிடைக்கவில்லையானால், அவர் தயம்மும் செய்து கொள்ளலாம்'' என்று ஹஸன் கூறினார்.
அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி), 'ஜுர்ஃப்' என்ற ஊரிலிருந்து வந்து கொண்டிருக்கும்போது 'மர்பதுந் நஅம்' என்ற இடத்தை அடைந்ததும் அஸர் தொழுகையின் நேரம் வந்துவிட்டது. உடனே (தண்ணீர் கிடைக்காததால் தயம்மும் செய்து) தொழுதார்கள். பின்னர் மதீனாவிற்குள் வந்தார்கள். அப்போது சூரியன் (மறையவில்லை) உயர்ந்தே இருந்தது என்றாலும் அவர்கள் அந்த அஸர் தொழுகையைத் திரும்பத் தொழவில்லை.
337. 'நானும் நபி(ஸல்) அவர்களின் மனைவியான மைமூனாவின் அடிமை அப்துல்லாஹ் இப்னு யஸாரும் அபூ ஜுஹைம் இப்னு அல்ஹாரிது இப்னு அஸ்ஸிம்மத்தில் அன்ஸாரி(ரலி) அவர்களிடம் சென்றோம். 'எங்களிடம் நபி(ஸல்) அவர்கள் 'பீர்ஜமல்' என்ற இடத்திலிருந்து வந்து கொண்டிருந்தார்கள். அப்போது ஒருவர் அவர்களை சந்தித்து ஸலாம் கூறியதற்கு, நபி(ஸல்) அவர்கள் பதில் சொல்லாமல் ஒரு சுவர் பக்கம் சென்று (அதில் கையை அடித்து) தங்களின் முகத்தையும் இரண்டு கைகளையும் தடவிய பின்னர் அவரின் ஸலாத்திற்கு பதில் கூறினார்கள்' என்று அபூ ஜுஹைம்(ரலி) கூறினார்'' என உமைர் என்பவர் அறிவித்தார்.
பகுதி 4
தயம்மும் செய்பவர் (மண்ணில் அடித்த பின்னர்) இரண்டு கைகளிலும் ஊதவேண்டுமா?
338. 'ஒருவர் உமர்(ரலி) அவர்களிடம் வந்து 'நான் குளிப்புக் கடமையானவனாக ஆகிவிட்டேன். தண்ணீர் கிடைக்கவில்லை. என்ன செய்யவேண்டும்?' என்று கேட்டபோது, அங்கிருந்த அம்மார் இப்னு யாஸிர்(ரலி) உமர்(ரலி) அவர்களிடம், 'நானும் நீங்களும் ஒரு பயணத்தில் சென்றோம். (அப்போது தண்ணீர் கிடைக்காததால்) நீங்கள் தொழவில்லை நானோ மண்ணில் புரண்டுவிட்டுத் தொழுதேன். இந்நிகழ்ச்சியை நபி(ஸல்) அவர்களிடம் நான் சொன்னபோது நபி(ஸல்) அவர்கள் தங்களின் இரண்டு கைகளையும் தரையில் அடித்து, அவற்றில் ஊதிவிட்டு அவ்விரு கைகளால் தங்களின் முகத்தையும் இரண்டு முன்கைகளையும் தடவிக் காண்பித்து 'இவ்வாறு செய்திருந்தால் அது உனக்குப் போதுமானதாக இருந்தது' எனக் கூறிய சம்பவம் உங்களுக்கு நினைவில்லையா?' என்று கேட்டார்கள்'' என அப்துர்ரஹ்மான் அப்ஸா(ரலி) கூறினார்.
பகுதி 5
முகத்தையும் இரண்டு முன் கைகளையும் தடவுவதே தயம்மும்
339. முந்திய ஹதீஸ் இங்கே இடம் பெறுகிறது. அத்துடன் 'ஷுஅபா' என்பவர் இரண்டு கைகளால் பூமியில் அடித்து அவற்றைத் தம் வாயின் பக்கம் நெருக்கி (ஊதிவிட்டு) பின்னர் தம் முகத்தையும் இரண்டு முன் கைகளையும் தடவினார்'' என்று குறிப்பிட்டார் எனக் குறிப்பிடப்படுகிறது.
340. நான் உமர்(ரலி) அவர்களிடமிருந்தேன். அப்போது அம்மார் இப்னு யாஸிர்(ரலி) உமர்(ரலி) அவர்களிடம் 'நாம் ஒரு பயணத்தில் சென்றபோது குளிப்புக் கடமையாகிவிட்டது' என்று கூறி (தயம்மும் செய்து காட்டினார்கள். அப்போது) இரண்டு கைகளிலும் ஊதிக் காட்டினார்கள்'' என அப்துர்ரஹ்மான் இப்னு அப்ஸா(ரலி) அறிவித்தார்.
341. 'நானோ மண்ணில் புரண்டேன். இந்நிகழ்ச்சியை நபி(ஸல்) அவர்களிடம் சொன்னபோது அவர்கள் முன்கைகளும் முகமும் போதுமானதாக இருந்தது' என அம்மார்(ரலி) உமர்(ரலி) அவர்களிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள கூறினார்கள்' என்று குறிப்பிட்டார்'' அப்துர்ரஹ்மான் இப்னு அப்ஸா(ரலி) அறிவித்தார்.
342. முந்திய ஹதீஸே இங்கு மீண்டும் இடம் பெற்றுள்ளது.
343. 'நபி(ஸல்) அவர்கள் தங்களின் இரண்டு கைகளையும் தரையில் அடித்துத் தங்களின் முகத்தையும் இரண்டு முன் கைகளையும் தடவிக் காண்பித்தார்கள்'' என அம்மார்(ரலி) அறிவித்தார்.
பகுதி 6
தண்ணீருக்குப் பகரமாக சுத்தமான மண் ஒரு முஸ்லிமுக்கு போதுமானது.
''ஒருமுறை ஒருவர் தயம்மும் செய்தால் உளு முறியும் செயல்கள் நிகழாதவரை அந்த தயம்மும் அவருக்குப் போதுமானது'' என்று ஹஸன் கூறினார்.
இப்னு அப்பாஸ்(ரலி) தயம்மும் செய்துவிட்டு இமாமாக நின்று தொழுகை நடத்தினார்கள்.
''எதையும் முளைக்கச் செய்யாத உப்புத் தரையில் தொழுவதும் அதில் தயம்மும் செய்வதும் (ஆகுமானதாகும்) எந்தக் குற்றமுமில்லை'' என்று யஹ்யா இப்னு ஸயீது கூறினார்.
344. 'நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு பயணம் சென்றோம். இரவின் கடைசி நேரம் வந்தபோது எங்களுக்கு தூக்கம் மேலிட்டது. பயணிக்கு அதைவிட இன்பமான தூக்கம் எதுவும் இருக்க முடியாது. அந்தத் தூக்கத்திலிருந்து எங்களை (அதிகாலை) சூரிய வெப்பம்தான் எழுப்பியது. முதல் முதலாகத் தூக்கத்திலிருந்து எழுந்தவர் இன்னவர், அடுத்த இன்னவர் அவரை அடுத்து இன்னவர் இந்த ஹதீஸ் அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூ ரஜா எழுந்தவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டுக் கூறினார். அவருக்கு அடுத்த அறிவிப்பாளரான அவ்ஃப் அவர்களின் பெயர்களை மறந்துவிட்டார். நான்காவதாகத் தூக்கத்திலிருந்து எழுந்தவர் உமர் இப்னு கத்தாப்(ரலி) ஆவார்கள்.''
நபி(ஸல்) அவர்கள் தூங்கினால் அவர்கள் தாமாகவே தூக்கத்திலிருந்து விழிக்கும் வரை வேறு யாராலும் எழுப்பப்பட மாட்டார்கள். காரணம் அவர்களின் தூக்கத்தில் என்ன செய்தி வருமென்பது எங்களுக்குத் தெரியாது. உமர்(ரலி) தூக்கத்தைவிட்டு எழுந்து மக்களுக்கு ஏற்பட்ட (ஸுப்ஹ் தொழுகை தவறிப்போன) இந்நிலையைப் பார்த்ததும் அல்லாஹு அக்பர்!' என்று சப்தமிட்டார். அவர் திடகாத்திரமான மனிதராக இருந்தார். அவர் சப்தமிட்டுத் தக்பீர் முழங்கிக் கொண்டே இருந்தார். அவர்களின் சப்தத்தைக் கேட்டு நபி(ஸல்) அவர்களும் தூக்கத்திலிருந்து எழுந்தார்கள். உடனே மக்கள் தங்களுக்கு ஏற்பட்ட இந்நிலையை நபி(ஸல்) அவர்களிடம் முறையிட்டார்கள். அப்போது 'அதனால் எந்தப் பாதிப்புமில்லை. நீங்கள் இங்கிருந்து புறப்படுங்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறிவிட்டு, அந்த இடத்தைவிட்டும் புறப்பட்டார்கள். சிறிது தூரம் சென்றதும் அங்கே தங்கி உளுச் செய்யத் தண்ணீர் கொண்டு வரச் செய்து அதில் உளுச் செய்தார்கள். தொழுகைக்காக அழைப்புக் கொடுக்கப்பட்டது. மக்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். நபி(ஸல்) அவர்கள் தொழுகையை முடித்துவிட்டு திரும்பிப் பார்த்தபோது, அங்கு ஒருவர் கூட்டத்துடன் தொழாமல் தனியாக இருந்தார். 'ஜமாஅத்துடன் நீர் தொழாமலிருக்கக் காரணமென்ன?' என்று அவரிடம் கேட்டபோது, 'எனக்குக் குளிப்புக் கடமையாகிவிட்டது. தண்ணீர் இல்லை' என்று அவர் கூறினார். 'மண்ணில் தயம்மும் செய். அது உனக்குப் போதுமானது' என்று நபி(ஸல்) அவர்கள் அவரிடம் கூறினார்கள்.
பின்னர் நபி(ஸல்) அவர்கள் பயணத்தைத் தொடங்கினார்கள். அப்போது மக்கள் அவர்களிடம் சென்று 'தாகமாக இருக்கிறது தண்ணீர் இல்லை' என முறையிட்டார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள் தங்களின் வாகனத்திலிருந்து இறங்கி, ஒரு மனிதரையும் அவர் பெயரை அபூ ரஜா குறிப்பிட்டார்கள். அவ்ஃப் என்பவர் மறந்துவிட்டார். அலீ(ரலி) அவர்களையும் அழைத்து' நீங்கள் இருவரும் சென்று தண்ணீரைத் தேடுங்கள்' என்று கூறினார்கள். அவர்கள் இருவரும் தண்ணீரைத் தேடிச் சென்று கொண்டிருந்தபோது, வழியில் ஒரு பெண்ணைச் சந்தித்தார்கள். அவள் ஓர் ஒட்டகத்தின் மீது இரண்டு தோல் பைகளில் தண்ணீர் வைத்துக் கொண்டு அதற்கிடையில் அமர்ந்திருந்தாள்.
'தண்ணீர் எங்கே கிடைக்கிறது?' என்று அவ்விருவரும் அப்பெண்ணிடம் கேட்டனர். 'தண்ணீர் ஒரு நாள் பயண தூரத்தில் இருக்கிறது. எங்களுடைய ஆண்கள் தண்ணீருக்காகப் பின்தங்கிவிட்டனர்' என அப்பெண் கூறினாள். 'அப்படியானால் நீ புறப்படு' என்று அவ்விருவரும் அப்பெண்ணிடம் கூறினார்கள். 'எங்கே?' என்று அவள் கேட்டாள். 'அல்லாஹ்வின் தூதரிடம்' என்று கூறினார்கள். 'மதம் மாறியவர் என்று கூறப்படுகிறாரே அவரிடத்திலா?' என்று அப்பெண் கேட்டாள். 'நீ கூறுகிற அவரேதான்' என்று கூறிவிட்டு அவளை நபி(ஸல்) அவர்களிடம் அழைத்து வந்து நடந்ததைக் கூறினார்கள்.
'அந்தப் பெண்ணை அவளுடைய ஒட்டகத்திலிருந்து இறங்கச் செல்லுங்கள்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறிவிட்டு, ஒரு பாத்திரத்தைக் கொண்டு வரச் சொல்லி, அந்த இரண்டு தோல் பைகளிலிருந்த தண்ணீரைப் பாத்திரங்களில் நிரப்பினார்கள். பின்னர் அந்த இரண்டு தோல் பைகளின் அடிப்புற வாயைக் கட்டிவிட்டுத் தண்ணீர் செலுத்தும் மேற்புற வாயைக் கட்டாமல்விட்டுவிட்டார்கள். 'எல்லோரும் வந்து தண்ணீர் குடியுங்கள். சேகரித்து வையுங்கள்' என்று மக்களுக்கு அறிவிக்கப்பட்டது. விரும்பியவர்கள் குடித்தார்கள் விரும்பியவர்கள் பாத்திரங்களில் எடுத்து வைத்தார்கள். குளிப்புக் கடமையான அவர்தாம் கடைசியாக வந்தவர். அவருக்கு ஒரு பாத்திரம் தண்ணீர் கொடுத்து, 'இதைக் கொண்டு போய் உம் மீது ஊற்றிக் கொள்ளும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அந்தப் பெண் தன்னுடைய தண்ணீர் எந்தெந்த வகையிலெல்லாம் பயன்படுத்தப்படுகிறது என்பதைக் கவனித்துக் கொண்டே நின்றாள். அல்லாஹ்வின் மீது ஆணையாக அவளுடைய உள்ளத்தில் நபி(ஸல்) மீது இருந்த வெறுப்பு நீங்கிவிட்டது. அந்த இரண்டு தோல் பைகளிலிருந்து முதலில் தண்ணீரை எடுக்கும்போது இருந்ததை விட அதிகமான தண்ணீர் பிறகு அத்தோல் பையில் இருப்பது போன்று எங்களுக்குத் தெரிந்தது. (தண்ணீர் குறையவில்லை.) 'அந்தப் பெண்ணுக்கு ஏதாவது சேகரித்துக் கொடுங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அவளுக்காகப் பேரீச்சம் பழம், மாவு போன்றவற்றைச் சேகரித்தார்கள். அவளுக்குப் போதுமான உணவு சேர்ந்தது. அதைத் துணியில் வைத்துக் (கட்டி) அவளை ஒட்டகத்தின் மீது அமரச் செய்து உணவுப் பொட்டலமுள்ள துணியை அவளுக்கு முன்னால் வைத்தார்கள். பின்னர், அந்தப் பெண்ணிடம் 'உன்னுடைய தண்ணீரிலிருந்து எதையும் நாங்கள் குறைக்கவில்லை அல்லாஹ்தான் எங்களுக்குத் தண்ணீர் புகட்டினான்' என்பதைத் தெரிந்து கொள் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அந்தப் பெண் தன்னுடைய குடும்பத்தினரிடம் குறிப்பிட்ட நேரத்தை விடத் தாமதமாக வந்தபோது, 'பெண்ணே! நீ பிந்தி வரக்காரணமென்ன?' என்று கேட்டதற்கு 'ஓர் ஆச்சரியமான விஷயம் நிகழ்ந்தது. இரண்டு மனிதர்கள் என்னைச் சந்தித்து மதம் மாறியவர் என்று கூறப்படக் கூடிய அந்த மனிதரிடம் என்னை அழைத்துச் சென்றனர். அவர் இப்படியெல்லாம் செய்தார்' (என நடந்த நிகழ்ச்சிகளைக் கூறினாள்.)
அவள் தன் கையின் நடுவிரலையும், ஆட்காட்டி விரலையும் வானத்தின் பக்கம் உயர்த்தி, 'அல்லாஹ்வின் மீது ஆணையாக இந்த வானத்திற்கும் இந்த பூமிக்கும் இடையிலுள்ள சூனியக்காரர்களில் அவர் மிகச் சிறந்தவராக இருக்க வேண்டும். அல்லது அல்லாஹ்வின் மீது ஆணையாக அவர் இறைத்தூதராக இருக்க வேண்டும்' என்று கூறினாள்.
பின்னர் முஸ்லிம்கள் அந்தப் பெண்ணைச் சுற்றி வாழ்ந்தவர்களை எதிர்த்துப் போராடினார்கள். அப்போது அந்தப் பெண் எந்தக் குடும்பத்தைச் சார்ந்துள்ளாளோ அந்தக் குடும்பத்தை அவர்கள் ஒன்றும் செய்யவில்லை.
ஒரு முறை அந்தப் பெண் தங்களின் கூட்டத்தரிடம், 'இந்த முஸ்லிம்கள் வேண்டுமென்றே (உங்களிடம் போரிடாமல்) உங்களைவிட்டு விடுகிறார்கள் என்றே கருதுகிறேன். எனவே நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள விரும்புகிறீர்களா?' என்று கேட்டபோது அவர்கள் எல்லோரும் அவளுடைய பேச்சுக்குக் கட்டுப்பட்டு இஸ்லாத்தில் இணைந்தார்கள்'' என இம்ரான்(ரலி) அறிவித்தார்.
பகுதி 7
குளிப்பதால் நோயோ, மரணமோ ஏற்படுமென குளிப்புக் கடமையானவர் பயந்தாலோ, குறைவாக இருக்கும் தண்ணீரில் உளுச் செய்தால் தாகத்தால் சிரமப்படுவோம் என்று அஞ்சினாலோ மண்ணில் தயம்மும் செய்யலாம்
குளிரான ஓர் இரவில் அம்ர் இப்னு ஆஸ்(ரலி) அவர்களுக்குக் குளிப்புக் கடமையானபோது அவர்கள் தயம்மும் செய்து 'உங்கள் ஆத்மாக்களை நீங்கள் கொலை செய்தீர்கள். நிச்சயமாக அல்லாஹ் உங்களின் மீது இரக்கமுடையவனாக இருக்கிறான்'' (திருக்குர்ஆன் 04:29) என்ற இறைவசனத்தை ஓதினார்கள். இந்த விஷயத்தை அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் கூறியபோது அவர்கள், அவரை குறையேதும் கூறவில்லை.
345. '(குளிப்புக் கடமையானவருக்குத்) தண்ணீர் கிடைக்காவிட்டாலும் அவர் தொழ வேண்டாமல்லவா?' என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களிடம் அபூ மூஸா(ரலி) கேட்டதற்கு, 'இந்த விஷயத்தில் நாம் சலுகையளித்தால் குளிர் ஏற்பட்டால் கூட மக்கள் தயம்மும் செய்து தொழ ஆரம்பித்து விடுவார்கள்' என்று அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி), அம்மார் இப்னு யாஸிர்(ரலி) உமர்(ரலி) அவர்களிடம் ('தண்ணீர் கிடைக்காவிட்டால் தயம்மும் செய்தால் போதுமானது' என்று) சொன்ன செய்தியை நீர் என்ன செய்வீர்?' என்று அவர் கேட்டார். அதற்கு, '(அம்மார்(ரலி) உமர்(ரலி) அவர்களிடம் அச்செய்தியைக் கூறியபோது) அதை உமர்(ரலி) ஏற்றுக் கொள்ளவில்லை' என்பது உமக்குத் தெரியாதா?' என்று அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) கேட்டார்.
'இதற்காகத்தான் தயம்மும் செய்வதை அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) வெறுத்திருக்கக் கூடுமோ?' என ஷகீக் அவர்களிடம் நான் கேட்டதற்கு, அவர் 'ஆம்! எனப் பதிலளித்தார்கள்'' என அஃமஷ் அறிவித்தார்.
346. 'அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அபூ மூஸ அல் அஷ்அரி(ரலி) ஆகியோருடன் நானும் இருந்தபோது அபூ மூஸா(ரலி) அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களிடம் 'அபூ அப்திர்ரஹ்மானே! குளிப்புக் கடமையானவருக்குத் தண்ணீர் கிடைக்காவிட்டால் அவர் என்ன செய்ய வேண்டும்?' என்று கேட்டதற்கு, 'தண்ணீர் கிடைக்கும் வரை அவர் தொழ வேண்டியதில்லை' என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) கூறியபோது, 'நபி(ஸல்) அவர்கள் அம்மார் இப்னு யாஸிர்(ரலி) அவர்களிடம், 'தண்ணீர் கிடைக்காவிட்டால் தயம்மும் செய்தால் போதுமானது' என்று சொன்ன செய்தியை நீர் என்ன செய்வீர்?' என அபூ மூஸா(ரலி) கேட்டதற்கு, '(அம்மார்(ரலி) உமர்(ரலி) அவர்களிடம் அச்செய்தியைக் கூறிய போது) அதை உமர்(ரலி) ஏற்றுக் கொள்ளவில்லை என்பது உமக்குத் தெரியாதா?' என்று அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) பதில் கூறினார். அப்போது, 'அம்மார்(ரலி) அறிவிப்பதைவிட்டு விடுங்கள். 'தண்ணீர் கிடைக்காவிட்டால் தயம்மும் செய்து கொள்ளுங்கள்' என்ற இந்த இறைவசனத்தை என்ன செய்வீர்கள்?' என்று அபூ மூஸா(ரலி) கேட்டதற்கு, 'இந்த விஷயத்தில் நாம் அவர்களுக்கு அனுமதி வழங்கிவிட்டால் யாருக்காவது தண்ணீர் கொஞ்சம் குளிராகத் தெரிந்தால் அதில் உளுச் செய்வதைவிட்டுவிட்டு தயம்மும் செய்வார்' என்று அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) தாம் சொல்லக்கூடிய இந்த வார்த்தையின் விபரீதத்தைப் புரியாமலே சொல்லிவிட்டார்.
இதற்காகத்தான் தயம்மும் செய்வதை அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) வெறுத்திருக்கக் கூடுமோ? என ஷகீகிடம் நான் கேட்டதற்கு அவர் 'ஆம்! என்றார்'' என அஃமஷ் அறிவித்தார்.
பகுதி 8
ஒரு முறை (கைகளால் மண்ணில்) அடிப்பதே தயம்மும் எனப்படும்
347. 'நான் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) மற்றும் அபூ மூஸல் அஷ்அரி(ரலி) ஆகிய இருவருடன் அமர்ந்திருந்தேன். அபூ மூஸா(ரலி) அப்துல்லாஹ் இப்னுமஸ்வூத்(ரலி) அவர்களிடம் 'குளிப்புக் கடமையானவர் ஒரு மாத காலம் வரை தண்ணீரைப் பெறவில்லையானால் அவர் தயம்மும் செய்து தொழ வேண்டியதில்லையா? 'மாயிதா' என்ற அத்தியாயத்தில் வரும், 'நீங்கள் தண்ணீரைப் பெறவில்லையானால் சுத்தமான மண்ணில் தயம்மும் செய்யுங்கள்' என்ற வசனத்தை என்ன செய்வீர்கள்?' என்று கேட்டதற்கு, 'இந்த விஷயத்தில் பொது அனுமதி கொடுக்கப்பட்டால், தண்ணீர் கொஞ்சம் குளிராக இருக்கும் போதெல்லாம் (மக்கள்) தண்ணீரில் உளுச் செய்வதைவிட்டுவிட்டு மண்ணில் தயம்மும் செய்து விடுவார்கள்' என்று அப்துல்லா இப்னு மஸ்வூத்(ரலி) கூறினார். அப்போது 'இதற்காகத்தான் தயம்மும் செய்வதை நீங்கள் வெறுத்தீர்களா?' என்று நான் கேட்டதற்கு 'ஆம்!' என்று பதிலளித்தபோது, 'என்னை ஒரு வேலைக்காக நபி(ஸல்) அவர்கள் அனுப்பி வைத்தபோது எனக்குக் கிடைக்கவில்லை. எனவே பிராணிகள் மண்ணில் புரளுவது போன்று புரண்டேன். இச்செய்தியை நபி(ஸல்) அவர்களிடம் நான் சொன்னபோது நபி(ஸல்) அவர்கள் தங்களின் இரண்டு கைகளால் பூமியில் ஓர் அடி அடித்து, பின்னர் இரண்டு கைகளையும் தட்டிவிட்டு, தங்களின் வலக்கரத்தால் இடது புறங்கையைத் தடவினார்கள். அல்லது தங்களின் இடக்கரத்தால் வலப்புறங்கையைத் தடவினார்கள். பின்னர் இரண்டு கைகளால் தங்களின் முகத்தைத் தடவிவிட்டு 'இப்படிச் செய்வது உமக்குப் போதுமானதாக இருந்தது' என்று கூறினார்கள்' என்ற செய்தியை 'உமர்(ரலி) அவர்களிடம், அம்மார் சொன்னதை நீங்கள் கேள்விப்படவில்லையா?' என அபூ மூஸா(ரலி) கேட்டதற்கு, 'அம்மார் சொன்னதில் உமர்(ரலி) திருப்திப்படவில்லை' என்பது உமக்குத் தெரியாதா? என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) திரும்பக் கேட்டார்'' என ஷகீக் அறிவித்தார்.
மற்றோர் அறிவிப்பில்: 'நான் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி), அபூ மூஸா(ரலி) ஆகிய இருவருடன் அமர்ந்திருந்தபோது, அபூ மூஸா(ரலி), அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களை நோக்கி 'என்னையும் உங்களையும் நபி(ஸல்) அவர்கள் (ஒரு வேலைக்காக) அனுப்பியபோது எனக்குக் குளிப்புக் கடமையாகி மண்ணில் நான் புரண்டதும், பின்னர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து நடந்த விஷயத்தைச் சொன்னபோது நபி(ஸல்) அவர்கள் தங்களின் முகத்தையும் இரண்டு முன் கைகளையும் ஒரு முறை தடவிவிட்டு 'இப்படி நீர் செய்திருந்தால் அது உமக்குப் போதுமானது' என்று கூறினார்கள்' என உமர்(ரலி) அவர்களிடம் அம்மார்(ரலி) கூறியதை நீர் கேள்விப்பட்டதில்லையா' என அபூ மூஸா(ரலி) கேட்டார்'' என ஷகீக்' வாயிலாக 'யஃலா' அறிவித்தார்.
பகுதி 9
348. 'ஒருவர் ஜமாஅத்துடன் தொழாமல் தனியாக இருப்பத்தைக் கண்ட நபி(ஸல்) அவர்கள், 'நீர் ஏன் ஜமாஅத்துடன் தொழவில்லை?' என்று கேட்டார்கள். அதற்கு அவர், 'இறைத்தூதர் அவர்களே! எனக்குக் குளிப்புக் கடமையாகிவிட்டது. தண்ணீர் கிடைக்கவில்லை' என்று கூறியபோது 'மண்ணில் தயம்மும் செய்யும்! அது உமக்குப் போதுமானது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என இம்ரான் இப்னு ஹுஸைன் அல் குஸாயீ(ரலி) அறிவித்தார்.