அத்தியாயம் 50 நயவஞ்சகத் தன்மைகளும் அதற்குரிய தண்டனைகளும்

ஸஹீஹ் முஸ்லிம்
அத்தியாயம் 50
நயவஞ்சகத் தன்மைகளும் அதற்குரிய தண்டனைகளும்

5353. ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்திற்காகப் புறப்பட்டோம். அப்பயணத்தில் (உணவுப் பற்றாக்குறையால்) மக்களுக்குச் சிரமம் ஏற்பட்டது. அப்போது (நயவஞ்சகர்களின் தலைவர்) அப்துல்லாஹ் பின் உபை பின் சலூல் தம் நண்பர்களிடம், "அல்லாஹ்வின் தூதருடன் இருக்கும் இவர்களுக்கு நீங்கள் செலவு செய்யாதீர்கள். அவர்கள் அல்லாஹ்வின் தூதரிடமிருந்து விலகிச் சென்றுவிடுவார்கள்" என்றும், "நாம் மதீனாவுக்குத் திரும்பிச் சென்றால், (எம்முடைய இனத்தாரான) கண்ணியவான்கள் இழிந்தோ(ராகிய முஹாஜி)ர்களை அங்கிருந்து வெளியேற்றிவிடுவர்" என்றும் சொன்னான்.
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று, அ(வர் சொன்ன)தை அவர்களிடம் தெரிவித்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அப்துல்லாஹ் பின் உபையிடம் ஆளனுப்பினார்கள். (அவர் வந்தவுடன்) அவரிடம் (அது குறித்துக்) கேட்டார்கள். தாம் அப்படிச் செய்யவேயில்லை என்று அவன் சத்தியம் செய்து சாதித்தார்.
அவர், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஸைத் பொய் சொல்லிவிட்டார்" என்று (என்னைப் பற்றிக்) கூறினார். (அவருடன் சேர்ந்து) மக்களில் சிலரும் அப்படிச் சொன்னதால் என் உள்ளத்தில் கடுமை(யான வேதனை) ஏற்பட்டது. அப்போது என் வாய்மையைக் குறிக்கும் வகையில் "(நபியே!) இந்த நயவஞ்சகர்கள் உங்களிடம் வருகின்றபோது..." (63:1) என்று தொடங்கும் வசனத்தை அல்லாஹ் அருளினான்.
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்த நயவஞ்சகர்களுக்காகப் பாவமன்னிப்புக் கோர அவர்களை அழைத்தார்கள். (அவர்கள் அதற்கு இணங்காமல்) தமது தலையைத் திருப்பிக் கொண்டார்கள்.
(மேற்கண்ட வசனத்தின் மூலத்திலுள்ள) "குஷுபும் முசன்னதா" (சாய்த்துவைக்கப்பட்ட மரக்கட்டை) என்பது, அவர்கள் மிகவும் அழகானவர்களாக (வாட்ட சாட்டமானவர்களாக) இருந்ததைக் குறிக்கிறது.
அத்தியாயம் : 50
5354. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (நயவஞ்சகர்களின் தலைவர்) அப்துல்லாஹ் பின் உபையின் (பிரேதம் சவக்குழிக்குள் வைக்கப்பட்ட பிறகு அந்த) சவக்குழிக்கு வந்து, அந்தப் பிரேதத்தை வெளியே எடுத்துத் தமது மடியில் வைத்து, அதன் மீது தமது உமிழ்நீரை உமிழ்ந்து, தமது அங்கியையும் அதற்கு அணிவித்தார்கள். (இதற்குக் காரணம் என்னவோ) அல்லாஹ்வே அறிந்தவன்!
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "நபி (ஸல்) அவர்கள் அப்துல்லாஹ் பின் உபையின் பிரேதம் சவக்குழிக்குள் வைக்கப்பட்ட பிறகு அங்கு வந்தார்கள்..." என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 50
5355. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(நயவஞ்சகர்களின் தலைவர்) அப்துல்லாஹ் பின் உபை பின் சலூல் இறந்தபோது, அவருடைய புதல்வர் அப்துல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, தம் தந்தைக்குப் பிரேத ஆடை (கஃபன்) அணிவிப்பதற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அங்கியைத் தருமாறு கோரினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அவரிடம் தமது அங்கியைக் கொடுத்தார்கள். பிறகு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் தம் தந்தைக்கு இறுதித் தொழுகையை முன்னின்று நடத்தும்படி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டார். அவருக்கு இறுதித் தொழுகை நடத்துவதற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்தார்கள்.
அப்போது உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் எழுந்து, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஆடையைப் பிடித்துக்கொண்டு, "அல்லாஹ்வின் தூதரே! இவருக்கு(ப் பாவமன்னிப்புக் கோரி) பிரார்த்தனை செய்ய வேண்டாமென அல்லாஹ் உங்களுக்குத் தடை விதித்திருக்க, இவருக்கா தொழுவிக்கப்போகிறீர்கள்?" என்று கேட்டார்கள்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(பாவமன்னிப்புக் கோரவும் கோராமலிருக்கவும்) எனக்கு அல்லாஹ் உரிமையளித்துள்ளான். "(நபியே!) நீர் அவர்களுக்காகப் பாவமன்னிப்புக் கோருவீராக; அல்லது கோராமலிருப்பீராக. (இரண்டும் சமம்தான்.) அவர்களுக்காக நீர் எழுபது முறை பாவமன்னிப்புக் கோரினாலும் அவர்களை ஒருபோதும் அல்லாஹ் மன்னிக்கமாட்டான்" (9:80) என்றே அல்லாஹ் கூறுகின்றான். நான் எழுபது முறையைவிட அதிகமாக இவருக்காகப் பாவமன்னிப்புக் கோருவேன்" என்று சொன்னார்கள்.
உமர் (ரலி) அவர்கள், "இவன் நயவஞ்சகனாயிற்றே!" என்று சொன்னார்கள். இருந்தும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவருக்கு (ஜனாஸாத்) தொழுகையை முன்னின்று நடத்தினார்கள். அப்போது வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், "அவர்களில் இறந்துவிட்ட எவருக்காகவும் (நபியே!) நீர் தொழுவிக்க வேண்டாம். அவருடைய மண்ணறை அருகேயும் நிற்க வேண்டாம்" எனும் (9:84ஆவது) வசனத்தை அருளினான்.
அத்தியாயம் : 50
5356. மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "(9:84ஆவது வசனம் அருளப்பெற்ற) பிறகு அவர்களுக்குத் தொழுவிப்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விட்டுவிட்டார்கள்" என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 50
5357. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
இறையில்லம் கஅபா அருகே மூன்றுபேர் ஒன்றுகூடினர். அவர்களில் "குறைஷியர் இருவரும் ஸகஃபீ குலத்தார் ஒருவரும்" அல்லது "ஸகஃபீ குலத்தார் இருவரும் குறைஷி ஒருவரும்" இருந்தனர். அவர்களது உள்ளத்தில் புரிந்துகொள்ளும் ஆற்றல் குறைவாகவே இருந்தது. (ஆனால்,) வயிற்றுச் சதை (தொந்தி) அதிகமாகத்தான் இருந்தது. அவர்களில் ஒருவர், "அல்லாஹ், நாம் சொல்வதைக் கேட்கின்றான் என்று நீங்கள் கருதுகிறீர்களா?" என்று கேட்க, மற்றொருவர், "நாம் உரக்கப் பேசினால் அவன் கேட்பான்; மெதுவாகப் பேசினால் கேட்கமாட்டான்" என்று சொன்னார். இன்னொருவர், "நாம் உரக்கப் பேசும்போது அவன் கேட்கிறான் என்றால், நாம் மெதுவாகப் பேசும் போதும் அவன் நிச்சயம் கேட்கவே செய்வான்" என்று சொன்னார்.
அப்போதுதான் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், "(உலகில் நீங்கள் குற்றங்களைச் செய்தபோது) உங்களின் காதுகளும் கண்களும் தோல்களும் உங்களுக்கெதிராகச் சாட்சியம் அளிக்கும் என்பதை அஞ்சிக்கூட (குற்றங்களிலிருந்து) தவிர்ந்துகொள்பவர்களாக நீங்கள் இருக்கவில்லை" (41:22) எனும் வசனத்தை அருளினான்.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 50
5358. ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் உஹுது(ப் போரு)க்காகப் புறப்பட்டுச் சென்றபோது, அவர்களுடனிருந்தவர்களில் சிலர் (நயவஞ்சகர்கள்) திரும்பி வந்துவிட்டனர். (இவர்கள்மீது என்ன நடவடிக்கை எடுப்பது என்பது தொடர்பாக) நபித்தோழர்கள் இரு பிரிவினராகப் பிரிந்துவிட்டார்கள்.
அவர்களில் சிலர், "அ(வ்வாறு திரும்பிச் சென்ற)வர்களைக் கொன்றுவிடுவோம்" என்று கூறினர். வேறுசிலர், "இல்லை (அவர்களைக் கொல்லவேண்டாம்)" என்று கூறினர். அப்போதுதான் "உங்களுக்கு என்ன நேர்ந்துவிட்டது? நயவஞ்சகர்கள் விஷயத்தில் நீங்கள் இரு பிரிவினர்களாக உள்ளீர்கள்" (4:88) எனும் வசனத்தை அல்லாஹ் அருளினான்.
- மேற்கண்ட ஹதீஸ் ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 50
5359. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் நயவஞ்சகர்களில் சிலர், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அறப்போருக்குப் புறப்பட்டுச் செல்லும்போது, அவர்களுடன் செல்லாமல் ஊரிலேயே தங்கிவிடுவார்கள். (அவ்வாறு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் செல்லாமல் தங்கிவிட்டதைப் பற்றி அவர்கள் பூரிப்பும் அடைந்து கொள்வார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (போரிலிருந்து திரும்பி)வந்தால், அவர்களிடம் (போய்,தாம் கலந்துகொள்ளாமல் போனதற்குச்) சாக்குப்போக்குகளைக் கூறி (பொய்ச்) சத்தியம் செய்வார்கள். தாம் செய்யாத (நற்) செயல்களுக்காகத் தாம் புகழப்பட வேண்டுமென்றும் விரும்புவார்கள்.
அப்போதுதான், "தாம் செய்த (தீய)வை குறித்துப் பூரித்துக்கொண்டும், தாம் செய்யாதவற்றுக்காகப் பாராட்டப்பட வேண்டும் என விரும்பிக்கொண்டும் இருப்போர் வேதனையிலிருந்து தப்பித்தவர்கள் என்று ஒருபோதும் (நபியே!) நீர் எண்ண வேண்டாம்; வதைக்கும் வேதனை தான் அவர்களுக்கு உண்டு" (3:188) எனும் இறைவசனம் அருளப்பெற்றது. - இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 50
5360. ஹுமைத் பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(மதீனா ஆளுநர்) மர்வான் பின் அல்ஹகம் தம் காவலரிடம், "ராஃபிஉ! நீ இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் சென்று, "தாம் செய்தவை குறித்து மகிழ்ச்சியடைகின்ற, தாம் செய்யாத (நற்)செயல்களுக்காக (சாதனைகளுக்காக)ப் புகழப்பட வேண்டுமென்று விரும்புகின்ற ஒவ்வொரு மனிதரும் வேதனை செய்யப்படுவார் என்றிருப்பின், நாம் அனைவருமே நிச்சயமாக வேதனை செய்யப்பட வேண்டிவருமே!" என்று (நான் வினவியதாகக்) கேள்" என்று சொன்னார்.
(அவ்வாறே இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் சென்று ராஃபிஉ கேட்டபோது) "உங்களுக்கு இந்த வசனம் தொடர்பாக என்ன (குழப்பம்) நேர்ந்தது? இந்த வசனம் வேதக்காரர்கள் தொடர்பாகவே அருளப்பெற்றது" என்று கூறிவிட்டு, "வேதம் வழங்கப்பெற்றோரிடம் நீங்கள் மக்களுக்கு அ(ந்த வேதத்)தை நிச்சயமாகத் தெளிவுபடுத்தி விடவேண்டும்; அதை நீங்கள் மறைக்கக் கூடாது என அல்லாஹ் உறுதிமொழி பெற்றதை (நபியே!) எண்ணிப்பார்ப்பீராக" (3:187) எனும் வசனத்தை ஓதினார்கள்.
பிறகு "தாம் செய்த (தீய)வை குறித்துப் பூரித்துக்கொண்டும் தாம் செய்யாதவற்றுக்காகப் பாராட்டப்பட வேண்டும் என விரும்பிக் கொண்டும் இருப்போர் வேதனையிலிருந்து தப்பித்தவர்கள் என்று (நபியே!) ஒருபோதும் நீர் எண்ண வேண்டாம்" (3:188) எனும் வசனத்தையும் ஓதிக்காட்டினார்கள்.
மேலும், "நபி (ஸல்) அவர்கள் (யூதர்களை அழைத்து) அவர்களிடம் ஒரு விஷயம் (தவ்ராத்தில் உள்ளதா என்பது) குறித்துக் கேட்டார்கள். அப்போது யூதர்கள் அதை மறைத்துவிட்டு, (உண்மைக்குப் புறம்பான) வேறொன்றை நபி (ஸல்) அவர்களிடம் தெரிவித்தார்கள். நபி (ஸல்) அவர்கள் கேட்டதற்குச் சரியான தகவலைத் தந்துவிட்டதைப் போன்று காட்டிக்கொண்டும், அதற்காக நபி (ஸல்) அவர்களிடம் பாராட்டை எதிர்பார்ப்பதைப் போன்றும், நபி (ஸல்) அவர்கள் கேட்டதைப் பற்றிச் சொல்லாமல் தாம் மறைத்துவிட்டதைக் குறித்து மகிழ்ச்சியடைந்துகொண்டும் புறப்பட்டுச் சென்றனர்.
(அப்போதுதான் மேற்கண்ட (3:188ஆவது) வசனம் அருளப்பெற்றது)" என்றும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 50
5361. கைஸ் பின் உபாத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அம்மார் பின் யாசிர் (ரலி) அவர்களிடம், "நீங்கள் அலீ (ரலி) அவர்கள் விஷயத்தில் செய்துவிட்ட இந்தச் செயலை நீங்களாக உங்கள் யோசனைப்படி செய்தீர்களா? அல்லது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உங்களிடம் கூறிய ஏதேனும் அறிவுரைப்படி செய்தீர்களா?" என்று கேட்டேன்.
அதற்கு அம்மார் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், மக்கள் அனைவரிடமும் கூறாத ஓர் அறிவுரையை எங்களிடம் மட்டும் கூறவில்லை. மாறாக, நபி (ஸல்) அவர்கள் "என் தோழர்களிடையே பன்னிரண்டு நயவஞ்சகர்கள் இருக்கிறார்கள். அவர்களில் எட்டுப்பேர், ஊசித் துவாரத்திற்குள் ஒட்டகம் நுழையாத வரை சொர்க்கத்திற்குள் நுழையமாட்டார்கள். நரக நெருப்பின் ஒரு தீப்பந்தமே அவர்கள் எட்டுப் பேருக்கும் போதுமானதாகும்" என்று கூறினார்கள் என ஹுதைஃபா (ரலி) அவர்கள் சொன்னார்கள்" என்றார்கள்.
மற்ற நால்வர் குறித்து அறிவிப்பாளர் ஷுஅபா (ரஹ்) அவர்கள் கூறியது என் நினைவில் இல்லை என அறிவிப்பாளர் அஸ்வத் பின் ஆமிர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
அத்தியாயம் : 50
5362. கைஸ் பின் உபாத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அம்மார் பின் யாசிர் (ரலி) அவர்களிடம், "நீங்கள் (அலீ (ரலி) அவர்களுடன் சேர்ந்து) போரிட்டுவருவதைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்? அதை நீங்கள் சுயமான முடிவுப்படி மேற்கொள்கிறீர்களா? ஏனெனில், உங்களின் சுயமுடிவு தவறானதாகவும் இருக்கலாம்; சரியானதாகவும் இருக்கலாம்.அல்லது உங்களிடம் (அவ்வாறு போரிடுமாறு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அறிவுரை கூறினார்களா?" என்று கேட்டோம்.
அதற்கு அம்மார் (ரலி) அவர்கள், "மக்கள் அனைவரிடமும் கூறாத அறிவுரை எதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் கூறவில்லை. (ஆனால்,) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "என் சமுதாயத்தாரிடையே பன்னிரண்டு நயவஞ்சகர்கள் இருக்கிறார்கள்..." என்று மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்று கூறினார்கள்" என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
ஷுஅபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அம்மார் (ரலி) அவர்கள் இதை ஹுதைஃபா (ரலி) அவர்களிடமிருந்து அறிவித்தார்கள் என்றே நான் கருதுகிறேன்" என்று கூறியதாக இடம் பெற்றுள்ளது.
ஃகுன்தர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "என் சமுதாயத்தாரிடையே பன்னிரெண்டு நயவஞ்சகர்கள் இருக்கிறார்கள். ஊசித் துவாரத்திற்குள் ஒட்டகம் நுழையாத வரை அவர்கள் சொர்க்கத்திற்குள் நுழையவுமாட்டார்கள்; அதன் வாடையைக்கூட நுகரவுமாட்டார்கள். நரக நெருப்பின் விளக்கே ("துபைலா") அந்த எட்டுப் பேருக்கும் போதுமானதாகும். அது அவர்களது தோள்களிடையே வெளிப்பட்டு அவர்களது நெஞ்சுகளுக்கு மேலே வந்துவிடும்" என்று கூறியதாக நான் கருதுகிறேன் என்று காணப்படுகிறது.
அத்தியாயம் : 50
5363. அபுத்துஃபைல் (ஆமிர் பின் வாஸிலா-ரலி) அவர்கள் கூறியதாவது:
கணவாய்வாசிகளில் ஒருவருக்கும் ஹுதைஃபா (ரலி) அவர்களுக்கும் இடையே மக்கள் மத்தியில் ஏற்படும் பிரச்சினை ஒன்று ஏற்பட்டது. அப்போது, (அந்த மனிதரிடம்) ஹுதைஃபா (ரலி) அவர்கள், "அல்லாஹ்வை முன்வைத்து உம்மிடம் கேட்கிறேன். அந்தக் கணவாய்வாசிகள் எத்தனை பேர் இருந்தனர்?" என்று கேட்டார்கள். (அந்த மனிதர் மௌனமாக இருக்கவே,) அவரிடம் அங்கிருந்த மக்கள், "அவர் கேட்டதற்குப் பதில் சொல்" என்று கூறினர். அந்த மனிதர், "அவர்கள் பதினான்கு பேர் இருந்தார்கள் என எங்களிடம் தெரிவிக்கப்பட்டது" என்றார்.
(ஹுதைஃபா (ரலி) அவர்கள் கூறினார்கள்:) அவர்களில் நீரும் ஒருவராக இருந்தால், (கணவாயிலிருந்த) மக்களின் எண்ணிக்கை பதினைந்தாக உயரும். நான் அல்லாஹ்வை சாட்சியாக்கிக் கூறுகிறேன்: அவர்களில் பன்னிரெண்டு பேர் இவ்வுலகிலும் சாட்சிகள் நிற்கும் (மறுமை) நாளிலும் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எதிரிகளாவர். மற்ற மூன்று பேரை நபியவர்கள் மன்னித்துவிட்டார்கள்.
(காரணம்) அவர்கள் மூவரும், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பொது அறிவிப்பாளரின் அறிவிப்பை நாங்கள் செவியுறவுமில்லை; அந்த மக்கள் தீட்டியிருந்த திட்டத்தை நாங்கள் அறிந்திருக்கவுமில்லை" என்று கூறி (மன்னிப்புக் கோரி)னர்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கருங்கற்கள் நிறைந்த ("ஹர்ரா"ப்) பகுதியில் இருந்தார்கள். பிறகு (தபூக் நோக்கி) நடந்தார்கள். அப்போது "(நீங்கள் தங்கப்போகுமிடத்திலுள்ள) நீர்நிலையில் தண்ணீர் மிகக் குறைவாகவே இருக்கும். என்னை முந்திக்கொண்டு யாரும் அங்கு செல்ல வேண்டாம்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆனால், அவர்களை முந்திக்கொண்டு சிலர் அங்கு சென்றுவிட்டிருப்பதைக் கண்டார்கள். அன்றைய தினத்தில் அவர்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சபித்தார்கள்.
அத்தியாயம் : 50
5364. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "யார் (குறைஷியரின் குதிரைப்படையை நோட்டமிடுவதற்காக ஹுதைபிய்யா அருகிலுள்ள) "ஸனிய்யத்துல் முரார்" கணவாயில் (முதலில்) ஏறுகிறாரோ அவருக்கு பனூ இஸ்ராயீல் சமுதாயத்துக்கு மன்னிப்பு வழங்கப்பட்டதைப் போன்று மன்னிப்பு வழங்கப்படும்" என்று கூறினார்கள்.
"கஸ்ரஜ்" குலத்தைச் சேர்ந்த எங்களது குதிரைப் படையினரே அதன் மீது முதலில் ஏறினர். பிறகு மற்றவர்கள் ஏறினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "சிவப்பு ஒட்டகத்தில் வரும் மனிதரைத் தவிர மற்ற அனைவரும் பாவமன்னிப்பு அளிக்கப் பட்டுவிட்டனர்" என்று கூறினார்கள்.
உடனே நாங்கள் அந்த மனிதரிடம் சென்று, "நீ வந்து, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உமக்காகப் பாவமன்னிப்புக் கோரச் சொல்" என்று கூறினோம்.
அதற்கு அந்த மனிதர், "அல்லாஹ்வின் மீது சத்தியமாக! உங்கள் தோழர் எனக்குப் பாவமன்னிப்புக் கோருவதைவிட காணாமற்போன எனது ஒட்டகம் எனக்கு (திரும்பக்) கிடைப்பதே எனக்கு மிகவும் விருப்பமானதாகும்" என்று சொன்னார். அப்போது அந்த மனிதர் காணாமற்போன தனது ஒட்டகத்தைத் தேடிக்கொண்டிருந்தார்.
அத்தியாயம் : 50
5365. மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "யார் "ஸனிய்யத்துல் முரார்" அல்லது "ஸனிய்யத்துல் மரார்" கணவாயில் முதலில் ஏறுகிறாரோ..." என்று ஹதீஸ் ஆரம்பமாகி மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளது.
இந்த அறிவிப்பில், "அப்போது கிராமவாசியொருவர் தமது காணாமற்போன ஒட்டகத்தைத் தேடிக்கொண்டு வந்தார்"என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 50
5366. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
எங்களில் பனுந் நஜ்ஜார் குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதர் இருந்தார். அவர் (இஸ்லாத்தைத் தழுவி) "அல்பகரா", "ஆலு இம்ரான்" ஆகிய (குர்ஆன்) அத்தியாயங்களை ஓதி முடித்தார். அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்காக (வேதஅறிவிப்பை) எழுதுபவராக இருந்தார். பிறகு அவர் (தமது பழைய கிறித்தவ மதத்துக்கே) ஓடிப்போய்,வேதக்காரர்களுடன் சேர்ந்துகொண்டார். வேதக்காரர்கள் அவரைத் தூக்கிவைத்துக் கொண்டாடினர். "இவர் முஹம்மதுக்காக (வேத அறிவிப்பை) எழுதிவந்தார்" என்று கூறி, அவரால் பெருமைப்பட்டுக் கொண்டனர்.
இதே நிலையில், (ஒரு நாள்) அவர்களுக்கு மத்தியில் வைத்து அவரது கழுத்தை அல்லாஹ் முறித்துவிட்டான். (அவர் இறந்து விட்டார்.) ஆகவே, அவருக்காகச் சவக்குழி தோண்டி அவரைப் புதைத்துவிட்டனர். காலை நேரமானபோது அவரைப் பூமி (குழிக்கு வெளியில்) தூக்கியெறிந்துவிட்டிருந்தது. பிறகு மீண்டும் அவருக்காகக் குழி தோண்டி அவரைப் புதைத்தனர்.
மறுநாள் காலையிலும் பூமி (குழிக்கு வெளியில்) அவரைத் தூக்கியெறிந்துவிட்டிருந்தது. பிறகு மறுபடியும் அவர்கள் அவருக்காகக் குழி தோண்டி அவரைப் புதைத்தனர். மறுநாள் காலையிலும் பூமி அவரை (குழிக்கு வெளியில்) தூக்கியெறிந்துவிட்டிருந்தது. ஆகவே, அவர்கள் அவரை (புதைக்காமல்) அப்படியே போட்டுவிட்டார்கள்.
அத்தியாயம் : 50
5367. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு பயணத்தை முடித்துவிட்டு வந்து கொண்டிருந்தார்கள். மதீனாவுக்கு அருகில் அவர்கள் வந்தபோது, கடுமையான (சூறாவளிக்) காற்று வீசியது.அது பயணிகளை மண்ணுக்குள் புதைத்துவிடப் பார்த்தது.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இந்தக் காற்று ஒரு நயவஞ்சகனைக் கொல்வதற்காக அனுப்பப்பட்டுள்ளது" என்று கூறினார்கள். மதீனாவுக்குள் வந்தபோது, நயவஞ்சகர்களின் பெருந்தலைவன் ஒருவன் இறந்துவிட்டிருந்தான்.
அத்தியாயம் : 50
5368. சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் காய்ச்சல் கண்டிருந்த ஒரு மனிதரை உடல்நலம் விசாரிப்பதற்காகச் சென்றோம். அப்போது நான் எனது கையை அவர் மீது வைத்தேன். (அவரது உடல் அனலாகத் தகித்தது.) அப்போது நான், "அல்லாஹ்வின் மீதாணையாக! இன்று போல் கடுமையான வெப்பமுள்ள ஒரு மனிதரை நான் கண்டதேயில்லை" என்று சொன்னேன்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "மறுமைநாளில் இவரைவிடக் கடுமையான வெப்பத்திற்கு ஆளாகுவோரை நான் அறிவிக்கட்டுமா? இதோ வாகனத்தில் திரும்பிக்கொண்டிருக்கும் இவ்விரு மனிதர்கள்தான்" என்று தம் தோழர்களிடையேயிருந்த இரு மனிதர்களைப் பற்றிச் சொன்னார்கள்.
அத்தியாயம் : 50
5369. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நயவஞ்சகனின் நிலை இரு கிடாக்களிடையே சுற்றிவரும் பெட்டை ஆட்டின் நிலையைப் போன்றதாகும். ஒருமுறை இதனிடம் செல்கிறது; மறுமுறை அதனிடம் செல்கிறது.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
ஆயினும் அதில், "ஒரு முறை இதற்கு இணங்குகிறது; மறுமுறை அதற்கு இணங்குகிறது" என்று இடம்பெற்றுள்ளது.மறுமை, சொர்க்கம், நரகம் ஆகியவற்றின் நிலை.
அத்தியாயம் : 50
5370. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மறுமை நாளில் உடல் பருத்த கொழுத்த மனிதன் ஒருவன் வருவான். அல்லாஹ்விடம் கொசுவின் இறக்கையளவு எடைகூட அவன் (மதிப்புப்) பெறமாட்டான்.
"மறுமை நாளில் அவர்(களின் செயல்)களுக்கு எந்த எடையையும் நாம் ஏற்படுத்த மாட்டோம்" (18:105) எனும் இறை வசனத்தை ஓதிக்கொள்ளுங்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 50
5371. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
யூதமத அறிஞர் ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "முஹம்மதே!" அல்லது "அபுல் காசிமே!" என்றழைத்து, "அல்லாஹ் மறுமை நாளில் வானங்களை ஒரு விரல்மீதும், பூமிகளை ஒரு விரல்மீதும், மலைகள் மற்றும் மரங்களை ஒரு விரல்மீதும், தண்ணீர் மற்றும் ஈர மண்ணை ஒரு விரல்மீதும், இதர படைப்பினங்கள் அனைத்தையும் ஒரு விரல்மீதும் வைத்துக்கொண்டு அவற்றை அசைத்தவாறே, "நானே அரசன்; நானே அரசன்" என்று சொல்வான்" என்றார்.
அவர் கூறியதைக் கேட்டு வியப்படைந்து அந்த அறிஞரின் கருத்தை உண்மையென ஆமோதிக்கும் வகையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிரித்தார்கள்.
பிறகு "அவர்கள் அல்லாஹ்வை எவ்வாறு மதிக்க வேண்டுமோ, அவ்வாறு மதிக்கவில்லை. மறுமைநாளில் பூமி முழுவதும் அவன் கைப்பிடியில் இருக்கும். வானங்கள் அவனது வலக் கரத்தில் சுருட்டப்பட்டிருக்கும். அவர்கள் இணை வைப்பவற்றிலிருந்து அவன் தூயவன்; உயர்ந்தவன்" (39:67) எனும் வசனத்தை ஓதினார்கள்.
அத்தியாயம் : 50
5372. மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "யூதர்களில் ஓர் அறிஞர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம் பெற்றுள்ளன. அவற்றில் "பிறகு அவற்றை அவன் அசைப்பான்" எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
மேலும், "அந்த அறிஞர் கூறியதைக் கேட்டு வியப்படைந்து, அவரது கருத்தை உண்மையென ஆமோதிக்கும் வகையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் கடைவாய்ப் பற்கள் தெரியச் சிரித்ததை நான் பார்த்தேன்" என்றும், பிறகு "அவர்கள் அல்லாஹ்வை எவ்வாறு மதிக்க வேண்டுமோ அவ்வாறு மதிக்கவில்லை" (39:67) என்று தொடங்கும் வசனத்தை ஓதினார்கள்" என்றும் இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 50
5373. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
வேதக்காரர்களில் ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "அபுல் காசிமே! அல்லாஹ் (மறுமை நாளில்) வானங்களை ஒரு விரல்மீதும் பூமிகளை ஒரு விரல் மீதும் மரங்கள் மற்றும் ஈர மண்ணை ஒரு விரல்மீதும் (இதர) படைப்புகளை ஒரு விரல் மீதும் வைத்துக்கொண்டு, பிறகு "நானே அரசன்; நானே அரசன்" என்று சொல்வான்" என்றார்.
(இதைக் கேட்டு) நபி (ஸல்) அவர்கள் தம் கடைவாய்ப் பற்கள் தெரியச் சிரித்ததை நான் பார்த்தேன். பிறகு "அவர்கள் அல்லாஹ்வை எவ்வாறு மதிக்க வேண்டுமோ அவ்வாறு மதிக்கவில்லை" (39:67) என்று தொடங்கும் வசனத்தை ஓதினார்கள்.
இதை அல்கமா (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 50
5374. மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஐந்து அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "மேலும் மரங்களை ஒரு விரல்மீதும், ஈர மண்ணை ஒரு விரல்மீதும்" என்று காணப்படுகிறது. ஜரீர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "இதரப் படைப்புகளை ஒரு விரல்மீதும்" எனும் குறிப்பு இல்லை. ஆயினும் அவரது அறிவிப்பில் "மலைகளை ஒரு விரல்மீது" என்று இடம்பெற்றுள்ளது. மேலும் ஜரீர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அந்த வேதக்காரர் கூறியதைக் கேட்டு வியப்படைந்து, அவரது கருத்தை உண்மையென ஆமோதிக்கும் வகையில் (சிரித்தார்கள்)" எனக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 50
5375. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வளமும் உயர்வுமிக்க அல்லாஹ், மறுமை நாளில் பூமியைத் தனது கைப்பிடிக்குள் அடக்கிக் கொள்வான்; வானத்தைத் தனது வலக் கரத்தில் சுருட்டிக்கொள்வான்; பிறகு "நானே அரசன்; பூமியின் அரசர்கள் எங்கே?" என்று கேட்பான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 50
5376. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் மறுமைநாளில் வானங்களைச் சுருட்டுவான். பிறகு அவற்றைத் தனது வலக் கரத்தில் எடுத்துக்கொள்வான். பிறகு "நானே அரசன். அடக்குமுறையாளர்கள் எங்கே? ஆணவம் கொண்டவர்கள் எங்கே?" என்று கேட்பான். பிறகு பூமிகளைத் தனது இடக் கரத்தில் சுருட்டிக்கொள்வான். பிறகு "நானே அரசன். அடக்கு முறையாளர்கள் எங்கே? ஆணவம் கொண்டவர்கள் எங்கே?" என்று கேட்பான்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 50
5377. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் தன் வானங்களையும் பூமிகளையும் தன்னுடைய இரு கரங்களிலும் எடுத்துக்கொண்டு, "நானே அல்லாஹ். நானே அரசன்" என்று கூறுவான் என்றார்கள். இதைக் கூறியபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் விரல்களை மடக்கிவிட்டு, பிறகு அவற்றை விரித்தார்கள்.
இதைக் கூறுகையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நின்றுகொண்டிருந்த சொற்பொழிவு மேடை (மிம்பர்) கீழே அசைந்துகொண்டிருந்ததை நான் கண்டேன். எங்கே அது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களோடு கீழேவிழுந்துவிடுமோ! என்று எனக்கு நானே கூறிக்கொண்டேன். (அந்த அளவுக்கு அது அசைந்துகொண்டிருந்தது.)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எவ்வாறு கூறினார்கள் என்பதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் விவரிப்பதை உற்றுக் கவனித்த உபைதுல்லாஹ் பின் மிக்சம் (ரஹ்) அவர்களே இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கி றார்கள்.
அத்தியாயம் : 50
5378. மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள் ளது.
அதில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடை (மிம்பர்)மீது நின்றுகொண்டு, "வல்லமையும் மாண்பும் மிக்கவனும் அடக்கியாள்பவனுமான அல்லாஹ், தன் வானங்களையும் பூமிகளையும் தன்னுடைய இரு கரங்களில் எடுத்துக்கொள்வான் என்று கூறினார்கள்" என ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெறுகின்றன.
அத்தியாயம் : 50
பாடம் : 1 படைப்பின் ஆரம்பமும் (ஆதி மனிதர்) ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்டதும்.
5379. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனது கையைப் பிடித்துக்கொண்டு, "வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் சனிக்கிழமையன்று மண்ணை (பூமியை)ப் படைத்தான். அதில் மலைகளை ஞாயிற்றுக்கிழமையன்று படைத்தான். மரங்களை திங்கட்கிழமை படைத்தான். துன்பத்தை செவ்வாய் கிழமையன்றும் ஒளியை புதன்கிழமையன்றும் படைத்தான். வியாழக்கிழமையன்று உயிரினங்களைப் படைத்து பூமியில் பரவச் செய்தான். (ஆதி மனிதர்) ஆதம் (அலை) அவர்களை வெள்ளிக்கிழமை அஸ்ருக்குப்பின் அந்த நாளின் இறுதி நேரத்தில் அஸ்ருக்கும் இரவுக்குமிடையேயுள்ள நேரத்தில் இறுதியாகப் படைத்தான்" என்று கூறினார்கள்.- இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 50
பாடம் : 2 மறுமை நாளில் இறந்தவர்கள் அனைவரும் எழுப்பப்படுவதும் ஒன்று திரட்டப்படுவதும் அன்று பூமியின் நிலையும்.
5380. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(உமியோ தவிடோ கலக்காத) சுத்தமான மாவினாலான ரொட்டியைப் போன்று, தூய வெண்மையான (சம)தளத்தின் மீது மறுமை நாளில் மனிதர்கள் அனைவரும் ஒன்றுதிரட்டப் படுவார்கள். அந்தப் பூமியில் (மலை, மடு, காடு, வீடு என) எந்த அடையாளமும் யாருக்கும் இருக்காது.
இதை சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 50
5381. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், "அந்நாளில் பூமி, வேறு பூமியாகவும் வானங்களும் (வேறு வானங்களாகவும்) மாற்றப்படும்" (14:48) எனும் இறைவசனத்தை ஓதிக்காட்டி, "அல்லாஹ்வின் தூதரே! அன்றைய நாளில் மக்கள் அனைவரும் எங்கே இருப்பார்கள்?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "அஸ்ஸிராத் (எனும் நரகப் பாலத்தின்) மீது" என்று பதிலளித்தார்கள்.
அத்தியாயம் : 50
பாடம் : 3 சொர்க்கவாசிகளுக்கு அளிக்கப்படும் விருந்து.
5382. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "மறுமை நாளில் இந்தப் பூமி, (அடுப்பில் இருக்கும்) ஒரு ரொட்டியைப் போன்று (சமதளமாக) மாறிவிடும். பயணத்திலுள்ள உங்களில் ஒருவர் தமது ரொட்டியை (ஒரு கையிலிருந்து மறு கைக்கு மாற்றி) தட்டிப்போடுவதைப் போன்று, சர்வ வல்லமை படைத்த (இறை)வன் பூமியைத் தனது கரத்தால் புரட்டிப்போடுவான். அதையே சொர்க்கவாசிகளுக்கு விருந்தாக்குவான்" என்று சொன்னார்கள்.
அப்போது யூதர்களில் ஒருவர் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம்) வந்து, "அபுல்காசிமே! அளவற்ற அருளாளன் தங்களுக்கு வளம் வழங்கட்டும்! மறுமைநாளில் சொர்க்கவாசிகளின் விருந்துணவு என்னவென்று உங்களுக்கு நான் தெரிவிக்கட்டுமா?" என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "சரி" என்றார்கள்.
அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னதைப் போன்றே, "மறுமை நாளில் இந்தப் பூமி ஒரேயொரு ரொட்டியைப் போன்று (சமதளமாக) இருக்கும்" என்று கூறினார்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களைக் கூர்ந்து பார்த்துவிட்டு, தம் கடைவாய்ப் பற்கள் தெரியச் சிரித்தார்கள்.
பிறகு "(அபுல்காசிமே!) உங்களுக்குச் சொர்க்கவாசிகளின் குழம்பு எது எனத் தெரிவிக்கட்டுமா?" என்று அந்த யூதர் கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "சரி" என்றார்கள்.
அவர், "அவர்களின் குழம்பு "பாலாம் மற்றும் நூன்" என்றார். மக்கள் "இது என்ன?" என்று கேட்டார்கள். அந்த யூதர், ("அவை) காளை மாடும் மீனும் ஆகும். அவ்விரண்டின் ஈரல்களுடன் ஒட்டிக்கொண்டிருக்கும் தனித் துண்டை (மட்டுமே சொர்க்கவாசிகளில்) எழுபதாயிரம் பேர் புசிப்பார்கள்" என்று கூறினார்.
அத்தியாயம் : 50
5383. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யூதர்களில் (முக்கியப் பிரமுகர்கள்) பத்துப் பேர் என்னைப் பின்பற்றியிருப்பார்களாயின், பூமியின் மீதுள்ள அனைத்து யூதர்களும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டிருப்பார்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 50
பாடம் : 4 நபி (ஸல்) அவர்களிடம் யூதர்கள் உயிரைப் பற்றிக் கேள்வி கேட்டதும், "(நபியே!) உயிரைப் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள்" (17:85) எனும் வசனமும்.
5384. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு வேளாண் பூமியில் (பேரீச்சந்தோப்பில்) சென்று கொண்டிருந்தேன். அவர்கள் பேரீச்ச மட்டை ஒன்றை (கையில்) ஊன்றியிருந்தார்கள். அப்போது யூதர்கள் சிலரைக் கடந்து சென்றார்கள்.
அவர்களில் ஒருவர் இன்னொருவரிடம் (நபியவர்களைச் சுட்டிக்காட்டி), "இவரிடம் உயிரைப் பற்றிக் கேளுங்கள்" என்றார். மற்றவர்கள், "உங்களுக்கு அதற்கான தேவை என்ன ஏற்பட்டது? நீங்கள் விரும்பாத ஒன்றை அவர் உங்களிடம் சொல்லிவிடக் கூடாது (எனவே, அவரிடம் நீங்கள் கேட்க வேண்டாம்)" என்றார்கள். பின்னர் அவர்கள், "(சரி) அவரிடம் கேளுங்கள்" என்றனர்.
உடனே அவர்களில் ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் எழுந்துவந்து, அவர்களிடம் உயிரைப் பற்றிக் கேட்டார். நபி (ஸல்) அவர்கள் மௌனமாக இருந்தார்கள். அவர்களுக்கு எந்தப் பதிலும் அளிக்கவில்லை. அவர்களுக்கு வேத அறிவிப்பு (வஹீ) அருளப்படுகின்றது என நான் அறிந்து கொண்டேன். ஆகவே, நான் அதே இடத்தில் நின்றுகொண்டேன்.
வேத அறிவிப்பு (வஹீ) இறங்கியபோது, அவர்கள் "(நபியே!) உயிரைப் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள். "உயிர் என்பது என் இறைவனின் கட்டளைப்படி உள்ளது. நீங்கள் குறைவாகவே கல்வி கொடுக்கப்பட்டுள்ளீர்கள்" என்று கூறுவீராக" (17:85) எனும் இறை வசனத்தைக் கூறினார்கள்.
அத்தியாயம் : 50
5385. மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "நான் நபி (ஸல்) அவர்களுடன் மதீனாவில் ஒரு வேளாண் பூமியில் சென்று கொண்டிருந்தேன்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அவற்றில் அலீ பின் கஷ்ரம் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், ("நீங்கள் கொடுக்கப் பட்டுள்ளீர்கள்" என்பதற்குப் பதிலாக) "அவர்கள் கொடுக்கப்பட்டுள்ளார்கள்" என்று இடம் பெற்றுள்ளதாக ஈசா பின் யூனுஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாகக் காணப்படுகிறது. வகீஉ (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "நீங்கள் கொடுக்கப்பட்டுள்ளீர்கள்" என்றே இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 50
5386. மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "நபி (ஸல்) அவர்கள் ஒரு பேரீச்சந்தோட்டத்தில் பேரீச்ச மட்டை ஒன்றை (கையில்) ஊன்றியபடி இருந்தார்கள்..." என்று ஹதீஸ் ஆரம்பமாகி மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளது. இந்த அறிவிப்பிலும் "நீங்கள் கொடுக்கப்பட்டுள்ளீர்கள்" என்றே காணப்படுகிறது.
அத்தியாயம் : 50
5387. கப்பாப் பின் அல்அரத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(இணைவைப்பாளர்) ஆஸ் பின் வாயில் என்பவர் எனக்குக் கடன் தர வேண்டியிருந்தது. அதைத் தரும்படி கேட்டு அவரிடம் நான் சென்றேன். அவர், "நீ முஹம்மதை நிராகரிக்காத வரை நான் (உனது கடனை) உனக்குத் தரமாட்டேன்" என்று சொன்னார்.
நான், "அல்லாஹ் உன்னை மரணிக்கச் செய்து, பிறகு நீ (மறுமையில் உயிருடன்) எழுப்பப்படும்வரை நான் முஹம்மத் (ஸல்) அவர்களை நிராகரிக்கமாட்டேன்" என்று கூறினேன். அவர், "நான் இறந்து மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பப்படுவேனா? அவ்வாறாயின், நான் (மறுமையில்) பொருட் செல்வத்தையும் மக்கட் செல்வத்தையும் திரும்பப் பெறும்போது நான் உனது கடனைச் செலுத்துவேன்" என்று (கிண்டலாகச்) சொன்னார்.
அப்போதுதான், "நம் வசனங்களை மறுத்தவனைக் கண்டீரா? எனக்குச் செல்வமும் சந்ததியும் வழங்கப்படும் என்று கூறுகிறான். மறைவானவற்றை இவன் கண்டுபிடித்து விட்டானா? அல்லது அளவற்ற அருளாளனிடம் ஏதேனும் உறுதிமொழியைப் பெற்றானா? அவ்வாறு ஏதுமில்லை. அவன் சொல்வதை நாம் பதிவு செய்வோம். அவனுக்கு வேதனையை ஒரேடியாக நீட்டுவோம். அவன் எதைப் பற்றிப் பேசினானோ அதற்கு (அவனுடைய செல்வங்களுக்கும் சந்ததிகளுக்கும்) நாமே வாரிசாகிவிடுவோம். தன்னந்தனியாகவே நம்மிடம் அவன் வருவான்" (19:77-80) எனும் இந்த வசனங்கள் அருளப்பெற்றன.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 50
5388. மேற்கண்ட ஹதீஸ் கப்பாப் பின் அல்அரத் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் ஜரீர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "நான் அறியாமைக் காலத்தில் கொல்லனாக வேலை பார்த்துவந்தேன். ஆஸ் பின் வாயில் என்பாருக்கு ஒரு வேலையைச் செய்து கொடுத்துவிட்டு அதற்குரிய கூலியைக் கேட்பதற்காக அவரிடம் சென்றேன்" என்று கப்பாப் (ரலி) அவர்கள் கூறியதாக ஹதீஸ் ஆரம்பமாகிறது.
அத்தியாயம் : 50
பாடம் : 5 "(நபியே!) நீர் அவர்களுடன் இருக்கும்போது அவர்களை அல்லாஹ் தண்டிப்பவனாக இல்லை" (8:33) எனும் வசனம்.
5389. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(குறைஷி இணைவைப்பாளர்களின் தலைவனாயிருந்த) அபூஜஹ்ல், "அல்லாஹ்வே! இது (குர்ஆன்) உன்னிடமிருந்து வந்த உண்மையாக இருந்தால், எங்கள்மீது வானத்திலிருந்து கல் மழையைப் பொழியச்செய். அல்லது வதைக்கும் வேதனையை எங்களுக்குக் கொண்டுவா" என்று சொன்னான்.
அப்போது "(நபியே!) நீர் அவர்களுடன் இருக்கும்போது அவர்களை அல்லாஹ் தண்டிப்பவனாக இல்லை. அவர்கள் பாவமன்னிப்புத் தேடிக்கொண்டிருக்கும்போதும் அவர்களை அல்லாஹ் தண்டிப்பவனாக இல்லை. மஸ்ஜிதுல் ஹராமுக்கு அவர்கள் நிர்வாகிகளாக (தகுதி) இல்லாத நிலையிலும், (மக்களை) அவர்கள் தடுத்துக்கொண்டிருக்கும் போது, அவர்களை ஏன் அல்லாஹ் தண்டிக்கக்கூடாது?" (8:33,34) என்று தொடங்கும் வசனங்கள் முழுமையாக அருளப்பெற்றன.
அத்தியாயம் : 50
பாடம் : 6 "தன்னைத் தன்னிறைவுள்ளவன் எனக் கருதியதால் மனிதன் எல்லை மீறுகிறான்" (96:6,7) எனும் வசனங்கள்.
5390. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(மக்காவில் ஒரு முறை) அபூஜஹ்ல், "உங்களிடையே முஹம்மத் (இறைவனை வணங்குவதற்காக) மண்ணில் தமது முகத்தை வைக்கிறாரா?" என்று கேட்டான். அப்போது "ஆம்" என்று சொல்லப்பட்டது. அவன், "லாத் மற்றும் உஸ்ஸாவின் மீதாணையாக! அவ்வாறு அவர் செய்துகொண்டிருப்பதை நான் கண்டால், அவரது பிடரியின் மீது நிச்சயமாக நான் மிதிப்பேன்; அல்லது அவரது முகத்தை மண்ணுக்குள் புதைப்பேன்" என்று சொன்னான்.
அவ்வாறே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுதுகொண்டிருந்தபோது, அவர்களது பிடரியின் மீது மிதிப்பதற்காக அவர்களை நோக்கி வந்தான். அப்போது அவன் தன் கைகளால் எதிலிருந்தோ தப்பிவருவதைப் போன்று சைகை செய்தவாறு வந்தவழியே பின்வாங்கி ஓடினான். இதைக் கண்ட மக்கள் திடுக்குற்றனர். அவனிடம், "உனக்கு என்ன நேர்ந்தது?" என்று கேட்கப்பட்டது.
அதற்கு அவன், "எனக்கும் அவருக்குமிடையில் நெருப்பாலான அகழ் ஒன்றையும் பீதியையும் இறக்கைக(ள் கொண்ட வானவர்)களையும் கண்டேன்" என்று சொன்னான்.
(இதைப் பற்றிக் கூறுகையில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவன் மட்டும் என்னை நெருங்கியிருந்தால் அவனுடைய உறுப்புகளை ஒவ்வொன்றாக வானவர்கள் பிய்த்தெடுத்திருப்பார்கள்" என்று சொன்னார்கள்.
ஆகவே வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், "அவ்வாறில்லை! தன்னைத் தன்னிறைவு பெற்றவன் எனக் கருதியதால் மனிதன் எல்லை மீறுகிறான். உம்முடைய இறைவனிடமே திரும்பிச் செல்ல வேண்டியுள்ளது. தொழும் அடியாரைத் தடுப்பவனை நீர் பார்க்க வில்லையா? அவர் நல்வழியில் இருப்பதையோ, அல்லது இறையச்சத்தை ஏவுவதையோ அவன் (அபூஜஹ்ல்) பொய்யெனக் கருதி அலட்சியம் செய்வதை நீர் கவனித்தீரா? அல்லாஹ் பார்க்கின்றான் என்பதை அவன் அறியவில்லையா?
அவ்வாறில்லை. அவன் விலகிக்கொள்ளவில்லையானால் முன்நெற்றியைப் பிடிப்போம். அது குற்றமிழைத்துப் பொய் கூறிய (மனிதனின்) முன்நெற்றி. அவன் தன் சபையோரை அழைத்துப் பார்க்கட்டும்! நாம் நரகின் காவலர்களை அழைப்போம். எனவே, அவனுக்குக் கட்டுப்படாதீர்" (96:6-19) எனும் வசனங்களை அருளினான்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் உபைதுல்லாஹ் பின் முஆத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அவனுக்கு அவர் எதைக் கட்டளையிட்டாரோ அதை அவன் பொய்யெனக் கருதி அலட்சியம் செய்வதை நீர் கவனித்தீரா?" என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது. முஹம்மத் பின் அப்தில் அஃலா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அவன் தன் சபையோரை அழைக்கட்டும்" என்பதற்கு, "அவன் தன் சமுதாயத்தாரை அழைக்கட்டும்" என்று பொருள் எனக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 50
பாடம் : 7 புகை.
5391. மஸ்ரூக் பின் அல்அஜ்தஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் (ஒரு முறை) அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் அமர்ந்திருந்தோம். அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் எங்களிடையே சாய்ந்து படுத்திருந்தார்கள். அப்போது அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, "அபூஅப்திர் ரஹ்மானே! (கூஃபாவின்) "கிந்தா" தலைவாயிலருகே பேச்சாளர் ஒருவர் பேசிக்கொண்டிருக்கிறார். அவர் "புகை" எனும் அடையாளம் (இனிமேல்தான்) நிகழும். அது (மறுமை நெருங்கும்போது வந்து) இறை மறுப்பாளர்களின் நாசியைப் பற்றிக்கொள்ளும். ஆனால், அது இறைநம்பிக்கையாளர்களுக்கு ஜலதோஷம் போன்றதையே ஏற்படுத்தும் என்று கூறுகிறார்" என்றார்.
உடனே அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கடும் கோபத்தோடு எழுந்து அமர்ந்து, பின்வருமாறு கூறினார்கள்: மக்களே! அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள். உங்களில் ஒன்றைப் பற்றி அறிந்தவர் அதைப் பற்றிப் பேசட்டும். அறியாதவர், "அல்லாஹ்வே நன்கறிந்தவன்" என்று கூறட்டும். ஏனெனில், தாம் அறியாததைப் பற்றி "அல்லாஹ்வே நன்கறிந்தவன்" என்று கூறுபவரே உங்களில் அறிஞர் ஆவார். அல்லாஹ் தன் தூதரிடம், "இதற்காக உங்களிடம் நான் எந்தக் கூலியும் கேட்கவில்லை. நான் சுயமாக உருவாக்கிக் கூறுபவன் அல்லன் என்று (நபியே!) நீர் கூறுவீராக" (38:86) எனக் கூறியுள்ளான்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (இணைவைக்கும்) மக்கள் புறக்கணிப்பதைக் கண்டபோது, "இறைவா! யூசுஃப் (அலை) அவர்களது காலத்து ஏழு பஞ்சம் நிறைந்த ஆண்டுகளைப் போன்று இவர்களுக்கும் ஏழு (பஞ்ச) ஆண்டுகளைக் கொடுப்பாயாக!" என்று பிரார்த்தித்தார்கள்.
உடனே அவர்களைப் பஞ்சம் வாட்டியது. அனைத்தையும் அது அழித்துவிட்டது. எந்த அளவுக்கென்றால், (பசியால்) அவர்கள் தோல்களையும் செத்தவற்றையும் உண்டனர். அவர்களில் ஒருவர் (பசி மயக்கத்தால் கண் பஞ்சடைந்து) வானத்தைப் பார்க்கும்போது, (தமக்கும் வானத்துக்கும் இடையே) புகை போன்ற ஒன்றையே கண்டார்.
இந்நிலையில் (இணைவைப்பாளர்களின் தலைவராயிருந்த) அபூசுஃப்யான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "முஹம்மதே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுமாறும் உறவுகளைப் பேணி வாழுமாறும் கட்டளையிடுவதற்காகவே நீர் வந்துள்ளீர். ஆனால், உம்முடைய சமூகத்தாரோ (பஞ்சத்தால்) அழிந்துவிட்டனர். ஆகவே, அவர்களுக்காக நீர் பிரார்த்திப்பீராக!" என்று கூறினார்.
(அப்போதுதான்) வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், "வானம் தெளிவான புகையைக் கொண்டுவரும் நாளை எதிர்பார்ப்பீராக! அது மக்களைச் சூழ்ந்துகொள்ளும். இதுவே வதைக்கும் வேதனையாகும்" என்று தொடங்கி, "வேதனையைச் சிறிது நீக்குவோம். நீங்கள் (பழைய நிலைக்குத்) திரும்புவீர்கள்" என்பதுவரையுள்ள (44:10-15)வசனங்களை அருளினான்.
(இது இவ்வுலகில் பஞ்சத்தால் கண்ணை மறைத்த புகை மூட்டத்தையே குறிக்கிறது.) மறுமை நாளின் வேதனை(யாக இருந்தால், அது) சிறிதேனும் அகற்றப்படுமா?
அடுத்து "மிகப் பலமாக அவர்களை நாம் பிடிக்கும் நாளில் (அவர்களைத்) தண்டிப்போம்" (44:16) என்றும் அல்லாஹ் கூறுகின்றான்.
இந்தப் பிடி பத்ருப்போர் நாளில் நடந்தது. புகை, கடுமையான பிடி, வேதனை, ரோம (பைஸாந்திய)ர்கள் (தோற்கடிக்கப்பட்டுப் பிறகு வென்றது) ஆகிய அடையாளங்கள் நடந்துமுடிந்து விட்டன.
அத்தியாயம் : 50
5392. மஸ்ரூக் பின் அல்அஜ்தஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் வந்து, "(கூஃபாவின் இந்தப்) பள்ளிவாசலில் ஒரு மனிதர் குர்ஆனுக்குச் சுயவிளக்கம் கொடுத்துக்கொண்டிருந்த நிலையில் அவரிடமிருந்து நான் வந்துள்ளேன். அவர், "வானம் தெளிவான புகையைக் கொண்டுவரும் நாளை எதிர்பார்ப்பீராக" (44:10) எனும் இந்த வசனத்துக்கு, "மறுமை நாள் நெருங்கும்போது மக்களிடம் ஒரு புகை வந்து அவர்களது நாசிகளைப் பற்றிக்கொள்ளும். அதனால் அவர்களுக்கு ஜலதோஷம் போன்று ஏற்படும்" என விளக்கமளிக்கிறார்" என்று சொன்னார். அப்போது அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்:
ஒன்றைப் பற்றி அறிந்தவர் அது குறித்துப் பேசட்டும். அறியாதவர், "அல்லாஹ்வே நன்கறிந்தவன்" என்று சொல்லட்டும். ஏனெனில், தாம் அறியாத ஒன்றைப் பற்றி (தம்மிடம் கேட்கப்படும்போது) ஒருவர் "அல்லாஹ்வே நன்கறிந்தவன்" என்று கூறுவது அந்த மனிதரின் அறிவின்பாற்பட்டதாகும்.
இது (புகைச் சம்பவம்), எப்போது நடந்ததெனில், குறைஷியர் நபி (ஸல்) அவர்களுக்கு மாறு செய்தபோது, நபி (ஸல்) அவர்கள் "யூசுஃப் (அலை) அவர்களது காலத்தில் ஏற்பட்ட ஏழு (பஞ்சம் நிறைந்த) ஆண்டுகளைப் போன்று இவர்களுக்குப் பஞ்சத்தைக் கொடுப்பாயாக!" என்று அவர்களுக்கெதிராகப் பிரார்த்தித்தார்கள்.
அதையடுத்து அவர்களுக்குப் பஞ்சமும் துன்பமும் ஏற்பட்டது. எந்த அளவுக்கென்றால், அவர்களில் ஒருவர் (பசி மயக்கத்தில்) வானத்தைப் பார்க்கும்போது தமக்கும் வானத்திற்கும் இடையே புகை போன்ற ஒன்றையே துன்பத்தால் காணலானார். அவர்கள் எலும்புகளைச் சாப்பிடும் நிலைக்கு ஆளாயினர். அப்போது நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, "அல்லாஹ்வின் தூதரே!"முளர்" குலத்தாருக்காகப் பாவமன்னிப்பு வேண்டிப் பிரார்த்தியுங்கள். அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்" என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், "(இறை மறுப்பாளர்களான) முளர் குலத்தாருக்கா? நீர் துணிவுமிக்கவர்தான்" என்று கூறிவிட்டு, அவர்களுக்காக அல்லாஹ்விடம் (மழை வேண்டிப்) பிரார்த்தித்தார்கள்.
அப்போதுதான் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், "வேதனையைச் (சற்று) நாம் நீக்குவோம். நீங்கள் (பழைய நிலைக்குத்) திரும்புவீர்கள்" (44:15) எனும் வசனத்தை அருளினான்.
பிறகு மழை பொழிந்து (பஞ்சம் விலகி) செழிப்பு ஏற்பட்டபோது, முந்தைய (இணை வைக்கும்) நிலைக்கே அவர்கள் திரும்பிச்சென்றனர். அப்போதுதான் அல்லாஹ், "வானம் தெளிவான புகையைக் கொண்டு வரும் நாளை எதிர்பார்ப்பீராக! அது மக்களைச் சூழ்ந்துகொள்ளும். இதுவே வதைக்கும் வேதனையாகும்" (44:10-12) எனும் வசனங்களை அருளினான்.
"மிகப் பலமாக அவர்களை நாம் பிடிக்கும் நாளில் அவர்களைத் தண்டிப்போம்" (44:16) எனும் வசனம், பத்ருப்போர் நாளைக் குறிக்கும்.
இந்த ஹதீஸ் ஆறு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 50
5393. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(மறுமை நாளின் அடையாளங்களில்) ஐந்து அடையாளங்கள் (வந்து) சென்றுவிட்டன. ஒன்று, புகை. இரண்டாவது,இறைவனின் தண்டனை. மூன்றாவது, ரோமர்கள் (தோல்வியடைந்து, மீண்டும் அவர்கள் வெற்றிபெற்றது). நான்காவது,இறைவனின் கடுமையான பிடி. ஐந்தாவது, சந்திரன் பிளப்பது.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 50
5394. உபை பின் கஅப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
"(மறுமையின் பெரிய வேதனை அல்லாமல் (இம்மையிலும்) சிறிய வேதனையை அவர்களுக்குச் சுவைக்கச் செய்கிறோம்" (32:21) எனும் இறைவசனத்திலுள்ள சிறிய வேதனை என்பது, இவ்வுலகில் நிகழ்ந்த சோதனைகள்,ரோமர்கள் (தோற்கடிக்கப்பட்டு மீண்டும் அவர்கள் வெற்றி பெற்றது), இறைவனின் கடுமையான பிடி, அல்லது புகை ஆகியவையாகும்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
இறைவனின் கடுமையான பிடி, அல்லது புகை என அறிவிப்பாளர் ஷுஅபா (ரஹ்) அவர்களே ஐயப்பாட்டுடன் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 50
பாடம் : 8 சந்திரன் (இரண்டாகப்) பிளந்த சம்பவம்.
5395. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் சந்திரன் இரண்டு துண்டுகளாகப் பிளந்தது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(நான் இறைவனின் தூதர் என்பதற்கு) நீங்கள் சாட்சிகளாக இருங்கள்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 50
5396. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) நாங்கள் (மக்காவிலுள்ள) "மினா" எனுமிடத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது சந்திரன் இரண்டு துண்டுகளாகப் பிளந்தது. (பிளவுண்ட சந்திரனின்) ஒரு துண்டு (ஹிரா) மலைக்கு அப்பா(ல் மேற்பகுதியி)லும் மற்றொரு துண்டு மலைக்குக் கீழேயும் சென்றது.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம், "(நான் இறைவனின் தூதர் என்பதற்கு) நீங்கள் சாட்சிகளாக இருங்கள்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 50
5397. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் சந்திரன் இரண்டு துண்டுகளாகப் பிளந்தது. அந்த (ஹிரா) மலை,சந்திரனின் ஒரு துண்டை மறைத்தது. மற்றொரு துண்டு, மலைக்கு மேலே இருந்தது.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இறைவா! நீயே சாட்சியாக இரு" என்று சொன்னார்கள்.
- இப்னு உமர் (ரலி) அவர்கள் வாயிலாகவும் மேற்கண்ட ஹதீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர் களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
ஆயினும் இப்னு அதீ (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "நீங்கள் சாட்சிகளாக இருங்கள்; நீங்கள் சாட்சிகளாக இருங்கள்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இரண்டு முறை) கூறியதாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 50
5398. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மக்காவாசிகள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஓர் அற்புதச் சான்றைக் காட்டும்படி கேட்டார்கள். ஆகவே,சந்திரன் இரண்டு துண்டுகளாகப் பிளப்பதை (தாம் இறைவனின் தூதர் என்பதற்குச் சான்றாக) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காட்டினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 50
5399. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
சந்திரன் இரண்டு துண்டுகளாகப் பிளந்தது.
இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அபூதாவூத் அத்தயாலிசீ (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் சந்திரன் பிளந்தது" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 50
5400. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் சந்திரன் பிளந்தது.
அத்தியாயம் : 50
பாடம் : 9 புண்படுத்தப்பட்டும்கூட (தண்டிக்காமல்) பொறுமைகாப்பவர் அல்லாஹ்வைவிட வேறு யாருமில்லை.
5401. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மனவேதனைக்குள்ளாக்கும் செய்தியைக் கேட்டும் (உடனே தண்டித்துவிடாமல்) மிகவும் பொறுமை காப்பவர் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்வைவிட வேறு யாருமில்லை. (மனிதர்களால்) அவனுக்கு இணை கற்பிக்கப்படுகிறது; அவனுக்குக் குழந்தை இருப்பதாகப் பேசப்படுகிறது. அதன் பிறகும் அவர்களுக்கு உடல் நலத்தையும் உணவு வளத்தையும் அவன் வழங்கிக்கொண்டிருக்கின்றான்.
இதை அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "அவனுக்குக் குழந்தை இருப்பதாகப் பேசப்படுகிறது" எனும் குறிப்பு இடம்பெற வில்லை.
அத்தியாயம் : 50
5402. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மனவேதனைக்குள்ளாக்கும் செய்தியைக் கேட்டும் (உடனே தண்டித்துவிடாமல்) மிகவும் பொறுமைகாப்பவர் உயர்ந்தோன் அல்லாஹ்வைவிட வேறு யாருமில்லை. மனிதர்கள் (சிலர்) அவனுக்கு இணையை ஏற்படுத்துகின்றனர்;அவனுக்குக் குழந்தை இருப்பதாகக் கூறுகின்றனர். அவ்வாறிருந்தும், அவர்களுக்கு உணவு வளத்தையும் உடல்நலத்தையும் (வேறு பல கொடைகளையும்) அவன் வழங்கிக் கொண்டிருக்கின்றான்.
இதை அபூமூசா அப்துல்லாஹ் பின் கைஸ் அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 50
பாடம் : 10 பூமி நிறையப் பொன்னை ஈடாகக் கொடுத்தேனும் தண்டனையிலிருந்து விடுதலை பெற விரும்புகிறாயா என இறைமறுப்பாளர்களிடம் கேட்கப்படும்.
5403. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(மறுமை நாளில்) நரகவாசிகளிலேயே மிகக் குறைவான வேதனை அளிக்கப்படுபவரிடம், "பூமியும் அதிலிருப்பவையும் உனக்கே சொந்தம் என்றிருந்தால், நீ அவற்றை ஈடாகத் தர(வும் அதன் மூலம் இந்த வேதனையிலிருந்து விடுதலை பெறவும்) முன்வருவாய் அல்லவா?" என்று வளமும் உயர்வும் உள்ள அல்லாஹ் கேட்பான். அதற்கு அவர், "ஆம்" என்று பதிலளிப்பார்.
அப்போது அல்லாஹ், "நீ (ஆதி மனிதர்) ஆதமின் முதுகுத்தண்டில் (அணுவாக) இருந்த போது, இதைவிட எளிதான ஒன்றையே (அதாவது) எனக்கு எதையும் இணை கற்பிக்காதே! உன்னை நான் நரகத்தில் புகுத்தமாட்டேன் என்பதையே) உன்னிடமிருந்து நான் எதிர்பார்த்தேன். ஆனால், (பூமிக்கு உன்னை அனுப்பியபோது) எனக்கு இணை கற்பிப்பதைத் தவிர வேறெதற்கும் நீ ஒப்புக்கொள்ளவில்லையே!" என்று கூறுவான்.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "உன்னை நான் நரகத்தில் புகுத்த மாட்டேன்" எனும் குறிப்பு இல்லை.
அத்தியாயம் : 50
5404. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மறுமை நாளில் இறைமறுப்பாளனிடம், "உனக்குப் பூமி நிறையத் தங்கம் சொந்தமாக இருந்தால், நீ அதை ஈடாகத் தர(வும் அதன் மூலம் இந்த வேதனையிலிருந்து விடுதலை பெற)வும் முன்வருவாயல்லவா?" என்று கேட்கப்படும். அதற்கு அவன், "ஆம்" என்று பதிலளிப்பான். அப்போது இதைவிடச் சுலபமான ஒன்றே (அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்காமலிருப்பதே) உன்னிடம் கோரப்பட்டிருந்தது. (ஆனால், அதை நீ ஏற்கவில்லை)" என்று கூறப்படும்.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 50
5405. மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், அப்போது அந்த இறைமறுப்பாளனிடம், "நீ பொய் சொல்கிறாய். இதைவிடச் சுலபமான ஒன்றே உன்னிடம் கோரப்பட்டிருந்தது என்று கூறப்படும்" என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 50
பாடம் : 11 (மறுமை நாளில்) இறைமறுப்பாளன் தனது முகத்தால் (நடத்தி) இழுத்துச் செல்லப்படுவான்.
5406. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர், "அல்லாஹ்வின் தூதரே! (25:34ஆவது இறைவசனத்தின்படி) மறுமை நாளில் இறைமறுப்பாளர் தமது முகத்தால் (நடத்தி) இழுத்துச் செல்லப்படுவது எப்படி?" என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இம்மையில் அவனை இரு கால்களால் நடக்கச் செய்த (இறை)வனுக்கு, மறுமை நாளில் அவனை அவனது முகத்தால் நடக்கச் செய்ய முடியாதா?" என்று (திருப்பிக்) கேட்டார்கள்.
(இதை அறிவித்த) கத்தாதா பின் திஆமா (ரஹ்) அவர்கள், "ஆம் (முடியும்), எங்கள் இறைவனின் வல்லமை மீதாணையாக!" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 50
பாடம் : 12 இவ்வுலகில் சுகபோகமாக வாழ்ந்தவர் நரகத்தில் சிறிது நேரம் அமிழ்த்தப் படுவதும், இவ்வுலகில் கடுமையான சோதனைகளை அனுபவித்தவர் சொர்க்கத்தைச் சிறிது நேரம் அனுபவிப்பதும்.
5407. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இவ்வுலகில் செல்வச் செழிப்புடன் வாழ்ந்த நரகவாசிகளில் ஒருவர் மறுமை நாளில் கொண்டுவரப்பட்டு, நரகத்தில் ஒருமுறை அழுத்தி எடுக்கப்படுவார். பிறகு அவரிடம், "ஆதமின் மகனே (மனிதா)! (உலக வாழ்வில்) எப்போதேனும் நல்லதைப் பார்த்தாயா? எப்போதேனும் அருட்கொடை ஏதும் உனக்குக் கிடைத்ததா?" என்று கேட்கப்படும். அதற்கு அவர், "அல்லாஹ்வின் மீதாணையாக, இல்லை என் இறைவா!" என்று பதிலளிப்பார்.
அவ்வாறே, இவ்வுலகில் கடுமையான துன்பத்தில் வாழ்ந்த சொர்க்கவாசிகளில் ஒருவர் மறுமைநாளில் கொண்டுவரப்பட்டு, சிறிது நேரம் சொர்க்கத்திற்குள் செல்ல அனுமதிக்கப் படுவார். பிறகு அவரிடம், "ஆதமின் மகனே! (உலகில்) எப்போதேனும் சிரமத்தைக் கண்டாயா? எப்போதேனும் துன்பம் ஏதும் உமக்கு ஏற்பட்டதா?" என்று கேட்கப்படும். அதற்கு அவர் "அல்லாஹ்வின் மீதாணையாக! இல்லை, என் இறைவா! ஒருபோதும் எனக்கு எந்தத் துன்பமும் ஏற்பட்டதில்லை. ஒரு போதும் நான் சிரமத்தைக் கண்டதுமில்லை" என்று கூறுவார்.- இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 50
பாடம் : 13 இறைநம்பிக்கையாளர் செய்த நற்செயல்களுக்கான நன்மைகள் இம்மையிலும் மறுமையிலும் வழங்கப்படும். இறை மறுப்பாளர் செய்த நற்செயல்களுக்கான நன்மைகள் முன்கூட்டியே இம்மையில் வழங்கப்பட்டுவிடும்.
5408. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் எந்த இறைநம்பிக்கையாளருக்கும் (அவர் செய்த நற்செயலுக்கான) நன்மையில் அநீதி இழைப்பதில்லை. அதற்குரிய நன்மை இம்மையிலும் அவருக்கு வழங்கப்படும். அதற்குரிய நன்மை மறுமையிலும் அவருக்கு வழங்கப்படும். (ஏக) இறைமறுப்பாளர் இறைவனுக்காகச் செய்த நற்செயல்களின் பலனால் இம்மையில் (மட்டும்) அவருக்கு உணவளிக்கப்படும். அவர் மறுமையை அடையும்போது, அவருக்கு வழங்கப்படுவதற்கு நன்மையேதும் இராது.- இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 50
5409. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஓர் இறைமறுப்பாளர் நற்செயல் ஒன்றைச் செய்தால், அதற்குரிய பலன் இவ்வுலகிலேயே அவருக்கு வழங்கப்பட்டுவிடும். இறைநம்பிக்கையாளரின் நிலை என்னவெனில், அவர் செய்த நற்செயல்களுக்குரிய நன்மைகளை இறைவன் மறுமை நாளில் வழங்குவதற்காகப் பத்திரப் படுத்துகிறான். மேலும், அவர் கீழ்ப்படிந்து நடப்பதற்கேற்ப இவ்வுலகிலும் அவருக்கு வாழ்வாதாரத்தை வழங்குகிறான்.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 50
பாடம் : 14 ஓர் இறைநம்பிக்கையாளரின் நிலை (இளம்) பயிர் போன்றதாகும்; இறை மறுப்பாளனின் நிலை தேவதாரு மரத்தைப் போன்றதாகும்.
5410. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஓர் இறைநம்பிக்கையாளரின் நிலையானது, (இளம்) பயிர் போன்றதாகும். காற்று அதைச் சாய்த்துக்கொண்டேயிருக்கும். (அவ்வாறே) இறைநம்பிக்கையாளருக்குச் சோதனைகள் ஏற்பட்டுக்கொண்டேயிருக்கும்.
நயவஞ்சகனின் நிலை, (விறைப்பாக நிற்கும்) தேவதாரு மரத்தைப் போன்றதாகும். (பலமாக வீசும்) காற்று அதை வேரோடு சாய்த்துவிடுகிறது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் ("சாய்த்துக்கொண்டேயிருக்கும்" என்பதைக் குறிக்க "துமீலுஹு" என்பதற்குப் பகரமாக) "துஃபீஉஹு" எனும் சொல் இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 50
5411. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறைநம்பிக்கையாளரின் நிலை, காற்றில் அசையும் இளம் தளிர்ப் பயிருக்கு ஒப்பானதாகும். அது முற்றிய பயிராகும்வரை அதைக் காற்று ஒரு முறை சாய்த்து, மறுமுறை நிமிர்ந்து நிற்கச் செய்யும்.
இறைமறுப்பாளனின் நிலை, தனது அடித்தண்டின் மீது விறைப்பாக நிமிர்ந்து நிற்கும் தேவதாரு மரத்திற்கு ஒப்பானதாகும். அது ஒரேடியாக வேரோடு சாய்ந்து விழும்வரை அதை எதுவும் சாய்ப்பதில்லை.
இதை கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 50
5412. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறைநம்பிக்கையாளரின் நிலை, காற்றில் அசையும் இளம் தளிர்ப் பயிருக்கு ஒப்பானதாகும். அதன் தவணை முடியும்வரை அதைக் காற்று ஒரு முறை சாய்த்து, மறுமுறை நிமிர்ந்து நிற்கச் செய்யும். நயவஞ்சகனின் நிலை விறைப்பாக நிற்கும் தேவதாரு மரத்திற்கு ஒப்பானதாகும். அது ஒரேயடியாக வேரோடு சாயும்வரை அதை(க் காற்று) எதுவும் செய்து விடுவதில்லை.- இதை கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 50
5413. மேற்கண்ட ஹதீஸ் கஅப் பின் மாலிக் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் பிஷ்ர் பின் அஸ்ஸரீ (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "இறைமறுப்பாளனின் நிலை தேவதாரு மரத்திற்கு ஒப்பானதாகும்" என்று இடம்பெற்றுள்ளது. முஹம்மத் பின் ஹாத்திம் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "நயவஞ்சகனின் நிலை..." என்று காணப்படுகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 50
5414. மேற்கண்ட ஹதீஸ் கஅப் பின் மாலிக் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் யஹ்யா அல்கத்தான் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "இறைமறுப்பாளனின் நிலை தேவதாரு மரத்திற்கு ஒப்பானதாகும்" என்று இடம்பெற்றுள்ளது. மற்றவர்களின் அறிவிப்பில் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே ("நயவஞ்சகனின் நிலை" என்று) காணப்படுகிறது.
அத்தியாயம் : 50
பாடம் : 15 இறைநம்பிக்கையாளரின் நிலை பேரீச்ச மரத்திற்கு ஒப்பானதாகும்.
5415. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "மரங்களில் ஒன்று உண்டு. அதன் இலை உதிர்வதில்லை. அது முஸ்லிமுக்கு ஒப்பானதாகும். அது என்ன மரம் என்று எனக்குச் சொல்லுங்கள்?" என்று கேட்டார்கள். அப்போது மக்களின் எண்ணங்களில் அது காட்டு மரம் என்றே தோன்றியது. என் மனதில் அது பேரீச்ச மரமாகத்தானிருக்கும் என்று தோன்றினாலும் வெட்கப்பட்டு(க் கொண்டு சொல்லாமல் இருந்து)விட்டேன். பின்னர், "அல்லாஹ்வின் தூதரே! அது என்ன மரம் என்று நீங்களே எங்களுக்கு அறிவியுங்கள்?" என்று மக்கள் கேட்டனர். அதற்கு அவர்கள் "அது பேரீச்ச மரம்" என்றார்கள்.
பிறகு என் தந்தை உமர் (ரலி) அவர்களிடம் அதைப் பற்றி நான் சொன்னபோது, "நீ (வெட்கப் படாமல்) "அது பேரீச்ச மரம்தான்" என்று கூறியிருந்தால் இன்னின்னவை எனக்குக் கிடைப்பதைவிட அது எனக்கு மிகவும் விருப்பமானதாக இருந்திருக்கும்" என்று சொன்னார்கள். - இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 50
5416. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் தோழர்களிடம், "ஒரு மரத்தைப் பற்றி எனக்குத் தெரிவியுங்கள். அதன் நிலை இறைநம்பிக்கையாளருக்கு ஒப்பானதாகும்" என்று சொன்னார்கள். மக்கள், காட்டு மரங்களில் ஒன்றை நினைத்தனர். என் மனத்தில் அது பேரீச்ச மரம்தான் என்று தோன்றியது. அது பேரீச்ச மரம்தான் என்று சொல்ல நான் விரும்பினேன்.
ஆயினும், அங்கு வயதில் மூத்தவர்கள் இருந்ததால் நான் சொல்வதற்கு அஞ்சினேன். மக்கள் (பேசாமல்) வாய் மூடி இருந்தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அது பேரீச்ச மரம்" என்று சொன்னார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் முஜாஹித் (ரஹ்) அவர்கள் பின்வருமாறு கூறியதாகக் காணப்படுகிறது:
நான் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களுடன் மதீனாவரை சென்றேன். அப்போது அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து எந்த ஹதீஸையும் கூறியதை நான் கேட்கவில்லை. ஒரேயொரு ஹதீஸை மட்டும் அவர்கள் கூறினார்கள்: "நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தபோது பேரீச்ச மரத்தின் குருத்து ஒன்று கொண்டுவரப்பட்டது..." என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம் பெற்றுள்ளன.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் பேரீச்ச மரத்தின் குருத்து ஒன்று கொண்டு வரப்பட்டது..." என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே காணப்படுகின்றன.
- அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இருந்தோம். அப்போது அவர்கள், "ஒரு முஸ்லிமான மனிதரை ஒத்திருக்கும்" அல்லது "(அவரைப்) போன்றிருக்கும்" ஒரு மரத்தை எனக்கு அறிவியுங்கள். அதன் இலை உதிராது. அது தன் கனிகளை எல்லாப் பருவங்களிலும் கொடுத்துக்கொண்டிருக்கும் என்று சொன்னார்கள்.
அப்போது என் மனத்தில், "அது பேரீச்ச மரம்தான்" என்று தோன்றியது. அபூபக்ர், உமர் (போன்றவர்களே பதில்) பேசாமல் இருப்பதை நான் கண்டேன். ஆகவே, நான் எதையும் பேசவோ, சொல்லவோ விரும்பவில்லை. பின்னர் (என் மனத்தில் தோன்றியதை நான் சொல்லாமலிருந்துவிட்டது குறித்து என் தந்தை உமர் (ரலி) அவர்களிடம் சொன்ன போது), "நீ அதைச் சொல்லியிருந்தால் இன்ன இன்ன (செல்வம் கிடைப்ப)தைவிட எனக்கு மிகவும் பிரியமானதாய் இருந்திருக்கும்" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 50
பாடம் : 16 மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக அவர்களிடையே ஷைத்தான் பிளவை உருவாக்குகிறான்; அவன் தன் படைகளை அனுப்புகிறான் என்பதும், ஒவ்வொரு மனிதனுடனும் (ஷைத்தானிய) கூட்டாளி ஒருவன் இருக்கிறான் என்பதும்.
5417. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அரேபிய தீபகற்பத்தில் தொழுகையாளர்கள் தன்னை வணங்குவார்கள் என்ற நம்பிக்கையை ஷைத்தான் இழந்துவிட்டான். எனினும், அவர்களிடையே பிளவை உருவாக்குவ(தில் வெற்றி கண்டு விட்டா)ன்.
இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 50
5418. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இப்லீஸின் சிம்மாசனம் கடலின் மீது அமைந்துள்ளது. அவன் (அங்கிருந்தே) தன் படைகளை அனுப்பி, மக்களிடையே குழப்பங்களை ஏற்படுத்துகிறான். மக்களிடையே பெருங்குழப்பத்தை ஏற்படுத்துகின்ற (ஷைத்தான் எவனோ அ)வனே இப்லீஸிடம் மிகவும் மரியாதைக்குரியவன் ஆவான்.
இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 50
5419. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இப்லீஸ், தனது சிம்மாசனத்தை (கடல்)நீரின் மீது அமைக்கிறான். பிறகு தன் பட்டாளங்களை (மக்களிடையே) அனுப்புகிறான். அவர்களில் மிகப்பெரும் குழப்பத்தை ஏற்படுத்துகின்ற (ஷைத்தான் எவனோ அ)வனே இப்லீஸிடம் மிகவும் நெருங்கிய அந்தஸ்தைப் பெறுகிறான். அவனிடம் ஷைத்தான்களில் ஒருவன் (திரும்பி)வந்து "நான் இன்னின்னவாறு செய்தேன்" என்று கூறுவான்.
அப்போது இப்லீஸ், "(சொல்லிக்கொள்ளும் அளவுக்கு) நீ எதையும் செய்யவில்லை" என்று கூறுவான். பிறகு அவர்களில் மற்றொருவன் வந்து, "நான் ஒரு மனிதனுக்கும் அவனுடைய மனைவிக்கும் இடையே பிரிவை ஏற்படுத்தாமல் அவனை நான் விட்டுவைக்கவில்லை" என்று கூறுவான். அப்போது இப்லீஸ், அவனை அருகில் வரச்செய்து, "நீதான் சரி(யான ஆள்)" என்று (பாராட்டிக்) கூறுவான்.
இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அறிவிப்பாளர்களில் ஒருவரான அஃமஷ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (எனக்கு இந்த ஹதீஸை அறிவித்த) அபூசுஃப்யான் தல்ஹா பின் நாஃபிஉ (ரஹ்) அவர்கள், "அப்போது அந்த ஷைத்தானை இப்லீஸ் கட்டியணைத்துக்கொள்கிறான் (பிறகு அவ்வாறு பாராட்டுகிறான்)" என்று கூறியதாகவே நான் கருதுகிறேன்.
அத்தியாயம் : 50
5420. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஷைத்தான்(களின் தலைவன்), தன் பட்டாளங்களை அனுப்பிவைக்கிறான். அவர்கள் மக்களிடையே குழப்பங்களை ஏற்படுத்துகின்றனர். அவர்களில் மிகப்பெரும் குழப்பத்தை ஏற்படுத்துகின்ற (ஷைத்தான் எவனோ அ)வனே இப்லீஸிடம் மிகவும் நெருங்கிய அந்தஸ்தைப் பெறுகிறான்.- இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 50
5421. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஜின் இனத்தைச் சேர்ந்த கூட்டாளியொருவன் (ஷைத்தான்) தம்முடன் நியமனம் செய்யப்படாமல் உங்களில் எவரும் இல்லை" என்று கூறினார்கள். அப்போது, "தங்களுடனுமா, அல்லாஹ்வின் தூதரே?" என்று மக்கள் கேட்டனர். அதற்கு அவர்கள், "என்னுடனும்தான். ஆயினும் அல்லாஹ்,அவனுக்கெதிராக எனக்கு உதவி செய்துவிட்டான். அவன் (எனக்குப்) பணிந்துவிட்டான். ஆகவே, எனக்கு அவன் நல்லதையே கூறுவான்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், சுஃப்யான் பின் சயீத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "ஜின்களிலுள்ள (ஷைத்தான்) கூட்டாளியொருவனும் வானவர்களிலுள்ள கூட்டாளியொருவரும் நியமனம் செய்யப்படாமல் உங்களில் எவரும் இல்லை" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 50
5422. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம் தங்கியிருந்த நாளில்) ஓர் இரவில் என்னிடமிருந்து புறப்பட்டுச் சென்றார்கள். அவர்கள்மீது எனக்கு ரோஷம் ஏற்பட்டது. பிறகு அவர்கள் (திரும்பி)வந்து என் நடவடிக்கையைக் கண்டபோது, "ஆயிஷா! உனக்கு என்ன நேர்ந்தது? ரோஷம் கொண்டுவிட்டாயா?" என்று கேட்டார்கள். அதற்கு நான், "என்னைப் போன்ற ஒருத்தி (பல துணைவியர் உள்ள) தங்களைப் போன்ற ஒருவர்மீது ரோஷம் கொள்ளாமல் எப்படி இருக்க முடியும்?" என்று சொன்னேன்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உன் ஷைத்தான் உன்னிடம் வந்து விட்டானா?" என்று கேட்டார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! என்னுடனும் ஷைத்தான் உள்ளானா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "ஆம்" என்றார்கள். "ஒவ்வொரு மனிதனுடனும் (ஷைத்தான்) உள்ளானா?" என்று கேட்டேன். அதற்கும் அவர்கள் "ஆம்" என்றார்கள். நான், "தங்களுடனுமா, அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "ஆம். ஆயினும்,என் இறைவன் அவனுக்கெதிராக எனக்கு உதவி செய்துவிட்டான். அவன் (எனக்குப்) பணிந்துவிட்டான்" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 50
பாடம் : 17 எவரும் தமது நற்செயலால் (மட்டும்) சொர்க்கத்தில் நுழைந்துவிடுவதில்லை. மாறாக, அல்லாஹ்வின் கருணையால்தான் நுழைவார்.
5423. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உங்களில் யாரையும் அவரது நற்செயல் காப்பாற்றாது (மாறாக,அல்லாஹ்வின் தனிப்பெருங்கருணையே காப்பாற்றும்)" என்று சொன்னார்கள். ஒரு மனிதர், "தங்களையுமா காப்பாற்றாது, அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "என்னையும்தான் காப்பாற்றாது; அல்லாஹ் (தன்) பேரருளால் என்னை அரவணைத்துக்கொண்டால் தவிர" என்று கூறிவிட்டு, "எனவே (வழிபாடுகள், நல்லறங்கள் ஆகியவற்றில் எல்லை மீறிவிடாமல்) நடுநிலையோடு செயல்படுங்கள்"என்று சொன்னார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "அல்லாஹ் தனது பேரருளாலும் தனிக்கருணையாலும் (அரவணைத்துக் கொண்டால் தவிர)" என்று காணப்படுகிறது. அதில், "எனவே, நடுநிலையோடு செயல்படுங்கள்" எனும் குறிப்பு இல்லை.
அத்தியாயம் : 50
5424. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், "யாரையும் அவரது நற்செயல் சொர்க்கத்திற்குள் நுழைவிக்காது" என்று சொன்னார்கள். அப்போது, "தங்களையுமா, அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், "(ஆம்) என்னையும்தான்;என் இறைவன் (தனது) பேரருளால் என்னை அரவணைத்துக்கொண்டால் தவிர" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 50
5425. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், "உங்களில் யாரையும் அவரது நற்செயல் காப்பாற்றப் போவதில்லை" என்று சொன்னார்கள். "தங்களையுமா, அல்லாஹ்வின் தூதரே?" என்று மக்கள் கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் "என்னையும்தான்;அல்லாஹ் தனது மன்னிப்பாலும் பேரருளாலும் என்னை அரவணைத்துக்கொண்டால் தவிர" என்று சொன்னார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு அவ்ன் (ரஹ்) அவர்கள், "என்னையும் தான்; அல்லாஹ் தனது மன்னிப்பாலும் பேரருளாலும் என்னை அரவணைத்துக்கொண்டால் தவிர" என்று கூறியபோது தமது கையைத் தமது தலையை நோக்கிச் சுட்டிக்காட்டி சைகை செய்தார்கள்.
அத்தியாயம் : 50
5426. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "யாரையும் அவரது நற்செயல் காப்பாற்றப் போவதில்லை" என்று சொன்னார்கள். "தங்களையுமா, அல்லாஹ்வின் தூதரே?" என்று மக்கள் கேட்டனர். அதற்கு அவர்கள், "என்னையும்தான்; அல்லாஹ் தனது பேரருளால் என்னை அரவணைத்துக்கொண்டால் தவிர" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 50
5427. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உங்களில் யாரையும் அவரது நற்செயல் ஒருபோதும் சொர்க்கத்தில் நுழைவிக்காது" என்று கூறினார்கள். மக்கள், "தங்களையுமா, அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(ஆம்) என்னையும்தான்; அல்லாஹ் தனது தனிக்கருணையாலும் பேரருளாலும் என்னை அரவணைத்துக் கொண்டால் தவிர" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 50
5428. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நடுநிலையோடு (நற்)செயல் புரியுங்கள். (அல்லது) அதற்கு நெருக்கமாக (நற்)செயல் புரியுங்கள். அறிந்துகொள்ளுங்கள்: உங்களில் யாரையும் அவரது நற்செயல் ஒருபோதும் காப்பாற்றாது"என்று சொன்னார்கள். மக்கள், "தங்களையுமா (தங்களின் நற்செயல் காப்பாற்றுவதில்லை), அல்லாஹ்வின் தூதரே?"என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "என்னையும்தான்; அல்லாஹ் தனது தனிக் கருணையாலும் பேரருளாலும் என்னை அரவணைத்துக்கொண்டால் தவிர" என்று சொன்னார்கள்.
- ஜாபிர் (ரலி) அவர்கள் வாயிலாகவும் மேற்கண்ட ஹதீஸ் வந்துள்ளது.
- மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் மேற்கண்ட ஹதீஸ் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "நற்செய்தி பெறுங்கள்" என்று (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக) கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 50
5429. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் யாரையும் அவரது நற்செயல் சொர்க்கத்திலும் நுழைவிக்காது; நரகத்திலிருந்தும் காப்பாற்றாது. என்னையும் சேர்த்துத் தான்; அல்லாஹ்வின் பேரருள் (எனக்குக்) கிடைத்தால் தவிர.- இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக் கிறார்கள்.
அத்தியாயம் : 50
5430. அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் பின்வருமாறு கூறிவந்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நடுநிலையாக (நற்)செயலாற்றுங்கள். (அல்லது) அதற்கு நெருக்கமாகச் செயலாற்றுங்கள். நற்செய்தி பெற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில், யாரையும் அவரது நற்செயல் ஒருபோதும் சொர்க்கத்தில் நுழைவிக்காது" என்று கூறினார்கள்.
மக்கள், "தங்களையுமா, அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "என்னையும்தான்; அல்லாஹ் தனது பேரருளால் என்னை அரவணைத்துக் கொண்டால் தவிர. அறிந்துகொள்ளுங்கள்! நற்செயல்களில் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானது (எண்ணிக்கையில்) குறைவாக இருந்தாலும் (தொடர்ந்து செய்யப்படும்) நிலையான நற்செயலே ஆகும்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் "நற்செய்தி பெறுங்கள்" எனும் குறிப்பு இல்லை.
அத்தியாயம் : 50
பாடம் : 18 நற்செயல்களை அதிகமாகச் செய்வதும் வழிபாடுகளில் கூடுதல் ஈடுபாடு காட்டுவதும்.
5431. முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் தம் பாதங்கள் புடைக்கும் அளவுக்கு நின்று தொழுவார்கள். அவர்களிடம், "இந்த அளவுக்கு நீங்கள் சிரமம் எடுத்துக்கொள்ள வேண்டுமா? தங்களின் முந்தைய மற்றும் பிந்தைய தவறுகளை அல்லாஹ் மன்னித்துவிட்டானே?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், "நான் நன்றியுள்ள அடியானாக இருக்கவேண்டாமா?" என்று கேட்டார்கள்.
அத்தியாயம் : 50
5432. முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் தம் பாதங்கள் வீங்கும் அளவுக்கு நின்று தொழுதார்கள். மக்கள், "தங்களின் முந்தைய மற்றும் பிந்தைய தவறுகளை அல்லாஹ் மன்னித்துவிட்டானே (பிறகு ஏன் தாங்கள் இந்த அளவுக்குச் சிரமம் எடுத்துக்கொள்ள வேண்டும்)?" என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், "நான் நன்றியுள்ள அடியானாக இருக்க வேண்டாமா?" என்று கேட்டார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 50
5433. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழும்போது தம் கால்களில் வெடிப்பு ஏற்படும் அளவுக்குத் தொழுவார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! இப்படிச் செய்கிறீர்களே! தங்களின் முந்தைய மற்றும் பிந்தைய தவறுகள் மன்னிக்கப்பட்டு விட்டனவே?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "ஆயிஷா! நான் நன்றியுள்ள அடியானாக இருக்க வேண்டாமா?" என்று கேட்டார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 50
பாடம் : 19 அறிவுரை வழங்குவதில் நடுநிலைப் போக்கு.
5434. அபூவாயில் ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களின் வீட்டுவாசலில் அவர்களை எதிர் பார்த்துக் காத்திருந்தோம். அப்போது யஸீத் பின் முஆவியா அந்நகஈ (ரஹ்) எங்களைக் கடந்து சென்றார். அவரிடம், "நாங்கள் இங்கிருப்பதைப் பற்றி அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் அறிவியுங்கள்" என்று சொன்னோம்.
அவர் உள்ளே நுழைந்த சிறிது நேரத்திற்குள் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் வெளியே வந்து, "நீங்கள் இங்கு இருக்கும் விஷயம் எனக்குத் தெரிவிக்கப்பட்டது. (இருந்தாலும்,) நான் உங்களுக்குச் சடைவை ஏற்படுத்திவிடுவேனோ எனும் அச்சம்தான் உங்களிடையே வரவிடாமல் என்னைத் தடுத்துவிட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நாங்கள் சடைவு அடைவதை விரும்பாமல் (சந்தர்ப்ப சூழ்நிலைகளைக் கவனித்து) விட்டு விட்டு எங்களுக்கு அறிவுரை வழங்கிவந்தார்கள். (இதுவே உங்களிடையே அறிவுரை வழங்க வரவிடாமல் என்னைத் தடுக்கிறது") என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் ஐந்து அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 50
5435. அபூவாயில் ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் ஒவ்வொரு வியாழக்கிழமையும் எங்களுக்கு (ஹதீஸ் அறிவித்து) அறிவுரை வழங்கிவந்தார்கள். இந்நிலையில் அவர்களிடம் ஒரு மனிதர், "அபூஅப்திர் ரஹ்மானே! தங்களின் ஹதீஸ் அறிவிப்பை நாங்கள் நேசிக்கிறோம்; ஆசிக்கிறோம். தாங்கள் ஒவ்வொரு தினமும் எங்களுக்கு ஹதீஸ் அறிவிப்பதை நாங்கள் பெரிதும் விரும்புகிறோம்" என்று கூறினார்.
அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், "நான் உங்களுக்குச் சடைவை ஏற்படுத்திவிடுவேனோ எனும் அச்சம்தான் உங்களுக்கு (நாள்தோறும்) ஹதீஸ் அறிவிக்க விடாமல் என்னைத் தடுத்துவிட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நாங்கள் சடைவு அடைவதை விரும்பாமல் (சந்தர்ப்ப சூழ்நிலைகளைக் கவனித்து) விட்டு விட்டு எங்களுக்கு அறிவுரை வழங்கிவந்தார்கள். (இதுவே உங்களிடையே அறிவுரை வழங்க வரவிடாமல் என்னைத் தடுக்கிறது") என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
Previous Post Next Post