அத்தியாயம் 26 உம்ரா

ஸஹீஹுல் புகாரி
அத்தியாயம் 26
உம்ரா

அளவற்ற அருளாளனும் கருணையன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கிறேன்.

பகுதி 1

உம்ராவின் அவசியமும் அதன் சிறப்பும்.

அனைவர் மீதும் ஹஜ்ஜும் உம்ராவும் கடமையாகும் என இப்னு உமர்(ரலி) கூறினார்.

அல்லாஹ் குர்ஆனில், 'அல்லாஹ்வுக்காக ஹஜ்ஜையும் உம்ராவையும் பூரணமாக நிறைவேற்றுங்கள்'' (திருக்குர்ஆன் 02:196) என்று ஹஜ்ஜையும் உம்ராவையும் இணைத்தே கூறுகிறான் என இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்.

1773. 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

''ஓர் உம்ரா செய்வது மறு உம்ரா வரையிலுள்ள பாவங்களின் பரிகாரமாகும். ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்கு, சொர்க்கத்தைத் தவிர வேறு கூலியில்லை.''

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பகுதி 2

ஹஜ்ஜுக்கு முன்னால் உம்ராச் செய்தல்.

1774. இப்னு ஜுரைஜ் அறிவித்தார்.

இக்ரிமா இப்னு காலித் ஹஜ்ஜுக்கு முன் உம்ரா செய்வது பற்றி இப்னு உமர்(ரலி) அவர்களிடம் கேட்டதற்குவர் 'குற்றமில்லை' என்றார்.

மேலும், 'நபி(ஸல்) அவர்கள் ஹஜ் செய்வதற்கு முன் உம்ராச் செய்தார்கள்' என்று இப்னு உமர்(ரலி) கூறினார் என்றும் இக்ரிமா கூறுகிறார்.

பகுதி 3

நபி(ஸல்) அவர்கள் செய்த உம்ராக்கள் எத்தனை?

1775 / 1776. முஜாஹித்(ரஹ்) அவர்கள் கூறினார்:

நானும் உர்வா இப்னு ஸுபைரும் மஸ்ஜிது(ன் நபவீ)க்குச் சென்றோம். அங்கே ஆயிஷா(ரலி) அவர்களின் அறைக்கருகே அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அமர்ந்திருந்தார்கள். அப்போது மக்கள் மஸ்ஜிதில் லுஹா தொழுகையை நிறைவேற்றிக் கொண்டிருந்தனர். நாங்கள் அவர்களிடம் மக்களின் இந்தத் தொழுகையைப் பற்றிக் கேட்டோம். அதற்கவர்கள், 'இது பித்அத்!'' என்றார்கள்! (காரணம் இப்னு உமர்(ரலி) நபி(ஸல்) அவர்கள் லுஹா தொழுததைப் பார்த்ததில்லை). பிறகு, 'நபி(ஸல்) அவர்கள் எத்தனை உம்ராக்கள் செய்துள்ளார்கள்?' என உர்வா(ரஹ்) கேட்டார்கள். அதற்கவர்கள் 'நான்கு, அவற்றில் ஒன்றை ரஜப் மாதத்தில் செய்தார்கள்!'' என்றார்கள்.

நாங்கள் அவர்களின் இக்கூற்றை மறுக்க விரும்பவில்லை.

இதற்கிடையே அறையில் உம்முல் மூமினீன் ஆயிஷா(ரலி) பல்துலக்கும் சப்தத்தைக் கேட்டோம் அப்போது உர்வா(ரஹ்), 'அன்னையே! இறைநம்பிக்கையாளர்களின் தாயே! அபூ அப்திர் ரஹ்மான் (இப்னு உமர்(ரலி)) அவர்கள் கூறுவதைச் செவியேற்றீர்களா?' எனக் கேட்டார். 'அவர் என்ன கூறுகிறார்?' என ஆயிஷா(ரலி) கேட்டதும். 'நபி(ஸல்) அவர்கள் நான்கு உம்ராக்கள் செய்துள்ளார்கள். அவற்றில் ஒன்று ரஜப் மாதத்தில் நடந்தது!'' என்று கூறுகிறார்!'' என்றார். ஆயிஷா(ரலி), 'அபூ அப்திர் ரஹ்மானுக்கு அல்லாஹ் கருணை புரிவானாக! நபி(ஸல்) அவர்கள் உம்ரா செய்யும் போதெல்லாம் அவர்களுடன் அவரும் இருந்திருக்கிறார்; (மறந்துவிட்டார் போலும்!) நபி(ஸல்) அவர்கள் ரஜப் மாதத்தில் உம்ரா செய்ததே இல்லை!'' எனக் கூறினார்கள்.

1777. உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அறிவித்தார்.

''ஆயிஷா(ரலி) அவர்களிடம் நான் (நபி(ஸல்) அவர்களின் உம்ரா பற்றிக்) கேட்டேன். அதற்கு அவர்கள், 'நபி(ஸல்) அவர்கள் ரஜப் மாதத்தில் உம்ரா செய்யவில்லை!'' என்றார்கள்.

1778. கதாதா(ரஹ்) அறிவித்தார்.

''நபி(ஸல்) அவர்கள் எத்தனை உம்ராக்கள் செய்துள்ளார்கள்?' என நான் அனஸ்(ரலி) அவர்களிடம் கேட்டதற்க அவர், 'நான்கு (உம்ராக்கள் செய்துள்ளார்கள்); அவை: ஹுதைபிய்யா எனுமிடத்தில் துல்கஅதா மாதத்தில், இணைவைப்போர் தடுத்தபோது செய்யச் சென்றது; இணைவைப்போருடன் செய்த சமாதான ஒப்பந்தப்படி, அடுத்த ஆண்டு துல்கஅதா மாதத்தில் செய்தது; அடுத்து 'ஜிர்இர்ரானா' என்ற இடத்திலிருந்து ஒரு போரின்... அது ஹுனைன் போர் என்று கருதுகிறேன்.. கனீமத்தைப் பங்கிட்ட பொழுது செய்தது; (நபி(ஸல்) அவர்களின் ஹஜ்ஜில் அடங்கியிருந்த உம்ராவையும் சேர்த்து நான்கு உம்ராக்கள்!)'' பிறகு 'எத்தனை ஹஜ் செய்திருக்கிறார்கள்?' என்று நான் கேட்டதற்கு, 'ஒரு ஹஜ்தான்!'' என்றார்கள்.

1779. அனஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் முதலில், இணைவைப்போர் (ஹுதைபிய்யாவில் அவர்களைத்) தடுத்துவிட்டபோது உம்ராவுக்காக சென்றிருந்தார்கள். பிறகு, அடுத்த ஆண்டு (அதே) ஹுதைபிய்யாவிலிருந்து உம்ராவை நிறைவேற்றினார்கள்; பிறகு துல்கஅதா மாதத்தில் உம்ரா செய்தார்கள்; அடுத்து, ஹஜ்ஜுடன் ஓர் உம்ரா செய்தார்கள்.

1780. ஹம்மாம்(ரஹ்) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் நான்கு உம்ராக்களையும் துல்கஅதா மாதத்திலேயே செய்தார்கள்; ஹஜ்ஜுடன் செய்த உம்ராவைத் தவிர!

அவை, ஹுதைபிய்யா (என்னுமிடத்தில் அவர்கள் தடுக்கப்பட்ட போது) செய்யச் சென்ற உம்ராவும், அதற்கடுத்த ஆண்டின் உம்ராவும், ஹுனைன் போரில் கிடைத்த போர்ச் செல்வங்களைப் பங்கு வைத்த இடமான 'ஜிஇர்ரானா'விலிருந்து செய்த உம்ராவும், ஹஜ்ஜுடன் செய்த உம்ராவும் ஆகும்.

1781. அபூ இஸ்ஹாக்(ரஹ்) அறிவித்தார்.

மஸ்ரூக், அதா, முஜாஹித்(ரஹ் - அலைஹிம்) ஆகிய மூவரிடமும் (நபி(ஸல்) அவர்கள் செய்த உம்ராவைப் பற்றி) கேட்டேன். அதற்கு அவர்கள் அனவைரும், 'நபி(ஸல்) அவர்கள் ஹஜ் செய்வதற்கு முன்னர் துல்கஅதாவில் உம்ரா செய்துள்ளார்கள்!'' என்று கூறினர்.

மேலும், 'நபி(ஸல்) அவர்கள் ஹஜ் செய்வதற்கு முன்பு துல்கஅதாவில் (வெவ்வேறு ஆண்டுகளில்) இரண்டு முறை உம்ரா செய்துள்ளார்கள்!'' என பராஉ இப்னு ஆஸிப்(ரலி) கூற கேட்டுள்ளேன்.

பகுதி 4

ரமலானில் உம்ரா செய்தல்.

1782. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் அன்ஸாரிப் பெண்களில் ஒருவரிடம்... 'இப்னு அப்பாஸ்(ரலி) அப்பெண்ணின் பெயரைக் குறிப்பிட்டார்கள். நான் அதை மறந்துவிட்டேன்!'' என அவரிடமிருந்து அறிவிக்கும் அதா(ரஹ்) கூறினார்.. 'நீ ஏன் எங்களுடன் ஹஜ் செய்யவில்லை?' எனக் கேட்டார்கள். அதற்கவர், 'எங்களிடம் இருந்த, தண்ணீர் கொண்டு வருவதற்கான ஓர் ஒட்டகத்தில் இன்னாரின் தந்தையும் அவரின் மகனும் (என்னுடைய கணவரும் மகனும்) ஏறிச் சென்றுவிட்டனர்; இன்னொரு ஒட்டகத்தைவிட்டுச் சென்றுள்ளனர்; அதன் மூலம் நாங்கள் தண்ணீர் எடுத்துக் கொண்டிருக்கிறோம்!'' என்றார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'ரமளான் வந்துவிட்டால் அதில் நீ உம்ரா செய்வாயாக! ஏனெனில், ரமளானில் உம்ரா செய்வது ஹஜ்ஜாகும்!' எனக் கூறினார்கள்; அல்லது அது போன்ற கருத்தைக் கூறினார்கள்.

பகுதி 5

முஹஸ்ஸபில் தங்கும் இரவிலும் மற்றநேரங்களிலும் உம்ரா செய்தல்.

1783. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நாங்கள் (துல்கஅதாவைப் பூர்த்தி செய்துவிட்டு) துல்ஹஜ்ஜின் பிறையை எதிர்நோக்கியவர்களாக, நபி(ஸல்) அவர்களுடன் ஹஜ்ஜுக்குப் புறப்பட்டோம். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'உங்களில் யார் ஹஜ்ஜுக்கு இஹ்ராம் அணிய விரும்புகிறார்களோ அவர்கள் ஹஜ்ஜுக்கு இஹ்ராம் அணிந்து கொள்ளட்டும்; யார் உம்ராச் செய்ய விரும்புகிறார்களோ அவர்கள் உம்ராவுக்கு இஹ்ராம் அணிந்து கொள்ளட்டும். நான் மட்டும் பலிப்பிராணியைக் கொண்டு வரவில்லையானால் உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்திருப்பேன்' எனக் கூறினார்கள். எனவே, எங்களில் சிலர் உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்தனர். இன்னும் சிலர் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணிந்தனர்; நான் உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்தவர்களுள் ஒருத்தியாவேன். அரஃபா நாள் நெருங்கியவதும் எனக்கு மாதவிடாய் வந்துவிட்டது. எனவே நான் நபி(ஸல்) அவர்கள், 'உன்னுடைய உம்ராவைவிட்டுவிட்டு உன்னுடைய தலைமுடியை அவிழ்த்துவிட்டு, வாரிக் கொண்டு ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணிந்துகொள்'' என்றார்கள்.

நபி(ஸல்) அவர்கள் முஹஸ்ஸபில் தங்குவதற்கான இரவு வந்தபோது என்னுடன் அப்துர்ரஹ்மானை அனுப்பித் தன்யீம் என்ற இடத்திற்குப் போகச் சொன்னார்கள். நான் என்னுடைய விடுபட்ட உம்ராவுக்குப் பகரமாக மற்றொரு உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்து கொண்டேன்.

பகுதி 6

உம்ராவுக்காக தன்யீமில் இஹ்ராம் அணிதல்.

1784. அப்துர் ரஹ்மான் இப்னு அபீ பக்ர்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் ஆயிஷா(ரலி)வை வாகனத்தில் ஏற்றிக் கொண்டு சென்று தன்யீம் என்னுமிடத்தில் உம்ராவுக்காக இஹ்ராம் அணியச் செய்ய வேண்டும் என எனக்குக் கட்டளையிட்டார்கள்.

1785. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களும் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணிந்தார்கள். நபி(ஸல்) மற்றும் தல்ஹா(ரலி) ஆகிய இருவரைத் தவிர வேறு யாரிடமும் குர்பானிப் பிராணி இல்லை. யமனிலிருந்து அலீ(ரலி) குர்பானிப் பிராணியுடன் வந்தார்கள். 'நபி(ஸல்) அவர்கள் எதற்காக இஹ்ராம் அணிந்தார்களோ அதற்காகவே நானும் அணிந்தேன்!'' என அவர்கள் கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் குர்பானிப் பிராணி கொண்டு வராதவர்களிடம், இதை (ஹஜ்ஜை) உம்ராவாக ஆக்கிக் கொள்ளுமாறும் வலம்வந்து, தலைமுடியைக் குறைத்து, இஹ்ராமிலிருந்து விடுபடுமாறும் கட்டளையிட்டார்கள். (மக்கள் சிலர்) 'நம் இன உறுப்பில் விந்து சொட்டிக் கொண்டிருக்கும் நிலையில் (மனைவியுடன் கூடிய பின் உடனடியாக) நாம் மினாவுக்குச் செல்வதா?' என்று பேசிய செய்தி, நபி(ஸல்) அவர்களுக்கு எட்டியதும் அவர்கள் '(ஹஜ் மாதங்களில் உம்ரா செய்ய அனுமதியுண்டு என) நான் இப்போது அறிந்ததை முன் கூட்டியே அறிந்திருந்தால் நான் குர்பானிப் பிராணி கொண்டு வந்திருக்க மாட்டேன்; நான் குர்பானிப் பிராணி மட்டும் கொண்டு வந்திருக்கவில்லையாயின் இஹ்ராமிலிருந்து விடுபட்டிருப்பேன்!'' என கூறினார்கள். மேலும், ஆயிஷா(ரலி) அவர்களுக்கு மாதவிடாய் வந்திருந்தது. எனவே அவர்கள், இறையில்லம் கஅபாவை வலம்வருவதைத் தவிர, ஹஜ்ஜின் மற்றெல்லா வழிபாடுகளையும் நிறைவேற்றினார்கள். மாதவிடாயிலிருந்து தூய்மையடைந்ததும் கஅபாவை வலம்வந்தார்கள். மேலும் ஆயிஷா(ரலி) 'இறைத்தூதர் அவர்களே! நான் ஹஜ்ஜை மட்டும் நிறைவேற்றிவிட்டுச் செல்ல. நீங்கள் (எல்லோரும்) ஹஜ்ஜையும் உம்ராவையும் நிறைவேற்றிவிட்டுச் செல்கிறீர்களா?' என (ஏக்கத்துடன்) கூறியதும், நபி(ஸல்) அவர்கள் அப்துர் ரஹ்மான் இப்னு அபீ பக்ரை, ஆயிஷா(ரலி) அவர்களுடன் (உம்ரா செய்திட இஹ்ராம் அணிவதற்காக) தன்யீம் என்ற இடத்திற்குச் செல்லுமாறு கட்டளையிட்டார்கள். ஆயிஷா(ரலி) ஹஜ் செய்த பின், துல்ஹஜ் மாதத்திலேயே உம்ராவையும் நிறைவேற்றினார்கள்.

நபி(ஸல்) அவர்கள் ஜம்ரத்துல் அகபாவில் கல்லெறிந்து கொண்டிருந்தபோது அவர்களைச் சந்தித்த சுராக்கா இப்னு மாலிக் இப்னு ஜுஃஷும்(ரலி) 'இறைத்தூதர் அவர்களே! இது (ஹஜ் மாதத்தில் உம்ரா செய்வது) உங்களுக்கு மட்டுமுள்ள தனிச் சட்டமா?' எனக் கேட்டதற்கவர்கள், 'இல்லை! இது எப்போதைக்கும் உரியதே!'' என்று பதிலளித்தார்கள்.

பகுதி 7

ஹஜ்ஜுக்குப் பின், குர்பானி கொடுக்காமல் உம்ரா செய்தல்.

1786. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

''(துல்கஅதாவை பூர்த்தி செய்துவிட்டு) துல்ஹஜ் பிறையை எதிர் நோக்கியவர்களாக, நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் புறப்பட்டோம். நபி(ஸல்) அவர்கள் 'உம்ராவுக்கு (மட்டும்) இஹ்ராம் அணிய விரும்புகிறவர் உம்ராவுக்காக (மட்டும்) இஹ்ராம் அணியட்டும்; ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணிய விரும்புகிறவர் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணியட்டும்! நான் குர்பானிப் பிராணியைக் கொண்டு வந்திராவிட்டால் உம்ராவுக்காக (மட்டும்) இஹ்ராம் அணிந்திருப்பேன்!'' என்றார்கள். சிலர் உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்தனர்; மற்றும் சிலர் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணிந்தனர். நான் உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்தவர்களுள் ஒருத்தியாக இருந்தேன். மக்காவில் நுழைவதற்கு முன் எனக்கு மாதவிடாய் ஏற்பட்டது. மாதவிடாயுள்ள நிலையிலேயே அரஃபா நாளையும் அடைந்தேன். நபி(ஸல்) அவர்களிடம் (இதுபற்றி) நான் முறையிட்டபோது, 'உன்னுடைய உம்ராவைவிட்டுவிட்டு, தலையை அவிழ்த்து வாரிக் கொள்! மேலும் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணிந்து கொள்!'' என்றார்கள். நான் அவ்வாறே செய்தேன். முஹஸ்ஸபில் தங்கும் இரவு வந்தபோது, என்னுடன் அப்துர் ரஹ்மானை தன்யீம்வரை நபி(ஸல்) அவர்கள் அனுப்பினார்கள். அப்துர்ரஹ்மான் தம் ஒட்டகத்தின் பின்னால் என்னை ஏற்றினார். விடுபட்ட உம்ராவுக்குப் பகரமாக மற்றொரு உம்ராவுக்காக நான் இஹ்ராம் அணிந்தேன்.

''அல்லாஹ் ஆயிஷா(ரலி) அவர்களுக்கு ஹஜ்ஜையும் உம்ராவையும் நிறைவேற்றித் தந்தான்'' என்று அறிவிப்பாளர் உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

''இதற்காக, ஆயிஷா(ரலி) குர்பானியோ, தர்மமோ, நோன்போ பரிகாரமாகச் செய்யவில்லை!'' என்று மற்றோர் அறிவிப்பாளர் ஹிஷாம் இப்னு உர்வா(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

பகுதி 8

உம்ரா செய்யும்போது ஏற்படும் சிரமத்திற்குத் தக்கவாறு நற்கூலியுண்டு.

1787. அஸ்வத்(ரஹ்), காஸிம் இப்னு முஹம்மத்(ரஹ்) ஆகியோர் அறிவித்தார்.

ஆயிஷா(ரலி) நபி(ஸல்) அவர்களிடம், 'மக்கள் எல்லோரும் (ஹஜ், உம்ரா ஆகிய) இரண்டு வழிபாடுகளுடன் திரும்புகின்றனர்; நான் மட்டும் (ஹஜ் என்கிற) ஒரேயொரு வழிபாட்டுடன் திரும்புகிறேனே?' எனக் கேட்டார்கள். அவர்களிடம், 'நீ சற்றுக் காத்திருந்து. (மாதவிடாயிலிருந்து) தூய்மையடைந்ததும் தன்யீமுக்குச் சென்று (உம்ராவுக்காக) இஹ்ராம் அணிந்து கொள்! பிறகு எங்களை இன்ன இடத்தில் வந்து சந்தித்துக் கொள்! ஆனால், உம்ராவுக்கான நற்கூலி உன்னுடைய சிரமத்திற்கோ, பொருட் செலவுக்கோ தக்கவாறே கிடைக்கும்!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

பகுதி 9

(ஹஜ்ஜுக்குப் பிறகு) உம்ரா செய்பவர், உம்ராவுக்கான தவாஃபை செய்துவிட்டு (மக்காவிலிருந்து) வெளியேறிவிட்டால் அவர் கடைசி வலம்வர வேண்டியதில்லையா? (உம்ராவுக்கான தவாஃபே அதற்குப் பகரமாகி விடுமா)?

1788 ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நாங்கள் ஹஜ்ஜின் மாதங்களில், ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணிந்து, ஹஜ்ஜுக்குரிய கட்டுப்பாடுகளுடன் (மதீனாவிலிருந்து) புறப்பட்டு, 'ஸாரிஃப்' என்னும் இடத்திற்கு வந்து தங்கினோம். அப்போது நபி(ஸல்) அவர்கள் தங்களின் தோழர்களிடம், 'பலிப்பிராணி கொண்டு வராமல் ஹஜ்ஜை உம்ராவாகச் செய்ய விரும்புகிறவர் அவ்வாறே செய்து கொள்ளட்டும்! பலிப்பிராணி வைத்திருப்பவர் அவ்வாறு செய்ய வேண்டாம்!' எனக் கூறினார்கள்.

நபி(ஸல்) அவர்களிடமும் அவர்களின் தோழர்களில் ஓரளவு வசனதி படைத்தவர்களிடமும் பலிப்பிராணிகள் இருந்தன. எனவே, அவர்கள் உம்ராவுக்கெனத் தனியாக வலம் வரவில்லை. பிறகு நபி(ஸல்) அவர்கள் என்னிடம் வந்தபோது நான் அழுது கொண்டிருந்தேன். அவர்கள் 'ஏன் அழுகிறாய்?' எனக் கேட்டார்கள். 'நீங்கள் உங்கள் தோழர்களிடம் கூறியதை செவியுற்றேன்; ஆனால், நான் உம்ரா செய்வதிலிருந்து தடுக்கப்பட்டு விட்டேன்!'' என்றேன். அதற்கவர்கள் 'என்ன காரணம்?' எனக் கேட்டதும், 'நான் தொழக்கூடாத நிலைமைக்கு ஆளாகி விட்டேன்! (எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது!) என்றேன். அவர்கள், 'உனக்கொன்றுமில்லை! நீ ஆதமின் பெண்மக்களில் ஒருத்தியே! அப்பெண்மக்களுக்கு விதிக்கப்பட்டதே உனக்கும் விதிக்கப்பட்டுள்ளது! எனவே, ஹஜ் செய்பவளாகவே இரு! அல்லாஹ் உனக்கு (உம்ரா செய்யவும்) வாய்ப்பளிக்கக் கூடும்!'' என்றார்கள்.

நாங்கள் ஹஜ்ஜை முடித்துவிட்டு மினாவிலிருந்து புறப்படும்வரை நான் அப்படியே (மாதவிடாயுடன்) இருந்தேன். பிறகு முஹஸ்ஸப் வந்து தங்கியபோது நபி(ஸல்) அவர்கள் அப்துர் ரஹ்மானை அழைத்து, 'உன்னுடைய சகோதரியை ஹரமுக்கு வெளியே அழைத்துப் போ! அவள் உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்து கொள்ளட்டும்! பிறகு நீங்களிருவரும் தவாஃபை முடித்துக் நடுநிசியில் வந்தபோது '(தவாஃபை) முடித்து விட்டீர்களா?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். நான் 'ஆம்!'' என்றேன். நபி(ஸல்) அவர்கள் தங்களின் தோழர்களிடம் புறப்படுமாறு அறிவித்தார்கள். மக்களும், ஸுப்ஹுக்கு முன்பே தவாஃபுஸ் ஸியாரத் செய்தவர்களும் புறப்படத் தயாரானதும் நபி(ஸல்) அவர்கள் மதீனாவை நோக்கிப் பயணமானார்கள்.

பகுதி 10

ஹஜ்ஜுக்கான கிரியைகளே உம்ராவிலும் நிறைவேற்றப்படும்.

1789. யஃலா இப்னு உமய்யா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் ஜிஇர்ரானா என்னுமிடத்தில் இருக்கும்போது நறுமணத்தின் அடையாளமோ அல்லது மஞ்சள் நிறமோ இருந்த சட்டை அணிந்திருந்த ஒருவர் அவர்களிடம் வந்து, 'உம்ராவில் நான் என்ன செய்ய வேண்டும் எனக் கட்டளையிடுகிறீர்கள்?' எனக் கேட்டார்.

அப்போது அல்லாஹ் நபி(ஸல்) அவர்களுக்கு வஹீ (இறைச்செய்தி) அறிவித்தான். எனவே, நபி(ஸல்) அவர்கள் போர்வையால் மூடப்பட்டார்கள். நான் நபி(ஸல்) அவர்களுக்கு வஹீ (இறைச்செய்தி) (இறைச்செய்தி) வருவதைப் பார்க்க வேண்டும் என ஆவல் கொண்டிருந்தேன். உமர்(ரலி), 'நபி(ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் வஹீ (இறைச்செய்தி) அருளும்போது அவர்களைப் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறாயா?' எனக் கேட்டார். நான் 'ஆம்' என்றேன். உடனே அவர் (நபி(ஸல்) அவர்கள்) மூடப்பட்டிருந்த ஆடையின் ஒரு புறத்தை நீக்கியதும் நான் நபி(ஸல்) அவர்களை உற்று நோக்கினேன். அப்போது ஒட்டகத்தின் குறட்டை போன்ற சப்தம் அவர்களிடமிருந்து வந்ததாக எண்ணுகிறேன். பிறகு (வஹீயின்) அந்நிலை அவர்களைவிட்டு நீங்கிவிட்ட பொழுது, அவர்கள், 'உம்ராவைப் பற்றிக் கேள்வி கேட்டவர் எங்கே?' எனக் கேட்டுவிட்டு (அவரிடம்), 'உம்முடைய இச்சட்டையைக் கழற்றி நறுமணத்தின் அடையாளத்தைக் கழுவிவிட்டு, மஞ்சள் நிறத்தையும் அகற்றிவிடும்! மேலும் நீர் ஹஜ்ஜில் செய்வதைப் போன்று உம்ராவிலும் செய்வீராக!'' எனக் கூறினார்கள்.

1790. உர்வா(ரஹ்) அறிவித்தார்.

நான் சிறு வயதுள்ளவனாக இருந்தபோது நபி(ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா(ரலி) அவர்களிடம் 'நிச்சயமாக ஸஃபாவும் மர்வாவும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளாகும்! எனவே, ஹஜ் அல்லது உம்ரா செய்கிறவர் அவ்விரண்டையும் வலம்வருவதில் எந்தக் குற்றமுமில்லை!' (திருக்குர்ஆன் 02:158) என்று அல்லாஹ் கூறினான். எனவே 'அவ்விரண்டிற்குமிடையே சஃயு செய்யாமலிருப்பதிலும் குற்றமில்லை என்றே கருதுகிறேன்!'' என்று கூறினேன். அதற்கு ஆயிஷா(ரலி) 'அவ்வாறில்லை, நீ கருதுவது போலிருந்தால் 'அவ்விரண்டையும் வலம்வராமலிருப்பதில் குற்றமில்லை!' என்று அவ்வசனம் அமைந்திருக்க வேண்டும்; மேலும், இந்த வசனம் அன்ஸாரிகளின் விஷயத்தில் அருளப்பட்டதாகும். (அறியாமைக் காலத்தில்) அவர்கள் 'குதைத்' என்ற இடத்தில், 'மனாத்' என்ற விக்கிரகத்திற்காக இஹ்ராம் அணிந்து வந்தார்கள். அதனால் (இஸ்லாத்தை ஏற்றபின்) ஸஃபா மர்வாவுக்கிடையே சஃயு செய்வதைக் குற்றமாகவும் கருதி இருந்தனர். எனவே, அவர்கள் இஸ்லாத்திற்கு வந்ததும் நபி(ஸல்) அவர்களிடம் இது பற்றிக் கேட்டனர்; அப்போது அல்லாஹ், 'நிச்சயமாக ஸஃபாவும் மர்வாவும் இறைவனின் அத்தாட்சிகளாகும்; எனவே, ஹஜ்ஜோ உம்ராவோ செய்பவர் அவ்விரண்டிற்குமிடையே சஃயு செய்வதால் அவரின் மீது எந்தக் குற்றமும் இல்லை!' (திருக்குர்ஆன் 02:158) என்ற வசனத்தை அருளினான்' எனக் கூறினார்கள்.

இன்னொரு அறிவிப்பில் 'ஸஃபா மர்வாவுக்கிடையே சஃயு செய்யாதவனின் ஹஜ்ஜையோ உம்ராவையோ அல்லாஹ் முழுமைப்படுத்தவில்லை!'' என்ற (ஆயிஷா(ரலி) அவர்களின்) சொல் இடம் பெற்றுள்ளது.

பகுதி 11

உம்ரா செய்பவர் இஹ்ராமிலிருந்து விடுபடுவது எப்போது?

''(ஹஜ்ஜை) உம்ராவாக ஆக்கிக் கொண்டு வலம் வந்து (தொங்கோட்டம் ஓடி) விட்டு முடியைக் குறைத்துக் கொண்டு இஹ்ராமிலிருந்து விடுபடுமாறு நபி(ஸல்) அவர்கள் தங்களின் தோழர்களுக்குக் கட்டளையிட்டார்கள்!'' என ஜாபிர்(ரலி) கூறினார்.

1791 / 1792 அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்தார்கள். நாங்களும் அவர்களுடன் உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்தோம். அவர்கள் மக்காவில் நுழைந்ததும் (தவாப்) வலம்வந்தார்கள். நாங்களும் அவர்களுடன் வலம்வந்தோம். அவர்கள் ஸஃபா, மர்வாவுக்கு வந்ததும் நாங்களும் அவர்களுடன் அங்கு வந்தோம். மேலும், மக்காவாசிகள் நபி(ஸல்) அவர்களைத் தாக்கிவிடக் கூடாது என்பதற்காக நாங்கள் அவர்களை மறைத்துக் கொண்டு (அவர்களுக்குத் தடுப்பாக) நின்றோம்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான இஸ்மாயீல் கூறுகிறார்:

என்னுடைய நண்பர் ஒருவர் இப்னு அபீ அவ்ஃபா(ரலி) அவர்களிடம் 'நபி(ஸல்) அவர்கள் கஅபாவின் உள்ளே சென்றார்களா?' எனக் கேட்டதற்கு அவர்கள் 'இல்லை!'' என்றார்கள். பிறகு, அவர், 'நபி(ஸல்) அவர்கள் கதீஜா(ரலி) அவர்களைப் பற்றி என்ன கூறினார்கள் என்பதை எங்களுக்கு அறிவியுங்களேன்!' எனக் கேட்டதற்கு, அவர்கள் 'கதீஜாவுக்கு நற்செய்தி கூறுங்கள்; அவருக்கு சொர்க்கத்தில் முத்தாலான ஒரு மாளிகை உள்ளது! அதில் வீண் கூச்சலோ எந்தச் சிரமமோ இருக்காது!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் எனச் சொன்னார்கள்.

1793 / 1794 அம்ர்ப்னு தீனார்(ரஹ்) அறிவித்தார்.

''உம்ராவில் ஒருவர் இறையில்லம் கஅபாவை வலம்வந்துவிட்டு ஸஃபா மர்வாவுக்கிடையே வலம்வராமலேயே தம் மனைவியிடம் (உறவு கொள்ள) வரலாமா?' என இப்னு உமர்(ரலி) அவர்களிடம் நாங்கள் கேட்டோம். அதற்கு அவர்கள், 'நபி(ஸல்) அவர்கள் (மக்கா) வந்ததும் இறையில்லம் கஅபாவை ஏழு முறை வலம்வந்துவிட்டு, மகாமு இப்ராஹீமில் இரண்டு ரக்அத்கள் தொழுதபின் ஸஃபா மர்வாவுக்கிடையே ஏழு முறை சஃயு செய்தார்கள். எனவே, நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் உங்களுக்கு அழகிய முன்மாதிரி உள்ளது!' எனக் கூறினார்கள்.

நாங்கள் ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அவர்களிடம் இது பற்றிக் கேட்டோம். அதற்கு அவர்கள் 'ஸஃபா மர்வாவுக்கிடையே சஃயு செய்யாமல் ஒருவர் தம் மனைவியை நெருங்கக் கூடாது!'' எனக் கூறினார்கள்.

1795. அபூ மூஸா அல் அஷ்அரீ(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் பத்ஹா என்னுமிடத்தில் ஒட்டகத்தை இளைப்பாற வைத்துத் தங்கியிருந்தபோது நான் அவர்களைச் சந்தித்தேன். அப்போது அவர்கள், 'ஹஜ் செய்யநாடியுள்ளீரா?' எனக் கேட்டார்கள். நான் 'ஆம்!'' என்றதும் 'எதற்காக இஹ்ராம் அணிந்தீர்?' எனக் கேட்டார்கள். நான் 'நபி(ஸல்) அவர்கள் எதற்காக இஹ்ராம் அணிந்தார்களோ அதற்காகவே இஹ்ராம் அணிந்துள்ளேன்!'' என்று கூறினேன். அதற்கவர்கள், 'நல்ல காரியம் செய்தீர்! இறையில்லம் கஅபாவை வலம்வந்துவிட்டு, ஸஃபா மர்வாவுக்கிடையே சஃயு செய்துவிட்டு இஹ்ராமிலிருந்து விடுபட்டு விடும்!' எனக் கூறினார்கள். நான் அவ்வாறே கஅபாவை வலம்வந்துவிட்டு, ஸஃபா மர்வாவுக்கிடையே சஃயு செய்துவிட்டு, கைஸ் கோத்திரத்தைச் சேர்ந்த (மஹ்ரமான) ஒரு பெண்ணிடம் வந்தேன். அவர் என்னுடைய தலையில் பேன் பார்த்தார். பிறகு நான் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணிந்தேன். இந்த அடிப்படையிலேயே நான் உமரின் ஆட்சிக்காலம் வரை மக்களுக்குத் தீர்ப்பளித்துக் கொண்டிருந்தேன். உமர்(ரலி), 'அல்லாஹ்வின் வேதத்தைப் பார்த்தால் அது நம்மை (ஹஜ்ஜையும் உம்ராவையும்) பூரணமாகச் செய்யுமாறு கட்டளையிடுகிறது; நபி(ஸல்) அவர்களின் நடைமுறையைப் பார்த்தாலும், பலிப்பிராணி அதற்குரிய இடத்தை அடையும் வரை இஹ்ராமிலிருந்து அவர்கள் விடுபடவில்லை எனத் தெரிகிறது!'' என்று கூறினார்கள்.

1796. (அஸ்மா பின்த் அபீ பக்ர்(ரலி) அவர்களின் ஊழியரான) அப்துல்லாஹ் அறிவித்தார்.

அஸ்மா பின்த் அபீ பக்ர்(ரலி) (மக்காவிலுள்ள) ஹஜூன் என்ற இடத்தைக் கடந்து செல்லும் போதெல்லாம்.'' (தன் தூதர்) முஹம்மத்(ஸல்) அவர்களின் மீது அல்லாஹ் கருணை புரிவானாக! (ஒரு முறை) நாங்கள் அவர்களுடன் இங்கு வந்திறங்கினோம்; அப்போது எங்களிடம் (பயண) மூட்டை முடிச்சுகள் அதிகம் இருக்கவில்லை; மேலும், எங்களிடம் (பயண) உணவுகளும் வாகனப் பிராணிகளும் குறைவாகவே இருந்தன் அப்போது நானும், என்னுடைய சகோதரி ஆயிஷா(ரலி), ஸுபைர்(ரலி) ஆகியோரும், மற்றும் இன்னாரும் இன்னாரும் உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்தோம்; கஅபாவை வலம்வந்ததும் இஹ்ராமிலிருந்து விடுபட்டு விட்டோம். பிறகு மாலை நேரத்தில் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணிந்தோம்'' என அஸ்மா(ரலி) கூறினார்.

பகுதி 12

ஹஜ், உம்ரா, புனிதப் போர் ஆகியவற்றை முடித்துவிட்டுத் திரும்பும்போது கூற வேண்டியது.

1797. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் போரிலிருந்தோ, ஹஜ் அல்லது உம்ராவிலிருந்தோ திரும்பும்போதும் மேடான இடங்களில் ஏறும்போதும் மூன்று தக்பீர்கள் கூறுவார்கள். மேலும், 'அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குத் தகுதியானவர் வேறுயாரும் இல்லை! அவன் தனித்தவன் அவனுக்கு இணை யாருமில்லை! அவனுக்கே ஆட்சியும் புகழும்! அவன் அனைத்தின் மீதும் போராற்றலுடையோன் நாங்கள் தவ்பா செய்தவர்களாகவும், எங்கள் இரட்சகனை வணங்கியவர்களாகவும், ஸஜ்தா செய்தவர்களாகவும், அவனைப் புகழ்ந்தவர்களாகவும் திரும்புகிறோம்  அல்லாஹ் தன்னுடைய வாக்குறுதியை உண்மைப் படுத்திவிட்டான்! தன் அடியாருக்கு (முஹம்மத்(ஸல்) அவர்களுக்கு) உதவினான்! அவன் தன்னந் தனியாகவே (எதிரிகளின்) படைகளைத் தோற்கடித்துவிட்டான்'' என்று கூறுவார்கள்.

பகுதி 13

ஹஜ்ஜுக்காக (மக்காவிற்கு) வருபவர்களை வரவேற்பதும் ஒரு பிராணியின் மீது மூவர் சவாரி செய்வதும்.

1798. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் மக்காவுக்கு வந்தபோது அப்துல் முத்தலிப் கோத்திரத்திலுள்ள சிறுவர்கள் அவர்களை வரவேற்றனர். அப்போது நபி(ஸல்) அவர்கள் தமக்கு முன்னால் ஒருவரையும் பின்னால் ஒருவரையும் வாகனத்தில் ஏற்றினார்கள்.

பகுதி 14

(பயணம் முடிந்து) காலை வேளையில் வீட்டிற்கு வருதல்.

1799. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

''நபி(ஸல்) அவர்கள் மக்காவை நோக்கிப் புறப்பட்டால் ஷஜரா எனுமிடத்திலுள்ள மஸ்ஜிதிற்கு வந்து தொழுவார்கள். மக்காவிலிருந்து திரும்பும்போது பத்னுல் வாதியிலுள்ள துல்ஹுலைஃபாவில் வந்து தொழுவார்கள்; மேலும் அங்கேயே காலை வரை தங்குவார்கள்.''

பகுதி 15

(பயணம் முடிந்து) மாலை வேளையில் வீட்டிற்கு வருதல்.

1800. அனஸ்(ரலி) அறிவித்தார்.

''நபி(ஸல்) அவர்கள் தங்களின் வீட்டிற்கு இரவு நேரத்தில் வரமாட்டார்கள். காலையிலோ, மாலையிலோ தான் வருவார்கள்.''

பகுதி 16

மதீனாவை அடைந்ததும் இரவு நேரத்தில் வீட்டிற்குச் செல்லக்கூடாது.

1801. ஜாபிர்(ரலி) அறிவித்தார்.

(பயணத்திலிருந்து திரும்பும் போது) இரவு நேரத்தில் வீட்டிற்குச் செல்வதை நபி(ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள்.

பகுதி 17

மதீனாவை அடைந்ததும் ஒட்டகத்தை விரைவாகச் செலுத்துதல்.

1802. அனஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் பயணத்திலிருந்து திரும்பி மதீனாவின் உயரமான பாதைகளைப் பார்க்கும்போது தம் ஒட்டகத்தை விரைந்து செலுத்துவார்கள்; வாகனத்தை அன்புடன் தட்டிக் கொடுப்பார்கள்.

மற்றோர் அறிவிப்பில் உயரமான பாதைகள் என்பதற்குப் பதிலாக சுவர்கள் என்று கூறப்பட்டுள்ளது.

பகுதி 18

அல்லாஹ் கூறினான்:

''(முன்) வாசல்கள் வழியாக வீடுகளுக்குச் செல்லுங்கள்!'' (திருக்குர்ஆன் 02:189)

1803. பராஉ(ரலி) அறிவித்தார்.

அன்ஸாரிகள் ஹஜ் செய்துவிட்டு வரும்போது தங்கள் வீடுகளின் (முன்) வாசல்கள் வழியாக உள்ளே செல்ல மாட்டார்கள். மாறாக, புழக்கடைகள் வழியாகச் செல்வார்கள். அப்போது அன்ஸாரிகளைச் சேர்ந்த ஒருவர் (முன்) வாசல் வழியாக வீட்டிற்குச் சென்றார். இது (மற்றவர்களால்) குறை கூறப்பட்டது. அப்போது 'உங்கள் வீடுகளுக்குள் புழக்கடைகள் (பின் வாசல்கள்) வழியாகச் செல்வது நன்மையான காரியமன்று; மாறாக (அல்லாஹ்வை) அஞ்சி நடப்பதே நன்மையான காரியமாகும். எனவே, வீடுகளுக்கு அதன் வாசல்கள் வழியாகச் செல்லுங்கள்!'' (திருக்குர்ஆன் 02:189) என்ற இறைவசனம் அன்ஸாரிகளாகிய எங்களின் விஷயத்தில் இறங்கியது.

பகுதி 19

பயணம் வேதனையில் ஒரு பகுதியாகும்.

1804. 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

''பயணம் வேதனையில் ஒரு பகுதியாகும். அது ஒருவரின் உணவையும் பானத்தையும் உறக்கத்தையும் தடுத்து விடுகிறது. எனவே, ஒருவர் தம் தேவையை முடித்ததும் விரைந்து தம் குடும்பத்தாரிடம் செல்லட்டும்.''

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பகுதி 20

பயணி, வீட்டுக்கு விரைந்து செல்ல வேண்டியிருந்தால் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்?

1805. உமர்(ரலி) அவர்களின் ஊழியாரான அஸ்லம்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) மக்கா செல்லும் வழியில் நான் அவர்களுடன் (பயணம் செய்து) இருந்தேன். (அவரின் மனைவி) ஸஃபிய்யா பின்த் அபீ உபைத் என்பவர் கடும் வேதனையில் இருக்கும் செய்தி அவர்களுக்குக் கிடைத்தது. உடனே, பயணத்தை விரைவுபடுத்தினார்கள். அடிவானத்தின் செம்மை மறைந்த பின் (வாகனத்திலிருந்து) இறங்கி மக்ரிபையும் இஷாவையும் சேர்த்துத் தொழுதார்கள். 'நபி(ஸல்) அவர்கள் விரைந்து பயணம் செய்வதாக இருந்தால் மக்ரிபைத் தாமதப்படுத்தி இரண்டு தொழுகைகளையும் சேர்த்துத் தொழுவதை பார்த்திருக்கிறேன்!'' என்றும் குறிப்பிட்டார்கள்.
Previous Post Next Post