அத்தியாயம் 22 தோப்புக் குத்தகை

ஸஹீஹ் முஸ்லிம்
அத்தியாயம் 22
தோப்புக் குத்தகை

பாடம் : 1 விளையும் கனிகள் மற்றும் தானியங்களில் ஒரு பகுதியைக் கொடுத்துவிட வேண்டும் எனும் நிபந்தனையின் பேரில் தோப்பைக் குத்தகைக்கு விடுவது.
3153. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கைபரில் உள்ள மரங்களையும் நிலங்களையும் "அவற்றின் விளைச்சலான பழங்கள் மற்றும் தானியங்களில் பாதியை (இஸ்லாமிய அரசுக்கு)க் கொடுத்துவிட வேண்டும்" எனும் நிபந்தனையின் பேரில் கைபர்வாசிகளுடன் ஒப்பந்தம் செய்து கொண்டார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 22
3154. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கைபரில் உள்ள மரங்களையும் நிலங்களையும் "அவற்றின் விளைச்சலான பழங்கள் மற்றும் தானியங்களில் பாதியை (தமது அரசுக்கு)க் கொடுத்துவிட வேண்டும்" எனும் நிபந்தனையின் பேரில் கைபர்வாசிகளுக்கு வழங்கினார்கள். (இந்த வருமானத்திலிருந்தே) தம் துணைவியருக்கு வருடாந்திரச் செலவுத் தொகையாக பேரீச்சம் பழத்தில் எண்பது "வஸ்க்"குகளும் தொலி நீக்கப்படாத கோதுமையில் இருபது "வஸ்க்"குகளும் வழங்கிவந்தார்கள்.
உமர் (ரலி) அவர்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றபோது, (யூதர்களை நாடு கடத்திவிட்டு) கைபர் நிலங்களை (மக்களிடையே) பங்கிட்டுக் கொடுத்தார்கள்; நபி (ஸல்) அவர்களின் துணைவியருக்குத் தாம் (கைபரில்) நிலங்களையும் பாசன நீரையும் ஒதுக்கீடு செய்யவோ, அல்லது (வழக்கம் போலவே பேரீச்ச பழங்களிலும் கோதுமையிலும்) குறிப்பிட்ட "வஸ்க்"கு களுக்கு ஒவ்வோர் ஆண்டும் பொறுப்பேற்றுக்கொள்ளவோ தயார் என அறிவித்து உமர் (ரலி) அவர்கள் விருப்பமளித்தார்கள்.
(இதில்) நபியவர்களின் துணைவியர் இரு வேறு நிலைகளை மேற்கொண்டனர். அவர்களில் சிலர், நிலத்தையும் பாசன நீரையும் பெற்றுக்கொள்வதைத் தேர்ந்தெடுத்தனர். வேறுசிலர், ஒவ்வோர் ஆண்டும் குறிப்பிட்ட "வஸ்க்"குகளைப் பெற்றுக்கொள்வதைத் தேர்ந்தெடுத்தனர். நிலத்தையும் பாசன நீரையும் தேர்ந்தெடுத்தவர்களில் ஆயிஷா (ரலி) அவர்களும் ஹஃப்ஸா (ரலி) அவர்களும் அடங்குவர்.
அத்தியாயம் : 22
3155. மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கைபரில் உள்ள மரங்களையும் நிலங்களையும் "அவற்றின் விளைச்சலான தானியங்கள் மற்றும் பழங்களில் பாதியை (இஸ்லாமிய அரசுக்கு)க் கொடுத்துவிட வேண்டும்" எனும் நிபந்தனையின் பேரில் கைபர்வாசிகளுடன் ஒப்பந்தம் செய்துகொண்டார்கள்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
ஆயினும், இந்த அறிவிப்பில், "ஆயிஷா (ரலி) அவர்களும் ஹஃப்ஸா (ரலி) அவர்களும் நிலத்தையும் பாசன நீரையும் தேர்ந்தெடுத்தவர்களில் அடங்குவர்" எனும் குறிப்பு இடம் பெறவில்லை. மேலும், இதில் "உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் துணைவியருக்குத் தாம் நிலங்களை ஒதுக்கீடு செய்யத் தயார் என அறிவித்து விருப்பமளித்தார்கள்" என இடம்பெற்றுள்ளது. பாசன நீரைப் பற்றிய குறிப்பு இல்லை.
அத்தியாயம் : 22
3156. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
கைபர் வெற்றி கொள்ளப்பட்டபோது, யூதர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் "நாங்கள் இங்கேயே தங்கி,இந்த நிலத்தில் பயிரிட்டு உழைக்கிறோம். இவற்றின் விளைச்சலான பழங்கள், தானியங்கள் ஆகியவற்றில் பாதியைப் பெற்றுக்கொள்கிறோம் (மீதிப்பாதியை அரசுக்குத் தந்துவிடுகிறோம்); இதற்கு எங்களை அனுமதிக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்கள். அவ்வாறே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இதன்படி நாம் விரும்பும் (காலம்)வரை நீங்கள் இங்கேயே தங்கிப் பயிரிட அனுமதிக்கிறோம்" என்று கூறினார்கள்.
மற்ற விவரங்கள் மேற்கண்ட இரு ஹதீஸ்களில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. மேலும், இந்த அறிவிப்பில், "கைபர் விளைச்சலில் கிடைத்த பழங்கள் (ஐந்து பாகங்களாகப் பிரிக்கப்பட்டு, போர்வீரர்களின்) பங்குகளுக்கேற்ப பங்கிடப்பட்டுவந்தன. ஐந்தில் ஒரு பாகத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எடுத்துவந்தார்கள்" எனும் தகவல் கூடுதலாக இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 22
3157. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(கைபர் வெற்றிக்குப் பின்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், கைபர் வாழ் யூதர்களிடம் "அவர்கள் தம் நிலங்களில் தமது சொந்தச் செலவில் பயிரிட்டு உழைக்க வேண்டும்; விளையும் கனிகளில் பாதியை அல்லாஹ்வின் தூதரிடம் (பொது நிதியத்துக்காக) வழங்க வேண்டும்" எனும் நிபந்தனையின் பேரில் கைபரின் பேரீச்சமரங்களையும் நிலங்களையும் ஒப்படைத்தார்கள்.
அத்தியாயம் : 22
3158. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(கலீஃபா) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் யூதர்களையும் கிறித்தவர்களையும் "ஹிஜாஸ்" மாநிலத்திலிருந்து நாடு கடத்தினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கைபரை வெற்றி கொண்டபோதே அங்கிருந்த யூதர்களை வெளியேற்றிவிட விரும்பினார்கள். ஏனெனில், அந்தப் பிரதேசம் வெற்றிகொள்ளப்பட்ட பின் அது அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் முஸ்லிம்களுக்கும் உரியதாகிவிட்டிருந்தது. ஆகவேதான், யூதர்களை அங்கிருந்து வெளியேற்ற விரும்பினார்கள். இந்நிலையில், யூதர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், "நாங்கள் இங்கேயே தங்கி, இந்த நிலங்களில் பயிரிட்டு உழைக்கும் பொறுப்பை ஏற்கிறோம். இவற்றின் விளைச்சலில் பாதியைப் பெற்றுக் கொள்கிறோம் (மீதியை மதீனா அரசுக்குச் செலுத்திவிடுகிறோம்); இதற்கு எங்களை அனுமதிக்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்கள்.
அவ்வாறே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இதன்படி நாம் விரும்பும்வரை நீங்கள் இங்கே தங்கிப் பயிரிட அனுமதிக்கிறோம்" என்று கூறினார்கள். ஆகவே, உமர் (ரலி) அவர்கள் தமது ஆட்சிக் காலத்தில் அந்த யூதர்களை "தைமா" "அரீஹா" (ஜெரிக்கோ) ஆகிய பகுதிகளுக்கு நாடுகடத்தி அனுப்பும்வரை அவர்கள் அங்கேயே (நிலங்களைப் பயிரிட்டு, வரி செலுத்தி) வசித்துவந்தார்கள். - இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 22
பாடம் : 2 மரம் நடுதல், பயிர் செய்தல் ஆகியவற்றின் சிறப்பு.
3159. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
முஸ்லிம் ஒருவர் ஒரு மரத்தை நட்டு வைத்து, அதிலிருந்து (அதன் இலைகள், கனிகள் ஆகியவை பறவைகளாலும் கால் நடைகளாலும்) உண்ணப்பட்டால், அதுவும் அவருக்கு ஒரு தர்மமாக அமையாமல் இருப்பதில்லை. அதிலிருந்து களவாடப்பட்டதும் அவருக்கு ஒரு தர்மமாக அமையும்; அதிலிருந்து வன விலங்குகள் உண்பதும் அவருக்கு ஒரு தர்மமாகவே அமையும். அதிலிருந்து பறவைகள் கொத்தித் தின்றதும் அவருக்கு ஒரு தர்மமாகவே அமையும்; அதில் எவரேனும் சேதம் விளைவித்தால் அதுவும் அவருக்கு ஒரு தர்மமாகவே அமையும். - இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 22
3160. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் உம்மு முபஷ்ஷிர் அல்அன்சாரிய்யா (ரலி) அவர்களது பேரீச்சந்தோப்பிற்குச் சென்றார்கள். உம்மு முபஷ்ஷிர் (ரலி) அவர்களிடம், "இந்தப் பேரீச்ச மரங்களை நட்டுவைத்தது யார்? முஸ்லிமா அல்லது இறைமறுப்பாளரா?" என்று கேட்டார்கள். அதற்கு அவர், "இல்லை; ஒரு முஸ்லிம்தாம் (நட்டுவைத்தார்)" என்று விடையளித்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், "முஸ்லிம் ஒருவர் மரமொன்றை நட்டுவைத்து, அல்லது விதையொன்றை விதைத்துப் பயிர் செய்து அதிலிருந்து (வரும் விளைச்சலை அல்லது கனிகளை) ஒரு மனிதனோ கால்நடையோ அல்லது (உயிரினம்) ஏதேனும் ஒன்றோ உண்டால், அது அவருக்கு ஒரு தர்மமாகவே அமையும்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 22
3161. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு முஸ்லிமான மனிதர் ஒரு மரத்தை நட்டுவைத்து, அல்லது விதை விதைத்து விவசாயம் செய்து, அதிலிருந்து ஒரு வனவிலங்கோ அல்லது ஒரு பறவையோ அல்லது வேறு ஏதேனும் ஒன்றோ உண்டால், அதனால் அவருக்கு ஒரு (தர்மம் செய்ததற்கான) நன்மை கிடைக்காமல் இருப்பதில்லை.
இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 22
3162. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் உம்மு மஅபத் (ரலி) அவர்களது பேரீச்சந்தோப்புக்குச் சென்றார்கள். அவரிடம், "உம்மு மஅபதே! இந்தப் பேரீச்சமரங்களை நட்டு வைத்தது யார்? முஸ்லிமா அல்லது இறை மறுப்பாளரா?" என்று கேட்டார்கள். அதற்கு அவர், "இல்லை; ஒரு முஸ்லிம்தாம் (நட்டு வைத்தார்)" என்று விடையளித்தார். நபி (ஸல்) அவர்கள், "முஸ்லிம் ஒரு மரத்தை நட்டுவைத்து, அதிலிருந்து ஒரு மனிதனோ அல்லது ஒரு கால்நடையோ அல்லது ஒரு பறவையோ உண்டால், மறுமைநாள்வரை அது அவருக்கு ஒரு தர்மமாகவே அமையும்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 22
3163. மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஐந்து அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் அம்ருந் நாகித் (ரஹ்) அவர்கள், அம்மார் (ரஹ்) அவர்களிடமிருந்து அறிவிக்கும் அறிவிப்பிலும், அபூகுறைப் (ரஹ்) அவர்கள் அபூமுஆவியா (ரஹ்) அவர்களிடமிருந்து அறிவிக்கும் அறிவிப்பிலும் "உம்மு முபஷ்ஷிர் (ரலி) அவர்கள் கூறினார்கள்" என்று இடம் பெற்றுள்ளது.
முஹம்மத் பின் ஃபுளைல் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "ஸைத் பின் ஹாரிஸா (ரலி) அவர்களின் துணைவியார் கூறினார்" என இடம்பெற்றுள்ளது.
அபூமுஆவியா (ரஹ்) அவர்களிடமிருந்து இப்னு இஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் அறிவிக்கும் அறிவிப்பில் சில நேரங்களில் "உம்மு முபஷ்ஷிர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து கூறினார்கள்" எனவும், வேறு சில நேரங்களில் அவ்வாறு (உம்மு முபஷ்ஷிர் பெயர்) கூறாமலும் இடம்பெற்றுள்ளது.
இவர்கள் அனைவருமே மேற்கண்ட ஹதீஸ்களில் உள்ளதைப் போன்றே அறிவித்துள்ளனர்.
அத்தியாயம் : 22
3164. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
முஸ்லிம் ஒருவர் ஒரு மரத்தை நட்டு வைத்து, அல்லது விதை விதைத்து விவசாயம் செய்து, அதிலிருந்து (அதன் விளைச்சலை அல்லது கனிகளை) ஒரு பறவையோ அல்லது ஒரு மனிதனோ அல்லது ஒரு பிராணியோ உண்டால்,அதன் காரணத்தால் ஒரு தர்மம் (செய்ததற்கான பிரதிபலன்) அவருக்குக் கிடைக்காமல் இராது.
இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 22
3165. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அன்சாரிப் பெண்களில் ஒருவரான உம்மு முபஷ்ஷிர் (ரலி) அவர்களது பேரீச்சந் தோப்பிற்குச் சென்றார்கள். "இந்தப் பேரீச்ச மரங்களை நட்டவர் யார்? முஸ்லிமா, அல்லது இறைமறுப்பாளரா?" என்று கேட்டார்கள். மக்கள், "ஒரு முஸ்லிம்தான் (நட்டுவைத்தார்)" என்று கூறினர்.
மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸ்களில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 22
பாடம் : 3 சேதமடைந்த பழங்களுக்கான கிரயத்தைத் தள்ளுபடி செய்தல்.
3166. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீ உன் சகோதரரிடம் (உனது மரத்திலுள்ள) பழங்களை விற்றுவிட, (அவர் பழங்களைப் பறிப்பதற்கு முன்) அவற்றுக்குச் சேதம் ஏதும் ஏற்பட்டால், அவரிடமிருந்து (கிரயம்) எதையும் பெறுவதற்கு உனக்கு அனுமதி இல்லை;எந்த உரிமையுமின்றி உன் சகோதரரின் பொருளை நீ எந்த அடிப்படையில் எடுத்துக்கொள்ள முடியும்?
இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 22
3167. ஹுமைத் பின் அபீஹுமைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அனஸ் (ரலி) அவர்கள், "நபி (ஸல்) அவர்கள், மரத்திலுள்ள பேரீச்சங்கனிகள் பக்குவம் அடையாதவரை அவற்றை விற்பதற்குத் தடை விதித்தார்கள்" என்று கூறினார்கள். நாங்கள் அனஸ் (ரலி) அவர்களிடம் "பக்குவமடைதல் என்றால் என்ன?" என்று கேட்டோம். "அது சிவப்பு நிறத்தையும் மஞ்சள் நிறத்தையும் அடைவதாகும்" என்று கூறிவிட்டு, "அல்லாஹ் மரத்திலுள்ள கனிகளைத் தடுத்துவிட்டால், நீ எந்த அடிப்படையில் உன் சகோதரரின் பொருளை எடுத்துக்கொள்ள முடியும் சொல்" என்றார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், மரத்திலுள்ள கனிகள் பக்குவமடையாத வரை அவற்றை விற்பதற்குத் தடை விதித்தார்கள். மக்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், "பக்குவமடைதல் என்றால் என்ன?" என்று கேட்டார்கள். "அது சிவப்பு நிறத்தை அடைவதாகும்" என்றார்கள். மேலும், "அல்லாஹ் மரத்திலுள்ள கனிகளைத் தடுத்துவிட்டால், உன் சகோதரரின் பொருள் எந்த அடிப்படையில் உனக்கு அனுமதிக்கப்பட்டதாக ஆகும்?" என்று கேட்டார்கள்.
அத்தியாயம் : 22
3168. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
"அல்லாஹ் அம்மரங்களில் கனிகளைத் தராவிட்டால், எந்த அடிப்படையில் உங்களில் ஒருவர், தம் சகோதரரின் பொருளை அனுமதிக்கப்பட்டதாக ஆக்கிக்கொள்வார்?" என நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள்.
அத்தியாயம் : 22
3169. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், சேதமடைந்த பழங்களுக்கான கிரயத்தைத் தள்ளுபடி செய்துவிடுமாறு உத்தரவிட்டார்கள். - இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 22
பாடம் : 4 (சிரமப்படுவோரின்) கடனைத் தள்ளுபடி செய்வது விரும்பத்தக்கதாகும்.
3170. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் பழங்களை விலைக்கு வாங்கிய ஒருவர் (நஷ்டமடைந்து) பாதிக்கப்பட்டார். அவருக்குக் கடன் அதிகமாகிவிட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இவருக்குத் தர்மம் செய்யுங்கள்" என்று கூறினார்கள். அவ்வாறே மக்கள் அவருக்குத் தர்மம் செய்தனர். அது அவரது கடனை அடைக்கப் போதுமான அளவுக்குத் தேறவில்லை. எனவே, அவருக்குக் கடன் கொடுத்தவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(அவரிடமிருந்து) கிடைப்பதைப் பெற்றுக்கொள்ளுங்கள். அதைத் தவிர உங்களுக்கு வேறெதுவுமில்லை" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடமிருந்து மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 22
3171. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது வீட்டின்) வாசலருகே சச்சரவிட்டுக்கொள்ளும் (இருவரின்) சப்தத்தைக் கேட்டார்கள். அவ்விருவரின் குரல்கள் உயர்ந்தன. ஒருவர் மற்றவரிடம் ஏதோ ஒரு (கடன்) விஷயத்தில் தள்ளுபடி செய்யுமாறும் மென்மையாக நடந்துகொள்ளுமாறும் கேட்டுக்கொண்டிருந்தார். அதற்கு மற்றவர், "அல்லாஹ்வின் மீதாணையாக! நான் (அவ்வாறு) செய்யமாட்டேன்" என்று கூறிக் கொண்டிருந்தார். அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புறப்பட்டு வந்து, "நல்லறத்தைச் செய்யமாட்டேன் என அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுச் சொன்னவர் எங்கே?" என்று கேட்டார்கள். அந்த மனிதர், "நான்தான் அல்லாஹ்வின் தூதரே! (நான் என் சத்தியத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன்;) அவர் விரும்பியது எதுவானாலும் (அது) அவருக்குக் கிடைக்கும்" என்று கூறினார்.
அத்தியாயம் : 22
3172. கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் எனக்கு அப்துல்லாஹ் பின் அபீ ஹத்ரத் (ரலி) அவர்கள் தர வேண்டியிருந்த ஒரு கடனை (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலில் வைத்துத் திருப்பிச் செலுத்தும்படி கேட்டேன். அப்போது (எங்கள்) இருவரின் குரல்களும் உயர்ந்தன. எங்கள் குரலைத் தமது வீட்டிலிருந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டுவிட்டார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்கள் இருவரையும் நோக்கிப் புறப்பட்டுவந்தார்கள். தமது அறையின் திரையை விலக்கி என்னை "கஅபே!" என்று அழைத்தார்கள்.
நான், "இதோ வந்தேன், அல்லாஹ்வின் தூதரே!" என்றேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை நோக்கி, "பாதிக் கடனைத் தள்ளுபடி செய்துவிடு" என்று தமது கரத்தால் சைகை செய்தார்கள். "அவ்வாறே செய்துவிட்டேன், அல்லாஹ்வின் தூதரே!" என்று நான் கூற, (அப்துல்லாஹ் பின் அபீஹத்ரத் (ரலி) அவர்களைப் பார்த்து) "நீங்கள் எழுந்து சென்று அவரது (மீதி) கடனை அடையுங்கள்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அத்தியாயம் : 22
3173. மேற்கண்ட ஹதீஸ் கஅப் பின் மாலிக் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "எனக்கு இப்னு அபீஹத்ரத் (ரலி) அவர்கள் தர வேண்டிய கடனைத் திருப்பிச் செலுத்தும்படி கேட்டேன்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது.
- கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் அபீஹத்ரத் அல் அஸ்லமீ (ரலி) அவர்கள் எனக்குப் பணம் தர வேண்டியிருந்தது. எனவே, அவரைச் சந்தித்து அவரை (நகரவிடாமல்) பிடித்துக் கொண்டேன். எங்கள் குரல்கள் உயரும் அளவிற்கு நாங்கள் பேசிக்கொண்டோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களைக் கடந்து சென்றார்கள். அப்போது அவர்கள் "கஅபே!" என்று என்னை அழைத்து, பாதிக்கடனைத் தள்ளுபடி செய்துவிடு என்பதைப் போன்று தமது கரத்தால் சைகை செய்தார்கள். ஆகவே, அவர் தர வேண்டியிருந்த கடனில் பாதியை மட்டும் பெற்றுக்கொண்டு, மீதிப்பாதியை (தள்ளுபடி செய்து)விட்டேன்.
அத்தியாயம் : 22
பாடம் : 5 ஒரு பொருளை (கடனாக) வாங்கியவர் திவாலாகிவிட்ட நிலையில், அவரிடம் அப்பொருள் இருப்பதைக் கண்டால் விற்றவர் அதைத் திரும்பப் பெற உரிமை உண்டு.
3174. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர், திவாலாகிவிட்ட ஒரு மனிதரிடம் (ஏற்கெனவே தாம் கடனாக விற்ற) தமது பொருள் அப்படியே இருப்பதைக் காண்பாராயின், அதை எடுத்துக்கொள்ள அவருக்கே அதிக உரிமை உண்டு.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் ஒன்பது அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் முஹம்மத் பின் ரும்ஹ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "எந்த மனிதர் திவாலானவர் என அறிவிக்கப்பட்டு விட்டாரோ..." என ஹதீஸ் தொடங்குகிறது.
அத்தியாயம் : 22
3175. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
திவாலாகிவிட்ட மனிதரிடம் ஏற்கெனவே விற்கப்பட்ட பொருள் பயன்படுத்தப்படாமல் அப்படியே காணப்பெற்றால், அது அதை விற்ற அதன் உரிமையாளருக்கே உரியதாகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 22
3176. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர், திவாலான ஒரு மனிதரிடம் (தாம் ஏற்கெனவே கடனாக விற்ற) தமது பொருளை அப்படியே காண்பாராயின்,அவரே அதற்கு அதிக உரிமை உடையவர் ஆவார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "அவரே மற்ற கடன்காரர்களை விட அதிக உரிமை உடையவர் ஆவார்" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 22
3177. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் திவாலான ஒரு மனிதரிடம் (தாம் ஏற்கெனவே கடனாக விற்ற) தமது விற்பனைச் சரக்கை அப்படியே காண்பாராயின், (மற்றவர்களைவிட) அவரே அதற்கு அதிக உரிமை உடையவர் ஆவார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 22
பாடம் : 6 கடனை அடைக்கச் சிரமப்படுபவருக்கு அவகாசம் அளிப்பதன் சிறப்பு.
3178. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களுக்கு முன் வாழ்ந்த மக்களில் ஒரு மனிதரின் உயிரை வானவர்கள் வரவேற்று, அவரிடம், "நீர் (உமது வாழ்நாளில்) ஏதேனும் நற்செயல் புரிந்திருக்கிறீரா?" என்று கேட்டார்கள்.அதற்கு அந்த மனிதர் "இல்லை" என்றார். வானவர்கள் "நன்கு நினைவு படுத்திப்பார்" என்று கூறினர். அவர் (யோசித்துவிட்டு) "நான் மக்களுக்குக் கடன் கொடுத்து வந்தேன். அப்போது (கடனை அடைக்க முடியாமல்) சிரமப்படுவோருக்கு அவகாசம் அளிக்கும்படியும், வசதியுடையோருக்கு (அவர்கள் கடனைத் திருப்பிச் செலுத்த தாமதம் ஏற்பட்டால்) கண்டுகொள்ளாமல் விட்டுவிடும்படியும் என் ஊழியர்களுக்குக் கட்டளையிட்டு வந்தேன்" என்று கூறினார். அல்லாஹ், "அந்த மனிதரின் குற்றங்குறைகளை கண்டு கொள்ளாமல் (மன்னித்து)விடுங்கள்" என்று (வானவர்களிடம்) கூறினான்.
இதை ஹுதைஃபா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 22
3179. ரிப்ஈ பின் ஹிராஷ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(நபித்தோழர்களான) ஹுதைஃபா (ரலி) அவர்களும் அபூமஸ்ஊத் (ரலி) அவர்களும் ஓரிடத்தில் சந்தித்துக்கொண்டனர். அப்போது ஹுதைஃபா (ரலி) அவர்கள், "(முந்தைய காலத்தில் வாழ்ந்த) ஒரு மனிதர் (இறந்த பின்) தம் இறைவனைச் சந்தித்தார். அப்போது அவரிடம் இறைவன், "நீ (ஏதேனும்) நற்செயல் புரிந்திருக்கிறாயா?" என்று கேட்டான். அவர் "எந்த நல்லறமும் செய்ய வில்லை. எனினும், நான் பொருளாதார வசதியுடைய ஒரு மனிதனாக இருந்தேன். எனவே, (மக்களுக்கு நான் கொடுத்துவந்த) பணத்தை (திருப்பித் தருமாறு) மக்களிடம் கோருவேன். அப்போது (என்னிடமிருந்து கடன் வாங்கியவர் கொடுக்கும், அவரால்) இயன்ற தொகையைப் பெற்றுக்கொள்வேன்; இயலாத தொகையைத் தள்ளுபடி செய்துவிடுவேன்" என்று கூறினார்.
உடனே இறைவன், "என் அடியானின் தவறுகளைத் தள்ளுபடி செய்துவிடுங்கள்" என்று (வானவர்களிடம்) கூறினான்"என்றார்கள். அதற்கு அபூமஸ்ஊத் (ரலி) அவர்கள் "இவ்வாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டுள்ளேன்" என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 22
3180. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு மனிதர் இறந்த பின் சொர்க்கத்திற்குச் சென்றார். அப்போது அவரிடம், "நீ என்ன நற்செயல் புரிந்துள்ளாய்?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், "நான் மக்களிடம் கொடுக்கல் வாங்கல் செய்துவந்தேன். அப்போது சிரமப்படுவோருக்கு அவகாசம் அளிப்பேன். காசு விஷயத்தில் பெருந்தன்மையுடன் நடந்து கொள்வேன்" என்று கூறினார். அவருடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டன.
இதை ஹுதைஃபா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள். அப்போது அபூமஸ்ஊத் (ரலி) அவர்கள் "இவ்வாறே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நானும் கேட்டுள்ளேன்" என்றார்கள்.
அத்தியாயம் : 22
3181. ஹுதைஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் அடியார்களில் ஒருவர் (இறந்த பின்) அல்லாஹ்விடம் கொண்டு வரப்பட்டார். அவரிடம் அல்லாஹ், "உலகத்தில் நீ என்ன நற்செயல் புரிந்தாய்?" என்று கேட்டான். (அல்லாஹ்விடம் அவர்கள் எந்தச் செய்தியையும் மறைக்க முடியாது.) அதற்கு அந்த அடியார், "இறைவா! உன் செல்வத்தை எனக்கு நீ வழங்கினாய். அதை வைத்து நான் மக்களிடம் கொடுக்கல் வாங்கல் செய்துவந்தேன். அப்போது பெருந்தன்மையுடன் நடந்து கொள்வதே எனது இயல்பாக இருந்தது. வசதியுடையவரிடம் மென்மையாக நடந்து கொள்வேன்: சிரமப்படுபவருக்கு அவகாசம் அளிப்பேன்" என்று சொன்னார்.
அதற்கு அல்லாஹ், "இ(வ்வாறு பெருந்தன்மையுடன் நடப்ப)தற்கு உன்னைவிட நானே மிகவும் தகுதியுடையவன். (எனவே,) என் அடியானின் தவறுகளைத் தள்ளுபடி செய்யுங்கள்" என்று (வானவர்களிடம்) கூறினான்.
(ஹுதைஃபா (ரலி) அவர்கள் இவ்வாறு கூறியதைக் கேட்ட) உக்பா பின் ஆமிர் அல்ஜுஹனீ (ரலி) அவர்களும் அபூமஸ்ஊத் அல்அன்சாரி (ரலி) அவர்களும், "இவ்வாறே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வாயிலிருந்து நாங்கள் செவியுற்றோம்" என்று கூறினர்.
அத்தியாயம் : 22
3182. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களுக்கு முன் வாழ்ந்த மக்களில் ஒரு மனிதர் (இறந்த பின்) விசாரணை செய்யப்பட்டார். அவரிடம் (அவரது வினைச்சீட்டில்) எந்த நற்செயலும் காணப்படவில்லை. எனினும், அவர் மக்களுடன் கலந்துறவாடுபவராய் இருந்தார். அவர் வசதியுடையவராக இருந்தார். தம் பணியாட்களிடம், சிரமப்படுவோரின் கடனைத் தள்ளுபடி செய்துவிடுமாறு கூறிவந்தார். அல்லாஹ், "இ(வ்வாறு தள்ளுபடி செய்வ)தற்கு அவரை விட நாமே மிகவும் தகுதியுடையோர். (எனவே,)அவருடைய தவறுகளைத் தள்ளுபடி செய்துவிடுங்கள்" என்று (வானவர்களிடம்) கூறினான்.-இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 22
3183. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(முற்காலத்தில்) ஒரு மனிதர் மக்களுக்குக் கடன் கொடுத்து (உதவி) வந்தார். (அதை வசூலிக்கச் சென்ற)தம் ஊழியரிடம், "(வசதியின்றிச்) சிரமப்படுபவரிடம் நீர் சென்றால் (அவரைக் கண்டுகொள்ளாமல்) மன்னித்து(க் கடனைத் தள்ளுபடி செய்து)விடு. அல்லாஹ்வும் நம்மை(க் கண்டுகொள்ளாமல்) மன்னித்துவிடக்கூடும்" என்று சொல்லி வந்தார். அவர் (இறந்த பின்) அல்லாஹ்வைச் சந்தித்தபோது (அவருடைய பிழைகளைப் பொறுத்து) அவரை அல்லாஹ் மன்னித்துவிட்டான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 22
3184. அப்துல்லாஹ் பின் அபீகத்தாதா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(என் தந்தை) அபூகத்தாதா (ரலி) அவர்கள், தமக்குக் கடன் தர வேண்டிய ஒருவரைத் தேடினார்கள். அவர் தலைமறைவாகிவிட்டார். பின்னர் அவரைக் கண்டபோது அவர், "நான் (வசதியின்றி) சிரமப்படுபவன்" என்று கூறினார். அதற்கு அபூகத்தாதா (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் மீது சத்தியமாகவா?" என்று கேட்டார்கள். அவர் "அல்லாஹ்வின் மீது சத்தியமாகத்தான்" என்றார். அபூகத்தாதா (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "மறுமை நாளின் துயரங்களிலிருந்து அல்லாஹ் தம்மைக் காப்பாற்ற வேண்டுமென விரும்புகின்றவர், (கடனை அடைக்க முடியாமல்) சிரமப்படுபவருக்கு அவகாசம் அளிக்கட்டும். அல்லது கடனைத் தள்ளுபடி செய்துவிடட்டும்" என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்" என்றார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 22
பாடம் : 7 வசதியுள்ளவர் கடனை இழுத்தடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது; கடனை மாற்றிவிடுவது செல்லும்; செல்வரிடம் கடன் மாற்றிவிடப்பட்டால் அதை ஏற்பது விரும்பத்தக்கதாகும்.
3185. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வசதியுள்ளவர் கடனை இழுத்தடிப்பது அநியாயமாகும். உங்களில் ஒருவரது கடன் வசதியுள்ள (மற்றொரு)வர்மீது மாற்றிவிடப்பட்டால், அவர் அதை ஏற்கட்டும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 22
பாடம் : 8 காடுகளில் உள்ள உபரி நீரை - அது புல் மேய்ச்சலுக்குத் தேவைப்படும் நிலையில் -விற்பதும், அதைப் பிறருக்கு வழங்க மறுப்பதும் தடை செய்யப்பட்டுள்ளன; பொலி காளைக்குக் கட்டணம் பெறுவதும் தடை செய்யப்பட்டுள்ளது.
3186. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தேவைக்கு மேல் எஞ்சியுள்ள தண்ணீரை விற்பதற்குத் தடை விதித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 22
3187. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், பொலி ஒட்டகத்தை வாடகைக்கு விடுவதற்கும், விவசாயம் செய்வதற்காகத் தண்ணீரையும் நிலத்தையும் (அக்கால முறைப்படி) குத்தகைக்கு விடுவதற்கும் இவ்விரண்டுக்குமே தடை விதித்தார்கள்.
அத்தியாயம் : 22
3188. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(தேவைக்கு மேல்) எஞ்சியுள்ள தண்ணீரைத் தடுக்கலாகாது. (அவ்வாறு தடுத்தால், அதைச் சுற்றியுள்ள) புற்பூண்டுகளை (மேயவிடாமல் கால்நடைகளை)த் தடுத்ததாகிவிடும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 22
3189. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(தேவைக்கு மேல்) எஞ்சியுள்ள தண்ணீரைத் தடுக்காதீர்கள். (அவ்வாறு தடுத்தால், அப்பகுதியில் தேவைக்கு மேல்) எஞ்சியுள்ள புற்பூண்டுகளைத் தடுத்தவர்களாக நீங்கள் ஆகிவிடுவீர்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 22
3190. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(தேவைக்கு மேல்) எஞ்சியுள்ள தண்ணீரை விற்கலாகாது. (அவ்வாறு விற்றால், அதைச் சுற்றியுள்ள) புற்பூண்டுகளை (கால்நடைகளுக்குத் தராமல்) விற்றதாக ஆகிவிடும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 22
பாடம் : 9 நாய் விற்ற காசு, சோதிடரின் தட்சணை, விபசாரியின் வருமானம் ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளன; மேலும்,பூனையை விற்பதும் தடை செய்யப்பட்டுள்ளது.
3191. அபூமஸ்ஊத் அல்அன்சாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாய் விற்ற காசு, விபசாரியின் வருமானம், சோதிடரின் தட்சணை ஆகியவற்றுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூமஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 22
3192. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சம்பாத்தியங்களிலேயே மோசமானவை, விபசாரியின் வருமானம், நாய் விற்ற காசு, குருதி உறிஞ்சி எடுப்பவர் பெறும் கூலி ஆகியவையே ஆகும்.
இதை ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 22
3193. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நாய் விற்ற காசு அசுத்தமானதாகும்; விபசாரியின் வருமானம் அசுத்தமானதாகும்; குருதி உறிஞ்சி எடுப்பவரின் சம்பாத்தியம் அசுத்தமானதாகும்.
இதை ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 22
3194. அபுஸ்ஸுபைர் முஹம்மத் பின் முஸ்லிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ஜாபிர் (ரலி) அவர்களிடம் நாய் மற்றும் பூனை விற்ற காசைப் பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள் "நபி (ஸல்) அவர்கள் அவற்றைக் கண்டித்தார்கள்" என விடையளித்தார்கள்.
அத்தியாயம் : 22
பாடம் : 10 நாய்களைக் கொன்றுவிடுமாறு வந்துள்ள கட்டளையும், பின்னர் அது மாற்றப்பட்ட விவரமும், வேட்டைக்காகவோ விவசாயப் பண்ணை அல்லது கால்நடைப் பாதுகாப்புக் காகவோ அல்லாமல் வேறு நோக்கங்களுக்காக நாய் வளர்ப்பது கூடாது என்ற விவரமும்.
3195. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறிய தாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நாய்களைக் கொல்லும்படி உத்தரவிட்டார்கள்.
அத்தியாயம் : 22
3196. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நாய்களைக் கொல்லும்படி உத்தரவிட்டார்கள். அதற்காக மதீனாவின் பல பகுதிகளுக்கு ஆட்களை அனுப்பினார்கள்.
அத்தியாயம் : 22
3197. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நாய்களைக் கொல்லும்படி உத்தரவிட்டார்கள்; உடனே நாங்கள் மதீனாவிற்குள்ளேயும் அதன் சுற்று வட்டாரங்களிலும் பரவிச் சென்று, ஒரு நாயையும் விடாமல் அனைத்தையும் கொன்றோம். கிராமவாசிப் பெண்ணைப் பின்தொடர்ந்து செல்லும் நாயையும் நாங்கள் கொன்றோம்.
அத்தியாயம் : 22
3198. அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இப்னு உமர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், வேட்டை நாயையும் ஆடுகள் மற்றும் கால்நடைகளைக் காவல் காக்கும் காவல் நாயையும் தவிர மற்ற நாய்களைக் கொல்லும்படி உத்தரவிட்டார்கள்" என்றார்கள். அப்போது இப்னு உமர் (ரலி) அவர்களிடம், "அபூ ஹுரைரா (ரலி) அவர்கள், "விவசாயப் பண்ணைகளைப் பாதுகாக்கும் நாய்களையும் தவிர" என்று கூறிவருகிறார்களே?" என்று கேட்கப்பட்டது. அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், "அபூஹுரைரா (ரலி) அவர்களுக்குப் பண்ணை நிலம் இருக்கிறது (எனவே, அதைப் பற்றி அவர் நன்கறிவார்)" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 22
3199. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நாய்களைக் கொல்லும்படி எங்களுக்கு உத்தரவிட்டார்கள். அதையடுத்து,கிராமத்திலிருந்து ஒரு பெண் (மதீனாவை நோக்கி) தனது நாயுடன் வந்தால், அதையும் நாங்கள் கொன்றோம். பின்னர் நபி (ஸல்) அவர்கள் நாய்களைக் கொல்வதற்குத் தடை விதித்தார்கள். மேலும், "கண்களுக்கு மேலே இரு வெண் புள்ளிகள் உள்ள கன்னங்கரிய நாயை (மட்டும்) கொல்லுங்கள். ஏனெனில், அது ஷைத்தான் ஆகும்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 22
3200. அப்துல்லாஹ் பின் அல்முஃகஃப்பல் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஆரம்பத்தில்) நாய்களைக் கொல்லும்படி உத்தரவிட்டார்கள். பின்பு, "அவர்களுக்கும் நாய்களுக்கும் எனன நேர்ந்தது (அவற்றைக் கொல்கிறார்களே)?" என்று கூறினார்கள். பின்னர் வேட்டை நாய்களுக்கும் ஆடுகளைக் காவல்காக்கும் நாய்களுக்கும் அனுமதியளித்தார்கள்.
அத்தியாயம் : 22
3201. மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் அல்முஃகஃப்பல் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஐந்து அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், முஹம்மத் பின் ஹாத்திம் (ரஹ்) அவர்கள், யஹ்யா பின் சயீத் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும் அறிவிப்பில், "ஆடுகளைக் காவல் காக்கும் நாய்களுக்கும் வேட்டை நாய்களுக்கும் விவசாயப் பண்ணைகளைக் காவல் காக்கும் நாய்களுக்கும் அனுமதியளித்தார்கள்" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 22
3202. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் நாய் வளர்க்கிறாரோ அவருடைய நற்செயல்களி(ன் நன்மையி)லிருந்து ஒவ்வொரு நாளும் இரண்டு "கீராத்"கள் (கணிசமான) அளவுக்குக் குறைந்துவிடும்; கால் நடைகளைக் காவல் காக்கும் நாயையும் வேட்டைக்கான பயிற்சி அளிக்கப்பட்ட நாயையும் தவிர.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 22
3203. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் நாய் வளர்க்கிறாரோ அவருடைய (நற்செயல்களின்) நன்மையிலிருந்து ஒவ்வொரு நாளும் இரண்டு "கீராத்"கள் (கணிசமான) அளவுக்குக் குறைந்துவிடும்; வேட்டை நாயையும் கால்நடைகளைக் காவல் காக்கும் நாயையும் தவிர.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 22
3204. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் நாய் வளர்க்கிறாரோ அவருடைய நற்செயல்களி(ன் நன்மையி)லிருந்து ஒவ்வொரு நாளும் இரண்டு "கீராத்"கள் (கணிசமான) அளவுக்குக் குறைந்துவிடும்; வேட்டை நாயையும் கால்நடைகளைக் காவல் காக்கும் நாயையும் தவிர.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 22
3205. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் நாய் வளர்க்கிறாரோ அவருடைய நற்செயல்களி(ன் நன்மையி)லிருந்து ஒவ்வொரு நாளும் ஒரு "கீராத்" (கணிசமான) அளவுக்குக் குறைந்துவிடும்; கால்நடைகளைக் காவல் காக்கும் நாயையும் வேட்டை நாயையும் தவிர.
இதன் அறிவிப்பாளரான அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
அபூஹுரைரா (ரலி) அவர்கள் "விளைநிலங்களைப் பாதுகாக்கும் நாயைத் தவிர" என்றும் கூறினார்கள்.- இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 22
3206. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் நாய் வளர்க்கிறாரோ அவருடைய நற்செயல்களி(ன் நன்மையி)லிருந்து ஒவ்வொரு நாளும் இரண்டு "கீராத்"கள் (கணிசமான) அளவுக்குக் குறைந்துவிடும்; வேட்டை நாயையும் கால்நடைகளைக் காவல் காக்கும் நாயையும் தவிர.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும் சாலிம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
அபூஹுரைரா (ரலி) அவர்கள் "விளைநிலங்களைப் பாதுகாக்கும் நாயையும் தவிர" என்று கூறிவந்தார்கள். அபூஹுரைரா (ரலி) அவர்கள் விளைநிலங்கள் உடையவராய் இருந்தார்கள்.
அத்தியாயம் : 22
3207. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எந்த வீட்டார் (தமது இல்லத்தில்) நாய் வளர்க்கின்றனரோ அவர்களுடைய நற்செயல்களி(ன் நன்மையி)லிருந்து ஒவ்வொரு நாளும் இரண்டு "கீராத்"கள் (கணிசமான) அளவுக்குக் குறைந்துவிடும்; கால்நடைகளைக் காவல் காக்கும் நாயையும் வேட்டை நாயையும் தவிர.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 22
3208. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் நாய் வளர்க்கிறாரோ அவருடைய (நற்செயல்களின்) நன்மையிலிருந்து ஒவ்வொரு நாளும் ஒரு "கீராத்" (கணிசமான) அளவுக்குக் குறைந்துவிடும்; விளைநிலங்கள், ஆடுகள் ஆகியவற்றைக் காவல் காக்கும் நாய்களையும் வேட்டை நாய்களையும் தவிர.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 22
3209. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் நாய் வளர்க்கிறாரோ அவருடைய (நற்செயல்களின்) நன்மையிலிருந்து ஒவ்வொரு நாளும் இரண்டு "கீராத்"கள் (கணிசமான) அளவுக்குக் குறைந்துவிடும்; வேட்டை நாயினாலோ அல்லது கால்நடைகளைக் காவல்காக்கும் நாயினாலோ (விளை) நிலங்களைப் பாதுகாக்கும் நாயினாலோ அல்ல.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் அபுத்தாஹிர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "(விளை)நிலங்களைப் பாதுகாக்கும் நாயினாலோ" என்பது இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 22
3210. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் நாய் வளர்க்கிறாரோ அவருடைய நன்மையிலிருந்து ஒவ்வொரு நாளும் ஒரு "கீராத்" (கணிசமான) அளவுக்குக் குறைந்து விடும்; கால்நடைகளைக் காவல் காக்கும் நாயையும், வேட்டை நாயையும், விவசாயப் பண்ணைகளைக் காவல் காக்கும் நாயையும் தவிர.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
இப்னு உமர் (ரலி) அவர்களிடம் அபூ ஹுரைரா (ரலி) அவர்களின் கூற்று எடுத்துரைக்கப்பட்டபோது அவர்கள், "அபூ ஹுரைரா (ரலி) அவர்களுக்கு அல்லாஹ் அருள்புரிவானாக! அவர்கள் விளைநிலங்கள் உடையவராக இருந்தார்கள். (எனவே, அதைப் பற்றி அவர்களுக்கு நன்கு தெரியும்)" என்றுரைத்தார்கள்.
அத்தியாயம் : 22
3211. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் நாய் வளர்க்கிறாரோ அவருடைய நற்செயல்களி(ன் நன்மைகளி)லிருந்து ஒவ்வொரு நாளும் ஒரு "கீராத்" (கணிசமான) அளவுக்குக் குறைந்துவிடும்; விளைநிலங்களையும் கால்நடைகளையும் காவல் காக்கும் நாய்களைத் தவிர.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே இன்னோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 22
3212. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் வேட்டை நாய், ஆடுகளைக் காவல்காக்கும் நாய் அல்லாமல் வேறு நாய்களை வளர்க்கிறாரோ அவருடைய நற்செயல்களி(ன் நன்மையி)லிருந்து ஒவ்வொரு நாளும் ஒரு "கீராத்" (கணிசமான) அளவுக்குக் குறைந்துவிடும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 22
3213. சாயிப் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஷனூஆ குலத்தைச் சேர்ந்த நபித் தோழர்களில் ஒருவரான சுஃப்யான் பின் அபீஸுஹைர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "விளைநிலங்கள் மற்றும் கால்நடைகளைக் காவல்காக்கும் தேவையேதுமின்றி யார் நாய் வளர்க்கிறாரோ அவருடைய நற்செயல்களி(ன் நன்மையி)லிருந்து ஒவ்வொரு நாளும் ஒரு "கீராத்" (கணிசமான) அளவுக்குக் குறைந்துவிடும்" என்று கூறியதை நான் கேட்டேன்" என்றார்கள்.
நான், "இதை நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றீர்களா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "ஆம்; இந்தப் பள்ளிவாசலின் அதிபதி மீதாணையாக!" என்றார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் சாயிப் பின் யஸீத் (ரஹ்) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "எங்களிடம் ஷனூஆ குலத்தைச் சேர்ந்த சுஃப்யான் பின் அபீஸுஹைர் (ரலி) அவர்கள் ஒரு தூதுக்குழுவில் வந்திருந்தார்கள். அப்போது அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்..." என (மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்று) அறிவித்தார்கள் என்று காணப்படுகிறது.
அத்தியாயம் : 22
பாடம் : 11 குருதி உறிஞ்சி எடுப்பதற்காக ஊதியம் பெறுவது அனுமதிக்கப்பட்டதாகும்.
3214. ஹுமைத் அத்தவீல் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம் குருதி உறிஞ்சி எடுப்பவரின் வருமானம் பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குருதி உறிஞ்சி எடுக்கச் செய்துள்ளார்கள். அவர்களுக்கு ("பனூ பயாளா" குலத்தாரின் அடிமையான) அபூதைபா (நாஃபிஉ) என்பவர் குருதி உறிஞ்சி எடுத்தார். அவருக்கு ஊதியமாக இரண்டு "ஸாஉ" உணவுப் பொருட்கள் கொடுக்குமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். மேலும், அபூதைபாவின் உரிமையாளர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பேசியதையடுத்து (அவர்களுக்கு அவர் செலுத்த வேண்டிய வரியை) உரிமையாளர்கள் தள்ளுபடி செய்தனர்.
மேலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "(அரபுகளே!) நீங்கள் எவற்றால் சிகிச்சை பெறுகிறீர்களோ அவற்றிலெல்லாம் சிறந்தது, குருதி உறிஞ்சி எடுப்பதாகும் என்றோ, அது உங்களின் சிறந்த சிகிச்சைகளில் உள்ளதாகும்" என்றோ கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 22
3215. மேற்கண்ட ஹதீஸ் ஹுமைத் அத்தவீல் (ரஹ்) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "அனஸ் (ரலி) அவர்களிடம் குருதி உறிஞ்சி எடுப்பவரின் வருமானம் பற்றிக் கேட்கப் பட்டது" என்று ஹதீஸ் ஆரம்பமாகி, "மேலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "நீங்கள் எவற்றால் சிகிச்சை பெறுகிறீர்களோ அவற்றிலெல்லாம் சிறந்தது குருதி உறிஞ்சி எடுப்பதும் வெண்கோஷ்டமும்தான். உங்கள் குழந்தைகளை (அவர்களது அடிநாக்கு அழற்சியைப் போக்க தொண்டையில்) குத்தித் துன்புறுத்தாதீர்கள் என்று கூறினார்கள்" என ஹதீஸ் முடிகிறது.
அத்தியாயம் : 22
3216. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் குருதி உறிஞ்சி எடுக்கும் எங்கள் அடிமை (ஊழியர்) ஒருவரை அழைத்து வரச்செய்து, தமக்குக் குருதி உறிஞ்சி எடுக்கச் செய்தார்கள். அவருக்கு ஒரு "ஸாஉ" அல்லது ஒரு "முத்"து அல்லது இரண்டு "முத்"து (அளவுக்கு உணவுப் பொருட்களை ஊதியமாகக்) கொடுக்குமாறு உத்தரவிட்டார்கள்; அவர் சம்பந்தமாக (அவருடைய உரிமையாளர்களிடம்) பேசினார்கள். அதையடுத்து அவர் செலுத்த வேண்டியிருந்த வரி குறைக்கப்பட்டது.
அத்தியாயம் : 22
3217. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குருதி உறிஞ்சி எடுத்துக்கொண்டார்கள். குருதி உறிஞ்சி எடுப்பவருக்கு அவருடைய ஊதியத்தைக் கொடுத்தார்கள். மேலும், தமது மூக்கில் (சொட்டு) மருந்து விட்டுக்கொண்டார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 22
3218. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
"பனூ பயாளா" குலத்தாரின் அடிமை ஒருவர் நபி (ஸல்) அவர்களுக்குக் குருதி உறிஞ்சி எடுத்தார். அவருக்குரிய ஊதியத்தை நபி (ஸல்) அவர்கள் கொடுத்தார்கள். அவருடைய உரிமையாளரிடம் பேசி, அவர் செலுத்த வேண்டியிருந்த வரியையும் குறைக்கச் செய்தார்கள். அது (அதாவது குருதி உறிஞ்சி எடுப்பதற்குக் கூலி பெறுவது), தடை செய்யப்பட்டதாக இருந்தால், அவருக்கு நபி (ஸல்) அவர்கள் (ஊதியம்) கொடுத்திருக்கமாட்டார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 22
பாடம் : 12 மதுபான வியாபாரம் தடை செய்யப்பட்டுள்ளது.
3219. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
(முழு மதுவிலக்கு வருவதற்கு முன்பு ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவில் (மக்களுக்கு) உரையாற்றினார்கள். அப்போது "மக்களே! அல்லாஹ் மது(விலக்கு) குறித்து மறைமுகமாகக் குறிப்பிடுகின்றான். விரைவில் அது தொடர்பாக ஓர் ஆணையை அல்லாஹ் அருளக்கூடும். எனவே, தம்மிடம் மதுவில் ஏதேனும் வைத்திருப்பவர் அதை (இப்போதே) விற்று, அதன் மூலம் பயனடைந்துகொள்ளட்டும்!" என்று கூறினார்கள்.
சிறிது காலம்கூடக் கழிந்திருக்கவில்லை. அதற்குள் நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹ் மதுவைத் தடை செய்துவிட்டான். எனவே, தம்மிடம் மதுவில் ஏதேனும் வைத்திருப்பவரை இந்த வசனம் அடைந்தால், மதுவை அவர் அருந்தவும் வேண்டாம்; விற்கவும் வேண்டாம்" என்று சொன்னார்கள். உடனே, மக்கள் தங்களிடமிருந்த மதுவுடன் மதீனாவின் சாலையை நோக்கிச் சென்று அவற்றைக் கொட்டி விட்டனர்.
அத்தியாயம் : 22
3220. ஸைத் பின் அஸ்லம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
எகிப்தியரான அப்துல்லாஹ் பின் வஅலா அஸ்ஸபயீ (ரஹ்) அவர்கள் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்களிடம் (வந்து), திராட்சையிலிருந்து பிழியப்படும் (மது)பானம் குறித்துக் கேட்டார். அதற்கு அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் (பின்வருமாறு) விடையளித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஒரு தோல்பை (நிரம்ப) மதுவை அன்பளிப்பாக வழங்கினார் ஒருவர். அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹ் மதுவைத் தடை செய்துவிட்டது உமக்குத் தெரியுமா?"என்று கேட்டார்கள். அதற்கு அவர், "இல்லை" என்று கூறிவிட்டு, பிறகு (தம் அருகிலிருந்த) ஒரு மனிதரிடம் இரகசியமாக ஏதோ சொன்னார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவரிடம் இரகசியமாக என்ன சொன்னீர்?" என்று கேட்டார்கள். அதற்கு அந்த மனிதர், "அதை விற்றுவிடச் சொன் னேன்" என்றார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "மதுவை அருந்துவதற்குத் தடை விதித்த (இறை)வனே அதை விற்பதற்கும் தடை விதித்துள்ளான்" என்றார்கள். உடனே அம்மனிதர் தோல்பையைத் திறந்துவிட, அதிலுள்ளது (வழிந்தோடிப்) போனது.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 22
3221. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
"அல்பகரா" அத்தியாயத்தின் (வட்டி தொடர்பான) இறுதி வசனங்கள் (2:275 - 281) அருளப்பெற்ற போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புறப்பட்டுச் சென்று அவற்றை மக்களுக்கு ஓதிக்காட்டினார்கள். பிறகு மதுபான வியாபாரத்தைத் தடை செய்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 22
3222. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
"அல்பகரா" அத்தியாயத்தின் இறுதி வசனங்கள் (2:275 - 281) வட்டி தொடர்பாக அருளப்பெற்ற சமயம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பள்ளிவாசலை நோக்கிப் புறப்பட்டுச் சென்று, (அவற்றை ஓதிக்காட்டி,) மதுபான வியாபாரத்தை(யும்) தடை செய்தார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 22
பாடம் : 13 மது, செத்தவை, பன்றி மற்றும் சிலைகள் ஆகியவற்றை விற்பது தடை செய்யப்பட்டுள்ளது.
3223. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின்போது மக்காவில் வைத்து "அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் மதுபானம், செத்தவை, பன்றி மற்றும் சிலைகள் ஆகியவற்றை விற்பனை செய்வதைத் தடை செய்துள்ளனர்"என்று கூறினார்கள். அப்போது, "அல்லாஹ்வின் தூதரே! செத்தவற்றின் கொழுப்புகள் பற்றி என்ன சொல்கிறீர்கள்?அவை கப்பல்களுக்குப் பூசப்படுகின்றன; தோல்களுக்கு அவற்றின் மூலம் மெருகேற்றப்படுகிறது; மக்கள் விளக்கெரிக்க அவற்றைப் பயன்படுத்துகின்றனரே?" என்று கேட்கப்பட்டது.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இல்லை; அது தடை செய்யப்பட்டதுதான்" எனக் கூறிவிட்டு, "அல்லாஹ் யூதர்களைத் தனது அருளிலிருந்து அப்புறப்படுத்துவானாக! அல்லாஹ் யூதர்களுக்குச் செத்தவற்றின் கொழுப்பைத் தடை செய்தபோது, அவர்கள் அதை உருக்கி விற்று, அதன் கிரயத்தை உண்டார்கள்" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 22
3224. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
சமுரா பின் ஜுன்தப் (ரலி) அவர்கள் மதுவை விற்றதாக உமர் (ரலி) அவர்களுக்குத் தகவல் கிடைத்தபோது, "அல்லாஹ் சமுராவைச் சபிப்பானாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "யூதர்களுக்குக் கொழுப்பு தடை செய்யப்பட்டபோது, அவர்கள் அதை உருக்கி விற்றனர். அல்லாஹ் யூதர்களைச் சபிப்பானாக!" என்று கூறியதை அவர் அறியவில்லையா?" என வினவினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 22
3225. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யூதர்களை அல்லாஹ் சபிப்பானாக! அவர்களுக்கு அல்லாஹ் கொழுப்பைத் தடை செய்திருந்தான். ஆனால், அவர்கள் அதை விற்று, அதன் கிரயத்தை உண்டனர்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 22
3226. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யூதர்களை அல்லாஹ் சபிப்பானாக! அவர்களுக்குக் கொழுப்பு தடை செய்யப்பட்டிருந்தது. ஆனால், அவர்கள் அதை விற்று அதன் கிரயத்தை உண்டனர்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 22
பாடம் : 14 வட்டி.
3227. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(எடையில்) சரிக்குச் சரியாகவே தவிர, தங்கத்திற்குத் தங்கத்தை விற்காதீர்கள். அவற்றில் ஒன்றைவிட மற்றொன்றைக் கூட்டி(யோ, குறைத்தோ)விடாதீர்கள். சரிக்குச் சரியாகவே தவிர, வெள்ளிக்கு வெள்ளியை விற்காதீர்கள். அவற்றில் ஒன்றைவிட மற்றொன்றைக் கூட்டி(யோ குறைத்தோ)விடாதீர்கள். அவற்றில் ஒன்று ரொக்கமாகவும் மற்றொன்று தவணையாகவும் இருக்கும் நிலையில் விற்காதீர்கள்.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 22
3228. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களும் பனூலைஸ் குலத்தாரில் ஒருவரும் நானும் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடம் சென்றோம். அப்போது பனூலைஸ் குலத்தைச் சேர்ந்த அம்மனிதர், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "சரிக்குச் சரியாகவே தவிர, வெள்ளிக்கு வெள்ளியை விற்பதையும், சரிக்குச் சரியாகவே தவிர தங்கத்திற்குத் தங்கத்தை விற்பதையும் தடைசெய்தார்கள்" எனத் தாங்கள் தெரிவித்ததாக இதோ இவர் (இப்னு உமர்) என்னிடம் கூறினாரே (அது உண்மையா?)" என்று கேட்டார்.
அதற்கு அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள், தம்மிரு கண்களையும் காதுகளையும் நோக்கி சைகை செய்து "என்னிரு கண்களும் பார்த்தன; என்னிரு காதுகளும் கேட்டன. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "சரிக்குச் சரியாகவே தவிர, தங்கத்தைத் தங்கத்திற்கும் வெள்ளியை வெள்ளிக்கும் விற்காதீர்கள்; அவற்றில் ஒன்றைவிட மற்றொன்றைக் கூட்டி(யோ குறைத்தோ)விடாதீர்கள். அவற்றில் ரொக்கமாகவுள்ள ஒன்றைத் தவணைக்குப் பகரமாக விற்காதீர்கள்;உடனுக்குடன் மாற்றிக்கொண்டாலே தவிர" என்று கூறியதை நான் செவியுற்றேன்" என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் முஹம்மத் பின் ரும்ஹ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "பனூலைஸ் குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதர் இப்னு உமர் (ரலி) அவர்களிடம் அபூசயீத் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து பின்வரும் ஹதீஸை அறிவித்தார்கள்" என்று கூறியதாக ஹதீஸ் ஆரம்பமாகிறது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 22
3229. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எடைக்கு எடையாகவே தவிர, அளவுக்கு அளவாகவே தவிர, சரிக்குச் சரியாகவே தவிர தங்கத்தைத் தங்கத்திற்கு விற்காதீர்கள்; வெள்ளியை வெள்ளிக்கு விற்காதீர்கள்.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 22
3230. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு தங்க நாணயத்தை இரண்டு தங்க நாணயங்களுக்கு (ஒரு தீனாரை இரு தீனார்களுக்கு) விற்காதீர்கள்; ஒரு வெள்ளி நாணயத்தை இரண்டு வெள்ளி நாணயங்களுக்கு (ஒரு திர்ஹமை இரு திர்ஹங்களுக்கு) விற்காதீர்கள்.
இதை உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 22
பாடம் : 15 நாணயமாற்று வியாபாரமும் வெள்ளிக்குத் தங்கத்தை ரொக்கமாக விற்பதும்.
3231. மாலிக் பின் அவ்ஸ் பின் அல்ஹதஸான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் "(எம்மிடமுள்ள தங்கத்தை) வெள்ளி நாணயத்திற்கு மாற்றித் தருபவர் யார்?" என்று கேட்டபடி வந்தேன். அப்போது உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களுக்கு அருகிலிருந்த தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி) அவர்கள், "(எங்கே) உமது தங்கத்தைக் காட்டும். அதைக் கொண்டுவாரும்! எம் ஊழியர் (வெளியூரிலிருந்து) வந்ததும் அதற்குரிய வெள்ளியைத் தருகிறோம்" என்று கூறினார்கள்.
அப்போது உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள், "இல்லை; அல்லாஹ்வின் மீதாணையாக! அவருக்கு வெள்ளியை (உடனடியாக)க் கொடுத்துவிடு. அல்லது அவரது தங்கத்தை அவரிடமே திருப்பிக் கொடுத்துவிடு. ஏனெனில்,அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உடனுக்குடன் அல்லாமல் (தவணை முறையில்) தங்கத்திற்கு வெள்ளியை மாற்றிக் கொள்வது வட்டியாகும்; உடனுக்குடன் அல்லாமல் (தவணை முறையில்) தொலி நீக்கப்பட்ட கோதுமைக்குத் தொலி நீக்கப்பட்ட கோதுமையை மாற்றிக் கொள்வதும் வட்டியாகும்; உடனுக்குடன் அல்லாமல் (தவணை முறையில்) தொலி நீக்கப்படாத கோதுமைக்குத் தொலி நீக்கப்படாத கோதுமையை மாற்றிக்கொள்வதும் வட்டியாகும்; உடனுக்குடன் அல்லாமல் (தவணை முறையில்) பேரீச்சம் பழத்திற்குப் பேரீச்சம் பழத்தை மாற்றிக்கொள்வதும் வட்டியாகும்" என்று கூறினார்கள்" என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 22
3232. அபூகிலாபா அப்துல்லாஹ் பின் ஸைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ஷாம் (சிரியா) நாட்டில் ஓர் அவையில் இருந்தேன். அங்கு முஸ்லிம் பின் யசார் (ரஹ்) அவர்களும் இருந்தார்கள். அப்போது அபுல் அஷ்அஸ் (ரஹ்) அவர்கள் வந்தார்கள். மக்கள், "அபுல் அஷ்அஸ் (வந்துவிட்டார்) அபுல் அஷ்அஸ் (வந்துவிட்டார்)" என்றனர். அவர்கள் (வந்து) அமர்ந்ததும் அவர்களிடம் நான், "எங்கள் சகோதர(ர் முஸ்லிம் பின் யசா)ருக்கு உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் அறிவித்த ஹதீஸைச் சொல்லுங்கள்" என்றேன். அதற்கு அவர்கள், "ஆம்" எனக் கூறிவிட்டுப் பின்வருமாறு அறிவித்தார்கள்:
நாங்கள் ஒரு போருக்காகச் சென்றிருந்தோம். (அப்போரில்) மக்களுக்கு முஆவியா (ரலி) அவர்கள் தளபதியாக இருந்தார்கள். போரின் முடிவில் நாங்கள் ஏராளமான போர்ச் செல்வங்களைப் பெற்றோம். நாங்கள் பெற்ற போர்ச்செல்வத்தில் ஒரு வெள்ளிப் பாத்திரமும் இருந்தது. மக்கள் போர்ச்செல்வங்களைப் பெறுவதற்காக வரும் நாள்வரை (தவணை சொல்லி, வெள்ளி நாணயங்களுக்குப் பதிலாக) அ(ந்தப் பாத்திரத்)தை விற்று விடுமாறு முஆவியா (ரலி) அவர்கள் கூறினார்கள். மக்கள் அதைப் பெறுவதற்காக விரைந்தனர்.
இச்செய்தி உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்களுக்கு எட்டியபோது அவர்கள் எழுந்து, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "தங்கத்தைத் தங்கத்திற்கு விற்பதையும் வெள்ளியை வெள்ளிக்கும், தொலி நீக்கப்பட்ட கோதுமையைத் தொலி நீக்கப்பட்ட கோதுமைக்கும், தொலி நீக்கப்படாத கோதுமையைத் தொலி நீக்கப்படாத கோதுமைக்கும், பேரீச்சம் பழத்தைப் பேரீச்சம் பழத்திற்கும், உப்பை உப்பிற்கும் விற்பதைத் தடை செய்தார்கள்; உடனுக்குடன் சரிக்குச் சரியாக மாற்றிக்கொண்டால் தவிர. யார் அதைவிடக் கூடுதலாகக் கொடுக்கிறாரோ அல்லது கூடுதலாகக் கேட்கிறாரோ அவர் வட்டியைப் பெற்றவர் ஆவார் என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்" என்றார்கள்.
உடனே மக்கள் தாம் பெற்றதை திருப்பிக் கொடுத்துவிட்டனர். இச்செய்தி முஆவியா (ரலி) அவர்களுக்கு எட்டியபோது,அவர்கள் (மக்களிடையே) நின்று உரையாற்றினார்கள். அப்போது, "சிலருக்கு என்ன நேர்ந்தது? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அவர்கள் பல ஹதீஸ்களை அறிவிக்கின்றனர். நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அவர்களது தோழமையில் இருந்திருக்கிறோம். ஆனால், இத்தகைய ஹதீஸ்களை அவர்களிடமிருந்து நாங்கள் கேட்டதில்லை" என்றார்கள்.
உடனே உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் எழுந்து, மீண்டும் அந்த ஹதீஸைக் கூறினார்கள். பிறகு "முஆவியா அவர்கள் வெறுத்தாலும் சரி; (அல்லது அவரது மூக்கு மண்ணைக் கவ்வினாலும் சரி) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றதை நிச்சயமாக நாம் அறிவிப்போம். இருள் கப்பிய ஓர் இரவில் முஆவியா அவர்களது படையில் அவர்களுடன் நான் இல்லாமற்போவது குறித்து நான் பொருட்படுத்தவில்லை" என்று சொன்னார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஹம்மாத் பின் ஸைத் (ரஹ்) அவர்கள் "இவ்வாறுதான் அய்யூப் (ரஹ்) அவர்கள் அறிவித்தார்கள்; அல்லது இதைப் போன்று அறிவித்தார்கள்" என (தன்னடக்கத்துடன்) கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 22
3233. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தங்கத்தைத் தங்கத்திற்கும், வெள்ளியை வெள்ளிக்கும், தொலி நீக்கப்பட்ட கோதுமையைத் தொலி நீக்கப்பட்ட கோதுமைக்கும், தொலி நீக்கப்படாத கோதுமையைத் தொலி நீக்கப்படாத கோதுமைக்கும், பேரீச்சம் பழத்தைப் பேரீச்சம் பழத்திற்கும், உப்பை உப்பிற்கும் சரிக்குச் சரியாக உடனுக்குடன் விற்கலாம். இந்த இனங்கள் மாறுபட்டிருக்கும்போது உடனுக்குடன் மாற்றிக்கொண்டால் நீங்கள் விரும்பியபடி விற்றுக்கொள்ளுங்கள்.
இதை உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 22
3234. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தங்கத்தைத் தங்கத்திற்கும், வெள்ளியை வெள்ளிக்கும், தொலி நீக்கப்பட்ட கோதுமையைத் தொலி நீக்கப்பட்ட கோதுமைக்கும், தொலி நீக்கப்படாத கோதுமையைத் தொலி நீக்கப்படாத கோதுமைக்கும், பேரீச்சம் பழத்தைப் பேரீச்சம் பழத்திற்கும், உப்பை உப்புக்கும் சரிக்குச் சரியாக உடனுக்குடன் விற்கலாம். யாரேனும் கூடுதலாகக் கொடுத்தாலோ, அல்லது கூடுதலாகக் கேட்டாலோ அவர் வட்டி வாங்கிவிட்டார். இ(ந்தப் பாவத்)தில் வாங்கிய வரும் கொடுத்தவரும் சமமானவர்கள் ஆவர்.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "தங்கத்தைத் தங்கத்திற்குச் சரிக்குச் சரியாக விற்கலாம்" என ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 22
3235. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பேரீச்சம் பழத்தைப் பேரீச்சம் பழத்திற்கும், தொலி நீக்கப்பட்ட கோதுமையைத் தொலி நீக்கப்பட்ட கோதுமைக்கும்,தொலி நீக்கப்படாத கோதுமையைத் தொலி நீக்கப்படாத கோதுமைக்கும், உப்பை உப்புக்கும் சரிக்குச் சரியாக உடனுக்குடன் விற்கலாம். யாரேனும் கூடுதலாகக் கொடுத்தாலோ, அல்லது கூடுதலாகக் கேட்டாலோ அவர் வட்டி வாங்கி விட்டார். அவற்றின் இனங்கள் வேறுபட்டிருந்தால் தவிர.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் "உடனுக்குடன்" எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 22
3236. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தங்கத்தைத் தங்கத்திற்குச் சரிக்குச் சரியான எடைக்கு (விற்கலாம்). வெள்ளியை வெள்ளிக்குச் சரிக்குச் சரியான எடைக்கு (விற்கலாம்). ஒருவர் கூடுதலாகக் கொடுத்தாலோ, அல்லது கூடுதலாகக் கேட்டாலோ அது வட்டியாகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 22
3237. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தங்க நாணயத்தைத் தங்க நாணயத்திற்கு, அவற்றுக்கிடையே ஏற்றத்தாழ்வின்றி விற்கலாம்; வெள்ளி நாணயத்தை வெள்ளி நாணயத்திற்கு, அவற்றுக்கிடையே ஏற்றத்தாழ்வின்றி விற்கலாம்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 22
பாடம் : 16 தங்கத்திற்கு வெள்ளியைக் கடனாக விற்பது தடை செய்யப்பட்டுள்ளது.
3238. அபுல் மின்ஹால் அப்துர் ரஹ்மான் பின் முத்இம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
என் கூட்டாளி ஒருவர், (தங்கத்திற்கு) வெள்ளியை ஹஜ் பருவம்வரை கடனாகச் சொல்லி (நாணயமாற்று முறையில்)விற்றார். பின்னர் என்னிடம் வந்து அதைப் பற்றித் தெரிவித்தார். நான், "இது தகாத செயலாகும்" என்றேன். அவர், "அவ்வாறாயின் நான் கடைத் தெருவில் அதை விற்றபோது என்னிடம் யாரும் ஆட்சேபம் தெரிவிக்கவில்லையே?"என்று கேட்டார். ஆகவே, நான் பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்களிடம் சென்று அதைப் பற்றிக் கேட்டேன்.
அவர்கள், "நபி (ஸல்) அவர்கள் (நாடு துறந்து) மதீனாவுக்கு வந்தபோது, நாங்கள் இந்த வியாபாரம் செய்து கொண்டிருந்தோம். அப்போது அவர்கள், "உடனுக்குடன் (நாணயமாற்று) ஏற்பட்டால் அதனால் குற்றமில்லை; கடனாக (தங்கத்தை வெள்ளிக்கோ, வெள்ளியைத் தங்கத்திற்கோ) மாற்றினால்தான் அது வட்டியாகும்" என்று கூறினார்கள். நீர் ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்களிடம் போ(ய் இதைப் பற்றி வினா எழுப்பு)வீராக! ஏனெனில், அவர் என்னைவிட பெரிய வணிகர் ஆவார்" என்றார்கள். அவ்வாறே நான் ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்களிடம் சென்று கேட்டபோது, பராஉ (ரலி) அவர்கள் கூறியதைப் போன்றே அவர்களும் கூறினார்கள்.
அத்தியாயம் : 22
3239. அபுல் மின்ஹால் அப்துர் ரஹ்மான் பின் முத்இம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்களிடம் நாணயமாற்று வியாபாரம் குறித்துக் கேட்டேன். அவர்கள், "நீர் ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்களிடம் கேளும். அவர் (என்னைவிட) நன்கு அறிந்தவர்" என்றார்கள். அவ்வாறே நான் ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்களிடம் கேட்டதற்கு அவர்கள், "நீர் பராஉ (ரலி) அவர்களிடமே கேளும். அவரே (என்னை விட) நன்கு அறிந்தவர்" என்றார்கள். பின்னர் இருவரும், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தங்கத்திற்கு வெள்ளியைக் கடனாக விற்பதற்குத் தடை விதித்தார்கள்" என்று கூறினர்.
அத்தியாயம் : 22
3240. அபூபக்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெள்ளிக்கு வெள்ளியை, தங்கத்திற்குத் தங்கத்தைச் சரிக்குச் சரியாகவே தவிர (வேறு முறையில்) விற்கக் கூடாது எனத் தடை விதித்தார்கள். தங்கத்திற்கு வெள்ளியை நாங்கள் விரும்பியவாறு வாங்குவதற்கும், வெள்ளிக்குத் தங்கத்தை நாங்கள் விரும்பியவாறு வாங்குவதற்கும் அனுமதித்தார்கள்.
இந்த ஹதீஸை அபூபக்ரா (ரலி) அவர்கள் அறிவித்தபோது அவர்களிடம் ஒரு மனிதர், "உடனுக்குடன் (மாற்றிக்கொண்டால்தானே)!" என்று கேட்டார். அதற்கு அபூபக்ரா (ரலி) அவர்கள் "அவ்வாறே நான் செவியுற்றேன்"என்றார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூபக்ரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "..... எங்களுக்குத் தடை விதித்தார்கள்" என இடம்பெற்றுள்ளது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 22
பாடம் : 17 பொன்னும் மணியும் உள்ள மாலையை விற்பது.
3241. ஃபளாலா பின் உபைத் அல்அன்சாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கைபரில் இருந்தபோது, அவர்களிடம் கழுத்து மாலை ஒன்று கொண்டுவரப்பட்டது. அதில் பொன்னும் மணியும் இருந்தன. அது போர்ச் செல்வங்களுடன் விற்கப்பட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்த மாலையில் இருந்த பொன்னைத் தனியே கழற்றி எடுத்துவிடுமாறு உத்தரவிட்டார்கள். பிறகு மக்களிடம் "எடைக்கு எடை தங்கத்தைத் தங்கத்திற்கு விற்கலாம்" என்றார்கள்.
அத்தியாயம் : 22
3242. ஃபளாலா பின் உபைத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் கைபர்போர் நாளில் பன்னிரண்டு "தீனாரு"க்கு ஒரு கழுத்து மாலையை வாங்கினேன். அதில் பொன்னும் மணிகளும் இருந்தன. உடனே அவற்றை நான் தனித்தனியே பிரித்தெடுத்தேன். அவை பன்னிரண்டு தீனாரைவிடக் கூடுதல் மதிப்புடையவையாக இருப்பதைக் கண்டேன். ஆகவே, இது குறித்து நான் நபி (ஸல்) அவர்களிடம் சொன்னபோது, தனியே பிரித்தெடுக்கப்படாத வரை (பொன்னும் மணியும் உள்ள ஆபரணங்கள்) விற்கப்படக் கூடாது"என்றார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஃபளாலா பின் உபைத் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 22
3243. ஃபளாலா பின் உபைத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் கைபர்போர் நாளில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தபோது, (பொன்னும் மணியும் சேர்க்கப்பட்டிருந்த) தங்க "ஊக்கியா"வை இரண்டு மூன்று பொற்காசு (தீனார்)களுக்கு யூதர்களிடம் விற்றோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "எடைக்கு எடை சரியாகவே தவிர (வேறு முறையில்) தங்கத்திற்குத் தங்கத்தை விற்காதீர்கள்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 22
3244. ஹனஷ் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் ஃபளாலா பின் உபைத் (ரலி) அவர்களுடன் ஒரு போரில் இருந்தோம். எனக்கும் என் தோழர்களுக்கும் (போர்ச் செல்வத்தின் பங்காக) மாலை ஒன்று கிடைத்தது. அதில் பொன், வெள்ளி, முத்து ஆகியன சேர்க்கப்பட்டிருந்தன. அதை நான் விலைக்கு வாங்க விரும்பினேன். எனவே, ஃபளாலா பின் உபைத் (ரலி) அவர்களிடம் அதைப் பற்றிக் கேட்டேன்.
அப்போது அவர்கள், மாலையிலுள்ள தங்கத்தைத் தனியே எடுத்து, அதைத் தராசின் ஒரு தட்டிலும், உனது தங்கத்தை மற்றொரு தட்டிலும் வைப்பீராக. பிறகு சரிக்குச் சரியாகவே தவிர (வேறு முறையில்) நீ (தங்கத்தைத் தங்கத்திற்கு) பெற்றுக்கொள்ள வேண்டாம். ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் சரிக்குச் சரியாகவே தவிர (வேறு முறையில் தங்கத்தைத் தங்கத்திற்கும் வெள்ளியை வெள்ளிக்கும்) பெற வேண்டாம்" என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்" என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 22
பாடம் : 18 சரிக்குச் சரியாக உணவுப் பொருளை விற்றல்.
3245. புஸ்ர் பின் சயீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
மஅமர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் ஒரு "ஸாஉ" தொலி நீக்கப்பட்ட கோதுமையைத் தம் அடிமையிடம் கொடுத்து, "இதை விற்றுவிட்டு அந்தக் காசைக் கொண்டு தொலி நீக்கப்படாத கோதுமை வாங்கி வா" என்று அனுப்பினார்கள். அந்த அடிமை சென்று, அதைக் கொடுத்து ஒரு "ஸாஉ" கோதுமையும் சற்று கூடுதலாகவும் பெற்றுவந்தார். அவர் மஅமர் (ரலி) அவர்களிடம் வந்து நடந்ததைத் தெரிவித்தார்.
அதற்கு மஅமர் (ரலி) அவர்கள், "ஏன் அவ்வாறு செய்தாய்? நீ சென்று அதைத் திருப்பிக் கொடுத்துவிடு. சரிக்குச் சரியாகவே தவிர (வேறு முறையில் உணவுப் பொருளை) வாங்காதே. ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "சரிக்குச் சரியாகவே உணவுப் பொருளை உணவுப் பொருளுக்கு (விற்கப்படும்)" என்று கூறியதை நான் செவியுற்றுள்ளேன்" என்றார்கள்.
மேலும் மஅமர் (ரலி) அவர்கள், "அன்றைய நாளில் தொலி நீக்கப்படாத கோதுமையே எங்கள் உணவாக இருந்தது"என்று கூறினார்கள். அப்போது அவர்களிடம் "இது (தொலி நீக்கப்படாத கோதுமை), அதைப் போன்று (தொலி நீக்கப்பட்ட கோது மையைப் போன்று ஒரே இனமாக) இல்லையே?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், "அது ஒன்றுக்கொன்று ஒப்பானதாக இருக்குமோ என நான் அஞ்சுகிறேன்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 22
3246. அபூஹுரைரா (ரலி) மற்றும் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) ஆகியோர் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பனூ அதீ அல்அன்சாரீ குலத்தைச் சேர்ந்த ஒருவரை கைபர் பகுதியின் அதிகாரியாக நியமித்து அனுப்பிவைத்தார்கள். அவர் (சென்றுவிட்டு கைபரிலிருந்து) உயர் ரகப் பேரீச்சம் பழங்களைக் கொண்டுவந்தார். அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "கைபரின் பேரீச்சம் பழங்கள் அனைத்துமே இப்படித்தான் (உயர் ரகமானதாக) இருக்குமா?" என்று கேட்டார்கள். அதற்கு அவர், "இல்லை; அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் மட்டமான பேரீச்சம் பழத்தில் இரண்டு "ஸாஉ"களைக் கொடுத்து விட்டு, (இந்த உயர்ரகப் பேரீச்சம் பழத்தில்) ஒரு "ஸாஉ" வாங்குவோம்" என்று சொன்னார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவ்வாறு செய்யாதீர்கள். (உணவுப் பொருளை) சரிக்குச் சமமாகவே வாங்குங்கள். அல்லது (உங்களிடமுள்ள) இந்த (மட்டமான) பேரீச்சம் பழத்தை விற்றுவிட்டு, அந்தத் தொகைக்கு அ(ந்த உயர்ரகப் பேரீச்சம் பழத்)தை வாங்குங்கள். இவ்வாறுதான் நிறுக்கப்படும் பொருட்களின் சட்டமும்" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 22
3247. அபூஹுரைரா (ரலி) மற்றும் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) ஆகியோர் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு மனிதரை கைபர் பகுதியின் அதிகாரியாக நியமித்(து அனுப்பிவைத்)தார்கள். அவர் (சென்றுவிட்டு) உயர்ரகப் பேரீச்சம் பழங்களைக் கொண்டுவந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "கைபரின் பேரீச்சம் பழங்கள் எல்லாமே இப்படித்தான் (உயர் ரகமானதாக) இருக்குமா?" என்று கேட்டார்கள். அவர், "இல்லை; அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் மட்டரகப் பேரீச்சம் பழங்களில் இரண்டு "ஸாஉ"கள் கொடுத்து ஒரு "ஸாஉ" இந்த (உயர் ரகப் பேரீச்சம்) பழம் வாங்குகிறோம்; அல்லது மட்டரகப் பேரீச்சம் பழங்களில் மூன்று "ஸாஉ"கள் கொடுத்து, (இந்த உயர்ரகப் பேரீச்சம் பழங்களில்) இரண்டு "ஸாஉ"கள் வாங்குகிறோம்" என்று கூறினார்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இவ்வாறு செய்யாதீர்! மட்டரகமான பேரீச்சம் பழங்களை வெள்ளிக் காசுகளுக்கு விற்றுவிட்டு, அந்த வெள்ளிக் காசுகளுக்கு உயர் ரகப் பேரீச்சம் பழங்களை வாங்குவீராக!" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 22
3248. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
பிலால் (ரலி) அவர்கள் ("பர்னீ" எனப்படும்) உயர்ரகப் பேரீச்சம் பழங்களுடன் வந்தார்கள். அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இது எங்கிருந்து கிடைத்தது?" என்று கேட்டார்கள். அதற்கு பிலால் (ரலி) அவர்கள், "என்னிடம் மட்ட ரகப் பேரீச்சம் பழங்கள் இருந்தன; நபி (ஸல்) அவர்களின் உணவுக்காக அதில் இரண்டு "ஸாஉ"கள் கொடுத்து இ(ந்த உயர் ரகப் பேரீச்சம் பழத்)தில் ஒரு "ஸாஉ" வாங்கினேன்" என்றார்.
அந்த நேரத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஆ! இது வட்டியேதான்! இவ்வாறு செய்யாதீர்கள். நீங்கள் இந்த (உயர் ரக)ப் பேரீச்சம் பழத்தை வாங்க விரும்பினால் உங்களிடமுள்ள அ(ந்த மட்டரகப் பேரீச்சம் பழத்)தைத் தனியாக விற்றுவிட்டு, பிறகு அந்தத் தொகையின் மூலம் (உயர் ரகப் பேரீச்சம் பழத்தை) வாங்கிக்கொள்ளுங்கள்" என்றார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் முஹம்மத் பின் சஹ்ல் அத்தமீமீ (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "அந்த நேரத்தில்" எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 22
3249. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் பேரீச்சம் பழங்கள் கொண்டுவரப்பட்டன. அப்போது அவர்கள், "இது என்ன?நம் பேரீச்சம் பழங்களுக்கு வேறுபடுகிறதே!" என்று கேட்டார்கள். அதற்கு (பேரீச்சம் பழங்களைக் கொண்டுவந்த) அந்த மனிதர், "அல்லாஹ்வின் தூதரே! நம் பேரீச்சம் பழங்களில் இரண்டு "ஸாஉ"கள் கொடுத்துவிட்டு, இ(ந்த உயர் ரகப் பேரீச்சம் பழத்)தில் ஒரு "ஸாஉ" வாங்கினோம்" என்றார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இதுதான் வட்டியாகும். இதைத் திருப்பிக் கொடுத்துவிடுங்கள்; பிறகு நமது பேரீச்சம் பழத்தை (தனியே) விற்றுவிட்டு, (அந்தத் தொகையின் மூலம்) நமக்காக இந்த (உயர் ரகப்) பேரீச்சம் பழத்தை வாங்குங்கள்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 22
3250. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் மட்டரகப் பேரீச்சம் பழங்கள் எங்களுக்கு வழங்கப்படும். அவை கலப்புப் பேரீச்சம் பழங்களாகும். அவற்றில் இரண்டு "ஸாஉ"களுக்கு ஒரு "ஸாஉ" (உயர் ரகப் பேரீச்சம்பழம்) என்ற அடிப்படையில் நாங்கள் விற்பனை செய்து வந்தோம். இச்செய்தி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு எட்டியபோது, "ஒரு "ஸாஉ"க்கு இரண்டு "ஸாஉ"கள் பேரீச்சம் பழங்கள் கூடாது; ஒரு ஸாஉக்கு இரண்டு "ஸாஉ"கள் தொலி நீக்கப்பட்ட கோதுமையும் கூடாது; இரண்டு வெள்ளி திர்ஹங்களுக்கு ஒரு வெள்ளி திர்ஹமும் கூடாது" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 22
3251. அபூநள்ரா முன்திர் பின் மாலிக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் நாணயமாற்று வணிகம் பற்றி வினவினேன். அப்போது அவர்கள் "உடனுக்குடன் மாற்றிக்கொள்கிறீர்களா?" என்று கேட்டார்கள். நான் "ஆம்" என்றேன். அதற்கு அவர்கள், "அவ்வாறாயின் குற்றமில்லை" என்றார்கள்.
பிறகு அபூசயீத் (ரலி) அவர்களிடம் நான் இதைத் தெரிவித்தேன்; "நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் நாணயமாற்று வணிகம் குறித்துக் கேட்டேன். அவர்கள் "உடனுக்குடன் மாற்றிக்கொள்கிறீர்களா" என்று கேட்டார்கள். நான் "ஆம்" என்றேன். அவ்வாறாயின் குற்றமில்லை" என்று அவர்கள் கூறினார்கள்" என்றேன். அபூசயீத் (ரலி) அவர்கள், "அவ்வாறா சொன்னார்கள். நாம் அவருக்குக் கடிதம் எழுதுகிறோம். இனி அவ்வாறு உங்களுக்குத் தீர்ப்பளிக்கமாட்டார்" என்று கூறிவிட்டுப் பின்வருமாறு தெரிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஊழியர்களில் ஒருவர், ஒருவகைப் பேரீச்சம் பழத்தைக் கொண்டுவந்தார். அந்தப் பழங்களை அந்நியமாகக் கண்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இது நமது மண்ணில் விளையும் பேரீச்சம் பழங்கள் இல்லை போலிருக்கிறதே?" என்று கேட்டார்கள். அவர், "இந்த ஆண்டு நமது மண்ணில் அல்லது நமது பேரீச்சம் பழங்களில் சில (மட்டரகமான பழங்கள்) இருந்தன. எனவே, அவற்றையும் அவற்றுடன் இன்னும் சிறிதளவு கூடுதல் பழத்தையும் கொடுத்து, இ(வ்வகைப் பேரீச்சம் பழத்)தைப் பெற்றேன்" என்று கூறினார்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "கூடுதலாகக் கொடுத்துவிட்டாய்; வட்டியாக்கிவிட்டாய். இதை நமக்கு அருகில் கொண்டுவர வேண்டாம். உம்முடைய பேரீச்சம் பழங்களில் ஒன்று உமக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தினால் அதை விற்றுவிட்டு, பின்னர் (அந்தத் தொகையை வைத்து) நீ விரும்புகின்ற (பேரீச்சம் பழ இனத்)தை வாங்கிக்கொள்"என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 22
3252. அபூநள்ரா முன்திர் பின் மாலிக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் இப்னு உமர் (ரலி) மற்றும் இப்னு அப்பாஸ் (ரலி) ஆகிய இருவரிடமும் நாணயமாற்று வணிகம் பற்றிக் கேட்டேன். அவ்விருவரும் அதைக் குற்றமாகக் கருத வில்லை. பின்னர் நான் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடம் அமர்ந்திருந்தபோது, நாணயமாற்று பற்றி அவர்களிடம் கேட்டேன். அதற்கு அபூசயீத் (ரலி) அவர்கள், "கூடுதலாக வருபவை வட்டியாகும்" என்றார்கள். (இப்னு உமர் (ரலி) இப்னு அப்பாஸ் (ரலி) ஆகிய) இருவரும் (வேறு விதமாக) கூறியிருந்ததால், நான் அபூசயீத் (ரலி) அவர்களது கருத்தை ஆட்சேபித்தேன்.
அப்போது அபூசயீத் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றதையே நான் உம்மிடம் அறிவிக்கிறேன்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அவர்களின் பேரீச்ச மரத்தோட்டக்காரர் ஒரு "ஸாஉ" உயர் ரகப் பேரீச்சம் பழத்துடன் வந்தார். நபி (ஸல்) அவர்களது பேரீச்சம் பழம் இந்த (மட்டரக) இனத்தைச் சேர்ந்ததாக இருந்தது.
ஆகவே, நபி (ஸல்) அவர்கள் தம் தோட்டக்காரரிடம், "இது எங்கிருந்து கிடைத்தது?" என்று கேட்டார்கள். அதற்கு அவர், "நான் (நம்மிடமிருந்த மட்டரகப் பேரீச்சம் பழங்களில்) இரண்டு "ஸாஉ"களுடன் சென்று, அதற்குப் பதிலாக இந்த (உயர்ரகப் பேரீச்சம் பழத்தின்) ஒரு "ஸாஉ"வை வாங்கி வந்தேன். கடைத்தெருவில் இந்தப் பேரீச்சம் பழத்தின் விலை இவ்வளவு; இந்தப் பேரீச்சம் பழத்தின் விலை இவ்வளவு" என்று கூறினார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உனக்குக் கேடுதான்; நீ வட்டி வியாபாரம் செய்துவிட்டாய். இ(வ்வாறு உயர் ரகப் பேரீச்சம் பழத்)தை நீ விரும்பினால், உமது பேரீச்சம் பழத்தை (வேறு) ஏதேனும் ஒரு பொருளுக்காக விற்றுவிட்டு, பிறகு அந்தப் பொருளுக்குப் பதிலாக நீ விரும்பும் எந்தப் பேரீச்சம் பழத்தை வேண்டுமானாலும் வாங்கிக்கொள்" என்றார்கள்.
அபூசயீத் (ரலி) அவர்கள் "பேரீச்சம் பழத்தைப் பேரீச்சம் பழத்திற்கு (ஏற்றத்தாழ்வுடன் விற்பது) வட்டியாக இருக்க அதிகத் தகுதியுடையதா, அல்லது வெள்ளியை வெள்ளிக்கு (ஏற்றத் தாழ்வுடன்) விற்பது வட்டியாக இருக்க அதிகத் தகுதியுடையதா?" என்று கேட்டார்கள். பின்னர் நான் இப்னு உமர் (ரலி) அவர்களிம் சென்றபோது, அவ்வாறு விற்க வேண்டாம் என அவர்கள் என்னைத் தடுத்தார்கள். பிறகு நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் செல்லவில்லை; (ஆயினும்,) அபுஸ்ஸஹ்பா (ரஹ்) அவர்கள், "நான் மக்காவில் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் இதைப் பற்றிக் கேட்டேன். அப்போது அவர்கள் அதை வெறுக்கத் தக்கதாகக் கருதினார்கள்" என்று என்னிடம் கூறினார்கள்.
அத்தியாயம் : 22
3253. அபூசாலிஹ் அஸ்ஸய்யாத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் "தங்க நாணயத்திற்குத் தங்க நாணயத்தையும் வெள்ளி நாணயத்திற்கு வெள்ளி நாணயத்தையும் சரிக்குச் சமமாக விற்கலாம். கூடுதலாகக் கொடுத்தாலோ, கூடுதலாகக் கேட்டாலோ அவர் வட்டி வாங்கிவிட்டார்" என்று கூறியதை நான் செவியுற்றேன். அவர்களிடம் நான் "இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் வேறு விதமாகக் கூறுகிறார்களே?" என்று கேட்டேன். அதற்கு அபூசயீத் (ரலி) அவர்கள் "நான் இப்னு அப்பாஸ் அவர்களைச் சந்தித்தபோது, நீங்கள் கூறிவருவதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றீர்களா, அல்லது இறைவேதத்தில் கண்டீர்களா?" என்று கேட்டேன்.
அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அவ்வாறு நான் செவியுறவுமில்லை; இறைவேதத்தில் அதை நான் காணவுமில்லை. மாறாக, "வட்டி என்பது கடனுக்கு (நாணயமாற்று செய்யும்போது)தான்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக உசாமா பின் ஸைத் (ரலி) அவர்களே என்னிடம் கூறினார்கள்" என்றார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 22
3254. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வட்டி என்பதே கடனில்தான்.
இதை உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 22
3255. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உடனுக்குடன் நிகழ்ந்த (நாணயமாற்று வணிகத்)தில் வட்டி கிடையாது.
இதை உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 22
3256. அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களைச் சந்தித்து, "நாணயமாற்று விஷயத்தில் தாங்கள் சொல்லிவருவதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நீங்கள் செவியுற்றீர்களா? அல்லது இறைவேதத்தில் கண்டதைக் கூறுகிறார்களா?" என்று கேட்டார்கள்.
அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், "இல்லை; அவ்வாறு நான் சொல்லவில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பற்றி நீங்கள் நன்கு அறிவீர்கள். அல்லாஹ்வின் வேதத்தில் உள்ளதாகவும் எனக்குத் தெரியவில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அறிக; வட்டி என்பதே கடனில்தான்" என்று கூறினார்கள் என உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள்தாம் என்னிடம் சொன்னார்கள்" என்று விடையளித்தார்கள்.
அத்தியாயம் : 22
பாடம் : 19 வட்டி வாங்குபவருக்கும் வட்டி கொடுப்பவருக்கும் வந்துள்ள சாபம்.
3257. அல்கமா பின் கைஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வட்டி வாங்குபவரையும் வட்டி கொடுப்பவரையும் சபித்தார்கள்" என்று கூறினார்கள். நான் "அதற்குக் கணக்கு எழுதுபவரையும் அதன் இரு சாட்சிகளையும் (சபித்தார்கள் என்று சேர்த்துக் கூறுங்கள்)" என்றேன். அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் "நாம் (அல்லாஹ்வின் தூதரிடமிருந்து) செவியுற்றதையே அறிவிக்கிறோம்" என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 22
3258. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், வட்டி வாங்குபவரையும் வட்டி கொடுப்பவரையும், அதற்குக் கணக்கு எழுதுபவரையும் அதன் இரு சாட்சிகளையும் சபித்தார்கள். மேலும், "இவர்கள் அனைவரும் (பாவத்தில்) சமமானவர்கள் ஆவர்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 22
பாடம் : 20 அனுமதிக்கப்பட்டதைக் கையாள்வதும் சந்தேகத்திற்கிடமானவற்றைக் கைவிடுவதும்.
3259. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அனுமதிக்கப்பட்டதும் (ஹலால்) தெளிவானது; தடை செய்யப்பட்டதும் (ஹராம்) தெளிவானது. இவ்விரண்டிற்கும் இடையில் சந்தேகத்திற்கிடமானவையும் (முஷ்தபிஹாத்) இருக்கின்றன. மக்களில் பெரும்பாலோர் அவற்றை அறியமாட்டார்கள்.
எனவே, யார் சந்தேகத்திற்கிடமானவற்றைத் தவிர்த்துக்கொள்கிறாரோ அவர் தமது மார்க்கத்தையும் தமது மானத்தையும் காப்பாற்றிக்கொள்கிறார். யார் சந்தேகத்திற்கிடமானவற்றில் தலையிடுகிறாரோ அவர் அனுமதிக்கபடாதவற்றில் தலையிடுகிறார். வேலியோரங்களில் (கால்நடைகளை) மேய்ப்பவர், வேலிக்குள்ளேயே (கால்நடைகளை) மேயவிட நேரும். அறிக! ஒவ்வொரு மன்னனுக்கும் ஓர் எல்லை உண்டு. அல்லாஹ்வின் எல்லை அவனால் தடை விதிக்கப்பெற்றவையே. அறிக! உடலில் ஒரு சதைத் துண்டு இருக்கிறது. அது சீரடைந்துவிட்டால் உடல் முழுவதும் சீரடைந்துவிடும். அது சீரழிந்துவிட்டால் முழு உடலும் சீரழிந்துவிடும். அறிக! அதுவே இதயம்.
இதை நுஅமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இதை அவர்கள் அறிவிக்கும்போது தம்மிரு காதுகளை நோக்கி இரு விரல்களால் சைகை செய்து (இந்தக் காதுகளால்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மேற்கண்டவாறு) கூறியதைக் கேட்டேன் என்றார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் நுஅமான் பின் பஷீர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
ஆயினும், மேற்கண்ட ஹதீஸே மற்றதை விட முழுமையானதும் பெரியதும் ஆகும்.
அத்தியாயம் : 22
3260. ஆமிர் அஷ்ஷஅபீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நபித்தோழர்களில் ஒருவரான நுஅமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் ஹிம்ஸ் (சிரியா) நகரில் மக்களுக்கு உரையாற்றும்போது, "அனுமதிக்கப்பெற்றதும் தெளிவானது; தடைசெய்யப் பட்டதும் தெளிவானது..." என்று தொடங்கும் மேற்கண்ட ஹதீஸை அறிவித்தார்கள். இந்த அறிவிப்பில் "வேலிக்குள்ளேயே மேயவிட நேரும்" என்பதுவரையே இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 22
பாடம் : 21 ஒட்டகத்தை விற்பதும், (விற்றவர் குறிப்பிட்ட தூரம்வரை) அதில் பயணம் செய்துகொள்வேன் என நிபந்தனை விதிப்பதும்.
3261. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (ஒரு பயணத்திலிருந்து திரும்பு கையில்) நன்றாக இயங்காதிருந்த எனது ஒட்டகத்தில் சென்றுகொண்டிருந்தேன். அதற்கு ஓய்வு கொடுக்க நான் எண்ணியிருந்தேன். அப்போது என்னிடம் வந்து சேர்ந்த நபி (ஸல்) அவர்கள் எனக்காகப் பிரார்த்தித்தார்கள்; எனது ஒட்டகத்தை அடித்தார்கள். அது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு (மிக வேகமாக) ஓடியது. பிறகு நபி (ஸல்) அவர்கள் "இ(ந்த ஒட்டகத்)தை ஓர் "ஊக்கியா"வுக்கு எனக்கு விற்றுவிடு" என்று கேட்டார்கள். நான் "இல்லை" என்றேன். பிறகு (மீண்டும்) "இதை எனக்கு விற்றுவிடு" என்று கேட்டார்கள். நான் ஓர் "ஊக்கியா"வுக்கு அதை விற்றேன்; ஆனால், என் வீட்டாரிடம் போய்ச் சேரும்வரை அதில் பயணம் செய்துகொள்வதற்கு என்னை அனுமதிக்க வேண்டும் என்று நிபந்தனையிட்டேன். (அவர்களும் அந்த நிபந்தனையை ஏற்றார்கள்.)
நான் (மதீனாவுக்கு) வந்து சேர்ந்தபோது, அந்த ஒட்டகத்தை நபி (ஸல்) அவர்களிடம் (ஒப்படைக்க) கொண்டுசென்றேன். அவர்கள் அதன் விலையை எனக்குக் கொடுத்தார்கள். பிறகு நான் திரும்பிச் சென்றபோது, எனக்குப் பின்னாலேயே நபி (ஸல்) அவர்கள் ஆளனுப்பி (என்னை மீண்டும் அழைத்து), "உனது ஒட்டகத்தை நான் எடுத்துக்கொள்வதற்காக அதன் விலையை நான் குறைத்து விடுவேன் என நீ எண்ணிக்கொண்டாயா? (என்னிடம் தர வேண்டிய) உனது ஒட்டகத்தையும், உனக்குச் சேர வேண்டிய வெள்ளிக் காசுகளையும் நீயே எடுத்துக்கொள். அது உனக்குரியதுதான்"என்றார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 22
3262. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஓர் அறப்போருக்குச் சென்றேன். நன்றாக இயங்காதிருந்த, நடக்க முடியாமல் நடந்துகொண்டிருந்த, தண்ணீர் சுமக்கும் எனது ஒட்டகம் ஒன்றின் மீது அமர்ந்து நான் சென்றுகொண்டிருந்தபோது (வழியில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை வந்தடைந்தார்கள். என்னிடம், "உனது ஒட்டகத்திற்கு என்ன நேர்ந்தது?" என்று கேட்டார்கள். நான் "நோய் கண்டுள்ளது" என்றேன்.
அதைக் கேட்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சற்று பின்வாங்கி அதை அதட்டினார்கள்; அதற்காகப் பிரார்த்தனையும் செய்தார்கள். உடனே அது (வேகமாக ஓடி) எல்லா ஒட்டகங்களுக்கும் முன்னே சென்றுகொண்டிருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், "உனது ஒட்டகத்தை (இப்போது) எப்படிக் காண்கிறாய்?" என்று கேட்டார்கள். நான் "நல்ல நிலையில் காண்கிறேன். தங்களது (பிரார்த்தனையின்) வளம் அதற்குக் கிடைத்து விட்டது" என்றேன்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீ அதை எனக்கு விற்றுவிடுகிறாயா?" என்று கேட்டார்கள். நான் (நபியவர்களுக்கு விலைக்கு விற்க) வெட்கப்பட்டேன். (அத் துடன்) எங்களிடம் அதைத் தவிர தண்ணீர் சுமக்கும் ஒட்டகம் வேறெதுவும் இருக்க வில்லை. பின்னர் நான், "சரி (விற்றுவிடுகிறேன்) என்றேன். ஆயினும், மதீனா சென்றடையும்வரை அதன் மீது பயணம் செய்துகொள்ள என்னை அனுமதிக்க வேண்டும் எனும் நிபந்தனையின் பேரில் அவர்களுக்கு அந்த ஒட்டகத்தை விற்றுவிட்டேன்.
பின்னர், "அல்லாஹ்வின் தூதரே! நான் புது மாப்பிள்ளை" என்று சொல்லி (ஊருக்கு விரைவாகச் செல்ல) அனுமதி கேட்டேன். அவர்கள் எனக்கு அனுமதியளித்தார்கள். ஆகவே, நான் மக்களைவிட முன்னதாகச் சென்று மதீனாவை அடைந்துவிட்டேன். அப்போது என் தாய் மாமன் (ஜத்து பின் கைஸ் அவர்கள் என்னைச்) சந்தித்து ஒட்டகத்தைப் பற்றிக் கேட்டார். நான் அதை என்ன செய்தேன் என்பதை அவரிடம் தெரிவித்தேன். அதற்காக அவர் என்னைக் கடிந்துகொண்டார்.
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (நான் புது மாப்பிள்ளை என்று சொல்லி) மதீனாவுக்கு விரைவாக செல்ல அனுமதி கேட்டபோது அவர்கள் என்னிடம், "நீ யாரை மணந்து கொண்டாய்? கன்னிப் பெண்ணையா, கன்னி கழிந்த பெண்ணையா?" என்று கேட்டார்கள். நான், "கன்னி கழிந்த பெண்ணைத்தான் மணந்துகொண்டேன்" என்றேன். "கன்னிப் பெண்ணை மணந்து கொண்டு, அவளோடு நீயும் உன்னோடு அவளுமாகக் கூடிக்குலவி மகிழ்ந்திருக்கலாமே?"என்று கூறினார்கள்.
நான், "அல்லாஹ்வின் தூதரே! எனக்குச் சிறு வயது சகோதரிகள் பலர் இருக்கும் நிலையில் என் தந்தை (உஹுதுப் போரில்) "இறந்துவிட்டார்கள்" அல்லது "கொல்லப்பட்டு விட்டார்கள்". ஆகவே, அவர்களுக்கு ஒழுக்கம் கற்பிக்கவோ,அவர்களைப் பராமரிக்கவோ முன்வராத, அவர்களைப் போன்றே (அனுபவமற்ற இளவயதுப் பெண்) ஒருத்தியை மணந்து, அவர்களிடம் அழைத்துச் செல்ல நான் விரும்பவில்லை. ஆகவே, அவர்களைப் பராமரிப்பதற்காகவும் அவர்களுக்கு ஒழுக்கம் கற்பிப்பதற்காகவும் (வாழ்ந்து பக்குவப்பட்ட) கன்னி கழிந்த ஒரு பெண்ணையே நான் மணந்துகொண்டேன்" என்று விடையளித்தேன்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்து சேர்ந்தபோது, காலையில் ஒட்டகத்துடன் அவர்களிடம் சென்றேன். எனக்கு அதன் விலையைக் கொடுத்தார்கள். பிறகு அந்த ஒட்டகத்தையும் என்னிடமே திருப்பிக் கொடுத்துவிட்டார்கள் (அன்பளிப்பாக).
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 22
3263. மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் மக்காவிலிருந்து மதீனா நோக்கி வந்துகொண்டிருந்தோம். அப்போது எனது ஒட்டகத்திற்கு நோய் ஏற்பட்டுவிட்டது..." என்று ஹதீஸ் ஆரம்பமாகி, மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளது. பின்வரும் தகவலும் அதில் இடம்பெற்றுள்ளது: என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உனது இந்த ஒட்டகத்தை எனக்கு விற்றுவிடு" என்று கேட்டார்கள். நான், "இல்லை; அது உங்களுக்கே உரியது (விலை வேண்டாம்)" என்றேன்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இல்லை; அதை எனக்கு விலைக்கு விற்றுவிடு" என்றார்கள். நான், "இல்லை (விலை வேண்டாம்) இது உங்களுக்கு உரியது, அல்லாஹ்வின் தூதரே!" என்றேன். அவர்கள், "இல்லை, அதை நீ எனக்கு விற்றுவிடு" என்றார்கள். "அவ்வாறாயின் நான் ஒருவருக்கு ஓர் "ஊக்கியா" தங்கம் கடனாகக் கொடுக்க வேண்டியுள்ளது. அந்தக் கடனுக்குப் பகரமாக இதை உங்களுக்குக் கொடுத்துவிடுகிறேன்" என்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நான் இதை வாங்கிக்கொண்டேன். (உன் கோரிக்கைப்படி) மதீனா வரை இதன் மீது அமர்ந்துகொண்டு வந்துசேர்" என்றார்கள்.
நான் மதீனாவுக்கு வந்தபோது, பிலால் (ரலி) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இவருக்கு ஓர் "ஊக்கியா" தங்கத்தையும் இன்னும் கூடுதலாகவும் கொடுங்கள்" என்றார்கள். பிலால் (ரலி) அவர்கள் என்னிடம் ஓர் "ஊக்கியா" தங்கமும் கொடுத்தார்கள். மேலும், கூடுதலாக ஒரு "கீராத்"தும் கொடுத்தார்கள். "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூடுதலாகத் தந்த (கீராத்தான)து என்னைவிட்டு ஒருபோதும் பிரியாது" என்று நான் கூறிக்கொண்டேன். அந்த ஒரு "கீராத்" எனது பணப்பையிலேயே இருந்துவந்தது. பின்னர் "ஹர்ரா"ப் போர்நாளில் சிரியாவாசிகள் அதை எடுத்துக்கொண்டு விட்டார்கள்.
அத்தியாயம் : 22
3264. மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "நாங்கள் ஒரு பயணத்தில் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது எனது ஒட்டகம் பின்தங்கிவிட்டது..."என ஹதீஸ் ஆரம்பமாகிறது. அதில், "பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அ(ந்த ஒட்டகத்)தைக் குத்தினார்கள். பிறகு என்னிடம், அல்லாஹ்வின் பெயரால் இதில் ஏறிச்செல் என்றார்கள்" என்றும் இடம்பெற்றுள்ளது. மேலும், "எனக்கு அதிகமாகக் கொடுத்துக்கொண்டே "அல்லாஹ் உன்னை மன்னிப்பானாக!" எனப் பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்கள்" என அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 22
3265. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(பயணத்தில்) எனது ஒட்டகம் நன்றாக இயங்காதிருந்த நிலையில் நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். பிறகு எனது ஒட்டகத்தைக் குத்தினார்கள். அது குதித்தோடலாயிற்று. பின்னர் நபி (ஸல்) அவர்கள் சொல்வதைக் கேட்பதற்காக அதன் கடிவாளத்தைப் பிடித்து அதன் வேகத்தை மட்டுப்படுத்திக்கொண்டிருந்தேன். ஆனால், என்னால் முடியவில்லை. பிறகு நபி (ஸல்) அவர்கள் என்னை வந்தடைந்த போது, "அதை எனக்கு விற்றுவிடு" என்றார்கள். நான் அதை ஐந்து "ஊக்கியா"க்களுக்கு அவர்களுக்கு விற்றுவிட்டேன்.
அப்போது "மதீனா சென்றடையும்வரை அதன் மீது பயணம் செய்துகொள்ள என்னை அனுமதிக்க வேண்டும் எனும் நிபந்தனையின்பேரில்" என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள் "மதீனா சென்றடையும்வரை அதன் மீது நீ பயணம் செய்துகொள்ளலாம்" என்றார்கள். நான் மதீனா வந்து சேர்ந்தபோது, அந்த ஒட்டகத்தை அவர்களிடம் (ஒப்படைக்க) கொண்டுசென்றேன். (அதன் விலையையும்) கூடுதலாக ஓர் "ஊக்கியா"வும் அவர்கள் எனக்குக் கொடுத்தார்கள். பின்னர் அந்த ஒட்டகத்தையும் எனக்கு அன்பளிப்பாகத் தந்துவிட்டார்கள்.
அத்தியாயம் : 22
3266. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் -("அறப்போர் வீரனாக" என்றும் கூறினார்கள் என்றே எண்ணுகிறேன்)- கலந்துகொண்டேன். மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. மேலும், பின்வருமாறு கூடுதலாகவும் இடம்பெற்றுள்ளது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஜாபிர்! (ஒட்டகத்தின்) விலை முழுவதையும் பெற்றுக் கொண்டாயா?" என்று கேட்டார்கள். நான் "ஆம்" என்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "விலையும் உனக்கே உரியது; ஒட்டகமும் உனக்கே உரியது. விலையும் உனக்கே உரியது; ஒட்டகமும் உனக்கே உரியது" என்றார்கள்.
அத்தியாயம் : 22
3267. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு முறை) இரண்டு "ஊக்கியா"க்களுடன் ஒரு திர்ஹம் அல்லது இரண்டு திர்ஹங்களைக் கொடுத்து என்னிடமிருந்து ஓர் ஒட்டகத்தை வாங்கினார்கள். (மதீனாவிற்கு அருகிலுள்ள) "ஸிரார்"எனுமிடத்திற்கு அவர்கள் வந்தபோது, ஒரு மாட்டை அறுக்கும்படி உத்தரவிட்டார்கள். அதன்படி அறு(த்து சமை)க்கப்பட்டது. அதை அனைவரும் உண்டார்கள்.
மதீனாவுக்கு வந்தபோது, பள்ளிவாசலுக்குச் சென்று இரண்டு ரக்அத்கள் தொழும்படி எனக்கு உத்தரவிட்டார்கள். (பின்னர்) ஒட்டகத்தின் விலையை எனக்குக் கொடுத்தார்கள். சற்று தாராளமாகவே நிறுத்தார்கள்.
அத்தியாயம் : 22
3268. மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
ஆயினும் அதில், "ஒரு தொகையைக் குறிப்பிட்டு என்னிடமிருந்து அ(ந்த ஒட்டகத்)தை வாங்கிக்கொண்டார்கள்" என்று இடம்பெற்றுள்ளது. இரண்டு "ஊக்கியா"க்களுடன் ஒரு திர்ஹம் அல்லது இரண்டு திர்ஹங்களைக் கொடுத்து எனும் (ஐயப்பாட்டுடனான) குறிப்பு இல்லை. மேலும் அதில், "ஒரு மாட்டை அறுக்கும்படி உத்தரவிட்டார்கள். அவ்வாறே அது அறுக்கப்பட்டது. பின்னர் அதன் இறைச்சியைப் பங்கிட்டார்கள்" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 22
3269. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் என்னிடம், "நான்கு தீனார்களுக்காக உனது ஒட்டகத்தை நான் வாங்கிக்கொண்டேன்; நீ மதீனா சென்றடையும்வரை அதன் மீது நீ பயணிக்கலாம்" என்றார்கள்.
அத்தியாயம் : 22
பாடம் : 22 ஒருவர் தாம் கடனாகப் பெற்றதை விடச் சிறந்ததைத் திருப்பிச் செலுத்துவதும், "வாங்கிய கடனை அழகிய முறையில் திருப்பிச் செலுத்துபவரே உங்களில் சிறந்தவர்" எனும் நபி மொழியும்.
3270. அபூராஃபிஉ அஸ்லம் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு மனிதரிடம் இளம் வயது ஆண் ஒட்டகம் ஒன்றைக் கடன் வாங்கியிருந்தார்கள். தர்ம ஒட்டகங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்த போது, (அவற்றிலிருந்து விலைக்கு வாங்கி) அம்மனிதருக்குரிய இளம் வயது ஒட்டகத்தைக் கொடுத்துவிடுமாறு எனக்கு உத்தரவிட்டார்கள். நான் சென்றுவிட்டுத் திரும்பிவந்து, "அவற்றில் ஆறுவயது முழுமையடைந்த (கடைவாய்ப் பற்கள் முளைத்து விட்ட) ஒட்டகங்களைத் தவிர வேறெதையும் நான் காணவில்லை" என்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அ(ந்த ஒட்டகத்)தையே அவருக்குக் கொடுத்து விடுங்கள் (ஏனெனில்,) அழகிய முறையில் திருப்பிச் செலுத்துபவரே சிறந்தவர் ஆவார்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 22
3271. மேற்கண்ட ஹதீஸ் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் முன்னாள் அடிமையாயிருந்த அபூராஃபிஉ (ரலி) அவர்களிடமிருந்து மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இளம்வயது ஆண் ஒட்டகம் ஒன்றை, அதைப் போன்றதைத் திருப்பித் தருவதாகக் கூறி கடன் வாங்கியிருந்தார்கள்" என ஹதீஸ் ஆரம்பமாகிறது. எனினும் அதில், "ஏனெனில், அழகிய முறையில் திருப்பிச் செலுத்துபவரே அல்லாஹ்வின் அடியார்களில் சிறந்தவர் ஆவார்" என்று (சிறிது மாற்றத்துடன்) இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 22
3272. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு மனிதருக்குக் கடன் கொடுக்க வேண்டியிருந்தது. (அதைத் திருப்பிச் செலுத்தும்படி கேட்டுவந்தபோது) அவர் கடுஞ்சொற்களை பயன்படுத்தினார். நபித்தோழர்கள் அவரை(ப் பிடித்து)க் கண்டிக்கத் தயாராயினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(அவரை விட்டுவிடுங்கள்.) கடன்காரருக்கு (இவ்வாறு) பேச உரிமை உண்டு" என்று கூறிவிட்டு, "அவருக்குக் கொடுக்க வேண்டிய ஒட்டகத்தின் வயதுடைய ஒட்டகமொன்றை வாங்கி வாருங்கள்" என்றார்கள். மக்கள் (சென்றுவிட்டு வந்து) அவருக்குக் கொடுக்க வேண்டிய ஒட்டகத்தைவிட அதிக வயதுடைய ஒட்டகங்களைத் தவிர வேறெதையும் நாங்கள் காணவில்லை" என்று கூறினர்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அதையே வாங்கி அவருக்குக் கொடுத்து விடுங்கள். ஏனெனில், அழகியமுறையில் திருப்பிச் செலுத்துபவரே "உங்களில் சிறந்தவர்களில் உள்ளவர்" அல்லது "உங்களில் சிறந்தவர்" ஆவார்"என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 22
3273. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறிப்பிட்ட வயதுடைய ஒட்டகமொன்றை கடன் வாங்கினார்கள். அதைவிட அதிக வயதுடைய ஒட்டகத்தைத் திருப்பிச் செலுத்தினார்கள். மேலும், "அழகிய முறையில் திருப்பிச் செலுத்துபவரே உங்களில் சிறந்தவர் ஆவார்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 22
3274. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (கடனாகக்) கொடுத்திருந்த ஒட்டகத்தைக் கேட்டு ஒரு மனிதர் வந்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அவருக்குக் கொடுக்க வேண்டிய ஒட்டகத்தைவிட அதிக வயதுடைய ஒட்டகத்தை அவருக்குக் கொடுங்கள்" என்றும் "அழகிய முறையில் திருப்பிச் செலுத்துபவரே உங்களில் சிறந்தவர்" என்றும் கூறினார்கள்.
அத்தியாயம் : 22
பாடம் : 23 ஓர் உயிரினத்தை அதே இன உயிரினத்திற்குப் பதிலாக ஏற்றத்தாழ்வோடு விற்பது செல்லும்.
3275. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஓர் அடிமை நபி (ஸல்) அவர்களிடம் வந்து, நாடு துறந்து (ஹிஜ்ரத்) செல்ல உறுதிமொழி அளித்தார். அவர் ஓர் அடிமை என்பது நபி (ஸல்) அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. பின்னர் அவருடைய உரிமையாளர் நபி (ஸல்) அவர்களைத் தேடிவந்(து, அது பற்றி முறையீடு செய்)தார். நபி (ஸல்) அவர்கள் அவரிடம், "அவரை எனக்கு விற்றுவிடு"என்று கூறி விட்டு, இரு கறுப்பு அடிமைகளைக் கொடுத்து அவரை வாங்கிக் கொண்டார்கள். பின்னர் "ஒருவர் அடிமையா?" என்று கேட்காத வரை (தம்மிடம் உறுதிமொழி அளிக்க வருபவர்) எவரிடமும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உறுதிமொழி பெறவில்லை.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 22
பாடம் : 24 அடைமானமும், அது உள்ளூரிலும் பயணத்திலும் செல்லும் என்பதும்.
3276. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு யூதரிடமிருந்து உணவுப் பொருளைக் கடனாக வாங்கினார்கள். அதற்காகத் தமது (இரும்புக்) கவசத்தை அவரிடம் அடகு வைத்தார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 22
3277. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு யூதரிடமிருந்து உணவுப் பொருளை (கடனாக) வாங்கினார்கள். (அதற்காக) இரும்புக் கவசத்தை அடகு வைத்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 22
3278. சுலைமான் பின் மிஹ்ரான் அல் அஃமஷ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்களிடம் முன்பண வணிகத்தில் (சலம்) அடைமானம் பற்றிப் பேசினோம். அப்போது இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் யூதர் ஒருவரிடமிருந்து ஒரு குறிப்பிட்ட தவணைக்கு உணவுப் பொருளை (கடனாக) வாங்கினார்கள்; அதற்காகத் தமது இரும்புக் கவசத்தை அடைமானம் வைத்தார்கள் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள் என நமக்கு அஸ்வத் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் அறிவித்தார்கள்" என்று சொன்னார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. - அதில், "இரும்பு" எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 22
பாடம் : 25 முன்பண வணிகம் (சலம்).
3279. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த போது, மக்கள் ஓராண்டு அல்லது ஈராண்டுகளில் பெற்றுக்கொள்வதாகக் கூறி,பேரீச்சம் பழத்திற்காக முன்பணம் கொடுத்துவந்தனர். நபி(ஸல்) அவர்கள், "ஒருவர் (இவ்வாறு) பின்னால் பெற்றுக்கொள்வதாகக் கூறி, பேரீச்சம் பழத்திற்காக முன்பணம் கொடுப்பதானால், குறிப்பிட்ட எடைக்காகவும் அளவுக்காகவும் குறிப்பிட்ட தவணைக்கு மட்டுமே கொடுக்கட்டும்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 22
3280. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மதீனாவுக்கு) வந்தபோது, (பின்னர் பொருளைப் பெற்றுக்கொள்வதாகக் கூறி) மக்கள் முன்பணம் செலுத்திவந்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(பொருளைப் பின்னர் பெற்றுக் கொள்வதாகக் கூறி) முன்பணம் கொடுப்பவர், குறிப்பிட்ட அளவுக்காகவும் குறிப்பிட்ட எடைக்காகவுமே முன்பணம் கொடுக்கட்டும்" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "குறிப்பிட்ட தவணைக்கு" எனும் குறிப்பு இல்லை.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "குறிப்பிட்ட தவணைக்கு" எனும் குறிப்பு இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 22
பாடம் : 26 உணவுப் பொருட்களைப் பதுக்குவது தடை செய்யப்பட்டுள்ளது.
3281. யஹ்யா பின் சயீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "பதுக்கல் செய்பவன் பாவியாவான்" என்று சொன்னார்கள் என மஅமர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறினார்கள்" என்றார்கள். அப்போது சயீத் பின் அல் முசய்யப் (ரஹ்) அவர்களிடம், "நீங்கள் பதுக்குகிறீர்களே?" என்று கேட்கப்பட்டது. அதற்கு சயீத் (ரஹ்) அவர்கள், "இந்த ஹதீஸை அறிவித்துவந்த மஅமர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களும் பதுக்குபவராகவே இருந்தார்கள்"என்றார்கள்.
அத்தியாயம் : 22
3282. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பாவியே பதுக்கல் செய்வான்.
இதை மஅமர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் பனூ அதீ பின் கஅப் குலத்தைச் சேர்ந்த மஅமர் பின் அப்தில்லாஹ் பின் நாஃபிஉ பின் அபீமஅமர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 22
பாடம் : 27 வியாபாரத்தில் (தேவையில்லாமல்) சத்தியம் செய்வது விலக்கப்பட்டுள்ளது.
3283. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சத்தியம் செய்வது பொருளை விலை போகச் செய்யும்; இலாபத்தை அழித்துவிடும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 22
3284. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வியாபாரத்தில் அதிகமாகச் சத்தியம் செய்ய வேண்டாம் என உங்களை நான் எச்சரிக்கிறேன். ஏனெனில், அது (பொருளை) விலைபோகச் செய்யும்; பின்னர் (வளத்தை) அழித்துவிடும்.
இதை அபூகத்தாதா அல்அன்சாரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 22
பாடம் : 28 விலைக்கோள் உரிமை (அஷ் ஷுஃப்ஆ).
3285. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இருவருக்குக் கூட்டாக உள்ள குடியிருப்பு அல்லது தோட்டத்தில் தம்முடைய (பங்கை விற்க நாடுபவர்) பங்காளிக்கு அறிவிப்பதற்கு முன் விற்பதற்கு உரிமை இல்லை. பங்காளி விரும்பினால் அதை வாங்கிக்கொள்வார்;விரும்பாவிட்டால் விட்டுவிடுவார்.
இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 22
3286. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
பிரிக்கப்படாத குடியிருப்பு, அல்லது தோட்டத்தில் விலைக்கோள் உரிமை உள்ளது என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தீர்ப்பளித்தார்கள். பங்காளிக்கு அறிவிப்புச் செய்வதற்கு முன்னர் (தமது பங்கை) விற்க ஒருவருக்கு அனுமதி இல்லை. பங்காளி விரும்பினால் அதை வாங்கிக்கொள்வார்; விரும்பாவிட்டால் விட்டுவிடுவார். அவரிடம் அறிவிக்காமல் விற்றுவிட்டாலும் அவரே அதிக உரிமையுடையவர் ஆவார்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 22
3287. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நிலம், வீடு, தோட்டம் ஆகிய (பிரிக்கப்படாத) கூட்டுச் சொத்துகள் ஒவ்வொன்றிலும் விலைக்கோள் உரிமை உள்ளது. எனவே, பங்காளிக்கு அறிவிப்பதற்கு முன் விற்பது தகாது. ஒன்று அவரே வாங்கிக் கொள்வார்; அல்லது விட்டுவிடுவார். அவர் (தம் பங்காளிக்கு அறிவிக்க) மறுத்தாலும் பங்காளியே அதற்கு மிகவும் உரிமையுடையவர் ஆவார்; அவரிடம் அறிவிக்கும்வரை.
இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 22
பாடம் : 29 அண்டை வீட்டாரின் சுவரில் மரக்கட்டையைப் பதிப்பது.
3288. அப்துர் ரஹ்மான் பின் ஹுர்முஸ் அல்அஃரஜ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அபூஹுரைரா (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "ஒருவர் தமது வீட்டுச் சுவரில் தம் அண்டை வீட்டுக்காரர் மரக்கட்டை (சாரம்) பதிப்பதைத் தடுக்க வேண்டாம்" என்று கூறினார்கள்" என்று சொல்லிவிட்டு, "என்ன இது? (நபியவர்களின்) இ(ந்த உபதேசத்)தைப் புறக்கணிப்பவர்களாகவே உங்களை நான் காண்கிறேனே! அல்லாஹ்வின் மீதாணையாக! (உங்களுக்குப் பிடிக்காவிட்டாலும்) இதை நான் உங்களுக்கு வலியுறுத்திக் கொண்டுதான் இருப்பேன்"என்று கூறுவார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 22
பாடம் : 30 அநீதியிழைத்தல், பிறர் நிலத்தை அபகரித்தல் உள்ளிட்டவை தடை செய்யப் பட்டுள்ளன.
3289. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் ஒரு சாண் அளவு நிலத்தை அநியாயமாக அபகரிக்கிறாரோ, அவரது கழுத்தில் அல்லாஹ் மறுமை நாளில் அந்த நிலத்தி(ன் மேற்பகுதியி)லிருந்து ஏழு பூமிகள்வரை (செல்லும் பகுதியை) மாலையாக மாட்டுவான்.
இதை சயீத் பின் ஸைத் பின் அம்ர் பின் நுஃபைல் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 22
3290. சயீத் பின் ஸைத் பின் அம்ர் பின் நுஃபைல் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அர்வா பின்த் உவைஸ் என்ற பெண், எனக்குரிய வீட்டின் ஒரு பகுதி தொடர்பாக வழக்காடினாள். அப்போது நான், "அவளையும் அந்த வீட்டையும் விட்டுவிடுங்கள். ஏனெனில், "யார் நியாயமின்றி (பிறருக்குச் சொந்தமான) ஒரு சாண் நிலத்தைக் கைப்பற்றிக் கொள்கிறாரோ, அவரது கழுத்தில் மறுமை நாளில் அந்த நிலத்தி(ன் மேற்பகுதியி)லிருந்து ஏழு பூமிகள்வரை (செல்லும் பகுதி) மாலையாக மாட்டப்படும்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டுள்ளேன். இறைவா! அவள் (தனது வாதத்தில்) பொய் சொல்பவளாக இருந்தால், அவளது பார்வையைப் பறித்துவிடு. அவளது சவக்குழியை அந்த வீட்டிலேயே அமைத்துவிடு" என்று கூறினேன்.
இந்த ஹதீஸை சயீத் பின் ஸைத் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும் முஹம்மத் பின் ஸைத் பின் அப்தில்லாஹ் பின் உமர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
பின்னர் நான் அந்தப் பெண்ணைப் பார்வையற்றவளாகப் பார்த்தேன். அவள் சுவர்களைத் தடவிக்கொண்டு இருந்தாள். "சயீத் பின் ஸைதின் பிரார்த்தனை எனது விஷயத்தில் பலித்துவிட்டது" என்று கூறுவாள். இந்நிலையில் அவள் (ஒரு நாள்) தனது வீட்டில் நடந்துகொண்டிருந்தபோது, வீட்டுக்குள்ளிருந்த கிணறு ஒன்றை அவள் கடந்து சென்றாள். அப்போது அதில் அவள் (தவறி) விழுந்துவிட்டாள். அதுவே அவளது சவக்குழியாக அமைந்தது.
அத்தியாயம் : 22
3291. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
சயீத் பின் ஸைத் (ரலி) அவர்கள் தமது நிலத்தில் ஒரு பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டார் என அர்வா பின்த் உவைஸ் (அல்லது உனைஸ்) என்ற பெண் குற்றம் சாட்டினார். (அப்போதைய மதீனாவின் ஆளுநர்) மர்வான் பின் அல்ஹகமிடம் சயீதுக்கு எதிராக அவர் வழக்குத் தொடுத்தார். (விசாரணையின்போது) சயீத் பின் ஸைத் (ரலி) அவர்கள், "நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து (ஒரு ஹதீஸை) செவியுற்ற பிறகும் அவளது நிலத்தில் ஒரு பகுதியை அபகரிப்பேனா?" என்று கேட்டார்கள்.
அதற்கு மர்வான் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நீங்கள் என்ன செவியுற்றீர்கள்?" என்று கேட்டார்கள். அதற்கு சயீத் (ரலி) அவர்கள், "யார் ஒரு சாண் நிலத்தை அநியாயமாகக் கைப்பற்றிக்கொள்கிறாரோ அவரது கழுத்தில் அந்த நிலத்தி(ன் மேற்பகுதியி)லிருந்து ஏழு பூமிகள்வரை (செல்லும் பகுதி) மாலையாக மாட்டப்படும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டுள்ளேன்" என்றார்கள்.அதற்கு மர்வான், "இதற்குப் பின் உங்களிடம் நான் ஆதாரம் கேட்கமாட்டேன்" என்றார்கள்.
அப்போது சயீத் பின் ஸைத் (ரலி) அவர்கள் "இறைவா! இவள் பொய் சொல்லியிருந்தால் அவளது பார்வையைப் பறித்துவிடு. அந்த நிலத்திலேயே அவளைக் கொன்றுவிடு" என்று பிரார்த்தித்தார்கள்.
பிறகு பார்வை பறிபோனவளாகவே அவள் இறந்தாள். அவள் தனது நிலத்தில் நடந்து கொண்டிருந்தபோது ஒரு குழியில் (தவறி) விழுந்து மாண்டுபோனாள்.
அத்தியாயம் : 22
3292. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் ஒரு சாண் நிலத்தை அநியாயமாகக் கைப்பற்றிக்கொள்கிறாரோ, அவரது கழுத்தில் மறுமை நாளில் அந்த நிலத்தி(ன் மேற்பகுதி யி)லிருந்து ஏழு பூமிகள்வரை (செல்லும் பகுதி) மாலையாக மாட்டப்படும்.
இதை சயீத் பின் ஸைத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 22
3293. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் முறையின்றி ஒரு சாண் நிலத்தைக் கைப்பற்றிக்கொள்கிறாரோ அவரது கழுத்தில் அல்லாஹ் மறுமை நாளில் அந்த நிலத்தி(ன் மேற்பகுதியி)லிருந்து ஏழு பூமிகள்வரை (செல்லும் பகுதியை) மாலையாக மாட்டாமல் விடுவதில்லை.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 22
3294. அபூசலமா அப்துல்லாஹ் பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
எனக்கும் என் கூட்டத்தாருக்குமிடையே ஒரு நிலம் தொடர்பாகத் தகராறு இருந்துவந்தது. நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று அதைப் பற்றிக் கூறினேன். ஆயிஷா (ரலி) அவர்கள், "அபூசலமா! மண்ணாசையைத் தவிர்த்துக் கொள்க! ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "யார் அநியாயமாக ஒரு சாண் அளவு நிலத்தை ஆக்கிரமித்துக் கொள்கிறாரோ அவரது கழுத்தில் அந்த நிலத்தி(ன் மேற்பகுதியி)லிருந்து ஏழு பூமிகள்வரை (செல்லும் பகுதி) மாலையாக மாட்டப்படும்" என்று கூறியுள்ளார்கள்" என்றார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 22
பாடம் : 31 பாதை விஷயத்தில் பிரச்சினை ஏற்படும்போது, பாதைக்காக ஒதுக்கப்பட வேண்டிய நிலத்தின் அளவு.
3295. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பாதை விஷயத்தில் நீங்கள் கருத்து வேறுபாடு கொண்டால், ஏழு முழங்கள் அகலமுள்ள நிலத்தைப் பொதுவழியாக ஆக்கப்படும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
أحدث أقدم