அத்தியாயம் 32 லைலத்துல் கத்ரின் சிறப்பு

ஸஹீஹுல் புகாரி
அத்தியாயம் 32
லைலத்துல் கத்ரின் சிறப்பு

அளவற்ற அருளாளனும் கருணையன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கிறேன்.

பகுதி 1

லைலத்துல் கத்ரின் சிறப்பு.

அல்லாஹ் கூறினான்:

''நிச்சயமாக, நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) இரவில் இறக்கினோம். கண்ணியமிக்க இரவு எதுவென உமக்கு அறிவித்தது எது? மேலும் கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக மேலானதாகும். அதில் வானவர்களும் ரூஹும் (ஜிப்ரீலும்) தம் இறைவனின் அனுமதியுடன் (அவனுடைய) கட்டளை ஒவ்வொன்றையும் செயல்படுத்துவதற்காக இறங்குகின்றனர். (அந்த இரவு முழுக்க) சாந்தி (பொழிந்த வண்ணமிருக்கும்); அது விடியற்காலை உதயமாகும் வரை நீடிக்கும்!'' (திருக்குர்ஆன் 97: 1-5)

''குர்ஆனில் ஒன்றைப் பற்றி 'மா அத்ராக்க (உமக்கு எது அறிவித்தது?)' என்று கூறப்பட்டால் அதை அல்லாஹ் அறிவித்துக் கொடுத்துவிட்டான் என்று பொருள்; 'வமா யுத்ரீக்க (எது உமக்கு அறிவிக்கும்?)' என்று ஏற்பட்டால் அதை அல்லாஹ் அறிவித்துக் கொடுக்க வில்லை என்று பொருள்!'' என இப்னு உயைனா(ரஹ்) கூறினார்.

2014. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

''ரமளானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்ததும் நோன்பு நோற்கிறவர் (அதற்கு) முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்! லைலத்துல் கத்ரில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நின்று வணங்குகிறவரின், முன்னர் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்!''

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பகுதி 2

லைலத்துல் கத்ர் இரவை (ரமளானின்) கடைசி ஏழு நாள்களில் தேடுதல்.

2015. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

நபித்தோழர்களில் சிலருக்கு, (ரமளானின்) கடைசி ஏழு நாள்களில் (வந்த) கனவில் லைலத்துல் கத்ர்(இரவு) காட்டப்பட்டது; அப்போது, நபி(ஸல்) அவர்கள் 'உங்கள் கனவுகள் கடைசி ஏழு நாள்களில் (லைலத்துல் கத்ரைக் கண்ட விஷயத்தில்) ஒத்து அமைந்திருப்பதை காண்கிறேன்! எனவே, அதைத் தேடுபவர். (ரமளானின்) கடைசி ஏழு நாள்களில் அதைத் தேடட்டும்!'' என்று கூறினார்கள்.

2016. அபூ ஸயீத்(ரலி) அறிவித்தார்.

நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ரமளானின் நடுப் பத்தில் இஃதிகாஃப் இருந்தோம். அவர்கள் இருபதாம் நாள் காலையில் வெளியே வந்து எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். (அவ்வுரையில்) 'எனக்கு லைலத்துல் கத்ர் இரவு காண்பிக்கப்பட்டது; பின்னர், அது எனக்கு மறக்கடிக்கப்பட்டுவிட்டது. எனவே, நீங்கள் கடைசிப்பத்து நாள்களின் ஒற்றைப் படை இரவுகளில் அதைத் தேடுங்கள்! நான் (லைலத்துல் கத்ரில்) ஈரமான களி மண்ணில் ஸஜ்தா செய்வது போல் (கனவு) கண்டேன்! எனவே, யார் என்னோடு இஃதிகாஃப் இருந்தாரோ அவர் திரும்பவும் வரட்டும்!'' என்றார்கள். நாங்கள் திரும்பச் சென்றோம். வானத்தில் ஒரு மெல்லிய மேகப் பொதியைக் கூட அப்போது நாங்கள் காணவில்லை. திடீர் என ஒரு மேகம் தோன்றி மழை பொழிந்தது. அதனால், பள்ளிவாசலின் கூரையில் தண்ணீர் ஒழுகியது. அந்தக் கூரை பேரீச்சை மட்டையிலினால் அமைந்திருந்தது. தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டதும் நபி(ஸல்) அவர்களை ஈரமான களிமண்ணில் ஸஜ்தா செய்யும் நிலையில் கண்டேன். அவர்களின் நெற்றியில் களிமண்ணின் அடையாளத்தை பார்த்தேன்.

பகுதி 3

கடைசிப் பத்து நாள்களின் ஒற்றைப்படை இரவுகளில் லைலத்துல் கத்ரை தேடுதல்.

இது பற்றிய ஹதீஸை உபாதா(ரலி) அறிவித்தார்.

2017. 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

''ரமளானின் கடைசிப் பத்து நாள்களில் உள்ள ஒற்றைப்படை இரவுகளில் லைலத்துல் கத்ரைத் தேடுங்கள்!''

என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

2018. அபூ ஸயீத் அல் குத்ரீ(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள், ரமளான் மாதத்தின் நடுப்பகுதியில் உள்ள பத்து நாள்களில் இஃதிகாஃப் இருப்பார்கள்; இருபதாம் இரவு கழிந்து மாலையாகி, இருபத்தொன்றாம் இரவு துவங்கியதும் தம் இல்லம் திரும்புவார்கள்; அவர்களுடன் இஃதிகாஃப் இருந்தவர்களும் திரும்புவார்கள். இவ்வழக்கப்படி நபி(ஸல்) அவர்கள் இரண்டு மாதம், எந்த இரவில் இல்லம் திரும்புவார்களோ அந்த இரவில் தங்கி மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அல்லாஹ் நாடிய விஷயங்களை அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள். பின்னர், 'நான் இந்தப் பத்து நாள்கள் இஃதிகாஃப் இருந்தேன்; பிறகு கடைசிப் பத்து நாள்களில் இஃதிகாஃப் இருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றியது; எனவே, என்னுடன் இஃதிகாஃப் இருந்த இடத்திலேயே தங்கியிருக்கட்டும்! இந்த (லைலத்துல் கத்ர்) இரவு எனக்குக் காட்டப்பட்டது; பின்னர் அது எனக்கு மறக்கடிக்கப்பட்டுவிட்டது; எனவே, கடைசிப்பத்து நாள்களில் அதைத் தேடுங்கள்! (அந்த நாள்களிலுள்ள) ஒவ்வொரு ஒற்றைப்படை இரவிலும் அதைத் தேடுங்கள்! நான் ஈரமான களிமண்ணில் (அந்த இரவில்) ஸஜ்தா செய்வதுபோல் (கனவு) கண்டேன்!' எனக் குறிப்பிட்டார்கள். அந்த இரவில் வானம் இரைச்சலுடன் மழை பொழிய, பள்ளிவாசல் (கூரையிலிருந்து) நபி(ஸல்) அவர்கள் தொழும் இடத்தில் (மழை நீர்) சொட்டியது. இருபத்தொன்றாம் இரவில் நடந்த இதை. நான் எண் கண்களால் பார்த்தேன்! மேலும், நபி(ஸல்) அவர்கள் தங்களின் முகத்தில் ஈரமான களிமண் நிறைந்திருக்க, ஸுப்ஹு தொழுதுவிட்டுத் திரும்புவதையும் கண்டேன்.

2019. 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

''(லைலத்துல் கத்ரை) தேடுங்கள்!''

என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

2020. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் ரமளானின் கடைசிப்பத்து நாள்களில் இஃதிகாஃப் இருப்பார்கள்; 'ரமளானின் கடைசிப் பத்து நாள்களில் லைலத்துல் கத்ரைத் தேடுங்கள்!'' எனக் கூறுவார்கள்.

2021. 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

''ரமளானின் கடைசிப் பத்து நாள்களில் லைலத்துல் கத்ரை தேடுங்கள்! 'லைலத்துல் கத்ரை இருபத்தொன்றாவது இரவில், இருபத்து மூன்றாவது இரவில், இருபத்து ஐந்தாவது இரவில் தேடுங்கள்!''

என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

2022. 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

''லைலத்துல் கத்ர் இரவு கடைசிப் பத்து நாள்களில் உள்ளது; அது இருபத்தொன்பதாவது இரவிலோ இருபத்து மூன்றாவது இரவிலோ உள்ளது!''

என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

''இருபத்து நான்காவது இரவில் அதைத் தேடுங்கள்!'' என்று இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்.

பகுதி 4

மக்கள் சச்சரவிட்டுக் கொண்டிருந்ததால் லைலத்துல் கத்ர் பற்றிய விளக்கம் நீக்கப்படுதல்.

2023. உபாதா இப்னு ஸாமித்(ரலி) அறிவித்தார்.

லைலத்துல் கத்ர் பற்றி எங்களுக்கு அறிவிப்பதற்காக நபி(ஸல்) அவர்கள் புறப்பட்டார்கள். அப்போது இரண்டு முஸ்லிம்கள் சச்சரவு செய்து கொண்டிருந்தனர். நபி(ஸல்) அவர்கள், 'லைலத்துல் கத்ரை உங்களுக்கு அறிவிப்பதற்காக நான் புறப்பட்டேன்; அப்போது இன்னாரும் இன்னாரும் சச்சரவு செய்து கொண்டிருந்தனர். எனவே, அது (பற்றிய விளக்கம்) நீக்கப்பட்டுவிட்டது! அது உங்களுக்கு நன்மையாக இருக்கலாம்! எனவே, அதை இருபத்தொன்பதாம் இரவிலும், இருபத்தேழாம் இரவிலும், இருபத்தைந்தாம் இரவிலும் தேடுங்கள்!'' எனக் கூறினார்கள்.

பகுதி 5

ரமளானின் கடைசிப்பத்தில் புரிய வேண்டிய வணக்கம்.

2024. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

(ரமளானின் கடைசிப்) பத்து நாள்கள் வந்துவிட்டால் நபி(ஸல்) அவர்கள் இல்லறத் தொடர்பை நிறுத்திக் கொள்வார்கள்; இரவை (அல்லாஹ்வைத் தொழுது) உயிர்ப்பிப்பார்கள்; (இறைவனை வணங்குவதற்காகத்) தம் குடும்பத்தினரை எழுப்பிவிடுவார்கள்!''
أحدث أقدم