அத்தியாயம் 36 குடிபானங்கள்

ஸஹீஹ் முஸ்லிம்
அத்தியாயம் 36
குடிபானங்கள்

பாடம் : 1 மதுவிலக்கும் திராட்சைப் பழச்சாறு, பேரீச்சங்கனி, பேரீச்சச் செங்காய், உலர்ந்த திராட்சை உள்ளிட்டவற்றிலிருந்து தயாரிக்கப்படும் போதையூட்டும் ஒவ்வொன்றும் மதுவே என்பதன் விளக்கமும்.
4004. அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
பத்ருப் போரில் கிடைத்த செல்வங்களில் (எனது பங்காக) வயதான ஒட்டகம் ஒன்றை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் சேர்ந்து பெற்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது பொறுப்பில் வந்த ஐந்தில் ஒரு பாகத்திலிருந்து) வயதான மற்றோர் ஒட்டகத்தையும் எனக்கு வழங்கினார்கள்.
ஒரு நாள் நான் அவ்விரண்டு ஒட்டகங்களையும் அன்சாரி ஒருவரின் வீட்டுவாசலருகே படுக்கவைத்திருந்தேன். "இத்கிர்" எனும் புல்லை அவற்றின் மீது ஏற்றிச் சென்று, விற்க வேண்டுமென நான் நினைத்திருந்தேன். அப்போது "பனூ கைனுகா" குலத்தைச் சேர்ந்த பொற்கொல்லர் ஒருவர் என்னுடன் (அதற்கு உதவியாக வர) இருந்தார். ஃபாத்திமா(வை மணம் புரிந்த) "வலீமா" விருந்துக்காக அந்தப் புல் விற்ற பணத்தைப் பயன்படுத்த நான் நாடியிருந்தேன்.
(நான் ஒட்டகத்தைப் படுக்கவைத்திருந்த) அந்த வீட்டில் (என் சிறிய தந்தை) ஹம்ஸா பின் அப்தில் முத்தலிப் (மது) அருந்திக்கொண்டிருந்தார். அவருடன் ஓர் அடிமைப் பாடகியும் இருந்தாள். அவள் "ஹம்ஸா! கொழுத்த இந்தக் கிழம் ஒட்டகங்களுக்கு (நீரே போதும். ஒரு கை பார்ப்பீராக!)" என்று (யாப்பு வகைப் பாடலைப்) பாடினாள்.
உடனே ஹம்ஸா (ரலி) அவர்கள் வாளுடன் அவ்விரு ஒட்டகங்களை நோக்கிப் பாய்ந்து அவற்றின் திமில்களை வெட்டிச் சாய்த்தார்; அவற்றின் இடுப்பைப் பிளந்து, பின்னர் ஈரக்குலைகளை வெளியே எடுத்தார்.
- இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் எனக்கு இதை அறிவித்த இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களிடம் "திமில்களையுமா அவர் வெளியே எடுத்தார்?" என்று கேட்டேன். அதற்கு அவர் "ஆம்; அவற்றின் திமில்களையும் பிளந்து எடுத்துக்கொண்டே அவர் சென்றார்" என்று கூறினார்கள்.
(தொடர்ந்து அலீ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:)
என்னை அதிர்ச்சியடையச் செய்த அந்தக் காட்சியை கண்ட நான், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்களுடன் ஸைத் பின் ஹாரிஸா (ரலி) அவர்களும் இருந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் நடந்ததைத் தெரிவித்தேன். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸைத் பின் ஹாரிஸா (ரலி) அவர்களுடன் புறப்பட்டார்கள். அவர்களுடன் நானும் நடந்தேன். ஹம்ஸா (ரலி) அவர்களிடம் சென்று தமது கோபத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெளிப்படுத்தினார்கள்.
அப்போது ஹம்ஸா தமது பார்வையை உயர்த்தி, "நீங்களெல்லாம் என் மூதாதையரின் அடிமைகள்தாமே?" என்று கூறினார். இதைக் கேட்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (ஹம்ஸா போதையில் இருக்கிறார் என்பதைப் புரிந்துகொண்டு திரும்பாமல்) அப்படியே பின்வாக்கில் நடந்துவந்து அவர்களைவிட்டு வெளியேறிவிட்டார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அலீ (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 36
4005. அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
பத்ருப் போரின்போது போர் செல்வத்திலிருந்து எனது பங்காக வயதான ஒட்டகம் ஒன்று கிடைத்திருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அன்றைய தினத்தில் (தமது பொறுப்பில் வந்த) ஐந்தில் ஒரு பாகத்திலிருந்து வயதான மற்றோர் ஒட்டகத்தை எனக்கு வழங்கியிருந்தார்கள்.
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் புதல்வி பாத்திமா(வை மணந்து) அவர்களுடன் தாம்பத்திய உறவைத் தொடங்க விரும்பியபோது, "பனூ கைனுகா" குலத்தைச் சேர்ந்த பொற்கொல்லர் ஒருவரிடம், அவர் என்னுடன் வந்து "இத்கிர்" புல்லை நாங்கள் கொண்டுவருவோம் எனச் சொல்லியிருந்தேன். அந்தப் புல்லைப் பொற்கொல்லர்களுக்கு விற்று அந்தப் பணத்தை என் மணவிருந்துக்குப் பயன்படுத்திக்கொள்ள விரும்பியிருந்தேன். அதற்காக நான் என் ஒட்டகங்களுக்கான சேண இருக்கைகளையும், தீவனப் பைகள் மற்றும் கயிறுகளையும் சேகரிக்கலானேன்.
அப்போது என் இரு ஒட்டகங்களும் அன்சாரீ ஒருவரது அறையின் அருகே படுக்கவைக்கப் பட்டிருந்தன. நான் சேகரிக்க விரும்பியவற்றைச் சேகரித்துவிட்டபோது (திரும்பிவந்தேன். அப்போது) என் இரு ஒட்டகங்களின் திமில்களும் பிளக்கப்பட்டிருந்தன. அவற்றின் இடுப்புப் பகுதியும் பிளக்கப்பட்டு, அதன் ஈரக்குலைகள் வெளியே எடுக்கப்பட்டிருந்தன. அவற்றின் இந்த (அவலக்) காட்சியைக் கண்டபோது என்னால் என் கண்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. (அழுதுவிட்டேன்.)
நான், "இதைச் செய்தவர் யார்?" என்று கேட்டேன். மக்கள், "ஹம்ஸா பின் அப்தில் முத்தலிப்’தாம் இப்படிச் செய்துவிட்டார். அவர் இந்த வீட்டில் அன்சாரிகளின் மது அருந்தும் குழுவினருடன் இருக்கிறார். அவருக்காக அவருடைய நண்பர்களும் அடிமைப் பாடகி ஒருத்தியும் பாட்டுப் பாடுகின்றனர்.
அவள் தமது பாடலில் "ஹம்ஸா! இந்தக் கிழம் ஒட்டகங்களுக்கு (நீரே போதும்! ஒரு கை பார்ப்பீராக!)" என்று பாடினாள். உடனே வாளுடன் எழுந்த ஹம்ஸா, அவ்விரு ஒட்டகங்களின் திமில்களைப் பிளந்தார். அதன் இடுப்புப் பகுதியைப் பிளந்து, அவற்றின் ஈரக்குலைகளை வெளியே எடுத்துக்கொண்டார்" என்று பதிலளித்தனர்.
உடனே நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்களுடன் ஸைத் பின் ஹாரிஸா (ரலி) அவர்களும் இருந்தார்கள். எனது முகத்தைப் பார்த்து நான் சந்தித்த (துயரத்)தை அறிந்துகொண்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உங்களுக்கு என்ன நேர்ந்தது?" என்று கேட்டார்கள்.
நான், "அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீதாணையாக! இன்று (நடந்ததைப்) போன்று (ஓர் அவலத்தை) நான் ஒருபோதும் கண்டதில்லை. ஹம்ஸா என் ஒட்டகங்களிடம் எல்லை மீறி நடந்துவிட்டார். அவற்றின் திமில்களை வெட்டித் துண்டாடிவிட்டார். அவற்றின் இடுப்பைப் பிளந்துவிட்டார். இதோ அவர் இப்போது ஒரு வீட்டில் மது அருந்தும் குழுவினருடன் இருக்கிறார்" என்று சொன்னேன்.
உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது மேலங்கியைக் கொண்டுவரச் சொல்லி அதை அணிந்துகொண்டு நடந்துசென்றார்கள். அவர்களை நானும் ஸைத் பின் ஹாரிஸா (ரலி) அவர்களும் பின்தொடர்ந்தோம். ஹம்ஸா இருந்த (வீட்டு)வாசல் வந்தவுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (உள்ளே செல்ல) அனுமதி கேட்டார்கள். அவர்கள் அனுமதி தந்தனர். அவர்கள் அனைவரும் குடிபோதையில் இருந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹம்ஸாவை அவர் செய்த காரியத்திற்காகக் கண்டிக்கலானார்கள்.
அப்போது ஹம்ஸாவின் கண்கள் சிவந்திருந்தன. ஹம்ஸா (தலையை உயர்த்தி) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பார்த்தார். பிறகு தமது பார்வையைத் தாழ்த்தி அவர்களின் இரு முழங்கால் பகுதிகளைப் பார்த்தார். பிறகு மீண்டும் பார்வையை உயர்த்தி வயிற்றுப் பகுதியைப் பார்த்தார். பிறகு இன்னும் சற்று தலையை உயர்த்தி முகத்தைப் பார்த்தார். பிறகு, "நீங்களெல்லாம் என் தந்தையின் அடிமைகள்தாமே?" என்று கூறினார்.
அவர் போதையில் இருக்கிறார் என்பதைப் புரிந்துகொண்டு, (திரும்பாமல்) அப்படியே பின்வாக்கில் எட்டுவைத்து, வந்த வழியே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெளியேறினார்கள். நாங்களும் அவர்களுடன் வெளியேறினோம்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 36
4006. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மது தடைசெய்யப்பட்ட நாளன்று நான் அபூதல்ஹா (ரலி) அவர்களது இல்லத்தில் மக்களுக்கு மது பரிமாறிக்கொண்டிருந்தேன். அந்நாட்களில் நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங்காய்கள், கனிந்த பேரீச்சம் பழங்கள் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்ட பேரீச்ச மதுவையே (ஃபளீக்) அவர்கள் அருந்தினர்.
(மதுவைத் தடைசெய்யும் இறைவசனம் அருளப்பெற்றதும்) ஒரு பொது அறிவிப்பாளர் "(மக்களே!) மது தடைசெய்யப்பட்டுவிட்டது" என்று அறிவிப்புச் செய்தார். அபூதல்ஹா (ரலி) அவர்கள் (என்னிடம்), "வெளியே போய் பார்(த்து வா)" என்று கூறினார்கள். அவ்வாறே நான் வெளியில் சென்றேன். அங்கு பொது அறிவிப்பாளர் ஒருவர் "அறிந்துகொள்ளுங்கள். மது தடைசெய்யப்பட்டுவிட்டது" என்று அறிவிப்புச் செய்துகொண்டிருந்தார்.
(இந்த அறிவிப்பைக் கேட்ட அனைவரும் மதுவை வீட்டுக்கு வெளியே ஊற்றினர்.) மதீனாவின் தெருக்களில் மது ஓடியது. அப்போது அபூதல்ஹா (ரலி) அவர்கள் என்னிடம், "வெளியே சென்று இதையும் ஊற்றிவிடு" என்று (தம்மிடமிருந்த மதுவைக் கொடுத்து) கூறினார். அவ்வாறே நான் அதை ஊற்றிவிட்டேன்.
அப்போது மக்கள் (அல்லது மக்களில் சிலர்) "மது, தம் வயிறுகளில் இருக்கும் நிலையில் இன்ன மனிதர் கொல்லப்பட்டார். இன்ன மனிதர் கொல்லப்பட்டார் (அவர்களின் நிலை என்னவாகுமோ!)" என்று கூறினர்.
(இந்த வாசகம் அனஸ் (ரலி) அவர்களின் அறிவிப்பிலேயே உள்ளதா என்பது எனக்குத் தெரியவில்லை என அறிவிப்பாளர்களில் ஒருவர் கூறுகிறார்).
அப்போதுதான் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், "(இறைவனை) அஞ்சி, இறைநம்பிக்கை கொண்டு,நல்லறங்கள் செய்து, பிறகு அஞ்சி, இறைநம்பிக்கை கொண்டு, பின்னரும் அஞ்சி, நன்மைகளைச் செய்வார்களானால் (தடுக்கப்பட்டவற்றை முன்னர்) உட்கொண்டதற்காக இறைநம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோர்மீது எந்தக் குற்றமுமில்லை" (5:93) எனும் வசனத்தை அருளினான்.
அத்தியாயம் : 36
4007. அப்துல் அஸீஸ் பின் ஸுஹைப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
மக்கள் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம் பேரீச்சங்காய் மது (ஃபளீக்) குறித்துக் கேட்டனர். அப்போது அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் "ஃபளீக்" எனக் குறிப்பிடும் இந்தப் பேரீச்சங்காய் மதுவைத் தவிர வேறெந்த மதுவும் (நபி (ஸல்) அவர்களது காலத்தில்) எங்களிடம் இருக்கவில்லை.
(ஒரு நாள்) நான் எங்கள் வீட்டில் (என் தாயாரின் இளைய கணவர்) அபூதல்ஹா (ரலி) அவர்களுக்கும் அபூஅய்யூப் (ரலி) அவர்களுக்கும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்களில் வேறுசிலருக்கும் மது பரிமாறுவதில் ஈடுபட்டிருந்தேன். அப்போது ஒரு மனிதர் வந்து, "உங்களுக்கு அச்செய்தி எட்டியதா?" என்று கேட்டார். நாங்கள் "இல்லை" என்றோம். அவர், "மது தடைசெய்யப்பட்டுவிட்டது" என்று தெரிவித்தார்.
அப்போது அபூதல்ஹா (ரலி) அவர்கள், "அனஸே! இந்த மதுப்பீப்பாயைக் கீழே கொட்டிவிடு" என்று கூறினார்கள். அந்த மனிதர் செய்தி தெரிவித்த பிறகு நபித்தோழர்கள் மதுவைத் திரும்பிப் பார்க்கவுமில்லை. (உறுதி செய்துகொள்வதற்காக) மதுவைப் பற்றி (வேறு யாரிடமும்) கேட்கவுமில்லை.
அத்தியாயம் : 36
4008. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் எங்கள் உறவினரிடையே நின்று என் தந்தையின் சகோதரர்களுக்கு, அவர்களுக்குரிய பேரீச்சங்காய் மதுவைப் பரிமாறிக்கொண்டிருந்தேன். நானே அவர்களில் (வயதில்) சிறியவனாயிருந்தேன். அப்போது ஒரு மனிதர் வந்து "மது தடைசெய்யப்பட்டுவிட்டது" என்று தெரிவித்தார். உடனே என் தந்தையின் சகோதரர்கள், "அனஸே! இதைக் கவிழ்த்துவிடு" என்று கூறினார்கள். அவ்வாறே நான் அதைக் கவிழ்த்துவிட்டேன்.
இதன் அறிவிப்பாளரான சுலைமான் பின் தர்கான் அத்தைமீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
நான் அனஸ் (ரலி) அவர்களிடம், "அ(வர்களுடைய ம)து எ(த்தகைய)து?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங்காய்களிலிருந்தும் பேரீச்சச் செங்காய்களிலிருந்தும் தயாரிக்கப்பட்டதாகும்" என்று பதிலளித்தார்கள். அப்போது அபூபக்ர் பின் அனஸ் (ரஹ்) அவர்கள் "அதுவே அன்றைய நாட்களில் அவர்களின் மதுபானமாக இருந்தது" என்று (விளக்கிக்) கூறினார். சுலைமான் அத்தைமீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இவ்வாறு அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களே கூறியதாக மற்றொரு மனிதர் எனக்கு அறிவித்தார்.
அத்தியாயம் : 36
4009. மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "நான் என் உறவினரிடையே நின்று (மது) பரிமாறிக்கொண்டிருந்தேன்..." என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. மேலும், அதில் பின்வருமாறு காணப்படுகிறது:
அப்போது அபூபக்ர் பின் அனஸ் (ரஹ்) அவர்கள் "அதுவே அன்றைய நாளில் அவர்களின் மதுபானமாக இருந்தது" என்று கூறினார்கள். அந்த இடத்தில் அனஸ் (ரலி) அவர்களும் இருந்தார்கள். அ(பூபக்ர் அவ்வாறு கூறிய)தை அனஸ் (ரலி) அவர்கள் மறுக்கவில்லை.
முஅதமிர் பின் சுலைமான் பின் தர்கான் (ரஹ்) அவர்கள் தம் தந்தையிடமிருந்து அறிவிக்கும் அறிவிப்பில், "அன்றைய நாளில் அதுவே அவர்களின் மதுபானமாக இருந்தது" என அனஸ் (ரலி) அவர்களே கூறியதை நான் கேட்டேன் என என்னுடனிருந்த ஒருவர் எனக்கு அறிவித்தார்" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 36
4010. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு நாள்) நான் அன்சாரிகளில் ஒரு குழுவில் அபூதல்ஹா (ரலி), அபூதுஜானா (ரலி) மற்றும் முஆத் பின் ஜபல் (ரலி) ஆகியோருக்கு மது பரிமாறிக்கொண்டிருந்தேன். அப்போது ஒருவர் உள்ளே வந்து, "புதிதாக ஒரு செய்தி வந்துள்ளது. மதுவைத் தடைசெய்யும் இறை வசனம் அருளப்பெற்றுள்ளது" என்று கூறினார்.
அன்றைய தினத்தில் நாங்கள் மதுவைக் கவிழ்த்துவிட்டோம். அ(ப்போதைய ம)து, நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங்காயிலிருந்தும் கனிந்த பேரீச்சம் பழங்களிலிருந்தும் கலந்து தயாரிக்கப்பட்டதாகவே இருந்தது.
இதன் அறிவிப்பாளரான கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
"மது தடைசெய்யப்பட்டபோது மக்களின் மதுபானங்களில் பெரும்பாலனவை நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங்காய்களிலிருந்தும் கனிந்த பேரீச்சம் பழங்களிலிருந்தும் கலந்து தயாரித்தவையாகவே இருந்தன" என்று அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "நான் தோல் பையிலிருந்து நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங்காயிலிருந்தும் கனிந்த பேரீச்சம் பழத்திலிருந்தும் கலந்து தயாரித்த மது பானத்தை அபூதல்ஹா (ரலி), அபூ துஜானா (ரலி) மற்றும் சுஹைல் பின் பைளா (ரலி) ஆகியோருக்குப் பரிமாறிக்கொண்டிருந்தேன்" என்று அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாக ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 36
4011. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கனிந்த பேரீச்சம் பழத்தையும் நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங்காயையும் கல(ந்து ஊறவை)க்க வேண்டாம் என்றும் பின்னர் அதை அருந்த வேண்டாம் என்றும் தடை விதித்தார்கள். மது தடைசெய்யப்பட்ட நாளில் அவர்களுடைய பொதுவான மதுபானம் அதுவாகவே இருந்தது.
அத்தியாயம் : 36
4012. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அபூஉபைதா பின் அல்ஜர்ராஹ் (ரலி), அபூதல்ஹா (ரலி) மற்றும் உபை பின் கஅப் (ரலி) ஆகியோருக்கு நிறம் மாறிய பேரீச்சங்காய்களாலும் பேரீச்சங்கனிகளாலும் தயாரித்த மதுபானத்தை நான் பரிமாறிக் கொண்டிருந்தேன். அப்போது அவர்களிடம் ஒருவர் வந்து "மது தடைசெய்யப்பட்டுவிட்டது" என்று கூறினார்.
உடனே அபூதல்ஹா (ரலி) அவர்கள், "அனஸே! எழுந்து இந்தப் பாத்திரங்களை உடைத்துவிடு" என்று கூறினார்கள். அவ்வாறே நான் எங்களது கல்பாத்திரம் ஒன்றை நோக்கி எழுந்து, அதன் அடிப்பாகத்தில் அடித்தேன். அது உடைந்துவிட்டது.
அத்தியாயம் : 36
4013. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ் மதுவைத் தடைசெய்யும் வசனத்தை அருளியபோது, மதீனாவில் கனிந்த பேரீச்சங்கனிகளில் தயாரிக்கப்படும் மதுபானத்தைத் தவிர வேறெந்த மதுபானமும் இருக்கவில்லை.
அத்தியாயம் : 36
பாடம் : 2 மதுபானத்தை (சமையல்) காடியாக மாற்றுவது தடைசெய்யப்பட்டதாகும்.
4014. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களிடம் மதுவை (சமையல்) காடியாக மாற்றுவதைப் பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் "இல்லை (மாற்றக் கூடாது)" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 36
பாடம் : 3 மதுவை மருந்தாகப் பயன்படுத்துவதற்கு வந்துள்ள தடை.
4015. வாயில் பின் ஹுஜ்ர் அல்ஹள்ரமீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களிடம் தாரிக் பின் சுவைத் அல்ஜுஅஃபீ (ரலி) அவர்கள் மது (தயாரிப்பதைப்) பற்றிக் கேட்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் அ(வ்வாறு மது தயாரிப்ப)தைத் தடை செய்தார்கள்; அல்லது அதை வெறுத்தார்கள். அப்போது தாரிக் (ரலி) அவர்கள், "மருந்துக்காகவே அதைத் தயாரிக்கிறேன்" என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், "அது மருந்தல்ல; நோய்" என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 36
பாடம் : 4 பேரீச்சம் பழம், திராட்சை ஆகியவற்றை ஊறவைத்துத் தயாரிக்கப்படும் எல்லாப் பழச்சாறுகளும் (போதை தருமானால்) "மதுபானம்" ("கம்ர்") என்றே அழைக்கப்படும்.
4016. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மது (கம்ர்), இவ்விரு மரங்களிலிருந்தே தயாரிக்கப்படுகிறது. அவை: 1. பேரீச்சை 2. திராட்சை.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 36
4017. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்
மது, இவ்விரு மரங்களிலிருந்தே தயாரிக்கப்படுகிறது. அவை: 1. பேரீச்சை 2. திராட்சை.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 36
4018. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மது, இவ்விரு மரங்களிலிருந்தே தயாரிக்கப்படுகிறது. அவை: 1. திராட்சை 2. பேரீச்சை.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் ஆறு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் அபூகுறைப் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், (திராட்சை, பேரீச்சை என்பதைக் குறிக்க அல்கர்மத், அந்நக்லத் என்பதற்குப் பதிலாக) அல்கர்ம், அந்நக்ல் எனும் சொற்கள் ஆளப்பட்டுள்ளன.
அத்தியாயம் : 36
பாடம் : 5 பேரீச்சம் பழங்களையும் உலர்ந்த திராட்சைகளையும் கலந்து ஊறவைப்பது வெறுக்கத்தக்கதாகும்.
4019. ஜாபிர் பின் அப்தில்லாஹ் அல்அன்சாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், உலர்ந்த திராட்சைகளும், பேரீச்சம் பழங்களும் கலந்து ஊறவைக்கப் படுவதற்கும் நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங்காய்களும், பேரீச்சச் செங்காய்களும் கலந்து ஊறவைக்கப்படுவதற்கும் தடைவிதித்தார்கள்.
அத்தியாயம் : 36
4020. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், பேரீச்சங்கனிகளும் உலர்ந்த திராட்சைகளும் ஒன்றுசேர்த்து ஊறவைக்கப்படுவதைத் தடைசெய்தார்கள். (அவ்வாறே) பேரீச்சச் செங்காய்களும் நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங்காய்களும் ஒன்றுசேர்த்து ஊறவைக்கப்படுவதையும் தடைசெய்தார்கள்.
4021. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பேரீச்சச் செங்காய்களையும் நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங்காய்களையும் ஒன்று சேர்(த்து ஊறவை)க்காதீர்கள். உலர்ந்த திராட்சைகளையும் பேரீச்சங்கனிகளையும் ஒன்றுசேர்த்து ஊறவைக்காதீர்கள்.
இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 36
4022. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், உலர்ந்த திராட்சைகளும் பேரீச்சம் பழங்களும் கல(ந்து ஊறவை)க்கப்படுவதைத் தடைசெய்தார்கள். (அவ்வாறே) நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங்காய்களும் பேரீச்சச் செங்காய்களும் ஒன்று சேர்த்து ஊறவைக்கப் படுவதையும் தடைசெய்தார்கள்.
அத்தியாயம் : 36
4023. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், பேரீச்சங்கனிகளும் உலர்ந்த திராட்சைகளும் கல(ந்து ஊறb வை)க்கப்படுவதைத் தடை செய்தார்கள். (அவ்வாறே) கனிந்த பேரீச்சம் பழங்களும் நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங்காய்களும் கல(ந்து ஊறவை)க்கப்படுவதையும் தடை செய்தார்கள்.
அத்தியாயம் : 36
4024. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், உலர்ந்த திராட்சைகளையும் பேரீச்சம் பழங்களையும் கல(ந்து ஊறவை)க்க வேண்டாமென எங்களுக்குத் தடைவிதித்தார்கள். (அவ்வாறே) நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங்காய்களையும் கனிந்த பேரீச்சம் பழங்களையும் கல(ந்து ஊறவை)க்க வேண்டாமென்றும் தடைவிதித்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 36
4025. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் பழச்சாற்றை அருந்துகின்றவர், உலர்ந்த திராட்சையைத் தனியாக (ஊறவைத்து) அருந்தட்டும். அல்லது பேரீச்சம் பழத்தைத் தனியாக (ஊறவைத்து) அருந்தட்டும். அல்லது நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங்காயைத் தனியாக (ஊறவைத்து) அருந்தட்டும்.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 36
4026. மேற்கண்ட ஹதீஸ் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங்காய்களை கனிந்த பேரீச்சம் பழங்களுடன், அல்லது உலர்ந்த திராட்சைகளைப் பேரீச்சம் பழங்களுடன், அல்லது உலர்ந்த திராட்சைகளை நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங்காய்களுடன் கல(ந்து ஊறவை)க்க வேண்டாமென எங்களுக்குத் தடை விதித்தார்கள்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. பிறகு "உங்களில் பழச்சாற்றை அருந்துகின்றவர்..." எனத் தொடரும் மேற்கண்ட ஹதீஸில் உள்ள இதர தகவல்களும் இடம் பெற்றுள்ளன.
அத்தியாயம் : 36
4027. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங்காய்களையும் பேரீச்சச் செங்காய்களையும் ஒன்றாகச் சேர்த்து ஊறவைக்காதீர்கள். (அவ்வாறே) உலர்ந்த திராட்சைகளையும் பேரீச்சம் பழங்களையும் ஒன்றாகச் சேர்த்து ஊறவைக்காதீர்கள். (வேண்டுமானால்) அவை ஒவ்வொன்றையும் தனித்தனியாக ஊறவைத்துக்கொள்ளுங்கள்.
இதை அபூகத்தாதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூகத்தாதா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 36
4028. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங்காய்களையும் பேரீச்சச் செங்காய்களையும் ஒன்றாகச் சேர்த்து ஊறவைக்காதீர்கள். (அவ்வாறே) பேரீச்சச் செங்காய்களையும் உலர்ந்த திராட்சைகளையும் ஒன்றுசேர்த்து ஊறவைக்காதீர்கள். மாறாக, அவை ஒவ்வொன்றையும் தனித்தனியாக ஊற வைத்துக்கொள்ளுங்கள்.
இதை அபூகத்தாதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், மேற்கண்ட ஹதீஸை அபூசலமா (ரஹ்) அவர்களிடமிருந்து அறிவிக்கும் யஹ்யா பின் அபீகஸீர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் அப்துல்லாஹ் பின் அபீ கத்தாதா (ரஹ்) அவர்களை (நேரடியாகச்) சந்தித்தேன். அப்போது தம் தந்தை அபூ கத்தாதா (ரலி) அவர்கள் கூறியதாக மேற்கண்ட ஹதீஸை என்னிடம் அவர்கள் அறிவித்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "பேரீச்சச் செங்காய்களையும் நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங் காய்களையும் (ஒன்றுசேர்த்து ஊறவைக்க வேண்டாம்) என்றும், பேரீச்சம் பழங்களையும் உலர்ந்த திராட்சைகளையும் (ஒன்றுசேர்த்து ஊறவைக்க வேண்டாம்)" என்றும் இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 36
4029. அ. அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், "பேரீச்சம் பழங்களையும் நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங் காய்களையும் கல(ந்து ஊறவை)க்க வேண்டாம் என்றும், உலர்ந்த திராட்சைகளையும் பேரீச்சம் பழங்களையும் கல(ந்து ஊறவை)க்க வேண்டாம் என்றும், நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங் காய்களையும் பேரீச்சச் செங்காய்களையும் கல(ந்து ஊறவை)க்க வேண்டாம் என்றும் தடைசெய்தார்கள். "(வேண்டுமானால்) அவை ஒவ்வொன்றையும் தனித்தனியாக ஊறவைத்துக் கொள்ளுங்கள்" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூகத்தாதா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. ஆ அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், உலர்ந்த திராட்சைகளையும் பேரீச்சம் பழங்களையும், (அவ்வாறே) நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங்காய்களையும் பேரீச்சம் பழங்களையும் (ஒன்றாகச் சேர்த்து) ஊறவைக்க வேண்டாமெனத் தடைசெய்தார்கள். "(வேண்டுமானால்) அவை ஒவ்வொன்றும் தனித்தனியாக ஊறவைக்கப்படலாம்"என்று கூறினார்கள். -இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 36
4030. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், பேரீச்சம் பழங்களும் உலர்ந்த திராட்சைகளும் ஒன்று சேர்(த்து ஊறவை)க்கப்படுவதற்கும் நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங்காய்களும் பேரீச்சம் பழங்களும் ஒன்றுசேர்த்து ஊற வைக்கப்படுவதற்கும் தடைவிதித்தார்கள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் (யமன் நாட்டிலுள்ள) "ஜுரஷ்"வாசிகளுக்குப் பேரீச்சம் பழங்களையும் உலர்ந்த திராட்சைகளையும் கல(ந்து ஊறவை)க்க வேண்டாம் எனத் தடைசெய்து கடிதம் எழுதினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "பேரீச்சம் பழங்களையும் உலர்ந்த திராட்சைகளையும் கலந்து ஊறவைக்க வேண்டாம்" என்பது மட்டுமே இடம்பெற்றுள்ளது. நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சம் பழங்களையும் பேரீச்சம் பழங்களையும் கலந்து ஊறவைப்பது பற்றிய குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 36
4031. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங்காய்களும் பேரீச்சச் செங்காய்களும் ஒன்றுசேர்த்து ஊறவைக்கப்படுவதற்கும் பேரீச்சம் பழங்களும் உலர்ந்த திராட்சைகளும் ஒன்றுசேர்த்து ஊற வைக்கப்படுவதற்கும் தடை விதிக்கப்பட்டுவிட்டது.
அத்தியாயம் : 36
4032. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங்காய்களும் பேரீச்சச் செங்காய்களும் ஒன்றாகச் சேர்த்து ஊறவைக்கப்படுவதற்கும் பேரீச்சம் பழங்களும் உலர்ந்த திராட்சைகளும் ஒன்றுசேர்த்து ஊறவைக்கப்படுவதற்கும் தடை விதிக்கப்பட்டுவிட்டது.
அத்தியாயம் : 36
பாடம் : 6 தார் பூசப்பட்ட பாத்திரம், சுரைக்காய் குடுவை, மண் சாடி, பேரீச்ச மரத்தின் அடிப்பாகத்தைக் குடைந்து தயாரிக்கப்பட்ட பாத்திரம் ஆகியவற்றில் பானங்களை ஊற்றிவைப்பதற்கு விதிக்கப்பெற்றிருந்த தடையும், பின்னர் அச்சட்டம் காலாவதியாக்கப் பட்டதும், போதையூட்டக்கூடியதாக மாறாத வரை எல்லாப் பாத்திரங்களும் தற்போது அனுமதிக்கப்பட்டவையே என்பது பற்றிய விளக்கமும்.
4033. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சுரைக்காய் குடுவை, தார் பூசப்பட்ட பாத்திரம் ஆகியவற்றில் பானங்களை ஊற்றிவைக்க வேண்டாமெனத் தடைவிதித்தார்கள்.
இதை இப்னு ஷிஹாப் அஸ்ஸஹ்ரீ (ரஹ்) அவர்கள் லைஸ் (ரஹ்) அவர்களிடமிருந்து அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 36
4034. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சுரைக்காய் குடுவை, தார் பூசப்பட்ட பாத்திரம் ஆகியவற்றில் பானங்களை ஊற்றிவைக்க வேண்டாமெனத் தடைவிதித்தார்கள்.
இதை இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்களிடமிருந்து அறிவிக்கிறார்கள்.
மேற்கண்ட ஹதீஸை அபூஹுரைரா (ரலி) அவர்கள் வழியாகவும் இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் அறிவித்துள்ளார்கள். அதில் பின்வருமாறு இடம்பெற்றுள்ளது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சுரைக்காய் குடுவையில் பானங்களை ஊற்றிவைக்காதீர்கள். தார் பூசப்பட்ட பாத்திரத்திலும் ஊற்றிவைக்காதீர்கள்.
பிறகு அபூஹுரைரா (ரலி) அவர்கள், "மண்சாடிகளையும் தவிர்த்துவிடுங்கள்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 36
4035. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், தார் பூசப்பட்ட பாத்திரம், "ஹன்த்தம்", பேரீச்ச மரத்தின் அடிப்பாகத்தைக் குடைந்து தயாரிக்கப்பட்ட பாத்திரம் ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டாமெனத் தடை செய்தார்கள்.
அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் "ஹன்த்தம் என்பது என்ன?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், "சுட்ட களிமண்ணாலான பச்சைநிறச் சாடிகள்" என்று பதிலளித்தார்கள்.
அத்தியாயம் : 36
4036. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் அப்துல் கைஸ் தூதுக்குழுவினரிடம், "சுரைக்காய் குடுவை, மண் சாடி (ஹன்த்தம்), பேரீச்ச மரத்தின் அடிப்பாகத்தைக் குடைந்து தயாரிக்கப்பட்ட பாத்திரம், தார் பூசப்பட்ட பாத்திரம் ஆகியவற்றை உங்களுக்குத் தடைவிதிக்கிறேன். வேண்டுமானால், தோல் பைகளில் (அனுமதிக்கப்பட்ட பானங்களை) அருந்திக்கொள்க. அதன் வாய்ப்பகுதியில் சுருக்கிட்டுக்கொள்க" என்று கூறினார்கள்.
"ஹன்த்தம்" என்பது, கழுத்துப் பகுதி துண்டிக்கப்பட்ட தோல் பை ஆகும்.
அத்தியாயம் : 36
4037. அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சுரைக்காய் குடுவை, தார் பூசப்பட்ட பாத்திரம் ஆகியவற்றில் பானங்களை ஊற்றிவைக்க வேண்டாமெனத் தடைசெய்தார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் ஜரீர் பின் அப்தில் ஹமீத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் மேற்கண்டவாறு இடம்பெற்றுள்ளது. அப்ஸர் பின் அல்காசிம் (ரஹ்) மற்றும் ஷுஅபா பின் அல்ஹஜ்ஜாஜ் (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில் "நபி (ஸல்) அவர்கள் சுரைக்காய் குடுவை, தார் பூசப்பட்ட பாத்திரம் ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டாமெனத் தடைசெய்தார்கள்" என்று இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 36
4038. இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அஸ்வத் பின் யஸீத் (ரஹ்) அவர்களிடம் "எந்தப் பாத்திரத்தில் பானங்களை ஊற்றி வைப்பது வெறுக்கப்பட்டது எனத் தாங்கள் இறைநம்பிக்கையாளர்களின் அன்னை (ஆயிஷா- ரலி) அவர்களிடம் கேட்டீர்கள்?" என்று வினவினேன். அதற்கு அவர்கள் "ஆம்; நான் "இறை நம்பிக்கையாளர்களின் அன்னையே! எந்தப் பாத்திரங்களில் பானங்களை ஊற்றிவைக்க வேண்டாமென அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடைசெய்தார்கள்?" என்று கேட்டேன்.
அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், "நபி (ஸல்) அவர்கள் தம் இல்லத்தாராகிய எங்களிடம் சுரைக்காய் குடுவை, தார் பூசப்பட்ட பாத்திரம் ஆகியவற்றில் பானங்களை ஊற்றிவைக்க வேண்டாமெனத் தடைசெய்தார்கள் என்று விடையளித்தார்கள்" என்றார்கள்.
(அறிவிப்பாளர் இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:)
"மண்சாடியையும் சுட்ட களிமண் பாத்திரத்தையும் ஆயிஷா (ரலி) அவர்கள் குறிப்பிட வில்லையா?" என நான் அஸ்வத் (ரஹ்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அஸ்வத் (ரஹ்) அவர்கள், "நான் கேட்டதைத்தான் உங்களுக்கு அறிவிக்கிறேன். நான் கேட்காததை உங்களுக்கு அறிவிக்கவேண்டுமா?" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 36
4039. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் சுரைக்காய் குடுவை, தார் பூசப்பட்ட பாத்திரம் ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டாமெனத் தடைசெய்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஆறு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 36
4040. ஸுமாமா பின் ஹஸ்ன் அல் குஷைரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ஆயிஷா (ரலி) அவர்களைச் சந்தித்துப் பழச்சாறுகள் பற்றிக் கேட்டேன். அப்போது அவர்கள், "நபி (ஸல்) அவர்களிடம் அப்துல் கைஸ் தூதுக்குழுவினர் வந்து பழச்சாறுகள் பற்றிக் கேட்டனர். நபி (ஸல்) அவர்கள் சுரைக்காய் குடுவை,பேரீச்ச மரத்தின் அடிப்பாகத்தைக் குடைந்து தயாரிக்கப்பட்ட பாத்திரம், தார் பூசப்பட்ட பாத்திரம், மண் சாடி ஆகியவற்றில் பானங்களை ஊற்றிவைக்க வேண்டாமெனத் தடைவிதித்தார்கள்" என்று பதிலளித்தார்கள்" என்றார்கள்.
அத்தியாயம் : 36
4041. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சுரைக்காய் குடுவை, மண் சாடி, பேரீச்ச மரத்தின் அடிப்பாகத்தைக் குடைந்து தயாரிக்கப்பட்ட பாத்திரம், தார் பூசப்பட்ட பாத்திரம் ("முஸஃப்பத்") ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டாமெனத் தடைசெய்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் (தார் பூசப்பட்டப்பட்ட பாத்திரம் என்பதைக் குறிக்க) "முஸஃப்பத்" என்பதற்குப் பதிலாக "முகய்யர்" என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 36
4042. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களிடம் அப்துல் கைஸ் தூதுக்குழுவினர் வந்தபோது, "சுரைக்காய் குடுவை, மண் சாடி, பேரீச்ச மரத்தின் அடிப்பாகத்தைக் குடைந்து தயாரிக்கப்பட்ட பாத்திரம், தார் பூசப்பட்ட பாத்திரம் (முகய்யர்) ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டாமென உங்களுக்குத் தடைசெய்கிறேன்" என்று நபியவர்கள் கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் ஹம்மாத் பின் ஸைத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் ("தார் பூசப்பட்ட பாத்திரம்" என்பதைக் குறிக்க) "முகய்யர்" என்பதற்குப் பதிலாக "முஸஃப்பத்" எனும் சொல் இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 36
4043. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சுரைக்காய் குடுவை, மண் சாடி, தார் பூசப்பட்ட பாத்திரம், பேரீச்ச மரத்தின் அடிப்பாகத்தைக் குடைந்து தயார் செய்யப்பட்ட பாத்திரம் ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டாமெனத் தடை செய்தார்கள்.
அத்தியாயம் : 36
4044. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சுரைக்காய் குடுவை, மண் சாடி, தார் பூசப்பட்ட பாத்திரம் மற்றும் பேரீச்ச மரத்தின் அடிப்பாகத்தைக் குடைந்து தயாரிக்கப்பட்ட பாத்திரம் ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டாம் என்றும்,பழுக்காத பச்சை நிறமுள்ள பேரீச்சம் பழங்களை நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங்காய்களுடன் ஒன்றாகச் சேர்த்து ஊறவைக்க வேண்டாம் என்றும் தடை செய்தார்கள்.
அத்தியாயம் : 36
4045. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சுரைக்காய் குடுவை, பேரீச்சமரத்தின் அடிப்பாகத்தைக் குடைந்து தயாரிக்கப்பட்ட பாத்திரம் மற்றும் தார் பூசப்பட்ட பாத்திரம் ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டாம் எனத் தடை விதித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 36
4046. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், சுட்ட களிமண் பாத்திரத்தில் பானங்களை ஊற்றி வைக்கவேண்டாம் எனத் தடை செய்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 36
4047. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சுரைக்காய் குடுவை, மண் சாடி, பேரீச்சமரத்தின் அடிப்பாகத்தைக் குடைந்து தயாரிக்கப்பட்ட பாத்திரம் மற்றும் தார் பூசப்பட்ட பாத்திரம் ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டாமெனத் தடைசெய்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "நபி (ஸல்) அவர்கள், (மேற்கண்ட பாத்திரங்களில் பானங்களை) ஊற்றிவைக்க வேண்டாமெனத் தடை செய்தார்கள்" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 36
4048. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மண் சாடி, சுரைக்காய் குடுவை மற்றும் பேரீச்ச மரத்தின் அடிப்பாகத்தைக் குடைந்து தயாரிக்கப்பட்ட பாத்திரம் ஆகியவற்றில் (பானங்களை) அருந்த வேண்டாமெனத் தடை செய்தார்கள்.
அத்தியாயம் : 36
4049. சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சுரைக்காய் குடுவை, மண் சாடி, தார் பூசப்பட்ட பாத்திரம் மற்றும் பேரீச்ச மரத்தின் அடிப்பாகத்தைக் குடைந்து தயாரிக்கப்பட்ட பாத்திரம் ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டாமெனத் தடைசெய்தார்கள் என நான் சாட்சியம் அளிக்கிறேன்" என்று இப்னு உமர் (ரலி) அவர்களும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களும் கூறியதாக நான் சாட்சியம் அளிக்கிறேன்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 36
4050. சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் இப்னு உமர் (ரலி) அவர்களிடம், சுட்ட களிமண் பாத்திரத்தில் ஊறவைக்கப்பட்ட பானங்கள் பற்றிக் கேட்டேன். இப்னு உமர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சுட்ட களிமண் பாத்திரத்தில் ஊறவைக்கப்பட்ட பானத்திற்குத் தடை விதித்தார்கள்" என்று பதிலளித்தார்கள்.
பின்னர் நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் சென்று, "இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுவதைத் தாங்கள் செவியுறவில்லையா?" என்று கேட்டேன். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், "இப்னு உமர் என்ன கூறுகிறார்?" என்று கேட்டார்கள். நான் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சுட்ட களிமண் பாத்திரத்தில் ஊறவைக்கப்பட்ட பானத்திற்குத் தடை விதித்தார்கள் என்று கூறினார்கள்" என்றேன்.
அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், "இப்னு உமர் சொன்னது உண்மையே. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "நபீதுல் ஜர்ரு"க்குத் தடைவிதித்தார்கள்" என்று கூறினார்கள். உடனே நான், "நபீதுல் ஜர் என்பது என்ன?" என்று கேட்டேன். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், "சுட்ட களிமண்ணில் தயாரிக்கப்படும் (பாத்திரங்கள்) ஒவ்வொன்றுமே (நபீதுல் ஜர்) ஆகும்" என்று பதிலளித்தார்கள்.
அத்தியாயம் : 36
4051. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தாம் கலந்துகொண்ட போர் ஒன்றில் மக்களிடையே உரையாற்றினார்கள். நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இருந்த பகுதியை நோக்கிச் சென்றேன். நான் அங்கு சென்றடைவதற்குள் (அவர்கள் உரையை முடித்துத்) திரும்பிவிட்டார்கள்.
எனவே நான் (மக்களிடம்), "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்ன சொன்னார்கள்?" என்று கேட்டேன். மக்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சுரைக்காய் குடுவை, தார் பூசப்பட்ட பாத்திரம் ஆகியவற்றில் (பானங்களை) ஊற்றிவைக்க வேண்டாம் எனத் தடை விதித்தார்கள்" என்று பதிலளித்தனர்.
அத்தியாயம் : 36
4052. மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் பத்து அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் மாலிக் பின் அனஸ் (ரஹ்) மற்றும் உசாமா பின் ஸைத் (ரஹ்) ஆகியோரது அறிவிப்பைத் தவிர மற்ற அறிவிப்புகளில் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கலந்துகொண்ட போர்களில் ஒன்றில்" எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 36
4053. ஸாபித் பின் அஸ்லம் அல்புனானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் இப்னு உமர் (ரலி) அவர்களிடம் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சுட்ட களிமண் பாத்திரத்தில் ஊறவைக்கப்பட்ட பானங்களைத் தடை செய்தார்களா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள் "அவ்வாறே மக்கள் கூறுகிறார்கள்" என்று பதிலளித்தார்கள்.
நான், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதற்குத் தடை விதித்தார்களா?" என்று (மீண்டும்) கேட்டேன். இப்னு உமர் (ரலி) அவர்கள் "அவ்வாறே மக்கள் கூறுகிறார்கள்" என்று பதிலளித்தார்கள்.
- தாவூஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இப்னு உமர் (ரலி) அவர்களிடம் ஒரு மனிதர் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சுட்ட களிமண் பாத்திரத்தில் பானங்களை ஊற்றி வைக்க வேண்டாமெனத் தடைசெய்தார்களா?" என்று கேட்டார். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள் "ஆம்" என்று பதிலளித்தார்கள்.
இதன் அறிவிப்பாளரான சுலைமான் அத்தைமீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
பிறகு தாவூஸ் (ரஹ்) அவர்கள் "அல்லாஹ்வின் மீதாணையாக! இவ்வாறே நான் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்து செவியுற்றேன்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 36
4054. தாவூஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இப்னு உமர் (ரலி) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சுட்ட களிமண் பாத்திரம்,சுரைக்காய் குடுவை ஆகியவற்றில் பானங்களை ஊற்றிவைக்க வேண்டாமெனத் தடை செய்தார்களா?" என்று கேட்டார். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள் "ஆம்" என்று பதிலளித்தார்கள்.
அத்தியாயம் : 36
4055. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சுட்ட களிமண் பாத்திரம், சுரைக்காய் குடுவை ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டாமெனத் தடை செய்தார்கள்.
அத்தியாயம் : 36
4056. தாவூஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(ஒரு நாள்) நான் இப்னு உமர் (ரலி) அவர்களிடம் அமர்ந்திருந்தேன். அப்போது அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சுட்ட களிமண் பாத்திரம், சுரைக்காய் குடுவை மற்றும் தார் பூசப்பட்ட பாத்திரம் ஆகியவற்றில் பானங்களை ஊற்றிவைக்க வேண்டாமெனத் தடைசெய்தார்களா?" என்று கேட்டார்கள். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள் "ஆம்" என்று பதிலளித்தார்கள்.
அத்தியாயம் : 36
4057. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மண் சாடி, சுரைக்காய் குடுவை, தார் பூசப்பட்ட பாத்திரம் ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டாமெனத் தடை செய்தார்கள்.
அறிவிப்பாளர் முஹாரிப் பின் திஸார் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இதை நான் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்து (ஓரிரு முறை அல்ல) பலமுறை செவியுற்றுள்ளேன்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், இப்னு உமர் (ரலி) அவர்கள் பேரீச்ச மரத்தின் அடிப்பாகத்தைக் குடைந்து தயாரிக்கப்பட்ட பாத்திரத்தையும் குறிப்பிட்டார்கள் என்றே நான் கருதுகிறேன் என முஹாரிப் பின் திஸார் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
அத்தியாயம் : 36
4058. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறிய தாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சுட்ட களிமண் பாத்திரம், சுரைக்காய் குடுவை மற்றும் தார் பூசப்பட்ட பாத்திரம் ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டாம் எனத் தடை செய்தார்கள். (மாறாக) "தோல் பைகளில் பானங்களை ஊற்றிவைத்துக்கொள்ளுங்கள்" என்று கூறினார்கள்.-இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 36
4059. ஜபலா பின் சஹீம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இப்னு உமர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "ஹன்த்தமா"வைப் பயன்படுத்த வேண்டாமெனத் தடை செய்தார்கள்" என்று கூறினார்கள். நான் "ஹன்த்தமா என்பது என்ன?" என்று கேட்டேன். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், "சுட்ட களிமண் பாத்திரம்" என்று பதிலளித்தார்கள்.
அத்தியாயம் : 36
4060. ஸாதான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் இப்னு உமர் (ரலி) அவர்களிடம் "நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ள குடிபானங்களைப் பற்றி உங்களது (வட்டார) மொழியில் கூறி, அதற்கு எங்களது (வட்டார) மொழியில் எனக்கு விளக்கமளியுங்கள். ஏனெனில், எங்களது மொழி வழக்கு அல்லாத வேறொரு மொழி வழக்கு உங்களுக்கு உள்ளது" என்று கூறினேன்.
அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "ஹன்த்தமை"ப் பயன்படுத்த வேண்டாமெனத் தடை செய்தார்கள். அது சுட்ட களிமண் பாத்திரமாகும். மேலும், அவர்கள் "துப்பா"வையும் தடை செய்தார்கள். அது சுரைக்காய் குடுவையாகும். "முஸஃப்பத்"தையும் தடை செய்தார்கள். அதுவே தார் பூசப்பட்ட பாத்திரமாகும்."நக்கீரை"யும் தடை செய்தார்கள். அது பேரீச்ச மரத்தின் மேற்பட்டை உரிக்கப்பட்டு பின்னர் நன்கு குடைந்து தயாரிக்கப்பட்ட பாத்திரமாகும்" என்று கூறிவிட்டு, "(இவற்றை விடுத்து) தோல் பைகளில் பானங்களை ஊற்றிவைக்குமாறு உத்தரவிட்டார்கள்" என்று சொன்னார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்து மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 36
4061. சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் இந்தச் சொற்பொழிவு மேடை -அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மிம்பரை நோக்கி சைகை செய்கிறார்- அருகில், "அப்துல் கைஸ் தூதுக் குழுவினர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து குடிபானங்கள் பற்றிக் கேட்டனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சுரைக்காய் குடுவை,பேரீச்ச மரத்தின் அடிப்பாகத்தைக் குடைந்து தயாரிக்கப்பட்ட பாத்திரம் மற்றும் மண் சாடி ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டாமென அவர்களுக்குத் தடை விதித்தார்கள்" என்று கூறியதை நான் கேட்டேன்.
இந்த ஹதீஸின் அறிவிப்பாளரான அப்துல் காலிக் பின் சலமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்களிடம், "அபூமுஹம்மதே! தார் பூசப்பட்ட பாத்திரத்தையுமா (பயன்படுத்தவேண்டாம் எனத் தடை செய்தார்கள்)?" என்று கேட்டேன். அதை அவர்கள் மறந்துவிட்டார்கள் என்று நாங்கள் கருதினோம். (அதனால்தான் அவ்வாறு கேட்டோம்).
அதற்கு சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்கள், "அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அன்று அவ்வாறு கூறியதை நான் கேட்கவில்லை. (எனினும்,) அவர்கள் (தார் பூசப்பட்ட பாத்திரத்தை) வெறுத்துவந்தார்கள்" என்று பதிலளித்தார்கள்.
அத்தியாயம் : 36
4062. ஜாபிர் (ரலி) மற்றும் இப்னு உமர் (ரலி) ஆகியோர் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பேரீச்சமரத்தின் அடிப்பாகத்தைக் குடைந்து தயாரிக்கப்பட்ட பாத்திரம், தார் பூசப்பட்ட பாத்திரம் மற்றும் சுரைக்காய் குடுவை ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டாமெனத் தடை செய்தார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 36
4063. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சுட்ட களிமண் பாத்திரம், சுரைக்காய் குடுவை மற்றும் தார் பூசப்பட்ட பாத்திரம் ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டாமெனத் தடை செய்ததை நான் செவியுற்றுள்ளேன்.
- ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சுட்ட களிமண் பாத்திரம், தார் பூசப்பட்ட பாத்திரம் மற்றும் பேரீச்ச மரத்தின் அடிப்பாகத்தைக் குடைந்து தயாரிக்கப்பட்ட பாத்திரம் ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டாமெனத் தடை செய்தார்கள். மேலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பானங்கள் ஊற்றிவைப்பதற்கு (பாத்திரம்) எதுவும் கிடைக்காவிட்டால், கல் தொட்டியில் அவர்களுக்காகப் பானங்கள் ஊற்றிவைக்கப்பட்டு வந்தது.
அத்தியாயம் : 36
4064. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களுக்காகக் கல் தொட்டி ஒன்றில் பானங்கள் ஊற்றிவைக்கப்பட்டுவந்தது.
அத்தியாயம் : 36
4065. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்காகத் தோல் பாத்திரத்தில் பானங்கள் ஊற்றி வைக்கப்பட்டுவந்தது. தோல் பாத்திரம் எதுவும் கிடைக்காவிட்டால், கல் தொட்டியொன்றில் அவர்களுக்காகப் பானங்கள் ஊற்றிவைக்கப்பட்டன.
இதன் அறிவிப்பாளரான அபுஸ் ஸுபைர் (ரஹ்) அவர்களிடம் மக்களில் சிலர் "கல் தொட்டியிலா (ஊற்றிவைத்தனர்)?"என்று கேட்டார்கள். அதற்கு அபுஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் "கல் தொட்டியில்தான்" என்று பதிலளித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 36
4066. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தோல் பாத்திரம் தவிர வேறெதிலும் பானங்களை ஊற்றிவைக்க வேண்டாமென உங்களுக்கு நான் தடைவிதித்திருந்தேன். இனி, எல்லாப் பாத்திரங்களிலும் (ஊற்றி வைத்து) அருந்திக் கொள்ளுங்கள். போதை தரக்கூடியதை அருந்தாதீர்கள்.
இதை புரைதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 36
4067. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(சில குறிப்பிட்ட) பாத்திரங்களைப் பயன்படுத்த வேண்டாமென உங்களுக்கு நான் தடை விதித்திருந்தேன். (இப்போது கூறுகிறேன்.) பாத்திரங்கள் -அல்லது பாத்திரம்- எந்த ஒன்றையும் அனுமதிக்கப்பட்டதாக ஆக்குவதுமில்லை; எந்த ஒன்றையும் தடை செய்யப்பட்டதாக ஆக்குவதுமில்லை. (பாத்திரத்தில் உள்ள பானமே முக்கியம். எனவே,) போதை தரும் எல்லாமே தடை செய்யப்பட்டதாகும்.
இதை புரைதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 36
4068. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தோல் பாத்திரங்களில் ஊற்றிவைக்கப்பட்ட பானங்களை(த் தவிர வேறெந்த பானத்தையும்) அருந்த வேண்டாமென உங்களுக்கு நான் தடைவிதித்திருந்தேன். இனி எல்லாப் பாத்திரங்களிலும் அருந்திக்கொள்ளுங்கள். எனினும், போதை தரக்கூடியதை அருந்தாதீர்கள்.
இதை புரைதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 36
4069. அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தோல் பாத்திரங்(களைத் தவிர மற்றவை)களில் (பானங்களை) ஊற்றிவைப்பதற்குத் தடைவிதித்தபோது, "மக்கள் அனைவருமே தோல் பாத்திரங்களைப் பெற்றிருப்பதில்லையே?" என்று மக்கள் கேட்டனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தார் பூசப்படாத சுட்ட களிமண் பாத்திரத்தைப் பயன்படுத்திக் கொள்ள மக்களுக்கு அனுமதியளித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 36
பாடம் : 7 போதை தரும் ஒவ்வொரு பானமும் மதுவேயாகும். அனைத்து மதுபானமும் தடைசெய்யப்பட்டதாகும் என்பதன் விளக்கம்.
4070. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தேனிலிருந்து தயாரிக்கப்படும் பானம் (பித்உ) குறித்துக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் "போதை தரும் ஒவ்வொரு பானமும் தடை செய்யப்பட்டதாகும்" என்று பதிலளித்தார்கள்.
இதை இப்னு ஷிஹாப் அஸ்ஸஹ்ரீ (ரஹ்) அவர்களிடமிருந்து மாலிக் பின் அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 36
4071. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தேனிலிருந்து தயாரிக்கப்படும் பானம் (பித்உ) குறித்துக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், "போதை தரும் ஒவ்வொரு பானமும் தடை செய்யப்பட்டதாகும்" என்று பதிலளித்தார்கள்.
இதை இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களிடமிருந்து யூனுஸ் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 36
4072. மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஒன்பது அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் சுஃப்யான் மற்றும் சாலிஹ் (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில், "தேனிலிருந்து தயாரிக்கப்படும் பானம் (பித்உ) பற்றிக் கேட்கப்பட்டது" எனும் குறிப்பு இடம்பெறவில்லை. மஅமர் (ரஹ்) மற்றும் சாலிஹ் (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "போதை தரும் ஒவ்வொரு பானமும் தடை செய்யப்பட்டதாகும்" என்று கூறியதை நான் கேட்டேன்" என ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 36
4073. அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் என்னையும் முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களையும் யமன் நாட்டுக்கு அனுப்பிவைத்தபோது நான், "அல்லாஹ்வின் தூதரே! எங்கள் நாட்டில் தோல் நீக்கப்படாத கோதுமையிலிருந்து ஒருவகை பானம் தயாரிக்கப்படுகிறது. அதற்கு "அல்மிஸ்ர்" என்று பெயர் சொல்லப்படுகிறது. மேலும், தேனிலிருந்து "பித்உ" எனப்படும் ஒரு பானமும் தயாரிக்கப்படுகிறது. (அவற்றை நாங்கள் அருந்தலாமா?)" என்று கேட்டேன்.
அதற்கு அவர்கள், "போதை தரும் ஒவ்வொன்றும் தடை செய்யப்பட்டதாகும்" என்று (பொது விதி) கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் என்னையும் முஆத் (ரலி) அவர்களையும் யமன் நாட்டுக்கு அனுப்பி வைத்தபோது எங்கள் இருவரிடமும், "நீங்கள் (மக்களுக்கு) நற்செய்திகளை(யே அதிகமாக)ச் சொல்லுங்கள். (அவர்களிடம்) எளிதாக நடந்துகொள்ளுங்கள். கற்றுக்கொடுங்கள். (அவர்களுக்கு) வெறுப்பேற்றிவிடாதீர்கள்" என்று கூறினார்கள்.
"நீங்கள் இருவரும் இணக்கமாக நடந்து கொள்ளுங்கள்" என்றும் (அறிவுரை) கூறினார்கள் என்றே நான் கருதுகிறேன். நான் திரும்பிச் சென்றபோது மீண்டும் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! யமன்வாசிகளிடம் தேன் சுண்டக்காய்ச்சப்பட்டுத் தயாரிக்கப்படும் ஒரு வகை பானம் உண்டு. மேலும், தோல் நீக்கப்படாத கோதுமையிலிருந்து தயாரிக்கப்படும் "மிஸ்ர்" எனும் பானமும் உண்டு (அவற்றை அருந்தலாமா?)" என்று கேட்டேன்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "தொழுகையிலிருந்து தடுக்கக்கூடிய போதை தரும் ஒவ்வொன்றும் தடை செய்யப்பட்டதாகும்" என்று பதிலளித்தார்கள்.
அத்தியாயம் : 36
4074. அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னையும் முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களையும் யமன் நாட்டுக்கு அனுப்பிவைத்தபோது, மக்களுக்கு (இஸ்லாமிய) அழைப்பு விடுங்கள். நற்செய்திகளை(யே அதிகமாக)க் கூறுங்கள். (எச்சரிக்கை விடுக்கும்போது) வெறுப்பேற்றி விடாதீர்கள். (அவர்களிடம்) எளிதாக நடந்துகொள்ளுங்கள். (அவர்களைச்) சிரமப்படுத்தி விடாதீர்கள்" என்று (அறிவுரை) கூறினார்கள்.
நான், "அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் யமன் நாட்டில் தயாரித்துவரும் இரு பானங்களைப் பற்றி எங்களுக்குத் தீர்ப்பு வழங்குங்கள். அவை: கட்டியாகும்வரை ஊறவைக்கப்படும் தேனிலிருந்து தயாரிக்கப்படும் "பித்உ" எனும் பானமும்,அவ்வாறே கட்டியாகும்வரை ஊறவைக்கப்படும் சோளம், தோல் நீக்கப்படாத கோதுமை ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்படும் "மிஸ்ர்" எனும் பானமும் ஆகும்" என்று கூறினேன்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (ஆரம்பம் முதல்) முடிவுவரை அனைத்தும் செறிவுடன் அமைந்த ஒருங்கிணைந்த சொற்கள் வழங்கப்பட்டிருந்தார்கள். அவர்கள் கூறினார்கள்: தொழுகையிலிருந்து தடுக்கக்கூடிய போதை தரும் ஒவ்வொன்றையும் நான் தடை செய்கிறேன். - இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 36
4075. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் யமன் நாட்டிலுள்ள "ஜைஷான்" எனுமிடத்திலிருந்து வந்து, தம் நாட்டினர் சோளத்திலிருந்து தயாரித்துப் பருகிவருகின்ற ஒருவகை பானம் குறித்து நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அது போதையளிக்கக்கூடியதா?" என்று கேட்டார்கள். அவர் "ஆம் (போதையளிக்கக்கூடியதே)" என்று பதிலளித்தார். நபி (ஸல்) அவர்கள், "போதையளிக்கக்கூடிய ஒவ்வொன்றும் தடை செய்யப்பட்டதாகும். (இவ்வுலகில்) போதைப் பொருட்களை உட்கொள்பவருக்கு (மறுமையில்) "தீனத்துல் கபாலை" நிச்சயமாக நான் புகட்டுவேன் என அல்லாஹ் உறுதிமொழி எடுத்துள்ளான்" என்று கூறினார்கள்.
மக்கள் "அல்லாஹ்வின் தூதரே! "தீனத்துல் கபால்" என்பது என்ன?" என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நரகவாசிகளின் வியர்வை அல்லது நரகவாசிகளின் சீழ்" என்று விடையளித்தார்கள்.
அத்தியாயம் : 36
4076. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
போதை தரும் ஒவ்வொன்றும் மதுவாகும். போதை தரும் ஒவ்வொன்றும் தடை செய்யப் பட்டதாகும். யார் இவ்வுலகில் தொடர்ந்து மது அருந்தி, பாவமன்னிப்புத் தேடாமல் (திருந்தாமல்) குடிகாரராகவே இறந்துவிடுகிறாரோ அவர் மறுமையில் (சொர்க்க) மதுவை அருந்தமாட்டார். - இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 36
4077. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
போதை தரும் ஒவ்வொன்றும் மதுவாகும். போதை தரும் ஒவ்வொன்றும் தடை செய்யப் பட்டதாகும். -இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 36
4078. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
போதை தரும் ஒவ்வொன்றும் மதுவாகும். ஒவ்வொரு மதுவும் தடை செய்யப்பட்டதாகும்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்தே அறிவிக்கிறார்கள் என்றே நான் அறிகிறேன் என அறிவிப்பாளர் நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 36
பாடம் : 8 குடிகாரன் பாவமன்னிப்புக் கோரி திருந்தாவிட்டால் மறுமையில் (சொர்க்கத்தின்) மது மறுக்கப்படுவதன் மூலம் தண்டிக்கப்படுவான்.
4079. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உலகில் மது அருந்தியவருக்கு மறுமையில் (சொர்க்கத்தின்) மது அருந்தும் வாய்ப்பு மறுக்கப்படும்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 36
4080. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
"உலகில் மது அருந்திவிட்டு அதற்காகப் பாவமன்னிப்புக் கோராதவருக்கு மறுமையில் (சொர்க்கத்தின்) மது அருந்தும் வாய்ப்பு மறுக்கப்படும். அது அவருக்குப் புகட்டப்பட மாட்டாது" என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அப்துல்லாஹ் பின் மஸ்லமா பின் கஅனப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
(எனக்கு இந்த ஹதீஸை அறிவித்த) மாலிக் பின் அனஸ் (ரஹ்) அவர்களிடம் "நாஃபிஉ (ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸை நபி (ஸல்) அவர்கள் கூறியதாகக் குறிப்பிட்டார்களா?" என்று கேட்கப்பட்டது.
அதற்கு மாலிக் (ரஹ்), அவர்கள், "ஆம்" என்றார்கள்.
அத்தியாயம் : 36
4081. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உலகில் மது அருந்தியவர் மறுமையில் அதை அருந்தமாட்டார்; பாவமன்னிப்புக் கோரி (திருந்தி)னால் தவிர.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 36
பாடம் : 9 கெட்டித்தன்மையும் போதையும் உள்ளதாக மாறாவிட்டால், பழச்சாறுகள் அனுமதிக்கப்பட்டவையே ஆகும்.
4082. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்காக இரவின் ஆரம்பநேரத்தில் பழச்சாறு ஊற்றி வைக்கப்படும். காலையில் அதை அவர்கள் அருந்துவார்கள். அன்றைய பகல் முழுவதும், அடுத்த இரவும், அடுத்த நாள் பகலிலும், மற்றோர் இரவிலும், அதற்கடுத்த பகலில் அஸ்ர் நேரம் வரையிலும் அதை அருந்துவார்கள்.
பிறகு (அதில்) ஏதேனும் எஞ்சியிருந்தால் (தம்) பணியாளருக்கு அதை அருந்தக் கொடுப்பார்கள். அல்லது (அதைக் கொட்டிவிடுமாறு) உத்தரவிடுவார்கள். அவ்வாறே அது கொட்டப்படும்.
அத்தியாயம் : 36
4083. யஹ்யா பின் உபைத் அல்பஹ்ரானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
மக்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் பழச்சாறுகள் பற்றிக் குறிப்பிட்டனர். அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்காகத் தோல் பையொன்றில் பழச்சாறு ஊற்றிவைக்கப்பட்டுவந்தது.
திங்கட்கிழமை இரவு அவ்வாறு ஊற்றி வைக்கப்பட்டால், திங்கட்கிழமையும் செவ்வாய் கிழமை அஸ்ர் வரையும் அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அருந்துவார்கள். பிறகு அதில் ஏதேனும் எஞ்சியிருந்தால் பணியாளருக்கு அருந்தக் கொடுப்பார்கள்; அல்லது கொட்டிவிடுவார்கள்.
அத்தியாயம் : 36
4084. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்காக உலர்ந்த திராட்சை (தண்ணீரில்) ஊறவைக்கப் படும். அதை அன்றைய தினமும் மறுநாளும் அதற்கடுத்த மூன்றாம் நாளின் மாலை வரையும் அவர்கள் அருந்துவார்கள்.
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கட்டளைக்கிணங்க அது (யாருக்கேனும்) அருந்தக் கொடுக்கப்படும்; அல்லது கொட்டப்பட்டுவிடும்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 36
4085. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்காகத் தோல் பையில் உலர்ந்த திராட்சை ஊறவைக்கப்படும். அதை அன்றைய தினமும் மறுநாளும் அதற்கடுத்த நாளும் அவர்கள் அருந்துவார்கள். மூன்றாவது நாள் மாலையில் தாமும் அருந்துவார்கள்; (யாருக்கேனும்) அருந்தவும் கொடுப்பார்கள். பிறகு (அதில்) ஏதேனும் எஞ்சியிருந்தால் அதைக் கொட்டி விடுவார்கள்.
அத்தியாயம் : 36
4086. யஹ்யா பின் உபைத் அபூஉமர் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
சிலர் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், மதுவை விற்பது, வாங்குவது, வியாபாரம் செய்வது ஆகியவற்றைப் பற்றிக் கேட்டனர். அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், "நீங்களெல்லாம் முஸ்லிம்களா?" என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் "ஆம்" என்று கூறினர்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், "மதுவை விற்பதும் கூடாது; வாங்குவதும் கூடாது; அது தொடர்பான வியாபாரங்களில் ஈடுபடுவதும் கூடாது" என்று கூறினார்கள். பிறகு மக்கள், பழச்சாறுகள் பற்றிக் கேட்டபோது, இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் பின்வருமாறு பதிலளித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு பயணத்திற்காகப் புறப்பட்டுச் சென்றுவிட்டுத் திரும்பிக்கொண்டிருந்தார்கள். அப்போது அவர்களுடைய தோழர்களில் சிலர் மண் சாடிகளிலும் பேரீச்ச மரத்தின் அடிப்பாகத்தைக் குடைந்து தயாரிக்கப்பட்ட பாத்திரத்திலும் சுரைக்காய் குடுவையிலும் பழச்சாறுகளை ஊறவைத்திருந்தனர். அவற்றைக் கொட்டிவிடுமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உத்தரவிட அவ்வாறே அவை கொட்டப்பட்டன.
பிறகு தோல் பையொன்றைக் கொண்டுவரச் சொல்லி உத்தரவிட்டார்கள். (அதைக் கொண்டு வந்ததும்) அதில் உலர்ந்த திராட்சைகளும் சிறிது தண்ணீரும் ஊற்றப்பட்டது. பிறகு அது அந்த இரவு முழுவதும் அப்படியே (ஊற) விடப்பட்டது. காலையானதும் அன்றைய தினம் முழுவதிலும் அடுத்த இரவிலும் அதற்கடுத்த நாள் மாலைவரையிலும் அதில் தாமும் அருந்தினார்கள்; (பிறருக்கும்) அருந்தக் கொடுத்தார்கள். (அடுத்த நாள்) காலையில் அதில் எஞ்சியிருந்ததைக் கொட்டிவிடுமாறு அவர்கள் உத்தரவிட அவ்வாறே அது கொட்டப்பட்டது.
அத்தியாயம் : 36
4087. ஸுமாமா பின் ஹஸ்ன் அல்குஷைரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ஆயிஷா (ரலி) அவர்களைச் சந்தித்து, பழச்சாறுகள் பற்றிக் கேட்டேன். அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள்,அபிசீனியாவைச் சேர்ந்த (கறுப்பு நிற) அடிமைப்பெண் ஒருவரை அழைத்து, "இவரிடம் கேளுங்கள். இவர்தாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்காகப் பழச்சாறுகளை ஊறவைப்பவராக இருந்தார்" என்று கூறினார்கள்.
அப்போது அந்த அபிசீனிய (அடிமைப்)பெண், "நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்காக இரவில் தண்ணீர் தோல் பையில் பழச்சாற்றை ஊற்றிவைத்து, அதன் வாய்ப் பகுதியை சுருக்கிட்டுக் கட்டி, அதை தொங்க விட்டுவிடுவேன். மறுநாள் காலையில் அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அருந்துவார்கள்" என்று கூறினார்.
அத்தியாயம் : 36
4088. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்காகத் தண்ணீர் தோல் பையொன்றில் பழச்சாறுகளை ஊற்றிவைப்போம். பையின் வாய்ப்பகுதி சுருக்கிட்டுக் கட்டப்படும். அதன் கீழ்ப்பகுதியில் துவாரம் இருக்கும். பழச் சாற்றை நாங்கள் காலையில் ஊற்றிவைத்தால் இரவில் அதை நபியவர்கள் அருந்துவார்கள்; இரவில் ஊற்றிவைத்தால் காலையில் அதை அருந்துவார்கள்.
அத்தியாயம் : 36
4089. சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அபூஉசைத் (மாலிக் பின் ரபீஆ) அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் தமது திருமணத்திற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அழைத்தார்கள். அதில் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கலந்துகொண்டார்கள்.) அபூஉசைத் (ரலி) அவர்களின் துணைவியார் (சலாமா பின்த் உஹைப் - ரலி) அவர்களே -அவர்தாம் மணப்பெண்- அன்றைய தினம் மக்களுக்குப் பணிவிடைகள் செய்தார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பருகுவதற்கு மணப்பெண் என்ன வழங்கினார் தெரியுமா? அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கென்றே இரவில் பேரீச்சம் பழங்களைக் கல் தொட்டியொன்றில் ஊறப்போட்டுவைத்திருந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (வலீமா விருந்தை) உண்டு முடித்ததும் அந்தப் பேரீச்சம் பழச்சாற்றை அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பருகத்தந்தார்.
- மேற்கண்ட ஹதீஸ் சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "அபூஉசைத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து அவர்களை (மணவிருந்துக்கு) அழைத்தார்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது.
அதில் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (வலீமா விருந்தை) உண்டு முடித்ததும் அந்தப் பேரீச்சம் பழச்சாற்றை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அவர் பருகத் தந்தார்" எனும் குறிப்பு இடம் பெறவில்லை.
அத்தியாயம் : 36
4090. மேற்கண்ட ஹதீஸ் சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "அவர் கல் தொட்டியொன்றில் (பேரீச்சம் பழங்களை ஊறவைத்திருந்தார்). அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உணவருந்தி முடித்ததும் அந்தப் பேரீச்சம் பழங்களை மணப்பெண் தமது கரத்தால் பிசைந்து சாறு எடுத்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பருகத்தந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு மட்டுமே அதை அவர் வழங்கினார்" என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 36
4091. சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஓர் அரபுப் பெண்ணைப் பற்றி (அவளை மணந்து கொள்ளுமாறு) கூறப்பட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்பெண்ணை அழைத்து வருவதற்கு ஆளனுப்புமாறு அபூஉசைத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்களுக்கு உத்தரவிட, அவ்வாறே அவர்கள் ஆளனுப்பினார்கள்.
அந்தப் பெண் வந்து, (மதீனாவிலுள்ள) பனூ சாஇதா குலத்தாரின் கோட்டை ஒன்றில் தங்கினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புறப்பட்டு அப்பெண்ணிடம் வந்து, அவள் இருந்த இடத்தில் நுழைய, அங்கே அப்பெண் தலையைக் கவிழ்த்தபடி இருந்தாள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்பெண்ணிடம் (தம்மை மணந்துகொள்ள சம்மதம் கேட்டுப்) பேசியபோது அவள், "உங்களிடமிருந்து நான் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறேன்" என்று சொன்னாள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "என்னிடமிருந்து உனக்குப் பாதுகாப்பு அளித்துவிட்டேன்" என்று கூறினார்கள். மக்கள் அந்தப் பெண்ணிடம், "இவர்கள் யார் என்று உனக்குத் தெரியுமா?" என்று கேட்க, அவள் "தெரியாது” என்று பதிலளித்தாள்.
மக்கள் "இவர்கள்தாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள். உன்னைப் பெண் பேசுவதற்காக வந்தார்கள்" என்று கூறினர். அந்தப் பெண், "அவர்களை மணந்துகொள்ளும் நற்பேற்றை நான் இழந்து துர்பாக்கியசாலி ஆகிவிட்டேனே!" என்று (வருத்தத்துடன்) கூறினாள்.
அன்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் தோழர்களும் முன்னே சென்று பனூ சாஇதா சமுதாயக் கூடத்தில் அமர்ந்துகொண்டனர். பிறகு "எங்களுக்குக் குடிக்க தண்ணீர் கொடுங்கள்" என்று என்னிடம் சொன்னார்கள். ஆகவே,நான் அவர்களுக்காக இந்தக் கிண்ணத்தை எடுத்துக்கொண்டு புறப்பட்டுச் சென்று அதில் அவர்களுக்குத் தண்ணீர் (கொண்டு வந்து) புகட்டினேன்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
(பின்னர்) சஹ்ல் (ரலி) அவர்கள் அந்தக் கிண்ணத்தை வெளியில் எடுத்தார்கள். அதில் நாங்களும் பருகினோம். பிறகு (கலீஃபா) உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்கள் அதைத் தமக்கு அன்பளிப்பாகத் தரும்படி கேட்க, சஹ்ல் (ரலி) அவர்கள் அதை அவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கிவிட்டார்கள்.
அபூபக்ர் பின் இஸ்ஹாக் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "எங்களுக்குக் குடிக்கத் தண்ணீர் கொடுங்கள், சஹ்லே!" என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 36
4092. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு இந்தக் கிண்ணத்தில் தேன், பழச்சாறு, தண்ணீர் மற்றும் பால் ஆகிய எல்லாப் பானங்களையும் அருந்தக் கொடுத்திருக்கிறேன்.
இதை ஸாபித் பின் அஸ்லம் அல்புனானீ (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 36
பாடம் : 10 பால் அருந்தலாம்.
4093. அபூபக்ர் அஸ்ஸித்தீக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் மக்காவிலிருந்து மதீனா நோக்கி (ஹிஜ்ரத்) சென்ற போது, ஆட்டு இடையன் ஒருவனை நாங்கள் கடந்துசென்றோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குத் தாகம் ஏற்பட்டிருந்தது. அப்போது நான் (அந்த இடையனிடமிருந்த ஆட்டிலிருந்து) சிறிதளவு பால் கறந்து அதை நபியவர்களிடம் கொண்டுவ(ந்து கொடு)த்தேன். நான் திருப்தியடையும் அளவுக்கு அதை நபி (ஸல்) அவர்கள் அருந்தினார்கள்.
இதை பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 36
4094. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து மதீனாவிற்கு (ஹிஜ்ரத் செய்து) வந்தபோது, அவர்களைப் பின்தொடர்ந்து (அவர்களைப் பிடிப்பதற்காக) சுராக்கா பின் மாலிக் பின் ஜுஅஷும் என்பவர் வந்தார். ஆகவே,அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சுராக்காவிற்கு எதிராகப் பிரார்த்தித்தார்கள். உடனே அவரது குதிரை பூமியில் அழுந்திவிட்டது.
சுராக்கா (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம்), "எனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்" என்று சொன்னார். அவ்வாறே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவருக்காகப் பிரார்த்தித்தார்கள்.
பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தாகத்துடன் இருக்க, ஓர் ஆட்டு இடையனை அவர்கள் கடந்துசென்றார்கள்.
(பின்னர் நடந்தவை பற்றி) அபூபக்ர் அஸ்ஸித்தீக் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
நான் ஒரு கிண்ணத்தை எடுத்து (ஆடு ஒன்றிலிருந்து) சிறிதளவு பாலை அதில் கறந்து, அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டுவந்(து கொடுத்)தேன். நான் திருப்தியடையும் அளவுக்கு அதிலிருந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அருந்தினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 36
4095. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ஜெரூசலத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட (இஸ்ரா மற்றும் விண்ணுலகப் பயண) இரவில் அவர்களிடம் இரு கிண்ணங்கள் கொண்டுவரப்பட்டன. ஒன்றில் மதுவும் மற்றொன்றில் பாலும் இருந்தன. நபி (ஸல்) அவர்கள் அவ்விரண்டையும் உற்றுப் பார்த்துவிட்டு, பால் கிண்ணத்தை எடுத்துக்கொண்டார்கள்.
அப்போது அவர்களிடம் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் "தங்களுக்கு இயற்கை வழியைக் காட்டிய இறைவனுக்கே எல்லாப் புகழும். நீங்கள் மதுக் கிண்ணத்தை எடுத்திருந்தால் உங்கள் சமுதாயம் தறிகெட்டுப் போயிருக்கும்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரவில் அழைத்துச் செல்லப்பட்டபோது அவர்களிடம் இரு கிண்ணங்கள் கொண்டுவரப்பட்டன" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. அதில் "ஜெரூசலத்திற்கு" எனும் குறிப்பு இல்லை.
அத்தியாயம் : 36
பாடம் : 11 பழச்சாறுகளைப் பருகுவதும் பாத்திரங்களை மூடிவைப்பதும்.
4096. அபூஹுமைத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் நபி (ஸல்) அவர்களிடம் "அந்நகீஉ" எனுமிடத்திலிருந்து ஒரு கோப்பைப் பாலை மூடாமல் கொண்டுவந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், "இதன்மீது ஒரு குச்சியைக் குறுக்காக வைத்தாவது இதை நீங்கள் மூடிக் கொண்டுவந்திருக்கக் கூடாதா?" என்று (என்னிடம்) கேட்டார்கள்.
இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
"தண்ணீர் தோல் பைகளின் வாய்ப்பகுதியைச் சுருக்கிட்டு வைக்குமாறும் கதவுகளை இரவில் தாழிட்டு வைக்குமாறும் கட்டளையிடப்பட்டுள்ளது" என்றும் அபூ ஹுமைத் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- அபூஹுமைத் (ரலி) அவர்களிடமிருந்து ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கும் மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "நான் நபி (ஸல்) அவர்களிடம் ஒரு கோப்பை பால் கொண்டுவந்தேன்" என ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம் பெற்றுள்ளன.
ஸகரிய்யா பின் இஸ்ஹாக் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "இரவில்" எனும் குறிப்பு இல்லை.
அத்தியாயம் : 36
4097. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒருமுறை) நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தபோது குடிப்பதற்குத் தண்ணீர் கேட்டார்கள். அப்போது ஒரு மனிதர், "அல்லாஹ்வின் தூதரே! குடிப்பதற்குப் பழச்சாறு தரட்டுமா?" என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "சரி”” என்றார்கள்.
உடனே அந்த மனிதர் விரைந்து சென்று ஒரு கோப்பையில் பழச்சாறு கொண்டு வந்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இதன்மீது ஒரு குச்சியைக் குறுக்காக வைத்தாவது இதை நீங்கள் மூடிக் கொண்டுவந்திருக்கக்கூடாதா?" என்று கேட்டு விட்டு, பிறகு அதை அருந்தினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 36
4098. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அபூஹுமைத் எனப்படும் ஒரு மனிதர் "நகீஉ" எனும் இடத்திலிருந்து ஒரு கோப்பை பால் கொண்டுவந்தார். அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இதன்மீது ஒரு குச்சியைக் குறுக்காக வைத்தாவது இதை நீங்கள் மூடிக் கொண்டுவந்திருக்கக்கூடாதா?" என்று கேட்டார்கள். - இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 36
பாடம் : 12 பாத்திரங்களை மூடிவைத்தல், தண்ணீர் தோல் பையின் வாயைச் சுருக்கிட்டு வைத்தல், கதவைத் தாழிடுதல்,இவற்றின்போது அல்லாஹ்வின் பெயர் கூறல், உறங்கச் செல்கையில் விளக்கையும் நெருப்பையும் அணைத்துவிடுதல், மஃக்ரிபுக்குப் பின் (இரவின் சிறிது நேரம் கழியும்வரை) குழந்தைகளையும் கால்நடைகளையும் (வெளியே திரியவிடாமல்) தடுத்துவிடல் ஆகியவற்றைச் செய்யுமாறு வந்துள்ள கட்டளை.
4099. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பாத்திரங்களை மூடிவையுங்கள்; தண்ணீர் தோல் பையின் வாயைச் சுருக்கிட்டுக் கட்டி விடுங்கள்; கதவைத் தாழிட்டுவிடுங்கள்; விளக்கை அணைத்துவிடுங்கள்; ஏனெனில், ஷைத்தான் (சுருக்கிட்டு மூடிவைக்கப்பட்ட) எந்தப் பையையும் அவிழ்ப்பதில்லை; மூடப்பட்ட எந்தக் கதவையும் திறப்பதில்லை; (மூடிவைக்கப்பட்ட) எந்தப் பாத்திரத்தையும் திறப்பதில்லை.
உங்களில் ஒருவர் தமது பாத்திரத்தின் மீது ஒரு குச்சியைக் குறுக்காக வைத்தாவது அல்லாஹ்வின் பெயர் சொல்லி மூடிவைக்க முடியுமானால் அவ்வாறே அவர் செய்து கொள்ளட்டும். ஏனென்றால், எலி (விளக்கின் திரியை இழுத்துச் சென்று) வீட்டாரோடு சேர்த்து வீட்டை எரித்துவிடும்.
இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் குதைபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "கதவைத் தாழிட்டுவிடுங்கள்" எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
- மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில்"பாத்திரத்தைக் கவிழ்த்து(க் கொட்டி)விடுங்கள்; அல்லது பாத்திரத்தை மூடிவையுங்கள்" என்று இடம்பெற்றுள்ளது. "பாத்திரத்தின் மீது குச்சியைக் குறுக்காக வைப்பது" தொடர்பான குறிப்பு இல்லை.
- மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "கதவைத் தாழிட்டுவிடுங்கள்" என்று ஹதீஸ் ஆரம்பமாகி மேற்கண்ட ஹதீஸில் உள்ளவாறே இடம்பெற்றுள்ளது. இந்த அறிவிப்பில் "பாத்திரத்தை மூடிவையுங்கள்" என்றும், "(எலி) வீட்டாரின் உடைகளை எரித்துவிடும்" என்றும் இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், மேற்கண்ட ஹதீஸில் உள்ள விவரங்களுடன் "எலி வீட்டாரோடு சேர்த்து வீட்டை எரித்துவிடும்" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 36
4100. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"இரவின் இருள் பரவத் தொடங்கிவிட்டால்" அல்லது "அந்திப் பொழுதாகிவிட்டால்" உங்கள் குழந்தைகளை (வெளியே திரியவிடாமல்) தடுத்துவிடுங்கள். ஏனெனில், ஷைத்தான்கள் அப்போதுதான் (புத்தெழுச்சியுடன் பூமியெங்கும்) பரவுகின்றனர். இரவின் சிறிது நேரம் கழிந்துவிட்டால் குழந்தைகளை (வெளியே செல்ல) விட்டுவிடுங்கள். மேலும், (வீட்டின்) கதவுகளைத் தாழிட்டுவிடுங்கள். அப்போது அல்லாஹ்வின் பெயரைச் சொல்லுங்கள். ஏனெனில், ஷைத்தான் மூடப்பட்ட எந்தக் கதவையும் திறப்பதில்லை.
உங்கள் தண்ணீர் பையின் வாய்ப் பகுதியைச் சுருக்கிட்டு மூடிவிடுங்கள். (அப்போதும்) அல்லாஹ்வின் பெயரைச் சொல்லுங்கள். உங்களுடைய பாத்திரங்களை மூடி வையுங்கள். (அப்போதும்) அல்லாஹ்வின் பெயரைச் சொல்லுங்கள். (அவற்றை முழுவதும் மூட முடியாவிட்டாலும்) அவற்றின் மீது எதையாவது குறுக்காக வைத்தேனும் மூடிவிடுங்கள். உங்கள் விளக்குகளை அணைத்துவிடுங்கள்.
இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
எனினும், அதில் "வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்வின் பெயரைச் சொல்லுங்கள்" என்று இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட இரு ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 36
4101. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சூரியன் மறைந்துவிட்டால் இரவின் (ஆரம்பநேர) இருள் விலகும்வரை உங்கள் கால்நடைகளையும் குழந்தைகளையும் வெளியே விடாதீர்கள். ஏனெனில், ஷைத்தான்கள் சூரியன் மறைந்துவிட்டால் இரவின் (ஆரம்பநேர) இருள் விலகும்வரை கிளம்பிச் செல்கின்றனர்.
இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 36
4102. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பாத்திரங்களை மூடிவையுங்கள்; தண்ணீர் தோல் பையின் வாய்ப்பகுதியைச் சுருக்கிட்டு மூடிவையுங்கள். ஏனெனில்,ஆண்டின் ஓர் இரவில் கொள்ளை நோய் இறங்குகிறது. மூடியில்லாத பாத்திரத்தையும் சுருக்கிட்டு மூடிவைக்காத தண்ணீர் பையையும் கடந்து செல்லும் அந்த நோயில் சிறிதளவாவது அதில் இறங்காமல் இருப்பதில்லை.
இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "ஆண்டில் ஒரு நாள் உண்டு. அந்நாளில் கொள்ளை நோய் இறங்குகிறது" என்று இடம்பெற்றுள்ளது. ஹதீஸின் இறுதியில் "நமக்கு அருகிலுள்ள அரபியர் அல்லாதோர் டிசம்பர் மாதத்தில் அந்த நாள் வருவதாகக் கருதி அஞ்சுகின்றனர்" என்று லைஸ் பின் சஅத் (ரஹ்) அவர்கள் கூறினார்கள் எனக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 36
4103. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் உறங்கச் செல்லும்போது உங்கள் வீட்டிலுள்ள நெருப்பை (அணைக்காமல்) விட்டுவிடாதீர்கள்.- இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 36
4104. அபூமூசா (ரலி) அவர்கள் கூறியதாவது:
மதீனாவில் ஒரு வீடு இரவில் (தீ விபத்துக்குள்ளாகி) வீட்டாரோடு எரிந்துவிட்டது. அவர்களின் நிலை குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தெரிவிக்கப்பட்ட போது, "இந்த நெருப்பு உங்களுக்கு ஆபத்தானதே ஆகும். ஆகவே, நீங்கள் உறங்கச் செல்லும்போது நெருப்பை அணைத்து விடுங்கள்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 36
பாடம் : 13 உண்பது, அருந்துவது ஆகியவற்றின் ஒழுங்குமுறைகளும் விதிமுறைகளும்.
4105. ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் (சேர்ந்து) உணவு உண்பதற்கு அமர்ந்தால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முதலில் கை வைப்பதற்கு முன் எங்கள் கைகளை (உணவில்) நாங்கள் வைக்கமாட்டோம். ஒருமுறை நாங்கள் உணவு உண்பதற்கு அவர்களுடன் அமர்ந்தோம். அப்போது ஒரு சிறுமி, (யாராலோ) தள்ளிவிடப்பட்டவளைப் போன்று (விரைந்து) வந்து, (பிஸ்மில்லாஹ் சொல்லாமல்) உணவில் கை வைக்கப்போனாள்.
உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவளது கையைப் பிடித்துக்கொண்டார்கள். பிறகு ஒரு கிராமவாசி, (யாராலோ) தள்ளிவிடப்பட்டவரைப் போன்று (விரைந்து வந்து பிஸ்மில்லாஹ் சொல்லாமல் உணவில் கை வைக்க) வந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரது கையையும் பிடித்துக் கொண்டார்கள்.
அப்போது, "அல்லாஹ்வின் பெயர் சொல்லப்படாத உணவில் ஷைத்தான் பங்கேற்கிறான். அவன் இச்சிறுமியுடன் வந்து, அவள் மூலமே இந்த உணவில் பங்கேற்கப் பார்த்தான். ஆகவே, அவளது கையை நான் பிடித்து (அதைத் தடுத்து)விட்டேன். பிறகு இந்தக் கிராமவாசியுடன் வந்து அவர் மூலம் இந்த உணவில் பங்கேற்கப் பார்த்தான். ஆகவே,இவரது கையைப் பிடித்து (அதைத் தடுத்து)விட்டேன். என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! ஷைத்தானின் கை அச்சிறுமியின் கையுடன் எனது கைக்குள் சிக்கிக்கொண்டது" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் உணவு உண்ண (விருந்துக்கு) அழைக்கப்பெற்றால்..."என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
இதில் ("தள்ளிவிடப்பட்டவரைப் போன்று" என்பதற்குப் பதிலாக) "துரத்தப்பட்டவரைப் போன்று" என்றும், முதலில் கிராமவாசி வந்தார்; பிறகு அச்சிறுமி வந்தாள் என்றும் இடம்பெற்றுள்ளது. மேலும், ஹதீஸின் இறுதியில் "பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் பெயர் (பிஸ்மில்லாஹ்) சொல்லி உணவு உண்டார்கள்" என்று அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள் ளது.
அதில் "கிராமவாசிக்கு முன் அச்சிறுமி வந்தாள்" என்று காணப்படுகிறது.
அத்தியாயம் : 36
4106. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் தமது இல்லத்திற்குள் நுழையும் போதும் உணவு உண்ணும்போதும் அல்லாஹ்வை நினைவுகூர்ந்தால், ஷைத்தான் (தன் கூட்டத்தாரிடம்), "இன்றைய இரவில் உங்களுக்கு (இங்கே) தங்குமிடமும் இல்லை; உண்ண உணவுமில்லை" என்று கூறுகிறான். ஒருவர் இல்லத்திற்குள் நுழையும் போது அல்லாஹ்வை நினைவுகூராவிட்டால் ஷைத்தான் (தன் கூட்டத்தாரிடம்), "இன்றைய இரவில் உங்களுக்குத் தங்குமிடம் கிடைத்துவிட்டது" என்று சொல்கிறான்.
அவர் உணவு உண்ணும்போது அல்லாஹ்வின் பெயர் கூறாவிட்டால் ஷைத்தான் "இன்றைய இரவில் நீங்கள் தங்கும் இடத்தையும் உணவையும் அடைந்துகொண்டீர்கள்" என்று சொல்கிறான்.
இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "அவர் உணவு உண்ணும்போது அல்லாஹ்வின் பெயர் கூறாவிட்டால், அவர் இல்லத்திற்குள் நுழையும்போது அல்லாஹ்வின் பெயர் கூறாவிட்டால் (ஷைத்தான் "இந்த இரவில் நீங்கள் தங்குமிடத்தையும் உணவையும் அடைந்துகொண்டீர்கள்" என்று கூறுகிறான்)" என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 36
4107. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இடக்கையால் உண்ணாதீர்கள். ஏனெனில், ஷைத்தான் இடக்கையால்தான் உண்கிறான்.
இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 36
4108. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் உணவு உண்ணும் போது வலக்கையால் உண்ணட்டும்; பருகும் போது வலக்கையால் பருகட்டும். ஏனெனில், ஷைத்தான் இடக்கையால்தான் உண்கிறான்; இடக் கையால்தான் பருகுகிறான்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிபபாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 36
4109. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் யாரும் இடக் கையால் உண்ண வேண்டாம்; இடக் கையால் பருக வேண்டாம். ஏனெனில், ஷைத்தான் இடக் கையால்தான் உண்கிறான்; இடக்கையால் தான் பருகுகிறான்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
நாஃபிஉ (ரஹ்) அவர்கள் தமது அறிவிப்பில் "இடக் கையால் வாங்காதீர்கள். இடக் கையால் கொடுக்காதீர்கள்" என்று கூடுதலாக அறிவித்துள்ளார்கள். அபுத்தாஹிர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "உங்களில் ஒருவர் (இடக் கையால்) உண்ண வேண்டாம்" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 36
4110. சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அருகில் இடக் கையால் உணவு உண்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "வலக் கையால் உண்பீராக!" என்று சொன்னார்கள். அவர், "என்னால் முடியாது" என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உம்மால் முடியாமலே போகட்டும்!" என்று சொன்னார்கள். அகம்பாவமே அவரை (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குக் கட்டுப்படாமல்) தடுத்தது. அவ்வாறே, அவரால் தமது வாய்க்குக் கையை உயர்த்த முடியாமல் போனது.
அத்தியாயம் : 36
4111. உமர் பின் அபீசலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மடியில் வளர்ந்தேன். (ஒருமுறை) எனது கை, உணவுத் தட்டில் (இங்கும் அங்குமாக) அலைந்துகொண்டிருந்தது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "குழந்தாய்! (உண்ணும்போது) அல்லாஹ்வின் பெயரைச் சொல்வாயாக! உன் வலக்கரத்தால் உண்பாயாக! உன(து கை)க்கு அருகிலிருக்கும் பகுதியிலிருந்து எடுத்து உண்பாயாக!" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 36
4112. உமர் பின் அபீசலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு நாள் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் உணவு அருந்தினேன். தட்டின் மூலைகளிலிருந்து இறைச்சியை எடுக்கலானேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உன(து கை)க்கு அருகிலிருந்து எடுத்து உண்பாயாக!" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 36
4113. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் தண்ணீர் தோல் பைகளை, அவற்றின் வாய்ப்பகுதியை வெளிப் பக்கமாகச் சுருட்டிவிட்டு அதிலிருந்து நீரருந்த வேண்டாமென ("இக்தினாஸ்") தடை விதித்தார்கள்.
அத்தியாயம் : 36
4114. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தண்ணீர் தோல் பைகளை, அவற்றின் வாய்ப் பகுதியி(னை வெளிப்பக்கமாகச் சுருட்டிவிட்டு அதி)லிருந்து நீர் பருக வேண்டாமெனத் தடை செய்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "இக்தினாஸ்" என்பது, அவற்றின் வாய்ப்பகுதியை வெளிப்பக்கமாகத் திருப்பிவிட்டு, அதிலிருந்து நீர் பருகுவதாகும்" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 36
பாடம் : 14 நின்றுகொண்டு நீர் அருந்துவது வெறுக்கத்தக்கதாகும்.
4115. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், நின்றுகொண்டு நீர் அருந்துவதைக் கண்டித்தார்கள்.
அத்தியாயம் : 36
4116. கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறிய தாவது:
அனஸ் (ரலி) அவர்கள், "நபி (ஸல்) அவர்கள், ஒருவர் நின்றுகொண்டு நீர் அருந்த வேண்டாம் எனத் தடை செய்தார்கள்" என்று கூறினார்கள். உடனே நாங்கள், "அவ்வாறாயின் (நின்றுகொண்டு) உண்ணலாமா?" என்று கேட்டோம். அதற்கு அனஸ் (ரலி) அவர்கள், "அது அதைவிட மோசமானது; அருவருப்பானது" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் கத்தாதா (ரஹ்) அவர்களின் கூற்று இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 36
4117. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், நின்றுகொண்டு நீர் அருந்துவதைக் கண்டித்தார்கள்.
அத்தியாயம் : 36
4118. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நின்றுகொண்டு நீர் அருந்த வேண்டாமெனத் தடை செய்தார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 36
4119. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் யாரும் நின்றுகொண்டு அருந்தவேண்டாம். யாரேனும் மறந்து(போய் நின்று கொண்டு அருந்தி)விட்டால் அவர் வாந்தி எடுத்துவிடட்டும்!
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 36
பாடம் : 15 ஸம்ஸம் தண்ணீரை நின்றுகொண்டு அருந்துவது.
4120. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு, அருந்துவதற்கு ஸம்ஸம் தண்ணீரைக் கொடுத்தேன். அதை அவர்கள் நின்றுகொண்டு அருந்தினார்கள்.
அத்தியாயம் : 36
4121. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ஸம்ஸம் (கிணற்றின்) தண்ணீரை ஒரு வாளியில் எடுத்து, அதை நின்றுகொண்டு அருந்தினார்கள்.
அத்தியாயம் : 36
4122. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நின்றுகொண்டு ஸம்ஸம் தண்ணீரை அருந்தினார்கள்.
இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 36
4123. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு, அருந்துவதற்கு ஸம்ஸம் தண்ணீர் கொடுத்தேன். அதை அவர்கள் நின்றுகொண்டு அருந்தினார்கள். இறையில்லம் கஅபா அருகில் இருந்தபோதுதான் அவர்கள் தண்ணீர் கேட்டார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "ஆகவே, அவர்களுக்கு ஒரு வாளியில் தண்ணீர் கொண்டுவந்தேன்" என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 36
பாடம் : 16 (பருகும்) பாத்திரத்தினுள் மூச்சு விடுவது வெறுக்கத்தக்கதாகும். பாத்திரத்திற்கு வெளியே மூன்று முறை மூச்சு விட்டுப் பருகுவது விரும்பத்தக்கதாகும்.
4124. அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறிய தாவது:
நபி (ஸல்) அவர்கள் (பருகும்) பாத்திரத்தினுள் மூச்சு விட வேண்டாமெனத் தடை செய்தார்கள்.
அத்தியாயம் : 36
4125. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பருகும்போது) மூன்று முறை பாத்திரத்தி(ற்கு வெளியி)ல் மூச்சு விட்டு(ப் பருகி)வந்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 36
4126. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பருகும்போது மூன்று முறை மூச்சு விட்டு(ப் பருகி)வந்தார்கள். மேலும், "இதுவே நன்கு தாகத்தைத் தணிக்கக்கூடியதும் (உடல்நலப்) பாதுகாப்பிற்கு ஏற்றதும் அழகிய முறையில் செரிக்கச் செய்யக்கூடியதும் ஆகும்" என்று கூறினார்கள்.
ஆகவேதான், நானும் பருகும்போது மூன்று முறை மூச்சு விட்டு(ப் பருகி) வருகிறேன்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "பாத்திரத்தில் (பருகும்போது)" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 36
பாடம் : 17 (ஓர் அவையில் பரிமாறப்படும்) தண்ணீர், பால் உள்ளிட்ட பானங்களை (பரிமாறுகின்ற) முதல் நபர், தமது வலப்பக்கத்திலிருந்து கொடுத்துவருவது விரும்பத்தக்கதாகும்.
4127. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தண்ணீர் கலந்த பால் கொண்டுவரப்பட்டது. அப்போது அவர்களுக்கு வலப்பக்கம் கிராமவாசி ஒருவரும் இடப்பக்கம் அபூபக்ர் (ரலி) அவர்களும் இருந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பாலைப்) பருகிய பின் (மீதியை வலப்பக்கமிருந்த) அந்தக் கிராமவாசிக்குக் கொடுத்துவிட்டு, "(பரிமாறும்போது முதலில்) வலப்பக்கம் இருப்பவருக்கும், அடுத்து (அவருக்கு) வலப்பக்கமிருப்பவருக்கும் (கொடுக்கவேண்டும்)" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 36
4128. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது நான் பத்து வயதுடையவனாக இருந்தேன். நான் இருபது வயதுடையவனாக இருந்தபோது அவர்கள் இறந்தார்கள். என் (தாய், தாயின் சகோதரி உள்ளிட்ட) அன்னையர்கள், நபி (ஸல்) அவர்களுக்குப் பணிவிடை செய்யுமாறு என்னைத் தூண்டிக்கொண்டேயிருந்தார்கள்.
இந்நிலையில் (ஒரு நாள்) நபி (ஸல்) அவர்கள் எங்கள் வீட்டுக்கு வந்தார்கள். அவர்களுக்காக (எங்கள்) வீட்டில் வளர்ந்த ஓர் ஆட்டிலிருந்து நாங்கள் பால் கறந்து, வீட்டிலிருந்த கிணறு ஒன்றிலிருந்து நீரெடுத்து அதில் கலந்து (அடர்த்தி நீக்கி, குளுமையாக்கி) அவர்களுக்குக் கொடுத்தோம். அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பருகினார்கள். அப்போது அவர்களிடம் உமர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! அபூபக்ருக்குக் கொடுங்கள்" என்று சொன்னார்கள்.
அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு இடப்பக்கத்தில் இருந்தார்கள். ஆனால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமக்கு வலப் பக்கத்திலிருந்த) கிராமவாசி ஒருவருக்கே கொடுத்தார்கள். மேலும், "(பானங்கள் உள்ளிட்டவற்றைப் பரிமாறும்போது முதலில்) வலப்பக்கம் இருப்பவருக்கும் அடுத்து (அவருக்கு) வலப்பக்கத்தில் இருப்பவருக்கும் (கொடுக்க வேண்டும்)" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 36
4129. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்கள் வீட்டுக்கு வந்தபோது, அருந்துவதற்குத் தண்ணீர் கேட்டார்கள். ஆகவே,அவர்களுக்காக நாங்கள் ஓர் ஆட்டின் பாலைக் கறந்தோம். பிறகு எனது இந்தக் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்து, அதில் கலந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொடுத்தேன்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அருந்தினார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் நபியவர்களின் இடப் பக்கத்திலும், உமர் (ரலி) அவர்கள் நபியவர்களின் முன் பக்கத்திலும், ஒரு கிராமவாசி நபியவர்களுக்கு வலப் பக்கத்திலும் இருந்தனர். அப்போது உமர் (ரலி) அவர்கள், "இதோ அபூபக்ர் (அவருக்கு மீதியுள்ள பாலைக் கொடுங்கள்) அல்லாஹ்வின் தூதரே!" என்று (இடப்பக்கத்திலிருந்த) அபூபக்ர் (ரலி) அவர்களைக் காட்டிக் கூறினார்கள். எனினும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (வலப்பக்கமிருந்த) அந்தக் கிராமவாசிக்குக் கொடுத்தார்கள். அபூபக்ர் (ரலி) அவர்களுக்கும் உமர் (ரலி) அவர்களுக்கும் கொடுக்கவில்லை.
மேலும், "(பரிமாறும்போது முதலில்) வலப்பக்கத்தில் இருப்பவர்களே (முன்னுரிமையுடையவர்கள்). வலப்பக்கத்தில் இருப்பவர்களே (முன்னுரிமையுடையவர்கள்). வலப்பக்கத்தில் இருப்பவர்களே (முன்னுரிமையுடையவர்கள்)" என்று கூறினார்கள்.
(இறுதியில்) அனஸ் (ரலி) அவர்கள், "இதுவே நபிவழியாகும்; இதுவே நபிவழியாகும்; இதுவே நபிவழியாகும்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 36
4130. சஹ்ல் பின் சஅத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒருமுறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஏதோ பானம் கொண்டு வரப்பட்டது. அவர்கள் அதை அருந்தினார்கள். அப்போது அவர்களுக்கு வலப்பக்கம் சிறுவர் ஒருவரும் இடப்பக்கத்தில் முதியோர் சிலரும் இருந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அச்சிறுவரிடம், "இ(ந்தப் பானத்தை இம்முதிய)வர்களுக்கு அளிக்க என்னை நீ அனுமதிப்பாயா?" என்று கேட்டார்கள்.
அதற்கு அச்சிறுவர், "இல்லை; அல்லாஹ்வின் மீதாணையாக! தங்களிடமிருந்து எனக்குக் கிடைக்கும் இந்த நற்பேற்றை வேறெவருக்கும் நான் விட்டுத்தரமாட்டேன்" என்று பதிலளித்தார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,அதை அச்சிறுவனின் கையிலேயே அழுத்தி வைத்துவிட்டார்கள்.
அத்தியாயம் : 36
4131. மேற்கண்ட ஹதீஸ் சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் குதைபா மற்றும் யஅகூப் (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில் "உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதை (அச்சிறுவனின் கையிலேயே) அழுத்தி வைத்துவிட்டார்கள்" எனும் குறிப்பு இடம்பெறவில்லை. ஆயினும், யஅகூப் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "எனவே, அ(ச் சிறு)வருக்கே அதைக் கொடுத்தார்கள்" என்று இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 36
பாடம் : 18 (உணவு உண்டு முடித்ததும்) விரல்களைச் சூப்புவதும், உணவுத் தட்டை வழித்து உண்பதும், கீழே தவறிவிழுந்த உணவுக் கவளத்தில் படும் தூசைத் துடைத்துவிட்டு அதை உண்பதும் விரும்பத்தக்கவை ஆகும். விரல்களைச் சூப்புவதற்கு முன் கையைத் துடைப்பது வெறுக்கத்தக்கதாகும்.
4132. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் உணவு உட்கொண்டால், அவர் தமது கையைத் தாமே உறிஞ்சாமல் அல்லது (மனைவி போன்றவரிடம்) உறிஞ்சத்தராமல் அதை அவர் துடைத்துக்கொள்ள வேண்டாம்.- இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 36
4133. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் உணவு உட்கொண்டால், அவர் தமது கையைத் தாமே உறிஞ்சாமல் அல்லது (மனைவி போன்றவரிடம்) உறிஞ்சத்தராமல் கையைத் துடைத்துக் கொள்ள வேண்டாம். - இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 36
4134. கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் உணவு உண்ட பின் தம்முடைய மூன்று விரல்களை உறிஞ்சுவதை நான் பார்த்திருக்கிறேன்.- இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் முஹம்மத் பின் ஹாத்திம் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "மூன்று" எனும் குறிப்பு இல்லை.
- கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மூன்று விரல்களால் உணவு உண்பார்கள். (உண்டு முடித்த பின்) கையைத் துடைப்பதற்கு முன் கையை உறிஞ்சுவார்கள்.
அத்தியாயம் : 36
4135. கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மூன்று விரல்களால் உணவு உட்கொள்வார்கள். உண்டு முடித்ததும் அவ்விரல்களை உறிஞ்சுவார்கள்.
இதை அப்துர் ரஹ்மான் பின் கஅப் (ரஹ்) அவர்கள், அல்லது அப்துல்லாஹ் பின் கஅப் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 36
4136. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், (உணவு உண்டு முடித்தவர் தம்) விரல்களை உறிஞ்சுமாறும் தட்டை வழித்து உண்ணுமாறும் உத்தரவிட்டார்கள். மேலும், "உணவின் எந்தப் பகுதியில் வளம் (பரக்கத்) உள்ளது என்பதை நீங்கள் அறியமாட்டீர்கள்" என்றும் கூறினார்கள்.
அத்தியாயம் : 36
4137. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவரது உணவுக்கவளம் (உண்ணும்போது தவறி) விழுந்துவிட்டால் அவர் அதை எடுத்து, அதில் ஒட்டியிருப்பதை அகற்றி(ச் சுத்தம் செய்து)விட்டு அதை உண்ணட்டும். அதை ஷைத்தானுக்கு விட்டுவிட வேண்டாம். மேலும், (உண்ட பின்) தம் விரல்களை உறிஞ்சுவதற்கு முன் கைக்குட்டையால் கையைத் துடைத்துவிட வேண்டாம். ஏனெனில், தமது உணவில் எந்தப் பகுதியில் வளம் (பரக்கத்) உள்ளது என்பதை அவர் அறியமாட்டார்.
இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "தமது கையைத் தாமே உறிஞ்சாமல் அல்லது (மனைவி போன்றவரிடம்) உறிஞ்சத் தராமல் அதைக் கைக்குட்டையால் துடைத்துவிட வேண்டாம்" என்பதும் அதற்குப் பின்னுள்ள தகவல்களும் இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 36
4138. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவருடைய ஒவ்வொரு அலுவலிலும் ஷைத்தான் பங்கேற்கிறான். மனிதன் உணவு உண்ணும்போதும் அவன் பங்கேற்கிறான். (உண்ணும்போது) உங்களில் ஒருவரிடமிருந்து உணவுக் கவளம் கீழே விழுந்துவிட்டால், அதில் படுவதை சுத்தப்படுத்தி விட்டு, பிறகு அதை உண்ணட்டும். அதை ஷைத்தானுக்கு விட்டுவிட வேண்டாம்.
உண்டு முடித்ததும் அவர் தம் விரல்களை உறிஞ்சிக்கொள்ளட்டும். ஏனெனில், அவரது எந்த உணவில் வளம் (பரக்கத்) இருக்கும் என்பதை அவர் அறியமாட்டார்.
இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "உங்களில் ஒருவரிடமிருந்து உணவுக்கவளம் விழுந்துவிட்டால்" என்பதிலிருந்தே ஹதீஸ் ஆரம்பமாகிறது. "உங்களில் ஒருவருடைய ஒவ்வொரு அலுவலிலும் ஷைத்தான் பங்கேற்கிறான்" எனும் ஆரம்பக் குறிப்பு அவற்றில் இல்லை.
- மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "கை விரல்களை உறிஞ்சிக் கொள்வது" தொடர்பாக இடம்பெற்றுள்ளது. அபூசுஃப்யான் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "உணவுக் கவளம் விழுந்துவிடுவது" தொடர்பான குறிப்பு இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 36
4139. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஏதேனும் உணவை உண்டால் (இறுதியில்) மூன்று விரல்களை உறிஞ்சிக்கொள்வார்கள். மேலும், "உங்களில் ஒருவரது உணவுக்கவளம் (உண்ணும் போது) கீழே விழுந்துவிட்டால், அதில் படுவதை நீக்கி (சுத்தப்படுத்தி)விட்டு, அதை உண்ணட்டும். அதை ஷைத்தானுக்கு விட்டுவிட வேண்டாம்" என்றும் அவர்கள் கூறினார்கள்.
இறுதியில் உணவுத் தட்டையும் வழித்து உண்ணுமாறு எங்களுக்கு உத்தரவிட்டார்கள். "ஏனெனில் உங்களின் எந்த உணவில் வளம் (பரக்கத்) உள்ளது என்பதை நீங்கள் அறிய மாட்டீர்கள்" என்றும் கூறுவார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 36
4140. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் உணவு உண்டால், அவர் தம் விரல்களை உறிஞ்சிக்கொள்ளட்டும். அவற்றில் எதில் வளம் (பரக்கத்) உள்ளது என்பதை அவர் அறியமாட்டார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "உங்களில் ஒருவர் உணவு உண்டால் (இறுதியில்) உணவுத் தட்டை வழித்து உண்ணட்டும்" என்றும், உங்களின் "எந்த உணவில் வளம் (பரகத்) உள்ளது” அல்லது "(உங்களின் எந்த உணவில்) உங்களுக்கு வளம் வழங்கப்படும்" (என்பதை அவர் அறியமாட்டார்)" என்றும் இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 36
பாடம் : 19 விருந்துக்கு அழைக்கப்பட்டவரைத் தொடர்ந்து, அழைக்கப்படாத மற்றொருவரும் வந்துவிட்டால் விருந்தாளி என்ன செய்யவேண்டும் என்பதும், அவ்வாறு பின் தொடர்ந்து வந்தவருக்கு விருந்து கொடுப்பவர் அனுமதி அளிப்பது விரும்பத்தக்கதாகும் என்பதும்.
4141. அபூமஸ்ஊத் உக்பா பின் ஆமிர் அல்அன்சாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அன்சாரிகளில் அபூஷுஐப் எனப்படும் ஒருவர் இருந்தார். அவரிடம் இறைச்சி விற்கும் பணியாளர் ஒருவர் இருந்தார். (ஒருமுறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் முகத்தில் பசி(யின் குறி)யைக் கண்ட அபூஷுஐப் (ரலி) அவர்கள் தம் பணியாளிடம், "உமக்குக் கேடுதான். ஐந்து பேருக்கு வேண்டிய உணவை நமக்காக நீ தயார் செய்(து வை). ஏனெனில், ஐவரில் ஒருவராக நபி (ஸல்) அவர்களை நான் (விருந்துக்கு) அழைக்கப் போகிறேன்" என்று கூறினார். அவ்வாறே அந்த அடிமையும் உணவு தயாரித்தார்.
பிறகு அபூஷுஐப் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, ஐவரில் ஒருவராக நபியவர்களையும் விருந்துண்ண அழைத்தார். அவர்களைப் பின்தொடர்ந்து மற்றொரு மனிதரும் வந்தார்.
(அபூஷுஐபின்) வீட்டுவாசலுக்கு வந்த நபி (ஸல்) அவர்கள், "இவர் எங்களைப் பின் தொடர்ந்து வந்துவிட்டார். எனவே,இவருக்கு அனுமதியளிக்க நீங்கள் விரும்பினால் (அவர் விருந்தில் கலந்துகொள்வார்; விருந்தில் கலந்துகொள்ளக்கூடாது என) நீங்கள் விரும்பினால் அவர் திரும்பிச் சென்றுவிடுவார்" என்று கூறினார்கள். அபூஷுஐப் (ரலி) அவர்கள், "இல்லை. அவருக்கு நான் அனுமதியளிக்கிறேன், அல்லாஹ்வின் தூதரே! என்று கூறினார்கள்.- இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூமஸ்ஊத் அல் அன்சாரீ (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஆறு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூமஸ்ஊத் அல்அன்சாரீ (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 36
4142. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அண்டை வீட்டுக்காரர் ஒருவர் இருந்தார். பாரசீகரான அவர் நன்கு (மணம் கமழ) குழம்பு சமைக்கக்கூடியவராக இருந்தார். அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்காக உணவு சமைத்துவிட்டு அவர்களை அழைப்பதற்காக வந்தார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் அருகில் பசியோடு இருந்த தம் துணைவி) ஆயிஷா (ரலி) அவர்களை சைகை செய்து காட்டி "இவரும் (வரலாமா)?" என்று கேட்டார்கள், அவர் (உணவு குறைவாக இருந்ததால்), "இல்லை (வேண்டாம்)" என்று கூறிவிட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இல்லை (அவ்வாறாயின் நானும் வரமாட்டேன்)" என்று கூறிவிட்டார்கள்.
அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அழைப்பதற்காக மறுபடியும் வந்தார். அப்போதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இவரும் (வரலாமா)?" என்று (ஆயிஷா (ரலி) அவர்களை சைகை செய்து) கேட்டார்கள். அப்போதும் அவர் "இல்லை (வேண்டாம்)" என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் "(அவ்வாறாயின் நானும்) இல்லை" என்று கூறிவிட்டார்கள்.
அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அழைப்பதற்காக மறுபடியும் வந்தார். அப்போதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இவரும் (வரலாமா)?" என்று (ஆயிஷா (ரலி) அவர்களை சைகை செய்து) கேட்டார்கள். அவர் மூன்றாவது முறை "சரி (வரலாம்)" என்றார். பின்னர் இருவரும் ஒருவரையொருவர் பின்தொடர்ந்து அவரது வீட்டுக்குப் போய்ச்சேர்ந்தனர்.
அத்தியாயம் : 36
பாடம் : 20 வீட்டுக்காரரின் சம்மதம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தால், அதை நன்கு உறுதி செய்துகொண்டு மற்றொருவரையும் அழைத்துச் செல்லலாம் என்பதும், பலர் சேர்ந்து உணவு உண்பது விரும்பத்தக்கதாகும் என்பதும்.
4143. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) "ஒரு பகல்" அல்லது "ஓர் இரவு" (தமது இல்லத்திலிருந்து) வெளியே புறப்பட்டு வந்தார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்களும் உமர் (ரலி) அவர்களும் வெளியே இருந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இந்த நேரத்தில் நீங்கள் இருவரும் உங்கள் வீடுகளிலிருந்து புறப்பட்டு வர என்ன காரணம்?" என்று கேட்டார்கள். அதற்கு, "பசிதான் (காரணம்), அல்லாஹ்வின் தூதரே!" என்று அவ்விருவரும் பதிலளித்தனர்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! நானும் (புறப்பட்டு வந்தது அதனால்)தான். உங்கள் இருவரையும் வெளியேவரச் செய்ததே என்னையும் வெளியேவரச் செய்தது" என்று கூறிவிட்டு, "எழுங்கள்" என்று கூறினார்கள். அவ்வாறே அவர்கள் இருவரும் எழுந்தனர். பிறகு (மூவரும்) அன்சாரிகளில் ஒருவரிடம் (அவரது வீட்டுக்குச்) சென்றனர்.
அப்போது அந்த அன்சாரி வீட்டில் இருக்கவில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அந்தத் தோழரின் துணைவியார் கண்டதும், "வாழ்த்துகள்! வருக" என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்பெண்ணிடம், "அவர் எங்கே?" என்று கேட்டார்கள். அதற்கு அப்பெண், "எங்களுக்காக நல்ல தண்ணீர் கொண்டுவருவதற்காக (வெளியே) சென்றுள்ளார்" என்று பதிலளித்தார்.
அப்போது அந்த அன்சாரி வந்துவிட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களையும் அவர்களுடைய இரு தோழர்களையும் (தமது வீட்டில்) கண்டார். பிறகு "எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! இன்றைய தினம் மிகச் சிறந்த விருந்தினரைப் பெற்றவர் என்னைத் தவிர வேறெவரும் இல்லை" என்று கூறிவிட்டு, (திரும்பிச்) சென்று ஒரு பேரீச்சங்குலையுடன் வந்தார். அதில் நன்கு கனியாத நிறம் மாறிய காய்களும் கனிந்த பழங்களும் செங்காய்களும் இருந்தன. அவர், "இதை உண்ணுங்கள்" என்று கூறிவிட்டு, (ஆடு அறுப்பதற்காக) கத்தியை எடுத்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "பால் தரும் ஆட்டை அறுக்க வேண்டாம் என உம்மை நான் எச்சரிக்கிறேன்"என்று கூறினார்கள்.
அவ்வாறே அவர்களுக்காக அவர் ஆடு அறுத்(து விருந்து சமைத்)தார். அவர்கள் அனைவரும் அந்த ஆட்டையும் அந்தப் பேரீச்சங்குலையிலிருந்தும் உண்டுவிட்டு (தண்ணீரும்) அருந்தினர். வயிறு நிரம்பி தாகம் தணிந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) மற்றும் உமர் (ரலி) ஆகியோரிடம், "என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீதாணையாக! இந்த அருட்கொடை பற்றி மறுமை நாளில் நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள். பசி உங்களை உங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றியது. பின்னர் இந்த அருட்கொடையை அனுபவித்த பிறகே நீங்கள் திரும்பிச் செல்கிறீர்கள்" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "அபூபக்ர் (ரலி) அவர்களுடன் உமர் (ரலி) அவர்கள் (ஓரிடத்தில்) அமர்ந்திருந்தபோது, அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து, "இங்கு நீங்கள் இருவரும் அமர்ந்திருப்பதற்கு என்ன காரணம்?" என்று கேட்டார்கள். அதற்கு அவ்விருவரும், "தங்களைச் சத்திய (மார்க்க)த்துடன் அனுப்பியவன் மீதாணையாக! பசிதான் எங்களை எங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றியது" என்று கூறினர்" என ஹதீஸ் துவங்குகிறது. மற்ற நிகழ்வுகள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 36
4144. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அகழ் (போருக்காகக் குழி) தோண்டப்பட்டுக்கொண்டிருந்தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வயிறு (பசியால்) ஒட்டியிருப்பதைக் கண்டேன். உடனே நான் என் மனைவியிடம் திரும்பிவந்து, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வயிறு மிகவும் ஒட்டியிருந்ததை நான் கண்டேன். உன்னிடம் ஏதேனும் (உணவு) இருக்கிறதா?" என்று கேட்டேன்.
உடனே என் மனைவி என்னிடம் ஒரு பையைக் கொண்டுவந்தார். அதில் ஒரு "ஸாஉ" அளவு தொலி நீக்கப்படாத கோதுமை இருந்தது. வீட்டில் வளரும் ஆட்டுக் குட்டி ஒன்றும் எங்களிடம் இருந்தது. அதை நான் அறுத்தேன். என் மனைவி அந்தக் கோதுமையை அரைத்தார். நான் (அறுத்து) முடித்தபோது அவரும் (அரைத்து) முடித்துவிட்டார். மேலும், அதைத் துண்டுகளாக்கி அதற்கான பாத்திரத்தில் இட்டேன்.
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் திரும்பிச் சென்றேன். என் மனைவி, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கும் அவர்களுடன் இருப்பவர்களுக்கும் முன்னால் என்னை நீங்கள் கேவலப்படுத்திவிட வேண்டாம் ("நம்மிடம் உணவு குறைவாகவே இருக்கிறது" என்று கூறிவிடுங்கள்)" என்று சொல்லியிருந்தார்.
எனவே, நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று இரகசியமாக "அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் எங்களுக்குச் சொந்தமான ஆட்டுக் குட்டியொன்றை அறுத்தோம். எங்களிடம் இருந்த ஒரு "ஸாஉ" அளவு தொலி நீக்கப்படாத கோதுமையை (என் மனைவி) அரைத்து வைத்துள்ளார். எனவே, தாங்களும் தங்களுடன் ஒரு சிலரும் (என் இல்லத்திற்கு) வாருங்கள்" என்று அழைத்தேன்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உரத்த குரலில், "அகழ்வாசிகளே! ஜாபிர் உங்களுக்காக உணவு தயாரித்துள்ளார். எனவே, விரைந்து வாருங்கள்" என்று கூறினார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம்), "நான் வரும்வரை நீங்கள் பாத்திரத்தை (அடுப்பிலிருந்து) இறக்க வேண்டாம். குழைத்துவைத்துள்ள மாவில் ரொட்டி சுடவும் வேண்டாம்" என்று கூறினார்கள். நான் என் இல்லத்திற்கு வந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களை அழைத்துக்கொண்டு முன்னால் வந்துகொண்டிருந்தார்கள்.
நான் என் மனைவியிடம் வந்துசேர்ந்தேன். (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நூற்றுக்கணக்கான மக்களுடன் வருவதைப் பார்த்து என் மனைவி கோபமுற்று) "(எல்லாம்) உங்களால்தான்; உங்களால்தான்" என என்னைக் கடிந்துகொண்டார். உடனே நான் "நீ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சொன்ன விஷயத்தை நான் அவர்களிடம் தெரிவித்துவிட்டேன்" என்று சொன்னேன்.
பிறகு என் மனைவி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் குழைத்த மாவைக் கொண்டு வந்து கொடுத்தார். அதில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இலேசாக உமிழ்ந்து, பெருக்கம் (பரக்கத்) ஏற்பட பிரார்த்தித்தார்கள். பிறகு (இறைச்சிப்) பாத்திரத்தை நோக்கிச் சென்று, அதில் இலேசாக உமிழ்ந்து பெருக்கம் (பரக்கத்) ஏற்படப் பிரார்த்தித்தார்கள்.
பிறகு (என் மனைவியிடம்), "ரொட்டி சுடுபவள் ஒருத்தியை (உதவிக்கு) அழைத்துக்கொள். உன்னுடன் (சேர்ந்து) அவளும் ரொட்டி சுடட்டும்! உங்கள் (இறைச்சிப்) பாத்திரத்திலிருந்து நீ அள்ளிக்கொண்டிரு. பாத்திரத்தை இறக்கி வைத்துவிடாதே" என்று கூறினார்கள். அ(ங்கு வந்த)வர்கள் ஆயிரம் பேர் இருந்தனர்.
அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்கள் அனைவரும் உண்டுவிட்டு, அந்த உணவை (சிறிதும் குறையாமல்) அப்படியே விட்டுவிட்டுத் திரும்பிச் சென்றனர். அப்போது எங்கள் பாத்திரம் முன்பு போலவே (சிறிதும் குறையாமல்) சப்தத்துடன் கொதித்துக்கொண்டிருந்தது. மேலும், நாங்கள் குழைத்த மாவும் (சிறிதும் குறைந்துவிடாமல்) முன்பு போலவே ரொட்டியாகச் சுடப்பட்டுக்கொண்டிருந்தது.
அத்தியாயம் : 36
4145. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அபூதல்ஹா (ரலி) அவர்கள் (தம் துணைவியும் என் தாயாருமான) உம்மு சுலைம் (ரலி) அவர்களிடம், "நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது குரலைப் பலவீனமானதாகக் கேட்டேன். அதில் நான் (அவர்களுக்கு இருக்கும்) பசியைப் புரிந்து கொண்டேன். உன்னிடம் (உணவு) ஏதேனும் இருக்கிறதா?" என்று கேட்டார்கள். அதற்கு உம்மு சுலைம் (ரலி) அவர்கள், "ஆம் (இருக்கிறது)" என்று கூறிவிட்டு, தொலி நீக்கப்படாத கோதுமை(யில் தயாரித்த) ரொட்டிகள் சிலவற்றை எடுத்தார்கள்.
பிறகு அவர்கள் தமது துப்பட்டா ஒன்றை எடுத்து, அதன் ஒரு பகுதியில் அந்த ரொட்டிகளைச் சுற்றி எனது ஆடைக்குள் திணித்துவிட்டு, அதன் மற்றொரு பகுதியை எனக்கு மேல்துண்டாகப் போர்த்திவிட்டார்கள். பிறகு என்னை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுப்பினார்கள்.
நான் அதைக் கொண்டுசென்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் அமர்ந்திருப்பதைக் கண்டேன். அவர்களுடன் மக்களும் இருந்தனர். நான் (சென்று) அவர்களுக்கு முன்னால் நின்றேன்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம்), "உன்னை அபூதல்ஹா அனுப்பினாரா?" என்று கேட்டார்கள். நான் "ஆம்" என்றேன். "உணவு உண்ணவா?" என்று கேட்டார்கள். நான் "ஆம்" என்றேன்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம்முடன் இருந்தவர்களிடம் "எழுந்திருங்கள்" என்று சொல்லிவிட்டு, (என் இல்லம் நோக்கி) நடக்கலானார்கள். நான் அவர்களுக்கு முன்னால் நடந்தேன். அபூதல்ஹா (ரலி) அவர்களிடம் நான் சென்று (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் தோழர்களுடன் வந்துகொண்டிருக்கும்) விவரத்தைத் தெரிவித்தேன்.
உடனே அபூதல்ஹா (ரலி) அவர்கள் (என் தாயாரிடம்), "உம்மு சுலைம்! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களுடன் வந்துவிட்டார்கள். ஆனால், அவர்களுக்கு வேண்டிய உணவு நம்மிடம் இல்லையே!" என்று சொன்னார்கள். உம்மு சுலைம் (ரலி) அவர்கள் "அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே அறிந்தவர்கள்" என்று கூறினார்கள்.
அபூதல்ஹா (ரலி) அவர்கள் (தாமே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை வரவேற்பதற்காக) நடந்து சென்று, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைச் சந்தித்தார்கள்.
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூதல்ஹா (ரலி) அவர்களுடன் வீட்டுக்குள் நுழைந்தார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உம்மு சுலைம்! உம்மிடம் இருப்பதைக் கொண்டுவா" என்று சொல்ல, உம்மு சுலைம் (ரலி) அவர்கள் அந்த ரொட்டியைக் கொண்டுவந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அதைத் துண்டு துண்டாகப் பிய்க்கும்படி) உத்தரவிட, அவ்வாறே அது பிய்க்கப்பட்டது.
உம்மு சுலைம் (ரலி) அவர்கள், தம்மிடமிருந்த தோல் பையிலிருந்து வெண்ணெய் எடுத்துப் பிழிந்து அதை (உருக்கி)க் குழம்பு செய்தார்கள். பிறகு அதில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறைவன் நாடிய (பிராத்தனை வரிகள் சில)வற்றைச் சொன்னார்கள்.
பிறகு "பத்துப் பேருக்கு (உள்ளே வர) அனுமதி அளியுங்கள்" என்று (அபூதல்ஹா (ரலி) அவர்களிடம்) சொன்னார்கள். அவ்வாறே அவர்களுக்கு அபூதல்ஹா (ரலி) அவர்கள் அனுமதி அளித்தார்கள். அவர்கள் (பத்துப் பேர்) வந்து வயிறார உண்டுவிட்டு வெளியேறினார்கள்.
பின்னர், "இன்னும் பத்துப் பேருக்கு அனுமதி அளியுங்கள்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற,அபூதல்ஹா (ரலி) அவர்களும் அனுமதியளித்தார்கள். அவர்களும் வயிறார உண்டுவிட்டு வெளியேறினார்கள். பிறகு "இன்னும் பத்துப் பேருக்கு அனுமதி அளியுங்கள்" என்றார்கள். (இவ்வாறு வந்திருந்த) மக்கள் அனைவரும் வயிறார உண்டார்கள். அப்படி உண்ட மக்கள் எழுபது அல்லது எண்பது பேர் ஆவர்.
அத்தியாயம் : 36
4146. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அபூதல்ஹா (ரலி) அவர்கள் உணவு தயாரித்துவிட்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அழைப்பதற்காக என்னை அனுப்பினார்கள். நான் வந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களுடன் இருந்தார்கள். அவர்கள் என்னைப் பார்த்த போது நான் கூச்சப்பட்டேன். நான், "அபூதல்ஹா (ரலி) அவர்கள் (தங்களை விருந்துண்ண அழைக்கிறார்கள். அந்த) அழைப்பை ஏற்றுக்கொள்ளுங்கள்" என்று கூறினேன்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம்முடனிருந்த) மக்களிடம், "எழுந்திருங்கள்" என்று சொன்னார்கள். பிறகு (அவர்கள் எங்கள் இல்லத்திற்கு வந்து சேர்ந்தபோது) "அல்லாஹ்வின் தூதரே! தங்களுக்கு மட்டுமே நான் சிறிதளவு (உணவு) தயாரித்துள்ளேன்" என்று அபூதல்ஹா (ரலி) அவர்கள் கூறினார்கள். அப்போது அல்லாஹவின் தூதர் (ஸல்) அவர்கள் அந்த உணவைத் தொட்டு, அதில் பெருக்கம் (பரக்கத்) ஏற்படப் பிரார்த்தித்தார்கள்.
பிறகு, "என் தோழர்களில் பத்துப் பேரை உள்ளே அனுப்புங்கள்" என்று கூறினார்கள். (அவர்கள் உள்ளே வந்ததும்) "உண்ணுங்கள்" என்று கூறிவிட்டு, தம் விரல்களுக்கிடையிலிருந்து எதையோ வெளியாக்கினார்கள். உள்ளே வந்தவர்கள் வயிறார உண்டுவிட்டு வெளியேறிச் சென்றனர். பிறகு "இன்னும் பத்துப் பேரை உள்ளே அனுப்புங்கள்"என்று கூறினார்கள். அவர்களும் வந்து வயிறார உண்டனர்.
இவ்வாறே பத்துப் பேர் உள்ளே வர, பத்துப் பேர் வெளியே போக அவர்களில் ஒருவர்கூட மிஞ்சாமல் அனைவரும் உள்ளே வந்து வயிறார உண்டனர். பிறகு எஞ்சியிருந்த உணவை ஒருங்கிணைத்துப் பார்த்தபோது, அவர்கள் சாப்பிட்டபோது இருந்த அதே அளவில் (சிறிதும் குறையாமல்) அது இருந்தது.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "அபூதல்ஹா (ரலி) அவர்கள் என்னை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுப்பினார்கள்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளவாறே இடம்பெற்றுள்ளன. இறுதியில் "பிறகு எஞ்சியிருந்த உணவை எடுத்து ஒன்றுசேர்த்து அதில் பெருக்கம் (பரக்கத்) ஏற்படப் பிரார்த்தித்தார்கள். அது முன்பிருந்ததைப் போன்றே மாறிவிட்டது. பிறகு "இதை வைத்துக்கொள்ளுங்கள்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "அபூதல்ஹா (ரலி) அவர்கள் உம்மு சுலைம் (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்களுக்காக மட்டும் உணவு தயாரிக்கும் படி கூறிவிட்டு, என்னை நபி (ஸல்) அவர்களிடம் அனுப்பினார்கள்" என்று ஹதீஸ் துவங்குகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளபடி தொடருகின்றன.
அதில், நபி (ஸல்) அவர்கள் தமது கரத்தை (உணவின் மீது) வைத்து அல்லாஹ்வின் பெயர் கூறினார்கள். பிறகு (அபூதல்ஹா (ரலி) அவர்களிடம்) "பத்துப் பேருக்கு அனுமதி அளியுங்கள்" என்று கூறினார்கள். அவ்வாறே அபூதல்ஹா (ரலி) அவர்கள் அனுமதியளித்ததும் அவர்கள் (இல்லத்திற்குள்) நுழைந்தனர்.
அப்போது "அல்லாஹ்வின் பெயர் (பிஸ்மில்லாஹ்) சொல்லி உண்ணுங்கள்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற, அவ்வாறே அவர்கள் உண்டனர். இவ்வாறு எண்பது பேரிடமும் கூறினார்கள். பிறகு நபி (ஸல்) அவர்களும் (அபூதல்ஹா (ரலி) அவர்களின்) வீட்டாரும் உண்டுவிட்டு, (மீதி) உணவையும் விட்டுச்சென்றனர் என்று இடம்பெற்றுள்ளது.
- அபூதல்ஹா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு விருந்தளித்த இந்த நிகழ்ச்சி அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், அபூதல்ஹா (ரலி) அவர்கள் (தம்) வீட்டுவாசலில் நின்றுகொண்டிருக்க அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்துசேர்ந்தார்கள். அப்போது அபூதல்ஹா (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! சிறிதளவே (உணவுப்) பொருள் இருக்கிறது" என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அதைக் கொண்டுவாருங்கள். அதில் அல்லாஹ் வளத்தை ஏற்படுத்துவான்" என்று கூறினார்கள் எனக் காணப்படுகிறது.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் சாப்பிட்டு, வீட்டாரும் சாப்பிட்டு தங்கள் அண்டை வீட்டாருக்கும் கொடுத்தனுப்பும் அளவுக்கு மீதி வைத்தனர்" என்று இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடமிருந்தே வேறோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், (ஒருமுறை) அபூதல்ஹா (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் படுத்திருப்பதைக் கண்டார்கள். அப்போது அவர்கள் புரண்டு புரண்டு படுத்தார்கள். (இதைக் கண்ட) அபூ தல்ஹா (ரலி) அவர்கள் (தம் துணைவி) உம்மு சுலைம் (ரலி) அவர்களிடம் சென்று, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் படுத்திருப்பதை நான் கண்டேன். அவர்கள் புரண்டு புரண்டு படுத்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் பசியோடு இருப்பதாக நான் எண்ணுகிறேன்" என்று கூறியதாக ஹதீஸ் துவங்குகிறது.
மேலும் அதில் "பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அபூதல்ஹா (ரலி), உம்மு சுலைம் (ரலி) மற்றும் அனஸ் (ரலி) ஆகியோரும் உண்டனர். மீதி உணவும் இருந்தது. அதை நாங்கள் எங்கள் அண்டை வீட்டாருக்கு அன்பளிப்பாக வழங்கினோம்" என்று இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் பிறிதோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் பின்வருமாறு அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது:
நான் ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தேன். அப்போது அவர்கள் தம் தோழர்களுடன் பேசிக்கொண்டு அமர்ந்திருப்பதைக் கண்டேன். அப்போது அவர்கள் தமது வயிற்றில் ஒரு துணியைக் கட்டியிருந்தார்கள்.
-அறிவிப்பாளர்களில் ஒருவரான உசாமா பின் ஸைத் (ரஹ்) அவர்கள் "கல்லை வைத்து ஒரு துணியால் கட்டியிருந்தார்கள் (என்று கூறியதாகவே) நான் சந்தேகத்துடன் கருதுகிறேன்" என்று கூறுகிறார்கள்-
உடனே நான் நபித்தோழர்கள் சிலரிடம் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஏன் தமது வயிற்றைத் துணியால் கட்டியிருக்கிறார்கள்?" என்று கேட்டேன். தோழர்கள், "பசியால்" என்று பதிலளித்தனர்.
ஆகவே, நான் அபூதல்ஹா (ரலி) அவர்களிடம் சென்று, - அபூதல்ஹா (ரலி) அவர்கள் (என் தாயார்) உம்மு சுலைம் பின்த் மில்ஹானின் கணவர் ஆவார் - "தந்தையே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது வயிற்றை ஒரு துணியால் கட்டியிருப்பதை நான் கண்டேன். எனவே, அவர்களுடைய தோழர்களில் சிலரிடம் (அதைப் பற்றிக்) கேட்டேன். அதற்கு "பசியால்தான்" என்று அவர்கள் பதிலளித்தனர் என்று சொன்னேன்.
உடனே அபூதல்ஹா (ரலி) அவர்கள் என் தாயாரிடம் சென்று "(உன்னிடம் உணவு) ஏதேனும் இருக்கிறதா?" என்று கேட்டார்கள். என் தாயார் "ஆம். என்னிடம் சில ரொட்டித் துண்டுகளும் பேரீச்சம் பழங்களும் இருக்கின்றன. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மட்டும் நம்மிடம் வந்தால் அவர்களுக்கு நம்மால் வயிறார உணவளிக்க முடியும். அவர்களுடன் வேறு யாரேனும் வந்தால் எல்லாருக்கும் போதாது..." என்று கூறினார். மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளவாறு தொடருகின்றன.
- அபூதல்ஹா (ரலி) அவர்கள் அளித்த விருந்து தொடர்பான மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் மேற்கண்ட ஹதீஸ்களில் காணப்படும் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 36
பாடம் : 21 குழம்பு சாப்பிடலாம்; சுரைக்காயை உண்பது விரும்பத்தக்கதாகும்; பந்தியில் அமர்ந்திருப்பவர்கள் அனைவரும் விருந்தினராய் இருந்தாலும், விருந்தளிப்பவர் வெறுக்க மாட்டார் என்றால் அவர்களில் சிலர் வேறுசிலருக்கு முன்னுரிமை அளிக்கலாம்.
4147. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
தையற்காரர் ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைத் தாம் தயாரித்த உணவி(னை உண்பத)ற்காக அழைத்தார். நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அந்த உணவை உண்ணச் சென்றேன். அந்தத் தையற்காரர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அருகே தொலி நீக்கப்படாத (வாற்)கோதுமை ரொட்டியையும், சுரைக்காயும் உப்புக்கண்டமும் உள்ள குழம்பையும் வைத்தார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தட்டைச் சுற்றிலும் சுரைக்காயைத் துழாவுவதை நான் கண்டேன். அன்றிலிருந்து சுரைக்காயை நானும் விரும்பி(ச் சாப்பிட்டு)க் கொண்டே இருக்கிறேன்.
அத்தியாயம் : 36
4148. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை (விருந்துக்கு) அழைத்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நானும் சென்றேன். அப்போது சுரைக்காய் உள்ள குழம்பு கொண்டுவரப்பட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்த சுரைக்காயை உண்ணலானார்கள். அது அவர்களுக்கு விருப்பமானதாயிருந்தது. அதன் பின்னர் சுரைக்காயை நானும் விரும்பி(ச் சாப்பிட்டு)க்கொண்டே இருக்கிறேன்.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "தையற்காரர் ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை (விருந்துக்கு) அழைத்தார்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. அவற்றில் பின்வருமாறு அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாகக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது:
அதன் பின்னர் எனக்காகத் தயாரிக்கப்படும் எந்த ஓர் உணவிலும் சுரைக்காயைச் சேர்த்துக் கொள்ள என்னால் முடியுமானால் (அவ்வாறே) சேர்த்துக்கொள்ளப்படாமல் இருந்ததில்லை.
அத்தியாயம் : 36
பாடம் : 22 பேரீச்சம் பழ(ம் உள்ள பாத்திர)த்துக்கு வெளியே கொட்டையைப் போடுவதும், விருந்தளிப்பவருக்காக விருந்தாளி பிரார்த்திப்பதும் விரும்பத்தக்கவை ஆகும். நல்ல மனிதருக்கு விருந்தளிக்கும்போது அவரிடம் பிரார்த்திக்குமாறு கோருவதும் அதையேற்று அவர் பிரார்த்திப்பதும் விரும்பத்தக்கவை ஆகும்.
4149. அப்துல்லாஹ் பின் புஸ்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒருமுறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் தந்தை (புஸ்ர் பின் அபீபுஸ்ர்-ரலி) அவர்களிடம் (விருந்தாளியாகத்) தங்கினார்கள். அப்போது அவர்களுக்கு அருகே உணவும் (பேரீச்சம் பழம், பாலாடை, நெய் ஆகியவற்றால் செய்யப்பட்ட "வத்பா" எனும்) ஒரு வகைப் பலகாரமும் வைத்தோம். அதிலிருந்து அவர்கள் உண்டார்கள்.
பிறகு பேரீச்சம் பழங்கள் கொண்டுவரப்பட்டன. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பேரீச்சம் பழத்தைச் சாப்பிட்டுவிட்டு, அவற்றின் கொட்டைகளை (பாத்திரத்தினுள்ளே போடாமல்) தம்மிரு விரல்களுக்கிடையே வைத்திருந்(துவிட்டு பிறகு வீசியெறிந்)தார்கள்.
- இதைக் கூறியபோது அறிவிப்பாளர் தம் ஆட்காட்டி விரலையும் நடு விரலையும் இணைத்து சைகை செய்கிறார்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஷுஅபா (ரஹ்) அவர்கள் "இன்ஷா அல்லாஹ், "இரு விரல்களுக்கிடையே கொட்டையை வைத்திருந்தார்கள்" என்பது ஹதீஸிலேயே உள்ளதாகும் என்பதே என் எண்ணமாகும்" என்று (ஐயத்துடன்) கூறினார்கள்.-
பிறகு ஒரு பானம் கொண்டுவரப்பட்டபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதையும் அருந்தினார்கள். பிறகு மீதியிருந்ததைத் தமக்கு வலப்பக்கத்திலிருந்தவருக்குக் கொடுத்தார்கள். பிறகு (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புறப்படத் தயாரானபோது) என் தந்தை, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வாகனத்தின் கடிவாளத்தைப் பிடித்துக்கொண்டு, "எங்களுக்காகப் பிரார்த்தியுங்கள்" என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இறைவா! நீ இவர்களுக்கு வழங்கிய உணவில் அருள்வளம் (பரக்கத்) புரிவாயாக! இவர்களை மன்னித்து, இவர்களுக்குக் கருணை புரிவாயாக!" (அல்லாஹும்ம, பாரிக் லஹும் ஃபீமா ரஸக்த்தஹும்,, வஃக்ஃபிர் லஹும், வர்ஹம்ஹும்) எனப் பிரார்த்தித்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் புஸ்ர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "இரு விரல்களுக்கிடையே பேரீச்சம் பழக் கொட்டைகளை வைத்திருந்(துவிட்டுப் பிறகு வீசியெறிந்)தார்கள்" என்பது ஐயத்திற்கிடமின்றி (ஹதீஸில் உள்ளதாகவே) அறிவிக்கப் பட்டுள்ளது.
அத்தியாயம் : 36
பாடம் : 23 பேரீச்சச் செங்காய்களுடன் வெள்ளரிக்காயையும் சேர்த்து உண்பது.
4150. அப்துல்லாஹ் பின் ஜஅஃபர் பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், பேரீச்சச் செங்காய்களுடன் (சேர்த்து) வெள்ளரிக் காய்களை உண்பதை நான் கண்டேன்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 36
பாடம் : 24 உணவு உண்பவர் பணிவோடு அமர்வது விரும்பத்தக்கதாகும் என்பதும் அவர் அமரும் முறையும்.
4151. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் குத்துக் காலிட்டு அமர்ந்து பேரீச்சம் பழத்தை உண்பதை நான் கண்டேன்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 36
4152. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (அவர்களுக்குரிய) பேரீச்சம் பழங்கள் கொண்டு வரப்பட்டன. (அவை கிடைத்தவுடன் சரியாக உட்காராமல்கூட) அவற்றை அவர்கள் விரைவாகப் பங்கிட்டுக் கொடுக்கவும் அவற்றை விரைவாக உண்ணவும் ஆரம்பித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 36
பாடம் : 25 பலருடன் சேர்ந்து உண்பவர், மற்றவர்கள் அனுமதித்தால் தவிர, ஒரே தடவையில் இரண்டு பேரீச்சம் பழங்களைச் சேர்த்து உண்ணக்கூடாது.
4153. ஜபலா பின் சுஹைம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(ஹிஜாஸ் பகுதியில்) மக்களுக்குப் பஞ்சம் ஏற்பட்டிருந்த நாளில் அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் எங்களுக்குப் பேரீச்சம் பழங்களை வழங்கிவந்தார்கள். அவற்றை நாங்கள் உண்ணும்போது, அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் எங்களைக் கடந்து செல்வார்கள்.
அப்போது அவர்கள், "பேரீச்சம் பழங்களை இரண்டிரண்டாக எடுக்காதீர்கள். ஏனெனில், ஒரே தடவையில் இரண்டு பழங்களை எடுத்து உண்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள்; ஒருவர் தம் சகோதரரிடம் (அவ்வாறு சேர்த்து எடுக்க) அனுமதி பெற்றிருந்தால் தவிர" என்று சொல்வார்கள்.
இதன் அறிவிப்பாளரான ஷுஅபா (ரஹ்) அவர்கள், "அனுமதி பெறுதல் தொடர்பான இக்கூற்று, இப்னு உமர் (ரலி) அவர்களின் சொந்தக் கருத்து என்றே நான் கருதுகிறேன்" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஜபலா பின் சுஹைம் (ரஹ்) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், ஷுஅபா (ரஹ்) அவர்களின் (இறுதிக்) கூற்றோ, "அன்றைய நாளில் மக்களுக்குப் பஞ்சம் ஏற்பட்டிருந்தது" எனும் விளக்கமோ இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 36
4154. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(பலர் கூடியுள்ள ஓர் அவையில்) ஒருவர், தம் சகாக்களிடம் அனுமதி பெறாதவரை இரு பேரீச்சம் பழங்களைச் சேர்த்து உண்ணுவதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.- இதை ஜபலா பின் சுஹைம் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 36
பாடம் : 26 குடும்பத்தாருக்காகப் பேரீச்சம் பழங்கள் உள்ளிட்ட உணவுகளைச் சேமித்து வைத்தல்.
4155. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எந்தக் குடும்பத்தாரிடம் பேரீச்சம் பழங்கள் (சேமித்துவைக்கப்பட்டு) உள்ளனவோ அவர்கள் பசித்திருக்கமாட்டார்கள்.
இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 36
4156. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம்), "ஆயிஷா! பேரீச்சம்பழம் இல்லாத வீட்டாரே பட்டினி கிடக்கும் வீட்டார். ஆயிஷா! பேரீச்சம் இல்லாத வீட்டாரே "பட்டினி கிடக்கும் வீட்டார்" அல்லது "பட்டினிக்குள்ளாகும் வீட்டார்" என்று இரண்டு அல்லது மூன்று தடவை கூறினார்கள்.
அத்தியாயம் : 36
பாடம் : 27 மதீனா பேரீச்சம் பழங்களின் சிறப்பு
4157. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் காலையில் இந்த (மதீனாவின்) இரு மலைகளுக்கிடையே உள்ள பழங்களில் ஏழு பேரீச்சம் பழங்களை உண்கிறாரோ அவருக்கு (அன்று) மாலைவரை எந்த விஷமும் தீங்களிக்காது.- இதை சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 36
4158. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் காலையில் ஏழு "அஜ்வா" (ரகப்) பேரீச்சம் பழங்களை உண்கிறாரோ அவருக்கு அன்றைய தினத்தில் (மாலைவரை) எந்த விஷமும் சூனியமும் இடையூறு செய்யாது.
இதை சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 36
4159. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(மதீனாவின்) மேட்டுப் பகுதியில் விளையும் "அஜ்வா" (ரகப்) பேரீச்சம் பழத்தை அதிகாலை உண்பதில் "நிவாரணம்" அல்லது "விஷமுறிவு" உள்ளது.
இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 36
பாடம் : 28 சமையல் காளானின் சிறப்பும் அதைக் கொண்டு கண்ணுக்கு மருந்திடுவதும்.
4160. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சமையல் காளான் "மன்னு" வகையைச் சேர்ந்ததாகும். அதன் சாறு கண்ணுக்கு நிவாரணமாகும்.
இதை சயீத் பின் ஸைத் பின் அம்ர் பின் நுஃபைல் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 36
4161. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சமையல் காளான் "மன்னு" வகையைச் சேர்ந்ததாகும். அதன் சாறு கண்ணுக்கு நிவாரணமாகும்.
இதை சயீத் பின் ஸைத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் சயீத் பின் ஸைத் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் அறிவிப்பாளர் ஷுஅபா (ரஹ்) அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகிறார்கள்: இந்த ஹதீஸை ஹகம் பின் உதைபா (ரஹ்) அவர்கள் எனக்கு அறிவித்தபோது, அப்துல் மலிக் பின் உமைர் (ரஹ்) அவர்கள் வழியாக எனக்கு வந்த (முந்தைய) அறிவிப்பை நான் மறுக்கவில்லை.
அத்தியாயம் : 36
4162. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சமையல் காளான் பனூ இஸ்ராயீல் சமுதாயத்தாருக்கு அல்லாஹ் இறக்கிவைத்த "மன்னு" வகையைச் சேர்ந்ததாகும். அதன் சாறு கண்ணுக்கு நிவாரணமாகும்.
இதை சயீத் பின் ஸைத் பின் அம்ர் பின் நுஃபைல் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 36
4163. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சமையல் காளான், மூசா (அலை) அவர்களு(டைய சமுதாயத்தாரு)க்கு அல்லாஹ் இறக்கி வைத்த "மன்னு" வகையைச் சேர்ந்ததாகும். அதன் சாறு கண்ணுக்கு நிவாரணமாகும்.
இதை சயீத் பின் ஸைத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 36
4164. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சமையல் காளான் பனூ இஸ்ராயீல் சமுதாயத்தாருக்கு அல்லாஹ் இறக்கிவைத்த "மன்னு" வகையைச் சேர்ந்ததாகும். அதன் சாறு கண்ணுக்கு நிவாரணமாகும்.
இதை சயீத் பின் ஸைத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 36
4165. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சமையல் காளான் "மன்னு" வகையைச் சேர்ந்ததாகும். அதன் சாறு கண்ணுக்கு நிவாரணமாகும்.- இதை சயீத் பின் ஸைத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 36
பாடம் : 29 "அல்கபாஸ்" எனும் (மிஸ்வாக்) மரத்தின் கறுப்பு நிற பழத்துடைய சிறப்பு.
4166. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் (ஒருமுறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் "மர்ருழ் ழஹ்ரான்" எனுமிடத்தில் "அல்கபாஸ்" மரத்தின் பழத்தைப் பறித்துக்கொண்டிருந்தோம். அப்போது நபி (ஸல்) அவர்கள், "இதில் கறுப்பு நிறத்தைப் பறியுங்கள்" என்று சொன்னார்கள்.
நாங்கள், "அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் ஆடு மேய்த்துள்ளீர்கள் போலிருக்கிறதே?" என்று கேட்டோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "ஆம், ஆடு மேய்க்காத இறைத்தூதரும் உண்டா?" என்றோ அது போன்றோ (திருப்பிக்) கேட்டார்கள்.
அத்தியாயம் : 36
பாடம் : 30 சமையல் காடியின் சிறப்பும் அதைக் குழம்பாகப் பயன்படுத்துவதும்.
4167. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
"குழம்புகளில்" அல்லது "குழம்பில்" அருமையானது (சமையல்) காடியாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அத்தியாயம் : 36
4168. மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "குழம்புகளில் அருமையானது" என ஐயப்பாடின்றி அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்தியாயம் : 36
4169. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒருமுறை) நபி (ஸல்) அவர்கள் தம் வீட்டாரிடம் குழம்பு கேட்டார்கள். அதற்கு வீட்டார், "நம்மிடம் காடி மட்டுமே உள்ளது" என்று கூறினர். நபி (ஸல்) அவர்கள் காடியைக் கொண்டுவரச் சொல்லி அதை(த் தொட்டு)க்கொண்டு உண்ணலானார்கள். மேலும், "குழம்புகளில் அருமையானது காடியாகும்" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 36
4170. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனது கையைப் பிடித்துத் தமது இல்லத்திற்கு அழைத்துச் சென்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களிடம், (அங்குள்ள ஒருவர்) ரொட்டித் துண்டைக் கொடுத்தார். நபி (ஸல்) அவர்கள், "குழம்பேதும் இல்லையா?" என்று கேட்டார்கள். வீட்டார், "இல்லை, சிறிது காடியைத் தவிர வேறெதுவுமில்லை" என்று கூறினர். நபி (ஸல்) அவர்கள், "காடிதான் குழம்புகளில் அருமையானது" என்று கூறினார்கள்.
ஜாபிர் (ரலி) அவர்கள், "இறைவனின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்வாறு கூறியதைக் கேட்டதிலிருந்து நான் காடியை விரும்பி(ச் சாப்பிட்டு)க்கொண்டிருக்கிறேன்" என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் தல்ஹா பின் நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
ஜாபிர் (ரலி) அவர்கள் இவ்வாறு கூறியதைக் கேட்டதிலிருந்து நானும் காடியை விரும்பி(ச் சாப்பிட்டு)க்கொண்டிருக்கிறேன்.
அத்தியாயம் : 36
4171. மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனது கையைப் பிடித்துத் தமது இல்லத்திற்கு அழைத்துச் சென்றார்கள்..." என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. தொடர்ந்து "குழம்புகளில் அருமையானது காடியாகும்" என்பதுவரை இடம்பெற்றுள்ளது. அதற்குப் பின் உள்ளவை இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 36
4172. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு நாள்) நான் என் வீட்டில் அமர்ந்திருந்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னைக் கடந்து சென்றார்கள். அப்போது (தம்மருகே வருமாறு) என்னை நோக்கி சைகை செய்தார்கள். நான் அவர்களிடம் எழுந்து சென்றேன். அவர்கள் எனது கையைப் பிடித்துக்கொண்டார்கள்.
பிறகு நாங்கள் இருவரும் நடந்தோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் துணைவியரில் ஒருவரது அறை வந்ததும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உள்ளே நுழைந்தார்கள். பிறகு எனக்கும் (உள்ளே வர) அனுமதியளித்தார்கள். நான் வீட்டாருக்காக இடப்பட்டிருந்த திரைவரை சென்றேன்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "ஏதேனும் உணவு உள்ளதா?" என்று கேட்டார்கள். வீட்டார், "ஆம்" என்றனர். பிறகு மூன்று ரொட்டிகள் கொண்டுவரப்பட்டு, அவர்களுக்கு முன்னால் வைக்கப்பட்டன. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு ரொட்டியை எடுத்துத் தமக்கு முன்னால் வைத்தார்கள்.
பிறகு மற்றொரு ரொட்டியை எடுத்து எனக்கு முன்னால் வைத்தார்கள். பிறகு மூன்றாவது ரொட்டியை எடுத்து அதை (இரண்டாக)ப் பிட்டு, ஒரு பாதியைத் தமக்கு முன்னாலும் மற்றொரு பாதியை எனக்கு முன்னாலும் வைத்தார்கள்.
பிறகு (தம் வீட்டாரிடம்), "குழம்பேதும் இருக்கிறதா?" என்று கேட்டார்கள். வீட்டார், "இல்லை; சிறிதளவு காடியைத் தவிர வேறெதுவுமில்லை" என்று கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அதைக் கொண்டுவாருங்கள். குழம்புகளில் அருமையானது அதுவே" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 36
பாடம் : 31 வெள்ளைப் பூண்டு சாப்பிடலாம்; பெரியவர்களைச் சந்தித்துப் பேசுபவர், அதையும் அதைப் போன்றதையும் தவிர்த்துக்கொள்வது அவசியமாகும்.
4173. அபூஅய்யூப் அல்அன்சாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஏதேனும் உணவு கொண்டுவரப்பட்டால், அதை உண்டுவிட்டு அதில் எஞ்சியதை எனக்குக் கொடுத்தனுப்புவார்கள். ஒரு நாள் (அவ்வாறு) எஞ்சியதை எனக்குக் கொடுத்தனுப்பினார்கள். அதிலிருந்து அவர்கள் உண்ணவில்லை. ஏனெனில், அதில் வெள்ளைப் பூண்டு இருந்தது.
எனவே, அது குறித்து நான் "அது (வெள்ளைப் பூண்டு) தடைசெய்யப்பட்டதா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "இல்லை. அதிலிருந்து வரும் வாடை காரணமாக அதை நான் விரும்பவில்லை" என்று சொன்னார்கள். நான், "அவ்வாறாயின் தாங்கள் விரும்பாததை நானும் விரும்பமாட்டேன்" என்று சொன்னேன்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஅய்யூப் அல்அன்சாரீ (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 36
4174. அபூஅய்யூப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (மக்காவிலிருந்து மதீனாவுக்கு வந்தபோது) எனது வீட்டிலேயே தங்கினார்கள். நபி (ஸல்) அவர்கள் கீழ்த்தளத்திலும் நான் மேல்தளத்திலும் தங்கியிருந்தோம். ஓர் இரவில் நான் உணர்வு பெற்று, "நாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது தலைக்கு மேலே நடமாடுவதா?" என்று சொல்லிக்கொண்டு, (தலைக்கு நேரான பகுதியிலிருந்து) விலகி மற்றொரு பகுதியில் (நானும் வீட்டாரும்) இரவைக் கழித்தோம்.
பிறகு நபி (ஸல்) அவர்களிடம் (இது குறித்துச்) சொன்னபோது அவர்கள், "கீழ்த்தளமே மிகவும் வசதியானது" என்று கூறினார்கள். நான், "நீங்கள் கீழேயிருக்க நான் மேல்தளத்தில் இருக்கமாட்டேன்" என்று சொன்னேன். எனவே, நபி (ஸல்) அவர்கள் மேல் தளத்துக்கும் நான் கீழ்த் தளத்துக்கும் இடம் மாறிக்கொண்டோம்.
நான் நபி (ஸல்) அவர்களுக்காக உணவு தயாரித்துவந்தேன். அது (நபி (ஸல்) அவர்களிடம் சென்றுவிட்டு) என்னிடம் கொண்டுவரப்பட்டால், (உணவுப் பாத்திரத்தில்) நபி (ஸல்) அவர்களின் விரல்கள்பட்ட இடத்தைப் பற்றிக் கேட்பேன். அவர்களின் விரல்கள் பட்ட இடத்தைக் கண்டறி(ந்து அந்த இடத்தில் நான் சாப்பிடு)வேன்.
இவ்வாறே (ஒரு நாள்) வெள்ளைப் பூண்டு உள்ள ஓர் உணவு தயாரித்தேன். (நபி (ஸல்) அவர்களிடம் சென்றுவிட்டு) அது திருப்பிக் கொண்டுவரப்பட்டபோது, நபி (ஸல்) அவர்களின் விரல்கள் பட்ட இடத்தைப் பற்றிக் கேட்டேன். அப்போது "நபி (ஸல்) அவர்கள் அதை உண்ணவில்லை" என்று என்னிடம் சொல்லப்பட்டது. அதைக் கேட்டு நான் பதறினேன்.
மேல் தளத்திற்கு ஏறிச்சென்று "அது (வெள்ளைப் பூண்டு) தடைசெய்யப்பட்டதா?" என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "இல்லை. ஆயினும், அதை நான் விரும்பவில்லை" என்று பதிலளித்தார்கள்.
நான், "அவ்வாறாயின், தாங்கள் வெறுப்பதை அல்லது தாங்கள் வெறுத்ததை நானும் வெறுக்கிறேன்" என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்களிடம் (வானவர்களும் வேத அறிவிப்பும்) வந்துகொண்டிருந்தன.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 36
பாடம் : 32 விருந்தினரை உபசரிப்பதும் அவர்களுக்கு முன்னுரிமை வழங்குவதன் சிறப்பும்.
4175. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "எனக்கு (கடுமையான பசி)த் துன்பம் ஏற்பட்டுள்ளது" என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் துணைவியரில் ஒருவரிடம் ஆளனுப்பி (அவர்களிடம் உணவு ஏதேனும் இருக்கிறதா என்று கேட்டுவரச் சொன்)னார்கள். அதற்கு அத்துணைவியார், "தங்களைச் சத்திய (மார்க்க)த்துடன் அனுப்பியவன் மீதாணையாக! என்னிடம் தண்ணீரைத் தவிர வேறெதுவும் இல்லை" என்று பதிலளித்தார்.
பிறகு (தம் துணைவியரில்) மற்றொருவரிடம் ஆளனுப்பியபோது, அவரும் அதைப் போன்றே பதிலளித்தார். முடிவில் ஒவ்வொரு துணைவியரிடமிருந்தும் அதே பதிலே வந்தது. "இல்லை; தங்களைச் சத்திய (மார்க்க)த்துடன் அனுப்பியவன் மீதாணையாக! என்னிடம் தண்ணீரைத் தவிர வேறெதுவும் இல்லை" என்றே கூறினர்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் தோழர்களை நோக்கி), "இன்றிரவு இவருக்கு விருந்தளிப்பவர் யார்? அவருக்கு அல்லாஹ் அருள்புரிவான்" என்று கேட்டார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர் எழுந்து, "நான் (இவருக்கு விருந்தளிக்கிறேன்), அல்லாஹ்வின் தூதரே!" என்று சொல்லி, (அவரை அழைத்துக்கொண்டு) தம் வீட்டுக்குச் சென்றார். அங்கு தம் மனைவியிடம், "உன்னிடம் (உணவு) ஏதேனும் இருக்கிறதா?" என்று கேட்டார். அதற்கு அவர் மனைவி "நம் குழந்தைகளின் உணவைத் தவிர வேறெதுவுமில்லை" என்றார்.
அவர், "(நம் குழந்தைகள் உணவு கேட்டால்) ஏதாவது காரணம் சொல்லி (தூங்கவைத்து) விடு; நம் விருந்தாளி நமது வீட்டுக்குள் நுழைந்ததும் (வீட்டிலுள்ள உணவைத் தயாராக எடுத்து வைத்துவிட்டு, விளக்கை ஏற்றிவிடுவதுபோல் பாவனை செய்து) விளக்கை அணைத்துவிடு. நாமும் சாப்பிட்டுக்கொண்டிருப்பதைப் போன்று அவருக்குக் காட்டிக்கொள். (மறக்காமல் விருந்தாளி வந்து) சாப்பிடக் கையை நீட்டும்போது விளக்கை நோக்கிச் சென்று அதை அணைத்துவிடு" என்று கூறினார்.
அவ்வாறே (விருந்தாளி வந்ததும்) அவர்கள் அனைவரும் அமர்ந்தனர். விருந்தாளி சாப்பிட்டார். பிறகு (விருந்தளித்த) அந்தத் தோழர் காலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இன்றிரவு நீங்கள் இருவரும் உங்கள் விருந்தாளியிடம் நடந்து கொண்ட முறையைக் கண்டு அல்லாஹ் வியப்படைந்தான்" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 36
4176. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஓர் அன்சாரித் தோழரிடம் இரவில் விருந்தாளி ஒருவர் வந்தார். அத்தோழரிடம் தமக்கும் தம் குழந்தைகளுக்கும் தேவையான உணவைத் தவிர வேறெதுவும் இருக்கவில்லை. எனவே, அவர் தம் துணைவியாரிடம், "குழந்தைகளை (எப்படியாவது சமாதானப்படுத்தி) தூங்கவைத்துவிடு; விளக்கை (ஏற்றிவிடுவதைப் போன்று பாவனை செய்து அதை) அணைத்துவிடு. உன்னிடம் உள்ள உணவை விருந்தாளிக்கு அருகில் வைத்துவிடு" என்று கூறினார். இது தொடர்பாகவே, "தமக்கே தேவையிருந்தும் கூட தம்மைவிடப் பிறருக்கே அவர்கள் முன்னுரிமை வழங்குவார்கள்" (59:9) எனும் இறை வசனம் அருளப்பெற்றது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் விருந்தாளியாக வந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அவருக்கு விருந்தளிப்பதற்கு எதுவும் இருக்க வில்லை. எனவே, (தம் தோழர்களை நோக்கி), "இவருக்கு விருந்தளிக்கும் ஆள் யாரேனும் உண்டா? அவருக்கு அல்லாஹ் அருள்புரிவான்" என்று கேட்டார்கள். அப்போது அன்சாரிகளில் அபூதல்ஹா (ரலி) எனப்படும் ஒரு மனிதர் எழுந்து, அந்த விருந்தாளியை தம் இல்லத்திற்கு அழைத்துச் சென்றார்..." என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது.
மற்றவை மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. அதில் (59:9 ஆவது) இறைவசனம் இறங்கியது தொடர்பான குறிப்பும் காணப்படுகிறது.
அத்தியாயம் : 36
4177. மிக்தாத் பின் அல்அஸ்வத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நானும் என்னிரு நண்பர்களும் பசியால் காதும் கண்ணும் (அடைபட்டுப்) போய்விட்ட நிலையில் வந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய தோழர்களுக்கு முன்னால் தலை காட்டினோம். (வறுமை சூழ்ந்திருந்த அந்த நிலையில்) அவர்களில் எவரும் எங்களை (விருந்தாளிகளாக) ஏற்றுக்கொள்ளவில்லை.
எனவே, நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் சென்றோம். நபி (ஸல்) அவர்கள் எங்களைத் தம் வீட்டாரிடம் அழைத்துச் சென்றார்கள். அங்கு மூன்று பெட்டை வெள்ளாடுகள் இருந்தன. நபி (ஸல்) அவர்கள், "இவற்றிலிருந்து பால் கறந்து நம்மிடையே பகிர்ந்துகொள்வோம்" என்று சொன்னார்கள்.
அவ்வாறே நாங்கள் பால் கறந்து எங்களில் ஒவ்வொருவரும் தமக்குரிய பங்கைப் பருகினோம். நபி (ஸல்) அவர்களுக்குரிய பங்கை அவர்களுக்காக எடுத்துவைத்தோம். நபி (ஸல்) அவர்கள் இரவில் (எங்களிடம்) வந்து,உறங்கிக்கொண்டிருப்பவரை விழிக்கச் செய்யாமல், விழித்திருப்பவர்களுக்குக் கேட்கும் விதமாக (மெதுவாக) முகமன் (சலாம்) சொல்வார்கள். பிறகு பள்ளிவாசலுக்குச் சென்று தொழுவார்கள். பிறகு தமது பானத்தை நோக்கி வந்து (அதை) அருந்துவார்கள்.
இந்நிலையில், எனது பங்கை நான் அருந்திவிட்ட நிலையில் ஓர் இரவில் என்னிடம் ஷைத்தான் வந்து, "முஹம்மத் அவர்கள் அன்சாரிகளிடம் செல்லும்போது அவர்களுக்கு அன்சாரிகள் அன்பளிப்புகள் வழங்குகிறார்கள். நபி (ஸல்) அவர்களும் அதைப் பெற்று (புசித்து)க்கொள்கிறார்கள். இந்த ஒரு மிடறு(ப்பால்) அவர்களுக்குத் தேவையே இருக்காது" என்று சொன்னான்.
எனவே, நான் அந்தப் பாலை நோக்கிச் சென்று அதைப் பருகிவிட்டேன். என் வயிற்றுக்குள் பால் இறங்கியதும், (அருந்திய) அந்தப் பாலை(த் திருப்பி)க் கொடுக்க வழியில்லை என்பதை நான் உணர்ந்தேன். பிறகு ஷைத்தான் "உனக்குக் கேடு நேரட்டும்! என்ன காரியம் செய்துவிட்டாய்! முஹம்மத் அவர்களுக்குரிய பானத்தைப் பருகிவிட்டாயே? அவர் (வீட்டுக்கு) வரும் போது, பால் இல்லாததைக் கண்டு உனக்கெதிராகப் பிரார்த்தித்துவிட்டால் நீ அழிந்துபோவாய். உனது இம்மையும் மறுமையும் (பாழாகிப்) போய்விடுமே!" என்று என்னைச் சஞ்சலப்படுத்தினான்.
அப்போது என்மீது ஒரு சால்வை இருந்தது. அதை என் பாதங்கள்மீது போர்த்தினால் தலை வெளியே தெரியும். தலைமீது போர்த்தினால் என் பாதங்கள் வெளியே தெரியும். (உடல் முழுவதும் போர்த்தி மூடிக்கொள்ளும் அளவுக்கு அது இருக்கவில்லை.) எனக்கு (அன்றிரவு குற்றஉணர்வால்) தூக்கமே வராமலாயிற்று. என்னிரு தோழர்களோ (நிம்மதியாகத்) தூங்கிவிட்டனர். நான் செய்த தவறை அவர்களிருவரும் செய்யவில்லை.
பிறகு நபி (ஸல்) அவர்கள் வந்து வழக்கம்போல் சலாம் சொன்னார்கள். பிறகு பள்ளிவாசலுக்குச் சென்று தொழுதார்கள். பிறகு தமது பானத்தை நோக்கி வந்து, அதைத் திறந்தார்கள். அதில் எதுவும் இருக்கவில்லை. அப்போது வானத்தை நோக்கித் தமது தலையை உயர்த்தினார்கள். "இப்போது எனக்கெதிராக அவர்கள் பிரார்த்திப்பார்கள். நான் அழிந்துபோய்விடுவேன்" என்று நான் (எனக்குள்ளே) கூறிக்கொண்டேன்.
ஆனால் அவர்கள், "இறைவா! எனக்கு உண்ண உணவளித்தவருக்கு நீ உணவளிப்பாயாக! எனக்குப் பருகப்பானம் புகட்டியவருக்கு நீ புகட்டுவாயாக!" (அல்லாஹும்ம அத்இம் மன் அத்அமனீ வஸ்கி மன் சகானீ) என்று பிரார்த்தித்தார்கள்.
நான் அந்தச் சால்வையை எடுத்து அதை இறுக்கமாக என்மீது கட்டிக்கொண்டு, கத்தியை எடுத்துக்கொண்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குரிய அந்த வெள்ளாடுகளை நோக்கிச் சென்று, அவற்றில் கொழுத்த ஆடு எது என்பதைப் பார்த்து, அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்காக அறுக்கலாம் என நினைத்தேன். ஆனால்,அவற்றின் பால்மடிகள் திரண்டு காணப்பட்டன. அவற்றில் ஒவ்வொன்றும் பால் சுரந்து காணப்பட்டன.
உடனே நான் முஹம்மத் (ஸல்) அவர்களின் குடும்பத்தார் பால் கறப்பதற்குப் பயன்படுத்தும் ஒரு பாத்திரத்தை நோக்கிச் சென்று அதில் பால் கறந்தேன். அதில் நுரை ததும்பும் அளவுக்குக் கறந்தேன். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தேன்.
அப்போது அவர்கள், "இன்றிரவு நீங்கள் உங்களுக்குரிய பானத்தைப் பருகினீர்களா?" என்று கேட்டார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் பருகுங்கள்" என்றேன். அவர்கள் பருகி விட்டுப் பிறகு (மீதியை) என்னிடம் கொடுத்தார்கள். பிறகு (மீண்டும்) நான், "அல்லாஹ்வின் தூதரே! (இன்னும்) பருகுங்கள்" என்றேன். அவர்கள் பருகிவிட்டுப் பிறகு (மீதியை மீண்டும்) என்னிடம் கொடுத்தார்கள். நபி (ஸல்) அவர்களின் தாகம் தணிந்துவிட்டது;அவர்களது பிரார்த்தனை எனக்குக் கிடைத்துவிட்டது என்பதை நான் அறிந்துகொண்டபோது, (மகிழ்ச்சியால்) பூமியில் விழுமளவுக்குச் சிரித்தேன்.
அப்போது நபி (ஸல்) அவர்கள், "மிக்தாதே! ஏதோ ஒரு குறும்பு செய்துள்ளீர்! அது என்ன?" என்று கேட்டார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! இன்னின்னவாறு நடந்தது. இப்படி நான் செய்தேன்" என்று சொன்னேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், "இது அல்லாஹ்விடமிருந்து வந்துள்ள கருணையே ஆகும். இதை (முன்பே) என்னிடம் தெரிவித்திருக்கக் கூடாதா? நம் தோழர்கள் இருவரையும் நாம் எழுப்பி, அவர்களுக்கும் அதைக் கிடைக்கச் செய்திருக்கலாமே!" என்று கூறினார்கள்.
அப்போது நான், "தங்களைச் சத்திய (மார்க்க)த்துடன் அனுப்பியவன் மீதாணையாக! அதைத் தாங்களும் தங்களுடன் நானும் அடைந்துகொண்ட பின் மக்களில் வேறு யாருக்குக் கிடைத்தாலும் (கிடைக்காவிட்டாலும்) அதை நான் பொருட்படுத்த மாட்டேன்" என்று கூறினேன்.
- மேற்கண்ட ஹதீஸ் மிக்தாத் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 36
4178. அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் நூற்று முப்பது பேர் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது நபி (ஸல்) அவர்கள், "உங்களில் யாரிடமாவது உணவு இருக்கிறதா?" என்று கேட்டார்கள். அப்போது ஒரு மனிதரிடம் ஒரு "ஸாஉ" அல்லது "கிட்டத்தட்ட அந்த அளவு" உணவு(க்கு வேண்டிய மாவு) இருந்தது. அது தண்ணீர் விட்டுக் குழைக்கப்பட்டது.
(சற்று நேரத்திற்குப்) பின் பரட்டைத் தலையுடைய உயரமான இணைவைப்பாளரான மனிதர் ஒருவர் ஆடுகளை ஓட்டியபடி வந்தார். அவரிடம் நபி (ஸல்) அவர்கள், "(இவை) விற்பனைக்கா? அல்லது அன்பளிக்கவா?" என்று கேட்டார்கள். அவர், "இல்லை. விற்பனைக்குத்தான்" என்றார்.
அவரிடமிருந்து நபி (ஸல்) அவர்கள் ஓர் ஆட்டை விலைக்கு வாங்கினார்கள். அது அறு(த்துச் சமை)க்கப்பட்டது. அதன் ஈரலைப் பொரிக்கும்படி நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! எங்கள் நூற்று முப்பது பேரில் ஒருவர் விடாமல் ஆளுக்கொரு துண்டை நபி (ஸல்) அவர்கள் வெட்டித் தந்தார்கள். அங்கிருந்தவருக்கு (அப்போதே) அவரிடமே கொடுத்தார்கள். அங்கில்லாதவருக்காக எடுத்து வைத்(துப் பிறகு கொடுத்)தார்கள்.
பிறகு இரு அகன்ற தட்டுக(ளில் அந்த இறைச்சி)களை வைத்தார்கள். அவற்றிலிருந்து நாங்கள் அனைவரும் வயிறார உண்டோம். அப்படியிருந்தும் அவ்விரு தட்டுகளிலும் மீதி இருந்தது. எனவே, அதை நான் ஒட்டகத்தின் மீது ஏற்றிக்கொண்டேன்.
அத்தியாயம் : 36
4179. அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
திண்ணைத் தோழர்கள் (அஸ்ஹாபுஸ் ஸுஃப்பா) ஏழைகளாக இருந்தார்கள். ஒரு முறை நபி (ஸல்) அவர்கள், "யாரிடம் இரண்டு பேருக்கான உணவு உள்ளதோ அவர், மூன்றாம(வராகத் திண்ணைத் தோழர்களில் ஒரு)வரை அழைத்துச் செல்லட்டும். யாரிடம் நான்கு பேருக்கான உணவு இருக்கிறதோ அவர் ஐந்தாவது அல்லது ஆறாவது பேரை அழைத்துச் செல்லட்டும்" என்று கூறினார்கள். (இவ்வாறே நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்) அல்லது நபி (ஸல்) அவர்கள் எப்படிச் சொன்னார்களோ அதைப் போல.
(என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் மூன்று பேரை அழைத்து வந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் பத்துப் பேருடன் (தம் வீட்டுக்குச்) சென்றார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் மூன்று பேருடன் வந்தபோது, வீட்டில் நானும் என் தந்தையும் என் தாயார் (உம்மு ரூமான்) அவர்களும் தாம் இருந்தோம்.
-"என் மனைவியும் எங்கள் வீட்டிற்கும் (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்களின் வீட்டிற்கும் சேர்ந்து பணிபுரிந்துவந்த பணிப்பெண்ணும்..." என அவர்கள் குறிப்பிட்டார்களா என எனக்குத் தெரியவில்லை என்கிறார்கள் அறிவிப்பாளர் அபூஉஸ்மான் அந்நஹ்தீ (ரஹ்) அவர்கள்.-
அபூபக்ர் (ரலி) அவர்கள் (விருந்தினருக்கு உணவளிக்குமாறு தம் வீட்டாரிடம் கூறிவிட்டு) நபி (ஸல்) அவர்களிடம் (சென்று) இரவு உணவு அருந்தினார்கள். பிறகு (நபியவர்களுடன்) இஷா தொழுகை தொழும்வரை (அவர்களுடன்) தங்கினார்கள். நபி (ஸல்) அவர்கள் உறங்கச் செல்லும்வரை அவர்களுடன் தங்கியிருந்துவிட்டு, இரவில் அல்லாஹ் நாடிய நேரம் கழிந்த பின்னர் வீட்டுக்குத் திரும்பிவந்தார்கள்.
அப்போது அவர்களுடைய துணைவியார் (அதாவது என் தாயார்), "உங்கள் விருந்தாளிகளை" அல்லது "உங்கள் விருந்தாளியை" உபசரிக்க வராமல் தாமாதமானதற்கு என்ன காரணம்?" என்று கேட்டார். அபூபக்ர் (ரலி) அவர்கள், "அவர்களுக்கு நீ இரவு உணவு அளிக்க வில்லையா?" என்று கேட்டார்கள். அதற்குத் துணைவியார், "நீங்கள் வராமல் உண்ண முடியாதென அவர்கள் மறுத்துவிட்டனர். நாங்கள் (உண்ணும்படி) கேட்டுக் கொண்டபோதும் (அவர்கள் சம்மதிக்காமல்) எங்களை மிகைத்துவிட்டனர்" என்று பதிலளித்தார்.
(என் தந்தை விருந்தாளிகளைக் கவனிக்கும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்துச் சென்றிருந்ததால் என்னைக் கண்டிப்பார்களோ என்றஞ்சி) நான் சென்று ஒளிந்துகொண்டேன். அவர்கள், "தடியா!" என்று (கோபத்துடன்) அழைத்து, "உன் மூக்கறுந்து போக!" என்று (என்னை) ஏசினார்கள்.
(விருந்தாளிகளை நோக்கி) "மகிழ்ச்சியாக இல்லை; நீங்கள் உண்ணுங்கள்" என்று கூறினார்கள். (தம் வீட்டாரை நோக்கி, "என்னை எதிர்பார்த்துத்தானே விருந்தாளிகளுக்குச் சிரமம் கொடுத்துவிட்டீர்கள்! இதற்குத் தண்டனையாக) அல்லாஹ்வின் மீதாணையாக! நான் ஒருபோதும் இதை உண்ணமாட்டேன்" என்று சொன்னார்கள்.
அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் ஒரு கவள உணவை எடுக்கும்போதெல்லாம் அதன் கீழ்ப் பகுதியிலிருந்து அதைவிட அதிகமாகப் பெருகியது. இறுதியில் நாங்கள் அனைவரும் வயிறார உண்டோம். அந்த உணவு முன்பிருந்ததைவிடக் கூடுதலாகிவிட்டிருந்தது. அது முன்பிருந்த அளவிலோ, அல்லது அதைவிடக் கூடுதலாகவோ மாறியிருப்பதைக் கண்ட அபூபக்ர் (ரலி) அவர்கள் தம் துணைவியாரிடம், "பனூ ஃபிராஸ் குலமகளே! என்ன இது?" என்று (வியப்புடன்) கேட்க, என் தாயார், "என் கண்குளிர்ச்சியின் மீதாணையாக! இந்த உணவு முன்பிருந்ததைவிட மூன்று மடங்கு அதிகமாகிவிட்டிருக்கிறது" என்று சொன்னார்.
பிறகு அபூபக்ர் (ரலி) அவர்கள் (தமது சத்தியத்தை முறித்துவிட்டு) அதிலிருந்து உண்டார்கள். மேலும், "அதுவெல்லாம் (நான் ஒருபோதும் இதை உண்ணமாட்டேன் என நான் சத்தியம் செய்ததெல்லாம்) ஷைத்தானால் ஏற்பட்டதே" என்று கூறிவிட்டு, பிறகு அதிலிருந்து மேலும் ஒரு கவளம் உண்டார்கள். பிறகு அதை நபி (ஸல்) அவர்களிடம் எடுத்துச் சென்றார்கள்.
பிறகு அந்த உணவு நபி (ஸல்) அவர்களிடம் இருக்கலாயிற்று. (அப்போது) எங்களுக்கும் ஒரு கூட்டத்தாருக்குமிடையே சமாதான ஒப்பந்தம் இருந்துவந்தது. ஒப்பந்தக் காலம் முடிவுக்கும் வந்தது. (இனி அவர்கள் போருக்கு வந்தால் அவர்களை எதிர்கொள்வதற்காக) நபி (ஸல்) அவர்கள் எங்களில் பன்னிரண்டு பேரைத் தளபதிகளாக்கி ஒவ்வொருவருடனும் சில வீரர்களை ஒப்படைத்தார்கள்.
ஒவ்வொரு தளபதியுடனும் எத்தனை பேர் இருந்தனர் என்பதை அல்லாஹ்வே அறிவான். எனினும், அப்படையினரிடம் அந்த உணவைக் கொடுத்தனுப்பினார்கள். அவர்கள் அனைவரும் அதிலிருந்து உண்டனர். (இவ்வாறே அவர்கள் அறிவித்தார்கள்) அல்லது அவர்கள் எப்படி அறிவித்தார்களோ அதைப் போல.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 36
4180. அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
எங்கள் (வீட்டுக்கு) விருந்தாளிகள் சிலர் வந்தனர். அந்த இரவில் என் தந்தை (அபூபக்ர்-ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பேசுவதற்காகச் சென்றுவிட்டார்கள். (அவர்கள் செல்வதற்கு முன் என்னிடம்,) "அப்துர் ரஹ்மானே! உன் விருந்தாளிகளை (இரவு உணவு கொடுத்து) கவனித்துக்கொள்" என்று கூறினார்கள்.
மாலை நேரமானதும் நாங்கள் விருந்தாளிகளுக்கு உணவு கொண்டுவந்து கொடுத்தோம். ஆனால் அவர்கள், "குடும்பத் தலைவர் வந்து எங்களுடன் உண்ணாத வரை நாங்கள் உண்ண மாட்டோம்" என்று கூறி, மறுத்துவிட்டனர்.
அப்போது அவர்களிடம் நான், "அவர் (என் தந்தை) ஓர் இரும்பு மனிதர். நீங்கள் விருந்து உண்ணவில்லையானால்,நான்தான் அவரிடம் அவஸ்தைப்பட வேண்டியிருக்கும் என அஞ்சுகிறேன்" என்று சொன்னேன். அப்படியிருந்தும் அவர்கள் மறுத்துவிட்டனர்.
அபூபக்ர் (ரலி) அவர்கள் வீட்டுக்கு வந்ததும் முதல் வேலையாக விருந்தாளிகளைப் பற்றியே கேட்டார்கள். "உங்கள் விருந்தாளிகளுக்கு உணவு கொடுத்துவிட்டீர்களா?" என்று கேட்டார்கள். வீட்டார், "இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்களுக்கு இன்னும் நாங்கள் உணவு கொடுக்கவில்லை" என்று பதிலளித்தனர். அபூபக்ர் (ரலி) அவர்கள், "நான் அப்துர் ரஹ்மானிடம் (அவர்களுக்கு உணவு கொடுக்குமாறு) கட்டளையிடவில்லையா?" என்று கேட்டார்கள்.
உடனே நான் அங்கிருந்து நகர்ந்தேன். அப்போது அவர்கள், "அப்துர் ரஹ்மான்!" என அழைத்தார்கள். நான் ஒளிந்துகொண்டேன். அவர்கள் "தடியா! உன்மீது அறுதியிட்டுச் சொல்கிறேன். என் குரல் உன் காதில் விழுந்தால் இங்கு வந்துவிடு" என்று கூறினார்கள். நான் வந்து, "அல்லாஹ்வின் மீது சத்தியமாக! என்மீது எந்தக் குற்றமும் இல்லை. இதோ! உங்கள் விருந்தாளிகளிடமே கேட்டுப் பாருங்கள். நான் அவர்களிடம் உணவைக் கொண்டுவந்து வைத்தேன். நீங்கள் வரும்வரை நாங்கள் உண்ணமாட்டோம் என அவர்கள்தாம் மறுத்துவிட்டனர்" என்று சொன்னேன்.
அபூபக்ர் (ரலி) அவர்கள், "எங்கள் விருந்தை ஏற்காமலிருக்க உங்களுக்கு என்ன வந்தது?" என்று கேட்டார்கள். மேலும், (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் மீதாணையாக! இன்றிரவு இதை நான் உண்ணமாட்டேன்" என்று கூறிவிட்டார்கள். அதற்கு விருந்தாளிகள், "அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் உண்ணாத வரை நாங்களும் இதை உண்ணமாட்டோம்" என்று கூறினர்.
அபூபக்ர் (ரலி) அவர்கள், "இன்றிரவைப் போன்று தர்மசங்கடமான ஓர் இரவை நான் ஒரு போதும் கண்டதில்லை" என்று கூறிவிட்டு, "உங்களுக்கு என்ன கேடு! உங்கள் விருந்தை எங்களிடமிருந்து ஏன் நீங்கள் மறுக்கிறீர்கள்?" என்று கூறிவிட்டு, "(நான் உண்ணமாட்டேன் எனச் சத்தியம் செய்த) முந்தைய நிலைப்பாடு ஷைத்தானால் விளைந்ததாகும்"என்றார்கள். பிறகு "உங்கள் உணவைக் கொண்டுவாருங்கள்" என்று கூறினார்கள். உணவு கொண்டுவரப் பட்டதும் அல்லாஹ்வின் பெயர் (பிஸ்மில்லாஹ்) சொல்லி உண்டார்கள். விருந்தினரும் உண்டனர்.
காலையில் நபி (ஸல்) அவர்களிடம் அபூபக்ர் (ரலி) அவர்கள் சென்று, "அல்லாஹ்வின் தூதரே! இவர்கள் (தமது சத்தியத்தில்) உறுதியாக இருந்தனர். நான்தான் சத்தியத்தை முறித்து விட்டேன்" என்று கூறி நடந்ததைத் தெரிவித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், "இல்லை. அவர்களில் நீரே நன்மை புரிந்தவர். அவர்களில் நீரே சிறந்தவர்" என்று கூறினார்கள்.- அறிவிப்பாளர்களில் ஒருவர் கூறுகிறார்:
அபூபக்ர் (ரலி) அவர்கள், சத்திய முறிவுக்குப் பரிகாரம் செய்தார்களா என்பது தொடர்பாக எனக்குத் தகவல் கிடைக்கவில்லை.
அத்தியாயம் : 36
பாடம் : 33 உணவு குறைவாக இருக்கும்போது அனுசரித்து நடந்துகொள்வதன் சிறப்பும், இருவருடைய உணவு மூவருக்குப் போதுமானதாகும் என்பதும்.
4181. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இருவருடைய உணவு மூவருக்குப் போதுமானதாகும். மூவரின் உணவு நால்வருக்குப் போதுமானதாகும்.- இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 36
4182. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஒருவருடைய உணவு இருவருக்குப் போதுமானதாகும். இருவரின் உணவு மூவருக்குப் போதுமானதாகும். நால்வரின் உணவு எண்மருக்குப் போதுமானதாகும்" என்று கூறியதைக் கேட்டேன்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் இஸ்ஹாக் பின் இப்ராஹீம் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்" என்றே இடம்பெற்றுள்ளது. "நான் கேட்டேன்" என ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாகக் குறிப்பு இல்லை.
- மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 36
4183. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவருடைய உணவு இருவருக்குப் போதுமானதாகும். இருவரின் உணவு நால்வருக்குப் போதுமானதாகும். -இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 36
4184. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு மனிதருடைய உணவு இரு மனிதருக்குப் போதுமானதாகும். இரு மனிதரின் உணவு நால்வருக்குப் போதுமானதாகும். நால்வரின் உணவு எண்மருக்குப் போதுமானதாகும்.
இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 36
பாடம் : 34 இறைநம்பிக்கையாளர் ஒரே குடலில் உண்பார். இறைமறுப்பாளன் ஏழு குடல்களில் உண்பான்.
4185. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறைமறுப்பாளன் ஏழு குடல்களில் உண்பான். இறைநம்பிக்கையாளர் ஒரே குடலில் உண்பார்.- இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஐந்து அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 36
4186. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இப்னு உமர் (ரலி) அவர்கள் ஓர் ஏழை(க்கு விருந்தளித்தபோது அவர் உண்ணும் முறை)யைக் கவனித்தார்கள். அவருக்கு முன் உணவை வைக்கலானார்கள். (மீண்டும் மீண்டும்) அவருக்கு முன் வைத்துக்கொண்டே இருந்தார்கள். அவர் (அளவுக்கு மீறி) நிறைய உண்டுகொண்டிருந்தார். அப்போது இப்னு உமர் (ரலி) அவர்கள் (என்னிடம்), "இவரை என்னிடம் அழைத்து வராதே. ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இறைமறுப்பாளன் ஏழு குடல்களில் உண்பான்" என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்" என்றார்கள்.
அத்தியாயம் : 36
4187. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறைநம்பிக்கையாளர் ஒரே குடலில் உண்பார். இறைமறுப்பாளன் ஏழு குடல்களில் உண்பான்.- இதை ஜாபிர் (ரலி) மற்றும் இப்னு உமர் (ரலி) ஆகியோர் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்து மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் இப்னு உமர் (ரலி) அவர்களும் அறிவிக்கிறார்கள் என்பது பற்றிய குறிப்பு இல்லை.
அத்தியாயம் : 36
4188. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறைநம்பிக்கையாளர் ஒரே குடலில் உண்பார். இறைமறுப்பாளன் ஏழு குடல்களில் உண்பான்.- இதை அபூமூசா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்கள் வாயிலாக மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 36
4189. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இறைமறுப்பாளர் ஒருவர் விருந்தாளியாக வந்து தங்கினார். அவருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓர் ஆட்டிலிருந்து பால் கறந்து கொடுக்கும்படி உத்தரவிட்டார்கள். அவ்வாறே கற(ந்து அவரிடம் கொடு)க்கப்பட்டது. அவர் அந்தப் பாலைப் பருகினார்.
பிறகு மற்றோர் ஆட்டில் பால் கறக்கப்பட்டது. அதையும் பருகினார். பிறகு மீண்டும் ஓர் ஆட்டில் கறக்கப்பட்டது. அதையும் பருகினார். இவ்வாறாக ஏழு ஆடுகளிலிருந்து கறக்கப்பட்ட பாலை அவர் பருகினார்.
மறுநாள் காலையில் அவர் இஸ்லாத்தைத் தழுவினார். அப்போது ஓர் ஆட்டில் பால் கறந்து அவருக்கு வழங்கும்படி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உத்தரவிட, அவர் அந்தப் பாலைப் பருகினார். மற்றோர் ஆட்டில் பால் கறந்து கொடுக்கும்படி உத்தரவிட்டபோது, அவரால் அதை முழுவதுமாகப் பருக முடியவில்லை.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இறை நம்பிக்கையாளர் ஒரே குடலில் பருகுவார். இறைமறுப்பாளன் ஏழு குடல்களில் பருகுவான்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 36
பாடம் : 35 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உணவைக் குறை சொல்லமாட்டார்கள்.
4190. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த உணவையும் ஒருபோதும் குறை சொன்னதில்லை. ஒரு பொருள் பிடித்தால் அதை உண்பார்கள்; பிடிக்காவிட்டால் (உண்ணாமல்) விட்டுவிடுவார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர், மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 36
4191. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த உணவையும் ஒருபோதும் குறை சொன்னதை நான் கண்டதில்லை. உணவு பிடித்திருந்தால் உண்பார்கள்; பிடிக்காவிட்டால் (உண்ணாமல்) அமைதியாக இருந்துவிடுவார்கள். -இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
Previous Post Next Post