அத்தியாயம் 20 மக்கா, மதீனாவுடைய பள்ளிவாயிலில் தொழுவதன் சிறப்பு

ஸஹீஹுல் புகாரி
அத்தியாயம் 20
மக்கா, மதீனாவுடைய பள்ளிவாயிலில் தொழுவதன் சிறப்பு

பகுதி1

1188. அபூ ஸயீத்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களிடமிருந்து நான்கு செய்திகளை கேட்டேன். (1197வது ஹதீஸில் இது விவரமாகக் கூறப்படுவதைக் காண்க)

1189. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்:

'மஸ்ஜிதுல் ஹராம், மஸ்ஜிதன் நபவி, மஸ்ஜிதுல் அக்ஸா ஆகிய மூன்று பள்ளிகளைத் தவிர (அதிக நன்மையை எதிர்பார்த்து)ப் பயணம் மேற்கொள்ளக் கூடாது.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

1190. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

மஸ்ஜிதுல் ஹராமைத் தவிர ஏனைய பள்ளிகளில் தொழுவதை விட என்னுடைய பள்ளியில் தொழுவது ஆயிரம் தொழுகைகளை விடச் சிறந்ததாகும்'.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பகுதி 2

குபாப் பள்ளிவாசல்

1191. நாஃபிவு அறிவித்தார்.

இப்னு உமர்(ரலி) இரண்டு நாள்கள் தவிர வேறு நாள்களில் லுஹாத் தொழ மாட்டார்கள். மக்காவுக்கு அவர்கள் வரக்கூடிய நாளில் லுஹா நேரத்தில் வந்து கஅபாவைத் வலம்வந்து மக்காமே இப்ராஹீம் எனும் இடத்தில் இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள். குபாப் பள்ளிக்கு ஒவ்வொரு சனிக்கிழமை அன்றும் சென்று பள்ளிக்குள் நுழைந்ததும் தொழாமல் வெளியே வர மாட்டார்கள். மேலும் 'நபி(ஸல்) அவர்கள் குபாப் பள்ளிக்கு நடந்தும் வாகனத்திலும் வரும் வழக்கம் உடையவராக இருந்தனர்' என்றும் கூறினார்கள்.

1192. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

நான் என்னுடைய தோழர்கள் செய்தது போன்றே செய்கிறேன். இரவிலோ, பகலிலோ எந்த நேரத்திலும் தொழுபவரை தடுக்க மாட்டேன். ஆயினும் சூரியன் உதிக்கும் நேரத்தையும் மறையும் நேரத்தையும் நீங்கள் தேர்ந்தெடுக்காதீர்கள்.

பகுதி 3

ஒவ்வொரு சனிக்கிழமையும் குபாப் பள்ளிக்குச் செல்வது

1193. அப்துல்லாஹ் இப்னு தீனார் அறிவித்தார்.

இப்னு உமர்(ரலி) ஒவ்வொரு சனிக்கிழமையும் குபாப் பள்ளிக்கு வருவார்கள் 'நபி(ஸல்) அவர்கள் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் நடந்தும் வாகனத்திலும் குபாப் பள்ளிக்கு வருவார்கள்' என்று அறிவித்தார்கள்.

பகுதி 4

குபாப் பள்ளிக்கு நடந்தும் வாகனத்திலும் வருவது.

1194. நபி(ஸல்) அவர்கள் குபாப் பள்ளிக்கு நடந்தும் வாகனத்திலும் வருவார்கள். மற்றோர் அறிவிப்பில் அங்கே இரண்டு ரகஅத்கள் தொழுவார்கள் என்று உள்ளது.

பகுதி 5

நபி(ஸல்) அவர்களின் அடக்கத்தலத்திற்கும் மிம்பருக்கும் இடைப்பட்ட பகுதியின் சிறப்பு:

1195. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

''என்னுடைய வீட்டிற்கும் என்னுடைய மிம்பருக்கும் இடைப்பட்ட பகுதி சுவர்க்கத்தின் பூங்காக்களில் ஒரு பூங்காவாகும்.''

என அப்துல்லாஹ் இப்னு ஜைத்(ரலி) அறிவித்தார்.

1196. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

''என்னுடைய வீட்டிற்கும் என்னுடைய மிம்பருக்கும் இடைப்பட்ட பகுதி சுவர்க்கத்தின் பூங்காக்களில் ஒரு பூங்காவாகும். என்னுடைய மிம்பர், என்னுடைய ஹவ்லுல் கவ்ஸர் அரும்லுள்ளது'.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பகுதி 6

பைத்துல முகத்தஸ் பள்ளி

1197. அபூ ஸயீத் அல் குத்ரி(ஸல்) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் எனக்கு நான்கு விஷயங்களைக் கூறினார்கள்.

1. இரண்டு நாள்கள் பயணம் செய்யும் பெண்மணி கணவனோ, மணம் முடிக்கத்தகாத ஆண் உறவினரோ துணையாக இல்லாமல் பயணம் செய்யக்கூடாது.

2. நோன்புப் பெருநாள் ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரண்டு நாள்களும் நோன்பு நோற்கக்கூடாது.

3. ஸுப்ஹுத் தொழுததிலிருந்து சூரியன் உதிக்கும் வரையும் அஸர் தொழுததிலிருந்து சூரியன் மறையும் வரையும் தொழக்கூடாது.

4. மஸ்ஜிதுல் ஹராம், மஸ்ஜிதுன் நபவி, மஸ்ஜிதுல் அக்ஸா ஆகிய மூன்று பள்ளிகளைத் தவிர (அதிக நன்மையை எதிர் பார்த்து) பயணம் மேற்கொள்ளக்கூடாது.

(முதல் பாகம் முற்றிற்று)
Previous Post Next Post