அத்தியாயம் 93 நீதியும் நிர்வாகமும்

ஸஹீஹுல் புகாரி
அத்தியாயம் 93

நீதியும் நிர்வாகமும்

அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...

பகுதி 1

''அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள்; உங்களில் பொறுப்பு(ம் அதிகாரமும்) உடையோருக்கும் கீழ்ப்படியுங்கள்'' எனும் (திருக்குர்ஆன் 04:59 வது) இறைவசனம்.2

7137 ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

எனக்குக் கீழ்ப்படிந்தவர் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்தவராவார். எனக்கு மாறு செய்தவர் அல்லாஹ்வுக்கு மாறு செய்தவராவார். என்னால் நியமிக்கப்பட்ட தலைவருக்குக் கீழ்ப்படிந்தவர் எனக்குக் கீழ்ப்படிந்தவராவார். என்னால் நியமிக்கப்பட்ட தலைவருக்கு மாறு செய்தவர் எனக்கு மாறு செய்தவராவார்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

7138 ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

நினைவில் கொள்க! நீங்கள் ஒவ்வொரு வரும் பொறுப்பாளியே. உங்களில் ஒவ்வொருவரும் தத்தம் பொறுப்பிலுள்ளவை பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள். ஆட்சித் தலைவர் மக்களின் பொறுப்பாளராவார். அவர் தம் குடிமக்கள் குறித்து விசாரிக்கப்படுவார். ஆண், தன் குடும்பத்தாருக்குப் பொறுப்பாளன் ஆவான். அவன், தன் பொறுப்புக்குட்பட்டவர்கள் குறித்து விசாரிக்கப்படுவான். பெண், தன் கணவனின் வீட்டாருக்கும், அவனுடைய குழந்தைக்கும் பொறுப்பாளி ஆவாள். அவள் அவர்கள் குறித்து விசாரிக்கப்படுவாள். ஒருவரின் பணியாள் தன் எசமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் அது குறித்து விசாரிக்கப்படுவான். நினைவில் கொள்க! உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே! உங்களில் ஒவ்வொருவரும் தத்தம் பொறுப்புக்குட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவீர்கள்.3

பகுதி 2

ஆட்சித் தலைவர்கள் குறைஷியராய் இருப்பார்கள்.4

7139 முஹம்மத் இப்னு ஜுபைர் இப்னி முத்யிம்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

நான் குறைஷியரின் தூதுக் குழுவில் ஒருவனாக முஆவியா(ரலி) அவர்களிடம் இருந்தபோது அவர்களுக்கு, அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அவர்கள், 'விரைவில் கஹ்தான் குலத்திலிருந்து அரசர் ஒருவர் தோன்றுவார்' என்று அறிவிப்பதாகச் செய்தி எட்டியது. உடனே அவர்கள் கோபம் கொண்டு எழுந்து நின்று அல்லாஹ்வை அவனுடைய தகுதிக்கேற்ப போற்றிப் புகழ்ந்துவிட்டுக் கூறினார்கள்.

இறைவனை துதித்த பின் கூறுகிறேன்: உங்களில் சில பேர் அல்லாஹ்வின் வேதத்திலும் இல்லாத, இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து அறிவிக்கவும் படாத செய்திகளைச் சொல்கிறார்கள் என்று எனக்குத் தகவல் கிடைத்துள்ளது. அவர்கள் உங்களிடையேயுள்ள அறிவீனர்கள் ஆவர். நீங்கள் உங்களை வழிதவறச் செய்கிற வெற்று நம்பிக்கைகளை வளர்த்துக்கொள்ள வேண்டாமென உங்களை எச்சரிக்கிறேன். ஏனெனில், இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'குறைஷியரிடையே தான் இந்த ஆட்சி அதிகாரம் இருந்துவரும். அவர்களைப் பகைத்துக் கொள்ளும் எவரையும் அல்லாஹ் முகம் குப்புறக் கவிழ்க்காமல் விடமாட்டான். அவர்கள் மார்க்கத்தை நிலைநாட்டிவரும் வரை இந்நிலை நீடிக்கும்'' என்றார்கள்.

இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.5

7140 ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

இந்த ஆட்சியதிகாரம் குறைஷியரிடையே தான் இருந்துவரும்; அவர்களில் இருவர் எஞ்சியிருக்கும் வரை.

என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.6

பகுதி 3

இறைச்சட்டத்தின்படி தீர்ப்பளிப்பவருக்குக் கிடைக்கும் பிரதிபலன்.

ஏனெனில், அல்லாஹ் கூறினான்.

அல்லாஹ் அருளிய (வேதச் சட்டத்)தின் படி தீர்ப்பளிக்காதவர்களே பாவிகள். (திருக்குர்ஆன் 05:47)

7141 ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

இரண்டு பண்புகளில் தவிர வேறு எதிலும் பொறாமை கொள்ளாகாது. ஒருவர் தமக்கு இறைவன் அளித்த செல்வத்தை அறப்பணியில் அர்ப்பணித்தல். மற்றொருவர் தமக்கு இறைவன் அளித்த ஞானத்தால் (மக்களின் பிரச்சினைகளுக்குத்) அதைக் கற்பித்துக்கொண்டும் இருத்தல்.

என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.7

பகுதி 4

இறைவனுக்கு மாறு செய்வதாக அமையாத வரை ஆட்சித் தலைவரின் சொல்லைக் கேட்டுக் கீழ்ப்படிவது (அவசியமாகும்).8

7142 ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

உலர்ந்த திராட்சை போன்ற (சுருங்கிய) தலையுடைய அபிசீனிய (கறுப்பு நிற) அடிமையொருவர் உங்களுக்குத் தலைவராக ஆக்கப்பட்டாலும் (அவரின் சொல்லைக்) கேளுங்கள்; (அவருக்குக்) கீழ்ப்படியுங்கள்.

என அனஸ்(ரலி) அறிவித்தார்.9

7143 ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

தம் (ஆட்சித்) தலைவரிடம் (மார்க்க விஷயத்தில் குறை) எதையேனும் கண்டு அதை வெறுப்பவர் பொறுமையைக் கடைப்பிடிக்கட்டும். ஏனெனில், ஒருவர் (இஸ்லாமியக்) கட்டமைப்பிலிருந்து ஒரு சாண் அளவுக்குப் பிரிந்து இறந்தாலும் அவர் அறியாமைக் கால மரணத்தையே தழுவுகிறார்.

என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.10

7144 ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

(இறைவனுக்கு) மாறு செய்யும்படி கட்டளையிடப்படாத வரை, ஒரு முஸ்லிம் தமக்கு விருப்பமான விஷயத்திலும் விருப்பமில்லாத விஷயத்திலும் (தலைமையின் கட்டளையைச்) செவியேற்பதும் (அதற்குக்) கீழ்ப்படிவது கடமையாகும். (இறைவனுக்கு) மாறு செய்யும்படி கட்டளையிடப்பட்டால் (அதைச்) செவியேற்பதோ (அதற்குக்) கட்டுப்படுவதோ கூடாது.

7145 அலீ(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் ஒரு படைப்பிரிவை அனுப்பி, அவர்களுக்கு அன்சாரிகளில் ஒருவரைத் தளபதியாக்கி, அவருக்குக் கட்டுப்பட்டு நடக்கும்படி படைவீரர்களுக்கு உத்தரவிட்டார்கள். அந்த அன்சாரி (ஒரு கட்டத்தில்) படைவீரர்களின் மீது கோபம் கொண்டு, 'நீங்கள் எனக்குக் கீழ்ப்படிந்து நடக்கவேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கட்டளையிடவில்லையா?' என்று கேட்டார். அவர்கள், 'ஆம்'' என்றனர். அவர், 'விறகைச் சேகரித்து நெருப்பை மூட்டி அதில் புகுந்து விடும்படி உங்களுக்கு நான் உத்தரவிடுகிறேன்'' என்றார். அவ்வாறே அவர்கள் விறகைச் சேகரித்து நெப்பை மூட்டினர். அதில் நுழைய நினைத்தபோது ஒருவரையொருவர் பார்த்தபடி நின்று கொண்டனர். அவர்களில் ஒருவர், '(நரக) நெருப்பிலிருந்து தப்பிக்கத்தானே நாம் நபி(ஸல்) அவர்களைப் பின்பற்றினோம்; அவ்வாறிருக்க, அதில் நாம் நுழைய வேண்டுமா?' என்று கேட்டார். இதற்கிடையே நெருப்பும் அணைந்தது; அவரின் கோபமும் தணிந்தது. பிறகு நபி(ஸல்) அவர்களிடம் இச்செய்தி தெரிவிக்கப்பட்டது. அப்போது நபி(ஸல்) அவர்கள், 'அதில் மட்டும் அவர்கள் புகுந்திருந்தால் அதிலிருந்து ஒருபோதும் வெளியேறிருக்கமாட்டார்கள்; கீழ்ப்படிதல் என்பதெல்லாம் நன்மையில் தான்'' என்றார்கள்.12

பகுதி 5

ஆட்சியதிகாரத்தை (விரும்பிக்) கேட்காதவருக்கு (அது வழங்கப்பட்டால்) அதற்காக அல்லாஹ் உதவுவான்.

7146 அப்துர் ரஹ்மான் இப்னு சமுரா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் (என்னிடம்), 'அப்துர் ரஹ்மானே! ஆட்சிக் பொறுப்பை (நீங்களாக)க் கேட்காதீர்கள். ஏனெனில், நீங்கள் கேட்டு அது உங்களுக்கு அளிக்கப்பட்டால் அதோடு நீங்கள் (தனியாக) விடப்படுவீர்கள். கேட்காமல் உங்களுக்கு அது அளிக்கப்பட்டால் அது தொடர்பாக உங்களுக்கு (அல்லாஹ்வின்) உதவி கிடைக்கும். நீங்கள் ஒரு சத்தியம் செய்து, அது அல்லாத வேறொன்றை அதைவிடச் சிறந்ததாக நீங்கள் கருதினால் உங்களின் சத்தியத்(தை முறித்துவிட்டு முறித்த)தற்கான பரிகாரத்தைச் செய்துவிடுங்கள். சிறந்தது எதுவோ அதைச் செயல்படுத்துங்கள்'' என்றார்கள்.13

பகுதி 6

ஆட்சியதிகாரத்தைக் கேட்டுப் பெறுபவர் அதோடு (தனியாக) விடப்படுவார்.

7147 அப்துர் ரஹ்மான் இப்னு சமுரா(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (என்னிடம்), 'அப்துர் ரஹ்மான் இப்னு சமுரா! ஆட்சித் தலைமையை (நீங்களாக)க் கேட்காதீர்கள். கேட்டு அது உங்களுக்குக் கொடுக்கப்பட்டால் அதோடு (தனியாக) விடப்படுவீர்கள். (இறையுதவி உங்களுக்குக் கிடைக்காது. நீங்களாகக்) கேட்காமல் அது உங்களுக்குக் கொடுக்கப்பட்டால் அது தொடர்பாக உங்களுக்கு (இறைவனின்) உதவி கிடைக்கும். நீங்கள் ஒரு சத்தியம் செய்து, அது அல்லாத வேறொன்றை அதைவிடச் சிறந்ததாக நீங்கள் கருதினால், சிறந்தது எதுவோ அதைச் செய்துவிட்டு, உங்களின் சத்தியத்(தை முறித்த)தற்காகப் பரிகாரம் செய்துவிடுங்கள்'' என்று கூறினார்கள்.14

பகுதி 7

ஆட்சியதிகாரத்தை அடைய ஆசைப்படுவது வெறுக்கப்பட்டதாகும்.

7148 ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

நீங்கள் ஆட்சிப் பதவியை அடைய பேராசைப்படுகின்றீர்கள். ஆனால், மறுமை நாளில் அதற்காக வருத்தப்படுவீர்கள். பாலூட்டுபவை (தாம் சுகங்)களிலேயே பதவி(ப் பால்) தான் இன்பமானது. பாலை மறக்க வைப்ப(தன் துன்பத்)திலேயே பதவி(ப் பாலை நிறுத்துவது)தான் மோசமானது.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

அபூ ஹுரைரா(ரலி) அவர்களிடமிருந்து மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.

7149 அபூ மூஸா அல்அஷ்அரீ(ரலி) அறிவித்தார்.

நானும் என் சமுதாயத்தாரில் இரண்டு பேரும் நபி(ஸல்) அவர்களிடம் சென்றோம். (என்னுடன் வந்த) அவ்விருவரில் ஒருவர், 'எங்களுக்குப் பதவி தாருங்கள், இறைத்தூதர் அவர்களே!'' என்று கேட்டார். மற்றொருவரும் அவ்வாறே கேட்டார்.

நபி(ஸல்) அவர்கள், 'கேட்பவருக்கும் ஆசைப்படுபவருக்கும் நாம் இதை (-பதவியை) வழங்கமாட்டோம்'' என்றார்கள்.

பகுதி 8

குடிமக்களின் பொறுப்பு அளிக்கப்பெற்ற ஒருவர், அவர்களுக்கு நலம் நாடவில்லை என்றால்...?

7150 ஹஸன் அல்பஸ்ரீ(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

(நபித் தோழர்) மஅகில் இப்னு யஸார்(ரலி) அவர்கள் இறப்பதற்கு முன் நோய்வாய்ப்பட்டிருந்தபோது அன்னாரை(ச் சந்தித்து) நலம் விசாரிப்பதற்காக (அன்றைய பஸ்ரா நகர ஆட்சியர்) உபைதுல்லாஹ் இப்னு ஸியாத் சென்றார். அவரிடம் மஅகில்(ரலி) அவர்கள் 'நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து கேட்ட செய்தி ஒன்றை உமக்கு அறிவிக்கிறேன். நபி(ஸல்) அவர்கள், 'ஓர் அடியானுக்குக் குடிமக்களின் பொறுப்பை அல்லாஹ் வழங்கியிருக்க, அவன் அவர்களின் நலனைக் காக்கத் தவறினால், சொர்க்கத்தின் வாடையைக் கூட அவன் பெறமாட்டான்' என்று சொல்ல கேட்டேன்'' எனக் கூறினார்கள்.

7151 ஹஸன் அல்பஸ்ரீ(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

நாங்கள் மஅகில் இப்னு யஸார்(ரலி) அவர்களை நலம் விசாரிக்கச் சென்றோம். அப்போது (பஸ்ராவின் ஆட்சியர்) உபைதுல்லாஹ் இப்னு ஸியாத் உள்ளே வந்தார். அவரிடம் மஅகில்(ரலி) அவர்கள், இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து நான் செவியுற்ற செய்தி ஒன்றை உமக்கு அறிவிக்கிறேன் என்று சொல்லிவிட்டு(ப் பின்வருமாறு) கூறினார்கள்: 'முஸ்லிம் குடிமக்களின் நிர்வாகப் பொறுப்பை ஏற்கும் ஒருவர் அவர்களுக்கு மோசடி செய்த நிலையில் இறந்துவிடுவாரனால், சொர்க்கத்தை அவருக்கு அல்லாஹ் தடை செய்துவிடுகிறான்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

பகுதி 9

(மக்களை) சிரமப்படுத்துகிறவரை அல்லாஹ் சிரமத்திற்குள்ளாக்குவான்.

7152 தாரீஃப் அபீ தமீமா இப்னு முஜாலித் அல்ஹுஜைமீ(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

ஜுன்துப் இப்னு அப்தில்லாஹ் அல்பஜலீ(ரலி) அவர்கள், ஸஃப்வான் இப்னு முஹ்ரிஸ்(ரஹ்) அவர்களுக்கும் அவர்களின் தோழர்களுக்கும் உபதேசம் செய்துகொண்டிருந்த இடத்தில் நான் இருந்தேன். அப்போது ஸஃப்வானும் அவர்களின் தோழர்களும், 'நீங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து (ஹதீஸ்) எதையேனும் செவியுற்றீர்களா?' என்று கேட்க ஜுன்தப்(ரலி) அவர்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (பின்வருமாறு) கூற கேட்டேன் என்றார்கள்:

விளம்பரத்திற்காக நற்செயல் புரிகிறவரை (அவரின் நோக்கத்தை) அல்லாஹ் மறுமைநாளில் விளம்பரப்படுத்துவான்15 (மக்களைச்) சிரமப்படுத்துகிறவரை அல்லாஹ் மறுமைநாளில் சிரமத்திற்குள்ளாக்குவான்.

அப்போது நண்பர்கள் 'எங்களுக்கு உபதேசம் செய்யுங்கள்'' என்று கேட்க, ஜுன்தப்(ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: (இறந்த பிறகு) மனிதனின் உறுப்புகளிலேயே முதல்முதலாக (அழுகி) துர்நாற்றமெடுப்பது அவனுடைய வயிறுதான். எனவே, (அனுமதிக்கப்பட்ட) நல்ல உணவை மட்டுமே உண்ண சக்திபடைத்தவர் அவ்வாறே செய்யட்டும். (அநியாயமாகத்) தம்மால் சிந்தப்பட்ட கையளவு இரத்தம், தாம் சொர்க்கம் செல்வதிலிருந்து தடுக்காமல் இருக்கும்படி செய்ய முடிந்தவர் அவ்வாறே செய்யட்டும்.

(ஃபர்பாரீ(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:)

நான் அபூ அப்தில்லாஹ் (புகாரீ - ரஹ்) அவர்களிடம், 'நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து செவுயுற்றேன் என்று சொல்பவர் யார்? ஜுன்தப்(ரலி) அவர்களா?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'ஆம்; ஜுன்தப்(ரலி) அவர்கள் தாம்'' என்று பதிலளித்தார்கள்.

பகுதி 10

சாலையில் தீர்ப்பு வழங்குவதும் மார்க்க விளக்கம் அளிப்பதும்.

(நீதிபதி) யஹ்யா இப்னு யஅமர்(ரஹ்) அவர்கள் சாலையில் தீர்ப்பளித்தார்கள். ஷஅபீ (ரஹ்) அவர்கள் தங்களின் வீட்டின் வாசலில் தீர்ப்பளித்தார்கள்.

7153 அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

நானும் நபி(ஸல்) அவர்களும் பள்ளிவாசலிலிருந்து புறப்பட்டுக்கொண்டிருந்தபோது பள்ளிவாசலின் முற்றத்தருகே எங்களை ஒருவர் சந்தித்து, 'இறைத்தூதர் அவர்களே! மறுமைநாள் எப்போது வரும்?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'நீ அதற்காக என்ன முன்னேற்பாடு செய்து வைத்திருக்கிறாய்?' என்று கேட்டார்கள். உடனே அம்மனிதர் அடங்கிப் போனவரைப் போன்று காணப்பட்டார். பிறகு, 'இறைத்தூதர் அவர்களே! நான் அதற்கு முன்னேற்பாடாகப் பெரிய அளவில் நோன்போ தொழுகையோ தான தர்மங்களோ செய்துவைத்திருக்கவில்லை. ஆயினும், நான் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கிறேன்'' என்று பதிலளித்தார். நபி(ஸல்) அவர்கள், 'நீ யாரை நேசிக்கிறாயோ அவருடன் (மறுமையில்) இருப்பாய்'' என்று கூறினார்கள்.16

பகுதி 11

நபி(ஸல்) அவர்களுக்கு வாயிற்காவலர் இருந்ததில்லை.

7154 ஸாபித் அல்புனானீ(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்கள் தம் வீட்டரில் ஒரு பெண்மணியிடம், 'இன்ன பெண்ணை உனக்குத் தெரியுமா?' என்று கேட்டார்கள். அப்பெண்மணி, 'ஆம் (தெரியும்)'' என்று கூறினார். அனஸ்(ரலி) கூறினார்: அவள் ஒரு மண்ணறை அருகே அழுதுகொண்டிருக்கும்போது நபி(ஸல்) அவர்கள் அவளைக் கடந்து சென்றார்கள். அப்போது, 'அல்லாஹ்வுக்கு அஞ்சிக்கொள்! பொறுமையாக இரு'' என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள். அப்பெண், 'என்னைவிட்டு விலகிச் செல்வீராக. எனக்கேற்பட்ட துன்பம் உமக்கேற்படவில்லை. (எனவேதான் இப்படிப் பேசுகிறீர்)'' என்று சொன்னாள். நபி(ஸல்) அவர்கள் (பேசாமல்) அவளைக் கடந்து சென்றார்கள். அப்போது ஒருவர் அவ்வழியே சென்றார். அவர், 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் உன்னிடம் என்ன சொன்னார்கள்?' என்று கேட்டார். அப்பெண், 'எனக்கு அவர் யாரென்றும் தெரியாது' எனக் கூறினாள். அம்மனிதர், 'அவர்கள்தாம் இறைத்தூதர்(ஸல்)'' என்று சொல்ல அவள், நபி(ஸல்) அவர்களின் வீட்டு வாசலுக்குச் சென்றாள். அங்கு அவள் வாயிற்காவலர் யாரையும் காணவில்லை. எனவே அவள், 'இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் யாரென்று நான் அறியவில்லை'' என்று சொன்னாள். நபி(ஸல்) அவர்கள், 'பொறுமை என்பது துன்பம் ஏற்பட்ட முதல் கட்டத்தில் கைக்கொள்வதேயாகும்'' என்றார்கள்.17

பகுதி 12

நீதிபதி தமக்கு மேலுள்ள ஆட்சியாளரின் (சிறப்பு) அனுமதி பெறாமலேயே உரிய குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கலாம்.

7155 அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

(அன்சாரிகளில் ஒருவரான) கைஸ் இப்னு ஸஅத் இப்னு உபாதா(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களுக்கு முன்னால் (அவர்களின் அவையில்) ஆட்சித் தலைவருக்கு ஒரு காவல்துறை அதிகாரியைப் போன்று செயல்பட்டு வந்தார்கள்.18

7156 அபூ மூஸா அல்அஷ்அரீ(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் என்னை (யமன் நாட்டிற்கு நீதி மற்றும் நிர்வாக அதிகாரியாக) அனுப்பினார்கள். என்னைத் தொடர்ந்து முஆத்(ரலி) அவர்களையும் அனுப்பி வைத்தார்கள்.19

7157 (தொடர்ந்து) அபூ மூஸா அல்அஷ்அரீ(ரலி) அறிவித்தார்.

(யூதராயிருந்த) ஒருவர் இஸ்லாத்தை ஏற்ற பின்பு யூதராக மாறிவிட்டார். அந்த மனிதர் என்னிடம் இருந்தபோது முஆத் இப்னு ஜபல்(ரலி) அவர்கள் வந்தார்கள். 'இவருக்கு என்ன?' என்று முஆத் கேட்டார்கள். நான், 'இவர் இஸ்லாத்தை ஏற்ற பிறகு யூதராகிவிட்டார்'' என்று சொன்னேன். முஆத்(ரலி) அவர்கள், 'நான் இவருக்கு மரண தண்டனை அளிக்காதவரை அமரமாட்டேன். இதுதான் அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதரின் தீர்ப்பாகும்'' என்றார்கள்.20

பகுதி 13

நீதிபதி கோபமாக இருக்கும்போது தீர்ப்போ மார்க்க விளக்கமோ அளிக்கலாமா?

7158 அப்துர் ரஹ்மான் இப்னு அபீ பக்ரா(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

(என் தந்தை) அபூ பக்ரா(ரலி) அவர்கள் தம் புதல்(வரும் என் சகோதரருமான உபைதுல்லாஹ் என்ப)வருக்குக் கடிதம் எழுதினார்கள். -அவர் (ஈரான் - ஆப்கன் எல்லையிலிருந்த) சிஜிஸ்தான் பகுதியில் (நீதிபதியாக) இருந்தார். 'நீ கோபமாக இருக்கும்போது இருவரிடையே தீர்ப்பளிக்க வேண்டாம். ஏனெனில், நபி(ஸல்) அவர்கள், நீதிபதி எவரும் கோபமாக இருக்கும்போது இருவருக்கிடையே தீர்ப்பளிக்கவேண்டாம் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன்'' (என்று அக்கடிதத்தில் எழுதினார்கள்).

7159 அபூ மஸ்வூத் அல்அன்சாரி(ரலி) அறிவித்தார்.

ஒருவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்வின் மீதாணையாக! இன்ன மனிதர் தொழுகையை எங்களுக்கு நீண்ட நேரம் தொழுகை நடத்துவதால் அதிகாலை(க் கூட்டு)த் தொழுகைக்கு வராமல் நான் தாமதித்துவிடுகிறேன்'' என்றார். நபி(ஸல்) அவர்கள் அன்று ஆற்றிய உரையின்போது கோபப்பட்டதைவிடக் கடுமையாகக் கோபப்பட்டு நான் ஒருபோதும் கண்டதில்லை. பிறகு அவர்கள், 'மக்களே! (வணக்க வழிபாடுகளில்) வெறுப்பூட்டுபவர்களும் உங்களில் உள்ளனர். எனவே, உங்களில் யார் மக்களுக்குத் தொழுகை நடத்தினாலும் அவர் சுருக்கமாகத் தொழுகை நடத்தட்டும். ஏனெனில், மக்களில் முதியோரும் பலவீனரும் அலுவல் உடையோரும் உள்ளனர்'' என்றார்கள்.21

7160 அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

என் மனைவி மாதவிடாயில் இருந்தபோது, அவளை நான் மணவிலக்கு (தலாக்) செய்துவிட்டேன். இதை (என் தந்தை) உமர்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் சொல்லிவிட்டார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அது குறித்துக் கோபமடைந்தார்கள். பிறகு, 'அவர் தம் மனைவியைத் திரும்ப அழைத்துக்கொள்ளட்டும். பின்னர் அவள் மாதவிடாயிலிருந்து தூய்மையடைந்து, அடுத்து மீண்டும் அவளுக்கு மாதவிடாய் ஏற்பட்டுப் பின்னர் அதிலிருந்து அவள் தூய்மையடையும் வரை அவளைத் தம்மிடமே வைத்திருக்கட்டும். பிறகு அவளை மணவிலக்குச் செய்தே தீர வேண்டும் என்று அவருக்குத் தோன்றினால் அவளை மணவிலக்குச் செய்துவிடட்டும்'' என்றார்கள்.22

பகுதி 14

மக்களின் உரிமைகள் தொடர்பாக நீதிபதி தம் சொந்த அறிவால் தீர்ப்பளிப்பது செல்லும்; ஆனால், சந்தேகமும் அவதூறும் கிளம்பும் என்ற அச்சம் அவருக்கு இருக்கலாகாது.

நபி(ஸல்) அவர்கள், ஹிந்த் பின்த் உத்பா(ரலி) அவர்களிடம் கூறியதைப் போன்று: உனக்கும் உன் குழந்தைக்கும் போதுமானதை நியாமான அளவுக்கு நீ எடுத்துக்கொள்.

(மக்களிடையே) பிரபலமாக உள்ள விஷயங்களில் தான் இது செல்லும்.23

7161 ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

(ஒரு முறை) ஹிந்த் பின்த் உத்பா இப்னு ரபீஆ(ரலி) அவர்கள் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்வின் மீதாணையாக! (நான் இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்) பூமியின் முதுகிலுள்ள வேறெந்த வீட்டார் இழிவடைவதையும் விட உங்கள் வீட்டார் இழிவடைதே எனக்கு மிகவும் விருப்பமானதாக இருந்து வந்தது. (நான் இஸ்லாத்தை ஏற்ற பிறகு) இன்று பூமியின் முதுகிலுள்ள வேறெந்த வீட்டார் கண்ணியம் அடைவதையும் விட உங்கள் வீட்டார் கண்ணியம் அடைவதே எனக்கு மிகவும் விருப்பமானதாக மாறிவிட்டது'' என்று கூறிவிட்டுப் பிறகு, '(என் கணவர்) அபூ சுஃப்யான் கருமியான மனிதர். அவருக்குரிய (செல்வத்)திலிருந்து (அவருக்குத் தெரியாமல்) எங்கள் குழந்தைகளுக்கு நான் உணவளித்தால் அது என்மீது குற்றமாகுமா?' என்று கேட்டார் நபி(ஸல்) அவர்கள் அவரிடம், 'நியாயமான அளவுக்கு (எடுத்து) அவர்களுக்கு உண்ணக் கொடுப்பதால் உன் மீது குற்றமேதும் வராது'' என்று பதிலளித்தார்கள்.

பகுதி 15

முத்திரையிடப் பெற்ற கடிதத்திற்கு (அது இன்னாரின் கடிதம் தான் என்று) சாட்சியமளிப்பதும், அதில் எது செல்லும்? அல்லது செல்லாது? என்பதும், ஆட்சியாளர் தம் அதிகாரிகளுக்கு எழுதும் கடிதமும், ஒரு நீதிபதி மற்றொரு நீதிபதிக்கு எழுதும் கடிதமும்.

(அறிஞர் பெரு) மக்களில் சிலர், 'குற்றவியல் தண்டனைச் சட்டங்கள் தவிர மற்ற விஷயங்களில் (நீதிபதிக்கு ஆலோசனை கூறி) ஆட்சியாளர் கடிதம் எழுதலாம்'' என்று கூறினர். பிறகு அவர்களே, 'தவறுதலாக நடந்துவிடும் கொலை விஷயத்தில் மட்டுமே இப்படி ஆலோசனை கூறி ஆட்சியாளர் நீதிபதிக்குக்) கடிதம் எழுதுவது செல்லும்'' என்று கூறுகிறார்கள். ஏனெனில், இது அவர்களைப் பொறுத்த வரை (இழப்பீடு வழங்கவேண்டிய) பொருள் சம்பந்தப்பட்ட விஷயம்தான். (ஆனால், இந்தக் கருத்து தவறானதாகும்.) ஏனென்றால், இது பொருள் சம்பந்தப்பட்ட பிரச்சினையாக மாறுவதெல்லாம் கொலை நிரூபணமான பின்புதான். எனவே, (ஆரம்பக் கட்டத்தில்,) தவறுதலாக நடந்த கொலையானாலும் வேண்டுமென்றே செய்யப்பட்ட கொலையானாலும் இரண்டும் ஒன்றே.

உமர் இப்னு அல்கத்தாப்(ரலி) அவர்கள் குற்றவியல் தண்டனைகள் தொடர்பாகத் தம் ஆளுநருக்குக் கடிதம் எழுதியுள்ளார்கள்.25

உமர் இப்னு அல்கத்தாப்(ரலி) அவர்கள் குற்றவியல் தண்டனைகள் தொடர்பாகத் தம் ஆளுநருக்குக் கடிதம் எழுதியுள்ளார்கள்.25 உமர் இப்னு அப்தில் அஸீஸ்(ரஹ்) அவர்களும் உடைக்கப்பட்ட ஒரு பல் தொடர்பான வழக்கில் (தனி மனிதரின் சாட்சியத்தை ஏற்கலாம் என்று) தம் ஆளுநருக்குக் கடிதம் எழுதியுள்ளார்கள்.

இப்ராஹீம் அந்நகஈ(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ஒரு நீதிபதி மற்றொரு நீதிபதிக்கு (ஆலோசனைகள் கூறி) கடிதம் எழுதுவது செல்லும்; எந்த நீதிபதிக்குக் கடிதம் எழுதப்பட்டதோ அவர் கடிதத்தையும் முத்திரையையும் (உண்மையானவை என) அறிந்திருந்தால் மட்டுமே செல்லும். ஷஅபீ (ரஹ்) அவர்கள் நீதிபதியிடமிருந்து கடிதத்தில் உள்ளவற்றை செயல்படுத்திவந்தார்கள். இப்னு உமர்(ரலி) அவர்களிடமிருந்து இவ்வாறே அறிவிக்கப்படுகின்றது.

முஆவியா இப்னு அப்தில் காரீம் அஸ்ஸகஃபீ(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் பஸ்ரா நீதிபதி அப்துல் மலிக் இப்னு யஅலா(ரஹ்) அவர்களையும், இயாஸ் இப்னு முஆவியா(ரஹ்), ஹஸன் அல்பஸ்ரீ(ரஹ்), ஸுமாமா இப்னு அப்தில்லாஹ் இப்னி அனஸ்(ரஹ்), பிலால் இப்னு அபீ புர்தா(ரஹ்), அப்துல்லாஹ் இப்னு புரைதா அல்அஸ்லமீ(ரஹ்), ஆமிர் இப்னு அபீ தா(ரஹ்), அப்பாத் இப்னு மன்ஸூர்(ரஹ்) ஆகியோரைத் கண்டுள்ளேன். அவர்கள் 'சாட்சிகள் ஆஜராகாமலேயே நீதிபதிகளின் கடிதங்களை (விசாரணை முடிவுகளை) ஆதாரமாகக் கொள்ளலாம்' என அனுமதித்துள்ளனர். 'இக்கடிதம் போலியானது' என யாருக்கெதிராகக் கடிதம் வந்தோ அவர் (-எதிரி) கூறினால், 'அதிலிருந்து வெளியேறும் வழியைப் பார்' என்று அவரிடம் சொல்லப்படும். இப்னு அபீ லைலா(ரஹ்) அவர்களும் சவ்வார் இப்னு அப்தில்லாஹ்(ரஹ்) அவர்களும்தாம் முதன்முதலில் நீதிபதியின் கடிதத்திற்கு (-இது நீதிபதியின் கடிதம்தான் என்பதற்கு) ஆதாரத்தைக் கேட்டவர்களாவர்.

உபைதுல்லாஹ் இப்னு முஹ்ரிஸ்(ரஹ்) அவர்கள் கூறினார்கள்: பஸ்ரா நீதிபதியான மூஸா இப்னு அனஸ்(ரஹ்) அவர்களிடமிருந்து கடிதமொன்றைக் கொண்டுவந்தேன். நான் அன்னாரிடம் எனக்குக் கூஃபாவில் உள்ள இன்னார் இவ்வளவு தர வேண்டியுள்ளது என்று ஆதாராம் சமர்ப்பித்திருந்தேன். நான் அ(ந்தக் கடிதத்)தை (கூஃபா நீதிபதி) காசிம் இப்னு அப்திர் ரஹ்மான்(ரஹ்) அவர்களிடம் கொண்டு சென்றேன். அதை அவர்கள் செல்லுமென ஏற்றார்கள்.

ஹஸன் அல்பஸ்ரீ(ரஹ்) அவர்களும் அபூ கிலாபா(ரஹ்) அவர்களும், ஒருவர் எழுதிய மரண சாசனத்தில் என்ன உள்ளது என்பதை அறியாமல் அதற்கு சாட்சியம் அளிப்பதை வெறுத்தார்கள். ஏனெனில், அதில் தவறு நடந்திருக்க இடமுண்டு; அது அவருக்குத் தெரியாது. நபி(ஸல்) அவர்கள் கைபர்வாசிகளுக்குக் கடிதம் எழுதியுள்ளார்கள். அதில் '(உங்கள் பகுதியில் கொல்லப்பட்ட) உங்களுடைய தோழ(ர் அப்துல்லாஹ் இப்னு ஸஹ்ல் என்பவ)ருக்காக இழப்பீடு வழங்கவேண்டும்; அல்லது போருக்குத் தயாராக வேண்டும் என்று எழுதியிருந்தார்கள்.

திரைக்கப்பாலுள்ள பெண்ணுக்கெதிராக சாட்சியம் அளிப்பது குறித்து ஸுஹ்ரீ(ரஹ்) அவர்கள் கூறும்போது 'அவளை நீ அறிந்திருந்தால் சாட்சியம் அளிக்கலாம்; இல்லையேல் அளிக்க வேண்டாம்'' என்றார்கள்.

7162. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் (பைஸாந்திய) ரோமர்களுக்குக் கடிதம் எழுத விரும்பியபோது மக்கள், 'ரோமர்கள் முத்திரையிடப்பட்ட கடிதத்தை மட்டுமே படிப்பார்கள்'' என்றார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள் வெள்ளி மோதிரம் ஒன்றை தயாரித்துக் கொண்டார்கள். அதன் மின்னும் வெண்மையை நான் (இன்னும்) பார்ப்பதைப் போன்றுள்ளது. அதில் முஹம்மதுர் ரசூலுல்லாஹ் (இறைத்தூதர் முஹம்மத்) என இலச்சினை பொறிக்கப்பட்டிருந்தது.26

பகுதி 16

நீதிபதியாகும் தகுதியை ஒருவர் எப்போது பெறுகிறார்?

ஹஸன் அல்பஸ்ரீ(ரஹ்) அவர்கள், 'நீதிபதிகள் மன இச்சையைப் பின்பற்றக் கூடாது; மக்களுக்கு அஞ்சக் கூடாது; தன் வசனங்களை அற்ப விலைக்கு விற்கக் கூடாது என அவர்களிடம் அல்லாஹ் உறுதிமொழி வாங்கியுள்ளான்'' என்று கூறிவிட்டு 'தாவுதே! உங்களை நாம் பூமியில் பிரதிநிதியாக ஆக்கியுள்ளோம். எனவே, மக்களுக்கிடையே (நேர்மையாக) சத்தியத் தீர்ப்பு வழங்குங்கள். மன இச்சையைப் பின்பற்றாதீர்கள். அது உங்களை இறைவழியிலிருந்து தவறச் செய்து விடும். இறைவழியிலிருந்து தவறிச் செல்பவர்களுக்கு, அவர்கள் கணக்கு வாங்கும் நாளை மறந்துவிட்ட காரணத்தால் கடுமையான வேதனை உண்டு'' எனும் (திருக்குர்ஆன் 38:26 வது) இறைவசனத்தை ஓதிக் காட்டினார்கள்.

மேலும், நிச்சயமாக நாம்தாம் 'தவ்ராத்'தையும் அருளினோம்; அதில் நேர்வழியும் பேரொளியும் இருந்தன் (அல்லாஹ்வுக்கு) முற்றிலும் வழிப்பட்ட நபிமார்கள், யூதர்களுக்கு அதைக்கொண்டே தீர்ப்பளித்து வந்தார்கள். இறைபக்தியாளர்களும் அறிஞர்களும் - அவர்கள் அல்லாஹ்வின் வேதத்தைப் பாதுகாக்கக் கட்டளையிடப்பட்டவர்கள் என்பதாலும், இன்னும் அவ்வேதத்திற்குச் சாட்சிகளாக அவர்கள் இருந்தாலும் - அவர்கள் அதைக்கொண்டே தீர்ப்பளித்து வந்தார்கள். (இறை நம்பிக்கையாளர்களே!) நீங்கள் மனிதர்களுக்கு அஞ்சாதீர்கள்; எனக்கே அஞ்சுங்கள். என்னுடைய வசனங்களை அற்பக் கிரயத்திற்கு விற்றுவிடாதீர்கள். அல்லாஹ் அருளிய(வேதத்)தைக் கொண்டு தீர்ப்பளிக்காதவர்களே இறைமறுப்பாளர்கள்'' எனும் (திருக்குர்ஆன் 05:44 வது) வசனத்தையும் ஓதிக் காட்டினார்கள்.

மேலும், 'இன்னும் தாவூதும் சுலைமானும் (பற்றி நினைவு கூர்வீராக!) வேளாண்மை நிலத்தில் அவர்களின் சமூகத்தாரின் ஆடுகள் இரவில் இறங்கி மேய்ந்தபோது, அதைப் பற்றி அவ்விருவரும் தீர்ப்பளித்தனர். அவர்களின் தீர்ப்பை நாம் கவனித்துக் கொண்டிருந்தோம். அப்போது, நாம் சுலைமானுக்கு அதை (-தீர்ப்பளிப்பதன் முறையைப்) புரியவைத்தோம். (அவ்விருவரில்) ஒவ்வொருவருக்கும் (தீர்ப்பளிக்கும்) ஞானத்தையும் அறிவையும் வழங்கினோம்'' எனும் (திருக்குர்ஆன் 21:78,79) வசனங்களையும் ஓதிக் காட்டினார்கள்.

(இந்த வசனத்தில்) அல்லாஹ் சுலைமான் (அலை) அவர்களைப் புகழ்ந்துள்ளான். தாவூத்(அலை) அவர்களைப் பழிக்கவில்லை. இந்த இருவரின் விவகாரத்தையும் அல்லாஹ் எடுத்துரைத்திருக்காவிட்டால், நீதிபதிகள் அழிந்துபோவதைத்தான் நான் பார்த்திருப்பேன். ஏனெனில், அல்லாஹ் ஒருவரை (சுலைமான்(அலை) அவர்களை) அவரின் அறிவுக்காகப் பாராட்டியுள்ளான். மற்றொரு வரை (தாவூத்(அலை) அவர்களை) அவரின் ஆராய்ச்சிக்காக மன்னித்திருக்கிறான்.

முஸாஹிம் இப்னு ஸுபைர்(ரஹ்) அவர்கள் கூறினார்கள்: உமர் இப்னு அப்தில் அஸீஸ்(ரஹ்) அவர்கள் எங்களிடம் கூறினார்கள்: ஒரு நீதிபதி ஐந்து பண்புகளில் எந்த ஒன்றைத் தவறவிட்டாலும் அது அவருக்குக் களங்கமாகும். அவையாவன: அவர் (விஷயங்களை நன்கு புரிந்துகொள்ளும்) விளக்கமுள்ளவராகவும் (பழிவாங்கும் எண்ணமில்லாத) சகிப்புத் தன்மையுடையவராகவும், (விலக்கப்பட்டவற்றிலிருந்து விலகி) மார்க்கநெறி காப்பவராகவும், (எடுக்கும் முடிவில்) உறுதியானவராகவும், கல்விமானாகவும், கல்வியறிவைப் பெருக்கிக் கொள்ள அதிகம் கேள்வி கேட்பவராகவும் இருக்கவேண்டும்.

பகுதி 17

ஆட்சியாளர்கள், நீதிபதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் ஆகியோருக்கான ஊதியம்.

நீதிபதி ஷுரைஹ்(ரஹ்) அவர்கள் (நீதிமன்றத்தில்) தீர்ப்பு வழங்கும் தம் பணிக்காக ஊதியம் பெற்றுவந்தார்கள்.27

ஆயிஷா(ரலி) கூறினார்: அநாதையின் காப்பாளர் தம் வேலைப்பளுவுக்கேற்ப அநாதையின் செல்வத்திலிருந்து உண்ணலாம். அபூ பக்ர்(ரலி) அவர்களும் உமர்(ரலி) அவர்களும் (நிர்வாகப் பணிக்காக அரசு நிதியிலிருந்து ஊதியம் பெற்று) உண்டார்கள்.

7163 அப்துல்லாஹ் இப்னு சஅதீ(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

நான் உமர்(ரலி) அவர்களிடம் அவர்களின் ஆட்சிக்காலத்தின்போது சென்றேன். அப்போது அவர்கள் என்னிடம், 'நீங்கள் மக்கள் (நலப்) பணிகள் சிலவற்றுக்குப் பொறுப்பேற்றிருப்பதாகவும், அதற்காக ஊதியம் தரப்பட்டால் அதை நீங்கள் வெறுப்பதாகவும் எனக்குத் தகவல் வந்ததே! (உண்மைதானா?)'' என்று கேட்டார்கள். அதற்கு நான் 'ஆம்' என்றேன். உமர்(ரலி) அவர்கள், 'நீங்கள் எந்த நோக்கத்தில் இப்படிச் செய்கிறீர்கள்?' என்று கேட்க, நான், 'என்னிடம் பல குதிரைகளும் பல அடிமைகளும் உள்ளனர். நான் நல்ல நிலையில் தான் இருக்கிறேன். எனவே, என் ஊதியம் முஸ்லிம்களுக்கு தர்மமாக இருக்கட்டும் என்று விரும்புகிறேன்'' என்று பதிலளித்தேன். உமர்(ரலி) கூறினார்: அப்படிச் செய்யாதீர்கள். ஏனென்றால், நீங்கள் விரும்பியபடியே நானும் விரும்பிவந்தேன். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எனக்கு (மக்கள் நல நிதியிலிருந்து) நன்கொடை வழங்குவார்கள். நான், 'என்னை விட அதிகத் தேவை உடையோருக்கு இதைக் கொடுங்கள்'' என்று சொல்லிவந்தேன். இறுதியில் ஒரு முறை நபி(ஸல்) அவர்கள், (நன்கொடைப்) பொருள் ஒன்றை எனக்கு அளித்தபோது, நான், 'என்னைவிட அதிகத் தேவை உடையோருக்கு இதை வழங்குங்கள்'' என்று சொன்னேன். நபி(ஸல்) அவர்கள், '(முதலில்) இதை வாங்கி உங்களுக்கு உடைமையாக்கிக் கொள்ளுங்கள். பிறகு, (தேவைப்படவில்லையென்றால்,) தர்மம் செய்துவிடுங்கள். இச்செல்வத்திலிருந்து எது நீங்கள் எதிர்பார்க்காமலும் நீங்களாகக் கேட்காமலும் உங்களுக்கு வந்தோ அதை (மறுக்காமல்) வாங்கிக் கொள்ளுங்கள். அப்படி எதுவும் வரவில்லையென்றால் நீங்களாக அதைத் தேடிச் செல்லாதீர்கள்'' என்றார்கள்.

7164. உமர்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் எனக்கு நன்கொடை வழங்குவார்கள். அப்போது நான், 'என்னை விட அதிகமாகத் தேவை உள்ளவருக்கு இதைக் கொடுத்துவிடுங்கள்'' என்று சொல்வேன். ஒரு முறை எனக்கு (நன்கொடைப்) பொருள் ஒன்றை அவர்கள் வழங்கியபோது, நான், 'என்னை விட அதிகமாக இது யாருக்குத் தேவைப்படுகிறதோ அவருக்கு இதைக் கொடுத்துவிடுங்கள்'' என்று சொன்னேன். நபி(ஸல்) அவர்கள், '(முதலில்) நீங்கள் இதை வாங்கி, உங்களுக்கு உடைமையாக்கிக் கொள்ளுங்கள். பிறகு (உங்களுக்குத் தேவைப்படாவிட்டால்) தர்மம் செய்துவிடுங்கள். நீங்கள் ஆசைப்பட்டு எதிர்பார்க்காமலும் நீங்களாகக் கேட்காமலும் இச்செல்வத்திலிருந்து உங்களுக்கு (தானாக) வரும் எதுவாயினும் அதை நீங்கள் வாங்கிக் கொள்ளுங்கள். அப்படி வராவிட்டால் அதன் பின்னே நீங்களாகச் செல்லாதீர்கள்'' என்றார்கள்.

பகுதி 18

பள்ளிவாசலில் தீர்ப்புக் கூறுவதும் (தம்பதியரை) சாப அழைப்புப் பிரமாணம் ('லிஆன்') செய்யவைப்பதும்.

உமர்(ரலி) அவர்கள் (ஒரு தம்பதியரை) நபி(ஸல்) அவர்களின் சொற்பொழிவு மேடை (மிம்பர்) அருகே சாப அழைப்புப் பிரமாணம் ('லிஆன்') செய்யச் சொன்னார்கள். (நீதிபதி) ஷுரைஹ்(ரஹ்), யஹ்யா இப்னு யஅமர்(ரஹ்) ஆகியோர் பள்ளிவாசலில் தீர்ப்பளித்துள்ளார்கள். (ஆளுநர்) மர்வான் இப்னி ஹகம், ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அவர்கள் சத்தியம் செய்ய வேண்டும் என்று சொற்பொழிவு மேடை (மிம்பர்) அருகே தீர்ப்பளித்தார்கள்.

ஹஸன் அல்பஸ்ரீ(ரஹ்) அவர்களும் சுராரா இப்னு அவ்ஃபா(ரஹ்) அவர்களும் மஸ்ஜிதுக்கு வெளியே முற்றத்தில் வைத்துத் தீர்ப்பளித்துள்ளார்கள்.

7165 ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்.

ஒரு தம்பதியர் (பள்ளிவாசலில்) சாப அழைப்புப் பிரமாணம் (லிஆன்) செய்த நேரத்தில் நான் அங்கிருந்தேன். அப்போது நான் பதினைந்து வயதுடையவனாக இருந்தேன். அவ்விருவரும் (மணபந்தத்திலிருந்து) பிரித்துவைக்கப்பட்டார்கள்.

7166. பனூ சாஇதா குலத்தைச் சேர்ந்த ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்.

அன்சாரிகளில் ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'ஒரு மனிதன் தன் மனைவியுடன் வேறொரு (அந்நிய) ஆடவன் (தகாத உறவுகொண்ட நிலையில்) இருக்கக் கண்டால், அவனை இவன் கொன்று விடலாமா? நீங்கள் என்ன சொல்கின்றீர்கள்?' என்று கேட்டார். பிறகு (இறைகட்டளைக்கேற்பக் கணவன், மனைவி) இருவரும் பள்ளிவாசலிலேயே சாப அழைப்புப் பிரமாணம் (லிஆன்) செய்தார்கள். அப்போது நானும் அங்கிருந்தேன்.28

பகுதி 19

பள்ளிவாசலில் தீர்ப்பளிப்பவர் தண்டனை (வழங்கும் முடிவு)க்கு வந்தால் பள்ளிவாசலுக்கு வெளியே தண்டனை நிறைவேற்றப்பட வேண்டுமென உத்தரவிட வேண்டும்.

உமர்(ரலி) அவர்கள் (பள்ளிவாசலில் வைத்து தண்டனை வழங்கப்பட்ட கைதி குறித்து) 'அவரைப் பள்ளிவாசலிலிருந்து வெளியேற்றி தண்டனை நிறைவேற்)றுங்கள்'' என்றார்கள்.

அலீ(ரலி) அவர்கள் குறித்தும் இவ்வாறே அறிவிக்கப்படுகிறது.

7167 அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் இருந்தபோது ஒருவர் அவர்களிடம் வந்து அவர்களை அழைத்து, இறைத்தூதர் அவர்களே! நான் விபசாரம் புரிந்துவிட்டேன்'' என்றார். நபி(ஸல்) அவர்கள் அவரிடமிருந்து தம் முகத்தைத் திருப்பினார்கள். (இவ்வாறு) அவர் தமக்கெதிராக நான்கு முறை சாட்சியம் அளித்தபோது, 'உனக்குப் பைத்தியமா?' என்று கேட்டார்கள். அவர், 'இல்லை'' என்றார். நபி(ஸல்) அவர்கள், 'இவரை (பள்ளிவாசலில் இருந்து வெளியே) கொண்டு சென்று கல்லெறி தண்டனை நிறைவேற்றுங்கள்'' என்றார்கள்.29

7168 ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.

(மதீனாவில் பெருநாள்) தொழுகைத் திடலில் வைத்து அவருக்குக் கல்லெறி தண்டனை வழங்கியவர்களில் நானும் ஒருவனாவேன்.30

கல்லெறி தண்டனை தொடர்பாக நபி(ஸல்) அவர்கள் அறிவித்த ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

பகுதி 20

(வழக்கின் போது) தலைவர் எதிரிகளுக்கு அறிவுரை கூறுவது.

7169 ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

நான் ஒரு மனிதன்தான். நீங்கள் என்னிடம் உங்கள் வழக்குகளைக் கொண்டு வருகிறீர்கள். உங்களில் ஒருவர் மற்றொருவரை விடத் தம் ஆதாரத்தை எடுத்துவைப்பதில் வாக்கு சாதுரியமிக்கவராக இருக்கலாம். நான் கேட்பதை வைத்து அதற்கேற்ப தீர்ப்பு வழங்கிவிடுவேன். எவருக்கு நான் அவரின் சகோதராரின் உரிமையில் சிறிதை (உண்மை நிலை அறியாமல் வாதங்களை வைத்து) கொடுக்க வேண்டுமென்று தீர்ப்பளித்து விடுகிறேனோ அதை அவர் எடுத்துக்கொள்ள வேண்டாம். ஏனெனில், அப்போது நான் அவருக்குப் பெயர்த்துக் கொடுப்பதெல்லாம் நரக நெருப்பின் ஒரு துண்டைத்தான்.

என உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார்.31

பகுதி 21

ஒருவர் நீதிபதி பதவி வகிக்கும்போது, அல்லது அதற்கு முன்பு தமக்குக் கிடைத்த சாட்சியத்தை வைத்து (வாதி, பிரதிவாதி இருவரில்) ஒருவருக்குச் சாதகமாகத் தாமே தீர்ப்பளிக்கலாமா? (அல்லது மற்றொரு நீதிபதியிடம் அந்த சாட்சியத்தை அளிக்க வேண்டுமா?)

(கூஃபா நகர) நீதிபதி ஷுரைஹ்(ரஹ்) அவர்களிடம் ஒருவர் (தமக்காக) சாட்சியம் அளிக்குமாறு வேண்டினார். அதற்கு அன்னார் நீ ஆட்சியாரிடம் (வழக்கைக் கொண்டு) செல். நான் (அங்கு வந்து) உனக்காக சாட்சியம் அளிக்கிறேன்'' என்றார்கள்.

இக்ரிமா(ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

உமர்(ரலி) அவர்கள் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அவர்களிடம், 'ஒருவன் விபசாரம் புரிவதையோ திருடுவதையோ நீங்கள் ஆட்சியராயிருக்கும் நிலையில் கண்டால் என்ன செய்வீர்கள்? (உங்கள் சாட்சியத்தை வைத்தே தண்டனை வழங்கிடுவீர்களா?)'' என்று கேட்டார்கள். (அதற்கு, அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அவர்கள், இல்லை; என்னுடன் மற்றொருவரும் சாட்சிமளிக்காதவரை தண்டனை வழங்கமாட்டேன்'' என்றார்கள்.) உமர்(ரலி) அவர்கள், 'அப்படியானால் (ஆட்சியாளராக இருக்கும்) உங்கள் சாட்சியமும் முஸ்லிம்களில் ஒருவரின் சாட்சியமாக மதிக்கப்படும் (அப்படித்தானே!)'' என்று கேட்க அவர்கள், 'உண்மைதான்'' என்றார்கள். உமர்(ரலி) அவர்கள் 'உமர் இறைவேதத்தில் (இல்லாத ஒன்றைச்) சேர்த்துவிட்டார் என்று மக்கள் பேசுவார்கள் எனும் அச்சம் இல்லாவிட்டால் 'ரஜ்கி' (கல்லெறி தண்டனை) தொடர்பான வசனத்தை நான் என் கையாலேயே (குர்ஆன் பிரதியில்) எழுதியிருப்பேன்'' என்று கூறினார்கள்.32

மாஇஸ் இப்னு அல்அஸ்லமீ(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் (வந்து) தாம் விபசாரம் புரிந்ததாக நான்கு முறை ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் (மாஇஸ் திருமணமானவராக இருந்ததால்) அவருக்குக் கல்லெறி தண்டனை நிறைவேற்றுமாறு உத்தரவிட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் அப்போது தம்மிடமிருந்தவர்கள் எவரையும் (மாஇஸ் விபசாரம் செய்ததற்கு) சாட்சியாக ஆக்கியதாகச் சொல்லப்படவில்லை.

ஹம்மாத் இப்னு அபீ சுலைமான்(ரஹ்) அவர்கள், 'ஒருவன் தான் விபச்சாரம் புரிந்ததாக நீதிபதியிடம் ஒரேயொரு முறை ஒப்புதல் வாக்குமூலம் அளித்தாலும் அவனுக்குக் கல்லெறி தண்டனை வழங்கப்படும்'' என்று கூறுகிறார்கள்.

ஆனால், ஹகம் இப்னு உதைபா(ரஹ்) அவர்கள், 'நான்கு முறை வாக்குமூலம் அளித்தால் தான் கல்லெறி தண்டனை வழங்கப்படும்'' என்கிறார்கள்.

7170 அபூ கத்தாதா(ரலி) அறிவித்தார்.

ஹுனைன் போரின்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், '(போரில் எதிரி) ஒருவரைக் கொன்றதற்கான ஆதாரம் எவரிடம் இருக்கிறதோ அவருக்கே அந்த எதிரியின் உடலிலிருந்து எடுத்த பொருள்கள் உரியவை'' என்று கூறினார்கள். உடனே நான் (என்னால்) கொல்லப்பட்டவரை நானே கொன்றேன் என்பதற்கு ஆதாரம் தேடுவதற்காக எழுந்தேன். எனக்காக சாட்சியம் சொல்பவர் எவரையும் நான் காணவில்லை. எனவே, நான் உட்கார்ந்து கொண்டேன். பிறகு ஏதோ தோன்ற, இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் நான் (போரில் எதிரி ஒருவனைக்) கொன்றதைச் சொன்னேன். உடனே நபி(ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தவர்களில் ஒருவர், '(இவரால் கொல்லப்பட்டதாக) இவர் சொல்கிற அந்த மனிதரின் ஆயுதம் என்னிடம் இருக்கின்றது. நானே இதை எடுத்துக்கொள்ள அவரிடம் இருந்து (எனக்கு) இசைவு பெற்றுத் தாருங்கள்'' என்றார்.

அப்போது (அங்கிருந்த) அபூ பக்ர்(ரலி) அவர்கள், 'அப்படி முடியாது. (கொல்லப்பட்டவரின்) அந்த உடைமைகளை, அல்லாஹ்வுக்காகவும் அவனுடைய தூதருக்காகவும் போரிடுகின்ற, அல்லாஹ்வின் சிங்கங்களில் ஒரு சிங்கத்தைவிட்டுவிட்டு, குறைஷியரின் (பலவீனமான) ஒரு குஞ்சுப் பறவைக்கு அதை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கொடுக்கமாட்டார்கள்'' என்றார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எழுந்து எனக்கு அந்தப் பொருளைக் கொடுத்தார்கள். நான் அதை விற்று பேரீச்சந் தோட்டம் ஒன்றை விலைக்கு வாங்கினேன். அதுதான் நான் இஸ்லாத்திற்கு வந்த பின் தேடிக்கொண்ட முதல் சொத்தாக அமைந்தது.33

மற்றோர் அறிவிப்பாளர் தொடரிலும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.34

ஹிஜாஸ் அறிஞர்கள் கூறுகிறார்கள்: நீதிபதி தாம் அறிந்ததை (மட்டும்) வைத்துத் தீர்ப்பளிக்கலாகாது. அவர் தம் பதவிக்காலத்தில் அதற்கு சாட்சியாக இருந்தாலும் சரி! அதற்கு முன்பே சாட்சியாக இருந்தாலும் சரி! (அவரின் மீது களங்கம் கற்பிக்க இடமுண்டு என்பதே இதற்குக் காரணம்.) நீதிமன்றத்தில் பிரதிவாதி ஆஜராகி மற்றவரின் உரிமை குறித்து நீதிபதியிடம் வாக்குமூலம் அளித்தாலும், இரண்டு சாட்சிகளை அழைத்து அவரின் வாக்குமூலத்தின்போது ஆஜர்படுத்தாத வரை அவருக்கெதிராகத் தீர்ப்பளிக்கலாகாது என அந்த அறிஞர்களில் சிலர் கூறியுள்ளனர்.

இராக்வாசிகளில் சிலர் கூறுகின்றனர்: நீதிமன்றத்தில் நீதிபதி கேட்ட, அல்லது பார்த்த ஒன்றை (ஆதாரமாக) வைத்து அவர் தீர்ப்பளிக்கலாம். நீதிமன்றமல்லா மற்ற இடங்களில் (தாம் கேட்ட அல்லது பார்த்த) ஒன்றை வைத்து அவர் தீர்ப்பளிக்கலாகாது; பிரதிவாதி வாக்குமூலம் அளிக்கும்போது இரண்டு சாட்சிகளை ஆஜர்படுத்தினால் தவிர.

இராக்வாசிகளில் இன்னும் சிலர், 'அல்ல! (வாதியின் வாக்குமூலத்தை வைத்தே) நீதிபதி தீர்ப்பளிக்கலாம். ஏனெனில், அவர் (நீதிபதி) நம்புதற்குரிய ஒருவராவார்; சாட்சியத்தால் நோக்கமே உண்மையை அறிவதுதான். நீதிபதி தீர்ப்பளிப்பார்; மற்ற பிரசினைகளில் (அவ்வாறு தாம் அறிந்ததை வைத்து, சாட்சிகள் இல்லாமல்) தீர்ப்பளிக்க மாட்டார்'' என்று கூறுகின்றனர்.

காசிம் இப்னு முஹம்மத் இப்னி அபீ பக்ர்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: வேறு யாரும் அறியாத, தாம் (மட்டும்) அறிந்திருக்கும் ஒன்றை வைத்துத் தீர்ப்பளிப்பது நீதிபதிக்கு முறையாகாது. பிறரின் சாட்சியத்தை விட அவர் அறிந்திருப்பது பலமானதாக இருக்கலாம். ஆனாலும், இதன் மூலம் முஸ்லிம்களிடையே தம்மை அவர் தவறான எண்ணத்திற்கு உட்படுத்திக் கொள்வதும், முஸ்லிம்களைச் சந்தேகத்தில் ஆட்படுத்துவதும் நேரலாம். நபி(ஸல்) அவர்கள், பிறர் சந்தேகப்படும் வகையில் நடப்பதை வெறுத்துள்ளார்கள். அதனால்தான், (தம்மைப் பள்ளிவாசலில் சந்தித்துவிட்டுச் சென்ற தம் துணைவியாரை இருவர் பார்த்தபோது) 'இவர் ஸஃபிய்யா தாம் (வேறு யாருமல்லர்)' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.35

7171 அலீ இப்னு ஹுசைன்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களிடம் (அவர்கள் பள்ளிவாசலில் இஃதிகாஃபில் இருந்தபோது அவர்களின் துணைவியார்) ஸஃபிய்யா பின்த் ஹுயை(ரலி) அவர்கள் வந்தார்கள். அவர்கள் திரும்பிச் சென்றபோது நபி(ஸல்) அவர்களும் ஸஃபிய்யாவுடன் (சிறிது தூரம் நடந்து) சென்றார்கள். அப்போது அன்சாரிகளில் இருவர் அவர்களைக் கடந்து சென்றனர். உடனே நபி(ஸல்) அவர்கள் அவ்விருவரையும் அழைத்து, '(இவர் (வேறு யாருமல்லர். என் துணைவி) ஸஃபிய்யாதாம்'' என்றார்கள். உடனே அவ்விருவரும் அல்லாஹ் தூயவன் (உங்களின் மீதா சந்தேகப்படுவோம்)'' என்று கேட்டனர். நபி(ஸல்) அவர்கள், 'மனிதனின் இரத்த நாளங்களில் எல்லாம் ஷைத்தான் ஊடுருவியுள்ளான்'' என்றார்கள்.

இந்த ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.36

பகுதி 22

ஆட்சித் தலைவர் இரண்டு ஆட்சியர்களை ஒரே இடத்திற்கு அனுப்பும்போது அவ்விருவரும் இணக்கத்தோடு நடந்து கொள்ளும்படியும் பிணங்கிக் கொள்ளாமல் இருக்கும்படியும் கட்டளையிடுவது.

7172 அபூ மூஸா அல்அஷ்அரீ(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் என்னையும் முஆத் இப்னு ஜபல்(ரலி) அவர்களையும் யமன் நாட்டுக்கு அனுப்பிவைத்தார்கள். அப்போது, '(மார்க்க விஷயத்தில் மக்களிடம்) எளிதாக நடந்துகொள்ளுங்கள்; (மக்களைச்) சிரமப்படுத்திவிடாதீர்கள்; நற்செய்தி(களை அதிகம்) கூறுங்கள்; (எச்சரிக்கை செய்யும்போது கூட) வெறுப்பேற்றிவிடாதீர்கள். (தீர்ப்பளிக்கும் போது) இணக்கமாக நடந்துகொள்ளுங்கள்'' என்றார்கள். அப்போது நான், 'எங்கள் (யமன்) நாட்டில் 'பித்உ' எனும் (மது) பானம் (தேனில்) தயாரிக்கப்படுகிறதே!'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'போதை தரும் ஒவ்வொன்றும் தடை செய்யப்பட்டதாகும்'' என்றார்கள்.37

இந்த ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

பகுதி 23

ஆட்சியாளர் (வலீமா - மண) விருந்தழைப்பை ஏற்பது

(கலீஃபா) உஸ்மான் இப்னு அஃப்பான்(ரலி) அவர்கள் முஃகீரா இப்னு ஷுஅபா(ரலி) அவர்களின் அடிமையின் விருந்தழைப்பை ஏற்றுச் சென்றார்கள்.

7173 ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

(போர்க்) கைதியை (எதிரியிடமிருந்து) விடுவியுங்கள்; (விருந்துக்கு) அழைப்பவருக்கு (அவரின் அழைப்பை ஏற்று) பதிலளியுங்கள்.

என அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.38

பகுதி 24

அதிகாரிகள் பெறும் அன்பளிப்புகள்

7174. அபூ ஹுமைத் அஸ்ஸாஇதீ(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் பனூஸஅத் குலத்தாரில் ஒருவரை ஸகாத் வசூலிக்கும் அதிகாரியாக நியமித்தார்கள். அவர் இப்னுல் உதபிய்யா (அல்லது இப்னுல் லுதபிய்யா) என்று அழைக்கப்பட்டார். அவர் (ஸகாத் வசூலித்துக்கொண்டு) வந்தபோது, 'இது உங்களுக்குரியது; இது எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது'' என்றார். உடனே நபி(ஸல்) அவர்கள் (எழுந்து) சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீது நின்று, அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்த பின்னர், 'நாம் அனுப்பும் அதிகாரியின் நிலை என்ன? அவர் (பணியை முடித்துத் திரும்பி) வந்து, 'இது உமக்குரியது; இது எனக்குரியது' என்று கூறுகிறாரே! அவர் (மட்டும்) தம் தந்தை அல்லது தாயின் வீட்டில் உட்கார்ந்து பார்க்கட்டுமே! அவருக்கு அன்பளிப்பு வழங்கப்படுகிறதா? இல்லையா? என்று தெரியும். என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! அவர் கொண்டுவரும் (அன்பளிப்பு) எதுவாயினும் அதைத் தம் கழுத்தில் சுமந்தபடிதான் மறுமைநாளில் வருவார். அந்த அன்பளிப்பு ஒட்டகமாக இருந்தால் அது கனைத்துக் கொண்டிருக்கும்; அது மாடாயிருந்தால் அல்லது ஆடாயிருந்தால் கத்திக்கொண்டிருக்கும்'' என்றார்கள். பிறகு, அவர்களின் அக்குள்களின் வெண்மையை நாங்கள் பார்க்கும் அளவுக்குத் தம் கைகளை உயர்த்தி, 'நான் எடுத்துரைத்துவிட்டேனா?' என்று மும்முறை கூறினார்கள்.

மற்றோர் அறிவிப்பில் அபூ ஹுமைத்(ரலி) அவர்கள் கூறியிருப்பதாவது:

இதை நான் என் கண்ணால் கண்டேன்; காதால் கேட்டேன். (சந்தேகமிருப்பின்) ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அவர்களிடம் கேட்டுப் பாருங்கள். அவருடன் என்னுடன் இதைக் கேட்டார்.39

பகுதி 25

அடிமையாயிருந்து விடுதலையடைந்தவர்களை நீதிபதிகளாக்குவதும் அதிகாரிகளாக்குவதும்.

7175 இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

அபூ ஹுதைஃபாவின் அடிமையாயிருந்த சலீம்(ரலி) அவர்கள் முதலாவதாக ஹிஜ்ரத் செய்தவர்களுக்கும் நபித்தோழர்களுக்கும் 'குபா' பள்ளிவாசலில் தலைமை தாங்கித் தொழுகை நடத்தினார்கள். அந்த நபித்தோழர்களில் அபூ பக்ர்(ரலி), உமர்(ரலி), அபூ ஸலமா(ரலி), ஸைத் இப்னு ஹாரிஸா(ரலி), ஆமிர் இப்னு ரபீஆ(ரலி) ஆகியோரும் அடங்குவர்.40

பகுதி 26

சமூகத் தலைவர்கள் (அல்உரஃபா)41

7176, 7177 மர்வான் இப்னு ஹகம் மற்றும் மிஸ்வர் இப்னு உக்ரமா(ரலி) ஆகியோர் அறிவித்தார்கள்:

ஹாவாஸின் குலத்தாரின் போர்க் கைதிகளை விடுதலை செய்வது தொடர்பாக இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கும் அவர்களுடனிருந்தவர்களுக்கும் முஸ்லிம்கள் அனுமதியளித்தபோது, 'உங்களில் யார் போர்க் கைதிகளை விடுவிக்க) சம்மதம் தெரிவிக்கிறார்; யார் சம்மதம் தெரிவிக்கவில்லை என்று எனக்குத் தெரியாது. எனவே, நீங்கள் திரும்பிச் செல்லுங்கள். உங்கள் சமூகத் தலைவர்கள் உங்களின் முடிவை எங்களிடம் வந்து தெரிவிக்கட்டும்'' என்று கூறினார்கள்.

உடனே மக்கள் திரும்பிச் சென்றார்கள். அவர்களிடம் அவர்களின் சமூகத் தலைவர்களை பேசி இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் திரும்பிவந்து மக்கள் மனப்பூர்வமாக சம்மதித்துவிட்டார்கள் என்று தெரிவித்தார்கள்.41-ஹ

பகுதி 27

மன்னரை முன்னால் புகழ்வதும் பின்னால் இகழ்வதும் வெறுக்கப்பட்ட செயலாகும்.

7178 முஹம்மத் இப்னு ஸைத் இப்னி அப்தில்லாஹ் இப்னி உமர்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

மக்கள் சிலர் (எங்கள் பாட்டனார்) அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அவர்களிடம், 'நாங்கள் எங்கள் மன்னர்களிடம் செல்கிறோம். அவர்களிடமிருந்து வெளியேறியதும் (அவர்களைப் பற்றி) நாங்கள் என்ன பேசிக் கொள்வோமோ அதற்கு நேர் மாறானதையே அவர்களுக்கு (முன்னிலையில்) நாங்கள் கூறுவோம்'' என்றார்கள். அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அவர்கள், 'இப்படி (முன்னால் ஒன்று பின்னால் ஒன்று பேசுவதை (நபி(ஸல்) அவர்களின் காலத்தில்) நாங்கள் நயவஞ்சகமாகக் கருதிவந்தோம்'' என்று பதிலளித்தார்கள்.

7179 ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

மனிதர்களிலேயே மிகவும் மோசமானவன் இரட்டை முகத்தான் ஆவான். அவன் இவர்களிடம் செல்லும்போது ஒரு முகத்துடனும் அவர்களிடம் செல்லும்போது இன்னொரு முகத்துடனும் செல்கிறான்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.42

பகுதி 28

(நீதிபதி முன்) ஆஜராகாதவருக்குக்கெதிராகத் தீர்ப்பளிப்பது43

7180 ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

(ஒருமுறை) ஹிந்த் பின்த் உத்பா(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம், '(என் கணவர்) அபூ சுஃப்யான் கருமித்தனம் உள்ள ஒருவர். நான் (செலவுக்காக) அவரின் பணத்திலிருந்து (அவருக்குத் தெரியாமல்) எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது. (அப்படிச் செய்ய எனக்கு அனுமதியுண்டா?)'' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'உனக்கும் உன் குழந்தைக்கும் போதுமான அளவிற்கு நியாயமான முறையில் எடுத்துக்கொள்'' என்றார்கள்.44

பகுதி 29

அடுத்தவருக்குரிய உரிமை (தொடர்பான வழக்கில், அது) தமக்குரியதென (வெளிப்படை ஆதாரங்களை வைத்து)த் தீர்ப்பளிக்கப்பட்டுவிட்டாலும் அதை எவரும் பெற வேண்டாம். ஏனெனில், நீதிபதியின் தீர்ப்பு தடை செய்யப்பட்டதை அனுமதிக்கப்பட்டதாகவோ, அனுமதிக்கப்பட்டதைத் தடை செய்யப்பட்டதாகவோ மாற்றிவிடாது.

7181. நபி(ஸல்) அவர்கள் துணைவியார் உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் அறைவாசலில் (நின்று) சிலர் சப்தமிட்டுத் தகராறு செய்து கொள்வதைக் கேட்டார்கள். எனவே, வெளியேவந்து அவர்களிடம் சென்று, 'நான் மனிதன்தான். என்னிடம் வழக்காடுபவர் வருகிறார். (அவரின் அந்தரங்க நிலை எனக்குத் தெரியாது.) உங்களில் ஒருவர் மற்றவரைவிட வாக்கு சாதுர்யம் மிக்கவராக இருக்கலாம். அவர் உண்மையே பேசுகிறார் என்றெண்ணி நான் அவருக்குச் சாதகமாகத் தீர்ப்பளித்துவிடுகிறேன். எனவே, அடுத்த முஸ்லிமுக்குரிய உரிமையை (உண்மை தெரியாமல்) யாருக்குரியதென நான் தீர்ப்பளித்துவிடுகிறனோ (அவர் அதைப் பெறவேண்டாம். ஏனெனில்,) அதுவெல்லாம் நரக நெருப்பின் ஒரு துண்டுதான். (இதைநினைவில் கொண்டு விரும்பினால், அதை அவர் எடுத்துக்கொள்ளட்டும்; அல்லது விட்டுவிடட்டும்'' என்று கூறினார்கள்.45

7182 ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

உத்பான இப்னு அபீ வக்காஸ்(ரலி) அவர்கள் தம் சகோதரர் ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அவர்களிடம், 'ஸம்ஆவின் அடிமைப் பெண்ணுடைய மகன் எனக்குப் பிறந்தவன். அவனைப் பிடித்து உன்னிடம் வைத்துக் கொள்'' என்று உறுதிமொழி வாங்கியிருந்தார். மக்கா வெற்றி ஆண்டில் ஸஅத்(ரலி) அவர்கள் அவனைப் பிடித்துவைத்துக் கொண்டு '(இவன்) என் சகோதரர் மகன். இவன் விஷயத்தில் என் சகோதரர் (இவனைப் பிடித்துவருமாறு) என்னிடம் உறுதிமொழி வாங்கியிருந்தார்'' என்றார்கள். அப்போது அப்து இப்னு ஸம்ஆ(ரலி) அவர்கள் சஅதை நோக்கி எழுந்து, '(இவன்) என் சகோதரன். என் தந்தையின் அடிமைப் பெண்ணுடைய மகன். இவன் (உடைய தாய்) என் தந்தையின் அதிகாரத்திலிருந்தபோது பிறந்தவன்'' என்று கூறினார். எனவே, இருவரும் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ஒருவர் பின் ஒருவராக (தீர்ப்புக் கேட்டுச்) சென்றர். ஸஅத்(ரலி) அவர்கள், 'இறைத்தூதர் அவர்களே! (இவன்) விஷயத்தில் (இவனைப் பிடித்துவருமாறு) என்னிடம் உறுதிமொழி வாங்கியிருந்தார்'' என்று கூற, அப்து இப்னு ஸம்ஆ(ரலி) அவர்கள், '(இவன்) என் சகோதரன். என் தந்தையின் அடிமைப் பெண்ணுக்குப் பிறந்தவன்; அவரின் ஆதிக்கத்தில் (இவனுடைய தாய் இருந்தபோது) பிறந்தவன்'' என்றார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'அப்து இப்னு ஸம்ஆவே! அவன் உனக்கே உரியவன்'' என்று (தீர்ப்புக்) கூறிவிட்டுப் பிறகு 'தாம் யாருடைய ஆதிக்கத்தில் இருக்கிறாளோ அவருக்கே குழந்தை உரியதாகும். விபசாரம் செய்தவனுக்கு இழப்புத்தான் உரியது'' என்றார்கள்.

பிறகு (தம் துணைவியும்) ஸம்ஆவின் புதல்வியுமான சவ்தா(ரலி) அவர்களிடம், 'இவனிடமிருந்து நீ உன்னைத் திரையிட்டு (மறைத்து)க்கொள்'' என்று கூறினார்கள். சாயலில் அவன் உத்பாவைப் போன்றே இருக்கக் கண்டால்தான் நபியவர்கள் இப்படிக் கூறினார்கள். அந்த மனிதர், தாம் இறக்கும்வரை சவ்தா(ரலி) அவர்களைப் பார்க்கவில்லை.46

பகுதி 30

கிணறு முதலானவை தொடர்பான தீர்ப்பு

7183. 'ஒரு சொத்தை அபகரிப்பதற்காக திட்டமிட்டு பொய்ச் சத்தியம் செய்கிறவரின் மீது அல்லாஹ் கோபம் கொண்ட நிலையில் தவிர வேறுவிதமாக அவனை அவர் சந்திக்கமாட்டார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியபோது 'அல்லாஹ்வின் உடன்படிக்கைக்கும் தம் சத்தியங்களுக்கும் பதிலாக அற்ப விலையைப் பெறுகிறர்களுக்கு நிச்சயமாக மறுமையில் எந்த நற்பேறுமில்லை'' எனும் (திருக்குர்ஆன் 03:77 வது) வசனத்தை அல்லாஹ் அருளினான்.47'' என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.

7184 மேற்கண்ட ஹதீஸின் அறிவிப்பாளர் அபூ வாயில்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்கள் எங்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது அஷ்அஸ்பின் கைஸ்(ரலி) அவர்கள் (அங்கு) வந்து (பின்வருமாறு) கூறினார்கள்: இந்த இறைவசனம் என் விஷயத்திலும் ஒரு கிணறு தொடர்பாக நான் வழக்கு தொடுத்திருந்த ஒருவர் விஷயத்திலும் தான் இறங்கிற்று. அப்போது நபி(ஸல்) அவர்கள் 'உன்னிடம் ஆதாரம் எதுவும் இருக்கிறதா?' என்று (என்னிடம்) கேட்டார்கள். நான் 'இல்லை' என்று சொன்னேன். நபி(ஸல்) அவர்கள் 'அப்படியென்றால் (பிரதிவாதியான) அவர் சத்தியம் செய்ய வேண்டியதுதான்' என்று சொல்ல, நான் 'அவர் (தயங்காமல்) சத்தியம் செய்துவிடுவார்' என்று சொன்னேன். அப்போதுதான் இந்த (திருக்குர்ஆன் 03:77 வது) வசனம் அருளப்பெற்றது.48

பகுதி 31

அதிகமான செல்வம் தொடர்பாகவும் குறைவான செல்வம் தொடர்பாகவும் தீர்ப்பளிக்கலாம்.49

(கூஃபாவின் நீதிபதி) அப்துல்லாஹ் இப்னு ஷுப்ருமா(ரஹ்) அவர்கள் கூறினார்:

தீர்ப்பு என்பது குறைவான செல்வம், அதிகமான செல்வம் இரண்டிலும் ஒன்றுதான்.

7185 உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் தங்களின் (அறையின்) வாசலில் சிலர் கூச்சலிட்டுத் தகராறு செய்துகொள்வதைக் கேட்டார்கள். உடனே வெளியே வந்து அவர்களிடம் சென்று, 'நான் மனிதன் தான். வழக்காடுபவர்கள் என்னிடம் வருகிறார்கள். இப்படி வருபவர்களில் சிலர் சிலரைவிட வாக்கு சாதுர்யமிக்கவர்களாக இருக்கக்கூடும். அதன் காரணத்தால் அவர் உண்மையே சொல்வதாக எண்ணி நான் அவருக்குத் சாதகமாகத் தீர்ப்பளித்துவிடுகிறேன். (உண்மை தெரியாமல் வாதப்பிரதிவாதத்தை வைத்து) ஒரு முஸ்லிமின் உரிமை வேறொருவருக்கு உரியதென்று நான் தீர்ப்பளித்தால் அது நரக நெருப்பின் துண்டேயாகும். (இதை நினைவில் கொண்டு விரும்பினால்) அதை அவர் எடுத்துக் கொள்ளட்டும்; (இல்லையேல்) அதைவிட்டு விடட்டும்.50

பகுதி 32

ஆட்சித் தலைவரே மக்களுக்கு அவர்களின் செல்வங்களையும் அசையாச் சொத்துக்களையும் விற்றுக்கொடுப்பது.

நபி(ஸல்) அவர்கள் (குறைஷியரான) நுஐம் இப்னு நஹ்ஹாம்(ரலி) அவர்களால் பின்விடுதலை அளிக்கப்பட்ட ஓர் அடிமையை (-முதப்பரை அவருக்காக) விற்றுக்கொடுத்தார்கள்.51

7186 ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.

தம் தோழர்களில் ஒருவர் 'என் ஆயுட்காலத்திற்குப் பிறகு நீ விடுதலையாவாய்' என்று தம் அடிமையிடம் சொல்லிவிட்டதாக நபி(ஸல்) அவர்களுக்குச் செய்தி எட்டியது. அத்தோழருக்கு அந்த அடிமையைத் தவிர வேறு செல்வம் எதுவும் இருக்கவில்லை.

எனவே, நபி(ஸல்) அவர்கள் அந்த அடிமையை எண்ணூறு திர்ஹங்களுக்கு விற்று, அந்தத் தொகையை அத்தோழருக்குக் கொடுத்தனுப்பினார்கள்.52

பகுதி 33

ஆட்சியாளர்கள் தொடர்பாக, அறியாத ஒருவர் கூறும் குறைகளைப் பொருட்படுத்த வேண்டியதில்லை.

7187 இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (தம் இறுதிக் காலத்தில்) உசாமா இப்னு ஸைத்(ரலி) அவர்களைத் தளபதியாக்கி ஒரு படைப் பிரிவை அனுப்பிவைத்தார்கள். அப்போது உசாமாவின் தலைமை குறித்து (அவர் வயதில் சிறியவர் என்று) குறை கூறப்பட்டது. அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'இவரின் தலைமை குறித்து இப்போது நீங்கள் குறை கூறுகின்றீர்கள் என்றால், (இது என்றும் புதிதல்ல.) இதற்கு முன்பு (மூத்தா போரின் போது) இவருடைய தந்தையின் தலைமையையும் தான். நீங்கள் குறை கூறிக் கொண்டிருந்தீர்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் தலைமைக்குத் தகுதியானவராகவே இருந்தார். மேலும், அவர் மக்களிலேயே எனக்கு மிகவும் பிரியமானவராகவும் இருந்தார். அவருக்குப் பின் (அவரின் புதல்வரான) இவர் மக்களிலேயே எனக்கு மிகவும் பிரியமானவராவார்'' என்றார்கள்.53

பகுதி 34

கடுமையாக சச்சரவு செய்பவன்

அதாவது தகராறு செய்வதையே வழக்கமாகக் கொண்டிருப்பவன்; எப்போதும் சச்சரவிட்டுக் கொண்டிருப்பவன். (மூலத்திலுள்ள 'அலத்து' என்பதன் வேர்ச் சொல்லான) 'லுத்து' என்பதற்குக் 'கோணல்' (நேர்மை தவறுதல்) என்ற பொருளும் உண்டு.

7188 ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

அல்லாஹ்விடம் மனிதர்களிலேயே மிகவும் வெறுப்புக்குரியவன், (எதற்கெடுத்தாலும்) கடுமையாகச் சச்சரவு செய்பவனே ஆவான்.

என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

பகுதி 35

அநீதியாகவோ அறிஞர்களின் முடிவுக்கு மாறாகவோ நீதிபதி தீர்ப்பளித்தால், அது செல்லாது.

7189 அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள், காலித் இப்னு வலீத்(ரலி) அவர்களை பனூ ஜதீமா குலத்தாரிடம் (இஸ்லாத்தை எடுத்துக்கூறி அவர்களை அழைப்பதற்காக) அனுப்பினார்கள். அவர்களுக்கு 'அஸ்லம்னா' ('நாங்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டோம்') என்று திருத்தமாகச் சொல்லவரவில்லை. எனவே, அவர்கள், 'ஸபஃனா' 'ஸபஃனா' ('நாங்கள் மதம் மாறி விட்டோம். நாங்கள் மதம் மாறிவிட்டோம்') என்றார்கள். உடனே, காலித்(ரலி) அவர்கள் அம்மக்களைக் கொல்லவும் சிறைப்பிடிக்கவும் தொடங்கினார்கள். மேலும், எங்களில் ஒவ்வொருவரிடமும் அவரவரால் கைது செய்யப்பட்டவரை ஒப்படைத்தார்கள். மேலும், எங்களில் ஒவ்வொருவரும் தம்மிடமுள்ள கைதியைக் கொன்றுவிடும்படி உத்தரவிட்டார்கள். நான், 'அல்லாஹ்வின் மீதாணையாக! என்னிடமுள்ள கைதியைக் கொல்லமாட்டேன். என் தோழர்களில் எவரும் தம்மிடமுள்ள கைதியைக் கொல்லமாட்டார்'' என்று சொன்னேன். இதை நாங்கள் நபி(ஸல்) அவர்களிடம் (சென்று) தெரிவித்தோம். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'இறைவா! 'காலித் இப்னு வலீத்' செய்த(த)வற்றுக்கும் எனக்கும் தொடர்பில்லையென்று உன்னிடம் தெரிவித்துக்கொள்கிறேன்'' என்று இருமுறை சொன்னார்கள்.55

பகுதி 36

(சண்டையிட்டுக்கொள்ளும்) சமுதாயத்தாரிடையே நல்லிணக்கம் ஏற்படுத்துவதற்காக அவர்களிடம் ஆட்சித் தலைவர் செல்வது.

7190 ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்.

பனூ அம்ர் இப்னு அவஃப் குலத்தாரிடையே மோதல் ஏற்பட்டிருந்த விவரம் நபி(ஸல்) அவர்களுக்கு எட்டியபோது லுஹ்ருத் தொழுகையை நடத்திவிட்டு அவர்களிடையே நல்லிணக்கத்தை உருவாக்குவதற்காகச் சென்றார்கள். இதற்கிடையே அஸ்ருத் தொழுகையின் நேரம் வந்துவிடவே பிலால்(ரலி) அவர்கள் தொழுகை அறிவிப்பு (பாங்கு) கொடுத்தார்கள். பிறகு இகாமத் சொல்லிவிட்டு (நபியவர்கள் வெளியே சென்றுவிட்டதால்) அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் (தொழுகை நடத்துமாறு) கூறினார்கள். எனவே, அபூ பக்ர் (தொழுகை நடத்த) முன்னின்றார்கள். அபூ பக்ர்(ரலி) அவர்கள் தொழுகையில் (இமாமாக) இருந்தபோது நபி(ஸல்) அவர்கள் (திரும்பி) வந்துவிட்டார்கள். (தொழுகை அணிகளை) விலக்கிக்கொண்டு வந்து (இமாமாக நின்று தொழுகை நடத்திக் கொண்டிருந்த) அபூ பக்ர்(ரலி) அவர்களுக்குப் பின்னாலுள்ள (முதல்) அணியில் நபி(ஸல்) அவர்கள் நின்றார்கள். இதைக் கண்ட மக்கள் அபூ பக்ர்(ரலி) அவர்களுக்கு நினைவூட்டுவதற்காக) கைத் தட்டினார்கள். அபூ பக்ர்(ரலி) அவர்கள் தொழுகத் தொடங்கிவிட்டால் அதை முடிக்கும் வரை திரும்பிப் பார்க்கவே மாட்டார்கள். ஆனால், மக்கள் நிறுத்தாமல் கைதட்டிக் கொண்டிருக்கக் கண்டபோது அபூ பக்ர்(ரலி) அவர்கள் திரும்பிப் பார்த்தார்கள். தமக்குப் பின்னால் நபி(ஸல்) அவர்களைக் கண்டார்கள். நபி(ஸல்) அவர்கள் (அபூ பக்ர்(ரலி) அவர்களை நோக்கி) அங்கேயே நின்று தொழுகையைத் தொடருமாறு (தம் கையால்) சைகை செய்தார்கள். இதோ இவ்வாறுதான் தம் கரத்தால் சைகை செய்தார்கள். அபூ பக்ர்(ரலி) அவர்கள் அங்கேயே சிறிது நேரம் இருந்து, நபி(ஸல்) அவர்கள் (தம்மைத் தொழுகை நடத்துமாறு) கூறியமைக்காக இறைவனைப் போற்றிப் புகழ்ந்தார்கள். பிறகு திரும்பாமல் அப்படியே பின்னோக்கி (முதல் அணிக்கு) நடந்தார்கள். இதைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் முன்னே சென்று மக்களுக்குத் தொழுகை நடத்தினார்கள்.

தொழுது முடிந்ததும், 'அபூ பக்ரே! நான் உங்களுக்கு சைகை செய்தும் நீங்கள் தொழுகையைத் தொடராமல் இருந்ததற்குக் காரணம் என்ன?' என்று கேட்டார்கள். 'நபி(ஸல்) அவர்களுக்கே தலைமை தாங்கித் தொழுகை நடத்தும் தகுதி அபூ குஹாஃபாவின் மகனுக்கு (எனக்கு) இல்லை'' என்று அபூ பக்ர்(ரலி) கூறினார். பிறகு நபி(ஸல்) அவர்கள் மக்களிடம், '(தொழுகையில்) உங்களுக்கு சந்தேகம் ஏற்படுமானால் ஆண்களாயிருந்தால், அவர்கள் 'சுப்ஹானல்லாஹ்' (அல்லாஹ் தூயவன்) என்று சொல்லட்டும். பெண்களாயிருந்தால், (இமாமின் கவனத்தை ஈர்ப்பதற்காகத்) கைத் தட்டட்டும்!'' என்றார்கள்.56

பகுதி 37

(தீர்ப்பு எழுதும்) எழுத்தர் நாணயமானவராகவும் விழிப்புள்ளவராகவும் இருத்தல் நன்று.

7191 (வேத அறிவிப்பை எழுதியோரில் ஒருவரான) ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அறிவித்தார்.

யமாமா(போரில்) வீரர்கள் கொல்லப்பட்டபோது அபூ பக்ர்(ரலி) அவர்கள் (என்னை அழைத்து வரும்படி) ஆளனுப்பினார்கள். (நான் சென்றேன்.) அங்கே அவர்களுடன் உமர்(ரலி) அவர்களும் இருந்தார்கள். அப்போது அபூ பக்ர்(ரலி) கூறினார்: உமர்(ரலி) அவர்கள் என்னிடம் வந்து, இந்த யமாமா போர், குர்ஆன் அறிஞர்கள் பலரைப் பலிகொண்டது. (இறைமறுப்பாளர்களுடன் போர் நடக்கும்) எல்லா இடங்களிலும் குர்ஆன் அறிஞர்கள் பலர் கொல்லப்பட்டு அதனால் குர்ஆனில் பெரும்பகுதி (அந்த நெஞ்சங்களுடன் அழிந்து) போய்விடுமோ என்று நான் அஞ்சுகிறேன். எனவே, (கலீஃபாவான) நீங்கள் குர்ஆனைத் திரட்டுமாறு ஆணையிட வேண்டுமென கருதுகிறேன்'' என்று கூறினார்கள். அதற்கு நான், 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் செய்யாத ஒன்றை நான் எப்படிச் செய்ய முடியும்?' என்று (உமர்(ரலி) அவர்களிடம்) கேட்டேன். அதற்கு உமர்(ரலி) அவர்கள், 'அல்லாஹ்வின் மீதாணையாக! இது நன்மை(யான பணி) தான்'' என்று கூறினார்கள். இது விஷயமாக தொடர்ந்து உமர்(ரலி) அவர்கள் என்னிடம் வலியுறுத்திக்கொண்டேயிருந்தார்கள். முடிவில், உமர்(ரலி) அவர்கள் மனதை அல்லாஹ் எதற்காக விரிவாக்கினானோ அதற்காக என் மனத்தையும் அவன் விரிவாக்கினான்; எது விஷயத்தில் உமர்(ரலி) அவர்கள் கருதியதையே நானும் (பொறுத்தமானதாகக்) கண்டேன்.

பிறகு அபூ பக்ர்(ரலி) அவர்கள் (என்னிடம்), 'நீங்கள் புத்திசாலியான இளைஞர்; உங்களை நாங்கள் (எந்த விதத்திலும்) சந்தேகப்பட்டதில்லை. நீங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்காக வஹீ (இறைச்செய்தி) (வேத அறிவிப்பை) எழுதக்கூடியவராயிருந்தீர்கள். எனவே, (தனித்தனி பிரதிகளில் பல்வேறு நபித்தோழர்களிடம் இருக்கும்) குர்ஆன் வசனங்களைத் தேடி (ஒரே பிரதியில்) ஒன்றுதிரட்டுங்கள்'' என்றார்கள்.

அல்லாஹ்வின் மீதாணையாக! மலைகளில் ஒன்றை நகர்த்த வேண்டுமென என்னை அவர்கள் பணிந்திருந்தாலும் கூட அது எனக்குப் பளுவாக இருந்திருக்காது. குர்ஆனை ஒன்று திரட்டும்படி எனக்கு அவர்கள் கட்டளையிட்டது. அதைவிட எனக்குப் பளுவாக இருந்தது. நான், 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் செய்யாத ஒன்றை நீங்கள் இருவரும் எப்படிச் செய்யப் போகிறீர்கள்?' என்று கேட்டேன். அதற்கு அபூ பக்ர்(ரலி) அவர்கள், 'அல்லாஹ்வின் மீதாணையாக! இது நன்மை(யான பணி) தான்'' என்றார்கள். இதையே என்னிடம் அன்னார் தொடர்ந்து வலியுறுத்திக்கொண்டிருந்தார்கள். முடிவில் எதற்காக அபூ பக்ர் மற்றும் உமர்(ரலி) ஆகியோரின் மனத்தை அல்லாஹ் விரிவாக்கினானோ அதற்காக என் மனத்தையும் அல்லாஹ் விரிவாக்கினான். அவர்கள் இருவரும் கருதியதையே நானும் (பொருத்தமானதாகக்) கருதினேன்.

எனவே, நான் (மக்களின் கரங்களிலிருந்து குர்ஆன் (சுவடிகளைத்) தேடினேன். அகலமான பேரீச்சமட்டைகள், துண்டுத் தோல்கள் ஓடுகள் மற்றும் (குர்ஆனை மனனம் செய்திருந்த) மனிதர்களின் நெஞ்சங்கள் ஆகியவற்றிலிருந்து குர்ஆன் வசனங்களைத் திரட்டினேன். அப்போது நான் அத்தவ்பா எனும் (9 வது) அத்தியாத்தின் இறுதி வசனத்தை ‘குஸைமா’ (ரலி) அவர்களிடம் அல்லது ‘அபூகுஸைமா’ (ரலி) அவர்களிடம் இருக்கக் கண்டேன். அதை நான் அதற்குரிய அத்தியாயத்தில் சேர்த்தேன். 'உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கிறார்'' என்று தொடங்கும் (திருக்குர்ஆன் 09:128 வது) வசனமே அந்த வசனமாகும்.

(என் வாயிலாகத் திரட்டிக் தொகுக்கப் பெற்ற) குர்ஆன் பிரதிகள் (கலீஃபா) அபூ பக்ர்(ரலி) அவர்களிடம், அவர்களை அல்லாஹ் இறக்கச் செய்யும் வரை அவர்களின் வாழ்நாள் முழுக்க இருந்து வந்தது. பிறகு (கலீஃபா) உமர்(ரலி) அவர்களிடம் அவர்களை அல்லாஹ் இறக்கச் செய்யும் வரை அவர்களின் வாழ்நாள் முழுக்க இருந்து வந்தது. பிறகு (நபிகளரின் துணைவியரான) ஹஃப்ஸா பின்த் உமர்(ரலி) அவர்களிடம் இருந்து வந்தது.

முஹம்மத் இப்னு உபைதில்லாஹ்(ரஹ்) அவர்கள், 'இந்த ஹதீஸின் மூலத்திலுள்ள) 'லிகஃப்' எனும் சொல்லுக்கு 'ஓடு' என்று பொருள் எனக் கூறினார்கள்.

பகுதி 38

ஆட்சித் தலைவர் ஆளுநர்களுக்கும், நீதிபதி சட்ட ஒழுங்கு அதிகாரிகளுக்கும் கடிதம் எழுதுவது.

7192 ஸஹ்ல் இப்னு அபீ ஹஸ்மா(ரலி) அவர்களும் அவர்களின் சமூகத்தைச் சேர்ந்த சில பிரமுகர்களும் அறிவித்ததாவது.

அப்துல்லாஹ் இப்னு ஸஹ்ல்(ரலி) அவர்களும் முஹய்யிஸா இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களும் தங்களுக்கு ஏற்பட்டிருந்த கடுமையான வறுமையின் காரணத்தால் (பேரீச்சங் கனிகள் பறிப்பதற்காக) கைபரை நோக்கிப் புறப்பட்டனர். (வழியில் இருவரும் பிரிந்துவிட்டனர்.) அப்போது 'அப்துல்லாஹ் இப்னு ஸஹ்ல்(ரலி) அவர்கள் கொல்லப்பட்டு ஒரு 'குழியில் அல்லது 'நீர்நிலையில்' போடப்பட்டுவிட்டார்'' என்ற செய்தி முஹய்யிஸா(ரலி) அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. எனவே, முஹய்யிஸா(ரலி) அவர்கள் (அப்பகுதி மக்களான) யூதர்களிடம் சென்று, 'அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீங்கள்தாம் அவரைக் கொன்று விட்டீர்கள்'' என்று கூறினார்கள். அதற்கு யூதர்கள், 'அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவரை நாங்கள் கொல்லவில்லை'' என்றார்கள்.

பிறகு முஹய்யிஸா(ரலி) அவர்கள் தம் சமூகத்தாரிடம் சென்று (அதைப்பற்றி) அவர்களிடம் சொன்னார்கள். பின்னர் அவரும் அவரின் சகோதரர் ஹுவய்யிஸா(ரலி) அவர்களும் - இவர் வயதில் மூத்தவர் (கொல்லப்பட்டவரின் சகோதரரான) அப்துர் ரஹ்மான் இப்னு ஸஹ்ல்(ரலி) அவர்களும் (இறைத்தூதர்(ஸல்) அவர்களை) நோக்கி வந்தனர். உடனே கைபரில் (இறந்தவருடன்) இருந்த முஹய்யிஸா(ரலி) அவர்கள் (முந்திக்கொண்டு அல்லாஹ்வின் தூதரிடம்) பேசப்போனார். அப்போது நபி(ஸல்) அவர்கள், முஹய்யிஸா(ரலி) அவர்களிடம், 'வயதில் மூத்தவரை (முதலில்) பேசவிடு; என்றார்கள். எனவே, ஹுவய்யிஸா(ரலி) அவர்கள் பேசினார்கள். பிறகு (இளையவரான) முஹய்யிஸா(ரலி) அவர்கள் பேசினார்கள்.

அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'ஒன்று உங்களுடைய நண்பருக்கான இழப்பீட்டுத் தொகையை அவர்கள் (யூதர்கள்) வழங்கட்டும்; அல்லது (எம்முடன் போரிட) அவர்கள் போர் பிரகடனம் செய்யட்டும்'' என்று கூறினார்கள். பிறகு இ(ந்தக் கருத்)தைக் குறிப்பிட்டு யூதர்களுக்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கடிதம் எழுதினார்கள். 'நாங்கள் அவரைக் கொல்லவில்லை'' என்று (யூதர்கள் தரப்பிலிருந்து பதில் கடிதம்) எழுதப்பட்டது. அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஹுவய்யிஸா(ரலி), முஹய்யிஸா(ரலி) மற்றும் அப்துர் ரஹ்மான் இப்னு சஹ்ல்(ரலி) ஆகியோரிடம், '(யூதர்கள் தாம் கொலை செய்தார்கள் என்று) நீங்கள் சத்தியம் செய்துவிட்டு, உங்கள் நண்பருக்கான உயிரீட்டுத் தொகையைப் பெறுகிறீர்களா?' என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் 'இல்லை (நாங்கள் சத்தியம் செய்யமாட்டோம்)'' என்று கூறினர். நபி(ஸல்) அவர்கள், 'அவ்வாறாயின் (தாங்கள் அவரைக் கொல்லவில்லை என்று) யூதர்கள் உங்களிடம் சத்தியம் செய்யட்டுமா?' என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் (மூவரும்), 'யூதர்கள் முஸ்லிம்கள் இல்லையே! (பொய்ச் சத்தியம் செய்யவும் அவர்கள் தயங்கமாட்டார்களே)'' என்று கூறினர். எனவே, கொல்லப்பட்டவருக்கான இழப்பீடாக நூறு ஒட்டகங்களை நபி(ஸல்) அவர்களே தம் தரப்பிலிருந்து வழங்கினார்கள். இறுதியில் (அவர்கள் கூடியிருந்த) அந்த வீட்டுக்குள் அந்த ஒட்டகங்கள் கொண்டுவரப்பட்டன. அப்போது அதில் ஓர் ஒட்டகம் என்னை மிதித்துவிட்டது.58

பகுதி 39

(குடிமக்களின்) பணிகளைக் கவனிப்பதற்காக ஒருவரை மட்டும் தனியாக ஆட்சியாளர் அனுப்பலாமா?

7193, 7194 அபூ ஹுரைரா(ரலி) மற்றும் ஸைத் இப்னு காலித் அல்ஜுஹனீ(ரலி) ஆகியோர் அறிவித்தார்கள்:

கிராமவாசி ஒருவர் (நபியவர்களிடம்) வந்து, 'இறைத்தூதர் அவர்களே! எங்களிடையே அல்லாஹ்வின் சட்டப்படி தீர்ப்பளியுங்கள்'' என்றார். அவரின் எதிரி (பிரதிவாதி) எழுந்து, 'இவர் சொல்வது உண்மைதான்; எங்களிடையே அல்லாஹ்வின் சட்டப்படி தீர்ப்பளியுங்கள்'' என்று கூறினார். அந்தக் கிராமவாசி 'என் மகன் இவரிடம் வேலைக்காரனாக இருந்தான். அப்போது அவன் இவருடைய மனைவியுடன் விபசாரம் செய்துவிட்டான். (அதற்குத் தண்டனையாக) 'உன் மகனைக் கல்லால் அடித்துக் கொல்ல வேண்டும்'' என்று என்னிடம் மக்கள் சொன்னார்கள். எனவே, நான் (இந்த தண்டனையிலிருந்து அவனைக் காப்பாற்றுவதற்காக) அதற்கு பதில் நூறு ஆடுகளையும் ஓர் அடிமைப் பெண்ணையும் ஈட்டுத் தொகையாக வழங்கினேன். பிறகு நான் அறிஞர்களிடம் விசாரித்தபோது, 'என் மகனுக்கு நூறு சாட்டையடிகளும் ஓராண்டுக் காலத்திற்கு நாடு கடத்தலும் தான் தண்டனையாகத் தரப்படவேண்டும்'' என்று கூறினார்'' என்றார்.

இதைக் கேட்ட நபி(ஸல்) அவர்கள், 'உங்கள் இருவருக்குமிடையே நான் அல்லாஹ்வின் சட்டப்படியே தீர்பபளிக்கிறேன்: அந்த அடிமைப் பெண்ணும் (நூறு) ஆடுகளும் உம்மிடமே திருப்பித் தரப்பட வேண்டும். உம்முடைய மகனுக்கு நூறு கசையடிகளும் ஓராண்டுக் காலத்திற்கு நாடு கடத்தும் தண்டனையும் தரப்படவேண்டும்'' என்று கூறிவிட்டு, (தமக்கருகிலிருந்த அஸ்லம் குலத்தாரான உனைஸ்(ரலி) அவர்களைப் பார்த்து) 'உனைஸே! நீங்கள் இந்த மனிதரின் மனைவியிடம் சென்று, (அவள் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டால்,) அவளுக்குக் கல்லெறி தண்டனை வழங்குங்கள்'' என்றார்கள். அவ்வாறே உனைஸ்(ரலி) அவர்கள் அப்பெண்ணிடம் சென்று (குற்றத்தை ஒப்புக்கொண்ட) அவளுக்குக் கல்லெறி தண்டனை நிறைவேற்றினார்கள்.59

பகுதி 40

ஆட்சியாளர்களுக்கு மொழிபெயர்த்துக் கூறுவதும், ஒரே மொழிபெயர்ப்பாளர் போதுமா? என்பதும்.

7195 ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள், யூதர்களின் (ஹீப்ரு அல்லது சிரியாக் மொழி) எழுத்து வடிவைக் கற்றுக்கொள்ளும்படி எனக்குக் கட்டளையிட்டார்கள். அவ்வாறே கற்றுக்கொண்டு, நபி(ஸல்) அவர்கள் (யூதர்களுக்கு) அனுப்பும் கடிதங்களை நான் எழுதிவந்தேன்; யூதர்கள் நபி(ஸல்) அவர்களுக்கு எழுதும் கடிதங்களை நபி(ஸல்) அவர்களுக்குப் படித்துக் காட்டி வந்தேன்.

உமர்(ரலி) அவர்கள் தம்மிடம் அலீ(ரலி), அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) மற்றும் உஸ்மான்(ரலி) ஆகியோர் இருக்க, (மொழி பெயர்ப்பாளர் அப்துர்ரஹ்மான் இப்னு ஹாத்திப்(ரலி) அவர்களிடம்), 'இந்த(க் கர்ப்பிணி)ப் பெண் என்ன சொல்கிறாள்?' என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், 'இவள் தன்னை இந்நிலைக்கு ஆளாக்கியவனைப் பற்றி உங்களுக்குத் தெரிவிக்கிறாள்'' என்றார்கள்.

அபூ ஜம்ரா(ரலி) அவர்கள், 'நான் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களுக்கும் அவர்களிடம் தீர்ப்பு கேட்டுவரும்) மக்களுக்கும் இடையே மொழிபெயர்ப்பாளராக இருந்துவந்தேன்'' என்று கூறுகிறார்கள்.

சிலர், 'ஆட்சியாளர் மற்றும் நீதிபதிக்கு இரண்டு மொழிபெயர்ப்பாளர்கள் தேவை ஒருவர் போதாது)'' என்று கூறுகின்றனர்.

7196 இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

அபூ சுஃப்யான் இப்னு ஹர்ப்(ரலி) கூறினார்: (ரோம் நாட்டு மன்னர்) ஹெராக்ளியஸ், நான் குறைஷி வணிகக் குழு ஒன்றில் இருந்தபோது எனக்கு ஆளனுப்பி அழைத்துவரச் செய்துவிட்டு, தம் மொழிப்பெயர்ப்பாளரை நோக்கி, 'நான் இவரிடம் (சில கேள்விகள்) கேட்பேன்; இவர் பதில் கூறும்போது பொய் சொன்னால் இவர் பொய் சொல்கிறார் என்று தெரிவித்துவிட வேண்டும் என இவருடைய நண்பர்களிடம் கூறிவிடு'' என்றார். பிறகு முழு ஹதீஸையும் சொன்னார். (இறுதியில்) அவர் தம் மொழிபெயர்ப்பாளரிடம், 'நீர் சொல்வது உண்மையாயிருந்தால் என்னுடை இவ்விரு பாதங்கள் இருக்கும் இடத்திற்கு விரைவில் அவர்(முஹம்மத்) அதிபராகிவிடுவார் என அவரிடம் சொல்'' என்றார்.60

பகுதி 41

ஆட்சித் தலைவர் தம் அதிகாரிகளிடம் கணக்குக் கேட்பது.

7197 அபூ ஹுமைத் அஸ்ஸாஇதீ(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் இப்னுல் லுதபிய்யா (அல்லது இப்னுல் உதபிய்யா(ரலி) அவர்களை பனூ சுலைம் குலத்தாரின் ஸகாத் பொருட்களை வசூலிக்கும் அதிகாரியாக நியமித்தார்கள். (அவர் பனூசுலைம் குலத்தாரிடம் சென்று ஸகாத் பொருட்களை வசூலித்துக் கொண்டு) இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்தபோது அவரிடம் நபி(ஸல்) அவர்கள் கணக்குக் கேட்டார்கள். அப்போது இப்னுல் லுதபிய்யா(ரலி) அவர்கள், 'இது உங்களுக்காக உள்ளது; இது எனக்கு வழங்கப்பட்ட அன்பளிப்பு'' என்றார்கள். உடனே இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'நீங்கள் (உங்களின் வாதத்தில்) உண்மையாளராக இருந்தால் நீங்கள் உங்கள் தந்தையின் வீட்டிலும் தாயின் வீட்டிலும் உட்கார்ந்து கொண்டு உங்களைத் தேடி அன்பளிப்பு வருகிறதா பாருங்கள்'' என்றார்கள். பிறகு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எழுந்து நின்று மக்களுக்கு உரையாற்றினார்கள். அல்லாஹ்வைப் புகழ்ந்து போற்றிவிட்டு, 'இறைவனைப் போற்றிய பின் கூறுகிறேன்: அல்லாஹ் என்னிடம் ஒப்படைத்துள்ள பணிகளில் சிலவற்றுக்கு உங்களில் சிலரை நான் அதிகாரிகளாக நியமிக்கிறேன். ஆனால், அவர் (போய்விட்டு) வந்து இது உங்களுக்கு; இது எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது என்று கூறுகிறாரே! அவர் வாய்மையானவராயிருந்தால் தம் தந்தையின் வீட்டிலும் தாயின் வீட்டிலும் உட்கார்ந்துகொண்டு தம்மைத் தேடி அன்பளிப்பு வருகின்றதா? என்று பார்க்கட்டுமே! அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் யாரும் அதிலிருந்து எதையும் முறையின்றி எடுக்கக் கூடாது அப்படி எடுப்பவர் மறுமைநாளில் அதைச் சுமந்தபடியே அல்லாஹ்விடம் வருவார். அறிக! (அன்று) அல்லாஹ்விடம் கத்தும் ஒட்டகத்துடனும் மாட்டுடனும் ஆட்டுடனும் ஒருவர் வருவதை நிச்சயம் அறிவேன்'' என்றார்கள்.

பின்னர், நாங்கள் நபியவர்களுடைய அக்குள்களின் வெண்மையைப் பார்க்கும் அளவிற்குத் தம் இரண்டு கைகளையும் உயர்த்தி, '(இறைவா!) நான் எடுத்துரைத்துவிட்டேனா?' என்று (வானை அண்ணாந்து நோக்கிக்) கேட்டார்கள்.61

பகுதி 42

ஆட்சித் தலைவருக்கு நெருக்கமானவர்களும் அவர்களின் ஆலோசர்களும்.

(திருக்குர்ஆன் 03:118 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'பித்தானா' (நெருக்கமானோர்) என்பதற்கு 'அந்தரங்க நண்பர்கள்' என்று பொருள்.

7198 ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

அல்லாஹ் ஓர் இறைத்தூதரை அனுப்பினாலும் சரி, ஒருவரை (ஆட்சிக்கு)ப் பிரதிநிதியாக ஆக்கினாலும் சரி அவர்களுக்கு இரண்டு நெருக்கமான ஆலோசகர்கள் அவசியம் இருப்பார்கள். ஓர் ஆலோசகர், அவரை நன்மை செய்யும்படி ஏவி அதற்குத் தூண்டுகோலாக இருப்பார். மற்றோர் ஆலோசகர், அவரைத் தீமை புரியும்படி ஏவி அதற்குத் தூண்டுகோலாக இருப்பார். அல்லாஹ் (குற்றங்களிலிருந்து) யாரைப் பாதுகாத்தானோ அவரே மாசற்றவராக இருப்பார்.

என அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.62

இதே ஹதீஸ் வேறு பல அறிவிப்பாளர் தொடர்கள் வாரியாகவும் வந்துள்ளது.

பகுதி 43

ஆட்சித் தலைவர் மக்களிடம் பெறும் விசுவாசப் பிரமாண (வாசக)ம் எவ்வாறு அமையவேண்டும்? 63

7199 உபாதா இப்னு அஸ்ஸாமித்(ரலி) அறிவித்தார்.

இன்பத்திலும் துன்பத்திலும் (கட்டளையைச்) செவியேற்றுக் கீழ்ப்படிந்து நடப்போம் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் நாங்கள் விசுவாசப் பிரமாணம் (பைஅத்) செய்தோம்.

7200 உபாதா இப்னு அஸ்ஸாமித்(ரலி) அவர்கள் (தொடர்ந்து) அறிவித்தார்.

நாங்கள் ஆட்சியதிகாரத்தில் இருப்பவர்களுடன் சண்டையிட மாட்டோம் என்றும், நாங்கள் எங்கிருந்தாலும் அல்லாஹ்வின் விஷயத்தில் பழிப்பவர்களின் பழிப்புரைக்கு அஞ்சாமல் 'உண்மையே கடைப்பிடிப்போம்' அல்லது 'உண்மையே பேசுவோம்' என்றும் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் உறுதிமொழி அளித்தோம்.64

7201 அனஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் (அகழ் வெட்டும் பணியைப் பார்வையிடுவதற்காகக்) குளிர்ந்த காலைப் பொழுதில் வெளியே சென்றார்கள். அப்போது முஹாஜிர்களும் அன்சாரிகளும் அகழ் தோண்டிக் கொண்டிருந்தார்கள்.

(அதைக் கண்ணுற்ற) நபி(ஸல்) அவர்கள், 'இறைவா! (நிலையான) நன்மை என்பது மறுமை (வாழ்வின்) நன்மையே. எனவே, அன்சாரிகளுக்கும் முஹாஜிர்களுக்கும் மன்னிப்பு வழங்குவாயாக!'' என்று (பாடிய படி) சொன்னார்கள்.

இதற்கு பதிலளிக்கும் விதத்தில் நபித்தோழர்கள், 'நாங்கள் வாழும் காலமெல்லாம் அறப்போர் புரிவோம் என முஹம்மத்(ஸல்) அவர்களிடம் உறுதிமொழி வழங்கியுள்ளோம்'' என்று கூறினர்.65

7202 அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

நாங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் (அவர்களின் கட்டளைகளைச்) செவியேற்றுக் கீழ்ப்படிந்து நடப்போம் என உறுதிமொழி (பைஅத்) அளிக்கும்போது அவர்கள், 'உங்களால் முடிந்த விஷயங்களில்'' என்று சொல்வது வழக்கம்.

7203 அப்துல்லாஹ் இப்னு தீனார்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

அப்துல் மாலிக் இப்னு மர்வான் அவர்களிடம், (அவருக்கு விசுவாசப் பிரமாணம் செய்வதற்காக) மக்கள் ஒன்று கூடிய இடத்தில் நான் இப்னு உமர்(ரலி) அவர்களைப் பார்த்தேன். அன்னார், 'நான் அல்லாஹ் வகுத்த நெறிமுறையின்படியும் அவனுடைய தூதர் காட்டிய வழிமுறையின்படியும், அல்லாஹ்வின் அடியாரும் இறைநம்பிக்கையாளர்களின் தலைவருமான அப்துல் மலிக் இப்னு மர்வானின் கட்டளைகளை என்னால் இயன்றவரை செவியேற்றுக் கீழ்ப்படிந்து நடப்பேன் என உறுதி அளிக்கிறேன்; என் மக்களும் இதைப் போன்றே உறுதி அளித்துள்ளனர்'' என்று எழுதித் தந்தார்கள்.

7204 ஜாரீர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களிடம் நான் (அவர்களின் கட்டளையைச்) செவியேற்று அதற்குத் கீழ்ப்படிந்து நடப்பேன் என்று உறுதிமொழியளித்தேன். அப்போது 'என்னால் இயன்ற விஷயங்களில்' என்றும் 'முஸ்லிம்களில் ஒவ்வொருவருக்கும் நன்மையே நாடுவேன்' என்றும் சேர்த்துச் சொல்லும்படி என்னிடம் அவர்கள் கூறினார்கள்.

7205. அப்துல்லாஹ் இப்னு தீனார்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

அப்துல் மலிக் இப்னு மர்வானுக்கு மக்கள் விசுவாசப் பிரமாணம் (பைஅத்) செய்து கொடுத்தபோது அவருக்கு அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அவர்கள் இவ்வாறு கடிதம் எழுதினார்கள்: அல்லாஹ்வின் அடியாரும் இறைநம்பிக்கையாளர்களின் தலைவருமான அப்துல் மலிக் இப்னு மர்வானுக்கு... நான் அல்லாஹ் வகுத்த நெறிமுறைப்படியும், அவனுடைய தூதர் காட்டிய வழியின்படியும், அல்லாஹ்வின் அடியாரும் இறைநம்பிக்கையாளர்களின் தலைவருமான அப்துல மலிக்கின் கட்டளைகளை என்னால் இயன்றவரை செவியேற்றுக் கீழ்ப்படிந்து நடப்பேன் என்று உறுதி அளிக்கிறேன். என் மக்களும் இவ்வாறு உறுதியளித்துள்ளனர்.

7206 யஸீத் இப்னு அபீ உபைத்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

ஸலமா இப்னு அக்வஃ(ரலி) அவர்களிடம் நான், 'எந்த விஷயத்திற்காக நீங்கள் நபி(ஸல்) அவர்களிடம் ஹுதைபிய்யா நாளில் உறுதி மொழி அளித்தீர்கள்?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், '(இறைவழியில்) உயிர் நீக்கத் தயாராக இருப்பதாக உறுதிமொழி அளித்தோம்'' என்று பதிலளித்தார்கள்.66

7207 மிஸ்வர் இப்னு மக்ரமா(ரலி) அறிவித்தார்.

உமர்(ரலி) அவர்கள் (தமக்குப் பின் ஆட்சித் தலைவரைத் தேர்ந்தெடுத்திடும்) பொறுப்பை ஒப்படைத்திருந்த (ஆறு பேர் கொண்ட) குழுவினர் ஒன்றுகூடி தமக்குள் கலந்தாலோசித்தனர்.67 அவர்களிடம் அக்குழுவில் இடம்பெற்றிருந்த) அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அவர்கள், 'நான் இந்த ஆட்சியதிகாரத்திற்காக உங்களுடன் போட்டியிடக்கூடியவன் அல்லன். ஆயினும், நீங்கள் விரும்பினால் உங்களிலிருந்தே ஒருவரை நான் உங்களுக்கு (ஆட்சித் தலைவராக)த் தேர்ந்தெடுக்கிறேன்'' என்றார்கள். எனவே, குழுவினர் அந்தப் பணியை அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அவர்களிடம் ஒப்படைத்தார்கள். இவ்வாறு அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அவர்களிடம் ஒப்படைத்தார்கள். இவ்வாறு அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அவர்கள் வசம் தங்கள் விவகாரத்தை அவர்கள் ஒப்படைத்துவிட்டபோது மக்கள் அப்துர்ரஹ்மான்(ரலி) அவர்களையே மொய்க்கத் தொடங்கிவிட்டனர். எந்த அளவிற்கென்றால், மக்களில் எவருமே அக்குழுவினரைப் பின்தொடர்ந்ததாகவோ அவர்கள் பின்னே சென்றதாகவோ நான் காணவில்லை. அந்த நாள்களில் அவரிடம் மட்டுமே மக்கள் ஆலோசனை கலந்தபடி அவரையே சுற்றிவரத் தொடங்கிவிட்டனர். எந்த நாள் காலையில் நாங்கள் உஸ்மான்(ரலி) அவர்களுக்கு விசுவாசப் பிரமாணம் (பைஅத்) செய்து அளித்தோமோ அன்றைய இரவு சிறிது நேரம் தூங்கிய பிறகு அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அவர்கள் வந்து திடீரென என் வீட்டுக் கதவைத் தட்டினார்கள்.

நான் விழித்துக்கொண்டேன். என்னிடம் அவர்கள், 'நீங்களோ உறங்குகிறீர்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! இன்றிரவு என்னைப் பெரிய அளவில் தூக்கம் தழுவவில்லை. நீங்கள் போய் ஸுபைர் இப்னு அவ்வாமையும் ஸஅத் இப்னு அபீ வக்காஸையும் அழைத்து வாருங்கள்'' என்று சொல்ல, நான் போய் அவர்களை அப்துர்ரஹ்மான் அவர்களிடம் அழைத்து வந்தேன். பிறகு அவ்விருவருடன் கலந்தாலோசித்துவிட்டு என்னை அழைத்து, 'அலீ(ரலி) அவர்களை என்னிடம் அழைத்து வருக'' என்றார்கள். அவ்வாறே நான் அலீ(ரலி) அவர்களை அழைத்துவர, அவர்களிடம் நடுநிசிவரை ஆலோசனை செய்தார்கள். பிறகு அலீ(ரலி) அவர்கள் (ஆட்சிப் பொறுப்பேற்க) ஆவல் கொண்டவர்களாக அப்துர் ரஹ்மான்(ரலி) அவர்களிடமிருந்து எழுந்தார்கள். அலீ(ரலி) அவர்களிடமிருந்து ஏதேனும் பிரச்சினை வருமோ என அப்துர் ரஹ்மான் அஞ்சியிருந்தார்கள். பிறகு, 'உஸ்மான்(ரலி) அவர்களை என்னிடம் அழைத்து வருக'' என்றார்கள். நானும் அவ்வாறே உஸ்மான்(ரலி) அவர்களை அழைத்துவர, அவர்களிடமும் ஆலோசனை செய்தார்கள். இறுதியில், சுப்ஹுத் தொழுகைக்கு பாங்கு சொன்னவர் சொல்ல அவ்விருவரும் கலைந்தனர். அப்துர் ரஹ்மான்(ரலி) அவர்கள் மக்களுக்கு சுப்ஹுத் தொழுகை நடத்திய பின்னர் அந்த ஆலோசனைக் குழுவினர் சொற்பொழிவு மேடை (மிம்பர்) அருகே ஒன்று கூடினார்கள். பின்னர் முஹாஜிர்கள் மற்றும் அன்சாரிகளில் அங்கு வந்திருந்தவர்களிடமும் மாகாணங்களின் ஆளுநர்களிடமும் ஆளனுப்பினார்கள். அந்த ஆளுநர்கள் (மக்கா வந்து) அந்த ஹஜ்ஜில் உமர்(ரலி) அவர்களுடன் கலந்து கொண்டிருந்(துவிட்டு மதீனா வந்திருந்)தனர்.68 அவர்கள் ஒன்றுகூடியபோது அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அவர்கள் ஏகத்துவ உறுதிமொழியைக் கூறிவிட்டுப் பிறகு, 'இறைவனைத் துதித்த பின் கூறுகிறேன்: அலீ(ரலி) அவர்களே! நான் மக்களின் கருத்தை ஆராய்ந்து பார்த்தேன். அவர்கள் உஸ்மானுக்குச் சமமாக எவரையும் கருதுவதாக எனக்குத் தெரியவில்லை. எனவே, உங்கள் உள்ளத்தில் (என் மீது) வருத்தம் ஏதும் கொள்ளவேண்டாம்'' என்று கூறினார்கள்.

பிறகு (உஸ்மான்(ரலி) அவர்களை நோக்கி), 'அல்லாஹ் வகுத்த வழிமுறைப்படியும் அவனுடைய தூதரின் நடைமுறைப்படியும் அவர்களுக்குப் பின்னுள்ள கலீஃபாக்கள் இருவரின் நடைமுறைகளின் படியும் உங்களுக்கு உறுதிமொழி அளிக்கிறேன்'' என்று கூறினார்கள். இப்படி அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அவர்கள் விசுவாசப் பிரமாணம் செய்ய முஹாஜிர்கள், அன்சாரிகள், மாகாண ஆளுநர்கள், முஸ்லிம்கள் என்று மக்கள் அனைவரும் (உஸ்மான்(ரலி) அவர்களுக்கு) விசுவாசப் பிரமாணம் செய்தனர்.69

பகுதி 44

(ஒரே சமயத்தில்) இரண்டு முறை விசுவாசப் பிரமாணம் செய்வது.

7208. ஸலமா இப்னு அக்வஃ(ரலி) அறிவித்தார்.

நாங்கள் நபி(ஸல்) அவர்களிடம் அந்த மரத்தினடியில் (பைஅத்துர் ரிள்வான்) உறுதி மொழி அளித்தோம். அப்போது அவர்கள் என்னிடம், 'ஸலமாவே! நீங்கள் உறுதிமொழி அளிக்கவில்லையா?' என்று கேட்டார்கள். நான், 'இறைத்தூதர் அவர்களே! முதல் முறையிலேயே நான் உறுதிமொழி அளித்து விட்டேன்'' என்று சொன்னேன். நபி(ஸல்) அவர்கள், 'இரண்டாவது முறையும் உறுதிமொழி அளியுங்கள்'' என்றார்கள்.70

பகுதி 45

கிராமவாசிகளின் விசுவாசப் பிரமாணம் (பைஅத்).

7209 ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.

கிராமவாசி ஒருவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதாக விசுவாசப் பிரமாணம் செய்தார். பின்னர் அவருக்குக் காய்ச்சல் ஏற்பட்டது. உடனே அந்தக் கிராமவாசி, 'என் விசுவாசப் பிரமாணத்திலிருந்து என்னை விடுவித்து விடுங்கள்'' என்றார். நபி(ஸல்) அவர்கள் (அதை ஏற்க) மறுத்துவிட்டார்கள். பிறகு மீண்டும் வந்து 'என்னுடைய விசுவாசப் பிரமாணத்திலிருந்து என்னை நீக்கிவிடுங்கள்'' என்றார். அப்போதும் நபி(ஸல்) அவர்கள் மறுத்துவிட்டார்கள். எனவே, அந்த மனிதர் (மதீனாவிலிருந்து) வெளியேறினார். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'மதீனா, கொல்லனின் உலை போன்றதாகும். அது தன்னிலுள்ள தீயவர்களை வெளியேற்றிவிட்டு நல்லவர்களைத் தூய்மைப்படுத்தும்'' என்றார்கள்.71

பகுதி 46

சிறுவர்களின் விசுவாசப் பிரமாணம் (பைஅத்)

7210 நபி(ஸல்) அவர்களின் காலத்தில் வாழ்ந்த அப்துல்லாஹ் இப்னு ஹிஷாம்(ரலி) அறிவித்தார்.

என் தாயார் ஸைனப் பின்த் ஹுமைத்(ரலி) அவர்கள் (நான் சிறுவனாயிருந்த போது) இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் என்னைக் கொண்டு சென்றார்கள். அப்போது அவர், 'இறைத்தூதர் அவர்களே! இவனிடம் உறுதிப் பிரமாணம் வாங்குங்கள்'' என்று கூற, நபி(ஸல்) அவர்கள், 'இவன் சிறுவனாயிற்றே'' என்று சொல்லிவிட்டு, (அன்போடு) என் தலையை வருடிக்கொடுத்து எனக்காகப் பிரார்த்தனை செய்தார்கள்.72

(அறிவிப்பாளர் ஸுஹ்ரா இப்னு மஅபத்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:)

என் பாட்டனார் அப்துல்லாஹ் இப்னு ஹிஷாம்(ரலி) அவர்கள் ஒரேயொரு ஆட்டை அறுத்துத் தம் குடும்பத்தார் அனைவருக்காகவும் குர்பானி கொடுத்து வந்தார்கள்.

பகுதி 47

விசுவாசப் பிரமாணம் (பைஅத்) அளித்துவிட்டுப் பின்னர் அதை விலக்கிக் கொள்வது.

7211 ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.

கிராமவாசி ஒருவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதாக விசுவாசப் பிரமாணம் செய்தார். பின்னர் அவருக்கு மதீனாவில் காய்ச்சல் கண்டது. உடனே அந்தக் கிராமவாசி இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! என் விசுவாசப் பிரமாணத்திலிருந்து என்னை நீக்கிவிடுங்கள்'' என்றார். நபி(ஸல்) அவர்கள் (அதை ஏற்க) மறுத்துவிட்டார்கள். பிறகு அவர் (மீண்டும்) வந்து 'இறைத்தூதர் அவர்களே! என் பிரமாணத்திலிருந்து என்னை நீக்கிவிடுங்கள்'' என்றார். நபி(ஸல்) அவர்கள் மறுத்துவிட்டார்கள். பிறகு (மூன்றாம் முறையாக) அவர் நபியவர்களிடம் வந்து 'இறைத்தூதர் அவர்களே! என் பிரமாணத்திலிருந்து என்னை நீக்கிவிடுங்கள்'' என்றார். அப்போதும் நபி(ஸல்) அவர்கள் மறுத்துவிட்டார்கள்.

எனவே, அந்தக் கிராமவாசி (மதீனாவிலிருந்து) வெளியேறினார். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'மதீனா, கொல்லனின் உலை போன்றதேயாகும். அது தன்னிலுள்ள தீயவர்களை வெளியேற்றிவிட்டு நல்லவர்களைத் தூய்மைப்படுத்துகின்றது'' என்றார்கள்.73

பகுதி 48

உலகாதாயத்திற்காக மட்டுமே ஒருவருக்கு விசுவாசப் பிரமாணம் (பைஅத்) செய்தல்.

7212 ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

மூன்றுபேரிடம் அல்லாஹ் மறுமை நாளில் பேசவுமாட்டான்; அவர்களைத் தூய்மைப்படுத்தவுமாட்டான். அவர்களுக்குத் துன்பமிக்க வேதனையும் உண்டு.

ஒருவன், (மக்களின் பயணப்) பாதையில் தேவைக்கு மிஞ்சிய தண்ணீரை வைத்திருந்தும் வழிப்போக்கர்கள் அதைப் பயன்படுத்தவிடாமல் தடுத்துவிட்டவன் ஆவான்.

இன்னொருவன் (ஆட்சித்) தலைவரிடம் தன்னுடைய உலக ஆதாயத்திற்காகவே விசுவாசப் பிராமணம் செய்துகொண்டவன். தான் விரும்பியதை அவர் கொடுத்தால் அவருக்கு விசுவாசமாக நடப்பான்; இல்லையென்றால் அவருக்கு விசுவாசகமா நடக்கமாட்டான்.

மற்றொருவன் அஸ்ர் நேரத்திற்குப் பிறகு தன்னுடைய வியாபாரப் பொருளை மற்றொருவரிடம் விற்பதற்காக, 'இந்தப் பொருள் இன்ன (அதிக) விலை கொடுக்கப்(பட்டு வாங்கப்)பட்டது'' என்று அவ்வாறு கொடுக்கப்படாமலேயே (பொய்ச்) சத்தியம் செய்து, அதை உண்மையென நம்பவைத்து (தன் வாடிக்கையாளர்) அதை எடுத்துக்கொள்ளச் செய்தவன் ஆவான்.74

பகுதி 49

பெண்களின் விசுவாசப் பிரமாணம் (பைஅத்)

இது தொடர்பாக நபி(ஸல்) அவர்களிடமிருந்து இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் அறிவித்தார்கள்.75

7213 உபாதா இப்னு அஸ்ஸாமித்(ரலி) அறிவித்தார்.

நாங்கள் ஓர் அவையில் இருந்தபோது எங்களிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்கமாட்டீர்கள்; திருடமாட்டீர்கள்; விபசாரம் புரியமாட்டீர்கள்; உங்கள் குழந்தைகளை (வறுமைக்கு அஞ்சி)க் கொல்லமாட்டீர்கள்; நீங்கள் எவர் மீதும் அவதூறை இட்டுக்கட்டி உங்களிடையே பரப்பமாட்டீர்கள்; நன்மையான காரியத்தில் (தலைவருக்கு) மாறு செய்யமாட்டீர்கள் என்று எனக்கு உறுதிமொழி அளியுங்கள். உங்களில் (இந்த உறுதிமொழிக்கேற்ப நடந்து) அதை நிறைவேற்றுகிறவருக்கு நற்பலன் அளிப்பது அல்லாஹ்வின் பொறுப்பாகும். இந்தக் குற்றங்களில் ஏதேனுமொன்றை ஒருவர் செய்து உலகிலேயே அதற்காக அவர் தண்டிக்கப்பட்டால் அந்தத் தண்டனையே அவரின் (குற்றத்திற்குப்) பரிகாரமாக ஆகிவிடும். அதில் ஏதேனுமொன்றை ஒருவர் செய்து அல்லாஹ் அதை (உலகில்) மறைத்துவிட்டால் அவரின் விவகாரம் அல்லாஹ்விடம் ஒப்படைக்கப்பட்டதாகும். அவன் நாடினால் அவரை தண்டிப்பான். நாடினால் அவரை மன்னிப்பான்.

எனவே, நாங்கள் நபி(ஸல்) அவர்களிடம் அதன்படி உறுதிமொழி அளித்தோம்.76

7214 ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் பெண்களிடம் 'நபியே! இறைநம்பிக்கைக் கொண்ட பெண்கள் உங்களிடம் அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்கமாட்டார்கள்; திருடமாட்டார்கள்; தங்கள் குழந்தைகளைக் கொலை செய்யமாட்டார்கள்; தாங்களாக அவதூறு இட்டுக்கட்டி பரப்பமாட்டார்கள்; நற்செயலில் உங்களுக்கு மாறுசெய்யமாட்டார்கள் என்று உறுதிமொழி அளித்தால் அவர்களிடம் உறுதிமொழி வாங்குங்கள்'' எனும் (திருக்குர்ஆன் 60:12 வது) இறைவசனத்தை ஓதி வாய்மொழியாக விசுவாசப் பிரமாணம் வாங்குவார்கள். (கையால் தொட்டு வாங்கமாட்டார்கள்.) இறைத்தூதர்(ஸல்) அவர்களின் கை, அவர்களுக்குத் சொந்தமான பெண்களை (-துணைவியரை)த் தவிர வேறெந்த பெண்ணின் கையையும் தொட்டதில்லை.77

7215 உம்மு அத்திய்யா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களிடம் நாங்கள் (-பெண்கள்) உறுதிமொழி (பைஅத்) அளித்தோம். அப்போது அவர்கள் எங்களுக்கு இந்த (திருக்குர்ஆன் 60:12 வது) இறைவசனத்தை ஓதிக்காட்டினார்கள். ஒப்பாரிவைக்கக் கூடாதென்று எங்களுக்குத் தடை விதித்தார்கள். அப்போது எங்களில் ஒரு பெண் (விசுவாசப் பிரமாணம் செய்யும் வகையில் சைகை செய்வதற்காக நீட்டிய) தன்னுடைய கையைப் பின்வாங்கிக் கொண்டு இன்ன பெண் எனக்கு (என் துக்கத்தில் உடனிருந்து ஒப்பாரிவைத்து) உதவினாள். எனவே, நான் அவளுக்குப் பிரதியுபகாரம் செய்ய (அவளுடன் சேர்ந்து ஒப்பாரிவைக்க) விரும்புகிறேன்'' என்று சொன்னாள். நபி(ஸல்) அவர்கள் ஏதும் கூறவில்லை. அவள் சென்றுவிட்டுப் பிறகு திரும்பி வந்(து உறுதிமொழி அளித்)தாள். (ஒப்பாரி வைக்கமாட்டோம் என்று உறுதிமொழியளித்தவர்களில்) உம்முசுலைம், உம்முல் அலா ஆகியோரும் முஆத் இப்னு ஜபல்(ரலி) அவர்களின் துணைவியாரான 'பின்த் அபீ சப்ராவும்' அல்லது 'பின்த் அபீ சப்ராவும் முஆத்(ரலி) அவர்களின் துணைவியாரும்' தவிர வேறெவரும் தம் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.78

பகுதி 50

அளித்த உறுதிமொழியை முறிப்பது.

உயர்ந்தோன் அல்லாஹ் கூறினான்:

(நபியே!) உங்களிடம் உறுதிப்பிரமாணம் செய்தவர்கள் (உண்மையில்) அல்லாஹ்விடமே உறுதிப் பிரமாணம் செய்கிறார்கள். அல்லாஹ்வின் கரம் அவர்களின் கரத்தின் மீது உள்ளது. உறுதிப் பிரமாணத்தை முறிப்பவர் தமக்கெதிராகவே அதை முறித்துக் கொள்கிறார். அல்லாஹ்விடம் செய்துகொண்ட ஒப்பந்தத்தை நிறைவேற்றுபவருக்கு அல்லாஹ் மகத்தான பிரதிபலனை விரைவில் வழங்குவான். (திருக்குர்ஆன் 48:10)

7216 ஜாபிர்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களிடம் ஒரு கிராமவாசி வந்து, '(இறைத்தூதர் அவர்களே! இஸ்லாத்தை ஏற்கும் விசுவாசப் பிரமாணத்தை என்னிடமிருந்து பெறுங்கள்'' என்று கோரினார். நபி(ஸல்) அவர்களும் அவரிடம் இஸ்லாத்தை ஏற்கும் விசுவாசப் பிரமாணத்தைப் பெற்றார்கள். பிறகு அவர் அடுத்த நாள் காய்ச்சலுடன் வந்து, '(என் விசுவாசப் பிரமாணத்திலிருந்து) என்னை விடுவித்துவிடுங்கள்'' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் (விடுவிக்க) மறுத்துவிட்டார்கள்.

அவர் திரும்பிச் சென்றபோது, 'மதீனா நகரம் கொல்லன் உலை போன்றதாகும்; அது தன்னிலுள்ள தீயவர்களை (சோதனைகளின் மூலம்) வெளியேற்றி நல்லவர்களைத் தூய்மைப்படுத்துகின்றது'' என்றார்கள்.79

பகுதி 51

ஆட்சித் தலைவர் (தமக்குப் பிறகு ஓர் ஆட்சித் தலைவரையோ, அவரைத் தேர்ந்தெடுக்கும் ஒரு குழுவையோ) நியமிப்பது.

7217 காசிம் இப்னு முஹம்மத் இப்னி அபீ பக்ர் அஸ்ஸித்தீக்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

(நபி(ஸல்) அவர்கள் தம் இறுதி நாள்களில் நோயுற்றிருந்தபோது) ஆயிஷா(ரலி) அவர்கள், 'அந்தோ! என் தலை(வலி)யே!'' என்று (தமக்கு ஏற்பட்ட தலைவலியின் கடுமையால்) சொல்ல, இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'நான் உயிரோடிருக்கும் போதே உனக்கு அது (-இறப்பு-) ஏற்பட்டால் உனக்காக நான் (அல்லாஹ்விடம்) பாவமன்னிப்புக் கோரி உனக்காகப் பிரார்த்திப்பேன்'' என்றார்கள். ஆயிஷா(ரலி) அவர்கள், 'அந்தோ! அல்லாஹ்வின் மீதாணையாக! நான் (விரைவில்) இறந்து போக வேண்டுமென்றே நீங்கள் விருப்பப்படுவதாக எண்ணுகிறேன். நான் இறந்து போய்விட்டால் அந்த நாளின் இறுதியிலேயே (என்னுடைய இல்லம் சென்று) நீங்கள் உங்களுடைய (மற்ற) துணைவியரில் ஒருவருடன் மணவறை காண்பீர்கள் (என்னை மறந்துவிடுவீர்கள்)'' என்றார்கள். நபி(ஸல்) அவர்கள், (புன்னகைத்துவிட்டு), 'இல்லை (உனக்கு ஒன்றும் ஆகாது); நான்தான் (இப்போது) என் தலை(வலி)யே! என்று சொல்ல வேண்டியுள்ளது. (உண்மையில் உன்மீதும் உன் குடும்பத்தார் மீதும் நான் அதிக மதிப்பு வைத்துள்ளேன். அதனாலேயே உன் தந்தை) அபூ பக்ருக்கும் அவரின் புதல்வருக்கும் ஆளனுப்பி (வரவழைத்து எனக்குப் பின் என் பிரதிநிதியாக) அறிவித்துவிட விரும்பினேன். (தாம் விரும்பியவரை கலீஃபா என) யாரும் சொல்லிவிடவோ, (தாமே கலீஃபாவாக ஆக வேண்டும் என) எவரும் ஆசைப்படவோ கூடாது என்பதற்காகவே (இவ்வாறு அறிவிக்க விரும்பினேன்). ஆனால், பின்னர் (அபூ பக்ரைத் தவிர வேறொருவரைப் பிரதிநிதியாக்க) அல்லாஹ் அனுமதிக்க மாட்டான்; இறைநம்பிக்கையாளர்களும் (அதை) ஏற்கமாட்டார்கள் என (எனக்கு நானே) சொல்லிக் கொண்டேன். (எனவேதான் அறிவிக்கவில்லை)'' என்றார்கள்.80

7218 அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

உமர்(ரலி) அவர்களிடம் (அன்னார் தாக்கப்பட்டபோது) 'நீங்கள் உங்களுக்குப் பின் யாரையாவது உங்கள் பிரதிநிதியாக (ஆட்சித் தலைவராக) நியமிக்கக் கூடாதா?' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், 'நான் எவரையேனும் எனக்குப் பின் ஆட்சித் தலைவராக நியமித்தால் (அது தவறாகாது); ஏனென்றால், (எனக்கு முன்பு) என்னைவிடச் சிறந்தவரான அபூ பக்ர்(ரலி) அவர்கள் அவ்வாறு ஆட்சித் தலைவரை (என்னை) நியமித்துச் சென்றிருக்கிறார்கள். (எவரையும் ஆட்சித் தலைவராக நியமிக்காமல்) அப்படியே நான் விட்டுவிட்டாலும் (அதுவும் தவறாகாது); ஏனெனில், என்னைவிடச் சிறந்தவர்களான இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அவ்விதம் தான் (யாரையும் நியமிக்காமல்)விட்டுச் சென்றிருக்கிறார்கள்'' என்றார்கள். உடனே நபித்தோழர்கள் உமர்(ரலி) அவர்களைப் பாராட்டினார்கள். அப்போது உமர்(ரலி) அவர்கள், '(என் கருத்து) பிடித்தோ பிடிக்காமலோ (என்னை நீங்கள் பாராட்டுகிறீர்கள். நான் வகித்த இந்தப் பதவி இறைவனிடம்) எனக்குச் சாதகமாகவும் வேண்டாம்; பாதகமாகவும் வேண்டாம்; சரிக்குச் சமமாக அமைந்த நிலையில் இதிலிருந்து நான் தப்பித்தாலே போதும் என்றே விரும்புகிறேன். நான் உயிரோடு இருக்கும்போது (தான் பதவியைச் சுமந்தேன் என்றால், எனக்குப் பின் ஒருவரை நியமிப்பதன் மூல)ம் இறந்த பிறகும் இதைச் சுமக்க நான் தயாராயில்லை'' என்று கூறினார்கள்.

7219 அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் இறந்த நாளுக்கு மறுநாள் (அபூ பக்ர்(ரலி) அவர்களுக்கு பனூ சாஇதா மண்டபத்தில் பிரமுகர்கள் வாக்களித்து 'பைஅத்' செய்த பிறகு பள்ளிவாசல் வந்து) சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீது அமர்ந்தபடி உமர்(ரலி) அவர்கள் ஆற்றிய இரண்டாம் உரையை நான் செவியேற்றேன். உமர்(ரலி) அவர்கள் ஏகத்துவ உறுதிமொழி கூறினார்கள். (அப்போது) அபூ பக்ர்(ரலி) அவர்கள் ஏதும் பேசாமல் மௌனமாயிருந்தார்கள். உமர்(ரலி) கூறினார்: நமக்கெல்லாம் இறுதியாகத்தான் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இறப்பார்கள்; அதுவரை உயிர் வாழ்வார்கள் என்றே நான் எதிர்பார்த்திருந்தேன். ஆனால், முஹம்மத்(ஸல்) அவர்கள் இறந்துவிட்டார்கள்; என்றாலும், மேலான அல்லாஹ் நீங்கள் நல்வழியில் செல்ல உங்களிடையே (குர்ஆன் எனும்) ஒர் ஒளியை அமைத்துள்ளான்; முஹம்மத்(ஸல்) அவர்களுக்கு அதன் மூலமே அல்லாஹ் நேர்வழி காண்பித்தான். இறைத்தூதர்(ஸல்) அவர்களின் தோழரும் (ஸவ்ர் மலைக்குகையில் இருந்த) இரண்டு போரில் இரண்டாமவருமான அபூ பக்ர்(ரலி) அவர்களே உங்களின் (ஆட்சியதிகார) விவகாரங்களுக்கு மக்களிலேயே மிகவும் தகுதி வாய்ந்தவர்க ஆவார்கள். எனவே, அன்னாரிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்து) விசுவாசப் பிரமாணம் செய்து கொடுங்கள்.

நபித்தோழர்களில் ஒரு சாரார் அதற்கு முன்பே பனூ சாஇதா மண்டபத்தில் அபூ பக்ர்(ரலி) அவர்களுக்கு விசுவாசப் பிரமாணம் செய்து கொடுத்து விட்டிருந்தார்கள். ஆனால், பொதுமக்களின் விசுவாசப் பிரமாணம் (இரண்டாம் நாள்) சொற்பொழிவு மேடையில் வைத்தே நடந்தது.

அனஸ்(ரலி) அவர்களிடமிருந்து ஸுஹ்ரீ(ரஹ்) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸில், 'அன்றைய தினம் உமர்(ரலி) அவர்கள் அபூ பக்ர்(ரலி) அவர்களிடம், சொற்பொழிவு மேடையில் ஏறுங்கள் என்று வற்புறுத்திக் கொண்டே இருந்தார்கள்; இறுதியில், அபூ பக்ர்(ரலி) அவர்கள் சொற்பொழிவு மேடையில் ஏற, அவர்களுக்குப் பொதுமக்கள் விசுவாசப் பிரமாணம் செய்தார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

7220 ஜுபைர் இப்னு முத்யிம்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களிடம் ஒரு பெண் வந்தார். அவர் நபி(ஸல்) அவர்களிடம் ஒரு விஷயம் குறித்துப் பேசினார். நபி(ஸல்) அவர்கள் மறுபடியும் தம்மிடம் வருமாறு அவளுக்குக் கட்டளையிட்டார்கள். அவள், 'இறைத்தூதர் அவர்களே! சொல்லுங்கள். நான் வந்து உங்களைக் காணவில்லையென்றால்...? என்று -தான் வருவதற்குள் நபி(ஸல்) அவர்கள் இறந்துவிட்டால் என்ன செய்வது என்ற கருத்தில் - கேட்டாள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் நீ என்னைக் காணவில்லை என்றால் அபூ பக்ரிடம் செல்'' என்று பதிலளித்தார்கள்.81

7221 தாரிக் இப்னு ஷிஹாப்(ரலி) அறிவித்தார்.

(கலீஃபா) அபூ பக்ர்(ரலி) அவர்கள் 'புஸாகா' எனும் குலத்தாரின் தூதுக் குழுவிடம் 'உங்களை மன்னிப்பதற்கான காரணம் ஒன்றை இறைத்தூதரின் பிரதிநிதி(யான என)க்கும் முஹாஜிர்களுக்கும் அல்லாஹ் காட்டும் வரை நீங்கள் ஒட்டகங்களின் வால்களைப் பின்தொடர்ந்து (நாடோடிகளாகச்) சென்று கொண்டிருங்கள்'' என்று கூறினார்கள்.82

7222, 7223 ஜாபிர் இப்னு சமுரா(ரலி) அறிவித்தார்.

(ஒரு முறை) நபி(ஸல்) அவர்கள், 'பன்னிரண்டு ஆட்சித் தலைவர்கள் வருவார்கள்'' என்று சொல்ல கேட்டேன். அப்போது நபி(ஸல்) அவர்கள், நான் (சரிவரக்) கேட்காத ஒரு சொல்லையும் சொன்னார்கள். (அது என்னவென்று விசாரித்த போது) என் தந்தை (சமுரா (ரலி) அவர்கள், 'அவர்கள் அனைவரும் குறைஷியராக இருப்பார்கள்'' என்று (நபி(ஸல்) அவர்கள்) சொன்னார்கள் எனக் கூறினார்கள்.83

பகுதி 52

(வெளிப்படையாகத்) தெரிந்துகொண்ட பிறகு சச்சரவு செய்வோரையும் சந்தேகத்திற்குரியோரையும் வீட்டிலிருந்து வெளியேற்றுவது.

அபூ பக்ர்(ரலி) அவர்களின் சகோதாரி (அபூ பக்ர்(ரலி) அவர்கள் இறந்துவிட்டதற்காக) ஒப்பாரி வைத்தபோது அவரை உமர்(ரலி) அவர்கள் (வீட்டைவிட்டு) வெளியேற்றினார்கள்.

7224 ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! விறகுகளைக் கொண்டு வந்து சுள்ளிகளாக உடைக்கும்படி நான் உத்தரவு பிறப்பித்துவிட்டு, பின்னர் தொழுகைக்காக அறிவிப்புச் செய்யும்படி ஆணையிட்டு, பின்னர் மக்களுக்குத் தொழுகை நடத்தும்படி ஒருவருக்குக் கட்டளையிட்டுவிட்டு, (கூட்டுத் தொழுகைக்கு வராமல் இருக்கும்) மனிதர்களைத் தேடிச் சென்று, அவர்களின் வீடுகளை அவர்களுடன் சேர்த்து எரித்துவிட வேண்டுமென நான் எண்ணியதுண்டு. 84 என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! உங்களில் ஒருவருக்கு சதைத் திரட்சியுள்ள ஓர் எலும்போ அல்லது ஆட்டின் இரண்டு குளம்புகளுக்கிடையேயுள்ள இறைச்சித் துண்டுகளோ கிடைக்கும் என்றிருந்தாலும் கூட அவர் 'இஷா' தொழுகையில் கலந்து கொள்வார்.

முஹம்மத் இப்னு சுலைமான்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

(இந்த ஹதீஸின் மூலத்திலுள்ள) 'மிர்மாத்' என்பது ஆட்டின் குளம்புகளுக்கிடையே உள்ள இறைச்சியைக் குறிக்கும். இது (வாய்பாட்டில்) 'மின்ஸாத்' மற்றும் 'மீளாத்' போன்றதாகும். இதிலுள்ள 'மீம்' எனும் எழுத்துக்கு 'இகர' அடையாளம் ('கஸர்') உண்டு.

பகுதி 53

தலைவர் குற்றவாளிகளையும் பாவிகளையும் தன்னுடன் பேசுவது, தன்னைச் சந்திப்பது போன்றவற்றிலிருந்து தடை செய்யலாமா?

7225 கஅப் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் தபூக் போருக்குச் செல்லாமல் பின்தங்கிவிட்டபோது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், எங்களுடன் பேச வேண்டாம் என்று முஸ்லிம்களுக்குத் தடை விதித்தார்கள். இந்த நிலையிலேயே நாங்கள் ஐம்பது நாள்கள் இருந்தோம். பிறகு அல்லாஹ் எங்களை மன்னித்த செய்தியை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்.

கஅப் இப்னு மாலிக்(ரலி), அவர்களிடமிருந்து அவர்களின் புதல்வர்களில் ஒருவரான அப்துல்லாஹ் இப்னு கஅப்(ரஹ்) அவர்கள் இதை அறிவித்தார்கள். அன்னார் தாம் தம் தந்தை கஅப்(ரலி) அவர்கள் (முதுமையடைந்து) கண்பார்வை இழந்துவிட்டபோது அவர்களின் கையைப் பிடித்து அழைத்துச் செல்பவர்களாக இருந்தார்கள்.85
أحدث أقدم