فَلْيَحْذَرْ الَّذِينَ يُخَالِفُونَ عَنْ أَمْرِهِ أَنْ تُصِيبَهُمْ فِتْنَةٌ أَوْ يُصِيبَهُمْ عَذَابٌ أَلِيمٌ
”எவர் அவருடைய (முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின்) கட்டளைக்கு
மாறு செய்கிறார்களோ அவர்கள் தங்களை சோதனை பிடித்துக் கொள்வதையோ, அல்லது
தங்களை நோவினை தரும் வேதனை பிடித்துக்கொள்வதையோ அஞ்சிக் கொள்ளட்டும்.
(அல்குர்ஆன் 24:63)
நபி(ஸல்)அவர்களின் பிறந்த நாள் விழா
ரபீவுல் அவ்வல் என்ற உடனேயே அது நபி(ஸல்) அவர்கள் பிறந்த மாதமல்லவா! என்ற
நினைவு வருகிறது. முஸ்லிம்களுக்கு மத்தியில் இவ்வளவு பிரபலமாகியிருக்கும்
இம்மாதத்தில் நடைபெறும் செயல்கள் அல்லாஹ்வும் அவனது தூதர்(ஸல்) அவர்களும்
வழிகாட்டியதின் அடிப்படையில் அமையவேண்டுமல்லவா? எனவே இம்மாதத்தில் நாம்
செய்யும் செயல்களை அல்குர்ஆன் மற்றும் நபிமொழியின் ஒளியில் ஆராய்வோமே!
மீலாது விழா ஆரம்பமானது எப்போது?
நபி(ஸல்) அவர்களோ, நாற்பெரும் கலீஃபாக்களோ, மற்ற நபித்தோழர்களோ,
அவர்களுக்குப் பின் தோன்றிய தாபியீன்களோ, அல்லது நபி(ஸல்) அவர்களால்
போற்றப்பட்ட முந்தய மூன்று நூற்றாண்டுகளில் வாழ்ந்தவர்களோ மீலாது விழா
கொண்டாடவில்லை. அப்படியானால் மீலாது விழா ஆரம்பமானது எப்போது?
திருக்குர்ஆன் விரிவுரையாளர்களில் ஒருவரான இமாம் இப்னு கஸீர்(ரஹ்) அவர்கள்
கூறுகிறார்கள்:
ஹிஜ்ரீ 357 முதல் 567 வரை மிஸ்ரை (எகிப்து) ஆண்டு வந்த
ஃபாத்திமியீன்களின் ஆட்சியில் அப்துல்லாஹ் பின் மைமூன் அல் கதாஹ் என்ற
யூதனால் இஸ்லாத்தின் பெயரால் பல விழாக்கள் அரங்கேற்றப்பட்டன. அதில்
நபி(ஸல்) அவர்களின் பிறந்த நாள் விழாவும் ஒன்று. (நூல்: பிதாயா வன் நிஹாயா
பாகம் 11 – பக்கம் 172)
ஆக இவ்விழா ஹிஜ்ரீ நான்காம் நூற்றாண்டில் யூதர்களால் அரங்கேற்றப்பட்டுள்ளது.
மீலாது விழாவும் சஹாபாக்களும்
நாற்பெரும் கலீஃபாக்களும் மற்ற நபித்தோழர்களும் அவர்களுக்குப் பின் தோன்றிய
தாபியீன்களும் மார்க்கத்தை நன்கறிந்தவர்கள். நபி(ஸல்) அவர்களை மிக அதிகமாக
நேசித்து மார்க்க அடிப்படையிலேயே தம் முழு வாழ்க்கையையும் அமைத்துக் கொள்ள
முழுமையாக பாடுபட்டவர்கள் என்பதை நாம் அனைவரும் ஏற்றுள்ளோம், மீலாது விழா
கொண்டாடுவது நன்மையான செயல் என்றோ, அது நபி(ஸல்) அவர்களுக்கு புகழ்
சேர்க்குமென்றோ எண்ணியிருந்தால் அவர்கள் பலவிழாக்களை
கொண்டாடியிருப்பார்கள். ஆனால் அவர்கள் நபி(ஸல்) அவர்களின் பிறந்த நாளுக்கென
எந்த விழாவும் கொண்டாடவில்லை.
மீலாது விழாவும் கிரிஸ்மஸும்
ஈஸா(அலை) அவர்களுக்கு கிருத்துவர்கள் பிறந்தநாள் விழாக் கொண்டாடுவது போன்று
முஸ்லிம்களான நாம் நபி(ஸல்) அவர்களுக்கு விழாக் கொண்டாடுகிறோம். ஆனால்
இந்த ஒப்பீடு சரிதானா?
பிறசமயக் கலாச்சாரத்தைப் பின்பற்றுபவன் அந்த சமயத்தையே சார்ந்தவன் என நபி(ஸல்)அவர்கள் கூறியுள்ளார்கள். (நூல்: அபூதாவூத்)
கிருத்துவர்கள் பிறந்த நாளை விழா நாளாக கருதுவது போன்று நாமும்
கருதினால் இவ்விஷயத்தில் நாம் கிருத்துவ மதத்தை சார்ந்துள்ளோம் என்றே இந்த
நபிமொழி கூறுகிறது. எனவே நபிகளாரின் எச்சரிக்கைக்குப் பயந்து பிறந்த நாள்
விழா மற்றும் இதுபோன்ற பிறமதக் கலாச்சாரங்களை விட்டும் முற்றிலும் விலகி,
முழுமையான இஸ்லாமியராக வாழ முயற்சிக்க வேண்டும்.
அரபுக் கவிதைகள்
பிறந்த நாளை கொண்டாடும் விதமாக பல விசேஷ வழிபாடுகள் நம் சமுதாயத்தில்
அரங்கேற்றப்பட்டுள்ளன. அதில் இன்றியமையாததாகக் கருதப்படுவது மவ்லிது என்ற
பெயரால் பாடப்படும் அரபுக் கவிதைகள்தான். இக்கவிதைகளுக்கு நம் சமுதாயத்தில்
மகத்தான மதிப்பிருக்கிறது. ஆனால் இஸ்லாத்தில் இதற்கெதிரான எச்சரிக்கைதான்
இருக்கிறது. ஆனால் அவை பள்ளிவாசலிலும் கூட கூட்டம் கூடி, புனித வழிபாடாகக்
கருதிப்பாடப்படுகிறது. நபி(ஸல்) அவர்களைப் புகழ்வதற்காக இயற்றப்பட்ட
இப்பாடல்களின் பல வரிகள் புகழ்ச்சியில் வரம்புமீறி நபி(ஸல்) அவர்களுக்கு
இறைத்தன்மைகளை கொடுத்துக் கொண்டிருக்கின்றன. நபி(ஸல்) அவர்களிடம்
உதவிதேடுவது, அவர்களிடம் பாதுகாப்புத் தேடுவது, அவர்களுக்கு மறைவான ஞானம்
உண்டு என்று நம்புவது போன்ற ஷிர்க்கான (இறைவனுக்கு இணைவைக்கும்)
கருத்துக்களை இப்பாடல்கள் தன்னுள் கொண்டுள்ளன.
எந்தக் கொள்கையை விட்டும் மக்களைத் தடுப்பதற்காக நபி(ஸல்) அவர்கள்
நபியாக அனுப்பப்பட்டார்களோ அதே கொள்கையைக் கொண்ட பாடல்களை அவர்களை
புகழ்வதற்கே பாடப்படுகிறது. இது மிகப்பெரிய அநீதி இல்லையா? அதைவிடக் கொடுமை
என்னவெனில் அல்லாஹ்வை மட்டுமே அழைக்கப்படவேண்டிய பள்ளிவாயிலிலேயே அவனுக்கு
இணைவைக்கும் இக்கவிதைகள் மிகவும் பக்திப்பரவசத்தோடு பாடப்படுவதுதான்.
அல்லாஹ்வின் தண்டனைக்கு பயப்படக்கூடிய மக்களாக இருந்தால் தவ்பாச் செய்து
உடனே இச்செயலை விட்டும் விலகிவிட வேண்டும்.
பிறந்த நாள் விழாவா? இறந்த நாள் விழாவா?
இதில் கவனிக்க வேண்டிய மற்றொரு முக்கிய விஷயம் என்னவெனில் எந்த நாளில்
நபி(ஸல்)அவர்கள் பிறந்தார்கள் என்று கூறுகின்றார்களோ அதே நாளில்தான்
நபி(ஸல்)அவர்கள் இறந்தும் உள்ளார்கள். இவ்வாறிருக்க இவர்களின் விழாக்களும்
வழிபாடுகளும் நபி(ஸல்)அவர்களின் பிறப்பிற்காகவா? அல்லது இறப்பிற்காகவா?
இது சரியான காரணம்தானா?
மீலாது விழாவிற்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமும் இல்லாவிட்டாலும் நபிகளாரை
கண்ணியப்படுத்தும் விதமாக நாமாகக் கொண்டாட வேண்டும் என்று சிலர் காரணம்
கூறுவர்.
வெளிப்படையாகப் பார்த்தால் இக்கருத்து நபி(ஸல்) அவர்களை போற்றுவது போன்று
தோன்றினாலும் உண்மையில் இது நபி(ஸல்) அவர்கள் மீது அபாண்டமாக பழி சுமத்தும்
வார்த்தையாகும். இதனடிப்படையில் நபி(ஸல்) அவர்கள் சில நல்லறங்களை
இச்சமுதாயத்திற்கு சொல்லவில்லை, மறைத்துவிட்டார்கள் என்று கூற வேண்டிவரும்.
நபித்தோழர்களும் இந்நல்லறங்களை செய்யவில்லை என்று அவர்கள் மீதும் குறை
கூறவேண்டிவரும். -நவூது பில்லாஹ்- இந்நிலையை விட்டும் அல்லாஹ் நம்மை
பாதுகாப்பானாக!
நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்:
நல்லறங்கள் அனைத்தையும் தத்தமது சமுதாயத்திற்கு அறிவித்துவிடுமாறு அல்லாஹ்
அனைத்து நபிமார்களுக்கும் கட்டளையிட்டுள்ளான். (ஹதீஸின் சுருக்கம் –
முஸ்லிம்)
நிச்சயமாக நபி(ஸல்) அவர்கள் தனக்கு வழங்கப்பட்ட தூதுப்பணியை முழுமையாக
நிறைவேற்றியவர்களும் இறுதி நபியும் ஆவார்கள். அவர்கள் இச்சமுதாயத்திற்கு
தேவையான எந்தச் சட்டத்தையும் உபதேசத்தையும் கூறாமல் விட்டுவிடவில்லை.
மீலாது விழாக் கொண்டாடுவது மார்க்கத்தில் ஒரு அங்கமாக இருக்குமேயானால்
நிச்சயம் அதனையும் சொல்லியிருப்பார்கள். செய்திருப்பார்கள். அதனை
நபித்தோழர்களும் பின்பற்றியிருப்பார்கள்.
நபி(ஸல்) அவர்களை நேசிப்பது எப்படி?
வருடத்தில் இது போன்ற ஓரிரு விழாக்களை கொண்டாடிவிட்டு, அதன் பிறகு நாம்
நினைத்தது போன்று வாழ்ந்து கொள்வது நபி(ஸல்)அவர்களை நேசிப்பதாகாது. நம்
வாழ்வின் அனைத்துத்துறைகளையும் அனைத்துச் செயல்களையும் அல்லாஹ்வின்
தூதர்(ஸல்)அவர்களின் வழிகாட்டுதலின் அடிப்படையில் அமைத்துக் கொள்ளவேண்டும்.
அவர்களை முழுமையாக பின்பற்றவேண்டும்.
இதனை அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான்:
قُلْ إِنْ كُنْتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمْ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ
நீங்கள் அல்லாஹ்வை நேசிக்கக் கூடியவர்களாக இருந்தால் என்னைப்
பின்பற்றுங்கள்! அப்போது தான் அல்லாஹ் உங்களை நேசிப்பான் என்று நபியே நீர்
கூறுவீராக! (அல்குர்ஆன் 3:31)
உங்களில் ஒவ்வொருவரும் சொர்க்கத்தில் நுழைந்து விடுவீர்கள் மறுப்பவரைத்
தவிர என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர்(ஸல்)
அவர்களே! மறுப்பவர் என்றால் யார்? என்று தோழர்கள் கேட்டனர். என்னைப்
பின்பற்றுபவர் சொர்க்கத்தில் நுழைந்துவிடுவார். எனக்கு மாறுசெய்பவர்
நிச்சயமாக என்னை மறுத்தவராவார் -அவர் சொர்க்கத்தில் நுழையமாட்டார்- என்று
நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். (நூல்: முஸ்லிம்)
எனவே நபி(ஸல்)அவர்களை பின்பற்றி நடப்பதே அவர்களை மதிப்பதின் அடையாளமாகும்.
மார்க்கம் முழுமையாக்கப்பட்டுவிட்டது. அல்லாஹ் நபி(ஸல்)அவர்களோடு இம்மார்க்கத்ததை முழுமையாக்கிவிட்டதாக குர்ஆனில் அறிவித்துவிட்டான்.
الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمْ الْإِسْلَامَ دِينًا
இன்றய தினம் உங்களுடைய மார்க்கத்தை உங்களுக்காக நாம் முழுமையாக்கி
விட்டேன். நம்முடைய அருட்கொடையை உங்கள் மீது பரிபூரணப்படுத்தி விட்டேன்.
உங்களுடைய மார்க்கமாக நான் இஸ்லாத்தைப் பொருந்திக் கொண்டேன். (அல்குர்ஆன்
5:3)
இந்த வசனம் ஹஜ்ஜத்துல் விதாவில் (விடைபெரும் ஹஜ்ஜில்) அரஃபா தினத்தன்று
இறங்குகிறது. நபி(ஸல்) அவர்கள் உயிரோடு இருக்கும் போதே மார்க்கம் முழுமை
பெற்றுவிட்டது எனும்போது, நபி(ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பிறகு அவர்கள்
கற்றுத்தராத ஒன்றை மார்க்கத்தில் இணைக்கவோ, அவர்கள் கட்டளையிட்டவற்றை
நீக்கவோ யாருக்கும் உரிமை கிடையாது. இதனடிப்படையில் மீலாது விழா என்பது
நபி(ஸல்) அவர்கள் மரணித்து நான்கு நூற்றாண்டுகளுக்கு பிறகு
ஆரம்பிக்கப்பட்டது எனும்போது அதற்கு மார்க்க சாயம் பூசுவது இறைவனுடைய
அதிகாரத்தில் நமது கரங்களை நுழைப்பதாகும். இதுபோன்று மார்க்க விஷயத்தில்
விளையாடிய யூத, கிருத்துவர்களுக்கு கிடைத்த தண்டனைகளையும்
கிடைக்கவிருக்கும் மறுமை வேதனைகளையும் திருக்குர்ஆனில் அல்லாஹ் பல
இடங்களில் கூறுகிறான். எனவே நாம் இதுபோன்று மார்க்கத்தில் புதிய செயல்களை
உறுவாக்குவதை விட்டும் முற்றிலும் தூரமாகி விடவேண்டும்.
மார்க்கத்தில் நூதனச் செயல்
மார்க்கத்தில் புதிதாக உறுவாக்கப்படுபவை அனைத்தும் பித்அத் (மார்க்கத்தில்
நூதனச்) செயலாகும். அல்லாஹ்வும் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களும்
கற்றுதராதவற்றை மார்க்கத்தின் அங்கமாக நினைத்து செயல்படுத்தப்பட்டால்
நிச்சயமாக அது வழிகேடாகும். அது மறுமையில் நிராகரிக்கப்பட்டுவிடும்.
அதற்குரிய தண்டனையும் கிடைக்கும்.
நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:
மார்க்கத்தில் புதிதாக உண்டாக்கப்படும் அனைத்தும் வழிகேடாகும். (நூல்: புகாரி)
யார் நம்முடைய இந்த மார்க்க விஷயத்தில் அதில் இல்லாத ஒன்றை புதிதாக உறுவாக்குகின்றாரோ அது மறுக்கப்பட்டுவிடும். (நூல்: முஸ்லிம்)
மஹ்ஷரில் கவ்ஸர் எனும் தடாகத்திலிருந்து நபி(ஸல்) அவர்கள் தண்ணீர்
புகட்டிக் கொண்டிருப்பார்கள். அதில் நீர் அருந்துவதற்காக மார்க்கத்தில்
நூதனச் செயல்களை உண்டாக்கியவர்களும் வருவார்கள். அவர்களை தண்ணீர் அருந்த
விடாமல் மலக்குகள் இழுத்துச் சென்று விடுவார்கள். (ஹதீஸின் சுருக்கம்:
புகாரி)
எனவே மீலாது விழாவும் மார்க்கத்தில் புதிதாக உண்டாக்கப்பட்டவையே!
இதற்காக செலவிடப்படும் பணத்திற்கோ, உழைப்பிற்கோ அல்லாஹ்விடத்தில் எந்த
நன்மையும் கிடைக்காது. மாறாக மஹ்ஷரில் நபி(ஸல்)அவர்கள் புகட்டும் தண்ணீரை
அருந்தும் வாய்ப்பை இழந்து கொடிய வெப்பத்தில் தாகத்தால் பரிதவிக்க
நேரிடும்.
எனவே அன்பிற்கினிய சகோதரர்களே! மீலாது விழா உட்பட மார்க்கத்தில் முரணான
எந்தச் செயலுக்கும் பொருளாலோ, உழைப்பாலோ, ஆலோசனையாலோ வேறு எந்த விதத்திலும்
உதவவேண்டாம் என அன்புடன் வேண்டுகிறோம்.
மௌலவி M.முஜீபுர்ரஹ்மான் உமரீ