அத்தியாயம் - 6 ஹஜ்

புலுகுல் மராம்  நபிமொழி தொகுப்பு
அத்தியாயம் - 6    ஹஜ்

ஹஜ் கடமையாக்கப்பட்டவர்களும் அதன் சிறப்புகளும்

727 ''உம்ராவானது, மறு உம்ரா வரையிலான பாவங்களின் பரிகாரமாகும். பாவங்கள் கலக்காத ஹஜ்ஜுடைய கூலி சுவர்க்கத்தைத் தவிர வேறில்லை!'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்

728 ''அல்லாஹ்வின் தூதர் அவர்களே! பெண்கள் மீது ஜிஹாத் உண்டா?'' என்று நான் கேட்டதற்கு, ''ஆம்! நீ பெண்கள் மீது ஜிஹாத் உண்டு. போர் இல்லை. அது ஹஜ் மற்றும் உம்ரா ஆகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், இப்னு மாஜா

இது ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இங்கு இப்னு மாஜாவின் வாசகம் இடம் பெற்றுள்ளது. இதன் மூலம் புகாரியில் உள்ளது.

729 நபி(ஸல்) அவர்களிடம் ஒரு நாட்டுப் புறத்தார் வந்து, ''அல்லாஹ்வின் தூதர் அவர்களே! எனக்கு உம்ராவைப் பற்றிக் கூறுங்கள். அது கடமையா?'' என்று கேட்டதற்கு, இல்லை! நீ உம்ரா செய்தால் உனக்குச் சிறப்பு என்று கூறினார்கள் என, ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், திர்மிதீ

இதில் மவ்கூஃப் எனும் தரம் மேலோங்கியள்ளது. இப்னு அதீ உடைய மற்றோர் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மற்றோர் அறிவிப்பின்படி ஜாபிர்(ரலி) வாயிலாக, 'ஹஜ் மற்றும் உம்ரா கடமைகள் என்று மர்ஃபூஃ எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

730 ''அல்லாஹ்வின் தூதர் அவர்களே! ஸபீல் என்றால் என்ன? (எதைக் குறிக்கும்?)'' என்று பதிலளித்தார்கள் என, அனஸ்(ரலி) அறிவிக்கிறார். தாரகுத்னீ

இது ஹாகிமில் ஸஹீஹ் எனும் தரத்தில் உள்ளது இன்னும் முர்ஸல் எனும் தரமே இதில் மேலோங்கியள்ளது.

731 இப்னு உமர்(ரலி) வாயிலாக திர்மிதீயில் இடம் பெறும் ஹதீஸ் ளயீஃப் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

732 (மதீனாவிற்கு அருகில் உள்ள) ரவ்ஹா எனும் இடத்தில் நபி(ஸல்) அவர்கள் ஒரு பயணக் கூட்டத்தைச் சந்தித்த போது, ''நீங்கள் யார்?'' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கவர்கள், ''நீங்கள் யார்?'' என்று கேட்டனர். ''நான் அல்லாஹ்வின் தூதர்'' என்று நபி(ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள். அப்போது ஒரு பெண் பிள்ளையை நபி(ஸல்) அவர்களின் பால் கொண்டு வந்து, ''இதற்கு ஹஜ் இருக்கிறதா?'' என்று கேட்டார். ''ஆமாம்! அதன் கூலி உனக்காகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்

733 ஃப்ழ்ல் இப்னு அப்பாஸ் சவாரியில் நபி(ஸல்) அவர்களுக்குப் பின்னால் அமர்ந்திருந்தார். அப்போது கஸ்அம் கோத்திரத்திலிருந்து ஒரு பெண்மணி வந்தார். உடனே ஃபழ்ல் அந்தப் பெண்ணைப் பார்த்தார். அந்தப் பெண்ணும் அவரைப் பார்க்கலானாள். நபி(ஸல்) அவர்கள் ஃபழ்ல் உடைய முகத்தை வேறு திசையில் திருப்பலானார்கள். அப்போது, ''அல்லாஹ்வின் தூதர் அவர்களே! அடியார்கள் மீது ஹஜ் அல்லாஹ்வின் கடமையாக உள்ளது. என்னுடைய தந்தை மிகவும் வயோதிகராம் விட்டார். அவரால் வாகனத்தில் அமர முடியாது. (எனவே) அவர் சார்பாக நான் ஹஜ் செய்யலாமா?'' என்று கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ''ஆம்! (செய்யலாம்) என்றார்கள். இது ஹஜ்ஜத்துல்வதாவில் நிகழ்ந்தது'' என்று இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்

இங்கு புகாரியின் வாசகம் இடம் பெற்றுள்ளது.

734 ஜுஹைனா கோத்திரத்திலிருந்து ஒரு பெண்மணி நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ''(அல்லாஹ்வின் தூதர் அவர்களே!) என்னுடைய தாய் ஹஜ் செய்வதாக நேர்ச்சை செய்திருந்தார். ஆனால் ஹஜ் செய்யாமலேயே இறந்துவிட்டார். அவருக்காக நான் ஹஜ் செய்யலாமா?'' என்று கேட்டார். (அதற்கு) ''ஆமாம் நீ அவருக்காக ஹஜ் செய்! உன்னுடைய தாய் மீது கடனிருந்தால், அதை நீ தீர்ப்பாயல்லவா? அல்லாஹ்வுடைய கடனைத் தீருங்கள். நமது வாக்கை நிறைவேற்றித் தர அல்லாஹ்வே மிகவும் அருகதையானவன் என்று நபி(ஸல்) அவர்கள் பதில் அளித்தார்கள். இதை இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம் புகாரி

735 ''எவர் சிறுவராக இருக்கும் போது ஹஜ் செய்து விட்டாரோ, அவர் இளமையடைந்து விட்டாரோ, அவர் இளமையடைந்து விட்டால் மற்றொரு ஹஜ் செய்ய வேண்டும். எவர் அடிமையாக இருக்கும் போது ஹஜ் செய்து விட்டாரோ, அவர் விடுதலையடைந்து விட்டால் மற்றொரு ஹஜ் செய்ய வேண்டும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என, இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கிறார். இப்னு அபீ ஷைபா, பைஹக்கீ

இதன் அறிவிப்பாளர்கள் பலமானவர்கள் இது மர்ஃபூஃ எனும் தரத்தில் உள்ளதா? என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது. மவ்கூஃப் எனும் தரமே இதில் மேலோங்கியள்ளது.

736 ''எந்த ஒரு பெண்ணுடனும் அவளை மணம் புரிவது தடை செய்யப்பட்ட ஒருவர் இல்லாமல் அவளுடன் எவரும் தனித்திருக்க வேண்டாம். இன்னும் எந்த பெண்ணும் திருமண பந்தம் தடை செய்யப்படாத ஓர் ஆணுடன் தனித்துப் பயணம் செய்ய வேண்டாம்'' என்று நபி(ஸல்) அவர்கள் உரை நிகழ்த்த நான் கேட்டுள்ளேன். அப்போது ஒருவர் எழுந்து ''அல்லாஹ்வின் தூதர் அவர்களே! என்னுடைய மனைவி தனியாக ஹஜ் செய்யச் சென்றுள்ளார். நானோ இன்ன இன்ன யுத்தங்களில் ஈடுபடுத்தப்பட்டுள்ளேன்'' என்று கூறினார். அதற்கு, ''நீ சென்று உன்னுடைய மனைவியுடன் ஹஜ்ஜை மேற்கொள்!'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என, இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்

இங்கு முஸ்லிமுடைய வாசகம் இடம் பெற்றுள்ளது.

737 ஒரு மனிதர் (ஹஜ் செய்யும் போதும்), ''ஷுப்ருமாவின் சார்பாக நான் ஆஜராகியள்ளேன்... என்று சொல்வதை செவியுற்ற நபி(ஸல்) அவர்கள், ''ஷுப்ருமா யார்?'' என்று கேட்டார்கள். அதற்கு அவர் ''என்னுடைய சகோதரன்'' என்றோ, ''எனக்கு நெருக்கமானவர்'' என்றோ கூறினார். (அதற்கு) ''முதலில் உனக்காக ஹஜ் செய்து கொள்! என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு அப்பா!(ரலி) அறிவிக்கிறார். அபூதாவூத், இப்னு மாஜா

இது இப்னு ஹிப்பானில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மவ்கூஃப் எனும் தரமே மேலோங்கியள்ளதாக அஹ்மதில் உள்ளது.

738 நபி(ஸல்) அவர்கள் ஒருமுறை எங்களுக்கு உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும் போது, ''அல்லாஹ் உங்கள் மீது ஹஜ்ஜை விதியாக்கியள்ளான்'' என்று கூறினார்கள். அப்போது அக்ரஉ இப்னு ஜாபிஸ்(ரலி) எழுந்து நின்று ''அல்லாஹ்வின் தூதர் அவர்களே! இது ஒவ்வொரு வருடமுமா?'' என்று கேட்டார். (அதற்கு) ''நான் அப்படிச் சொன்னால் அது கடமையாகி விடும். ஹஜ் என்பது ஒருமுறை தான். அதற்கு மேல் செய்வது உபரியாகி விடும்'' என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத்,அபூ தாவூத், நஸாயீ, மற்றும் இப்னுமாஜா

739 இதன் (738வது ஹதீஸின்) மூலம் அபூஹுரைரா(ரலி) வாயிலாக முஸ்லிமிலும் உள்ளது.



மினா எல்லை

740 மதீனா வாசிகளுக்கு துல்ஹுலைஃபா எனும் இடத்தையும் சிரியா வாசிகளுக்கு ஜுஹ்ஃபா எனும் இடத்தையும், நஜ்த் வாசிகளுக்கு கர்ன் அல்மனாஸில் எனும் இடத்தையும் இன்னும் யமன் வாசிகளுக்கு கர்ன் அல்மனாஸில் எனும் இடத்தையும் இன்னும் யமன் வாசிகளுக்கு 'யலம்லம்' எனும் இடத்தையும் இஹ்ராம் கட்டுமிடமாக நபி(ஸல்) அவர்கள் ஆக்கினார்கள். இவை அவர்களுக்கும் இவற்றின் வழியாக யார் ஜழைகிறார்களோ, அவர்களுக்கும் அங்கு இஹ்ராம் கட்டும் இடங்களாகும். மக்காவாசிகள் இஹ்ராம் கட்டுமிடம் மக்காவே ஆகும் என, இஹ்ராம் கட்டுமிடத்தை நபி(ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள். புகாரி, முஸ்லிம்

741 இராக் வாசிகளின் இஹ்ராம் கட்டுமிடம் 'தாத்து' 'இர்க்' எனும் மலைக்குன்று அருகே என நபி(ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள் என ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அபூதாவூத், நஸயீ

742 ஹதீஸ் 741 உடைய மூலம் ஜாபிர்(ரலி) அவர்கள் வாயிலாக முஸ்லிமில் உள்ளது. அதனுடைய அறிவிப்பாளர் அதற்கு மர்ஃபூஃ எனும் தரம் உள்ளதா என சந்தேம்க்கிறார்.

743 உமர்(ரலி) அவர்கள்,தாம், தாத்து இர்க் என்னும் இடத்தை இஹ்ராம் கட்டுமிடமாக ஆக்கினார்கள் என, புகாரியில் உள்ளது.

744 நபி(ஸல்) அவர்கள், கீழை நாட்டவர்களின் இஹ்ராம் கட்டுமிடமாக 'அகீக்' எனும் இடத்தை ஆக்கினார்கள் என்று இப்னு அப்பாஸ்(ரலி) வாயிலாக அஹ்மத், அஹ்மத், திர்மிதீயில் உள்ளது.



இஹ்ராமுடைய தன்மைகள் மற்றும் அதன் வகைகள்

745 ஹஜ்ஜதுல் வதா ஆண்டில் நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் சென்றோம். அப்போது எங்களில் சிலர் உம்ராவுக்காக இஹ்ராம் கட்டினார்கள். மற்றும் சிலர் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டினார்கள். நபி(ஸல்) அவர்கள் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டினார்கள் எவர்கள் உம்ராவுக்காக இஹ்ராம் கட்டினார்களோ, அவர்கள் மக்காவை அடைந்தவுடன் (உம்ரா செய்து) இஹ்ராமைக் கலைந்து விட்டார்கள். எவர்கள் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டினார்களோ அல்லது ஹஜ் உம்ரா இரண்டையும் ஒன்று சேர்த்து கிரானுடைய ஹஜ்ஜுக்கு இஹ்ராம் கட்டினார்களோ, குர்பானியுடைய நாள் வரும் வரை அது (இஹ்ராமைக் கலைதல்) ஆகுமானதல்ல. புகாரி, முஸ்லிம்



இஹ்ராம் தொடர்பான விளக்கங்கள்

746 துல்ஹுலைஃபா இடத்திலுள்ள மஸ்ஜிதைத் தவிர்த்து நபி(ஸல்) அவர்கள் வேறெங்கும் இஹ்ராம் கட்டியது இல்லை என்று இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்

747 என்னிடம் ஜிப்ரில்(அலை) அவர்கள் வந்து என்னுடைய தோழர்கள். அவர்களுடைய லப்பைக் முழக்கத்தை உயர்த்தும்படி கட்டளையிட வேண்டுமாறு எனக்குக் உத்தரவிட்டார்கள் என்று நபி(ஸல்) கூறினார்கள் என, கல்லாத் இப்னு அஸ்ஸாயிபு தம்முடைய தந்தையிடமிருந்து அறிவிக்கிறார். அஹ்மத், அபூ தாவூத், நஸயீ, திர்மிதீ மற்றும் இப்னு மாஜா.

திர்மிதீ மற்றும் இப்னு ஹிப்பானில் இது ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

748 நபி(ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்டும்போது தம்முடைய ஆடைகளைக் களைந்து குளித்தனர்.

இது ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

749 ''இஹ்ராம் கட்டுபவர்கள், எத்தகைய ஆடை அணிய வேண்டும்? என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டதற்கு, ''சட்டை, தலைப்பாகை மற்றும் காலுறை மற்றும் தலையில் முடிய நீண்ட அங்கி ஆகியவற்றை அணியவேண்டாம். எவரிடமேனும் காலணி இருப்பின் அவர் காலுறை அணிந்து கொள்ளட்டும். ஆனாலும், அதை கரண்டைக் காலுக்குக் கீழ் கத்தரித்துக் கொள்ளட்டும். காவி (அல்லது குங்குமப்பூச்சாயம்) மேலும், 'வர்ஸ்' எனும் செடியின் இலையின் சாயம் பூசப்பட்ட ஆடைகளை அணிய வேண்டாம்'' என்று நபி(ஸல்) அவர் கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்

இங்கு முஸ்லிமின் வாசகம் இடம் பெற்றுள்ளது.

750 நபி(ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்டுவதற்கு முன்பும் கஅபத்துல்லாஹ்வை வலம் வருவதற்கு முன்பு இஹ்ராமைக் கலையும் போதும் நான் அவர்களுக்கு நறுமணம் பூசினேன் என, ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்

751 இஹ்ராம் கட்டியவர் நிக்காஹ் (திருமணம்) செய்யவோ திருமணம் செய்து வைக்கவோ, இன்னும் அதற்காக உரை நிகழ்த்தவோ கூடாது என்று நபி(ஸல்) கூறினார்கள் என உஸ்மான் இப்னு அஃப்பான்(ரலி) அறிவிக்கிறார்கள். முஸ்லிம்

752 தான் இஹ்ராம் கட்டாத நிலையில் இருக்கும் போது காட்டுக் கழுதையை வேட்டையாடிய சம்பவம் பற்றி அபூ கதாதா அன்சாரி(ரலி) அறிவிக்கிறார். இஹ்ராம் கட்டிய தம்முடைய தோழர்களைப் பார்த்து, (இதற்காக) உங்களில் எவரேனும் கட்டளையிட்டாரா? அல்லது சமிக்ஞை செய்தாரா? என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டதற்கு, அவர்கள், ''இல்லை'' என்று சொன்னார்கள். ''(அதன்பின்) மீதமிருக்கும் அதன் கறியை உண்ணுங்கள்'' என சொன்னார்கள். புகாரி, முஸ்லிம்

753 நபி(ஸல்) அவர்களுக்கு அப்வா அல்லது வத்தான் எனும் இடத்தில் இருக்கும் போது ஒரு காட்டுக் கழுதையை அன்பளிப்பாகக் கொடுத்தேன். அதை அவர்கள் என்னிடமே திருப்பிக் கொடுத்து விட்டு, நாங்கள் இஹ்ராம் கட்டியிருப்பதால் தான் இதைத் திரும்பத் தருகிறோம்'' என்று கூறினார்கள் என ஸஅப் இப்னு ஜஸ்ஸலாமா அல் லைஸி(ரலி) அறிவிக்கிறார்கள். புகாரி, முஸ்லிம்

754 மிகத் தீய ஐந்து உயிரினங்களை இஹ்ராம் கட்டியிருக்கும் நிலையிலும் சொல்ல வேண்டும். அவை 1 தேன் 2. பருந்து 3. காகம் 4. எலி 5. வெறிநாய் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். புகாரி, முஸ்லிம்

755 நபி(ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்டியிருக்கும் நிலையில், இரத்தம் குத்தி எடுத்துக் கொண்டார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்

756 நான் நபி(ஸல்) அவர்களிடம் தூக்கி வரப்பட்டேன். அப்போது என்னுடைய முகத்தில் பேன்கள் உதிர்ந்து கொண்டிருந்தன. ''நான் உன்னை இப்போது பார்க்கும் அளவுக்கு உனக்கு நோய் இருக்கும் என்று நான் கருத வில்லை'' என்று கூறிவிட்டு ''உன்னிடம் ஆடு எதுவும் இருக்கிறதா?'' என்று கேட்டார்கள். அதற்கு நான் ''இல்லை'' என்று சொன்னேன். ''அப்படியானால், நீ மூன்று தினங்கள் நோன்பு நோற்றுக் கொள்! அல்லது ஆறு ஏழைகளுக்கு (நபர் ஒன்றுக்கு) அரை ஸாவு அளவு உணவளித்திடு!'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என கஅப் இப்னு உஜ்ரா(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்

757 அல்லாஹ் தனது தூதருக்கு மக்கா வெற்றியை அளித்ததும் அவர்கள் எழுந்து நின்று, அல்லாஹ்வைப் புகழ்ந்து போற்றி விட்டு, அல்லாஹ் யானைகளை மக்காவை விட்டுத் தடுத்து விட்டான். இன்னும் தனது தூதர் மற்றும் முஸ்லிம்களுக்கு அதன் மீது வெற்றியைக் கொடுத்தான். நிச்சயமாக மக்காவில் போர் புரிவது எனக்கு முன்பு எவருக்கும் அனுமதிக்கப்படவில்லை. நிச்சயமாக எனக்குப் பின்னரும் மக்காவில் போர்புரிவது எவருக்கும் அனுமதிக்கப்படாது. அதன் வேட்டைப் பிராணிகளை விரட்டக் கூடாது. அதில் முள் மரங்களையும் வெட்டக் கூடாது. அங்கு கீழே விழும் பொருளை பொது அறிவிப்புச் செய்பவர் தவிர, வேறு யாரும் எடுக்கக் கூடாது. கொலை செய்யப்பட்டவனின் சாராருக்கு (ஈட்டுத் தொகை வாங்கிக் கொள்ளும் அல்லது பழிதீர்க்கும்) இரண்டு உரிமைகளில் சிறந்தது ஒன்று தரப்பட்டுள்ளது. அப்போது ''நம்முடைய இல்லங்கள், அடக்க ஸ்தலங்களில் நாம் பயன்படுத்தக் கூடிய இத்கிர் எனும் புல்லில் மட்டும் சலுகை அளியுங்கள். அல்லாவின் தூதர் அளியுங்கள். அல்லாஹ்வின் தூதர் அவர்களே!'' என்று அப்பாஸ்(ரலி) அவர்கள் கேட்டதற்கு ''இத்கிரைத் தவிர'' என்று நபி(ஸல்) பதிலளித்தார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்

758 இப்ராஹீம் (அலை) அவர்கள் மக்கா வைப் புனித நகராக அறிவித்து அதில் வாழும் மக்களுக்காக துஆ செய்தார்கள். மக்காவை இப்ராஹீம் புனிதமாக்கியது போன்று நானும் மதீனாவைப் புனிதமாக்குகிறேன். மேலும், அதன் 'முத்'திலும் 'ஸாஉ' விலும் அருள்வளம் வழங்கும்படி இப்ராஹீம்(அலை) அவர்கள் மக்காவாசிகளுக்காக பிரார்த்தித்ததைப் போன்றே மதீனாவாசிகளுக்காகப பிரார்த்தித்தேன். புகாரி, முஸ்லிம்

759 ''மலையிலிருந்து 'ஸ்வர்' மலை வரையுள்ள மதீனாவின் மலை வரையுள்ள மதீனாவின் நிலப்பரப்பு புனிதமானது'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அலீ இப்னு அபீதாலீப்(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்



ஹஜ்ஜின் ஒழுங்குகள், மக்கா பிரவேசம்

760 நபி(ஸல்) அவர்கள் ஹஜ் செய்த போது நாங்கள் அவர்களுடன் சென்றோம். நாங்கள் துல்ஹுலைஃபா எனும் இடத்தை அடைந்த போது அஸ்மா பின்த்து உமைஸ் குழந்தை பெற்றெடுத்தார். ''குளித்து விட்டு ஏதாவது துணியை இடுப்பில் (கோவணம்) கட்டிக் கொள்! இன்னும் இஹ்ராம் கட்டிக் கொள்!'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். பின்னர் நபி(ஸல்) அவர்கள் பள்ளியில் தொழுது விட்டு, தம்முடைய கஸ்வா எனும் தமது ஒட்டகத்தில் எறினார்கள். 'பைதா' எனும் இடத்தை அடைந்ததும் அவர்கள் ஏகத்துவ முழக்க மிடலானார்கள். ''யா அல்லாஹ்! நான் ஆஜராம் விட்டேன். உனக்கு இணை எதுவும் இல்லை. நான் ஆஜராம் விட்டேன். உண்மையில் அனைத்துப் புகழும், அருளும் இன்னும் ஆட்சியதிகாரம் அனைத்தும் உன் கைவசமே. இன்னும் உனக்கு இணை எதுவும் இல்லை'' என்று கூறினார்கள். இதற்கிடையில் நாங்கள் பைத்துல் லாஹ்வில் நுழைந்தோம். நபி(ஸல்) அவர்கள் ஹஜ்ருல் அஸ்வத்தை முத்தமிட்டார்கள். பின்னர் மூன்று சுற்றுக்கள் ஓட்டமாகவும், நான்கு சுற்றுகள் நடையாகவும் தவாஃப் செய்தார்கள். பின்னர் மகாமெ இப்ராஹீம் எனும் இடத்திற்கு வந்து தொழுதார்கள். பின்னர் ஹரமுயை வாயிற் கதவு வழியாக ஸஃபா விற்குச் சென்றார்கள். ஸஃபா, மர்வா இரண்டும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் உள்ளவை என்ற வசனத்தை ஓதினார்கள். அல்லாஹ் தொடங்கிய இந்த இடத்திலிருந்து தொங்கோட்டத்தைத் தொடர்கிறேன் என்று கூறிவிட்டு, கஅபா தெரியும் அளவுக்கு ஸஃபாவில் ஏறினார்கள். பின்னர், கிப்லாவை முன்னோக்கி அல்லாஹ் ஒருவன் என எடுத்துரைத்து அவனது பெருமையை எடுத்தோதினார்கள். ''வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை. அவன் தனித்தவன், அவனுக்கு இணை துணை இல்லை. ஆட்சியதிகாரம் அவனுக்கே உரியது. புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது. அவன் அனைத்துப் பொருட்கள் மீதும் சக்தி வாய்ந்தவன். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. அவன் தன்னுடைய வாக்குறுதியை முழுமையாக்கினான். இன்னும் தன்னுடைய அடியாருக்கு உதவினான். இறை மறுப்பாளர்களின் கூட்டத்தை அவனே தனித்து நின்று (வெற்றி கண்டான்) தோல்வியடையச் செய்தான். பின்னர் இதற்கு நடுவில் துஆ செய்தார்கள். மூன்று முறை இதே போன்று சொன்னார்கள். பின்னர் ஸஃபாவிலிருந்து இறங்கி மர்வாவின் பக்கம் சென்றார்கள். தம் இரண்டு கால்களையும் பள்ளத்தில் பதித்து மர்வாவின் ஏறும் வரை ஓடினார்கள் ஸஃபாவில் தாம் செய்ததையே மர்வாவிலும் செய்தார்கள். தர்வியா தினம்: (துல்ஹஜ் எட்டாம் நாள்) அன்று மக்கள் மினாவுக்குத் திரும்பினார்கள். மேலும் நபி(ஸல்) அவர்கள் தம் சவாரியில் ஏறினார்கள். பின்னர் அங்கு சென்றதும் லுஹர் மற்றும் அஸர் தொழுதார்கள். பின்னர், மக்ரிப் மற்றும் இஷா தொழுதார்கள். பின்னர், அங்கு சூரியன் உதயமாகும் வரை சிறிது நேரம் தங்கினார்கள். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு முஸ்தலிஃபா வழியாக அரஃபா மைதானம் வந்தார்கள். அங்கு 'நமிரா' எனும் இடத்தில் நபி(ஸல்) அவர்களுக்காக ஒரு கூடாரம் அடிக்கப்பட்டிருந்தது. அங்கு அவர்கள் இறங்கினார்கள். சூரியன் உச்சி சாய்ந்தவுடன் தம்முடைய 'கஸ்வா' எனும் ஒட்டகத்தின் மீது பயண இருக்கையை வைக்குமாறு கட்டளையிட்டார்கள். அதில் அவர்கள் ஏறி அரஃபா பள்ளத்தாக்கிற்கு வந்தார்கள். அங்கு மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். பின்னர் பாங்கும், இகாமத்தும் சொல்லப்பட்டது. பிறகு லுஹர் தொழுகையை நிறைவேற்றினார்கள். பின்னர் (மறுபடியும்) இகாமத் சொல்லச் செய்து அஸர் தொழுகையை நிறைவேற்றினார்கள். அவை இரண்டிற்குமிடையில் எத்தொழுகையும் தொழவில்லை. பின்னர் தம் சவாரியில் ஏறி இருப்பிடம் வந்தார்கள். பின்னர் தம் கஸ்வா எனும் ஒட்டகத்தின் வயிறு ஸகராத் எனும் இடத்தை நோக்கியம், ஹப்லு முஷாத்தை தமக்கு முன்பாக்கியம், கிப்லாவை எதிர்நோக்கியம் நபி(ஸல்) அவர்கள் இருந்தார்கள். சூரியன் சற்று மஞ்சள் நிறத்தை அடைந்து மறையும் வரை நின்றே இருந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் ஒட்டகத்தின் (வேகத்தை குறைப்பதற்காக அதன் தலை, நெஞ்சோடு ஒன்றிணையும் அளவிற்கு கடிவாளத்தை பிடித்து இழுத்துவாறு அங்கிருந்து புறப்பட்டார்கள். ''மக்களே! மிதமாக செல்லுங்கள்! மிதமாகச் செல்லுங்கள்'' என்று தமது வலக்கரத்தால் சைகை செய்தார்கள். மணற் குன்றுகளில் ஒட்டகம் ஏறும் போதெல்லாம் அதன் கடிவாளத்தை விட்டவாறே, முஸ்தலிஃபா வந்தடைந்தார்கள். அங்கு, ஒரு பாங்கு, இரு இகாமத்துடன் மக்ரிப் மற்றும் இஷா தொழுகையை நிறைவேற்றினார்கள். அவ்விரண்டு தொழுகைக்குமிடையில் வேறு எந்த தொழுகையும் தொழவில்லை. பின்னர் கிழக்கு வெளுக்கும் வரை சாய்ந்து விட்டு, பாங்கு இகாமத் கூறி ஃபஜர் தொழுதார்கள். பின்பு தமது கஸ்வாவில் அமர்ந்து முஸ்தலிஃபாவில் உள்ள மஷ் அருல் ஹராம் எனும் இடத்திற்கு வந்தார்கள். அங்கு கிப்லாவை முன்னோக்கி, பிரார்த்தித்து, தக்பீர், தஹ்லீல் கூறியவாறு நன்கு விடியும் வரை அங்கேயே நின்றிருந்தார்கள். பின்னர் சூரியன் உதயமாகும் முன்பு அங்கிருந்து புறப்பட்டு சற்று விரைந்து பத்னு முஹஸ்ஸர் எனும் இடத்தை வந்தடைந்தார்கள். பின்னர் அங்கிருந்து ஐம்ரத்துல் குப்ரா சென்றடையும் தாரிகுல் உஸ்தா வழியாக ஜம்ராவை வந்தடைந்தார்கள். அங்கு ஏழு கற்களை (ஒவ்வொரு கல்லிற்கும்) தக்பீர் சொல்லிக் கொண்டே பத்னுல் வாத் எனும் பள்ளத்தாக்கிலிருந்து எறிந்தார்கள். ஒவ்வொரு கல்லும பட்டாணிக் கடலைக்கும் சிறியதாக இருந்தது. பின்னர் குர்பானி கொடுக்குமிடம் திரும்பிச் சென்று குர்பானி கொடுத்தார்கள். பின்னர் வாகனத்தில் அமர்ந்து, கஅபத்துல்லாஹ் சென்று தவாஃபுல் இஃபாளவை முடித்து விட்டு மக்காவில் லுஹர் தொழுதார்கள் என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்

இது நீண்ட ஹதீஸாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

761 நபி(ஸல்) அவர்கள் தல்பிய்யா சொல்லி முடித்தவுடன் அல்லாஹ்விடம் ''அவனது திருப்தியையும், சுவர்க்கத்தையும் வேண்டுவார்கள். இன்னும் அவனுடைய கருணையைக் கொண்டு நரகத்திலிருந்து பாதுகாப்புத் தேடுவார்கள்'' என்று குஸைமா இப்னு ஸாபித்(ரலி) அறிவிக்கிறார். ஷாஃபிஈ

இது ளயீஃப் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

762 ''நான் இந்த இடத்தில் குர்பானி கொடுத்தேன். மினாவில் எல்லா இடங்களிலும் குர்பானி கொடுக்கலாம். நீங்கள் உங்களுடைய இருப்பிடங்களில் குர்பானி கொடுத்துக் கொள்ளுங்கள். நான் இங்கு தங்கினேன். அரஃபா மைதானம் எல்லாம் தங்குமிடம் தான். நான் இங்கு தங்கினேன். முஸ்தலிஃபா எல்லாமே தங்குமிடம் தான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஜாபிர்(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்

763 ''நபி(ஸல்) அவர்கள் மக்காவில் அதன் மேல் திசையில் நுழைந்து கீழ்த்திசை வழியாக வெளியேறினார்கள்'' என ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்

764 மக்காவில் தான் நுழையும் போதெல்லாம் 'தூத்துவா' எனும் இடத்தில் தங்கி இரவைக் கழித்து விட்டு காலையானதும் குளித்து விட்டு, பின்னரே மக்காவில் நுழைந்ததாகவும், அதைப்பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கூறியதாகவும் இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்

765 நபி(ஸல்) அவர்கள் ஹஜருல் அஸ்வதை முத்தமிட்டார்கள். இன்னும் அதன் மீது தலையை வைத்தார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கிறார்.

இது ஹாகிமில் மர்ஃபூஃ எனும் தரத்திலும் மற்றும் பைஹகீயில் மவ்கூஃப் எனும் தரத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

766 (கஅபாவை தவாஃப் செய்யும் போது) மூன்று முறை விரைவாகவும், ஹஜருல் அஸ்வத்திற்கும், ருக்கெனயமானீக்கும் நடுவில் நான்கு முறை சாதாரணமாக நடந்தும் வலம் வருமாறும் நபி(ஸல்) அவர்கள் தம் தோழர்களுக்குக் கட்டளையிட்டார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்

767 நபி(ஸல்) அவர்கள் தவாஃப் செய்யும் போது முதல் மூன்று முறை வேகமாகவும், பின்னர் நான்கு முறை சாதாரணமாகவும் நடந்தார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார்.

மற்றோர் அறிவிப்பின்படி, ஹஜ் மற்றும் உம்ராவில். நபி(ஸல்) அவர்களை தவாஃப் செய்கையில் நான் பார்த்தேன். அவர்கள் முதல் மூன்று முறை வேகமாகவும், பின்னர் நான்கு முறை சாதாரணமாகவும் நடந்தார்கள் என்றுள்ளது. புகாரி, முஸ்லிம்

768 நபி(ஸல்) அவர்கள் ஹஜ்ருல் அஸ்வதைத் தவிர வேறு எதையும் முத்தமிட நான் பார்க்கவில்லை என இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்

769 நிச்சயமாக உமர்(ரலி) அவர்கள் ஹஜ்ருல் அஸ்வத்தை முத்தமிட்ட போது, ''நீ கல் என்பதை நான் நன்றாகவே அறிவேன். உன்னால் தீங்கும் செய்ய முடியாது. பலனும் தரமுடியாது. நபி(ஸல்) அவர்கள் உன்னை முத்தமிட நான் பார்க்கவில்லை என்றால் நான் உன்னை முத்தமிட மாட்டேன்'' என்று கூறினார்கள். புகாரி, முஸ்லிம்

770 நபி(ஸல்) அவர்கள் பைத்துல்லாஹ்வை வலம் வரும் போது அங்குள்ள கல்லை முததமிட்டத்தை நான் பார்த்தேன் என அபூதுஃபைல்(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்

771 நபி(ஸல்) அவர்கள் ஒரு பச்சை நிறப் போர்வையை இடத்தோளை மூடியபடி வலப்பக்க அக்குளில் நுழைந்து வலத் தோள் தெரிய தவாஃப் செய்தார்கள் என, யஃலா இப்னு உமையா(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், அபூ தாவூத், திர்மிதீ மற்றும் இப்னு மாஜா.

இது திர்மிதீயில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

772 எங்களில் தஹ்லீல் சொல்பவர்கள் தஹ்லீலும், தக்பீர் சொல்பவர்கள் தக்பீரும் கூறிக் கொண்டிருந்தார்கள். அதற்காக அவர்கள் கண்டிக்கப்படவில்லை என அனஸ்(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்

773 நபி(ஸல்) அவர்கள் பயணச்சுமைகளுடன் (அதனைப் பராமரிக்க) அல்லது பலவீனர்களுடன் முஸ்தலிஃபா இரவன்று என்னை அனுப்பி வைத்தார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கிறார்.

774 நபி(ஸல்) அவர்களுக்கு முன்னதாகத் திரும்புவதற்கு முஸ்தலிஃபா இரவில் ஸவ்தா(ரலி) அனுமதி கேட்டார். ஏனெனில், அவர் மிகவும் கனமாகவும் தடித்தவராகவும் (நின்று நின்று செய்பவராகவும்) இருந்தார். எனவே, நபி(ஸல்) அவர்களுக்கு சலுகை அளித்து விட்டார்கள் என ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்

775 ''சூரியன் உதயமாகாத வரை கல் எறியாதீர்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், அபூதாவூத், திர்மிதீ, மற்றும் இப்னு மாஜா

இது 'முன்கதி' எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

776 உம்முல் முஃமினீன் உம்மு ஸலமா(ரலி) அவர்களை நபி(ஸல்) அவர்கள் குர்பானி(துல்ஹஜ் 10ன்) இரவன்று அனுப்பினார்கள். அவர் ஃபஜ்ருக்கு முன்னதாக கல் எறிந்தார். பின்னர் சென்று அவர் தவாஃப் செய்தார் என ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார். அபூ தாவூத்

இது முஸ்லிமின் நிபந்தனைகளுக்குட்பட்டு தரமாக உள்ளது.

777 எவர் முஸ்தலிஃபாவில் நம்முடன் தொழுதாரோ அவர் நாம் அரஃபா சென்று இரவு அல்லது பகல் தங்கும் வரை நம்முடன் தங்க வேண்டும். அவ்வாறு தங்குபவருடைய ஹஜ் பூர்த்தியாகி விட்டது. அவர் தம்முடைய அழுக்குகளைப் போக்கிக் கொண்டார் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என உர்வா இப்னு முனர்ரஸ்(ரலி) அறிவிக்கிறார்.

அஹ்மத், அபூதாவூத், நஸயீ, திர்மிதீ, மற்றும் இப்னு மாஜா.

இது திர்மிதீ மற்றும் இப்னு குஸைமாவில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

778 இணைவைப்பாளர்கள் சூரியன் உதயமாகாதவரை திரும்பமாட்டார்கள். பின்னர் அவர்கள், ''ஸபீர் மலை ஒளிரட்டும்'' எனக் கூறுவார்கள். ஆனால், நபி(ஸல்) அவர்கள், அவர்களுக்கு மாறாக சூரியன் உதயமாகும் முன்பே திரும்பி விடுவார்கள் என, உமர்(ரலி) அறிவிக்கிறார். புகாரி

779 நபி(ஸல்) அவர்கள் (ஜம்ரத்துல் அகபா) கல் எறியும் வரை தொடர்ந்து, ''லப்பைக்'' முழங்குபவர்கள் என்று இப்னு அப்பாஸ்(ரலி) மற்றும் உஸாமா(ரலி) அறிவிக்கிறார்கள். புகாரி

780 அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் அவர்கள் கஅபத்துல்லாஹ் தனக்கு இடப்புறமாகவும் மினாவை தனக்கு வலப்புறமாகவும் ஆக்கிக் கொண்டு நின்று, ஜம்ராவின மீது ஏழு கற்களை எறிந்தார்கள். பின்னர் ''இது சூரத்துல் பகரா இறக்கியருளப்பட்டவர் நிற்கும் இடமாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்

781 நபி(ஸல்) அவர்கள் குர்பானி தினத்தன்று சூரியன் உயர்ந்து முற்பகல் நேரம், அதன் பின் சூரியன் உச்சி சாய்ந்ததும் ஜம்ராவின் மீது கல் எறிந்தார்கள் என, ஜாபிர்(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்

782 நபி(ஸல்) அவர்கள் முதல் ஜம்ராவில் ஏழு கற்களை எறிவார்கள். ஒவ்வொரு கல் எறிந்த பின்பும் 'அல்லாஹு அக்பர்' என்று கூறுவார்கள். பின்னர் முன்னால் வந்து கிப்லாவை முன்னோக்கி நீண்ட நேரம் சமதளத்தில நின்று; தம் கரங்களை உயர்த்தி துஆ செய்வார்கள். பின்னர் நடுவிலிருக்கும் ஜம்ராவின் மீது கல் எறிவார்கள். பின்னர் இடப்பக்கமாகச் சென்று கிப்லாவை முன்னோக்கி, தம் கரங்களை உயர்த்தி, நீண்ட நேரம் சமதளத்தில நின்று துஆ செய்தார்கள். பின்னர் ஜம்ரத்துல் அக்பா'வின் மீது கணவாயில் நின்று கல் எறிந்து விட்டடு அங்கு நிற்காமல் சென்று விடுவார்கள். நபி(ஸல்) அவர்கள் இவ்வாறே செய்ய நான் பார்த்துள்ளேன் என இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார். புகாரி

783 ''மொட்டையடித்துக் கொள்பவர்கள் மீது அல்லாஹ் கிருபை செய்வானாக!'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறிய போது ''முடியை குறைத்துக் கொள்பவர்கள் மீது'' என்று மக்கள் கேட்டார்கள். அதற்கு அவர்கள் மூன்றாவது முறை, ''இன்னும் முடியை வெட்டிக் கொள்பவர்கள் (மீதும் அல்லாஹ் கிருபை செய்வானாக!) என்று கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்

784 நபி(ஸல்) அவர்கள் ஹஜ்ஜத்துல் வதாஃவில் நின்றிருந்தார்கள். (அப்போது) அவர்களிடம் மக்கள் கேள்வி கேட்க ஆரம்பித்தார்கள். ''எனக்குத் தெரியவில்லை, நான் குர்பானி கொடுக்கும் முன் மொட்டையடித்துக் கொண்டு விட்டேன்'' என்று ஒரு மனிதர் குற்றத்தைக் கூறினார். அதற்கு, ''குர்பானி கொடுங்கள் ஒன்றும் குறைவாகாது'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். பின்னர் மற்றொருவர் வந்து ''எனக்குத் தெரியவில்லை. நான் கல் எறியும் முன்பே குர்பானி கொடுத்து விட்டேன்'' என்று கூறினார். அதற்கு, ''இப்போது எறிந்து கொள் குற்றமில்லை!'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். முன்னும், பின்னும் செய்யப்பட்ட பல விஷயங்கள் அன்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டன. அவர்கள், குற்றமில்லை என்றே கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு ஆஸ்(ரலி) அறிவிக்கிறார். புகாரி

785 நபி(ஸல்) அவர்கள் மொட்டையடித்துக் கொள்வதற்கு முன்பு குர்பானி கொடுத்தார்கள். அவ்வாறே தமது தோழர்களுக்கும் கட்டளையிட்டார்கள் என மிஸ்வர் இப்னு மக்ரமா(ரலி) அறிவிக்கிறார்.

786 ''நீங்கள் கல் எறிந்து விட்டு, மொட்டையடித்துக் கொண்டால், பெண்ணை (உறவு கொள்வதைத்) தவிர்த்து நறுமணம் உட்பட அனைத்தும் ஹலால் ஆகிவிடுகிறது'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், அபூ தாவூத்

இது ளயீஃப் எனும் தரத்தில பதிவு செய்யப்பட்டுள்ளது.

787 ''பெண்கள் மீது மொட்டையடித்துக் கொள்வது (கடமை) இல்லை. அவர்கள் முடியைக் குறைத்துக் கொண்டால் மட்டும் போதும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கிறார். அபூதாவூத். இது ஹஸன் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

788 மக்களுக்கு ஜம்ஜம் தண்ணீர் புகட்டுவதற்காக மினாவின் இரவன்று மக்காவில் தங்குவதற்கு நபி(ஸல்) அவர்களிடம் அப்பாஸ் இப்னு அப்தில் முத்தலிப்(ரலி) அவர்கள் அனுமதி கேட்க நபி(ஸல்) அவர்கள் அனுமதியளித்தார்கள் என உமர்(ரலி) அறிவிக்கிறார்கள். புகாரி, முஸ்லிம்

789 மினாவை விட்டு வேறிடத்தில இரவைக் கழிப்பதற்கும், குர்பானீ தினத்தன்று கல் எறிவதற்கும், இரண்டாம் மற்றும் மூன்றாம் நாள் பின்னர் பதி மூன்றாம் நாள் கல்லை எறிவதற்கும், ஒட்டகம் மேய்ப்பவர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் அனுமதியளித்தார்கள் என ஆஸிம் இப்னு ஆதீ(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், அபூதாவூத், நஸயீ, திர்மிதீ மற்றும் இப்னு மாஜா

இது திர்மிதீ மற்றும் இப்னு ஹிப்பானில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

790 நபி(ஸல்) அவர்கள் குர்பானி தினத்தன்று எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள் என அபூபக்ரா (ரலி) அறிவிக்கிறார். (ஹதீஸ் சுருக்கம்) புகாரி, முஸ்லிம்

791 தலையை மழிக்கும் நாளன்று நபி(ஸல்) அவர்கள் எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அப்போது, ''இது அய்யாமுத்தஷ்ரிக்கின் நடு நாளில்லையா?'' என்று கூறினார்கள் என, ஸர்ரா பின்த்து நப்ஹான்(ரலி) அறிவிக்கிறார். (ஹதீஸ் சுருக்கம்) அபூதாவூத்

இது ஹஸன் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

792 ''நீ இறையில்லம கஅபாவை வலம் வருவதும், ஸஃபா மர்வாவுக்கிடையே ஓடுவதும், உன்னுடைய ஹஜ் மற்றும் உம்ராவிற்குப் போதுமானது'' என்று நபி(ஸல்) அவர்கள் என்னிடம் கூறினார்கள் என, ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்

793 நபி(ஸல்) அவர்கள் ஏழு முறை தவாஃபுஸ்ஸியாரத் செய்த போது விரைவாகச் செல்லவில்லை என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், அபூ தாவூத், நஸயீ, மற்றும் இப்னுமாஜா. இது ஹாகிமில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

794 நபி(ஸல்) அவர்கள் முஹஸ்ஸப் எனும் இடத்தில் லுஹர், அஸர், மக்ரிப் மற்றும் இஷா தொழுதார்கள். இன்னும் அங்கு சிறிதும் நேரம் தூங்கினார்கள். பின்னர், தம் வாகனத்தில் ஏறி கஅபத்துல்லாஹ் சென்று தவாஃப் செய்தார்கள் என அனஸ்(ரலி) அறிவிக்கிறார். புகாரி

795 ''ஆயிஷா(ரலி) அவர்கள் முஹஸ்ஸபில் இறங்க மாட்டார்கள்'' இது நபி(ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து மதீனா புறப்படத் தோதுவான இடம் என்பதைத் தவிர வேறொன்றுமில்லை. அதனால் தான் நபி(ஸல்) அவர்கள் அங்கு இறங்கினார்கள் என ஆயிஷா(ரலி) அவர்களே கூறினார்கள். முஸ்லிம்

796 இறுதியாக கஅபத்துல்லாஹ்வைச் சந்தித்து வர வேண்டுமென கட்டளையிடப்பட்டது. ஆனால் மாதவிடாய்ப் பெண்களுக்குச் சலுகை அளிக்கப்பட்டது என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்

797 ''என்னுடைய இந்தப் பள்ளியில் (மஸ்ஜிதுன்னபவி) தொழுவது, மஸ்ஜித் ஹராமைத் தவிர மற்ற பள்ளிகளில் தொழும் ஆயிரம் தொழுகைகளை விடச் சிறந்தது. இன்னும் மஸ்ஜித் ஹராமில் தொழுவது என்னுடைய இந்தப் பள்ளியில் தொழும் நூறு தொழுகைகளை விடச் சிறந்தது'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு ஜுபைர்(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத். இது இப்னு ஹிப்பானில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.



ஹஜ் பயணம் தவறி விடுதல் அல்லது ஹஜ் செய்ய விடாமல் தடுக்கப்படுதல்

798 நபி(ஸல்) அவர்கள் (உம்ராவிற்குச் செல்லும் போது) தடுக்கப்பட்டார்கள். அப்போது அவர்கள் தலைமழித்துக் கொண்டார்கள். மேலும், தம்முடைய மனைவியருடன் கூடினார்கள். மேலும், தன்னுடைய குர்பானியை அறுத்தார்கள். பின்னர் மறுவருடம் உம்ரா செய்தார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கிறார். புகாரி

799 ளபாஆ பின்த் ஜுபைர் இப்னி அப்தில் முத்தலிபிடம் நபி(ஸல்) அவர்கள் சென்றார்கள். அவர் ''அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நான் ஹஜ் செய்ய விரும்புகிறேன். ஆனால், நான் நோயாளியாக உள்ளேன்?'' என்று கூறினார்கள். ''(இறைவா!) நீ எங்கு விரும்புகிறாயோ, அது உன்னுடைய இஹ்ராம் உடையைக் களையுமிடமாகும் என்ற நிபந்தனையுடன் ஹஜ் செய்!'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்

800 ''(இஹ்ராம் கட்டிய நிலையில்) எவருடைய காலேனும் ஒடிக்கப்பட்டால் அல்லது நொண்டியாகி விட்டால் அவர் இஹ்ராமை விட்டு வெளியாகி விட்டார். மறுவருடம் ஹஜ் செய்வது அவர் மீது கடமையாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஹஜ்ஜாஜ் இப்னு அம்ரிடமிருந்து இக்ரிமா(ரலி) அறிவிக்கிறார். மேலும் இது பற்றி அபூஹுரைரா(ரலி) மற்றும் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் தான் கேட்டதற்கு ஹஜ்ஜாஜ் உண்மை சொன்னார் என்று கூறியதாகவும் அறிவிக்கிறார். அஹ்மத், அபூ தாவூத், நஸயீ, திர்மிதீ மற்றும் இப்னு மாஜா

இது திர்மிதீயில் ஹஸன் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

أحدث أقدم