அத்தியாயம் - 13 சத்தியம் செய்தல் மற்றும் நேர்ச்சை

புலுகுல் மராம் நபிமொழி தொகுப்பு
அத்தியாயம் 13-  சத்தியம் செய்தல் மற்றும் நேர்ச்சை


1387 உமர்(ரலி) அவர்கள் தம் தந்தையின் மீது சத்தியம் செய்ததைக் கண்ட நபி(ஸல்) அவர்கள், அவர்களை அழைத்து ''எச்சரிக்கையாக இருங்கள்! உங்கள் தந்தைமார்கள் மீது நீங்கள் சத்தியம் செய்வதை அல்லாஹ் தடை செய்கின்றான்! எவரேனும் சத்தியம் செய்ய நேர்ந்தால் அவர் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்யட்டும்; அல்லது மௌனமாக இருக்கட்டும்!'' என்று நபி(ஸல்) அறிவிக்கிறார்கள். புகாரி, முஸ்லிம்

1388 ''உங்கள் தந்தைமார்கள் மீதும், தாய்மார்கள் மீதும் இணைவைத்து வணங்கப்படும் பொய்க் கடவுள்கள் மீதும் சத்தியம் செய்யாதீர்கள். நீங்கள் உண்மையாளராக இருந்தாலே தவிர, அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்யாதீர்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். அபூதாவூத், நஸயீ

1389 ''உன்னிடம் சத்தியம் வாங்குபவர் (நீதிபதி அல்லது பிரதிவாதி) நீ எதற்காக சத்தியம் செய்ததாக நம்புகிறாரோ, அதற்காக செய்ததாகவே உன் சத்தியம் இருக்கும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார்.

1390 மற்றோர் அறிவிப்பில், ''சத்தியத்தைக் கேட்டு வாங்கியவரின் (நீதிபதியின்) நோக்கத்தின் அடிப்படையில் தான் அந்த சத்தியத்திற்குப் பொருள் கொள்ளப்படும்'' என்று பதிவாகியள்ளது. முஸ்லிம்

1391 ''நீ ஒரு உறுதிப் பிரமாணத்திற்காக சத்தியம் செய்து விட்டு பின்னர் அதைவிடச் சிறந்ததைக் கண்டால் (அதை முறித்து விட்டு) உன்னுடைய சத்தியத்திற்குப் பரிகாரம் செய்து கொள். பின்னர் அந்த நல்லதைச் செய்து கொள்!'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என, அப்துர் ரஹ்மான் இப்னு ஸமுரா(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்

புகாரியில் ''நல்லதைச் செய்துவிட்டு உன்னுடைய சத்தியத்திற்கு, பரிகாரம் செய்துகொள்'' என்று உள்ளது.

அபூ தாவூதுடைய மற்றொரு அறிவிப்பில், ''உன்னுடைய சத்தியத்திற்குப் பரிகாரம் செய்து விட்டு பின்னர் நல்லதைச் செய்துகொள்!'' என்றுள்ளது

1392 ''எவர் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து, அல்லாஹ் நாடினால் என்பதையும் (இணைத்துக்) கூறுகிறாரோ, (அவர் அதை மீறிவிட்டால்) அதற்காகப் பரிகாரம் செய்யத் தேவை இல்லை'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், அபூதாவூத், நஸயீ, திர்மிதீ மற்றும் இப்னு மாஜா

இது இப்னு ஹிப்பானில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

1393 ''உள்ளங்களை புரட்டுபவன் மீது ஆணையாக!'' என்று நபி(ஸல்) அவர்கள் சத்தியம் செய்பவர்களாக இருந்தார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார். புகாரி

1394 நபி(ஸல்) அவர்களிடம் ஒரு கிராமவாசி வந்து, ''அல்லாஹ்வின் தூதர் அவர்களே! பெரும் பாவங்கள் எவை?'' என்று கேட்டார். (அறிவிப்பாளர் முழு ஹதீஸையும் கூறினார்) அதில் ''பொய் சத்தியம் (பெரும் பாவங்களில் ஒன்று)'' என்றும் உள்ளது. ''அல்லாஹ்வின் தூதர் அவர்களே! பொய் சத்தியம் என்றால் என்ன?'' என்று நான் கேட்டதற்கு, ''ஒரு முஸ்லிமுடைய செல்வத்தைப் பொய் சொல்லியபடி சத்தியமிட்டுப் பறித்துக் கொள்கிறானே அந்த மோசடியான சத்தியம் தான் அது'' என்று கூறினார்கள் என்றும் அதில் உள்ளது. இதை அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவிக்கிறார். புகாரி

1395 ''நீங்கள் விளையாட்டாகச் செய்யும் சத்தியங்களுக்காக (அவற்றை முறித்தால்) உங்களை அல்லாஹ் தண்டிக்க மாட்டான்'' என்னும் (2:225) இறைவசனத்திற்கு விளக்கம் தரும் போது, அதாவது இல்லை. அல்லாஹ்வின் மீது சத்தியமாக! 'ஏனில்லை? அல்லாஹ்வின் மீது சத்தியமாக!' என்றெல்லாம் கூறுவதைத் தான் விளையாட்டாகச் செய்யும் சத்தியம் என்று இறைவன் குறிப்பிடுகிறான் என்று ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார். புகாரி

இது அபூதாவூதில் மர்ஃபூஉ எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

1396 ''அல்லாஹ்வுக்கு மொத்தம் 99 பெயர்கள் உள்ளன. எவர் அவற்றை மனனம் செய்து கொள்கிறாரோ அவர் சுவர்க்கம் புகுவார்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்

திர்மிதீ மற்றும் இப்னு ஹிப்பானில் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

1397 ''ஒருவருக்கு நன்மை புரியப்பட்டு, அவர் தனக்கு நன்மை புரிந்தவரை நோக்கி, ''ஜஸாக்கல்லாஹு கைரன் - அல்லாஹ் உங்களுக்கு நல்ல பிரதிபலனைத் தரட்டும்'' என்று கூறுவாராயின் அவர் நிறைவான முறையில் நன்றி செலுத்தியவராவார்'' நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என உஸாமா இப்னு ஸைத்(ரலி) அறிவிக்கிறார். திர்மிதீ

இது இப்னு ஹிப்பானில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

1398 நபி(ஸல்) அவர்கள் நேர்ச்சை செய்வதைத் தடுத்து விட்டு, அதன் மூலம் கஞ்சனிடமிருந்து (ஏழை எளியவர்களுக்காக) சிறிது பொருளை வெளியே கொண்டு வரலாம் என்பதைத் தவிர, அது வேறெந்த நன்மையையும் தராது என்று கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்

1399 ''சத்தியத்திற்குரிய பரிகாரமே நேர்ச்சைக்கும் உரியதாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என, உக்பா இப்னு ஆமிர்(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்

''இது அல்லாஹ்வுக்காக செய்யும் நேர்ச்சை என்று குறிப்பிட்டுக் கூறாவிட்டால்'' என்னும் வாசகம் திர்மிதீயில் அதிகப்படியாக உள்ளது. இன்னும் இது ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

1400 ''இது அல்லாஹ்வுக்காகச் செய்யும் நேர்ச்சையை நிறைவேற்றக் கூடாது'' என்று இம்ரான்(ரலி) வாயிலாக முஸ்லிமில் உள்ளது.

1403 கஅபத்துல்லாஹ்விற்கு (செருப்பில்லாமல்) வெறுங்காலால் நடந்து செல்வதாக என்னுடைய சகோதரி நேர்ச்சை செய்திருந்தார். இதைப்பற்றி நபி(ஸல்) அவர்களிடம் சட்டம் கேட்குமாறு என்னிடம் கூறினார். நானும் அவ்வாறே நபி(ஸல்) அவர்களிடம் சட்டம் கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ''அவர் நடந்து செல்லட்டும்'' என்று கூறினார்கள் என உக்பா இப்னு ஆமிர்(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்

இங்கு முஸ்லிமின் வாசகம் இடம் பெற்றுள்ளது.

1404 உன்னுடைய சகோதரி (இதனால்) கஷ்டப்படுவதை வைத்து அல்லாஹ் ஏதும் செய்யப் போவதில்லை. பர்தா அணிந்து கொண்டு வாகனத்தில் செல்லச் சொல்! மேலும், மூன்று நோன்புகள் நோற்கும்படி கட்டளையிடு! என்று உள்ளது.

1405 தன்னுடைய தாயார் ஒரு நேர்ச்சை செய்திருந்து அதை நிறைவேற்றாமலேயே இறந்து போனது பற்றி நபி(ஸல்) அவர்களிடம் ஸஅத் இப்னு உபாதா(ரலி) சட்டம் கேட்டதற்கு, ''அவர் சார்பாக அதை நீர் நிறைவேற்றும்!'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்

1406 நபி(ஸல்) அவர்களது காலத்தில் சில ஒட்டகங்களை 'புவானா' எனும் இடத்தில் அறுப்பபதாக ஒருவர் நேர்ச்சை செய்து கொண்டார். பின்னர் அவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து அதைப் பற்றிக் கேட்டார். அதற்கு, ''அங்கு ஏதேனும் சிலை வணங்கப்பட்டு வந்ததா?'' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர், ''இல்லை'' என்றார். ''அறியாமைக்கால விழாக்களில் ஏதேனும் ஒரு திருவிழா அங்கு நடத்தப்பட்டு வந்ததா?'' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர், ''இல்லை'' என்றார். ''(அப்படியானால்) நீ உன்னுடைய நேர்ச்சையைப் பூர்த்தியாக்கிக் கொள்! அல்லாஹ்விற்குமாறு செய்வதாக உள்ள நேர்ச்சையைத் தான் பூர்த்தி செய்யக் கூடாது. மேலும், உறவை முறிக்கும் நேர்ச்சையைப் பூர்த்தி செய்யக் கூடாது. மேலும் ஆதமுடைய மகனால் இயலாதவற்றில் நேர்ச்சை இல்லை'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என சாபித் இப்னு ளஹ்ஹாக்(ரலி) அறிவிக்கிறார். அபூதாவூத், தபரானீயின் வாசகம் இடம் பெற்றுள்ளது. இது ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

1407 கர்தம் வாயிலாக அஹ்மதில் இதற்கு சான்றாக ஹதீஸ் உள்ளது.

1408 மக்கா வெற்றி தினத்தன்று ஒருவர் எழுந்து நின்று ''அல்லாஹ்வின் தூதர் அவர்களே! தங்களுக்கு அல்லாஹ் மக்காவின் வெற்றியை அளித்து விட்டால் பைத்துல் மத்திஸில் இரண்டு ரக்அத்துக்கள் தொழுவதாக நான் நேர்ச்சை செய்திருந்தேன்'' என்று கூறினார். அதற்கு ''இங்கு தொழுது கொள்!'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அவர் மறுபடியும் கேட்டதற்கு, ''இங்கு தொழுது கொள்!'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அவர் மூன்றாவது முறை கேட்டதும், ''அப்படியானால் நீ உன் விருப்பப்படி செய்து கொள்! என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஜாபிர்(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், அபூதாவூத்

இது ஹாகிமில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

1409 ''1, மஸ்ஜிதுல் ஹராம் 2. மஸ்ஜிதுல் அக்ஸா (பைத்துல் முகத்தஸ்) 3. என்னுடைய இந்தப் பள்ளி (மஸ்ஜிதுன் நபவீ எனும் மதீனாவின் பள்ளி) ஆகிய மூன்று பள்ளிவாசல்களை தவிர வேறு எதை நோக்கியம் பயணம் மேற் கொள்ளாதீர்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஸயீத் அல் குத்ரி(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்

இங்கு புகாரியின் வாசகம் இடம் பெற்றுள்ளது.

1410 ''அல்லாஹ்வின் தூதர் அவர்களே! மஸ்ஜிதுல் ஹராமில் ஓர் இரவு (தங்கி) இஃதிகாஃப் இருப்பதாக நான் அறியாமைக் காலத்தில் நேர்ச்சை செய்திருந்தேன்'' என்று கூறினார். அதற்கு ''இங்கு தொழுது கொள்!'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அவர் மறுபடியும் கேட்டதற்கு, ''இங்கு தொழுது கொள்!'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அவர் மூன்றவாது முறை கேட்டதும், ''அப்படியானால் நீ உன் விருப்பப்படி செய்து கொள்! என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என உமர்(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்

''அவ்வாறே உமர்(ரலி) அவர்கள் ஓர் இரவு மஸ்ஜிதுல் ஹராமில் இஃதிகாஃப் இருந்தார்'' என்னும் வாசகம் புகாரியில் அதிகமாக இடம் பெற்றுள்ளது. 

أحدث أقدم