அத்தியாயம் 50 முகாதப்

ஸஹீஹுல் புகாரி
அத்தியாயம் 50
முகாதப் (விடுதலைப் பத்திரம் எழுதித் தரப்பட்ட அடிமை)

பகுதி 1 

முகாத்தபும் அவனது விலையை ஆண்டுதோறும் தவணை முறையில் செலுத்துவதும். 

அல்லாஹ் கூறுகிறான்: உங்கள் அடிமைகளில் எவர் விடுதலைப் பத்திரம் எழுதித் தரும்படி கோருகின்றார்களோ அவர்களிடம் நன்மை இருப்பதாக அறிந்தால் அவர்களுக்கு விடுதலைப் பத்திரம் எழுதிக் கொடுங்கள். மேலும்,அல்லாஹ் உங்களுக்கு வழங்கியிருக்கும் செல்வத்திலிருந்து அவர்களுக்கு வழங்குங்கள். (24:33) இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் அதா பின் அபீ ரபாஹ் (ரஹ்) அவர்களிடம், என் அடிமையிடம் பொருள் (பணம்) இருப்பதாக நான் அறிந்தால் அவனுக்கு விடுதலைப் பத்திரம் எழுதிக் கொடுப்பது என் மீது கடமையா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், நான் அதைக் கடமையாகவே கருதுகிறேன் என்று பதிலளித்தார்கள். அம்ரு பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் அதா (ரஹ்) அவர்களிடம், இதை எந்த நபித் தோழரிடமிருந்தாவது கேட்டுத் தான் அறிவிக்கிறீரா?என்று கேட்டேன். அதற்கு அவர்கள், இல்லை என்று பதிலளித்தார்கள். பிறகு (முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்களின் தந்தையான) சீரீன் (ரஹ்) அவர்கள்அதிக செல்வத்தை வைத்துக் கொண்டு - அனஸ் (ரலி) அவர்களிடம் விடுதலைப் பத்திரம் எழுதித் தரும்படி கேட்க, அதற்கு அவர்கள் மறுத்து விட்டதாகவும் உடனே, சீரின் (ரஹ்) அவர்கள்-இவர் அதிக செல்வமுடையவராக இருந்தார்- உமர் (ரலி) அவர்களிடம் சென்று முறையிட்டதாகவும் அதற்கு உமர் (ரலி) அவர்கள், அனஸ் (ரலி) அவர்களிடம் எழுதிக் கொடுங்கள் என்று கூற, அவர் மறுத்து விடவே உமர் (ரலி) அவர்கள் அனஸ் (ரலி) அவர்களைச் சாட்டையால் அடித்து மேற்கண்ட (24:33) இறை வசனத்தை ஓதிக் காட்டியதாகவும் பிறகு அனஸ் (ரலி) அவர்கள், சீரீன் (ரஹ்) அவர்களுக்கு விடுதலைப் பத்திரம் எழுதிக் கொடுத்ததாகவும் மூசா பின் அனஸ் (ரஹ்) அவர்கள் அறிவித்ததாக எனக்கு (இப்னு ஜுரைஜுக்கு) அதாவு (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.

2560. ஆயிஷா (ரலி) அவர்கள்கூறியதாவது. பரீரா (ரலி) அவர்கள் (தம் எஜமானிடமிருந்து) எழுதி வாங்கிய விடுதலைப் பத்திரத்தின் தொகையைச் செலுத்துவதற்குத் தமக்கு உதவி செய்யும்படி கேட்டு என்னிடம் வந்தார். அவர் (தம் எஜமானுக்கு விடுதலைத் தொகையாக) ஐந்து ஊக்கியாக்களை- ஐந்து ஆண்டுகளில் ஆண்டுக்கு ஒரு ஊக்கியாவாக தவணை முறையில் செலுத்த வேண்டியிருந்தது. ஆகவே, நான் (அவரை விடுதலை செய்ய ஆசைப்பட்டு) நான் அவர்களுக்கு (உன் எஜமானர்களுக்கு) ஒரே முறையில் முழுத்தொகையையும் செலுத்திவிட்டால், உன் எஜமானர்கள் உன்னை எனக்கு விற்றுவிட, நான் உன்னை விடுதலை செய்து உனது வலாவை (வாரிசுரிமையை) நான் அடைந்துக் கொள்ள முடியுமா? (அதற்கு உன் எஜமானர்கள் சம்மதிப்பார்களா?) நீ என்ன கருதுகிறாய்? என்று கேட்டேன். உடனே பரீரா (ரலி), தன் எஜமானர்களிடம் சென்று எனது நிபந்தனையை அவர்கள் முன் வைத்தார். அதற்கு அவர்கள், இதற்கு நாங்கள் ஒப்புக்கொள்ள முடியாது. (உனது) வாரிசுரிமை (உன்னை விற்ற பின்பும்) எங்களுக்கே உரியதாக இருக்கும் என்று கூறினார்கள். (இதை அறிந்த) நான் அல்லாஹ்வின் தூதரிடம் சென்று விஷயத்தைக் கூறினேன். அவர்கள் என்னிடம் (அவரை) விலைக்கு வாங்கி விடுதலை செய்துவிடு. ஏனெனில், விடுதலை செய்தவருக்கே வாரிசுரிமை உரியதாகும் என்று கூறினார்கள். பிறகு எழுந்து நின்று, சில மனிதர்களுக்கு என்ன நேர்ந்தது? அல்லாஹ்வின் சட்டத்தில் இல்லாத நிபந்தனைகள் எல்லாம் விதிக்கின்றர்களே! ஒருவர் அல்லாஹ்வின் சட்டத்தில் இல்லாத நிபந்தனைகளை விதித்தால் அது செல்லாததாகும். அல்லாஹ்வின் நிபந்தனையே (ஏற்று) பின்பற்றத்தக்கதும் உறுதிமிக்கதும் (கட்டுப்படுத்தக் கூடியதும்) ஆகும் என்று கூறினார்கள்.

பகுதி 2 

முகாத்தபுக்கு இடும் நிபந்தனைகளில் அனுமதிக்கப்பட்டவை பற்றியும் அல்லாஹ்வின் சட்டத்தில் இல்லாத நிபந்தனையை விதிப்பவன் பற்றியும்... மேற்கண்ட (விவகாரம் குறித்த) நபிமொழியை இப்னு உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவித்துள்ளார்கள்.4

2561. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. பரீரா (ரலி), தனக்கு (தன் எஜமானர்களிடமிருந்து) எழுதி வாங்கிய விடுதலைப் பத்திரத்தின் தொகையைச் செலுத்துவதற்கு உதவி செய்யும்படி கேட்டு என்னிடம் வந்தார். (அப்போது) அவர் தன் விடுதலைத் தொகையில் சிறிதளவும் செலுத்தியிருக்கவில்லை. நான் அவரிடம், நீ உன் எஜமானர்களிடம் திரும்பிச் சென்று (அவர்களுடைய சம்மதத்தைக் கேள். நான் உன் சார்பாக) உன் விடுதலைப் பத்திரத்தின் தொகையைச் செலுத்தி (உன்னை விடுதலை செய்து) உன் வாரிசுரிமையை நான் பெற்றுக் கொள்வதை அவர்கள் விரும்பி (ஒப்பி)னால் நானே அதைச் செலுத்தி விடுகிறேன் என்று கூறினேன். அவ்வாறே, பரீரா (ரலி) தன் எஜமானர்களிடம் கேட்க, அவர்கள் சம்மதம் தர மறுத்து, உன்(னை வாங்கி விடுதலை செய்வதன்) வாயிலாக, அவர் (ஆயிஷா (ரலி) அவர்கள்) இறைவனிடம் நன்மையைப் பெற விரும்புவாராயின் அவ்வாறே செய்யட்டும். ஆனால், உனது வாரிசுரிமை எங்களுக்கே உரியதாக இருக்கும் என்று கூறிவிட்டார்கள். இதை நான் அல்லாஹ்வின் தூதரிடம் கூறினேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் அவர்கள், நீ அவரை வாங்கி விடுதலை செய்து விடு, ஏனெனில், விடுதலை செய்பவருக்கே வாரிசுரிமை உரியதாகும் என்று கூறினார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர், மக்களுக்கு என்னவாயிற்று? அல்லாஹ்வின் சட்டத்தில் இல்லாத நிபந்தனைகளை விதிக்கின்றார்களே! அல்லாஹ்வின் வேதத்தில் இல்லாத ஒரு நிபந்தனையை ஒருவர் விதித்தால் அது செல்லாததாகும், அவர் நூறுமுறை நிபந்தனை விதித்தாலும் சரியே! அல்லாஹ்வின் நிபந்தனையே (ஏற்று) பின்பற்றத் தக்கதும் உறுதியும் கட்டுப்படுத்தும் சக்தியும் வாய்ந்ததும் ஆகும் என்று கூறினார்கள்.

2562. இப்னு உமர்(ரலி) கூறியதாவது. இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள், விடுதலை செய்வதற்காக ஓர் அடிமைப் பெண்ணை வாங்க விரும்பினார்கள். அப்போது அப்பெண்ணின் எஜமானர்கள், அவரது வாரிசுரிமை எங்களுக்கே உரியது என்னும் நிபந்தனையின் பேரில் தான் நாங்கள் அவரை விற்போம் என்று கூறினார்கள். (இதை அறிந்த) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அவர்களுடைய இந்த நிபந்தனை (அப்பெண்ணை வாங்கி விடுதலை செய்து, அவரது வாரிசுரிமையை நீயே அடைந்து கொள்வதிலிருந்து) உன்னைத் தடுக்காது. ஏனெனில், விடுதலை செய்தவருக்கே (விடுதலை செய்யப்பட்ட அடிமையின்) வாரிசுரிமை உரியதாகும் என்று கூறினார்கள்.

பகுதி 3 

முகாத்தப் உதவி தேடுவதும் மக்களிடம் (தனது விடுதலைக்காகப் பணம்) கேட்பதும்.

2563. ஆயிஷா (ரலி)அவர்கள் கூறியதாவது. பரீரா (ரலி) அவர்கள் (என்னிடம்) வந்து, நான் என் எஜமானர்களிடம் ஒன்பது ஊக்கியாக்களை- (விடுதலைத் தொகையாக) ஒவ்வோர் ஆண்டும் ஓர் ஊக்கியா வீதம் செலுத்திவிட வேண்டும் என்னும் நிபந்தனையை ஒப்புக் கொண்டு விடுதலைப் பத்திரம் எழுதி வாங்கியுள்ளேன். ஆகவே, நீங்கள் எனக்கு உதவுங்கள் என்று கேட்டார். நான், உன் எஜமானர்களுக்கு அந்த ஊக்கியாக்களை நான் ஒரே தடவையில் கொடுத்து உன்னை விடுதலை செய்து விடுவதை அவர்கள் ஏற்று, உன் வாரிசுரிமை எனக்குச் சேர சம்மதிக்கவும் செய்வார்களாயின் நான் அவ்வாறே செய்கிறேன் என்று கூறினேன். எனவே, பரீரா (ரலி) தன் எஜமானர்களிடம் சென்றார். (அவர்களிடம் நான் சொன்னதைக் கூற) அவர்கள் அவரிடம் அதற்கு மறுப்புத் தெரிவித்து விட்டார்கள். (பிறகு) பரீரா (ரலி) என்னிடம் வந்து), அவர்களிடம் உங்கள் விருப்பத்தை முன் வைத்தேன். (என்) வாரிசுரிமை தங்களுக்குக் கிடைத்தாலே தவிர அதற்கு ஒப்புக் கொள்ள முடியாது என்று அவர்கள் மறுத்து விட்டனர் என்று கூறினார். இதைக் கேள்விப்பட்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அது பற்றி) என்னைக் கேட்க, நான் அவர்களுக்கு விபரத்தைச் சொன்னேன். அவளை எடுத்துக் கொண்டு விடுதலை செய்துவிடு. அவர்களிடம் வாரிசுரிமை (உனக்கேயுரியது என்று) நிபந்தனை விதித்து விடு. ஏனெனில், விடுதலை செய்பவருக்கே வாரிசுரிமை உரியதாகும் என்று கூறினார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் மக்களிடையே எழுந்து நின்று அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்தார்கள். பிறகு, சில மனிதர்களுக்கு என்ன நேர்ந்தது? அல்லாஹ்வின் சட்டத்தில் இல்லாத நிபந்தனைகளை விதிக்கின்றார்களே! அல்லாஹ்வின் சட்டத்தில் இல்லாத எந்த ஒரு நிபந்தனையும் செல்லாததாகும், நூறு முறை நிபந்தனை விதித்தாலும் சரியே! அல்லாஹ்வின் தீர்ப்பே (ஏற்று) பின்பற்றத் தக்கதாகும். அல்லாஹ்வின் நிபந்தனையே உறுதியும் கட்டுப்படுத்தும் சக்தியும் வாய்ந்ததாகும். உங்களில் சில மனிதர்களுக்கு என்ன நேர்ந்தது? அவர்களில் ஒருவர் இன்னாரே! (என் அடிமையை வாங்கி) விடுதலை செய்து விடு. ஆனால், வாரிசுரிமை எனக்கே உரியது என்று கூறுகிறாரோ! (எனினும்) விடுதலை செய்பவருக்கே வாரிசுரிமை உரியதாகும் என்று கூறினார்கள்.

பகுதி 4 

முகாத்தப் சம்மதித்தால் அவனை விற்று விடுதல். ஆயிஷா (ரலி) அவர்கள், முகாத்தப், (விடுதலைப் பத்திரத்தின்படி) தனது விலை முழுவதையும் செலுத்தாமல் இன்னும் பாக்கி வைத்திருக்கும் வரை அடிமையாகவே இருப்பான் என்று கூறினார்கள். ஸைத் பின் சாபித் (ரலி) அவர்கள், அவன் ஒரேயொரு திர்ஹம் பாக்கி வைத்திருந்தாலும் கூட அடிமையே ஆவான் என்று கூறினார்கள். அவன் சிறிது தொகை பாக்கி வைத்திருக்கும் வரை - அவன் வாழ்ந்தாலும் சரி, இறந்தாலும் சரி, அவன் குற்றம் புரிந்தாலும் சரி-அடிமையே என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.

2564. அம்ரா பின்த்து அப்திர் ரஹ்மான் கூறியதாவது. பரீரா (ரலி) அவர்கள், இறை நம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம் (தன் விடுதலைப் பத்திரத் தொகையைச் செலுத்தும் விஷயத்தில்) உதவி கேட்டு வந்தார். அவரிடம் ஆயிஷா (ரலி) அவர்கள், உன் எஜமானர்கள், நான் அவர்களுக்கு ஒரே தடவையில் உன் விலையைக் கொடுத்து, உன்னை விடுதலை செய்து விடுவதை (ஏற்றுக் கொண்டு) சம்மதித்தால் நான் அவ்வாறே (முழுத் தொகையையும்) ஒரே தடவையில் செலுத்தி விடுகின்றேன் என்று கூறினார்கள். அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் இந்த விருப்பத்தை பரீரா (ரலி) தன் எஜமானர்களிடம் கூறினார்கள். அதற்கு அவர்கள், (உனது) வாரிசுரிமை எங்களுக்கே உரியதாக இருந்தாலே தவிர, நாங்கள் இதற்குச் சம்மதிக்க மாட்டோம் என்று கூறிவிட்டனர். ஆயிஷா (ரலி) அவர்கள் இந்தச் செய்தியை அல்லாஹ்வின் தூதரிடம் கூறினார்கள். அதற்கு அவர்கள், நீ அவளை வாங்கி விடுதலை செய்துவிடு. ஏனெனில், விடுதலை செய்பவருக்கே வாரிசுரிமை உரியதாகும் என்று கூறினார்கள்.

பகுதி 5 

முகாத்தப், என்னை வாங்கி விடுதலை செய்து விடு என்று கூற, அவ்வாறே அவனை ஒருவர் வாங்கினால் (செல்லும்).

2565. அபூ அய்மன்(ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று, நான் உத்பா பின் அபீலஹபுக்கு அடிமையாக இருந்தேன். அவர் இறந்து விட்டார். பிறகு, அவரது மக்கள் எனக்கு எஜமானர்கள் ஆனார்கள். மேலும், அபூ அம்ருடைய மகனுக்கு என்னை அவர்கள் விற்றார்கள். அப்போது உத்பாவின் மக்கள், எனது வாரிசுரிமை தமக்கே கிடைக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தார்கள் என்று கூறினேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள். பரீரா, என்னிடம் (தனக்கு) விடுதலைப் பத்திரம் எழுதிக் கொடுக்கப்பட்ட நிலையில் வந்திருந்தார். என்னை வாங்கி விடுதலை செய்து விடுங்கள் என்று என்னைக் கேட்டுக் கொண்டார். நான், சரி என்று சொன்னேன். அதற்கு அவர், எஜமானர்கள் தங்களுக்கே (எனது) வாரிசுரிமை வேண்டும் என்று நிபந்தனை விதிக்காமல் என்னை விற்க மாட்டார்கள் என்று கூறினார். அதற்கு நான், அப்படியென்றால் எனக்கு அது (உன்னை வாங்கி விடுதலை செய்வது) தேவையற்றது என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள் இதைக் கேள்விப்பட்டார்கள். அல்லது இந்தச் செய்தி அவர்களுக்கு எட்டியது. உடனே, நபி (ஸல்) அவர்கள் என்னிடம் இது பற்றிக் கேட்க, நான் பரீரா என்னிடம் கூறியதைச் சொன்னேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அவளை வாங்கி விடுதலை செய்து விடு. அவளது எஜமானர்கள் தாங்கள் விரும்பியவற்றையெல்லாம் நிபந்தனையிட்டுக் கொள்ளட்டும் (அது செல்லப் போவதில்லை) என்று கூறினார்கள். ஆகவே, நான் பரீராவை வாங்கி விடுதலை செய்து விட்டேன். (அப்போதும்) அவரது எஜமானர்கள் (அவரது) வாரிசுரிமை தங்களுக்கே உரியது என்று நிபந்தனை விதித்தார்கள். (இதை அறிந்த) நபி (ஸல்) அவர்கள், விடுதலை செய்தவருக்கே வாரிசுரிமை உரியதாகும், அவர்கள் (அடிமையின் எஜமானர்கள்) நூறு முறை நிபந்தனை விதித்தாலும் சரியே என்று கூறினார்கள்.
Previous Post Next Post