அத்தியாயம் 49 அடிமையை விடுதலை செய்தல்

ஸஹீஹுல் புகாரி
அத்தியாயம் 49

அடிமையை விடுதலை செய்தல்

அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்.

பகுதி 1

அடிமையை விடுதலை செய்வதும் அதன் சிறப்பும்.

அல்லாஹ் கூறினான்:

(நன்மை, தீமையின்) தெளிவான இரண்டு வழிகளை அவனுக்கு நாம் காட்டி விட்டோம். ஆயினும், அவன் கடினமான மலைப் பாதையை (நன்மையின் பாதையைக்) கடந்து செல்லத் துணியவில்லை. கடினமான அந்த மலைப்பாதை எதுவென்று உமக்குத் தெரியுமா? (அதுதான்) ஒருவனை அடிமைத் தளையிலிருந்து விடுவிப்பதாகும்; அல்லது பட்டினியான நாளில் உறவினரான அநாதைக்கோ அல்லது வறுமையில் வாடும் ஏழைக்கோ உணவளிப்பதும் ஆகும். (திருக்குர்ஆன் 90: 10-17)

2517. அலீ இப்னு ஹுஸைன்(ரஹ்) 1 அவர்களின் தோழரான ஸயீத் இப்னு மர்ஜானா(ரஹ்) அறிவித்தார்.

''ஒரு முஸ்லிமான (அடிமை) மனிதரை விடுதலை செய்கிறவரை (விடுதலை செய்யப்பட்ட) அந்த முஸ்லிமின் ஒவ்வோர் உறுப்புக்கும் பகரமாக (விடுதலை செய்தவருடைய) ஓர் உறுப்பை அல்லாஹ் நரகத்திலிருந்து (விடுவித்துக்) காப்பாற்றுவான்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என என்னிடம் அபூ ஹுரைரா(ரலி) கூறினார். உடனே நான், இந்த நபிமொழியை அலீ இப்னு ஹுஸைன்(ரஹ்) அவர்களிடம் கொண்டு சென்றேன். இதைக்கேட்ட அன்னார் தம் அடிமை ஒருவரை விடுதலை செய்ய விரும்பினார்கள். அந்த அடிமைக்கு (விலையாக) அப்துல்லாஹ் இப்னு ஜஅஃபர் இப்னு அபீ தாலிப்(ரலி) பத்தாயிரம் திர்ஹம்களையோ ஆயிரம் தீனாரையோ அன்னரிடம் கொடுத்திருந்தார்கள். அவ்வாறிருந்தும. (அந்தப் பணத்திற்குப் பொறுப்பேற்றுக் கொண்டு) அந்த அடிமையே அன்னார் விடுதலை செய்துவிட்டார்கள்.

பகுதி 2

எந்த அடிமையை விடுதலை செய்வது மிகவும் சிறந்தது.

2518. அபூ தர்(ரலி) அறிவித்தார்.

நான் நபி(ஸல்) அவர்களிடம், 'எந்த நற்செயல் சிறந்தது?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'அல்லாஹ்வின் மீது ஈமான் எனும் நம்பிக்கை கொள்வதும் அவனுடைய பாதையில் ஜிஹாத் எனும் போராடுவதுமாகும்'' என்று பதிலளித்தார்கள். நான், 'எந்த அடிமை(யை விடுதலை செய்வது) சிறந்தது'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'அவர்களில் அதிக விலை கொண்ட அடிமையும் தன் எஜமானர்களிடம் பெறுமதி மிக்க அடிமையும் (தான் சிறந்தவர்கள்)'' என்று பதிலளித்தார்கள். நான், 'என்னால் அது (அடிமையை விடுதலை செய்வது) இயலவில்லையென்றால்?' என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், 'பலவீனருக்கு உதவு; அல்லது உழைத்துச் சம்பாதிக்க இயலாதவனுக்கு நன்மை செய்'' என்று கூறினார்கள். நான், 'இதுவும் என்னால் இயலாவில்லையென்றால்...? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'மக்களுக்குத் தீங்கு செய்யாமல் இரு. ஏனெனில், அதுவும் நீ உனக்க செய்து கொள்ளும் ஒரு தர்மம் ஆகும்'' என்று கூறினார்கள்.

பகுதி 3

சூரிய கிரகணம் உள்ளிட்ட இறைச் சான்றுகள் வெளிப்படும்போது அடிமைகளை விடுதலை செய்வது விரும்பத்தக்கது.

2519. அஸ்மா பின்த்து அபீ பக்ர்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் சூரிய கிரகணத்தின்போது அடிமைகளை விடுதலை செய்யும்படி உத்தரவிட்டார்கள்.

2520. அஸ்மா பின்த்து அபீ பக்ர்(ரலி) அறிவித்தார்.

நாங்கள் சந்திர கிரகணத்தின்போது அடிமைகளை விடுதலை செய்யும்படி கட்டளையிட்டிருந்தோம்.

பகுதி 4

இருவருக்குரிய ஓர் அடிமையை, அல்லது பலருக்குரிய ஓர் அடிமைப் பெண்ணை விடுதலை செய்தல்.

2521. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

இருவருக்குப் பங்குள்ள ஓர் அடிமையை (அவ்விருவரில்) ஒருவர் விடுதலை செய்தால் அவர் வசதியுடையவராக இருப்பாராயின் அவ்வடிமையின் (சந்தை) விலை மதிப்பிடப்பட்டு (மீதி விலையும் செலுத்தப்பட வேண்டும்;) பின்னர் அவன் விடுதலை செய்யப்பட வேண்டும். 2

என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

2522. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

ஓர் அடிமையில் தனக்குள்ள பங்கை விடுதலை செய்கிறவரிடம் அந்த அடிமையின் (முழு) விலையையும் எட்டுகிற அளவிற்குச் செல்வம் இருந்தால் அந்த அடிமையை ஒத்த மற்றோர் அடிமையின் விலையை மதிப்பிட்டு தன்னுடைய கூட்டாளிகளுக்கு அவர்களின் பங்குக்கான விலையைக் கொடுத்து அந்த அடிமையை (முழுமையாக) விடுதலை செய்து விட வேண்டும். இல்லையென்றால், அவர் எந்த அளவிற்கு விடுதலை செய்தாரோ, அந்த (தன்னுடைய பங்கின்) அளவிற்கே விடுதலை செய்தவராவார்.

என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

2523. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

ஓர் அடிமையின் தனக்குள்ள பங்கை விடுதலை செய்கிறவர் தன்னிடம் அவ்வடிமையின் (முழு) விலையை எட்டுகிற் அளவிற்குச் செல்வம் இருந்தால், அந்த அடிமையை முழுமையாக விடுதலை செய்து விட வேண்டும். அந்த அடிமைக்கு ஒத்த (மற்றோர் அடிமையின்) விலையை மதிப்பிட்ட பின் (அவனுடைய மற்றப் பங்குகளையும்) விடுதலை செய்யும் அளவிற்கு அவரிடம் செல்வம் இல்லையென்றால் அவர் விடுதலை செய்த அந்த (அவரின் பங்கின்) அளவிற்கு மட்டுமே அவ்வடிமை விடுதலை செய்யப்படுவார்.

என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

2524. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

ஓர் அடிமையில் தனக்குள்ள பங்கை விடுதலை செய்தவரிடம் அவ்வடிமையையொத்த மற்றோர் அடிமையின் விலையை எட்டுகிற அளவுக்குச் செல்வம் இருந்தால் அவன் (முழுவதுமாக) விடுதலை செய்யப்பட வேண்டும்.

மேலும், 'அவ்வாறு (முழுவதுமாக விடுதலை) செய்ய இயலாவிட்டால் அவர் விடுதலை செய்த (அந்தப் பங்கின்) அளவிற்கே அந்த அடிமையை விடுதலை செய்தவராவார்' என்று நாஃபிஉ(ரஹ்) கூறினார்'' என்று சொல்லிவிட்டு, 'இந்தக் கடைசி வாசகத்தை நாஃபிஉ(ரஹ்) கூறினார்களா அல்லது அது ஹதீஸின ஒரு பகுதியா என்று எனக்குத் தெரியாது'' என்று அறிவிப்பாளர் அய்யூப்(ரஹ்) சொன்னார்கள்.

2525. நாஃபிஉ(ரஹ்) அறிவித்தார்.

பங்குதாரர்கள் பலருக்கும் கூட்டான (சொத்தாக இருக்கும்) ஓர் அடிமையில் அல்லது அடிமைப் பெண்ணில் தன்னுடைய பங்கை (பங்குதாரர்களில்) ஒருவர் விடுதலை செய்யும் விஷயத்தில் இப்னு உமர்(ரலி) மார்க்கத் தீர்ப்பு வழங்கி வந்தார்கள். அத்தீர்ப்பில், '(தன்னுடைய பங்கை) விடுதலை செய்தவர் மீது அவ்வடிமையை ஒத்த (மற்றோர் அடிமையின்) விலை மதிப்பிடப்பட்டு அந்த அளவிற்குச் செல்வம் அவரிடம் இருக்குமாயின் அவ்வடிமையை முழுவதுமாக விடுதலை செய்வது அவரின் மீது கடமையாகும். (அவரின் மற்ற) கூட்டாளிகளுக்கு அவர்களின் பங்கு (களுக்கான விலை)கள் கொடுக்கப்பட்டு விடவேண்டும். விடுதலை செய்யப்பட்ட அடிமை சுதந்திரமாகச் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும்'' என்று சொல்லி வந்தார்கள்.

இதை நபி(ஸல்) அவர்களிடமிருந்தே இப்னு உமர்(ரலி) அறிவித்து வந்தார்கள்.

பகுதி 5

(பலருக்கும்) கூட்டான ஓர் அடிமையில் தன்னுடைய பங்கை மட்டும் விடுதலை செய்த ஒருவரிடம் (அந்த அடிமையை முழுமையாக விடுதலை செய்யப் போதுமான) செல்வம் இல்லையென்றால் விடுதலைப் பத்திரத்தில் எழுதியுள்ளபடி அந்த அடிமை (தன்னை முழுமையாக விடுதலை செய்து கொள்ளத் தேவையான செல்வத்தைச் சம்பாதித்துக் கொள்வதற்காக) உழைக்க அனுமதிக்கப்பட வேண்டும்; அவனுக்கு அதிகச் சிரமத்தைத் தரக் கூடாது.

2526. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

ஓர் அடிமையிலிருந்து (தன்னுடைய) பங்கை விடுதலை செய்தவர்.. (தன்னிடம் போதிய) செல்வம் இருக்குமாயின் அந்த அடிமை(யின் மற்ற பங்குகள்) முழுவதையும் விடுதலை செய்யட்டும். இல்லையெனில் அவ்வடிமை, (மீதிப் பங்குகளுக்கான விலையைத் தந்து முழு விடுதலை பெற்றுக் கொள்வதற்காக) உழைத்து(ச் சம்பாதித்து)க் கொள்ள அனுமதிகக்ப்பட வேண்டும். அவன் மீது அதிகச் சிரமத்தை சுமத்தக் கூடாது.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

2527. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

ஓர் அடிமையில் (தனக்குள்ள) ஒரு பங்கை விடுதலை செய்கிறவரிடம் (போதிய) செல்வம் இருக்குமாயின் அவரின் செல்வத்திலிருந்து அவ்வடிமையை (முழுவதுமாக) விடுதலை செய்வது அவரின் மீது கடமையாகும். (அவரிடம் போதிய செல்வம்) இல்லையெனில், அவ்வடிமையின் (நியாயமான விலை மதிப்பிடப்பட்டு மீதிப் பங்குகளின் விலையைத் தருவதற்காக) உழைத்து (சம்பாதித்து)க் கொள்ள அனுமதிக்கப்பட வேண்டும். அவனுக்கு அதிகச் சிரமத்தைத் தரக்கூடாது.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பகுதி 6

அடிமையை விடுதலை செய்தல், விவாகரத்து செய்தல் போன்றவற்றில் நேரும் தவறும் மறதியும்; மேலும், அல்லாஹ்வின் திருப்திக்காவே தவிர அடிமையை விடுதலை செய்வது கூடாது என்பதும்.

''ஒவ்வொரு மனிதனுக்கும், அவன் எண்ணியதே கிடைக்கும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஆனால், (ஒன்றை) மறந்துவிட்டவனுக்கும், தவறுதலாகச் செய்துவிட்டவனுக்கும் 'நிய்யத்' (எண்ணம்) என்பதே கிடையாது. 3

2528. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

என் உம்மத்தினரின் உள்ளங்களில் ஊசலாடும் தீய எண்ணங்களை, அவர்கள் அதன்படி செயல்படாதவரை அல்லது அதை (வெளிப்படுத்தி)ப் பேசாதவரை எனக்காக அல்லாஹ் மன்னித்துவிட்டான்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

2529. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

செயல்கள் (அனைத்துமே) எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன. ஒரு மனிதனுக்கு அவன் எதை எண்ணியிருந்தானோ அதுதான் கிடைக்கும். ஒருவர் அல்லாஹ்வுக்காகவும் அவனுடைய தூதருக்காகவும் ஹிஜ்ரத் செய்வாராயின் அவரின் ஹிஜ்ரத் அல்லாஹ்வுக்காகவும் அவனுடைய தூதருக்காகவுமே அமைந்திருக்கும். அவரின் ஹிஜ்ரத் 4 அவர் அடைந்து கொள்ளும் உலக ஆதாயம் ஒன்றுக்காகவோ, அவர் மணந்து கொள்ளும் ஒரு பெண்ணுக்காகவோ இருக்குமானால் அவர் எதற்காக ஹிஜ்ரத் செய்தாரோ அதுதான் அவருக்குக் கிடைக்கும்.

என உமர் இப்னு கத்தாப்(ரலி) அறிவித்தார்.

பகுதி 7

விடுதலை செய்யும் எண்ணத்தில் ஒருவர் தன் அடிமையை 'இவன் அல்லாஹ்வுக்குரியவன்' என்று கூறினால் (அது செல்லும்.) மேலும், அடிமையை விடுதலை செய்ய சாட்சிகளை ஏற்படுத்துதல்.

2530. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

நான் இஸ்லாத்தை ஏற்க விரும்பி (நபி(ஸல்) அவர்களிடம்) சென்று கொண்டிருந்த பொழுது என்னுடன் ஓர் அடிமையும் இருந்தார். (வழியில்) அவர் என்னைப் பிரிந்தும் நான் அவரைப் பிரிந்தும் வழிதவறிச் சென்றுவிட்டோம். அதன் பிறகு, நான் நபி(ஸல்) அவர்களுடன் அமர்ந்து கொண்டிருந்த பொழுது அவ்வடிமை வந்தார். உடனே நபி(ஸல்) அவர்கள், 'அபூ ஹுரைராவே! இதோ, உங்கள் அடிமை உங்களிடம் வந்திருக்கிறான் (பாரும்)'' என்று கூறினார்கள். நான், '(நபி(ஸல்) அவர்களே!) இந்த அடிமை சுதந்திரமானார் என்பதற்கு நான் தங்களை சாட்சியாக ஆக்குகிறேன்'' என்று கூறினேன். 5

அறிவிப்பாளர் கைஸ்(ரஹ்) கூறினார்.

அபூ ஹுரைரா(ரலி) மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்து மதீனா வந்தபோது அவர் பின்வரும் கவிதையைப் பாடிக் கொண்டே வந்த நேரத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றது:

எவ்வளவு நீண்ட களைப்பூட்டுகிற இரவு! ஆயினும் அது இறைமறுப்பு (ஏக இறைவனை ஏற்க மறுக்கும் கொள்கை) ஆட்சி செய்யும் நாட்டிலிருந்து எங்களை விடுதலை செய்துவிட்டது.

2531. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

நான் (மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்து மதீனாவிற்கு) நபி(ஸல்) அவர்களைக் காணவந்தபோது பாதையில், 'எவ்வளவு நீண்ட களைப்பூட்டுகிற இரவு! ஆயினும், அது இறைமறுப்பு ஆட்சி செய்யும் நாட்டிலிருந்து எங்களை விடுதலை செய்துவிட்டது'' என்று பாடினேன். வழியில் என்னுடைய அடிமை ஒருவன் தப்பியோடிவிட்டான். நான் நபி(ஸல்) அவர்களிடம் சென்றபோது அவர்களிடம் நான் (இஸ்லாத்திற்கான) உறுதிமொழியளித்தேன். நான் நபி(ஸல்) அவர்களிடமே இருந்து கொண்டிருந்தபோது அந்த (என்) அடிமை தென்பட்டான். உடனே நபி(ஸல்) அவர்கள் என்னிடம், 'அபுஹுரைராவே! இதோ உங்கள் அடிமை உங்களிடம் வந்துவிட்டான் (பாருங்கள்)'' என்று கூறினார்கள். நான், 'அவன் (இன்று முதல்) சுதந்திரமானவன்; (என்று) அல்லாஹ்வின் திருப்தியைப் பெறுவதற்காக (அறிவிக்கிறேன்)'' என்று கூறினேன்; அவ்விதம் (கூறி) அவனை விடுதலை செய்துவிட்டேன்.

அபூ அப்தில்லாஹ் புகாரி(யாகிய நான்) கூறுகிறேன்:

இந்த அறிவிப்பாளர் தொடரிலுள்ள அபூ உஸாமாவிடமிருந்து இதே ஹதீஸை அறிவிக்கும் மற்றோர் அறிவிப்பாளரான அபூ குரைப் அவர்களின் அறிவிப்பில் '(அவன்) சுதந்திரமானவன்' என்னும் சொல் மட்டும் இல்லை.

2532. கைஸ் இப்னு அவ்ஃப்(ரலி) அறிவித்தார்.

அபூ ஹுரைரா(ரலி) (நபி(யவர்களிடம்) இஸ்லாத்தை (ஏற்க) நாடி வந்த பொழுது அவர்களுடன் ஓர் அடிமையும் இருந்தான். அவர்கள் பாதையறியாமல் ஒருவரையொருவர் பிரிந்து போய்விட்டார்கள். பிறகு, அபூ ஹுரைரா(ரலி) நபி(ஸல்) அவர்களிடம் சென்று.... 'நபி(ஸல்) அவர்களே! இவ்வடிமை அல்லாஹ்விற்குரியவன் என்பதற்கு நான் தங்களையே சாட்சியாக்குகிறேன்'' என்று கூறினார்கள்.

பகுதி 8

''அடிமைப்பெண் 'உம்முல் வலத்'6 தன்னுடைய எஜமானைப் பெற்றெடுப்பதும்... மறுமை நாளின் அடையாளங்களில் ஒன்றாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். 7

2533. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

உத்பா இப்னு அபீ வக்காஸ் தன் சகோதரர் ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அவர்களிடம் ஸம்ஆவின் அடிமைப் பெண்ணுடைய மகனை, 'அவன் என்னுடைய மகன்'' என்று கூறி, அவனைப் பிடித்து வரும்படி உறுதிமொழி வாங்கியிருந்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின்போது (மக்கா நகருக்கு) வந்திருந்த சமயம், ஸஅத்(ரலி) ஸம்ஆவுடைய அடிமைப் பெண்ணின் மகனைப் பிடித்துக் கொண்டு அல்லாஹ்வின் தூதரிடம் வந்தார். ஸம்ஆவின் மகன் அப்து(ரலி) அவர்களையும் தம்முடன் கொண்டு வந்தார். பிறகு ஸஅத்(ரலி), 'இறைத்தூதர் அவர்களே! இவன் என் சகோதரரின் மகன். என் சகோதரர் என்னிடம் இவன் தன் மகன் என்று (கூறி இவனை அழைத்து வர) உறுதிமொழி வாங்கியுள்ளார்'' என்று கூறினார்கள். அப்து இப்னு ஸம்ஆ(ரலி), 'இறைத்தூதர் அவர்களே! இவன் என்னுடைய சகோதரன்; என் தந்தை ஸம்ஆவின் அடிமைப் பெண் பெற்றெடுத்த மகன்; தன் தந்தையின் படுக்கையில் (என் தந்தையின் ஆதிக்கத்தில் இவனுடைய தாய் இருந்த போது) பிறந்தவன்'' என்று கூறினார்கள். உடனே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஸம்ஆவின் அடிமைப் பெண்ணுடைய மகனைப் பார்த்தார்கள். அவன் மக்களில் உத்பாவிற்கு மிகவும் ஒப்பானவனாக இருந்ததைக் கண்டார்கள். (ஸம்ஆவின் மகன் அப்து(ரலி) அவர்களை நோக்கி) 'அப்து இப்னு ஸம்ஆவே! அவன் உனக்கே உரியவன்'' என்று கூறினார்கள். அவன் அப்துவின் தந்தை ஸம்ஆவின் படுக்கையில் பிறந்தவன் என்னும் காரணத்தால் இப்படிக் கூறினார்கள். (பிறகு) இறைத்தூதர் (தம் மனைவி சவ்தா(ரலி) அவர்களை நோக்கி,) 'ஸம்ஆவின் மகள் சவ்தாவே! இவன் பார்வையில் படாத வண்ணம் நீ திரையிட்டுக் கொள்'' என்று கூறினார்கள். தோற்றத்தில் உத்பாவுக்கு ஒப்பாக அவன் இருந்ததைக் கண்டதாலேயே நபி(ஸல்) அவர்கள் இப்படிக்கட்டளையிட்டார்கள். சவ்தா(ரலி) நபி(ஸல்) அவர்களின் மனைவியாக இருந்தார்கள். 8

பகுதி 9

பின் விடுதலை அளிக்கப்பட்ட அடிமையை விற்பது. 9

2534. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.

எங்களில் ஒருவர் தன் அடிமை ஒருவனை தன் ஆயுட்காலத்திற்குப் பிறகு விடுதலை செய்து விடுவதாக அறிவித்திருந்தார். நபி(ஸல்) அவர்கள் அந்த அடிமையை (''இவனை வாங்குபவர் யார்?' என்று) கூவி அழைத்து (ஏலத்தில்) விற்றுவிட்டார்கள். அந்த அடிமை (விற்கப்பட்ட) முதல் ஆண்டிலேயே மரணித்துவிட்டான். 10

பகுதி 10

'வலா'வை (முன்னாள் அடிமைக்கு வாரிசாகும் உரிமையை) விற்பதும் நன்கொடையாக வழங்குவதும்.

2535. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (முன்னாள்) அடிமைக்கு வாரிசாகும் உரிமையை (அவனுடைய எஜமானர்கள்) விற்பதையும் (அன்பளிப்பாக) வழங்குவதையும் தடை செய்தார்கள். 11

2536. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நான் பாரீராவை வாங்கினேன். அப்போது அவரின் எஜமானர்கள் 'அவருக்கு வாரிசாகும் உரிமை தமக்கே உரியதாக இருக்கவேண்டும்' என்று நிபந்தனையிட்டார்கள். நான் இதை நபி(ஸல்) அவர்களிடம் சொன்னேன். அவர்கள், 'அவளை விடுதலை செய்து விடு! ஏனெனில், 'வலா' - விலையைக் கொடுப்பவருக்கே (விடுதலை செய்பவருக்கே) உரியதாகும்'' என்று கூறினார்கள். நான் அவரை விடுதலை செய்துவிட்டேன். நபி(ஸல்) அவர்கள் பாரீராவை அழைத்து, அவரின் கணவர் விஷயத்தில் (அவருடன் வாழ்வது, அல்லது பிரிந்து விடுவது இரண்டில்) எதையும் தேர்ந்தெடுத்துக் கொள்ள உரிமை வழங்கினார்கள். அதற்கு பாரீரா, 'அவர் எனக்கு எவ்வளவுதான் கொடுத்தாலும் அவரிடம் நான் இருக்க மாட்டேன்'' என்று கூறி (கணவனைப் பிரிந்து) தனித்து வாழ்வதையே தேர்ந்தெடுத்தார்.

பகுதி 11

ஒருவரின் சகோதரர், அல்லது தந்தையின் சகோதரர் இணைவைப்பவராக இருக்கும் நிலையில் போர்க் கைதிகளாகப் பிடிக்கப்பட்டால் (அவர்களை விடுதலை செய்வதற்கு) பிணைத் தொகை பெறத்தான் வேண்டுமா?

அனஸ்(ரலி) கூறினார்.

அப்பாஸ்(ரலி) நபி(ஸல்) அவர்களிடம், 'நான் எனக்கும் அகீலுக்கும் பிணைத் தொகை கொடுத்து விட்டேன்'' என்று கூறினார்கள்.

தம் சகோதரர்கள் அகீல் அவர்களிடமிருந்தும் தம் தந்தையின் சகோதரரான அப்பாஸ்(ரலி) அவர்களிடமிருந்தும் பெற்ற போர்ச் செல்வத்தில் அலீ(ரலி) அவர்களுக்குப் பங்கிருந்தது. 12

2537. அனஸ்(ரலி) அறிவித்தார்.

அன்சாரிகளில் சிலர் அல்லாஹ்வின் தூதரிடம், 'எங்கள் சகோதரி மகன் அப்பாஸ்(ரலி) அவர்களிடமிருந்து பிணைத் தொகை பெறாமல் நாங்கள் (அவரை)விட்டு விடுகிறோம்; நீங்கள் எங்களுக்கு அனுமதி கொடுங்கள்'' என்று அனுமதி கோரினார்கள்.

நபி(ஸல்) அவர்கள், 'அவரிடமிருந்து ஒரு திர்ஹமைக் கூட (வாங்காமல்)விட்டு விடாதீர்கள்'' என்று கூறினார்கள். 13

பகுதி 12

இணைவைப்பவர் (தன் அடிமையை) விடுதலை செய்தல்.

2538. உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) கூறினார்.

ஹகீம் இப்னு ஹிஸாம்(ரலி) அறியாமைக் காலத்தில் நூறு அடிமைகளை விடுதலை செய்தார்கள்; நூறு ஒட்டகங்களையும் அறுத்து தருமம் செய்தார்கள். இவ்வாறே, அவர்கள் இஸ்லாத்தைத் தழுவியபோது (ஹஜ் செய்த நேரத்தில்) நூறு ஒட்டகங்களை அறுத்து தருமம் (செய்து) நூறு அடிமைகளையும் விடுதலை செய்தார்கள். நபி(ஸல்) அவர்களிடம், 'இறைத்தூதர் அவர்களே! நான் அறியாமைக் காலத்தில் நன்மையை நாடியவனாக செய்து வந்த (தரும) காரியங்களைக் குறித்து தாங்கள் என்ன கருதுகிறீர்கள்?' என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'நீங்கள் இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்னர் செய்த நற்செயல்க(ளுக்கான பிரதிபலன்)களுடனேயே நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுள்ளீர்கள்'' என்று கூறினார்கள். 14

பகுதி 13

அரபி அடிமையை உடைமையாக்கிக் கொள்வதும், அந்த அடிமையை அன்பளிப்பாக வழங்குவதும், விலைக்கு விற்பதும், உடலுறவு கொள்வதும், அவனிடம் பிணைத் தொகை பெறுவதும், அவனுடைய மக்களை அடிமைகளாக்கிக் கொள்வதும் (அனுமதிக்கப்பட்டது).

அல்லாஹ் கூறினான்:

அல்லாஹ் இவ்வாறு ஓர் உதாரணம் சொல்கிறான்:

பிறருக்கு உடைமையாக்கப்பட்ட ஓர் அடிமை இருக்கிறார்; அவர் சுயமாக எதையும் செய்ய அதிகாரம் இல்லாதவர். மற்றொருவர் இருக்கிறார். அவருக்கு நாம் நம்மிடத்திலிருந்து நல்ல வாழ்க்கை வசதிகளை வழங்கியிருக்கிறோம். அவர் அதிலிருந்து மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் செலவு செய்கிறார். (கூறுங்கள்:) இவ்விருவரும சமமாவார்களா? அல்ஹம்துலில்லாஹ்... எல்லாப் புகழும் இறைவனுக்கே! ஆனால், (இந்தநேரிய விஷயத்தை) அவர்களில் பெரும்பாலோர் அறிந்து கொள்வதில்லை. (திருக்குர்ஆன் 16:75)15

2539, 2540 மர்வான் இப்னி ஹகம் மற்றும் மிஸ்வர் இப்னு மக்ரமா(ரலி) ஆகியோர் அறிவித்தார்கள்.

ஹவாஸின் குலத்தைச் சேர்ந்த ஒரு குழுவினர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து தங்கள் செல்வங்களையும் முஸ்லிம்களால் (சிறைபிடிக்கப்பட்ட) போர்க்கைதிகளையும் திருப்பித் தந்து விடும்படி கேட்டபோது நபி(ஸல்) அவர்கள் (அக்குழுவினரை) எழுந்து நின்று (வரவேற்று), 'என்னுடன் நீங்கள் பார்க்கிற (மற்ற)வர்களும் இருக்கின்றனர். உண்மையான பேச்சே எனக்கு மிகவும் பிடிக்கும். எனவே, செல்வங்கள் அல்லது கைதிகள் இரண்டில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். நான் உங்களை எதிர்பார்த்தே இருந்தேன்'' என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் தாயிஃபிலிருந்து திரும்பியது முதல், பத்து நாள்களாக அவர்களை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் இரண்டில் ஒன்றையே திருப்பித் தருவார்கள் என்று அவர்களுக்குத் தெளிவாகிவிட்டபோது, 'நாங்கள் கைதிகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறோம்' என்று கூறினார்கள். பிறகு, நபி(ஸல்) அவர்கள் மக்களிடையே எழுந்து நின்று அல்லாஹ்வைப் புகழ்ந்து (உரையாற்றலானார்கள். அப்போது) 'உங்களுடைய (இந்தச்) சகோதரர்கள் மனம் திருந்தி நம்மிடம் வந்துள்ளனர். அவர்களிடம் அவர்களின் (குலத்தினரின்) கைதிகளைத் திருப்பித் தந்து விட விரும்புகிறேன். உங்களில் மனப்பூர்வமாக இதைச் செய்ய (திருப்பித் தந்துவிட) விரும்புகிறவர் செய்யட்டும் (திருப்பித் தந்து விடட்டும்). தம் பங்கு(க்குரிய கைதிகள்) தம்மிடமே இருக்க வேண்டுமென விரும்புபவர் அல்லாஹ் நமக்கு (அடுத்தடுத்த வெற்றிகளின் வாயிலாகக்) கொடுக்கவிருக்கும் முதலாவது செல்வத்திலிருந்து நாம் அவருக்குக் கொடுக்கும் வரை அவ்வாறே செய்யட்டும். (தம்மிடமே கைதிகளை வைத்துக் கொள்ளட்டும்.) (இதைச் செவியுற்றதும்) மக்கள், 'நாங்கள் உங்களுக்காக மனப்பூர்வமாக (கைதிகளைத்) திருப்பித் தந்து விடுகிறோம்'' என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், 'உங்களில் சம்மதிப்பவர் யார், சம்மதிக்காதவர் யார் என்று நாம் அறிய மாட்டோம். எனவே, நீங்கள் திரும்பிச் செல்லுங்கள். உங்களிடையேயுள்ள தலைவர்கள் உங்கள் முடிவை நம்மிடம் தெரிவிக்கட்டும் (பிறகு பார்த்துக் கொள்வோம்)'' என்று கூறினார்கள். எனவே, மக்கள் திரும்பிச் சென்றனர். அவர்களிடையேயுள்ள தலைவர்கள் அவர்களுடன் (கலந்து) பேசினர். பிறகு, நபி(ஸல்) அவர்களிடம் திரும்பி வந்து, அவர்கள் மனமொப்பி சம்மதித்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதுதான் ஹவாஸின் போர்க் கைதிகள் குறித்து நமக்கு எட்டிய செய்தியாகும். 16

அனஸ்(ரலி) கூறினார்.

அப்பாஸ்(ரலி) நபி(ஸல்) அவர்களிடம், 'நான் எனக்கும் அகீலுக்கும் பிணைத் தொகை கொடுத்து விட்டேன்'' என்று கூறினார்கள்.

2541. இப்னு அவ்ன்(ரஹ்) அறிவித்தார்.

நான் நாஃபிஉ(ரஹ்) அவர்களுக்குக் கடிதம் எழுதினேன்; அவர்கள் எனக்கு (பதில்) கடிதம் எழுதினார்கள். அதில் அவர்கள் 'நபி(ஸல்) அவர்கள் பனூ முஸ்தலிக் குலத்தார் அசட்டையாக (எச்சரிக்கையின்றி) இருந்தபோது அவர்களின் மீது (திடீர்) தாக்குதல் நடத்தினார்கள்; அப்போது அவர்களின் கால்நடைகள் நீர்நிலை ஒன்றில் தண்ணீர் புகட்டப்பட்டுக் கொண்டிருந்தன. அவர்களில் போரிடும் திறன் பெற்றவர்களைக் கொன்றார்கள்; அவர்களின் மக்களை (பெண்கள், பிள்ளை குட்டிகளை) போர்க் கைதிகளாக சிறை பிடித்தார்கள்; அன்றுதான் ஜுவைரிய்யா(ரலி) அவர்களைக் கண்டார்கள். இதை அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) எனக்கு அறிவித்தார்கள். அவர்களும் அந்த (முஸ்லிம்) படையில் இருந்தார்கள்' என்று குறிப்பிட்டிருந்தார்கள். 17

2542. இப்னு முஹைரீஸ்(ரஹ்) அறிவித்தார்.

நான் அபூ ஸயீத் குத்ரீ(ரலி) அவர்களைப் பார்த்தபோது அவர்களிடம் (அஸல் செய்வது பற்றி) கேட்டேன். அவர்கள் சொன்னார்கள்; நாங்கள் அல்லாஹ்வின் தூதருடன் பனூ முஸ்தலிக் (குலத்திற்கெதிரான) போருக்குச் சென்றோம். அப்போது, அரபுகளிலிருந்து போர்க் கைதிகள் (சிலர்) எங்களுக்குத் கிடைத்தனர். நாங்கள் (அந்தக் கைதிகளிடையேயிருந்த) பெண்களை (உடலுறவு கொள்ள) விரும்பினோம். ஏனெனில், (எங்கள் மனைவியரைப் பிரிந்து) தனிமையில் இருந்தது எங்களை வாட்டியது. மேலும், (இந்தப் பெண்களுடன் உடலுறவு கொள்ளும்போது) 'அஸ்ல்' செய்ய நாங்கள் விரும்பினோம். எனவே, அல்லாஹ்வின் தூதரிடம் அதுபற்றிக் கேட்டோம். அதற்கு, 'நீங்கள் அதைச் செய்யாமலிருந்தால் தவறேதுமில்லையே! மறுமைநாள் வரை தவறேது மில்லையே! மறுமை நாள் வரை (இறைவிதிப்படி) உருவாக வேண்டிய எந்த உயிரும் கட்டாயம் உருவாகியே தீரும்'' என்று பதிலளித்தார்கள். 18

2543. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பனூ தமீம் குலத்தார் பற்றிக் கூறிய மூன்று விஷயங்களைக் கேட்டதிலிருந்து நான் அவர்களை எப்போதும் நேசிக்கலானேன். (ஒரு முறை) நபி(ஸல்) அவர்கள், 'அவர்கள் (பனூ தமீம் குலத்தார்) என் உம்மத்தினரிலேயே அதிகக் கடுமையுடன் தஜ்ஜாலை எதிர்த்துப் போராடுவார்கள்'' என்று கூறினார்கள். (ஒரு முறை) பனூ தமீம் குலத்தாரின் தருமப் பொருள்கள் வந்தபோது இறைத்தூதர், 'இவை எங்கள் இனத்தாரின் தருமப் பொருள்கள்'' என்று கூறினார்கள். (ஒரு முறை) ஆயிஷா(ரலி) அவர்களிடம் பனூ தமீம் குலத்தாரின் பெண் போர்க் கைதி ஒருவர் இருந்தார். நபி(ஸல்) அவர்கள் ஆயிஷா(ரலி) அவர்களிடம், 'நீ இந்தப் பெண்ணை விடுதலை செய்துவிடு. ஏனெனில், இவள் இஸ்மாயீல்(அலை) அவர்களின் சந்ததிகளில் ஒருத்தி'' என்று கூறினார்கள். 19

பகுதி 14

தம் அடிமைப் பெண்ணுக்கு ஒழுக்கமும் கல்வியும் கற்பிப்பவரின் சிறப்பு.

2544. 'தன்னிடம் ஓர் அடிமைப் பெண் இருந்து, அவளுக்கு அவர் கல்வி கற்றுக் கொடுத்து, அவளை நல்ல முறையில் நடத்தி, பிறகு அவளை விடுதலை செய்து திருமணமும் முடித்து வைக்கிறவருக்கு இரண்டு நன்மைகள் உண்டு' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என அபூ மூஸா அஷ்அரீ(ரலி) அறிவித்தார்.

பகுதி 15

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அடிமைகள் உங்கள் சகோதரர்கள். நீங்கள் உண்ணுவதிலிருந்தே அவர்களுக்கு உண்ணக் கொடுங்கள்.

அல்லாஹ் கூறினான்.

மேலும், நீங்கள் அனைவரும் அல்லாஹ்வுக்கே அடிபணிந்து வாழுங்கள். அவனோடு எதனையும் இணையாக்காதீர்கள். தாய் தந்தையரிடமும், உறவினர்களிடமும், அநாதைகள் மற்றும் வறியவர்களிடமும் நல்ல விதமாக நடந்து கொள்ளுங்கள். மேலும், உறவினரான அண்டை வீட்டார், அந்நியரான அண்டை வீட்டார், பக்கத்திலிருக்கும் நண்பர், வழிப்போக்கர் மற்றும் உங்கள் ஆதிக்கத்திலுள்ள அடிமைகள் ஆகியோருடனும் நல்லவிதமாக நடந்து கொள்ளுங்கள். நிச்சயமாக, அல்லாஹ் தற்பெருமை கொண்டு கர்வமாக நடப்பவர்களை நேசிப்பதில்லை. (திருக்குர்ஆன் 4:36)

2545. மஃரூர் இப்னு சுவைத்(ரஹ்) அறிவித்தார்.

நான், அபூ தர் கிஃபாரீ(ரலி) ஒரு மேலங்கியை (தம் மீது) அணிந்தவர்களாக இருக்கும் நிலையில் அவர்களைக் கண்டேன். அப்போது அவர்களின் அடிமையும் ஒரு மேலங்கியை அணிந்திருந்தார். அதைப்பற்றி (இருவரும் ஒரே விதமான ஆடை அணிந்திருப்பது பற்றி) அபூ தர்(ரலி) அவர்களிடம் நாங்கள் கேட்டோம். அதற்கு அவர்கள் சொன்னார்கள்; நான் ஒருவரை (அவரின் தாயைக் குறிப்பிட்டு) ஏசிவிட்டேன்; அவர் நபி(ஸல்) அவர்களிடம் முறையிட்டார். நபி(ஸல்) அவர்கள் (என்னை நோக்கி) 'இவரின் தாயாரைக் குறிப்பிட்டு நீர் குறை கூறினீரா?' என்று கேட்டார்கள். பிறகு, 'உங்கள் அடிமைகள் உங்கள் சகோதரர்கள் ஆவர். அவர்களை அல்லாஹ் உங்கள் ஆதிக்கத்தின் கீழ் ஒப்படைத்துள்ளான். எனவே, எவரின் ஆதிக்கத்தின் கீழ் அவரின் சகோதரர் இருக்கிறாரோ அவர், தன் சகோதரருக்கு, தான் உண்பதிலிருந்து உண்ணத் தரட்டும். தான் உடுத்துவதிலிருந்தே உடுத்தத் தரட்டும். அவர்களின் சக்திக்கு மீறிய வேலை பளுவை அவர்களின் மீது சுமத்தாதீர்கள். அப்படி அவர்களின் சக்திக்கு மீறிய வேலை பளுவை அவர்களின் மீது நீங்கள் சுமத்தினால் (அதை நிறைவேற்றிட) அவர்களுக்கு உதவுங்கள்'' என்று கூறினார்கள்.

பகுதி 16

இறைவனையும் முறையாக வழிபட்டு, எஜமானுக்கும் விசுவாசமாக நடந்து கொள்கிற அடிமையின் சிறப்பு.

2546. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

அடிமை, தன் எஜமானுக்கு விசுவாசமாக நடந்து, தன் இறைவனைச் செம்மையான முறையில் வணங்குவானாயின் அவனுக்கு இருமுறை நன்மை கிடைக்கும்.

என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

2547. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

ஒரு மனிதரிடம் அடிமைப் பெண் ஒருத்தி இருந்து, அவளுக்கு அவர் ஒழுக்கம் கற்பித்து, கல்வியையும் அழகிய முறையில் கற்றுக் கொடுத்து, அவளை விடுதலையும் செய்து, திருமணமும் முடித்து வைத்தால் அவருக்கு இரண்டு நன்மைகள் கிடைக்கும். மேலும், ஓர் அடிமை அல்லாஹ்வின் உரிமையையும் தன் எஜமானர்களின் உரிமையையும் (ஒழுங்காக) நிறைவேற்றுவானாயின் அவனுக்கும் இரண்டு நன்மைகள் கிடைக்கும்.

என அபூ மூஸா அஷ்அரீ(ரலி) அறிவித்தார்.

2548. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

ஒருவருக்கு உடைமையான நல்ல அடிமைக்கு இரண்டு நன்மைகள் உண்டு.

இதை அறிவித்துவிட்டு, அபூ ஹுரைரா(ரலி), 'எவனுடைய கரத்தில் என் உயிர் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக! இறைவழியில் போராடுவதும், ஹஜ்ஜும், என் தாய்க்குச் செய்ய வேண்டிய கடமையும் இல்லாமலிருந்திருந்தால் நான் (ஒருவரின்) அடிமையாக இருக்கும் நிலையில் மரணிப்பதையே விரும்பியிருப்பேன்.'' என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

2549. 'தன் இறைவனைச் செம்மையான முறையில் வணங்கி, தன் எஜமானுக்கு விசுவாசமாக நடப்பவரே உங்களில் நல்லவராவார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என அபூ ஹுரைரா(ரலி) அறிக்கிறார்.

பகுதி 17

அடிமையைக் கேவலமாகக் கருதுவதும் 'என் அடிமை, என் அடிமைப் பெண்' என்று கூறுவதும் வெறுப்புக் குரியதாகும்.

மேலும் அல்லாஹ் கூறினான்:

உங்கள் ஆண், பெண் அடிமைகளில் நல்லவர்களுக்கும்... (திருக்குர்ஆன் 24:32)

பிறருக்கு உடைமையாக்கப்பட்ட ஓர் அடிமை... (திருக்குர்ஆன் 16:75)

அவ்வேளை வாயிலில் அவளுடைய எஜமான் (கணவன்) நிற்பதை இருவரும் கண்டார்கள். (திருக்குர்ஆன் 12:25)

உங்கள் ஆதிக்கத்தில் இருக்கிற இறைநம்பிக்கை கொண்ட அடிமைப் பெண்களில்... (திருக்குர்ஆன் 04: 25)

மேலும், நபி(ஸல்) அவர்கள், 'உங்கள் தலைவருக்காக எழுந்து நில்லுங்கள்'' என்று கூறியுள்ளனர்.

மேலும், அல்லாஹ் கூறினான்:

''உன் எஜமானிடம் (ரப்பிடம்) என்னைப் பற்றி எடுத்துக் கூற வேண்டும்'' என்று (யூசுஃப்) கூறினார். (திருக்குர்ஆன் 12:42)

மேலும், நபி(ஸல்) அவர்கள், 'உங்கள் தலைவர் யார்?' என்று கேட்டார்கள்.20

2550. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

அடிமை, தன் எஜமானுக்கு விசுவாசமாக நடந்து, தன் இறைவனை நல்ல முறையில் வணங்கி வருவானாயின் அவனுக்கு இருமுறை நன்மை கிடைக்கும். 21

என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

2551. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

தன் இறைவனை நல்லமுறையில் வணங்கி, தன் எஜமானுக்குத் தான் செய்ய வேண்டிய கடமைகளை (ஒழுங்காக) நிறைவேற்றி, அவனுக்கு நலம் நாடி (நேர்மையாகவும் விசுவாசமாகவும் நடந்து) அவனுக்கு கீழ்ப்படிகிற அடிமைக்கு என்றால் அவனுக்கு இரண்டு நன்மைகள் கிடைக்கும்.

என அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.

2552. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

உங்களில் எவரும் 'உன் ரப்புக்கு (அதிபதிக்கு) உணவு கொண்டு, உன் ரப்புக்கு உளூச் செய்ய உதவு, உன் ரப்புக்கு நீர் புகட்டு' என்று கூற வேண்டாம். 'என் எஜமான்; என் உரிமையாளர்' என்று கூறட்டும்.

''என் அடிமை; என் அடிமைப் பெண்'' என்று உங்களில் எவரும் கூற வேண்டாம். 'என் பணியாள்; என் பணிப்பெண்; என் பையன்'' என்று கூறட்டும்.

என அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.

2553. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

ஓர் அடிமையில் தனக்கிருக்கும் பங்கை விடுதலை செய்கிறவருக்கு அவ்வடிமையின் விலையை எட்டுகிற அளவுக்குச் செல்வமிருந்தால் அவனையொத்த அடிமையின் விலை மதிப்பிடப்பட்டு, தன் செல்வத்திலிருந்து அதைச் செலுத்தி அவனை முழுமையாக விடுவித்து விடவேண்டும். இல்லையெனில், அவர் எந்த அளவுக்கு அவ்வடிமைய விடுதலை செய்தாரோ அந்த அளவுக்கே அவன் சுதந்திரவான் ஆவான்.

என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

2554. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளே. உங்கள் பொறுப்புக்குட்பட்டவை பற்றி நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள். மக்களின் மீது ஆட்சி புரியும் தலைவர் அவர்களுக்குப் பொறுப்பாளியாவான். அவர்களை (பராமரித்த விதம்) குறித்து அவன் விசாரிக்கப்படுவான். பெண், தன் கணவனின் வீட்டிற்கும் அவனுடைய குழந்தைக்கும் பொறுப்பாளியாவாள். அவர்களை (பராமரித்த விதம்) குறித்து அவள் விசாரிக்கப்படுவாள். அடிமை, தன் எஜமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் அதை (பாதுகாத்த விதம்) குறித்து விசாரிக்கப்படுவான். ஆக, நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளே. உங்கள் பொறுப்புக்குட்பட்டவை குறித்து நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள்.

என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

2555, 2556 ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

அடிமைப் பெண் விபசாரம் செய்தால் அவளுக்குக் கசையடி கொடுங்கள். அதன் பிறகும் அவள் விபசாரம் செய்தால் (அப்போதும்) அவளுக்குக் கசையடி(யே) கொடுங்கள். பிறகு மூன்றாவதாகவோ, நான்காவதாகவோ விபசாரம் செய்தால் அவளை ஒரு முடிக் கற்றைக்காகவாவது விற்று விடுங்கள்.

இதை அபூ ஹுரைரா(ரலி) அவர்களும் ஸைத் இப்னு காலித்(ரலி) அவர்களும் அறிவித்தார்கள்.

பகுதி 18

உங்கள் பணியாள் உங்களுக்கு உணவு கொண்டு வந்தால்...

2557. நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்

உங்களில் ஒருவரிடம் அவரின் பணியாள் அவரின் உணவைக் கொண்டு வந்தால், அவர் அப்பணியாளைத் தம்முடன் (உட்கார வைத்துக் கொள்ளட்டும். அவ்வாறு) உட்கார வைக்கவில்லையென்றாலும் அவருக்கு ஒரு கவளம் அல்லது இரண்டு கவளங்கள் அல்லது ஒரு வாய் அல்லது இரண்டு வாய்கள் (அந்த உணவிலிருந்து) கொடுக்கட்டும். ஏனெனில், அதைத் தயாரிக்க அந்தப் பணியாள் பாடுபட்டார்.

பகுதி 19 

அடிமை தன் எஜமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவார் (இதில்) நபி (ஸல்) அவர்கள் செல்வத்தை எஜமானுடன் இணைத்துக் கூறியுள்ளார்கள்.

2558. நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. மேலும், உங்கள் பொறுப்புக்குட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவீர்கள். ஆட்சித் தலைவரும் பொறுப்பாளியாவார். தன் பிரஜைகள் குறித்து அவர் விசாரிக்கப்படுவார். ஆண், தன் குடும்பத்தாருக்குப் பொறுப்பாளியாவார். அவன், தன் பொறுப்புக்குட்பட்டவர்கள் குறித்து விசாரிக்கப்படுவார். பெண், தன் கணவனின் வீட்டிற்குப் பொறுப்பாளியாவாள். அவளது பொறுப்புக்குட்பட்டவை குறித்து அவள் விசாரிக்கப்படுவாள். பணியாள் (அடிமை) தன் எஜமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன், தன் பொறுப்புக்குட்பட்டவை பற்றி விசாரிக்கப்படுவான். இதை நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவித்த இப்னு உமர் (ரலி) அவர்கள், நான் இவற்றையெல்லாம் நபி (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றேன். மேலும், நபி (ஸல்) அவர்கள், மனிதன் (மகன்) தன் தந்தையின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவனது பொறுக்குட்பட்டவை குறித்து அவன் விசாரிக்கப்படுவான். ஆக, நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளே. நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் பொறுப்புக்குட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவீர்கள் என்று சொன்னதாக எண்ணுகிறேன் என்று கூறினார்கள்.

பகுதி 20 

ஒருவர் (தன்) அடிமையை அடித்தால் முகத்தில் அடிப்பதைத் தவிர்த்துக் கொள்ளட்டும்.

2559. நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் உங்களில் ஒருவர் (எவரையாவது) தாக்கினால் முகத்(தில் அடிப்ப)தைத் தவிர்க்கட்டும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்.

தன் அடிமையைப் பற்றி அவதூறு கூறியவன் பாவம் செய்தவன் ஆவான்.2 
Previous Post Next Post