இறைத் தூதர்கள் அனுப்பப்பட்டதன் நோக்கம்!
“(ஆரம்பத்தில்) மனிதர்கள் ஒரே கூட்டத்தினராகவே இருந்தனர்; அல்லாஹ் (நல்லோருக்கு) நன்மாராயங் கூறுவோராகவும், (தீயோருக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வோராகவும் நபிமார்களை அனுப்பி வைத்தான்; அத்துடன் மனிதர்களிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளைத் தீர்த்து வைப்பதற்காக அவர்களுடன் உண்மையுடைய வேதத்தையும் இறக்கி வைத்தான்; எனினும் அவ்வேதம் கொடுக்கப் பெற்றவர்கள், தெளிவான ஆதாரங்கள் வந்த பின்னரும், தம்மிடையே உண்டான பொறாமை காரணமாக மாறுபட்டார்கள்; ஆயினும் அல்லாஹ் அவர்கள் மாறுபட்டுப் புறக்கணித்துவிட்ட உண்மையின் பக்கம் செல்லுமாறு ஈமான் கொண்டோருக்குத் தன் அருளினால் நேர் வழி காட்டினான்; இவ்வாறே, அல்லாஹ் தான் நாடியோரை நேர்வழியில் செலுத்துகின்றான். (அல்-குர்ஆன் 2:213)
“(நன்மையைக் கொண்டு) நன்மாராயம் கூறுவோராகவும், (தீமையை விட்டு) எச்சரிக்கை செய்வோராகவுமேயன்றி நாம் தூதர்களை அனுப்பவில்லை; எனவே எவர் நம்பி, சீர்திருந்தி நடந்தார்களோ, அவர்களுக்கு அச்சமுமில்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்” (அல்-குர்ஆன் 6:48)
“மெய்யாகவே நாம் ஒவ்வொரு சமூகத்தாரிடத்திலும், ‘அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள்; ஷைத்தான்களை விட்டும் நீங்கள் விலகிச் செல்லுங்கள்’ என்று (போதிக்குமாறு) நம் தூதர்களை அனுப்பி வைத்தோம்; எனவே அ(ந்த சமூகத்த)வர்களில் அல்லாஹ் நேர்வழி காட்டியோரும் இருக்கிறார்கள்; வழிகேடே விதிக்கப்பெற்றோரும் அவர்களில் இருக்கிறார்கள்; ஆகவே நீங்கள் பூமியில் சுற்றுப்பயணம் செய்து, பொய்யர்களின் முடிவு என்ன ஆயிற்று என்பதைக் கவனியுங்கள்” (அல்-குர்ஆன் 16:36)
“இன்னும், நாம் தூதர்களை நன்மாரயங் கூறுபவர்களாகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர்களாகவும் அல்லாமல் அனுப்பவில்லை; எனினும் காஃபிர்களோ பொய்யைக் கொண்டு சத்தியத்தை அழித்து விடுவதற்காகத் தர்க்கம் செய்கிறார்கள் – என்னுடைய அத்தாட்சிகளையும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்யப்பட்டதையும் பரிகாசமாகவே எடுத்துக் கொள்கின்றனர்” (அல்-குர்ஆன் 18:56)
“(இவ்வாறு தூதர்களை அவன் அனுப்பியதற்குக்) காரணம் யாதெனில், அநியாயம் செய்பவர்களின் ஊரை, அதிலிருப்போர் எச்சரிக்கை இல்லாதிருக்கும் நிலையில் அவர்கள் செய்துவிட்ட அநியாயத்தின் காரணமாக உம் இறைவன் அழிப்பதில்லை என்பதேயாகும்” (அல்-குர்ஆன் 6:131)
இறைத்தூதர்களுக்கு அத்தாட்சிகளையும் வேதங்களையும் இறைவன் வழங்கினான்!
“நிச்சயமாக நம் தூதர்களைத் தெளிவான அத்தாட்சிகளுடன் அனுப்பினோம்; அன்றியும், மனிதர்கள் நீதியுடன் நிலைப்பதற்காக, அவர்களுடன் வேதத்தையும் (நீதத்தின்) துலாக்கோலையும் இறக்கினோம்” (அல்-குர்ஆன் 57:25)
தீர்க்கதரிசிகள் அனைவரும் நேர் வழிசார்ந்த ஸாலிஹான நல்லடியார்களாவார்கள்: -
“நாம் அவருக்கு இஸ்ஹாக்கையும், யஃகூபையும் (சந்ததியாகக்) கொடுத்தருளினோம், இவர்கள் அனைவரையும் நாம் வழியில் செலுத்தினோம்; இதற்கு முன்னர் நாம் நூஹையும் அவருடைய சந்ததியிலிருந்து தாவூது, ஸுலைமான், அய்யூப்,யூஸுஃப், மூஸா, ஹாரூன் ஆகியோரையும் நேர்வழியில் செலுத்தினோம்; இப்படியே நாம் நன்மை புரிவோருக்கு நற்கூலி வழங்குகிறோம். இன்னும், ஜகரிய்யா, யஹ்யா, ஈஸா, இல்யாஸ் – இவர்கள் யாவரும் (நேர் வழிசார்ந்த) ஸாலிஹானவர்களில் நின்றுமுள்ளவர்களே. (அல்-குர்ஆன் 6:84-85)
“(நபியே!) இவ்வேதத்தில் மூஸாவைப் பற்றியும் நினைவு கூர்வீராக! நிச்சயமாக அவர் மாசில்லாத (தூயவராக) இருந்தார். அவர் ரஸூலாகவும் நபியாகவும் இருந்தார்” (அல்-குர்ஆன் 19:51)
“இன்னும் நாம் அவருக்கு இஸ்ஹாக்கையும், மேலதிகமாக யஃகூபையும் அளித்தோம்; இவர்கள் ஒவ்வொருவரையும் (ஸாலிஹான) நல்லடியார்களாக்கினோம்” (அல்-குர்ஆன் 21:72)
“இன்னும், லூத்தையும் (நபியாக்கி) – நாம் அவருக்கு ஞானத்தையும், கல்வியையும் கொடுத்தோம்; அறுவறுப்பான செயல்களைச் செய்து கொண்டிருந்(தவர்களின்) ஊரை விட்டும் அவரை நாம் காப்பாற்றினோம்; நிச்சயமாக அவர்கள் மிகவும் கெட்ட சமூகத்தினராகவும், பெரும் பாவிகளாகவும் இருந்தனர்” (அல்-குர்ஆன் 21:74)
“இன்னும்: இஸ்மாயீலையும், இத்ரீஸையும், துல்கிஃப்லையும் (நபியே! நீர் நினைவு கூர்வீராக); அவர்கள் யாவரும் பொறுமையாளர்களில் நின்றுமுள்ளவர்களே! இவர்கள் (எல்லோரையும்) நாம் நம் கிருபையில் புகுத்திக் கொண்டோம், நிச்சயமாக இவர்கள் (ஸாலிஹீன்களான) நல்லடியார்களில் நின்றுமுள்ளவர்களே!” (அல்-குர்ஆன் 21:85-86)
ஒவ்வொரு தூதரும் அவருடைய சமுதாயத்தின் மொழியிலேயே போதித்தார்கள்!
“ஒவ்வொரு தூதரையும் அவருடைய சமூகத்தாருக்கு அவர் விளக்கிக் கூறுவதற்காக அவர்களுடைய மொழியிலேயே (போதிக்கும் படி) நாம் அனுப்பிவைத்தோம்; அல்லாஹ் தான் நாடியோரை வழிதவறச் செய்கின்றான், தான் நாடியோருக்கு நேர்வழியையும் காண்பிக்கின்றான்; அவன் மிகைத்தவனாகவும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்” (அல்-குர்ஆன் 14:4)
தூதர்களின் மூலம் இறைவன் போதித்தது என்ன?
“(நபியே!) உமக்கு முன்னர் நாம் அனுப்பிய ஒவ்வொரு தூதரிடமும்: ‘நிச்சயமாக (வணக்கத்திற்குரிய) நாயன் என்னைத் தவிர வேறு எவருமில்லை; எனவே, என்னையே நீங்கள் வணங்குங்கள்’ என்று நாம் வஹீ அறிவிக்காமலில்லை” (அல்-குர்ஆன் 21:25)
இறைத் தூதர்கள் அனைவரும் ஆடவரே!
“(நபியே!) இன்னும் உமக்கு முன்னர் வஹீ கொடுத்து நாம் அவர்களிடம் அனுப்பி வைத்த தூதர்கள் எல்லோரும் ஆடவரே தவிர வேறல்லர்; ஆகவே (அவர்களை நோக்கி) ‘நீங்கள் (இதனை) அறிந்து கொள்ளாமலிருந்தால். (முந்திய) வேத ஞானம் பெற்றோரிடம் கேட்டறிந்து கொள்ளுங்கள்’ (என்று கூறுவீராக)” (அல்-குர்ஆன் 16:43)
இறைத் தூதர்கள் அனைவருமே மக்கள் சிலரால் பொய்பிக்கப்பட்டார்கள்!
“எனினும் அவர்களிடம் (நம்முடைய) எந்தத் தூதர் வந்தாலும் அவரை அந்த மக்கள் ஏளனம் செய்யாமல் இருந்ததில்லை” (அல்-குர்ஆன் 15:11)
“இன்னும் அவர்கள் உம்மைப் பொய்பித்தார்களானால் (விசனப்படாதீர்), இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் இவ்வாறே திட்டமாகப் பொய்ப்பித்தனர். அவர்களுடைய தூதர்கள், அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளுடனும், ஆகமங்களுடனும், ஒளிவீசும் வேதத்துடனும் வந்திருந்தார்கள்” (அல்-குர்ஆன் 35:25)
இறைவனின் தூதர்களைப் பொய்பித்த முந்தைய சமுதாயங்களை இறைவன் அழித்துவிட்டான்!
“பின்னரும் நாம் நம்முடைய தூதர்களைத் தொடர்ச்சியாக அனுப்பி வைத்தோம். ஒரு சமுதாயத்திடம் அதன் தூதர் வந்த போதெல்லாம், அவர்கள் அவரைப் பொய்யாக்கவே முற்பட்டார்கள்; ஆகவே நாம் அச்சமூகத்தாரையும் (அழிவில்) ஒருவருக்குப் பின் ஒருவராக்கி நாம் அவர்களை(ப் பின் வருவோர் பேசும் பழங்)கதைகளாகச் செய்தோம். எனவே, நம்பிக்கை கொள்ளாத மக்களுக்கு (அல்லாஹ்வின் ரஹ்மத்) நெடுந்தொலைவேயாகும்” (அல்-குர்ஆன் 23:44)
“எத்தனையோ ஊர்கள் தம் இறைவனுடையவும் அவனுடைய தூதர்களுடையவும் கட்டளைக்கு மாறு செய்தனர்; ஆதலால், நாம் வெகு கடுமையாக அவற்றைக் கணக்குக் கேட்டு, அவர்களைக் கொடிய வேதனையாகவும் வேதனை செய்தோம்” (அல்-குர்ஆன் 65:8)
“ஆகவே, அவர்களுடைய தூதர்கள் அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளுடன் வந்த போது, அவர்கள் தங்களிடமிருந்த கல்வியைக் கொண்டு பெரும் மகிழ்ச்சி அடைந்திருந்தார்கள், எனினும், அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்ததுவே அவர்களை சூழ்ந்து கொண்டது” (அல்-குர்ஆன் 40:83)
“(மனிதர்களே!) உங்களுக்கு முன்னிருந்த எத்தனையோ தலைமுறையினர்களை, அவர்கள் அநியாயம் செய்த போது நிச்சயமாக நாம் அழித்திருக்கின்றோம்; அவர்களிடம் அவர்களுடைய (இறை) தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள்; எனினும் அவர்கள் நம்பவில்லை – குற்றம் செய்யும் மக்களுக்கு நாம் இவ்வாறு கூலி கொடுக்கின்றோம்” (அல்-குர்ஆன் 10:13)
எந்த சமுதாயமும் அழக்கப்படுவதற்கு முன்னர் எச்சரிக்கை செய்யும் தூதர் அனுப்பப்படாமலில்லை!
“(நபியே!) நம் வசனங்களை அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கும் தூதர் ஒருவரை அவர்களுடைய தலைநகருக்கு அனுப்பி வைக்காத வரையில் எந்த ஊர்களையும் உம்முடைய இறைவன் அழிப்பவனாக இல்லை; மேலும் ,எந்த ஊரையும் அதன் மக்கள் அக்கிரமக் காரர்களாக இல்லாத வரையில் நாம் அழிப்போராகவும் இல்லை” (அல்-குர்ஆன் 28:59)
அன்னை மேரியின் மகனாகிய இயேசு நாதர் இறைவனின் தூதர் மற்றும் அடியார் அன்றி வேறில்லை!
“மர்யமுடைய குமாரர் மஸீஹ் இறை தூதரேயன்றி வேறில்லை, இவருக்கு முன்னரும் தூதர்கள் பலர் வந்து சென்றுவிட்டனர். இவருடைய தாயார் மிக்க உண்மையானவர்; இவ்விருவரும் (மற்ற மனிதர்களைப் போல்) உணவு உண்பவர்களாகவே இருந்தனர்; அவர்களுக்கு நம்முடைய அத்தாட்சிகளை கொண்டு எவ்வாறு தெளிவாக்கினோம் என்பதை (நபியே!) நீங்கள் கவனிப்பீராக! அவர்கள் எவ்வாறு திசை திருப்பப்படுகிறார்கள் என்பதையும் கவனிப்பீராக!” (அல்-குர்ஆன் 5:75)
“அவர் (ஈஸா நம்முடைய) அடியாரே அன்றி வேறில்லை; அவருக்கு நாம் அருட்கொடையைச் சொரிந்து இஸ்ராயீலின் சந்ததியாருக்கு அவரை நல்லுதாரணமாக ஆக்கினோம். (அல்-குர்ஆன் 43:59)
கடவுள் மூவரில் இருக்கிறார் (Trinity) என்று கூறாதீர்கள்!
“வேதத்தையுடையோரே! நீங்கள் உங்கள் மார்க்கத்தில் அளவு கடந்து செல்லாதீர்கள். அல்லாஹ்வைப் பற்றி உண்மையைத் தவிர (வேறெதையும்) கூறாதீர்கள்; நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய ஈஸா மஸீஹ் அல்லாஹ்வின் தூதர் தான்; இன்னும் (‘குன்’ ஆகுக என்ற) அல்லாஹ்வின் வாக்காக (அதனால் உண்டானவராகவும்) இருக்கின்றார்; அதை அவன் மர்யமின்பால் போட்டான்; (எனவே) அவரும் அவனிடமிருந்து (வந்த) ஓர் ஆன்மா தான்; ஆகவே, அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொள்ளுங்கள்; இன்னும், (வணக்கத்திற்குரிய இறைவன்) மூன்று என்று கூறாதீர்கள் – (இப்படிக் கூறுவதை விட்டு) விலகிக் கொள்ளுங்கள்; (இது) உங்களுக்கு நன்மையாகும் – ஏனெனில் வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ் ஒருவன் தான்; அவனுக்கு எவரும் சந்ததியாக இருப்பதிலிருந்து அவன் தூய்மையானவன். வானங்களிலும்;, பூமியிலும் இருப்பவையெல்லாம் அவனுக்கே சொந்தம். (காரியங்கள் அனைத்துக்கும்) பொறுப்பேற்றுக் கொள்வதற்கு அல்லாஹ்வே போதுமானவன்” (அல்-குர்ஆன் 4:171)
நோவா மற்றும் ஆப்ரஹாம் ஆகிய தீர்க்கதரிசிகளின் வழிவந்தவர்தான் இயேசு நாதர்!
“அன்றியும், திடமாக நாமே நூஹையும், இப்ராஹீமையும் (தூதர்களாக) அனுப்பினோம்; இன்னும், அவ்விருவரின் சந்ததியில் நுபுவ்வத்தை (நபித்துவத்தை)யும் வேதத்தையும் ஏற்படுத்தினோம்; (அவர்களில்) நேர்வழி பெற்றவர்களும் உண்டு; எனினும் அவர்களில் பெரும்பாலோர் ஃபாஸிக்குகளாக – பாவிகளாக இருந்தனர். பின்னர் அவர்களுடைய (அடிச்) சுவடுகளின் மீது (மற்றைய) நம் தூதர்களைத் தொடரச் செய்தோம்; மர்யமின் குமாரர் ஈஸாவை (அவர்களை)த் தொடரச் செய்து, அவருக்கு இன்ஜீலையும் கொடுத்தோம் – அன்றியும், அவரைப் பின்பற்றியவர்களின் இதயங்களில் இரக்கத்தையும் கிருபையையும் உண்டாக்கினோம்; ஆனால் அவர்கள் தாங்களே புதிதாக உண்டாக்கிக் கொண்ட துறவித்தனத்தை நாம் அவர்கள் மீது விதிக்கவில்லை. அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடைய வேண்டியேயன்றி (அவர்களே அதனை உண்டுபண்ணிக் கொண்டார்கள்); ஆனால் அதைப் பேணுகிற அளவுக்கு அவர்கள் அதைச் சரிவரப் பேனவில்லை – அப்பால், அவர்களில் ஈமான் கொண்டவர்களுக்கு அவர்களுடைய (நற்)கூலியை நாம் வழங்கினோம்; எனினும், அவர்களில் பெரும் பாலோர் ஃபாஸிக்குகளாக – பாவிகளாகவே இருக்கின்றனர்” (அல்-குர்ஆன் 57:26-27)
இயேசு நாதர் அனுப்பப்பட்டதன் நோக்கம்!
“மேலும், மர்யமின் குமாரர் ஈஸா: ‘இஸ்ராயீல் மக்களே! எனக்கு முன்னுள்ள தவ்ராத்தை மெய்ப்பிப்பவனாகவும், எனக்குப் பின்னர் வரவிருக்கும் ‘அஹமது’ என்னும் பெயருடைய தூதரைப் பற்றி நன்மாராயம் கூறுபவனாகவும் இருக்கும் நிலையில் அல்லாஹ்வின் தூதனாக உங்களிடம் வந்துள்ளேன்’ என்று கூறிய வேளையை (நபியே! நீர் நினைவு கூர்வீராக!) எனினும், அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளை அவர் கொண்டு வந்த போது, அவர்கள் ‘இது தெளிவான சூனியமாகும்’ என்று கூறினார்கள்” (அல்-குர்ஆன் 61:6)
ஆப்ராம், இஸ்மவேல், யாக்கோபு ஆகியோரின் மார்க்கம் என்ன?
“இப்ராஹீமும், இஸ்மாயீலும், இஸ்ஹாக்கும், யஃகூபும், இன்னும் அவர்களுடைய சந்ததியினர் யாவரும் நிச்சயமாக யூதர்கள் அல்லது கிறிஸ்தவர்களே’ என்று கூறுகின்றீர்களா? (நபியே!) நீர் கேட்பீராக: ‘(இதைப் பற்றி) உங்களுக்கு நன்றாகத் தெரியுமா அல்லது அல்லாஹ்வுக்கா? அல்லாஹ்விடமிருந்து தன்பால் வந்திருக்கும் சாட்சியங்களை மறைப்பவனைவிட அநியாயக்காரன் யார்? இன்னும் அல்லாஹ் நீங்கள் செய்பவை பற்றி பராமுகமாக இல்லை” (அல்-குர்ஆன் 2:140)
இறுதி தூதர் முஹம்மது(ஸல்)!
“முஹம்மது(ஸல்) (இறைவனின்) தூதரே அன்றி(வேறு) அல்லர்; அவருக்கு முன்னரும் (அல்லாஹ்வின்) தூதர்கள் பலர் (காலம்) சென்றுவிட்டார்கள்” (அல்-குர்ஆன் 3:144)
“(இறை) தூதர்களில் நாம் புதிதாக வந்தவனல்லன்; மேலும் என்னைப் பற்றியோ, உங்களைப் பற்றியோ, என்ன செய்யப்படும் என்பதை நான் அறியமாட்டேன், எனக்கு என்ன வஹீ அறிவிக்கப்படுகிறதோ அதைத் தவிர (வேறெதையும்) நான் பின்பற்றுவதில்லை; தெளிவாக அச்சமூட்டி எச்சரிப்பவனேயன்றி நான் வேறில்லை’ என்று (நபியே!) நீர் கூறும்” (அல்-குர்ஆன் 46:9)
இறுதி தூதர் அனுப்பப்பட்டதன் நோக்கம்!
“(இறைவன் கட்டளைகளை) எடுத்துக் கூறுவதே அன்றி இத்தூதர் மீது (வேறு கடமை) இல்லை” (அல்-குர்ஆன் 5:99)
“இதே போன்று, நாம் உங்களிடையே உங்களிலிருந்து ஒரு தூதரை, நம் வசனங்களை உங்களுக்கு எடுத்து ஓதுவதற்காகவும், உங்களைத் தூய்மைப்படுத்துவதற்காகவும், உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக்கொடுப்பதற்காகவும், இன்னும் உங்களுக்குத் தெரியாமல் இருந்தவற்றை, உங்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்காகவும் அனுப்பியுள்ளோம்” (அல்-குர்ஆன் 2:151)
“(நபியே!) நாம் உம்மை உண்மையுடன், (நல்லடியாருக்கு) நன்மாராயம் கூறுபவராகவும், (தீயோருக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவுமே அனுப்பியுள்ளோம்; நரகவாதிகளைப் பற்றி நீர் வினவப்பட மாட்டீர்” (அல்-குர்ஆன் 2:119)
முஹம்மது நபி (ஸல்) இறுதி தூதராவார்!
“முஹம்மது(ஸல்) உங்கள் ஆடவர்களில் எவர் ஒருவருக்கும் தந்தையாக இருக்கவில்லை; ஆனால் அவரோ அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களுக்கெல்லாம் இறுதி (முத்திரை)யாகவும் இருக்கின்றார்; மேலும் அல்லாஹ் எல்லாப் பொருள்கள் பற்றியும் நன்கறிந்தவன்” (அல்-குர்ஆன் 33:40)
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் முந்தைய தீர்க்கதரிசிகளை உண்மைப்படுத்துகிறார்!
“அப்படியல்ல! அவர் சத்தியத்தையே கொண்டு வந்திருக்கிறார்; அன்றியும் (தமக்கு முன்னர் வந்த) தூதர்களையும் உண்மைப்படுத்துகிறார்” (அல்-குர்ஆன் 37:37)
முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு முந்தைய தீர்க்கதரிசிகள்!
“(நபியே!) உமக்கு முன்னர் இருந்த சமூகத்தாருக்கும் நாம் (நம்) தூதர்களை அனுப்பினோம்; அச்சமூகத்தாரை நோயைக் கொண்டும் வறுமையைக் கொண்டும் பிடித்தோம் அவர்கள் பணிந்து வரும் பொருட்டு” (அல்-குர்ஆன் 6:42)
“உமக்கு முன்னிருந்த (நம்) தூதர்களும் பொய்ப்பிக்கப்பட்டனர் அவர்களுக்கு நம் உதவி வரும்வரை, தாம் பொய்ப்பிக்கப் பட்டதையும், துன்புறுத்தப்பட்டதையும், அவர்கள் பொறுத்துக் கொண்டனர்; அல்லாஹ்வின் வாக்குகளை யாராலும் மாற்ற முடியாது; (உங்களுக்கு முன்னிருந்த) தூதர்களின் இத்தகைய செய்திகள் உம்மிடம் வந்தேயிருக்கின்றன” (அல்-குர்ஆன் 6:34)
அனைத்து தூதர்களும் மனிதர்களேயன்றி வேறில்லை!
“(நபியே!) உமக்கு முன்னர் (பற்பல சமூகங்களுக்கும் ) நாம் அனுப்பிய தூதர்கள் (அந்தந்த சமூகங்களின்) ஊர்களிலிருந்த மனிதர்களேயன்றி வேறில்லை; அவர்களுக்கு நாம் வஹீ மூலம் (நம் கட்டளைகளை) அறிவித்தோம்” (அல்-குர்ஆன் 12:109)
“(நபியே!) நிச்சயமாக உமக்கு முன்னரும், நாம் தூதர்களை அனுப்பி வைத்தோம்; அவர்களுக்கும் மனைவியரையும், சந்ததிகளையும் நாம் ஏற்படுத்தியிருந்தோம்; மேலும், எந்தத் தூதரும் அல்லாஹ்வின் அனுமிதியில்லாமல் எந்த அத்தாட்சியையும் கொண்டுவந்ததில்லை; ஒவ்வொரு தவணைக்கும் ஒரு (பதிவு) ஏடு உள்ளது” (அல்-குர்ஆன் 13:38)
“(நபியே!) இன்னும் உமக்கு முன்னர் நாம் அனுப்பிய தூதர்களெல்லாம் நிச்சயமாக உணவருந்துபவர்களாகவும், கடை வீதிகளில் நடமாடுபவர்களாகவும் தாம் இருந்தார்கள்” (அல்-குர்ஆன் 25:20)
முஹம்மது நபி (ஸல்) உலக முடிவு நாள் வரை தோன்றக் கூடிய மனித குலம் முழுமைக்குமான இறுதி தூதராவார்கள்!
“இன்னும், (நபியே!) நாம் உம்மை மனித குலம் முழுமைக்கும் நன்மாராயங் கூறுபவராகவும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவுமே யன்றி (வேறெவ்வாரும்) அனுப்பவில்லை; ஆனால் மனிதர்களில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள்” (அல்-குர்ஆன் 34:28
“(இவர்களுக்காகவும்), இவர்களுடன் சேராத (பிற்காலத்த)வர்களுக்காகவும், (தூதராக அனுப்பி வைத்தான்) அவன் (யாவரையும்) மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்” (அல்-குர்ஆன் 62:3)
முந்தைய தீர்க்கதரிசிகள் பொய்ப்பிக்கப்பட்டதைப் போன்றே இறுதி தூதரையும் பொய்ப்பிக்கிறார்கள்!
“(நபியே!) நிச்சயமாக உமக்கு முன்னர் (வந்து சென்ற நம்) தூதர்களும் (இவ்வாறே) பரிகசிக்கப் பட்டனர்; ஆகவே, நிராகரித்துக் கொண்டிருந்தோருக்கு நான் தவணையளித்துப் பின்னர் அவர்களைப் பிடித்துக் கொண்டேன்; ஆகவே, (அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட) என் தண்டனை எவ்வாறு இருந்தது? (என்பதைச் சிந்திப்பார்களாக!)” (அல்-குர்ஆன் 13:32)
“இன்னும், (நபியே!) நிச்சயமாக உமக்கு முன்னர் வந்த தூதர்களும் (இவ்வாறே) பரிகசிக்கப் பட்டார்கள் – ஆனால் அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்த (வேதனையான)து அவர்களை சூழ்ந்து கொண்டது” (அல்-குர்ஆன் 21:41)
வேதமுடையவர்கள் மறைத்துக் கொண்டிருக்கும் பல விஷயங்களை இறுதி தூதர் விளக்கி காட்டுகிறார்: -
“வேதமுடையவர்களே! மெய்யாகவே உஙகளிடம் நம்முடைய தூதர் வந்திருக்கின்றார்; வேதத்திலிருந்து நீங்கள் மறைத்துக் கொண்டிருப்பவற்றில் பல விஷயங்களை அவர் உங்களுக்கு விளக்கிக் காட்டுவார். இன்னும், (இப்பொழுது தேவையில்லாத) அநேகத்தை விட்டுவிடுவார். நிச்சயமாக அல்லாஹ்விடமிருந்து பேரொளியும், தெளிவுமுள்ள (திருக் குர்ஆன் என்னும்) வேதமும் உங்களிடம் வந்திருக்கின்றது” (அல்-குர்ஆன் 5:15)
முந்தைய வேதங்களிலும் இறுதி தூதரைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது!
“எவர்கள் எழுதப்படிக்கத் தெரியாத நபியாகிய நம் தூதரைப் பின்பற்றுகிறார்களோ – அவர்கள் தங்களிடமுள்ள தவ்ராத்திலும் இன்ஜீலிலும் இவரைப் பற்றி எழுதப் பட்டிருப்பதைக் காண்பார்கள்; அவர், அவர்களை நன்மையான காரியங்கள் செய்யுமாறு ஏவுவார்; பாவமான காரியங்களிலிருந்து விலக்குவார்; தூய்மையான ஆகாரங்களையே அவர்களுக்கு ஆகுமாக்குவார்; கெட்டவற்றை அவர்களுக்குத் தடுத்து விடுவார்; அவர்களுடைய பளுவான சுமைகளையும், அவர்கள் மீது இருந்த விலங்குகளையும், (கடினமான கட்டளைகளையும்) இறக்கிவிடுவார்; எனவே எவர்கள் அவரை மெய்யாகவே நம்பி, அவரைக் கண்ணியப்படுத்தி, அவருக்கு உதவி செய்து, அவருடன் அருளப்பட்டிருக்கும் ஒளிமயமான (வேதத்)தையும் பின் பற்றுகிறார்களோ, அவர்கள் தாம் வெற்றி பெறுவார்கள்” (அல்-குர்ஆன் 7:157)
முஸ்லிம்கள் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு முந்தைய அனைத்து தீர்க்க தரிசிகளின் மீதும் நம்பிக்கைக் கொள்கிறார்கள்!
“(இறை) தூதர், தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பெற்றதை நம்புகிறார்; (அவ்வாறே) முஃமின்களும் (நம்புகின்றனர்; இவர்கள்) யாவரும் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும் நம்புகிறார்கள்: ‘நாம் இறை தூதர்களில் எவர் ஒருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டுவதில்லை; (என்றும்) இன்னும் நாங்கள் செவிமடுத்தோம்; (உன் கட்டளைகளுக்கு) நாங்கள் வழிப்பட்டோம்; எங்கள் இறைவனே! உன்னிடமே மன்னிப்புக் கோருகிறோம்; (நாங்கள்) மீளுவதும் உன்னிடமேதான்’ என்று கூறுகிறார்கள்” (அல்-குர்ஆன் 2:285)
இறைவனின் தீர்க்கதரிசிகளுக்கிடையில் பாகுபாடு காட்டக் கூடாது என்பது இறைக்கட்டளை!!
“(முஃமின்களே!)’நாங்கள் அல்லாஹ்வையும், எங்களுக்கு இறக்கப்பட்ட(வேதத்)தையும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் இன்னும் அவர் சந்ததியினருக்கு இறக்கப்பட்டதையும்¢ மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் கொடுக்கப்பட்டதையும் இன்னும் மற்ற நபிமார்களுக்கும் அவர்களின் இறைவனிடமிருந்து கொடுக்கப்பட்டதையும் நம்புகிறோம்; அவர்களில் நின்றும் ஒருவருக்கிடையேயும் நாங்கள் வேறுபாடு காட்ட மாட்டோம்; இன்னும் நாங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபடுகிறோம்’ என்று கூறுவீர்களாக” (அல்-குர்ஆன் 2:136)
“யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்” (அல்-குர்ஆன் 4:152)
மனிதர்களை நோக்கி இறுதி தூதர் மூலமாக இறைவனின் அழைப்பு!
(நபியே!) நீர் கூறுவீராக: ‘மனிதர்களே! மெய்யாக நான் உங்கள் அனைவருக்கும் அல்லாஹ்வின் தூதராக இருக்கிறேன்; வானங்கள், பூமி ஆகியவற்றின் ஆட்சி அவனுக்கே உரியது, அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறுயாருமில்லை – அவனே உயிர்ப்பிக்கின்றான்; அவனே மரணம் அடையும்படியும் செய்கின்றான் – ஆகவே, அல்லாஹ்வின் மீதும், எழுதப்படிக்கத்தெரியா நபியாகிய அவன் தூதரின் மீதும் ஈமான் கொள்ளுங்கள், அவரும் அல்லாஹ்வின் மீதும் அவன் வசனங்களின் மீதும் ஈமான் கொள்கிறார் – அவரையே பின்பற்றுங்கள்; நீங்கள் நேர்வழி பெறுவீர்கள்” (அல்-குர்ஆன் 7:158)
“அல்லாஹ்விடமிருந்து (வருவதை) எடுத்துச் சொல்வதும், அவனுடைய தூதுவத்துவத்தையும் தவிர (எனக்கு வேறில்லை) எனவே, எவர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்கிறாரோ அவருக்கு நிச்சயமாக நரக நெருப்புத்தான். அதில் அவர் என்றென்றும் இருப்பார்’ என (நபியே!) நீர் கூறும்” (அல்-குர்ஆன் 72:23)
கேப்ரியேல் என்ற வானவர் மூலம் இறுதி தூதரின் இதயத்தில் இறுதி வேதத்தை இறைவன் இறக்கி வைத்தான்: -
“யார் ஜிப்ரீலுக்கு விரோதியாக இருக்கின்றானோ (அவன் அல்லாஹ்வுக்கும் விரோதியாவான்) என்று (நபியே!) நீர் கூறும்; நிச்சயமாக அவர்தாம் அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்கி உம் இதயத்தில் (குர்ஆனை) இறக்கி வைக்கிறார்; அது, தனக்கு முன்னிருந்த வேதங்கள் உண்மை என உறுதிப்படுத்துகிறது; இன்னும் அது வழிகாட்டியாகவும், நம்பிக்கை கொண்டோருக்கு நன்மாராயமாகவும் இருக்கிறது” (அல்-குர்ஆன் 2:97)
முன்னோர்களைப் பின்பற்றுதல் கூடாது! இறைத் தூதரையே பின்பற்ற வேண்டும்!
“அல்லாஹ் இறக்கி அருளிய (வேதத்)தின்பாலும், இத்தூதரின்பாலும் வாருங்கள்’ என அவர்களுக்குக் கூறப்பட்டால், ‘எங்களுடைய தந்தையர் (மூதாதையர்)களை நாங்கள் எ(ந்த மார்க்கத்)தில் கண்டோமோ அதுவே எங்களுக்குப் போதுமானது’ என்று அவர்கள் கூறுகிறார்கள்; என்ன! அவர்களுடைய தந்தையர் (மூதாதையர்கள்) ஒன்றும் அறியாதவர்களாகவும், நேர்வழியில் நடக்காதவர்களாகவும் இருந்தாலுமா? (அவர்களைப் பின்பற்றுவார்கள்.)” (அல்-குர்ஆன் 5:104)
“இவ்வாறே உமக்கு முன்னரும் நாம் (நம்முடைய) தூதரை எந்த ஊருக்கு அனுப்பினாலும், அவர்களில் செல்வந்தர்கள்: ‘நிச்சயமாக நாங்கள் எங்கள் மூதாதையரை ஒரு மார்க்கத்தில் கண்டோம்; நிச்சயமாக நாங்கள் அவர்களின் அடிச்சுவடுகளையே பின்பற்றுகின்றோம்’ என்று கூறாதிருக்கவில்லை. இவ்வாறே உமக்கு முன்னரும் நாம் (நம்முடைய) தூதரை எந்த ஊருக்கு அனுப்பினாலும், அவர்களில் செல்வந்தர்கள்: ‘நிச்சயமாக நாங்கள் எங்கள் மூதாதையரை ஒரு மார்க்கத்தில் கண்டோம்; நிச்சயமாக நாங்கள் அவர்களின் அடிச்சுவடுகளையே பின்பற்றுகின்றோம்’ என்று கூறாதிருக்கவில்லை. (அப்பொழுது அத்தூதர்,) ‘உங்கள் மூதாதையரை எதன்மீது நீங்கள் கண்டீர்களோ, அதை விட மேலான நேர்வழியை நான் உங்களுக்குக் கொண்டு வந்திருந்த போதிலுமா?’ என்று கேட்டார்” (அல்-குர்ஆன் 43:23-24)
இறைவனையும் இறைத்தூதரையும் மட்டுமே பின்பற்ற வேண்டியதன் அவசியம்!
“மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து சத்தியத்துடன் (அனுப்பப்பட்ட இத்)தூதர் உங்களிடம் வந்துள்ளார்; அவர் மீது ஈமான் கொள்ளுங்கள்; (இது) உங்களுக்கு நன்மையாகும்; ஆனால் நீங்கள் நிராகரிப்பீர்களானால், (இறைவனுக்கு எதுவும் குறைந்து விடாது, ஏனெனில்) நிச்சயமாக வானங்களிலும் பூமியிலும் இருப்பவை அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியவை; அல்லாஹ்வே (யாவற்றையும்) நன்கறிந்தோனும், ஞானம் மிக்கோனும் ஆவான்” (அல்-குர்ஆன் 4:170)
“இன்னும் அல்லாஹ்வுக்கும் வழிபடுங்கள்; (அவன்) தூதருக்கும் வழிபடுங்கள்; எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்; (இதனை) நீங்கள் புறக்கணித்துவிட்டால், (நம் கட்டளைகளைத்) தெளிவாக எடுத்து விளக்குவது மட்டுமே நம் தூதர்மீது கடமையாகும் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்” (அல்-குர்ஆன் 5:92)
“(மறுமை நாளில் இறைவன் ஜின்களையும் மனிதர்களையும் நோக்கி) ‘ஜின்கள், மனிதர்கள் கூட்டத்தாரே! உங்களுக்கு என் வசனங்களை (அறிவித்து) ஓதிக்காட்டவும், இந்த நாளில் (ஏற்படப்போகும்) சந்திப்பைப் பற்றி உங்களுக்கு எச்சரிக்கை செய்யவும் உங்களிலிருந்தே உங்களிடம் தூதர்கள் வரவில்லையா?’ (என்று கேட்பான்), அதற்கு அவர்கள், ‘நாங்கள் எங்கள் (பாவத்தின்) மீது சாட்சி கூறுகிறோம்’ என்று கூறுவார்கள்; இதற்குக் காரணம் உலக வாழ்க்கை அவர்களை மயக்கிவிட்டது – அவர்கள் காஃபிர்களாக இருந்ததாக அவர்கள் தங்களுக்கு எதிராகவே சாட்சி கூறுவார்கள்” (அல்-குர்ஆன் 6:130)
“ஆதமுடைய மக்களே! உங்களிடம் உங்களிலிருந்தே (நம்) தூதர்கள் வந்து, என் வசனங்களை உங்களுக்கு விளக்கினால், அப்போது எவர்கள் பயபக்தி கொண்டு (தம் வாழ்க்கையில்) திருந்திக் கொண்டார்களோ அவர்களுக்கு அச்சமுமில்லை; அவர்கள் துக்கப்படவுமாட்டார்கள்” (அல்-குர்ஆன் 7:35)
“அல்லாஹ்வுக்கு நீங்கள் கீழ்படியுங்கள்; இன்னும் (அவனுடைய) ரஸூலுக்கும் கீழ்ப்படியுங்கள்’ என்று (நபியே!) நீர் கூறுவீராக; ஆனால் நீங்கள் புறக்கணித்தால் அவர் மீதுள்ள கடமையெல்லாம் தம் மீது சுமத்தப்பட்ட (தூதுச் செய்தியை உங்களிடம் அறிவிப்ப)துதான்; இன்னும் உங்கள் மீதுள்ள கடமையானது, உங்கள் மீது சுமத்தப்பட்ட (படி வழிபடுவ)துதான்; எனவே, நீங்கள் அவருக்குக் கீழ்படிந்து நடந்தால் நீங்கள் நேர்வழி பெறுவீர்கள்; இன்னும் (நம் தூதைத்) தெளிவாக எடுத்துரைப்பதைத் தவிர (வேறெதுவும் நம்) தூதர்மீது கடமையில்லை” (அல்-குர்ஆன் 24:54)
இறுதி தூதரைப் பின்பற்றுவதனால் ஏற்படும் நன்மைகள்!
“அல்லாஹ்வுக்கும், (அவன்) தூதருக்கும் கீழ்படியுங்கள்; நீங்கள் (அதனால் அல்லாஹ்வினால்) கிருபை செய்யப்படுவீர்கள்” (அல்-குர்ஆன் 3:132)
“அல்லாஹ்வின் மீதும், அவன் தூதர்கள் மீதும் ஈமான் (நம்பிக்கை) கொள்ளுங்கள்; நீங்கள் நம்பிக்கை கொண்டு பயபக்தியுடன் நடப்பீர்களாயின் உங்களுக்கு மகத்தான நற்கூலியுண்டு” (அல்-குர்ஆன் 3:179)
எவர் அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்களை சுவனபதிகளில் பிரவேசிக்கச் செய்வான்; அதன் கீழே ஆறுகள் சதா ஓடிக்கொண்டிருக்கும், அவர்கள் அங்கே என்றென்றும் இருப்பார்கள் – இது மகத்தான வெற்றியாகும்” (அல்-குர்ஆன் 4:13)
“இன்னும் எவர்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்படிந்து அல்லாஹ்வுக்கு பயபக்தி கொள்கிறார்களோ அவர்கள் தாம் வெற்றி பெற்றவர்கள்” (அல்-குர்ஆன் 24:52)
“அன்றியும் உங்களில் எவர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் வழிபட்டு, நல்ல அமல் செய்கிறாரோ, அவருக்கு நாம் நற்கூலியை இருமுறை வழங்குவோம்; இன்னும் அவருக்கு கண்ணியமான உணவையும் சித்தம் செய்திருக்கிறோம்” (அல்-குர்ஆன் 33:31)
“அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் எவர் வழிப்படுகிறாரோ, அவர் மகத்தான வெற்றி கொண்டு விட்டார்” (அல்-குர்ஆன் 33:71)
“உங்கள் இறைவனின் மன்னிப்பிற்கும் சுவர்க்கத்திற்கும் நீங்கள் முந்துங்கள்; அச்சுவர்க்கத்தின் பரப்பு, வானத்தினுடையவும், பூமியினுடையவும் பரப்பைப் போன்றதாகும்; எவர்கள் அல்லாஹ்வின் மீதும், அவன் தூதர் மீதும் ஈமான் கொள்கிறார்களோ, அவர்களுக்கு அது சித்தம் செய்து வைக்கப்பட்டிருக்கிறது. அது அல்லாஹ்வுடைய கிருபையாகும் – அதனை அவன் நாடியவருக்கு அளிக்கின்றான். இன்னும், அல்லாஹ் மகத்தான கிருபையுடையவன்” (அல்-குர்ஆன் 57:21)
“யார் அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்வின் அருளைப்பெற்ற நபிமார்கள், ஸித்தீகீன்கள் (சத்தியவான்கள்) ஷுஹதாக்கள் (உயிர்த்தியாகிகள்) ஸாலிஹீன்கள் (நற்கருமங்களுடையவர்கள்) ஆகியவர்களுடன் இருப்பார்கள் – இவர்கள் தாம் மிக்க அழகான தோழர்கள் ஆவார்கள்” (அல்-குர்ஆன் 4:69)
இறுதி தூதரை நிராகரிப்பதால் ஏற்படவிருக்கும் விளைவுகள்!
“நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, ‘நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்’ என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்” (அல்-குர்ஆன் 4:150)
“எனவே உண்மையாளர்களாகிய (அத்தூதர்களிடம்) அவர்கள் (எடுத்துக் கூறிய தூதின்) உண்மையை பற்றி அல்லாஹ் கேட்பான்; (அவர்களை நிராகரித்த) காஃபிர்களுக்கு அல்லாஹ் நோவினை தரும் வேதனையைச் சித்தம் செய்திருக்கின்றான்” (அல்-குர்ஆன் 33:8)
“நெருப்பில் அவர்களுடைய முகங்கள் புரட்டப்படும் அந்நாளில், ‘ஆ, கை சேதமே! அல்லாஹ்வுக்கு நாங்கள் வழிப்பட்டிருக்க வேண்டுமே; இத்தூதருக்கும் நாங்கள் வழிப்பட்டிருக்க வேண்டுமே!’ என்று கூறுவார்கள்” (அல்-குர்ஆன் 33:66)
“எவன் அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் மாறு செய்கிறானோ, இன்னும் அவன் விதித்துள்ள வரம்புகளை மீறுகிறானோ அவனை நரகில் புகுத்துவான்; அவன் அங்கு (என்றென்றும்) தங்கி விடுவான்; மேலும் அவனுக்கு இழிவான வேதனையுண்டு” (அல்-குர்ஆன் 4:14)
“அந்த நாளில், (இவ்வாறு) (அல்லாஹ்வை) நிராகரித்து, (அல்லாஹ்வின்) தூதருக்கும் மாறு செய்தவர்கள், பூமி தங்களை விழுங்கி சமப்படுத்திடக் கூடாதா என்று விரும்புவார்கள்; ஆனால் அல்லாஹ்விடத்தில் எந்த விஷயத்தையும் அவர்கள் மறைக்கமுடியாது” (அல்-குர்ஆன் 4:42)
“எவர் (அல்லாஹ்வின்) தூதருக்குக் கீழ்படிகிறாரோ, அவர் அல்லாஹ்வுக்குக் கீழ்படிகிறார்; யாராவது ஒருவர் (இவ்வாறு கீழ்படிவதை) நிராகரித்தால் (நீர் வருந்த வேண்டியதில்லை, ஏனெனில்) நாம் உம்மை அவர்களின் மேல் கண்காணிப்பவராக அனுப்பவில்லை” (அல்-குர்ஆன் 4:80)
“எவனொருவன் நேர்வழி இன்னது என்று தனக்குத் தெளிவான பின்னரும், (அல்லாஹ்வின்) இத்தூதரை விட்டுப் பிரிந்து, முஃமின்கள் செல்லாத வழியில் செல்கின்றானோ, அவனை அவன் செல்லும் (தவறான) வழியிலேயே செல்லவிட்டு நரகத்திலும் அவனை நுழையச் செய்வோம்; அதுவோ, சென்றடையும் இடங்களில் மிகக் கெட்டதாகும்” (அல்-குர்ஆன் 4:115)
“முஃமின்களே! நீங்கள் அல்லாஹ்வின் மீதும், அவனுடைய தூதர் மீதும், அவன் தூதர் மீது அவன் இறக்கிய (இவ்) வேதத்தின் மீதும், இதற்கு முன்னர் இறக்கிய வேதங்களின் மீதும் ஈமான் கொள்ளுங்கள்; எவர் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும், இறுதி நாளையும் (நம்பாமல்) நிராகரிக்கிறாரோ அவர் வழிகேட்டில் வெது தூரம் சென்றுவிட்டார்” (அல்-குர்ஆன் 4:136 )
“(அந்நாளில்) நிராகரித்தவர்கள் கூட்டம் கூட்டமாக நரகத்திற்கு இழுத்துக் கொண்டு வரப்படுவார்கள்; அவர்கள் அங்கே வந்தவுடன் அதன் வாசல்கள் திறக்கப்படும்; அதன் காவலர்கள் அவர்களை நோக்கி: ‘உங்களிலிருந்து (அல்லாஹ்வின்) தூதர்கள், உங்கள் இறைவனுடைய வசனங்களை உங்களுக்கு ஓதிக் காண்பிக்கிறவர்களாகவும், இந்த நாளை நீங்கள் சந்திக்க வேண்டுமென்பதைப் பற்றி உங்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர்களாகவும் உங்களிடம் வரவில்லையா?’ என்று கேட்பார்கள்; (இதற்கு அவர்கள்) ‘ஆம் (வந்தார்கள்)’ என்று கூறுவார்கள்; எனினும் காஃபிர்களுக்கு வேதனை பற்றிய வாக்கு உண்மையாகி விட்டது” (அல்-குர்ஆன் 39:71)
“காலையிலும், மாலையிலும் அவர்கள் நரக நெருப்பின் முன் கொண்டுவரப்படுவார்கள்; மேலும் நியாயத் தீர்ப்பு காலம் நிலைபெற்றிருக்கும் நாளில் ‘ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரைக் கடினமான வேதனையில் புகுத்துங்கள்’ (என்று கூறப்படும்). அவர்கள் நரக நெருப்பில் தர்க்கம் செய்து கொண்டு, பலஹீனர்கள் பெருமை அடித்துக் கொண்டிருந்தோரை நோக்கி: ‘நிச்சயமாக நாங்கள் உங்களைப் பின்பற்றுபவர்களாக இருந்தோம் – எனவே, எங்களை விட்டும் இந்நெருப்பிலிருந்து ஒரு பகுதியையாவது விலக்கி வைப்பீர்களாக?’ என்று அவர்கள் சொல்லும் வேளையை (நினைவுட்டுவீராக!). (அப்போது:) ‘நிச்சயமாக நாம் எல்லோருமே இதிலிருக்கிறோம்; நிச்சயமாக அல்லாஹ் (தன்) அடியார்களுக்கிடையில் தீர்ப்புச் செய்து விட்டான்’ என்று பெருமை அடித்துக் கொண்டிருந்தவர்கள் கூறுவார்கள். ‘இவ்வேதனையை ஒரு நாளைக்கு (மட்டுமாவது) எங்களுக்கு இலேசாக்கும்படி உங்கள் இறைவனிடத்தில் பிரார்த்தனை செய்யுங்கள்’ என்று (நரக) நெருப்பில் இருப்பவர்கள் நரகத்தின் காவலாளிகளை நோக்கி கூறுவார்கள். ‘உங்கள் ரஸூல்கள் (தூதர்கள்) உங்களிடம் தெளிவான அத்தாட்சிகளுடன் வரவில்லையா?’ என (அக்காவலாளிகள்) கேட்பார்கள். ‘ஆம்! நிச்சயமாக’ என அவர்கள் பதில் கூறுவார்கள். ‘அவ்வாறாயின் நீங்களே பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்’ என்று அவர்கள் கூறுவர். ஆனால் காஃபிர்களின் பிரார்த்தனை வழி கேட்டிலில்லாமல் இல்லை” (அல்-குர்ஆன் 40:46-50)
“அன்றியும் எவர் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர் மீதும் ஈமான் கொள்ளவில்லையோ – நிச்சயமாக அக்காஃபிர்களுக்கு நாம் கொழுந்து விட்டெரியும் (நரக) நெருப்பைச் சித்தம் செய்திருக்கிறோம்” (அல்-குர்ஆன் 48:13)
முஸ்லிம்களை நோக்கிய கிறிஸ்தவர்களின் அழைப்புக்கு பதில்!
“நீங்கள் யூதர்களாக அல்லது கிறிஸ்தவர்களாக மாறிவிடுங்கள் – நீங்கள் நேர்வழியை அடைவீர்கள்’ என்று அவர்கள் கூறுகிறார்கள். ‘அப்படியல்ல! (நேரான வழியைச் சார்ந்த) இப்ராஹீமின் மார்க்கத்தையே பின்பற்றுவோம், (இணை வைக்கும்) முஷ்ரிக்குகளில் நின்றும் அவரில்லை’ என்று (நபியே!) நீர் கூறுவீராக!” (அல்-குர்ஆன் 2:135)
முஹம்மது நபி (ஸல்) அவர்களை எளிதில் நம்புவர் யார்?
“(நபியே!) நீர் (இறைவனால் அனுப்பப்பட்ட) தூதர் அல்லர் என்று காஃபிர்கள் சொல்கிறார்கள்; எனக்கும், உங்களுக்குமிடையே சாட்சியாக இருக்க அல்லாஹ்வும், வேதஞானம் யாரிடமிருக்கிறதோ அவர்களும் போதுமானவர்கள்’ என்று நீர் கூறிவிடுவீராக!” (அல்-குர்ஆன் 13:43)
“எவரும் தம் குழந்தைகளை (சந்தேகமில்லாமல் அறிவதைப் போல், வேதங் கொடுக்கப் பெற்றவர்கள், (நம் தூதராகிய இவரை, இறைவனுடைய தூதர் தாம்) என்று நன்கறிவார்கள். எவர்கள் தமக்குத் தாமே நஷ்டமிழைத்துக் கொண்டார்களோ அவர்கள் தாம் இவரை நம்பமாட்டார்கள்” (அல்-குர்ஆன் 6:20)
இறைவனுக்கு இணை வைப்பவர்கள் வெறுத்த போதிலும் இஸ்லாம் மார்க்கமே மிகைக்கும்!
(இணை வைத்து வணங்கும்) முஷ்ரிக்குகள் வெறுத்த போதிலும், மற்ற எல்லா மார்க்கங்களையும் மிகைக்கும் பொருட்டு, அவனே தன் தூதரை நேர்வழியுடனும், சத்திய மார்க்கத்துடனும் அனுப்பினான்” (அல்-குர்ஆன் 61:9)
“அவனே தன் தூதரை நேர் வழியுடனும், சத்திய மார்க்கத்துடனும் அனுப்பி வைத்தான் – முஷ்ரிக்குகள் (இணை வைப்பவர்கள், இம்மார்க்கத்தை) வெறுத்த போதிலும், எல்லா மார்க்கங்களையும் இது மிகைக்குமாறு செய்யவே (அவ்வாறு தன் தூதரையனுப்பினான்.)” (அல்-குர்ஆன் 9:33)
“அவனே தன் தூதரை நேரான வழியைக் கொண்டும், சத்திய மார்க்கத்தைக் கொண்டும், அனுப்பியருளினான்; சகல மார்க்கங்களையும் விட அதை மேலோங்கச் செய்வதற்காக (இதற்கு) அல்லாஹ் சாட்சியாக இருப்பதே போதுமானது” (அல்-குர்ஆன் 48:28)
“நானும் என்னுடைய தூதர்களும் நிச்சயமாக மிகைத்து விடுவோம்’ என்று அல்லாஹ் விதித்துள்ளான்; நிச்சயமாக அல்லாஹ் மிக்க சக்தியுடையவன்; யாவரையும் மிகைத்தவன்” (அல்-குர்ஆன் 58:21)
மனித குலம் முழுமைக்குமான ஒரு தூதர்
மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து சத்தியத்துடன் (அனுப்பப்பட்ட இத்)தூதர் உங்களிடம் வந்துள்ளார்; அவர் மீது ஈமான் கொள்ளுங்கள்; (இது) உங்களுக்கு நன்மையாகும்; ஆனால் நீங்கள் நிராகரிப்பீர்களானால், (இறைவனுக்கு எதுவும் குறைந்து விடாது, ஏனெனில்) நிச்சயமாக வானங்களிலும் பூமியிலும் இருப்பவை அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியவை; அல்லாஹ்வே (யாவற்றையும்) நன்கறிந்தோனும், ஞானம் மிக்கோனும் ஆவான். (அல்-குர் ஆன் 4:170)
இறைவன், அனைத்து மனிதர்களையும், தன்னிடமிருந்து உண்மையை கொண்டு வந்த முஹம்மது நபி (ஸல்) அவர்களை ஒரு தூதராக ஏற்றுக்கொள்ளுமாறு அழைக்கிறான். இறைவனின் தூதர் என்பவர், இஸ்லாமிய பார்வையில், நபிமார்களை விட அந்தஸ்தில் உயர்ந்தவர்கள் ஆவார். நபி என்பவர் இறைவனின் உதவியுடன், எதிர் காலத்தைப் பற்றி முன் கூட்டியே சொல்பவர் ஆவார். தூதர் என்பவர் இறைவனால் நியமிக்கப்பட்ட, இறைவனிடமிருந்து பெறப்பட்ட செய்திகளை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லக்கூடிய ஒரு ஆசிரியரைப் போன்றவராவார்.
வஹீ என்பது இறைவனிடமிருந்து பெறப்பட்ட தகவல்களைக் குறிக்கும் சொல். இஸ்லாமிய மரபுப்படி அனைத்து தூதர்களும் நபிமார்கள் ஆவார்கள். ஆனால் அனைத்து நபிமார்களும், தூதர்களாக ஆக மாட்டார்கள். ஆப்ரஹாம், மோஸஸ், ஜீஸஸ் மற்றும் முஹம்மது நபி (ஸல்) அனைவர்களும் தூதராவார்கள்.
ஏன் ஒருவர் முஹம்மது நபி (ஸல்) அவர்களை இறைவனின் தூதராக ஏற்றுக் கொள்ள வேண்டும்?
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மோஸஸ் மற்றும் ஜீஸஸ் வேதங்களில் சொல்லப்பட்டவைகளை பூர்த்தி செய்தவர் ஆவார்.முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தவறே இல்லாத குணத்துக்கு சொந்தக்காரர். அவர்கள் வாழ்ந்த ஒரு பரிபூரணமான வாழ்க்கையை பாதுகாக்கப்பட்டது போல உலகில் வேறு எந்த மனிதரின் வாழ்க்கையும் பாதுகாக்கப்படவில்லை. அவர்களின் மார்க்க போதனைகளும், நற்குணங்களும் தற்கால உலகின் பிரச்சனைகளுக்கு தீர்வாக உள்ளது. அவர்கள் இறைவனிடமிருந்து கொண்டு வந்த திருகுர்ஆன், மிகச் சிறந்த அற்புதமாக மட்டும் இல்லாமல் வார்த்தைக்கு வார்த்தை பாதுகாக்கப்பட்ட ஒரே வேத நூலாகவும் உள்ளது.
சுருக்கமாக சொல்ல வேண்டும் எனில், அவர்களும் அவர்கள் கொண்டுவந்த வேதமும் உண்மையானதாக உள்ளது. ஆகையால் யார் இந்த மனிதரைப் பற்றி அறியவில்லையோ, அவர்கள் இவர்களைப் பற்றி அறிந்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள். யார் இந்த மனிதரை நம்புகிறாரோ அவர் இறைவன் சொல்வதைப் போல இந்த உலகத்தில் ஒரு கட்டுப்பாடான வாழ்க்கையை வாழ்வார். மேலும் மரணத்திற்குப் பிறகு சுவர்க்கத்தில் நிரந்தரமாக வசிப்பார். யாராவது ஒருவர் இந்த மனிதரை நிராகரித்தால் (அதன் மூலம் அவரை அனுப்பிய இறைவனை நிராகரித்தால்) இறைவனுக்கோ அல்லது அவனுடைய தூதருக்கோ எந்த ஒரு தீங்கும் இல்லை. மாறாக அது நிராகரிப்போருக்குத்தான் தீங்காக முடியும். இந்த உலகத்தில் உள்ள அனைத்தும் இறைவனுக்குச் சொந்தமானது. அவன் அனைத்தையும் நன்கு அறிந்தவனாகவும் அவன் கட்டளையிடுவ உள்ளான்.