ஸஹீஹ் முஸ்லிம்
அத்தியாயம் 1
இறைநம்பிக்கை
பாடம் : 1 இறைநம்பிக்கை (ஈமான்), அடிபணிதல் (இஸ்லாம்), அழகிய முறையில் செயலாற்றல் (இஹ்சான்) ஆகியவை பற்றிய விளக்கமும்; தூய்மையாளனும் உயர்ந்தோனுமாகிய அல்லாஹ் நிர்ணயித்துள்ள விதியை நம்புவதன் அவசியமும்; விதியை நம்பாதவனுக்கும் இஸ்லாத்துக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை' என்பதற்கான ஆதாரமும்; அவன் தொடர்பாக வந்துள்ள கண்டனமும். அபுல்ஹுசைன் முஸ்லிம் பின் அல் ஹஜ்ஜாஜ் அல்குஷைரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அல்லாஹ்வின் உதவியால் ஆரம்பிக்கிறோம். அவனைக் கொண்டே நாம் நிறைவடைகிறோம். வல்லமை மிக்க (அந்த) அல்லாஹ்வின் நல்லருள் இன்றி நாம் நல்வாய்ப்பினைப் பெற இயலாது.
1. யஹ்யா பின் யஅமர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(இராக்கிலுள்ள) பஸ்ரா நகரில் முதன் முதலில் விதி தொடர்பாக (அப்படி ஒன்று இல்லை என மாற்று)க் கருத்துத் தெரிவித்தவர் மஅபத் அல் ஜுஹனீ என்பவரேயாவார். இந்நிலையில், நானும் ஹுமைத் பின் அப்திர் ரஹ்மான் அல்ஹிம்யரீ (ரஹ்) அவர்களும் ஹஜ்" அல்லது உம்ரா"ச் செய்வதற்காக (புனித மக்கா நோக்கி)ச் சென்றோம். அப்போது நாங்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய தோழர்களில் யாரேனும் ஒருவரை நாம் சந்தித்தால் அவரிடம் விதி தொடர்பாக இவர்கள் கூறிவருவதைப் பற்றிக் கேட்க வேண்டும்" என்று சொல்லிக் கொண்டோம். அப்போது பள்ளிவாசலுக்குள் நுழைந்து கொண்டிருந்த அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது.
உடனே நானும் என் தோழரும் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களைச் சூழ்ந்துகொண்டு, எங்களில் ஒருவர் அவர்களுக்கு வலப்பக்கத்திலும் மற்றொருவர் அவர்களுக்கு இடப்பக்கத்திலும் இருந்துகொண்டோம். (நான் சரளமாகப் பேசக்கூடியவன் என்பதால் அன்னாருடன்) பேசுகின்ற பொறுப்பை என்னிடமே என் தோழர் விட்டுவிடுவார் என எண்ணி நானே பேசினேன். அபூஅப்திர் ரஹ்மான் அவர்களே! எங்கள் பகுதியில் சிலர் தோன்றியிருக்கின்றனர். அவர்கள் குர்ஆனை ஓதுகின்றனர்; தேடித் திரிந்து கல்வி பயில்கின்றனர்" என அவர்களது (நல்ல) தன்மைகளை எடுத்துரைத்து, ஆனால், அவர்கள் விதி என்று ஏதுமில்லை எனவும், நடக்கின்ற காரியங்கள் (இறைவன் திட்டமிடாமலேயே) தற்செயலாகத்தான் நடக்கின்றன என்றும் அவர்கள் கருதுகிறார்கள் என்றேன்.
அதற்கு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: இத்தகையோரை நீங்கள் சந்தித்தால், அவர்களை விட்டு நானும் என்னை விட்டு அவர்களும் விலகிவிட்டவர்கள் என அவர்களிடம் தெரிவித்துவிடுங்கள்.(இந்த) அப்துல்லாஹ் பின் உமர் யார்மீது சத்தியம் செய்வானோ அ(ந்த இறை)வன் மீது சத்தியமாக! அவர்களில் ஒருவரிடம் உஹுத் மலையளவு தங்கம் இருந்து, அதை அவர் (அறவழிகளில்) செலவிட்டாலும் அவர் விதியை நம்பிக்கை கொள்ளாதவரை அவரிடமிருந்து அல்லாஹ் அதை ஏற்கமாட்டான் (என்றும் கூறிவிடுங்கள்).
பிறகு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: என் தந்தை உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் என்னிடம் தெரிவித்தார்கள்:
நாங்கள் ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அருகில் இருந்தபோது தூய வெண்ணிற ஆடை அணிந்த, அடர் கறுப்பு நிறத்தில் தலைமுடி உடைய ஒரு மனிதர் வந்தார். பயணத்தில் வந்த எந்த அடையாளமும் அவரிடம் காணப்படவில்லை; எங்களில் எவருக்கும் அவரை (யார் என)த் தெரிய வில்லை. அவர் நபி (ஸல்) அவர்களின் அருகில் (சென்று), தம் முழங்கால்களை நபியவர்களின் முழங்கால்களோடு இணைத்துக்கொண்டு (நெருக்கமாக) அமர்ந்தார். அவர் தம் கைகளைத் தம் தொடைகள்மீது வைத்(து பவ்வியமாக அமர்ந்)தார். பிறகு முஹம்மதே! இஸ்லாம் (அடிபணிதல்) என்றால் என்னவென்று எனக்குத் தெரிவியுங்கள்" என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இஸ்லாம் என்பது, அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும் முஹம்மத் (ஆகிய நான்) அல்லாஹ்வின் தூதர் என்றும் நீங்கள் உறுதி கூறுவதாகும். மேலும்,தொழுகையைக் கடைப்பிடிப்பதும், ஸகாத்தை வழங்கிவருவதும், ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பதும், சென்றுவர இயன்றால் இறையில்லம் கஅபாவில் ஹஜ்" செய்வதும் ஆகும்" என்று பதிலளித்தார்கள். அதற்கு அந்த மனிதர் உண்மைதான்" என்றார்.
அவர் இவ்வாறு கூறியதைக் கேட்டு, அவரே கேள்வியும் கேட்டுவிட்டு அவரே நபி (ஸல்) அவர்கள் அளித்த பதிலை உறுதிப்படுத்தவும் செய்கிறாரே என்று நாங்கள் வியப்படைந்தோம்.
அடுத்து அவர், ஈமான் (இறைநம்பிக்கை) பற்றி எனக்குத் தெரிவியுங்கள்" என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்வையும் அவனுடைய வானவர்களையும் அவனுடைய வேதங்களையும் அவனுடைய தூதர்களையும் இறுதி நாளையும் நீங்கள் நம்புவதாகும்; நன்மை, தீமை அனைத்தும் விதியின்படியே நடக்கின்றன என்றும் நீங்கள் நம்புவதுமாகும்" என்று கூறினார்கள். அதற்கும் அம்மனிதர் உண்மைதான்" என்றார்.
அடுத்து அம்மனிதர், இஹ்சான் (அழகிய முறையில் செயலாற்றல்) பற்றி எனக்குத் தெரிவியுங்கள்" என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள்,(இஹ்சான் என்பது,) அல்லாஹ்வை நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பதைப் போன்ற உணர்வுடன் வழிபடுவதாகும். ஏனெனில், அவனை நீங்கள் பார்க்கவில்லை என்றாலும், அவன் உங்களைப் பார்க்கின்றான்" என்று பதிலளித்தார்கள்.
அம்மனிதர், மறுமை (உலக அழிவு) நாளைப் பற்றி (அது எப்போது வரும் என) எனக்குத் தெரிவியுங்கள்" என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், கேள்வி கேட்கப்படுபவர் (அதாவது நான்), கேட்பவரைவிட (அதாவது உங்களைவிட) அதிகம் அறிந்தவர் அல்லர். (இது பற்றி எனக்கும் தெரியாது; உங்களுக்கும் தெரியாது.)" என்று கூறினார்கள்.
அம்மனிதர், மறுமை நாளின் அடையாளங்களைப் பற்றி எனக்குத் தெரிவியுங்கள்!" என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ஓர் அடிமைப் பெண் தன் எசமானியைப் பெற்றெடுப்பதும், காலில் செருப்பில்லாத, அரைகுறை ஆடைகளை அணிந்துள்ள ஏழைகளான ஆட்டு இடையர்கள் போட்டி போட்டுக்கொண்டு உயரமான கட்டடங்கள் கட்டுவதை நீங்கள் காண்பதும் ஆகும்" என்று கூறினார்கள்.
பிறகு அம்மனிதர் சென்றுவிட்டார். நீண்ட நேரம் நான் (அங்கேயே) இருந்தேன். பின்னர் என்னிடம் நபி (ஸல்) அவர்கள், உமரே! கேள்வி கேட்ட அந்த நபர் யார் என்று உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டார்கள். நான், அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்" என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், அவர்தாம் (வானவர்) ஜிப்ரீல். உங்களுக்கு உங்களது மார்க்கத்தைக் கற்றுத் தருவதற்காக உங்களிடம் அவர் வந்தார்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாக வந்துள்ளது.
அத்தியாயம் : 1
2. யஹ்யா பின் யஅமர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
மஅபத் பின் காலித் அல்ஜுஹனீ என்பார் விதி தொடர்பாக (மாறுபட்ட) கருத்தைத் தெரிவித்த போது அதை நாங்கள் ஆட்சேபித்தோம். இந்நிலையில், நானும் ஹுமைத் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்களும் ஒரு தடவை ஹஜ்ஜுக்குச் சென்றோம்.
இதையடுத்து மேற்கண்ட ஹதீஸை அதன் அறிவிப்பாளர்தொடர் (இஸ்னாத்) உடன் அப்படியே முழுமையாகக் கூறுகிறார்கள். ஆனால், அதில் சிற்சில வார்த்தைகளில் கூடுதல் குறைவு உண்டு.- இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
3. அப்துல்லாஹ் பின் புரைதா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
யஹ்யா பின் யஅமர் (ரஹ்) மற்றும் ஹுமைத் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) ஆகியோர், நாங்கள் (ஹஜ்ஜுக்குச் சென்றிருந்தபோது) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களைச் சந்தித்தோம். அப்போது விதியைப் பற்றியும் அது குறித்து அவர்கள் (மஅபதும் அவர் ஆதரவாளர்களும்) சொல்லிக்கொண்டிருப்பதைப் பற்றியும் குறிப்பிட்டோம்" என்று கூறிவிட்டு, உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவிக்கும் (மேற்கண்ட) ஹதீஸிலுள்ளபடி அறிவித்தனர். ஆனால், அதைவிடச் சற்றுக் கூடுதலாகவும் சில இடங்களில் சற்றுக் குறைத்தும் அறிவித்தனர்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
4. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
5. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு நாள் மக்கள் முன் வந்திருந்தார்கள். அப்போது ஒரு மனிதர் அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! ஈமான் (இறைநம்பிக்கை) என்றால் என்ன?" என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்வையும் அவனுடைய வானவர் (மலக்கு)களையும், அவனுடைய வேதத்தையும், அவனது சந்திப்பையும், அவனுடைய தூதர்களையும் நீங்கள் நம்புவதும், (மரணத்திற்குப் பின்) இறுதியாக (அனைவரும்) உயிருடன் எழுப்பப்படுவதை நம்புவதும் ஆகும்" என்று பதிலளித்தார்கள். அல்லாஹ்வின் தூதரே! இஸ்லாம்" (அடிபணிதல்) என்றால் என்ன?" என்று அவர் கேட்டார். நபி (ஸல்) அவர்கள், இஸ்லாம் என்பது அல்லாஹ்வை நீங்கள் வணங்குவதும், அவனுக்கு நீங்கள் எதையும் இணைவைக்காமலிருப்பதும், கடமையான தொழுகையைக் கடைப்பிடிப்பதும், கடமையான ஸகாத்தை நிறைவேற்றி வருவதும், ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பதும் ஆகும்" என்றார்கள்.
அம்மனிதர், அல்லாஹ்வின் தூதரே! இஹ்சான் (அழகிய முறையில் செயலாற்றல்) என்றால் என்ன?" என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், இஹ்சான் என்பது அல்லாஹ்வை நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பதைப் போன்ற உணர்வுடன் வழிபடுவதாகும். நீங்கள் அவனைப் பார்த்துக்கொண்டிராவிட்டாலும் அவன் உங்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறான்" என்று பதிலளித்தார்கள்.அல்லாஹ்வின் தூதரே! மறுமை(நாள்) எப்போது வரும்?" என்று அம்மனிதர் கேட்க, நபி (ஸல்) அவர்கள், கேள்வி கேட்கப்படுபவர் (அதாவது நான்), கேட்பவரைவிட (அதாவது உங்களைவிட) அதிகம் அறிந்தவர் அல்லர். ஆயினும், நான் உங்களுக்கு மறுமை நாளின் அடையாளங்கள் சிலவற்றை எடுத்துரைக்கிறேன் என்றார்கள்:
ஓர் அடிமைப் பெண் தன் எசமானைப் பெற்றெடுப்பாளாயின் அது மறுமையின் அடையாளங்களில் ஒன்றாகும். முழு ஆடையில்லாத, செருப்பணியாதவர்கள் எல்லாம் மக்களின் தலைவர்களாக இருந்தால் அதுவும் அதன் அடையாளங்களில் ஒன்றாகும். ஆட்டுக்குட்டிகளை மேய்ப்பவர்கள் போட்டி போட்டுக்கொண்டு உயரமான கட்டடங்களைக் கட்டினால் அதுவும் மறுமையின் அடையாளங்களில் ஒன்றாகும். (மறுமை நாள் எப்போது நிகழவிருக்கிறது எனும் அறிவானது) அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியாத ஐந்து விஷயங்களில் அடங்கும்.
பிறகு, நிச்சயமாக, மறுமை (நாள் எப்போது நிகழும் என்பது) பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. அவனே மழையை இறக்கிவைக்கிறான். இன்னும் அவன் கர்ப்பங்களில் உள்ளவற்றையும் (தீர்க்கமாக) அறிகின்றான். தாம் நாளை என்ன சம்பாதிப்போம் என்பதை (அவனைத் தவிர வேறு) யாரும் (உறுதியாக) அறிவதில்லை. எந்த இடத்தில் தாம் இறக்கப்போகிறோம் என்பதையும் எவரும் அறிவதில்லை. அல்லாஹ்தான் (இவற்றையெல்லாம்)நன்கறிந்தவன்; நுணுக்கமானவன்" எனும் (31:34ஆவது) இறை வசனத்தை நபியவர்கள் ஓதிக் காட்டினார்கள்.
பின்னர் (கேள்வி கேட்ட) அம்மனிதர் திரும்பிச் சென்றுவிட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அந்த மனிதரைத் திரும்ப என்னிடம் அழைத்துவாருங்கள்" என்று சொன்னார்கள். மக்கள் உடனே அவரைத் திரும்ப அழைத்துவரச் செல்லலாயினர். (அவரைத் தேடியும்) அவரை அவர்கள் எங்கேயும் காணவில்லை. பின்னர், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இ(ப்போது வந்து போன)வர், (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள்தாம். மக்களுக்கு அவர்களது மார்க்கத்(தின் அடிப்படைத் தத்துவத்)தை கற்றுத் தருவதற்காக அவர் வந்திருந்தார்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
6. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாக முஹம்மத் பின் அப்தில்லாஹ் பின் நுமைர் (ரஹ்) அவர்களால் அறிவிக்கப்பெற்றுள்ளது. ஆயினும், அவர்களது அறிவிப்பில் (ஓர் அடிமைப் பெண் தன் எசமானைப் பெற்றெடுப்பாளாயின்..." என்பதற்கு பதிலாக) ஓர் அடிமைப் பெண் தன் கணவனைப் பெற்றெடுப்பாளாயின்..." என்று காணப்படுகிறது.
அத்தியாயம் : 1
7. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்களிடம்), என்னிடம் (விளக்கம்) கேளுங்கள்" என்று கூறினார்கள். மக்கள் அவர்களிடம் கேட்க அஞ்சினார்கள். அப்போது (எங்கிருந்தோ) ஒரு மனிதர் வந்து நபி (ஸல்) அவர்களின் முழங்கால்களுடன் ஒட்டி அமர்ந்து, அல்லாஹ்வின் தூதரே! இஸ்லாம் (அடிபணிதல்) என்றால் என்ன?" என்று கேட்டார்.நபி (ஸல்) அவர்கள் (இஸ்லாம் என்பது), அல்லாஹ்வுக்கு நீங்கள் எதையும் இணைவைக்காமலிருப்பதும், தொழுகையைக் கடைப்பிடிப்பதும், ஸகாத்தை வழங்கி வருவதும், ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பதும் ஆகும்" என்று கூறினார்கள். (இதைக் கேட்ட) அம்மனிதர் உண்மைதான்" என்று கூறினார்.
அல்லாஹ்வின் தூதரே! ஈமான் (இறை நம்பிக்கை) என்றால் என்ன?" என்று அம்மனிதர் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள்,அல்லாஹ்வையும் அவனுடைய வானவர்களையும், அவனுடைய வேதத்தையும், அவனது சந்திப்பையும், அவனுடைய தூதர்களையும் நீங்கள் நம்புவதும் (மரணத்திற்குப் பின் இறுதியாக அனைவரும்) உயிருடன் எழுப்பப்படுவதை நீங்கள் நம்புவதும், விதியை முழுமையாக நம்புவதும் ஆகும்" என்று கூறினார்கள். அதற்கும் அம்மனிதர் உண்மை தான்" என்றார்.
அல்லாஹ்வின் தூதரே! இஹ்சான் (அழகிய முறையில் செயலாற்றல்) என்றால் என்ன?" என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்வை நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பதைப் போன்ற உணர்வுடன் அவனை நீங்கள் அஞ்சுவதாகும். ஏனெனில், நீங்கள் அவனைப் பார்த்துக்கொண்டிராவிட்டாலும் அவன் உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கின்றான்" என்று கூறினார்கள். அதற்கும் அம்மனிதர் உண்மைதான்" என்று கூறினார். அல்லாஹ்வின் தூதரே! மறுமை (நாள்) எப்போது நிகழும்?" என்று அம்மனிதர் கேட்க, நபி (ஸல்) அவர்கள், கேள்வி கேட்கப்படுபவர் (அதாவது நான்) கேள்வி கேட்பவரை விட (அதாவது உங்களைவிட) அதிகம் அறிந்தவர் அல்லர். ஆயினும், நான் உங்களுக்கு மறுமை நாளின் அடையாளங்கள் சிலவற்றை எடுத்துரைக்கிறேன் என்றார்கள்:
ஒரு (அடிமைப்) பெண் தன் எசமானையே பெற்றெடுப்பதை நீங்கள் கண்டால் அது மறுமை நாளின் அடையாளங்களில் ஒன்றாகும். காலில் செருப்பணியாத, உடலில் உடையணியாத, செவிடர்களையும் குருடர்களையும் (போன்று வாழ்கின்ற கல்வி கலாசாரமற்ற மக்களை) நீங்கள் பூமியின் அரசர்களாய்க் கண்டால் அதுவும் மறுமை நாளின் அடையாளங்களில் ஒன்றாகும். மேலும், ஆட்டுக்குட்டிகளை மேய்க்கும் இடையர்கள் போட்டி போட்டுக்கொண்டு உயரமான கட்டடங்களைக் கட்டுவதை நீங்கள் கண்டால் அதுவும் மறுமையின் அடையாளங்களில் அடங்கும். இவ்வாறு கூறிவிட்டு, நிச்சயமாக, மறுமை (நாள் எப்போது நிகழும் என்பது) பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. அவனே மழையை இறக்கி வைக்கின்றான். இன்னும் அவனே கர்ப்பங்களில் உள்ளவற்றையும் (தீர்க்கமாக) அறிகின்றான்.தாம் நாளை என்ன சம்பாதிப்போம் என்பதை (அவனைத் தவிர வேறு) யாரும் (உறுதியாக) அறிவதில்லை. எந்த இடத்தில் தாம் இறக்கப்போகிறோம் என்பதையும் எவரும் அறிவதில்லை. அல்லாஹ்தான் (இவற்றையெல்லாம்) நன்கறிந்தவன்; நுணுக்கமானவன்" எனும் (31:34ஆவது) இறைவசனத்தை ஓதிக் காட்டினார்கள்.
பிறகு (கேள்வி கேட்க வந்த) அம்மனிதர் எழுந்து (சென்று)விட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அந்த மனிதரை என்னிடம் திரும்ப அழைத்துவாருங்கள்" என்று கூறினார்கள்.
உடனே அவர் தேடப்பட்டார். ஆனால், மக்களால் அவரைக் காண இயலவில்லை. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இ(ப்போது வந்துபோன)வர் (வானவர்)ஜிப்ரீல் (அலை) அவர்கள்தாம். நீங்கள் என்னிடம் (விளக்கம்) கேட்க முற்படாதபோது, (தம் வாயிலாக) நீங்கள் விளக்கம் பெற வேண்டும் என அவர் விரும்பினார். (அதற்காகவே அவர் வந்தார்)" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 1
பாடம் : 2 இஸ்லாத்தின் தூண்களில் ஒன்றான தொழுகை பற்றிய விளக்கம்.
8. தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நஜ்த்வாசிகளில் ஒருவர் தலைவிரி கோலத்துடன் (பயணம் முடிந்த கையோடு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார். (அவர் சற்றுத் தொலைவில் இருந்ததால்) அவரது குரலை எங்களால் கேட்க முடிந்ததே தவிர, அவர் என்ன சொல்கிறார் என்பதை எங்களால் அறிய முடியவில்லை. பின்னர் அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நெருங்கினார். அப்போதுதான் அவர் இஸ்லாத்தைப் பற்றி வினவுகிறார் என்று எங்களுக்குப் புரிந்தது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(நாளொன்றுக்கு) பகலிலும் இரவிலும் ஐந்து தொழுகைகள் (நிறைவேற்றுவது இஸ்லாத்தின் விதியாகும்)" என்று பதிலளித்தார்கள். உடனே அவர், "இவற்றைத் தவிர வேறு (தொழுகைகள்) ஏதேனும் என்மீது (விதியாக்கப்பட்டு) உள்ளதா?" என்று கேட்க, "இல்லை; நீயாக விரும்பித்தொழும் (கூடுதலான) தொழுகையைத் தவிர" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அடுத்து ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பது (இஸ்லாத்தின் விதியாகும்) என நபி (ஸல்) அவர்கள் (அவரிடம்) கூறினார்கள். அவர், "இதைத் தவிர வேறு (நோன்புகள்) ஏதேனும் என்மீது (விதியாக்கப்பட்டு) உள்ளதா?" என்று கேட்க, "இல்லை; நீயாக விரும்பி நோற்கும் (கூடுதலான) நோன்பைத் தவிர" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
மேலும், ஸகாத் (வழங்குவது இஸ்லாத்தின் விதி என்பது) பற்றியும் அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எடுத்துக் கூறினார்கள். அவர், "இதைத் தவிர வேறு ஏதேனும் (தர்மம்) என்மீது (கடமையாக்கப்பட்டு) உள்ளதா?" எனக் கேட்க, "இல்லை; நீயாக விரும்பிச் செய்யும் (கூடுதலான) தர்மத்தைத் தவிர" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அந்த மனிதர், "அல்லாஹ்வின் மீதாணையாக! இதற்கு மேல் நான் அதிகமாகச் செய்யவுமாட்டேன்; இதைக் குறைக்கவுமாட்டேன்"என்று கூறியபடி திரும்பிச் சென்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவர் (தாம் கூறியதில்) உண்மையாளராக இருந்தால் வெற்றியடைந்துவிட்டார்" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 1
9. மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
ஆயினும், (அவற்றின் இறுதியில்) "அவருடைய தந்தை மீதாணையாக! அவர் (தாம் கூறியதில்) உண்மையாளராக இருந்தால் வெற்றியடைந்துவிட்டார்" அல்லது "அவருடைய தந்தை மீதாணையாக! அவர் (தாம் கூறியதில்) உண்மையாளராக இருந்தால் சொர்க்கத்தில் நுழைந்துவிட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 1
பாடம் : 3 இஸ்லாத்தின் தூண்(களான முக்கியக் கடமை)கள் குறித்துக் கேட்டறிதல்.
10. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (அவசியமற்ற) சில விஷயங்கள் குறித்துக் கேள்வி கேட்கக்கூடாதென தடை விதிக்கப்பட்டிருந்தோம். எனவே, (இந்தத் தடையை அறிந்திராத) கிராமவாசிகளில் (புத்திசாலியான) ஒருவர் வந்து நபியவர்களிடம் கேள்வி கேட்க வேண்டும்; நாங்களும் அதைச் செவியுற வேண்டும் என்பது எங்கள் ஆசையாக இருந்தது. அவ்வாறே (ஒரு நாள்) கிராமவாசிகளில் ஒருவர் வந்து, முஹம்மதே! உங்கள் தூதர் ஒருவர் எங்களிடம் வந்து, அல்லாஹ் உங்களை (மனித இனம் முழுமைக்கும்) தூதராக அனுப்பியுள்ளான் என்று நீங்கள் கூறுவதாக எங்களிடம் சொன்னாரே (அது உண்மையா)?" என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் உண்மைதான்" என்று கூறினார்கள்.
அந்தக் கிராமவாசி, வானத்தைப் படைத்தவன் யார்?" என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்" என்று பதிலளித்தார்கள். பூமியைப் படைத்தவன் யார்?" என்று அவர் கேட்டார். நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்" என்றார்கள். இந்த மலைகளை நட்டுவைத்து அதிலுள்ளவற்றை உருவாக்கியவன் யார்?" என்று கிராமவாசி கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்" என்றார்கள். அவர், அப்படியானால், வானத்தைப் படைத்து, பூமியையும் படைத்து. இந்த மலைகளை நட்டும்வைத்தவன் மீதாணையாக! அல்லாஹ்தான் உங்களைத் தூதராக அனுப்பினானா?" என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ஆம்" என்று சொன்னார்கள்.
அவர் இரவிலும் பகலிலும் (நாளொன்றுக்கு) ஐவேளைத் தொழுகைகள் எங்கள்மீது (கடமையாக்கப்பட்டு) உள்ளன என்று உங்கள் தூதர் கூறினாரே (அது உண்மையா)?" என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், உண்மைதான்" என்றார்கள். உங்களைத் தூதராக அனுப்பி வைத்தவன் மீதாணையாக! அல்லாஹ்தான் உங்களுக்கு இவ்வாறு கட்டளையிட்டானா?" என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ஆம்" என்றார்கள்.
தொடர்ந்து அவர், நாங்கள் எங்கள் செல்வங்களில் இருந்து ஸகாத் வழங்குவது எங்கள்மீது (கடமையாக்கப்பட்டு) உள்ளது என்று உங்கள் தூதர் கூறினாரே!" என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், உண்மைதான்" என்றார்கள். உங்களைத் தூதராக அனுப்பி வைத்தவன் மீதாணையாக! அல்லாஹ்தான் இவ்வாறு உங்களுக்குக் கட்டளையிட்டானா?" என்று அந்தக் கிராமவாசி கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ஆம்" என்றார்கள். அவர், ஒவ்வோர் ஆண்டும் ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பது எங்கள்மீது (கடமையாக்கப்பட்டு) உள்ளது என்று உங்கள் தூதர் கூறினாரே?" என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், உண்மைதான்" என்றார்கள். உங்களைத் தூதராக அனுப்பிவைத்தவன் மீதாணையாக! அல்லாஹ்தான் இவ்வாறு உங்களுக்குக் கட்டளையிட்டானா?" என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ஆம்" என்றார்கள். மேலும் உங்கள் தூதர் எங்களில் வசதிபடைத்தோர் இறையில்லம் கஅபாவில் ஹஜ் செய்வது (கடமையாக்கப்பட்டு) உள்ளது என்று கூறினாரே?" என்று கேட்டார். அதற்கும் நபி (ஸல்) அவர்கள், உண்மைதான்"என்றார்கள்.
பிறகு அந்தக் கிராமவாசி, உங்களைச் சத்திய (மார்க்க)த்துடன் அனுப்பியவன் மீதாணையாக! இவற்றைவிட நான் அதிகமாக்கவுமாட்டேன்; இவற்றிலிருந்து (எதையும்) குறைக்கவும் மாட்டேன்" என்று கூறிவிட்டுத் திரும்பிச் சென்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள் அவர் (தாம் கூறியதில்) உண்மையாளராக இருந்தால் நிச்சயமாக சொர்க்கம் செல்வார்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 1
11. ஸாபித் அல்புனானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அனஸ் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (அவசியமற்ற) சில விஷயங்கள் தொடர்பாகக் கேள்வி கேட்கக்கூடாதென நாங்கள் குர்ஆன் மூலம் தடை விதிக்கப்பெற்றிருந்தோம்" என்று கூறிவிட்டு, மேற்கண்ட ஹதீஸைப் போன்றே தொடர்ந்து அறிவித்தார்கள்.
அத்தியாயம் : 1
பாடம் : 4 சொர்க்கம் செல்வதற்குக் காரணமாய் அமையும் இறைநம்பிக்கை (ஈமான்) பற்றிய விளக்கமும், தமக்குக் கட்டளையிடப்பட்டவற்றைக் கடைப்பிடித்து வாழ்ந்தவர் சொர்க்கம் செல்வார் என்பது பற்றிய விளக்கமும்.
12. அபூஅய்யூப் அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு பயணத்தில் இருந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் கிராமவாசி ஒருவர் இடைமறித்து அவர்களது ஒட்டகத்தின் கடிவாளத்தை" அல்லது மூக்கணாங்கயிற்றைப்" பிடித்துக்கொண்டார். பிறகு அல்லாஹ்வின் தூதரே" அல்லது முஹம்மதே "என்னைச் சொர்க்கத்திற்கு நெருக்கமாகவும் நரகத்திலிருந்து விலக்கியும் வைக்குமே அத்தகைய ஒரு (நற்)செயலை எனக்குத் தெரிவியுங்கள்!" என்று கேட்டார்.
நபி (ஸல்) அவர்கள் (ஏதும் பேசாமல்) அமைதியாக இருந்தார்கள். பிறகு தம் தோழர்களைக் கூர்ந்து பார்த்தார்கள். பின்னர் நிச்சயமாக இவர் நல்லருள் பெற்றுவிட்டார்" அல்லது நேர்வழியில் செலுத்தப்பட்டுவிட்டார்"" என்று கூறினார்கள்.
பிறகு நபி (ஸல்) அவர்கள் நீர் என்ன சொன்னீர்?" என்று (அந்தக் கிராமவாசியிடம்) கேட்டார்கள். அவர் முன்பு கூறியதைப் போன்றே மீண்டும் கூறினார். அப்போது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வை (மட்டுமே) நீர் வழிபட வேண்டும்; அவனுக்கு எதையும் இணையாக்கக் கூடாது; (கடமையான) தொழுகையைக் கடைப்பிடிக்க வேண்டும்; (கடமையான) ஸகாத்தை வழங்க வேண்டும்; உறவைப் பேணி வாழ வேண்டும்" என்று கூறிவிட்டு, ஒட்டகத்தை விட்டுவிடுவீராக (நாங்கள் பயணத்தைத் தொடர வேண்டும்)" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 1
13. மேற்கண்ட ஹதீஸ் மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்தியாயம் : 1
14. அபூஅய்யூப் அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, எனக்கு ஒரு (நற்)செயலை அறிவியுங்கள். நான் அதைச் செயல்படுத்தினால் அது என்னைச் சொர்க்கத்திற்கு நெருக்கமாகவும் நரகத்திலிருந்து விலக்கியும் வைக்கவேண்டும்" என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்வையே நீங்கள் வழிபட வேண்டும்; அவனுக்கு எதையும் நீங்கள் இணையாக்கக் கூடாது; (கடமையான) தொழுகையை நீங்கள் கடைப்பிடிக்க வேண்டும்; (கடமையான) ஸகாத்தை நீங்கள் வழங்க வேண்டும்; உங்கள் உறவினரைப் பேணி வாழ வேண்டும்" என்று கூறினார்கள்.
அந்த மனிதர் திரும்பிச் சென்றதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இவர் தமக்குக் கட்டளையிடப்பட்டவற்றைக் கடைப்பிடித்தால் கட்டாயம் இவர் சொர்க்கம் சென்றுவிடுவார்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாக வந்துள்ளது.
அவற்றில், அபூபக்ர் பின் அபீஷைபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் இதை இவர் கடைப்பிடித்தால்..." என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 1
15. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
கிராமவாசி ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! எனக்கு ஒரு (நற்)செயலை அறிவியுங்கள்! நான் அதைச் செயல்படுத்தினால் சொர்க்கத்திற்குச் செல்ல வேண்டும்" என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்வையே நீங்கள் வழிபட வேண்டும்; அவனுக்கு எதையும் நீங்கள் இணையாக்கக் கூடாது; கடமையாக்கப்பட்ட தொழுகையை நீங்கள் கடைப்பிடிக்க வேண்டும்; கடமையாக்கப் பட்ட ஸகாத்தை நிறைவேற்ற வேண்டும்; ரமளான் மாதத்தில் நோன்பு நோற்க வேண்டும்" என்று கூறினார்கள்.
அதற்கு அந்த மனிதர், என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! ஒரு போதும் இதைவிட அதிகமாக எதையும் நான் செய்யமாட்டேன்; இதிலிருந்து எதையும் நான் குறைக்கவும் மாட்டேன்" என்று கூறினார்.
அவர் திரும்பிச் சென்றதும் நபி (ஸல்) அவர்கள், சொர்க்கவாசிகளில் ஒருவரைப் பார்ப்பது யாருக்கு மகிழ்ச்சி அளிக்குமோ அவர் (இதோ!) இவரைப் பார்த்துக்கொள்ளட்டும்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 1
16. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நுஅமான் பின் கவ்கல் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! நான் கடமையான தொழுகையை நிறைவேற்றி, (மார்க்கத்தில்) விலக்கப் பட்டவற்றை விலக்கப்பட்டவை என்றும் அனுமதிக்கப்பட்டவற்றை அனுமதிக்கப்பட்டவை என்றும் ஏற்று வாழ்ந்தால் நான் சொர்க்கத்தில் நுழைந்துவிடுவேனா? கூறுங்கள்" என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ஆம்" என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
17. மேற்கண்ட ஹதீஸ் வேறு இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் நுஅமான் பின் கவ்கல் (ரலி) அவர்கள் இதைவிட அதிகமாக வேறெதையும் நான் செய்யமாட்டேன்" என்று கூறியதாகக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 1
18. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், கடமையான தொழுகைகளை நான் தொழுது, ரமளான் மாதத்தில் நோன்பு நோற்று, (மார்க்கத்தில்) அனுமதிக்கப்பட்டவற்றை அனுமதிக்கப்பட்டவை என்றும் விலக்கப்பட்டவற்றை விலக்கப்பட்டவை என்றும் ஏற்று வாழ்ந்து, இவற்றைவிட வேறெதையும் அதிகமாகச் செய்யாவிட்டாலும் நான் சொர்க்கத்தில் நுழைந்துவிடுவேனா?" என்று கேட்டார்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள் ஆம்" என்றார்கள். அந்த மனிதர் அல்லாஹ்வின் மீதாணையாக! இவற்றைவிட வேறெதையும் நான் அதிகமாகச் செய்யமாட்டேன்" என்று கூறினார்.
அத்தியாயம் : 1
பாடம் : 5 இஸ்லாத்தின் (ஐம்)பெரும் தூண்களான முக்கியக் கடமைகள் பற்றிய விளக்கம்.
19. சஅத் பின் உபைதா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் "இஸ்லாம் (எனும் மாளிகை) ஐந்து (தூண்கள்)மீது எழுப்பப்பட்டுள்ளது. அவை: 1.இறைவன் ஒருவன் என ஏற்பது. 2. தொழுகையைக் கடைப் பிடிப்பது. 3. ஸகாத் வழங்குவது. 4. ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பது. 5. ஹஜ் செய்வது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்" என்றார்கள்.
அப்போது ஒருவர், "(நான்காவதாக) ஹஜ் செய்வதையும் (ஐந்தாவதாக) ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பதையும்தானே (நபி அவர்கள் குறிப்பிட்டார்கள்)?" என்று கேட்டார். அதற்கு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், "இல்லை. (நான்காவது) ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பது, (ஐந்தாவது) ஹஜ் செய்வது" என்று கூறிவிட்டு, "இவ்வாறுதான் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியேற்றேன்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 1
20. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இஸ்லாம் ஐந்து (தூண்கள்)மீது நிறுவப்பட்டுள்ளது. அல்லாஹ்வையே வழிபட்டு, அவன் அல்லாதவற்றை நிராகரிப்பது; தொழுகையைக் கடைப்பிடிப்பது; ஸகாத் வழங்குவது; இறையில்லம் கஅபாவில் ஹஜ் செய்வவது; ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பது. (ஆகியனவே அந்த ஐந்தும்.)
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
21. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இஸ்லாம் ஐந்து (தூண்கள்)மீது நிறுவப்பட்டுள்ளது. (அவை:) அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதரும் ஆவார்கள் என்றும் உறுதிமொழி அளிப்பது; தொழுகையைக் கடைப்பிடிப்பது; ஸகாத் வழங்குவது; இறையில்லம் கஅபாவில் ஹஜ் செய்வது; ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பது.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 1
22. தாவூஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(காரிஜிய்யா கூட்டத்தைச் சேர்ந்த) ஒருவர் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம், "நீங்கள் அறப்போரில் கலந்துகொள்வதில்லையே (ஏன்)?" என்று கேட்டார். அதற்கு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பின்வருமாறு) கூறக்கேட்டுள்ளேன்: நிச்சயமாக இஸ்லாம் ஐந்து (தூண்கள்)மீது நிறுவப்பட்டுள்ளது. (அவை:) அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று உறுதிமொழி அளிப்பது; தொழுகையைக் கடைப்பிடிப்பது; ஸகாத் வழங்குவது; ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பது; இறையில்லம் கஅபாவில் ஹஜ் செய்வது. (போரில் கலந்துகொள்வது இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகளில் ஒன்றல்ல. அதிலும் இப்போது நடைபெறும் போர்கள் வெறும் அரசியல் காரணங்களுக்காகவே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன)" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 1
பாடம் : 6 அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும், மார்க்க நெறிமுறைகளையும் நம்பிக்கை கொள்ளுமாறும், அதன்பால் (மக்களை) அழைத்தல், அதைக் குறித்துக் கேட்டுத் தெரிந்துகொள்ளல், அ(வ்வாறு தெரிந்துகொண்ட)தை மனனம் செய்து காத்தல், அதைப் பற்றிய தகவல் எட்டாத மக்களுக்கு அதை எட்டச்செய்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ளுமாறும் வந்துள்ள கட்டளை.
23. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அப்துல் கைஸ் குலத்தாரின் தூதுக் குழுவினர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் "ரபீஆ" கோத்திரத்தின் இன்ன (அப்துல் கைஸ்) குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆவோம். (உங்களைச் சந்திக்கவிடாமல்) உங்களுக்கும் எங்களுக்குமிடையே "முளர்" குலத்து இறைமறுப்பாளர்கள் தடையாக உள்ளனர். அதனால், (போர் புரியக்கூடாதெனத் தடை விதிக்கப்பட்ட) புனித மாதத்தில்தான் நாங்கள் உங்களிடம் வர முடியும். ஆகவே, எங்களுக்குச் சில கட்டளைகளை அளியுங்கள். அவற்றை நாங்களும் கடைப்பிடித்து, எங்களுக்குப் பின்னால் (எங்கள் ஊரில்) இருப்பவர்களையும் அவற்றைக் கடைப்பிடித்து நடக்கும்படி அழைப்போம்" என்று சொன்னார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான்கு விஷயங்களை (செயல்படுத்தும்படி) உங்களுக்கு நான் கட்டளையிடுகின்றேன். நான்கு பொருட்களை உங்களுக்குத் தடை செய்கின்றேன்.
(கட்டளையிடும் நான்கு விஷயங்கள்:)
1. அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்வது. (பிறகு அதை மக்களுக்கு விவரித்துக் கூறும் முகமாக பின்வருமாறு கூறினார்கள்:) அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஆவார்கள் என்றும் உறுதி கூறுவது. 2. தொழுகையைக் கடைப்பிடிப்பது. 3. ஸகாத் வழங்குவது. 4. நீங்கள் அடைந்த போர்ச் செல்வங்களில் ஐந்திலொரு பங்கை (அரசு பொதுநிதிக்கு)ச் செலுத்துவது (ஆகியவைதாம் அவை).
(மது ஊற்றிவைக்கப் பயன்படும்) சுரைக்காய்க் குடுவை, மண் சாடி, (பேரீச்ச மரத்தின் அடிப் பாகத்தைக் குடைந்து தயாரித்த) மரப்பீப்பாய், தார் பூசப்பட்ட பாத்திரம் ஆகியவற்றை உபயோகிக்க வேண்டாமென உங்களுக்கு நான் தடை விதிக்கிறேன்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாக வந்துள்ளது.
அவற்றில், கலஃப் பின் ஹிஷாம் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை"என்று கூறி, (அந்த நான்கில்) "ஒன்று" என (தமது விரலை) மடித்துக் காட்டினார்கள் என்று அதிகப்படியாக இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 1
24. அபூஜம்ரா நஸ்ர் பின் இம்ரான் அள்ளுபஈ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்கும் (அரபுமொழி தெரியாத) மக்களுக்கும் இடையே மொழிபெயர்ப்பாளனாக இருந்தேன். அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் ஒரு பெண்மணி வந்து பழச்சாறு (மது) ஊற்றிவைக்கப் பயன்படுத்தப்படும் மண்பானை குறித்து (அதை வேறு உபயோகத்திற்குப் பயன்படுத்தலாமா? என)க் கேட்டார். அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்:
அப்துல் கைஸ் குலத்தாரின் தூதுக் குழுவினர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இத்தூதுக் குழுவினர் யார்?" அல்லது "இக்கூட்டத்தார் யார்?" என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், "ரபீஆ" (குடும்பத்தினர்)" என்று பதிலளித்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இழிவுக்குள்ளாகாமலும் மன வருத்தத்திற்குள்ளாகாமலும் வருகைபுரிந்த சமூகத்தாரே! வருக! உங்கள் வரவு நல்வரவாகுக!" என்று (வாழ்த்துச்) சொன்னார்கள். அத்தூதுக் குழுவினர், "அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் வெகுதொலைவிலிருந்து உங்களிடம் வந்திருக்கிறோம். எங்களுக்கும் உங்களுக்குமிடையே "முளர்" குலத்து இறைமறுப்பாளர்களில் இன்ன குடும்பத்தார் (நாம் சந்திக்க முடியாதபடி) தடையாக உள்ளனர். (இதனால், போர் நிறுத்தம் நிகழும்) புனித மாதங்களில் தவிர வேறு மாதங்களில் நாங்கள் உங்களிடம் வர முடியாது. ஆகவே, எங்களுக்குத் தெளிவான சில கட்டளைகளை அளியுங்கள். அவற்றை நாங்கள் எங்களுக்குப் பின்னால் (ஊரில்) இருப்பவர்களுக்குத் தெரிவிப்போம்; அ(வற்றைச் செயல்படுத்துவ)தன் மூலம் நாங்களும் சொர்க்கம் செல்வோம்" என்றார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அவர்களுக்கு நான்கு விஷயங்களைக் கட்டளையிட்டார்கள். நான்கு பொருட்களை(ப் பயன்படுத்த வேண்டாமென)த்தடை செய்தார்கள்: அல்லாஹ் ஒருவனையே நம்பிக்கை கொள்ளுமாறு அவர்களுக்குக் கட்டளையிட்டுவிட்டு, "அல்லாஹ்வை நம்பிக்கை கொள்வது என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், "அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்" என்றார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும், முஹம்மத் (ஆகிய நான்) அல்லாஹ்வின் தூதர் என்றும் உறுதி கூறுவது (என விளக்கமளித்துவிட்டு); தொழுகையைக் கடைப்பிடிப்பது; ஸகாத் வழங்குவது; ரமளான் மாதம் நோன்பு நோற்பது. அத்துடன், போரில் கிடைக்கும் பொருள்களிலிருந்து ஐந்திலொரு பங்கை (அரசுப் பொதுநிதிக்கு) நீங்கள் செலுத்திட வேண்டும்" என்று(ம்) கூறினார்கள்.
மது ஊற்றி வைக்கப்படும் பாத்திரங்களான சுரைக்காய்க் குடுவை, மண் சாடி மற்றும் தார் பூசப்பட்ட பாத்திரம் ஆகியவற்றை (பயன்படுத்தக் கூடாதெனத்) தடை விதித்தார்கள். "இவற்றை நினைவில் வைத்து, உங்களுக்குப் பின்னால் இருப்பவர்களுக்கு அறிவித்து விடுங்கள்" என்றும் கூறினார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஷுஅபா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அறிவிப்பாளர் அபூஜம்ரா (ரஹ்) அவர்கள் சில நேரங்களில் "(பேரீச்சமரத்தின் அடிப் பாகத்தைக் குடைந்து தயாரிக்கப்படும்) மரப் பீப்பாய்" ("அந்நகீர்")என்றும், வேறு சில நேரங்களில் "தார் பூசப்பட்ட பாத்திரம்" (அல்முகய்யர்) என்றும் அறிவித்தார்கள்.
அபூபக்ர் பின் அபீஷைபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "உங்களுக்குப் பின்னால் இருப்பவர்களுக்கு (அறிவித்துவிடுங்கள்)" என்பதுவரை மட்டுமே இடம்பெற்றுள்ளது. "தார் பூசப்பட்ட பாத்திரம்" ("அல்முகய்யர்") பற்றி அதில் காணப்படவில்லை.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
25. மேற்கண்ட ஹதீஸ் வேறு இரு அறிவிப்பாளர்தொடர்களிலும் வந்துள்ளது.
அவற்றில், "(மது ஊற்றிவைக்கப்படும் பாத்திரங்களான) சுரைக்காய்க் குடுவை, (பேரீச்ச மரத்தின் அடிப்பாகத்தைக் குடைந்து தயாரிக்கப்படும்) மரப் பீப்பாய், மண்சாடி மற்றும் தார் பூசப்பட்ட பாத்திரம் ஆகியவற்றில் ஊறவைக்கப்படும் பானங்களுக்குத் தடை விதிக்கிறேன்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.
முஆத் அல்அம்பரீ (ரஹ்) அவர்களது அறிவிப்பில், அப்துல் கைஸ் குலத்தின் (தலைவர்) அஷஜ் (எனும் முன்திர் பின் ஆயித்-ரலி) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பின்வருமாறு) கூறியதாக இடம்பெற்றுள்ளது:
(அஷஜ்ஜே!) அல்லாஹ் நேசிக்கக்கூடிய இரு குணங்கள் உங்களிடம் உள்ளன 1. அறிவாற்றல்
2. நிதானம்.
அத்தியாயம் : 1
26. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அப்துல் கைஸ் குலத்தைச் சேர்ந்த சிலர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "இறைவனின் தூதரே! நாங்கள் "ரபீஆ" குலத்தாரின் (இன்ன) குடும்பத்தார் ஆவோம். எங்களுக்கும் உங்களுக்குமிடையே "முளர்" குலத்து இறைமறுப்பாளர்கள் (நாம் சந்திக்க முடியாதபடி தடையாக) உள்ளனர். இதனால் (போர் நிறுத்தம் நிகழும்) புனித மாதங்களில் தவிர வேறு மாதங்களில் நாங்கள் உங்களிடம் வர முடியாது. ஆகவே, எங்களுக்கு ஒரு கட்டளையிடுங்கள். அதை(ச் செயல்படுத்துமாறு) எங்களுக்கு அப்பால் இருப்பவர்களுக்கு நாங்கள் கட்டளையிடுவோம். அதைக் கடைப்பிடித்து நடந்தால் நாங்களும் சொர்க்கம் செல்வோம்" என்று கூறினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நான்கு விஷயங்களை உங்களுக்கு நான் கட்டளையிடுகின்றேன். நான்கு பொருட்களை உங்களுக்குத் தடை செய்கின்றேன்: அல்லாஹ் ஒருவனையே வழிபடுங்கள். அவனுக்கு எதையும் இணையாக்காதீர்கள். தொழுகையைக் கடைப்பிடியுங்கள். ஸகாத் வழங்குங்கள். ரமளான் மாதத்தில் நோன்பு நோற்றுக்கொள்ளுங்கள். அத்துடன் போரில் கிடைக்கும் பொருட்களிலிருந்து ஐந்திலொரு பங்கை (அரசு பொதுநிதிக்கு)ச் செலுத்துங்கள்.
நான்கு பொருட்களை உங்களுக்கு நான் தடை செய்கிறேன். சுரைக்காய்க் குடுவை, மண்சாடி, தார் பூசப்பட்ட பாத்திரம் மற்றும் மரப் பீப்பாய் ("அந்நகீர்") ஆகியவைதாம் அவை" என்று கூறினார்கள்.
அப்போது மக்கள், "இறைவனின் தூதரே! "அந்நகீர் என்பது என்னவென்று தாங்கள் அறிவீர்களா?" என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஆம் (அறிவேன்).பேரீச்சமரத்தின் அடி மரத்தைத் துளையிட்டு அதில் "சிறு பேரீச்சம் பழங்களை" அல்லது "பேரீச்சம் பழங்களை" நீங்கள் போட்டு வைப்பீர்கள். பிறகு அதில் தண்ணீரை ஊற்றுவீர்கள். அதன் கொதி நிலை அடங்கியதும் அதை நீங்கள் அருந்துவீர்கள். (அதை அருந்தியதும் போதையேற்றப்பட்டுவிடுகிறது.) எந்த அளவிற்கென்றால் "உங்களில் ஒருவர்" அல்லது"மக்களில் ஒருவர்" தம்முடைய தந்தையின் சகோதரர் மகனையே கூட வாளால் வெட்டிவிடுகின்றார்" என்று கூறினார்கள்.
அந்தத் தூதுக் குழுவினரிடையே இவ்வாறு காயமேற்பட்ட ஒரு மனிதர் இருந்தார். அவர் "நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வெட்கப்பட்டுக்கொண்டு அ(ந்தக் காயத்)தை மறைத்துக் கொண்டிருந்தேன்" என்று கூறுகிறார். அப்போது நான், "அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் (வேறு) எந்தப் பாத்திரத்தில்தான் அருந்துவோம்?" என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "வாய்ப்பகுதி சுருக்கிட்டுக் கட்டப்படும் தோல் பைகளில்" என்று கூறினார்கள். அதற்கு மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! எங்கள் நாட்டில் ஏராளமாகப் பெருச்சாளிகள் உள்ளன. அங்கு தோல் பைகள் சரிப்பட்டுவரா" என்று கூறினர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அவற்றைப் பெருச்சாளிகள் சாப்பிட்டாலும் சரியே! அவற்றைப் பெருச்சாளிகள் சாப்பிட்டாலும் சரியே! அவற்றைப் பெருச்சாளிகள் சாப்பிட்டாலும் சரியே!" என்று கூறினார்கள்.
மேலும், நபி (ஸல்) அவர்கள் அப்துல் கைஸ் குலத்தாரின் (தலைவர்) அஷஜ் (ரலி) அவர்களிடம் கூறினார்கள்:
உங்களிடம் அல்லாஹ் நேசிக்கின்ற இரு குணங்கள் உள்ளன. 1. அறிவாற்றல் 2. நிதானம்.
அறிவிப்பாளர் கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்த அப்துல் கைஸ் தூதுக் குழுவினரைச் சந்தித்த ஒருவர் (இந்த ஹதீஸை) நமக்கு அறிவித்தார்.
அத்தியாயம் : 1
27. அபூநள்ரா முன்திர் பின் மாலிக் அல்அவகீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல் கைஸ் குலத்தாரின் தூதுக் குழுவினர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தது பற்றி மேற்கண்ட ஹதீஸிலுள்ளவாறே அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவித்தார்கள். ஆனால் அதில், (மரப் பீப்பாய் (அந்நகீர்) பற்றி விளக்கமளிக்கையில் நபி (ஸல்) அவர்கள்) "பேரீச்சமரத்தின் அடிமரத்தைக் குடைந்து அதனுள் "சிறு பேரீச்சம் பழங்களை" அல்லது "பேரீச்சம் பழத்தையும் தண்ணீரையும்" கலந்துவிடுவீர்கள்" என்று கூறியதாக இடம்பெற்றுள்ளது.
"சிறு பேரீச்ச மரங்களை" அல்லது "பேரீச்சம் பழங்களை" என்று ஐயப்பாட்டுடன் அறிவிப்பாளர் சயீத் (ரஹ்) அவர்கள் அறிவித்துள்ள வாசகம் அதில் இடம்பெறவில்லை.
அந்தத் தூதுக் குழுவினரைச் சந்தித்த பலர் எனக்கு இதை அறிவித்தனர் என்று கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறினார்கள். (அவர்களில் ஒருவரான) அபூநள்ரா மேற்கண்டவாறு அறிவித்தார்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
28. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அப்துல் கைஸ் குலத்தாரின் தூதுக் குழுவினர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் எங்களைத் தங்களுக்கு அர்ப்பணமாக்கட்டும்! எந்தெந்தக் குடிபானங்கள் எங்களுக்குத் தகும்?" என்று கேட்டார்கள்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், "மரப் பீப்பாயில் ("அந்நகீரில்"-ஊற்றிவைக்கப்பட்ட பானத்தை) அருந்தாதீர்கள்" என்று கூறினார்கள். அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் எங்களைத் தங்களுக்கு அர்ப்பணமாக்கட்டும்! அந்நகீர் என்பது என்ன என்று தாங்கள் அறிவீர்களா?" என்று கேட்டார்கள்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், "ஆம். பேரீச்சமரத்தின் அடிப்பாகத்தின் நடுவே துளையிடப் படுவதுதான்" என்று கூறிவிட்டு, "சுரைக்காய்க் குடுவையிலும் மண் சாடியிலும் நீங்கள் அருந்தாதீர்கள்.சுருக்குக் கயிற்றால் வாய்ப்பகுதி கட்டப்படும் தோல் பைகளையே பயன்படுத்துங்கள்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
பாடம் : 7 இஸ்லாமிய உறுதிமொழிகள் மற்றும் நெறிமுறைகளை ஏற்குமாறு அழைப்பு விடுத்தல்.
29. முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை (யமன் நாட்டின் நீதி நிர்வாகத்தைக் கவனிக்க) அனுப்பிவைத்தபோது சொன்னார்கள்:
நீங்கள் வேதக்காரர்களில் ஒரு சமூகத்தாரிடம் செல்கிறீர்கள். அவர்களிடம் நீங்கள் (செல்லும் போது), அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும், நான் அல்லாஹ்வின் தூதர் என்றும் உறுதிமொழி அளிக்கும்படி அவர்களுக்கு அழைப்புவிடுங்கள். இதற்கு அவர்கள் கட்டுப்பட்டால், அல்லாஹ் அவர்கள்மீது ஒவ்வொரு நாளும் ஐந்து (நேரத்) தொழுகைகளைக் கடமையாக்கியுள்ளான் என்று அவர்களுக்குத் தெரிவியுங்கள். இதற்கும் அவர்கள் கட்டுப்பட்டால், அவர்கள்மீது அல்லாஹ் ஸகாத் (எனும் கட்டாய தர்மத்)தைக் கடமையாக்கியுள்ளான் என்றும், அது அவர்களில் செல்வர்களிடமிருந்து பெறப்பட்டு ஏழைகளுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர்களுக்குத் தெரிவியுங்கள். இதற்கும் அவர்கள் கட்டுப்பட்டால், (அவர்களிடம் ஸகாத்தை வசூலிக்கும்போது) அவர்களின் செல்வங்களில் (நடுத்தரமானவற்றை விடுத்து) உயர்ந்தவற்றை எடுத்துக்கொள்ள வேண்டாமென உங்களை நான் எச்சரிக்கிறேன். அநீதி இழைக்கப்பட்டவனின் பிரார்த்தனைக்கு அஞ்சுங்கள். ஏனெனில், அவன் செய்யும் பிரார்த்தனைக்கும் அல்லாஹ்வுக்குமிடையே திரையேதுமில்லை.
இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
30. அபூமஅபத் (நாஃபித்-ரஹ்) அவர்கள் கூறியதாவது:
"நபி (ஸல்) அவர்கள் முஆத் (ரலி) அவர்களை யமன் நாட்டுக்கு அனுப்பியபோது "நீங்கள் ஒரு சமுதாயத்தாரிடம் செல்கிறீர்கள்..." என்று சொன்னார்கள்" எனத் தொடங்கும் மேற்கண்ட ஹதீஸை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் முழுமையாக அறிவித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாக வந்துள்ளது.
அத்தியாயம் : 1
31. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முஆத் (ரலி) அவர்களை யமன் நாட்டுக்கு அனுப்பிவைத்த போது சொன்னார்கள்:
நீங்கள் வேதக்காரர்களில் ஒரு சமுதாயத்தாரிடம் செல்கிறீர்கள். ஆகவே, அவர்களுக்கு நீங்கள் விடுக்கும் முதலாவது அழைப்பு, (ஏக இறைவனான) அல்லாஹ் ஒருவனையே வழிபடுங்கள் என்பதாகவே இருக்க வேண்டும். அவர்கள் அல்லாஹ்வை (ஏகன் என்று) ஏற்றுக்கொண்டால், அல்லாஹ் அவர்கள்மீது (நாளொன்றுக்கு) இரவிலும் பகலிலும் ஐந்து தொழுகைகளைக் கடமையாக்கியுள்ளான் என்று அவர்களுக்குத் தெரிவியுங்கள். தொழுகையை அவர்கள் நிறைவேற்றினால், அவர்களில் செல்வர்களாய் இருப்பவர்களிடமிருந்து வசூலிக்கப்பெற்று அவர்களில் ஏழைகளாயிருப்பவர்களிடையே விநியோகிக்கப்பட வேண்டிய ஸகாத்தை அல்லாஹ் அவர்கள்மீது கடமையாக்கியுள்ளான் என்று அவர்களுக்குத் தெரிவியுங்கள். இதற்கு அவர்கள் கட்டுப்பட்டால் அவர்களிடமிருந்து ஸகாத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள். ஆனால், மக்களின் செல்வங்களிலிருந்து உயர்ந்தவற்றைத் தவிர்த்துவிடுங்கள். (அவற்றை ஸகாத்தாகப் பெறாதீர்கள்).
அத்தியாயம் : 1
பாடம் : 8 மக்கள் "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை; முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஆவார்கள்" என்று கூறி, தொழுகையைக் கடைப்பிடித்து, ஸகாத் வழங்கி, நபி (ஸல்) அவர்கள் கொண்டுவந்த அனைத்துக் கட்டளைகளையும் நம்பிக்கை கொள்ளாதவரை அவர்களுடன் போரிடுமாறு (இறைத் தூதருக்கு) இடப்பெற்ற உத்தரவு; அவ்வாறு செய்தவர் தகுந்த காரணம் இருந்தால் தவிர தமது உயிரையும் உடைமையையும் காத்துக்கொள்வார்; அவரது அந்தரங்கம் அல்லாஹ்விடம் விடப்படும் என்ற அறிவிப்பு; ஸகாத் முதலான இஸ்லாமியக் கடமைகளில் ஒன்றை மறுப்பவருடன் போரிடப்படும் என்ற அறிவிப்பு; ஆட்சித் தலைவர் இஸ்லாமிய அடையாளங்(களான சில விதிமுறை)களுக்கு முக்கியத்துவம் அளித்திடவேண்டும் என்ற உத்தரவு.
32. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தபின் அபூபக்ர் (ரலி) அவர்கள் ஆட்சியாளர் ஆக்கப்பட்டதும் அரபுகளில் சிலர் (ஸகாத் வழங்க மறுத்ததன் மூலம்) இறை மறுப்பாளர்களாகிவிட்டனர். (அவர்களுடன் போர் தொடுக்க கலீஃபா அபூபக்ர் (ரலி) அவர்கள் ஆயத்தமானார்கள். அப்போது) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம், "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை (லா இலாஹ இல்லல்லாஹ்) என்று (இந்த) மக்கள் கூறும்வரை அவர்களுடன் போரிடுமாறு நான் கட்டளையிடப்பட்டுள்ளேன். லா இலாஹ இல்லல்லாஹ் என்று கூறியவர் (தகுந்த காரணமிருந்தாலன்றி)தமது செல்வத்தையும் உயிரையும் என்னிடமிருந்து பாதுகாத்துக் கொள்வார். அவரது (அந்தரங்கம் பற்றிய) விசாரணை அல்லாஹ்விடமே உள்ளது." என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியிருக்கும்போது நீங்கள் எவ்வாறு (இறை நம்பிக்கை கொண்டுள்ள) இந்த மக்களுடன் போர் செய்ய முடியும்?" என்று கேட்டார்கள். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் மீதாணையாக! தொழுகையையும் ஸகாத்தையும் வேறுபடுத்திப் பார்ப்போருடன் நிச்சயமாக நான் போர் செய்வேன். ஏனெனில் ஸகாத், செல்வத்திற்குரிய கடமையாகும். அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வழங்கிவந்த ஒட்டகத்தின் கயிற்றை இவர்கள் என்னிடம் வழங்க மறுத்தாலும் அதை மறுத்ததற்காக நான் இவர்களுடன் போர் செய்வேன்" என்றார்கள். இது குறித்து உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் மீதாணையாக! அபூபக்ர் (ரலி) அவர்களின் இதயத்தை, போர் (தொடுப்பதன் மீது உறுதியான முடிவு) செய்வதற்காக அல்லாஹ் விசாலமாக்கியிருந்ததை நான் கண்டுகொண்டேன். அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறியதே சரியானது என நான் விளங்கிக்கொண்டேன்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 1
33. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை (லா இலாஹ இல்லல்லாஹ்) என்று கூறும்வரை இந்த மக்களுடன் போரிடுமாறு எனக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது. யார் "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை" என்று கூறிவிடுகிறாரோ அவர் -தகுந்த காரணம் இருந்தாலன்றி- தமது செல்வத்தையும் உயிரையும் என்னிடமிருந்து காத்துக் கொள்வார்.அவரது (அந்தரங்கம் குறித்த) விசாரணை அல்லாஹ்வின் பொறுப்பாகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
34. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை (லா இலாஹ இல்லல்லாஹ்) என உறுதிமொழி கூறி, என்னையும் எனக்குக் கிடைத்துள்ள (மார்க்கத்)தையும் நம்புகின்றவரை இந்த மக்களுடன் போரிடுமாறு எனக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது. இதை அவர்கள் செயல்படுத்தினால் (தகுந்த காரணம் இருந்தாலன்றி) தமது உயிரையும் செல்வத்தையும் என்னிடமிருந்து காத்துக்கொள்வார்கள். அவர்களது (அந்தரங்கம் குறித்த) விசாரணை அல்லாஹ்வின் பொறுப்பில் உள்ளது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
35. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை (லா இலாஹ இல்லல்லாஹ்) என்று கூறும்வரை இந்த மக்களுடன் போரிடுமாறு எனக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது. அவர்கள் "லா இலாஹ இல்லல்லாஹ்" என்று சொல்லிவிட்டால் (தகுந்த காரணம் இருந்தாலன்றி) என்னிடமிருந்து தம் உயிரையும் உடைமைகளையும் பாதுகாத்துக்கொள்வார்கள். அவர்களது (அந்தரங்கம் குறித்த) விசாரணை அல்லாஹ்வின் பொறுப்பில் உள்ளது" என்று கூறினார்கள். பிறகு, "(நபியே!) நிச்சயமாக நீர் நினைவூட்டுபவர்தாம். அவர்கள்மீது ஆதிக்கம் செலுத்துபவர் அல்லர்" எனும் இறை வசனங்களை (88:21, 22) ஓதிக் காட்டினார்கள்.
வேறு சில அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
36. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும் முஹம்மத் (ஆகிய நான்) அல்லாஹ்வின் தூதர் ஆவேன் என்றும் உறுதிமொழி கூறி, தொழுகையைக் கடைப்பிடித்து, ஸகாத்தும் வழங்கும்வரை இந்த மக்களுடன் போரிடுமாறு எனக்குக் கட்டளை இடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் செய்துவிட்டால் (தகுந்த காரணம் இருந்தாலன்றி) என்னிடமிருந்து தம் உயிரையும் உடைமைகளையும் பாதுகாத்துக் கொள்வார்கள். அவர்களது (அந்தரங்கம் குறித்த) விசாரணை அல்லாஹ்வின் பொறுப்பில் உள்ளது.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 1
37. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறி னார்கள்:
அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று யார் (உறுதிமொழி) கூறி, (மக்களால்) வழிபாடு செய்யப்படும் இதர தெய்வங்களை நிராகரித்துவிடுகிறாரோ அவரது உடைமையும் உயிரும் பாதுகாப்புப் பெற்றுவிடும். அவரது (அந்தரங்கம் குறித்த) விசாரணை அல்லாஹ்வின் பொறுப்பில் உள்ளது.
இதைத் தாரிக் பின் அஷ்யம் பின் மஸ்ஊத் அல்அஷ்ஜயீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
38. மேற்கண்ட ஹதீஸ் தாரிக் பின் அஷ்யம் (ரலி) அவர்களிடமிருந்தே வேறு இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "யார் ஓரிறைக் கொள்கையை ஏற்று..." என்று ஹதீஸ் ஆரம்பிக்கிறது.
அத்தியாயம் : 1
பாடம் : 9 மரணத் தறுவாயில் உள்ள ஒருவர், உயிர் பிரிவதற்கு சற்று முன்னர் இஸ்லாத்தை ஏற்றால்கூட அது செல்லும்;இணைவைப்பாளர்களுக்காகப் பாவமன்னிப்புக் கோருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது; இணைவைப்பாளராக உள்ள நிலையில் இறந்து போனவர் நரகவாசிகளில் ஒருவர்தாம். அவரை எந்த வகையிலும் காப்பாற்ற முடியாது- என்பதற்கான ஆதாரம்.
39. முஸய்யப் பின் ஹஸ்ன் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய பெரிய தந்தை) அபூதாலிப் அவர்களுக்கு மரண வேளை நெருங்கிவிட்டபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரிடம் வந்தார்கள். அங்கே, அவரருகே அபூஜஹ்லையும், அப்துல்லாஹ் பின் அபீஉமய்யா பின் அல்முஃகீராவையும் கண்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "என் பெரிய தந்தையே! அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை (லா இலாஹ இல்லல்லாஹ்) என்று சொல்லுங்கள்! இந்த (ஏகத்துவ உறுதிமொழிக்கான) சொல்லை வைத்து நான் உங்களுக்காக அல்லாஹ்விடம் சாட்சியம் கூறுவேன்" என்று சொன்னார்கள். அப்போது அபூஜஹ்லும் அப்துல்லாஹ் பின் அபீ உமய்யாவும் "அபூதாலிபே! நீங்கள் (உங்கள் தந்தை) அப்துல் முத்தலிபின் மார்க்கத்தையா வெறுத்து ஒதுக்கப்போகிறீர்கள்?" என்று கேட்டனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஏகத்துவ உறுதிமொழியைக் கூறும்படி அபூதாலிப் அவர்களிடம் கோரிக்கொண்டேயிருந்தார்கள்; தாம் முன்பு சொன்னதையே அவரிடம் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.
இறுதியில் அபூதாலிப் கடைசியாக அவர்களிடம் பேசியது "நான் (என் தந்தை) அப்துல் முத்தலிபின் மார்க்கத்திலேயே இருக்கிறேன்" என்பதாகவே இருந்தது. "லா இலாஹ இல்லல்லாஹ்" எனும் உறுதிமொழியைச் சொல்ல அவர் மறுத்துவிட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அறிந்துகொள்ளுங்கள்! அல்லாஹ்வின் மீதாணையாக! எனக்குத் தடை விதிக்கப்படும்வரை உங்களுக்காக நான் பாவமன்னிப்புக் கேட்டுக்கொண்டேயிருப்பேன்" என்று சொன்னார்கள். அப்போது தான் கண்ணியமும் மாண்பும் உடைய அல்லாஹ், "இறைவனுக்கு இணைவைப்பவர்கள் நரகவாசிகள் தாம் என்பது நன்கு தெளிவாகிவிட்ட பின்னரும் (அவர்கள் நெருங்கிய உறவினர்களாயிருந்தாலும் சரி) அவர்களுக்காகப் பாவமன்னிப்புக் கோர இறைத்தூதருக்கும் இறை நம்பிக்கையாளர்களுக்கும் உரிமையில்லை" எனும் (9:113ஆவது) வசனத்தை அருளினான். அபூதாலிப் தொடர்பாக (நபியவர்கள் வருந்தியபோது) அல்லாஹ், "(நபியே!) நீங்கள் விரும்பியவரை(யெல்லாம்) நேர்வழியில் செலுத்திவிட முடியாது. மாறாக, அல்லாஹ்தான் தான் நாடியவர்களை நேர்வழியில் செலுத்துகிறான்" எனும் (28:56ஆவது) வசனத்தை அருளினான்.
அத்தியாயம் : 1
40. மேற்கண்ட ஹதீஸ் மேலும் சில அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், ஸாலிஹ் பின் கைசான் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "அப்போது அல்லாஹ் வசனத்தை அருளினான்" என்று ஹதீஸ் முடிகிறது. அவ்விரு வசனங்களும் அந்த அறிவிப்பில் இடம்பெறவில்லை. மேலும், "அபூ ஜஹ்லும் அப்துல்லாஹ் பின் அபீஉமய்யாவும் தாம் முன்பு சொன்னதையே (அபூதாலிபிடம்) திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார்கள்" என்றும் இடம்பெற்றுள்ளது.
மஅமர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் இந்த இடத்தில் "அவ்விருவரும் அவரிடம் அதைச் சொல்லிக்கொண்டேயிருந்தார்கள்" என்று இடம்பெற்றுள்ளது.
41. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் பெரிய தந்தை (அபூதாலிப்) உடைய மரண தறுவாயில் "லா இலாஹ இல்லல்லாஹ் என்று சொல்லுங்கள்; இதை வைத்து உங்களுக்காக நான் மறுமைநாளில் (அல்லாஹ்விடம்) சாட்சியம் கூறுவேன்" என்று கூறினார்கள். ஆனால் அவர், (ஏகத்துவ உறுதிமொழி கூற) மறுத்துவிட்டார். அப்போது அல்லாஹ், "(நபியே!) நீங்கள் விரும்பியவரை(யெல்லாம்) நேர்வழியில் செலுத்திவிட முடியாது" எனும் (28:56ஆவது) வசனத்தை அருளினான்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
42. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தம் பெரிய தந்தை (அபூதாலிபின் மரண தறுவாயில்) அவர்களிடம், "லா இலாஹ இல்லல்லாஹ் என்று சொல்லுங்கள். இதை வைத்து உங்களுக்காக நான் மறுமைநாளில் சாட்சியம் கூறுவேன்" என்று கூறினார்கள். அதற்கு அவர், "பயம்தான் அவரை இவ்வாறு செய்யவைத்தது என்று என்னைப் பற்றிக் குறைஷியர் குறை கூறிவிடுவார்கள் என்ற அச்சம் எனக்கு இல்லையாயின் (ஏகத்துவ உறுதிமொழியான) இதைக் கூறி உம்முடைய கண்களை நான் குளிர வைத்திருப்பேன்" என்று கூறினார். அப்போதுதான் அல்லாஹ் "(நபியே!) நீங்கள் விரும்பியவரை (யெல்லாம்) நேர்வழியில் செலுத்திவிட முடியாது. மாறாக, அல்லாஹ்தான் தான் நாடியவர்களை நேர்வழியில் செலுத்துகிறான்" எனும் (28:56 ஆவது) வசனத்தை அருளினான்.
அத்தியாயம் : 1
பாடம் : 10 ஓரிறைக் கோட்பாட்டில் இறந்தவர் சொர்க்கம் செல்வது உறுதி என்பதற்கான ஆதாரம்.
43. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று யார் (மனமார) அறிந்த நிலையில் இறந்துவிடுகின்றாரோ அவர் சொர்க்கம் செல்வார்.
இதை உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
மேற்கண்ட ஹதீஸ் உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்களிடமிருந்து மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
44. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தோம். அப்போது மக்களிடம் இருந்த உணவுப் பொருட்கள் தீர்ந்துவிட்டன. அதனால் மக்களின் (உணவுக்காகப்) பயண ஒட்டகங்களில் சிலவற்றை அறுக்கலாம் என்று கூட நபி (ஸல்) அவர்கள் எண்ணினார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! மக்களிடம் எஞ்சியுள்ள உணவுப் பொருட்களை ஒன்றுதிரட்டி, அதில் (பெருக்கம் ஏற்பட) தாங்கள் பிரார்த்தித்தால் நன்றாயிருக்குமே!" என்று கூறினார்கள். அவ்வாறே நபி (ஸல்) அவர்கள் செய்தார்கள். அப்போது தம்மிடம் கோதுமை வைத்திருந்தவர் கோதுமையைக் கொண்டுவந்தார்; பேரீச்சம் பழங்கள் வைத்திருந்தவர் பேரீச்சம் பழங்களைக் கொண்டுவந்தார். -அறிவிப்பாளர் தல்ஹா பின் முஸர்ரிஃப் (ரஹ்) கூறுகிறார்கள்: முஜாஹித் (ரஹ்) அவர்கள், "பேரீச்சம் பழங்களின் கொட்டைகள் வைத்திருந்தவர் பேரீச்சம்பழக் கொட்டைகளைக் கொண்டுவந்தார்" என்று கூறினார்கள். நான், "பேரீச்சம் பழத்தின் கொட்டைகளை வைத்து மக்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "அவற்றை வாயிலிட்டுச் சுவைத்துவிட்டு, அதற்கு மேல் தண்ணீரை அருந்திக்கொள்வார்கள்" என்று கூறினார்கள்.-
(மக்களிடமிருந்த உணவுப் பொருட்கள் ஒன்று திரட்டப்பட்டன.) அதில் (பெருக்கம் ஏற்பட) நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள். (அவ்வாறே பெருக்கம் ஏற்பட்டது.) எந்த அளவிற்கென்றால் மக்கள் அனைவரும் தங்கள் பயண(த்திற்கு வேண்டிய) உணவை நிரப்பிக் கொண்டனர். (இதைக் கண்ட) நபி (ஸல்) அவர்கள் "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும், நான் அல்லாஹ்வின் தூதர் ஆவேன் என்றும் நான் உறுதி கூறுகிறேன். இவ்விரு உறுதிமொழிகளுடன், அவற்றில் சந்தேகம் கொள்ளாமல் இறைவனைச் சந்திக்கும் அடியார் எவரும் சொர்க்கம் செல்லாமல் இருக்கமாட்டார்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 1
45. அபூஹுரைரா (ரலி), அல்லது அபூசயீத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
தபூக் போரின்போது மக்களுக்குக் கடுமையான பசி ஏற்பட்டது. அப்போது அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் எங்களுக்கு அனுமதி அளித்தால் நாங்கள் எங்கள் ஒட்டகங்களை அறுத்துச் சாப்பிடவும் (அவற்றின் கொழுப்புகளை உருக்கி) எண்ணெய் எடுத்துக்கொள்ளவும் செய்வோமே!" என்று கேட்டனர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(அவ்வாறே) செய்துகொள்ளுங்கள்" என்று கூறினார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! இவ்வாறு நீங்கள் செய்(ய அனுமதியளித்)தால் வாகனப் பிராணிகள் குறைந்துவிடும். இதைவிடுத்து, மக்களிடம் எஞ்சியுள்ள உணவுப் பொருட்களைக் கொண்டுவரச் சொல்லுங்கள். பின்னர் அவற்றில் பெருக்கம் (பரக்கத்) ஏற்பட அவர்களுக்காகப் பிரார்த்தியுங்கள். அல்லாஹ் அதில் (பெருக்கத்தை) ஏற்படுத்தக்கூடும்" என்றார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஆம்" என்று கூறிவிட்டு, ஒரு தோல் விரிப்பைக் கொண்டுவந்து விரிக்கச் சொன்னார்கள். பிறகு மக்களிடம் எஞ்சியிருந்த உணவுப் பொருட்களைக் கொண்டுவரச் சொன்னார்கள்.
(மக்களில்) ஒருவர் ஒரு கையளவு கோதுமையைக் கொண்டுவரலானார். மற்றொருவர் ஒரு கையளவு பேரீச்சம் பழங்களுடன் வந்தார். இன்னொருவர் ரொட்டித் துண்டு ஒன்றைக் கொண்டுவந்தார். அந்த விரிப்பின் மீது சிறிதளவு உணவுப் பொருட்கள் சேர்ந்தன. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதில் பெருக்கம் ஏற்படப் பிரார்த்தித்தார்கள். பிறகு "உங்கள் பைகளில் நிரப்பிக்கொள்ளுங்கள்" என்று கூறினார்கள். அவ்வாறே மக்களும் தம் பைகளில் நிரப்பிக் கொண்டனர். அந்தப் படையினர் தம்மிடம் இருந்த எந்தப் பையையும் விட்டுவைக்காமல் எல்லாவற்றிலும் நிரப்பிக்கொண்டனர். மக்களும் வயிறு நிரம்பச் சாப்பிட்டனர். (இருப்பினும்) இன்னும் அது எஞ்சியது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும் நான் அல்லாஹ்வின் தூதர் என்றும் நான் உறுதி கூறுகிறேன். இவ்விரண்டு உறுதிமொழிகளையும் சந்தேகம் கொள்ளாமல் நம்பிய நிலையில் அல்லாஹ்வைச் சந்திக்கும் எந்த அடியாரும் சொர்க்கத்தைவிட்டுத் தடுக்கப்படமாட்டார்"என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
46. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை; அவன் தனித்தவன்; அவனுக்கு இணையாளன் யாருமில்லை. முஹம்மத் (ஆகிய நான்) அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதரும் ஆவேன்; (இறைத் தூதர்) ஈசா (அலை) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய அடிமையின் புதல்வரும் ஆவார்; அல்லாஹ் மர்யமை நோக்கிச் சொன்ன ("ஆகுக" எனும்) ஒரு வார்த்தை(யில் பிறந்தவர்); அவனிடமிருந்து (ஊதப்பட்ட) ஓர் உயிர்; சொர்க்கம் உண்மை; நரகம் உண்மை என்றெல்லாம் யார் உறுதிமொழி கூறுகின்றாரோ அவரைச் சொர்க்கத்தின் எட்டு வாசல்களில் தான் நாடிய வாசல் வழியாக அல்லாஹ் நுழைவிப்பான்.
இதை உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
ஆனால், (அதன் இறுதியில்) "அவரை அல்லாஹ் அவருடைய செயல்களுக்கேற்ப சொர்க்கத்தில் நுழைவிப்பான்" என்று இடம்பெற்றுள்ளது. "சொர்க்கத்தின் எட்டு வாசல்களில் தான் நாடிய வாசல் வழியாக நுழைவிப்பான்" என்பது இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 1
47. அபூஅப்தில்லாஹ் அப்துர் ரஹ்மான் பின் உசைலா அஸ்ஸுனாபிஹீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் மரணப் படுக்கையில் இருந்தபோது நான் அவர்களிடம் சென்று அழுதேன். அப்போது அவர்கள் "அமைதியாயிருங்கள். ஏன் அழுகிறீர்கள்? அல்லாஹ்வின் மீதாணையாக! சாட்சியம் கூறுமாறு எனக்கு வாய்ப்பளிக்கப் பட்டால் உங்களுக்காக நான் சாட்சியம் கூறுவேன். பரிந்துரை செய்ய எனக்கு வாய்ப்பளிக்கப்பட்டால் உங்களுக்காக நான் பரிந்துரைப்பேன்; எனக்கு சக்தி இருந்தால் நிச்சயமாக உங்களுக்கு நான் பயன் அளிப்பேன்" என்று கூறினார்கள். பிறகு பின்வருமாறு கூறினார்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியேற்ற உங்களுக்குப் பயனுள்ள எந்தச் செய்தியையும் உங்களிடம் தெரிவிக்காமல் இருந்ததில்லை. ஆனால், ஒரே ஒரு செய்தியைத் தவிர. அந்தச் செய்தியையும் இதோ என் உயிர் பிரியப்போகும் இந்நேரத்தில் உங்களிடம் நான் சொல்லப் போகிறேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும் முஹம்மத் (ஆகிய நான்) அல்லாஹ்வின் தூதர் என்றும் உறுதி கூறுகிறாரோ அவருக்கு அல்லாஹ் நரகத்தைத் தடை செய்துவிடுகிறான்.
அத்தியாயம் : 1
48. முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) நான் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் (வாகனத்தில்) இருந்தேன். எனக்கும் அவர்களுக்குமிடையே (ஒட்டகச்) சேணத்துடன் இணைந்த சாய்வுக் கட்டைதான் இருந்தது. (அவ்வளவு நெருக்கத்தில் இருந்தேன்.) அப்போது நபி (ஸல்) அவர்கள், "முஆத் பின் ஜபல்" என்று அழைத்தார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன்(கூறுங்கள்)" என்றேன். பிறகு சிறிது தூரம் சென்ற பின் (மீண்டும்) "முஆத் பின் ஜபல்" என்று அழைத்தார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன் (கூறுங்கள்)" என்றேன். சிறிது தூரம் சென்ற பின் (மீண்டும்) "முஆத்பின் ஜபல்!!" என்று அழைத்தார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன் (கூறுங்கள்)" என்றேன்.
நபி (ஸல்) அவர்கள், "அடியார்கள்மீது அல்லாஹ்வுக்குள்ள உரிமை என்ன என்பதை நீர் அறிவீரா?" என்று கேட்டார்கள். நான், "அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்" என்று பதிலளித்தேன். நபி (ஸல்) அவர்கள், "அடியார்கள் மீது அல்லாஹ்வுக்குள்ள உரிமை என்னவென்றால், அவர்கள் அவனையே வழிபட வேண்டும்; அவனுக்கு எதையும் இணை கற்பிக்கக் கூடாது" என்றார்கள்.
இன்னும் சிறிது தூரம் சென்ற பின் "முஆத் பின் ஜபல்" என்று அழைத்தார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன்(கூறுங்கள்)" என்றேன். அவர்கள், "அவ்வாறு (அல்லாஹ்வையே வழிபட்டு அவனுக்கு இணைவைக்காமல்) செயல்பட்டுவரும் அடியார்களுக்கு அல்லாஹ்வின் மீதுள்ள உரிமை என்ன என்பதை நீர் அறிவீரா?" என்று கேட்டார்கள். நான், "அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்" என்று பதிலளித்தேன். நபி (ஸல்) அவர்கள், "(இத்தகைய) அடியார்களை அவன் (மறுமையில்) வேதனை செய்யாமல் இருப்பது தான்" என்று சொன்னார்கள்.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 1
49. முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பின்னால் "உஃபைர்" என்றழைக்கப்பட்ட கழுதையின் மீது அமர்ந்திருந்தேன். அப்போது அவர்கள், "முஆத்! அல்லாஹ்வுக்கு அடியார்கள் மீதுள்ள உரிமை என்ன? அடியார்களுக்கு அல்லாஹ்வின் மீதுள்ள உரிமை என்ன என்பதை நீர் அறிவீரா?" என்று (என்னிடம்) கேட்டார்கள்.
நான், "அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்" என்று பதில் கூறினேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அடியார்கள்மீது அல்லாஹ்வுக்குள்ள உரிமை என்னவென்றால், அவர்கள் அவனையே வழிபட வேண்டும், அவனுக்கு எதையும் இணையாக்கக்கூடாது; அல்லாஹ்வின் மீது அடியார்களுக்குள்ள உரிமை யாதெனில், அவனுக்கு எதையும் இணைகற்பிக்காமலிருப்பவரை (மறுமையில்) அவன் வேதனை செய்யாமல் இருப்பதாகும்" என்று கூறினார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! நான் இந்த நற்செய்தியை மக்களுக்கு அறிவிக்கட்டுமா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "மக்களுக்கு இந்த நற்செய்தியை அறிவிக்காதீர்கள். அவர்கள் இதையே நம்பி (நற்செயல்களில் ஈடுபடாமல்) இருந்துவிடுவார்கள்"என்று பதிலளித்தார்கள்.
இதை அம்ர் பின் மைமூன் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 1
50. முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம்), "முஆத்! அடியார்கள்மீது அல்லாஹ்வுக்குள்ள உரிமை என்ன என்பதை நீர் அறிவீரா?" என்று கேட்டார்கள். நான், "அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்" என்று பதிலளித்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வே வணங்கப்பட வேண்டும். அவனுக்கு எதுவும் இணையாக்கப்படக்கூடாது"என்று கூறிவிட்டு, "அவ்வாறு (அல்லாஹ்வையே வணங்கி, அவனுக்கு இணைகற்பிக்காமல்)செயல்பட்டுவரும் அடியார்களுக்கு அல்லாஹ்வின் மீதுள்ள உரிமை என்ன என்பதை நீர் அறிவீரா?" என்று கேட்டார்கள். அதற்கு நான், "அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்" என்று பதிலளித்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(இத்தகைய) அடியார்களை அவன் (மறுமையில்) வேதனை செய்யாமல் இருப்பதாகும்" என்று சொன்னார்கள்.
இதை அல்அஸ்வத் பின் ஹிலால் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
51. அல்அஸ்வத் பின் ஹிலால் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
முஆத் (ரலி) அவர்கள், "என்னை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அழைத்தார்கள். நான் அவர்களுக்கு பதிலளித்தேன். அப்போது அவர்கள் "மனிதர்கள்மீது அல்லாஹ்வுக்குள்ள உரிமை என்ன என்பதை நீர் அறிவீரா?" என்று கேட்டார்கள்". (இவ்வாறு கூறிவிட்டு) மேற்கண்ட ஹதீஸிலுள்ளதைப் போன்றே அறிவித்தார்கள்.
அத்தியாயம் : 1
52. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் (ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைச் சுற்றி அமர்ந்திருந்தோம். எங்களுடன் அமர்ந்திருந்த சிலரில் அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரும் இருந்தனர். அப்போது எங்களிடையேயிருந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்து சென்றார்கள். நெடுநேரமாகியும் அவர்கள் எங்களிடம் (திரும்பி) வரவில்லை. அவர்களுக்கு (எதிரிகளால்) ஏதேனும் ஆபத்து நேர்ந்து விட்டதோ என்று நாங்கள் அஞ்சினோம்; நாங்கள் பீதி அடைந்தவர்களாக (அங்கிருந்து) எழுந்தோம். பீதியுற்றவர்களில் நானே முதல் ஆளாக இருந்தேன். எனவே, நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைத் தேடிக்கொண்டு புறப்பட்டேன். பனூ நஜ்ஜார் குலத்தைச் சேர்ந்த அன்சாரிகளுக்குச் சொந்தமான ஒரு தோட்டத்திற்கு வந்து சேர்ந்தேன். அத்தோட்டத்தின் வாசல் எங்கே என்று (தேடியவனாக) அதைச் சுற்றி வந்தேன். ஆனால் (அதன் வாசலை) நான் காணவில்லை. அத்தோட்டத்திற்கு வெளியே இன்னொரு தோட்டத்திலிருந்து வாய்க்கால் ஒன்று அதனுள் சென்று கொண்டிருந்தது. உடனே நான் குள்ளநரி உடலைக் குறுக்குவதைப் போன்று (என் உடலைக்) குறுக்கிக் கொண்டு (அந்த வாய்க்கால் வழியே தோட்டத்திற்குள்) நுழைந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள், "அபூஹுரைராவா?" என்று கேட்டார்கள். நான், "ஆம், அல்லாஹ்வின் தூதரே!" என்றேன். "என்ன விஷயம்?" என்று கேட்டார்கள். "நீங்கள் எங்களிடையே இருந்து கொண்டிருந்தீர்கள். (திடீரென) எழுந்து சென்றீர்கள். நெடுநேரமாகியும் நீங்கள் எங்களிடம் திரும்பவில்லை. எனவே, (எதிரிகளால்) ஏதேனும் உங்களுக்கு ஆபத்து நேர்ந்துவிட்டதோ என்று நாங்கள் அஞ்சினோம்; பீதியுற்றோம். நான்தான் பீதியுற்றவர்களில் முதல் ஆளாவேன். எனவேதான் குள்ளநரி உடலைக் குறுக்குவதைப் போன்று உடலைக் குறுக்கிக்கொண்டு இந்தத் தோட்டத்திற்கு வந்தேன். இதோ மக்கள் என் பின்னால் வந்துகொண்டிருக்கிறார்கள்" என்று சொன்னேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அபூஹுரைரா!" (என்று என்னை அழைத்து) தம் காலணிகள் இரண்டையும் என்னிடம் கொடுத்து, "இவ்விரு காலணிகளையும் கொண்டு செல்! அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று யார் தமது உள்ளத்தால் உறுதியாக நம்பிச் சான்று கூறுகின்றாரோ அவரைத் தோட்டத்திற்கு அப்பால் நீ சந்தித்தால் அவருக்குச் சொர்க்கம் கிடைக்கவிருக்கிறது என்று நற்செய்தி சொல்!" என்று கூறினார்கள்.
நான் உமர் (ரலி) அவர்களையே முதலில் சந்தித்தேன். அப்போது உமர் (ரலி) அவர்கள், "இவை என்ன காலணிகள்,அபூஹுரைரா?" என்று கேட்டார்கள். அதற்கு நான் "இவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய காலணிகள். அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று தமது உள்ளத்தால் உறுதியாக நம்பிச் சாட்சியம் கூறுகின்ற எவரை நான் சந்தித்தாலும் அவருக்குச் சொர்க்கம் கிடைக்கும் என்ற நற்செய்தி கூறுமாறு சொல்லி, இக்காலணிகளை (ஆதாரமாக)க் கொடுத்து என்னை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அனுப்பிவைத்தார்கள்" என்று சொன்னேன். உடனே உமர் (ரலி) அவர்கள் தமது கரத்தால் எனது மார்பில் அடித்தார்கள். நான் மல்லாந்து விழுந்தேன். "திரும்பிச் செல்லுங்கள், அபூஹுரைரா!" என்று சொன்னார்கள். உடனே நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். எனக்கு அழுகை அழுகையாக வந்தது. என்னைப் பின்தொடர்ந்து வந்த உமரும் அங்கே எனக்குப் பின்னால் வந்து நின்றார். என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அபூஹுரைரா! உமக்கு என்ன நேர்ந்தது?" என்று கேட்டார்கள்.
நான், "உமரைச் சந்தித்து நீங்கள் என்னிடம் சொல்லி அனுப்பிய விஷயத்தை அவரிடம் தெரிவித்தேன். அவர் என் மார்பில் ஓர் அடி அடித்தார். நான் மல்லாந்து விழுந்துவிட்டேன். பிறகு, "திரும்பிச் செல்லுங்கள்" என்று கூறினார்" என்றேன். அப்போது உமர் (ரலி) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உமரே! ஏன் இவ்வாறு செய்தீர்?" என்று கேட்டார்கள். உமர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று உள்ளத்தால் உறுதிகொண்ட நிலையில் சாட்சியம் சொல்பவர் எவரைச் சந்தித்தாலும் அவருக்குச் சொர்க்கம் கிடைக்கவிருக்கிறது என்று நற்செய்தி சொல்லுமாறு கூறி உங்கள் காலணிகளைக் கொடுத்து நீங்கள்தாம் அபூஹுரைராவை அனுப்பிவைத்தீர்களா?" என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஆம்" என்றார்கள். உமர் (ரலி) அவர்கள், "அவ்வாறு செய்யாதீர்கள்! ஏனெனில், மக்கள் அதையே நம்பி (நற்செயல்களில் ஈடுபடாமல்) இருந்துவிடுவார்களோ என்று நான் அஞ்சுகிறேன். அவர்கள் (நற்)செயல் புரிய விட்டுவிடுங்கள்" என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவ்வாறே அவர்களை விட்டுவிடுங்கள் (அவர்கள் நற்செயல் புரியட்டும்)" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 1
53. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு பயணத்தில்) நபி (ஸல்) அவர்கள் தமக்குப் பின்னால் வாகனத்தில் அமர்ந்திருந்த முஆத்பின் ஜபல் (ரலி) அவர்களை "முஆத்!" என்று அழைத்தார்கள். "அல்லாஹ்வின் தூதரே! இதோ! உங்களுக்குக் கீழ்ப்படியக் காத்திருக்கிறேன்(கூறுங்கள்)" என்று முஆத் பதிலளித்தார்கள். (சிறிது தூரம் சென்ற பின்) "முஆத்!" என்று (மீண்டும்) அழைத்தார்கள். முஆத் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! இதோ! உங்களுக்குக் கீழ்ப்படியக் காத்திருக்கிறேன் (கூறுங்கள்)" என்றார்கள். (இன்னும் சிறிது தூரம் சென்ற பின்) "முஆத்!" என்று (மீண்டும்) அழைத்தார்கள். முஆத் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன் (கூறுங்கள்)" என்றார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும் முஹம்மத் (ஸல்) அவர்கள் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்றும் உறுதிகூறுகின்ற எந்த அடியாருக்கும் அல்லாஹ் நரகத்தைத் தடை செய்யாமல் இருப்பதில்லை" என்று கூறினார்கள். முஆத் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! இதை நான் மக்களுக்கு அறிவித்துவிடட்டுமா? (இதைக் கேட்டு அவர்கள்) மகிழ்ச்சி அடைவார்களே!" என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "(வேண்டாம்) இவ்வாறு நீர் அறிவித்தால் மக்கள் இதையே நம்பிக் கொண்டு (நற்செயல்களில் ஈடுபடாமல்) இருந்துவிடுவார்கள்" என்று கூறினார்கள்.
(கல்வியை மறைத்த) குற்றத்திலிருந்து தப்புவதற்காகத் தமது இறப்பின்போதுதான் இதை முஆத் (ரலி) அவர்கள் (மக்களிடையே) அறிவித்தார்கள்.
அத்தியாயம் : 1
54. மஹ்மூத் பின் ரபீஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் மதீனாவுக்குச் சென்று இத்பான் பின் மாலிக் (ரலி) அவர்களைச் சந்தித்து, "தங்களைப் பற்றிய ஒரு செய்தி எனக்கு எட்டியது (அது உண்மையா? கூறுங்கள்!)" என்றேன். அப்போது இத்பான் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
என் பார்வையில் ஏதோ ஏற்பட்டு (என் கண்பார்வை போய்)விட்டது. ஆகவே, நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஆளனுப்பி "நீங்கள் வந்து என் வீட்டில் தொழ வேண்டும். அதை நான் தொழுமிடமாக ஆக்கிக்கொள்ள விரும்புகிறேன்" என்று சொல்லியனுப்பினேன். எனவே, நபி (ஸல்) அவர்களும் அவர்களுடைய தோழர்களில் அல்லாஹ் நாடிய சிலரும் (மறுநாள் என் வீட்டுக்கு) வந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் (வீட்டுக்குள்) வந்து வீட்டி(ன் ஒரு மூலையி)ல் தொழுது கொண்டிருந்தார்கள். நபித் தோழர்களோ தம்மிடையே (நயவஞ்சகர்களைப் பற்றியும் அவர்களால் தங்களுக்கு ஏற்படும் தொந்தரவு பற்றியும்) பேசிக்கொண்டிருந்தார்கள். பிறகு அதில் மாலிக் பின் துக்ஷுன் அவர்களுக்குப் பெரும் பங்கிருப்பதாகக் கூறினர்.
அவருக்கெதிராக நபியவர்கள் பிரார்த்தித்து அவர் அழிந்துபோக வேண்டும் என்று மக்கள் விரும்பினர். அவருக்கு ஏதேனும் கேடு நேரவேண்டும் என்றும் விரும்பினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுது முடித்ததும் "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும் நான் அல்லாஹ்வின் தூதர் என்றும் அவர் (மாலிக் பின் துக்ஷும்) சாட்சியம் கூறவில்லையா?" என்று கேட்டார்கள். மக்கள், "அவர் அவ்வாறு (சாட்சியம்) கூறுகிறார். ஆனால், அது அவருடைய இதயத்தில் இல்லையே?" என்று கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும் நான் அல்லாஹ்வின் தூதர் ஆவேன் என்றும் சாட்சியம் கூறும் ஒருவர் "நரகத்தில் நுழையமாட்டார்" அல்லது "நரகம் அவரைத் தீண்டாது" " என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸை (மஹ்மூத் பின் ரபீஉ (ரலி) அவர்களிடமிருந்து) அறிவிக்கும் அனஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: இந்த ஹதீஸ் என்னை வியப்படையச் செய்தது. ஆகவே, நான் என் புதல்வரிடம் "இதை எழுதி வைத்துக்கொள்" என்று கூறினேன். அவ்வாறே அவர் அதை எழுதி வைத்துக் கொண்டார்.
அத்தியாயம் : 1
55. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
இத்பான் பின் மாலிக் (ரலி) அவர்கள் என்னிடம் கூறினார்கள்:
எனக்குக் கண்பார்வை போய்விட்டது. ஆகவே, நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஆளனுப்பி "(என் வீட்டுக்கு) நீங்கள் வந்து எனக்காக நான் தொழுமிடம் ஒன்றை அறிவியுங்கள்" என்று கூறினேன். எனவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் மக்களும் (என் வீட்டுக்கு) வந்தனர். அப்போது மக்களில் மாலிக் பின் துக்ஷும் என்றழைக்கப்பட்ட ஒரு மனிதரைப் பற்றி விமர்சிக்கப்பட்டது. (இவ்வாறு கூறிவிட்டு) சுலைமான் பின் அல்முஃகீரா (ரஹ்) அவர்களின் மேற்கண்ட அறிவிப்பிலுள்ளதைப் போன்றே தொடர்ந்து கூறினார்கள்.
அத்தியாயம் : 1
பாடம் : 11 அல்லாஹ்வை இறைவனாகவும் இஸ்லாத்தை மார்க்கமாகவும் முஹம்மத் (ஸல்) அவர்களை இறைத் தூதராகவும் மன நிறைவோடு ஏற்றுக்கொண்டவர் இறை நம்பிக்கையாளர் (முஃமின்)தாம். அவர் பெரும் பாவங்களைச் செய்திருந்தாலும் சரியே- என்பதற்கான ஆதாரம்.
56. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் அல்லாஹ்வை இறைவனாகவும் இஸ்லாத்தை மார்க்கமாகவும் முஹம்மத் (ஸல்) அவர்களை இறைத்தூதராகவும் மன நிறைவோடு ஏற்றுக்கொண்டாரோ அவர் இறை நம்பிக்கையின் சுவையை அடைந்துவிட்டார்.
இதை அப்பாஸ் பின் அப்தில் முத்தலிப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
பாடம் : 12 இறைநம்பிக்கையின் கிளைகளின் எண்ணிக்கை, அவற்றில் உயர்ந்தவை மற்றும் தாழ்ந்தவை, இறைநம்பிக்கையின் ஓர் அம்சமான நாணத்தின் சிறப்பு ஆகியவை பற்றிய விளக்கம்.
57. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறைநம்பிக்கை (ஈமான்) என்பது எழுபதுக்கும் அதிகமான கிளைகளைக் கொண்டதாகும். நாணமும் இறைநம்பிக்கையின் ஒரு கிளையாகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
58. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறைநம்பிக்கை என்பது "எழுபதுக்கும் அதிகமான" அல்லது "அறுபதுக்கும் அதிகமான" கிளைகள் கொண்டதாகும். அவற்றில் உயர்ந்தது "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை" என்று கூறுவதாகும். அவற்றில் தாழ்ந்தது, தொல்லை தரும் பொருளைப் பாதையிலிருந்து அகற்றுவதாகும். நாணமும் இறைநம்பிக்கையின் ஒரு கிளைதான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 1
59. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் தம் சகோதரருக்கு, (அதிகமாக) நாணம் (கொள்வதால் ஏற்படும் நஷ்டம்) தொடர்பாக அறிவுரை கூறிக்கொண்டிருந்ததை நபி (ஸல்) அவர்கள் செவியுற்றார்கள்.
அப்போது "(அவரை விட்டுவிடு!) நாணம் இறை நம்பிக்கையில் அடங்கும்" என்று நபியவர்கள் கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
"நபி (ஸல்) அவர்கள் அன்சாரிகளில் ஒருவரைக் கடந்து சென்றார்கள். அவர் தம் சகோதரருக்கு நாணப்படுவது தொடர்பாக அறிவுரை கூறிக்கொண்டிருந்தார்" என்று அந்த அறிவிப்பு (சிறு வித்தியாசத்துடன்) தொடங்குகிறது.
அத்தியாயம் : 1
60. அபுஸ் ஸவ்வார் அல்அதவீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் "நாணம் நன்மையே தரும்" என நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் என்று அறிவித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது புஷைர் பின் கஅப் (ரஹ்) அவர்கள், "சில (வகை) நாணத்தில் கம்பீரம் உண்டு; சில (வகை) நாணத்தில் மன அமைதி உண்டு எனத் தத்துவ(ப் புத்தக)த்தில் எழுதப்பட்டுள்ளது" என்று கூறினார். அப்போது (அவரிடம்) இம்ரான் (ரலி) அவர்கள், "நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (கூறியது) பற்றி உங்களுக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறேன். நீங்கள் உங்கள் ஏடுகளில் உள்ளவை குறித்துச் சொல்லிக்கொண்டிருக்கிறீர்களே!" என்று கேட்டார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
61. அபூகத்தாதா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் ஒரு குழுவாக இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்களுடன் இருந்தோம். எங்களிடையே புஷைர் பின் கஅப் (ரஹ்) அவர்களும் இருந்தார்கள். அன்றைய தினம் இம்ரான் (ரலி) அவர்கள் "நாணம், முழுக்க முழுக்க நன்மையாகும்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என எங்களுக்கு அறிவித்தார்கள். அப்போது புஷைர் பின் கஅப் (ரஹ்) அவர்கள், "நாங்கள் "சில நூல்களில்" அல்லது "தத்துவ(ப் புத்தகத்)தில்" அல்லாஹ்விற்காக மேற்கொள்ளப்படும் சில (வகை) நாணத்தில் மன அமைதியும் கம்பீரமும் உண்டு. மற்றச் சில வகையில் பலவீனம் உண்டு என்று (எழுதப்பட்டிருப்பதைக்) காண்கிறோம்" என்று கூறினார்கள். (இதைக் கேட்ட) இம்ரான் (ரலி) அவர்கள் தம் கண்கள் சிவக்கும் அளவிற்குக் கோபமடைந்தார்கள். "நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (நாணம் முழுக்க நன்மைதான் என்று) கூறியதாகச் சொல்லிக் கொண்டிருக்கிறேன். நீங்களோ அதற்கு எதிர்க்கருத்து கூறுகின்றீர்களே!" என்று சொல்லி விட்டுத் தாம் முன்பு சொன்ன ஹதீஸையே மீண்டும் சொன்னார்கள். புஷைர் அவர்களும் முன்பு தாம் சொன்னதையே மீண்டும் கூறினார்கள். அப்போதும் இம்ரான் (ரலி) அவர்கள் கோபமடைந்தார்கள். நாங்கள், "அபூநுஜைதே! அவர் நம்மைச் சார்ந்தவர்தாம். அவரிடம் (கொள்கைக்) குறைபாடு ஏதுமில்லை" என்று கூறி (இம்ரான் அவர்களை சமாதானப் படுத்தி)க்கொண்டிருந்தோம்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
பாடம் : 13 இஸ்லாத்தின் அனைத்து விஷயங்களையும் உள்ளடக்கிக்கொண்ட அம்சம்.
62. சுஃப்யான் பின் அப்தில்லாஹ் அஸ்ஸகஃபீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் "அல்லாஹ்வின் தூதரே! இஸ்லாம் குறித்து (சுருக்கமாக) எனக்கு ஒரு விளக்கம் அளியுங்கள். "தங்களுக்குப் பிறகு யாரிடமும்" அல்லது "தங்களைத் தவிர வேறு யாரிடமும்" அது குறித்து நான் கேட்க வேண்டிய திருக்கலாகாது" என்று வினவினேன்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ""அல்லாஹ்வின் மீது நான் நம்பிக்கை கொண்டேன்" என்று கூறி, அதில் உறுதியாக நிலைத்து நிற்பீராக!" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
பாடம் : 14 இஸ்லாம் கூறும் நல்லறங்களுக்கிடையேயான வித்தியாசமும் அவற்றில் மிகவும் சிறந்தது எது என்பது பற்றிய விளக்கமும்.
63. அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், "இஸ்லாமி(யப்பண்புகளி)ல் மிகவும் சிறந்தது எது?" என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(பசித்தவருக்கு) உணவளிப்பதும், உமக்கு அறிமுகமானவருக்கும் உமக்கு அறிமுகம் அற்றவருக்கும் சலாம் (முகமன்) சொல்வதுமாகும்" என்று பதிலளித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
64. அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், "முஸ்லிம்களில் சிறந்தவர் யார்?" என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "எவருடைய நாவிலிருந்தும் கரத்திலிருந்தும் மற்ற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெற்றிருக்கிறார்களோ அவரே (முஸ்லிம்களில் சிறந்தவர்)" என்று பதிலளித்தார்கள்.
அத்தியாயம் : 1
65. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எவருடைய நாவிலிருந்தும் கரத்திலிருந்தும் மற்ற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெற்றிருக்கிறார்களோ அவரே (உண்மையான) முஸ்லிம் ஆவார்.
இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
66. அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (நபி (ஸல்) அவர்களிடம்), "அல்லாஹ்வின் தூதரே! இஸ்லாமி(யப் பண்புகளி)ல் மிகவும் சிறந்தது எது?" என்று கேட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "எவருடைய நாவிலிருந்தும் கரத்திலிருந்தும் மற்ற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெற்றிருக்கிறார்களோ அவரே (சிறந்தவர்; அவருடைய பண்பே சிறந்தது)" என்று பதிலளித்தார்கள். மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இதே ஹதீஸ் வந்துள்ளது.
அதில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் முஸ்லிம்களில் சிறந்தவர் யார் என்று கேட்கப்பட்டது" என்று ஹதீஸ் ஆரம்பிக்கிறது. மீதி மேற்கண்டவாறே இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 1
பாடம் : 15 இறைநம்பிக்கையின் இனிமையை உணர்ந்திட ஒருவரிடம் அமைந்திருக்க வேண்டிய பண்புகள் பற்றிய விளக்கம்.
67. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எவரிடம் மூன்று தன்மைகள் உள்ளனவோ அவர் இறைநம்பிக்கையின் இனிமையை உணர்வார். (அவை:)
1. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒருவருக்கு மற்றெதையும் விட நேசத்திற்குரியோராய் இருப்பது.
2. அவர் மற்றொருவரை அல்லாஹ்வுக்காகவே நேசிப்பது.
3. இறைமறுப்பிலிருந்து அல்லாஹ் தம்மைக் காப்பாற்றிய பின் மீண்டும் அதற்குத் திரும்புவதை நெருப்பில் தாம் வீசப்படுவதை வெறுப்பதைப் போன்று அவர் வெறுப்பது.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
68. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எவரிடம் மூன்று தன்மைகள் உள்ளனவோ அவர் இறைநம்பிக்கையின் சுவையை உணர்ந்து கொள்வார்.
1. ஒருவர் மற்றொருவரை அல்லாஹ்வுக்காகவே நேசித்துக்கொண்டிருப்பது.
2. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒருவருக்கு மற்றெதையும் விட நேசத்திற்குரியோராவது.
3. இறைமறுப்பிலிருந்து அல்லாஹ் தம்மைக் காப்பாற்றிய பின் மீண்டும் அதற்குத் திரும்புவதை விட நெருப்பில் வீசப்படுவதையே அவர் விரும்புவது.
இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- அனஸ் (ரலி) அவர்கள் வழியாக மற்றோர் அறிவிப்பாளர்தொடரிலும் மேற்கண்ட ஹதீஸ் வந்துள்ளது.
அதில் "மீண்டும் யூதராகவோ கிறிஸ்தவராகவோ தாம் மாறுவதைவிட (நெருப்பில் வீசப்படுவதை அவர் விரும்புவது)" என்று (சிறு மாற்றத்துடன்) ஹதீஸ் இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 1
பாடம் : 16 மனைவி மக்களையும் பெற்றோரையும், மக்கள் அனைவரையும் விட அதிகமாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நேசிப்பது கடமை என்பது பற்றியும், அல்லாஹ்வின் தூதரை இந்த அளவு நேசிக்காதவரிடம் இறைநம்பிக்கை இல்லை என்று கூறலாம் என்பதும்.
69. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவருக்கு தம் குடும்பத்தார்,தமது செல்வம்,ஏனைய மக்கள் அனைவரையும் விட நான் நேசத்திற்குரியவனாக ஆகாதவரை “எந்த அடியாரும் அல்லது எந்த மனிதரும்,இறை நம்பிக்கையுள்ளவராக ஆகமாட்டார்.-இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
70. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவருக்கு,அவருடைய குழந்தைகள்,பெற்றோர்,மற்ற மக்கள் அனைவரையும் விட நான் அதிகம் நேசத்திற்குரியவனாக ஆகாதவரை அவர் இறைநம்பிக்கையாளராக ஆகமாட்டார்.”-இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
பாடம் : 17 தமக்கு விரும்பும் நன்மையை தம் சகோதர முஸ்லிமுக்கும் விரும்புவது,இறை நம்பிக்கையின் அடையாளக் குணங்களில் ஒன்றாகும் என்பதற்கான ஆதாரம்.
71. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே “தம் சகோதரருக்கும்” அல்லது தம் அண்டை வீட்டாருக்கும் விரும்பாதவரை அவர் (முழுமையான) இறைநம்பிக்கையாளர் ஆகமாட்டார்.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
72. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! தமக்கு விரும்புவதையே தம் அண்டை வீட்டாருக்கும் அல்லது தம் சகோதரருக்கும் விரும்பாத எந்த அடியாரும் முழுமையான இறைநம்பிக்கையாளர் ஆகமாட்டார்.
€இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 1
பாடம் : 18 அண்டை வீட்டாருக்கு தொல்லை தருவது தடை செய்யப்பட்டுள்ளது.
73. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எவருடைய நாசவேலைகளில் இருந்து அவருடைய அண்டைவீட்டார்க்குப் பாதுகாப்பு உணர்வு ஏற்படவில்லையோ அவர் சொர்க்கத்தில் நுழையமாட்டார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
பாடம் : 19 அண்டைவீட்டாரைக் கண்ணியப்படுத்துதல்,நல்லதையே பேசுதல் அல்லது வாய்மூடி இருத்தல் ஆகியவற்றை தூண்டும் நபிமொழிகளும்,இக்குணங்கள் யாவும் இறைநம்பிக்கையில் அ$டங்கும் என்பதும்.
74. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வையும் மறுமைநாளையும் நம்பியவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும்,அல்லது வாய்மூடி இருக்கட்டும்,அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பியவர் தம் அண்டை வீட்டாரை கண்ணியப்படுத்தட்டும்,அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பியவர் தம் விருந்தாளியைக் கண்ணியப்படுத்தட்டும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 1
75. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பியவர் தமது அண்டைவீட்டாருக்குத் தொல்லை தர வேண்டாம்.அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பியவர் தம் விருந்தாளியைக் கண்ணியப்படுத்தட்டும்.அல்லாஹ்வையும் மறுமைநாளையும் நம்பியவர் ஒன்று நல்லதை பேசட்டும் அல்லது வாய் மூடி இருக்கட்டும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 1
76. மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
ஆனால் அதில் “(அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பியவர்) தம் அண்டை வீட்டாருக்கு உதவி செய்யட்டும் “ என்று (சிறு வித்தியாசத்துடன்) காணப்படுகிறது.
அத்தியாயம் : 1
77. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பியவர் தம் அண்டை வீட்டாருக்கு உதவி செய்யட்டும்,அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பியவர் தம் விருந்தாளியைக் கண்ணியப்படுத்தட்டும்,அல்லாஹ்வையும் மறுமைநாளையும் நம்பியவர் (ஒன்று) நல்லதை பேசட்டும் அல்லது வாய் மூடி இருக்கட்டும்.
இதை அபூஷீரைஹ் அல்குஸாஈ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
பாடம் : 20 தீமைகளை தடுப்பது இறைநம்பிக்கையின் ஓர் அம்சமாகும்;இறைநம்பிக்கை கூடலாம்;குறையலாம்;நல்லதை(ச் செய்யுமாறு) ஏவுவதும் தீமையை தடுப்பதும் இரு கடமைகளாகும் என்பன பற்றிய விளக்கம்.
78. தாரிக் பின் ஷிஹாப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
முதன்முதலில் பெருநாள் தினத்தில் தொழுகைக்கு முன் சொற்பொழிவு (குத்பா) நிகழ்த்தியவர் மர்வான் பின் ஹகம் ஆவார்.(அவ்வாறு அவர் சொற்பொழிவு நிகழ்த்திக் கொண்டிருந்தார்.)அப்போது அவரை நோக்கி ஒருவர் எழுந்து நின்று,” “சொற்பொழிவுக்கு முன்பே (பெருநாள் தொழுகை) தொழ வேண்டும் என்று கூறினார்.
அதற்கு மர்வான் “முன்பு நடைபெற்றது கைவிடப்பட்டுவிட்டது (இப்போது அது நடைமுறையில் இல்லை) “ என்று கூறினார்.(அப்போது அங்கிருந்த$) அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள்,இதோ இந்த மனிதர் தமது கடமையை நிறைவேற்றிவிட்டார்.அல்லாஹ்வின் தூதர் (ஸல) அவர்கள் (பின்வருமாறு) கூற நான் கேட்டுள்ளேன்:
உங்களில் ஒருவர் ஒரு தீமையை (மார்க்கத்திற்கு முரணான ஒரு செயலை)க் கண்டால் அவர் அதைத் தமது கரத்தால் தடுக்கட்டும்,முடியாவிட்டால் தமது நாவால் (சொல்லித் தடுக்கட்டும்),அதுவும் முடியாவிட்டால் தமது உள்ளத்தால் (அதை வெறுத்து ஒதுக்கட்டும்). இந்த (இறுதி) நிலையானது இறைநம்பிக்கையின் பலகீனமா(ன நிலையா)கும்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
79. மர்வான் பின் ஹகம் சம்பவத்தின் போது அபூசயீத் அல்குத்ரி (ரலி) அவர்கள் அறிவித்த மேற்கண்ட ஹதீஸ் வேறுசில அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
80. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எனக்கு முந்தைய சமுதாயத்தார் மத்தியில் அல்லாஹ் அனுப்பிய ஒவ்வோர் இறைத் தூதருக்கும் அவருடைய சமுதாயத்திலேயே சிறப்பு உதவியாளர்களும் நண்பர்களும் இல்லாமல் இருந்ததில்லை. அவர்கள் அந்த இறைத்தூதரின் வழிமுறையைக் கடைப்பிடிப்பார்கள்;அவரது உத்தரவைப் பின்பற்றி நடப்பார்கள்.அந்தத் தோழர்களுக்கு பிறகு சிலர் வருவார்கள்.அவர்கள் தாம் செய்யாதவற்றைச் சொல்வார்கள்.தமக்கு கட்டளையிடப்படாதவற்றைச் செய்வார்கள்.ஆகவே,யார் இ(த்தகைய)வர்களுடன் தமது கரத்தால் போராடுவாரோ அவர் இறைநம்பிக்கையாளர் ஆவார்.யார் இவர்களுடன் தமது உள்ளத்தால் போராடுவாரோ அவரும் இறைநம்பிகையாளர்தாம்.இவற்றுக்கப்பால் இறை நம்பிக்கை என்பது கடுகளவு கூட கிடையாது.
இதை அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(இதை அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்களிடம் இருந்து அறிவிக்கும்) அபூராஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
இந்த ஹதீஸ் நான் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம் கூறினேன்.அதை அவர்கள் மறுத்தார்கள்.இந்நிலையில் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் (மதினாவின் பள்ளத்தாக்குகளில் ஒன்றான)” “$கனாத்”“ எனும் இடத்திற்கு (ஒருமுறை) வந்தார்கள்,அப்போது அவர்களை நலம் விசாரிக்கச் சென்ற அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் தம்முடன் என்னை வருமாறு கூறினார்கள்.நானும் அவர்களுடன் சென்றேன். நாங்கள் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் அமர்ந்த போது,
நான் இந்த ஹதீஸ் குறித்து அவர்களிடம் வினவினேன்.அப்போது அவர்கள் நான் அப்துல்லாஹ் பின் உமர்(ரலி) அவர்களுக்கு அறிவித்ததைப் போன்றே அதை எனக்கு அறிவித்தார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஸாலிஹ் பின் கைசான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
(சர்ச்சைக்குரியவரான ஹாரிஸிடமிருந்து மட்டுமின்றி வேறு வழிகளிலும் இதை போன்றே அறிவிக்கப் பட்டுள்ளது.$)
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் இருந்து மற்றோர் அறிவிப்பாளர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் “ஒவ்வொரு இறைத்தூதருக்கும் சிறப்பு உதவியாளர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்கள் அந்த இறைத்தூதரின் வழியில் நடப்பார்கள்; அவருடைய வழிமுறையைப் பின்பற்றுவார்கள்“என்று இடம்பெற்றுள்ளது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸ்ஸிலுள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
ஆனால், அதில் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் “கனாத்“ எனும் பள்ளத்தாக்கிற்கு வந்தது பற்றியோ அவர்களை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் சந்தித்தது பற்றியோ குறிப்பில்லை.
அத்தியாயம் : 1
பாடம் : 21 இறைநம்பிகையில்,இறைநம்பிக்கையாளர்களிடையே உள்ள ஏற்றத்தாழ்வும், இறைநம்பிக்கையில் யமனியர் முதலிடம் பெற்றிருப்பதும்.
81. அபூமஸ்ஊத் உக்பா அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் தமது கரத்தால் யமன் நாட்டுத் திசையை நோக்கி சைகை காட்டி,” “அறிந்து கொள்ளுங்கள்! இறைநம்பிக்கை (ஈமான்) இங்கே உள்ளது.கல் மனமும் (இரக்கமற்ற) கடின சுபாவமும் ஒட்டகங்களின் வால்களை பிடித்தபடி,அவற்றி அதட்டிக் கொண்டே (நாடோடிகளாகச்) சென்று கொண்டிருக்கும் (பாலைவன) ஒட்டக மேய்ப்பர்களிடையே காணப்படும்.அங்கிருந்துதான் ஷைத்தானின் இரு கொம்புகளும் (குழப்பங்கள்) உதயமாகும்.(அதாவது) ரபிஆ மற்றும் முளர் குலத்தாரிடையே அவை தோன்றும்“ என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
82. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யமன்வாசிகள் (உங்களிடம்) வந்திருக்கிறார்கள்.அவர்கள் இளகிய நெஞ்சமுடையவர்கள்; இறைநம்பிக்கை,யமன் நாட்டைச் சேர்ந்ததாகும்.மார்க்க ஞானமும் யமன் நாட்டைச் சேர்ந்ததாகும்.விவேகமும் யமன் நாட்டைச் சேர்ந்ததாகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 1
83. மேற்கண்ட ஹதீஸ் வேறு இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
84. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யமன்வாசிகள் உங்களிடம் வந்துள்ளனர்.அவர்கள் இளகிய மனம் படைத்தவர்கள்; மென்மையான நெஞ்சம் உடையவர்கள்.மார்க்க ஞானம் யமன் நாட்டைச் சேர்ந்ததாகும். விவேகமும் யமன் நாட்டைச் சேர்ந்ததாகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 1
85. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறைமறுப்பின் தலைமைப் பீடம் கிழக்கு திசையில் (அக்னி ஆராதகாரர்களான மஜூசிகள் வசிக்கும் பாரசீகத்தில்) உள்ளது.குதிரைகள் மற்றும் ஒட்டகங்களின் உரிமையாளர்களிடமும் (நாடோடிப்) பாலைவனத்தவர்களான ஒட்டக் மேய்ப்பர்(களிடமும் பண்ணை முதலாளி)களிடமும் தற்பெருமையும் அகம்பாவமும் காணப்படுகின்றன.ஆடுகளின் உரிமையாளர்களிடம் அமைதி(யும் பணிவும்) காணப்படுகின்றது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 1
86. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறைநம்பிக்கை யமன் நாட்டைச் சேர்ந்ததாகும்.இறைமறுப்பு (அக்னி ஆராதனையாளர்கள் வசிக்கும்)கிழக்கு திசையில் (பாரசீகத்தில்) உள்ளது.அமைதி,ஆடுகளின் உரிமையாளர்களிடம் காணப்படுகிறது.தற்பெருமையும் முகஸ்துதியும் குதிரைகள் மற்றும் ஒட்டகங்களின் உரிமையாளர்களும் (நாடோடிப்) பாலைவனவாசிகளுமான ஒட்டக மேய்ப்பர் (களிடமும் பண்ணை முதலாளி)களிடமும் காணப்படுகின்றன.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
87. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பெருமையும் கர்வமும் ஒட்டகங்களின் உரிமையாளர்களான நாடோடிகளிடையே காணப்படும்.அமைதி(யும் பணிவும்) ஆடுகளின் உரிமையாளர்களிடையே காணப்படும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 1
88. மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்கள் வாயிலாக மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் அறிவிப்பாளர் ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் “இறைநம்பிக்கை யமன் நாட்டைச் சேர்ந்ததாகும்.விவேகமும் யமன் நாட்டைச் சேர்ந்ததாகும்“ என்று அதிகப்படியாக அறிவித்துள்ளார்கள்.
அத்தியாயம் : 1
89. நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யமன்வாசிகள் (உங்களிடம்) வந்திருக்கின்றார்கள்.அவர்கள் மென்மையான நெஞ்சம் உடையவர்கள்; இளகிய மனம் படைத்தவர்கள்.இறைநம்பிக்கை யமன் நாட்டைச் சேர்ந்ததாகும்.விவேகமும் யமன் நாட்டைச் சேர்ந்ததாகும்.அமைதி(யும் பணிவும்)ஆடுகளின் உரிமையாளர்களிடையே காணப்படும்.பெருமையும் கர்வமும் கிழக்குத் திசையிலுள்ள ஒட்டக உரிமையாளர்களான நாடோடிகளிடையே காணப்படும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 1
90. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யமன்வாசிகள் உங்களிடம் வந்திருக்கிறார்கள்.அவர்கள் இளகிய மனம் படைத்தவர்கள்; மென்மையான நெஞ்சம் உடையவர்கள்.இறைநம்பிக்கை யமன் நாட்டைச் சேர்ந்ததாகும். இறை மறுப்பின் தலைமைப்பீடம் கிழக்குத் திசையில் (அக்னி ஆராதனையாளர்களான மஜீஸிகல் வசிக்கும் பாரசீகத்தில்) உள்ளது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில், அறிவிப்பாளஎ அஃமஷ் (ரஹ்) அவர்கல் “இறைமறுப்பின் தலைமைப் பீடம் கிழக்குத் திசையில் உள்ளது“ எனும் வாசகத்தை குறிப்பிடவில்லை.
அத்தியாயம் : 1
91. மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் அறிவிப்பாளர் அஃமஷ் (ரஹ்) அவர்கள், “பெருமையும் அகம்பாவமும் ஒட்டக உரிமையாளர்களிடையே காணப்படும்.அமைதியும் கம்பீரமும் ஆடுகளின் உரிமையாளர்களிடையே காணப்படும்“ என்று (நபி (ஸல்) அவர்கல் கூறியதாக அதிகப்படியாக அறிவித்துள்ளார்கள்.
அத்தியாயம் : 1
92. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கல் மனமும் (இரக்கமற்ற) கடின சுபாவமும் கிழக்குத் திசையில் (பாரசீக அக்னி ஆராதனையாளர்களிடையே) காணப்படும்.இறைநம்பிக்கை ஹிஜாஸ்வாசிகளிடையே காணப்படும்.
இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 1
பாடம்:22 இறைநம்பிக்கையாளர்களைத் தவிர வேறெவரும் சொர்க்கத்தில் நுழைய முடியாது; இறைநம்பிக்கையாளர்களை நேசிப்பதும் இறைநம்பிக்கையின் ஓர் அம்சமே; சலாத்தை பரப்புவது அந்த நேசம் ஏற்படக் காரணமாக அமையும்.
93. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் இறைநம்பிக்கை கொள்ளாதவரையில் சொர்க்கத்தில் நுழைய முடியாது.நீங்கள் ஒருவரை ஒருவர் நேசிக்காதவரை (முழுமையான) இறைநம்பிக்கையாளராக முடியாது. ஒன்றை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? அதை நீங்கள் செயல்படுத்தினால் ஒருவரை ஒருவர் நேசம் கொள்ளலாம்.உங்களிடையே சலாத்தைப் பரப்புங்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 1
94. மேற்கண்ட ஹதீஸைப் போன்றே மற்றோர் அறிவிப்பாளர் தொடர்வழியாகவும் வந்துள்ளது.
அதில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்). அவர்கள், “என் உயிர் யார் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! நீங்கள் இறைநம்பிக்கை கொள்ளாதவரை சொர்க்கத்தில் நுழைய முடியாது“ என்று கூறியதாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 1
பாடம்:23 மார்க்கம் (தீன்) என்பதே ”””நலம் நாடுவது” தான்.
95. தமீமுத் தாரீ (ரலி) அவர்கல் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், “மார்க்கம் (தீன்) என்பதே “நலம் நாடுவது“ தான் என்று கூறினார்கள்.நாங்கள்,யாருக்கு (நலம் நாடுவது)?“ என்று கேட்டோம்.நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வுக்கும், அவனது வேதத்துக்கும், அவனது தூதருக்கும், முஸ்லிம் தலைவர்களுக்கும், அவர்களில் பொதுமக்களுக்கும்“ என்று பதிலளித்தார்கள்.
இந்த ஹதீஸ்ஸின் அறிவிப்பாளர்களில் ஒருவரான சுஃப்யான (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
நான் சுஹைல் பின் அபீஸாலிஹ் (ரஹ்) அவர்களிடம் “அம்ர் அவர்கள் கஅகாஃ அவர்களிடலிருந்தும்,அவர் உங்கள் தந்தை அபூஸாலிஹ் அவர்களிடமிருந்தும் இந்த ஹதீஸை எமக்கு அறிவித்தார்கள்“ என்றேன்.அதற்கு சுஹைல் “எனக்கும் என் தந்தைக்கும் இடையே வேறொருவர் அறிவிப்பாளராக இருப்பதை நான் விரும்பவில்லை“ என்று கூறியதுடன், “என் தந்தை யாரிடமிருந்து இந்த ஹதீஸைக் கேட்டார்களோ அவரிடமிருந்தே நானும் கேட்டேன்.அவர் எனக்கு ஷாமில் (சிரியாவில்) நண்பராக இருந்தார் “என்றும் கூறினார்கள்.பின்னர் அந்த நண்பரான அதா பின் யஸீத் (ரஹ்) அவர்களிடமிருந்து நேரடியாகவே சுஹைல் அறிவித்தார்.
அத்தியாயம் : 1
96. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
97. ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் தொழுகையைக் கடைப்பிடிப்பதாகவும்,ஸகாத் வழங்குவதாகவும்,ஒவ்வொரு முஸ்லிமுக்கும் நலம் நாடுவதாகவும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உறுதிமொழி (பைஅத்) அளித்தேன்.
இதை கைஸ் பின் அபீஹாஸிம் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
98. ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களிடம் நான் முஸ்லிம்களில் ஒவ்வொருவருக்கும் நலம் நாடுவதாக உறுதிமொழி (பைஅத்) அளித்தேன்.
இதை ஸியாத் பின் இலாக்கா (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
99. ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது.
நபி (ஸல்) அவர்களிடம் நான் (அவர்களின் கட்டளையைச்) செவியேற்று (அதற்குக்) கீழ்படிவதாக உறுதிமொழி அளித்தேன்.அப்போது “என்னால் இயன்ற விஷயங்களில்” “ என்று சேர்த்துக் கூறும்படி எனக்கு அவர்கள் சொல்லிக் கொடுத்தார்கள்.மேலும்,ஒவ்வொரு முஸ்லிமுக்கும் நனமை நாடுவேன் என்றும் உறுதிமொழி அளித்தேன்.
இதை ஷஅபீ (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
பாடம்:24 பாவங்களால் இறைநம்பிக்கை குறைகிறது;பாவத்தில் ஈடுபட்டுள்ளவன் இறைநம்பிக்கையாளன் அல்லன் என்று கூறுவது,நிறைவான இறைநம்பிக்கை அவனிடம் இல்லை என்ற கருத்தில்தான்.
100. அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
விபச்சாரம் புரிகின்றவன் விபச்சாரம் புரியும் போது இறை நம்பிக்கையாளனாக இருந்தபடி அதைச் செய்யமாட்டான்.திருடன் திருடும்போது இறைநம்பிக்கையாளனாக இருந்தபடி திருடமாட்டான்.(மது அருந்துகின்றவன்)மது அருந்தும்போது இறைநம்பிக்கையாளனாக இருந்தபடி மது அருந்தமாட்டான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அறிவிப்பாளர்களில் ஒருவரான அப்துல் மலிக் பின் அபீபக்ர் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
இந்த ஹதீஸை அபூபக்ர் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து மக்களுக்கு அறிவித்துவந்தார்கள்.பிறகு “மேற்கண்ட குற்றங்களுடன் பின்வரும் குற்றத்தையும் அபூஹுரைரா (ரலி) அவர்கள் சேர்த்துக் கூறிவந்தார்கள் “என்று கூறுவார்கள்:மக்களின் மதிப்பு மிக்க செல்வத்தை அவர்கள் தம் விழிகளை உயர்த்திப் பார்த்துக் கொண்டிருக்கக் கொள்ளையடிப்பவன் அதைக் கொள்ளையடிக்கும்போது இறைநம்பிக்கையாளனாக இருந்தபடி கொள்ளையடிக்கமாட்டான்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
101. இப்னு ஷிஹாப் அஸ்ஸஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
மேற்கண்ட ஹதீஸை அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து அபூபக்ர் பின் அப்திர் ரஹ்மான் பின் அல்ஹாரிஸ் பின் ஹிஷாம் (ரஹ்) அவர்கள் எனக்கு அறிவித்தார்கள்.
அதில் (ஹதீஸில் இடம்பெற்றுள்ள மூன்று விஷயங்களுடன்) “மக்களின் செல்வத்தைக் கொள்ளையடிப்பவன் கொள்ளையடிக்கும் போது இறைநம்பிக்கையாளனாக இருந்தபடி கொள்ளையடிப்பதில்லை “என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.” “மக்களின் மதிப்பு மிக்க செல்வம்“ எனும் வாசகத்தை அவர்கள் குறிப்பிடவில்லை.
அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து சயீத் பின் முஸய்யப் (ரஹ்),அபூசலமா பின் அப்திர் ரஹ்மான்(ரஹ்) ஆகியோர் அறிவித்துள்ள இதைப் போன்ற ஹதீஸில் “கொள்ளையடித்தல்“ தொடர்பான தகவலைத் தவிர மற்ற அனைத்தும் இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 1
102. மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் கொள்ளையடித்தல் பற்றி இடம்பெற்றுள்ளது. “மதிப்பு மிக்க செல்வத்தை“ எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 1
103. மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் மேற்கண்ட ஹதீஸ் வந்துள்ளது.
மற்றோர் அறிவிப்பில் ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களது மேற்கண்ட ஹதீஸைப் போன்ற எல்லாம் இடம்பெற்றுள்ளது.
ஆயினும் அல்அலாஉ பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்),ஸஃப்வான் பின் சுலைம் (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில், “மக்கள் தம் விழிகளை உயர்த்திப் பார்த்துக் கொண்டிருக்க (கொள்ளையடிப்பவன் அதைக் கொள்ளையடிக்கும் போது இறைநம்பிக்கையாளனாக இருந்தபடி கொள்ளையடிக்கமாட்டான்) “ எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
ஹம்மான் பின் முஅப்பிஹ் (ரஹ்) அவர்கல் தமது அறிவிப்பில் “ இறைநம்பிக்கையாளர்கள் தம் விழிகளை உயர்த்திப் பார்த்துக் கொண்டிருக்கக் கொள்ளையடிப்பவன் அதை கொள்ளையடிக்கும் போது இறைநம்பிக்கையாளனாக இருந்தபடி கொள்ளையடிக்கமாட்டான் “என்று அறிவித்துள்ளார்கள்.மேலும், “மோசடி செய்பவன் செய்யும் போது அவன் இறைநம்பிக்கையாளனாக இருந்தபடி மோசடி செய்வதில்லை.(இவற்றிலிருந்து விலகிக் கொள்ளுமாறு) உங்களை நான் எச்சரிக்கிறேன்;உங்களை எச்சரிக்கிறேன்” “ என்றும் (நபி (ஸல்) அவர்கள் கூறினார்கல் என) அதிகப்படியாக அறிவித்துள்ளார்கள்.
அத்தியாயம் : 1
104. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
விபச்சாரம் புரிகின்றவன் விபச்சாரம் புரியும் போது இறைநம்பிக்கையாளனாக இருந்தபடி அதைச் செய்யமாட்டான்.(திருடன்) திருடும்போது இறைநம்பிக்கையாளனாக இருந்தபடி திருடமாட்டான்.(மது அருந்துகின்றவன்) மது அருந்தும் போது இறைநம்பிக்கையாளனாக இருந்தபடி மது அருந்தமாட்டான்.மனம் வருந்தி பாவமன்னிப்புக் கோரல் பின்னர்தான் ஏற்படுகிறது.- இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 1
105. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
பாடம்:25 நயவஞ்சகனின் குணங்கள்.
106. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான்கு குணங்கள் எவரிடம் குடிகொண்டுள்ளனவோ அவர் அப்பட்டமான நயவஞ்சகர் ஆவார்.எவரிடம் அவற்றில் ஒரு குணம் குடிகொண்டுள்ளதோ அவர் அதை விட்டுவிடும் வரை அவருள் நயவஞ்சகத்தின் ஒரு குணம் குடியிருக்கும்.
பேசினால் பொய் சொல்வதும்,ஒப்பந்தம் செய்து கொண்டால் (நம்பிக்கை) மோசடி செய்வதும்,வாக்களித்தால் மாறுசெய்வதும்,வழக்காடினால் நேர்மை தவறுவது தான் அவை (நான்கும்).
இதை அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “இவற்றில் ஏதேனும் ஒரு குணம் அவரிடம் இருந்தால் நயவஞ்சகத்தின் ஒரு குணம் அவரிடம் இருக்கிறது“ என்று (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக) இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 1
107. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நயவஞ்சகனின் அடையாளங்கள் மூன்றாகும்:அவன் பேசும்போது பொய் உரைப்பான்; வாக்களித்தால் அதற்கு மாறுசெய்வான்; அவனிடம் நம்பி (ஏதேனுமொன்றை) ஒப்படைத்தால் (அதில்) மோசடி செய்வான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
108. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மூன்று குணங்கள் நயவஞ்சகனின் அடையாளங்களில் அடங்கும்: பேசும்போது பொய் உரைப்பதும்,வாக்களித்தால் அதற்கு மாறுசெய்வதும், நம்பி (ஏதேனுமொன்றை) ஒப்படைத்தால் (அதில்) மோசடி செய்வதும்தான் அவை (மூன்றும்).
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 1
109. மேற்கண்ட அறிவிப்பாளர் தொடர் வழியாகவே யஹ்யா பின் முஹம்மத் (ரஹ்) அவர்களும் இந்த ஹதீஸை அறிவித்துள்ளார்கள்.
அதில் நயவஞ்சகனின் அடையாளங்கள் மூன்றாகும்...அவன் நோன்பு நோற்றாலும், தொழுதாலும், தன்னை ஒரு முஸ்லிம் என்று கூறிக்கொண்டாலும் சரியே“ என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 1
110. வேறு இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் மேற்கண்ட ஹதீஸ் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
பாடம் : 26 தம் சகோதர முஸ்லிமை நோக்கி “இறைமறுப்பாளனே!“ (காஃபிர்) என்று அழைத்தவரது இறைநம்பிக்கையின் நிலை.
111. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு மனிதர் தம் (முஸ்லிம்) சகோதரரை “இறைமறுப்பாளர்“ (காஃபிர்) என்று கூறினால் நிச்சயம் அவர்கள் இருவரில் ஒருவர் அச்சொல்லுக்கு உரியவராகத் திரும்புவார்,
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எந்த மனிதர் தம் (முஸ்லிம்) சகோதரரைப் பார்த்து "இறைமறுப்பாளனே!" ("காஃபிரே!") என்று அழைக்கின்றாரோ நிச்சயம் அவர்களிருவரில் ஒருவர் அச்சொல்லுக்கு உரியவராகத் திரும்புவார். அவர் கூறியதைப் போன்று இவர் இருந்தால் சரி! இல்லாவிட்டால் அவர் சொன்ன சொல் அவரை நோக்கியே திரும்புகிறது.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
112. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தன் தந்தை அல்லாத(ஒரு)வரை, அவர் தன் தந்தையல்ல என்று விவரம் அறிந்துகொண்டே "அவர்தாம் என் தந்தை" என்று கூறும் ஒரு மனிதன் நன்றி கெட்டவன் (காஃபிர்) ஆகிவிட்டான். தனக்குச் சொந்தமில்லாத ஒன்றைக் குறித்து "அது தனக்குரியதுதான்" என்று கூறிக்கொள்பவன் நம்மைச் சார்ந்தவன் அல்லன்; அவன் தன் இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக்கொள்ளட்டும். ஒருவர் மற்றொரு (முஸ்லிமான) மனிதரை "இறைமறுப்பாளர்" என்றோ "அல்லாஹ்வின் எதிரியே!" என்றோ அழைத்தால் -அவர் (உண்மையில்) அவ்வாறு (இறை மறுப்பாளராக) இல்லையாயின்- சொன்னவரை நோக்கியே அச்சொல் திரும்பிவிடுகின்றது.
இதை அபூதர் (ஜுன்துப் பின் ஜுனாதா-ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 1
பாடம் : 27 தெரிந்துகொண்டே தன் தந்தையை வெறுத்து (வேறொருவரை தன் தந்தை என்று கூறி)விடுகின்றவனது இறை நம்பிக்கையின் நிலை.
113. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்கள் தந்தையரை நீங்கள் வெறுக்காதீர்கள். யார் தம் தந்தையை வெறுத்து (வேறொருவரைத் தம் தந்தை என்று கூறி)விடுகின்றாரோ அவர் நன்றி கொன்றவர் (காஃபிர்) ஆவார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 1
114. அபூஉஸ்மான் அந்நஹ்தீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஸியாத் பின் உபைத் அஸ்ஸகஃபீ என்பார் (அபூசுஃப்யான் (ரலி) அவர்களுடைய புதல்வர் என்று) அழைக்கப்பட்டபோது, நான் அபூபக்ரா (ரலி) அவர்களைச் சந்தித்தேன். அவர்களிடம் "ஏன் இவ்வாறு செய்கின்றீர்கள்? சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் "யார் இஸ்லாத்தில் தம் தந்தையல்லாத வேறொருவரை -அவர் தம் தந்தையல்ல என்று தெரிந்துகொண்டே- தம் தந்தை என்று கூறுகின்றாரோ அவருக்குச் சொர்க்கம் தடை செய்யப்பட்டுள்ளது" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற என் காதுகளால் கேட்டேன் எனக் கூறியுள்ளார்களே!" என்று சொன்னேன். அதற்கு அபூபக்ரா (ரலி) அவர்கள் "நானும் இவ்வாறே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியேற்றுள்ளேன்" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 1
115. அபூஉஸ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
முஹம்மத் (ஸல்) அவர்கள் "யார் தம் தந்தையல்லாத ஒருவரை (அவர் தம் தந்தை அல்ல என்பதை அறிந்துகொண்டே) தந்தை என்று கூறுவாரோ அவருக்குச் சொர்க்கம் தடை செய்யப்பட்டுள்ளது" என்று கூறியதைத் தம் காதுகள் செவியேற்றதாகவும், மனம் நினைவில் நிறுத்திக்கொண்டதாகவும் சஅத் பின் அபீவக்காஸ் (ரலி), அபூபக்ரா (ரலி) ஆகியோர் கூறினர்.
அத்தியாயம் : 1
பாடம் : 28 "ஒரு முஸ்லிமை ஏசுவது பாவமாகும். அவனுடன் போரிடுவது இறைமறுப்பாகும்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது.
116. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு முஸ்லிமை ஏசுவது பாவமாகும். அவனுடன் போரிடுவது (அல்லது கொலை செய்வது) இறைமறுப்பு (போன்ற பாவச்செயல்) ஆகும்.
இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஸுபைத் பின் அல்ஹாரிஸ் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
நான் அபூவாயில் ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்களிடம் "இதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிப்பதை நீங்கள் செவியேற்றீர்களா?" என்று கேட்டேன். அபூவாயில் (ரஹ்) அவர்கள், "ஆம்" என்று கூறினார்கள்.
ஷுஅபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் அபூவாயில் (ரஹ்) அவர்களிடம் ஸுபைத் (ரஹ்) அவர்கள் (மேற்கண்டவாறு) கேட்டது பற்றிய குறிப்பு இடம் பெறவில்லை.
அத்தியாயம் : 1
117. மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
பாடம் : 29 "எனக்குப் பின்னால் உங்களில் ஒருவர் மற்றவரின் கழுத்தை வெட்டி மாய்த்துக் கொள்ளும் இறைமறுப்பாளர்களாய் மாறிவிடாதீர்கள்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதன் பொருள்.
118. ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
"விடைபெறும்" ஹஜ்ஜின்போது (உரை நிகழ்த்திக்கொண்டிருக்கையில்) நபி (ஸல்) அவர்கள் என்னிடம், "மக்களை மௌனமாக இருக்கச் சொல்லுங்கள்!" என்று கூறிவிட்டு, "எனக்குப் பின்னால் உங்களில் ஒருவர் மற்றவரின் கழுத்தை வெட்டி மாய்த்துக்கொள்ளும் இறைமறுப்பாளர்களாய் மாறிவிடாதீர்கள்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
119. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
120. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் விடைபெறும் ஹஜ்ஜின்போது (உரையாற்றுகையில்), "உங்களுக்கு அழிவு தான் (வைஹக்கும்)" அல்லது "உங்களுக்குக் கேடுதான் (வைலக்கும்)". எனக்குப் பிறகு ஒருவர் மற்றவரின் கழுத்தை வெட்டி மாய்த்துக்கொள்ளும் இறைமறுப்பாளர்களாய் நீங்கள் மாறிவிடாதீர்கள்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
பாடம் : 30 பரம்பரையைக் குறை கூறுவதையும், (இறந்தவருக்காக) ஒப்பாரி வைப்பதையும் இறைமறுப்பு என்று குறிப்பிடுவது.
121. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மக்களிடம் உள்ள இரு குணங்கள் இறை மறுப்பாகும்: 1. பரம்பரையைக் குறை கூறுவது. 2. இறந்தவருக்காக ஒப்பாரிவைப்பது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
பாடம் : 31 (எசமானைவிட்டு) ஓடிப்போன அடிமையை "இறைமறுப்பாளன்” என்று குறிப்பிடுவது.
122. ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
எந்த அடிமை தன் எசமானர்களிடமிருந்து ஓடிப்போகிறானோ அவன் அவர்களிடம் திரும்பி வரும்வரை இறைமறுப்பாளனாகவே இருக்கிறான்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான மன்ஸூர் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
அல்லாஹ்வின் மீது சத்தியமாக! (மேற்கண்ட ஹதீஸ் ஜரீர் (ரலி) அவர்களது சொந்தக் கருத்தல்ல. மாறாக,) நபி (ஸல்) அவர்கள் கூறியது என்றே (எனக்கு) அறிவிக்கப்பட்டது. ஆயினும், (குழப்பவாதிகளான முஃதஸிலா மற்றும் காரிஜிய்யாக்கள் நிறைந்துள்ள) இந்த பஸ்ரா நகரில் என் வாயிலாக இது அறிவிக்கப்படுவதை நான் விரும்பவில்லை.
அத்தியாயம் : 1
123. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எந்த அடிமை (தன் எசமானிடமிருந்து) ஓடிப் போகிறானோ அவனைவிட்டு (இறைவனின்) பொறுப்பு(ம் பாதுகாப்பும்) நீங்கிவிடுகிறது.
இதை ஜரீர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 1
124. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அடிமை (தன் எசமானிடமிருந்து) ஓடிப் போய்விட்டால் அவனுடைய எந்தத் தொழுகையும் ஏற்றுக்கொள்ளப்படாது. (தொழுகையின் நன்மை கிடைக்காது.)
இதை ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 1
பாடம் : 32 நட்சத்திர இயக்கத்தால்தான் நமக்கு மழை பொழிந்தது என்று கூறுவது இறைமறுப்பாகும்.
125. ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "ஹுதைபியா" எனுமிடத்தில் எங்களுக்கு சுப்ஹுத் தொழுகை தொழுவித்தார்கள். (அன்றிரவு மழை பெய்திருந்தது.) தொழுது முடித்ததும் மக்களை நோக்கி நேராகத் திரும்பி, "உங்கள் இறைவன் என்ன கூறினான் என்பதை நீங்கள் அறிவீர்களா?" என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், "அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்" என்று கூறினர்.
அப்போது "என் அடியார்களில் என்னை நம்பக்கூடியவர்களும் உள்ளனர்; (என்னை) மறுக்கக்கூடியவர்களும் உள்ளனர். "அல்லாஹ்வின் தயவாலும் அவன் கருணையாலும்தான் நமக்கு மழை பொழிந்தது" எனக் கூறியவர்கள் என்னை நம்பி, நட்சத்திரத்தை மறுத்தவர்களாவர். "இன்ன இன்ன நட்சத்திரத்தினால்தான் எங்களுக்கு மழை பொழிந்தது" எனக் கூறியவர்களோ என்னை மறுத்து நட்சத்திரத்தை நம்பியவர்கள் ஆவர்" என அல்லாஹ் சொன்னான்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அத்தியாயம் : 1
126. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உங்கள் இறைவன் என்ன சொன்னான் என்று நீங்கள் அறிவீர்களா?" என (மக்களிடம்) கேட்டார்கள். பிறகு, "என் அடியார்களுக்கு நான் என் அருட்செல்வங்களில் ஒன்றை வழங்கும்போது அவர்களில் ஒரு சாரார் "(இதற்கெல்லாம் காரணம்) நட்சத்திரங்கள்தாம்; நட்சத்திரங்களாலேயே (இது எங்களுக்குக் கிடைத்தது)" என்று கூறி, அந்த அருட்செல்வத்தின் விஷயத்தில் நன்றி கெட்டவர்களாய் நடந்துகொள்ளாமல் இருந்ததில்லை (என்று அல்லாஹ் சொன்னான்)" என்றார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் வானிலிருந்து ஏதேனும் ஒரு வளத்தை இறக்கும்போதெல்லாம் மக்களில் ஒரு சாரார் அதன் விஷயத்தில் நன்றி கொன்றவர்களாய் மாறிவிடாமல் இருந்ததில்லை. (வானிலிருந்து) அல்லாஹ் மழை பொழிவிக்கிறான். அவர்களோ, "இன்ன இன்ன நட்சத்திரம் தான் (மழை பொழிவித்தது)" என்று கூறுகின்றனர்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில், முஹம்மத் பின் சலமா அல்முராதீ (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "இன்ன இன்ன நட்சத்திரங்களால்தான் (மழை பொழிந்தது என்று அவர்கள் கூறுகின்றனர்)" என வந்துள்ளது.
அத்தியாயம் : 1
127. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களது காலத்தில் (ஒரு நாள்) மழை பெய்தது. அப்போது நபி (ஸல்) அவர்கள், "மக்களில் நன்றியுள்ளவர்களும் உள்ளனர். நன்றி கெட்டவர்களும் உள்ளனர். (மழை பொழியும் போது) இது அல்லாஹ்வின் கருணை என்று (சிலர்) கூறுகின்றனர். வேறு சிலரோ, இன்ன இன்ன நட்சத்திர இயக்கம் மெய்யாகிவிட்டது என்று கூறுகின்றனர்" என்றார்கள்.
அப்போதுதான், "நட்சத்திர மண்டலங்களின் மீது நான் சத்தியம் செய்கிறேன்" என்று தொடங்கி, "(இறைவன் வழங்கிய) உங்கள் வாழ்வாதாரத்திற்கு (நன்றியாக) உங்களது அவிசுவாசத்தை ஆக்குகின்றீர்களா?" என்று முடியும் இறைவசனங்கள் (56:75-82) அருளப்பெற்றன.
அத்தியாயம் : 1
பாடம் : 33 அன்சாரிகளையும் அலீ (ரலி) அவர்களையும் நேசிப்பது இறைநம்பிக்கையும் அதன் அடையாளங்களில் ஒன்றும் ஆகும்; அவர்களை வெறுப்பது நயவஞ்சகத்தின் அடையாளங்களில் ஒன்றாகும் என்பதன் ஆதாரம்.
128. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நயவஞ்சகனின் அடையாளம் அன்சாரிகளை வெறுப்பதாகும்; இறைநம்பிக்கையாளரின் அடையாளம் அன்சாரிகளை நேசிப்பதாகும்.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மற்றோர் அறிவிப்பில் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அன்சாரிகளை நேசிப்பது இறைநம்பிக்கையின் அடையாளமாகும்; அவர்களை வெறுப்பது நயவஞ்சகத்தின் அடையாளமாகும்.
இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 1
129. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அன்சாரிகள் தொடர்பாக நபி (ஸல்) அவர்கள் கூறுகையில், "இறைநம்பிக்கையாளரைத் தவிர வேறெவரும் அவர்களை நேசிக்கமாட்டார்கள்; நயவஞ்சகனைத் தவிர வேறெவரும் அவர்களை வெறுக்கமாட்டார்கள். யார் அவர்களை நேசிக்கிறார்களோ அவர்களை அல்லாஹ்வும் நேசிக்கிறான். யார் அவர்களை வெறுக்கிறார்களோ அவர்களை அல்லாஹ்வும் வெறுக்கிறான்" என்று குறிப்பிட்டார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஷுஅபா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: நான் (இதை எனக்கு அறிவித்த) அதீ பின் ஸாபித் (ரஹ்) அவர்களிடம், "இதை பராஉ (ரலி) அவர்களிடமிருந்தா செவியுற்றீர்கள்?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "(ஆம்;) எனக்குத்தான் அவர்கள் அறிவித்தார்கள்" என்று பதிலளித்தார்கள்.
அத்தியாயம் : 1
130. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்ட எவரும் அன்சாரிகளை வெறுக்கமாட்டார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்ட எவரும் அன்சாரிகளை வெறுக்கமாட்டார்.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
131. அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
எவன் வித்துக்களைப் பிளந்தானோ, உயிர்களைப் படைத்தானோ அவன்மீது ஆணையாக! உம்மீ நபி (ஸல்) அவர்கள் (பின்வருமாறு) என்னிடம் அறுதியிட்டுக் கூறினார்கள்:
இறைநம்பிக்கையாளரைத் தவிர வேறெவரும் என்னை (அலீயை) நேசிக்கமாட்டார்கள். நயவஞ்சகனைத் தவிர வேறெவரும் என்னை வெறுக்கமாட்டார்கள்.
இதை ஸிர்ரு பின் ஹுபைஷ் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
பாடம் : 34 வணக்க வழிபாடுகள் குறைவதால் இறைநம்பிக்கையும் குறையும்; நன்றி மறத்தல், உரிமை மீறல் போன்ற இறைமறுப்பு அல்லாத செயல்களுக்கும் "குஃப்ர்" எனும் சொல் ஆளப்படும்.
132. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (உரையாற்றுகையில்), "பெண்கள் சமுதாயமே! தானதர்மங்கள் செய்யுங்கள்; அதிகமாகப் பாவமன்னிப்புக் கோருங்கள். ஏனெனில், நரகவாசிகளில் நீங்களே அதிகமாக இருப்பதை நான் கண்டேன்" என்று கூறினார்கள். அப்போது அங்கிருந்த புத்திசாலியான ஒரு பெண்மணி, "நரகவாசிகளில் அதிகம் பேராக நாங்கள் இருப்பதற்கு என்ன காரணம்? அல்லாஹ்வின் தூதரே!" என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீங்கள் அதிகமாகச் சாபம் கொடுக்கிறீர்கள்; கணவனிடம் நன்றி இல்லாதவர்களாக நடந்துகொள்கிறீர்கள்; அறிவிலும் மார்க்கத்திலும் குறைபாடுள்ளவர்களாகவும், அறிவிற் சிறந்தோரைக்கூட (கவர்ச்சியால்) வீழ்த்தக் கூடியவர்களாகவும் (பெண்களான) உங்களைப் போன்று வேறு யாரையும் நான் காணவில்லையே" என்று பதிலளித்தார்கள்.
அப்பெண்மணி, "அறிவிலும் மார்க்கத்திலும் எங்களுடைய குறைபாடு என்ன? அல்லாஹ்வின் தூதரே!" என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அறிவிலுள்ள குறைபாடு யாதெனில், ஓர் ஆணின் சாட்சியத்திற்கு இரு பெண்களின் சாட்சியம் நிகராகிறது. இதுதான் (பெண்களின்) அறிவிலுள்ள குறைபாடாகும். (மாதவிடாய் ஏற்படும்) பல நாட்கள் அவள் தொழாமல் இருந்துகொண்டிருக்கிறாள்; ரமளான் மாதத்தில் நோன்பு நோற்காமல் இருக்கிறாள். இதுதான் (அவளுடைய) மார்க்கத்திலுள்ள குறைபாடு" என்று கூறினார்கள்.
மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸைப் போன்றே அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களும் அபூஹுரைரா (ரலி) அவர்களும் அறிவித்துள்ளார்கள்.
அத்தியாயம் : 1
பாடம் : 35 தொழுகையைக் கைவிடுவதற்கும் "குஃப்ர்" எனும் சொல் ஆளப்படுவதுண்டு.
133. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஆதமின் மைந்தன் (மனிதன்) சஜ்தா (சிரவணக்கத்திற்கான) வசனத்தை ஓதி சிரவணக்கம் (சஜ்தா) செய்தால் ஷைத்தான் அழுதவாறே "அந்தோ எனக்கு வந்த நாசமே! ஆதமின் மைந்தன் சிரவணக்கம் செய்யும்படி கட்டளையிடப்பட்டான். அவன் சிரவணக்கம் செய்துவிட்டான். அவனுக்குச் சொர்க்கம் கிடைக்கப்போகிறது. ஆனால் (ஆதி மனிதர் ஆதமுக்குச்) சிரம்பணியும்படி எனக்குக் கட்டளையிடப்பட்டது. நானோ மறுத்து விட்டேன். எனவே, எனக்கு நரகம்தான்" என்று கூறியபடி விலகிச்செல்கிறான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "(ஆதமுக்குச் சிரம்பணியும்படி எனக்குக் கட்டளையிடப்பட்டது.) ஆனால், நான் (அதற்கு) மாறுசெய்தேன். எனவே, எனக்கு நரகம்தான்" என்று (சிறு வித்தியாசத்துடன்) இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 1
134. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நிச்சயமாக மனிதனுக்கும் இணைவைப்பு மற்றும் இறைமறுப்பு ஆகியவற்றுக்குமிடையே (பாலமாக இருப்பது) தொழுகையைக் கைவிடுவது தான்.
இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மனிதனுக்கும் இணைவைப்பு மற்றும் இறைமறுப்பு ஆகியவற்றுக்குமிடையே (பாலமாக இருப்பது) தொழுகையைக் கைவிடுவதுதான்.
இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(இதன் அறிவிப்பாளர்தொடர் வேறுபடுகிறது.)
அத்தியாயம் : 1
பாடம் : 36 அல்லாஹ்வை நம்பிக்கைகொள்வதே (நற்)செயல்களில் மிகவும் சிறந்ததாகும்.
135. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் "(நற்)செயல்களில் சிறந்தது எது?" என்று கேட்கப் பட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வை நம்பிக்கை கொள்வது" என்று கூறினார்கள். "பிறகு எது (சிறந்தது)?" என்று கேட்கப்பட்டபோது, "அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிவது" என்றார்கள். "பிறகு எது (சிறந்தது)?" எனக் கேட்கப்பட்டபோது, "(பாவச் செயல் எதுவும் கலவாத) ஒப்புக்கொள்ளப்பட்ட ஹஜ்" என்று பதிலளித்தார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் முஹம்மத் பின் ஜஅஃபர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் ("அல்லாஹ்வை நம்பிக்கைகொள்வது" எனும் இடத்தில்) "அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நம்பிக்கைகொள்வது" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 1
136. அபூதர் அல்ஃகிஃபாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (நபி (ஸல்) அவர்களிடம்), "அல்லாஹ்வின் தூதரே! (நற்)செயல்களில் சிறந்தது எது?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "அல்லாஹ்வின் மீது நம்பிக்கை (ஈமான்) கொள்வதும் அவனது பாதையில் அறப்போர் புரிவதும் ஆகும்" என்று பதிலளித்தார்கள். நான், "எந்த அடிமை(யை விடுதலை செய்வது) சிறந்தது?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "தன் எசமானர்களிடம் பெறுமதி மிக்க, அதிக விலை கொண்ட அடிமைதான் (சிறந்தவன்)" என்று பதிலளித்தார்கள்."அ(த்தகைய அடிமையை விடுதலை செய்வ)து என்னால் இயலவில்லை யென்றால்...?"என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "தொழில் செய்பவருக்கு உதவி செய்க; அல்லது வேலை இல்லாதவருக்கு வேலை தருக" என்று சொன்னார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! (நற்)செயல்களில் சிலவற்றைக்கூட என்னால் செய்ய இயலவில்லையென்றால் (நான் என்ன செய்வது?) கூறுங்கள்!" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "மக்களுக்குத் தீங்கு செய்யாமல் இருங்கள்! ஏனெனில், அதுவும் நீங்கள் உங்களுக்குச் செய்துகொள்ளும் ஒரு நல்லறம்தான்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் வேறு இரு அறிவிப்பாளர் தொடர்களிலும் வந்துள்ளது.
அவற்றில் ("தொழில் செய்பவனுக்கு உதவி செய்க" என்பதற்கு பதிலாக) "பலவீனருக்கு உதவி செய்க; அல்லது வேலை இல்லாதவருக்கு வேலை தருக" என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 1
137. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், "(நற்)செயல்களில் சிறந்தது எது?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "உரிய நேரத்தில் தொழுகையை நிறைவேற்றுவது" என்று பதிலளித்தார்கள். நான் "பிறகு எது?" என்று கேட்டேன். "தாய் தந்தையருக்கு நன்மை புரிவது" என்றார்கள். நான், "பிறகு எது?" என்று கேட்டேன். அதற்கு "அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிவது" என்றார்கள். (நபி அவர்களுக்கு தொந்தரவு கொடுக்கக் கூடாது என்று) அவர்கள்மீது பரிவுகாட்டியே நான் மேலும் மேலும் கேட்பதை நிறுத்திவிட்டேன்.
அத்தியாயம் : 1
138. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம்), "அல்லாஹ்வின் நபியே! (நற்)செயல்களில் சொர்க்கத்திற்கு மிகவும் நெருக்கமானது எது?" என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "உரிய நேரத்தில் தொழுகையை நிறைவேற்றுவது" என்று கூறினார்கள். "அடுத்து எது? அல்லாஹ்வின் நபியே!" என்று கேட்டேன். அதற்கு, "தாய் தந்தையருக்கு நன்மை புரிவது" என்றார்கள். "அடுத்து எது? அல்லாஹ்வின் நபியே!" என்று கேட்டபோது, "அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிவது" என்றார்கள்.
அத்தியாயம் : 1
139. வலீத் பின் அல்அய்ஸார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களின் இல்லத்தைச் சுட்டிக் காட்டியவாறு அபூஅம்ர் அஷ் ஷைபானீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: இதோ! இந்த வீட்டுக்காரர் (பின்வருமாறு) என்னிடம் கூறினார்கள்:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், "அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான செயல் (அமல்) எது?" என்று கேட்டேன். அவர்கள், "உரிய நேரத்தில் தொழுகையை நிறைவேற்றுவது" என்று கூறினார்கள். நான் "பிறகு எது?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "பிறகு தாய் தந்தையருக்கு நன்மை புரிவது" என்றார்கள். நான், "பிறகு எது?" என்று கேட்டபோது, "பிறகு அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிவது" என்றார்கள்.
இவற்றை மட்டுமே என்னிடம் அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். இன்னும் அதிகமாக (இது குறித்து) நான் கேட்டிருந்தால் அவர்களும் எனக்கு அதிகமாகச் சொல்லியிருப்பார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர்வழியாகவும் வந்துள்ளது.
அதில், "அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களின் இல்லத்தை நோக்கி அபூஅம்ர் அஷ்ஷைபானீ (ரஹ்) அவர்கள் சாடை காட்டினார்கள்; அன்னாரது பெயரை எங்களிடம் குறிப்பிடவில்லை" என்று அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 1
140. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"நற்செயல்களில்" அல்லது "நற்செயலில்" சிறந்தது உரிய நேரத்தில் தொழுகையை நிறைவேற்றுவதும் தாய் தந்தையருக்கு நன்மை புரிவதுமாகும்
இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
பாடம் : 37 இறைவனுக்கு இணைவைப்பதுதான் பாவங்களிலேயே மிகவும் மோசமானது. அதற்கடுத்த பெரும் பாவம் எது என்பது பற்றிய விளக்கம்.
141. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், "அல்லாஹ்விடம் பாவங்களில் மிகப் பெரியது எது?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "அல்லாஹ் உன்னைப் படைத்திருக்க, அவனுக்கு நீ இணை கற்பிப்பது" என்று சொன்னார்கள். நான் அவர்களிடம், "நிச்சயமாக அது மிகப் பெரிய பாவம்தான்" என்று சொல்லிவிட்டு, "பிறகு எது?" என்று கேட்டேன். "உன் குழந்தை உன்னுடன் (அமர்ந்து உன் உணவைப் பங்குபோட்டு) உண்ணும் என அஞ்சி அதை நீ கொல்வது" என்று சொன்னார்கள். நான் "பிறகு எது?" என்று கேட்க, அவர்கள், "உன்(மீது அபார நம்பிக்கைவைத்துள்ள) அண்டை வீட்டானின் மனைவி(யைக் கவர்ந்து அவள்) உடன் நீ விபசாரம் செய்வது" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
142. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் (நபி (ஸல்) அவர்களிடம் "அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்விடம் எந்தப் பாவம் மிகப் பெரியது?" என்று கேட்டார். அதற்கு அவர்கள், "அல்லாஹ் உன்னைப் படைத்திருக்க, அவனுக்கு நீ இணைவைப்பதுதான், (பெரும் பாவம்)" என்று பதிலளித்தார்கள். அவர், "பிறகு எது?" என்று கேட்டார். அவர்கள், "உன் குழந்தை உன்னுடன் (அமர்ந்து உன் உணவைப் பங்குபோட்டு) உண்ணும் என அஞ்சி அதை நீ கொல்வது" என்று சொன்னார்கள். "பிறகு எது?" என்று அவர் கேட்க, "உன் அண்டை வீட்டானின் மனைவி(யைக் கவர்ந்து அவள்) உடன் நீ விபசாரம் செய்வது" என்று அவர்கள் பதிலளித்தார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது இக்கூற்றை மெய்ப்பிக்கும் வகையில், "மேலும், அவர்கள் அல்லாஹ்வுடன் வேறெந்தத் தெய்வத்தையும் அழைப்பதில்லை. மேலும், (கொலை செய்யக் கூடாது என்று) அல்லாஹ் தடை விதித்துள்ள எந்த உயிரையும் (சட்டபூர்வமான) உரிமையின்றி அவர்கள் கொலை செய்வதில்லை; மேலும், விபசாரமும் செய்வதில்லை. யாரேனும் இச்செயல்களைச் செய்தால் அவன் (தன் பாவத்திற்கான) தண்டனையைப் பெற்றே தீருவான்" எனும் (25:68ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளினான்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
பாடம் : 38 பெரும் பாவங்களும் மிகப்பெரும் பாவங்களும்.
143. அபூபக்ரா நுஃபைஉ பின் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் (ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அருகில் இருந்தோம். அப்போது அவர்கள், "பெரும் பாவங்களிலேயே மிகப்பெரும் பாவங்களை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?" என்று (மூன்று முறை) கேட்டு விட்டு, "அல்லாஹ்வுக்கு இணைவைப்பது, பெற்றோரைப் புண்படுத்துவது, "பொய் சாட்சியம் சொல்வது" அல்லது "பொய் பேசுவது" ஆகியவை (தாம் அவை)" என்று கூறினார்கள். அப்போது சாய்ந்துகொண்டிருந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்து அமர்ந்து இ(றுதியாகச் சொன்ன)தை திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டேயிருந்தார்கள். இதைக் கண்ட நாங்கள் "அவர்கள் நிறுத்திக் கொள்ளக்கூடாதா!" என்று கூறினோம்.
அத்தியாயம் : 1
144. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வுக்கு இணைவைப்பது, பெற்றோரைப் புண்படுத்துவது, கொலைசெய்வது மற்றும் பொய் பேசுவது ஆகியவை பெரும்பாவங்களில் அடங்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
- அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெரும் பாவங்கள் பற்றிக் கூறினார்கள்" அல்லது "பெரும் பாவங்கள் குறித்து அவர்களிடம் வினவப்பட்டது". அப்போது அவர்கள், "அல்லாஹ்வுக்கு இணைவைப்பது, கொலை செய்வது, பெற்றோரைப் புண்படுத்துவது ஆகியன (பெரும்பாவங்களாகும்)" என்று கூறினார்கள்.
பிறகு "பெரும் பாவங்களிலேயே மிகப் பெரும் பாவம் ஒன்றை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?" என்று கேட்டுவிட்டு, "பொய் பேசுவது" அல்லது "பொய் சாட்சியம் கூறுவது" தான் (அது) என்று சொன்னார்கள்.
அறிவிப்பாளர்களில் ஒருவரான ஷுஅபா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: "பொய் சாட்சியம்" என்றே நான் பெரிதும் கருதுகிறேன்.
அத்தியாயம் : 1
145. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "பேரழிவை ஏற்படுத்தும் ஏழு பெரும் பாவங் களைத் தவிர்த்திடுவீர்!" என்று கூறினார்கள். அப்போது, "அல்லாஹ்வின் தூதரே! அவை எவை?" என்று கேட்கப்பட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பது, சூனியம் செய்வது, (சட்டபூர்வமான) உரிமையின்றி கொல்லக் கூடாது என்று அல்லாஹ் தடை விதித்துள்ள உயிரைக் கொல்வது, அநாதைகளின் செல்வத்தை உண்பது, வட்டியை உண்பது, போரின்போது புறமுதுகிட்டு ஓடுவது, அப்பாவிகளான, இறை நம்பிக்கை கொண்ட, கற்புள்ள பெண்கள்மீது அவதூறு கூறுவது ஆகியவைதாம் (அந்தப் பெரும் பாவங்கள்)" என்று பதிலளித்தார்கள்.
அத்தியாயம் : 1
146. அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
"ஒரு மனிதர் தம் தாய் தந்தையரை ஏசுவது பெரும் பாவங்களில் உள்ளதாகும்" என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது "அல்லாஹ்வின் தூதரே! ஒரு மனிதர் தம் தாய் தந்தையரையே ஏசுவாரா?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஆம். ஒருவர் இன்னொருவரின் தந்தையை ஏசுவார். உடனே (பதிலுக்கு) அவர் இவருடைய தந்தையை ஏசுவார். ஒருவர் இன்னொருவரின் தாயை ஏசுவார். உடனே (பதிலுக்கு) அவர் இவருடைய தாயை ஏசுவார். (ஆக, தம் பெற்றோர் ஏசப்படுவதற்கு இவரே காரணமாகிவிடுகிறார்)" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
பாடம் : 39 தற்பெருமை கூடாது; தற்பெருமை என்றால் என்ன?
147. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் "யாருடைய உள்ளத்தில் அணுவளவு தற்பெருமை இருக்கிறதோ அவர் சொர்க்கத்தில் நுழையமாட்டார்" என்று கூறினார்கள். அப்போது ஒரு மனிதர், "தமது ஆடை அழகாக இருக்க வேண்டும்; தமது காலணி அழகாக இருக்க வேண்டும் என ஒருவர் விரும்புகிறார். (இதுவும் தற்பெருமையில் சேருமா?)" என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹ் அழகானவன்; அழகையே அவன் விரும்புகின்றான். தற்பெருமை என்பது (ஆணவத்தோடு) உண்மையை மறுப்பதும், மக்களைக் கேவலமாக மதிப்பதும்தான்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
148. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தமது உள்ளத்தில் கடுகு மணியளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகு மணியளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழையமாட்டார்.
இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
149. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யாருடைய உள்ளத்தில் அணுவளவு தற்பெருமை உள்ளதோ அவர் சொர்க்கத்தில் நுழையமாட்டார்.
இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 1
பாடம் : 40 அல்லாஹ்வுக்கு எதையும் இணை வைக்காமல் இறந்தவர் சொர்க்கம் செல்வார். இணைவைப்பாளராக இறந்து போனவர் நரகம் செல்வார்.
150. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "யார் அல்லாஹ்வுக்கு இணைவைத்தவராக இறந்து விடுகிறாரோ அவர் நிச்சயமாக நரகம் செல்வார்" என்று கூறியதை நான் கேட்டேன். நான் (அதே கருத்தை) "யார் அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்காமல் இறந்துவிடுகிறாரோ அவர் நிச்சயமாக சொர்க்கம் செல்வார்" என்று கூறினேன்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
151. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "(சொர்க்கத்தையும் நரகத்தையும்) கட்டாயமாகத் தேடித் தருகின்ற இரண்டு விஷயங்கள் என்னென்ன?" என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "யார் அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்காமல் இறந்துவிடுகிறாரோ அவர் (நிச்சயமாகச்) சொர்க்கம் செல்வார். யார் அல்லாஹ்வுக்கு இணைவைத்தவராக இறந்துவிடுகிறாரோ அவர் (நிச்சயமாக) நரகம் செல்வார்" என்று பதிலளித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
152. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்காமல் அவனைச் சந்திக்கிறாரோ அவர் சொர்க்கம் செல்வார். யார் அவனுக்கு இணைவைத்தவராக அவனைச் சந்திக்கிறாரோ அவர் நரகம் செல்வார்.
இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில், ஹஜ்ஜாஜ் பின் அஷ்ஷாயிர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "ஜாபிர் (ரலி) அவர்கள் எங்களுக்கு அறிவித்தார்கள்" என்று (முத்தஸிலாகவு)ம், அபூஅய்யூப் அல்ஃகைலானீ (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கப்படுகிறது" என்று (முன்கத்திஉ ஆகவு)ம் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
153. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என்னிடம் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து "உங்கள் சமுதாயத்தாரில் யார் அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்காமல் இறந்துவிடுகிறாரோ அவர் நிச்சயமாகச் சொர்க்கம் செல்வார்" என்று நற்செய்தி கூறினார். உடனே நான், "அவர் விபசாரம் செய்தாலும் திருடினாலுமா?" என்று கேட்டேன். அதற்கு ஜிப்ரீல் "விபசாரம் செய்தாலும் திருடினாலும் சரியே" என்று பதிலளித்தார்.
இதை அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
154. அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள் வெள்ளை ஆடை அணிந்தபடி உறங்கிக்கொண்டிருந்தார்கள். (சிறிது நேரத்திற்குப்) பிறகு மீண்டும் நான் அவர்களிடம் சென்றேன். அப்போதும் அவர்கள் உறங்கிக்கொண்டிருந்தார்கள். பிறகு (மீண்டும்) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள் விழித்திருந்தார்கள். நான் அவர்கள் அருகில் அமர்ந்தேன். அப்போது "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை("லா இலாஹ இல்லல்லாஹ்") என்று சொல்லி, பிறகு அதே நம்பிக்கையில் இறந்துவிடும் எந்த அடியாரும் சொர்க்கம் புகுந்தே தீருவார்" என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். நான், "அவர் விபசாரம் புரிந்தாலும் திருடினாலுமா?" என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், "அவர் விபசாரம் புரிந்தாலும் திருடினாலும் சரியே (சொர்க்கம் புகுந்தே தீருவார்)" என்று சொன்னார்கள். நான் (மீண்டும்) "அவர் விபசாரம் புரிந்தாலும் திருடினாலுமா?" என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், "அவர் விபசாரம் புரிந்தாலும் திருடினாலும் சரியே (சொர்க்கம் புகுந்தே தீருவார்)" என்று சொன்னார்கள்.- இவ்வாறு மூன்று தடவை நடந்தது. நான்காவது தடவை "(அவர் சொர்க்கம் புகுந்தே தீருவார்.) அபூதர்ரின் மூக்கு மண்ணைக் கவ்வட்டும்! (அதாவது நீர் இதை விரும்பாவிட்டாலும் சரியே)" என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் அபுல்அஸ்வத் அத்தீலீ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
அபூதர் (ரலி) அவர்கள் "அபூதர்ரின் மூக்கு மண்ணைக் கவ்வட்டும்" என்று கூறியபடியே புறப்பட்டுச் சென்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
பாடம் : 41 இறைமறுப்பாளர் ஒருவர் "லா இலாஹ இல்லல்லாஹ்" என்று (கலிமாச்) சொன்னதற்குப் பிறகு அவரைக் கொலை செய்வது கூடாது.
155. மிக்தாத் பின் அம்ர் அல்அஸ்வத் அல்கிந்தீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (நபி (ஸல்) அவர்களிடம்) "இறை மறுப்பாளர்களில் ஒருவனை நான் சந்தித்தேன். அவன் என்னிடம் சண்டையிட்டான். அப்போது அவன் என் கைகளில் ஒன்றை வாளால் வெட்டித் துண்டித்துவிட்டான். பிறகு, அவன் என்னை விட்டு ஓடிப்போய் ஒரு மரத்தில் அபயம் தேடி (ஒளிந்து)கொண்டு, "அல்லாஹ்வுக்கு அடிபணிந்(து இஸ்லாத்தில் இணைந்)தேன்" என்று சொன்னான். இதை அவன் சொன்னதற்குப் பிறகு நான் அவனைக் கொல்லலாமா? அல்லாஹ்வின் தூதரே!" என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(வேண்டாம்) அவனைக் கொல்லாதே!" என்றார்கள். அதற்கு நான், "அல்லாஹ்வின் தூதரே! அவன் எனது கையைத் துண்டித்துவிட்டான். அதைத் துண்டித்த பிறகுதானே இதைச் சொன்னான்!" என்று கேட்டேன்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவனை நீ கொல்லாதே! அவ்வாறு நீ அவனைக் கொன்றுவிட்டால் அவனைக் கொல்வதற்கு முன்பு நீயிருந்த (குற்றமற்ற) நிலைக்கு அவன் வந்து விடுவான். அந்த வார்த்தையைச் சொல்வதற்கு முன் அவனிருந்த (குற்றவாளி எனும்) நிலைக்கு நீ சென்றுவிடுவாய்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
156. மேற்கண்ட ஹதீஸ் வேறு சில அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் மஅமர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "நான் அவனைக் கொல்வதற்கு முற்படும் போது அவன் "லா இலாஹ இல்லல்லாஹ்" (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை) என்று கூறினான். (இதற்குப் பிறகு அவனை நான் கொல்லலாமா? என்று மிக்தாத் (ரலி) அவர்கள் வினவினார்கள்) என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 1
157. அதாஉ பின் யஸீத் அல்லைஸீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
உபைதுல்லாஹ் பின் அதீ பின் கியார் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
பனூ ஸுஹ்ரா குலத்தாரின் நட்புக் குலத்தைச் சேர்ந்தவரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பத்ருப்போரில் பங்கேற்றவருமான மிக்தாத் பின் அம்ர் பின் அல்அஸ்வத் அல்கிந்தீ (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! கூறுங்கள்: இறைமறுப்பாளர்களில் ஒருவனை நான் சந்தித்தேன்..." என்று கேட்டார்கள்.
இதைத் தொடர்ந்து மேற்கண்ட (155ஆவது) ஹதீஸிலுள்ளதைப் போன்றே உபைதுல்லாஹ் பின் அதீ (ரஹ்) அவர்கள் அறிவித்தார்கள்.
அத்தியாயம் : 1
158. உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
எங்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் படைப்பிரிவொன்றில் அனுப்பி வைத்தார்கள். ஜுஹைனா குலத்தைச் சேர்ந்த "ஹுரக்காத்" கூட்டத்தாரிடம் நாங்கள் காலையில் சென்றடைந்தோம். (அவர்களுடன் நடந்த சண்டையில் அவர்களை நாங்கள் தோற்கடித்தோம்.) அப்போது நான் ஒருவரைச் சந்தித்தேன். (அவரை நாங்கள் சுற்றி வளைத்துக்கொண்டபோது) அவர், "லா இலாஹ இல்லல்லாஹ்" (அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு இறைவன் இல்லை) என்று சொன்னார். நான் (எனது ஈட்டியால்) அவரைத் தாக்கி(க் கொன்று)விட்டேன். ஆனால் அது என் மனதில் உறுத்திக்கொண்டே இருந்தது. (திரும்பி வந்தபோது) நான் இது குறித்து நபி (ஸல்) அவர்களிடம் சொன்னேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "லா இலாஹ இல்லல்லாஹ் என்று அவர் சொன்ன பிறகுமா அவரை நீ கொன்றாய்?" என்று கேட்டார்கள். "ஆயுதத்தை அஞ்சித்தான் அவர் இவ்வாறு சொன்னார், அல்லாஹ்வின் தூதரே!" என்று கூறினேன். "அதை அவர் (உளப்பூர்வமாக) சொன்னாரா இல்லையா என்று அறிய அவருடைய இதயத்தை நீ பிளந்து பார்த்தாயா?" என்று (கடிந்து) கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் அந்தக் கேள்வியையே என்னிடம் திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டேயிருந்தார்கள். எந்த அளவிற்கென்றால், நான் (அதற்கு முன் இஸ்லாத்தை ஏற்றிராமல்) அன்றைய தினத்தில் இஸ்லாத்தை ஏற்றிருந்தால் நன்றாயிருந்திருக்குமே என்றுகூட ஆசைப்பட்டேன்.
எனவேதான் சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் மீதாணையாக! எந்த முஸ்லிமுடன் நான் போரிடுவதாக இருந்தாலும் அவருடன் இந்தச் "சின்ன வயிற்றுக்காரர்" -உசாமா- போரிடாதவரை போரிடமாட்டேன்" என்று கூறினார்கள். அப்போது ஒரு மனிதர் (சஅத் (ரலி) அவர்களிடம்), "(பூமியிலிருந்து) குழப்பம் நீங்கி, கீழ்ப்படிதல் முற்றிலுமாக அல்லாஹ்வுக்கென்றே ஆகிவிடும்வரை அவர்களுடன் நீங்கள் போரிடுங்கள்" (8:39) என்று அல்லாஹ் கூறவில்லையா? என்று கேட்டார். அதற்கு சஅத் (ரலி) அவர்கள், "(அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில்) குழப்பம் முற்றிலும் நீங்கிவிட வேண்டுமென்பதற்காக நாங்கள் போரிட்டோம். ஆனால், நீரும் உம் தோழர்களும் குழப்பம் உருவாக வேண்டுமென்பதற்காகப் போரை விரும்புகிறீர்கள்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாக வந்துள்ளது.
அத்தியாயம் : 1
159. உசாமா பின் ஸைத் பின் ஹாரிஸா (ரலி) அவர்கள் கூறியதாவது:
எங்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஜுஹைனா குலத்தைச் சேர்ந்த "ஹுரக்கா" கூட்டத்தாரிடம் அனுப்பிவைத்தார்கள். நாங்கள் அந்தக் கூட்டத்தாரிடம் காலையில் சென்றடைந்தோம். (அவர்களுடன் நடந்த சண்டையில்) அவர்களை நாங்கள் தோற்கடித்தோம். அப்போது நானும் அன்சாரிகளில் ஒருவரும் அந்தக் கூட்டத்தைச் சேர்ந்த ஒருவரிடம் போய்ச்சேர்ந்தோம். அவரை நாங்கள் சுற்றி வளைத்துக்கொண்டபோது, அவர் "லா இலாஹ இல்லல்லாஹ்" (அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு இறைவன் இல்லை) என்று சொல்ல, அந்த அன்சாரி (அவரைக் கொல்லாமல்) விலகிக்கொண்டார். நான் என் ஈட்டியால் அவரைக் குத்திக் கொன்றுவிட்டேன். நாங்கள் (திரும்பி) வந்தபோது நபி (ஸல்) அவர்களுக்கு இந்தச் செய்தி எட்டவே அவர்கள் என்னிடம், "உசாமா! அவர் "லா இலாஹ இல்லல்லாஹ்" என்று (ஏகத்துவ வாக்கியத்தை) மொழிந்த பின்னருமா அவரை நீ கொன்றாய்?" என்று கேட்டார்கள். நான், "அவர் உயிரைப் பாதுகாக்கவே (அவ்வாறு கூறினார்)" என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள் "அவர் "லா இலாஹ இல்லல்லாஹ்" என்று மொழிந்த பின்னருமா அவரை நீ கொன்றாய்?" என்று (மீண்டும்) கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் அந்தக் கேள்வியையே திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். எந்த அளவிற்கென்றால், நான் "(அந்தப் பாவத்தைச் செய்த) அந்த நாளுக்கு முன்பு இஸ்லாத்தை ஏற்காமல் (அதற்குப் பிறகு ஏற்று) இருந்திருந்தால் நன்றாயிருந்திருக்குமே; (பாவம் மன்னிக்கப்பட்டிருக்குமே!)" என்றுகூட ஆசைப்பட்டேன்.
அத்தியாயம் : 1
160. ஸஃப்வான் பின் முஹ்ரிஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்களது காலத்தில் நடந்த சண்டையின் போது ஜுன்தப் பின் அப்தில்லாஹ் அல்பஜலீ (ரலி) அவர்கள் அஸ்அஸ் பின் சலமா (ரஹ்) அவர்களிடம் "எனக்காக உங்களுடைய சகோதரர்களில் சிலரை ஒன்றுகூட்டுங்கள். அவர்களிடம் நான் பேச வேண்டும்" என்று சொல்லி அனுப்பினார்கள். (தம் சகோதரர்களை அழைத்து வருமாறு) அஸ்அஸ் ஒரு தூதுவரை அவர்களிடம் அனுப்பினார். அவ்வாறே அவர்கள் ஒன்றுகூடியதும் (அவர்களிடம்) மஞ்சள் நிற முக்காட்டு ஆடை ஒன்றை அணிந்து கொண்டு ஜுன்தப் (ரலி) அவர்கள் வந்து "நீங்கள் பேசிக்கொண்டிருந்ததை (தொடர்ந்து) பேசுங்கள்" என்று சொன்னார்கள். அதையடுத்து அவர்கள் ஒவ்வொருவராக பேசிக்கொண்டே வந்து ஜுன்தப் (ரலி) அவர்கள் பேச வேண்டிய முறை வந்தபோது அவர்கள் தமது தலையிலிருந்த முக்காட்டை விலக்கிவிட்டுப் பின்வருமாறு கூறினார்கள்: நான் உங்களிடம் வரும்போது உங்களுக்கு உங்களுடைய நபியின் செய்தி ஒன்றை அறிவிக்க வேண்டும் என நான் எண்ணியிருக்கவில்லை. (ஆனால், அறிவிக்க வேண்டுமென இப்போது விரும்புகிறேன்.) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இணைவைப்பாளர்களில் ஒரு கூட்டத்தாரை நோக்கி முஸ்லிம்களின் படைப் பிரிவொன்றை அனுப்பிவைத்தார்கள். அவர்கள் (அக்கூட்டத்தாரிடம் சென்று) அவர்களை(ப் போர்க்களத்தில்) சந்தித்தனர். அப்போது இணைவைப்பாளர்களில் ஒரு மனிதர் முஸ்லிம்களில் எவரையேனும் தாக்க முற்படும்போதெல்லாம் (குறி தவறாமல்) தாக்கிக் கொலை செய்துகொண்டிந்தார். இந்நிலையில் முஸ்லிம்களில் ஒருவர் (அவர் உசாமா பின் ஸைத் என்றே நாங்கள் பேசிக்கொண்டதுண்டு) அந்த எதிரி அயர்ந்துபோகும் நேரத்திற்காகக் காத்திருந்தார். (அந்த நேரமும் வந்தது.) அந்த மனிதர்மீது இவர் வாளை உயர்த்தியபோது அவர் (தம்மைக் காப்பாற்றிக்கொள்வதற்காக) "லா இலாஹ இல்லல்லாஹ்" என்று (ஏகத்துவ உறுதிமொழியை) கூறினார். ஆனால் (அதைப் பொருட்படுத்தாமல்) உசாமா (ரலி) அவர்கள் அந்த மனிதரைக் கொன்றுவிட்டார்கள். (அந்தப் போரில் முஸ்லிம்கள் வெற்றி பெற்றனர்.) அந்த வெற்றியை அறிவிப்பதற்காக ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார். அவரிடம் நபி (ஸல்) அவர்கள் அந்தப் போரின் நிலவரம் குறித்து விசாரித்தார்கள். அப்போது அவர் நடந்த நிகழ்ச்சிகளையும் (கொல்லப்பட்ட) அந்த மனிதர் நடந்துகொண்ட விதம் பற்றியும் தெரிவித்தார். ஆகவே, நபி (ஸல்) அவர்கள் உசாமா (ரலி) அவர்களை வரவழைத்து அவர்களிடம் "ஏன் அவரைக் கொன்றாய்?" என்று கேட்டார்கள். உசாமா (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! அந்த மனிதர் முஸ்லிம்களுக்குப் பெருத்த சேதத்தை ஏற்படுத்தினார்.இன்னார் இன்னாரை அவர் கொன்றுவிட்டார் (சிலருடைய பெயரை உசாமா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் குறிப்பிட்டார்கள்) ஆகவே, நான் அவரைத் தாக்கினேன். அவர் வாளைக் கண்டதும் (பயந்துபோய்) "லா இலாஹ இல்லல்லாஹ்" என்று (ஏகத்துவ உறுதிமொழி) கூறினார்" என்றார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவரை நீ கொன்றுவிட்டாயா?" என்று கேட்டார்கள். உசாமா, "ஆம்" என்றார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(அவர் ஏற்றுக்கொண்ட ஏகத்துவ உறுதிமொழியான) "லா இலாஹ இல்லல்லாஹ்" மறுமை நாளில் (உனக்கெதிரான சாட்சியாக) வரும்போது நீ என்ன செய்யப் போகிறாய்?" என்று கேட்டார்கள். இதைவிட அதிகமாக வேறெதையும் கேட்காமல், "லா இலாஹா இல்லல்லாஹ்" மறுமை நாளில் வரும் போது நீ என்ன செய்யப்போகிறாய்?" என்றே (திரும்பத் திரும்ப) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.
அத்தியாயம் : 1
பாடம் : 42 "நமக்கெதிராக ஆயுதம் ஏந்தியவர் நம்மைச் சார்ந்தவர் அல்லர்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது.
161. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நமக்கெதிராக ஆயுதம் ஏந்தியவர் நம்மைச் சார்ந்தவர் அல்லர்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
162. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நமக்கெதிராக வாளை உருவியவர் நம்மைச் சார்ந்தவர் அல்லர்.
இதை சலமா பின் அல்அக்வஃ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
163. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நமக்கெதிராக ஆயுதம் ஏந்தியவர் நம்மைச் சார்ந்தவர் அல்லர்.
இதை அபூமூசா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
பாடம் : 43 "நமக்கு மோசடி செய்தவர் நம்மைச் சார்ந்தவர் அல்லர்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது.
164. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நமக்கெதிராக ஆயுதம் ஏந்தியவர் நம்மைச் சார்ந்தவர் அல்லர்; நம்மை வஞ்சித்தவரும் நம்மைச் சார்ந்தவர் அல்லர்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓர் உணவு(தானிய)க் குவியலைக் கடந்து சென்றார்கள். (விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த) அந்தக் குவியலுக்குள் தமது கையை அவர்கள் நுழைத்தார்கள். அப்போது (தானியக் குவியலில் இருந்த) ஈரம் அவர்களின் விரல்களில் பட்டது. உடனே அவர்கள் "உணவு (தானியத்தின்) உரிமையாளரே! என்ன இது (ஈரம்)?" என்று கேட்டார்கள். அதற்கு அவர், "இதில் மழைச்சாரல் பட்டுவிட்டது, அல்லாஹ்வின் தூதரே!" என்றார். அப்போது அவர்கள், "ஈரமானதை மக்கள் பார்க்கும் விதமாக உணவு (தானியத்து)க்கு மேலே வைத்திருக்கக் கூடாதா?" என்று கேட்டுவிட்டு, "மோசடி செய்தவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
பாடம் : 44 (துக்கத்தில்) கன்னங்களில் அறைந்துகொள்வது, சட்டைப் பைகளைக் கிழித்துக் கொள்வது, அறியாமைக் கால வழக்கப்படி புலம்புவது ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளன.
165. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(துக்கத்தில்) கன்னங்களில் அறைந்துகொள்பவன், அல்லது சட்டைப் பைகளைக் கிழித்துக் கொள்பவன், அல்லது அறியாமைக் கால வழக்கப்படி புலம்புகின்றவன் நம்மைச் சார்ந்தவன் அல்லன்.
இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் இப்னு நுமைர், அபூபக்ர் பின் அபீஷைபா ஆகியோரது அறிவிப்பில் "அல்லது" என்பது இடம்பெறவில்லை. "அறைந்துகொள்பவனும் கிழித்துக்கொள்பவனும் புலம்புகின்றவனும்" என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 1
166. மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் ("அல்லது" என்பது இடம்பெறாமல்) "அறைந்துகொள்பவனும் கிழித்துக் கொள்பவனும் புலம்புகின்றவனும்" என்றே காணப்படுகிறது.
அத்தியாயம் : 1
167. அபூபுர்தா பின் அபீமூசா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(என் தந்தை) அபூமூசா (ரலி) அவர்கள் (தமது) கடுமையான (மரண) வேதனையில் மயக்கமடைந்துவிட்டார்கள். அவர்களது தலை அவர்களுடைய குடும்பப் பெண் ஒருவரின் மடிமீது இருந்தது. அப்போது அவர்களுடைய குடும்பத்துப் பெண்மணி ஒருவர் ஓலமிட்டு அழுதார். அபூமூசா (ரலி) அவர்களால் அப்பெண்ணுக்கு பதிலேதும் சொல்ல முடியவில்லை.
பிறகு மயக்கம் தெளிந்தபோது, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் யாரை விட்டுத் தமது பொறுப்பை விலக்கிக்கொண்டார்களோ அவரை விட்டு நானும் என் பொறுப்பை விலக்கிக் கொள்கிறேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (துன்பத்தின்போது) ஓலமிட்டு அழும் பெண், தலையை மழித்துக்கொள்ளும் பெண், ஆடையைக் கிழித்துக்கொள்ளும் பெண் ஆகியோரிடமிருந்து தமது பொறுப்பை விலக்கிக்கொண்டார்கள்" என்று கூறினார்கள்.
- அப்துர் ரஹ்மான் பின் யஸீத் (ரஹ்), அபூபுர்தா பின் அபீமூசா (ரஹ்) ஆகியோர் கூறியதாவது:
அபூமூசா (ரலி) அவர்கள் (மரணப் படுக்கையில் இருந்தபோது) மயக்கமடைந்துவிட்டார்கள். அப்போது அவர்களின் துணைவியார் உம்மு அப்தில்லாஹ் சப்தமிட்டு (ஒப்பாரிவைத்து) அழுது கொண்டே (அங்கு) வந்தார். பிறகு மயக்கம் தெளிந்தபோது, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "(துக்கத்தில்) தலையை மழித்துக்கொண்டவர், ஓலமிட்டு அழுதவர், ஆடையைக் கிழித்துக்கொண்டவர் ஆகியோரிடமிருந்து நான் எனது பொறுப்பை விலகிக் கொண்டேன்" (எனக்கும் அவர்களுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது) என்று கூறியது உனக்குத் தெரியாதா?" என்று அபூமூசா (ரலி) அவர்கள் கேட்டார்கள். இந்த ஹதீஸைத் தம் துணைவியாருக்கு ஏற்கெனவே அபூமூசா (ரலி) அவர்கள் கூறியிருந்தார்கள். (எனவேதான் "உனக்குத் தெரியாதா?" என்று கேட்டார்கள்.)
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் இயாள் அல்அஷ்அரீ (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "நான் எனது பொறுப்பை விலக்கிக்கொண்டேன்" என்பதற்கு பதிலாக "நம்மைச் சார்ந்தவர் அல்லர்" என்று (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக) வந்துள்ளது.
அத்தியாயம் : 1
பாடம் : 45 கோள் சொல்வது வன்மையாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
168. அபூவாயில் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் (மக்கள்) பேசிக்கொள்வதை (ஆட்சியாளர்வரைக் கொண்டுபோய்) கோள் சொல்லிக்கொண்டிருக்கிறார் எனும் செய்தி ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்களுக்கு எட்டியது. அப்போது ஹுதைஃபா (ரலி) அவர்கள், "கோள் சொல்கின்றவன் சொர்க்கம் செல்லமாட்டான் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்" என்றார்கள்.- இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
169. ஹம்மாம் பின் அல்ஹாரிஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் (மக்களிடையே நடக்கும்) உரையாடல்களை ஆட்சியாளர்வரைக் கொண்டு போய்ச் சேர்த்துக்கொண்டிருந்தார். நாங்கள் (ஒரு நாள்) பள்ளிவாசலில் அமர்ந்திருந்தோம். அப்போது மக்கள், "இதோ! இவர் (நமக்கிடையே நடக்கும்) உரையாடல்களை ஆட்சியாளர் வரைக் கொண்டுபோய்ச் சேர்ப்பவர்களில் ஒருவர் என்று (ஒருவரைச் சுட்டிக்காட்டி) கூறினர். அந்த மனிதர் வந்து எங்கள் அருகில் அமர்ந்தார். அப்போது ஹுதைஃபா (ரலி) அவர்கள், "கோள் சொல்கின்றவன் சொர்க்கம் செல்லமாட்டான் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
170. ஹம்மாம் பின் அல்ஹாரிஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் ஹுதைஃபா (ரலி) அவர்களுடன் பள்ளிவாசலில் அமர்ந்திருந்தோம். அப்போது ஒரு மனிதர் வந்து எங்கள் அருகில் உட்கார்ந்தார். உடனே ஹுதைஃபா (ரலி) அவர்களிடம் "இதோ! இந்த மனிதர் (நாம் பேசிக்கொள்ளும்) பல விஷயங்களை ஆட்சியாளர் வரைக் கொண்டு போய்ச் சொல்கிறார்" என்று கூறப்பட்டது. அப்போது ஹுதைஃபா (ரலி) அவர்கள் அந்த மனிதருக்குக் கேட்கும் விதமாக, "கோள் சொல்கின்றவன் சொர்க்கம் செல்லமாட்டான் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
பாடம் : 46 கீழங்கியை (கணுக்காலுக்கு)க் கீழே இறக்கிக் கட்டுவது,கொடுத்த நன்கொடையைச் சொல்லிக் காட்டுவது, பொய்ச் சத்தியம் செய்து சரக்கை விற்பனை செய்வது ஆகியன வன்மையாகத் தடை செய்யப்பட்டுள்ளன; (இந்த) மூன்று (செயல்களைச் செய்கின்ற) பேர்களிடம் மறுமை நாளில் அல்லாஹ் பேசவுமாட்டான்; அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவுமாட்டான்; அவர்களைத் தூய்மைப்படுத்தவுமாட்டான்; துன்பம் தரும் வேதனைதான் அவர்களுக்கு உண்டு.
171. அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் "மூன்று பேரிடம் மறுமை நாளில் அல்லாஹ் பேசவுமாட்டான்; அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவுமாட்டான்; அவர்களைத் தூய்மைப்படுத்தவுமாட்டான்; அவர்களுக்குத் துன்பம் தரும் வேதனைதான் உண்டு" என்று கூறினார்கள். இதையே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மூன்று முறை கூறினார்கள். நான், "(அவ்வாறாயின்) அவர்கள் இழப்புக்குள்ளாகிவிட்டனர்; நஷ்டமடைந்துவிட்டனர்; அவர்கள் யார் அல்லாஹ்வின் தூதரே!" என்று கேட்டேன். அதற்கு, "தமது ஆடையை (கணுக்காலுக்கு)க் கீழே இறக்கிக் கட்டியவர், (செய்த உபகாரத்தைச்) சொல்லிக் காட்டுபவர், பொய்ச் சத்தியம் செய்து தமது சரக்கை விற்பனை செய்பவர் ஆகியோர்(தாம் அம்மூவரும்)" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மூன்று பேரிடம் மறுமை நாளில் அல்லாஹ் பேசமாட்டான்: 1. செய்த தருமத்தைச் சொல்லிக் காட்டுபவர். அவர் எதை வழங்கினாலும் அதைச் சொல்லிக் காட்டாமல் இருக்கமாட்டார். 2. பொய்ச் சத்தியம் செய்து தமது சரக்கை விற்பனை செய்பவர். 3. தமது கீழங்கியை (கணுக் காலுக்கும்) கீழே இறக்கிக் கட்டுபவர்.
இதை அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "(அந்த) மூன்று பேரிடம் அல்லாஹ் பேசவுமாட்டான்; அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவுமாட்டான்; அவர்களைத் தூய்மைப்படுத்தவுமாட்டான்; அவர்களுக்குத் துன்பம் தரும் வேதனைதான் உண்டு" என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 1
172. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"மூன்று பேரிடம் மறுமை நாளில் அல்லாஹ் பேசவுமாட்டான்; அவர்களைத் தூய்மைப் படுத்தவுமாட்டான்- அபூமுஆவியா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "அவர்களைப் பார்க்கவுமாட்டான்" என்றும் இடம்பெற்றுள்ளது.- அவர்களுக்குத் துன்பம் தரும் வேதனைதான் உண்டு: விபசாரம் புரிகின்ற முதியவர், பொய் சொல்கின்ற அரசன், பெருமையடிக்கும் ஏழை ஆகியோர்(தாம் அம்மூவரும்).
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
173. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மூன்று பேரிடம் மறுமை நாளில் அல்லாஹ் பேசவுமாட்டான்; அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவுமாட்டான்; அவர்களைத் தூய்மைப்படுத்தவுமாட்டான்; அவர்களுக்குத் துன்பம் தரும் வேதனைதான் உண்டு:
ஒருவர், வனாந்தரத்தில் தேவைக்கு அதிகமாகத் தண்ணீரை வைத்திருந்தும், வழிப்போக்கனுக்கு வழங்காமல் அதைத் தடுப்பவர் ஆவார்.
இன்னொருவர், அஸ்ர் தொழுகைக்குப் பிறகு (மக்கள் கடைவீதியில் திரளும்போது) தமது வியாபாரப்பொருளை ஒருவரிடம் விற்பதற்காகத் தாம் இன்ன விலை கொடுத்து அப்பொருளை வாங்கியதாக அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து அவரை நம்பவும் வைத்துவிட்டவர் ஆவார். ஆனால், உண்மை(யான விலை) வேறொன்றாக இருக்கும்.
மற்றொருவர், ஆட்சித் தலைவரிடம் உலக ஆதாயத்திற்காகவே விசுவாசப் பிரமாணம் (பைஅத்) செய்து கொடுத்தவர் ஆவார். ஆட்சித் தலைவரிடமிருந்து ஆதாயம் கிடைத்தால் (பிரமாணத்தின் அடிப்படையில்) அவரிடம் விசுவாசமாக நடந்துகொள்வார். கிடைக்காவிட்டால் விசுவாசமாக நடந்து கொள்ளமாட்டார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் வேறிரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் ஜரீர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "ஒருவர் இன்னொருவரிடம் ஒரு பொருளுக்கு (இன்னின்னவாறு) விலை கூறினார்" என்று (சிறிது வித்தியாசத்துடன்) இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 1
174. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
"மூன்று பேரிடம் மறுமை நாளில் அல்லாஹ் பேசவுமாட்டான்; அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவுமாட்டான்; அவர்களுக்குத் துன்பம் தரும் வேதனைதான் உள்ளது. ஒருவர், அஸ்ருத் தொழுகைக்குப் பிறகு ஒரு முஸ்லிமின் செல்வத்தை அபகரித்துக்கொள்ளும் நோக்கத்துடன் (பொய்) சத்தியம் செய்தவர்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இந்த ஹதீஸின் தொடர்ச்சி மேற்கண்ட (173ஆவது) ஹதீஸிலுள்ளதைப் போன்றே வந்துள்ளது.
அத்தியாயம் : 1
பாடம் : 47 தற்கொலை செய்வது வன்மையாகத் தடை செய்யப்பட்டுள்ளது; எந்தப் பொருளால் ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறாரோ அதன் மூலமே அவர் நரகத்தில் வேதனை செய்யப்படுவார்; (இறைவனுக்கு அடிபணிந்து வாழ்ந்த) முஸ்லிமைத் தவிர வேறெவரும் சொர்க்கத்தில் நுழையமாட்டார்.
175. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் ஒரு (கூரான) ஆயுதத்தால் தற்கொலை செய்துகொள்கிறாரோ அவர் தமது கையில் அந்த கூராயுதத்தை வைத்துக்கொண்டு நரக நெருப்பில் தமது வயிற்றில் தாமே என்றென்றும் நிரந்தரமாக அதனால் குத்திக்கொண்டேயிருப்பார். யார் விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொள்கிறாரோ அவர் (விஷத்தை கையில் வைத்துக்கொண்டு) நரக நெருப்பில் என்றென்றும் நிரந்தரமாக அதைக் குடித்துக்கொண்டேயிருப்பார். யார் மலையின் மீதிருந்து கீழே குதித்துத் தற்கொலை செய்துகொள்கிறாரோ அவர் நரக நெருப்பில் (தள்ளப்பட்டு மேலிருந்து கீழே) என்றைக்கும் நிரந்தரமாகக் குதித்துக் கொண்டேயிருப்பார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாக வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
176. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் இஸ்லாம் அல்லாத மார்க்த்தின் மீது பொய்ச் சத்தியம் செய்கிறாரோ அவர் தாம் சொன்னதைப் போன்றே ஆகிவிடுகிறார். எந்தப் பொருளின் மூலம் ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறாரோ அதன் மூலமே அவர் மறுமை நாளில் வேதனை செய்யப்படுவார். தமக்கு உடைமையில்லாத ஒன்றில் நேர்த்திக்கடன் செய்வது(ம் அந்த நேர்த்திக் கடனை நிறைவேற்றுவதும்) எந்த மனிதருக்கும் தகாது.
இதை அந்த மரத்தினடியில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (பைஅத்துர் ரிள்வான்) உறுதிமொழி அளித்தவரான ஸாபித் பின் அள்ளஹ்ஹாக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தமக்கு உடைமையில்லாத ஒன்றில் நேர்த்திக்கடன் செய்வது(ம் அந்த நேர்த்திக்கடனை நிறைவேற்றுவதும்) எந்த மனிதருக்கும் தகாது. ஓர் இறைநம்பிக்கையாளரை சபிப்பது அவரைக் கொலை செய்வதற்குச் சமம். இவ்வுலகில் எந்தப் பொருள் மூலம் ஒருவர் தற்கொலை செய்துகொள்கிறாரோ, அதன் மூலமே மறுமை நாளில் அவர் வேதனை செய்யப்படுவார். யார் (தனது செல்வத்தை) அதிகமாக்கிக் கொள்வதற்காகப் பொய்வாதம் புரிகிறாரோ அவருக்கு அல்லாஹ் குறைவையே (இழப்பையே) அதிகப்படுத்துவான். யார் (நீதிபதி முன் அளிக்கும்) பிரமாண வாக்குமூலத்தின்போது பொய்ச் சத்தியம் செய்கிறாரோ (அவர் தம்மீது கோபம் கொண்ட நிலையிலேயே அல்லாஹ்வைச் சந்திப்பார்).
இதை ஸாபித் பின் அள்ளஹ்ஹாக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 1
177. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் இஸ்லாம் அல்லாத மார்க்கத்தின் மீது திட்டமிட்டுப் பொய்ச் சத்தியம் செய்கிறாரோ அவர் தாம் சொன்னதைப் போன்றே ஆகிவிடுகிறார். எந்தப் பொருள் மூலம் ஒருவர் தற்கொலை செய்துகொள்கிறாரோ அதன் மூலமே அல்லாஹ் அவரை நரக நெருப்பில் வேதனை செய்வான்.
இதை ஸாபித் பின் அள்ளஹ்ஹாக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் அறிவிப்பாளர் சுஃப்யான் அஸ்ஸவ்ரீ (ரஹ்) அவர்கள் அறிவித்துள்ள ஹதீஸிலேயே மேற்கண்டவாறு இடம் பெற்றுள்ளது.
ஷுஅபா (ரஹ்) அவர்கள் அறிவித்துள்ள ஹதீஸில், "யார் இஸ்லாம் அல்லாத மார்க்கத்தின் மீது பொய்ச் சத்தியம் செய்கிறாரோ அவர் தாம் சொன்னதைப் போன்றே ஆகிவிடுகிறார். எந்தப் பொருள் மூலம் ஒருவர் தம்மைத்தாமே அறுத்துக்(கொண்டு தற்கொலை செய்து) கொள்கிறாரோ அதன் மூலமே அவர் மறுமை நாளில் அறுக்கப்படுவார்" என்று இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 1
178. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நாங்கள் ஹுனைன் போரில் கலந்து கொண்டோம்.அப்(போரின்)போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம்முடன்) இருந்த முஸ்லிம் என்று கருதப்பட்ட ஒருவரைப் பற்றி "இவர் நரகவாசிகளில் ஒருவர்" என்று கூறினார்கள். போரிடும் நேரம் வந்தபோது அந்த நபர் கடுமையாகப் போரிட்டார். அதனால் அவருக்குக் காயங்கள் ஏற்பட்டன. அப்போது (நபி (ஸல்) அவர்களிடம்) "அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் யாரைப் பற்றி "இவர் நரகவாசிகளில் ஒருவர்" என்று சொன்னீர்களோ அவர் இன்றைய தினம் கடுமையாகப் போரிட்டு இறந்துவிட்டார்" என்று கூறப்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள் "அவர் நரகத்திற்குத்தான்" என்றார்கள். உடனே முஸ்லிம்களில் சிலர் (நபி (ஸல்) அவர்களின் இக்கூற்றை) சந்தேகப்படும் அளவுக்குச் சென்றுவிட்டார்கள். நிலைமை இவ்வாறிருக்க, "அந்த மனிதர் (போரில்) இறக்கவில்லை. அவருக்குக் கடுமையான காயம்தான் ஏற்பட்டது" என்று கூறப்பட்டது. பின்னர் இரவு வந்தபோது அவரால் வலி பொறுக்க முடியாமல் தற்கொலை செய்துகொண்டார். இச்செய்தி நபி (ஸல்) அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. அப்போது அவர்கள், "அல்லாஹ் மிகவும் பெரியவன். நான் அல்லாஹ்வின் அடியானும் அவனுடைய தூதரும் ஆவேன் என்று நான் உறுதி கூறுகிறேன்" என்றார்கள். பிறகு பிலால் (ரலி) அவர்களிடம் "(துன்பங்களை எல்லா நிலைகளிலும் சகித்துக்கொண்டு அடிபணிந்து வாழ்ந்த) முஸ்லிமான மனிதர்தாம் சொர்க்கத்தில் நுழைவார். மேலும், அல்லாஹ் இந்த மார்க்கத்திற்குப் பாவியான மனிதனின் மூலமும் வலுவூட்டுகிறான்" என்று மக்களிடையே அறிவிப்புச் செய்யுமாறு கூறினார்கள். அவ்வாறே பிலால் (ரலி) அவர்கள் மக்களிடையே அறிவிப்புச் செய்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
179. சஹ்ல் பின் சஅத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் (யூத) இணைவைப்பாளர்களும் (கைபரில்) சந்தித்துப் போரிட்டனர். (ஒருநாள் போர் முடிந்து) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தம் படையினரிடமும், எதிர் அணியினர் தம் படையினரிடமும் திரும்பியபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்களிடையே ("குஸ்மான்" என்றழைக்கப்பட்ட) ஒரு மனிதர் இருந்தார். அவர் (எதிரிகளின் அணியிலிருந்து) பிரிந்து சென்ற (மற்றும் பிரிந்து செல்லாத) எவரையும் விட்டுவிடாமல் அவர்களைப் பின்தொடர்ந்து சென்று தமது வாளால் வெட்டி வீழ்த்திக்கொண்டிருந்தார். "இன்று இவரைப் போன்று நம்மில் வேறு யாரும் தேவையான அளவிற்கு (நிறைவாகப்) போரிடவில்லை" என்று மக்கள் பேசிக்கொண்டனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இவர் நரகவாசிகளில் ஒருவர்" என்று (அந்த வீரரைப் பற்றிக்) கூறினார்கள். உடனே மக்களில் ஒருவர், "நான் அவருடன் தொடர்ந்து செல்லப் போகிறேன்" என்று கூறிவிட்டு அந்த மனிதருடன் புறப்பட்டார்.
அந்த வீரர் நிற்கும்போதெல்லாம் அவருடன் இவரும் நின்றார். அவர் விரைந்துசென்றால் அவருடன் இவரும் விரைந்துசென்றார். இந்நிலையில் அவ்வீரர் (போரில்) கடுமையாகக் காயப்படுத்தப்பட்டார். அதனால் அவர் அவசரமாக இறந்துபோக விரும்பி தனது வாளின் கீழ்முனையை பூமியில் (நட்டு) வைத்து, அதன் (கூரான) மேல் முனையைத் தன் மார்புகளுக்கிடையே வைத்து, பிறகு அந்த வாளின் மீது தன் உடலை சாய்த்துக்கொண்டு தன்னை மாய்த்துக்கொண்டார். (பின்தொடர்ந்து சென்ற) அந்த மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "தாங்கள் அல்லாஹ்வின் தூதர் என்று நான் உறுதிகூறுகின்றேன்" என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "என்ன விஷயம்?" என்று கேட்டார்கள். அதற்கு அவர், "இவர் நரகவாசிகளில் ஒருவர் என்று ஒரு மனிதரைப் பற்றித் தாங்கள் சற்று முன்பு கூறினீர்களல்லவா? அதை மக்கள் பெரிதாகக் கருதினர். எனவே, நான் "அவர் விஷயத்தில் உங்களுக்கு நான் பொறுப்பு" என்று (மக்களிடம்) கூறிவிட்டு அவரைத் தேடிப் புறப்பட்டேன். (அவரைக் கண்டுபிடித்துப் பின்தொடர்ந்தேன்.) அவர் (ஒரு கட்டத்தில் எதிரிகளால்) மிகக் கடுமையாகக் காயப்படுத்தப்பட்டார். எனவே, அவர் அவசரமாக இறந்துபோக விரும்பி, தனது வாளின் கீழ்முனையை பூமியில் (நட்டு) வைத்து அதன் மேல் முனையைத் தன் மார்புகளுக்கிடையில் வைத்துத் தன்னை அந்த வாளின் மீது சாய்த்துக்கொண்டு தன்னையே மாய்த்துக்கொண்டார்" என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "மக்களின் வெளிப்பார்வைக்கு ஒரு மனிதர் சொர்க்கவாசிகளின் (நற்)செயலைச் செய்துவருவார். ஆனால், (உண்மையில்) அவர் நரகவாசிகளில் ஒருவராக இருப்பார். அவ்வாறே ஒரு மனிதர் மக்களின் வெளிப்பார்வைக்கு நரகவாசிகளின் (தீய) செயலைச் செய்துவருவார். ஆனால், (உண்மையில்) அவர் சொர்க்க வாசிகளில் ஒருவராக இருப்பார்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 1
180. ஹசன் அல்பஸரி (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
உங்களுக்கு முன்னிருந்த (பனூ இஸ்ராயீல்) மக்களிடையே ஒருவர் இருந்தார். அவருடைய உடலில் ஒரு கொப்புளம் கிளம்பியது. அது அவரைத் தொல்லைபடுத்தியபோது (பொறுமை இழந்த) அவர் தமது அம்புக் கூட்டிலிருந்து ஓர் அம்பை உருவி கொப்புளத்தில் பாய்ச்சினார். (கொப்புளம் உடைந்து) இரத்தம் நிற்காமல் கொட்டிக் கொண்டிருந்தது. இறுதியில் அவர் இறந்துபோனார். உங்கள் இறைவன் "(என் அடியான் அவசரப்பட்டு தன்னை அழித்துக் கொண்டதால்) அவன்மீது நான் சொர்க்கத்தைத் தடை செய்துவிட்டேன்" என்று கூறினான்.
(இதை ஹசன் அல்பஸரி (ரஹ்) அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஷைபான் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:)
பிறகு ஹசன் அல்பஸரி (ரஹ்) அவர்கள் (பஸ்ராவிலுள்ள) பள்ளிவாசலை நோக்கித் தமது கையை நீட்டியவாறு, "ஆம், அல்லாஹ்வின் மீதாணையாக! ஜுன்தப் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து இந்த ஹதீஸைத் தாம் செவியுற்றதாக இந்தப் பள்ளிவாசலில் வைத்துத்தான் எனக்கு அறிவித்தார்கள்" என்றார்கள்.
அத்தியாயம் : 1
181. ஹசன் அல்பஸரி (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஜுன்தப் பின் அப்தில்லாஹ் அல்பஜலீ (ரலி) அவர்கள் (இந்த நபிமொழியை பஸ்ராவிலுள்ள) இந்தப் பள்ளிவாசலில் எமக்கு அறிவித்தார்கள். (அவர்கள் அறிவித்ததிலிருந்து அதை) நாம் மறக்கவில்லை; ஜுன்தப் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்மீது பொய்யுரைத்திருப்பார்களோ என்ற அச்சமும் நமக்கு இல்லை. ஜுன்தப் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவித்தார்கள்:
"உங்களுக்கு முன்னிருந்தவர்களிடையே வாழ்ந்த ஒரு மனிதரின் உடலில் கொப்புளம் கிளம்பியது" என்று தொடங்கி (மேற்கண்ட) ஹதீஸிலுள்ளதைப் போன்றே அறிவித்தார்கள்.
அத்தியாயம் : 1
பாடம் : 48 (பங்கிடப்படாத போர்ச்செல்வம் போன்ற பொதுச் சொத்துகளை) கையாடல் செய்வது வன்மையாகத் தடை செய்யப்பட்டுள்ளது. இறைநம்பிக்கை கொண்டவரைத் தவிர வேறெவரும் சொர்க்கத்தில் நுழையமாட்டார்கள்.
182. உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
கைபர் போர் தினத்தன்று நபித்தோழர்களில் சிலர் "இன்னார் உயிர்த்தியாகி (ஷஹீத்) ஆகி விட்டார், இன்னார் உயிர்த்தியாகி ஆகிவிட்டார்" என்று கூறிக்கொண்டேவந்து இறுதியாக ஒரு மனிதரைப் பற்றி "இன்னாரும் உயிர்த்தியாகி ஆகிவிட்டார்" என்று கூறினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இல்லை! (போர்ச்செல்வங்கள் பங்கிடப்படும் முன் அவற்றிலிருந்து) கோடுபோட்ட வண்ணப் போர்வை ஒன்றை அவர் எடுத்துக்கொண்ட காரணத்தால் அவரை நான் நரகத்தில் கண்டேன் (எனவே அவரை உயிர்த்தியாகி என்று கூறாதீர்கள்)" என்றார்கள்.
பிறகு (என்னிடம்) "கத்தாபின் புதல்வரே! நீங்கள் சென்று, "இறைநம்பிக்கையாளர்கள்தாம் சொர்க்கத்தில் நுழைவார்கள்" என்று மக்களுக்கு அறிவித்துவிடுங்கள்!" என்றார்கள். அவ்வாறே நானும் சென்று, "அறிந்துகொள்ளுங்கள்! இறைநம்பிக்கையாளர்கள்தாம் சொர்க்கத்தில் நுழைவார்கள்" என்று (மக்களிடையே) அறிவித்தேன்.
இதை அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 1
183. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் கைபரை நோக்கிப் புறப்பட்டோம். அல்லாஹ் எங்களுக்கு வெற்றியளித்தான். அப்போ(ரின்போ)து நாங்கள் தங்கத்தையோ வெள்ளியையோ போர்ச் செல்வங்களாகப் பெறவில்லை. உபயோகப் பொருட்கள், உணவுப் பொருட்கள், ஆடைகள் ஆகியவற்றையே போர்ச்செல்வங்களாகப் பெற்றோம். பிறகு நாங்கள் (மதீனா அருகிலுள்ள) "வாதீ(அல்குரா)" எனுமிடத்தை நோக்கி நடந்தோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அவர்களுடைய (மித்அம் என்றழைக்கப்படும்) ஓர் அடிமையும் இருந்தார். அவரை "பனுள்ளுபைப்" குலத்திலுள்ள ஜுதாம் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் அல்லாஹ்வின் தூதருக்கு அன்பளிப்பாக வழங்கியிருந்தார். அவர் "ரிஃபாஆ பின் ஸைத்" என்று அழைக்கப் பட்டார்.
நாங்கள் அந்த (வாதில் குரா) பள்ளத்தாக்கில் இறங்கியபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அந்த அடிமை எழுந்து அவர்களது சிவிகையை (ஒட்டகத்திலிருந்து) இறக்கிக் கொண்டிருந்தார். அப்போது (எங்கிருந்தோ வந்த) ஓர் அம்பால் அவர் தாக்கப்பட்டார். அதுவே அவரது இறப்புக்குக் காரணமாக அமைந்தது. அப்போது நாங்கள், "அல்லாஹ்வின் தூதரே! அவருக்கு இறைவழியில் உயிர்த் தியாகம் செய்யும் பேறு கிடைத்துவிட்டது. வாழ்த்துகள்!" என்று கூறினோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இல்லை, என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! கைபர் போரில் கிடைத்த போர்ச் செல்வங்கள் பங்கிடப்படும் முன்பே அவர் எடுத்துக்கொண்ட போர்வை அவருக்கு நரக நெருப்பாக எரிந்துகொண்டிருக்கிறது" என்று கூறினார்கள்.
(இதைக் கேட்ட) மக்கள் திடுக்குற்றனர். அப்போது ஒரு மனிதர் "ஒரு செருப்பு வாரை" அல்லது "இரண்டு செருப்பு வார்களை"க் கொண்டு வந்து "(இதை) நான் கைபர் போரின்போது எடுத்துக் கொண்டேன்" என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(இது சாதாரண செருப்பு வார் அன்று; இதைத் திருப்பித் தராமல் இருந்திருந்தால் இதுவே) "நரகத்தின் செருப்பு வார்" அல்லது "நரகத்தின் இரு செருப்பு வார்கள்" ஆகும்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
பாடம் : 49 "தற்கொலை செய்துகொண்டவர் இறைமறுப்பாளர் (காஃபிர்) அல்லர்" என்பதற்கான ஆதாரம்.
184. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அறியாமைக் காலத்தில் தவ்ஸ் குலத்தாருக்குக் கோட்டை ஒன்றிருந்தது. தவ்ஸ் குலத்தைச் சேர்ந்த துஃபைல் பின் அம்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! (தாங்கள் ஹிஜ்ரத் செய்யும்போது எதிரிகளிடமிருந்து உங்களைத்) தற்காத்துக்கொள்ள உறுதியான கோட்டை கொத்தளம் தங்களுக்கு வேண்டுமா? (அத்தகைய கோட்டை தவ்ஸ் குலத்தாரின் வசிப்பிடத்தில் உள்ளது)" என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் அதற்கு இணங்கவில்லை. (அந்த வாய்ப்பை மதீனாவாசிகளான) அன்சாரிகளுக்கென அல்லாஹ் வழங்கியிருந்ததே அதற்குக் காரணமாகும். நபி (ஸல்) அவர்கள் நாடு துறந்து மதீனாவுக்கு (ஹிஜ்ரத்) சென்றபோது நபி (ஸல்) அவர்களிடம் துஃபைல் பின் அம்ர் (ரலி) அவர்களும் நாடு துறந்து (ஹிஜ்ரத்) சென்றார்கள். துஃபைல் (ரலி) அவர்களுடன் அவர்களுடைய சமூகத்தைச் சேர்ந்த ஒரு மனிதரும் நாடு துறந்து சென்றார். (அவர்கள் மதீனாவிற்குச் சென்றபோது) மதீனாவின் தட்பவெப்பநிலை அவர்களுக்கு ஒத்துக்கொள்ளவில்லை. அந்த மனிதர் நோய்வாய்ப்பட்டுவிட்டார். (நோயின் வேதனை பொறுக்க முடியாமல்) பதறிப்போன அந்த மனிதர் தம்முடைய பெரிய அம்புகளை எடுத்துத் தமது கை நாடியை அறுத்துக் கொண்டார். கைகளிலிருந்து இரத்தம் கொட்டியது. இறுதியில் அவர் இறந்துவிட்டார். அவரைத் துஃபைல் பின் அம்ர் (ரலி) அவர்கள் கனவில் கண்டார்கள். அவர் நல்ல நிலையில் தான் இருந்தார். ஆனால், அவருடைய இரு கைகளும் போர்த்தி மூடப்பட்டு இருப்பதைக் கண்டார்கள். அவரிடம், "உம்மிடம் உம்முடைய இறைவன் எவ்வாறு நடந்துகொண்டான்?" என்று கேட்டார்கள். அதற்கு அந்த மனிதர், "நான் நபி (ஸல்) அவர்களிடம் நாடு துறந்து (ஹிஜ்ரத்) வந்ததால் அல்லாஹ் எனக்கு மன்னிப்பு அளித்தான்" என்று பதிலளித்தார். துஃபைல் (ரலி) அவர்கள், "ஏன் உம்மிரு கைகளும் போர்த்தி மூடப்பட்டிருக்கின்றன?" என்று கேட்டார்கள். "நீ வீணாக்கிய உனது கையை நாம் சீராக்கமாட்டோம்" என்று (இறைவனின் தரப்பிலிருந்து) என்னிடம் கூறப்பட்டது" என்று அவர் சொன்னார்.
துஃபைல் (ரலி) அவர்கள் இக்கனவு பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் எடுத்துரைத்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இறைவா! அவருடைய இரு கைகளுக்கும் மன்னிப்பு அளிப்பாயாக!" என்று பிரார்த்தித்தார்கள்.
அத்தியாயம் : 1
பாடம் : 50 மறுமை நாள் நெருங்கும்போது ஒரு காற்று வீசும்; எவருடைய உள்ளத்தில் சிறிதளவு இறைநம்பிக்கை இருக்குமோ அவ(ரது உயி)ரை அது கைப்பற்றும்.
185. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(மறுமை நாள் நெருங்கும்போது) யமன் நாட்டி(ன் திசையி)லிருந்து பட்டைவிட மென்மையான ஒரு காற்றை அல்லாஹ் அனுப்புவான். எவரது உள்ளத்தில் "கடுகளவு" அல்லது "அணுவளவு" இறைநம்பிக்கை உள்ளதோ அவ(ரது உயி)ரை அது கைப்பற்றிக் கொள்ளும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில், அபூஅல்கமா அல்ஃபர்வீ (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "கடுகளவு" என்றும் அப்துல் அஸீஸ் பின் முஹம்மத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "அணுவளவு" என்றும் இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 1
பாடம் : 51 குழப்பங்கள் தோன்றுவதற்கு முன் விரைந்து (நற்)செயல்கள் புரியும்படி வந்துள்ள தூண்டுதல்.
186. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இருள் மிகுந்த இரவின் பகுதிகளைப் போன்ற குழப்பங்கள் தோன்றுவதற்கு முன் விரைந்து (நற்)செயல்கள் புரிந்துகொள்ளுங்கள். (அக்குழப்பங்களின்போது) காலையில் இறை நம்பிக்கையாளனாக இருக்கும் ஒரு மனிதன் மாலையில் இறைமறுப்பாளனாக மாறிவிடுவான். மாலையில் இறைநம்பிக்கையாளனாக இருக்கும் ஒருவன் காலையில் இறைமறுப்பாளனாக மாறிவிடுவான். இவ்வுலகின் அற்ப சுகங்களுக்காகத் தனது மார்க்கத்தையே அவன் விற்றுவிடுவான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
பாடம் : 52 இறைநம்பிக்கையாளர் தமது (நற்)செயல் அழிந்துவிடுமோ என அஞ்சுதல்.
187. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
"இறைநம்பிக்கை கொண்டவர்களே! உங்கள் குரல்களை நபியின் குரலுக்கு மேல் உயர்த்தாதீர்கள்!" எனும் இந்த (49:2ஆவது) வசனம் அருளப்பெற்ற பின் ஸாபித் பின் கைஸ் (ரலி) அவர்கள் தமது இல்லத்திலேயே அமர்ந்து விட்டார்கள். "நான் நரகவாசிகளில் ஒருவன்" என்று கூறிக்கொண்டு, நபி (ஸல்) அவர்களிடம் வராமல் (வீட்டிலேயே) அடைந்துகிடந்தார்கள். எனவே, நபி (ஸல்) அவர்கள் (ஸாபித் குறித்து) சஅத் பின் முஆத் (ரலி) அவர்களிடம், "அபூ அம்ர்! ஸாபித்துக்கு என்ன ஆயிற்று? அவருக்கு உடல் நலமில்லையா?" என்று கேட்டார்கள். அதற்கு சஅத் (ரலி) அவர்கள், "அவர் என் பக்கத்து வீட்டுக்காரர்தாம். அவருக்கு எந்த நோயுமிருப்பதாக எனக்குத் தெரியவில்லை" என்று கூறினார்கள். பிறகு சஅத் (ரலி) அவர்கள் ஸாபித் (ரலி) அவர்களிடம் சென்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டதைப் பற்றிச் சொன்னார்கள்.
அப்போது ஸாபித் (ரலி) அவர்கள், "இந்த (49:2ஆவது) வசனம் அருளப்பெற்றுள்ளது. உங்களில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு முன் குரலை உயர்த்திப் பேசுபவன் நான் என்பதை நீங்கள் அறிந்தே உள்ளீர்கள். ஆகவே நான், நரகவாசிகளில் ஒருவன்தான்" என்று கூறினார்கள். இதை சஅத் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் (சென்று) சொன்னார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இல்லை. அவர் சொர்க்கவாசிகளில் ஒருவர் ஆவார்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 1
188. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
"ஸாபித் பின் கைஸ் பின் ஷம்மாஸ் (ரலி) அவர்கள் அன்சாரிகளின் பேச்சாளராக இருந்தார். இந்த (49:2ஆவது) வசனம் அருளப்பெற்றபோது..." என்று தொடங்கி மற்றவை மேற்கண்ட ஹதீஸிலுள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
ஆனால், அதில் சஅத் பின் முஆத் (ரலி) அவர்களைப் பற்றியக் குறிப்பேதும் இல்லை.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "உங்கள் குரல்களை நபியின் குரலைவிட உயர்த்தாதீர்கள் எனும் (49:2ஆவது) இறைவசனம் அருளப்பெற்றபோது..." என்று ஹதீஸ் தொடங்குகிறது. அந்த ஹதீஸிலும் சஅத் பின் முஆத் (ரலி) அவர்களைப் பற்றியக் குறிப்பு இல்லை.
- மேற்கண்ட ஹதீஸ் இன்னோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதிலும் சஅத் பின் முஆத் (ரலி) அவர்களைப் பற்றியக் குறிப்பு இடம்பெறவில்லை. அதில் "எங்களிடையே நடமாடிய ஒரு சொர்க்கவாசியாகவே நாங்கள் ஸாபித் (ரலி) அவர்களைக் கருதிவந்தோம்" என்று (அனஸ் (ரலி) அவர்கள்) கூறினார்கள் எனக் கூடுதலாக இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 1
பாடம் : 53 அறியாமைக் காலத்தில் செய்த (தீய) செயல்களுக்காக ஒருவர் (மறுமையில்) தண்டிக்கப்படுவாரா?
189. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மக்களில் சிலர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், "நாங்கள் அறியாமைக் காலத்தில் செய்த(த)வற்றிற்காகத் தண்டிக்கப்படுவோமா, அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "யார் இஸ்லாத்தில் (இணைந்து தொடர்ந்து) நன்மை புரிகிறாரோ அவர் அறியாமைக் காலத்தில் செய்த தவறுகளுக்காகத் தண்டிக்கப் படமாட்டார். யார் (இஸ்லாத்தில் நுழைந்த பிறகு "இறைமறுப்பு" எனும்) தீமை புரிகிறாரோ அவர் அறியாமைக் காலத்தில் செய்த தவறுகளுக்காகவும் இஸ்லாத்தில் (நுழைந்த பிறகு) செய்த தவறுகளுக்காகவும் (மறுமையில்) தண்டிக்கப்படுவார்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 1
190. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் "அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் அறியாமைக் காலத்தில் செய்த(த)வற்றிற்காக (மறுமையில்) தண்டிக்கப்படுவோமா?" என்று கேட்டோம். அதற்கு அவர்கள், "யார் இஸ்லாத்தில் (நுழைந்து தொடர்ந்து) நன்மை புரிகிறாரோ அவர் அறியாமைக் காலத்தில் செய்த(த)வற்றுக்காக தண்டிக்கப்படமாட்டார். யார் இஸ்லாத்தில் (நுழைந்த பிறகு "இறைமறுப்பு" எனும்) தீமை புரிகிறாரோ அவர் (இஸ்லாத்தைத் தழுவுவதற்கு) முன் செய்த தவறுகளுக்காகவும் (இஸ்லாத்தை ஏற்ற பின் செய்த இந்த) பிந்திய தவறுகளுக்காகவும் தண்டிக்கப்படுவார்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
191. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
பாடம் : 54 முந்தைய பாவங்களை இஸ்லாம் அழித்துவிடுகிறது. ஹிஜ்ரத்தும் ஹஜ்ஜும் அவ்வாறுதான்.
192. அப்துர் ரஹ்மான் பின் ஷுமாசா அல்மஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இறப்பின் நெருக்கத்தில் இருந்த அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்களிடம் நாங்கள் சென்றோம். அவர்கள் நீண்ட நேரம் அழுதார்கள். பிறகு அவர்கள் சுவரை நோக்கித் தமது முகத்தைத் திருப்பிக்கொண்டார்கள். அப்போது அவர்களுடைய புதல்வர், "அருமைத் தந்தையே! தங்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இன்னின்ன நற்செய்திகளைக் கூறவில்லையா?" என்று கேட்டார். உடனே அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் தமது முகத்தை (தம் புதல்வரை நோக்கி)த் திருப்பி (பின்வருமாறு) கூறினார்கள்: "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும் முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஆவார்கள்" என்றும் உறுதி கூறியதே நமது சேமிப்புகளில் சிறந்தது ஆகும். நான் (என் வாழ்நாளில்) மூன்று கட்டங்களைக் கடந்து வந்திருக்கிறேன்.
(முதலாவது கட்டத்தில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்மீது கடுமையான வெறுப்புக் கொண்டவர் என்னைவிட வேறெவரும் இருக்கவில்லை என்றே நான் கருதினேன். என்னால் இயன்றால் அவர்களைக் கொன்றுவிட வேண்டும் என்பதே எனக்கு மிகவும் விருப்பமான விஷயமாக இருந்தது. அந்தக் காலகட்டத்தில் மட்டும் நான் இறந்துவிட்டிருந்தால் நான் நரகவாசிகளில் ஒருவனாக ஆகியிருப்பேன்.
(இரண்டாவது கட்டத்தில்) அல்லாஹ் என் உள்ளத்தில் இஸ்லாத்தை ஊட்டினான். அப்போது நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்று "உங்கள் வலக் கரத்தை நீட்டுங்கள். நான் உங்களிடம் உறுதிப் பிரமாணம் (பைஅத்) அளிக்கிறேன்" என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள் தமது வலக் கரத்தை நீட்டினார்கள். உடனே நான் எனது கையை இழுத்துக்கொண்டேன். நபி (ஸல்) அவர்கள், "அம்ரே! உமக்கு என்ன ஆயிற்று?" என்று கேட்டார்கள். நான், "சில நிபந்தனைகளை விதிக்க விரும்புகிறேன்" என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள், "என்ன நிபந்தனை விதிக்கப்போகிறீர்?" என்று கேட்டார்கள். "என் (முந்தைய) பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டும்" என்று கூறினேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், "முந்தைய பாவங்களை இஸ்லாம் அழித்துவிடும்; ஹிஜ்ரத்தும் (மார்க்கத்திற்காக நாடுதுறத்தல்) முந்தைய பாவங்களை அழித்துவிடும்; ஹஜ்ஜும் முந்தைய பாவங்களை அழித்துவிடும் என்று உமக்குத் தெரியாதா?" என்று கேட்டார்கள். (பிறகு நான் இஸ்லாத்தைத் தழுவினேன்.) அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைவிட மிகவும் பிரியமானவர் வேறெவரும் எனக்கு இருக்கவில்லை; எனது பார்வைக்கு அவர்களை விட மிகவும் கண்ணியமானவர் வேறெவரும் இருக்கவில்லை. அப்போது அவர்கள்மீது நான் வைத்திருந்த மரியாதையினால் என் கண்கள் நிரம்ப அவர்களைப் பார்க்கக்கூட என்னால் முடியவில்லை. அவர்களை வர்ணித்துக் கூறும்படி நான் கேட்டுக்கொள்ளப்பட்டால் அதற்கும் என்னால் இயலாது. ஏனெனில், நான் அவர்கள்மீது வைத்திருந்த மரியாதையின் காரணத்தால் என் கண்கள் நிரம்ப அவர்களை நான் பார்த்திருக்கவிலலை. அந்த நிலையில் நான் இறந்திருந்தால் சொர்க்கவாசிகளில் ஒருவனாக ஆகியிருப்பேன் என்றே எதிர் பார்க்கிறேன்.
பிறகு (மூன்றாவது கட்டத்தில்) பல்வேறு பொறுப்புகளை நாம் வகித்தோம். அவற்றில் எனது நிலையென்ன என்பது எனக்குத் தெரியாது. எனவே, நான் இறந்துவிட்டால் ஒப்பாரி வைப்பவரோ நெருப்போ என் சடலத்தோடு இருக்கலாகாது. என்னை (குழிக்குக்குள் வைத்து) நீங்கள் அடக்கம் செய்யும்போது என்மீது மண்ணைத் தள்ளுங்கள். பிறகு ஓர் ஒட்டகத்தை அறுத்து அதன் இறைச்சியைப் பங்கிடும் நேரம் அளவுக்கு நீங்கள் அடக்கத்தலத்தைச் சுற்றி நில்லுங்கள். உங்களால் நான் ஆசுவாசமடைவேன்; என் இறைவனின் தூதர்க(ளான வானவர்க)ளிடம் நான் என்ன பதிலளிப்பது என்பதையும் கண்டுகொள்வேன்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
193. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
இணைவைப்பவர்களில் சிலர், நிறைய கொலைகளைப் புரிந்திருந்தனர்; விபசாரம் அதிகமாகச் செய்திருந்தனர். பிறகு (ஒரு நாள்) அவர்கள் முஹம்மத் (ஸல்) அவர்களிடம் வந்து, "நீங்கள் கூறிவருகின்ற (போதனை முதலிய)வையும் நீங்கள் அழைப்புவிடுக்கின்ற (இஸ்லாமிய) மார்க்கமும் உறுதியாக நல்லவையே! நாங்கள் புரிந்துவிட்ட பாவங்களுக்குப் பரிகாரம் ஏதேனும் உண்டா என நீங்கள் எங்களுக்குத் தெரிவித்தால் (நாங்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வோம்)" என்று கூறினர்.
அப்போது, "(ரஹ்மானின் உண்மையான அடியார்களான) அவர்கள் அல்லாஹ்வுடன் வேறெந்தத் தெய்வத்தையும் அழைப்பதில்லை. மேலும், (கொலை செய்யக்கூடாது என்று) அல்லாஹ் தடைசெய்துள்ள எந்த உயிரையும் முறையின்றி அவர்கள் கொலை செய்வதில்லை; மேலும், விபசாரம் புரிவதில்லை. ஆகவே, யார் இவற்றைச் செய்கிறாரோ அவர் தண்டனை அடைய நேரிடும்" எனும் (25:68ஆவது) வசனம் அருளப்பெற்றது. மேலும், "(நபியே!) கூறுங்கள்: வரம்புமீறித் தமக்குத் தாமே அநீதியிழைத்துக்கொண்ட என் அடியார்களே! அல்லாஹ்வின் கருணைமீது அவநம்பிக்கை கொண்டுவிடாதீர்கள்..." எனும் (39:53ஆவது) வசனமும் அருளப்பெற்றது.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
பாடம் : 55 இஸ்லாத்தைத் தழுவுதற்கு முன் இறைமறுப்பாளர் ஒருவர் செய்த (நற்)செயலின் நிலையென்ன?
194. ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், "(நான் இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்பு) அறியாமைக் காலத்தில் செய்துவந்த நல்லறங்களைப் பற்றித் தாங்கள் என்ன கூறுகிறீர்கள்? அவற்றுக்கு (மறுமையில்) எனக்கு (நற்பலன்) ஏதும் உண்டா?" என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீர் முன்னர் செய்த நற்செயல்(களுக்கான பிரதிபலன்)களுடன்தான் இஸ்லாத்தைத் தழுவியுள்ளீர்" என்று எனக்கு பதிலளித்தார்கள்.
இதை உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 1
195. ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான், "அல்லாஹ்வின் தூதரே! நான் அறியாமைக் காலத்தில் தானதர்மம், அடிமைகளை விடுதலை செய்தல், உறவைப் பேணுதல் ஆகிய நல்லறங்களைப் புரிந்துள்ளேன். அவற்றுக்கு (மறுமையில்) நற்பலன் ஏதும் உண்டா, கூறுங்கள்?" என்று கேட்டேன்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீர் முன்னர் செய்த நற்செயல்(களுக்கான பிரதிபலன்)களுடன்தான் இஸ்லாத்தைத் தழுவியுள்ளீர்" என்று பதிலளித்தார்கள்.
இதை உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான், "அல்லாஹ்வின் தூதரே! நான் அறியாமைக் காலத்தில் (நன்மையை நாடி) பல நற்பணிகள் ஆற்றிவந்தேன். (அவற்றுக்கு மறுமையில் எனக்குப் பிரதிபலன் உண்டா?)" என்று கேட்டேன்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீர் முன்னர் செய்த நற்செயல்(களுக்கான பிரதிபலன்)களுடன்தான் இஸ்லாத்தைத் தழுவியுள்ளீர்(; உமக்கு நற்பலன் உண்டு)" என்று பதிலளித்தார்கள். அப்போது நான் "அல்லாஹ்வின் மீதாணையாக! அறியாமைக் காலத்தில் செய்துவந்த நற்செயல் எதையும் இஸ்லாத்திலும் செய்யாமல் இருக்கமாட்டேன்" என்று கூறினேன்.
இதை உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
196. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்கள் அறியாமைக் காலத்தில் நூறு அடிமைகளை விடுதலை செய்தார்கள்; நூறு பயண ஒட்டகங்களை தர்மம் செய்தார்கள்; அவ்வாறே அன்னார் இஸ்லாத்தைத் தழுவிய பிறகும் நூறு அடிமைகளை விடுதலை செய்தார்கள். நூறு பயண ஒட்டகங்களை தர்மம் செய்தார்கள்.
பிறகு நபி (ஸல்) அவர்களிடம் சென்று மேற்கண்ட ஹதீஸிலுள்ளவாறு கேட்டார்கள்.
அத்தியாயம் : 1
பாடம் : 56 இறைநம்பிக்கையின் வாய்மையும் தூய்மையும்.
197. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
"எவர் இறைநம்பிக்கை கொண்டு (பின்னர்) தமது இறைநம்பிக்கையுடன் அநீதியைக் கலந்துவிடவில்லையோ அவர்களுக்கே உண்மையில் அமைதி உண்டு" எனும் (6:82ஆவது) இறைவசனம் அருளப்பெற்றபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்களுக்கு அது கடினமாகத் தெரிந்தது. மேலும், அவர்கள் "எங்களில் யார்தாம் தமக்குத் தாமே அநீதி இழைக்காதவர்?" என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அநீதி என்பதற்கு நீங்கள் நினைக்கின்ற அர்த்தம் இல்லை. உண்மையில் (அறிஞர்) லுக்மான் அவர்கள் தம் புதல்வரிடம் "என் அன்பு மகனே! அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்காதே. அல்லாஹ்வுக்கு இணைகற்பிப்பது தான் மாபெரும் அநீதியாகும்" என்று சொன்ன(தாக 31:13ஆவது வசனத்தில் அல்லாஹ் கூறியிருப்ப)துதான் அதற்குப் பொருள் ஆகும்.- இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
198. மேற்கண்ட ஹதீஸ் மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
பாடம் : 57 தூயவனான அல்லாஹ், அவரவர் ஆற்றலுக்கு ஏற்பவே சுமைகளைத் தருகின்றான்.
199. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
"வானங்கள் மற்றும் பூமியில் உள்ள அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியன; உங்கள் மனத்திலுள்ளவற்றை நீங்கள் வெளியிட்டாலும், அவற்றை மறைத்துக்கொண்டாலும் அவற்றைப் பற்றியும் அல்லாஹ் உங்களிடம் விசாரணை செய்வான். அவன் நாடியவர்களை மன்னிப்பான்; அவன் நாடியவர்களை வேதனை செய்வான். இன்னும் அல்லாஹ் அனைத்துப் பொருள்கள்மீதும் ஆற்றல் உள்ளவன் ஆவான்" எனும் (2:284ஆவது) வசனம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அருளப்பெற்றபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்களுக்கு அது கடினமாகத் தெரிந்தது. ஆகவே, அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, மண்டியிட்டு அமர்ந்து, "அல்லாஹ்வின் தூதரே! எங்கள் சக்திக்குட்பட்ட தொழுகை, நோன்பு, அறப்போர், தர்மம் (ஸகாத்) ஆகியவற்றைச் செய்யுமாறு நாங்கள் உத்தரவிடப்பட்டோம். ஆனால், (இப்போது) தங்களுக்கு (மேற்கண்ட) இந்த வசனம் அருளப்பெற்றுள்ளது. இது எங்கள் சக்திக்கு மீறியதாயிற்றே?" என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உங்களுக்கு முந்தைய இரு வேதக்காரர்(களான யூதர்களும் கிறிஸ்தவர்)களும் கூறியதைப் போன்று "செவியுற்றோம்; மாறு செய்தோம்" என்று நீங்களும் கூற விரும்புகின்றீர்களா? வேண்டாம்.(அவ்வாறு கூறிவிடாதீர்கள். மாறாக,) "எங்கள் அதிபதியே! (உன் கட்டளைகளை) நாங்கள் செவியுற்றோம்; கீழ்ப்படிந்தோம். உன்னிடம் மன்னிப்புக் கோருகின்றோம். இன்னும் உன்னிடமே (எங்களின்) மீட்சியும் உள்ளது" என்றே கூறுங்கள்" என்றார்கள். அவ்வாறே மக்கள், "எங்கள் அதிபதியே! (உன் கட்டளைகளை) நாங்கள் செவியுற்றோம்; கீழ்ப்படிந்தோம். உன்னிடம் மன்னிப்புக் கோருகின்றோம். (எங்களின்) மீட்சியும் உன்னிடமே உள்ளது" என்று கூறினர். மக்கள் இவ்வாறு சொல்லச் சொல்ல அவர்களின் நாவு (இறைவனுக்குப்) பணிந்தது (உள்ளமும்தான்).
அதைத் தொடர்ந்து அல்லாஹ், "(மனிதர்களே! நம்முடைய) தூதர், தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பெற்ற (வேதத்)தை நம்புகின்றார். நம்பிக்கையாளர்களும் (நம்புகின்றனர்). (இவர்கள்) யாவரும் அல்லாஹ்வையும், அவனுடைய வானவர்களையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும் நம்பிக்கை கொள்கின்றனர். (மேலும் கூறுகின்றனர்:) அவனுடைய தூதர்கள் எவருக்கிடையிலும் (சிலரை ஏற்று சிலரை மறுத்து) நாங்கள் வேற்றுமை காட்டமாட்டோம். "எங்கள் அதிபதியே! நாங்கள் செவியுற்றோம்; கீழ்ப்படிந்தோம். உன்னிடம் மன்னிப்புக் கோருகின்றோம். உன்னிடமே (எங்களின்) மீட்சியும் உள்ளது" என்றும் அவர்கள் வேண்டுகிறார்கள்" எனும் (2:285ஆவது) வசனத்தை அருளினான்.
ஆக, மக்கள் இவ்வாறு செயல்பட்டதையடுத்து அல்லாஹ், ("உங்கள் மனத்திலுள்ளவற்றை நீங்கள் வெளியிட்டாலும் மறைத்தாலும் உங்களிடம் அல்லாஹ் விசாரணை செய்வான்" எனும்) முந்திய வசனத்(தின் சட்டத்)தை மாற்றி (அதற்கு பதிலாகப்) பின்வரும் வசனத்தை அருளினான்: எந்த ஆன்மாவுக்கும் அது தாங்கிக்கொள்ள முடியாத பொறுப்பை அல்லாஹ் சுமத்துவதில்லை; அது சம்பாதித்த நன்மை அதற்கே; அது சம்பாதித்த தீமையும் அதற்கே. (நம்பிக்கையாளர்களே! பிரார்த்தனை செய்யுங்கள்:) எங்கள் அதிபதியே! நாங்கள் மறந்துபோயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களை தண்டித்து விடாதே! (2:286). "ஆகட்டும்! (அவ்வாறே செய்கிறேன்)" என்றான் அல்லாஹ்.
"எங்கள் அதிபதியே! எங்களுக்கு முன் சென்றோர்மீது சுமத்திய சுமையைப் போன்று எங்கள்மீது சுமத்திவிடாதே!" அப்போதும் "ஆகட்டும்!" என்றான் அல்லாஹ்.
"எங்கள் சக்திக்கு மீறிய (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள்மீது சுமத்திவிடாதே!" அதற்கும் "ஆகட்டும்!" என்றான் அல்லாஹ்.
"எங்கள் பாவங்களை நீக்கி, எங்களை மன்னித்தருள்வாயாக! எங்கள்மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் காவலன்; மறுக்கின்ற கூட்டத்தாருக்கு எதிராக எங்களுக்கு உதவி செய்வாயாக!" அதற்கும் "சரி! ஆகட்டும்!" என்றான் அல்லாஹ்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
200. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
"உங்கள் மனத்திலுள்ளவற்றை நீங்கள் வெளியிட்டாலும், அவற்றை மறைத்துக் கொண்டாலும் அவற்றைப் பற்றியும் அல்லாஹ் உங்களிடம் விசாரணை செய்வான்" எனும் இந்த (2:284ஆவது) வசனம் அருளப்பெற்றபோது, மக்களின் உள்ளத்தில் முன்பு ஏற்பட்டிராத (கலக்கம்) ஒன்று அப்போது ஏற்பட்டது. உடனே நபி (ஸல்) அவர்கள், "செவியுற்றோம்; கீழ்ப்படிந்தோம்; எங்களை ஒப்படைத்தோம்" (சமிஃனா, வ அதஃனா, வ சல்லம்னா) என்று கூறுங்கள்" என்றார்கள்.
உடனே (மக்களும் அவ்வாறு செய்யவே) அவர்களது உள்ளத்தில் அல்லாஹ் நம்பிக்கையை ஊட்டினான். மேலும், "அல்லாஹ் எந்த ஆன்மாவுக்கும் அது தாங்கிக்கொள்ள முடியாத பொறுப்பைச் சுமத்துவதில்லை; அது சம்பாதித்த நன்மை அதற்கே; அது சம்பாதித்த தீமையும் அதற்கே. (நம்பிக்கையாளர்களே!) "எங்கள் அதிபதியே! நாங்கள் மறந்துபோயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைத் தண்டிக்காதிருப்பாயாக!" (என்று பிரார்த்தியுங்கள்)" எனும் (2:286ஆவது) வசனத் தொடரை அல்லாஹ் அருளினான். (அவ்வாறே மக்கள் பிரார்த்தித்ததும்) அல்லாஹ் "(உங்கள் பிரார்த்தனையை ஏற்று) அவ்வாறே செய்தேன்" என்றான்.
"எங்கள் அதிபதியே! எங்களுக்கு முன் சென்றோர்மீது சுமத்திய சுமையைப் போன்று எங்கள்மீது சுமத்தாதிருப்பாயாக!" "அவ்வாறே செய்தேன்" என்றான் அல்லாஹ்.
"எங்கள் பாவங்களை நீக்கி, எங்களை மன்னித்தருள்வாயாக! எங்கள்மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் காவலன்" அதற்கும் அல்லாஹ் "அவ்வாறே செய்தேன்" என்றான்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
பாடம் : 58 உள்ளத்தில் தோன்றும் கெட்ட எண்ணங்களும் ஆசைகளும் (செயல் வடிவம் பெற்று) உறுதியாகாவிட்டால் அவற்றை அல்லாஹ் மன்னிக்கிறான்.
201. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என் சமுதாயத்தாரின் உள்ளங்களில் எழும் தீய எண்ணங்களை, அவர்கள் (வெளிப்படுத்திப்) பேசாமல், அல்லது அதன்படி செயல்படாமல் இருக்கும்வரை அல்லாஹ் மன்னிக்கிறான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
202. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மாண்பும் வலிவுமிக்க அல்லாஹ், என் சமுதாயத்தாரின் உள்ளங்களில் எழும் தீய எண்ணங்களை, அவர்கள் (அதன்படி) செயல்படாமல், அல்லது அதை (வெளிப்படுத்திப்) பேசாமல் இருக்கும்வரை மன்னிக்கிறான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் ஆறு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
பாடம் : 59 ஓர் அடியார் நன்மை செய்ய வேண்டும் என எண்ணினாலே அது (நன்மையாகப்) பதிவு செய்யப்படும்; தீமை செய்ய வேண்டும் என எண்ணுவதால் (மட்டும் தீமையாக) அது பதிவு செய்யப்படுவதில்லை.
203. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மாண்பும் வலிவுமிக்க அல்லாஹ் (நன்மை தீமைகளைப் பதிவு செய்யும் வானவர்களிடம்) கூறினான்: என் அடியான் ஒரு தீமை செய்ய எண்ணிவிட்டாலே அதை நீங்கள் பதிவு செய்துவிடாதீர்கள். தான் எண்ணியபடி அவன் (அந்தத் தீமையை) செயல்படுத்திவிட்டால் அதை ஒரேயொரு குற்றமாகவே பதிவு செய்யுங்கள். அவன் ஒரு நன்மையைச் செய்ய எண்ணி அதைச் செய்யாமல் இருந்துவிட்டாலும் அதை ஒரு நன்மையாகவே பதிவு செய்யுங்கள். எண்ணியபடி அந்த நன்மையை அவன் செய்து முடித்துவிட்டால் அதைப் பத்து நன்மைகளாகப் பதிவு செய்யுங்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
204. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மாண்பும் வலிவுமிக்க அல்லாஹ் கூறினான்: என் அடியான் ஒரு நன்மையைச் செய்ய எண்ணி, அதைச் செய்யாமல் இருந்துவிட்டாலும் அதை அவனுக்கு ஒரு நன்மையாகவே நான் பதிவு செய்வேன். (எண்ணியபடி) அந்த நன்மையை அவன் செய்து முடித்தால் அதை நான் பத்து முதல் எழுநூறு மடங்கு நன்மைகளாகப் பதிவு செய்வேன். அவன் ஒரு தீமையைச் செய்ய எண்ணினான்; ஆனால், அதைச் செய்யவில்லை என்றால், அதை நான் ஒரு குற்றமாகப் பதிவு செய்வதில்லை. (எண்ணியபடி) அவன் அந்தத் தீமையைச் செய்து முடித்துவிட்டால் அதை ஒரேயொரு குற்றமாகவே நான் பதிவு செய்வேன்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
205. ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களிடமிருந்து (நபித்தோழர்) அபூஹுரைரா (ரலி) அவர்கள் எங்களுக்குப் பல ஹதீஸ்களை அறிவித்தார்கள். அவற்றில் ஒன்றுதான் (பின்வரும்) இந்த ஹதீஸும்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மாண்பும் வலிவுமிக்க அல்லாஹ் கூறினான்: என் அடியான் ஒரு நன்மை செய்ய வேண்டும் என நினைத்தாலே, அவன் அதைச் செய்து முடிக்காவிட்டாலும் ஒரு நன்மையாகவே அதை நான் பதிவு செய்வேன். அதை அவன் செய்து முடித்து விட்டாலோ, அதைப் போன்ற பத்து நன்மைகளாக அதை நான் பதிவு செய்வேன். (அதே நேரத்தில்) அவன் ஒரு தீமையைச் செய்ய வேண்டும் என்று நினைத்தால், அதைச் செய்யாமல் இருக்கும்வரை நான் மன்னிப்பேன். அவ்வாறு தீமை செய்துவிட்டால் செய்ததற்கொப்ப ஒரு குற்றமாகவே அதை நான் பதிவு செய்வேன்.
தொடர்ந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வானவர்கள், "இறைவா! உன்னுடைய இந்த அடியான் ஒரு தீமையைச் செய்ய விரும்புகின்றானே?" என்று -அந்த அடியானைப் பற்றி அல்லாஹ் நன்கு தெரிந்திருந்தும்- கேட்கின்றனர். அதற்கு அல்லாஹ் அவனைக் கண்காணித்துவாருங்கள்! அவ்வாறு அந்தத் தீமையை அவன் செய்து முடித்துவிட்டால் செய்ததற்கொப்ப ஒரு குற்றமாகவே அதை நீங்கள் பதிவு செய்யுங்கள். எண்ணியபடி அவன் அந்தத் தீமையைச் செய்யாமல் இருந்துவிட்டால் அதை அவனுக்கு ஒரு நன்மையாகப் பதிவு செய்யுங்கள். ஏனெனில், என் (மீதிருந்த அச்சத்தி)னால்தான் அதை அவன் கைவிட்டான்" என்று கூறினான்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மேலும் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் தமது இஸ்லாமை (நம்பிக்கையாலும் நடத்தையாலும்) அழகுபடுத்திக் கொண்டால், அவர் செய்யும் ஒவ்வொரு நன்மைக்கும் அதைப் போன்று பத்து மடங்கிலிருந்து எழுநூறு மடங்குவரை (நன்மை) பதிவு செய்யப்படுகிறது. அவர் செய்யும் ஒவ்வொரு தீமைக்கும் அதற்கொப்ப ஒரு தீமையே (அவர் இறைவனைச் சந்திக்கும்வரை) பதிவு செய்யப்படுகிறது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 1
206. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் ஒரு நன்மை செய்ய வேண்டும் என(மனத்தில்) எண்ணிவிட்டாலே (அதைச் செய்யா விட்டாலும்) அது ஒரு நன்மையாகவே பதிவு செய்யப்படும். ஒருவர் ஒரு நன்மை செய்ய வேண்டும் என (மனத்தில்) எண்ணி, எண்ணிய படி அதை அவர் செய்து முடித்துவிட்டால் பத்து முதல் எழுநூறு மடங்கு நன்மைகளாக அது பதிவு செய்யப்படும். (அதே நேரத்தில்) ஒருவர் ஒரு தீமை செய்ய எண்ணி, அதைச் செய்யாமல் இருந்துவிட்டால் அது (ஒரு குற்றமாகப்) பதியப்படுவதில்லை. எண்ணியபடியே அவர் செய்து முடித்தால் அது (ஒரேயொரு குற்றமாக மட்டுமே) பதிவு செய்யப்படும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 1
207. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் இறைவனைப் பற்றி அறிவிக்கையில் (பின்வருமாறு) கூறினார்கள்:
அல்லாஹ் நன்மைகளையும் தீமைகளையும் (அவை இன்னின்னவை என நிர்ணயித்து) எழுதிவிட்டான். பிறகு அவற்றை விவரித்தான். அதாவது ஒருவர் ஒரு நன்மை செய்ய வேண்டும் என (மனத்தில்) எண்ணிவிட்டாலே (அதைச் செயல்படுத்தாவிட்டாலும்) அவருக்காகத் தன்னிடம் அதை ஒரு முழுமையான நன்மையாக அல்லாஹ் பதிவு செய்கிறான். அதை அவர் எண்ணியதுடன் செயல்படுத்தியும்விட்டால், அந்த ஒரு நன்மையைத் தன்னிடம் பத்து நன்மைகளாக, எழுநூறு மடங்காக, இன்னும் அதிகமாக அல்லாஹ் பதிவு செய்கிறான். ஆனால், ஒருவர் ஒரு தீமை செய்ய எண்ணி, (அல்லாஹ்வுக்கு அஞ்சி) அதைச் செய்யாமல் கைவிட்டால், அதற்காக அவருக்குத் தன்னிடம் ஒரு முழு நன்மையை அல்லாஹ் எழுதுகிறான். எண்ணியபடி அந்தத் தீமையை அவர் செய்து முடித்துவிட்டாலோ, அதற்காக ஒரேயொரு குற்றத்தையே அல்லாஹ் எழுதுகிறான்.
அத்தியாயம் : 1
208. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "(ஒருவர் தாம் எண்ணியபடி ஒரு தீமையைச் செய்து விட்டால் அதை ஒரேயொரு குற்றமாகவே அல்லாஹ் எழுதுகிறான்.) அல்லது அதையும் அல்லாஹ் மன்னித்து விடுகிறான். (இத்துணை விசாலமான இறையன்புக்குப் பிறகும் ஒருவர் பாவத்தில் மூழ்கி அழிகின்றார் என்றால்,) அல்லாஹ்வின் திட்டப்படி அழியக்கூடியவர் தாம் (அவ்வாறு) அழிந்துபோவார்" என்று அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 1
பாடம் : 60 இறைநம்பிக்கை தொடர்பாக ஏற்படும் மனக்குழப்பமும் அந்தக் குழப்பத்தை உணர்கின்றவர் சொல்ல வேண்டியதும்.
209. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களுடைய தோழர்களில் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "எங்கள் உள்ளத்தில் சில (குழப்பமான) விஷயங்கள் எழுகின்றன. அவற்றை (வெளிப்படுத்திப்) பேசுவதைக்கூட நாங்கள் மிகப்பெரும் (பாவ) காரியமாகக் கருதுகிறோம் (இது பற்றி தாங்கள் என்ன கூறுகின்றீர்கள்?)" என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "உண்மையிலேயே நீங்கள் அத்தகைய உணர்வுகளுக்கு உள்ளாகின்றீர்களா?" என்று கேட்டார்கள். அதற்கு நபித் தோழர்கள், "ஆம்" என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள், "அதுதான் ஒளிவுமறைவற்ற இறைநம்பிக்கை" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 1
210. மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
211. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களிடம் "மனக் குழப்பம்" குறித்து வினவப்பட்டது. அதற்கு அவர்கள், "அதுதான் ஒளிவுமறைவற்ற இறைநம்பிக்கை" என்று பதிலளித்தார்கள்.
இதை அல்கமா (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 1
212. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மக்கள் (இதைப் படைத்தவர் யார்? இதைப் படைத்தவர் யார்? என்று ஒவ்வொன்றாகக்) கேட்டுக்கொண்டேவந்து இறுதியில், "அல்லாஹ் படைப்பினங்களைப் படைத்தான். அல்லாஹ்வைப் படைத்தவன் யார்?" என்று கேட்கும் நிலைக்கு உள்ளாவார்கள். இத்தகைய எண்ணம் ஒருவருக்கு ஏற்பட்டால் அவர் உடனே, "அல்லாஹ்வை நான் நம்பிக்கை கொண்டேன்" (ஆமன்த்து பில்லாஹ்) என்று சொல்லட்டும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
213. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "உங்களில் ஒருவரிடம் ஷைத்தான் வந்து, வானத்தைப் படைத்தவர் யார்? பூமியைப் படைத்தவர் யார்?" என்று கேட்பான். அவர் "அல்லாஹ்" என்று பதிலளிப்பார். (பிறகு அல்லாஹ்வைப் படைத்தவர் யார் என்றும் கேட்பான்) என்று தொடங்கி, மேற்கண்ட ஹதீஸைப் போன்றே இடம்பெற்றுள்ளது. மேலும், "(இத்தகைய எண்ணங்கள் ஏற்பட்டால் "நான் அல்லாஹ்வையும்) அவனுடைய தூதர்களையும் நம்பிக்கை கொண்டேன்" என்று கூறுங்கள்" என்றும் அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 1
214. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவரிடம் ஷைத்தான் வந்து, "இன்னின்னவற்றைப் படைத்தவர் யார்?" என்று கேட்டுக்கொண்டே வந்து இறுதியில் அவரிடம், "உன் இறைவனைப் படைத்தவர் யார்?" என்று கேட்பான். இந்தக் (கேள்வி கேட்கும்) கட்டத்தை அவன் எட்டும்போது, அவர் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோரட்டும். (இத்தகைய சிந்தனையிலிருந்து) அவர் விலகிக் கொள்ளட்டும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஓர் அடியாரிடம் ஷைத்தான் வந்து, "இன்னின்னவற்றைப் படைத்தவர் யார்?" என்று கேட்பான் எனத் தொடங்கி மற்றவை மேற்கண்ட ஹதீஸிலுள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.- இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 1
215. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மக்கள் உங்களிடம் கல்வியறிவு தொடர்பான கேள்விகளைக் கேட்டுக்கொண்டேவந்து இறுதியில், "இதோ! அல்லாஹ்தான் நம்மைப் படைத்தான். அல்லாஹ்வைப் படைத்தவர் யார்?" என்று கேட்பார்கள்.
இதன் அறிவிப்பாளரான அபூஹுரைரா (ரலி) அவர்கள் ஒரு மனிதரின் கையைப் பிடித்துக் கொண்டு, "அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் உண்மையே கூறினர். "(மேற்கண்டவாறு) என்னிடம் இருவர் கேட்டுவிட்டனர். இதோ! இவர்தாம் மூன்றாமவர்" அல்லது "(அவ்வாறு ஏற்கெனவே) என்னிடம் ஒருவர் கேட்டுவிட்டார். இதோ! இவர்தாம் இரண்டாமவர்"" என்று கூறினார்கள்.
இதை முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியதாக இடம்பெறவில்லை. ஆயினும், அதன் இறுதியில் "அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் உண்மையே கூறினர்" எனும் வாசகம் இடம் பெற்றுள்ளது.
- அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அபூஹுரைரா! உம்மிடம் மக்கள் கேள்வி கேட்டுக்கொண்டேவந்து இறுதியில், "இதோ! இவன்தான் (நம்மைப் படைத்த) அல்லாஹ். அல்லாஹ்வைப் படைத்தவர் யார்?" என்று கேட்பார்கள்" என்று கூறினார்கள்.
ஒரு நாள் நான் பள்ளிவாசலில் அமர்ந்திருக்கையில் என்னிடம் கிராமவாசிகளில் சிலர் வந்து, "அபூஹுரைரா! இதோ! இவன்தான் அல்லாஹ். அல்லாஹ்வைப் படைத்தவர் யார்?" என்று கேட்டார்கள். உடனே நான் எனது கையில் சில சிறு கற்களை எடுத்து அவர்கள்மீது வீசியெறிந்தேன். பிறகு, "எழுந்து செல்லுங்கள்! எழுந்து செல்லுங்கள்! என் உற்ற தோழர் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்) உண்மையே உரைத்தார்கள்" என்றேன்.
இதை அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 1
216. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நிச்சயமாக மக்கள் உங்களிடம் ஒவ்வொன்றைப் பற்றியும் வினா தொடுப்பார்கள். இறுதியில் "அல்லாஹ்தான் ஒவ்வொன்றையும் படைத்தான். அவனைப் படைத்தவர் யார்?" என்றும் கேட்பார்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 1
217. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மாண்பும் வலிவுமிக்க அல்லாஹ் (என்னிடம் பின்வருமாறு) கூறினான்: உம்முடைய சமுதாயத்தார் (உம்மிடம்), "இது என்ன (இதைப் படைத்தவர் யார்)? இது என்ன (இதைப் படைத்தவர் யார்)?" என்று கேட்டுக்கொண்டே வந்து இறுதியில் "இதோ! அல்லாஹ்தான் படைப்பினங்களைப் படைத்தான். அல்லாஹ்வைப் படைத்தவர் யார்?" என்றும் கேட்பார்கள்.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் இஸ்ஹாக் பின் இப்ராஹீம் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், இது அல்லாஹ் கூறியதாக இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 1
பாடம் : 61 பொய்ச் சத்தியம் செய்து ஒரு முஸ்லிமின் உரிமையை அபகரிக்கின்றவருக்கு நரகம் தான் (தண்டனை) என்ற எச்சரிக்கை.
218. அபூஉமாமா அல்ஹாரிஸீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "யார் (பொய்ச்) சத்தியம் செய்து ஒரு முஸ்லிமின் உரிமையை அபகரித்துக்கொள்கிறாரோ அவருக்கு அல்லாஹ் நரகத்தைக் கட்டாயமாக்கி விட்டான்; சொர்க்கத்தை அவருக்குத் தடை செய்துவிட்டான்" என்று கூறினார்கள்.
அப்போது ஒரு மனிதர், "அது ஒரு சிறிய பொருளாய் இருந்தாலுமா, அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "மிஸ்வாக் மரத்தின் ஒரு குச்சியாக அது இருந்தாலும் சரியே!" என்று பதிலளித்தார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
219. மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
220. அபூவாயில் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், "யார் ஒரு பிரமாண (வாக்கு மூல)த்தின்போது ஒரு முஸ்லிமின் செல்வத்தை அபகரித்துக் கொள்வதற்காகத் திட்டமிட்டுப் பொய்ச் சத்தியம் செய்கிறாரோ அவர் (மறுமையில்) தம்மீது அல்லாஹ் கோபம் கொண்டிருக்கும் நிலையில் தான் அவனைச் சந்திப்பார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்றார்கள். அப்போது அஷ்அஸ் பின் கைஸ் (ரலி) அவர்கள் வந்து (மக்களை நோக்கி), "அபூஅப்திர் ரஹ்மான் (அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்) உங்களிடம் என்ன சொல்லிக் கொண்டிருக்கிறார்?" என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், "இன்னின்னவாறு (சொன்னார்)" என்று பதிலளித்தனர். அப்போது அஷ்அஸ் (ரலி) அவர்கள், "அபூஅப்திர் ரஹ்மான் சொன்னது உண்மையே. என் தொடர்பாகத்தான் இந்த இறைவசனம் (3:77) அருளப்பெற்றது. எனக்கும் இன்னொரு மனிதருக்கும் இடையே யமன் நாட்டில் (உள்ள) ஒரு நிலம் (தொடர்பாக வழக்கு) இருந்தது. அந்த வழக்கை நான் நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு சென்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், "(உமது வாதத்தை நிரூபிக்க) உமக்கு ஆதாரம் ஏதும் உண்டா?" என்று (என்னிடம்) கேட்க, நான், "இல்லை" என்று பதிலளித்தேன். "அவ்வாறாயின் (பிரதிவாதியான) அவர் சத்தியம் செய்ய வேண்டியதுதான்" என்று கூறினார்கள். நான், "அப்படியென்றால் அவர் (தயங்காமல்) பொய்ச் சத்தியம் செய்வாரே!" என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "எவர் ஒரு பிரமாண வாக்குமூலத்தின்போது ஒரு முஸ்லிமின் செல்வத்தை அபகரித்துக் கொள்வதற்காகத் திட்டமிட்டுப் பொய்ச்சத்தியம் செய்கிறாரோ அவர்மீது அல்லாஹ் கோபம் கொண்ட நிலையில்தான் (மறுமையில்) அவனை அவர் சந்திப்பார்" என்று கூறினார்கள். அப்போதுதான் "எவர் அல்லாஹ்விடம் செய்துகொண்ட ஒப்பந்தத்தையும் தம் சத்தியங்களையும் சொற்ப விலைக்கு விற்று விடுகின்றார்களோ..." என்று தொடங்கும் (3:77ஆவது) வசனம் அருளப்பெற்றது.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
221. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "யார் ஒரு செல்வத்தை அடைவதற்காகத் திட்டமிட்டுப் பொய்ச்சத்தியம் செய்கிறாரோ அவர்மீது அல்லாஹ் கோபம் கொண்டிருக்கும் நிலையிலேயே அவனை (மறுமையில்) அவர் சந்திப்பார்" என்று தொடங்கி மேற்கண்ட ஹதீஸிலுள்ள தகவல்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால், அதில், "எனக்கும் ஒரு மனிதருக்குமிடையே ஒரு கிணறு தொடர்பாக தகராறு இருந்தது. ஆகவே, நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வழக்கைக் கொண்டு சென்றோம். அவர்கள், "உம்முடைய இரு சாட்சிகள்; அல்லது (பிரதிவாதியான) அவரது சத்தியம் (தீர்ப்பளிக்கத் தேவைப்படுகின்றன)" என்று கூறினார்கள்" என (சிறிய வித்தியாசத்துடன்) இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 1
222. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "யார் (ஒரு பிரமாண வாக்குமூலத்தின்போது சட்டபூர்வமான) உரிமையின்றி ஒரு முஸ்லிமின் செல்வத்(தை அபகரிக்கும் நோக்கத்)திற்காகப் பொய்சத்தியம் செய்கிறாரோ, அவர்மீது அல்லாஹ் கோபம் கொண்டிருக்கும் நிலையிலேயே அவனை (மறுமையில்) அவர் சந்திப்பார்" என்று கூறினார்கள்.
பிறகு தமது கூற்றை உறுதிப்படுத்தும் வகையில் "யார் அல்லாஹ்விடம் செய்து கொண்ட ஒப்பந்தத்தையும் தம் சத்தியங்களையும் அற்ப விலைக்கு விற்றுவிடுகிறார்களோ..." என்று தொடங்கும் (3:77ஆவது) இறைவசனத்தை எங்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஓதிக்காட்டினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
223. வாயில் பின் ஹுஜ்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களிடம் (யமன் நாட்டிலுள்ள) "ஹள்ர மவ்த்" எனும் இடத்தைச் சேர்ந்த மனிதர் ஒருவரும் "கிந்தா" எனும் குலத்தைச் சேர்ந்த இன்னொரு மனிதரும் வந்தனர். அப்போது ஹள்ர மவ்த்தைச் சேர்ந்த அந்த மனிதர், "அல்லாஹ்வின் தூதரே! என் தந்தைக்குச் சொந்தமான நிலத்தை இவர் ஆக்கிரமித்துவிட்டார்" என்று கூறினார். அதற்கு கிந்தா குலத்தைத் சேர்ந்த அந்த மனிதர், "அது என் கைவசமுள்ள என்னுடைய நிலம்; அதில் நான் விவசாயம் செய்துவருகிறேன்; அதில் இவருக்கு எந்த உரிமையும் கிடையாது" என்று கூறினார்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹள்ர மவ்த்தைச் சேர்ந்த அந்த மனிதரிடம், "(உமது வாதத்தை நிரூபிப்பதற்கு) உம்மிடம் ஆதாரம் ஏதும் உண்டா?" என்று கேட்டார்கள். அவர் "இல்லை" என்று பதிலளித்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அப்படியென்றால் இவர் சத்தியம் செய்வதுதான் உமக்கு (வழி)" என்று கூறினார்கள். உடனே ஹள்ர மவ்த்தைச் சேர்ந்த அந்த மனிதர் "அவர் (துணிந்து பொய் சொல்லும்) பொல்லாத மனிதர். தாம் எதற்குச் சத்தியம் செய்கிறோம் என்பதைப் பற்றி அவர் கவலைப்படமாட்டார். எந்த விவகாரத்திலும் அவர் நேர்மையைப் பற்றி யோசிப்பவரில்லை" என்று சொன்னார்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இதைத் தவிர உமக்கு வேறு வழி கிடையாது" என்று கூறினார்கள். உடனே (பிரதிவாதியான) அந்த (கிந்தா குலத்து) மனிதர் சத்தியம் செய்வதற்காக (குறிப்பிட்ட இடத்திற்கு)ச் சென்றபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இவருடைய செல்வத்தை உண்பதற்காக அநியாயமாக அவர் பொய்ச் சத்தியம் செய்தால், அல்லாஹ் அவரைப் புறக்கணிக்கும் நிலையிலேயே (மறுமையில்) அவனை அவர் சந்திப்பார்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
224. வாயில் பின் ஹுஜ்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அருகில் இருந்தேன். அப்போது அவர்களிடம் ஒரு நிலம் தொடர்பான வழக்கை இருவர் கொண்டுவந்தனர். அவர்களில் ஒருவர், "அல்லாஹ்வின் தூதரே! அறியாமைக் காலத்தில் இவர், எனது நிலத்தை ஆக்கிரமித்துக் கொண்டார்" என்று கூறினார் -அவ(ரது பெய)ர் இம்ரஉல் கைஸ் பின் ஆபிஸ் அல்கிந்தீ. ரபீஆ பின் இப்தான் அவருடைய பிரதிவாதி(யின் பெயர்). அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உமது ஆதாரம் என்ன?" என்று கேட்டார்கள். அதற்கு அவர், "என்னிடம் ஆதாரம் ஏதும் இல்லை" என்று பதிலளித்தார். "அப்படியென்றால் (பிரதிவாதியான) இவரது சத்தியம் (தான் வழி)" என்று சொன்னார்கள். உடனே (வாதியான) அவர், "அவ்வாறாயின் (பொய்ச் சத்தியம் செய்து) அவர், அந்த நிலத்தைத் தட்டிக்கொண்டு போய்விடுவாரே!" என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "உமக்கு இதைத் தவிர வேறு வழி இல்லை" என்று கூறினார்கள். ஆகவே, (பிரதிவாதியான) அந்த மனிதர் சத்தியம் செய்வதற்காக எழுந்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அநியாயமாக ஒரு நிலத்தை அபகரித்துக்கொள்பவர் தம்மீது அல்லாஹ் கோபம் கொண்ட நிலையிலேயே அவனை (மறுமையில்) சந்திப்பார்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில், இஸ்ஹாக் பின் இப்ராஹீம் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "(பிரதிவாதியான அந்த மனிதரின் பெயர்) ரபீஆ பின் அய்தான்" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 1
பாடம் : 62 முறையின்றி பிறரது செல்வத்தைப் பறிக்க முனைகின்றவனின் உயிர் மதிப்பற்றதாகிவிடும்; அவன் கொல்லப்பட்டுவிட்டால் நரகத்திற்கே செல்வான்; தமது செல்வத்தைக் காக்கப் போராடிய ஒருவர் கொலை செய்யப்பட்டுவிட்டால் அவர் உயிர்த்தியாகி (ஷஹீத்) ஆவார் என்பதற்கான ஆதாரம்.
225. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! ஒருவன் எனது செல்வத்தைப் பறிக்கும் நோக்கத்தில் வந்தால் (நான் என்ன செய்ய வேண்டும்) கூறுங்கள்?" என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவனுக்கு உமது செல்வத்தை (விட்டு)க் கொடுக்க வேண்டியதில்லை" என்று கூறினார்கள். அந்த மனிதர், "அவன் என்னுடன் சண்டையிட்டால்...?" என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீரும் அவனுடன் சண்டையிட வேண்டியது தான்!" என்று கூறினார்கள். "(அந்தச் சண்டையில்) அவன் என்னைக் கொன்றுவிட்டால்...?" என்று அந்த மனிதர் கேட்டார். அவர்கள், "அப்போது நீர் உயிர்த்தியாகி (ஷஹீத்) ஆவீர்" என்றார்கள். "நான் அவனைக் கொன்றுவிட்டால்...?" என்று அவர் கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவன் நரகத்திற்குச் செல்வான்" என்று பதிலளித்தார்கள்.
அத்தியாயம் : 1
226. உமர் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்களின் முன்னாள் அடிமையான ஸாபித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களுக்கும் அன்பஸா பின் அபீசுஃப்யான் அவர்களுக்குமிடையே (ஒரு வாய்க்கால் தொடர்பாக) பிரச்சினை ஏற்பட்டு சண்டை மூளும் நிலை ஏற்பட்டது. அப்போது காலித் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களிடம் புறப்பட்டுவந்து அவர்களுக்கு அறிவுரை கூறினார்கள்.
அப்போது அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள், "தமது செல்வத்தை காப்பதற்காக போராடிய போது ஒருவர் கொல்லப்பட்டுவிட்டால் அவர் உயிர்த்தியாகி (ஷஹீத்) ஆவார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியது உங்களுக்குத் தெரியாதா? என்று கேட்டார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் வேறு இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
பாடம் : 63 குடிமக்களைச் சுரண்டும் ஆட்சியாளன் நரகத்திற்குரியவன் ஆவான்.
227. ஹசன் அல்பஸரி (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
மஅகில் பின் யசார் அல்முஸனீ (ரலி) அவர்கள் எந்த நோயில் இறந்துபோனார்களோ அந்த நோயின்போது அவர்களை உடல்நலம் விசாரிப்பதற்காக( பஸ்ராவின் ஆளுநர்) உபைதுல்லாஹ் பின் ஸியாத் சென்றார்.அப்போது மஅகில் (ரலி) அவர்கள் உபைதுல்லாஹ்விடம் (பின்வருமாறு) கூறினார்கள்:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்ற செய்தி ஒன்றை உமக்கு அறிவிக்கிறேன். நான் இன்னும் (சில நாள்) உயிர்வாழ்வேன் என்று அறிந்திருந்தால் (அதை) உமக்கு அறிவிக்கமாட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: குடிமக்களில் சிலரை நிர்வகிக்கும் பொறுப்பை அல்லாஹ் ஓர் அடியாருக்கு வழங்கியிருக்க, அவர் அந்த மக்களை ஏமாற்றி மோசடி செய்த நிலையிலேயே இறந்து போனால், அவருக்கு அல்லாஹ் சொர்க்கத்தைத் தடை செய்யாமல் இருப்பதில்லை.
அத்தியாயம் : 1
228. ஹசன் அல்பஸரி (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
மஅகில் பின் யசார் (ரலி) அவர்கள் நோயுற்றிருந்தபோது (உடல்நலம் விசாரிப்பதற்காக) அவர்களிடம் (பஸ்ராவின் ஆளுநர்) உபைதுல்லாஹ் பின் ஸியாத் சென்றார். அப்போது உபைதுல்லாஹ்விடம் மஅகில் (ரலி) அவர்கள், "முன்பு நான் உம்மிடம் அறிவித்திராத செய்தி ஒன்றை அறிவிக்கிறேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "குடிமக்களில் சிலரை நிர்வகிக்கும் பொறுப்பை அல்லாஹ் ஓர் அடியாருக்கு வழங்கியிருக்க, அவர் அந்த மக்களை ஏமாற்றி மோசடி செய்த நிலையிலேயே இறந்துபோனால், அவருக்கு அல்லாஹ் சொர்க்கத்தைத் தடைசெய்யாமல் இருப்பதில்லை" என்று கூறினார்கள்" என்றார்கள். அப்போது உபைதுல்லாஹ், "இதற்கு முன்பு இதை நீங்கள் எனக்கு அறிவிக்கவில்லையே?" என்று கேட்டார். மஅகில் (ரலி) அவர்கள், "நான் உமக்கு (காரணத்தோடுதான்) அறிவிக்கவில்லை" அல்லது "உம்மிடம் நான் (காரணத்தோடுதான்) அறிவிக்கவில்லை" " என்று பதிலளித்தார்கள்.
அத்தியாயம் : 1
229. ஹசன் அல்பஸரி (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் மஅகில் பின் யசார் (ரலி) அவர்களை உடல்நலம் விசாரிக்கச் சென்றிருந்தோம். அப்போது (ஆளுநர்) உபைதுல்லாஹ் பின் ஸியாத் வந்தார். அவரிடம் மஅகில் (ரலி) அவர்கள், "நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்ற செய்தி ஒன்றை உமக்கு அறிவிக்கப்போகிறேன்..."என்று கூறிவிட்டு, மேற்கண்ட ஹதீஸின் பொருள்பட அறிவித்தார்கள்.
- அபுல்மலீஹ் அல்பஸரி (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
மஅகில் பின் யசார் (ரலி) அவர்கள் நோயுற்றிருந்தபோது அவர்களை உடல் நலம் விசாரிக்க (ஆளுநர்) உபைதுல்லாஹ் பின் ஸியாத் வந்தார். அவரிடம் மஅகில் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
"உமக்கு நான் ஒரு ஹதீஸை அறிவிக்கப்போகிறேன். நான் இறக்கும் தறுவாயில் இல்லாவிட்டால் அதை நான் உமக்கு அறிவித்திருக்கமாட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்: ஓர் ஆட்சியாளர் முஸ்லிம்களை நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்ட பின்னர் அவர்களுக்காக உழைக்காமலும் (அவர்கள்மீது) அக்கறை காட்டாமலும் இருந்தால், அவர்களுடன் அவர் சொர்க்கத்திற்குச் செல்லவே மாட்டார்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
பாடம் : 64 சிலரது உள்ளத்திலிருந்து நம்பகத்தன்மை அகன்றுவிடுவதும் உள்ளங்களில் குழப்பங்கள் தோன்றுவதும்.
230. ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு (நம்பகத்தன்மை தொடர்பாக) இரு செய்திகளைக் கூறினார்கள். அவற்றில் ஒன்றை நான் (என் வாழ்நாளிலேயே) பார்த்து விட்டேன். மற்றொன்றை எதிர்பார்த்(துக் காத்)திருக்கிறேன்.
ஒரு செய்தி யாதெனில், (இயற்கையாகவே) மனிதர்களின் ஆழ்மனத்தில் ("அமானத்" எனும்) நம்பகத் தன்மை இடம்பிடித்தது. பிறகு குர்ஆன் அருளப்பெற்றபோது குர்ஆனிலிருந்தும் (அதை) அறிந்துகொண்டார்கள்; (எனது வழியான) "சுன்னா"விலிருந்தும் அறிந்துகொண்டார்கள். (நபியவர்கள் கூறிய இதை நான் பார்த்துவிட்டேன்.)
இரண்டாவது செய்தி, நம்பகத்தன்மை அகற்றப்படுவது தொடர்பானதாகும். மனிதன் ஒரு முறை உறங்குவான். (உறக்கத்திலேயே) அவனது உள்ளத்திலிருந்து நம்பகத்தன்மை (சிறிது) கைப்பற்றப்படும். அதையடுத்து அ(து அகற்றப்பட்ட)தன் அடையாளம் சிறு (கரும்)புள்ளி அளவுக்கு (அவனில்) தங்கிவிடும். பிறகு மீண்டும் ஒரு முறை அவன் உறங்குவான். அப்போது (மறுபடியும்) அது கைப்பற்றப்படும். இம்முறை அ(து கைப்பற்றப்பட்ட)தன் அடையாளம் (கடின உழைப்பால் கையில் ஏற்படும்) காய்ப்பு அளவுக்கு அவனில் நிலைத்துவிடும். (இவ்வாறு முதலில் "நம்பகத்தன்மை" எனும் ஒளி உள்ளத்தில் ஏற்றப்பட்டுப் பிறகு சிறிது சிறிதாக அது அணைக்கப்படுவதானது,) காலில் தீக்கங்கை உருட்டிவிட்டு, அதனால் கால் கொப்புளித்து உப்பிவிடுவதைப் போன்றதாகும். பார்வையில் அது உப்பிப் பெரியதாகத் தெரியுமே தவிர, அதனுள் ஒன்றும் இருக்காது. -பிறகு நபி (ஸல்) அவர்கள் சிறு கற்களை எடுத்துத் தமது காலால் அதை உருட்டிக் காட்டினார்கள்.-
பின்னர் காலையில் மக்கள் தங்களிடையே கொடுக்கல் வாங்கல் செய்துகொள்வார்கள். (ஆனால், அவர்களில்) யாருமே நம்பிக்கையைக் காப்பாற்ற முனையமாட்டார்கள். இன்னாருடைய மக்களில் நம்பிக்கையாளரான ஒருவர் இருக்கிறார் என்று (தேடிக் கண்டுபிடித்து) சொல்லப்படும் (அளவுக்கு நம்பிக்கையாளர்கள் அரிதாகிவிடுவார்கள்). மேலும், ஒருவரைப் பற்றி "அவருடைய வீரம்தான் என்ன? அவருடைய விவேகம்தான் என்ன? அவருடைய அறிவுதான் என்ன?" என்று (சிலாகித்து) கூறப்படும். ஆனால், அந்த மனிதருடைய இதயத்தில் கடுகளவுகூட இறைநம்பிக்கை இருக்காது.
(அறிவிப்பாளர் ஹுதைஃபா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:)
என்மீது ஒரு காலம் வந்திருந்தது. அக்காலத்தில் நான் உங்களில் யாரிடம் கொடுக்கல் வாங்கல் செய்கிறேன் என்று பொருட்படுத்தியதில்லை. (ஏனெனில்,) முஸ்லிமாக இருந்தால், இஸ்லாம் (எனது பொருளை) அவரிடமிருந்து மீட்டுத் தந்துவிடும். கிறிஸ்தவராகவோ யூதராகவோ இருந்தால் அவருக்கான அதிகாரி (எனது பொருளை) அவரிடமிருந்து மீட்டுத் தந்துவிடுவார். ஆனால், இன்றோ நான் இன்னார், இன்னாரிடம் மட்டுமே கொடுக்கல் வாங்கல் செய்யத் தயாராக இருக்கிறேன்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
231. ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் (கலீஃபா) உமர் (ரலி) அவர்களிடம் அமர்ந்திருந்தோம். அப்போது அவர்கள், "உங்களில் யார் சோதனை (ஃபித்னா) தொடர்பாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றுள்ளார்?" என்று கேட்டார்கள். அப்போது சிலர், "நாங்கள் செவியுற்றுள்ளோம்" என்று கூறினர். உமர் (ரலி) அவர்கள், "ஒரு மனிதன் தன் குடும்பத்தார் மற்றும் அண்டை வீட்டார் விஷயத்தில் சோதனைக்கு உள்ளாக்கப்படுவதையே நீங்கள் நினைக்கிறீர்கள் போலும்" என்று கூறினார்கள். அதற்கு மக்கள், "ஆம்" என்றனர். "இத்தகைய சோதனையில் ஆழ்த்தப்படும் போது தொழுகை, நோன்பு, தானதர்மம் ஆகியவை அதற்கான பரிகாரமாக அமைந்து விடும். (நான் அந்த அர்த்தத்திலுள்ள ஃபித்னா பற்றி உங்களிடம் கேட்கவில்லை.) மாறாக, கடல் அலையைப் போன்று அடுக்கடுக்காகத் தோன்றும் என நபியவர்கள் (முன்னறிவிப்பாகக்) கூறிய (அரசியல் குழப்பம் எனும் பொருள் கொண்ட) ஃபித்னாவைப் பற்றிச் செவியுற்றவர் உங்களில் யார்?" என்று கேட்டார்கள். அப்போது மக்கள் (பதிலளிக்காமல்) அமைதியாக இருந்தனர். ஆகவே, நான், "நான் (செவியுற்றுள்ளேன்)" என்று கூறினேன். "உம் தந்தை அல்லாஹ்வுக்கு அர்ப்பணம்! (உம்மைப் போன்றே அவரும் நல்ல மனிதர்.) நீரா (செவியுற்றீர்)?" என்று கேட்க, நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றதை(ப் பின்வருமாறு) கூறினேன்:
கோரை கோரையாக வைத்துப் பாய் பின்னப்படுவதைப் போன்று மக்கள் உள்ளங்களில் சோதனைகள் பின்னப்படும். எந்த உள்ளம் அந்தச் சோதனைகளில் அமிழ்ந்துவிடுகிறதோ அந்த உள்ளத்தில் ஒரு கரும்புள்ளி இடப்படும். எந்த உள்ளம் அவற்றை நிராகரித்து விடுகிறதோ அந்த உள்ளத்தில் ஒரு வெண்புள்ளி இடப்படும். இவ்வாறு சோதனைகள் இரு விதமான உள்ளங்களில் ஏற்படுகின்றன. ஒன்று, வெண்பாறை போன்று தூய்மையானது; வானங்களும் பூமியும் நிலைத்திருக்கும்வரை எந்தச் சோதனையும் அதற்கு இடரளிக்காது. மற்றொன்று, சிறிதளவு வெண்மை கலந்த கருமையான உள்ளம். அது தலைகீழாகக் கவிழ்க்கப்பட்ட கூஜாவைப் போன்று நல்லதை அறியவும் செய்யாது; தீமையை நிராகரிக்கவும் செய்யாது. மனஇச்சையில் அமிழ்ந்து கிடப்பது ஒன்றுதான் அதற்குத் தெரிந்ததெல்லாம்.
(அறிவிப்பாளர் ஹுதைஃபா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:)
(மேற்கண்ட ஹதீஸை நான் உமர் (ரலி) அவர்களிடம் அறிவித்துவிட்டு, "இறை நம்பிக்கையாளர்களின் தலைவரே!) உங்களுக்கும் அந்தக் குழப்பங்களுக்கும் இடையே மூடிய கதவு ஒன்று உண்டு; அக்கதவு (விரைவில்) உடைக்கப்படக் கூடும்" என்று கூறினேன். உடனே உமர் (ரலி) அவர்கள், "நீர் தந்தையற்றுப் போவீர்! அது உடைக்கப்படுமா? அது (உடைக்கப் படாமல்) திறக்கப்பட்டாலாவது மீண்டும் அது மூடப்பட இடமுண்டே!" என்று கூறினார்கள். நான், "இல்லை. (அது திறக்கப்படாது.) உடைக்கத்தான் படும்" என்று சொன்னேன். மேலும், நான் அவர்களிடம் "அந்தக் கதவு "கொல்லப்படவிருக்கும்" அல்லது "இறந்துபோகவிருக்கும்" ஒரு மனிதர் தாம். இது கட்டுக்கதை அன்று. (உண்மையான செய்திதான்)" என்றும் கூறினேன்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அபூகாலித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
நான் (அறிவிப்பாளர்) சஅத் பின் தாரிக் (ரஹ்) அவர்களிடம், "அபூமாலிக்கே! (இந்த ஹதீஸின் மூலத்திலுள்ள) "அஸ்வது முர்பாத்தன்" என்பதன் பொருள் என்ன?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "கறுப்பில் தூய வெள்ளை" என்று கூறினார்கள். நான் "அல்கூஸு முஜக்கியன்" என்பதன் பொருள் யாது?" என்று கேட்டேன். அதற்கு, "தலைகீழாகக் கவிழ்க்கப்பட்ட கூஜா" என்று பதிலளித்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், (கலீஃபா) உமர் (ரலி) அவர்களிடமிருந்து (விடைபெற்று மதீனாவிலிருந்து) ஹுதைஃபா (ரலி) அவர்கள் புறப்பட்டு (கூஃபா) வந்து எங்களுடன் அமர்ந்துகொண்டு (பின்வருமாறு) கூறினார்கள் என்று காணப்படுகிறது:
நான் நேற்று இறைநம்பிக்கையாளர்களின் தலைவரிடம் அமர்ந்திருந்தபோது அவர்கள் தம் தோழர்களிடம், "உங்களில் யார் (இனி தலைதூக்கவிருக்கும் அரசியல்) குழப்பங்கள் குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னதை நினைவில் வைத்திருக்கிறார்?" என்று கேட்டார்கள். அபூமாலிக் (ரஹ்) அவர்கள் அளித்த அருஞ் சொற்பொருள்கள் அதில் குறிப்பிடப்படவில்லை.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் பின்வருமாறு காணப்படுகிறது:
உமர் (ரலி) அவர்கள் மக்களிடம் "(அரசியல்) குழப்பங்கள் குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை எமக்கு அறிவிப்பவர் உங்களில் யார்?" என்று கேட்டார்கள். அங்கு ஹுதைஃபா (ரலி) அவர்களும் இருந்தார்கள். அவர்கள் "நான் (கேட்டிருக்கிறேன்)" என்று கூறினார்கள்.
ஹதீஸின் இறுதியில் "இது கட்டுக்கதை அன்று; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதுதான்" என ஹுதைஃபா (ரலி) அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
அத்தியாயம் : 1
பாடம் : 65 இஸ்லாம் குறைந்த எண்ணிக்கை கொண்ட மக்களிடையேதான் தோன்றியது; குறைந்த எண்ணிக்கையினரிடையே தான் அது திரும்பிச்செல்லும். அது (இறுதியில் மஸ்ஜிதுல் ஹராம், மஸ்ஜிதுந் நபவீ ஆகிய) இரு பள்ளிவாசல்களிடையே அபயம் பெறும்.
232. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இஸ்லாம் குறைந்த எண்ணிக்கை கொண்ட மக்களிடையேதான் தோன்றியது. அது தோன்றிய பழைய நிலைக்கே திரும்பிச்செல்லும். அந்தக் குறைந்த எண்ணிக்கையிலான மக்களுக்கு சுபம் உண்டாகட்டும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இஸ்லாம் குறைந்த எண்ணிக்கை கொண்ட மக்களிடையேதான் தோன்றியது. அது தோன்றிய பழைய நிலைக்கே திரும்பிச்செல்லும். பாம்பு தனது புற்றில் (சென்று) அபயம் பெறுவதைப் போன்று இஸ்லாம் இரு பள்ளிவாசல்களில் அபயம் பெறும்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்தள்ளது.
அத்தியாயம் : 1
233. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பாம்பு தனது புற்றில் (சென்று) அபயம் பெறுவதைப் போன்று இறைநம்பிக்கை (ஈமான்) மதீனாவில் அபயம் பெறும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
பாடம் : 66 இறுதிக் காலத்தில் இறைநம்பிக்கை (இல்லாமற்) போய்விடுவது.
234. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பூமியில் "அல்லாஹ், அல்லாஹ்" என்று சொல்லப்படாதபோதுதான் மறுமை நாள் நிகழும்.
இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"அல்லாஹ், அல்லாஹ்" என்று சொல்லிக்கொண்டிருக்கும் (இறைநம்பிக்கையாளர்) எவர்மீதும் மறுமை நாள் நிகழாது.
இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 1
பாடம் : 67 (எதிரிகளால் தொல்லை ஏற்படும் என்று) அஞ்சுகின்றவர் தமது இறை நம்பிக்கையை இரகசியமாக வைத்துக்கொள்வது.
235. ஹுதைஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு நாள்) நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது அவர்கள், "எத்தனை பேர் இஸ்லாத்தை ஏற்றுள்ளார்கள்? என்பதை எனக்குக் கணக்கிட்டுச் சொல்லுங்கள்!" என்று கூறினார்கள். நாங்கள் அறுநூறு முதல் எழுநூறு பேர்வரை இருக்க, எங்களைப் பற்றி அஞ்சுகிறீர்களா, அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்டோம்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உங்களுக்குத் தெரியாது. நீங்கள் (எதிரிகளால்) சோதிக்கப்படலாம்!" என்று சொன்னார்கள். அவ்வாறே நாங்கள் சோதிக்கப் பட்டோம். எந்த அளவுக்கென்றால், (ஒரு கட்டத்தில்) எங்களில் சிலர் இரகசியமாகவே தவிரத் தொழ முடியாத நிலை ஏற்பட்டது.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
பாடம் : 68 தமது இறைநம்பிக்கை குறித்து அஞ்சுகின்ற பலவீனமான ஒருவரின் உள்ளத்தைத் தேற்றுவதும், உறுதியான ஆதாரமின்றி ஒருவரை இறைநம்பிக்கையாளர் என்று முடிவு செய்வதற்கு வந்துள்ள தடையும்.
236. சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு சமயம்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தர்மப் பொருள்களைப்) பங்கிட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது நான், "அல்லாஹ்வின் தூதரே! இன்னாருக்கு நீங்கள் கொடுங்கள். அவர் ஓர் இறைநம்பிக்கையாளர் (முஃமின்)" என்று சொன்னேன். உடனே நபி (ஸல்) அவர்கள், "அவரை முஸ்லிம் (வெளித்தோற்றத்தில் இறைநம்பிக்கையாளர்) என்று சொல்லுங்கள்!" என்றார்கள். நான் முன்பு கூறியதைப் போன்றே மூன்று முறை கூறினேன். நபி (ஸல்) அவர்களும் முன்பு கூறியதைப் போன்றே "அவரை முஸ்லிம் (என்று சொல்லுங்கள்)" என்று மூன்று முறை என்னிடம் கூறினார்கள். பிறகு, "நான் ஒருவருக்குக் கொடுக்கிறேன்; ஆனால், அவரைவிட மற்றொருவர் என் அன்புக்குரியவராய் இருப்பார். (அப்படியிருந்தும் அவருக்கு நான் கொடுப்பதற்குக்) காரணம், (நான் ஏதும் கொடுக்காதிருந்தால் வறுமையினால் அவர் குற்றம் ஏதும் இழைத்து அதனால்) அவரை இறைவன் நரகத்தில் குப்புறத் தள்ளிவிடுவானோ எனும் அச்சம்தான்" என்றார்கள்.
அத்தியாயம் : 1
237. சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு குழுவினருக்கு (தர்மப் பொருள்களை) வழங்கினார்கள். அவர்களிடையே நானும் அமர்ந்திருந்தேன். அப்போது, அக்குழுவினரில் எனக்குப் பிடித்த ஒருவருக்கு ஏதும் கொடுக்காமல் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விட்டுவிட்டார்கள். ஆகவே நான், "அல்லாஹ்வின் தூதரே! (அவரை ஏன் விட்டுவிட்டீர்கள்?) அவர்மீது உங்களுக்கு என்ன (அதிருப்தி)? அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் ஓர் இறைநம்பிக்கையாளர் (முஃமின்) என நான் அறிவேன்" என்று கூறினேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவரை முஸ்லிம் (வெளித்தோற்றத்தில் இறை நம்பிக்கையாளர்) என்று சொல்லுங்கள்!" என்றார்கள். சிறிது நேரம் நான் அமைதியாக இருந்தேன். நான் அவரைப் பற்றி அறிந்திருந்த விஷயங்கள் மிகைத்துவிடவே, "அல்லாஹ்வின் தூதரே! அவர்மீது உங்களுக்கு என்ன (அதிருப்தி)? அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் ஓர் இறைநம்பிக்கையாளர் என்று நான் அறிவேன்" என்று (மீண்டும்) கூறினேன். அதற்கும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவரை முஸ்லிம் (என்று சொல்லுங்கள்!)" என்றார்கள். சிறிது நேரம் நான் அமைதியாக இருந்தேன். நான் அவரைப் பற்றி அறிந்திருந்த விஷயங்கள் என்னை மிகைத்துவிடவே, "அல்லாஹ்வின் தூதரே! அவர்மீது உங்களுக்கு என்ன (அதிருப்தி)? அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் ஓர் இறை நம்பிக்கையாளர் என்று நான் அறிவேன்" என்றேன். அப்போதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவரை முஸ்லிம் (என்று சொல்லுங்கள்!) நான் ஒருவருக்குக் கொடுக்கிறேன்; ஆனால், மற்றொருவர் அவரைவிட என் அன்புக்குரியவராய் இருப்பார். (அப்படியிருந்தும் அவருக்கு நான் கொடுப்பதற்குக்) காரணம், (நான் ஏதும் கொடுக்காதிருந்தால் வறுமையினால் அவர் குற்றமேதும் இழைத்து, அதனால்) அவர் நரகத்தில் முகம் குப்புற வீழ்த்தப்படுவாரோ எனும் அச்சம்தான்" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "(அக்குழுவினரில் ஒருவருக்கு ஏதும் கொடுக்காததால்) நான் எழுந்து சென்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், "அவர்மீது உங்களுக்கு என்ன (அதிருப்தி)?" என்று இரகசியமாகக் கேட்டேன்" என்று (சஅத் பின் அபீக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாக) அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், (மூன்று முறை கேட்டு பதிலுரைத்த பின்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனது கழுத்திற்கும் புஜத்திற்கும் மத்தியில் அடித்து, "சஅதே! (என்னிடம் வழக்காடி) மோத வருகின்றீர்களா? நான் ஒருவருக்குக் கொடுக்கிறேன்..." என்று கூறியதாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 1
பாடம் : 69 (இறைச்)சான்றுகள் வெளிப்படுவதன் மூலம் (இறைநம்பிக்கை மீது) மன அமைதி அதிகரிப்பது.
238. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(இறந்துபோனவற்றுக்கு அல்லாஹ் எப்படி உயிரூட்டுகிறான் என்ற சந்தேகம் இறைத்தூதர் களுக்கு வருவதாயிருந்தால் இறைத்தூதர்) இப்ராஹீம் (அலை) அவர்களைவிடவும் நாமே சந்தேகம் கொள்ள அதிகத் தகுதியுடையவர்கள் ஆவோம். (அவர்கள் சந்தேகப்பட்டு அப்படிக் கேட்கவில்லை.) ஏனெனில், "என் இறைவா! மரித்தவர்களை எவ்வாறு நீ உயிர்ப்பிப்பாய் என்று எனக்குக் காட்டுவாயாக!" என்று அன்னார் கேட்டார்கள். இறைவன், "நீங்கள் நம்பிக்கை கொள்ளவில்லையா?" என்று கேட்டான். அதற்கு அவர்கள், "ஆம்! ஆயினும் என் உள்ளம் நிம்மதியடைவதற்காகவே கேட்கிறேன்" என்று பதிலளித்தார்கள். (2:260)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பின்வருமாறும்) கூறினார்கள்:
அல்லாஹ், லூத் (அலை) அவர்களுக்குக் கருணை புரிவானாக! அன்னார் வல்லமை மிக்க ஓர் உதவியாளனிடமே தஞ்சம் புகுந்தவர்களாய் இருந்தார்கள். யூசுஃப் (அலை) அவர்கள் தங்கியிருந்த அளவிற்கு நீண்ட காலம் நான் சிறையில் தங்கியிருக்க நேரிட்டு (பிறகு அவர்களை விடுதலை செய்ய அழைப்பாளர் ஒருவர் வந்ததைப் போன்று என்னிடம் வந்து) இருந்தால், நான் அந்த அழைப்பாளரின் அழைப்பை ஏற்றுக்கொண்டிருப்பேன்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "பிறகு நபி (ஸல்) அவர்கள் இந்த (2:260ஆவது) இறைவசனத்தை முழுமையாக ஓதிக் காட்டினார்கள்" என்றும் இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதிலும் "நபி (ஸல்) அவர்கள் இந்த (2:260ஆவது) இறை வசனத்தை முழுமையாக ஓதிக் காட்டினார்கள்" என்றே இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 1
பாடம் : 70 முஹம்மத் (ஸல்) அவர்கள் (உலக) மக்கள் அனைவருக்கும் இறைத்தூதராக அனுப்பப்பட்டுள்ளார்கள் என்றும், அவர்களது மார்க்கத்தின் மூலம் மற்ற (முந்தைய) மார்க்கங்கள் காலாவதியாகிவிட்டன என்றும் நம்புவது கட்டாயமாகும்.
239. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒவ்வோர் இறைத்தூதருக்கும் சில அற்புதங்கள் வழங்கப்பெற்றே இருந்தன. அவற்றைக் காணும் மக்கள் நம்பித்தான் ஆக வேண்டியநிலை இருந்தது. எனக்கு வழங்கப்பெற்ற அற்புதமெல்லாம், அல்லாஹ் எனக்கு அருளிய வேதஅறிவிப்பு (வஹீ)தான். ஆகவே, இறைத்தூதர்களிலேயே மறுமை நாளில், பின்பற்றுவோர் அதிகம் உள்ள இறைத்தூதராக நான் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 1
240. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
முஹம்மதின் உயிர் யாருடைய கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! இந்த(இறுதி)ச் சமுதாயத்திலுள்ள யூதரோ கிறிஸ்தவரோ யாரேனும் ஒருவர் என்(மார்க்கத்தி)னைப் பற்றிக் கேள்விப்பட்ட பிறகும்கூட நான் கொண்டுவந்த (மார்க்கத்)தை நம்பிக்கை கொள்ளாமல் இறந்துவிட்டால், அவர் நரகவாசிகளில் ஒருவராகவே இருப்பார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
241. ஸாலிஹ் பின் ஸாலிஹ் அல்ஹம்தானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(அன்றைய) குராசான் நாட்டைச் சேர்ந்த ஒரு மனிதர் ஆமிர் அஷ்ஷஅபீ (ரஹ்) அவர்களிடம், "அபூஅம்ரே! "ஒருவர் தம் அடிமைப் பெண்ணை விடுதலை செய்து அவளைத் தாமே மணந்துகொள்ளும்போது, அவர் தமது ஒட்டகத்திலேயே பயணம் செய்து கொண்டிருப்பவரைப் போன்றவராகிறார் (அவருக்கு அதற்காக நன்மை ஏதும் கிடைக்காது)" என எங்கள் குராசான் பகுதியைச் சேர்ந்த சிலர் கூறுகின்றனரே!?" என்று கேட்டார். அதற்கு ஷஅபீ (ரஹ்) அவர்கள் சொன்னார்கள்: அபூபுர்தா பின் அபீமூசா (ரஹ்) அவர்கள் தம் தந்தை அபூமுசா (ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறியதாக எனக்கு அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மூன்று பேருக்கு (அல்லாஹ்விடத்தில்) இரட்டை நன்மைகள் அளிக்கப்படும்:
1.வேதக்காரர்களில் ஒருவர் தம்முடைய (சமூகத்தாருக்கு நியமிக்கப்பெற்ற) இறைத்தூதரையும் நம்பினார்; எனது காலத்தை அவர் அடைந்தபோது என்னையும் நம்பினார்; பின்பற்றினார்; மெய்ப்படுத்தினார். அவருக்கு இரு நன்மைகள் உண்டு.
2.அடிமையாக உள்ள ஒருவர் இறைவனின் கடமையையும் நிறைவேற்றி, தன் எசமானின் கடமையையும் நிறைவேற்றினார். அவருக்கும் இரு நன்மைகள் உண்டு.
3.ஒருவர் தம்மிடமிருந்த அடிமைப் பெண்ணுக்கு நிறைவாக உணவளித்(துப் பராமரித்து வந்)தார். அவளுக்கு நற்குணங்களைக் கற்றுக்கொடுத்தார். அதையும் செம்மையாகச் செய்தார். பிறகு அவளை அடிமைத்தளையிலிருந்து விடுதலை செய்து தாமே மணந்தும்கொண்டார் எனில், அவருக்கும் இரட்டை நன்மைகள் உண்டு.
பிறகு ஷஅபீ (ரஹ்) அவர்கள் அந்தக் குராசான்வாசியிடம், "(கட்டணம்) ஏதுமின்றி (உங்களுக்கு நான் அறிவித்த) இந்த ஹதீஸைப் பெற்றுக்கொள்ளுங்கள். இதைவிடச் சிறிய விஷயங்களை அறிந்துகொள்வதற்காகவெல்லாம் சிலர் மதீனா வரை பயணம் சென்றதுண்டு" என்றார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
பாடம் : 71 (உலக அழிவுக்கு முன்) மர்யமின் மைந்தர் ஈசா (அலை) அவர்கள் (பூமிக்கு) இறங்கி வந்து, நம்முடைய நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் மார்க்க நெறியின்படி நீதி வழங்குதல்.
242. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என் உயிர் எவன் கையிலுள்ளதோ அ(ந்த இறை)வன்மீது சத்தியமாக! விரைவில் (உலக அழிவுக்கு முன்) மர்யமின் மைந்தர் (ஈசா -அலை) உங்களிடையே நேர்மையாகத் தீர்ப்பளிக்கும் நீதிபதியாக இறங்கவிருக்கிறார். அவர் சிலுவையை உடைப்பார்; பன்றியைக் கொல்வார்; ஜிஸ்யா (எனும் காப்பு)வரியை வாங்க மறுப்பார்; (இஸ்லாம் ஒன்றையே மக்களிடமிருந்து ஏற்பார்.) அப்போது செல்வம் (பெருகி) வழிந்தோடும். எந்த அளவுக்கென்றால் அதை வாங்கிக்கொள்ள எவரும் இருக்கமாட்டார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் ஆறு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் ஓர் அறிவிப்பில், "(மர்யமின் மைந்தர்) நீதிவழுவாத் தலைவராக, நேர்மையாகத் தீர்ப்பளிக்கும் நீதிபதியாக (இறங்கவிருக்கிறார்.)" என்று இடம்பெற்றுள்ளது.
மற்றோர் அறிவிப்பில் "நேர்மையாகத் தீர்ப்பளிக்கும் நீதிபதியாக" என்பது மட்டுமே இடம் பெற்றுள்ளது. "நீதிவழுவாத் தலைவராக" என்பது இடம்பெறவில்லை. மற்றோர் அறிவிப்பில் "நீதிவழுவாத் தீர்ப்பாளராக" என இடம்பெற்றுள்ளது. அதில் "அந்த நேரத்தில் செய்யப்படும் ஒரேயொரு சஜ்தா (சிரவணக்கம்) இந்த உலகத்தையும் அதிலுள்ளவற்றையும் விடச் சிறந்ததாக இருக்கும்" என்றும் அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.
இந்த நபிமொழியை அறிவிக்கும் அபூஹுரைரா (ரலி) அவர்கள், "வேதம் வழங்கப் பெற்றவர்களில் எவரும், அவர் (மர்யமின் மைந்தர்) இறப்பதற்கு முன்பாக அவரை நம்பிக்கை கொள்ளாமல் இருக்கமாட்டார்..." எனும் (4:159ஆவது) இறைவசனத்தை நீங்கள் விரும்பினால் ஓதிக்கொள்ளுங்கள்!" என்று கூறியதாகவும் இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 1
243. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் மீதாணையாக! (உலக அழிவுக்கு முன்) மர்யமின் மைந்தர் (ஈசா, உங்களிடையே) நேர்மையாகத் தீர்ப்பளிக்கும் நீதிபதியாக இறங்கவிருக்கிறார். அவர் சிலுவையை உடைப்பார்; பன்றியைக் கொல்வார்; ஜிஸ்யா (எனும் காப்பு)வரியை வாங்க மறுப்பார்; அப்போது (உயர்ந்த செல்வமான) ஒட்டகங்கள் அப்படியே விடப்படும். அவற்றை யாரும் தேடி அலையமாட்டார்கள். (அந்த நேரத்தில் மக்களிடையே) பகைமையும் வெறுப்பும் போட்டி பொறாமையும் அகன்றுவிடும். செல்வங்களைப் பெற்றுக்கொள்ளுமாறு மக்கள் அழைக்கப்படுவார்கள். ஆனால், அதை யாரும் ஏற்கமாட்டார்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 1
244. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களைச் சேர்ந்த ஒருவரே உங்களுக்கு(த் தொழுகை நடத்தும்) இமாமாக இருக்க, மர்யமின் மைந்தர் (ஈசா)உங்களிடையே இறங்குவாரேயானால் அப்போது உங்களுக்கு எப்படியிருக்கும்?
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 1
245. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மர்யமின் மைந்தர் (ஈசா) உங்களிடையே இறங்கி, உங்களுக்குத் தலைவராக இருந்தால் உங்களுக்கு எப்படியிருக்கும்?
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 1
246. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "மர்யமின் மைந்தர் (ஈசா) உங்களிடையே இறங்கி வந்து, உங்களுக்கு இமாமாக இருந்தால் அப்போது உங்களுக்கு எப்படியிருக்கும்?" என்று கூறினார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான வலீத் பின் முஸ்லிம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த இப்னு அபீதிஉப் (ரஹ்) அவர்களிடம் நான், "அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து வரும் அவ்ஸாயீ (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "உங்களைச் சேர்ந்த ஒருவரே உங்களுக்கு இமாமாக இருக்க (மர்யமின் மைந்தர் உங்களிடையே இறங்குவாரேயானால்...)" என இடம்பெற்றுள்ளதே?" என்று கேட்டேன். அதற்கு இப்னு அபீதிஉப் (ரஹ்) அவர்கள் "மர்யமின் மைந்தர் உங்களுக்கு இமாமாக இருந்தால்..." என்பதன் பொருள் என்னவென்று நீங்கள் அறிவீர்களா? என்று கேட்டார்கள். நான், "நீங்களே கூறுங்கள்!" என்றேன். அப்போது அவர்கள், "உங்களுடைய இறைவனின் வேதத்தின்படியும் உங்களுடைய நபியின் வழிமுறைப்படியும் உங்களை வழிநடத்திச் செல்வார் என்று பொருள்" என்றார்கள்.
அத்தியாயம் : 1
247. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என் சமுதாயத்தாரில் ஒரு பிரிவினர் சத்தியத்திற்கு ஆதரவாகப் போராடிக் கொண்டேயிருப்பார்கள். மறுமை நாள்வரை அவர்கள் (சத்தியத்தில்) மேலோங்கியே நிற்பார்கள். பிறகு மர்யமின் மைந்தர் ஈசா (அலை) அவர்கள் (பூமிக்கு) இறங்கிவருவார்கள். அப்போது முஸ்லிம்களின் தலைவர், "வாருங்கள், வந்து எங்களுக்குத் தலைமை தாங்கித் தொழுகை நடத்துங்கள்!" என்று (ஈசாவிடம்) கூறுவார். அதற்கு ஈசா (அலை) அவர்கள், "இல்லை (உங்களுக்கு நான் தலைமை தாங்கித் தொழுவிக்கமாட்டேன்). உங்களில் சிலர்தாம் மற்றச் சிலருக்குத் தலைவராக இருப்பார்; இது, அல்லாஹ் இந்தச் சமுதாயத்திற்கு அளித்துள்ள மரியாதையாகும்" என்று கூறிவிடுவார்கள்.
இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
பாடம் : 72 இறைநம்பிக்கை (ஈமான்) கொள்ள முன்வந்தாலும் ஏற்கப்படாத (இறுதிக்) காலம்.
248. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மேற்கிலிருந்து சூரியன் உதயமாகாதவரை மறுமைநாள் வராது. அவ்வாறு அது மேற்கிலிருந்து உதயமாகும்போது மக்கள் அனைவரும் (அதைப் பார்த்துவிட்டு) ஒட்டு மொத்தமாக இறைநம்பிக்கை கொள்வார்கள். ஆனால், முன்பே இறைநம்பிக்கை கொண்டிராத, அல்லது இறைநம்பிக்கை கொண்டிருந்தாலும் நன்மையேதும் செய்திராத எந்த மனிதருக்கும் அந்த (இறுதி) நாளில் கொள்ளும் இறைநம்பிக்கை பயனளிக்காது. (6:158)
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் ஆறு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
249. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மூன்று அடையாளங்கள் தோன்றிவிட்டால் முன்பே இறைநம்பிக்கை கொண்டிராத,அல்லது இறைநம்பிக்கை கொண்டிருந்தாலும் நன்மையேதும் செய்திராத எந்த மனிதருக்கும் அந்த நேரத்தில் கொள்ளும் இறைநம்பிக்கை பயனளிக்காது. (அவை:) 1. மேற்கிலிருந்து சூரியன் உதயமாகுதல். 2. தஜ்ஜால் (தோன்றுதல்). 3. பூமியிலிருந்து வெளிப்படும் (அதிசய) கால்நடை.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
250. அபூதர் அல்ஃகிஃபாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் (எங்களிடம்), "இந்தச் சூரியன் எங்கு செல்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டார்கள். மக்கள், "அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிவார்கள்" என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், "அது (சூரியன்) இறை அரியாசனத்துக்கு (அர்ஷுக்கு)க் கீழே தலைவணங்குவதற்காகத் தனது நிலையை நோக்கிச் செல்கிறது. அதனிடம், "எழுந்து, நீ வந்த வழியே சென்றுவிடு" என்று கூறப்படும் வரை அது அவ்வாறே இருந்துகொண்டிருக்கிறது. அவ்வாறு கூறப்பட்டதும் அது சென்று கிழக்கிலிருந்து உதயமாகிறது. பிறகு (மறுநாள் மீண்டும்) இறை அரியாசனத்துக்குக் கீழே தனது நிலையை நோக்கிச் சென்று தலைவணங்குகிறது, அதனிடம், "நீ எழுந்து, வந்த வழியே திரும்பிச் சென்றுவிடு!" என்று கூறப்படும்வரை அது அவ்வாறே இருந்துகொண்டிருக்கிறது. அவ்வாறு கூறப்பட்டதும் அது திரும்பிச் சென்று கிழக்கிலிருந்து உதயமாகிறது. பிறகு மக்களுக்கு (எந்த வித்தியாசமும்) தெரியாத விதத்தில் இறை அரியாசனத்துக்குக் கீழே தனது நிலையை நோக்கிச் செல்கிறது. அப்போது அதனிடம், "நீ எழுந்து மேற்கிலிருந்து உதயமாகு!" என்று கூறப்படும். அப்போது அது (வழக்கத்திற்கு மாறாக) மேற்கிலிருந்து உதயமாகும்" என்று கூறினார்கள்.
பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அது எந்த நாள் என்று உங்களுக்குத் தெரியுமா? அது, முன்பே இறைநம்பிக்கை கொண்டிராத, அல்லது இறைநம்பிக்கை கொண்டிருந்தாலும் நன்மையேதும் செய்திராத எந்த மனிதருக்கும் அந்த நேரத்தில் கொள்ளும் இறைநம்பிக்கை பயனளிக்காத (இறுதி) நாளாகும்" என்று கூறினார்கள்.(6:158)
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
- அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு நாள்) நான் பள்ளிவாசலுக்குள் நுழைந்தபோது அங்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அமர்ந்திருந்தார்கள். சூரியன் மறைந்தபோது (என்னிடம்) அவர்கள், "இந்தச் சூரியன் எங்கு செல்கிறது என்று உமக்குத் தெரியுமா, அபூதர்?" என்று கேட்டார்கள். நான், "அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்" என்று கூறினேன். அப்போது அவர்கள், "அது (இறை அரியாசனத்துக்குக் கீழே) சென்று தலைவணங்குவதற்கு அனுமதி கேட்கிறது. உடனே அதற்கு அனுமதியளிக்கப்படுகிறது. அதனிடம், "நீ வந்த வழியே திரும்பிச் சென்றுவிடு" என்று கூறப்படுகிறது போலும். (இறுதியாக ஒரு நாள்) அது மேற்கிலிருந்து உதயமாகும்" என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் அபூதர் (ரலி) அவர்கள் இதை அறிவித்துவிட்டு, (குர்ஆனில் "வஷ்ஷம்சு தஜ்ரீ லி முஸ்தகர்ரின் லஹா" என்று இடம்பெற்றுள்ள 36:38ஆவது வசனத்தை) அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களின் ஓதல் முறையில் உள்ளபடி "வ தாலிக முஸ்தகர்ருன் லஹா" என்று ஓதிக்காட்டினார்கள். (பொருள்: அதுதான் அது நிலைகொள்ளும் இடமாகும்.)
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
251. அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், "சூரியன் தான் நிலைகொள்ளும் இடத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது" எனும் (36:38ஆவது) வசனம் குறித்துக் கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அது நிலைகொள்ளுமிடம் இறைவனின் அரியாசனத்திற்குக் கீழே உள்ளது" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
பாடம் : 73 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு வேதஅறிவிப்பு (வஹீ) அருளப் பெற்றதன் துவக்கம்.
252. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஆரம்பமாக வந்த வேதஅறிவிப்பு (வஹீ) தூக்கத்தில் கண்ட உண்மைக் கனவுகளாகவே இருந்தது. அது அதிகாலைப் பொழுதின் விடியலைப் போன்று (தெளிவாகவே) இருக்கும். பின்னர் தனிமையிலிருப்பது அவர்களுக்கு விருப்பமாயிற்று. எனவே, அவர்கள் "ஹிரா" குகையில் தனித்திருந்து கணிசமான இரவுகள் வணக்க வழிபாட்டில் ஈடுபட்டுவந்தார்கள். அதற்காகத் தம் குடும்பத்தாரிடம் சென்று (பல நாட்களுக்கு வேண்டிய) உணவைத் தம்முடன் கொண்டுசெல்வார்கள். (அந்த உணவு தீர்ந்ததும்) மீண்டும் (தம் துணைவியார்) கதீஜா (ரலி) அவர்களிடம் திரும்பிவந்து அதைப் போன்று (பல நாட்களுக்கு வேண்டிய) உணவைப் பெற்றுச் செல்வார்கள். இந்நிலை, "ஹிரா" குகையில் அவர்களுக்குச் சத்திய(வேத)ம் வரும் வரை நீடித்தது. (ஒரு நாள்) அந்த வானவர் (ஜிப்ரீல்) நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "ஓதுவீராக!" என்றார். நபி (ஸல்) அவர்கள்,
"நான் ஓதத் தெரிந்தவனில்லையே!" என்று சொன்னார்கள். (பின்பு நடந்தவற்றை) நபி (ஸல்) அவர்கள் (பின்வருமாறு எடுத்துக்) கூறினார்கள்:
வானவர் (ஜிப்ரீல்) என்னைப் பிடித்து நான் திணறும் அளவிற்கு இறுகக் கட்டியணைத்தார். பிறகு என்னை விடுவித்துவிட்டு "ஓதுவீராக!" என்றார். அப்போதும் "நான் ஓதத் தெரிந்த வனில்லையே!" என்றேன். உடனே அவர் என்னைப் பிடித்து நான் திணறும் அளவிற்கு (மீண்டும்) இறுகக் கட்டியணைத்தார். பிறகு, என்னை விடுவித்துவிட்டு "ஓதுவீராக!" என்றார். அப்போதும் "நான் ஓதத் தெரிந்தவனில்லையே!" என்றேன். உடனே அவர் என்னைப் பிடித்து என்னால் தாங்க இயலாத அளவிற்கு மூன்றாவது முறையாக இறுகத் தழுவினார். பின்னர் என்னை விடுவித்துவிட்டு, "படைத்த உம்முடைய இறைவனின் (திருப்) பெயரால் ஓதுவீராக! அவனே மனிதனை "பற்றித் தொங்கும் (அட்டைபோன்ற) நிலை"யிலிருந்து படைத்தான். (நபியே!) ஓதுவீராக! உம்முடைய இறைவன் மாபெரும் கொடையாளி; அவன்தான் எழுதுகோல் மூலம் (எழுதக்) கற்றுக்கொடுத்தான். மனிதன் அறியாதவற்றையெல்லாம் அவனுக்குக் கற்பித்தான்" எனும் (96:1-5) இறைவசனங்களை அவர் ஓதினார்.
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அந்த வசனங்களுடன், (அச்சத்தால்) தம் கழுத்துச் சதைகள் படபடக்கத் திரும்பிவந்து, (தம் துணைவியார்) கதீஜாவிடம் சென்றார்கள். "எனக்குப் போர்த்திவிடுங்கள்; எனக்குப் போர்த்திவிடுங்கள்" என்றார்கள். அவ்வாறே (வீட்டாரும்) அவர்களுக்குப் போர்த்திவிட அச்சம் அவர்களைவிட்டு அகன்றது. பின்னர் கதீஜாவிடம் நடந்தவற்றைத் தெரிவித்து விட்டு "எனக்கு என்ன ஆயிற்று? எனக்கேதும் நேர்ந்துவிடுமோ என நான் அஞ்சுகிறேன்" என்று சொன்னார்கள். அதற்கு கதீஜா (ரலி) அவர்கள், "அப்படியொன்றும் ஆகாது. நீங்கள் ஆறுதலடையுங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களை ஒருபோதும் அல்லாஹ் இழிவுபடுத்தமாட்டான்; ஏனெனில், அல்லாஹ்வின் மீதாணை(யிட்டுச் சொல்கிறேன்)! நீங்கள் உறவுகளைப் பேணி நடந்துகொள்கிறீர்கள்; உண்மையே பேசுகிறீர்கள்; (சிரமப்படுவோரின்) பாரத்தைச் சுமக்கின்றீர்கள்; வறியவர்களுக்காகப் பாடுபடுகின்றீர்கள்; விருந்தினர்களை உபசரிக்கின்றீர்கள்; சத்திய சோதனையில் ஆட்படுவோருக்கு உதவி செய்கின்றீர்கள் (அதனால் நீங்கள் அஞ்ச வேண்டியதில்லை)" என்று (ஆறுதல்) சொன்னார்கள். பின்னர் நபி (ஸல்) அவர்களை அழைத்துக் கொண்டு தம் தந்தையின் சகோதரர் மகனான வரக்கா பின் நவ்ஃபல் பின் அசத் பின் அப்தில் உஸ்ஸா என்பாரிடம் கதீஜா (ரலி) அவர்கள் சென்றார்கள்.
"வரக்கா" அறியாமைக் காலத்திலேயே கிறிஸ்தவ சமயத்தைத் தழுவியவராக இருந்தார். மேலும், அவர் அரபி (மற்றும் எபிரேய) மொழியில் எழுதத் தெரிந்தவராக இருந்தார். எனவே, இன்ஜீல் வேதத்தை அல்லாஹ் நாடிய அளவிற்கு (எபிரேய மொழியிலிருந்து) அரபு மொழியில் (மொழிபெயர்த்து) எழுதுவார். அவர் கண்பார்வையிழந்த முதியவராகவும் இருந்தார்.
அவரிடம் கதீஜா (ரலி) அவர்கள், "என் தந்தையின் சகோதரரே! உங்களுடைய சகோதரரின் புதல்வர் (முஹம்மத்) இடம் (அவர் கூறுவதைக்) கேளுங்கள்" என்றார்கள். அப்போது வரக்கா பின் நவ்ஃபல் (நபி (ஸல்) அவர்களிடம்), "என் சகோதரர் மைந்தரே! நீங்கள் என்ன பார்த்தீர்கள்?" எனக் கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தாம் பார்த்தவற்றின் விவரத்தை அவரிடம் தெரிவித்தார்கள். (இதைக் கேட்ட) வரக்கா, "(நீர் கண்ட) இவர்தாம் (இறைத்தூதர்) மூசாவிடம் அனுப்பப்பெற்ற வானவர் (ஜிப்ரீல்) ஆவார்" என்று நபியவர்களிடம் கூறிவிட்டு, "(மகனே!) உம்மை உம் சமூகத்தார் (உமது நாட்டிலிருந்து) வெளியேற்றும் அந்தச் சமயத்தில் நான் திடகாத்திரமானவனாக இருந்தால் நன்றாயிருக்குமே! நான் அந்தத் தருணத்தில் உயிரோடு இருந்தால் நன்றாயிருக்குமே!" என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(என் சமூக) மக்கள் என்னை (நாட்டைவிட்டு) வெளியேற்றவா செய்வார்கள்?" என்று கேட்க, வரக்கா, "ஆம், நீங்கள் பெற்றுள்ள (உண்மையான வேதம் போன்ற)தைப் பெற்ற (இறைத்தூதர்) எவரும் (மக்களால்) பகைத்துக்கொள்ளப்படாமல் இருந்ததில்லை. உங்களது (தூதுத்துவப் பணி பரவலாகும்) நாளை நான் அடைந்தால் உங்களுக்குப் பலமான உதவிபுரிவேன்" என்று கூறினார்.
இதை உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 1
253. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் ("அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களை ஒருபோதும் அல்லாஹ் இழிவுபடுத்த மாட்டான்" எனும் வாசகத்திற்கு பதிலாக) "அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களை ஒருபோதும் அல்லாஹ் கவலையில் ஆழ்த்தமாட்டான்" என்று (கதீஜா (ரலி) அவர்கள் ஆறுதல் கூறியதாக) இடம்பெற்றுள்ளது.
அவ்வாறே ("என் தந்தையின் சகோதரரே!" என்று வரக்காவிடம் கூறியதற்கு பதிலாக) "என் தந்தையின் சகோதரர் புதல்வரே!" என கதீஜா (ரலி) அவர்கள் கூறியதாகவும் இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 1
254. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் ("தம் கழுத்து சதைகள் படபடக்க நபியவர்கள் தம் துணைவியார் கதீஜாவிடம் திரும்பிவந்து" எனும் வாசகத்திற்கு பதிலாக) "(அச்சத்தால்) இதயம் படபடக்க நபியவர்கள் (தம் துணைவியார்) கதீஜாவிடம் திரும்பிவந்து" என்று இடம்பெற்றுள்ளது. "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஆரம்பமாக வந்த வேத அறிவிப்பு (வஹீ) தூக்கத்தில் கண்ட உண்மைக் கனவுகளாகவே இருந்தது" என்று இந்த அறிவிப்பின் தொடக்கத்தில் கூறப்படவில்லை.
யூனுஸ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களை ஒருபோதும் அல்லாஹ் இழிவுபடுத்தமாட்டான்" என்ற வாசகமே இடம்பெற்றுள்ளது. மேலும், கதீஜா (ரலி) அவர்கள் "என் தந்தையின் சகோதரர் புதல்வரே! உங்கள் சகோதரர் மகனிடம் கேளுங்கள்" என்று சொன்னதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
அத்தியாயம் : 1
255. நபித்தோழர் ஜாபிர் பின் அப்தில்லாஹ் அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமக்கு வேதஅறிவிப்பு (வஹீ) நின்றுபோயிருந்த இடைக்காலத்தைப் பற்றி அறிவிக்கையில் (பின்வருமாறு) கூறினார்கள்:
நான் நடந்து போய்க்கொண்டிருக்கும்போது வானத்திலிருந்து ஒரு குரலைக் கேட்டு அண்ணாந்து பார்த்தேன். அங்கே, நான் "ஹிரா"வில் இருந்தபோது என்னிடம் வந்த அதே வானவர் (ஜிப்ரீல்) வானுக்கும் பூமிக்குமிடையே ஓர் ஆசனத்தில் அமர்ந்திருந்தார். அவரைப் பார்த்து பயந்து அதிர்ச்சிக்குள்ளானேன். உடனே நான் (வீட்டிற்குத்) திரும்பிவந்து (என் வீட்டாரிடம்), "எனக்குப் போர்த்திவிடுங்கள்; எனக்குப் போர்த்திவிடுங்கள்" என்று சொன்னேன். அவர்களும் போர்த்திவிட்டார்கள். அப்போது சுபிட்சமும் உயர்வும் உடைய அல்லாஹ், "போர்த்தியிருப்பவரே! எழுந்து எச்சரிக்கை செய்வீராக! உம்முடைய இறைவனைப் பெருமைப்படுத்துவீராக! உம்முடைய ஆடைகளைத் தூய்மையாக வைத்திருப்பீராக! அசுத்தத்திலிருந்து விலகியிருப்பீராக" எனும் வசனங்களை (74:1-5) அருளினான். பின்னர் வேதஅறிவிப்பு (வஹீ) தொடர்ந்து வரலாயிற்று.
மேற்கண்ட (74:5ஆவது) வசனத்தின் மூலத்திலுள்ள "அர்ருஜ்ஸ்" (அசுத்தம்) என்பது சிலைகளைக் குறிக்கும்.
அத்தியாயம் : 1
256. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள் என இடம் பெற்றுள்ளது:
பின்னர் சிறிது காலம் எனக்கு வேதஅறிவிப்பு (வஹீ) நின்றுபோயிற்று. அப்போது (ஒரு நாள்) நான் நடந்துபோய்க்கொண்டிருந்தேன். ...அவரைப் பார்த்து பயந்து அதிர்ச்சிக்குள்ளான நான் தரையில் விழுந்துவிட்டேன்... பின்னர் வேதஅறிவிப்புத் தொடர்ந்து அதிகமாக வரலாயிற்று.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடரிலும் வந்துள்ளது.
அதில், "தொழுகை கடமையாக்கப்படுவதற்கு முன்னர் அந்த வசனங்களை (74:1-5) அல்லாஹ் அருளினான்" என்று சிறு வித்தியாசத்துடன் இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 1
257. யஹ்யா பின் அபீகஸீர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்களிடம், "குர்ஆனில் எந்த வசனம் முதன் முதலில் அருளப்பெற்றது?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "போர்த்தியிருப்பவரே!" (யா அய்யுஹல் முத்தஸ்ஸிர்) எனும் (74:1ஆவது) வசனம்" என்றார்கள். நான், "ஓதுக (என்று தொடங்கும் 96:1ஆவது) வசனம் இல்லையா?" என்று கேட்டேன். அதற்கு அபூசலமா (ரஹ்) அவர்கள், "நான் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடம், "எந்த வசனம் முதன் முதலில் அருளப்பெற்றது?" என்று (இதே கேள்வியைக்) கேட்டேன். அதற்கு அவர்கள், "போர்த்தியிருப்பவரே!" எனும் (74:1ஆவது) வசனம்" என்றே பதிலளித்தார்கள். உடனே நான் "ஓதுக (இக்ரஃ பிஸ்மி ரப்பிக்க...) எனும் (96:1ஆவது) வசனம் இல்லையா?" என்று (நீங்கள் கேட்டதைப் போன்றே) கேட்டேன். அதற்கு ஜாபிர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்குச் சொன்னதையே உங்களுக்கு நான் சொல்கிறேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் ஹிரா மலைக் குகையில் ஒரு மாதம் தங்கியிருந்தேன். பிறகு என் தங்குதலை முடித்துக்கொண்டு (மலையிலிருந்து) இறங்கி, அங்கிருந்த "பத்னுல் வாதீ" பள்ளத்தாக்கின் நடுவே வந்து சேர்ந்தேன். அப்போது என்னை அழைக்கும் குரலைக் கேட்டு நான் என் முன் புறத்திலும் பின் புறத்திலும் எனக்கு வலப் பக்கத்திலும் எனக்கு இடப் பக்கத்திலும் பார்த்தேன். அங்கு யாரையும் நான் காணவில்லை. பிறகு (மீண்டும்) என்னை அழைக்கும் குரல் கேட்டுப் பார்வையைச் செலுத்தினேன். யாரையும் நான் காணவில்லை. பிறகு (மூன்றாவது முறையாக) என்னை அழைக்கும் குரல் கேட்டு அண்ணாந்து பார்த்தேன். அப்போது அவர் (வானவர் ஜிப்ரீல்) ஆகாயவெளியில் ஓர் ஆசனத்தில் இருந்தார். அப்போது நான் கடுமையாக நடுக்கமுற்றேன். உடனே நான் (என் துணைவியார்) கதீஜாவிடம் வந்து, "எனக்குப் போர்த்திவிடுங்கள்" என்று கூறினேன். அவ்வாறே (என் வீட்டார்) எனக்குப் போர்த்தி விட்டார்கள். என்மீது தண்ணீரை ஊற்றினார்கள். அப்போது மாண்பும் வலிவுமிக்க அல்லாஹ், "போர்த்தியிருப்பவரே! எழுந்து எச்சரிக்கை செய்வீராக! உம்முடைய இறைவனைப் பெருமைப்படுத்துவீராக! உமது ஆடைகளைத் தூய்மையாக வைத்திருப்பீராக" எனும் (74:1-5) வசனங்களை அருளினான்.
அத்தியாயம் : 1
258. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "அவர் (வானவர் ஜிப்ரீல்) வானுக்கும் பூமிக்குமிடையே ஓர் ஆசனத்தில் அமர்ந்து கொண்டிருந்தார்" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 1
பாடம் : 74 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விண்ணுலகப் பயணத்திற்காக (மிஃராஜ்) இரவில் அழைத்துச் செல்லப்பட்டதும், தொழுகை கடமையாக்கப்பட்டதும்.
259. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(விண்ணுலகப் பயணத்தின்போது) என்னிடம் கோவேறு கழுதையைவிடச் சிறியதும், கழுதையைவிடப் பெரியதுமான வெள்ளை நிறத்திலமைந்த நீளமான புராக் எனும் (மின்னல் வேக) வாகனம் ஒன்று கொண்டுவரப்பட்டது. அது பார்வை எட்டுகிற தூரத்திற்குத் தனது கால் குளம்பை எடுத்து (எட்டு) வைக்கும். அதிலேறி நான் பைத்துல் மக்திஸ் (ஜெரூசலேம்) இறை ஆலயம் வரை சென்றேன். பிறகு இறைத்தூதர்கள் தமது வாகனத்தைக் கட்டி வைக்கும் வளையத்தில் எனது வாகனத்தைக் கட்டிவைத்துவிட்டு அந்த இறையாலயத்திற்குள் நுழைந்து இரண்டு ரக்அத்கள் தொழுதேன். பிறகு நான் அங்கிருந்து புறப்பட்ட போது (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் (என்னிடம்) ஒரு பாத்திரத்தில் மதுவும் மற்றொரு பாத்திரத்தில் பாலும் கொண்டுவந்தார். (அதில் விரும்பியதைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளுமாறு கூறினார்.) நான் பால் பாத்திரத்தைத் தேர்ந்தெடுத்துக் கொண்டேன். அப்போது ஜிப்ரீல், "இயற்கையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டீர்" என்று கூறினார்.
பிறகு ஜிப்ரீல் என்னை அழைத்துக்கொண்டு முதல் வானத்திற்கு உயர்ந்தார். (அதன் கதவைத்) திறக்கும்படி கூறினார். அப்போது "நீங்கள் யார்?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், "ஜிப்ரீல்" என்று பதிலளித்தார். "உங்களுடன் (வந்திருப்பவர்) யார்?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், "முஹம்மத்" என்று பதிலளித்தார். "(அவரை அழைத்து வரச்சொல்லி) அவரிடம் ஆள் அனுப்பப்பட்டிருந்ததா?" என்று கேட்கப்பட்டது. அவர், "(அவரை அழைத்து வரச்சொல்லி என்னை) அவரிடம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது" என்றார். அப்போது எங்களுக்காக (கதவு) திறக்கப்பட்டது. நான் அங்கு (ஆதி மனிதர்) ஆதம் (அலை) அவர்களைக் கண்டேன். அவர்கள் என்னை வாழ்த்தி வரவேற்று, எனது நன்மைக்காகப் பிரார்த்தித்தார்கள். பிறகு ஜிப்ரீல் என்னை அழைத்துக் கொண்டு இரண்டாம் வானத்திற்கு உயர்ந்தார். (அதன் கதவைத்) திறக்கும்படி சொன்னார். அப்போது "நீங்கள் யார்?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், "ஜிப்ரீல்" என்று பதிலளித்தார். "உங்களுடன் (இருப்பவர்) யார்?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், "முஹம்மத்" என்று பதிலளித்தார். "(அவரை அழைத்துவரும்படி) அவரிடம் ஆளனுப்பப் பட்டிருந்ததா?" என்று கேட்கப்பட்டது. அவர், "(ஆம், அவரை அழைத்து வரும்படி என்னை) அவரிடம் அனுப்பிவைக்கப் பட்டிருந்தது" என்று பதிலளித்தார். அப்போது எங்களுக்காக (கதவு) திறக்கப்பட்டது. அங்கு சகோதரிகளின் புதல்வர்களான ஈசா பின் மர்யம் (அலை), யஹ்யா பின் ஸகரிய்யா (அலை) ஆகியோரை நான் கண்டேன்.அவர்கள் இருவரும் என்னை வரவேற்று, எனது நன்மைக்காகப் பிரார்த்தித்தனர்.
பிறகு ஜிப்ரீல் என்னை அழைத்துக்கொண்டு மூன்றாம் வானத்திற்கு உயர்ந்தார். (அதன் கதவைத்) திறக்கும்படி கூறினார். அப்போது "நீங்கள் யார்?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், "ஜிப்ரீல்" என்று பதிலளித்தார். "உம்முடன் (இருப்பவர்) யார்?" என்று கேட்கப்பட்டது. அவர், "முஹம்மத்" என்று பதிலளித்தார். "(அவரை அழைத்துவரும்படி) அவரிடம் ஆளனுப்பப்பட்டிருந்ததா?" என்று கேட்கப்பட்டது. அவர், "(ஆம், அவரை அழைத்துவரும்படி என்னை) அவரிடம் அனுப்பிவைக்கப்பட்டிருந்தது" என்று பதிலளித்தார். உடனே எங்களுக்காக (கதவு) திறக்கப்பட்டது. அங்கு நான் யூசுஃப் (அலை) அவர்களைக் கண்டேன். (மொத்த) அழகில் பாதி அவர்களுக்கு வழங்கப்பெற்றிருந்தது. அன்னாரும் என்னை வரவேற்று எனது நன்மைக்காகப் பிரார்த்தித்தார்கள்.
பிறகு ஜிப்ரீல் என்னை அழைத்துக்கொண்டு நான்காம் வானத்திற்கு உயர்ந்தார். (அந்த வானத்தின் கதவைத்) திறக்கும்படி கூறினார். அப்போது "யார் அது?" என்று கேட்கப்பட்டது. அவர், "ஜிப்ரீல்" என்று பதிலளித்தார். "உம்முடன் (இருப்பவர்) யார்?" என்று கேட்கப்பட்டது. அவர் "முஹம்மத்" என்று பதிலளித்தார். "(அவரை அழைத்துவரும்படி) அவரிடம் ஆளனுப்பப்பட்டிருந்ததா?" என்று கேட்கப்பட்டது. அவர், "(ஆம் அவரை அழைத்துவரும்படி என்னை) அவரிடம் அனுப்பிவைக்கப்பட்டிருந்தது" என்று பதிலளித்தார். அப்போது எங்களுக்காக (கதவு) திறக்கப்பட்டது. அங்கு நான் இத்ரீஸ் (அலை) அவர்களைக் கண்டேன். அவர்கள் (என்னை) வரவேற்று எனது நன்மைக்காகப் பிரார்த்தித்தார்கள். (இத்ரீஸ் (அலை) அவர்கள் தொடர்பாக) அல்லாஹ், "மேலும், நாம் அவரை ஓர் உயரிய இடத்தில் உயர்த்தினோம்" (19:57) என்று கூறுகின்றான்.-
பிறகு ஜிப்ரீல் என்னை அழைத்துக்கொண்டு ஐந்தாம் வானத்தில் ஏறினார். (அந்த வானத்தின் கதவைத்) திறக்கும்படி கூறினார். அப்போது, "யார் அது?" என்று கேட்கப்பட்டது. அவர், "ஜிப்ரீல்" என்று பதிலளித்தார். "உம்முடன் (இருப்பவர்) யார்?" என்று கேட்கப்பட்டது. அவர், "முஹம்மத்" என்று பதிலளித்தார். "(அவரை அழைத்துவருமாறு) ஆளனுப்பப்பட்டிருந்ததா?" என்று கேட்கப்பட்டது. அவர், "(ஆம், அவரை அழைத்துவருமாறு என்னை) அவரிடம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது" என்று பதிலளித்தார். அப்போது எங்களுக்காக (கதவு) திறக்கப்பட்டது. அங்கு நான் ஹாரூன் (அலை) அவர்களைக் கண்டேன். அவர்கள் (என்னை) வரவேற்று எனது நன்மைக்காகப் பிரார்த்தித்தார்கள்.
பிறகு ஜிப்ரீல் என்னை அழைத்துக்கொண்டு ஆறாம் வானத்தில் ஏறினார். (அந்த வானத்தின் கதவைத்) திறக்கும்படி கூறினார். "யார் அது?" என்று கேட்கப்பட்டது. அவர், "ஜிப்ரீல்" என்று பதிலளித்தார். "உம்முடன் (இருப்பவர்) யார்?" என்று கேட்கப்பட்டது. அவர் "முஹம்மத்" என்று பதிலளித்தார் "(அவரை அழைத்து வரும்படி) அவரிடம் ஆளனுப்பப்பட்டிருந்ததா?" என்று கேட்கப்பட்டது. அவர், "(ஆம், அவரை அழைத்துவரும்படி என்னை) அவரிடம் அனுப்பிவைக்கப்பட்டிருந்தது" என்று பதிலளித்தார். அப்போது எங்களுக்காக (கதவு) திறக்கப்பட்டது. அங்கு நான் மூசா (அலை) அவர்களைக் கண்டேன். அவர்கள் (என்னை) வரவேற்று, எனது நன்மைக்காகப் பிரார்த்தித்தார்கள்.
பிறகு ஜிப்ரீல் என்னை அழைத்துக்கொண்டு ஏழாவது வானத்தில் ஏறினார். (அந்த வானத்தின் கதவைத்) திறக்கும்படி கூறினார். "யார் அது?" என்று கேட்கப்பட்டது. அவர், "ஜிப்ரீல்" என்று பதிலளித்தார். "உம்முடன் (இருப்பவர்) யார்?" என்று கேட்கப்பட்டது. அவர், "முஹம்மத்" என்று பதிலளித்தார். "(அவரை அழைத்து வரும்படி) அவரிடம் ஆளனுப்பப்பட்டிருந்ததா?" என்று கேட்கப்பட்டது. அவர், "(ஆம், அவரை அழைத்துவரும்படி என்னை) அவரிடம் அனுப்பிவைக்கப்பட்டிருந்தது" என்று பதிலளித்தார். அப்போது எங்களுக்காக (கதவு) திறக்கப்பட்டது. அங்கு நான் இப்ராஹீம் (அலை) அவர்களைக் கண்டேன். அவர்கள் அல்பைத்துல் மஅமூர் (எனும் வானவர்கள் அதிகம் சஞ்சரிக்கும்) இறையில்லத்தில் தமது முதுகைச் சாய்த்து அமர்ந்துகொண்டிருந்தார்கள். அ(ந்த இறையில்லத்)தில் ஒவ்வொரு நாளும் எழுபதாயிரம் வானவர்கள் (இறைவனை வணங்கச்) செல்வார்கள். அவர்கள் மறுபடியும் அங்கு நுழைவதில்லை. (புதியவர்களே அடுத்து நுழைவார்கள்.)
பிறகு (வான் எல்லையிலுள்ள இலந்தை மரமான) "சித்ரத்துல் முன்தஹா" எனும் இடத்திற்கு என்னை ஜிப்ரீல் அழைத்துச்சென்றார். அதன் இலைகள் யானைகளின் காதுகளைப் போன்றிருந்தன. அதன் பழங்கள் கூஜாக்களைப் போன்றிருந்தன. அல்லாஹ்வின் கட்டளையால் இனம் புரியாத (நிறங்கள்) அதைச் சூழ்ந்து கொண்டபோது (அதன் அமைப்போ முற்றிலும்) மாறிவிட்டது. அல்லாஹ்வின் படைப்புகளில் எவராலும் அதன் அழகை விவரித்துக் கூற முடியாது. அப்போது அல்லாஹ் அறிவிக்க வேண்டியச் சிலவற்றை எனக்கு அறிவித்தான். என்மீது இரவிலும் பகலிலும் (நாள் ஒன்றுக்கு) ஐம்பது தொழுகைகளைக் கடமையாக்கினான்.
பிறகு நான் மூசா (அலை) அவர்களிடம் இறங்கிவந்தேன். அப்போது அவர்கள், "உங்கள் சமுதாயத்தாருக்கு உம்முடைய இறைவன் என்ன கடமையாக்கினான்?" என்று கேட்டார்கள். "ஐம்பது (வேளைத்) தொழுகைகளை(க் கடமையாக்கினான்)" என்று நான் பதிலளித்தேன். "உங்கள் இறைவனிடம் திரும்பிச்சென்று (உங்கள் சமுதாயத்தாருக்காக தொழுகையின் எண்ணிக்கையைக்) குறைக்கும்படி கேளுங்கள். ஏனெனில், உங்கள் சமுதாயத்தார் இதைத் தாங்கமாட்டார்கள். நான் (என்னுடைய) பனூ இஸ்ராயீல் மக்களிடம் பழகி அனுபவப் பட்டிருக்கிறேன்" என்று கூறினார்கள். நான் என் இறைவனிடம் திரும்பிச்சென்று, "என் இறைவா! என் சமுதாயத்தார்மீது (ஐம்பது வேளைத் தொழுகைகளின் எண்ணிக்கையைக்) குறைப்பாயாக!" என்று கேட்டேன். இறைவன் (ஐம்பதிலிருந்து) ஐந்தை எனக்குக் குறைத்தான். நான் மூசா (அலை) அவர்களிடம் திரும்பிவந்து, "(ஐம்பதிலிருந்து) ஐந்தை எனக்குக் குறைத்தான்" என்று கூறினேன். அப்போது அவர்கள், "உங்கள் சமுதாயத்தார் இதையும் தாங்கமாட்டார்கள். எனவே, உங்கள் இறைவனிடம் திரும்பிச்சென்று இன்னும் குறைக்கும்படி கேளுங்கள்" என்றார்கள். இவ்வாறே நான், என் இறைவனுக்கும் மூசா (அலை) அவர்களுக்குமிடையே திரும்பிச் சென்றுகொண்டிருந்தேன்.
இறுதியாக, "முஹம்மதே! இவை இரவிலும் பகலிலும் (நிறைவேற்ற வேண்டிய) ஐவேளைத் தொழுகைகள் ஆகும். ஒவ்வொரு தொழுகைக்கும் பத்து (நற்பலன்) உண்டு. (நற்பலனில்) இவை ஐம்பது வேளைத் தொழுகை(க்கு ஈடு) ஆகும். ஒருவர், ஒரு நன்மை செய்ய வேண்டும் என (மனத்தில்) எண்ணிவிட்டாலே, அதைச் செயல்படுத்தாவிட்டாலும் அவருக்காக ஒரு நன்மை பதிவு செய்யப்படும். அதை அவர் செய்து முடித்துவிட்டால் அவருக்காகப் பத்து நன்மைகள் பதிவு செய்யப்படும். ஒருவர் ஒரு தீமையைச் செய்ய எண்ணி, (அல்லாஹ்வுக்கு அஞ்சி) அதைச் செய்யாமல் இருந்துவிட்டால் (குற்றம்) எதுவும் பதியப்படுவதில்லை. (எண்ணியபடி) அதை அவர் செய்து முடித்துவிட்டால் ஒரு குற்றமாகவே அது பதிவு செய்யப்படுகிறது" என்று கூறினான்.
பின்னர் நான் அங்கிருந்து புறப்பட்டு மூசா (அலை) அவர்களிடம் வந்துசேர்ந்தேன். அ(ல்லாஹ் கூறிய)தை அவர்களிடம் நான் தெரிவித்தேன். அப்போது அவர்கள், "உங்கள் இறைவனிடம் திரும்பிச் சென்று இன்னும் குறைக்கும்படி கேளுங்கள்" என்று கூறினார்கள். உடனே நான், "(பல முறை) என் இறைவனிடம் திரும்பிச் சென்றுவிட்டேன். (இன்னும்) அவனிடம் (குறைத்துக் கேட்க) நான் வெட்கப்படுகிறேன்" என்று கூறிவிட்டேன்.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 1
260. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என்னை அ(ந்த வான)வர்கள் ஸம்ஸம் கிணற்றுக்குக் கொண்டுசென்றார்கள். என் நெஞ்சைப் பிளந்து, (இதயத்தை வெளியிலெடுத்து) ஸம்ஸம் கிணற்றின் நீரால் (என் இதயம்) கழுவப்பட்டது. பிறகு மீண்டும் (அதே இடத்திற்கு) நான் கொண்டுவந்து விடப்பட்டேன்.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 1
261. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது சிறு வயதில்) சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து நபியவர்களைப் பிடித்துப் படுக்கவைத்து,அவர்களின் நெஞ்சைத் திறந்து இருதயத்தை வெளியிலெடுத்தார்கள். ஓர் (சதைத்) துண்டை வெளியில் எடுத்து, "இதுதான் உம்மிடமிருந்த ஷைத்தானுக்குரிய பங்கு" என்று ஜிப்ரீல் கூறினார். பிறகு ஒரு தங்கத் தாம்பூலத்தில் இதயத்தை வைத்து ஸம்ஸம் நீரால் அதைக் கழுவினார். பின்னர் முன்பு இருந்த இடத்தில் இதயத்தைப் பொருத்தினார். (நபியவர்களுடன் விளையாடிக்கொண்டிருந்த) அந்தச் சிறுவர்கள் நபியவர்களின் செவிலித் தாயிடம் ஓடிச் சென்று "முஹம்மத் கொல்லப்பட்டுவிட்டார்" என்று கூறினர். குடும்பத்தார் நபியவர்களை நோக்கி வந்தபோது (அச்சத்தால்) நபியவர்கள் நிறம் மாறிக் காணப்பட்டார்கள்.
அறிவிப்பாளர் அனஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:
நபி (ஸல்) அவர்களின் நெஞ்சில் ஊசியால் தைத்த அந்த அடையாளத்தை நான் பார்த்திருக்கிறேன்.
அத்தியாயம் : 1
262. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகச் சிறிது முன் பின்னாகவும் கூடுதல் குறைவுடனும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த ஹதீஸ் பின்வருமாறு துவங்குகிறது: ஷரீக் பின் அப்தில்லாஹ் பின் அபீநமிர் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரவு நேரத்தில் (விண்ணுலகப் பயணத்திற்காக) கஅபா பள்ளிவாசலில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டது குறித்து அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்:
நபி (ஸல்) அவர்களுக்கு (மீண்டும்) வேத அறிவிப்பு (வஹீ) வருவதற்கு முன் இறையில்லம் கஅபா அருகில் படுத்து உறங்கிக்கொண்டிருந்தார்கள். அப்போது அவர்களிடம் (வானவர்) மூன்று பேர் வந்தார்கள்...
அத்தியாயம் : 1
263. அபூதர் (ரலி) அவர்கள் அறிவித்துவந்ததாக அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் மக்காவில் இருந்தபோது என் வீட்டின் கூரை பிளக்கப்பட்டது. (அதன் வழியாக வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் இறங்கி (வந்து) என்னுடைய நெஞ்சைப் பிளந்தார். பிறகு அதை "ஸம்ஸம்" நீரால் கழுவினார். பிறகு நுண்ணறிவாலும் இறைநம்பிக்கையாலும் நிரம்பிய தங்கத் தாம்பூலம் ஒன்றைக் கொண்டு வந்து என் நெஞ்சத்தினுள் அதை ஊற்றி (நிரப்பி)னார். பிறகு (பழையபடியே) நெஞ்சை மூடிவிட்டார்.
பிறகு என் கையைப் பிடித்து (என்னை அழைத்து)க் கொண்டு விண்ணில் ஏறினார். முதல் வானத்திற்கு நாங்கள் வந்தபோது முதல் வானத்தின் காவலரிடம் ஜிப்ரீல், "திறப்பீராக!" என்று கூறினார். அதற்கு அக்காவலர் "யார் அது?" எனக் கேட்டார். அவர் "ஜிப்ரீல்" என்று பதிலளித்தார். "உம்முடன் யாரேனும் வந்திருக்கிறார்களா?" என்று அக்காவலர் கேட்டார். அவர், "என்னுடன் முஹம்மத் (ஸல்) வந்திருக்கிறார்" என்று பதிலளித்தார். "(அவரை அழைத்துவரும்படி) அவரிடம் ஆளனுப்பப்பட்டிருந்ததா?" என்று அவர் கேட்க, ஜிப்ரீல் "ஆம்" என்று பதிலளித்தார். (முதல் வானத்தின் கதவை அதன்) காவலர் திறந்தார். நாங்கள் முதல் வானத்தில் (இன்னும்) மேலே சென்றபோது அங்கே ஒரு மனிதர் இருந்தார். அவரது வலப் பக்கத்திலும் மக்கள் இருந்தனர்; இடப் பக்கத்திலும் மக்கள் இருந்தனர். அவர் தமது வலப் பக்கம் பார்க்கும்போது சிரித்தார்; இடப் பக்கம் பார்க்கும்போது அழுதார். (பிறகு, என்னைப் பார்த்து,) "நல்ல இறைத்தூதரே, வருக! நல்ல மகனே, வருக!" என்று அந்த மனிதர் கூறினார். நான் ஜிப்ரீல் (அலை) அவர்களிடம், "யார் இவர் ஜிப்ரீலே?" என்று கேட்டேன். ஜிப்ரீல் (அலை) அவர்கள், "இவர்தாம் (ஆதிமனிதர்) ஆதம் (அலை) அவர்கள். இவருடைய வலப் பக்கமும் இடப் பக்கமும் இருக்கும் மக்கள் அன்னாரின் வழித்தோன்றல்கள்; வலப் பக்கமிருப்பவர்கள் சொர்க்கவாசிகள். இடப் பக்கமிருப்பவர்கள் நரகவாசிகள். ஆகவேதான், அவர் வலப் பக்கம் (சொர்க்கவாசிகளான தம் மக்களைப்) பார்க்கும் போது சிரிக்கிறார். இடப் பக்கம் (நரகவாசிகளான தம் மக்களைப்) பார்க்கும்போது அழுகிறார்" என்று பதிலளித்தார்.
பிறகு ஜிப்ரீல் (அலை) அவர்கள் என்னை அழைத்துக்கொண்டு இரண்டாம் வானில் ஏறினார். இரண்டாம் வானம் வந்ததும் அதன் காவலரிடம் "திறப்பீராக!" என்று கூறினார். அதன் காவலரும் முதலாம் வானத்தின் காவலர் கேட்டதைப் போன்றே கேட்டார். பிறகு (முன்பு போன்றே ஜிப்ரீல் அவர்கள் பதிலளித்த பின்) அவர் கதவைத் திறந்தார்.
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்வானங்களில் ஆதம் (அலை), இத்ரீஸ் (அலை), ஈசா (அலை), மூசா (அலை) மற்றும் இப்ராஹீம் (அலை) ஆகியோரைக் கண்டதாக அபூதர் (ரலி) அவர்கள் கூறினார்களே தவிர அவர்கள் எங்கெங்கே தங்கியிருந்தார்கள் என்பது பற்றி (என்னிடம்) அவர்கள் குறிப்பிட்டுக் கூறவில்லை. ஆனால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆதம் (அலை) அவர்களை முதல் வானத்திலும் இப்ராஹீம் (அலை) அவர்களை ஆறாவது வானத்திலும் கண்டதாகக் கூறினார்கள் என அபூதர் (ரலி) அவர்கள் சொன்னார்கள்.
அனஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:
ஜிப்ரீல் (அலை) அவர்களும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் இத்ரீஸ் (அலை) அவர்களைக் கடந்து சென்றபோது, "நல்ல இறைத்தூதரும் நல்ல சகோதரருமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்" என்று இத்ரீஸ் (அலை) அவர்கள் (வாழ்த்துச்) சொன்னார்கள். பிறகு (அவரைக்) கடந்து சென்றபோது, நான் "இவர் யார்?" என்று கேட்டேன். அதற்கு ஜிப்ரீல் "இவர்தாம் இத்ரீஸ் (அலை) அவர்கள்" என்று பதிலளித்தார்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பின்னர் நான் மூசா (அலை) அவர்களையும் கடந்துசென்றேன். அவர்களும் "நல்ல இறைத்தூதரும் நல்ல சகோதரருமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்." என்று (வாழ்த்துக்) கூறினார்கள்.
நான் (ஜிப்ரீலிடம்), "இவர் யார்?" என்று கேட்டேன். ஜிப்ரீல், "இவர்தாம் மூசா" என்று பதிலளித்தார். பிறகு நான் ஈசா (அலை) அவர்களையும் கடந்துசென்றேன். அவர்களும் "நல்ல இறைத்தூதரும் நல்ல சகோதரருமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்" என்று (வாழ்த்துக்) கூறினார்கள். நான், "இவர் யார்?" என்று கேட்டேன். அதற்கு ஜிப்ரீல் (அலை), "இவர்தாம் மர்யமின் மைந்தர் ஈசா" என்று பதிலளித்தார். பிறகு நான் இப்ராஹீம் (அலை) அவர்களைக் கடந்துசென்றேன். அவர்கள், "நல்ல இறைத்தூதரும் நல்ல மகனுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்" என்று (வாழ்த்துச்) சொன்னார்கள். நான், "இவர் யார்?" என்று கேட்டேன். ஜிப்ரீல் (அலை), "இவர்தாம் இப்ராஹீம்" என்று பதிலளித்தார்.
இப்னு ஷிஹாப் (முஹம்மத் பின் முஸ்லிம் அஸ்ஸுஹ்ரீ-ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
இப்னு அப்பாஸ் (ரலி), அபூஹப்பா அல் அன்சாரி (ரலி) ஆகியோர் அறிவித்துவந்துள்ளதாக இப்னு ஹஸ்ம் (அபூபக்ர் பின் முஹம்மத் -ரஹ்) அவர்கள் என்னிடம் (பின்வருமாறு) கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பிறகு ஜிப்ரீல் (அலை) அவர்கள் என்னை அழைத்துக்கொண்டு (இன்னும் மேலே) உயர்ந்தார்கள். நான் ஓர் உயரமான இடத்தில் ஏறிக்கொண்டிருந்தபோது (வானவர்கள் தலை விதிகளைப் பதிவு செய்து கொண்டிருக்கும்) எழுதுகோல்களின் ஓசையைச் செவியுற்றேன்.
இப்னு ஹஸ்ம் (ரஹ்), அனஸ் பின் மாலிக் (ரலி) ஆகியோர் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அப்போது அல்லாஹ் என் சமுதாயத்தார்மீது (நாளொன்றுக்கு) ஐம்பது தொழுகைகளைக் கடமையாக்கினான். அதைப் பெற்றுக்கொண்டு நான் திரும்பியபோது மூசா (அலை) அவர்களைக் கடந்தேன். அப்போது மூசா (அலை) அவர்கள், "உங்கள் சமுதாயத்தார்மீது உங்கள் இறைவன் என்ன கடமையாக்கினான்?" என்று கேட்டார்கள். நான், அவர்கள்மீது (நாளொன்றுக்கு) ஐம்பது தொழுகைகளைக் கடமையாக்கியுள்ளான்" என்று பதிலளித்தேன். "அவ்வாறாயின் உங்கள் இறைவனிடம் திரும்பிச் செ(ன்று குறைக்கும்படி சொ)ல்லுங்கள்! ஏனெனில், உங்கள் சமுதாயத்தாரால் அவற்றைத் தாங்க முடியாது" என்று கூறினார்கள். உடனே நான் என் இறைவனிடம் திரும்பிச்சென்றேன். (தொழுகைகளின் எண்ணிக்கையைக் குறைத்துக் கேட்டபோது) அவன் அதில் ஒரு பகுதியைக் குறைத்தான். நான் மூசா (அலை) அவர்களிடம் திரும்பிவந்து (அதில் ஒரு பகுதியை இறைவன் குறைத்துவிட்டான் என்று) தெரிவித்தபோது (மீண்டும்) அவர்கள், "உங்கள் இறைவனிடம் திரும்பிச் செல்லுங்கள். (இன்னும் சிறிது குறைத்துத் தரும்படி கேளுங்கள்.) ஏனெனில், இதையும் உங்கள் சமுதாயத்தார் தாங்கமாட்டார்கள்" என்று சொன்னார்கள். இவ்வாறாக நான் என் இறைவனிடம் திரும்பிச் சென்று (இறுதியில்), "இவை ஐவேளைத் தொழுகைகள் ஆகும். (நற்பலனில்) ஐம்பது (வேளைத் தொழுகைக்கு ஈடு) ஆகும். என்னிடம் இந்தச் சொல் (இனி) மாற்றப்படாது" என்று கூறிவிட்டான்.
நான் மூசா (அலை) அவர்களிடம் திரும்பிச்சென்றேன். அவர்கள், "உங்கள் இறைவனிடம் திரும்பிச் செல்லுங்கள்!" என்றார்கள். நான், "என் இறைவனிடம் (மேலும் சலுகை கோர) வெட்கப்படுகிறேன்" என்று சொன்னேன்.
பிறகு ஜிப்ரீல் (அலை) அவர்கள் என்னை அழைத்துக்கொண்டு (வானுலக எல்லையில் அமைந்துள்ள இலந்தை மரமான) "சித்ரத்துல் முன்தஹா"வுக்குப் போய்ச்சேர்ந்தார்கள். பல வண்ணங்கள் அதைப் போர்த்திக்கொண்டிருந்தன. அவையென்ன என்று எனக்குத் தெரியாது. பிறகு நான் சொர்க்கத்திற்குள் அனுமதிக்கப்பட்டேன். அங்கே முத்தாலான கோபுரங்கள் இருந்தன. சொர்க்கத்தின் மண் (நறுமணம் கமழும்) கஸ்தூரியாக இருந்தது.
அத்தியாயம் : 1
264. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் தம் சமூகத்தைச் சேர்ந்த மாலிக் பின் ஸஅஸஆ (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் இறையில்லம் கஅபா அருகில் (பாதி) உறக்கத்திலும் (பாதி) விழிப்பிலும் இருந்தபோது, (வானவர்) ஒருவர் (வந்து), "இரண்டு பேருக்கு (ஹம்ஸா மற்றும் ஜஅஃபர்-ரலி) நடுவில் படுத்திருக்கும் மூன்றாவது மனிதரைத்தாம் (நாம் அழைத்துச் செல்லவேண்டும்)" என்று கூறுவதைக் கேட்டேன். பிறகு நான் அழைத்துச் செல்லப்பட்டேன். அப்போது என்னிடம் ஒரு தங்கத்தட்டு கொண்டுவரப்பட்டது. அதில் "ஸம்ஸம்" நீர் இருந்தது. பிறகு எனது நெஞ்சு இங்கிருந்து இதுவரையில் பிளக்கப்பட்டது.
-இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: நான் என்னுடன் இருந்த ஒருவரிடம் (-அனஸ் (ரலி) அவர்களின் நண்பர் ஜாரூத் (ரஹ்) அவர்களிடம்), ஹதீஸின் அறிவிப்பாளரான அனஸ் (ரலி) அவர்கள் "இங்கிருந்து இதுவரையில்... என்று எதைக் கருத்தில் கொண்டு கூறினார்கள்?" என்று கேட்டேன். அதற்கு அவர், "(நெஞ்சின் ஆரம்பத்திலிருந்து) அடிவயிறுவரை" என்ற கருத்தில் அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்" என்று பதிலளித்தார்கள்.-
பிறகு எனது இருதயம் வெளியிலெடுக்கப்பட்டு, ஸம்ஸம் நீரால் அது கழுவப்பட்டது. பிறகு பழையபடி அது இருந்த இடத்தில் வைக்கப்பட்டது. பிறகு இறைநம்பிக்கையாலும் நுண்ணறிவாலும் அது நிரப்பப்பட்டது. பிறகு கோவேறு கழுதையைவிடச் சிறியதும் கழுதையைவிடப் பெரியதுமான வெள்ளை நிறத்திலமைந்த "புராக்" எனப்படும் (மின்னல் வேக) வாகனம் ஒன்று என்னிடம் கொண்டு வரப்பட்டது. அந்த வாகனம் பார்வை எட்டுகிற தூரத்திற்கு ஓர் எட்டு வைக்கும். பிறகு நான் அந்த வாகனத்தில் ஏற்றப்பட்டேன். பின்னர் நாங்கள் (புறப்பட்டு) முதல் வானத்திற்குச் சென்றோம். அதன் கதவைத் திறக்கும்படி ஜிப்ரீல் (அலை) அவர்கள் கூறினார்கள். அப்போது "யார் அது?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், "ஜிப்ரீல்" என்று பதிலளித்தார்கள். "உம்முடன் (வந்திருப்பவர்) யார்?" என்று கேட்கப்பட்டது. அதற்கு ஜிப்ரீல் (அலை) அவர்கள், "முஹம்மத் (ஸல்)" என்று பதிலளித்தார்கள். "(அவரை அழைத்துவரும்படி) அவரிடம் ஆளனுப்பப்பட்டிருந்ததா?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், "ஆம்" என்றார்கள். அப்போது (அந்த வானத்தின் காவலர்) எங்களுக்காகக் கதவைத் திறந்து "அவரது வரவு நல்வரவாகட்டும். அவரது வருகை மிக நல்ல வருகை" என்று (வாழ்த்துக்) கூறினார். நாங்கள் (அந்த வானிலிருந்த) ஆதம் (அலை) அவர்களிடம் சென்றோம். -ஹதீஸை இறுதிவரை குறிப்பிடுகிறார்கள்.
மேலும், நபி (ஸல்) அவர்கள் இரண்டாம் வானத்தில் ஈசா (அலை), யஹ்யா (அலை) ஆகியோரைத் தாம் சந்தித்ததாகக் குறிப்பிட்டார்கள். மூன்றாம் வானத்தில் யூசுஃப் (அலை) அவர்களையும், நான்காம் வானத்தில் இத்ரீஸ் (அலை) அவர்களையும், ஐந்தாம் வானத்தில் ஹாரூன் (அலை) அவர்களையும் சந்தித்ததாக குறிப்பிட்டார்கள்.
நபி (ஸல்) அவர்கள் (தொடர்ந்து) கூறினார்கள்:
பிறகு நாங்கள் ஆறாம் வானத்தைச் சென்றடைந்தோம். அங்கு நான் மூசா (அலை) அவர்களிடம் சென்று அவர்களுக்கு சலாம் சொன்னேன். அவர்கள், "நல்ல சகோதரரும் நல்ல நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்" என்று (வாழ்த்துக்) கூறினார்கள். நான் அவர்களைக் கடந்து சென்றபோது அவர்கள் அழுதார்கள். "நீங்கள் ஏன் அழுகிறீர்கள்?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், "இறைவா! என் சமுதாயத்தாரில் சொர்க்கம் செல்கின்றவர்களை விட அதிகமானவர்கள் எனக்குப் பிறகு உன்னால் அனுப்பப்பெற்ற இந்த இளைஞரின் சமுதாயத்தாரிலிருந்து சொர்க்கம் செல்வார்கள்" என்று பதிலளித்தார்கள். பிறகு நாங்கள் ஏழாம் வானத்தைச் சென்றடைந்தோம். அங்கு நான் இப்ராஹீம் (அலை) அவர்களிடம் சென்றேன்.
(ஏழாம் வானத்தின் எல்லையிலிருந்த இலந்தை மரமான சித்ரத்துல் முன்தஹாவை நான் கண்டேன்.) நான்கு நதிகளையும் கண்டேன். அந்த மரத்தின் வேர்ப்பகுதியிலிருந்து வெளிநோக்கி இரண்டு நதிகளும், உள்நோக்கி இரண்டு நதிகளும் (ஊற்றெடுத்துப்) பாய்ந்து கொண்டிருந்தன. நான் ஜிப்ரீல் (அலை) அவர்களிடம், "ஜிப்ரீலே! இந்நதிகள் எவை?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "உள்ளே இருப்பவை இரண்டும் சொர்க்கத்தில் உள்ள (சல்சபீல், கவ்ஸர் ஆகிய)வையாகும். வெளியே இருப்பவை இரண்டும் நைல் நதியும் யூப்ரடீஸ் நதியும் ஆகும்" என்று பதிலளித்தார்கள்.
பிறகு, "அல்பைத்துல் மஅமூர்" (எனும் வானவர்கள் அதிகம் சஞ்சரிக்கும் இறையில்லம்) எனக்கு (அருகே கொண்டுவந்து) காட்டப்பட்டது. நான், "ஜிப்ரீல்! இது என்ன?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "இதுதான் "அல்பைத்துல் மஅமூர்" ஆகும். இதில் (இறைவனை வணங்குவதற்காக) ஒவ்வொரு நாளும் எழுபதாயிரம் வானவர்கள் நுழைகிறார்கள். அவர்கள் இங்கிருந்து வெளியே சென்றால் திரும்ப இங்கு வரமாட்டார்கள். அதுவே அவர்கள் கடைசியாக நுழைந்ததாகிவிடும்" என்று சொன்னார்கள். பிறகு என்னிடம் இரண்டு பாத்திரங்கள் கொண்டுவரப்பட்டன; அவற்றில் ஒரு பாத்திரத்தில் மதுவும் மற்றொரு பாத்திரத்தில் பாலும் இருந்தது. அவ்விரு பாத்திரங்களையும் என்னிடம் எடுத்துக் காட்டப் (பட்டு, அவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுக்குமாறு கூறப்)பட்டது. நான் பாலைத் தேர்ந்தெடுத்தேன். அப்போது, "இயற்கை நெறியையே நீங்கள் பெற்றுள்ளீர்கள்; இறைவன், உங்கள் மூலம் இயற்கை நலனையே நாடியுள்ளான். உங்கள் சமுதாயத்தாரும் அந்த இயற்கை நெறியிலேயே உள்ளனர்"என்று கூறப்பட்டது.
பிறகு என்மீது நாளொன்றுக்கு ஐம்பது தொழுகைகள் கடமையாக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து நடந்த நிகழ்ச்சிகளை இறுதிவரை குறிப்பிட்டார்கள்.
அத்தியாயம் : 1
265. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "...பிறகு என்னிடம் நுண்ணறிவாலும் இறைநம்பிக்கையாலும் நிரப்பப்பெற்ற தங்கத் தாம்பூலம் ஒன்று கொண்டுவரப்பட்டது. பிறகு எனது (நெஞ்சு) காறையெலும்பிலிருந்து அடிவயிறுவரை பிளக்கப்பட்டு ஸம்ஸம் நீரால் கழுவப்பட்டது. பிறகு நுண்ணறிவாலும் இறை நம்பிக்கையாலும் (என் நெஞ்சம்) நிரப்பப்பட்டது" என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக மாலிக் பின் ஸஅஸஆ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 1
266. நபி (ஸல்) அவர்களுடைய பெரிய தந்தையின் புதல்வரான இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தாம் (விண்ணுலகப் பயணத்திற்காக) அழைத்துச் செல்லப்பட்ட நாள் குறித்து நினைவுகூர்ந்தார்கள்.
அப்போது "மூசா (அலை) அவர்கள் மாநிறமுடையவர்கள்; (யமனியர்களான) "ஷனூஆ" குலத்து மனிதர்களைப் போன்று உயரமானவர்கள்" என்று கூறினார்கள். மேலும், "ஈசா (அலை) அவர்கள் சுருள் முடியுடையவர்கள்; நடுத்தர உயரமுடையவர்கள்" என்றும் சொன்னார்கள். நரகத்தின் காவலர் (வானவர்) மாலிக் அவர்களைப் பற்றியும் தஜ்ஜாலைப் பற்றியும் குறிப்பிட்டார்கள்.- இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
267. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் (விண்ணுலகப் பயணத்திற்காக) அழைத்துச்செல்லப்பட்ட இரவில் இம்ரானின் புதல்வர் மூசா (அலை) அவர்களைக் கடந்துசென்றேன். மூசா (அலை) அவர்கள் (யமனியர்களான) "ஷனூஆ" குலத்தைச் சேர்ந்த மனிதரைப் போன்று மாநிறமுடையவர்கள்; உயரமானவர்கள்; சுருள்முடியுடைவர்கள். (அப்பயணத்தில்) மர்யமின் மைந்தர் ஈசா (அலை) அவர்களையும் கண்டேன். அவர்கள் நடுத்தர உயரமும் சிவப்பும் வெண்மையும் கலந்த, மிதமான சரும அமைப்புக் கொண்டவர்களாகவும் படிந்த, தொங்கலான தலைமுடி உடையவர்களாகவும் இருந்தார்கள். மேலும், நரகத்தின் காவலரான (வானவர்) மாலிக்கும், (இறுதிக் காலத்தில் வரவிருக்கும் மகா பொய்யனான) தஜ்ஜாலும் எனக்குக் காட்டப்பட்டனர். இவையெல்லாம் அல்லாஹ் எனக்குக் காண்பித்த அவனுடைய சான்றுகளில் உள்ளவை. "நீங்கள் அவரைச் சந்தித்ததில் சந்தேகம் ஏதும் கொள்ள வேண்டாம்". (32:23)
இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
மேற்கண்ட (32:23ஆவது) வசனத்திற்கு விளக்கமளிக்கையில் கத்தாதா (ரஹ்) அவர்கள், "நபி (ஸல்) அவர்கள் மூசா (அலை) அவர்களைச் சந்தித்தது பற்றி நீங்கள் சந்தேகம் ஏதும் கொள்ள வேண்டாம்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 1
268. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு பயணத்தில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அல்அஸ்ரக்" பள்ளத்தாக்கைக் கடந்து சென்றார்கள்.அப்போது, "இது எந்தப் பள்ளத்தாக்கு?" என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், "அல்அஸ்ரக் பள்ளத்தாக்கு" என்று பதிலளித்தார்கள். "மூசா (அலை) அவர்கள் உரத்த குரலில் "தல்பியா" சொல்லிக்கொண்டு இந்த மலைக் குன்றிலிருந்து இறங்கிவந்து கொண்டிருப்பதை (இப்போதும்) நான் காண்பதைப் போன்று உள்ளது" என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். பிறகு ஹர்ஷா மலைக் குன்றுக்குச் சென்றார்கள். "இது எந்த மலைக் குன்று?" என்று கேட்டார்கள். மக்கள், "(இது) ஹர்ஷா மலைக் குன்று" என்று பதிலளித்தனர். அதற்கு "யூனுஸ் பின் மத்தா (அலை) அவர்கள் கம்பளி நீளங்கி அணிந்தவர்களாகக் கட்டுடல் கொண்ட சிவப்பு ஒட்டகமொன்றின் மீது "தல்பியா" சொல்லிக் கொண்டிருப்பதை நான் (இப்போதும்) காண்பதைப் போன்று உள்ளது. அவர்களது ஒட்டகத்தின் கடிவாளம் ஈச்ச நாரினாலானது" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
269. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் மக்காவுக்கும் மதீனாவுக்குமிடையே பயணம் செய்துகொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கைக் கடந்து சென்றோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இது எந்தப் பள்ளத்தாக்கு?" என்று கேட்டார்கள். மக்கள், "அல்அஸ்ரக் பள்ளத்தாக்கு" என்று பதிலளித்தனர். அப்போது அவர்கள், "மூசா (அலை) அவர்கள் தம் இருவிரல்களைக் காதுகளுக்குள் நுழைத்தவர்களாக உரத்த குரலில் தல்பியாச் சொன்னபடி இந்தப் பள்ளத்தாக்கைக் கடந்து சென்றுகொண்டிருப்பதை நான் (இப்போதும்) காண்பதைப் போன்று உள்ளது" என்று கூறினார்கள். -அப்போது மூசா (அலை) அவர்களது நிறத்தைப் பற்றியும் முடியைப் பற்றியும் ஏதோ குறிப்பிட்டார்கள். ஆனால் அது அறிவிப்பாளர் தாவூத் (ரஹ்) அவர்களது நினைவிலில்லை.-
பிறகு நாங்கள் பயணம் செய்து ஒரு மலைக் குன்றுக்கு வந்துசேர்ந்தோம். அப்போது "இது எந்த மலைக் குன்று?" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். மக்கள், "ஹர்ஷா" அல்லது "லிஃப்த்" என்று பதிலளித்தனர். அப்போது, "யூனுஸ் (அலை) அவர்கள் சிவப்பு நிற ஒட்டகத்தின் மீது கம்பளி நீளங்கி அணிந்தவர்களாக தல்பியா சொன்னவாறு இந்த (மலைக் குன்றின்) பள்ளத்தாக்கைக் கடந்துசெல்வதை நான் (இப்போதும்) பார்ப்பதைப் போன்று உள்ளது. அவர்களது ஒட்டகத்தின் கடிவாளம் ஈச்ச நார் (கொண்டு பின்னப்பட்டது) ஆகும்" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 1
270. முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் இருந்தோம். அப்போது மக்கள் (இறுதிக் காலத்தில் வரவிருக்கும் மகா பொய்யனான) தஜ்ஜாலைப் பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது ஒருவர், "அவனுடைய இரு கண்களுக்குமிடையே "காஃபிர்" (இறைமறுப்பாளன்) என எழுதப்பட்டிருக்கும்" என்று சொன்னார். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: நான் இவ்வாறு கேள்விப்பட்டதில்லை. ஆனால், நபி (ஸல்) அவர்கள், "(இறைத்தூதர்) இப்ராஹீம் (அலை) அவர்கள் எத்தகைய உருவ அமைப்பில் இருந்தார்கள் என்று அறிய வேண்டுமென்றால் உங்கள் தோழரை (என்னை)ப் பாருங்கள். மூசா (அலை) அவர்கள் எத்தகையவர் என்றால், அவர்கள் மாநிறமுடையவர்கள்; சுருள் முடி கொண்டவர்கள்; ஈச்ச நாரினால் மூக்கணாங்கயிறு இடப்பட்ட சிவப்பு ஒட்டகம் ஒன்றின் மீது பயணம் செய்தபடி இருப்பார்கள். அவர்கள் (ஹஜ் செய்ய) தல்பியா கூறியபடி இந்த (அல்அஸ்ரக்) பள்ளத்தாக்கில் இறங்கியபோது (அவர்களைக் கண்டேன். அந்தக் காட்சியை) நான் (இப்போதும்) பார்ப்பதைப் போன்று உள்ளது" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 1
271. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இறைத்தூதர்கள் எனக்குக் காட்டப்பட்டனர். மூசா (அலை) அவர்கள் (யமனியர்களான) “ஷனூஆ” குலத்தைச் சேர்ந்த மனிதரைப் போன்று உயரமான மனிதராக இருந்தார்கள். மர்யமின் மைந்தர் ஈசா (அலை) அவர்களையும் நான் பார்த்தேன். அவர்கள் (என் தோழர்) உர்வா பின் மஸ்ஊதுக்கு மிக நெருக்கமான சாயலுடையவராக இருந்தார்கள். இப்ராஹிம் (அலை) அவர்களையும் நான் பார்த்தேன். அவர்கள் உங்கள் தோழருக்கு (எனக்கு) மிக நெருக்கமான சாயலுடையவராக இருந்தார்கள். (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் (என் தோழர்) தஹ்யா அவர்களுக்கு மிக நெருக்கமான சாயலுடையவராக இருந்தார்கள்.
இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில், முஹம்மத் பின் ரும்ஹூ (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “தஹ்யா பின் கலீஃபா அவர்களுக்கு”’’ என்று (தந்தை பெயரும் இணைத்து) கூறப்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 1
272. அபூஹூரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், (விண்ணுலகப்) பயணத்திற்காக அழைத்துச் செல்லப்பட்ட இரவில் நடந்தவற்றை விவரித்துக் கூறியபடி, “நான் மூசா (அலை) அவர்களைச் சந்தித்தேன்” என்று கூறிவிட்டு அவர்(களின் அங்க அடையாளங்)களை வர்ணித்தார்கள்.(அப்போது கூறினார்கள்:) மூசா (அலை) அவரகள் (யமனியர்களான) ஷனூஆ குலத்தைச் சேர்ந்தவர்களில் ஒருவரைப் போன்று ஒல்லியாக, தலைமுடி தொங்கலாக (வாரி) விட்டிருப்பராக இருந்தார்கள்.
(தொடர்ந்து நபி (ஸல் அவர்கள்) நான் ஈசா (அலை) அவர்களைச் சந்தித்தேன்” என்று கூறிவிட்டு, அவர்(களின் அங்க அடையாளங்)களை வர்ணித்தார்கள்; சிவப்பு நிறமுடையவர்களாக, நடுத்தர உயரம் கொண்டவர்களாக, (அப்போதுதான்) குளியலறையிலிருந்து வெளியே வந்தவரைப் போன்று அவர்கள் இருந்தார்கள். மேலும், நான் இப்ராஹீம் (அலை) அவர்களைப் பார்த்தேன். நான்தான் அவர்களுடைய வழித் தோன்றல்களிலேயே சாயலில் அவர்களுக்கு மிகவும் நெருக்கமானவனாக இருக்கின்றேன். (அந்த பயணத்தில்) என்னிடம் இரு பாத்திரங்கள் கொண்டுவரப்பட்டன. அவற்றில் ஒன்றில் பாலும் மற்றொன்றில் மதுவும் இருந்தது. “நீங்கள் விரும்பியதை எடுத்துக்கொள்ளுங்கள்” என்று என்னிடம் சொல்லப்பட்டது. நான் பாலை எடுத்து பருகினேன். அப்போது, “நீங்கள் இயற்கையான வழியில் செலுத்தப்பட்டுவிட்டீர்கள்” அல்லது “நீங்கள் இயற்கை மரபை பெற்றுக்கொண்டீர்கள்”. நீங்கள் மதுவை எடுத்துக் கொண்டிருந்தால் உங்கள் சமுதாயம் வழி தவறிப்போயிருக்கும்” என்று என்னிடம் சொல்லப்பட்டது.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
பாடம் : 75 மர்யமின் மைந்தர் மஸீஹ் (ஈசா-அலை), "தஜ்ஜால்" எனும் மஸீஹ் ஆகியோரைப் பற்றிய குறிப்பு.
273. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஓர் இரவில் (இறையில்லம்) கஅபாவின் அருகே(கனவில்) நான் என்னைக் கண்டேன், அப்போது மனிதர்களில் மாநிறத்தில் நீ பார்த்தவர்களிலேயே மிக அழகான முடி அவருக்கு இருந்தது, அதை அவர் வாரிவிட்டிருந்தார், அதிலிருந்து தண்ணீர் சொட்டிக் கொண்டிருந்தது. அவர் “இரு மனிதர்களின் மீது சாய்ந்தபடி’ அல்லது “இரு மனிதர்களின் தோள்கள் மீது சாய்ந்தபடி” இறையில்லத்தைச் சுற்றி (தவாஃப்) வந்துகொண்டிருந்தார். நான், “இவர் யார்? என்று கேட்டேன். “இவர் தாம் மர்யமின் மைந்தர் மஸீஹ் (ஈசா)” என்று பதிலளிக்கப்பட்டது. பின்னர் அங்கே கடும் சுருள்முடி கொண்ட, வலக் கண் குருடான மனிதன் ஒருவன் இருந்தான்,அவனுக்கிருந்த கண் (ஒரே குலையில்) துருத்திக்கொண்டிருக்கும் திராட்சையைப் போன்றிருந்தது, நான், ”இவர் யார்?” என்று கேட்டேன். “இவன் தான் அல்மஸீஹுத் தஜ்ஜால்” என்று பதிலளிக்கப்பட்டது.
இதை அப்துல்லாஹ் பின் உமர்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 1
274. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் ஒரு நாள் மக்களிடையே “தஜ்ஜால்” எனும் மஸீஹை நினைவுகூர்ந்தார்கள்.அப்போது “அல்லாஹ்,ஒற்றைக் கண்ணன் அல்லன், ஆனால் “தஜ்ஜால்” எனும் மஸீஹ், வலது கண் குருடானவன். அவனது கண், (ஒரே குலையில்) துருத்திக் கொண்டிருக்கும் திராட்சையைப் போன்றிருக்கும்” என்று கூறினார்கள்.
மேலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இன்றிரவு நான் கஅபாவின் அருகே கனவில் என்னைக் கண்டேன், நீ கண்ட மனிதர்களின் மாநிறத்திலேயே மிக அழகான மாநிறம் கொண்ட மனிதர் ஒருவர் அங்கிருந்தார். அவரது தலைமுடி அவருடைய தோள்களுக்கிடையே தொங்கிக்கொண்டிருந்தது; படிய வாரப்பட்ட தொங்கலான முடியுடையவராக இருந்தார். அவரது தலையிலிருந்து நீர் சொட்டிக் கொண்டிருந்தது, இரு மனிதர்களின் தோள்கள்மீது அவர் தம் இரு கைகளையும் வைத்துக் கொண்டு கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வந்து கொண்டிருந்தார். நான், ”இவர் யார்?” என்று கேட்டேன்.“மர்யமின் மைந்தர் மஸீஹ் (ஈசா)” என்று பதிலளித்தார்கள். அவருக்குப் பின்னால் நிறைய சுருள்முடி கொண்ட, வலக் கண் குருடான ஒரு மனிதனைக் கண்டேன். அவன் நான் பார்த்த மனிதர்களிலேயே இப்னு கத்தனுக்கு மிக நெருக்கமான சாயல் உடையவனாக இருந்தான். நான், ”இவன் யார்?” என்று கேட்டேன். “இவன் “தஜ்ஜால்” எனும் மஸீஹ்” என்று பதிலளித்தார்கள்.
அத்தியாயம் : 1
275. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் (கனவில்) இறையில்லம் கஅபா அருகில் மாநிறமுடைய, படிய வாரப்பட்ட தலை முடியுடைய ஒரு மனிதரைக் கண்டேன். அவர் இரு மனிதர்கள் மீது தம் இரு கைகளை வைத்துக்கொண்டிருந்தார்; “அவருடைய தலையிலிருந்து தண்ணீர் வழிந்து கொண்டிருந்தது” அல்லது அவருடைய தலையிலிருந்து தண்ணீர் சொட்டிக்கொண்டிருந்தது”. நான் “இவர் யார்?” என்று கேட்டேன். அதற்கு, “மர்யமின் மைந்தர் ஈசா’ அல்லது “மர்யமின் மைந்தர் மஸீஹ்’ என்று பதிலளித்தார்கள். இவற்றில் எதை அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள் என்று எங்களுக்குத் தெரியாது,அவருக்குப் பின்னால் சிவப்பு நிறைமுடைய, சுருள்முடி கொண்ட, வலக் கண் குருடான ஒரு மனிதனை நான் பார்த்தேன். அவன் நான் பார்த்தவர்களிலேயே இப்னு கத்தனுக்கு மிக நெருக்கமான சாயலுடையவனாக இருந்தான். நான், “இவன் யார்?” என்று கேட்டேன்.”(இவன்) “தஜ்ஜால்’’’’””” எனும் மஸீஹ்” என்று பதிலளித்தார்கள்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 1
276. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்;
(நான் இரவின் சிறு பகுதியில் புனித கஅபாவிலிருந்து பைத்துல் மகதிஸ் (ஜெருசலேம்) வரை சென்று வந்த தகவலைச் சொன்ன சமயம்) குறைஷியர் என்னை நம்ப மறுத்தனர், அப்போது நான் (கஅபாவில்) “ஹிஜ்ர்” எனும் (வளைந்த பகுதியில் நின்றிருந்தேன். அல்லாஹ் எனக்கு அப்போது பைத்துல் மக்திஸைக் காட்சியளிக்கச் செய்தான். உடனே நான் அதைப் பார்த்தபடியே அதன் அடையாளங்களைக் குறைஷியருக்கு விவரிக்கலானேன்.
இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 1
277. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் உறங்கிக்கொண்டிருக்கையில் (கனவில்) இறையில்லம் கஅபாவைச் சுற்றி நான் (தவாஃப்) வந்துகொண்டிருப்பதைக் கண்டேன். அங்கு மாநிறமுடைய, படிய வாரப்பட்ட தலைமுடி கொண்ட ஒருவர் இரண்டு மனிதர்களுக்கிடையே இருந்தார். “அவருடைய தலையிலிருந்து தண்ணீர் சொட்டிக்கொண்டிருந்தது’ அல்லது ”அவருடைய தலையிலிருந்து தண்ணீர் கொட்டிக்கொண்டிருந்தது.” நான், “இவர் யார்?” என்று கேட்டேன். “இவர்தாம் மர்யமின் மைந்தர்” என்று பதிலளித்தார்கள்.
பிறகு நான் திரும்பிச் சென்ற போது சிவப்பான, உடல் பருத்த, சுருள்முடி கொண்ட, (ஒரு) கண் குருடான மனிதன் ஒருவன் அங்கிருந்தான். அவனது கண் (ஒரே குலையில்) துருத்திக் கொண்டிருக்கும் திராட்சை போன்றிருந்தது.நான், “இவன் யார்?” என்று கேட்டேன். “தஜ்ஜால்’ என்று பதிலளித்தார்கள், மக்களிலேயே அவனுக்கு மிக நெருக்கமான சாயலுடையவர் இப்னு கத்தன் தாம்.- இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அத்தியாயம் : 1
278. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நான் (கஅபாவிலோ ஹிஜ்ர் எனும் (வளைந்த) பகுதியில் இருந்தேன். நான் (இரவின் ஒரு சிறு பகுதியில் மக்காவிலிருந்து பைத்துல் மக்திஸ் – ஜெருசலேம் வரை) பயணம் மேற்கொண்டது பற்றி என்னிடம் குறைஷியர் கேள்வி கேட்டுக்கொண்டிருந்தனர். அப்போது பைத்துல் மக்திஸிலுள்ள சில பொருட்களைப் பற்றி என்னிடம் அவர்கள் கேட்டனர். ஆனால், அவை என் நினைவிலிருக்கவில்லை. அப்போது நான் மிகவும் வருந்தினேன். முன்பு எப்போதும் அந்த அளவுக்கு நான் வருந்தியதேயில்லை. உடனே அல்லாஹ் பைத்துல் மக்திஸை எனக்குக் காட்டினான். அதைப் பார்த்துக்கொண்டே அவர்கள் கேட்ட ஒவ்வொன்றுக்கும் (சரியான) தகவல் தெரிவித்தேன்.
(பைத்துல் மக்திஸில்) இறைத்தூதர்களில் ஒரு குழுவினர் இருந்தனர். அங்கு மூசா (அலை) அவர்கள் நின்று தொழுதுகொண்டிருந்தார்கள். அவர்கள் (யமனியர்களான) ஷனூஆ குலத்தைச் சேர்ந்த மனிதரைப் போன்று (உயரமாக) திரண்ட உடல் உள்ள மனிதராக இருந்தார்கள்.அங்கு மர்யமின் மைந்தர் ஈசா அவர்களும் நின்று தொழுதுகொண்டிருந்தார்கள். அவர்கள் மனிதர்களிலேயே (என் தோழர்) உர்வா பின் மஸ்ஊத் அஸ்ஸகஃபீ அவர்களுக்கு மிக நெருக்கமான சாயலுடையவராக இருந்தார்கள். அங்கு இப்ராஹீம் (அலை) அவர்களும் நின்று தொழுதுகொண்டிருந்தார்கள். மக்களில் அவர்களுக்கு மிக நெருக்கமான சாயல் உடையவர் உங்கள் தோழர் (நான்)தான்.
அப்போது (ஒரு) தொழுகையின் நேரம் வந்துவிடவே இறைதூதர்களுக்கு நான் தலைமை தாங்கித் தொழுகை நடத்தினேன்.தொழுது முடித்தபோது (என்னிடம்) ஒருவர், “முஹம்மதே! இதோ இவர்தாம் நகரத்தின் காவலர் மாலிக்.அவருக்கு சலாம் சொல்லுங்கள்! என்று கூறினார். நான் அவரை நோக்கித் திரும்பிய போது அவர் முந்திக் கொண்டு எனக்கு சலாம் சொல்லிட்டார்.-இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 1
பாடம் : 76 (வான்) எல்லையிலுள்ள இலந்தை மரம் (சித்ரத்துல் முன்தஹா) பற்றிய குறிப்பு.
279. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூஹர் (ஸல்) அவர்கள் (விண்ணுலகப் பயணத்திற்காக)இரவில் அழைத்துச் செல்லப்பட்ட போது (வான் எல்லையிலுள்ள இலந்தை மரமான) சித்ரத்துல் முன்தஹா” வரை அவர்கள் கொண்டுசெல்லப்பட்டார்கள். அ(ந்த மரத்தில் வேர்பகுதியான)து ஆறாம் வானத்தில் அமைந்துள்ளது. பூமியிலிருந்து மேலே கொண்டு செல்லப்படும் (உயிர்கள், மனிதர்களின் செயல்கள் பற்றிய குறிப்புகள்) யாவும் அங்கு தான் சென்று சேர்கின்றன; அங்கே அவை கையகப்படுத்தப்படுகின்றன.அதற்கு மேலேயிருந்து கிழே கொண்டு வரப்படும் (இறைக்கட்டளைகள்) யாவும் அங்குதான் வந்து சேர்கின்றன; அங்கே (வானவர்களால்) அவை பெற்றுக்கொள்ளப்படுகின்றன.
“சித்ரத்துல் முன்தஹா எனும் அம்மரத்தை ஏதோ (பிரமாண்டமான) ஒன்று சூழ்ந்து கொண்டிருக்கிறது” எனும் (53:16 ஆவது) வசனம் தங்கத்தாலான விட்டில் பூச்சிகளையே குறிக்கிறது.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு முன்று(கட்டளைகள்) வழங்கப்பட்டன. அவையாவன: 1. ஐவேளைத்தொழுகைகள் வழங்கப்பட்டன. 2. அல்பகரா அத்தியாயத்தின் இறுதி (மூன்று) வசன்ங்கள் அருளப்பெற்றன. 3. அவர்களுடைய சமுதாயத்தாரில் அல்லாஹ்வுக்கு இணையேதும் வைக்காதவர்களுக்குப் பேரழிவை ஏற்படுத்தும் பெரும்பாவங்கள் மன்னிக்கப்(படுவதாக அறிவிக்கப்)பட்டது.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
280. சுலைமான் அஷ்ஷைபானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ஸிர்ரு பின் ஹீபைஷ் (ரஹ்) அவர்களிடம் “(வளைந்த) வில்லின் இரு முனைகளுக்கிடையிலான நெருக்கத்தைப் போன்று, அல்லது அதைவிடச் சமீபமாக (வானவர் ஜிப்ரீலும் நபிக்கும் இடையிலான நெருக்கம்) இருந்தது” எனும் (53:9வது) வசனம் தொடர்பாகக் கேட்டேன்.அதற்கு அவர்கள்,“(வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்களை, அறுநூறு இறக்கைகள் இருக்க, (அவரது நிஜத் தோற்றத்தில்) நபி (ஸல்) அவர்கள் பார்த்தார்கள்’ (என்பதே இவ்வசனத்தின் கருத்தாகும்) என இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் என்னிடம் தெரிவித்தார்கள்” என்று பதிலளித்தார்கள்.
அத்தியாயம் : 1
281. ஸிர்ரு பின் ஹுபைஷ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், “நபியின்) உள்ளம்,அவர் கண்டது தொடர்பாகப் பொய்யுரைக்கவில்லை””” எனும் (53:11 ஆவது) வசனத்திற்குப் பின்வருமாறு விளக்கமளித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள், (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்களுக்கு அறுநூறு இறக்கைகள் இருக்க, (அவரது நிஜத் தோற்றத்தில்) அவரைப் பார்த்தார்கள்.
அத்தியாயம் : 1
282. ஸிர்ரு பின் ஹூபைஷ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
“உறுதியாக அவர் தம் இறைவனின் சான்றுகளில் மிகப் பெரியதைக் கண்டார்” எனும் (53:18 ஆவது) வசனம் குறித்து அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்:
நபி (ஸல் அவர்கள், (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்களுக்கு அறுநூறு இறக்கைகள் இருக்க, அவரது (நிஜ) உருவத்தில் அவரைப் பார்த்தார்கள்.
அத்தியாயம் : 1
பாடம் : 77 "நிச்சயமாக அவர் மற்றொரு முறையும் அவரைக் கண்டார்" எனும் (53:13ஆவது) இறைவசனத்தின் பொருளும், விண்ணுலகப் பயணத்தின்போது நபி (ஸல்) அவர்கள் தம் இறைவனைப் பார்த்தார்களா? என்பதும்.
283. அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
"நிச்சயமாக அவர் மற்றொரு முறையும் அவரைக் கண்டார்" எனும் (53:13ஆவது) வசனம், "நபி (ஸல்) அவர்கள் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்களைப் பார்த்ததையே குறிக்கிறது" என்று அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்.
அத்தியாயம் : 1
284. அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
”நபி (ஸல்) அவர்கள் தம் இறைவனை அகத்தால் பார்த்தார்கள்” என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், (53:13 ஆவது) வசனத்திற்கு விளக்கம்) கூறினார்கள்.
அத்தியாயம் : 1
285. அபுல் ஆலியா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
“(நபியின்) உள்ளம், அவர் கண்டது தொடர்பாகப் பொய்யுரைக்கவில்லை” (53:11), “நிச்சயமாக அவர் மற்றொரு முறையும் அவனைக் கண்டார்” (53:13), ஆகிய வசனங்கள் குறித்து இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்:
நபி (ஸல்) அவர்கள் தம் இறைவனை இரண்டு முறை தமது அகத்தால் பார்த்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
286. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
287. மஸ்ரூக் பின் அஜ்த உ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் (அன்னை) ஆயிஷா (ரலி) அவர்களிடம் சாய்ந்து அமர்ந்திருந்தேன். அப்போது அவர்கள் (என்னிடம்), “அபூஆயிஷா, மூன்று விஷயங்கள் உள்ளன. அவற்றில் எந்த ஒன்றை யார் கூறினாலும் அவர் அல்லாஹ்வின் மீது மிகப்பெரும் பொய்யை இட்டுக்கட்டியவர் ஆவார்” என்று கூறினார்கள்: நான், அவை எவை?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “யார் முஹம்மத் (ஸல்) அவர்கள் தம் இறைவனை (நேரில்) பார்த்தார்கள் என்று கூறுகின்றாரோ அவர் அல்லாஹ்வின் மீது மிகப்பெரும் பொய்யை இட்டுக்கட்டிவிட்டார்” என்று சொன்னார்கள். உடனே சாய்ந்து அமர்ந்து (ஓய்வு எடுத்துக்)கொண்டிருந்த நான் எழுந்து (நேராக) அமர்ந்து, “இறைநம்பிக்கையாளர்களின் அன்னையே! நிதானித்துக் கூறுங்கள்! அவசரப்படாதீர்கள். வலிவும் மாண்புமிக்க அல்லாஹ், “திண்ணமாக அவனைத் தெளிவான அடிவானத்தில் அவர் கண்டார்’ (81:23) என்றும், “நிச்சயமாக அவர் மற்றொரு முறையும் அவனைக் கண்டார்’ (53:13) என்றும் கூறவில்லையா?” என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் பின்வருமாறு விளக்கமளித்தார்கள்:
இந்த சமுதாயத்தாரில் இது தொடர்பாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேள்வி கேட்ட முதல் ஆள் நான்தான். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அது,(வானவர்) ஜிப்ரீலை, (நான் பார்த்த்தை)யே குறிக்கிறது. நான் ஜிப்ரீலை, அவர் படைக்கப்பெற்றுள்ள (நிஜத்) தோற்றத்தில் இந்த இரு தடவைகள் தவிர வேறெப்போதும் பார்த்ததில்லை. அவர் வானிலிருந்து(பூமிக்கு) இறங்கிக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன்.அப்போது அவருடைய பிராமாண்டமான தோற்றம் வானம் பூமிக்கிடையேயுள்ள இடைவெளியை அடைத்துக் கொண்டிருந்தது” என்று கூறினார்கள்.
மேலும், ஆயிஷா (ரலி) அவர்கள் (தமது கருத்துக்குச் சான்றாக) அல்லாஹ் (பின்வருமாறு) கூறுவதை நீங்கள் செவியுறவில்லையா?” என்று கேட்டார்கள்.
“கண் பார்வைகள் அவனை எட்ட முடியாது; அவனோ அனைத்தையும் பார்க்கிறான். அவன் நுட்பமானவனும் நன்கறிந்தவனும் ஆவான்” (6:103).
அல்லது (பின்வருமாறு) அல்லாஹ் கூறுவதை நீங்கள் செவியுறவில்லையா? “எந்த மனிதருடனும் அல்லாஹ் நேருக்கு நேர் பேசுவதில்லை. ஆயினும், வஹியின் (தனது அறிவிப்பின்) மூலமோ, திரைக்கு அப்பாலிருந்தோ, ஒரு தூதரை அனுப்பிவைத்துத் தன் அனுமதியின் பேரில் தான் நாடுகின்றவற்றை (வேதமாக) அறிவிக்கச்செய்தோ அல்லாமல் நேரடியாகப் பேசுவதில்லை; நிச்சயமாக அவன் உயர்ந்தோனும் ஞானமிக்கோனும் ஆவான்” (42:51).
(தொடர்ந்து) ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறைவேத்திலிருந்து எதையும் மறைத்தார்கள் என்று யாரேனும் கூறினால், அவரும் அல்லாஹ்வின் மீது மிகப்பெரும் பொய்யை இட்டுகட்டிவிட்டார்.அல்லாஹ்வோ, “(எம்) தூதரே! உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பெற்ற (வேதத்)தை (மக்களுக்கு) எடுத்துரைத்துவிடுங்கள்! (இவ்வாறு) நீங்கள் செய்யாவிட்டால், அவனுடைய தூதை நீங்கள் நிறைவேற்றியவராகமாட்டீர்கள்” (5:67) என்று கூறுகின்றான்.
“நபி (ஸல்) அவர்கள் நாளை நடக்கவிருப்பதைத் தெரிவிப்பார்கள்’ என்று யாரேனும் கூறினால் அவர் அல்லாஹ்வின் மீது மிகபெரும் பொய்யைப் புனைந்துவிட்டார். அல்லாஹ்வோ, “(நபியே!) கூறுக: அல்லாஹ்வைத் தவிர வான்ங்களிலும் பூமியிலும் உள்ள யாரும் மறைவானவற்றை அறியமாட்டார்” (27:65) என்று கூறுகின்றான்.
அத்தியாயம் : 1
288. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் கீழ்க்காணும் தகவல் அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது:
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: முஹம்மத் (ஸல்) அவர்கள் தமக்கு அருளப்பெற்ற (வேதத்)திலிருந்து எதையும் மறைப்பவராக இருந்தால், பின்வரும் வசனத்தை மறைத்திருப்பார்கள்: (நபியே!) எவருக்கு அல்லாஹ்வும் அருள்புரிந்து நீங்களும் அவர்மீது உபகாரம் புரிந்தீர்களோ, அவரிடத்தில் நீங்கள், "அல்லாஹ்வுக்குப் பயந்து நீர் உம் துணைவியை (மணவிலக்குச் செய்துவிடாமல்) உம்மிடமே நிறுத்திவைத்துக்கொள்ளும்" என்று சொன்னபோது, அல்லாஹ் வெளிப்படுத்த இருந்ததை மனிதர்களுக்குப் பயந்து நீங்கள் உங்களது மனத்தில் மறைத்துவைத்தீர்கள்; அல்லாஹ்வே நீங்கள் அஞ்சுவதற்கு மிகவும் தகுதியுடையோன். (33:37)
அத்தியாயம் : 1
289. மேற்கண்ட (287ஆவது) ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், மஸ்ரூக் (ரஹ்) அவர்கள், "நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் "முஹம்மத் (ஸல்) அவர்கள் தம் இறைவனைப் பார்த்தார்களா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "அல்லாஹ் தூயவன். நீர் கூறியதைக் கேட்டு என் ரோமம் சிலிர்த்துவிட்டது..." என்று கூறியதாக ஹதீஸ் துவங்குகிறது. (இது தொடர்பான அறிவிப்புகளில்) மேற்கண்ட (287ஆவது) ஹதீஸே முழுமையானதும் விரிவானதும் ஆகும்.
அத்தியாயம் : 1
290. மஸ்ரூக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(நபி (ஸல்) அவர்கள் இறைவனைப் பார்க்கவில்லை என்று கூறிய) ஆயிஷா (ரலி) அவர்களிடம் நான், "(வளைந்த) வில்லின் இரு முனைகளுக்கிடையிலான நெருக்கத்தைப் போன்று, அல்லது அதைவிடச் சமீபமாக (அவர்கள் இருவருக்கும் இடையிலான) நெருக்கம் இருந்தது. பிறகு அல்லாஹ் தன் அடியாருக்கு எதை அறிவித்தானோ அதை அறிவித்தான்" எனும் (53:9-11) வசனங்களின் பொருள் என்ன?" என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் "அது (வானவர்) ஜிப்ரீலை (நபியவர்கள் பார்த்ததை)யே குறிக்கிறது. ஜிப்ரீல் (அலை) அவர்கள் மனித உருவிலேயே நபி (ஸல்) அவர்களிடம் வருவார்கள். ஆனால், இம்முறை மட்டும் அடிவானத்தையே அடைத்தபடி (பிரமாண்டமான) தமது (நிஜ) உருவத்தில் வந்தார்கள்" என்றார்கள்.
அத்தியாயம் : 1
பாடம் : 78 "(அவனைச் சுற்றிலும் இருப்பது) ஒளியாயிற்றே! நான் எப்படி அவனைப் பார்க்க முடியும்?" என்றும், "நான் ஓர் ஒளியைக் கண்டேன்" என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறியது.
291. அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் "நீங்கள் உங்கள் இறைவனைப் பார்த்தீர்களா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள் "(அவனைச் சுற்றிலும் இருப்பது) ஒளியாயிற்றே! நான் எப்படி அவனைப் பார்க்க முடியும்?" என்று (திருப்பிக்) கேட்டார்கள்.
அத்தியாயம் : 1
292. அப்துல்லாஹ் பின் ஷகீக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அபூதர் (ரலி) அவர்களிடம் "நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பார்த்திருந்தால் அவர்களிடம் (ஒரு விஷயத்தைப் பற்றி) கேட்டிருப்பேன்" என்று கூறினேன். "எதைப் பற்றிக் கேட்டிருப்பாய்?" என்று என்னிடம் அவர்கள் கேட்டார்கள். நான், "நீங்கள் உங்கள் இறைவனைப் பார்த்தீர்களா? என்று கேட்டிருப்பேன்" என்றேன்.
அபூதர் (ரலி) அவர்கள், "(இதுபற்றி) நான் அல்லாஹ்வின் தூதரிடமே கேட்டேன். அதற்கு அவர்கள், "நான் ஓர் ஒளியைக் கண்டேன் (அவ்வளவுதான்; வேறு எதையும் நான் காணவில்லை)" என்று பதிலளித்தார்கள்" என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
பாடம் : 79 "அல்லாஹ் உறங்கமாட்டான்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதும், "ஒளியே (அவனைப் பார்க்கவிடாமல் தடுக்கும்) அவனது திரையாகும்; அதை அவன் விலக்கிவிட்டால் அவனது பார்வை எட்டும் தூரம்வரையுள்ள படைப்பினங்களை அவனது ஒளிச்சுடர் சுட்டெரித்துவிடும்" என்று அவர்கள் கூறியதும்.
293. அபூமூசா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடையே நின்று ஐந்து விஷயங்களைச்
சொன்னார்கள். (அவை:)
1) வலிவும் மாண்புமிக்க அல்லாஹ் உறங்க மாட்டான்; உறங்குவது அவனுக்குத் தகாது.
2) அவன் தராசைத் தாழ்த்துகிறான்; உயர்த்துகிறான்.
3) (மனிதன்) இரவில் புரிந்த செயல், பகலில் புரிந்த செயலுக்கு முன்பே அவனிடம் மேலே கொண்டுசெல்லப்படுகிறது.
4) (மனிதன்) பகலில் புரிந்த செயல், இரவில் புரிந்த செயலுக்கு முன்பே அவனிடம் மேலே கொண்டுசெல்லப்படுகிறது.
5) ஒளியே (அவனைப் பார்க்கவிடாமல் தடுக்கும்) அவனது திரையாகும். -மற்றோர் அறிவிப்பில் "நெருப்பே அவனது திரையாகும்" என்று காணப்படுகிறது.- அத்திரையை அவன் விலக்கிவிட்டால் அவனது பார்வை எட்டும் தூரம் வரையுள்ள அவனுடைய படைப்பினங்களை அவனது ஒளிச்சுடர் சுட்டெரித்துவிடும்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
294. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடையே நின்று நான்கு விஷயங்களைச் சொன்னார்கள்" என்று இடம்பெற்றுள்ளது. மேலும் அதில் "அவனுடைய படைப்பினங்கள்" எனும் சொற்றொடர் இடம்பெறவில்லை. "ஒளியே அவனது திரையாகும்" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 1
295. அபூமூசா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடையே நின்று நான்கு விஷயங்களைச் சொன்னார்கள்:
1) அல்லாஹ் உறங்கமாட்டான்; உறங்குவது அவனுக்குத் தகாது.
2) அவன் தராசை உயர்த்துகிறான்; தாழ்த்துகிறான்.
3)(மனிதன்) பகலில் புரிந்த செயல், இரவில் இறைவனிடம் மேலே கொண்டுசெல்லப்படுகிறது.
4) (மனிதன்) இரவில் புரிந்த செயல் பகலில் அவனிடம் மேலே கொண்டுசெல்லப்படுகிறது.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
பாடம் : 80 இறைநம்பிக்கையாளர்கள் மறுமையில் இறைவனைக் காண்பார்கள் என்பதற்குரிய சான்று.
296. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இரு சொர்க்கங்கள் உண்டு. அவற்றின் பாத்திரங்களும் இதரப் பொருட்களும் வெள்ளியால் ஆனவை. (வேறு) இரு சொர்க்கங்களும் உண்டு. அவற்றின் பாத்திரங்களும் இதரப் பொருட்களும் பொன்னால் ஆனவை. "அத்ன்" எனும் சொர்க்கத்தில் இருப்பவர்கள் தங்கள் இறைவனைக் காண்பதற்கு, அவன்மீதுள்ள "பெருமை" எனும் மேலாடை தவிர வேறெந்தத் தடையும் இராது.
இதை அப்துல்லாஹ் பின் கைஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
297. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சொர்க்கவாசிகள் சொர்க்கத்தில் நுழைந்துவிடும்போது (அவர்களிடம்) அல்லாஹ், "உங்களுக்கு நான் இன்னும் கூடுதலாக ஏதேனும் வழங்க வேண்டுமென நீங்கள் விரும்புகின்றீர்களா?" என்று கேட்பான். அதற்கு அவர்கள் "(இறைவா!) நீ எங்கள் முகங்களை வெண்மையாக்க வில்லையா? எங்களை நரகத்திலிருந்து காப்பாற்றி சொர்க்கத்திற்குள் பிரவேசிக்கச் செய்யவில்லையா (இதைவிடக் கூடுதலாக எங்களுக்கு வேறென்ன வேண்டும்)?" என்று கேட்பார்கள்.
அப்போது அல்லாஹ், (தன்னைச் சுற்றிலும் இருக்கும்) திரையை விலக்கி (அவர்களுக்கு தரிசனம் தந்தி)டுவான். அப்போது தம் இறைவனைக் (காணும் அவர்களுக்கு அவனைக்) காண்பதைவிட மிகவும் விருப்பமானது வேறெதுவும் வழங்கப்பட்டிராது.
இதை ஸுஹைப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 1
298. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "பிறகு "நன்மை புரிந்தோருக்கு நன்மையும், (அதைவிட) அதிகமும் கிடைக்கும்" எனும் இந்த (10:26ஆவது) வசனத்தையும் நபி (ஸல்) அவர்கள் ஓதிக் காட்டினார்கள்" என்று அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 1
பாடம் : 81 இறைவனைக் காணும் வழிமுறை.
299. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
மக்களில் சிலர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் "அல்லாஹ்வின் தூதரே! மறுமையில் நாங்கள் எங்கள் இறைவனைக் காண்போமா?" என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "பௌர்ணமி இரவில் முழு நிலவைக் காண்பதில் உங்களுக்குச் சிரமம் உண்டா?" என்று கேட்டார்கள். மக்கள், "(சிரமம்) இல்லை; அல்லாஹ்வின் தூதரே!" என்று பதிலளித்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "மேகம் மறைக்காத சூரியனைக் காண்பதில் உங்களுக்குச் சிரமம் உண்டா?" என்று கேட்டார்கள். மக்கள், "(சிரமம்) இல்லை; அல்லாஹ்வின் தூதரே!" என்று பதிலளித்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இவ்வாறுதான் (மறுமையில்) இறைவனை நீங்கள் காண்பீர்கள். அல்லாஹ் மறுமை நாளில் மனிதர்களை ஒன்றுகூட்டி, "(உலகத்தில்) யார் எதை வழிபட்டுக்கொண்டிருந்தாரோ அவர் அதைப் பின்தொடர்ந்து செல்லட்டும்" என்று கூறுவான். ஆகவே, சூரியனை வழிபட்டுக்கொண்டிருந்தவர்கள் சூரியனைப் பின்தொடர்ந்து செல்வார்கள். சந்திரனை வழிபட்டுக்கொண்டிருந்தவர்கள் சந்திரனைப் பின்தொடர்ந்து செல்வார்கள். ஷைத்தான்(களான தீயசக்தி)களை வழிபட்டுக்கொண்டிருந்தவர்கள் அவற்றைப் பின்தொடர்ந்து செல்வார்கள். இறுதியில் இந்தச் சமுதாயத்தார் மட்டும் எஞ்சியிருப்பார்கள். அவர்களிடையே நயவஞ்சகர்களும் இருப்பார்கள்.
அப்போது இறைவன் அவர்களிடம், அவர்கள் அறிந்திராத ஒரு தோற்றத்தில் வந்து, "நான் உங்கள் இறைவன்" என்பான். உடனே அவர்கள், "உன்னிடமிருந்து அல்லாஹ்விடம் நாங்கள் பாதுகாப்புக் கோருகிறோம். எங்கள் இறைவன் எங்களிடம் வரும்வரை நாங்கள் இங்கேயே இருப்போம். எங்கள் இறைவன் எங்களிடம் வந்தால் அவனை நாங்கள் அறிந்துகொள்வோம்" என்பர். அப்போது அவர்கள் அறிந்துகொள்ளும் தோற்றத்தில் அவர்களிடம் இறைவன் வந்து, "நான் உங்கள் இறைவன்" என்பான். அதற்கு அவர்கள், "நீயே எங்கள் இறைவன்" என்று கூறியவாறு அவனைப் பின் தொடர்ந்து செல்வார்கள். அங்கு நரகத்திற்கு மேலே பாலம் அமைக்கப்படும். நானும் என் சமுதாயத்தாருமே (அந்தப் பாலத்தைக்) கடப்பவர்களில் முதல் ஆளாக இருப்போம். அன்று இறைத்தூதர்களைத் தவிர வேறெவரும் பேசமாட்டார்கள். அந்தச் சூழ்நிலையில் இறைத் தூதர்கள் அனைவரின் பிரார்த்தனையும் "அல்லாஹ்வே! காப்பாற்று; காப்பாற்று" என்பதாகவே இருக்கும். நரகத்(தின் மேலே உள்ள அப்பாலத்)தில் கொக்கிகள் மாட்டப்பட்டிருக்கும். அவை கருவேல மரத்தின் (சஅதான்) முற்களைப் போன்றிருக்கும்.
-பிறகு "கருவேலமரத்தை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். மக்கள், "ஆம் (பார்த்திருக்கிறோம்), அல்லாஹ்வின் தூதரே!" என்று பதிலளித்தார்கள்.-
(தொடர்ந்து) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அந்தக் கொக்கிகள் கருவேல மரத்தின் முள்ளைப் போன்றுதான் இருக்கும். ஆயினும், அதன் பருமன் என்னவென்று அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள். அந்தக் கொக்கிகள் மக்களை அவர்களின் செயல்களுக்கேற்ப கவ்விப்பிடிக்கும். அவர்களில் தமது (பாவச்) செயலால் (அங்கு) தங்கிவிட்ட இறைநம்பிக்கையாளரும் இருப்பார். இன்னும் அவர்களில் தண்டனை அளிக்கப்பட்டுப் பின்னர் விடுவிக்கப்படுபவரும் இருப்பார். இறுதியாக இறைவன், அடியார்களிடையே தீர்ப்பு வழங்கி முடித்த பின், நரகவாசிகளில் தான் நாடிய சிலரைத் தனது கருணையினால் (நரகத்திலிருந்து) வெளியேற்ற விரும்புவான். அதன்படி அல்லாஹ்விற்கு எதையும் இணைகற்பிக்காமல் இருந்து, "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை" என்று உறுதிகூறியவர்களில், தான் கருணைகாட்ட நாடிய சிலரை நரகத்திலிருந்து வெளியேற்றுமாறு வானவர்களுக்கு இறைவன் ஆணையிடுவான். வானவர்கள் நரகத்திலிருக்கும் அவர்களை சஜ்தாவின் அடையாளங்களை வைத்து இனம் கண்டுகொள்வார்கள். மனிதனி(ன் உடலி)ல் உள்ள சஜ்தாவின் அடையாளத்தைத் தவிர மற்றப் பகுதிகளை நரகம் தீண்டுகிறது. சஜ்தா அடையாளத்தைத் தீண்டக் கூடாதென நரகத்திற்கு இறைவன் தடை விதித்துள்ளான். ஆகவே, அவர்கள் அங்கமெல்லாம் கரிந்துவிட்ட நிலையில் நரகத்திலிருந்து வெளியேற்றப்படுவார்கள்.
அப்போது அவர்கள்மீது "மாஉல் ஹயாத்" எனப்படும் (ஜீவ) நீர் ஊற்றப்படும். உடனே அவர்கள் சேற்று வெள்ளத்தில் விதைப் பயிர் முளைப்பதைப் போன்று (புதுப் பொலிவுடன்) நிறம் மாறிவிடுவார்கள்.
பிறகு இறைவன் (தன்) அடியார்களிடையே தீர்ப்பு வழங்கி முடிப்பான். அப்போது நரகத்தை முன்னோக்கியபடி ஒரு மனிதர் மட்டும் எஞ்சியிருப்பார். அந்த மனிதர்தாம் சொர்க்கத்தில் நுழையும் இறுதி மனிதராவார். அவர் "என் இறைவா! நரகத்தின் (வெப்பக்) காற்றால் எனக்கு மூச்சடைக்கிறது. அதன் ஜுவாலை என்னைக் கரிக்கிறது. ஆகவே, நரகத்தைவிட்டு என் முகத்தை (வேறு பக்கம்) திருப்பிடுவாயாக!" என்று கூறி, அல்லாஹ் நாடிய சில பிரார்த்தனைகளைச் சொல்லி அல்லாஹ்விடம் பிரார்த்தித்துக் கொண்டிருப்பார். பிறகு அல்லாஹ், "இ(ப்போது நீ கோரிய)தை உனக்கு நான் செய்(து கொடுத்)தால் வேறொரு கோரிக்கையையும் நீ முன்வைக்கலாம் அல்லவா?" என்று கேட்பான். அதற்கு அந்த மனிதர், "(இல்லை;) வேறெதையும் உன்னிடம் நான் கேட்கமாட்டேன்" என்று சொல்லிவிட்டு, அல்லாஹ் நாடிய வாக்குறுதிகளையும் உறுதிமொழிகளையும் அவர் தம் இறைவனிடம் வழங்குவார். ஆகவே, இறைவன் அவரது முகத்தை நரகத்தைவிட்டு (வேறு பக்கம்) திருப்பிவிடுவான். இதையடுத்து அவர் சொர்க்கத்தை முன்னோக்கி, அ(திலுள்ள)தைக் காணும்போது அல்லாஹ் நாடிய நேரம்வரை அமைதியாக இருப்பார்.
பிறகு, "என் இறைவா! சொர்க்கத்தின் வாசல்வரை என்னைக் கொண்டுசெல்வாயாக!" என்பார். அதற்கு இறைவன் அவரிடம், "இப்போது உனக்கு நான் வழங்கியதைத் தவிர வேறெதையும் என்னிடம் கேட்கமாட்டேன் என நீ வாக்குறுதியும் உறுதிமொழியும் வழங்கவில்லையா? மனிதா! உனக்குக் கேடுதான். உன்னுடைய ஏமாற்று வேலைதான் என்ன!" என்பான். ஆனால், அவர் தொடர்ந்து "என் இறைவா..." என்று கூறி அல்லாஹ்வைப் பிரார்த்தித்துக்கொண்டே இருப்பார். அவரிடம் இறைவன், "(உனது இந்தக் கோரிக்கையை ஏற்று) இதை நான் உனக்கு வழங்கிவிட்டால் வேறொரு கோரிக்கையையும் நீ முன்வைக்கலாம் அல்லவா?" என்று கேட்பான்.
அதற்கு அவர், "இல்லை; உன் கண்ணியத்தின் மீதாணையாக! (வேறெதையும் உன்னிடம் நான் கேட்கமாட்டேன்)" என்று சொல்லிவிட்டு, அல்லாஹ் நாடிய வாக்குறுதிகளையும் உறுதிமொழிகளையும் தம் இறைவனிடம் வழங்குவார். ஆகவே, அல்லாஹ் அவரைச் சொர்க்கத்தின் வாசல்வரை கொண்டு செல்வான். அவர் சொர்க்கத்தின் வாசலில் நிற்கும்போது அவருக்காகச் சொர்க்கம் திறந்துகொள்ளும். உடனே அவர் அதிலுள்ள உல்லாசமான சுகங்களைக் காணும்போது அல்லாஹ் நாடிய நேரம்வரை மௌனமாக இருப்பார். பிறகு, "என் இறைவா! என்னைச் சொர்க்கத்திற்குள் அனுப்புவாயாக!" என்று கூறுவார். அப்போது அவரிடம் இறைவன், "இப்போது உனக்கு வழங்கப்பெற்றதைத் தவிர வேறெதையும் என்னிடம் கேட்கமாட்டாய் என்று கூறி என்னிடம் வாக்குறுதிகளையும் உறுதிமொழிகளையும் நீ வழங்கவில்லையா? மனிதா! உனக்குக் கேடுதான். உனது ஏமாற்று வேலைதான் என்ன!" என்று கேட்பான். அதற்கு அவர், "என் இறைவா! நான் உன் படைப்புகளிலேயே நற்கதியற்றவனாக ஆகிவிடக்கூடாது" என்று கூறி அல்லாஹ்விடம் பிரார்த்தித்துக்கொண்டேயிருப்பார். இறுதியில் அவரைக் கண்டு இறைவன் சிரித்துவிடுவான். அவரைக் கண்டு இறைவன் சிரித்ததும் "சொர்க்கத்திற்குள் நுழைந்துகொள்!" என்று கூறிவிடுவான். சொர்க்கத்திற்குள் அவர் நுழைந்த பின், "நீ (விரும்பிய) இன்னதை ஆசைப்படலாம்" என்று அவரிடம் இறைவன் கூறுவான். அவ்வாறே அவர் ஆசைப்பட்டுத் தம் இறைவனிடம் கோருவார். அப்போது இறைவன் இன்னின்னதை ஆசைப்படு என்று அவருக்கு நினைவு படுத்துவான். இறுதியில் அவருடைய ஆசைகள் அனைத்தும் அடங்கிவிடும்போது, "இதுவும் உனக்குக் கிடைக்கும்; இதைப் போன்று இன்னொரு மடங்கும் உனக்குக் கிடைக்கும்" என்று இறைவன் கூறுவான்.
அறிவிப்பாளர் அதாஉ பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
(மேற்கண்ட ஹதீஸை அறிவித்த) அபூ ஹுரைரா (ரலி) அவர்களுடன் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களும் இருந்தார்கள். அன்னார் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்த இந்த ஹதீஸிற்கு எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை. ஆனால்,"இதுவும் உனக்குக் கிடைக்கும்; இதைப் போன்று இன்னொரு மடங்கும் உனக்குக் கிடைக்கும்" என்று இறைவன் அம்மனிதரிடம் கூறுவான்" என்று அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்தபோது தான், அபூசயீத் (ரலி) அவர்கள் (குறுக்கிட்டு) "இதுவும் இதைப் போன்று பத்துமடங்கும் உனக்குக் கிடைக்கும் என்று அல்லாஹ் கூறுவான்" என்றல்லவா ஹதீஸ் இருக்கிறது, அபூஹுரைரா!" என்றார்கள். அபூஹுரைரா (ரலி) அவர்கள், " "இதுவும் உனக்குக் கிடைக்கும்; இதைப் போன்று இன்னொரு மடங்கும் உனக்குக் கிடைக்கும்" என்றே நான் மனனமிட்டுள்ளேன்" என்று கூறினார்கள். அதற்கு அபூசயீத் (ரலி) அவர்கள், "நான் "இதுவும் இதைப்போன்று பத்துமடங்கும் உனக்குக் கிடைக்கும்" என்றுதான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து மனனமிட்டுள்ளேன் என்று அறுதியிட்டுக் கூறுகிறேன்" என்றார்கள்.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: இந்த மனிதர்தாம் சொர்க்கத்தில் நுழையும் கடைசி மனிதராவார்.
அத்தியாயம் : 1
300. மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் பின்வருமாறு ஹதீஸ் துவங்குகிறது:
நபி (ஸல்) அவர்களிடம் மக்கள் "அல்லாஹ்வின் தூதரே, மறுமை நாளில் எங்கள் இறைவனை நாங்கள் காண்போமா?" என்று கேட்டார்கள். மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளவாறே இடம் பெற்றுள்ளன.
அத்தியாயம் : 1
301. ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இவை அபூஹுரைரா (ரலி) அவர்கள் எங்களுக்கு அறிவித்த ஹதீஸ்களாகும். அவற்றில் இந்த ஹதீஸும் ஒன்றாகும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சொர்க்கத்தில் உங்களில் ஒருவரது குறைந்தபட்சத் தகுதி என்னவென்றால், "நீ (இன்னதை) ஆசைப்படு" என்று அவரிடம் (இறைவன்) சொல்வதாகும். அப்போது அவர் ஒவ்வொன்றாக ஆசைப்படுவார். (இறுதியில்) அவரிடம், "ஆசைப்பட்டு (முடித்து)விட்டாயா?" என்று இறைவன் கேட்பான். அதற்கு அவர், "ஆம்" என்று பதிலளிப்பார். அப்போது அவரிடம், "நீ ஆசைப்பட்டதும் அத்துடன் அதைப் போன்றதும் உனக்குக் கிடைக்கும்" என்று இறைவன் கூறுவான்.
அத்தியாயம் : 1
302. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் மக்கள் சிலர் "அல்லாஹ்வின் தூதரே! மறுமை நாளில் நாங்கள் எங்கள் இறைவனைக் காண்போமா?" என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஆம் (காண்பீர்கள்); மேகமே இல்லாத தெளிவான நண்பகல் நேரத்தில் சூரியனைப் பார்க்க நீங்கள் ஒருவரையொருவர் முண்டியடித்துக் கொண்டு சிரமப்படுவீர்களா? மேகமே இல்லாத தெளிவான பௌர்ணமி இரவில் முழு நிலவைக் காண்பதற்கு நீங்கள் ஒருவரையொருவர் முண்டியடித்துக்கொண்டு சிரமப்படுவீர்களா?" என்று கேட்டார்கள். மக்கள் "இல்லை, அல்லாஹ்வின் தூதரே!" என்று கூறினர்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இவ்விரண்டில் ஒன்றைப் பார்க்க நீங்கள் சிரமப்படாததைப் போன்றே மறுமை நாளில்- சுபிட்சமும் உயர்வும் மிக்க- அல்லாஹ்வைக் காணவும் நீங்கள் சிரமப்படமாட்டீர்கள். மறுமை நாள் ஏற்படும்போது அழைப்பாளர் ஒருவர் "ஒவ்வொரு சமுதாயத்தாரும் (உலகத்தில்) தாம் வழிபட்டுவந்தவர்களைப் பின்தொடர்ந்து செல்லட்டும்" என்று அழைப்புவிடுப்பார். அப்போது, அல்லாஹ்வை விடுத்து பொய்த் தெய்வங்களையும் சிலைகளையும் வழிபட்டுக்கொண்டிருந்தவர்கள் ஒருவர்கூட எஞ்சாமல் அனைவரும் நரக நெருப்பில் விழுவர். முடிவில் அல்லாஹ்வை வழிபட்டுக்(கொண்டு நன்மைகளும் புரிந்து)கொண்டிருந்த நல்லவர்களும் (அல்லாஹ்வை வழிபட்டுப் பாவங்களும் புரிந்து வந்த) பாவிகளும் வேதக்காரர்களில் மிஞ்சியவர்களும்தாம் எஞ்சியிருப்பர்.
அப்போது (வேதக்காரர்களான) யூதர்கள் அழைக்கப்படுவார்கள். அவர்களிடம், "நீங்கள் எதை வழிபட்டுவந்தீர்கள்?" என்று கேட்கப்படும். அவர்கள், "அல்லாஹ்வின் மைந்தர் உஸைர் அவர்களை நாங்கள் வழிபட்டுக்கொண்டிருந்தோம்" என்று பதிலளிப்பார்கள். அப்போது அவர்களிடம், "நீங்கள் பொய்யுரைக்கிறீர்கள். அல்லாஹ் தனக்கு எந்தத் துணைவியையும் குழந்தையையும் ஆக்கிக் கொள்ளவில்லை" என்று கூறப்படும். மேலும், "இப்போது உங்களுக்கு என்ன வேண்டும்?" என்று கேட்கப்படும். அதற்கு அவர்கள், "எங்கள் இறைவா! எங்களுக்குத் தாகமாக உள்ளது. எங்களுக்கு (நீர்) புகட்டுவாயாக!" என்பார்கள். உடனே நீங்கள் தண்ணீர் உள்ள (அந்த) இடத்திற்குச் செல்லக் கூடாதா என (ஒரு திசையை)ச் சுட்டிக் காட்டப்படும். பிறகு (அத்திசையிலுள்ள) நரகத்தின் பக்கம் அவர்கள் கொண்டு செல்லப் படுவார்கள். அது கானலைப் போன்று காணப்படும். அதன் ஒரு பகுதி மற்றொரு பகுதியைச் சிதைத்துக்கொண்டிருக்கும். அப்படியே அவர்கள் அந்த நரக நெருப்பில் விழுவார்கள்.
பிறகு, கிறிஸ்தவர்கள் அழைக்கப்பட்டு, "நீங்கள் எதை வழிபட்டுக்கொண்டிருந்தீர்கள்?" என்று அவர்களிடம் கேட்கப்படும். அவர்கள், "நாங்கள் அல்லாஹ்வின் மைந்தர் மஸீஹை (ஈசாவை) வழிபட்டுக்கொண்டிருந்தோம்" என்று கூறுவர். அப்போது அவர்களிடம், "நீங்கள் பொய்யுரைக்கிறீர்கள். அல்லாஹ் தனக்கு எந்தத் துணைவியையும் குழந்தையையும் ஆக்கிக் கொள்ளவில்லை" என்று சொல்லப்படும். மேலும், அவர்களைப் பார்த்து, "உங்களுக்கு என்ன வேண்டும்?" என்று கேட்கப்படும். அதற்கு அவர்கள், "எங்கள் இறைவா! எங்களுக்குத் தாகமாக உள்ளது. எங்களுக்கு (நீர்) புகட்டுவாயாக!" என்று (யூதர்கள் கூறியதைப் போன்றே) கூறுவார்கள். உடனே நீங்கள் தண்ணீர் உள்ள (அந்த) இடத்திற்குச் செல்லக் கூடாதா என (ஒரு திசையை)ச் சுட்டிக் காட்டப்படும். பிறகு (அந்தத் திசையிலுள்ள) நரகத்தின் பக்கம் அவர்கள் கொண்டுசெல்லப்படுவார்கள். அது கானலைப் போன்று காட்சி தரும். அதன் ஒரு பகுதி மற்றொரு பகுதியைச் சிதைத்துக்கொண்டிருக்கும். அப்படியே அவர்கள் அந்த நரக நெருப்பில் விழுவார்கள்.
இறுதியில் அல்லாஹ்வை வழிபட்டு(க்கொண்டு நன்மைகளும் புரிந்து)வந்த நல்லோர் மற்றும் (அல்லாஹ்வையும் வழிபட்டுக்கொண்டு பாவங்களும் புரிந்துவந்த) தீயோர் மட்டும் எஞ்சியிருப்பர். அவர்களிடம் அகிலத்தாரின் இரட்சகன் வருவான். (அவனுடைய தன்மைகளை முன்பே அறிந்திருந்ததன் மூலம் தம் உள்ளத்தில்) அவனைப் பற்றி அவர்கள் எண்ணி வைத்திருந்த தோற்றங்களில் (அடையாளம் கண்டுகொள்வதற்கு) மிக நெருக்கமானதொரு தோற்றத்தில் (அவன் வருவான்). அப்போது "நீங்கள் எதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்? ஒவ்வொரு சமுதாயத்தாரும் (உலகில்) தாம் வழிபட்டுக் கொண்டிருந்தவற்றைப் பின்தொடர்ந்து சென்றுகொண்டிருக்கின்றார்களே!" என்று அவன் கேட்பான். அவர்கள், "எங்கள் இறைவா! உலகத்தில் நாங்கள் (வாழ்க்கையின் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக) இந்த மக்களிடம் அதிக அளவில் தேவையுள்ளவர்களாக இருந்தும், அவர்களுடன் உறவாடிக்கொண்டிராமல் அவர்களைப் பிரிந்திருந்தோம். (அப்படியிருக்க, இப்போதா அவர்களைப் பின்தொடர்வோம்?)" என்று பதிலளிப்பார்கள்.
அப்போது இறைவன், "நானே உங்கள் இறைவன்" என்று கூறுவான். (அவர்களால் உறுதிசெய்ய முடியாத தோற்றத்தில் அப்போது அவன் இருப்பதால்) அதற்கு அவர்கள், "உன்னிடமிருந்து அல்லாஹ்விடம் நாங்கள் பாதுகாப்புக்கோருகிறோம்; நாங்கள் அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்க மாட்டோம்" என்று இரண்டு தடவையோ அல்லது மூன்று தடவையோ கூறுவார்கள். (அந்தச் சோதனையான கட்டத்தில்) அவர்களில் சிலர் (சத்தியத்திலிருந்து) பிறழ்ந்துவிடும் அளவுக்குப் போய் விடுவார்கள். அப்போது இறைவன், "அவனை இனங்கண்டுகொள்ள உங்களுக்கும் அவனுக்குமிடையே ஏதேனும் அடையாளம் உண்டா?" என்று கேட்பான். அதற்கு அவர்கள் "ஆம் (இறைவனின் கணைக்கால் தான் அடையாளம்)" என்று கூறுவார்கள். உடனே (இறைவனின்) கணைக்காலைவிட்டும் (திரை) விலக்கப்படும். அப்போது (உலகத்தில்) மனப்பூர்வமமாக அல்லாஹ்வுக்குச் சிரம்பணிந்து கொண்டிருந்தவர் யாரோ அவர் சிரம்பணிய இறைவன் அனுமதிப்பான். தற்காப்புக்காகவோ பாராட்டுக்காகவோ சிரம்பணிந்து கொண்டிருந்தவருடைய முதுகை (நெடும் பலகையைப் போன்று) ஒரே நீட்டெலும்பாக அல்லாஹ் ஆக்கிவிடுவான். அவர் சிரம்பணிய முற்படும்போதெல்லாம் மல்லாந்து விழுந்துவிடுவார். (அவரால் சிரம் பணிய முடியாது.)
பின்னர் அவர்கள் தம் தலையை உயர்த்துவார்கள். அப்போது முதலில் அவர்கள் பார்த்த அதே தோற்றத்தில் இறைவன் காட்சியளித்து "நானே உங்கள் இறைவன்" என்று கூறுவான். அதற்கு அவர்கள் "நீயே எங்கள் இறைவன்" என்று கூறுவார்கள். பிறகு நரகத்தின் மீது பாலம் அமைக்கப்படும்; (பாவம் புரிந்த இறை நம்பிக்கையாளர்களுக்காகப்) பரிந்துரை செய்ய அனுமதி கிடைக்கும். அப்போது மக்கள், "அல்லாஹ்வே! காப்பாற்று; காப்பாற்று" என்று பிரார்த்திப்பார்கள்.
-(அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மேற்கண்டவாறு கூறிக்கொண்டிருந்தபோது அவர்களிடம்) "அல்லாஹ்வின் தூதரே! பாலம் என்றால் என்ன? (அது எதைக் குறிக்கிறது?)" என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், "(கால்கள்) வழுக்கிவிடக்கூடிய ஓர் இடமாகும். அ(ந்தப் பாலத்)தில் நஜ்துப் பகுதியில் முளைக்கும் "சஅதான்" எனப்படும் (முட்)செடியின் முற்களைப் போன்ற கொக்கிகள் இருக்கும்" என்று பதிலளித்தார்கள்.-
இறைநம்பிக்கையாளர்கள் கண் சிமிட்டும் நேரத்தில் மின்னல், காற்று, பறவை, உயர் ரகக் குதிரைகள் மற்றும் ஒட்டகங்கள் ஆகியவற்றைப் போன்று (விரைவாக அந்தப் பாலத்தைக்) கடந்துவிடுவார்கள். (அப்போது அவர்கள் மூன்று வகையினராக இருப்பார்கள்:) அவர்களில் பாதுகாப்பாகத் தப்பித்துக்கொள்வோரும் உண்டு. கீறிக் காயப்படுத்தப்பட்டுத் தப்புவோரும் உண்டு. பின்புறத்திலிருந்து தள்ளப்பட்டு நரக நெருப்பில் விழுவோரும் உண்டு. இறுதியில் இறைநம்பிக்கையாளர்கள் (அந்தப் பாலத்தைக் கடந்து) நரக நெருப்பிலிருந்து தப்பிவிடுவார்கள்.
என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! மறுமை நாளில் நரகத்தில் கிடக்கும் தம் சகோதரர்களின் நன்மையை வலியுறுத்தி இறைவனிடம் மிகவும் மன்றாடி வேண்டுபவர்கள் இறை நம்பிக்கையாளர்களைவிட வேறெவருமில்லை. அவர்கள் (பின்வருமாறு) கூறுவார்கள்: எங்கள் இறைவா! இவர்கள் எங்களுடன்தான் நோன்பு நோற்றார்கள்; தொழுதார்கள்; ஹஜ் செய்தார்கள் (எனவே இவர்களை நீ நரகத்திலிருந்து விடுதலை செய்வாயாக!). அப்போது அவர்களிடம், "நீங்கள் (சென்று) உங்களுக்குத் தெரிந்தவர்களை (நரகத்திலிருந்து) வெளியேற்றுங்கள்" என்று கூறப்படும். மேலும், (நரகத்திலுள்ள அவர்களை இவர்கள் அடையாளம் காண்பதற்கு வசதியாக) அவர்களது உடலைத் தீண்டக் கூடாதென நரகத்திற்குத் தடை விதிக்கப்படும். உடனே அவர்கள் (நரகத்திற்குச் சென்று) ஏராளமான மக்களை வெளியே கொண்டுவருவார்கள். அப்போது (நரகத்தில் இருந்த) அவர்களில் சிலருடைய கணைக்கால்களில் பாதிவரையும், (இன்னும் சிலருடைய) முழங்கால்கள்வரையும் நரக நெருப்பு தீண்டியிருக்கும். பிறகு, "எங்கள் இறைவா! நீ யாரை வெளியேற்றுமாறு கூறினாயோ அவர்களில் ஒருவர்கூட நரகத்தில் எஞ்சவில்லை (எல்லாரையும் நாங்கள் வெளியேற்றிவிட்டோம்)" என்று கூறுவார்கள்.
அப்போது இறைவன் "நீங்கள் திரும்பிச் சென்று எவரது உள்ளத்தில் ஒரு பொற்காசு அளவு நன்மை இருக்கிறதோ அவரை வெளியேற்றுங்கள்" என்று கூறுவான். அவ்வாறே அவர்களும் (இன்னும்) ஏராளமான மக்களை வெளியேற்றிவிட்டு (வந்து), "எங்கள் இறைவா! நீ உத்தரவிட்ட யாரையும் அதில் நாங்கள் விட்டு வைக்கவில்லை (எல்லாரையும் வெளியேற்றி விட்டோம்)" என்று கூறுவார்கள். பிறகு இறைவன், "நீங்கள் திரும்பிச்சென்று எவரது உள்ளத்தில் அரைப் பொற்காசு அளவு நன்மை இருக்கிறதோ அவரையும் (நரகத்திலிருந்து) வெளியேற்றிவிடுங்கள்" என்பான். அவர்களும் ஏராளமான மக்களை வெளியே கொண்டு வருவார்கள். பின்னர் "எங்கள் இறைவா, நீ கட்டளையிட்ட ஒருவரையும் நாங்கள் விட்டு வைக்கவில்லை" என்று கூறுவார்கள். பின்பும் இறைவன் "நீங்கள் திரும்பிச்சென்று எவரது உள்ளத்தில் அணுவளவு நன்மை இருக்கிறதோ அவரை வெளியேற்றுங்கள்" என்பான். அவ்வாறே அவர்கள் (சென்று) அதிகமான மக்களை வெளியேற்றிவிட்டு (வந்து), "எங்கள் இறைவா! நரகத்தில் எந்த நன்மையையும் நாங்கள் விட்டுவைக்கவில்லை" என்று கூறுவார்கள்.
-அறிவிப்பாளர் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
நான் கூறும் இந்த ஹதீஸை நீங்கள் நம்பாவிட்டால், "திண்ணமாக அல்லாஹ் (எவருக்கும்) அணுவளவும் அநீதி இழைக்கமாட்டான். அணுவளவு நன்மை இருந்தாலும் அதை அவன் பன்மடங்காக்கி (வழங்குவதுடன்) தன்னிடமிருந்து மாபெரும் சன்மானத்தையும் வழங்குவான்" எனும் (4:40ஆவது) இறைவசனத்தை நீங்கள் விரும்பினால் ஓதிக்கொள்ளுங்கள்.-
பிறகு வலிவும் மாண்புமிக்க அல்லாஹ், "வானவர்கள் பரிந்துரைத்துவிட்டார்கள்; இறைத்தூதர்களும் பரிந்துரைத்துவிட்டார்கள்; இறைநம்பிக்கையாளர்களும் பரிந்துரைத்து விட்டார்கள். இப்போது கருணையாளர்களுக்கெல்லாம் கருணையாளன் மட்டுமே எஞ்சியிருக்கிறான்" என்று கூறிவிட்டு, நரகத்திலிருந்து ஒரு கைப்பிடி அளவிலான மக்களை அள்ளியெடுத்து, அறவே எந்த நன்மையும் செய்திராத ஒரு கூட்டத்தை நரகத்திலிருந்து வெளியேற்றுவான். அவர்கள் கரிக்கட்டை போன்று மாறியிருப்பார்கள். எனவே, அவர்களைச் சொர்க்கத்தின் நுழைவாயில்களில் உள்ள ஒரு நதியில் போடுவான். -அதற்கு "ஜீவநதி" (நஹ்ருல் ஹயாத்) என்று பெயர்.- உடனே அவர்கள் சேற்று வெள்ளத்தில் விதைப் பயிர் முளைப்பதைப் போன்று (புதுப் பொலிவுடன்) வெளியேறுவார்கள். நீங்கள் விதைப் பயிரைப் பார்த்ததில்லையா? பாறையோரங்களில் அல்லது மரங்களுக்கு அருகில் அவை வளர்கின்றன. அவற்றில் வெயில் படுமிடத்தில் இருப்பவை மஞ்சளாகவும் பச்சையாகவும் இருக்கும். (வெயில் படாமல்) நிழலில் இருப்பவை (வெளிறிப்போய்) வெள்ளை நிறத்தில் இருக்கும் அல்லவா?" என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் கிராமப் புறங்களில் (கால்நடைகளை) மேய்த்துக் கொண்டிருந்தீர்கள் போலும்" என்றார்கள்.
(தொடர்ந்து) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஆக, அவர்கள் (அந் நதியிலிருந்து) முத்துகளைப் போன்று (ஒளிர்ந்தவர்களாக) வெளியேறுவார்கள். அவர்களது கழுத்தில் ("நரக விடுதலை பெற்றோர்" எனும்) முத்திரை இருக்கும். (அதை வைத்து) அவர்களைச் சொர்க்கவாசிகள் அடையாளம் கண்டு கொள்வார்கள். "இவர்கள் அல்லாஹ்வால் (நரகத்திலிருந்து) விடுதலை செய்யப்பட்டவர்கள்; (உலகில்) எந்த நற்செயலும் புரிந்திராமலும் எந்த நன்மையும் செய்துவைத்திராமலும் இருந்த இவர்களை அல்லாஹ்வே (தனது தனிப்பெரும் கருணையால்) சொர்க்கத்திற்கு அனுப்பினான்" என்று பேசிக்கொள்வார்கள்.
பிறகு (அவர்களிடம்) இறைவன், "சொர்க்கத்திற்குள் செல்லுங்கள்; அங்கு எதையெல்லாம் நீங்கள் காண்கிறீர்களோ அது உங்களுக்கே உரியது" என்று கூறுவான். அதற்கு அவர்கள், "எங்கள் இறைவா! அகிலத்தாரில் யாருக்கும் வழங்காத (பாக்கியத்)தை எங்களுக்கு நீ வழங்கிவிட்டாய்" என்று (நன்றியுடன்) கூறுவார்கள். அதற்கு இறைவன், "உங்களுக்கு இதைவிடச் சிறந்த வேறொன்று உள்ளது" என்று கூறுவான். அதற்கு அவர்கள், "எங்கள் இறைவா! இதைவிடச் சிறந்த அந்த ஒன்று எது?" என்று கேட்பார்கள். அதற்கு, "எனது திருப்தி(தான் அது). இனி ஒருபோதும் உங்கள் மீது நான் கோபம் கொள்ளமாட்டேன்" என்பான் இறைவன்.
முஸ்லிம் (பின் அல்ஹஜ்ஜாஜ் ஆகிய நான்) கூறுகிறேன்:
நான், பரிந்துரை (ஷஃபாஅத்) தொடர்பான இந்த ஹதீஸை ஈசா பின் ஹம்மாத் ஸுஃக்பதல் மிஸ்ரீ (ரஹ்) அவர்களிடம் வாசித்துக்காட்டி, "இந்த ஹதீஸை லைஸ் பின் சஅத் (ரஹ்) அவர்களிடமிருந்து நீங்கள் செவியுற்றதாக உங்களிடமிருந்து நான் அறிவிக்கலாமா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள் "ஆம் (அறிவியுங்கள்)" என்றார்கள்.
மேலும் "இந்த ஹதீஸைத் தங்களுக்கு லைஸ் பின் சஅத் (ரஹ்) அவர்கள் காலித் பின் யஸீத் (ரஹ்) அவர்களிடமிருந்தும், காலித் அவர்கள் சயீத் பின் அபீஹிலால் (ரஹ்) அவர்களிடமிருந்தும், சயீத் அவர்கள் ஸைத் பின் அஸ்லம் (ரஹ்) அவர்களிடமிருந்தும், ஸைத் அவர்கள் அதாஉ பின் யசார் (ரஹ்) அவர்களிடமிருந்தும், அதாஉ அவர்கள் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடமிருந்தும், அபூசயீத் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்தும் அறிவித்தார்களா?" என்றும் நான் ஈசா பின் ஹம்மாத் அவர்களிடம் கேட்டேன்.
அதாவது அபூசயீத் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்: நாங்கள், "அல்லாஹ்வின் தூதரே, நாங்கள் எங்கள் இறைவனைக் காண்போமா?" என்று கேட்டோம். அதற்கு அவர்கள், "(மேகமூட்டமில்லாத) தெளிவான பகல் நேரத்தில் சூரியனைப் பார்க்க நீங்கள் முண்டியடித்துக்கொண்டு சிரமப்படுவீர்களா?" என்று கேட்டார்கள்... என்று தொடங்கும் மேற்கண்ட ஹதீஸை முழுமையாக அறிவித்தார்கள்.
அதில், "(உலகில்) எந்த நற்செயலும் புரிந்திராமலும், எந்த நன்மையும் செய்துவைத்திராமலும் இருந்த இவர்களை அல்லாஹ்வே (தனது தனிப்பெரும் கருணையால்) சொர்க்கத்திற்கு அனுப்பினான்" எனும் வாசகத்திற்குப் பின்னால் "நீங்கள் காணக்கூடிய இதுவும் இதைப் போன்று இன்னொரு மடங்கும் உங்களுக்கே உரியது என அவர்களிடம் கூறப்படும்" எனும் வாசகத்தை அதிகப்படியாகவும் அறிவித்துள்ளார்கள்.
மேலும், அபூசயீத் (ரலி) அவர்கள் கூறினார்கள்: "அந்தப் பாலம் முடியைவிட மெலிதானது; வாளைவிட கூர்மையானது" எனும் செய்தி எனக்கு எட்டியது.
லைஸ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "(நரகத்திலிருந்து விடுதலை பெற்று சொர்க்கம் சென்ற) மக்கள், "எங்கள் இறைவா! அகிலத்தாரில் யாருக்கும் நீ வழங்காத (பாக்கியத்)தை எங்களுக்கு நீ வழங்கிவிட்டாய்" என்று கூறுவார்கள் எனும் வாசகமும் அதற்குப் பிறகு வருபவையும் இடம்பெறவில்லை.
நான் அறிவித்த இவை அனைத்தையும் ஈசா பின் ஹம்மாத் (ரஹ்) அவர்கள் ஒப்புக் கொண்டார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
303. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் வந்துள்ள வாசகங்களில் சிறிது கூடுதல் குறைவு காணப்படுகிறது.
அத்தியாயம் : 1
பாடம் : 82 (மறுமையில்) பரிந்துரை (ஷஃபாஅத்) உண்டு என்பதற்கான சான்றும், ஓரிறைக் கோட்பாட்டை நம்பினோர் (அனைவரும்) நரகத்திலிருந்து வெளியேற்றப்படுவதும்.
304. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(மறுமையில் விசாரணைகள் முடிந்த பின்) அல்லாஹ் சொர்க்கவாசிகளைச் சொர்க்கத்திற்கு அனுப்புவான். தான் நாடும் சிலரைத் தனது (தனிப் பெரும்) கருணையால் அவன் சொர்க்கத்திற்கு அனுப்புவான். நரகவாசிகளை நரகத்தில் நுழையவைப்பான். பிறகு (இறைநம்பிக்கையாளர்களிடம்), "பாருங்கள்; யாருடைய உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கை (ஈமான்) உள்ளதோ அவரை (நரகத்திலிருந்து) வெளியேற்றுங்கள்" என்று கூறுவான். அப்போது கரிந்து கரிக்கட்டையாகிவிட்ட நிலையில் நரகவாசிகள் வெளியேற்றப் படுவார்கள். பின்னர் அவர்கள் "நஹ்ருல் ஹயாத்" (ஜீவ) நதியில் அல்லது "நஹ்ருல் ஹயா" (மழை) நதியில் போடப்படுவார்கள். உடனே அவர்கள் சேற்று வெள்ளத்தில் விதைப் பயிர் முளைப்பதைப் போன்று (புதுப் பொலிவுடன்) நிறம் மாறிவிடுவார்கள். அந்த வித்து(விலிருந்து வரும் புற்பூண்டுகள்) மஞ்சள் நிறத்தில் (பார்ப்பதற்கு அழகாகவும், காற்றில்) அசைந்தாடக் கூடியதாக(வும்) எவ்வாறு முளைக்கின்றது என்பதை நீங்கள் கண்டதில்லையா?
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 1
305. மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "அவர்கள் நஹ்ருல் ஹயாத் (ஜீவ) நதியில் போடப்படுவார்கள்" என்று ஐயப்பாடின்றி இடம்பெற்றுள்ளது.
காலித் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அவர்கள் வெள்ளத்தின் ஓரத்தில் குப்பைக் கூளங்கள் (மத்தியிலுள்ள வித்துகள்) முளைப்பதைப் போன்று" என்று இடம்பெற்றுள்ளது.
உஹைப் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "களிமண் வெள்ளத்தில்" அல்லது "சேற்று வெள்ளத்தில்" மிதந்துவரும் விதைப் பயிர் முளைப்பதைப் போன்று" என்று (ஐயப்பாட்டுடன்) இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 1
306. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நரகத்திற்கே உரியவர்களான நரகவாசிகள் நரகத்தில் இறக்கவுமாட்டார்கள்; வாழவு மாட்டார்கள். ஆனால், "தம் பாவங்களால்" அல்லது "தம் குற்றங்களால்" நரக நெருப்பிற்கு ஆளான மக்களை உடனே இறைவன் இறக்கச் செய்துவிடுவான். அவர்கள் (எரிந்து) கரிக் கட்டையாக மாறிவிடும் போது (அவர்களுக்காகப்) பரிந்துரை செய்ய (சொர்க்கவாசிகளான இறைநம்பிக்கையாளர்களுக்கு) அனுமதி வழங்கப்படும். உடனே அவர்கள் தனித் தனிக் கூட்டங்களாகக் கொண்டுவரப்பட்டு, சொர்க்க நதிகளின் படுகையில் பரப்பி வைக்கப்படுவர். பிறகு (சொர்க்கத்திலிருப்பவர்களிடம்) "சொர்க்கவாசிகளே! அவர்கள்மீது தண்ணீரை ஊற்றுங்கள்" என்று கூறப்படும். (அவ்வாறே ஊற்றப்படும்.) உடனே அவர்கள் வெள்ளத்தில் மிதந்து வரும் விதைப் பயிர் முளைப்பதைப் போன்று (புதுப் பொலிவுடன்) மாறி விடுவார்கள்.
இவ்வாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியபோது மக்களில் ஒருவர், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கிராமப்புறத்தில் இருந்திருக்கிறார்கள் போலும்" என்று கூறினார்.
அத்தியாயம் : 1
307. மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "வெள்ளத்தில் மிதந்துவரும் விதைப் பயிர் முளைப்பதைப் போன்று" என்பது வரைதான் இடம்பெற்றுள்ளது. அதற்குப் பிறகுள்ள தகவல் இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 1
பாடம் : 83 நரகத்திலிருந்து இறுதியாக வெளியேறுபவர்.
308. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (சொர்க்கவாசிகள் மற்றும் நரகவாசிகளின் நிலை குறித்துப் பின்வருமாறு) கூறினார்கள்:
நரகவாசிகளில் இறுதியாக நரகத்திலிருந்து வெளியேறுபவர் யார் என்பதையும், சொர்க்க வாசிகளில் இறுதியாகச் சொர்க்கத்தில் நுழைபவர் யார் என்பதையும் நான் நன்கறிவேன். நரகத்திலிருந்து தவழ்ந்தபடி வெளியேறுகின்ற ஒரு மனிதரே அவர். அவரிடம் அல்லாஹ், "நீ போய் சொர்க்கத்தில் நுழைந்துகொள்" என்பான். அவர் சொர்க்கத்திற்குச் செல்வார். அது நிரம்பியிருப்பதைப் போன்று அவருக்குத் தோன்றும். உடனே அவர் திரும்பிவந்து, "என் இறைவா! அது நிரம்பியிருக்கக் கண்டேன்" என்று கூறுவார். அதற்கு அல்லாஹ், "நீ சென்று சொர்க்கத்தில் நுழைந்துகொள்!" என்று (மீண்டும்) சொல்வான். அவர் சொர்க்கத்திற்குச் செல்வார். அது நிரம்பியிருப்பதைப் போன்று அவருக்குத் தோன்றும். ஆகவே, அவர் திரும்பிவந்து, "என் இறைவா! அது நிரம்பியிருக்கக் கண்டேன்" என்று கூறுவார். அதற்கு அவன், "நீ சென்று சொர்க்கத்தில் நுழைந்துகொள். ஏனெனில், "உலகம் மற்றும் அதைப் போன்று பத்து மடங்கு" அல்லது "உலகத்தைப் போன்று பத்து மடங்கு" (இடம் சொர்க்கத்தில்) உனக்கு உண்டு" என்று சொல்வான். அதற்கு அவர், "அரசனாகிய நீ என்னைப் "பரிகாசம் செய்கிறாயா?" அல்லது "என்னை நகைக்கின்றாயா?" என்று கேட்பார்.
(இதைக் கூறும்போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் கடைவாய்ப் பற்கள் தெரியச் சிரித்ததை நான் பார்த்தேன்.
அறிவிப்பாளர்களில் ஒருவர் கூறுகிறார்: இவரே சொர்க்கவாசிகளில் குறைந்த அந்தஸ்து உடையவர் ஆவார் என்று கூறப்பட்டுவந்தது.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
309. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (நரகவாசிகளின் நிலை குறித்துப் பின்வருமாறு) கூறினார்கள்: நரகவாசிகளில் இறுதியாக நரகத்திலிருந்து வெளியேறுபவர் யார் என்பதை நான் நன்கறிவேன். நரகத்திலிருந்து தவழ்ந்தபடி வெளியேறுகின்ற ஒரு மனிதரே அவர். அவரிடம், "நீ சென்று சொர்க்கத்தில் நுழைந்து கொள்" என்று கூறப்படும். அவர் சென்று சொர்க்கத்தில் நுழைவார். அங்கு மக்கள் தத்தமது இருப்பிடங்களைப் பிடித்துக் கொண்டிருப்பதை அவர் காண்பார். அவரிடம், "நீ கடந்து வந்த காலத்தை நினைவுகூருகிறாயா?" என்று கேட்கப்படும். அதற்கு அவர், "ஆம்" என்பார். "நீ (இன்ன இன்னதை) ஆசைப்படலாம்" என்று கூறப்படும். அவர் அவ்வாறே ஆசைப்படுவார். அவரிடம், "நீ ஆசைப்பட்டதும் உனக்குக் கிடைக்கும்; உலகத்தைப் போன்று பத்து மடங்கும் உனக்குக் கிடைக்கும்" என்று கூறப்படும். உடனே அவர், "அரசனாகிய நீ என்னைப் பரிகாசம் செய்கிறாயா?" என்று கேட்பார்.
(இதைக் கூறும்போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் கடைவாய்ப் பற்கள் தெரியச் சிரித்ததை நான் பார்த்தேன்.
அத்தியாயம் : 1
310. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (நரகத்திலிருந்து விடுதலை பெறும் மனிதர் குறித்துப் பின்வருமாறு) கூறினார்கள்:
(நரகத்திலிருந்து வெளியேறி) இறுதியாக சொர்க்கத்தில் நுழையும் ஒரு மனிதர் சில சமயம் நடந்து வருவார். சில சமயம் தவழ்ந்தபடி வருவார். சில சமயம் நரக நெருப்பு அவரது முகத்தைத் தாக்கிக் கரித்தும்விடும். இந்நிலையில் அவர் நரகத்தைத் தாண்டியதும் அதைத் திரும்பிப் பார்த்து, "உன்னிடமிருந்து என்னைக் காப்பாற்றிய (என் இறை)வன் சுபிட்சமிக்கவன்; முன்னோர் பின்னோர் யாருக்கும் வழங்காத (பாக்கியத்)தை அல்லாஹ் எனக்கு வழங்கினான்" என்று கூ(றி இறைவனைப் போற்)றுவார். அப்போது அவருக்கு ஒரு மரம் காட்டப்படும். உடனே அவர், "என் இறைவா! அந்த மரத்தின் அருகே என்னைக் கொண்டு செல்வாயாக! அதன் நிழலை நான் பெற்றுக் கொள்வேன்; அதன் (கீழே பாயும்) நீரைப் பருகிக்கொள்வேன்" என்று கூறுவார். அதற்கு அல்லாஹ், "மனிதா! அதை நான் உனக்கு வழங்கினால் வேறொன்றை நீ என்னிடம் கேட்கக்கூடுமல்லவா" என்று கூறுவான். அதற்கு அவர், "இல்லை; இறைவா! வேறெதையும் உன்னிடம் நான் கேட்கமாட்டேன்" என்று கூறி, வாக்குறுதி அளிப்பார். அவரிடம் பொறுமை இல்லை என்பதைக் காணும் அவருடைய இறைவன், அவருக்கு வாய்ப்பளித்து, அவரை அந்த மரத்தின் அருகே கொண்டுசெல்வான். அங்கு அவர் அந்த மரத்தின் நிழலைப் பெறுவார்; அதன் நீரையும் பருகிக்கொள்வார்.
பிறகு அவருக்கு மற்றொரு மரம் காட்டப்படும். அது முதலில் காட்டப்பட்ட மரத்தைவிட மிகவும் அழகாய் இருக்கும். (அதைக் கண்ட) உடன் அவர், "என் இறைவா! இதற்கருகே என்னைக் கொண்டு செல்வாயாக! நான் அதன் நீரைப் பருகி அதன் நிழலை அடைந்து கொள்வேன்! இதைத் தவிர வேறெதையும் உன்னிடம் நான் கேட்கமாட்டேன்" என்று கூறுவார். அதற்கு இறைவன், "மனிதா! வேறெதையும் கேட்கமாட்டேன் என்று என்னிடம் நீ (முன்பு) வாக்குறுதி அளிக்கவில்லையா? அதன் அருகில் உன்னை நான் கொண்டுசென்றால், வேறொன்றை என்னிடம் நீ கேட்கக்கூடுமல்லவா" என்பான். உடனே அவர், வேறெதையும் கேட்கமாட்டேன் என்று வாக்குறுதி அளிப்பார். இறைவனும் அவரிடம் பொறுமை இல்லை என்பதைக் கண்டு அவருக்கு வாய்ப்பளித்து, அவரை அதன் அருகே கொண்டுசெல்வான். அவர் அதன் நிழலை அனுபவித்துக் கொண்டு அதன் (கீழே ஓடும்) நீரையும் அருந்துவார்.
பிறகு சொர்க்க வாசல் அருகே உள்ள மரம் அவருக்குக் காட்டப்படும். அது முதலிரண்டு மரங்களை விடவும் ரம்மியமானதாய் இருக்கும். உடனே அவர், "என் இறைவா! அந்த மரத்தின் அருகே என்னைக் கொண்டுசெல்வாயாக! நான் அதன் நிழலைப் பெறுவேன்; அதன் நீரைப் பருகிக்கொள்வேன்; இதைத் தவிர வேறெதையும் உன்னிடம் நான் கேட்கமாட்டேன்" என்று கூறுவார். அதற்கு இறைவன், "மனிதா! வேறெதையும் நான் கேட்கமாட்டேன் என்று (முன்பு) என்னிடம் நீ வாக்குறுதி அளிக்கவில்லையா?" என்று கேட்பான். அதற்கு அவர், "ஆம்; என் இறைவா! இந்தத் தடவை (மட்டும்); இனி, இதன்றி வேறெதையும் உன்னிடம் கேட்கமாட்டேன்" என்று கூறுவார். இறைவனும் அவரிடம் பொறுமை இல்லை என்பதைக் கண்டு அவருக்கு வாய்ப்பளித்து, அவரை அதன் அருகே கொண்டுசெல்வான். அவர் அந்த மரத்தை நெருங்கும்போது சொர்க்கவாசிகளின் குரல் அவருக்குக் கேட்கும். உடனே அவர், "என் இறைவா! சொர்க்கத்திற்குள் என்னை அனுப்புவாயாக!" என்பார். அதற்கு இறைவன், "மனிதா! ஏன் என்னிடம் கோருவதை நிறுத்திக்கொண்டாய்? உலகத்தையும் அதைப் போன்ற இன்னொரு மடங்கையும் உனக்கு நான் வழங்கினால் உனக்கு மகிழ்ச்சி ஏற்படும்தானே?" என்று கேட்பான். அதற்கு அவர், "என் இறைவா! அகிலத்தின் அதிபதியே! நீயே என்னைப் பரிகாசம் செய்கிறாயா?" என்று கேட்பார்.
(இதை அறிவித்தபோது) அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் சிரித்தார்கள். பிறகு "நான் ஏன் சிரித்தேன் என்று என்னிடம் நீங்கள் கேட்கமாட்டீர்களா?" என்று கேட்டார்கள். அப்போது மக்கள் "ஏன் சிரிக்கிறீர்கள்?" என்று கேட்டார்கள். அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், "இவ்வாறுதான் (இதை அறிவிக்கையில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிரித்தார்கள். அப்போது நபித் தோழர்கள், "ஏன் சிரித்தீர்கள், அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்டார்கள் அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அகிலத்தின் அதிபதியாகிய நீயே என்னைப் பரிகாசம் செய்கிறாயா?" என்று அந்த மனிதர் கூறும்போது அதைக் கேட்டு இறைவன் சிரிப்பான். (அதனால் தான் நான் சிரித்தேன்.) மேலும், "நான் உன்னைப் பரிகாசம் செய்யவில்லை. மாறாக, நாடியதைச் செய்கின்ற ஆற்றல் உள்ளவன் நான்" என இறைவன் கூறுவான் என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
அத்தியாயம் : 1
பாடம் : 84 சொர்க்கவாசிகளில் மிகக் குறைந்த தரம் உடையவர்.
311. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
(சொர்க்கவாசிகளில் மிகக் குறைந்த தரமுடைய மனிதர் பற்றி) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்:
சொர்க்கவாசிகளில் மிகக் குறைந்த தரமுடைய மனிதர் யாரெனில், அவரது முகத்தை அல்லாஹ் நரகத்திலிருந்து சொர்க்கத்தின் பக்கம் திருப்பிவிடுவான்; மேலும், நிழல் தரும் மரம் ஒன்றை அவருக்குக் காட்டுவான். அப்போது அவர், "என் இறைவா! இந்த மரத்தின் அருகே என்னைக் கொண்டுசெல்வாயாக! நான் அதன் நிழலில் இருக்க வேண்டும்" என்பார்.
-பிறகு இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களின் (மேற்கண்ட) அறிவிப்பில் உள்ளவாறே காணப்படுகிறது.-
ஆனால், "மனிதா! ஏன் என்னிடம் கோருவதை நிறுத்திக்கொண்டாய்?" என்பதிலிருந்து இறுதிவரையுள்ள மற்ற தகவல்கள் இதில் இடம்பெறவில்லை. "இன்னின்னதை நீ கேட்கலாம்!"என்று அவருக்கு அல்லாஹ் நினைவூட்டுவான். (அவ்வாறே அவர் ஆசைப்பட்டுக் கேட்பார்.) இறுதியில் ஆசைகள் அனைத்தும் அடங்கிவிடும்போது, "இதுவும் உனக்குக் கிடைக்கும்; இதைப் போன்று இன்னும் பத்து மடங்கும் உனக்குக் கிடைக்கும்" என்று இறைவன் கூறுவான்" என்று அதிகப்படியாக இடம் பெற்றுள்ளது.
பிறகு அந்த மனிதர் (சொர்க்கத்திலுள்ள) தமது இல்லத்திற்குள் நுழைவார். அப்போது அவருடைய "ஹூருல் ஈன்" எனும் (கண்ணழகுக் கன்னியரான) சொர்க்கத் துணைவியர் இருவர் அவரிடம் வந்து, "எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது. அவன்தான் எங்களுக்காக உங்களையும், உங்களுக்காக எங்களையும் உயிர்ப்பித்தான்"என்று கூறுவார்கள். அப்போது அந்த மனிதர் "எனக்கு வழங்கப்பட்டதைப் போன்று வேறு யாருக்கும் வழங்கப் படவில்லை" என்று (மகிழ்ந்து) கூறுவார்.
இதை நுஅமான் பின் அபீஅய்யாஷ் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 1
312. ஷஅபீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் சொற்பொழிவு மேடை (மிம்பர்)மீது நின்றவாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக(பின்வருமாறு) மக்களுக்கு அறிவித்தார்கள்:
மூசா (அலை) அவர்கள் இறைவனிடம், "சொர்க்கவாசிகளில் மிகக் குறைந்த தரம் உடையவர் யார்?" என்று கேட்டார்கள். அதற்கு இறைவன் கூறினான்: சொர்க்கவாசிகள் சொர்க்கத்திற்குள் நுழைந்த பிறகு ஒரு மனிதர் வருவார். அவரிடம் "நீ (சென்று) சொர்க்கத்திற்குள் நுழைந்துகொள்!" என்று கூறப்படும். அதற்கு அவர், "இறைவா! எப்படி (நான் நுழைவேன்)? மக்கள் அனைவரும் அவரவர் இருப்பிடங்களைப் பிடித்துக்கொண்டு தமக்குக் கிடைத்ததை எடுத்துக்கொண்டுவிட்டார்களே?" என்று கூறுவார். அவரிடம், "உலக அரசர்களில் ஒருவரது ஆட்சிக்குட்பட்ட பகுதியைப் போன்று உனக்குக் கிடைத்தால் திருப்திதானே?" என்று கேட்கப்படும். அதற்கு அவர் "திருப்தியடைவேன், இறைவா!" என்பார். அப்போது இறைவன், "இதுவும் உனக்குக் கிடைக்கும்; இதைப் போன்று இன்னொரு மடங்கும், இதைப் போன்று இன்னொரு மடங்கும், இதைப் போன்று இன்னொரு மடங்கும், இதைப் போன்று இன்னொரு மடங்கும் உனக்குக் கிடைக்கும்" என்று (நான்கு மடங்கைக்) குறிப்பிடுவான். ஐந்தாம் மடங்கு பற்றிக் கூறும்போது, அவர், "திருப்தியடைந்துவிட்டேன், இறைவா!" என்பார்.
உடனே இறைவன், "இதுவும் உனக்குக் கிடைக்கும்; இதைப் போன்று பத்து மடங்கும் உனக்குக் கிடைக்கும். உன் மனம் விரும்புகின்ற, உன் பார்வை ரசிக்கின்ற அனைத்தும் உனக்குக் கிடைக்கும்" என்பான். அப்போது அவர், "திருப்தியடைந்தேன், இறைவா!" என்று கூறுவார்.
பின்னர் மூசா (அலை) அவர்கள், "இறைவா! சொர்க்கத்தில் மிக உயர்ந்த தரமுடையவர் யார்?" என்று கேட்டார்கள். அதற்கு இறைவன், "அவர்களை நானே தேர்ந்தெடுத்தேன். அவர்களுக்குரிய தரங்களையும் நானே நேரடியாகத் தீர்மானித்தேன். அவற்றின் மீது நான் முத்திரையும் வைத்துவிட்டேன். எனவே, (அவர்களின் தரத்தை) எந்தக் கண்ணும் பார்த்திராது; எந்தக் காதும் கேட்டிராது. எந்த மனிதனின் உள்ளத்திலும் தோன்றியிராது" என்றான்.
இதை மெய்ப்பிக்கும் வகையில் அல்லாஹ்வின் வேதத்தில், "அவர்கள் செய்த (நற்)செயல்களுக்குரிய பிரதிபலனாக அவர்களுக்கென மறைத்துவைக்கப்பட்டுள்ள கண் குளிர்ச்சியை (மறுமையின் பேரின்பத்தை) எந்த ஓர் ஆன்மாவும் அறிந்து கொள்ள முடியாது" (32:17) என்று இடம் பெற்றுள்ளது.
இது, அறிவிப்பாளர் இப்னு அப்ஜர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்ன செய்தி (மர்ஃபூஉ) என்றும், முதர்ரிஃப் பின் தரீஃப் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் தாமே சொன்ன செய்தி (மவ்கூஃப்) என்றும் இடம்பெற்றுள்ளது.
இந்த ஹதீஸ் பல அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
313. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "மூசா (அலை) அவர்கள் அல்லாஹ்விடம் சொர்க்கவாசிகளில் மிகத் தாழ்ந்த தரமுடைய மனிதரைப் பற்றிக் கேட்டார்கள்" என்று முஃகீரா (ரலி) அவர்கள் கூறியதாக ஹதீஸ் தொடங்குகிறது.
அத்தியாயம் : 1
314. அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (சொர்க்கவாசிகள் மற்றும் நரகவாசிகளின் நிலை குறித்துப் பின்வருமாறு) கூறினார்கள்:
சொர்க்கவாசிகளில் இறுதியாகச் சொர்க்கத்தில் நுழைபவர் யார் என்பதையும், நரகவாசிகளில் இறுதியாக நரகத்திலிருந்து வெளியேறுபவர் யார் என்பதையும் நான் நன்கறிவேன். மறுமை நாளில் ஒரு மனிதர் கொண்டுவரப்படுவார். அப்போது, "இவர் புரிந்த சிறு பாவங்களை இவருக்கு எடுத்துக் காட்டுங்கள்! இவர் புரிந்த பெரும்பாவங்களை இவரைவிட்டு நீக்கிவிடுங்கள்" என்று கூறப்படும். அவ்வாறே அவருக்கு அவர் புரிந்த சிறுபாவங்கள் எடுத்துக் காட்டப்பட்டு, "நீ இன்ன இன்ன நாளில் இன்ன இன்ன (பாவத்)தைச் செய்துள்ளாய்; இன்ன இன்ன நாளில் இன்ன இன்ன பாவத்தைச் செய்துள்ளாய்" என்று கூறப்படும். அவரும் "ஆம்" என்று (ஒப்புதல்) கூறுவார்; அவரால் எதையும் மறுக்க முடியாது. தாம் புரிந்துவிட்டிருக்கும் பெரும் பாவங்கள் தம்மிடம் எடுத்துக் காட்டப்பட்டுவிடுமோ என்றும் அஞ்சிக்கொண்டிருப்பார். இந்நிலையில் அவரிடம், "நீ செய்த ஒவ்வொரு (சிறு) தவறுகளுக்கும் ஈடாக ஒரு நன்மை உனக்கு உண்டு" என்று கூறப்படும். அப்போது அவர், "இறைவா! நான் இன்னும் பல (பெரும் பாவச்) செயல்களைப் புரிந்திருந்தேனே! அவற்றையெல்லாம் இங்கு நான் காணவில்லையே!" என்று கேட்பார்.
(இதைக் கூறும்போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் கடைவாய்ப் பற்கள் தெரியச் சிரித்ததை நான் பார்த்தேன்.
அத்தியாயம் : 1
315. மேற்கண்ட ஹதீஸ் மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
316. அபுஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடம் ("உங்களில் யாரும் அங்கு -நரகத்திற்கு- வராமல் இருக்க முடியாது" எனும் (19:71ஆவது) வசனத்தில் இடம்பெற்றுள்ள) "வருதல்" பற்றிக் கேட்கப்பட்டது. அப்போது அவர்கள் (பின் வருமாறு) கூறினார்கள்:
மறுமை நாளில் நாம் இப்படி இப்படி -அதாவது எல்லா மக்களுக்கும் மேல் (உயரமான குன்றின் மீது)- வருவோம். அப்போது ஒவ்வொரு சமுதாயத்தாரும் அவரவர் தெய்வச் சிலைகளுடனும் அவர்கள் வழிபட்டுவந்தவையுடனும் அழைக்கப்படுவர். முதலில் முதல் சமுதாயம், அடுத்து அதற்கடுத்த சமுதாயம் (என வரிசை முறையுடன் அழைக்கப்படுவார்கள்). பிறகு நம்மிடம் நம் இறைவன் வந்து "நீங்கள் யாரை எதிர்பார்த்துக் காத்திருக்கிறீர்கள்?" என்று கேட்பான். அப்போது (ஓரிறை நம்பிக்கையுள்ள) மக்கள், "நாங்கள் எங்கள் இறைவனை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்" என்று பதிலளிப்பார்கள். உடனே, அவன், "நான்தான் உங்கள் இறைவன்" என்பான். மக்கள் "நாங்கள் உன்னை (நேரடியாகப்) பார்க்காதவரை (உறுதி கொள்ளமாட்டோம்)" என்று கூறுவார்கள். ஆகவே, இறைவன் சிரித்தபடி அவர்களிடையே காட்சியளிப்பான். அவர்களை அழைத்துக்கொண்டு நடப்பான். அவர்களும் அவனைப் பின்தொடர்ந்து செல்வார்கள். அப்போது அவர்களிலுள்ள நம்பிக்கையாளர் (முஃமின்), நயவஞ்சகர் (முனாஃபிக்) ஆகிய ஒவ்வொருவருக்கும் ஓர் ஒளி வழங்கப்படும். அவர்கள் அந்த ஒளியைப் பின்தொடர்ந்து செல்வார்கள். நரகத்தின் (மேல் அமைக்கப்பட்டிருக்கும்) பாலத்தின் மீது கொக்கிகளும் முட்களும் இருக்கும். அவை அல்லாஹ் நாடிய சிலரை (அவரவர் தீமைகளுக்கேற்ப) கவ்விப் பிடிக்கும். பிறகு நயவஞ்சகர்களுக்கு வழங்கப்பட்டிருந்த ஒளி அணைக்கப்பட்டுவிடும். அதன் பிறகு (அந்தப் பாலத்தைக் கடந்து) நம்பிக்கையாளர்கள் மட்டும் தப்பிச்செல்வார்கள். (அவர்களில்) தப்பிச்செல்லும் முதல் கூட்டத்தாரின் முகங்கள் பௌர்ணமி இரவின் முழு நிலவைப் போன்று ஒளிரும்; அவர்கள் எழுபதாயிரம் பேர் இருப்பர்; அவர்களிடம் எந்த விசாரணையும் நடத்தப்படாது. பிறகு அவர்களைத் தொடர்ந்துவரும் கூட்டத்தார் வானத்துத் தாரகைகள் போன்று ஜொலிப்பர். இவ்வாறே அடுத்தடுத்து வருபவர்களும் (அவர்களது நன்மைகளுக்கேற்ப இலங்குவர்).
பிறகு பரிந்துரை (ஷஃபாஅத்) நடைபெறும். "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை" (லா இலாஹ இல்லல்லாஹ்) என்று கூறிய எவரது உள்ளத்தில் வாற்கோதுமையளவு நன்மை உள்ளதோ அவர் நரகத்திலிருந்து வெளியேறும்வரை (பரிந்துரைக்கு அனுமதி பெற்றவர்கள்) பரிந்துரைப்பார்கள். அ(ப்போது நரகத்திலிருந்து வெளியேற்றப்படுப)வர்கள் சொர்க்கத்தின் முற்றத்தில் வைக்கப்படுவார்கள். அவர்கள்மீது சொர்க்கவாசிகள் (ஜீவ) நீரைத் தெளிப்பார்கள். முடிவில் வெள்ளத்தில் வரும் விதைப் பயிர் முளைப்பதைப் போன்று (பொலிவுடன்) அவர்கள் எழுவார்கள். அத்தகையவர் மீதிருந்த தீக்காயங்கள் மறைந்துவிடும். பிறகு அவர் தமக்கு இந்த உலகமும் இன்னும் அதைப் போன்று பத்து மடங்கும் (சொர்க்கத்தில் தமக்குரியதாக) ஆக்கப்படும்வரை வேண்டிக்கொண்டேயிருப்பார்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
317. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
"மக்களில் சிலரை அல்லாஹ் நரகத்திலிருந்து வெளியேற்றி,சொர்க்கத்திற்குள் அனுப்புவான்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதை நான் என் காதுபடக்கேட்டேன்.
அத்தியாயம் : 1
318. ஹம்மாத் பின் ஸைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்களிடம், "மக்களில் சிலரைப் பரிந்துரையின் பேரில் அல்லாஹ் நரகத்திலிருந்து வெளியேற்றுவான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிப்பதை நீங்கள் செவியுற்றீர்களா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "ஆம்" என்றார்கள்.
அத்தியாயம் : 1
319. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(மக்களில்) சிலர் தம் முகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளைத் தவிர மற்ற (அங்கங்கள்) யாவும் கரிந்துவிட்டிருக்கும் நிலையில் நரகநெருப்பிலிருந்து வெளியேறி, சொர்க்கத்திற்குள் நுழைவார்கள்.
இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 1
320. யஸீத் அல்ஃபகீர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
காரிஜிய்யாக்களின் கொள்கைகளில் ஒன்று என் உள்ளத்தை உறுத்திக்கொண்டேயிருந்தது. இந்நிலையில் (கணிசமான) எண்ணிக்கை கொண்ட ஒரு குழுவாக நாங்கள் ஹஜ் செய்துவிட்டுப் பிறகு (காரிஜிய்யாக்களின் அக்கொள்கை குறித்து விவாதிக்க) மக்களிடம் புறப்பட்டுச் செல்லத் தீர்மானித்தோம். அப்(பயணத்தின்)போது நாங்கள் மதீனாவைக் கடந்துசென்றோம். அங்கு ஒரு தூண் அருகில் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அமர்ந்துகொண்டு மக்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறிய செய்திகளைச் சொல்லிக்கொண்டிருந்தார்கள். அப்போது "நரக விடுதலை பெறுவோர்" பற்றியும் அவர்கள் குறிப்பிட்டார்கள்.
நான், "இறைத்தூதரின் தோழரே! நீங்கள் இவ்வாறு கூறுகின்றீர்கள்? அல்லாஹ்வோ, "நீ எவரை நரக நெருப்பில் புகுத்துகின்றாயோ அவரை நிச்சயமாக நீ இழிவாக்கிவிட்டாய்" (3:192) என்றும், "அவர்கள் அ(ந்த நரகத்) திலிருந்து வெளியேற நாடும் போதெல்லாம், அதிலேயே மீண்டும் தள்ளப்படுவார்கள்" (32:20) என்றும் கூறுகின்றானே? ஆனால், நீங்களோ வேறுவிதமாகச் சொல்லிக்கொண்டிருக்கிறீர்களே?" என்று கேட்டேன்.
அதற்கு ஜாபிர் (ரலி) அவர்கள், "நீங்கள் குர்ஆனை ஓதிவருபவர்தாமே?" என்று கேட்டார்கள். நான் "ஆம்" என்றேன். "அவ்வாறாயின், நீங்கள் முஹம்மத் (ஸல்) அவர்களின் உயர் தகுதியைப் பற்றி -அதாவது நபியவர்களை அல்லாஹ் ("மகாமு மஹ்மூத்" எனும் உயர் இடத்திற்கு) அனுப்புவானே அதைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?" என்று கேட்டார்கள். நான் "ஆம்" என்றேன். அப்போது அவர்கள், "அந்த "மகாமு மஹ்மூத்" எனும் உயர் இடத்திலிருந்து கொண்டுதான் நபி (ஸல்) அவர்களின் மூலம் அல்லாஹ் சிலரை (நரகத்திலிருந்து) வெளியேற்றுவான்" என்று கூறிவிட்டு, பிறகு "ஸிராத்" எனும் பாலம் அமைக்கப்படுவது பற்றியும் அதைக் கடந்து மக்கள் செல்வது பற்றியும் விவரித்தார்கள். மேலும் "இதை நான் நினைவிலிருத்தாதவனாக ஆகிவிடுவேனோ என்று அஞ்சுகிறேன்" என்றும் குறிப்பிட்டார்கள்.
மேலும், "ஆயினும், சிலர் நரகத்திலிருந்த பின் அங்கிருந்து வெளியேறுவார்கள்- அதாவது எள்ளுச் செடியின் குச்சிகளைப் போன்று (கரிய நிறத்தில் கருகி) வெளியேறுவார்கள். பிறகு சொர்க்க நதிகளில் ஒன்றில் நீராடுவார்கள். அதையடுத்து வெள்ளைத் தாள்களைப் போன்று (புதுப் பொலிவுடன்) வெளியேறுவார்கள்" என்று கூறினார்கள்.
நாங்கள் "(காரிஜிய்யாக்களே!) உங்களுக்கு நாசம் உண்டாகட்டும். இந்த மூதறிஞர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்மீது பொய்யுரைக்கிறார் என்றா நீங்கள் கருதுகிறீர்கள்?" என்று சொல்லிக்கொண்டே (அங்கிருந்து) திரும்பினோம். அல்லாஹ்வின் மீதாணையாக! (பரிந்துரையும் நரக விடுதலையும் உண்டு எனும் எங்கள் கொள்கையிலிருந்து) எங்களில் ஒரேயொரு மனிதரைத் தவிர வேறெவரும் விலகிவிடாத நிலையில் நாங்கள் (ஹஜ்ஜிலிருந்து) திரும்பினோம்.
(முஸ்லிம் பின் அல்ஹஜ்ஜாஜ் ஆகிய நான் கூறுகின்றேன்:)
(ஹஜ்ஜாஜ் பின் அஷ்ஷாஇர் (ரஹ்) அவர்கள், அபூநுஐம் ஃபள்ல் பின் துகைன் (ரஹ்) அவர்களிடமிருந்து இவ்வாறுதான் எனக்கு அறிவித்தார்கள் என்று நான் கருதுகிறேன்.) அல்லது அபூநுஐம் (ரஹ்) அவர்கள் எவ்வாறு கூறினார்களோ அவ்வாறு.
அத்தியாயம் : 1
321. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(இறுதிக் கட்டத்தில்) நான்கு பேர் (நரக) நெருப்பிலிருந்து வெளியேறுவார்கள். அந்நால்வரும் அல்லாஹ்வின் முன் நிறுத்தப்படுவார்கள். அப்போது அவர்களில் ஒருவர் (நரகத்தை நோக்கித்) திரும்பி, "இறைவா! இ(ந்தக் கொடிய நரகத்)திலிருந்து என்னை நீ வெளியேற்றிய பின் மீண்டும் அதற்குள் என்னை அனுப்பிவிடாதே!" என்று கூறுவார். அதையடுத்து அல்லாஹ் அதிலிருந்து அவரைக் காப்பாற்றுவான்.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
322. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் மறுமை நாளில் மக்களை ஒன்று கூட்டுவான். அப்போது அவர்கள் "(அமளிகள் நிறைந்த) அந்த நாளைப் பற்றி (அதிலிருந்து விடுபடும் வழிவகை குறித்து) கவலையோடு யோசிப்பார்கள்" அல்லது "அது குறித்த எண்ணம் அவர்களது உள்ளத்தில் ஏற்படுத்தப்படும்". ஆகவே, அவர்கள் "(அதி பயங்கரமான) இந்த நிலையிலிருந்து நம்மை விடுவிக்க நம் இறைவனிடம் பரிந்துரைக்கும்படி (யாரையாவது) நாம் கேட்டுக்கொண்டால் நன்றாயிருக்குமே!" என்று கூறியவாறு (ஆதி மனிதரும் ஆதித் தூதருமான) ஆதம் (அலை) அவர்களிடம் வருவார்கள். அவரிடம் "நீங்கள்தாம் மனித குலத்தின் தந்தை ஆவீர்கள்; அல்லாஹ் தனது கையால் உங்களைப் படைத்தான். தன்(னால் படைக்கப்பட்ட) உயிரை உங்களுக்குள் அவன் ஊதினான். மேலும், தன் வானவர்களுக்கு அவன் கட்டளையிட, அவர்கள் உங்களுக்குச் சிரம்பணிந்தனர். ஆகவே, இந்த(ச் சோதனையான) கட்டத்திலிருந்து எங்களை விடுவிப்பதற்காக உங்கள் இறைவனிடத்தில் எங்களுக்காகப் பரிந்துரை (ஷஃபாஅத்) செய்யுங்கள்" என்று கூறுவார்கள். அதற்கு ஆதம் (அலை) அவர்கள், "(நீங்கள் நினைக்கும்) அந்த இடத்தில் நான் இல்லை" என்று கூறியவாறு, (உலகில்) தாம் புரிந்துவிட்ட தவறை நினைத்துப் பார்த்து தம் இறைவனுக்கு முன் அதற்காக வெட்கப்படுவார்கள். பிறகு, "நீங்கள் (எனக்குப் பின் முக்கிய) முதல் தூதராக இறைவன் அனுப்பிவைத்த நூஹ் (அலை) அவர்களிடம் செல்லுங்கள்" என்று கூறுவார்கள்.
உடனே மக்கள், நூஹ் (அலை) அவர்களிடம் செல்வார்கள். அன்னாரும் "(நீங்கள் நினைக்கும்) அந்த இடத்தில் நான் இல்லை" என்று கூறி, (உலகில்) தாம் புரிந்துவிட்ட தவறை நினைத்து அதற்காகத் தம் இறைவனுக்கு முன் வெட்கப்படுவார்கள். மேலும், "அல்லாஹ் தன்னுடைய உற்ற நண்பராக்கிக் கொண்ட (நபி) இப்ராஹீம் (அலை) அவர்களிடம் நீங்கள் செல்லுங்கள்" என்று கூறிவிடுவார்கள்.
உடனே மக்கள், இப்ராஹீம் (அலை) அவர்களிடம் செல்ல, அவர்களும் "(நீங்கள் நினைக்கும்) அந்த இடத்தில் நான் இல்லை" என்று கூறி, தாம் புரிந்துவிட்ட தவறை நினைத்து அதற்காகத் தம் இறைவன் முன் வெட்கப்படுவார்கள். மேலும், "நீங்கள் அல்லாஹ் உரையாடிய, தவ்ராத் (வேதத்)தையும் வழங்கிய (நபி) மூசா (அலை) அவர்களிடம் செல்லுங்கள்" என்று கூறிவிடுவார்கள்.
உடனே மக்கள், மூசா (அலை) அவர் களிடம் செல்வார்கள். அன்னாரும் "(நீங்கள் நினைக்கும்) அந்த இடத்தில் நான் இல்லை" என்று கூறி, தாம் புரிந்துவிட்ட தவறை நினைத்து அதற்காகத் தம் இறைவனுக்கு முன் வெட்கப்படுவார்கள். மேலும், "நீங்கள் அல்லாஹ்வின் ஆவியும் அவனுடைய வார்த்தையுமான (நபி) ஈசாவிடம் செல்லுங்கள்" என்று கூறி விடுவார்கள். உடனே மக்கள், அல்லாஹ்வின் ஆவியும் அவனுடைய வார்த்தையுமான (நபி) ஈசாவிடம் செல்ல, அவர்களும் "(நீங்கள் நினைக்கும்) அந்த இடத்தில் நான் இல்லை" என்று கூறிவிடுவார்கள். "எனவே, நீங்கள் முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட அடியாரான (நபி) முஹம்மத் (ஸல்) அவர்களிடம் செல்லுங்கள்" என்று கூறிவிடுவார்கள்.
உடனே மக்கள், என்னிடம் வருவார்கள். அப்போது நான் என் இறைவனிடத்தில் அனுமதி கேட்பேன். எனக்கு அனுமதி அளிக்கப்படும். இறைவனை நான் கண்டதும் சிரம் பணிந்தவனாக (சஜ்தாவில்) விழுந்துவிடுவேன். அவன் நாடிய நேரம்வரை (அப்படியே) என்னை விட்டுவிடுவான். பிறகு (இறைவனின் தரப்பிலிருந்து) "முஹம்மதே! உங்கள் தலையை உயர்த்துங்கள். சொல்லுங்கள்; செவியேற்கப்படும். கேளுங்கள்; உங்களுக்குக் கொடுக்கப்படும். பரிந்துரை செய்யுங்கள்; உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்" என்று கூறப்படும். உடனே நான் எனது தலையை உயர்த்தி என் இறைவன் எனக்குக் கற்றுத்தரும் புகழ்மொழிகளைக் கூறி அவனைப் புகழ்வேன். பிறகு, நான் பரிந்துரை செய்வேன். அப்போது இறைவன் (நான் யார் யாருக்குப் பரிந்துரை செய்யலாம் என்பதை வரையறுத்து) எனக்கு வரம்பு விதிப்பான். பின்னர் அவர்களை நான் நரகத்திலிருந்து வெளியேற்றி சொர்க்கத்திற்கு அனுப்பிவைப்பேன். பின்னர் மீண்டும் நான் (இறைவனிடம்) சென்று சிரம்பணிந்து விழுவேன். இறைவன் தான் நாடும் நேரம்வரை (அப்படியே) என்னை விட்டுவிடுவான். பிறகு "முஹம்மதே, உங்கள் தலையை உயர்த்துங்கள். சொல்லுங்கள்; செவியேற்கப்படும். கேளுங்கள்; அது உங்களுக்குத் தரப்படும். பரிந்துரை செய்யுங்கள்; உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்" என்று சொல்லப்படும். நானும் அவ்வாறே என் தலையை உயர்த்தி, என் இறைவன் எனக்கு அப்போது கற்றுத்தருகின்ற புகழ்மொழிகளைக் கூறி அவனை நான் புகழ்வேன். பிறகு நான் பரிந்துரைப்பேன். (நான் யார் யாருக்குப் பரிந்துரைக்கலாம் என்பதை வரையறுத்து) எனக்கு அவன் வரம்பு விதிப்பான். பிறகு அவர்களை நான் நரகத்திலிருந்து வெளியேற்றி, சொர்க்கத்திற்கு அனுப்பிவைப்பேன். (இதைப் போன்றே மூன்று அல்லது நான்கு முறை நடக்கும்.)
அறிவிப்பாளர் கூறுகிறார்: மூன்றாவது முறையிலா, அல்லது நான்காவது முறையிலா என்று தெரியவில்லை; நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்: "என் இறைவா! குர்ஆன் தடுத்துவிட்டவர்கள் -அதாவது நிரந்தர நரகம் கட்டாயமாகிவிட்டவர்(களான இறைமறுப்பாளர்கள் மற்றும் நயவஞ்சகர்)களைத் தவிர வேறு யாரும் நரகத்தில் எஞ்சியிருக்கவில்லை" என்று கூறுவேன்.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில், இப்னு உபைத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் (பின்வருமாறு) கூறப்பட்டுள்ளது: கத்தாதா பின் திஆமா (ரஹ்) அவர்கள், "குர்ஆன் தடுத்துவிட்டவர்களைத் தவிர" என்பதற்கு விளக்கமாக "நிரந்தர நரகம் கட்டாயமாகிவிட்டவர்களைத் தவிர" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 1
323. மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில், "மறுமை நாளில் இறை நம்பிக்கையாளர்கள் ஒன்றுகூடி..." என்று தொடங்கி, இறுதியில் "பிறகு நான் நான்காம் முறையும் இறைனிடம் "சென்று" அல்லது திரும்பிப்போய்", "என் இறைவா, குர்ஆன் தடுத்து விட்டவர்களைத் தவிர வேறு யாரும் நரகத்தில் எஞ்சியிருக்கவில்லை" என்று கூறுவேன்" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 1
324. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் மறுமை நாளில் இறைநம்பிக்கையாளர்களை ஒன்றுகூட்டுவான். அப்போது அவர்களுடைய உள்ளத்தில் (பரிந்துரைக்கும்படி யாரையாவது நாம் கேட்டுக்கொண்டால் நன்றாயிருக்குமே" எனும்) எண்ணம் ஏற்படுத்தப்படும்.
மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளவாறே இடம்பெற்றுள்ளன.
இந்த அறிவிப்பிலும் "நான்காம் முறை நான் "என் இறைவா, குர்ஆன் தடுத்து விட்டவர்களைத் தவிர - அதாவது நிரந்தர நரகம் கட்டாயமாகிவிட்டவர்களைத் தவிர- வேறு யாரும் நரகத்தில் எஞ்சியிருக்கவில்லை" என்று கூறுவேன்" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 1
325. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை (லா இலாஹ இல்லல்லாஹ்) என்று கூறிய எவரது உள்ளத்தில் வாற்கோதுமையளவு நன்மை இருக்குமோ அவர் (நரக) நெருப்பிலிருந்து வெளியேற்றப்படுவார். பிறகு "லா இலாஹ இல்லல்லாஹ்" எனக் கூறிய எவரது உள்ளத்தில் மணிக்கோதுமையளவு நன்மை இருக்குமோ அவர் (நரக) நெருப்பிலிருந்து வெளியேற்றப் படுவார். பிறகு "லா இலாஹ இல்லல்லாஹ்" எனக் கூறிய எவரது உள்ளத்தில் அணுவளவு அளவு நன்மை இருக்குமோ அவர் (நரக) நெருப்பிலிருந்து வெளியேற்றப்படுவார்.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் பல அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
முஹம்மத் பின் மின்ஹால் (ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸை அறிவிக்கும்போது (பின் வருமாறு) யஸீத் பின் ஸுரைஉ (ரஹ்) அவர்கள் கூறியதாக அதிகப்படியாகக் குறிப்பிட்டார்கள்:
நான் ஷுஅபா (ரஹ்) அவர்களைச் சந்திக்கும்போது இந்த ஹதீஸை அவர்களிடம் எடுத்துரைத்தேன். அப்போது ஷுஅபா (ரஹ்) அவர்கள், "இந்த ஹதீஸை நபி (ஸல்) அவர்களிடமிருந்து அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களும், அன்னாரிடமிருந்து கத்தாதா (ரஹ்) அவர்களும் எமக்கு அறிவித்தார்கள்" என்றார்கள். ஆனால், ஷுஅபா (ரஹ்) அவர்கள் ("அணுவளவு என்பதைக் குறிக்க,) "தர்ரா" எனும் சொல்லுக்கு பதிலாக "துரா" எனும் சொல்லைக் கூறியுள்ளார்கள். அபூபிஸ்தாம் (என்ற ஷுஅபா) அவர்கள்தாம் இவ்வாறு மாற்றியுள்ளார்கள்.
அத்தியாயம் : 1
326. மஅபத் பின் ஹிலால் அல்அனஸீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(பஸ்ராவாசிகளான) நாங்கள் (அபூஹம்ஸா) அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களை நோக்கிப் புறப்பட்டோம். (பரிந்துரை குறித்த ஹதீஸை அன்னார் எங்களுக்கு அறிவிக்க) ஸாபித் அல்புனானீ (ரஹ்) அவர்களின் பரிந்துரையை நாடினோம். அனஸ் (ரலி) அவர்கள் "ளுஹா" தொழுது கொண்டிருக்கையில் நாங்கள் அங்கு போய்ச்சேர்ந்தோம். நாங்கள் உள்ளே நுழைய எங்களுக்காக ஸாபித் (ரஹ்) அவர்கள் அனுமதி கேட்டார்கள். பிறகு நாங்கள் உள்ளே நுழைந்தோம். அப்போது அனஸ் (ரலி) அவர்கள் தமது கட்டிலில் ஸாபித் (ரஹ்) அவர்களைத் தம்முடன் அமரவைத்துக்கொண்டார்கள். ஸாபித் (ரஹ்) அவர்கள், "அபூஹம்ஸா! பஸ்ராவைச் சேர்ந்த உங்கள் சகோதரர்கள் பரிந்துரை (ஷஃபாஅத்) தொடர்பான ஹதீஸைத் தமக்கு அறிவிக்குமாறு உங்களிடம் கோருகிறார்கள்" என்று சொன்னார்கள். அதற்கு அனஸ் (ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்:
முஹம்மத் (ஸல்) அவர்கள் எங்களிடம் தெரிவித்தார்கள்: (பீதி நிறைந்த) மறுமை நாள் நிகழும்போது மக்கள் சிலர் சிலரோடு அலைமோதுவார்கள். அப்போது மக்கள் ஆதம் (அலை) அவர்களிடம் வந்து, "உங்கள் வழித்தோன்றல்களுக்காக நீங்கள் பரிந்துரை செய்யுங்கள்" என்பார்கள். அதற்கு ஆதம் (அலை) அவர்கள், "அந்தத் தகுதி எனக்கு இல்லை; நீங்கள் இப்ராஹீம் (அலை) அவர்களைப் போய்ப்பாருங்கள். ஏனெனில், அவர்தாம் அல்லாஹ்வின் உற்ற நண்பர் ஆவார்" என்று கூறுவார்கள்.
உடனே மக்கள், இப்ராஹீம் (அலை) அவர்களிடம் செல்வார்கள். அப்போது இப்ôôஹீம் (அலை) அவர்களும், "எனக்கு அந்தத் தகுதி இல்லை; நீங்கள் மூசா (அலை) அவர்களைப் போய்ப்பாருங்கள். ஏனெனில், அவர்தாம் அல்லாஹ்விடம் உரையாடியவர் ஆவார்" என்று கூறுவார்கள்.
உடனே (பரிந்துரை பற்றிய மக்களின் கோரிக்கை) மூசா (அலை) அவர்களிடம் கொண்டு செல்லப்படும். மூசா (அலை) அவர்களும், "அந்தத் தகுதி எனக்கு இல்லை; நீங்கள் ஈசா (அலை) அவர்களைப் போய்ப்பாருங்கள். ஏனெனில், அவர்தாம் அல்லாஹ்வின் ஆவியும் அவனுடைய வார்த்தையும் ஆவார்" என்று சொல்வார்கள்.
உடனே (மக்களின் கோரிக்கை) ஈசா (அலை) அவர்களிடம் கொண்டுசெல்லப்படும். அப்போது ஈசா (அலை) அவர்களும் "எனக்கு அந்தத் தகுதி இல்லை; நீங்கள் முஹம்மத் (ஸல்) அவர்களை அணுகுங்கள்" என்று கூறுவார்கள். உடனே (மக்களின் கோரிக்கை) என்னிடம் கொண்டுவரப்படும். அப்போது "நான் அதற்குரியவனே" என்று நான் சொல்லிவிட்டுச் சென்று (மக்களுக்காகப் பரிந்துரைக்க) என் இறைவனிடம் அனுமதி கேட்பேன். அப்போது எனக்கு அனுமதி வழங்கப்படும். உடனே நான் இறைவனுக்கு முன்னால் நின்று தற்போது என்னால் சொல்லவியலாத புகழ்மொழிகளைக் கூறி அவனைப் போற்றுவேன்;அவற்றை அல்லாஹ்வே (அந்த நேரத்தில்) என் எண்ணத்தில் தோன்றச் செய்வான். பிறகு (அவனைக் காணும்போது) அவனுக்காகச் சிரம் பணிந்தவனாக (சஜ்தாவில்) விழுந்துவிடுவேன். அப்போது (இறைவனின் தரப்பிலிருந்து) "முஹம்மதே! உங்கள் தலையை உயர்த்துங்கள். சொல்லுங்கள்; உங்கள் சொல் செவியேற்கப்படும். கேளுங்கள்; உங்களுக்குத் தரப்படும். பரிந்துரை செய்யுங்கள்; உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்" என்று சொல்லப்படும். அப்போது நான், "என் இறைவா! என் சமுதாயம்; என் சமுதாயம்" என்பேன்.
அப்போது, "செல்லுங்கள்; எவரது உள்ளத்தில் மணிக்கோதுமை அல்லது வாற்கோதுமையளவு இறைநம்பிக்கை (ஈமான்) உள்ளதோ அவரை நரகத்திலிருந்து வெளியேற்றுங்கள்" என்று கூறப்படும். ஆகவே, நான் சென்று அவ்வாறே செய்வேன். பிறகு மீண்டும் என் இறைவனிடம் வந்து, அதே புகழ்மொழிகளைக் கூறி அவனைப் போற்றுவேன். பிறகு (அவனைக் காணும்போது) அவனுக்காகச் சிரம்பணிந்தவனாக (சஜ்தாவில்) விழுந்துவிடுவேன். அப்போதும், "முஹம்மதே! உங்கள் தலையை உயர்த்துங்கள். சொல்லுங்கள்; உங்கள் சொல் செவியேற்கப்படும். கேளுங்கள்; உங்களுக்குத் தரப்படும். பரிந்துரை செய்யுங்கள்; உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்" என்று கூறப்படும். அப்போதும் "என் இறைவா! என் சமுதாயம்; என் சமுதாயம்" என்பேன். அப்போது என்னிடம், "செல்லுங்கள்; யாருடைய உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கை (ஈமான்) உள்ளதோ அவரை (நரக) நெருப்பிலிருந்து வெளியேற்றுங்கள்" என்று கூறப்படும்.
நான் சென்று அவ்வாறே செய்துவிட்டு, மீண்டும் என் இறைவனிடம் திரும்பிவருவேன். அதே புகழ்மாலைகளைக் கூறி அவனைப் போற்றுவேன். பின்னர் அவனுக்காகச் சிரம்பணிந்து விழுவேன். அப்போதும் என்னிடம் "முஹம்மதே, எழுந்திருங்கள். சொல்லுங்கள்; உங்கள் சொல் செவியேற்கப்படும். கேளுங்கள்; தரப்படும். பரிந்துரையுங்கள்; ஏற்கப்படும்" என்று கூறப்படும். அதற்கு நான் "என் இறைவா, என் சமுதாயம்; என் சமுதாயம்" என்பேன். அப்போது "செல்லுங்கள்; எவரது உள்ளத்தில் கடுகுமணியை விட மிக மிகச் சிறியஅளவு இறைநம்பிக்கை இருக்கிறதோ அவரை நரகத்திலிருந்து வெளியேற்றுங்கள்" என என்னிடம் சொல்லப்படும். நானும் சென்று அவ்வாறே செய்வேன்.
இதுதான் அனஸ் (ரலி) அவர்கள் எங்களுக்கு அறிவித்த (பரிந்துரை பற்றிய) ஹதீஸாகும். நாங்கள் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து (விடைபெற்றுப்) புறப்பட்டோம். நாங்கள் பாலைவன (மணல்)மேட்டுக்கு வந்தபோது, "நாம் ஹசன் அல்பஸரி (ரஹ்) அவர்களைச் சந்தித்து சலாம் சொல்லிவிட்டு வந்தால் (நன்றாயிருக்கும்)" என்று பேசிக்கொண்டோம். அன்னார் (அமீர் ஹஜ்ஜாஜ் பின் யூசுஃபிற்கு அஞ்சி) அபூகலீஃபா என்பவரின் இல்லத்தில் ஒளிந்திருந்தார்கள். அவ்வாறே நாங்கள் அவர்களிடம் சென்று சலாம் கூறினோம். மேலும், "அபூசயீத்! நாங்கள் உங்கள் சகோதரர் அபூஹம்ஸா (அனஸ்-ரலி) அவர்களிடமிருந்து வந்துள்ளோம். பரிந்துரை (ஷஃபாஅத்) தொடர்பாக அவர்கள் எங்களுக்கு அறிவித்த ஹதீஸைப் போன்று வேறு யாரும் அறிவிக்க நாங்கள் கேட்டதில்லை" என்று கூறினோம்.
அதற்கு ஹசன் அல்பஸரி (ரஹ்) அவர்கள், "எங்கே சொல்லுங்கள்!" என்றார்கள். அந்த ஹதீஸை நாங்கள் அவர்களிடம் சொன்னோம். அப்போது அவர்கள் "இன்னும் சொல்லுங்கள்!" என்றார்கள். அதற்கு நாங்கள், "இதைவிடக் கூடுதலாக எங்களிடம் அனஸ் (ரலி) அவர்கள் கூறவில்லை" என்றோம். அதற்கு ஹசன் அல்பஸரி (ரஹ்) அவர்கள், இருபது ஆண்டுகளுக்கு முன்னால் நினைவாற்றலும் உடல்பலமும் மிக்கவராக இருந்தபோது இந்த ஹதீஸை (இன்னும் விரிவாக) எமக்கு அனஸ் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள். அதில் சிலவற்றை இப்போது அனஸ் (ரலி) அவர்கள் கூறாமல் விட்டுள்ளார்கள். முதியவரான அன்னார் அதை மறந்துவிட்டார்களா? அல்லது (நபிகளாரின் பரிந்துரை மீது அபரிமிதமான) நம்பிக்கை வைத்துக்கொண்டு (நல்லறங்களில் நாட்டமில்லாமல்) நீங்கள் இருந்து விடுவீர்கள் என்று அஞ்சினார்களா என்று எனக்குத் தெரியவில்லை" என்று கூறினார்கள்.
நாங்கள் ஹசன் அல்பஸரி (ரஹ்) அவர்களிடம், "(அந்தக் கூடுதல் செய்தியை) எங்களுக்குச் சொல்லுங்கள்!" என்றோம். (இதைக் கேட்டவுடன்) ஹசன் (ரஹ்) அவர்கள் சிரித்துவிட்டு, "மனிதன் அவசரக்காரனாகவே படைக்கப்பட்டுள்ளான். இந்த நபிமொழியை உங்களுக்கு அறிவிக்க வேண்டும் என்பதற்காகவே உங்களிடம் நான் இவ்வாறு குறிப்பிட்டேன்" என்று (சொல்லிவிட்டு, அந்தக் கூடுதல் செய்தியையும்) கூறினார்கள்.
(நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:)
பிறகு நான்காம் முறையும் நான் என் இறைவனிடம் திரும்பிச்சென்று அதே புகழ்மொழிகளைக் கூறி அவனைப் போற்றுவேன். பிறகு அவனுக்காகச் சிரம்பணிந்தவனாக (சஜ்தாவில்) விழுந்துவிடுவேன். அப்போது, "முஹம்மதே! உங்கள் தலையை உயர்த்துங்கள். சொல்லுங்கள்; உங்கள் சொல் செவியேற்கப்படும். கேளுங்கள்; உங்களுக்குத் தரப்படும். பரிந்துரை செய்யுங்கள்; உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்" என்று கூறப்படும். அப்போது நான், "என் இறைவா! "லா இலாஹ இல்லல்லாஹ்" மொழிந்தவர்கள் விஷயத்தில் (பரிந்துரை செய்ய) எனக்கு அனுமதி வழங்குவாயாக!" என்று கேட்பேன். அதற்கு இறைவன், "அந்த உரிமை உங்களுக்கில்லை" அல்லது "அந்தப் பொறுப்பு உங்களிடம் ஒப்படைக்கப்படவில்லை". மாறாக, என் வல்லமையின் மீதும், பெருமையின் மீதும், மகத்துவத்தின் மீதும், அதிகாரத்தின் மீதும் ஆணையாக! "லா இலாஹ இல்லல்லாஹ்" என்று சொன்னவரை நிச்சயமாக நானே (நரகத்திலிருந்து) வெளியேற்றுவேன்" என்று கூறுவான்.
அறிவிப்பாளர் மஅபத் பின் ஹிலால் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: "ஹசன் அல்பஸரி (ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸை எங்களுக்கு அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடமிருந்து அறிவித்தார்கள்" என்று நான் அறுதியிட்டுக் கூறுகிறேன். மேலும், ஹசன் அல்பஸரி (ரஹ்) அவர்கள், "இருபது ஆண்டுகளுக்கு முன்னால் அனஸ் (ரலி) அவர்கள் நினைவாற்றலும் உடல் பலமும் மிக்கவராக இருந்தார்கள். (அப்போது இந்த ஹதீஸை அறிவித்தார்கள்)" என்றும் கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
327. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு நாள் (விருந்தொன்றில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு இறைச்சி பரிமாறப் பட்டது. அப்போது (சமைக்கப்பட்ட) முன்கால் சப்பை ஒன்று அவர்களிடம் வழங்கப்பட்டது. அது அவர்களுக்கு மிகவும் பிடித்தமானதாக இருந்தது. (அதை) அவர்கள் தம் பற்களால் கடித்து, அதிலிருந்து சிறிது உண்டார்கள்.
பிறகு (பின்வருமாறு) கூறினார்கள்: நான் மறுமை நாளில் மனிதர்களின் தலைவன் ஆவேன். அது எப்படி என்று உங்களுக்குத் தெரியுமா? (அந்நாளில்) அல்லாஹ் (மனிதர்களில்) முந்தியவர்களையும் பிந்தியவர்களையும் ஒரே சமவெளியில் ஒன்றுதிரட்டுவான். அழைப்பவர் எவரும் அந்த மக்களை அழைத்தால் அதை அவர்கள் செவியேற்க முடியும். (பார்ப்போரின்) பார்வை அவர்களை ஊடுருவிச் செல்லும். சூரியன் (அவர்களுக்கு) அருகில் வரும். அப்போது மனிதர்களிடம் அவர்களால் தாங்கிக் கொள்ளவோ சகித்துக்கொள்ளவோ இயலாத துன்பங்களும் துயரங்களும் வந்துசேரும். அப்போது மனிதர்களில் சிலர் (சிலரை நோக்கி) "நீங்கள் (சிக்கிக்கொண்டு) இருக்கும் (அவல) நிலையைக் கவனிக்கவில்லையா? உங்களுக்கு எத்தகைய (ஆபத்தான) நிலை நேர்ந்திருக்கிறது என்பதை நீங்கள் பார்க்க வில்லையா? உங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்து பேசுபவரை(த் தேடி)ப் பார்க்கமாட்டீர்களா?" என்று கேட்பார்கள். அப்போது மனிதர்களில் சிலர் வேறு சிலரிடம், "(ஆதி மனிதர்) ஆதம் (அலை) அவர்களிடம் செல்லுங்கள் (அவர் உங்களுக்காகப் பரிந்து பேசுவார்)" என்பர்.
ஆகவே, மனிதர்கள், ஆதம் (அலை) அவர்களிடம் சென்று, "ஆதமே, நீங்கள் மனித இனத்தின் தந்தையாவீர்கள்; உங்களை அல்லாஹ் தனது கரத்தால் படைத்தான். தன்(னால் உருவாக்கப்பட்ட) உயிரை உங்களுக்குள் அவன் ஊதினான். வானவர்களை உங்களுக்குச் சிரம்பணியும்படி உத்தரவிட்டான். அவ்வாறே அவர்களும் உங்களுக்குச் சிரம் பணிந்தார்கள். நீங்கள் உங்கள் இறைவனிடம் எங்களுக்காகப் பரிந்து பேசுங்கள். நாங்கள் (சிக்கிக்கொண்டு) இருக்கும் (அவல) நிலையையும், எங்களுக்கு நேர்ந்திருக்கும் (துன்ப) நிலையையும் நீங்கள் கவனிக்கவில்லையா?" என்று கேட்பார்கள்.
அதற்கு ஆதம் (அலை) அவர்கள் "(நான் செய்த தவறின் காரணத்தால்) என் இறைவன் என்மீது இன்று (கடுங்)கோபம் கொண்டிருக்கிறான். இதற்கு முன் இதைப் போன்று அவன் கோபம் கொண்டதில்லை. இதற்குப் பிறகும் அவன் இதைப் போன்று ஒருபோதும் கோபம் கொள்ளப்போவதுமில்லை. (நான் நெருங்கக்கூடாத ஒரு) மரத்திலிருந்து (உண்ண வேண்டாமென்று) என்னை அவன் தடுத்தான். நான் அவனுக்கு மாறு செய்தேன். என்னையே நான் காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது; என்னையே நான் காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது" என்று கூறிவிட்டு, "நீங்கள் வேறெவரிடமாவது செல்லுங்கள். நீங்கள் (இறைத்தூதர்) நூஹிடம் செல்லுங்கள்" என்று சொல்வார்கள்.
உடனே மக்கள் நூஹ் (அலை) அவர்களிடம் சென்று "நூஹே! நீங்கள் பூமி(யில் வசிப்பவர்களு)க்கு (அனுப்பப்பெற்ற முக்கியமான) முதலாவது இறைத்தூதர் ஆவீர்கள். உங்களை அல்லாஹ் "நன்றியுள்ள அடியார்" என்று குறிப்பிட்டுள்ளான். எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்து பேசுங்கள். நாங்கள் (சிக்கிக்கொண்டு) இருக்கும் (அவல) நிலையையும், எங்களுக்கு நேர்ந்திருக்கும் (துன்ப) நிலையையும் நீங்கள் கவனிக்கவில்லையா?" என்று கேட்பார்கள். அதற்கு நூஹ் (அலை) அவர்கள் "என் இறைவன் இன்று (என்மீது) கடுங்கோபம் கொண்டுள்ளான். இதற்கு முன் அவன் இதைப் போன்று கோபம் கொண்டதில்லை. இதற்குப் பிறகும் அவன் இதைப் போன்று ஒருபோதும் கோபம் கொள்ளப் போவதுமில்லை. (எல்லா நபிமார்களுக்கும் இருப்பதைப் போன்று விசேஷமான) பிரார்த்தனை ஒன்று எனக்கு (வழங்கப்பட்டு) இருந்தது. அதை நான் என் சமுதாயத்தாருக்கு எதிராகப் பயன்படுத்தி விட்டேன். நான் என்னையே காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது; நான் என்னையே காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது!" என்று கூறிவிட்டு, "நீங்கள் (இறைவனின் உற்ற நண்பர்) இப்ராஹீம் (அலை) அவர்களிடம் செல்லுங்கள்" என்பார்கள்.
அவ்வாறே மக்களும் இப்ராஹீம் (அலை) அவர்களிடம் சென்று, "நீங்கள் இறைத்தூதரும் பூமியில் வசித்தவர்களில் இறைவனின் உற்ற நண்பரும் ஆவீர்கள். எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்துரையுங்கள். நாங்கள் (சிக்கிக்கொண்டு) இருக்கும் (அவல) நிலையையும், எங்களுக்கு நேர்ந்திருக்கும் (துன்ப) நிலையையும் நீங்கள் கவனிக்கவில்லையா?" என்று கேட்பார்கள். அதற்கு இப்ராஹீம் (அலை) அவர்கள் "என் இறைவன் இன்று (என்மீது) கடுங்கோபம் கொண்டுள்ளான். இதற்கு முன்பும் இதைப் போன்று அவன் கோபம் கொண்டதில்லை. இதற்குப் பிறகும் இதைப் போன்று அவன் ஒருபோதும் கோபம் கொள்ளப்போவதுமில்லை" என்று கூறிவிட்டுத் தாம் சொன்ன (மூன்று) பொய்களை நினைவு கூருவார்கள். பிறகு "நான் என்னையே காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது; நான் என்னையே காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது. (ஆகவே,) வேறெவரிடமாவது நீங்கள் செல்லுங்கள். (இறைத் தூதர்) மூசாவிடம் செல்லுங்கள்" என்று கூறிவிடுவார்கள்.
உடனே மக்கள் மூசா (அலை) அவர்களிடம் சென்று, "மூசாவே! நீங்கள் அல்லாஹ்வின் தூதர் ஆவீர்கள். தன்னுடைய தூதுவத்தை வழங்கியும் உங்களிடம் உரையாடியும் மக்கள் அனைவரையும் விட உங்களை அல்லாஹ் மேன்மைப்படுத்தியுள்ளான். (ஆகவே,) எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்து பேசுங்கள். நாங்கள் (சிக்கிக்கொண்டு) இருக்கும் (அவல) நிலையையும், எங்களுக்கு நேர்ந்திருக்கும் (துன்ப) நிலையையும் நீங்கள் கவனிக்க வில்லையா?" என்று கூறுவார்கள். அதற்கு மூசா (அலை) அவர்கள் "இன்று என் இறைவன் (என்மீது) கடுங்கோபம் கொண்டுள்ளான். இதற்கு முன்பும் இதைப் போன்று அவன் கோபம் கொண்டதில்லை. இதற்குப் பின்பும் இதைப் போன்று அவன் ஒருபோதும் கோபம் கொள்ளப்போவதுமில்லை. கொலை செய்யுமாறு எனக்கு ஆணையிடப்படாமலேயே நான் ஒரு மனித உயிரைக் கொலை செய்துவிட்டிருக்கிறேன். நான் என்னையே காப்பாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது; நான் என்னையே காப்பாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது. (ஆகவே,) நீங்கள் (இறைத்தூதர்) ஈசா (அலை) அவர்களிடம் செல்லுங்கள்" என்று கூறுவார்கள்.
உடனே மக்கள் ஈசா (அலை) அவர்களிடம் சென்று, "ஈசாவே! நீங்கள் அல்லாஹ்வின் தூதர் ஆவீர்கள். நீங்கள் (குழந்தையாய்) தொட்டிலில் இருந்தபோதே மக்களிடம் பேசினீர்கள். மர்யமிடம் இறைவனிட்ட அவனது வார்த்தையும் அவன் (ஊதிய) உயிரும் ஆவீர்கள். ஆகவே, எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்து பேசுங்கள். நாங்கள் (சிக்கிக்கொண்டு) இருக்கும் (அவல) நிலையையும், எங்களுக்கு நேர்ந்துள்ள (துன்ப) நிலையையும் நீங்கள் கவனிக்கவில்லையா?" என்று கேட்பார்கள். அதற்கு ஈசா (அலை) அவர்கள், "என் இறைவன் இன்று (என்மீது) கடுங்கோபம் கொண்டுள்ளான். இதற்கு முன்பும் இதைப் போன்று அவன் கோபம் கொண்டதில்லை. இதற்குப் பின்பும் இதைப் போன்று அவன் ஒருபோதும் கோபம் கொள்ளப்போவதுமில்லை- (தாம் புரிந்துவிட்டதாக) எந்தப் பாவத்தையும் அவர்கள் குறிப்பிடாமல்- நான் என்னையே காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது; நான் என்னையே காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது. நீங்கள் வேறெவரிடமாவது செல்லுங்கள்; நீங்கள் (இறுதித்தூதர்) முஹம்மத் (ஸல்) அவர்களிடம் செல்லுங்கள்" என்று கூறுவார்கள்.
அப்போது மக்கள் என்னிடம் வந்து, "முஹம்மதே! நீங்கள் அல்லாஹ்வின் தூதர்; இறைத் தூதர்களில் இறுதியானவர். உங்களது முன் பின் பாவங்களை இறைவன் மன்னித்து விட்டான். எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்து பேசுங்கள். நாங்கள் (சிக்கிக்கொண்டு) இருக்கும் (அவல) நிலையையும், எங்களுக்கு நேர்ந்துள்ள (துன்ப) நிலையையும் நீங்கள் கவனிக்கவில்லையா?" என்று கூறுவர்.
அப்போது நான் புறப்பட்டு இறைவனின் அரியாசனத்திற்குக் கீழே சென்று என் இறைவனுக்கு(ப் பணிந்து) சஜ்தாவில் விழுவேன். பிறகு இறைவன் எனக்கு முன் வேறெவருக்கும் (உள்ளத்தில்) உதிக்கச் செய்திராத இறைப் புகழ்மாலைகளையும் அழகிய தோத்திரங்களையும் எனக்கு உதிக்கச் செய்வான். பிறகு "முஹம்மதே! உங்கள் தலையை உயர்த்துங்கள்! கேளுங்கள்; அது உங்களுக்குத் தரப்படும். பரிந்துரையுங்கள்; உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்" என்று சொல்லப்படும். அப்போது நான் என் தலையை உயர்த்தி, "இறைவா! என் சமுதாயம்; என் சமுதாயம்" என்பேன். அதற்கு "முஹம்மதே! சொர்க்கவாசல்களில் வலப் பக்க வாசல் வழியாக எந்தவிதக் கேள்வி கணக்கும் இல்லாமல் உங்கள் சமுதாயத்தார் சிலரை நுழையச் செய்யுங்கள்; அவர்கள் மற்ற வாசல்களிலும் மக்களுடன் இணைந்து நுழைந்து கொள்ளலாம்" என்று கூறப்படும்.
முஹம்மதின் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! சொர்க்கவாசலின் இரு பக்கங்களுக்கிடையேயான தூரம் "மக்காவிற்கும் (பஹ்ரைனிலுள்ள) ஹஜர் எனும் ஊருக்கும்" அல்லது "மக்காவுக்கும் (சிரியாவிலுள்ள) புஸ்ரா எனும் ஊருக்கும்" இடையிலுள்ள தூரமாகும்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
328. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு முன்னால் (ஒரு விருந்தில்) தக்கடி ("ஸரீத்") எனும் உணவும் (சமைக்கப்பட்ட) இறைச்சியும் இருந்த ஒரு தட்டு வைக்கப்பட்டது. அப்போது அதிலிருந்து முன்கால் சப்பை ஒன்றை எடுத்துக் கடித்து சிறிது உண்டார்கள். ஆட்டிலேயே அதுதான் அவர்களுக்குப் பிடித்த பகுதியாகும். பிறகு, "நான் மறுமை நாளில் மனிதர்களின் தலைவன் ஆவேன்" என்று கூறினார்கள்.
பிறகு இன்னொரு முறை கடித்துவிட்டு, "நான் மறுமை நாளில் மக்களின் தலைவன் ஆவேன்" என்று (மீண்டும்) கூறினார்கள். தம் தோழர்கள் அது குறித்து (ஏன்) எவ்வாறு என்று வினவாதததைக் கண்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அது எவ்வாறு என்று நீங்கள் வினவமாட்டீர்களா?" என்று கேட்டார்கள். உடனே தோழர்கள், "அது எவ்வாறு, அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(மறுமை நாளில்) மக்கள் அகிலத்தின் அதிபதிக்கு முன்னால் நின்றுகொண்டிருப்பார்கள்..." என்று தொடங்கி, மேற்கண்ட ஹதீஸிலுள்ளதைப் போன்றே கூறினார்கள்.
இப்ராஹீம் (அலை) அவர்கள் தொடர்பாக இதில் பின்வரும் தகவல்கள் அதிகப்படியாக இடம் பெற்றுள்ளன:
இப்ராஹீம் (அலை) அவர்கள் (மக்களுக்காகத் தம்மால் பரிந்து பேசமுடியாது என்று கூறிவிட்டு), தாம் (உலகில்) நட்சத்திரத்தைப் பார்த்து "இதுதான் என் இறைவன்" என்றும், அம்மக்களின் தெய்வச் சிலைகளை (உடைத்தது) குறித்து, "இவற்றில் பெரியதுதான் இவ்வாறு செய்தது" என்றும், (நோயில்லாமலேயே) "நான் நோயுற்றிருக்கிறேன்" என்றும் (மூன்று பொய்களைச்) சொன்னதை நினைவு கூர்ந்தார்கள்.
மேலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாகப் பின்வரும் தகவலும் அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது:
முஹம்மதின் உயிர் யார் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! சொர்க்க வாயிலின் இரு பக்கத் தூண்களுக்கிடையேயான தூரம் "மக்காவிற்கும் (பஹ்ரைனிலுள்ள) ஹஜர் எனும் ஊருக்கும்" அல்லது "ஹஜர் எனும் ஊருக்கும் மக்காவிற்கும்" இடையிலுள்ள தூரமாகும். "இதில் எதை (முந்தி எதைப் பிந்தி)க் கூறினார்கள் என்று தெரியவில்லை" என்று அறிவிப்பாளர் கூறுகிறார்.
அத்தியாயம் : 1
329. அபூஹுரைரா (ரலி) மற்றும் ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) ஆகியோர் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் (மறுமை நாளில்) மனிதர்களை ஒன்றுகூட்டுவான். அங்கு இறை நம்பிக்கையாளர்களும் நின்றுகொண்டிருப்பார்கள். அவர்களுக்கு அருகில் சொர்க்கம் கொண்டு வரப்படும். உடனே அவர்கள் ஆதம் (அலை) அவர்களிடம் சென்று, "எங்கள் தந்தையே! எங்களுக்காகச் சொர்க்கத்தின் வாசலைத் திறக்கும்படி கூறுங்கள்" என்பார்கள். அதற்கு ஆதம் (அலை) அவர்கள் "உங்கள் தந்தை ஆதம் செய்த தவறுதானே உங்களைச் சொர்க்கத்திலிருந்தே வெளியேற்றியது! அ(வ்வாறு சொர்க்கத்தைத் திறக்குமாறு கூறுவ)தற்கு நான் உரியவன் அல்லன். (ஆகவே,) நீங்கள் என் புதல்வரும் அல்லாஹ்வின் உற்ற நண்பருமான இப்ராஹீம் அவர்களிடம் செல்லுங்கள்" என்று கூறுவார்கள்.
(அவ்வாறே மக்களும் செல்ல) இப்ராஹீம் (அலை) அவர்கள், "நான் அதற்கு உரியவன் அல்லன். நான் உற்ற நண்பனாக இருந்ததெல்லாம் (வானவர் ஜிப்ரீல் தூதுவராக இருந்த) பின்னணியில்தான்; அந்தப் பின்னணியில்தான். (ஆகவே,) நீங்கள் அல்லாஹ் (நேரடியாக) உரையாடிய மூசா (அலை) அவர்களை நாடிச் செல்லுங்கள்" என்று கூறுவார்கள். அவ்வாறே மக்களும் மூசா (அலை) அவர்களிடம் செல்ல, அவர்களும் "நான் அதற்கு உரியவன் அல்லன். (ஆகவே,) நீங்கள் அல்லாஹ்வின் வார்த்தையும் அவனுடைய ஆவியுமான ஈசா (அலை) அவர்களிடம் செல்லுங்கள்" என்று கூறுவார்கள். (அவ்வாறே மக்களும் செல்ல) ஈசா (அலை) அவர்கள், "நான் அதற்கு உரியவன் அல்லன்" என்று கூறுவார்கள்.
பின்னர் மக்கள் முஹம்மத் (ஸல்) அவர்களிடம் செல்வார்கள். உடனே அவர்கள் எழு(ந்து பரிந்துரைக்க அனுமதி கோரு)வார்கள். அவர்களுக்கு அனுமதி வழங்கப்படும். அப்போது நம்பகத்தன்மையும் இரத்தபந்த உறவும் அனுப்பிவைக்கப்படும். அவையிரண்டும் (நரகத்தின் மீதுள்ள "ஸிராத்" எனும்) அப்பாலத்தின் இரு மருங்கிலும் வலம் இடமாக நின்றுகொள்ளும். அப்போது உங்களில் முதல் அணியினர் மின்னலைப் போன்று அதைக் கடந்துசெல்வார்கள்.
-இதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியபோது, நான் (அபூஹுரைரா-ரலி),
"என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும். மின்னலைப் போன்று கடந்துசெல்வது என்றால் என்ன?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "மின்னல் எவ்வாறு கண் இமைக்கும் நேரத்தில் சென்று விட்டுத் திரும்புகிறதென்று நீங்கள் பார்க்க வில்லையா?" என்று கேட்டார்கள்.-
பிறகு காற்று வீசுவதைப் போன்றும், பறவை பறப்பதைப் போன்றும், மனிதர்கள் விரைந்து ஓடுவதைப் போன்றும் இறைநம்பிக்கையாளர்களை அழைத்துக்கொண்டு அவர்களின் (நற்)செயல்கள் ஓடும். உங்கள் நபியோ அந்தப் பாலத்தின் மீது நின்றுகொண்டு, "இறைவா! காப்பாற்று! காப்பாற்று!" என்று கூறிக்கொண்டிருப்பார்கள். இறுதியில் அடியார்களின் செயல்கள் செயலிழந்துபோகும்; அப்போது ஒருவர் வருவார். அவரால் நடக்க முடியாமல் தவழ்ந்தபடியே (அதைக் கடந்து) செல்வார். அந்தப் பாலத்தின் இரு ஓரங்களிலும் கொக்கிகள் மாட்டப்பட்டிருக்கும். சிலரைப் பிடிக்கும்படி அவற்றுக்கு உத்தரவிடப்பட்டிருக்கும். சிலர் காயப்படுத்தப்பட்டுத் தப்பிவிடுவர்; சிலர் நரகநெருப்பில் தள்ளப்படுவர்.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்: அபூஹுரைராவின் உயிர் யார் கையில் உள்ளதோ அவன்மீது ஆணையாக! நரகத்தின் ஆழமானது, எழுபது ஆண்டுகள் தொலைதூரம் கொண்டதாகும்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
பாடம் : 85 "நானே சொர்க்கத்திற்காகப் பரிந்துரைக்கும் முதல் மனிதராவேன்; இறைத் தூதர்களிலேயே அதிகமான மக்களால் பின்பற்றப்படுபவன் ஆவேன்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது.
330. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நானே சொர்க்கத்திற்காகப் பரிந்துரைக்கும் முதல் மனிதராவேன்; இறைத்தூதர்களிலேயே அதிகமான மக்களால் பின்பற்றப்படுபவன் ஆவேன்.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
331. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நானே மறுமை நாளில் இறைத்தூதர்களிலேயே அதிகமான மக்களால் பின்பற்றப்படுபவன் ஆவேன்; நானே சொர்க்கத்தின் வாசலை முதன் முதலில் தட்டுபவன் ஆவேன்.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 1
332. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நானே சொர்க்கத்திற்காகப் பரிந்துரைக்கும் முதல் ஆள் ஆவேன். நான் (இறைவனின் தூதர் என) ஏற்றுக்கொள்ளப்பட்ட அளவுக்கு இறைத்தூதர்களில் வேறெவரும் ஏற்றுக் கொள்ளப் பட்டதில்லை. இறைத்தூதர்களில்(இப்படியும்) ஒருவர் இருந்தார்; அவருடைய சமுதாயத்தாரில் ஒரேயொரு மனிதர்தாம் அவரை ஏற்றுக்கொண்டார்.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 1
333. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் மறுமை நாளில் சொர்க்கத்தின் தலைவாயிலுக்குச் சென்று அதைத் திறக்கும்படி கோருவேன். அப்போது அதன் காவலர், "நீங்கள் யார்?" என்று கேட்பார். நான், "முஹம்மத்" என்பேன். அதற்கு அவர், "உங்களுக்காகவே நான் கட்டளையிடப்பட்டுள்ளேன்; உங்களுக்கு முன் வேறு யாருக்காகவும் (சொர்க்க வாயிலை) நான் திறக்கலாகாது (எனப் பணிக்கப் பட்டுள்ளேன்)" என்று கூறுவார்.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்தள்ளது.
அத்தியாயம் : 1
பாடம் : 86 நபி (ஸல்) அவர்கள் (தமக்கு அளிக்கப்பட்ட சிறப்புப்) பிரார்த்தனையி(ன் வாய்ப்பி)னை தம் சமுதாயத்தாருக்குப் பரிந்துரை செய்வதற்காகப் பத்திரப்படுத்தியது.
334. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒவ்வோர் இறைத்தூதருக்கும் அவர் (தம் சமுதாயத்தாருக்காகப்) பிரார்த்தித்துக்கொள்ள (அங்கீகரிக்கப்பட்ட) பிரார்த்தனை ஒன்று (வழங்கப்பட்டு) உள்ளது. நான் எனது பிரார்த்தனையை, மறுமை நாளில் என் சமுதாயத்தாருக்குப் பரிந்துரை செய்வதற்காகப் பத்திரப்படுத்தவே விரும்புகிறேன்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 1
335. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒவ்வோர் இறைத்தூதருக்கும் (தம் சமுதாயத்தார் தொடர்பாக) ஒரு (சிறப்புப்) பிரார்த்தனை உண்டு. அல்லாஹ் நாடினால் நான் எனது பிரார்த்தனையை, மறுமை நாளில் என் சமுதாயத்தாருக்குப் பரிந்துரை செய்வதற்காகப் பத்திரப்படுத்தவே விரும்புகிறேன்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்தள்ளது.
அத்தியாயம் : 1
336. மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
337. அம்ர் பின் அபீசுஃப்யான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கஅபுல் அஹ்பார் (ரஹ்) அவர்களிடம், "நபி (ஸல்) அவர்கள், "ஒவ்வோர் இறைத்தூதருக்கும் அவர் (தம் சமுதாயத்தாருக்காகப்) பிரார்த்தித்துக் கொள்ள பிரார்த்தனை ஒன்று உண்டு. நான் அல்லாஹ் நாடினால் எனது பிரார்த்தனையை, மறுமை நாளில் என் சமுதாயத்தாருக்குப் பரிந்துரை செய்வதற்காகப் பத்திரப்படுத்தவே விரும்புகிறேன் என்று கூறினார்கள்" என்றார்கள்.
அதற்கு கஅப் (ரஹ்) அவர்கள்,"நீங்கள் இதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றீர்களா?" என்று அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு அபூஹுரைரா (ரலி) அவர்கள், "ஆம்" என்று பதிலளித்தார்கள்.
அத்தியாயம் : 1
338. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒவ்வோர் இறைத்தூதருக்கும் (தம் சமுதாயத்தார் தொடர்பாக) ஒரு (சிறப்புப்) பிரார்த்தனை உண்டு; எல்லா இறைத்தூதர்களும் அந்தப் பிரார்த்தனையை அவசரப்பட்டு (இம்மையிலேயே) கேட்டுவிட்டனர். நான் எனது பிரார்த்தனையை, மறுமை நாளில் என் சமுதாயத்தாருக்குப் பரிந்துரை செய்வதற்காகப் பத்திரப்படுத்தி வைத்துள்ளேன். அல்லாஹ் நாடினால் என் சமுதாயத்தாரில் யார் அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்காமல் மரணிக்கிறாரோ அவருக்கு அது கிடைக்கும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
339. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒவ்வோர் இறைத்தூதருக்கும் அவர் பிரார்த்தித்துக்கொள்ள அங்கீகரிக்கப்பட்ட பிரார்த்தனை ஒன்று உண்டு. அது ஏற்றுக் கொள்ளப்பட்டு, வழங்கப்பட்டும்விட்டது. நான் எனது பிரார்த்தனையை, மறுமை நாளில் என் சமுதாயத்தாருக்குப் பரிந்துரை செய்யப் பத்திரப் படுத்தி வைத்துவிட்டேன்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 1
340. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒவ்வோர் இறைத்தூதருக்கும் தம் சமுதாயத்தார் தொடர்பாக ஒரு (சிறப்புப்) பிரார்த்தனை செய்துகொள்ள உரிமை உண்டு; அதை அவருக்கு ஏற்கப்பட்டும்விட்டது. நான் அல்லாஹ் நாடினால் எனது பிரார்த்தனையை, மறுமை நாளில் என் சமுதாயத்தாருக்காகப் பரிந்துரை செய்யத் தள்ளிவைக்க விரும்புகிறேன்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 1
341. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒவ்வோர் இறைத்தூதருக்கும் தம் சமுதாயத்தார் தொடர்பாக ஒரு (சிறப்புப்) பிரார்த்தனை செய்ய உரிமை உண்டு. நான் எனது பிரார்த்தனையை, மறுமை நாளில் என் சமுதாயத்தாருக்காகப் பரிந்துரை செய்ய பத்திரப்படுத்தி வைத்துவிட்டேன்.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
342. மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
343. மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளளது.
அவற்றில், அறிவிப்பாளர் வகீஉ (ரஹ்) அவர்கள் "ஒவ்வோர் இறைத்தூதருக்கும் ஒரு (சிறப்புப்) பிரார்த்தனை வழங்கப்பட்டது" என்று குறிப்பிட்டார்கள்.
அத்தியாயம் : 1
344. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப் பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
இதை அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து கத்தாதா (ரஹ்) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
அத்தியாயம் : 1
345. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒவ்வோர் இறைத்தூதருக்கும் தம் சமுதாயத்தார் தொடர்பாக ஒரு (சிறப்புப்) பிரார்த்தனை செய்ய உரிமை உண்டு. நான் எனது பிரார்த்தனையை, மறுமை நாளில் என் சமுதாயத்தாருக்காகப் பரிந்துரை செய்யப் பத்திரப்படுத்திவிட்டேன்.
இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 1
பாடம் : 87 நபி (ஸல்) அவர்கள் தம் சமுதாயத்தாருக்காகப் பிரார்த்தித்ததும், அவர்கள் மீதுள்ள பரிவால் அழுததும்.
346. அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள், இப்ராஹீம் (அலை) அவர்கள் தொடர்பாக அல்லாஹ் குறிப்பிட்டுள்ள "இறைவா! நிச்சயமாக! இவை (சிலைகள்) மக்களில் அதிகம் பேரை வழிகெடுத்துவிட்டன;எனவே, எவர் என்னைப் பின்பற்றுகிறாரோ அவர் என்னைச் சேர்ந்தவராவார்; எவர் எனக்கு மாறு செய்கிறாரோ (அவரை) நீயே மன்னிப்பவனாகவும் கருணைபுரிபவனாகவும் இருக்கின்றாய்" என்ற (14:36ஆவது) வசனத்தையும், ஈசா (அலை) அவர்கள் கூறியதாகக் குறிப்பிட்டுள்ள "(இப்போது) நீ இவர்களுக்கு வேதனை அளித்தால் இவர்கள் நிச்சயமாக உன்னுடைய அடியார்களே! நீ இவர்களை மன்னித்தாலும் (அப்போதும்) நீயே யாவற்றையும் மிகைத்தவனும் நுண்ணறிவுடையவனுமாய் இருக்கின்றாய்" என்ற (5:118 ஆவது) வசனத்தையும் ஓதிக் காட்டினார்கள். அப்போது நபியவர்கள் தம்மிரு கைகளையும் உயர்த்தியவாறு "இறைவா! என் சமுதாயம்; என் சமுதாயம் (இவர்களைக் காப்பாற்றுவாயாக!)" என்று பிரார்த்தித்தார்கள்; அழுதார்கள். அப்போது வலிவும் மாண்புமிக்க அல்லாஹ் (வானவர் ஜிப்ரீலிடம்), "ஜிப்ரீலே! நீங்கள் முஹம்மதிடம் சென்று (உங்கள் இறைவனுக்கு எல்லாம் தெரியும்; என்றாலும்) "நீங்கள் ஏன் அழுகிறீர்கள்?" என்று கேளுங்கள்" என்றான்.
அவ்வாறே ஜிப்ரீல் (அலை) அவர்கள் சென்று, அது குறித்துக் கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், -அல்லாஹ்வுக்குத் தெரியும்; என்றாலும்- தாம் கூறியவற்றை (மேற்கண்டவாறு) தெரிவித்தார்கள். அதற்கு அல்லாஹ், ""ஜிப்ரீலே! முஹம்மதிடம் சென்று, நாம் உம் சமுதாயத்தார் தொடர்பாக உம்மை திருப்தியடையச் செய்வோம்; உம்மை நாம் கவலையடையச் செய்யமாட்டோம்" என்று கூறுக என்றான்.
அத்தியாயம் : 1
பாடம் : 88 இறைமறுப்பாளராக இறந்தவர் நரகத்திற்கே செல்வார். எந்தப் பரிந்துரையும் அவருக்குக் கிடைக்காது; இறை நெருக்கம் பெற்றவர்கள் யாருடைய உறவும் அவருக்குப் பயனளிக்காது.
347. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் (நபி (ஸல்) அவர்களிடம்), "அல்லாஹ்வின் தூதரே! (இஸ்லாத்திற்கு முன் இறந்துவிட்ட) என் தந்தை எங்கே இருக்கிறார்?" என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "(நரக) நெருப்பில்" என்று பதிலளித்தார்கள். அவர் திரும்பிச் சென்றபோது அவரை நபி (ஸல்) அவர்கள் அழைத்து, "என் தந்தையும் உன் தந்தையும் (நரக) நெருப்பில்தான் (இருக்கிறார்கள்)" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 1
பாடம் : 89 "(நபியே!) உங்களுடைய நெருங்கிய உறவினர்களுக்கு நீங்கள் எச்சரிக்கை செய்யுங்கள்" எனும் (26:214ஆவது) இறைவசனம்.
348. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
"(நபியே!) உங்களுடைய நெருங்கிய உறவினர்களுக்கு எச்சரிக்கை செய்யுங்கள்" எனும் இந்த (26:214ஆவது) இறைவசனம் அருளப்பெற்றபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறைஷியரை (ஓரிடத்திற்கு) அழைத்தார்கள்.
அவர்கள் அனைவரும் ஒன்றுகூடினர். அப்போது பொதுவாகவும் தனித்தனியாகவும் பெயர் குறிப்பிட்டு,"கஅப் பின் லுஅய்யின் மக்களே! உங்களை நரக நெருப்பிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள். முர்ரா பின் கஅபின் மக்களே! உங்களை நரக நெருப்பிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள். அப்து ஷம்சின் மக்களே! உங்களை நரக நெருப்பிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள். அப்து மனாஃபின் மக்களே! உங்களை நரக நெருப்பிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள். ஹாஷிமின் மக்களே! உங்களை நரக நெருப்பிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள். அப்துல் முத்தலிபின் மக்களே! உங்களை நரக நெருப்பிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள். (என் மகள்) ஃபாத்திமாவே! உன்னை நரக நெருப்பிலிருந்து காப்பாற்றிக் கொள்! ஏனென்றால், அல்லாஹ்விடமிருந்து வரும் (முடிவாகிவிட்ட சோதனை) எதிலிருந்தும் உங்களைக் காக்க என்னால் இயலாது. ஆயினும், உங்களுடன் எனக்கு இரத்த உறவு உண்டு. அதை நான் (காய்ந்துபோகவிடாமல்) பசுமையாக்குவேன் (உங்களுடைய உறவைப் பேணி நடந்துகொள்வேன்)" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
349. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
இருப்பினும், முந்தைய அறிவிப்பே நிறைவானதும் நிரப்பமானதும் ஆகும்.
அத்தியாயம் : 1
350. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
"(நபியே!) உங்களுடைய நெருங்கிய உறவினர்களுக்கு எச்சரிக்கை செய்யுங்கள்" எனும் (26:214ஆவது) இறைவசனம் அருளப்பெற்றபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "ஸஃபா" மலைக் குன்றின் மீதேறி, "முஹம்மதின் மகள் ஃபாத்திமாவே! அப்துல் முத்தலிபின் மகள் ஸஃபிய்யாவே! அப்துல் முத்தலிபின் மக்களே! அல்லாஹ்விடமிருந்து வரும் (முடிவாகிவிட்ட சோதனை) எதிலிருந்தும் உங்களை என்னால் காக்க இயலாது. (வேண்டுமானால்) என் செல்வத்திலிருந்து நீங்கள் விரும்பியதை என்னிடம் கேளுங்கள் (தருகிறேன்)" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
351. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு "(நபியே!) உங்களுடைய நெருங்கிய உறவினர்களுக்கு எச்சரிக்கை செய்யுங்கள்" எனும் (26:214ஆவது) இறைவசனம் அருளப்பெற்ற போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "குறைஷிக் கூட்டத்தாரே! உங்கள் உயிர்களை (இஸ்லாத்தை ஏற்பதன் மூலம்) விலைக்கு வாங்கிக் (காப்பாற்றிக்)கொள்ளுங்கள். உங்களை அல்லாஹ்விடமிருந்து ஒரு சிறிதும் என்னால் காப்பாற்ற முடியாது. அப்துல் முத்தலிபின் மக்களே! உங்களை அல்லாஹ்விடமிருந்து ஒரு சிறிதும் என்னால் காப்பாற்ற இயலாது. அப்பாஸ் பின் அப்தில் முத்தலிபே! உங்களை அல்லாஹ்விடமிருந்து ஒரு சிறிதும் என்னால் காப்பாற்ற இயலாது. அல்லாஹ்வின் தூதருடைய அத்தை ஸஃபிய்யாவே! உங்களை அல்லாஹ்விடமிருந்து ஒரு சிறிதும் என்னால் காப்பாற்ற இயலாது. அல்லாஹ்வின் தூதருடைய புதல்வி ஃபாத்திமாவே! என் செல்வத்திலிருந்து நீ விரும்பியதைக் கேள்! (தருகிறேன்.) ஆனால், அல்லாஹ்விடமிருந்து, உன்னை என்னால் ஒரு சிறிதும் காப்பாற்ற முடியாது" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
352. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
353. கபீஸா பின் அல்முகாரிக் (ரலி), ஸுஹைர் பின் அம்ர் (ரலி) ஆகியோர் கூறியதாவது:
"(நபியே!) உங்களுடைய நெருங்கிய உறவினர்களுக்கு எச்சரிக்கை செய்யுங்கள்" எனும் (26:214 ஆவது) இறைவசனம் அருளப்பெற்றபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஒரு மலையின் பாறைக் குவியலை நோக்கிச் சென்று அதன் உச்சியிலிருந்த கல்மீது ஏறி, கூவி அழைத்து, "அந்தோ! அப்து மனாஃபின் மக்களே! நான் (உங்களை) எச்சரிப்பவன் ஆவேன். எனது நிலையும் உங்களது நிலையும் ஒரு மனிதனின் நிலையை ஒத்திருக்கிறது. அவன் எதிரிகளைக் கண்டான். தன் குடும்பத்தாரைப் பாதுகாப்பதற்காக உடனே அவன் (விரைந்து) சென்றான். அப்போது (எங்கே தான் செல்வதற்கு முன் எதிரிகள்) முந்திக்கொண்டு (தம் குடும்பத்தாரைத் தாக்கி)விடுவார்களோ என்று அவன் அஞ்சினான். எனவே, அவன் (அங்கிருந்தபடியே), "யா ஸபாஹா! (உதவி, உதவி! அதிகாலை ஆபத்து)" என்று சப்தமிடத் தொடங்கினான்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
354. மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
355. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
"(நபியே!) உங்களுடைய நெருங்கிய உறவினர்களுக்கு எச்சரிக்கை செய்யுங்கள் (அவர்களில் நல்லெண்ணம் படைத்த உங்கள் கூட்டத்தாரையும் எச்சரிக்கை செய்யுங்கள்)" எனும் (26:214ஆவது) இறைவசனம் அருளப் பெற்றபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புறப்பட்டுச்சென்று "ஸஃபா" மலைக்குன்றின் மீதேறி உரத்த குரலில் "யா ஸபாஹா!" (உதவி! உதவி! அதிகாலை ஆபத்து) என்று உரத்த குரலில் கூறினார்கள். அப்போது (குறைஷி) மக்கள், "சப்தமிடும் இந்த மனிதர் யார்?" என்று கேட்டார்கள். அதற்கு "முஹம்மத்" என்று (சிலர்) பதிலளித்தனர். உடனே முஹம்மத் (ஸல்) அவர்களை நோக்கி மக்கள் திரண்டனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இன்னாரின் மக்களே, இன்னாரின் மக்களே, இன்னாரின் மக்களே! அப்து மனாஃபின் மக்களே! அப்துல் முத்தலிபின் மக்களே!" என்று அழைத்தார்கள். அவர்கள் அனைவரும் ஒன்றுகூடினர். அப்போது, "இந்த மலை அடிவாரத்திலிருந்து (உங்களைத் தாக்குவதற்காக எதிரிகளின்) குதிரைப் படையொன்று புறப்பட்டுவருகிறது என்று நான் உங்களிடம் தெரிவித்தால், என்னை நீங்கள் நம்பியிருப்பீர்களா?" என்று கேட்டார்கள். மக்கள், "உம்மிடமிருந்து எந்தப் பொய்யையும் நாங்கள் (இதுவரை) அனுபவித்ததில்லை. (அவ்வாறிருக்க, இதை நாங்கள் நம்பாமல் இருப்போமா?)" என்று சொன்னார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அப்படியென்றால், (என் மார்க்கத்தை நீங்கள் ஏற்காவிட்டால் இறைவனின்) கடும் வேதனையொன்று எதிர்நோக்கியுள்ளது என்று உங்களை எச்சரிக்கை செய்கின்றேன்" என்றார்கள். (அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பார்த்து குறைஷித் தலைவர்களில் ஒருவனான) அபூலஹப், "உமக்கு அழிவுண்டாகட்டும்! இதற்காகத்தான் எங்களை ஒன்றுகூட்டினாயா?" என்று கேட்டான். பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (புறப்பட) எழுந்தார்கள். அப்போது "அழியட்டும் அபூலஹபின் இரு கரங்கள்; அவனே அழியட்டும்" எனும் (111ஆவது) அத்தியாயம் அருளப்பெற்றது.
இந்த (111:1ஆவது) வசனத்தை (அதன் இறுதியில் "கத்" (ளுóகுú) எனும் இடைச் சொல்லை இணைத்து) "வ கத் தப்ப" (அவன் அழிந்தேவிட்டான்) என்றே அப்போது (அறிவிப்பாளர்) அஃமஷ் (ரஹ்) அவர்கள் ஓதினார்கள்.
அத்தியாயம் : 1
356. மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "ஸஃபா" மலைக்குன்றின் மீது ஏறி, "யா ஸபாஹா!" (உதவி! உதவி! அதிகாலை ஆபத்து!) என்று கூறினார்கள்" என்று ஹதீஸ் ஆரம்பிக்கிறது.
"(நபியே!) உங்களுடைய நெருங்கிய உறவினர்களுக்கு எச்சரிக்கை செய்யுங்கள்" எனும் (26:214ஆவது) வசனம் அருளப்பெற்றது தொடர்பாக அவற்றில் கூறப்படவில்லை.
அத்தியாயம் : 1
பாடம் : 90 நபி (ஸல்) அவர்கள் (தம் பெரிய தந்தை) அபூதாலிப் அவர்களுக்காகப் பரிந்துரை செய்ததும், அதை முன்னிட்டு அவர்களுக்கு (நரக வேதனை) குறைக்கப்பட்டதும்.
357. அப்பாஸ் பின் அப்தில் முத்தலிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான், "அல்லாஹ்வின் தூதரே! அபூதாலிப் அவர்களுக்கு ஏதேனும் (பிரதி) உபகாரம் செய்தீர்களா? ஏனெனில், தங்களை அவர் பாதுகாப்பவராகவும் தங்களுக்காக (எதிரிகள்மீது) கோபப்படுபவராகவும் இருந்தாரே!" என்று கேட்டேன்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஆம்; அவர் இப்போது (கணுக்கால்வரை தீண்டும்) சிறிதளவு நரக நெருப்பிலேயே உள்ளார். நான் இல்லையானால் அவர் நரகின் அடித்தளத்திற்குச் சென்றிருப்பார்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
358. அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான், "அல்லாஹ்வின் தூதரே! அபூதாலிப் தங்களைப் பாதுகாப்பவராகவும், தங்களுக்கு உதவி
செய்பவராகவும் இருந்தாரே! அது அவருக்குப் பயனளித்ததா?" என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஆம்; அவரை நான் நரகத்தின் பிரதான பகுதியில் கண்டேன். உடனே அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தி (கணுக்கால்வரை தீண்டும்) சிறிதளவு நெருப்பிற்குக் கொண்டுவந்தேன்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 1
359. மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
360. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களிடம் அவர்களுடைய பெரிய தந்தை அபூதாலிப் அவர்களைப் பற்றிக் கூறப்பட்டது. அப்போது அவர்கள், "மறுமை நாளில் அவருக்கு என் பரிந்துரை பயனளிக்கக் கூடும்; (அதனால்) நரக நெருப்பு அவரது (முழு உடலையும் தீண்டாமல்) கணுக்கால்கள்வரை மட்டுமே தீண்டும்படி ஆக்கப்படலாம். (ஆனால்,) அதனால் அவருடைய மூளை (தகித்துக்) கொதிக்கும்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 1
பாடம் : 91 நரகவாசிகளிலேயே மிகவும் குறைவான வேதனை அனுபவிக்கும் மனிதர்.
361. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நரகவாசிகளிலேயே மிகவும் குறைவான வேதனை அனுபவிப்பவர், நெருப்பாலான இரு காலணிகளை அணி(விக்கப்படு)வார். அந்தக் காலணிகளின் வெப்பத்தால் அவரது மூளை (தகித்துக்) கொதிக்கும்.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 1
362. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நரகவாசிகளிலேயே மிகவும் குறைவான வேதனை அனுபவிப்பவர் அபூதாலிப் ஆவார். அவர் (நெருப்பாலான) இரு காலணிகளை அணிந்துகொண்டிருப்பார். அதனால் அவரது மூளை (தகித்துக்) கொதிக்கும்.
இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 1
363. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மறுமை நாளில் நரகவாசிகளிலேயே மிகவும் குறைவான வேதனை அனுபவிப்பவர் ஒரு மனிதராவார். அவருடைய உள்ளங்கால்களின் நடுவில் இரண்டு நெருப்புக் கங்குகள் வைக்கப் படும். அவற்றால் அவரது மூளை கொதிக்கும்.
இதை நுஅமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் உரையாற்றிக்கொண்டிருக்கும்போது அறிவித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
364. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நரகவாசிகளிலேயே மிகவும் குறைவான வேதனை அனுபவிக்கும் நபர் ஒரு மனிதராவார். அவருக்கு நெருப்பாலான இரு காலணிகளும் வார்களும் இருக்கும். (அடுப்பில் வைக்கப் பட்டுள்ள) செம்புப் பாத்திரம் கொதிப்பதைப் போன்று அவற்றால் அவரது மூளை கொதிக்கும். நரகவாசிகளிலேயே அவர் தாம் மிகவும் குறைவான வேதனை அனுபவிப்பவராய் இருக்க, அவரோ "தம்மைவிட வேறெவரும் மிகக் கடுமையாக வேதனை செய்யப்படவில்லை" என எண்ணுவார் (அந்த அளவுக்கு வேதனை கடுமையாக இருக்கும்).
இதை நுஅமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 1
பாடம் : 92 இறைமறுப்பாளராக மரணித்த ஒருவருக்கு அவர் புரிந்த (நற்)செயல் எதுவும் (மறுமையில்) பயனளிக்காது என்பதற்கான சான்று.
365. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான், "அல்லாஹ்வின் தூதரே! இப்னு ஜுத்ஆன் அறியாமைக் காலத்தில் உறவுகளைப் பேணி நடப்பவராகவும் ஏழைகளுக்கு உணவளிப்பவராகவும் இருந்தாரே! இவை அவருக்கு (மறுமை நாளில்) பயனளிக்குமா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "அவருக்குப் பயனளிக்கா; அவர் ஒரு நாள்கூட "இறைவா! விசாரணை நாளில் என் பாவத்தை மன்னித்தருள்வாயாக!" என்று கேட்டதேயில்லை" என்று பதிலளித்தார்கள்.
அத்தியாயம் : 1
பாடம் : 93 (கொள்கைச் சகோதரர்களான) இறை நம்பிக்கையாளர்களுடன் நட்பு கொள்வதும், (எதிரிகளான) மற்றவர்களின் நட்புறவைத் துண்டிப்பதும், அவர்களிடமிருந்து தம் பொறுப்பை விலக்கிக் கொள்வதும்.
366. அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
"இன்னாரின் தந்தையின் குடும்பத்தார் என் நேசர்கள் அல்லர்; என் நேசர்கள் யாரெனில், அல்லாஹ்வும் நல்ல இறைநம்பிக்கையாளர்களும்தாம்" என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒளிவுமறைவின்றி பகிரங்கமாகவே கூறுவதை நான் கேட்டேன்.
அத்தியாயம் : 1
பாடம் : 94 முஸ்லிம்களில் ஒரு பெருங்கூட்டம் எந்த விதமான விசாரணையும் வேதனையும் இல்லாமல் சொர்க்கத்தில் நுழைவார்கள் என்பதற்கான சான்று.
367. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், "என் சமுதாயத்தாரில் எழுபதாயிரம் பேர் எந்த விசாரணையுமின்றி சொர்க்கத்தில் நுழைவார்கள்" என்று கூறினார்கள்.
உடனே (உக்காஷா எனும்) ஒரு மனிதர் எழுந்து, "அல்லாஹ்வின் தூதரே! அவர்களில் ஒருவனாக என்னையும் ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்" என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் "அல்லாஹ்வே! இவரை அவர்களில் ஒருவராக ஆக்குவாயாக!" எனப் பிரார்த்தித்தார்கள். பிறகு மற்றொரு மனிதர் எழுந்து, "அல்லாஹ்வின் தூதரே! அவர்களில் ஒருவனாக என்னையும் ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்" என்றார். நபி (ஸல்) அவர்கள் "இந்த விஷயத்தில் உக்காஷா உம்மை முந்திவிட்டார்" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 1
368. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
369. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "என் சமுதாயத்தாரில் எழுபதாயிரம் பேர் கொண்ட ஒரு கூட்டம் பௌர்ணமி இரவில் சந்திரன் பிரகாசிப்பதைப் போன்று முகங்கள் பிரகாசித்த படி (விசாரணையின்றி சொர்க்கத்துக்குள்) நுழைவார்கள்" என்று கூறினார்கள்.
உடனே உக்காஷா பின் மிஹ்ஸன் அல் அசதீ (ரலி) அவர்கள் தம் மீதிருந்த கோடுபோட்ட சால்வையை உயர்த்தியவாறு எழுந்து, "அல்லாஹ்வின் தூதரே! அவர்களில் ஒருவனாக என்னையும் ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்" என்று சொன்னார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வே! இவரையும் அவர்களில் ஒருவராக ஆக்குவாயாக!" என்று பிரார்த்தித்தார்கள். பிறகு அன்சாரிகளில் ஒருவர் எழுந்து, "அல்லாஹ்வின் தூதரே! அவர்களில் ஒருவனாக என்னையும் ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்!" என்று சொன்னார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இந்த விஷயத்தில் உக்காஷா உம்மை முந்திவிட்டார்" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 1
370. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என் சமுதாயத்தாரில் எழுபதாயிரம் பேர் (விசாரணையின்றி) சொர்க்கத்தில் நுழைவார்கள். அவர்களில் ஒரேயொரு கூட்டத்தினர் சந்திரனைப் போன்று பிரகாசிப்பர்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 1
371. இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் "என் சமுதாயத்தாரில் எழுபதாயிரம் பேர் எந்த விசாரணையுமின்றி சொர்க்கத்தில் நுழைவார்கள்" என்று கூறினார்கள். மக்கள், "அவர்கள் யார், அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், "அவர்கள் (நோய்க்காக) சூடிட்டுக் கொள்ளமாட்டார்கள்; ஓதிப்பார்க்கமாட்டார்கள்; தங்கள் இறைவன்மீதே முழு நம்பிக்கை வைப்பார்கள்" என்று கூறினார்கள்.
உடனே உக்காஷா (ரலி) அவர்கள் எழுந்து, "அவர்களில் ஒருவனாக என்னையும் ஆக்கும் படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்!" என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள், "அவர்களில் நீரும் ஒருவர்தாம்" என்று சொன்னார்கள். உடனே இன்னொருவர் எழுந்து, "அவர்களில் ஒருவனாக என்னையும் ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள், நபியே!" என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், "இந்த விஷயத்தில் உக்காஷா உம்மை முந்திவிட்டார்" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 1
372. இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,
"என் சமுதாயத்தாரில் எழுபதாயிரம் பேர் விசாரணையின்றி சொர்க்கத்தில் நுழைவார்கள்" என்று கூறினார்கள். மக்கள், "அவர்கள் யார், அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவர்கள் எத்தகையவர்கள் எனில், ஓதிப்பார்க்கமாட்டார்கள்; பறவை சகுனம் பார்க்கமாட்டார்கள்; (நோய்க்காக) சூடிட்டுக் கொள்ளமாட்டார்கள்; தங்கள் இறைவன் மீதே முழு நம்பிக்கை வைப்பார்கள்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 1
373. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நிச்சயமாக என் சமுதாயத்தாரில் "எழுபதாயிரம் பேர்" அல்லது "ஏழு லட்சம் பேர்" ஒருவரையொருவர் பற்றிக்கொண்டு ஒரே சீராக (விசாரணையின்றி) சொர்க்கத்தில் நுழைவார்கள். அவர்களில் கடைசி நபர் நுழையாதவரை முதல் நபர் நுழையமாட்டார்; (அனைவரும் ஓரணியில் நுழைவர்). மேலும், அவர்களுடைய முகங்கள் பௌர்ணமி இரவில் (பிரகாசிக்கும்) முழு நிலவின் வடிவத்தில் இருக்கும்.
இதை சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
("எழுபதாயிரம் பேர்", "ஏழு இலட்சம் பேர்" ஆகிய) இவற்றில் எது என்று அறிவிப்பாளர் அபூஹாஸிம் (ரஹ்) அவர்களுக்குத் தெரியவில்லை.
அத்தியாயம் : 1
374. ஹுஸைன் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்களிடம் இருந்துகொண்டிருந்தேன். அப்போது அவர்கள், "இன்றிரவு நட்சத்திரம் விழுந்ததைக் கண்டவர் உங்களில் யார்?" என்று கேட்டார்கள். நான், "நான் (கண்டேன்)" என்று பதிலளித்தேன். பிறகு, "(நான் தொழுகையில் ஈடுபட்டிருந்ததால் அப்போது விழித்திருந்தேன் என எண்ணிவிடாதீர்கள். ஏனெனில், அப்போது நான் எந்தத் தொழுகையிலும் இருக்கவில்லை. மாறாக, என்னை விஷ ஜந்து தீண்டிவிட்டது
(அதனால் விழித்திருந்தபோதுதான் நட்சத்திரம் விழுந்ததைப் பார்த்தேன்)" என்று கூறினேன். "(விஷக்கடிக்காக) நீங்கள் என்ன செய்தீர்கள்" என்று சயீத் கேட்டார்கள். நான், "ஓதிப்பார்த்துக் கொண்டேன்" என்று பதிலளித்தேன். அதற்கு அவர்கள், "ஏன் அவ்வாறு செய்தீர்கள்?" என்று கேட்டார்கள். நான், "ஆமிர் அஷ்ஷஅபீ (ரஹ்) அவர்கள் எமக்கு அறிவித்த ஒரு நபிமொழிதான் (அதற்குக் காரணம்)" என்று கூறினேன். அவர்கள் "ஆமிர் அஷ்ஷஅபீ (ரஹ்) அவர்கள் உங்களுக்கு என்ன அறிவித்தார்கள்?" என்று கேட்க, நான், "புரைதா பின் ஹுஸைப் அல் அஸ்லமீ (ரலி) அவர்களிடமிருந்து "கண்ணேறு, அல்லது விஷக்கடி தவிர வேறெதற்காகவும் ஓதிப்பார்த்த(லி)ல் (சிறப்பு) கிடையாது என்று ஆமிர் அஷ்அஷபீ (ரஹ்) அவர்கள் எமக்கு அறிவித்தார்கள்" என்று பதிலளித்தேன். அதற்கு சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள், "யார் தாம் செவியுற்றபடி செயல்பட்டாரோ அவர் நன்மையே செய்தார். ஆயினும், இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து (பின்வருமாறு) எமக்கு அறிவித்தார்கள் என்றார்கள்:
(நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:)
(மிஹ்ராஜ் எனும் விண்ணுலகப் பயணத்தின்போது) எனக்குப் பல சமுதாயத்தார் எடுத்துக் காட்டப்பட்டனர். அப்போது ஓர் இறைத்தூதரை நான் கண்டேன். அவருடன் (அவருடைய சமுதாயத்தாரில் பத்துக்கும் குறைந்த) ஒரு சிறு குழுவினரே இருந்தனர். மற்றோர் இறைத்தூதருடன் ஓரிரு நபர்களே இருந்தனர். இன்னோர் இறைத்தூதருடன் ஒருவர்கூட இருக்கவில்லை. பின்னர் எனக்கு ஒரு பெருங்கூட்டம் காட்டப்பட்டது. அவர்கள் என் சமுதாயத்தார்தாம் என்று நான் எண்ணினேன். ஆனால், இது (இறைத்தூதர்) மூசாவும் அவருடைய சமுதாயமும்தான்; அடிவானத்தைப் பாருங்கள்" என்று என்னிடம் கூறப்பட்டது. அவ்வாறே நான் பார்த்தேன். அங்கு ஒரு பெரும் மக்கள் கூட்டம் இருந்தது. மேலும் "மற்றோர் அடிவானத்தைப் பாருங்கள்" என்றும் என்னிடம் கூறப்பட்டது. பார்த்தேன்; அங்கும் ஒரு பெரும் மக்கள் கூட்டம் இருந்தது. அப்போது "இதுதான் உங்கள் சமுதாயம். எந்த விசாரணையும் வேதனையுமின்றி சொர்க்கம் செல்லும் எழுபதாயிரம் பேரும் இவர்களில் அடங்குவர்" என்று எனக்குச் சொல்லப்பட்டது.
(எந்த விசாரணையும் வேதனையுமின்றி சொர்க்கம் செல்லும் அந்த எழுபதாயிரம் பேர் யார் என்பதை விளக்காமலேயே) நபி (ஸல்) அவர்கள் அங்கிருந்து சென்று தமது வீட்டுக்குள் நுழைந்து விட்டார்கள். எனவே, விசாரணையும் வேதனையுமின்றி சொர்க்கம் செல்வோர் யார் என்பது தொடர்பாக மக்கள் விவாதிக்கத் தொடங்கினார்கள். சிலர், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழமையைப் பெற்றவர்களே அவர்களாக இருக்கலாம்" என்று கூறினர்.
வேறு சிலர், "இஸ்லாத்தில் பிறந்து, இறைவனுக்கு இணைவைக்காமல் இருந்தவர்களே அவர்களாக இருக்கலாம்" என்றும், இன்னும் பலவற்றையும் கூறினார்கள். அப்போது அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து, "எது குறித்து நீங்கள் விவாதித்துக்கொண்டிருக்கிறீர்கள்?" என்று கேட்டார்கள். அப்போது, மக்கள் (நடந்த விவாதங்களைத்) தெரிவித்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், "(எந்த விசாரணையும் வேதனையுமின்றி சொர்க்கம் செல்லவுள்ள) அவர்கள் யாரெனில், அவர்கள் தாங்களும் ஓதிப்பார்க்கமாட்டார்கள்; ஓதிப்பார்க்குமாறு பிறரிடம் கோரவுமாட்டார்கள்; பறவைகளை வைத்து சகுனம் பார்க்கமாட்டார்கள்; தம் இறைவனையே முழுமையாகச் சார்ந்திருப்பார்கள்" என்று கூறினார்கள்.
அப்போது உக்காஷா பின் மிஹ்ஸன் (ரலி) அவர்கள் எழுந்து, "அவர்களில் ஒருவனாக என்னையும் ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்" என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அவர்களில் நீரும் ஒருவர்தாம்" என்று கூறினார்கள். பிறகு மற்றொருவர் எழுந்து, "அவர்களில் ஒருவனாக என்னையும் ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்" என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் "இந்த விஷயத்தில் உக்காஷா உம்மை முந்திவிட்டார்" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 1
375. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் வாயிலாக வரும் மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
"எனக்குப் பல சமுதாயத்தார் எடுத்துக் காட்டப்பட்டனர்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என இந்த அறிவிப்பு தொடங்குகிறது. அறிவிப்பாளர் ஹுஸைன் (ரஹ்) அவர்கள் ஆரம்பத்தில் குறிப்பிட்டுள்ள தகவல் இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 1
பாடம் : 95 சொர்க்கவாசிகளில் பாதிப்பேராக இந்த (இறுதிச்) சமுதாயத்தார் இருப்பர்.
376. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம், "சொர்க்கவாசிகளில் நான்கில் ஒரு பகுதியினராக இருக்க நீங்கள் விரும்புகின்றீர்களா?" என்று கேட்டார்கள். நாங்கள், "அல்லாஹ் மிகப் பெரியவன்" என்று (தக்பீர்) முழங்கினோம். பிறகு "சொர்க்கவாசிகளில் மூன்றில் ஒரு பகுதியினராக இருக்க நீங்கள் விரும்புகின்றீர்களா?" என்று கேட்டார்கள். அப்போதும் நாங்கள், "அல்லாஹ் மிகப் பெரியவன்" என்று (தக்பீர்) முழங்கினோம்.
பிறகு "சொர்க்கவாசிகளில் பாதிப்பேராக (என் சமுதாயத்தாரான) நீங்கள் இருக்க வேண்டுமென்றே நான் எதிர்பார்க்கிறேன். அ(தற்குரிய காரணம் என்ன என்ப)து பற்றி உங்களுக்கு நான் தெரிவிக்கிறேன்: இறைமறுப்பாளர்களுடன் ஒப்பிடுகையில் முஸ்லிம்கள் "கறுப்புக் காளைமாட்டி(ன் உடலி)லுள்ள வெள்ளை முடியைப் போன்றுதான்" அல்லது "வெள்ளைக் காளைமாட்டிலுள்ள கறுப்பு முடியைப் போன்றுதான்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 1
377. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் சுமார் நாற்பது பேர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஒரு (தோல்) கூடாரத்தில் இருந்துகொண்டிருந்தோம். அப்போது அவர்கள், "சொர்க்கவாசிகளில் நான்கில் ஒரு பகுதியினராக இருக்க நீங்கள் விரும்புகின்றீர்களா?" என்று கேட்டார்கள். நாங்கள் "ஆம்" என்று சொன்னோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "சொர்க்கவாசிகளில் மூன்றில் ஒரு பகுதியினராக இருக்க நீங்கள் விரும்புகின்றீர்களா?" என்று கேட்டார்கள். அதற்கும் நாங்கள் "ஆம்" என்றோம்.
பிறகு அவர்கள் "என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! சொர்க்கவாசிகளில் பாதிப்பேராக (என் சமுதாயத்தாரான) நீங்கள் இருக்க வேண்டுமென்றே நான் எதிர்பார்க்கிறேன். அதற்குக் காரணம், சொர்க்கத்தில் முஸ்லிமானவரைத் தவிர வேறெவரும் நுழைய முடியாது. இணைவைப்பாளர்களுடன் ஒப்பிடும்போது நீங்கள் "கறுப்புக் காளைமாட்டின் தோலில் உள்ள வெள்ளை முடியைப் போன்றுதான்" அல்லது "சிவப்புக் காளைமாட்டின் தோலில் உள்ள கறுப்பு முடியைப் போன்றுதான்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
378. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது முதுகை தோல் கூடாரமொன்றில் சாய்த்தபடி எங்களிடையே உரையாற்றினார்கள். அப்போது, "அறிந்துகொள்ளுங்கள்; சொர்க்கத்தில் முஸ்லிமானவரைத் தவிர வேறெவரும் நுழைய முடியாது. இறைவா! நான் (சொல்ல வேண்டிய செய்தியைச்) சொல்லிவிட்டேனா? இறைவா (இதற்கு) நீயே சாட்சி" என்று கூறிவிட்டு, "சொர்க்கவாசிகளில் நான்கில் ஒரு பகுதியினராக இருக்க நீங்கள் விரும்புகின்றீர்களா?" என்று கேட்டார்கள். நாங்கள், "ஆம்; அல்லாஹ்வின் தூதரே!" என்று சொன்னோம். அவர்கள், "சொர்க்கவாசிகளில் மூன்றில் ஒரு பகுதியினராக இருக்க நீங்கள் விரும்புகிறீர்களா?" என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், "ஆம்; அல்லாஹ்வின் தூதரே!" என்று சொன்னார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "சொர்க்கவாசிகளில் பாதிப்பேராக (என் சமுதாயத்தாரான) நீங்கள் இருக்க வேண்டும் என்றே நான் எதிர்பார்க்கிறேன். மற்ற சமுதாயங்களுடன் ஒப்பிடும்போது நீங்கள் "வெள்ளைக் காளைமாட்டிலுள்ள "கறுப்பு முடியைப் போன்றுதான்" அல்லது கறுப்புக் காளைமாட்டிலுள்ள வெள்ளை முடியைப் போன்றுதான்" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 1
பாடம் : 96 (மறுமை நாளில்) ஆதம் (அலை) அவர்களிடம், "ஒவ்வோர் ஆயிரம் பேரிலிருந்தும் நரகத்திற்குச் செல்லவிருக்கும் தொள்ளாயிரத்து தொண்ணூற்றொன்பது பேரை நீங்கள் தனியாகப் பிரித்திடுங்கள்" என்று அல்லாஹ் கூறுவான்.
379. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வலிவும் மாண்புமிக்க அல்லாஹ் (மறுமை நாளில் ஆதிமனிதரை நோக்கி), "ஆதமே!" என்பான். அதற்கு ஆதம் (அலை) அவர்கள், "(இறைவனின் அழைப்பை ஏற்று, இறைவா!) இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன். (கட்டளையிடு) நலம் அனைத்தும் உன் கரங்களில்தான்" என்று கூறுவார்கள். அப்போது இறைவன், "(உங்கள் வழித்தோன்றல்களில்) நரகத்திற்குச் செல்லவிருப்பவர்களை (மற்றவர்களிலிருந்து) தனியாகப் பிரித்திடுங்கள்" என்று சொல்வான். அதற்கு அவர்கள், "எத்தனை நரகவாசிகளை (அவ்வாறு பிரிக்க வேண்டும்)?" என்று கேட்பார்கள். அதற்கு இறைவன், "ஒவ்வோர் ஆயிரம் பேரிலிருந்தும் தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றொன்பது பேரை(த் தனியாகப் பிரித்திடுங்கள்)" என்று பதிலளிப்பான். அப்போது(ள்ள பயங்கரச் சூழ்நிலையில்) பாலகன்கூட நரைத்து (மூப்படைந்து)விடுகின்ற, கர்ப்பம் கொண்ட பெண் ஒவ்வொருவரும் கர்ப்பத்தைப் (பீதியின் காரணத்தால் அரைகுறையாகப்) பிரசவித்துவிடுகின்ற நேரம் இதுதான். மக்களை (அச்சத்தால்) போதையுற்றவர்களாக நீங்கள் காண்பீர்கள். ஆனால், அவர்கள் (உண்மையிலேயே மதுவால்) போதையுற்றிருக்கமாட்டார்கள். ஆனால் அல்லாஹ்வின் வேதனை கடுமையானதாகும்.
இவ்வாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியது, மக்களுக்கு மிகவும் சிரமமானதாக இருந்தது. எனவே அவர்கள், "(ஒவ்வோர் ஆயிரத்திலும் நரகத்திற்குச் செல்லாமல் எஞ்சியிருக்கும்) அந்த ஒரு நபர் எங்களில் யார்?" என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(பயப்படாதீர்கள்!) நற்செய்தி பெறுங்கள். யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தாரில் ஓராயிரம் பேர் என்றால், உங்களில் ஒருவர் (நரகத்திற்குச் செல்ல தனியாகப் பிரிக்கப்பட்டோரில்) இருப்பார்" என்று கூறிவிட்டுப் பின்னர், "என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! சொர்க்கவாசிகளில் நான்கில் ஒரு பகுதியினராக நீங்கள் இருக்க வேண்டுமென்று நான் பேராவல் கொள்கிறேன்" என்று கூறினார்கள். உடனே நாங்கள் (இந்த மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியைக் கேட்டு) அல்லாஹ்வைப் புகழ்ந்து, "அல்லாஹ் மிகப் பெரியவன்" (அல்லாஹு அக்பர்) என்று முழங்கினோம். பின்னர், "என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! சொர்க்கவாசிகளில் மூன்றில் ஒரு பகுதியினராக நீங்கள் இருக்க வேண்டுமென்று நான் ஆசைப்படுகிறேன்" என்று கூறினார்கள். அப்போதும் நாங்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்து, "அல்லாஹ் மிகப் பெரியவன்" (அல்லாஹு அக்பர்) என்று முழக்கமிட்டோம். பின்னர், "என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! சொர்க்கவாசிகளில் பாதிப்பேராக (என் சமுதாயத்தாரான) நீங்கள் இருக்க வேண்டுமென்று நான் பேராவல் கொள்கிறேன். மற்றச் சமுதாயங்களுடன் ஒப்பிடும்போது உங்கள் (எண்ணிக்கையின்) நிலை, "கறுப்புக் காளை மாட்டின் தோலில் உள்ள வெள்ளை முடியைப் போன்றுதான்" அல்லது "கழுதையின் முன்னங்காலிலுள்ள வெள்ளை சொட்டையைப் போன்றுதான்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 1
380. மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "அன்றைய தினம் (மற்ற) மனிதர்களுடன் ஒப்பிடும்போது நீங்கள் "கறுப்புக் காளை மாட்டிலுள்ள வெள்ளை முடியைப் போன்றுதான்" அல்லது "வெள்ளைக் காளைமாட்டிலுள்ள கறுப்பு முடியைப் போன்றுதான்" எனும் வாக்கியம் இடம்பெற்றுள்ளது. "கழுதையின் முன்னங்காலிலுள்ள வெள்ளை சொட்டையைப் போன்றுதான்" என்பது இடம்பெறவில்லை.