வாரிசுரிமையின் அவசியம்
வாழ்வின் எல்லாப் பிரச்னைகளுக்கும் வழிகாட்டும் இஸ்லாம், வாரிசுரிமைப் பற்றியும் மிகத் தெளிவானதொரு வழிமுறையைக் காட்டியுள்ளது. பல்வேறு வழிமுறைகளில் பொருளை அடைய முடிந்தாலும் அதை ஈட்டுவதற்கான சிறந்த வழி எது? அதை எந்தெந்த வழிகளில் செலவிட வேண்டும்? என்பன போன்ற வினாக்களுக்கு பொருளியல் நிபுணர்களே வியந்து பாராட்டும் வண்ணம் எக்காலத்திற்கும் பொருத்தமான தீர்வை இஸ்லாம் வழங்கியுள்ளது. அதுபோல பொருளாதாரம் ஓரிடத்தில் குவிந்து, சிலர் என்றும் பொருளாதார வசதி படைத்தோராகவும், சிலர் என்றுமே வறியவர்களாகவும் இருக்கும் நிலையை இஸ்லாம் அனுமதிக்கவில்லை.
மனிதன் கஷ்டப்பட்டு உழைத்துச் சம்பாதிப்பது தனக்கு மட்டுமின்றி, தனது பிற்கால வாழ்வு, தனது மரணத்திற்குப் பின்னர் தனது சந்ததிகள், உற்றார், உறவினர் போன்றவர்களுக்காகவும்தான். எனவே, அவன் அப்படி கடின உழைப்பின் மூலம் ஈட்டிய சொத்து, சுகங்கள் அவனது மரணத்திற்குப் பின்னர் உரியவர்களுக்குக் கிடைக்காமல் போய், ஒரு சிலரோ அல்லது உரிமையற்றவர்களோ அபகரித்து விடக்கூடாது என்ற விஷயத்தில் தனி கவனம் செலுத்தி, அதற்காக அச்சொத்தில் அவர்களுக்கு உரியது எந்த அளவு என்பதையும் இஸ்லாம் நிர்ணயித்துள்ளது. அளவு நிர்ணயிக்கப்படாதிருந்தால் பேராசையால் தனக்கே சொத்து முழுவதும் சேர வேண்டுமென்று வலியவர்கள் அதை அபகரித்து விடக்கூடும். எனவே, தகுதியானவர்களுக்கு தகுதியான விகிதத்திலேயே சொத்துரிமை அளித்துள்ளது இஸ்லாம்.
"ஒவ்வொரு சமூகத்தினருக்கும் ஒரு சோதனை உண்டு. எனது சமூகத்தினருக்கு பொருட் செல்வம் தான் பெரிய சோதனையாகும்" என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக கஃபு இப்னு இயாழ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல் : திர்மிதீ 2337, இப்னு ஹிப்பான் 2470,
அஹ்மத் 4 :160, ஹாகிம் 4 :318
எனவே, நம் பொருட்செல்வம் என்ற சோதனையில் நாம் வெற்றி பெற, கவனமாக நடப்பது அவசியமாகும். சொத்து மனிதர்களுடன் சம்பந்தப்பட்டதாக இருப்பதால், "அடியார்கள் மன்னிக்காமல் நான் மன்னிக்க மாட்டேன்" என அல்லாஹ் குறிப்பிடும் "ஹுகூகுல் இபாத்" என்ற பிரிவுடனும் சேர்ந்ததாகும். தொழுகை, நோன்பு, ஹஜ், ஸக்காத் போன்றவைதான் கட்டாயக் கடமை என நாம் எண்ணிக் கொண்டிருக்கின்றோம். ஆனால் சொத்துரிமையும் கட்டாயக் கடமைதான்.
(மரணமடைந்த) தாய், தந்தையரும் நெருங்கிய உறவினரும் விட்டுச் சென்ற சொத்தில் ஆண்களுக்குப் பங்குண்டு. (அது போல) தாய், தந்தையரும் நெருங்கிய உறவினரும் விட்டுச் சென்ற சொத்தில் பெண்களுக்கும் பங்குண்டு; அச்சொத்து குறைவாகவோ, அதிகமாகவோ இருந்தாலும் சரியே! இந்தப் பங்கு அல்லாஹ்வினால் நிர்ணயிக்கப்பட்டதாகும்.
(அல்குர் ஆன் 4 :7)
4:11-வது வசனத்தில் பாகப்பிரிவினைப் பங்கீடுகளைப் பற்றிக் கூறிய பின்னர் "இது அல்லாஹ்விடமிருந்து வந்த கட்டளையாகும்" என்றும், 4:12-வது வசனத்தின் இறுதியில் "இது அல்லாஹ்வினால் விதிக்கப்பட்டதாகும்" என்றும், 4:13-வது வசனத்தில் "இவை அல்லாஹ்வின் வரையறைகளாகும்" என்றும் அல்லாஹ் கூறுகிறான். எனவே, வாரிசுரிமைப் பங்கீடு கட்டாயக் கடமையே.
நமது நாடுகளில் ஒருவர் இறந்தவுடன் சொத்துரிமைப் பங்கு பிரித்துக் கொடுக்கப்படாத காரணத்தால் அண்ணன், தம்பி, அக்காள், தங்கைகளுக்கிடையில் சண்டைகள் ஏற்பட்டு நீதிமன்றம் செல்லும் பலரைப் பார்க்கின்றோம். பெண்மக்களுக்கு சொத்துரிமை கொடுக்கப்படாத நிலையைப் பார்க்கின்றோம். ஆனால், இஸ்லாம் தான் பெண்களுக்கும் சொத்துரிமை உண்டு எனக் கட்டளையிட்டு பெண்ணுரிமை பேணிய மார்க்கம் ஆகும். எனவே, வாரிசுரிமைச் சொத்துப் பங்கீடு கட்டாயக் கடமை. அதன் மூலம் உலகில் நம்மிடையே, குடும்பங்களுக்கிடையே அமைதியை ஏற்படுத்தலாம்.
சொத்துரிமை ஏற்பட்ட வரலாறு:
ஸஃது இப்னு ரபீஃ (ரலி) அவர்களின் மனைவி, ஸஃதின் மூலம் தனக்குப் பிறந்த இரு பெண் மக்களுடன் வந்து, "அல்லாஹ்வின் தூதரவர்களே! இவ்விருவரும் ஸஃது இப்னு ரபீஃ அவர்களின் (மூலம் எனக்குப் பிறந்த) புதல்விகள். இவர்களின் தந்தை ஸஃது உஹதுப் போர்க்களத்தில் கொல்லப்பட்டார். இந்தப் பெண்களுக்கு எந்தப் பொருளையும் விட்டு வைக்காமல் அவரது சொத்து முழுவதையும் அவருடன் பிறந்த சகோதரர் எடுத்துக் கொண்டார். இவ்விருவரின் சொத்துகளுக்காகவே எவரும் திருமணம் செய்ய முன்வருவார்கள்" என முறையிட்டார். இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், "இது விஷயமாக அல்லாஹ் தீர்ப்பளிப்பான்" எனக் கூறினார்கள். அப்போதுதான் சொத்துரிமை பற்றிய பின்வரும் (4 :11,12-வது) குர் ஆன் வசனங்கள் இறக்கி அருளப்பட்டன.
உங்கள் மக்களில் ஓர் ஆணுக்கு, இரண்டு பெண்களுக்குக் கிடைக்கும் பங்கு போன்றே கிடைக்கும் என்று அல்லாஹ் உங்களுக்கு உபதேசம் செய்கிறான். பெண்கள் மட்டும் இருந்து, அவர்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டு இருந்தால், அவர்களுக்கு இறந்து போனவர் விட்டுச் சென்றதில் மூன்றில் இரண்டு பாகம் கிடைக்கும். ஆனால், ஒரே பெண்ணாக இருந்தால் அவள் பங்கு பாதியாகும்.
இறந்தவருக்கு குழந்தை இருக்குமானால், இறந்தவர் விட்டுச் சென்றதில் ஆறில் ஒரு பாகம் (அவரது) பெற்றோர் ஒவ்வொருவருக்கும் உண்டு. ஆனால், இறந்தவருக்கு குழந்தை இல்லாதிருந்து பெற்றோர் மட்டுமே வாரிசாக இருந்தால், அவர் தாய்க்கு மூன்றில் ஒரு பாகம் (மீதி தந்தைக்கு உரியதாகும்). இறந்தவருக்கு சகோதரர்கள் இருந்தால், அவர் தாய்க்கு ஆறில் ஒரு பாகம்தான் (மீதி தந்தைக்கு சேரும்). இவ்வாறு பிரித்துக் கொடுப்பது அவர் செய்துள்ள மரண சாசனத்தையும், கடனையும் நிறைவேற்றிய பின்னர்தான். உங்கள் பெற்றோர்கள், குழந்தைகளில் யார் நன்மை பயப்பதில் உங்களுக்கு நெருக்கமாக இருப்பவர்கள் என்று நீங்கள் அறிய மாட்டீர்கள். ஆகையினால் (இந்தப் பாகப் பிரிவினை) அல்லாஹ்விடமிருந்து வந்த கட்டளையாகும். நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிந்தவனாகவும், மிக்க ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.
இன்னும் உங்கள் மனைவியர் விட்டுச் சென்றதில் - அவர்களுக்குப் பிள்ளை இல்லாதிருந்தால் உங்களுக்குப் பாதி பாகம் உண்டு. அவர்களுக்குப் பிள்ளை இருந்தால் அவர்கள் விட்டுச் சென்றவற்றிலிருந்து. உங்களுக்கு கால் பாகம்தான் - (இதுவும்) அவர்கள் செய்திருக்கிற மரண சாஸனத்தையும், கடனையும் நிறைவேற்றிய பின்னர்தான் - தவிர உங்களுக்குப் பிள்ளையில்லாதிருப்பின் நீங்கள் விட்டுச் சென்றதிலிருந்து அவர்களுக்குக் கால் பாகம்தான். உங்களுக்குப் பிள்ளை இருந்தால், அப்போது அவர்களுக்கு நீங்கள் விட்டுச் சென்றதில் எட்டில் ஒரு பாகம்தான். (இதுவும்) நீங்கள் செய்திருக்கும் மரண சாஸனத்தையும் கடனையும் நிறைவேற்றிய பின்னரேதான்.
தந்தை, பாட்டன் போன்ற முன் வாரிசுகளோ அல்லது பிள்ளை, பேரன் போன்ற பின் வாரிசுகளோ இல்லாத ஓர் ஆணோ அல்லது ஒரு பெண்ணோ - இவர்களுக்கு ஒரு சகோதரனோ அல்லது சகோதரியோ இருந்தால் - அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பாகம் உண்டு. ஆனால் இதற்கு அதிகமாக இருந்தால் அவர்கள் மூன்றில் ஒரு பாகத்தில் சமமாகப் பங்கிட்டுக் கொள்ளவேண்டும் - (இதுவும்) அவர்களின் மரண சாஸனமும் கடனும் நிறைவேற்றிய பின்னர்தான். ஆனால் (மரண சாஸனத்தைக் கொண்டு வாரிசுகள்) எவருக்கும் நஷ்டம் ஏற்படக் கூடாது. (இது) அல்லாஹ்வினால் விதிக்கப்பட்டதாகும். இன்னும் அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிந்தவனாகவும், மிக்க பொறுமையுடையோனுமாகவும் இருக்கின்றான்.
அல்குர் ஆன் 4 :11,12
அப்போது, நபி (ஸல்) அவர்கள் அப்பெண்களின் சிறிய தந்தையை அழைத்து, ஸஃதின் புதல்விகள் இருவருக்கும் சொத்தில் மூன்றில் இரண்டு பங்கும், ஸஃதின் மனைவிக்கு எட்டில் ஒரு பங்கும் கொடுத்துவிட்டு, மீதியை அவர் எடுத்துக் கொள்ளும்படி ஆணையிட்டார்கள்.
ஆதாரம்: அபூதாவூத் 2891, திர்மிதீ 2092
இப்னுமாஜா 2720, அஹ்மத் 3307
மற்றொரு வரலாறு:
பனீஸலமா கூட்டத்தினரில் நான் நோய்வாய்ப்பட்டிருக்கும்போது, என்னை நபி (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலி) அவர்களும் நோய் விசாரிக்க வந்தனர். என்னால் எதையும் விளங்கிக் கொள்ள முடியாத நிலையில் என்னைக் கண்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் தண்ணீரை வரவழைத்து உளூச் செய்து, பின்னர் என் மீது தண்ணீரைத் தெளித்தார்கள். அப்போது நான் விழித்து, அல்லாஹ்வின் தூதர் அவர்களே! எனது செல்வத்தை நான் என்ன செய்யச் சொல்கிறீர்கள்? எனக் கேட்க, அப்போது 4:11வது வசனம் இறங்கிற்று என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
(புகாரி 4577, 6723, 5651, 5676 மற்றும் முஸ்லிம்)
இன்னொரு வரலாறு:
ஹஸ்ஸான் இப்னு ஸாபித் (ரலி) அவர்களின் சகோதரரான அப்துர்ரஹ்மான் இப்னு ஸாபித் (ரலி) அவர்கள் மரணமானபோது ஆண் வாரிசுகள் அனைவரும் வந்து, சொத்து முழுவதையும் எடுத்துக் கொண்டனர். அவரது மனைவி உம்மு கஹ்ஹா மற்றும் அவரது சகோதரிகள் ஐவருக்கும் எதுவும் கொடுக்கவில்லை. அப்போது உம்மு கஹ்ஹா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டபோது மேற்கண்ட வசனம் இறங்கியதாகவும் வரலாறு காணப்படுகிறது. (தஃப்ஸீர் இப்னு ஜரீர்)
ஆக எது எப்படியாயினும், பெண்களுக்குக் கிடைக்க வேண்டிய சொத்து கிடைக்காமல் பெண்களுக்கு அநீதி இழைக்கப்பட்ட போதுதான் சொத்துரிமை பற்றிய தெளிவான சான்றுகள் தோன்ற ஆரம்பித்தன என்பது உண்மையாகும். (அல்லாஹ் மிக அறிந்தவன்)
இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டத்தின் சிறப்பு
பெற்றோரோ, நெருங்கிய உறவினர்களோ விட்டுச் சென்ற (சொத்)தில் ஆண்களுக்குப் பாகமுண்டு. அவ்வாறே பெற்றோரோ, நெருங்கிய உறவினர்களோ விட்டுச் சென்ற (சொத்)தில் பெண்களுக்கும் உண்டு – (அதிலிருந்துள்ள சொத்து) குறைவாக இருந்தாலும் சரி, அதிகமாக இருந்தாலும் சரியே, (இது அல்லாஹ்வினால்) விதிக்கப்பட்ட பாகமாகும். அல்குர் ஆன் 4:7
அல்லாஹ் இந்த வசனத்தில் இறந்தவர் விட்டுச் சென்ற சொத்தில் ஆண்களுக்கும் பாகமுண்டு என்று கூறுகிறான். அதேபோல பெண்களுக்கும் பாகமுண்டு என்று கூறுகிறான். சொத்து குறைவாக இருந்தாலும் சரி, அதிகமாக இருந்தாலும் சரியே என்று குறிப்பிடுகிறான்.
சொத்து குறைவாக இருக்கிறது அல்லது அதிகமாக இருக்கிறது என்பது பிரச்சினை அல்ல. மாறாக, நெருங்கிய உறவினர் விட்டுச் செல்லும் சொத்தில் ஆண் வாரிசுகள், பெண் வாரிசுகள் ஒவ்வொருவருக்கும் நிர்ணயிக்கப்பட்ட பாகம் உண்டு என்று கூறியிருப்பதால் இந்த வாரிசுரிமை பற்றி ஒவ்வொருவரும் அறிந்து கொள்வது கட்டாயம் ஆகும்.
"யூகத்தின் அடிப்படையில் (வாரிசுரிமை பற்றிப்) பேசக் கூடியவர்கள் தோன்றுவதற்கு முன்பு (மிக முக்கிய அடிப்படைக் கல்வியான பாகப்பிரிவினை) கல்வியைக் கற்றுக் கொள்ளுங்கள்" என்று உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஆதாரம் : புகாரி (பாகப்பிரிவினையை கற்றுக் கொள்ளுங்கள் என்ற பாடம்) மற்றும் ரஸீன்
இன்று வரிசுரிமைக் கல்வி எவருக்கும் தெரிவதில்லை. அரபுக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள், கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்கள் உட்பட அனைவருமே பாடம் படிக்க வேண்டுமென்ற நோக்கத்திலும், பாடம் கற்றுக் கொடுக்க வேண்டுமென்ற நோக்கத்திலும் தான் கற்றுக் கொள்கிறார்களே தவிர இது வாழ்வியல் பிரச்சினை என்ற ரீதியில் கற்றுக் கொடுப்பதில்லை; கற்றுக் கொள்வதுமில்லை. அதனால் கல்வி கற்கும்போது இப்பாடத்தில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்கள் கூட, பின்னாளில் அது பற்றிக் கேட்கும்போது மறந்து விட்டேன் அல்லது தெரியாது என்று கூறுவதிப் பார்க்கிறோம்.
சொத்துரிமை பிரச்சினை சிக்கலாகி குடும்பப் பிரச்சினை தோன்றினால் மட்டுமே அரபுக் கல்லூரிகளுக்கு தீர்ப்புக் கேட்டு எழுதி அதன்படி செயல்படுகின்றனர். இல்லையெனில் யூகத்தின் அடிப்படையில் தான் பாகப்பிரிவினை செய்து கொடுப்பதைப் பார்க்கிறோம்.
சில குடும்பங்களில் ஆண்கள் மட்டுமே பெற்றோரின் சொத்துக்களை எடுத்துக் கொள்கின்றனர். பெண்களுக்கு எதுவும் கொடுப்பதில்லை. காரணம் கேட்டால், பெண்களைத் திருமணம் செய்து கொடுக்கும் போதே சீர்வரிசை, வரதட்சணை, நகை நட்டுக்கள் என அதிகமாகச் செலவு செய்து விட்டோம் என்று கூறி விடுகின்றனர். இது வரதட்சணை மற்றும் சீர்வரிசைகளின் தீய விளைவாகும். சிலர் தாயாரின் சொத்துக்கள் பெண்களுக்கு மட்டுமே உரியவை என்றும், தந்தையின் சொத்துக்கள் ஆண் மக்களுக்கு உரியவை என்றும் (யூகத்தின் அடிப்படையில்) பிரித்து விடுகின்றனர். எனவே, இந்நிலை மாற வேண்டும். வாரிசுகள் யார்? அவர்களுக்குரிய பங்கு என்ன? என்பது பற்றியெல்லாம் ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். அதன்படி பிரித்தளிப்பதும் அவசியம்.
இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டத்தின் சிறப்புப் பற்றிப் பேராசிரியர் G.C. வெங்கட சுப்பாராவ் தம்முடைய FAMILY LAW IN INDIA (இந்திய குடும்ப இயல் சட்டம்) என்ற நூலில் கூறியுள்ள கருத்துக்கள் நாம் கவனிக்கத் தக்கவை. "இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டம் மிகுந்த நுண்ணறிவோடு திட்டமிடப்பட்ட ஒன்றாகும். வாரிசுரிமையின் மிகச் சிக்கலான பிரச்சினைகளைப் பயனுள்ள வகையில் கையாளுவதால் அது நமது போற்றுதலுக்குரியதாகும்" என்று அவர் கூறுகிறார். மேலும், "இஸ்லாமியச் சட்டத்தில் கடமையாக்கப்பட்டுள்ள விரிவான வாரிசுரிமை முறை எந்த அளவிற்கு இயலுமோ அந்த அளவிற்குத் துல்லியமாக உள்ளது" என்றும் புகழ்ந்துரைக்கிறார்.
இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டத்தின் மீது கூறப்படும் ஒரேயொரு குறை என்னவெனில் அது பின்னங்களாக இருப்பதும் அதனால் சொத்து சிறு சிறு துண்டுகளாகப் பிரிந்து விடுவதும் தான். குறிப்பாக ஒரு வீடு அல்லது ஒரு வயல் சிறு சிறு துண்டுகளாய்ப் பிரிக்கப்படும்போது யாருக்கும் பயன்படாமல் போய்விடும் என்பது நாம் அறிந்ததே. "ஆனால் அந்தக் குறையும் கூட பிற வாரிசுகளிடம் இருந்து விலைக்கு வாங்கும் முன்னுரிமையை அந்நியரை விட மற்ற வாரிசுதாரர்களுக்கு வழங்குவதன் மூலம் இஸ்லாமிய சட்டம் போக்கிவிடுகிறது" என்றும் G.C. வெங்கட சுப்பாராவ் கூறுகிறார்.
அதாவது, இருவருக்குச் சொந்தமான சொத்தில் தமது பங்கை ஒருவர் விற்க விரும்பினால் அவர் தமது பங்காளிக்குத்தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும்.
"பங்காளிக்குத் தான் விற்க வேண்டும் என்பது, பிரிக்கப்படாத ஒவ்வொரு சொத்திலும் உள்ளது. எல்லைகள் வகுக்கப்பட்டுப் பாதைகள் (பிரித்துக்) குறிக்கப்பட்டு விட்டால் பங்காளிக்குத் தான் விற்க வேண்டும் என்ற நிலை இல்லை" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விதித்தார்கள் என ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஆதாரம் : புகாரி 2257
இந்த முன்னுரிமையால் தான் இந்த விரிவான வாரிசுரிமை முறை காலத்தின் சோதனையைக் கடந்து இன்றுவரை அதன் அசல் வடிவத்தில் நிலைத்திருக்க முடிகிறது என்று அப்பேராசிரியர் வியந்து போற்றுகிறார்.
இந்தச் சொத்துரிமைப் பங்கு விகிதாச்சாரங்கள் நம்மையெல்லாம் படைத்த இறைவனே ஏற்படுத்திய கணக்கீடு ஆகும். மனிதர்களாகிய நாம் அதை ஏற்படுத்தி இருந்தால் நமக்கு வேண்டியவர், வேண்டாதவர் என்ற ரீதியில் பாகுபடுத்தி இருப்போம். ஆனால், கருணையாளனான அல்லாஹ் யாருக்கும் எந்தப் பாதகமுமின்றி எல்லோருக்கும் சொத்துக் கிடைக்கும் வகையில் பங்கீடு செய்துள்ளான்.
நபி (ஸல்) அவர்கள் கூட, ஏன் நபிமார்கள் எவரும் கூட இந்தச் சொத்துப் பங்கீடு பிரச்சினையில் தலையிடவில்லை என்பது மட்டுமின்றி அவர்களின் சொத்து கூட பொதுவுடமைதான். அது எங்களது வாரிசுகளுக்கு வழங்கப்படக் கூடாது என்று உறுதியாகக் கூறிச் சென்றுள்ளனர். இது இஸ்லாமிய மார்க்கத்தின் தனிச் சிறப்பாகும்.
"என் வாரிசுகள் ஒரு தங்க நாணயத்தைக் கூட வாரிசுப் பங்காகப் பெற மாட்டார்கள். என் துணைவியருக்கான வாழ்க்கைச் செலவும் என் ஊழியரின் ஊதியமும் தவிர நான் விட்டுச் செல்பவையெல்லாம் தர்மமேயாகும்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஆதாரம் : புகாரி 6729, 2776, 3096; முஸ்லிம் : 1760, 1761;
முஅத்தா; அபூதாவூத் 2974; மற்றும் அஹ்மத்
இது பற்றி மிகத் தெளிவாகப் பின்வரும் நபிமொழியில் வந்துள்ளது.
நபி (ஸல்) அவர்களின் மகள் ஃபாத்திமா (ரலி) அவர்கள் (நபியவர்களின் இறப்பிற்குப் பிறகு கலீஃபா) அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு ஆளனுப்பி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் ஒதுக்கித் தந்திருந்த மதீனா மற்றும் ஃபதக் சொத்திலிருந்தும், கைபரின் ஐந்தில் ஒரு பகுதி நிதியில் எஞ்சியதிலிருந்தும் தமக்குச் சேர வேண்டிய வாரிசுரிமையைக் கேட்டார்கள். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(நபிமார்களான) எங்கள் சொத்துக்களுக்கு வாரிசாக யாரும் வர முடியாது. நாங்கள் விட்டுச் செல்பவையெல்லாம் தர்மம் செய்யப்பட வேண்டியவை ஆகும். இந்தச் செல்வத்திலிருந்தே முஹம்மதின் குடும்பத்தினர் சாப்பிடுவார்கள்" என்று சொல்லியிருக்கிறார்கள். (எனவே) அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தர்மச் சொத்தில் நான் எந்த சிறு மாற்றத்தையும் செய்ய மாட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் எந்நிலையில் அந்த சொத்துக்கள் இருந்து வந்தனவோ, அதே நிலையில் அவை நீடிக்கும். அதில் (அந்தச் சொத்துக்களைப் பங்கிடும் விஷயத்தில்) நபி (ஸல்) அவர்கள் செயல்பட்ட படியே நானும் செயல்படுவேன்" என்று (ஃபாத்திமா அவர்களுக்கு) பதில் கூறி(யனுப்பி)னார்கள். ஃபாத்திமா (ரலி) அவர்களிடம் அவற்றில் எதையும் ஒப்படைக்க அபூபக்ர் (ரலி) அவர்கள் மறுத்து விட்டார்கள். இதனால் அபூபக்ர் (ரலி) அவர்கள் மீது மன வருத்தம் கொண்டு இறக்கும் வரையில் அவர்களுடன் ஃபாத்திமா (ரலி) அவர்கள் பேசவில்லை. (புகாரியிலுள்ள ஹதீஸின் சுருக்கம்)
பார்க்க புகாரி எண் 3092, 3093
கடனும் வஸிய்யத்தும்
ஒருவர் இறந்த பின் அவரது சொத்து வாரிசுதாரர்களுக்குப் பிரித்துக் கொடுக்கப்படுவதற்கு முன்பு பல்வேறு விஷயங்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது அவசியமாகும். வாரிசுரிமைப் பற்றிக் குறிப்பிடும் 4:11,12வது வசனங்களில்,
. . . இவ்வாறு வாரிசுகளுக்குச் சொத்து பிரித்துக் கொடுப்பது அவர் செய்துள்ள மரண சாசனத்தையும், கடனையும் நிறைவேற்றிய பின்னர் தான். . . என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான். எனவே, இறந்தவருக்குக் கடன் இருந்தால் சொத்து பிரிக்கப்படுவதற்கு முன் கடன் அடைக்கப்பட வேண்டும்.
"மார்க்கப் போரில் உயிர் நீத்த ஷஹீத் (தியாகி)க்கு கடனைத் தவிர மற்றெல்லாப் பாவங்களையும் அல்லாஹ் மன்னித்து விடுகிறான். இந்த விஷயத்தை எனக்கு ஜிப்ரீல் (அலை) கூறினார்கள் என நபி (ஸல்) கூறியதாக அப்துல்லாஹ் பின் அம்ரு பின் அல் ஆஸ் (ரலி) அறிவிக்கிறார்.
ஆதாரம்: அஹ்மத் 2220; முஸ்லிம் 4860;
திர்மிதீ 1640, 1886; நஸயீ 3156
மார்க்கப் போரில் உயிர் நீத்த ஷஹீத் என்று கூறப்படும் உயிர்த்தியாகி கேள்வி கணக்கு ஏதுமின்றி சுவர்க்கம் செல்வார் என்றிருக்க அவருக்குக் கடன் இருக்குமானால் அது மட்டும் மன்னிக்கப்படாது. ஏனெனில் கடன் என்பது பிறரது உரிமை ஆகும். பிறரது உரிமை அவர் மன்னிக்காதவரை இறைவனால் மன்னிக்கப்பட மாட்டாது. எனவேதான் இறந்தவருக்குக் கடன் இருந்தால் அதை முதலில் கொடுத்துவிட வேண்டும். அல்லது இறந்தவருக்குக் கடன் கொடுத்தவர் விரும்பினால் அந்தக் கடனைத் திரும்பிப் பெறாமல் மன்னித்து விடலாம். அதுவரை உயிர்த்தியாகியான ஷஹீத் கூட மன்னிக்கப்பட மாட்டார்.
சொத்து முழுவதும் கடனுக்கே சரியாகப் போனால் கடன் அடைக்கப்பட்டு, வாரிசுதாரர்களுக்கு ஏதும் கொடுக்கப்பட மாட்டாது. அல்லது வாரிசுதாரர்கள் இருக்க, கடன் தொகை இருக்கும் சொத்தை விட அதிகமாக இருந்தால் வாரிசுதாரர்கள் தான் அந்தக் கடனுக்கும் பொறுப்பேற்க வேண்டும். அவர்களும் வறியவர்களாக இருந்தால் செல்வந்தர்கள் யாராவது அக்கடனுக்குப் பொறுப்பேற்கலாம். அல்லது கடன் கொடுத்தவர்கள் பெருந்தன்மையோடு கடனை மன்னித்து விடலாம்.
கடன் என்பதில் மக்களிடம் வாங்கிய கடன் மட்டுமின்றி, இறந்தவர் செலுத்த வேண்டிய ஸகாத், நஷ்ட ஈட்டுத் தொகை முதலியவையும் அடங்கும் என்று சில அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். மேலும் மனைவிக்குக் கொடுக்க வேண்டிய மஹர் கூட கடன் தான் என்றும் குறிப்பிடுகின்றனர். மற்றும் சில அறிஞர்கள், ஒரு மனிதன் இறந்த பின்னர் அல்லாஹ்வுக்காக செலுத்த வேண்டிய ஸகாத் போன்றவற்றைச் செலுத்தத் தேவையில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் அம்மய்யித்தை அடக்கம் செய்வதற்கான செலவினங்களுக்கும், கஃபன் ஆடை போன்றவற்றிற்கும் அவரது சொத்தில் இருந்துதான் செலவு செய்ய வேண்டும். அவரது உறவினர்களில் மகன், மகள் போன்றவர்கள் தமது சொந்தப் பணத்தில் செலவு செய்தால் அது குற்றமாகாது. எனவே, இறந்தவருக்குக் கடன் இருந்தால் அதைக் கொடுத்த பின்னர் தான் அவரது சொத்து வாரிசுகளுக்குப் பிரித்துக் கொடுக்கப்படும்.
வஸிய்யத் (உயில்) அவசியமா?
வஸிய்யத் என்றால் இறந்தவர் இறக்கும் முன் அல்லது இறக்கும் தருவாயில் சொத்துரிமைப் பங்கீடு பெறாதவர்களுக்கு அல்லது ஏதாவது தர்ம காரியத்திற்கு அல்லது மத்ரஸா, பள்ளிவாசல், அறக்கட்டளை போன்றவற்றிற்கு தனது சொத்தை சாஸனம் செய்தல் ஆகும்.
வஸிய்யத் செய்யத்தக்க பொருள்வளம் பெற்றவராக ஒருவர் இருந்தால், அப்பொருள் அவருக்குக் கிடைத்து, இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் வஸிய்யத்து எழுதப்பட்டு விட வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு உமர் (ரலி) அறிவிக்கிறார்கள்.
(புகாரி, முஸ்லிம், முஅத்தா, திர்மிதீ, அபூதாவூத், நஸயீ)
மேலும் இப்னு உமர் (ரலி) அவர்கள் ரஸுல் (ஸல்) அவர்களிடம் "நான் இதைக் கேள்விப்பட்ட பின்னர், எனது வஸிய்யத்தை நான் எழுதி வைத்து விட்டேன். எழுதி வைக்காமல் ஓர் இரவு கூடக் கழித்ததில்லை!" எனவும் குறிப்பிடுகிறார்கள்.
"வஸிய்யத்து செய்யத்தக்க பொருளாதாரம் ஒரு முஸ்லிமிடம் இருக்க இரண்டு இரவுகள் கடக்கலாகாது!" என நபி (ஸல்) குறிப்பிட்டதாக அஹ்மதில் பதிவாகியுள்ளது,
"உங்களில் எவருக்கு மரணம் நெருங்கி விடுகிறதோ அவர், ஏதேனும் பொருள் விட்டுச் செல்பவராக இருப்பின் அவர் (தம்) பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் முறைப்படி வஸிய்யத் (மரண சாஸனம்) செய்வது விதியாக்கப் பட்டிருக்கிறது. இதை நியாயமான முறையில் நிறைவேற்றுவது முத்தகீன்கள் (பயபக்தியுடையோர்) மீது கடமையாகும்.
வஸிய்யத்தை (மரண சாஸனத்தை)க் கேட்ட பின்னர் எவரேனும் ஒருவர் அதை மாற்றினால், நிச்சயமாக அதன் பாவமெல்லாம் யார் அதை மாற்றுகிறார்களோ, அவர்கள் மீதே சாரும். நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) கேட்பவனாகாவும் அறிபவனாகவும் இருக்கின்றான்.
ஆனால் வஸிய்யத் செய்பவரிடம் (பாரபட்சம் போன்ற) தவறோ, அல்லது மனமுரண்டான அநீதமோ இருப்பதை அஞ்சி ஒருவர் (சம்பந்தப்பட்டவர்களிடையே) சமாதானம் செய்து அந்த (வஸிய்யத்தை) சீர் செய்தால் அ(ப்படிச் செய்ப)வர் மீது குற்றமில்லை. நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனுமாகவும் இருக்கின்றான்.
(அல்குர் ஆன்: 2:180,181,182)
இந்த ஆதாரங்களின் அடிப்படையில் வஸிய்யத் செய்வது அவசியம் என்கின்றனர் சிலர். ஒவ்வொரு வாரிசுகளுக்கும் உரிய பங்கு இவ்வளவுதான் எனக் கூறும் 4:11,12 மற்றும் 4:176வது வசனங்கள் அருளப்படுவதற்கு முன்னருள்ள நிலையாகும் இது. வாரிசுகளின் பாகங்கள் இவ்வளவு என இறைவன் வரையறுத்து விட்டதால் வஸிய்யத் செய்வது அவசியமானது அல்ல. ஒருவர் விரும்பினால் வஸிய்யத் செய்யத் தடை ஏதும் இல்லை.
ஆயினும், யார் யாருக்கு எவ்வளவு பாகம் என்று இறைவன் வரையறுத்து விட்டானோ அவர்களுக்காக வஸிய்யத் செய்ய அனுமதி இல்லை. அவர்கள் அல்லாத மற்றவர்களுக்காக வஸிய்யத் செய்யத் தடை இல்லை. இதற்கான ஆதாரங்கள் வருமாறு:
மேற்கண்ட 2:180வது திருவசனத்தில் பெற்றோருக்கும், உறவினருக்கும் வஸிய்யத் செய்ய வேண்டுமென வலியுறுத்தப் பட்டிருக்கிறது. இந்தத் திருவசனம் பற்றிக் குறிப்பிடுகின்ற அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், வாரிசுரிமை பற்றிய முன்னர் குறிப்பிட்ட திருவசனங்கள் இறங்கியவுடன் 2:180வது திருவசனம் மாற்றப்பட்டு விட்டது என குறிப்பிடுகிறார்கள்.
"நிச்சயமாக! அல்லாஹ் யாருக்கு எவ்வளவு பங்கு உரித்தானதோ, அந்த அளவு அவர்களுக்கு வழங்கி விட்டான். எனவே, வாரிசுரிமைப் பங்கு பெற்றவர்களுக்கு வஸிய்யத்து செய்யலாகாது என நபி (ஸல்) கூறினார்கள். அபு உமாமதல் பாஹிலீ (ரலி) அறிவிக்கும் இந்த ஹதீஸ் அபூதாவூதில் 2870வது ஹதீஸாகும்.
எனவே, வாரிசுரிமைப் பங்கு பெற்றவர்களுக்கு அறவே வஸிய்யத் செய்யலாகாது. பங்கு பெறாதவர்களுக்கு வஸிய்யத் செய்யலாம்.
வாரிசுதாரர்களுக்குத் தீங்கிழைக்கக் கூடாது:
(மரண சாஸனத்தின் மூலம் வாரிசுகள்) எவருக்கும் நஷ்டம் ஏற்படக் கூடாது என அல்லாஹ் குறிப்பிடுகிறான். (அல்குர் ஆன் 4:12) எனவே வாரிசுகளுக்குக் கிடைக்க வேண்டிய பாகத்தில் எவ்விதப் பாதிப்பும் ஏற்படாதவாறு வஸிய்யத்து செய்ய வேண்டுமென இஸ்லாம் வலியுறுத்துகிறது.
நபி (ஸல்) அவர்களின் இறுதி ஹஜ்ஜுடைய ஆண்டில் நான் நோய் வாய்ப்பட்டிருந்த போது, என்னை நோய் வினவுவதற்காக ரஸுல் (ஸல்) அவர்கள் வந்தார்கள். அப்போது நான் அல்லாஹ்வின் தூதரே! நான் கடுமையாக நோய் வாய்ப்பட்டு விட்டேன் என்பதை நீங்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றீர்கள். எனக்கு ஏராளமான பொருட் செல்வம் உள்ளது. எனக்கு ஒரே ஒரு மகள் மட்டும் தான் வாரிசு. எனவே எனது செல்வத்தில் மூன்றில் இரண்டு பங்கை தானமாக வழங்கிடட்டுமா? எனக் கேட்க, "வேண்டாம்" என நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டார்கள். "அல்லாஹ்வின் தூதர் அவர்களே! எனது சொத்தில் பாதியை தானமாகக் கொடுத்து விடவா?" எனக் கேட்க அதற்கும் மறுத்து விட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் அவர்களே! எனது சொத்தில் மூன்றில் ஒரு பங்கை தர்மம் செய்து விடவா? என நான் மீண்டும் கேட்க, "மூன்றில் ஒரு பங்கு என்பது அதிகம்", என்று சொன்ன நபி (ஸல்) அவர்கள் "மக்களிடம் கையேந்திப் பிழைக்கும் ஏழைகளாக உமது சந்ததியினரை விட்டுச் செல்வதை விட பணக்காரர்களாக விட்டுச் செல்வது மிக நல்லது" என நபி (ஸல்) அவர்கள் தம்மிடம் கூறியதாக ஸஃது பின் அபீவக்காஸ் (ரலி) அறிவிக்கிறார்.
ஆதாரம் : புகாரி: 3936, 4409, 5668, 6373; முஸ்லிம்;
முஅத்தா; அபூதாவூத்; நஸயீ; திர்மிதீ
எனவே வஸிய்யத்து செய்யும் போது மூன்றில் ஒரு பங்கை விட அதிகம் வஸிய்யத்து செய்து சொத்துரிமை உள்ளவர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தலாகாது. மூன்றில் ஒரு பங்குக்கு மேல் வஸிய்யத்து செய்திருந்தால் அது செல்லாது எனவும் அறிய முடிகிறது. மேலும் சொத்துரிமை பெறத்தக்கவர்களுக்கும் வஸிய்யத் செய்திருந்தால் அதுவும் செல்லாது என்று அறியலாம்.
வாரிசுரிமை பெறுவோர்
ஆண்களில் வாரிசுரிமை பெறக்கூடியவர்கள் பத்துப் பேர் ஆவர். விரிவாகச் சொன்னால் அவர்கள் பதினைந்து பேராக இருப்பார்கள். அவர்கள்,
1. மகன்
2. மகனின் மகன்
3. தந்தை
4. தந்தை வழிப் பாட்டன்
5. தாய் வழிச் சகோதரன்
6. தந்தை வழிச் சகோதரன்
7. தாய் தந்தை வழிச் சகோதரன்
8. தந்தை வழிச் சகோதரனின் மகன்
9. தாய் தந்தை ஒன்றுபட்ட சகோதரனின் மகன்
10. தாய் தந்தை ஒன்றுபட்ட சிறிய தகப்பனார்
11. தந்தை மட்டும் ஒன்றுபட்ட சிறிய தந்தை
12. தாய் தந்தை ஒன்றுபட்ட சிறிய தந்தையின் மகன்
13. தந்தை ஒன்றுபட்ட சிறிய தந்தையின் மகன்
14. கணவன்
15. அடிமையாயிருந்து விடுதலை பெற்றவன்
இவர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து வாரிசுதாரர்களாக வந்தால் இவர்களில் மூவர் மட்டுமே வாரிசுரிமை பெறுவர்.
1. மகன்
2. தந்தை
3. கணவன்
இவர்கள் தவிர ஏனையோர் மகன் அல்லது தந்தை இருப்பதால் வாரிசுரிமையை விட்டும் தடுக்கப்படுவர். சொத்துரிமை பெறக்கூடியவர்களில் தாய் தந்தை ஒன்றுபட்ட சிறிய தந்தை, தந்தை மட்டும் ஒன்றுபட்ட சிறிய தந்தை என்று குறிப்பிடப்படுகிறது.
பெண்களில் வாரிசுரிமை பெறுவோர் எழுவர் ஆவர். விரிவாகச் சொன்னால் பத்துப் பேர் வாரிசுரிமை பெறுவர். அவர்கள்,
1. மகள்
2. மகனின் மகள்
3. தாய்
4. தாய் வழிப் பாட்டி
5. தந்தை வழிப் பாட்டி
6. தாய் தந்தை ஒன்றுபட்ட சகோதரி
7. தந்தை வழிச் சகோதரி
8. தாய் வழிச் சகோதரி
9. மனைவி
10. அடிமையாயிருந்து விடுதலை பெற்ற பெண்
வாரிசுரிமை பெறும் பெண்கள் அனைவரும் ஒரே நேரத்தில் இருந்தால் இவர்களில் ஐவர் மட்டுமே வாரிசுரிமை பெறுவர். அவர்கள்,
1. மகள்
2. மகனின் மகள்
3. தாய்
4. மனைவி
5. தாய் தந்தை ஒன்றுபட்ட சகோதரி
ஏனையோர் இவர்களால் வாரிசுரிமை பெறத் தடை செய்யப்படுவர். மேற்கூறப்பட்டவர்களில் ஆண்களும், பெண்களும் ஆகிய அனைவரும் வாரிசுரிமை பெறுவோரில் இடம் பெற்றால், மொத்தத்தில் ஐவர் மட்டுமே வாரிசுரிமைப் பங்கீடு பெறுவர். அவர்கள்,
1. தந்தை
2. தாய்
3. மகன்
4. மகள்
5. கணவன் அல்லது மனைவி
ஏனையோர் இவர்களால் வாரிசுரிமை இழப்பர்.
சொத்துரிமை கணக்குகளில் பெரும்பாலும் ஆண்களில் 4 பேரும், பெண்களில் 8 பேரும் மட்டுமே வாரிசுகளாக வருவர்.
பெண் பங்குதாரர்கள்
1. மனைவி
2. தாய்
3. பாட்டி
4. மகள்
5. மகனின் மகள்
6. தாய் வழிச் சகோதரி
7. உடன் பிறந்த சகோதரி
8. தந்தை வழிச் சகோதரி
ஆண் பங்குதாரர்கள்
1. கணவன்
2. தந்தை
3. பாட்டன்
4. தாய் வழிச் சகோதரன்
இவர்கள் தவிர மகன், மகனின் மகன், சிறிய தந்தை, உரிமை விடப்பட்ட அடிமை போன்றோர் அஸபாக்களாக வருவர்.
வாரிசுரிமை ஏற்படுவதற்கான காரணங்கள் மூன்று ஆகும்.
1. வம்சா வழித் தொடர்பு
2. திருமணத் தொடர்பு
3. ஒப்பந்த அடிப்படையான தொடர்பு (அடிமை-எஜமான் என்ற தொடர்பு)
3 வது வகையான ஒப்பந்த அடிப்படையிலான தொடர்பு இரு வகைப்படும்.
1. நண்பர்கள், கூட்டாக வியாபாரம் செய்வோர் ஒருவருக்கொருவர் செய்து கொள்ளும் உடன்படிக்கை
2. அடிமை உரிமை விடப்பட்டதால் ஏற்படும் தொடர்பு
வாரிசுரிமையைத் தடுப்பவை மூன்று நிலைகள் ஆகும். அவை,
1. அடிமைத்தனம்
2. கொலை செய்தல்:- கொன்றவன் கொல்லப்பட்டவனிடமிருந்து எதையும் வாரிசாகப் பெற மாட்டான்.
3. மதமாற்றம் – முஸ்லிமுக்கு காஃபிர் (இறை நிராகரிப்பாளன்) வாரிசாக மாட்டான். அதுபோல, காஃபிருக்கு (இறை நிராகரிப்பாளனுக்கு) ஒரு முஸ்லிம் வாரிசுரிமை பெற மாட்டான்.
விரிவான விளக்கத்துக்கு இந்நூலை படிக்கவும்