பித்அதுல் ஹஸனா

எழுதியவர் : எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) 

பித்அத் கூடாது என்று எவ்வளவுதான் கூறினாலும் “நல்ல பித்அத்தும் இருக்கிறதுதானே” என்ற ஒரு வசனத்தில் அவ்வளவு ஆதாரங்களையும் சில உலமாக்கள் மழுங்கடித்துவிட முயல்கின்றனர்.

பொதுமக்களும் பித்அதுல் ஹஸனா பற்றி அறியாமல் இவர்கள் உளறுகின்றனர் என எண்ணிவிடுகின்றனர். எனவே பித்அதுல் ஹஸனா (நல்ல பித்அத்) குறித்து விரிவாக விளக்குவது அவசியமாகின்றது.

“எல்லா பித்அத்துக்களும் வழிகேடுகளே” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கும்போது நல்ல பித்அத்துக்கள் எனப் பேச முற்படுவது ஆச்சரியமாக உள்ளது. எல்லா பித்அத்துக்களும் வழிகேடு என நபி (ஸல்) அவர்கள் கூறும் போது இல்லை இல்லை நல்ல பித்அத்துக்களும் இருக்கின்றன என நபி (ஸல்) அவர்களுக்கே இவர்கள் பாடம் நடத்த முற்படுகின்றனரா?

பித்அத்துக்கள் பார்ப்பதற்கு நல்லதாகத்தான் இருக்கும். குடி, களவு, விபச்சாரம் போன்று கெட்டதாக இருக்காது. மார்க்கம் விதித்த நல்ல அம்சங்களில் தான் பித்அத் உருவாகும். எனவே “நல்ல பித்அத்” அதாவது “நன்மையின் பெயரில் மக்களை வழிகெடுக்கக்கூடியது” என்று வேண்டுமானால் இதற்கு அர்த்தம் செய்யலாம்.

மற்றும் சில மெத்தப் படித்த மேதாவிகள் உள்ளனர். இவர்கள் “குல்லு” என்ற அரபுச் சொல்லுக்கு “எல்லாம்” என்று அர்த்தம் இருப்பது போன்றே சிலது என்றும் அர்த்தம் இருக்கிறது. எனவே எல்லா பித்அத்தும் வழிகேடு என்று இதற்கு அர்த்தம் செய்வது தவறு “குல்லு பித்அதின் ழழாலா” என்பதற்கு சில பித்அத்துக்கள் வழிகேடு என்று தான் அர்த்தம் செய்ய வேண்டும். என்று கூறுவர். இவர்கள் கூறுவதை ஒரு வாதத்திற்காக நாம் ஏற்றுக் கொண்டு அவர்கள் கூறுவது போன்று அர்த்தம் செய்து பார்ப்போம்.

“எல்லா பித்அத்துக்களும் வழிகேடுகளே! எல்லா வழிகேடுகளும் நரகத்திற்கே இட்டுச் செல்லும்” இது ஹதீஸாகும். இந்த ஹதீஸில் பயன்படுத்தப்பட்டுள்ள “குல்லு” என்ற அரபுப் பதத்திற்கு எல்லாம் என்று பொருள் செய்யாமல் சிலது என்று பொருள் செய்ய வேண்டும் என்பது இவர்களது வாதம். அதன்படி,

சில பித்அத்துக்கள் வழிகேடுகளே! இவர்கள் இத்துடன் நிறுத்திக் கொள்வர். ஹதீஸின் அடுத்த பகுதியை இவர்கள் கூறுவது போன்று “குல்லு” என்ற அரபுப் பதத்திற்கு “சிலது” என்று அர்த்தம் செய்து மொழிபெயர்த்தால்,

“சில வழிகேடுகள் நரகத்திற்கு இட்டுச் செல்லும்” என்று அர்த்தம் செய்ய நேரிடும்.

சில வழிகேடுகள் நரகத்திற்கு இட்டுச் செல்லும் என்றால் சில வழிகேடுகள் சுவனத்திற்கு இட்டுச் செல்லும் என்று அர்த்தமாகிவிடும். அதாவது தாம் செய்யும் பித்அத்தை நியாயப்படுத்துவதற்காக இஸ்லாத்தின் அடிப்படையையே தகர்க்கவும் இவர்கள் தயங்க மாட்டார்கள் என்பதையே இவர்களது இந்த வாதம் எடுத்துக்காட்டுகிறது.

எனவே “குல்லு” என்ற அரபுப் பதத்திற்கு “எல்லாம்” என்றுதான் அர்த்தம் செய்ய முடியும். “சிலது” என்று அர்த்தம் செய்ய முடியாது. எனவே, நபி (ஸல்) அவர்கள் மிகத் தெளிவாகவே எல்லா பித்அத்துக்களும் வழிகேடுகளே! என்று கூறியிருக்கும் போது சில பித்அத்துக்கள் வழிகேடுகள் என அர்த்தம் செய்ய எவருக்கும் எள்ளளவும் எள்ளின் முனையளவும் அருகதையோ அதிகாரமோ கிடையாது.

பித்அதுல் ஹஸனா வாதத்தை வலுப்படுத்த மாற்றுக் கருத்துடைய அறிஞர்கள் மற்றும் சில வாதங்களை முன்வைப்பர்.

“எவரேனும் இஸ்லாத்தில் அழகிய நடைமுறை ஒன்றை நடைமுறைப்படுத்தினால் அதற்குரிய கூலியும் அவனுக்குப் பின் அதைச் செய்வோரின் கூலியும் அவனுக்குக் கிடைக்கும் அதற்காக அதைச் செயல்படுத்துவேரின் கூலிகளில் குறைவு ஏற்படமாட்டாது. இஸ்லாத்தில் கெட்ட நடைமுறை ஒன்றை ஒருவன் நடைமுறைப்படுத்தினால் அதற்குரிய பாவமும், அவனுக்குப் பின் அதைச் செயல்படுத்துவோரின் பாவமும் அவனைச் சேரும். அதற்காக அதைச் செயல்படுத்தியோரின் பாவத்தில் குறைக்கப்படமாட்டாது.” (முஸ்லிம்)

இந்த ஹதீஸை எடுத்துக் காட்டி இஸ்லாத்தில் நல்ல நடைமுறையை ஏற்படுத்த அனுமதி உள்ளது. அப்படி ஏற்படுத்தினால் யாரெல்லாம் அதைப் பின்பற்றுகின்றார்களோ அவர்களுக்குக் கிடைப்பது போன்ற நன்மை உண்டாக்கியவருக்கும் கிடைக்கும். எனவே நல்ல பித்அத்தை உருவாக்க அனுமதி உள்ளது என சிலர் வாதிடுகின்றனர்.

இந்த வாதம் தவறானதாகும். இவர்கள் பித்அத் பற்றி செய்யப்பட்டுள்ள எச்சரிக்கைகளை அலட்சியம் செய்துவிட்டே இப்படி பேசுகின்றனர். இந்த ஹதீஸ் மர்க்கத்தில் இல்லாத ஒன்றை அவரவர் தமது சுய விருப்பத்திற்கு உருவாக்குவது குறித்துப் பேசவில்லை.

இங்கு “ஒருவன் நடைமுறைப்படுத்தினால்” என்று வரும் வாசகம் புதிதாக ஒன்றை மார்க்கமாக்கி நடைமுறைப்படுத்துவதைக் குறிக்கப் பயன்படுத்தப்படவில்லை. மாறாக மார்க்கத்தில் உள்ள ஒன்றை நடைமுறைக்குக் கொண்டு வருவதையே குறிப்பிடுகிறது. அந்த வாசகத்தின் கருத்தும் அதுதான். ஏனெனில் பின்வரும் வரலாறு அதை மிகத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகிறது.

“நபி (ஸல்) அவர்கள் எ ங்களுக்குப் பிரசங்கம் (குத்பா) செய்தார்கள். அதில் தான தர்மம் கொடுக்கும்படி மக்களைத் தூண்டினார்கள். மக்களோ அமைதியாகக் கொண்டிருந்தார்கள். நபி (ஸல்) அவர்களின் முகத்தில் கோபத்தின் அறிகுறிகள் தென்பட்டன. பின்னர் அன்சாரிகளில் ஒருவர் கொஞ்சம் பொருட்களைக் கொண்டு வர அதைத் தொடர்ந்து மக்கள் கொண்டு வர ஆரம்பிக்க, நபி (ஸல்) அவர்களின் முகம் சந்தோஷத்தால் குளிர மோற்சொன்ன பொன் மொழியைக் கூறியதாக ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்”

இச்சம்பவம் “முஸ்லிம்”, “தாரமீ” போன்ற கிரந்தங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

“இஸ்லாத்தில் அழகிய நடைமுறை ஒன்றை ஒருவர் நடைமுறைப்படுத்தினால்.. ..” என்று சொன்ன அதே நபி (ஸல்) அவர்கள்தான் “சகல பித்அத்துக்களும் வழிகேடு” எனவும் கூறியுள்ளார்கள். வாய்மையே வாக்காகக் கொண்ட ஒருவரிடமிருந்து ஒன்றை ஒன்று பொய்யாக்கும் விதமாக வாசகங்கள் வெளியாக முடியாது. நபி (ஸல்) அவர்களின் சொற்கள் ஒன்றுக்கொன்று முரண்பாடானவைகளாக இருக்கவே முடியாது.

எனவே ஒரு நபிமொழியை எடுத்துக் கொண்டு மற்றொரு நபி மொழியை புறக்கணிக்க எமக்கு எந்த அதிகாரமும் வழங்கப்படவில்லை. அப்படிச் செய்வது வேதத்தில் சிலதை விசுவாசித்து சிலதை நிராகரிப்பது போலாகிவிடும்.

“யாராவது ஒரு நன்மையை நடைமுறைப்படுத்தினால்.. “என்றுதான் நபி (ஸல்) அவர்கள் சொன்னார்களேயன்றி “யாராவது புதிதாக உருவாக்கினால்….” எனக் கூறவில்லை. அடுத்து அப்பொன்மொழியின் தொடரில் “இஸ்லாத்திலே…” எனவும் கூறியதால், புதிதாக உருவாகியவைகள் இஸ்லாத்தில் உள்ளவைகளல்ல. மேலும் “(நல்ல) அழகிய நடைமுறைகள்…” எனக் கூறியிருப்பதால் புதிதாக உருவாகியவைகள் அழகிய நடைமுறைகள் அல்ல.

“சுன்னா”வுக்கும், “பித்ஆ”வுக்கும் இடையில் உள்ள முரண்பாடுகள் மிகத் தெளிவானவை. “சுன்னா” என்பது பின்பற்றப்பட வேண்டிய பாதை “பித்ஆ” என்பது மார்க்கத்தில் புதிதாக உண்டானவைகள்.

மக்கள் தாங்களாக உருவாக்கிக் கொள்ளும் நூதன அனுஷ்டானங்களுக்கு “அழகிய நடைமுறை” என்று விளக்கமளித்ததாக முன்னோர்களின் வரலாற்றுக் குறிப்புக்களில் காணப்படவில்லை.

“யாராவது நடைமுறைப்படுத்தினால்.. ..” என நபிமொழியில் வந்திருக்கும் வாசகம் தெளிவுபடுத்துவது என்னவெனில், இஸ்லாத்தில் உள்ள ஒரு விடயம் மக்களால் கைவிடப்பட்ட நிலையில் அதை மீண்டும் உயிர்ப்பிப்பதையே சுட்டிக்காட்டுகின்றது. இதற்கு ஆதாரமாகப் பின்வரும் நபிமொழியைக் கூறலாம்.

“எனது நடைமுறையில் ஒரு நடைமுறையை யாராவது உயிர்ப்பித்து மக்கள் அதன்படி செயற்பட்டால், அவருக்கு செயற்பட்ட அனைவரின் கூலியும் உண்டு. அவர்களது கூலிகளிலும் குறைவு ஏற்படாது. யாராவது புதிதாக ஒன்றை உருவாக்கி செயற்படுத்தினால், அதைச் செய்தவர்களின் தீமைகள் அனைத்தும் இவருக்கும் உண்டு. அவர்களுக்குரிய தீமைகளில் எதுவும் குறைக்கப்பட மாட்டாது. (இப்னுமாஜா)

“யாராவது நல்ல நடைமுறையை நடைமுறைப்படுத்தினால்…” என்ற நபிமொழி வாசகங்களில் “கெட்டது, நல்லது” என இரு விடயங்கள் கூறப்பட்டுள்ளன. இந்த இரண்டையும் மார்க்கத்தின் ஒளியில் தான் பார்க்க வேண்டுமே தவிர, இது கெட்டது. இது நல்லது என தீர்ப்புக் கூற எம்மால் முடியாது.

உமர் (ரழி) அவர்களது காலத்தில் மக்கள் ரமழான் மாத இரவுத் தொழுகையைத் தனித் தனியாகவும், சிறுசிறு குழுக்களாகவும் தொழுது வந்தனர். இந்த ஒழுங்கற்ற நிலையை நீக்க அனைவரையும் ஒரே இமாமின் பின்னால் தொழுவதற்கான ஒரு ஏற்பாட்டை உமர் (ரழி) அவர்கள் செய்துவிட்டு, மக்கள் ஒரே இமாமின் கீழ் தொழுவதைப் பார்த்து “இந்த புதிய ஏற்பாடு நல்லதாக உள்ளதே” என்ற கருத்தைக் கூறி “நிஃமல்பித்ஆத்” இது நல்ல பித்அத்தாக உள்ளது என்று கூறினார்கள்.

இதை ஆதாரமாக வைத்து உமர் (ரழி) பித்அத்தில் நல்லதும் உண்டு கெட்டதும் உண்டு எல்லா பித்அத்தும் கெட்டது அல்ல என்ற கருத்திலே இதனைக் கூறினார்கள். என்று மாற்றுக் கருத்துடையோர் கூறிவருகின்றனர்.

ஒரு வாதத்திற்காக – உண்மையில் அல்ல – அதை நாம் ஒப்புக் கொண்டாலும், அல்லாஹ்வுடைய தூதருடைய பேச்சுக்கு எந்த மனிதனுடைய பேச்சும் குறுக்கீடு செய்ய முடியாது. அவர் எவராக இருந்தாலும் சரிதான்.

நபி (ஸல்) அவர்களுக்குப் பின் இந்த சமுதாயத்தின் சிறந்த மனிதரான அபூபக்கர் (ரழி) அவர்களின் பேச்சோ, நபி (ஸல்) அவர்களுக்குப் பின் இச்சமுதாயத்தின் இரண்டாவது சிறந்த மனிதரான உமர் (ரழி) அவர்களின் பேச்சோ அல்லது வேறு எவரின் பேச்சுமோ நபி (ஸல்) அவர்களின் பேச்சுக்கு குறுக்கீடாக அமைய முடியாது.

“அல்லாஹ்வுடைய தூதர் சொன்னார்கள் என நான் கூறும் போது நீங்களோ அபூபக்கர், உமர் கூறினார்கள். எனக் கூறுகின்றீர்களே! உங்களின் மீது வானத்திலிருந்து கல்மாரி பொழியக் கூடும்” என அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரிழி) அவர்கள் கூறுகின்றார்கள்.

“இதுதான் அல்லாஹ்வுடைய செயன்முறை எனத் தொளிவாகத் தெரிந்த பின், வேறொருவரின் சொல்லுக்காக அதை விட்டுவிடுவது கூடாது என முஸ்லிம்கள் அனைவரும் ஏகோபித்து முடிவெடுத்துள்ளனர்” என இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

“நபி (ஸல்) அவர்களின் பொன்மொழியை எவன் தட்டிக் கழிக்கிறானோ அவன் அழிவின் விளிம்பில் இருக்கிறான்” என இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

அடுத்து, தராவீஹ் தொழுகையில் மக்கள் ஒன்று சேர்ந்தபொழுதுதான் மேற்சொன்ன அவ்வாசகத்தை உமர் (ரழி) பயன்படுத்தினார்கள். தராவீஹ் தொழுகை “பித்அத்”தான ஒரு செயலல்ல. ஏனெனில் பின்வரும் விடயத்தை ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

“நபி (ஸல்) அவர்கள் ஒரு இரவு பள்ளியில் தொழுதார்கள். அவர்களுடைய தொழுகையுடன் மக்களும் தொழுதார்கள். பின்னர் அடுத்த இரவும் நபி (ஸல்) அவர்கள் தொழ மக்கள் தொகை அதிகரித்துவிட்டது. மூன்றாவது அல்லது நான்காவது இரவிலும் அவர்கள் ஒன்று சேர்ந்துவிட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் அவர்களுக்கு மத்தியில் வரவே இல்லை. விடிந்ததும்,
“நீங்கள் செய்தவற்றை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். இது உங்கள் மீது கட்டாயக் கடமையாக ஆக்கப்பட்டுவிடுமோ எனப் பயந்ததனால் உங்கள் மத்தியில் வராமல் வீட்டிலேயே இருந்து விட்டேன்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இது நடந்தது ரமழான் மாதத்திலாகும். (புஹாரி)

தராவீஹ் தொழுகையில் எதற்காக ஜமாஅத்தை விட்டார்கள் என்ற காரணத்தை நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுக் கூறுகிறார்கள். அக்காரணம் இப்போது இல்லை என்பதை விளங்கிக் கொண்ட உமர் (ரழி) அவர்கள், தராவீஹ் தொழுகையை மீண்டும் ஜமாஅத்தாகத் தொழ ஆரம்பித்தார்கள். உமர் (ரழி) செய்த அச்செயலுக்கு நபி (ஸல்) அவர்களின் செயல் அடிப்பiயாக அமைந்திருக்கிறது.

உமர் (ரழி) அவர்கள் செய்தது “பித்அத்” அல்ல என்பது மிகத் தெளிவாகத் தெரிந்தாலும் அவர்களது பேச்சில் வந்த குறிப்பிட்ட அந்த “பித்அத்” என்ற பதத்தின் பொருள் யாது?

இங்கு உமர் (ரழி) அவர்கள் கூறியதன் கருத்து அறபு மொழி வழக்கமே தவிர, மார்க்க அடிப்படையில் அல்ல.

அறபு மொழி வழக்கில் “பித்அத்” என்பது புதிதாகச் செய்யப்படும் ஒரு செயலுக்குப் பயன்படுத்தப்படுவதாகும். இத்தொழுகையோ அபூபக்கர் (ரழி) அவர்களது காலத்திலும் உமர் (ரழி) அவர்களின் ஆட்சியின் ஆரம்ப காலத்திலும் ஒரே இமாமின் கீழ் கூட்டாகச் செயற்படவில்லை. எனவே தான் மொழி வழக்கின் அடிப்படையில் பொருள் கொள்ள வேண்டி இருக்கிறது.

இவ்வாறு நோக்கும் போது உமர் (ரழி) அவர்கள் நல்ல பித்அத் உண்டு என்ற கருத்தில் இருந்தார்கள் என்ற வாதம் வலுவற்றுவிடுகின்றது. எனவே, பித்அத்தில் நல்லது, கெட்டது என்ற பேதம் இல்லை. அனைத்து பித்அத்துக்களும் வழிகேடுகளே என்பதை உணர்ந்து செயற்பட வேண்டும்.

மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட அனைத்தும் பித்அத்கள் என்பதையும், பித்அத் கள் அனைத்தும் வழிகேடுகள் என்பதையும் பித்அத்தினால் ஏற்படக் கூடிய பாரதூரமான மார்க்க ரீதியான விபரீதங்களையும் பார்த்தோம். இந்த விபரீதங்களைக் கருத்திற்கொள்ளாத சிலர் சில தவறான வாதங்களை முன்வைத்து நல்ல பித்அத்தும் இருக்கின்றதென வாதிக்கின்றனர். இந்த வாதம் தவறானதாகும்.

இந்த வாதத்தை ஏற்றுக் கொண்டால் நபி(ச) அவர்கள் பித்அத்களைக் கண்டித்ததில் அர்த்தமில்லாமல் போகும். “எல்லா பித்அத்களும் வழிகேடுகளே!” என்று கூறியதில் அர்த்தமற்றுப் போய் விடும். இந்த மார்க்கம் பூரணப்படுத்தப்பட்டு விட்டதென்ற குர்ஆனின் கூற்றை மறுப்பது போன்று ஆகிவிடும். அவரவர் தாம் விரும்பிய விதத்தில் மார்க்க வழிபாடுகளை உருவாக்க முடியுமென்றால் அல்லாஹ் இறைத் தூதர்களை அனுப்பியதிலும் அர்த்தம் இல்லாமல் போய்விடும். இவ்வாறு இஸ்லாத்தின் அடிப்படைகளையே ஆட்டங்காணச் செய்யும் அபத்தமான வாதமாகவே “பித்அதுல் ஹஸனா” வாதம் இருக்கின்றது.

இது குறித்து ஸஹாபாக்கள்-அறிஞர்கள் சிலரது கூற்றுகளைத் தருவது இந்த இடத்துக்கு ஏற்றமாக இருக்குமெனக் எண்ணுகின்றேன்.

அபூபக்கர்(ர) அவர்கள் கூறியதாக இப்னு ஸஅத்(ர) அவர்கள் கூறும் போது பின்வருமாறு குறிப்பிட்டதாகக் கூறுகின்றனர்;
அதாவது, “மனிதர்களே! நிச்சயமாக நான் (மார்க்கத்தில் உள்ளதைப்) பின்பற்றுபவனே! புதிதாக எதையும் உருவாக்குபவன் அல்ல! நான் நல்லது செய்தால் எனக்கு உதவி செய்யுங்கள்! நான் தவறி விட்டால் என்னை நேர்ப்படுத்துங்கள்!”.
(தபகாதுல் குப்ரா 3/136)
அபூபக்கர்(ர) அவர்கள் பித்அத்தைக் கண்டித்திருப்பதை இது உணர்த்துகின்றது.
இவ்வாறு நாம் கூறும் போது “நபி(ச) அவர்கள் குர்ஆனைத் தனி நூலாக ஆக்கவில்லை! அபூபக்கர்(ர) அவர்கள்தான் குர்ஆனைத் தனி நூலாக ஒன்று திரட்டினார்கள்! இது பித்அத் இல்லையா?” எனச் சிலர் கேட்பர்.

நபி(ஸல்) அவர்களது காலத்திலேயே குர்ஆன் நபியவர்களால் நியமிக்கப்பட்ட “குத்தாபுல் வஹீ” எனும் வஹீயை எழுதுவோராலும், தனி நபர்களாலும் எழுதிப் பாதுகாக்கப்பட்டன. ஆயத்துகள் இறங்கும் போது இதை இந்த ஸூறாவில் இந்த ஆயத்துக்கு அடுத்ததாகப் பதிவு செய்யுங்கள்!” என நபி(ஸல்) அவர்கள் கட்டளையிடுவார்கள். அவ்வாறே பதிவு செய்யப்பட்டு வந்தது. நபி(ஸல்) அவர்களது மரணத்தின் பின்னர் குர்ஆனை முழுமையாக மனனம் செய்த நபித் தோழர்கள் யுத்தங்களில் மரணித்த போதுதான் அங்குமிங்குமாகத் தனித் தனியாகப் பதியப்பட்ட குர்ஆனை முழுமையாக ஒரே நூலாகப் பதிந்து பாதுகாக்கப்பட வேண்டிய அவசியம் உணரப்பட்டது. அபூபக்கர்(ர) அவர்கள், உமர்(ர) அவர்களது ஆலோசனையின் பேரில் இந்த முடிவைச் செய்தார்கள். குர்ஆனைக் குறிக்க “அல்கிதாப்” (வேதம், புத்தகம்) என்ற பதம் அல்குர்ஆனில் பல இடங்களில் இடம்பெற்றுள்ளது.
(பார்க்க: 2:2, 2:83, 2:89, 2:129, 151, 176, 177, 213, 231)

நபி(ஸல்) அவர்கள் உயிருடனிருக்கும் போது வஹீ வந்துகொண்டிருந்த காரணத்தினால் நூலாக்கப் பணியைச் செய்ய முடியாது. எனவே எழுதிப் பாதுகாக்கும் பணி மட்டும்தான் நடந்தது. நபி(ஸல்) அவர்களது மரணத்தின் பின் நூலாக்குவதற்கு இருந்த தடையும் நீங்கி விட்டது. குர்ஆனைப் பாதுகாப்பதற்கான ஏற்பாடும் அவசியமாகி விட்டது.

அடுத்து, குர்ஆனை நூலாக ஆக்கியதென்பது தனியான இபாதத் அல்ல. இதனால் இஸ்லாமிய இபாதத்களில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. குர்ஆனை ஓதுவதில் கூட மாற்றங்களோ, திருத்தங்களோ ஏற்படவில்லை. எனவே இது பித்அத்தில் சேராது. சில அறிஞர்கள் “பித்அதுல் ஹஸனா” என்றொரு பிரிவு இருப்பதாகக் கூறுகின்றனர். “எது நல்ல பித்அத்?” என்று கேட்டால் “மத்ரஸா கட்டுவது, பள்ளி கட்டுவது, குர்ஆன் ஒன்று திரட்டப்பட்டது, ஒலிபெருக்கியில் அதான் சொல்தல் மற்றும் பயான்களை நிகழ்த்துவது என்று பித்அத்தில் சேராத சில அம்சங்களை “நல்ல பித்அத்” என்ற பிரிவில் சேர்க்கின்றனர். இது தவறாகும்.

பித்அத் குறித்து இப்னு மஸ்ஊத்(ர) அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள்;
“(உள்ளதைப்) பின்பற்றுங்கள்! புதிதாக எதையும் உருவாக்காதீர்கள்! நீங்கள் போதுமாக்கப்பட்டு விட்டீர்கள்! எல்லா பித்அத்களும் வழிகேடுகளே!”
(தபரானீ 9/154, 8770, மஜ்மஉஸ் ஸவாயித் 1/181)

இருப்பதைப் பின்பற்றினாலே போதும். புதிதாக எதையும் நீங்கள் உருவாக்க வேண்டியதில்லை. மார்க்கம் உங்களுக்குப் பூரணமான வழிகாட்டலைத் தந்திருக்கின்றது. நீங்கள் எதையும் உருவாக்கும் அளவுக்கு மார்க்கம் குறைவடையவில்லையென்று கூறும் இப்னு மஸ்ஊத்(ரலி) அவர்கள் பித்அத்களை வன்மையாகக் கண்டிப்பவராகவும் இருந்தார்கள். இதனையும் மார்க்கத்தில் நல்ல பித்அத்தென்று எதுவும் இல்லை என்பதையும் பின்வரும் சம்பவம் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது.

பள்ளியில் ஒரு கூட்டம் ஒன்று கூடியிருந்து கூட்டாக திக்ர் செய்துகொண்டிருந்தனர். இது பற்றிக் கேள்விப்பட்ட இப்னு மஸ்ஊத்(ர) அவர்கள் அந்த இடத்துக்குச் சென்று அவர்களைப் பின்வரும் வார்த்தைகள் மூலம் கண்டித்தார்கள்.

“முஹம்மத்(ஸல்) அவர்களின் தோழர்களும், மனைவியரும் உயிருடனிருக்கின்றனர்! அவரது ஆடைகளும், பாத்திரங்களும் கூட அப்படியே இருக்கும் போது இவ்வளவு விரைவாக உங்களை வழிகெடுத்தது எது?” என்று கேட்டார்கள்.

இதை முன்னின்று நடத்தி அம்ர் என்பவரைப் பார்த்து,
“அம்ரே! நீங்கள் வழிகெட்ட பித்அத்தை உண்டாக்கி விட்டீர்கள்!” என்று கண்டித்ததுடன், “நீங்கள் முஹம்மத்(ஸல்) அவர்களையும், அவர்களது தோழர்களையும் விட நேர்வழி பெற்றவர்களாகி விட்டீர்களா?” என்று கேட்டார்கள்.
(பார்க்க: தபரானீ 8557, 8558, 8559)

இந்த நிகழ்ச்சியை நன்றாகச் சிந்தித்துப் பாருங்கள்!
“நல்ல பித்அத்” என்ற ஒன்று இருக்குமாக இருந்தால் பள்ளியில் ஒன்று சேர்ந்து கூட்டாக திக்ர் செய்வதும் நல்ல பித்அத்தில் தானே சேரும்?

இதை ஏன் இப்னு மஸ்ஊத்(ரலி) அவர்கள் கண்டிக்க வேண்டும்?

மார்க்கத்தில் நல்ல பித்அத்தென்று ஒன்றும் இல்லை. பித்அத்கள் அனைத்துமே வழிகேடுகள்தான். எனவேதான் இப்னு மஸ்ஊத்(ரலி) அவர்கள் பள்ளியில் கூட்டு திக்ர் செய்தோரைக் கண்டித்தார்கள். இது நபி(ஸல்) அவர்களோ, அவர்களது தோழர்களோ நடைமுறைப்படுத்தாத புதிய செயலாகும். இதை மார்க்கமென்றும், நல்லது என்றும் சொல்வதன் மூலம் இவர்கள் தம்மை நபியையும், நபித் தோழர்களையும் விடவும் அதிகம் நேர்வழியை அறிந்து கொண்டோராகக் காட்டிக்கொள்கின்றனர். எனவேதான் “நீங்கள் இந்தப் புதிய வழிபாட்டை உருவாக்குவதன் மூலம் நபி(ஸல்) அவர்களை விடவும், நபித் தோழர்களை விடவும் உங்களை அதிகம் நேர்வழி பெற்றவர்களென்று கூற வருகின்றீர்களா?” என்று கேட்கின்றார்கள்.

மார்க்கத்தில் நல்ல பித்அத்தென்று எதுவும் இல்லை. பித்அத்கள் அனைத்தும் வழிகேடுகளே என்பதை இந்த நிகழ்ச்சி சந்தேகத்துக்கு இடமில்லாமல் நிரூபிக்கின்றது.

இப்னு உமர்(ரலி) அவர்கள் இது பற்றிப் பின்வருமாறு கூறுகின்றார்கள்;

“மக்கள் நல்லதாகக் கண்ட போதிலும் அனைத்து பித்அத்களும் வழிகேடுகளே!”.

இவ்வாறு கூறிய இப்னு உமர்(ரலி) அவர்கள் பித்அத் விடயத்தில் மிக விழிப்பாக இருந்தார்கள். ஒரு மஸ்ஜிதுக்கு இப்னு உமர்(ரலி) அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டார்கள். அங்கு அதான் கூறிய முஅத்தின், அதன் முடிவில் “தொழுகை! தொழுகை!” என அதானில் இல்லாத சில வார்த்தைகளைக் கூறிய போது வயோதிபத்தினால் பார்வையை இழந்திருந்த இப்னு உமர்(ரலி) அவர்கள் “இது பித்அத்!” எனக் கூறி, “என்னை வேறு பள்ளிக்கு அழைத்துச் செல்லுங்கள்!” என்று கூறினார்கள்.

எனவே மார்க்கத்தில் “நல்ல பித்அத்” என்ற பேச்சுக்கு இடமேயில்லை. மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட அனைத்தும் பார்ப்பதற்கு நல்லதாகத்தான் தென்படும். அது மார்க்கத்தில் இல்லாததென்பதால் அல்லாஹ்வின் அங்கீகாரத்துக்கு அப்பாற்பட்டது என்பதோடு வழிகேடாகும் என்பதே இஸ்லாத்தின் நிலைப்பாடாகும். இது குறித்து மார்க்க அறிஞர்கள் பலரும் உறுதியான நிலைப்பாட்டில் இருந்துள்ளனர்.

பித்அத் கூடாது என்று கூறும் போது மாற்றுக் கருத்துள்ள சில அறிஞர்கள் பித்அத் கூடாது தான் இருந்தாலும் நல்ல பித்அத் (பித்அதுல் ஹஸனா) ஆகுமானது என்று கூறுகின்றனர். இவ்வாறு கூறுவது தவறானது என்பது குறித்தும் பித்அத்தில் (வழிகேட்டில்) நல்ல பித்அத் (நல்ல வழிகேடு) என்று ஒன்று இல்லை என்பது குறித்து கடந்த இதழ்களில் நாம் பார்த்தோம். இது குறித்து மேலதிக தெளிவுக்காக இவ்வாக்கம் எழுதப்படுகிறது.

“பித்அதுல் ஹஸனா” என்ற ஒன்று இல்லை என்று கூறும் போது மாற்றுக் கருத்துடைய அறிஞர்கள் பித்அதுல் ஹஸனா என்ற வார்த்தையை மதிக்கத்தக்க பல அறிஞர்களும் பயன்படுத்தியுள்ளார்களே! அவர்களுக்கு இது தெரியாதா என்ற தோரணையில் கேள்வி எழுப்புகின்றனர். இந்த கேள்விக்கு விடையாக இந்த ஆக்கம் அமையும்.

“பித்அதுல் ஹஸனா” என்ற ஒன்று இல்லை என நாம் கூறும் போது எமது கருத்தாக மட்டும் இல்லாமல் ஹதீஸை ஆதாரமாக வைத்தோம். மற்றும் இப்னு மஸ்ஊத், இப்னு உமர்(ர) போன்ற நபித் தோழர்கள், இமாம் “ஷாஃபிஈ(ரஹ்), இமாம் மாலிக்(ரஹ்) போன்றோரது கருத்துக்களையும் எடுத்து வைத்தோம். “பித்அதுல் ஹஸனா” என்ற ஒன்று இல்லை என இவர்கள் கூறுகின்றார்கள். “பித்அதுல் ஹஸனா” என்று ஒன்று இருந்தால் அந்த செய்தி இந்த ஸஹாபாக்களுக்கும், இமாம்களுக்கும் தெரியாமல் போய்விட்டதா? என்ற கேள்விக்கு பதில் தேடியாக வேண்டும்.

“பித்அதுல் ஹஸனா” இருக்கிறது என்று கூறிய இமாம்களை விட இவர்கள் அறிவாளிகளா? அந்த இமாம்களுக்கு விளங்காதது இவர்களுக்கு விளங்கிவிட்டதா? என்றெல்லாம் சில அறிஞர்கள் வாதிக்கின்றர்.

“பித்அதுல் ஹஸனா” இல்லை எனக் கூறிய ஸஹாபாக்கள் இமாம்களை விட, இருக்கிறது எனக் கூறும் நீங்கள் அறிவாளிகளா? அவர்களுக்கு விளங்காதது உங்களுக்கு மட்டும் விளங்கிவிட்டது என்று கூற வருகிறீர்களா?

அடுத்து மதிக்கத்தக்க அறிஞர்கள் “பித்அதுல் ஹஸனா” என்ற பதத்தைப் பயன்படுத்தியுள்ளார்கள். இருப்பினும் இதே அறிஞர்கள் ஹதீஸில் இல்லாத சில நடைமுறைகளுக்கு எதிராகப் பேசியுள்ளார்கள். அவர்கள் “பித்அதுல் ஹஸனா” என்று கூறிய சில பித்அத்துக்களுக்கும் கூடாது எனக் கூறிய பித்அத்துக்கும் இடையில் எந்த வேறுபாடும் இல்லை. எனவே, பித்அதுல் ஹஸனா என்று கூறுவதில் அவர்கள் தமக்குத் தாமே முரண்படுகின்றனர்.

கண்ணியத்திற்குரிய அறிஞர்களைக் குறை கூற வேண்டும் என்பதோ அவர்கள் இந்த தீனுக்கு ஆற்றிய பணிகளைக் குறைத்து மதிப்பிட வேண்டும் என்றோ நாம் கடுகளவும் கருதவில்லை. உண்மை தெளிவாக உணரப்பட வேண்டும் என்பது மட்டுமே எமது எண்ணமாகும். இந்த அடிப்படையில் “பித்அதுல் ஹஸனா” என்ற கருத்தை முன்வைத்துள்ள மதிக்கத்தக்க அறிஞர்கள் சிலர் மற்றும் சில பித்அத்துக்கள் விடயத்தில் கூறியிருக்கும் கருத்துக்கள் சிலவற்றை தொகுத்துத் தருவது பொருத்தமாக அமையும். என்று எண்ணுகின்றோம்.
அல் இஸ்-இப்னு அப்துஸ் ஸலாம் என்பவர் “பித்அதுல் ஹஸனா” இருக்கின்றது என்று கூறிய அறிஞர்களில் ஒருவராவார். அவர் குனூத் ஓதும் போது கையைத் தூக்கி ஓத வேண்டுமா என்பது குறித்து பேசும் போது பின்வருமாறு கூறுகின்றார்கள்.
குனூத்தின் போது கையை உயர்த்துவது விரும்பத்தக்கது அல்ல. சூரதுல் ஃபாத்திஹாவில் வரும் துஆவுக்கோ, இரண்டு ஸஜதாக்களுக்கிடையில் ஓதப்படதும் துஆவுக்கோ கையை உயர்த்தாதது போன்றே குனூதில் கையை உயர்த்தாமல் இருக்க வேண்டும். இது குறித்து எந்த ஆதாரபூர்வமான ஹதீஸும் இல்லை. இவ்வாறே அத்தஹிய்யாதில் ஓதப்படும் துஆவுக்கும் கைகளை உயர்த்தக் கூடாது. நபி(ச) அவர்கள் தமது இரு கைகளையும் உயர்த்திய சந்தர்ப்பங்கள் அல்லாத துஆக்களின் போது கைகளை உயர்த்துவது விரும்பத்தக்கது அல்ல. துஆ முடிந்ததும் தமது இரு கைகளாலும் அறிவிலிகள் தாம் முகத்தைத் தடவுவர். குனூத்தில் ஸலவாத்து ஓதுவது கூடாது. குனூத் துஆவில் நபி(ச) அவர்கள் கற்றுத் தந்ததை விட அதிகப்படுத்துவதோ அல்லது குறைப்பதோ கூடாது.
இந்த செய்தி அறிஞர் அவர்களின் பதாவா நூலில் 392 ஆம் பக்கத்தில் இடம்பெற்றுள்ளது. குனூத்தில் கையை உயர்த்தி துஆச் செய்வது, குனூத்தில் ஸலவாத்து ஓதுவது, நபியவர்கள் கைகளை உயர்த்தி துஆக் கேட்காத சந்தர்ப்பங்களில் கைகளை உயர்த்தி துஆக் கேட்பது, துஆக் கேட்ட பின்னர் கரங்களால் முகத்தைத் தடவுவது இவற்றில் எல்லாம் என்ன குற்றம் இருக்கிறது? நபி வழியில் ஆதாரம் இல்லை என்பதை விட இதில் வேறு ஏதும் தவறுகள் உள்ளனவா? “பித்அதுல் ஹஸனா” இருக்கிறது என்று கூறும் அறிஞர் அவர்கள் இவற்றையெல்லம் ஏன் பித்அதுல் ஹஸனாவிலே சேர்க்கவில்லை? பித்அதுல் ஹஸனா பற்றி பேசும் அறிஞர்கள் பித்அத் விடயத்தில் தமக்குத் தாமே முரண்பட்டிருப்பதைத் தானே இது உறுதிப்படுத்துகின்றது.

இதே அறிஞர் அமல்களைச் செய்துவிட்டு அதன் நன்மைகளை மரணித்தவர்களுக்கும், உயிருடன் இருப்பவர்களுக்கும் ஹதியா செய்வது பற்றி தமது பதாவாவில் கூறும் போது,

ஒருவர் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு ஒரு நல்லமலைச் செய்து விட்டு அதன் நன்மையை உயிருடன் இருப்பவருக்கோ அல்லது மரணித்தவருக்கோ ஹதியாச் செய்தால் அந்த நன்மை அவரைச் சென்றடையாது
“மேலும், மனிதனுக்கு அவன் முயற்சித் ததைத் தவிர வேறு எதுவும் இல்லை” (அன்னஜ்ம்:39)

ஸதகா, நோன்பு, ஹஜ் போன்ற …… விதிவிலக்கு அளிக்கப்பட்ட அமல்கள் அல்லாமல் வேறு அமல்களை மரணித்தவருக்கு சேர்ப்பிப்பதற்காகச் செய்தாலும் அதுவும் சென்றடையாது. பதாவா அல் இஸ்-இன்னு அப்துஸ்ஸலாம் 289)

குர்ஆனை ஓதி ஹதியாச் செய்தால் அது சேரும் என்று சிற அறிஞர்கள் கூறியிருக்கும் போது “பித்அதுல் ஹஸனா” இருக்கிறது என்று கூறும் இந்த அறிஞரோ அதை மறுக்கின்றாரே! இதை ஏன் அவர் பித்அதுல் ஹஸனாவில் சேர்க்கவில்லை?

‘ஷஃபான் மாதத்தில் நடுப்பகுதியில் “ஸலாதுர் ரகாயிப்” என்ற பெயரில் தொழுகை ஒன்று தொழப்படுவதுண்டு. இதனை சிலர் பித்அதுல் ஹஸனா என்று கூறுகின்றர். எனினும் மார்க்கத்தில் பித்அதுல் ஹஸனா இருக்கிறது என்று கூறும் பல அறிஞர்களும் இதை வண்மையாக மறுத்துள்ளனர். ஒரு தொழுகையை எதற்காக மறுக்க வேண்டும்? அதில் என்ன தீங்கு அல்லது குற்றம் இருக்கிறது! நபி வழியில் இல்லை என்பதை விட இதை இந்த அறிஞர்கள் தடுப்பதற்கு வேறு காரணம் இருக்கிறதா? இந்தக் காரணத்தை முன்வைத்துத் தான் நபி வழியில் இல்லாத புதிய வழிபாடுகள், தொழுகைகள் அனைத்தையும் நாம் பித்அத் என்கின்றோம்.

அல் இஸ்-இப்னு அப்துஸ்ஸலாம் அவர்கள்
என்ற நூலில் 7ஆம், 8ஆம் பக்கங்களில் இந்தத் தொழுகையைக் கண்டித்துள்ளார்கள். அறபா, முஸ்தலிபாவில் நிற்பது, ஜமாராவில் கல் எறிவது என்பவை இபாதத்துக்கள் தான். ஹஜ் அல்லாத காலத்தில் போய் அறபா, முஸ்தலிபாவில் நின்றால் அல்லது ஜமாராத்தில கல்லெறிந்தால் அது இபாதத் ஆகாது. எனவே, ஒரு இபாதத் செய்வதென்றால் அதற்காக கூறப்பட்ட நேரம், இடம் அனைத்தும் கவனத்திற் கொள்ளப்பட வேண்டும் என்று விபரிக்கின்றார்.

“ஷாஃபிஈ மத்ஹபின் பிரபலமான இமாமான இமாம் நவவி (ரஹ்) அவர்களும் பித்அத்தை நல்லது, கெட்டது எனப் பிரித்துள்ளார்கள். எனினும் அவர்களும் இந்தத் தொழுகையை தமது பதாவா பக்கம் 57 இல் கண்டிக்கிறார்கள். இவ்வாறே அறிஞர் அப்துல்லாஹ் அல் காரிமூன் அவர்களும் பித்அதுல் ஹஸனா பற்றிப் பேசியவராவார். அவரும் என்ற நூலில் இந்த பித்அத்தான தொழுகைகளையும், வணக்கங்களையும் கண்டிக்கின்றார்கள். இதனைத்தான் நாம் இன்று ஒட்டுமொத்தமான பித்அத்துக்களுக்கும் கூறுகின்றோம்.

இவ்வாறே இமாம் அபூ ஸாமா(ரஹ்) அவர்கள் மவ்லிதுன் நபியை பித்அதுல் ஹஸனா என்று கூறியவர். இவர் தனது என்ற நூலில் ஏராளமான பித்அத்துக்களைக் கண்டிக்கிறார்கள். இவர் ஜனாஸா தூக்கும் போது இஸ்தஃபிரூ லஹு கபரல்லாஹு லகும் என்று கூறுவதைக் கண்டிக்கிறார். ஜும்ஆவுக்கு முன் சுன்னத் இல்லை என்கின்றார். ஸலாதுல் ரகாயிப் கூடாது என்கின்றார். ஷஃபான் நடுப்பகுதியில் தொழப்படும் தொழுகை கூடாது என்கின்றார். மவ்லித் பித்அதுல் ஹஸனா என்றால் ஷஃபான் தொழுகை எப்படிக் கெட்ட பித்அத் ஆவது? என்ற கேள்விக்கு நியாயமான பதில் இருக்காது. ஷஃபான் தொழுகை நபி வழிக்கு மாற்றமானது என்றால் மவ்லிதுன் நபியும் நபிவழிக்கு மாற்றமானதே! அது கூடும், இது கூடாது என்று கூறுவது முரண்பாடாக இல்லையா?

மற்றும் பல அறிஞர்களும் பித்அதுல் ஹஸனா இருக்கிறது என்று கூறிவிட்டு பல பித்அத்துக்களை எதிர்த்து எழுதியுள்ளார்கள். மேலதிக விளக்கத்துக்காகவும் உறுதிக்காகவும் இன்னும் சில செய்திகளை இன்ஷா அல்லாஹ் அடுத்த இதழில் நோக்குவோம்.

சில அறிஞர்கள் பித்அதுல் ஹஸனா இருக்கிறது என்று கூறுகின்றனர். அதேவேளை அவர்கள் மற்றும் பல பித்அத்துக்களைக் கண்டித்துள்ளனர். இவர்கள் கண்டித்துள்ள பித்அத்துக்களுக்கும், இவர்கள் பித்அதுல் ஹஸனா என்று கூறும் பித்அத்துக்களுக்கும் இடையில் எந்த வேறுபாடும் இல்லை. பித்அத்தை நல்லது, கெட்டது என்று எந்த அடிப்படையில் பிரிக்கின்றனர் என்பது புரியவில்லை.

நல்ல பித்அத், கெட்ட பித்அத் என்று கூறுகின்றனர். பித்அதுல் ஹஸனா எது என்று கேட்டால் நல்ல பித்அத் என்கின்றனர். பித்அதுல் ஸைய்யிஆ எது எனக் கேட்டால் கெட்ட பித்அத் என்கின்றர். அதேவேளை பல பித்அத்துக்களைக் கண்டித்துள்ளனர். அவை இவர்களின் பார்வையில் நல்லதாகத்தான் இருக்கின்றன. இவ்வகையில் நல்ல பித்அத் இருக்கின்றது என்று கூறும் அறிஞர்கள் கண்டித்துள்ள மற்றும் சில பித்அத்துக்கள் குறித்து சென்ற இதழில் குறிப்பிட்டிருந்தோம். பித்அதுல் ஹஸனா இருக்கிறது என்று கூறும் அறிஞர்கள் தமக்குத் தாமே முரண்படுவதையே இது எடுத்துக் காட்டுகின்றது. இதனை இன்னும் அதிகமாக உறுதி செய்வதற்காக மற்றும் சில அறிஞர்களின் கூற்றுக்கள் சிலவற்றைத் தொகுத்துத் தருகின்றோம்.

இமாம் நவவி(ரஹ்)
இஸ்லாமிய உலகு அறிந்த முக்கிய அறிஞர்களில் இவரும் ஒருவர். ஷாஃபிஈ மத்ஹபைச் செர்ந்த அறிஞர்களில் முக்கியமானவர். இவர் நல்ல பித்அத், கெட்ட பித்அத் என பித்அத்தைப் பிரிப்பதை சரிகாணும் அறிஞர்களில் ஒருவராவார். இவர் மக்களின் மத்தியில் காணப்பட்ட பல பித்அத்துக்களைக் கண்டித்தார். ஆனால் அவை எந்த அடிப்படையில் கெட்ட பித்அத்தாகியது என்பது தெரியாது. நபி வழியில் இல்லையென்பதைத் தவிர அவற்றைக் கெட்டது எனக்கூற எந்த முகாந்திரமும் இல்லை. பித்அதுல் ஹஸனாவை நியாயப்படுத்துவது என்றால் இவற்றையும் பித்அதுல் ஹஸனா என்று கூறிவிட்டுப் போகலாம். 

அதான் கூறும் போது ‘ஹய்ய அலா கைரில் அமல்’ என்று கூறும் பழக்கம் இருந்தது. அது பற்றி இமாமவர்கள் தமது அல் மாஜ்மூஃ எனும் ஏட்டில் குறிப்படும் போது, 

அதானில் அமல்களில் சிறந்ததின்பால் விரைந்து வாருங்கள் என்று கூறுவது வெறுக்கத்தக்கதாகும். ஏனெனில் இது நபியவர்கள் செய்ததாக வரவில்லை. பைஹகி இமாம் இது குறித்து இப்னு உமர் மற்றும் அலி இப்னுல் ஹுஸைன்(வ) ஆகியோர் தொடர்புபட்ட மவ்கூபான செய்தியை அறிவிக்கின்றார். இந்த வார்த்தைகள் நபி(ச) அவர்களைத் தொட்டும் உறுதி செய்யப்படவில்லை என பைஹகி இமாம் கூறுகின்றார். அதானில் மேலதிக வார்த்தைகளை மேலதிகமாக சேர்ப்பதை நாம் வெறுக்கின்றோம் ‘அல்லாஹு அஃலம்’ (அல் மஜ்மூஃ : 3/98)

ஹய்ய அலா கைரில் அமல் என்று அதானில் கூறுவது நபிவழி அல்ல. எனவே, இதனையும் வெறுக்கின்றோம் என இமாம் நவவி(ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள். இங்கே குறிப்பிடப்படும் வார்த்தை தவறானதல்ல. அதன் கருத்தும் தவறானதல்ல. இருப்பினும் அதானில் அதைச் சேர்ப்பதற்கு நபி வழியில் எந்த ஆதாரமும் இல்லை என்பதால் தான் இமாமவர்கள் இந்தக் கருத்தை வலியுறுத்துகின்றார்கள். எல்லா பித்அத்துக்களுக்கும் இந்த நிலை பொருந்தும் அல்லவா? இந்த வார்த்தை நல்லது என்றாலும் ஆதாரம் இல்லாதது என்பதால் இந்தச் செயல் மறுக்கப்பட வேண்டும். என்றால் மற்ற பித்அத்துக்களையும் மறுக்கத்தானே வேண்டும்?

ஹஜ், உம்றா செய்பவர்கள் ஸபா-மர்வாவுக்கு இடையில ஸஈ முடிந்ததும் மர்வாவில் இரண்டு ரக்அத்துக்கள் சுன்னத்துத் தொழுவர். இதற்கு நபி வழியில் எந்த ஆதாரமும் இல்லை. இது குறித்து இமாம் நவவி(ரஹ்) அவர்கள் தமது அல் மஜ்மூஃ வில் குறிப்பிடும் போது,

ஷேக் அபூமுஹம்மத் அல் ஜுவைனி அவர்கள் ‘ஸயீ முடிந்ததும் மர்வாவில் மக்கள் இரண்டு ரக்அத்துக்கள் தொழுவதை நான் கண்டேன் (இது குறித்து அல் ஜுவைனி குறிப்பிடும் போது) இது நல்லது. நன்மைகள் அதிகம் தரக்கூடியது என்று குறிப்பிடுகின்றார். எனினும் இது நபி(ச) அவர்களைத் தொட்டும் உறுதிப்படுத்தப்படவில்லை. இது அபூமுஹம்மதின் கூற்றாகும். அபூ அம்ர் இப்னுஸ் ஸலாஹ் அவர்கள் (இது குறித்துக் கூறும் போது); இது வெறுக்கப்பட வேண்டும். ஏனெனில் இது ஒரு அடையாளத்தின் ஆரம்பமாகும். இது குறித்து இமாம ஷாஃபி (ரஹ்) அவர்கள் குறிப்பிடும் போது ஸஈ செய்த பின் எந்தத் தொழுகையும் இல்லையெனக் குறிப்பிடுகின்றார்கள். இதைத்தான் அபூஅம்ர் அவர்களும் குறிப்பிடுகின்றார்கள். அல்லாஹு அஃலம். (அல் மஜ்மூஃ : 8/80)

ஸஈ செய்பவர்கள் ஸஈயின் முடிவாக மர்வாவில் தொழுவதில் என்ன தவறு இருக்கிறது இதை ஏன் வெறுக்க வேண்டும்? ஒரேயொரு காரணம் தான் இருந்துள்ளது. இதை நபி(ஸல்) அவர்கள் செய்யவில்லை. மற்றப்படி தொழுபவர்களின் நோக்கத்திலும் தவறில்லை. செய்யப்படும் வேலையும் தொழுகை எனும் புனிதச் செயலாகும். அது செய்யப்படும் இடமும் ஹரம் எல்லைக்குள் உள்ளடங்கியுள்ள புனித மர்வாவுக்குரிய இடமாகும். புனிதமான ஒரு பணியைச் செய்து இந்தத் தொழுகையைத் தொழுகின்றனர். எல்லாம் நல்லதாக இருந்தாலும் நபி வழியில் ஆதாரம் இல்லை, வழிகாட்டல் இல்லை எனும் போது மறுக்கப்படத்தக்க தாகவும், வெறுக்கப்படத்தக்கதாகவும் மாறிவிடுகின்றது. நபிவழியில் இல்லையென்பதால் இதை மறுக்க வேண்டும் என்றால் கத்தம், கந்தூரி, பாத்திஹாக்கள், கூட்டு துஆக்கள் போன்ற அத்தனையும் அதே அடிப்படையில் மறுக்கப்பட வேண்டியவைகளே என்பதில் எப்படி மாற்றுக் கருத்து இருக்க முடியும்.

ஜனாஸா வீட்டில் அவர்களுக்கு ஆறுதல் கூறுவதற்காக ஒன்று கூடும் பழக்கம் இன்றும் இருக்கிறது. தமக்கு ஆறுதல் கூறுவதற்காக மக்கள் வருவார்கள் என்பதற்காகவும், ஜனாஸாவுடைய உறவினர்கள் ஒரு இடத்தில் ஒன்று சேர்ந்து இருப்பார்கள். இது குறித்து இமாமவர்கள் குறிப்பிடும் போது ,
ஆறுதல் பெறுவதற்காக (ஒரு இடத்தில் ஒன்றுகூடி) இருப்பது வெறுக்கத்தக்கது என இமாம் ஷாஃபி அவர்களும் எமது தோழர்களும் கூறுகின்றனர். அவர்கள் கூறுகின்றனர், ஆறுதல் கூற வருபவர்களுக்காக மையித்து வீட்டினர் ஒன்றுகூடி இருப்பதே இங்கு கருத்தில் கொள்ளப்படுகின்றது. மாற்றமாக அவர்கள் தமது பணிகளுக்காகப் பிரிந்து சென்றுவிட வேண்டும். இதற்காக ஒன்றுகூடி இருப்பது வெறுக்கத்தக்கது என்பதில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையில் எந்த வேறுபாடும் இல்லை. இது குறித்து அல்மஸாமிலீ வெளிப்படையாகப் பேசியுள்ளார். ஷாஃபி இமாமைத் தொட்டும் இதனை அறிவித்துள்ளார். ஆறுதல் கூறுபவர்களுக்காக இவ்வாறு ஒன்று கூடியிருப்பதுடன் வேறு பித்அத்துக்கள் எதுவும் நடக்கவில்லை என்றால் இது சாதாரணமான வெறுக்கத்தக்க நடவடிக்கையாகும். எனினும் அதிகமாக நடைமுறையில் இருப்பது போன்று இவ்வாறு ஒன்றுகூடியிருப்பதுடன் ஹராமான ஒரு பித்அத்தும் வந்துவிடுமானால் இவ்வாறு கூடியிருப்பது அசிங்கமான ஒரு ஹராமாக மாறிவிடும். ஏனெனில் இது மார்க்கத்தில் புதிய நடவடிக்கையாகும். மார்க்கத்தில் புதிதாக உருவான அனைத்தும் பித்அத் ஆகும். பித்அத் அனைத்தும் வழிகேடாகும் என்பது ஸஹீஹான ஹதீஸில் உறுதிசெய்யப்பட்டுள்ளது. (ஆதாரம்: முஸ்லிம் , அல் அத்கார் அந்நவவிய்யா (1/205))

ஒருவர் மரணித்து விட்டால் அந்த வீட்டிற்கு ஆறுதல் கூறுவதற்காக மக்கள் செல்வது வழக்கமாகும். மக்கள் வரவேண்டும் என்பதற்காக மையத்து வீட்டார் ஒரு இடத்தில் கூடியிருப்பதில் என்ன தவறு இருக்கிறது. இது ஏன் வெறுக்கப்பட வேண்டும். இது நபி வழியில் இல்லாத வழிமுறை என்பது தானே இந்த வெறுப்புக்குக் காரணம். இதே காரணத்திற்காகத்தான் அனைத்து பித்அத்துக்களையும் நாம் எதிர்க்கின்றோம்.

தராவீஹ் தொழும் போது ரமழான் ஏழாம் தினத்தில் இறுதி ரகாஅத்தில் சூரதுல் அன்ஆம் அத்தியாயத்தைப் பூரணமாக ஓதித் தொழுவிக்கும் வழக்கம் இருந்து வந்துள்ளது. இது பற்றி இமாம் நவவி(ரஹ்) அவர்கள் குறிப்பிடும் போது,
மக்களுக்கு தொழுகை நடாத்தக்கூடிய அறிவீனர்களில் அதிகமானவர்கள் செய்யக்கூடிய மறுக்கப்படக்கூடிய பித்அத்துக்களில் ஒன்று தான் ‘சூரதுல் அன்ஆம் அத்தியாயத்தை ரமழான் மாதம் ஏழாம் அன்று இரவு இறுதி ரக்அத்தில் ஓதுவதாகும். இதனை விரும்பத்தக்கது என்ற எண்ணத்தில் ஓதி வருகின்றனர்…..'(அல் அத்கார்:1/152)

ரமழான் மாதம் ஏழாம் இரவில் தராவீஹ் தொழுகையில் இறுதி ரக்அத்தில் அன்ஆம் அத்தியாயத்தை ஓதுவதை இமாமவர்கள் பித்அத் என்று கடுமையாகக் கண்டிக்கின்றார்கள்.

அனைத்து பித்அத்துக்களும் இந்த அடிப்படையில் தான் கண்டிக்கத்தக்கதேயாகும். இதில் நல்லது, கெட்டது என்ற வேறுபாட்டிற்கு இடமேயில்லை.






Previous Post Next Post