எழுதியவர் : எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி)
முஸ்லிம் உம்மத்தில் இஸ்லாத்தின் பெயரில் தோன்றிய வழிகேடுகளே
பித்அத்துகளாகும். இந்த பித்அத்துகளால் பல்வேறுபட்ட பாரதூரமான
எதிர்விளைவுகள் உருவாகின்றன. ஆனால், பித்அத்தான விடயங்களைச் சாதாரணமாகக்
கருதும் சிலர், அவற்றைச் செய்வதில் பின்னிற்பதில்லை. அது போல், பித்அத்
பற்றிப் பேசுபவர்களை சின்னத்தனமாய் நோக்கும் நிலையும் காணப்படுகிறது.
எது எவ்வாறாயினும், பித்அத் புரிவோர் பல பாதிப்புகளை சம்பாதிக்கின்றனர்
என்பது நபி(ஸல்) அவர்களின் கண்டிப்பான எச்சரிக்கையாகும். அப்பாதிப்புகளை
முறையாக உணர்ந்தால்தான் பித்அத் எவ்வளவு பாரதூரமான குற்றம் என்பதை உணரலாம்.
எனவே பித்அத் ஏற்படுத்தும் தீய விளைவுகள் குறித்து சுருக்கமாகப்
புரிந்துகொள்ள முனைவோமாக!
(1) குப்ருக்கு இட்டுச் செல்லுதல்:
பித்அத், குப்ர் அல்ல என்றாலும் அது காலப் போக்கில் குப்ர் ஏற்பட வழி
விடுகின்றது. நபியைப் புகழ வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். மவ்லூதுகளை
உருவாக்கினார்கள்; புகழ்ந்தார்கள். ஷிர்க்கையும், குப்ரையும் ஏற்படுத்தும்
அளவுக்கு புகழ் பாக்கள் வரம்பு மீறிச் சென்றன. இறந்து விட்ட நல்லடியார்களை
கண்ணியப்படுத்துவதற்காக கப்ருகளைக் கட்டினர். அதுவே இறந்தவர்களிடம்
பிரார்த்தனை புரிதல், அவர்களுக்காக அறுத்துப் பலியிடல், அவர்களுக்காக
நேர்ச்சை வைத்தல் எனப் பல ஷிர்க்குகளை ஏற்படுத்தியது.
எனவே பித்அத் ஷிர்க்குக்கும், குப்ருக்குமான பாதையைத் திறந்து
விடுகின்றது என்ற வகையில் பாரதூரமாகப் பார்க்கப்பட வேண்டிய விடயமாகும்
என்பதை மறுக்க முடியாது.
“நீங்கள் உங்களுக்கு முன்பிருந்தவர்களின் வழிமுறைகளைச் சாணுக்குச் சாண்,
முழத்துக்கு முழம் பின்பற்றுவீர்கள். அவர்கள் ஒரு உடும்புப் பொந்தினுள்
நுழைந்தாலும் நீங்கள் அவர்களைப் பின்பற்றி நுழைவீர்கள்!” என நபி(ஸல்)
கூறினார்கள். நபித் தோழர்கள், “அல்லாஹ்வின் தூதரே! அவர்கள் யூதர்களும்,
கிறிஸ்தவர்களுமா?” எனக் கேட்டனர். அதற்கு, நபி(ஸல்) அவர்கள் “வேறு யார்?”
எனக் கேட்டார்கள்.
(புகாரி 7320, முஸ்லிம் 2669)
அந்நியர்களைப் பின்பற்றுவதன் மூலம் இந்த உம்மத் தடம் மாறிச் செல்லும் என்பதை இந்த ஹதீஸ் உறுதி செய்கின்றது.
அபூஹுரைரா(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்;
“வேதத்தைக் கையில் வைத்துக் கொண்டே எப்படி அவர்கள் நிராகரிப்பில்
வீழ்ந்தார்களோ அதே நிலை இந்த உம்மத்திலும் தோன்றும்! (யெமனைச் சேர்ந்த)
தவ்ஸ் குலத்துப் பெண்கள் சிலைகளைச் சுற்றி வராத வரையில் மறுமை நாள் ஏற்பட
மாட்டாது!” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி 7116, 6699, முஸ்லிம்
2906, 7482)
முஸ்லிம் உம்மத்தில் சிலை வணக்கம் ஏற்படும் என இந்த ஹதீஸ் கூறுகின்றது.
இது ஒரேயடியாக ஏற்படும் தீடீர் மாற்றமாக இருக்காதது. கொஞ்சம் கொஞ்சமாக
மார்க்கத்தை விட்டும் தடம் புரண்டு சென்று ஈற்றில் இந்த நிலைக்கு தவ்ஸ்
கோத்திரம் வந்து நிற்கும் என்பதைத்தான் இந்த ஹதீஸ் எடுத்துக்
காட்டுகின்றது.
எனவே பித்அத்கள்தான் இந்த உம்மத்தில் ஷிர்க்கும், குப்ரும் தோன்றுவதற்கு
வழிவகுக்கின்றன என்பது எச்சரிக்கையுடன் பார்க்கப்பட வேண்டிய அம்சமாகும்.
(2) அல்லாஹ்வின் மீதும், தூதர் மீதும் இட்டுக்கட்டுதல்:
பித்அத் செய்வோர் அல்லாஹ்வின் மீதும், அவனது தூதர் மீதும் அதிகமதிகம்
பொய்களை இட்டுக்கட்டிக் கூறுகின்றனர். அல்லாஹ்வும், அவனது தூதரும்
சொல்லாதவற்றைச் சொன்னதாகத் துணிந்து கூறுவார்கள்.
இந்த வகையில் பித்அத்துகள் அல்லாஹ்வின் மீதும், அவனது தூதர் மீதும் இட்டுக்கட்டுதல் என்ற பெரும் குற்றத்துக்கு வழி வகுக்கின்றது.
“அல்லாஹ்வின் விடயத்தில் அறிவின்றித் தர்க்கம் புரிவோரும், மூர்க்கத்தனமான ஒவ்வொரு ஷைத்தானையும் பின்பற்றுவோரும் மனிதர்களில் உள்ளனர். நிச்சயமாக யார் (ஷைத்தானாகிய) அவனைப் பின்பற்றுகிறானோ அவனை அவன் வழிகெடுத்து, நரக வேதனையின்பால் வழி நடத்துவான் என அவன் மீது விதிக்கப்பட்டு விட்டது.” (22:3-4)“அறிவின்றியும், நேர்வழி இல்லாமலும், ஒளி பொருந்திய வேதமில்லாமலும் அல்லாஹ்வின் விடயத்தில் தர்க்கம் புரிவோரும் மனிதர்களிலுள்ளனர். அவன் அல்லாஹ்வின் பாதையை விட்டும் வழிகெடுப்பதற்காகத் தனது கழுத்தைத் திருப்பிக் கொண்டவன். அவனுக்கு இவ்வுலகில் இழிவுதான். மேலும், நாம் அவனுக்கு மறுமை நாளில் சுட்டெரிக்கும் வேதனையைச் சுவைக்கச் செய்வோம்.” (22:8-9)“..அல்லாஹ்வின் விடயத்தில் எவ்வித அறிவோ, வழிகாட்டலோ, ஒளி பொருந்திய வேதமோ இன்றி தர்க்கிப்போரும் மனிதர்களில் உள்ளனர். அல்லாஹ் இறக்கியவற்றையே பின்பற்றுங்கள் என அவர்களுக்குக் கூறப்பட்டால், “இல்லை! எமது மூதாதையர்கள் எதி லிருக்கக் கண்டோமோ அதையே நாம் பின்பற்றுவோம் என அவர்கள் கூறுகின்றனர். ஷைத்தான் அவர்களை நரக வேதனையின் பால் அழைத்தாலுமா? (பின் பற்றுவர்?)” (31:20-21)
மேற்படி வசனங்கள் அல்லாஹ்வின் விடயத்தில் தகுந்த ஆதாரம் இல்லாமல்
பேசுவது எவ்வளவு பாரதூரமானது என்பதையும், அவர்களது பண்புகள் அவர்களுக்கு
ஏற்படும் பாதிப்புகள் என்பன பற்றியும் பேசுகின்றன.
அனஸ்(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்;
“யார் என் மீது வேண்டுமென்றே இட்டுக் கட்டுகின்றாரோ அவர் தனது இருப்பிடத்தை
நரகத்தில் அமைத்துக்கொள்ளட்டும்!” என இது குறித்து நபி(ஸல்) அவர்கள்
கண்டித்துள்ளார்கள்.
(புகாரி 168, முஸ்லிம் 2)
எனவே பித்அத் அல்லாஹ்வின் மீதும், அவன் தூதர் மீதும் இட்டுக்கட்டுதல்
எனும் நரகத்துக்கு இட்டுச் செல்லும் பெருங்குற்றத்துக்குக் காரணமாக
அமைகின்றது என்ற வகையிலும் எச்சரிக்கையுடன் கையாளப்பட வேண்டிய அம்சமாகத்
திகழ்கின்றது.
(3) ஸுன்னாவை வெறுக்கும் மனோநிலை ஏற்படல்:
பித்அத் செய்வோர் ஸுன்னாவை வெறுக்கின்றனர். ஹதீஸ்களைப் புறக்கணிக்கின்றனர்.
சில போது ஹதீஸ்களையும், ஸுன்னத்துகளையும் கேலி செய்தும், கிண்டல் செய்தும்
பேசுகின்றனர். இது பித்அத்தால் ஏற்படும் பெரிய விபரீதங்களில் ஒன்றாகும்.
அல்லாஹ்வின் தூதரையோ, அவரது போதனைகளையோ கிண்டல் செய்வதும், கேலி செய்வதும் குப்ரை ஏற்படுத்தும் குற்றங்களாகும்.
“(இது பற்றி) அவர்களிடம் நீர் கேட்டால், “நாங்கள் (வீண்) பேச்சில் மூழ்கியும், விளையாடிக் கொண்டுமிருந்தோம்” என்று நிச்சயமாக அவர்கள் கூறுவார்கள். அல்லாஹ்வையும், அவனது வசனங் களையும், அவனது தூதரையுமா நீங்கள் பரிகசித்துக் கொண்டிருந்தீர்கள்? என்று (நபியே!) நீர் கேட்பீராக!”“போலிக் காரணம் கூறாதீர்கள். நீங்கள் நம் பிக்கை கொண்ட பின்னர் நிச்சயமாக நிராகரித்து விட்டீர்கள். உங்களில் ஒரு கூட்டத்தை நாம் மன்னித்தாலும் மற்றொரு கூட்டத்தாரை அவர்கள் குற்றம் புரிபவர்களாக இருந்த காரணத்தினால் நாம் தண்டிப்போம் (என்றும் கூறுவீராக!)” (9:65-66)
அல்லாஹ்வையும், அவனது ஆயத்துகளையும், அவனது தூதரையும் கேலி
செய்தவர்களைப் பார்த்து நீங்கள் ஈமானுக்குப் பின்னர் நிராகரித்து
விட்டீர்கள் என இந்த வசனம் கூறுவதால் அல்லாஹ்வின் தூதரையோ, அவரது
போதனைகளையோ கேலி செய்வது குப்ரை ஏற்படுத்தும் குற்றச் செயல் என்பது
உறுதியாகின்றது. பித்அத் செய்வோர் இந்தக் குற்றத்தைச் செய்கின்றனர்.
அடுத்து ஸுன்னாவையும், ஸுன்னாவைப் போதிக்கும் அறிஞர்களையும்
பகைத்துக்கொள்கின்றனர். அவர்களுக்கு எதிராகச் செயற்படுகின்றனர். அவர்களை
அவமதிக்கின்றனர். வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் அவர்கள் மீதான
கோபத்தையும், வெறுப்பையும் வெளிப்படுத்துகின்றனர்.
அறிஞர் இஸ்மாயில் இப்னு அப்துர் ரஹ்மான்(றஹ்) அவர்கள் இது பற்றிக் கூறும் போது;
“பித்அத்காரர்களுக்கெனப் பல வெளிப்படை யான அடையாளங்கள் உள்ளன! அவர்களின்
வெளிப்படையான அடையாளங்களில் பிரதானமானது நபி(ஸல்) அவர்களது செய்திகளைச்
சுமந்திருப்போர் மீது வெறுப்பை வெளிப்படுத்துவதும், அவர்களை
இழிவுபடுத்துவதுமாகும்!” எனக் குறிப்பிடுகின்றார்கள்.
(அகீதது அஹ்லுஸ் ஸுன்னா வ அஸ்ஹாபுல் ஹதீஸ் 299)
எனவே, பித்அத் செய்வோர் இந்தக் குற்றத்திலும் வீழ்கின்றார்கள். இதுவும் பித்அத் ஏற்படுத்தும் தீய விளைவுகளில் ஒன்றாகும்.
(4) அமல்கள் புறக்கணிக்கப்படுதல்:
பித்அத் செய்வோர் பணத்தையும், நேரத்தையும், காலத்தையும் செலவிட்டு இல்லாத
வழிபாடுகளைச் செய்கின்றனர். அவை அத்தனையும் புறக்கணிக்கப்படும் என்பது
நபியவர்களது எச்சரிக்கையாகும்.
அல்லாஹ்வினால் அவர்களுக்கு எந்த நற்கூலியும் வழங்கப்படாத அதே நேரத்தில் அவர்கள் தண்டனையையும் சந்திக்க நேரிடும்.
“எமது மார்க்கத்தில் இல்லாததை எவர் செய்கின்றாரோ அது
நிராகரிக்கப்படும்!” என்ற ஹதீஸ்களும், பித்அத் வழிகேடு என்று என்று கூறும்
ஹதீஸ்களும் இதைத்தான் கூறுகின்றன. எனவே பித்அத் செய்வோர் தமது இம்மை-மறுமை
இரண்டையும் தாமே அழித்துக்கொள்கின்றனர். ஷைத்தான் நன்மையைக் காட்டி இவர்களை
நரகத்துக்கு அழைத்துச் சென்று விடுகின்றான்.
(5) மோசமான முடிவைச் சந்திக்க நேரும்:
தவறுகள் செய்வோர் அவற்றைத் தவறு என்று அறிந்தே செய்கின்றனர். திருடுதல்,
பொய் சொல்லுதல், விபசாரம் செய்தல் – இவையெல்லாம் ஹறாம் என்பது அனைவருக்கும்
தெரியும். இவற்றைச் செய்வோர் தாம் செய்வது தவறு என்பதை உணர்ந்தே
செய்கின்றனர். இவர்கள் அல்லாஹ்விடம் தவ்பாச் செய்ய அதிகம் வாய்ப்புள்ளது.
பித்அத் புரிவோர் நல்லறம் புரிவதாகவே நினைத்துக்கொள்கின்றனர். ஆனால்
அவர்கள் தவறுதான் செய்கின்றனர். இவர்கள் பெரும்பாலும் தவ்பாச் செய்யாமல்
மரணித்து மோசமான இறுதி முடிவை அடைவர். இந்த வகையில் ஷைத்தானுக்குப் பெரும்
பாவங்களை விட பித்அத் விருப்பத்துக்கு உரியதாகும்.
இது குறித்து இமாம் சுப்யான் அத்தவ்ரீ(றஹ்) அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்கள்;
“பெரும் பாவங்களை விட பித்அத்துகள் ஷைத்தானுக்கு விருப்பத்துக்கு
உரியதாகும். ஏனெனில் பெரும் பாவங்களிலிருந்து பாவ மன்னிப்புக் கோரப்படலாம்.
ஆயினும் பித்அத்துகளில் இருந்து பெரும்பாலும் பாவ மன்னிப்புக்
கோரப்படுவதில்லை!” என்று குறிப்பிடுகின்றார்கள்.
(ஷரஹுஸ் ஸுன்னா லில் பகவீ)
எனவே தீய இறுதி முடிவை ஏற்படுத்தக் கூடியது என்ற வகையில் பித்அத் குறித்து எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டியுள்ளது.
(6) தலைகீழாக மாறி விடும் பித்அத்காரனின் அறிவு:
பித்அத் செய்வோர் நல்லதைத் தீமை என்றும், தீமையை நன்மை என்றும் தலைகீழாக
விளங்கிக்கொள்வர். மார்க்கத்தில் இல்லாததை மார்க்கக் கடமை போலக் கருதிச்
சண்டையும் செய்வர். மார்க்கத்தில் உள்ளதைச் சில போது கண்டுகொள்ளாது விட்டு
விடுவர்.
தொப்பி போடாமல் தொழுபவருக்கு எதிராகப் போர்க் கொடி தூக்குவர். பெண்கள்
தலை மூடாதது குறித்துக் கண்டுகொள்ள மாட்டார்கள். இந்த நிலை அவர்களிடத்தில்
குழப்பமான ஒரு பார்வையை ஏற்படுத்தி விடும்.
இவர்களின் இந்தத் தவறான புரிதல் பற்றி ஹுதைபா(ரழி) பின்வருமாறு கூறுகின்றார்கள்;
“பித்அத் பரவும். அதிலொன்று விடுபடும் போது மக்கள் ஸுன்னா விடுபட்டது என்று கூறுவர்!”
இதே கருத்தை இப்னு மஸ்ஊத்(ரழி) அவர்களும் குறிப்பிடுகின்றார்கள்.
மார்க்கத்தின் ஒரு கடமை விடுபட்டாலும் கவலைப்படாத பித்அத்காரர் ஒருவர்
கூட்டு துஆவோ, தல்கீனோ, பாத்திஹாவோ விடுபடும் போது அதற்கெதிராகப்
போராடுபவராக மாறி விடுகின்றார். இந்த தலைகீழாக மாறி விளங்கும் போக்கு
மடமைப் போக்கு என்பது பித்அத் ஏற்படுத்தும் தீய விளைவுகளில் ஒன்றாகும்.
ஒரு விடயத்தைத் தவறாக விளங்கிக்கொள்தல் தவறில் பாதியாகும். இந்தப்
பாவத்தில் இருந்தும் பா(த்)திலில் இருந்தும் விடுபட பித்அத் குறித்து
மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
(7) மூட நம்பிக்கை சார்ந்த குழப்பங்களில் வீழ்தல்:
மார்க்க ரீதியாக எழும் எந்தக் குழப்பமாக இருந்தாலும் அதில் அதிகம் வீழ்பவர்களாக பித்அத்காரர்கள் இருப்பார்கள்.
“இத்தூதரை அழைப்பதை உங்களுக்கிடையில் சிலர் சிலரை அழைப்பது போன்று ஆக்கிக் கொள்ளாதீர்கள். உங்களில் யார் மறைவாக நழுவிச் செல்கிறார்களோ அவர்களை அல்லாஹ் நன்கறிவான். அவரின் கட்டளைக்கு மாறு செய்வோர் தமக்கு ஒரு துன்பம் நேருவதையோ, அல்லது தமக்கு நோவினை தரும் வேதனை ஏற்படுவதையோ அஞ்சிக்கொள்ளட்டும்.”(24:63)
பித்அத் செய்வோர் அல்லாஹ்வின் தூதருக்கு எதிராகச் செயற்படுபவர்கள் என்ற அடிப்படையில் பித்னாக்களில் வீழ்ந்து விடுகின்றனர்.
குறி சொல்வோர், சாஸ்திரக்காரர், ஜின் வஸியம் செய்திருப்பதாகக் கூறும்
ஏமாற்றுப் பேர்வழிகள் போன்றோரின் பித்னாக்களில் அதிகம் விழுவோர்
பித்அத்காரரே!
மக்காவில் கண்ட கனவு!
மதீனாவில் கண்ட கனவு!
குர்ஆனில் மயில் இரகு!
குர்ஆனில் செம்டம்பர் தாக்குதல்!
இவ்வாறு பல்வேறுபட்ட பித்னாக்களில் விழுவோரும் பித்அத்காரர்களே!
ஹதீஸ்களை உறுதியாக நம்பாத இவர்கள் வதந்திகள், கட்டுக் கதைகள், கற்பனைக்
கதைகள், கனவுகள், உதாரணங்கள் என்பவற்றை உடனே நம்பி ஏமாந்து விடுவர்.
“இருண்ட இரவின் ஒரு பகுதி போன்ற பித்னாக்கள் தோன்றுவதற்கு முன்னர்
நல்லமல்களைச் செய்துகொள்ளுங்கள்! அந்த நேரத்தில் ஒருவர் முஃமினாகக் காலைப்
பொழுதை அடைவார்! மாலையைக் காபிராக அடைவார்! அல்லது முஃமினாக மாலையை அடைபவர்
காபிராகக் காலையை அடைவார். உலகத்துக்காக ஒருவன் தனது மார்க்கத்தை
விற்பான்!” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(முஸ்லிம் 118, 328, அபூதாவூத் 4261, 4264)
பித்அத்தான சிந்தனையும், பித்அத்தான செயற்பாடும் உடையவர்கள் மிக விரைவாக இத்தகைய பித்னாக்களில் வீழ்ந்து விடுவர்.
எனவே பித்அத் பித்னாக்களில் வீழ்த்தக் கூடியது என்ற அடிப்படையிலும் பித்அத் குறித்து விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டியுள்ளது.
(8) ஷரீஆவில் பங்கு கோரும் பித்அத்:
பித்அத் செய்பவர் தனது செயற்பாடு மூலமாக மார்க்கத்தில் பங்கு கேட்கின்றார்.
அவர் “மார்க்கம் பூரணமற்றது!” என்று கூறுவதுடன், தானே மார்க்கத்தைப் பூரணப்படுத்த முற்படுபவர் போன்றவராகின்றார்.
“..இன்றைய தினம் உங்களது மார்க்கத்தை உங்களுக்கு நான் முழுமைப்படுத்தி விட்டேன். எனது அருட்கொடையையும் உங்கள் மீது பூரணப்படுத்தி விட்டேன். மேலும் நான் இஸ்லாத்தையே உங்களுக்கு மார்க்கமாகப் பொருந்திக் கொண்டேன்..” (5:3)
மேற்படி வசனம் மார்க்கம் பூரணப்படுத்தப்பட்டு விட்டதாகக் கூறுகின்றது.
பித்அத் செய்பவர் மார்க்கம் பூரணமாகி விட்டதில் உறுதியான நம்பிக்கை
உடையவராக இருந்தால் மார்க்கத்தில் இல்லாததை மார்க்கமாகச் செய்ய
முற்படமாட்டார்.
“அல்லாஹ் அனுமதிக்காததை அவர்களுக்கு மார்க்கமாக ஆக்கக் கூடிய இணை தெய்வங்கள் அவர்களுக்கு இருக்கின்றனவா? தீர்ப்புக்குரிய விதி இல்லாவிட்டால் அவர்களுக்கிடையில் தீர்ப்பளிக்கப் பட்டிருக்கும். நிச்சயமாக அநியாயக்காரர்களுக்கு நோவினை தரும் வேதனை உண்டு.” (42:21)
மேற்படி வசனம் மார்க்கத்தில் இல்லாததை மார்க்கமாக்குவது ஷரீஅத் உருவாக்கத்தில் பங்கு கேட்பதற்குச் சமனானதென்ற கருத்தைச் சொல்கின்றது.
எனவே பித்அத் தீவிரமாக எதிர்க்கப்பட வேண்டியதும், எச்சரிக்கையுடன் ஒதுக்கப்பட வேண்டியதுமாகும்.
(9) உண்மையுடன் பொய்யும் கலந்த நிலை:
பித்அத் செய்பவருக்கு உண்மை-பொய் இரண்டும் குழம்பிப் போன ஒரு மனநிலை
உண்டாகி விடும். இது ஆபத்தானதாகும். யூத-கிறிஸ்தவர்களுக்கு நேர்ந்ததும்
அதுதான்.
“வேதத்தையுடையோரே! நீங்கள் அறிந்து கொண்டே ஏன் சத்தியத்தை அசத்தியத்துடன் கலந்து சத்தியத்தை மறைக்கின்றீர்கள்?” (3:71)
குர்ஆன்-ஸுன்னா எனும் அறிவு மனிதனுக்கு நேர்வழியைக் காட்டும் ஒளியாகத்
திகழ்கின்றது. இந்த ஒளியை இழந்த பித்அத்காரர்கள் நேர்வழியையும்,
சத்தியத்தையும் அறிந்துகொள்ளும் பாக்கியத்தை அடைந்துகொள்ள மாட்டார்கள்.
“நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்சி நடந்தால் (சத்தியத்தையும், அசத்தியத்தையும்) பிரித்துக் காட்டும் வழிமுறையை உங்களுக்கு அவன் ஏற்படுத்துவான். மேலும், உங்கள் தீமைகளை உங்களை விட்டும் நீக்கி, உங்களை மன்னிப்பான். இன்னும், அல்லாஹ் மகத்தான அருளுக் குரியவன்.” (8:29)
மேற்படி வசனம் அல்லாஹ்வை அஞ்சுபவர்களுக்குச் சத்தியத்தையும்,
அசத்தியத்தையும் பிரித்தறியும் பாக்கியத்தை அல்லாஹ் வழங்குவதாகக்
கூறுகின்றன. பித்அத் செய்வோர் இந்தப் பாக்கியத்தை இழந்து விடுவர்.
(10) தனது பாவத்தையும், தன்னைப் பின்பற்றுபவர்களது பாவத்தையும் சுமந்துகொள்ளும் பித்அத்காரன்:
பித்அத் செய்பவன் – தனது பாவத்தை மட்டுமல்ல; தன்னைப் பின்பற்றி அந்த பித்அத்களைச் செய்பவர்களின் பாவங்களையும் சேர்த்தே சுமப்பான்.
அபூஹுரைரா(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்;
“யாரேனும் ஒருவர் வழிகேட்டின் பால் அழைத்தால் அதைப் பின்பற்றுகின்றோரின்
பாவங்களையும் இவன் சுமப்பான்! அவர்களின் பாவங்களில் எதுவும் குறைந்தும்
விடாது!” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(முஸ்லிம் 2060, 2674)
இந்த வகையில் பித்அத் செய்வோர் தமது பாவங்களுடன் தம்மைப் பின்பற்றி
யாரெல்லாம் அந்த பித்அத்தைச் செய்தார்களோ அவர்களது பாவங்களையும்
சுமப்பார்கள். பித்அத்தின் பக்கம் மக்களை அழைக்கும் ஆலிம்கள், பொது மக்கள்
இது குறித்து மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும். விடுபட்ட பித்அத்களை
மீண்டும் உயிர்ப்பிப்பதற்காகப் போராடும் இயக்க வாதிகளும், ஜமாஅத்தார்களும்
வீணாக மக்களது பாவங்களைச் சுமந்து நரகம் செல்லும் இழிநிலையில் இருந்து
தம்மைப் பாதுகாத்துக்கொள்ளக் கடமைப்பட்டுள்ளனர்.
(11) பித்அத் சாபத்தைத் தேடித் தரும்:
பித்அத் செய்வது அல்லாஹ்வினதும், அவனது தூதரினதும், நல்ல மக்களினதும் சாபத்தைத் தேடித் தரும்.
இது குறித்து நபி(ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்;
“யார் மதீனாவில் பித்அத்தை உருவாக்குகின்றாரோ அல்லது பித்அத்
செய்பவனுக்குப் புகலிடம் அளிக்கின்றாரோ அவர் மீது அல்லாஹ்வின் (லஃனத்)
சாபம் உண்டாகட்டும்! மற்றும் மலக்குகள், (நல்ல) மனிதர்கள் அனைவரின் சாபமும்
அவன் மீது உண்டாகும்! அவனிடமிருந்து எந்தச் சாக்குப் போக்குகளும் ஏற்றுக்
கொள்ளப்பட மாட்டாது!” (புகாரி 7306, முஸ்லிம் 1366)
இந்த நபிமொழி மதீனா குறித்துப் பேசினாலும் இதை நாம் பொதுவாகவே எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது.
மற்றுமொரு அறிவிப்பில் நபி(ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள்;
“பித்அத்காரனுக்குப் புகழிடம் அளிப்பவனை அல்லாஹ் சபிப்பானாக! (முஸ்லிம்)
பித்அத்காரனுக்குப் புகழிடம் அளிப்பவனே சபிக்கப்படுவானெனில் பித்அத்
செய்வோர், அதைப் பரப்புவோர், அதற்காகப் போராடுவோரின் நிலையென்ன என்பது
சிந்திக்க வேண்டியதாகும்.
(12) பித்அத் செய்வோர் சத்தியத்தை மறைப்போராவர்:
சத்தியத்தை மறுப்பதும், அதை மறைப்பதும் மார்க்க அடிப்படையில் பெரிய
குற்றங்களாகும். பித்அத் செய்வோர் சத்தியத்தை அறிந்த பின்னரும் அதை
மறைக்கின்றனர்; மறுக்கின்றனர். இதுவும் அல்லாஹ்வின் சாபத்தைத் தேடித் தரும்
பெரிய குற்றமாகும்.
“மக்களுக்காக நாம் வேதத்தில் தெளிவு படுத்திய பின்னர் நாம் இறக்கிய தெளிவான சான்று களையும், வழிகாட்டலையும் யார் மறைக்கின்றார்களோ அவர்களை நிச்சயமாக அல்லாஹ் சபிக்கின்றான். சபிப்ப(தற்கு உரிமை உடைய)வர்களும் சபிக்கின்றனர்.”(2:159)
சத்தியத்தை மறைப்போரை அல்லாஹ்வும் சபிக்கின்றான்; நல்லவர்களும்
சபிக்கின்றனர். இந்தச் சாபத்திலிருந்து அவர்கள் விடுபட வேண்டுமென்றால் தமது
தவறை விட வேண்டும். தவ்பாச் செய்ய வேண்டும். தாம் மறைத்த சத்தியத்தை
மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும் எனப் பின்வரும் வசனம் கூறுகின்றது;
“ஆனால், எவர்கள் (தம் தவறிலிருந்து) பாவ மன்னிப்புக் கோரித் தம்மைச் சீர்திருத்திக் கொண்டு, (தாம் மறைத்தவற்றைத்) தெளிவுபடுத்துகின்றார்களோ அவர்களை நான் மன்னிப்பேன். நான் மிக்க மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையவன்.” (2:160)
தொழுகையின் பின்னர் கூட்டு துஆ இல்லை என்பது தெரியும்; சொன்னால் மக்கள்
குழம்புவார்கள் என நினைத்து சத்தியத்தை ஒருவர் மறைக்கிறார்; கூட்டு
துஆவையும் ஓதுகின்றார்.
இவர் அல்லாஹ்வின் சாபத்திலிருந்து விடுபட வேண்டுமென்றால் பித்அத்தை விட
வேண்டும்; தவ்பாச் செய்ய வேண்டும். மறைத்த உண்மையை மக்களுக்குப் பகிரங்கமாக
வெளிப்படுத்த வேண்டும்.
இல்லையென்றால் சாபத்திலிருந்து விடுபட முடியாது என்பதை இந்த வசனத்தின் மூலம் அறியலாம்.
(13) பித்அத் செய்வோர் சமூகத்தைப் பிரிக்கின்றனர்:
பித்அத் – அது கொள்கை சார்ந்ததாக இருந்தாலும், இபாதத் சார்ந்ததாக இருந்தாலும் அதுவே உம்மத்தைப் பிரிக்கக் கூடியதாகும்.
சிலர் ஸுன்னத்துத்தான் சமூகத்தைப் பிரிப்பதாகப் பார்க்கின்றனர். ஒற்றுமை
மலர ஸுன்னத்தை விட்டு விட்டு பித்அத்தைச் செய்ய வேண்டும் என்றும்
எதிர்பார்க்கின்றனர். எல்லா பித்அத்களையும் எல்லோரும் விட்டு விடுவதாக
முடிவு செய்தால் அதுவே ஒற்றுமையை ஏற்படுத்தக் கூடியதாகும்.
“நிச்சயமாக இதுவே எனது நேரான வழியாகும். எனவே, இதனையே நீங்கள் பின்பற்றுங்கள். பல வழிகளைப் பின்பற்றாதீர்கள். அப்பொழுது அது அவனது வழியை விட்டும் உங்களைச் சிதறடித்து விடும். நீங்கள் (அல்லாஹ்வை) அஞ்சி நடக்கும் பொருட்டு இதைக் கொண்டு உங்களுக்கு ஏவுகின்றான்.” (6:153)
மேற்படி வசனம் நபி(ஸல்) அவர்களது நேரான பாதையைப் பின்பற்ற
வேண்டுமென்றும், பல பாதைகளைப் பின்பற்றினால் அது அல்லாஹ்வின் பாதையை
விட்டும் எங்களைத் திசை திருப்பி விடும் என்றும் கூறுகின்றது.
நபி(ஸல்) அவர்கள் ஒரு நேர்கோட்டை வரைந்து அதன் இரு புறங்களிலும்
கோடுகளைக் கீறி நேர்கோட்டைக் காட்டி “இதுவே எனது நேரான வழி! இவை பல
வழிகள்!” எனக் கூறினார்கள். எனவே நபிவழியில் உறுதியாக இருப்பதும்,
பித்அத்தைத் தவிர்ப்பதும் பிரிவினையைத் தவிர்ப்பதற்கான வழிகளாகும். பித்அத்
பிரிவினையை உண்டுபண்ணக் கூடியதென்பதால் அதனை அவசியம் தவிர்த்தேயாக
வேண்டும்.
(14) மறுமையில் அல்கவ்தர் நீர் கிடைக்காது:
நபி(ஸல்) அவர்களுக்கு மறுமையில் “கவ்தர்” எனும் ஒரு நீர்த் தடாகம்
வழங்கப்படும். அது பாலை விட வெண்மையானது; தேனை விட இனிமையானது. அதைக்
குடித்தவருக்குச் சுவனம் போகும் வரை தாகமே ஏற்படாது. இந்த நீரை அருந்தச்
செல்லும் சிலர் மலக்குகளால் அடித்து விரட்டப்படுவார்கள். “இவர்கள் எனது
உம்மத் தினர்!” என நபி(ஸல்) அவர்கள் கூறும் போது, “உங்களுக் குப் பின்னர்
இவர்கள் என்னென்ன புதிய விடயங்களை உருவாக்கினார்கள் என்பது உங்களுக்குத்
தெரியாது!” என்று கூறப்படும். (புகாரி 6575, முஸ்லிம் 2297)
இந்த அடிப்படையில் பித்அத் செய்பவர்கள் கவ்தர் நீரைப் பருகும்
பாக்கியத்திலிருந்து தடுக்கப்பட்டு விடுவர். இந்த உம்மத்துக்கு அல்லாஹ்
வழங்கிய சிறப்பம்சங்களில் ஒன்றான இதை இழப்பது சாதாரண விடயமல்ல. இந்த
வகையில் சிந்திக்கும் போது பித்அத் எவ்வளவு பாரதூரமானது என்பதையும்,
நஞ்சைப் போன்று வெறுத்து ஒதுக்கப்பட வேண்டியது என்பதையும் உணரலாம்.
(15) பித்அத் நரகத்துக்கு இட்டுச் செல்லும்:
ஒவ்வொரு முஸ்லிமின் இலக்கும் சுவர்க்கம் ஆகும். ஆனால் பித்அத் மனிதனை
நரகத்துக்கு இட்டுச்செல்லும் குற்றச் செயலாகும். செய்யும் பித்அத்
ஷிர்க்கையோ, குப்ரையோ ஏற்படுத்தாததாக இருந்தால் அவர் நிரந்தர நரக வாதியாக
இருக்க மாட்டார். இருப்பினும் “இன்றைய தினம் நானும், எனது தோழர்களும் எதில்
இருக்கின்றோமோ, அதில் இருப்பவர்களே சுவனம் செல்லும் கூட்டத்தினர்!” என
நபி(ஸல்) அவர்கள் கூறியிருப்பதால் ஸுன்னாவுக்கு மாற்றமான புதிய
கொள்கைகள்-வழிபாடுகளை நம்பி நடப்பவர்கள் அஹ்லுஸ் ஸுன்னாவின் வட்டத்தில்
இருந்து வெளியேறி விடுகின்றனர்.
இது நரகத்துக்கு இட்டுச் செல்லும் இழி நிலையாகும். இந்த இழிநிலையில்
இருந்து நாம் நம்மைப் பாதுகாத்துக்கொள்வதாக இருந்தால் பித்அத்களை விட்டும்
விலகியிருப்பதே அதற்கான ஒரே வழியாகும்.
எனவே, அனைத்து பித்அத்களையும் விட்டு விலகி ஸுன்னாக்களை உயிர்ப்பித்து சுவனம் செல்ல முனைவோமாக!