மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி
வஹி என்றால் அல்லாஹ்விடமிருந்து அவனது தூதர்களுக்கு அருளப்பட்ட வேத வெளிப்பாட்டைக் குறிக்கும். நபி(ச) அவர்ளுக்கு அருளப்பட்ட வஹி (வேத வெளிப்பாடு) இரண்டு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
01. வஹி அல் மத்லூ (ஓதப்படும் வஹி)
இது குர்ஆனைக் குறிக்கும். குர்ஆனின் கருத்தும், வார்த்தைகளும் அல்லாஹ்விடமிருந்து வந்தவையாகும். எனவே அது “கலாமுல்லாஹ்” அல்லாஹ்வின் வார்த்தையாகும். அதைப் போன்ற ஒரு அத்தியாயத்தைக் கூட இந்த முழு உலகும் ஒன்று திரண்டாலும் உருவாக்க முடியாது. அந்த வார்த்தைகளே தனியான அற்பதமாகும்.
02. வஹி கைர மத்லூ (ஓதப்படாத வஹி)
இது நபி(ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் என்பவற்றைக் குறிக்கும். சுன்னா, ஹதீஸ் என்று கூறப்படுபவை இந்த வகையைச் சேர்ந்ததாகும். இதுவும் வஹிதான். நபி(ஸல்) அவர்கள் கூறிய கருத்து வேத வெளிப்பாடாகும். ஆனால் அதற்குப் பயன்படுத்திய வார்த்தைப் பிரயோகம் அவர்களது சொந்த வார்த்தைகளாகும். குர்ஆனை ஓதும் போது ஒரு எழுத்துக்குப் பத்து நன்மைகளை ஒருவர் பெற்றுக் கொள்வார். குர்ஆனைப் போன்று ஒருவர் ஹதீஸை வைத்து ஓதினால் அதனால் அவர் நன்மையைப் பெற்றுக் கொள்ளமாட்டார்.
சுன்னா:
சுன்னா என்ற அறபுப் பதத்திற்கு வழி, வழிமுறை என்பது அர்த்தமாகும். பொதுவாக நல்ல வழிக்கும், கெட்ட வழிக்கும் கூட அறபு மொழியில் சுன்னா என்ற பதம் பயன்படுத்தப்படும்.
“உமக்கு முன்னர் நாம் அனுப்பிய எமது தூதர்களின் வழிமுறையும் (இவ்வாறே) இருந்தது. எமது வழிமுறையில் எந்த மாற்றத்தையும் நீர் காணமாட்டீர்!” (17:77)
“மனிதர்களிடம் நேர்வழி வந்தபோது, முன்னோரின் வழிமுறை (எனும் அழிவு) தம்மிடம் வரவில்லை என்பதையும், அல்லது வேதனை கண்முன்னே வரவில்லை என்பதையும் தவிர, வேறெதுவும் அவர்கள் நம்பிக்கை கொள்வதை விட்டும், தமது இரட்சகனிடம் பாவமன்னிப்புக் கோருவதை விட்டும் அவர்களைத் தடுக்கவில்லை.” (18:55)
இந்த இடங்களில் சுன்னா என்ற பதம் வழிமுறை என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப் பட்டிருப்தைக் காணலாம்.
நபி மொழிகளிலும் இந்த அர்த்தத்தில் சுன்னா என்ற பதம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
“யார் ஒரு நல்ல வழியை ஏற்படுத்துகின்றாரோ அவருக்கு அதற்கான நற்கூலியும் கிடைக்கும். மறுமை நாள் வரை அதன்படி யாரெல்லாம் அமல் செய்தார்களோ அவர்களது கூலியும் கிடைக்கும். யார் ஒரு கெட்ட வழிமுறையை ஏற்படுத்துகின்றாரோ அவருக்கும் அதற்குரிய குற்றமும், மறுமை நாள் வரை யாரெல்லாம் அதை எடுத்து நடக்கின்றார்களோ அதற்குரிய குற்றமும் சேரும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்”
(அறிவிப்பவர்: ஜாபிர் இப்னு அப்துல்லாஹ்)
இங்கே நல்ல வழி, கெட்ட வழி என்ற அர்த்தத்தைத் தரும் விதத்தில் “சுன்னா ஹஸனா”, “சுன்னா ஷையிஆ” என்ற பதங்கள் பயன்படுத்தப் பட்டுள்ளன. அறபு மொழியில் சுன்னா என்ற பதம் பயான், விளக்கம், தொடர்ச்சியாகச் செய்யக் கூடியது, பின்பற்றத்தக்க முன்னுதாரணம் போன்ற இன்னும் அர்த்தங்களிலும் பயன்படுத்தப்படுவதுண்டு.
இஸ்லாமிய பரிபாஷையில் சுன்னா என்ற பதம் குறித்து விளக்க முனைந்த இஸ்லாமிய அறிஞர்கள், அவரவர் சார்ந்த துறை சார்ந்து சுன்னாவை விளக்குகின்றனர்.
குர்ஆன் அல்லாத நபி(ஸல்) அவர்கள் கூறிய அனைத்தும் சுன்னா என சிலரால் கூறப்படுகின்றது.
வாஜிப் (பர்ழ்) இல்லாத அனைத்தும் சுன்னா என சிலரால் வரைவிலக்கணப்படுத்தப்படுகின்றது.
செய்தால் நன்மை செய்யாவிட்டால் குற்றமில்லை என்ற நிலையில் இருப்பது சுன்னா எனச் சிலரால் கூறப்படுகின்றது.
நபி(ஸல்) அவர்கள் சொல், செயல், அங்கீகாரம், நபி(ஸல்) அவர்களின் பண்புகள், குணவியல்புகள் பற்றிய செய்திகள் அனைத்தும் ஹதீஸ் என்றும் சுன்னா என்றும் கூறப்படும் என்பது அனேக அறிஞர்களின் அபிப்பிராயமாகும்.
நபி(ஸல்) அவர்களின் மார்க்க ரீதியான சொல், செயல், அங்கீகாரம் என்பன பின்பற்றுதலுக்கும், நம்பிக்கை கொள்வதற்குமுரியதாகும். நபி(ஸல்) அவர்கள் கூறிய சில விடயங்கள் நம்பிக்கை சார்ந்ததாக இருக்கலாம். மற்றும் சிலதும் செய்ய வேண்டியவைகளாக இருக்கலாம். இந்த வகையில் சுன்னா சொல்லும் செய்திகளை நம்புவதும், அதன் ஏவல்களை எடுத்து நடப்பதும், அதன் விலக்கல்களை விட்டும் விலகிக் கொள்வதும் கட்டாயக் கடமையாகும்.
சுன்னாவின் தீர்வுக்கு முழுமையாகக் கட்டுப்படுவது ஈமானின் அடிப்படையாகும். சுன்னாவுக்கு மாற்றுக் கருத்துக் கூறும் அதிகாரம் யாருக்கும் கிடையாது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
“(நபியே!) உமது இரட்சகன் மீது சத்தியமாக அவர்கள் தமக்கிடையில் ஏற்பட்ட சர்ச்சையில் உம்மை நீதிபதியாக்கி, பின்னர் நீர் வழங்கும் தீர்ப்பை தம் மனங்களில் எத்தகைய அதிருப்தியும் கொள்ளாது ஏற்று, அதற்கு முற்றிலும் கட்டுப்படும் வரை நம்பிக்கை கொண்டவர்களாக மாட்டார்கள்.” (4:65)
நபி(ஸல்) அவர்களின் தீர்ப்பை எவ்வித சங்கடமுமில்லாமல் ஏற்காதவரை ஒருவர் முஃமினாக முடியாது.
“அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒரு காரியத்தில் முடிவுசெய்து விட்டால் தமது காரியத்தில் சுய அபிப்பிராயம் கொள்வதற்கு முஃமினான எந்த ஆணுக்கும் முஃமினான எந்தப் பெண்ணுக்கும் உரிமை இல்லை. எவன் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் மாறு செய்கின்றானோ நிச்சயமாக அவன் மிகத் தெளிவான வழிகேட்டில் சென்றுவிட்டான்.” (33:36)
சுன்னாவுக்கு மாற்றுக் கருத்துக் கூறுபவர்கள் தெளிவான வழிகேட்டில் இருப்பதாக இந்த வசனம் கூறுகின்றது.
“இத்தூதர் உங்களுக்கு எதை வழங்கினாரோ அதை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். அவர் எதை உங்களுக்குத் தடுத்தாரோ (அதை விட்டும்) விலகிக் கொள்ளுங்கள். இன்னும் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் தண்டிப்பதில் கடுமையானவன்.” (59:7)
சுன்னாவின் ஏவல், விலக்கல் இரண்டுமே பின்பற்றப்பட வேண்டியவை என இந்த வசனம் கூறுகின்றது.
அல்லாஹ்வுக்கும் வழிப்படுங்கள், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள். எனக் கூறும் குர்ஆன் வசனங்கள் அனைத்துமே சுன்னாவின் முக்கியத் துவத்தை வலியுறுத்துவதாகவே அமைந்துள்ளது.
“அல்லாஹ்வுக்கும் தூதருக்கும் கட்டுப்படுங்கள் என்று (நபியே!) நீர் கூறுவீராக! அவர்கள் புறக்கணித்தால் நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்பாளர்களை நேசிக்கமாட்டான்.” (3:32)
“நீங்கள் அருள் செய்யப்படும் பொருட்டு அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்” (3:132)
“நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள். இன்னும் இத் தூதருக்கும் உங்களில் அதிகாரமுடையோருக்கும் கட்டுப்படுங்கள். நீங்கள் ஏதேனும் ஒரு விடயத்தில் முரண்பட்டுக் கொண்டால், நீங்கள் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொள்வோராக இருந்தால், அதனை அல்லாஹ்விடமும் இத்தூதரிடமும் (தீர்வை வேண்டி) திருப்பிவிடுங்கள். இதுவே மிகச் சிறந்ததும் அழகான முடிவுமாகும்” (4:59)
“யார் அல்லாஹ்வுக்கும் இத்தூதருக்கும் கட்டுப்படுகின்றார்களோ அவர்கள், அல்லாஹ் அருள் புரிந்த நபிமார்கள், உண்மையாளர்கள், உயிர்த்தியாகிகள், நல்லோர்கள் ஆகியோருடன் இருப்பார்கள். இவர்களே சிறந்த தோழர்களாவார்கள்” (4:69)
“யார் இத்தூதருக்குக் கட்டுப்படுகின்றாரோ அவர் நிச்சயமாக அல்லாஹ்வுக்கும் கட்டுப்பட்டுவிட்டார். எவர்கள் புறக்கணிக்கின்றார்களோ அவர்களைக் கண்காணிப்பவராக உம்மை நாம் அனுப்பவில்லை” (4:80)
“அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள். இத் தூதருக்கும் கட்டுப்படுங்கள். (அவர்களுக்கு மாறுசெய்வதில்) எச்சரிக்கையாகவும் இருந்து கொள்ளுங்கள். நீங்கள் புறக்கணித்தால், எமது தூதர்; மீதுள்ள பொறுப்பு தெளிவாக எடுத்துரைப்பதுதான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்” (5:92)
“நீங்கள் அருள் செய்யப்படும் பொருட்டு தொழுகையை நிலைநாட்டுங்கள். ஸகாத்தையும் கொடுங்கள், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்” (24:56)
“நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள். அல்லாஹ் உங்களை நேசிப்பான், இன்னும், உங்கள் பாவங்களை உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும் நிகரற்ற அன்புடையவனுமாவான் என்று (நபியே!) நீர் கூறுவீராக!” (3:31)
“அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள். இன்னும் இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள். மேலும், நீங்கள் புறக்கணித்தால் தெளிவாக எடுத்துரைப்பதே நமது தூதர் மீதுள்ள கடமையாகும்.” (64:12)
இந்த வசனங்கள் அனைத்தும் சுன்னாவும் இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரங்களில் ஒன்று என்பதையும், அதற்கு மாற்றம் செய்வது வழிகேடு என்பதையுமே தெளிவுபடுத்துகின்றன.
சுன்னாவும் வேத வெளிப்பாட்டின் ஒரு பகுதி என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்வது அவசியமாகும்.
1. நபியவர்களின் சொல்லும் வஹியே!
“அவர் மனோ இச்சைப்படி பேசுவதில்லை.
“அது அவருக்கு அறிவிக்கப்படும் வஹியேயன்றி வேறில்லை”
“வலிமைமிக்க அழகிய தோற்றத்தையுடைய (ஜிப்ரீல் எனும் வான)வர் இவருக்குக் கற்றுக் கொடுத்தார். (தனது இயற்கை அமைப்பில் நபியின் முன்) நேராக நின்றார்” (53:3-5)
நபி(ஸல்) அவர்கள் தனது மனோ இச்சைப்படி பேசுவதில்லை என்றும், அவர் பேசும் பேச்சுக்கள் அனைத்தும் வஹி எனும் வேத வெளிப்பாடே என்றும் இந்த வசனங்கள் பேசுகின்றன.
“நான் வஹியைக் கொண்டே உங்களுக்கு எச்சரிக்கை செய்கின்றேன் என (நபியே) நீர் கூறுவீராக! செவிடர்கள் எச்சரிக்கப்படும் போது, இவ்வழைப்பை அவர்கள் செவியுறமாட்டார்கள்.” (21:45)
நபி(ஸல்) அவர்கள் வஹி மூலமாகத்தான் மக்களுக்கு எச்சரிக்கை செய்துள்ளார்கள் என்பதை இந்த வசனம் உறுதி செய்கின்றது. இந்த அடிப்டையில் நபி(ஸல்) அவர்கள் கூறிய கூற்றுக்கள் வஹியாக அமைகின்றன. அவற்றை மறுப்பவர் வஹியை மறுப்பவராக கருதப்படுவார்.
2. நபியின் செயலும் வஹியே!
“உமக்கு வஹியாக அறிவிக்கப்படுவதைப் பின்பற்றுவீராக! இன்னும் அல்லாஹ் தீர்ப்பளிக்கும் வரை பொறுமையாக இருப்பீராக! அவனே தீர்ப்பளிப்போரில் மிகச் சிறந்தவனாவான்.” (10:109)
உமக்கு வஹீ மூலம் அறிக்கப்பட்டதைப் பின்பற்றுவீராக! என அல்லாஹ் கட்டளையிடுகின்றான். இந்தக் கட்டளைப் பிரகாரம் நபி(ஸல்) அவர்கள் தனக்கு வஹீ மூலம் அறிவிக்கப் பட்டதைத்தான் பின்பற்றியுள்ளார்கள். எனவே, நபி(ஸல்) அவர்களது செயல்களும் வஹியாகவே அமைந்துள்ளன.
“மேலும், உமது இரட்சகனிடமிருந்து உமக்கு வஹியாக அறிவிக்கப்படுபவற்றையே நீர் பின்பற்றுவீராக! நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்து கொண்டிருப்பவற்றை நன்கறிந்தவனாக இருக்கின்றான்” (33:2)
இந்த வசனமும் இதே கருத்தைத்தான் தருகின்றது. பின்வரும் வசனங்கள் நபி(ஸல்) அவர்களின் செயல்களும் வஹிதான் என்பதை உறுதி செய்கின்றன.
“நான் தூதர்களில் புதியவனாக இல்லை. எனக்கும் உங்களுக்கும் என்ன செய்யப்படும் என்பதையும் நான் அறியமாட்டேன். எனக்கு வஹியாக அறிவிக்கப்படுபவற்றையே நான் பின்பற்றுகின்றேன். மேலும், நான் தெளிவாக எச்சரிப்பவனேயன்றி வேறில்லை” என (நபியே) நீர் கூறுவீராக!” (46:9)
“அவர்கள் மீது நமது வசனங்கள் தெளிவாக ஓதிக்காட்டப்பட்டால், “இது அல்லாத வேறு குர்ஆனைக் கொண்டு வாரும்ளூ அல்லது இதை மாற்றி விடும்” என நமது சந்திப்பை ஆதரவு வைக்காதோர் கூறுகின்றனர். “என் சுய விருப்பப்படி இதை மாற்றிவிட எனக்கு எந்த அதிகாரமும் இல்லை. எனக்கு வஹியாக அறிவிக்கப்படுவதைத் தவிர வேறு எதையும் நான் பின்பற்ற மாட்டேன். நான் என் இரட்சகனுக்கு மாறு செய்தால் மகத்தான நாளின் வேதனையை நிச்சயமாக அஞ்சுகிறேன்” என்று (நபியே!) நீர் கூறுவீராக!” (10:15)
“அவர்களிடம் நீர் ஏதேனும் ஒரு வசனத்தைக் கொண்டுவராவிட்டால், “அதனை நீரே உருவாக்கியிருக்க வேண்டாமா?” என அவர்கள் கேட்கின்றனர். “எனக்கு என் இரட்சகனிடமிருந்து வஹியாக அறிவிக் கப்படுபவற்றையே நான் பின்பற்றுகின்றேன். இது உங்கள் இரட்சகனிடமிருந்து வந்த தெளிவான சான்றுகளாகவும், நம்பிக்கை கொள்ளும் சமூகத்திற்கு நேர்வழியாகவும் அருளாகவும் இருக்கின்றது” என (நபியே!) நீர் கூறுவீராக!” (7:203)
“”என்னிடம் அல்லாஹ்வின் பொக்கிஷங்கள் இருக்கின்றன” என்று நான் உங்களுக்குக் கூறமாட்டேன். மறைவானவற்றை நான் அறியவும் மாட்டேன். நிச்சயமாக நான் ஒரு வானவர் என்றும் உங்களுக்குக் கூறமாட்டேன். எனக்கு வஹியாக அறிவிக்கப்படுவதைத் தவிர வேறெதையும் நான் பின்பற்றுவதில்லை என்று (நபியே!) நீர் கூறுவீராக! “பார்வையற்றவனும் பார்வையுடையவனும் சமமாவார்களா? நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா?” என்று கேட்பீராக!” (6:50)
இந்த வசனங்கள் அனைத்தும் நபி(ச) அவர்கள் வஹியின் அடிப்படையிலேயே செயற்பட்டார்கள் என்பதை உறுதி செய்கின்றன. இந்த வசனஙகள் மூலம் நபி(ஸல்) அவர்களது சொல், செயல் என்பன வஹிதான் என்பது உறுதி செய்யப்படுகின்றது.
ஒரு நபியின் முன்னால் ஒரு செயல் செய்யப்பட்டு அது தவறாக இருந்தால் அந்த நபி நிச்சயமாக அதைக் கண்டிப்பார். அவர் கண்டிக்கவில்லை என்றால் வஹி அந்தச் செயலை அங்கீகரித்துள்ளது என்பதே அர்த்தமாகின்றது. இவ்வகையில் நபி(ஸல்) அவர்களது சொல், செயல், அங்கீகாரம் என்பன வஹியாக அல்லது வஹியின் அங்கீகாரம் பெறப்பட்டதாகக் கொள்ளப்படுகின்றது.
ஹதீஸின் பார்வையில்
நபி(ஸல்) அவர்களுக்குக் குர்ஆன் ஜிப்ரீல்(அலை) அவர்கள் மூலம் கொடுக்கப்பட்டது போன்றே “ஹதீஸ்”களும் ஜிப்ரீல்(அலை) அவர்கள் மூலம் அளிக்கப்பட்டுள்ளது.
லைலதுல் கத்ர் இரவு பற்றி அறிவிப்பதற்காக ஜிப்ரீல்(அலை) அவர்கள் வந்தது குறித்து ஸஹீஹுல் புஹாரியின் 813 ஆவது ஹதீஸ் குறிப்பிடுகின்றது.
“உனது உம்மத்தில் அல்லாஹ்வுக்கு இணை வைக்காமல் யார் மரணிக்கிராரோ அவர் சுவனம் நுழைவார் என ஜிப்ரீல்(அலை) அவர்கள் வந்து கூறினார்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்” (புஹாரி: 2388)
இந்த செய்தியைக் கூறுவதற்காக ஜிப்ரீல்(அலை) அவர்கள் வந்துள்ளதை இந்த ஹதீஸ் உறுதி செய்கின்றது. இஸ்லாத்தை ஏற்பதாகக் கூறி நபித்தோழர்களை அழைத்துச் சென்று ஒரு கூட்டம் கொலை செய்தது. இவ்வாறு கொல்லப்பட்டது குறித்து ஜிப்ரீல்(அலை) வந்து “அவர்கள் தங்கள் ரப்பை சந்தித்தனர். அவன் அவர்களைப் பொருந்திக் கொண்டான். அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டார்கள்” என அறிவித்தார்கள்…” (புஹாரி: 2801)
“நாங்கள் நாயும், உருவப்படமும் உள்ள வீட்டில் நுளையமாட்டோம் என ஜிப்ரீல்(அலை) அவர்கள் கூறியதாக நபி(ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்” (புஹாரி:3227)
தாயிப் சம்பவத்தின் போது அல்லாஹுத் தஆலா ஜிப்ரீல்(அலை) அவர்களையும், மலைகளுக்குப் பொறுப்பான மலக்குகளையும் நபி(ஸல்) அவர்களிடத்தில் அனுப்பியதையும், ஜிப்ரீல்(அலை) அவர்கள் நபி(ஸல்) அவர்களுடன் உரையாடியது குறித்தும் புஹாரி 3231 ஆவது ஹதீஸ் கூறுகின்றது.
“அப்துல்லாஹ் இப்னு ஸலாம் என்ற யூதர் நபி(ஸல்) அவர்களிடம் மூன்று கேள்விகள் கேட்டார். இதற்கு ஒரு நபியால்தான் பதில் கூற முடியும் என்று கூறி அவர் கேள்வி கேட்க நபி(ஸல்) அவர்கள் சற்று முன்னர் இது பற்றி ஜிப்ரீல் எனக்கு அறிவித்தார் எனக் கூறி பதில் கூறினார்கள். அவர் இஸ்லாத்தை ஏற்றார்” (புஹாரி: 3229)
“ஆயிஷா(ரழி) அவர்களுக்கு ஜிப்ரீல்(அலை) அவர்கள் ஸலாம் கூறியுள்ளார்கள்” (புஹாரி:3768)
ஜிப்ரீல்(அலை) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் வந்து கதீஜா(ரழி) அவர்கள் பற்றிப் பேசியதாகவும், அவர்களுக்கு ஸலாம் கூறியதாகவும், அவர்களுக்கு சுவனத்தைக் கொண்ட சுபசோபனம் கூறியதாகவும் புஹாரி 3820 ஹதீஸ் கூறுகின்றது.
பத்ர் வீரர்கள் சிறப்புப் பெற்றது போல் பத்ரில் பங்கு கொண்ட மலக்குகளும் சிறப்புப் பெற்றவர்கள் என்பதை ஜிப்ரீல்(அலை) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் வந்து கூறியதாக புஹாரி 3992, 3993 ஆவது ஹதீஸ்கள் கூறுகின்றது.
பத்ர் போரின் போது ஜிப்ரீல்(அலை) அவர்கள் வந்ததாக புஹாரி 3995 ஆவது ஹதீஸ் கூறுகின்றது.
“ஜிப்ரீல்(அலை) அவர்கள் அண்டை வீட்டார்களைக் குறித்து உபதேசித்துக் கொண்டே இருந்தார்கள். அண்டை வீட்டாருக்கு வாரிசுரிமையில் பங்கு கொடுக்குமாறு கூறுவார்களோ என நான் அஞ்சுமளவுக்கு அந்த வஸீயத் இருந்தது என நபி(ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்” (புஹாரி:6014) அண்டை வீட்டார் உரிமை பற்றி வலியுறுத்துவதற்காகவே ஜிப்ரீல்(அலை) அவர்கள் பலமுறை வந்துள்ளார்கள் என்பதை இந்த ஹதீஸ் உறுதி செய்கின்றது.
நபி(ஸல்) அவர்களிடம் பல சந்தர்ப்பங்களில் கேள்விகள் கேட்கப்பட்டு அந்தக் கேள்விகளுக்கு வஹி வந்த பின்னர் பதில் கூறியுள்ளார்கள்.
நன்மை தீமையைக் கொண்டு வருமா? என ஒருவர் கேட்ட போது (புஹாரி: 1465, 2842, 6427), உம்ராவுடைய ஆடை குறித்து ஒருவர் கேள்வி கேட்ட போதும் (புஹாரி: 1789) நபி(ஸல்) அவர்களுக்கு வஹி வந்து பதில் கூறியுள்ளார்கள்.
இவ்வாறு நோக்கும் போது சுன்னாவும் வஹி என்பது எள்ளளவும் சந்தேகம் இல்லாத அளவுக்கு உறுதியாகின்றது.
குர்ஆன், சுன்னா இரண்டுமே வஹி என்றிருக்கும் போது சுன்னாவைப் புறக்கணிப்பதும் சுன்னாவை மறுப்பதும், சுன்னாவில் சிலவற்றை ஆதாரமாக எடுக்க முடியாது என எடுத்தெறிந்து பேசுவதும் குர்ஆனின் தீர்வு இருந்தால் சுன்னா தேவையில்லை என்று கூறுவதும், சுன்னாவில் சிலது சட்டமியற்றவும், சிலது அகீதா பற்றிப் பேசவும் அருகதையற்றது எனக் கூறுவதும் வழிகேட்டின் வாயிலைத் திறப்பதாகவே இருக்கும்.
எனவே, சுன்னாவும் வேத வெளிப்பாடே என்ற சத்தியத்தில் உறுதியாக இருப்போமாக!…