அத்தியாயம் 11 இறுதிக் கடன்கள்

ஸஹீஹ் முஸ்லிம்
அத்தியாயம் 11
இறுதிக் கடன்கள்

பாடம் : 1 இறப்பின் நெருக்கத்தில் இருப்போருக்கு "லா இலாஹ இல்லல்லாஹ்" (எனும் கலிமா)வை நினைவூட்டுதல்.
1672. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் இறப்பின் நெருக்கத்தில் இருப்போருக்கு "லா இலாஹ இல்லல்லாஹ்" ("அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை" எனும் கலிமா)வை நினைவுபடுத்துங்கள்.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூசயீத் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது:
அத்தியாயம் : 11
1673. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் இறப்பின் நெருக்கத்தில் இருப்போருக்கு "லா இலாஹ இல்லல்லாஹ்" (எனும் கலிமா)வை நினைவுபடுத்துங்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 11
பாடம் : 2 துன்பம் நேரும்போது ஓத வேண்டிய பிரார்த்தனை.
1674. உம்மு சலமா ஹிந்த் பின்த் அபீ உமய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:
"ஒரு முஸ்லிமுக்கு ஏதேனும் துன்பம் நேரும்போது அவர் அல்லாஹ்வின் கட்டளைக்கேற்ப "இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்" (நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்) என்றும், "அல்லா ஹும்மஃஜுர்னீ ஃபீ முஸீபத்தீ வ அக்லிஃப் லீ கைரம் மின்ஹா" (இறைவா, எனக்கேற்பட்ட இத்துன்பத்தை நான் பொறுமையுடன் ஏற்றதற்கு மாற்றாக எனக்கு நன்மையை வழங்குவாயாக!) என்றும் கூறினால், அதற்கு ஈடாக அதைவிடச் சிறந்ததை அவருக்கு அல்லாஹ் வழங்காமல் இருப்பதில்லை" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(என் முதல் கணவர்) அபூசலமா (ரலி) அவர்கள் இறந்தபோது நான் "அபூசலமாவைவிட முஸ்லிம்களில் சிறந்தவர் எவர் இருக்க முடியும்? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் முதன்முதலில் நாடு துறந்துவந்த குடும்பம் (அவருடைய குடும்பம்தான்)" என்று கூறினேன். ஆயினும், (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது கூற்றுக்கேற்ப) இன்னாலில்லாஹி... என்று நான் சொன்னேன். அவ்வாறே அவருக்கு ஈடாக அல்லாஹ் தன்னுடைய தூதரையே (இரண்டாவது கணவராக) எனக்கு வழங்கினான்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் ஹாத்திப் பின் அபீபல்தஆ (ரலி) அவர்களை அனுப்பி, தமக்காக என்னைப் பெண் கேட்டார்கள். அப்போது நான் "எனக்கு ஒரு மகள் இருக்கிறாள். நானோ முன்கோபக்காரி ஆவேன்" என்று கூறிவிட்டேன். (எனது பதிலைக் கேட்ட) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அவருடைய மகள் (அவரது துணையின்றியே) தன்னிறைவுடன் இருக்க நாம் அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறோம். அவரது முன்கோபத்தைப் போக்கவும் நான் அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறேன்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 11
1675. உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
"ஓர் அடியார் தமக்கு ஒரு துன்பம் ஏற்படும்போது "இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். அல்லாஹும்மஃஜுர்னீ ஃபீ முஸீபத்தீ வ அக்லிஃப் லீ கைரம் மின்ஹா" என்று கூறினால், அவர் துன்பம் அடைந்ததற்காக அவருக்கு அல்லாஹ் நன்மையை வழங்கி, அதைவிடச் சிறந்த ஒன்றை அதற்கு ஈடாக வழங்காமல் இருப்பதில்லை" என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டேன்.
(என் முதல் கணவர்) அபூசலமா (ரலி) அவர்கள் இறந்தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டதைப் போன்றே (இன்னா லில்லாஹி... என்று) நான் கூறினேன். அல்லாஹ் அபூசலமாவைவிடச் சிறந்தவரான அல்லாஹ்வின் தூதரையே எனக்கு மாற்றாக (கணவராக) வழங்கினான்.
அத்தியாயம் : 11
1676. மேற்கண்ட ஹதீஸ் நபி (ஸல்) அவர்களின் துணைவியார் உம்மு சலமா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் பின்வருமாறு காணப்படுகிறது:
அபூசலமா (ரலி) அவர்கள் இறந்தபோது, நான் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர் அபூசலமாவைவிடச் சிறந்தவர் எவர் இருக்க முடியும்?" என்று கூறினேன். பிறகு அல்லாஹ் என் உள்ளத்தில் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கட்டளைப்படி கூறும்) உறுதியை அளித்தபோது, நான் அவ்வாறே சொன்னேன். அல்லாஹ்வின் தூதரையே மணந்துகொண்டேன்.
அத்தியாயம் : 11
பாடம் : 3 நோயாளியிடமும் இறப்பிற்கு நெருக்கத்தில் இருப்பவரிடமும் சொல்ல வேண்டியவை.
1677. உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
"நீங்கள் நோயாளியையோ இறந்தவரையோ சந்திக்கச் சென்றால் நல்லதையே சொல்லுங்கள். ஏனெனில், நீங்கள் சொல்வதற்கு வானவர்கள் "ஆமீன்" கூறுகின்றனர்" என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(என் கணவர்) அபூசலமா (ரலி) அவர்கள் இறந்தபோது நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, "அல்லாஹ்வின் தூதரே, அபூசலமா இறந்துவிட்டார்" என்று கூறினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் "இறைவா, என்னையும் அவரையும் மன்னிப்பாயாக! அவருக்கு மாற்றாக அவரைவிடச் சிறந்த துணையை எனக்கு வழங்குவாயாக" என்று கூறுமாறு என்னிடம் சொன்னார்கள். நான் அவ்வாறே பிரார்த்தித்தேன்.
அவரைவிடச் சிறந்தவரான முஹம்மத் (ஸல்) அவர்களையே அல்லாஹ் எனக்குத் துணையாக வழங்கினான்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 11
பாடம் : 4 உயிர் பிரிந்தவுடன் இறந்தவரின் கண்களை மூடிவிடுவதும் இறந்தவருக்காகப் பிரார்த்திப்பதும்.
1678. உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(என் முதல் கணவர்) அபூசலமாவின் (இறுதி நாளில் அவரது) பார்வை நிலைகுத்தி நின்றபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து, அவருடைய கண்களை மூடிவிட்டார்கள். பிறகு, "உயிர் கைப்பற்றப்படும்போது பார்வை அதைப் பின்தொடர்கிறது" என்று கூறினார்கள். அப்போது அபூசலமாவின் குடும்பத்தார் சப்தமிட்டு (புலம்பி) அழுதனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "உங்களுக்காக நீங்கள் நல்லதைத் தவிர வேறெதையும் வேண்டாதீர்கள். ஏனெனில், நீங்கள் சொல்வதற்கு வானவர்கள் "ஆமீன்" கூறுகின்றனர்" என்று கூறினார்கள். மேலும், "இறைவா! அபூசலமாவை மன்னிப்பாயாக! நல்வழி பெற்றவர்களிடையே அவரது தகுதியை உயர்த்துவாயாக! அவருக்குப் பிறகு எஞ்சியிருப்போருக்கு அவரைவிடச் சிறந்த துணையை வழங்குவாயாக! அகிலத்தின் அதிபதியே! எங்களுக்கும் அவருக்கும் மன்னிப்பு அருள்வாயாக! அவரது மண்ணறையை (கப்று) விசாலமாக்குவாயாக! அதில் அவருக்கு வெளிச்சத்தை ஏற்படுத்துவாயாக!" என்று பிரார்த்தித்தார்கள்.
அத்தியாயம் : 11
1679. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "அவர் விட்டுச் சென்றவர்களில் அவருக்குப் பகரமாக அவரைவிடச் சிறந்தவரை ஏற்படுத்துவாயாக" என்றும் ("இறைவா,அவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக!" என்பதைக் குறிக்க) "இஃப்சஹ் லஹு" எனும் சொற்றொடரை ஆளாமல் "அவ்சிஃ லஹு" என்று கூறியதாகவும் இடம்பெற்றுள்ளது. "பிரார்த்தனையில் ஏழாவதாக நபி (ஸல்) அவர்கள் கூறிய மற்றொன்றை நான் மறந்து விட்டேன்" என அறிவிப்பாளர்களில் ஒருவரான காலித் அல்ஹஃத்தா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
அத்தியாயம் : 11
பாடம் : 5 இறப்பவரின் பார்வை தனது உயிரை நோக்கி நிலைகுத்தி நிற்றல்.
1680. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஒரு மனிதன் இறக்கும்போது அவனது பார்வை நிலைகுத்தி நிற்பதை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா?" என்று கேட்டார்கள். மக்கள் "ஆம் (கவனித்திருக்கிறோம்)" என்று விடையளித்தனர். "உயிர் பிரிந்து செல்லும்போது, அதைப் பார்வை பின்தொடர்வது தான் அது" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 11
பாடம் : 6 இறந்தவருக்காக அழுவது.
1681. உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(என் முதல் கணவர்) அபூசலமா (ரலி) அவர்கள் இறந்தபோது, நான் "(என் கணவர்) ஒரு வெளியூர்காரர்; அந்நிய மண்ணில் (இறந்துபோயிருக்கிறார்). அவருக்காக நான் (ஒப்பாரி வைத்து) நன்கு அழுவேன். அதுபற்றி (ஊரெல்லாம்) பேசப்பட வேண்டும்" என்று கூறிக்கொண்டு அழத் தயாரானேன். அப்போது (மதீனாவையொட்டிய "அவாலீ" எனப்படும்) மேட்டுப் பகுதியிலிருந்து ஒரு பெண் எனக்கு ஒத்தாசை செய்யும் நோக்கில் வந்து கொண்டிருந்தாள். அவளை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எதிர்கொண்டு "அல்லாஹ் ஓர் இல்லத்திலிருந்து (அந்த இல்லத்தார் இறைநம்பிக்கைகொண்டதன் மூலம்) ஷைத்தானை வெளியேற்றிய பின் அவனை நீ உள்ளே அனுமதிக்க விரும்புகிறாயா?" என்று இரண்டுமுறை கேட்டார்கள். எனவே, நான் அழுகையை நிறுத்திக்கொண்டேன்; (அதன் பின் அவருக்காக) நான் அழவில்லை.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 11
1682. உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் நபி (ஸல்) அவர்கள் அருகில் இருந்தோம். அப்போது நபி (ஸல்) அவர்களுடைய புதல்வியரில் ஒருவர் (ஸைனப்-ரலி) "தமது குழந்தை" அல்லது "தம் மகன்" இறக்கும் தறுவாயில் இருப்பதால் உடனே வரும்படி நபி (ஸல்) அவர்களுக்குச் செய்தி அனுப்பினார். செய்தி கொண்டு வந்தவரிடம், "என் மகளிடம் சென்று, எடுத்ததும் கொடுத்ததும் அல்லாஹ்வுக்குரியதே! ஒவ்வொன்றுக்கும் அவனிடம் ஒரு குறிப்பிட்ட தவணை உண்டு. எனவே, பொறுமையாக இருந்து நன்மையை எதிர்பார்க்கச் சொல்!" என்று கூறியனுப்பினார்கள். அவர் (சென்றுவிட்டு) திரும்பிவந்து "தங்கள் மகள் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுத் தாங்கள் கண்டிப்பாக வரவேண்டும் எனக் கூறுகிறார்" என்றார். உடனே நபி (ஸல்) அவர்கள் எழுந்தார்கள். அவர்களுடன் சஅத் பின் உபாதா, முஆத் பின் ஜபல் (ரலி) ஆகியோரும் சென்றனர். அவர்களுடன் நானும் சென்றேன்.
(வீட்டுக்குச் சென்ற) நபி (ஸல்) அவர்களிடம், (சுவாசிக்க முடியாமல்) மூச்சுத் திணறிக் கொண்டிருக்கும் குழந்தை கொடுக்கப்பட்டது; இற்றுப்போன பழைய தோல் பையில் இருப்பதைப் போன்று (குழந்தையின் மார்பு ஏறி இறங்கிற்று). அப்போது நபி (ஸல்) அவர்களின் கண்கள் கண்ணீரைச் சொரிந்தன. சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள் "அல்லாஹ்வின் தூதரே, என்ன இது (ஏன் அழுகிறீர்கள்)?" என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "இது, அல்லாஹ் தன் அடியார்களின் உள்ளங்களில் ஏற்படுத்திய இரக்க உணர்வாகும். நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களில் இரக்கமுடையவருக்கே இரக்கம் காட்டுகிறான்"என்றார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
இருப்பினும், ஹம்மாத் பின் ஸைத் (ரஹ்) அவர்களது மேற்கண்ட அறிவிப்பே (ஹதீஸ்- 1682) நிறைவானதும் விரிவானதுமாகும்.
அத்தியாயம் : 11
1683. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள் நோயுற்றபோது, அவர்களை உடல்நலம் விசாரிப்பதற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப், சஅத் பின் அபீவக்காஸ், அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) ஆகியோருடன் சென்றார்கள். வீட்டுக்குள் நுழைந்தபோது (சஅத் பின் உபாதா அவர்களின் குடும்பத்தார் அவரைச்) சூழ்ந்திருப்பதைக் கண்டதும் என்ன, "இறந்துவிட்டாரா?" என்று கேட்டார்கள். அவர்கள், "இல்லை, அல்லாஹ்வின் தூதரே!" என்றனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அழலானார்கள். அவர்களின் அழுகையைக் கண்ட மக்களும் அழத் தொடங்கினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(மக்களே!) நீங்கள் (செவி சாய்த்துக்) கேட்கமாட்டீர்களா? நிச்சயமாகக் கண்கள் அழுவதாலும் உள்ளம் கவலை கொள்வதாலும் அல்லாஹ் தண்டிப்பதில்லை. மாறாக, இதோ இதன் காரணமாகவே தண்டிக்கிறான் அல்லது தயவு காட்டுகிறான்" என்று கூறி தமது நாவைக் காட்டினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 11
பாடம் : 7 நோயாளிகளைச் சந்தித்து உடல்நலம் விசாரித்தல்.
1684. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தோம். அப்போது அன்சாரிகளில் ஒருவர் வந்து, சலாம் கூறிவிட்டுப் பிறகு திரும்பிச் செல்லப் போனார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அன்சாரிகளின் சகோதரரே! என் சகோதரர் சஅத் பின் உபாதா எப்படி இருக்கிறார்?" என்று விசாரித்தார்கள். அதற்கு "நலமுடன் இருக்கிறார்" என்று அவர் பதிலளித்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "உங்களில் யார் அவரை உடல் நலம் விசாரிப்ப(தற்கு நம்முடன் வருப)வர்?" என்று கேட்டு எழுந்தார்கள். அவர்களுடன் நாங்களும் எழுந்தோம். அப்போது நாங்கள் பத்துக்கும் மேற்பட்டோர் இருந்தோம். நாங்கள் காலணிகளோ காலுறைகளோ தொப்பிகளோ நீளங்கிகளோ அணிந்திருக்கவில்லை. கரடு முரடான அந்தப் பாதையில் நடந்தே அவரிடம் சென்றோம். அப்போது சஅத் (ரலி) அவர்களைச் சுற்றிலுமிருந்த அவருடைய கூட்டத்தார் அவரைவிட்டு விலகிக்கொண்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அவர்களுடனிருந்த தோழர்களும் (சஅத் (ரலி) அவர்களை) நெருங்கினார்கள்.
அத்தியாயம் : 11
பாடம் : 8 துன்பம் ஏற்பட்ட முதல் கட்டத்தில் கடைப்பிடிப்பதே பொறுமை ஆகும்.
1685. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பொறுமை என்பது துன்பம் ஏற்பட்ட முதல் கட்டத்தில் கடைப்பிடிப்பதே ஆகும்.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 11
1686. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஒரு பெண்மணி அருகே சென்றார்கள். அந்தப் பெண், (இறந்துபோய்விட்ட) தன் குழந்தை அருகே அழுதுகொண்டிருந்தாள். அவளிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அல்லாஹ்வை அஞ்சிக்கொள். பொறுமையாக இரு" என்று கூறினார்கள். அதற்கு அப்பெண் "என் துயரத்தை நீங்கள் உணரவில்லை" என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சென்றதும் அப்பெண்ணிடம் "அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்)" என்று சொல்லப்பட்டது. அப்பெண்ணுக்கு மரணமே வந்துவிட்டதைப் போன்று வருத்தம் ஏற்பட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வீட்டுவாசலுக்கு வந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது வீட்டுவாசலில் வாயிற்காவலர் எவரும் இருக்கவில்லை. அப்பெண் "அல்லாஹ்வின் தூதரே! நான் உங்களை (யாரென) அறியவில்லை" என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "பொறுமை என்பது, துன்பம் ஏற்பட்ட முதல் கட்டத்தில் கடைப்பிடிப்பதாகும்" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், அப்துஸ் ஸமத் பின் அப்தில் வாரிஸ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "நபி (ஸல்) அவர்கள் ஒரு மண்ணறை (கப்று) அருகில் இருந்து (அழுது)கொண்டிருந்த ஒரு பெண்ணைக் கடந்து சென்றார்கள்" என ஹதீஸ் துவங்குகிறது.
அத்தியாயம் : 11
பாடம் : 9 இறந்தவருக்காகக் குடும்பத்தார் (ஒப்பாரிவைத்து) அழுவதால் அவர் வேதனை செய்யப்படுகிறார்.
1687. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(என் தந்தை) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் இறந்தபோது அவர்களுக்காக (என் சகோதரி) ஹஃப்ஸா (ரலி) அழுதார். அப்போது நான் "அருமை மகளே! பொறுமையாக இரு! "இறந்தவருக்காக அவருடைய குடும்பத்தார் அழுவதால் அவர் வேதனை செய்யப்படுகிறார்" என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நீர் அறியவில்லையா?" என்று கேட்டேன்.
இதை நாஃபிஉ (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 11
1688. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறந்தவருக்காக ஒப்பாரிவைத்து அழுவதால் மண்ணறையில் (கப்று) அவர் வேதனை செய்யப்படுவார்.
இதை உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 11
1689. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
உமர் (ரலி) அவர்கள் (கத்தியால்) குத்தப்பட்டு மயக்கமுற்றிருந்தபோது, வேகமாக அழுகுரல் கேட்டது. மயக்கம் தெளிந்ததும் அவர்கள், "உயிரோடிருப்பவர் அழுவதன் காரணமாக இறந்தவர் வேதனை செய்யப்படுகிறார்" என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நீங்கள் அறியவில்லையா?" என்று கேட்டார்கள்.
அத்தியாயம் : 11
1690. அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
உமர் (ரலி) அவர்கள் (கத்தியால் குத்தப்பட்டு) காயமுற்றிருந்தபோது, ஸுஹைப் (ரலி) அவர்கள் (சப்தமிட்டு அழுதவர்களாக) "அந்தோ! சகோதரரே!" என்று கூறலானார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் "ஸுஹைபே! "உயிரோடிருப்பவர்கள் அழுவதன் காரணமாக இறந்தவர் வேதனை செய்யப்படுகிறார்" என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நீர் அறியவில்லையா?"என்று கேட்டார்கள்.
அத்தியாயம் : 11
1691. அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
உமர் (ரலி) அவர்கள் (கத்தியால் குத்தப்பட்டு) காயமுற்றிருந்தபோது, ஸுஹைப் (ரலி) அவர்கள் தமது இல்லத்திலிருந்து உமர் (ரலி) அவர்களை நோக்கி வந்து, அவர்களுக்கு எதிரில் நின்று அழுதுகொண்டிருந்தார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் "ஏன் அழுகிறீர்? எனக்காகவா அழுகிறீர்?" என்று கேட்டார்கள். ஸுஹைப் (ரலி) அவர்கள் "ஆம், அல்லாஹ்வின் மீதாணையாக! தங்களுக்காகவே அழுகிறேன், இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே!" என்று கூறினார்கள். உமர் (ரலி) அவர்கள் "அல்லாஹ்வின் மீதாணையாக! "எவருக்காக அழப்படுகின்றதோ அவர் வேதனை செய்யப்படுவார்" என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நீர் அறிந்தே உள்ளீர்" என்று கூறினார்கள்.
இதன் அறிவிப்பாளரான அப்துல் மலிக் பின் உமைர் பின் சுவைத் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
இந்த ஹதீஸை நான் தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரஹ்) அவர்களிடம் கூறினேன். அப்போது அவர்கள் "இதுவெல்லாம் அந்த யூதர்களுக்காகத்தான் என ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிவந்தார்கள்" என்றார்கள்.
அத்தியாயம் : 11
1692. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் (கத்தியால்) குத்தப்பட்டபோது, அவர்களுக்காக (அவர்களுடைய புதல்வி) ஹஃப்ஸா (ரலி) அவர்கள் சப்தமிட்டு அழுதார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் "ஹஃப்ஸா! "சப்தமிட்டு எவருக்காக அழப்படுகின்றதோ அவர் வேதனை செய்யப்படுகின்றார்" என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நீர் அறியவில்லையா?" என்று கேட்டார்கள். (அவ்வாறே உமர் மீது அதிக அன்புகொண்டிருந்த) ஸுஹைப் (ரலி) அவர்கள் சப்தமிட்டு அழுதபோதும் "ஸுஹைப்! "சப்தமிட்டு எவருக்கு அழப்படுகின்றதோ அவர் வேதனை செய்யப்படுவார்" என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நீர் அறியவில்லையா?" என்று கேட்டார்கள்.
அத்தியாயம் : 11
1693. அப்துல்லாஹ் பின் உபைதில்லாஹ் பின் அபீமுலைக்கா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் (மக்காவில்) இப்னு உமர் (ரலி) அவர்களுக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்தேன். அப்போது நாங்கள் உஸ்மான் (ரலி) அவர்களின் புதல்வியார் உம்மு அபான் அவர்களது ஜனாஸாவை எதிர்பார்த்துக் காத்திருந்தோம். இப்னு உமர் (ரலி) அவர்களுக்கு அருகில் உஸ்மான் (ரலி) அவர்களுடைய புதல்வர் அம்ரும் இருந்தார். அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் வந்தார்கள். அவர்களை ஒருவர் கைத்தாங்கலாக அழைத்துவந்து இப்னு உமர் (ரலி) அவர்கள் அமர்ந்திருந்த இடத்தைக் காட்டினார். உடனே அவர்கள் வந்து எனக்குப் பக்கத்தில் அமர்ந்தார்கள். நான் அவர்கள் இருவருக்குமிடையே இருந்தேன். அப்போது வீட்டிலிருந்து அழுகுரல் கேட்டது. உடனே இப்னு உமர் (ரலி) அவர்கள் அம்ரிடம் "நீங்கள் எழுந்து சென்று, அவர்களை அழவேண்டாம் எனத் தடை செய்யுங்கள்"என்று சைகை செய்துவிட்டு, "குடும்பத்தார் அழுவதன் காரணமாக இறந்தவர் வேதனை செய்யப்படுகிறார் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டுள்ளேன்" என்றார்கள்.
அப்போது இப்னு உமர் (ரலி) அவர்கள் ("இறந்தவர் இறைமறுப்பாளராக இருந்தால்" என்று குறிப்பிட்டுச் சொல்லாமல்) பொதுப்படையாக ("இறந்தவர் வேதனை செய்யப்படுகிறார்" என்று)தான் கூறினார்கள்.
உடனே இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்:
நாங்கள் (ஒரு பயணத்தில்) இறைநம்பிக்கையார்களின் தலைவர் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களுடன் இருந்தோம். நாங்கள் (மக்காவிற்கும் மதீனாவிற்கும் இடையிலுள்ள) "பைதாஉ" எனுமிடத்தில் இருந்தபோது, அங்கு ஒரு மரத்திற்குக் கீழே யாரோ ஒருவர் தங்கியிருந்தார். (இதைக் கண்ட) உமர் (ரலி) அவர்கள் என்னிடம் "நீங்கள் சென்று அவர் யாரெனப் பார்த்து வந்து என்னிடம் கூறுங்கள்" என்றார். நான் சென்று பார்த்த போது அங்கு ஸுஹைப் (ரலி) அவர்கள் இருந்தார்கள். நான் உமர் (ரலி) அவர்களிடம் திரும்பிவந்து "நீங்கள் பார்த்துவிட்டு வந்து தெரிவிக்கச் சொன்ன அந்த மனிதர் ஸுஹைப் (ரலி)" என்றேன். அதற்கு உமர் (ரலி) அவர்கள் "அவரை நம்முடன் சேர்ந்து கொள்ளச் சொல்லுங்கள்!" என்றார்கள். நான் "அவருடன் அவருடைய குடும்பத்தாரும் உள்ளார்கள்" என்றேன். உமர் (ரலி) அவர்கள் "அவருடன் அவருடைய குடும்பத்தார் இருந்தாலும் சரியே! (அவரை நம்முடன் வந்து சேர்ந்துகொள்ளச் சொல்லுங்கள்)" என்றார்கள். நாங்கள் (அனைவரும் மதீனாவுக்கு) வந்து சேர்ந்து வெகுநாட்கள் ஆகியிருக்கவில்லை. அதற்குள் இறைநம்பிக்கையாளர்களின் தலைவர் உமர் (ரலி) அவர்கள் (கத்தியால் குத்தப்பட்டு) காயமுற்றார்கள். அப்போது ஸுஹைப் (ரலி) அவர்கள் "சகோதரரே! நண்பரே!" எனக் கூறியபடியே (அழுதுகொண்டு) வந்தார். அப்போது உமர் (ரலி) அவர்கள் "குடும்பத்தாரின் அழுகைகளில் சிலவற்றால் இறந்தவர் வேதனை செய்யப்படுகிறார் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை "நீர் அறியவில்லையா?" அல்லது "நீர் செவியுறவில்லையா?" என்று கேட்டார்கள். ("நீர் அறியவும் கேள்விப்படவுமில்லையா?" என்று கேட்டதாக அய்யூப் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் இடம்பெற்றுள்ளது.) இப்னு உமர் (ரலி) அவர்கள் (குறிப்பிட்டுக் கூறாமல்) பொதுவாகச் சொல்லியுள்ளார்கள். உமர் (ரலி) அவர்களோ "குடும்பத்தாரின் சில அழுகையால்" என்று (குறிப்பாக்கிக்) கூறினார்கள்.
(அறிவிப்பாளர் அப்துல்லாஹ் பின் உபைதில்லாஹ் பின் அபீமுலைக்கா (ரஹ்) அவர்கள் தொடர்ந்து கூறுகின்றார்கள்:)
உடனே நான் எழுந்து ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்றேன்; இப்னு உமர் (ரலி) அவர்கள் சொன்ன ஹதீஸை அவர்களிடம் தெரிவித்தேன். ஆயிஷா (ரலி) அவர்கள், "இல்லை; அல்லாஹ்வின் மீதாணையாக! "எவரோ ஒருவர் அழுவதன் காரணமாக இறந்துவிட்ட (இறைநம்பிக்கையாளரான) மனிதர் வேதனை செய்யப்படுகிறார்" என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒருபோதும் கூறவில்லை. மாறாக "குடும்பத்தார் அழுவதன் காரணமாக இறைமறுப்பாளனுக்கு அல்லாஹ் இன்னும் வேதனையை அதிகப்படுத்துகின்றான்" என்றே கூறினார்கள். அல்லாஹ்வே சிரிக்கவும் வைக்கிறான்; அழவும் வைக்கிறான் (53:43).ஓர் ஆத்மாவின் (பாவச்) சுமையை மற்றோர் ஆத்மா சுமக்காது (35:18)" என்று கூறினார்கள்.
காசிம் பின் முஹம்மத் பின் அபீபக்ர் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
உமர் (ரலி) மற்றும் இப்னு உமர் (ரலி) ஆகியோரின் கூற்று ஆயிஷா (ரலி) அவர்களுக்கு எட்டியபோது "நீங்கள் பொய்யர்களோ பொய்ப்பிக்கப்பட்டவர்களோ அல்லாத இருவர் சொன்ன ஹதீஸை என்னிடம் கூறுகின்றீர்கள். ஆயினும், செவி (சில நேரங்களில்) தவறாக விளங்கிவிடுகிறது" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 11
1694. அப்துல்லாஹ் பின் உபைதில்லாஹ் பின் அபீமுலைக்கா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
மக்காவில் உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்களுடைய புதல்வியார் இறந்தபோது, நாங்கள் ஜனாஸாவில் கலந்துகொள்வதற்காகச் சென்றோம். அங்கு இப்னு உமர் (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி) ஆகியோரும் வந்திருந்தனர். நான் அவர்கள் இருவருக்கும் நடுவில் அமர்ந்திருந்தேன். (முதலில்) அவர்களில் ஒருவருக்கு அருகில் நான் அமர்ந்தேன். பிறகு மற்றொருவர் வந்து எனக்குப் பக்கத்தில் உட்கார்ந்தார். அப்போது இப்னு உமர் (ரலி) அவர்கள் தமக்கு எதிரே அமர்ந்திருந்த உஸ்மான் (ரலி) அவர்களுடைய புதல்வர் அம்ர் அவர்களிடம் "நீங்கள் (சப்தமிட்டு) அழுபவர்களைத் தடுக்கக் கூடாதா? "இறந்தவருக்காக அவருடைய குடும்பத்தார் (சப்தமிட்டு) அழுவதன் காரணமாக இறந்தவர் வேதனை செய்யப்படுகிறார்" என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்" என்றார்கள்.
உடனே இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் "உமர் (ரலி) அவர்கள் இதே போன்ற சில ஹதீஸ்களைக் கூறியிருக்கிறார்கள். நான் உமர் (ரலி) அவர்களுடன் மக்காவிலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்தேன். நாங்கள் "பைதாஉ" எனும் இடத்தை அடைந்தோம். அங்கு ஒரு மரத்தின் நிழலில் ஒரு வாகனக் கூட்டத்தைக் கண்டோம். அப்போது "நீங்கள் சென்று இந்த வாகனக் கூட்டத்தார் யார் எனப் பார்த்து வாருங்கள்!" என உமர் (ரலி) அவர்கள் கூறி (என்னை அனுப்பி)னார்கள். நான் (அங்கு சென்று) பார்த்தபோது அங்கே ஸுஹைப் (ரலி) அவர்கள் இருந்தார்கள். அதை நான் உமர் (ரலி) அவர்களிடம் கூறினேன். "அவரை என்னிடம் அழைத்து வாருங்கள்" என உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள். நான் மீண்டும் ஸுஹைப் (ரலி) அவர்களிடம் சென்று "நீங்கள் புறப்படுங்கள்;இறைநம்பிக்கையாளர்களின் தலைவருடன் சேர்ந்துகொள்ளுங்கள்" என்று கூறினேன்.
பின்னர் (சிறிது நாட்களுக்குப் பின்) உமர் (ரலி) அவர்கள் (கத்தியால்) குத்தப்பட்டபோது அவர்களிடம் "சகோதரரே! நண்பரே!" எனக் கூறி அழுதவராக ஸுஹைப் (ரலி) அவர்கள் (வீட்டினுள்) நுழைந்தார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் "ஸுஹைபே! எனக்காகவா நீங்கள் அழுகிறீர்கள்? "இறந்தவருக்காக அவருடைய குடும்பத்தார் அழும் சில அழுகையின் காரணமாக இறந்தவர் வேதனை செய்யப்படுகிறார்" என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் அல்லவா?" என்றார்கள்.
உமர் (ரலி) அவர்கள் இறந்தபோது, (அவர்கள் இறப்பதற்கு முன் கூறிய) அந்தச் செய்தியை நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் கூறினேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், "அல்லாஹ் உமர் (ரலி) அவர்களுக்கு அருள்புரிவானாக! அல்லாஹ்வின் மீதாணையாக! "(எவரோ) ஒருவர் அழுவதன் காரணமாக இறைநம்பிக்கையாளரை அல்லாஹ் வேதனை செய்வான்" என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறவில்லை. மாறாக, "குடும்பத்தார் சப்தமிட்டு அழுவதன் காரணத்தால் இறைமறுப்பாளருக்கு அல்லாஹ் வேதனையை அதிகப்படுத்துகிறான்" என்றே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்"என்று சொல்லிவிட்டு, "ஓர் ஆத்மாவின் (பாவச்) சுமையை மற்றோர் ஆத்மா சுமக்காது" எனும் (35:18ஆவது) இறை வசனமே உங்களுக்கு (சான்றுக்கு)ப் போதும்" என்றார்கள்.
இதைக் கூறி முடித்தபோது "அல்லாஹ்வே சிரிக்க வைக்கிறான்; அழவும் வைக்கிறான்" (53:43) என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பாளர்) இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
"அல்லாஹ்வின் மீதாணையாக! இ(ப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் இவ்வாறு கூறிய)தற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள் (ஆட்சேபணை) எதுவும் தெரிவிக்கவில்லை" என (அறிவிப்பாளர்) அப்துல்லாஹ் பின் உபைதில்லாஹ் பின் அபீமுலைக்கா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் உபைதில்லாஹ் பின் அபீமுலைக்கா (ரஹ்) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "நாங்கள் உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்களுடைய புதல்வி உம்மு அபான் அவர்களின் ஜனாஸாவில் இருந்தோம்"என்று ஹதீஸ் தொடங்குகிறது. மற்றவை மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம் பெற்றுள்ளன.
இந்த அறிவிப்பில், அய்யூப் பின் அபீ தமீமா (ரஹ்) மற்றும் இப்னு ஜுரைஜ் (ரஹ்) ஆகியோரின் (முந்தைய) ஹதீஸ்களில் உள்ளதைப் போன்று நபி (ஸல்) அவர்களிடமிருந்து உமர் (ரலி) அவர்கள் கூறியதாகக் குறிப்பு இல்லை. ஆயினும், அவ்விருவரின் ஹதீஸே அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்களது (இந்த) ஹதீஸைவிட முழுமையானதாகும்.
அத்தியாயம் : 11
1695. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உயிரோடிருப்பவர் அழுவதன் காரணமாக இறந்தவர் வேதனை செய்யப்படுகிறார்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 11
1696. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
"இறந்தவருக்காக அவருடைய குடும்பத்தார் அழுவதன் காரணமாக இறந்தவர் வேதனை செய்யப்படுகிறார்" என இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாக ஆயிஷா (ரலி) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள், "அல்லாஹ் அபூஅப்திர் ரஹ்மானுக்கு அருள்புரிவானாக! அவர் ஒரு ஹதீஸைச் செவியுற்றார்; ஆனால், அதை அவர் நினைவில் வைத்துக் கொள்ளவில்லை. (உண்மையில் என்ன நடந்தது என்றால்,) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் கடந்து ஒரு யூதரின் சடலம் சென்றது. அவருக்காக யூதர்கள் அழுதுகொண்டிருந்தனர். அப்போது தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "நீங்கள் அழுதுகொண்டிருக்கிறீர்கள். ஆனால், அதுவோ வேதனை செய்யப்படுகிறது" என்று கூறினார்கள். (இறைநம்பிக்கையாளர்கள் விஷயத்தில் இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் கூறவில்லை)" என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 11
1697. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
"இறந்தவருக்காக அவருடைய குடும்பத்தார் அழுவதன் காரணமாக இறந்தவர் மண்ணறையில் (கப்று) வேதனை செய்யப்படுகிறார்" என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் என ஆயிஷா (ரலி) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது.
அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: இப்னு உமர் தவறாக விளங்கிக் கொண்டார். (நபி (ஸல்) அவர்கள் அப்படிச் சொல்லவில்லை.) "இறந்தவர் தன் (வாழ்நாளில் புரிந்த) சிறிய, பெரிய பாவங்களின் காரணத்தால் வேதனை செய்யப்படுகிறார். அவருடைய குடும்பத்தாரோ, இப்போது அவருக்காக அழுதுகொண்டிருக்கின்றனர்" என்றுதான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இ(ப்னு உமர் அறிவித்திருப்ப)து எப்படியிருக்கிறதென்றால், (குறைஷித் தலைவர்களான) இணைவைப்பாளர்கள் பத்ருப்போரில் கொல்லப்பட்டு எறியப்பட்டிருந்த பாழுங்கிணற்றுக்கு அருகில் நின்றுகொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஏதோ பேசினார்கள். (அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் "உயிரற்ற சடலங்களிடமா பேசுகிறீர்கள்?" என்று உமர் (ரலி) அவர்கள் கேட்க,) "நான் கூறுவதை அவர்கள் செவியுறுகிறார்கள்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதிலளித்ததாக இப்னு உமர் தவறாகவே விளங்கிக் கொண்டார்.
"நான் அவர்களுக்குச் சொல்லிவந்ததெல்லாம் உண்மை என்று இப்போது அவர்கள் அறிகிறார்கள்" என்றுதான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ("இப்போது நான் கூறுவதை அவர்கள் செவியுறுகிறார்கள்" என்று சொல்லவில்லை).
பிறகு, (இறந்தவர்கள் நாம் பேசுவதைச் செவியுறுவதில்லை என்ற தமது கருத்திற்குச் சான்றாக) ஆயிஷா (ரலி) அவர்கள் (பின்வரும்) வசனங்களை ஓதினார்கள்:
(நபியே!) இறந்தவர்களை உங்களால் கேட்கச் செய்ய முடியாது (27:80).
(நபியே!) மண்ணறைகளில் (கப்று) இருப்பவர்களை உங்களால் செவியுறச்செய்ய முடியாது (35:22).
"நரகத்தில் அவர்கள் தங்களின் இருப்பிடங்களில் ஒதுங்கும்போது (இந்நிலை ஏற்படும்)" என ஆயிஷா (ரலி) அவர்கள் (விளக்கம்) கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அபூஉசாமா (ஹம்மாத் பின் உசாமா பின் ஸைத்-ரஹ்) அவர்கள் அறிவித்த (முந்தைய) ஹதீஸே முழுமையானதாகும்.
அத்தியாயம் : 11
1698. அம்ரா பின்த் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
"உயிரோடிருப்பவர் அழுவதன் காரணமாக இறந்தவர் வேதனை செய்யப்படுகிறார்" என அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாக ஆயிஷா (ரலி) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள், "அல்லாஹ். அபூஅப்திர் ரஹ்மானை மன்னிப்பானாக! அவர் நிச்சயமாக பொய்யுரைக்கவில்லை; எனினும், அவர் மறந்திருக்கலாம். அல்லது தவறாக விளங்கியிருக்கலாம்; (நடந்தது இதுதான்:) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு யூதப் பெண்ணின் பிரேதத்தைக் கடந்துசென்றார்கள். அவளுக்காகச் சிலர் அழுதுகொண்டிருந்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இவர்கள் இவளுக்காக அழுகின்றனர். இவளோ தனது சவக்குழியில் வேதனை செய்யப்படுகிறாள்" என்றுதான் கூறினார்கள்" என்று பதிலளித்தார்கள்.
அத்தியாயம் : 11
1699. அலீ பின் ரபீஆ அல்அஸ்தீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
கூஃபாவில் கரளா பின் கஅப் (ரலி) அவர்கள் இறந்ததற்காகவே முதன்முதலில் ஒப்பாரி வைக்கப்பட்டது. அப்போது (கூஃபாவின் ஆட்சியாளராயிருந்த) முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் "யாருக்காக ஒப்பாரி வைக்கப்படுகிறதோ அவர் அதனால் மறுமை நாளில் வேதனை செய்யப்படுவார்" என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியுற்றுள்ளேன் என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
- மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் மேற்கண்ட ஹதீஸ் வந்துள்ளது.
அத்தியாயம் : 11
பாடம் : 10 ஒப்பாரி வைத்தல் குறித்து வந்துள்ள கடுமையான கண்டனம்.
1700. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என் சமுதாயத்தாரிடையே நிலவுகின்ற நான்கு நடைமுறைகள் அறியாமைக் கால வழக்கங்களாகும். (பெரும்பாலான) மக்கள் அவற்றைக் கைவிடமாட்டார்கள். (அவையாவன:) குலப்பெருமை பாராட்டுவது, (அடுத்தவரின்) பாரம்பரியத்தைக் குறைகூறுவது, கிரகங்களால் மழை பொழியும் என எதிர்பார்ப்பது மற்றும் ஒப்பாரிவைத்து அழுவது.
ஒப்பாரிவைக்கும் வழக்கமுடைய பெண், தான் இறப்பதற்கு முன் பாவமன்னிப்புக் கோரி (அதிலிருந்து) மீளாவிட்டால், மறுமை நாளில் தாரால் (கீல்) ஆன நீளங்கியும் சொறிசிரங்குச் சட்டையும் அணிந்தவளாக அவள் நிறுத்தப்படுவாள்.
இதை அபூமாலிக் கஅப் பின் ஆஸிம் அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 11
1701. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(மூத்தாப் போரில்) ஸைத் பின் ஹாரிஸா (ரலி), ஜஅஃபர் பின் அபீதாலிப் (ரலி), அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி) ஆகியோர் கொல்லப்பட்ட செய்தி வந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கவலை தோய்ந்த முகத்துடன் அமர்ந்திருந்தார்கள். நான் கதவிடுக்கில் கவனித்துக்கொண்டிருந்தேன். அப்போது ஒருவர் வந்து "அல்லாஹ்வின் தூதரே, ஜஅஃபர் (ரலி) அவர்களின் குடும்பப் பெண்கள் (ஒப்பாரிவைத்து) அழுகின்றனர்" எனக் கூறினார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அவ்வாறு அழுவதைத்) தடுக்கும்படி கட்டளையிட்டார்கள். அவர் சென்றுவிட்டுத் திரும்பிவந்து "அவர்கள் எனது சொல்லுக்குக் கட்டுப்படவில்லை" என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "நீர் சென்று அவர்களைத் தடுத்து நிறுத்துவீராக!" என இரண்டாவது முறையும் கட்டளையிட்டார்கள். அவர் சென்றுவிட்டு (மூன்றாவது முறையாக) வந்து "அல்லாஹ்வின் மீதாணையாக, எம்மை அப்பெண்கள் மிகைத்துவிட்டனர் (அவர்களை எங்களால் அமைதிப்படுத்த முடிய வில்லை), அல்லாஹ்வின் தூதரே!" என்று கூறினார்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "நீர் சென்று, அப்பெண்களின் வாயில் மண்ணை அள்ளிப்போடும்" எனக் (கடிந்து) கூறினார்கள் என நான் நினைக்கிறேன். பின்னர் நான் (அவரை நோக்கி) "அல்லாஹ் உமது மூக்கை மண்ணைக் கவ்வச் செய்வானாக! அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உமக்குக் கட்டளையிட்டதையும் உம்மால் செய்ய முடியவில்லை; இன்னும் அவர்களைத் தொந்தரவு செய்வதையும் நீர் நிறுத்தவில்லை" என்று கூறினேன்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், அப்துல் அஸீஸ் பின் முஸ்லிம் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், (தொந்தரவு என்பதைக் குறிக்க "அல்அநாஉ" எனும் சொல்லுக்கு பதிலாக) "அல்இய்யு" எனும் சொல் ஆளப்பட்டுள்ளது.
அத்தியாயம் : 11
1702. உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் (இறைநம்பிக்கைக்கான) உறுதிமொழி வாங்கியபோது, ஒப்பாரிவைக்கக் கூடாது என்றும் உறுதிமொழி வாங்கினார்கள். எனினும், இந்த வாக்குறுதியை எங்களில் ஐந்து பெண்களைத் தவிர வேறெவரும் நிறைவேற்ற வில்லை. அப்பெண்கள்: உம்மு சுலைம் (ரலி), உம்முல் அலா (ரலி), "முஆத் (ரலி) அவர் களின் துணைவியான அபூசப்ராவின் மகள்" அல்லது "அபூசப்ராவின் மகள் மற்றும் முஆத் (ரலி) அவர்களின் துணைவி".
இதை முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 11
1703. உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒப்பாரி வைக்கக்கூடாது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் உறுதிமொழி வாங்கினார்கள். எனினும், இந்த வாக்குறுதியை எங்களில் ஐந்து பெண்களைத் தவிர வேறெவரும் நிறைவேற்றவில்லை. அவர்களில் உம்மு சுலைம் (ரலி) அவர்களும் ஒருவராவார்.
இதை ஹஃப்ஸா பின்த் சீரீன் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 11
1704. உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:
"நபியே! இறைநம்பிக்கை கொண்ட பெண்கள் உம்மிடம் விசுவாசப் பிரமாணம் செய்வதற்காக வந்தார்களாயின்" (60:12) என்று தொடங்கும் இறைவசனம் அருளப்பெற்ற போது, ஒப்பாரிவைப்பது தொடர்பான உறுதி மொழியும் அதில் ஒன்றாக அமைந்தது. அப்போது நான், "அல்லாஹ்வின் தூதரே, இன்ன மனிதரின் குடும்பத்தாருக்கு நான் ஒப்பாரி வைப்பதற்கு மட்டும் எனக்கு விலக்கு அளியுங்கள். ஏனெனில், அறியாமைக் காலத்தில் அவர்கள் (என்னுடன் சேர்ந்து என் உறவினர் ஒருவருக்காக ஒப்பாரிவைத்து) எனக்கு உதவி புரிந்தனர். எனவே, (பதிலுக்கு அவர்களுடன் சேர்ந்து நான் ஒப்பாரி வைத்து) அவர்களுக்குப் பிரதியுதவி செய்ய நான் கடமைப்பட்டுள்ளேன்" என்று கூறினேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இன்ன மனிதரின் குடும்பத்திற்குத் தவிர" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 11
பாடம் : 11 இறுதி ஊர்வலத்தை (ஜனாஸாவை)ப் பின்தொடர்ந்து செல்ல பெண்களுக்கு வந்துள்ள தடை
1705. உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் (பெண்கள்) இறுதி ஊர்வலத்தைப் பின்தொடர்ந்து செல்ல வேண்டாமெனத் தடை விதிக்கப்பட்டிருந்தோம். ஆனால்,வன்மையாகத் தடுக்கப்பட்டோமில்லை.
இதை முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 11
1706. மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "நாங்கள் (பெண்கள்) இறுதி ஊர்வலத்தைப் பின்தொடரக் கூடாது எனத் தடுக்கப் பட்டோம். ஆனால் வன்மையாகத் தடுக்கப்பட்டோமில்லை" என்று உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறினார்கள் என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 11
பாடம் : 12 பிரேதத்தைக் குளிப்பாட்டுதல்.
1707. உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களின் புதல்வி இறந்துவிட்டபோது அவரது பிரேதத்தை நாங்கள் நீராட்டிக்கொண்டிருந்தோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து, "இலந்தை இலை கலந்த நீரால் மூன்று, அல்லது ஐந்து, அல்லது தேவையெனக் கருதினால் அதற்கதிகமான தடவைகள் அவரை நீராட்டுங்கள்; இறுதியில் "கற்பூரத்தை" அல்லது "சிறிது கற்பூரத்தை"ச் சேர்த்துக்கொள்ளுங்கள். இவற்றை முடித்ததும் எனக்கு அறிவியுங்கள்" என்று கூறினார்கள். நாங்கள் நீராட்டி முடித்ததும் அவர்களுக்கு அறிவித்தோம். அவர்கள் தமது கீழாடையை எங்களிடம் போட்டு "இதை அவரது உடலில் போர்த்துங்கள்" என்று கூறினார்கள்.
இதை முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 11
1708. உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அவருக்குத் தலைவாரி மூன்று பின்னல்கள் இட்டோம்.
இதை ஹஃப்ஸா பின்த் சீரீன் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 11
1709. மேற்கண்ட ஹதீஸ் மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "நபி (ஸல்) அவர்களுடைய புதல்வியரில் ஒருவர் இறந்தபோது" என்று ஹதீஸ் தொடங்குகிறது.
இப்னு உலைய்யா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "எங்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்தார்கள். அப்போது நாங்கள் அவர்களுடைய புதல்வியை நீராட்டிக் கொண்டிருந்தோம்" என்று உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறினார்கள் என ஹதீஸ் தொடங்குகிறது.
மாலிக் பின் அனஸ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் புதல்வி இறந்துவிட்டபோது அவர்கள் எங்களிடம் வந்தார்கள்" என்று ஹதீஸ் தொடங்குகிறது.
அத்தியாயம் : 11
1710. மேற்கண்ட ஹதீஸ் உம்மு அத்திய்யா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் பின்வரும் (தகவல் அதிகப்)படியாக இடம்பெற்றுள்ளது:
"இலந்தை இலை கலந்த நீரால் மூன்று, அல்லது ஐந்து, அல்லது ஏழு, அல்லது தேவையெனக் கருதினால் அதற்கதிகமான தடவைகள் அவரை நீராட்டுங்கள்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
மேலும், "அவர்களது தலையில் மூன்று பின்னல் இட்டோம்" என்றும் உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறியதாகவும் இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் உம்மு அத்திய்யா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "ஒற்றைப்படையாக(த் தண்ணீர் ஊற்றி) நீராட்டுங்கள்; மூன்று, அல்லது ஐந்து, அல்லது ஏழு தடவைகள் (தண்ணீர் ஊற்றுங்கள்)" என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாகவும் "நாங்கள் அவருக்குத் தலைவாரி மூன்று பின்னல்கள் இட்டோம்" என உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறியதாகவும் இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 11
1711. உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய புதல்வியார் ஸைனப் (ரலி) அவர்கள் இறந்தபோது "இவரை மூன்று முறை,அல்லது ஐந்து முறை ஒற்றை எண்ணிக்கையில் நீராட்டுங்கள். ஐந்தாவது முறையில் "கற்பூரத்தை" அல்லது "சிறிது கற்பூரத்தை"ச் சேர்த்துக்கொள்ளுங்கள். நீராட்டி முடித்ததும் எனக்குத் தெரிவியுங்கள்" என்று எங்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நாங்கள் (அவ்வாறே செய்து முடித்ததும்) அவர்களுக்கு அதுபற்றி அறிவித்தோம். அவர்கள் தமது கீழாடையை எங்களிடம் தந்து "இதை அவருக்குப் போர்த்துங்கள்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 11
1712. மேற்கண்ட ஹதீஸ் உம்மு அத்திய்யா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் புதல்வியரில் ஒருவரை நாங்கள் நீராட்டிக் கொண்டிருந்தோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து "இவரை ஐந்து. அல்லது அதற்கும் அதிகமாக ஒற்றை எண்ணிக்கையில் நீராட்டுங்கள்" என்று கூறினார்கள் என உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.
மேலும், "நாங்கள் அவரது தலைமுடியை பிடரிப் பகுதியில் இரண்டும், முன்நெற்றிப் பகுதியில் ஒன்றுமாக மூன்று பின்னல்களிட்டோம்" என்று இந்த அறிவிப்பில் இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 11
1713. உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் புதல்வியை நீராட்டும்போது, "அவரது வலப் புறத்திலிருந்தும் அங்கத்தூய்மை (உளூ) செய்ய வேண்டிய பகுதிகளிலிருந்தும் (நீராட்டலை) ஆரம்பியுங்கள்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அத்தியாயம் : 11
1714. உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம்முடைய புதல்வியை நீராட்டிக் கொண்டிருந்தவர்களிடம் "அவரது வலப் புறத்திலிருந்தும் அங்கத்தூய்மை (உளூ) செய்ய வேண்டிய பகுதிகளிலிருந்தும் (நீராட்டலை) ஆரம்பியுங்கள்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 11
பாடம் : 13 மய்யித்திற்கு "கஃபன்”” அணிவித்தல்.
1715. கப்பாப் பின் அல்அரத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அல்லாஹ்வின் திருப்தியை நாடி அல்லாஹ்வின் பாதையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நாடு துறந்து (ஹிஜ்ரத்) சென்றோம். எங்களுக்கான பிரதி பலனை அளிப்பது அல்லாஹ்வின் பொறுப்பாகி விட்டது. எங்களில் சிலர் தமக்குரிய பிரதி பலனில் எதையும் (இவ்வுலகில்) அனுபவிக்காமலேயே (உலகைப் பிரிந்து) சென்றுவிட்டனர். அவர்களில் முஸ்அப் பின் உமைர் (ரலி) அவர்களும் ஒருவர். அவர்கள் உஹுதுப் போரில் கொல்லப்பட்டார்கள். அவருக்கு "கஃபன்" அணிவிக்கக் கோடுபோட்ட வண்ணத் துணி ஒன்று மட்டுமே (அவருடைய உடைமைகளில்) கிடைத்தது. அதைக்கொண்டு அவரது தலைப் பகுதியை மறைத்தால் கால்கள் வெளியே தெரிந்தன; கால்களை மறைத்தால் தலை வெளியே தெரிந்தது. ஆகவே, அவரது தலைப் பகுதியை அந்தத் துணியால் மறைத்து விட்டு, அவருடைய கால்கள்மீது "இத்கிர்" எனும் ஒருவகை வாசனைப் புல்லை இட்டு மறைக்குமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.
எங்களில் (நாடு துறந்து சென்றதன்) பலன் கனிந்து அதைப் பறித்து (அனுபவித்து)க் கொண்டிருப்பவர்களும் உள்ளனர்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் ஐந்து அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 11
1716. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இறந்தபோது) மூன்று வெண்ணிறப் பருத்தி ஆடைகளால் கஃபனிடப்பட்டார்கள்; அவற்றில் நீளங்கியோ தலைப்பாகையோ இருக்கவில்லை.
(அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது உடலில்) போர்வை அணிவிக்கப்பட்டதாக ஒரு குழப்பம் மக்களிடையே உண்டு. (அப்படி) ஒரு போர்வை அவர்களின் கஃபனுக்காக வாங்கப்பட்டது (உண்மைதான். ஆனால்,) பின்னர் அந்தப் போர்வையை விட்டுவிட்டு மூன்று வெண்ணிறப் பருத்தி ஆடைகளால் கஃபன் அணிவிக்கப்பட்டது. அந்தப் போர்வையை (என் சகோதரர்) அப்துல்லாஹ் பின் அபீபக்ர் (ரலி) அவர்கள் பெற்றுக்கொண்டு, "இதை (நான் இறந்த பிறகு) எனக்குக் கஃபன் அணிவிப்பதற்காகப் பத்திரப்படுத்துவேன்"என்று கூறினார்கள். பிறகு "அல்லாஹ் இந்தப் போர்வையை தன் தூதருக்காகத் தேர்ந்தெடுத்திருந்தால், அதில் அவர்களைக் கஃபனிடச் செய்திருப்பான். (ஆனால் அதை இறைவன் தேர்வு செய்யவில்லை.)" என்று கூறி, அதை விற்று, அந்தக் காசைத் தர்மம் செய்துவிட்டார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 11
1717. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இறந்த பின்னர் என் சகோதரர்) அப்துல்லாஹ் பின் அபீபக்ர் (ரலி) அவர்களுக்குச் சொந்தமான யமன் நாட்டுப் போர்வையில் சுற்றப்பட்டார்கள். பின்னர் அது அகற்றப்பட்டு, யமன் நாட்டின் மூன்று பருத்தி ஆடைகளால் கஃபனிடப்பட்டது. அவற்றில் தலைப் பாகையோ நீளங்கியோ இருக்கவில்லை. பிறகு அப்துல்லாஹ் பின் அபீபக்ர், அந்தப் போர்வையை எடுத்து கையில் வைத்துக்கொண்டு, "இதில்தான் நான் கஃபனிடப்பட வேண்டும்" என்றார். பின்னர் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது (உடலில்) கஃபனாக அணிவிக்கப்படாத இந்த ஆடையால் நான் கஃபனிடப்படுவதா?" என்று கூறிவிட்டு, அதைத் தர்மம் செய்துவிட்டார்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் ஆறு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் அப்துல்லாஹ் பின் அபீபக்ர் (ரலி) அவர்களது நிகழ்ச்சி தொடர்பான குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 11
1718. அபூசலமா அப்துல்லாஹ் பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு எத்தனை ஆடையில் கஃபனிடப்பட்டது?" என்று கேட்டேன். அதற்கு "மூன்று பருத்தி ஆடைகளில்" என ஆயிஷா (ரலி) அவர்கள் விடையளித்தார்கள்.
அத்தியாயம் : 11
பாடம் : 14 மய்யித்தை மூடிவைத்தல்.
1719. இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தபோது அவர்களின் உடல் (பருத்தியாலான) யமன் நாட்டுப் போர்வையால் போர்த்தி மூடப்பட்டது.
இதை அபூசலமா அப்துல்லாஹ் பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 11
பாடம் : 15 மய்யித்திற்கு அழகிய முறையில் கஃபன் அணிவித்தல்.
1720. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் (எங்களிடையே) உரையாற்றுகையில், தம் தோழர் ஒருவரை நினைவுகூர்ந்தார்கள். அவர் இறந்தபோது நிறைவான கஃபன் அணிவிக்கப்படாமல் (அரைகுறை கஃபனில்) இரவிலேயே அடக்கம் செய்யப்பட்டார். எனவே, நபி (ஸல்) அவர்கள் (தாம் கலந்துகொண்டு) தொழவைக்கப்படாமல் இரவிலேயே ஒருவர் அடக்கம் செய்யப்படுவதைக் கண்டித்தார்கள். ஒருவருக்கு நிர்ப்பந்தம் ஏற்பட்டால் தவிர (அவ்வாறு செய்யவேண்டாம் எனத் தடைவிதித்தார்கள்). மேலும், "உங்களில் ஒருவர் தம் சகோதரருக்குக் கஃபனிடும்போது அழகிய முறையில் கஃபனிடட்டும்!" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 11
பாடம் : 16 பிரேதத்தைத் துரிதமாக எடுத்துச் செல்லல்.
1721. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பிரேதத்தைத் துரிதமாகக் கொண்டுசெல்லுங்கள். ஏனெனில், அது (பிரேதம்) நல்லறங்கள் புரிந்ததாயிருந்தால் (அதற்கான) நன்மையின் பக்கம் அதை விரைவுபடுத்துகிறீர்கள். வேறு விதமாக அது இருந்தால், ஒரு தீங்கை உங்கள் தோள்களிலிருந்து (விரைவாக) இறக்கி வைக்கிறீர்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், மஅமர் பின் ராஷித் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "இதை நபி (ஸல்) அவர்களிடமிருந்தே அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள் என்றே நான் கருதுகிறேன்" என இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 11
1722. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பிரேதத்தைத் துரிதமாகக் கொண்டு செல்லுங்கள். ஏனெனில், அது நல்லதாயிருந்தால், நன்மையின் பக்கம் அதைக் கொண்டு சேர்க்கிறீர்கள். அது வேறுவிதமாக இருந்தால், ஒரு தீங்கை உங்கள் தோள்களிலிருந்து (விரைவாக) இறக்கிவைத்தவர்கள் ஆவீர்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 11
பாடம் : 17 ஜனாஸா (பிரேத)த் தொழுகை மற்றும் ஜனாஸாவைப் பின்தொடர்தல் ஆகியவற்றின் சிறப்பு.
1723. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
"யார் ஜனாஸா (பிரேத)த் தொழுகையில் பங்கேற்கின்றாரோ அவருக்கு ஒரு "கீராத்" நன்மையுண்டு; அடக்கம் செய்யப்படும்வரை யார் கலந்துகொள்கிறாரோ அவருக்கு இரண்டு "கீராத்"கள் நன்மை உண்டு" என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது "இரண்டு "கீராத்கள்” என்றால் என்ன?" என வினவப்பட்டது. அதற்கு அவர்கள் "இரண்டு பெரிய மலைகளைப் போன்ற அளவு (நன்மை)" என்று விடையளித்தார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் ஹர்மலா பின் யஹ்யா மற்றும் ஹாரூன் பின் சயீத் (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில் இப்னு ஷிஹாப் (ரஹ்) அவர்கள் கூறியதாக (பின்வருமாறு) இடம்பெற்றுள்ளது:
"இப்னு உமர் (ரலி) அவர்கள் ஜனாஸாத் தொழுகை தொழுவித்(து முடித்)ததும் திரும்பிச் சென்று விடுவார்கள். அபூஹுரைரா (ரலி) அவர்களின் இந்த ஹதீஸ் அவர்களுக்கு எட்டிய போது, "நாம் ஏராளமான "கீராத்” (நன்மை)களை வீணாக்கிவிட்டோம்" என்று கூறினார்கள்" என சாலிம் பின் அப்தில்லாஹ் பின் உமர் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், அப்துல் அஃலா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் மேற்கண்ட ஹதீஸின் முழு வடிவமும் இடம்பெற்றுள்ளது. மற்ற இரு அறிவிப்பாளர்தொடர்களில் "இரண்டு பெரிய மலைகளைப் போன்ற அளவு (நன்மை)" என்பதுவரையே இடம்பெற்றுள்ளது. அதற்குப் பின்னுள்ள தகவல் இடம்பெறவில்லை.
அப்துல் அஃலா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "அடக்கம் முடியும்வரை கலந்து கொள்பவருக்கு” என்ற வாசகமும், அப்துர் ரஸ்ஸாக் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "குழியில் வைக்கப்படும்வரை கலந்துகொள்பவருக்கு இரண்டு "கீராத்"கள் (நன்மை) உண்டு" என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளன.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "அடக்கப்படும்வரை அ(ந்த பிரேதத்)தைப் பின்தொடர்பவருக்கு இரண்டு "கீராத்"கள் (நன்மை) உண்டு" என இடம்பெற்றுள்ளது. இதர விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 11
1724. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
"ஜனாஸா (பிரேத)த் தொழுகையில் பங்கேற்ற ஒருவர் (அதை அடக்கம் செய்யும்வரை) பின் தொடர்ந்து செல்லவில்லையானால், அவருக்கு ஒரு ‘கீராத்" (நன்மையே) உண்டு; அதை (அடக்கம் செய்யும்வரை) பின்தொடர்ந்தால் அவருக்கு இரண்டு "கீராத்"கள் (நன்மை) உண்டு" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது "இரண்டு "கீராத்"கள் என்றால் என்ன?" என்று வினவப்பட்டது. அதற்கு அவர்கள் "இரண்டு "கீராத்"களில் மிகச் சிறிய அளவு, உஹுத் மலை அளவாகும்" என்று விடையளித்தார்கள்.
அத்தியாயம் : 11
1725. அபூஹாஸிம் சல்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
"ஜனாஸா (பிரேத)த் தொழுகையில் பங்கேற்றவருக்கு ஒரு "கீராத்" (நன்மை) உண்டு. மண்ணறையில் (கப்று) வைக்கப்படும்வரை அதைப் பின்தொடர்ந்தவருக்கு இரண்டு "கீராத்"கள் (நன்மை) உண்டு" என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள். நான் "அபூஹுரைரா (ரலி) அவர்களே! "கீராத்" என்றால் என்ன?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள் "உஹுத் மலை அளவு" என்று விடையளித்தார்கள்.
அத்தியாயம் : 11
1726. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
"யார் ஜனாஸாவைப் பின்தொடர்கிறாரோ அவருக்கு ஒரு "கீராத்" நன்மை உண்டு" என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறிவருகிறார்களே!" என இப்னு உமர் (ரலி) அவர்களிடம் வினவப்பட்டது. அதற்கு "அபூஹுரைரா நம்மிடம் அதிகப்படுத்துகிறார்" என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறிவிட்டு, ஆயிஷா (ரலி) அவர்களிடம் ஆளனுப்பி இதைப் பற்றிக் கேட்டார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள் அபூஹுரைரா (ரலி) அவர்களின் கூற்றை உறுதிப்படுத்தினார்கள். இதைக் கேட்ட இப்னு உமர் (ரலி) அவர்கள் "(அப்படியாயின்) நாம் ஏராளமான "கீராத்"களைத் தவறவிட்டுவிட்டோம்" என்றார்கள்.
அத்தியாயம் : 11
1727. ஆமிர் பின் சஅத் பின் அபீவக்காஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களுக்கு அருகில் அமர்ந்திருந்தேன். அப்போது பெரிய வீட்டுக்காரர் கப்பாப் அல்மதனீ (ரலி) அவர்கள் அங்கு வந்து, "அப்துல்லாஹ் பின் உமர் அவர்களே! "ஒரு ஜனாஸாவின் வீட்டிலிருந்து அதனுடன் புறப்பட்டுச் சென்று, (ஜனாஸாத்தொழுகை) தொழுதுவிட்டு, அடக்கம் செய்யப்படும்வரை அதைப் பின் தொடர்கின்றவருக்கு இரண்டு "கீராத்"கள் நன்மை உண்டு; ஒவ்வொரு "கீராத்"தும் உஹுத் மலை அளவுடையதாகும்; (ஜனாஸாத்) தொழுதுவிட்டு (அடக்கம் செய்யப்படும்வரை காத்திராமல்) திரும்பிவிடுகின்றவருக்கு உஹுத் மலையளவு (ஒரு "கீராத்") நன்மை உண்டு" என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறிவருகின்றார்களே?" என்று கேட்டார்கள். அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், கப்பாபை ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று அது பற்றிக் கேட்டுவிட்டு அவர்கள் அளிக்கும் பதிலைத் தம்மிடம் வந்து தெரிவிக்குமாறு அனுப்பிவைத்தார்கள். அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், போனவர் திரும்பிவரும்வரை பள்ளிவாசல் தரையில் கிடந்த சிறு கற்களில் ஒரு கைப்பிடியளவு அள்ளி தமது கையில் வைத்து கிளறிக்கொண்டிருந்தார்கள்.
(கப்பாப் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று கேட்டதற்கு) ஆயிஷா (ரலி) அவர்கள் "அபூஹுரைரா சொன்னது உண்மையே" என்றார்கள். (இதைக் கேள்விப்பட்ட) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் தமது கையிலிருந்த சிறு கற்களை கீழே எறிந்துவிட்டு, "நாம் ஏராளமான "கீராத்" (நன்மை)களை தவற விட்டுவிட்டோம்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 11
1728. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஜனாஸாத் தொழுகை தொழுதவருக்கு ஒரு "கீராத்" (நன்மை) உண்டு; (தொழுகையில் கலந்ததோடு) அதன் அடக்கத்திலும் கலந்துகொண்டால், அவருக்கு இரண்டு "கீராத்" (நன்மை)கள் உண்டு; "கீராத்" என்பது உஹுத் மலை அளவாகும்.
இதை, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அவர்களின் அடிமையான ஸவ்பான் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், சயீத் மற்றும் ஹிஷாம் (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில் "நபி (ஸல்) அவர்களிடம் "கீராத்" பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் "உஹுத் மலையளவு" என்று பதிலளித்தார்கள்" என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 11
பாடம் : 18 யாருக்கு நூறு பேர் (இறுதித் தொழுகை) தொழுகின்றார்களோ அவருக்காக அவர்கள் செய்யும் பரிந்துரை ஏற்கப்படும்.
1729. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறந்த ஒருவருக்கு நூறுபேர் கொண்ட முஸ்லிம் குழுவினர் (இறுதித்) தொழுகை தொழுது, அவர்களில் ஒவ்வொருவரும் அவருக்காகப் பரிந்துரை செய்தால் அவர்களின் பரிந்துரை ஏற்கப்படாமல் இருப்பதில்லை.
இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) சல்லாம் பின் அபீமுதீஉ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
இந்த ஹதீஸை நான் ஷுஐப் பின் அல் ஹப்ஹாப் (ரஹ்) அவர்களிடம் கூறினேன். அதற்கு அவர்கள் "இவ்வாறே எனக்கு அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவித்தார்கள்" என்றார்கள்.
அத்தியாயம் : 11
பாடம் : 19 யாருக்கு நாற்பது பேர் (இறுதித் தொழுகை) தொழுகின்றார்களோ அவருக்காக அவர்கள் செய்யும் பரிந்துரை ஏற்கப்படும்.
1730. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அவர்களின் அடிமையான குறைப் பின் அபீமுஸ்லிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுடைய புதல்வர் ஒருவர் "குதைத்" அல்லது "உஸ்ஃபான்" எனுமிடத்தில் இறந்துவிட்டார். அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், "குறைப்! மக்கள் ஒன்றுகூடிவிட்டனரா எனப் பார்" என்று கூறினார்கள். நான் சென்று பார்த்தபோது அங்கு மக்களில் சிலர் குழுமியிருந்தனர். நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் வந்து விஷயத்தைச் சொன்னபோது "அவர்கள் நாற்பது பேர் இருப்பார்களா, சொல்" என்றார்கள். நான் "ஆம்" என்றேன். "அதை (மய்யித்தை) எடுத்துக்கொண்டு புறப்படுங்கள்" என்று கூறிவிட்டு, "ஒரு முஸ்லிம் இறந்தவுடன் அல்லாஹ்விற்கு எதையும் இணைவைக்காத நாற்பது பேர் அவருக்காக (இறுதித் தொழுகை) தொழுதால் அவர்களின் பரிந்துரையை அல்லாஹ் ஏற்காமல் இருப்பதில்லை" என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியுற்றுள்ளேன்" என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 11
பாடம் : 20 இறந்தவர் குறித்துப் புகழ்ந்து பேசப்படுதல்; அல்லது இகழ்ந்து பேசப்படுதல்.
1731. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(நபி (ஸல்) அவர்களைக் கடந்து) ஜனாஸா (பிரேதம்) ஒன்று கொண்டுசெல்லப்பட்டது. அது குறித்து நல்ல விதமாகப் (புகழ்ந்து) பேசப்பட்டது. இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் "உறுதியாகிவிட்டது; உறுதியாகிவிட்டது; உறுதியாகிவிட்டது" என்று கூறினார்கள். பின்னர் மற்றொரு பிரேதம் கொண்டுசெல்லப்பட்டது. அது குறித்து இகழ்வாகப் பேசப்பட்டது. அப்போதும் நபி (ஸல்) அவர்கள் "உறுதியாகிவிட்டது; உறுதியாகிவிட்டது; உறுதியாகிவிட்டது" என்று கூறினார்கள். உமர் (ரலி) அவர்கள் "(அல்லாஹ்வின் தூதரே!) என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! ஒரு பிரேதம் கொண்டு செல்லப்பட்ட போது அது குறித்து நல்லவிதமாகப் பேசப்பட்டது. அதற்கு நீங்கள் "உறுதியாகிவிட்டது; உறுதியாகிவிட்டது; உறுதியாகிவிட்டது;" என்று கூறினீர்கள். பிறகு மற்றொரு பிரேதம் கொண்டுசெல்லப்பட்டது. அது குறித்து இகழ்வாகப் பேசப்பட்டது. அதற்கும் நீங்கள் "உறுதியாகிவிட்டது; உறுதியாகிவிட்டது; உறுதியாகிவிட்டது;" என்று கூறினீர்கள். (இரண்டிற்குமே இவ்வாறு தாங்கள் கூறக் காரணமென்ன?)" என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீங்கள் யாரைப் பற்றி நல்ல விதமாகப் பேசினீர்களோ அவருக்குச் சொர்க்கம் உறுதியாகிவிட்டது; நீங்கள் யாரைப் பற்றி இகழ்வாகப் பேசினீர்களோ அவருக்கு நரகம் உறுதியாகிவிட்டது. நீங்கள் பூமியில் அல்லாஹ்வின் சாட்சிகள் ஆவீர்கள்; நீங்கள் பூமியில் அல்லாஹ்வின் சாட்சிகள் ஆவீர்கள்;நீங்கள் பூமியில் அல்லாஹ்வின் சாட்சிகள் ஆவீர்கள்" என்று (மும்முறை) கூறினார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "நபி (ஸல்) அவர்கள் இருந்த இடத்தின் வழியாக பிரேதம் ஒன்று கொண்டு செல்லப்பட்டது" என்று ஹதீஸ் தொடங்குகிறது. இதர விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. ஆயினும், மேற்கண்ட ஹதீஸே முழுமையானதாகும்.
அத்தியாயம் : 11
பாடம் : 21 ஓய்வு பெற்றவரும் ஓய்வு அளித்தவரும்.
1732. அபூகத்தாதா ஹாரிஸ் ரிப்ஈ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் கடந்து ஒரு பிரேதம் (ஜனாஸா) கொண்டு செல்லப்பட்டது. அப்போது அவர்கள் "(இவர்) ஓய்வு பெற்றவராவார்; அல்லது (பிறருக்கு) ஓய்வு அளித்தவராவார்" என்று சொன்னார்கள். மக்கள் "அல்லாஹ்வின் தூதரே,ஓய்வு பெற்றவர்; அல்லது ஓய்வு அளித்தவர் என்றால் என்ன?" என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இறைநம்பிக்கைகொண்ட அடியார் (இறக்கும்போது) இவ்வுலகத்தின் துன்பத்திலிருந்து ஓய்வு பெறுகிறார். பாவியான அடியான் (இறக்கும்போது) அவனி(ன் எல்லா விதமான தொல்லையி)லிருந்து மற்ற அடியார்கள், (நாடு) நகரங்கள், மரங்கள் மற்றும் கால்நடைகள் ஆகியன ஓய்வு(பெற்று நிம்மதி) பெறுகின்றன" என்று சொன்னார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், யஹ்யா பின் சயீத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "இவ்வுலகத்தின் தொல்லையிலிருந்தும் துன்பத்திலிருந்தும் ஓய்வு பெற்று இறையருளை நோக்கிச் செல்கிறார்" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 11
பாடம் : 22 ஜனாஸாத் தொழுகையில் சொல்ல வேண்டிய தக்பீர்கள்.
1733. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (அபிசீனிய மன்னர்) நஜாஷீ (நீகஸ்) இறந்த அன்றே அவரது மரணச்செய்தியை மக்களுக்கு அறிவித்தார்கள். பிறகு மக்களுடன் "முஸல்லா" எனும் தொழும்திடலுக்குப் புறப்பட்டுச் சென்று ("அல்லாஹு அக்பர்" என்று) நான்கு "தக்பீர்"கள் கூறி (ஜனாஸாத் தொழுகை நடத்தி)னார்கள்.
அத்தியாயம் : 11
1734. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அபிசீனிய மன்னர் நஜாஷீ இறந்த அன்றே அவரது மரணச்செய்தியை எங்களிடம் அறிவித்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "உங்கள் சகோதரருக்காகப் பாவமன்னிப்புக் கோருங்கள்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்களிடமிருந்து இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அறிவிக்கும் அறிவிப்பில் "பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களை தொழுகைத்திடலில் அணிவகுக்கச் செய்து நான்கு "தக்பீர்"கள் கூறி ஜனாஸாத் தொழுகை நடத்தினார்கள்" என அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 11
1735. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அஸ்ஹமா" எனும் நஜாஷீ (மன்னரு)க்கு நான்கு "தக்பீர்" கூறி (ஜனாஸாத் தொழுகை நடத்தி)னார்கள்.
அத்தியாயம் : 11
1736. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இன்று அல்லாஹ்வின் நல்லடியார் ஒருவர் (நஜாஷீ மன்னர்) அஸ்ஹமா இறந்து விட்டார்" என்று கூறினார்கள். பின்னர் எழுந்து எங்களுக்கு முன்னால் நின்று அவருக்காக (இறுதித் தொழுகை) தொழுதார்கள்.
அத்தியாயம் : 11
1737. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(நஜாஷீ மன்னர் இறந்த அன்று) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "உங்கள் சகோதரர் ஒருவர் இறந்துவிட்டார். எனவே,அவருக்காக எழுந்து தொழுங்கள்!" என்று கூறினார்கள். நாங்கள் எழுந்து இரு வரிசையாக அணி வகுத்தோம்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 11
1738. இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(நஜாஷீ மன்னர் இறந்த அன்று) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "உங்கள் சகோதரர் ஒருவர் -அதாவது நஜாஷீ- இறந்துவிட்டார். எனவே, அவருக்காக எழுந்து தொழுங்கள்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 11
பாடம் : 23 மண்ணறை (கப்று) அருகில் (இறுதித் தொழுகை) தொழுவது.
1739. சுலைமான் பின் அபீசுலைமான் அஷ்ஷைபானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு பிரேதம் அடக்கம் செய்யப்பட்ட பின் அதன் மண்ணறை (கப்று) அருகில் நின்று நான்கு "தக்பீர்"கள் கூறி (ஜனாஸாத் தொழுகை நடத்தி)னார்கள் என ஷஅபீ (ஆமிர் பின் ஷராஹீல்-ரஹ்) அவர்கள் கூறினார்கள்.
நான் "இதை உங்களுக்கு அறிவித்தவர் யார்?" என ஷஅபீ அவர்களிடம் கேட்டேன். அதற்கு "நம்பத்தகுந்த வலுவான அறிவிப்பாளரான இப்னு அப்பாஸ் (ரலி)" என்று விடையளித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் ஹசன் பின் அர்ரபீஉ (ரஹ்) அவர்களது அறிவிப்பிலேயே மேற்கண்ட வாசகம் இடம்பெற்றுள்ளது.
முஹம்மத் பின் அப்தில்லாஹ் பின் நுமைர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஈரம் உலர்ந்திராத (புதிய) மண்ணறை (கப்று) நோக்கிச் சென்று நான்கு "தக்பீர்"கள் கூறி தொழுவித்தார்கள். மக்கள் அவர்களுக்குப் பின்னால் நின்று தொழுதனர்" என இடம்பெற்றுள்ளது.
ஷைபானீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் ஆமிர் பின் ஷராஹீல் (ரஹ்) அவர்களிடம் "(இதை) உங்களுக்கு அறிவித்தவர் யார்?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "நம்பத் தகுந்தவரும் (நிகழ்ச்சியில்) கலந்துகொண்டவருமான இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள்தாம்" என்றார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஏழு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் எதிலும் நபி (ஸல்) அவர்கள் அத்தொழுகையில் நான்கு "தக்பீர்"கள் கூறினார்கள் எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 11
1740. மேற்கண்ட ஹதீஸ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
இம்மூன்று அறிவிப்புகளிலும் "நான்கு தக்பீர்கள் கூறினார்கள்" என்ற குறிப்பு இடம் பெறவில்லை.
அத்தியாயம் : 11
1741. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ஒரு மண்ணறை (கப்று) அருகில் (அதற்கான இறுதித் தொழுகை) தொழுதார்கள்.
அத்தியாயம் : 11
1742. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலைக் கூட்டிப் பெருக்குபவராக இருந்த கறுத்த "பெண்" அல்லது "இளைஞர்" ஒருவரைக் காணாமல் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விசாரித்தார்கள். "அவர் இறந்துவிட்டார்" என மக்கள் தெரிவித்தனர். "நீங்கள் எனக்குத் தெரிவித்திருக்கக் கூடாதா?" என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர் (இறந்த) விஷயத்தை மக்கள் அற்பமாகக் கருதி விட்டனர் போலும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அவரது மண்ணறையை எனக்குக் காட்டுங்கள்" என்று கூறினார்கள். மக்கள் அதைக் காட்டியதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கு (சென்று) அவருக்காக (இறுதித்) தொழுகை நடத்தினார்கள். பிறகு "இந்த அடக்கத்தலங்கள், அவற்றில் வசிப்போருக்கு இருள் மண்டிக்காணப்படுகின்றன. வலிவும் மாண்பும் உடைய அல்லாஹ், எனது தொழுகையின் மூலம் அவற்றில் அவர்களுக்கு வெளிச்சத்தை ஏற்படுத்துவான்" என்று கூறினார்கள். - இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 11
1743. அப்துர் ரஹ்மான் பின் அபீலைலா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்கள், எங்களில் இறந்தவர்களுக்கு (ஜனாஸாத் தொழுகை) தொழுவிக்கும்போது, (பெரும்பாலும்) நான்கு தக்பீர்கள் கூறுவார்கள். (ஆனால்) ஒரு ஜனாஸாத் தொழுகையின் போது ஐந்து தக்பீர்கள் கூறினார்கள். இதுபற்றி நான் அவர்களிடம் கேட்டதற்கு "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (சில வேளைகளில்) ஐந்து தக்பீர்கள் கூறுபவர்களாய் இருந்தார்கள்" என்று விடையளித்தார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 11
பாடம் : 24 ஜனாஸாவைக் கண்டு எழுந்து நிற்றல்.
1744. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பிரேதத்தைக் கண்டால் அது "உங்களைக் கடந்து செல்லும்வரை" அல்லது "(கீழே) வைக்கப் படும்வரை" அதற்காக எழுந்து நில்லுங்கள்.
இதை ஆமிர் பின் ரபீஆ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 11
1745. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் பிரேதத்தைக் கண்டும் அதனுடன் (நடந்து) செல்லப்போவதில்லை என்றால், அது அவரைக் கடந்துசெல்லும் வரை, அல்லது அது அவரைக் கடந்துசெல்வதற்கு முன்னால் (கீழே) வைக்கப்படும்வரை அவர் எழுந்து நிற்கட்டும்!
இதை ஆமிர் பின் ரபீஆ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 11
1746. மேற்கண்ட ஹதீஸ் ஆமிர் பின் ரபீஆ (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஐந்து அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "உங்களில் ஒருவர் பிரேதத்தைக் கண்டால் அதைப் பின்தொடரும் எண்ணம் இல்லாதபோது, அது கடந்து செல்லும்வரை அவர் எழுந்து நிற்கட்டும்" என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 11
1747. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் பிரேதத்தைப் பின்தொடர்ந்து சென்றால், அது (கீழே) வைக்கப்படும்வரை உட்கார வேண்டாம்!
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 11
1748. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் பிரேதத்தைக் கண்டால் எழுந்து நில்லுங்கள். அதைப் பின்தொடர்ந்து செல்பவர், அது (கீழே) வைக்கப்படும்வரை உட்கார வேண்டாம்.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 11
1749. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு பிரேதம் (ஜனாஸா) எங்களைக் கடந்து சென்றபோது உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்து நின்றார்கள். அவர்களுடன் நாங்களும் எழுந்து நின்றோம். நாங்கள் "அல்லாஹ்வின் தூதரே, இது யூதப் பெண்ணின் பிரேதம்" என்றோம். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "மரணம் என்பது திடுக்கிடச் செய்யும் ஒரு விஷயமாகும். எனவே, பிரேதத்தைக் கண்டால் எழுந்து நில்லுங்கள்!" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 11
1750. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ஒரு பிரேதம் தம்மைக் கடந்து சென்றபோது எழுந்து, அது (தமது கண்ணை விட்டு) மறையும்வரை நின்றார்கள்.
அத்தியாயம் : 11
1751. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு யூதரின் பிரேதத்திற்காக நபி (ஸல்) அவர்களும் அவர்களுடைய தோழர்களும் எழுந்து, அது (கண்ணைவிட்டு) மறையும்வரை நின்றனர்.
அத்தியாயம் : 11
1752. அப்துர் ரஹ்மான் பின் அபீலைலா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
கைஸ் பின் சஅத் (ரலி), சஹ்ல் பின் ஹுனைஃப் (ரலி) ஆகியோர் (இராக் நாட்டிலுள்ள) "காதிசிய்யா" எனும் இடத்தில் இருந்தபோது, ஒரு பிரேத (ஊர்வல)ம் அவர்களைக் கடந்து சென்றது. உடனே அவர்கள் இருவரும் எழுந்து நின்றனர். அப்போது அவர்களிடம், "இது இந்த நாட்டு (முஸ்லிமல்லாத) பிரஜையின் பிரேதமாயிற்றே?" என்று கூறப்பட்டது. அதற்கு அவ்விருவரும், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் கடந்து ஒரு பிரேதம் கொண்டு செல்லப்பட்டபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்து நின்றார்கள். அப்போது அவர்களிடம், "இது யூதரின் பிரேதம்" எனக் கூறப்பட்டது. அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இது ஓர் (மனித) உயிரில்லையா?" என்று (திருப்பிக்) கேட்டார்கள்" என்றனர்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் கைஸ் பின் சஅத் (ரலி), சஹ்ல் பின் ஹுனைஃப் (ரலி) ஆகியோர் வழியாக மற்றோர் அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது.
அதில் "அதற்கு அவர்கள் இருவரும் "நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது ஒரு பிரேத (ஊர்வல)ம் எங்களைக் கடந்து சென்றது" என்று கூறியதாக ஹதீஸ் தொடர்கிறது.
அத்தியாயம் : 11
பாடம் : 25 ஜனாஸாவைக் கண்டு எழுந்து நிற்கும் விதி மாற்றப்பட்டுவிட்டது.
1753. வாகித் பின் அம்ர் பின் சஅத் பின் முஆத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் ஒரு நல்லடக்க நிகழ்ச்சியில் இருந்தபோது நான் நின்றுகொண்டேயிருந்ததை நாஃபிஉ பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கண்டார்கள். ஆனால், அவர்கள் பிரேதம் வைக்கப்படுவதை எதிர்பார்த்து உட்கார்ந்துகொண்டிருந்தார்கள். அப்போது அவர்கள் "ஏன் நிற்கிறீர்கள்?" என்று என்னிடம் கேட்டார்கள். நான் "பிரேதம் வைக்கப்படுவதை எதிர்பார்த்து நிற்கிறேன். அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஒரு ஹதீஸே இதற்குக் காரணம்" என்றேன். அதற்கு அவர்கள் மஸ்ஊத் பின் அல்ஹகம் (ரலி) அவர்கள் கூறியதாக (பின்வரும்) ஹதீஸை அறிவித்தார்கள்:
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பிரேதத்தைக் கண்டால் ஆரம்பக்காலத்தில்) எழுந்து நின்றார்கள். பின்னர் உட்கார்ந்து விட்டார்கள்" என அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 11
1754. மஸ்ஊத் பின் அல்ஹகம் அல்அன் சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது:
அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் பிரேதங்களுக்காக எழுந்து நிற்பது தொடர்பாக "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஆரம்பக்காலத்தில்) எழுந்து நின்றார்கள்; பின்னர் உட்கார்ந்துவிட்டார்கள்" என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் யஹ்யா பின சயீத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
வாகித் பின் அம்ர் (ரஹ்) அவர்கள் பிரேதம் வைக்கப்படும்வரை நின்றுகொண்டிருப்பதைக் கண்டபோதுதான் நாஃபிஉ பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸை அறிவித்தார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 11
1755. அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஆரம்பக்காலத்தில்) பிரேதத்தைக் கண்டு எழுந்து நிற்பதைப் பார்த்தபோது நாங்களும் நின்றோம்; (பிற்காலத்தில்) அவர்கள் உட்கார்ந்தபோது நாங்களும் உட்கார்ந்துவிட்டோம்.
இதை மஸ்ஊத் பின் அல்ஹகம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அலீ (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 11
பாடம் : 26 இறந்தவருக்காக ஜனாஸாத் தொழுகையில் செய்யும் பிரார்த்தனை.
1756. அவ்ஃப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு பிரேதத்திற்காகத் தொழுகை நடத்தினார்கள். அப்போது அவர்கள் ஓதிய பிரார்த்தனையை நான் மனனமிட்டுள்ளேன். அவர்கள், "அல்லா ஹும் மஃக்பிர் லஹு, வர்ஹம்ஹு, வ ஆஃபிஹி, வஉஃபு அன்ஹு, வ அக்ரிம் நுஸுலஹு, வ வஸ்ஸிஃ முத்கலஹு, வஃக்சில்ஹு பில்மாயி வஸ்ஸல்ஜி வல்பரத், வ நக்கிஹி மினல் கத்தாயா கமா நக்கைத்தஸ் ஸவ்பல் அப்யள மினத் தனஸி, வ அப்தில்ஹு தாரன் கைரம் மின் தாரிஹி, வ அஹ்லன் கைரம் மின் அஹ்லிஹி, வ ஸவ்ஜன் கைரம் மின் ஸவ்ஜிஹி, வ அத்கில்ஹுல் ஜன்னத்த, வ அஇத்ஹு மின் அதாபில் கப்ரி / மின் அதாபிந் நார்" என்று பிரார்த்தித்தார்கள்.
(பொருள்: இறைவா! இவருக்கு மன்னிப்பு அளிப்பாயாக; கருணை புரிவாயாக; (மறுமையின் சோதனைகளிலிருந்து) இவரைக் காப்பாயாக; பாவங்களை மாய்ப்பாயாக; இவருக்கு நல்கப்படும் விருந்தை நல்லதாக்குவாயாக! இவர் புகுமிடத்தை (கப்றை) விசாலமாக்குவாயாக; இவருடைய குற்றங்குறைகளிலிருந்து இவரை நீராலும் பனிக்கட்டியாலும் ஆலங்கட்டியாலும் (கழுவி),அழுக்கிலிருந்து வெண்மையான ஆடையை நீ தூய்மைப்படுத்துவதைப் போன்று தூய்மைப்படுத்துவாயாக; மேலும், இங்குள்ள வீட்டைவிடச் சிறந்த வீட்டை அவருக்கு வழங்குவாயாக; இங்குள்ள குடும்பத்தைவிடச் சிறந்த குடும்பத்தை வழங்குவாயாக;இங்குள்ள துணையைவிடச் சிறந்த துணையை இவருக்கு வழங்குவாயாக; இவரைச் சொர்க்கத்தில் பிரவேசிக்கச் செய்வாயாக;இவரை மண்ணறையின் வேதனையிலிருந்து காத்தருள்வாயாக / நரகத்தின் வேதனையிலிருந்து காத்தருள்வாயாக!)
அவ்ஃப் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: அந்தப் பிரேதம் நானாக இருந்திருக்கக் கூடாதா என நான் ஆசைப்பட்டேன்.
இந்த ஹதீஸ் அவ்ஃப் பின் மாலிக் (ரலி) அவர்களிடமிருந்து மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 11
1757. அவ்ஃப் பின் மாலிக் அல்அஷ்ஜஈ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ஒரு ஜனாஸாத் தொழுகையில் "அல்லாஹும் மஃக்ஃபிர் லஹு, வர்ஹம்ஹு, வஉஃபு அன்ஹு, வ ஆஃபிஹி, வ அக்ரிம் நுஸுலஹு, வ வஸ்ஸிஃ முத்கலஹு, வஃக்சில்ஹு பி மாயின் வ ஸல்ஜின் வ பரதின், வ நக்கிஹி மினல் கத்தாயா கமா யுனக்கஸ் ஸவ்புல் அப்யளு மினத் தனஸ், வ அப்தில்ஹு தாரன் கைரம் மின் தாரிஹி, வ அஹ்லன் கைரம் மின் அஹ்லிஹி, வ ஸவ்ஜன் கைரம் மின் ஸவ்ஜிஹி, வ கிஹி ஃபித்னத்தல் கப்றி வ அதாபந் நார்" என்று ஓதுவதை நான் செவியுற்றேன்.
(பொருள்: இறைவா! இவருக்கு மன்னிப்பு அளிப்பாயாக; கருணை புரிவாயாக; இவருடைய பாவங்களை மாய்த்து இவரைக் காப்பாயாக! இவருக்கு நல்கப்படும் விருந்தை நல்ல தாக்குவாயாக! இவர் புகுமிடத்தை (கப்றை) விசாலமாக்குவாயாக; இவருடைய குற்றங்குறைகளிலிருந்து இவரை நீராலும் பனிக்கட்டியாலும் ஆலங்கட்டியாலும் கழுவி, அழுக்கிலிருந்து வெண்மையான ஆடை தூய்மைப்படுத்தப்படுவதைப் போன்று தூய்மையாக்குவாயாக; மேலும், இங்குள்ள வீட்டைவிடச் சிறந்த வீட்டையும் இங்குள்ள குடும்பத்தைவிடச் சிறந்த குடும்பத்தையும் இங்குள்ள துணையைவிடச் சிறந்த துணையையும் இவருக்கு வழங்குவாயாக;மண்ணறையின் வேதனையிலிருந்தும் நரக நெருப்பின் வேதனையிலிருந்தும் இவரைக் காத்தருள்வாயாக.)
அந்தப் பிரேதத்திற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிரார்த்தித்ததைப் பார்த்துவிட்டு, அது நானாக இருந்திருந்தால் நன்றாகயிருந்திருக்குமே என்று நான் ஆசைப்பட்டேன்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 11
பாடம் : 27 ஜனாஸாத் தொழுகையின்போது இமாம் எந்த இடத்தில் நிற்க வேண்டும்?
1758. சமுரா பின் ஜுன்துப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
உம்மு கஅப் (ரலி) எனும் பெண்மணி பிரசவ இரத்தப்போக்கு ஏற்பட்டிருந்த நிலையில் இறந்துவிட்டார். அவருக்காக நபி (ஸல்) அவர்கள் ஜனாஸாத் தொழுகை தொழுவித்தார்கள். அப்போது அவர்களைப் பின்பற்றி நானும் தொழுதேன். அத்தொழுகையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிரேதத்தின் மையப்பகுதிக்கு நேராக நின்று தொழுவித்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் சமுரா பின் ஜுன்துப் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "உம்மு கஅப்" எனும் பெயர் இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 11
1759. சமுரா பின் ஜுன்துப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் சிறுவனாக இருந்தேன். நான் நபி (ஸல்) அவர்களிடமிருந்து (பல தகவல்களை) மனனமிட்டுவந்தேன். இங்கு என்னைவிட வயதில் பெரியவர்கள் இருப்பதே என்னை அவற்றைச் சொல்லவிடாமல் தடுக்கிறது. நான் (ஒருமுறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பின்னால் நின்று, பிரசவ இரத்தப்போக்கில் இறந்துபோன பெண்ணிற்காக ஜனாஸாத் தொழுகை தொழுதிருக்கிறேன். அத்தொழுகையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிரேதத்தின் மையப்பகுதிக்கு நேராக நின்று தொழுவித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் முஹம்மத் பின் அல்முஸன்னா (ரஹ்) அவர்கள்,அப்துல்லாஹ் பின் புரைதா (ரஹ்) அவர்களிடமிருந்து அறிவிக்கும் அறிவிப்பில் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்பெண்ணிற்காக தொழுவித்தபோது, சடலத்தின் மையப்பகுதிக்கு நேராக நின்றார்கள்" என்று (சமுரா (ரலி) கூறியதாக) இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 11
பாடம் : 28 ஜனாஸாத் தொழுகை தொழுதுவிட்டு வாகனத்தில் திரும்பிச் செல்வது.
1760. ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் இப்னுத் தஹ்தாஹ் (ரலி) அவர்களது நல்லடக்கத்தை முடித்தபோது அவர்களிடம் சேணம் பூட்டப்படாத வெற்றுடலான குதிரையொன்று கொண்டுவரப்பட்டது. அதிலேறி அவர்கள் திரும்பினார்கள். நாங்கள் அவர்களைச் சுற்றி நடந்துவந்தோம்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இப்னுத் தஹ்தாஹ் (ரலி) அவர்களுக்கு ஜனாஸாத் தொழுகை தொழுவித்தபிறகு அவர்களிடம் சேணம் பூட்டப்படாத வெற்றுடலான குதிரையொன்று கொண்டுவரப்பட்டது. அதை ஒரு மனிதர் பிடித்துக்கொள்ள அதில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஏறிக்கொண்டார்கள். அது சீராக ஓடலாயிற்று. நாங்கள் அதைப் பின் தொடர்ந்து விரைந்து நடக்கலானோம். அப்போது அங்கிருந்த மக்களில் ஒருவர், "இப்னுத் தஹ்தாஹ் அல்லது அபுத்தஹ்தாஹ் (அறிவிப்பாளர் ஷுஅபாவிடமிருந்து அறிவிப்பவரின் ஐயம்) அவர்களுக்காக சொர்க்கத்தில் எத்தனையோ பேரீச்சங்குலைகள் தொங்கிக்கொண்டிருக்கின்றன" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்" என்றார்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 11
பாடம் : 29 உட்குழியும் பிரேதத்தின் மீது செங்கற்களை அடுக்குவதும்.
1761. ஆமிர் பின் சஅத் பின் அபீவக்காஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(என் தந்தை) சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் எந்த நோயில் இறந்துபோனார்களோ அந்த நோயில் இருந்தபோது, "(நான் இறந்ததும்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்காகச் செய்யப்பட்டதைப் போன்று, (குழியினுள்) எனக்காக உட்குழியொன்றை வெட்டுங்கள்; என்மீது நன்கு செங்கற்களை அடுக்கிவையுங்கள்!" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 11
பாடம் : 30 கப்றுக் குழியினுள் போர்வையை விரித்து (பிரேதத்தை) வைப்பது.
1762. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கப்றுக்குள் சிவப்புப் போர்வை ஒன்று விரிக்கப் பட்டது.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
(முஸ்லிம் பின் அல்ஹஜ்ஜாஜ் ஆகிய நான் கூறுகின்றேன்:) இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் இடம்பெற்றுள்ள அபூஜம்ரா என்பவரின் பெயர் நஸ்ர் பின் இம்ரான் என்பதாகும். (இங்கு இடம்பெறாத மற்றொருவரான) அபுத்தய்யாஹ் என்பாரின் பெயர் யஸீத் பின் ஹுமைத் ஆகும். இவர்கள் இருவரும் (குராசான் நாட்டிலுள்ள) "சர்கஸ்" எனும் நகரத்தில் இறந்தனர்.
அத்தியாயம் : 11
பாடம் : 31 மண்ணறை(யின் மேற்பகுதி)யைத் தரைக்குச் சமமாக்குதல்.
1763. ஸுமாமா பின் ஷுஃபை (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் ஃபளாலா பின் உபைத் (ரலி) அவர்களுடன் ரோம் நாட்டிலுள்ள "ரோடிஸ்" தீவில் இருந்தோம். அங்கு எங்கள் நண்பர் ஒருவர் இறந்துவிட்டார். அப்போது ஃபளாலா பின் உபைத் (ரலி) அவர்கள், அவரது கப்றைத் தரைமட்டமாக அமைக்கும்படி உத்தரவிட்டார்கள். பின்னர் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கப்றைத் தரைமட்டமாக்கும்படி உத்தரவிட்டதை நான் கேட்டுள்ளேன்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 11
1764. அபுல்ஹய்யாஜ் அல்அசதீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் என்னிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த அலுவலுக்காக என்னை அனுப்பினார்களோ அந்த அலுவலுக்காக உம்மை நான் அனுப்புகிறேன். (அந்த அலுவல் என்னவென்றால்) எந்த உருவச் சிலைகளையும் நீர் அழிக்காமல் விட்டுவிடாதீர்; (தரையைவிட) உயர்ந்துள்ள எந்தக் கப்றையும் தரை மட்டமாக்காமல் விடாதீர்!"என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் "எந்த உருவப் படங்களையும் நீ அழிக்காமல் விடாதீர்!" என்று கூறியதாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 11
பாடம் : 32 கப்றுகளைக் காரையால் பூசுவதோ அதன் மீது கட்டடம் எழுப்புவதோ கூடாது.
1765. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
கப்றுகள் காரையால் (சுண்ணாம்புக் கலவையால்) பூசப்படுவதையும் அதன் மீது உட்காருவதையும் அதன் மீது கட்டடம் எழுப்பப்படுவதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 11
1766. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
கப்றுகள் காரையால் பூசப்படுவது தடை செய்யப்பட்டுள்ளது.
அத்தியாயம் : 11
பாடம் : 33 கப்றுமீது அமர்வதோ அதன் மீது தொழுவதோ கூடாது.
1767. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர், ஒரு நெருப்புக்கங்கின் மீது அமர்ந்து அது அவரது ஆடையைக் கரித்து அவரது சருமம்வரை சென்றடைவதானது, ஓர் அடக்கத்தலத்தின் (கப்று)மீது அவர் உட்காருவதைவிட அவருக்குச் சிறந்ததாகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 11
1768. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அடக்கத்தலங்கள் (கப்று)மீது உட்காராதீர்கள்; அவற்றை நோக்கித் தொழாதீர்கள்.
இதை அபூமர்ஸத் கன்னாஸ் பின் அல் ஹுஸைன் அல்ஃகனவீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 11
1769. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அடக்கத்தலங்களை (கப்று) நோக்கித் தொழாதீர்கள்; அவற்றின் மீது உட்காராதீர்கள்.
இதை அபூமர்ஸத் அல்ஃகனவீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 11
பாடம் : 34 பள்ளிவாசலில் ஜனாஸாத் தொழுகை நடத்துவது.
1770. அப்பாத் பின் அப்தில்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஆயிஷா (ரலி) அவர்கள், சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களின் பிரேதத்தைப் பள்ளிவாசலுக்குக் கொண்டுசென்று தொழுகை நடத்துமாறு கூறினார்கள். மக்கள் அதற்கு ஆட்சேபம் தெரிவித்தனர். அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள் எவ்வளவு விரைவாக மக்கள் மறந்துவிடுகின்றனர்! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், சுஹைல் பின் அல்பைளா (ரலி) அவர்களுக்குப் பள்ளிவாசலில்தான் தொழுகை நடத்தினார்கள்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 11
1771. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் இறந்தபோது அவரது பிரேதத்தைப் பள்ளிவாசலுக்குக் கொண்டுவருமாறும், தாங்கள் அவருக்கு (இறுதித் தொழுகை) தொழப் போவதாகவும் நபி (ஸல்) அவர்களின் துணைவியர் சொல்லி அனுப்பினார்கள். அவ்வாறே மக்களும் செய்தனர். அப்போது அவரது பிரேதம் நபி (ஸல்) அவர்களின் துணைவியரின் அறைகளுக்கு அருகில் கொண்டுவந்து,அவர்கள் தொழுதுகொள்வதற்காக வைக்கப்பட்டது. பிறகு "மகாஇத்" எனும் இடம் நோக்கி இருந்த "பாபுல் ஜனாயிஸ்" தலைவாயில் வழியாகப் பிரேதம் வெளியே கொண்டுசெல்லப்பட்டது. இது குறித்து மக்கள் குறை கூறுவதாகவும் "பிரேதங்களைப் பள்ளிவாசலுக்குள் கொண்டுசெல்லப்படாது" என்று அவர்கள் பேசிக் கொள்வதாகவும் நபி (ஸல்) அவர்களுடைய துணைவியருக்குச் செய்தி எட்டியது. அப்போது நான் "மக்கள் தங்களுக்குத் தெரியாத விஷயத்தில் ஏன் அவசரப்பட்டுக் குறை கூறுகின்றனர்? பள்ளிவாசலுக்குள் ஒரு பிரேதத்தைக் கொண்டு சென்றதற்காக எங்களை அவர்கள் குறைசொல்கின்றனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சுஹைல் பின் அல்பைளா (ரலி) அவர்களுக்குப் பள்ளிவாசலின் நடுப்பகுதியில்தான் தொழுகை நடத்தினார்கள்" என்று கூறினேன்.
இதை அப்பாத் பின் அப்தில்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 11
1772. அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் இறந்தபோது "அவரது பிரேதத்தைப் பள்ளிவாசலுக்குக் கொண்டுசெல்லுங்கள்; அவருக்காக நான் தொழப்போகிறேன்" என ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள். ஆயிஷா (ரலி) அவர்களிடம் ஆட்சேபம் தெரிவிக்கப் பட்டபோது, "அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பைளா எனும் பெண்மணியின் இரு புதல்வர்களான சுஹைலுக்கும் அவருடைய சகோதரருக்கும் பள்ளிவாசலில்தான் தொழுகை நடத்தினார்கள்" என்று கூறினார்கள்.
(முஸ்லிம் பின் அல்ஹஜ்ஜாஜ் கூறுகின்றேன்:) சுஹைல் பின் தஅத் என்பதே அவரது பெயராகும். பைளா என்பது அவருடைய தாயாரின் (புனை) பெயராகும்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 11
பாடம் : 35 அடக்கத்தலங்களில் நுழையும்போது கூற வேண்டியதும் அடக்கம் செய்யப் பட்டிருப்பவர்களுக்காகப் பிரார்த்திப்பதும்.
1773. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் இறுதிநாட்களில்) என்னுடன் தங்கியிருந்த ஒவ்வோர் இரவின் பிற்பகுதியிலும்(மதீனாவிலுள்ள) "பகீஉல் ஃகர்கத்" பொது மையவாடிக்குச் செல்வார்கள். அங்கு (பின்வருமாறு) கூறுவார்கள்:
அஸ்ஸலாமு அலைக்கும் தார கவ்மின் முஃமினீன். வ அத்தாக்கும் மா தூஅதூன ஃகதன் முஅஜ்ஜலூன். வ இன்னா இன்ஷா அல்லாஹு பிக்கும் லாஹிகூன். அல்லாஹும்மஃக்ஃபிர் லி அஹ்லி பகீஇல் ஃகர்கத்.
(பொருள்: இந்த அடக்கத்தலத்தில் உள்ள இறைநம்பிக்கையாளர்களே! உங்கள்மீது சாந்தி பொழியட்டும்! நீங்கள் நாளை சந்திக்கப்போவதாக வாக்களிக்கப்பட்ட ஒன்று, தவணை அளிக்கப்பட்ட பின்னர் உங்களிடம் வந்துவிட்டது. நாங்கள் அல்லாஹ் நாடினால் உங்களுக்குப் பின்னால் வந்து சேரக்கூடியவர்களாக உள்ளோம். இறைவா! பகீஉல் ஃகர்கதில் உள்ளோருக்கு நீ மன்னிப்பளிப்பாயாக!)
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் குதைபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "உங்களிடம் வந்துவிட்டது" (அ(த்)தாக்கும்) எனும் சொற்றொடர் இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 11
1774. அப்துல்லாஹ் பின் கஸீர் அல்முத்தலிப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(ஒரு நாள்) ஆயிஷா (ரலி) அவர்கள் "நான் நபி (ஸல்) அவர்களைப் பற்றியும் என்னைப் பற்றியும் உங்களுக்கு அறிவிக்க வேண்டாமா?" என்று கேட்டார்கள். அதற்கு நாங்கள் "ஆம் (அறிவியுங்கள்)" என்று கூறினோம் என முஹம்மத் பின் கைஸ் பின் மக்ரமா (ரஹ்) அவர்கள் தெரிவித்தார்கள்.
மற்றோர் அறிவிப்பில் (பின்வருமாறு) காணப்படுகிறது:
ஒரு நாள் முஹம்மத் பின் கைஸ் பின் மக்ரமா பின் அல்முத்தலிப் (ரஹ்) அவர்கள், "நான் என்னைப் பற்றியும் என் அன்னையைப் பற்றியும் உங்களுக்கு அறிவிக்க வேண்டாமா?" என்று கேட்டார்கள். அவர்கள் தம்மை ஈன்றெடுத்த அன்னையைப் பற்றித்தான் குறிப்பிடுகிறார்கள் என்று நாங்கள் எண்ணினோம். பிறகு அவர்கள் கூறினார்கள்:
(ஒரு நாள் அன்னை) ஆயிஷா (ரலி) அவர்கள் "நான் என்னைப் பற்றியும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பற்றியும் உங்களுக்கு அறிவிக்க வேண்டாமா?" என்று கேட்டார்கள். நாங்கள் "ஆம் (அறிவியுங்கள்)" என்று கூறினோம். அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்:
நபி (ஸல்) அவர்கள் என்னுடன் தங்க வேண்டிய இரவில் (என்னிடம்) வந்தார்கள். தமது மேலாடையை (எடுத்துக் கீழே) வைத்தார்கள்; தம் காலணிகளைக் கழற்றித் தமது கால்மாட்டில் வைத்துவிட்டுத் தமது கீழாடையின் ஓரத்தைப் படுக்கையில் விரித்து அதில் ஒருக்களித்துப் படுத்திருந்தார்கள். நான் உறங்கிவிட்டேன் என்று அவர்கள் எண்ணும் அளவு பொறுத்திருந்தார்கள். (நான் உறங்கிவிட்டதாக எண்ணியதும்) மெதுவாகத் தமது மேலாடையை எடுத்து (அணிந்து)கொண்டார்கள்; மெதுவாகக் காலணிகளை அணிந்தார்கள்; கதவைத் திறந்து வெளியே சென்று மெதுவாகக் கதவை மூடினார்கள்.
உடனே நான் எனது தலைத் துணியை எடுத்து, தலையில் வைத்து மறைத்துக் கொண்டேன்; கீழாடையை அணிந்துகொண்டு அவர்களைப் பின்தொடர்ந்து நடந்தேன். அவர்கள் "அல்பகீஉ" பொது மையவாடிக்குச் சென்று நின்றார்கள்; அங்கு நீண்ட நேரம் நின்றிருந்தார்கள். பிறகு மூன்று முறை கைகளை உயர்த்தினார்கள். பிறகு (வீடு நோக்கித்) திரும்பினார்கள்; நானும் திரும்பினேன். அவர்கள் விரைவாக நடந்தபோது நானும் விரைவாக நடந்தேன். அவர்கள் ஓடிவந்தார்கள்; நானும் (அவ்வாறே) ஓடிவந்தேன்;அவர்களுக்கு முன்னால் (வீட்டுக்கு) வந்து படுத்துக்கொண்டேன். நான் படுத்த சிறிது நேரத்தில் அவர்கள் (வீட்டுக்குள்) வந்து "ஆயிஷ்! உனக்கு என்ன நேர்ந்தது? உனக்கு ஏன் மூச்சு வாங்குகிறது?" என்று கேட்டார்கள். நான் "ஒன்றுமில்லை" என்றேன். அதற்கு அவர்கள் "ஒன்று, நீயாகச் சொல்லிவிடு! இல்லாவிட்டால் நுண்ணறிவாளனும் மென்மையானவனுமான அல்லாஹ் எனக்கு அறிவித்துவிடுவான்" என்று கூறினார்கள். நான் "அல்லாஹ்வின் தூதரே, என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்!" என்று கூறிவிட்டு, நடந்ததை அவர்களிடம் தெரிவித்தேன். அவர்கள் "ஓ நீதான் எனக்கு முன்னால் நான் கண்ட அந்த உருவமா?" என்று கேட்டார்கள். நான் "ஆம்" என்றேன். உடனே அவர்கள் என் நெஞ்சில் கையை வைத்துத் தள்ளினார்கள். எனக்கு வலித்தது. பிறகு "அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் (உனக்கு) அநீதியிழைத்துவிடுவார்கள் என நீ எண்ணிக்கொண்டாயோ?" என்று கேட்டார்கள். நான் "ஆம்! மனிதர்கள் என்னதான் மறைத்தாலும் அல்லாஹ் அதை அறிந்துவிடுவானே!" என்று கூறினேன்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீ என்னைக் கண்டபோது (வானவர்) ஜிப்ரீல் என்னிடம் வந்து மறைவாக ஓரிடத்தில் நின்றுகொண்டு என்னை அழைத்தார். நானும் அவரது அழைப்பை ஏற்று உனக்குத் தெரியாமல் மறைவாக அவரிடம் சென்றேன். -(பொதுவாக) நீ உனது ஆடையை கழற்றிவைத்துவிட்ட நேரங்களில் அவர் நீ இருக்கும் இடத்திற்கு வரமாட்டார்- (எனவே தான், மறைவாக நின்று அவர் என்னை அழைத்தார்.) நான் நீ உறங்கிவிட்டதாக நினைத்தேன். உன்னை எழுப்பிவிடவும் நான் விரும்பவில்லை. நீ தனிமையில் இருப்பதை நினைத்து பயந்துவிடுவாய் என்று நான் அஞ்சினேன். (எனவே, உன்னை உறக்கத்திலிருந்து எழுப்பவில்லை.) அப்போது ஜிப்ரீல் "உம் இறைவன் உம்மை "பகீஉ"வாசிகளிடம் சென்று அவர்களுக்காகப் பாவமன்னிப்புக் கோரும்படி கட்டளையிடுகின்றான்" என்று கூறினார்" என்றார்கள்.
தொடர்ந்து ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
நான் "அல்லாஹ்வின் தூதரே! அ(டக்கத்தலங்களில் இருப்ப)வர்களுக்காக நான் என்ன சொல்ல வேண்டும்?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "அஸ்ஸலாமு அலா அஹ்லித் தியாரி மினல் முஃமினீன வல் முஸ்லிமீன். வ யர்ஹமுல்லாஹுல் முஸ்தக்திமீன மின்னா வல் முஸ்தஃகிரீன். வ இன்னா இன்ஷா அல்லாஹு பி(க்)கும் ல லாஹிகூன்" என்று சொல்" என்றார்கள்.
(பொருள்: அடக்கத்தலங்களில் உள்ள இறைநம்பிக்கையாளர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் சாந்தி பொழியட்டும்! நம்மில் முந்திச் சென்றுவிட்டவர்களுக்கும் பிந்தி வருபவர்களுக்கும் அல்லாஹ் கருணை புரிவானாக! நாம் அல்லாஹ் நாடினால் உங்களுக்குப் பின்னால் வந்து சேரக்கூடியவர்களாக உள்ளோம்.)
அத்தியாயம் : 11
1775. புரைதா பின் அல்ஹஸீப் அல்அஸ்லமீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களுக்கு, அவர்கள் அடக்கத்தலங்களுக்குச் செல்லும்போது கூற வேண்டியதைக் கற்றுக்கொடுத்துவந்தார்கள். அ(வ்வாறு கற்றுக் கொண்ட)வர்களில் ஒருவர் "அஸ்ஸலாமு அலா அஹ்லித் தியாரி மினல் முஃமினீன வல்முஸ்லிமீன். வ இன்னா இன்ஷா அல்லாஹு ல லாஹிகூன். அஸ்அலுல்லாஹ லனா வ ல(க்)குமுல் ஆஃபிய்யா" என்று (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கற்றுக் கொடுத்ததாகக்) கூறினார்.
(பொருள்: அடக்கத்தலங்களில் உள்ள இறைநம்பிக்கையாளர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் சாந்தி பொழியட்டும்! நாம் அல்லாஹ் நாடினால் (உங்களிடம்) வந்து சேரக்கூடியவர்களாக உள்ளோம். நான் எங்களுக்காகவும் உங்களுக்காகவும் விமோசனத்தை வேண்டுகிறேன்.)
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில், அபூபக்ர் பின் அபீஷைபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் மேற்கண்ட வாசக அமைப்பு இடம்பெற்றுள்ளது.
ஸுஹைர் பின் ஹர்ப் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "அஸ்ஸலாமு அலைக்கும் அஹ்லத் தியாரி" என்று தொடங்குகிறது.
அத்தியாயம் : 11
பாடம் : 36 நபி (ஸல்) அவர்கள் தம் தாயாரின் அடக்கத்தலத்தைச் சந்திக்க இறைவனிடம் அனுமதி கோரியது.
1776. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் என் இறைவனிடம் என் தாயாருக்காகப் பாவமன்னிப்புக் கோர அனுமதி கேட்டேன். அவன் அனுமதி வழங்கவில்லை. அவரது அடக்கத்தலத்தைச் சந்திக்க அனுமதி கேட்டேன். எனக்கு அனுமதி வழங்கினான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 11
1777. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் தம் தாயாரின் அடக்கத்தலத்தைச் சந்தித்தபோது அழுதார்கள்; (இதைக் கண்டு) அவர்களைச் சுற்றியிருந்தவர்களும் அழுதனர். அப்போது அவர்கள், "நான் என் இறைவனிடம் என் தாயாருக்காகப் பாவமன்னிப்புக் கோர அனுமதி கேட்டேன். எனக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அவரது அடக்கத்தலத்தைச் சந்திப்பதற்கு அனுமதி கேட்டேன். எனக்கு அனுமதி வழங்கினான். எனவே, அடக்கத்தலங்களைச் சந்தியுங்கள். ஏனெனில், அவை மரணத்தை நினைவூட்டும்!" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 11
1778. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் உங்களை அடக்கத்தலங்களைச் சந்திக்க வேண்டாமென்று தடை விதித்திருந்தேன். இனி நீங்கள் அவற்றைச் சந்தியுங்கள். குர்பானி இறைச்சியை மூன்று நாட்களுக்கு மேல் சேமித்துவைக்க வேண்டாமென உங்களுக்குத் தடை விதித்திருந்தேன். இனி நீங்கள் விரும்பும் நாட்கள்வரை சேமித்துவையுங்கள். பழச்சாறு மதுபானங்கள் ஊற்றிவைக்கப் பயன்படும் பாத்திரங்களைப் பயன்படுத்த வேண்டாமென்று உங்களுக்குத் தடை விதித்திருந்தேன். இனி நீங்கள் எல்லாப் பாத்திரங்களிலும் பருகலாம். ஆனால், போதையூட்டுகின்றவற்றை அருந்தாதீர்கள்.
இதை புரைதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் புரைதா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஐந்து அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 11
பாடம் : 37 தற்கொலை செய்தவனுக்கு (இறுதி)த் தொழுகையைக் கைவிட்டது.
1779. ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அகலமான அம்பால் தற்கொலை செய்து கொண்ட ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டபோது, அவருக்காக நபி (ஸல்) அவர்கள் தொழவைக்கவில்லை.
Previous Post Next Post