அத்தியாயம் 52 குழப்பங்களும், மறுமை நாளின் அடையாளங்களும்

ஸஹீஹ் முஸ்லிம்
அத்தியாயம் 52
குழப்பங்களும், மறுமை நாளின் அடையாளங்களும்

பாடம் : 1 குழப்பங்கள் நெருங்கிவிட்டதும், யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தாரின் தடுப்புச்சுவர் திறந்துவிட்டதும்.
5520. ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு நாள்) நபி (ஸல்) அவர்கள் (திடுக்கிட்டுத்) தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து, "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை. நெருங்கிவிட்ட ஒரு தீமையின் காரணமாக அரபியருக்குக் கேடுதான். இன்று யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தாரின் தடுப்புச் சுவரிலிருந்து இந்த அளவுக்குத் திறக்கப்பட்டுள்ளது" என்று கூறினார்கள்.
-அறிவிப்பாளர் சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் ("இந்த அளவுக்கு" என்று கூறியபோது) தம் கைவிரல்களால் (அரபி எண் வடிவில்) 10 என்று மடித்துக் காட்டினார்கள்.-
அப்போது நான், "அல்லாஹ்வின் தூதரே! நல்லவர்கள் நம்மிடையே இருக்கும்போதா நமக்கு அழிவு ஏற்படும்?" என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "ஆம்; தீமை பெருத்து விட்டால்" என்று பதிலளித்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 52
5521. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் முகம் சிவந்த நிலையில் பதற்றத்துடன் "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை. நெருங்கிவிட்ட ஒரு தீமையின் காரணமாக அரபியருக்குக் கேடு தான். இன்று யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தாரின் தடுப்புச் சுவரிலிருந்து இந்த அளவுக்குத் திறக்கப் பட்டுள்ளது" என்று கூறியபடி வெளியேறினார்கள்.
("இந்த அளவுக்கு" என்று கூறியபோது) பெருவிரலையும் அதற்கு அடுத்துள்ள (சுட்டு) விரலையும் வளையமிட்டுக் காட்டினார்கள். அப்போது நான், "அல்லாஹ்வின் தூதரே! நல்லவர்கள் நம்மிடையே இருக்கும்போதுமா நமக்கு அழிவு ஏற்படும்?" என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "ஆம்; தீமை பெருத்துவிட்டால்" என்று பதிலளித்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 52
5522. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், "இன்று யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தாரின் தடுப்புச் சுவரிலிருந்து இந்த அளவுக்குத் திறக்கப்பட்டுள்ளது" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களில் ஒருவரான உஹைப் பின் காலித் (ரஹ்) அவர்கள், ("இந்த அளவுக்கு" என்று கூறியபோது) தம் விரல்களால் (அரபி எண் வடிவில்) 90 என்று மடித்துக் காட்டினார்கள்.
அத்தியாயம் : 52
பாடம் : 2 இறையில்லம் கஅபாவை நாடிவரும் படையினர் பூமிக்குள் புதைந்துபோவது பற்றிய முன்னறிவிப்பு.
5523. உபைதுல்லாஹ் இப்னு கிப்திய்யா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஹாரிஸ் பின் அபீரபீஆ மற்றும் அப்துல்லாஹ் பின் ஸஃப்வான் (ரஹ்) ஆகியோர் இறைநம்பிக்கையாளர்களின் அன்னை உம்மு சலமா (ரலி) அவர்களிடம் சென்றனர். அப்போது அவ்விருவருடன் நானும் இருந்தேன். அவர்கள் இருவரும் உம்மு சலமா (ரலி) அவர்களிடம், பூமிக்குள் புதைந்துபோகும் படையினரைப் பற்றிக் கேட்டார்கள். -இது அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்களின் காலத்தில் நடைபெற்றது.-
அதற்கு உம்மு சலமா (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஒருவர் இறையில்லம் கஅபா (எல்லை)க்குள் அபயம் தேடி வருவார். அவரை நோக்கிப் படையொன்று அனுப்பப்படும். அப்படையினர் ஒரு சமவெளியில் இருக்கும்போது, பூமிக்குள் புதைந்துபோய் விடுவார்கள்" என்று சொன்னார்கள்.
உடனே நான், "அல்லாஹ்வின் தூதரே! நிர்பந்தமாகப் புறப்பட்டு வந்தவரின் நிலை என்ன?" என்று கேட்டேன். "அவர்களுடன் சேர்த்து அவரும் புதைந்துபோவார். எனினும், மறுமை நாளில் அவரது எண்ணத்திற்கேற்ப அவர் எழுப்பப்படுவார்" என்று கூறினார்கள் என்றார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூஜஅஃபர் (ரஹ்) அவர்கள், "("சமவெளி" என்பது) மதீனாவிலுள்ள சமவெளி (பைதாஉல் மதீனா) ஆகும்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 52
5524. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் அப்துல் அஸீஸ் பின் ருஃபைஉ (ரஹ்) அவர்கள், "நான் அபூஜஅஃபர் (ரஹ்) அவர்களைச் சந்தித்தபோது, "பூமியில் ஒரு சமவெளியில் என்றே உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறினார்கள்" என்றேன். அதற்கு அபூஜஅஃபர் (ரஹ்) அவர்கள், "அவ்வாறில்லை; அல்லாஹ்வின் மீதாணையாக! அது மதீனாவிலுள்ள பைதா(சமவெளி) ஆகும்" என்று கூறினார்கள்" என்றார்கள்.
அத்தியாயம் : 52
5525. ஹஃப்ஸா (ரலி) அவர்கள் கூறிய தாவது:
நபி (ஸல்) அவர்கள், "இந்த இறையில்லத்தின் மீது போர் தொடுக்க எண்ணி ஒரு படையினர் நிச்சயமாக வருவார்கள். அவர்கள் பூமியில் ஒரு சமவெளியில் இருக்கும்போது, நடுவிலுள்ள அணியினர் பூமிக்குள் புதைந்து போவார்கள். முன்னாலுள்ள அணியினர் பின்னாலிருக்கும் அணியினரை அழைப்பார்கள். பிறகு அவர்களும் பூமிக்குள் புதைந்து போவார்கள். இறுதியில் அங்கிருந்து தப்பித்து வந்து, அவர்களைப் பற்றிய செய்தி அறிவிப்பவர் மட்டுமே எஞ்சியிருப்பார்.
(இதை அப்துல்லாஹ் பின் ஸஃப்வான் (ரஹ்) அவர்கள் அறிவித்தபோது,) ஒரு மனிதர், "நீர் ஹஃப்ஸா (ரலி) அவர்களின் மீது பொய்யுரைக்கவில்லை என நான் சாட்சியம் கூறுகிறேன். மேலும், ஹஃப்ஸா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் மீது பொய்யுரைக்கவில்லை என்றும் நான் சாட்சியமளிக்கிறேன்" என்றார்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 52
5526. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இந்த இல்லத்தை -அதாவது கஅபாவை- நோக்கி அபயம் தேடி ஒரு கூட்டத்தார் வருவார்கள். அவர்களிடம் ஆதரவுப் படையினரோ ஆட்பலமோ முன்னேற்பாடோ இருக்காது. (அவர்களைத் தாக்குவதற்காக) படை ஒன்று அவர்களிடம் அனுப்பப்படும். அப்படையினர் ஒரு சமவெளியில் இருக்கும்போது அவர்கள் பூமிக்குள் புதைந்து போய்விடுவார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான யூசுஃப் பின் மாஹக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
(இந்த ஹதீஸை அப்துல்லாஹ் பின் ஸஃப் வான் (ரஹ்) அவர்கள் எனக்கு அறிவித்த போது) நான், "ஷாம் (சிரியா)வாசிகள் அன்றைய நாளில் மக்கா நோக்கிப் பயணம் மேற்கொள்வார்கள்" என்று சொன்னேன். அதற்கு அப்துல்லாஹ் பின் ஸஃப்வான் (ரஹ்) அவர்கள், "அறிந்துகொள்ளுங்கள்! அது (பூமிக்குள் புதைந்துபோகும்) இந்தப் படையல்ல" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஸைத் பின் அபீஉனைசா (ரஹ்) அவர்கள் வாயிலாக மற்றோர் அறிவிப்பாளர் தொடரிலும் வந்துள்ளது. ஆயினும், அதில் அப்துல்லாஹ் பின் ஸஃப்வான் (ரஹ்) அவர்கள் கூறிய படையினர் பற்றிய குறிப்பு இல்லை.
அத்தியாயம் : 52
5527. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் படுக்கையில் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தார்கள். நாங்கள், "அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் உறங்கும்போது ஏதோ செய்துகொண்டிருந்தீர்கள். இவ்வாறு நீங்கள் எப்போதும் செய்வதில்லையே!" என்று கேட்டோம். அதற்கு, "ஓர் ஆச்சரியமான செய்தி(யினால் நான் அவ்வாறு செய்து கொண்டிருந்தேன்).என் சமுதாயத்தாரில் சிலர், இறையில்லம் கஅபாவில் தஞ்சம் புகுந்துள்ள குறைஷியரில் ஒருவருக்காக இறையில்லத்தை நோக்கி (படையெடுத்து) வருவார்கள். அவர்கள் ("பைதா எனும்) சமவெளியில் இருக்கும்போது பூமிக்குள் புதைந்துபோவார்கள்" என்று கூறினார்கள்.
நாங்கள், "அல்லாஹ்வின் தூதரே! சாலையில் பல்வேறு மக்களும் திரண்டிருப்பார்களே (அவர்கள் அனைவரும் புதைந்துபோவார்களே)?" என்று கேட்டோம். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஆம்; அவர்களில் பார்வையாளர்கள், நிர்பந்தமாக அழைத்து வரப்பட்டவர்கள், வழிப்போக்கர்கள் ஆகியோரும் இருப்பார்கள். அவர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக அழிந்துபோவார்கள். பிறகு பல்வேறு நிலைப்பாடு கொண்டவர்களாய் அவர்கள் எழுப்பப்படுவார்கள். அவர்களின் எண்ணங்களுக்கேற்ப அவர்களை அல்லாஹ் (மறுமை நாளில்) எழுப்புவான்" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 52
பாடம் : 3 மழைத் துளிகள் விழுவதைப் போன்று குழப்பங்கள் (தொடர்ந்து) நிகழும் என்பது பற்றிய முன்னறிவிப்பு.
5528. உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் மதீனாவின் கோட்டைகளில் ஒன்றின் மீது ஏறிக்கொண்டு (நோட்டமிட்டபடி), "நான் பார்க்கின்றவற்றை நீங்கள் பார்க்கிறீர்களா? நான் மழைத்துளிகள் விழுவதைப் போன்று உங்கள் வீடுகள் நெடுகிலும் குழப்பங்கள் நிகழப்போவதைப் பார்க்கிறேன்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் உசாமா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 52
5529. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
விரைவில் குழப்பங்கள் சில தோன்றும். அவற்றுக்கிடையே (மௌனமாகி) அமர்ந்திருப்பவர், (அவற்றுக்காக) எழுந்து நிற்பவரை விடவும், அவற்றுக்கிடையே எழுந்து நிற்பவர், நடப்பவரை விடவும், அவற்றுக்கிடையே நடப்பவர், (அவற்றை நோக்கி) ஓடுபவரைவிடவும் சிறந்தவர் ஆவார்.
அவற்றில் யார் தம்மை ஈடுபடுத்திக்கொள்கிறாரோ அவரை அழிக்க அவை முற்படும். அப்போது யார் ஒரு புகலிடத்தைப் பெறுகிறாரோ, அவர் அதன் மூலம் தம்மைத் தற்காத்துக் கொள்ளட்டும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் ஆறு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 52
5530. மேற்கண்ட ஹதீஸ் நவ்ஃபல் பின் முஆவியா பின் உர்வா (ரலி) அவர்கள் வாயிலாக மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் அபூபக்ர் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "தொழுகைகளில் ஒன்று (அஸ்ர்) உள்ளது. அதைத் தவறவிட்டவர் தம் குடும்பத்தாரையும் சொத்துக்களையும் விட்டுத் தனிமைப்படுத்தப்பட்டதைப் போன்றவர் ஆவார்" என்று கூடுதலாக இடம் பெற்றுள்ளது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம் பெற்றுள்ளன.
அத்தியாயம் : 52
5531. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சில குழப்பங்கள் தோன்றும். அப்போது படுத்து உறங்கிக்கொண்டிருப்பவர் விழித்திருப்பவரை விடவும், விழித்திருப்பவர் (அவற்றுக்காக) எழுந்து நடப்பவரைவிடவும், அவற்றுக்காக எழுந்து நடப்பவர் (அவற்றுக்காக) எழுந்து ஓடுபவரைவிடவும் சிறந்தவர் ஆவார். அப்போது யார் ஒரு புகலிடத்தையோ காப்பிடத்தையோ பெறுகின்றாரோ அவர் (அதன் மூலம்) தம்மைத் தற்காத்துக் கொள்ளட்டும்!
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 52
5532. உஸ்மான் அஷ்ஷஹ்ஹாம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நானும் ஃபர்கத் அஸ்ஸபகீ (ரஹ்) அவர்களும் முஸ்லிம் பின் அபீபக்ரா (ரஹ்) அவர்களிடம் அவர்களது வசிப்பிடத்திற்குச் சென்றோம். அவர்களிடம் நாங்கள் சென்றடைந்து, "குழப்பங்கள் தொடர்பாக தாங்கள் தங்கள் தந்தை (அபூபக்ரா-ரலி) அறிவித்த ஹதீஸ் எதையேனும் செவியுற்றீர்களா?" என்று கேட்டோம். அதற்கு அவர்கள் கூறினார்கள்: "ஆம்" (என் தந்தை) அபூபக்ரா (ரலி) அவர்கள் பின்வருமாறு கூறியதைக் கேட்டேன்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "விரைவில் குழப்பங்கள் சில தோன்றும். அறிந்து கொள்ளுங்கள். பின்னர் ஒரு குழப்பம் தோன்றும். அதற்கிடையே உட்கார்ந்து கொண்டிருப்பவர் (அதற்காக) எழுந்து நடப்பவரை விடவும், அதற்காக எழுந்து நடப்பவர் அதை நோக்கி ஓடுபவரைவிடவும் சிறந்தவர் ஆவார். கவனத்தில் கொள்ளுங்கள்: அந்தக் குழப்பம் நிகழ்ந்துவிட்டால் தம்மிடம் ஒட்டகங்கள் வைத்திருப்பவர், அவற்றிடம் சென்றடையட்டும். தம்மிடம் ஆடுகள் வைத்திருப்பவர், அவற்றிடம் சென்றடையட்டும். தம்மிடம் நிலம் வைத்திருப்பவர் தமது நிலத்திற்குச் சென்றுவிடட்டும்" என்று கூறினார்கள்.
அப்போது ஒரு மனிதர், "அல்லாஹ்வின் தூதரே! தம்மிடம் ஒட்டகமோ ஆடோ நிலமோ இல்லாதவர் என்ன செய்யவேண்டும் எனக் கூறுகிறீர்கள்?" என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவர் தமது வாள்முனையை ஒரு கல்லால் அடித்து முறித்துவிட்டு,(சண்டையிலிருந்து) தம்மைத் தற்காத்துக்கொள்ள முடிந்தால் அவர் தற்காத்துக் கொள்ளட்டும்" என்று கூறினார்கள். (பின்னர்) "இறைவா! (நீ தெரிவிக்கச் சொன்னவற்றை) நான் தெரிவித்துவிட்டேனா? இறைவா! நான் தெரிவித்துவிட்டேனா? இறைவா! நான் தெரிவித்து விட்டேனா?" என்று (மூன்று முறை) கூறினார்கள்.
அப்போது ஒரு மனிதர், "அல்லாஹ்வின் தூதரே! (குழப்பமான காலகட்டத்தில்) என்னைக் கட்டாயப்படுத்தி இரு அணிகளில் ஒன்றுக்கு, அல்லது இரு குழுக்களில் ஒன்றுக்கு நான் இழுத்துச் செல்லப்பட்டு, என்னை ஒரு மனிதர் தமது வாளால் வெட்டிவிட்டால், அல்லது எங்கிருந்தோ வந்த மர்ம அம்பு என்னைக் கொன்றுவிட்டால் (எனது நிலை) என்ன கூறுங்கள்" என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அ(வ்வாறு செய்த)வர், தமது பாவத்துடனும் உமது பாவத்துடனும் திரும்பிச் சென்று, நரகவாசிகளில் ஒருவராகிவிடுவார்" என்று சொன்னார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் வகீஉ (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "தம்மைத் தற்காத்துக்கொள்ள முடிந்தால் அவர் தம்மைத் தற்காத்துக்கொள்ளட்டும்" என்பதோடு ஹதீஸ் நிறைவடைகிறது. அதற்குப் பின்னுள்ள குறிப்புகள் இடம்பெற வில்லை. இப்னு அபீஅதீ (ரஹ்) அவர்களது அறிவிப்பில் (மேற்கண்ட ஹதீஸில் உள்ள விவரங்கள்) முழுமையாக இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 52
பாடம் : 4 இரண்டு முஸ்லிம்கள் வாட்களால் சந்தித்துக்கொண்டால்...
5533. அஹ்னஃப் பின் கைஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(அலீ (ரலி) அவர்களது காலத்தில் உள்நாட்டு அரசியல் குழப்பம் தலைதூக்கியிருந்த காலகட்டத்தில்) நான் இந்த மனிதரை (அலீ (ரலி) அவர்களை) நாடிப் புறப்பட்டேன். அப்போது என்னை அபூபக்ரா (ரலி) அவர்கள் எதிர்கொண்டு, "எங்கே செல்கிறீர்?" என்று கேட்டார்கள்.
நான், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய பெரிய தந்தையின் மகன் -அதாவது அலீ (ரலி)- அவர்களுக்கு உதவப்போகிறேன்" என்று சொன்னேன். அப்போது அவர்கள், "அஹ்னஃபே! திரும்பிச் சென்றுவிடுங்கள். ஏனெனில்,அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இரண்டு முஸ்லிம்கள் தம் வாட்களால் ஒருவரையொருவர் சந்தித்(து சண்டையிட்டு மடிந்)தால் அவர்களில் கொன்றவர், கொல்லப்பட்டவர் ஆகிய இருவருமே நரகத்திற்குச் செல்வார்கள்"என்று கூறியதை நான் கேட்டேன்.
அப்போது "அல்லாஹ்வின் தூதரே! இவர் கொலைகாரர் (தண்டனை பெறுவது சரிதான்); ஆனால், கொல்லப்பட்டவரின் நிலை என்ன?" என்று கேட்கப்பட்டது. அல்லது நான் கேட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "கொல்லப்பட்டவரும் தம் தோழரைக் கொல்ல வேண்டும் என்ற எண்ணத்துடன்தான் இருந்தார்" என்று பதிலளித்தார்கள்" என்றார்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 52
5534. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இரண்டு முஸ்லிம்கள் தம் வாட்களால் ஒருவரையொருவர் சந்தித்(து மடிந்)தால் அவர்களில் கொன்றவர்,கொல்லப்பட்டவர் ஆகிய இருவருமே நரகத்திற்குச் செல்வார்கள்.
இதை அபூபக்ரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 52
5535. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இரண்டு முஸ்லிம்கள் பரஸ்பரம் தம் சகோதரருக்கு எதிராக ஆயுதமேந்தும்போது, அவர்கள் இருவருமே நரகத்தின் விளிம்பில் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் மற்றவரைக் கொன்றுவிட்டால், அவர்கள் இருவருமே நரகத்திற்குள் நுழைந்துவிடுகின்றனர்.
இதை அபூபக்ரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 52
5536. ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் எமக்கு அறிவித்த ஹதீஸ்களாகும். அவற்றில் பின்வரும் ஹதீஸும் ஒன்றாகும்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரு பெருங்குழுவினர் ஒருவரோடொருவர் போரிட்டுக் கொள்ளாதவரை யுக முடிவு நாள் வராது. அவ்விரு குழுக்களிடையே பெரும் போர் நிகழும். ஆனால்,அவ்விரு குழுவினரும் முன்வைக்கும் வாதம் ஒன்றாகவே இருக்கும்.
அத்தியாயம் : 52
5537. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறிய தாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஹர்ஜ் பெருகாதவரை யுக முடிவு நாள் வராது" என்று கூறினார்கள். மக்கள், "ஹர்ஜ் என்றால் என்ன, அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "கொலை; கொலை" என்று பதிலளித்தார்கள்.
அத்தியாயம் : 52
பாடம் : 5 இந்தச் சமுதாயத்தில் சிலரால் சிலருக்கு அழிவு ஏற்படும் (என்பது பற்றிய முன்னறிவிப்பு).
5538. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் எனக்காகப் பூமியைச் சுருட்டிக் காட்டினான். நான் அதன் கிழக்குப் பகுதிகளையும் மேற்குப் பகுதிகளையும் பார்த்தேன். அதில் எனக்குச் சுருட்டிக் காட்டப்பட்ட அளவுக்கு என் சமுதாயத்தாரின் ஆட்சி விரிவடையும். எனக்குச் சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்தாலான (தங்கம் மற்றும் வெள்ளியின்) இரு கருவூலங்கள் வழங்கப்பட்டன. நான் என் இறைவனிடம் என் சமுதாயத்தைப் பஞ்சத்தால் ஒட்டுமொத்தமாக அழித்துவிடாதே எனப் பிரார்த்தித்தேன்.
மேலும், "அவர்கள்மீது அவர்களிடையே உள்ள எதிரிகளைத் தவிர வெளி எதிரிகளைச் சாட்டி விடாதே. அவ்வாறு நீ சாட்டினால், அவர்களது ஆட்சியும் கண்ணியமும் முற்றாக அழிந்துவிடும்" என்றும் பிரார்த்தித்தேன்.
என் இறைவன், "முஹம்மதே! நான் ஒன்றை முடிவு செய்துவிட்டால் அது மாற்றப்படாது. நான் உம்முடைய சமுதாயத்தைப் பஞ்சத்தால் ஒட்டுமொத்தமாக அழிக்கமாட்டேன் என்பதை உமக்கு (வாக்குறுதியாக) அளிக்கிறேன். மேலும், அவர்களுக்கெதிராக அவர்களிடையேயுள்ள எதிரிகள் அல்லாமல் வெளி எதிரிகளைச் சாட்டி, அவர்களது ஆட்சியை முற்றாக அழிக்கமாட்டேன்; எதிரிகள் பூமியின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் அவர்களுக்கு எதிராகத் திரண்டாலும் சரியே! ஆனால், அவர்களிலேயே சிலர் சிலரை அழிப்பார்கள். அவர்களிலேயே சிலர் சிலரைச் சிறைபிடிப்பார்கள்" என்று கூறினான்.
இதை ஸவ்பான் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஸவ்பான் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் நான்கு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "அல்லாஹ் எனக்காகப் பூமியைச் சுருட்டிக் காட்டினான். நான் அதன் கிழக்குப் பகுதிகளையும் மேற்குப் பகுதிகளையும் பார்த்தேன். மேலும், சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்தாலான (தங்கம் மற்றும் வெள்ளியாலான) இரு கருவூலங்களை எனக்கு வழங்கினான்..." என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹதீஸ் ஆரம்பமாகிறது.
மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 52
5539. சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மதீனா புறநகரில் மேட்டுப் பகுதியான) "ஆலியா"விலிருந்து வந்து பனூ முஆவியா பள்ளிவாசலைக் கடந்து சென்றார்கள். அப்போது பள்ளிவாசலுக்குள் நுழைந்து இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். அவர்களுடன் நாங்களும் தொழுதோம். பிறகு நீண்ட நேரம் தம் இறைவனிடம் பிரார்த்தித்தார்கள்.
பிறகு எங்களை நோக்கித் திரும்பி, "நான் என் இறைவனிடம் மூன்று கோரிக்கைகளை முன்வைத்துப் பிராத்தித்தேன். அவற்றில் இரண்டை எனக்குத் தந்தான்; ஒன்றை மறுத்து விட்டான். நான் என் இறைவனிடம், "என் சமுதாயத்தாரை (ஒட்டுமொத்தமாக) பஞ்சத்தால் அழித்துவிடாதே" என்று பிரார்த்தித்தேன். அதை எனக்கு அவன் வழங்கினான். அவனிடம் நான் "என் சமுதாயத்தாரை வெள்ள நீரில் (ஒட்டுமொத்தமாக) மூழ்கடித்துவிடாதே" என்று பிரார்த்தித்தேன். அதையும் எனக்கு அவன் வழங்கினான். அவனிடம் நான் "(என் சமுதாயத்தார்) தமக்கிடையே மோதிக்கொள்ளக்கூடாது" எனப் பிரார்த்தித்தேன். ஆனால், (அந்தப் பிரார்த்தனையை ஏற்க) அவன் மறுத்துவிட்டான்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 52
5540. மேற்கண்ட ஹதீஸ் சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ("ஆலியா" பகுதியிலிருந்து) வந்தேன். அப்போது அவர்களுடன் அவர்களுடைய தோழர்களில் சிலரும் இருந்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பனூ முஆவியா பள்ளிவாசலைக் கடந்து சென்றார்கள்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 52
பாடம் : 6 யுக முடிவு நாள்வரை நிகழவிருப்பது பற்றி நபி (ஸல்) அவர்கள் செய்த முன்னறிவிப்பு.
5541. அபூஇத்ரீஸ் அல்கவ்லானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக! நான்,எனக்கும் யுக முடிவு நாளுக்குமிடையே நிகழப்போகும் குழப்பங்கள் குறித்து மக்களிலேயே நன்கு அறிந்தவன் ஆவேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதைக் குறித்து எனக்குச் சிலவற்றை இரகசியமாகச் சொல்லியிருந்ததே அதற்குக் காரணமாகும். மற்றவர்கள் அவற்றை அறிவிக்கவில்லை.
எனினும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓர் அவையில் குழப்பங்கள் குறித்துப் பேசினார்கள். அங்கு நானும் இருந்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (நிகழப்போகும்) குழப்பங்களை எண்ணிக் கணக்கிட்டபடி, "அவற்றில் மூன்று குழப்பங்கள் உள்ளன. அவை எதையுமே விட்டுவைக்காது. அவற்றில் இன்னும் சில குழப்பங்கள் உள்ளன. அவை கோடைகால (வெப்பக்)காற்றைப் போன்றவையாகும். அவற்றில் சிறிய குழப்பங்களும் உள்ளன;பெரிய குழப்பங்களும் உள்ளன" என்று கூறினார்கள்.
(இந்தச் செய்தியைச் செவியுற்ற) அக்குழுவினரில் என்னைத் தவிர மற்ற அனைவரும் (இறந்து) போய்விட்டனர்.
அத்தியாயம் : 52
5542. ஹுதைஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடையே நீண்ட நேரம் நின்று கொண்டு, யுக முடிவு நாள் ஏற்படும் வரையிலான எந்தத் தகவலையும் ஒன்றுவிடாமல் குறிப்பிட்டார்கள். அதை மனனமிட்டவர்கள் மனனமிட்டுக்கொண்டார்கள். அதை மறந்தவர்கள் மறந்து விட்டார்கள். இதோ இந்த என் தோழர்கள் அதை அறிந்துகொண்டனர். அவற்றில் ஏதேனும் ஒன்றை நான் மறந்துவிட்டிருந்தாலும் அதை நேரில் காணும் போது, அது என் நினைவிற்கு வந்துவிடும்; தம்மைவிட்டு மறைந்துவிட்ட ஒருவரது முகத்தை (மீண்டும்) பார்க்கும்போது அவரை ஒருவர் அடையாளம் கண்டுகொள்வதைப் போன்று.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஹுதைஃபா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "அதை மறந்தவர்கள் மறந்துவிட்டார்கள்" என்பதுவரையே இடம்பெற்றுள்ளது. அதற்குப் பின்னுள்ளவை இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 52
5543. ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், யுக முடிவு நாள்வரை ஏற்படும் (குழப்பங்கள்) அனைத்தையும் பற்றி எனக்குத் தெரிவித்தார்கள். அவற்றில் ஒவ்வொன்றைக் குறித்தும் அவர்களிடம் நான் கேள்வி கேட்(டுத் தெரிந்து கொண்)டேன். ஆனால், "மதீனாவாசிகளை மதீனாவிலிருந்து வெளியேற்றுவது எது?" என்பதைப் பற்றி அவர்களிடம் நான் கேட்கவில்லை.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 52
5544. அபூஸைத் அம்ர் பின் அக்தப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு "ஃபஜ்ர்" தொழுகை தொழுவித்து விட்டு, சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீதேறி எங்களுக்கு உரையாற்றினார்கள். இறுதியில் லுஹர் தொழுகை நேரம் வந்தபோது (மேடையிலிருந்து) இறங்கி, தொழுவித்துவிட்டுப் பிறகு மீண்டும் மேடைமீதேறி "அஸ்ர்" தொழுகைவரை உரையாற்றினார்கள். பிறகு மேடையிலிருந்து இறங்கி (அஸ்ர் தொழுகை) தொழுவித்து விட்டு பிறகு மறுபடியும் மேடைமீதேறி சூரியன் மறையும்வரை உரையாற்றினார்கள். நடந்தவை, நடக்கவிருப்பவை அனைத்தையும் பற்றி (அன்று) எங்களுக்குத் தெரிவித்தார்கள். எங்களில் நன்கறிந்தவர் (அவற்றை) நன்கு மனனமிட்டவர் ஆவார்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 52
பாடம் : 7 கடல் அலை போன்று அடுக்கடுக்காய் வரும் குழப்பங்கள்.
5545. ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் (ஒருமுறை கலீஃபா) உமர் (ரலி) அவர்களிடம் இருந்தோம். அப்போது அவர்கள், "உங்களில் யார் (இனி தலைதூக்கவிருக்கும்) குழப்பங்கள் (ஃபித்னா) பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னதை, அவர்கள் சொன்னதைப் போன்றே நினைவில் வைத்திருக்கிறார்?" என்று கேட்டார்கள். "நான் (நினைவில் வைத்திருக்கிறேன்)"என்றேன்.
அதற்கு உமர் (ரலி) அவர்கள் "நீர் துணிவு மிக்க மனிதர்தான்" என்று கூறிவிட்டு, "எப்படிச் சொன்னார்கள்?" என்று கேட்டார்கள். நான், "ஒரு மனிதன் தன் குடும்பத்தார் விஷயத்திலும் (அதாவது அவர்கள்மீது அளவு கடந்த பாசம் வைத்திருப்பதன் மூலமும்), தனது செல்வம் விஷயத்திலும் (அதாவது அது இறைவனைப் பணிந்து வாழும் வாழ்க்கையிலிருந்து திசை திருப்புவதன் மூலமும்), தன் விஷயத்திலும், தன் குழந்தை குட்டிகள் விஷயத்திலும், தன் அண்டை வீட்டார் விஷயத்திலும் (நிறைவேற்ற வேண்டிய உரிமைகளில் குறைவைப்பதன் மூலமும்) சோதனையில் (ஃபித்னா) ஆழ்த்தப்படும்போது தொழுகை, தானதர்மம், நன்மை புரியும்படி ஏவுதல், தீமையிலிருந்து தடுத்தல் ஆகியவை அதற்கான பரிகாரமாக அமையும்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதைக் கேட்டேன் என்றேன்.
உமர் (ரலி) அவர்கள், "நான் (சோதனை எனும் பொருள் கொண்ட ஃபித்னாவான) இதைப் பற்றிக் கேட்கவில்லை. கடல் அலையைப் போன்று அடுக்கடுக்காக ஏற்படக்கூடிய (அல்லாஹ்வின் தூதரால் முன்னறிவிப்புச் செய்யப்பட்ட "குழப்பம்"எனும் பொருள் கொண்ட ஃபித்னா)வைப் பற்றியே கேட்கிறேன்" என்று சொன்னார்கள்.
நான், "இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! உங்களுக்கும் அதற்குமிடையே என்ன தொடர்பு? (அதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை.) உங்களுக்கும் அதற்குமிடையே மூடப்பட்ட கதவொன்று உள்ளது (உங்கள் ஆட்சியில் அவற்றில் ஏதும் தலைதூக்கப் போவதில்லை)" என்று கூறினேன்.
உமர் (ரலி) அவர்கள், "அந்தக் கதவு உடைக்கப்படுமா? அல்லது திறக்கப்படுமா?" என்று கேட்டார்கள். நான், "இல்லை;அது உடைக்கப்படும்" என்று பதிலளித்தேன். அதற்கு உமர் (ரலி) அவர்கள், "(அப்படியானால்) அது ஒருபோதும் மூடப்படாமலிருக்க ஏற்றதே ஆகும்" என்று சொன்னார்கள்.
(இதன் அறிவிப்பாளரான) ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
நாங்கள் ஹுதைஃபா (ரலி) அவர்களிடம், "உமர் (ரலி) அவர்கள் அந்தக் கதவு (என்பது) யாரைக் குறிக்கும் என அறிந்திருந்தார்களா?" என்று கேட்டோம்.
ஹுதைஃபா (ரலி) அவர்கள், "ஆம்; பகலுக்குமுன் இரவு உண்டு என்பதை அறிவதைப் போன்று உமர் (ரலி) அவர்கள் அதை அறிந்திருந்தார்கள். ஏனெனில், பொய்கள் கலவாத செய்தியையே நான் அவருக்கு அறிவித்தேன்" என்று பதிலளித்தார்கள்.
அந்தக் கதவு என்பது யாரைக் குறிக்கிறது என ஹுதைஃபா (ரலி) அவர்களிடம் கேட்க நாங்கள் அஞ்சினோம். எனவே,அவர்களிடம் மஸ்ரூக் பின் அல்அஜ்தஉ (ரஹ்) அவர்களைக் கேட்கச் சொன்னோம். அவர் (அந்தக் கதவு என்பது யாரைக் குறிக்கிறது என்று) கேட்டதற்கு ஹுதைஃபா (ரலி) அவர்கள், "உமர் (ரலி) அவர்கள்தான் அந்தக் கதவு" என்று பதிலளித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 52
5546. மேற்கண்ட ஹதீஸ் ஹுதைஃபா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஐந்து அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஹுதைஃபா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "உமர் (ரலி) அவர்கள், "குழப்பங்கள்" (ஃபித்னா) பற்றி எமக்கு அறிவிப்பவர் யார்?" என்று கேட்டார்கள் என ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 52
5547. ஜுன்துப் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(கூஃபாவாசிகள் உஸ்மான் (ரலி) அவர்கள் நியமனம் செய்த ஆளுநரைத் திருப்பியனுப்பிய) "அல்ஜரஆ" தினத்தன்று நான் (கூஃபாவில் ஓரிடத்திற்கு) வந்தேன். அப்போது, அங்கு ஒரு மனிதர் அமர்ந்திருந்தார்.
நான், "இன்றைய தினம் இங்கு இரத்த ஆறு ஓடப்போகிறது" என்று சொன்னேன். அந்த மனிதர், "அல்லாஹ்வின் மீதாணையாக! இல்லை; (இரத்த ஆறு ஓடாது)" என்று சொன்னார். நான், "ஆம்; அல்லாஹ்வின் மீதாணையாக! (இரத்த ஆறு ஓடும்)" என்றேன். அந்த மனிதர், "அல்லாஹ்வின் மீதாணையாக! இல்லை (ஓடாது)" என்றார். நான், "ஆம்;அல்லாஹ்வின் மீதாணையாக (இரத்த ஆறு ஓடும்)" என்றேன். அவர், "அல்லாஹ்வின் மீதாணையாக! இல்லை (இரத்த ஆறு ஓடாது). இவ்வாறே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் கூறினார்கள்" என்றார்.
நான், "இன்று முதல் நீர் எனக்கு ஒரு தீயநண்பர் ஆவீர். நான் உமக்கு மாறாகப் பேசிக்கொண்டிருப்பதைக் கேட்டுக்கொண்டிருக்கிறீர். நீர் இது குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றிருந்தும் (ஆரம்பத்திலேயே) என்னை நீர் தடுக்கவில்லையே?" என்று சொன்னேன். பிறகு "ஏனிந்தக் கோபம்?" என்று (எனக்கு நானே) கூறிக்கொண்டு, அவரை நோக்கிச் சென்று அவரைப் பற்றி விசாரித்தேன். அந்த மனிதர் ஹுதைஃபா (ரலி) அவர்களாவார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 52
பாடம் : 8 யூப்ரடீஸ் நதி வற்றி, தங்க மலை ஒன்றை வெளிப்படுத்தாத வரை யுக முடிவு நாள் வராது.
5548. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(மேற்காசியாவில் பாயும்) யூப்ரடீஸ் நதியானது வற்றி, தங்க மலை ஒன்றை வெளிப்படுத்தாத வரை யுக முடிவு நாள் வராது. அதற்காக (உரிமை கொண்டாடி) மக்கள் சண்டையிட்டுக்கொள்வர். அப்போது ஒவ்வொரு நூறு பேரிலிருந்தும் தொண்ணூற்றொன்பது பேர் கொல்லப்படுவர். அவர்களில் ஒவ்வொருவரும் "உயிர் பிழைப்பவர் நானாக இருக்க வேண்டுமே!" என்று கூறுவர்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் தக்வான் (ரஹ்) அவர்கள், "அதை நீ கண்டால், அதை நெருங்க வேண்டாம்" என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாகக் கூடுதலாக அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 52
5549. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யூப்ரடீஸ் நதியானது வற்றி, தங்கப் புதையல் ஒன்றை வெளிப்படுத்தப்போகிறது. அப்போது அங்கிருப்பவர்கள் அதிலிருந்து எதையும் எடுத்துவிட வேண்டாம்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 52
5550. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யூப்ரடீஸ் நதியானது வற்றி, தங்கமலை ஒன்றை வெளிப்படுத்தப்போகிறது. அப்போது அங்கிருப்பவர்கள் அதிலிருந்து எதையும் எடுத்துவிட வேண்டாம்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 52
5551. அப்துல்லாஹ் பின் அல்ஹாரிஸ் பின் நவ்ஃபல் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) நான் உபை பின் கஅப் (ரலி) அவர்களுடன் நின்றுகொண்டிருந்தேன். அப்போது அவர்கள், "உலகத்தைத் தேடுவதில் மக்கள் தம் கழுத்துகளை நீட்டிக் கொண்டேயிருக்கிறார்கள் (அல்லவா?)" என்று கூறினார்கள். நான் "ஆம்" என்றேன். அதற்கு உபை பின் கஅப் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறியதை நான் கேட்டுள்ளேன்:
யூப்ரடீஸ் நதியானது வற்றி, தங்கமலை ஒன்றை வெளிப்படுத்தப்போகிறது. அதைப் பற்றி மக்கள் கேள்விப்படும்போது,அதை நோக்கிச் செல்வார்கள். அப்போது அந்த மலை அருகில் இருப்பவர், "அதிலிருந்து சிறிதளவை எடுத்துக்கொள்ளட்டும் என மக்களை நாம் விட்டு விட்டால், முழுவதுமாகக் கொண்டு போய்விடுவார்கள்" என்று கூறுவார். எனவே, அதற்காகச் சண்டையிட்டுக்கொள்வார்கள். அப்போது ஒவ்வொரு நூறு பேரிலிருந்தும் தொண்ணூற்றொன்பது பேர் கொல்லப்படுவார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் அபூகாமில் ஃபுளைல் பின் ஹுசைன் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "நானும் உபை பின் கஅப் (ரலி) அவர்களும் ஹஸ்ஸான் கோட்டையின் நிழலில் நின்று கொண்டிருந்தோம்" என (அப்துல்லாஹ் பின் அல்ஹாரிஸ் பின் நவ்ஃபல் (ரஹ்) அவர்கள் கூறியதாக) ஹதீஸ் ஆரம்பமாகிறது.
அத்தியாயம் : 52
5552. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இராக், தனது (நாணயமான) திர்ஹமையும் (அளவையான) கஃபீஸையும் (தர) மறுக்கும். ஷாம், (சிரியா) தனது (அளவையான) "முத்யு"வையும் தீனாரையும் (தர) மறுக்கும். மிஸ்ர் (எகிப்து), தனது (அளவையான) "இர்தப்பை"யும் தீனாரையும் (தர) மறுக்கும். ஆரம்ப நிலைக்கே நீங்கள் திரும்பிச் செல்வீர்கள். ஆரம்ப நிலைக்கே நீங்கள் திரும்பிச் செல்வீர்கள். ஆரம்ப நிலைக்கே நீங்கள் திரும்பிச் செல்வீர்கள்.
இதை அறிவித்த அபூஹுரைரா (ரலி) அவர்கள், "இதற்கு அபூஹுரைராவின் சதையும் இரத்தமும் சாட்சியமளிக்கின்றன" என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 52
பாடம் : 9 கான்ஸ்டாண்டிநோபிள் வெற்றி கொள்ளப்படுவதும், (மகா பொய்யன்) தஜ்ஜால் புறப்படுவதும், மர்யமின் மைந்தர் ஈசா (அலை) அவர்கள் இறங்குவதும்.
5553. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ரோம பைஸாந்தியர், அஃமாக் மற்றும் தாபிக் ஆகிய இடங்களில் நிலைகொள்ளாத வரை யுக முடிவு நாள் ஏற்படாது. அவர்களை நோக்கி மதீனாவிலிருந்து ஒரு படை புறப்படும். அன்றைய நாளில் பூமியில் வசிப்போரில் அவர்களே சிறந்தவர்களாயிருப்பர். அவர்கள் அணி வகுத்து நிற்கும்போது ரோமர்கள், எங்களுக்கும் எங்களில் சிறைக்கைதிகளாகப் பிடிக்கப் பட்டோருக்குமிடையே நாங்கள் போர் செய்ய எங்களை விட்டு விடுங்கள்" என்று கூறுவார்கள்.
அப்போது முஸ்லிம்கள், "இல்லை; அல்லாஹ்வின் மீதாணையாக! எங்கள் சகோதரர்கள் மீது போர் தொடுக்க உங்களை நாங்கள் அனுமதிக்கமாட்டோம்" என்று சொல்வார்கள்.
ஆகவே, ரோமர்கள் முஸ்லிம்கள் மீது போர் தொடுப்பார்கள். அப்போது முஸ்லிம்களில் மூன்றிலொரு பகுதியினர் தோற்று வெருண்டோடுவார்கள். அவர்களை அல்லாஹ் ஒருபோதும் மன்னிக்கவே மாட்டான். அவர்களில் மூன்றிலொரு பகுதியினர் கொல்லப்படுவார்கள். அவர்கள் அல்லாஹ்விடம் மிகச் சிறந்த உயிர்த்தியாகிகளாவர்; மூன்றிலொரு பகுதியினர் (ரோமர்களை) வெற்றிகொள்வார்கள். அவர்கள் (அதன் பின்னர்) ஒருபோதும் சோதனைக்குள்ளாக்கப் படமாட்டார்கள். இவ்வாறு அவர்கள் கான்ஸ்டாண்டிநோபிளை வெற்றி கொள்வார்கள்.
அவர்கள் தம் வாட்களை ஆலிவ் மரங்களில் தொங்கவிட்டுப் போர்ச்செல்வங்களை பங்கிட்டுக்கொண்டிருக்கும்போது,அவர்களிடையே ஷைத்தான், "நீங்கள் புறப்பட்டு வந்த பின் உங்கள் குடும்பத்தாரிடையே மசீஹ் (தஜ்ஜால்) வந்துவிட்டான்" என்று குரலெழுப்புவான்.
உடனே அவர்கள் தம் குடும்பத்தாரை நோக்கிப் புறப்பட்டுச் செல்வார்கள். ஆனால், அது பொய்யான செய்தியாயிருக்கும். அவர்கள் ஷாமுக்கு (சிரியா) வரும்போது "மசீஹ்" (தஜ்ஜால்) புறப்படுவான். இந்நிலையில் அவர்கள் போருக்காக ஆயத்தமாகி அணிகளைச் சீர் செய்து கொண்டிருக்கும்போது, தொழுகைக்காக இகாமத் சொல்லப்படும். அப்போது மர்யமின் புதல்வர் ஈசா (அலை) அவர்கள் (வானிலிருந்து) இறங்கி வந்து அவர்களுக்குத் தலைமையேற்பார்கள்.
அவரை அல்லாஹ்வின் விரோதி (தஜ்ஜால்) காணும்போது, தண்ணீரில் உப்பு கரைவதைப் போன்று கரைந்துபோவான். அவனை ஒன்றும் செய்யாமல் விட்டுவிட்டால்கூட அவன் தானாகக் கரைந்து அழிந்துவிடுவான். ஆயினும், ஈசாவின் கரத்தால் அவனை அல்லாஹ் அழிப்பான். அப்போது ஈசா (அலை) அவர்கள் தமது ஈட்டி முனையில் படிந்துள்ள அவனது இரத்தத்தை மக்களுக்குக் காட்டுவார்கள்.இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 52
பாடம் : 10 ரோமின் மக்கள் தொகை அதிகமாக இருக்கும்போதே யுக முடிவு ஏற்படும்.
5554. உலைய்யு பின் ரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
முஸ்தவ்ரித் பின் ஷத்தாத் அல்குறஷீ (ரலி) அவர்கள், அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ரோமின் மக்கள் தொகை அதிகமாக இருக்கும்போதே யுக முடிவு ஏற்படும்" என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்" என்றார்கள். அப்போது அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள், "நீர் சொல்வதை யோசித்துக் கொள்ளும்"என்று கூறினார்கள். அதற்கு முஸ்தவ்ரித் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றதையே நான் சொல்கிறேன்" என்றார்கள்.
அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள், "நீர் இவ்வாறு கூறுவீராயின் அவர்களிடையே (ரோமர்களிடையே) நான்கு குணங்கள் இருக்கும் (என்பதையும் அறிந்துகொள்க என்றார்கள். (அவையாவன:)
1. அவர்கள் சோதனையின்போது மக்களிலேயே மிகவும் நிதானத்தைக் கடைப்பிடிப்பவர்கள் ஆவர்.
2. சோதனைக்குப் பின்னர் மிக விரைவாக விழித்துக்கொள்பவர்கள்.
3. (களத்திலிருந்து) வெருண்டோடிய பின்னர் மிக விரைவாகத் திரும்பி வருபவர்கள்.
4. ஏழைகள், அநாதைகள், நலிந்தோர் ஆகியோருக்கு நல்லுதவிகள் புரிபவர்கள். ஜந்தாவதாக அவர்களிடம் அழகிய குணம் ஒன்று உண்டு. ஆட்சியாளர்களின் அநீதியிலிருந்து (மக்களைக்) காப்பவர்கள்.
அத்தியாயம் : 52
5555. அப்துல் கரீம் பின் அல்ஹாரிஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
முஸ்தவ்ரித் அல்குறஷீ (ரலி) அவர்கள், "ரோமின் மக்கள் தொகை அதிகமாக இருக்கும்போதே யுகமுடிவு ஏற்படும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டேன்" என்று கூறினார்கள். இச்செய்தி அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்களுக்கு எட்டியபோது, "நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக உங்களிடமிருந்து அறிவிக்கப்படும் இந்த ஹதீஸ்கள் என்ன?" என்று கேட்டார்கள்.
அதற்கு முஸ்தவ்ரித் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றதையே கூறினேன்" என்றார்கள். அதற்கு அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள், "நீர் இவ்வாறு சொல்லியிருந்தால், "அவர்கள் (ரோமர்கள்) சோதனையின்போது மிகவும் நிதானத்தைக் கடைப்பிடிப்பவர்கள்; சோதனையின்போது மக்களில் நன்கு நிவாரணம் மேற்கொள்பவர்கள்; தம்மிடையேயுள்ள ஏழைகளுக்கும் நலிந்தவர்களுக்கும் மக்களிலேயே நல்லுதவி புரிபவர்கள்" (என்பதையும் சேர்த்து அறிந்துகொள்க" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 52
பாடம் : 11 தஜ்ஜால் புறப்படும் வேளையில் ரோமர்கள் ஏராளமானோரைக் கொலை செய்து முன்னேறுவார்கள்.
5556. யுசைர் பின் ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை இராக்கிலுள்ள) கூஃபாவில் அனல்காற்று வீசியது. அப்போது ஒரு மனிதர், "அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் அவர்களே! யுகமுடிவு வந்துவிட்டது" என்று திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டே வந்தார். உடனே சாய்ந்துகொண்டிருந்த அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் நேராக எழுந்து அமர்ந்து, "சொத்துகள் பங்கு போடப்படாத நிலையும் போர்ச்செல்வத்தின் மூலம் மகிழ்ச்சியடையாத நிலையும் ஏற்படாத வரையில் யுகமுடிவு ஏற்படாது" என்று கூறிவிட்டு, தமது கரத்தால் (ஷாம் நாட்டின் திசையை நோக்கி) சைகை செய்து, "இஸ்லாமியரைத் தாக்குவதற்காக எதிரிகளின் படையொன்று ஒன்றுதிரளும். அவர்களை எதிர்கொள்வதற்காக இஸ்லாமியரும் ஒன்றுதிரளுவர்" என்று கூறினார்கள்.
உடனே நான், "ரோம (இத்தாலியக் கிறித்தவ)ர்களையா (எதிரிகள் என்று) கூறுகிறீர்கள்?" என்று கேட்டேன். அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் "ஆம்" என்று கூறிவிட்டுப் பின்வருமாறு கூறினார்கள்:
அந்தப் போரின்போது கடுமையான பலப்பிரயோகம் இருக்கும். அப்போது முஸ்லிம்கள் முதலில் ஒரு படையை அனுப்புவார்கள். ஒன்று வீர மரணம், அல்லது வெற்றியை இலக்காகக் கொண்டு அவர்கள் புறப்பட்டுச் செல்வார்கள். அவர்கள் (சென்று) போரிட்டுக்கொண்டிருக்கும்போது இரவு நேரம் குறுக்கிட்டுவிடும். ஆகவே, அவர்களில் எவரும் வெற்றி பெறாமல் இரு அணியினரும் (தாக்குதலை நிறுத்திவிட்டுத் தமது முகாமிற்குத்) திரும்பிவிடுவர். ஆனால்,முதலில் சென்ற படையினர் (போரில்) அழிந்துவிடுவர்.
பிறகு (மறுநாள்) முஸ்லிம்கள், ஒன்று வீர மரணம் அல்லது வெற்றி என்ற இலக்கில் மற்றொரு படையை முதலில் அனுப்புவார்கள். அவர்கள் (சென்று) போரிட்டுக்கொண்டிருப்பார்கள். இரவு குறுக்கிடும்போது அவர்களில் எவருமே வெற்றி பெறாமல் திரும்பி விடுவர். ஆனாலும், முதலில் சென்ற அணியினர் அழிந்துவிடுவார்கள்.
பிறகு (மூன்றாம் நாளு)ம், ஒன்று வீர மரணம் அல்லது வெற்றியை இலக்காக்கி மற்றொரு படையை முஸ்லிம்கள் அனுப்புவார்கள். அவர்கள் (சென்று) மாலை நேரமாகும் வரை போரிட்டு எவருக்கும் வெற்றிகிட்டாமல் திரும்பிவிடுவர். அப்போதும் முதலில் சென்ற அணியினர் அழிந்துவிடுவார்கள்.
நான்காம் நாளாகும்போது முஸ்லிம் (படை)களில் எஞ்சியிருப்பவர்கள் எதிரிகளை நோக்கி முன்னேறிச் செல்வார்கள். அப்போது அவர்களுக்கு அல்லாஹ் தோல்வியையே தருவான். (இருந்தாலும்) அவர்கள் ஏராளமான பேரைக் கொன்றுவிட்டிருப்பார்கள். அதைப் போன்ற ஓர் உயிரிழப்பை உலகம் கண்டிராது. எந்த அளவுக்கென்றால், அவர்களைச் சுற்றி பறவைகள் பறக்கும். அவற்றில் ஒன்றுகூட அவர்களைக் கடந்து செல்ல முடியாமல் செத்து விழும் (அந்த அளவுக்குப் பெரிய பரப்பளவில் அவர்கள் மடிந்து கிடப்பார்கள்). நூறு பேர் கொண்ட ஒரு குடும்பத்தில் ஒரேயொருவர் மட்டுமே எஞ்சுவார்.
அப்போது எந்தப் போர்ச் செல்வத்தைக் கொண்டு மகிழ்ச்சி ஏற்படும்? அல்லது எந்தச் சொத்து பங்கிடப்படும்? இவ்வாறே அவர்கள் இருந்துகொண்டிருக்கும்போது இதைவிட மிகப்பெரிய பேராபத்து ஒன்றைப் பற்றி அவர்கள் கேள்விப்படுவார்கள். அப்போது ஒருவர் (வந்து), "உங்கள் குடும்பத்தாரிடையே தஜ்ஜால் வந்துவிட்டான்" என்று கூவியறிவிப்பார். உடனே அவர்கள் தம் கைகளிலுள்ளவற்றை அப்படியே போட்டுவிட்டு (தம் குடும்பத்தாரை) முன்னோக்கிவருவார்கள். முன்னதாக (தஜ்ஜாலைப் பற்றி அறிவதற்காக) பத்துக் குதிரை வீரர்களை உளவு பார்ப்பதற்காக அனுப்பி வைப்பார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் அவர்களுடைய பெயர்களையும் அவர்களுடைய தந்தையரின் பெயர்களையும் அவர்களுடைய குதிரைகளின் நிறங்களையும் நன்கறிவேன். அன்றைய நாளில் பூமியின் மீதுள்ள குதிரை வீரர்களில் அவர்களே சிறந்தவர்கள்; அல்லது அன்றைய நாளில் பூமியின் மீதுள்ள சிறந்த குதிரை வீரர்களில் அவர்களும் அடங்குவர்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் இப்னு அபீஷைபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், (யுசைர் பின் ஜாபிர் என்பதற்குப் பகரமாக) உசைர் பின் ஜாபிர் என்று இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் யுசைர் பின் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "நான் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் இருந்தேன். அப்போது அனல் காற்று வீசியது" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்றவை மேற்கண்ட ஹதீஸில் உள்ளவாறே இடம்பெற்றுள்ளன.
ஆனாலும், மேற்கண்ட அறிவிப்பே முழுமையானதும் விரிவானதும் ஆகும்.
- மேற்கண்ட ஹதீஸ் உசைர் பின் ஜாபிர் (ரலி) அவர்கள் வாயிலாக மற்றோர் அறிவிப்பாளர் தொடரிலும் வந்துள்ளது.
அதில், "நான் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களது இல்லத்தில் இருந்தேன். அப்போது வீடு நிறைய மக்கள் இருந்தனர். அப்போது கூஃபாவில் அனல் காற்று வீசியது" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. தொடர்ந்து மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 52
பாடம் : 12 தஜ்ஜால் வருவதற்குமுன் முஸ்லிம்களுக்குக் கிட்டும் வெற்றிகள்.
5557. நாஃபிஉ பின் உத்பா பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் ஒரு போரில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது கம்பளியாடை அணிந்த ஒரு கூட்டத்தார் மேற்கிலிருந்து வந்து ஒரு குன்றின் அருகில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைச் சந்தித்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அமர்ந்துகொண்டிருந்தார்கள். அக்கூட்டத்தார் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அருகில்) நின்றுகொண்டிருந்தார்கள்.
அப்போது என் மனம், "நீ சென்று அவர்களுக்கும் அல்லாஹ்வின் தூதருக்குமிடையே நின்று கொள். அல்லாஹ்வின் தூதரை அவர்கள் திடீரெனத் தாக்கிவிட வேண்டாம்" என்று சொன்னது. பிறகு நான், "அவர்களுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஏதேனும் இரகசியம் பேசிக்கொண்டிருக்கலாம்" என்று நினைத்தேன். பிறகு அவர்களிடம் வந்து அவர்களுக்கும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கும் நடுவில் நின்றுகொண்டேன். அப்போது என் கைவிரல்களில் எண்ணியபடி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நான்கு விஷயங்களை மனனமிட்டேன்.
1. நீங்கள் அரபு தீபகற்பம் முழுவதையும் போரிட்டு வெற்றி காணும் நிலையை அல்லாஹ் ஏற்படுத்துவான்.
2. பிறகு பாரசீகர்களை வெற்றி கொள்ளும் நிலையை அல்லாஹ் ஏற்படுத்துவான்.
3. பிறகு ரோம (பைஸாந்திய)ர்களுடன் போரிட்டு வெற்றி கொள்ளும் நிலையை அல்லாஹ் ஏற்படுத்துவான்.
4. பிறகு நீங்கள் (மகா குழப்பவாதியான) தஜ்ஜாலுடன் போரிட்டு அவனையும் வெற்றி கொள்ளும் நிலையை அல்லாஹ் ஏற்படுத்துவான்.
இதன் அறிவிப்பாளரான ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
(இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த) நாஃபிஉ பின் உத்பா (ரலி) அவர்கள், "ஜாபிரே! ரோமர்கள் வெற்றி கொள்ளப்படாத வரை தஜ்ஜால் புறப்பட்டு வருவான் என நாங்கள் கருதவில்லை" என்றார்கள்.
அத்தியாயம் : 52
பாடம் : 13 யுக முடிவு நாளுக்கு முந்தைய சில அடையாளங்கள்.
5558. அபூசரீஹா ஹுதைஃபா பின் அசீத் அல்ஃகிஃபாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒருமுறை) நாங்கள் (நபி (ஸல்) அவர்களது அறைக்குக் கீழே) பேசிக்கொண்டிருந்தோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் எங்களை எட்டிப்பார்த்து, "எதைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறீர்கள்?" என்று கேட்டார்கள். மக்கள், "யுகமுடிவு நாளைப் பற்றி (பேசிக் கொண்டிருக்கிறோம்)" என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், "நீங்கள் (பெரிய) பத்து அடையாளங்களைக் காணாத வரை யுகமுடிவு நாள் ஏற்படவே செய்யாது" என்று கூறிவிட்டு, அந்த அடையாளங்களைப் பற்றிக் கூறினார்கள்:
1. புகை, 2. தஜ்ஜால், 3. (பேசும்) பிராணி, 4. மேற்கிலிருந்து சூரியன் உதிப்பது, 5. மர்யமின் புதல்வர் ஈசா (அலை) அவர்கள் இறங்குதல், 6. யஃஜூஜ், மஃஜூஜ், 7.8.9. மூன்று நில நடுக்கங்கள். ஒன்று கிழக்கிலும், மற்றொன்று மேற்கிலும், இன்னொன்று அரபு தீபகற்பத்திலும், 10. இறுதியாக யமன் நாட்டிலிருந்து ஒரு நெருப்பு கிளம்பி மக்களை விரட்டிக்கொண்டு வந்து ஓரிடத்தில் ஒன்றுகூட்டும்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 52
5559. அபூசரீஹா ஹுதைஃபா பின் அசீத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (மாடி) அறையொன்றில் இருந்தார்கள். நாங்கள் கீழே இருந்தோம். அப்போது அவர்கள் எங்களை எட்டிப்பார்த்து, "என்ன பேசிக்கொண்டிருக்கிறீர்கள்?" என்று கேட்டார்கள். நாங்கள், "யுக முடிவைப் பற்றி (பேசிக்கொண்டிருக்கிறோம்)" என்று சொன்னோம்.
அப்போது நபி (ஸல்) அவர்கள், "பத்து அடையாளங்கள் நிகழாதவரை யுகமுடிவு நாள் வராது. 1. கிழக்கில் ஒரு நிலநடுக்கம் 2. மேற்கில் ஒரு நிலநடுக்கம் 3. அரபு தீபகற்பத்தில் ஒரு நிலநடுக்கம் 4. புகை 5. தஜ்ஜால் 6.பூமிக்குள்ளிருந்து வெளிப்படும் (அதிசயப்) பிராணி 7. யஃஜூஜ், மஃஜூஜ் 8. சூரியன் மேற்கிலிருந்து உதிப்பது 9. (யமன் நாட்டிலுள்ள)"அதன்" பகுதியின் கடைக்கோடியிலிருந்து ஒரு நெருப்புக் கிளம்பி மக்களை வாகனங்களில் ஏறிப் பயணம் புறப்படச் செய்வது.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஷுஅபா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
ஹுதைஃபா பின் அசீத் (ரலி) அவர்களிடமிருந்து அபுத்துஃபைல் (ரஹ்) அவர்களும் அபுத்துஃபைலிடமிருந்து அப்துல் அஸீஸ் பின் ருஃபைஉ (ரஹ்) அவர்களும் அறிவிக்கும் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் எனக்குக் கிடைத்தது. அதில் மேற்கண்ட செய்தி அபூசரீஹா ஹுதைஃபா (ரலி) அவர்களின் கூற்றாகவே வந்துள்ளது. நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக இல்லை.
ஹுதைஃபா (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும் இந்த ஹதீஸை மேற்கண்ட இரு அறிவிப்பாளர்களில் ஒருவர்,பத்தாவது "மர்யமின் புதல்வர் ஈசா (அலை) அவர்கள் (வானிலிருந்து) இறங்குதல்" என்றும், மற்றொருவர் "ஒரு காற்று கிளம்பி மக்களைக் கடலில் தூக்கி வீசுதல்" என்றும் கூறினர்.
அத்தியாயம் : 52
5560. மேற்கண்ட ஹதீஸ் அபூசரீஹா ஹுதைஃபா பின் அசீத் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மாடி)அறை ஒன்றில் இருந்தார்கள். அப்போது அதற்குக் கீழே நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்றவை மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே தொடர்கின்றன.
அதில் அறிவிப்பாளர் ஷுஅபா (ரஹ்) அவர்கள், "ஃபுராத் அல்கஸ்ஸார் (ரஹ்) அவர்கள் "அந்த நெருப்பு அவர்கள் வாகனங்களிலிருந்து இறங்கித் தங்கும்போதும் அவர்கள் மதிய ஓய்வு மேற்கொள்ளும்போதும் அவர்களுடனேயே இருக்கும்" என்று கூறியதாகவே நான் கருதுகிறேன்" எனத் தெரிவித்ததாக இடம்பெற்றுள்ளது.
மேலும் ஷுஅபா (ரஹ்) அவர்கள், "இந்த ஹதீஸை அபூசரீஹா (ரலி) அவர்களிடமிருந்து அபுத்துபைல் (ரஹ்) அவர்களும் அவர்களிடமிருந்து மற்றொரு மனிதரும் எனக்கு அறிவித்தனர்" என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறியதாகக் குறிப்பு இல்லை.
மேலும் அபூசரீஹாவிடமிருந்து அறிவிக்கும் இவ்விருவரில் ஒருவர், "மர்யமின் புதல்வர் ஈசா (அலை) அவர்கள் (வானிலிருந்து) இறங்குவார்கள்" என்பதையும், மற்றொருவர் "ஒரு காற்று கிளம்பி மக்களைத் தூக்கிக் கடலில் வீசும்" என்பதையும் குறிப்பிட்டனர்" என்று காணப்படுகிறது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூசரீஹா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் ஓர் அறிவிப்பில், "நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது (மாடியிலிருந்த) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களை எட்டிப்பார்த்தார்கள்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது.
மற்றோர் அறிவிப்பில், "பத்தாவது அடையாளம், மர்யமின் புதல்வர் ஈசா (அலை) அவர்கள் (வானிலிருந்து) இறங்குவதாகும்" என்று இடம்பெற்றுள்ளது. அதில் இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்தொடரை அப்துல் அஸீஸ் பின் ருஃபை (ரஹ்) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக முடிக்கவில்லை. அபூசரீஹா (ரலி) அவர்கள் கூறியதாகவே முடிக்கிறார்கள்.
அத்தியாயம் : 52
பாடம் : 14 ஹிஜாஸ் பகுதியிலிருந்து ஒரு நெருப்பு கிளம்பாத வரை யுக முடிவு நாள் வராது.
5561. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஹிஜாஸ் பகுதியிலிருந்து ஒரு நெருப்பு கிளம்பி, (ஷாம் நாட்டிலுள்ள) "புஸ்ரா" (ஹவ்ரான்) எனும் ஊரிலுள்ள ஒட்டகங்களின் பிடரிகளை ஒளிரச் செய்யாத வரை யுகமுடிவு நாள் வராது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 52
பாடம் : 15 யுக முடிவு நாளுக்குமுன் மதீனாவின் குடியிருப்புகளின் நிலை.
5562. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(யுக முடிவு நாளுக்குமுன் மதீனாவிலுள்ள) குடியிருப்பு (பகுதி)கள் "இஹாப்" அல்லது "யஹாப்" எனுமிடத்திற்குச் சென்றுவிடும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஸுஹைர் பின் முஆவியா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
நான் (இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த) சுஹைல் பின் அபீஸாலிஹ் (ரஹ்) அவர்களிடம், "இந்த (இஹாப் எனும்) இடம் மதீனாவிலிருந்து எவ்வளவு தொலைவில் உள்ளது?" என்று கேட்டேன். அவர்கள், "இவ்வளவு இவ்வளவு மைல் தூரத்தில் உள்ளது" என்று பதிலளித்தார்கள்.
அத்தியாயம் : 52
5563. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மழை பொய்த்துவிடுவதற்குப் பெயர் பஞ்சமன்று. மாறாக, பஞ்சம் என்பது, மழை பெய்து கொண்டேயிருந்தும் பூமியில் (புற்பூண்டுகள்) எதுவும் முளைக்காமலிருப்பதாகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 52
பாடம் : 16 ஷைத்தானின் இரு கொம்புகள் உதயமாகும் கிழக்குத் திசையிலிருந்தே குழப்பங்கள் தோன்றும்.
5564. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கிழக்குத் திசையை முன்னோக்கி, "நினைவில் கொள்ளுங்கள்: குழப்பம் இங்கிருந்துதான் தோன்றும். நினைவில் கொள்ளுங்கள்: குழப்பம் இங்கிருந்துதான் தோன்றும்; ஷைத்தானின் கொம்பு உதயமாகும் இடத்திலிருந்து" என்று கூறியதை நான் கேட்டேன்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 52
5565. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஃப்ஸா (ரலி) அவர்களது வீட்டுவாசலில் நின்றுகொண்டு, கிழக்குத் திசையை நோக்கித் தமது கையால் சைகை செய்து, "குழப்பம், இங்கிருந்துதான் தோன்றும்; ஷைத்தானின் கொம்பு உதயமாகும் இடத்திலிருந்து" என்று இரண்டு அல்லது மூன்று முறை கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் உபைதுல்லாஹ் பின் சயீத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களது வீட்டுவாசலில் நின்று கொண்டிருந்தார்கள்" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 52
5566. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கிழக்குத்திசையை முன்னோக்கி, "நினைவில் கொள்ளுங்கள்: குழப்பம் இங்கிருந்துதான் தோன்றும். நினைவில் கொள்ளுங்கள்: குழப்பம் இங்கிருந்துதான் தோன்றும்; நினைவில் கொள்ளுங்கள்: குழப்பம் இங்கிருந்துதான் தோன்றும்; ஷைத்தானின் கொம்பு உதயமாகும் இடத்திலிருந்து" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 52
5567. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களது வீட்டிலிருந்து புறப்பட்டு வந்து, "இறைமறுப்பின் தலை (குழப்பம்), இங்கிருந்து -அதாவது கிழக்கிலிருந்து-தான் தோன்றும்; ஷைத்தானின் கொம்பு உதயமாகும் இடத்திலிருந்து" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 52
5568. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது கரத்தால் கிழக்குத்திசையை நோக்கி சைகை செய்து, "நினைவில் கொள்ளுங்கள்: குழப்பம் இங்கிருந்துதான் தோன்றும். நினைவில் கொள்ளுங்கள் குழப்பம் இங்கிருந்துதான் தோன்றும்"என்று மூன்று முறை கூறிவிட்டு, "ஷைத்தானின் கொம்புகள் உதயமாகும் இடத்திலிருந்து" என்று கூறியதைக் கேட்டேன்.
அத்தியாயம் : 52
5569. ஃபுளைல் பின் ஃகஸ்வான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
சாலிம் பின் அப்தில்லாஹ் பின் உமர் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: இராக்வாசிகளே! நீங்கள் பெரும்பாவத்தைச் செய்துகொண்டு, சிறுபாவத்தைப் பற்றிக் கேட்டுக்கொண்டிருப்பது வியப்பையே அளிக்கிறது. என் தந்தை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் பின்வருமாறு கூறியதை நான் கேட்டுள்ளேன்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "கிழக்குத்திசையை நோக்கித் தமது கரத்தால் சைகை செய்தவாறு, குழப்பம் இங்கிருந்துதான் தோன்றும்; ஷைத்தானின் கொம்புகள் உதயமாகும் இடத்திலிருந்து" என்று கூறியதை நான் கேட்டேன்.
(இராக்வாசிகளே!) உங்களில் சிலர் சிலரது கழுத்தை வெட்டிக்கொண்டிருக்கிறீர்கள். (அதைப் பற்றிக்கேட்டால் இறைத்தூதர் மூசா, ஃபிர்அவ்னின் குடும்பத்தாரில் ஒருவனைக் கொன்றதைச் சான்றாகக் கூறுவீர்கள்.) மூசா (அலை) அவர்கள் ஃபிர்அவ்னின் குடும்பத்தாரில் ஒருவனைத் தவறுதலாகவே கொன்றார்கள்.
எனவேதான், வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் மூசா (அலை) அவர்களிடம், "நீர் ஓர் உயிரைக் கொன்றிருந்தீர். உம்மைக் கவலையிலிருந்து நாம் காப்பாற்றினோம். உம்மைப் பல வழிகளில் சோதித்தோம்" (20:40) என்று கூறினான்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 52
பாடம் : 17 "தவ்ஸ்" குலத்தார் "துல்கலஸா" கடவுள் சிலையை வழிபடாதவரை யுக முடிவு நாள் வராது.
5570. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"தவ்ஸ்" குலப்பெண்களின் புட்டங்கள் "துல்கலஸா"வைச் சுற்றி அசையாத வரை யுக முடிவு நாள் வராது.
துல்கலஸா என்பது, "தவ்ஸ்" குலத்தார் அறியாமைக்காலத்தில் (யமனிலுள்ள) "தபாலா" எனுமிடத்தில் வழிபட்டுவந்த கடவுள் சிலையாகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 52
5571. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(அறியாமைக்கால கடவுள் சிலைகளான) "லாத்"தும் "உஸ்ஸா"வும் வழிபாடு செய்யப்படாத வரை இரவும் பகலும் (இல்லாமற்) போகாது" என்று கூறியதைக் கேட்டேன்.
நான், "அல்லாஹ்வின் தூதரே! இணை கற்பிப்போர் வெறுத்தபோதிலும், எல்லா மார்க்கங்களை விட மேலோங்கச் செய்வதற்காக நல்வழியுடனும் உண்மை மார்க்கத்துடனும் அவனே தன் தூதரை அனுப்பினான்" (9:33; 61:9) என அல்லாஹ் அருளியபோது, இந்த மார்க்கம் முழுமையடையும் என்றே நான் எண்ணிக்கொண்டிருந்தேன். (ஆனால்,தாங்கள் வேறு விதமாகச் சொல்கிறீர்களே!)" என்று கூறினேன்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(உண்மைதான்) விரைவில் அல்லாஹ் நாடிய அளவு இது நடக்கும். பிறகு அல்லாஹ் நல்ல காற்று ஒன்றை அனுப்புவான். அது யாரது உள்ளத்தில் கடுகுமணியளவு இறைநம்பிக்கை (ஈமான்) உள்ளதோ அந்த ஒவ்வொருவரையும் கைப்பற்றிக்கொள்ளும். பிறகு எந்த நன்மையும் இல்லாதவர்களே (பூமியில்) எஞ்சியிருப்பர். அவர்கள் தம் மூதாதையரின் மார்க்கத்திற்குத் திரும்பிச் சென்றுவிடுவர்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 52
பாடம் : 18 ஒரு மனிதர் மற்றொரு மனிதரின் மண்ணறையைக் கடந்து செல்லும்போது, "நான் இவரது இடத்தில் (இக்குழிக்குள்) இருக்கக் கூடாதா" என்று ஆசைப்படாத வரை யுக முடிவு நாள் வராது; அவர் அனுபவிக்கும் சோதனையே அதற்குக் காரணமாகும்.
5572. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு மனிதர் மற்றொரு மனிதரின் மண்ணறையை (கப்றை)க் கடந்து செல்லும்போது, "அந்தோ! நான் இவரது இடத்தில் (கப்றுக்குள்) இருக்கக் கூடாதா?" என்று (ஏக்கத்துடன்) கூறாதவரை யுக முடிவு நாள் வராது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 52
5573. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! ஒரு மனிதர் (மற்றொரு மனிதரின்) மண்ணறையை (கப்றை)க் கடந்து செல்லும்போது, அதன்மீது அவர் படுத்துப்புரண்டவாறு "அந்தோ! நான் இந்த மண்ணறையில் இருப்பவரது இடத்தில் இருக்கக்கூடாதா" என்று கூறாத வரை உலகம் அழியாது. இ(வ்வாறு அவர் செய்வ)தற்கு,அவர் (வாழ்க்கையில்) சந்திக்கும் சோதனையே காரணமாக இருக்குமே தவிர, மார்க்கம் காரணமாக இருக்காது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 52
5574. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என் உயிர் எவன் கையிலுள்ளதோ அ(ந்த இறை)வன்மீது சத்தியமாக! மக்களுக்கு ஒரு காலம் நிச்சயமாக வரும். (அப்போது) கொலை செய்தவனுக்குத் தான் எதற்காகக் கொலை செய்தான் என்பது தெரியாது. கொல்லப்பட்டவனுக்குத் தான் எதற்காகக் கொல்லப்பட்டான் என்பது தெரியாது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 52
5575. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "என் உயிர் எவன் கையிலுள்ளதோ அ(ந்த இறை)வன்மீது சத்தியமாக! மக்களுக்கு ஒருநாள் வராதவரை உலகம் அழியாது. அன்று கொலை செய்தவனுக்குத் தான் எதற்காகக் கொன்றோம் என்பது தெரியாது. கொல்லப்பட்டவனுக்குத் தான் எதற்காகக் கொல்லப்பட்டோம் என்பது தெரியாது" என்று கூறினார்கள்.
அப்போது "அது எவ்வாறு நடக்கும்?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "கொலை சர்வ சாதாரணமாகிவிடும். கொன்றவனும் கொல்லப்பட்டவனும் நரகத்திற்குச் செல்வார்கள்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 52
5576. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அபிசீனியாவைச் சேர்ந்த மெலிந்த கால்கள் உடைய ஒரு மனிதன் கஅபாவை (இடித்து)ப் பாழாக்குவான். - இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 52
5577. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அபிசீனியாவைச் சேர்ந்த மெலிந்த கால்கள் உடைய ஒரு மனிதன் கஅபாவை (இடித்து)ப் பாழாக்குவான்.- இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 52
5578. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அபிசீனியாவைச் சேர்ந்த மெலிந்த கால்கள் உடைய ஒரு மனிதன் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்வின் இல்லத்தை (கஅபாவை இடித்து)ப் பாழாக்குவான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 52
5579. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"கஹ்தான்" குலத்திலிருந்து ஒரு மனிதர் தோன்றி, தமது கைத்தடியால் மக்களை வழி நடத்தாத வரை யுக முடிவு நாள் வராது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 52
5580. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"ஜஹ்ஜாஹ்" எனப்படும் ஒரு மனிதர் அரசாளாத வரை இரவு பகல் (மாற்றம் நின்று, உலகம் அழிந்து) போகாது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
முஸ்லிம் (பின் அல்ஹஜ்ஜாஜ் ஆகிய நான்) கூறுகிறேன்: ஷரீக், உபைதுல்லாஹ், உமைர், (இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அப்துல் கபீர் ஆகிய நால்வரும் சகோதர்கள் ஆவர். அப்துல் மஜீத் என்பவரே இந்நால்வரின் தந்தை ஆவார்.
அத்தியாயம் : 52
5581. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தோலால் மூடப்பட்ட கேடயங்களைப் போன்ற முகங்களைக் கொண்ட ஒரு சமுதாயத்தாருடன் நீங்கள் போர் புரியாதவரை யுக முடிவு நாள் வராது. முடியாலான காலணிகளை அணியும் ஒரு கூட்டத்தாருடன் நீங்கள் போர் புரியாதவரை யுக முடிவுநாள் வராது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 52
5582. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
முடியாலான காலணிகளை அணியும் ஒரு சமுதாயத்தார் உங்களுடன் போர் செய்யாதவரை யுக முடிவுநாள் வராது. அவர்களின் முகங்கள் தோலால் மூடப்பட்ட கேடயங்களைப் போன்றிருக்கும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 52
5583. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
முடியாலான காலணிகளை அணியும் ஒரு கூட்டத்தாருடன் நீங்கள் போர் புரியாதவரை யுக முடிவுநாள் வராது. சிறிய கண்களும் சப்பை மூக்குகளும் கொண்ட ஒரு சமுதாயத்தாருடன் நீங்கள் போரிடாத வரை யுக முடிவுநாள் வராது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 52
5584. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
முடியை (உடையாக) அணிந்து, முடியில் (காலணி தயாரித்து) நடக்கின்ற, தோலால் மூடப்பட்ட கேடயங்களைப் போன்ற முகங்களைக் கொண்ட சமுதாயத்தாரான துருக்கியருடன் முஸ்லிம்கள் போரிடாத வரை யுக முடிவுநாள் வராது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 52
5585. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யுக முடிவு நாளுக்கு முன், முடியாலான காலணிகளை அணிகின்ற சிவந்த முகமும் சிறிய கண்களும் கொண்ட ஒரு கூட்டத்தாருடன் நீங்கள் போர் செய்வீர்கள். அவர்களின் முகங்கள் தோலால் மூடப்பட்ட கேடயங்களைப் போன்று (அகன்று) இருக்கும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 52
5586. அபூநள்ரா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களுடன் இருந்தோம். அப்போது அவர்கள், "இராக்வாசிகளிடம் (அவர்களின் அளவையான) கஃபீஸோ (அவர்களின் நாணயமான) திர்ஹமோ கொண்டுவரப்படாத நாள் விரைவில் வரப்போகிறது" என்று கூறினார்கள். நாங்கள், "எங்கிருந்து கொண்டுவரப்படாது?" என்று கேட்டோம்.
"அரபியல்லாத பிறமொழி பேசுபவர்கள் அவற்றைத் தர மறுப்பார்கள்" என்று கூறிவிட்டுப் பிறகு "ஷாம் (சிரியா)வாசிகளிடம் தீனாரோ (அவர்களின் அளவையான) "முத்யோ" கொண்டு வரப்படாத நாள் விரைவில் வரப்போகிறது" என்று கூறினார்கள். நாங்கள், "எங்கிருந்து கொண்டு வரப்படாது?" என்று கேட்டோம். அதற்கு "ரோம(பைஸாந்திய)ர்களிடமிருந்து கொண்டு வரப்படாது" என்று கூறிவிட்டு, சிறிது நேரம் அமைதியாக இருந்தார்கள்; பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "என் இறுதிச் சமுதாயத்தில் ஓர் ஆட்சியாளர் (கலீஃபா) இருப்பார். அவர் எண்ணிப் பார்க்காமல் வாரி வாரி வழங்குவார் என்று கூறினார்கள்" என்றார்கள்.
இதன் அறிவிப்பாளரான ஜுரைரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
நான், அபூநள்ரா மற்றும் அபுல்அலா (ரஹ்) ஆகியோரிடம், "அந்த ஆட்சியாளர் உமர் பின் அப்தில் அஸீஸ் அவர்கள்தான் என நீங்கள் இருவரும் கருதுகிறீர்களா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள் இருவரும் "இல்லை" எனப் பதிலளித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 52
5587. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்கள் கலீஃபாக்களில் ஒருவர் வருவார். அவர் செல்வத்தை வாரி வாரி வழங்குவார். எண்ணிக் கணக்குப் பார்க்கமாட்டார்.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் அலீ பின் ஹுஜ்ர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் ("செல்வத்தை வாரி வழங்குவார்" என்பதைக் குறிக்க "யஹ்ஸூ" என்பதற்குப் பகரமாக) "யஹ்ஸில் மால" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 52
5588. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறுதிக் காலத்தில் ஒரு கலீஃபா வருவார். அவர் செல்வத்தை (மக்களிடையே) பங்கிட்டுக் கொடுப்பார்; எண்ணிக் கணக்குப் பார்க்க மாட்டார்.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களும் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களும் அறிவிக்கின்றனர்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் வழியாக மற்றோர் அறிவிப்பாளர் தொடரிலும் வந்துள்ளது.
அத்தியாயம் : 52
5589. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அம்மார் (ரலி) அவர்கள் அகழ் தோண்டிக்கொண்டும் தமது தலையில் படிந்திருந்த மண்ணைத் துடைத்துக்கொண்டும் இருக்கலானார்கள். இதைக் கண்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அம்மார் (ரலி) அவர்களிடம் "சுமய்யாவின் மகனுக்கு ஏற்படவுள்ள துன்பமே! (புஃஸ இப்னி சுமய்யா) உம்மை ஒரு கலகக்கூட்டத்தார் கொன்று விடுவார்கள்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 52
5590. மேற்கண்ட ஹதீஸ் மேலும் ஆறு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில், காலித் பின் அல்ஹாரிஸ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், ("புஃஸ இப்னி சுமய்யா" என்பதற்குப் பகரமாக) "வய்ஸ இப்னி சுமய்யா (பாவம்! சுமைய்யாவின் மகன்)" அல்லது "யா வய்ஸ இப்னி சுமய்யா" (சுமய்யாவின் மகன் அப்பாவியே!) என்று காணப்படுகிறது.
அத்தியாயம் : 52
5591. உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அம்மார் (ரலி) அவர்களிடம், "உம்மைக் கலகக்கார கூட்டத்தார் கொன்றுவிடுவார்கள்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்து.
- மேற்கண்ட ஹதீஸ் உம்மு சலமா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 52
5592. உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அம்மார் (ரலி) அவர்களைப் பற்றி), "அம்மாரை ஒரு கலகக்கார கூட்டத்தார் கொன்றுவிடுவர்" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 52
5593. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள், "இக்குறைஷிக் குலத்தவர்(களில் சிலர்) என் சமுதாயத்தாரை அழிப்பார்கள்" என்று சொன்னார்கள். மக்கள் "(அப்படி ஒரு நிலைவந்தால்) நாங்கள் என்ன செய்ய வேண்டுமென நீங்கள் கட்டளையிடுகிறீர்கள்?" என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், "அவர்களிடமிருந்து மக்கள் விலகி வாழ்ந்தால் நன்றாயிருக்கும்" என்று பதிலளித்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 52
5594. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(பாரசீக மன்னர்) "கிஸ்ரா" (குஸ்ரூ) இறந்துவிட்டார். அவருக்குப் பிறகு வேறொரு "கிஸ்ரா" வரமாட்டார். (ரோம பைஸாந்திய மன்னர்) கைசர் (சீசர்) இறந்துவிட்டால், அவருக்குப்பின் வேறொரு கைசர் வரமாட்டார். என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! அவர்கள் இருவரின் கருவூலங்களும் நிச்சயமாக இறைவழியில் செலவிடப்படும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 52
5595. ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் எமக்கு அறிவித்த ஹதீஸ்களாகும். அவற்றில் பின்வரும் ஹதீஸும் ஒன்றாகும்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(தற்போதுள்ள) "கிஸ்ரா" அழிந்துவிட்டார். இவருக்குப் பிறகு வேறொரு "கிஸ்ரா" வரமாட்டார். (தற்போதைய) கைஸரும் அழிந்துவிடுவார். அவருக்குப் பின் வேறொரு கைஸர் வரமாட்டார். அவர்கள் இருவரின் கருவூலங்களும் இறைவழியில் பங்கிடப்படும்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 52
5596. மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "(தற்போதுள்ள) கிஸ்ரா அழிந்துவிட்டால் அவருக்குப் பிறகு வேறொரு கிஸ்ரா வரமாட்டார்..." என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 52
5597. ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "முஸ்லிம்களில் அல்லது இறை நம்பிக்கையாளர்களில் ஒரு குழுவினர்,வெள்ளை மாளிகையில் இருக்கும் "கிஸ்ரா" மன்னருடைய குடும்பத்தாரின் கருவூலத்தை வெற்றி கொள்வார்கள்"என்று கூறியதை நான் கேட்டேன்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் குதைபா பின் சயீத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "முஸ்லிம்களில் (ஒரு குழுவினர்)" என்றே ஐயப்பாடின்றி இடம் பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
- அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், "ஒரு பகுதி கரையிலும் மற்றொரு பகுதி கடலிலும் அமைந்துள்ள ஒரு நகரத்தைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?" என்று கேட்டார்கள். மக்கள், "ஆம்; அல்லாஹ்வின் தூதரே!" என்று பதிலளித்தார்கள்.
நபி (ஸல்) அவர்கள், "இஸ்ஹாக் (அலை) அவர்களின் வழித்தோன்றல்களில் எழுபதாயிரம் பேர் அந்நகரத்தின் மீது போர் தொடுக்காத வரை யுக முடிவுநாள் வராது. அவர்கள் வந்து (அந்நகரத்தில்) இறங்கும்போது அவர்கள் எந்த ஆயுதத்தைக் கொண்டும் சண்டையிட மாட்டார்கள்; அம்பெய்யவுமாட்டார்கள். அவர்கள் "லாயிலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர்" (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை; அல்லாஹ் மிகப் பெரியவன்) என்றே கூறுவார்கள். உடனே அந்நகரத்தில் கடலிலுள்ள ஒரு பகுதி வீழ்ந்துவிடும்.
பிறகு அவர்கள் இரண்டாவது முறை "லாயிலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர்" என்று கூறுவார்கள். உடனே அதன் மறுபகுதி வீழ்ந்துவிடும். பிறகு அவர்கள் மூன்றாவது முறை "லாயிலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர்" என்று கூறுவார்கள். உடனே அவர்களுக்கு வழி திறக்கும். அதில் நுழைந்து போர்ச்செல்வங்களைத் திரட்டுவார்கள். அவர்கள் போர்ச் செல்வங்களைப் பங்கிட்டுக்கொண்டிருக்கும்போது ஒருவர் வந்து உரத்த குரலில், "தஜ்ஜால் புறப்பட்டுவிட்டான்" என்று அறிவிப்பார். உடனே அவர்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு (தஜ்ஜாலை நோக்கி) திரும்பிச் செல்வார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 52
5598. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் யூதர்களுடன் போர் புரிந்து அவர்களைக் கொல்வீர்கள். எந்த அளவுக்கென்றால், (கல்லின் பின்னால் ஒரு யூதன் ஒளிந்துகொள்வான்.) அப்போது அந்தக் கல், "முஸ்லிமே! இதோ ஒரு யூதன். நீ வந்து, அவனைக் கொன்றுவிடு" என்று கூறும்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "இதோ ஒரு யூதன் எனக்குப் பின்னால் (ஒளிந்துகொண்டிருக்கிறான்)" என்று அந்தக் கல் கூறும் என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 52
5599. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்களும் யூதர்களும் போரிட்டுக்கொள்வீர்கள். (யூதன் ஒருவன் கல்லுக்குப் பின்னால் ஒளிந்து கொள்வான்.) அப்போது அந்தக் கல், "முஸ்லிமே! இதோ எனக்குப் பின்னால் யூதன் ஒருவன் இருக்கிறான். நீ வந்து அவனைக் கொன்றுவிடு" என்று கூறும்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 52
5600. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யூதர்கள் உங்களுடன் போரிடுவார்கள். அப்போது அவர்கள்மீது உங்களுக்குச் செல்வாக்கு ஏற்படும். எந்த அளவுக்கென்றால், அந்தக் கல், "முஸ்லிமே! இதோ எனக்குப் பின்னால் யூதன் ஒருவன் இருக்கிறான். அவனைக் கொன்றுவிடு" என்று கூறும்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 52
5601. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
முஸ்லிம்கள் யூதர்களுடன் போர் தொடுக்காத வரை யுக முடிவுநாள் வராது. அப்போது முஸ்லிம்கள் (பதிலடியாக) யூதர்களைக் கொல்வார்கள். எந்த அளவுக்கென்றால், யூதன் ஒருவன் அந்தக் கல்லுக்கும் மரத்துக்கும் பின்னால் ஒளிந்துகொள்வான். உடனே அந்தக் கல், அல்லது அந்த மரம், "முஸ்லிமே! அல்லாஹ்வின் அடியாரே! இதோ எனக்குப் பின்னால் யூதன் ஒருவன் இருக்கிறான். உடனே நீ வந்து அவனைக் கொன்றுவிடு" என்று கூறும். பெரிய உடை மரத்தைத் தவிர. ஏனெனில், அது யூதர்களின் மரமாகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 52
5602. ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "யுக முடிவு நாளுக்கு முன் பெரும் பொய்யர்கள் சிலர் வருவார்கள்" என்று கூறியதை நான் கேட்டேன்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அபுல்அஹ்வஸ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், உடனே நான் ஜாபிர் (ரலி) அவர்களிடம், "இதை நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றீர்களா?" என்று கேட்டேன். அதற்கு ஜாபிர் (ரலி) அவர்கள் "ஆம்" என்றார்கள் என இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், சிமாக் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், என் சகோதரர் முஹம்மத் பின் ஹர்ப் (ரஹ்) அவர்கள், ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள், "அவர்கள் குறித்து நீங்கள் எச்சரிக்கையாக இருந்துகொள்ளுங்கள்" என்று கூறியதை நான் கேட்டேன் எனத் தெரிவித்ததாக இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 52
5603. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பெரும் பொய்யர்களான சுமார் முப்பது "தஜ்ஜால்"கள் அனுப்பப்படாமல் யுக முடிவுநாள் வராது. அவர்களில் ஒவ்வொருவரும் தம்மை இறைவனின் தூதர் என்று சொல்லிக்கொள்வார்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 52
பாடம் : 19 இப்னு ஸய்யாத் பற்றிய குறிப்பு.
5604. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒருமுறை) நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் சிறுவர்கள் சிலரைக் கடந்து சென்றோம். அவர்களிடையே இப்னு ஸய்யாதும் இருந்தான். (எங்களைக் கண்டதும்) சிறுவர்கள் ஓடிவிட்டனர். இப்னு ஸய்யாத் (மட்டும்) அப்படியே உட்கார்ந்துகொண்டான். அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெறுத்ததைப் போன்றிருந்தது. ஆகவே, அவனிடம், "உன் கரங்கள் மண்ணைத் தழுவட்டும்! நான் அல்லாஹ்வின் தூதர் என நீ உறுதிமொழி அளிக்கிறாயா?" என்று கேட்டார்கள். அதற்கு அவன், "இல்லை; நான் அல்லாஹ்வின் தூதர் என நீர் சாட்சியமளிக்கிறீரா?" என்று கேட்டான்.
அப்போது உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! என்னை விடுங்கள். நான் அவனைக் கொன்றுவிடுகிறேன்" என்று கூறினார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீர் கருதக்கூடிய ஒருவனாக (தஜ்ஜாலாக) இவன் இருந்தால், உம்மால் ஒருபோதும் அவனைக் கொல்லமுடியாது. (அந்தப் பொறுப்பு கொடுக்கப்பட்டவர் ஈசா (அலை) அவர்களே)" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 52
5605. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நடந்துசென்றோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இப்னு ஸய்யாதைக் கடந்து சென்றார்கள். அவனிடம், "நான் உனக்காக (என் மனதிற்குள்) ஒன்றை மறைத்துவைத்துள்ளேன் (அது என்ன?)" என்று கேட்டார்கள். அதற்கு அவன் "துக்" என்று சொன்னான். (அதாவது "துகான்" எனும் அத்தியாயத்தை (44) "துக்" என அரைகுறையாகச் சொன்னான்.) அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "தூரப்போ! உன்னால் உனது எல்லையைத் தாண்ட முடியாது" என்று சொன்னார்கள்.
அப்போது உமர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! என்னை விடுங்கள். நான் அவனது கழுத்தை வெட்டிவிடுகிறேன்" என்று சொன்னார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவனை விட்டுவிடுக. நீர் அஞ்சுகின்ற ஒருவனாக (தஜ்ஜாலாக) இவன் இருந்தால், இவனைக் கொல்ல உம்மால் முடியாது" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 52
5606. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அபூபக்ர் மற்றும் உமர் (ரலி) ஆகியோரும் மதீனாவின் வீதியொன்றில் அவனை (இப்னு ஸய்யாதை)ச் சந்தித்தார்கள். அவனிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நான் இறைவனின் தூதர் என நீ சாட்சியம் அளிக்கிறாயா?"என்று கேட்டார்கள். அதற்கு அவன், "நான் இறைவனின் தூதர் என நீர் சாட்சியம் அளிக்கிறீரா?" என்று (திருப்பிக்) கேட்டான். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நான் அல்லாஹ்வையும் அவனுடைய வானவர்களையும் அவனுடைய வேதங்களையும் நம்பிக்கை கொண்டேன். நீ என்ன காண்கிறாய்?" என்று கேட்டார்கள். அதற்கு இப்னு ஸய்யாத், "தண்ணீரின் மீது சிம்மாசனம் ஒன்றைக் காண்கிறேன்" என்று சொன்னான்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீ கடல்மீதுள்ள இப்லீஸின் சிம்மாசனத்தையே காண்கிறாய்" என்று கூறிவிட்டு, "இன்னும் என்ன காண்கிறாய்?" என்று கேட்டார்கள். அதற்கு அவன், "(அல்லாஹ்விடமிருந்து செய்திகளைக் கொண்டுவரும்) இரு உண்மையாளர்களையும் ஒரு பொய்யரையும், அல்லது இரு பொய்யர்களையும் ஓர் உண்மையாளரையும் நான் காண்கிறேன்" என்று சொன்னான். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவனுக்குக் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அவனை விட்டுவிடுங்கள்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 52
5607. மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் வழியாகவும் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
"நபி (ஸல்) அவர்கள் தம்முடன் அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகியோர் இருக்க, இப்னு ஸாயிதைச் சந்தித்தார்கள். அப்போது இப்னு ஸாயித் சிறுவர்களுடன் (விளையாடிக் கொண்டு) இருந்தான்..." என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம் பெற்றுள்ளன.
அத்தியாயம் : 52
5608. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் இப்னு ஸாயிதுடன் மக்காவரை பயணம் மேற்கொண்டேன். அப்போது அவன் என்னிடம், "நான் மக்களில் சிலரைச் சந்தித்தேன். அவர்கள் என்னை "தஜ்ஜால்" எனக் கருதுகின்றனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "தஜ்ஜாலுக்குக் குழந்தை இருக்காது" என்று கூறியதை நீங்கள் கேட்கவில்லையா?" என்று கேட்டான். நான், "ஆம் (கேட்டுள்ளேன்)" என்றேன்.
அவன், "எனக்குக் குழந்தை உள்ளது" என்று கூறிவிட்டு, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "தஜ்ஜால் மதீனாவுக்குள்ளும் மக்காவுக்குள்ளும் நுழையமாட்டான்" என்று கூறியதை நீங்கள் கேட்டதில்லையா?" என்றான். நான் "ஆம் (கேட்டுள்ளேன்)" என்றேன். அவன், "நான் மதீனாவில் பிறந்தேன். இதோ நான் மக்காவுக்குச் செல்லப் போகிறேன்" என்று கூறினான்.
பிறகு இறுதியாக அவன், "அறிந்துகொள்க: அல்லாஹ்வின் மீதாணையாக! நான் தஜ்ஜாலின் பிறப்பையும் அவனது வசிப்பிடத்தையும் இப்போது அவன் எங்கே இருக்கிறான் என்பதையும் நன்கறிவேன்" என்று கூறி, என்னைக் குழப்பிவிட்டான்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 52
5609. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
இப்னு ஸாயித் என்னிடம் பேசியபோது, அவனைப் பழிப்பதற்கு எனக்கு வெட்கமாக இருந்தது. அவன், "(விவரம் தெரியாத காரணத்தால், என்னை "தஜ்ஜால்" என்று நினைக்கும்) பொது மக்களை நான் பொருட்படுத்தவில்லை. (ஆனால்,) முஹம்மத் (ஸல்) அவர்களின் தோழர்களே! உங்களுக்கும் எனக்குமிடையே என்ன பிரச்சினை? நபி (ஸல்) அவர்கள், "அவன் (தஜ்ஜால்) யூதன்" என்று சொல்லவில்லையா? ஆனால், நானோ இஸ்லாத்தை ஏற்றுவிட்டேன்; "அவனுக்குக் குழந்தையேதும் பிறக்காது" என்று நபியவர்கள் சொன்னார்கள். எனக்குக் குழந்தை இருக்கிறது. "அவன் மக்காவுக்குள் நுழைவதை அல்லாஹ் தடைசெய்துவிட்டான்" என்று நபியவர்கள் கூறினார்கள். நான் ஹஜ் செய்துவிட்டேன்" என்று கூறினான்.
இவ்வாறு அவனது சொல்,என்னில் ஒரு மதிப்பை உண்டாக்கும் அளவுக்கு அவன் பேசிக்கொண்டேயிருந்தான். பிறகு அவன், "அறிந்துகொள்க: அல்லாஹ்வின் மீதாணையாக! இப்போது அவன் (தஜ்ஜால்) எங்கே இருக்கிறான் என்பதை நான் அறிவேன். அவனுடைய தந்தையையும் தாயையும் நான் அறிவேன்" என்றான். அவனிடம் "அந்த (தஜ்ஜால் எனும்) மனிதனாக நீ இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறாயா?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அவன், "அவ்வாறு என்னிடம் கோரப்பட்டால் அதை நான் வெறுக்கமாட்டேன்" என்றான்.
இந்தத் தகவல் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 52
5610. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒருமுறை) நாங்கள் ஹஜ்ஜுக்கு, அல்லது உம்ராவுக்குச் சென்றோம். எங்களுடன் இப்னு ஸாயிதும் இருந்தான். (வழியில்) நாங்கள் ஓரிடத்தில் தங்கினோம். (ஓய்வெடுப்பதற்காக) மக்கள் கலைந்து சென்றபின் நானும் இப்னு ஸாயிதும் மட்டுமே எஞ்சியிருந்தோம். அவனைப் பற்றிச் சொல்லப்படுகிற விஷயங்களால் அவனருகில் இருப்பதை நான் மிகவும் வெறுத்தேன். அவன் தனது பயணச் சாமான்களைக் கொண்டுவந்து எனது பயணச் சாமான்களுடன் வைத்தான்.
அப்போது நான், "வெயில் கடுமையாக உள்ளது. அந்த மரத்திற்குக் கீழே நீ உன் பொருட்களை வைத்தால் நன்றாயிருக்குமே" என்றேன். அவ்வாறே அவன் செய்தான். அப்போது ஆட்டு மந்தை ஒன்று வந்தது. உடனே அவன் சென்று, ஒரு பெரிய கோப்பை (நிறைய பால்) உடன் என்னிடம் வந்து, "அபூசயீதே! பருகுவீராக" என்றான். நான், "வெயிலும் கடுமையாக உள்ளது. பாலும் சூடாக உள்ளது என்று -அவன் கையிலிருந்து வாங்கி அருந்தப் பிடிக்காமல்,அல்லது அவன் கையிலிருந்து வாங்கப் பிடிக்காமல்- சொன்னேன்.
அவன், "அபூசயீதே! நான் ஒரு கயிற்றை எடுத்துவந்து அதை ஒரு மரத்தில் மாட்டி தற்கொலை செய்துகொள்ளலாமா என்று நினைத்தேன். என்னைப் பற்றி மக்கள் பேசிக்கொள்கிற செய்திகளே காரணம். அபூசயீதே! யாருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறிய ஹதீஸ் தெரியாவிட்டாலும், அன்சாரிகளே! உங்களுக்குத் தெரியாமல் போகாது.
(அபூசயீதே!) நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஹதீஸ்களை நன்கறிந்தவர்களில் ஒருவரல்லவா? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவன் (தஜ்ஜால்) இறைமறுப்பாளன்" என்று சொல்லவில்லையா? நானோ ஒரு முஸ்லிமாக இருக்கிறேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவன் (தஜ்ஜால்) குழந்தை பாக்கியமற்ற மலடன்" என்று கூறவில்லையா? நானோ என் குழந்தையை மதீனாவில் விட்டுவந்துள்ளேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவன் மதீனாவுக்குள்ளும் மக்காவுக்குள்ளும் நுழையமுடியாது" என்று கூறவில்லையா? நானோ,மதீனாவிலிருந்து மக்காவை நாடி வந்துகொண்டிருக்கிறேன்" என்று சொன்னான்.
இதையெல்லாம் கேட்டு அவனை மன்னிக்கும் அளவுக்கு நான் போய்விட்டேன். பிறகு அவன், "அறிந்துகொள்க: அல்லாஹ்வின் மீதாணையாக! தஜ்ஜாலை நான் அறிவேன். அவனது பிறப்பையும், இப்போது அவன் எங்கே இருக்கிறான் என்பதையும் நான் அறிவேன்" என்றான். அப்போது நான் "காலமெல்லாம் உனக்கு நாசமுண்டாகட்டும்" என்று கூறி (சபித்து)விட்டேன்.
அத்தியாயம் : 52
5611. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இப்னு ஸாயிதிடம், "சொர்க்கத்தின் மண் எது?" என்று கேட்டார்கள். அதற்கு அவன், "அபுல்காசிமே! அது (நிறத்தில்) வெண்மையான மாவும் (மணத்தில்) கஸ்தூரியும் ஆகும்" என்றான். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "சரிதான்" என்றார்கள்.
அத்தியாயம் : 52
5612. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
இப்னு ஸய்யாத், நபி (ஸல்) அவர்களிடம் சொர்க்கத்தின் மண்ணைப் பற்றிக் கேட்டான். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "வெண்மையான மாவும் சுத்தமான கஸ்தூரியுமாகும்" என்று பதிலளித்தார்கள்.
அத்தியாயம் : 52
5613. முஹம்மத் பின் அல்முன்கதிர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள், "இப்னு ஸாயித்"தான் தஜ்ஜால் என அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கூறுவதை நான் கண்டேன். நான், "அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கூறுகிறீர்களா?" என்று கேட்டேன். அதற்கு ஜாபிர் (ரலி) அவர்கள், "உமர் (ரலி) அவர்கள் "இப்னு ஸாயித்"தான் தஜ்ஜால் என்று நபி (ஸல்) அவர்களுக்கு அருகிலேயே சத்தியம் செய்து கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் உமர் (ரலி) அவர்களுக்கு மறுப்புத் தெரிவிக்கவில்லை" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 52
5614. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(என் தந்தை) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடனும் (அவர்களின் தோழர்களில்) ஒரு குழுவினருடனும் இப்னு ஸய்யாதை நோக்கிச் சென்றார்கள். "பனூ மஃகாலா" குலத்தாரின் மாளிகைக்கருகே சிறுவர்களுடன் (சிறுவனாக) அவன் விளையாடிக்கொண்டிருப்பதைக் கண்டார்கள். அப்போது இப்னு ஸய்யாத் பருவ வயதை நெருங்கிவிட்டிருந்தான். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது கரத்தால் அவனது முதுகில் அடிக்கும் வரையில் அவன் எதையுமே உணரவில்லை.
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நான் இறைவனின் தூதர்தான் என்று நீ சாட்சியம் அளிக்கிறாயா?" என்று இப்னு ஸய்யாதிடம் கேட்டார்கள். இப்னு ஸய்யாத் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் கூர்ந்து பார்த்துவிட்டு, "நீங்கள் (எழுதப்படிக்கத் தெரியாத மக்களான) "உம்மி" களின் தூதர் என்று நான் சாட்சியம் அளிக்கிறேன்" என்று பதிலளித்தான். மேலும் அவன், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், "நான் இறைவனின் தூதர்தான் என்று நீங்கள் சாட்சியம் அளிக்கிறீர்களா?" என்றும் கேட்டான்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (இஸ்லாத்தைப் பற்றி அவனிடம் எதுவும் கேட்காமல்) அவனை விட்டுவிட்டு, "நான் அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர்களின் மீதும் நம்பிக்கை கொண்டுள்ளேன்" என்று கூறினார்கள்.
பிறகு அவனிடம், "(உன் நிலை பற்றி) நீ என்ன கருதுகிறாய்?" என்று கேட்டார்கள். அதற்கு இப்னு ஸய்யாத், "எனக்கு மெய்யான செய்திகளும் பொய்யான செய்திகளும் உதிக்கின்றன" என்று கூறினான். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "உனக்கு இப்பிரச்சினையில் (உண்மையும் பொய்யும் கலந்து) குழப்பம் ஏற்பட்டுள்ளது" என்று கூறிவிட்டு, "நான் ஒன்றை மனதில் உனக்காக (உன்னைச் சோதிப்பதற்காக) மறைத்துவைத்துள்ளேன். (அது என்னவென்று சொல்)" என்று கூறினார்கள். இப்னு ஸய்யாத், "அது "துக்" என்று பதிலளித்தான். (அதாவது "துகான்" (44) எனும் அத்தியாயத்தின் 10ஆவது வசனம் என்பதை அரைகுறையாகச் சொன்னான்.)
உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "தூரவிலகிப்போ. நீ உன் எல்லையைத் தாண்டிவிட முடியாது" என்று கூறினார்கள்.
அப்போது உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! என்னை விடுங்கள். இவனது கழுத்தை நான் வெட்டி விடுகிறேன்" என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இவன் (இப்னு ஸய்யாத்) அவனாக (தஜ்ஜாலாக) இருந்தால் இவனைக் கொல்லும் பொறுப்பு உங்களுக்குக் கொடுக்கப்படவில்லை; இவன் அவனில்லையென்றால், இவனைக் கொல்வதால் உங்களுக்கு நன்மையேதும் இல்லை" என்று சொன்னார்கள்.
- (தொடர்ந்து) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
அதன் பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் உபை பின் கஅப் (ரலி) அவர்களும் இப்னு ஸய்யாத் தங்கியிருந்த பேரீச்சந்தோட்டத்தை நோக்கி நடக்கலாயினர். பேரீச்சந் தோட்டத்திற்குள் நுழைந்தவுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இப்னு ஸய்யாத் தம்மைப் பார்த்துவிடும் முன்பே அவனிடமிருந்து அவனது பேச்சு எதையாவது கேட்டுவிட வேண்டுமென்று திட்டமிட்டபடி பேரீச்ச மரங்களுக்கிடையில் தம்மை மறைத்துக் கொண்டு நடந்தார்கள். அப்போது இப்னு ஸய்யாத் தனது படுக்கையில் ஒரு பூம்பட்டுப் போர்வைக்குள் எதையோ முணுமுணுத்தபடி படுத்திருந்தான்.
இப்னு ஸய்யாதின் தாய், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பேரீச்ச மரங்களுக்கிடையே தம்மை மறைத்துக்கொண்டு வருவதைக் கண்டு, இப்னு ஸய்யாதை, "ஸாஃபியே!" (இது இப்னு ஸய்யாதின் பெயர்) இதோ முஹம்மத்!" என்றாள். உடனே இப்னு ஸய்யாத் குதித்தெழுந்து உட்கார்ந்து கொண்டான். (அதனால் அவனது பேச்சு எதையும் கேட்க முடியவில்லை.) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவள் அவனை அப்படியே விட்டுவிட்டிருந்தால் அவன் (உண்மை நிலையைத்) தெளிவுபடுத்தியிருப்பான்" என்று சொன்னார்கள்.
- அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிடையே எழுந்து நின்று, அல்லாஹ்வை அவனது தகுதிக்கேற்பப் போற்றிப் புகழ்ந்துவிட்டு, தஜ்ஜாலைப் பற்றிப் பின்வருமாறு பேசினார்கள்:
அவனைக் குறித்து உங்களை நான் எச்சரிக்கிறேன். எந்த இறைத்தூதரும் அவனைக் குறித்துத் தம் சமுதாயத்தாரை எச்சரிக்காமல் இருந்ததில்லை. நூஹ் (அலை) அவர்கள் தம் சமுதாயத்தாரை அவனைக் குறித்து எச்சரித்தார்கள். ஆயினும், நான் அவனைப் பற்றி வேறெந்த இறைத்தூதரும் தம் சமுதாயத்தாருக்குச் சொல்லாத ஒரு விவரத்தை உங்களுக்குச் சொல்கிறேன். அவன் ஒற்றைக் கண்ணன் ஆவான்; வளமும் உயர்வும் மிக்க அல்லாஹ் ஒற்றைக் கண்ணன் அல்லன் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
அம்ர் பின் ஸாபித் அல்அன்சாரீ (ரஹ்) அவர்கள், நபித்தோழர்களில் சிலர் தம்மிடம் கூறியதாகப் பின்வருமாறு என்னிடம் தெரிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தஜ்ஜாலைப் பற்றி எச்சரித்த அன்றைய தினத்தில், "தஜ்ஜாலின் இரு கண்களுக்கிடையில் "காஃபிர்" (இறைமறுப்பாளன்) என்று எழுதப்பட்டிருக்கும். அவனது நடவடிக்கையை வெறுக்கின்ற ஒவ்வொருவரும் அதை வாசிப்பார்கள்; அல்லது ஒவ்வோர் இறைநம்பிக்கையாளரும் வாசிப்பார்கள்" என்றும், "அறிந்து கொள்ளுங்கள்: உங்களில் எவரும் இறப்பதற்கு முன் தம் இறைவனைப் பார்க்கமுடியாது" என்றும் கூறினார்கள்.
அத்தியாயம் : 52
5615. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் தோழர்களில் ஒரு குழுவினருடன் (இப்னு ஸய்யாதை நோக்கி) நடந்தார்கள். அவர்களுடன் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களும் இருந்தார்கள். இப்னு ஸய்யாத், பனூ முஆவியா குலத்தாரின் மாளிகைக்கருகே சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்டார்கள். அப்போது அவன் பருவ வயதை எட்டியிருந்தான்.
மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. அதில் உமர் பின் ஸாபித் (ரஹ்) அவர்கள் கூறிய செய்திவரையே இடம்பெற்றுள்ளது.
இந்த அறிவிப்பில், "அவள் அவனை அப்படியே விட்டுவிட்டிருந்தால் அவன் தனது நிலையை தெளிவுபடுத்தியிருப்பான்" என்பதற்கு "அவனுடைய தாய் அவனை அப்படியே விட்டிருந்தால் அவன் தனது நிலையைத் தெளிவுபடுத்தியிருப்பான்" என்று யஅகூப் பின் இப்ராஹீம் (ரஹ்) அவர்கள் (விளக்கம்) கூறியதாகவும் இடம்பெற்றுள்ளது.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 52
5616. மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் தோழர்களில் ஒரு குழுவினருடன் இப்னு ஸய்யாதைக் கடந்து சென்றார்கள். அவர்களுடன் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களும் இருந்தார்கள். இப்னு ஸய்யாத், "பனூ மஃகாலா" குலத்தாரின் மாளிகைக்கருகே சிறுவர்களுடன் விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது அவன் சிறுவனாக இருந்தான்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸ்களில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அவற்றில் அப்து பின் ஹுமைத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உபை பின் கஅப் (ரலி) அவர்களுடன் (இப்னு ஸய்யாத் தங்கியிருந்த) பேரீச்சந் தோட்டத்திற்குச் சென்றதைப் பற்றிய குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 52
5617. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் இப்னு ஸாயிதை மதீனாவின் சாலைகளில் ஒன்றில் சந்தித்தார்கள். அவர்கள் அவனிடம் ஏதோ சொல்ல அவன் கோபப்பட்டான். உடனே அவனது உடல், தெருவையே அடைத்துக்கொள்ளும் அளவுக்கு (வீங்கி)ப் புடைத்தது. பின்னர் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் (தம் சகோதரி) ஹஃப்ஸா (ரலி) அவர்களிடம் சென்றார்கள். நடந்த செய்தி முன்பே ஹஃப்ஸாவுக்குத் தெரிந்திருந்தது.
அப்போது ஹஃப்ஸா (ரலி) அவர்கள், "அல்லாஹ் உமக்கு அருள்புரியட்டும்! நீர் இப்னு ஸாயிதிடமிருந்து என்ன எதிர்பார்த்தீர்?" என்று கேட்டுவிட்டு, "உமக்குத் தெரியுமா? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவன் (தஜ்ஜால்) தனக்கேற்படும் ஒரு கோபத்தின் போதே புறப்படுவான்" என்று கூறியதை நீர் அறியவில்லையா? (ஒருகால் இப்னு ஸய்யாதே தஜ்ஜாலாக இருந்தால் என்னவாயிருக்கும்!)" என்று கேட்டார்கள்.
அத்தியாயம் : 52
5618. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், "நான் இப்னு ஸய்யாதை இரு முறை சந்தித்தேன். முதல் முறை சந்தித்துவிட்டு வந்து அவ(னுடைய நண்ப)ர்களில் ஒருவரிடம், "இவன் (இப்னு ஸய்யாத்), அவர் (நபி) என்று நீங்கள் பேசிக்கொள்கிறீர்களா?" எனக் கேட்டேன். அதற்கு அவர், "அல்லாஹ்வின் மீதாணையாக! இல்லை" என்று பதிலளித்தார்.
அதற்கு நான், "நீர் என்னிடம் பொய் சொல்கிறீர். அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களில் சிலர் என்னிடம், "அவன் உங்களிலேயே அதிகச்செல்வமும் நிறைய குழந்தைகளும் உள்ளவனாக ஆகாத வரை மரணிக்கமாட்டான்" என்று கூறினார்கள். அவனைப் பற்றி அவ்வாறே இன்றும் அவர்கள் கருதிக்கொண்டிருக்கிறார்கள் (நபி என்று கருதாவிட்டால் அவ்வளவு உறுதியாக நீங்கள் எப்படி இவ்வாறு நம்பினீர்கள்?)" என்று கேட்டேன் என்று கூறினார்கள்.
மேலும், அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: பிறகு நாங்கள் பேசிக்கொண்டிருந்துவிட்டு,அவனிடமிருந்து நான் (புறப்பட்டு) வந்துவிட்டேன். பிறகு அவனை மறுபடியும் நான் சந்தித்தபோது, அவனது கண் ஒன்று வீங்கிப் புடைத்திருந்தது. நான், "இப்போது நான் காணுகின்ற நிலையில் உன்னுடைய கண் எப்போது மாறியது?"என்று கேட்டேன். அதற்கு அவன், "எனக்குத் தெரியாது" என்று பதிலளித்தான். "உன் தலையிலேயே அது இருக்க,உனக்கு எப்படி தெரியாமல் போகும்?" என்று கேட்டேன்.
அதற்கு அவன், "அல்லாஹ் நாடினால் உம்முடைய இந்தக் கைத்தடிக்கும் அல்லாஹ் (இந்தக் குறையுள்ள) கண்ணை உருவாக்குவான்" என்று கூறிவிட்டு, கழுதையைப் போன்று மிகக் கடுமையாகக் கத்தினான். அப்போது என் தோழர்களில் சிலர், என்னிடமிருந்த கைத்தடியால் அது உடையும் அளவுக்கு நான்தான் அவனை அடித்துவிட்டேன் என்று எண்ணினர். "அல்லாஹ்வின் மீதாணையாக! அ(வன் கத்திய)தற்கான காரணத்தை நான் அறியவில்லை.
பிறகு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் இறைநம்பிக்கையாளர்களின் அன்னை (ஹஃப்ஸா-ரலி) அவர்களிடம் சென்று அதைப் பற்றித் தெரிவித்தார்கள். அதற்கு இறை நம்பிக்கையாளர்களின் அன்னை ஹஃப்ஸா (ரலி) அவர்கள், "அவனிடம் உமக்கென்ன வேலை?" என்று கேட்டுவிட்டு, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவனுக்கு (தஜ்ஜாலுக்கு) ஏற்படும் ஒரு கோபத்தை முன்னிட்டே அவன் மக்களிடையே முதன் முதலில் புறப்பட்டு வருவான்" என்று கூறியதை நீர் அறியவில்லையா?" என்று கேட்டார்கள்.
அத்தியாயம் : 52
பாடம் : 20 தஜ்ஜால், அவனது தன்மை, அவனு டன் இருப்பவை ஆகியவை பற்றிய குறிப்பு.
5619. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிடையே தஜ்ஜாலைப் பற்றிக் குறிப்பிட்டார்கள். அப்போது அவர்கள், "அல்லாஹ் ஒற்றைக் கண்ணன் அல்லன். அறிந்துகொள்ளுங்கள்! மசீஹுத் தஜ்ஜால் வலக்கண் குருடானவன் ஆவான். அவனது கண் (ஒரே குலையில்) துருத்திக் கொண்டிருக்கும் திராட்சையைப் போன்றிருக்கும்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 52
5620. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எல்லா இறைத்தூதர்களும் தம் சமுதாயத்தாரை மகா பொய்யனான ஒற்றைக் கண்ணன் (தஜ்ஜால்) குறித்து எச்சரிக்காமல் இருந்ததில்லை. அறிந்துகொள்ளுங்கள்: அவன் ஒற்றைக் கண்ணன் ஆவான். ஆனால், உங்கள் இறைவன் ஒற்றைக் கண்ணன் அல்லன். அந்தப் பொய்யனுடைய இரு கண்களுக்கிடையே காஃப், ஃப, ரா (இறைமறுப்பாளன் - காஃபிர்) என்று (தனித் தனி எழுத்துகளில்) எழுதப்பட்டிருக்கும்.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது
அத்தியாயம் : 52
5621. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தஜ்ஜாலின் இரு கண்களுக்கிடையே காஃப், ஃப, ர -அதாவது காஃபிர் (இறைமறுப்பாளன்)- என்று எழுதப்பட்டிருக்கும்.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 52
5622. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "தஜ்ஜால் ஒரு கண் தடவப்பட்டவன் ஆவான். அவனுடைய இரு கண்களுக்கிடையே "காஃபிர்" என்று எழுதப்பட்டிருக்கும். அதை ஒவ்வொரு முஸ்லிமும் வாசிப்பார்" என்று கூறிவிட்டு,அதைத் தனித்தனியாக (காஃப், ஃப, ர என்று) உச்சரித்துக் காட்டினார்கள்.
அத்தியாயம் : 52
5623. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தஜ்ஜால் இடக்கண் குருடானவனும் தலைமுடி நிறைந்தவனும் ஆவான். அவனுடன் சொர்க்கமொன்றும் நரகமொன்றும் இருக்கும். அவனிடம் உள்ள நரகம் சொர்க்கமாகும். அவனிடம் உள்ள சொர்க்கம் நரகமாகும்.
இதை ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 52
5624. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தஜ்ஜாலுடன் என்ன இருக்கும் என்பதை அவனைவிட நான் நன்கறிவேன். ஓடுகின்ற இரு நதிகள் அவனிடம் இருக்கும். அவற்றில் ஒன்று வெளிப்பார்வைக்கு வெண்மையான நீராகக் காட்சி தரும். மற்றொன்று வெளிப்பார்வைக்கு கொழுந்துவிட்டெரியும் நெருப்பாகக் காட்சி தரும்.
அந்த இடத்தை அடைபவர் நெருப்பாகக் காட்சியளிக்கும் நதிக்குச் சென்று, கண்ணை மூடிக் கொண்டு, தலையைத் தாழ்த்தி அதிலிருந்து சிறிது அருந்தட்டும். ஏனெனில், அது குளிர்ந்த நீராகும். தஜ்ஜால் ஒரு கண் தடவப்பட்டவன் ஆவான். அவ(னது கண்ணி)ன் மீது கெட்டியான தோல் ஒன்று (மூடி) இருக்கும். அவனுடைய இரு கண்களுக்கிடையில் "காஃபிர்" (இறை மறுப்பாளன்) என்று எழுதப்பட்டிருக்கும். எழுத்தறிவுள்ள, எழுத்தறிவற்ற ஒவ்வோர் இறை நம்பிக்கையாளரும் அதை வாசிப்பார்.
இதை ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 52
5625. ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் தஜ்ஜால் தொடர்பாகக் கூறுகையில், "அவனுடன் நீரும் நெருப்பும் இருக்கும். அவனிடம் உள்ள நெருப்பானது (உண்மையில்) குளிர்ந்த நீராகும். அவனிடமுள்ள நீர் (உண்மையில்) நெருப்பாகும். ஆகவே, (அவனிடமுள்ள தண்ணீரை நம்பி) அழிந்து விடாதீர்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
இந்த ஹதீஸை நானும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றுள்ளேன் என அபூமஸ்ஊத் உக்பா பின் அம்ர் அல்அன்சாரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 52
5626. ரிப்ஈ பின் ஹிராஷ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அபூமஸ்ஊத் உக்பா பின் அம்ர் (ரலி) அவர்களுடன் ஹுதைஃபா பின் அல் யமான் (ரலி) அவர்களிடம் சென்றேன். உக்பா (ரலி) அவர்கள் ஹுதைஃபா (ரலி) அவர்களிடம், "நீங்கள் தஜ்ஜால் தொடர்பாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்ற ஹதீஸை எனக்கு அறிவியுங்கள்" என்று கேட்டார்கள்.
அதற்கு அவர்கள், "தஜ்ஜால் (யுக முடிவு நாளுக்குமுன்) புறப்பட்டு வருவான். அவனுடன் நீரும் நெருப்பும் இருக்கும். மக்களுக்கு நீராகக் காட்சி தருவது (உண்மையில்) கரிக்கும் நெருப்பாகும். மக்களுக்கு நெருப்பாகக் காட்சி தருவது (உண்மையில்) குளிரான சுவை நீராகும். உங்களில் யார் அந்த இடத்தை அடைகிறாரோ அவர் நெருப்பாகக் காட்சியளிப்பதில் விழட்டும்! ஏனெனில், அது நல்ல சுவை நீராகும்" என்று கூறினார்கள்.
அப்போது உக்பா பின் அம்ர் (ரலி) அவர்கள், ஹுதைஃபா (ரலி) அவர்களின் அறிவிப்பை உண்மைப்படுத்தும் விதமாக, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நானும் (இவ்வாறே) செவியுற்றேன்" என்றார்கள்.
அத்தியாயம் : 52
5627. ரிப்ஈ பின் ஹிராஷ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஹுதைஃபா (ரலி) அவர்களும் அபூமஸ்ஊத் உக்பா பின் அம்ர் (ரலி) அவர்களும் (ஓரிடத்தில்) சந்தித்துக்கொண்டனர். அப்போது ஹுதைஃபா (ரலி) அவர்கள், "நான் தஜ்ஜாலுடன் என்ன இருக்கும் என்பதை தஜ்ஜாலைவிட நன்கறிவேன். அவனுடன் நீராலான நதியொன்றும் நெருப்பாலான நதியொன்றும் இருக்கும். நெருப்பாகக் காட்சியளிப்பதே (உண்மையில்) நீராகும். நீராகக் காட்சியளிப்பதே (உண்மையில்) நெருப்பாகும். உங்களில் அந்த இடத்தை அடைபவர் நீரருந்த விரும்பினால், நெருப்பைப் போன்று காட்சியளிப்பதிலிருந்து அருந்தட்டும். ஏனெனில், அதையே அவர் நீராகக் காண்பார்" என்று சொன்னார்கள்.
(இதைக் கேட்ட) அபூமஸ்ஊத் உக்பா பின் அம்ர் (ரலி) அவர்கள், "இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் கூறியதை நானும் கேட்டுள்ளேன்" என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 52
5628. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்
நான் உங்களிடம் தஜ்ஜாலைப் பற்றிய செய்தி ஒன்றைச் சொல்லட்டுமா? வேறெந்த இறைத்தூதரும் அதைப் பற்றி தம் சமுதாயத்தாருக்குச் சொன்னதில்லை. அது (என்னவெனில்), அவன் ஒற்றைக்கண்ணன் ஆவான். அவன் தன்னுடன் சொர்க்கம் மற்றும் நரகம் போன்றதைக் கொண்டுவருவான். அவன் எதைச் சொர்க்கம் என்று கூறுகிறானோ, அதுதான் (உண்மையில்) நரகமாக இருக்கும். (இறைத்தூதர்) நூஹ் (அலை) அவர்கள் அவனைக் குறித்துத் தம் சமூகத்தாரை எச்சரித்ததைப் போன்று, நானும் உங்களை (அவனைக் குறித்து) எச்சரிக்கிறேன்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 52
5629. நவ்வாஸ் பின் சம்ஆன் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு நாள் காலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தஜ்ஜாலைப் பற்றிக் குறிப்பிட்டார்கள். அவன் தொடர்பாக(ப் பேசியபோது) அவர்கள் (சில சமயம் குரலைத்) தாழ்த்தவும், (சில சமயம்) உயர்த்தவும் செய்தார்கள். இறுதியில் அவன், (அருகிலுள்ள) பேரீச்ச மரத்தோப்புகளுக்கிடையே இருக்கிறானோ என்று நாங்கள் எண்ணும் அளவுக்குப் பேசினார்கள்.
பின்னர் நாங்கள் (மறுபடியும்) மாலைப் பொழுதில் நபியவர்களிடம் வந்தோம். அப்போது தஜ்ஜாலைக் குறித்த அச்சம் எங்கள் முகங்களில் இருப்பதை அவர்கள் அறிந்துகொண்டு, "உங்களுக்கு என்ன நேர்ந்தது?" என்று கேட்டார்கள். நாங்கள், "அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் (இன்று) காலையில் தஜ்ஜாலைப் பற்றிக் குறிப்பிட்டீர்கள். (அப்போது) அவனைப் பற்றி(க் குரலை)த் தாழ்த்தியும் உயர்த்தியும் பேசினீர்கள். இறுதியில் அவன், (அருகிலுள்ள) பேரீச்ச மரத்தோப்புகளுக்கிடையே இருக்கிறானோ என்று நாங்கள் எண்ணும் அளவுக்குப் பேசினீர்கள் (அதுதான் எங்கள் அச்சத்திற்குக் காரணம்)" என்று கூறினோம்.
அப்போது நபியவர்கள், "நான் உங்கள் விஷயத்தில் பெரிதும் அஞ்சுவது தஜ்ஜாலைக் குறித்து அல்ல; நான் உங்களிடையே (உயிருடன்) இருக்கும்போது அவன் தோன்றினால் அவனிடமிருந்து உங்களைக் காக்க நானே வாதாடுவேன். நான் உங்களிடையே இல்லாத போது அவன் வெளிப்பட்டால், அப்போது ஒவ்வொரு (முஸ்லிமான) மனிதரும் தமக்காக வாதாடிக்கொள்ள வேண்டும்; அல்லாஹ் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் எனது சார்பில் பொறுப்பாளனாக இருப்பான்.
தஜ்ஜால் சுருள்முடி கொண்ட ஓர் இளைஞன் ஆவான்; அவனது கண் ஒரே குலையில் துருத்திக் கொண்டிருக்கும் திராட்சை போன்றிருக்கும். உருவத்தில் அவன் அப்துல் உஸ்ஸா பின் கத்தன் என்பவனை ஒத்திருப்பான்.
உங்களில் யார் அவனை அடைகிறாரோ அவர் அவனுக்கெதிராக "அல்கஹ்ஃப்" அத்தியாயத்தின் (18) ஆரம்ப வசனங்களை ஓதிக்கொள்ளட்டும். அவன் சிரியாவுக்கும் இராக்குக்கும் இடையே உள்ள ஒரு பகுதியிலிருந்து புறப்பட்டு வந்து, வலப்பக்கத்திலும் இடப்பக்கத்திலும் அக்கிரமங்களைக் கட்டவிழ்த்துவிடுவான்; அல்லாஹ்வின் அடியார்களே! அப்போது நீங்கள் உறுதியோடு இருங்கள்" என்றார்கள்.
நாங்கள், "அல்லாஹ்வின் தூதரே! அவன் பூமியில் எத்தனை நாட்கள் தங்கியிருப்பான்?" என்று கேட்டோம். அதற்கு, "நாற்பது நாட்கள்" என்று பதிலளித்த நபியவர்கள், "அன்றைய ஒரு நாள் ஓர் ஆண்டைப் போன்றும், மறுநாள் ஒரு மாதத்தைப் போன்றும், அதற்கு அடுத்த நாள் ஒரு வாரத்தைப் போன்றும், மற்ற நாட்கள் உங்களின் (சாதாரண) நாட்களைப் போன்றும் இருக்கும்" என்று குறிப்பிட்டார்கள்.
நாங்கள், "அல்லாஹ்வின் தூதரே! ஓர் ஆண்டிற்குச் சமமாக இருக்கும் அந்த ஒரு நாளில், வழக்கமாகத் தொழும் (ஐவேளைத்) தொழுகைகளைத் தொழுதால் போதுமா?" என்று கேட்டோம். அதற்கு நபியவர்கள், "இல்லை (போதாது);அந்த (நீண்ட) நாளை, அதற்கேற்ப மதிப்பிட்டு(த் தொழுது)கொள்ளுங்கள்" என்று பதிலளித்தார்கள்.
நாங்கள், "அல்லாஹ்வின் தூதரே! பூமியில் அவன் (சுற்றித் திரியும்) வேகம் எப்படி இருக்கும்?" என்று கேட்டோம். அதற்கு நபியவர்கள், "பின்னாலிருந்து காற்று விரட்டிச் செல்லும் மேகம் போன்று (அவன் வேகமாக பூமியைச் சுற்றிவருவான்)" என்றார்கள். மேலும், நபியவர்கள் கூறினார்கள்:
அவன் ஒரு சமுதாயத்தாரிடம் வந்து (தன்னை இறைவன் என்று ஏற்றுக்கொள்ளுமாறு) அவர்களுக்கு அழைப்புவிடுப்பான். அவர்களும் அவன்மீது நம்பிக்கை கொண்டு அவனது அழைப்புக்குப் பதிலளிப்பார்கள். உடனே வானத்திற்கு (மழை பொழியுமாறு) அவன் கட்டளையிட, மழை பொழியும். பூமிக்கு(த்தாவரங்களை முளைக்கச் செய்யுமாறு) கட்டளையிட, அது முளையவைக்கும். (அவற்றை மேய்ந்து) அவர்களின் கால்நடைகள் ஏற்கெனவே இருந்ததைவிட நீண்ட திமில்களைக் கொண்டவையாகவும் மடி கனத்தவையாகவும் வயிறு நிரம்பியவையாகவும் மாலையில் (வீடு) திரும்பும்.
பின்னர், அவன் மற்றொரு சமுதாயத்தாரிடம் வந்து, (தன்னை இறைவன் என்று ஏற்றுக்கொள்ளுமாறு) அவர்களுக்கும் அழைப்பு விடுப்பான். ஆனால், அவனது அழைப்பை அவர்கள் நிராகரித்து விடுவார்கள். அவர்களிடமிருந்து அவன் திரும்பிச் சென்றுவிடுவான். அதனால், அவர்கள் பஞ்சத்தாலும் வறட்சியாலும் பாதிக்கப்பட்டவர்களாகக் காலைப்பொழுதை அடைவார்கள். அவர்களின் கைகளில் அவர்களின் செல்வம் ஏதும் (எஞ்சி) இராது.
அவன் பாழடைந்த இடமொன்றைக் கடந்து செல்வான். அதைப் பார்த்து, "உன்னிடம் இருக்கின்ற புதையல்களை வெளிப்படுத்து" என்று கூறுவான். அப்போது (வெளிப்படும்) அந்தப் புதையல்கள், இராணித் தேனீக்களை (பின்பற்றிச் செல்லும் தேனீக்களை)ப் போன்று அவனைப் பின்தொடர்ந்து செல்லும்.
பின்னர், அவன் வாட்டசாட்டமான இளைஞர் ஒருவரை அழைத்து, அவரை வாளால் வெட்டி இரு துண்டுகளாக்கி,அம்பெய்யும் தூரத்திற்கு இடைவெளிவிட்டு (அவ்விரண்டையும்) போடுவான். பின்னர் அந்தச் சடலத்தை அழைப்பான். உடனே அந்த இளைஞர் முகம் ஒளிர சிரித்துக்கொண்டே எழுந்து வருவார்.
இதற்கிடையே, மர்யமின் மைந்தர் ஈசா (அலை) அவர்களை அல்லாஹ் (பூமிக்கு) அனுப்பி வைப்பான். அவர் (சிரியாவின் தலைநகர்) "திமஷ்க்" (டமாஸ்கஸ்) நகரின் கிழக்குப் பகுதியிலுள்ள வெள்ளைக் கோபுரத்திற்கு அருகில் இரு வானவர்களின் இறக்கைகள்மீது தம் கைகளை வைத்தவாறு இறங்குவார்.
அப்போது அவர் குங்குமப்பூ நிறத்தில் இரு ஆடைகளை அணிந்திருப்பார். அவர் தமது தலையைத் தாழ்த்தினால் நீர்த்துளி சொட்டும்; தலையை உயர்த்தினாலோ வெண்முத்தைப் போன்று நீர்த்துளி வழியும். அவரது மூச்சுக் காற்றைச் சுவாசிக்கும் (அதாவது அவரை நெருங்கும்) எந்தவோர் இறைமறுப்பாளனும் சாகாமல் இருக்கமாட்டான். அவர் விடும் மூச்சானது அவரது பார்வை எட்டும் தூரம்வரை செல்லும்.
பின்னர் ஈசா (அலை) அவர்கள் தஜ்ஜாலைத் தேடிச் செல்வார்கள். இறுதியில், (பாலஸ் தீனத்திலுள்ள) "லுத்து" எனும் நகரத்தின் தலைவாயிலருகே அவனைக் கண்டு, அவனைக் கொன்றொழிப்பார்கள். பின்னர் தஜ்ஜாலிடமிருந்து அல்லாஹ் காப்பாற்றிய ஒரு சமுதாயத்தார் மர்யமின் மைந்தர் ஈசா (அலை) அவர்களிடம் வருவார்கள். அவர்களின் முகங்களை(ப்பரிவோடு) அவர் தடவிக் கொடுத்துச் சொர்க்கத்தில் அவர்களுக்குக் கிடைக்கவிருக்கும் படித்தரங்கள் குறித்து அவர்களுக்குத் தெரிவிப்பார்.
இதற்கிடையே, ஈசா (அலை) அவர்களுக்கு அல்லாஹ், "நான் என் அடியார்கள் சிலரை வெளி வரச் செய்துள்ளேன். அவர்களுடன் போரிட யாருக்கும் ஆற்றல் கிடையாது. எனவே, (முஸ்லிமான) என் அடியார்களை (சினாயிலுள்ள) "தூர்" மலைக்கு அழைத்துச் சென்று பாதுகாப்பாக வையுங்கள்" என்று (வஹீ) அறிவிப்பான்.
பின்னர், அல்லாஹ் "யஃஜூஜ்" "மஃஜூஜ்" கூட்டத்தாரை அனுப்புவான். அவர்கள் ஒவ்வோர் உயரமான பகுதியிலிருந்தும் வேகமாக(க் கீழே இறங்கி) வருவார்கள். அவர்களில் முதல் அணியினர் (ஜோர்தானில் உள்ள) "தபரிய்யா" ஏரியைக் கடந்து செல்லும்போது, அதிலுள்ள மொத்த நீரையும் குடித்துவிடுவார்கள். அவர்களின் இறுதி அணியினர் அதைக் கடந்து செல்லும்போது. "முன்னொரு காலத்தில் இந்த ஏரியில் தண்ணீர் இருந்திருக்கும்" என்று பேசிக்கொள்வார்கள்.
பின்னர் இறைத்தூதர் ஈசா (அலை) அவர்களும் அவர்களுடன் இருப்போரும் ("தூர்" மலையில்) முற்றுகையிடப்படுவார்கள். அப்போது (ஏற்படும் பட்டினியால்) அவர்களில் ஒருவருக்குக் காளை மாட்டின் தலை கிடைப்பது, இன்று உங்களில் ஒருவருக்கு நூறு பொற்காசுகள் கிடைப்பதைவிடச் சிறந்ததாக இருக்கும்.
பின்னர் இறைத்தூதர் ஈசா (அலை) அவர்களும் அவர்களுடன் இருப்போரும் (அல்லாஹ்விடம் உதவி கேட்டுப்) பணிந்து வேண்டுவார்கள். அப்போது யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தாரின் பிடரிகளில் புழுக்களை அல்லாஹ் அனுப்புவான். அதனால் அவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் பலியாவார்கள். பின்னர் இறைத்தூதர் ஈசா (அலை) அவர்களும் அவர்களுடன் இருப்போரும் (மலையிலிருந்து) தரைக்கு இறங்கி வருவார்கள்.
அப்போது பூமியின் எந்தவொரு சாண் அளவு இடமும், யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தாரின் (சடலங்களிலிருந்து வெளிவரும்) கொழுப்பாலும் துர்நாற்றத்தாலும் நிரம்பியிருப்பதையே காண்பார்கள். உடனே இறைத்தூதர் ஈசா (அலை) அவர்களும் அவர்களுடன் இருப்போரும் அல்லாஹ்விடம் (அவற்றை அகற்றக்கோரிப்) பணிந்து வேண்டுவார்கள். அப்போது அல்லாஹ் ஒட்டகங்களின் கழுத்துகளைப் போன்று (பெரியதாக உள்ள) பறவைகளை அனுப்புவான். அவை அந்தப் பிணங்களைத் தூக்கிச் சென்று அல்லாஹ் நாடிய இடத்தில் வீசியெறியும்.
பின்னர் அல்லாஹ் மழை பொழியச் செய்வான். அந்த மழை எந்த மண் வீட்டிலும், எந்த முடிவீட்டிலும் படாமல் இருக்காது. இறுதியில், பூமியைக் கழுவி, கண்ணாடி போன்று (சுத்தமாக) ஆக்கிவிடும். பின்னர் பூமிக்கு, "நீ உன் கனி வர்க்கங்களை முளைக்கச் செய்வாயாக; உன்னிடமுள்ள வளங்களை மறுபடியும் தருவாயாக" என்று உத்தரவு பிறப்பிக்கப்படும்.
அன்றைய நாளில் (எந்த அளவுக்கு வளம் கொழிக்குமெனில்), ஒரு குழுவினர் சேர்ந்து ஒரேயொரு மாதுளம் பழத்தை உண்பர். அதன் தொலி அவர்கள் அனைவருக்கும் நிழல் அளிக்கும். அவர்களுக்குப் பால் வளமும் கிட்டும். எந்த அளவுக்கென்றால், பால் தரும் ஓர் ஒட்டகம் ஒரு பெரும் கூட்டத்துக்கே போதுமானதாயிருக்கும். பால் தரும் பசுவொன்று ஒரு குலத்தாருக்கே போதுமானதாயிருக்கும். பால் தரும் ஆடொன்று உறவினர்கள் அடங்கிய ஒரு கூட்டத்திற்கே போதுமானதாயிருக்கும்.
இந்நிலையில், அல்லாஹ் தூய காற்று ஒன்றை அனுப்புவான். அது அவர்களின் அக்குள்களுக்குக் கீழே நுழைந்து அவர்களைப் பிடித்துக்கொள்ளும். இறைநம்பிக்கை கொண்ட ஒவ்வொரு முஸ்லிமின் உயிரையும் அது கைப்பற்றும். அதையடுத்து மக்களில் தீயவர்கள் (மட்டுமே பூமியில்) எஞ்சியிருப்பார்கள். அவர்கள் கழுதைகளைப் போன்று (வெட்ட வெளியில் வைத்துப் பகிரங்கமாக) உடலுறவு கொள்வார்கள். அவர்கள்மீதுதான் உலக முடிவு நாள் ஏற்படும்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 52
5630. மேற்கண்ட ஹதீஸ் வேறு இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "முன்பொரு காலத்தில் இங்கு நீர் இருந்திருக்கிறது" என்பதற்குப் பிறகு, "பின்னர் அவர்கள் பைத்துல் மக்திஸிலுள்ள மலையான "ஜபலுல் கமர்"வரை பயணம் மேற்கொள்வார்கள். அப்போது அவர்கள், "பூமியிலுள்ளவர்கள் அனைவரையும் நாம் கொன்று விட்டோம். வாருங்கள்: வானத்திலுள்ளோரை நாம் கொல்வோம்" என்று கூறியபடி தங்களுடைய அம்புகளை வானை நோக்கி எய்வார்கள். அப்போது அல்லாஹ் அவர்களுடைய அம்புகளை இரத்தம் தோய்த்து திருப்பியனுப்புவான்" என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
அலீ பின் ஹுஜ்ர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "நான் என் அடியார்கள் சிலரை (மலைகளிலிருந்து) இறக்கிவிட்டுள்ளேன். அவர்களுடன் போரிட யாருக்கும் ஆற்றல் கிடையாது என்று (அல்லாஹ் ஈசா (அலை) அவர்களிடம் அறிவிப்பான்" என) இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 52
பாடம் : 21 தஜ்ஜாலின் தன்மையும், மதீனா நகருக்குள் நுழைய முடியாமல் அவனுக்குத் தடை விதிக்கப்படுவதும், அவன் இறைநம்பிக்கையாளர் ஒருவரைக் கொன்றுவிட்டு உயிர்ப்பிப்பதும்.
5631. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு நாள் தஜ்ஜாலைக் குறித்து நீண்ட ஹதீஸ் ஒன்றை அறிவித்தார்கள். (அவனைப் பற்றி) எங்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அறிவித்தவற்றில் பின்வரும் தகவலும் அடங்கும்:
மதீனாவின் பாதைகளில் நுழைவது தடை செய்யப்பட்டிருக்கும் நிலையில் தஜ்ஜால் வருவான். மதீனாவையடுத்து (சிரியா நாட்டுத்திசையில்) உள்ள உவர் நிலம் ஒன்றில் அவன் தங்குவான். அந்நாளில் "மக்களிலேயே சிறந்தவரான ஒரு மனிதர்" அல்லது "மக்களிலேயே சிறந்தவர்களில் ஒரு மனிதர்" அவனை நோக்கிப் புறப்பட்டுச் சென்று, "எவனது செய்தியை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு முன்னறிவிப்புச் செய்தார்களோ அந்த தஜ்ஜால் நீதான் என்று நான் உறுதி கூறுகிறேன்" என்று கூறுவார்.
அப்போது தஜ்ஜால், "நான் இவனைக் கொன்றுவிட்டுப் பிறகு உயிராக்கிவிட்டால் அப்போதுமா (நான் இறைவன் எனும்) என் விஷயத்தில் சந்தேகம் கொள்வீர்கள்?" என்று (மக்களிடம்) கேட்பான். மக்கள், "இல்லை" என்று பதிலளிப்பார்கள். உடனே அவன் அம்மனிதரைக் கொன்றுவிட்டு உயிர்ப்பித்துக் காட்டுவான். அந்த மனிதர் உயிர் பெற்றெழுந்ததும், "அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இன்று உன்னை அறிந்து கொண்டதைவிட வேறெப்போதும் நன்றாக அறிந்துகொண்டதில்லை" என்று சொல்வார். உடனே தஜ்ஜால் அந்த மனிதரைக் கொன்றுவிட விரும்புவான். ஆனால்,அவருக்கெதிராக அவனுக்கு அதிகாரம் வழங்கப்படாது.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அபூஇஸ்ஹாக் இப்ராஹீம் பின் சுஃப்யான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அந்த மனிதர் "களிர்" (அலை) அவர்கள்தான் என்று சொல்லப்படுகிறது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 52
5632. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தஜ்ஜால் புறப்பட்டு வரும்போது இறைநம்பிக்கையாளர்களில் ஒருவர் அவனை நோக்கிச் செல்வார். அப்போது அவரை ஆயுதமேந்திய தஜ்ஜாலின் பாதுகாப்புப் படையினர் எதிர்கொண்டு, "எங்கே செல்கிறாய்?" என்று கேட்பார்கள். அந்த மனிதர், "(இப்போது) புறப்பட்டிருக்கும் இந்த மனிதனை நோக்கிச் செல்கிறேன்" என்று பதிலளிப்பார். அதற்கு அவர்கள், "நம் இறைவனை (தஜ்ஜாலை) நீ நம்பவில்லையா?" என்று கேட்பார்கள். அந்த மனிதர், "நம் இறைவன் யார் என்பது தெரியாதது அல்ல" என்று கூறுவார். அதற்கு அவர்கள், "இவனைக் கொல்லுங்கள்" என்று கூறுவார்கள்.
அப்போது அவர்களில் சிலர் சிலரிடம், "உங்கள் இறைவன் (தஜ்ஜால்), யாரையும் தானின்றி கொல்லக்கூடாதென உங்களுக்குத் தடை விதிக்கவில்லையா?" என்று கூறுவார்கள். ஆகவே, அவர்கள் அந்த மனிதரை தஜ்ஜாலிடம் கொண்டுசெல்வார்கள். அந்த இறை நம்பிக்கையாளர் தஜ்ஜாலைக் காணும் போது, "மக்களே! இவன்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறிப்பிட்ட தஜ்ஜால் ஆவான்" என்று சொல்வார்.
உடனே தஜ்ஜாலின் உத்தரவின்பேரில், அவர் பிடித்துக் கொண்டுவரப்பட்டு (தூண்களுக்கிடையே) நிறுத்தப்படுவார். "இவனைப் பிடித்து இவனது தலையைப் பிளந்துவிடுங்கள்" என்று அவன் கட்டளையிடுவான். அப்போது அவர்,முதுகும் வயிறும் வீங்கும் அளவுக்கு அடிக்கப்படுவார்.
பிறகு தஜ்ஜால், "என்மீது நீ நம்பிக்கை கொள்ளவில்லையா?" என்று கேட்பான். அதற்கு அந்த மனிதர், "நீ பெரும் பொய்யன் "மசீஹ்" ஆவாய்" என்று கூறுவார். பிறகு அவரது உச்சந்தலையில் ரம்பத்தை வைத்து அறுத்து அவருடைய இரு கால்கள்வரை தனித்தனியே பிளக்கும்படி கட்டளையிடப்படும். அவ்வாறே செய்து (அவரது உடலை இரு துண்டுகளாக்கியதும்) அவ்விரு துண்டுகளுக்கிடையில் தஜ்ஜால் நடந்து வருவான்.
பிறகு அந்த உடலைப் பார்த்து, "எழு" என்பான். உடனே அந்த மனிதர் (உயிர்பெற்று) நேராக எழுந்து நிற்பார். பிறகு அவரிடம், "என்மீது நம்பிக்கை கொள்கிறாயா?" என்று தஜ்ஜால் கேட்பான். அதற்கு அந்த மனிதர், "உன்னைப் பற்றி இன்னும் கூடுதலாகவே நான் அறிந்து கொண்டேன்" என்று சொல்வார். பிறகு அந்த மனிதர், "மக்களே! (இவன் இவ்வாறெல்லாம் செய்வதால் இவனை இறைவன் என நம்பிவிடாதீர்கள்.) இவன் எனக்குப் பிறகு மக்களில் வேறெவரையும் எதுவும் செய்யமுடியாது" என்று கூறுவார்.
உடனே தஜ்ஜால் அவரை அறுப்பதற்காகப் பிடிப்பான். ஆனால், அப்போது அவரது பிடரியிலிருந்து காறை எலும்புவரையுள்ள பகுதி செம்பாக மாறிவிடும். ஆகவே, அவனால் அவரை ஒன்றும் செய்யமுடியாது. பிறகு தஜ்ஜால் அந்த மனிதரின் கைகளையும் கால்களையும் பிடித்துத் தூக்கியெறிவான். அந்த மனிதரை தஜ்ஜால் நெருப்பில் தூக்கியெறிந்துவிட்டான் என மக்கள் எண்ணிக் கொள்வார்கள். ஆனால், அவர் சொர்க்கத்தில்தான் வீசப்பட்டிருப்பார்.
"இந்த மனிதர்தான் அகிலத்தின் அதிபதியான அல்லாஹ்விடம் மக்களிலேயே மகத்தான உயிர்த்தியாகம் செய்தவர் ஆவார்" என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் கள் கூறினார்கள்.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 52
பாடம்: 22 வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்வுக்கு தஜ்ஜால் மிகவும் சாதாரணமானவனே!
5633. முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களிடம் தஜ்ஜாலைப் பற்றி நான் கேட்(டுத் தெரிந்துகொண்)டதைவிட அதிகமாக வேறெவரும் கேட்(டுத் தெரிந்து கொண்)டதில்லை. நபி (ஸல்) அவர்கள் என்னிடம், "அவனைக் குறித்து உமக்கென்ன சிரமம்? அவனால் உமக்கெந்தத் தீங்கும் இல்லை" என்றார்கள்.
நான், "அல்லாஹ்வின் தூதரே! (அவனைக் குறித்து அச்சம்தான். ஏனெனில்,) தஜ்ஜாலுடன் (மலையளவு) உணவும் நதிகளும் இருக்கும் என்று மக்கள் கூறுகிறார்கள்" என்றேன். "(இது என்ன பிரமாதம்? அவன் மூலம் அல்லாஹ் எதையெல்லாம் காட்டவிருக்கிறானோ) அவற்றைவிட இவை அல்லாஹ்வுக்கு மிகவும் சாதாரணமானவையே!" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 52
5634. முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களிடம் தஜ்ஜாலைக் குறித்து நான் வினவியதைவிட அதிகமாக வேறெவரும் வினவியதில்லை. நபி (ஸல்) அவர்கள் (என்னிடம்), "உமது கேள்வி என்ன?" என்று கேட்டார்கள். நான், "தஜ்ஜாலுடன் மலையளவு ரொட்டியும் இறைச்சியும் நதியளவு நீரும் இருக்கும் என்று மக்கள் கூறுகிறார்கள்" என்றேன்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், "(இது என்ன பிரமாதம்? அவன் மூலம் அல்லாஹ் எதையெல்லாம் காட்டவிருக்கிறானோ) அவற்றைவிட இவை அல்லாஹ்வுக்கு மிகவும் சாதாரணமானவையே" என்று சொன்னார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஆறு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் யஸீத் பின் ஹாரூன் (ரஹ்), அவர்களது அறிவிப்பில், என்னிடம் நபி (ஸல்) அவர்கள் "அன்பு மகனே!" என்று கூறினார்கள் எனக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 52
பாடம் : 23 தஜ்ஜால் வெளிப்படுவதும், அவன் பூமியில் தங்கியிருப்பதும், ஈசா (அலை) அவர்கள் (வானிலிருந்து) இறங்கிவந்து அவனைக் கொன்றொழிப்பதும், நன்மையும் இறைநம்பிக்கையும் உள்ளவர்கள் (மரித்துப்)போவதும், மக்களிலேயே தீயவர்கள் எஞ்சியிருந்து சிலைகளை வழிபடுவதும், எக்காளம் (ஸூர்) ஊதப்பட்டு மண்ணறைகளில் உள்ளோர் எழுப்பப்படுவதும்.
5635. யஅகூப் பின் ஆஸிம் பின் உர்வா பின் மஸ்ஊத் அஸ்ஸகஃபீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களிடம் வந்து, "யுக முடிவு நாளில் இன்னின்னது நிகழும் எனத் தாங்கள் கூறிவரும் ஹதீஸ் என்ன?" என்று கேட்டார். அதற்கு அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் "சுப்ஹானல்லாஹ்" (அல்லாஹ் தூயவன்), அல்லது "லாயிலாஹ இல்லல்லாஹ்" (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை), அல்லது இவற்றைப் போன்ற ஒரு (துதிச்) சொல்லைக் கூறிவிட்டு, "நான் யாருக்கும் எந்த ஹதீஸையும் ஒருபோதும் அறிவிக்கக்கூடாது என எண்ணியிருந்தேன். நீங்கள் வெகுவிரைவில் ஒரு மகத்தான நிகழ்ச்சியைக் காண்பீர்கள். இறையில்லம் கஅபா எரிக்கப்படும். மேலும் இவ்வாறு, இவ்வாறு நடக்கும் என்றே நான் சொன்னேன் எனக் கூறிவிட்டு, பின்வருமாறு கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தஜ்ஜால் என் சமுதாயத்தாரிடையே புறப்பட்டுவந்து, நாற்பதுவரை தங்கியிருப்பான். (நாற்பது நாட்களா, அல்லது நாற்பது மாதங்களா, அல்லது நாற்பது ஆண்டுகளா என்பது எனக்குத் தெரியவில்லை.) அப்போது அல்லாஹ், மர்யமின் புதல்வர் ஈசா (அலை) அவர்களை அனுப்புவான். அவர்கள் (சாயலில்) உர்வா பின் மஸ்ஊத் அவர்களைப் போன்றிருப்பார்கள். அவர்கள் தஜ்ஜாலைத் தேடி வந்து அழிப்பார்கள். பிறகு மக்கள் ஏழாண்டுகள் தங்கியிருப்பார்கள். அன்று எந்த இருவருக்குமிடையேயும் பகையுணர்வு இருக்காது.
பிறகு அல்லாஹ் ஷாம் (சிரியா) நாட்டின் திசையிலிருந்து குளிர்ந்த காற்று ஒன்றை அனுப்புவான். அப்போது பூமியின் மீது தமது உள்ளத்தில் கடுகு மணியளவு நன்மை, அல்லது இறைநம்பிக்கை (ஈமான்) உள்ள எவரது உயிரையும் அது கைப்பற்றாமல் விட்டுவைக்காது. எந்த அளவுக்கென்றால், உங்களில் ஒருவர் மலைக்கு நடுவே நுழைந்து விட்டாலும் அங்கும் அது நுழைந்து அவரது உயிரைக் கைப்பற்றும். இவ்வாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டேன்.
மேலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பிறகு (தீமைகளை நோக்கி) விரைந்து செல்வதில் பறவைகளையும், குணத்தில் மிருகங்களையும் ஒத்த தீய மனிதர்களே எஞ்சியிருப்பார்கள். அவர்கள் எந்த நன்மையையும் அறியவுமாட்டார்கள். எந்தத் தீமையையும் மறுக்கவுமாட்டார்கள். அப்போது அவர்களிடையே ஷைத்தான் காட்சியளித்து, "நீங்கள் (எனக்குப்) பதிலளிக்க மாட்டீர்களா?" என்று கேட்பான். அந்த மக்கள், "நீ என்ன உத்தரவிடுகிறாய்?" என்று கேட்பார்கள். அப்போது ஷைத்தான், சிலைகளை வழிபடுமாறு உத்தரவிடுவான்.
இவ்வாறு அவர்கள் (சிலைவழிபாடு செய்துகொண்டு) இருக்கும்போது அவர்களின் வாழ்வாதாரம் தாராளமானதாய் இருக்கும். அவர்களின் வாழ்க்கை செழிப்பானதாக இருக்கும். பிறகு எக்காளம் (ஸூர்) ஊதப்படும். அதைக் கேட்கும் ஒவ்வொருவரின் கழுத்தும் ஒரு பக்கம் சாயும்; மறுபக்கம் உயரும். (அதாவது சுயநினைவிழந்து மூர்ச்சையாகிவிடுவார்கள்.) தமது ஒட்டகத்தின் தண்ணீர் தொட்டியைச் செப்பனிட்டுக்கொண்டிருக்கும் மனிதர் ஒருவரே அந்தச் சப்தத்தை முதலில் கேட்பார். உடனே அவர் மூர்ச்சையாகி (விழுந்து)விடுவார். (இதையடுத்து) மக்கள் அனைவரும் மூர்ச்சையாகிவிடுவர்.
பிறகு அல்லாஹ் மழையொன்றை அனுப்புவான்; அல்லது இறக்குவான். அது "பனித்துளி" அல்லது "நிழலைப்" போன்றிருக்கும். (அறிவிப்பாளர் நுஅமான் அவர்களே ஐயப்பாட்டுடன் அறிவிக்கிறார்.)
உடனே அதன் மூலம் மனிதர்களின் உடல்கள் மீண்டும் முளைக்கும். பிறகு மறுபடியும் ஒரு முறை எக்காளம் (ஸூர்) ஊதப்படும். அப்போது அவர்கள் அனைவரும் எழுந்து பார்த்துக்கொண்டிருப்பார்கள். பிறகு (மனிதர்களிடம்) "மக்களே! உங்கள் இறைவனிடம் வாருங்கள்" என்றும், (வானவர்களிடம்) "அவர்களைப் பிடித்து நிறுத்துங்கள்;அவர்கள் விசாரிக்கப்பட வேண்டியவர்கள்" என்றும் கூறப்படும்.
பிறகு "நரகத்திற்குச் செல்லவிருப்பவர்களை (மற்றவர்களைவிட்டுத்) தனியாகப் பிரித்திடுங்கள்" என்று கூறப்படும். அப்போது "எத்தனை பேரிலிருந்து (எத்தனை பேரை)?" என்று கேட்கப்படும். அதற்கு "(நரகத்திற்குச் செல்லவிருக்கும்) ஒவ்வோர் ஆயிரம் பேரிலிருந்தும் தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றொன்பது பேரை" என்று பதிலளிக்கப்படும். (பயங்கர சூழ்நிலையின் காரணத்தால்) பாலகன்கூட நரைத்து (மூப்படைந்து)விடுகின்ற நாள் அதுதான்; கணைக்கால் திறக்கப்படும் நாளும் அது தான்.
அத்தியாயம் : 52
5636. மேற்கண்ட ஹதீஸ் யஅகூப் பின் ஆஸிம் பின் உர்வா பின் மஸ்ஊத் (ரஹ்) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "ஒரு மனிதர் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களிடம், "யுக முடிவு நாளின்போது இன்னின்னது நடக்கும் என்று நீங்கள் கூறுகிறீர்களா?" என்று கேட்டார். அதற்கு அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள், "உங்களுக்கு எதையும் அறிவிக்கக்கூடாது என்றே நான் எண்ணியிருந்தேன். இதை மட்டும் கூறுகிறேன்: நீங்கள் சிறிது காலத்திற்குப்பின் மாபெரும் நிகழ்வொன்றைக் காண்பீர்கள். அதில் இறையில்லம் கஅபா தீக்கிரையாகும்" என்றோ,அல்லது இது போன்றோ கூறினார்கள்" என ஷுஅபா (ரஹ்) அவர்கள் ஐயப்பாட்டுடன் அறிவிக்கிறார்கள்.
மேலும் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "என் சமுதாயத்தாரிடையே தஜ்ஜால் புறப்பட்டுவருவான்..." என்று கூறி மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே அறிவித்தார்கள்.
அந்த அறிவிப்பில், "(ஷாம் திசையிலிருந்து வீசும் அந்தக் குளிர்ந்த காற்று) தம், உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கை (ஈமான்) உள்ள எந்த மனித(ரின் உயி)ரையும் கைப்பற்றாமல் விடாது" என்று இடம்பெற்றுள்ளது. (அதில் தமது உள்ளத்தில் கடுகளவு "நன்மை" அல்லது "இறைநம்பிக்கை" என்ற ஐயப்பாடு இடம்பெறவில்லை.)
அறிவிப்பாளர்களில் ஒருவரான முஹம்மத் பின் ஜஅஃபர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இந்த ஹதீஸை எனக்கு ஷுஅபா (ரஹ்) அவர்கள் பலமுறை அறிவித்தார்கள். நானும் இதை அவர்களிடம் (பலமுறை) சொல்லிக் காட்டியுள்ளேன்.
அத்தியாயம் : 52
5637. அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து ஒரு ஹதீஸை மனனமிட்டேன். இதுவரை அதை நான் மறக்கவில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறியதை நான் கேட்டேன்:
(மறுமை நாளின் அடையாளங்களில்) முதலாவதாக வெளிப்படும் அடையாளம், சூரியன் மேற்கிலிருந்து உதயமாவதும், (பூமியிலிருந்து) ஒரு (அதிசயப்) பிராணி முற்பகல் நேரத்தில் வெளிப்படுவதும் ஆகும். இவ்விரண்டில் எது முதலில் வெளிப்பட்டாலும் மற்றொன்றும் அதைத் தொடர்ந்து வெகுவிரைவில் வெளிப்பட்டுவிடும்.
- அபூஸுர்ஆ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
மதீனாவில் மர்வான் பின் அல்ஹகமுடன் முஸ்லிம்களில் மூன்றுபேர் அமர்ந்து, (மறுமை நாளின்) அடையாளங்கள் குறித்து மர்வான் கூறியதைக் கேட்டுக்கொண்டிருந்தனர். மர்வான், "(மறுமை நாளின் அடையாளங்களில்) முதலாவது அடையாளம் தஜ்ஜால் வெளிப்படுவதாகும்" என்று கூறினார்.
அப்போது அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள், "(தஜ்ஜாலைப் பற்றி) எதையும் மர்வான் (எனக்குக்) கூறவில்லை. நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்தே (அதைப் பற்றிய) ஹதீஸை மனனமிட்டேன். இதுவரை அதை நான் மறக்கவில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்" என்று கூறியபடி மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே அறிவித்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஸுர்ஆ (ரஹ்) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "மக்கள் மர்வான் பின் அல்ஹகம் அருகில் யுக முடிவு நாளைப் பற்றி பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்று அறிவித்தார்கள். அதில் "முற்பகல் நேரத்தில் (அந்தப் பிராணி வெளிப்படும்)" எனும் குறிப்பு இல்லை.
அத்தியாயம் : 52
பாடம் : 24 (தஜ்ஜாலின் உளவாளி) "ஜஸ்ஸாஸா" பற்றிய செய்தி.
5638. ஆமிர் பின் ஷராஹீல் அஷ்ஷஅபீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ளஹ்ஹாக் பின் கைஸ் (ரலி) அவர்களின் சகோதரியும், முந்திய முஹாஜிர்களில் ஒருவருமான ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்களிடம், "நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்ற ஹதீஸ் ஒன்றை எனக்கு அறிவியுங்கள். அது (நேரடியாக) நீங்கள் அல்லாஹ்வின் தூதரிடமிருந்து கேட்டதாக இருக்க வேண்டும். பிறர் மூலம் கேட்டதாக இருக்க வேண்டாம்" என்று கேட்டேன்.
அப்போது ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்கள், "நீங்கள் விரும்பினால் நிச்சயமாக அவ்வாறே செய்கிறேன்" என்றார்கள். நான் "ஆம் (அவ்வாறுதான் நான் விரும்புகிறேன்); எனக்கு ஹதீஸ் அறிவியுங்கள்" என்றேன். ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
நான் அன்றைய குறைஷி இளைஞர்களில் சிறந்தவர்களில் ஒருவரான முஃகீராவின் புதல்வருக்கு வாழ்க்கைப்பட்டிருந்தேன். அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்த முதல் போரில் காயப்படுத்தப்பட்ட(வர் ஆவா)ர்.
(அவர் என்னை மணவிலக்குச் செய்து) நான் விதவையாயிருந்தபோது, என்னை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்களில் ஒரு குழுவினர் பெண் கேட்டார்கள். அவர்களில் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களும் ஒருவராவார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் தம்மால் விடுதலை செய்யப்பட்ட அடிமையின் புதல்வரான உசாமா பின் ஸைத் அவர்களுக்காக என்னைப் பெண் கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "என்னை நேசிப்பவர்,உசாமாவையும் நேசிக்கட்டும்" என்று கூறிய செய்தியை நான் அறிந்திருந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் பேசியபோது, "என் காரியம் உங்கள் கையில் உள்ளது. நீங்கள் நாடியவருக்கு என்னை மணமுடித்து வையுங்கள்" என்று கூறினேன்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீ உம்மு ஷரீக்கின் இல்லத்துக்குச் சென்று தங்கி இரு" என்று சொன்னார்கள் - உம்மு ஷரீக் (ரலி) அவர்கள் அன்சாரிகளில் வசதி படைத்த பெண்மணியாகவும் அல்லாஹ்வின் பாதையில் பெருமளவில் செலவு செய்யக் கூடியவராகவும் இருந்தார். அவரது இல்லத்தில் விருந்தாளிகள் தங்குவார்கள்.- "அவ்வாறே செய்கிறேன்" என்று நான் கூறினேன்.
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(வேண்டாம்;) அப்படிச் செய்யாதே! உம்மு ஷரீக் ஏராளமான விருந்தாளிகளை உபசரிக்கும் ஒரு பெண்மணி ஆவார். உன் முகத்திரையோ உன் கணைக்காலிலிருந்து ஆடையோ விலகியிருக்க, நீ விரும்பாத சிலவற்றை மக்கள் பார்க்கும் நிலை ஏற்படுவதை நான் வெறுக்கிறேன். எனவே, நீ உன் தந்தையின் சகோதரரான (அம்ர் - உம்மு மக்தூம் தம்பதியரின் புதல்வரான) அப்துல்லாஹ் பின் அம்ர் பின் உம்மி மக்தூம் அவர்களின் இல்லத்துக்குச் சென்று தங்கியிரு" என்று கூறினார்கள்.
(அப்துல்லாஹ் பின் அம்ர் பின் உம்மி மக்தூம் குறைஷிக் குலத்திலுள்ள பனூ ஃபிஹ்ர் கிளையைச் சேர்ந்தவர் ஆவார். அந்தக் குடும்பத்தில் ஒருவராக ஃபாத்திமா பின்த் கைஸ் இருந்தார்.) அவ்வாறே நான் அவரது இல்லத்திற்குச் சென்று தங்கினேன். என் காத்திருப்புக் காலம் ("இத்தா") முடிந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பொது அறிவிப்பாளர்களில் ஒருவர், "கூட்டுத் தொழுகைக்கு வாருங்கள்" என்று அறிவிப்புச் செய்வதை நான் செவியுற்றேன். ஆகவே, நான் பள்ளிவாசலுக்குச் சென்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தொழுகையை நிறைவேற்றினேன்.
அப்போது நான் ஆண்களின் தொழுகை வரிசைக்குப் பின்னால் உள்ள பெண்களின் தொழுகை வரிசையில் இருந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்துச் சொற்பொழிவு மேடை (மிம்பர்)மீது சிரித்தபடியே அமர்ந்தார்கள். "ஒவ்வொருவரும் தாம் தொழுத இடத்தில் அப்படியே இருங்கள்" என்று கூறினார்கள். பிறகு, "நான் உங்களை ஏன் ஒன்று கூட்டினேன் என்று உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டார்கள். மக்கள், "அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்" என்று பதிலளித்தார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களுக்கு ஆர்வமூட்டுவதற்கோ அச்சுறுத்துவதற்கோ நான் உங்களை ஒன்றுகூட்டவில்லை. மாறாக, (மற்றொரு தகவலைச் சொல்வதற்காகவே) உங்களை ஒன்றுகூட்டினேன். கிறித்தவ மதத்தைச் சேர்ந்த தமீமுத் தாரீ எனும் ஒரு மனிதர் (என்னிடம்) வந்து வாக்குறுதிப் பிரமாணம் அளித்து இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்.
அவர் என்னிடம் ஒரு செய்தியைச் சொன்னார். அது(பெருங்குழப்பவாதியான) மசீஹுத் தஜ்ஜால் குறித்து நான் உங்களிடம் தெரிவித்திருந்த செய்திக்கு ஒத்திருந்தது. அவர் என்னிடம் கூறினார்:
நான் "லக்ம்" , "ஜுதாம்" ஆகிய குலங்களைச் சேர்ந்த முப்பது பேருடன் ஒரு கப்பலில் கடல் பயணம் மேற்கொண்டேன். அப்போது கடல் அலை ஒரு மாதகாலம் எங்களைக் கடலில் அலைக் கழித்துவிட்டது. பிறகு நாங்கள் கடலில் சூரியன் அஸ்தமிக்கும் (மேற்குத்) திசையில் ஒரு தீவில் ஒதுங்கினோம். பிறகு நாங்கள் சிறிய மரக்கலம் ஒன்றில் அமர்ந்து அங்கிருந்த தீவுக்குள் சென்றோம்.
அங்கு (உடல் முழுவதும் அடர்ந்த) முடிகள் நிறைந்த ஒரு பிராணி எங்களைச் சந்தித்தது. அதன் முன்பகுதி எது,பின்பகுதி எது என்றே எங்களால் அறிய முடியவில்லை. (உடல் முழுவதும்) முடிகள் நிறைந்திருந்ததே அதற்குக் காரணம்.
அப்போது நாங்கள், "உனக்குக் கேடுதான். நீ யார்?" என்று கேட்டோம். அதற்கு அந்தப் பிராணி "நான்தான் ஜஸ்ஸாஸா"என்று சொன்னது. "ஜஸ்ஸாஸா என்றால் என்ன?" என்று நாங்கள் கேட்டோம். அதற்கு அந்தப் பிராணி, "கூட்டத்தாரே! இந்த மண்டபத்திற்கு உள்ளே இருக்கும் மனிதரை நோக்கிச் செல்லுங்கள். அவர் உங்களைப் பற்றிய செய்தி அறிய ஆவலாக உள்ளார்" என்று சொன்னது.
அந்தப் பிராணி ஒரு மனிதனைப் பற்றிக் குறிப்பிட்டதைக் கேட்டு அது ஷைத்தானாக இருக்குமோ என்று நாங்கள் பயந்துவிட்டோம். உடனே நாங்கள் அந்த மனிதனை நோக்கி விரைந்து நடந்தோம். நாங்கள் அந்த மண்டபத்தைச் சென்றடைந்தோம். அங்கு மாபெரும் உருவமுடைய மனிதன் ஒருவன் இருந்தான். அவனைப் போன்ற ஒரு படைப்பை நாங்கள் ஒருபோதும் கண்டதில்லை. அவன் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்தான். அவனுடைய கைகள் அவனது தோளோடு சேர்த்து வைத்து இறுகக்கட்டப்பட்டிருந்தன. அவனுடைய முழங்கால்கள் கணுக்கால்களோடு சேர்த்துச் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்தன. அவனிடம் நாங்கள், "உனக்குக் கேடுதான். நீ யார்?" என்று கேட்டோம்.
"என்னைப் பற்றிய தகவலை நிச்சயம் நீங்கள் அறிந்துகொள்வீர்கள். (முதலில்) நீங்கள் யார் என்று கூறுங்கள்?" என்று கேட்டான். "நாங்கள் அரபு மக்கள். நாங்கள் கப்பலொன்றில் கடல் பயணம் மேற்கொண்டோம். கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு ஒரு மாதகாலமாகக் கடல் அலை எங்களை அலைக்கழித்துவிட்டது. பிறகு நீயிருக்கும் இந்தத் தீவில் நாங்கள் கரை ஒதுங்கினோம். பிறகு நாங்கள் சிறிய மரக்கலம் ஒன்றில் அமர்ந்து இந்தத் தீவுக்குள் நுழைந்தோம்.
அப்போது உடல் முழுவதும் அடர்ந்த முடிகள் கொண்ட பிராணி ஒன்று எங்களைச் சந்தித்தது. உடல் முழுவதும் முடிகள் நிறைந்திருந்த காரணத்தால் அதன் முன்பகுதி எது, பின்பகுதி எது என்று அறிய முடியவில்லை. நாங்கள் "உனக்குக் கேடுதான். நீ யார்?" என்று கேட்டோம். அது "நான்தான் ஜஸ்ஸாஸா" என்று சொன்னது. "ஜஸ்ஸாஸா என்றால் என்ன?" என்று கேட்டோம். அதற்கு அது, "இந்த மண்டபத்திலுள்ள இந்த மனிதரை நோக்கிச் செல்லுங்கள். அவர் உங்களைப் பற்றிய செய்தியை அறிய பெரும் ஆவலுடன் இருக்கிறார்" என்று கூறியது. ஆகவேதான், நாங்கள் உன்னை நோக்கி விரைந்து வந்தோம். அது ஷைத்தானாக இருக்கலாம் என்பதால் எங்களால் அச்சம் கொள்ளாமல் இருக்க முடியவில்லை" என்று சொன்னோம்.
அப்போது அவன், "பைசான் பேரீச்சந்தோட்டத்தைப் பற்றி எனக்குச் சொல்லுங்கள்" என்றான். "அந்தத் தோட்டத்தில் நீ எதைப் பற்றிக் கேட்கிறாய்?" என்று கேட்டோம்.
அதற்கு அவன், "அந்தப் பேரீச்சந்தோட்டத்தின் மரங்கள் கனிகள் தருகின்றனவா என்பதைப் பற்றியே நான் கேட்கிறேன்" என்றான். நாங்கள் "ஆம்" என்று பதிலளித்தோம். அவன், "அறிந்துகொள்ளுங்கள். அது கனியே தராத காலம் நெருங்கிக்கொண்டிருக்கிறது" என்று கூறினான்.
பிறகு "தபரிய்யா நீர்நிலை பற்றி எனக்குச் சொல்லுங்கள்" என்று கேட்டான். "அதில் எதைப் பற்றி நீ கேட்கிறாய்?"என்று நாங்கள் கேட்டோம். அதற்கு அவன், "அதில் தண்ணீர் இருக்கிறதா?" என்று கேட்டான். நாங்கள், "அதில் தண்ணீர் அதிகமாக இருக்கிறது" என்று பதிலளித்தோம். அவன், "அறிந்துகொள்ளுங்கள்: அதிலுள்ள நீர் வற்றும் காலம் நெருங்கிவிட்டது" என்று சொன்னான்.
பிறகு, "(ஷாம் நாட்டிலுள்ள) ஸுஃகர் நீரூற்றைப் பற்றி எனக்குச் சொல்லுங்கள்" என்று கேட்டான். நாங்கள், "அதில் எதைப் பற்றி நீ கேட்கிறாய்?" என்றோம். அதற்கு அவன், "அந்த ஊற்றில் தண்ணீர் உள்ளதா? அந்த ஊற்றுத் தண்ணீரால் மக்கள் பயிர் செய்கிறார்களா?" என்று கேட்டான். நாங்கள் "ஆம், அதில் தண்ணீர் அதிகமாக உள்ளது. அங்குள்ளவர்கள் அந்தத் தண்ணீரால் விவசாயம் செய்கிறார்கள்" என்று சொன்னோம்.
பிறகு அவன், "எழுத்தறிவற்ற மக்களின் இறைத்தூதர் பற்றி எனக்குச் சொல்லுங்கள். அவர் (இப்போது) என்ன செய்கிறார்?" என்று கேட்டான். நாங்கள், "அவர் மக்காவிலிருந்து புறப்பட்டுச் சென்று யஸ்ரிபில் (மதீனாவில்) தங்கியிருக்கிறார்" என்று பதிலளித்தோம்.
அவன், "அவருக்கும் அரபியருக்குமிடையே போர் நடந்ததா?" என்று கேட்டான். நாங்கள், "ஆம்" என்றோம். அவன், "அவர்களை அவர் என்ன செய்தார்?" என்று கேட்டான். நாங்கள், "அவர், தம் அருகிலுள்ள அரபியரை வெற்றி கொண்டுவிட்டார். அரபியர் அவருக்குக் கட்டுப்பட்டு விட்டனர்" என்று சொன்னோம். அதற்கு அவன், "அப்படித்தான் நடந்ததா?" என்று கேட்டான். நாங்கள் "ஆம்" என்றோம்.
அவன், "அறிந்துகொள்ளுங்கள். அவருக்குக் கட்டுப்பட்டு நடப்பதே அவர்களுக்கு நல்லதாகும். (இனி) நான் என்னைப் பற்றி உங்களுக்குச் சொல்கிறேன்: நான்தான் மசீஹ் (அத்தஜ்ஜால்) ஆவேன். நான் (இங்கிருந்து) புறப்பட அனுமதிக்கப்படும் நாள் நெருங்கிக்கொண்டிருக்கிறது. நான் புறப்பட்டு வந்து, நாற்பது நாட்களில் பூமியில் எந்த ஓர் ஊரையும் விட்டுவைக்காமல் பூமியெங்கும் பயணம் செய்வேன்; மக்காவையும் தைபாவையும் தவிர! அவ்விரண்டிற் குள்ளேயும் நுழைவது எனக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அவ்விரு நகரங்களில் ஏதேனும் ஒன்றில் நுழைய நான் நாடும்போதெல்லாம் என்னை நோக்கி வானவர் ஒருவர் வருவார். அவரது கையில் உருவியவாள் இருக்கும். (அதை வைத்து) அதற்குள் நுழைய விடாமல் அவர் என்னைத் தடுத்துவிடுவார். அதன் ஒவ்வொரு நுழைவாயிலிலும் வானவர் ஒருவர் இருந்து, அதைக் காவல் காத்துக்கொண்டிருப்பார்" என்று கூறினான்.
இதைக் கூறியபின் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தம்மிடமிருந்த கைத்தடியால் சொற்பொழிவு மேடைமீது குத்தியவாறு இது -அதாவது மதீனா நகரம்-தான் தைபா; இதுதான் தைபா; இதுதான் தைபா" என்று கூறிவிட்டு, "இதைப்பற்றி நான் உங்களுக்கு (முன்பே) அறிவித்துள்ளேன் அல்லவா?" என்று கேட்டார்கள். மக்கள், "ஆம் (அறிவித்தீர்கள்)" என்று பதிலளித்தனர். "தமீமுத் தாரீ சொன்ன இந்தச் செய்தி, தஜ்ஜாலைப் பற்றியும் மதீனா மற்றும் மக்கா பற்றியும் நான் ஏற்கெனவே உங்களிடம் நான் கூறியிருந்ததற்கு ஒப்பவே அமைந்திருக்கிறது" என்று கூறினார்கள்.
பிறகு அறிந்துகொள்ளுங்கள்: அ(ந்தத் தீவான)து, ஷாம் நாட்டுக் கடலில், அல்லது யமன் நாட்டுக் கடலில் உள்ளது. இல்லை; அது கிழக்குப் பகுதிக் கடலில் உள்ளது. அது கிழக்குப் பகுதிக் கடலில் உள்ளது. அது கிழக்குப் பகுதி கடலில் உள்ளது" என்று (அறுதியிட்டுச்) சொன்னார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இதைக் கூறும்போது கிழக்குத் திசையை நோக்கி தமது கரத்தால் சைகை செய்தார்கள். ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: இதை நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்தே மனனமிட்டேன்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 52
5639. ஷஅபீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்களிடம் (அவர்களது இல்லத்திற்குச்) சென்றோம். அவர்கள் எங்களுக்கு "ருதப் இப்னு தாப்" எனப்படும் பேரீச்சம் பழங்களை அன்பளிப்பாக வழங்கினார்கள். தொலி இல்லாத கோதுமை மாவால் செய்யப்பட்ட ஒரு வகை பானத்தையும் அருந்தக் கொடுத்தார்கள்.
அப்போது அவர்களிடம் நான், "மூன்று "தலாக்"கும் சொல்லப்பட்டு (தலாக்கை முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு)விட்ட பெண் எங்கே "இத்தா" இருப்பாள்?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள் கூறினார்கள்: என் கணவர் என்னை மூன்று "தலாக்" சொல்லி (முற்றிலுமாக விடுவித்து)விட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னை என் குடும்பத்தாரிடம் தங்கி "இத்தா" மேற்கொள்ள அனுமதியளித்தார்கள்.
அப்போது மக்களிடையே, "கூட்டுத் தொழுகை நடைபெறப்போகிறது" என்று அறிவிப்புச் செய்யப்பட்டது. அப்போது (பள்ளி வாசலை நோக்கி) நடந்துசென்றவர்களுடன் நானும் சென்று பெண்களின் வரிசையில் முதல் வரிசையில் இருந்தேன். அது ஆண்களின் வரிசையில் இறுதி வரிசைக்கு அடுத்திருந்தது.
அப்போது நபி (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடை (மிம்பர்)மீதிருந்தபடி, "தமீமுத் தாரியின் தந்தையின் சகோதரர் குலத்தைச் சேர்ந்த சிலர் கடல் பயணம் மேற்கொண்டனர்..." என்று தொடங்கி மேற்கண்ட ஹதீஸில் உள்ளபடி அறிவித்தார்கள்.
இந்த அறிவிப்பில், "அப்போது நபி (ஸல்) அவர்கள் தம்மிடமிருந்த கைத்தடியைப் பூமியை நோக்கிச் சாய்த்தவாறு, "இதுதான் தைபா - அதாவது மதீனா" என்று கூறியதை இப்போதும் நான் பார்ப்பதைப் போன்றுள்ளது" என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 52
5640. மேற்கண்ட ஹதீஸ் ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "தமீமுத் தாரீ அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, தாம் கடல் பயணம் மேற்கொண்டபோது (கடல் கொந்தளித்து அவர்களது) கப்பல் திசைமாறி ஒரு தீவில் ஒதுங்கியதாகவும், அப்போது (குடி)தண்ணீரைத் தேடியபடி அவர்கள் அந்தத் தீவுக்குள் போனதாகவும், அப்போது தமது முடியை இழுத்துக்கொண்டு வந்த ஒரு மனிதனைச் சந்தித்ததாகவும் கூறினார்கள்" என்று இடம்பெற்றுள்ளது. மற்றவை மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
"அந்த மனிதன், கவனியுங்கள்: எனக்குப் புறப்படுவதற்கு அனுமதியளிக்கப்படும்போது எல்லா ஊர்களிலும் என் பாதத்தைப் பதிப்பேன்; தைபா (எனும் மதீனா) தவிர" என்று கூறினான் என்றும், "அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமீமுத் தாரீ தம்மிடம் கூறியதை மக்களிடையே தெரிவித்துவிட்டு, இதுதான் தைபா; அவன்தான் தஜ்ஜால்" என்று கூறியதாகவும் இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 52
5641. மேற்கண்ட ஹதீஸ் ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீதமர்ந்து, மக்களே! தமீமுத் தாரீ என்னிடம், தம் சமுதாயத்தாரில் சிலர் தமக்குரிய கப்பலொன்றில் கடல் பயணம் மேற்கொண்டதாகவும், அப்போது கப்பல் உடைந்துவிட்டதாகவும், உடனே அவர்களில் சிலர் கப்பலில் இருந்த பலகைகளில் ஒன்றில் ஏறி கடலிலிருந்து ஒரு தீவுக்குச் சென்றதாகவும் தெரிவித்தார்" என்று கூறியதாக ஹதீஸ் ஆரம்பிக்கிறது. தொடர்ந்து மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே காணப்படுகிறது.
அத்தியாயம் : 52
5642. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்
மக்காவையும் மதீனாவையும் தவிர தஜ்ஜாலின் கால்படாத எந்த ஊரும் இராது. மதீனாவின் ஒவ்வொரு நுழைவாயிலிலும் வானவர்கள் அணிவகுத்து நின்று மதீனாவைப் பாதுகாப்பார்கள். ஆகவே, தஜ்ஜால் (மதீனாவுக்கு வெளியிலுள்ள) உவர் நிலத்தில் இறங்கித் தங்குவான். அப்போது மதீனா மூன்று முறை குலுங்கும். உடனே மதீனாவிலிருந்து ஒவ்வொரு இறைமறுப்பாளனும் நயவஞ்சகனும் அவனை நோக்கிப் புறப்பட்டுவருவார்கள்.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "ஆகவே, தஜ்ஜால் "அல்ஜுருஃப்" எனும் இடத்திலுள்ள உவர் நிலத்திற்குச் சென்று, தனது கூடாரத்தை அமைப்பான். அப்போது ஒவ்வொரு நயவஞ்சகனும் நயவஞ்சகியும் அவனை நோக்கி (மதீனாவிற்குள்ளிருந்து) புறப்பட்டுவருவார்கள்" என்று இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 52
பாடம் : 25 தஜ்ஜாலைப் பற்றிய இன்னும் சில தகவல்கள்.
5643. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தஜ்ஜாலைப் பின்தொடர்ந்து "அஸ்பஹான்" (ஈரான்) நாட்டைச் சேர்ந்த யூதர்களில் எழுபதாயிரம் பேர் வருவார்கள். அப்போது அவர்கள் "தயாலிசா" எனும் (கோடு போட்ட கெட்டியான) ஒரு வகை ஆடை அணிந்திருப்பார்கள்.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 52
5644. உம்மு ஷரீக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், "மக்கள் தஜ்ஜாலிடமிருந்து வெருண்டோடி மலைகளுக்குச் சென்றுவிடுவார்கள்" என்று கூறக்கேட்டேன். அப்போது நான், "அல்லாஹ்வின் தூதரே! (இறைவழியில் போராடும்) அரபியர் அப்போது எங்கே இருப்பார்கள்?" என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அப்போது அவர்கள் மிகக் குறைவான எண்ணிக்கையிலேயே இருப்பார்கள்" என்று பதிலளித்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் உம்மு ஷரீக் (ரலி) அவர்களிடமிருந்தே வேறு இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 52
5645. அபுத்தஹ்மா (ரஹ்), அபூகத்தாதா (ரலி) உள்ளிட்ட ஒரு குழுவினர் கூறியதாவது:
நாங்கள் ஹிஷாம் பின் ஆமிர் (ரலி) அவர்களைக் கடந்து இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்களிடம் செல்வோம். ஒரு நாள் ஹிஷாம் (ரலி) அவர்கள், "நீங்கள் என்னைக் கடந்து சில மனிதரை நோக்கிச் செல்கிறீர்கள். அவர்கள் என்னைவிட அதிகமாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அவையில் இருந்ததுமில்லை; என்னைவிட அதிகமாக அவர்களிடமிருந்து ஹதீஸ்களைச் செவியுற்றதுமில்லை.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(முதல் மனிதர்) ஆதம் (அலை) அவர்களைப் படைத்தது முதல் யுக முடிவுநாள் ஏற்படும்வரை தஜ்ஜாலைவிட (குழப்பத்தை ஏற்படுத்துகின்ற) மிகப் பெரும்படைப்பேதும் இல்லை" என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்" என்றார்கள்.
இதை ஹுமைத் பின் ஹிலால் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 52
5646. மேற்கண்ட ஹதீஸ் ஹுமைத் பின் ஹிலால் (ரஹ்) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "என் கூட்டத்தைச் சேர்ந்த மூன்றுபேர் கொண்ட ஒரு குழுவினர் என்னிடம் கூறினர். அவர்களில் அபூகத்தாதா (ரலி) அவர்களும் ஒருவராவார். நாங்கள் ஹிஷாம் பின் ஆமிர் (ரலி) அவர்களைக் கடந்து இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்களிடம் செல்வோம்" என்று கூறியதாக ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம் பெற்றுள்ளன. அதில், ("தஜ்ஜாலைவிட மிகப்பெரும் படைப்பு" என்பதற்குப் பதிலாக) "தஜ்ஜாலைவிட மிகப் பெரும் பிரச்சினை" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 52
5647. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஆறு அடையாளங்கள் நடைபெறுவதவற்கு முன் விரைந்து நற்செயல் புரியுங்கள். சூரியன் மேற்கிலிருந்து உதித்தல்,அல்லது புகை, அல்லது தஜ்ஜால், அல்லது (அதிசயப்) பிராணி, அல்லது தனிப்பட்ட முறையில் உங்களுக்கு ஏற்படும் மரணம், அல்லது ஒட்டுமொத்தமாக ஏற்படும் (யுக) முடிவு.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 52
5648. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஆறு அடையாளங்கள் ஏற்படுவதற்கு முன் விரைந்து நற்செயல் புரியுங்கள். 1. தஜ்ஜால் 2. புகை. 3. பூமியிலிருந்து வெளிப்படும் (அதிசயப்)பிராணி 4. சூரியன் மேற்கிலிருந்து உதயமாதல் 5. ஒட்டுமொத்தமாக ஏற்படும் (யுகமுடிவு) விஷயம் 6. தனிப்பட்ட முறையில் உங்களில் ஒருவருக்கு ஏற்படும் இறப்பு.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 52
பாடம் : 26 கொந்தளிப்பான காலத்தில் (இறைவனை) வழிபடுவதன் சிறப்பு.
5649. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கொந்தளிப்பான காலத்தில் இறைவனை வழிபடுவது, (நற்பலனில்) என்னிடம் நாடு துறந்து (ஹிஜ்ரத்) வருவதைப் போன்றதாகும்.
இதை மஅகில் பின் யசார் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மஅகில் பின் யசார் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 52
பாடம் : 27 யுக முடிவு நாள் நெருங்குதல்.
5650. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மனிதர்களில் தீயவர்கள் மீதே யுக முடிவு நாள் ஏற்படும். (அதற்கு முன்பே நல்லவர்கள் அனைவரும் மறைந்துவிடுவர்.)
இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 52
5651. சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், தமது பெருவிரலுக்கு அடுத்த (சுட்டு) விரலையும் நடுவிரலையும் (இணைத்துக் காட்டி) சைகை செய்து, "நானும் யுக முடிவு நாளும் இதோ இதைப் போன்று (நெருக்கமாகவே) அனுப்பப்பட்டுள்ளோம்" என்று கூறியதைக் கேட்டேன்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 52
5652. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நானும் யுக முடிவு நாளும் இதோ இந்த (சுட்டு விரல், நடு விரல் ஆகிய) இரு விரல்களைப் போன்று (நெருக்கமாகவே) அனுப்பப்பட்டுள்ளோம்" என்று கூறினார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஷுஅபா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
கத்தாதா (ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸை (எனக்கு) அறிவிக்கும்போது, "(உயரத்தில் அவ்விரல்களில்) ஒன்றைவிட மற்றொன்று உயர்ந்திருப்பதைப் போன்று" என்று கூறினார்கள். அதை அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாகத் தெரிவித்தார்களா, அல்லது தாமாகவே கூறினார்களா என்பது எனக்குத் தெரியவில்லை.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 52
5653. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நானும் யுக முடிவு நாளும் இவ்வாறு அனுப்பப் பட்டுள்ளோம்" என்று கூறினார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஷுஅபா (ரஹ்) அவர்கள் இதை அறிவிக்கும் போது, தம் சுட்டு விரலையும் நடுவிரலையும் இணைத்து (இவ்வாறு என்று) சைகை செய்து காட்டினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 52
5654. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தம் சுட்டு விரலையும் நடுவிரலையும் இணைத்தவாறு "நானும் யுக முடிவு நாளும் இவ்விரு விரல்களைப் போன்று அனுப்பப் பட்டுள்ளோம்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 52
5655. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
கிராமவாசிகள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வரும்போது யுக முடிவு நாளைப் பற்றி, "அது எப்போது வரும்?" என்று கேட்பார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அம்மக்களிலேயே வயதில் மிகச்சிறிய மனிதரைப் பார்த்து, "இதோ இவர் உயிருடன் வாழ்ந்தால் இவர் முதுமையை அடையாமல் இருக்கும்போதே உங்களின் யுக முடிவு (இறப்பு) நாள் சம்பவிக்கும்" என்று கூறுவார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 52
5656. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், "யுக முடிவு நாள் எப்போது வரும்?" என்று கேட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அருகில் "முஹம்மத்" எனப்படும் அன்சாரி சிறுவர் ஒருவர் இருந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அந்தச் சிறுவரைக் காட்டி), "இந்தச் சிறுவர் உயிருடன் வாழ்ந்து, அவருக்கு முதுமைப்பருவம் ஏற்படாமலிருக்கும் நிலையில் யுக முடிவு நாள் வரலாம்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 52
5657. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், "யுக முடிவு நாள் எப்போது வரும்?" என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் சிறிது நேரம் (பதிலளிக்காமல்) அமைதியாக இருந்தார்கள். பிறகு தமக்கு முன்னாலிருந்த "அஸ்த் ஷனூஆ" குலத்தைச் சேர்ந்த சிறுவர் ஒருவரைக் கூர்ந்து பார்த்துவிட்டு, "இவருக்கு வாழ்நாள் கிடைத்து, முதுமைப் பருவம் ஏற்படாமலிருக்கும்போது யுக முடிவு நாள் வரும்" என்று சொன்னார்கள்.
அந்தச் சிறுவர் அன்று என் வயதொத்தவர்களில் ஒருவராக இருந்தார்.
அத்தியாயம் : 52
5658. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்களின் அடிமைகளில் ஒருவர் (எங்களைக்)கடந்து சென்றார். அவர் என் வயதொத்தவர்களில் ஒருவராக இருந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், "இவரது வாழ்நாள் தள்ளிப்போய் இவரை முதுமைப் பருவம் அடைவதற்கு முன்பே யுக முடிவு நாள் வந்துவிடும்" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 52
5659. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு மனிதர் தமது ஒட்டகத்தில் பால் கறந்து அந்தப் பாத்திரத்தைத் தமது வாயருகே கொண்டுசென்றிருக்கமாட்டார். அதற்குள் யுக முடிவு சம்பவித்துவிடும். இரு மனிதர்கள் துணியை விரித்துப்போட்டுப் பேரம் பேசிக் கொண்டிருப்பார்கள். அவர்கள் பேரத்தை முடிப்பதற்கு முன்பே யுக முடிவு ஏற்பட்டுவிடும். ஒரு மனிதர் தமது தண்ணீர் தொட்டியைச் செப்பனிட்டுக்கொண்டிருப்பார். அவர் அதை முடிப்பதற்கு முன்பே யுக முடிவு ஏற்பட்டுவிடும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 52
பாடம் : 28 இரு எக்காளங்களுக்கும் ("ஸூர்") இடைப்பட்ட காலம்.
5660. அபூஸாலிஹ் ஃதக்வான் அஸ்ஸம்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அந்த இரு எக்காளத்திற்கு (ஸூர்) மத்தியில் (இடைப்பட்ட காலம்) நாற்பதாகும்" என்று கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் தெரிவித்தார்கள்.
அப்போது மக்கள், "அபூஹுரைரா அவர்களே! நாட்களில் நாற்பதா?" என்று கேட்டார்கள். அபூஹுரைரா (ரலி) அவர்கள், "(இதற்குப் பதில் சொல்வதிலிருந்து) நான் விலகிக் கொள்கிறேன்" என்று கூறினார்கள். மக்கள், "மாதங்களில் நாற்பதா?"என்று கேட்டார்கள். அபூஹுரைரா (ரலி) அவர்கள், "(மீண்டும் நான் விலகிக்கொள்கிறேன்" என்று சொன்னார்கள்.
மக்கள், "வருடங்களில் நாற்பதா?" என்று கேட்டார்கள். அபூஹுரைரா (ரலி) அவர்கள் (மீண்டும்), "நான் விலகிக் கொள்கிறேன் (எனக்கு இது குறித்துத் தெரியாது)" என்று கூறிவிட்டு, "பிறகு அல்லாஹ், வானத்திலிருந்து ஒரு நீரை இறக்குவான். உடனே இ(றந்துபோன)வர்கள் பச்சைப் புற்பூண்டுகள் முளைப்பதைப் போன்று எழுவார்கள். மனிதனின் எல்லா உறுப்புகளும் (மண்ணுக்குள்) மக்கிப்போய் விடும்; ஒரே ஒரு எலும்பைத் தவிர! அது (அவனது முதுகுத்தண்டின் வேர்ப் பகுதியிலிருக்கும்) உள்வால் எலும்பின் (அணுவளவு) நுனியாகும். அதை வைத்தே படைப்பினங்கள் (மீண்டும் மறுமை நாளில்) படைக்கப்படும்" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 52
5661. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஆதமின் மகனின் (மனிதனின் உடலிலுள்ள) அனைத்துப் பகுதிகளையும் மண் தின்றுவிடும்; மனிதனின் (முதுகுத்தண்டின் வேர்ப்பகுதியிலிருக்கும்) உள்வால் எலும்பின் நுனியைத் தவிர! அதை வைத்தே அவன் (தன் தாயின் கருவறையில் முதன் முதலாக) படைக்கப்பட்டான். அதிலிருந்தே அவன் (மீண்டும் மறுமை நாளில்) படைக்கப்படுவான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 52
5662. ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் எமக்கு அறிவித்த ஹதீஸ்களாகும். அவற்றில் பின்வரும் ஹதீஸும் ஒன்றாகும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "மனிதனின் உடலில் எலும்பு ஒன்று உள்ளது. அதை பூமி ஒருபோதும் புசிக்காது. அதை வைத்தே (மீண்டும்) மறுமை நாளில் அவன் படைக்கப்படுவான்" என்று சொன்னார்கள்.
மக்கள், "அது எந்த எலும்பு அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், "உள்வால் எலும்பின் நுனி" என்று பதிலளித்தார்கள்.


أحدث أقدم