ஹதீஸ் கலை விரிவான விளக்கம்

 

ஹதீஸ் கலை பாடம்


(3:32) அல்லாஹ் கூறுகிறான் : எனக்குக் கட்டுப்படுங்கள் என்னுடைய தூதருக்கும் கட்டுப்படுங்கள்.


 நாம் ஏன் தூதருக்குக் கட்டுப்பட வேண்டும்?


அல்லாஹ் குர்ஆனில் எல்லாவற்றையும் கூறிவிட்டு அதனை முழுமையாக விளக்கமாக விளக்கி சொல்ல விளக்கவுரையாக வழிகாட்டலாக தூதரை அனுப்பினான்.


ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள் : ரசூல்லாஹ்வின் வாழ்க்கை குர்ஆனாகவே இருந்தது.


 உதாரணமாக 


அல்லாஹ் குர்ஆனில் ஒழு செய்யுங்கள் (4:43) என்று கூறுகிறான். ஒழு எப்படி செய்ய வேண்டும் என விளக்கமாக குர்ஆனில் சொல்லப் படவில்லை. அந்த உளூவை நாம் எப்படி செய்ய வேண்டும் என்று நபி ஸல் அவர்கள் சொல்லி தந்தார்கள்.


ஏன் நாம் ஹதீஸை பின்பற்ற வேண்டும்?


அல்லாஹ் குர்ஆனில் சொல்லப்பட்ட விடயங்களுக்கு விளக்க உரையாக ஹதீஸை அனுப்பினான்.


நபி ஸல் அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் ஆகியன ஹதீஸ் எனப்படும்.


ஹதீஸில் இல்லாத விடயங்கள் இட்டுக்கட்டப்படுவதன் காரணமாக எது சரியான ஹதீஸ் என்று படிப்பதே ஹதீஸ் கலை ஆகும்.


குர்ஆன்  இறைவனால் அருளப்பட்டது.


ஹதீஸ்  நபி ஸல் அவர்களின் வாழ்க்கை வழிமுறை.


உதாரணமாக 

(2:187) ஆயத்தில் கறுப்பு கயிறிலிருந்து வெள்ளை கயிறு தெளிவாகும் வரை உண்னுங்கள். இதை ஒரு சஹாபி தன் தலையணை அடியில் கறுப்பு நூலை வைத்து விட்டு உறங்கினார்கள். வெள்ளை ஆக வில்லையே என்று விடிந்தவுடன் நபி ஸல் அவர்களிடம் சொல்கிறார்கள். இதை கேட்ட நபி ஸல் அவர்கள் தன் கடவாய் பற்கள் தெரியும் அளவிற்கு சிரிக்கிறார்கள்.


அல்லாஹ் கூற கூடிய விஷயம் அது அல்ல என்று விளக்கினார்கள்.


நமக்கும் ஹதீஸ் அனுப்பவில்லை என்றால் நாமும் இது போலவே விளங்கியிருப்போம். அதனால் தான் நாம் தூதருக்கு கட்டுப்பட வேண்டும்.


நாம் பின்பற்ற வேண்டியது குர்ஆன் மற்றும் ஹதீஸ் ஆகும்.



குர்ஆன் என்றால் என்ன?


குர்ஆன் என்பது ஜிப்ரீல் அலை மூலமாக நபி ஸல் அவர்களுக்கு வஹியாக அனுப்பப்பட்டது தான் இந்தகுர்ஆன்.


அதற்காக ஜிப்ரீல் அலை அவர்கள் மூலமாக வஹியாக வந்த அனைத்தும் குர்ஆன் அல்ல.


எதை அல்லாஹ் குறிப்பிட்டு குர்ஆன் என்று கூறினானோ அதுவே குர்ஆனாக வந்தது.


குர்ஆன் அல்லாத மற்ற வஹிகளும் ஜிப்ரீல் அலை மூலமாக வந்தது.


உதாரணமாக


அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு நாள் மக்கள் முன் வந்திருந்தார்கள். அப்போது ஒரு மனிதர் அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! ஈமான் (இறைநம்பிக்கை) என்றால் என்ன?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்வையும் அவனுடைய வானவர் (மலக்கு)களையும், அவனுடைய வேதத்தையும், அவனது சந்திப்பையும், அவனுடைய தூதர்களையும் நீங்கள் நம்புவதும், (மரணத்திற்குப் பின்) இறுதியாக (அனைவரும்) உயிருடன் எழுப்பப்படுவதை நம்புவதும் ஆகும்” என்று பதிலளித்தார்கள். அல்லாஹ்வின் தூதரே! இஸ்லாம்” (அடிபணிதல்) என்றால் என்ன?” என்று அவர் கேட்டார். நபி (ஸல்) அவர்கள், இஸ்லாம் என்பது அல்லாஹ்வை நீங்கள் வணங்குவதும், அவனுக்கு நீங்கள் எதையும் இணைவைக்காமலிருப்பதும், கடமையான தொழுகையைக் கடைப்பிடிப்பதும், கடமையான ஸகாத்தை நிறைவேற்றி வருவதும், ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பதும் ஆகும்” என்றார்கள். அம்மனிதர், அல்லாஹ்வின் தூதரே! இஹ்சான் (அழகிய முறையில் செயலாற்றல்) என்றால் என்ன?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், இஹ்சான் என்பது அல்லாஹ்வை நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பதைப் போன்ற உணர்வுடன் வழிபடுவதாகும். நீங்கள் அவனைப் பார்த்துக்கொண்டிராவிட்டாலும் அவன் உங்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறான்” என்று பதிலளித்தார்கள். அல்லாஹ்வின் தூதரே! மறுமை(நாள்) எப்போது வரும்?” என்று அம்மனிதர் கேட்க, நபி (ஸல்) அவர்கள், கேள்வி கேட்கப்படுபவர் (அதாவது நான்), கேட்பவரைவிட (அதாவது உங்களைவிட) அதிகம் அறிந்தவர் அல்லர். ஆயினும், நான் உங்களுக்கு மறுமை நாளின் அடையாளங்கள் சிலவற்றை எடுத்துரைக்கிறேன் என்றார்கள்: ஓர் அடிமைப் பெண் தன் எசமானைப் பெற்றெடுப்பாளாயின் அது மறுமையின் அடையாளங்களில் ஒன்றாகும். முழு ஆடையில்லாத, செருப்பணியாதவர்கள் எல்லாம் மக்களின் தலைவர்களாக இருந்தால் அதுவும் அதன் அடையாளங்களில் ஒன்றாகும். ஆட்டுக்குட்டிகளை மேய்ப்பவர்கள் போட்டி போட்டுக்கொண்டு உயரமான கட்டடங்களைக் கட்டினால் அதுவும் மறுமையின் அடையாளங்களில் ஒன்றாகும். (மறுமை நாள் எப்போது நிகழவிருக்கிறது எனும் அறிவானது) அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியாத ஐந்து விஷயங்களில் அடங்கும். பிறகு,நிச்சயமாக, மறுமை (நாள் எப்போது நிகழும் என்பது) பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. அவனே மழையை இறக்கிவைக்கிறான். இன்னும் அவன் கர்ப்பங்களில் உள்ளவற்றையும் (தீர்க்கமாக) அறிகின்றான். தாம் நாளை என்ன சம்பாதிப்போம் என்பதை (அவனைத் தவிர வேறு) யாரும் (உறுதியாக) அறிவதில்லை. எந்த இடத்தில் தாம் இறக்கப்போகிறோம் என்பதையும் எவரும் அறிவதில்லை. அல்லாஹ்தான் (இவற்றையெல்லாம்)நன்கறிந்தவன்; நுணுக்கமானவன்” எனும் (31:34ஆவது) இறை வசனத்தை நபியவர்கள் ஓதிக் காட்டினார்கள். பின்னர் (கேள்வி கேட்ட) அம்மனிதர் திரும்பிச் சென்றுவிட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அந்த மனிதரைத் திரும்ப என்னிடம் அழைத்துவாருங்கள்” என்று சொன்னார்கள். மக்கள் உடனே அவரைத் திரும்ப அழைத்துவரச் செல்லலாயினர். (அவரைத் தேடியும்) அவரை அவர்கள் எங்கேயும் காணவில்லை. பின்னர், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இ(ப்போது வந்து போன)வர், (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள்தாம். மக்களுக்கு அவர்களது மார்க்கத்(தின் அடிப்படைத் தத்துவத்)தை கற்றுத் தருவதற்காக அவர் வந்திருந்தார்” என்று சொன்னார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

ஸஹீஹ் முஸ்லிம் : 5

அத்தியாயம் : 1 இறைநம்பிக்கை.


இந்த ஹதீஸிலிருந்து ஜிப்ரீல் அலை அவர்கள் மூலமாக வரும் வஹி அனைத்தும் குர்ஆன் இல்லை என்பது விளங்குகிறது.


மலக்குகள் மூலம் வரும் வஹியானது எதை அல்லாஹ் குர்ஆன் என்று சொல்லி அனுப்பினானோ அது தான் வஹி. மற்ற விஷயங்கள் ஹதீஸ் ஆகும்.


நபிமார்களுக்கு இறைச்செய்தி மூன்று விதமாக வரும்.


1] வானவர்கள் மூலமாக :

   1.ஜிப்ரீல் அலை மூலம்.

   2.மற்ற வானவர்கள் மூலம்.


1.ஜிப்ரீல் அலை மூலமாக வரும் வஹி குர்ஆனாகவும், ஹதீஸாகவும் இடம் பெறும்.


2.மற்ற வானவர்கள் மூலம் வரும் வஹி ஹதீஸாக மட்டுமே இடம் பெறும்.


நபி ஸல் அவர்கள் குர்ஆன் வஹியை எப்படி கண்டுபிடிப்பார்கள் என்றால், லவ்ஹூல் மவ்பூல் மூல பிரதியிலிருந்து அறிவிக்கப்படும்போது இது தான் குர்ஆன் என்று முன்கூட்டியே அறிவிக்கப்படும்.


2] திரைக்கு அப்பால்:

அல்லாஹ் தன்னை மறைத்து கொண்டு திரைக்கு அப்பால் இருந்து பேசுவான்.


உதாரணமாக:

மிஹ்ராஜ் பயணத்தின் போது தொழுகை கடமையாக்கப்படும். 50 வேளை தொழுகை கடமையாக்கப்படும். அந்த சமயத்தில் அல்லாஹ் நேரடியாக பேசுவான். ஆனால் முகம் தெரியாது. (இவை ஹதீஸில் இடம் பெறும்).


3] நபிமார்களின் உள்ளத்தில் வஹியை போடுவது.

 நபிமார்களின் உள்ளத்திலோ அல்லது கனவு மூலமாகவோ இந்த முறையில் வஹி வரும்.


உதாரணமாக:

இப்ராஹீம் அலை தன் மகனை அறுத்து பலியிடுவதை போன்று கணவு கண்டார்கள்.



குர்ஆன் எழுத்து வடிவில் அருளப்பட்டதா?


குர்ஆன் எழுத்து வடிவில் அருளப்படவில்லை. நபியவர்களுக்கு குர்ஆன் ( ஒலி ) வடிவில் அருளப்பட்டது. பார்க்க : அல்குர்ஆன் 75:16


எப்படி குர்ஆன் எழுத்து வடிவில் ஆனது?


நபி(ஸல்) அவர்கள் குர்ஆனை எழுதுவதற்கு அலி, முஆவியா, உபய் பின் கஃப், ஜைத் பின் ஸாபித் போன்ற சஹாபாக்களை நியமித்திருந்தார்கள். வஹி இறங்கியவுடன் எழுதுபவர்களை அழைத்து அதனை எழுதும் படி கட்டளையிடுவார்கள்.


அதே போல் சஹாபாக்களில் பலரும் தாங்கள் ஓதுவதற்காக தாங்களாக முன் வந்து குர்ஆனை எழுதிவைத்திருந்தார்கள்.


இப்படி குர்ஆன் முழுவதும் எழுதப்பட்டிருந்தது. ஆனால் ஒரே ஏட்டில் முழுமையாக எழுதப்படவில்லை. அதாவது சிலரிடம் சில சூராக்களும் வேறு சிலரிடம் வேறு சில சூராக்களும் என்கிற நிலையே இருந்தது. இவ்வாறு இருக்கும் நிலையிலேயே நபியவர்கள் மரணமடைந்தார்கள். 


நபி ஸல் அவர்கள் மரணத்திற்கு பின் அபூபக்கர் (ரழி) ஆட்சியின் போது உஸைமா என்று சொல்லக்கூடிய ஒருவன் நான் தான் இறைத்தூதர் என்று கூறி குழப்பங்களை ஏற்படுத்துவான். உஸைமாவின் கூட்டத்திற்கும் முஸ்லிம்களுக்கும் நடந்த போரில் (யமாமா போர்) குர்ஆனை மனனம் செய்த 70க்கும் மேற்பட்ட தோழர்கள் கொல்லப்படுவார்கள். உமர் (ரலி) க்கு இது வேதனையை ஏற்படுத்தியதும் மீதம் இருப்பவர்களும் கொல்லப்படலாம் எனும் அச்சத்தில் ஒரே ஏட்டில் எழுத்து வடிவில் கொண்டு வரலாம் என கூறினார்கள். ஆனால் அபூபக்கர் (ரலி) தடுத்தார்கள். காரணம் நபி ஸல் அவர்கள் காலத்தில் இவை இல்லை என்பதால். உமர் (ரலி) அதிகமாகா ஆலோசனை கொடுக்கவும் அபூபக்கர் (ரலி) ஏற்றுக் கொள்கிறார்கள்.


ஜைத் இப்னு ஜாபித் (ரலி) வயதில் சிறுவராக இருப்பதனாலும் நிறைய மனன சக்தி உள்ளவர்களாகவே இருப்பதனாலும் அவர்களின் கீழ் குர்ஆன் தொகுக்கப்பட்டது. (புகாரி-4679). அதன் பிறகு தான் குர்ஆன் பிரதி எடுக்கப்பட்டது.



ஹதீஸ் என்றால் என்ன?


ஹதீஸ் என்பது நபி ஸல் அவர்களின் சொல், செயல், அவர்கள் எதை அங்கீகரித்தார்களோ, அவை தான் ஹதீஸ் ஆகும்.


ஹதீஸ்கள் தொகுக்கப்பட்டது எங்கே?


நபி ஸல் அவர்கள் காலத்திலேயே எப்படி குர்ஆன் எழுதி வைக்கப்பட்டதோ, அது போல நபி ஸல் அவர்கள் காலத்திலேயே ஒரு சிலர் ஹதீஸை எழுதி வைத்திருந்தார்கள். ஆனால் ஹதீஸுக்கு அவர்கள் அந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. நபி ஸல் அவர்கள் கூறுவதை மக்கள் பின்பற்றி வந்தார்கள். குறைவான மக்களே எழுதி வைத்திருந்தார்கள்.


நபி ஸல் அவர்கள் காலத்தில் ஹதீஸை எழுதி வைத்திருந்தவர்கள்:


‘நபி(ஸல்) அவர்களின் தோழர்களில் எவரும் என்னை விட அதிகமான ஹதீஸ்களை அறிவிக்கவில்லை, அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அவர்களைத் தவிர. அவர்களிடம் கொஞ்சம் நபிமொழிகள் இருந்தன. காரணம் அவர்கள் (ஹதீஸ்களை) எழுதி வைத்துக் கொள்வார்கள். நான் (நினைவில் வைத்துள்ளேன்) எழுதி வைத்ததில்லை’ என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

ஸஹீஹ் புகாரி : 113.

அத்தியாயம் : 3.

கல்வியின் சிறப்பு.


அலீ(ரலி) அறிவித்தார்கள் :

‘அல்லாஹ்வின் வேதத்தையும் நபியவர்களிடமிருந்து கிடைத்த இந்த ஏட்டையும் தவிர (எழுத்து வடிவிலான மார்க்கச் சட்டம்) வேறு எதுவும் (நபியின் குடும்பத்தாரான) எங்களிடம் இல்லை!

ஸஹீஹ் புகாரி : 1870.

அத்தியாயம் : 29.

மதீனாவின் சிறப்புகள்.


உமர் (ரலி) அவர்களின் ஆலோசனை:


நபி மொழிகளை எழுதிவைத்துக்கொள்ள உமர் (ரலி) அவர்கள் நாடியபோது நபித்தோழர்களிடம் ஆலோசனை செய்யதார்கள். ஒரு மாதம் அல்லாஹ்விடம் இஸ்திகாரா தொழுகை தொழுதுவந்தார்கள். ஒரு நாள் காலை அவருக்கு அல்லாஹ் ஒரு உறுதியை கொடுத்தான். அப்போது நான் நபிமொழியை எழுதிக்கொள்ள நாடினேன். ஆனால் முன்னர் ஒரு கூட்டத்தினர் புத்தகமாக எழுதிவைத்துக்கொண்டு அதை பற்றிப்பிடித்துக்கொண்டு இறைவேதத்தை விட்டுவிட்டனர், அல்லாஹ்வின் மீது ஆணையாக அல்லாஹ்வின் வேதத்தோடு ஒரு போதும் எந்த ஒன்றையும் நான் சேர்க்க மாட்டேன் என்று உமர்(ரலி) அவர்கள் கூறினார்கள்.

(நூல்: அல்மத்கல்,பாகம் 1,பக்கம் 407)


தாபியீன்களில் நபிமொழியை முதலில் தொகுத்தவர்கள்:


தாபீயீன்கள் காலத்தில் உமர் பின் அப்துல் அஸீஸ் (ரஹ்) அவர்கள் (மதீனாவின் ஆளுநராயிருந்த) அபூபக்ர் பின் ஹஸ்ம் (ரஹ்) அவர்களுக்கு கடிதம் எழுதினார்கள். அதில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்கள்:


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பற்றிய செய்தி (ஹதீஸ்)களை ஆராய்ந்து அதனை எழுதி(த் தொகுத்து) வைத்துக் கொள்வீர்களாக! ஏனெனில், மார்க்கக் கல்வி அழிந்து போய்விடுமென்றும் மார்க்க அறிஞர்கள் (இவ்வுலகைவிட்டுச்) சென்றுவிடுவார்கள் என்றும் நான் அஞ்சுகின்றேன். (அவ்வாறு எழுதும்போது) நபி (ஸல்) அவர்களின் செய்தி (ஹதீஸ்)களைத் தவிர வேறு எதையும் (பதிவுசெய்ய) ஏற்கக்கூடாது. (கற்றவர்கள்) அறிவைப் பரப்பட்டும்; கல்லாதவர்களுக்கு அது கற்பிக்கப்படும்வரை கற்றோர் (ஓரிடத்தில் நிலையாக) அமர்ந்து கொள்ளட்டும். ஏனெனில், கல்வி இரகசியமாக இருக்கும்போதே அழிகிறது.

புஹாரி 100


ஹதீஸை தொகுப்பாக எழுதியவர்கள்:


முதலில் ஸயீத் இப்னு மன்ஸூர் போன்றவர்கள் தொகுத்தனர். மேலும் அவர் ஹதீஸ்களை புத்தகமாக எழுதுகிறார். அவர் எழுதிய புத்தகத்தின் பெயர் சுனன் ஸயீத் இப்னு மன்ஸூர் ஆகும். இவருடைய பிறப்பு ஹிஜ்ரி 47- ஹிஜ்ரி 127 வரை. ரஸுலுல்லாஹ் “ஹிஜ்ரி – 11” வபாத் ஆனார்கள். எனவே ஆரம்ப காலத்திலயே ஹதீஸ் எழுதப்பட்டது.


இதற்கு பின் ஸுஃபா. இவர் ஹிஜ்ரி – 82ல் பிறந்து ஹிஜ்ரி – 160ல் வபாத் ஆகினார்கள்.


இமாம் மாலிக் “மூஆத்தா” என்ற புத்தகத்தை எழுதினார்கள். பிறப்பு ஹிஜ்ரி 93 – 179 ஆகும்.


இவருக்கு அடுத்து இன்னும் நிறைய பேர் ஹதீஸ் புத்தகங்களை எழுதினார்கள். ஆனால் இவர்கள் எழுதிய ஹதீஸ்களானது, மக்கள் என்ன சொல்கிறார்களோ அதை அப்படியே எழுதினார்கள்.


இமாம் மாலிக் (ஹிஜ்ரீ 93-179) மரணித்தார்கள்.

இமாம் புகாரீ (ஹிஜ்ரீ 194-256) மரணித்தார்கள்.

இமாம் முஸ்லிம் (ஹிஜ்ரீ 204-261) மரணித்தார்கள்.

இமாம் நஸயீ (ஹிஜ்ரீ 215-303) மரணித்தார்கள்.

இமாம் அபூதாவூத் (ஹிஜ்ரீ 202-275) மரணித்தார்கள்.

இமாம் திர்மிதீ (ஹிஜ்ரீ 209-270) மரணித்தார்கள்.

இமாம் இப்னுமாஜா (ஹிஜ்ரீ 207-273) மரணித்தார்கள்.


இரண்டாவதாக புத்தகம் எழுதிய ஸூஃபா அவர்கள் கேள்வி எழுப்பினார்கள். இப்படியே எழுதினால் எது உண்மை எது பொய் என்று தெரியாது என முதல் முதலில் ஹதீஸ் கலை என்பதை உருவாக்கினார்கள். இவரை ஹதீஸ் கலையின் ஆசிரியர் என்று கூட சொல்லலாம். ஏன் என்றால் குர்ஆன் அருளப்பட்டவுடன் தொழுகையில் நபி ஸல் அவர்கள் ஓதுவார்கள். எனவே குர்ஆன் ஆனது அனைத்து மக்களுக்கும் போய் சென்றடைந்தது. அனைவரும் மனனம் செய்தனர். ஆனால் ஹதீஸை பொருத்த வரை நபி ஸல் அவர்களுடன் தொடர்புபட்ட அந்த சம்பவத்தில் உடன் இருந்தவர்களுக்கு மட்டுமே தெரியும். எல்லோருக்கும் சென்றடையும் அளவிற்கு ஹதீஸ் பரவவில்லை.


ஹதீஸ்களை அறிவிப்பவர்களில் எவர் உண்மை சொல்லக்கூடிய நபர், எவர் எப்படிப்பட்டவர் என ஆராய்ச்சி செய்ய ஸூஃபா திட்டமிட்டார்கள். இதை அவர் மனோ இச்சையின் அடிப்படையில் செய்யவில்லை. மாறாக, குர்ஆனில் (9:102) இந்த வசனம் தான் அவருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அவர் உண்மையான ஹதீஸை மட்டுமே அறிவிக்க வேண்டும் என்று எண்ணினார்.


 يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِنْ جَآءَكُمْ فَاسِقٌ بِنَبَاٍ فَتَبَيَّنُوْۤا اَنْ تُصِيْبُوْا قَوْمًا بِجَهَالَةٍ فَتُصْبِحُوْا عَلٰى مَا فَعَلْتُمْ نٰدِمِيْنَ 

 நம்பிக்கையாளர்களே! யாதொரு விஷமி உங்களிடம் யாதொரு செய்தியைக் கொண்டுவந்தால், (அதன் உண்மையை அறியும் பொருட்டு அதனைத்) தீர்க்க விசாரணை செய்து கொள்ளுங்கள். (இல்லையெனில், அவனுடைய சொல்லை நம்பி) அறியாமையால் யாதொரு மக்களுக்கு நீங்கள் தீங்கிழைத்துவிட்டுப் பின்னர், நீங்கள் செய்தவைகளைப் பற்றி நீங்களே துக்கித்துக் கவலைப்படும்படியும் நேர்ந்துவிடும். (அல்குர்ஆன் : 49:6) என்ற வசனத்தின் மூலம் ஒரு சந்தேகத்தை ஏற்படுத்தியது.


ஒரு மனிதரின் பேச்சை எப்படி நம்புவது, அவருடைய “உள்ளத்தை” அறிய முடியாது அதை இறைவனே அறிவான். அப்போது அவர்களுடைய வெளி தோற்றத்தை பேண முடிவு செய்தார்கள்.


இவர் உண்மை பேசுவார்.  இவர் ஞாபக சக்தி கொண்டவர் போன்றவற்றின் அடிப்படையில் அலசப்பட்டது.



”உள்ளத்தை அறிய முடியாது”:


நபி ஸல் அவர்கள் காலத்தில் உஸாமா (ரலி) அவர்களின் தலைமையில் போருக்கு சென்றனர். அதில் எதிரி கூட்டத்தில் ஒருவர் நான் இஸ்லாத்தை ஏற்று கொள்கிறேன் என்னை விட்டு விடுங்கள் என்னை கொலை செய்யாதீர்கள் என்று கூறிய போதிலும் அவர் பொய் சொல்வதாக எண்ணி உஸாமா ரலி கொண்றுவிட்டார்கள். இதை நபி ஸல் அவர்கள் கேட்டதும் உஸாமா (ரலி) அவர்களை மிக கண்டித்தார்கள். நீ அவருடைய உள்ளத்தை பிளர்ந்து பார்த்தாயா ? என்று நபி ஸல் கேட்டுக் கொண்டே இருந்தார்கள்.


இந்த ஹதீஸின் மூலம் புஹாரி இமாம் ஹதீஸ்களை அலசி ஆராய்ந்தாலும் முஸ்லிம், அபூதாவூத் அவர்கள் புஹாரி இமாமின் மாணவர்கள் என்பதாலும் புஹாரி இமாம் அதிக பிரபல்யமானார்கள். ஆனால் மற்ற இமாம்கள் பிரபல்யமாகாததற்கு காரணம் புத்தகம் இருந்தாலும் அதனை வெளிக் கொண்டு வர ஆட்கள் இல்லை.


ஸூஃபா அவர்களை தொடர்ந்து, முஹம்மது இப்னு ஹம்பல், அலி இப்னு மதனி, யஹய் இப்னு முஹைனா ஆகியோர் ஹதீஸ் கலை எழுதினார்கள். ஆதாரபூர்வமான முறையில் ஹதீஸ் கலை இருந்ததால் அதனை மக்கள் ஏற்றுக் கொண்டனர்.


புஹாரி ஹதீஸ்கள் கிடைத்ததென்றால் ஊர் ஊராக சென்று எழுதவில்லை. ஒவ்வொரு ஊரிலும் அறிஞர்கள் இருந்தனர். மார்க்கத்தை கற்றவர்களிடம் கூப்பிட்டு எழுதி வைத்தார்கள். மக்காவில் இப்னு ஜுரைர் என்பவர் இருந்தார். அவர் ஹிஜ்ரீ 150ல் வஃபாத் ஆனார். மக்காவில் அவர் தங்கியிருந்த காலத்தில் ஹதீஸ் தொகுத்தவர்களை அழைத்து ஹதீஸ்கலை எழுதினார்கள்.


நபி [ஸல்] அவர்களிடமிருந்து

 ↓

சஹாபாக்கள்

{நபி தோழர்கள்}

 ↓

தாபியீன்கள்

 ↓

தபா தாபியீன்கள்


மக்காவில் இப்னு இஸ்ஹாக் என்பவரும் ஹதீஸை எழுதி வைத்தார்கள். இவர் 151ல் மரணித்தார்கள். இவர்களுடைய ஹதீஸ்கள் 90% சரியாக இருந்தது.10% வார்த்தைகள் கருத்துகள் இதெல்லாம் மாற்றி இருந்தது. இந்த ஹதீஸ்கள் புஹாரி இமாமிற்கு கிடைக்கிறது.



மதீனாவில் ஹதீஸ்களை எழுதி வைத்தவர்கள்:


மதீனாவில் அயீத் இப்னு அபி அரோபா எனபவர் எழுதி வைத்தார். ஹிஜ்ரி 156ல் மரணித்தார்கள். அதே போல மாலிக் இமாம் என்பவரும் எழுதினார்கள். இவர் 179ல் மரணித்தார்கள். இவர் எழுதிய புத்தகம் பெயர் முஆதீதா என்ற புத்தகம். இவை இன்னும் புழக்கத்தில் உள்ளன. ஆனால் இதில் மதீனா ஹதீஸ் மட்டுமே இருக்கும்.


அதே போல் பஷோரா நகரில் (ஈராக்) ஹம்மாத் இப்னு ஸல்மா எழுதினார்கள். இவர் 167ல் மரணித்தார். அதே போல கூஃபா என்ற இடத்தில் சுப்யானுவ் சவ்ரி என்பவர் ஹதீஸை எழுதினார்கள். இவர் ஹிஜ்ரி 161ல் மரணித்தார்கள். அதே போல சிரியாவில் (ஷாம்) நாட்டில் அவ்ஸான் என்பவர் எழுதினார். இவர் ஹிஜ்ரி 157ல் மரணித்தார்கள். விஷித் என்ற ஊரில் உள்ள ஹுசைன் என்பவர் ஹதீஸை எழுதினார். இவர் ஹிஜ்ரி 173ல் மரணித்தார்கள். ஈரானில் உள்ள குரஸான் அப்துல்லாஹ் இப்னு முபாரக் என்பவர் எழுதினார். இவர் ஹிஜ்ரி 181ல் மரணித்தார்கள். எமன் நாட்டில் மாமர் என்பவர் எழுதினார். இவர் ஹிஜ்ரி 154ல் மரணித்தார்கள். ரய்யி என்ற ஊரில் ஜரீர் என்பவர் எழுதினார். இவர் ஹிஜ்ரி 188ல் மரணித்தார்கள்.


ஒவ்வொரு ஊரிலும் குறிப்பிட்ட நபர்கள் ஹதீஸ்களை எழுதினார்கள்.ஆனால் இவை அனைத்தும் ஒட்டு மொத்தமாக எழுதி வைத்தார்கள். அதை ஆராயவில்லை. இவை முதல் தலைமுறை.



இரண்டாம் தலைமுறை:


இரண்டாம் தலைமுறையினர், முதல் தலைமுறையினரின் புத்தகங்களை எல்லாம் ஒன்று சேர்த்து தொகுப்பாக ஆக்கினர். சஹாபாக்களுக்கு கீழ் வரும் புத்தகத்தை “முஸ்னத்” என்று கூறுவார்கள். அதனால் அஹ்மத் ஹதீஸ் நூல்களை “முஸ்னத் அஹ்மத்” எனறு சொல்வார்கள். காரணம் அஹ்மத் புத்தகத்தை பார்த்தால் அபூபக்கர் {ரலி} அவர்களின் ஹதீஸ்களாகவே இருக்கும். ஆனால் புகாரி நூல்களைப் பொருத்த வரையில் ஒரு தலைப்பின் கீழ் எல்லா வகையான சஹாபாக்களின் பெயர்களையும் கொண்டிருக்கும்.


முஸ்னத் என்றால் அறிவிப்பாளர்களின் வரிசையின் ஒரு தலைப்பின் கீழ் தொகுக்கப்படும் நூல்களுக்கு முஸ்னத் என்று சொல்லப்படும். அஹ்மத் இப்னு ஹம்பல் என்பவர் அஹ்மத் என்ற நூலை எழுதினார்கள்.


அப்துல்லாஹ் இப்னு மூஸா என்பவர் முஸ்னத் புத்தகத்தை எழுதினார்கள். முஷத்தத் என்பவர் முஸ்னத் புத்தகம் எழுதினார்கள். அஷத் இப்னு மூஸா என்பவர் முஸ்னத் புத்தகம் எழுதினார்கள்.


ஆனால் இரண்டாம் தலைமுறையினர் ஹதீஸ்களை தொகுக்கும் போது சொந்த கருத்துக்களை அந்த ஹதீஸ்களில் இருந்து நீக்குகிறார்கள்.


அஹ்மத் உமர் {ரலி} அவர்கள் அறிவித்த ஹதீஸ்கள் (எல்லாம்) அபூபக்கர் {ரலி} அறிவிப்பு.


புஹாரி ஒவ்வொரு தலைப்பின் கீழ் அறிவித்த ஹதீஸ்கள் தொழுகை – தலைப்பு சம்பந்தமாக வரும் ஹதீஸ்கள்.


ஆனால் அவர்கள் ஸஹீஹ், லயீப் நீக்கவில்லை. பிறரின் கருத்துகளை மட்டுமே நீக்கினார்கள்.


அஹ்மத் இப்னு ஹம்பல் என்பவரின் மாணவர்கள் தான் இப்போது பிரபலமான புஹாரி இமாம், முஸ்லிம் இமாம் போன்றவர்கள். அப்போது அஹ்மத் இப்னு ஹம்பல் அவர் எழுதிய புத்தகம் மற்றும் பாடங்களை நடத்தி கொண்டிருக்கும் போது எது ஸஹீஹ், ளயீப் என்பது பற்றிய விஷயங்களை சொல்லி தருகிறார்கள். அப்போது யஹய் இப்னு என்பவரும் பாடம் நடத்துபவர். எனவே அவர் அறிவிப்பாளர்களின் வரலாற்றில் பிறப்பு / இறப்பு போன்றவற்றை கணக்கிட்டார்கள்.


ஆனால், அஹமத் இப்னு ஹம்பல் அவர்கள் புத்தகத்தில் ஸஹீஹ் ளயீப் எது என்பதை குறிப்பிடவில்லை. பாடம் நடத்தும் போது அதை சொல்லி கொடுத்தார்கள்.


ளயீப் என்பது அந்த காலத்தில் ஹதீஸ்களை அறிவிக்கக்கூடிய அறிவிப்பாளர்கள் தன்னுடைய சொந்த கருத்துக்களை அறிவிப்பாளர்கள், சஹாபாக்கள் சொன்னதாக இட்டுகட்டினார்கள். ஒருவர் ஹதீஸ் ஒன்றை அறிவிக்கிறார் என்றால் அவர் நபி(ஸல்) காலத்திலோ அல்லது சஹாபாக்கள் காலத்திலோ வாழ்ந்தவராக இருக்க வேண்டும்.எனவே தான் அவருடைய இறப்பு, பிறப்பு போன்றவை கணக்கிடப்படுகின்றன.


இமாம்களான புஹாரி, முஸ்லிம் ஆகியோர் லயீப் என்று சொல்லக்கூடிய ஹதீஸ்களை நீக்க வேண்டும் என்று யோசனை செய்கிறார்கள். அது போல புகாரி இமாம் யஹம் இப்னு முஹய் அவர்களின் மாணவராகவும் இருந்து வந்தார்கள்.



மூன்றாம் தலைமுறை:


மூன்றாம் தலைமுறையினர் எழுதிய புத்தகங்கள் புஹாரி, முஸ்லிம், இப்னு மாஜா, அபூதாவூத், நஸாயி, திர்மிதி ஆகியவையாகும்.


இன்றைக்கு பிரபலமாக இருக்ககூடிய புத்தகங்கள் இவைதாம். இதற்கு முன்னால் எழுதப்பட்ட புத்தகங்களை விட இந்த புத்தகங்கள் தான் பிரபல்யமானது. காரணம் இரண்டாம் தலைமுறையினரை விட மூன்றாம் தலைமுறையினர் கூடுதல் வேலை பார்த்தார்கள்.


அவை 

1.இதற்கு முன்னால் எழுதப்பட்ட புத்தகங்களில் ளயீபான ஹதீஸ்கள் எழுதப்பட்டிருந்தது. ஆனால் மூன்றாம் தலைமுறையினர் அந்த புத்தகத்தில் தங்களுக்கு தெரிந்த ளஃயீபான ஹதீஸ்களை நீக்கினார்கள். ஸஹீஹ் ஆன ஹதீஸ்களை மட்டும் பதிவு செய்தார்கள்.


2.முன்னுள்ள முதல் தலைமுரையினர் ஊர் ஊராக ஹதீஸ்களை எழுதி வைத்தார்கள். இரண்டாவது தலைமுறையினர் சஹாபாக்களின் பெயருக்கு கீழ் ஹதீஸ்களை தொகுத்தார்கள். மூன்றாம் தலைமுறையினர் ஒவ்வொரு தலைப்பின் கீழேயும் அது சம்பந்தமான ஹதீஸ்களை தொகுத்தனர்.


உதாரணமாக தொழுகை என்ற தலைப்பின் கீழ் அது சம்பந்தமான ஹதீஸ்கள் அனைத்தும் இருக்கும்.


இது மக்களுக்கு மிக மிக எளிமையாக இருந்தது.


அதுவே இரண்டாம் தலைமுறையால் தொகுக்கப்பட்ட நூலான ‘அஹ்மத்’ என்ற நூலை எடுத்து பார்த்தால் ஒவ்வொரு தலைப்பின் கீழும் ஹதீஸ்கள் காணவே முடியாது, தேடி எடுக்கவும் கடினமானதாகா இருக்கும். எனவே தான இவற்றை விட மூன்றாம் தலைமுறையினரின் புத்தகங்கள் பிரபலமானது.


அதிலும் புஹாரி என்ற நூல் மிக பிரபலமானதற்கு காரணம் என்னவென்றால் ஒவ்வொரு புத்தகம் எழுதிய இமாம்கள் ஒவ்வொரு பணியை மட்டும் தான் செய்வார்கள். அறிவிப்பாளர்கள் பெயர் வரிசையாக வரும் “ஹத்தஸ்ஸனா”, அபூமுஸா ஹத்தஸனா அஷர் போன்றவை வந்த பிறகு தான் ஹதீஸ் வரும் அத்தனை மக்களிடம் கேட்டு கடைசியில் வருவதால் அறிவிப்பாளர்கள் பெயர்களை அவர் நம்பகமானவார்தானா, நல்லவரா போன்ற சோதனைகளை செய்வார்கள. இன்னும் சில மக்கள் ஹதீஸ்களை எந்தெந்த தலைப்பின் கீழ் கொண்டு வரலாம் என்று ஆராய்ச்சி செய்வார்கள் ஆனால் இந்த இரண்டு பணிகளையும் “புஹாரி” இமாம் செய்வதில் தலை சிறந்து விளங்கினார்கள்.


அறிவிப்பாளார்களை ஆராய்ச்சி செய்வதிலும், ஒவ்வொரு தலைப்பின் கீழ் ஹதீஸ்களை கொண்டு வருவதுமாக இரண்டு பணிகளை செய்தார்கள்.


இன்னும் ஒரு ஹதீஸ் பல தலைப்பிர்க்கு கீழ் வரும் மாதிரியாக இருந்தால் அவற்றை எல்லாம் (அந்தந்த) தலைப்பின் கீழ் கொண்டு வந்தார்.


உதாரணம் நபி (ஸல்) இஷா தொழுகை தொழ தாமதமாக வந்தார்கள். அவராகள் மஸ்ஜிதுக்கு வரும் நேரம் பெண்களும் சிறுவர்களும் உறங்கிவிட்டார்கள். இந்த ஹதீஸ் மற்ற (3 ஆம் தலைமுறை) புத்தகத்தில் தொழுகை என்ற தலைப்பின் கீழ் வரும். புஹாரி இமாமுடைய புத்தகம் ”இஷா தொழுகையை தாமதமாக தொழலாமா” என்ற தலைப்பின் கீழ் வரும். இதே ஹதீஸ் மற்றாரு தலைப்பின் கீழ் ”சிறுவர்கள் மஸ்ஜிதுக்கு வரலாமா” என்ற தலைப்பின் கீழ் வரும். இதே போல் ”பெண்கள் மஸ்ஜிதுக்கு வரலாமா” என்ற தலைப்பின் கீழ் வரும். மேலும் ”மஸ்ஜிதி்ல் தூங்கலாமா” என்ற தலைப்பின் கீழும் அதே வரும்.


இல்வாறாக ஒரே ஹதீஸை அது சம்பந்தப்பட்ட பல்வேறு இடங்களில் கொண்டு வந்தார்கள். எனவே இவை மக்களுக்கு இலகுவாக இருந்தது. எனவே தான் புஹாரி இமாம் எழுதிய புத்தகத்திற்கு “ஸஹீஹுல் புஹாரி என்றும் முஸ்லிம் எழுதிய புத்தகத்திற்கு “ஸஹீஹுல் முஸ்லிம்” என்று கூறுகிறார்கள். ஆனால் திர்மிதி, நஸாயி, இப்னுமாஜா புத்தகங்களில் ஸஹீஹ் என்று இருக்காது. ஏன் என்றால் புஹாரி, முஸ்லிம் முன்னிலையில்; அதுவும் புஹாரி நூல் மக்களுக்கு மிக இலகுவாக இருந்தது. எனவே இந்த ஒரு நடைமுறையை “புஹாரி” இமாம் கடைபிடித்தார்கள். அது போல் அவர்களுக்கு தெரிந்த அத்தனை ளஃயீப் ஹதீஸ்களையும் நீக்கினார்கள். மேலும் அவர்கள் பதிந்த அத்தனை ஹதீஸும் ஸஹீஹ் தான் என உறுதியாக சொன்னார்கள்.


திர்மிதி ஹதீஸில் ஒரு ஹதீஸ் ளஃயீபாக இருந்தால் அந்த ஹதீஸின் கீழ் هدا ضعيف மேலும் மவ்ளுவ் , மத்ரூக் ஆக இருந்தால் அவற்றை அந்த ஹதீஸின் கீழ் இணைந்திருப்பார்கள். ஆனால் அவற்றை நீக்க மாட்டார்கள்.


ஆனாலும் கூடத்தான் புஹாரியில் நபியவர்களுடன் சம்பந்தப்பட்ட / சம்பந்தப்படாத ஓரிரு ளஃயீபான  செய்திகள் இருக்கிறதே என்று யோசித்தால் அது இமாம்களின் அறியாமையால் அவை நீக்கப்படாமல் இருந்திருக்கலாம் (அவர்களும் மனிதர்களே!) ளஃயீப் என்று தெரிந்தே அவற்றை பதிவு செய்யவில்லை, மக்களுடைய ஆய்வு சரியாக கிடைக்காததால் அறியாமை காரணத்தாலும் பதிவு செய்திருக்கலாம்.



புஹாரி இமாமின் இலக்கணமும் மற்ற இமாம்களின் இலக்கணமும்:


இன்னும் புஹாரி இமாம் ஒரு ஹதீஸை ஸஹீஹ் தான் என்பதற்கு பல இலக்கணங்கள் வைத்திருந்தார்கள்.


ஒரு ஹதீஸ் ஸஹீஹ் தானா என்று அறிந்து கொள்ள “இமாம்கள்” பல இலக்கணங்களை வைத்திருந்தார்கள்.


ஹதீஸ்களை அறிவிக்கக் கூடிய அறிவிப்பாளர்களின் நம்பகத்தன்மை நேர்மை (ஹதீஸ்களை அறிவிக்கக்கூடியவர்) உண்மையாளராக இருக்க வேண்டும். பொய் சொல்லக்கூடாது, மறதி ஏற்படக் கூடாது. இப்படியெல்லாம் பல இலக்கணங்கள் வைத்திருந்தார்கள். புஹாரி அரமாய் வைத்த இலக்கணத்தைத்தான். முஸ்லிம் இமாம், திர்மிதி இமாம் என எல்லா இமாம்களும் வைத்திருந்தார்கள். ஆனால் எல்லா இமாம்களையும் விட ”புஹாரி இமாம் கூடுதலாக ஒரு இலக்கணம் வைத்தார்கள்.” அது என்னவென்றால்


உதாரணம்: இஸ்மாயிலிடமிருந்து ஒரு ஹதீஸை இப்றாஹீம் அறிவிக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். இமாம்கள் முதலில் ”இஸ்மாயில்” என்பவரின் வரலாற்றை எடுத்து பார்ப்பார்கள். அவருடைய பிறப்பு, வாழ்ந்த காலம், இறப்பு இவற்றையெல்லாம் ஆராய்ச்சி செய்வார்கள். இது முடிந்த பிறகு இப்றாஹீம் என்பவரின் வரலாற்றை எடுத்துப் பார்ப்பார்கள். அவருடைய பிறப்பு, எங்கு வாழ்ந்தவர், கால கட்டம், இறப்பு அனைத்தையும் அலசி பார்ப்பார்கள். ”இந்த இரண்டு இமாமும் சம காலத்தில் வாழ்ந்தவர்களா? இந்த அறிவிப்பாளர்களை சந்திப்பதற்கான வாய்ப்புகள் இருந்ததா?” என்பதையெல்லாம் பார்ப்பார்கள்.


உதாரணமாக இஸ்மாயில் என்பவர் ஹிஜ்ரி:80 ல் மெளத் ஆகினார் என்று வைத்துக் கொண்டால் இப்றாஹீம் ஹிஜ்ரி: 65ல் பிறக்கிறார். என்பதாக வைத்துக்கொண்டால் இஸ்மாயில் இருக்கும் 15- வருட(80– 65) காலத்தில் இஸ்மாயில் அவர்களை இப்றாஹீம் சந்தித்து இருப்பார்கள். ஹதீஸ்களை கேட்டிருப்பார்கள். அதனால் இந்த ஹதீஸை ஏற்றுக் கொள்ளலாம். என அறிவிப்பாளர்களின் பிறப்பு, இறப்பு வைத்து கணக்கிடுவார்கள். ஆனால் இதுவே.


உதாரணமாக இஸ்மாயில் என்பவர் ஹிஜ்ரி:80 ல் மெளத் ஆகிறார். இப்றாஹீம் என்பவர் ஹிஜ்ரி:75 ல் பிறக்கிறார்கள். என்றால் இப்றாஹிம் என்பவரின் வயது 5 ஆக 75-80 இருக்கும் அந்த ஐந்து வயதில் கேட்கும் பக்குவம் இருந்திருக்காது. இந்த (ஹதீஸ்) சரியானதா? என்பது தெரியாதது என்பதால் இப்படிப்பட்ட ஹதீஸ்களை ”புஹாரி இமாம்” ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.


அறிவிப்பாளர்கள் ஒரே காலத்தில் வாழ்ந்தவர்களாக இருந்தால், யாரிடமிருந்து யார் கேட்டார்கள், ஒருவரையொருவர் பார்த்திருக்கிறார்கள், அறிவிக்கக்கூடியவர்களின் காலகட்டமும் ஒன்று தான், அவர்களில் ஒருவர் மரணிக்கும் போது ஹதீஸை கேட்டவர் பக்குவப்பட்ட வயதுள்ளவர் என்று தெரிந்தால் எல்லா இமாம்களும் ஹதீஸை எடுத்துக் கொள்வார்கள்.


ஒரே கால கட்டத்தில் வாழ்ந்தால் மட்டும் போதாது. ஏனென்றால் ஒரே கால கட்டத்தில் வாழ்ந்தவர்கள் சந்திப்பதற்கு வாய்ப்பில்லாமல் கூட இருந்திருக்கலாம்! என்று புஹாரி இமாம் கூறுவார்கள். ஆனால் “இருவரும் ஒரே கால கட்டத்தில் வாழ்ந்தவர்கள்” என்ற ஆய்வுகள் படி, அந்த ஹதீஸை முஸ்லிம் இமாம் தன்னுடைய புத்தகத்தில் பதிவு செய்து விடுவார்கள். 


”புஹாரி இமாம்” கூடுதலாக ஒரு இலக்கணம் வைத்து மேலும் அலசி ஆராய்வார்கள். அது என்னவென்றால் ”இஸ்மாயில் வழியாக இப்றாஹிம் அறிவித்தார்.” மேலும் குறிப்பிட்ட படி ”வழியாக” என்று வந்தால் புஹாரி இமாம் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். காரணம்.


இஸ்மாயில் வழியாக வேறு யாராவது கேட்டிருக்கலாம். அவர் இப்றாஹீமிற்கு சொல்லியிருக்கலாம். அதனால் இவ்வகையான ஹதீஸை ஏற்றுக் கொள்ள மாட்டேன். இடையில் யாராவது வந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஆனால் முஸ்லிம் இமாமும் மற்ற இமாம்கள் ஏற்றுக் கொள்வார்கள். ஹதீஸை பதிவு செய்வார்கள்.



புஹாரி இமாமின் இலக்கணம் :


இஸ்மாயில் எனக்கு அறிவித்தார் என்று இப்றாஹீம் சொல்ல வேண்டும்.


மேலே குறிப்பிட்ட படி ”எனக்கு” என்ற வார்த்தை குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். இந்த இலக்கணம் நமக்கும் புரியும்படியாகவே உள்ளது. இவ்வகையான ஹதீஸை தான் ”இமாம் புஹாரி” ஏற்றுக் கொள்வார்கள்.


”எனக்கு இவர் தான் சொன்னார்” என்று திருத்தமாக சொல்ல முடிவதன் காரணமாக, இந்த ஹதீஸின் இடையில் யாரும் தலையிட வாய்ப்பில்லை. அப்போது இந்த ஹதீஸ் சரியானது தான் என்று அறிவிப்பார். வழியாக” என்று வரும்போது அதன் இடையில் யாராவது தலையிட வாய்ப்புள்ளதால் நான் அந்த ஹதீஸை எடுக்க மாட்டேன். என்று புஹாரி இமாம் அறிவிக்க மாட்டார்கள். ஆனால் மற்ற இமாம்கள் வழியாக என்று வரக்கூடிய ஹதீஸ்களை பதிவு செய்வார்கள்.


”இதன் காரணமாக தான் ஹதீஸ்கலை வல்லுனர்களின் இடையில் புஹாரி இமாம் உயர்ந்த இடத்தை பிடிக்க காரணமாக அமைந்தது.”


அந்த அளவிற்கு ஹதீஸ்களை மிக நூணுக்கமாக பார்த்து பதிவு செய்தார்கள். மேலே கூறியபடி இல்லாவிட்டால் இஸ்மாயிலுக்கு மாணவராக இப்றாஹீம் இருந்தார். இஸ்மாயிலின் சபைகளில் இப்றாஹீம் கலந்துக் கொண்டார். இஸ்மாயிலின் மாணவர் இப்றாஹீம் தான் என்று வேறு யாராவது உறுதியாக சொன்னால் அந்த ஹதீஸை புஹாரி இமாம் ஏற்றுக் கொள்வார்கள்.


இதிலிருந்து ஒரு ஹதீஸை ஸஹீஹா என்பதற்கு மற்ற இமாம்களை விட ”புஹாரி இமாம்” கூடுதலாக ஓர் இலக்கணம் வைத்ததனால் ”புஹாரி” மக்களுக்கு மத்தியிலும், அறிஞர்களுக்கு மத்தியிலும் மிகவும் ஒரு தலை சிறந்த புத்தகமாக உள்ளது. இன்னும் புஹாரி இமாம் ஹதீஸ்களை (மக்காவில் இப்னு ஜூனாஜ் என்பவர் எழுதி வைத்தார். மேலும் ஒவ்வொரு ஊரிலும் ஹதீஸ்களை எழுதி வைத்திருந்தார்கள்.) என (முன்னர் பார்த்தோம்.) இந்த ஹதீஸ் கிதாபுகள் எல்லாம் புஹாரி இமாமின் கையில் இருந்தாலும் புஹாரி இமாம் ஒவ்வொரு ஊராக சென்று அங்குள்ள அறிஞர்களை எல்லாம் அழைத்து, உங்களில் யார் ஜூரைஜ் உடைய மாணவர்? அவரிடம் யாரெல்லாம் படித்தீர்கள்? என்று அவர்களிடம் ஹதீஸ்களை கேட்பார்கள். (ஏற்கெனவே எழுதியும் வைத்திருந்தார்கள். ஊர் ஊராக சென்று கேட்பார்கள்.) புத்தகத்தில் இருப்பதும் அவர்களின் மாணவர்கள் சொல்வதும் சரியாக உள்ளதா! என்று அந்த அளவுக்கு சோதனை செய்வார்கள்.


நம்மிடம் புஹாரி, முஸ்லிம் இமாமின் புத்தகங்கள் இருந்தாலும் ஸஹீஹா, லயீ.:பா என்று ஆய்வு செய்வது போல புஹாரி இமாமின் கையில் எத்தனை புத்தகங்கள் இருந்தாலும், ஒவ்வொரு ஊர்களுக்கும் சென்று அவர்களிடம் படித்த மாணவர்களிடம் கேட்பார்கள். என்னென்ன ஹதீஸ்கள் ஆசிரியரிடமிருந்து கேட்டீர்கள்.? அவர்கள் சொல்லக்கூடிய ஹதீஸூம் தன்னிடம் உள்ள எல்லா ஹதீஸூம் ஆய்வு செய்து சரியாக இருப்பதை ஸஹீஹாஹ புஹாரி இமாம் பதிவு செய்வார்கள். இவ்வாறான முறையில் தான் ஹதீஸ்களை பகுத்தார்கள். ஆனால் சில இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களும் சொல்லப்படும்.


புஹாரி இமாம் ஒரு ஹதீஸை கேட்கப் போவார்கள். அதற்கு முன் இஸ்திஹாரா தொழுது சரியா என்ற எண்ணம் வந்த பிறகு தான் கேட்கப் போவார்கள்.


புஹாரி இமாம் ஒருவரிடம் ஹதீஸ்களை கேட்கப் போகும்போது ஒட்டகம் (அ) குதிரையை கட்டி வைத்து பால் கறப்பதற்காக அதன் குட்டி இறந்துவிட்டதால் குட்டி போன்று ஒரு பொம்மையைச் செய்து, அதை காட்டி பால் கறக்கிறார். அவரிடம் இமாம் ஹதீஸ் கேட்கப் போகும்போது இப்படி வாயில்லா ஜீவனை ஏமாற்றுகிறார். அப்போது இவர் எப்படி உண்மை பேசுவார். பொய் தான் கூறுவார் என்று திரும்பி வந்து விடுவார். இப்படியெல்லாம் நிறைய இட்டுக்கட்டப்பட்ட விஷயங்கள் இருக்கிறது. ஆனால் தாம் ஏற்கனவே புஹாரி இமாமின் இலக்கணத்தைப் பார்த்தோம். உதாரணமாக: புஹாரி நூலில் தமிழ் மொழிபெயர்ப்பை எடுத்து முதலாவது ஹதீஸ் ஒன்றை பார்த்தால் ,


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அடுத்து ==> ஹதீஸ்

அடுத்து ==> இது உமர் பின் கத்தாப் அறிவித்தார்கள்.


மேலே குறிப்பிட்டபடி ஹதீஸூடைய அமைப்பு இருக்கும். ஆனால் அரபி ஹதீஸில்.


ஹத்தஸனா (எனக்கு அறிவித்தார்.)

புஹாரி இமாம் சொல்கிறார். ஹூமைதிய்யு அப்துல்லாஹ் இப்னு ஜூபைர் என்ற (ஹூமைதி) எனக்கு அறிவித்தார். கால (ஹூமைதிக்கு அறிவித்தவர்.) ஹத்தஸனா

சுப்யான்: சுப்யான் எனக்கு அறிவித்தார். என்று


இமாம் புஹாரி

 ↓

ஹூமைதிய்யு அப்துல்லாஹ் இப்னு ஜூபைர்

 ↓

சுப்யான் 


ஹூமைதிய்யு அப்துல்லாஹ் இப்னு ஜூபைர் எனக்கு அறிவித்தார். என்று புஹாரி இமாம் கூறினார்கள்.


இமாம் புஹாரி ஹூமைதிய்யு அப்துல்லாஹ் இப்னு ஜூபைரிடம் கேட்பார்கள்.


ஹூமைதிய்யு அப்துல்லாஹ் இப்னு ஜூபைர் 

சுப்யானிடம் கேட்பார்கள். என்று இமாம் புஹாரியிடம் அறிவிக்கிறார்கள்.


சுப்யான் யார் என்றால் ? ஹதீஸ்களை காபாவில் எழுதியவர், சுப்யான் எழுதிய புத்தகம் புஹாரி இமாமின் கையில்.


புஹாரி இமாம் ”கூபா” சென்று ஹூமைதிய்யு அப்துல்லாஹ் இப்னு ஜூபைர் (சுப்யானின் மாணவர்) என்பவரிடம் ஹதீஸ்களை கேட்டு சரியாக உள்ளதா என ஆய்வு செய்கிறார்கள்.


சுப்யான் (கூபாவில் ஹதீஸை எழுதியவர்) யாரிடம் கேட்டார் என்றால் ஹத்தஸனா யஹ்யா இப்னு ஸயீதுல் அன்ஸாரி அவர்களிடம் சுப்யான் கேட்கிறார்கள். யஹ்யா இப்னு ஸயீத் என்பவர், முஹம்மது இப்னு இப்றாஹீம் அவர்களிடம் கேட்கிறார்கள்.


முஹம்மது பின் இப்ராஹீம் என்பவர் அல்கமா பின் வக்காஸ் என்பவரிடம் செவியேற்றேன். என்றுகூறினார்கள்.


அல்கமா இப்னு வக்காஸ் என்பவர் உமர் இப்னு கத்தாப் (ரலி) அன்ஹூ (அலல் மிம்பர்) மிம்பர் மேலே நின்று பேசுவதை நான் செவியேற்றேன். அதற்கு பிறகு (கால ரஸூலுல்லாஹ் (ஸல்)) அவர்களிடம் இருந்து நான் செவியேற்றேன். என்று உமர் (ரலி) கூறினார்கள். நிச்சயமாக எண்ணத்தைப் பொருத்தே செயல்கள் அமைகின்றன.


கடைசியில் யார் எழுதுகிறாரோ புஹாரி இமாம் எழுதினால் அவர் கேட்டதாக எழுதுவார்கள்.


நபிகள் நாயகம்

 ↓

உமர் (ரலி) அன்ஹூ (ஸஹாபாக்கள்)

 ↓

அல்கமா பின் வக்காஸ் (தாபியீன்கள்)

 ↓

முஹம்மது இப்னு இப்றாஹீம் (தபா தாபியீன்கள்)

 ↓

யஹ்யா இப்னு ஸயீத் (ஆசிரியர்)

 ↓

சுப்யான் (மாணவர்)

 ↓

ஹூமைதிய்யு அப்துல்லாஹ் இப்னு ஜூபைர் (கேட்டவர்)

 ↓

புஹாரி இமாம் (இமாம்)


இவ்வாறு தான் ஹதீஸ்களை அறிவிப்பார்கள். இதிலிருந்து யாரிடம் ஹதீஸ்கள் கேட்கப்படுமோ அவரிடம் கேட்டதாக புத்தகத்தில் குறிப்பிடுவார்கள்.


புஹாரி இமாம் ஹதீஸ்களில் பெரும்பாலானவை மாலிக் இமாமிடம் இருந்து கேட்பார்கள். மாலிக் இமாம் ”முஅத்தா” என்ற புத்தகத்தை எழுதினார்கள். ஹத்தஸனா அப்துல்லாஹ் இப்னு யூசுப் என்று அறிவித்தார்கள். என புஹாரி இமாம் கூறினார்கள். அப்துல்லாஹ் இப்னு யூசுப் என்பவர் மலிக் இமாமிடம் இருந்து நான் கேட்டேன். என்று கூறுகிறார்கள். இதிலிருந்து மாலிக் என்பவரின் மாணவரான அப்துல்லாஹ் இப்னு யூசுப் என்பவரிடமிருந்து புஹாரி இமாம் கேட்டேன். என அறிவிக்கிறார்கள்.


தமிழ் ஹதீஸில் ஸஹாபாக்கள் அறிவிப்பதாக ஹதீஸ் வரும்.


அரபியில் யார், யார் அறிவித்தார்கள் யாரிடமிருந்து யாருக்கு அறிவிக்கப்பட்டது என்று வரிசையாக வரும்.


எல்லா புத்தகங்ளில் இருந்தும் சிறந்த ஆறு புத்தகங்கள்:

1. புஹாரி

2. முஸ்லிம்

3. அபூதாவூத்

4. இப்னு மாஜா

5. நஸாயி

6. தர்மிதி


தற்போதைய கால கட்டத்தில் சிறந்த புத்தகமாக விளங்குபவை இந்த ஆறு புத்தகங்கள் தான். ஏன்? எத்தனையோ? புத்தகங்கள் எழுதப்பட்டிருக்கும் நிலையில் இந்த ஆறு புத்தகங்களும் சிறந்ததாக இருப்பதற்கு காரணம். ஒரு தலைப்பின் கீழ் கொண்டுவந்தார்கள். இந்த ஆறிலும் புஹாரி, முஸ்லிம் சிறந்து விளங்க காரணம். ஸஹீஹ் என்று உறுதியளிக்கப்பட்டதேயாகும். இந்த இரண்டிலும் புஹாரி உயரக் காரணம்:


புஹாரி இமாம் எந்த தலைப்பின் கீழ் அந்த ஹதீஸ் வருகிறதோ அதை அனைத்திலும் அந்த ஹதீஸை கொண்டு வந்தார்கள். மேலும் கூடுதல் இலக்கணம் கொடுத்ததன் காரணமாகவும் புஹாரி நூல் உயர்ந்த நிலையை அடைந்தது.



நான்காம் தலைமுறை:


நான்காம் தலைமுறையினரில் புத்தகம் எழுதியவர்கள், தபரானி, ஹாக்கிம், தார குத்னி, இப்னு ஹிப்பான், இப்னு உஜை(z)மா, பைஹக்கி ஆகியோராவர்.


அவர்கள் எழுதிய ஹதீஸ்கள் புஹாரி, முஸ்லிம் இமாம்கள் எழுதிய ஹதீஸ்களில் ஏதாவது ”விடுபட்ட ஹதீஸ்கள்” இருந்தால், அதை எழுதுவார்கள்.


புஹாரி இமாம், முஸ்லிம் இமாம் வைத்திருந்த ஹதீஸ் ஸஹீஹ் என்று பதிவு செய்வதற்கு என்னென்ன நிபந்தனை வைத்தார்களோ, அந்த நிபந்தனையின் அடிப்படையில் “ஒரு சில ஹதீஸ்கள் விடுபட்டிருந்தால்” அந்த ஹதீஸ்களை அவர்கள் நான்காம் தலைமுறையில் உள்ள இமாம்கள் பதிவு செய்வார்கள்.


மூன்றாம் தலைமுறையினர் எழுதி வைத்த புத்தகங்கள் அனைத்துயும் வைத்து அவற்றில் விடுபட்ட ஹதீஸ்களை எழுதி வைத்தார்கள். 


இதில் ”ஹாக்கிம்” என்பவர் புஹாரி இமாம் என்னென்ன நிபந்தனைகள் வைத்து ஹதீஸ் எழுதினார்களோ, அதே நிபந்தனையின் கீழ் ஒரு ஹதீஸ் இருந்தால், அந்த ஹதீஸை பதிவு செய்துவிட்டு அதற்கு கீழே அது; புஹாரி இமாமின் நிபந்தனைகளுகுட்பட்டது. அது போல முஸ்லிம் இமாம் அவர்களின் நிபந்தனையோடு ஒரு ஹதீஸ் விடுபட்டிருந்ததால் அதை பதிவு செய்து விட்டு ”இது முஸ்லிம் இமாம் வைத்த நிபந்தனைகளுக்குட்பட்டது”. இதுவே இரண்டு இமாம்கள் வைத்த நிபந்தனையாக இருந்தால் பதிவு செய்யப்பட்ட அந்த ஹதீஸின் கீழ் அந்த இரண்டு இமாம்களின் பெயர் குறிப்பிடப்படும்.


இந்த புத்தகத்தை எழுதியவர் பெயர் ”ஹாக்கிம்” இவர் எழுதிய புத்தகத்தின் பெயர் ”அல் முஸ்தத்ரக அல் ஸஹீஹைனி” அதாவது புஹாரி முஸ்லிமிலிருந்து விடுபட்ட ஸஹீஹான ஹதீஸ்கள் என்று தன்னுடைய புத்தகத்திற்கு பெயர் வைத்து இருந்தார்.


நான்காம் தலைமுறையினர் என குறிப்பிட்டிருந்த இமாம்கள் 6- பேர் எழுதிய புத்தகமும் பிற்காலத்தில் அவர்கள் எழுதிய அந்த ஹதீஸ்களை தள்ளுபடி செய்கிறார்கள். ஏன் என்றால் புஹாரி இமாம் எல்லா ஹதீஸ் கிதாபுகளையும் சேகரித்து ஆராய்ச்சி செய்து எழுதினார்கள்.


அதில் ஒரு சில விடுபட்ட ஹதீஸ்களை இவர்கள் (“நான்காம் தலை முறை”) எழுதுகிறார்கள். எவ்வாறு எழுதுகிறார்கள் என்றால், புஹாரி இமாம் ஒவ்வொரு ஊருக்குச் சென்று கிதாபுகள் எழுதியவர்களின் மாணவர்களிடம் ஹதீஸை கேட்கிறார்கள். 


ஹதீஸ்களை சொல்லும் அந்த நபருடைய பெயர் (இஸ்மாயில் என்று வைத்துக்கொண்டால்) ஸஹீஹை அறிவிக்கக் கூடிய இஸ்மாயில் அவர்களின் ஹதீஸை ஏற்றுக் கொண்டும் அதே பெயருள்ள லயீபை அறிவித்த இஸ்மாயிலின் ஹதீஸை பதிவு செய்யாமல் விட்டிருப்பார்கள். ஒரே பெயருள்ள, வேறு வேறு இஸ்மாயில் இருந்திருப்பார்கள்.


ஒருவர் ஸஹீஹை அறிவிக்கக்கூடியவர் மற்றொருவர் லயீஃபை அறிவிக்கக்கூடியவர். இருவரும் ஒரே கால கட்டத்தில் வாழ்ந்தவர்களாக இருக்கலாம். இருவரின் தந்தை பெயர்கள் ஒரே மாதிரியாக இருக்கலாம். ஊர்கள் வேற வேறானதாக இருக்கும். ஒருவர் கூபாவில் வாழ்ந்தவராக இருப்பார். மற்றொருவர் மக்காவில் வாழ்ந்தவராக இருப்பார். இதெல்லாம் ஆராய்ச்சி செய்து புஹாரி இமாம் பதிவு செய்திருப்பார்கள்.


ஆனால் பிற்காலத்தில் எழுத கூடிய ”நான்காம் தலைமுறையினர்கள்” லயீஃப்- ஆன செய்திகளை அறிவிக்கக்கூடிய இஸ்மாயிலை பெயர்- தந்தை பெயர்- வாழ்ந்த காலம்- இவற்றை வைத்துக் கொண்டு ஸஹீஹ் ஹதீஸ்களை அறிவிக்கக்கூடிய இஸ்மாயில் சொன்ன ஹதீஸ் விடுபட்டுள்ளது. என்று எண்ணி அவற்றை பதிவு செய்கிறார்கள். (ஆனால் இவற்றை பதிவு செய்தது லயீபை அறிவிக்கக்கூடிய இஸ்மாயிலின் ஹதீஸ்கள்) நான்காம் தலைமுறைக்கு பின் வந்தவர்கள் இவர்கள் இருவரும் வாழ்ந்த ஊர்கள் வெவ்வேறானவை என்பதை அறிந்து அந்த மாதிரியான ஹதீஸ்களை தள்ளுபடி செய்கிறார்கள்.


இது போல ”தபரானி” என்பவர் 3- புத்தகங்கள் எழுதியுள்ளார்கள். தன்னுடைய புத்தகத்திற்கு (முதலில் எழுதிய புத்தகம்) ”முஃஜமுல் கபீர் தபரானி” என்று சொல்லக்கூடிய பெரிய புத்தகத்தை எழுதினார்கள். இதில் ”25,000″ ஹதீஸ்களுக்கும் மேல் இருக்கும்.


அடுத்தது (2- வது எழுதிய புத்தகம்) ”மு.:ஜமுல் அவ்ஸல்” ஆகும். (3-வது எழுதிய புத்தகம்) ”மு.:ஜமுல் ஸகீர்” என்று சொல்லக்கூடிய சிரிய புத்தகம். என்று பெயர் வைத்தார்கள். இவர் மு.:ஜம் என்றால் தபரானி யாரிடமிருந்து பாடம் கற்றுக் கொண்டாரோ, அந்த உஸ்தாத் அடிப்படையில் ஹதீஸ்களை கொண்டு வந்தார்கள். ஏற்கனவே (மேலே கூறப்பட்டுள்ளது போல்) ஸஹாபாக்களின் பெயரின் கீழ் அவர்கள் அறிவித்த ஹதீஸ்கள் இவ்வாறு ஸஹாபாக்கள் பெயரின் கீழ் அறிவித்த ஹதீஸ்களை போல, இந்த தபரானி என்பவர் ”மு.:ஜம்” என்ற பெயர், இவர் யாரிடமெல்லாம் பாடத்தை கற்றுக் கொண்டாரோ , (உ:ம்) அஹ்மத் இமாமிடம் படித்தால், அஹ்மத் இமாமிடம் படித்த ஹதீஸ்கள் என்ற தலைப்பின் கீழ் அவர் படித்த ஹதீஸ்களை தொழுகை, நோன்பு, ஹஜ் எல்லாவற்றையும் மொத்தமாக அந்த (அஹ்மத் இமாமிடம் படித்த ஹதீஸ்கள்) தலைப்பின் கீழ் போட்டிருப்பார்கள் இது போல எந்தெந்த இமாமிடம் படித்தார்களோ அவர்களின் பெயரை போட்டு அதன் கீழ் அவர் படித்த ஒட்டு மொத்த ஹதீஸையும் எழுதி வைத்தார்கள்.


இதுவரை புத்தகங்களில் நான்கு வகைகளை பார்த்தோம்.


1. முஸ்னத்– ஸஹாபாக்களின் பெயரின் கீழ் வரும் ஹதீஸ்.

2. ஸஹீஹ்– இமாம் புஹாரி, முஸ்லிம் புத்தகங்கள்.

3. சுனன்– திர்மிதி, அபூதாவூத், நஸாயி, இப்னுமாஜா

4. மு.:ஜம்– இமாம் படித்த உஸ்தாதிடமிருந்தது படித்தது. மேலும் ஒவ்வொரு பெயரின் கீழ் வரும் ஹதீஸ்.


”சுனன்” என்றால் ஒவ்வொரு தலைப்பின் கீழ் வரக் கூடிய ஹதீஸ்கள் ஆகும். நான்காம் தலைமுறையினரின் ஹதீஸ்கள். புஹாரி இமாம், முஸ்லிம் இமாம் இவர்களால் விடுபட்ட ஹதீஸ்களை பதிவு செய்து வைத்திருந்தார்கள் அதிலும் நிறைய ஹதீஸ்கள் லயீபான ஹதீஸாக இருந்தது. ஒரு சில ஹதீஸ்கள் மட்டும் ஸஹீஹானதாக இதுதான். ”நான்கு தலைமுறையினர்கள் எழுதிய புத்தகங்கள் ஆகும்.”


”நான்கு தலைமுறைகள்” ஹதீஸ்களை எழுதி வைத்திருந்தார்கள் நான்கு தலைமுறைகளுடன் ஹதீஸ்களை எழுதி வைக்கும் பழக்கமானது. ஒரு முடிவுக்கு வந்தது. காரணம் எழுத்து வடிவில் ஹதீஸ்கள் இல்லாத போது தான். வாய் வழியாக ஹதீஸ்கள் அறிவிக்கப்பட்டுக் கொண்டிருக்கும். நான்காம் தலை முறைகளோடு வாய் வழி ஹதீஸ்கள் எழுத்து வடிவில் கொண்டு வரப்பட்டன.


இவ்வாறு எழுத்து வடிவில் ஹதீஸ்களை எழுதி வைக்க ஆரம்பகால மக்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். ”ஹதீஸ்களை எழுதி வைக்க கூடாது.” காரணம், ”நான் கூறுவதை எழுதி வைக்காதீர்கள். குர்ஆன் தவிர மற்றதை என்னிடம் இருந்து எவரேனும் எழுதி வைத்திருந்தால் அதை அவர் அழித்து விடட்டும்.”

(ஆதாரம்: முஸ்லிம் :5734)


மேற்கண்ட ஹதீஸை வைத்துக்கொண்டு பெரும்பாலான மக்கள் ஹதீஸ்களை எழுதக் கூடாது. அவ்வாறு ஹதீஸை எழுதி வைத்திருந்தால் அதை அழித்து விட வேண்டும். நபியவர்களே அதை திருத்திருக்கும் பொழுது நாம் அந்த வேலையை செய்யக் கூடாது, என்று கூறுகிறார்கள்.


ஆனால் நபியவர்கள் வந்த செய்தியை நபியவர்களின் காலத்திலேயே குர்ஆனை எழுத்து மூலமாக எழுதி வைத்தவர்களிடம் கூறினார்கள். ஏனென்றால், குர்ஆனை எழுதி வைப்பவர்களின் பொறுப்பு குர்ஆனை ஒன்று திரட்டுவது, அதோடு ஹதீஸையும் எழுதி வைத்தார்களேயானால், ஒன்று திரட்டும் போது குழப்பம் ஏற்படும். (எது ஹதீஸ்? எது குர்ஆன்? என்று குழப்பம் ஏற்பட்டு விடும்).


எனவே மேற்கூறப்பட்டள்ள நபிமொழி குர்ஆனை ஒன்று திரட்டும் பணியை செய்த நபிதோழர்களைப் பார்த்து கூறப்பட்ட ஒரு செய்தியாகும்.


இன்றைய காலத்தில் ”ஹதீஸ்களை நிராகரிப்பவர்கள்” நபியவர்களே எழுத கூடாது என்று சொல்லியிருக்க நாம் ஏன் அதனை பின்பற்ற வேண்டும்? என்று கூறுகிறார்கள்.


ஆனால் நபியவர்களின் காலத்திலேயே ஹதீஸ்களை எழுதி வைத்திருந்தார்கள் ஒருவேளை நபியவர்கள் ஒட்டுமொத்த மக்களிடம் ஹதீஸை எழுதி வைக்கக் கூடாது! என்ற அறிவித்திருந்தால் யாரும் ஹதீஸை எழுதியிருக்க மாட்டார்கள்.


நபி (ஸல்) அவர்களின் தோழர்களில் எவரும் என்னை விட அதிகமான ஹதீஸ்களை அறிவிக்கவில்லை. அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) அவர்களை தவிர அவர்களிடம் கொஞ்சம் நபிமொழிகள் இருந்தன காரணம் அவர்கள் (ஹதீஸ்களை) எழுதி வைத்துக் கொள்வார்கள். நான் (நினைவில்) வைத்துள்ளேன். எழுதி வைத்ததில்லை. என அபூ ஹூரைரா (ரலி) கூறினார்கள்.

”(ஆதாரம்= புஹாரி=113)”


மேற்சொன்ன ஹதீஸிலிருந்து ”அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி)” ஹதீஸ்களை எழுதி வைத்திருந்தவர்களுள் ஒருவர். ஆக எழுதி வைப்பதற்கு அனுமதி உள்ளது. என்பதால் தான் அந்த நபித் தோழர் எழுதிவைத்திருக்கிறார்கள்.


”அல்லாஹ் உடைய வேதத்தையும் நபியவர்களிடமிருந்து கிடைத்த இந்த ஏட்டையும் தவிர (எழுத்து வடிவினாலான மார்க்க சட்டம்) வேறு எதுவும் நபியின் குடும்பத்தாரான எங்களிடம் இல்லை. என அலி (ரலி) அன்ஹூ அவர்கள் கூறினார்கள்.

(ஆதாரம் : புஹாரி :1870)


ஆக இவர்கள இருவர் மட்டுமல்லாமல் இன்னும் ஏராளமான நபித் தோழர்கள் ”ஹதீஸை” எழுதி வைத்திருந்தார்கள் என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளன. அதிலிருந்து நபியவர்களின் காலத்திலேயே ஹதீஸ்களை எழுதி வைத்திருந்தார்கள் அதை நபியவர்கள் தடுக்கவில்லை.




ஹதீஸ்கள் தொகுக்கப்பட்ட முறைகள்:


முதல் தலைமுறையினர்:


முதல் தலைமுறையில் வாழ்ந்த‌ அறிஞர்கள் தாங்கள் கேள்விப்பட்ட ஹதீஸ்கள் அனைத்தையும் பதிவுசெய்து எழுத்துவடிவில் ஒரு புத்தகமாக தொகுத்தார்கள். அந்த தொகுப்பில் நபி(ஸல்) அவர்களின் ஹதீஸ்கள் மட்டுமின்றி சஹாபாக்களின் கருத்துக்கள், தாபியீன்களின் கருத்துக்கள், தபா தாபியீன்களின் கருத்துக்களையும் சேர்த்து பதிவு செய்து வைத்துவிட்டார்கள். அதில் அந்த அறிவிப்பளர்களின் தரம் பற்றியும், எது ஸஹீஹானவை, எது ளயீஃபானவை என்பது பற்றியும் எந்த கருத்தும் அவர்கள் தெரிவிக்கவில்லை. இந்த முதல் தலைமுறையினரே ஒலி வடிவில் இருந்த ஹதீஸ்களை தொகுத்து எழுத்து வடிவமாக கொண்டுவந்தவர்கள்.


இரண்டாம் தலைமுறையினர்:


இரண்டாம் தலைமுறையினர் மக்களிடம் சென்று நேரடியாக ஹதீஸ்களை திரட்டாமல், ஏற்கனவே முதல் தலைமுறையினர் தொகுத்து வைத்திருந்த ஹதீஸ் புத்தகங்களை ஊர் ஊராக சென்று ஒன்று திரட்டினார்கள். பின் அந்த ஹதீஸ்கள் யார் யார் வாயிலாக கிடைக்கப்பட்டதோ அந்தந்த‌ சஹாபாக்களின் பெயர்களிலேயே தலைப்புவாரியாக பிரித்தார்கள். ஒவ்வொரு சஹாபாக்களின் பெயருக்கு கீழும் அவரவர் அறிவித்த ஹதீஸ்களை தொகுத்து வைத்தார்கள். உதாரணமாக: அலி(ரலி) அறிவித்த ஹதீஸ்களை இது அலி(ரலி) மூலம் வந்த ஹதீஸ்கள் என்றும் உமர்(ரலி) அறிவித்த ஹதீஸ்களை இது உமர்(ரலி) மூலம் வந்த ஹதீஸ்கள் என்றும் தொகுத்து வைத்தார்கள். இந்த இரண்டாம் தலைமுறையினரும், அந்த அறிவிப்பாளர்களின் வரிசையை சரி செய்யவோ தரம் பிரிக்கவோ அல்லது ஆராய்ச்சியோ செய்யவோ இல்லை.


முதலாம் தலைமுறையினர் தொகுத்து வைத்திருந்த ஹதீஸ்களில் இருந்த சஹாபாக்கள், தாபியீன்கள், தபா தாபியீன்கள் கருத்துக்களை எல்லாம் நீக்கிவிட்டு நபி(ஸல்) அவர்கள் காலத்தில் சம்பந்தப்பட்ட ஹதீஸ்களை மட்டும் தனியாக‌ பிரித்து எழுதி வைத்தார்கள். இதுபோல் சஹாபாக்களின் பெயரில் தொகுத்த ஹதீஸ் வகை ”முஸ்னத்” வகை ஹதீஸ்கள் எனப்படும்.


மூன்றாம் தலைமுறையினர்:


புகாரி, முஸ்லிம், திர்மிதி, அபுதாவூத், நஸயீ, இப்னுமாஜா, பஜ்ஜார் போன்றவர்கள் மூன்றாம் தலைமுறையை சேர்ந்தவர்கள். இவர்கள் இரண்டாம் தலைமுறையினர், சஹாபாக்கள் பெயரில் தொகுத்து வைத்த முஸ்னத் ஹதீஸ்களை பாடவாரியாக பிரித்தார்கள். சஹாபாக்கள் பெயரில் தொகுக்கப்பட்டிருந்த முஸ்னத் ஹதீஸ்களில் தேவையான பாடங்களை தேடுவது மிகவும் சிரமமாக இருந்ததால், மக்களிடம் அந்த ஹதீஸ்கள் சரியான முறையில் போய் சேரவில்லை. அதனால் மூன்றாம் தலைமுறையினர் அந்த ஹதீஸ்களை பாடங்களின் தலைப்பு வாரியாக தொகுத்தார்கள். அதாவது நோன்பு சம்பந்தப்பட்ட ஹதீஸ்கள், தொழுகை சம்பந்தப்பட்ட ஹதீஸ்கள், கல்வி சம்பந்தப்பட்ட ஹதீஸ்கள் என்று தொகுத்தார்கள். அவ்வாறு தொகுத்தது, நோன்பு பற்றிய செய்திகளை அறிய வேண்டுமென்றால் நோன்பு என்ற தலைப்பின் கீழும், தொழுகை பற்றிய செய்திகளை அறிய வேண்டுமென்றால் தொழுகை என்ற தலைப்பின் கீழும் பார்ப்பதற்கு மிகவும் சுலபமாக இருந்தது. அதனால் இந்த மூன்றாம் தலைமுறையினர் மிகவும் பிரபலமடைந்தனர்.


அது மட்டுமின்றி இவர்கள் பிரபலமடைய மற்றொரு காரணம் இதற்கு முன் இருந்த முதல் இரண்டு தலைமுறையினர் ஆராய்ச்சி செய்யாத‌ ஸனது வரிசையை இவர்கள் ஆராய்ந்தார்கள். (ஸனது வரிசை என்றால் அறிவிப்பாளர்கள் தொடர் வரிசை). அறிவிப்பாளர்களில் இவர் பலஹீனமானவர், இவர் ஞாபக ம‌றதியுடையவர், இவர் பொய் சொல்லக்கூடியவர், இவர் தரம் குறைந்தவர் என்று அறிவிப்பாளர்களின் தரத்தை ஆராய்ந்து எந்த ஹதீஸ் ஸஹீஹான ஹதீஸ், எந்த ஹதீஸ் ளயீஃபான ஹதீஸ் என்றும் எந்த ஹதீஸ் ஏற்றுக்கொள்ள தகுந்தவை, எந்த ஹதீஸ் ஏற்றுக்கொள்ள தகுந்தவை அல்ல என்றும் அறிவிப்பாளரின் தரத்தைக் கொண்டு பாட தலைப்புவாரியாக தொகுத்தார்கள். இந்த வகை ஹதீஸ் தொகுப்புகள் ”ஸுனன்” எனப்படும்.


நான்காம் தலைமுறையினர்:


மூன்றாம் தலைமுறையினரே ஹதீஸ்களை தலைப்பு வாரியாகவும், அறிவிப்பாளர்களின் தரம் வாரியாகவும் தொகுத்து வைத்திருந்ததால், நான்காம் தலைமுறையினர்க்கு தொகுக்கவேண்டிய வேலை எதுவும் இருக்கவில்லை. புகாரி, முஸ்லிம் போன்ற மூன்றாம் தலைமுறை இமாம்கள் சரியான ஹதீஸ்கள் என்பதற்கு சில நிபந்தனைகள் வைத்திருந்தார்கள். அறிவிப்பாளர் பொய் சொல்லக்கூடியவ‌ராகவோ, ஞாபக மறதியுடையவராகவோ இல்லாமலும், நல்ல நினைவாற்றல் உடைய‌வராக இருக்கவேண்டும் என்பது போன்ற நிபந்தனைகள் வைத்திருந்தார்கள். அறிவிப்பாளர் ஒரு ஹதீஸை யார் தமக்கு அறிவித்தாக கூறினாரோ, அவரும் அந்த அறிவிப்பாளரும் ஒரே காலக்கட்டத்தில் வாழ்ந்தவராகவும், ஒருவரை ஒருவர் சந்தித்தவராகவும் இருக்கவேண்டும் என்று நிறைய ஷர்த்துக்கள் வைத்திருந்தார்கள். அவ்வாறு அந்த இமாம்கள் விதித்த‌ ஷர்த்துக்களுக்கு உட்பட்ட ஹதீஸ்கள் இன்னும் இருப்பதாக கூறி இந்த நான்காம் தலைமுறையினர் புதிதாக‌ சில ஹதீஸ்களை சேர்த்து தொகுத்தனர். ஆனால் அவைகள் தரம் வாய்ந்த ஹதீஸ்களாக இல்லை.


சுமார் ஹிஜ்ரீ 100 லிருந்து 300 அல்லது 400க்குள் ஹதீஸ்கள் தொகுக்கப்பட்ட பணி நிறைவடைந்தது. மேலும் ஹதீஸ்களை எழுத்து வடிவில் கொண்டுவருவது பற்றி பல குழப்பங்கள் எழுந்தாலும், நபி(ஸல்) அவர்கள் காலத்திலேயே ஹதீஸ்களை எழுதப்பட்டிருந்ததற்கு நிறைய ஆதாரங்கள் இருப்பதால் ஹதீஸ்களை எழுதுவதில் தவறில்லை என்பதை அறியலாம்.


எழுத்துவடிவில் தொகுக்கப்பட்ட‌ ஹதீஸ் நூல்களின் இரண்டு வகைகள்:


ஹிஜ்ரீ 400 க்குள் ஹதீஸ் தொகுக்கப்பட்டு எழுத்து வடிவாக கொண்டு வரும் பணி முடிவடைந்தது. பின் எழுத்து வடிவாக கொண்டுவரப்பட்ட இந்த நூல் இரண்டு வகையாக பிரிக்கப்பட்டது.


ஒன்று புகாரி, முஸ்லிம் போன்ற சுனன் வகை ஹதீஸ்கள்; மற்றொன்று யார் யாரின் மூலமாக ஹதீஸ் அறிவிக்கப்பட்டது என்ற அறிவிப்பாளர் தொடர் வரிசை எதுவும் இடம்பெறாமல், ஹதீஸை மட்டும் பதிந்து இது எந்த நூலில் உள்ளது மற்றும் யார் அறிவித்தது என்று மட்டும் பதியப்பட்டிருக்கும். அதாவது அபுஹுரைரா அறிவித்தது; புகாரியிலிருந்து எடுக்கப்பட்டது என்பது போல் பதியப்பட்டிருக்கும்.


மிஷ்காத், ரியாலுஸ்ஸாலிஹீன் போன்ற ஹதீஸ் புத்தகங்கள் இந்த இரண்டாம் வகையை சார்ந்தது. உதாரணமாக; ரியாலுஸ்ஸாலிஹீன் புத்தகத்தில் கல்வி என்று ஒரு தலைப்பை எடுத்துக்கொண்டால் அத்தலைப்பின் கீழ் திர்மிதி, முஸ்லிம், புகாரி, இப்னுமாஜா ஆகிய நூல்கலில் உள்ள கல்வி சம்பந்தமான ஹதீஸ்களை எல்லாம் ஒன்று திரட்டி இது அபுஹுரைரா அறிவிக்கக்கூடியது என்றும், இந்த ஹதீஸ் முஸ்லிம், புகாரி என்று எந்த நூல்களின் மூலம் எடுக்கப்பட்டதோ அந்நூலின் பெயரும் பதியப்பட்டிருக்கும். அறிவிப்பாளர்களின் தொடர் வரிசை எதுவும் இருக்காது. யாரிடமிருந்து யாருக்கு அறிவிக்கப்பட்டது, புகாரி இமாம் அந்த அறிவிப்பாளரை பற்றி என்ன கருத்து சொல்லியிருக்கிறார்கள் என்பது பற்றி எல்லாம் ஆதாரம் தேடுவதற்கு மீண்டும் புகாரி, முஸ்லிம் போன்ற நூல்களில் சென்று தான் ஆராய வேண்டும்.


ஒரு தலைப்பை பற்றி நாம் அறிந்துக்கொள்ள நாடினால், அது எந்த நூலிலிருந்து வந்ததோ அதையே மீண்டும் தேடி ஆராய்வதற்கு பதிலாக‌ அந்த மூல ஹதீஸ் நூற்களிலே படித்துக்கொள்ளலாம் என்ற எண்ணம் தோன்றிவிடுவதால் தான் மிஷ்காத், ரியாலுஸ்ஸாலிஹீன் போன்ற நூல்கள் அதிகம் இந்த  மக்களிடம் பிரபலமடையவில்லை. அதனால் மக்கள் ஹதீஸ் பற்றி ஆதாரம் தேடி அறிந்துக்கொள்ள புகாரி, முஸ்லிம் போன்ற சிறந்த ஏழு ஹதீஸ் புத்தகங்களையே நாடுகிறார்கள்.



ஹதீஸ் நூல்கள் பற்றிய விளக்கம்:


ஒரு ஹதீஸை படித்தாலோ அல்லது யார் வாயிலாகவும் கேட்டாலோ அது எந்த புத்தகத்திலிருந்து வந்தது என்பதை பற்றிய விஷயத்தில் எந்த சந்தேகமும் வராமல் இருப்பதற்கு, நாம் எல்லா ஹதீஸ் புத்தகங்கள் பற்றிய விவரங்களையும் அறிந்து வைத்திருப்பது அவசியம்.


புகாரி, முஸ்லிம், நஸயீ, அஹமது, இப்னுமாஜா,அபுதாவூத், திர்மிதி ஆகிய பிரபலமான‌ ஏழு ஹதீஸ் நூல்களும் நமக்கு மிகவும் பரிச்சையமானவை. இது தவிர ஸஹீஹான ஹதீஸ்கள் இடம்பெற்றுள்ள வேறு நிறைய ஹதீஸ் நூல்களும் நடைமுறையில் உள்ளது.


ஒவ்வொரு ஹதீஸ் புத்தகங்களின் பெயரை சொல்லும்போதும் அதில் எத்தனை ஹதீஸ்கள் உள்ளதோ அந்த எண்ணிக்கை அந்த புத்தகங்களின் பெயர்களோடு சேர்த்து சொல்லப்படும். ஒலி வடிவமாக இருந்த ஹதீஸ்களின் தொகுப்புகள் எழுத்து வடிவமாக வந்து, இன்றைய நவீன கால விஞ்ஞான முன்னேற்றத்தின் காரணமாக மென் பொருளாக‌வும்(software), சி.டி(CD) க்களாகவும், ஆப்ஸ்(App)களாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வடிவமைக்கப்பட்ட நவீன முறை ஹதீஸ் தொகுப்புகளில் உள்ள ஹதீஸ்களின் எண்ணிக்கை அன்றைய ஹதீஸ் புத்தகங்களில் உள்ள ஹதீஸ்களின் எண்ணிக்கையோடு மாறுபட வாய்ப்பு உள்ளது. ஒரு புத்தகத்திற்கும் மற்றொரு புத்தகத்திற்குமே கூட ஹதீஸ்களின் எண்கள் மாறுபடும். ஏனெனில் ஹதீஸ்களை தொகுத்தவர்கள் இந்த எண்களை பதியவில்லை.


உதாரணமாக; 7 பகுதிகளாக உள்ள புகாரி ஹதீஸ் புத்தககங்களை ரஹ்மத் பப்ளிகேஷன்ஸ் வெளியிடும்போது ஒவ்வொரு ஹதீஸிற்கும் ஒவ்வொரு எண் குறித்து வெளியிட்டிருப்பார்கள். இதையே வேறு பப்ளிஷர்கள் வெளியிடும்போது மீண்டும் மீண்டும் வரும் ஒரே ஹதீஸிற்கு வேறு வேறு எண்கள் கொடுக்காமல், ஒரே எண்ணை குறித்திருப்பார்கள். இன்னும் சிலர் ஒரே அறிவிப்பாளர்கள் அறிவித்த ஹதீஸ்களை ஒரே எண்களின் கீழும் பதிந்திருப்பார்கள். இவ்வாறு எண்கள் மாறுபடுவதன் காரணமாக‌ ஹதீஸ்களில் எந்த மாற்றமும் ஏற்படாது. அதனால்  இந்த எண்களை ஹதீஸ்களின் மொத்த எண்ணிக்கை என்று நாம் கருதிவிடக்கூடாது. மேலும் மென்பொருளின் வடிவில், இந்த எண்ணிக்கையில் இன்னும் அதிகம் மாற்றமிருக்கும். ஒரு ஹதீஸை  தேடும்போது 50  எண்களுக்கு முன்னாலிருந்தே தேடவேண்டியது போல் அமைந்திருக்கும். அதனால் குறிப்பிட்ட ஒரு எண்ணில் ஒரு ஹதீஸை தேடி அது கிடைக்காவிட்டால் அந்த ஹதீஸே இல்லை என்று நாம் முடிவு செய்துவிட கூடாது.



  

ஹதீஸ் புத்தகங்களின் விவரங்கள்:


புகாரி:

இந்த‌ புத்தகத்தில்  7124  ஹதீஸ்கள் இடம் பெற்றுள்ளது. இதை எழுதியவர்  முகமது இப்னு இஸ்மாயில்.  இவர் வாழ்ந்த ஊரின் பெயர் தான்  புகாரி.  ஆனால் அந்த ஊரின் பெயராலே அழைக்கப்பட்டு பிரபலமடைந்தார். எந்த ஹதீஸ் புத்தகத்திற்கும் அதை எழுதியவர்கள் எந்த பெயரும் வைக்க‌வில்லை. அந்த பெயர்கள் எல்லாமே வழக்கத்தில் வந்ததுதான்.


முஸ்லிம்:

இந்த புத்தகத்தில்  7748  ஹதீஸ்கள் இடம் பெற்றுள்ளது. இதை எழுதியவர் பெயர்  முஸ்லிம்.  அவர் பெயராலேயே இந்த புத்தகம் அழைக்கப்பட்டது. முஸ்லிம் இமாம், ஒரே ஹதீஸை ஒன்றுக்கும் மேற்பட்டோர்  அறிவித்திருந்தாலும்  எல்லாவற்றையுமே தனி தனியாக எழுதி வைத்திருந்தார். ஆனால் புகாரி இமாமோ ஒன்றுக்கு மேற்பட்டோர் அறிவித்திருந்தால், அதில் யார் அறிவித்தது சந்தேகத்திற்கு  இடமில்லாமல் வலுவாக இருக்கிறதோ அதை மட்டுமே வடிகட்டி  எழுதிவைத்தார். ஆனால் ஒரே ஹதீஸை நான்கு தலைப்பின் கீழ் எழுதிவைத்திருப்பதால் இதில் ஹதீஸ்களின் எண்ணிக்கை அதிகப்படுகிறது.


அபுதாவூத்:

இதில்  5274  ஹதீஸ்கள் இடம் பெற்றுள்ளது.


நஸயீ:

இதில்  5754  ஹதீஸ்கள் இடம் பெற்றுள்ளது.  நஸயீ  இமாம்  ஸுனன் அல்குப்ரா நஸயீ  என்று மற்றொரு புத்தகமும் எழுதியுள்ளார். இதில்  11768  ஹதீஸ்கள் இடம் பெற்றுள்ளது. இது ஆரம்பத்தில் ஸனது வரிசை சரிப்பார்த்து, எது ஸஹீஹானது, எது ள‌யீஃபானது, எது ஏற்றுக்கொள்ள கூடியது, எது ஏற்றுக்கொள்ள தகுந்ததல்ல என்றெல்லாம் ஆராயாமல் எல்லா ஹதீஸ்களையும் மொத்தமாக எழுதி வைத்ததால் இதன் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஆராய்ந்து சரி பார்த்து எழுதிய நஸயீ புத்தகத்தில்  5754  ஹதீஸ்களே இடம்பெற்றுள்ளது.


திர்மிதி:

இதில்  3956  ஹதீஸ்கள் இடம்பெற்றுள்ளது.


இப்னுமாஜா:

இதில்  4341  ஹதீஸ்கள் இடம்பெற்றுள்ளது.


முஸ்னத் அஹ்மத்:

இதில்  27688  ஹதீஸ்கள் இடம்பெற்றுள்ளது. ஹதீஸ் புத்தகங்களிலேயே மிக பெரிய ஹதீஸ் புத்த‌கம் இது தான்.


முஅத்தா:

இதில்  3676  ஹதீஸ்கள் இடம்பெற்றுள்ளது. இதை எழுதியவர் மாலிக் இமாம். இவர் மதீனாவில் வாழ்ந்தவர். மதீனாவில் தொகுக்கப்பட்ட ஹதீஸ்களை மட்டுமே இந்த புத்தகத்தில் எழுதியுள்ளார்.


தாரமி:

இதில்  3567  ஹதீஸ்கள் இடம்பெற்றுள்ளது.


ஹாகீம்:

இதில்  8803  ஹதீஸ்கள் இடம்பெற்றுள்ளது.


இப்னு ஹிப்பான்:

இதில்  7491  ஹதீஸ்கள் இடம்பெற்றுள்ளது.


இப்னு ஹுஸைமா:

இதில்  3099  ஹதீஸ்கள் இடம்பெற்றுள்ளது.


பைஹக்கி: 

பை ஹக்கி இமாம் நான்காம் தலைமுறையை சார்ந்தவர். இவர் இரண்டு விதமான புத்தகங்களை எழுதியுள்ளார்.

1) ஸுனனுல் குப்ரா பைஹக்கி

2) ஸுனனுல் சுஹ்ரா பைஹக்கி

முதலில் ஸுனனுல் குப்ரா பைஹக்கி என்னும்  21601  ஹதீஸ்கள் கொண்ட நூலை எழுதினார். இது சரியான மற்றும் சரியில்லாத ஹதீஸ்கள் அனைத்தும் சேர்த்து எழுதப்பட்டது. பின் அதை தரம் பிரித்து ஸுனனுல் சுஹ்ரா பைஹக்கி என்ற நூலை எழுதினார். இதில்  4883  ஹதீஸ்கள் இடம் பெற்றுள்ளது.


தபரானி:

தபரானி இமாம்  முஃஜமுல் கபீர், முஃஜமுல் அவ்ஸத், முஃஜமுல் ஸகீர்  என்ற மூன்று புத்தகங்கள் எழுதியுள்ளார்.


முஃஜமுல் என்றால் ஒரே ஆசிரியரின் வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ள ஹதீஸ்களை தொகுத்து எழுதுவது.  [உதாரணமாக; மாலிக் இமாம் அறிவித்த ஹதீஸ்களை எல்லாம் ஒன்றாக தொகுத்து இவை மாலிக் இமாம் வாயிலாக கேட்டது என்று பதிவது]. 

1. முஃஜமுல் கபீர்: இதில் 22,796 ஹதீஸ்கள் இடம் பெற்றுள்ளது.

2. முஃஜமுல் அவ்ஸத்: இதில் 9489 ஹதீஸ்கள் இடம் பெற்றுள்ளது.

3. முஃஜமுல் ஸகீர்: இதில் 1198 ஹதீஸ்கள் இடம் பெற்றுள்ளது.


அபு அவானா:

அபு அவானா இமாம் 7065 ஹதீஸ்கள் எழுதியுள்ளார். இவை ’முஸ்தஹ்ரத்’ வகையை சார்ந்தவை. ’முஸ்தஹ்ரத்’ என்றால் ஒரே கருத்தையுடைய ஹதீஸ் வேறு அறிவிப்பாளர் வழியாக வந்திருப்பது. உதாரணமாக; “இன்னமல் ‘ஆமலு பின்நியாஹ்” என்ற பிரபலமான செய்தியை நபி(ஸல்) அவர்கள் சொன்னபோது அங்கு உமர்(ரலி), அபு பக்கர்(ரலி), உஸ்மான்(ரலி), அலி (ரலி) ஆகிய நான்கு சஹாபாக்களும் இருந்திருக்கலாம். இந்த நான்கு சஹாபக்களின் வாயிலாகவும் இந்த ஹதீஸ் அறிவிக்கப்பட்டிருக்கலாம். புகாரி இமாம் இதில் எந்த ஸனது வரிசை மிக வலுவாக இருக்கிறதோ அந்த அறிவிப்பாளர் வரிசையில் உள்ளதை மட்டும் பதிந்துவைப்பார். அவற்றை, அலி(ரலி) வழியாக வந்த அறிவிப்பாளர் வரிசையில் இந்த ஹதீஸ் இடம் பெற்றிருக்கிறது, உமர் (ரலி) வழியாக வந்த அறிவிப்பாளர் வரிசையில் இந்த ஹதீஸ் இடம் பெற்றிருக்கிறது என்று ஒரே கருத்துடைய ஹதீஸை அறிவிப்பாளர் தொடர் வரிசை வேறுவேறாக வரும்போது மீண்டும் பதிவு செய்வதே ’முஸ்தஹ்ரத்’ வகையை சார்ந்த ஹதீஸ்கள் எனப்படும்.


முஸ்னத் அபு யஹ்லா:

இதில்  7335  ஹதீஸ்கள் இடம் பெற்றுள்ளது. சஹாபாக்கள் அறிவித்த ஹதீஸ்களை இவை உமர்(ரலி) வழியாக வந்த ஹதீஸ்கள், இவை அபு பக்கர்(ரலி) வழியாக வந்த ஹதீஸ்கள் என்று அவர்கள் பெயரில் தொகுத்து எழுதிய ஹதீஸ் வகைகளே முஸ்னத் வகை ஹதீஸ்களாகும்.


தாரகுத்னி:

இதில்  4898  ஹதீஸ்கள் இடம் பெற்றுள்ளது.


முஸ்னத் அல் பஜ்ஜார்:

இதில்  3450  ஹதீஸ்கள் இடம் பெற்றுள்ளது.


ஸுனன் ஸஹீத் பின் மந்தூர்:

இதில்  2978  ஹதீஸ்கள் இடம் பெற்றுள்ளது. பாடத்தலைப்பு வாரியாக தொகுக்கப்பட்ட ஹதீஸ்களே ஸுனன் வகை ஹதீஸ்களாகும்.


முஸன்னப் இப்னு அபிஷைபா:

இதில்  37,943  ஹதீஸ்கள் இடம் பெற்றுள்ளது. இவை ’முஸ‌ன்னப்’ வகை ஹதீஸ்களை சார்ந்தவை. முதல் தலைமுறையினர் நபி(ஸல்) அவர்களின் கருத்துக்களோடு, சஹாபக்களின் கருத்துகள், தாபியீன்களின் கருத்துகள், தபா தாபியீன்களின் கருத்துக்கள் என்று அவர்கள் கேள்விப்பட்ட எல்லா செய்திகளையும் சேர்த்து பதிந்து வைத்திருந்தனர். இந்த ஹதீஸ்களே முஸன்னப் ஹதீஸ் வகையாகும். இந்த முஸன்னப் வகை ஹதீஸ்களை சரிவர ஆராய்ந்த பின்னே அதை ஆதாரத்திற்கு எடுத்துகொள்ளவேண்டும்.


முஸன்னத் ஷாஃபி:

ஷாஃபி இமாம்  முஸன்னத் ஷாஃபி  என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். இதில்  1829  ஹதீஸ்கள் இடம் பெற்றுள்ளது. இவர் மாலிக் இமாமின் மாணவர்.


அப்துர் ரஸ்ஸாக்:

இதில் 21,033 ஹதீஸ்கள் இடம் பெற்றுள்ளது.


பைஹக்கி:

பைஹக்கி இமாம்  ஆதாப்  என்னும் புத்தகத்தை எழுதியுள்ளார். ஆதாப் என்றால் குணநலன்கள். ஒழுக்கங்கள் சம்பந்தப்பட்ட‌ இதில்  867  ஹதீஸ்கள் இடம் பெற்றுள்ளது.


அதபுல் முஃப்ரத்:

இதை  புகாரி இமாம்  எழுதியுள்ளார். இதில்  1322  ஹதீஸ்கள் இடம் பெற்றுள்ளது. இதில் பொய் பேசக்கூடாது, தர்மம் செய்யவேண்டும், நன்மையான செயல்கள் செய்வதற்கு முற்படவேண்டும் போன்ற நல் ஒழுக்கங்களை பற்றி பதியப்பட்டுள்ளது. ஆனால் நல்ல விஷயங்களை பற்றி மட்டுமே இருக்கிறது என்பதால் ஸனது வரிசை ஆராயாமல் எழுதியுள்ளார். அதனால் இதில் வரும் ஹதீஸ்களை ஸனது வரிசையை ஆராய்ந்து, ஆய்வுக்கு உட்படுத்தியே நாம் ஆதாரத்திற்கு எடுத்துகொள்ள வேண்டும்.


மராஸில்:

அபுதாவூத் இமாம் எழுதிய  ’மராஸில்’  என்ற புத்தகத்தில்  19,467  ஹதீஸ்கள் இடம் பெற்றுள்ளது.  ’முர்ஸல்’  என்பதின் பன்மை தான்  ’மராஸில்’ . வழக்கமாக, ஹதீஸ்கள் நபி(ஸல்) அவர்களோடு வாழ்ந்த சஹாபாக்கள் வாயிலாக தாபியீன்களுக்கு அறிவிக்கப்பட்டு, தாபியீன்கள் வாயிலாக தபா தாபியீன்களுக்கும், தபா தாபியீன்கள் வாயிலாக கேட்டு இமாம்கள் தொகுத்து வழங்குவார்கள். அறிவிப்பாளர் வரிசையில் சஹாபாக்கள் பெயர்கள் இல்லாமல் நபி(ஸல்) அவர்கள் செய்ததாக‌ தாபியீன்களே நேரடியாக அறிவித்த ஹதீஸ் வகைகளே முர்ஸல் வகை ஹதீஸ்களாகும்.  முர்ஸல் என்றால் துண்டிக்கப்பட்டது அல்லது அறுக்கப்பட்டது  என்று பொருள். இவ்வாறு அறிவிப்பாளர் வரிசை துண்டிக்கப்பட்ட ஹதீஸ்களை தொகுத்து அபுதாவூத் இமாம் எழுதிய ஹதீஸ் புத்தகம் தான் மராஸில். ஏற்கனவே அறிவிப்பாளர் வரிசைகளை ஆராய்ந்து ஸஹீஹான ஹதீஸ்களை எழுதிய அபுதாவூத் இமாம், அறிவிப்பாளர் வரிசை விட்டுப்போன ஹதீஸ்களை எல்லாம் தனியாக திரட்டி மராஸில் என்னும் புத்தகத்தை எழுதியிருக்கலாம்.


இதில் வரும் ஹதீஸ்களை நாம் தெரிந்து வைத்துகொள்ளலாமே தவிர‌ ஆதாரபூர்வமான ஹதீஸாக எடுத்துக்கொள்ளக்கூடாது. 


அப்துல்லாஹ் இப்னு முபாரக்:

இவர் எழுதிய முஸ்னத் வகை புத்தகத்தில்  275  ஹதீஸ்கள் இடம் பெற்றுள்ளது.


இப்னுல் ஆராபி:

இவர் எழுதிய‌  முஃஜம் இப்னுல் ஆராபி  என்னும் புத்தகத்தில்  2460  ஹதீஸ்கள் இடம்பெற்றுள்ளது.  (முஃஜம் என்றால் இமாம்கள் வாயிலாக கேட்ட ஹதீஸ் வகைகள்) 


தபரானி:

தபரானி இமாம் எழுதிய  முஸ்னத் ஷாமியின்  புத்தகத்தில்  3557  ஹதீஸ்கள் இடம் பெற்றுள்ளது. ஷாமியின் என்றால் சிரியாவாசிகள். சிரியாவில் வாழ்ந்த மக்களிடமிருந்து தொகுத்த ஹதீஸ்கள் மட்டுமே இதில் இடம்பெற்றிருக்கும். இதுபோல் ஈராக், ஈரான், ஓமன் என்ற நாட்களில் தொகுக்கப்பட்ட ஹதீஸ்களும் இருந்திருக்க வாய்ப்பிருந்தாலும், நமக்கு ஆதாரப்பூர்வமாக கிடைத்தது சிரியாவாசிகளிடமிருந்த‌ தொகுக்கப்பட்ட இந்த புத்தகம் மட்டும் தான்.


முஸ்னத் இப்னு அபிஷைபா:

அபிஷைபா இமாம் எழுதிய இந்த புத்தகத்தில்  998  ஹதீஸ்கள் இடம் பெற்றுள்ளது. இவர் முஸன்னப் வகை ஹதீஸ் புத்தகமும் எழுதியுள்ளார். அதில்  37943  உள்ளது. அதை சரிவர ஆராய்ந்து 998 ஸஹீஹான ஹதீஸ்களை மட்டும் தொகுத்து முஸ்னத் வகை புத்தகத்தை எழுதினார்.


முஸ்னத் ஸிஹாப்:

ஸிஹாப் என்பவர் எழுதிய இந்த புத்தகத்தில்  1371  ஹதீஸ்கள் இடம்பெற்றுள்ளது.


முஸ்னத் அல் உமைதி:

உமைதி என்பவர் எழுதிய இந்த புத்தகத்தில்  1361  ஹதீஸ்கள் இடம்பெற்றுள்ளது.


முஸ்னத் அல் ஆரிஸ்:

ஆரிஸ் என்பவர் எழுதிய இந்த புத்தகத்தில்  1124  ஹதீஸ்கள் இடம்பெற்றுள்ளது.


முஸ்னத் அல் தயாரிபி:

அல் தயாரிபி என்பவர் எழுதிய இந்த புத்தகத்தில்  2767  ஹதீஸ்கள் இடம்பெற்றுள்ளது.


முஸ்னத் இஸ்ஹாக் இப்னு ராகவை:

இஸ்ஹாக் என்பவரின் மகன் ராகவை என்பவர் எழுதிய இந்த புத்தகத்தில்  2425  ஹதீஸ்கள் இடம்பெற்றுள்ளது.


முஸ்னத் பின் ஸாபி:

ஸாபி என்னும் ஊரில் திரட்டிய ஹதீஸ்களை தொகுத்து எழுதிய இந்த புத்தகத்தில்  1458  ஹதீஸ்கள் இடம்பெற்றுள்ளது.


முஸ்னத் அலி இப்னுல் ஜஹத்:

அலி இப்னுல் ஜஹத் எழுதிய இந்த புத்தகத்தில்  3462  ஹதீஸ்கள் இடம்பெற்றுள்ளது.


முஸ்னத் இப்னு பின்த் உமைது:

இவர் எழுதிய இந்த புத்தகத்தில்  1594  ஹதீஸ்கள் இடம்பெற்றுள்ளது.

(இந்த முஸ்னத் வகை ஹதீஸ்கள் எல்லாமே புகாரி இமாம் தொகுத்து வழங்கியுள்ள ஸஹீஹான ஹதீஸ் புத்தக்த்தில் அடங்கியுள்ளது.) 


அபுஹனிபா:

அபுஹனிபா இமாம் சிறந்த மார்க்க அறிஞர். அவர் மக்களுக்கு அதிகம் பிரச்சாரம் செய்தவராகவும், நிறைய மாணவர்கள்களுக்கு கல்வி கற்பித்தவராகவும் இருந்திருக்கிறார். ஆயினும் அவர் அதிகமான ஹதீஸ்களை வாய்வழியாக மொழிந்திருக்கிறாரே தவிர எந்த புத்தகத்தையும் அவர் ஆதாரப்பூர்வமாக வெளியிடவில்லை.  அவர் பெயரால் வெளிவந்திருக்கும் எந்த புத்தகமும் அவர் எழுதியதில்லை.  அவர் பாரிசி நாட்டுக்காரராக இருந்த காரணத்தால் அரபி தெரியாமல் இருந்திருக்கலாம்.


சஹாபாக்கள் வாயிலாக அறிவிக்கப்பட்ட ஹதீஸ்களை தொகுத்து சஹாபாக்கள் பெயரிலேயே எழுதிய நிறைய முஸ்னத் வகை ஹதீஸ் புத்தகங்கள் இருக்கிறது. இவற்றில் அறிவிப்பாளர் வரிசை சரிபார்த்து நாம் ஆதாரத்திற்கு எடுத்துக்கொள்ளலாம்.


இதுவரை நாம் பார்த்த முஸ்னத், முர்ஸல், ஸுனன், முஸப், முஃஜம் போன்ற‌ வகைகள் பற்றியெல்லாம் விரிவாக பார்த்தோம். இது தவிர வேறு சில புத்தகங்களும் உள்ளது. இதை எழுதியவர்கள் ஹதீஸ்களை திரட்டவோ அல்லது இமாம்களை சந்தித்து அறிவிப்பாளர்கள் வரிசையை ஆராய்ந்ததோ இல்லை. இவர்கள் கல்வி, தொழுகை என்று தலைப்பிட்டு அதன் கீழ் ஏற்கனவே புகாரி, முஸ்லிம், திர்மிதி போன்ற இமாம்கள் தொகுத்து வைத்த புத்தகங்களிலிருந்து இந்த தலைப்புகள் பற்றியவை எடுத்து எழுதிவிட்டு அது யார் அறிவித்தது, எந்த ஹதீஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது என்ற விவரங்களை எழுதியுள்ளர்கள். இதில் நாம் அறிவிப்பாளர் வரிசை ஆராயவேண்டுமாயின் நாம் புகாரி, முஸ்லிம் போன்ற புத்தகங்களை பார்த்து தான் ஆராயமுடியும்.



இந்த வகையை சார்ந்த புத்தகங்கள்:


இபானத்துல் குப்ரா:

இப்னு பஸ்ஸா என்பவர் எழுதிய இந்த புத்தகத்தில்  2643  இடம் பெற்றுள்ளது.


தன்துல் அல் உம்மார்:

இவர் எழுதிய‌ புத்தகத்தில்  46,624  ஹதீஸ்கள் இடம் பெற்றுள்ளது.


அல் முத்தகா:

இந்த புத்தகத்தை எழுதியவர்  இப்னுல் ஜாருத். 


ஜாமிஉல் உசூல்:

இந்த புத்தகத்தை எழுதியவர்  இப்னுல் அசீர். 


இது போல்  மிஸ்காத், மஜ்மஉல் ஜவாஹிர், ஹரம் சுன்னா, புலூஹில் மராம், ரியாலுஸ்ஸாலிஹீன்  போன்ற பல நூல்கள் உள்ளன. ஆனால் இப்புத்தகங்களில் அறிவிப்பாளர் வரிசை இடம் பெற்றிருக்காது. நாம் ஆராயவேண்டுமாயின் மீண்டும் மூலப்புத்தகமான புகாரி, முஸ்லிம் போன்ற புத்தகங்களை தான் பார்க்கவேண்டும். அதன் காரணமாகவே இந்த வகை புத்தகங்கள் அதிகம் நடைமுறையில் இல்லை.


முஸ்னத் வகை ஹதீஸ் புத்தகங்கள் ஸஹீஹானவையாக இருந்தாலும் அவை தலைப்பு வாரியாக பிரிக்கப்படாமல், அறிவிப்பாளர் தொடர் வரிசையும் இல்லாமல் இருப்பதால் அதிகம் பிரபலமாகவில்லை.



அறிவிப்பாளர்களை பற்றிய ஆய்வு:


ஹதீஸ்களை தொகுக்கும் பணி நடந்த அதே காலக்கட்டத்திலேயே, அறிவிப்பாளர்கள் தரத்தை ஆராயும் பணியும் அறிஞர்களால் மேற்கொள்ளப்பட்டது.


ஹதீஸ்கள் தொகுக்கப்பட்ட பணி முடிந்த பிறகு தான் இந்த அறிவிப்பாளர்கள் பற்றிய ஆராய்ச்சி தொடங்கப்பட்டது என்று சிலர் சொல்வது தவறு. 


ஹதீஸ்களை ஆரம்பத்தில் தொகுத்த  அஹ்மத் இப்னு ஹம்பல், அலிஃபில் மதனி, யஹ்யா பின் முயீம்  போன்றவர்களே அறிவிப்பாளர்கள் யார், எப்படிப்பட்டவர்கள் போன்ற அனைத்தையும் நன்றாக ஆராய்ந்து எழுதி அதை புத்தகங்களாக‌ வெளியிட்டார்கள்.  புகாரி, அலி இப்னு மதனி, யஹ்யா இப்னு முயீம்  போன்றவர்கள் அறிவிப்பாளர்களின் வரலாற்றை புத்தகமாக எழுதியுள்ளார்கள். அதில் அறிவிப்பாளர்களின் பெயர் என்ன, எப்போது பிறந்தார்கள், எப்போது இறந்தார்கள், அவர்கள் நல்ல‌வர்களா கெட்டவர்களா, அவர்களுடைய நம்பகத்தன்மை, அவர்களுடைய நினைவாற்றல் திறன் போன்ற நமக்கு தேவையான எல்லா விவரங்களையும் தொகுத்து புத்தகமாக வெளியிட்டுள்ளார்கள்.


அந்த புத்தகத்தில் அறிவிப்பாளர்கள் நல்லவரா, கெட்டவரா என்றெல்லாம் பிரிக்கவில்லை. அதில் நல்ல அறிவிப்பாளர்களை பற்றியும் சொல்லப்பட்டிருக்கும், கெட்ட அறிவிப்பாளர்களை பற்றியும் சொல்லப்பட்டிருக்கும். இந்த வகை புத்தகம்  தாரீஜ்  எனப்படும். புகாரி இமாம்  தாரீஜ் அல் கபிர்  மற்றும்  தாரீஜ் அல் ஸஹீர்  ஆகிய இரண்டு தாரீஜ் வகை புத்தகங்கள் எழுதியுள்ளார். ( கபீர் என்றால் பெரியது; ஸஹீர் என்றால் சிறியது ). தாரீஜ் அல் கபிர் புத்தகத்தில் அறிவிப்பாளர்கள் பற்றிய விவரங்களையும் மிக விரிவாகவும், தாரீஜ் அல் ஸஹீர் புத்தகத்தில் அறிவிப்பாளர்கள் பற்றிய விவரங்களை சுருக்கமாகவும் எழுதியுள்ளார்.


அபு ஜரா, இப்னு முயீம் போன்றோரும் இந்த தாரிஜ் வகை புத்தகங்களை எழுதியுள்ளார்கள். ஆரம்பக்கட்டத்தில் முதல் தலைமுறையினர் இதுபோல் நல்லவர்களை பற்றியும், கெட்டவர்களை பற்றியும் கலந்து நிறைய‌ தாரிஜ் வகை புத்தகங்களை எழுதிவைத்தனர்.


பின் இரன்டாம் தலைமுறையினர் இப்படி கலந்துள்ள வரலாற்றை ஆராய்வதற்கு சிரமமாக இருந்ததால் நல்லவர்களை பற்றியும், கெட்டவர்களை பற்றியும் பிரித்து எழுதும் பணியை மேற்கொண்டார்கள். முதலில் பலஹீனமானவர்கள், குறையுடையவர்களை பற்றி தனியாக பிரித்து எழுதினார்கள். (  உதாரணமாக; புகாரி இமாம் ஒரு 1000 பேரில் 200 பேர் பலஹீனமானவர்கள் என்று சொல்லியிருந்தால் அந்த 200 நபர்களை பற்றி மட்டும் பிரித்து தனியாக எழுதினார்கள் ). பின் இதில் என்ன குறை சொல்லப்பட்டிருக்கிறது என்றும், அந்த குறையை சொன்னவர் எப்படிப்பட்டவர் என்பதை பற்றியும் விவரமாக எழுதினார்கள்.


இப்னு அஜி, முபைல், ஜஹபி, தார்குத்னி, இப்னு ஹிப்பான் பொன்றோர்கள் இது போல் பலஹீனமானவர்கள் என்ற தலைப்பில் நிறைய புத்தகங்கள் எழுதியுள்ளார்கள்.



அறிவிப்பாளர்கள் பற்றிய புத்தகங்கள்:


புகாரி இமாம், அபு ஜரா, இப்னு முயீம் போன்றோர் அறிவிப்பாளர்களை பற்றிய எல்லா விவரங்களையும் ஆராய்ந்து நல்லவர்கள், கெட்டவர்கள் என்று கலந்து ஒரே புத்தகங்களாக எழுதிவைத்தனர். அதன் பின் வந்த தலைமுறையினர் இது போல் எல்லாம் கலந்திருப்பது ஆராய்வுக்கு சிரமமாக இருப்பதால், பலஹீனமானவர்களை பற்றி மட்டும் பிரித்து எழுதி நிறைய புத்தகங்களாக‌ வெளியிட்டனர்.


அதன் பின் நம்பகமானவர்களை பற்றியும் தனியாக தொகுத்து நிறைய புத்தகங்கள் வெளியிட்டனர். இந்த புத்தகங்கள் ஹிஜ்ரி 300 லிருந்து 400 க்குள் தான் எழுதப்பட்டிருந்தாலும், இவை எல்லாம் ஹிஜ்ரி 100 க்குள் வாழ்ந்த முதல் தலைமுறையினர் ஆராய்ந்து எழுதிவைத்த ’கிதாபுல் தாரீஜ்’ வகை புத்தகங்களை மூலமாக வைத்துதான் நம்பகமானவர்கள் மற்றும் பலஹீனமானவர்கள் என்று எழுதப்பட்டதாகும்.


 பலஹீனமானவர்கள் பற்றிய புத்தங்களுக்கு  ’கிதாபுல் லௌஃபா’   என்றும் நம்பகமானவர்கள் பற்றிய புத்தகங்களுக்கு  ’கிதாபுல் ஷிகாத்’   என்றும் பெயர்.  இந்த புத்தகங்கள் எதையுமே அவர்கள் நேரடியாக சென்று யாரையும் விசாரித்து எழுதியதில்லை. முதல் தலைமுறையினரின் புத்தகங்களிலிருந்து தான் பிரித்து எழுதினார்கள். ஹதீஸ்கள் எவ்வாறு முதல் தலைமுறையினரால் எழுதப்பட்டு பின் அடுத்தடுத்து வந்த தலைமுறையினரால் ஆராய்ந்து தொகுத்து எழுதப்பட்டதோ அதே போல் தான் அறிவிப்பாளர்களை பற்றிய புத்தகமும் முதல் தலைமுறையினர் எழுதி வைத்ததிலிருந்து படி படியாக பிரித்து எழுதப்பட்டது.


நம்பகமானவர்கள் பற்றி நிறைய புத்தகங்கள் எழுதப்பட்டிருக்கிறது.  இப்னு ஹிப்பான், அஜிலி, ஜஹபி, இப்னு ஷாபி  ஆகியோர் எழுதிய நம்பகமானவர்களை பற்றிய‌ புத்தகங்கள் அதிகம் பிரபலமானவை. இதில் ஒருவர் 100 பேரை நல்லவர்கள் பட்டியலில் சேர்த்திருப்பார்கள்; மற்றொருவர் 1000 பேரையும், மற்றுமொருவர் 2000 பேரையும் சேர்த்திருப்பார்கள். ஒரு 75 சதவீதமானவர்கள் எல்லாவற்றிலும் ஒரே மதிரியாக இருந்தாலும், 25 சதவீதமானவர்கள் வித்தியாசப்படுவார்கள். ஏனெனில், நம்பகமானவர்கள் என்று சொல்வதற்கு ஒவ்வொருவரும் சில நிபந்தனைகள் வைத்திருப்பார்கள். அதனால் ஒருவருக்கு நம்பகமானவராக தோன்றுபவர் மற்றொருவருக்கு பலஹீனமானவராக தோன்றுவார். அதே போல் ஒருவருக்கு பலஹீனமானவராக தோன்றுபவர் மற்றொருவருக்கு நம்பகமானவராக தோன்றுவார்.  இவர்கள் மூல‌ ஆதாரமாக‌ வைத்து எழுதிய முதல் தலைமுறையினரின் கிதாபுல் தாரீஜ் புத்தகங்களிலேயே இது போல் ஒன்றுக்கு ஒன்று மாறுப்ப‌ட்டதாக இருக்கும். 


முதல் தலைமுறையினர் எழுதிய  ”கிதாபுல் தாரீஜ்”  வகை புத்தகங்களை ஆதாரமாக வைத்து, அதற்கு பின் வந்த தலைமுறையினர் அதை ஆராய்ந்து பலஹீனமானவர்கள் பற்றி  ”கிதாபுல் லௌஃபா”  எனப்படும் புத்தகங்களும், நம்பகமானவர்கள் பற்றி  ”கிதாபுல் ஷிஹாத்”  எனப்படும் புத்தகங்களையும் எழுதினார்கள் என்றும், அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்களா என்பதை உறுதி செய்வதற்கு ஒவ்வொரு இமாமும் தமக்கென்று சில நிபந்தனைகள் வைத்திருந்தார்கள் என்றும் பார்த்தோம்.


அவரவர் நிபந்தனைக்குட்பட்டு ஆய்வு செய்து தரம் பிரித்து எழுதியதில் ஒருவருக்கு நம்பகமானவராக தோன்றியவர் மற்றவருக்கு பலஹீனமானவராகவும், ஒருவருக்கு பலஹீனமானவராக தோன்றியவர் மற்றவருக்கு நம்பகமானவராகவும் தோன்றியதால் அறிவிப்பாளர்களை பற்றிய புத்தகங்களில் அந்த இமாம்களின் கருத்துகளுக்கிடையே முரண்பாடு இருக்கும்.


அதனால் ஒரு இமாம், ஒரு அறிவிப்பாளரை நம்பகமானவர் என்று சொல்லிவிட்டதற்காக நாம் அவரை நம்பகமானவர் என்றும் ஒரு அறிவிப்பாளரை பலஹீனமானவர் என்று சொல்லிவிட்டதற்காக நாம் அவரை பலஹீனமானவர் என்றும் ஏற்றுக்கொள்ளக்கூடாது. நாம் அதை நன்றாக‌ ஆராய்ந்து தான் முடிவு செய்யவேண்டும்.  உதாரணமாக:  இப்னு ஹிப்பான் எழுதிய நம்பகமானவர் பற்றிய‌ புத்தகத்தில் அவர் நம்பகமானவர் என்று சொல்வதற்கான நிபந்தனையாக  ”யார் ஒருவரை பற்றி யாரும் எந்த குறையும், எந்த கருத்தும் சொல்லவில்லையோ அவர் நம்பகமானவர்”  என்று குறிப்பிட்டிருக்கிறார்.


இது ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை.மற்ற இமாம்கள் ஒரு அறிவிப்பாளரை ‘மஜ்ஹூர்’ அதாவது யாரென்றே அறியப்படாதவர் என்று குறிப்பிட்டிருப்பவர்களை இவர் நம்பகமானவர் பட்டியலில் சேர்த்திருக்கிறார்.


ஒருவரை பற்றி நல்லவர் என்றோ அல்லது கெட்டவர் என்றோ கருத்து சொல்லவேண்டுமாயின், அவரை பற்றி நன்றாக தெரிந்தவர்களால் மட்டும் தான் சொல்ல முடியும். அவ்வாறில்லாமல் ஒருவரை பற்றி எந்த கருத்தும் யாரும் சொல்லவில்லை என்பதால் அவரை நம்பகமானவர் என்று ஏற்றுக்கொள்ள முடியாது.


அதனால் ஒரு இமாம் ஒரு அறிவிப்பாளரை நம்பகமானவர் என்றோ, பலஹீனமானவர் என்று சொல்லியிருந்தால் அதை அப்படியே நாம் ஏற்றுக்கொள்ளக்கூடாது. ஒவ்வொரு இமாமும் தங்களுக்கென்று ஒவ்வொரு விதமான படித்தரங்கள் வைத்திருப்பதால் அனைவருடைய கருத்தும் ஒன்று போல் இருக்காது. அதனால் அவர்களுடைய கருத்தை நாம் அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் ஒவ்வொருவருடைய கருத்தையும் நன்றாக ஆய்வுக்குற்படுத்தியே உறுதி செய்யவேண்டும்.



நுணுக்கமான குறைப்பாடுகள்:


நுணுக்கமான குறைப்பாடுகள் என்பது மேலோட்டமாக ஆராயும்பொழுது தெரியாது. மிகவும் நுணுக்கமாக ஆழ்ந்து ஆராயும்போது தான் தெரியும்.   இத்தகைய குறைப்படுகள் “இலல்” எனப்படும். 


பொதுவாக ஹதீஸ்களை ஆராயும்போது அதன் அறிவிப்பாளர்களின் வரிசை சரியாக இருக்கிறதா, அவர்களுக்குள் உள்ள தொடர்பு எத்தகையது, ஒரே காலக்கட்டத்தில் வாழ்ந்திருக்கிறார்களா, அவர்களுடைய நினைவாற்றல் எப்படிபட்டது, அவர்களுடைய நம்பகத்தன்மையின் அளவு, அவர்கள் சொல்வது சரியா போன்றவற்றை அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை ஆராய்ந்து அவர்கள் நம்பகமானவராக இருந்தால் பின் அந்த தொடர் வரிசையை சரி செய்து அதை ஸஹீஹான ஹதீஸ்கள் என்று உறுதிசெய்வோம்.


சில ஹதீஸ்களில் மேற்கூறிய‌ அனைத்துமே சரியாக இருந்தும் இவை நுணுக்கமான‌ குறைகள் உள்ள ஹதீஸ்கள் என்று குறிப்பிடப்பட்டிருக்கும். ஒரு அறிவிப்பாளரின் ஹதீஸை மட்டும் ஆராயும்போது அதிலுள்ள குறைப்பாடுகளை காணமுடியாது. அந்த செய்தியோடு சம்பந்தப்பட்ட மற்ற அறிவிப்பாளர்களின் ஹதீஸ்களோடு ஒப்பிட்டு ஆராயும்போது தான் அதில் உள்ள குறைகளை கண்டறிய முடியும்.


அதிக அறிவுக்கூர்மையுடையவராகவும், ஏராளமான ஹதீஸ்களை மனனமிட்டவராகவும் இருப்பவரால் மட்டுமே இது போன்ற நுணுக்கமான‌ குறைகளை ஆராயமுடியும். இது போன்ற நுணுக்கமான குறைகள் உள்ள ஹதீஸ்களை ஆராய்ந்து நிறைய புத்தகங்களை ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளார்கள்.


அவ்வாறு வெளியிட்டவர்களில் பிரபலமானவர்கள் இப்னு அபி ஹாத்தம், திர்மிதி, இப்னு ஜெவ்ஜி, அஹ்மது இப்னு ஹம்பல், தாரகுத்னி, அபுஜீரா. இந்த இமாம்கள் இலல் சம்பந்தப்பட்ட ஹதீஸ்களை மட்டும் ஆராய்ந்து அதில் என்ன நுணுக்கமான‌ குறைகள் இருக்கிறது என்பதை தொகுத்து புத்தகங்கள் வெளியிட்டுள்ளார்கள்.  உதரணமாக;  ஒரு ஹதீஸை ஒரு இமாம் வாயிலாக பத்து மாணவர்களுக்கு சென்றடைந்திருக்கும். அந்த பத்து மாணவர்களில் ஒன்பது பேர் இந்த ஹதீஸ் சஹாபியிடமிருந்து தாபியீன்களுக்கும், தாபியீன்களிடமிருந்து தபோதாபியீன்களுக்கும் வந்ததாக‌ சொல்லியிருப்பார்கள். ஆனால் ஒருவர் மட்டும் இந்த ஹதீஸ் நபி(ஸல்) அவர்களிடமிருந்து சஹாபிக்கும், சஹாபியிடமிருந்து தாபியீன்களுக்கும், தாபியீன்களிடமிருந்து தபோதாபியீன்களுக்கும் வந்ததாக‌ சொல்வார்கள். இதில் ஒன்பது பேர் இது சஹாபியின் கருத்து என்று சொல்லும்போது, ஒருவர் மட்டும் இது நபி(ஸல்) அவர்களின் கூற்று என்று சொல்கிறார்கள். பத்து பேருமே நம்பகமானவர்களாக இருந்தும், அறிவிப்பாளர் தொடர் வரிசை மற்றும் கருத்து அனைத்தும் சரியாக இருந்தும் அதில் சிறு மாற்றம் இருக்கிறது என்றால் அங்கு ஏதோ ஒரு தவறு இருப்பதை உணரலாம். அந்த மாற்றம் என்ன என்பதை அறிவதற்கு இமாம்கள் இது சம்பந்தமான வேறு ஹதீஸ்களை ஆழமாக ஆராயும்போது அவர்களால் அந்த குறைகளை கண்டறிய முடியும்.


அறிவிப்பாளர்கள் வரிசை மட்டுமல்லாது கருத்து வேறுபாடு, காலக்கட்டத்தில் மாற்றம், அறிவித்த நபர்களில் மாற்றம் என்று நாம் மேலோட்டமாக பார்த்தால் தெரியாமல் மிகவும் நுணுக்கமாக ஆராயும்பொழுது மட்டும் தெரியும் குறைகள் தான் நுணுக்கமான குறைகள் எனப்படும். 



இதுவரை பார்த்தது: 


ஹிஜ்ரி 100 க்குள் வாழ்ந்த முதல் தலைமுறையினர், அறிவிப்பாளர்களை பற்றி ஆராய்ந்து ‘கிதாபுல் தாரீஜ்’ என்ற புத்தககத்தை எழுதினர். அதில் நல்லவர்கள், கெட்டவர்கள் என்று தரம் பிரிக்காமல் அனைத்தையும் கலந்து ஓன்றாக எழுதிவைத்திருந்தனர். அவர்களுக்கு பின் வந்தவர்கள் அதை ஆராய்ந்து தரம் பிரித்து பலஹீனமானவர்கள் பற்றிய‌ அனைத்து விவரங்களையும் அடங்கிய‌ “கிதாபுல் லௌஃபா” எனப்படும் புத்தகங்களையும், நம்பகமானவர்களை பற்றி அனைத்து விவரங்களும் அடங்கிய‌ “கிதாபுல் ஷிஹாத்” எனப்படும் புத்தகங்களையும் எழுதினார்கள். 


மேலோட்டமாக பார்த்தால் தெரியாத‌, அதிக அறிவு கூர்மையுடையவராகவும், ஏராளமான ஹதீஸ்களை மனன‌மிட்டவராலும் மட்டுமே கண்டறியக்கூடிய நுணுக்கமான குறைபாடுகள் கொண்ட ஹதீஸ்கள் உள்ள புத்தகங்களின் பெயர் “ஹதீஸ் அல்இலல்”. இந்த “இலல்” வகை புத்தகத்தை எழுதுவது, ஆராய்வது அனைத்துமே மிகவும் சிரமமானது. அது சம்பந்தப்பட்ட சில புத்தகங்களை பார்ப்போம்.



கிதாபுல் வஃபாத்:


”வஃபாத்” என்றால் மரணம் என்று பொருள். ஹதீஸ்களை அறிவித்த எல்லா அறிவிப்பாளர்களின் மரணத்தை பற்றி மட்டுமே எழுதிய புத்தகம்  கிதாபுல் வஃபாத்  எனப்படும். ஹதீஸ்களை அறிவித்த ஒவ்வொரு அறிவிப்பாளரும் எந்த தேதியில் இறந்தார் அல்லது எந்த மாதத்தில் இறந்தார் அல்லது குறைந்தபட்சம் எந்த வருடத்தில் இறந்தார் என்ற விவரமாவது இந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும்.


ஒரு அறிவிப்பாளர் எப்போது இறந்தார் என்பது தெரிந்தால் தான் அவரை ஒருவர் சந்தித்திருப்பதாக சொன்னால் அவருடைய காலக்கட்டத்தில் அவர் வாழ்ந்தாரா, அவர் சந்தித்திருப்பதற்கு வாய்ப்பிருக்கிறதா, அவர் எப்போது சந்தித்திருப்பார், அவருடைய மரணத்திற்கும் சந்திப்பிற்குமிடையில் எவ்வளவு காலக்கட்டம் இருந்தது என்பதை கணிக்கமுடியும். அதனால் தான் ஒவ்வொரு அறிவிப்பாளரின் மரணத்தை மட்டுமே தொகுத்து புத்தகங்களாக வெளியிட்டார்கள். ஹதீஸ்கலைக்கு எழுதப்பட்டது போல் வேறு எந்த துறைக்கும் இவ்வளவு அதிகமான புத்தகங்கள் எழுதப்படவில்லை.  இப்னு உஜ்ஜா, இப்னு ராஃபி, முஹம்மது இப்னு ஷாகிர், இப்னு புன்ருத் போன்ற பல அறிஞர்கள் இவ்வகை புத்தகங்களை எழுதியுள்ளார்கள். 


ஒரு சிலருக்கு மரண செய்திகளிலும் கருத்து வேறுபாடு இருக்கும். உதாரணமாக; ஒரு அறிவிப்பாளர் இந்த ஆண்டு மரணித்தார் என்று ஒருவர் சொன்னால், அதற்கு மற்றொருவர் இல்லை அந்த ஆண்டு மரணிக்கவில்லை அதற்கு அடுத்த ஆண்டுத்தான் மரணித்தார் என்பார். இது போல் ஒரு சில அறிவிப்பாளர்களுக்கு மட்டுமே இரண்டு அல்லது மூன்று வகையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும், அதை வைத்து அவர்களே கணித்துக்கொள்வார்கள். இது தவிர ஒரு சிலர் அறிவிப்பாளர்களாக இருப்பார்கள். ஆனால் அவர்கள் யார் என்றே அறியப்படாதவர்களாக இருப்பார்கள். இவர்களை பற்றி எதுவுமே தெரியாத போது அவர் எப்போது மரணித்தார் என்பதையும் அறியமுடியாது. இது போல் அறியப்படாதவர்களை தவிர மற்ற எல்லா அறிவிப்பாளர்களின் மரணத்தையும் பற்றி இந்த புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும். ஒரு புத்தகத்தில் ஒருவரை பற்றி விடுப்பட்டிருந்தாலும் மற்றொரு புத்தகத்தில் அவரை பற்றி இடம் பெற்றிருக்கும். இவ்வாறு அறிவிப்பாளர்களின் மரணத்தை பற்றிய‌ புத்தகமே கிதாபுல் வஃபாத் எனப்படும்.



கிதாபுல் குன்யத்:


சிலர் தம்முடைய இயற்பெயரால் அறியப்படாமல் அவருடைய பெற்றோர் பெயரால் அல்லது பிள்ளைகள் பெயரால் அறியப் பட்டிருப்பார்கள்.


உதாரணமாக:

உம்மு ஸலமா (ஸலமாவின் தாயார்), இப்னு உமர்( உமருடைய மகன்), அபு ஹாஸிம் (ஹாஸிமின் தந்தை). அது போல் பிள்ளைகள் பெயரை குறிப்பிட்டு பெற்றோர்களையும், பெற்றோர்கள் பெயரை குறிப்பிட்டு பிள்ளைகளையும் அழைப்பது தான் குன்யத் எனப்படும். குன்யத் என்றால் அடைமொழி எனப்பொருள்.


இவ்வாறு அழைக்கப்படுவதில் நிறைய குழப்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஃபாத்திமா என்பருக்கு ஸலமா என்று ஒரு பிள்ளை இருந்தால் அவரை உம்மு ஸலமா என அழைத்தோம் என்றால், ஜைனப் என்பவருக்கு ஸலமா என்ற பெயரை கொண்ட பிள்ளை இருந்தால் அவரும் உம்மு ஸலமாஎன அழைக்கப்படுவார். இவ்வாறு இருக்கும்போது, ஹதீஸ் அறிவித்த ஒருவரின் பெயர் உம்மு ஸலமா என்று குறிப்பிட்டிருந்தால் அது எந்த உம்மு ஸலமாவை குறிக்கும் என்று குழப்பம் ஏற்படும். அது போல் இப்னு உமர்(உமரின் மகன்) என்று ஒருவர் தம் தந்தையின் பெயரால் குறிப்பிடப்படும்போது, உமர் என்பவருக்கு நிறைய மகன்கள் இருக்கும்பட்சத்தில் எந்த மகனை இது குறிக்கும் என்ற குழப்பம் ஏற்படும்.


ஒரு இமாம், உம்மு ஸலமா மிகவும் நம்பகமானவர் என்று ஸலமாவின் தாயாராகிய ஃபாத்திமா என்பவரை மனதில் கொண்டு கருத்து தெரிவித்திருப்பார். ஆனால் மற்றொரு இமாம், அது ஜைனபை குறிப்பதாக நினைத்துஅந்த இமாம் கூறியதை மறுத்து, உம்மு ஸலமா நம்பகமானவர் இல்லை என்று கூறுவார்.


இருவருடைய கருத்தும் சரியாக இருந்தும் அவர்கள் கூறிய நபர்கள் வேறுவேறாக இருக்கும். இதுபோல் இயற்பெயர் அறியாமல், குன்யத் பெயரால் அழைக்கப்படுவதால் தான் குழப்பம் ஏற்படுகிறது.


பிள்ளைகளின் பெயரால் பெற்றோர்களும், பெற்றோர்களின் பெயரால் பிள்ளைகளும் அழைக்கப்படுவது மட்டும் குன்யத் ஆகாது.


உதாரணமாக:

அபுஹுரைரா என்று ஒரு சஹாபா அழைக்கப்பட்டார். அபுஹுரைரா என்றால் பூனைகுட்டியின் தந்தை எனப்பொருள். அவருடைய இயற்பெயர் என்னவென்று தெரியவில்லை. அவர் பூனை குட்டிகள் வளர்த்த காரணத்தால் அவர் அபுஹுரைரா என்றழைக்கப்பட்டார். அவருக்கு நிறைய பிள்ளைகள் இருந்தும் அவர் பிள்ளைகள் பெயரால் அழைக்கப்படாமல் பூனைக்குட்டியின் பெயராலே அழைக்கப்பட்டார்.


சிலர் குன்யத் பெயரால் அழைக்கப்பட்டிருந்தாலும், அவருடைய இயற்பெயர் அறியப்பட்டிருக்கும். அலி(ரலி) அவர்கள் ’அபூ துராப்’ (மண்ணின் தந்தை) என்று நபி(ஸல்) அவர்களால் அழைக்கப்பட்டிருந்தாலும் அவருடைய இயற்பெயர் மறையவில்லை. அது போல் நபி (ஸல்) அவர்களும் ’அபுல் காஸிம்’ என்ற குன்யத் பெயரால் அழைக்கப்பட்டவர் தான் என்றாலும் அவருடைய இயற்பெயரும் மறையவில்லை.


ஆனால் குன்யத் பெயரால் அழைக்கப்பட்ட ஒரு சிலருக்கு மட்டும் தான் அவர்களுடைய இயற்பெயரும் நிலைத்திருந்தது. குன்யத் பெயரால் அழைக்கப்பட்ட பலரும் அவர்களுடைய இயற்பெயரால் அறியப்படாதவராக இருந்தார்கள். அதனால் ஹதீஸை அறிவித்தவர்கள் குன்யத் பெயரால் குறிப்பிடப்பட்டிருந்தால் அப்பெயர் யாரை குறிக்கிறது. யாருடைய பெற்றோரை குறிக்கிறது அல்லது யாருடைய பிள்ளையை குறிக்கிறது என்பதில் குழப்பம் ஏற்படாது.


இது போன்ற குழப்பங்கள் வரக்கூடாது என்பதற்காகவே அறிஞர்கள் கிதாபுல் குன்யத் என்ற புத்தகங்களை எழுதினார்கள். இப்புத்தகங்களில் குன்யத் பெயரால் அழைக்கப்பட்ட அனைத்து ஹதீஸ் அறிவிப்பாளர்களை பற்றிய விவரங்களையும் எழுதியுள்ளார்கள்.


அபு காஸிம் என்று ஒரு அறிவிப்பாளர் குன்யத் பெயரால் குறிப்பிடப்பட்டிருந்தால் அந்த பெயரால் யாரெல்லாம் அழைக்கப்பட்டார்கள். இதில் குறிப்பிட்டிருக்கும் அபு காஸிம் யார் அவர்? நம்பகமானவர்? போன்ற அனைத்து விவரங்களையும் துல்லியமாக ஆராயந்து எழுதியுள்ளார்கள். இவ்வாறு குன்யத் பெயரால் அழைக்கப்பட்ட அறிவிப்பாளர்களை பற்றிய அனைத்து விவரங்களும் அடங்கிய புத்தகம் தான் ’கிதாபுல் குன்யத்’ எனப்படும். புகாரி இமாம் உற்பட நிறைய இமாம்கள் இது போன்ற குன்யத் வகை புத்தகங்களை எழுதியுள்ளார்கள்.


ஒரு ஹதீஸை ஆராயும் போது, அதை அறிவித்த அறிவிப்பாளரைப் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்வதற்கு, அது சம்பந்தமான புத்தகங்களை பற்றி தெரிந்து கொள்வது அவசியம்.


இயற்பெயரால் குறிப்பிடப்படாமல் , பெற்றோர்களின் பெயராலோ, பிள்ளைகளின் பெயராலோ, குறிப்பிடப்பட்டிருக்கும் அறிவிப்பாளர்களை பற்றிய கிதாபுல் குன்யத் வகை புத்தகங்கள் பற்றி பார்த்தோம்.



மஹ்னிமதுல் சஹாபா:


ஹதீஸை அறிவித்த அறிவிப்பாளர்கள் நல்லவராகவும் இருக்கலாம். கெட்டவராகவும் இருக்கலாம். அதனால் தான் அவர்களை பற்றி நல்லவரா, கெட்டவரா, நம்பகமானவரா, பலஹீனமானவரா , எப்போது பிறந்தார், எப்போது இறந்தார் போன்ற அனைத்து விவரங்களையும் ஆராய வேண்டியுள்ளது. ஆனால், ஸஹாபாக்களை பொருத்தவரை அவர்கள் நபி(ஸல்) அவர்கள் காலத்தில் அவர்களோடு நெருங்கி வாழ்ந்வர்களாக இருக்கிறார்கள். அல்லாஹ்வும் அவர்களை பொருந்திக் கொண்டான். அவர்களும் அல்லாஹ்வை பொருந்திக் கொண்டார்கள். சஹாபி என்று சொல்லும் போது, அபூபக்கர்(ரலி) , உமர்(ரலி), அலி(ரலி) போன்ற நிறைய சஹாபாக்கள் அனைவராலும் அறியப்பட்டவர்களாக இருப்பதால், அவர்களை பற்றி ஆராய தேவையில்லை. ஆனால், நாம் கேள்விப்படாத பெயர்களில் சிலர் சஹாபா என குறிப்பிடப்பட்டிருக்கும் போது, உண்மையாகவே அவர்கள் சஹாபி தானா என்பதில் நமக்கு சந்தேகம் ஏற்படலாம். அவ்வாறு சந்தேகம் ஏற்பட்டால் அவர் சஹாபி தானா என்பதை நாம் ஆராய்ந்து அறிந்து கொள்வதற்காக நிறைய அறிஞர்கள் இது சம்பந்தமாக ஏறக்குறைய பத்து புத்தகங்கள் எழுதியுள்ளார்கள். இது போன்று ஸஹாபாக்களை பற்றிய புத்தகங்களின் பெயர் ” மஹ்னிமதுல் சஹாபா ”


இப்னு அஜர், இப்னு அப்துல்பர், இஸ்பஹானி போன்ற இமாம்கள் இவ்வகை புத்தகங்களை எழுதியுள்ளார்கள். ஒரு மனிதர் சஹாபியா இல்லையா என்பதை தெரிந்தை கொள்ள அவர்களுடைய பெயர்களை இப்புத்தகங்களில் ஆராய்ந்தால், அனைத்து விவரங்களும் அறிந்து கொள்ளலாம்.


தஹ்தீமுல் அஸ்மா:


அறிவிப்பாளர்களின் பெயர்கள் அரபியில் இருக்கும் பட்சத்தில், குழப்பம் வராது. ஆனால் சில அரபிகள் பாரசீகம் போன்ற அண்டைநாட்டு மொழிகளில், பெயர் வைப்பதை விரும்பக்கூடியவர்களாக இருந்தார்கள். வழக்கத்தில் இல்லாத மொழியை உச்சரிக்கும் போது அதில் தவறு ஏற்படுவது இயல்புதான். அரபிகளுக்கு அரபியல்லாத பிறமொழி பெயர்களை உச்சரிப்பதில் குழப்பம் இருந்ததால், அதுபோன்று வேற்றுமொழி பெயர்களை உச்சரிப்பதில் மாற்றம் ஏற்பட்டது. அதாவது ‘அ ‘ என்பதற்கு ‘உ’ என்றும், ‘உ’ என்பதற்குப் பதிலாக ‘இ’ என்பது போலும் மாற்றி உச்சரிக்கப்பட்டதால் ளெயர்களில் மாற்றம் ஏற்பட்டது.

அதுமட்டுமின்றி சில அரபி பெயர்களையும் இரண்டு விதமாக உச்சரிக்க வாய்ப்புள்ளது. ஆரம்பக்காலத்தில் அரபி மொழி எழுதும்போது ஹரகாக்கள் போட்டு எழுதுவது வழக்கத்தில் இல்லை. அவ்வாறு ஹரக்கா இல்லாமல் ஒரு பெயரை உச்சரிக்கும் போது, அதில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. உதாரணமாக “முஹம்மது” என்ற பெயரை ஹரக்கா இல்லாமல், محمد என்று எழுதினால் م ح م د என்று தான் இருக்கும்.இதை எப்படி வேண்டுமானாலும் உச்சரிக்கலாம்.


முக்ரீம் என்ற பெயரையும், மக்ரூம் என்ற பெயரையும் ஹரக்கா இல்லாமல் எழுதும்போது مخريم என்று தான் எழுதலாம். இதை “முக்ரீம்” என்றும் படிக்கலாம். ” மக்ரூம்” என்றும் படிக்கலாம். முக்ரீம் என்றால் மரியாதை செய்பவன், மக்ரூம் என்றால் மரியாதை செய்யப்பட்டவன் என பொருள்படும். இவ்வாறு மாற்றி படிக்கும்போது பெயரின் பொருளிலேயே மாற்றம் ஏற்பட்டுவிடும்.


இதுபோல் பெயர்களை உச்சரிப்பதில் குழப்பம் ஏற்படாமல் இருப்பதற்காக பெயர்களை மக்கள் எப்படி வழக்கத்தில் உச்சரிக்கிறார்கள் என்பதை, ஆராய்ந்து எப்படி அந்த பெயர்களை சரியாக உச்சரிக்க வேண்டும் என்றும் அறிஞர்கள் புத்தகங்களை எழுதியுள்ளார்கள்.


இவ்வாறு எழுதப்பட்டுள்ள புத்தகத்தின் பெயர் ” தஹ்தீமுல் அஸ்மா” அதாவது பெயர்களின் சீரமை உச்சரிப்பை சரி செய்தல்.



சஹீகத்துல் ஹூக்பால்:


ஒரு ஹதீஸை அறிவிக்கும் அறிவிப்பாளர்கள் தொடர் வரிசையில், சாதாரண அறிவிப்பாளர்கள் மட்டுமின்றி அறிஞர்களின் பெயரும் இடம்பெற்றிருக்கும். பொதுவாக, யார் வாயிலாகவாவது கேள்விப்பட்டு ஒரு ஹதீஸை அறிவிக்கும் அறிவிப்பாளர்களுக்கு அந்த ஹதீஸை பற்றிய அறிவு ஓரளவுதான் இருக்கும். ஆனால், அந்த ஹதீஸை அறிவித்தவர்களில் ஒரு அறிஞரும் இருந்தால் அவர்களுடைய தரம் வித்தியாசப்படும். உதாரணமாக, ஒரு அறிவிப்பாளர் தொடர் வரிசையில், அஹ்மது இப்னு ஹம்பல் என்பவர் இடம்பெற்றிருப்பார். அவர் அறிவிப்பாளர் மட்டுமின்றி சிறந்த அறிஞரும்., நிறைய ஹதீஸ்களை திரட்டி ஆராய்ச்சி செய்தவருமாவார். அதனால், இவரும் மற்ற அறிவிப்பாளர்களும் சமமாக மாட்டார்கள். மேலும் அறிஞர்கள் பல ஆயிரம் ஹதீஸ்களை மனனம் செய்தவர்களாக இருப்பார்கள். ஹதீஸை மட்டுமல்லாமல் அதன் சனது வரிசையையும் மனனம் செய்திருப்பார்கள். அதாவது ஒரு ஹதீஸை அறிவித்த அறிவிபபாளர்கள் 10 நபர்கள் இருந்தால் அவர்கள் அனைவருடைய பெயரையும் சேர்த்து மனனம் செய்திருப்பார்கள்.


குர்ஆனை மனனம் செய்தவர்களை ஹாஃபிழ்கள் என்று அழைப்பது போல, ஆயிரத்திற்கும் மேலான ஹதீஸ்களை மனனம் செய்தவர்களும் ஹாஃபிழ்கள் என்று அழைக்கப்படுவார்கள். ” ஹாஃபிழ் இப்னு ஈராக்கி ” என்றால், ஈராக்கிலிருந்து ஹதீஸ்களை மனனம் செய்த ஹாஃபிழ் எனப்படுவார். இது போல ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஹதீஸ்களை மனனம் செய்தவர்கள், ஹதீஸ் ஆராய்ச்சியில் ஈடுபட்டவர்கள், மற்றும் ஹதீஸ்களை தொகுத்தவர்கள், போன்ற சாதனையாளர்களையெல்லாம் தேர்ந்தெடுத்து, தனியாக “சஹிகத்துல் ஹூக்பால்” என்ற ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார்கள் . ஹூக்பால் என்றால் ஹாஃபிழ்கள் என பொருள்படும். ஹாஃபிழ் என்பது மனனமிட்ட ஒருவரை குறிப்பது. ஹூக்பால் என்பது மனனம் செய்தவர்கள் என்று குறிப்பிடுவது. இது போன்ற ஹாஃபிழ்கள் அறிவித்த ஹதீஸை நாம் ஆராயத் தேவையில்லை.


முன்பரிதாத்:


ஒரு ஹதீஸை ஒரு சஹாபி அறிவித்தால். அவர் வாயிலாக அது ஒரு பத்து நபர்களுக்கும், பின் அந்த பத்து நபர்கள் வாயிலாக, இன்னும் பலரையும் சென்றடைந்திருக்கும். ஆனால், ஒரு இல ஹதீஸ்களை எடுததுக் கொண்டால், ஒரே ஒருவர் மட்டும் அறிவித்து அவர் வாயிலாக இன்னும் ஒருவர் மட்டும் அறிவித்திருப்பார். உதாரணமாக இஸ்மாயீல் என்பவர் ஒரு ஹதீஸை அறிவித்திருந்தால், அவரிடமிருந்து இப்ராஹீம் என்பவர் மட்டும் அறிவித்திருப்பார். இஸ்மாயீல் என்ற அறிவிப்பாளர் வரும் இடமெல்லாம், இப்ராஹிம் என்ற பெயர் மட்டும் தான் வரும். அவர் மாணவர்களை சேர்த்து பாடம் எடுக்காதவராகவும் தான் கேள்விப்பட்ட ஹதீஸை பலரும் அறிவிக்காமல் ஒருவருககு மட்டும் அறிவித்தவருமாக இருப்பார். ஒருவருக்கு மட்டும் தான் ஹதீஸை அறிவித்தவராக இருந்தாலும், அவரிடம் குறைப்பாடுகள எதுவும் இருக்காது.


இவ்வாறு ஒருவரிடமிருந்து ஒருவர் மட்டுமே அறிவித்த அறிவிப்பாளர்களை எல்லாம், தொகுத்து தனியாக புத்தகங்கள் எழுதியுள்ளார்கள். இவ்வகை புத்தகங்கள் ” முன்பரிதாத் ” அல்லது ” வஹ்தான் ” எனப்படும்.


ஒருவரின் இயற்பெயரால் அறியப்படாமல் அவர்களுடைய பெற்றோர்களின் பெயரையோ அல்லது பிள்ளைகளின் பெயரையோ புணைப்பெயராக கொண்டு அறியப்படுபவர்களை பற்றிய புத்தகங்களின் பெயர் ” குன்யத் ” என்று பார்த்தோம்.



கிதாபுல் லஹ்பு:


குன்யத் அல்லாமல் பட்டப்பெயருடன் அழைப்பது லஹ்பு எனப்படும் பட்டப்பெயர் என்பது ஒருவருடைய உருவத்தையோ, குணத்தையோ அல்லது வேறு அம்சங்களையோ குறித்து அமைப்பதாகும். உதாரணமாக, ஒருவர் பருத்த உடலுடன் இருந்தால் அவரை யானை என்று அழைப்பது

ஒருவர் மனம் புண்படுமாறு பட்டப்பெயர் வைத்து அழைப்பதற்கு மார்க்கத்தில் அனுமதி இல்லாவிட்டாலும் அழைக்கப்படுபவர் அதற்காக வருந்தாமல், அவ்வாறு அழைப்பதை ஏற்றுக்கொண்டால் அழைக்கலாம். சஹாபாக்களும் தாபியீன்களும் கூட அவ்வாறு பட்டப்பெயர் கொண்டு அழைக்கப்பட்டுள்ளார்கள்.


இது போல் பட்டப்பெயர்கள் வைத்து அழைக்கப்பட்டவர்கள் யார் ? அவர்களுடைய இயற்பெயர் என்ன ? எதனால் அந்த பட்டப்பெயர் வந்தது என்பதை பற்றி எழுதப்பட்டுள்ள புத்தகங்களின் பெயர் ”கிதாபுல் லஹ்பு” (லஹ்பு) என்றால் பட்டப்பெயர் என அர்த்தமாகும்.


அல் மவ்லுஆத்:


சில அறிவிப்பாளர்கள் நபி(ஸல்) அவர்கள் சொல்லாததையெல்லாம் சொன்னதாக இட்டுக்கட்டியவர்களாக இருந்திருக்கிறார்கள். பலஹீனமானவர்கள் என்றால் மறதியாலோ அல்லது சரியாக புரிந்து கொள்ளாததாலோ, தவறாக சொன்னவர்கள். ஆனால் இட்டுக்கட்டியவர்களோ வேண்டுமென்றே நபி(ஸல்) அவர்கள் மீது பொய்யான செய்திகளை பரப்பியவர்கள். இவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள். இமாம்களின் ஆராய்ச்சியில் இப்படிப்பட்டவர்கள் எளிதில் மாட்டிக்கொள்வார்கள். இமாம்களுக்கு யார்மீது இட்டுக்கட்டுபவர் என்ற சந்தேகம் வருகிறதோ, அவர்களிடம் சென்று அவர்கள் அறிவித்த ஹதீஸைப் பற்றி துருவித்துருவி கேள்வி கேட்பார்கள். உதாரணமாக -  ஒருவர் ஒரு ஹதீஸை தமக்கு அறிவித்ததாக சொன்னால், அந்த நபரை இவர் எப்போது சந்தித்தார் என்று கேட்பார்கள். அவர் தான் கடந்த பத்து வருடங்கள் முன்பாக சந்தித்ததாக கூறினால், நீங்கள் அவர்கள் மரணித்த பத்து வருடங்களுக்கு பிறகா சந்தித்தீர்கள் என்று கேட்கும்போது இட்டுக்கட்டியவர் மாட்டிக் கொள்வார்.


இவ்வாறு இட்டுக்கட்டியவர்கள் யார், எப்படி இட்டுக்கட்டினார்கள், என்ன செய்திகளை இட்டுக்கட்டினார்கள், எவ்வாறு மாட்டிக்கொண்டார்கள் போன்ற அனைத்து விவரங்களையும் தொகுத்து மவ்லுஹ் புத்தகங்களை எழுதியுள்ளார்கள். மவ்லுஹ் என்றால் இட்டுக்கட்டியது. இந்த புத்தகங்களின் பெயர் அல் மவ்லுஆத் எனப்படும். அல் மவ்லுஆத் என்றால் இட்டுக்கட்டப்பட்டவைகள். இவ்வகை புத்தகங்கள் நிறைய பாகங்களாக உள்ளன.


கிதாபுல் முஸ்தலித்:


அறிவிப்பாளர்களில் சிலர் நல்லவராகவும், நம்பகத்தன்மை கொண்டவராகவும் இருந்தாலும் அவர்களுக்கு வயதாக, வயதாக வாய் குழறுவது, நேற்று ஒன்று சொல்வதும், இன்று ஒன்று சொல்வதுமாக, மாற்றி மாற்றி பேசுவது, நெருங்கிய உறவுகளான மனைவி, குழந்தைகளைக் கூடமறந்து விடுவது போன்ற பலஹீனங்கள் ஏற்பட்டிருக்கும் அவ்வாறு வயது முதிர்ச்சியால், பலஹீனமடைந்த அறிவிப்பாளர்களை பற்றியும் புத்தகங்கள் எழுதியிருக்கிறார்கள்.


ஒரு குறிப்பிட்ட வயது வரை நல்ல நிலைமையில் இருந்து பின் பலஹீனமடைந்தவர்கள் அறிவித்த ஹதீஸ்களில் அவர் நல்ல நிலையில் இருந்த வரை அறிவித்தவைகள் மட்டுமே ஏற்றுக்கொள்ளத்தக்கதாயிருக்கும். ஒருவர் 59 வயது வரை நல்ல நிலையிலிருந்து 60 வயதுக்கு மேல் மூளை குழப்பம் ஏற்பட்டிருந்ததால், நினைவாற்றல் குறையவும், மாற்றிப் பேசவும் வாய்ப்பிருப்பால், அவைகளை ஏற்றுக்கொள்ள கூடாது. இவற்றை மூன்று விதமாக பிரித்து எழுதியுள்ளார்கள்.


1 : முதலாவது மூளை குழப்பத்திற்கு முன் அறிவித்த ஹதீஸ்கள்.

2: : இரண்டாவது மூளை குழப்பத்திற்கு பின் அறிவித்த ஹதீஸ்கள்

3 : மூனறாவது, மூளை குழப்பத்திற்கு முன் அறிவிக்கபப்ட்டதா, அல்லது பின் அறிவிக்கப்பட்டதா என்பதை தெரிந்து கொள்ளமுடியாத ஹதீஸ்கள் என்று தொகுத்தார்கள்.


உதாரணமாக எந்தக் குறையுமில்லாதவருமான, நம்பகத்தன்மை கொண்டவருமான அப்துல் காதர் என்பவரிடம் இரண்டு மாணவர்கள் அவரின் 50 வயது முதல், 55 வயது வரை கல்வி கற்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளலாம். அடுத்து 56 வயது முதல் 60 வயது வரை வேறு இரண்டு மாணவர்களும், அடுத்து 61 வயது முதல் 65 வயது வரை வேறு இரண்டு மாணவர்களும் கல்வி கற்கிறார்கள். ஆக அவரிடம் ஆறு மாணவர்கள் மூன்று காலகட்டத்தில் கல்வி கற்றிருக்கிறார்கள். இதில் 50 வயது முதல், 55 வயது வரை அப்துல் காதர் என்பவர் நல்ல மனநிலையில் இருந்ததால், அச்சமயம் அவரிடம் கற்ற மாணவர்கள் அறிவிக்கும் ஹதீஸ்களை ஏற்றுக்ககொள்ளக்கூடிய ஹதீஸ்களாக பிரிப்பார்கள். 56 முதல் 60 வயது வரை, அவர் நல்ல மனநிலையில் இருநத்தாரா அல்லது அப்போதே மூளை குழப்பம் ஏற்பட்டிருந்ததா என்பது சரியாக தெரியாததால், அந்த காலக்கட்டத்தில் கல்வி கற்ற மாணவர்கள் அறிவிக்கும் ஹதீஸ்கள், சந்தேகத்திற்குரியவையாக பிரிப்பார்கள். அதற்குப் பின் 61 முதல் 65 வரை, அவரிடம் கல்வி கற்ற மாணவர்கள் அறிவிக்கும் ஹதீஸ்கள் நிச்சயமாக ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று பிரிப்பார்கள்.


இதுபோல் வயது முதிர்வின் காரணமாக மூளை குழம்பிய அறிவிப்பாளர்கள் யார் யார் என்னென்ன ஹதீஸ்கள் அறிவித்திருக்கிறார்கள் அவற்றில் எவை ஏற்றுக்கொள்ள கூடியது, மற்றும் எவை ஏற்றுக்கொள்ள தக்கதல்ல என்பது போன்ற விஷயங்களையெல்லாம் தொகுத்து, சில புத்தகங்கள் எழுதியுள்ளார்கள். அந்த புத்தகத்தின் பெயர் ” கிதாபுல் முஸ்தலித்”. முஸ்தலித் என்றால் மூளை குழம்பியவர்கள் . இஸ்திலாத் என்றால் மூளை குழம்பியவர் .


லா அஸல லஹூ:


ஒரு ஹதீஸை அறிவித்த அறிவிப்பாளர்களை வைத்தே அந்த ஹதீஸ் நம்பகமானதா, பலஹீனமானதா இட்டுக்கட்டப்பட்டா என்பதை அறியலாம். பலஹீனமானதை விட இட்டுக்கட்டப்பட்டது மோசமானது. இட்டுக்கட்டப்ட்டதை விட மோசமானது ஒன்று உள்ளது. அது ஹதீஸ் திரட்டப்பட்ட காலத்திலோ அல்லது தொகுக்கப்பட்ட காலத்திலோ ஒரு இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸாக கூட இடம்பெற்றிராத ஒன்றை ஹிஜ்ரி 300 க்கு மேல் ஒருவர் வந்து ஹதீஸ் என்று அறிவிப்பது இவற்றை பெரும்பாலும் ஹஜ்ரத்மார்கள் பயான் என்ற பெயரில் தன்னை பிரபலப்டுத்திக் கொள்வதற்காக இஸ்லாத்தின் பக்கம் பிறரை ஈர்ப்பதாக நினைத்து கொண்டு பலவிதமான கதைகளை திரித்து சொல்வார்கள். இது போல் ஹதீஸே இல்லாத ஒன்றை ஹதீஸென்று சொல்லப்பட்டவைகளையெல்லாம், ஒன்றாக திரட்டி இப்னு தைமி, ஜஹபி போன்ற நிறைய இமாம்கள் நிறைய புத்தகங்களை தொகுத்து வெளியிட்டுள்ளார்கள். இந்த அடிப்படையே இல்லாமல் வந்த செய்திகளை பற்றிய புத்தகங்களின் பெயர் ” லா அஸல லஹூ ”

கஸ்ஸாலி இமாம் எழுதிய யஹ்யா என்னும் ஃபிக்ஹ் சமபந்தப்பட்ட புத்தகத்தில் மேற்கோள் காட்டுவதற்காக ஹதீஸில் இல்லாதவைகளை ஹதீஸ் என்று குறிப்பிட்டிருப்பார். இப்படிப்பட்ட செய்திகள் பிரபலமடைந்து மக்கள் அவற்றை பின்பற்றி தவறான வழியில் சென்று விட கூடாது என்பதற்காக இவற்றையெல்லாம் தொகுத்து இந்த புத்தகத்தில் உள்ளது ஹதீஸ் இல்லை, அது தவறானது. பலஹீனமானது என்று புத்தகங்களாக வெளியிட்டுள்ளார்கள். அது போல ஹனஃபி மத்ஹபில் உள்ள ஹிதாயா போன்ற சட்டதிட்ட புத்தகங்கள் அனைத்திலும் உள்ள தவறான செய்திகளை தொகுத்து நிறைய புத்தகங்கள் எழுதியுள்ளார்கள்.


இது தவிர ஒரு மனிரைப் பற்றிக்கூட பலரும் பலவிதமான கருத்து வேறுபாடுகளுடன் பல புத்தகங்கள் எழுதியுள்ளார்கள். இமாம் புகாரி, இமாம் முஸ்லிம், இமாம் திர்மீதி போன்ற இமாம்கள் தொகுத்த அறிவிப்பாளர்களைப் பற்றி புகாரியில் இடம்பெற்றிருக்கும் அறிவிப்பாளர்கள் , திர்மீதியில் இடம்பெற்றிருக்கும் அறிவிப்பாளர்கள் முஸ்லிமில் இடம்பெற்றிருக்கும் அறிவிப்பாளர்கள் என்று தனிதனியாக நிறைய புத்தகங்கள் எழுதியுள்ளார்கள்.


ஹதீஸ் துறை சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் தேடி தேடி புத்தகங்களாக எழுதியுள்ளார்கள்.



ஹிஜாஸத்:


இந்த காலத்தில் புத்தகங்கள் வெளியிடுவது என்பது வியாபாரரீதியாகவும், அதை எழுதுபவர், வெளியிடுபவர், விற்பவர் அனைவருக்கும் லாபம் தரக் கூடியதாகவும் உள்ளது.ஆனால் அந்த காலத்தில் அறிஞர்கள் எந்த லாபமும் எதிர்பார்க்காது மக்கள் நேர்வழி அடைவதற்கும், அல்லாஹ்வின் மார்க்கத்தை நிலை நாட்டுவதையும் மட்டுமே குறிக்கோள்களாக கொண்டு தன் வாழ்நாளை, தியாகம் செய்து உழைத்திருக்கிறார்கள்.ஒரு இமாம் தான் சேகரித்து எழுதி வைத்திருக்கும் செய்திகளை அவருடைய மாணவர்கள் பிரதி எடுக்க கேட்டால் அதை எடுத்து சென்றால் சேதமாகி விடலாம் என்பதால், எடுத்து செல்ல அனுமதிக்க மாட்டார்கள். அவர்களை அங்கேயே தங்கி எழுதிக் கொள்ளுமாறு சொல்வார்கள். அவ்வாறு எழுதிய மாணவர்கள் தாங்கள் எழுதியதையெல்லாம், படித்துக்காட்டி தவறுகள் இருந்தால் திருத்திக்கொண்டு அவரிடம் அனுமதி பெறவேண்டும். உதாரணமாக புகாரி இமாம், எழுதிய புத்தகத்தை பார்த்து வேறு ஒருவர் எழுதினால், அதை அவர் புகாரி இமாமிடம் படித்துக்காட்டி தன்னுடைய புத்தகத்தில் உள்ளது தான் எழுதப்பட்டிருக்கிறதா என்பதை உறுதி செய்து ஒப்புதல் தர வேண்டும். அவ்வாறு அனுமதியளிப்பதற்காக தனி விதிமுறைகள் கொண்ட நூலின் பெயர் ” ஹிஜாஸத் ”

ஹிஜாஸத் என்றால் அனுமதி.



இம்லா:


இம்லா என்றால் வாயால் சொல்வதை கேட்டு எழுதுவது. இமாம்கள் வாயால் சொல்வதை மாணவர்கள் எழுதி பின் தாம் எழுதியதை படித்துக்காட்டி திருத்தம் செய்து அனுமதி வாஙகுவார்கள்.

எந்த பிரதிபலனும் எதிர்ப்பார்க்காமல் மறுமையின் வெற்றிக்காக மட்டுமே தம்முடைய வாழ்நாட்களை செலவு செய்து ஹதீஸ் சம்பந்தமான எல்லா துறைகளிலும், ஆராய்ந்து பல அறிஞர்கள் பல புத்தகங்கள் எழுதியிருக்கிறார்கள்.



அஸ்தத்தவ் அந்நஸிய:


ஒரு அறிவிப்பாளர் பத்து வருடங்களுக்கு முன் ஒரு ஹதீஸை அறிவித்து, அது புத்தகங்களிலும் வெளியிடப்பட்டிருக்கும். பத்து வருடங்களுக்கு பிறகு அவரிடம் போய் ஒரு இமாம் அந்த ஹதீஸ் பற்றி கேட்டால் அந்த அறிவிப்பாளர் அதை தான் சொன்னதாக நினைவில்லை என்று மறுக்கக்கூடியவராக இருப்பார். இது பொதுவாக சிலருக்கு ஏற்படும் மறதியே தவிர இதை ஒரு குறைபாடாக எடுத்துக்கொள்ள முடியாது. இது போல் அறிவித்தவரே தான் , அறிவித்ததை மறந்த ஹதீஸ்கள் எவை, அவ்வாறு அறிவித்ததை மறந்தவர்கள் யார் தலையிட்டு ஒரு புத்தகம் எழுதியுள்ளார்கள். அந்த புத்தகத்தின் பெயர் ” அஸ்தத்தவ் அந்நஸிய ” .நஸிய என்றால் மறந்துவிடுவது.



ஹரீபுல் ஹதீஸ்:


அதிகமாக வழக்கத்தில் இல்லாத அறிய வார்த்தைகளை பயன்படுத்தி நபி(ஸல்) அவர்கள் சில ஹதீஸ்களை கூறியுள்ளார்கள். சாதாரணமான மக்கள் அதிகம் பயன்படுத்தாத பெரிய அறிஞர்கள் இலக்கண இலக்கியவாதிகள் பயன்படுத்தக்கூடிய மொழிநடையில் சொல்லப்பட்டதாக இருக்கும் அது போன்ற ஹதீஸ்களை எல்லாம் ஒன்றாக திரட்டி ஒரு புத்தகம் எழுதியுள்ளார்கள். அதன் பெயர் ” ஹரீபுல் ஹதீஸ் “ஹரீப் என்றால், மிகவும் அபூர்வமாக பயன்படுத்தக்கூடிய வார்த்தை என்று பொருள். இந்த புத்தகத்தைப் பார்த்தால் என்ன சொல்லப்பட்டிருக்கிறது அதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் அறிய வார்த்தைக்கு பொருள் என்ன என்பதை அறியலாம்.



கிதாபுல் தஹ்ரீஜ்:


மக்களிடம் சென்று பயன்பாட்டில் இருக்கும் சில பிரபலமான ஹதீஸ் புத்தகங்களில் இருக்கக்கூடிய பலஹீனமான ஹதீஸ்களையெல்லாம், தொகுத்துப் புத்தகங்களாக எழுதியுள்ளார்கள். உதாரணமாக திர்மீதி, அஹ்மது, ரியாளுஸ் ஸாலிஹீன், போன்ற பிரபலமான ஹதீஸ் புத்தகங்களில், இருக்கும் பலஹீனமான ஹீஸ்களையெல்லாம் தனியாகப் பிரித்து, “திர்மீதியில் இடம்பெற்றுள்ள பலஹீனமான ஹதீஸ்கள் , அஹ்மதுவில் இடம்பெற்றுள்ள பலஹீனமான ஹதீஸ்கள், ரியாளுஸ் ஸாலிஹீனில் இடம்பெற்றுள்ள பலஹீனமான ஹதீஸ்கள்” என்று தனிதனியாக நிறைய புத்தகங்கள் எழுதியுள்ளனர். இதன் பெயர் ” கிதாபுல் தஹ்ரீஜ் “. தஹ்ரீஜ் என்றால், தரம் பிரிப்பது. புகாரியில் இடம் பெற்றுள்ள பலஹீனமான ஹதீஸ்களை தொகுத்து தாரகுத்னி இமாம் ஒரு தஹ்ரீஜ் புத்தகம் எழுதியுள்ளார்.



கிதாபுல் முஹ்தலித்

(மூளை குழம்பியவர்கள்):


நல்ல அறிவிப்பாளர்களாக இருந்து வயோதிக பருவத்தில் நினைவாற்றல் குறைந்து மூளை குழம்பிய அறிவிப்பாளர்களை கண்டறிந்து, அவர்கள் நினைவாற்றல் குறைவதற்கு அல்லது மூளை குழம்புவதற்கு முன்பாக அறிவித்த ஹதீஸ்களை பிரித்து அறிந்து கொள்ள, அப்படிப்பட்ட அறிவிப்பாளர்களின் வரலாறுகளை ஆய்வு செய்து, மூளை குழம்புவதற்கு முன்பு அறிவித்தவை, பின்பு அறிவித்தவை எப்போது அறிவித்தவை என பிரித்தறிய முடியாதவை என்று மூன்று வகையாகப் பிரிப்பார்கள். இந்த வகையான தகவல்களைக் கொண்ட நூல்களுக்கு இஹ்திலாத் என்று பெயர்.



ஹத்தத வ நஸிய

(அறிவித்து மறந்தவர்கள்):


ஒரு ஹதீஸை அறிவித்து விட்டு பின்னர் கேட்கும்போது தான் அறிவித்ததை தானே மறந்தவர்களும் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட அறிவிப்பாளர்களைப் பற்றிய தகவல்களைக் கொண்டு தொகுக்கப்பட்ட நூலுக்கு ஹத்ததவநஸிய (அறிவித்து மறந்தவர்கள்) என்று பெயர்.



கரீபுல் ஹதீத் (அருஞ்சொற்கள்):

நபி(ஸல்) அரிதாக பயன்படுத்திய இலக்கியச் சொற்களும் ஹதீஸ்களில் உள்ளன. அவற்றுக்கு பொருள் தெரிந்து கொள்ள அருஞ்சொற்ப்பொருட்களைக் கொண்ட நூல்களும் இருக்கின்றன. இந்த வகை நூல்களுக்கு கரீபுல் ஹதீத் என்று பெயர்.



தக்ரீஜ் (பிரபலமான நூல்களில் உள்ள பலவீனமானவை):


பிரபல்யமான நூல்களை திறனாய்வு செய்து அவற்றில் உள்ள பலவீனமான செய்திகளை பிரித்து எழுதப்பட்ட நூல்களும் உள்ளன.

உதாரணமாக:

திர்மிதீ, அபூதாவூத், நஸயி, இப்னு மாஜா, ரியாளுஸ் சாலிஹீன், அதபுல் முஃப்ரத், தர்ஹீபுத் தர்ஹீப் போன்ற பிரபலமான நூல்களில் உள்ள பலவீனமான ஹதீஸ்களைக் குறித்து எழுதப்பட்ட நூல்களும் உள்ளன. தாரகுத்னி அவர்கள் புகாரியைப் பற்றி விமர்சித்து எழுதிய நூல்களும் உள்ளன. இந்த வகை நூல்களுக்கு தக்ரிஜ் என்று பெயர்.


இது வரை படித்தவை:


ஹதீஸ் நூல்கள் எவ்வாறு திரட்டப்பட்டன, எவ்வாறு வகைப்படுத்தப்பட்டன, என்னென்ன ஹதீஸ் நூல்கள் உள்ளது, யாரெல்லாம் ஹதீஸ்களை தொத்துள்ளார்கள், அதன் அறிவிப்பாளார்கள் பற்றி மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், அந்த அறிவிப்பாளார்களின் பிறப்பு, இறப்பு, புணிப்பெயர்கள், குன்னியத் பெயர்கள் போன்ற்வைகள் இடம் பெற்ற நூல்கள் ஆகியவற்றை பற்றிய விளக்கங்களை பற்றி இது வரை பார்த்தோம். இவை ஹதீஸ்கலையின் ஒரு முன்னுரை தான்.



இனி படிக்கயிருப்பவை:


ஹதீஸ்கலை என்றால் என்ன, ஒரு ஹதீஸ் சரியானதா, தவறானதா, பலஹீனமானதா என்று எந்த அடிப்படை சட்டங்களை கொண்டு சொல்லப்படுகிறது என்பதை பற்றிய முக்கிய விவரங்களை இனி வரும் பாடங்களில் படிக்கவிருக்கிறோம். இதை “முஸ்தலஹீ ஹதீஸ்”, “ஹதீஸ்கலையின் சட்டங்கள்” என்று சொல்லப்படும்.


உதாரணமாக; “நோன்பு வைத்துக் கொண்டு யார் மறதியாக சாப்பிட்டு விடுகிறாரோ அல்லது பருகி விடுகிறாரோ அவர் தனது நோன்பை முழுமைப்படுத்தட்டும்!” என்ற‌ ஹதீஸை எடுத்துக்கொண்டால், அதன் அறிவிப்பாளர்கள் அம்ரு பின் இஸ்மாயில், முஹம்மது பின் ஷீரின், அபுஹுரைரா ஆகியோர் நபி(ஸல்) அவர்களிடமிருந்து அறிவித்ததாக அறிவிப்பாளர்களின் தொடர் போடப்பட்டிருக்கும். அதாவது ஒரு ஹதீஸை எடுத்துக்கொண்டால் அதில் 2 பகுதிகள் உள்ளது. ஒன்று அந்த ஹதீஸில் இடம்பெற்றுள்ள செய்தி, மற்றொன்று அந்த ஹதீஸை அறிவித்த அறிவிப்பாளர்களின் தொடர் வரிசை அதாவது கடைசியாக அந்த ஹதீஸ் யாரிடமிருந்து அறிவிக்கப்பட்டதோ அவரிலிருந்து வரிசையாக சஹாபியிடம் முடிந்து, கடைசியாக நபி(ஸல்) அவர்களிடமிருந்து அந்த செய்தியை பெற்ற சஹாபி வரை இடம்பெற்றிருக்கும். இந்த அறிவிப்பாளர் வரிசை தொடரை சங்கிலித்தொடர் என்றும், இந்த சங்கிலித்தொடர் வரிசையில் இடம்பெற்றுள்ள‌ அறிவிப்பாளர்களை “ச‌னது” என்றும், அந்த ஹதீஸில் இடம்பெற்றுள்ள செய்தியை “மத்தன்” என்றும் கூறுவர். இந்த இரண்டு பகுதிகளுமே ஒரு ஹதீஸில் சரியாக இருந்தால் தான் அது சரியான ஹதீஸாக கருதப்படும்.

அரபு மொழி மூல‌நூல்களை பொருத்தவரை ஒரு ஹதீஸின் கீழ் அறிவிப்பாளர்களின் வரிசை நபி(ஸல்) வரை அனைத்தும் இடம்பெற்றிருக்கும். ஆனால் தமிழ் மொழிப்பெயர்ப்பை பொருத்தவரை ஹதீஸும் அது இடம்பெற்றுள்ள நூலின் பெயரையும் போட்டு அபுஹுரைரா அறிவித்ததாக மட்டும் போட்டிருப்பார்கள். ஒரு ஹதீஸை நடைமுறைபடுத்துவதற்கு அறிவிப்பாளரின் தொடர் தேவையில்லையென்பதாலும், படிப்பவர்களுக்கு சலிப்பு ஏற்படுமென்பதாலும் தமிழ் மொழிப்பெயர்ப்பு நூல்களில் அறிவிப்பாளர்களின் தொடர் வரிசையை போடுவதில்லை.

அறிவிப்பாளர்கள் வரிசையில் உள்ள ஒவ்வொரு அறிவிப்பாளர்களையும் அவருடைய பிறப்பு, இறப்பு, தகுதி, அவர்களின் நம்பகத்தன்மை ஆகியவை பற்றிய ஆய்வை ஹதீஸ்கலை நிபுணர்கள் மேற்கொள்ளுவார்கள். அவர்கள் செய்தியை பற்றி ஆராயமாட்டார்கள். அதனால் ஹதீஸ்கலை நிபுணர்கள் ஆய்வு செய்து சொல்வதை வைத்து மட்டும் ஒரு ஹதீஸ் சரியானதென்று சொல்லமுடியாது. அந்த செய்தி சரியானதா என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும். அறிவிப்பாளர்களை பற்றி ஆய்வு செய்வதற்கு ஹதீஸ்களை நிபுணர்கள் இருப்பது போல், அந்த செய்தியை ஆய்வு செய்வதற்கும் நிபுணர்கள் இருப்பார்கள். அவர்கள் அந்த செய்தி நம்பகமானதா, இது போன்று வேறு செய்திகள் இருக்கிறதா, இது சம்பந்தமாக என்ன ஆயத்துக்கள் வந்துள்ளது போன்றவற்றை ஆய்வு செய்வார்கள். இவ்வாறு செய்திகளை ஆய்வு செய்பவர்கள் முதலில் ஹதீஸ்கலை நிபுணர்கள் ஆய்வுசெய்த ச‌னது சரியாக உள்ளதா என்பதை கொண்டே அந்த செய்தியை ஆராய்வார்கள். ஹதீஸ்கள் சரியானதென்று சொல்வதற்கு அவர்கள் சில அளவுகோல்கள் வைத்திருப்பார்கள். இதுபோல் ச‌னது ஆய்வுசெய்தவர்களின் அளவுகோலும், செய்தி ஆய்வுசெய்தவர்களின் அளவுகோலும் ஒன்றுகொன்று முரண்பாடில்லாமல் ஒத்துப்போனால் தான் அது சரியான ஹதீஸாக ஏற்றுக்கொள்ளப்படும். “ச‌னது” சரியில்லாமல், செய்தி சரியாக இருந்தாலோ அல்லது செய்தி சரியில்லாமல் ச‌னது சரியாக இருந்தாலோ அதை சரியான ஹதீஸாக ஏற்றுக்கொள்ளக்கூடாது.


”ச‌னது” சரியென சொல்வதற்குறிய அளவுகோல் என்ன, “மத்தன்” சரியென சொல்வதற்குறிய அளவுகோல் என்ன என்பது பற்றி இனி வரும் பாடங்களில் பார்க்கலாம்.



ஹதீஸ்கலை சட்டங்கள்:


ஹதீஸ்களுக்கு யாரும் எழுத்து முக்கியத்துவம் கொடுக்கவில்லை ஒரு சில ஸஹாபாக்கள் மட்டுமே எழுதி வைத்திருந்தார்கள்.


112. பனூ லைஸ் கூட்டத்தார் குஸாஆ கூட்டத்தாரில் ஒருவரைக் கொலை செய்ததற்குப் பிரதியாக அவர்களில் ஒருவரை குஸாஆ கூட்டத்தார் மக்கா வெற்றியடைந்த ஆண்டில் கொன்றுவிட்டார்கள். இச்செய்தி நபி(ஸல்) அவர்களுக்கு அறிவிக்கப்பட்டவுடன் தம் வாகனத்தில் அமர்ந்தவர்களாக, ‘சந்தேகமின்றி அல்லாஹ் இந்த(ப் புனித) மக்கா மாநகரில் கொலையைத் தடை செய்துள்ளான். மேலும் மக்காவாசிகளின் மீது அல்லாஹ் தன்னுடைய தூதரையும், இறைநம்பிக்கையாளர்களையும் ஆதிக்கம் செலுத்த வைத்தான். எச்சரிக்கை! மக்காவில் யுத்தம் செய்வது எனக்கு முன்னர் யாருக்கும் அனுமதிக்கப்பட்டதில்லை; எனக்குப் பின்னரும் எவருக்கும் அனுமதிக்கப்படப் போவதுமில்லை. எச்சரிக்கை! எனக்கு கூட (அது) பகலின் சிறிது நேரம்தான் அனுமதிக்கப்பட்டிருந்தது. எச்சரிக்கை! சந்தேகத்திற்கிடமின்றி இப்போதிருந்தே (முழுமையாகத்) தடை செய்யப்பட்டுவிட்டது. எனவே, இந்நகரின் முட்செடிகள் அகற்றப் படக் கூடாது. இதன் மரங்கள் வெட்டப்ப படக் கூடாது. இங்கே தவறி விழும் பொருட்களை (அவற்றைப் பற்றி மக்களுக்கு) விளம்பரம் செய்பவரைத் தவிர (யாரும்) எடுக்கக் கூடாது. ஒருவர் (இனிமேல்) கொலை செய்யப்பட்டால் அவரின் குடும்பத்தார்கள் நட்ட ஈடு பெறுதல் அல்லது பழிக்கு பழி வாங்குதல் என்ற இரண்டில் அவர்கள் விரும்பியதைத் தேர்வு செய்யலாம்’ என்று ஓர் உரை நிகழ்த்தினார்கள்.

அப்போது யமன் வாசிகளில் ஒருவர், ‘இறைத்தூதர் அவர்களே! இ(ந்தப் பிரசங்கத்)தை எனக்கு எழுதித் தரச்சொல்லுங்கள்’ என்று கேட்டார். ‘இவருக்கு எழுதிக் கொடுங்கள்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் அப்போது குறைஷிகளில் ஒருவர், ‘இறைத்தூதர் அவர்களே! (மக்காவின் செடி கொடிகளை வெட்டக் கூடாது என்பதிலிருந்து) வாசனைப் புற்களில் ஒருவகையான ‘இத்கிர்’ என்ற தாவரத்துக்கு விதிவிலக்கு அளியுங்கள்; ஏனெனில், நாங்கள் அதனை எங்கள் வீடுகளி(ன் கூரைகளி)லும் எங்கள் மண்ணறைகளிலும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்’ என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள் ‘இத்கிர்’ என்ற வாசனைப் புற்களைத் தவிர’ என்றார்கள்’ அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

இந்த ஹதீஸைப் பதிவு செய்த புகாரி அவர்கள் ‘கொலை’ என்ற இடத்தில் யானைப் படைகள் என்று இருந்ததோ’ என தாம் எண்ணுவதாகக் கூறினார்.

ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 3. கல்வியின் சிறப்பு


113. ‘நபி(ஸல்) அவர்களின் தோழர்களில் எவரும் என்னை விட அதிகமான ஹதீஸ்களை அறிவிக்கவில்லை, அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அவர்களைத் தவிர. அவர்களிடம் கொஞ்சம் நபிமொழிகள் இருந்தன. காரணம் அவர்கள் (ஹதீஸ்களை) எழுதி வைத்துக் கொள்வார்கள். நான் (நினைவில் வைத்துள்ளேன்) எழுதி வைத்ததில்லை’ என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 3. கல்வியின் சிறப்பு


111. ‘உங்களிடம் (எழுதி வைக்கப்பட்ட) ஏடு ஏதாவது உள்ளதா? என்று அலீ(ரலி) அவர்களிடம் நான் கேட்டதற்கு, ‘(திருக்குர்ஆன் என்ற) அல்லாஹ்வின் வேதத்தையும் ஒரு முஸ்லிமான மனிதருக்கு வழங்கப்படும், விளக்கத்தையும், இந்த ஏட்டில் இருப்பவற்றையும் தவிர, வேறு ஒன்றுமில்லை’ என்று அவர் கூறினார். ‘அந்த ஏட்டில் என்னதான் இருக்கிறது?’ என்று நான் கேட்டதற்கு, ‘நஷ்ட ஈடுகளைப் பற்றியும் சிறைக்கைதிகளை விடுவிப்பது பற்றியும் (சத்தியத்தை) நிராகரிப்பவன் கொலை செய்யப்பட்டதற்காக ஒரு முஸ்லிம் கொல்லப்படக் கூடாது’ என்ற சட்டங்களும் இதிலுள்ளன’ என்று கூறினார்கள்’ என அபூ ஜுஹைஃபா(ரலி) அறிவித்தார்.

ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 3. கல்வியின் சிறப்பு

& புகாரி 1870



ஸஹாபாக்கள் நபிகள் ஸல் அலை அவர்கள் காலத்தில் எப்படி எழுதி வைத்தார்கள் என்ற ஹதீஸ்கள்:


உமர் ரலி அவர்கள் காலத்தில் ஆலோசனை நடந்தது ஆனால் அவை எழுதி வைக்கப்படவில்லை

நபி மொழிகளை எழுதிவைத்துக்கொள்ள உமர் (ரலி) அவர்கள் நாடியபோது நபித்தோழர்களிடம் ஆலோசனை செய்யதார்கள். ஒரு மாதம் அல்லாஹ்விடம் இஸ்திகாரா தொழுகை தொழுதுவந்தார்கள். ஒரு நாள் காலை அவருக்கு அல்லாஹ் ஒரு உறுதியை கொடுத்தான். அப்போது நான் நபிமொழியை எழுதிக்கொள்ள நாடினேன். ஆனால் முன்னர் ஒரு கூட்டத்தினர் புத்தகமாக எழுதிவைத்துக்கொண்டு அதை பற்றிப்பிடித்துக்கொண்டு இறைவேதத்தை விட்டுவிட்டனர், அல்லாஹ்வின் மீது ஆணையாக அல்லாஹ்வின் வேதத்தோடு ஒரு போதும் எந்த ஒன்றையும் நான் சேர்க்க மாட்டேன் என்று உமர்(ரலி) அவர்கள் கூறினார்கள்.

(நூல்: அல்மத்கல்,பாகம் 1,பக்கம் 407)



தாபியீன்களில் நபிமொழியை முதலில் தொகுத்தவர்கள் :


தாபீயீன்கள் காலத்தில் உமர் பின் அப்துல் அஸீஸ் (ரஹ்) அவர்கள் (மதீனாவின் ஆளுநராயிருந்த) அபூபக்ர் பின் ஹஸ்ம் (ரஹ்) அவர்களுக்கு கடிதம் எழுதினார்கள். அதில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பற்றிய செய்தி (ஹதீஸ்)களை ஆராய்ந்து அதனை எழுதி(த் தொகுத்து) வைத்துக் கொள்வீர்களாக! ஏனெனில், மார்க்கக் கல்வி அழிந்து போய்விடுமென்றும் மார்க்க அறிஞர்கள் (இவ்வுலகைவிட்டுச்) சென்றுவிடுவார்கள் என்றும் நான் அஞ்சுகின்றேன். (அவ்வாறு எழுதும்போது) நபி (ஸல்) அவர்களின் செய்தி (ஹதீஸ்)களைத் தவிர வேறு எதையும் (பதிவுசெய்ய) ஏற்கக்கூடாது. (கற்றவர்கள்) அறிவைப் பரப்பட்டும்; கல்லாதவர்களுக்கு அது கற்பிக்கப்படும்வரை கற்றோர் (ஓரிடத்தில் நிலையாக) அமர்ந்து கொள்ளட்டும். ஏனெனில், கல்வி இரகசியமாக இருக்கும்போதே அழிகிறது


இமாம் புகாரி நிறைய ஹதீஸ்களை எழுதியுள்ளார் மேலும் சில தாபீயீன்கள் அப்துல்லா இப்னு மூஸா, நுஹி நிஹ்ம் ஹமத், அஸதுல் பின் மூஸா, மூஸத்ததுல் பஸரி ,போன்றவர்கள் எழுதி வைத்திருந்தனர்,


அப்துல்லா இப்னு அஜீஸ் காலத்தில் எழுதியவர்கள் நபிகளுடைய வார்த்தைகளை மட்டும் எழுதி வைக்காமல் ஸஹாபாக்களுடைய கூற்றையும் கலந்து எழுதினார்கள், தலைப்பு வாரியாக தொகுத்து எழுதவில்லை.


ஸஹாபாக்கள் வரிசையின் கீழ் ஹதீஸ்களை எழுதி வைத்தனர், தொழுகை, ஜக்காத் போன்ற ஹதீஸ்களை எடுக்க மிக சிரமமாக இருக்கும்.


அதற்கு அடுத்தபடியாக வந்த புகாரி இமாம் காலத்தில் புகாரி, முஸ்லீம், அபுதாவூத், இப்னு மாஜா, திர்மிதீ, தலைப்புவாரியாக எழுதப்பட்டது,


இமாம் மாலிக் (ஹிஜ்ரீ 93-179)

இமாம் புகாரீ (ஹிஜ்ரீ 194-256)

இமாம் முஸ்லிம் (ஹிஜ்ரீ 204-261)

இமாம் நஸயீ (ஹிஜ்ரீ 215-303)

இமாம் அபூதாவூத் (ஹிஜ்ரீ 202-275)

இமாம் திர்மிதீ (ஹிஜ்ரீ 209-270)

இமாம் இப்னுமாஜா (ஹிஜ்ரீ 207-273)


ஹிஜ்ரி 40 ஆண்டின் தொடக்கத்தில் முஹம்மது நபி ஸல் அவர்கள் பெயரால் இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்.


உஸ்மான் ரலி கொல்லப்பட்டு அலி ரலி அவர்கள் ஆட்சிக்கு வந்த காலத்தில் முஆவியா அவர்களும் ஆட்சி செய்கிறார் இருவருக்கும் இடையில் போர் நடக்கின்றது, இதை சாதகமாக பயன்படுத்தி அலி ரலி சொல்லியதாக கூறி பல இட்டுக்கட்டிய செய்திகளை கூறினார்கள்.


இட்டுக்கட்டப்பட்ட செய்திகள் அலி ரலி அவர்கள் காலத்தில் சிலரால் தோன்றியது.


உதாரணமாக ஓர்

இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்:


அப்பாஸ் ரலி அவர்கள் அறிவிக்கின்றார்கள்:

நபிகள் நாயகம் ஸல் அலை அவர்கள் கூறினார்கள்

யார் ஞானத்திலே ஆதமைப்போன்றும் ஹிக்மத்திலே நூஹ் அலை அவர்களை போன்றும் சகிப்புதன்மையிலே இப்ராஹிம் அலை அவர்கள் போன்றும் யார் ஒருவரை நோக்க வேண்டும் என்று நாடுகின்றாரோ அவர் அலியை நோக்கட்டும்.

இஸானுல் மீஸான்

26 பக்கம்


ஹஸன் ரலியல்லாஹ் அறிவிக்கின்றார்கள்:

நபி ஸல் அலை அவர்கள் கூறினார்கள்

மிம்பரின் மீது முஆவியாவை கண்டால் அவரை கொன்று விடுங்கள், ஏனெனில் அவர் பொய்கூறுகின்றார்.

நூல் – லுஹ்ஃபா ரிஜால் (ளயிஃப்பான ஹதீஸ்கள் சொல்லக்கூடிய ஆட்கள்)

பக்கம்-98

பகுதி-5


என்று இட்டுக்கட்டபட்ட செய்தியை வெளியிட்டார்கள்

முஆவியாவிற்கு ஆதாரவாக சிலர் இட்டுக்கட்டிய செய்தியை வெளியிட்டனர் .


நபி ஸல் அலை அவர்கள் கூறினார்கள்:

நம்பிக்கைக்கு உரியவர்கள் 3 நபர்கள் ஒன்று நான் இரண்டாவது ஜிப்ரியியல் அலை அவர்கள் மூன்றாவது முஆவியா.


இந்த ஹதீஸ்கள் யாவும் ஹதீஸ்கலை அறிஞர்களால்

நம்பகமானவர்களா இல்லையா இட்டுக்கட்டப்பட்ட செய்திகள் என்ற நூலில் இருந்து எடுக்கப்பட்டது



صحيح – ஸஹிஹ் என்றால் சரியானது, ஆதாரப்பூர்வமானது என்பது பொருளாகும்.


ஸஹீஹான ஹதீஸைப் பற்றி அறிந்து கொள்வதற்கு முன்னால் ஹதீஸ் நூற்களில் ஹதீஸ்கள் எவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ளன? என்பதைத் தெரிந்து கொள்வோம்.


ஹதீஸ் நூற்களில் ஹதீஸ்கள் எவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ளன?


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பற்றிய ஒரு செய்தியை அறிவிக்கும்போது இன்று நாம் அறிவிப்பாளர்களின் வரிசையுடன் கூறுவதில்லை. நூல் வடிவில் ஹதீஸ்கள் தொகுத்து பாதுகாக்கப்பட்டுள்ளதால் அது தேவையுமில்லை.


ஆனால் நூல் வடிவில் தொகுக்கும் பணி நடந்து கொண்டிருந்த இரண்டாவது மூன்றாவது நூற்றாண்டுகளில் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் தொடர்பான ஒரு செய்தியை அறிவிப்பாளர்களின் வரிசையுடன் கூறினால் தான் ஹதீஸ்கலை அறிஞர்கள் அதை தமது நூற்களில் பதிவு செய்வார்கள்.


தமக்கு அறிவித்தவர் யாரிடம் கேட்டார்?

அவர் இச்செய்தியை யாரிடம் கேட்டார் ? என்று சங்கிலித் தொடராக நபிகள் நாயகம் வரை அறிவிப்பாளர் தொடரை சொல்ல வேண்டும்.


அப்படி சொன்னால் தான் அதை ஹதீஸ் என்று ஒப்புக் கொள்வார்கள் எல்லா ஹதீஸ் நூற்களும் இந்த வகையில் தான் தொகுக்கப்பட்டுள்ளன.


உதாரணமாக:

புகாரி நூலில் இடம் பெற்றுள்ள முதலாவது ஹதீஸை எப்படிப் பதிவு செய்துள்ளார்கள் என்று பார்ப்போம்,


1- حَدَّثَنَا الْحُمَيْدِيُّ عَبْدُ اللَّهِ بْنُ الزُّبَيْرِ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ الأَنْصَارِيُّ، قَالَ أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ التَّيْمِيُّ، أَنَّهُ سَمِعَ عَلْقَمَةَ بْنَ وَقَّاصٍ اللَّيْثِيَّ، يَقُولُ سَمِعْتُ عُمَرَ بْنَ الْخَطَّابِ ـ رضى الله عنه ـ عَلَى الْمِنْبَرِ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُو إِنَّمَا الأَعْمَالُ بِالنِّيَّاتِ، وَإِنَّمَا لِكُلِّ امْرِئٍ مَا نَوَى، فَمَنْ كَانَتْ هِجْرَتُهُ إِلَى دُنْيَا يُصِيبُهَا أَوْ إِلَى امْرَأَةٍ يَنْكِحُهَا فَهِجْرَتُهُ إِلَى مَا هَاجَرَ إِلَيْهِ ”- البخاري 

‘செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது. ஒருவரின் ஹிஜ்ரத் (துறத்தல்) உலகத்தைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தால் அதையே அவர் அடைவார். ஒரு பெண்ணை நோக்கமாகக் கொண்டால் அவளை மணப்பார். எனவே, ஒருவரின் ஹிஜ்ரத் எதை நோக்கமாகக் கொண்டதோ அதுவாகவே அமையும்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என உமர் இப்னு கத்தாப்(ரலி) மேடையிலிருந்து அறிவித்தார்கள்.

நூல்: புகாரி (1)


இந்த ஹதீஸில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதை கூறியதாக அறிவிக்கும் முதல் அறிவிப்பாளர் உமர்(ரலி) என்ற நபித்தோழர் ஆவார்.


இவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நேரடியாகக் கேட்டு அறிவிக்கிறார்.


உமர் அவர்களிடமிருந்து இதை நேரடியாகக் கேட்டவர் அல்கமா பின் வக்காஸ் என்பவர்.


அவரிடமிருந்து கேட்டவர் முஹம்மத் பின் இப்ராஹிம் என்பார்.


முஹம்மது பின் இப்ராஹிம் என்பாரிடமிருந்து நேரடியாகக் கேட்டவர் யஹ்யா பின் ஸயீத் என்பார்.


யஹ்யா பின் ஸயீத் எனபாரிடமிருந்து நேரடியாக கேட்டவர் ஸுஃப்யான் எனபவர்.


ஸுஃப்யான் என்பாரிடமிருந்து நேரடியாகக் கேட்டவர் இமாம் புகாரி அவர்கள்.


இதை கீழ்கண்ட வரைபடம் மூலம் தெளிவாக விளங்கலாம்


நபிகள் நாயகம் (ஸல்)

உமர்

அல்கமா பின் வக்காஸ்

முஹம்மத் பின் இப்ராஹிம்

யஹ்யா பின் ஸயீத்

ஸுஃப்யான்

ஹூமைதீ

இமாம் புகாரி


இவ்வளவு விபரங்களையும் முதல் ஹதீஸில் புகாரி இமாம் கூறுகிறார்.


இப்படி ஒவ்வொரு ஹதீஸுக்கும் அறிவிப்பாளர்களின் தொடரை அவர் கூறுகிறார். இவ்வாறு தான் அனைத்து ஹதீஸ் நூற்களிலும் ஹதீஸ்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.


இப்போது ஸஹீஹான ஹதீஸுக்குரிய அளவுகோலை அறிந்து கொள்வோம்.


ஸஹீஹான ஹதீஸுக்குரிய அளவுகோல் என்ன?

மேற்கண்ட புகாரியின் முதலாவது ஹதீஸ், அறிவிப்பாளர் தொடருடன் பதிவு செய்யப்பட்டுள்ளதை பார்த்தோம்.


இந்த செய்தி இமாம் புகாரிக்கு எவர்கள் வழியாகக் கிடைத்ததோ அவர்கள் அனைவரும் நம்பகமானவர்களாக இருக்கவேண்டும்.


அவர்கள் அனைவரும் உறுதியான நினைவாற்றல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.


அவர்கள் அனைவரது நேர்மையும் சந்தேகிக்கப்படாமல் இருக்கவேண்டும்.


அவர்கள் ஒவ்வொருவரும் தாம் யார் வழியாக அறிவிக்கிறாரோ அவரிடமிருந்து நேரடியாகக் கேட்டிருக்க வேண்டும்.


இந்த நான்கு விஷயங்களையும் தாண்டி இந்த ஹதீஸில் உள்ள வாசகம் குர்ஆனுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மோதக் கூடிய வகையில் இருக்கக்கூடாது.


இந்த ஐந்து விதிமுறைகளுக்கு உட்பட்டு ஒரு ஹதீஸ் இருக்குமானால் அந்த ஹதீஸைத் தான் ஸஹிஹான ஹதீஸ் என்று கூறப்படும்.


நபி மொழிகளை பொறுத்த வரையில் அவை அறிப்பாளர்களின் எண்ணிக்கை அடிப்படையில் பின்வருமாறு பிரிக்கப்படுகிறது. 


1. முதவாத்திர், 

2. ஆஹாத் 


முதவாத்திர் என்பது ஒவ்வொரு அறிவிப்பாளர் தொடரிலும் பல நபர்கள் இடம் பெறுவதாகும். 


ஆஹாத் என்பது ஒருவர் வழியாக அறிவிக்கப்படும் ஹதீஸ்கள் ஆகும். அது 3 வகைப்படும். 


1. கரீபு

2. அசீச், 

3. மஷ்ஹூர் 



1.கரீப்


அறிவிப்பாளர் வரிசையின் ஏதேனும் ஒரு தலைமுறையிலோ அல்லது அனைத்து தலைமுறையிலோ ஒருவர் மட்டுமே தனித்து அறிவிக்கும் ஹதீஸாகும்.


உதாரணம்:


“பயணம் வேதனையின் ஒரு பகுதியாகும். அது ஒருவரின் உணவையும், பானத்தையும், உறக்கத்தையும் தடுத்து விடுகிறது. எனவே, ஒருவர் தம் தேவையை முடித்தவுடன் விரைந்து தம் குடும்பத்தாரிடம் செல்லட்டும்!” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.


அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)


நூல்: புகாரி 1804


நபி(ஸல்) அவர்களிடமிருந்து இந்த ஹதீஸை நபித்தோழர்களில் “அபூஹுரைரா (ரலி)” மட்டும் தனித்து அறிவிக்கின்றார்கள்.


அவர்களிடமிருந்து “அபூ ஸாலிஹ்” என்ற தாபிஃ மட்டும் தனித்து அறிவிக்கிறார்.


அவரிடமிருந்து “சுமைஇ” என்பவர் மட்டும் தனித்து அறிவிக்கின்றார்.


அவரிடமிருந்து “மாலிக் பின் அனஸ்” என்ற தபஉத் தாபிஃ மட்டும் தனித்து அறிவிக்கின்றார்.


இவ்வாறு, அனைத்து நிலையிலும் ஒருவர் மட்டும் தனித்து அறிவிப்பதால் ஹதீஸ் கலையில் இது “கரீப்” என்று குறிப்பிடப்படப்படுகிறது.


2. அசீச்


அறிவிப்பாளர் வரிசையின் ஏதேனும் ஒரு தலைமுறையில் இருவர் மட்டுமே அறிவிக்கும் ஹதீஸாகும். இதில் ஏதேனும் ஒரு தலைமுறையில் மூவர் இடம் பெற்றாலும் அல்லது அனைத்து தலைமுறையிலும் இருவர் மட்டுமே இடம்பெற்றாலும் அது அஜீஸ் என்றே சொல்லப்படும்.


உதாரணம்:


“உங்களில் ஒருவருக்கு அவரின் தந்தை, குழந்தைகள், ஏனைய மக்கள் அனைவரையும் விட நான் மிக அன்பானவராகும் வரை அவர் (உண்மையான) இறைநம்பிக்கையாளராக மாட்டார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


அறிவிப்பவர்: அனஸ்(ரலி).


நூல்கள்: புகாரி 15, முஸ்லிம் 179.


நபி (ஸல்) அவர்களிடமிருந்து இந்த ஹதீஸை நபித்தோழர்களில் “அபூஹுரைரா (ரலி), அனஸ் (ரலி)” ஆகிய இருவரும் அறிவிக்கிறார்கள்.


அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து “கதாதா மற்றும் அப்துல் அஜீஸ் பின் சுஹைப்” என்ற இரண்டு தாபியீன்கள் அறிவிக்கின்றனர்.


கதாதாவிடமிருந்து “ஷுஃபா மற்றும் சயீத்” என்ற இரண்டு தபஉத் தாபியீன்கள் அறிவிக்கின்றார்கள்.


அப்துல் அஜீஸ் பின் சுஹைபிடமிருந்து “இஸ்மாயில் பின் உலையா மற்றும் அப்துல் வாரிஸ்” என்ற இரண்டு தபஉத் தாபியீன்களும் அறிவிக்கின்றனர்.


இந்த ஹதீஸில் அனைத்து தலைமுறையிலும் இரண்டு நபர்கள் இடம்பெற்றுள்ளதால் இது ஹதீஸ் கலையில் அஜீஸ் என்று குறிப்பிடப்படும்.


3. மஷ்ஹூர்


மஷ்ஹூர் என்பது அனைத்து தலைமுறைகளிலும் இரண்டுக்கும் மேற்பட்ட அறிவிப்பாளர்கள் அறிவிக்கும் ஹதீஸாகும். எந்த ஒரு தலைமுறையிலும் இருவருக்குக் குறைவாக இடம்பெறக் கூடாது.


உதாரணம்:


“நிச்சயமாக அல்லாஹ் கல்வியை(த் தன்னுடைய) அடியார்களிடமிருந்து ஒரேடியாக பறித்துவிட மாட்டான். ஆயினும், அறிஞர்களை கைப்பற்றுவதன் மூலமே அவன் கல்வியை கைப்பற்றுவான். கடைசியாக ஓர் அறிஞர் கூட மீதமில்லாமல் ஆகிவிட்டதும் மக்கள் அறிவீனர்களைத் தம் தலைவர்களாக்கிக் கொள்வார்கள். அவர்களிடம் கேள்விகள் கேட்கப்படும் போது அறிவின்றியே மார்க்கத் தீர்ப்பு வழங்குவார்கள். (இதன் முலம்) தாமும் வழிகெட்டு(ப் பிறரையும்) வழிகெடுப்பார்கள்”. என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.


அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)


நூல்: புகாரி 100


இந்த ஹதீஸில் அனைத்து தலைமுறையிலும் இரண்டுக்கும் அதிகமான நபர்கள் (மூவர், நால்வர்) இடம் பெற்றுள்ளனர். எனவே இது மஷ்ஹூர் எனப்படும்



ஒருவர் அறிவித்த ஹதீஸாக இருந்தாலும் அதன் அறிவிப்பாளர் நம்பகமானவராக இருந்தால் அதனை ஏற்க வேண்டுமென்பதுதான் ஹதீஸ் கலை வல்லுனர்களின் நிலைப்பாடு. அந்த ஹதீஸ் அகீதா தொடர்பானதாக இருந்தாலும் சரியே. 


முத்தவாதிர், ஆஹாத் என அறிப்பாளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பிரதானமாக பிரிக்கப்பட்ட ஹதீஸ்கள் அவற்றின் அறிவிப்பளர்களின் தரத்தின் அடிப்படையில் நான்கு வகைகளாக இருக்கின்றன அவை:


 صحيح ஸஹீஹ் – ஆதாரப்பூர்வமானது.


 موضوع மவ்ளூவு இட்டுக்கட்டப்பட்டது.


متروك மத்ருக் – விடப்படுவதற்கு ஏற்றது.


ضعيف- லயீஃப் பலவீனமானது.



இந்த நான்கு வகைகளில் முதலாவதாக இருக்கும் ஸஹிஹான ஹதீஸை மட்டும் தான் செயல்படுத்த வேண்டும்.


மற்ற 3 வகையான ஹதீஸ்களை செயல்படுத்தாமல் விட்டுவிட வேண்டும்.



هو ما اتصل سنده بنقل العدل الضابط عن مثله إلى منتهاه، من غير شذوذ ولا علة”.

எதனுடைய ஸனது, நம்பகத்தன்மைமிக்க நேர்மையான ஒருவர் தன்னைப் போண்ற ஒருவரின் வழியாக அந்த ஸனதின் இறுதி வரை ஷாத் இல்லாமலும், இல்லத் இல்லாமலும் அறிவிக்கிறாரோ அப்படிப்பட்ட ஸனது இணைந்திருப்பதாகும்.


ஒரு ஹதீஸை ஸஹீஹ் என சொல்வதாக இருந்தால் அதில் ஐந்து விஷயங்கள் இருக்க வேண்டும் என்பதே இந்த வாசகத்தின் விளக்கம். 


அந்த ஐந்து: விஷயங்கள் என்னவென்றால்…


1. اتصال السند

ஸனத் என்ற சங்கிலித் தொடர் இணைந்திருத்தல்.


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சம்பந்தமான ஒரு ஹதீஸ், நபித்தோழர்களால் அறிவிக்கப்பட்டு இமாம் புகாரி, முஸ்லிம் போன்ற ஹதீஸ் நூல்களை எழுதியவர்களுக்கு யார் யார் வழியாகவெல்லாம் கிடைத்தது என்ற அறிவிப்பாளர் தொடர், சங்கிலித் தொடராக ஒரு ஹதீஸில் இணைந்திருந்தால் மட்டுமே அது ஸஹீஹான ஹதீஸாகும்.


உதாரணமாக

புகாரி நூலில் இடம் பெற்றுள்ள முதலாவது ஹதீஸில் அறிவிப்பாளர் தொடர் எப்படி இணைந்துள்ளது என்று பாருங்கள்.


1-حَدَّثَنَا الْحُمَيْدِيُّ عَبْدُ اللَّهِ بْنُ الزُّبَيْرِ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ الأَنْصَارِيُّ، قَالَ أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ التَّيْمِيُّ، أَنَّهُ سَمِعَ عَلْقَمَةَ بْنَ وَقَّاصٍ اللَّيْثِيَّ، يَقُولُ سَمِعْتُ عُمَرَ بْنَ الْخَطَّابِ ـ رضى الله عنه عَلَى الْمِنْبَرِ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُو إِنَّمَا الأَعْمَالُ بِالنِّيَّاتِ، وَإِنَّمَا لِكُلِّ امْرِئٍ مَا نَوَى، فَمَنْ كَانَتْ هِجْرَتُهُ إِلَى دُنْيَا يُصِيبُهَا أَوْ إِلَى امْرَأَةٍ يَنْكِحُهَا فَهِجْرَتُهُ إِلَى مَا هَاجَرَ إِلَيْهِ ”- البخاري

1. ‘செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது. ஒருவரின் ஹிஜ்ரத் (துறத்தல்) உலகத்தைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தால் அதையே அவர் அடைவார். ஒரு பெண்ணை நோக்கமாகக் கொண்டால் அவளை மணப்பார். எனவே, ஒருவரின் ஹிஜ்ரத் எதை நோக்கமாகக் கொண்டதோ அதுவாகவே அமையும்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என உமர் இப்னு கத்தாப்(ரலி) மேடையிலிருந்து அறிவித்தார்கள்.

நூல்: புகாரி (1)


இந்த ஹதீஸ் புகாரி இமாமுக்கு எப்படி கிடைத்தது என்று புகாரி இமாம் ஒரு அறிவிப்பாளர் தொடரைக் கூறுகிறார்.


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த செய்தியை சொன்னதாக உமர் (ரலி) அவர்கள் அல்கமா பின் வக்காஸ் என்ற ஒரு தாபியீயிடம் சொல்கிறார்கள்.


அவர் முஹம்மத் பின் இப்ராஹிம் என்ற தபவுத் தாபியீனிடம் சொல்கிறார்.


அவர், யஹ்யா பின் ஸயீத் என்பவரிடம் சொல்கிறார்.


அவர், ஸுஃப்யான் என்பவரிடம் சொல்கிறார்.


அவர் ஹூமைதீ என்பவரிடம் சொல்கிறார்.


அவரிடமிருந்து இமாம் புகாரி இந்த ஹதீஸைக் கேட்டு பதிவு செய்கிறார்.


இவ்வாறு ஒவ்வொரு ஹதீஸிலும் நபிகள் நாயகம் (ஸல்) காலம் முதல் புகாரி, முஸ்லிம் போன்றவர்கள் வரை வருகின்ற அறிவிப்பாளர் தொடரில், ஒருவரும் விடுபடாத அளவுக்கு சங்கிலித் தொடராக அறிவிப்பாளர் தொடர் இருக்க வேண்டும்.


அது மட்டுமல்ல இந்த அறிவிப்பாளர் தொடரில் வருகின்ற ஒவ்வொரு அறிவிப்பாளரும் தான் யாரிடமிருந்து கேட்டதாக அறிவிக்கிறார்களோ அவரிடமிருந்து நேரடியாக அதைக் கேட்டிருக்க வேண்டும். ஒருவர் தனக்கு மேலே உள்ள அறிவிப்பாளரின் மாணவராக இருந்ததாலோ,


அல்லது, சம காலத்தில் வாழ்ந்து சந்தித்துக் கொண்ட அடிப்படையிலோ ஒருவர் மற்றவரிடம் நேரடியாகக் கேட்டவராக இருக்க வேண்டும்.


அதாவது மேற்கண்ட ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில்


உமர் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கக் கூடிய அல்கமா என்பவர் உமர் அவர்களிடம் நேரடியாக இதைக் கேட்டிருக்க வேண்டும்.


முஹம்மத் பின் இப்ராஹிம் என்பவர் தனக்கு மேலுள்ள அல்கமா என்பவரிடம் நேரடியாக இதைக் கேட்டிருக்க வேண்டும்.


அல்கமா என்பவரிடமிருந்து அவருக்கு அடுத்து வருகின்ற யஹ்யா பின் ஸயீத் நேரடியாக இதைக் கேட்டிருக்க வேண்டும்.


யஹ்யாவிடமிருந்து ஸுஃப்யான் என்பவர் நேரடியாக இதைக் கேட்டிருக்க வேண்டும்.


ஸுஃப்யானிடம் இருந்து, ஹூமைதீ என்பவர் நேரடியாக இதைக் கேட்டிருக்க வேண்டும்.


ஹுமைதியிடம் புகாரி இமாம் நேரடியாகக் கேட்டு எழுதியிருக்க வேண்டும்.


இப்படி உமர் (ரலி) அவர்களிடம் கேட்டவரில் ஆரம்பித்து புகாரிக்கு அறிவித்த அறிஞர் வரை ஆரம்பத்திலிருந்து கடைசி வரை வரக் கூடிய அறிவிப்பாளர்கள் ஒவ்வொருவரும் தான் யாரிடமிருந்து கேட்டாரோ அப்படிப்பட்ட தங்களுக்கு மேலே உள்ள அறிவிப்பாளரிடம் நேரடியாகக் கேட்டிருக்க வேண்டும்.


ஒரு ஹதீஸை எப்போது ஸஹீஹ் என்று முடிவு செய்ய முடியும் என்பதைக் கூறும் போது “சங்கிலித் தொடர் இணைந்ததாக இருக்க வேண்டும்” என்று இதைத் தான் ஹதீஸ் கலை அறிஞர்கள் கூறுகின்றனர்.



2. عدالة الرواة

 ராவிகளின் நம்பகத்தன்மை (உறுதி செய்யப்பட்டதாக இருக்க வேண்டும்.)


அதாவது அறிவிப்பாளர் ஒவ்வொருவரும்:


முஸ்லிமாக இருக்க வேண்டும்


பருவ வயதை அடைந்தவராக இருக்க வேண்டும்


விவரமுள்ளவராக இருக்க வேண்டும்


பாவியாக இருக்கக் கூடாது


மூளை குழம்பியவராக இருக்கக் கூடாது.




3. ضبط الرواة

அறிவிப்பாளர்களின் நம்பகத்தன்மை பூரத்தியானதாக இருக்க வேண்டும்.


அதாவது


நினைவாற்றல் மிக்கவராக இருக்க வேண்டும். அல்லது கேட்டதை எழுதி வைப்பவராக இருக்க வேண்டும். ஏட்டளவிலோ, எழுத்தளவிலோ ஹதீஸைப் பாதுகாப்பவராக இருக்க வேண்டும்.


இது போக ஒரு ஹதீஸ், ஸஹீஹாஹ இருப்பதற்கு பின்வரும் இரண்டு நிபந்தனைகளுக்குட்பட்டதாகவும் அது இருக்க வேண்டும்.



4. شاذ

ஷாத் இல்லாமல் இருக்க வேண்டும்.



5. علة

இல்லத்தாக இருக்க கூடாது.



இந்த ஐந்து விஷயங்களும் ஒரு ஹதீஸில் இருந்தால் அதுவே சஹீஹான ஹதீஸாகும்.




ஹஸன்:


ஸஹீஹான ஹதீஸில் இன்னொரு வகை ஹஸன் என்பதாகும்.


ஸஹீஹான ஹதீஸை ஏற்பதற்கு சொல்லப்பட்ட ஐந்து நிபந்தனைகள் இதிலும் இருக்கும்.



ஐந்து நிபந்தனைகள்:


1. அறிவிப்பாளர் ஒவ்வொருவரும் முஸ்லிமாக இருக்க வேண்டும்.

2. அறிவிப்பாளர்கள் அனைவரும் நம்பகமானவர்களாக இருக்க வேண்டும்.

3. அறிவிப்பாளர் தொடரில் ஸனத் என்ற சங்கிலித் தொடர் விடுபடாமல் இணைந்திருக்க வேண்டும்.

4. ஷாத் இல்லாமல் இருக்க வேண்டும்.

5. இல்லத்தாக இருக்க கூடாது.


இந்த ஐந்து விஷயங்களும் ஒரு ஹதீஸில் இருந்தால் தான் அது சஹீஹான ஹதீஸாகும்.


ஹஸன் தரத்தில் உள்ள ஹதீஸ்களிலும் இந்த நிபநத்னைகள் இருக்கும்.


இருந்தாலும் இரண்டுக்கும் இடையே ஒரு வித்தியாசம் உண்டு.



ஸஹீஹ் - ஹஸன் வித்தியாசம்:


ஸஹீஹ் - ஹஸன் ஆகிய இரண்டுக்கும் இடையில் உள்ள வித்தியாசம் என்னவென்றால்

மீஸானுல் இஃத்திதால், தஹ்தீபுத் தஹ்தீப் போன்ற அறிவிப்பாளர்களை எடைபோடும் நூல்களில் ஹதீஸை அறிவிக்கும் ஒவ்வொரு அறிவிப்பாளரின் பெயர்களையும் பதிவு செய்யும் போது ஒருவரைக் குறித்து


இவர்


சிறந்த ஆசிரியர் என்றோ,

அமீன் - நம்பிக்கையாளர் என்றோ,

ஹுஃப்ஃபாழ் - அதிக நினைவாற்றல் உள்ளவர் என்றோ,

இவரை போல் ஒரு அறிவிப்பாளர் கிடையாது என்றோ குறிப்பிடுவார்கள்.


சிலரை அந்த அளவுக்கு நற்சான்று வழங்காமல், இவர் நல்லவர் என்பதோடு தங்கள் விமர்சனத்தை நிறுத்திக் கொள்வார்கள். 


இது போன்ற அறிவிப்பாளர்கள் இடம் பெறும் ஹதீஸை ஹஸன் என்று கூறுவர்.


ஸஹீஹான ஹதீஸ்கள் முதல் தரம் என்றால் ஹஸன் என்பது அதற்கு அடுத்த தரத்தில் அமைந்தவை எனலாம்.


ஹஸன் என்ற தரத்தில் வரும் ஹதீஸ்களின் அறிவிப்பாளர்கள் குறை சொல்லப்படாதவர்கள் என்பதால் ஸஹீஹான ஹதீசைப் போலவே இதையும் கருத வேண்டும். இந்த தரத்தில் வரும் செய்திகளையும் பின்பற்ற வேண்டும்.




موضوع 

மவ்ளூவு இட்டுக்கட்டப்பட்டது:



இட்டுக்கட்டடப்பட்ட ஹதீஸ்களைப் பற்றி இனி அறிந்து கொள்வோம்….


இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள் என்றால் என்ன என்று அறிஞர்கள் கூறும்போது…


الموضوع:

 إذا كان سبب الطعن في الراوي هو الكذب على رسول الله صلى الله عليه وسلم، فحديثه يسمى “الموضوع”.

அறிவிப்பாளர் விஷயத்தில் உள்ள குறையின் காரணம் என்பது,


ஒருவர், நபிகள் நாயகம் (சல்) அவர்கள் பெயரால் பொய் சொன்னார் என்று இருந்தால் ( அவர் அறிவித்த) அந்த ஹதீஸ் இட்டுக்கட்டப்பட்டது என்று பெயர் சொல்லப்படும்.


இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களின் தரம்

 رتبته:

هو شر الأحاديث الضعيفة، وأقبحها، وبعض العلماء يعده قسما مستقلا، وليس نوعا من أنواع الأحاديث الضعيفة

 பலவீனமான ஹதீஸ்களிலேயே இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள் தான் மிகவும் மோசமானது என்று மற்றொரு அறிஞர் கூறுகின்றார்.


இன்னும் சில அறிஞர்கள்,

பலவீனமான ஹதீஸ்களின் வரிசையில் கூட இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களை சேர்க்கவில்லை.


ஏனெனில் அந்த அளவுக்கு மவ்ளூஆன ஹதீஸ்கள் மோசமாக இருக்கிறது.



மவ்ளூஆன ஹதீஸ்களின் சட்டம்:

حكم روايته:


أجمع العلماء على أنه لا تحل روايته لأحد علم حاله في أي معنى كان إلا مع بيان وضعه، لحديث مسلم: ”

ஹதீஸ் என்ற பெயரில் சொல்லப்படும் ஒரு செய்தி, அது இட்டுக்கட்டப்பட்டது தான் என்று தெரிந்த பிறகு அந்த அறிவிப்பை ஏற்றுக் கொள்ள கூடாது. அது எப்படிப்பட்ட செய்தியாக இருந்தாலும் சரி என்பதில் அறிஞர்கள் ஒன்றுபட்ட கருத்தில் உள்ளனர்.


இதற்கு காரணம், பின் வரும் ஹதீஸ், நபி (ஸல்) அவர்களின் பெயரால் பொய்யான செய்தியைப் பரப்புவதை கண்டிக்கிறது என்று கூறுகின்றனர்.


அறிஞர்கள் சான்றாக காட்டும் ஹதீஸ்:

“من حدث عني بحديث يُرَى أنه كذب فهو أحد الكاذبين

 (1) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பொய் என்று கருதப்படும் ஒரு செய்தியை என்னைப் பற்றி யார் அறிவிக்கிறாரோ அவரும் பொய்யர்களில் ஒருவராவார்

 அறிவிப்பாளர்: முகீரா பின் ஷுஅபா (ரலி)

 நூல்: முஸ்லிம் (1)


இந்த ஹதீஸின் அடிப்படையில் மவ்ளூஆன ஹதீஸை நாம் மற்றவர்களுக்கு பரப்பவும் கூடாது, நாமும் அதைப் பின்பற்றவும் கூடாது.


மவ்ளூஆன ஹதீஸ்கள் எவ்வாறு உருவாக்கப்பட்டன?


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்திற்குப் பிறகு ஹதீஸ்கள் என்ற பெயரால் சிலர் பொய்யான செய்திகளை உண்டாக்கி இட்டுக்கட்டினர். 


அவைகளே இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள் என்று சொல்லப்படுகின்றன.


என்ன காரணங்களுக்காகவெல்லாம் இட்டுக்கட்டினார்கள் என்பதைப் பின்னால் அறிந்து கொள்வோம்.


அதற்கு முன் எந்த வழிமுறையில் அவர்கள் இட்டுக்கட்டினார்கள் என்பதை அறிந்து கொள்வோம்.


طرق الوضاعين في صياغة الحديث:

ஹதீஸ்களை போல் தோற்றமளிக்கும் இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களை உண்டாக்கியோர் கடைப்பிடித்த வழிமுறைகள்:


للوضاعين في صياغة الحديث طريقان:

இட்டுக்கட்டுபவர்கள் இரண்டு வழிமுறைகளைக் கடைப்பிடித்தார்கள்.


1) إما أن ينشئ الوضاع الكلام من عنده، ثم يضع له إسنادا ويرويه.

1) தாங்களாகவே ஒரு வாசகத்தை ஏற்படுத்தி ( அந்த வாசகத்தை சிலர் அறிவித்தது போல்)

ஒரு ஸனதை (அறிவிப்பாளர் தொடரை) யும் உண்டாக்கினர்.


2) وإما أن يأخذ كلاما لبعض الحكماء، أو غيرهم، ويضع له إسنادا.

2) அறிஞர்கள், அல்லது மற்றவர்களின் நல்ல வாசகங்களை எடுத்து அதற்கென ஒரு ஸனதை இவர்களாகவே உண்டாக்கி அதை நபிகளார் சொன்னது போல் இட்டுக்கட்டினார்கள்.


நம் காலத்திலும் கூட காந்தி, அண்ணா, அல்லது அப்துல் கலாம் போன்றோர் சில நல்ல கருத்துக்களை சொல்லியிருப்பார்கள். இது போன்று அன்றைய காலத்தில் வாழ்ந்த அறிஞர்களின் நல்ல கருத்துக்களை ஹதீஸ்கள் என்று நபிகளார் பெயரால் சிலர் இட்டுக்கட்டினார்கள்.



இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களை எவ்வாறு அறிந்து கொள்வது?

كيف يعرف الحديث الموضوع؟


يعرف الحديث الموضوع من دون النظر في إسناده بأمور؛ منها:

அறிவிப்பாளர் வரிசையை கவனிக்காமலேயே இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களை அறிந்து கொள்ள சில வழிமுறைகள் உள்ளன.


إقرار الواضع بالوضع: كإقرار أبي عصمة نوح بن أبي مريم بأنه وضع حديث فضائل سور القرآن سورة سورة، عن ابن عباس.

இட்டுக்கட்டுவோர் தாமாகவே முன் வந்து அதை ஒப்புக் கொள்வார்.


உதாரணமாக

நூஹ் இப்னு அபீ மர்யம் என்பவர் ஒவ்வொரு சூராவுக்கும் தனித்தனி சிறப்புகள் இருப்பதாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் பெயரால் தான் இட்டுக்கட்டியுள்ளதாக ஒப்புக் கொண்டுள்ளார்.

அப்படி ஒப்புக் கொள்ளும் போது அந்த ஹதீஸ்களை இட்டுக்கட்டது என அறிந்து கொள்ள முடியும்.


மற்றொரு வழிமுறை:


أو ما يتنزل منزلة إقراره: كأن يحدث عن شيخ، فيسأل عن مولده هو، فيذكر تاريخا تكون وفاة ذلك الشيخ قبل مولده هو، ولا يعرف ذلك الحديث إلا عنده.

இட்டுக்கட்டி அறிவிப்பவர்களிடம் உங்களுக்கு இதை அறிவித்தவர் யார்? அவரது பிறந்த வருடம் என்ன? என்று கேட்கும் போது பதில் சொல்ல முடியாமல் தான், இட்டுக்கட்டி அறிவித்ததை ஒப்புக் கொள்வார். 


அல்லது


யாரிடமிருந்து ஒரு செய்தியைக் கேட்டதாக அவர் கூறுகிறாரோ அவர் இறந்த பிறகே இவர் பிறந்திருப்பார். அவர் ஒருவர் வழியாக மட்டுமே இவர் இந்தச் செய்தியை அறிவித்திருப்பார்.


இந்த விஷயங்களில் அவர் மாட்டிக் கொள்ளும் போது. வேறு வழியின்றி தான் இட்டுக்கட்டியதை அவர் ஒப்புக் கொள்வார். அந்த வகையில் இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள் இனம் காட்டப்பட்டுள்ளன.


மற்றொரு வழிமுறை:


أو قرينة في الراوي: مثل أن يكون الراوي رافضيا، والحديث في فضائل أهل البيت.

அறிவிப்பாளரை வைத்து அறிந்து கொள்ள முடியும்.


உதாரணமாக

ஒரு அறிவிப்பாளர் ராஃபிளிய்யா

கூட்டத்தைச் சேர்ந்தவராக இருப்பார்.


ராஃபிளிய்யா கூட்டத்தைச் சேர்ந்தவர் அறிவிக்கும் ஹதீஸ்கள் இட்டுக்கட்டப்பட்டது என்று அறிந்து கொள்ள முடியும்.

(ராஃபிளிய்யா என்போர் ஷியாக்களில் ஒரு பிரிவினர்)


ராஃபிளிய்யா கூட்டத்தினரின் ஹதீஸ்களைக் கூட ஒட்டு மொத்தமாக அறிஞர்கள் மறுக்கவில்லை.


(அலி (ரலி), ஃபாத்திமா (ரலி), ஹஸன், ஹுஸைன் ஆகிய) நபிகளாரின் குடும்பத்தினரின் சிறப்புகள் விஷயமாக அவர்கள் அறிவித்தவைகளை மட்டுமே இட்டுக்கட்டப்பட்டது என அறிஞர்கள் கூறுகின்றனர்.


புகாரியில் இவர்கள் அறிவித்த வேறு ஹதீஸ்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.


மற்றொரு வழிமுறை:


أو قرينة في المروي: مثل كون الحديث ركيك اللفظ، أو مخالفا للحس، أو مخالفا لصريح القرآن.

அறிவிக்கப்படும் செய்தியை வைத்தும் இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களை அறிந்து கொள்ள முடியும்.


உதாரணத்திற்கு :

அந்த செய்தியில் உள்ள வார்த்தைகள் பொருத்தமில்லாததாக இருக்கும், (அதாவது புத்தியில்லாதவனின் உளரலைப் போன்றதாக இருக்கும்)

அல்லது அறிவுக்கு மாற்றமானதாக இருக்கும்.

அல்லது குர்ஆனுக்கு முரணானதாக இருக்கும்.




ஹதீஸ்களை இட்டுக்கட்டியதற்கான காரணங்கள்:


அல்லாஹ்விடம் நெருக்கத்தை ஏற்படுத்துதல்:


அல்லாஹ்விடம் நெருக்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் நண்மைகளை ஆர்வமூட்டும் விதமாகவும், தீமைகளை குறித்து அச்சமூட்டும் விதமாகவும் ஹதீஸ்களை சிலர் இட்டுக்கட்டினர்.

சீர்திருத்தம், வணக்க வழிபாடுகளில் ஈடுபாடு காட்டுதல் போன்ற காரியங்களால் இவர்கள் தங்களை நல்லவர்களாக காட்டிக்கொண்டதால் இவர்கள் இட்டுக்கட்டி கூறிய செய்திகளை மக்கள் ஹதீஸ்கள் என உறுதியாக நம்பினர்.


எனவே இட்டுக்கட்டக்கூடிய நபர்களில் இவர்கள் தான் மிகவும் மோசமானவர்கள்.


அவர்களில் ஒருவர் தான் மைஸரா என்பவர்.


இமாம் இப்னுஹிப்பான் அவர்கள் ளுஅஃபாவு- பலவீனமானவர்கள் என்ற பெயரில் ஒரு  நூலை எழுதியுள்ளார்கள்.


அதில் இந்த மைஸரா என்பவர் பற்றி ஒரு தகவலை பதிவு செய்துள்ளார்.


இப்னுல் மஹ்தி என்ற அறிஞர், மைஸராவிடம் :


இன்னின்ன சூராக்களுக்கு இன்ன இன்ன சிறப்புகள் இருப்பதாக நீ அறிவிக்கும் ஹதீஸ்களை எங்கிருந்து பெற்றாய்? என்று கேட்டார்.


மார்க்கத்தின் பக்கம் மக்கள் ஈர்க்கப்பட வேண்டும் என்பதற்காக நானே இவ்வாறு இட்டுக்கட்டினேன் என்று அவர் ஒப்புக் கொண்டார்.


இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள் உருவாக மற்றொரு காரணம்:


இயக்க வெறி:


உஸ்மான் (ரலி) அவர்களின் மரணத்திற்கு பிறகு உருவான காரிஜிய்யா, ஷியா, ராஃபிளிய்யா போன்ற வழிகெட்ட கூட்டத்தினர் தங்களின் வழிகெட்ட கொள்கைகளுக்கு வலு சேர்க்கும் வகையில் ஹதீஸ்களை இட்டுக்கட்டினர்.


உதாரணமாக

அலி (ரலி), மனிதர்களிலேயே சிறந்தவர். அவர் விஷயத்தில் சந்தேகம் கொள்பவர் காஃபிராகி விட்டார் என்று ஷியாக்கள் இட்டுக்கட்டியுள்ளனர்.


இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள் உருவாக மற்றொரு காரணம்:


இஸ்லாத்தின் வளர்ச்சியை தடுத்து நிறுத்துதல்:


இஸ்லாத்தின் வளர்ச்சியை எந்த சூழ்ச்சியாலும் தடுத்து நிறுத்த முடியாததால் சில கிறுக்குத்தனமான செய்திகளை ஹதீஸ்கள் என்ற பெயரில் சிலர் இட்டுக்கட்டினர்.


இஸ்லாத்தின் மீது தவறான அபிப்ராயம் ஏற்படும் வகையிலும், இஸ்லாத்தின் மீது களங்கம் கற்பிக்கும் வகையிலும் ஹதீஸ்களை தொகுப்பாக இட்டுக்கட்டினர்.


அதில் ஜன்தக்கா என்ற ஒரு கூட்டம்

குறிப்பாக இந்த வழிமுறையை கடைப்பிடித்தனர்.


அவர்களில் ஒருவன் தான் முஹம்மத் இப்னு ஸயீத் என்பவன்.


இவன் அனஸ் (ரலி) கூறியதாக மர்ஃபூஆன பின் வரும் ஹதீஸை அறிவித்துள்ளான்:

நபிமார்களில் நானே இறுதியானவன். எனக்கு பிறகு அல்லாஹ் நாடினால் தவிர வேறு நபி இல்லை.


இந்த ஹதீஸில் அல்லாஹ் நாடினால் தவிர என்ற வார்த்தையை இவன் சுயமாக சேர்த்து இட்டுக்கட்டியுள்ளான்.


இது போன்ற ஹதீஸ்களை அல்லாஹ் நமக்கு அடையாளம் காட்டி விட்டான். இல்லாவிட்டால் முஹம்மத் நபிக்கு பிறகு நபி வர முடியும் என்று நம்புகிற காதியானிகள் இதைப் பெரிய ஆதாரமாக காட்டியிருப்பார்கள்.


இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள் உருவாக மற்றொரு காரணம்:


மன்னர்களின் நெருக்கத்தை பெற:


பலவீனமான ஈமானுடைய சிலர் மன்னர்களிடம் நெருக்கத்தைப் பெறுவதற்காக மன்னர்களுக்குத் தகுந்தவாறும் அவர்களைப் புகழும் விதமாகவும் இட்டுக்கட்டினர்.


உதாரணத்திற்கு:


மஹ்தி என்ற மன்னர் காலத்தில் கியாஸ் இப்னு இப்ராஹிம் சம்பவம்:


மஹ்தி என்ற மன்னர் ஒரு நேரம் புறாவுடன் விளையாடிக் கொண்டிருந்த போது கியாஸ் இப்னு இப்ராஹிம் என்பவர்,கால் குழம்பிலோ (குதிரை), அம்பெறிதலிலோ தவிர போட்டி என்பது கிடையாது என்ற நபிமொழியுடன் புறாவிலும் தவிர என்ற வார்த்தையையும் சேர்த்து இட்டுக்கட்டி கூறியுள்ளார். அதாவது கால் குழம்பிலோ (குதிரை), அம்பெறிதலிலோ, இறக்கையுடையதிலோ (புறாவிலோ) தவிர போட்டி என்பது கிடையாது என்று அறிவித்தார்.


இந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட அந்த மன்னர் தன்னைக் காரணமாக வைத்து ஒரு ஹதீஸ் இட்டுக்கட்டப்பட்டுள்ளதே? என நினைத்து அந்தப் புறாவை அறுத்துப் பலியிட ஆணையிட்டார்.

புகழை விரும்பாதவராக அம்மன்னர் இருந்ததால் அந்த ஹதீஸ் இட்டுக்கட்டப்பட்டது என்ற செய்தி வெளியானது. இல்லையானால் அந்த செய்தி அப்படியே பரவியிருக்கும்.


வயிற்றுப் பிழைப்புக்காக இட்டுக்கட்டினர்:


பேச்சையே பிழைப்பாக நடத்திக் கொண்டிருந்த சிலர் வீரமிக்க, ஆச்சர்யமான சில கதைகளை ஹதீஸ்களின் பெயரால் இட்டுக்கட்டினர்.


மக்களுக்கு ஆர்வம் ஏற்படும் வகையில் அவற்றைக் கூறி அவர்களிடம் எதையாவது அன்பளிப்பாக பெறலாம் என நினைத்து இவ்வாறு இட்டுக்கட்டினர்.


மிக குறைவான நபர்களால் அறிவிக்கப்படும் ஹதீஸ்கள் கரீப் என சொல்லப்படும்.


ஹதீஸ்களை இட்டுக்கட்டியோர் தங்களின் ஹதீஸ்களை, அதற்கென யாரிடமும் இல்லாத ஒரு தனி ஸனதை (அறிவிப்பாளர் தொடர்) ஏற்படுத்தி அறிவித்தனர்.


வயிற்றுப் பிழைப்புக்காக ஹதீஸ்களை இட்டுக்கட்டியோரில் இப்னு அபீ திஹ்யா, ஹம்மாதுன் நஸபீ ஆகியோரை இதற்கு உதாரணமாக கூறலாம்.



 المتروك – மத்ரூக் –

(விடப்படுவதற்கு ஏற்றது)


மவ்ளுவு எனும் இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களுக்கு அடுத்த நிலையில் அமைந்தவை மத்ரூக் எனப்படும் ஹதீஸ்களாகும்.



மத்ரூக் என்றால் அறிவிப்பாளர்களில் பொய்யர் என்று சந்தேகிக்கப்பட்டவர் இடம் பெறுவது மத்ரூக் எனப்படும்.


மவ்ளூஃ – மத்ரூக் வித்தியாசம்:


மவ்ளூவு (இட்டுக்கட்டப்பட்ட) ஹதீஸ்களுக்கும் மத்ரூக் எனும் ஹதீஸ்களுக்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால்…


மவ்ளுவு என்றால் அறிவிப்பாளர் பொய்யர் என்று சந்தேகமற நிரூபிக்கப்பட்டிருக்கும்.


மத்ரூக் என்பதில் பொய்யர் என்று நிரூபிக்கப்பட்டிருக்காது. எனினும் பரவலாக அவர் மேல் பொய்யர் என்று சந்தேகம் தெரிவிக்கப்பட்டிருக்கும்.


ஒருவரை மத்ரூக் என்று சொல்ல இரண்டு காரணம் இருக்க வேண்டும்.


முதல் காரணம்:

ஒரு செய்தி அவரிடமிருந்து தவிர மற்றவர்கள் மூலம் அது அறிவிக்கப்பட்டிருக்காது. மேலும் அந்த செய்தி அறியப்பட்ட சட்டங்களுக்கு மாற்றமாக இருக்கும்.


உதாரணத்திற்கு:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், தொழுகையில் நெஞ்சின் மீது தக்பீர் கட்டினார்கள் என்று அதிகமானோர் அறிவித்துள்ளார்கள் என்று வைத்துக் கொள்வோம். இதற்கு மாற்றமாக ஒருவர் மட்டும், வயிற்றில் தக்பீர் கட்டினார்கள் என்று அறிவித்திருந்தால் அதுவும் இவர் மட்டுமே அந்தச் செய்தியை அறிவித்துள்ளார் என்றால் அவர் மத்ரூக் என்று சொல்லப்படுவார்.


(வயிற்றில் தக்பீர் கட்டும் ஹதீஸ் மத்ரூக் இல்லை. அது வேறு வகையில் பலவீனமானது. மத்ரூக் என்றால் என்ன என்பதை விளக்குவதற்காக மட்டுமே அந்த ஹதீஸைக் கூறுகிறோம்.)


இரண்டாவது காரணம்:

மத்ரூக் என விமர்சிக்கப்படுபவர் ஹதீஸ்களில் பொய் கூறினார் என்பது நிரூபிக்கப்படா விட்டாலும் பொதுவாக அவர் பொய் பேசக்கூடியவர் என்று நிரூபிக்கப்பட்டிருந்தால் அவர் அறிவிக்கும் ஹதீஸ்களும் மத்ரூக் எனப்படும்.


உதாரணமாக பின்வரும் ஹதீஸை கவனியுங்கள்;


حديث عمرو بن شمر الجعفي الكوفي، عن جابر، عن أبي الطفيل، عن علي وعمار قالا: كان النبي صلى الله عليه وسلم يقنت في الفجر، ويكبر يوم عرفة من صلاة الغداة، ويقطع صلاة العصر آخر أيام التشريق.

وقد قال النسائي والدارقطني وغيرهما من عمرو بن شمر: “متروك الحديث

நபி (ஸல்) அவர்கள் ஃபஜர் தொழுகையில் குனூத் ஓதுபவர்களாக இருந்தார்கள். அரஃபாவுடைய நாளில் பகல் தொழுகையிலிருந்து தக்பீர் கூற தொடங்குவார்கள். அய்யாமுத் தஷ்ரீக்கின் கடைசி (நாள்) (துல்ஹஜ் பிறை 13) அவர் தொழுகையில் (தக்பீரை) நிறுத்திக் கொள்வார்கள்.


இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெறும் அம்ர் பின் ஷமிர் என்பவர் மத்ரூக்குல் ஹதீஸ் ( ஹதீஸ் துறையில் விடப்பட வேண்டியவர்) என்று இமாம் நஸயீ, தாரகுத்னீ ஆகியோர் கூறியுள்ளார்கள்.

இப்படி ஒரு ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையில் உள்ள ஒருவர் பற்றி மத்ரூக்குல் ஹதீஸ் என்று விமர்சிக்கப்பட்டிருந்தால் அந்த ஹதீஸை நாம் நிராகரித்து விட வேண்டும்.


மேலும் நபி (ஸல்) அவர்கள் வித்ரில் குனூத் ஓதினார்கள் என்று அறியப்பட்ட செய்திக்கு மாற்றமாகவும் இந்த ஹதீஸ் அமைந்துள்ளது.


எனவே இந்த இரண்டு காரணங்கள் இடம் பெறும் எந்த ஹதீஸும் மத்ரூக் – விடப்படுவதற்கு ஏற்றது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.


குறிப்பு:

இந்த ஹதீஸ் மட்டுமல்ல, ஃபஜரில் குனூத் ஓதுவது சம்பந்தமாக வரும் அனைத்து ஹதீஸ்களும் பலவீனமானது.


ஸஹீஹான ஹதீஸ்களின் அறிவிப்பாளர்கள் பற்றி வரக்கூடிய விமர்சனங்களுக்கு உதாரணம்.


புகாரியில் வரும் முதலாவது ஹதீஸின் அறிவிப்பாளர்களில் ஹுமைதி என்பவரைப் பற்றி….


أبو حاتم الرازي:أثبت الناس في ابن عيينة الحميدي ، وهو رئيس أصحاب ابن عيينة ، وهو ثقة إمام

ஹுமைதி, மக்களில் மிக உறுதியானவர், மேலும் தலைவராகவும் இருந்தார் என்று அபூஹாத்தம் அர்ராஸீ கூறியுள்ளார்கள்


ابن حجر العسقلاني:قال في (تقريب التهذيب) : ثقة ، حافظ فقيه

ஹுமைதி, உறுதியானவராகவும், சிறந்தவராகவும், ஹதீஸ்களை பிரித்து அறியக் கூடியவராகவும் இருந்தார் என்று இப்னுஹஜர் அல்அஸ்கலானி அவர்கள் தமது தக்ரீபுத்தஹ்தீப் எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார்கள்.


இது போன்று தான் ஸஹீஹான ஹதீஸ்கள் பற்றிய விமர்சனங்கள் இருக்கும்.



ஹதீஸ்களை இட்டுக்கட்டுவதில் கர்ராமிய்யாக்களின் கொள்கை:


ஹதீஸ் கலையில், வழிகெட்ட கொள்கையுடையோரின் ஹதீஸ்களை எப்படி எடுத்துக் கொள்வது என்றும் ஹதீஸ் கலை அறிஞர்கள் இனம் காட்டியுள்ளனர்.


உதாரணத்திற்கு:

கர்ராமிய்யா என்ற பெயரில் அன்றைய காலத்தில் இருந்த முஸ்லிம்களில் உள்ள ஒரு பிரிவினர் பற்றி ஹதீஸ் கலை அறிஞர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.


கர்ராமிய்யாவினரின் கொள்கை:


முஸ்லிம்களில் புதிதாக ஒரு கூட்டம் தோன்றினார்கள். அவர்கள் தங்களுக்கு கர்ராமிய்யா (சங்கைமிக்கோர்) என்று பெயர் சூட்டிக் கொண்டார்கள்.


இவர்கள் நன்மைகளை ஆர்வமூட்டும் விஷங்களிலும் தீமைகளை எச்சரிக்கை செய்யும் விஷயங்களிலும் ஹதீஸ்களை இட்டுக்கட்டலாம் என்று வாதிட்டனர்.


இதற்கு ஒரு ஹதீஸையும் ஆதாரமாக எடுத்து வைத்தார்கள்.


அந்த ஹதீஸ் இது தான்


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:


என்னைப் பற்றி (நான் சொல்லாத ஒன்றைச் சொன்னதாக ) யார் வேண்டுமென்றே பொய்யுரைக்கிறாரோ அவர் தமது இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக்கொள்ளட்டும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் (04)


இது ஒரு முதவாதிரான ஹதீஸ் ஆகும்.


(ஒரு ஹதீஸுக்கு 10க்கும் மேற்பட்ட அறிவிப்பாளர் தொடர் இருந்தால் அதற்கு முதவாத்திர் என்று பெயர் )


பல அறிவிப்பாளர் தொடர் கொண்ட மேற்கண்ட ஹதீஸின் வாசகத்தில் இல்லாத ஒரு வாசகத்தை அதிகப்படியாக சேர்த்து ஒரு அறிவிப்பு வந்துள்ளது.


அந்த அறிவிப்பின் வாசகம்:

“என்னைப் பற்றி ( நான் சொல்லாத ஒன்றைச் சொன்னதாக) யார் வேண்டுமென்றே ”மக்களை வழிகெடுக்கும் நோக்கத்தில்” பொய்யுரைக்கிறாரோ அவர் தமது இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக்கொள்ளட்டும்”


இந்த ஹதீஸில்: மக்களை வழிகெடுக்கும் நோக்கத்தில் பொய்யுரைக்கக் கூடாது என்று சொல்லப்பட்டிருப்பதால் நன்மையை ஆர்வமூட்டும் வகையிலும் மக்களை எச்சரிக்கும் வகையிலும் ஹதீஸ்களை இட்டுக்கட்டலாம் என்று கர்ராமியாக்கள் கூறி வந்தனர்.


பலவீனமான ஹதீஸ்:

ஆனால் “மக்களை வழிகெடுக்கும் நோக்கத்தில் பொய்யுரைக்கக் கூடாது” என்ற வாசகம் இடம் பெற்ற ஹதீஸ் உறுதியானதல்ல (பலவீனமானது) என்று ஹதீஸ் கலை அறிஞர்கள் கூறியுள்ளார்கள்.


எனவே நபியின் பெயரால் எத்தகைய ஹதீஸையும் இட்டுக்கட்டக் கூடாது.


ஏனெனில் நபியவர்கள் சொல்லாத ஒன்றை, அது நல்ல விஷயமாக இருந்தாலும் அதை நபியின் பெயரால் நாம் இட்டுக்கட்டக் கூடாது.


இதைப் பின் வரும் நபிமொழியிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:


நீ உன் படுக்கைக்குச் செல்லும்போது தொழுகைக்காக அங்கசுத்தி (உளூ) செய்வது போன்று அங்கசுத்தி செய்துகொள். பிறகு உன் வலப்பக்கத்தின் மீது சாய்ந்து படு. பிறகு,

« اَللَّهُمَّ أَسْلَمْتُ نَفْسِي إِلَيْكَ ، وَفَوَّضْتُ أَمْرِي إِلَيْكَ ، وَأَلْجَأْتُ ظَهْرِي إِلَيْكَ ، رَغْبَةً وَرَهْبَةً إِلَيْكَ ، لاَمَلْخَأَ وَلاَمَنْجَا مِنْكَ إِلاَّ إِلَيْكَ ، آمَنْتُ بِكِتَابِكَ الَّذِي أَنْزَلْتَ وَبِنَبِيِّكَ الَّذِي أَرْسَلْتَ »

 “அல்லாஹும்ம அஸ்லம்த்து நஃப்ஸீ இலைக்க. வ ஃபவ்வள்த்து அம்ரீ இலைக்க. வ அல்ஜஃத்து ழஹ்ரீ இலைக்க. ரஃக்பத்தன் வ ரஹ்பத்தன் இலைக்க. லா மல்ஜஅ வலா மன்ஜா மின்க்க இல்லா இலைக்க. ஆமன்த்து பி கித்தாபிக்கல்லதீ அன்ஸல்த்த வபி நபிய்யிக்கல்லதீ அர்சல்த்த” என்று ஓதிக்கொள்.

( பொருள்: இறைவா! உனக்கு நான் கீழ்ப்படிந்தேன். காரியம் அனைத்தையும் உன்னிடம் ஒப்படைத்தேன். என் விவகாரங்கள் அனைத்திலும் உன்னையே சார்ந்திருக்கிறேன். உன் மீதுள்ள ஆவலிலும் அச்சத்திலும்தான் (இவற்றை நான் செய்தேன்). உன்னிடமிருந்து தப்பிக்கவும் ஒதுங்கிடவும் உன்னைத் தவிர வேறு போக்கிடமில்லை. நீ அருளிய உன்னுடைய வேதத்தையும், நீ அனுப்பிவைத்த உன்னுடைய நபியையும் நான் நம்பினேன்.

(இவ்வாறு நீ பிரார்த்தனை செய்துவிட்டு உறங்கி அன்றைய இரவில்) நீ இறந்துவிட்டால் (இஸ்லாம் எனும்) இயற்கை மரபில் இறந்தவனாவாய். இந்தப் பிரார்த்தனையை (இரவின்) இறுதிப் பேச்சாக ஆக்கிக்கொள்.


இந்த நபிமொழியின் அறிவிப்பாளரான பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:


“நான் இவற்றைத் திரும்ப ஓதிக்காட்டுகிறேன்” என்று நபி (ஸல்) அவர்களிடம் கூறிவிட்டு ஓதிக் காட்டலானேன். (“நீ அனுப்பிய உன் நபியையும் நான் நம்பினேன்’ என்பதற்கு பதிலாக) “நீ அனுப்பிய உன் ரசூலையும் நான் நம்பினேன்’ என்று நான் சொல்லிவிட்டேன். உடனே நபி (ஸல்) அவர்கள், “இல்லை; “நீ அனுப்பிய உன் நபியை நம்பினேன்’ என்று சொல்” என (எனக்குத் திருத்தி)ச் சொன்னார்கள்.

நூல்: புகாரி (6311)


ஒரு துஆவை நபிகளார் கற்றுத் தருகிறார்கள். அதில் நபிய்யிக்கல்லதீ அர்ஸல்த்த என்ற வார்த்தையை, ரசூலிக்கல்லதீ அர்ஸல்த்த என்று சஹாபி மாற்றி கூறுகிறார். இரண்டு வார்த்தைக்கும் பொருள் ஒன்று தான். என்றாலும் தான் சொல்லாத ஒன்று தான் சொன்னதாக வந்து விடக் கூடாது என்று நபிகளார் கவனமாக திருத்திக் கொடுத்திருக்கும் போது அவர்கள் சொல்லாத செய்திகளை ஹதீஸ்கள் என்று எப்படி இட்டுக்கட்ட முடியும்?


எனவே எந்தக் காரணத்தைக் கூறியும் பொய்யான செய்திகளை நபியின் பெயரால் சொல்லக் கூடாது.


கராமிய்யா கூட்டத்தினர் பலவீனமான ஹதீஸின் அடிப்படையில் தான் தங்களின் தவறான கொள்கையை பரப்பினார்கள். எனவே அந்த கொள்கையை நாம் பின்பற்றக் கூடாது.

மேலும் கராமிய்யாக்களில் சிலர், நாங்கள் நபி (ஸல்) சொன்ன வணக்கங்களுக்கு ஆதரவாகத் தான் பொய் சொல்கிறோமே தவிர நபியின் மீது நாங்கள் பொய்யை இட்டுக்கட்டவில்லை என்ற வாதத்தையும் எடுத்து வைத்தார்கள்.


இது முட்டாள் தனமான வாதமாகும். ஏனெனில் பொய் சொல்லி மார்க்கத்தைப் பரப்புமாறு நபிகளார் கூறாததால் இந்த வாதமும் ஏற்றுக் கொள்ள முடியாத வாதமாகும்.


இந்த கருத்து அறிஞர்களின் ஒன்றுபட்ட கருத்துக்கு மாற்றமான கருத்தாகவும் இருக்கிறது.


மேலும் அபூ முஹம்மத் அல்ஜூனி என்ற அறிஞர் மவ்ளூஆன ஹதீஸை உண்டாக்கியோர் காஃபிர்கள் எனும் அளவுக்கு விமர்சித்துள்ளார்



ஹதீஸ்கள் நான்கு வகைகளாக இருக்கின்றன. அவை:


صحيح  – ஸஹீஹ் –

ஆதாரப்பூர்வமானது


موضوع  – மவ்ளூவு –

இட்டுக்கட்டபட்டது


متروك  – மத்ருக் –

விடப்படுவதற்கு ஏற்றது


ضعيف  – ளயீஃப் –

பலவீனமானது


ஆகியவையாகும்.


என்பதையும் மவ்ளூவு என்றால் என்ன? மத்ரூக் என்றால் என்ன? என்பதையும் தெரிந்து கொண்டோம்.



இனி…


ضعيف – ளயீஃப் –


பலவீனமானது

என்றால் என்ன என்பதைப் பார்ப்போம்.


ஹஸன் என்ற தரத்திற்கு உள்ள நிபந்தனைகளுக்கும் சட்டங்களுக்கும் உட்படாத ஹதீஸ்களை ளயீஃப் என்று சொல்லப்படும்.


ஸஹீஹான ஹதீஸுக்கு உள்ள நிபந்தனைகள்:


ஒரு ஹதீஸை ஸஹீஹ் என சொல்வதாக இருந்தால் அதில் ஐந்து விஷயங்கள் இருக்க வேண்டும். 


அந்த ஐந்து விஷயங்கள் என்னவென்றால்…


 اتصال السند-

ஸனத்

என்ற சங்கிலித் தொடர் இணைந்திருத்தல்.


عدالة الرواة

ராவிகளின் நம்பகத்தன்மை (உறுதி செய்யப்பட்டதாக இருக்க வேண்டும்.)


அதாவது,

✜ அறிவிப்பாளர் ஒவ்வொருவரும் முஸ்லிமாக இருக்க வேண்டும்.

✜ பருவ வயதை அடைந்தவராக இருக்க வேண்டும்.

✜ விவரமுள்ளவராக இருக்க வேண்டும்.

✜ பாவியாக இருக்கக் கூடாது.

✜ மூளை குழம்பியவராக இருக்கக் கூடாது.


 ضبط الرواة –

அறிவிப்பாளர்களின் மனனத் தன்மை பூர்த்தியானதாக இருக்க வேண்டும்.


அதாவது,

நினைவாற்றல் மிக்கவராக இருக்க வேண்டும். அல்லது கேட்டதை எழுதி வைப்பவராக இருக்க வேண்டும். ஏட்டளவிலோ, எழுத்தளவிலோ ஹதீஸைப் பாதுகாப்பவராக இருக்க வேண்டும்.


இது போக ஒரு ஹதீஸ் ஸஹீஹாஹ இருப்பதற்கு பின் வரும் இரண்டு நிபந்தனைகளுக்குட்பட்டதாகவும் அது இருக்க வேண்டும்.


 شاذ- ஷாத்

ஷாத் இல்லாமல் இருக்க வேண்டும்.


 علة-

இல்லத்தாக இருக்க கூடாது. அதாவது நுணுக்கமான குறைகள் அதில் இருக்கக் கூடாது.


இந்த ஐந்து விஷயங்களும் ஒரு ஹதீஸில் இருந்தால் தான் அது சஹீஹான ஹதீஸாகும்.



ஹஸன்:


இந்த ஐந்து விஷயங்களும் ஹஸன் என்ற தரத்தில் உள்ள ஹதீஸில் இருக்கும். ஆனால் ஸஹீஹான ஹதீஸின் அறிவிப்பாளர்களுடைய நினைவாற்றலை விட ஹஸன் தரத்தில் உள்ள ஹதீஸின் அறிவிப்பாளர்களின் நினைவாற்றல் சற்று குறைவாக இருக்கும்.



ضعيف  – ளயீஃப் –

பலவீனமானது என்றால் என்ன?


ஹஸனுக்கு சொல்லப்பட்ட நிபந்தனைகளுக்கு உட்படாததாகவோ, அல்லது அந்த ஐந்து நிபந்தனைகளில் ஒன்று இல்லாததாகவோ இருந்தால் அது ளயீஃப் ஆன ஹதீஸ்களாகும்.


ஒரு ஹதீஸ் எதனால் ضعيف – ளயீஃப் – பலவீனமானதாக ஆகும் என்பதைப் பார்ப்போம்.


அறிவிப்பாளர் விடுபடுதல்:


ஒரு ஹதீஸ் பலவீனமானதாக இருக்க பல காரணங்கள் உண்டு.


ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் ஒருவரோ அல்லது பலரோ விடுபட்டிருப்பதும் அவற்றில் ஒரு காரணம்.


அறிவிப்பாளர் விடுபட்டுள்ளதை அறிந்து கொள்வது எப்படி?


இதைப் பின் வரும் ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையை கவனித்து விளங்கிக் கொள்ளலாம்.

( அறிவிப்பாளர் விடுபட்டிருப்பதற்கு இந்த ஹதீஸ் உதாரணமல்ல, அறிவிப்பாளர் விடுபடுதல் என்றால் என்ன என்று புரிந்து கொள்வதற்காக மட்டுமே இந்த ஹதீஸ் கூறப்படுகிறது. )


1-حَدَّثَنَا الْحُمَيْدِيُّ عَبْدُ اللَّهِ بْنُ الزُّبَيْرِ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ الأَنْصَارِيُّ، قَالَ أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ التَّيْمِيُّ، أَنَّهُ سَمِعَ عَلْقَمَةَ بْنَ وَقَّاصٍ اللَّيْثِيَّ، يَقُولُ سَمِعْتُ عُمَرَ بْنَ الْخَطَّابِ ـ رضى الله عنه عَلَى الْمِنْبَرِ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُو إِنَّمَا الأَعْمَالُ بِالنِّيَّاتِ، وَإِنَّمَا لِكُلِّ امْرِئٍ مَا نَوَى، فَمَنْ كَانَتْ هِجْرَتُهُ إِلَى دُنْيَا يُصِيبُهَا أَوْ إِلَى امْرَأَةٍ يَنْكِحُهَا فَهِجْرَتُهُ إِلَى مَا هَاجَرَ إِلَيْهِ ”- البخاري 

1. ‘செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது. ஒருவரின் ஹிஜ்ரத் (துறத்தல்) உலகத்தைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தால் அதையே அவர் அடைவார். ஒரு பெண்ணை நோக்கமாகக் கொண்டால் அவளை மணப்பார். எனவே, ஒருவரின் ஹிஜ்ரத் எதை நோக்கமாகக் கொண்டதோ அதுவாகவே அமையும்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என உமர் இப்னு கத்தாப்(ரலி) மேடையிலிருந்து அறிவித்தார்கள். நூல்: புகாரி (1)


இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடர்:


உமர்

அல்கமா பின் வக்காஸ்

முஹம்மத் பின் இப்ராஹிம்

யஹ்யா பின் ஸயீத்

ஸுஃப்யான்

ஹூமைதீ

இமாம் புகாரி


மேற்கண்ட அறிவிப்பாளர்கள் ஒவ்வொருவரும் தமக்கு அறிவித்தவர்களைக் கூறியிருப்பதைப் பார்க்கிறோம்.


இந்த ஹதீஸ், ஸஹீஹானதா என உறுதி செய்ய வேண்டுமானால் முதல் அறிவிப்பாளரான சஹாபியையும் ஹதீஸைப் பதிவு செய்துள்ள நூலாசிரியரையும் தவிர மற்ற அறிவிப்பாளர்களை ஆய்வு செய்த பிறகு தான் முடிவு செய்ய முடியும்.


அறிவிப்பாளர் பற்றிய விபரங்களை அறிந்து கொள்வது எப்படி?


அறிவிப்பாளர் பற்றிய விபரங்களை அறிந்து கொள்ள நிறைய நூல்கள் அரபியில் உள்ளது.


உதாரணத்திற்கு:

தஹ்தீபுத் தஹ்தீப் , மத்ஹலுஸ் ஸஹீஹ் போன்ற நூற்கள்.

(ஹதீஸ் சாஃப்ட்வேரிலும் அறிவிப்பாளர் குறித்த விபரங்களை ஒவ்வொரு ஹதீஸின் அருகிலும் தெரிந்து கொள்ளலாம்.)


இந்த நூல்களில்:

அறிவிப்பாளர்களின் பெயர்கள்

அவர்களின் பிறந்த வருடம், இறந்த வருடம்

அவர்களின் மாணவர்கள், ஆசிரியர்கள் பற்றிய விபரம்

அவர்கள் பயணித்த ஊர்கள்,

அவர்கள் சந்தித்த நபர்கள், சந்திக்காத நபர்கள் பற்றிய விபரங்கள் என்றெல்லாம் மனித சக்திக்கு உட்பட்டு ஆய்வு செய்து அறிவிப்பாளர்களின் வரலாறுகளை அறிஞர்கள் பதிவு செய்துள்ளனர்.


இந்த நூல்களில் மேற்கண்ட ஹதீஸின் அறிவிப்பாளர்கள் ஒவ்வொருவரையும் நாம் ஆய்வு செய்ய வேண்டும்.


அல்கமாவில் தொடங்கி ஹுமைதி வரை உள்ள அறிவிப்பாளர்கள் ஒவ்வொருவரும் அவருக்கு மேல் உள்ள அறிவிப்பாளரும் ஒரு காலத்தில் வாழ்ந்தவர்களா?


ஒரு காலத்தில் வாழ்ந்தாலும் இருவரும் ஒரு ஊரைச் சேர்ந்தவர்களா?


இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்துள்ளனரா?


அவரின் பிறந்த வருடம் எது? இவரின் பிறந்த வருடம் எது? என்றெல்லாம் ஆய்வு செய்த பிறகு தான் எந்த இருவருக்கும் இடையிலும் யாரும் விடுபட்டுள்ளனரா? விடுபடவில்லையா? என்பதை அறிந்து கொள்ள முடியும்.


அதன் பிறகு தான் ஒரு ஹதீஸ், ஸஹீஹா? ளயீஃபா? என முடிவு செய்ய முடியும்.



அறிவிப்பாளர் விடுபடுதல் என்பது இரு வகைகளாக உள்ளது:


1. السقط الظاهر – வெளிப்படையாக விடுபடுவது.

2. سقط خفي – மறைமுகமாக விடுபடுவது.


 السقط الظاهر –

வெளிப்படையாக அறிவிப்பாளர் விடுபடுவதை நான்கு வகைகளாக அறிஞர்கள் பிரித்துள்ளனர்:


அல்-முன்கதிவு المنقطع-

அல்-முர்ஸல் – المرسل

அல்-முஃளல் – المعضل

அல்-முஅல்லக் المعلق –


سقط خفي –

மறைமுகமாக அறிவிப்பாளர் விடுபடுவதை இரண்டு வகைகளாக அறிஞர்கள் பிரித்துள்ளனர்:


 المدلس - அல்-முதல்லஸ்

 المرسل الخفي - அல்முர்ஸலுல் ஹஃபிய்யு


மறைமுகமாக அறிவிப்பாளர் விடுபடுவதை திறமைமிக்க அறிஞர்களைத் தவிர மற்றவர்களால் கண்டுபிடிக்க முடியாது.



اَلْمُعَلَّقُ – முஅல்லக்

ஆரம்ப அறிவிப்பாளர்கள் விடுபட்டிருத்தல்:


முஅல்லக் என்பதன் விளக்கம்:


ஒரு ஹதீஸின் அறிவிப்பாளர் சங்கிலித் தொடரில் அந்த ஹதீஸைப் பதிவு செய்துள்ள நூல் ஆசிரியருக்கு முந்திய அறிவிப்பாளர் ஒருவரோ, அல்லது பலரோ விடுபட்டிருக்கும் ஹதீஸ்களுக்கு முஅல்லக் என்று பெயர்.


முஅல்லக் என்பது இரு வகைப்படும்.


1. அறிவிப்பாளர்கள் அனைவரும் விடுபட்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள் என்று மட்டும் பதிவு செய்யப்பட்டிருக்கும்.

2. அறிவிப்பாளர்கள் அனைவரும் விடுபட்டு நபித்தோழரின் பெயர் மட்டுமோ, அல்லது நபித்தோழரின் பெயரும் ஒரு தாபியின் பெயர் மட்டுமோ பதிவு செய்யப்பட்டிருக்கும்.


புகாரியில் முஅல்லக் வகை ஹதீஸ்கள் பல உள்ளன. இந்த ஹதீஸ்களுக்கு புகாரியில் இலக்கமிடப் பட்டிருக்கமாட்டாது.


முதல் வகைக்கு உதாரணம்:

அந்த சவக்குழியிலிருந்தவர் குறித்து நபி (ஸல்) அவர்கள் “தமது சிறுநீரிலிருந்து அவர் (தம் உடலையும் உடையையும்) மறைக்காமலிருந்தார்” என்றே கூறினார்கள். மனிதர்களுடைய சிறுநீரைத் தவிர வேறெந்த (உயிரினங்களின்) சிறுநீர் குறித்தும் அவர்கள் குறிப்பிடவில்லை.

புகாரி – பாடம் : 56 சிறுநீர் கழித்தபின் கழுவுதல்.)


இந்த ஹதீஸை பதிவு செய்துள்ள இமாம் புகாரி அவர்கள், இதைத் தமக்கு அறிவித்தவரின் பெயரையோ அல்லது மற்ற எந்த அறிவிப்பாளரின் பெயரையுமோ குறிப்பிடாமல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள் என்று மட்டுமே பதிவு செய்துள்ளார்கள்.


 எனவே இது முஅல்லக் வகை ஹதீஸ் ஆகும்.



இரண்டாவது வகைக்கு உதாரணம்:


இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:


நபி (ஸல்) அவர்கள் (விடைபெறும் ஹஜ்ஜுப் பேருரையின் இறுதியில்) “நான் எல்லாவற்றையும் (உங்களுக்கு) சமர்ப்பித்துவிட்டேனா?” என்று மூன்று முறை கேட்டார்கள்.

கிதாபுல் இல்ம்- பாடம்: 30.தாம் சொல்வது நன்கு புரிந்துகொள்ளப்பட வேண்டும் என்பதற்காக ஒரு செய்தியை மும்முறை திருப்பிச் சொல்லுதல்.


இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் இமாம் புகாரி அவர்கள், இப்னு உமர் (ரலி) அவர்களைத் தவிர தமக்கு அறிவித்தவரின் பெயரையோ அல்லது மற்ற எந்த அறிவிப்பாளரின் பெயரையுமோ குறிப்பிடவில்லை.


எனவே இது முஅஅல்லக் வகை ஹதீஸ் ஆகும்.


முஅல்லக்கான ஹதீஸை ஏற்கலாமா?


ஸஹீஹான ஹதீஸுக்கு இருக்க வேண்டிய ஐந்து நிபந்தனைகளில் முதல் நிபந்தனை, அறிவிப்பாளர் சங்கிலித் தொடர் விடுபடாமல் இருக்க வேண்டும் என்பது தான். அந்த முதல் நிபந்தனை முஅல்லக்கான ஹதீஸில் இல்லாததாலும், விடுபட்டவர்கள் நம்பகமானவர்களா? என்பதோ அல்லது அவர்களைப் பற்றிய மற்ற விபரங்களோ இதில் தெரியாமல் போவதால் இந்த வகை ஹதீஸ்களை ஏற்கக் கூடாது என்று ஹதீஸ் துறை அறிஞர்கள் அனைவரும் கூறியுள்ளனர்.


மற்ற ஹதீஸ் நூற்களில் உள்ள முஅல்லக்கான ஹதீஸ்களை ஏற்கக் கூடாது என்பதைப் போலவே புகாரியில் இடம் பெறும் முஅல்லக்கான ஹதீஸ்களையும் ஏற்கக் கூடாதா?


இமாம் புகாரி அவர்கள் ஒரு ஹதீஸை தம் நூலில் பதிவு செய்வதற்குக் கடும் நிபந்தனைகளை வைத்திருக்கும் போது அவர்கள் பதிவு செய்துள்ள முஅல்லக்கான ஹதீஸ்கள் பற்றிய நிலைப்பாடு என்ன? என்பதை இனி பார்ப்போம் இன்ஷாஅல்லாஹ்.



அறிவிப்பாளர் விடுபடுதல்:


ஒரு ஹதீஸ் பலவீனமானதாக இருக்க பல காரணங்கள் உண்டு.


ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் ஒருவரோ அல்லது பலரோ விடுபட்டிருப்பதும் அவற்றில் ஒரு காரணம்.


அறிவிப்பாளர் விடுபடுவதில் பல வகை உண்டு. அவற்றில் ஒன்று:


அல்-முர்ஸல் – المرسل


அல்-முர்ஸல் المرسل- என்றால் ஒரு ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் எல்லா அறிவிப்பாளர்களையும் கூறி விட்டு நபித்தோழரை மட்டும் கூறாமல் விட்டிருந்தால் அந்த ஹதீஸ் முர்ஸல் ஆகும்.


ஒவ்வொரு ஹதீஸும் நபித்தோழர்களிடமிருந்து தான் வந்திருக்க முடியும்.


அப்படியிருக்கும் போது நபித்தோழரை விட்டு விட்டு தாபியீனே நபிகளாரிடமிருந்து ஒரு ஹதீஸை அறிவிப்பதாக ஒரு செய்தி வந்தால் எப்படி அதை ஏற்க முடியும். முடியும்?


எனவே நபித்தோழர் விடுபட்டுள்ள முர்ஸலான செய்தி பலவீனமான செய்தியாகும்.


முர்ஸல் வரைபடம்:


நபிகள் நாயகம் (ஸல்)

தாபியீன்

தபவுத் தாபியீன்

 ராவி (அறிவிப்பாளர்)

புகாரி


உதாரணம்:

நபி (ஸல்)அவர்கள் நோன்பு துறக்கும் போது அல்லாஹூம்ம லக்க ஸூம்த்து வஅலா ரிஸ்க்கிக அஃப்தர்த்து (இறைவா உனக்காக நோன்பு நோற்றேன்.உனது உணவைக்கொண்டு நோன்பு துறந்தேன் என்று கூறுபவர்களாக இருந்தார்கள்.

(நூல்: அபூதாவுத். 2011)


இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடர்:

↘ முஸத்தத்

↘ ஹூஸைம்

↘ ஹுஸைன்

↘ முஆத் பின் ஸூஹ்ரா


↘ நபிகள் நாயகம் என்ற சங்கிலித் தொடரில் மேற்கண்ட ஹதீஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது.


அறிவிப்பாளர் தொடர் சரியாகவே கூறப்பட்டாலும் நபித்தோழர்மட்டும் விடப்பட்டுவிட்டார்.


முஆத் பின் ஸூஹ்ரா என்பவர் நபித்தோழர் அல்ல. அவர் இதை நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறியதை நேரடியாக கேட்டிருக்கவே முடியாது.


ஆனால், நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறியதாக தாபியீன்களைச் சேர்ந்த முஆத் பின் ஸூஹ்ரா கூறுகிறார்.


இத்தகைய தன்மையில் அமைந்த ஹதீஸ்கள் முர்ஸல் எனப்படும்.



சந்தேகமும் தெளிவும்!!


ஒரு ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் நபித்தோழர் மட்டும் விடுபட்டிருந்தால் அதை ஏன் மறுக்க வேண்டும். விடுபட்டவர் நபித்தோழர் தானே? எல்லா நபித்தோழர்களும் நம்பகமானவர்கள் தானே? எனவே நபித்தோழர் யார் எனத் தெரியாவிட்டாலும் ஹதீஸை அறிவித்தவர் நபித்தோழர் எனும் போது அதை மறுப்பது சரியா? என சந்தேகம் வரலாம்.


முர்ஸல் என்றால் அறிவிப்பாளர் தொடரில் விடுபட்டவர் சஹாபி தான் என்று உறுதியாகக் கூற முடியாது. ஒரு ஹதீஸை ஒரு தாபியி நபித்தோழரிடமும் கேட்டிருக்கலாம். தம்மைப் போன்ற ஒரு தாபியிடமும் கேட்டிருக்கலாம். எனவே ஒரு தாபியும் நபித்தோழரும் விடுபட்டிருப்பதற்கும் சாத்தியம் உள்ளது.


விடுபட்ட தாபியி யார்? அவரது நம்பகத்தன்மை எப்படி? என்பதைத் தெரியாத நிலையில் ஒரு ஹதீஸை தாபியீனே நபிகளாரிடமிருந்து அறிவிப்பதாக வரும் செய்தி சந்தேகத்திற்குரியதாகும்.


உனக்கு திட்டவட்டமான அறிவு இல்லாதவற்றைப் பின்பற்றாதே!(17 :36) என்று அல்லாஹ் கூறுவதால் முர்ஸலான ஹதீஸை ஏற்கக் கூடாது.



اَلْمُعْضَلُ – முஃளல்

( தொடர்ச்சியாக இரு

அறிவிப்பாளர்கள் விடுபட்டிருத்தல்)


முஃளல் -விளக்கம்:


ஒரு ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் ஆரம்ப அறிவிப்பாளர் விடுபட்டிருந்தால் அதை முஅல்லக் என அறிந்தோம்.


ஒரு அறிவிப்பாளர் தொடரில் இரண்டு பேரோ அல்லது அதற்கு அதிகமானோரோ தொடர்ச்சியாக விடுபட்டிருந்தால் அதை اَلْمُعْضَلُ – முஃளல் என்று சொல்லப்படும்.


உதாரணத்திற்கு இமாம் ஹாகிம் அவர்கள் தனது மஃரிஃபத்து உலூமில் ஹதீஸ் என்ற நூலில் பதிவு செய்துள்ள ஹதீஸை எடுத்துக் கொள்ளலாம்.


حَدَّثَنِي مَالِك أَنَّهُ بَلَغَهُ أَنَّ أَبَا هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِلْمَمْلُوكِ طَعَامُهُ وَكِسْوَتُهُ بِالْمَعْرُوفِ وَلَا يُكَلَّفُ مِنْ الْعَمَلِ إِلَّا مَا يُطِيقُ .

அடிமைக்கு உணவும் உடையும் நியாயமான முறையில் வழங்கப்படவேண்டும். அவர்களின் சக்திக்கு மீறி சிரமம் அளிக்கக்கூடாது என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். (நூல்: மஃரிஃபத்து உலூமில் ஹதீஸ்)


இந்த ஹதீஸ் முஃளல் வகையைச் சார்ந்ததாகும் என்று இமாம் ஹாகிம் கூறுகிறார்கள்.


ஏனெனில் இந்த செய்தியை இமாம் மாலிக் அவர்கள் அபூஹூரைரா (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கிறார்கள் என்று கஃனபீ என்பவர் சொன்னதாக ஹாகிம் இமாம் பதிவு செய்துள்ளார்கள்.


இந்த ஹதீஸின் முழு அறிவிப்பாளர் தொடர் மாலிக் அவர்களின் முஅத்தா எனும் நூலில் வருகிறது.


இதை முஅத்தா நூலில் உள்ள அறிவிப்பாளர் வரிசையை கவனித்து இமாம் ஹாகிம் அவர்கள் பின் வருமாறு குறிப்பிடுகிறார்கள்:


இமாம் மாலிக் அவர்கள், அபூஹூரைரா(ரலி) அவர்களுடைய காலத்தில் வாழ்ந்தவர் இல்லை.


இந்த இருவருக்கும் இடையே


முஹம்மத் பின் அஜ்லான், அவருடைய தந்தை அஜ்லான் ஆகிய இருவர் விடுபட்டுள்ளனர் என்று இமாம் ஹாகிம் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.


இரண்டு நபர்கள் விடுபட்டு உள்ளதால் இச்செய்தி முஃளல் என்று கூறப்படுகிறது.



முஃளல் வகையைச் சார்ந்த ஹதீஸை ஏற்கலாமா?


முஃளல் வகை ஹதீஸ்களும் பலவீனமானவை தான். மேலும் முர்ஸல், முன்கதிவை விட முஃளல் மோசமானது காரணம் அதிகமான அறிவிப்பாளர்கள் இதில் விடுபடுகின்றனர்.


ஒரு அறிவிப்பாளர் விடுபட்டதையே ஆதாரமாகக் கொள்ளமுடியாது என்றால் தொடர்ச்சியாக இருவர் அல்லது பலர் விடுபட்டிருப்பது அதை விட மோசமானது.


எனவே முஃளலான ஹதீஸ்களும் பலவீனமானதாகும்.


இதனால் தான் முஃளலான ஹதீஸ்கள் நிராகரிக்கப்பட வேண்டும் என்று ஹதீஸ் கலை அறிஞர்கள் ஒன்றுபட்டுக் கூறியுள்ளனர்.



முஃளல் – முஅல்லக் வித்தியாசம்:


1. ஆரம்ப அறிவிப்பாளர் ஒருவர் மட்டும் விடுபட்டிருந்தால் அது முஅல்லக் ஆகும். அதை முஃளல் என்று சொல்லக் கூடாது.

2. ஆரம்ப அறிவிப்பாளர்களில் தொடர்ச்சியாக இரு அறிவிப்பாளர் விடுபட்டிருந்தால் அதை முஅல்லக் என்றும் முஃளல் என்றும் சொல்லலாம்.


இந்த ஒரு விஷயத்தில் முஅல்லக், முஃளல் இரண்டும் ஒன்று போல் இருக்கும்.


உதாரணமாக:


ஒரு ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் முதலாவது அறிவிப்பாளர் அப்துல்லாஹ் பின் ஜுபைர் (ரலி) என்று வைத்துக் கொள்வோம். இரண்டாவது அறிவிப்பாளர் ஸுஃப்யான் என்று வைத்துக் கொள்வோம். இவர்கள் இருவரும் இல்லாமல் ஒரு ஹதீஸின் ஸனத் – அறிவிப்பாளர் சங்கிலித் தொடர் இருக்குமானால் ஆரம்ப அறிவிப்பாளர் விடுபட்டுள்ளதால் இதை முஅல்லக் என்றும், தொடர்ச்சியாக இருவர் விடுபட்டுள்ளதால் முஃளல் என்றும் கூறலாம்.


3- ஒரு ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் நடுவில் உள்ளவர்கள் விடுபட்டிருந்தால் கண்டிப்பாக அது முஃளல் ஆகும்.


உதாரணம்:

அடிமைகள் குறித்த மேற்கண்ட ஹதீஸ்.

ஆரம்ப அறிவிப்பாளர் அபூஹுரைரா (ரலி) ஆவார்கள்.

அதற்கடுத்து மாலிக் இமாம் வந்து விடுகிறார்.


இவர் அபூஹுரைரா காலத்தில் வாழாதவர்.


இவருக்கும் அபூஹுரைரா அவர்களுக்கும் இடையில் இருவர் விடுபட்டுள்ளனர்.


எனவே நடுவில் உள்ள அறிவிப்பாளர்களில் இருவரோ அதற்கு மேற்பட்டவரோ விடுபட்டால் கண்டிப்பாக அது முஃளல் தான். முஅல்லக் என்று சொல்லக் கூடாது.


முஃளல் சம்பந்தமாக எழுதப்பட்டுள்ள நூல்களின் பெயர்:

ஸயீத் இப்னு மன்ஸூர் அவர்கள் எழுதிய கிதாபுஸ் ஸுனன்.

இப்னு அபீ துன்யா அவர்களின் முஅல்லஃபாத்




اَلْمُنْقَطِعُ- (தொடர்பு அறுந்தது)


ஒரு ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் எல்லா அறிவிப்பாளர்களையும் கூறி விட்டு நபித்தோழரை மட்டும் கூறாமல் விட்டிருந்தால் அந்த ஹதீஸ் முர்ஸல் என்பதை பார்த்தோம்.


ஒரு ஹதீஸின் அறிவிப்பாளர் சங்கிலித் தொடரில் ஆரம்ப அறிவிப்பாளர்கள் விடுபட்டிருந்தால் அந்த ஹதீஸ்கள் முஅல்லக் என்பதைப் பார்த்தோம்.


ஒரு அறிவிப்பாளர் தொடரில் இரண்டு பேரோ அல்லது அதற்கு அதிகமானோரோ தொடர்ச்சியாக விடுபட்டிருந்தால் அந்த ஹதீஸ்கள் முஃளல் என்பதை பார்த்தோம்.


இனி முன்கதிஃ என்றால் என்ன என்பதைப் பார்ப்போம்.


முன்கதிஃ என்றால் அறிவிப்பாளர் தொடரில் ஏதாவது ஒரு இடத்தில் ஒரு அறிவிப்பாளர் விடுபட்டிருந்தாலே அது اَلْمُنْقَطِعُ- தொடர்பு அறுந்தது தான் என்று பொதுவாக ஹதீஸ் கலை குறித்த நூலில் குறிப்பிடுகின்றனர்.


அந்த வகையில் முர்ஸல், முஅல்லக், முஃளல் ஆகிய மூன்றையுமே முன்கதிஃ என்று குறிப்பிடலாம் என நாம் அறிந்து கொண்டு வரக் கூடிய நூலின் ஆசிரியர் கூறுகிறார்.


ஆனால் இமாம் இப்னு ஹஜர் போன்றோர் மற்ற மூன்று வகை ஹதீஸ்களிலிருந்து இதை வேறுபடுத்துகின்றனர்.


இந்த மூன்று வகையிலும் அடங்காதது தான் முன்கதிஃ என்று இவர்கள் கூறுகின்றனர்.


எப்படி என்று பார்ப்போம்:


ஒரு ஹதீஸை முன்கதிஃ என்று கூற வேண்டுமானால்

அது,


நபித்தோழர்கள் விடுபட்டதாக (முர்ஸலாக) இருக்கக் கூடாது,


ஆரம்ப அறிவிப்பாளர்கள் விடுபட்டதாக (முஅல்லக்காக) இருக்கக் கூடாது,


தொடர்ச்சியாக இரு அறிவிப்பாளர்கள் விடுபட்டதாக (முஃளலாக) இருக்கக் கூடாது.


மாறாக இடையில் உள்ள அறிவிப்பாளர்கள் ஒருவரோ பலரோ விடுபட்டதாக இருந்தால் அதுவே முன்கதிஃ என்று விளக்கமளிக்கின்றனர். இதுவே சரியானதாகும்.


முன்கதிஃ வகை ஹதீஸ்களுக்கு உதாரணம்:


திர்மிதியில் இடம் பெறும் ஹதீஸ்:


184حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ عَنْ مُعَاوِيَةَ بْنِ يَحْيَى الصَّدَفِيِّ عَنْ الزُّهْرِيِّ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا يُؤَذِّنُ إِلَّا مُتَوَضِّئٌ رواه الترمذي

உளூச்செய்தவரைத் தவிர வேறு எவரும் பாங்கு சொல்லக் கூடாது என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். (நூல் : திர்மிதீ)


இந்த செய்தி திர்மிதி இமாமுக்கு எப்படி கிடைத்தது என்பது கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


அறிவிப்பாளர் தொடர்:


திர்மிதீ

அலீ பின் ஹூஜ்ர்

அல்வலீத் பின் முஸ்லிம்

முஆவியா பின் யஹ்யா

ஸூஹ்ரீ

அபூஹூரைரா(ரலி)

நபிகள் நாயகம்(ஸல்) என்று அறிவிக்கப்படுகிறது.


இதில் ஸுஹ்ரி என்பவர் அபூஹூரைரா (ரலி) அவர்களிடம் எதையும் செவியுற்றதில்லை. அபூஹூரைரா (ரலி) அவர்களிடம் அவர் செவியுறவில்லையானால் அபூஹூரைரா (ரலி) அவர்களிடம் யார் செவியுற்றாரோ, அவரிடமிருந்து இதைச் செவியுற்றிருப்பார். ஆனால், அவரைக் குறிப்பிடவில்லை.


எனவே இங்கு நடுவில் ஒருவர் விடுபட்டுள்ளது தெரிகிறது.


ஆனால் இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையில் விடுபட்டவர் நபித்தோழர் அல்ல. எனவே இது முர்ஸல் அல்ல.


விடுபட்டவர் ஆரம்ப அறிவிப்பாளர் இல்லை. எனவே இது முஅல்லக் அல்ல.


இதில் தொடர்ச்சியாக இரு நபர்கள் விடுபடவில்லை. எனவே இது முஃளலும் அல்ல.


நபித்தோழருக்கும் ஸுஹ்ரி என்பவருக்கும் இடையில் உள்ள ஒரு அறிவிப்பாளர் விடுபட்டுள்ளார்.


இதையே முன்கதிஃ – அறிவிப்பாளர் தொடர் அறுந்தது என்று கூறப்படும்.


விடுபட்டவர் யார் என்று தெரியாத நிலையில் அவர் நல்லவரா? கெட்டவரா என்பது தெரியாது.


எனவே இந்த வகை ஹதீஸ்களும் பலவீனமானது.


மற்றொரு உதாரணம்:


رواه عبد الرزاق، عن الثوري، عن أبي إسحاق، عن زيد بن يثيع، عن حذيفة مرفوعا: “إن وليتموها أبا بكر فقوي أمين”

நீங்கள் அபூபக்கரை பொறுப்பாளராக ஆக்கினால் அவர் உறுதியானவரும் நம்பிக்கையானவருமாவார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக ஹுதைஃபா (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸை இமாம் ஹாகிம் அவர்கள் தனது மஃரிஃபத்து உலூமில் ஹதீஸ் எனும் நூலில் பதிவு செய்துள்ளார்கள்.


மேலும் அஹ்மத், பஸ்ஸார், தபரானி அவ்ஸத் ஆகிய நூல்களிலும் இந்தச் செய்திப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


இதன் அறிவிப்பாளர் தொடர் வருமாறு:


ஹாகிம்

அப்துர்ரஸ்ஸாக்

ஸவ்ரீ

அபூ இஸ்ஹாக்

ஜைத் பின் யுஷய்யஃ

ஹுதைஃபா

(ரலி)

நபிகள் நாயகம் (ஸல்)


இந்த அறிவிப்பாளர் வரிசையில் வரும் ஸவ்ரீ என்பவர் அபூ இஸ்ஹாக் என்பரிடம் எதையும் செவியுற்றதில்லை என அறிவிப்பாளர்களை ஆய்வு செய்து எழுதப்பட்ட நூல்களில் விமர்சனம் உள்ளது.


இதில் விடுபட்டவர் ஷரீக் என்பவர் தான் என்றும் அவர்கள் ஆய்வு செய்து கூறுகின்றனர்.


எனவே இது போல் அறிவிப்பாளர் வரிசையில் இடையில் யாரும் விடுபட்டிருந்தால் அதுவே முன்கதிஃ ஆகும்.



شاذ- محفوظ-

شاذ- அரிதானது


ஒரு ஹதீஸை ஸஹீஹ் என சொல்வதாக இருந்தால் அதில் பின் வரும் ஐந்து விஷயங்கள் அதில் இருக்க வேண்டும் என்பதை ஏற்கனவே அறிந்தோம்.


அந்த ஐந்து விஷயங்கள் என்னவென்றால்…


 اتصال السند

– ஸனத்

என்ற சங்கிலித் தொடர் இணைந்திருக்க வேண்டும்.


عدالة الرواة-

ராவிகளின் நம்பகத்தன்மை (உறுதி செய்யப்பட்டதாக இருக்க வேண்டும்.)


 ضبط الرواة –

அறிவிப்பாளர்களின்

மனனத் தன்மை

பூர்த்தியானதாக

இருக்க வேண்டும்


 شاذ- ஷாத்

இல்லாமல் இருக்க

வேண்டும்.


 علة- இல்லத்தாக

இருக்க கூடாது.


இந்த ஐந்து விஷயங்களும் ஒரு ஹதீஸில் இருந்தால் அதுவே சஹீஹான ஹதீஸாகும்.


மேற்கண்ட ஐந்து நிபந்தனைகளில் ஒன்று ஒரு ஹதீஸ், ஸஹீஹாஹ இருப்பதற்கு அது ஷாத்தாக இருக்கக் கூடாது என்பதும் ஒன்றாகும்.



அந்த ஷாதைப் பற்றி இனி அறிந்து கொள்வோம்.



ஷாத் என்றால் அரிதானது என்பது பொருளாகும்.


ஷாத் என்பதன் விளக்கம்:


ஏற்றுக்கொள்வதற்கு தகுதியான (மக்பூலான), உறுதி வாய்ந்த ஓர் அறிவிப்பாளர் (ثِقَةٌ) , அவரை விட மேலான (நம்பகமான) ஓருவர் அறிவிப்பதற்கு மாற்றமாக அறிவிக்கும் நபிமொழிக்கு ஷாத் என்று சொல்லப்படும்.


அதாவது ஒரு ஆசிரியரிடமிருந்து ஒரு ஹதீஸை பல பேர் கேட்டிருக்க அவர்களில் ஒருவர் மட்டும் அதற்கு மாற்றமாக அறிவித்தால் அது ஷாத் ஆகும்.


அதே போன்று

ஒரு ஹதீஸை ஒரு ஆசிரியரிடமிருந்து கற்ற நம்பகமான அறிவிப்பாளர்களில் பெரும்பான்மையினர் அறிவிப்பதற்கு மாற்றமாக நம்பகமான சிலர் அறிவிக்கும் நபிமொழிக்கு ஷாத் என்று சொல்லப்படும்.


ஷாதான – அரிதான அறிவிப்புக்கு மாற்றமாக அறிவிக்கப்பட்டுள்ள நபிமொழிகளுக்கு மஹ்ஃபூழ் என்று சொல்லப்படும்.


ஷாத் எப்படியெல்லாம் ஏற்படும்?


ஷாத் என்பது மதனில்

(அறிவிக்கப்படும் செய்தியில்) ஏற்படுவதைப் போல அறிவிப்பாளர் தொடரிலும் (ஸனத்) ஏற்படும்.


மத்தனில் வரும் ஷாத்துக்கு உதாரணம்:

ما رواه الترمذي والنسائي وابن ماجه، من طريق ابن عيينة، عن عمرو بن دينار، عن عوسجة، عن ابن عباس، “أن رجلا توفي على عهد رسول الله صلى الله عليه وسلم، ولم يدع وارثا إلا مولى هو

நபி(ஸல்) அவர்கள் காலத்தில் ஒரு நபர் இறந்து விட்டார். அவரால் விடுவிக்கப்பட்ட வாரிசை மட்டுமே அவர் விட்டுச் சென்றார்.


இந்தச் செய்தி இப்னு அப்பாஸ் (ரலி), அவ்ஸஜா, அம்ரு பின் தீனார், இப்னு உயைனா ஆகியோர் வழியாக இப்னுமாஜா, நஸயி, திர்மிதி போன்ற நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.


ஆனால் இதே செய்தியை அறிவிக்கும்

ஹம்மாத் பின் ஸைத் என்பவர் மேற்கண்ட பலர் கூறுவதற்கு மாற்றமாக அவ்ஸஜா, அம்ர் பின் தீனார் வழியாக இச்செய்தியை அறிவிக்கிறார்கள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் பெயரை அவர் குறிப்பிடவில்லை.


ஹம்மாத் பின் ஜைத் என்பவர், நேர்மையானவர், உறுதியான மனனத் தன்மை உடையவர் என்றாலும் நம்பகமான பலர் இந்த செய்தியை இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்ததாக கூறும் போது அந்த செய்திக்கு முரணாக அவரது அறிவிப்பு இருப்பதால் அவர் அறிவிக்கும் செய்தி ஷாத் ஆகும்,


இப்னு உயைனா அறிவிக்கும் செய்தி மஹ்ஃபூள் ஆகும் என்று இமாம் அபூஹாத்தம் கூறுகிறார்கள்.


நம்பகமான பலருக்கு மாற்றமாக நம்பகமான குறைவான எண்ணிக்கை உடையவர்கள் அறிவிக்கும் செய்தியை ஷாத் என்று அறிந்தோம்.


ஆனால் பலர் சொல்லாத ஒரு தகவலை கூடுதலாக ஒருவர் அறிவிப்பது ஷாத் ஆகாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.


மத்தனில் ஷாத் வருவதற்கு உதாரணம்


ما رواه أبو داود والترمذي من حديث عبد الواحد بن زياد، عن الأعمش، عن أبي صالح، عن أبي هريرة مرفوعا: “إذا صلى أحدكم الفجر فليضطجع عن يمينه”

உங்களில் யாரேனும் ஃபஜர் தொழுது விட்டால் அவ்ர் வலது பக்கம் ஒருக்களித்து ஓய்வெடுக்கட்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


அபூஹுரைரா (ரலி), அபூஸாலிஹ், அப்துல் வாஹித் இப்னு ஜியாத் வழியாக அறிவிக்கப்படும் இந்தச் செய்தி அபூதாவூத், திர்மிதி போன்ற நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.


இந்தச் செய்தியை நம்பகமான பலர் அறிவிக்கும் போது நபி (ஸல்) அவர்களின் சொல்லாக இல்லாமல் செயலாக அறிவித்துள்ளனர்.


(அதாவது நபியவர்கள் ஃபஜரின் (சுன்னத்) இரண்டு ரக்அத்களை தொழுததும் வலது புறம் ஒருக்களித்து ஓய்வெடுப்பார்கள் என்று பலர் அறிவிக்கின்றனர்.)


நபியவர்களின் செயலாக பலர் அறிவித்துள்ள இந்தச் செய்தியை அப்துல் வாஹித் என்பவர் மட்டும் நபியின் சொல்லாக அறிவித்துள்ளார் என்று இமாம் பைஹகி கூறுகிறார்கள்.


அப்துல் வாஹித் அவர்கள் அறிவிக்கும் செய்தி (மத்தன்) ஷாத் ஆகும்.


இவருக்கு மாற்றமாக அறிவிக்கும் செய்தி மஹ்ஃபூழ் ஆகும்.


மஹ்ஃபூளை ஏற்றுக் கொள்ள வேண்டும்.


ஷாத் (அரிதாக அறிவிக்கப்படுவதை) ஏற்றுக் கொள்ளக் கூடாது.




اَلْمُنْكَرُ- நிராகரிக்கப்பட்டது:


முன்கர் (நிராகரிக்கப்பட்டது) ஓர் விளக்கம்:



முன்கர் என்றால்:


அதிகமாகத் தவறிழைப்பது,


அதிகமாக அலட்சியம் செய்வது,


பாவம் செய்வது, (மூன்றாவது நான்காவது காரணம்) ஆகிய குறைகள் ஒரு அறிவிப்பாளரிடம் இருந்தால் அப்படிப்பட்ட அறிவிப்பாளர் இடம் பெறுகின்ற ஹதீஸுக்கு முன்கர் – நிராகரிக்கப்பட்டது என்று சொல்லப்படும்.


(மூன்றாவது, நான்காவது காரணம் என்றால் என்ன என்பதைப் பிறகு பார்ப்போம்)


اَلْمُنْكَرُ- நிராகரிக்கப்பட்டது…


முன்கரைப் பார்க்கும் முன்..


அறிவிப்பாளர்களின் நம்பகத்தன்மையில் உள்ள ஐந்து குறைகள் என்னவென்று பார்ப்போம்.


அறிவிப்பாளரின் நம்பகத்தன்மையில் ஏற்படும் குறைகள் என்பது:


❖ அவர் பொய் சொல்லக் கூடியவராக இருப்பார்.

❖ அல்லது பொய் சொல்லக் கூடியவர் என்று சந்தேகிக்கப்படக் கூடியவராக இருப்பார்.

❖ அல்லது பாவியாக இருப்பார்.

❖ அல்லது புதுமையை உருவாக்கக் கூடியவராக இருப்பார்.

❖அல்லது யாரென்று அறியப்படாதவராக இருப்பார்.



இனி மனனம் செய்வதில் உள்ள குறைகளைப் பார்ப்போம்:


அதை ஐந்து வகையாக இமாம் கூறுகிறார்:


❖ ஒன்றைத் தவறுதலாக அறிவிப்பது

❖ அதிகமாக மறந்து விடுவது

❖ அலட்சியமாக இருப்பது

❖ அதிகமாக யூகம் செய்வது

❖நம்பகமானவர்களுக்கு மாற்றமாக அறிவிப்பது.


ஏதோ ஒரு செய்தியை நம்பகமான அறிவிப்பாளருக்கு மாற்றமாக அறிவித்தால் அதை ஷாத் என்போம்.


ஆனால் முன்கரான அறிவிப்பாளர் என்பவர் அவர் அறிவிக்கும் பெரும்பாலான செய்திகள் நம்பகமானவருக்கு மாற்றமாக இருக்கும்.

எனவே இப்படிப்பட்டவர்களின் செய்தியை முன்கர் என்று சொல்லப்படும்.


(மேற்கண்ட ஐந்து காரணங்களில் மூன்றாவது நான்காவது காரணங்கள் யாரிடம் இருக்கிறதோ அவர் அறிவிக்கும் ஹதீஸைத் தான் முன்கர் என சொல்லப்படும் என்பதைத் தான் ஏற்கனவே அறிந்தோம்.)



اَلْمُنْكَرُ- நிராகரிக்கப்பட்டது:


முன்கர் என்பதற்கு பல விளக்கங்களை அறிஞர்கள் கூறியிருந்தாலும் அவற்றில் பிரபல்யமான இரு காரணங்களை ஆசிரியர், முன்கர் என்பதற்கு விளக்கம் என்று கூறுகிறார்.


அதிகமாக தவறிழைப்பது, அலட்சியமாக இருப்பது, பாவம் வெளிப்படுவது ஆகிய ஏதோ ஒரு குறைகள் அறிவிப்பாளர் தொடரில் வருபவரிடம் இருந்தால் அவர் இடம் பெற்ற ஹதீஸை முன்கரான ஹதீஸ் என்று சொல்லப்படும்.


இந்த விளக்கத்தை இமாம் இப்னு ஹஜரும் இன்னும் பல அறிஞர்களும் கூறியிருக்கிறார்கள்.



اَلْمُنْكَرُ- நிராகரிக்கப்பட்டது:


இரண்டாவது விளக்கம்:


நம்பகமான பலருக்கு மாற்றமாக, குறைவான எண்ணிக்கையில் உள்ள நம்பகமானவர்கள் அறிவிக்கும் செய்தியை ஷாத் என்று பார்த்தோம்.


நம்பகமானவருக்கு மாற்றமாக பலவீனமான அறிவிப்பாளர் அறிவிக்கும் ஹதீஸ் முன்கர் ஆகும்.


இந்த விளக்கத்தையும் இமாம் இப்னு ஹஜர் போன்றோர் கூறுகிறார்கள்.


முந்தைய விளக்கத்துக்கும் இந்த விளக்கத்துக்கும் இடையே ஒரு வித்தியாசம் இருப்பதாக இமாம் இப்னு ஹஜர் கூறுகிறார்கள். அந்த வித்தியாசம் இது தான்:

அதிகமாக தவறிழைப்பது, அலட்சியமாக இருப்பது, பாவம் செய்வது ஆகிய ஏதோ ஒரு குறைகள் அறிவிப்பாளர் தொடரில் வருபவரிடம் இருந்தால் அவர் இடம் பெற்ற ஹதீஸை முன்கரான ஹதீஸ் என்று இமாம் இப்னு ஹஜர் கூறினார்கள்.


இந்த விளக்கத்தில் பலவீனமான ஒரு அறிவிப்பாளர் நம்பகமானவருக்கு மாற்றமாக அறிவிப்பது ஷாத்  ஆகும் என்று முந்தைய விளக்கத்தை விட கூடுதலான ஒரு விளக்கத்தை இமாம் இப்னு ஹஜர் கூறியுள்ளார்கள்.


உதாரணமாக:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தக்பீர் கட்டினார்கள் என்று நம்பகமான ஒருவர் அறிவிப்பதற்கு மாற்றமாக நபியவர்கள் தக்பீர் கட்டவில்லை என்று பலவீனமான ஒருவர் அறிவித்தால் அந்தச் செய்தி முன்கரான செய்தியாகும்.



முன்கர்- ஷாத் ஆகிய இரண்டுக்கும் மத்தியில் உள்ள வேறுபாடு:


ஷாத் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட அறிவிப்பாளர் (மக்பூல்) அவரை விட சிறந்தவரான அறிவிப்பாளருக்கு மாற்றமாக ஒரு செய்தியை அறிவிப்பது ஷாத் ஆகும்.


முன்கர் என்பது நம்பகமானவருக்கு மாற்றமாக பலவீனமான அறிவிப்பாளர் அறிவிக்கும் ஹதீஸ் முன்கர் ஆகும்.


ஒரு அறிவிப்பாளர் கூறுவதற்கு முரணாக உள்ளது என்ற ஒரு விஷயத்தில் ஷாத், முன்கர் இரண்டுமே ஒன்றுபட்டுள்ளது.


ஆனால் ஷாத்தான செய்தியில் முரணாக அறிவிப்பவர் நம்பகமானவராக இருப்பார். முன்கரான செய்தியில் முரணாக அறிவிப்பவர் நம்பகமற்றவராக இருப்பார் என்ற வகையில் வித்தியாசமாக உள்ளது.


இந்த இரண்டையும் சமமாகப் பார்ப்பவர் அலட்சியம் செய்து விட்டார் என்று இமாம் இப்னு ஹஜர் கூறுகிறார்கள்.


ஏனெனில்….


ஷாத்தான அறிவிப்பாளருடைய வேறு ஹதீஸ்களை ஏற்றுக் கொள்ளலாம்.


முன்கரான ஒருவர் அறிவிக்கும் எந்த ஹதீஸையும் ஏற்றுக் கொள்ளக் கூடாது.



முதல் விளக்கத்திற்கான உதாரணம்:


பேரிச்சம்பழத்தை காயாக இருக்கும் போது உண்ணுங்கள். ஏனெனில் ஆதமுடைய மகன் அவ்வாறு அதை சாப்பிடும்போது ஷைத்தான் கோபப்படுகிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னதாக ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


இது நஸயி, இப்னுமாஜா ஆகிய நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.


இந்த செய்தி தான் முன்கரான ஹதீஸுக்கு கூறப்படும் இரண்டு விளக்கங்களில் முதலாவது விளக்கத்திற்கான உதாரணம்.


இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடர்:


↪ நபிகள் நாயகம் (ஸல்)

↩ ஆயிஷா (ரலி)

↩ உர்வா

↩ ஹிஷாம் பின் உர்வா

↩ அபூ ஸுகைர் யஹ்யா பின் முஹம்மத் பின் கைஸ்


இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் சங்கிலித் தொடரில் வருகின்ற அபூ ஸுகைர் யஹ்யா பின் முஹம்மத் பின் கைஸ் என்பவர் முன்கர் என்று விமர்சிக்கப்பட்டுள்ளார்.


எனவே இது முன்கரான செய்தியாகும். அதாவது ஏற்றுக்கொள்ள முடியாத பலவீனமான ஹதீஸாகும்.


இவர் இந்த செய்தியைத் தனித்து அறிவிப்பதால் இதை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று இமாம் நஸயி கூறுகிறார்கள்.


அபூ ஸுகைர் யஹ்யா பின் முஹம்மத் பின் கைஸ் என்பவர் குறித்த விமர்சனங்களை பார்ப்போம் இன்ஷாஅல்லாஹ்.


முன்கரான ஹதீஸ் என்றால் என்ன? 


முதல் விளக்கத்திற்கான உதாரணம்:


பேரிச்சம்பழத்தை காயாக இருக்கும் போது உண்ணுங்கள். ஏனெனில் ஆதமுடைய மகன் அவ்வாறு அதை சாப்பிடும்போது ஷைத்தான் கோபப்படுகிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னதாக (மர்ஃபூஃ) ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இது நஸயி, இப்னுமாஜா ஆகிய நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.


இந்த ஹதீஸ் முன்கரான ஹதீஸாகும். எப்படி என்பதைப் பார்ப்போம்.


இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடர்:


 நபிகள் நாயகம் (ஸல்)

➡ ஆயிஷா (ரலி)

➡ உர்வா பின் ஸுபைர் தம் தந்தை ஸுபைர் (ரலி) வழியாக

➡ஹிஷாம் பின் உர்வா

➡அபூ ஸுகைர் யஹ்யா பின் முஹம்மத் பின் கைஸ்


இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் சங்கிலித் தொடரில் வருகின்ற அபூ ஸுகைர் யஹ்யா பின் முஹம்மத் பின் கைஸ் என்பவர் முன்கர் என்று விமர்சிக்கப்பட்டுள்ளார்.


எனவே இது முன்கரான செய்தியாகும். அதாவது ஏற்றுக்கொள்ள முடியாத பலவீனமான ஹதீஸாகும்.


இவரைப் பற்றி வந்துள்ள சில விமர்சனங்கள்:


இவர் பலவீனமானவர் என்று யஹ்யா இப்னு மயீன் கூறியதாக இஸ்ஹாக் இப்னு மன்ஸூர் கூறுகிறார்கள்.


தக்ரீபுத் தஹ்தீப் எனும் நூலில் இவர் ஏனோ தானோ என அறிவிப்பவர் (ஸதூக்) என்றும், அதிகமாக தவறிழைப்பவர் இவர் பலவீனமானவர் என்று இப்னு ஹஜர் கூறுகிறார்கள்.


இவரது ஹதீஸ் பின்பற்றப்படாது என்று இமாம் அகீலீ கூறுகிறார்கள்.


இவர் ஸதூக் (ஏனோ தானோ என அறிவிப்பவர்) யூகம் செய்யக் கூடியவர் என்றும் இவரது ஹதீஸில் பலவீனம் இருக்கிறது என்று இமாம் ஸாஜி கூறுகிறார்கள்.


இவரை இப்னு மயீன் பலவீனமானவர் என்று கூறியிருப்பதாக காஷிஃப் எனும் நூலில் இமாம் தஹபி கூறியுள்ளார்கள்.


இவரைப் பற்றி இப்படிப்பட்ட விமர்சனங்கள் வந்திருப்பதால் இந்த ஹதீஸ் முன்கரான ஹதீஸாகும்.


முன்கரான ஹதீஸ் என்றால் என்ன? 


இரண்டாவது விளக்கத்திற்கான உதாரணம்:


யார் தொழுகையை நிலைநாட்டி, ஜகாத் கொடுத்து, ஆலயத்தில் ஹஜ் செய்து நோன்பு நோற்று விருந்தாளியைக் கண்ணியப்படுத்துகிறாரோ அவர் சுவர்க்கம் செல்வார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள் என இப்னு அபீ ஹாத்திம் பதிவு செய்துள்ளார்கள்.


இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடர்:


 நபிகள் நாயகம் (ஸல்)

➡ இப்னு அப்பாஸ் (ரலி)

➡ அய்ஸார் இப்னு ஹரீஸ்

➡ அபீ இஸ்ஹாக்

➡ ஹுபைப் இப்னு ஹபீப்

➡இப்னு அபீ ஹாத்திம்


இந்த ஹதீஸைப் பதிவு செய்து விட்டு இமாம் இப்னு அபீ ஹாத்திம் அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்.


இந்த ஹதீஸ் முன்கரான ஹதீஸாகும். காரணம் இந்த அறிவிப்பாளர் தொடரில் வரும்.


ஹுபைப் இப்னு ஹபீப் என்பவர் பலவீனமானவர்.

இவர் அல்லாத உறுதியான பலர் (ஸிகத்) இந்த ஹதீஸை அபூ இஸ்ஹாக் வழியாக மவ்கூஃபாகவே (நபித்தோழர் கூறியதாக) அறிவித்துள்ளார்கள்.


அதற்கு மாற்றமாக இவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவித்திருப்பதால் இவர் அறிவிக்கும் இந்த அறிவிப்பு முன்கராகும்.


இவருக்கு மாற்றமாக உறுதியானவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் மஃரூஃபாகும். (அறியப்பட்டதாகும்)


முன்கரான ஹதீஸுக்கு மாற்றமான (மஃரூஃப்) ஹதீஸ் மர்ஃபூவாக (நபிகளார் கூறியதாக) இருந்தால் அதை நாம் ஏற்றுக் கொள்ளலாம்.


ஆனால் மேற்கண்ட ஹதீஸ் நபிகள் நாயகம் (ஸல்) அவர்க்ளின் கூற்று அல்ல, நபித்தோழரின் கூற்று என்பதால் இந்த செய்தியை நாம் ஏற்றுக் கொள்ளக் கூடாது.



மஃரூஃப் என்றால் என்ன?


ஒரு (ஸிகத்) நம்பகமான அறிவிப்பாளர் எதனை அறிவிக்கிறாரோ அந்த ஒரு செய்தி என்பது பலகீனமானவர் அறிவிப்பதற்கு மாற்றமாக இருக்கும்.


இதற்கு உதாரணமாக “முன்கர்”-இன் இரண்டாவது உதாரணத்தை எடுத்துக் கொள்ளலாம்.


” யார் தொழுகையை நிலைநாட்டி, ஜகாத் கொடுத்து, நோன்பு நோற்று, ஆலயத்தில் ஹஜ் செய்து விருந்தாளியை கண்ணியப்படுத்துகிறாரோ அவர் சுவர்கம் செல்வார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ” என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள் என இப்னு அலீ ஹாத்திம் பதிவு செய்துள்ளார்.


இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடர்:


நபி (ஸல்)அவர்கள்,

இப்னு அப்பாஸ் (ரலி),

அய்ஸார் இப்னு ஹரீஸ்,

அடி இஸ்ஹாக்,

ஹுபைப் இப்னு ஹபீப்,

இப்னு அபீ ஹாத்திம்.


இது முன்கரான ஹதீஸ் என்பதை முன்பு கண்டோம். ஹுபைப் இப்னு ஹபீப் அல்லாத மற்ற நம்பகமான அறிவிப்பாளர்கள் கூறுவதாவது, இந்த செய்தி அபூ இஸ்ஹாக் வழியாக வந்ததாகவும், இது மவ்கூஃப் (ஸஹாபியின் கருத்து/கூற்று) எனவும் அறிவிக்கிறார்கள்.


இந்த ஸிக்கத்தான் (நம்பகமான) அறிவிப்பாளர்கள் பதிவு செய்த கூற்று மஃரூஃப் ஆகும் என இமாம் குறிப்பிடுகிறார்.


எனவே, இது இப்னு அப்பாஸ்(ரலி) என்ற ஸஹாபியின் கருத்தே ஆகும். இது நபி (ஸல்) அவர்கள் கூறியது அல்ல. எனவே இதனை நாம் பின்பற்றமாட்டோம்.



முதல்லஸ் (தத்லீஸ்):


தத்லீஸ் (முதல்லஸ்) என்றால் என்ன?


தத்லீஸ் என்றால் இருட்டடிப்பு செய்யப்பட்டது என்பதாகும். அதாவது, ஒரு ஸனதில் உள்ள குறையை மறைத்து, வெளிப்படையாக அதை அழகுற செய்வதாகும்.


இங்கு அறிந்துக்கொள்ள வேண்டிய சொற்கள்:-


இஹ்ஃபா – மறைப்பது

அஈப் – குறை

தஹ்ஸீன் – அழகு படுத்துதல்

ளாஹிர் – வெளிப்படையானது.


தத்லீஸின் வகைகள்: (اقسام التدليس)

தத்லீஸ் இரண்டு தலையாய பிரிவுகள் உள்ளன.


அவை:

1. தத்லீஸுல் இஸ்நாதி – ஸனதில் உள்ளிருட்டடிப்பு ,

2. தத்லீஸுல் ஷுயூஹி – ஆசிரியர் விஷயத்தில் உள்ள இருட்டடிப்பு.



தத்லீஸுல் இஸ்நாதி – ஸனதில் உள்ள இருட்டடிப்பு:


ஹதீஸ்கலை அறிஞர்கள், ‘ஸனதில் உள்ள இருட்டடிப்பு’க்கு பல்வேறு தஃரீப்களை தொகுத்துள்ளார்கள். அவற்றில் சிறந்ததையும், மிகச்சரியானதையும் ஆசிரியர் தேர்வு செய்திருக்கிறார். அவை இமாம் அபூ அஹமத் இப்னு அம்ரில் பஸ்ஸார் மற்றும் அபூ ஹஸன் இப்னு கத்தார் ஆகிய இருவரின் தஃரீஃப் ஆகும். 


அது கீழ்கண்டவாறு:

”ஒரு அறிவிப்பாளர் (ராவி) தனது ஆசிரியரிடம் இருந்து எதை கேட்டாரோ, அதை குறிப்பிடாமல், அவரிடம் இருந்து கேட்காத ஒன்றை கேட்டதாக அந்த ஆசிரியர் வழியாகவே அறிவிப்பதாகும்.


உதாரணம்:

குறிப்பு -> ஹதீஸ்கலையில் ஒரு ஆசிரியருக்கு பல மாணவர்கள் இருக்கலாம். அதே போல் ஒரு மாணவருக்கு பல ஆசிரியர்கள் இருக்கலாம்.


யஹ்யா – முதல் ஆசிரியர்

இஸ்மாயில் – மாணவர்

ஸுஹ்ரியா – இரண்டாம் ஆசிரியர்


மேற்கூறப்பட்டுள்ள பெயர்கள் யாவும் உதாரணத்திற்காக மட்டுமே.


இஸ்மாயில் என்ற மாணவர் ஒரு ஹதீஸை இருட்டடிப்பு (தத்லீஸ்) செய்ய வேண்டும் என எண்ணுகிறார். அவர் இருட்டடிப்பு செய்ய விரும்பும் ஹதீஸை யஹ்யா என்ற ஆசிரியரிடம் இருந்து கேட்டிருக்க மாட்டார். மாறாக ஸுஹ்ரியா என்ற ஆசிரியரிடம் இருந்து கேட்டிருப்பார்.


ஆனால் ஸுஹ்ரியா பெயரை விட்டுவிட்டு, “கால” அல்லது “அன்” போன்ற வார்த்தைகளை உபயோகப்படுத்தி யஹ்யாவிடம் இருந்து கேட்டதாக அவர் மாற்றிவிடுவார். [” கால”/”அன்” என்றால் கேட்பதற்கும் கேட்காமல் இருப்பதற்கும் சாத்தியப்படக்கூடிய ஒரு வார்த்தை.]


இந்த இஸ்மாயில் என்ற மாணவர் “ஸமிஅது”, ” ஹத்தஸ்” போன்ற வார்த்தைகளை அந்த ஹதீஸில் பயன்படுத்த மாட்டார். அவ்வாறு பயன் படுத்தினால், ஆசிரியரை மாற்றிய காரணத்திற்காக அந்த மாணவர் பொய்யராக ஆகிவிடுவார்.


மேலும், இந்த மாணவர் (அறிவிப்பாளர்) ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஆசிரியர்களின் பெயர்களை போக்கிவிடுவார் (நீக்கிவிடுவார்).


எனவே, (ராவி) அறிவிப்பாளர் அல்லாத ஒருவர் இப்படிப்பட்ட ஹதீஸை படிக்கும் பொழுது அவர் அதனை உண்மை எனவே நம்புவார்.



(معنعن)- முஅன்னன் என்றால் என்ன?


அறிவிப்புகளில் முன்னன் (معنعن) மற்றும் முவன்னன் (مٶنن) என இருவகை உள்ளது. நாம் இங்கு முஅன்னன் (معنعن) என்பதை பற்றி மட்டும் விரிவாகக் காண்போம்.


முஅன்னன் (معنعن):


ஒரு ராவி, “இன்னர் வழியாக இந்த செய்தி வந்தது” என்று அறிவிப்பதாகும். அதாவது, ஸுஹ்ரி அன் உயய்னா என்றால் ஸுஹ்ரி வழியாக இந்த செய்தியை உயய்னா அறிவித்தார் என்று பொருள்.


உதாரணம்:

இப்னு மாஜாவில் வரும் ஒரு உதாரணத்தைக் காணலாம். ”அல்லாஹ்வும் மலக்குமார்களும் ஸஃப்பில் வலது புறம் இருப்பவர்களை புகழ்கின்றனர்” என்று நபி (ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்.


(இந்த ஹதீஸ் ஸஹீஹா அல்லது லயீஃபா என்பதை நாம் இங்கு விவாதிக்கவில்லை. உதாரணத்திற்கு மட்டும் இதனை எடுத்துக்கொள்வோம்.)


ஸனது வரிசை:


நபி (ஸல்) அவர்கள்

ஆயிஷா (ரலி)

உர்வா

உஸ்மான் இப்னு உர்வா

உஸாமா இப்னு ஸயித்

ஸுஃப்யான்

முஆவியா இப்னு ஹிஷாம்

உஸ்மான் இப்னு அபீ ஷயிபா


அல்லாஹ்வும் மலக்குமார்களும் கூறும் செய்தியை நபி (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) வழியாக, உர்வா வழியாக, உஸ்மான் வழியாக, உஸாமா இப்னு ஸயித் வழியாக, ஸுஃப்யான் வழியாக, முஆவியா வழியாக, உஸ்மான் இப்னு அபீ ஷயிபா அறிவித்தார் என்று இப்னுமாஜா கூறுகின்றார். மேலும் இவ்வாறு ”அன்” போட்டு அறிவிக்கும் செய்தி முத்தஸிலா அல்லது முன்கதியா என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது.


முத்தஸில் – ஸனது சேர்த்து வரும்; அறிவிப்பாளர் விடுபடவில்லை.


முன்கதி – ஸனது விடுபட்டிருக்கும்; அறிவிப்பாளர் விடுபட்டிருப்பார்.



கருத்து வேறுபாடு:


ஒரு செய்தியை ”அன்” பயன்படுத்தி அறிவித்தால், அந்த செய்தியை அந்த ராவி, தனது ஆசிரியரிடம் இருந்து நேரடியாக கேட்டு அறிந்தாரா அல்லது வேறு ஆசிரியரிடம் இருந்து கேட்டரிந்தாரா என்பது தெரியாது. இடையில் ஏதேனும் ஆசிரியர் விடிபட்டிருக்கவும் வாய்ப்புள்ளது. எனவே இவ்வகை செய்திகளை முத்தஸில் எனக்கூறுவதா அல்லது முன்கதி என கூறுவதா என்பதில் அறிஞர்களுக்கிடையில் கருத்து வேறுபாடு நிலவியது. ஆகவே, ஒரு அறிவிப்பில் ஸனது வரிசை விடுபடவில்லை என்பது தெளிவாக தெரிந்தால் மட்டுமே அதனை முத்தஸில் என கூறலாம். மேலும் அதை நாம் பின்பற்ற வேண்டும்.



நிபந்தனைகள்:


பல அறிஞர்களும் ஹதீஸ்கலை வல்லுனர்களும் ஒரு விஷயத்தில் ஒன்றுபட்ட கருத்து வைத்திருந்தனர். அதாவது, ஒரு செய்தியை முத்தஸில் என்று கூறவேண்டுமெனில் அது இரண்டு நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.


அவை:


1. அந்த செய்தியை அறிவிக்கும் ராவி தத்லீஸ் செய்பவராக இருக்கக் கூடாது.

2. ஸனது வரிசையில் வரும் ஒருவர் மற்றவரை சந்திக்க வாய்ப்பு இருக்க வேண்டும்.


அதாவது, மேற்கூறப்பட்ட ஸனது வரிசையில் ஆயிஷா(ரலி) வழியாக உர்வா அறிவித்தார் என்று வந்துள்ளது. எனவே, ஆயிஷா (ரலி)-ம் உர்வாவும் ஒரே காலகட்டத்தில் வாழ்ந்தால் மட்டுமே அவர்கள் சந்திக்க வாய்ப்புள்ளது. இந்த நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டால் முஅன்னன் (معنعن) வகை செய்தியை முத்தஸில் எனக் கூறலாம்.


முதல்லஸ் (தத்லீஸ்):


முதத்லீஸ் (முதல்லஸ்) என்பதன் விளக்கத்தை முன்பு பார்த்தோம். மீண்டும் ஒரு எடுத்துக்காட்டுடன் அதனைக் காணலாம்..


தத்லீஸ் இஸ்நாதி என்றால் ” ஒரு அறிவிப்பாளர் தன் ஆசிரியரிடம் இருந்து பல்வேறு செய்திகளை செவியுற்றிருப்பார். எந்த ஹதீஸை அவர் தத்லீஸ் செய்ய நினைக்கிறாரோ, அந்த ஹதீஸை அவர் வேறு ஒரு ஆசிரியரிடம் இருந்து கேட்டிருப்பார், தனது ஆசிரியரிடம் இருந்து இவர் கேட்டிருக்க மாட்டார். ஆனால், தனக்கு ஹதீஸை அறிவித்த உண்மையான ஆசிரியரின் பெயரை இவர் விட்டுவிடுவார். மேலும், அதில் ”கால” (قَالَ) மற்றும் ”அன்” (عَن) போன்ற வார்த்தைகளை அவர் உபயோகிப்பார்.


(ஆசிரியர் பெயரை விடுவித்த காரணத்தால்) இவர் பொய்யராக ஆகிவிடக்கூடாது என்பதற்காக ”ஸமிஅது ஹத்தஸனி” (سمعت حدثن) என்ற வார்த்தையை அவர் உபயோகிக்க மாட்டார். பிறகு, அந்த ”ஸனதில்” இருந்து அவர் (ஆசிரியர்) ஒருவரையோ அல்லது இருவரையோ நீக்கிவிடுவார்.


(سمعت حدثن)

ஸமிஅது ஹத்தஸனி – என்றால் ஆசிரியரிடம் நேரில் கேட்டு தெரிந்தது போன்றாகும்.


(قال/عن)

கால அன் – என்றால் அந்த ஆசிரியர் வழியாக வந்தது போன்றதாகும்.


உதாரணம் 1:


அதாவது காந்தியடிகள் நம் முன்னோர்களிடம் சில விஷயங்களை எடுத்து வைத்துள்ளார். நம் முன்னோர் வாயிலாக புத்தகத்தில் இடம்பெற்று, நமக்கு நம் ஆசிரியர் விளக்குகிறார். ஆனால் நம் ஆசிரியர் விளக்கும்போது “காந்தி இப்படி கூறினார்; அப்படி கூறானார்” என்று எடுத்துரைப்பார். இடையில் உள்ள முன்னோர்களை விட்டுவிடுவார்.காந்தி கூறினார் என்பது உண்மை ஆனால் யாரிடம் கூறினார் என்பது இங்கு விடுபட்டுவிட்டது.


உதாரணம் 2:


ஸுஹ்ரி -Zuhri (ஷேக் – ஆசிரியர்)

மஃமூன்

அப்துல் ரஸ்ஸாக்

அலி இப்னு உயய்னா (தத்லீஸ் செய்த ராவி)

இமாம் அலி இப்னு ஹஷ்ரம்


அலி இப்னு உயய்னா என்பவரின் ஸனதை இமாம் ஹாக்கிம் அறிவிக்கின்றார். இமாம் அலி இப்னு ஹஷ்ரம் கூறினார்:

”ஸுஹ்ரி வழியாக அலி இப்னு உயய்னா எங்களுக்கு இந்த செய்தியை கூறினார்”.


பிறகு அலி இப்னு உயய்னாவிடம் கேட்கப்படுகிறது:


”நீங்கள் இந்த செய்தியை ஸுஹ்ரியிடம் இருந்து கேட்பீர்களா?” என்று.


அதற்கு அலி இப்னு உயய்னா கூறினார்: ”நான் இந்த செய்தியை ஸுஹ்ரியிடம் இருந்தும் கேட்கவில்லை; ஸுஹ்ரி யாரிடம் கூறினாரோ அவரிடம் இருந்தும் நான் கேட்கவில்லை. ஸுஹ்ரி மஃமூனிடம் அறிவித்தார்; மஃமூன் – அப்துல் ரஸ்ஸாகிற்கு அறிவித்தார்; அப்துல் ரஸ்ஸாக் தான் எனக்கு அறிவித்தார்”.


அதாவது, இங்கு அலி இப்னு உயய்னா என்பவர் தத்லீஸ் செய்துவிட்டார். மஃமூன் மற்றும் அப்துல் ரஸ்ஸாக் ஆகிய ஆசிரியர்களின் பெயர்களை விட்டுவிட்டு, இமாம் ஸுஹ்ரி வழியாக இந்த செய்தி வந்தது என்று கூறிவிட்டார். இமாம் ஸுஹ்ரி கூறியது உண்மையாக இருந்தாலும் யார் வழியாக இந்த விஷயம் வந்தது என்பது இங்கு மறைக்கப்பட்டுவிட்டது. அலி இப்னு உயய்னா அதை மறுத்துவிட்டார். அதாவது “இமாம் ஸுஹ்ரி அன்ஹு” என்றால் ஸுஹ்ரி வழியாக வந்தது என்பதாகும்.


ஆகவே இது தத்லீஸ் செய்யப்படுள்ளது. இது தத்லீஸ் இஸ்நாதி



முத்ரஜ்:


முத்ரஜ் என்றால் இடைச்சருகல்.


விளக்கம்:

எந்த ஒரு ஸனதின் உரைநடை மாற்றப்படுகிறதோ அது முத்ரஜ் ஆகும் (அல்லது) அந்த மத்தனியே இல்லாத ஒன்றை நுழையச்செய்வதாகும்.


ஸனது – சங்கிலித்தொடர்

மத்தன் – செய்தி


பிரிவுகள்: (الاقسام)

முத்ரஜ் என்பது இரண்டு வகைப்படும்.


1. முத்ரஜுல் இஸ்நாதி – ஸனதில் ஏற்படக்கூடியது.

2. முத்ரஜுல் மத்தனி – மத்னில் ஏற்படக்கூடியது.


முத்ரஜுல் இஸ்நாதி:


ஒரு ஸனதின் உரைநடைப் போக்கு மாற்றப்பட்டால் அது முத்ரஜுல் இஸ்நாதி. இதன் வகையை உதாரணத்துடன் காண்போம்.


ஒரு அறிவிப்பாளர் ஒரு ஸனதைக் கூறிக் கொண்டு இருப்பார். அப்பொழுது எவரேனும் ஒருவர் இடையில் குறுக்கிடுவார். அப்பொழுது அந்த அறிவிப்பாளர் குறிக்கிடும் அந்த மனிதரிடம் ஏதேனும் ஒரு வாசகத்தைக் கூறுவார். இதனை செவியுறக்கூடிய சிலர் இந்த வாசகம் தான் அந்த ஸனதில் செய்தி (மத்தன்) என்று எண்ணிவிடுகிறார். பிறகு அதை அந்த அறிவிப்பாளர் வழியாக அறிவித்தும் விடுகிறார்.


உதாரணம்:

ஸாபித் இப்னு மூஸா தன்னுடைய அறிவிப்பில் கூறிய ஒரு செய்தி: ”எவருடைய தொழுகை இரவில் அதிகமாக உள்ளதோ அவருடைய முகம் பகலிலே பிரகாசமாக இருக்கும்.”


இந்த வசனத்தின் உண்மையான தோற்றம்:


ஷரீக் இப்னு அப்துல்லா என்ற ஆசிரியர் தனது மாணவர்களுக்கு வகுப்பிலே ஒரு ஸனதை கூறிக்கொண்டு இருக்கிறார்.


ஸனது வரிசை:


நபி(ஸல்) அவர்கள்

ஜாபிர்

அபூ ஸுஃப்யான்

அஃமஷ்


இந்த ஸனது வரிசையை கூறிவிட்டு அவர் செய்தியை கூறுவதற்கு முன்பு, ஸாபித் இப்னு மூஸா என்பவர் அந்த வகுப்பிற்கு வருகிறார். ஸாபித் என்பவர் அதிகமாக இரவு தொழுகை தொழும் வழக்கம் கொண்டவர். எனவே ஷரீக் இப்னு அப்துல்லா இவர் மீது நல்லெண்ணம் கொண்டிள்ளார். அந்த நல்லெண்ணம் காரணமாக ஸாபித் அவர்களைப் பார்த்து ஷரீக் கூறுகிறார். ”எவருடைய தொழுகை இரவில் அதிகமாக உள்ளதோ அவருடைய முகம் பகலிலே பிரகாசமாக இருக்கும்.” இது ஸாபித்தை பார்த்து ஷரீக் கூறிய வார்த்தைகள். ஆனால் ஸாபித் அவர்கள் இது மேற்கண்ட ஸனது வரிசையின் செய்தி (ஹதீஸ்) என்று எண்ணிவிட்டார். மேலும், அதனை ஷரீக் வழியாக வந்த செய்தி என்று அறிவித்தும் விட்டார். (இது இப்னுமாஜாவில் இடம்பெற்றுள்ளது).


ஆனால் ஹதீஸ்கலை வல்லுனர்கள் இதனை ஆராய்ந்து உண்மையைக் கண்டறிந்தனர். ஸனது வரிசையில் வரும் அறிவிப்பாளர்கள் அனைவரும் உத்மையானவர்களாக இருந்தாலும், அந்த ஸனதின் செய்தி இது அல்ல என்ற உண்மையை ஹதீஸ்கலை வல்லுனர்கள் விளக்கியுள்ளனர்.



முத்ரஜுல் மத்தன்:


ஒரு ஹதீஸின் வாசகத்தில், அந்த ஹதீஸில் இல்லாத ஒரு வார்த்தை (எந்த ஒரு பிரிவுமின்றி) நுழைக்கப்படுமானால் அது முத்ரஜுல் மத்தன். அதாவது, நுழைக்கப்படும் அந்த வார்த்தை இந்த ஹதீஸிற்கு சம்பந்தம் இல்லாதது என்று கூறிவிட முடியாது.


வகைகள்:


இது மூன்று வகைப்படும்.


1.ஹதீஸின் ஆரம்பத்தில் ஏற்படும் இடைச்சருகல் – இது குறைவாகவே ஏற்படும்.

2. ஹதீஸின் இடையில் ஏற்படும் இடைச்சருகல் – இது மிகக் குறைவானது. ஆரம்பத்தில் வரும் முத்ரஜ் விட குறைவாகவே நடக்கும்.

3. ஹதீஸின் இறுதியில் ஏற்படும் இடைச்சருகல் – இது மிக அதிகமாக நடக்கக்கூடியது.



ஹதீஸின் ஆரம்பத்தில் வரும் முத்ரஜ் - முதலாம் வகை:


ஒரு அறிவிப்பாளர் ஏதேனும் ஒரு விஷயத்தை/வார்த்தையை கூறுவார். அதற்கு ஆதாரமாக ஒரு ஹதீஸை எடுத்துரைப்பார். அந்த ஹதீஸுடன் தனது சொந்த கருத்தையும் எடுத்துரைப்பார். ஆனால் கேட்பதற்கு எது ஹதீஸ், எது அவரின் சொந்த கருத்து என்று பிரித்துப் பார்க்க இயலாது. அறிவிப்பாளரின் சொந்த கருத்தும் ஹதீஸ் தான் என்று எண்ணிவிடுவார்.


உதாரணம்:


ஹதீஸின் ஸனது ⬇


அபுஹுரைரா (ரலி)

முஹம்மத் இப்னு ஸியாத்

ஷுஃபா

அபுல் கதம் + ஷபாபா

ஹதீப்


இந்த ஸனது வரிசையின்படி வரும் செய்தியானது;

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “உளூவை பூர்ணமாகச் செய்யுல்கள். உளூவை முழுமையாக செய்யாத இந்த குதிகால்களை நரகம் தீண்டட்டும்”.


இதனை அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள். இமாம் புஹாரியால் பதிவு செய்யப்பட்டது.


இங்கு ” உளூவை பூர்ணமாகச் செய்யுங்கள்” என்ற வசனம் அபூ ஹுரைரா (ரலி) அவர்களின் சொந்த கருத்து தான். இது நபி (ஸல்) அவர்கள் கூறியது அல்ல. ஒரு சம்பவம் நடக்கிறது; அதற்கு அபூ ஹுரைரா (ரலி) தனது சொந்த கருத்தைக் கூறிவிட்டு அதன் பிறகு ஒரு ஹதீஸையும் கூறியிருக்கிறார். ஆனால் இதனைக் கேட்டார்கள் “உளூவை பூரணமாகச் செய்யுங்கள்” என்பதும் ஹதீஸ்தான் என்று எண்ணி விட்டார். இது இடைச்சருகல் (முத்ரஜ்). இது மற்றொரு ஸனது வழியாக தெளிவாக்கப் பட்டுள்ளது.


அபூ ஹுரைரா (ரலி)

முகம்மத் இப்னு ஸியாத்

ஷுஃபா

ஆதம்

புஹாரி


ஆதம் அவர்களின் வழியாக வரும் ஹதீஸில்:

அபுல் காஸிம் [நபி (ஸல்)] அவர்கள் கூறினார்கள், “உளூவை முழுமையாக செய்யாத இந்த குதிகால்களை நரகம் தீண்டட்டும்”. என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


மேற்கூறப்பட்ட இரண்டு அறிவிப்புகளும் அபூஹுரைரா (ரலி) அவர்களின் வழியாகவே வந்துள்ளது. ஆதம் அவர்களின் அறிவிப்பில், ஹதீஸ் எது, அபு ஹுரைரா (ரலி) அவர்களின் கருத்து எது என்பது தனித்தனியாக விவரிக்கப்பட்டுள்ளது. ஆனால் அபுல் கதம் மற்றும் ஷபாபா அவர்களின் அறிவிப்பில், அபூஹுரைரா (ரலி) அவர்களின் சொந்தக் கருத்தையும் சேர்த்து ஹதீஸாக அறிவித்துவிட்டனர். அதனை பிரித்துக் கூறவில்லை. இதுவே ஹதீஸின் ஆரம்பத்தில் வரும் முத்ரஜ் ஆகும்.


முத்ரஜுல் மத்தன் – இரண்டாம் வகை:


ஹதீஸின் இடையில் ஏற்படும் இடைச்சருகல்


பொதுவாக தமிழ், ஆங்கிலம் போன்ற மொழிகளில் ஒரு வார்த்தைக்கு பல விளக்கங்கள் உண்டு. அதனை அகராதியில் விளக்கியிருப்பார்கள். அதேபோல, அரபு மொழியிலும் சில அரிதான வார்த்தைகளுக்கு விளக்கங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.


ஆனால், இந்த விளக்கங்களை தனியாக விளக்காமல், அறிவிப்பாளர்கள் ஹதீஸுடன் சேர்த்து விளக்கிவிடுகிறார்கள்/ கூறிவிடுகிறார்கள்.


எனவே, அது ஹதீஸில் ஒரு வார்த்தை போல் ஆகிவிடும். இதுவே ஹதீஸின் இடையில் ஏற்படும் இடைச்சருகல்.


உதாரணம்:

(வஹி) இறைச்செய்தியின் ஆரம்பம் என்ற தலைப்பிலன் கீழ் ஆயிஷா (ரலி) அறிவிப்பது:

وَكَانَ يَخْلُو بِغَارِ حِرَاءٍ فَيَتَحَنَّثُ فِيهِ ـ وَهُوَ التَّعَبُّدُ ـ


இதன் விளக்கமாவது, நபி (ஸல்) அவர்கள் பல இரவுகள் ஹிரா குகையில் வணக்க வழிபாடுகளில் ஈடுபடக் கூடியவராக இருந்தார்கள்.


விளக்கம்:

இங்கு فَيَتَحَنَّثُ என்ற வார்த்தையின் அர்த்தம் وَهُوَ التَّعَبُّدُ (வணக்க வழிபாடு) என்பதாகும். ஆனால் இந்த வார்த்தை ஹதீஸில் உள்ளதல்ல. இது இமாம் ஸுஹ்ரி அவர்களின் வார்த்தையாகும். فَيَتَحَنَّثُ என்ற வார்த்தையின் விளக்கத்தை அவர் ஹதீஸின் இடையில் அறிவித்துள்ளார். எனவே, இது ஹதீஸின் இடையில் ஏற்படும் இடைச்சருகல்.


முத்ரஜுல் மத்தன் – மூன்றாம் வகை:


ஹதீஸின் இறுதியில் ஏற்படும் இடைச்சருகல்:


உதாரணம்:

: قَالَ أَبُو هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ” لِلْعَبْدِ الْمَمْلُوكِ الصَّالِحِ أَجْرَانِ “. وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، لَوْلَا الْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ، وَالْحَجُّ، وَبِرُّ أُمِّي، لَأَحْبَبْتُ أَنْ أَمُوتَ وَأَنَا مَمْلُوكٌ.

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அறிவிப்பது:

ஒரு ஸாலிஹான அடிமைக்கு இரண்டு கூலிகள் உள்ளன. என்னுடைய உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது சத்தியமாக, அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத்தும், ஹஜ்ஜும், என்னுடைய தாய்க்கு பணிவிடை செய்வதும் எனக்கு கடமையாக இல்லாது இருந்தால், நான் ஒரு அடிமையாக இருக்கும் நிலையிலேயே மரணிக்க வேண்டுகிறேன்.


விளக்கம்:

மேற்கூறிய உதாரணத்தில் ”ஒரு ஸாலிஹான அடிமைக்கு இரண்டு கூலிகள் உள்ளன” என்பது மட்டும் தான் ஹதீஸ்; அதாவது நபி (ஸல்) அவர்கள் கூறிய வார்த்தைகள். அதன்பின் வருவபை அனைத்தும், அதாவது ”என்னுடைய உயிர்…” என்பது வரை உள்ள வார்த்தைகள் அனைத்தும் அபூ ஹுரைரா (ரலி) அவர்களின் வார்த்தைகளாகும். ஹதீஸை கூறிவிட்டு, அப்படியே தன்னுடைய எண்ணத்தையும் கூறியதால், அதுவும் ஹதீஸ் போல ஆகிவிட்டது. ஏனெனில், இப்படி ஒரு வார்த்தையை நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்க வாய்ப்பில்லை என அறிஞர்கள் தெளிவுபடுத்துகிறார்கள். ஏனென்றால், மேற்கூறிய வசனங்களில் ”தாய்க்கு பணிவிடை செய்வதும்” என்ற வசனம் இடம் பெற்றுள்ளது.

நபி (ஸல்) அவர்களின் தாய் ஆமினா, நபி (ஸல்) அவர்களின் சிறு பருவத்திலேயே இறந்துவிட்டார். இவ்வாறு இருக்க, தாய்க்கு பணிவிடை செய்யும் வாய்ப்பு நபி (ஸல்) அவர்களுக்கு கிடைக்கவில்லை. ஆகவே, இவை அபூஹுரைரா (ரலி) அவர்களின் வார்த்தைகள் தான் என்பது தெளிவாகிறது. எனவே, இது இறுதியில் ஏற்படும் இடைச்சருகல்.



தவாஅல் இத்ராஜி – முத்ரஜின் காரணங்கள்:


ஹதீஸில் இடைச்சருகல் எதனால் ஏற்படுகிறது அவை கீழ்கண்டவாறு (பிரபலமான காரணங்கள் மட்டும்):


1.ஷரீஅத்தின் சட்டத்தை விளக்குவதற்காக (பயானு ஹுக்மி ஷரீஇ):


உதாரணம்:


நபி(ஸல்) அவர்கள் கூறியதாவது:

وَيْلٌ لِلأَعْقَابِ مِنَ النَّارِ

“குதிகால்களை நரகம் தீண்டட்டும்”.


விளக்கம்:

அதாவது ஸஹாபாக்கள் உளூ செய்யும் பொழுது குதிகால்களை சரியாக கழுவாத நிலையில் இதனை நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள். ஆனால் பின்னாளில் இதனை அறிவிக்கும் நிலையில் இதனுடைய முழுபொருளும் மக்களுக்கு விளங்காது. எனவே, இதனை தெளிவு படுத்தும் பொருட்டு.

قَالَ أَسْبِغُوا الْوُضُوءَ-

உளூவை பூரணமாக செய்யுங்கள் என்ற வார்த்தையை சேர்த்துள்ளார்கள். எனவே, ” உளூ செய்யும் பொழுது குதிகால்களை சரியாக கழுவவில்லை என்றால், அதனை நரகம் தீண்டட்டும்” என்று இந்த ஹதீஸ் மக்களுக்கு விளங்குகிறது.


ஆகவே, மக்கள் விளங்குவதற்காக ஷரீஅத்தின் சட்டத்தை தெளிவுபடுத்த இடைச்சருகலை சேர்த்துள்ளனர்.


2. ஹதீஸ் முடிவதற்கு முன்பாகவே ஹதீஸின் சட்டத்தை கிரகிப்பது:


அதாவது, ஒரு ஹதீஸ் முடிவதற்கு முன்பே, அது மக்களுக்கு புரிந்துவிட வேண்டும் என்பதற்காக இடைச்சருகலை சேர்ப்பது/செய்வது.


3.ஹதீஸில் உள்ள அரிதான வார்த்தைக்கு விளக்கம் அளித்தல்.


இத்ரஜை எப்படி தெரிந்துக்கொள்வது:


ஒரு ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் கூறிய வார்த்தை எது, கூறாதது எது என்பதை எப்படி அறிவது என்று இமாம் கீழ்கண்டவாறு விளக்குகிறார்:


இடைச்சருகலை அறியும் வழிகள்:


ஒரு ஹதீஸை ஒரேயொரு அறிவிப்பாளர் வழியாக மட்டும் எடுத்துக்கொள்ளக் கூடாது.


மற்ற அறிவிப்பாளர்கள் அந்த ஹதீஸை எப்படி அறிவித்துள்ளார் என்பதையும் ஆராய வேண்டும்.

உதாரணத்திற்கு, உளூ செய்வது பற்றி வரும் ஹதீஸில் அபூஹுரைரா (ரலி) அவர்களின் அறிவிப்பின்படி:


”உளூச்செய்யும் பொழுது குதிகால்களை சரியாக கழுவவில்லை என்றால் அந்த குதிகால்களை நரகம் தீண்டட்டும்” – இந்த வார்த்தைகள் அனைத்தும் நபி (ஸல்) அவர்கள் கூறியதுபோல் உள்ளது.


ஆனால் ஆதமுடைய அறிவிப்பில்:


وَيْلٌ لِلأَعْقَابِ مِنَ النَّارِ-

“குதிகால்களை நரகம் தீண்டட்டும்” – இவை மட்டும் தான் நபி (ஸல்) அவர்களின் வார்த்தைகள் என்று பிரித்துக் காண்பிக்கப் பட்டுள்ளது. ஆகவே, இது முத்ரஜ் என்பதை அறிந்து கொள்ளலால்.


2. அறிவிப்பாளர்களே முத்ரஜ் என்பதை பிரித்து அறிந்து கூறியிருப்பது.


3. சில அறிவிப்பாளர்கள் அவர் இடையில் கூறும் வார்த்தைகளை அவருடைய வார்த்தை என்பதை தெளிவாகக் கூறிவிடுவார்.


4. நபி (ஸல்) அவர்கள் அப்படி ஒரு வார்த்தையை கூற சாத்தியமே இல்லை என்பது – [ (உதா:) ஒரு ஸாலிஹான அடிமைக்கு இரண்டு கூலிகள் உள்ளன என அபூஹுரைரா (ரலி) அறிவிப்பில் வருல் ஹதீஸ் பார்க்கவும்]


இர்ரஜை ஏற்கும் சட்டம்:


சில ஹதீஸ்களில் அறிதான வார்த்தைக்கு விளக்கம் அளித்திருப்பார்கள். அதனை ஏற்றுக் கொள்ளலாம்.

[எ.டு.] يَتَحَنَّثُ என்பதன் விளக்கம் وَهُوَ التَّعَبُّدُ ـ(வணக்க வழிபாடு) என்பதாகும்.


இப்படிப்பட்ட இடைச்சருகலை ஏற்றுக்கொள்வதில் தடை ஏதும் இல்லை. இதுபோன்ற இடைச்சருகலை ஸுஹ்ரி போன்ற இமாம்கள் செய்துள்ளனர். ஏனெனில் சில அரிதான வார்த்தைகளின் விளக்கம் அறிஞர்களுக்கு மட்டுமே தெரியும். எனவே, அதனை அவர்கள் விளக்கியாக வேண்டும். இதுபோன்ற முத்ரஜை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், அறிவிப்பாளர்கள் தங்களுடைய கருத்தைக் கூறுவதும், தங்களுடைய ஆசைகளைக் கூறுவதும் போன்றவற்றால் ஏற்படும் முத்ரஜை ஏற்றுக்கொள்ள இயலாது.


முத்ரஜ் பற்றி அறிந்துக்கொள்வதற்கான புத்தகங்கள் (கிதாப்):


1. அல் ஃபஸ்லு லில் வஸ்லில் முத்ரஜி ஃபின் நக்ல் – ஹதீபில் பஃதாத் என்பவர் எழுதயுள்ளார்.

2. தத்ரீபுல் மின் ஹஜ்லில் தர்தீபுல் முத்ரஜ் – இமாம் இப்னு ஹஜிர்.


أحدث أقدم