அத்தியாயம் 13 நோன்பு

ஸஹீஹ் முஸ்லிம்
அத்தியாயம் 13
நோன்பு

பாடம் : 1 ரமளான் மாதத்தின் சிறப்பு
1956. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ரமளான் வந்துவிட்டால் சொர்க்கத்தின் வாயில்கள் திறக்கப்படுகின்றன; நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படுகின்றன; ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 13
1957. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ரமளான் மாதம் ஆகிவிட்டால் அருளின் வாயில்கள் திறக்கப்படுகின்றன; நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படுகின்றன; ஷைத்தான்கள் சங்கிலியால் விலங்கிடப்படுகின்றனர்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "ரமளான் மாதம் நுழைந்துவிட்டால்" என்று ஹதீஸ் தொடங்குகிறது.
அத்தியாயம் : 13
பாடம் : 2 (முதல்)பிறையைப் பார்த்து ரமளான் நோன்பு நோற்பதும் (மறு)பிறையைப் பார்த்து நோன்பை விடுவதும் கடமையாகும். மாதத்தின் ஆரம்பத்திலோ அல்லது இறுதியிலோ (வானில்) மேகமூட்டம் தென்பட்டால் அம்மாதத்தின் எண்ணிக்கை முப்பது நாட்களாக முழுமையாக்கப்படும்.
1958. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ரமளான் பற்றிக் கூறுகையில், "ரமளான் பிறையைக் காணாதவரை நோன்பு நோற்காதீர்கள்; (மறு) பிறையைக் காணாதவரை நோன்பை விடாதீர்கள்; உங்களுக்கு மேகமூட்டம் தென்பட்டால், அந்த மாதத்தை (முப்பது நாட்களாக)க் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்" என்று கூறினார்கள்.
1959 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமளான் பற்றிக் கூறுகையில் தம்மிரு கைகளையும் (மூன்று தடவை) அடித்தவாறு, "மாதம் என்பது இவ்வளவு, இவ்வளவு, இவ்வளவுதான்" என்று கூறினார்கள். (மூன்றாவது தடவையில் தமது பெருவிரலை மடக்கிக் கொண்டார்கள்.) மேலும் "பிறை பார்த்து நோன்பு நோறுங்கள்; பிறை பார்த்தே நோன்பை விடுங்கள்; உங்களுக்கு மேகமூட்டம் தென்பட்டால், அந்த மாதத்தை முப்பது (நாட்கள்) ஆகக் கணக்கிட்டுக்கொள்ளுங்கள்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 13
1960. மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "உங்களுக்கு மேகமூட்டம் தென்பட்டால், முப்பதாக (அந்த மாதத்தின் நாட்களை)க் கணக்கிட்டுக்கொள்ளுங்கள்" என்று இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் பின்வருமாறு இடம்பெற்றுள்ளது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமளான் மாதம் குறித்துக் கூறுகையில், "மாதம் என்பது இருபத்தொன்பது நாட்களா(கவும் இருக்)கும்; மாதம் என்பது இவ்வளவு, இவ்வளவு, இவ்வளவுதான்" என்று கூறி (மூன்றாவது தடவையில் பெருவிரலை மடக்கி)னார்கள். மேலும், அதில், "(மேகமூட்டம் தென்பட்டால்,) அந்த மாதத்தைக் கணக்கிட்டுக்கொள்ளுங்கள்" என்று மட்டுமே இடம்பெற்றுள்ளது. "முப்பதாக" எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 13
1961. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு மாதம் என்பது இருபத்தொன்பது நாட்களா(கவும் இருக்)கும். எனவே, பிறையைப் பார்க்காமல் நீங்கள் நோன்பு நோற்காதீர்கள். பிறையைப் பார்க்காமல் நோன்பை விடாதீர்கள். உங்களுக்கு மேகமூட்டம் தென்பட்டால், அந்த மாதத்தை (முப்பது நாட்களாக)க் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 13
1962. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு மாதம் என்பது இருபத்தொன்பது நாட்களா(கவும் இருக்)கும். எனவே, நீங்கள் பிறை பார்த்ததும் நோன்பு நோறுங்கள்; பிறை பார்த்ததும் நோன்பை விடுங்கள். உங்களுக்கு மேகமூட்டம் தென்பட்டால், அந்த மாதத்தை (முப்பது நாட்களாக)க் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 13
1963. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் பிறை பார்த்ததும் நோன்பு நோறுங்கள். (மறு)பிறை பார்த்ததும் நோன்பை விடுங்கள். உங்களுக்கு (வானில்) மேகமூட்டம் தென்பட்டால், அந்த மாதத்தை (முப்பது நாட்களாக)க் கணக்கிட்டுக்கொள்ளுங்கள்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 13
1964. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு மாதம் என்பது இருபத்தொன்பது இரவுகளா(கவும் இருக்)கும். எனவே, பிறையைப் பார்க்காமல் நீங்கள் நோன்பு நோற்காதீர்கள். பிறையைப் பார்க்காமல் நோன்பை விடாதீர்கள். உங்களுக்கு (வானில்) மேகமூட்டம் தென்பட்டால் தவிர. அவ்வாறு உங்களுக்கு மேகமூட்டம் தென்படுமானால், அந்த மாதத்தை (முப்பது நாட்களாக)க் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 13
1965. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (ரமளான் பற்றிக் கூறுகையில்) "மாதம் என்பது இவ்வளவு, இவ்வளவு, இவ்வளவுதான்" என்று கூறினார்கள். மூன்றாவது தடவையில் தமது பெருவிரலை மடக்கிக்கொண்டார்கள்.
அத்தியாயம் : 13
1966. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு மாதம் என்பது இருபத்தொன்பது நாட்களா(கவும் இருக்)கும்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 13
1967. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (ரமளான் பற்றிக் கூறுகையில்) "மாதம் என்பது இவ்வளவு, இவ்வளவு, இவ்வளவுதான்" என்று கூறி, பத்து + பத்து + ஒன்பது (=இருபத்தொன்பது) என்று (கைகளால் சைகை செய்து) கூறினார்கள்.
அத்தியாயம் : 13
1968. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இரு கைவிரல்களையும் இருமுறை அடித்து (கைதட்டி), மூன்றாவது முறை வலக் கை,அல்லது இடக் கையின் பெருவிரலை மடக்கியவாறு "மாதம் என்பது இவ்வளவு இவ்வளவு இவ்வளவு தான்" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 13
1969. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஒரு மாதம் என்பது இருபத்தொன்பது நாட்களா(கவும் இருக்)கும்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஷுஅபா (ரஹ்) அவர்கள் இதைக் கூறுகையில், இரு கைகைளையும் முன்று முறை கோத்துக் காட்டி, முன்றாவது தடவையில் பெருவிரலை மடித்துக்கொண்டார்கள்.
அறிவிப்பாளர் உக்பா பின் ஹுரைஸ் (ரஹ்) அவர்கள், "ஒரு மாதம் என்பது முப்பது நாட்களாகும் என இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறி, தம்மிரு கைகளையும் மூன்று முறை கோத்துக் காட்டியதாகவே நான் கருதுகிறேன்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 13
1970. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், "நாம் எழுதப்படிக்கத் தெரியாத சமுதாயம் (உம்மத்துன் உம்மிய்யா) ஆவோம்; எழுதுவதை நாம் அறியமாட்டோம்; (நட்சத்திரக்) கணிதத்தையும் நாம் அறியமாட்டோம். மாதம் என்பது (சில வேளைகளில்) இப்படியும் இப்படியும் இப்படியும் (இருபத்தொன்பது நாட்களாக) இருக்கும்" என்று (மூன்று தடவை) கூறி, மூன்றாவது தடவையில் பெருவிரலை மடக்கிக்கொண்டார்கள். மேலும், மாதம் என்பது (சில வேளைகளில்) இப்படியும் இப்படியும் இப்படியும் -அதாவது முப்பது நாட்களாகவும்- இருக்கும் என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடரிலும் வந்துள்ளது. அதில் இரண்டாவது மாதத்தைக் குறிப்பிடுகையில், "அதாவது முப்பது இரவுகள்" எனும் விளக்கக் குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 13
1971. சஅத் பின் உபைதா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் "இன்றைய இரவு (மாதத்தின்) பாதி இரவாகும் (இன்றிரவுடன் அரை மாதமாகிறது)" என்று கூறியதை இப்னு உமர் (ரலி) அவர்கள் செவியுற்றார்கள். உடனே அந்த மனிதரிடம் "இன்றைய இரவுதான் (மாதத்தின்) பாதியாகும் என உமக்கு எப்படித் தெரியும்? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது கை விரல்களால் இரண்டு முறை பத்து பத்து எனச் சைகை செய்து) "மாதம் என்பது இவ்வளவு இவ்வளவு இரவுகளாகும்" என்று கூறிவிட்டு, (மூன்றாவது தடவையில்) "இவ்வளவு" (என்று கூறியவாறு எல்லா விரல்களாலும் சைகை செய்து பெருவிரலை மட்டும் மடக்கிக்காட்டி மாதம் என்பது இருபத்தொன்பது இரவுகளாகவும் இருக்கும்) என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்" என்றார்கள்.
அத்தியாயம் : 13
1972. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் பிறையைப் பார்த்து நோன்பு நோறுங்கள். (மறு)பிறையைப் பார்த்து நோன்பை விடுங்கள். (ரமளான் பிறை இருபத்தொன்பதாம் நாள் மாலை) உங்களுக்கு மேகமூட்டம் தென்படுமானால் முப்பதாவது நாளும் நோன்பு நோற்றுக்கொள்ளுங்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 13
1973. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பிறை பார்த்து நோன்பு வையுங்கள்; (மறு)பிறை பார்த்து நோன்பை விடுங்கள்; உங்களுக்கு மேகமூட்டம் தென்பட்டால், (ஷஅபான் மாதத்தின்) எண்ணிக்கையை (முப்பது நாட்களாக) முழுமையாக்கிக்கொள்ளுங்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 13
1974. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பிறை பார்த்து நோன்பு வையுங்கள்; (மறு)பிறை பார்த்து நோன்பை விடுங்கள்; (மேக மூட்டத்தால்) உங்களுக்குத் திங்கள் தென்படவில்லையானால் முப்பது நாட்களாக எண்ணிக் கொள்ளுங்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 13
1975. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிறை குறித்துக் கூறுகையில், "நீங்கள் பிறையைப் பார்த்து நோன்பு வையுங்கள். (மறு)பிறையைப் பார்த்து நோன்பை விடுங்கள். உங்களுக்கு மேகமூட்டம் தென்பட்டால், (மாதத்தை) முப்பது நாட்களாகக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 13
பாடம் : 3 ரமளானுக்கு முந்தைய நாளும் அதற்கு முந்தைய நாளும் நோன்பு நோற்காதீர்.
1976. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ரமளானுக்கு முந்தைய நாளும் அதற்கு முந்தைய நாளும் நோன்பு நோற்காதீர்கள். (வழக்கமாக அந்த நாளில்) ஏதேனும் நோன்பு நோற்கும் மனிதரைத் தவிர! அவர் அந்நாளில் நோன்பு நோற்கட்டும். - இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் ஐந்து அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 13
பாடம் : 4 மாதம் என்பது இருபத்தொன்பது நாட்களாகவும் இருக்கும்.
1977. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் துணைவியருடன் ஒரு மாதகாலம் சேரப் போவதில்லை என்று சத்தியம் செய்துவிட்டு (விலகி) இருந்தார்கள். பின்னர் இருபத்தொன்பது இரவுகள் முடிந்ததும் (அந்த இரவுகளை நான் எண்ணிக்கொண்டே இருந்தேன்) என்னிடம்தான் முதன்முதலில் வந்தார்கள். அப்போது நான், "அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் ஒரு மாதம் எங்களிடம் வரமாட்டீர்கள் என்று சத்தியம் செய்திருந்தீர்களே, இருபத்தொன்பது நாட்கள் முடிந்ததும் வந்துவிட்டீர்களே? நான் அந்த இரவுகளை எண்ணிக் கொண்டிருந்தேனே!" என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "மாதம் என்பது இருபத்தொன்பது நாட்களாகவும் இருக்கும்" என்றார்கள்.
அத்தியாயம் : 13
1978. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தம் துணைவியரிடமிருந்து ஒரு மாதகாலம் விலகியிரு(க்கப்போவதாகக் கூறியிரு)ந்தார்கள். பின்னர் இருபத்தொன்பதாம் நாள் எங்களிடம் வந்தார்கள். அப்போது நாங்கள், "இன்று இருபத்தொன்பதாவது நாள்தான்" என்று சொன்னோம். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மூன்று தடவை கைகளைத் தட்டி, இறுதியில் ஒரு விரலை மட்டும் விரிக்காமல் மடக்கிவைத்திருந்துவிட்டு, "மாதம் என்பது இப்படி (இருபத்தொன்பது நாட்களாகவும்) இருக்கும்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 13
1979. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் தம் துணைவியரிடமிருந்து ஒரு மாதகாலம் விலகியிரு(க்கப் போவதாகக் கூறியிரு)ந்தார்கள். பின்னர் இருபத்தொன்பதாம் நாள் காலையிலேயே புறப்பட்டு எங்களிடம் வந்தார்கள். அப்போது சிலர், "அல்லாஹ்வின் தூதரே! (இன்று) இருபத்தொன்பதாம் நாள் காலைதான்" என்று கூறினர். அதற்கு நபி (ஸல்) அவர்கள் "மாதம் என்பது இருபத்தொன்பது நாட்களாகவும் இருக்கும்" என்று சொன்னார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் தம் கை விரல்களை (விரித்து) மூன்று முறை சேர்த்துக் காட்டினார்கள். இரண்டு தடவை எல்லா விரல்களையும் விரித்தார்கள்; மூன்றாவது தடவை ஒன்பது விரல்களை மட்டுமே விரித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பபாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 13
1980. உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் தம் துணைவியரில் சிலரிடம் ஒரு மாதகாலம் செல்லப்போவதில்லை எனச் சத்தியம் செய்து (விலகி) இருந்தார்கள். பின்னர் இருபத்தொன்பது நாட்கள் முடிந்ததும் அன்று "காலையில்" அல்லது "மாலையில்" அவர்களிடம் சென்றார்கள். அப்போது, "இறைவனின் தூதரே! எங்களிடம் ஒரு மாதகாலம் வரமாட்டீர்கள் எனச் சத்தியம் செய்திருந்தீர்களே?" என்று கேட்கப்பட்டது. அதற்கு நபியவர்கள், "மாதம் என்பது இருபத்தொன்பது நாட்களாகவும் இருக்கும்" என்று சொன்னார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 13
1981. சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது ஒரு கையை மற்றொரு கையில் (மூன்று தடவைகள்) அடித்து, "மாதம் என்பது இப்படியும் இப்படியும் இருக்கும்" என்று சொன்னார்கள். மூன்றாவது தடவையில் ஒரு விரலை மடக்கிக்கொண்டார்கள்.
அத்தியாயம் : 13
1982. சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் "மாதம் என்பது இப்படி, இப்படி, இப்படி இருக்கும்" என்று கூறி (தம் கை விரல்களை முதலிரு முறை) பத்து,பத்து என்றும், (மூன்றாவதாக) ஒரு முறை ஒன்பது என்றும் சைகை செய்து காட்டினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 13
பாடம் : 5 ஒவ்வோர் ஊர்க்காரர்களுக்கும் அவரவர் பார்க்கும் பிறையே (கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்). ஓர் ஊரில் பிறை பார்த்தால்,வெகு தொலைவில் உள்ளவர்களுக்கு அது பொருந்தாது.
1983. (இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் அடிமையாயிருந்த) குறைப் பின் அபீமுஸ்லிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
உம்முல் ஃபள்ல் பின்த் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் (ஒரு வேலை நிமித்தம்) என்னை ஷாம் (சிரியா) நாட்டிலிருந்த முஆவியா (ரலி) அவர்களிடம் அனுப்பினார்கள். நான் ஷாம் சென்று அவரது தேவையை நிறைவுசெய்தேன். நான் ஷாமில் இருந்தபோது ரமளான் (முதல்)பிறை எனக்குத் தென்பட்டது. வெள்ளிக்கிழமை இரவில் நான் பிறையைக் கண்டேன்.
பிறகு அந்த (ரமளான்) மாதத்தின் இறுதியில் நான் மதீனா வந்துசேர்ந்தேன்.
அப்போது அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் (பயணம் குறித்து) என்னிடம் விசாரித்தார்கள். பின்னர் பிறை குறித்தும் பேசினார்கள். அப்போது "நீங்கள் (ஷாமில்) எப்போது பிறை பார்த்தீர்கள்?" என்று கேட்டார்கள். நான், "நாங்கள் வெள்ளியன்று பிறை கண்டோம்" என்று பதிலளித்தேன். அவர்கள், "நீயே அதைக் கண்டாயா?" என்று கேட்டார்கள். நான், "ஆம் (நானும் கண்டேன்). மக்களும் அதைக் கண்டார்கள். மக்களும் நோன்பு நோற்றனர். முஆவியா (ரலி) அவர்களும் நோன்பு நோற்றார்கள்" என்று கூறினேன். அதற்கு அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள், "ஆனால், நாங்கள் சனிக்கிழமை இரவுதான் (முதல்) பிறை கண்டோம். எனவே, நாங்கள் (ரமளான் மாதத்தின்) எண்ணிக்கையை முப்பது நாட்களாக முழுமையாக்கும் வரை, அல்லது (ஷவ்வால் மாதத்தின் முதல்) பிறையைப் பார்க்கும்வரை நோன்பு நோற்றுக்கொண்டேயிருப்போம்" என்று சொன்னார்கள். அதற்கு நான், "முஆவியா (ரலி) அவர்கள் (முதல்பிறை) கண்டு, நோன்பு நோற்றது உங்களுக்குப் போதாதா?" என்று கேட்டேன். அதற்கு, "இல்லை. இப்படித்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டுள்ளார்கள்" என்று பதிலளித்தார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 13
பாடம் : 6 (முதல்)பிறை பெரியதாகவோ சிறியதாகவோ தென்படுவதற்கு எந்த முக்கியத்துவமும் இல்லை. பார்ப்பதற்காகவே பிறையை (சிறிது நேரம்) அல்லாஹ் தென்படச் செய்கிறான். மேகமூட்டம் தென்பட்டால் (மாதத்தின் நாட்கள்) முப்பதாக முழுமையாக்கப்படும்.
1984. அபுல் பக்தரீ சயீத் பின் ஃபைரூஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் உம்ராவிற்காக (மக்காவிற்கு)ப் புறப்பட்டுச் சென்றோம். (வழியில்) நாங்கள் "பத்னு நக்லா" எனுமிடத்தில் தங்கியிருந்தபோது, பிறையைப் பார்க்க ஒன்றுகூடினோம். அப்போது மக்களில் சிலர், "அது மூன்றாவது பிறை" என்று கூறினர். வேறுசிலர், "(அல்ல) அது இரண்டாவது பிறை" என்று கூறினர். பின்னர் நாங்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களைச் சந்தித்தபோது, "நாங்கள் பிறை பார்த்தோம். மக்களில் சிலர் "அது மூன்றாவது பிறை" என்றனர். வேறுசிலர் "அது இரண்டாவது பிறை" என்று கூறினர்" என்று சொன்னோம். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், "எந்த இரவில் நீங்கள் பிறை கண்டீர்கள்?" என்று கேட்டார்கள். அதற்கு, "இன்ன (மாதத்தின்) இன்ன இரவில்" என்று பதிலளித்தோம். அப்போது, "பார்ப்பதற்காகவே பிறையை அல்லாஹ் சிறிதுநேரம் தென்படச் செய்கிறான். ஆகவே, அது நீங்கள் கண்ட இரவுக்குரியதே ஆகும்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்றார்கள்.
அத்தியாயம் : 13
1985. அபுல் பக்தரீ சயீத் பின் பைரூஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் "தாத்து இர்க்" எனும் இடத்தில் இருந்தபோது ரமளான் (முதல்) பிறையைக் கண்டோம். அதைப் பற்றிக் கேட்பதற்காக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் ஒருவரை அனுப்பினோம். அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், "பார்ப்பதற்காகவே பிறையை அல்லாஹ் சிறிதுநேரம் தென்படச்செய்கிறான். உங்களுக்கு (வானில்) மேகமூட்டம் தென்படுமானால் (மாதத்தின் நாட்களின்) எண்ணிக்கையை (முப்பதாக) முழுமையாக்கிக் கொள்ளுங்கள்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்றார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 13
பாடம் : 7 இரு பெருநாட்களின் மாதங்கள் (சேர்ந்தாற்போல்) குறையாது.
1986. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இரு பெருநாட்களின் மாதங்களான ரமளானும் துல்ஹஜ்ஜும் குறையாது.
இதை அபூபக்ரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 13
1987. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இரு பெருநாட்களின் மாதங்கள் குறையாது.
இதை அபூபக்ரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் காலித் பின் மஹ்ரான் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "இரு பெருநாட்களின் மாதங்களான ரமளானும் துல்ஹஜ்ஜும் குறையாது" என்று காணப்படுகிறது.
அத்தியாயம் : 13
பாடம் : 8 ஃபஜ்ர் நேரம் வந்தவுடன் நோன்பு ஆரம்பமாகிவிடும். ஃபஜ்ர் நேரம் வரும்வரை உண்ணுதல் உள்ளிட்ட செயல்கள் செல்லும். நோன்பு ஆரம்பமாகுதல், சுப்ஹுத் தொழுகையின் நேரம் ஆரம்பமாகுதல் உள்ளிட்ட விதிமுறைகளுடன் தொடர்புடைய ஃபஜ்ர் நேரம் எது?
1988. அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்கள் கூறியதாவது:
"கறுப்புக் கயிற்றிலிருந்து விடியலின் வெள்ளைக் கயிறு உங்களுக்குத் தென்படும்வரை நீங்கள் உண்ணுங்கள்; பருகுங்கள்" (2:187) வசனம் அருளப்பெற்றபோது நான் நபி (ஸல்) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதரே! நான் வெள்ளை நிறத்தில் ஒரு கயிறு, கறுப்பு நிறத்தில் மற்றொரு கயிறு என இரு கயிறுகளை என் தலையணையின் கீழே வைத்து, பகலில் இருந்து இரவை (பிரித்து) அறிய முயன்றேன். (ஆயினும், என்னால் பிரித்தறிய முடியவில்லை)" என்று சொன்னேன். அதற்கு அவர்கள், "உங்கள் தலையணை நிச்சயம் (மிக) அகலமானதாய் இருக்கவேண்டும். (கறுப்புக்கயிறு, வெள்ளைக்கயிறு என்பன அவற்றின் உண்மையான பொருளில் கூறப்படவில்லை. மாறாக,) அது இரவின் கருமையும் பகலின் வெண்மையுமே ஆகும்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 13
1989. சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
"கறுப்புக் கயிற்றிலிருந்து வெள்ளைக் கயிறு உங்களுக்குத் தென்படும்வரை நீங்கள் உண்ணுங்கள்; பருகுங்கள்" எனும் இந்த (2:187 ஆவது) வசனம் அருளப்பெற்றபோது, ஒருவர் வெள்ளைக்கயிறு ஒன்றையும் கறுப்புக்கயிறு ஒன்றையும் எடுத்து வைத்துக்கொண்டு, அவையிரண்டும் பார்வைக்குத் தெளிவாகப் புலப்படும்வரை (சஹர் உணவு) சாப்பிட்டுக் கொண்டிருப்பார். அதன் பின்னர் அல்லாஹ், "மினல் ஃபஜ்ர்" (விடியலின்) எனும் சொல்லையும் சேர்த்து அருளி அ(வ்வசனத்)தைத் தெளிவுபடுத்தினான்.
அத்தியாயம் : 13
1990. சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
"கறுப்புக் கயிற்றிலிருந்து வெள்ளைக் கயிறு உங்களுக்குத் தென்படும்வரை நீங்கள் உண்ணுங்கள்; பருகுங்கள்" எனும் இந்த (2:187 ஆவது) வசனம் அருளப்பெற்றபோது, நோன்பு நோற்க நாடியுள்ள ஒருவர் தம் இரு கால்களில் (ஒன்றில்) கறுப்புக்கயிற்றையும் (மற்றொன்றில்) வெள்ளைக்கயிற்றையும் கட்டிக்கொண்டு, அவ்விரண்டும் தமது பார்வைக்குத் தெளிவாகப் புலப்படும்வரை சாப்பிட்டுக்கொண்டிருப்பார். ஆகவே, அதற்குப் பின்னர் அல்லாஹ், "மினல் ஃபஜ்ர்" (விடியலின்) எனும் சொல்லையும் சேர்த்து அருளினான். அப்போதுதான் மக்கள், இதன் மூலம் அல்லாஹ் அதிகாலையையும் இரவையுமே நாடுகிறான் என்பதை அறிந்துகொண்டார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 13
1991. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பிலால் அவர்கள், (பின்)இரவில் தொழுகை அறிவிப்புச்செய்வார். எனவே, (ஃபஜ்ர் தொழுகைக்காக) இப்னு உம்மி மக்தூம் செய்யும் தொழுகை அறிவிப்பை நீங்கள் கேட்கும்வரை உண்ணுங்கள்; பருகுங்கள்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 13
1992. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பிலால் (பின்)இரவில் தொழுகை அறிவிப்புச் செய்வார். (நீங்கள் சஹர் நேரம் முடிந்து விட்டதாக நினைத்துவிடாதீர்கள்.) இப்னு உம்மி மக்தூமின் தொழுகை அறிவிப்பை நீங்கள் கேட்கும்வரை உண்ணுங்கள்; பருகுங்கள்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 13
1993. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு இரு தொழுகை அறிவிப்பாளர்கள் இருந்தார்கள். (ஒருவர்) பிலால் (ரலி) அவர்கள். (மற்றொருவர்) கண் பார்வையற்ற இப்னு உம்மி மக்தூம் (ரலி) அவர்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "பிலால் (பின்)இரவில் தொழுகை அறிவிப்புச் செய்வார். எனவே, இப்னு உம்மி மக்தூம் (ஃபஜ்ர் தொழுகைக்காக) அறிவிப்புச் செய்யும்வரை உண்ணுங்கள்; பருகுங்கள்" என்று சொன்னார்கள்.
அவர் அறிவிப்புச் செய்துவிட்டு இறங்குவார்; இவர் அறிவிப்புச் செய்வதற்காக ஏறுவார். இதைத் தவிர இருவரு(டைய அறிவிப்பு நேரங்களு)க்கிடையே (பெரிய இடைவெளி) ஏதும் இருக்காது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாக ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தும் அறிவிக்கப்பட்டுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) மற்றும் ஆயிஷா (ரலி) ஆகியோர் வாயிலாக (தலா) மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 13
1994. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் சஹர் உணவு உண்பதிலிருந்து பிலாலின் தொழுகை அறிவிப்பு (அல்லது பிலாலின் அழைப்பு) அவரைத் தடுத்துவிடவேண்டாம். உங்களில் (இரவுத் தொழுகை) தொழுதுகொண்டிருப்பவர் திரும்புவதற்காகவும் உங்களில் உறங்கிக்கொண்டிருப்பவரை எழுப்புவதற்காவுமே பிலால் "அறிவிப்புச் செய்கிறார்" அல்லது "அழைக்கிறார்".
இதன் அறிவிப்பாளரான அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:
இதைக் கூறும்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தமது கையைக் கீழே தாழ்த்திப் பின்னர் மேலே உயர்த்திக் காட்டி, இவ்வாறு இவ்வாறு (கீழ் மேலாகச் செங்குத்தாய் தெரியும் வெளிச்சம் ஃபஜ்ர்) அல்ல என்று கூறிவிட்டு, பிறகு தம் கைவிரல்களை விரித்துக் காட்டி இவ்வாறு (அடிவானில் நாலா பாகமும் பரவலாகத் தெரியும் வெளிச்சமே ஃபஜ்ர் ஆகும்) என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. ஆயினும், அதில் பின்வருமாறு இடம்பெற்றுள்ளது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் கைவிரல்களை ஒன்றுசேர்த்து பூமியை நோக்கித் தாழ்த்திக் காட்டி, இவ்வாறு (செங்குத்தான வெளிச்சமாக) இருப்பது ஃபஜ்ர் அல்ல; மாறாக, ஒரு சுட்டு விரல்மீது மற்றொரு சுட்டுவிரல் வைத்துத் தம் இரு கைகளையும் நீட்டிக் காட்டி இவ்வாறு (பரவாலான வெளிச்சமாக) இருப்பதே ஃபஜ்ர் ஆகும் என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 13
1995. மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், முஅதமிர் பின் சுலைமான் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "உங்களில் உறங்கிக் கொண்டிருப்பவரை எழுப்புவதற்காகவும் உங்களில் (இரவுத்தொழுகை) தொழுது கொண்டிருப்பவர் திரும்புவதற்காகவுமே (பிலால் அறிவிப்புச்செய்கிறார்)" என்பது வரையே இடம்பெற்றுள்ளது.
இஸ்ஹாக் பின் இப்ராஹீம் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "இவ்வாறு தெரிவது ஃபஜ்ர் அல்ல; மாறாக, இவ்வாறு தெரிவதே ஃபஜ்ர் ஆகும். அதாவது செங்குத்தானது ஃபஜ்ர் அன்று; அகலத்தில் பரவியிருப்பதே ஃபஜ்ர் ஆகும்" என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 13
1996. முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் சஹர் உணவு உண்பதிலிருந்து பிலாலின் தொழுகை அறிவிப்பு ஏமாற்றி (தடுத்து)விட வேண்டாம். நீளவாக்கில் (செங்குத்தாகத்) தென்படும் இந்த வெண்மையானது (அடிவானில்) பரவலாகத் தெரியும்வரை அதுவும் உங்களை ஏமாற்றி (தடுத்து)விட வேண்டாம்.
இதை சமுரா பின் ஜுன்துப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 13
1997. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களை (சஹர் உணவு உண்பதிலிருந்து) பிலாலின் தொழுகைஅறிவிப்பு ஏமாற்றி (தடுத்து) விடவேண்டாம். (செங்குத்தாகத் தெரியும்) இந்த வெளிச்சமும் (இவ்வாறு பரவலாகத் தெரியும்வரை) ஏமாற்றி (தடுத்து) விடவேண்டாம். இவ்வாறு (அகலவாக்கில்) பரவலாகத் தெரியும்வரை.
இதை சமுரா பின் ஜுன்துப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 13
1998. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களை சஹர் உணவு உண்பதிலிருந்து பிலாலின் தொழுகை அறிவிப்பு ஏமாற்றி (தடுத்து) விடவேண்டாம். அடிவானில் நீளவாக்கில் (செங்குத்தாய்) தெரியும் இந்த வெண்மை -இவ்வாறு (அகலவாக்கில்) பரவும் வரை- ஏமாற்றி (தடுத்து) விடவேண்டாம்.
இதை சமுரா பின் ஜுன்துப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஹம்மாத் பின் ஸைத் (ரஹ்) அவர்கள் அ(கலவாக்கில் பரவலாகத் தெரியும்வரை என்ப)தை அறிவிக்கும்போது, இவ்வாறு என்று தம் இரு கரங்களால் சைகை செய்து (விரித்துக்) காட்டினார்கள்.
அத்தியாயம் : 13
1999. நபி (ஸல்) அவர்கள் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களை (சஹர் செய்வதிலிருந்து) பிலாலின் தொழுகைஅறிவிப்பு ஏமாற்றிவிட வேண்டாம். (அடிவானில் நீளவாக்கில் தென்படும்) இந்த வெண்மை -வைகறை "வெளிப்படும் வரை" அல்லது "தோன்றும்வரை"- ஏமாற்றி (தடுத்து) விடவேண்டாம்.
இதை சமுரா பின் ஜுன்துப் (ரலி) அவர்கள் உரையாற்றுகையில் அறிவித்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் சமுரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஹதீஸ் தொடங்குகிறது.
அத்தியாயம் : 13
பாடம் : 9 சஹர் செய்வதன் சிறப்பு; அது வலியுறுத்தப்பெற்ற விரும்பத்தகுந்த செயலாகும்; சஹரை அதன் இறுதி நேரத்தில் செய்வதும்,நோன்பு துறத்தலை அதன் ஆரம்ப நேரத்தில் செய்வதும் விரும்பத்தக்கவை ஆகும்.
2000. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சஹர் செய்யுங்கள். ஏனெனில், சஹர் செய்வதில் அருள்வளம் (பரக்கத்) உள்ளது.
இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 13
2001. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நமது நோன்பிற்கும் வேதக்காரர்களின் உபவாசத்திற்கும் இடையில் உள்ள வேறுபாடு சஹர் நேரத்தில் உண்பதுதான்.
இதை அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 13
2002. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
"நாங்கள் சஹர் செய்துவிட்டுப் பின்னர் (ஃபஜ்ர்) தொழுகைக்குத் தயாராவோம்" என்று ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறினார்கள். நான், "சஹருக்கும் (ஃபஜ்ர்) தொழுகைக்குமிடையே எவ்வளவு இடைவெளி இருக்கும்?" என்று கேட்டேன். அதற்கு ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள், "(குர்ஆனில்) ஐம்பது வசனங்கள் (ஓதும் நேரம்)" என்று பதிலளித்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் இன்னும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 13
2003. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நோன்பு துறப்பதை விரைவுபடுத்தும் காலமெல்லாம் மக்கள் நன்மையில் நிலைத்திருப்பார்கள்.
இதை சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் அறவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்களிடமிருந்தே வேறு இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 13
2004. அபூஅத்திய்யா மாலிக் பின் ஆமிர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நானும் மஸ்ரூக் (ரஹ்) அவர்களும் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்றோம். "இறைநம்பிக்கையாளர்களின் அன்னையே! இரு நபித்தோழர்களில் ஒருவர் விரைந்து நோன்பு துறக்கிறார்; (மஃக்ரிப் தொழுகையின் ஆரம்ப நேரத்திலேயே) விரைந்து தொழுகிறார். இன்னொருவர், நோன்பு துறப்பதையும் தாமதப்படுத்துகிறார்; தொழுகையையும் தாமதப் படுத்துகிறார் (இவ்விருவரில் யார் செய்வது சரி?)" என்று கேட்டோம். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் "விரைந்து நோன்பு துறந்து, விரைந்து தொழுபவர் யார்?" என்று கேட்டார்கள். நாங்கள் "அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்" என்றோம். அதற்கு, "இவ்வாறே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்வார்கள்" என்று ஆயிஷா (ரலி) அவர்கள் விடையளித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில், அபூகுறைப் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "இன்னொரு நபித்தோழர் அபூமூசா (ரலி) ஆவார்" என அதிகப்படியாக இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 13
2005. அபூஅத்திய்யா மாலிக் பின் ஆமிர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நானும் மஸ்ரூக் (ரஹ்) அவர்களும் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்றோம். அப்போது மஸ்ரூக், ஆயிஷா (ரலி) அவர்களிடம் "முஹம்மத் (ஸல்) அவர்களின் தோழர்களில் இருவர் நன்மையில் குறைவைப்பவர்கள் அல்லர். அவ்விருவரில் ஒருவர் மஃக்ரிப் தொழுகையையும் நோன்பு துறப்பதையும் விரைவாகவே செய்கிறார். மற்றொருவர் அவ்விரண்டையுமே தாமதப்படுத்துகிறார்" என்று கூறினார். அப்போது "மஃக்ரிபையும் நோன்பு துறப்பதையும் விரைவுபடுத்துபவர் யார்?" என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கேட்டார்கள். அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்" என்றார் மஸ்ரூக். ஆயிஷா (ரலி) அவர்கள், "இவ்வாறே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்வார்கள்" என்று விடையளித்தார்கள்.
அத்தியாயம் : 13
பாடம் : 10 நோன்பு முடியும் நேரமும் பகலின் வெளியேற்றமும்.
2006. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இரவு வந்து, பகல் போய், சூரியன் மறைந்துவிட்டால் நோன்பாளி நோன்பு துறப்பார்.
இதை உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 13
2007. அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் ரமளான் மாதத்தில் நோன்பு நோற்றவர்களாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தோம். சூரியன் மறைந்ததும், "இன்ன மனிதரே, (ஒட்டகத்திலிருந்து) இறங்கி நமக்காக மாவு கரைப்பீராக!" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள். அவர், "அல்லாஹ்வின் தூதரே! பகல் இன்னும் எஞ்சியுள்ளதே?" என்று சொன்னார். "இன்ன மனிதரே, (ஒட்டகத்திலிருந்து) இறங்கி நமக்காக மாவு கரைப்பீராக!" என்று (மீண்டும்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள். எனவே, அவர் இறங்கிவந்து, மாவு கரைத்துக் கொண்டுவந்தார். உடனே நபி (ஸல்) அவர்கள் அதை அருந்திவிட்டு, "சூரியன் இங்கிருந்து மறைந்து, இரவு இங்கிருந்து வந்துவிட்டால் நோன்பாளி நோன்பு துறப்பார்" என்று கையால் சைகை செய்து கூறினார்கள்.
அத்தியாயம் : 13
2008. அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் ஒரு பயணத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். சூரியன் மறைந்ததும் ஒரு மனிதரிடம், "(ஒட்டகத்திலிருந்து) இறங்கி நமக்காக மாவு கரைப்பீராக" என்று சொன்னார்கள். அவர், "அல்லாஹ்வின் தூதரே, மாலைநேரம் ஆகட்டுமே!" என்று சொன்னார். "இறங்கி நமக்காக மாவு கரைப்பீராக" என்று (மீண்டும்) சொன்னார்கள். அவர், "இன்னும் பகல் இருக்கிறதே!" என்று சொல்லிவிட்டு, இறங்கி நபி அவர்களுக்காக மாவு கரைத்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதை அருந்தினார்கள். பின்னர், கிழக்குத் திசையை நோக்கி சைகை செய்து "இரவு இங்கிருந்து முன்னோக்கி வந்துவிட்டதை நீங்கள் காணும்போது நோன்பாளி நோன்பு துறப்பார்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (ஒரு பயணத்தில்) சென்றோம். அவர்கள் நோன்பு நோற்றிருந்தார்கள். சூரியன் மறைந்ததும், "இன்ன மனிதரே, இறங்கி நமக்காக மாவு கரைப்பீராக" என்று கூறினார்கள் என அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் கூறினார்கள் என ஹதீஸ் தொடங்குகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 13
2009. மேற்கண்ட ஹதீஸ் மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், மேற்கண்ட இரு ஹதீஸ்களில் உள்ள தகவல்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால், இந்த அறிவிப்புகளில் "ரமளான் மாதத்தில்" எனும் குறிப்போ, "இரவு இங்கிருந்து வந்துவிட்டால்" எனும் சொற்றொடரோ காணப்படவில்லை. ஹுஷைம் பின் பஷீர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் மட்டுமே இவ்வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 13
பாடம் : 11 தொடர்நோன்பு நோற்பதற்கு வந்துள்ள தடை.
2010. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறிய தாவது:
நபி (ஸல்) அவர்கள் தொடர்நோன்பு நோற்கலாகாது எனத் தடைவிதித்தார்கள். "நீங்கள் தொடர்நோன்பு நோற்கிறீர்களே?" என்று மக்கள் வினவினர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நான் (இந்த விஷயத்தில்) உங்களைப் போன்றவன் அல்லன்; எனக்கு (இறைவனிடமிருந்து) உணவும் பானமும் வழங்கப்படுகிறது" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 13
2011. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு ரமளான் மாதத்தில் தொடர்நோன்பு நோற்றார்கள். மக்களும் அவ்வாறே தொடர்நோன்பு நோற்றனர். ஆனால், மக்களுக்குத் தடை விதித்துவிட்டார்கள். "நீங்கள் தொடர்நோன்பு நோற்கிறீர்களே?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், "நான் (இந்த விஷயத்தில்) உங்களைப் போன்றவன் அல்லன். எனக்கு (என் இறைவனிடமிருந்து) உணவும் பானமும் வழங்கப்படுகிறது" என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் "ரமளான் மாதத்தில்" எனும் குறிப்பு இடம் பெறவில்லை.
அத்தியாயம் : 13
2012. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொடர்நோன்பிற்குத் தடை விதித்தார்கள். அப்போது முஸ்லிம்களில் ஒருவர், "தாங்கள் மட்டும் தொடர்நோன்பு நோற்கிறீர்களே, அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உங்களில் என்னைப் போன்றவர் யார் இருக்கிறார்? எனக்கு என் இறைவன் உண்ணவும் பருகவும் வழங்குகின்ற நிலையில் நான் இரவைக் கழிக்கிறேன்" என்று சொன்னார்கள். ஆனால், தொடர்நோன்பு நோற்பதிலிருந்து விலகிக்கொள்ள மக்கள் மறுத்தபோது,தம்முடன் ஒரு நாள் தொடர்நோன்பு நோற்க மக்களையும் நபியவர்கள் அனுமதித்தார்கள். பின்னர் அடுத்த நாளும் அனுமதித்தார்கள். பிறகு (அடுத்த மாதத்தின்) தலைப்பிறையை மக்கள் கண்டனர். அப்போது நபி (ஸல்) அவர்கள் "தலைப்பிறை இன்னும் தள்ளிப்போயிருந்தால் (உங்களால் இயலாத அளவிற்குத் தொடர்நோன்பு நோற்பதை) மேலும் நான் உங்களுக்கு அதிகப் படுத்தியிருப்பேன்" என்று சொன்னார்கள். மக்கள் தொடர்நோன்பு நோற்பதிலிருந்து விலகிக் கொள்ள மறுத்ததைக் கண்டிக்கும் விதத்திலேயே இவ்வாறு கூறினார்கள்.
அத்தியாயம் : 13
2013. அபூஹுரைரா ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தொடர்நோன்பு நோற்பதிலிருந்து உங்களை நான் எச்சரிக்கிறேன்" என்று கூறினார்கள். "தாங்கள் மட்டும் தொடர்நோன்பு நோற்கிறீர்களே, அல்லாஹ்வின் தூதரே?" என்று மக்கள் கேட்டார்கள். "இவ்விஷயத்தில் நீங்கள் என்னைப் போன்றவர்கள் அல்லர். எனக்கு என் இறைவன் உண்ணவும் பருகவும் வழங்குகின்ற நிலையில் நான் இரவைக் கழிக்கிறேன். எனவே, நற்செயல்களில் உங்களால் இயன்ற சுமையை மட்டும் ஏற்றுக்கொள்ளுங்கள்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. ஆயினும், அதில் "உங்களுக்குச் சக்தியுள்ள சுமையை மட்டுமே ஏற்றுக்கொள்ளுங்கள்" என இடம் பெற்றுள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில், "நபி (ஸல்) அவர்கள், தொடர் நோன்பிற்குத் தடை விதித்தார்கள்" என ஹதீஸ் தொடங்குகிறது.
அத்தியாயம் : 13
2014. அனஸ் ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தில் தொழுவார்கள். (ஒரு நாள்) நான் சென்று அவர்களுக்கு விலாப் பக்கத்தில் நின்றுகொண்டேன். இன்னொரு மனிதர் வந்து அவரும் நின்றுகொண்டார். இறுதியில் நாங்கள் ஒரு கூட்டமாகவே ஆகிவிட்டோம். தமக்குப் பின்னால் நாங்கள் நிற்பதை நபி (ஸல்) அவர்கள் உணர்ந்ததும் தொழுகையைச் சுருக்கலானார்கள். பிறகு தமது இல்லத்திற்குள் சென்று, எங்களுடன் தொழாத விதத்தில் (நீளமாகத்) தொழுதார்கள். காலையில் நாங்கள் அவர்களிடம் "இந்த இரவு (உங்களுக்குப் பின்னால் இருந்த) எங்களைத் தாங்கள் அறிந்தீர்களா?" என்று கேட்டோம். அதற்கு அவர்கள் "ஆம். அதுதான் நான் எதைச் செய்தேனோ அதைச் செய்ததற்கு (சுருக்கித் தொழுததற்கு)க் காரணமாக அமைந்தது" என்று சொன்னார்கள். அந்த மாதத்தின் இறுதியில்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொடர்நோன்பு நோற்க ஆரம்பித்தார்கள். அவர்களுடைய தோழர்களில் சிலரும் அவ்வாறே தொடர்நோன்பு நோற்கலாயினர். அப்போது நபி (ஸல்) அவர்கள், "சிலருக்கு என்ன நேர்ந்தது? அவர்கள் தொடர்நோன்பு நோற்கிறார்கள்! நீங்கள் (இவ்விஷயத்தில்) என்னைப் போன்றவர்கள் அல்லர். கவனத்தில் வையுங்கள்! அல்லாஹ்வின் மீதாணையாக! இந்த மாதம் இன்னும் தள்ளிப்போயிருந்தால் (உங்களால் தொடர இயலாத அளவிற்கு) இன்னும் பல நாட்கள் நான் தொடர்நோன்பு நோற்றிருப்பேன். அப்போது (வழிபாடுகளில்) அதீத ஆர்வம் காட்டுவோர் தங்கள் போக்கைக் கைவிட்டிருப்பர்" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 13
2015. அனஸ் ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தின் ஆரம்பத்தில் தொடர்நோன்பு நோற்றார்கள். (இதைக் கண்டு) முஸ்லிம்கள் சிலரும் தொடர்நோன்பு நோற்றார்கள். இந்த விஷயம் நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியபோது அவர்கள், "எமக்கு (மட்டும்) இந்த மாதம் (எத்தனை நாட்கள்) நீட்டிக்கப்பட்டிருந்தாலும் எம்மால் தொடர்நோன்பு நோற்றிருக்க முடியும். அப்போது (வழிபாடுகளில்) அதீத ஆர்வம் காட்டுபவர்கள் தங்களது போக்கைக் வைவிட்டிருப்பர். "நீங்கள் (இவ்விஷயத்தில்) என்னைப் போன்றவர்கள் அல்லர்" அல்லது "நான் உங்களைப் போன்றவன் அல்லன்". எனக்கு என் இறைவன் உண்ணவும் பருகவும் வழங்கும் நிலையில் நான் பகல் நேரத்தைக் கழிக்கிறேன்" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 13
2016. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
தொடர்நோன்பு நோற்கலாகாது என நபி (ஸல்) அவர்கள் மக்களுக்குத் தடைவிதித்தார்கள். மக்கள்மீது கொண்ட கருணையே இதற்குக் காரணம். அப்போது "தாங்கள் (மட்டும்) தொடர் நோன்பு நோற்கிறீர்களே!" என்று மக்கள் கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நான் (இவ்விஷயத்தில்) உங்களைப் போன்றவன் அல்லன். எனக்கு என் இறைவன் உண்ணவும் பருகவும் வழங்குகின்றான்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 13
பாடம் : 12 பாலுணர்வைத் தூண்டாது எனில் நோன்பாளி (தம் மனைவியை) முத்தமிடுவது தடைசெய்யப்பட்டதன்று.
2017. (ஆயிஷா (ரலி) அவர்களின் சகோதரியின் புதல்வர்) உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருந்த நிலையில் தம் துணைவியரில் ஒருவரை முத்தமிடுவார்கள்" எனக் கூறிவிட்டு ஆயிஷா (ரலி) அவர்கள் சிரிப்பார்கள்.
அத்தியாயம் : 13
2018. சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அப்துர் ரஹ்மான் பின் அல்காசிம் (ரஹ்) அவர்களிடம், "நீங்கள் உங்கள் தந்தை (காசிம் பின் முஹம்மத் - ரஹ்) அவர்கள் வாயிலாக "நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றுக் கொண்டு என்னை முத்தமிடுவார்கள்" என ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவித்த ஹதீஸைச் செவியுற்றீரா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள் (பதிலளிக்காமல் சிறிது நேரம்) அமைதியாக இருந்துவிட்டுப் பிறகு "ஆம்" என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 13
2019. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருந்த நிலையில் என்னை முத்தமிடுவார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொண்டதைப் போன்று உங்களில் எவரால் தம் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொள்ளமுடியும்?
இதைக் காசிம் பின் முஹம்மத் பின் அபீபக்ர் அஸ்ஸித்தீக் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 13
2020. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருந்த நிலையில் (தம் துணைவியை) முத்தமிடுவார்கள்; நோன்பு நோற்றிருந்த நிலையில் கட்டியணைப்பார்கள். ஆயினும், அவர்கள் தம் உணர்ச்சிகளை, உங்களையெல்லாம்விட அதிகமாகக் கட்டுப்படுத்திக் கொள்பவர்களாக இருந்தார்கள்.
இதை மஸ்ரூக் பின் அல்அஜ்தஉ (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் ஏழு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 13
2021. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருந்த நிலையில் (தம் துணைவியை) முத்தமிடுவார்கள்; (அதே நேரத்தில்) அவர்கள் தம் உணர்ச்சிகளை, உங்களையெல்லாம்விட அதிகமாகக் கட்டுப்படுத்திக் கொள்பவர்களாக இருந்தார்கள்.
இதை அல்கமா பின் கைஸ் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 13
2022. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருந்த நிலையில் (தம் துணைவியைக்) கட்டியணைப்பார்கள்.
இதை அல்கமா பின் கைஸ் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 13
2023. அஸ்வத் பின் யஸீத் பின் கைஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நானும் மஸ்ரூக் (ரஹ்) அவர்களும் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோன்பு நோற்ற நிலையில் (தம் துணைவியரைக்) கட்டியணைப்பார்களா?" என்று கேட்டோம். அதற்கு அவர்கள், "ஆம். ஆயினும், "அவர்கள் தம் உணர்ச்சிகளை, உங்களையெல்லாம்விட அதிகமாகக் கட்டுப்படுத்திக்கொள்பவர்களாக இருந்தார்கள்””. அல்லது "அவர்கள் உங்களில் தம் உணர்ச்சிகளை அதிகமாகக் கட்டுப்படுத்திக் கொள்பவர்களில் ஒருவராக இருந்தார்கள்" " என்றார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "நாங்கள் இருவரும் இறை நம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம் (நோன்பு நோற்றுக் கொண்டு முத்தமிடுவது பற்றிக்) கேட்பதற்காகச் சென்றோம்" என்று அஸ்வத் (ரஹ்), மஸ்ரூக் (ரஹ்) ஆகியோர் கூறியதாக ஹதீஸ் தொடங்குகிறது.
அத்தியாயம் : 13
2024. இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருந்த நிலையில் என்னை முத்தமிடுவார்கள்.
இதை உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 13
2025. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோன்பு மாதத்தில் (நோன்பு நோற்றிருந்த நிலையில் தம் துணைவியரை) முத்தமிடுவார்கள்.
இதை அம்ர் பின் மைமூன் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 13
2026. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தில் நோன்பு நோற்றிருந்த நிலையில் (தம் துணைவியரை) முத்தமிடுவார்கள்.
இதை அம்ர் பின் மைமூன் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 13
2027. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருந்த நிலையில் (தம் துணைவியரை) முத்தமிடுவார்கள்.
இதை அலீ பின் அல்ஹுசைன் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 13
2028. ஹஃப்ஸா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருந்த நிலையில் (தம் துணைவியரை) முத்தமிடுவார்கள்.
இதை ஷுதைர் பின் ஷகல் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஹஃப்ஸா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 13
2029. உமர் பின் அபீசலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் "நோன்பாளி (மனைவியை) முத்தமிடலாமா?" என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இது பற்றி நீ (உன் தாயார்) உம்மு சலமாவிடம் கேள்!" என்றார்கள். (அவ்வாறே நான் கேட்டபோது, என் தாயார்), "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்வாறு செய்வார்கள்" என்று என்னிடம் தெரிவித்தார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! (தாங்கள் இவ்வாறு செய்தால் குற்றமில்லை. ஏனெனில்) அல்லாஹ், தங்கள் முன்பின் பாவங்களை மன்னித்து (விட்டதாக அறிவித்து)விட்டான்" என்று சொன்னேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "கவனி! அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களையெல்லாம்விட நான் அதிகமாக அல்லாஹ்விற்கு அஞ்சி (பாவங்களிலிருந்து விலகி) வாழ்கிறேன்; அவனு(டைய தண்டனை)க்குப் பயந்து வாழ்கிறேன்" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 13
பாடம் : 13 பெருந்துடக்குடன் வைகறைப் பொழுதை அடைந்தவரின் நோன்பு செல்லும்.
2030. அபூபக்ர் பின் அப்திர் ரஹ்மான் பின் அல்ஹாரிஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அபூஹுரைரா (ரலி) அவர்கள் "பெருந்துடக்குடன் வைகறைப் பொழுதை அடைந்தவருக்கு நோன்பு இல்லை (அது செல்லாது)" என்று அறிவிப்பதை நான் செவியுற்றேன். இதை நான் (என் தந்தை) அப்துர் ரஹ்மான் பின் அல்ஹாரிஸ் (ரஹ்) அவர்களிடம் சொன்னேன். அதை அவர்கள் மறுத்தார்கள். பின்னர் ஆயிஷா (ரலி) மற்றும் உம்மு சலமா (ரலி) ஆகியோரை நோக்கி நடந்தார்கள். அவர்களுடன் நானும் நடந்தேன். அவ்விருவரிடம் நாங்கள் போய்ச் சேர்ந்தோம். அதைப் பற்றி அவர்களிடம் என் தந்தை கேட்டார்கள். அதற்கு அவர்கள் இருவரும், "நபி (ஸல்) அவர்கள் (இரவில் தாம்பத்திய உறவு கொண்டு) குளிப்புக் கடமையான நிலையில் -உறக்க ஸ்கலிதத்தினால் அல்ல- வைகறைப் பொழுதை அடைவார்கள். பிறகு நோன்பு நோற்பார்கள்" என்று கூறினர்.
எனவே, நாங்கள் இருவரும் (மதீனாவின் ஆட்சியராயிருந்த) மர்வான் பின் அல்ஹகமை நோக்கிச் சென்றோம். (என் தந்தை) அப்துர் ரஹ்மான் அவர்கள் (அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்துவந்த விஷயத்தையும் அதற்கு மாறாக ஆயிஷா (ரலி) மற்றும் உம்மு சலமா (ரலி) ஆகியோர் கூறியதையும்) மர்வான் பின் அல்ஹகமிடம் எடுத்துரைத்தார்கள். உடனே மர்வான், "நீங்கள் அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் சென்று, அவர்கள் அறிவித்து வருவதற்கு மறுப்புத் தெரிவித்துத் தான் ஆகவேண்டும்" என்று கூறினார். அவ்வாறே நாங்கள் இருவரும் அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் சென்றோம். இந்த நிகழ்ச்சி முழுவதிலும் நானும் அங்கிருந்தேன். நடந்தவற்றை அபூ ஹுரைரா (ரலி) அவர்களிடம் அப்துர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறினார்கள். இதைக்கேட்ட அபூஹுரைரா (ரலி) அவர்கள், "(ஆயிஷா (ரலி) மற்றும் உம்மு சலமா (ரலி) ஆகிய) அவ்விருவருமா உம்மிடம் இவ்வாறு கூறினார்கள்?" என்று கேட்டார்கள். அதற்கு (என் தந்தை) அப்துர் ரஹ்மான் அவர்கள், "ஆம் (அவர்கள் இருவருமே கூறினர்)"என்றார்கள். அபூஹுரைரா (ரலி) அவர்கள், "(நபி (ஸல்) அவர்களின் துணைவியரான) அவர்கள் இருவரும் (இதுகுறித்து) நன்கறிந்தவர்கள்" என்று சொன்னார்கள்.
பின்னர் அபூஹுரைரா (ரலி) அவர்கள் தாம் இதுவரை ஃபள்ல் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதையே அறிவித்து வந்ததாகக் கூறிவிட்டு, "இதை நான் ஃபள்லிடமிருந்தே செவியுற்றேன்; (நேரடியாக) நபி (ஸல்) அவர்களிடமிருந்து செவியுறவில்லை" என்று சொன்னார்கள். பின்னர் இது தொடர்பாகத் தாம் கூறிவந்த கருத்தை அபூஹுரைரா (ரலி) அவர்கள் திரும்பப் பெற்றுக்கொண்டார்கள்.
அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
நான் (இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த) அப்துல் மலிக் பின் அபீபக்ர் (ரஹ்) அவர்களிடம், "ரமளான் மாதத்தில் (நபி (ஸல்) அவர்கள் அவ்வாறு செய்ததாக) ஆயிஷாவும் உம்மு சலமாவும் கூறினார்களா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "(ஆம்) அவ்வாறுதான். நபி (ஸல்) அவர்கள் குளிப்புக் கடமையான நிலையில் -உறக்க ஸ்கலிதத்தினால் அல்ல- வைகறைப் பொழுதை அடைவார்கள். பிறகு நோன்பைத் தொடருவார்கள் என்று கூறினர்" என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 13
2031. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தில் பெருந்துடக்குடையவர்களாக வைகறை (ஃபஜ்ர்) நேரத்தை அடைவார்கள்; ஸ்கலிதம் ஏற்பட்டதால் அல்ல (தாம்பத்திய உறவில் ஈடுபட்டதால்தான்). பின்னர் குளித்துவிட்டு நோன்பைத் தொடருவார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 13
2032. அபூபக்ர் பின் அப்திர் ரஹ்மான் பின் அல்ஹாரிஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
மர்வான் பின் அல்ஹகம், "பெருந்துடக்குடன் வைகறைப் பொழுதை அடைந்த மனிதர் நோன்பு நோற்கலாமா?" என்பது குறித்துக் கேட்பதற்காக என்னை உம்மு சலமா (ரலி) அவர்களிடம் அனுப்பினார். (அவ்வாறே நான் கேட்டதற்கு) "நபி (ஸல்) அவர்கள் (இரவில்) தாம்பத்திய உறவில் ஈடுபட்டுப் பெருந்துடக்குடன் -உறக்க ஸ்கலிதத்தால் அல்ல- வைகறைப் பொழுதை அடைவார்கள். பிறகு நோன்பை(த் தொடர்வார்களே தவிர) விட்டுவிடமாட்டார்கள்; (பின்னாளில் "களா" வாகத்) திரும்ப நோற்கவுமாட்டார்கள்" என உம்மு சலமா (ரலி) அவர்கள் விடையளித்தார்கள்.
அத்தியாயம் : 13
2033. நபி (ஸல்) அவர்களின் துணைவியரான ஆயிஷா (ரலி) மற்றும் உம்மு சலமா (ரலி) ஆகியோர் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமளான் மாத்தில் (இரவில்) தாம்பத்திய உறவில் ஈடுபட்டு, பெருந்துடக்குடையவர்களாக சுப்ஹு நேரத்தை அடைவார்கள். ஸ்கலிதம் ஏற்பட்டதால் அல்ல. பின்னர் நோன்பைத் தொடருவார்கள்.
அத்தியாயம் : 13
2034. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது::
ஒரு மனிதர் (ஒரு விஷயத்தில்) தீர்ப்புக் கேட்பதற்காக நபி (ஸல்) அவர்களிடம் வந்தார். அப்போது நான் கதவுக்குப் பின்னாலிருந்து கேட்டுக்கொண்டிருந்தேன். அவர், "அல்லாஹ்வின் தூதரே! எனக்குப் பெருந்துடக்கு ஏற்பட்டிருக்கும் நிலையில் (ஃபஜ்ர்) தொழுகையின் நேரம் என்னை வந்தடைந்தால், அப்போதும் நான் நோன்பு நோற்கவேண்டுமா?" என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "எனக்குப் பெருந்துடக்கு ஏற்பட்ட நிலையில் (ஃபஜ்ர்) தொழுகைநேரம் என்னை வந்தடைகிறது. அப்போதும் நான் நோன்பைத் தொடரவே செய்கிறேன்" என்று விடையளித்தார்கள். அதற்கு அந்த மனிதர், "அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் எங்களைப் போன்றவர்கள் அல்லர். அல்லாஹ் தங்களின் முன் பின் பாவங்களை மன்னித்துவிட்டானே?" என்று சொன்னார். அதற்கு, "அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களைவிட அதிகமாக நான் அல்லாஹ்வை அஞ்சுபவனாகவும், எவற்றிலிருந்து நான் தவிர்ந்துகொள்ள வேண்டும் என்பதை உங்களைவிட அதிகமாக அறிந்தவனாகவும் இருக்கவே நான் ஆசிக்கிறேன்" என்றார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 13
2035. சுலைமான் பின் யசார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் உம்மு சலமா (ரலி) அவர்களிடம் "பெருந்துடக்குடன் காலை (சுப்ஹு) நேரத்தை அடைந்த ஒரு மனிதர் நோன்பைத் தொடரலாமா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இரவில் தாம்பத்திய உறவில் ஈடுபட்டு), பெருந்துடக்குடையவர்களாக சுப்ஹு நேரத்தை அடைவார்கள்; ஸ்கலிதம் ஏற்பட்டதால் அல்ல. பின்னர் நோன்பைத் தொடருவார்கள்" என்று விடையளித்தார்கள்.
அத்தியாயம் : 13
பாடம் : 14 நோன்பாளி ரமளான் பகலில் தாம்பத்திய உறவில் ஈடுபடுவது கடுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளது; அவ்வாறு ஈடுபட்டால் அதற்காகப் பெரிய பரிகாரம் செய்வது கடமையாகும் என்பதன் விளக்கம்; ஏழை, செல்வர் அனைவர்மீதும் அந்தப் பரிகாரம் கடமையாகும். ஆனால், ஏழைக்கு வசதி வரும்வரை அவகாசம் உண்டு.
2036. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, "நான் அழிந்துவிட்டேன், அல்லாஹ்வின் தூதரே!" என்றார். நபி (ஸல்) அவர்கள், "உமது அழிவுக்குக் காரணம் என்ன?" என்று கேட்டார்கள். "நான் ரமளானில் (நோன்பு வைத்துக்கொண்டே) என் மனைவியுடன் (பகலில்) தாம்பத்திய உறவு கொண்டுவிட்டேன்" என்று அவர் சொன்னார். நபி (ஸல்) அவர்கள், "(இதற்குப் பரிகாரமாக) ஓர் அடிமையை விடுதலைசெய்ய உம்மால் இயலுமா?" என்று கேட்டார்கள். அவர் "இல்லை" என்றார். "தொடர்ந்து இருமாதங்கள் நோன்பு நோற்க உம்மால் முடியுமா?" என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர் "இல்லை" என்றார். "அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க உம்மால் இயலுமா?" என்று நபி (ஸல்) அவர்கள் கேட்க, அவர் "இல்லை" என்று கூறிவிட்டுப் பிறகு அமர்ந்துவிட்டார்.
பின்னர் நபி (ஸல்) அவர்களிடம் பேரீச்சம் பழங்கள் உள்ள ஒரு கூடை கொண்டு வரப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் அந்த மனிதரிடம், "இதை(ப் பெற்று) தர்மம் செய்வீராக!" என்று கூறினார்கள். அவர், "எங்களைவிட ஏழையாக இருப்போருக்கா (நான் தர்மம் செய்ய வேண்டும்)? இந்நகரத்தின் இருமலைகளுக்கு இடையே எங்களைவிட மிக வறியநிலையில் எந்த வீட்டாரும் இல்லை" என்றார். உடனே நபி (ஸல்) அவர்கள் தம் கடைவாய்ப்பற்கள் தெரியச் சிரித்துவிட்டு, "நீர் (இதைப் பெற்றுச்) சென்று, உம் வீட்டாருக்கே ஊட்டுவீராக!" என்றார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "கூடை ("அரக்") என்பதற்கு "ஸன்பீல்" (பெரிய கூடை) என்று பொருள்" என இடம் பெற்றுள்ளது. மேலும், "உடனே நபி (ஸல்) அவர்கள் தம் கடைவாய்ப்பற்கள் தெரியச் சிரித்தார்கள்" எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 13
2037. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் ரமளானில் (நோன்பு வைத்துக்கொண்டு) தம் மனைவியுடன் (பகலில்) தாம்பத்திய உறவில் ஈடுபட்டு (வந்து), அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அது குறித்துத் தீர்ப்புக்கேட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(விடுதலை செய்ய) ஓர் அடிமையை நீர் பெற்றுள்ளீரா?" என்று கேட்டார்கள். அவர் "இல்லை" என்றார். "(தொடர்ந்து) இருமாதங்கள் நோன்பு நோற்க உம்மால் முடியுமா?" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர் "இல்லை" என்றார். "அவ்வாறாயின், அறுபது ஏழைகளுக்கு உணவளிப்பீராக!" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 13
2038. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "ஒரு மனிதர் ரமளானில் (பகலில் தாம்பத்திய உறவு கொண்டு) நோன்பை முறித்துவிட்டார். ஓர் அடிமையை விடுதலை செய்யுமாறு அம்மனிதருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள்" என ஹதீஸ் தொடங்குகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட (2036ஆவது) ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 13
2039. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் ரமளானில் (பகலில் தாம்பத்திய உறவு கொண்டு) நோன்பை முறித்துவிட்டார். ஓர் அடிமையை விடுதலை செய்யவேண்டும்; அல்லது (தொடர்ந்து) இரு மாதங்கள் நோன்பு நோற்கவேண்டும்; அல்லது அறுபது ஏழைகளுக்கு உணவளிக்கவேண்டும் என அவருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 13
2040. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "நான் கரிந்துபோனேன்" என்றார். "ஏன் (உமக்கு என்ன நேர்ந்தது)?" என்று அவர்கள் கேட்டார்கள். அவர், "நான் ரமளானில் பகலில் (நோன்பு நோற்றுக்கொண்டு) என் மனைவியுடன் தாம்பத்திய உறவு கொண்டுவிட்டேன்" என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "தர்மம் செய்வீராக, தர்மம் செய்வீராக!" என்று சொன்னார்கள். அவர், "என்னிடம் ஏதும் இல்லையே?" என்றார். அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அங்கேயே) அமர்ந்திருக்குமாறு உத்தரவிட்டார்கள். பின்னர் உணவுப்பொருட்கள் உள்ள இரண்டு பெரிய கூடைகள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்(து சேர்ந்)தன. அதை(ப் பெற்று) தர்மம் செய்யுமாறு அம்மனிதருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.
அத்தியாயம் : 13
2041. மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார்" என ஹதீஸ் தொடங்குகிறது. ஹதீஸின் ஆரம்பத்தில் "தர்மம் செய்வீராக, தர்மம் செய்வீராக" என்பதும் "பகலில்" எனும் குறிப்பும் இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 13
2042. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் ரமளானில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் பள்ளிவாசலுக்கு வந்து, "நான் கரிந்துபோனேன், அல்லாஹ்வின் தூதரே! நான் கரிந்துபோனேன்" என்றார். "அவருக்கு என்ன ஆயிற்று?" என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரிடம் வினவினார்கள். அவர், "நான் (நோன்பு நோற்றுக்கொண்டு) என் மனைவியுடன் (பகலில்) தாம்பத்திய உறவு கொண்டுவிட்டேன்" என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "தர்மம் செய்வீராக!" என்றார்கள்.
அவர் "அல்லாஹ்வின் மீதாணையாக! நபியே! (தர்மம் செய்ய) என்னிடம் எதுவும் இல்லை. அதற்கான சக்தியும் எனக்கு இல்லை" என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அமர்வீராக" என்றார்கள். அவர் அமர்ந்தார். அவர் அமர்ந்திருந்தபோது மற்றொரு மனிதர் ஒரு கழுதையை ஓட்டிக்கொண்டு (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம்) வந்தார். அதன் மீது உணவுப்பொருட்கள் இருந்தன. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "சற்று முன்னர் கரிந்துபோனவர் எங்கே?" என்று கேட்டார்கள். அந்த மனிதர் எழுந்து நின்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இதை(ப் பெற்று) தர்மம் செய்வீராக!" என்றார்கள். அவர், "அல்லாஹ்வின் தூதரே! எங்களைவிட்டு மற்றவர்களுக்கா (தர்மம் செய்யச் சொல்கிறீர்கள்)? அல்லாஹ்வின் மீது ஆணையாக! நாங்களே பசியோடு இருக்கிறோம். எங்களிடம் எதுவும் இல்லை?" என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவ்வாறாயின், அதை நீங்களே உண்ணுங்கள்!" என்றார்கள்.
அத்தியாயம் : 13
பாடம் : 15 ரமளான் மாதத்தில் பயணம் செய்பவர் நோன்பு நோற்பதும் நோற்காமலிருப்பதும் செல்லும்; அவரது பயணம் பாவ(நோக்க)மில்லாமல் இரண்டு நாள் பயணத்தொலைவோ அதைவிட அதிகமாகவோ இருக்கவேண்டும். (பயணத்தில்) இடையூறின்றி நோன்பு நோற்கச் சக்தி உள்ளவர் நோன்பு நோற்பதும், சிரமப்படுகின்றவர் நோன்பை விட்டுவிடுவதும் சிறந்ததாகும்.
2043. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்காவெற்றி ஆண்டில் ரமளானில் (மதீனாவிலிருந்து மக்காவிற்குப்) புறப்பட்டார்கள். அப்போது அவர்கள் நோன்பு நோற்றிருந்தார்கள். "அல்கதீத்" எனும் இடத்தை அடைந்ததும் நோன்பை விட்டுவிட்டார்கள். (பொதுவாக) நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் செயல்களில் பிந்தியதை, அடுத்து பிந்தியதையே பின்பற்றுவார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் நான்கு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் யஹ்யா பின் யஹ்யா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறுதியாகச் சொன்னதையே கடைப்பிடிக்கப்படும்" எனக் கூறியவர் யார் என்று எனக்குத் தெரியாது என சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், (பயணத்தில்) நோன்பை விடுவதே நபி (ஸல்) அவர்களின் இரு செயல்களில் இறுதியானதாக இருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் செயல்களில் இறுதியானது, அதற்கடுத்து இறுதியானது எதுவோ அதுவே எடுத்துக்கொள்ளப்படும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அந்த ஆண்டு) ரமளான் பதிமூன்றாம் நாள் காலையில் மக்காவில் இருந்தார்கள்" என்று இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே வேறோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் செயல்களில் பிந்தியதை, அடுத்து பிந்தியதையே பின்பற்றுவார்கள். பிந்தியது, முந்தியதைக் காலாவதியாக்கக்கூடியதும் இறுதி செய்யப்பட்டதுமாகும் என்று கருதுவார்கள்" என இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள் என இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் பின்வருமாறு இடம்பெற்றுள்ளது.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தில் (மதீனாவிலிருந்து மக்காவிற்குப்) பயணம் மேற்கொண்டார்கள். அப்போது அவர்கள் நோன்பு நோற்றிருந்தார்கள். "உஸ்ஃபான்" எனும் இடத்தை அடைந்ததும் குடிநீருள்ள பாத்திரத்தைக் கொண்டுவரச் சொல்லி, மக்கள் காண்பதற்காக பகல் நேரத்திலேயே அதை அருந்தி நோன்பை விட்டார்கள். இறுதியில் மக்காவிற்குள் நுழை(யும்வரை நோன்பு நோற்கமாலேயே இரு)ந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பயணத்தில்) நோன்பு நோற்றும் இருக்கிறார்கள்; நோன்பை விட்டும் இருக்கிறார்கள். எனவே, (நோன்பு நோற்க) விரும்புகின்றவர் நோன்பு நோற்கலாம்; (விட்டுவிட) விரும்புகின்றவர் விட்டுவிடவும் செய்யலாம்.
அத்தியாயம் : 13
2044. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(பயணத்தில்) நோன்பு நோற்றிருப்பவரையும் குறை கூறாதீர்; விட்டுவிட்டவரையும் குறை கூறாதீர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பயணத்தில் நோன்பு நோற்றும் இருக்கிறார்கள்; விட்டும் இருக்கிறார்கள்.
அத்தியாயம் : 13
2045. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்காவெற்றி ஆண்டில் ரமளான் மாதத்தில் மக்காவை நோக்கிப் புறப்பட்டார்கள். அப்போது அவர்கள் நோன்பு நோற்றார்கள். மக்களும் அவர்களுடன் நோன்பு நோற்றனர். "குராஉல் ஃகமீம்" எனும் இடத்தை அடைந்ததும் தண்ணீர் பாத்திரத்தைக் கொண்டுவரச் சொல்லி மக்கள் பார்க்கும் அளவுக்கு உயர்த்திக் காட்டிய பின் அருந்தினார்கள். அதன் பிறகு அவர்களிடம், "மக்களில் சிலர் நோன்புடனேயே இருக்கின்றனர்" என்று சொல்லப்பட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இத்தகையோரே (எனக்கு) மாறுசெய்பவர்கள்; இத்தகையோரே (எனக்கு) மாறுசெய்பவர்கள்" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 13
2046. மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "மக்களுக்கு நோன்பு நோற்பது சிரமமாக இருக்கிறது. நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்பதையே எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சொல்லப்பட்டது. இதையொட்டியே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அஸ்ர் தொழுகைக்குப் பின் தண்ணீர் பாத்திரத்தைக் கொண்டுவரச் சொன்னார்கள்" என்று அதிகப்படியாக இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 13
2047. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு பயணத்தில் இருந்தபோது, ஒரு மனிதர் நிழலில் தங்கவைக்கப்பட்டு, அவரைச் சுற்றிலும் மக்கள் குழுமியிருந்ததைக் கண்டார்கள். அப்போது "இவருக்கு என்ன நேர்ந்தது?" என்று கேட்டார்கள். "இவர் நோன்பு நோற்றிருக்கிறார்" என்று மக்கள் கூறினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "பயணத்தில் நீங்கள் நோன்பு நோற்பது நற்செயலில் சேராது" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு மனிதரைக் கண்டார்கள்" என்று ஹதீஸ் தொடங்குகிறது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்தே வந்துள்ளது.
அதில் ஷுஅபா (ரஹ்) அவர்கள் பின்வருமாறு அறிவித்துள்ளார்கள்: அறிவிப்பாளர் யஹ்யா பின் அபீகஸீர் (ரஹ்) அவர்கள் "அல்லாஹ் உங்களுக்கு வழங்கியுள்ள சலுகையைப் பயன் படுத்திக்கொள்ளுங்கள்" என்று (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என) அதிகப்படியாக அறிவித்தார்கள். அது பற்றி அவர்களிடம் நான் கேட்டபோது, அது அவர்களது நினைவில் இருக்கவில்லை.
அத்தியாயம் : 13
2048. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது.
நாங்கள் ரமளான் மாதம் பதினாறாவது நாள் அன்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் சேர்ந்து போர் புரிந்தோம். அப்போது எங்களில் சிலர் நோன்பு நோற்றிருந்தனர். வேறுசிலர் நோன்பு நோற்காமலிருந்தனர். அப்போது நோன்பு நோற்றிருந்தவர் நோன்பு நோற்காதவரையோ, நோன்பு நோற்காதவர் நோன்பு நோற்றவரையோ குறை சொல்லவில்லை.
அத்தியாயம் : 13
2049. மேற்கண்ட ஹதீஸ் அபூசயீத் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஐந்து அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், சுலைமான் பின் தர்கான் அத்தைமீ, உமர் பின் ஆமிர், ஹிஷாம் பின் அபீஅப்தில்லாஹ் (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில் "(ரமளான் மாதம்) பதினெட்டாவது நாள் அன்று" என்றும், சஈத் பின் அபீ அரூபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "பன்னிரண்டாவது நாள் அன்று" என்றும், ஷுஅபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "பதினேழாவது நாள், அல்லது பத்தொன்பதாவது நாள் அன்று" என்றும் இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 13
2050. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ரமளான் மாதத்தில் பயணம் செய்திருக்கிறோம். அப்போது நோன்பு நோற்றவர் நோற்றதற்காகவோ, நோன்பு நோற்காதவர் நோற்காததற்காகவோ குறை கூறப்படவில்லை.
அத்தியாயம் : 13
2051. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ரமளான் மாதத்தில் போர் புரிந்திருக்கிறோம். எங்களில் நோன்பு நோற்றவரும் இருந்தார்; நோன்பு நோற்காதவரும் இருந்தார். நோன்பு நோற்றவர் நோன்பு நோற்காதவர்மீதோ, நோன்பு நோற்காதவர் நோன்பு நோற்றவர்மீதோ அதிருப்தி கொள்ளமாட்டார். (பயணத்தில்) சக்தி இருப்பவர் நோன்பு நோற்றால் அதுவும் நன்றே;பலவீனம் உள்ளவர் நோன்பை விட்டால் அதுவும் நன்றே என்று தான் நபித்தோழர்கள் கருதினர்.
அத்தியாயம் : 13
2052. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) மற்றும் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) ஆகியோர் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நாங்கள் பயணம் செய்துள்ளோம். அப்போது, (எங்களில்) சிலர் நோன்பு நோற்பார்கள்;சிலர் நோன்பு நோற்கமாட்டார்கள். இவர்களில் யாரும் மற்றவரைக் குறை கூறமாட்டார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 13
2053. ஹுமைத் பின் அபீஹுமைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அனஸ் (ரலி) அவர்களிடம், ரமளானில் பயணத்தின்போது நோன்பு நோற்பது குறித்து வினவப்பட்டது. அதற்கு அவர்கள், "நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ரமளானில் பயணம் செய்தோம். அப்போது. நோன்பு நோற்றவர் நோன்பு நோற்காதவரையோ, நோன்பு நோற்காதவர் நோன்பு நோற்றவரையோ குறை கூறியதில்லை" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 13
2054. ஹுமைத் பின் அபீஹுமைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் (பயணம்) புறப்பட்டேன். (பயணத்தில்) நோன்பு நோற்றிருந்தேன். அப்போது மக்கள் என்னிடம், "(பயணத்தில் நோன்பு நோற்காதீர்.) பின்னர் (ஊர் திரும்பியபின்) நோற்றுக் கொள்ளுங்கள்!" என்றார்கள். அதற்கு நான், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்கள் பயணம் செய்யும்போது (சிலர் நோன்பு நோற்பர். சிலர் நோற்பதில்லை. அப்போது) நோன்பு நோற்றவர் நோன்பு நோற்காதவரையோ, நோன்பு நோற்காதவர் நோன்பு நோற்றவரையோ குறை கூறமாட்டார்" என என்னிடம் அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் என்றேன்.
பின்னர் நான் இப்னு அபீமுலைக்கா (ரஹ்) அவர்களைச் சந்தித்தபோது அவர்கள் "மேற்கண்டவாறு ஆயிஷா (ரலி) அவர்கள் என்னிடம் அறிவித்தார்கள்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 13
பாடம் : 16 பயணத்தில் நோன்பைக் கைவிட்ட ஒருவர், பொதுப்பணி ஆற்றினால் கிடைக்கும் நன்மை.
2055. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் (ஒரு) பயணத்திலிருந்தோம். அப்போது எங்களில் நோன்பு நோற்றவர்களும் இருந்தனர்; நோன்பு நோற்காதவர்களும் இருந்தனர். அப்போது வெப்பமிக்க ஒரு நாளில் ஓர் இடத்தில் இறங்கித் தங்கினோம். எங்களில் மேல்துண்டு வைத்திருந்தவரே (அன்று) அதிகமாக நிழலைப் பெற்றார். தமது கரத்தால் வெயிலை மறைத்துக் கொண்டோரும் எங்களில் இருந்தனர். நோன்பு நோற்றிருந்தவர்கள் செயலற்றுப்போயினர். நோன்பு நோற்காதிருந்தவர்கள் எழுந்து (செயல்படத் தொடங்கினர்.) கூடாரங்களை நிறுவினர்; வாகன (ஒட்டக)ங்களுக்கு நீர் புகட்டினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இன்று நோன்பு நோற்காதவர்கள் நன்மையைத் தட்டிச் சென்றுவிட்டனர்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 13
2056. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு பயணத்தில் இருந்தார்கள். அப்போது (அவர்களுடனிருந்த) சிலர் நோன்பு நோற்றனர்;வேறுசிலர் நோன்பு நோற்காமல் விட்டு விட்டனர். நோன்பு நோற்காதவர்கள் மும்முரமாகப் பணி புரிந்துகொண்டிருந்தார்கள். நோன்பு நோற்றிருந்தவர்கள் ஒருசில வேலைகளை(க் கூட)ச் செய்யமுடியாமல் பலவீனமடைந்தனர். இது தொடர்பாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இன்று நோன்பு நோற்காதவர்கள் நன்மைகளைத் தட்டிச் சென்றுவிட்டனர்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 13
2057. கஸஆ பின் யஹ்யா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடம் சென்றேன். அவர்களைச் சுற்றி நிறைய மக்கள் குழுமியிருந்தனர். (அவர்கள் மக்கள் கேட்ட கேள்விகளுக்கு விளக்கம் அளித்துக் கொண்டிருந்தார்கள்.) மக்கள் கலைந்துசென்றதும் நான், "இவர்கள் கேட்டதையெல்லாம் உங்களிடம் நான் கேட்கமாட்டேன்" என்று கூறிவிட்டு, பயணத்தில் நோன்பு நோற்பது பற்றி அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், "நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (மதீனாவிலிருந்து) மக்காவுக்குப் பயணம் செய்தோம். அப்போது நாங்கள் நோன்பு நோற்றிருந்தோம். (வழியில்) ஓரிடத்தில் இறங்கி(த் தங்கி)னோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீங்கள் உங்கள் எதிரிகளை நெருங்கிவிட்டீர்கள். இந்நிலையில் நீங்கள் நோன்பை விட்டுவிடுவதே உங்களுக்கு வலுசேர்க்கும்" என்று கூறினார்கள். இது ஒரு சலுகையாகவே இருந்தது. எனவே, எங்களில் சிலர் நோன்பு நோற்றனர்; வேறுசிலர் நோன்பை விட்டுவிட்டனர். பிறகு மற்றோர் இடத்தில் நாங்கள் இறங்கி(த் தங்கி)னோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் "நீங்கள் (நாளைக்) காலையில் எதிரிகளைச் சந்திக்கப்போகிறீர்கள்கள். இந்நிலையில் நோன்பை விட்டுவிடுவதே உங்களுக்கு வலுசேர்க்கும். எனவே, நோன்பை விட்டுவிடுங்கள்" என்று சொன்னார்கள். இது ஒரு கட்டளையாகவே இருந்தது. ஆகவே, நாங்கள் நோன்பை விட்டுவிட்டோம். அதன் பின்னர் நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பயணத்தில் நோன்பு நோற்பவர்களாகவே இருந்தோம்.
அத்தியாயம் : 13
பாடம் : 17 பயணத்தில் நோன்பு நோற்கவும் நோன்பை விட்டுவிடவும் உரிமை உண்டு.
2058. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஹம்ஸா பின் அம்ர் அல்அஸ்லமீ (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் பயணத்தில் நோன்பு நோற்பது குறித்துக் கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீர் நாடினால் நோன்பு நோற்பீராக; நாடினால் நோன்பை விட்டுவிடுவீராக!" என்றார்கள்.
அத்தியாயம் : 13
2059. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஹம்ஸா பின் அம்ர் அல்அஸ்லமீ (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதரே! நான் தொடர்ந்து நோன்பு நோற்கும் மனிதன் ஆவேன். பயணத்திலும் நான் நோன்பு நோற்கலாமா?" என்று கேட்டார்கள். அதற்கு, "நீர் நாடினால் நோன்பு நோற்பீராக! நீர் நாடினால் நோன்பை விட்டுவிடுவீராக!" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அத்தியாயம் : 13
2060. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 13
2061. மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில், "நான் (விடாமல்) நோன்பு நோற்கும் மனிதன் ஆவேன். பயணத்தில் நான் நோன்பு நோற்கலாமா?" என்று ஹம்ஸா பின் அம்ர் (ரலி) அவர்கள் கேட்டார்கள் என ஹதீஸ் தொடங்குகிறது.
அத்தியாயம் : 13
2062. ஹம்ஸா பின் அம்ர் அல்அஸ்லமீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான், "அல்லாஹ்வின் தூதரே! பயணத்தில் நோன்பு நோற்க எனக்குச் சக்தி உண்டு என நான் உணர்கிறேன். (அவ்வாறு நோன்பு நோற்பது) என்மீது குற்றமாகுமா?" என்று கேட்டேன். அதற்கு "இது அல்லாஹ்விடமிருந்து (வந்துள்ள) சலுகையாகும். யார் அதைப் பயன்படுத்திக் கொள்கிறாரோ அது நல்லதே. (பயணத்தில்) நோன்பு நோற்க விரும்புகின்றவர் மீதும் குற்றம் இல்லை" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில், ஹாரூன் பின் சஈத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "இது சலுகையாகும்" என்றே இடம்பெற்றுள்ளது. "அல்லாஹ்விடமிருந்து” எனும் குறிப்பு இல்லை.
அத்தியாயம் : 13
2063. அபுத்தர்தா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ரமளான் மாதத்தில் கடுமையான வெப்பத்தில் (பயணம்) புறப்பட்டோம். கடும் வெப்பம் காரணமாக எங்களில் சிலர் தமது கையைத் தமது தலைமீது வைத்து (மறைத்து)க்கொண்டனர். அப்(பயணத்தின்) போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களையும் அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி) அவர்களையும் தவிர எங்களில் வேறு யாரும் நோன்பு நோற்றிருக்கவில்லை.
அத்தியாயம் : 13
2064. அபுத்தர்தா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மேற்கொண்ட பயணமொன்றில் கடுமையான வெப்பமுள்ள நாளில் அவர்களுடன் நாங்களும் இருந்தோம். கடும் வெப்பத்தின் காரணமாக சிலர் தமது கையைத் தமது தலைமீது வைத்து(மறைத்து)க்கொண்டனர். அப்(பயணத்தின்) போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களையும் அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி) அவர்களையும் தவிர வேறு யாரும் நோன்பு நோற்றிருக்கவில்லை.
அத்தியாயம் : 13
பாடம் : 18 அரஃபா (துல்ஹஜ் 9ஆவது) நாளில் "அரஃபாத்"தில் தங்கும் ஹாஜிகள் நோன்பு நோற்காமலிருப்பது விரும்பத்தக்கதாகும்.
2065. உம்முல் ஃபள்ல் பின்த் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இன்று நோன்பு நோற்றிருக்கிறார்களா?" என்று "அரஃபா" நாளில் எனக்கருகே மக்கள் சிலர் விவாதித்தனர். சிலர் "அவர்கள் நோன்பு வைத்திருக்கிறார்கள்" என்றனர். மற்றும் சிலர் "அவர்கள் நோன்பு வைக்கவில்லை" என்றனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் பால் கோப்பை ஒன்றை நான் கொடுத்தனுப்பினேன்; அப்போது அவர்கள் "அரஃபா" பெருவெளியில் ஒட்டகத்தின் மேல் இருந்தார்கள். அதை அவர்கள் அருந்தி (தாம் நோன்பாளியல்ல என்பதை உணர்த்தி)னார்கள்.
இதை அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்களின் அடிமையாயிருந்த உமைர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில், "அவர்கள் ஒட்டகத்தின் மேல் இருந்தார்கள்" எனும் குறிப்பு இல்லை. "உம்முல் ஃபள்ல் (ரலி) அவர்களின் அடிமையாயிருந்த உமைர் (ரஹ்) அவர்கள் இதை அறிவிக்கிறார்கள்" என்று இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதிலும், "உம்முல் ஃபள்ல் (ரலி) அவர்களின் அடிமையாயிருந்த உமைர் (ரஹ்) அவர்கள் அறிவித்தார்கள்" என்றே இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 13
2066. உம்முல் ஃபள்ல் (ரலி) அவர்கள் கூறியதாவது:
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அரஃபா" நாளில் நோன்பு நோற்றிருக்கிறார்களா" என்று நபித்தோழர்களில் சிலர் சந்தேகம் தெரிவித்தனர். (அன்றைய தினம்) நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அரஃபாவில் இருந்தோம். அரஃபாவிலிருந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் பாலிருந்த ஒரு கிண்ணத்தை நான் கொடுத்தனுப்பினேன். அதை அவர்கள் அருந்தினார்கள்.
அத்தியாயம் : 13
2067. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் மைமூனா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அரஃபா நாளில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கிறார்களா என்பதில் மக்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டது. அரஃபாவில் தங்கியிருந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் பால் பாத்திரத்தைக் கொடுத்தனுப்பினேன். மக்கள் பார்த்துக் கொண்டிருக்க, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதிலிருந்து அருந்தினார்கள்.
அத்தியாயம் : 13
பாடம் : 19 ஆஷூரா (முஹர்ரம் பத்தாவது) நாளில் நோன்பு நோற்றல்.
2068. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அறியாமைக் காலத்தில் குறைஷியர் ஆஷூரா (முஹர்ரம் பத்தாவது நாள்) அன்று நோன்பு நோற்றுவந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அந்நாளில் நோன்பு நோற்று வந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு நாடு துறந்து சென்றதும் (அங்கும்) ஆஷூரா நோன்பு நோற்றார்கள்; அந்நாளில் நோன்பு நோற்குமாறு (மக்களையும்) பணித்தார்கள். ரமளான் நோன்பு கடமையாக்கப்பட்டதும், நாடியவர் ஆஷூரா நோன்பு நோற்கலாம்; நாடியவர் அதை விட்டுவிடலாம்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அத்தியாயம் : 13
2069. மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அந்நாளில் நோன்பு நோற்று வந்தார்கள்" எனும் குறிப்பு ஹதீஸின் ஆரம்பத்தில் இடம்பெறவில்லை. ஹதீஸின் இறுதியில் "(ரமளான் நோன்பு கடமையாக்கப்பட்டதும்) முஹர்ரம் பத்தாவது நாளில் (ஆஷூரா) நோன்பு நோற்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விட்டுவிட்டார்கள்" என்று இடம்பெற்றுள்ளது. எனவே,நாடியவர் அந்நாளில் நோன்பு நோற்றனர்; நாடியவர் அதை விட்டுவிட்டனர்" என்றே இடம்பெற்றுள்ளது. ("நாடியவர் நோற்கலாம்;நாடியவர் விட்டு விடலாம்" என) நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இல்லை.
- ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அறியாமைக் காலத்தில் முஹர்ரம் பத்தாவது நாள் (ஆஷூரா) அன்று நோன்பு நோற்கப் பட்டுவந்தது. இஸ்லாம் வந்தபோது விரும்பியவர் அந்த நோன்பை நோற்றனர்; (விட்டுவிட) விரும்பியவர் அதை விட்டுவிட்டனர்.
அத்தியாயம் : 13
2070. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ரமளான் நோன்பு கடமையாக்கப்படுவதற்கு முன்பு (ஆஷூரா நாள்) அன்று நோன்பு நோற்குமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டுவந்தார்கள். ரமளான் நோன்பு கடமையாக்கப்பட்டதும் நாடியவர் ஆஷூரா நாளன்று நோன்பு நோற்றனர்;நாடியவர் (அதை) விட்டுவிட்டனர்.
அத்தியாயம் : 13
2071. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அறியாமைக் காலத்தில் குறைஷியர் முஹர்ரம் பத்தாவது நாளில் (ஆஷூரா) நோன்பு நோற்றுவந்தனர். ரமளான் நோன்பு கடமையாக்கப்படும்வரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் ஆஷூரா நாளில் நோன்பு நோற்குமாறு கட்டளையிட்டார்கள். (ரமளான் நோன்பு கடமையாக்கப்பட்ட) பின்னர் "முஹர்ரம் பத்தாவது நாளில் விரும்பியவர் (ஆஷூரா) நோன்பு நோற்கட்டும்; (விட்டுவிட) விரும்பியவர் அதை விட்டுவிடட்டும்!" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 13
2072. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அறியாமைக் கால மக்கள் (குறைஷியர்) முஹர்ரம் பத்தாவது நாள் (ஆஷூரா) அன்று நோன்பு நோற்றுவந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் முஸ்லிம்களும் ரமளான் நோன்பு கடமையாக்கப்படுவதற்கு முன்புவரை முஹர்ரம் பத்தாவது நாளில் நோன்பு நோற்றனர். ரமளான் நோன்பு கடமையாக்கப்பட்டதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "முஹர்ரம் பத்தாவது நாள் அல்லாஹ்வின் நாட்களில் ஒரு நாளாகும். நாடியவர் அந்நாளில் நோன்பு நோற்கலாம்; நாடியவர் அ(ந்நாளில் நோன்பு நோற்ப)தை விட்டுவிடலாம்" என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 13
2073. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அருகில் முஹர்ரம் பத்தாவது நாள் (ஆஷூரா) குறித்துப் பேசப்பட்டது. அப்போது, "அது, அறியாமைக் காலத்தார் நோன்பு நோற்ற தினமாகும். உங்களில் அன்றையதினம் நோன்பு நோற்க விரும்புகின்றவர் நோன்பு நோற்கட்டும்! விரும்பாதவர் நோன்பை விட்டுவிடட்டும்!" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 13
2074. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
முஹர்ரம் பத்தாவது நாள் (ஆஷூரா) குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இது, அறியாமைக் காலத்தார் நோன்பு நோற்றுவந்த தினமாகும். விரும்புகின்றவர் அந்நாளில் நோன்பு நோற்கட்டும்; அதை விட்டுவிட விரும்புகின்றவர் விட்டுவிடட்டும்!" என்றார்கள்.
இதன் அறிவிப்பாளர் நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், தாம் நோற்கும் வேறு ஏதேனும் நோன்பு அந்நாளில் தற்செயலாக அமைந்தால் தவிர, முஹர்ரம் பத்தாவது நாளன்று நோன்பு நோற்கமாட்டார்கள்.
அத்தியாயம் : 13
2075. மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் முஹர்ரம் பத்தாவது நாளில் (ஆஷூரா) நோன்பு நோற்பது குறித்துப் பேசப்பட்டது" என்று ஹதீஸ் தொடங்குகிறது. மற்றபடி மேற்கண்ட ஹதீஸிலுள்ள தகவல்கள் (அனைத்தும்) அப்படியே இதிலும் இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 13
2076. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அருகில் முஹர்ரம் பத்தாவது நாள் (ஆஷூரா) குறித்துப் பேசப்பட்டது. அப்போது, "அது, அறியாமைக் காலத்தார் நோன்பு நோற்றுவந்த நாளாகும். எனவே, நாடுகின்றவர் அந்நாளில் நோன்பு நோற்கலாம்;நாடுகின்றவர் அதை விட்டுவிடலாம்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள்.
அத்தியாயம் : 13
2077. அஷ்அஸ் பின் கைஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள் காலை உணவு உண்டுகொண்டிருந்தார்கள். மேலும் அவர்கள், "அபூமுஹம்மதே, சாப்பிட வாருங்கள்" என்று (என்னிடம்) கூறினார்கள். நான், "இன்று ஆஷூரா (முஹர்ரம் பத்தாவது) நாளல்லவா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "ஆஷூரா நாள் எ(த்தகைய)து என்று நீர் அறிவீரா?" என்று கேட்டார்கள். "அது என்ன நாள்?" என்று கேட்டேன். அவர்கள், "அது ரமளான் நோன்பு கடமையாவதற்கு முன்பு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றுவந்த நாளாகும். ரமளான் நோன்பு கடமையானபோது, அந்த நோன்பு (கட்டாயம் நோற்கப்பட வேண்டும் எனும் விதி) கைவிடப்பட்டது" என்று சொன்னார்கள்.
இதை அப்துர் ரஹ்மான் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில், அபூகுறைப் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "அந்த நோன்பை (அல்லாஹ்வின் தூதர்-ஸல்) அவர்கள் கைவிட்டார்கள்" என்று இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில், "ரமளான் நோன்பு கடமையானபோது, அந்த (ஆஷூரா) நோன்பை (அல்லாஹ்வின் தூதர் - ஸல்) அவர்கள் கைவிட்டார்கள்" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 13
2078. அஷ்அஸ் பின் கைஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
முஹர்ரம் பத்தாவது நாள் (ஆஷூரா) அன்று நான் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். (என்னைக் கண்டதும்) அவர்கள், "அபூமுஹம்மதே, அருகில் வந்து நீங்களும் உண்ணுங்கள்" என்றார்கள். "நான் நோன்பு நோற்றிருக்கிறேன்" என்று நான் சொன்னேன். அவர்கள், "நாங்கள் (ஆரம்பக் காலத்தில்) அந்நாளில் நோன்பு நோற்றோம். பின்னர் அந்த நோன்பு கைவிடப்பட்டது" என்றார்கள்.
இதைக் கைஸ் பின் சகன் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 13
2079. அஷ்அஸ் பின் கைஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் முஹர்ரம் பத்தாவது நாள் (ஆஷூரா) அன்று அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். நான், "அபூ அப்திர் ரஹ்மான், இன்று முஹர்ரம் பத்தாவது நாள் (ஆஷூரா) ஆயிற்றே?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "ரமளான் நோன்பு கடமையாவதற்கு முன்பு (ஆஷூரா நாளில்) நோன்பு நோற்கப்பட்டுவந்தது. ரமளான் நோன்பு கடமையானபோது அந்த (ஆஷூரா) நோன்பு கைவிடப்பட்டது. ஆகவே, நீங்கள் நோன்பை விட்டுவிட விரும்பினால் நீங்களும் (என்னுடன்) சாப்பிடலாம்" என்றார்கள்.
இதை அல்கமா (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 13
2080. ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
முஹர்ரம் பத்தாவது நாளில் (ஆஷூரா) நோன்பு நோற்குமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டு வந்தார்கள்; அந்நோன்பை நோற்குமாறு எங்களை ஊக்குவிக்கவும் செய்வார்கள். அந்த நாளில் (நாங்கள் நோன்பு நோற்கிறோமா என) எங்களைக் கவனித்தும் வந்தார்கள். ரமளான் நோன்பு கடமையாக்கப்பட்டபோது, (ஆஷூரா நோன்பு நோற்குமாறு) எங்களுக்குக் கட்டளையிடவுமில்லை; எங்களுக்குத் தடைவிதிக்கவுமில்லை; அந்த நாளில் எங்களைக் கவனிக்கவுமில்லை.
அத்தியாயம் : 13
2081. ஹுமைத் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
முஆவியா பின் அபீசுஃப்யான் (ரலி) அவர்கள் ஒரு முறை (சிரியாவிலிருந்து) மதீனாவிற்கு வந்தபோது, முஹர்ரம் பத்தாவது நாள் (ஆஷூரா) அன்று மக்களுக்கு உரையாற்றினார்கள். அப்போது "மதீனாவாசிகளே, உங்கள் அறிஞர்கள் எங்கே? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இது, முஹர்ரம் பத்தாவது நாள் (ஆஷூரா) ஆகும்; இந்நாளில் நோன்பு நோற்பதை அல்லாஹ் உங்களுக்குக் கடமையாக்கவில்லை. நான் நோன்பு நோற்றிருக்கிறேன். உங்களில் நோன்பு நோற்க விரும்புகின்றவர் நோன்பு நோற்கட்டும்; விட்டுவிட விரும்புகின்றவர் விட்டுவிடட்டும்!" என்று கூறியதை நான் செவியுற்றுள்ளேன் என்றார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில், "இது போன்ற (ஆஷூரா) நாளில் நபி (ஸல்) அவர்கள் "நான் நோன்பு நோற்றுள்ளேன். எனவே, நோன்பு நோற்க விரும்புகின்றவர் நோன்பு நோற்கட்டும்" என்று கூறியதாக இடம் பெற்றுள்ளது. மற்ற தகவல்கள் காணப்படவில்லை.
அத்தியாயம் : 13
2082. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (நாடு துறந்து) மதீனாவுக்கு வந்தபோது, யூதர்கள் முஹர்ரம் பத்தாவது நாளில் (ஆஷூரா) நோன்பு நோற்பதைக் கண்டார்கள். இது குறித்து யூதர்களிடம் வினவப்பட்டபோது, "இந்த நாளில்தான் (இறைத்தூதர்) மூசா (அலை) அவர்களுக்கும் பனூ இஸ்ராயீல் சமுதாயத்தாருக்கும் பிர்அவ்னுக்கெதிராக இறைவன் வெற்றியளித்தான். எனவே,இந்நாளைக் கண்ணியப்படுத்தும் முகமாகவே நாங்கள் இந்நாளில் நோன்பு நோற்கிறோம்" என யூதர்கள் கூறினர். அப்போது நபி (ஸல்) அவர்கள், "உங்களைவிட மூசாவுக்கு அதிக நெருக்கமுடையவர்கள் நாங்களே" என்று கூறிவிட்டு, ஆஷூரா நோன்பு நோற்குமாறு கட்டளையிட்டார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில், "எனவே யூதர்களிடம் அது பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள்" என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 13
2083. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனா வந்தபோது, யூதர்கள் முஹர்ரம் பத்தாவது நாளில் (ஆஷூரா) நோன்பு நோற்றிருப்பதைக் கண்டார்கள். "நீங்கள் நோன்பு நோற்றிருக்கும் இது என்ன நாள்?" என்று கேட்டார்கள். அதற்கு யூதர்கள், "இது ஒரு மகத்தான நாள்; இந்த நாளில்தான் மூசாவையும் அவருடைய சமுதாயத்தாரையும் இறைவன் காப்பாற்றி, ஃபிர்அவ்னையும் அவனுடைய சமுதாயத்தாரையும் (செங்கடலில்) மூழ்கடித்தான். எனவே, மூசா (அலை) அவர்கள் (இறைவனுக்கு) நன்றி தெரிவிக்கும் முகமாக (இந்நாளில்) நோன்பு நோற்றார்கள். ஆகவே, நாங்களும் இந்நாளில் நோன்பு நோற்கிறோம்" என்று கூறினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உங்களைவிட நாங்களே மூசா (அலை) அவர்களுக்கு மிகவும் உரியவர்களும் நெருக்கமானவர்களும் ஆவோம்" என்று கூறினார்கள். பின்னர், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அந்நாளில்) தாமும் நோன்பு நோற்று, நோன்பு நோற்குமாறு (மக்களுக்குக்) கட்டளையுமிட்டார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 13
2084. அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
முஹர்ரம் பத்தாவது நாளை (ஆஷூரா) யூதர்கள் கண்ணியப்படுத்தியும் பண்டிகை நாளாகக் கொண்டாடியும் வந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எங்களிடம்), "இந்நாளில் நீங்களும் நோன்பு நோறுங்கள்!" என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 13
2085. மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் பின்வருமாறு இடம்பெற்றுள்ளது:
அபூமூசா (ரலி) அவர்கள் கூறினார்கள்: கைபர்வாசிகள் (யூதர்கள்) முஹர்ரம் பத்தாவது நாளில் (ஆஷூரா) நோன்பு நோற்றுவந்தனர்; அந்நாளை அவர்கள் பண்டிகை நாளாகக் கொண்டாடினர்; தங்களுடைய பெண்களுக்கு அந்நாளில் ஆபரணங்களையும் அழகிய ஆடைகளையும் அவர்கள் அணிவித்தனர். எனவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எங்களிடம்) "இந்நாளில் நீங்களும் நோன்பு நோறுங்கள்!" என்றார்கள்.
அத்தியாயம் : 13
2086. உபைதுல்லாஹ் பின் அபீயஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் முஹர்ரம் பத்தாவது நாள் (ஆஷூரா) நோன்பு பற்றி வினவப்பட்டது. அதற்கு அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நாட்களிலேயே இந்த (ஆஷூரா) நாளையும் மாதங்களிலேயே இந்த -ரமளான்- மாதத்தையும் தவிர வேறெதையும் சிறப்பாகத் தேர்ந்தெடுத்து நோன்பு நோற்றதாக நான் அறியவில்லை" என்று விடையளித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 13
பாடம் : 20 ஆஷூரா நோன்பை எந்த நாளில் நோற்க வேண்டும்?
2087. அல்ஹகம் பின் அல்அஃரஜ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் "ஸம்ஸம்" கிணற்றுக்கருகில் தமது மேல்துண்டைத் தலையணையாக வைத்துச் சாய்ந்திருந்தபோது அவர்களிடம் நான் சென்றேன். "ஆஷூரா நோன்பு பற்றி எனக்குச் சொல்லுங்கள்!" என அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், "முஹர்ரம் மாதத்தின் (முதல்) பிறையை நீர் கண்டதும் (அன்றிலிருந்து நாட்களை) எண்ணிக்கொள்வீராக! ஒன்பதாவது நாள் காலையில் நீர் நோன்பாளியாக இருப்பீராக!" என்று சொன்னார்கள். "இவ்வாறுதான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த (ஆஷூரா) நோன்பை நோற்றார்களா?" என்று நான் கேட்டேன். அதற்கு, "ஆம்" என்று அவர்கள் விடையளித்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "ஸம்ஸம் கிணற்றுக்கருகில் தமது மேல்துண்டைத் தலையணையாக்கிச் சாய்ந்திருந்த இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் நான் ஆஷூரா நோன்பு பற்றிக் கேட்டேன்" என ஹதீஸ் தொடங்குகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 13
2088. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆஷூரா நாளில் தாமும் நோன்பு நோற்று, நோன்பு நோற்குமாறு (மக்களுக்கும்) கட்டளையிட்டார்கள். அப்போது மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! இது யூதர்களும் கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்தும் நாளாயிற்றே?" என்று வினவினர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்) அடுத்த ஆண்டில் நாம் (முஹர்ரம்) ஒன்பதாவது நாளில் நோன்பு நோற்போம்" என்று கூறினார்கள். ஆனால், அடுத்த ஆண்டு வருவதற்குள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்துவிட்டார்கள்.
அத்தியாயம் : 13
2089. மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "அடுத்த ஆண்டுவரை நான் உயிரோடிருந்தால் ஒன்பதாவது நாளில் நோன்பு நோற்பேன்" என்று இடம்பெற்றுள்ளது. அபூபக்ர் பின் அபீஷைபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில்" அதாவது ஆஷூரா நாளில்" எனும் குறிப்புடன் இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 13
பாடம் : 21 ஆஷூரா நாளில் (நோன்பு நோற்காமல்) சாப்பிட்டுவிட்டவர், அன்றைய தினத்தின் எஞ்சிய பகுதியில் உண்பதைத் தவிர்க்கட்டும்!
2090. சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆஷூரா நாளன்று "அஸ்லம்" குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதரை அனுப்பி, "(இன்று) நோன்பு நோற்காமலிருப்பவர், நோன்பு நோற்கட்டும்; சாப்பிட்டுவிட்டவர், இரவுவரை தமது நோன்பை நிறைவு செய்யட்டும்" என்று மக்களிடையே அறிவிக்குமாறு உத்தரவிட்டார்கள்.
அத்தியாயம் : 13
2091. ருபய்யிஉ பின்த் முஅவ்வித் பின் அஃப்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆஷூரா (முஹர்ரம் பத்தாவது) நாளன்று காலையில் மதீனா புறநகரிலுள்ள அன்சாரிகளின் கிராமங்களுக்கு ஆளனுப்பி "(இன்று) காலையில் நோன்பாளியாக இருப்பவர், தமது நோன்பைத் தொடரட்டும்;நோன்பு நோற்காமல் காலைப் பொழுதை அடைந்தவர் இன்றைய தினத்தின் எஞ்சிய பொழுதை (நோன்பிருந்து) நிறைவு செய்யட்டும்" என்று அறிவிக்கச்செய்தார்கள்.
நாங்கள் அதன் பின்னர் அந்நாளில் நோன்பு நோற்கலானோம்; எங்கள் சிறுவர்களையும் -அல்லாஹ் நாடினால்- நோன்பு நோற்கச்செய்வோம். நாங்கள் பள்ளிவாசலுக்குச் செல்லும்போது, கம்பளியாலான விளையாட்டுப் பொருட்களை அவர்களுக்காகச் செய்து, அவர்களில் ஒருவன் (பசியால்) உணவு கேட்டு அழும்போது நோன்பு துறக்கும் நேரம்வரை (அவன் பசியை மறந்திருப்பதற்காக) அவனிடம் அந்த விளையாட்டுப் பொருளைக் கொடுப்போம்.
அத்தியாயம் : 13
2092. காலித் பின் தக்வான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ருபய்யிஉ பின்த் முஅவ்வித் (ரலி) அவர்களிடம், ஆஷூரா (முஹர்ரம் பத்தாவது நாள்) நோன்பு பற்றிக்கேட்டேன். அப்போது அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அன்சாரிகளின் கிராமங்களுக்குத் தம் தூதுவர்களை அனுப்பினார்கள்" என்று கூறியதாக மேற்கண்ட ஹதீஸ் தொடங்குகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
இருப்பினும், அதில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது: நாங்கள் கம்பளியாலான விளையாட்டுப் பொருட்களை அவர்களுக்காகத் தயார்செய்து, அவற்றை எங்களுடன் எடுத்துச்செல்வோம். சிறுவர்கள் எங்களிடம் உணவு கேட்பார்களானால், விளையாட்டுப் பொருளைக் கொடுத்து, அவர்கள் நோன்பை நிறைவு செய்யும்வரை கவனத்தைத் திசைதிருப்புவோம்.
அத்தியாயம் : 13
பாடம் : 22 நோன்புப் பெருநாள் மற்றும் ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரு தினங்களில் நோன்பு நோற்பதற்கு வந்துள்ள தடை.
2093. அப்துர் ரஹ்மான் பின் அஸ்ஹர் (ரஹ்) அவர்களின் அடிமையாயிருந்த சஅத் பின் உபைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் (ஹஜ்ஜுப்) பெருநாள் தொழுகையில் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களுடன் கலந்துகொண்டேன். அவர்கள் வந்து (முதலில்) தொழுதுவிட்டுப் பின்னர் திரும்பி மக்களுக்கு உரையாற்றினார்கள். அப்போது பின்வருமாறு குறிப்பிட்டார்கள்:
இவ்விரு நாட்களிலும் நோன்பு நோற்கக் கூடாதென அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடைவிதித்துள்ளார்கள். ஒன்று,உங்கள் நோன்பிலிருந்து நீங்கள் விடுபடும் நோன்புப் பெருநாள் ஆகும். மற்றொன்று உங்கள் குர்பானிப் பிராணிகளின் இறைச்சியை நீங்கள் உண்ணும் (ஹஜ்ஜுப்) பெருநாள் ஆகும்.
அத்தியாயம் : 13
2094. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள், நோன்புப் பெருநாள் ஆகிய இரு தினங்களில் நோன்பு நோற்கக் கூடாதெனத் தடைவிதித்தார்கள்.
அத்தியாயம் : 13
2095. கஸஆ பின் யஹ்யா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அபூசயீத் (ரலி) அவர்களிடமிருந்து ஒரு ஹதீஸை நான் செவியுற்றேன். அது எனக்கு வியப்பூட்டவே, "இதை நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றீர்களா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுறாத ஒன்றை அவர்கள் கூறியதாகச் சொல்வேனா? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "ஹஜ்ஜுப் பெருநாள் மற்றும் நோன்புப் பெருநாள் ஆகிய இரு தினங்களில் நோன்பு நோற்பது தகாது" என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்" என்றார்கள்.
அத்தியாயம் : 13
2096. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாள் மற்றும் குர்பானி செய்யும் (ஹஜ்ஜுப் பெரு)நாள் ஆகிய இரு தினங்களில் நோன்பு நோற்க வேண்டாமெனத் தடை விதித்தார்கள்.
இதை யஹ்யா பின் உமாரா (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 13
2097. ஸியாத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் இப்னு உமர் (ரலி) அவர்களிடம் வந்து, "நான் ஒரு நாள் நோன்பு நோற்க நேர்ச்சை செய்துள்ளேன். அது ஹஜ்ஜுப் பெருநாளாக, அல்லது நோன்புப் பெருநாளாக அமைந்துவிட்டது" என்று சொன்னார். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள்,உயர்ந்தோன் அல்லாஹ் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றுமாறு கட்டளையிட்டுள்ளான். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த நாளில் நோன்பு நோற்பதைத் தடை விதித்துள்ளார்கள்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 13
2098. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாள் மற்றும் ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரு தினங்களில் நோன்பு நோற்க வேண்டாமெனத் தடைவிதித்தார்கள்.
அத்தியாயம் : 13
பாடம் : 23 "அய்யாமுத் தஷ்ரீக்" (துல்ஹஜ் 11, 12, 13 ஆகிய) நாட்களில் நோன்பு நோற்பதற்கு வந்துள்ள தடை.
2099. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"அய்யாமுத் தஷ்ரீக்" (எனும் ஹஜ்ஜுப் பெருநாளுக்கு அடுத்த மூன்று) நாட்கள், உண்பதற்கும் பருகுவதற்கும் உரிய நாட்களாகும்.
இதை நுபைஷா பின் அம்ர் பின் அவ்ஃப் அல்ஹுதலீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் நுபைஷா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "அறிவிப்பாளர் காலித் அல்ஹத்தா (ரஹ்) அவர்கள், நான் எனக்கு இந்த ஹதீஸை அறிவித்த அபுல்மலீஹ் (ரஹ்) அவர்களைச் சந்தித்தபோது, அவர்களிடம் அதைப் பற்றிக் கேட்டேன். அப்போது மேற்கண்ட ஹதீஸை அவர்கள் எனக்கு அறிவித்தார்கள். மேலும், ("பருகுவதற்கும்" என்பதற்குப் பின்னால்) "இறைவனை நினைவுகூர்(ந்து திக்ர் செய்)வதற்கும் உரிய நாளாகும்" என்பதை அதிகப்படியாக அறிவித்தார்கள்" என்று கூறியதாக இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 13
2100. கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னையும் அவ்ஸ் பின் அல்ஹதஸான் (ரலி) அவர்களையும் "அய்யாமுத் தஷ்ரீக்" நாட்களில் அனுப்பி, "இறைநம்பிக்கையாளரைத் தவிர வேறெவரும் சொர்க்கத்தில் நுழையமாட்டார்; "மினா"வின் நாட்கள் உண்பதற்கும் பருகுவதற்கும் உரிய நாட்களாகும்" என (மக்களிடையே) அறிவிக்கச் செய்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் "எங்கள் இருவரையும் அறிவிக்கச் செய்தார்கள்" எனும் வாசகம் இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 13
பாடம் : 24 வெள்ளிக்கிழமை (ஒரு நாள்) மட்டும் நோன்பு நோற்பது விரும்பத்தக்கதன்று.
2101. முஹம்மத் பின் அப்பாத் பின் ஜஅஃபர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இறையில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வந்துகொண்டிருந்த ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடம் நான், "வெள்ளிக்கிழமை (ஒரு நாள் மட்டும்) நோன்பு நோற்க வேண்டாமென அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடைசெய்தார்களா?" என்று கேட்டேன். அதற்கு "ஆம், இந்த இல்லத்தின் அதிபதிமீது ஆணையாக!" என்று ஜாபிர் (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 13
2102. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் வெள்ளிக்கிழமைக்கு முன்பு ஒரு நாள், அல்லது பின்பு ஒரு நாளைச் சேர்க்காமல் (தனியாக) வெள்ளியன்று மட்டும் நோன்பு நோற்கவேண்டாம்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 13
2103. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இரவுகளில் வெள்ளிக்கிழமை இரவைமட்டும் இரவுத் தொழுகைக்காகத் தேர்ந்தெடுக்காதீர்கள். தினங்களில் வெள்ளிக்கிழமை தினத்தை மட்டும் நோன்பு நோற்பதற்காகத் தேர்ந்தெடுக்காதீர்கள்; உங்களில் ஒருவர் (வழக்கமாக) நோன்பு நோற்கும் நாள் வெள்ளிக்கிழமையாக அமைந்துவிட்டால் தவிர!
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 13
பாடம் : 25 "நோன்பு நோற்கச் சக்தி பெற்றவர்கள் (நோற்காமல் விட்டுவிட்டால்) அதற்குப் பரிகாரமாக ஓர் ஏழைக்கு உணவளிப்பது கடமையாகும்" எனும் (2:184ஆவது) இறைவசன(த்தின் சட்ட)ம், "உங்களில் (ரமளான் எனும்) அந்த மாதத்தை அடைந்தவர் அதில் நோன்பு நோற்கட்டும்" எனும் (2:185ஆவது) வசனத்தின் மூலம் மாற்றப்பட்டுவிட்டது என்பதன் விளக்கம்.
2104. சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:
"நோன்பு நோற்பதற்குச் சக்தி உள்ளவர்கள் (நோன்பு நோற்காமல் விட்டுவிட்டால்) அதற்குப் பரிகாரமாக ஓர் ஏழைக்கு உணவளிக்கவேண்டும்" எனும் இந்த (2:184ஆவது) வசனம் அருளப்பெற்றபோது, நாடியவர் நோன்பு நோற்காமல் விட்டுவிட்டுப் பரிகாரம் செய்துவந்தார். பின்னர் இதை மாற்றி இதற்குப் பின்னுள்ள ("உங்களில் அந்த மாதத்தை அடைந்தவர் அதில் நோன்பு நோற்கட்டும்"என்ற 2:185ஆவது) வசனம் அருளப்பெற்றது.
அத்தியாயம் : 13
2105. சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் ரமளான் மாதத்தில் நாடினால் நோன்பு நோற்போம்; நாடினால் நோன்பு நோற்காமல் விட்டுவிட்டு, அதற்குப் பரிகாரமாக ஓர் ஏழைக்கு உணவளித்து வந்தோம். இறுதியில் (அந்த நடைமுறையை மாற்றுகின்ற) "உங்களில் அந்த மாதத்தை அடைந்தவர் அதில் நோன்பு நோற்கட்டும்" எனும் இந்த (2:185ஆவது) வசனம் அருளப்பெற்றது.
அத்தியாயம் : 13
பாடம் : 26 ரமளானில் விடுபட்ட நோன்பை ஷஅபான் மாதத்தில் "களா"ச் செய்தல்.
2106. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
எனக்கு ரமளானில் சில நோன்புகள் விடுபட்டுவிடும். அவற்றை ஷஅபான் மாதத்தில் தவிர வேறெதிலும் என்னால் (களாவாக) நிறைவேற்றமுடியாது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பணிவிடையில் ஈடுபட்டதே இதற்குக் காரணம்.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரஹ்) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. ஆயினும் அதில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (உடைய தேவைகளைக் கவனிக்க வேண்டி) இருந்ததே காரணம்" என்று இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் யஹ்யா (ரஹ்) அவர்களிடமிருந்தே இன்னோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "நபி (ஸல்) அவர்களிடம் ஆயிஷா (ரலி) அவர்களுக்கு இருந்த (பணி) நிலையே அதற்குக் காரணம் என நான் எண்ணுகிறேன்" என யஹ்யா (ரஹ்) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பணிவிடையில் ஈடுபட்டது பற்றிய குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 13
2107. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் (அவர்களுடைய துணைவியரான) எங்களில் ஒருவருக்கு ரமளான் நோன்பு தவறிவிடும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (இருந்ததால்) அதை அவரால் ஷஅபான் மாதம் வராதவரை "களா"ச் செய்ய முடியாது.
அத்தியாயம் : 13
பாடம் : 27 இறந்துபோனவர் சார்பாக (அவர் தவறவிட்ட) நோன்பைக் "களா"ச் செய்வது.
2108. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நோன்பை நிறைவேற்ற வேண்டிய ஒருவர் இறந்துவிட்டால், அவர் சார்பாக அவருடைய பொறுப்பாளர் (உறவினர்) நோன்பு நோற்பார்.
இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 13
2109. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு பெண்மணி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "என் தாயாருக்கு ஒரு மாத நோன்பு கடமையிருந்த நிலையில் இறந்துவிட்டார். (அவர் சார்பாக நான் நோன்பு நோற்கலாமா?)" என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவர் மீது கடன் ஏதும் இருந்தால் அதை நீ நிறைவேற்றுவாய் அல்லவா?" என்று கேட்டார்கள். அதற்கு அவர் "ஆம்" என்றார். "அவ்வாறாயின், நிறைவேற்றுவதற்கு மிகவும் தகுதிவாய்ந்தது அல்லாஹ்வின் கடனே" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அத்தியாயம் : 13
2110. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! ஒருமாத நோன்பு கடமையிருந்த நிலையில் என் தாயார் இறந்துவிட்டார். அதை அவர் சார்பாக நான் நிறைவேற்றலாமா?" என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உன் தாயார்மீது கடனேதும் இருந்தால், அவர் சார்பாக அதை நீ நிறைவேற்றுவாயா?" என்று கேட்டார்கள். அவர் "ஆம்" என்றார். "அவ்வாறாயின், நிறைவேற்றப்படுவதற்கு மிகவும் தகுதி வாய்ந்தது அல்லாஹ்வின் கடனே" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான சுலைமான் அல்அஃமஷ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
முஸ்லிம் பின் இம்ரான் அல்பத்தீன் (ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸை எங்களுக்கு அறிவித்த போது, அல்ஹகம் பின் உதைபா (ரஹ்) மற்றும் சலமா பின் குஹைல் (ரஹ்) ஆகிய இருவரும், "இந்த ஹதீஸை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்து முஜாஹித் (ரஹ்) அவர்கள் அறிவித்ததை நாங்கள் செவியுற்றுள்ளோம். அப்போது அங்கு நாங்களும் அமர்ந்திருந்தோம்" என்று கூறினர்.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஒன்பது அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 13
2111. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு பெண்மணி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! என் தாயார், தம்மீது நேர்ச்சை நோன்பு கடமையாகியிருந்த நிலையில் இறந்துவிட்டார். அவர் சார்பாக நான் நோன்பு நோற்கலாமா?" என்று கேட்டார். அதற்கு "உன் தாயார்மீது ஏதேனும் கடனிருந்த நிலையில் அதை நீ நிறைவேற்றினால், அவர் சார்பாக நிறைவேறி விடாதா?" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அப்பெண்மணி, "ஆம்" என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உன் தாயார் சார்பாக நோன்பு நோற்றுக்கொள்" என்றார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 13
2112. புரைதா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அமர்ந்திருந்தேன். அப்போது அவர்களிடம் ஒரு பெண்மணி வந்து, "நான் என் தாயாருக்கு ஓர் அடிமைப்பெண்ணைத் தானமாக வழங்கியிருந்தேன். என் தாயார் இறந்துவிட்டார். (இப்போது அந்த அடிமைப்பெண் எனக்கே கிடைத்துவிட்டார். இந்நிலையில் தானத்திற்குரிய நற்பலன் எனக்கு உண்டா?)" என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(தானம் செய்ததற்குரிய) நற்பலன் உனக்கு உறுதியாகிவிட்டது. வாரிசுரிமை, அவ்வடிமைப்பெண்ணை உனக்கே மீட்டுத் தந்துவிட்டது" என்று சொன்னார்கள். அப்பெண்மணி, "என் தாயார்மீது ஒருமாத நோன்பு (கடமையாகி) இருந்தது. அவர் சார்பாக நான் நோன்பு நோற்கலாமா?" என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவர் சார்பாக நீ நோன்பு நோற்றுக்கொள்" என்றார்கள். அப்பெண்மணி, "என் தாயார் (இதுவரை) அறவே ஹஜ் செய்யவில்லை. அவர் சார்பாக நான் ஹஜ் செய்யலாமா?" என்று கேட்டதற்கு, "அவருக்காக நீ ஹஜ் செய்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அத்தியாயம் : 13
2113. மேற்கண்ட ஹதீஸ் புரைதா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "(என் தாயார்மீது) இருமாத நோன்பு (கடமையாகி) இருந்தது" என்று அப்பெண்மணி கேட்டதாக இடம்பெற்றுள்ளது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
- மேற்கண்ட ஹதீஸ் புரைதா (ரலி) அவர்களிடமிருந்தே வேறோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில், "ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்" என்று ஹதீஸ் தொடங்குகிறது. இந்த அறிவிப்பில், "(என் தாயார்மீது) ஒருமாத நோன்பு (கடமையாகி) இருந்தது" என்றே இடம்பெற்றுள்ளது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் "இரு மாத நோன்பு (கடமையாகி) இருந்தது" என்று இடம்பெற்றுள்ளது.
- இன்னோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் மேற்கண்ட ஹதீஸ் வந்துள்ளது. அதில் "ஒருமாத நோன்பு (கடமையாகி) இருந்தது" என்று காணப்படுகிறது.
அத்தியாயம் : 13
பாடம் : 28 நோன்பு நோற்றிருப்பவர் விருந்துக்கு அழைக்கப்பட்டால் "நான் நோன்பாளி" என்று அவர் சொல்லிவிட வேண்டும்.
2114. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் நோன்பு நோற்றிருக்கும்போது விருந்துக்கு அழைக்கப்பட்டால் "நான் நோன்பாளி" என்று அவர் கூறிவிடட்டும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 13
பாடம் : 29 நோன்பாளி நாவைக் காப்பது.
2115. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் நோன்பு நோற்றவராகக் காலைப்பொழுதை அடையும் நாளில் அருவருப்பாக (ஆபாசமாக)ப் பேசவேண்டாம்;அறிவீனமாக நடந்துகொள்ளவேண்டாம். எவரேனும் அவரை ஏசினாலோ அல்லது வம்புக்கு இழுத்தாலோ "நான் நோன்பு நோற்றிருக்கிறேன்; நான் நோன்பு நோற்றிருக்கிறேன்" என்று அவர் கூறிவிடட்டும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 13
பாடம் : 30 நோன்பின் மாண்பு.
2116. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வலிவும் மாண்பும் உடைய அல்லாஹ், "ஆதமின் மைந்தனுடைய (மனிதனுடைய) ஒவ்வொரு செயலும் அவனுக்கே உரியதாகும். ஆனால், நோன்பைத் தவிர! நோன்பு எனக்கு (மட்டுமே) உரியதாகும். அதற்கு நானே நற்பலன் வழங்குவேன்" என்று கூறினான். முஹம்மதின் உயிர் எவன் கையிலுள்ளதோ அ(ந்த இறை)வன்மீது சத்தியமாக! நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை, அல்லாஹ்விடம் கஸ்தூரி மணத்தைவிட நறுமணமிக்கதாகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 13
2117. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நோன்பு (பாவங்களிலிருந்து காக்கும்) கேடயமாகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 13
2118. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"ஆதமின் மைந்தனுடைய (மனிதனுடைய) ஒவ்வொரு செயலும் அவனுக்கே உரியதாகும்; நோன்பைத் தவிர! நோன்பு எனக்கு உரியதாகும். அதற்கு நானே நற்பலன் வழங்குவேன்" என வலிவும் மாண்பும் உடைய அல்லாஹ் கூறினான். நோன்பு (பாவங்களிலிருந்து காக்கும்) கேடயமாகும். உங்களில் ஒருவர் நோன்பு நோற்றிருக்கும் நாளில் அருவருப்பாக (ஆபாசமாக)ப் பேசவேண்டாம்; கூச்சலிட்டு சச்சரவு செய்யவேண்டாம். யாரேனும் அவரை ஏசினால் அல்லது வம்புக்கிழுத்தால் "நான் நோன்பு நோற்றிருக்கிறேன்" என்று அவர் கூறிவிடட்டும்! முஹம்மதின் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! நோன்பாளியின் வாயிலிருந்து வரும் வாடை, மறுமை நாளில் அல்லாஹ்விடம் கஸ்தூரியின் மணத்தைவிட நறுமணமிக்கதாகும். நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. நோன்பு துறக்கும்போது, நோன்பு துறப்பதை முன்னிட்டு அவர் மகிழ்ச்சியடைகிறார். தம் இறைவனைச் சந்திக்கும்போது நோன்பின் காரணமாக அவர் மகிழ்ச்சியடைகிறார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 13
2119. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஆதமின் மகனுடைய (மனிதனுடைய) ஒவ்வொரு நற்செயலுக்கும் ஒன்றுக்குப் பத்து முதல் எழுநூறு மடங்குகள்வரை நன்மைகள் வழங்கப்படுகின்றன; அல்லாஹ் கூறுகின்றான்: நோன்பைத் தவிர. ஏனெனில், நோன்பு எனக்கு உரியதாகும். அதற்கு நானே நற்பலன் வழங்குகிறேன். அவன் எனக்காகவே தனது உணர்வையும் உணவையும் கைவிடுகிறான் (என அல்லாஹ் கூறுகின்றான்). நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. அவர் நோன்பைத் துறக்கும்போது ஒரு மகிழ்ச்சியும், தம் இறைவனைச் சந்திக்கும் போது மற்றொரு மகிழ்ச்சியும் (அடைகிறார்). நோன்பாளியின் வாயிலிருந்து வரும் வாடை, அல்லாஹ்விடம் கஸ்தூரியின் மணத்தைவிட நறுமணமிக்கதாகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 13
2120. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"நோன்பு எனக்கு உரியதாகும். அதற்கு நானே நற்பலன் வழங்குவேன்" என அல்லாஹ் கூறுகின்றான். நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. நோன்பு துறக்கும்போது அவர் மகிழ்ச்சி அடைவார்; அல்லாஹ்வைச் சந்திக்கும்போதும் மகிழ்ச்சி அடைவார். முஹம்மதின் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! நோன்பாளியின் வாயிலிருந்து வரும் வாடை, அல்லாஹ்விடம் கஸ்தூரியின் மணத்தைவிட நறுமணமிக்கதாகும்.
இந்த ஹதீஸை அபூஹுரைரா (ரலி) அவர்களும் அபூசயீத் (ரலி) அவர்களும் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில், "அவர் அல்லாஹ்வைச் சந்திக்கும்போது, அல்லாஹ் அவருக்கு நற்பலன் வழங்குவான்; அவர் மகிழ்ச்சி அடைவார்" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 13
2121. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சொர்க்கத்தில் "ரய்யான்" எனப்படும் ஒரு நுழைவாயில் இருக்கிறது. மறுமை நாளில் அதன் வழியாக நோன்பாளிகளே நுழைவார்கள். அவர்களைத் தவிர வேறெவரும் (அதன் வழியாக) நுழையமாட்டார்கள். "நோன்பாளிகள் எங்கே?" என்று கேட்கப்படும்; உடனே அவர்கள் அதன் வழியாக நுழைவார்கள். அவர்களில் இறுதி நபர் நுழைந்ததும் அந்நுழைவாயில் அடைக்கப்பட்டுவிடும்; அதன் வழியாக வேறெவரும் நுழையமாட்டார்கள்.
இதை சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 13
பாடம் : 31 அல்லாஹ்வின் பாதையில் (அறப்போருக்குச் செல்லும்போது) எந்த வித இடையூறும் கடமைதவறுதலும் ஏற்படாமல் நோன்பு நோற்கச் சக்தி பெற்றிருப்பவர் நோன்பு நோற்பதன் சிறப்பு.
2122. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் பாதையில் (அறப்போர் புரியச் செல்லும்போது) ஒருநாள் நோன்பு நோற்கும் அடியாரின் முகத்தை, அந்த ஒரு நாளுக்குப் பகரமாக எழுபது ஆண்டுகள் (பயணத்) தொலைவிற்கு நரகத்திலிருந்து அல்லாஹ் அப்புறப்படுத்தாமல் இருப்பதில்லை.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூசயீத் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 13
2123. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் பாதையில் (அறப்போருக்குச் செல்லும்) ஒருவர் ஒருநாள் நோன்பு நோற்றால், அவரது முகத்தை அல்லாஹ் நரக நெருப்பைவிட்டு எழுபது ஆண்டுகள் (பயணத்) தொலைவிற்கு அப்புறப்படுத்திவிடுகிறான்.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 13
பாடம் : 32 கூடுதலான (நஃபில்) நோன்பு நோற்கும் முடிவை நண்பகலுக்கு முன் செய்தாலும் நோன்பு செல்லும். கூடுதலான நோன்பு நோற்றிருப்பவர் எவ்விதக் காரணமுமின்றி நோன்பை (இடையிலே) விட்டுவிடலாம்.
2124. இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு நாள் என்னிடம் (வந்து), "ஆயிஷா! உங்களிடம் (உண்பதற்கு) ஏதேனும் இருக்கிறதா?" என்று கேட்டார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! எங்களிடம் எதுவுமில்லை" என்றேன். உடனே "அவ்வாறாயின் நான் நோன்பாளியாக இருந்துகொள்கிறேன்" என்று கூறிவிட்டுப் புறப்பட்டுச் சென்றார்கள். பின்னர் "எங்களுக்கு ஓர் அன்பளிப்பு வழங்கப்பட்டது" (அல்லது "எங்களைச் சந்திக்கச் சிலர் (அன்பளிப்புடன்) வந்தனர்"). அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் திரும்பிவந்தபோது, நான் "அல்லாஹ்வின் தூதரே! "நமக்கு ஓர் அன்பளிப்பு வழங்கப்பட்டுள்ளது" (அல்லது "நம்மைச் சந்திக்கச் சிலர் (அன்பளிப்புடன்) வந்தனர்"). (அந்த அன்பளிப்பிலிருந்து) சிறிதளவைத் தங்களுக்காக நான் எடுத்துவைத்துள்ளேன்" என்று சொன்னேன். அதற்கு அவர்கள் "என்ன அது?" என்று கேட்டார்கள். நான் "(பேரீச்சம் பழம், பாலாடைக் கட்டி, நெய் ஆகியவற்றால் தயாரிக்கப்படும்) "ஹைஸ்" எனும் பலகாரம்" என்று சொன்னேன். "அதைக் கொண்டு வா" என்று அவர்கள் சொன்னார்கள். நான் அதைக் கொண்டுவந்தேன். அவர்கள் உண்டார்கள். பிறகு "நான் இன்று காலையில் நோன்பு நோற்றி(ட எண்ணியி)ருந்தேன்" என்று கூறினார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான தல்ஹா பின் யஹ்யா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
நான் இந்த ஹதீஸை முஜாஹித் (ரஹ்) அவர்களிடம் அறிவித்தபோது அவர்கள், இ(வ்வாறு நோற்க எண்ணியிருந்த நோன்பை விட்டுவிடுவதான)து, ஒருவர் தமது செல்வத்திலிருந்து தர்மப் பொருளை எடுத்துவைப்பதைப் போன்றதுதான். அவர் நாடினால், (எடுத்து வைத்த) அதை வழங்கலாம்; நாடினால் தம்மிடமே அதை வைத்துக்கொள்ளலாம்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 13
2125. இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ஒரு நாள் என்னிடம் வந்து, "உங்களிடம் (உண்பதற்கு) ஏதேனும் இருக்கிறதா?" என்று கேட்டார்கள். நாங்கள் "இல்லை" என்றோம். "அப்படியானால் நான் (இன்று) நோன்பாளியாக இருந்துகொள்கிறேன்" என்றார்கள். பிறகு மற்றொரு நாள் அவர்கள் எம்மிடம் வந்தபோது, "அல்லாஹ்வின் தூதரே! நமக்கு "ஹைஸ்" எனும் பலகாரம் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது" என்றோம். அதற்கு அவர்கள், "எனக்கு அதைக் காட்டு. நான் இன்று காலை நோன்பு நோற்றிருந்தேன்" என்று கூறிவிட்டு, அதை (வாங்கி)ச் சாப்பிட்டார்கள்.
அத்தியாயம் : 13
பாடம் : 33 (நோன்பாளி) மறதியாக உண்ணவோ பருகவோ தாம்பத்திய உறவு கொள்ளவோ செய்தால் நோன்பு முறியாது.
2126. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் நோன்பு நோற்றுக்கொண்டு மறதியாக உண்ணவோ பருகவோ செய்தால் அவர் நோன்பைத் தொடரட்டும். அவரை அல்லாஹ்வே உண்ணவும் பருகவும் வைத்தான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 13
பாடம் : 34 நபி (ஸல்) அவர்கள் ரமளான் அல்லாத மாதத்தில் நோன்பு நோற்றதும், நோன்பே இல்லாமல் எந்த மாதத்தையும் வெறுமையாக விடாமலிருப்பது விரும்பத்தக்கதாகும் என்பதும்.
2127. அப்துல்லாஹ் பின் ஷகீக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், "நபி (ஸல்) அவர்கள் ரமளானைத் தவிர வேறெந்த குறிப்பிட்ட மாதத்திலாவது (மாதம் முழுக்க) நோன்பு நோற்றிருக்கிறார்களா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "அல்லாஹ்வின் மீதாணையாக! நபி (ஸல்) அவர்கள் இறக்கும்வரை ரமளான் அல்லாத வேறெந்த குறிப்பிட்ட மாதத்திலும் (மாதம் முழுக்க) நோன்பு நோற்றதுமில்லை; ஒரு சில நாட்களாவது நோன்பு நோற்காமல் எந்த மாதத்தையும் (அடியோடு) விட்டதுமில்லை" என்று பதிலளித்தார்கள்.
அத்தியாயம் : 13
2128. அப்துல்லாஹ் பின் ஷகீக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ரமளானைத் தவிர வேறு மாதங்களில்) ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்றார்களா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமளானைத் தவிர வேறெந்த மாதத்திலும் ஒருமாதம் முழுவதும் நோன்பு நோற்றதில்லை. அவர்கள் இறக்கும்வரை எந்தவொரு மாதத்திலும் ஒரு சில நாட்களேனும் நோன்பு நோற்காமல் இருந்ததில்லை" என்று விடையளித்தார்கள்.
அத்தியாயம் : 13
2129. அப்துல்லாஹ் பின் ஷகீக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்களின் நோன்பு குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள், "நபி (ஸல்) அவர்கள் (தொடர்ந்து) நோன்பு நோற்கிறார்களோ, நோன்பு நோற்கிறார்களோ என்று நாங்கள் சொல்லுமளவிற்கு நோன்பு நோற்றுக்கொண்டிருப்பார்கள்; நோன்பே நோற்கமாட்டார்களோ; நோன்பே நோற்கமாட்டார்களோ என்று நாங்கள் சொல்லுமளவிற்கு நோன்பு நோற்காமல் இருந்துவிடவும் செய்வார்கள். மேலும், அவர்கள் மதீனாவிற்கு வந்ததிலிருந்து ரமளானைத் தவிர வேறு எந்த மாதத்திலும் மாதம் முழுக்க நோன்பு நோற்றதை நான் கண்டதில்லை" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 13
2130. இறைநம்பிக்கையார்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இனி) நோன்பை விடவே மாட்டார்களோ என்று நாங்கள் சொல்லுமளவிற்கு அவர்கள் நோன்பு நோற்றுக்கொண்டே இருப்பார்கள்; (இனி) அவர்கள் நோன்பே நோற்கமாட்டார்களோ என்று நாங்கள் சொல்லுமளவிற்கு அவர்கள் நோன்பு நோற்காமல் விட்டுவிடவும் செய்வார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமளானைத் தவிர வேறெந்த மாதத்திலும் மாதம் முழுக்க நோன்பு நோற்றதை நான் கண்டதில்லை. ஷஅபானைத் தவிர வேறெந்த மாதத்திலும் அதிகமாக நோன்பு நோற்றதை நான் கண்டதில்லை.
அத்தியாயம் : 13
2131. அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் நோன்பு குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தொடர்ந்து) நோன்பு நோற்கிறார்களோ என்று நாங்கள் சொல்லுமளவிற்கு நோன்பு நோற்றுக்கொண்டே இருப்பார்கள்; நோன்பே நோற்கமாட்டார்களோ என்று நாங்கள் சொல்லுமளவிற்கு நோன்பு நோற்காமல் இருந்துவிடவும் செய்வார்கள். அவர்கள் ஷஅபானைத் தவிர வேறெந்த மாதத்திலும் அதிக நாட்கள் நோன்பு நோற்றதை நான் கண்டதில்லை. ஷஅபான் மாதம் முழுவதும் அவர்கள் நோன்பு நோற்றிருக்கிறார்கள். ஷஅபானில் சில நாட்கள் மட்டும் நோன்பு நோற்றும் இருக்கிறார்கள்" என்று விடையளித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 13
2132. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓராண்டில் ஷஅபான் மாதத்தைவிட அதிகமாக வேறெந்த மாதத்திலும் நோன்பு நோற்றதில்லை. "நற்செயல்களில் உங்களால் இயன்றதையே செய்யுங்கள். நீங்கள் சலிப்படையாதவரை அல்லாஹ் சலிப்படைய மாட்டான்" என்று அவர்கள் கூறுவார்கள். மேலும், "குறைவாக இருந்தாலும் தொடர்ந்து ஒருவர் செய்துவரும் நற்செயலே அல்லாஹ்விற்கு மிக விருப்பமானதாகும்" என்றும் அவர்கள் கூறுவார்கள்.
அத்தியாயம் : 13
2133. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமளானைத் தவிர வேறெந்த மாதத்திலும் மாதம் முழுக்க நோன்பு நோற்கமாட்டார்கள். நோன்பு நோற்கத் தொடங்கிவிட்டால், "அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்கள் இனி விடாமல் (தொடர்ந்து) நோன்பு நோற்றுக் கொண்டே இருப்பார்களோ" என்று ஒருவர் சொல்லுமளவிற்கு நோன்பு நோற்றுக்கொண்டே இருப்பார்கள். நோன்பை அவர்கள் விடத்தொடங்கினால், "அல்லாஹ்வின் மீதாணையாக! இனிமேல் நோன்பே நோற்கமாட்டார்களோ" என்று ஒருவர் சொல்லுமளவிற்கு நோன்பு நோற்காமலும் இருந்து விடுவார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வந்ததிலிருந்து (ரமளானில் தவிர) தொடர்ந்து ஒரு மாதம் நோன்பு நோற்றதில்லை" என்று ஹதீஸ் தொடங்குகிறது.
அத்தியாயம் : 13
2134. உஸ்மான் பின் ஹகீம் அல்அன்சாரி (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்களிடம் ரஜப் மாதத்தில் நோன்பு நோற்பது குறித்துக் கேட்டேன். (அப்போது நாங்கள் ரஜப் மாதத்தில் இருந்தோம்) அதற்கு அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்:
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இனி விடாமல்) நோன்பு நோற்றுக்கொண்டே இருப்பார்களோ என்று நாங்கள் சொல்லுமளவிற்கு நோன்பு நோற்றுக்கொண்டே இருப்பார்கள். (இனி) நோன்பே நோற்கமாட்டார்களோ என்று நாங்கள் சொல்லுமளவிற்கு நோன்பு நோற்காமல் இருந்துவிடவும் செய்வார்கள்" என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 13
2135. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றுக்கொண்டேயிருப்பார்களோ, நோன்பு நோற்றுக்கொண்டேயிருப்பார்களோ என்று சொல்லப்படும் அளவிற்கு நோன்பு நோற்றுக் கொண்டே இருப்பார்கள். நோன்பே நோற்கமாட்டார்களோ, நோன்பே நோற்கமாட்டார்களோ என்று சொல்லப்படும் அளவிற்கு நோன்பு நோற்காமலும் இருந்து விடுவார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 13
பாடம் : 35 இடரைச் சந்திப்பவர், கடமையைத் தவறவிடுபவர், இரு பெருநாட்கள் மற்றும் "அய்யாமுத் தஷ்ரீக்" ஆகிய நாட்களில்கூட விடாமல் நோன்பு நோற்பவர் ஆகியோர் காலமெல்லாம் நோன்பு நோற்பதற்கு வந்துள்ள தடையும், ஒரு நாள் விட்டு ஒரு நாள் நோன்பு நோற்பதன் சிறப்பும்.
2136. அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
"நான் உயிரோடு வாழும்வரை பகலெல்லாம் நோன்பு நோற்பேன்; இரவெல்லாம் நின்று வழி படுவேன்" என்று நான் சொல்லிக்கொண்டிருந்த செய்தி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம்), "நீர் இவ்வாறு கூறினீரா?" என்று கேட்டார்கள். "நான் அவ்வாறு கூறத்தான் செய்தேன், அல்லாஹ்வின் தூதரே!" என்றேன். அதற்கு அவர்கள், "இது உம்மால் முடியாது; (சில நாட்கள்) நோன்பு நோற்பீராக! (சில நாட்கள் நோன்பை) விட்டுவிடுவீராக! (இரவில் சிறிது நேரம்) உறங்குவீராக! (சிறிது நேரம்) நின்று வழிபடுவீராக! மாதத்தில் மூன்று நாட்கள் நோன்பு நோற்றுக்கொள்வீராக! ஏனெனில், ஒவ்வொரு நற்செயலுக்கும் பிரதியாக அதைப் போன்ற பத்து மடங்கு (நற்பலன்)கள் உண்டு. (இதன்படி மாதத்தில் மூன்று நாட்கள் நோன்பு நோற்பது மாதம் முழுவதும் நோன்பு நோற்பதற்குச் சமமாகும்.) இது வருடமெல்லாம் நோன்பு நோற்றதாக அமையும்" என்று சொன்னார்கள்.
நான், "என்னால் இதைவிடச் சிறப்பாக (கூடுதலாக)ச் செய்யமுடியும்!" என்று கூறினேன். "(அப்படியானால்) ஒரு நாள் நோன்பு நோற்று, இரண்டு நாட்கள் நோன்பை விட்டுவிடுவீராக!" என்று அவர்கள் கூறினார்கள். நான், "என்னால் இதைவிடச் சிறப்பாக (கூடுதலாக)ச் செய்ய முடியும், அல்லாஹ்வின் தூதரே!" என்று சொன்னேன். "(அப்படியானால்) ஒரு நாள் நோன்பு நோற்று, ஒரு நாள் நோன்பை விட்டுவிடுவீராக! இதுதான் (இறைத்தூதர்) தாவூத் (அலை) அவர்களின் நோன்பாகும். நோன்புகளில் இதுவே நடுநிலையானதாகும்" என்று கூறினார்கள். "என்னால் இதைவிடச் சிறப்பாக (கூடுதலாக)ச் செய்ய முடியும்" என்று நான் சொன்னேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அதைவிடச் சிறந்தது எதுவுமில்லை" என்றார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறிப்பிட்ட மூன்று நாட்களை நான் ஏற்றுக் கொண்டிருப்பது, என் மனைவி மக்களையும் என் சொத்து பத்துக்களையும்விட எனக்கு மிகவும் விருப்பானதாகும் (என்பதை முதுமையடைந்துவிட்ட இந்நிலையில் உணர்கிறேன்).
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 13
2137. யஹ்யா பின் அபீகஸீர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நானும் அப்துல்லாஹ் பின் யஸீத் (ரஹ்) அவர்களும் அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்களிடம் சென்றோம். அவர்களை அழைத்துவருமாறு ஆளனுப்பிவிட்டு, அவர்கள் எங்களிடம் வரும்வரை அவர்களது வீட்டுக்கு அருகிலிருந்த ஒரு பள்ளிவாசலில் நாங்கள் (காத்து) இருந்தோம். அவர்கள் எங்களிடம் வந்தபோது, "நீங்கள் நாடினால் (என் வீட்டுக்குள்) வரலாம்; நீங்கள் நாடினால் இங்கேயே அமரலாம்" என்றார்கள். நாங்கள், "இல்லை, இங்கேயே அமருகிறோம். எங்களுக்கு ஹதீஸ் அறிவியுங்கள்" என்றோம். அப்போது அவர்கள் கூறினார்கள்:
என்னிடம் அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:
நான் பகலெல்லாம் நோன்பு நோற்று, ஒவ்வோர் இரவிலும் குர்ஆன் முழுவதையும் ஓதியும் வந்தேன். அப்போது "என்னைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் சொல்லப்பட்டது" அல்லது "(என்னை அழைத்து வருமாறு) அவர்கள் என்னிடம் ஆளனுப்பினார்கள்." நான் அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள் என்னிடம், "நீர் (பகற்)காலமெல்லாம் நோன்பு நோற்று, ஒவ்வோர் இரவிலும் குர்ஆன் முழுவதையும் ஓதிவருவதாக எனக்குச் செய்தி வந்ததே (அது உண்மையா)?" என்று கேட்டார்கள். நான், "ஆம், அல்லாஹ்வின் தூதரே! இதன் மூலம் நான் நன்மையைத் தவிர வேறெதையும் நாடவில்லை" என்றேன். அவர்கள், "ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பது உமக்குப் போதுமே!" என்றார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! என்னால் இதைவிடக் கூடுதலாகச் செய்ய முடியும்" என்றேன். அவர்கள், "உம் துணைவிக்குச் செய்ய வேண்டிய கடமைகள் உமக்கு இருக்கின்றன. உம் விருந்தினருக்குச் செய்யவேண்டிய கடமைகள் உமக்கு உள்ளன. உமது உடலுக்குச் செய்யவேண்டிய கடமைகளும் உமக்கு உண்டு. எனவே, இறைத்தூதர் தாவூத் (அலை) அவர்களைப் போன்று நோன்பு நோற்பீராக! ஏனெனில், தாவூத் (அலை) அவர்கள் மக்களிடையே மாபெரும் வணக்கசாலியாக இருந்தார்கள்" என்று கூறினார்கள்.
நான், "அல்லாஹ்வின் தூதரே! தாவூத் (அலை) அவர்களின் நோன்பு என்ன?" என்று கேட்டேன். "ஒரு நாள் நோன்பு நோற்று ஒரு நாள் நோன்பை விடுவதே அவர்களது நோன்பாகும்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மேலும், "மாதத்திற்கு ஒரு தடவை குர்ஆனை ஓதி நிறைவு செய்வீராக!" என்று கூறினார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! என்னால் இதைவிடக் கூடுதலாகச் செய்யமுடியும்" என்றேன். "அவ்வாறாயின் இருபது நாட்களுக்கு ஒரு தடவை குர்ஆனை ஓதி நிறைவு செய்வீராக!" என்றார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! என்னால் இதைவிடக் கூடுதலாகச் செய்ய முடியும்" என்றேன். "அப்படியானால், பத்து நாட்களுக்கு ஒரு தடவை குர்ஆனை ஓதி நிறைவு செய்வீராக!" என்றார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! என்னால் இதைவிடக் கூடுதலாகச் செய்யமுடியும்!" என்றேன். "அவ்வாறாயின் வாரத்துக்கு ஒரு தடவை குர்ஆனை ஓதி நிறைவு செய்வீராக! அதைவிட அதிகமாக்க வேண்டாம். ஏனெனில், உம் துணைவிக்குச் செய்யவேண்டிய கடமைகள் உமக்கு உள்ளன;உம் விருந்தினருக்குச் செய்யவேண்டிய கடமைகளும் உமக்கு உள்ளன; உமது உடலுக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கு உள்ளன" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆனால், நான் சிரமத்தை வலிந்து ஏற்றுக்கொண்டேன்; அதனால் என்மீது சிரமம் சுமத்தப்பட்டது. என்னிடம் நபி (ஸல்) அவர்கள், "உமக்குத் தெரியாது; உமது வயது நீளக்கூடும் (அப்போது தொடர்நோன்பும் தொடர்வழிபாடும் உம்மால் முடியாமல் போகலாம்)" என்றார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறியதைப் போன்று நான் ஆனேன். முதுமை அடைந்த பின், நபி (ஸல்) அவர்களின் சலுகையை நான் ஏற்றுக்கொண்டிருந்தால் நன்றாயிருந்திருக்குமே என்று நான் விரும்பினேன். (அந்த அளவிற்கு நான் பலவீனப்பட்டு விட்டேன்).
அத்தியாயம் : 13
2138. மேற்கண்ட ஹதீஸ் யஹ்யா பின் அபீகஸீர் (ரஹ்) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "ஒவ்வொரு மாதமும் மூன்று நோன்புகள் நோற்பீராக" என்பதற்குப் பின், "ஏனெனில் ஒவ்வொரு நற்செயலுக்குப் பிரதியாக அதைப் போன்ற பத்து மடங்கு (நற்பலன்)கள் உமக்கு உண்டு. இது வருடமெல்லாம் நோன்பு நோற்றதாக அமையும்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது. மேலும் அதில், "நபி தாவூத் (அலை) அவர்களின் நோன்பு என்ன?" என்று நான் கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "வருடத்தில் பாதிநாள் (நோன்பு நோற்பது)" என்று கூறினார்கள் என இடம்பெற்றுள்ளது. குர்ஆன் ஓதுவதைப் பற்றிய எந்தக் குறிப்பும் இடம்பெறவில்லை. "உம் விருந்தினருக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கு உள்ளன" என்ற இடத்தில் "உம் பிள்ளைகளுக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கு உள்ளன" என்றே இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 13
2139. அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "ஒவ்வொரு மாதமும் (ஒருமுறை) குர்ஆனை ஓதி நிறைவு செய்வீராக!" என்றார்கள். அப்போது நான், "(அதைவிடவும் குறைந்த நாட்களில் குர்ஆனை முழுமையாக ஓதி முடிக்கும்) சக்தி எனக்கு உள்ளது" என்று கூறினேன். "அப்படியானால் இருபது இரவுகளில் (ஒருமுறை) ஓதி நிறைவு செய்வீராக!" என்றார்கள். அப்போதும் நான், "(அதை டவும் குறைந்த நாட்களில் குர்ஆனை முழுமையாக ஓதி முடிக்கும்) சக்தி எனக்கு உள்ளது" என்றேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அப்படியானால் ஏழு நாட்களில் (ஒருமுறை) ஓதி நிறைவு செய்வீராக! அதைவிட (ஓதுவதை) அதிகமாக்கிவிடாதீர்!" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 13
2140. அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம்), "அப்துல்லாஹ்! இரவில் (அதிகமாக) நின்று வணங்கிவிட்டு, இறுதியில் இரவுத்தொழுகையையே கைவிட வேண்டிய நிலைக்கு ஆளான இன்ன மனிதரைப் போன்று நீரும் ஆகிவிட வேண்டாம்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 13
2141. அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் தொடர்ந்து (பகலெல்லாம்) நோன்பு நோற்பதாகவும் இரவெல்லாம் நின்று வழிபடுவதாகவும் நபி (ஸல்) அவர்களுக்குச் செய்தி எட்டியது. அப்போது "அவர்கள் என்னை அழைத்துவருமாறு ஆளனுப்பினார்கள்" அல்லது "நானாக அவர்களைச் சந்தித்தேன்." அவர்கள், "நீர், விடாமல் நோன்பு நோற்பதாகவும் (உறங்காமல்) இரவெல்லாம் நின்று தொழுவதாகவும் என்னிடம் கூறப்படுகிறதே! அவ்வாறு செய்யாதீர். ஏனெனில், உமது கண்ணுக்கு (நீர்) அளிக்க வேண்டிய பங்கு உண்டு; உமது உடலுக்கு அளிக்கவேண்டிய பங்கும் உண்டு. உம் வீட்டாருக்கு அளிக்கவேண்டிய பங்கும் உண்டு. எனவே, (சில நாள்) நோன்பு நோற்று, (சில நாள்) நோன்பை விட்டுவிடுவீராக! (சிறிது நேரம்) தொழுவீராக! (சிறிது நேரம்) உறங்குவீராக! பத்து நாட்களுக்கு ஒரு முறை நோன்பு நோற்றுக்கொள்வீராக! (மற்ற) ஒன்பது நாட்களுக்கும் உமக்கு நற்பலன் உண்டு" என்று கூறினார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! இதைவிட அதிகமாகச் செய்வதற்கு நான் சக்தி பெற்றுள்ளேன்" என்றேன். "அவ்வாறாயின் (இறைத்தூதர்) தாவூத் (அலை) அவர்களின் நோன்பை நோற்பீராக!" என்றார்கள். "அல்லாஹ்வின் தூதரே! தாவூத் (அலை) அவர்கள் எவ்வாறு நோன்பு நோற்பார்கள்?" என்று கேட்டேன். அதற்கு "அவர்கள் ஒரு நாள் நோன்பு நோற்று, ஒரு நாள் விட்டுவிடுவார்கள். மேலும், (போர் முனையில்) எதிரிகளைச் சந்திக்கும்போது பின் வாங்கமாட்டார்கள்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! (தாவூத் நபியின் வீரத்தை நான் பெறஇயலுமா?) இந்தக் குணத்திற்காக எனக்கு யார் பொறுப்பேற்றுக்கொள்வார்?" என்று கேட்டேன்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அதாஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
(இந்த உரையாடலுக்கிடையே) ஆயுள் நோன்பு நோற்பது பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எப்படிக் கூறினார்கள் என்பதை நான் அறியமாட்டேன். (ஆயினும், பின்வருமாறு கூறினார்கள் என்று நான் எண்ணுகிறேன்:) "காலமெல்லாம் நோன்பு நோற்றவர், நோன்பு நோற்றவர் அல்லர்; காலமெல்லாம் நோன்பு நோற்றவர், நோன்பு நோற்றவர் அல்லர்; காலமெல்லாம் நோன்பு நோற்றவர், நோன்பு நோற்றவர் அல்லர்" என்று நபியவர்கள் (மூன்று முறை) கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் பின்வரும் தகவலும் இடம்பெற்றுள்ளது:
முஸ்லிம் (பின் அல்ஹஜ்ஜாஜ் ஆகிய நான்) கூறுகிறேன்:
இந்த ஹதீஸை (அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களிடமிருந்து) அறிவிப்பவரான கவிஞர் அபுல்அப்பாஸ் அஸ்ஸாயிப் பின் ஃபர்ரூக் (ரஹ்) அவர்கள் மக்காவாசிகளில் ஒருவராவார்; நம்பத்தகுந்தவரும் நேர்மையானவரும் ஆவார்.
அத்தியாயம் : 13
2142. அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், "அப்துல்லாஹ் பின் அம்ர்! நீர் இரவெல்லாம் நின்று வணங்கி, பகலெல்லாம் நோன்பு நோற்கிறீர் (என்று கேள்விப்பட்டேன்). நீர் இவ்வாறு செய்தால் உமது கண் சொருகிவிடும்; பலவீனமடைந்து விடும். காலமெல்லாம் நோன்பு நோற்றவர், நோன்பு நோற்றவர் அல்லர். மாதத்தில் மூன்று நோன்பு நோற்பது எல்லா மாதங்களிலும் நோன்பு நோற்றதாக அமையும்" என்று சொன்னார்கள். நான், "என்னால் இதைவிட அதிகமாகச் செய்யமுடியும்" என்றேன். "அவ்வாறாயின், (இறைத்தூதர்) தாவூத் (அலை) அவர்களின் நோன்பை நோற்பீராக! அவர்கள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் நோன்பு நோற்பார்கள்; (போர் முனையில்) எதிரிகளைச் சந்தித்தால் பின்வாங்கமாட்டார்கள்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில், ("கண் பலவீனமடைந்துவிடும்" என்பதற்குப் பகரமாக) "உடல் நலிந்துவிடும்" என்று இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 13
2143. அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், "நீர் இரவெல்லாம் நின்று வணங்கி பகலெல்லாம் நோன்பு நோற்பதாகக் கேள்விப்பட்டேனே (அது உண்மையா?)" என்று கேட்டார்கள். நான், "(உண்மைதான்) நான் அவ்வாறு செய்கிறேன்" என்றேன். அவர்கள், "இவ்வாறு நீர் செய்தால் உம்முடைய கண்கள் சொருகிவிடும்; உமது உடல் நலிந்துவிடும். நீர் உமது கண்ணுக்குச் செய்யவேண்டிய கடமைகளும் உள்ளன. உமது உடலுக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உள்ளன. உம் இல்லத்தாருக்குச் செய்யவேண்டிய கடமைகளும் உள்ளன. எனவே, நீர் (சிறிது நேரம்) தொழுவீராக; (சிறிது நேரம்) உறங்குவீராக! (ஒரு நாள்) நோன்பு நோற்பீராக! (ஒரு நாள்) நோன்பை விட்டுவிடுவீராக!" என்றார்கள்.
அத்தியாயம் : 13
2144. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான நோன்பு தாவூத் (அலை) அவர்களின் நோன்பாகும். அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான தொழுகை தாவூத் (அலை) அவர்களின் தொழுகையாகும். தாவூத் (அலை) அவர்கள் பாதி இரவுவரை உறங்குவார்கள். இரவில் மூன்றில் ஒரு பகுதி நேரம் நின்று வழிபடுவார்கள். (பிறகு) ஆறில் ஒரு பகுதி நேரம் உறங்குவார்கள். அவர்கள் ஒரு நாள் நோன்பு நோற்பார்கள்; ஒரு நாள் நோன்பை விட்டு விடுவார்கள். - இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 13
2145. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான நோன்பு தாவூத் (அலை) அவர்களின் நோன்பாகும். அவர்கள் ஆண்டில் பாதி நாட்கள் நோன்பு நோற்பார்கள். வலிவும் மாண்புமிக்க அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான தொழுகை தாவூத் (அலை) அவர்களின் தொழுகையாகும். அவர்கள் பாதி இரவுவரை உறங்குவார்கள். பிறகு எழுந்து வழிபட்டு விட்டுப் பின்னர் இரவின் இறுதிப் பகுதியில் உறங்குவார்கள். இரவின் பாதி நேரம் கழிந்த பின்னர் இரவின் மூன்றிலொரு பகுதி நேரம் வழிபடுவார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
நான் (எனக்கு இந்த ஹதீஸை அறிவித்த) அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்களிடம் "அம்ர் பின் அவ்ஸ் (ரஹ்) அவர்களா "தாவூத் (அலை) அவர்கள் இரவில் பாதி நேரம் கழிந்த பின் இரவின் மூன்றிலொரு பகுதி நேரம்வரை நின்று வழிபடுவார்கள்" என்று கூறுவார்கள்?" என்று கேட்டேன். அதற்கு அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள், "ஆம்" என்றார்கள்.
அத்தியாயம் : 13
2146. அபூகிலாபா அப்துல்லாஹ் பின் ஸைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அபுல்மலீஹ் ஆமிர் பின் உசாமா (ரஹ்) அவர்கள் என்னிடம், "நான் உம்முடைய தந்தை (ஸைத் பின் அம்ர் -ரஹ்) அவர்களுடன் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களிடம் சென்றேன். அப்போது அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் எங்களிடம் (பின்வருமாறு) கூறினார்கள் என்றார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் எனது நோன்பு குறித்துச் சொல்லப்பட்டது. எனவே, அவர்கள் என்னிடம் வந்தார்கள். அவர்களுக்காக நான் ஈச்ச நாரால் நிரப்பப்பட்டிருந்த தோல் தலையணை ஒன்றை எடுத்துவைத்தேன். அவர்கள் (அதில் அமராமல்) தரையில் அமர்ந்தார்கள். தலையணை எனக்கும் அவர்களுக்கும் இடையில் கிடந்தது. அப்போது அவர்கள் என்னிடம், "ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் (நோன்பு நோற்பது) உமக்குப் போதாதா?" என்று கேட்டார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! (என்னால் இதைவிட அதிகமாக நோன்பு நோற்க இயலும்)" என்றேன். அவர்கள், "(மாதத்தில்) ஐந்து நாட்கள் (நோற்றுக்கொள்)" என்றார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! (என்னால் இதைவிட அதிகமாக நோன்பு நோற்க இயலும்)" என்றேன். அவர்கள் "ஏழு நாட்கள் (நோற்றுக்கொள்)" என்றார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே....!" என்றேன். அவர்கள், "ஒன்பது நாட்கள்..." என்றார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே...! என்றேன். அவர்கள், "பதினோரு நாட்கள்..." என்றார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! (என்னால் இதைவிட அதிகமாக நோன்பு நோற்க முடியும்)" என்றேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "தாவூத் (அலை) அவர்களின் நோன்புக்கு மேல் (சிறப்பான) எந்த நோன்பும் கிடையாது. வருடத்தின் பாதி நாட்கள் (நோன்பு நோற்றலே அது). ஒரு நாள் விட்டு ஒரு நாள் நோன்பு நோற்றலாகும்" என்றார்கள்.
அத்தியாயம் : 13
2147. அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், "(மாதத்தில்) ஒரு நாள் நோன்பு நோற்பீராக! எஞ்சிய நாட்கள் நோன்பு நோற்றதற்குரிய நன்மையும் உமக்கு உண்டு" என்றார்கள். நான், "என்னால் இதைவிட அதிகமாகச் செய்யமுடியும்" என்றேன். அவர்கள், "இரண்டு நாட்கள் நோன்பு நோற்பீராக! எஞ்சிய நாட்கள் நோன்பு நோற்றதற்குரிய நன்மையும் உமக்கு உண்டு" என்றார்கள். நான், "என்னால் இதைவிட அதிகமாகச் செய்ய முடியும்" என்றேன். அவர்கள், "மூன்று நாட்கள் நோன்பு நோற்பீராக! எஞ்சிய நாட்கள் நோன்பு நோற்றதற்குரிய நன்மையும் உமக்கு உண்டு" என்றார்கள்.நான், "என்னால் இதைவிட அதிகமாகச் செய்யமுடியும்" என்றேன். அவர்கள், "நான்கு நாட்கள் நோன்பு நோற்பீராக! எஞ்சிய நாட்கள் நோன்பு நோற்றதற்குரிய நன்மையும் உமக்கு உண்டு" என்றார்கள். நான், "என்னால் இதைவிட அதிகமாகச் செய்யமுடியும்" என்றேன். அதற்கு, "அல்லாஹ்விடம் மிகச் சிறந்த நோன்பான தாவூத் (அலை) அவர்களின் நோன்பை நோற்றுக்கொள்வீராக! தாவூத் (அலை) அவர்கள் ஒரு நாள் நோன்பு நோற்று,ஒரு நாள் நோன்பை விட்டு விடுவார்கள்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 13
2148. அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், "அப்துல்லாஹ் பின் அம்ர்! நீர் பகலெல்லாம் நோன்பு நோற்று, இரவெல்லாம் நின்று வழிபடுவதாக எனக்குச் செய்தி எட்டியது. அவ்வாறு நீர் செய்யாதீர். ஏனெனில், உமது உடலுக்கு அளிக்கவேண்டிய பங்கும் உமக்கு உண்டு. உமது கண்ணுக்கு வழங்க வேண்டிய பங்கும் உமக்கு உண்டு. உம் துணைவிக்கு வழங்க வேண்டிய பங்கும் உமக்கு உண்டு. (சில நாட்கள்) நோன்பு நோற்பீராக! (சில நாட்கள்) நோன்பை விட்டுவிடுவீராக! ஒவ்வொரு மாதத்திலும் மூன்று நோன்புகள் நோற்பீராக! இது வருடமெல்லாம் நோன்பு நோற்றதாக அமையும்" என்று சொன்னார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! எனக்குச் சக்தி உள்ளது (என்னால் இதைவிட அதிகமான நோன்புகள் நோற்க முடியும்)" என்றேன். அவர்கள், "அப்படியானால் தாவூத் (அலை) அவர்கள் நோற்றதைப் போன்று நோன்பு நோற்பீராக; ஒரு நாள் நோன்பு நோற்பீராக! ஒரு நாள் நோன்பை விட்டுவிடுவீராக!" என்று சொன்னார்கள்.
இதன் அறிவிப்பாளரான சஈத் பின் மீனாஉ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: (முதுமையடைந்த) பின்னர் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் "(அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அறிவித்த) அந்தச் சலுகையைப் பயன்படுத்தியிருந்தால் நன்றாயிருந்திருக்குமே" என்று கூறுவார்கள்.
அத்தியாயம் : 13
பாடம் : 36 மாதந்தோறும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பதும் அரஃபா (துல்ஹஜ் ஒன்பதாவது) நாள், ஆஷூரா (முஹர்ரம் பத்தாவது) நாள், (வாரத்தில்) திங்கட்கிழமை மற்றும் வியாழக்கிழமை ஆகிய நாட்களில் நோன்பு நோற்பதும் விரும்பத்தக்கதாகும்.
2149. முஆதா அல்அதவிய்யா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மாதந்தோறும் மூன்று நாட்கள் நோன்பு நோற்றுவந்தார்களா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள் "ஆம்" என்றார்கள். நான், "மாதத்தில் எ(ந்தெ)ந்த நாட்களில் நோன்பு நோற்றுவந்தார்கள்?" என்று கேட்டேன். அதற்கு "தாம் நோன்பு நோற்பதற்கென மாதத்தில் எந்த நாளுக்கும் அவர்கள் (தனி) முக்கியத்துவம் அளித்ததில்லை" என ஆயிஷா (ரலி) அவர்கள் விடையளித்தார்கள்.
அத்தியாயம் : 13
2150. இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் "என்னிடம்" அல்லது "நான் செவியுற்றுகொண்டிருக்க மற்றொரு மனிதரிடம்" "நீர் இந்த (ஷஅபான்) மாதத்தின் நடுப்பகுதியில் நோன்பு நோற்றீரா?" என்று கேட்டார்கள். நான், "இல்லை" என்றேன். நபி (ஸல்) அவர்கள், "நீர் (ரமளான்) நோன்பை முடித்ததும் இரண்டு நாட்கள் நோன்பு நோற்பீராக!" என்று கூறினார்கள்.
இதை முதர்ரிஃப் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 13
2151. அபூகத்தாதா அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "நீங்கள் எவ்வாறு நோன்பு நோற்கின்றீர்கள்?" என்று கேட்டார். (அதைக் கேட்ட) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கோபமடைந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கோபத்தைக் கண்ட உமர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வை இறைவனாகவும், இஸ்லாத்தை மார்க்கமாகவும், முஹம்மத் (ஸல்) அவர்களைத் தூதராகவும் நாங்கள் மனநிறைவுடன் ஏற்றுக் கொண்டோம். நாங்கள் அல்லாஹ்விடம் அவனது கோபத்திலிருந்தும் அவனுடைய தூதரின் கோபத்திலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறோம்" என்று கூறினார்கள். உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது கோபம் தணியும்வரை இவ்வாறு பல முறை சொல்லிக் கொண்டிருந்தார்கள். பிறகு "அல்லாஹ்வின் தூதரே! காலமெல்லாம் நோன்பு நோற்பவர் குறித்து தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?" என்று உமர் (ரலி) அவர்கள் கேட்டார்கள். அவர் "(முறைப்படி) நோன்பு நோற்றவருமல்லர்; (முறைப்படி) நோன்பை விட்டவருமல்லர்" அல்லது "அவர் (முறைப்படி) நோற்கவுமில்லை; (முறைப்படி) நோன்பை விடவுமில்லை" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள்.
உமர் (ரலி) அவர்கள், "இரண்டு நாட்கள் நோன்பு நோற்று ஒரு நாள் நோன்பை விட்டு விடுபவர் பற்றித் தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?" என்று கேட்க, "இவ்வாறு நோன்பு நோற்பதற்கு எவரால் இயலும்?" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (திருப்பிக்) கேட்டார்கள். உமர் (ரலி) அவர்கள், "ஒரு நாள் நோன்பு நோற்று ஒரு நாள் நோன்பை விட்டு விடுபவர் குறித்துத் தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?" என்று கேட்டார்கள். அதற்கு, "அதுதான் தாவூத் (அலை) அவர்களின் நோன்பாகும்" என்று விடையளித்தார்கள்.
உமர் (ரலி) அவர்கள், "ஒரு நாள் நோன்பு நோற்று இரண்டு நாட்கள் நோன்பை விட்டுவிடுபவர் பற்றித் தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?" என்று கேட்டதற்கு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இ(வ்வாறு நோன்பு நோற்ப)தற்கு எனக்குச் சக்தி அளிக்கப்பட வேண்டும் என நான் விரும்பினேன்" என்று கூறினார்கள். பிறகு, "மாதந்தோறும் மூன்று நோன்பு நோற்பது, ஆண்டுதோறும் ரமளானில் நோன்பு நோற்பது ஆகியன காலமெல்லாம் நோன்பு நோற்றதாக அமையும். துல்ஹஜ் ஒன்பதாவது நாள் (அரஃபா) அன்று நோன்பு நோற்பதை, அதற்கு முந்தைய ஓராண்டிற்கும் அதற்குப் பிந்தைய ஓராண்டிற்கும் பாவப் பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என்று நான் எதிர்பார்க்கிறேன். முஹர்ரம் பத்தாவது நாளில் (ஆஷூரா) நோன்பு நோற்பதை, அதற்கு முந்தைய ஓராண்டிற்குப் பாவப்பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என நான் எதிர்பார்க்கிறேன்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 13
2152. அபூகத்தாதா அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அவர்களது நோன்பு பற்றிக் கேட்கப்பட்ட போது, அவர்கள் கோபமுற்றார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வை இறைவனாகவும், இஸ்லாத்தை மார்க்கமாகவும், முஹம்மத் (ஸல்) அவர்களைத் தூதராகவும், எங்கள் உறுதிப் பிரமாணத்தை (முழுமையான) உறுதிமொழிப் பிரமாணமாகவும் நாங்கள் மனநிறைவுடன் ஏற்றுக் கொண்டோம்" என்று கூறினார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், காலமெல்லாம் நோன்பு நோற்பது குறித்துக் கேட்கப்பட்டது. அதற்கு "அ(வ்வாறு நோன்பு நோற்ப)வர் (முறைப்படி) நோன்பு நோற்றவருமல்லர். (முறைப்படி) நோன்பை விட்டவருமல்லர்" அல்லது "அவர் (முறைப்படி) நோன்பு நோற்கவுமில்லை; (முறைப்படி) நோன்பை விடவுமில்லை" என்று விடையளித்தார்கள்.
இரண்டு நாட்கள் நோன்பு நோற்று ஒரு நாள் நோன்பை விடுவது பற்றிக் கேட்கப்பட்ட போது, "அ(வ்வாறு நோன்பு நோற்ப)தற்கு எவரால் முடியும்?" என்று (திருப்பிக்) கேட்டார்கள். ஒரு நாள் நோன்பு நோற்று இரண்டு நாட்கள் நோன்பை விடுவது பற்றிக் கேட்கப்பட்டதற்கு, "இதற்கான வலிமையை அல்லாஹ் நமக்கு அளித்தால் நன்றாயிருக்கும்!" என்றார்கள். ஒரு நாள் நோன்பு நோற்று ஒரு நாள் நோன்பை விடுவது பற்றிக் கேட்கப்பட்ட போது, "அதுதான் என் சகோதரர் தாவூத் (அலை) அவர்களின் நோன்பாகும்" என்று சென்னார்கள்.
திங்கட்கிழமையன்று நோன்பு நோற்பது பற்றிக் கேட்கப்பட்டதற்கு, "அன்றைய தினத்தில்தான் நான் பிறந்தேன்; அன்றுதான் "நான் நபியாக நியமிக்கப்பட்டேன்" அல்லது "எனக்குக் குர்ஆன் (முதன்முதலில்) அருளப்பெற்றது" என்றார்கள். மேலும், "மாதந்தோறும் மூன்று நோன்புகள் நோற்பதும் ரமளான் தோறும் நோன்பு நோற்பதும் காலமெல்லாம் நோன்பு நோற்பதாகும்" என்றும் கூறினார்கள். அரஃபா (துல்ஹஜ் ஒன்பதாவது) நாளில் நோன்பு நோற்பது பற்றிக் கேட்கப்பட்டதற்கு, "முந்தைய ஓராண்டிற்கும் பிந்தைய ஓராண்டிற்கும் அது பாவப் பரிகாரமாக அமையும்" என்றார்கள். ஆஷூரா (முஹர்ரம் பத்தாவது) நாளில் நோன்பு நோற்பது குறித்து வினவப்பட்டது. அதற்கு "அது கடந்த ஆண்டின் பாவப்பரிகாரமாகும்" என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
ஷுஅபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் (பின்வருமாறு) காணப்படுகிறது: திங்கட்கிழமையும் வியாழக்கிழமையும் நோன்பு நோற்பது குறித்துக் கேட்கப்பட்டது. வியாழக்கிழமை நோன்பு குறித்த செய்தியை நாம் சந்தேகத்திற்கிடமானதாகக் கருதியபோது, அதைப் பற்றி நாம் குறிப்பிடவில்லை.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில், திங்கட்கிழமை நோன்பு குறித்தே கூறப்பட்டுள்ளது; வியாழக்கிழமை பற்றிய குறிப்பு இல்லை.
அத்தியாயம் : 13
2153. அபூகத்தாதா அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், திங்கட்கிழமை நோன்பு நோற்பது குறித்துக் கேட்கப்பட்டது. அதற்கு "அன்றுதான் நான் பிறந்தேன்; அதில்தான் எனக்குக் குர்ஆன் (முதன்முதலில்) அருளப்பெற்றது" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 13
பாடம் : 37 ஷஅபான் மாத இறுதியில் நோன்பு நோற்றல்.
2154. இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "என்னிடம்" அல்லது "மற்றொரு மனிதரிடம்", "நீர் ஷஅபான் மாதத்தின் இறுதியில் நோன்பு நோற்றீரா?" என்று கேட்டார்கள். நான், "இல்லை" என்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "நீர் (ரமளான்) நோன்பை முடித்ததும் இரண்டு நாட்கள் நோன்பு நோற்பீராக!" என்று கூறினார்கள்.
இதை முதர்ரிஃப் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 13
2155. இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ஒரு மனிதரிடம், "நீர் இந்த (ஷஅபான்) மாதத்தின் இறுதியில் ஏதேனும் நோன்பு நோற்றீரா?" என்று கேட்டார்கள். அம்மனிதர், "இல்லை" என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீர் ரமளான் நோன்பை முடித்ததும் அதற்குப் பகரமாக இரண்டு நாட்கள் நோன்பு நோற்பீராக!" என்று கூறினார்கள்.
இதை முதர்ரிஃப் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 13
2156. இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ஒரு மனிதரிடம், "இந்த மாதத்தின் -அதாவது ஷஅபான்- இறுதியில் ஏதேனும் நோன்பு நோற்றீரா?" என்று கேட்டார்கள். அம்மனிதர் "இல்லை" என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நீர் ரமளான் நோன்பை முடித்ததும் "ஒரு நாள்",அல்லது "இரண்டு நாட்கள்" நோன்பு நோற்பீராக!" என்று கூறினார்கள். (இங்கே அறிவிப்பாளர் ஷுஅபா (ரஹ்) அவர்களே ஐயம் தெரிவிக்கிறார்கள்.) "இரண்டு நாட்கள்" என்று கூறியதாகவே நான் கருதுகிறேன் என்று அறிவிப்பாளர் ஷுஅபா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 13
பாடம் : 38 முஹர்ரம் நோன்பின் சிறப்பு.
2157. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ரமளான் மாத நோன்புக்கு அடுத்தபடியாகச் சிறந்த நோன்பு யாதெனில், அல்லாஹ்வின் மாதமான முஹர்ரம் மாதநோன்பாகும். கடமையாக்கப்பட்ட தொழுகைக்கு அடுத்தபடியாகச் சிறந்த தொழுகை, இரவுத் தொழுகை (தஹஜ்ஜுத்) ஆகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 13
2158. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களிடம் "கடமையாக்கப்பட்ட தொழுகைக்கு அடுத்தபடியாகச் சிறந்த தொழுகை எது? ரமளான் மாதநோன்புக்கு அடுத்தபடியாகச் சிறந்த நோன்பு எது?" என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், "கடமையான தொழுகைக்கு அடுத்தபடியாகச் சிறந்த தொழுகை, நடுநிசியில் தொழுவதாகும். ரமளான் மாதநோன்புக்கு அடுத்தபடியாகச் சிறந்த நோன்பு, அல்லாஹ்வின் மாதமான முஹர்ரம் மாதநோன்பாகும்" என்று விடையளித்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 13
பாடம் : 39 ரமளான் நோன்பைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்பு நோற்பது விரும்பத்தக்கதாகும்.
2159. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ரமளான் மாதம் நோன்பு நோற்று அதைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்பு நோற்றவர், காலமெல்லாம் நோன்பு நோற்றவரைப் போன்றவராவார்.
இதை அபூஅய்யூப் அல்அன்சாரி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஅய்யூப் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஅய்யூப் (ரலி) அவர்களிடமிருந்தே வேறோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 13
பாடம் : 40 லைலத்துல் கத்ர் இரவின் சிறப்பும், அதைத் தேடுமாறு வந்துள்ள தூண்டலும், அது எந்த இரவு என்பது பற்றிய விளக்கமும், அதைத் தேடுவதற்கு ஏற்ற நேரமும்.
2160. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபித்தோழர்களில் சிலர், கனவில் (ரமளானின்) இறுதி ஏழு இரவுகளில் ஒன்றில் "லைலத்துல் கத்ர்" இரவு இருப்பதாகக் காட்டப்பெற்றனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இறுதி ஏழு இரவுகளில் ஒன்று என்பதில் உங்கள் கனவுகள் ஒன்றுபட்டிருப்பதை நான் காண்கிறேன். ஆகவே, அதைத் தேடுபவர் (ரமளானின்) இறுதி ஏழு இரவுகளில் தேடிக்கொள்ளட்டும்!"என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 13
2161. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"லைலத்துல் கத்ர்" இரவை (ரமளானின்) இறுதி ஏழு இரவுகளில் (ஒன்றில்) தேடிக் கொள்ளுங்கள்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 13
2162. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் (தமது கனவில் ரமளானின்) இருபத்தேழாவது இரவில் லைலத்துல் கத்ர் இரவு இருப்பதாகக் கண்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள், "ரமளானின் இறுதிப் பத்து இரவுகளில் (ஒன்று என்பதில்) உங்கள் கனவுகள் ஒன்றுபட்டிருப்பதைக் காண்கிறேன். எனவே, ரமளானின் இறுதிப்பத்தில் ஒற்றைப்படையான இரவுகளில் (ஒன்றில்) அதைத் தேடிக்கொள்ளுங்கள்!" என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 13
2163. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "லைலத்துல் கத்ர்" இரவு தொடர்பாகக் கூறுகையில், "உங்களில் சிலர், (கனவில்) ரமளானின் முந்தைய ஏழு இரவுகளில் (ஒன்றில்) "லைலத்துல் கத்ர்" இரவு இருப்பதாகக் காட்டப்பெற்றனர்; உங்களில் வேறுசிலர் (கனவில்) ரமளானின் பிந்தைய ஏழு இரவுகளில் (ஒன்றில்) "லைலத்துல் கத்ர்" இரவு இருப்பதாகக் காட்டப்பெற்றனர். ஆகவே,நீங்கள் ரமளானின் பிந்தைய பத்தில் (ஒற்றைப்படையான இரவு ஒன்றில்) அதைத் தேடிக்கொள்ளுங்கள்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 13
2164. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் அந்த (லைலத்துல் கத்ர்) இரவை (ரமளானின்) இறுதிப்பத்து இரவுகளில் (ஒன்றில்) தேடிக்கொள்ளுங்கள். உங்களில் ஒருவருக்குப் பலவீனம், அல்லது இயலாமை ஏற்பட்டால், எஞ்சிய (இறுதி) ஏழு இரவுகளில் (ஒன்றிலாவது அதைத் தேடும் முயற்சியில்) தளர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டுவிட வேண்டாம்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 13
2165. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அந்த (லைலத்துல் கத்ர்) இரவைத் தேடுபவர் ரமளானின் இறுதிப்பத்து இரவுகளில் (ஒன்றில்) தேடட்டும்!
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 13
2166. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீங்கள் (ரமளானின்) இறுதிப்பத்து இரவுகளில், அல்லது இறுதி ஒன்பது இரவுகளில் (ஒன்றில்) "லைலத்துல் கத்ர்" இரவைத் தேடிக் கொள்ளுங்கள்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 13
2167. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் (உறங்கிக் கொண்டிருந்தபோது கனவில்) "லைலத்துல் கத்ர்" இரவு எனக்குக் காட்டப்பெற்றது. பின்னர் என் வீட்டாரில் ஒருவர் என்னை உறக்கத்திலிருந்து விழிக்கச் செய்தபோது, அதை நான் மறக்கவைக்கப்பட்டேன்.
ஆகவே, (ரமளானின்) இறுதிப்பத்து இரவுகளில் (ஒன்றில்) அதைத் தேடிக்கொள்ளுங்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஹர்மலா பின் யஹ்யா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "பின்னர் அதை நான் மறந்துவிட்டேன்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 13
2168. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்த (ரமளான்) மாதத்தின் நடுப்பத்து நாட்களில் பள்ளிவாசலில் தங்கி (இஃதிகாஃப் வழிபாட்டில்) இருப்பார்கள். இருபதாவது இரவு முடிந்து இருபத்தொன்றாவது இரவு துவங்கியதும் தமது இல்லம் திரும்புவார்கள். அவர்களுடன் "இஃதிகாஃப்" இருப்பவர்களும் (தங்கள் இல்லம்) திரும்புவார்கள். இவ்வழக்கப்படி, ஒரு மாதத்தில் "இஃதிகாஃப்" இருந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தாம் வழக்கமாக இல்லம் திரும்பும் இரவில் (இல்லம் திரும்பாமல் பள்ளிவாசலிலேயே) தங்கி மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அல்லாஹ் நாடிய விஷயங்களை அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள். பின்னர் "நான் இந்த (நடு)ப்பத்து நாட்களில் "இஃதிகாஃப்" இருந்தேன். பிறகு இறுதிப்பத்து நாட்களிலும் "இஃதிகாஃப்" இருக்கவேண்டும் என எனக்குத் தோன்றியது. ஆகவே, என்னுடன் இந்த (நடுப்)பத்து நாட்களில் "இஃதிகாஃப்" இருந்தவர் அதே இடத்திலேயே தங்கி ("இஃதிகாஃப்") இருக்கட்டும். இந்த (லைலத்துல் கத்ர்) இரவை நான் (கனவில்) கண்டேன். பின்னர் அது எனக்கு மறக்கவைக்கப்பட்டது. எனவே, (ரமளானின்) இறுதிப்பத்தில் ஒவ்வோர் ஒற்றைப்படை இரவிலும் அதைத் தேடிக்கொள்ளுங்கள். நான் ஈரமான களிமண்ணில் (லைலத்துல் கத்ர் இரவில்) சஜ்தாச் செய்வதைப் போன்று (கனவில்) கண்டேன்" என்று கூறினார்கள்.
இருபத்தொன்றாவது நாள் இரவில் எங்களுக்கு மழை பெய்தது. பள்ளிவாசல் கூரையிலிருந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழும் இடத்தில் மழை நீர் சொட்டியது. அன்று காலை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சுப்ஹுத் தொழுது விட்டுத் திரும்பும்போது அவர்களை நான் கண்டேன். அவர்களது முகத்தில் ஈரமான களிமண் படிந்திருந்தது.
அத்தியாயம் : 13
2169. மேற்கண்ட ஹதீஸ் அபூசயீத் அல் குத்ரீ (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தின் நடுப்பத்து நாட்களில் இஃதிகாஃப் இருப்பார்கள்" என்று ஹதீஸ் தொடங்குகிறது. மேலும் ("அதே இடத்திலேயே தங்கி (இஃதிகாஃப்) இருக்கட்டும்" என்பதைக் குறிக்க "ஃபல்யபித் ஃபீ முஅத கிஃபிஹி" என்பதற்குப் பகரமாக) "ஃபல்யஸ்புத் ஃபீ முஅதகிஃபிஹி" எனும் வாசகம் இடம் பெற்றுள்ளது.
(அவர்களது முகத்தில் ஈரமான களிமண் என்பதற்குப் பதிலாக) "அவர்களது நெற்றியில் ஈரமான களிமண்" என்று காணப்படுகிறது.
அத்தியாயம் : 13
2170. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தின் முதல் பத்து நாட்களில் "இஃதிகாஃப்" இருந்தார்கள். பின்னர் நடுப்பத்து நாட்களில் துருக்கி தோல் கூடாரமொன்றில் "இஃதிகாஃப்" இருந்தார்கள். அதன் நுழைவிடத்தில் (மறைப்பாக) பாயொன்று (நிறுத்தி வைக்கப்பட்டு) இருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது கரத்தால் அந்தப் பாயை எடுத்துக் கூடாரத்தின் ஓரத்திற்கு நகர்த்தினார்கள். பிறகு தமது தலையை (கூடாரத்திற்கு) வெளியே நீட்டி மக்களிடம் பேசினார்கள். உடனே மக்கள் அவர்களுக்கு அருகில் நெருங்கிவந்தனர். "இந்த (ரமளானில் லைலத்துல் கத்ர்) இரவைத் தேடியவாறு நான் முதல் பத்து நாட்களில் "இஃதிகாஃப்" இருந்தேன். பின்னர் நடுப்பத்து நாட்களிலும் "இஃதிகாஃப்" இருந்தேன். பிறகு "அந்த இரவு இறுதிப் பத்து நாட்களில் உள்ளது" என (வானவர் மூலம்) என்னிடம் வந்து சொல்லப்பட்டது. ஆகவே, உங்களில் (இறுதிப்பத்து நாட்களில்) "இஃதிகாஃப்" இருக்க விரும்புகின்றவர் இஃதிகாஃப் இருக்கட்டும்" என்றார்கள்.
எனவே மக்களும் அவர்களுடன் "இஃதிகாஃப்" இருந்தனர். மேலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "லைலத்துல் கத்ர் இரவு ரமளான் மாதத்தின் ஓர் ஒற்றைப்படையான இரவில் இருப்பதாக எனக்குக் காட்டப்பட்டது. நான் அன்று காலை களிமண்ணிலும் தண்ணீரிலும் சிரவணக்கம் (சஜ்தா) செய்வதைப் போன்று காட்டப்பட்டது" என்றும் கூறினார்கள். இருபத்தொன்றாவது நாள் காலையில் அவர்கள் சுப்ஹுத் தொழுகைக்காக நின்றபோது மழை பெய்தது. பள்ளிவாசல் கூரை ஒழுகியது. அப்போது நான் களிமண்ணையும் தண்ணீரையும் (பள்ளிவாசலுக்குள்) கண்டேன். சுப்ஹுத் தொழுகையை முடித்துப் புறப்பட்டபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது நெற்றியிலும் மூக்கு நுனியிலும் களிமண்ணும் தண்ணீரும் படிந்திருந்ததை நான் கண்டேன். அந்த "லைலத்துல் கத்ர்" இரவு (ரமளானின்) இறுதிப் பத்தில் இருபத்தொன்றாவது நாள் இரவாகவே அமைந்தது.
அத்தியாயம் : 13
2171. அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(ஒரு நாள்) நாங்கள் லைலத்துல் கத்ர் இரவு பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். பின்னர் நான் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடம் சென்றேன். அவர்கள் என் நண்பராயிருந்தார்கள். அவர்களிடம், "நீங்கள் எங்களுடன் பேரீச்சந்தோப்புவரை புறப்பட்டுவரக் கூடாதா?" என்று கேட்டேன். உடனே புறப்பட்டார்கள். அப்போது அவர்கள் கறுப்புக் கம்பளியாடை அணிந்திருந்தார்கள். அவர்களிடம் "லைலத்துல் கத்ர் இரவு குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நீங்கள் செவியுற்றீர்களா?" என்று கேட்டேன். அவர்கள், "ஆம், நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ரமளான் மாதத்தின் நடுப்பத்து நாட்களில் "இஃதிகாஃப்" இருந்தோம். இருபதாவது நாள் காலையில் நாங்கள் (பள்ளிவாசலில் இருந்து) வெளியேறினோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடையே உரையாற்றினார்கள்: எனக்கு லைலத்துல் கத்ர் இரவு (கனவில்) காட்டப் பெற்றது. ஆனால், அதை நான் மறந்துவிட்டேன். (அல்லது அதை மறக்கவைக்கப்பட்டேன்.) எனவே, ரமளானின் இறுதிப்பத்து நாட்களில் ஒற்றைப்படையான ஒவ்வோர் இரவிலும் அதை நீங்கள் தேடிக்கொள்ளுங்கள். நான் (அந்த இரவில்) தண்ணீரிலும் களிமண்ணிலும் சிரவணக்கம் (சஜ்தா) செய்வதைப் போன்று எனக்குக் காட்டப்பெற்றது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் "இஃதிகாஃப்" இருந்தவர் மறுபடியும் (பள்ளிவாசலுக்கு) வரட்டும்!" என்றார்கள்.
நாங்கள் மீண்டும் சென்றோம். அப்போது வானில் மழை மேகத்தின் ஒரு துண்டைக்கூட நாங்கள் காணவில்லை. (திடீரென) ஒரு மேகம் (திரண்டு) வந்தது; எங்களுக்கு மழை பெய்தது. பள்ளிவாசலின் கூரையிலிருந்து மழை நீர் சொட்டியது. அப்போதைய கூரை பேரீச்ச மட்டையால் வேயப்பட்டிருந்தது. தொழுகைக்காக "இகாமத்" சொல்லப்பட்ட போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தண்ணீரிலும் களிமண்ணிலும் சிரவணக்கம் (சஜ்தா) செய்ததை நான் கண்டேன். அவர்களது நெற்றியில் களிமண் படிந்திருந்ததைக் கண்டேன்.
- அபூசயீத் (ரலி) அவர்கள் அறிவிக்கும் மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்துத் திரும்பிய போது அவர்களை நான் கண்டேன். அவர்களது நெற்றியிலும் மூக்கு நுனியிலும் களி மண்ணின் அடையாளம் இருந்தது" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 13
2172. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமக்கு "லைலத்துல் கத்ர்" இரவு பற்றிய குறிப்பு வெளிப்படுத்தப்படுவதற்கு முன்னர் ரமளான் மாதத்தின் நடுப்பத்து நாட்களில் லைலத்துல் கத்ரைத் தேடியவாறு "இஃதிகாஃப்" இருந்தார்கள். நடுப்பத்து நாட்கள் முடிந்ததும் (தாம் வீற்றிருந்த) கூடாரத்தை அகற்றுமாறு உத்தரவிட, அவ்வாறே அது அகற்றப்பட்டது. பின்னர் அவர்களுக்கு "லைலத்துல் கத்ர்" இரவு இறுதிப்பத்து இரவுகளில் இருப்பதாகத் தெரிவிக்கப் பட்டது. எனவே, மீண்டும் கூடாரம் அமைக்குமாறு உத்தரவிட்டார்கள். மீண்டும் கூடாரம் அமைக்கப்பட்ட பிறகு மக்களிடம் புறப்பட்டுவந்து, "மக்களே! லைலத்துல் கத்ர் பற்றிய குறிப்பு எனக்கு அறிவிக்கப்பட்டது. அதைப் பற்றிச் சொல்வதற்காக உங்களிடம் நான் புறப்பட்டுவந்தேன். அப்போது இரண்டு மனிதர்கள் தமது உரிமை குறித்து விவாதித்துக் கொண்டிருந்தனர். அவ்விருவருடன் ஷைத்தானும் இருந்தான். அதனால் அதை(ப் பற்றிய குறிப்பை) நான் மறக்கவைக்கப்பட்டேன். ஆகவே, ரமளானின் இறுதிப் பத்தில் அந்த இரவை நீங்கள் தேடிக்கொள்ளுங்கள்;ஒன்பது, ஏழு, ஐந்து ஆகிய இரவுகளில் அதை நீங்கள் தேடிக்கொள்ளுங்கள்!" என்றார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூநள்ரா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
நான் அபூசயீத் (ரலி) அவர்களிடம் "அதன் எண்ணிக்கை பற்றி எங்களைவிட நீங்களே நன்கறிந்தவர்கள்" என்றேன். அதற்கு அவர்கள், "ஆம். உங்களைவிட நாங்களே அதற்குத் தகுதியானவர்கள்" என்றார்கள். நான், "ஒன்பது, ஏழு, ஐந்து என்பவை எவை?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், இருபத்தொன்றாவது இரவு முடிந்து, அதையடுத்து வரும் இருபத்து இரண்டாவது இரவே "ஒன்பது" ஆகும். இருபத்து மூன்றாவது இரவு முடிந்து அடுத்து வரும் (இருபத்து நான்காவது) இரவே "ஏழு" ஆகும். இருபத்து ஐந்தாவது இரவு முடிந்து அடுத்து வரும் இரவே "ஐந்து" ஆகும்" என்று விடையளித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில், அபூபக்ர் பின் கல்லாத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், ("இரண்டு மனிதர்கள் தமது உரிமை குறித்து விவாதித்துக் கொண்டிருந்தனர்" என்பதற்குப் பகரமாக) "சச்சரவு செய்துகொண்டிருந்தனர்" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 13
2173. அப்துல்லாஹ் பின் உனைஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "லைலத்துல் கத்ர் (எந்த இரவு என்பது) பற்றி எனக்குக் கனவில் காட்டப்பெற்றது. பின்னர் அதை மறக்கவும் செய்யப்பட்டேன். அன்று காலை நான் தண்ணீரிலும் களிமண்ணிலும் சிரவணக்கம் (சஜ்தா) செய்வதைப் போன்று (கனவில்) கண்டேன்" என்று கூறினார்கள். இருபத்து மூன்றாவது நாள் இரவில் மழை பெய்தது. (அன்று காலையில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு (சுப்ஹுத் தொழுகை) தொழுவித்தார்கள். அவர்கள் தொழுகையை முடித்துத் திரும்பியபோது தண்ணீர் மற்றும் களிமண்ணின் அடையாளம் அவர்களது நெற்றியிலும் மூக்கிலும் படிந்திருந்தது.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
இதன் அறிவிப்பாளரான புஸ்ர் பின் சயீத் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: அப்துல்லாஹ் பின் உனைஸ் (ரலி) அவர்கள் (இருபத்து மூன்றாவது நாள் இரவில் என்பதைக் குறிக்க) "ஸலாஸின் வ இஷ்ரீன்" எனும் சொற்றொடரையே பயன்படுத்தினார்கள். (சில அறிவிப்புகளில் உள்ளதைப் போன்று "ஸலாஸின் வ இஷ்ரூன்" என்று குறிப்பிடவில்லை.)
அத்தியாயம் : 13
2174. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ரமளான் மாதத்தின் இறுதிப்பத்து இரவுகளில் லைலத்துல் கத்ர் இரவைத் தேடிக்கொள்ளுங்கள்.
இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 13
2175. ஸிர்ரு பின் ஹுபைஷ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் உபை பின் கஅப் (ரலி) அவர்களிடம், "தங்கள் சகோதரர் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் "வருடம் முழுவதும் (இரவில்) நின்று வழிபடுபவர் லைலத்துல் கத்ர் இரவை அடைந்துகொள்வார்" என்று கூறுகிறாரே?" என்று கேட்டேன். அதற்கு உபை (ரலி) அவர்கள், "இப்னு மஸ்ஊதுக்கு அல்லாஹ் அருள்புரிவானாக! மக்கள் (மற்ற நாட்களில் வழி பாடுகளில் ஈடுபடாமல்) அசட்டு நம்பிக்கையோடு இருந்துவிடக்கூடாது என அவர்கள் கருதினார்கள் (போலும்)! லைலத்துல் கத்ர் இரவு ரமளான் மாதத்தின் கடைசிப் பத்தில் இருபத்தேழாவது இரவுதான் என்பதை இப்னு மஸ்ஊத் அறிந்தே உள்ளார்கள்" என்று பதிலளித்தார்கள். பிறகு "அல்லாஹ் நாடினால்" என்று கூறாமல் "அது (ரமளானின்) இருபத்தேழாவது இரவே ஆகும்" என்று சத்தியமிட்டுச் சொன்னார்கள். நான், "அபுல் முன்திரே! எதை வைத்து அவ்வாறு கூறுகிறீர்கள்?" என்று கேட்டேன். அதற்கு உபை (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் "அன்றைய நாளில் (காலையில்) சூரியன் சுடரின்றி உதிக்கும்" என்று கூறினார்கள். அந்த அடையாளத்தின் மூலமே (அறிந்துகொண்டேன்)" என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 13
2176. ஸிர்ரு பின் ஹுபைஷ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
உபை பின் கஅப் (ரலி) அவர்கள் "லைலத்துல் கத்ர்" இரவு குறித்துக் கூறுகையில், "அல்லாஹ்வின் மீதாணையாக! அது (எந்த இரவு என்பது) பற்றி நான் நன்கறிவேன்" என்றார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஷுஅபா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: எனது அறிவுக்கு எட்டியவரையில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நின்று வழிபடுமாறு எங்களைப் பணித்த அந்த இரவு இருபத்தேழாவது இரவேயாகும் (என்று உபை (ரலி) அவர்கள் தெரிவித்தார்கள்) என்றே கருதுகிறேன்.
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நின்று வழிபடுமாறு எங்களைப் பணித்த அந்த இரவு" எனும் இந்த வாசகத்தில்தான் ஷுஅபா (ரஹ்) அவர்கள் ஐயம் தெரிவித்தார்கள். அப்தா பின் அபீலுபாபா (ரஹ்) அவர்களிடமிருந்து என் நண்பர் ஒருவரே இதை எனக்கு அறிவித்தார் என ஷுஅபா (ரஹ்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
அத்தியாயம் : 13
2177. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அருகில் "லைலத்துல் கத்ர்" இரவு பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது அவர்கள், "உணவுத் தட்டின் பாதித்துண்டைப் போன்று நிலா தோன்றும் இரவே (லைலத்துல் கத்ர்) ஆகும் என்பதை உங்களில் நினைவில் கொள்பவர் யார்?" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
பள்ளிவாசலில் தங்குதல் (இஃதிகாஃப்)


Previous Post Next Post