புலுகுல் மராம் நபிமொழி தொகுப்பு
அத்தியாயம் - 10 தண்டனை சட்டங்கள்
விபச்சாரத்திற்கான தண்டனை
1232 கிராமவாசிகளில் ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ''அல்லாஹ்வின் தூதர் அவர்களே! தாங்கள் எனக்கு அல்லாஹ்வின் சட்டத்தின் அடிப்படையில் தீர்ப்பளிக்க வேண்டுமென தங்களுக்கு அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டுக் கூறுகிறேன்'' என்றார். அவருடனிருந்த அவரை விட அதிகமாகப் புரிந்து கொள்ளும் ஆற்றல் கொண்ட மற்றொருவர், ''ஆம்! எங்கள் மத்தியில் அல்லாஹ்வின் கட்டளைப்படி தீர்ப்பளியுங்கள். இன்னும் (நடந்ததைக்) கூற என்னை அனுமதியுங்கள்'' என்றார்கள். ''என்னுடைய மகன் இவரிடம் வேலை பார்த்து வந்தான். அப்போது அவன் இவரது மனைவியுடன் விபச்சாரம் செய்துவிட்டான். என்னுடைய மகனைக் கல்லெறிந்து கொல்ல வேண்டும் என எனக்குத் தெரிவிக்கப்பட்டது. நான் அதற்கு பகரமாக நூறு ஆடுகள் மற்றும் ஓர் அடிமைப் பெண்ணை ஈட்டுத் தொகையாகக் கொண்டு அவனை தண்டனையிலிருந்து விடுவித்தேன். பின்னர் அதைப் பற்றி நான் அறிஞர்களிடம் கேட்டதற்கு அவர்கள், ''அவனுக்குரிய தண்டனை நூறு கசையடியும் ஒரு வருடம் ஊரைவிட்டு வெளியேற்றுதலுமாகும்'' என்றும் இவரது மனைவியைக் கல்லால் எறிந்து கொல்லவேண்டும் என்றும் கூறினார்'' என்று சொன்னார். (இதைகேட்ட) நபி(ஸல்) அவர்கள் எவனது கரத்தில் என் உயிர் இருக்கின்றதோ அவன் மீது ஆணையாக! நான் உங்கள் மத்தியில் இறைச் சட்டத்தைக் கொண்டு தீர்ப்பளிப்பேன், அந்த அடிமைப் பெண்ணும், ஆடுகளும் உங்களிடம் திரும்பத் தரப்பட வேண்டும். உங்கள் மகனுக்குத் தண்டனையாக நூறு கசையடி கொடுக்கப்படும்; மேலும் ஒரு வருடம் ஊர் விலக்கம் செய்யப்படும். உனைஸே! இவரது மனைவியிடம் செல்லும். அவள் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டால் அவளைக் கல்லெறிந்து கொல்லும்!'' என்று கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்
இங்கு முஸ்லிமின் வாசகம் இடம் பெற்றுள்ளது.
1233 ''என்னிடமிருந்து இறைச் சட்டத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள். என்னிடமிருந்து இறைச் சட்டத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பெண்களுக்கு தீர்ப்பளித்து வழி ஏற்படுத்த விட்டான். திருமணமாகாதவன், திருமணமாகாதவளுடன் விபச்சாரம் செய்தால் அதற்குத் தண்டனை நூறு கசையடியும் ஒரு வருட காலம் நாடு கடத்துவதுமாகும். மேலும், திருமணம் ஆணவன், திருமணம் ஆனவளுடன் விபச்சாரம் செய்தால் அதற்குரிய தண்டனை நூறு கசையடியும், கல்லெறிந்து கொல்வதுமாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என உபாதா இப்னு ஸாமித்(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்
1234 நபி(ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் இருக்கும்போது முஸ்லிம்களில் ஒருவர், அவர்களிடம் வந்து நபி(ஸல்) அவர்களை அழைத்து, ''அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நான் விபச்சாரம் செய்துவிட்டேன்'' என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள் மறுபடியும் தமது முகத்தைத் திருப்பிக் கொண்டார்கள். அவர் இவ்வாறே திரும்பத் திரும்ப நான்கு முறை செய்தார். இவ்வாறு அவர் தனக்கெதிராக நான்கு முறை சாட்சி சொல்லிக் கொண்ட பின்னர் நபி(ஸல்) அவர்கள், ''இவரை அழைத்துச சென்று கல்லேறிந்து கொல்லுங்கள்'' என்று கட்டளையிட்டார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்
1235 மாயிஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் வந்தபோது, ''நீ முத்தமிட்டிருப்பாய்; அல்லது கண்சாடை காட்டியிருப்பாய் (கட்டியணைத்திருப்பாய்) அல்லது பார்த்திருப்பாய்!'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அதற்கவர், ''இல்லை, அல்லாஹ்வின் தூதர் அவர்களே!'' என்று கூறினார் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கிறார். புகாரி
1236 உமர்(ரலி) அவர்கள் ஒரு முறை உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும் போது ''நிச்சயமாக அல்லாஹ் முஹம்மத்(ஸல்) அவர்களை சத்திய மார்க்கத்துடன் அனுப்பினான். அவர்களுக்கு வேதத்தையும் அருளினான். அதில் நாங்கள் கல்லெறியும் சட்டத்தை எடுத்துரைக்கும் வசனத்தைப் படித்தோம். அதைப் புரிந்து காண்டு மனதில் பதித்தோம். நபி(ஸல்) அவர்களும் கல்லெறியும் தண்டனையை நிறைவேற்றினார்கள். அவர்களுக்குப் பின் நாங்களும் கல்லெறியும் தண்டனையை நிறைவேற்றினோம். மக்கள் மீது நீண்ட காலம் சென்று விட்டதால் கல்லெறியும் சட்டத்தை அல்லாஹ்வின் வேதத்தில் நாங்கள் காணவில்லை'' என்று எவரேனும் கூற மக்கள் அல்லாஹ் அருளிய ஒரு கடமையைக் கை விட்டு வழிகெட்டு விடுவார்கள் என நான் அஞ்சுகிறேன். உண்மையில் திருமணமான ஆணோ, பெண்ணோ விபச்சாரம் செய்து அதற்கான சாட்சியம் கிடைத்தாலோ, கருத்தரித்துவிட்டாலோ அல்லது (தானே முன் வந்து குற்றத்தை) ஒப்புக் கொண்டாலோ அவளைக் கல்லெறிந்து கொல்வது அல்லாஹ்வின் கட்டளையாகும்'' என்று உமர்(ரலி) அவர்கள் கூறினார்கள். புகாரி, முஸ்லிம்
1237 ''உங்களில் எவரது அடிமைப் பெண்ணேனும் விபச்சாரம் செய்து, அது நிரூபணமாம் விட்டால் அவர் அவளுக்கு நூறு கசையடி தரட்டும். அவளை ஏசிப் பேசி மனவேதனை தரவேண்டாம். பின்னரும் அவள் விபச்சாரம் செய்து அது நிரூபணமாம்விட்டால் அவளுக்கு அவன் நூறு கசையடி தரட்டும். அவளை ஏசிப் பேசி மன வேதனை தர வேண்டாம். பின்னர் அவள் மூன்றாவது முறையும் விபச்சாரம் செய்து; அது நிரூபணமாம் விட்டால், முடியால் செய்யப்பட்ட ஒரு கயிற்றுக்கேனும் அவளை விற்பனை செய்துவிடட்டும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்
இங்கு முஸ்லிமின் வாசகம் இடம் பெற்றுள்ளது.
1238 ''உங்களது ஆதிக்கத்தின் கீழ் அடிமைப் பெண்கள் மற்றும் அடிமைகள் மீது (அவர்கள் குற்றம் புரிந்து விட்டால்) தண்டனையை நிறைவேற்றுங்கள்'' என்று நபி(ஸல்) அவர்க்ள கூறினார்கள். என அலீ(ரலி) அறிவிக்கிறார். அபூதாவூத்
இது முஸ்லிம் மவ்கூஃப் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
1239 ''விபச்சாரம் செய்து கர்ப்பிணியான ஜுஹைனா கோத்திரத்தைச் சேர்ந்த ஒருபெண் அதே நிலையில் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ''அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நான் தண்டனைக்குரிய குற்றத்தை புரிந்து விட்டேன். என்மீது அதை (தண்டனையை) நிறைவேற்றுங்கள்'' என்று கூறினார். இதைக் கேட்ட நபி(ஸல்) அவர்கள் அவரது பொறுப்பாளரை அழைத்து, அவரது பொறுப்பாளரை அழைத்து, இவளுடன் நன்றாக நடந்து கொள்ளும் இவள் குழந்தை பெற்றெடுத்தும் என்னிடம் அழைத்து வாரும்'' என்று கூறினார்கள். அவர் நபி(ஸல்) அவர்களது கட்டளையை நிறைவேற்றினார். பின்னர் நபி(ஸல்) அவர்கள் அவளது துணியை அவள் மீது கட்டிவிட்டு அவள் மீது கல்லெறிந்து கொல்லுமாறு கட்டளையிட்டார்கள். இதைக் கண்ட உமர்(ரலி) அவர்கள், ''அல்லாஹ்வின் தூதர் அவர்களே! விபச்சாரம் செய்த ஒரு பெண்ணுக்கா தாங்கள் தொழுகை நடத்துகிறீர்கள்?'' என்று கேட்டார். அதற்கு, ''அவள் செய்திருக்கும் பாவமன்னிப்பை இந்த மதீனா நகரில் உள்ள எழுபது மனிதர்களுக்குப் பிரித்துப் பங்கிட்டாலும் அது அவர்கள் அனைவரின் பாவங்களும் மன்னிக்கப்பட போதுமானதாயிருக்கும். அந்த அளவிற்கு அவள் பாவமன்னிப்புக் கோரியிருக்கிறாள். தன்னுடைய உயிரை இறைவன் வசம் ஒப்படைத்து விட்ட ஒரு பெண்ணை விடச் சிறந்த செயல் புரிந்தவரை நீர் கண்டதுண்டா?'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இம்ரான் இப்னுஹுசைன்(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்
1240 அஸ்லம் கோத்திரத்தைச் சேர்ந்த ஓர் ஆணுக்கும் யூத குலத்தைச் சேர்ந்த ஓர் ஆணுக்கும் இன்னும் ஓர் பெண்ணுக்கும் நபி(ஸல்) அவர்கள் கல்லெறிந்து கொல்லும் தண்டனை வழங்கினார்கள் என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்
1241 விபச்சாரம் புரிந்த யூதர்களையும் யூதப் பெண்ணையும் நபி(ஸல்) அவர்கள் கல்லெறிந்து கொன்ற சம்பவம் இப்னு உமர்(ரலி) வாயிலாக புகாரி, முஸ்லிமில் பதிவாகியள்ளது.
1242 திருமணம் ஆகாத பலவீனமான சிறிய மனிதர் ஒருவர் எங்கள் வீடுகளில் இருந்து வந்தார். (ஒருமுறை) அவர் எங்கள் அடிமைப் பெண்களில் ஒருத்தியுடன் தகாத முறையில் நடந்து கொண்டார். (இதைப் பற்றி) நபி(ஸல்) அவர்களிடம் என் தந்தை சஅத்(ரலி) அவர்கள் முறையிட்டார்கள். அதற்கு, ''அவருக்கு அதற்கான கசையடி கொடுங்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள். ''அல்லாஹ்வின் தூதர் அவர்களே! அவர் மிகவும் பலவீனமானவர்'' என்று மக்கள் சொன்னார்கள். சிறு கிளைகள் கொண்ட பெரிய ஒன்றைப் பிடுங்கி அதனால் அவரை ஒரு அடி அடியுங்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அவர்களும் அவ்வாறே செய்தனர் என ஸயீத் இபனு ஸஅத் இப்னு உபாதா(ரலி) அறவிக்கிறார். அஹ்மத், நஸயீ மற்றும் இப்னு மாஜா
இது ஹஸன் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் இது மவ்ஸுலா மற்றும் முர்ஸலா என்பதில் கருத்து வேறுபாடுகள் உள்ளன.
1243 ''லூத்(அலை) அவர்களது கூட்டத்தார் செய்த (ஓரினச் சேர்க்கை) செயலை எவரேனும் செய்ய நீங்கள் கண்டால், செய்தவனையும் செய்யப்பட்டவனையும் கொன்று விடுங்கள். கால்நடையோடு உறவு கொள்பவனை, நீங்கள் கண்டால், அவனையும் அந்தக் கால்நடையையும் கொன்றுவிடுங்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், அபூதாவூத், நஸயீ, திர்மிதீ மற்றும் இப்னுமாஜா. இதன் அறிவிப்பாளர்கள் பலமானவர்கள் இருப்பினும் இதில் கருத்து வேறுபாடு உள்ளது.
1244 நபி(ஸல்) அவர்கள் (கசையால்) அடித்தார்கள். மேலும் ஊர்விலக்கம் செய்தார்கள். அபூபக்ர்(ரலி) அவர்கள் (கசையால்) அடித்தார்கள். மேலும் ஊர்விலக்கம் செய்தார்கள். உமர்(ரலி) அவர்கள் (கசையால்) அடித்தார்கள். இன்னும் ஊர் விலக்கம் செய்தார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார். திர்மிதீ. இதன் அறிவிப்பாளர்கள் பலமானவா;கள் இன்னும் இது மர்ஃபூஉ மவ்கூஃப் என்பதில் கருதது வேறுபாடு உள்ளது.
1245 பெண்களைப் போன்று மாறிக் கொள்ளும் ஆண்களையும், ஆண்களைப் போன்று மாறிக் கொள்ளும் பெண்களையும் நபி(ஸல்) அவர்கள் சபித்தார்கள். மேலும், ''அவர்களை உங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றி (விரட்டி) விடுங்கள்'' எனக் கட்டளையிட்டார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கிறார். புகாரி
1246 ''தண்டனைகளை விலக்கிக் கொள்ளும் முகாந்திரம் உள்ள வரை அவற்றை விலக்கிக் கொள்ளுங்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். இப்னு மாஜா. இது ளயீஃப் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
1247 ''உங்களால் முடிந்த அளவு முஸ்லிம்களை விட்டு தண்டனைகளைத் தடுத்துக் கொள்ளுங்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஆயிஷா(ரலி) வாயிலாக திர்மிதீ மற்றும் ஹாகிமில் உள்ளது. இப்னும் இதுவும் ளயீஃப் எனும் தரத்தில் தான் உள்ளது. 1248 ''சந்தேகங்களால் தண்டனைகளைத் தவிர்த்து விடுங்கள்'' (என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக) என்பதாக அலீ(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
1249 ''அல்லாஹ் தடை செய்துள்ள நீயே செயல்களையும் கெட்ட பேச்சுக்களையும் தவிர்த்துக் கொள்ளுங்கள். எவன் ஒரு குற்றத்தைப் புரிகிறானோ, அல்லாஹ் அதை மறைத்தவாறே அவன் அதை மறைத்துக் கொண்டு இறைவனிடம் பாவமன்னிப்புக் கோராட்டும். எவன் நம்மிடம் தன் குற்றத்தை வெளிப்படுத்துகிறானோ, அவன் மீது நாம் இச்சட்டத்தை நிலை நிறுத்துவோம்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார். ஹாகிம்
இது முஅத்தாவில் ஸைத் இப்னு அஸ்லம் வாயிலாக முர்ஸல் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அவதூறுக் குற்றத்திற்கான தண்டனை
1250 நான் தூய்மையானவன் என்று எடுத்துரைக்கும் இறைவசனம் அருளப்பட்டதும் நபி(ஸல்) அவர்கள் மிம்பரில் ஏறி அதைக் கூறிவிட்டு குர்ஆனை ஓதினார்கள். பின்னர் கீழே இறங்கி இரண்டு ஆண்களையும் ஒரு பெண்ணையும் அழைத்து வருமாறு கட்டளையிட்டார்கள். அவர்களுக்கு கசையடி கொடுக்கப்பட்டது என ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார்கள். அஹ்மத், அபூதாவூத், நஸயீ, திர்மிதீ மற்றும் இப்னுமாஜா.
இது புகாரியிலும் சமிக்கைஞயாகக் கூறப்பட்டுள்ளது.
1251 ஷாரிக் இப்னு ஸஹ்மாவின் மீது ஹிலால் இப்னு உமையா இணைத்து (விபச்சாரக்) குற்றம் சாட்டினார். அதற்கு, ''சாட்சி கொண்டுவா! இல்லையெனில், உனது முதுகில் கசையடி தான் (விழும்)'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவிக்கிறார். அபூ யஃலா. இதன் அறிவிப்பாளர்கள் பலமானவர்கள்.
1252 இன்னும் இப்னு அப்பாஸ்(ரலி) வாயிலாக புகாரியிலும் இது போன்ற ஹதீஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது.
''அபூபக்ர், உமர், உஸ்மான் மற்றும் அவருக்குப் பின்னர் வந்தவர்கள் அனைவரும் அவதூறுக் குற்றம் புரிந் அடிமைகளுக்கு நாற்பது கசையடிகள் தருவதைத்தான் நான் கண்டுள்ளேன்'' என அப்துல்லாஹ் இப்னு ஆமிர் இப்னு ரபீஆ(ரலி) அறிவிக்கிறார். மாலிக், சவ்ரி
1253 ''எவன் தன் அடிமை மீது அவதூறாகக் குற்றம் சாட்டுகிறானோ அவன் சொன்னது போல் இல்லை எனில் மறுமையில் அவனுக்குக் கசையடி கொடுக்கப்படும்'' என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்
திருட்டுக் குற்றத்திற்கான தண்டனை
1254 ''கால் தீனார் அல்லது அதற்கும் அதிகமானதற்காகவேயன்றி, திருடனின் கை வெட்டப்படக்கூடாது'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்
இங்கு முஸ்லிமின் வாசகம் இடம் பெற்றுள்ளது.
''கால் தீனார் அல்லது அதற்கு அதிகமானதற்காக திருடனின் கை வெட்டப்படும்'' என்று (நபி(ஸல்) அவர்கள் கூறியதாக) புகாரியில் உள்ளது.
''கால் தீனாரில் கையை வெட்டுங்கள். அதற்குக் குறைவாக உள்ளதில் கையை வெட்டாதீர்கள்'' என்று அஹ்மதில் உள்ளது.
1255 நபி(ஸல்) அவர்கள் மூன்று திர்ஹம்கள் விலையுடைய கேடயத்தைத் திருடியதற்காக ஒருவரது கையை வெட்டினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்
1256 ''முட்டை திருடும் திருடனை அல்லாஹ் சபிக்கிறான். அவனது கை வெட்டப்பட வேண்டும். மேலும், கயிற்றை திருடுபவனையும் (சபிக்கிறான்.) அவனது கையும் வெட்டப்படவேண்டும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்
1257 திருட்டுக் குற்றம் புரிந்த உயர்குலத்துப் பெண்ணுக்கு தண்டனையைத் தளர்த்தும்படி தம்மிடம் பரிந்துரைத்த தம் வளர்ப்புப் பேரன் உஸாமாவை நோக்கி ''அல்லாஹ் நிர்ணயித்துள்ள தண்டனைகளில் ஒன்றைத் தளர்த்தும்படியா நீ பரிந்துரை செய்கிறாய்?'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறிவிட்டு எழுந்து நின்று உரை நிகழ்த்தினார்கள். அதில், ''மக்களே! உங்களுக்கு முன்னிருந்தவர்கள் தங்களிடையே கௌரவமானவன் திருடினால் அவனை விட்டுவிடுவர். தங்களிடையேயுள்ள பலவீனன் திருடினால் அவனுக்கு தண்டனை தருவர். அதன் காரணத்தால் தான், அவர்கள் அழிக்கப்பட்டனர்'' என்று கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்
இங்கு முஸ்லிமின் வாசகம் இடம் பெற்றுள்ளது.
ஆயிஷா(ரலி) அவர்களின் மற்றொரு அறிவிப்பில் ''ஒரு பெண் இரவலாக பாத்திரத்தை வாங்குவாள். அதைத் திரும்பிக் கேட்டால் தர மறுத்து விடுவாள். அதனால் அவளது கையை வெட்டுமாறு நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்'' என்று உள்ளது. இது முஸ்லிமில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
1258 ''மோசடி செய்பவன், பறித்துக் கொண்டு செல்பவன், (பார்த்துக் கொண்டிருக்கும் போதே) கொள்யைடித்துக் கொண்டு செல்பவன் (ஊழல் பேர்வழி) ஆகியோருக்கு கையை வெட்டும் தண்டனை இல்லை'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஜாபிர்(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், அபூதாவூத், நஸயீ, திர்மிதீ மற்றும் இப்னு மாஜா.
இது திர்மிதீ மற்றும் இப்னு ஹிப்பானில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
1259 ''பழங்கள் மற்றும் பேரீச்சங் குருத்துக்களுக்காகக் கையை வெட்டக் கூடாது'' என்று நபி(ஸல்) அவர்கள் கூற தான் கேட்டதாக ராஃபிஃ இப்னு கதீஜ்(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், அபூதாவூத், நஸயீ திர்மிதீ மற்றும் இப்னுமாஜா
இது திர்மிதீ மற்றும் இப்னு ஹிப்பானில் ஸஹீஹ் எனுத் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
1260 நபி(ஸல்) அவர்களிடம் ஒஒரு திருடன் கொண்டு வரப்பட்டான். அவன் தனது திருட்டை ஒப்புக் கொண்டான். ஆனால் அவனிடம் பொருள் ஏதும் காணப்படவில்லை. அவனிடம் நபி(ஸல்) அவர்கள், ''நீ திருடியிருப்பாய் என்று நான் கருதவில்லை'' என்று கூறினார்கள். அதற்கவன் ''ஏனில்லை'' என்றான். ஆனால் நபி(ஸல்) அவர்கள் இரண்டு அல்லது மூன்று முறை அதே போன்று திரும்பத் திரும்பக் கேட்டார்கள். இறுதியாக (அவனது கையை வெட்டுமாறு) கட்டளையிட்டார்கள். உடனே(கை) வெட்டப்பட்டது. பின்னர் அவன் கொண்டு வரப்பட்டான். அப்போது நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என (அதன் அறிவிப்பாளர் கூறுகிறார்). இது பஸ்ஸாரிலும் உள்ளது. இதன் ஸனது சரியானது.
1262 ''திருடனுக்குரிய தண்டனை நிறைவேற்றப்பட்டு விட்டால் அதற்குப் பின்னர் அவன் மீது அபாரதம் விதிக்கக் கூடாது'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அறிவிக்கிறார். நஸயீ
இது முன்கதிஃ எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அபூ ஹாகிமில் முன்கர் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
1263 (மரத்தில்) தொங்கிக் கொண்டிருக்கும் பேரீச்சம் பழத்தைப் பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கேட்டபோது, அதற்கு, ''எவன் தனது மடியில் அள்ளி எடுத்துக் கொள்ளாமல் வயிற்றுத் தேவைக்காக உண்டு கொள்கிறானோ அவனுக்குத் தண்டனை இல்லை. இன்னும் எவன் அதில் சிறிதை வெளியில் எடுத்துச் செல்கிறானோ அவன் மீது அபாரதம், தண்டனை இரண்டும் உண்டு. எவன் அதைக் களஞ்சியத்தில் சேமித்த பின்பு அதில் சிறிதை வெளியில் எடுத்துச் சென்று விடுகிறானோ அவனது கையை ஒரு கேடயத்தின் விலைக்கு சமமானதாயிருந்தால் வெட்டி விட வேண்டும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு ஆஸ்(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், நஸயீ. இது ஹாகிமில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
1264 எனது போர்வையைத் திருடிய ஒருவனது கரத்தை வெட்டுமாறு நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்ட போது அவனை விட்டு விடும்படி நான் அவனுக்காகப் பரிந்துரை செய்தேன். அதற்கு, என்னிடம் கொண்டு வருமுன் இவர் மீது உனக்கு ஏன் இரக்கம் ஏற்படவில்லை?'' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள் என ஸஃப்வான் பின் உமய்யா(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், அபூதாவூத், நஸயீ, திர்மிதீ மற்றும் இப்னு மாஜா.
இப்னு ஜாரூத் மற்றும் ஹாகிமில் இது ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
1265 நபி(ஸல்) அவர்களிடம் ஒரு திருடன் கொண்டு வரப்பட்ட போது, ''அவனைக் கொன்று விடுங்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அதற்கு மக்கள், ''அல்லாஹ்வின் தூதர் அவர்களே! இவர் திருடத்தான் செய்தார்'' என்று கூறினர். ''அவனது கையை வெட்டுங்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். அவனது கை வெட்டப்பட்டது. பின்னர் மறுபடியும் அவன் கொண்டு வரப்பட்டான். (அப்போதும்) ''அவனைக் கொன்று விடுங்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (மக்கள்) முன்பு போன்றே (கை வெட்டும்படி) உத்தரவிட்டார்கள். பின்னர் அவன் மூன்றாவது முறையும் கொண்டு வரப்பட்டான். பின்னர் அவன் மூன்றாவது முறையும் கொண்டு வரப்பட்டான். முன்பு போன்றே சொன்னார்கள். பின்னர் நான்காவது முறையும் அவ்வாறே அவன் கொண்டு வரப்பட்டான். முன்பு போன்றே சொன்னார்கள். பின்னர் அவன் ஐந்தாவது முறை கொண்டு வரப்பட்டான். அப்போது, ''அவனைக் கொன்று விடுங்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஜாபிர்(ரழி) அறிவிக்கிறார். அபூதாவூத், நஸயீ. இது முன்கர் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
1266 ஹாரிஸ் இப்னு ஹாதிப் அவர்களின் இதே போன்ற அறிவிப்பு ஒன்றை நஸயீ பதிவு செய்துள்ளார். ''ஐந்தாவது முறை திருடும் போது கொல்லச் சொன்ன ஹதீஸின் சட்டம் மன்ஸுக்(ரத்து) ஆகிவிட்டது'' என்று ஷாபிஈ கூறியுள்ளார்.
குடிகாரனக்குரிய தண்டனை மற்றும் போதைப் பொருட்கள்
1267 மது அருந்தியிருந்த ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டார். நபி(ஸல்) அவர்கள் இரண்டு பேரீச்சங்கம்புகளால் நாற்பது அடிகள் அவருக்குக் கொடுத்தார்கள். இவ்வாறே அபூபக்ர்(ரலி) அவர்களும் செய்தார்கள். உமர்(ரலி) அவர்களின் காலத்தில் மக்களிடம் ஆலோசனை கேட்கப்பட்டது அப்போது, ''(எண்பது அடி கொடுங்கள்) (இதற்கான) தண்டனைகளில் எண்பது தான் குறைந்தது'' என்று அவ்ஃப்(ரலி) கூறினார். உமர்(ரலி) அவர்களும் அவ்வாறே கட்டளையிட்டார்கள்'' என அனஸ்(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்
1268 முஸ்லிமில் வலீத் இப்னு உக்பா உடைய சம்பவ விபரத்தில் அலீ(ரலி) அவர்களின் அறிவிப்பொன்று இடம் பெற்றுள்ளது. அதில், ''நபி(ஸல்) அவர்கள் மது அருந்தியவனுக்கு நாற்பது கசையடி கொடுத்தார்கள். அபூபக்ர்(ரலி) அவர்களும் நாற்பது கசையடி அடித்தார்கள். உமர்(ரலி) அவர்கள் எண்பது கசையடி கொடுத்தார்கள். இவை ஒவ்வொன்றும் சுன்னத்தாகும். எண்பது கசையடிகளே எனக்கு மிகவும் பிடித்தமானதாகும்'' என்று உள்ளது.
(மது அருந்தியதால்) அவர் வாந்தி எடுத்ததை தான் பார்த்ததாக ஒருவர் சாட்சி கூறினார். அதற்கு ''அவர் மது அருந்தும் வரை வாந்தி எடுக்கவில்லை அல்லவா?'' என்று உஸ்மான் (ரலி) கேட்டார்கள் என்றும் அநத் ஹதீஸில் உள்ளது.
1269 மது அருந்துபவனுக்குரிய தண்டனை பற்றிக் குறிப்பிட்ட போது, ''அவன் மது குடித்தால் கசையடி கொடுங்கள். மீண்டும் அவன் மது குடித்தால் கசையடி அடியுங்கள். அவன் மூன்றாம் முறையும் மீண்டும் மது குடித்தால் அப்போதும் அவனுக்குக் கசையடி கொடுங்கள். அவன் பின்னர் நான்காவது முறையும் மது குடித்தால் அவனது கழுத்தை வெட்டி விடுங்கள் (தலையைக் கொய்து விடுங்கள்)'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என முஆவியா(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், அபூதாவூத், நஸயீ, திர்மிதீ மற்றும் இப்னுமாஜா.
இங்கு அஹ்மதின் வாசகம் இடம் பெற்றுள்ளது.
''நான்காவது முறையாகக் குடித்து விட்டு வந்தால் அவனைக் கழுத்தை வெட்டிக் கொன்று விடுங்கள்'' என்று சொல்லும் இந்த ஹதீஸின் சட்டம் மற்றோரு அறிவிப்பின் வாயிலாக மாற்றப்பட்டு விட்டது என்று திர்மிதீ கூறுகிறார். வெளிப்படையான அந்த அறிவிப்பை ஸுஹ்ரி(ரஹ்) வாயிலாக அபூதாவூத்(ரஹ்) தமது நூலில் பதிவு செய்துள்ளார்.
1270 ''நீங்கள் எவரையாவது அடிக்க நேர்ந்தால், முகத்தைக் தவிர்த்துக் கொள்ளுங்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்
1271 ''பள்ளிவாசலில் தண்டனைகள் நிறைவேற்றப்படக் கூடாது'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கிறார். திர்மிதீ, ஹாகிம்
1272 மதுவைத் தடை செய்யும் சட்டத்தை அல்லாஹ் அருளிய போது மதீனாவில் பேரீச்சம்பழத்தால் செய்யப்பட்டதைத் தவிர வேறு எந்த மதுவும் இருக்கவில்லை என அனஸ்(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்
1273 ''தடை செய்யப்பட்ட மது செய்தி அறிவிக்கப்பட்ட போது திராட்சை, பேரீச்சம் பழம், தேன், கோதுமை மற்றும் வாற்கோதுமை ஆகிய ஐந்து பொருள்களால் மது தயாரிக்கப்பட்டு வந்தது. அறிவுக்குத் திரையிட்டு மறைப்பதே மதுவாகும்'' என்று உமர்(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்
1274 ''போதை தரக்கூடிய ஒவ்வொன்றும் மதுவாகும் போதை தரக்கூடிய ஒவ்வொன்றும் தடை செய்யப்பட்டதாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்
1275 ''எந்தப் பொருளை அதிக அளவில் அருந்தினால் அது போதையுண்டாக்குமோ அதனைக் குறைந்த அளவில் அருந்துவதும் தடை செய்யப்பட்டதேயாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஜாபிர்(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், அபூதாவூத், நஸயீ, திர்மிதீ, மற்றும் இப்னு மாஜா. இது இப்னு ஹிப்பானில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
1276 நபி(ஸல்) அவர்கள், உலர்ந்த திராட்சையால் நபீத் எனும் பானத்தைத் தயாரித்து முதல் நாள், அதற்கடுத்த நாள் மற்றும் மூன்றாம் நாள் மாலை வரை அதைக் குடிப்பார்கள். பிறருக்குக் குடிக்கக் கொடுப்பார்கள். அதற்குப் பின் அதில் ஏதாவது மிச்சம் இருந்தால், அதைக் கீழே கொட்டிவிடுவார்கள் என்று இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்
1277 ''அல்லாஹ் உங்களுக்கு எவற்றைத் தடை செய்திருக்கின்றானோ அவற்றில் அவன் உங்களுக்கு நிவாரணத்தை வைக்கவில்லை'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என உம்மு ஸலமா(ரலி) அறிவிக்கிறார். பைஹகீ. இது இப்னு ஹிப்பானில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
1278 மருந்துக்காகத் தயாரிக்கும் மதுவைப் பற்றி நபி(ஸல்) அவர்களிடம் தாரிக் இப்னுஸுவைத்(ரலி) கேட்டபோது, ''நிச்சயமாக அது மருந்தல்ல் மாறாக அது நோயாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என வாயில் இப்னு ஹள்ரமீ(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம் மற்றும் அபூதாவூத்
நிர்ணயிக்கப்படாத தண்டனை மற்றும் தாக்குபவர்கள்
1279 ''அல்லாஹ்வுடைய தண்டனைகளில் எதிலும் பத்து கசையடிக்கு மேல் அடிக்க வேண்டாம்'' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டதாக அபூ புர்தா அல் அன்ஸா(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்
1280 ''இறைத் தண்டனைக்குரிய குற்றங்களைத் தவிர கண்ணியமானவர்கள் செய்யும் பிற தவறுகளுக்காக அவர்களை (தண்டிக்காமல்) மன்னித்து விடுங்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், அபூதாவூத், நஸயீ, பைஹகீ
''எவருக்கேனும் நிர்ணயிக்கப்பட்ட தண்டனையில் அவர் இறந்து விட்டால் நான் என் மனத்தில் கவலை கொள்வேன். ஆனால், குடிகாரனுக்குரிய தண்டனையில் அவன் இறந்துவிட்டால் அவனுக்கு நான் நஷ்டஈடு கொடுப்பேன்'' என்று என அலீ(ரலி) அவர்கள் கூறினார்கள். புகாரி
1281 ''தனது சொத்தை (அநியாயமாகப் பிடுங்கிக் கொள்ள ஒருவர் முனையும் போது அதைப்) பாதுகாத்துக் கொள்வதற்காகப் போராடிக் கொண்டிருக்கும் நிலையில் ஒருவர் கொல்லப்பட்டால், அவர் உயிர்த்தியாகி ஆவார்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஸயீத் இப்னு ஸைத்(ரலி) அறிவிக்கிறார். அபூதாவூத், நஸயீ, திர்மிதீ, மற்றும் இப்னுமாஜா. இது திர்மிதீயில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
1282 ''அல்லாஹ்வின் அடிமையே! (விரைவில்) பல குழப்பங்கள் தோன்றும். அப்போது நீ கொலை செய்யப்பட்டவனாக இருக்கலாம். (ஆனால்) கொலைகாரனாக இருக்கக் கூடாது'' என்று அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறக் கேட்டதாக என் தந்தை சொன்னார் என்று அப்துல்லாஹ் இப்னு கப்பாப்(ரலி) அறிவிக்கிறார். இப்னு அபீகைஸமா, தாரகுத்னீ
1283 காலித் இப்னு உர்ஃபுதா வாயிலாக அஹ்மதில் மேற்கண்ட ஹதீஸ் போன்று இடம் பெற்றுள்ளது.