அத்தியாயம் 32 அறப்போரும் வழிகாட்டு நெறிகளும்

ஸஹீஹ் முஸ்லிம்
அத்தியாயம் 32
அறப்போரும் வழிகாட்டு நெறிகளும்

பாடம் : 1 இஸ்லாமிய அழைப்புச் செய்தி எட்டிய பிறகும் அதை ஏற்க மறு(த்து தாக்குதல் தொடுக்க ஆயத்தமாக இரு)ப்போர்மீது முன்னறிவிப்பின்றி தாக்குதல் தொடுப்பது செல்லும்.
3564. இப்னு அவ்ன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(எதிரிகள்மீது) தாக்குதல் தொடுப்பதற்கு முன் அவர்களுக்கு இஸ்லாமிய அழைப்பு விடுப்பது பற்றிக் கேட்டு நான் நாஃபிஉ (ரஹ்) அவர்களுக்குக் கடிதம் எழுதினேன்; அவர்கள் எனக்கு பதில் எழுதினார்கள்.
அதில் அவர்கள், "இஸ்லாத்தின் ஆரம்பத்தில்தான் இவ்வாறு (அழைப்பு விடுக்கும் வழக்கம்) இருந்தது. (பிறகு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "பனுல் முஸ்தலிக்" குலத்தார் அசட்டையாக (எச்சரிக்கையின்றி) இருந்தபோது அவர்கள்மீது (திடீர்) தாக்குதல் நடத்தினார்கள். அப்போது அவர்களின் கால்நடைகள் நீர்நிலை ஒன்றில் தண்ணீர் புகட்டப்பட்டுக் கொண்டிருந்தன. அவர்களில் போர் வீரர்களைக் கொன்றார்கள்; (பெண்கள், சிறார்கள் ஆகியோரைக்) கைதிகளாகப் பிடித்தார்கள்.
அன்றுதான் ஜுவைரியா (ரலி) அவர்களை, அல்லது பின்த் அல்ஹாரிஸ் (ரலி) அவர்களை உரிமையாக்கிக் கொண்டார்கள்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் எனக்கு அறிவித்தார்கள். அவர்களும் அப்போது (நபியவர்களின்) அப்படையில் இருந்தார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான யஹ்யா பின் யஹ்யா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: எனக்கு இந்த ஹதீஸை அறிவித்த சுலைம் பின் அக்ளர் (ரஹ்) அவர்கள் "நபி (ஸல்) அவர்கள் அன்றுதான் ஜுவைரியாவை உரிமையாக்கிக்கொண்டார்கள்" என்று சொன்னதாகவே நான் எண்ணுகிறேன். ஆனால், "பின்துல் ஹாரிஸை" என்று அவர் சொன்னது உறுதி.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு அவ்ன் (ரஹ்) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "ஜுவைரியா பின்த் அல்ஹாரிஸ் (ரலி) அவர்களை உரிமையாக்கிக்கொண்டார்கள்" என்று ஐயப்பாடின்றி இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 32
பாடம் : 2 தலைவர், படைப்பிரிவுகளுக்குத் தளபதிகளை நியமிப்பதும், போர் நெறிகள் குறித்து அவர்களுக்கு அவர் அறிவுறுத்துவதும்.
3565. சுஃப்யான் அஸ்ஸவ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(அடுத்து வரும் ஹதீஸை) எனக்கு அறிவித்த அல்கமா பின் மர்ஸத் (ரஹ்) அவர்கள், இதை எங்களுக்கு அறிவித்து,நன்கு எழுதி வைத்துக்கொள்ளுமாறு கூறினார்கள்.
இது இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 32
3566. புரைதா பின் அல்ஹசீப் அல்அஸ்லமீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு படைக்கோ அல்லது படைப் பிரிவுக்கோ தளபதி ஒருவரை நியமித்தால்,தனியாக அவரை அழைத்து இறைவனை அஞ்சுமாறும் அவருடன் இருக்கும் முஸ்லிம்களின் நலனைப் பேணுமாறும் அறிவுறுத்துவார்கள்.
பிறகு, பின்வருமாறு அறிவுரை கூறுவார்கள்: இறைவனின் பெயரால், இறைவனின் பாதையில் போரிடுங்கள். இறைவனை மறு(த்து உண்மைக்கு எதிராக நட)ப்பவர்களுடன் போராடுங்கள்; அறப்போர் புரியுங்கள்; போர்ச் செல்வங்களில் கையாடல் செய்யாதீர்கள்; ஒப்பந்தங்களை முறிக்காதீர்கள்; அங்ககீனம் செய்யாதீர்கள்; குழந்தைகளைக் கொல்லாதீர்கள்; உம்முடைய எதிரிகளான இணைவைப்பாளர்களை நீர் சந்தித்தால் மூன்று அம்சங்களின் பக்கம் அவர்களை அழைப்பீராக.
அவற்றில் எந்த ஒன்றை ஏற்றுக்கொள்ள அவர்கள் முன்வந்தாலும் அவர்களிடமிருந்து அதை ஏற்பீராக; நடவடிக்கையை நிறுத்தி விடுவீராக. பிறகு அவர்களுக்கு இஸ்லாத்தின் பக்கம் அழைப்பு விடுப்பீராக! அதை அவர்கள் ஏற்றுக்கொண்டால், அவர்களிடமிருந்து அதை ஏற்று, அவர்கள்மீது நடவடிக்கையை நிறுத்திவிடுவீராக.
பிறகு அவர்களை (அவர்கள் வசிக்கும்) அந்த ஊரிலிருந்து முஹாஜிர்கள் (நாடு துறந்தோர்) வசிக்கும் பகுதிக்கு வந்து குடியேறுமாறு அழைப்பீராக. மேலும், அவர்களிடம் "இவ்வாறு நீங்கள் செய்தால் முஹாஜிர்களுக்குக் கிடைக்கும் சாதகங்களும் முஹாஜிர்களுக்கு ஏற்படும் பாதகங்களும் உங்களுக்கும் உண்டு" என்று தெரிவித்துவிடுவீராக.
அங்கிருந்து இடம்பெயர அவர்கள் மறுத்தால் அவர்களிடம் கூறிவிடுங்கள்: முஸ்லிம்களில் நாட்டுப்புறத்தாரைப் போன்றுதான் நீங்களும் இருக்க வேண்டும்; மற்ற இறைநம்பிக்கையாளர்களுக்குப் பொருந்தும் அனைத்து இறைச்சட்டங்களும் உங்களுக்கும் பொருந்தும்.போர்ச் செல்வங்கள் (ஃகனீமத்) மற்றும் போரிடாமல் கிடைத்த (ஃபய்உ) சொத்துகள் எதுவும் உங்களுக்குக் கிடைக்காது; முஸ்லிம்களுடன் இணைந்து அறப்போர்களில் ஈடுபட்டால் தவிர (அப்போது மட்டுமே அவர்களுக்கு அச்செல்வங்கள் கிடைக்கும் என்று கூறிவிடுங்கள்). அதற்கும் அவர்கள் மறுத்தால் அவர்களிடம் "ஜிஸ்யா" (இராணுவக்) காப்புவரியைக் கோருக.
அதையேற்று அவர்கள் உமக்கு இணங்கினால் அவர்களிடமிருந்து அதை ஒப்புக்கொண்டு அவர்கள்மீது நடவடிக்கை எடுப்பதை நிறுத்திவிடுவீராக. அதற்கும் அவர்கள் மறுத்தால், அல்லாஹ்விடம் உதவி கோரிவிட்டு, அவர்கள்மீது போர் தொடுப்பீராக. ஒரு கோட்டையை நீர் முற்று கையிடும்போது, அல்லாஹ்வின் பொறுப்பையும் அவனுடைய தூதரின் பொறுப்பையும் நீங்கள் தர வேண்டுமென அவர்கள் விரும்பினால், அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதரின் பொறுப்பை அவர்களுக்குத் தந்துவிடாதீர்.
மாறாக, அவர்களுக்கு உமது பொறுப்பையும் உம்முடைய தோழர்களின் பொறுப்பையுமே தருவீராக. ஏனெனில்,நீங்கள் உங்களது பொறுப்பையும் உங்களுடைய தோழர்களின் பொறுப்பையும் முறித்துக் கொள்வதானது,அல்லாஹ்வின் பொறுப்பையும் அவனுடைய தூதருடைய பொறுப்பையும் முறித்துக்கொள்வதைவிட எளிதானதாகும்.
நீங்கள் ஒரு கோட்டைவாசிகளை முற்றுகையிடும்போது, அல்லாஹ்வின் தீர்ப்பின் மீது இறங்கிவருவதற்கு அவர்கள் விரும்பினால், அல்லாஹ்வின் தீர்ப்பிற்கு அவர்கள் இறங்கிவர உடனே அவர்களுக்கு அனுமதியளிக்காதீர். மாறாக,உம்முடைய தீர்ப்புக்கு இணங்கிவர அவர்களுக்கு அனுமதியளிப்பீராக. ஏனெனில், அவர்கள் விஷயத்தில் அல்லாஹ்வின் தீர்ப்பைச் சரியாக நீர் நிறை வேற்றுவீரா என்பது உமக்குத் தெரியாது.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அப்துர் ரஹ்மான் பின் மஹ்தீ (ரஹ்) அவர்கள் (இதை அறிவித்துவிட்டு), "இவ்வாறுதான் சுஃப்யான் (ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸை அறிவித்தார்கள். அல்லது இதைப்போன்று (வேறு வார்த்தைகளில்) அறிவித்தார்கள்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 32
3567. மேற்கண்ட ஹதீஸ் புரைதா பின் அல்ஹசீப் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒருவரது தலைமையில் படையை அனுப்பி னால், அல்லது படைப்பிரிவை அனுப்பினால் அவரை அழைத்து அறிவுரை கூறுவார்கள்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 32
3568. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 32
பாடம் : 3 மக்களிடம் எளிதாக நடந்துகொள்ள வேண்டும்; வெறுப்பேற்றக் கூடாது எனும் கட்டளை.
3569. அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் தோழர்களில் எவரையேனும் தமது (அரசியல் அல்லது மார்க்கப்)பணிக்காக அனுப்பும்போது, "(மக்களுக்கு) நற்செய்திகளை(யே அதிகமாக)க் கூறுங்கள்; (அவர்களுக்கு) வெறுப்பேற்றிவிடாதீர்கள்; (அவர்களிடம்) எளிதாக நடந்து கொள்ளுங்கள்; (அவர்களைச்) சிரமப்படுத்திவிடாதீர்கள்"என்று கூறுவார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 32
3570. அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் என்னையும் முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களையும் யமன் நாட்டுக்கு அனுப்பிவைத்தார்கள். அப்போது, "(மக்களிடம்) எளிதாக நடந்துகொள்ளுங்கள்; (மக்களைச்) சிரமப்படுத்திவிடாதீர்கள்; நற்செய்தி(களை அதிகம்) கூறுங்கள்; (எச்சரிக்கை செய்யும் போதுகூட) வெறுப்பேற்றிவிடாதீர்கள். நீங்கள் இருவரும் (தீர்ப்பளிக்கும்போது) இணக்கமாக நடந்துகொள்ளுங்கள். முரண்பட்டுக்கொள்ளாதீர்கள்" என்று (அறிவுரை) கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூமூசா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் ஸைத் பின் அபீஉனைசா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "நீங்கள் இருவரும் (தீர்ப்பளிக்கும்போது) இணக்கமாக நடந்துகொள்ளுங்கள்; முரண்பட்டுக்கொள்ளாதீர்கள்" எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 32
3571. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(மக்களிடம்) எளிதாக நடந்துகொள்ளுங்கள்; (அவர்களைச்) சிரமப்படுத்திவிடாதீர்கள்; (நற்செய்திகளைக் கூறி) அமைதிப்படுத்துங்கள்; (எச்சரிக்கும்போதுகூட) வெறுப்பேற்றி விடாதீர்கள்.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 32
பாடம் : 4 மோசடி செய்வது தடை செய்யப்பட்டதாகும்.
3572. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் மறுமை நாளில் (விசாரணைக்காக மக்களில்) முன்னோர் பின்னோர் அனைவரையும் ஒன்றுதிரட்டும்போது, (உலகில்) மோசடி செய்த ஒவ்வொருவனுக்கும் (அவன் செய்த மோசடிக்கு அடையாளமாகக்) கொடி ஒன்று ஏற்றப்படும். பிறகு "இது இன்ன மனிதருடைய மகன் இன்ன மனிதரின் மோசடி(யைக் குறிக்கும் கொடி)"என்று கூறப்படும்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 32
3573. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மோசடி செய்பவனுக்கு மறுமை நாளில் (அவன் செய்த மோசடிக்கு அடையாளமாகக்) கொடி ஒன்று நடப்படும். அப்போது "அறிந்துகொள்ளுங்கள்: இது இன்ன மனிதரின் மகன் இன்ன மனிதரின் மோசடி (யைக் குறிக்கும் கொடி)"என்று கூறப்படும்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 32
3574. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மோசடி செய்பவன் ஒவ்வொருவனுக்கும் மறுமை நாளில் ஒரு (அடையாளக்) கொடி இருக்கும்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 32
3575. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மோசடி செய்பவன் ஒவ்வொருவனுக்கும் மறுமை நாளில் (அடையாளக்) கொடி ஒன்று இருக்கும். "இது இன்ன மனிதனின் மோசடி(யைக் குறிக்கும் கொடி)" என்று கூறப்படும்.
இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "இது இன்ன மனிதனின் மோசடி(யைக் குறிக்கும் கொடி) என்று கூறப்படும்" எனும் குறிப்பு இல்லை.
அத்தியாயம் : 32
3576. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மோசடிக்காரன் ஒவ்வொருவனுக்கும் மறுமை நாளில் (அடையாளக்) கொடி ஒன்று இருக்கும். அதன் மூலம் அவன் அடையாளம் காணப்படுவான். "இது இன்ன மனிதனின் மோசடி(யைக் குறிக்கும் கொடி)" என்று கூறப்படும்.
இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 32
3577. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மோசடி செய்பவன் ஒவ்வொருவனுக்கும் மறுமை நாளில் (அடையாளக்) கொடி ஒன்று இருக்கும். அதன் மூலம் அவன் அடையாளம் காணப்படுவான்.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 32
3578. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மோசடி செய்பவன் ஒவ்வொருவனுடைய பின்புறத்திலும் மறுமை நாளில் (அடையாளக்) கொடி ஒன்று இருக்கும்.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 32
3579. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மோசடி செய்பவன் ஒவ்வொருவனுக்கும் மறுமை நாளில் (அடையாளக்) கொடி ஒன்று இருக்கும். அது அவனது மோசடியின் அளவுக்கு (உயரமாக) ஏற்றப்படும். அறிந்து கொள்ளுங்கள்: பொதுமக்களுக்குத் தலைமைப் பொறுப்பை ஏற்று, மோசடி செய்தவனைவிட மாபெரும் மோசடிக்காரன் வேறெவருமில்லை.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 32
பாடம் : 5 போரின்போது சூழ்ச்சி செய்வது அனுமதிக்கப்பட்டதே.
3580. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
போர் என்பது சூழ்ச்சியாகும்.
இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 32
3581. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
போர் என்பது சூழ்ச்சியாகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 32
பாடம் : 6 எதிரியை (போர்க் களத்தில்) சந்திக்க ஆசைப்படுவது வெறுக்கத் தக்கதாகும் என்பதும், அவ்வாறு சந்திக்க நேர்ந்தால் (நிலை குலைந்துவிடாமல்) பொறுமையாக இருக்குமாறு வந்துள்ள கட்டளையும்.
3582. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எதிரிகளை (போர்க்களத்தில்) சந்திக்க ஆசைப்படாதீர்கள். அவர்களை நீங்கள் (போர்க் களத்தில்) சந்திக்க நேர்ந்தால், (போரின் துன்பங்களைக் கண்டு நிலை குலைந்துவிடாமல்) பொறுமையாக இருங்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 32
3583. அபுந்நள்ர் சாலிம் பின் உமய்யா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(என் முன்னாள் உரிமையாளர்) உமர் பின் உபைதில்லாஹ் (ரஹ்) அவர்களுக்கு, அவர்கள் ஹரூரிய்யாக்களை (காரிஜிய்யாக்கள்) நோக்கிப் போருக்குச் சென்றபோது அஸ்லம் குலத்தைச் சேர்ந்த நபித்தோழரான அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் கடிதம் எழுதினார்கள். அதில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எதிரிகளைச் சந்தித்த நாட்களில் ஒன்றில் (நண்பகல் நேரம்வரை) காத்திருந்தார்கள். சூரியன் (உச்சியிலிருந்து) சாய்ந்ததும் மக்களிடையே நின்று, "மக்களே! எதிரிகளை(ப் போர்க்களத்தில்) சந்திக்க ஆசைப்படாதீர்கள். அல்லாஹ்விடம் (போர் அழிவுகளிலிருந்து) பாதுகாப்புக் கோருங்கள். அவ்வாறு எதிரிகளைச் சந்திக்க நேர்ந்துவிட்டால், (போரின் துன்பங்களைக் கண்டு துவண்டுவிடாமல்) பொறுமையாக இருங்கள். அறிந்துகொள்ளுங்கள்: (அநீதிக்கெதிராக உயர்த்தப்படும்) வாட்களின் நிழலிலில் தான் சொர்க்கம் உள்ளது" என்று கூறினார்கள்.
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நின்றுகொண்டு, "இறைவா! வேதத்தை அருள்பவனே! மேகத்தை நகர்த்துபவனே! கூட்டுப் படையினரைத் தோற்கடித்தவனே! இவர்களையும் தோற்கடிப்பாயாக. இவர்களுக்கெதிராக எங்களுக்கு உதவி செய்வாயாக!" என்று பிரார்த்தித்தார்கள்.
அத்தியாயம் : 32
பாடம் : 7 எதிரிகளைச் சந்திக்கும்போது இறையுதவி வேண்டிப் பிரார்த்திப்பது விரும்பத் தக்கதாகும்.
3584. அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அகழ்ப் போரின்போது) கூட்டுப் படையினருக் கெதிராகப் பிரார்த்தித்தார்கள். அப்போது, "இறைவா! வேதத்தை அருள்பவனே! விரைவாகக் கணக்கெடுப்பவனே! இக்கூட்டுப் படையினரைத் தோற்கடிப்பாயாக. இறைவா! இவர்களைத் தோல்வியுறச் செய்து, நடுக்கத்திற்குள்ளாக்குவாயாக!" என்று பிரார்த்தித்தார்கள்.
அத்தியாயம் : 32
3585. மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதிலும் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மேற்கண்ட ஹதீஸில் உள்ளபடி) பிரார்த்தித்தார்கள்" என்றே ஹதீஸ் ஆரம்பமாகி, அதிலுள்ள மற்ற விவரங்கள் இடம் பெறுகின்றன.
"(இக்கூட்டுப் படையினரைத் தோற்கடிப்பாயாக எனும் இடத்தில்) கூட்டுப்படையினரைத் தோற்கடிப்பவனே!" என்று இடம் பெற்றுள்ளது. இறுதியில் இடம்பெற்றுள்ள "இறைவா!" எனும் சொல் இடம்பெறவில்லை.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் இப்னு அபீஉமர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "மேகத்தை நகர்த்துபவனே!" என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 32
3586. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உஹுதுப் போர் நாளில் "இறைவா! நீ (இந்த முஸ்லிம் படையை அழிக்க) நாடினால் (இனி) உன்னை மட்டுமே வழிபடுவோர் யாரும் இப்புவியில் இருக்கமாட்டார்கள்" என்று பிரார்த்தித்துக்கொண்டிருந்தார்கள்.
அத்தியாயம் : 32
பாடம் : 8 போரில் பெண்கள் மற்றும் குழந்தைகளைக் கொல்வது தடை செய்யப்பட்டுள்ளது.
3587. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கலந்துகொண்ட அறப்போர்களில் ஒன்றில் பெண்ணொருத்தி கொல்லப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டாள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெண்களையும் குழந்தைகளையும் கொல்வதைக் கண்டித்தார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 32
3588. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கலந்துகொண்ட அறப்போர்களில் ஒன்றில் பெண்ணொருத்தி கொல்லப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டாள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெண்களையும் குழந்தைகளையும் கொல்வதற்குத் தடைவிதித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 32
பாடம் : 9 (போர்ச் சூழலில் எதிரிகளின்) பெண்களையும் குழந்தைகளையும் இரவு நேரங்களில் தற்செயலாகக் கொன்றுவிட்டால் குற்றமாகாது.
3589. ஸஅப் பின் ஜஸ்ஸாமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களிடம் "இணைவைப் போ(ரான எதிரிநாட்டின)ரின் பெண்களும் குழந்தைகளும் (போரில் சிக்கிச்) சேதமடையும் (வாய்ப்பு உண்டு என்னும்) பட்சத்தில் அவர்கள்மீது இரவு நேரத்தில் தாக்குதல் நடத்தலாமா?" என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் "அவர்களும் (எதிரிகளான) அவர்களைச் சேர்ந்தவர்களே" என்று பதிலளித்தார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 32
3590. ஸஅப் பின் ஜஸ்ஸாமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான், "அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் (எதிரிகளான) இணைவைப்பாளர்களின் பெண்களையும் குழந்தைகளையும் இரவு நேரத்தில் தாக்க வேண்டிய நிலை (சில சந்தர்ப்பங்களில்) ஏற்பட்டுவிடுகிறதே?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "அவர்களும் எதிரிகளைச் சேர்ந்தவர்கள்தாம்" என்று விடையளித்தார்கள்.
அத்தியாயம் : 32
3591. ஸஅப் பின் ஜஸ்ஸாமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களிடம், "குதிரைப் படையினர் இரவு நேரத்தில் திடீர்த் தாக்குதல் நடத்தும் போது (எதிரிகளான) இணைவைப்பாளர்களின் குழந்தைகளும் பாதிக்கப்பட்டுவிடுகிறார்களே?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் "அக்குழந்தைகளும் அவர்களின் தந்தையரைச் சேர்ந்தவர்களே" என்று விடையளித்தார்கள்.
அத்தியாயம் : 32
பாடம் : 10 (போர் நடவடிக்கையாக எதிரிகளான) இறைமறுப்பாளர்களின் மரங்களை வெட்டுவதும் எரிப்பதும் அனுமதிக்கப்பட்டதாகும்.
3592. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பயங்கரவாதிகளான) பனூ நளீர் குலத்தாரின் பேரீச்ச மரங்களை (போர்க்கால நடவடிக்கையாக) எரித்தார்கள்; இன்னும் (சிலவற்றை) வெட்டிவிட்டார்கள். அது "புவைரா" எனும் இடமாகும்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் இப்னு குதைபா (ரஹ்) மற்றும் இப்னு ரும்ஹ் (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில் "எனவேதான்,வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் "நீங்கள் (அவர்களுடைய) பேரீச்ச மரங்களை வெட்டியதோ, அல்லது அவற்றின் அடிமரங்கள்மீது அவற்றை நிற்கும்படி விட்டுவிட்டதோ எல்லாமே அல்லாஹ்வின் அனுமதியுடனேயே நடந்தன. தீயோரை அவன் இழிவுபடுத்தவே (இவ்வாறு அனுமதித்தான்)" (59:5) எனும் வசனத்தை அருளினான்" என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 32
3593. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்ட) பனூ நளீர் குலத்தாரின் பேரீச்ச மரங்களை வெட்டினார்கள்; (சில மரங்களை) எரித்தார்கள். இந்தச் சம்பவம் குறித்தே (கவிஞர்) ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி) அவர்கள் பின்வருமாறு பாடினார்கள்:
புவைராவில்
கொழுந்துவிட்டெரிந்த நெருப்பு
பனூ லுஅய் குலத்தாரின்
(கையாலாகாத) தலைவர்களுக்கு
எளிதாகிவிட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பாகவே "நீங்கள் (அவர்களுடைய) பேரீச்ச மரங்களை வெட்டியதோ, அல்லது அவற்றின் அடிமரங்கள்மீது அவற்றை நிற்கும்படி விட்டுவிட்டதோ எல்லாமே அல்லாஹ்வின் அனுமதியுடனேயே நடந்தன" (59:5) எனும் இறைவசனம் அருளப்பெற்றது.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 32
3594. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்ட) பனூ நளீர் குலத்தாரின் பேரீச்ச மரங்களை எரித்தார்கள்.
அத்தியாயம் : 32
பாடம் : 11 போர்ச் செல்வங்கள் இந்தச் சமுதாயத்திற்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டவை ஆகும்.
3595. ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் நமக்கு அறிவித்த ஹதீஸ்களாகும். அவற்றில் பின்வரும் ஹதீஸும் ஒன்றாகும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறைத்தூதர்களில் ஒருவர் (யூஷஉ பின் நூன் (அலை) அவர்கள்) ஓர் அறப்போருக்குச் சென்றார். அப்போது அவர் தம் சமுதாயத்தாரிடம் "ஒரு பெண்ணிடம் இல்லற உரிமையைப் பெற்ற ஒருவர், அவளுடன் தாம்பத்திய உறவைத் தொடங்க விரும்பி, இன்னும் தாம்பத்திய உறவைத் தொடங்காமலிருப்பின் என்னைப் பின்பற்றி (போருக்கு) வர வேண்டாம். (அவ்வாறே,) வீடு கட்டி முடித்து, அதன் மேற்கூரையை (இன்னும்) உயர்த்தாமலிருப்பவரும் என்னைப் பின்பற்றி (போருக்கு) வர வேண்டாம். ஆட்டையோ, சினை ஒட்டகங்களையோ வாங்கிவிட்டு, அவை குட்டிகள் ஈனுவதை எதிர்பார்த்துக் கொண்டிருப்பவரும் என்னைப் பின்பற்றி (போருக்கு) வர வேண்டாம்" என்று கூறிவிட்டுப் போருக்குப் புறப்பட்டார்.
ஓர் ஊரை (ஜெரிக்கோ நகரை வெள்ளிக்கிழமை) அஸ்ர் தொழுகையின் நேரத்தில் அல்லது சற்றேறக்குறைய அந்த வேளையில் அவர் நெருங்கினார். (சற்று நேரத்தில் சூரியன் மறையத் தொடங்க, சனிக்கிழமை போரிடுவது அவர்களுக்குத் தடை செய்யப்பட்டிருந்த காரணத்தால் தோற்றுப்போக நேரிடுமே என்றஞ்சி) சூரியனை நோக்கி, "நீ,இறைவனின் கட்டளைப்படி இயங்குகின்றாய். நானும் இறைக்கட்டளைப்படி நடக்க வேண்டியவன் ஆவேன்" என்று கூறிவிட்டு, "இறைவா! சூரியனை (உடனே மறையவிடாமல்) தடுத்துவிடு" என்று பிரார்த்தித்தார். எனவே, அவருக்கு அல்லாஹ் வெற்றியை வழங்கும்வரை சூரியன் (மறையாமல்) தடுத்து நிறுத்தப்பட்டது.
(வெற்றிபெற்ற) பின்னர் அம்மக்கள் போரில் கிடைத்த செல்வங்களை ஒன்று சேர்த்தனர். அப்போது அவற்றை (எரித்துச் சாம்பலாக்கி)ப் புசிப்பதற்கு வானிலிருந்து நெருப்பு வந்தது. (ஆனால்) அவற்றைப் புசிக்க அது மறுத்துவிட்டது. அந்த இறைத்தூதர் "உங்களில் கையாடல் நடந்துள்ளது. ஆகவே, ஒவ்வொரு குலத்திலிருந்தும் ஒரு மனிதர் என்னிடம் சத்தியப் பிரமாணம் அளிக்கட்டும்" என்று கூறினார்.
அவ்வாறே அவர்களும் அவரிடம் சத்தியப் பிரமாணம் அளித்தனர். அப்போது, ஒரு மனிதரின் கை, இறைத்தூதரின் கையோடு ஒட்டிக்கொண்டது. அப்போது இறைத்தூதர், "உங்களிடையே தான் கையாடல் செய்யப்பட்ட பொருள் உள்ளது. ஆகவே, உன்னுடைய குலத்தார் என்னிடம் சத்தியப் பிரமாணம் அளிக்கட்டும்" என்று கூறினார்.
அவ்வாறே, அவர்கள் சத்தியப் பிரமாணம் அளிக்க, இரண்டு மனிதர்களின் கை அல்லது மூவருடைய கை இறைத்தூதருடைய கையுடன் ஒட்டிக்கொண்டது. அப்போது அவர், "உங்களிடையேதான் கையாடல் செய்யப்பட்ட அந்தப் பொருள் உள்ளது. நீங்கள்தாம் அதைக் கையாடல் செய்துள்ளீர்கள்" என்று கூறினார்.
ஆகவே, அக்குலத்தார் பசுமாட்டின் தலை அளவுக்குத் தங்கத்தைக் கொண்டு வந்து, மண் தரையில் இருந்த பொருட்களுடன் வைத்தனர். உடனே (வானிலிருந்து) நெருப்பு வந்து அதைப் புசித்தது. (முற்காலங்களில் போர்ச் செல்வங்கள் இப்படித்தான் செய்யப்பட்டன.)
நமக்கு முன்னால் யாருக்கும் போர்ச்செல்வங்கள் (எடுத்துப் பயன்படுத்திக்கொள்ள) அனுமதிக்கப்படவில்லை. (பின்னர் நமக்கு அப்பொருட்களைப் பயன்படுத்த அல்லாஹ் அனுமதியளித்தான்). வளமும் உயர்வும் உள்ள அல்லாஹ் நமது பலவீனத்தையும் இயலாமையையும் கண்டு, அவற்றை நமக்கு அனுமதிக்கப்பட்டவையாக ஆக்கினான்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 32
பாடம் : 12 எதிரிகளிடமிருந்து கைப்பற்றப்படும் செல்வங்கள்.
3596. முஸ்அப் பின் சஅத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
என் தந்தை (சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள்), "குமுஸ்" (ஐந்திலொரு பங்கு) நிதியிலிருந்து ஒரு வாளை எடுத்துக் கொண்டு நபி (ஸல்) அவர்களிடம் சென்று, "இதை எனக்கு அன்பளிப்பாகத் தாருங்கள்" என்று கேட்டார்கள்.
அப்போதுதான் வல்லமையும் மாண்பும்மிக்க அல்லாஹ், "(நபியே!) போர்க்களத்தில் எதிரிகளிடமிருந்து கைப்பற்றப்படும் செல்வங்கள் குறித்து அவர்கள் உம்மிடம் வினவுகின்றனர். அந்தச் செல்வங்கள் (பற்றி முடிவு செய்யும் அதிகாரம்) அல்லாஹ்வுக்கும் இத் தூதருக்கும் உரியது" என்று கூறுவீராக!" (8:1) எனும் வசனத்தை அருளினான்.
அத்தியாயம் : 32
3597. சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
என் விஷயத்தில் நான்கு இறைவசனங்கள் அருளப்பெற்றன. நான் (குமுஸ் நிதியிலிருந்து) வாள் ஒன்றை எடுத்துக்கொண்டு நபி (ஸல்) அவர்களிடம் சென்று, "அல்லாஹ்வின் தூதரே! இதை எனக்கு அன்பளிப்பாகத் தாருங்கள்"என்று கேட்டேன்.
நபியவர்கள் "அதை வைத்துவிடு" என்றார்கள். பிறகு நான் (அதை அன்பளிப்பாகத் தருமாறு கேட்டு) எழுந்து நின்றேன். நபியவர்கள் "எடுத்த இடத்திலேயே அதை வைத்துவிடு" என்று சொன்னார்கள்.
பிறகு மீண்டும் எழுந்து நின்று, "அல்லாஹ்வின் தூதரே! அதை எனக்கு அன்பளிப்பாகத் தாருங்கள்" என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், "(இல்லை) அதை வைத்துவிடு" என்றார்கள். பிறகும் நான் எழுந்து, "அல்லாஹ்வின் தூதரே! இதை எனக்கு அன்பளிப்பாகத் தந்துவிடுங்கள். போதுமென்ற மனமில்லாத ஒருவனாக நான் கருதப்படுகிறேனா?" என்று கூறினேன்.
அப்போதும் நபி (ஸல்) அவர்கள், "எடுத்த இடத்திலேயே அதை வைத்துவிடு" என்று கூறினார்கள். அப்போதுதான் "(நபியே!) போர்க் களத்தில் எதிரிகளிடமிருந்து கைப்பற்றப்படும் செல்வங்களைப் பற்றி உம்மிடம் அவர்கள் கேட்கின்றனர். போர்க்களத்தில் எதிரிகளிடம் கைப்பற்றப்படும் செல்வங்கள் (பற்றி முடிவு செய்யும் அதிகாரம்) அல்லாஹ்வுக்கும் இத்தூதருக்கும் உரியது எனறு கூறுவீராக!" (8:1) எனும் இந்த வசனம் அருளப்பெற்றது.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 32
3598. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ஒரு படைப் பிரிவை நஜ்துப் பகுதிக்கு அனுப்பிவைத்தார்கள். அதில் நானும் இடம்பெற்றிருந்தேன். நாங்கள் நிறைய ஒட்டகங்களைப் போர்ச்செல்வமாகப் பெற்றோம்.
எங்கள் பங்குகள், (ஒவ்வொருவருக்கும்) பன்னிரண்டு ஒட்டகங்கள் அல்லது பதினோரு ஒட்டகங்களாக இருந்தன. எங்கள் ஒவ்வொரு வருக்கும் ஒவ்வோர் ஒட்டகம் அதிகப்படியாகவும் (நஃபல்) தரப்பட்டது.
அத்தியாயம் : 32
3599. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு படைப்பிரிவை நஜ்துப் பகுதிக்கு அனுப்பி வைத்தார்கள். அதில் நானும் இடம் பெற்றிருந்தேன். (போருக்குப் பின் எதிரிகளிடம் கைப்பற்றப்பட்டச் செல்வங்களில்) எங்கள் பங்குகள்,ஒவ்வொருவருக்கும் பன்னிரண்டு ஒட்டகங்கள்வரை எட்டின.
இது போக (ஒவ்வொருவருக்கும்) ஓர் ஒட்டகம் அதிகப்படியாகவும் (நஃபல்) தரப்பட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்தப் பங்கீட்டை மாற்றவில்லை.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 32
3600. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நஜ்துப் பகுதிக்கு படைப் பிரிவு ஒன்றை அனுப்பி வைத்தார்கள். அந்தப் படையில் நானும் புறப்பட்டுச் சென்றேன். (அப்போருக்குப் பின்) நிறைய ஒட்டகங்களையும் ஆடுகளையும் நாங்கள் (போர்ச் செல்வமாகப்) பெற்றோம்.
எங்கள் பங்குகள், ஒவ்வொருவருக்கும் பன்னிரண்டு ஒட்டகங்களாக இருந்தன. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வோர் ஒட்டகத்தை அதிகப்படியாகவும் (நஃபல்) தந்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே வேறு இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் ஐந்து அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் இப்னு அவ்ன் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "நான் நாஃபிஉ (ரஹ்) அவர்களிடம் போர்ச் செல்வங்களைப் பற்றிக் கேட்டு கடிதம் எழுதினேன். அப்போது நாஃபிஉ (ரஹ்) அவர்கள் "இப்னு உமர் (ரலி) அவர்கள் ஒரு படைப்பிரிவில் இருந்தார்கள்..." என்று தொடங்கி மேற்கண்ட ஹதீஸில் உள்ளவாறு பதில் எழுதினார்கள்" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 32
3601. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறிய தாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் போர்ச் செல்வத்தில் எங்கள் பங்குகளைத் தந்ததோடு "குமுஸ்" நிதியிலிருந்து அதிகப்படியாகவும் (நஃபல்) தந்தார்கள். அந்த வகையில் ஒரு வயது பூர்த்தியான பெரிய ஒட்டகம் ஒன்று எனக்குக் கிடைத்தது.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 32
3602. மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு படைப் பிரிவுக்குப் போர்ச் செல்வத்தில் (பங்கிட்டுக் கொடுத்ததுபோக) அதிகமாகவும் (நஃபல்) கொடுத்தார்கள்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 32
3603. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அறப்போருக்காகத் தாம் அனுப்பிவைக்கும் படைப் பிரிவினரில் சிலருக்கு மட்டும் பொதுப் படையினருடன் சேர்ந்து பெறுகின்ற பங்குக்கு மேல் தனிப்பட்ட முறையில் (குமுஸ் நிதியிலிருந்து) அதிகப்படியாகவும் (நஃபல்) கொடுத்து வந்தார்கள்.
அத்தியாயம் : 32
பாடம் : 13 போரில் கொல்லப்பட்ட எதிரியின் உடைமைகள் அவனை வீழ்த்தியவருக்கே உரியவை ஆகும்.
3604. அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஹுனைன் போர் நடந்த ஆண்டில் (அப்போருக்காக) நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் புறப்பட்டோம். (எதிரிகளைப் போர்க்களத்தில்) நாங்கள் சந்தித்தபோது, (ஆரம்பத்தில்) முஸ்லிம்களுக்குத் தோல்வி பயம் ஏற்பட்டது.
அப்போது இணைவைப்பாளர்களில் ஒருவன் ஒரு முஸ்லிமின் மீது ஏறி உட்கார்ந்து கொண்டு, அவரைக் கொல்ல முயல்வதை நான் கண்டேன். நான் அவனிடம் சுற்றிவந்து, அவனுக்குப் பின்பக்கம் சென்று, அவனது பிடரி நரம்பில் வெட்டிவிட்டேன்.
உடனே அவன் (அந்த முஸ்லிமை விட்டுவிட்டு) என்னைத் தாவியணைத்து ஓர் இறுக்கு இறுக்கினான். பிராண வாயு பிரியும் நிலைக்கு நான் உள்ளானேன். பின்னர் மரணம் அவனைப் பிடித்துக்கொள்ளவே அவன் என்னை விட்டுவிட்டான்.
பின்னர் நான் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களைச் சென்றடைந்தேன். அப்போது அவர்கள் "மக்களுக்கு என்ன நேர்ந்தது? (ஏன் சிதறி ஓடுகிறார்கள்?)" என்று கேட்டார்கள். அதற்கு நான், "(எல்லாம்) அல்லாஹ்வின் ஏற்பாடு" என்று பதிலளித்தேன். பிறகு (பின்வாங்கி ஓடிய) மக்கள் (போர்க்களத்திற்கு) திரும்பி வந்தார்கள். (தீரத்துடன் போராடி வென்றார்கள்.)
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அமர்ந்துகொண்டு, "போரில் எதிரி ஒருவனைக் கொன்றதற்கான ஆதாரம் எவரிடம் இருக்கிறதோ அவருக்கே அந்த எதிரியின் (உடலில் கிடந்த ஆடை, ஆயுதம் போன்ற) உடைமைகள் உரியவை" என்று கூறினார்கள்.
அப்போது நான் எழுந்து நின்று, "(நான் எதிரி ஒருவனை வீழ்த்தியதற்கு) எனக்குச் சாட்சியம் கூறுபவர் யார்?" என்று கேட்டு விட்டு உட்கார்ந்துகொண்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மீண்டும் ("போரில் எதிரி ஒருவனைக் கொன்றதற்கான ஆதாரம் எவரிடம் இருக்கிறதோ அவருக்கே அந்த எதிரியின் உடைமைகள் உரியவை" என்று) கூறினார்கள்.
உடனே நான் (மறுபடியும்) எழுந்து "(நான் எதிரி ஒருவனை வீழ்த்தியதற்கு) எனக்குச் சாட்சியம் கூறுபவர் யார்?" என்று கேட்டேன்; பிறகு உட்கார்ந்துகொண்டேன். பிறகு, மூன்றாவது தடவையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முன்பு கூறியதைப் போன்றே கூறினார்கள்.
உடனே நான் எழுந்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னைப் பார்த்து), "உங்களுக்கு என்ன வேண்டும், அபூகத்தாதா?" என்று கேட்டார்கள். நடந்ததை அவர்களிடம் நான் எடுத்துரைத்தேன்.
அப்போது மக்களில் ஒருவர், "இவர் சொல்வது உண்மைதான், அல்லாஹ்வின் தூதரே! (இவரால்) கொல்லப்பட்டவரின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட பொருட்கள் என்னிடம் உள்ளன. அவர் தமது உரிமையை (எனக்கு) விட்டுக்கொடுக்கச் சொல்லுங்கள்" என்று கூறினார்.
அப்போது அபூபக்ர் அஸ்ஸித்தீக் (ரலி) அவர்கள், "இல்லை, அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் சிங்கங்களில் ஒரு சிங்கம் அல்லாஹ்வுக்காகவும் அவனுடைய தூதருக்காகவும் போரிட்டு (எதிரி ஒருவனை வீழ்த்திவிட்டு) வர, அவரால் கொல்லப்பட்ட எதிரியின் உடலிலிருந்து எடுத்த பொருளை உனக்குக் கொடுக்கும் முடிவுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செல்லமாட்டார்கள்" என்று கூறினார்கள்.
இதைக் கேட்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உண்மைதான். (எதிரியை வீழ்த்திய) இவரிடமே அந்தப் பொருட்களைக் கொடுத்துவிடு" என்று சொன்னார்கள்.
அவ்வாறே அவர் அதை என்னிடம் கொடுத்தார். (அந்த வகையில் எனக்குக் கவச உடையொன்று கிடைத்தது.) அந்தக் கவச உடையை விற்றுவிட்டு பனூ சலமா குலத்தார் வாழும் பகுதியில் ஒரு பேரீச்சந்தோட்டத்தை வாங்கினேன். அதுதான் இஸ்லாத்தைத் தழுவிய பின் நான் சேகரித்த முதல் சொத்தாகும்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் லைஸ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அபூபக்ர் (ரலி) அவர்கள் "இல்லை, அல்லாஹ்வின் சிங்கங்களில் ஒரு சிங்கத்தை விட்டுவிட்டு, குறைஷியரில் உள்ள குழிமுயல் குட்டிக்கு அதைக் கொடுக்க மாட்டார்கள்" என்று கூறினார்கள்" என இடம் பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூகத்தாதா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூகத்தாதா (ரலி) அவர்களிடமிருந்தே வேறோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 32
3605. அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
பத்ருப் போரின்போது நான் (படை) அணியில் நின்றுகொண்டிருந்த நேரத்தில் என் வலப் பக்கமும் இடப்பக்கமும் பார்த்தேன். என்னருகே (இருபக்கங்களிலும்) இளம் வயது அன்சாரிச் சிறுவர்கள் இருவர் நின்றுகொண்டிருந்தனர்."(இவர்களுக்கிடையே வந்து நிற்கிறோமே!) இவர்களைவிட வலுவானவர்களுக்கிடையே நான் இருந்திருக்கக் கூடாதா!"என்று நான் எண்ணினேன்.
அப்போது அவர்களில் ஒருவர் என்னைத் தொட்டுணர்த்தி "என் தந்தையின் சகோதரரே! (என மரியாதை நிமித்தம் அழைத்து) நீங்கள் அபூஜஹ்லை அறிவீர்களா?" என்று கேட்டார்.
நான், "ஆம் (அறிவேன்). உமக்கு அவனிடம் என்ன வேலை, என் சகோதரர் மகனே!" என்று கேட்டேன்.
அதற்கு அந்த இளவல், "அவன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை ஏசுகிறான் என்று எனக்குத் தகவல் கிடைத்தது. என் உயிர் யார் கையிலுள்ளதோ அவன் மீதாணையாக! நான் அவனைப் பார்த்தால், எங்களில் ஒருவர் இறக்கும்வரை அவனது உடலைவிட்டு எனது உடல் பிரியாது (ஒன்று நான், அல்லது அவன் மரணிக்கும்வரை அவனுடன் போரிட்டுக்கொண்டேயிருப்பேன்)" என்று கூறினார்.
இதைக் கேட்டு நான் வியந்துபோனேன். அப்போது மற்றோர் இளவலும் என்னைத் தொட்டுணர்த்தி முதலாமவர் கூறியதைப் போன்றே கூறினார். சிறிது நேரம்தான் கழிந்திருக்கும். அதற்குள் அபூஜஹ்ல் மக்களிடையே (பம்பரமாகச்) சுற்றி வருவதைக் கண்டு, "அதோ தெரிகிறானே? அவன்தான் நீங்கள் விசாரித்த உங்கள் ஆசாமி" என்று கூறினேன். உடனே அவர்கள் இருவரும் போட்டி போட்டுக்கொண்டு அவனை நோக்கிச் சென்று தம்மிடமிருந்த வாட்களால் அவனை வெட்டிக் கொன்றார்கள்.
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று அபூஜஹ்லைக் கொன்று விட்ட செய்தியைத் தெரிவித்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உங்களில் யார் அவனைக் கொன்றார்?" என்று கேட்டார்கள். அவர்களில் ஒவ்வொருவரும் "நான்தான் கொன்றேன்" என்று கூறினர்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உங்கள் வாட்க(ளில் படிந்த இரத்தக் கறைக)ளைத் துடைத்துவிட்டீர்களா?" என்று கேட்டார்கள். அவர்கள் இருவரும் "இல்லை" என்று பதிலுரைத்தனர்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்விரு வாட்களையும் கூர்ந்து பார்த்துவிட்டு, "நீங்கள் இருவருமே அவனை வெட்டிக்கொண்டிருக்கிறீர்கள்" என்று கூறினார்கள்.
(முதலில் வெட்டியவர் என்ற அடிப்படையில்) "முஆத் பின் அம்ர் பின் அல்ஜமூஹுக்கே அபூஜஹ்லின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட பொருட்கள் (சலப்) உரியவை" என்று தீர்ப்பளித்தார்கள். முஆத் பின் அம்ர் பின் அல்ஜமூஹ் (ரலி) மற்றும் முஆத் பின் அஃப்ரா (ரலி) ஆகிய இருவருமே அந்த இளவல்கள் ஆவர்.
அத்தியாயம் : 32
3606. அவ்ஃப் பின் மாலிக் அல்அஷ்ஜஈ (ரலி) அவர்கள் கூறியதாவது:
(மூத்தா போரின்போது யமன் பழங்குடி இனத்தாரான) "ஹிம்யர்" குலத்தாரில் ஒருவர் (ரோம பைஸாந்திய) எதிரிகளில் ஒருவரைக் கொன்றுவிட்டு, தம்மால் கொல்லப்பட்டவரின் உடைமைகளை எடுத்துக்கொள்ள விரும்பினார்.
ஆனால், காலித் பின் அல்வலீத் (ரலி) அவர்கள் (அவற்றை முழுமையாகத்) தர மறுத்து விட்டார்கள். அப்போது காலித் பின் அல்வலீத் (ரலி) அவர்களே அவர்களுக்குத் தளபதியாக இருந்தார்கள்.
எனவே, நான் (மதீனா திரும்பியதும்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று நடந்ததைத் தெரிவித்தேன். அவர்கள் காலிதிடம் "அவர், தாம் கொன்ற எதிரியின் உடைமைகளை எடுத்துக்கொள்ளவிடாமல் நீர் தடுக்கக் காரணமென்ன?" என்று வினவினார்கள். அதற்கு "அவை அதிகமாக இருப்பதாக நான் கருதினேன், அல்லாஹ்வின் தூதரே! (ஒரே ஆளுக்கு அவ்வளவையும் கொடுப்பது பொருத்தமாக இராது)" என்று காலித் (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அவற்றை அவரிடமே கொடுத்துவிடுங்கள்" என்று கூறினார்கள்.
பிறகு காலித் பின் அல்வலீத் (ரலி) அவர்கள் (அங்கு அமர்ந்திருந்த) என்னைக் கடந்து சென்றார்கள். உடனே நான் காலித் (ரலி) அவர்களது மேல்துண்டைப் பிடித்து இழுத்து, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உம்மைப் பற்றிக் கூறுவேன் என்று நான் கூறியபடி செய்துவிட்டேன் அல்லவா!" என்று கூறினேன்.
இதைக் கேட்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கோபமடைந்தார்கள். "காலிதே! அவருக்குக் கொடுக்காதீர். காலிதே! அவருக்குக் கொடுக்காதீர். என்னால் நியமிக்கப்பெற்ற தளபதிகளை எனக்காக விட்டுவைக்கமாட்டீர்களா? உங்களது நிலையும் (உங்களுக்குத் தளபதிகளாக நியமிக்கப்பட்ட) அவர்களது நிலையும் ஒட்டகங்களையோ ஆடுகளையோ மேய்க்குமாறு நியமிக்கப்பட்ட (இடையன்) ஒருவனின் நிலையைப் போன்றதாகும். அவன் அவற்றை (ஓட்டிச் சென்று) மேய்த்தான். பிறகு தண்ணீர் புகட்டும் நேரம் வரும்வரை காத்திருந்து, நீர்நிலை ஒன்றுக்கு அவற்றை ஓட்டிச் சென்றான்.
அவை அதில் தண்ணீர் குடிக்கத் துவங்கின. அப்போது (நீர்நிலையின் மேற்பகுதியில் உள்ள) தெளிந்த நீரை அவை குடித்துவிட்டு, கலங்கலான நீரை விட்டுவைத்தன. (அவ்வாறுதான்) தெளிந்த நீர் உங்களுக்கும் கலங்கலான நீர் உங்கள் தளபதிகளுக்கும் உரியவையா?" என்று கேட்டார்கள்.
அத்தியாயம் : 32
3607. மேற்கண்ட ஹதீஸ் அவ்ஃப் பின் மாலிக் அல்அஷ்ஜஈ (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "மூத்தா போரின்போது ஸைத் பின் ஹாரிஸா (ரலி) அவர்களுடன் புறப்பட்டுச் சென்றவர்களில் நானும் இருந்தேன். படையினருக்கு உதவி செய்ய யமனிலிருந்து ஒருவர் என்னுடன் வந்திருந்தார்..." என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
ஆயினும், அதில் "அவ்ஃப் பின் மாலிக் (ரலி) அவர்கள் "காலித் (ரலி) அவர்களே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எதிரியைக் கொன்றவருக்கே அவரால் கொல்லப்பட்டவரின் உடைமைகள் உரியவை எனத் தீர்ப்பளித்துள்ளதை நீங்கள் அறியவில்லையா?" என்று கேட்டார்கள். அதற்கு காலித் (ரலி) அவர்கள் "ஆம்; ஆயினும், நான் அதை அதிகமாகக் கருதுகிறேன்" என்று விடையளித்தார்கள்" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 32
3608. சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் "ஹவாஸின்" குலத்தாருடன் போரிடப் புறப்பட்டோம். நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் காலை உணவு உண்டு கொண்டு இருந்தபோது, சிவப்பு ஒட்டகம் ஒன்றில் (உளவு பார்ப்பதற்காக எதிரிகளில்) ஒரு மனிதர் வந்து, ஒட்டகத்தை மண்டியிட வைத்தார். பிறகு ஒட்டகத்திலிருந்த பையிலிருந்து கயிறு ஒன்றை எடுத்து ஒட்டகத்தைக் கட்டிப்போட்டார்.
பிறகு மக்களுடன் சேர்ந்து காலை உணவு உட்கொள்ள வந்தார்; எங்களை நோட்டமிட ஆரம்பித்தார். எங்களிடையே பலவீனமும் வாகனப் பற்றாக்குறையும் இருந்தன. எங்களில் சிலர் நடைப்பயணிகளாக இருந்தனர். பிறகு அவர் (அங்கிருந்து) வேகமாகப் புறப்பட்டு தமது ஒட்டகத்திடம் சென்று, அதன் கயிற்றை அவிழ்த்துவிட்டு, அதை மண்டியிடச் செய்து அதிலேறி அமர்ந்தார்.
பிறகு ஒட்டகத்தைக் கிளப்பி அங்கிருந்து வேகமாகப் புறப்பட்டார். (அவர் உளவு பார்க்க வந்தவர் என்பதை அறிந்த முஸ்லிம்களில்) ஒருவர் சாம்பல் நிற ஒட்டகத்தில் ஏறி அவரைப் பின்தொடர்ந்தார்.
நானும் வேகமாகப் புறப்பட்டுச் சென்று, (பின்னால் சென்ற அம்மனிதரின்) ஒட்டகத்திற்கு அருகில் சென்றேன். பிறகு முன்னேறிச் சென்று, அந்தச் சிவப்பு ஒட்டகத்திற்கு அருகில் இருந்தேன். பிறகு இன்னும் சற்று முன்னேறிச் சென்று,அந்தச் சிவப்பு ஒட்டகத்தின் கடிவாளத்தைப் பிடித்து, அதை மண்டியிடச் செய்தேன்.
அவ்வொட்டகம் முழங்காலை மடித்து பூமியில் அமர்ந்ததும் எனது உறையிலிருந்த வாளை உருவி அந்த மனிதரின் தலையில் செலுத்தினேன். அந்த மனிதர் சரிந்து விழுந்தார். பிறகு அந்த ஒட்டகத்தை அதன் சிவிகையுடனும் மற்ற ஆயுதங்களுடனும் ஓட்டிக்கொண்டு வந்தேன்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அவர்களுடனிருந்த மக்களும் என்னை எதிர்கொண்டார்கள். "அவனைக் கொன்றவர் யார்?" என்று நபியவர்கள் கேட்டார்கள். மக்கள் "(சலமா) இப்னுல் அக்வஉதாம் (அவனைக் கொன்றார்)" என்று பதிலளித்தனர். "இவருக்கே அவனுடைய உடைமைகள் அனைத்தும் உரியவை" என்று நபியவர்கள் கூறினார்கள்.
அத்தியாயம் : 32
பாடம் : 14 போர்ச் செல்வங்களில் சிலருக்குக் கூடுதலாக வழங்குவதும், போர்க் கைதிகளை ஒப்படைத்துவிட்டு முஸ்லிம்களை (எதிரிகளிடமிருந்து) விடுவிப்பதும்.
3609. சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் "(பனூ) ஃபஸாரா" குலத்தார்மீது போரிடப் புறப்பட்டோம். எங்களுக்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் தளபதியாக இருந்தார்கள். அவர்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே எங்களுக்குத் தளபதியாக நியமித்தார்கள்.
எங்களுக்கும் (ஃபஸாரா குலத்தாரின்) நீர் நிலைக்குமிடையே ஒரு மணி நேரப்பயணத் தொலைவு இருந்தபோது,இரவின் இறுதி நேரத்தில் அபூபக்ர் (ரலி) அவர்கள் எங்களை ஓய்வெடுக்கச் சொன்னார்கள்.
பின்னர் (காலைத் தொழுகைக்குப் பின்) பல்வேறு திசைகளிலிருந்து அதிரடித் தாக்குதல் தொடுத்தோம். அப்போது (ஹவாஸின் குலத்தாரின்) நீர்நிலைக்கு வந்த அபூபக்ர் (ரலி) அவர்கள் அங்கு சிலரை வெட்டி வீழ்த்தினார்கள்;வேறுசிலரைச் சிறைப்பிடித்தார்கள்.
அப்போது நான் (எதிரிகளில்) ஒரு கூட்டத்தைப் பார்த்தேன். அவர்களில் பெண்களும் குழந்தைகளும் இருந்தனர். அவர்கள் என்னை முந்திக்கொண்டு (என்னிடமிருந்து தப்பி) மலைக்குச் சென்றுவிடுவார்களோ என்று நான் அஞ்சினேன். உடனே அவர்களுக்கும் அந்த மலைக்குமிடையே ஓர் அம்பைப் பாய்ச்சினேன். அந்த அம்பைப் பார்த்ததும் அவர்கள் நின்றுவிட்டனர்.
உடனே அவர்களைப் பிடித்துக் கொண்டுவந்தேன். அவர்களிடையே பனூ ஃபஸாரா குலத்தைச் சேர்ந்த பெண்ணொருத்தியும் இருந்தாள். அவளது உடலில் தோலினாலான "கஷ்உ" ஒன்று இருந்தது. ("கஷ்உ" என்பதற்கு "விரிப்பு" என்று பொருள்.) அவளுடன் அவளுடைய மகளும் இருந்தாள். அவள் அரபியரிலேயே அழகிய பெண் ஆவாள். அவர்களைப் பிடித்துக்கொண்டு அபூபக்ர் (ரலி) அவர்களிடம் வந்தேன். அபூபக்ர் (ரலி) அவர்கள் அவளுடைய மகளை எனக்குக் கூடுதல் பங்காக வழங்கினார்கள்.
இந்நிலையில் நாங்கள் (மதீனாவுக்கு) வந்தோம். நான் அவளுக்காக ஆடையைக்கூடக் களைந்திருக்கவில்லை. (தாம்பத்திய உறவு கொள்ளவில்லை. மதீனாவின்) கடைத் தெருவில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னைச் சந்தித்தபோது, "சலமா! அப்பெண்ணை என்னிடம் கொடுத்துவிடு" என்று கூறினார்கள். நான் "அல்லாஹ்வின் தூதரே! அவள் என்னைக் கவர்ந்துவிட்டாள். நான் அவளுக்காக ஆடையைக்கூட களைந்திருக்க வில்லை" என்று கூறிவிட்டேன்.
பிறகு மறுநாள் கடைத் தெருவில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னைச் சந்தித்த போதும் "சலமா! அப்பெண்ணை என்னிடம் ஒப்படைத்துவிடுவாயாக! உன் தந்தை (உன்னைப் போன்ற மகனைப் பெற்றெடுத்ததற்காக) அல்லாஹ்வுக்கே (நன்றி)" என்று கூறினார்கள்.
நான் "அல்லாஹ்வின் தூதரே! அவள் உங்களுக்கே உரியவள் (அவளை உங்களிடம் ஒப்படைத்துவிட்டேன்). அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அவளுக்காக ஆடையைக்கூட களைந்திருக்கவில்லை" என்று கூறினேன்.
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவளை மக்காவாசிகளிடம் அனுப்பிவைத்து, மக்காவில் கைதிகளாகப்பிடித்துவைக்கப்பட்டிருந்த முஸ்லிம்களில் சிலரை விடுவித்தார்கள்.
அத்தியாயம் : 32
பாடம் : 15 போரிடாமல் கிடைத்த செல்வங்களின் சட்டம்.
3610. ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் எமக்கு அறிவித்த ஹதீஸ்களாகும். அவற்றில் பின்வரும் ஹதீஸும் ஒன்றாகும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஓர் ஊருக்கு நீங்கள் சென்று, அங்கு நீங்கள் தங்கி (போரிடாமல் அவர்களின் செல்வங்களைக் கைப்பற்றி)னால், அதிலுள்ள உங்களின் பங்கு (நன்கொடையாக உங்களுக்கே) வந்துசேரும்.
ஓர் ஊரார் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்தால் (அவர்கள்மீது தாக்குதல் தொடுத்து அவர்களின் செல்வங்களைக் கைப்பற்றினால்), அதில் ஐந்தில் ஒரு பாகம் (குமுஸ்) அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் சேரும். பின்னர் அ(வற்றில் மிஞ்சுவ)து உங்களுக்கு உரியதாகும்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 32
3611. உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
பனூ நளீர் (யூதக்) குலத்தாரின் செல்வங்கள், அல்லாஹ் தன் தூதருக்கு அளித்தவை ஆகும். அதற்காக முஸ்லிம்கள் குதிரைகளையோ ஒட்டகங்களையோ ஓட்டிச் செல்லவில்லை (போர் செய்திருக்கவில்லை). அவை நபி (ஸல்) அவர்களுக்கு மட்டுமே உரியவையாக இருந்தன. அதிலிருந்துதான் நபியவர்கள் தம் வீட்டாருக்கு ஆண்டுச் செலவுக்குக் கொடுத்துவந்தார்கள். பிறகு மீதியை அல்லாஹ்வின் பாதையில் போரிடுவதற்கான ஆயத்தப் பொருட்கள் வாங்க,ஆயுதங்களுக்காகவும் குதிரைகளுக்காகவும் செலவிட்டுவந்தார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 32
3612. மாலிக் பின் அவ்ஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
என்னிடம் (கலீஃபா) உமர் பின் அல்கத் தாப் (ரலி) அவர்கள் ஆளனுப்பினார்கள். நண்பகல் நேரத்தில் நான் அவர்களிடம் சென்றேன். அவர்கள் தமது இல்லத்தில் ஒரு கட்டிலில் விரிப்பு ஏதுமின்றி ஈச்சம் பாயில் ஒரு தோல் தலையணையின் மீது சாய்ந்தபடி அமர்ந்திருந்தார்கள்.
அப்போது அவர்கள் என்னிடம் (என் பெயரைச் சுருக்கி) "மால்! உங்கள் குலத்தாரிலுள்ள சில குடும்பத்தார் (என்னிடம்) விரைந்து வந்தனர். அவர்களுக்குச் சிறிதளவு நன்கொடைகளை வழங்குமாறு உத்தரவிட்டேன். அதை நீங்கள் பெற்றுச் சென்று, அவர்களிடையே பங்கிட்டுக் கொடுங்கள்" என்று கூறினார்கள்.
நான், "இந்தப் பொறுப்பை வேறெவரிடமாவது நீங்கள் ஒப்படைத்தால் நன்றாயிருக்குமே!" என்று சொன்னேன். அதற்கு "மாலே! நீங்களே அதைப் பெற்றுக்கொள்ளுங்கள்" என்று கூறினார்கள்.
அப்போது (உமர் (ரலி) அவர்களின் மெய்க்காவலர்) யர்ஃபஉ என்பார் வந்து, "இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! உஸ்மான் (ரலி), அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி), ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி), சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) ஆகியோர் (தங்களைச் சந்திக்க வந்துள்ளனர். தாங்கள் அவர்களைச்) சந்திக்க அனுமதியளிக்கிறீர்களா?" என்று கேட்டார். அதற்கு உமர் (ரலி) அவர்கள் "ஆம்" என அவர்களுக்கு அனுமதியளித்தார்கள். அவர்கள் அனைவரும் உள்ளே வந்(து, அமர்ந்)தனர்.
பிறகு (சற்று நேரம் கழித்து) யர்ஃபஉ வந்து, "அப்பாஸ் (ரலி) அவர்களும் அலீ (ரலி) அவர் களும் (தங்களைச் சந்திக்க அனுமதி கேட்கிறார்கள். அவர்களைச்) சந்திக்க அனுமதிக்கிறீர்களா?" என்று கேட்டார். உமர் (ரலி) அவர்கள் "ஆம்"என்று கூறி அவ்விருவருக்கும் அனுமதி அளித்தார்கள்.
அப்பாஸ் (ரலி) அவர்கள், "இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! எனக்கும் பொய்யரும் பாவியும் நாணயமற்றவரும் மோசடிக்காரருமான (என் சகோதரர் மகனான) இவருக்கும் (அலீக்கும்) இடையே தீர்ப்பளியுங்கள்" என்று சொன்னார்கள்.
அப்போது (உஸ்மான் (ரலி) அவர்களும் உடன்வந்திருந்த அவர்களுடைய நண்பர்களும் அடங்கிய) அக்குழுவினர், "ஆம்;இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! (இந்த) இருவருக்கு மிடையே தீர்ப்பளித்து ஒருவரது பிடியிலிருந்து மற்றவரை விடுவித்துவிடுங்கள்" என்று கூறினார்கள். (இதற்காகத்தான் இவ்விருவரும் அக்குழுவினரை முன்கூட்டியே அனுப்பி வைத்திருந்தனர் என்று எனக்குத் தோன்றியது.)
அதற்கு உமர் (ரலி) அவர்கள், "இருவரும் பொறுமையாக இருங்கள். எந்த அல்லாஹ்வின் கட்டளையால் வானமும் பூமியும் நிலைபெற்றிருக்கின்றனவோ அவன் பொருட்டால் உங்களிடம் கேட்கிறேன்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(நபிமார்களான எங்களுக்கு) யாரும் வாரிசாகமாட்டார். நாங்கள் விட்டுச்செல்வதெல்லாம் தர்மமே" என்று சொன்னதை நீங்கள் அறிவீர்களா?" என்று (அக்குழுவினரிடம்) கேட்டார்கள். அக்குழுவினர் "ஆம் (அவ்வாறு சொன்னதை நாங்கள் அறிவோம்)" என்று பதிலளித்தனர்.
பிறகு உமர் (ரலி) அவர்கள் (வாதியும் - பிரதிவாதியுமான) அலீ (ரலி) அவர்களையும் அப்பாஸ் (ரலி) அவர்களையும் நோக்கி, "எந்த அல்லாஹ்வின் கட்டளையால் வானமும் பூமியும் நிலைபெற்றிருக்கின்றனவோ அவன் பொருட்டால் உங்கள் இருவரிடமும் கேட்கிறேன்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "(நபிமார்களான எங்களுக்கு) யாரும் வாரிசாகமாட்டார். நாங்கள் விட்டுச்செல்வதெல்லாம் தர்மமே" என்று சொன்னதை நீங்கள் அறிவீர்களா?" என்று கேட்டார்கள்.
அவ்விருவரும் "ஆம் (அவ்வாறு அவர்கள் சொன்னதை நாங்கள் அறிவோம்)" என்று விடையளித்தனர். உமர் (ரலி) அவர்கள், "(போரிடாமல் கைப்பற்றப்பட்ட) இந்த "ஃபைஉ"ச் செல்வத்தை தன் தூதருக்கு மட்டுமே உரியதாக அல்லாஹ் ஆக்கியிருந்தான். அவர்களைத் தவிர வேறெவருக்கும் அவன் அதைச் சொந்தமாக்கவில்லை" (என்று கூறிவிட்டு,) "(பல்வேறு) ஊராரிடமிருந்து எதைத் தன் தூதர் கைப்பற்றுமாறு அல்லாஹ் செய்தானோ அது அல்லாஹ்வுக்கும் இத்தூதருக்கும்... உரியது" (59:7) எனும் இறைவசனத்தை ஓதிக்காட்டினார்கள். (இதற்கு முந்தைய வசனத்தையும் அப்போது ஓதினார்களா இல்லையா என்பது எனக்குத் தெரியாது.)
தொடர்ந்து "எனவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், பனூ நளீர் குலத்தாரின் செல்வங்களை (அவர்கள் நாடு கடத்தப்பட்டபின்) உங்களிடையே பங்கிட்டுக் கொடுத்தார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உங்களைவிட தம்மைப் பெரிதாகக் கருதவுமில்லை; உங்களை விட்டுவிட்டுத் தமக்காக அதை எடுத்துக்கொள்ளவுமில்லை. இறுதியாக (இறைத்தூதருக்கு மட்டுமே இறைவன் ஒதுக்கிய அந்நிதியிலிருந்து) இந்த (ஃபதக்) செல்வம் மட்டுமே எஞ்சியது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்தச் செல்வத்திலிருந்து தம் வீட்டாரின் ஆண்டுச் செலவை எடுத்து(ச் செலவிட்டு)வந்தார்கள். அப்படிக் கொடுத்த பிறகு மீதியுள்ளதைப் பொதுச் சொத்தாக ஆக்கினார்கள். எந்த அல்லாஹ்வின் கட்டளையால் வானமும் பூமியும் நிலைபெற்றிருக்கின்றனவோ அந்த அல்லாஹ்வின் பொருட்டால் உங்களை நான் கேட்கிறேன்: இதை நீங்கள் அறிவீர்களா?" என்று கேட்டார்கள்.
அதற்கு அக்குழுவினர் "ஆம் (அறிவோம்)" என்று பதிலளித்தனர். பிறகு அல்லாஹ்வைப் பொருட்டாக்கி அக்குழுவினரிடம் கேட்டதைப் போன்றே அப்பாஸ் (ரலி) அவர்களிடமும் அலீ (ரலி) அவர்களிடமும் "அதை நீங்கள் இருவரும் அறிவீர்களா?" என்று கேட்டார்கள். அவர்கள் இருவரும் "ஆம் (அறிவோம்)" என்று பதிலளித்தனர்.
தொடர்ந்து உமர் (ரலி) அவர்கள், "பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்த போது (ஆட்சித் தலைவராக வந்த) அபூபக்ர் (ரலி) அவர்கள், "நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய (ஆட்சிக்குப்) பிரதிநிதியாவேன்" என்று கூறினார்கள். (அச்செல் வத்தை தமது பொறுப்பில் வைத்துக் கொண்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செயல்பட்டதைப் போன்றே தாமும் செயல்பட்டார்கள்.) அப்போதும் நீங்கள் இருவரும் (அபூபக்ர் (ரலி) அவர்களிடம்) சென்றீர்கள். (அப்பாஸே!) நீங்கள் உம்முடைய சகோதரரின் புதல்வரிடமிருந்து (நபியிடமிருந்து) உங்களுக்குச் சேர வேண்டிய வாரிசுச் சொத்தைக் கேட்டீர்கள். இதோ இவரும் (அலீயும்) தம் மனைவிக்கு அவருடைய தந்தை (ஆகிய நபி)யிடமிருந்து சேர வேண்டிய வாரிசுச் சொத்தைக் கேட்டார்.
அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (நபிமார்களான) எங்களுக்கு யாரும் வாரிசாகமாட்டார். நாங்கள் விட்டுச் செல்வதெல்லாம் தர்மமே! என்று கூறினார்கள்" என்று பதிலளித்து (அதைத்தர மறுத்து)விட்டார்கள். அப்போது நீங்கள் இருவரும் அபூபக்ர் (ரலி) அவர்களைப் பொய்யராகவும் பாவியாகவும் நாணயமற்ற மோசடிக்காரராகவுமே பார்த்தீர்கள். ஆனால், அபூபக்ர் (ரலி) அவர்கள் அந்த விஷயத்தில் உண்மையே உரைத்தார்கள்; நல்லவிதமாகவே நடந்துகொண்டார்கள்; நேர்வழி நின்று வாய்மையையே பின்பற்றினார்கள் என்பதை அல்லாஹ் அறிவான்.
பிறகு அபூபக்ர் (ரலி) அவர்கள் இறந்ததும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கும் அபூபக்ர் (ரலி) அவர்களுக்கும் நான் பிரதிநிதியானேன்; அந்தச் செல்வத்துக்குப் பொறுப்பேற்றேன். (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலி) அவர்களும் செயல்பட்டதைப் போன்றே நானும் செயல்பட்டேன்.) அப்போது என்னையும் நீங்கள் இருவரும் பொய்யனாகவும் பாவியாகவும் நாணயமற்ற மோசடிக்காரனாகவுமே பார்த்தீர்கள்.
ஆனால், இந்த விஷயத்தில் நான் உண்மையே உரைத்தேன்; நல்ல விதமாகவே நடந்து கொண்டேன்; நேர்வழி நின்று,வாய்மையையே பின்பற்றினேன் என்பதை அல்லாஹ் அறிவான்.
பிறகு நீங்களும் (இதோ) இவரும் சேர்ந்து வந்தீர்கள். நீங்கள் இருவரும் ஒரே நிலைப் பாட்டில்தான் இருந்தீர்கள். நீங்கள் இருவருமே, அதை எங்கள் இருவரிடமும் ஒப்படைத்து விடுங்கள் என்று கூறினீர்கள். அப்போது உங்கள் இருவரிடமும் நான் "நீங்கள் இருவரும் விரும்பினால் இச்செல்வத்தை ஒப்படைக்கிறேன். ஆனால், இந்த விஷயத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எவ்வாறு செயல்பட்டார்களோ அவ்வாறே நீங்கள் இருவரும் செயல்பட வேண்டும் எனும் நிபந்தனையின் பேரில் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு வாக்குறுதியளிக்க வேண்டும்" என்று நான் கூறினேன்.
நீங்கள் இருவரும் அதன் பேரில் (என் நிபந்தனையை ஏற்று) அச்செல்வத்தைப் பெற்றுச் சென்றீர்கள். அவ்வாறுதானே?" என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் இருவரும் "ஆம்" என்று பதிலளித்தனர். தொடர்ந்து உமர் (ரலி) அவர்கள், "பின்னர் நீங்கள் இருவரும் உங்களிருவர் இடையே தீர்ப்பளிக்கும்படி கோரி என்னிடம் வந்துள்ளீர்கள். இல்லை, அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இந்த விஷயத்தில் இதைத் தவிர வேறெந்தத் தீர்ப்பையும் மறுமை நாள் நிகழும்வரை அளிக்கமாட்டேன். உங்கள் இருவராலும் இதைப் பராமரிக்க முடியாவிட்டால், என்னிடமே அதைத் திரும்ப ஒப்படைத்துவிடுங்கள் (அதை நானே பராமரித்துக் கொள்கிறேன்)" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 32
3613. மேற்கண்ட ஹதீஸ், மாலிக் பின் அவ்ஸ் பின் அல்ஹதஸான் (ரஹ்) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது:
அவற்றில், "உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் என்னிடம் ஆளனுப்பினார்கள். (நான் சென்றேன்.) அப்போது அவர்கள் உங்கள் குலத்தாரில் சில குடும்பத்தார் (என்னிடம்) வந்தார்கள்..." என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மேலும் அவற்றில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்த (ஃபைஉ)ச் செல்வத்திலிருந்தே தம் வீட்டாருக்கு ஓராண்டிற்குச் செலவிட்டுவந்தார்கள்" என்று இடம்பெற்றுள்ளது.
மஅமர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அச்செல்வத்திலிருந்து தம் வீட்டாருக்கு ஓராண்டிற்கு வேண்டிய உணவை சேமித்து வைப்பார்கள். பிறகு மீதியை எடுத்து, அல்லாஹ்வின் (பாதையில் செலவிடும்) செல்வத்தை எந்த இனங்களில் செலவிடுவார்களோ அவற்றில் (நல நிதியாக வைத்துச்) செலவிட்டு வந்தார்கள்" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 32
பாடம் : 16 "(இறைத்தூதர்களாகிய) எங்களுக்கு யாரும் (சொத்தில்) வாரிசாக முடியாது. நாங்கள் விட்டுச்செல்பவையெல்லாம் தர்மம் ஆகும்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது.
3614. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தபோது, அவர்களின் துணைவியர் உஸ்மான் (ரலி) அவர்களை (என் தந்தை கலீஃபா) அபூபக்ர் (ரலி) அவர்களிடம் அனுப்பிவைத்து, (அல்லாஹ்வின் தூதரிடமிருந்து) தங்களுக்குச் சேர வேண்டிய சொத்தை அபூபக்ர் (ரலி) அவர்களிடம் கேட்க விரும்பினர்.
அப்போது நான் அவர்களைப் பார்த்து, "(இறைத்தூதர்களான) எங்களுக்கு யாரும் (சொத்தில்) வாரிசாக முடியாது. நாங்கள் விட்டுச்செல்பவையெல்லாம் தர்மமே" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொல்லியிருக்கவில்லையா?" என்று கேட்டேன்.
அத்தியாயம் : 32
3615. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் புதல்வி ஃபாத்திமா (ரலி) அவர்கள் (அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்த பிறகு), (கலீஃபா) அபூபக்ர் அஸ்ஸித்தீக் (ரலி) அவர்களிடம் ஆளனுப்பி, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் ஒதுக்கித் தந்திருந்த மதீனா(விலிருந்த பனூ நளீர் குலத்தாரின்) சொத்து, "ஃபதக்" (ஃபைஉச்) சொத்து, கைபர் சொத்தில் ஐந்தில் ஒரு பகுதியில் எஞ்சியிருப்பது ஆகியவற்றில் தமக்குச் சேர வேண்டிய வாரிசுரிமையைக் கேட்டார்கள்.
அதற்கு (கலீஃபா) அபூபக்ர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "(இறைத்தூதர்களான) எங்களுக்கு யாரும் (சொத்தில்) வாரிசாக முடியாது. நாங்கள் விட்டுச்செல்பவையெல்லாம் தர்மம் ஆகும். இந்தச் செல்வத்திலிருந்தே முஹம்மதின் குடும்பத்தார் சாப்பிடுவார்கள்" என்று சொல்லியிருக்கிறார்கள். (எனவே,)அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தர்மமாக விட்டுச்சென்ற இந்தச் சொத்தில் நான் சிறிதும் மாற்றம் செய்யமாட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் எந்நிலையில் இந்தச் சொத்துகள் இருந்துவந்தனவோ, அதே நிலையில் அவை நீடிக்கும். இ(ந்தச் சொத்துகளைப் பங்கிடும் விஷயத்)தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செயல்பட்ட படியே நானும் செயல்படுவேன்" என்று கூறி, ஃபாத்திமா (ரலி) அவர்களிடம் (அவற்றில்) எதையும் ஒப்படைக்க மறுத்துவிட்டார்கள்.
இதனால் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் கோபித்துக்கொண்டு, இறக்கும்வரை அவர்களுடன் ஃபாத்திமா (ரலி) அவர்கள் பேசவில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்த பின் ஆறு மாதகாலம்தான் ஃபாத்திமா (ரலி) அவர்கள் உயிர் வாழ்ந்தார்கள்.
ஃபாத்திமா (ரலி) அவர்கள் இறந்தபோது, அவர்களின் கணவர் அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் (இறப்பதற்கு முன் ஃபாத்திமா அவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க) இரவிலேயே அவர்களை அடக்கம் செய்துவிட்டார்கள். அபூபக்ர் (ரலி) அவர்களுக்குக்கூட இது குறித்துத் தெரிவிக்கவில்லை.
அலீ (ரலி) அவர்களே ஃபாத்திமா (ரலி) அவர்களுக்கு இறுதி (ஜனாஸா)த் தொழுகை தொழுவித்தார்கள். ஃபாத்திமா (ரலி) அவர்கள் வாழ்ந்தவரையில், அலீ (ரலி) அவர்கள்மீது மக்களுக்கு ஒரு தனிக்கவனம் இருந்து வந்தது.
ஃபாத்திமா (ரலி) அவர்கள் இறந்துவிட்ட பின் மக்களின் முகங்களில் (மரியாதையில்) மாற்றத்தை அலீ (ரலி) அவர்கள் கண்டார்கள்.
எனவே, (கலீஃபா) அபூபக்ரிடம் சமரசம் பேசவும் வாக்களிப்புப் பிரமாணம் (பைஅத்) செய்துகொள்ளவும் விரும்பினார்கள். அந்த (ஆறு) மாதங்களில் அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு அலீ (ரலி) அவர்கள் வாக்களிப்புப் பிரமாணம் செய்து கொடுத்திருக்கவில்லை.
ஆகவே, "(கலீஃபா அவர்களே!) நீங்கள் மட்டும் எங்களிடம் வாருங்கள். தங்களுடன் வேறெவரும் வர வேண்டாம்"என்று கூறி அலீ (ரலி) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு ஆளனுப்பினார்கள். (அபூபக்ர் (ரலி) அவர்களுடன் உமர் (ரலி) அவர்கள் வருவதை அலீ (ரலி) அவர்கள் விரும்பாததால்தான் அலீ (ரலி) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்.)
(இச்செய்தி அறிந்த) உமர் (ரலி) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம், "அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் மட்டும் தனியாக அவர்களிடம் செல்லாதீர்கள். (உங்களுக்குரிய கண்ணியத்தை அவர்கள் கொடுக்காமல் இருந்துவிடலாம்)"என்று கூறினார்கள்.
அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், "என் விஷயத்தில் அவர்கள் அப்படி நடந்துகொள்ள மாட்டார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்களிடம் நான் சென்றே தீருவேன்" என்று கூறிவிட்டு, அவ்வாறே அவர்களிடம் சென்றார்கள்.
அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் ஏகத்துவ உறுதிமொழி கூறி, இறைவனை வாழ்த்தினார்கள். பிறகு, (அபூபக்ர் (ரலி) அவர்களை நோக்கி) "உங்கள் சிறப்பையும் உங்களுக்கு அல்லாஹ் வழங்கிய (பாக்கியத்)தையும் நாங்கள் அறிவோம். அல்லாஹ் உங்களிடம் ஒப்படைத்துள்ள இந்த (ஆட்சித்தலைமை எனும்) நன்மையைக் குறித்து நாங்கள் பொறாமைப்படவில்லை. ஆயினும், இந்த (ஆட்சிப் பொறுப்பு) விஷயத்தில் (எங்களிடம் ஆலோசனை கலக்காமல்) தன்னிச்சையாகச் செயல்பட்டுவிட்டீர்கள். ஆனால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் எங்களுக்குள்ள உறவு முறையின் காரணத்தால் (ஆட்சித் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில்) எங்களுக்கு ஓர் உரிமை உண்டு என நாங்கள் கருதிவந்தோம்" என்று கூறினார்கள்.
அலீ (ரலி) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் பேசிக்கொண்டிருக்க, அபூபக்ர் (ரலி) அவர்களின் கண்கள் கண்ணீரைச் சொரிந்தன. அபூபக்ர் (ரலி) அவர்கள் பேசத் துவங்கியபோது, "என் உயிர் எவன் கையிலுள்ளதோ அ(ந்த இறை)வன்மீது சத்தியமாக! என்னுடைய உறவினர்களின் உறவைப் பேணுவதைவிட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் உறவினர்களே எனக்கு மிகவும் உவப்பானவர்கள். இந்தச் செல்வங்கள் தொடர்பாக எனக்கும் உங்களுக்குமிடையே ஏற்பட்ட (கருத்து வேறுபாட்டின்) விவகாரத்தில் நான் நியாயமாக நடந்துகொள்வதில் சிறிதும் குறைவைக்கவில்லை. இந்த விஷயத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்யக் கண்ட எதையும் செய்யாமல் நான் விட்டுவிடவுமில்லை" என்று கூறினார்கள்.
அப்போது அபூபக்ர் (ரலி) அவர்களிடம் அலீ (ரலி) அவர்கள் "தங்களுக்கு வாக்களிப்புப் பிரமாணம் (பைஅத்) செய்து கொடுப்பதற்காக நான் நண்பகலுக்குப் பின் (கட்டாயம்) வருவேன்" என்று கூறினார்கள்.
(அன்று) அபூபக்ர் (ரலி) அவர்கள் லுஹ்ர் தொழுகையை முடித்ததும் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீதேறி, ஏகத்துவ உறுதிமொழி கூறி, இறைவனை வாழ்த்திய பிறகு அலீ (ரலி) அவர்கள் குறித்தும், அவர் தமக்கு வாக்களிப்புப் பிரமாணம் (பைஅத்) செய்து கொடுக்கத் தாமதமானது குறித்தும், அதற்கு அலீ (ரலி) அவர்கள் தம்மிடம் கூறிய காரணம் குறித்தும் எடுத்துரைத்தார்கள். பின்னர் (அல்லாஹ்விடம்) பாவமன்னிப்புக் கோரினார்கள்.
பிறகு அலீ (ரலி) அவர்கள் (எழுந்து), ஏகத்துவ உறுதிமொழி கூறி இறைவனை வாழ்த்திய பின் அபூபக்ர் (ரலி) அவர்களின் தகுதியைக் கண்ணியப்படுத்திப் பேசினார்கள். "தாம் இவ்வாறு (ஆறு மாதம்) நடந்துகொள்ளக் காரணம்,அபூபக்ர் (ரலி) அவர்கள்மீது கொண்ட பொறாமையோ அல்லது அவர்களுக்கு அல்லாஹ் வழங்கிய சிறப்பை நிராகரித்ததோ அல்ல. மாறாக, (ஆட்சித் தலைமையைத் தேர்ந்தெடுக்கும்) இந்த விஷயத்தில் எங்களுக்குப் பங்கு உண்டு என (நபியின் குடும்பத்தாராகிய) நாங்கள் கருதிவந்ததேயாகும். ஆனால், (எங்களிடம் ஆலோசிக்காமல்) தன்னிச்சையாகச் செயல்படும் நிலை ஏற்பட்டுவிட்டது. அதனால் எங்களுக்கு மனவருத்தம் ஏற்பட்டது" என்று கூறினார்கள்.
இதைக் கேட்டு முஸ்லிம்கள் மகிழ்ச்சியடைந்து (அலீ (ரலி) அவர்களைப் பார்த்து) "நீங்கள் சரியாகவே நடந்துகொண்டீர்கள்" என்று கூறினர். இயல்பு நிலைக்கு அலீ (ரலி) அவர்கள் திரும்பியபோது, முஸ்லிம்கள் அலீ (ரலி) அவர்களிடம் நெருக்கமானவர்களாக ஆகிவிட்டனர்.
அத்தியாயம் : 32
3616. மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியகவும் வந்துள்ளது.
அவற்றில், "ஃபாத்திமா (ரலி) அவர்களும் அப்பாஸ் (ரலி) அவர்களும் (கலீஃபா) அபூபக்ர் (ரலி) அவர்களிடம் சென்று,அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து தங்களுக்குச் சேர வேண்டிய வாரிசுச் சொத்தைக் கேட்டனர்.
அப்போது அவர்களிருவரும் "ஃபதக்" பகுதியிலிருந்த நபியவர்களின் நிலத்தையும் கைபரில் அவர்களுக்குக் கிடைத்த பங்கையுமே அவ்வாறு கோரினர். அப்போது அவர்கள் இருவரிடமும் (மேற்கண்ட ஹதீஸில் உள்ளபடி) அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது.
மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளவாறே இடம்பெற்றுள்ளன.
மேலும், இந்த அறிவிப்புகளில் பின்வருமாறு காணப்படுகிறது: பிறகு அலீ (ரலி) அவர்கள் எழுந்து அபூபக்ர் (ரலி) அவர்களின் தகுதிகளில் சிலவற்றைக் கண்ணியப்படுத்திப் பேசினார்கள்; அவர்களின் சிறப்பையும் முதலிடத்தையும் பற்றிக் கூறினார்கள். பிறகு அபூபக்ர் (ரலி) அவர்களை நோக்கிச் சென்று அவர்களிடம் வாக்களிப்புப் பிரமாணம் (பைஅத்) செய்தார்கள்.
அப்போது மக்கள் அலீ (ரலி) அவர்களை நோக்கி வந்து "நீங்கள் சரியாகவே நடந்து கொண்டீர்கள்; நன்முறையில் நடந்து கொண்டீர்கள்" என்று கூறினர். அலீ (ரலி) அவர்கள் நிலைமையை இயல்புக்குக் கொண்டு வந்தபோது முஸ்லிம்கள் அலீ (ரலி) அவர்களுக்கு நெருக்கமானவர்களாக ஆகிவிட்டனர்.
அத்தியாயம் : 32
3617. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்துவிட்ட பிறகு, அவர்களின் புதல்வி ஃபாத்திமா (ரலி) அவர்கள், அல்லாஹ் தன் தூதருக்கு ஒதுக்கித்தந்திருந்த ("ஃபைஉ"ச்) செல்வத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விட்டுச்சென்றதிலிருந்து தமக்குச் சேர வேண்டிய வாரிசுச் சொத்தைப் பங்கிட்டுத் தருமாறு (கலீஃபா) அபூபக்ர் (ரலி) அவர்களிடம் கேட்டார்கள்.
அப்போது ஃபாத்திமா (ரலி) அவர்களிடம் அபூபக்ர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "(இறைத்தூதர்களான எங்களுக்கு) யாரும் (சொத்தில்) வாரிசாக முடியாது. நாங்கள் விட்டுச்செல்பவை எல்லாம் தர்மம் ஆகும் என்று சொல்லியிருக்கிறார்கள்" எனக் கூறி (அதிலிருந்து பங்கு தர மறுத்து)விட்டார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பிறகு ஃபாத்திமா (ரலி) அவர்கள் ஆறு மாதங்களே உயிர் வாழ்ந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது தனி நிதியாக) விட்டுச் சென்ற கைபர், ஃபதக் ஆகிய பகுதிகளின் சொத்துகளிலிருந்தும் மதீனாவில் அவர்கள் தர்மமாக விட்டுச்சென்ற சொத்திலிருந்தும் தமக்குப் பங்கு தரும்படியே அபூபக்ர் (ரலி) அவர்களிடம் ஃபாத்திமா (ரலி) அவர்கள் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.
அபூபக்ர் (ரலி) அவர்கள் ஃபாத்திமாவின் கோரிக்கையை ஏற்க மறுத்து, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்துவந்த எந்த ஒன்றையும் நான் செய்யாமல் விடமாட்டேன். அதை நான் செய்தே தீருவேன். அவர்களுடைய செயல்களில் எதையேனும் நான் விட்டுவிட்டால் நான் வழி தவறிவிடுவேனோ என அஞ்சுகிறேன்" என்று சொன்னார்கள்.
(அபூபக்ர் (ரலி) அவர்களின் மறைவுக்குப் பின்,) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவில் தர்மமாக விட்டுச் சென்ற சொத்தை (கலீஃபா) உமர் (ரலி) அவர்கள், அலீ (ரலி) அவர்களிடமும் அப்பாஸ் (ரலி) அவர்களிடமும் ஒப்படைத்தார்கள். அந்தச் சொத்தி(ன் பராமரிப்பி)ல் அப்பாஸ் (ரலி) அவர்களை அலீ (ரலி) அவர்கள் மிகைத்து (ஓரங்கட்டி) விட்டார்கள்.
கைபர் மற்றும் ஃபதக்கில் இருந்த சொத்துகளை (கலீஃபா) உமர் (ரலி) அவர்கள் (யாரிடமும் ஒப்படைக்காமல்) தமது பொறுப்பிலேயே வைத்துக்கொண்டார்கள். மேலும், "இவ்விரண்டும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தர்மமாக விட்டுச்சென்றவை. அவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஏற்பட்ட கடமைகளையும் அவசரத் தேவைகளையும் நிறைவேற்றுவதற்காக (ஒதுக்கப்பட்டு) இருந்தன. அவ்விரண்டின் அதிகாரமும் ஆட்சிக்குப் பொறுப்பேற்பவரிடம் இருக்க வேண்டும்" என்று சொன்னார்கள்.
இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் (இந்த ஹதீஸை அறிவித்தபோது), "அந்த இரு சொத்துகளும் இன்றுவரை அவ்வாறே (ஆட்சியாளரின் பொறுப்பிலேயே) இருந்து வருகின்றன" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 32
3618. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என் வாரிசுகள் ஒரு தீனாரைக்கூட (வாரிசுப்) பங்காகப் பெறமாட்டார்கள். என் மனைவிமார்களுக்குச் சேர வேண்டிய வாழ்க்கைச் செலவும் என் உதவியாளரின் ஊதியமும் போக நான் விட்டுச்செல்பவையெல்லாம் தர்மம் ஆகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 32
3619. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(இறைத்தூதர்களான) எங்களுக்கு யாரும் (சொத்தில்) வாரிசாக முடியாது. நாங்கள் விட்டுச் செல்பவையெல்லாம் தர்மம் ஆகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 32
பாடம் : 17 போரில் கலந்துகொண்டவர்களிடையே போர்ச்செல்வத்தை பங்கிடும் முறை.
3620. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், போரில் கிடைத்த செல்வத்தைப் பங்கிட்டார்கள். (போரில் கலந்துகொண்ட ஒரு மனிதருடன் குதிரையிருந்தால் அவருக்கு ஒரு பாகமும்) குதிரைக்காக இரு பாகங்களும் காலாட்படை வீரருக்கு ஒரு பாகமும் கொடுத்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "போரில் கிடைத்த செல்வத்தை" எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 32
பாடம் : 18 பத்ருப் போரில் வானவர்கள் மூலம் (இறைவன்) உதவி செய்ததும் போர்ச் செல்வங்கள் அனுமதிக்கப்பட்டதும்.
3621. உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், பத்ருப் போர் நாளில் (எதிரிகளான) இணை வைப்பாளர்கள் (எண்ணிக்கை) ஆயிரம் பேராக இருப்பதையும், (முஸ்லிம்களான) தம் தோழர்கள் முன்னூற்றுப் பத்தொன்பது பேராக இருப்பதையும் கண்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (தொழுகையின் திசையான) "கிப்லா"வை முன்னோக்கித் தம் கரங்களை நீட்டித் தம் இறைவனை உரத்த குரலில் (அழைத்துப்) பிராத்தித்தார்கள்.
"இறைவா! எனக்கு நீ அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவாயாக. இறைவா! எனக்கு அளித்த வாக்குறுதியை வழங்குவாயாக. இறைவா! இஸ்லாமியரில் இக்குழுவினரை நீ அழித்துவிட்டால், இந்தப் பூமியில் உன்னை (மட்டுமே) வழிபட (இனி) யாரும் இருக்க மாட்டார்கள்" என்று தம் கரங்களை நீட்டி, கிப்லாவை முன்னோக்கி இறைவனிடம் பிரார்த்தித்துக்கொண்டேயிருந்தார்கள். எந்த அளவுக்கென்றால், (கைகளை உயர்த்தியதால்) அவர்களுடைய தோள்களிலிருந்து அவர்களின் மேல்துண்டு நழுவி கீழே விழுந்துவிட்டது.
அப்போது அவர்களிடம் அபூபக்ர் (ரலி) அவர்கள் வந்து, அத்துண்டை எடுத்து அவர்களின் தோள்கள்மீது போட்டுவிட்டு,பின்னாலிருந்து அவர்களைக் கட்டியணைத்துக்கொண்டு, "அல்லாஹ்வின் தூதரே! உங்கள் இறைவனிடம் வேண்டியது போதும். அவன் உங்களுக்கு அளித்த வாக்குறுதியை நிச்சயம் நிறைவேற்றுவான்" என்று கூறினார்கள்.
அப்போது வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், "நீங்கள் உங்கள் இறைவனிடம் பாதுகாப்புக் கோரியபோது "உங்களுக்குப் பின்னால் அணிவகுக்கும் ஆயிரம் வானவர்களைக் கொண்டு உங்களுக்கு நான் உதவி செய்வேன்" என்று அவன் உங்களுக்குப் பதிலளித்தான்" (8:9) எனும் வசனத்தை அருளினான்.
அவ்வாறே நபி (ஸல்) அவர்களுக்கு வானவர்களைக் கொண்டு அல்லாஹ் உதவியளித்தான்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூஸுமைல் சிமாக் பின் அல்வலீத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
இந்த ஹதீஸை உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களிடமிருந்து எனக்கு அறிவித்த இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அன்றைய தினத்தில் முஸ்லிம்களில் ஒருவர் தமக்கு முன் சென்றுகொண்டிருந்த இணைவைப்பாளர்களில் ஒருவரை விரட்டிச் சென்றுகொண்டிருந்தார். அப்போது தமக்கு மேலே சாட்டையைச் சுழற்றி அடிக்கும் சப்தத்தையும், ஒரு குதிரை வீரர் "ஹைஸூம்! முன்னேறிச் செல்" என்று கூறியதையும் செவியுற்றார்.
உடனே தமக்கு முன்னால் சென்றுகொண்டிருந்த அந்த இணைவைப்பாளர் மல்லாந்து வீழ்ந்து கிடப்பதைக் கண்டார். அந்த இணைவைப்பாளரின் (அருகில் சென்று) அவர் பார்த்த போது, அவனது மூக்கில் காயமேற்பட்டிருப்பதையும் சாட்டையால் அடிபட்டது போல் அவனது முகம் கிழிந்து முகமெல்லாம் பச்சையாகக் கன்றிப் போயிருப்பதையும் கண்டார்.
உடனே அந்த அன்சாரீ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, அதைப் பற்றித் தெரிவித்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "நீர் சொன்னது உண்மையே. இது மூன்றாவது வானிலிருந்து இறங்கிய (வானவர்களின்) உதவியாகும்" என்று கூறினார்கள்.(முஸ்லிம்கள்) அன்றைய தினத்தில் (இணைவைப்பாளர்களில்) எழுபது பேரைக் கொன்றனர்; எழுபது பேரைச் சிறைப்பிடித்தனர்.
முஸ்லிம்கள் எதிரிகளைச் சிறைப்பிடித்தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடமும் உமர் (ரலி) அவர்களிடமும் "இந்தக் கைதிகள் விஷயத்தில் நீங்கள் என்ன கருதுகிறீர்கள் (இவர்களை என்ன செய்யலாம்)?" என்று (ஆலோசனை) கேட்டார்கள்.
அபூபக்ர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! (எதிரிகளாயினும்) அவர்கள் (நம்) தந்தையின் சகோதரர் புதல்வர்களே; நம் குலத்தாரே. அவர்களிடமிருந்து ஏதேனும் பிணைத் தொகையைப் பெற்றுக்கொள்ளுங்கள்; அது இறைமறுப்பாளர்களுக்கெதிரான பலமாக நமக்கு அமையும். அவர்களுக்கு அல்லாஹ் இஸ்லாத்திற்கு வழிகாட்டக்கூடும். இவ்வாறே நான் கருதுகிறேன்" என்றார்கள்.
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "நீங்கள் என்ன கருதுகிறீர்கள், கத்தாபின் புதல்வரே?" என்று கேட்டார்கள்.
உமர் (ரலி) அவர்கள், "இல்லை, அல்லாஹ்வின் மீதாணையாக! (இவ்வாறு செய்யாதீர்கள்), அல்லாஹ்வின் தூதரே! எனது கருத்து அபூபக்ர் அவர்களின் கருத்தைப் போன்ற தன்று. மாறாக, அவர்களை எங்களிடம் ஒப்படைத்துவிடுங்கள். அவர்களின் கழுத்துகளை நாங்கள் துண்டித்துவிடுகிறோம். அக்கீலை அலீ அவர்களிடம் ஒப்படைத்துவிடுங்கள்; அவரது கழுத்தை அலீ துண்டிக்கட்டும்! (உமர் (ரலி) அவர்கள் தம் குலத்தாரில் ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டு) இன்ன மனிதரை என்னிடம் ஒப்படையுங்கள். நான் அவரது கழுத்தைத் துண்டித்துவிடுகிறேன். ஏனெனில், இவர்கள் இறைமறுப்பின் தலைவர்கள்; அதன் முன்னோடிகள். (எனவே, பிணைத் தொகை பெற்று இவர்களை விடுவிக்க வேண்டாம்)" என்று (ஆலோசனை) கூறினார்கள்.
உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அபூபக்ர் (ரலி) அவர்களின் கருத்தையே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விரும்பினார்கள். எனது கருத்தை அவர்கள் ஆதரிக்கவில்லை. மறுநாள் சென்றபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலி) அவர்களும் அமர்ந்து அழுதுகொண்டிருந்தனர்.
நான் "அல்லாஹ்வின் தூதரே! நீங்களும் உங்கள் நண்பரும் ஏன் அழுகிறீர்கள்? உங்கள் அழுகைக்கான காரணத்தை அறிந்தால் நானும் அழுவேன். அழுகை வராவிட்டாலும் உங்கள் இருவரது அழுகையைக் கண்டு அழுவது போன்றாவது இருப்பேனே!" என்று கூறினேன்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "கைதிகளிடமிருந்து பிணைத் தொகையைப் பெற்றுக்கொண்டு அவர்களை விடுவித்துவிடலாம் என உங்களுடைய நண்பர்கள் எனக்குக் கூறிய ஆலோசனைக்காகவே நான் அழுகிறேன். ஆனால், (இதோ) இந்த மரத்திற்கு அருகில் அந்த எதிரிகள் வேதனை செய்யப்படுவது எனக்கு எடுத்துக் காட்டப்பட்டது என்று (தமக்கு அருகிலிருந்த ஓர் மரத்தைக் காட்டி) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அப்போது அல்லாஹ், "பூமியில் எதிரிகளை வேரறுக்கும்வரை சிறைப்பிடித்தல் எந்த நபிக்கும் தகாது" என்று தொடங்கி, "நீங்கள் அடைந்த போர்ச் செல்வங்களை அனுமதிக்கப்பட்ட தூய்மையானவையாகவே (கருதி) உண்ணுங்கள்" (8:67-69) என்பது வரை (மூன்று வசனங்களை) அருளினான். அப்போதுதான் போர்ச் செல்வங்களை அவர்களுக்கு அல்லாஹ் அனுமதித்தான்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 32
பாடம் : 19 கைதியைக் கட்டிவைப்பது, அடைத்து வைப்பது, அல்லது பெருந்தன்மையுடன் விட்டுவிடுவது செல்லும்.
3622. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "நஜ்த்" பகுதிக்குக் குதிரைப் படையொன்றை அனுப்பினார்கள். அந்தப் படையினர் யமாமாவாசிகளின் தலைவரும் "பனூ ஹனீஃபா" குலத்தைச் சேர்ந்தவருமான ஸுமாமா பின் உஸால் எனப்படும் மனிதரை (கைது செய்து) கொண்டுவந்தார்கள்; (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலின் தூண்களில் ஒன்றில் அவரைக் கட்டிப்போட்டார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரிடம் வந்து, "(உம்முடைய விஷயத்தில் நான் சொல்லப்போகும் தீர்ப்பைப் பற்றி) நீர் என்ன கருதுகிறீர், ஸுமாமா?" என்று கேட்டார்கள். அவர், "நல்லதே கருதுகிறேன், முஹம்மதே! நீங்கள் என்னைக் கொன்றால் இரத்தப் பழிவாங்க வேண்டிய ஒருவனையே கொல்கிறீர்கள். நீங்கள் (என்னை மன்னித்து) உபகாரம் செய்தால், நன்றி பாராட்டக்கூடிய ஒருவனுக்கே உபகாரம் செய்கிறீர்கள். நீங்கள் செல்வத்தை விரும்பினால் கேளுங்கள். நீங்கள் விரும்புவது கொடுக்கப்படும்" என்றார்.
அன்றைய தினம் அவரை (அந்நிலையிலேயே) விட்டுவிட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சென்றார்கள். மறுநாள் வந்தபோது அவரிடம், "ஸுமாமா, (உம்முடைய விஷயத்தில் நான் சொல்லப்போகும் தீர்ப்பைப் பற்றி) நீர் என்ன கருதுகிறீர்?" என்று கேட்டார்கள்.
அதற்கு அவர், "உங்களிடம் நான் (ஏற்கெனவே) கூறியதுதான்: நீங்கள் உபகாரம் செய்தால் நன்றி பாராட்டக்கூடிய ஒருவனுக்கே உபகாரம் செய்கிறீர்கள். நீங்கள் (என்னைக்) கொன்றால் இரத்தப் பழிவாங்க வேண்டிய ஒருவனையே கொல்கிறீர்கள். நீங்கள் செல்வத்தை விரும்பினால் கேளுங்கள்; நீங்கள் விரும்புவது கொடுக்கப்படும்" என்றார்.
அன்றும் அவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விட்டுவிட்டார்கள். மூன்றாவது நாள் வந்தபோது, "ஸுமாமா! என்ன கருதுகிறீர்?" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர், "நான் (ஏற்கெனவே) உங்களிடம் சொன்னதைத்தான் கருதுகிறேன். நீங்கள் உபகாரம் செய்தால் நன்றி பாராட்டும் ஒருவனுக்கே உபகாரம் செய்கிறீர்கள். நீங்கள் என்னைக் கொன்றால் இரத்தப் பழிவாங்க வேண்டிய ஒருவனையே கொல்கிறீர்கள். நீங்கள் செல்வத்தை விரும்பினால் கேளுங்கள். அதில் நீங்கள் விரும்புவது கொடுக்கப்படும்" என்று சொன்னார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஸுமாமாவை அவிழ்த்துவிடுங்கள்" என்று கூறிவிட்டார்கள். உடனே, ஸுமாமா பள்ளிவாசலுக்கு அருகிலிருந்த பேரீச்சந்தோட்டத்திற்குச் சென்று குளித்துவிட்டுப் பள்ளிவாசலுக்கு வந்தார். "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்று உறுதிமொழிகிறேன். முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதரும் ஆவார்கள் என்றும் உறுதிமொழிகிறேன்" என்று கூறி (முஸ்லிம் ஆ)னார்.
பிறகு "முஹம்மதே! அல்லாஹ்வின் மீதாணையாக! (இன்றுவரை) உங்கள் முகத்தைவிட எனக்கு மிகவும் வெறுப்புக்குரிய முகம் வேறெதுவும் இருக்கவில்லை. ஆனால், (இன்று) உங்களுடைய முகம் மற்றெல்லா முகங்களையும்விட எனக்கு மிகவும் பிரியமானதாக ஆகிவிட்டது. அல்லாஹ்வின் மீதாணையாக! (இன்றுவரை) உங்கள் மார்க்கத்தைவிட என் வெறுப்புக்குரிய மார்க்கம் வேறெதுவும் இருக்கவில்லை. ஆனால், (இன்று) உங்களுடைய மார்க்கம் மற்றெல்லா மார்க்கங்களையும்விட எனக்கு மிகவும் பிரியமானதாக ஆகிவிட்டது. அல்லாஹ்வின் மீதாணையாக! (இன்றுவரை) உங்கள் ஊரைவிட எனக்கு வெறுப்பான ஊர் வேறெதுவும் இருக்கவில்லை. ஆனால், (இன்று) உங்கள் ஊரே மற்றெல்லா ஊர்களையும் விட எனக்கு மிகவும் பிரியமானதாக ஆகிவிட்டது. உங்கள் குதிரைப்படையினர் என்னைப் பிடித்து(வந்து)விட்டனர். நான் "உம்ரா"ச் செய்ய விரும்புகிறேன். நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?" என்று கேட்டார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவருக்கு நற்செய்தி கூறி, "உம்ரா"ச் செய்ய அவருக்கு அனுமதியளித்தார்கள். அவர் மக்காவிற்குச் சென்றபோது அவரிடம் ஒருவர், "நீர் மதமாறிவிட்டீரா?" என்று கேட்டார். அதற்கு ஸுமாமா (ரலி) அவர்கள், "இல்லை, அல்லாஹ்வின் மீதாணையாக! (நான் மதம் மாறவில்லை) அல்லாஹ்வின் தூதருடன் இணைந்து இறைவனுக்குக் கீழ்ப்படியும் முஸ்லிமாக மாறிவிட்டேன். இல்லை; அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அனுமதியளிக்காத வரை (எனது பகுதியான) யமாமாவிலிருந்து ஒரு கோதுமை தானியம் கூட (மக்காவாசிகளான) உங்களுக்கு வராது" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 32
3623. மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "நஜ்த்" பகுதியை நோக்கி குதிரைப் படையொன்றை அனுப்பினார்கள். அந்தப் படையினர் யமாமாவாசிகளின் தலைவரான ஸுமாமா பின் உஸால் அல்ஹனஃபீ எனப்படும் ஒருவரை (கைது செய்து) கொண்டு வந்தார்கள்..." என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது.
மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. எனினும், அதில் "என்னை நீங்கள் கொன்றால், இரத்தப் பழிவாங்க வேண்டிய ஒருவனையே கொல்கிறீர்கள்" என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 32
பாடம் : 20 யூதர்களை ஹிஜாஸ் பகுதியிலிருந்து நாடு கடத்தியது.
3624. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் பள்ளிவாசலில் இருந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் புறப்பட்டுவந்து, "யூதர்களை நோக்கிச் செல்லுங்கள்" என்று கூறினார்கள். உடனே நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் புறப்பட்டு யூதர்களிடம் சென்றோம்.
அங்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நின்றுகொண்டு, "யூதச் சமுதாயத்தாரே! இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்; பாதுகாப்புப் பெறுவீர்கள்" என்று அவர்களுக்கு அழைப்பு விடுத்தார்கள்.
அதற்கு யூதர்கள், "அபுல்காசிமே! நீங்கள் சொல்ல வேண்டியதைச் சொல்லி விட்டீர்கள்" என்று பதிலளித்தார்கள்.
உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இ(வ்வாறு, "நான் சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டேன்" என நீங்கள் ஒப்புக்கொள்வ)தைத்தான் நான் எதிர்பார்க்கிறேன். நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்; பாதுகாப்புப் பெறுவீர்கள்" என்று சொன்னார்கள்.
அப்போதும் யூதர்கள் "அபுல்காசிமே! நீங்கள் சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டீர்கள்" என்று சொன்னார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இதைத்தான் நான் எதிர்பார்க்கிறேன்" என்று கூறிவிட்டுப் பிறகு மூன்றாவது முறையாக (முன்பு போலவே) சொன்னார்கள்.
பின்னர் "இந்தப் பூமி அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் உரியது. நான் உங்களை இந்தப் பூமியிலிருந்து நாடு கடத்த விரும்புகிறேன். உங்களில் யார் தமது (அசையாச்) சொத்துக்குப் பதிலாக ஏதேனும் (விலையைப்) பெறுகிறாரோ அவர் அந்தச் சொத்தை விற்று விடட்டும். இல்லையென்றால், இந்தப் பூமி அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் உரியது என்பதை நீங்கள் தெரிந்துகொள்ளுங்கள்" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 32
3625. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(மதீனா யூதர்களான) பனூ நளீர் மற்றும் பனூ குறைழா குலத்தார் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்மீது போர் தொடுத்தனர். எனவே, பனூ நளீர் குலத்தாரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நாடு கடத்தினார்கள். பனூ குறைழா குலத்தாரை, (அவர்கள் வருத்தம் தெரிவித்ததால்) பெருந்தன்மையுடன் மன்னித்து, அவர்களை (மதீனாவிலேயே) வசிக்க விட்டுவிட்டார்கள்.
அதன் பின்னர் பனூ குறைழா குலத்தாரும் போர் தொடுத்தபோது, அவர்களில் ஆண்களைக் கொன்றார்கள். அவர்களுடைய பெண்களையும் குழந்தைகளையும் அவர்களுடைய உடைமைகளையும் முஸ்லிம்களுக்கு மத்தியில் (போர்ச்செல்வமாகப்) பங்கிட்டுக் கொடுத்தார்கள்.
இருப்பினும், அவர்களில் சிலர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து சேர்ந்துகொண்டனர். அந்த (பனூ குறைழா குலத்தாரில்) சிலருக்குப் பாதுகாப்பு வழங்கினார்கள். அவர்கள் முஸ்லிம்களாக மாறிவிட்டனர். (அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்களின் குலத்தாரான) "பனூ கைனுகா" கூட்டத்தாரையும் பனூ ஹாரிஸா குலத்து யூதர்களையும், மதீனா நகரத்தைச் சேர்ந்த யூதர்கள் அனைவரையும் (ஆக) மதீனாவிலிருந்த எல்லா யூதர்களையும் நாடு கடத்திவிட்டார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. ஆயினும், மேற்கண்ட ஹதீஸே அதிகமான (தகவலைக் கொண்ட)தும் முழுமையானதும் ஆகும்.
அத்தியாயம் : 32
பாடம் : 21 அரபு தீபகற்பத்திலிருந்து யூதர்களும் கிறித்தவர்களும் வெளியேற்றப்படல்.
3626. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் அரபு தீபகற்பத்திலிருந்து யூதர்களையும் கிறித்தவர்களையும் நிச்சயம் வெளியேற்றியே தீருவேன். முஸ்லிம்களைத் தவிர வேறெவரையும் (அங்கு) நான் விட்டு வைக்கமாட்டேன்.
இதை உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 32
பாடம் : 22 ஒப்பந்தத்தை முறித்துவிட்ட (பகைவர்)களுடன் போர் செய்யலாம்; கோட்டை வாசி(களான பகைவர்)களைத் தகுதியுடைய நேர்மையான ஒரு நீதிபதியின் தீர்ப்புக்கு இணங்கச் செய்வது செல்லும்.
3627. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
(யூதர்களான) பனூ குறைழா குலத்தார் (தமது கோட்டையிலிருந்து இறங்கிவந்து தம் நட்புக் குலத் தலைவரான) சஅத் பின் முஆத் (ரலி) அவர்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள சம்மதித்தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சஅத் (ரலி) அவர்களை அழைத்து வரும்படி ஆளனுப்பினார்கள்.
(அப்போது சஅத் (ரலி) அவர்கள் அகழ்ப்போரில் ஏற்பட்ட காயத்தால் மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாசலில் தங்கவைக்கப்பட்டிருந்தார்கள்.) சஅத் (ரலி) அவர்கள் ஒரு கழுதையின் மீதமர்ந்து வந்தார்கள்.
(அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அக்கோட்டையை ஒட்டித் தாற்காலிகமாக அமைத்திருந்த) பள்ளிவாசலுக்கு அருகில் சஅத் (ரலி) அவர்கள் வந்தபோது, அன்சாரிகளை நோக்கி "உங்கள் தலைவரை" அல்லது "உங்களில் சிறந்தவரை" (வரவேற்பதற்காக அவரை) நோக்கி எழுந்து செல்லுங்கள்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
பிறகு "(சஅதே!) இவர்கள் உங்களது தீர்ப்பை ஏற்றுக்கொள்ள(ச் சம்மதித்து) இறங்கி வந்திருக்கிறார்கள்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
சஅத் (ரலி) அவர்கள், "இவர்களிலுள்ள போர் வீரர்களைக் கொன்றுவிடுங்கள். இவர்களின் பெண்களையும் குழந்தைகளையும் போர்க் கைதிகளாக ஆக்கிக்கொள்ளுங்கள்" என்று (தீர்ப்புக்) கூறினார்கள்.
நபி (ஸல்) அவர்கள், ""நீங்கள் அல்லாஹ்வின் தீர்ப்பை" அல்லது "அரசனின் தீர்ப்பை"யே (இவர்களின் விஷயத்தில்) வழங்கினீர்கள்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் முஹம்மத் பின் அல்முஸன்னா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அரசனின் தீர்ப்பை" எனும் குறிப்பு இடம்பெற வில்லை.
- மேற்கண்ட ஹதீஸ் அபூசயீத் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "(சஅதே!) நீங்கள் இவர்களின் விஷயத்தில் அல்லாஹ்வின் தீர்ப்பையே அளித்திருக்கிறீர்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்" என்று இடம்பெற்றுள்ளது. மற்றோர் தடவை "நீங்கள் அரசனின் தீர்ப்பை அளிந்திருக்கிறீர்கள்" என்று கூறியதாக இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 32
3628. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது:
அகழ்ப் போரின்போது சஅத் பின் முஆத் (ரலி) அவர்கள் தாக்கப்பட்டார்கள். அவர்களது கை நரம்பில் குறைஷியரில் ஒருவனான இப்னுல் அரிகா எனப்படுபவன் அம்பெய்துவிட்டான். அருகில் இருந்து, அவரது உடல் நலத்தை விசாரித்து அறிவதற்கு வசதியாக, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலிலேயே (அவருக்காகக்) கூடாரமொன்றை அமைத்தார்கள்.
அகழ்ப் போரை முடித்துவிட்டு வந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டுக் குளித்தார்கள்.
அப்போது (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் தமது தலையிலிருந்த புழுதியைத் தட்டிய வண்ணம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (மனித உருவில்) வந்து, "நீங்கள் ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டீர்களா? அல்லாஹ்வின் மீதாணையாக! (வானவர்களாகிய) நாங்கள் ஆயுதத்தைக் கீழே வைக்கவில்லை. அவர்களை நோக்கிப் புறப்படுங்கள்"என்று கூறினார்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "(இப்போது) எங்கே?" என்று கேட்டார்கள். உடனே ஜிப்ரீல் (அலை) அவர்கள் பனூ குறைழா குலத்தார் (உடைய வசிப்பிடம்) நோக்கி சைகை செய்தார்கள்.
ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பனூ குறைழா குலத்தாரை நோக்கிச் சென்று) அவர்களுடன் போரிட்டார்கள். (பல நாட்கள் முற்றுகைக்குப் பின்) பனூ குறைழா குலத்தார் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தீர்ப்பை ஏற்க இறங்கிவந்தனர்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பனூ குறைழா தொடர்பான முடிவை (பனூ குறைழா குலத்தாரின் நட்புக் குலத் தலைவரான) சஅத் (ரலி) அவர்களிடம் ஒப்படைத்தார்கள்.
சஅத் (ரலி) அவர்கள், "பனூ குறைழாக்களில் போர் வீரர்கள் கொல்லப்பட வேண்டும்; குழந்தைகளும் பெண்களும் போர்க் கைதிகளாக ஆக்கப்பட வேண்டும்; அவர்களின் சொத்துக்கள் பங்கிடப்பட வேண்டும் என்று தீர்ப்பளிக்கிறேன்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 32
3629. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீங்கள் இவர்கள் விஷயத்தில் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்வின் தீர்ப்பையே அளித்திருக்கிறீர்கள்" என்று (சஅத் (ரலி) அவர்களிடம்) கூறினார்கள் என என்னிடம் தெரிவிக்கப்பட்டது.
அத்தியாயம் : 32
3630. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
சஅத் பின் முஆத் (ரலி) அவர்களின் (கை நரம்பில் பட்ட அம்புக்) காயம், ஆறும் நிலையை அடைந்தபோது அவர்கள், "இறைவா! உன் தூதரை நம்ப மறுத்து, அவர்களை (ஊரைவிட்டு) வெளியேற்றிய சமுதாயத்தாரை எதிர்த்து உன் பாதையில் போர்புரிவதே மற்ற எதையும்விட எனக்கு மிகவும் விருப்பமானது என்பதை நீ அறிவாய். இறைவா! குறைஷியருடனான போர் ஏதேனும் எஞ்சியிருந்தால் நான் உன் வழியில் போர் செய்ய என்னை உயிருடன் இருக்கச் செய். இறைவா! எங்களுக்கும் (குறைஷியரான) அவர்களுக்கும் இடையிலான போரை (இத்துடன்) நீ முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டாய் என்றே நான் எண்ணுகிறேன். அவ்வாறு எங்களுக்கும் அவர்களுக்கும் இடையிலான போரை நீ முடிவுக்குக் கொண்டுவந்திருந்தால், (ஆறும் நிலையிலிருக்கும் எனது) காயத்திலிருந்து மீண்டும் குருதி கொப்புளிக்கச் செய்து, அதிலேயே எனக்கு (வீர)மரணத்தை அளிப்பாயாக!" என்று பிரார்த்தித்தார்கள்.
அவ்வாறே அவரது நெஞ்செலும்பிலிருந்து குருதி கொப்புளித்தது. அவரது கூடாரத்தை ஒட்டி பனூ ஃகிஃபார் குலத்தாரின் கூடாரம் ஒன்றும் பள்ளிவாசலில் அமைக்கப்பெற்றிருந்தது.
பனூ ஃகிஃபார் குலத்தாருக்கு, சஅத் (ரலி) அவர்களது கூடாரத்திலிருந்து தங்களை நோக்கி வழிந்தோடி வந்த இரத்தம் அச்சத்தை ஏற்படுத்தியது. அப்போது அக்குலத்தார் "கூடாரவாசிகளே! உங்கள் பகுதியிலிருந்து எங்களை நோக்கிப் பாய்ந்து வருகிறதே, இது என்ன?" என்று கேட்டுக்கொண்டு, அங்கு பார்த்தபோது காயத்திலிருந்து இரத்தம் வழியும் நிலையில் சஅத் (ரலி) அவர்கள் இருந்தார்கள். அந்தக் காயத்தாலேயே அவர்கள் இறந்தார்கள்.
அத்தியாயம் : 32
3631. மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "அன்றிரவே அவரது காயத்திலிருந்து குருதி கொப்புளித்தது. குருதி வழிந்தோடிக் கொண்டே இருந்து, முடிவில் அவர் இறந்துவிட்டார்" என்று இடம்பெற்றுள்ளது.
மேலும், அந்த அறிவிப்பில் பின்வரும் தகவலும் இடம்பெற்றுள்ளது: இது குறித்தே ஒரு கவிஞர் பாடினார்.
சஅதே!
பனூ முஆதின் வழித்தோன்றலே!
குறைழாவும் நளீரும்
என்ன ஆனார்கள்?
உன் வாழ்நாள் மீதாணை!
குறைழாவும் நளீரும்
நாட்டைவிட்டு
வெளியேறியபோது,
சஅத் பின் முஆத்
(அளவுக்கதிகமாக) பொறுமை காத்தார்
(அவ்ஸே!) நீங்கள் உங்கள்
பாத்திரங்களைக் காலி
செய்துவிட்டீர்கள்.
(உதவ முன்வரவில்லை.)
ஆனால், அந்த (கஸ்ரஜ்) குலத்தாரின்
பாத்திரமோ (பனூ கைனுகா),
சுடச் சுடக் கொதிக்கிறது
(காப்பாற்றப்பட்டுவிட்டனர்).
மாண்பமை அபூஹுபாப்
(அப்துல்லாஹ் பின் உபை),
"இங்கேயே தங்குவீர்,
கைனுகாவினரே!
எங்கும் சென்றுவிடாதீர்" என்றார்.
அவர்கள் இன்று
சொந்த ஊரிலேயே
திடமாக அமர்ந்துவிட்டனர்.
"மைத்தான்" (ஹிஜாஸ்) மலைமீது
கற்பாறைகள் அமர்ந்தது போல்.
அத்தியாயம் : 32
பாடம் : 23 போருக்கு விரைந்து செல்வதும், (நம்மை) எதிர்நோக்கியுள்ள இரு விஷயங்களில் மிகவும் முக்கியமானதற்கு முன்னுரிமை அளிப்பதும்.
3632. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அகழ்ப் போரை முடித்துத் திரும்பிய நாளன்று, "பனூ குறைழா குலத்தார் வசிக்குமிடத்தை நீங்கள் அடையாத வரை உங்களில் எவரும் லுஹர் தொழுகையைத் தொழ வேண்டாம்" என்று எங்களிடம் (கூறி, பனூ குறைழா குலத்தாரை நோக்கி விரைவாகப் புறப்படுமாறு) அறிவித்தார்கள்.
அவ்வாறு சென்றவர்கள் (வழியிலேயே அஸ்ர் தொழுகையின் நேரத்தை அடைந்தனர்.) சிலர் (அஸ்ர் தொழுகையின்) நேரம் தவறிவிடுமோ என அஞ்சினர். எனவே, பனூ குறைழா குலத்தார் வசிக்குமிடத்திற்கு முன்பே தொழுதுவிட்டனர். வேறுசிலர் தொழுகையின் நேரம் நமக்குத் தவறினாலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டளையிட்ட இடத்திலேயே தொழுவோம் என்று கூறி (தொழுகையைத் தாமதப்படுத்தி)னர்.
பின்னர் (இரு பிரிவினர் குறித்தும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டபோது) அவ்விரு பிரிவினரில் எவரையும் அவர்கள் குறை கூறவில்லை.
அத்தியாயம் : 32
பாடம் : 24 முஹாஜிர்களுக்கு அன்சாரிகள் இரவலாகக் கொடுத்திருந்த மரங்கள் மற்றும் கனிகளை, வெற்றிக(ளில் கிடைத்த செல்வங்க)ளால் தன்னிறைவு பெற்ற போது முஹாஜிர்கள் திருப்பிக் கொடுத்தது.
3633. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
முஹாஜிர்கள் (மக்கா முஸ்லிம்கள்) மதீனாவுக்கு வந்தபோது, தங்களுடைய கரங்களில் (செல்வம்) எதுவும் இல்லாத நிலையிலேயே வந்தனர். (மதீனாவாசிகளான) அன்சாரிகளோ நிலங்களும் (பேரீச்சந்தோப்புகள் போன்ற) அசையாச் சொத்துகளும் உடையவர்களாக இருந்தார்கள்.
எனவே, ஒவ்வோர் ஆண்டும் தம் நிலங்களின் விளைச்சல்களில் (குறிப்பிட்ட) பாகங்களை முஹாஜிர்கள் தமக்குக் கொடுத்துவிட வேண்டும் என்றும், தம் பங்கிற்கு அவர்கள் பாடுபட்டு உழைக்க வேண்டும் என்றும் பேசி முஹாஜிர்களுக்கு அன்சாரிகள் தம் நிலங்களைப் பிரித்துக் கொடுத்தார்கள்.
என் தாயார் உம்மு சுலைம் (ரலி) அவர்கள், என் தாய்வழிச் சகோதரர் அப்துல்லாஹ் பின் அபீதல்ஹாவின் தாயாராகவும் இருந்தார். என் தாயார் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குச் சில பேரீச்ச மரங்களை (அவற்றின் கனிகளை மட்டும் பயன்படுத்திக் கொள்ளும்படி அன்பளிப்பாகக்) கொடுத்திருந்தார்கள்.
அவற்றை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தம் அடிமைப் பெண்ணாயிருந்த உசாமா பின் ஸைதுடைய தாயார் உம்மு அய்மனுக்கு (அன்பளிப்பாக)க் கொடுத்தார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கைபர்வாசிகள்மீது போர் தொடுத்து முடித்து மதீனாவுக்கு (வெற்றியோடு) திரும்பியபோது முஹாஜிர்கள், தங்களுக்கு அன்சாரிகள் இரவலாக வழங்கியிருந்த கனிக(ள் தரும் மரங்க)ளை அவர்களிடமே திருப்பிக் கொடுத்துவிட்டார்கள்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் என் தாயாரிடம் அவருடைய பேரீச்ச மரங்களைத் திரும்பத் தந்துவிட்டு, அவற்றுக்குப் பதிலாக உம்மு அய்மன் (ரலி) அவர்களுக்குத் தமது தோட்டத்திலிருந்து (சில மரங்களை அன்பளிப்பாகக்) கொடுத்தார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
உம்மு அய்மன் (ரலி) அவர்கள் உசாமா பின் ஸைத் (ரலி) அவர்களின் தாயார் ஆவார். அவர் (நபியவர்களின் தந்தை) அப்துல்லாஹ் பின் அப்துல் முத்தலிபின் அடிமையாக இருந்தார்; அபிசீனிய இனத்தைச் சேர்ந்தவராகவும் இருந்தார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தந்தை இறந்த பிறகே ஆமினா அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பெற்றெடுத்தார்கள். இந்நிலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை உம்மு அய்மன் அவர்களே வளர்த்துவந்தார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வளர்ந்து பெரியவரானதும் உம்மு அய்மனை விடுதலை செய்துவிட்டார்கள். பின்னர் (தமது பொறுப்பில் வளர்ந்த) ஸைத் பின் ஹாரிஸாவுக்கு அவரைத் திருமணம் செய்துவைத்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்து ஐந்து மாதங்களுக்குப் பின்னர் உம்மு அய்மன் (ரலி) அவர்கள் இறந்தார்கள். இதுவே உம்மு அய்மன் (ரலி) அவர்களின் (வாழ்க்கையின்) சில குறிப்புகளாகும்.- இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 32
3634. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
பனூ குறைழா மற்றும் பனூ நளீர் குலத்தார் வெற்றி கொள்ளப்படும்வரை (இரவலாகப் பயன்படுத்திக்கொள்ளும்படி) தமது நிலத்திலிருந்து பேரீச்ச மரங்களில் சிலவற்றை ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் கொடுத்து வைத்திருந்தார். (பனூ குறைழா, பனூ நளீர் குலத்தாரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெற்றி கொண்ட) பின்னர் அவரிடமே அம்மரங்களை அவர்கள் திருப்பிக் கொடுத்துவிட்டார்கள்.
இந்நிலையில், என் குடும்பத்தார் என்னை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று, அல்லாஹ்வின் தூதருக்குத் தாங்கள் கொடுத்திருந்த மரங்கள் அனைத்தையும் அல்லது அவற்றில் சிலவற்றை (திரும்பத் தரும்படி) கேட்குமாறு என்னைப் பணித்தனர்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்த மரங்களை(ப் பராமரித்து பயன்பெற்றுக்கொள்ளுமாறு தம் வளர்ப்புத்தாய்) உம்மு அய்மன் (ரலி) அவர்களிடம் (இரவலாகக்) கொடுத்திருந்தார்கள். நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று கேட்டபோது, அவர்கள் அம்மரங்களை என்னிடம் திரும்பத் தந்துவிட்டதாகக் கூறினார்கள்.
அப்போது அங்கு உம்மு அய்மன் (ரலி) அவர்கள் வந்து, எனது கழுத்தில் துணியைப் போட்டுப் பிடித்து "அல்லாஹ்வின் மீதாணையாக! (முடியாது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்குத் தந்துவிட்டவற்றை உன்னிடம் நான் கொடுக்கமாட்டேன்" என்று கூறலானார்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உம்மு அய்மன்! அவரை விட்டு விடுங்கள். இன்னின்ன பொருட்களை உங்களுக்கு நான் தருகிறேன்" என்று கூறினார்கள். அவர் "இல்லை (முடியாது). எவனைத் தவிர வேறு இறைவன் இல்லையோ அ(ந்த ஏக இறை)வன் மீதாணையாக! (அவற்றைத் தர முடியாது)" என்று கூறினார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இன்னின்னதைத் தருகிறேன் என்று கூறிக்கொண்டே வந்து, இறுதியில் அதைப் போன்று பத்து மடங்கு அல்லது ஏறக்குறைய அதைப் போன்ற அளவு கொடுத்தார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 32
பாடம் : 25 போர்ச் செல்வமாகக் கிடைத்த உணவுப் பொருட்களை (நாடு திரும்புவதற்கு முன்) பகை நாட்டில் இருக்கும் போதே உண்ணலாம்.
3635. அப்துல்லாஹ் பின் முஃகஃப்பல் (ரலி) அவர்கள் கூறியதாவது:
கைபர் போர் தினத்தன்று கொழுப்பு இருந்த தோல் பை ஒன்றை நான் பெற்றேன். அதை நான் இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு "இன்று இதிலிருந்து ஒரு சிறிதளவைக்கூட யாருக்கும் நான் கொடுக்கமாட்டேன்" என்று கூறினேன். பிறகு திரும்பிப் பார்த்தேன். அங்கே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புன்னகைத்த வண்ணம் இருந்தார்கள்.
அத்தியாயம் : 32
3636. அப்துல்லாஹ் பின் முஃகஃப்பல் (ரலி) அவர்கள் கூறியதாவது:
கைபர் போர் தினத்தன்று எங்களை நோக்கி ஒரு தோல் பை வீசப்பட்டது. அதில் உணவுப் பொருளும் கொழுப்பும் இருந்தன. அதை எடுப்பதற்காக நான் குதித்தோடினேன். பிறகு திரும்பிப் பார்த்தேன். அங்கே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இருந்தார்கள். அவர்களைக் கண்டு நான் வெட்கமடைந்தேன்.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் முஃகஃப்பல் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "கொழுப்பு அடங்கிய தோல் பை ஒன்று" என இடம்பெற்றுள்ளது. "உணவுப் பொருள்" பற்றிய குறிப்பு இல்லை.
அத்தியாயம் : 32
பாடம் : 26 இஸ்லாத்திற்கு அழைப்பு விடுத்து ஹெராக்ளியஸ் மன்னருக்கு நபி (ஸல்) அவர்கள் எழுதிய கடிதம்.
3637. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அபூசுஃப்யான் (ரலி) அவர்கள் என்னிடம் நேரடியாகக் கூறினார்கள்: (குறைஷியரின் தலைவனாயிருந்த) எனக்கும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கும் இடையே (ஹுதைபியா) ஒப்பந்தம் ஏற்பட்டிருந்த காலகட்டத்தில் (குறைஷியரின் வணிகக் குழுவில்) சென்று ஷாம் (சிரியா) நாட்டில் நான் இருந்தேன்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து ரோமப் பைஸாந்திய மன்னர் ஹெராக்ளியஸுக்குக் கடிதம் வந்தது. அக்கடிதத்தை (நபித்தோழர்) திஹ்யா அல்கல்பீ (ரலி) அவர்கள் கொண்டுவந்து, புஸ்ரா (ஹூரான்) சிற்றரசரிடம் கொடுக்க, அவர் அதை ஹெராக்ளியஸிடம் ஒப்படைத்திருந்தார்.
அப்போது ஹெராக்ளியஸ் "தம்மை இறைத்தூதர் எனக் கூறும் அந்த மனிதரின் குலத்தாரில் யாரேனும் இங்கு (நம் நாட்டில்) உள்ளனரா?" என்று கேட்டார். அ(வையிலிருந்த)வர்கள் "ஆம்" என விடையளித்தனர்.
குறைஷி (வணிக)க் குழுவினருடன் இருந்த என்னை அழைத்து வரும்படி ஆளனுப்பப்பட்டது. நாங்கள் அனைவரும் ஹெராக்ளியஸிடம் சென்றோம். எங்கள் அனைவரையும் தமக்கு முன்னால் உட்காரச் சொன்னார் ஹெராக்ளியஸ். பிறகு, "தம்மை இறைத்தூதர் எனச் சொல்லிக்கொண்டிருக்கும் இந்த (முஹம்மத் எனும்) மனிதருக்கு உங்களில் நெருங்கிய உறவினர் யார்?" என்று கேட்டார்.
நான் "நானே (அவருக்கு நெருங்கிய உறவினர் ஆவேன்)" என்று பதிலளித்தேன். எனவே, என்னை அவருக்கு எதிரில் (நெருக்கமாக) உட்காரவைத்தனர். என் நண்பர்களை எனக்குப் பின்னால் உட்காரவைத்தனர்.
பிறகு ஹெராக்ளியஸ் தம் மொழி பெயர்ப்பாளரை அழைத்து, "தம்மை இறைத்தூதர் எனச் சொல்லிக்கொண்டிருக்கும் அந்த (முஹம்மத் எனும்) மனிதரைப் பற்றி நான் இவரிடம் கேட்பேன். இவர் பொய் (ஏதும்) சொன்னால் உடனே "அவர் பொய் சொல்கிறார்" என்று கூறிவிட வேண்டும்" என அவருடைய நண்பர்களிடம் (மொழிபெயர்த்துச்) சொல் என்றார்.
"நான் பொய் பேசினேன்" என என்னைப் பற்றி என் நண்பர்கள் (ஊரில் வந்து) பேசுவார்களே என்ற அச்சம் மட்டும் எனக்கு இல்லாதிருந்தால், அல்லாஹ்வின் மீதாணையாக! நான் (நபியவர்களைப் பற்றி) பொய்யான தகவல்களைச் சொல்லியிருப்பேன்.
பிறகு ஹெராக்ளியஸ் தம் மொழிபெயர்ப்பாளரிடம், "இவரிடம் "அந்த (முஹம்மத் எனும்) மனிதரின் குலம் எப்படிப்பட்டது?" எனக் கேள்" என்றார். நான் "அவர் எங்களில் சிறந்த குலத்தைச் சேர்ந்தவர்" என்றேன். "அடுத்து அந்த மனிதருடைய முன்னோரில் அரசர் எவரேனும் இருந்திருக்கின்றனரா?" என்று கேட்டார். நான் "இல்லை" என்றேன்.
அவர், "அந்த மனிதர் இவ்வாறு (தம்மை இறைத்தூதர் என) வாதிப்பதற்கு முன் அவர் மக்களிடம் பொய்(யேதும்) சொன்னார் என நீங்கள் அவரைக் குற்றம் சாட்டியதுண்டா?" என்று கேட்டார். நான் "இல்லை" என்றேன். "அந்த மனிதரை யார் பின்பற்றுகின்றனர்? மேட்டுக்குடி மக்களா, அல்லது நலிந்த பிரிவினரா?" என்று கேட்டார். நான் "அல்ல. நலிந்த பிரிவினரே (அவரைப் பின்பற்றுகின்றனர்)" என்றேன்.
"அவரைப் பின்பற்றுவோர் கூடிக்கொண்டே செல்கின்றனரா, அல்லது குறைந்துவருகின்ற னரா?" என்று கேட்டார். நான் "குறைவதில்லை. (நாளுக்கு நாள்) அதிகரித்துக்கொண்டே செல்கின்றனர்" என்றேன்.
"அவரது மார்க்கத்தில் இணைந்த பிறகு அதன் மீது அதிருப்தியடைந்து எவரேனும் அதிலிருந்து வெளியேறிச் செல்வதுண்டா?" என்று கேட்டார். நான் "இல்லை (யாரும் பழைய மதத்திற்குத் திரும்புவதில்லை)" என்றேன்.
"அந்த மனிதருடன் நீங்கள் போர் புரிந்ததுண்டா?" என்று கேட்டார். நான் "ஆம்" என்றேன். "அவருடன் நீங்கள் நடத்திய போர்(களின் முடிவு)கள் எவ்வாறு அமைந்தன?" என்று கேட்டார். நான் "எங்களுக்கிடையேயான போர், (வெற்றியும் தோல்வியும் சுழல் முறையில் வரும்) கிணற்று வாளியாக உள்ளது. ஒரு முறை அவர் எங்களை வெல்கிறார்;மறுமுறை நாங்கள் அவரை வெல்கிறோம்" என்றேன்.
"அந்த மனிதர் ஒப்பந்த மீறல் செய்கின்றாரா?" என்று கேட்டார். நான் "இல்லை (தற்போது நடைமுறையிலுள்ள இந்த ஹுதைபியா சமாதான உடன்படிக்கையின்) இந்தக் கால கட்டத்தில் நாங்களும் அவரும் இருந்துவருகிறோம். இதில் அவர் எப்படி நடந்துகொள்வார் என்று எங்களுக்குத் தெரியாது" என்று சொன்னேன்.
அல்லாஹ்வின் மீதாணையாக! இதைத் தவிர (நபியவர்களைக் குறை சொல்வதற்கு) வேறு எந்த வார்த்தையையும் திணிக்க எனக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை.
தொடர்ந்து அவர், "(உங்களில்) எவரேனும் இவருக்கு முன் இப்படி(த் தம்மை இறைத்தூதர் என) எப்போதாவது வாதித்ததுண்டா?" என்று கேட்டார். நான் "இல்லை" என்று கூறினேன்.
பிறகு ஹெராக்ளியஸ் தம் மொழிபெயர்ப்பாளரிடம் பின்வருமாறு கூறினார்:
அவரிடம் (அபூசுஃப்யானிடம்) கூறிவிடு: நான் உம்மிடம் அந்த மனிதருடைய குலத்தைப் பற்றிக் கேட்டேன். அதற்கு நீர் "அவர் எங்களில் சிறந்த குலத்தை உடையவர்" என்று கூறினீர். இவ்வாறே இறைத்தூதர்கள் ஒரு சமுதாயத்தின் நற்குடியில்தான் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
நான் உம்மிடம் "அவருடைய முன்னோர்களில் அரசர் எவரேனும் இருந்திருக்கின்றனரா?" என்று கேட்டேன். அதற்கு நீர் "இல்லை" என்று விடையளித்தீர். அவருடைய முன்னோர்களில் அரசர் எவரேனும் இருந்(ததாக நீர் கூறியிருந்)தால், "தம் முன்னோரின் ஆட்சியதிகாரத்தை(த் தாமும்) அடைய விரும்பும் ஒரு (சராசரி) மனிதர்தாம் இவர்" என்று நான் கூறியிருப்பேன்.
நான் உம்மிடம் அவரைப் பின்பற்றுவோர் பற்றி, "மக்களில் மேட்டுக்குடியினர் அவரைப் பின்பற்றுகின்றனரா, அல்லது நலிந்த பிரிவினரா?" என்று கேட்டேன். அதற்கு நீர் "நலிந்த பிரிவினரே அவரைப் பின்பற்றுகின்றனர்" என்று பதிலளித்தீர். (பெரும்பாலும்) நலிந்த பிரிவினர்தாம் இறைத்தூதர்களைப் பின்பற்றுவோர் ஆவர்.
நான் உம்மிடம் "அவர் இவ்வாறு (தம்மை இறைத்தூதர் என) வாதிப்பதற்கு முன்பு, (அவர் மக்களிடம்) பொய் பேசினார் என நீங்கள் குற்றம் சாட்டியதுண்டா" என்று கேட்டேன். அதற்கு நீர் "இல்லை" என்று பதிலளித்தீர். இதிலிருந்து மக்களிடம் பொய் பேச(த் துணிய)ôத அவர் அல்லாஹ்வின் மீது பொய் சொல்லமாட்டார் என்று நான் புரிந்துகொண்டேன்.
நான் உம்மிடம் "அவரது மார்க்கத்தில் இணைந்த பின் எவரேனும் அதன் மீது அதிருப்தி கொண்டு அதிலிருந்து வெளியேறிச் செல்வதுண்டா?" என்று கேட்டேன். அதற்கு நீர் "இல்லை" என்று விடையளித்தீர். இறைநம்பிக்கை (ஈமான்) இத்தகையதே; அதன் மலர்ச்சி மனங்களில் கலந்துவிடும்போது (அதைக் குறித்து எவருமே அதிருப்தியடையமாட்டார்).
நான் உம்மிடம் "அவ(ரைப் பின்பற்றுபவ)ர்கள் (நாளுக்கு நாள்) அதிகரித்துவருகின்றனரா, அல்லது குறைந்துவருகின்றனரா" என்று கேட்டேன். அதற்கு நீர் "அவர்கள் அதிகரித்தே வருகின்றனர்" என்று பதிலளித்தீர். இறைநம்பிக்கை என்பது, அது முழுமையடையும்வரை அவ்வாறுதான் (வளர்ச்சியை நோக்கியே செல்லும்).
நான் உம்மிடம் "அவருடன் நீங்கள் போர் புரிந்ததுண்டா?" என்று கேட்டேன். அதற்கு நீர் "அவருடன் நீங்கள் போர் செய்துள்ளதாகவும் உங்களுக்கும் அவருக்கும் இடையே நடைபெறும் போரில் (வெற்றியும் தோல்வியும்) கிணற்று வாளிகள் போன்று சுழல் (முறையில் அமை)கின்றன. ஒரு முறை உங்களை அவர் வெல்வார். மறுமுறை அவரை நீங்கள் வெல்கிறீர்கள்" என்று கூறினீர். இறைத்தூதர்கள் இத்தகையோரே. முதலில் அவர்கள் சோதிக்கப்படுவார்கள். பிறகு இறுதி முடிவு அவர்களுக்கே (சாதகமாக) அமையும்.
நான் உம்மிடம் "அவர் ஒப்பந்த மீறல் செய்கிறாரா?" என்று கேட்டேன். அதற்கு நீர் "அவர் ஒப்பந்த மீறல் செய்வதில்லை" என்று பதிலளித்தீர். இறைத்தூதர்கள் இத்தகையோரே. அவர்கள் வாக்கு மீறமாட்டார்கள்.
நான் உம்மிடம் "இவருக்கு முன்னர் (உங்களில்) எவரேனும் இவ்வாதத்தை முன்வைத்த துண்டா?" என்று கேட்டேன். அதற்கு நீர் "இல்லை" என்று பதிலளித்தீர். இவருக்கு முன்னர் எவரேனும் இவ்வாதத்தை முன்வைத்திருந்(ததாக நீர் கூறியிருந்)தால், "தமக்கு முன்னர் (சிலரால்) முன்வைக்கப்பட்ட ஒரு வாதத்தைப் பின் பற்றிச் செல்கின்ற ஒரு (சராசரி) மனிதரே இவர்" என்று நான் சொல்லியிருப்பேன்.
பிறகு ஹெராக்ளியஸ், "அந்த மனிதர் உங்களுக்கு என்ன கட்டளையிடுகிறார்?" என்று கேட்டார். "தொழுகையை நிறைவேற்றுமாறும் ஸகாத் கொடுக்குமாறும் உறவுகளைப் பேணுமாறும் சுயக்கட்டுப்பாட்டுடன் வாழுமாறும் எங்களுக்குக் கட்டளையிடுகிறார்" என்று நான் கூறினேன்.
அதற்கு ஹெராக்ளியஸ், "நீர் சொல்வது உண்மையாயிருப்பின், நிச்சயமாக அவர் ஓர் இறைத்தூதர்தாம். (இறைத்தூதரான) அவர் வரவிருப்பதாக நான் அறிந்திருந்தேன். ஆனால், அவர் (குறைஷியரான) உங்களிலிருந்து வருவார் என்று நான் நினைத்திருக்க வில்லை. நான் அவரைச் சென்றடைவேன் என அறிந்தால், அவரைச் சந்திப்பதில் எனக்கு விருப்பம் உண்டு. நான் அவருக்கு அருகில் இருந்திருந்தால் அவருடைய பாதங்களைக் கழுவியிருப்பேன். அவரது ஆட்சி(யின் எல்லை) என் பாதங்களுக்குக் கீழ்வரை வந்து சேரும்" என்று கூறினார்.
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுதிய கடிதத்தைக் கொண்டுவந்து வாசிக்கச் சொன்னார் ஹெராக்ளியஸ். அக்கடிதத்தில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது:
அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...
இது அல்லாஹ்வின் தூதர் முஹம்மதிடமிருந்து ரோமாபுரியின் அதிபர் ஹெராக்ளியஸுக்கு (எழுதப்படும் கடிதம்): நேர்வழியைப் பின்பற்றியவர்மீது சாந்தி (சலாம்) நிலவட்டும். இறை வாழ்த்துக்குப் பின்!
இஸ்லாத்தின் (ஏகத்துவ) அழைப்பை ஏற்குமாறு உங்களை நான் அழைக்கிறேன். இஸ்லாத்தை ஏற்றுக்கொள்க. (ஏற்றுக்கொண்டால் ஈருலகிலும்) பாதுகாப்புப் பெறுவீர். நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டால் அல்லாஹ் உங்களுக்குச் சேர வேண்டிய நற்பலனை இரு மடங்காகத் தருவான்.
நீங்கள் புறக்கணித்தால் குடி(யானவர்)களின் பாவமும் (அவர்கள் இஸ்லாத்தை ஏற்காமல் போனதற்கான குற்றமும்) உங்களையே சேரும். "வேதக்காரர்களே! எங்களுக்கும் உங்களுக்கும் இடையே பொதுவானதொரு கொள்கையின்பால் நீங்கள் வாருங்கள். (அதாவது) நாம் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் வழிபடக் கூடாது; அவனுக்கு எதையும் இணை கற்பிக்கக் கூடாது; அல்லாஹ்வை விடுத்து நம்மில் சிலர் வேறு சிலரைக் கடவுள்களாக ஆக்கிக்கொள்ளக் கூடாது என்று (நபியே!) நீர் கூறுவீராக. (இதற்குப் பிறகும்) அவர்கள் புறக்கணித்தால், நாங்கள் (அல்லாஹ்வுக்கு அடிபணிந்த) முஸ்லிம்கள்தாம் என்பதற்கு நீங்கள் சாட்சிகளாக இருங்கள் என்று சொல்லிவிடுங்கள். (3:64)
ஹெராக்ளியஸ் அந்தக் கடிதத்தைப் படித்து முடித்தபோது, அவர் அருகிலிருந்த (மதகுருமார்கள் மற்றும் ரோம பைஸாந்திய ஆட்சியாளர்களின்) குரல்கள் உயர்ந்தன. கூச்சல் அதிகரித்தது. ஹெராக்ளியஸின் உத்தரவின்பேரில் நாங்கள் (அவையிலிருந்து) வெளியேற்றப்பட்டோம்.
நாங்கள் வெளியே வந்தபோது நான் என் நண்பர்களிடம் "இப்னு அபீகப்ஷா (முஹம்மது)வின் விவகாரம் (மார்க்கம்) வலிமை பெற்றுவிட்டது. மஞ்சள் நிற இனத்தாரான (ரோமானிய) மன்னரே அவருக்கு (முஹம்மதுக்கு) அஞ்சுகிறாரே!"என்று சொன்னேன்.
அன்று தொட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் விவகாரம் (மார்க்கம்) விரைவில் வெற்றிபெறும் என உறுதிபூண்டவனாக நான் இருக்கலானேன். முடிவில் அல்லாஹ் என் உள்ளத்தில் இஸ்லாத்தைப் புகுத்தினான்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "பாரசீகப் படையை (ரோமாபுரி மன்னர்) கைஸர் (சீசர்) மூலம் அல்லாஹ் விரட்டியடித்தபோது, தமக்கு அல்லாஹ் வழங்கிய அருட்கொடைக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக "ஹிம்ஸி"லிருந்து பைத்துல் மக்திஸுக்கு (ஈலியா) கைஸர் (ஹெராக்ளியஸ்) வந்தார்" என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
இந்த அறிவிப்புகளில் "அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதருமான (முஹம்மத் எழுதிய கடிதம்)" என்று காணப்படுகிறது. "குடி(யானவர்)கள்" என்பதைக் குறிக்க ("அரீசிய்யீன்" என்பதற்குப் பதிலாக) "யரீசிய்யீன" என்ற சொல்லும் "இஸ்லாத்தின் அழைப்பு" என்பதைக் குறிக்க ("திஆயத்துல் இஸ்லாம்" என்பதற்குப் பகரமாக) "தாஇயத்துல் இஸ்லாம்" எனும் சொற்றொடரும் ஆளப்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 32
பாடம் : 27 (ஏக இறை) அல்லாஹ்வை ஏற்குமாறு இறைமறுப்பாளர்களான அரசர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் எழுதிய கடிதங்கள்.
3638. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (பாரசீக மன்னர்) கிஸ்ரா (குஸ்ரூ), (ரோம பைஸாந்திய மன்னர்) கைசர் (சீசர்), (அபிசீனிய அரசர்) நஜாஷீ (நீகஸ்) மற்றும் ஒவ்வொரு சர்வாதிகார ஆட்சியாளருக்கும் (ஏக இறை) அல்லாஹ்வை ஏற்குமாறு அழைப்பு விடுத்துக் கடிதம் எழுதினார்கள். நபி (ஸல்) அவர்கள் ஜனாஸாத் தொழுகை தொழுவித்த நஜாஷீ இவரல்லர்.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "நபி (ஸல்) அவர்கள் ஜனாஸாத் தொழுகை தொழுவித்த நஜாஷீ இவரல்லர்" எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே வேறோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதிலும் "நபி (ஸல்) அவர்கள் ஜனாஸாத் தொழுகை தொழுவித்த நஜாஷீ இவரல்லர்" எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 32
பாடம் : 28 ஹுனைன் போர்.
3639. அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஹுனைன் போரில் கலந்துகொண்டேன். (போர் உக்கிரமாக நடந்தபோது) நானும் அபூசுஃப்யான் பின் அல்ஹாரிஸ் பின் அப்தில் முத்தலிப் (ரலி) அவர்களும் மட்டுமே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைவிட்டுப் பிரியாமல் அவர்களுடனேயே இருந்தோம்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமக்குரிய வெள்ளைக் கோவேறு கழுதையின் மீதிருந்தார்கள். அந்தக் கழுதையை ஃபர்வா பின் நுஃபாஸா அல்ஜுதாமீ என்பார் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கியிருந்தார்.
இறைமறுப்பாளர்களும் முஸ்லிம்களும் மோதிக்கொண்டபோது முஸ்லிம்கள் புறமுதுகிட்டு ஓடினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களோ (நிலைகுலையாமல்) தமது கோவேறு கழுதையை இறைமறுப்பாளர்களை நோக்கி விரட்டினார்கள். நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது கழுதையின் கடிவாளத்தைப் பிடித்து, அது விரைவாகச் சென்று விடக் கூடாது என்பதற்காக அதைக் கட்டுப்படுத்திக்கொண்டிருந்தேன்.
அபூசுஃப்யான் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது வாகனத்தின் சேணத்தைப் பிடித்துக்கொண்டிருந்தார்கள்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அப்பாஸ்! கருவேல மரத்தின் (கீழ் "ரிள்வான்" உடன்படிக்கை செய்த) தோழர்களை அழையுங்கள்" என்று கூறினார்கள். நான் உரத்த குரலில் "கருவேல மரத்தின் (கீழ் "ரிள்வான்" ஒப்பந்தம் செய்த) நண்பர்கள் எங்கே?" என்று அழைத்தேன். (அப்பாஸ் (ரலி) அவர்கள் உரத்த குரலுடையவராக இருந்தார்கள்.)
அல்லாஹ்வின் மீதாணையாக! (பிரிந்தோடிய) முஸ்லிம்கள், எனது குரலைக் கேட்டவுடன் பசு தன் கன்றுகளை நோக்கித் தாவிவருவதைப் போன்று "இதோ வந்துவிட்டோம்; இதோ வந்துவிட்டோம்" என்று கூறியவாறு தாவிவந்து இறைமறுப்பாளர்களுடன் போரிட்டனர்.
அன்சாரிகளிடையே "அன்சாரிகளே! அன்சாரிகளே!" என்று அழைப்பு விடுக்கப்பட்டது. பிறகு பனுல் ஹாரிஸ் பின் அல்கஸ்ரஜ் குலத்தாருக்கு மட்டுமே அழைப்பு விடுக்க வேண்டியிருந்தது. அப்போது அவர்கள், "பனுல் ஹாரிஸ் பின் அல்கஸ்ரஜ் குலத்தாரே! பனுல் ஹாரிஸ் பின் அல்கஸ்ரஜ் குலத்தாரே!" என்று அழைத்தனர்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது கோவேறுகழுதையில் அமர்ந்தவாறு தலையை உயர்த்தி சண்டையைக் கவனித்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "கல் அடுப்பு கனன்றுகொண்டிருக்கும் நேரமிது" என்று கூறினார்கள்.
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு கைப்பிடி சிறு கற்களை அள்ளி இறைமறுப்பாளர்களின் முகத்தில் எறிந்தார்கள். பிறகு "முஹம்மதின் இறைவன் மீதாணையாக! அவர்கள் தோற்றனர்" என்று கூறினார்கள்.
நான் பார்த்துக்கொண்டே போனேன். அப்போது போர் தனது போக்கில் (உக்கிரமாக) நடந்துகொண்டிருந்தது. அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிறு கற்களை எறிந்ததுதான் தாமதம்; இறைமறுப்பாளர்களின் பலம் குன்றிக்கொண்டே செல்வதையும் அவர்களின் கதை முடிவுக்கு வருவதையுமே நான் காணலானேன்.
அத்தியாயம் : 32
3640. மேற்கண்ட ஹதீஸ் அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "(அக்கழுதையை அன்பளிப்பாக அளித்தவரின் பெயர்) ஃபர்வா பின் நுஆமா அல்ஜுதாமீ" என்று இடம்பெற்றுள்ளது. (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிறு கற்களை அள்ளி எறிந்துவிட்டு) "அவர்கள் தோற்றனர்;கஅபாவின் அதிபதி மீதாணையாக! அவர்கள் தோற்றனர்; கஅபாவின் அதிபதி மீதாணையாக என்று கூறினார்கள்"என்றும் காணப்படுகிறது.
மேலும் "முடிவில் அல்லாஹ் இறைமறுப்பாளர்களைத் தோற்கடித்தான்" என்று கூடுதலாகவும் இடம்பெற்றுள்ளது.
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களுக்குப் பின்னால் தமது கோவேறு கழுதையிலிருந்தவாறு விரட்டிக்கொண்டிருந்ததை நான் இப்போதும் பார்ப்பதைப் போன்றுள்ளது" என்றும் இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்து.
அதில் "நான் ஹுனைன் போரில் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தேன்" என ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. ஆயினும், மேற்கண்ட ஹதீஸே இந்த அறிவிப்பைவிட அதிகத் தகவல் உள்ளதும் முழுமையானதும் ஆகும்.
அத்தியாயம் : 32
3641. அபூஇஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்களிடம் ஒரு மனிதர், "அபூஉமாரா! நீங்கள் ஹுனைன் போர் நாளில் வெருண்டு ஓடினீர்களா?" என்று கேட்டார். அதற்கு பராஉ (ரலி) அவர்கள் கூறினார்கள்: இல்லை, அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புறமுதுகிட்டுச் செல்லவில்லை. ஆயினும், அவர்களுடைய தோழர்களில் சில இளைஞர்கள் ஆயுதமின்றி, அல்லது அதிகமான ஆயுதமின்றி அவசரப்பட்டு நிராயுதபாணிகளாக (போருக்கு)ப் புறப்பட்டு வந்துவிட்டார்கள்.
அவர்கள் ஹவாஸின் மற்றும் பனூ நஸ்ர் குலத்தாரில் அம்பெய்யும் வீரர்களைச் சந்தித்தனர். அந்தக் குலத்தாரின் ஒரு அம்பு கூட குறி தவறாது. அவர்கள் கூட்டாகச் சேர்ந்து குறி தவறாமல் ஒரே நேரத்தில் அம்பெய்தார்கள். எனவே, அங்கு நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நோக்கிவந்தனர்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு வெள்ளைக் கோவேறுகழுதையில் அமர்ந்துகொண்டிருக்க, அதை அபூசுஃப்யான் பின் அல்ஹாரிஸ் பின் அப்தில் முத்தலிப் (ரலி) அவர்கள் ஓட்டிக்கொண்டு வந்தார்கள். (நபித்தோழர்களின் நிலையைக் கண்டதும் தமது கழுதையிலிருந்து) இறங்கி (அல்லாஹ்விடம்) உதவி கோரிப் பிரார்த்தித்தார்கள்.
மேலும், "நான் இறைத்தூதர்தாம்; (இதில்) பொய் இல்லை. நான் அப்துல் முத்தலிபின் (மகனின்) மகன் ஆவேன்" என்று கூறினார்கள். பிறகு தம் தோழர்களை அணிவகுக்கச் செய்தார்கள்.
அத்தியாயம் : 32
3642. அபூஇஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்களிடம் வந்து, "நீங்கள் (அனைவரும்) ஹுனைன் போர் நாளில் பின்வாங்கி ஓடிக்கொண்டிருந்தீர்களா, அபூஉமாரா?" என்று கேட்டார்.
அதற்கு பராஉ (ரலி) அவர்கள் கூறினார்கள்: நான் அறுதியிட்டுச் சொல்கிறேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புறமுதுகிட்டுச் செல்லவில்லை. ஆயினும். மக்களில் அவசரப்பட்டு வந்த சில நிராயுதபாணிகள் (எதிரிகளான) இந்த ஹவாஸின் குலத்தாரை நோக்கிச் சென்றனர். அவர்களோ வில்வீரர்களாய் இருந்தனர். அவர்கள் கூட்டமாகச் சேர்ந்து ஒரே நேரத்தில் அம்புக் கூட்டிலிருந்து அம்புகளை எடுத்து எய்தனர்.
அந்த அம்புகள் வெட்டுக்கிளி கூட்டங்களைப் போன்று (பறந்துவந்தன). இதனால், (முஸ்லிம்கள்) சிதறி ஓடினர். பிறகு மக்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நோக்கி வந்தனர். அப்போது அபூசுஃப்யான் பின் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கோவேறுகழுதையை ஓட்டிக்கொண்டு (நடந்து) வந்தார்கள்.
உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது கழுதையிலிருந்து) இறங்கி அல்லாஹ்விடம் உதவி கோரிப் பிரார்த்தித்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நான் இறைத்தூதர்தாம்; (இதில்) பொய் இல்லை;நான் அப்துல் முத்தலிபின் (மகனின்) மகன் ஆவேன்" என்றும், "இறைவா! உன் உதவியை இறக்குவாயாக!" என்றும் கூறிக்கொண்டிருந்தார்கள்.
அல்லாஹ்வின் மீதாணையாக! போர் (உச்சகட்டமடைந்து) சிவந்து (கனன்று) கொண்டிருந்த போது நபியவர்களையே கேடயமாக்கி நாங்கள் தப்பித்துக்கொண்டிருந்தோம். எங்களில் வீரர்கள்கூட நபியவர்களுக்கு நேராக (அவர்களுக்குப் பின்னாலேயே) நின்று கொண்டிருந்தனர்.
அத்தியாயம் : 32
3643. அபூஇஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
கைஸ் குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதர் பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்களிடம், "ஹுனைன் போர் நாளில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை விட்டுவிட்டு நீங்கள் வெருண்டு ஓடினீர்களா?" என்று கேட்டார். அதற்கு பராஉ (ரலி) அவர்கள் கூறினார்கள்: ஆனால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெருண்டோடவில்லை. ஹவாஸின் குலத்தார் அன்றைய தினம் வில்வீரர்களாய் இருந்தனர்.
(முதலில்) நாங்கள் அவர்கள்மீது தாக்குதல் நடத்தியபோது அவர்கள் சிதறியோடினர். எனவே, நாங்கள் குனிந்து போர்ச் செல்வங்களைச் சேகரிப்பதில் மும்முரமாய் ஈடுபட்டோம். அப்போது (சிதறியோடிய) எதிரிகள் எங்களை முன்னோக்கி அம்புகளை (கூட்டமாக நின்று) எய்தனர். (எனவே, நிலைகுலைய வேண்டிய நிலை எங்களுக்கு ஏற்பட்டது.)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (வெருண்டோடாமல்) தமது வெள்ளைக் கோவேறுகழுதையில் அமர்ந்திருந்ததை நான் பார்த்தேன். அபூசுஃப்யான் பின் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் அதன் கடிவாளத்தைப் பிடித்துக்கொண்டிருந்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நான் இறைத்தூதர்தாம். (இதில்) பொய் இல்லை. நான் அப்துல் முத்தலிபின் (மகனின்) மகன் ஆவேன்" என்று கூறிக் கொண்டிருந்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "பராஉ (ரலி) அவர்களிடம் ஒரு மனிதர் அபூஉமாரா!" என்று அழைத்து மேற்கண்ட ஹதீஸில் உள்ளபடி கேட்டதாக ஹதீஸ் ஆரம்பமாகிறது. மேற்கண்ட ஹதீஸில் குறைந்த தகவல்களே இடம்பெற்றுள்ளன. இவர்களின் அறிவிப்பில் முழுமையான தகவல்கள் காணப்படுகின்றன.
அத்தியாயம் : 32
3644. சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் சேர்த்து ஹுனைன் போரில் கலந்து கொண்டோம். நாங்கள் எதிரிகளை எதிர்கொண்டபோது, நான் முன்னேறிச் சென்றேன். அப்போது நான் ஒரு மலைக் கணவாய்மீது ஏறினேன்;எதிரிகளில் ஒருவன் என்னை எதிர்கொண்டான். உடனே நான் ஓர் அம்பை எடுத்து அவன்மீது எய்தேன். அவன் என்னைவிட்டு மறைந்து (தப்பித்துக்)கொண்டான். பிறகு அவன் என்ன ஆனான் என்று எனக்குத் தெரியவில்லை.
அப்போது எதிரிகளை நான் பார்த்தேன். அவர்கள் மற்றொரு கணவாய்மீது ஏறி விட்டிருந்தார்கள். அவர்களும் நபித்தோழர்களும் மோதிக்கொண்டனர். பிறகு நபித்தோழர்கள் பின்வாங்க வேண்டிய நிலைக்கு ஆளாயினர். நானும் தோல்வி கண்டு திரும்பினேன். அப்போது என்மீது இரு போர்வைகள் இருந்தன. ஒன்றை நான் கீழங்கியாகவும் மற்றொன்றை மேலங்கியாகவும் போர்த்திக்கொண்டிருந்தேன்.
(நான் திரும்பிக்கொண்டிருந்தபோது) எனது கீழங்கி அவிழ்ந்துவிட்டது. உடனே நான் மேலங்கியையும் கீழங்கியையும் சேர்த்து (சுருட்டிப்) பிடித்துக்கொண்டேன். அப்போது நான் தோற்றுப்போனவனாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் கடந்து சென்றேன். அப்போது அவர்கள் தமது வெள்ளைக் கோவேறுகழுதையில் (நிலைகுலையாமல்) இருந்தார்கள்.
அப்போது அவர்கள், "இப்னுல் அக்வஉ, திடுக்கிடும் நிகழ்வெதையோ கண்டுள்ளார்" என்று கூறினார்கள். எதிரிகள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைச் சூழ்ந்துகொண்டதும் அவர்கள் தமது கோவேறுகழுதையிலிருந்து இறங்கி,பூமியிலிருந்து ஒரு கைப்பிடி மண் அள்ளி, அவர்களது முகங்களை நோக்கி எறிந்தார்கள்.
அப்போது "இம்முகங்கள் இழிவடைந்தன" என்று கூறினார்கள். எதிரிகளில் ஒருவரது முகம் கூட விடுபடாமல் அனைவருடைய கண்களையும் அந்த ஒரு பிடி மண்ணால் அல்லாஹ் நிரப்பாமல் விடவில்லை. பிறகு அவர்கள் புறமுதுகிட்டு ஓடினர்.
வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் எதிரிகளைத் தோற்கடித்தான். அவர்கள் விட்டுச் சென்ற போர்ச்செல்வங்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முஸ்லிம்களுக்கிடையே பங்கிட்டுக் கொடுத்தார்கள்.
அத்தியாயம் : 32
பாடம் : 29 தாயிஃப் போர்.
3645. அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தாயிஃப் நகரத்தாரை முற்றுகையிட்டபோது அவர்களால் அந்நகரத்தாரை ஒன்றும் செய்ய முடியவில்லை. எனவே, "இறைவன் நாடினால், நாம் (நாளை மதீனாவுக்குத்) திரும்பிச் செல்வோம்"என்று கூறினார்கள். நபித்தோழர்கள், "இ(ந்நகரத்)தை வெல்லாமல் நாம் திரும்புவதா?" என்று கேட்டார்கள்.
(தோழர்களின் தயக்கத்தைக் கண்ட) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "காலையில் போருக்குப் புறப்படுங்கள்"என்றார்கள். அவ்வாறே அவர்கள் (மறு நாள்) காலை போருக்குச் சென்று பலத்த காயங்களுக்கு ஆளானார்கள்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நாளை நாம் (மதீனாவுக்குத்) திரும்பிச் செல்வோம்" என்றார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இப்படிச் சொன்னது நபித் தோழர்களுக்கு (இப்போது) மகிழ்ச்சி (தரும் செய்தி)யாக அமைந்தது. (அவர்களின் மகிழ்ச்சியைக் கண்டு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிரித்தார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 32
பாடம் : 30 பத்ருப் போர்.
3646. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அபூசுஃப்யான் (தலைமையில் வணிகக் குழு) வரும் தகவல் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு எட்டியபோது (தம் தோழர்களிடம்) ஆலோசனை கேட்டார்கள்.
அபூபக்ர் (ரலி) அவர்கள் (தமது கருத்தைச்) சொன்னபோது, அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கண்டுகொள்ளவில்லை. பின்னர் உமர் (ரலி) அவர்கள் (தமது கருத்தைச்) சொன்னபோதும் கண்டுகொள்ளவில்லை.
அப்போது (அன்சாரிகளில் கஸ்ரஜ் கூட்டத்தாரின்) தலைவர் சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள் எழுந்து, "எங்(கள் அன்சாரிகளின் கருத்து)களையா நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள், அல்லாஹ்வின் தூதரே? என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீதாணையாக! எங்கள் குதிரைகளைக் கடலுக்குள் செலுத்துமாறு நீங்கள் உத்தரவிட்டாலும் நிச்சயமாக நாங்கள் செலுத்துவோம். எங்கள் குதிரைகளின் பிடரிகளில் அடித்து (தொலைவில் உள்ள) "பர்குல் ஃகிமாத்" நோக்கி (விரட்டிச்) செல்லுமாறு நீங்கள் உத்தரவிட்டாலும் நாங்கள் அவ்வாறே செய்வோம்" என்று கூறினார்கள்.
பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களைப் புறப்படச்செய்தார்கள். மக்கள் புறப்பட்டுச் சென்று பத்ர் எனும் இடத்தில் தங்கினர். அப்போது அவர்களிடம் குறைஷியரின் தண்ணீர் சுமக்கும் ஒட்டகக்குழாம் ஒன்று வந்தது. அவர்களில் பனுல் ஹஜ்ஜாஜ் குலத்தாரின் கறுப்பு அடிமை ஒருவனும் இருந்தான்.
நபித்தோழர்கள், அவனைப் பிடித்துக்கொண்டனர். அவனிடம் அபூசுஃப்யானைப் பற்றியும் அவருடைய சக பயணிகள் பற்றியும் விசாரித்தனர். அவன் "அபூசுஃப்யானைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஆனால், இதோ அபூஜஹ்ல், உத்பா,ஷைபா, உமய்யா பின் கலஃப் (ஆகியோர் உங்களை நோக்கிப் படைதிரட்டி வந்துகொண்டிருக்கின்றனர்)" என்று சொன்னான். அவன் இவ்வாறு சொன்னதும் (அவன் பொய் சொல்வதாக எண்ணிக்கொண்டு) அவனை நபித் தோழர்களை அடித்தனர். அப்போது அவன் "ஆம் (எனக்குத் தெரியும்); நான் சொல்கிறேன். இதோ அபூசுஃப்யான் வந்துகொண்டிருக்கிறார்" என்று (பொய்) சொன்னான்.
அடிப்பதை நிறுத்திவிட்டு அவனிடம் கேட்டால் "அபூசுஃப்யான் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஆனால், இதோ அபூஜஹ்ல், உத்பா, ஷைபா, உமய்யா பின் கலஃப் மக்களுடன் (வந்துகொண்டிருக்கின்றனர்)" என்று சொன்னான். மீண்டும் அவன் இவ்வாறு சொன்னதும் அவனை நபித்தோழர்கள் அடித்தனர்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அங்கு) நின்று தொழுது கொண்டிருந்தார்கள். இ(வ்வாறு அவர்கள் நடந்து கொள்வ)தை அவர்கள் கண்டதும் தொழுகையை (சுருக்கமாக) முடித்துத் திரும்பினார்கள். மேலும், "என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீதாணையாக! அவன் உண்மையைச் சொல்லும்போது அடிக்கிறீர்கள். பொய் சொல்லும்போது அடிப்பதை நிறுத்து விடுகிறீர்களே!" என்று கூறினார்கள்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இது இன்ன மனிதர் மாண்டு விழும் இடம்" என்று கூறி, பூமியில் தமது கையை வைத்து "இவ்விடத்தில் இவ்விடத்தில்" என்று காட்டினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கை வைத்துக் காட்டிய இடத்தைவிட்டு அவர்களில் எவரும் தள்ளி விழவில்லை. (சரியாக அதே இடத்தில் போரில் மாண்டு கிடந்தனர்).
அத்தியாயம் : 32
பாடம் : 31 மக்கா வெற்றி .
3647. அப்துல்லாஹ் பின் ரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஒரு ரமளான் மாதத்தில் (சிரியா நாட்டிலிருந்த) முஆவியா (ரலி) அவர்களைச் சந்திக்க சில தூதுக் குழுக்கள் சென்றன. (அத்தூதுக் குழுவில் நானும் அபூஹுரைரா (ரலி) அவர்களும் இருந்தோம்.) அப்போது எங்களில் சிலர் வேறுசிலருக்கு (முறைவைத்து) உணவு சமைத்(து விருந்தளித்)தனர். அபூஹுரைரா (ரலி) அவர்கள் தமது கூடாரத்திற்கு மக்களை அதிகமாக (விருந்திற்கு) அழைப்பவராக இருந்தார்கள்.
அப்போது நான், "நான் உணவு சமைத்து மக்களை என் கூடாரத்திற்கு அழைக்கக்கூடாதா?" என்று கூறிவிட்டு, உணவு தயாரிக்க உத்தரவிட்டேன். பிறகு அபூஹுரைரா (ரலி) அவர்களை மாலையில் சந்தித்து, "இன்றிரவு என்னிடம்தான் விருந்து" என்றேன். அதற்கு அபூஹுரைரா (ரலி) அவர்கள், "நீ என்னை முந்திக்கொண்டாய்" என்று கூறினார்கள். நான் "ஆம்" என்று கூறிவிட்டு, மக்களை (எனது கூடாரத்திற்கு) அழைத்தேன்.
அப்போது அபூஹுரைரா (ரலி) அவர்கள் (நான் கேட்டுக்கொண்டதற்கிணங்க) "அன்சாரிக் கூட்டத்தாரே! உங்கள் செய்திகளில் ஒன்றைக் குறித்து உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா?" என்று கேட்டார்கள். பிறகு மக்கா வெற்றியைப் பற்றிக் குறிப்பிட்டார்கள். அப்போது அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவிலிருந்து புறப்பட்டு மக்காவுக்கு வந்து சேர்ந்தார்கள். அப்போது ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி) அவர்களை, (தமது படையின்) இரு பக்கவாட்டுப் படைகளில் ஒன்றுக்குத் தளபதியாக நியமித்தார்கள்.
காலித் பின் அல்வலீத் (ரலி) அவர்களை மற்றொரு பக்கவாட்டுப் படைக்குத் தளபதியாக நியமித்தார்கள். அபூஉபைதா பின் அல்ஜர்ராஹ் (ரலி) அவர்களை நிராயுதபாணி(களான காலாட் படை)யினருக்குத் தளபதியாக நியமித்தார்கள்.
அவர்கள் அனைவரும் பள்ளத்தாக்கின் மையப்பகுதிக்கு வந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் படையின் முக்கியப்பகுதியில் இருந்தார்கள். அப்போது அவர்களது பார்வையில் நான் பட்டபோது, "அபூஹுரைரா நீயா?" என்று கேட்டார்கள். நான், "(ஆம்) இதோ, வந்தேன் அல்லாஹ்வின் தூதரே!" என்றேன். அப்போது அவர்கள், "ஓர் அன்சாரித் தோழரே (இப்போது) என்னிடம் வருவார் (என்றே நான் எதிர்பார்த்தேன்)" என்றார்கள்.
ஷைபான் பின் ஃபர்ரூக் (ரஹ்) அல்லாதோரின் அறிவிப்பில், "அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,எனக்காக அன்சாரிகளைச் சப்தமிட்டு அழைப்பீராக! என்றார்கள். உடனே அன்சாரிகள் வந்து குழுமினர்" என இடம்பெற்றுள்ளது.
(எதிரிகளான) குறைஷியர் தம்முடைய பல்வேறு குலத்தாரையும் ஆதரவாளர்களையும் ஒன்றுகூட்டி, "இவர்களை நாம் (முதலில் போருக்கு) அனுப்பிவைப்போம். இவர்களுக்கு (வெற்றி) ஏதேனும் கிடைத்தால், (குறைஷியரான) நாமும் இவர்களுடன் சேர்ந்துகொள்வோம். இவர்களுக்குத் தோல்வி ஏற்பட்டால், நம்மிடம் (முஸ்லிம்களால்) கோரப்படுவதை நாம் வழங்கிவிடுவோம்" என்று கூறினர்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "நீங்கள் (ஒற்றுமையாக உள்ள) குறைஷியரின் பல்வேறு குலத்தாரையும் ஆதரவாளர்களையும் காண்கிறீர்கள் (அல்லவா?)" என்று கூறிவிட்டு, தம்முடைய ஒரு கையின் மீது மற்றொரு கையை வைத்து (அவர்களது ஒற்றுமையை) சைகை செய்து காட்டினார்கள்.
பிறகு "நீங்கள் (வெற்றி அடைந்த பின்) என்னை "ஸஃபா" மலைக்கருகில் வந்து சந்தியுங்கள்" என்று கூறி(விட்டுப் போ)னார்கள்.
அவ்வாறே நாங்கள் நடந்து சென்றோம். எங்களில் ஒருவர் எதிரிகளில் ஒருவரைத் தாக்கி வீழ்த்த நினைத்தால், (தடையின்றித்) தாக்கி வீழ்த்தினார். ஆனால், எதிரிகளில் யாரும் எங்களை நோக்கி எதையும் வீச இயலவில்லை.
அப்போது (இஸ்லாத்தைத் தழுவியிருந்த) அபூசுஃப்யான் (ரலி) அவர்கள் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! குறைஷிக் குலமே அடியோடு அழிக்கப்படுகிறது. இன்றைக்குப் பிறகு குறைஷியரே இருக்கமாட்டார்கள்" என்று கூறினார்.
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "யார் அபூசுஃப்யானின் இல்லத்தினுள் நுழைந்துகொள்கிறாரோ, அவர் அபயம் பெற்றவராவார்" என்று அறிவித்தார்கள்.
அப்போது அன்சாரிகள் ஒருவருக்கொருவர் "இந்த மனிதருக்கு (நபியவர்களுக்கு) தமது ஊர்மீது பற்றும், தம் குலத்தார்மீது பரிவும் ஏற்பட்டுவிட்டது" என்று பேசிக்கொண்டனர்.
அப்போது இறைவனிடமிருந்து செய்தி (வஹீ) வந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு "வஹீ" வந்தால், அது எங்களுக்குத் தெரியாமல் போகாது. அப்போது "வஹீ" முடிவடையும் வரை எங்களில் யாரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நோக்கிப் பார்வையைச் செலுத்தமாட்டார்.
அவ்வாறே "வஹீ" வந்து முடிந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அன்சாரி சமுதாயமே!" என்று அழைத்தார்கள். அம்மக்கள் "இதோ வந்தோம், அல்லாஹ்வின் தூதரே!" என்று கூறினர். "இம்மனிதருக்குத் தமது ஊர்மீது பற்று ஏற்பட்டுவிட்டது என்று நீங்கள் சொன்னீர்கள்(தானே)?" என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் "ஆம்;அவ்வாறு கூறவே செய்தோம்" என்று (உண்மை) சொன்னார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவ்வாறன்று; நான் அல்லாஹ்வின் அடிமையும் தூதரும் ஆவேன். நான் அல்லாஹ்வை நோக்கியும் உங்களிடமும் (நாடு துறந்து) ஹிஜ்ரத் வந்தேன். என் வாழ்வு உங்கள் வாழ்வோடுதான்; என் இறப்பு உங்கள் இறப்போடுதான்" என்று கூறினார்கள்.
அப்போது அன்சாரிகள் அழுதுகொண்டே வந்து, "அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதரின் மீதும் கொண்ட பேராசையின் காரணத்தாலேயே அவ்வாறு நாங்கள் கூறினோம்" என்று சொன்னார்கள்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் உங்களது சொல்லை உண்மை என ஏற்று, நீங்கள் கூறிய காரணத்தையும் ஏற்கின்றனர்" என்று சொன்னார்கள்.
அப்போது மக்களில் சிலர், அபூசுஃப்யானின் வீட்டை நோக்கிச் சென்றனர். வேறுசிலர் தங்கள் (வீட்டுக்) கதவுகளைப் பூட்டிக்கொண்டனர். பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "ஹஜருல் அஸ்வத்" எனும் கல் இருக்குமிடத்தை நோக்கி வந்து, அதைத் தமது கையால் தொட்டு முத்தமிட்டார்கள். பிறகு இறையில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வந்தார்கள்.
அப்போது இறையில்லம் கஅபாவுக்கு அருகிலிருந்த ஒரு சிலையை நோக்கி வந்தார்கள். அதை மக்கள் வழிபட்டுவந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது கையில் வில்லொன்று இருந்தது. அவர்கள் அந்த வில்லின் வளைவுப் பகுதியை பிடித்திருந்தார்கள். அந்தச் சிலைக்கு அருகில் வந்ததும், அந்த வில்லால் அதன் கண்ணில் குத்திக்கொண்டே "உண்மை வந்துவிட்டது. பொய்மை அழிந்துவிட்டது" என்று கூறலானார்கள்.
இறையில்லத்தைச் சுற்றி (தவாஃப்) வந்ததும் "ஸஃபா" குன்றுக்கு வந்து, அதன் மீது ஏறி, இறையில்லம் கஅபாவைப் பார்த்தார்கள். அப்போது அல்லாஹ்வைப் போற்றிப் புகழவும், அவன் நாடிய சிலவற்றை வேண்டிப் பிரார்த்திக்கவும் ஆரம்பித்தார்கள்.
அத்தியாயம் : 32
3648. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம்முடைய ஒரு கையை மற்றொரு கைமீது வைத்து இரு கைகளையும் இணைத்துக் காட்டியபடி "அவர்களை அறுவடை செய்துவிடுங்கள்" என்று கூறினார்கள்" என இடம்பெற்றுள்ளது.
மேலும் இந்த அறிவிப்பில், "அன்சாரிகள் அவ்வாறு நாங்கள் கூறத்தான் செய்தோம், அல்லாஹ்வின் தூதரே!" என்று கூறினர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அவ்வாறாயின் (முஹம்மத் - புகழப்பட்டவர் எனும்) என் பெயருக்கு என்ன அர்த்தம்? அவ்வாறன்று; நான் அல்லாஹ்வின் அடிமையும் தூதரும் ஆவேன்" என்று கூறினார்கள்" என்றும் இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 32
3649. அப்துல்லாஹ் பின் ரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் (சிரியாவிலிருந்த) முஆவியா பின் அபீசுஃப்யான் (ரலி) அவர்களைச் சந்திக்க ஒரு தூதுக் குழுவில் சென்றோம். எங்களிடையே அபூஹுரைரா (ரலி) அவர்களும் இருந்தார்கள்.
எங்களில் ஒவ்வொருவரும் தம் சக பயணிகளுக்கு ஒரு நாளைக்கு ஒருவர் என்ற முறையில் உணவு தயாரித்தோம். என்னுடைய முறைநாள் வந்தபோது நான், "அபூஹுரைரா (ரலி) அவர்களே! இன்று எனது முறைநாள். மக்கள் (எனது) இருப்பிடத்திற்கு வந்துவிட்டனர். ஆனால், உணவு இன்னும் வந்து சேரவில்லை. உணவு வரும்வரை நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பற்றி(ய ஹதீஸ்) கூறினால் நன்றாயிருக்குமே!" என்று கூறினேன். அப்போது அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்:
மக்கா வெற்றி நாளில் நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காலித் பின் அல்வலீத் (ரலி) அவர்களை வலப் பக்க அணியினருக்குத் தளபதியாக நியமித்தார்கள்; ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி) அவர்களை இடப் பக்க அணியினருக்கும் அபூஉபைதா பின் அல்ஜர்ராஹ் (ரலி) அவர்களை (நிராயுதபாணிகளாயிருந்த) காலாட்படையினர் மற்றும் பள்ளத்தாக்கின் மையப் பகுதியில் இருந்தோர் ஆகியோருக்கும் தளபதியாக நியமித்தார்கள்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அபூஹுரைரா! அன்சாரிகளை எனக்காக அழையுங்கள்!" என்று கூறினார்கள். அவ்வாறே நான் அவர்களை அழைத்தேன். அப்போது அன்சாரிகள் விரைந்து வந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அன்சாரி சமுதாயத்தாரே! (எதிரிக்) குறைஷியரின் பல்வேறு குலத்தாரை நீங்கள் காண்கிறீர்களா?" என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் "ஆம்" என்று கூறினர்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தமது கையை வெளியிலெடுத்து வலக் கையை இடக் கையின் மீது வைத்து சைகை செய்து காட்டியபடி, "நாளைய தினம் (களத்தில்) அவர்களை நீங்கள் சந்தித்தால் அவர்களை அறுவடை செய்துவிடுங்கள்" என்று கூறினார்கள். பிறகு, "ஸஃபாவில் சந்திப்போம்" என்று கூறி(விட்டுச் செல்லலா)னார்கள். அவ்வாறே முஸ்லிம்கள் கண்ணில் தென்பட்ட (எதிரிகள்) எவரையும் (ஒரேயடியாகத்) தூங்க வைக்காமல் விடவில்லை.
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஸஃபா மலைமீது ஏறினார்கள். அன்சாரிகள் வந்து ஸஃபா மலையைச் சுற்றி நின்றுகொண்டனர். அப்போது அபூசுஃப்யான் (ரலி) அவர்கள் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! குறைஷிக் கூட்டத்தார் முற்றாகத் துடைத்தெறியப் படுகின்றனர். இன்றைய தினத்திற்குப் பிறகு குறைஷியர் எவரும் இருக்கமாட்டார்கள்" என்று கூறினார்கள்.
அபூசுஃப்யான் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "யார் அபூசுஃப்யானின் இல்லத்தினுள் நுழைந்துகொள்கிறாரோ அவர் அபயம் பெற்றவராவார். யார் ஆயுதத்தைக் கீழே போட்டுவிட்டாரோ அவரும் அபயம் பெற்றவராவார். யார் தமது வீட்டுக் கதவை பூட்டிக்கொண்டாரோ அவரும் அபயம் பெற்றவராவார்"என்று கூறினார்கள். அப்போது அன்சாரிகள், "இம்மனிதரை (நபி (ஸல்) அவர்களை) குலப் பாசமும் ஊர்ப் பற்றும் பற்றிக்கொண்டுவிட்டன" என்று கூறினர்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு இறைச்செய்தி (வஹீ) வந்தது. (அன்சாரிகள் தம்மைப் பற்றிப் பேசிக் கொண்டதை நபியவர்கள் அறிந்துகொண்டார்கள்). பிறகு "இம்மனிதரை குலப்பாசமும் ஊர்ப்பற்றும் பற்றிக்கொண்டுவிட்டன" என்று கூறினீர்களா? நன்றாக அறிந்துகொள்ளுங்கள்: அப்படியானால் எனது (முஹம்மத் - புகழப்பட்டவர் எனும்) பெயருக்கு என்ன அர்த்தமிருக்க முடியும்?" என்று (மூன்று முறை) கூறிவிட்டு, "நான் அல்லாஹ்வின் அடிமையும் அவனுடைய தூதருமான முஹம்மத் ஆவேன். நான் அல்லாஹ்வின் பக்கமும் உங்களிடமும் (நாடு துறந்து) ஹிஜ்ரத் வந்தேன். இனி என் வாழ்வு உங்கள் வாழ்வோடுதான்; என் இறப்பு உங்கள் இறப்போடுதான்" என்று கூறினார்கள்.
அதற்கு அன்சாரிகள், "அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதரின் மீதும் கொண்ட பேராசையின் காரணத்தாலேயே நாங்கள் அவ்வாறு சொன்னோம்" என்று கூறினர்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அப்படியானால், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் உங்களது சொல்லை ஏற்று, நீங்கள் கூறிய காரணத்தையும் ஏற்கின்றனர்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 32
பாடம் : 32 கஅபாவைச் சுற்றியிருந்த சிலைகளை அப்புறப்படுத்தியது.
3650. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் கஅபாவைச் சுற்றிலும் முன்னூற்று அறுபது சிலைகள் இருக்க, மக்கா நகருக்குள் நுழைந்தார்கள். அப்போது அவர்கள், தமது கையிலிருந்த குச்சியால் அவற்றைக் குத்தி (அடிக்கத் தொடங்கி)னார்கள். மேலும் "உண்மை வந்துவிட்டது. பொய் அழிந்துவிட்டது. பொய் அழியக்கூடியதாகவே உள்ளது" (17:81) என்றும் "உண்மை வந்துவிட்டது. பொய் புதிதாக ஒன்றும் செய்துவிடவில்லை; இனியும் செய்யப்போவதில்லை" (34:49) என்றும் கூறிக் கொண்டிருந்தார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் இப்னு அபீஉமர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றி நாளில் மக்காவினுள் நுழைந்தார்கள்" என்று இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "அழியக்கூடியதாகவே உள்ளது" என்பது வரையில்தான் இடம்பெற்றுள்ளது. இரண்டாவது வசனம் இடம்பெறவில்லை. மேலும் (சிலைகள் என்பதைக் குறிக்க "நுஸுப்" என்பதற்குப் பகரமாக) "ஸனம்" எனும் சொல் இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 32
பாடம் : 33 மக்கா வெற்றிக்குப் பின் எந்தக் குறைஷியும் கட்டிவைத்துத் தாக்கப்படும் நிலை வராது.
3651. முதீஉ பின் அல்அஸ்வத் பின் ஹாரிஸா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றி நாளில், "இன்றைய தினத்துக்குப் பிறகு மறுமை நாள்வரை குறைஷியர் எவரும் கட்டிவைத்துத் தாக்கப்படும் நிலை ஏற்படாது" என்று கூறியதை நான் கேட்டேன்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 32
3652. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "அன்றைய தினம் குறைஷியரில் "அல்ஆஸ்" எனும் பெயர் பெற்றிருந்தவர்களில் முதீஉ (ரலி) அவர்களைத் தவிர வேறெவரும் இஸ்லாத்தை ஏற்றிருக்கவில்லை.
அப்போது முதீஉ அவர்களுடைய பெயர் "அல்ஆஸீ" (மாறு செய்பவர்) என்றிருந்தது. அவருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே "முதீஉ" (கீழ்ப்படிந்தவர்) என்று பெயர் சூட்டினார்கள்" என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 32
பாடம் : 34 "ஹுதைபியா" எனுமிடத்தில் நடந்த "ஹுதைபியா சமாதான ஒப்பந்தம்".
3653. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களுக்கும் (குறைஷி) இணைவைப்பாளர்களுக்கும் இடையே ஹுதைபியா நாளில் நடைபெற்ற சமாதான ஒப்பந்தப் பத்திரத்தை அலீ (ரலி) அவர்களே எழுதினார்கள். அப்போது அலீ (ரலி) அவர்கள், "இது அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் எழுதிக்கொண்டது" என எழுத, இணைவைப்பாளர்கள் "அல்லாஹ்வின் தூதர் முஹம்மத்" என எழுதாதீர்கள்" (என்று கூறிவிட்டு நபியவர்களை நோக்கி), "நீர் அல்லாஹ்வின் தூதர்தாம் என நாங்கள் அறிந்திருந்தால் உம்முடன் போரிட்டிருக்கவே மாட்டோம்" என்று கூறினர்.
ஆகவே, நபி (ஸல்) அவர்கள் (அலீ (ரலி) அவர்களிடம்), "அ(ந்த வாசகத்)தை அழித்துவிடுங்கள்" என்று கூறினார்கள். அலீ (ரலி) அவர்கள், "நான் அதை (ஒரு போதும்) அழிக்கப்போவதில்லை" என்று கூறிவிட்டார்கள். ஆகவே, நபி (ஸல்) அவர்களே தமது கரத்தால் அதை அழித்தார்கள்.
"முஸ்லிம்கள் (அடுத்த ஆண்டு) மக்கா நகருக்குள் நுழைந்து மூன்று நாட்கள் மட்டும் தங்கியிருக்கலாம். நகருக்குள் எந்த ஆயுதத்தையும் உறையிலிட்டுத்தான் ("ஜுலுப்பானுஸ் ஸிலாஹ்") எடுத்துவர வேண்டும்" என இணைவைப்பாளர்கள் நிபந்தனை விதித்திருந்தனர்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஷுஅபா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
நான் (இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த) அபூஇஸ்ஹாக் (ரஹ்) அவர்களிடம் "ஜுலுப் பானுஸ் ஸிலாஹ் என்றால் என்ன?" என்று கேட்டேன். அதற்கு அபூஇஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் "உறையும் அதிலுள்ள ஆயுதமும்" என்று பதிலளித்தார்கள்.
அத்தியாயம் : 32
3654. மேற்கண்ட ஹதீஸ் பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹுதைபியாக்காரர்களுடன் (மக்கா குறைஷியருடன் ஹுதைபியா எனுமிடத்தில்) சமாதான ஒப்பந்தம் செய்துகொண்டபோது, அலீ (ரலி) அவர்களே அவர்களுக்கிடையிலான ஒப்பந்தப்பத்திரத்தை எழுதினார்கள். அப்போது "அல்லாஹ்வின் தூதர் முஹம்மத்" என்று அவர்கள் எழுத..." என ஹதீஸ் ஆரம்பமாகிறது.
மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. ஆயினும், இந்த அறிவிப்புகளில் "இது எழுதிக்கொண்டது" ("ஹாதா மா காத்தப அலய்ஹி") எனும் வாக்கியம் இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 32
3655. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் இறையில்லம் கஅபாவுக்குச் செல்ல முடியாமல் தடுக்கப்பட்டபோது, "முஸ்லிம்கள் (அடுத்த ஆண்டு) மக்காவிற்குள் நுழைந்து மூன்று நாட்கள் தங்கலாம்; நகருக்குள் உறையிலிட்ட வாளுடன்தான் நுழைய வேண்டும்; மக்காவிலிருந்து திரும்பிச் செல்லும்போது மக்காவாசிகளில் யாரையும் தம்முடன் அழைத்துச் செல்லக் கூடாது. அவர்களுடன் வந்திருப்பவர்களில் மக்காவிலேயே தங்கிக்கொள்ள விரும்பும் யாரையும் தடுக்கக்கூடாது" ஆகிய நிபந்தனைகளின் பேரில் மக்காவாசிகள் நபி (ஸல்) அவர்களடன் சமாதான ஒப்பந்தம் செய்துகொண்டனர்.
நபி (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களிடம், "நமக்கிடையிலான சமாதான ஒப்பந்தத்தின் நிபந்தனைகளைப் பின்வருமாறு எழுதுவீராக:
"அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...
இது அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் எழுதிக்கொண்ட ஒப்பந்த பத்திரம்..." என்று கூறினார்கள். உடனே இணைவைப்பாளர்கள், "நீர் அல்லாஹ்வின் தூதர்தாம் என நாங்கள் அறிந்திருப்போமாயின், நாங்கள் உம்மைப் பின்தொடர்ந்திருப்போமே! மாறாக, "அப்துல்லாஹ்வின் புதல்வர் முஹம்மத்" என்று எழுதுங்கள்" என்று கூறினார்கள்.
ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களிடம் அ(ந்த வாசகத்)தை அழித்துவிடுமாறு கூறினார்கள். அதற்கு அலீ (ரலி) அவர்கள், "இல்லை, அல்லாஹ்வின் மீதாணையாக! அதை நான் அழிக்கமாட்டேன்"என்று கூறினார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அந்த இடத்தை எனக்குக் காட்டுவீராக!" என்று கூறினார்கள். அலீ (ரலி) அவர்கள் அந்த (வாசகம் இருந்த) இடத்தைக் காட்டினார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதை (தமது கரத்தால்) அழிந்துவிட்டார்கள். மேலும், "அப்துல்லாஹ்வின் புதல்வர்" என்று எழுதச் செய்தார்கள்.
(அடுத்த ஆண்டு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்காவில் மூன்று நாட்கள் தங்கியிருந்தார்கள். மூன்றாவது நாளானபோது மக்காவாசிகள் அலீ (ரலி) அவர்களிடம், "உம்முடைய தோழர் நிபந்தனையில் குறிப்பிட்டிருந்த இறுதிநாள் இதுதான். எனவே, அவரை இந்நகரைவிட்டு வெளியேறச் சொல்லுங்கள்" என்று கூறினர். அலீ (ரலி) அவர்கள் இதை நபி (ஸல்) அவர்களிடம் தெரிவித்தபோது "ஆம்" என்று கூறிவிட்டு நபி (ஸல்) அவர்கள் புறப்பட்டு விட்டார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் அஹ்மத் பின் ஜனாப் அல் மிஸ்ஸீஸீ (ரஹ்) அவர்களது அறிவிப்பில், ("உம்மை நாங்கள் பின்தொடர்ந்திருப்போமே!" என்பதற்குப் பகரமாக) "நாங்கள் (இஸ்லாத்தை ஏற்பதாக) உம்மிடம் உறுதிமொழி அளித்திருப்போமே!" என்று (மக்காவாசிகள் கூறினார்கள் என) இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 32
3656. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
குறைஷியர் தம்முடன் சுஹைல் பின் அம்ர் இருக்க, நபி (ஸல்) அவர்களுடன் சமாதான ஒப்பந்தம் செய்தனர். நபி (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களிடம் "(ஒப்பந்தப் பத்திரத்தில் முதலில்) பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் (அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...) என எழுதுவீராக!" என்று கூறினார்கள்.
அப்போது சுஹைல், "பிஸ்மில்லாஹ்" (அல்லாஹ்வின் பெயரால்) என்பது சரி (அதை நாங்கள் அறிவோம்); அது என்ன பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்? அதை நாங்கள் அறியவில்லையே? எனவே, நாங்கள் அறிந்துள்ள "பிஸ்மிக்கல்லாஹும்ம" (அல்லாஹ்வே! உன் பெயரால்) எனும் வாசகத்தை எழுதுங்கள்" என்று கூறினார். (அவ்வாறே எழுதும்படி உத்தரவிட்டார்கள்.) பிறகு நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் முஹம்மதிடமிருந்து... என எழுதுவீராக!" என்று (அலீயிடம்) கூறினார்கள்.
அப்போது குறைஷியர், "நீர் இறைவனின் தூதர்தாம் என நாங்கள் அறிந்திருப்போமாயின் நாங்கள் உம்மைப் பின்தொடர்ந்திருப்போம். மாறாக, உமது பெயரையும் உம் தந்தையின் பெயரையும் (ஒப்பந்தத்தில்) எழுதுக" என்று கூறினர். ஆகவே, நபி (ஸல்) அவர்கள் (அலீ (ரலி) அவர்களிடம்) "அப்துல்லாஹ்வின் புதல்வர் முஹம்மதிடமிருந்து என எழுதுவீராக" என்று கூறினார்கள்.
அப்போது குறைஷியர் பின்வருமாறு நபிகளாரிடம் நிபந்தனையிட்டனர்: உங்களிடமிருந்து யாரேனும் (எங்களிடம்) வந்துவிட்டால் அவரை நாங்கள் திருப்பியனுப்பமாட்டோம். எங்களிடமிருந்து யாரேனும் (உங்களிடம்) வந்துவிட்டால் அவரை எங்களிடம் நீங்கள் திருப்பியனுப்ப வேண்டும்.
முஸ்லிம்கள், "அல்லாஹ்வின் தூதரே! (பாதகமான நிபந்தனைகள் கொண்ட) இதை நாம் எழுத வேண்டுமா?" என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், "ஆம்" என்று கூறிவிட்டு, "யாரேனும் நம்மிடம் வந்துவிட்டு (மதமாறிச்) சென்றால் அவரை அல்லாஹ் (தனது அருளிலிருந்து) அப்புறப்படுத்தி விடுவான். அவர்களிடமிருந்து யாரேனும் நம்மிடம் வந்தால் (அவர் திருப்பியனுப்பப் பெற்றாலும்) அவருக்கு மகிழ்வையும் (நெருக்கடியிலிருந்து) விடுபடுவதற்கான வழியையும் நிச்சயமாக அல்லாஹ் ஏற்படுத்துவான்" என்றார்கள்.
அத்தியாயம் : 32
3657. அபூவாயில் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
"ஸிஃப்பீன்" போர் நாளில் சஹ்ல் பின் ஹுனைஃப் (ரலி) அவர்கள் (மக்களிடையே) எழுந்து நின்று பின்வருமாறு கூறினார்கள்:
மக்களே! (இந்தப் போரில் ஈடுபாடு காட்டாததைக் குறித்து யாரையும் நீங்கள் குற்றம் சாட்டாதீர்கள்; மாறாக,) உங்களை நீங்களே குற்றம் சாட்டிக்கொள்ளுங்கள். நாங்கள் ஹுதைபியா நாளில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம்.
போர் புரிவது சரியானதென்று நாங்கள் கருதியிருந்தால் போர் புரிந்திருப்போம். ஆனால், அது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கும் இணைவைப்பாளர்களுக்கும் இடையே சமாதான உடன்பாட்டில் முடிந்தது.
(ஹுதைபியாவில் இணைவைப்பாளர்கள் முஸ்லிம்களுக்குப் பாதகமான நிபந்தனைகளை விதித்தபோதும் நபியவர்கள் ஏற்றுக்கொண்டார்கள்.) அப்போது உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! நாம் சத்தியத்திலும் அவர்கள் (எதிரிகள்) அசத்தியத்திலும் இல்லையா?" என்று கேட்டார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "ஆம் (நாம் சத்தியத்தில் இருக்கிறோம்; அவர்கள் அசத்தியத்தில் இருக்கிறார்கள்)" என்று பதிலளித்தார்கள். உமர் (ரலி) அவர்கள், "போரில் கொல்லப்படும் நம் வீரர்கள் சொர்க்கத்திலும் அவர்களுடைய வீரர்கள் நரகத்திலும் இருப்பார்கள் இல்லையா?" என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "ஆம்" என்று விடையளித்தார்கள்.
அதற்கு உமர் (ரலி) அவர்கள், "அப்படியிருக்க, நாம் ஏன் நமது மார்க்க விஷயத்தில் பணிந்து போக வேண்டும்? அல்லாஹ் நமக்கும் அவர்களுக்கும் இடையே தீர்ப்பளிக்காமலிருக்கும் நிலையில் நாம் ஏன் திரும்ப வேண்டும்?" என்று கேட்டார்கள்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "கத்தாபின் புதல்வரே! நான் அல்லாஹ்வுடைய தூதராவேன். என்னை அல்லாஹ் ஒருபோதும் வீணாக்கமாட்டான்" என்று பதிலளித்தார்கள்.
உமர் (ரலி) அவர்கள் கோபத்தை அடக்க முடியாமல் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் சென்று, "அபூபக்ர் அவர்களே! நாம் சத்தியத்திலும் அவர்கள் அசத்தியத்திலும் இல்லையா?" என்று கேட்டார்கள்.
அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் "ஆம் (நாம் சத்தியத்தில் இருக்கிறோம். அவர்கள் அசத்தியத்தில் இருக்கிறார்கள்)" என்று விடையளித்தார்கள்.
உமர் (ரலி) அவர்கள், "போரில் கொல்லப்படும் நம் வீரர்கள் சொர்க்கத்திலும் அவர்களுடைய வீரர்கள் நரகத்திலும் இருப்பார்கள் இல்லையா?" என்று கேட்டார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் "ஆம்" என்று பதிலளித்தார்கள்.
உமர் (ரலி) அவர்கள், "அப்படியிருக்க, நாம் ஏன் நமது மார்க்க விஷயத்தில் பணிந்து போக வேண்டும்? அல்லாஹ் நமக்கும் அவர்களுக்கும் இடையே தீர்ப்பளிக்காமலிருக்கும் நிலையில் நாம் ஏன் திரும்ப வேண்டும்?" என்று கேட்டார்கள்.
அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், "கத்தாபின் புதல்வரே! நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஆவார்கள். அவர்களை அல்லாஹ் ஒருபோதும் வீணாக்கமாட்டான்" என்று கூறினார்கள்.
அப்போதுதான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ("உமக்கு நாம் தெளிவான வெற்றியை அளித்துவிட்டோம்" என்று தொடங்கும்) "அல்ஃபத்ஹ்" எனும் (48ஆவது) அத்தியாயம் அருளப்பெற்றது.
உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உமர் (ரலி) அவர்களுக்கு ஆளனுப்பி அந்த வசனத்தை ஓதிக்காட்டினார்கள். உமர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! இது வெற்றியா?" என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஆம் (வெற்றிதான்)" என்று பதிலளித்தார்கள். பிறகு உமர் (ரலி) அவர்கள் மனச்சாந்தியடைந்து திரும்பிச் சென்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 32
3658. அபூவாயில் ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
"ஸிஃப்பீன்" போரின்போது சஹ்ல் பின் ஹுனைஃப் (ரலி) அவர்கள் "மக்களே! (நான் இந்தப் போரில் ஈடுபாடு காட்டாததைக் குறித்து என்னைக் குற்றம் சாட்டாதீர்கள்) உங்களது கருத்தையே குறை காணுங்கள்.
அபூஜந்தல் (அபயம் தேடிவந்த ஹுதைபியா உடன்படிக்கை) நாளில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கட்டளையை மறுப்பதற்கு என்னால் முடிந்திருந்தால் நான் மறுத்திருப்பேன். (அத்தகைய மன நிலையில் அன்று நான் இருந்தேன்.) (அன்று) நாங்கள் எங்கள் வாட்களை எங்கள் தோள்களில் (முடக்கி) வைத்துக்கொண்டது, ஒருபோதும் போருக்கு அஞ்சியல்ல. நாங்கள் அறிந்த ஓர் எளிய விஷய(மான சமாதான)த்திற்காகத்தான். ஆனால், உங்களது இந்த விவகாரம் (ஸிஃப்பீன் போர் அவ்வாறன்று)" எனக் கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் முஹம்மத் பின் அப்தில்லாஹ் பின் நுமைர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "ஒருபோதும் போருக்கு" எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "எங்கள் தோள்களில் நாங்கள் வாட்களை (முடக்கி) வைத்துக்கொண்டது, எங்களுக்குச் சிரமம் தரும் போருக்கு அஞ்சி அல்ல" என்று சஹ்ல் (ரலி) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 32
3659. அபூவாயில் ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
"ஸிஃப்பீன்" போரின்போது சஹ்ல் பின் ஹுனைஃப் (ரலி) அவர்கள் பின்வருமாறு கூறியதை நான் கேட்டேன்: (நான் இந்தப் போரில் ஈடுபாடு காட்டாதது குறித்து என்னைக் குற்றம் சாட்டாதீர்கள்) உங்கள் மார்க்க விஷயத்தில் நீங்கள் எடுத்துள்ள முடிவையே குறை காணுங்கள்.
அபூஜந்தல் (அபயம் தேடி வந்த ஹுதைபியா) நாளில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கட்டளையை ஏற்க மறுப்பதற்கு என்னால் முடிந்திருந்தால் (ஏற்க மறுத்திருப்பேன். அத்தகைய மனோ நிலையில்தான் நான் அன்று இருந்தேன்.)
(ஆனால், இன்று உங்கள்) பிரச்சினையில் ஒரு மூலையை (அடைத்து)ச் சீராக்கும்போது, மற்றொரு மூலை நம் முன்னே வெடித்துத் திறந்துகொள்கிறது.
அத்தியாயம் : 32
3660. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (உம்ரா வழிபாட்டை நிறைவேற்ற முடியாமல் போனதால்) ஹுதைபியா எனுமிடத்திலேயே பலிப்பிராணியை அறுத்துவிட்டு, அங்கிருந்து (மதீனா நோக்கி) திரும்பிக் கொண்டிருந்தார்கள். அப்போது நபித்தோழர்களைக் கவலையும் சோகமும் தழுவியிருந்தன.
இந்நிலையில்தான் (அவர்களுக்கு), "(நபியே!) உமக்குத் தெளிவானதொரு வெற்றியை நாம் அளித்தோம். உமது பாவத்தில் முந்தியதையும் பிந்தியதையும் உமக்காக அல்லாஹ் மன்னித்து, அவன் தனது அருட்கொடையை உமக்கு முழுமைப்படுத்தி, உமக்கு நேரான பாதையைக் காட்டுவதற்காகவும், அல்லாஹ் மகத்தான உதவியை உமக்குச் செய்வதற்காகவும் (இந்த வெற்றியை அவன் அளித்தான்)" என்று தொடங்கி, "இது அல்லாஹ்விடம் மகத்தான வெற்றியாக இருக்கிறது" என்பதுவரை (48:1-5) இறைவசனங்கள் அருளப்பெற்றன.
அப்போது நபி (ஸல்) அவர்கள், "எனக்கு ஓர் இறைவசனம் அருளப்பெற்றுள்ளது. அது இவ்வுலகிலுள்ள அனைத்தையும்விட எனக்கு மிகவும் உவப்பானதாகும்" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 32
பாடம் : 35 (போரிலும்) வாக்குறுதியை நிறைவேற்றல்.
3661. ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் பத்ருப் போரில் கலந்துகொள்ளாததற்குக் காரணம் யாதெனில், நானும் என் தந்தை ஹுசைல் (எனும் அல்யமான்) அவர்களும் (பத்ர் நோக்கிப்) புறப்பட்டோம். அப்போது குறைஷி இறைமறுப்பாளர்கள் எங்களைப் பிடித்துக்கொண்டனர். "நீங்கள் முஹம்ம(துடன் சேர்ந்து எங்களுக்கெதிராகப் போர் செய்வ)தை நாடித்தானே செல்கிறீர்கள்?" என்று கேட்டார்கள்.
நாங்கள் "(இல்லை) மதீனாவை நோக்கியே செல்கிறோம்" என்று (பேச்சை மாற்றிச்) சொன்னோம். அப்போது குறைஷியர் "நாங்கள் மதீனாவுக்கே திரும்பிவிட வேண்டும்; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் சேர்ந்து (குறைஷியருக்கெதிராக) போரிடக் கூடாது" என அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு எங்களிடம் வாக்குறுதி பெற்றுக் கொண்டனர்.
நாங்கள் இருவரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று நடந்ததைத் தெரிவித்தோம். அப்போது அவர்கள், "நீங்கள் இருவரும் (மதீனாவுக்கே) திரும்பிச் செல்லுங்கள். நாம் அவர்களுக்கு ஆதரவாக அவர்களது வாக்குறுதியை நிறைவேற்றுவோம். அவர்களுக்கெதிராக அல்லாஹ்விடம் உதவி கோருவோம்" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 32
பாடம் : 36 அகழ்ப் போர்.
3662. யஸீத் பின் ஷரீக் அத்தைமீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) நாங்கள் ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்களிடம் இருந்தோம். அப்போது ஒரு மனிதர், "நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் வாழ்ந்திருந்தால், அவர்களுடன் சேர்ந்து போர்களில் ஈடுபட்டிருப்பேன்; கடுமையாக உழைத்திருப்பேன்" என்று கூறினார்.
அதற்கு ஹுதைஃபா (ரலி) அவர்கள் கூறினார்கள்: நீ அவ்வாறு செய்திருக்கவாபோகிறாய்? அகழ்ப் போர் இரவில் நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். கடுமையான காற்றும் குளிரும் எங்களை வாட்டிக்கொண்டிருந்தன.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எங்களிடம்), "எதிரிகள் பற்றிய செய்தியை (உளவறிந்து) என்னிடம் கொண்டுவருபவர் யார்? அவரை மறுமை நாளில் அல்லாஹ் என்னுடன் இருக்கச் செய்வான்" என்று கூறினார்கள். நாங்கள் மௌனமாக இருந்தோம். எங்களில் யாரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பதிலளிக்கவில்லை.
பிறகு மீண்டும் "எதிரிகள் பற்றிய செய்தியை (உளவறிந்து) நம்மிடம் கொண்டுவருபவர் யார்? அவரை மறுமை நாளில் அல்லாஹ் என்னுடன் இருக்கச் செய்வான்" என்று கூறினார்கள். அப்போதும் நாங்கள் அமைதியாக இருந்தோம். எங்களில் யாரும் அவர்களுக்குப் பதிலளிக்கவில்லை.
பிறகு (மூன்றாவது முறையாக), "எதிரிகள் பற்றிய செய்தியை (உளவறிந்து) நம்மிடம் கொண்டுவருபவர் யார்? அவரை மறுமை நாளில் அல்லாஹ் என்னுடன் இருக்கச் செய்வான்" என்று கூறினார்கள். அப்போதும் நாங்கள் அமைதியாகவே இருந்தோம். எங்களில் யாரும் அவர்களுக்குப் பதிலளிக்கவில்லை.
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஹுதைஃபா! எதிரிகளைப் பற்றிய செய்தியை (உளவறிந்து) என்னிடம் கொண்டுவா" என்று கூறினார்கள். எனது பெயரைக் குறிப்பிட்டு அவர்கள் என்னை அழைத்துவிட்டதால் என்னால் மறுக்க முடியவில்லை. நான் எழுந்தேன்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், " நீ சென்று எதிரிகளைப் பற்றிய செய்தியை (உள வறிந்து) என்னிடம் கொண்டுவா! எதிரிகளை எனக்கெதிராக விழிப்படையச் செய்துவிடாதே" என்று கூறினார்கள்.
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து விடைபெற்று (எதிரிகளை நோக்கி)ச் சென்றபோது, நான் வெண்ணீரில் நடப்பதைப் போன்றிருந்தது (குளிரே எனக்குத் தெரிய வில்லை). இந்நிலையில் நான் எதிரிகளிடம் வந்துசேர்ந்தேன். அப்போது (எதிரிகளின் தலைவர்) அபூசுஃப்யான் தமது முதுகை நெருப்பில் காட்டி, குளிர் காய்ந்துகொண்டிருந்தார்.
நான் எனது வில்லின் நடுவே ஓர் அம்பைப் பொருத்தி அவர்மீது எய்யப்போனேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் "எனக்கெதிராக எதிரிகளை விழிப்படையச் செய்துவிடாதே" என்று கூறியதை நான் நினைவுகூர்ந்தேன். அப்போது மட்டும் நான் அம்பை எய்திருந்தால், அவரை நிச்சயமாக நான் தாக்கியிருப்பேன்.
பிறகு நான் வெண்ணீரில் நடப்பதைப் போன்றே, (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம்) திரும்பி வந்தேன். அவர்களிடம் சென்று எதிரிகளைப் பற்றிய செய்திகளைத் தெரிவித்தேன். நான் செய்திகளைச் சொல்லி முடித்ததும் குளிர் என்னைத் தாக்கத் தொடங்கியது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம்மீது இருந்த போர்வையின் ஒரு கூடுதலான பகுதியை எனக்கு அணி வித்தார்கள். அந்தப் போர்வையைப் போர்த்திக்கொண்டுதான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அப்போது) தொழுது கொண்டிருந்தார்கள். அதிகாலைவரை நான் (அப்போர்வையில்) உறங்கிக்கொண்டேயிருந்தேன். அதிகாலையானதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "தூங்கு மூஞ்சி! எழுந்திரு" என்றார்கள்.- இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 32
பாடம் : 37 உஹுதுப் போர்.
3663. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
உஹுதுப் போர் நாளில் (ஒரு கட்டத்தில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அன்சாரிகளில் எழுவரும் குறைஷியரில் (முஹாஜிர்களில்) இருவரும் மட்டுமே தம்முடனிருக்க தனித்து விடப்பட்டார்கள். (மற்ற தோழர்கள் சிதறி ஓடிவிட்டனர்.)
இந்நிலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை எதிரிகள் நெருங்கிய போது, "நம்மிடமிருந்து இவர்களை விரட்டியடிப்பவர் யார்? "அவருக்குச் சொர்க்கம் கிடைக்கும்"; அல்லது "அவர் சொர்க்கத்தில் என்னுடன் இருப்பார்"என்று கூறினார்கள்.
அப்போது அன்சாரிகளில் ஒருவர் முன்னேறிச் சென்று போரிட்டார். இறுதியில் அவர் கொல்லப்பட்டார். பிறகு மீண்டும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை எதிரிகள் நெருங்கினார்கள். அப்போது "நம்மிடமிருந்து இவர்களை விரட்டியடிப்பவர் யார்? "அவருக்குச் சொர்க்கம் கிடைக்கும்"; அல்லது "அவர் சொர்க்கத்தில் என்னுடன் இருப்பார்" என்று கூறினார்கள்.
அப்போது அன்சாரிகளில் மற்றொரு மனிதர் முன்னேறிச் சென்று எதிரிகளுடன் போரிட்டார். அவரும் கொல்லப்பட்டார். இவ்வாறே (ஒருவர் பின் ஒருவராகச்) சென்று அன்சாரிகள் எழுவரும் கொல்லப்பட்டனர்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (உடனிருந்த) தம்மிரு (குறைஷித்) தோழர்களிடம், "நாம் நம்முடைய (அன்சாரித்) தோழர்களிடம் நியாயமாக நடந்துகொள்ள வில்லை" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 32
3664. அபூஹாஸிம் சலமா பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு உஹுதுப் போர் நாளில் ஏற்பட்ட காயங்கள் குறித்துக் கேட்கப்பட்டது. அப்போது அவர்கள் கூறினார்கள்:
(அன்றைய தினத்தில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முகம் காயப்படுத்தப்பட்டது. அவர்களின் முன்வாய்ப்பற்களில் (கீழ் வரிசையில் வலப்புறப் பல்) ஒன்று உடைக்கப்பட்டது. தலைக் கவசம் அவர்களது தலையில் வைத்தே நொறுக்கப்பட்டது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய புதல்வி ஃபாத்திமா (ரலி) அவர்கள் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய முகத்திலிருந்து வழிந்த) இரத்தத்தைக் கழுவிக்கொண்டிருந்தார்கள். அலீ பின் அபீ தாலிப் (ரலி) அவர்கள் (தமது) கேடயத்தில் தண்ணீர் (நிரப்பி வந்து அந்தக் காயத்தைக் கழுவுவதற்காக) ஊற்றிக்கொண்டிருந்தார்கள்.
தண்ணீர் மேன்மேலும் இரத்தத்தை அதிகமாக்குவதையே கண்ட ஃபாத்திமா (ரலி) அவர்கள், ஒரு பாய்த் துண்டை எடுத்து வந்து சாம்பலாகும்வரை அதைக் கரித்து, அதைக் காயத்தில் வைத்து அழுத்தினார்கள். இரத்தம் (வழிவது) நின்றுவிட்டது.
அத்தியாயம் : 32
3665. மேற்கண்ட ஹதீஸ் அபூஹாஸிம் (ரஹ்) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் பின்வருமாறு ஹதீஸ் ஆரம்பமாகிறது:
சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு (உஹுதுப் போரில்) ஏற்பட்ட காயங்கள் குறித்துக் கேட்கப்பட்டது. அதற்கு சஹ்ல் (ரலி) அவர்கள், "இதோ! அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காயத்தைக் கழுவிவிட்டவரையும், (கழுவுவதற்காகத்) தண்ணீரை ஊற்றிக் கொண்டிருந்தவரையும், மருந்துக்குப் பயன்படுத்தப்பட்ட பொருளையும் நான் அறிவேன்" என்று கூறிவிட்டுத் தொடர்ந்து மேற்கண்ட ஹதீஸில் உள்ளபடி கூறினார்கள்.
ஆயினும், இந்த அறிவிப்பில் "அவர்களது முகம் காயப்படுத்தப்பட்டது" எனும் தகவல் (ஹதீஸின் இறுதியில்) இடம்பெற்றுள்ளது. ("உடைக்கப்பட்டது" என்பதைக் குறிக்க) "ஹுஷிமத்" என்பதற்குப் பதிலாக "குசிரத்" எனும் சொல் ஆளப்பட்டுள்ளது.
அத்தியாயம் : 32
3666. மேற்கண்ட ஹதீஸ் மேலும் ஆறு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் சயீத் பின் அபீஹிலால் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "அவர்களுடைய முகம் தாக்கப்பட்டது” என்றும், முஹம்மத் பின் முதர்ரிஃப் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "அவர்களுடைய முகம் காயப்படுத்தப்பட்டது” என்றும் இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 32
3667. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
உஹுதுப் போர் நாளில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய முன்வாய்ப் பற்களில் (கீழ் வரிசையில் வலப்புறப் பல்) ஒன்று உடைக்கப்பட்டது. அவர்களது முகம் காயப்படுத்தப்பட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காயத்திலிருந்து வழிந்த இரத்தத்தைத் துடைத்தபடியே, "தங்களுடைய நபியைக் காயப்படுத்தி, அவரது பல்லை உடைத்த ஒரு சமுதாயம் எப்படி உருப்படும்? அவரோ அவர்களை அல்லாஹ்வின் பக்கம் அழைத்துக்கொண்டிக்கிறார்" என்று கூறலானார்கள்.
அப்போதுதான் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், "(நபியே!) அதிகாரத்தில் உமக்கு எந்தப் பங்கும் இல்லை" (3:128) எனும் வசனத்தை அருளினான்.
அத்தியாயம் : 32
3668. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(முற்கால) இறைத்தூதர்களில் ஒருவரின் நிலையை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எடுத்துரைத்துக்கொண்டிருந்ததை நான் இப்போதும் பார்ப்பதைப் போன்றுள்ளது. அந்த இறைத்தூதரை அவருடைய சமுதாயத்தார் அடித்தனர். அவரோ தமது முகத்திலிருந்து இரத்தத்தைத் துடைத்தபடி, "இறைவா! என் சமுதாயத்தாரை மன்னித்துவிடு. ஏனெனில், அவர்கள் அறியாதவர்களாக இருக்கிறார்கள்" என்று சொல்லிக்கொண்டிருந்தார் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. ஆயினும் அவற்றில், "அவர் தமது நெற்றியிலிருந்து இரத்தத்தை வழித்துக்கொண்டிருந்தார்" என்று இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 32
பாடம் : 38 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களால் கொல்லப்பட்ட ஒருவன்மீது அல்லாஹ்வின் கோபம் கடுமையாதல்.
3669. ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இவை அபூஹுரைரா (ரலி) அவர்கள் எங்களுக்கு அறிவித்த ஹதீஸ்களாகும். அவற்றில் பின்வரும் ஹதீஸும் ஒன்றாகும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (உஹுதுப் போரில் உடைபட்ட) தமது (முன் வாய்ப்பற்களில் கீழ் வரிசையில் வலப்புறம் இருந்த) பல்லைச் சுட்டிக்காட்டி, "அல்லாஹ்வின் தூதரை இப்படிச் செய்துவிட்ட சமுதாயத்தின் மீது அல்லாஹ்வின் கோபம் மிகக் கடுமையாகிவிட்டது" என்றும், "அல்லாஹ்வின் பாதையில் அல்லாஹ்வின் தூதர் யாரைக் கொன்றுவிடுவாரோ அவர்மீதும் அல்லாஹ்வின் கோபம் மிகக் கடுமையாகி விட்டது" என்றும் கூறினார்கள்.
அத்தியாயம் : 32
பாடம் : 39 நபி (ஸல்) அவர்கள் இணைவைப்பாளர்களிடமிருந்தும் நயவஞ்சகர்களிடமிருந்தும் சந்தித்த துன்பங்கள்.
3670. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறையில்லம் கஅபா அருகில் தொழுது கொண்டிருந்தார்கள். அபூஜஹ்லும் அவனுடைய நண்பர்களும் (அங்கு) அமர்ந்திருந்தனர். அதற்கு முந்தையநாள் (இறைச்சிக்காக மக்காவில்) ஓர் ஒட்டகம் அறுக்கப்பட்டிருந்தது.
அபூஜஹ்ல், "உங்களில் யார், இன்ன குடும்பத்தார் (நேற்று) அறுத்த ஒட்டகத்தின் கருப்பையைச் சுற்றியுள்ள சவ்வுகளைக் கொண்டுவந்து முஹம்மத் (தொழுகையில்) சிரவணக்கத்திற்குச் செல்லும்போது, அவருடைய தோள்கள்மீது வைப்பவர்?" என்று கேட்டான். அங்கிருந்தவர்களில் மாபாதகன் ஒருவன் கிளம்பிச் சென்று, அதைக் கொண்டுவந்தான்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிரவணக்கம் செய்தபோது, அவர்களுடைய தோள்களுக்கு மத்தியில் அதை(த் தூக்கி) வைத்தான். அதைக் கண்டு அவனுடைய சகாக்கள் ஒருவர்மீது ஒருவர் விழுந்து சிரிக்கலாயினர். நான் நின்று பார்த்துக்கொண்டிருந்தேன். எனக்குச் சக்தி இருந்திருந்தால் அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய முதுகிலிருந்து அப்புறப்படுத்தியிருப்பேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிரவணக்கத்திலிருந்து தலையை உயர்த்தாமல் (அப்படியே) இருந்தார்கள்.
இதற்கிடையில், யாரோ ஒருவர் சென்று (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் புதல்வி) ஃபாத்திமா (ரலி) அவர்களிடம் விஷயத்தைத் தெரிவித்துவிட்டார். உடனே சிறுமியாயிருந்த ஃபாத்திமா (ரலி) அவர்கள் வந்து அதை அப்புறப்படுத்தினார்.
பிறகு அ(ந்தக் கய)வர்களை நோக்கிச் சென்று அவர்களை ஏசினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுது முடித்ததும் உரத்த குரலில் எதிரிகளுக்கெதிராகப் பிரார்த்தித்தார்கள்.
-பொதுவாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தால் ஒவ்வொரு வாக்கியத்தையும் மூன்று முறை கூறுவார்கள்.-
பிறகு "இறைவா! குறைஷியரை நீயே கவனித்துக்கொள்" என்று மூன்று முறை பிரார்த்தித்தார்கள். நபியவர்களது குரலைக் கேட்டதும் எதிரிகளின் சிரிப்பு அடங்கிவிட்டது. அல்லாஹ்வுடைய தூதரின் பிரார்த்தனையைக் குறித்து அவர்கள் அஞ்சினர்.
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இறைவா! அபூஜஹ்ல் பின் ஹிஷாம், உத்பா பின் ரபீஆ, ஷைபா பின் ரபீஆ, வலீத் பின் உக்பா, உமய்யா பின் கலஃப், உக்பா பின் அபீமுஐத் (ஏழாவதாக மற்றொருவரையும் குறிப்பிட்டார்கள். ஆனால், அது என் நினைவில் இல்லை.) ஆகியோரை நீயே கவனித்துக்கொள்" என்று பிரார்த்தித்தார்கள்.
முஹம்மத் (ஸல்) அவர்களைச் சத்திய (மார்க்க)த்துடன் அனுப்பியவன்மீது ஆணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இந்தப் பிரார்த்தனையில்) பெயர் குறிப்பிட்ட அனைவரும் பத்ருப் போர்க்களத்தில் மாண்டு கிடந்ததை நான் கண்டேன். பின்னர் அவர்கள் அனைவரும் இழுத்துச் செல்லப்பட்டு, பத்ரிலிருந்த ஒரு பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டனர்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூஇஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
இந்த ஹதீஸில் வலீத் பின் உக்பாவின் பெயர் தவறுதலாகவே இடம்பெற்றுள்ளது. (வலீத் பின் உத்பா என்பதே சரி.)
அத்தியாயம் : 32
3671. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இறையில்லம் கஅபா அருகில்) தொழுகையில் சிரவணக்கத்தில் (சஜ்தாவில்) இருந்தார்கள். அவர்களைச் சுற்றி குறைஷியர் சிலர் இருந்தனர். அப்போது உக்பா பின் அபீமுஐத் என்பான் அறுக்கப்பட்ட ஓர் ஒட்டகத்தின் கருவைச் சுற்றியுள்ள சவ்வுகளுடன் வந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய முதுகில் அதைப் போட்டான். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (சஜ்தாவிலிருந்து) தமது தலையை உயர்த்தவில்லை.
பின்னர் (அவர்களுடைய புதல்வி) ஃபாத்திமா (ரலி) அவர்கள் வந்து அவர்களது முதுகிலிருந்தவற்றை அப்புறப்படுத்திவிட்டு, அவ்வாறு செய்தோருக்கெதிராகப் பிரார்த்தித்தார்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இறைவா! குறைஷிப் பிரமுகர்களான அபூஜஹ்ல் பின் ஹிஷாம், உத்பா பின் ரபீஆ, உக்பா பின் அபீமுஐத், ஷைபா பின் ரபீஆ, "உமய்யா பின் கலஃப்” அல்லது "உபை பின் கலஃப்” (அறிவிப்பாளர் ஷுஅபாவின் ஐயப்பாடு) ஆகியோரை நீயே கவனித்துக்கொள்" என்று பிரார்த்தித்தார்கள்.
அவர்கள் அனைவரும் பத்ருப் போரில் கொல்லப்பட்டு, ஒரு கிணற்றில் போடப்பட்டனர். உமய்யா அல்லது உபையின் மூட்டுகள் தனித்தனியே கழன்றுகொண்டதால் அவன் (இழுத்துச் சென்று) கிணற்றில் போடப்படவில்லை.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 32
3672. மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஏதேனும் பிரார்த்தித்தால்) மூன்று முறை கோருவதையே விரும்புவார்கள். "இறைவா! குறைஷியரை நீயே கவனித்துக்கொள். இறைவா! குறைஷியரை நீயே கவனித்துக்கொள். இறைவா! குறைஷியரை நீயே கவனித்துக்கொள்" என்று மூன்று முறை பிரார்த்தித்தார்கள்" என்று அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.
மேலும் வலீத் பின் உத்பா, உமய்யா பின் கலஃப் ஆகியோர் பெயரையும் குறிப்பிட்டதாகவும் இடம்பெற்றுள்ளது. அந்த அறிவிப்பிலுள்ள ஐயப்பாடு இதில் இல்லை. "ஏழாமவர் பெயரை நான் மறந்துவிட்டேன்" என்று அபூஇஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் கூறியதாகவும் காணப்படுகிறது.
அத்தியாயம் : 32
3673. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறையில்லம் கஅபாவை முன்னோக்கி, குறைஷிக் குலத்தைச் சேர்ந்த அறுவருக்கெதிராகப் பிரார்த்தித்தார்கள்.
அவர்களில் அபூஜஹ்ல், உமய்யா பின் கலஃப், உத்பா பின் ரபீஆ, ஷைபா பின் ரபீஆ, உக்பா பின் அபீமுஐத் ஆகியோர் இடம்பெற்றனர். (ஆறாவது நபரின் பெயர் இடம்பெறவில்லை.) அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுச் சொல்கிறேன்: அவர்கள் (அறுவரும்) சூரிய வெப்பத்தால் (உடல் உப்பி, நிறம் மாறி,) உருமாறி (பத்ருப் போர்க்களத்தில்) மாண்டு கிடந்ததை நான் கண்டேன். அன்றைய தினம் வெப்பம் நிறைந்த நாளாக இருந்தது.
அத்தியாயம் : 32
3674. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் நபி (ஸல்) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதரே! (தாங்கள் காயமடைந்த) உஹுதுப் போர் நாளைவிடக் கடுமையானதொரு நாளைத் தாங்கள் சந்தித்ததுண்டா?" என்று கேட்டேன்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நான் உன் சமுதாயத்தாரால் (நிறையத் துன்பங்களைச்) சந்தித்துவிட்டேன். அவர்களால் நான் சந்தித்த துன்பங்களிலேயே மிகக் கடுமையானது, (தாயிஃபில் உள்ள) "அகபா" நாளில் சந்தித்த துன்பமேயாகும்.
ஏனெனில், அன்று நான் என்னை (இறைவனின் தூதராக) ஏற்றுக்கொள்ளும்படி (தாயிஃப் நகரத் தலைவரான கினானா) இப்னு அப்தி யாலீல் பின் அப்தி குலால் என்பவரிடம் எடுத்துரைத்தேன். எனக்கு இசைவான பதிலை அவர் அளிக்கவில்லை.
ஆகவே, நான் கவலையோடு எதிர்ப்பட்ட திசையில் நடந்தேன். "கர்னுஸ் ஸஆலிப்" எனும் இடத்தை அடையும்வரை நான் சுயஉணர்வுக்குத் திரும்பவில்லை. அங்கு வந்து சேர்ந்தவுடன் என் தலையை உயர்த்தினேன். அப்போது அங்கே (வானத்தில்) ஒரு மேகம் என்மீது நிழலிட்டுக்கொண்டிருந்தது. நான் கூர்ந்து கவனித்தபோது, அதில் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் இருந்தார்கள்.
அவர்கள் என்னை அழைத்து, "உங்கள் சமுதாயத்தாரிடம் நீங்கள் சொன்னதையும் அவர்கள் உங்களுக்கு அளித்த பதிலையும் அல்லாஹ் செவியுற்றான். அவர்களை நீங்கள் விரும்பியபடி (தண்டிப்பதற்கு) ஆணையிடுவதற்காக மலைகளுக்கான வானவரை அல்லாஹ் உங்களிடம் அனுப்பியுள்ளான்" என்று கூறினார்கள்.
உடனே மலைகளை நிர்வகிக்கும் வானவர் என்னை அழைத்து, எனக்கு முகமன் (சலாம்) கூறினார். பிறகு "முஹம்மதே! உங்கள் சமுதாயத்தார் உங்களிடம் பேசியதை அல்லாஹ் கேட்டான். நான் மலைகளுக்கான வானவர். (இந்த மக்கள் விஷயத்தில்) நீங்கள் விரும்பியபடி கட்டளையிடுவதற்காக உங்களிடம் என்னை அல்லாஹ் அனுப்பியுள்ளான். உங்கள் விருப்பம் என்ன? (இந்த நகரத்தின் இரு மருங்கிலுமுள்ள) இந்த இரு மலைகளையும் அவர்கள்மீது நான் புரட்டிப் போட்டுவிட வேண்டுமென்று நீங்கள் விரும்பினாலும் (உங்கள் கட்டளைப்படி செயல்பட நான் தயாராக உள்ளேன்)" என்று கூறினார்.
உடனே நான் அவரிடம், "வேண்டாம். இந்த (நகரத்து) மக்களின் வழித்தோன்றல்களில் அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்காமல் அவனை மட்டுமே வழிபடுவோரை அல்லாஹ் உருவாக்குவான் என்று நான் நம்புகிறேன் (ஆகவே, அவர்களைத் தண்டிக்க வேண்டாம்)" என்று கூறிவிட்டேன்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 32
3675. ஜுன்துப் பின் அப்தில்லாஹ் பின் சுஃப்யான் அல்பஜலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பங்குபெற்ற ஒரு போரில் அவர்களது (கால்) விரலில் (காயம் ஏற்பட்டு) இரத்தம் சொட்டியது. அப்போது அவர்கள்,
நீ இரத்தம் சொட்டுகின்ற
ஒரு விரல்தானே
நீ பட்டதெல்லாம்
இறைவழியில்தானே
என்று (ஈரடிச் சீர்பாடல் வடிவில்) கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 32
3676. மேற்கண்ட ஹதீஸ் ஜுன்துப் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு படையில் இருந்தபோது, அவர்களது (கால்) விரலில் கல் பட்டு (காயமேற்பட்டு)விட்டது" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 32
3677. ஜுன்துப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (சில நாட்கள்) தாமதமாக வந்தார்கள். அப்போது இணைவைப்பாளர்கள், "முஹம்மத் விடை கொடுக்கப்பட்டு விட்டார்" என்று கூறினர்.
அப்போது வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், "முற்பகலின் மீது சத்தியமாக! இருண்டுவிட்ட இரவின் மீது சத்தியமாக! (நபியே!) உம்முடைய இறைவன் உம்மைக் கைவிடவுமில்லை; கோபங்கொள்ளவுமில்லை" (93:1-3) எனும் வசனங்களை அருளினான்.
அத்தியாயம் : 32
3678. ஜுன்துப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டு "இரண்டு இரவுகள்” அல்லது "மூன்று இரவுகள்” (இரவுத் தொழுகைக்காகக்கூட) எழவில்லை. அவர்களிடம் ஒரு பெண் வந்து, "முஹம்மதே! உம்முடைய ஷைத்தான் உம்மைக் கைவிட்டு விட்டான் என்றே நான் கருதுகிறேன். அதனால்தான் "இரண்டு இரவுகளாக" அல்லது "மூன்று இரவுகளாக” உம்மை அந்த ஷைத்தான் நெருங்கி வரவில்லை" என்று கூறினாள்.
அப்போது வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் "முற்பகலின் மீது சத்தியமாக! இருண்டுவிட்ட இரவின் மீது சத்தியமாக! (நபியே!) உங்கள் இறைவன் உங்களைக் கைவிடவுமில்லை; கோபங் கொள்ளவுமில்லை" எனும் (93: 1-3)வசனங்களை அருளினான்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஜுன்துப் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் நான்கு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 32
பாடம் : 40 நபி (ஸல்) அவர்கள் (மக்களை) இறைவன்பால் அழைத்ததும் நயவஞ்சகர்கள் அளித்த துன்பங்களைப் பொறுத்ததும்.
3679. உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் கழுதையொன்றில் சேணம் விரித்து, அதில் "ஃபதக்" நகர் குஞ்சம் வைத்த முரட்டுத் துணி விரித்து, அதில் அமர்ந்தவாறு பயணம் செய்தார்கள். என்னைத் தமக்குப் பின்னால் அமர்த்திக்கொண்டார்கள். ஹாரிஸ் பின் அல்கஸ்ரஜ் குலத்தாரிடையே (உடல் நலமில்லாமல்) இருந்த சஅத் பின் உபாதா (ரலி) அவர்களை உடல்நலம் விசாரிக்கச் சென்றார்கள்.
இது பத்ருப் போர் நிகழ்ச்சிக்கு முன்னால் நடந்தது. (வழியில்) நபியவர்கள் ஓர் அவையைக் கடந்துசென்றார்கள். அந்த அவையில் முஸ்லிம்களும் சிலை வழிபாட்டாளர்களான இணைவைப்போரும் யூதர்களும் கலந்து இருந்தார்கள்.
அவர்களிடையே (நயவஞ்சகர்களின் தலைவர்) அப்துல்லாஹ் பின் உபை பின் சலூலும் இருந்தார். அதே அவையில் (கவிஞர்) அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி) அவர்களும் இருந்தார்கள். (எங்கள் வாகனப்) பிராணியின் (காலடிப்) புழுதி அந்த அவையைச் சூழ்ந்தபோது, அப்துல்லாஹ் பின் உபை தனது மேல்துண்டால் தனது முகத்தைப் பொத்திக்கொண்டு, "எங்கள்மீது புழுதியைக் கிளப்பாதீர்கள்" என்று சொன்னார்.
நபி (ஸல்) அவர்கள் அந்த அவையோருக்கு முகமன் (சலாம்) கூறினார்கள். பிறகு, தமது வாகனத்தை நிறுத்தி இறங்கி,அவர்களை அல்லாஹ்வின் (மார்க்கத்தின்)பால் அழைத்தார்கள். அவர்களுக்குக் குர்ஆன் வசனங்களை ஓதிக்காட்டினார்கள். அப்போது அப்துல்லாஹ் பின் உபை பின் சலூல், "மனிதரே! நீர் கூறுகின்ற விஷயம் உண்மையாயிருப்பின், அதைவிட அழகியது வேறொன்றுமில்லை. ஆனாலும், அதை எங்களுடைய (இத்தகைய) அவைகளில் கூறி எங்களுக்குத் தொல்லை கொடுக்காதீர். உமது இருப்பிடத்திற்குச் செல்லும். எங்களில் யார் உம்மிடம் வருகிறார்களோ அவர்களுக்கு எடுத்துச் சொல்லும்" என்றார்.
(இதைக் கேட்ட) அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி) அவர்கள், "(ஆம்; அல்லாஹ்வின் தூதரே! இதை) எங்கள் அவைகளில் வெளிப்படுத்துங்கள். ஏனெனில், நாங்கள் அதை விரும்புகிறோம்" என்று சொன்னார்கள்.
இதற்கிடையே முஸ்லிம்களும் இணைவைப்போரும் யூதர்களும் ஒருவரையொருவர் ஏசிக் கொண்டே ஒருவர் மீதொருவர் பாய்ந்து (தாக்கிக்)கொள்ள முற்பட்டனர். அப்போது நபி (ஸல்) அவர்கள் மக்களை அமைதிப்படுத்திக் கொண்டேயிருந்தார்கள்.
பின்னர் தமது வாகனத்தில் ஏறி (உடல்நலமில்லாமல் இருந்த) சஅத் பின் உபாதா (ரலி) அவர்களிடம் சென்று, "சஅதே! (உங்கள் குலத்தாரான) அபூஹுபாப் -அப்துல்லாஹ் பின் உபை- சொன்னதை நீங்கள் கேள்விப்படவில்லையா?" என்று கூறி, "அப்துல்லாஹ் பின் உபை இப்படி இப்படிக் கூறினார்" என்று தெரிவித்தார்கள்.
அதற்கு சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள், "அவரை மன்னித்து விட்டுவிடுங்கள், அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீதாணையாக! இந்த (மதீனா) நகரத்தார் அவருக்குக் கிரீடம் அணிவித்து அவருக்கு முடிசூட்ட முடிவு செய்திருந்த நிலையில்தான், அல்லாஹ் தங்களுக்கு இ(ந்த நபித்துவம் மற்றும் தலைமைத்துவத்)தை வழங்கினான். அல்லாஹ் தங்களுக்கு வழங்கிய சத்திய (மார்க்க)த்தின் மூலம் அவர்களின் முடிவை நிராகரித்தபோது, அதனால் அவர் பொருமினார். அதுதான் தாங்கள் பார்த்தபடி அவர் நடந்துகொண்டதற்குக் காரணம்" என்று கூறினார்கள். ஆகவே, நபி (ஸல்) அவர்கள் அப்துல்லாஹ்வை மன்னித்துவிட்டார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "இது அப்துல்லாஹ் தம்மை ஒரு முஸ்லிம் என்று கூறிக்கொள்வதற்கு முன்னர் (இறைமறுப்பாளராக இருந்தபோது) நடந்ததாகும்" என்று அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 32
3680. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களிடம், "தாங்கள் அப்துல்லாஹ் பின் உபையிடம் சென்றால் நன்றாயிருக்குமே!" என்று கூறப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் அப்துல்லாஹ்விடம் செல்ல ஒரு கழுதையில் ஏறினார்கள். முஸ்லிம்களும் நடந்து சென்றார்கள். அவர்கள் சென்ற பாதை உவர் நிலமாக இருந்தது.
அப்துல்லாஹ்வை நபி (ஸல்) அவர்கள் சென்றடைந்தபோது, அவர், "தூர விலகிப்போ! அல்லாஹ்வின் மீதாணையாக! உன் கழுதையின் துர்நாற்றம் என்னைத் துன்புறுத்திவிட்டது" என்று கூறினார்.
அப்போது அன்சாரி(த் தோழர்)களில் ஒருவர், "அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதருடைய கழுதை உன்னைவிட நல்ல வாசனையுடையதுதான்" என்று கூறினார். அப்துல்லாஹ்வுக்காக அவரது (கஸ்ரஜ்) குலத்தைச் சேர்ந்த ஒருவர் ஆத்திரப்பட்டார்.
அவ்விருவருக்காகவும் அவரவருடைய நண்பர்கள் கோபமடைந்தார்கள். ஈச்ச மட்டையாலும் கைகளாலும் செருப்பாலும் அடித்துக்கொண்டார்கள்.
அப்போது, "இறைநம்பிக்கையாளர்களில் இரு குழுவினர் தம்மிடையே சண்டையிட நேர்ந்தால் அவர்களிடையே சமாதானம் செய்துவையுங்கள்" (49:9) எனும் வசனம் அவர்கள் குறித்து அருளப்பட்டது எனும் செய்தி எங்களுக்கு எட்டியது.
அத்தியாயம் : 32
பாடம் : 41 அபூஜஹ்ல் கொல்லப்படுதல்.
3681. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(பத்ருப் போர்க் களத்தில்) "அபூஜஹ்ல் என்ன ஆனான் எனப் பார்த்து வருபவர் யார்?" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். உடனே இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் (அவனைப் பார்த்துவரச்) சென்றார்கள். அவனை (அன்சாரியான) அஃப்ரா என்பவருடைய இரு புதல்வர்கள் (முஆத், முஅவ்வித் ஆகிய இருவரும் பலமாகத்) தாக்கிவிடவே அவன் (குற்றுயிராக) வீழ்ந்து கிடப்பதைக் கண்டார்கள்.
இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் அவனது தாடியைப் பிடித்துக்கொண்டு, "அபூஜஹ்ல் நீதானே!" என்று கேட்டார்கள். அதற்கு அபூஜஹ்ல், "நீங்கள் கொன்றுவிட்ட ஒரு மனிதனுக்கு மேலாக” அல்லது "தன்னுடைய (சமுதாயத்து) மக்களாலேயே கொல்லப்பட்டுவிட்ட ஒரு மனிதனுக்கு மேலாக” ஒருவன் உண்டா?" என்று (தன்னைத்தானே பெருமைப்படுத்திய) அவன் கேட்டான்.
அபூமிஜ்லஸ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "விவசாயக் குடியில் பிறக்காத ஒருவன் (அன்சாரி அல்லாதவன்) என்னைக் கொன்றிருந்தால் நன்றாயிருந்திருக்குமே!" என அபூஜஹ்ல் கூறினான் என்று இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "அபூஜஹ்ல் என்ன செய்கிறான் என எனக்காக அறிந்துவருபவர் யார்?" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள் என ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. அபூமிஜ்லஸ் (ரஹ்) அவர்களின் குறிப்பும் இதில் இடம்பெறுகிறது.
அத்தியாயம் : 32
பாடம் : 42 யூதர்களின் தலைவன் கஅப் பின் அல்அஷ்ரஃப் கொல்லப்படுதல்.
3682. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "கஅப் பின் அல்அஷ்ரஃபை வீழ்த்துவதற்கு (தயாராயிருப்பவர்) யார்? அவன் அல்லாஹ்வுக்கும் அல்லாஹ்வின் தூதருக்கும் தொல்லை கொடுத்துவிட்டான்" என்று சொன்னார்கள்.
உடனே முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! நான் அவனைக் கொல்வதை தாங்கள் விரும்புகிறீர்களா?" என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "ஆம்" என்று விடையளித்தார்கள்.
முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், "நான் (அவனைக் குதூகலப்படுத்தி நம்பவைப்பதற்காக உங்களைக் குறை கூறிப்) பேச என்னை அனுமதியுங்கள்" என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "பேசு” என அனுமதியளித்தார்கள்.
முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள் கஅப் பின் அல்அஷ்ரஃபிடம் சென்று, "இந்த மனிதர் (முஹம்மத் -ஸல்), எங்களிடம் (மக்களுக்குத் தருவதற்காக) தான தர்மத்தை விரும்புகிறார். எங்களுக்குக் கடும் சிரமம் தந்துவிட்டார்" என்று (நபி (ஸல்) அவர்களைக் குறை கூறி சலித்துக்கொள்ளும் விதத்தில்) கூறினார்கள். இதைக் கேட்ட கஅப் பின் அல்அஷ்ரஃப், "அல்லாஹ்வின் மீதாணையாக! இன்னும் அதிகமாக நீங்கள் அவரிடம் சலிப்படைவீர்கள்" என்று கூறினான்.
அதற்கு முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், "நாங்கள் (தெரிந்தோ தெரியாமலோ) அவரை இப்போது பின்பற்றிவிட்டோம். அவரது விவகாரம் எதில் முடிவடைகிறது என்பதைப் பார்க்காமல் அவரைவிட்டு (விலகி)விட நாங்கள் விரும்பவில்லை. (அதனால்தான் அவருடன் இருந்துகொண்டிருக்கிறோம்)" என்று (சலிப்பாகப் பேசுவதைப் போன்று) கூறிவிட்டு, நீர் எனக்குச் சிறிதளவு கடன் தர வேண்டும் என நான் விரும்புகிறேன்" என்று கூறினார்கள்.
அதற்கு கஅப், "இதற்காக நீ எதை அடைமானம் வைக்கப்போகிறாய்?" என்று கேட்டான். அதற்கு முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், "நீ என்ன விரும்புகிறாய்?" என்று கேட்டார்கள். அதற்கு கஅப், "உங்கள் பெண்களை என்னிடம் அடைமானம் வையுங்கள்" என்று சொன்னான். முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், "நீர் அரபுகளிலேயே மிகவும் அழகானவர். எங்கள் பெண்களை அடைமானம் வைக்க வேண்டுமா? (அடைமானம் மூலம்தான் பெண்களை அடைய வேண்டிய அவசியம் உமக்கு இல்லை)" என்று சொன்னார்கள்.
"(அப்படியானால்) உங்கள் குழந்தைகளை என்னிடம் அடைமானம் வையுங்கள்" என்று கஅப் கேட்டான். அதற்கு முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், "(எங்கள் குழந்தைகளை எப்படி அடைமானம் வைப்பது?) எங்கள் புதல்வர்களில் ஒருவர் ஏசப்பட்டால், அப்போது "இவன் இரண்டு "வஸ்க்” பேரீச்சம் பழங்களுக்காக அடைமானம் வைக்கப்பட்டவன்" என்றல்லவா ஏசப்படுவான்? (இது எங்களுக்கு அவமானமாயிற்றே?) எனவே, உன்னிடம் (எங்கள்) ஆயுதங்களை அடைமானம் வைக்கிறோம்" என்று கூறினார்கள். "அப்படியானால் சரி" என கஅப் (சம்மதம்) தெரிவித்தான்.
பிறகு முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், ஹாரிஸ் பின் அவ்ஸ், அபூஅப்ஸ் பின் ஜப்ர், அப்பாத் பின் பிஷ்ர் (ரலி) ஆகியோருடன் பிறகு வருவதாக வாக்களித்துவிட்டுச் சென்றார்கள்.
அவ்வாறே அவர்கள் ஓரிரவில் வந்து அவனை அழைத்தார்கள். கஅப் (தனது கோட்டையிலிருந்து) அவர்களிடம் இறங்கிவந்தான்.
-(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: எனக்கு இதை அறிவித்த அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் அல்லாத மற்றொருவரது அறிவிப்பில் "கஅபின் மனைவி அவனிடம், "நான் ஒரு சப்தத்தைக் கேட்கிறேன். அது இரத்தப் பலி கோருபவனின் குரலைப் போன்றுள்ளது" என்று கூறினாள்.
அதற்கு கஅப் "அவர் (வேறு யாருமல்லர்) முஹம்மத் பின் மஸ்லமாவும் அவருடைய பால்குடிச் சகோதரர் அபூநாயிலாவும் தாம். மேன்மக்களில் ஒருவன் ஈட்டி எறிய இரவு நேரத்தில் அழைக்கப்பட்டாலும் அவன் அந்த அழைப்பை ஏற்றுக்கொள்ளவே செய்வான்" என்று கூறினான் என இடம்பெற்றுள்ளது.
அப்போது முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள் (தம் சகாக்களிடம்), "கஅப் பின் அல் அஷ்ரஃப் வந்தால் நான் அவனது தலையை நோக்கி (அவனது தலையிலுள்ள நறுமணத்தை நுகருவதற்காக) எனது கையை நீட்டுவேன். அவனது தலையை எனது பிடிக்குள் நான் கொண்டு வந்துவிட்டதும் அவனைப் பிடித்து (வாளால் வெட்டி)விடுங்கள்" என்று கூறினார்கள்.
கஅப் பின் அல்அஷ்ரஃப் (தனது ஆடை அணிகலன்களை) அணிந்துகொண்டு நறுமணம் கமழ இறங்கிவந்தான். அப்போது முஹம்மத் பின் மஸ்லமாவும் சகாக்களும், "உம்மிடமிருந்து நல்ல நறுமணத்தை நாங்கள் நுகருகிறோம்" என்று கூறினர். அதற்கு கஅப் "ஆம்; என்னிடம் இன்ன பெண் (மனைவியாக) இருக்கிறாள். அவள் அரபுப் பெண்களிலேயே மிகவும் வாசனையுடைய நறுமணத்தைப் பாவிக்கக்கூடியவள்" என்று கூறினான்.
முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், "உமது தலையிலுள்ள நறுமணத்தை நுகர எனக்கு அனுமதியளிப்பீரா?" என்று கேட்டார்கள். அதற்கு கஅப் "ஆம்; நுகர்ந்து கொள்" என அனுமதியளித்தான்.
அவ்வாறே முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள் அவனது தலையைப் பிடித்துக் கொண்டு நுகர்ந்தார்கள். பிறகு, "மீண்டும் ஒருமுறை நுகர என்னை அனுமதிப்பீரா?" என்று கேட்டார்கள். இவ்வாறு முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள் அவனைத் தம் வசம் கொண்டு வந்தபோது "பிடியுங்கள்" என்று கூறினார்கள். உடனே அவர்கள் அனைவரும் (சேர்ந்து) அவனைக் கொன்றுவிட்டனர்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 32
பாடம் : 43 கைபர் போர்.
3683. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கைபர் போருக்குப் புறப்பட்டுச் சென்றபோது, கைபருக்கு அருகில் இரவின் இருட்டு இருக்கவே சுப்ஹுத் தொழுகையை நாங்கள் தொழுதோம். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது) வாகனத்தில் ஏறி (கைபரை நோக்கி)ப் பயணம் செய்தார்கள். அபூதல்ஹா (ரலி) அவர்களும் தமது வாகனத்தில் ஏறிப் பயணம் செய்தார்கள். நான் அபூதல்ஹா (ரலி) அவர்களுக்குப் பின்னால் வாகனத்தில் இருந்தேன்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கைபர் செல்லும் சாலையில் தமது வாகனத்தை (விரைவாகச்) செலுத்தினார்கள். எனது முழங்கால், (அருகில் வாகனத்தில் சென்ற) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தொடையைத் தொட்டுக்கொண்டிருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது வேட்டி அவர்களது தொடையிலிருந்து விலகியது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது தொடையின் வெண்மையை நான் பார்த்தேன்.
நகருக்குள் நுழைந்தபோது, "அல்லாஹ் மிகப் பெரியவன். கைபர் பாழா(வது உறுதியா)கி விட்டது. நாம் ஒரு சமுதாயத்தின் முற்றத்தில் (போரிட) இறங்குவோமாயின், எச்சரிக்கப்பட் டோரின் காலைப் பொழுது கெட்டதாக ஆகிவிடும்" என்று மூன்று முறை கூறினார்கள்.
அப்போது (யூத) மக்கள் தம் வேலைகளுக்காகப் புறப்பட்டுவந்தனர். (எங்களைப் பார்த்ததும்), "முஹம்மத் வந்துவிட்டார்" என்று கூறினர். நாங்கள் கைபரைப் போர் செய்தே கைப்பற்றினோம் (சமாதான ஒப்பந்தத்தின் மூலம் கைப்பற்றவில்லை).
இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களில் ஒருவரான அப்துல் அஸீஸ் பின் ஸுஹைப் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: "முஹம்மதும் அவருடைய ஐந்து அணிகள் கொண்ட படையும் வந்துவிட்டனர்" என யூதர்கள் சொல்லிக்கொண்டார்கள் என என் சகாக்களில் சிலர் கூறினர்.
அத்தியாயம் : 32
3684. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
கைபர் போர் நாளில் நான் அபூதல்ஹா (ரலி) அவர்களுக்குப் பின்னால் (வாகனத்தில்) இருந்தேன். எனது பாதம், (அருகில் வாகனத்தில் சென்ற) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது பாதத்தைத் தொட்டுக்கொண்டிருந்தது. நாங்கள் கைபர்வாசிகளிடம் சூரியன் உதிக்கும் நேரத்தில் சென்றடைந்தோம். அப்போது அவர்கள் தங்களுடைய கால்நடைகள், கோடரிகள், (பேரீச்ச ஓலைகளாலான) கூடைகள் மற்றும் மண் வெட்டிகள் ஆகியவற்றுடன் (வயல்வெளிகளை நோக்கி) வெளியேறி வந்தனர்.
(அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பார்த்ததும்) "முஹம்மதும் அவருடைய (ஐந்து அணிகள் கொண்ட) படையும் (வருகின்றனர்)" என்று கூறினர்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "கைபர் பாழா(வது உறுதியா)கிவிட்டது. நாம் ஒரு சமுதாயத்தின் முற்றத்தில் (போரிட) இறங்குவோமாயின், எச்சரிக்கப்பட்டோரின் காலைப் பொழுது கெட்டதாக ஆகிவிடும்" என்று கூறினார்கள். அவ்வாறே வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், அவர்களைத் தோற்கடித்தான்.
அத்தியாயம் : 32
3685. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கைபருக்கு வந்தபோது, "நாம் ஒரு சமுதாயத்தின் முற்றத்தில் (போரிட) இறங்குவோமாயின், எச்சரிக்கப்பட்டோரின் காலைப்பொழுது கெட்டதாக ஆகிவிடும்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 32
3686. சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் கைபரை நோக்கி(ப் போருக்காக)ப் புறப்பட்டோம். இரவு நேரத்தில் நாங்கள் சென்றுகொண்டிருந்தபோது மக்களில் ஒருவர், (என் தந்தையின் சகோதரர்) ஆமிர் பின் அல்அக்வஉ (ரலி) அவர்களிடம், "உங்கள் கவிதைகளில் சிலவற்றை எங்களுக்குப் பாடமாட்டீர்களா?" என்று கேட்டார்.
ஆமிர் (ரலி) அவர்கள் கவிஞராக இருந்தார்கள். அவர்கள் தமது வாகனத்திலிருந்து இறங்கி மக்களுக்காக (பின்வரும் யாப்பு வகைக் கவிதையை)ப் பாடி அவர்களுடைய ஒட்டகங்களைப் பாய்ந்தோடச் செய்தார்கள்:
இறைவா!
நீ இல்லையென்றால்
நாங்கள்
நேர்வழி பெற்றிருக்கமாட்டோம்.
தர்மமும் செய்திருக்கமாட்டோம்.
தொழுதிருக்கவுமாட்டோம்.
நாங்கள் புரிந்துவிட்ட
பாவங்களுக்காக
எங்களை மன்னிப்பாயாக.
உனக்கே நாங்கள் அர்ப்பணம்.
(போர்முனையில் எதிரியை)
நாங்கள் சந்திக்கும்போது
எங்கள் பாதங்களை
உறுதிப்படுத்துவாயாக.
எங்கள்மீது அமைதியைப்
பொழிவாயாக. (அறவழியில் செல்ல)
நாங்கள் அழைக்கப்பட்டால்
நாங்கள் (தயாராக) வந்துவிடுவோம்.
எங்களிடம்
மக்கள் (அபயக்) குரல்
எழுப்பினால்
(உதவிக்கு வருவோம்).
என்று பாடிக்கொண்டிருந்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "யார் இந்த ஒட்டகவோட்டி?" என்று கேட்டார்கள். "ஆமிர் பின் அல்அக்வஉ” என்று மக்கள் பதிலளித்தனர். அப்போது, "அவருக்கு அல்லாஹ் அருள் புரிவானாக" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள்.
அங்கிருந்த மக்களில் ஒருவர், "இறைத்தூதரே! (அவருக்கு வீரமரணமும் அதையடுத்துச் சொர்க்கமும்) உறுதியாகிவிட்டது. அவர் (நீண்ட காலம் உயிர் வாழ்வதன்) மூலம் எங்களுக்குப் பயன் கிடைக்க (பிரார்த்தனை) செய்யக்கூடாதா?" என்று கேட்டார்.
பிறகு நாங்கள் கைபருக்குச் சென்று, கைபர்வாசிகளை முற்றுகையிட்டோம். அப்போது எங்களுக்குக் கடுமையான பசி ஏற்பட்டது. பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹ் உங்களுக்குக் கைபரை வெற்றியாக்கிவிட்டான்"என்று கூறினார்கள். வெற்றியளிக்கப்பட்ட அன்று மாலை, மக்கள் நிறைய நெருப்புகளை (ஆங்காங்கே) மூட்டினர்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இது என்ன நெருப்பு? எதற்காக இவற்றை மூட்டியிருக்கிறீர்கள்?"என்று கேட்டார்கள். "இறைச்சி சமைப்பதற்காக" என்று மக்கள் விடையளித்தனர். "எந்த இறைச்சி?" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். "நாட்டுக் கழுதைகளின் இறைச்சி” என்று மக்கள் கூறினர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவற்றைக் கொட்டிவிட்டு, பாத்திரங்களை உடைத்து விடுங்கள்" என்று கூறினார்கள்.
அப்போது ஒருவர், "இறைச்சிகளைக் கொட்டிவிட்டு, பாத்திரங்களைக் கழுவிக் கொள்ளலாமா?" என்று கேட்டார். "அப்படியே ஆகட்டும்" என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அன்றைய தினம் போருக்காக) மக்கள் அணிவகுத்து நின்றபோது, ஆமிர் (ரலி) அவர்களின் வாள் குட்டையாக இருந்தது. குனிந்து ஒரு யூதனின் காலை அவர்கள் வெட்டப் போனபோது, ஆமிர் அவர்களின் வாளின் மேற்பகுதி அவர்களது முழங்காலையே திருப்பித் தாக்கிவிட்டது. அதனால் அவர்கள் இறந்துவிட்டார்கள்.
(கைபர் வெற்றிக்குப் பின் மதீனாவை நோக்கி) மக்கள் திரும்பியபோது -சலமா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்- அமைதியாக இருந்த என்னைக் கண்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனது கையைப் பிடித்துக்கொண்டு, "உமக்கு என்ன நேர்ந்தது?" என்று கேட்டார்கள்.
நான், "என் தந்தையும் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! (என் தந்தையின் சகோதரர்) ஆமிரின் நற்செயல்கள் அழிந்துவிட்டன. (அவர் தமது வாளால் தம்மைத் தாமே குத்திக் கொண்டு தற்கொலை செய்துகொண்டார்) என்று மக்கள் கூறுகிறார்கள்" எனத் தெரிவித்தேன்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இதைச் சொன்னவர் யார்?" என்று கேட்டார் கள். "இன்ன மனிதரும் இன்ன மனிதரும் உசைத் பின் ஹுளைர் அல்அன்சாரீ (ரலி) அவர்களுமே இவ்வாறு கூறினர்" என்று நான் பதிலளித்தேன். "இதைச் சொன்னவர் பொய்யுரைத்து விட்டார். நிச்சயமாக ஆமிருக்கு (நற்செயல் புரிந்த நன்மை,அறப்போர் புரிந்த நன்மை ஆகிய) இரண்டு நன்மைகள் உண்டு" என்று கூறியவாறு, தம் இரு விரல்களையும் இணைத்துக் காட்டினார்கள்.
தொடர்ந்து, "அவர் துன்பங்களைத் தாங்கினார். (இறைவழியில்) அறப்போரும் புரிந்தார். (துன்பங்களைத் தாங்கியதுடன் அறவழியில் போரும் புரிந்து) பூமியில் உலவிய இவரைப் போன்ற அரபியர் மிகவும் அரிதே" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் முஹம்மத் பின் அப்பாத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் ("எங்கள்மீது அமைதியைப் பொழிவாயாக" என்பதைக் குறிக்க "வ அல்கியன் சகீனத்தன் அலைனா” என்பதற்குப் பகரமாக) "வ அல்கீ சகீனத்தன் அலைனா" என்று இடம்பெற்றுள்ளது (பொருள் ஒன்றே).
அத்தியாயம் : 32
3687. சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:
கைபர் போர் தினத்தன்று என் (தந்தையின்) சகோதரர் (ஆமிர்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் சேர்ந்து (யூதர்களுடன்) கடுமையாகப் போரிட்டார். அப்போது அவருடைய வாள் முனை அவரையே திருப்பித் தாக்கிவிட்டது. அதனால் அவர் இறந்துவிட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய தோழர்கள் (சிலர்) இது தொடர்பாக (பல விதமாக)ப் பேசிக் கொண்டனர். அவர் (மரணம்) தொடர்பாக சந்தேகம் வெளியிட்டனர். "அவர் தமது ஆயுதத்தாலேயே இறந்துவிட்ட மனிதர்" என்றும், அவருடைய நடவடிக்கைகளில் இன்னும் சிலவற்றைக் குறித்தும் சந்தேகமாகப் பேசினர்.
கைபரிலிருந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் திரும்பிச் சென்றபோது (அவர்களிடம்) நான், "அல்லாஹ்வின் தூதரே! தங்களுக்காகச் சில யாப்பு வகைக் கவிதையைப் பாட எனக்கு அனுமதி அளியுங்கள்" என்று கேட்டேன். எனக்கு அவர்கள் அனுமதியளித்தார்கள். அப்போது உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள், "நீ சொல்லவிருப்பதை நான் அறிவேன்" என்று கூறினார்கள். அப்போது நான் பின்வரும் யாப்பு வகைக் கவிதைகளைப் பாடினேன்:
"அல்லாஹ்வின் மீதாணை!
அல்லாஹ் இல்லாவிட்டால்
நாங்கள் நேர்வழி பெற்றிருக்கமாட்டோம்
தர்மமும் செய்திருக்கமாட்டோம்.
தொழுதிருக்கவும் மாட்டோம்"
என்று பாடினேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "நீ உண்மையுரைத்தாய்" என்று கூறினார்கள். பிறகு நான்,
"எங்கள் மீது
அமைதியைப் பொழிவாயாக.
(போர் முனையில் எதிரிகளை)
நாங்கள் சந்திக்கும்போது
எங்கள் பாதங்களை
உறுதிப்படுத்துவாயாக.
இணைவைப்பாளர்கள்
எங்கள்மீது வரம்புமீறிவிட்டார்கள்"
என்று பாடினேன்.
நான் பாடி முடித்ததும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இதை யாத்தவர் யார்?" என்று கேட்டார்கள். நான் "என் (தந்தையின்) சகோதரர் (ஆமிர்)" என்றேன். "அவருக்கு அல்லாஹ் அருள்புரிவானாக" என்று நபியவர்கள் பிரார்த்தித்தார்கள்.
அப்போது நான், "அல்லாஹ்வின் தூதரே! சிலர், என் சகோதரருக்கு (இறுதித் தொழுகை) தொழுவதற்கு அஞ்சுகின்றனர். அவர் தமது ஆயுதத்தாலேயே தற்கொலை செய்துகொண்ட ஒரு மனிதர் என்று கூறுகின்றனர்" என்றேன்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அவர் துன்பங்களைத் தாங்கி, (இறை வழியில்) அறப்போரும் புரிந்து இறந்தார்" என்று கூறினார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
பிறகு நான் சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்களின் புதல்வர் ஒருவரிடம் (இந்த ஹதீஸைப் பற்றிக்) கேட்டேன். அவரும் தம் தந்தையாரிடமிருந்து இதைப் போன்றே எனக்கு அறிவித்தார்.
ஆயினும், "மக்களில் சிலர் ஆமிருக்காக (இறுதித் தொழுகை) தொழுவதற்கு அஞ்சுகின்றனர்" என்று நான் கூறியபோது "அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அவர்கள் பொய்யுரைத்துவிட்டனர். அவர் துன்பங்களைத் தாங்கி (இறைவழியில்) அறப்போரும் புரிந்து இறந்தார். அவருக்கு (நற்செயல் புரிந்த நன்மை, அறப்போர் புரிந்த நன்மை ஆகிய) இரண்டு நன்மைகள் உண்டு" என்று கூறியபடி, தம் இரு விரல்களை இணைத்துக் காட்டினார்கள்" என்று அவர் கூறினார்.
அத்தியாயம் : 32
பாடம் : 44 "அஹ்ஸாப்" எனும் அகழ்ப் போர்.
3688. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அகழ்ப் போரின்போது (அகழ் வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுடன் மண்ணைச் சுமந்து எடுத்துச் சென்றுகொண்டு இருந்தார்கள். மண், அவர்களது வயிற்றின் வெண்மையை மறைத்துவிட்டிருந்தது. அப்போது அவர்கள் இவ்வாறு (பாடிய வண்ணம்) கூறிக்கொண்டு இருந்தார்கள்:
அல்லாஹ்வின் மீதாணை!
அல்லாஹ் இல்லாவிட்டால், நாங்கள்
நேர்வழி அடைந்திருக்கமாட்டோம்
தர்மமும் செய்திருக்கமாட்டோம்
தொழுதிருக்கவுமாட்டோம்.
எங்கள்மீது அமைதியைப்
பொழிவாயாக! இவர்கள்
(கூட்டுப் படையினர்) எங்களுக்கு
அக்கிரமம் இழைத்துவிட்டனர்.
சில வேளை இவ்வாறு கூறினார்கள்:
இந்தப் பிரமுகர்கள்
எங்களை நிராகரித்துவிட்டனர்.
இவர்கள் எங்களைச்
சோதனையில் ஆழ்த்த விரும்பினால்
நாங்கள் இடம் தரமாட்டோம்.
"(நாங்கள் இடம் தரமாட்டோம்; நாங்கள் இடம் தரமாட்டோம் என) இந்த (இறுதி) வாசகத்தை உரத்த குரலில் கூறிக்கொண்டு இருந்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் பராஉ (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், ("இவர்கள் எங்களை நிராகரித்து விட்டனர்" என்பதற்குப் பகரமாக) "இவர்கள் எங்கள்மீது எல்லை மீறிவிட்டனர்" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 32
3689. சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அகழ் தோண்டிக்கொண்டும் எங்கள் தோள்களின் மீது மண்ணைச் சுமந்து எடுத்துச் சென்றுகொண்டும் இருந்தபோது, எங்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்தார்கள். அப்போது அவர்கள்,
"இறைவா! மறுமை வாழ்வைத் தவிர
வேறு (நிரந்தர) வாழ்வு எதுவுமில்லை
ஆகவே, (அதற்காகப் பாடுபடும்)
முஹாஜிர்களுக்கும் அன்சாரிகளுக்கும் மன்னிப்பருள்வாயாக!"
என்று (பாடியபடி) கூறினார்கள்.
அத்தியாயம் : 32
3690. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (அகழ் தோண்டிக்கொண்டிருந்தபோது),
"இறைவா! மறுமை வாழ்வைத் தவிர
வேறு (நிரந்தர) வாழ்வு எதுவுமில்லை
ஆகவே, (அதற்காகப் பாடுபடும்)
அன்சாரிகளுக்கும் முஹாஜிர்களுக்கும் மன்னிப்பருள்வாயாக!"
என்று (பாடியபடி) கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 32
3691. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அகழ் தோண்டிக்கொண்டிருந்தபோது),
"இறைவா! மறுமை வாழ்வே
(நிரந்தரமான) வாழ்வாகும்"
அல்லது "இறைவா!
மறுமை வாழ்வைத் தவிர
வேறு (நிரந்தர) வாழ்வு
வேறெதுவுமில்லை"
ஆகவே, (அதற்காகப் பாடுபடும்
அன்சாரிகளையும் முஹாஜிர்களையும்
நீ கண்ணியப்படுத்துவாயாக"
என்று (பாடியபடி) கூறினார்கள். "அல்லது" எனும் ஐயப்பாட்டுடன் ஷுஅபா (ரஹ்) அவர்களே அறிவித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 32
3692. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மக்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (அகழ் தோண்டிக்கொண்டு) இருந்த போது பின்வரும் யாப்பு வகைக் கவிதையைப் பாடிக்கொண்டிருந்தார்கள்:
இறைவா!
மறுமையின் நன்மையைத் தவிர
வேறு (நிலையான) நன்மை
எதுவுமில்லை.
ஆகவே, (அதற்காகப் பாடுபடும்)
அன்சாரிகளுக்கும் முஹாஜிர்களுக்கும்
நீ உதவி செய்வாயாக.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் ஷைபான் பின் ஃபர்ரூக் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "உதவி செய்வாயாக" என்பதற்குப் பகரமாக "மன்னிப்பருள்வாயாக" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 32
3693. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அகழ்ப் போர் நாளில் முஹம்மத் (ஸல்)
அவர்களின் தோழர்கள்,
"நாங்கள் (எத்தகையோர் எனில்)
உயிரோடிருக்கும் காலம்வரை
நாங்கள் "இஸ்லாத்தில் நிலைப்போம்”
அல்லது "அறப்போர் புரிவோம்”
என முஹம்மத் (ஸல்) அவர்களிடம்
உறுதிமொழி கொடுத்திருக்கிறோம்"
என்று (பாடியபடி) கூறிக்கொண்டிருந்தனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள்,
"இறைவா! மறுமையின் நன்மையே
(நிலையான) நன்மையாகும்.
ஆகவே, (அதற்காகப் பாடுபடும்)
அன்சாரிகளுக்கும் முஹாஜிர்களுக்கும்
நீ மன்னிப்பருள்வாயாக!"
என்று (பாடியபடியே) சொன்னார்கள்.
அத்தியாயம் : 32
பாடம் : 45 "தூ கரத்" உள்ளிட்ட போர்கள்.
3694. சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:
முதல் தொழுகை(யான ஃபஜ்ரு)க்கு அழைப்புக் கொடுப்பதற்கு முன்பாகவே நான் (மதீனாவிலிருந்து சிரியா வழியிலுள்ள ஃகாபாவை நோக்கிப்) புறப்பட்டேன். "தூ கரத்” எனும் இடத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் (பால் தரும்) ஒட்டகங்கள் மேய்ந்துகொண்டிருந்தன.
அப்போது அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களுடைய ஓர் அடிமை (வந்து) என்னைச் சந்தித்து, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பால் ஒட்டகங்கள் பிடித்துச் செல்லப்பட்டுவிட்டன" என்று கூறினார். நான், "அவற்றை யார் பிடித்துச் சென்றனர்?" என்று கேட்டேன். அதற்கு அந்த அடிமை, "ஃகத்ஃபான் குலத்தார்" என்று பதிலளித்தார்.
உடனே நான் உரக்கச் சப்தமிட்டு "உதவி! உதவி! அதிகாலை ஆபத்து!” (யா ஸபாஹா!) என்று மதீனாவின் இரு மலைகளுக்கிடையிலிருந்த அனைவருக்கும் கேட்கும்படி மூன்று முறை கத்தினேன். பிறகு முகத்தைத் திருப்பாமல் நேராக விரைந்து சென்று "தூ கரத்” எனும் இடத்தில் அவர்களை அடைந்தேன். அவர்கள் (அங்கிருந்த நீர்நிலையில்) தண்ணீர் புகட்டத் தலைப்பட்டிருந்தனர்.
"அக்வஇன் மகன் நான்! இன்று அற்பர்கள் (அழியும்) நாள்"
என்று பாடியபடி கூறிக்கொண்டே அவர்கள்மீது அம்பெய்யத் தொடங்கினேன். நான் அம்பெய்வதில் தேர்ச்சி பெற்றவனாக இருந்தேன். மேலும், நான் "ரஜ்ஸ்" எனும் யாப்பு வகைக் கவிதையைப் பாடிக்கொண்டே அவர்களிடமிருந்து (சில) ஒட்டகங்களை விடுவித்தேன்.
(அவர்களை நான் விரட்டிச் சென்றபோது) அவர்கள் விட்டுவிட்டுப்போன முப்பது சால்வை களை நான் எடுத்துக்கொண்டேன். அப்போது நபி (ஸல்) அவர்களும் மக்களும் (அங்கு) வந்து சேர்ந்தனர்.
நான், "அல்லாஹ்வின் தூதரே! அந்தக் கூட்டத்தார் தாகத்துடன் இருந்தபோதும் அவர்களை தண்ணீர் குடிக்கவிடாமல் நான் தடுத்துவிட்டேன். எனவே, (அவர்கள் ஓட்டிச்சென்ற மற்ற ஒட்டகங்களையும் விடுவிக்க) அவர்களை நோக்கி ஒரு படைப்பிரிவை இப்போதே அனுப்புங்கள்" என்று கூறினேன்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அக்வஉ உடைய மகனே! (அவர்களை) நீ தோற்கடித்துவிட்டாய். ஆகவே, மென்மையாக நடந்துகொள்" என்று கூறினார்கள். பிறகு நாங்கள் (மதீனாவுக்குத்) திரும்பிவந்தோம்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவிற்குள் நுழையும் வரையில் என்னைத் தமக்குப் பின்னே தமது ஒட்டகத்தின் மீது அமர்த்திக்கொண்டார்கள்.
அத்தியாயம் : 32
3695. சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஹுதைபியாவை நோக்கிச் சென்றோம். அப்போது நாங்கள் ஆயிரத்து நானூறு பேர் இருந்தோம். அங்கு (தண்ணீர் குறைவாக இருந்ததால் எங்களுடைய) ஐம்பது (குர்பானி) ஆடுகள் நீர் புகட்டப் படாமல் (தாகத்துடன்) இருந்தன.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கிருந்த கிணற்றின் சுற்றுச் சுவர்மீது அமர்ந்துகொண்டு பிரார்த்தித்தார்கள். அல்லது அதனுள் உமிழ்ந்தார்கள். உடனே கிணற்றில் நீர் மட்டம் உயர்ந்தது. உடனே நாங்கள் நீர் அருந்தினோம். எங்கள் கால் நடைகளுக்கும் நீர் புகட்டினோம்.
பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கிருந்த மரத்துக்குக் கீழே உறுதிமொழிப் பிரமாணம் (பைஅத்) வாங்குவதற்காக எங்களை அழைத்தார்கள். மக்கள் அனைவருக்கும் முன்பாக (முதலில்) நானே அவர்களிடம் உறுதிமொழி அளித்தேன். பிறகு ஒவ்வொருவராக (வந்து) உறுதிமொழி அளித்தனர்.
மக்களில் பாதிப்பேரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (உறுதிமொழி வாங்கி) இருந்தபோது "சலமா! உறுதிமொழி அளிப்பாயாக!" என்று (என்னிடம்) கூறினார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! நான் மக்கள் அனைவருக்கும் முன்பாக தங்களிடம் உறுதிமொழி அளித்துவிட்டேன்" என்று சொன்னேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "மீண்டும் (ஒரு முறை உறுதிமொழி அளிப்பாயாக)" என்று கூறினார்கள்.
அப்போது என்னிடம் ஆயுதம் எதுவும் இல்லாமலிருப்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கண்டார்கள். எனக்கு "சிறிய தோல் கேடயம் ஒன்றை” அல்லது "தோல் கேடயம் ஒன்றை” அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வழங்கினார்கள். பிறகு என்னிடம் உறுதிமொழி பெற்றார்கள்.
மக்களில் இறுதி நபரிடம் அவர்கள் (உறுதிமொழி பெற்றுக்கொண்டு) இருந்தபோது, "சலமா! என்னிடம் நீ உறுதிமொழி அளிக்கக் கூடாதா?" என்று கேட்டார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! நான் மக்கள் அனைவருக்கும் முன்பாகவும் மக்களில் பாதிப்பேராகவும் தங்களிடம் உறுதிமொழி அளித்துவிட்டேன்" என்று சொன்னேன்.
"மீண்டும் (ஒரு தடவை உறுதிமொழி அளிப்பாயாக)" என்று சொன்னார்கள். நான் மூன்றாவது தடவையாக உறுதிமொழி அளித்தேன்.
பிறகு என்னிடம், "சலமா! உனக்கு நான் வழங்கிய உனது "சிறிய தோல் கேடயம்” அல்லது "தோல் கேடயம்" எங்கே?" என்று கேட்டார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! என் தந்தையின் சகோதரர் ஆமிர் (ரலி) அவர்கள் என்னைச் சந்தித்தார். அவரிடம் ஆயுதம் எதுவும் இல்லாமலிருப்பதை நான் கண்டேன். எனவே, அதை அவருக்குக் கொடுத்துவிட்டேன்" என்று சொன்னேன்.
அதைக் கேட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிரித்தார்கள். மேலும், "நீர் முற்காலத்தில் வாழ்ந்த ஒரு மனிதரைப் போன்றவர் ஆவீர். அவர் "இறைவா! எனக்காக ஒரு நண்பரைக் கிடைக்கச் செய்வாயாக! அவர் என் உயிரைவிட எனக்கு மிகவும் பிரியமானவராக இருக்க வேண்டும்" என்று பிரார்த்தித்தார். (அவரைப் போன்றே நீரும் உம்மைவிட உம் தந்தையின் சகோதரருக்கு முன்னுரிமை அளித்துள்ளீர்)" என்று கூறினார்கள்.
பிறகு (மக்கா) இணைவைப்பாளர்கள் சமாதான ஒப்பந்தம் செய்துகொள்வதாக எங்களுக்குத் தூது விட்டார்கள். இதனால், (நாங்களும் அவர்களும்) ஒருவர் பகுதிக்கு மற்றவர் சென்றுவர முடியும். நாங்கள் சமாதான ஒப்பந்தம் செய்துகொண்டோம்.
நான் தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி) அவர்களுக்கு உதவியாளராக இருந்தேன். அவரது குதிரைக்குத் தண்ணீர் புகட்டுவேன். அதைத் துடைத்துத் துப்புரவு செய்வேன். அவருக்கு ஊழியமும் செய்வேன். அவர் தரும் உணவை உண்டுகொள்வேன். அல்லாஹ்வுக்காகவும் அவனுடைய தூதருக்காகவும் எனது குடும்பம், சொத்து (சுகங்)கள் அனைத்தையும் விட்டுவிட்டு, நான் நாடு துறந்து (மதீனாவுக்கு) வந்திருந்தேன்.
நாங்களும் மக்காவாசிகளும் சமாதான ஒப்பந்தம் செய்து, எங்களில் ஒருவர் மற்றொருவருடன் கலந்துறவாடிக்கொண்டபோது, நான் ஒரு மரத்தை நோக்கி வந்து, அதன் (அடிப்பாகத்தில் இருந்த) முற்களை அகற்றிவிட்டு அதற்குக் கீழே படுத்துக்கொண்டேன்.
அப்போது மக்காவாசிகளான நான்கு இணைவைப்பாளர்கள் என்னிடம் வந்து, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை இழிவாகப் பேசத் தொடங்கினர். அவர்கள் மீது எனக்குக் கோபம் வந்தது. உடனே மற்றொரு மரத்துக்கு நான் மாறிக்கொண்டேன். அந்த நால்வரும் தம் ஆயுதங்களை (அந்த மரத்தில்) தொங்கவிட்டுவிட்டு அவர்களும் படுத்துக்கொண்டனர்.
இந்நிலையில், யாரோ ஒருவர் அந்தப் பள்ளத்தாக்கின் கீழேயிருந்து "முஹாஜிர்களுக்கு ஏற்பட்ட நாசமே! (நம் தோழர்) இப்னு ஸுனைம் கொல்லப்பட்டுவிட்டார் (ஒப்பந்த மீறல் நடைபெற்றுவிட்டது)" என்று உரக்க அறிவித்தார். உடனே நான் எனது வாளை உருவிக் கொண்டு, படுத்திருந்த அந்நால்வரைத் தாக்கினேன். அவர்களின் ஆயுதங்களை எடுத்து ஒரே கட்டாக என் கையில் வைத்துக்கொண்டேன்.
பிறகு "முஹம்மத் (ஸல்) அவர்களது முகத்தைக் கண்ணியப்படுத்திய (இறை)வன் மீதாணையாக! உங்களில் யாரேனும் தலையைத் தூக்கிப் பார்த்தால் அவரது கண் உள்ள பகுதியிலேயே அடிப்பேன்" என்று கூறினேன்.
பின்னர் அவர்களை இழுத்துக்கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தேன். என் தந்தையின் சகோதரர் ஆமிர் (ரலி) அவர்கள் "அபலாத்” குலத்தைச் சேர்ந்த "மிக்ரஸ்” எனப்படும் ஒரு மனிதரை பிடித்துக்கொண்டு, துணி விரிக்கப்பட்ட குதிரையொன்றில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார். அவருடன் எழுபது இணைவைப்பாளர்களும் இருந்தார்கள்.
அவர்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பார்த்துவிட்டு "அவர்களை விட்டு விடுங்கள். (ஒப்பந்த மீறல்) குற்றம் அவர்களிடமிருந்தே தொடங்கி மீண்டும் ஏற்பட்டதாக இருக்கட்டும்" என்று கூறி, அவர்களை மன்னித்து விட்டுவிட்டார்கள்.
அல்லாஹ் (இது தொடர்பாகவே), "மக்காவின் மையப் பகுதியில் அவர்களுக்கு எதிராக அவன் உங்களுக்கு வெற்றி அளித்த பின் உங்கள் கைகளை அவர்களிடமிருந்தும், அவர்கள் கைகளை உங்களிடமிருந்தும் அவனே தடுத்தான். அல்லாஹ் நீங்கள் செய்து கொண்டிருப்பதை உற்றுநோக்குபவனாக இருக்கின்றான்" (48:24) எனும் வசனத்தை அருளினான்.
பிறகு நாங்கள் மதீனாவை நோக்கித் திரும்பினோம். அப்போது ஓரிடத்தில் நாங்கள் இறங்கித் தங்கினோம். (அந்த இடத்திலிருந்த) எங்களுக்கும் இணைவைப்பாளர்களான "பனூ லஹ்யான்” குலத்தாருக்கும் இடையே ஒரு மலை மட்டுமே இருந்தது.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "(எதிரிகளைக் கண்காணிப்பதற்காக) இன்றிரவு இம்மலைமீது ஏறுபவரின் பாவங்களை அல்லாஹ் மன்னிப்பானாக!" எனப் பிரார்த்தித்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கும் அவர்களுடைய தோழர்களுக்கும் உளவாளி போன்று (அவர் இருக்க வேண்டும் என்பதே நோக்கம்). அன்றிரவு நான் இரண்டு அல்லது மூன்று முறை அம்மலைமீது ஏறினேன்.
பிறகு நாங்கள் மதீனாவுக்கு வந்தோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் (பால்) ஒட்டகங்களைத் தம் அடிமையான ரபாஹ் (ரலி) அவர்களுடன் அனுப்பிவைத்தார்கள். அவருடன் நானும் இருந்தேன். தல்ஹா (ரலி) அவர்களின் குதிரையை ஓட்டிக்கொண்டு, ஒட்டகங்களுடன் அந்தக் குதிரைக்கும் தண்ணீர் புகட்டி மேய்ச்சல் நிலத்துக்கு அனுப்புவதற்காக நானும் புறப்பட்டுச் சென்றேன்.
காலையில் அப்துர் ரஹ்மான் அல்ஃபஸாரீ என்பான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஒட்டகங்களைத் திடீரெனத் தாக்கி, அவை அனைத்தையும் ஓட்டிச் சென்றுவிட்டான். அவற்றின் மேய்ப்பாளரையும் கொன்றுவிட்டான்.
உடனே நான், "ரபாஹே! (இதோ) இந்தக் குதிரையைப் பிடித்துச் சென்று, தல்ஹா பின் உபை தில்லாஹ் (ரலி) அவர்களிடம் சேர்த்துவிடு. மேலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், அவர்களின் கால்நடைகளை எதிரிகள் தாக்கிக் கொள்ளையடித்துச் சென்று விட்டனர் எனத் தெரிவித்துவிடு" என்று கூறினேன்.
பிறகு ஒரு மலையின் உச்சியில் ஏறி மதீனாவை முன்னோக்கி நின்றுகொண்டு, "உதவி! உதவி! அதிகாலை ஆபத்து! (யா ஸபாஹா!)" என மூன்று முறை உரத்த குரலில் கூவினேன். பிறகு அந்தக் (கொள்ளைக்) கூட்டத்தைப் பின்தொடர்ந்து சென்று, அவர்கள்மீது அம்பெய்தவனாக விரட்டிச் சென்றேன். அப்போது நான்,
"அக்வஇன் மகன் நான்
இன்று அற்பர்களின் (அழிவு) நாள்"
என யாப்புக் கவிதை பாடினேன். பிறகு அவர்களில் ஒருவனை நெருங்கி அவனது ஒட்டகச் சேணத்தின் மீது அம்பெய்தேன். அதன் கூர்முனை சேணத்தில் நுழைந்து அவனது தோளில் பாய்ந்தது. நான்,
"இதோ வாங்கிக்கொள்;
அக்வஇன் மகன் நான்;
இன்று அற்பர்களின் (அழிவு) நாள்"
என்று (பாடியபடி) கூறினேன்.
அல்லாஹ்வின் மீதாணையாக! இவ்வாறு அவர்கள்மீது அம்பெய்துகொண்டும் அவர்களின் குதிரைகளை வெட்டி வீழ்த்திக்கொண்டும் நான் இருந்தேன். என்னை நோக்கிக் குதிரை வீரர் எவரேனும் திரும்பி வந்தால், நான் ஏதேனும் மரத்தை நோக்கிச் சென்று அதற்குக் கீழே அமர்ந்துகொண்டு, அவன்மீது அம்பைப் பாய்ச்சினேன். அவனது குதிரையை வெட்டி வீழ்த்தினேன். குறுகிய மலையிடுக்கு தென்பட்டபோது, அதன் இடுக்கில் அவர்கள் நுழைந்து கொண்டனர். நானும் அம்மலை மீதேறிக்கொண்டு, கல்லால் அவர்களை விரட்டியடித்தேன்.
இவ்வாறு (விரட்டியடித்த வண்ணம்) அவர்களை நான் பின்தொடர்ந்து சென்று கொண்டிருந்தேன். இறுதியில் அல்லாஹ் படைத்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஒட்டகங்கள் அனைத்தையும் என் முதுகுக்குப் பின்னால் கொண்டு வந்துவிட்டேன். அவர்கள் அவற்றை என்னிடமே விட்டுவிட்டு விரைந்துகொண்டிருந்தனர்.
பிறகு மீண்டும் அவர்கள்மீது அம்பெய்த வண்ணம் அவர்களைப் பின்தொடர்ந்தேன். அவர்கள் (ஓடிய வேகத்தில்) முப்பது சால்வைகளையும் முப்பது ஈட்டிகளையும் விட்டு விட்டு ஓடினர். அவர்கள் விட்டுச் சென்ற ஒவ்வொரு பொருள்மீதும் அல்லாஹ்வின் தூதரும் அவருடைய தோழர்களும் அறியும் விதத்தில் ஓர் அடையாளக் கல்லை வைத்துக் கொண்டேபோனேன்.
பிறகு ஒரு குறுகலான மலைக் கணவாய்க்கு அவர்கள் சென்றனர். அங்கு பத்ர் அல்ஃபஸாரீ என்பவனின் மகனிடம் அவர்கள் போய்ச்சேர்ந்து, அமர்ந்து காலை உணவை உட்கொள்ளலாயினர். நான் ஒரு மலை உச்சியில் அமர்ந்துகொண்டேன்.
அப்போது அந்த ஃபஸாரீ, "நான் காணும் இந்தக் காட்சிகள் என்ன?" என்று கேட்டான். அதற்கு அவர்கள், "இதோ இவனிடமிருந்து கடும்துயரத்தை நாங்கள் சந்தித்துவிட்டோம். அல்லாஹ்வின் மீதாணையாக! அதிகாலை இருளிலிருந்து அவன் எங்களை விட்டு விலகவே இல்லை. எங்களை நோக்கி அம்பெய்து எங்கள் கையிலிருந்த எல்லாவற்றையும் பறித்துக்கொண்டான்" என்று கூறினர்.
அதற்கு அந்த ஃபஸாரீ, "உங்களில் நான்கு பேர் அவனை நோக்கிச் செல்லட்டும்" என்று கூறினான்.
அவர்களில் நான்கு பேர் நானிருந்த மலைமீது ஏறினர். அவர்கள் எனது பேச்சைக் கேட்கும் இடத்திற்கு வந்தபோது,நான், "என்னை உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டேன்.
அவர்கள் "இல்லை, நீ யார்?" என்று கேட்டார்கள். "நான் சலமா பின் அல்அக்வஉ. முஹம்மத் (ஸல்) அவர்களது முகத்தைக் கண்ணியப்படுத்திய (இறை)வன் மீதாணையாக! உங்களில் யாரேனும் ஒருவரை நான் தேடிப் புறப்பட்டால் அவரை நான் பிடிக்காமல் விடமாட்டேன். (அதே சமயத்தில்) உங்களில் யாரேனும் ஒருவர் என்னைத் தேடிப் புறப்பட்டால் அவரால் என்னைப் பிடிக்க முடியாது" என்று நான் கூறினேன். அவர்களில் ஒருவன், "நானும் (அவ்வாறே) கருதுகிறேன்" என்றான்.
பிறகு அவர்கள் அனைவரும் திரும்பிச் சென்றனர். நான் அந்த இடத்திலிருந்து நகர்ந்திருக்கக்கூட இல்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் குதிரைப் படையினர் மரங்களிடையே புகுந்து வருவதை நான் பார்த்தேன். அவர்களில முதல் ஆளாக அக்ரம் அல்அசதீ (ரலி) அவர்கள் இருந்தார்கள். அவருக்குப் பின்னால் அபூகத்தாதா அல்அன்சாரீ (ரலி) அவர்கள் இருந்தார்கள். அவரைத் தொடர்ந்து மிக்தாத் பின் அல்அஸ்வத் அல்கிந்தீ (ரலி) அவர்கள் இருந்தார்கள்.
நான் அக்ரம் (ரலி) அவர்களது குதிரையின் கடிவாளத்தைப் பிடித்துக்கொண்டேன். அவர்கள் நால்வரும் புறமுதுகிட்டு ஓடிக் கொண்டிருந்தனர். நான் "அக்ரமே! அவர்களிடம் எச்சரிக்கையாக இருந்துகொள்ளுங்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அவர்களுடைய தோழர்களும் வந்து சேர்வதற்கு முன் (தனியாக வரும்) உம்மை இவர்கள் பிடித்துவிட வேண்டாம்" என்று கூறினேன்.
அதற்கு அக்ரம் (ரலி) அவர்கள், "சலமா! நீங்கள் அல்லாஹ்வின் மீதும் மறுமை நாளின் மீதும் நம்பிக்கை கொண்டவராயிருந்தால், சொர்க்கம் உண்மை; நரகம் உண்மை என நீர் அறிந்திருந்தால் எனக்கும் வீர மரணத்துக்குமிடையே குறுக்கிடாதீர்!" என்று கூறினார்.
ஆகவே, அவரை நான் விட்டுவிட்டேன். அவரும் அப்துர் ரஹ்மான் அல்ஃபஸாரியும் (வாள் முனையில்) சந்தித்துக்கொண்டனர். அக்ரம் (ரலி) அவர்கள் அப்துர் ரஹ்மானின் குதிரையை வெட்டிவிட்டார்கள். அப்துர் ரஹ்மான்,அக்ரம் (ரலி) அவர்கள்மீது ஈட்டியைப் பாய்ச்சி அவர்களைக் கொன்றுவிட்டான்.
முஹம்மத் (ஸல்) அவர்களின் முகத்தைக் கண்ணியப்படுத்திய (இறை)வன் மீதாணையாக! பிறகு நான் காலால் நடந்தே அவர்களைப் பின்தொடர்ந்தேன். எனக்குப் பின்னால் வந்த முஹம்மத் (ஸல்) அவர்களின் தோழர்களையோ,அவர்களது (குதிரை கிளப்பிய) புழுதியையோ நான் பார்க்கவில்லை.
இறுதியில் அ(ந்தப் பகை)வர்கள் சூரியன் மறைவதற்கு முன் ஒரு கணவாயை அடைந்தனர். அங்கு ஒரு நீர்நிலை இருந்தது. அதற்கு "தூ கரத்” எனப் பெயர் சொல்லப்பட்டது. அவர்கள் தாகத்துடன் இருந்ததால் அதில் நீர் அருந்தச் சென்றனர். தங்களுக்குப் பின்னால் நான் ஓடி வருவதை அவர்கள் கண்டதும் அந்த இடத்தைவிட்டு வெளியேறும் நிலைக்கு அவர்கள் உள்ளாயினர். அவர்கள் ஒரு துளி நீரைக்கூட சுவைக்கவில்லை.
அவர்கள் அங்கிருந்து கிளம்பி ஒரு மலைக் குன்றில் விரைந்து சென்றனர். நான் வேகமாக ஓடி அவர்களில் ஒருவனைச் சென்றடைந்தேன். அவனது தோள் பட்டையிலுள்ள மெல்லிய எலும்பின் மீது,
"இதோ இதை வாங்கிக்கொள்
அக்வஇன் மகன் நான்
இன்று அற்பர்களின் (அழிவு) நாள்"
என்று கூறியவாறு ஓர் அம்பைப் பாய்ச்சினேன். அவன், "உன் தாய் உன்னை இழக்கட்டும்! காலையில் வந்த அக்வஆ நீ?" என்று கேட்டான். நான் "ஆம். தனக்குத் தானே பகைவன் ஆகிவிட்டவனே! காலையில் சந்தித்த உன் அக்வஉதான் நான்" என்றேன்.
அக்கூட்டத்தார் ஒரு மலைக் குன்றின் மீது இரு குதிரைகளை விட்டுவிட்டு ஓடி விட்டனர். நான் அவ்விரு குதிரைகளையும் பிடித்து, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஓட்டி வந்தேன்.
அப்போது (என் தந்தையின் சகோதரர்) ஆமிர் (ரலி) அவர்கள் தோல் அடுக்குப் பாத்திரம் ஒன்றை என்னிடம் கொண்டுவந்தார். அதில் தண்ணீர் கலந்த பால் சிறிதளவு இருந்தது. இன்னொரு தோல் அடுக்குப் பாத்திரமும் அவரிடம் இருந்தது. அதில் தண்ணீர் இருந்தது. நான் அங்கத் தூய்மை (உளூ) செய்தேன்; அருந்தினேன்.
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தேன். அக்கூட்டத்தாரை நான் விரட்டியடித்த நீர்நிலை அருகில் அவர்கள் இருந்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்த ஒட்டகங்களையும் அந்த இணைவைப்பாளர்களிடமிருந்து நான் கைப்பற்றிய ஈட்டிகள், சால்வைகள் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களையும் எடுத்து வைத்திருந்தார்கள்.
அப்போது பிலால் (ரலி) அவர்கள், அக்கூட்டத்தாரிடமிருந்து நான் விடுவித்த ஒட்டகங்களில் ஒன்றை அறுத்து அதன் ஈரலையும் திமிலையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்காகப் பொரித்துக்கொண்டிருந்தார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! என்னை விடுங்கள். நான் (நம்) மக்களில் நூறு பேரைத் தேர்ந்தெடுத்து (அழைத்துக்கொண்டு) அக்கூட்டத்தாரைப் பின் தொடர்ந்து செல்கிறேன். அவர்களில் இறப்புச் செய்தி அறிவிக்கக்கூட ஒருவரையும் விட்டு வைக்காமல் அவர்கள் அனைவரையும் கொன்றுவிடுகிறேன்" என்று கூறினேன்.
அதைக் கேட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிரித்தார்கள். அங்கிருந்த நெருப்பின் வெளிச்சத்தில் அவர்களின் கடைவாய்ப் பற்கள் தெரிந்தன. அப்போது அவர்கள், "சலமா! உன்னால் அதைச் செய்ய முடியும் என நீ கருதுகிறாயா?"என்று கேட்டார்கள். நான் "ஆம் (செய்வேன்), தங்களைக் கண்ணியப்படுத்திய (இறை)வன் மீதாணையாக!" என்று கூறினேன்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "தற்போது அக்கூட்டத்தார் ஃகத்ஃபான் பகுதியில் விருந்து அளிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்" என்று (இறையறிவிப்பின் மூலம்) கூறினார்கள்.
அப்போது ஃகத்ஃபான் பகுதியிலிருந்து ஒரு மனிதர் வந்தார். அவர் "அக்கூட்டத்தாருக்காக இன்ன மனிதர் இறைச்சி ஒட்டகமொன்றை அறுத்(து விருந்தளித்)தார். அவர்கள் அந்த ஒட்டகத்தின் தோலை உரித்துக்கொண்டிருந்தபோது (பாலைவன வெளியில்) புழுதி கிளம்புவதைக் கண்டனர். உடனே "அக்(குதிரைப் படைக்) கூட்டம் வந்துவிட்டது” என்று கூறியவாறு வெருண்டோடிவிட்டனர்" என்று கூறினார்.
காலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இன்றைய தினத்தில் நம் குதிரைப் படையில் மிகச் சிறந்த வீரர் அபூகத்தாதா ஆவார். நம் காலாட் படையில் மிகச் சிறந்த வீரர் சலமா ஆவார்" என்று (பாராட்டிக்) கூறினார்கள்.
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், குதிரைப்படை வீரருக்கான ஒரு (பரிசுப்) பங்கும், காலாட்படை வீரருக்கான ஒரு பங்குமாக இரு பங்குகள் சேர்த்து (போர்ச் செல்வமாக) எனக்கு வழங்கினார்கள்.
பிறகு தமது "அள்பா” எனும் ஒட்டகத்தில் தமக்குப் பின்னால் என்னை அமரச் செய்து மதீனா நோக்கித் திரும்பினார்கள்.
நாங்கள் வந்துகொண்டிருந்தபோது (ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது.) அன்சாரிகளில் ஒருவர் இருந்தார். அவரை ஓட்டப்பந்தயத்தில் யாராலும் வெல்ல முடியாது. அவர், "மதீனாவரை என்னுடன் போட்டியிட்டு ஓடுபவர் யார்? போட்டியிட்டு ஓடுபவர் யார்?" என்று திரும்பத் திரும்பக் கூறலானார்.
அவரது குரலைக் கேட்ட நான் (அவரிடம்), "மரியாதைக்குரியவர்களை நீ மதிக்கமாட்டாயா? சிறப்புக்குரியவர்களை நீ அஞ்சமாட்டாயா?" என்று கேட்டேன். அவர் "இல்லை, அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களாக இருந்தால் தவிர" என்று கூறினார்.
நான், "அல்லாஹ்வின் தூதரே! என் தந்தையும் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! என்னை விடுங்கள்; அந்த மனிதரை நான் வெல்கிறேன்" என்று கேட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "உன் விருப்பம்" என்றார்கள்.
நான், "முதலில் நீ ஓடு” என்று கூறிவிட்டு, என் கால்களை உதறிவிட்டு, குதித்து ஓடினேன். ஓடிக்கொண்டிருந்தபோது ஒன்றிரண்டு மேடுகளில் ஏறியபோது, ஓட்டத்தைக் கட்டுப்படுத்தி மூச்சு வாங்கி ஓய்வெடுத்தேன். பிறகு அவருக்குப் பின்னால் ஓடினேன். மறுபடியும் ஒன்றிரண்டு மேடுகளில் ஏறியபோது ஓட்டத்தை மட்டுப்படுத்தினேன்.
பிறகு அவரைச் சென்றடைவதற்காக (மேட்டில்) ஏறினேன். அப்போது அவருடைய தோள்களுக்கிடையே அடித்து, "நீ தோற்கடிக்கப்பட்டாய், அல்லாஹ்வின் மீதாணையாக!" என்றேன். அவர், "நானும் (அவ்வாறே) எண்ணுகிறேன்" என்று கூறினார். மதீனாவரை அவருக்கு முன்பாகவே நான் ஓடிவந்தேன்.
அல்லாஹ்வின் மீதாணையாக! (மதீனாவிற்கு வந்த பின்) நாங்கள் மூன்று இரவுகள் மட்டுமே தங்கியிருந்தோம். (நான்காம் நாள்தான்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் கைபரை நோக்கி(ப் போருக்காக)ப் புறப்பட்டோம். அப்(பயணத்தின்)போது, என் தந்தையின் சகோதரர் ஆமிர் (ரலி) பின்வரும் யாப்புக் கவிதையைப் பாடினார்கள்:
அல்லாஹ்வின் மீதாணையாக!
அல்லாஹ் மட்டும் இல்லாவிட்டால்
நாங்கள்
நேர்வழி பெற்றிருக்கமாட்டோம்
தானதர்மம் செய்திருக்கவுமாட்டோம்
தொழுதிருக்கவுமாட்டோம்
(இறைவா!) நாங்கள்
உன் கருணையிலிருந்து
தேவையற்றவர்கள் அல்லர்.
(போர் முனையில் எதிரிகளை)
நாங்கள் சந்திக்கும்போது
எங்கள் பாதங்களை
உறுதிப்படுத்துவாயாக!
எங்கள்மீது
அமைதியைப் பொழிவாயாக!
இதைக் கேட்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இவர் யார்?" என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் "நான் ஆமிர்" என்றார்கள். "உம்முடைய இறைவன் உமக்கு மன்னிப்பருள்வானாக" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(பொதுவாக) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு மனிதருக்காக (போரில் தனிப்பட்ட முறையில்) அவரது பெயர் குறிப்பிட்டுப் பாவமன்னிப்பு வேண்டுவார்களேயானால், அவர் (அப்போரில்) வீர மரணம் அடையாமல் இருந்ததில்லை.
ஆகவே, உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள், தமது ஒட்டகத்தின் மீதிருந்தவாறு, "அல்லாஹ்வின் தூதரே! ஆமிர் (நீண்ட நாள் உயிர் வாழ்வதன்) மூலம் எங்களைப் பயனடையச் செய்யக்கூடாதா?" என்று கேட்டார்கள். பிறகு நாங்கள் கைபர் சென்றடைந்ததும் கைபர்வாசிகளின் மன்னன் மர்ஹப் தனது வாளை மேலும் கீழுமாக அசைத்துக்கொண்டே,
"கைபருக்குத் தெரியும்
நான்தான் மர்ஹப் என்று
(போருக்கு ஆயத்தமாய் என்றும்)
முழு ஆயுதங்கள் தரித்த பண்பட்ட வீரன் என்று.
போர்கள் மூண்டு
கொழுந்துவிட்டு எரியும்போது
(சில நேரம் நான் ஈட்டியெறிவேன்
சில நேரம் வாள் வீசுவேன்)"
என்று பாடினான்.
அப்போது என் தந்தையின் சகோதரர் ஆமிர் (ரலி) அவர்கள் முன்னே வந்து,
"கைபருக்குத் தெரியும் நான் ஆமிர் என்று
போர்த் துன்பங்களை எதிர்கொள்ளும்
ஆயுதங்கள் தரித்த சரியான வீரன் என்று"
என்று பாடினார்கள். பிறகு இருவரும் மோதிக்கொண்டனர். அப்போது மர்ஹபின் வாள், ஆமிர் (ரலி) அவர்களின் கேடயத்தைத் தாக்கியது. ஆமிர் (ரலி) அவர்கள் (குனிந்து) அவனது கீழ் பகுதியில் (தமது வாளால்) வெட்டப்போனார்கள். அப்போது அவரது வாள் அவரையே திருப்பித் தாக்கிவிட்டது; அவரது கை நரம்பைத் துண்டித்துவிட்டது. அதிலேயே அவரது இறப்பும் ஏற்பட்டது.
பிறகு நான் புறப்பட்டுச் சென்றேன். அப்போது நபித்தோழர்களில் சிலர் "ஆமிரின் நற்செயல்கள் அழிந்துவிட்டன. அவர் தற்கொலை செய்துகொண்டார்" என்று பேசிக் கொண்டிருந்தனர்.
உடனே நான் அழுதுகொண்டே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! ஆமிரின் நற்செயல்கள் அழிந்துவிட்டனவா?" என்று கேட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(அவ்வாறு) யார் சொன்னது?" என்று கேட்டார்கள். "தங்கள் தோழர்களில் சிலர்" என்று பதிலளித்தேன்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இவ்வாறு சொன்னவர் பொய்யுரைத்துவிட்டார். அவருக்கு அவரது நன்மை இருமுறை கிடைக்கும்" என்று கூறினார்கள்.
பிறகு கண்வலியுடன் இருந்த அலீ (ரலி) அவர்களிடம் (அவர்களை அழைத்துவர) என்னை அனுப்பிவைத்தார்கள்.
(என்னை அனுப்புவதற்கு முன்) "நான் (நாளை) இஸ்லாமிய(ச் சேனையின்) கொடியை ஒரு மனிதரிடம் கொடுப்பேன். அவர் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கிறார்; அவரை அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நேசிக்கின்றனர்" என்று கூறினார்கள்.
நான் அலீ (ரலி) அவர்களிடம் சென்று கண் வலியுடனிருந்த அவர்களை அழைத்துக் கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தேன். அப்போது அலீ (ரலி) அவர்களின் கண்களில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உமிழ்ந்தார்கள். அவர்கள் கண் குணமடைந்தார்கள். பிறகு அலீ (ரலி) அவர்களிடம் இஸ்லாமிய(ச் சேனையின்) கொடியைக் கொடுத்தார்கள். கைபரின் மன்னன் மர்ஹப் புறப்பட்டு வந்து,
"கைபருக்குத் தெரியும் நான்தான் மர்ஹப் என்று
(போருக்கு ஆயத்தமாய் என்றும்)
ஆயுதங்கள் தரித்த பண்பட்ட வீரன் என்று.
போர்கள் மூண்டு கொழுந்துவிட்டு எரியும்போது
(சில வேளை நான் ஈட்டியெறிவேன்
சில வேளை நான் வாள் வீசுவேன்)"
என்று பாடினான்.
அதற்கு அலீ (ரலி) அவர்கள்,
என் தாயாரால் ஹைதர் (சிங்கம்)
எனப் பெயர் சூட்டப்பட்டவன் நான்
அருவருப்பான தோற்றமுடைய
அடர்வனத்தின் சிங்கம் நான்
சந்தர் எனும் பேரளவையால்
அளப்பதைப் போன்று
அவர்களைத் தாராளமாக அளந்திடுவேன்
(ஏராளமான எதிரிகளை
வெட்டி வீழ்த்துவேன்)"
என்று பாடிக்கொண்டே மர்ஹபின் தலையில் ஓங்கி அடித்து, அவனை வீழ்த்தினார்கள். பிறகு அலீ (ரலி) அவர்களின் கரங்களாலேயே (கைபரின்) வெற்றியும் கிட்டியது.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 32
பாடம் : 46 "அவனே அவர்கள் கைகளை உங்களிடமிருந்து தடுத்தான்" (48:24) எனும் வசனம்.
3696. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மக்காவாசிகளில் எண்பது பேர் நபி (ஸல்) அவர்கள்மீதும் நபித்தோழர்கள்மீதும் திடீர்த் தாக்குதல் தொடுப்பதற்காக "தன்ஈம்” மலையிலிருந்து ஆயுதங்களோடு இறங்கிவந்தனர். அப்போது சரணடைந்த அவர்களை நபி (ஸல்) அவர்கள் பிடித்து, (அவர்களை மன்னித்து) உயிரோடு விட்டுவிட்டார்கள்.
அப்போது வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், "மக்காவின் மையப் பகுதியில் அவர்களுக்கு எதிராக அவன் உங்களுக்கு வெற்றி அளித்த பின், உங்கள் கைகளை அவர்களை விட்டும், அவர்கள் கைகளை உங்களைவிட்டும் அவனே தடுத்தான்" (48:24) எனும் வசனத்தை அருளினான்.
அத்தியாயம் : 32
பாடம் : 47 அறப்போரில் ஆண்களுடன் பெண்களும் கலந்துகொள்வது.
3697. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(என் தாயார்) உம்மு சுலைம் (ரலி) அவர்கள் ஹுனைன் போர் தினத்தன்று பிச்சுவாக் கத்தி ஒன்றை எடுத்து, தம்முடன் வைத்திருந்தார். அதைப் பார்த்த (என் தாயாரின் கணவர்) அபூதல்ஹா (ரலி) அவர்கள் (நபி (ஸல்) அவர்களிடம் சென்று), "அல்லாஹ்வின் தூதரே! உம்மு சுலைம் தம்முடன் பிச்சுவாக் கத்தி ஒன்றை வைத்திருக்கிறார்" என்று கூறினார்கள்.
அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இந்தப் பிச்சுவாக் கத்தி எதற்கு?" என்று கேட்டார்கள். அதற்கு உம்மு சுலைம் (ரலி) அவர்கள், "இணைவைப்பாளர்களில் யாரேனும் என்னை நெருங்கினால் அவரது வயிற்றை நான் பிளந்துவிடுவேன். அதற்காகத்தான் அதை வைத்துள்ளேன்" என்று கூறினார். அதைக் கேட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிரிக்கலானார்கள்.
உம்மு சுலைம் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! நம்மவரைத் தவிர (மக்கா வெற்றியின்போது) தங்களிடம் சரணடைந்து தங்களால் (பொது மன்னிப்பளிக்கப்பட்டு) விடுவிக்கப்பட்டவர்களைத் தாங்கள் கொன்றுவிடுங்கள்" என்று கூறினார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹ் போதுமானவனாக ஆகிவிட்டான். அவன் உபகாரமும் செய்துவிட்டான். (இந்த ஹுனைன் போரில் நமக்குச் சரிவு ஏற்பட்டாலும் பெருத்த பாதிப்பு ஏதுமில்லாமல் அல்லாஹ் காப்பாற்றிவிட்டான்)" என்று கூறினார்கள்.
- உம்மு சுலைம் (ரலி) அவர்கள் தொடர்பான மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 32
3698. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் போருக்குப் புறப்பட்டுச் செல்லும்போது, அவர்களுடன் (என் தாயார்) உம்மு சுலைம் (ரலி) அவர்களும் இன்னும் சில அன்சாரிப் பெண்மணிகளும் கலந்துகொள்வர். அப்பெண்கள் (அறப்போர் வீரர்களுக்கு) தண்ணீர் கொடுப்பார்கள்; காயமுற்றவர்களுக்குச் சிகிச்சை அளிப்பார்கள்.
அத்தியாயம் : 32
3699. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
உஹுதுப் போரின்போது நபி (ஸல்) அவர்களை(த் தனியே) விட்டுவிட்டு மக்கள் சிலர் தோற்று (ஓடி)விட்டனர். அபூதல்ஹா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களை ஒரு தோல் கேடயத்தால் மறைத்துக்கொண்டு பாதுகாத்தபடி நின்றார்கள்.
அபூதல்ஹா (ரலி) அவர்கள் அதிவேகமாக அம்பெடுத்து எய்யக்கூடியவர்களாக இருந்தார்கள். (வேகவேகமாக இழுத்து அம்பெய்கையில்) இரண்டு அல்லது மூன்று விற்களை உடைத்து விட்டார்கள். யாரேனும் ஒருவர் அம்புக்கூட்டுடன் செல்வதைக் கண்டால் நபி (ஸல்) அவர்கள், "அதை அபூதல்ஹாவிடம் தூக்கிப்போடு" என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
அந்த நேரத்தில் நபி (ஸல்) அவர்கள் (அபூதல்ஹா (ரலி) அவர்களுக்குப் பின்னாலிருந்து) தலையை உயர்த்தி எதிரிகளை எட்டிப் பார்க்க, அபூதல்ஹா (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! தங்களுக்கு என் தந்தையும் தாயும் அர்ப்பணமாகட்டும். எட்டிப் பார்க்காதீர்கள். எதிரிகளின் அம்புகளில் ஏதேனும் ஓர் அம்பு தங்களைத் தாக்கிவிடலாம். என் மார்பு தங்கள் மார்ப்புக்குக் கீழே இருக்கும் (தாங்கள் எட்டிப் பார்க்காமல் இருந்தால் என் மார்பு தங்கள் மார்புக்கு நேராகக் கேடயம் போன்று இருக்கும்)" என்று சொன்னார்கள்.
(அன்று) நான் அபூபக்ர் (ரலி) அவர்களின் புதல்வி ஆயிஷா (ரலி) அவர்களையும் உம்மு சுலைம் (ரலி) அவர்களையும் ஆடையை வரிந்து கட்டிக்கொண்டவர்களாகப் பார்த்தேன். அவர்கள் கால் கொலுசுகளைக் கண்டேன். அவர்கள் இருவரும் (தண்ணீர் உள்ள) தோல் பைகளை முதுகின் மீது சுமந்துவந்து, (காயம் பட்டுக்கிடந்த) வீரர்களின் வாயில் ஊற்றுவார்கள். பின்னர் திரும்பிப்போய், தண்ணீர் நிரப்பிக்கொண்டு வந்து, வீரர்களின் வாயில் ஊற்றுவார்கள். அபூதல்ஹா (ரலி) அவர்களின் சிற்றுறக்கத்தால் அவர்கள் கரங்களிலிருந்து இரண்டு, அல்லது மூன்று முறை வாள் (நழுவி) விழுந்துவிட்டது.
அத்தியாயம் : 32
பாடம் : 48 அறப்போரில் கலந்துகொண்ட பெண்களுக்குப் போர்ச் செல்வத்தில் (வீரர்களுக்கான) பங்கு வழங்காமல் சிறிதளவு (ஊக்கத் தொகை) வழங்கப்படும் என்பதும், எதிரிகளின் குழந்தைகளைக் கொல்வதற்கு வந்துள்ள தடையும்.
3700. யஸீத் பின் ஹுர்முஸ் அல்லைஸீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(காரிஜிய்யாக் கூட்டத்தைச் சேர்ந்த) நஜ்தா பின் ஆமிர் என்பவர் ஐந்து விஷயங்களைப் பற்றிக் கேட்டு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்குக் கடிதம் எழுதினார். அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் "நான் ஒரு கல்வியை மறைத்த குற்றத்திற்கு ஆளாகிவிடுவேன் என்ற அச்சம் எனக்கு இல்லையாயின் அவருக்கு நான் பதில் கடிதம் எழுதமாட்டேன்" என்று கூறி (அவருக்குப் பதில் எழுதி)னார்கள்.
நஜ்தா தமது கடிதத்தில் பின்வருமாறு எழுதியிருந்தார்:
இறைவாழ்த்துக்குப் பின்! அறப்போர்களில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பெண்களும் கலந்துகொண்டார்களா?
அவ்வாறு கலந்துகொண்ட பெண்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் போர்ச் செல்வத்தில் பங்கு கொடுத்தார்களா? (போரில்) எதிரிகளின் குழந்தைகளைக் கொன்றார்களா? அநாதை எனும் பெயர் எந்தப் பருவத்தில் முற்றுப்பெறும்? போரில் கைப்பற்றப்படும் செல்வங்களில் ஐந்தில் ஒரு பாகம் (குமுஸ்) நிதி யாருக்குரியது? இந்த ஐந்து விஷயங்கள் குறித்து எனக்கு அறிவியுங்கள்.
அவருக்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் பின்வருமாறு பதில் எழுதினார்கள்:
நீர் என்னிடம் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பெண்களும் அறப்போர்களில் கலந்துகொண்டார்களா?” எனக்கேட்டிருந்தீர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அறப்போர்களில் பெண்களும் கலந்து கொண்டார்கள். போரில் காயமடைந்தவர்களுக்கு மருந்திட்டு சிகிச்சை அளித்தார்கள். போர்ச்செல்வத்திலிருந்து சிறிதளவு அவர்களுக்கு (ஊக்கத் தொகையாக) வழங்கப்பட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் போர்ச் செல்வத்தில் பெண்களுக்கு (குறிப்பிட்ட) பங்கு எதையும் நிர்ணயிக்கவில்லை.
போரின்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குழந்தைகளைக் கொல்ல மாட்டார்கள். எனவே, நீரும் குழந்தைகளைக் கொல்லாதீர்.
மேலும், நீர் "அநாதை எனும் பெயர் எந்தப் பருவத்தோடு முற்றுப்பெறுகிறது?” எனக் கேட்டிருந்தீர்.என் ஆயுளின் (அதிபதி)மீதாணையாக! சிலருக்குத் தாடி கூட முளைத்துவிடும். ஆனால், தமக்குரிய ஒன்றைப் பெறுவதிலும் தமக்குரிய ஒன்றைக் கொடுப்பதிலும் பலவீனத்துடனேயே அவர்கள் இருப்பர். (ஒன்றைப் பெறும்போது) மற்றவர்களைப் போன்று சரியான பொருளைப் பெறுகின்ற பக்குவத்தை ஒருவன் அடைந்துவிட்டால் அவனைவிட்டு அநாதை எனும் பெயர் நீங்கிவிடும்.
மேலும், நீர் என்னிடம் "போர்ச்செல்வத்தில் ஐந்தில் ஒரு பாகம் (குமுஸ்) யாருக்குரியது?” எனக் கேட்டிருந்தீர். (நபியவர்களின் குடும்பத்தாராகிய) நாங்கள் அது எங்களுக்கே உரியது எனக் கூறிவந்தோம். ஆனால், எங்கள் மக்களே (பனூ உமைய்யா) அதை எங்களுக்குத் தர மறுத்துவிட்டனர். (ஆகவே, குமுஸ் நிதி ஆட்சியாளராக வரும் அனைவரின் குடும்பத்தாருக்கும் உரியதாகும்.)
அத்தியாயம் : 32
3701. மேற்கண்ட ஹதீஸ் யஸீத் பின் ஹுர்முஸ் (ரஹ்) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "நஜ்தா என்பவர் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்கு (ஐந்து விஷயங்கள் குறித்துக் கேட்டு)க் கடிதம் எழுதினார்" என்றே ஹதீஸ் ஆரம்பமாகிறது.
மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. ஆயினும், ஹாத்திம் பின் இஸ்மாயீல் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குழந்தைகளைக் கொல்லமாட்டார்கள். எனவே, நீரும் குழந்தைகளைக் கொல்லாதீர். "களிர்” (அலை) அவர்கள், தாம் கொன்ற சிறுவனிடமிருந்து அறிந்து கொண்டதைப் போன்று நீரும் அறிந்தால் தவிர (அது உம்மால் இயலாத காரியமாகும்)" என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் குறிப்பிட்டார்கள் என இடம் பெற்றுள்ளது.
ஹாத்திம் பின் இஸ்மாயீல் (ரஹ்) அவர்களிடமிருந்து இஸ்ஹாக் பின் இப்ராஹீம் (ரஹ்) அவர்கள் அறிவிக்கும் அறிவிப்பில் "இறைநம்பிக்கையாளரை நீர் பாகுபடுத்தி அறிந்து கொள்ள முடிந்தால் தவிர. அப்போதுதான் இறைமறுப்பாளனைக் கொல்வதற்கும் இறைநம்பிக்கையாளரை விட்டுவிடுவதற்கும் உமக்கு முடியும் (ஆனால்,சிறுவன் பிற்காலத்தில் எப்படி மாறுவான் என்பதை, "களிரை”ப் போன்று அறிந்துகொள்ள உம்மால் முடியாது)" என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் குறிப்பிட்டார்கள் என இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 32
3702. யஸீத் பின் ஹுர்முஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(காரிஜிய்யாக்களில் ஒருவரான) நஜ்தா பின் ஆமிர் அல்ஹரூரீ என்பவர் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்குக் கடிதம் எழுதி, அடிமைகளும் பெண்களும் போர்ச்செல்வங்கள் பங்கிடப் படும் இடத்திற்கு வந்தால் அவர்களுக்கும் போர்ச்செல்வத்தில் பங்கு கொடுக்கப்படுமா? (எதிரிகளின்) குழந்தைகளைக் கொல்லலாமா? அநாதை எனும் பெயர் எந்தப் பருவத்தோடு முற்றுப் பெறும்? (குமுஸைப் பற்றிக் கூறும் 8:41ஆவது வசனத்திலுள்ள) "உறவினர்கள்” யார் ஆகியவை பற்றி விளக்கம் கேட்டார்.
அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் என்னிடம், "அவருக்காகப் பதில் கடிதம் எழுது" என்று கூறிவிட்டு, "அவர் முட்டாள்தனமான ஒரு முடிவை எடுத்துவிடுவார் என்ற அச்சம் எனக்கில்லையாயின் அவருக்கு நான் பதில் கடிதம் எழுதமாட்டேன்" என்று கூறினார்கள். பிறகு பின்வருமாறு எழுதச் சொன்னார்கள்: "நீர் என்னிடம் போர்ச் செல்வம் பங்கிடப்படும் இடத்திற்குப் பெண்களும் அடிமைகளும் வந்தால் அவர்களுக்கும் போர்ச் செல்வத்தில் பங்கு கொடுக்கப்படுமா?" எனக் கேட்டிருந்தீர். போர்ச்செல்வத்தில் அந்த இரு பிரிவினருக்கும் ஏதேனும் (ஊக்கத் தொகையாக) வழங்கப்பட்டால் தவிர (குறிப்பிட்ட) பங்கேதும் இல்லை.
(போரில் எதிரிகளின்) குழந்தைகளைக் கொல்வதைப் பற்றி என்னிடம் கேட்டிருந்தீர். (போரில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குழந்தைகளைக் கொல்லமாட்டார்கள். எனவே, நீரும் அவர்களைக் கொல்ல வேண்டாம். மூசா (அலை) அவர்களின் நண்பர் (களிர்), தாம் கொன்ற சிறுவனைப் பற்றி (இறைவன் மூலம்) அறிந்துகொண்டதைப் போன்று நீரும் அக்குழந்தைகளைப் பற்றி அறிந்தால் தவிர. (அது உம்மால் இயலாது.)
நீர் என்னிடம் அநாதைகளைப் பற்றி "அநாதை எனும் பெயர் எந்தப் பருவத்தோடு முற்றுப்பெறும்?” எனக் கேட்டிருந்தீர். அவன் பருவ வயதை அடைந்து, அவனிடம் பக்குவ நிலை தென்படாத வரை "அநாதை” எனும் பெயர் அவனிடமிருந்து நீங்காது.
மேலும், நீர் என்னிடம் "(8:41ஆவது வசனத்திலுள்ள) "உறவினர்" என்போர் யார்?” எனக் கேட்டிருந்தீர். (நபியவர்களின் உறவினர்களான) நாங்கள்தாம் அவர்கள் என நாங்கள் கூறினோம். ஆனால், அதை எங்கள் மக்கள் மறுத்துவிட்டனர் (எனவே ஆட்சியாளர்களின் உறவினர்களையும் அது குறிக்கும்).
- இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்து யஸீத் பின் ஹுர்முஸ் (ரஹ்) அவர்கள் அறிவிக்கும் மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 32
3703. யஸீத் பின் ஹுர்முஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(காரிஜிய்யாவான) நஜ்தா பின் ஆமிர் என்பவர் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்கு (ஐந்து விஷயங்களைப் பற்றிக் கேட்டு)க் கடிதம் எழுதினார். அவரது கடிதத்தை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் வாசித்தபோதும் அவருக்குப் பதில் எழுதியபோதும் நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுடன் இருந்தேன்.
அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் "அல்லாஹ்வின் மீதாணையாக! முடைநாற்றத்தில் வீழ்ந்துவிடாமல் அவரைக் காக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லையாயின் அவருக்கு நான் பதில் கடிதம் எழுதவுமாட்டேன்; அவரைக் கண்குளிரச் செய்திருக்கவுமாட்டேன்" என்று கூறிவிட்டு, (பின்வருமாறு) அவருக்குக் கடிதம் எழுதச் சொன்னார்கள்:
"அல்லாஹ் (8:41ஆவது வசனத்தில்) குறிப்பிட்டுள்ள (குமுஸில்) பங்கு பெறுகின்ற உறவினர்கள் யார்?” என்பது குறித்து நீர் என்னிடம் கேட்டிருந்தீர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் உறவினர்களாகிய நாங்கள்தாம் அவர்கள் என நாங்கள் கருதினோம். ஆனால், அதை மக்கள் மறுத்துவிட்டனர்.
நீர் என்னிடம் "ஓர் அநாதைக்கு "அநாதை” எனும் பெயர் எப்போது முற்றுப்பெறும்?” எனக் கேட்டிருந்தீர். அவன் திருமண வயதை அடைந்து, அவனிடம் பக்குவம் தென்பட்டு, அவனது செல்வம் அவனிடம் ஒப்படைக்கப்படும் பருவத்தை அவன் அடையும்போது அவனிடமிருந்து "அநாதை” எனும் பெயர் முற்றுப்பெற்றுவிடும்.
நீர் என்னிடம் "(அறப்போரில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இணைவைப்பாளர்களின் குழந்தைகளில் எதையேனும் கொன்றிருக்கிறார்களா?” என்று கேட்டிருந்தீர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எதிரிகளின் குழந்தைகள் எதையும் கொன்றதில்லை. நீரும் அவர்களின் குழந்தைகள் எதையும் கொன்றுவிடாதீர்; களிர், தாம் கொன்ற சிறுவனிடமிருந்து அறிந்துகொண்டதை நீரும் அறிந்துகொள்ள முடிந்தால் தவிர. (ஆனால், அது உம்மால் முடியாது.)
மேலும், நீர் என்னிடம் "பெண்களும் அடிமைகளும் போரில் கலந்துகொண்டால் அவர்களுக்கும் போர்ச்செல்வத்தில் குறிப்பிட்ட அளவு பங்கு உண்டா?” எனக் கேட்டிருந்தீர். அவர்களுக்கு மக்களின் போர்ச்செல்வங்களிலிருந்து சிறிதளவு (ஊக்கத் தொகையாக) வழங்கப்படுவதைத் தவிர குறிப்பிட்ட அளவு பங்கேதும் அவர்களுக்குக் கிடையாது.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 32
3704. மேற்கண்ட ஹதீஸின் ஒரு பகுதி மட்டும் யஸீத் பின் ஹுர்முஸ் (ரஹ்) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் முழுத் தகவல்களுடன் ஹதீஸ் இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 32
3705. உம்மு அத்திய்யா அல்அன்சாரிய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஏழு அறப்போர்களில் கலந்துகொண்டேன். மக்கள் (போரிடச்) சென்ற பிறகு அவர்களின் இருப்பிடங்களில் அவர்களுக்குப் பின்துணையாக இருந்து நான் செயல்படுவேன்; அவர்களுக்காக உணவு சமைப்பேன். போரில் காயமுற்றவர்களுக்கு மருந்திட்டுச் சிகிச்சை செய்வேன். நோயாளிகளைக் கவனித்துக் கொள்வேன்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 32
பாடம் : 49 நபி (ஸல்) அவர்கள் கலந்துகொண்ட அறப்போர்களின் எண்ணிக்கை.
3706. அபூஇஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்களது ஆட்சியில் கூஃபாவின் ஆளுநராயிருந்த) அப்துல்லாஹ் பின் யஸீத் அவர்கள் மழை வேண்டிப் பிரார்த்திப்பதற்காக மக்களுடன் புறப்பட்டுச் சென்றார். அப்போது அவர் இரண்டு ரக்அத்கள் தொழுவித்துவிட்டு மழை வேண்டிப் பிரார்த்தித்தார்.
அப்போது நான் ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்களைச் சந்தித்தேன். எனக்கும் அவர்களுக்குமிடையே ஒரு மனிதர் மட்டுமே இருந்தார். அப்போது நான் ஸைத் (ரலி) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கலந்துகொண்ட போர்கள் எத்தனை?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "பத்தொன்பது" என விடையளித்தார்கள்.
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நீங்கள் கலந்துகொண்ட போர்கள் எத்தனை?" என்று வினவியபோது, "பதினேழு" என்றார்கள். "அவர்கள் கலந்துகொண்ட முதல் போர் எது?" என்று கேட்டதற்கு "தாத்துல் உசைர், அல்லது உஷைர்" என்று பதிலளித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 32
3707. ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பத்தொன்பது அறப்போர்களில் கலந்து கொண்டார்கள். மேலும், அவர்கள் (மதீனாவுக்கு) நாடு துறந்து சென்ற பிறகு ஒரேயொரு ஹஜ் மட்டுமே செய்தார்கள். "விடைபெறும்” ஹஜ் எனும் அந்த ஹஜ்ஜைத் தவிர வேறெந்த ஹஜ்ஜையும் அவர்கள் செய்யவில்லை.
இதை அபூஇஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 32
3708. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பத்தொன்பது அறப்போர்களில் கலந்து கொண்டேன். நான் பத்ருப் போரிலோ உஹுதுப் போரிலோ கலந்துகொள்ளவில்லை. (அப்போருக்குச் செல்லவிடாமல்) என் தந்தை (அப்துல்லாஹ் (ரலி) அவர்கள்) என்னைத் தடுத்துவிட்டார்கள்.
(என் தந்தை) அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் உஹுதுப் போர் நாளில் கொல்லப்பட்டுவிட்ட பின் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நான் ஒருபோதும் எந்தப் போரிலும் கலந்துகொள்ளாமல் இருந்ததில்லை.
அத்தியாயம் : 32
3709. புரைதா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பத்தொன்பது அறப்போர்களில் கலந்து கொண்டார்கள். அவற்றில் எட்டுப் போர்களில் அவர்கள் (நேரடியாகப்) போரிட்டார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் அபூபக்ர் பின் அபீஷைபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "அவற்றில்” எனும் சொல் இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 32
3710. புரைதா (ரலி) அவர்கள் கூறிய தாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பதினாறு போர்களில் கலந்து கொண்டேன்.
அத்தியாயம் : 32
3711. சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஏழு அறப்போர்களில் கலந்துகொண்டேன். அவர்கள் அனுப்பிக்கொண்டிருந்த படைப்பிரிவுகளில் பங்கேற்று ஒன்பது அறப்போர்களுக்குச் சென்றுள்ளேன். (அவற்றில்) ஒருமுறை எங்களுக்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் தளபதியாக நியமிக்கப்பட்டிருந்தார்கள். ஒருமுறை உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் தளபதியாக நியமிக்கப்பட்டிருந்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், (சலமா (ரலி) அவர்கள் கலந்து கொண்ட அறப்போர் மற்றும் படைப்பிரிவு ஆகிய) அவ்விரண்டின் எண்ணிக்கையும் ஏழு என்றே இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 32
பாடம் : 50 "தாத்துர் ரிக்காஉ” போர்.
3712. அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் ஒரு போருக்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் புறப்பட்டோம். எங்களில் ஆறு பேருக்கு ஓர் ஒட்டகம்தான் இருந்தது. அதில் நாங்கள் ஒருவர் பின் ஒருவராக (முறை வைத்து) பயணம் செய்தோம். (வாகனம் இல்லாமல் நடந்தே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதால்) எங்களுடைய பாதங்கள் தேய்ந்து (கொப்புளங்கள் வெடித்து)விட்டன. என்னுடைய இரண்டு பாதங்களும் தேய்ந்து என் கால் நகங்கள் விழுந்துவிட்டன.
அப்போது நாங்கள் எங்கள் கால்களில் துண்டுத் துணிகளைச் சுற்றிக்கொள்பவர்களாக இருந்தோம். இவ்வாறு துண்டுத் துணிகளை நாங்கள் கால்களில் சுற்றிக் கட்டிக்கொண்டதால் தான் அந்தப் போருக்கு "தாத்துர் ரிக்காஉ”(ஒட்டுத் துணிப் போர்) எனப்பெயர் சூட்டப்பெற்றது.
இதன் அறிவிப்பாளரான அபூபுர்தா பின் அபீமூசா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
இந்த ஹதீஸை அறிவித்த பின் (என் தந்தை) அபூமூசா (ரலி) அவர்கள், தம்மைப் பற்றித் தாமே இவ்வாறு அறிவித்ததை விரும்பவில்லை. தமது நற்செயல் ஒன்றைத் தாமே வெளியே சொல்லிவிட்டதை அவர்கள் விரும்பவில்லை போலும்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூஉசாமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
புரைத் (ரஹ்) அவர்கள் அல்லாத மற்றொருவரது அறிவிப்பில் "அல்லாஹ் அதற்குரிய நற்பலனை அவர்களுக்கு வழங்குவானாக" என்று அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 32
பாடம் : 51 அறப்போர்களில் இறைமறுப்பாளரிடம் உதவி கோருவது வெறுக்கத்தக்கதாகும்.
3713. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பத்ரை நோக்கி (போருக்கு)ப் புறப்பட்டார்கள். (மதீனாவுக்கு அருகில்) "ஹர்ரத்துல் வபரா” எனும் இடத்தில் அவர்கள் இருந்தபோது அவர்களை ஒரு மனிதர் அணுகினார். அவரது வீரதீரமும் விவேகமும் (மக்களால் பெரிதும்) பேசப்பட்டு வந்தது. அவரைப் பார்த்ததும் நபித்தோழர்கள் மகிழ்ச்சியுற்றனர்.
அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அணுகி, "உம்மைப் பின்பற்றி, உம்முடன் சேர்ந்து (எதிரிகளோடு) போரிட நான் வந்துள்ளேன்" என்று கூறினார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீ அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நம்புகிறாயா?" என்று கேட்டார்கள். அவர் "இல்லை” என்றார். "அப்படியானால் நீ திரும்பிச் செல். ஓர் இணைவைப்பாளரிடம் நான் உதவி கோரமாட்டேன்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறிவிட்டார்கள்.
பிறகு சிறிது தூரம் சென்று, நாங்கள் "அஷ்ஷஜரா” எனும் இடத்தில் இருந்தபோது, அந்த மனிதர் மீண்டும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அணுகி, முன்பு கூறியதைப் போன்றே கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முன்பு கூறியதைப் போன்றே கூறிவிட்டு, "நீ திரும்பிச் சென்றுவிடு. நான் ஓர் இணைவைப்பாளரிடம் உதவி கோர மாட்டேன்" என்று கூறினார்கள்.
பிறகு அந்த மனிதர் திரும்பிச் சென்றுவிட்டு, "அல்பைதா" எனும் இடத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அணுகியபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், முன்பு கேட்டதைப் போன்றே "நீ அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நம்புகிறாயா?" என்று கேட்டார்கள். அதற்கு அவர் "ஆம்" என்றார்.
ஆகவே, அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அப்படியானால், நீர் (நம்முடன்) வரலாம்" என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
Previous Post Next Post