அத்தியாயம் 34 வியாபாரம்

ஸஹீஹுல் புகாரி
அத்தியாயம் 34
வியாபாரம்

அளவற்ற அருளாளனும் கருணையன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கிறேன்.

அல்லாஹ் கூறினான்:

''அல்லாஹ் வியாபாரத்தை ஹலாலாக்கியிருக்கிறான். வட்டியை ஹராமாக்கி இருக்கிறான்'' (திருக்குர்ஆன் 02:275)

மேலும் அல்லாஹ் கூறினான்:

உங்களிடையே சுற்றிவரும் ரொக்க வியாபாரத்தைத் தவிர (மற்றவற்றை எழுதிக் கொள்ளுங்கள்) (திருக்குர்ஆன் 02:282)

பகுதி 1

அல்லாஹ் கூறினான்:

(ஜும்ஆ) தொழுகை நிறைவேற்றப்பட்டுவிட்டதும் (பள்ளியிலிருந்து வெளிப்பட்டு) பூமியில் பரவிச் சென்று அல்லாஹ்வின் அருளைத் தேடிக் கொள்ளுங்கள்; அன்றியும், நீங்கள் வெற்றியடையும் பொருட்டு, அல்லாஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யுங்கள்.

இன்னும், (நபியே!) அவர்களில் (சிலர்) ஒரு வியாபாரத்தையோ அல்லது ஒரு வேடிக்கையோ கண்டால், அதன்பால் அவர்கள் சென்று விடுகின்றனர். மேலும், நின்றவண்ணமே உம்மைவிட்டு விடுகின்றனர். 'அல்லாஹ்விடம் இருப்பது, வேடிக்கையை விடவும் வியாபாரத்தை விடவும் மிகவும் மேலானதாகும்; மேலும் அல்லாஹ் உணவளிப்பவர்களில் மிகவும் மேலானவன்!'' என்று (நபியே) நீர் கூறும்! (அல்குர்ஆன 62:10, 11)

மேலும் அல்லாஹ் கூறினான்:

''உங்களில் ஒருவருக்கொருவர் இசைந்து ஏற்படுத்திக்கொள்கிற வர்த்தகம் அல்லாமல், ஒருவர் மற்றவரின் பொருட்களை தவறான முறையில் உண்ணாதீர்கள்!'' (திருக்குர்ஆன் 4:29)

2047. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

''அபூ ஹுரைராவின் ஹதீஸ் அளவிற்கு முஜாஹிர்களும் அன்ஸாரிகளும் ஏன் அறிவிப்பதில்லை? அபூ ஹுரைரா மட்டும் அதிகமாக நபி(ஸல்) அவர்களின் ஹதீஸ்களை அறிவிக்கிறாரே!'' என்று நீங்கள் கூறுகிறீர்கள். முஹாஜிர்களைச் சேர்ந்த என்னுடைய சகோதரர்கள் கடைவீதிகளில் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தனர். நான் 'என் வயிறு நிரம்பினால் போதும்' என்று நபி(ஸல்) அவர்களுடனேயே இருந்து வந்தேன். அவர்கள் (நபி(ஸல்) அவர்களிடம்) செல்லாதபோதும் நான் செல்வேன். (நபிமொழிகளை) அவர்கள் மறந்து விடும்போது நான் மனனம் செய்து கொள்வேன்! என்னுடைய அன்ஸாரிச் சகோதரர்கள் தங்கள் செல்வங்களின் (பராமரிப்புப்) பணியில் ஈடுபட்டிருந்தனர்; நான் பள்ளிவாசலின் திண்ணையில் இருந்த ஏழைகளில் ஓர் ஏழையாக இருந்தேன். அவர்கள் மறந்துவிடும் வேளையில் நபி(ஸல்) அவர்களின் போதனைகளை நான் மனனம் செய்து கொள்வேன்! மேலும், நபி(ஸல்) அவர்கள், 'நான், என்னுடைய இந்த வாக்கைச் சொல்லி முடிக்கும்வரை தன்னுடைய ஆடையை விரித்து வைத்திருந்து. பிறகு அதைத் தன்பக்கம் (நெஞ்சோடு) சேர்த்து (அணைத்து)க் கொள்கிறவர் நான் சொல்பவற்றை மனனம் செய்யாதிருக்கமாட்டார்!' எனக் கூறினார்கள். நான் என் மீது கிடந்த ஒரு போர்வையை விரித்து, நபி(ஸல்) அவர்கள் தங்களின் வாக்கை முடித்ததும் அதை என் நெஞ்சோடு சேர்த்து (அணைத்துக்) கொண்டேன்; (அதன்பின்னர் நபி(ஸல்) அவர்களின் அந்த வாக்கில் எதனையும் நான் மறக்கவில்லை!''

2048. அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அறிவித்தார்.

முஹாஜிர்களான நாங்கள் மதீனாவுக்கு வந்தபோது நபி(ஸல்) அவர்கள் என்னையும் ஸஅத் இப்னு ரபீஉ(ரலி) அவர்களையும் சகோதரர்களாக ஆக்கினார்கள். ஸஅத்(ரலி) 'நான் அன்ஸாரிகளில் அதிகச் செல்வமுடையவன்; எனவே, என் செல்வத்தில் பாதியை உமக்குப் பிரித்துத் தருகிறேன். என்னுடைய இரண்டு மனைவியரில் நீர் யாரை விரும்புகிறீர் என்று பாரும்! அவரை உமக்காக விவாகரத்துச் செய்கிறேன். அவரின் இத்தா முடிந்ததும் அவரை உமக்கு மணம் முடித்துத் தருகிறேன்!'' என்று கூறினார். அப்போது நான், 'இது எனக்குத் தேவையில்லை! வியாபாரம் நடைபெறுகிற கடைவீதி ஏதும் (இங்கு) இருக்கிறதா?' எனக் கேட்டேன். அவர், 'கைனுகா எனும் கடை வீதி இருக்கிறது!'' என்றார். நான் அங்கே சென்று பாலாடைக் கட்டியையும் நெய்யையும் (லாபமாகக்) கொண்டு வந்தேன். மறுநாளும் தொடர்ந்து சென்றேன். சிறிது காலத்திற்குள் நறுமணப் பொருளின் (மஞ்சள்) கறையுடன் நபி(ஸல்) அவர்களிடம் வந்தேன். நபி(ஸல்) அவர்கள், 'நீ மண முடித்துவிட்டாயா?' என்று கேட்டார்கள். நான் 'ஆம்!'' என்றேன். 'யாரை?' என்றார்கள். 'ஓர் அன்ஸாரிப் பெண்ணை!'' என்றேன். 'எவ்வளவு மஹ்ர் கொடுத்தாய்?' என்று கேட்டார்கள். 'ஒரு பேரீச்சங் கொட்டை எடைக்குத் தங்கம்!'' என்றேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'ஓர் ஆட்டையேனும் மணவிருந்தாக அளிப்பாயாக!'' என்றார்கள்.

2049. அனஸ்(ரலி) அறிவித்தார்.

அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) மதீனாவுக்கு வந்தபோது, அவர்களையும் ஸஅத் இப்னு ரபீஉ(ரலி) அவர்களையும் நபி(ஸல்) அவர்கள் சகோதரர்களாக ஆக்கினார்கள். ஸஅத்(ரலி) வசதி படைத்தவராக இருந்தார். அவர் அப்துர் ரஹ்மானிடம், 'என்னுடைய செல்வத்தைச் சரி பாதியாக உமக்குப் பிரித்துத் தருகிறேன். (என் மனைவியரில் ஒருத்தியை விவாகரத்து செய்து) உமக்கு மண முடித்துத் தருகிறேன்!' எனக் கூறினார். அதற்கு அப்துர் ரஹ்மான்(ரலி), 'உம்முடைய குடும்பத்திலும் செல்வத்திலும் அல்லாஹ் பரக்கத் செய்வானாக!' எனக்குக் கடை வீதியைக் காட்டுங்கள்! எனக் கூறினார். அவர் பாலாடைக் கட்டியையும் நெய்யையும் இலாபமாகப் பெற்று, அவர் தங்கியிருந்த வீட்டாரிடம் கொண்டு வந்தார். சிறிது காலத்திற்குள் நறுமணப் பொருளின் (மஞ்சள்) கறையுடன் வந்தார். அவரிடம் நபி(ஸல்) அவர்கள் 'என்ன விசேஷம்?' எனக் கேட்டார்கள். அதற்கவர், 'இறைத்தூதர் அவர்களே! நான் ஓர் அன்ஸாரிப் பெண்ணை மணமுடித்துக் கொண்டேன்!'' என்றார். நபி(ஸல்) 'அவருக்கு என்ன மஹர் கொடுத்தீர்?' எனக் கேட்டார்கள். 'ஒரு பேரீச்சங் கொட்டை எடைக்குத் தங்கம்!'' என அவர் பதில் கூறினார். அதற்கு 'ஓர் ஆட்டையேனும் மணவிருந்ததாக அளிப்பீராக!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

2050. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

உக்காழ், மஜன்னா, துல்மஜாஸ் ஆகியவை அறியாமைக் காலத்தில் கடைவீதிகளாக இருந்தன. இஸ்லாம் வந்ததும் அங்கே வியாபாரம் செய்வதை மக்கள் குற்றம் எனக் கருதினார்கள். அப்போது 'உங்களுடைய இறைவனின் அருளைத் தேடுவது உங்களின் மீது குற்றமில்லை'' என்ற (திருக்குர்ஆன் 02:198) வசனம் அருளப்பட்டது.

இவ்வசனத்துடன் ஹஜ்ஜுக்காலங்களில் என்பதையும் சேர்த்து இப்னு அப்பாஸ்(ரலி) ஓதியிருக்கிறார்.

பகுதி 2

அனுமதிக்கப்பட்டது தெளிவானது; விலக்கப்பட்டதும் தெளிவானது; அவ்விரண்டிற்குமிடையே சந்தேகத்திற்கிடமானதும் உள்ளது.

2051. 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

''ஹலால் எனும் அனுமதிக்கப்பட்டது தெளிவானது; ஹராம் எனும் விலக்கப்பட்டதும் தெளிவானது; அவ்விரண்டிற்குமிடையே சந்தேகத்திற்கிடமான காரியங்கள் உள்ளன. பாவம் எனச் சந்தேகப்படுபவற்றைவிட்டு விடுகிறவர் பாவம் என்று தெளிவாகத் தெரிவதை நிச்சயம்விட்டு விடுவார்; பாவம் எனச் சந்தேகப்படுபவற்றைச் செய்யத் துணிகிறவர் தெளிவான பாவங்களிலும் வீழ்ந்து விடக் கூடும். பாவங்கள் அல்லாஹ் போட்ட வேலிகளாகும். வேலியைச் சுற்றி மேய்கிறவர் அதற்குள்ளும் சென்று விடக்கூடும்''

என நுஃமான் இப்னு பஷீர்(ரலி) அறிவித்தார்.

பகுதி 3

சந்தேகத்திற்கிடமானவை பற்றிய விளக்கம்.

''(பாவங்களில் சிக்கிக் கொள்ளாமல்) பேணுதலாக இருப்பதைவிட மிகவும் எளிதான ஒன்றை நான் காணவில்லை! 'சந்தேகத்திற்கிடமானவற்றை நீர்விட்டுவிட்டு, சந்தேகத்திற்கிடமில்லாதவற்றின் பக்கம் சென்று விடுவீராக!'' (என்னும் நபி போதனையைப் பின்பற்றியதால்தான் இறையச்சமுடைய பேணுதலான வாழ்க்கை வாழ்வது எனக்கு எளிதாயிற்று!)'' என்று ஹஸ்ஸான் இப்னு அபீ ஸினான்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

2052. உக்பா இப்னு ஹாரிஸ்(ரலி) அறிவித்தார்.

கருப்பு நிறப் பெண் ஒருவர் (என்னிடம்) வந்து, எனக்கும் என் மனைவிக்கும் தாம் பாலூட்டியிருப்பதாகக் கூறினார். இது பற்றி நபி(ஸல்) அவர்களிடம் நான் கூறியபோது, (முதலில்) அவர்கள் அதைக் கண்டு கொள்ளவில்லை; பிறகு (மீண்டும் மீண்டும் நான் கூறவே) புன்னகைத்துவிட்டு 'இவ்வாறு கூறப்பட்ட பின் எப்படி (அவளுடன் நீ வாழ முடியும்?' என்று வினவினார்கள். அப்பொழுது எனக்கு மனைவியாக இருந்தவர் அபூ இஹாப் தமீமியின் மகளாவார்!

2053. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

''ஸம்ஆ'' என்பவரின் அடிமைப் பெண்ணுடைய மகன் எனக்குப் பிறந்தவன். எனவே, அவனை நீ கைப்பற்றிக் கொள்!'' என்று உத்பா இப்னு அபீ வக்காஸ்(ரலி) (தம் மரண வேளையில்) தம் சகோதரர் ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அவர்களிடம் உறுதிமொழி வாங்கினார். மக்கா வெற்றி கொள்ளப்பட்ட ஆண்டு ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அந்தச் சிறுவனைப் பிடித்துக் கொண்டு, 'இவன் என் சகோதரரின் மகன்! என்னிடம் அவர் உறுதிமொழி வாங்கியிருக்கிறார்!' எனக் கூறினார். அப்போது ஸம்ஆவின் மகன் அப்து(ரலி), 'இவன் என் சகோதரன்; என் தந்தையின் அடிமைக்குப்பிறந்தவன்; என் தந்தையின் ஆதிக்கத்தில் இவனுடைய தாயார் இருக்கும்போது பிறந்தவன்!' எனக் கூறினார். இருவரும் நபி(ஸல்) அவர்களிடம் வந்தனர். அப்போது ஸஅத்(ரலி) 'இறைத்தூதர் அவர்களே! இவன் என் சகோதரரின் மகன். இவனைப் பற்றி என் சகோதரர் உறுதிமொழி வாங்கியிருக்கிறார்' எனக் கூறினார். அதற்கு ஸம்ஆவின் மகன் அப்து(ரலி) 'இவன் என் சகோதரன்! என் தந்தையின் ஆதிக்கத்தில் இவனுடைய தாய் இருக்கும்போது என் தந்தைக்குப் பிறந்தவன்! எனக் கூறினார். அப்போது நபி(ஸல்) அவர்கள்,''ஸம்ஆவின் மகன் அப்தே! இவன் உமக்குரியவனே! எனக் கூறினார்கள். பின்னர் '(தாய்) யாருடைய ஆதிக்கத்தில் இருக்கும்போது குழந்தை பிறக்கிறதோ அவருக்கே அக்குழந்தை உரியது! விபச்சாரம் செய்தவருக்கு இழப்புதான் உரியது! எனக் கூறினார்கள். பின்னர், தம் மனைவியும் ஸம்ஆவின் மகளுமான ஸவ்தா(ரலி) அவர்களிடம் 'ஸவ்தாவே! நீ இவரிடம் ஹிஜாபைப் பேணிக் கொள்!'' என்றார்கள். ('அவர் ஸம்ஆவின் மகன்தான்! என்று நபி(ஸல்) அவர்கள் தீர்ப்பளித்தாலும்) உத்பாவின் தோற்றத்தில் அவர் இருந்ததால்தான் இவ்வாறு நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். அதன் பிறகு அவர் அன்னை ஸவ்தா(ரலி) அவர்களை மரணிக்கும்வரை சந்திக்கவில்லை.

2054. அதீ இப்னு ஹாதிம்(ரலி) அறிவித்தார்.

நான் நபி(ஸல்) அவர்களிடம் ஈட்டி (மூலம் வேட்டையாடுவதைப்) பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், 'பிராணியை ஈட்டி அதன் முனையால் தாக்கிக் கொன்றால் அதை நீ உண்; பக்கவாட்டாகத் தாக்கிக் கொன்றால் அதை நீ உண்ணாதே. ஏனெனில் அது அடித்துக் கொல்லப்பட்டதாகும்'' என்றார்கள். நான் இறைத்தூதர் அவர்களே! (வேட்டைக்காக) நான் என்னுடைய நாயை அல்லாஹ்வின் பெயர் கூறி அனுப்புகிறேன்; வேட்டையாடப் பட்ட பிராணிக்கு அருகில் என்னுடைய நாயுடன் மற்றொரு நாயையும் காண்கிறேன்; அந்த மற்றொரு நாய்க்காக நான் அல்லாஹ்வின் பெயர் கூறவில்லை; இவ்விரு நாய்களில் எது வேட்டையாடியது என்பதும் எனக்குத் தெரியவில்லை (அதை நான் சாப்பிடலாமா?) எனக் கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'சாப்பிடாதே! நீ அல்லாஹ்வின் பெயர் கூறியது உன்னுடைய நாயை அனுப்பும்போது தான். மற்றொரு நாய்க்கு நீ அல்லாஹ்வின் பெயர் கூறவில்லை'' என விடையளித்தார்கள்.

பகுதி 4 சந்தேகத்திற்குரியவற்றை எந்த அளவுக்குத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்?

2055. அனஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் கீழே கிடந்த பேரீச்சம் பழத்தைக் கடந்து சென்றார்கள். அப்போது, 'இது ஸதக்காப் பொருளாக இருக்காது என்றிருந்தால் இதை நான் சாப்பிட்டிருப்பேன்'' என்றார்கள்.

''என்னுடைய படுக்கையில் விழுந்து கிடக்கும் பேரீச்சம் பழத்தை நான் பார்க்கிறேன்...' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) வழியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பகுதி 5

அடிப்படை இல்லாத மனக் குழப்பங்கள் சந்தேகத்திற்குரியவைகளில் சேராது.

2056. அப்துல்லாஹ் இப்னு ஸைத் இப்னி ஆஸிம்(ரலி) அறிவித்தார்.

'ஒருவர் தொழும்போது காற்றுப் பிரிந்தது போன்று உணர்கிறார்; இதனால் தொழுகை முறியுமா?' என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கவர்கள், 'சப்தத்தைக் கேட்கும்வரை அல்லது நாற்றத்தை உணரும்வரை முறியாது'' என்றார்கள்.

சப்தத்தைக் கேட்காமல், நாற்றத்தை உணராமல் உளூ தேவையில்லை என்று ஸுஹ்ரி கூறுகிறார்.

2057. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

'இறைத்தூதர் அவர்களே! ஒரு கூட்டத்தினர் எங்களிடம் இறைச்சியைக் கொண்டு வருகின்றனர். அதன் மீது (அறுக்கும் போது) அல்லாஹ்வின் பெயர் கூறினார்களா இல்லையா என்பது எங்களுக்குத் தெரியவில்லை' என்று ஒரு கூட்டத்தினர் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'நீங்கள் அதன்மீது அல்லாஹ்வின் பெயர் கூறி உண்ணுங்கள்'' என்றார்கள்.

பகுதி 6

அல்லாஹ் கூறினான்:

''அவர்கள் வியாபாரத்தை அல்லது வீணானவற்றைக் கண்டால் அதன்பால் சென்று விடுகிறார்கள்'' (திருக்குர்ஆன் 62:11)

2058. ஜாபிர்(ரலி) அறிவித்தார்.

நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் தொழுது கொண்டிருந்தோம். அப்போது உணவுப் பொருட்களை ஏற்றிக் கொண்டு ஷாம் நாட்டிலிருந்து ஒரு வணிகக் கூட்டம் வந்தது. மக்கள் அதை நோக்கிச் சென்றார்கள். நபி(ஸல்) அவர்களுடன் பன்னிரண்டு நபர்களைத் தவிர யாரும் எஞ்சியிருக்கவில்லை. அப்போது, 'அவர்கள் வியாபாரத்தையோ வீணானவற்றையோ கண்டால் அதன் பால் செல்வார்கள்'' என்ற வசனம் அருளப்பட்டது.

பகுதி 7

'எவ்வாறு பொருள் ஈட்டினோம்' என்பது பற்றிப் பொருட்படுத்தாதவர்.

2059. 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

''தாம் சம்பாதித்தது ஹலாலா ஹராமா என்று மக்கள் பொருட்படுத்தாத ஒரு காலம் (இனி) வரும்!''

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பகுதி 8

தரை வழி வாணிபமும் மற்றவையும்.

''அந்த இறையில்லங்களில் காலையிலும் மாலையிலும் அவனைத் துதித்துக் கொண்டிருப்பவர்கள் எத்தகையோரெனில், இறைவனை நினைவு கூருவதிலிருந்தும், தொழுகையை நிலைநாட்டுவதிலிருந்தும், ஸகாத் கொடுப்பத்திலிருந்தும் வியாபாரமும் கொடுக்கல் வாங்கலும் திசைதிருப்பி விடுவதில்லை!'' (திருக்குர்ஆன் 24:37)

''அன்றைய மக்கள் கொடுக்கல், வாங்கலும் வியாபாரமும் செய்து வந்தார்கள். ஆயினும், இறைவனுக்குச் செய்ய வேண்டிய ஒரு கடமை அவர்கள் முன்னே வரும்போது அதை நிறைவேற்றி முடிக்கும் வரை அவர்களின் வியாபாரமோ, கொடுக்கல் வாங்கலோ அவர்களை திசை திருப்பவில்லை!'' என்று கதாதா(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

2060 / 2061. அபுல் மின்ஹால்(ரஹ்) அறிவித்தார்.

''நான் நாணய மாற்று வியாபாரம் செய்து வந்தேன்; அது பற்றி(ய மார்க்கச் சட்டத்தை) ஸைத் இப்னு அர்கம்(ரலி), பராஉ இப்னு ஆஸிப்(ரலி) ஆகியோரிடம் கேட்டேன். அதற்கவர்கள், 'நாங்கள் நபி(ஸல்) அவர்களின் காலத்தில் வியாபாரிகளாக இருந்தோம்; அவர்களிடம் நாணயமாற்று வியாபாரம் பற்றிக் கேட்டோம். அதற்கு 'உடனுக்குடன் மாற்றினால் அதில் தவறில்லை; தவணையுடன் இருந்தால் அது கூடாது!'' என அவர்கள் பதிலளித்தார்கள்!' என்றார்கள்!''

பகுதி 9

வியாபாரத்திற்காக வெளியே செல்லுதல்.

அல்லாஹ் கூறினான்.

''நீங்கள் பூமியில் பரவி அல்லாஹ்வின் அருளைத் தேடுங்கள்!'' (திருக்குர்ஆன் 62:10)

2062. உபைத் இப்னு உமைர்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

உமர்(ரலி) (கலீஃபாவாக இருந்த காலத்தில்) அபூ மூஸா(ரலி) வந்து, உள்ளே வர அனுமதி கோரினார்கள். உமர்(ரலி) அலுவலில் ஈடுபட்டிருந்ததால் அவர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை; உடனே அபூ மூஸா(ரலி) திரும்பிவிட்டார்கள். அலுவலை முடித்த உமர்(ரலி), 'அபூ மூஸாவின் குரலை நான் கேட்டேனே! அவருக்கு அனுமதி அளியுங்கள்!'' என்றார்கள். 'அவர் திரும்பிச் சென்றார்!'' என்று கூறப்பட்டது. உடனே உமர்(ரலி) அபூ மூஸா(ரலி) அவர்களை அழைத்து வரச் செய்தார்கள். (''ஏன் திரும்பிச் சென்றுவிட்டீர்?' என்று உமர்(ரலி) கேட்டபோது) அபூ மூஸா(ரலி), 'இவ்வாறே நாங்கள் கட்டளையிடப்பட்டிருந்தோம்!' எனக் கூறினார்கள். உமர்(ரலி) 'இதற்குரிய சான்றை நீர் என்னிடம் கொண்டுவாரும்!' எனக் கேட்டார்கள். உடனே, அபூ மூஸா(ரலி) அன்ஸாரிகளின் அவைக்குச் சென்று அவர்களிடம் கேட்டார்கள். அதற்கவர்கள், 'நம்மில் இளையவரான அபூ ஸயீத் அல்குத்ரியைத் தவிர வேறு யாரும் இந்த விஷயத்தில் உமக்கு சாட்சி சொல்ல மாட்டார்கள்!'' என்றனர். அபூ மூஸா(ரலி) அபூ ஸயீத் அல்குத்ரி(ரலி) கூறியதை உறுதிப்படுத்தியதும்) உமர்(ரலி), 'நபி(ஸல்) அவர்களின் இந்தக் கட்டளை எனக்குத் தெரியாமல் போய்விட்டதா? நபி(ஸல்) அவர்களின் காலத்தில் (வெளியே சென்று) கடைவீதிகளில் நான் வியாபாரம் செய்து கொண்டிருந்தது என் கவனத்தை திசைதிருப்பிவிட்டது போலும்!'' என்று கூறினார்கள்.

பகுதி 10

கடல்வழிப் பயணம் மேற்கொண்டு வியாபாரம் செய்தல்.

''இதில் எந்தத் தவறுமில்லை! குர்ஆனில் கடல் பயணம் குறித்து அல்லாஹ், தகுந்த காரணத்தோடுதான் (தன் அருட்கொடையாக அதை வர்ணித்துக்) கூறியுள்ளான்!'' என்று ம(த்)தர்(ரஹ்) அவர்கள் கூறிவிட்டு, 'நீங்கள் கடலிலிருந்து மிருதுவான (புத்தம் புதிய) மாமிசத்தைப் புசிப்பதற்காகவும், அணிந்து கொள்ளக் கூடிய ஆபரணத்தை அதிலிருந்து நீங்கள் வெளிக் கொணர்வதற்காகவும் அவன்தான் கடலை உங்களுக்க வசப்படுத்தித் தந்தான்! இன்னும் அதில் நீரைப் பிளந்து கொண்டு செல்லும் கப்பலை நீர் காண்கிறீர்! (பல்வேறு நாடுகளுக்கும் சென்று) அவனுடைய அருட்கொடையை நீங்கள் தேடுவதற்காகவும் அவனுக்கு நன்றி செலுத்தத் கூடியவர்களாய் நீங்கள் திகழ்வதற்காகவுமே இவையெல்லாம் (உங்களுக்கு வசப்படுத்தித் தரப்பட்டு) உள்ளன!'' என்ற (திருக்குர்ஆன் 16:14) இறைவசனத்தை ஓதினார்!

2063. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

''நபி(ஸல்) அவர்கள் இஸ்ரவேலர்களில் ஒரு மனிதரைப் பற்றிக் கூறும்போது 'அவர் கடல் மார்க்கமாகப் பயணம் சென்று. தம் தேவையை நிறைவேற்றினார்!'' என்று குறிப்பிட்டார்கள்.

பகுதி 11

அல்லாஹ் கூறினான்:

''அவர்கள் வியாபாரத்தையோ வேடிக்கையையோ கண்டால்... அதன் பால் சென்று விடுகிறார்கள்!'' (திருக்குர்ஆன் 62:11)

மேலும் அல்லாஹ் கூறினான்:

''வியாபாரமோ கொடுக்கல் வாங்கலோ அவர்களை இறை நினைவிலிருந்து திருப்பாது!'' (திருக்குர்ஆன் 24:27)

''அன்றைய தினம் வியாபாரம் செய்து வந்தனர். அல்லாஹ்விற்குச் செய்ய வேண்டிய கடமைகளில் ஒன்று அவர்கள் முன்னே வந்தால் அதை நிறைவேற்றும்வரை அவர்களின் வியாபாரமோ கொடுக்கல் வாங்கலோ இறைநினைவிலிருந்து அவர்களைத் திருப்பாது!'' என்று கதாதா(ரஹ்) கூறினார்.

2064. ஜாபிர்(ரலி) அறிவித்தார்.

''நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ஜும்ஆ தொழுகை தொழுது கொண்டிருந்தபோது வணிகக் கூட்டம் ஒன்று வந்தது. உடனே, பன்னிரண்டு நபர்களைத் தவிர மற்றவர்கள் (வணிகக் கூட்டத்தை நோக்கி கலைந்து) ஓடிவிட்டனர். அப்போது, 'அவர்கள் வியாபாரத்தையோ வேடிக்கையையோ கண்டால், நின்ற நிலையில் உம்மைவிட்டுவிட்டு அங்கே ஓடி விடுகிறார்கள்!' என்னும் (திருக்குர்ஆன் 62:11) இறைவசனம் அருளப்பட்டது!''

பகுதி 12

அல்லாஹ் கூறினான்:

''(அனுமதிக்கப்பட்ட வழிகளில்) நீங்கள் சம்பாதித்தவற்றிலிருந்து சிறந்தவற்றைச் செலவு செய்யுங்கள்!'' (திருக்குர்ஆன் 02:267)

2065. 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

''ஒரு பெண் தம் வீட்டிலுள்ள உணவைப் பாழ்படுத்தாமல், (பசித்தவர்களுக்குக் கொடுத்து) செலவு செய்தால் (அப்படி) செலவு செய்ததற்காக (அவளுக்குரிய) நற்கூலி அவளுக்கு கிடைக்கும்! (அந்த உணவைச்) சம்பாதித்தற்கான நற்கூலி அவளுடைய கணவனுக்கு உண்டு! கருவூலப் பொறுப்பாளருக்கும் அதுபோல் (நற்கூலி) கிடைக்கும்! ஒருவர் மற்றவரின் கூலியில் எதனையும் குறைத்து விடமாட்டார்!''

என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

2066. 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

''ஒரு பெண், தன் கணவனின் கட்டளையின்றி அவனுடைய சம்பாத்தியத்திலிருந்து செலவு செய்தாலும் அவனுடைய நற்கூலியில் பாதி அவளுக்கு உண்டு!''

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பகுதி 13

செல்வ வளத்தை ஒருவர் விரும்பினால்...?

2067. 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

''ஒருவர் செல்வ வளம் தமக்கு வழங்கப்பட வேண்டும் அல்லது தம் வாழ்நாள் அதிகரிக்கப்படவேண்டும்'' என்று விரும்பினால் அவர் தம் உறவினர்களுடன் சேர்ந்து வாழட்டும்!''

என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

பகுதி 14

நபி(ஸல்) அவர்கள் பொருட்களைக் கடனாக வாங்கியது.

2068. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

''நபி(ஸல்) அவர்கள் ஒரு யூதரிடம் குறிப்பிட்ட தவணையில் திருப்பித் தருவதாக உணவுப் பொருளை வாங்கினார்கள். (அதற்காக) அவரிடம் தம் இரும்புக் கவசத்தை அடைமானமாக வைத்தார்கள்!''

2069. அனஸ்(ரலி) அறிவித்தார்.

நான் நபி(ஸல்) அவர்களிடம் தீட்டப்படாத கோதுமையில் தயாரிக்கப்பட்ட ரொட்டியையும் வாசனை நீங்கிய உருக்கப்பட்ட கொழுப்பையும் கொண்டு சென்றேன். நபி(ஸல்) அவர்கள் தங்களின் கவசத்தை மதீனாவில் உள்ள ஒரு யூதரிடம் அடைமானமாக வைத்து அவரிடமிருந்து தம் குடும்பத்தினருக்காகத் தீட்டப்படாத கோதுமையை வாங்கியிருந்தார்கள். 'முஹம்மதின் குடும்பத்தினரிடம் தீட்டிய கோதுமையில் ஒரு ஸாவு, பிற தானியத்தில் ஒரு ஸாவு இருந்ததில்லை.'' அந்த நேரத்தில் அவர்களுக்கு ஒன்பது மனைவியர் இருந்தனர்.

பகுதி 15

ஒருவர் கைத் தொழில் செய்தும் உழைத்தும் உண்பது.

2070. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

அபூ பக்ர்(ரலி) கலீஃபாவாக ஆனபோது 'என்னுடைய தொழில் என் குடும்பத்தினரின் செலவுக்குப் போதுமானதாக இருந்தது என்பதை என் சமுதாயத்தினர் அறிவர்; இப்போது நான் முஸ்லிம்களின் தலைமைப் பொறுப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளேன்; இனி அபூ பக்ரின் குடும்பத்தினர் இந்தப் பொது நிதியிலிருந்து உண்பார்கள். இதில் முஸ்லிம்களுக்காக நான் உழைப்பேன்' எனக் கூறினார்கள்.

2071. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நபித்தோழர்கள் பலர் உழைத்து உண்பவர்களாக இருந்தனர். இதனால் அவர்களிடம் (வியர்வை) வாடை வீசும். இதன் காரணமாகவே 'நீங்கள் குளிக்கக் கூடாதா?' என்று அவர்களிடம் கூறப்பட்டது.

2072. 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

''ஒருவர் தம் கையால் உழைத்து உண்பதை விடச் சிறந்த உணவை ஒருபோதும் உண்ண முடியாது. தாவூத் நபி அவர்கள் தங்களின் கையால் உழைத்து உண்பவர்களாகவே இருந்தனர்.''

என மிக்தாம்(ரலி) அறிவித்தார்.

2073. 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

''தாவூத் நபி(ஸல்) தம் கையால் உழைத்தே தவிர உண்ண மாட்டார்கள்.''

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

2074 / 2075 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

''பிறரிடம் யாசகம் கேட்பதை விட ஒருவர் தம் முதுகில் விறகுக் கட்டைச் சுமந்து (விற்கச்) செல்வது சிறந்ததாகும். அவர் யாசிக்கும்போது யாரும் கொடுக்கவும் செய்யலாம்; மறுக்கவும் செய்யலாம்.''

இதை அபூ ஹுரைரா(ரலி) ஸுபைர் இப்னு அவ்வாம்(ரலி) இருவரும் அறிவித்தார்கள்.

பகுதி 16

விற்கும்போதும் வாங்கும் போதும் தாராளமாக நடந்து கொள்ளுதல்.

ஒருவர் தமக்குரிய உரிமைகளைத் தேடும்போது அதை முறையாகத் தேடட்டும்.

2076. 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

வாங்கும் பொழுதும் விற்கும் பொழுதும் வழக்குரைக்கும் பொழுதும் பெருந்தன்மையாக நடந்து கொள்ளும் மனிதருக்கு அல்லாஹ் அருள் புரிவானாக!''

என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.

பகுதி 17

(கடனைத் தீர்க்க) வசதி படைத்தவர்களுக்கும் அவகாசம் அளித்தல்.

2077. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

''உங்களுக்கு முன்னர் வாழ்ந்த ஒரு மனிதரின் உயிரை வானவர்கள் கைப்பற்றி, அவரிடம் 'நீர் ஏதேனும் நல்லது செய்திருக்கிறீரா?' எனக் கேட்டனர். அதற்கு அம்மனிதர், 'வசதியானவருக்கும் அவகாசம் அளிக்கும்படியும் (அவர் கடனைத் திருப்பிச் செலுத்த தாமதம் செய்வதை) கண்டு கொள்ளாமல் விட்டுவிடும்படியும் நான் என்னுடைய ஊழியர்களுக்குக் கட்டளையிட்டிருந்தேன்!'' என்று கூறினார். உடனே, 'அவரின் தவறுகளைக் கண்டு கொள்ளாமல் விட்டு விடுங்கள்!' என்று அல்லாஹ் வானவர்களுக்குக் கட்டளையிட்டான்!''

என ஹுதைஃபா(ரலி) அறிவித்தார்.

மற்றோர் அறிவிப்பில், 'சிரமப்படுபவருக்கு நான் அவகாசம் அளிப்பவனாகவும் வசதியானவரிடம் மிருதுவாக நடப்பவனாகவும் இருந்தேன்!' என்று அவர் கூறினார்கள் என இடம் பெற்றுள்ளது.

மற்றோர் அறிவிப்பில், 'வசதியானவருக்கு அவகாசம் வழங்கியும், சிரமப்படுபவரின் கடனைத் தள்ளுபடி செய்தும் வந்தேன்!'' என்று கூறினார்கள் என இடம் பெற்றுள்ளது.

இன்னொரு அறிவிப்பில், 'வசதியானவரிடமிருந்து கடனைத் திரும்பப் பெற்றுக் கொண்டு, சிரமப்படுபவரின் கடனைத் தள்ளுபடி செய்து வந்தேன்!'' என்று கூறினார்கள் என இடம் பெற்றுள்ளது.

பகுதி 18

கடனை அடைக்கச் சிரமப்படுபவருக்கு அவகாசம் அளித்தல்.

2078. 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

''(முன் காலத்தில்) மக்களுக்குக் கடன் கொடுக்கக் கூடிய ஒரு வியாபாரி இருந்தார். கடனைத் திருப்பிச் செலுத்தச் சிரமப்படுபவரை அவர் கண்டால், தம் பணியாளர்களிடம் இவரின் கடனைத்தள்ளுபடி செய்யுங்கள்; அல்லாஹ் நம்முடைய தவறுகளைத் தள்ளுபடிச் செய்யக்கூடும் என்று கூறுவார். அல்லாஹ்வும் அவரின் தவறுகளைத் தள்ளுபடி செய்தான்.''

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பகுதி 19

விற்பவரும் வாங்குபவரும் பொருட்களில் உள்ள குறைகளை மறைக்காமல் தெளிவுபடுத்தி நலம் நாடுதல்.

என்னிடமிருந்து ஓர் அடிமையை நபி(ஸல்) அவர்கள் வாங்கியபோது நபி(ஸல்) அவர்கள், 'அதா இப்னு காலித் என்பாரிடமிருந்து இறைத்தூதர் முஹம்மத் இவரை விலைக்கு வாங்கினார்; இது ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமிடம் செய்த வியாபாரமாகும்; இதில் எந்தக் குறையுமில்லை; இவரிடம் கெட்ட குணமில்லை. குற்றம் புரியும் தன்மையுமில்லை'' என்று எனக்கு எழுதித் தந்தனர்.

குற்றம் புரிதல் என்று இங்குக் கூறப்படுவது விபச்சாரம் செய்தல், திருடுதல், எஜமானரைவிட்டு ஓடுதல் ஆகியவையே!'' என்று கதாதா(ரஹ்) கூறினார்.

சில தரகர்கள் தொழுவங்களுக்கு 'குராஸான் தொழுவம்' 'ஸஜஸ்தான் தொழுவம்' என்று பெயரிட்டு, 'இது நேற்று குராஸானிலிருந்து வந்தது!'' என்று கூறுவார்கள். இது பற்றி இப்ராஹீம் நகயீ(ரஹ்) அவர்களிடம் கேட்கப்பட்டபோது அவர்கள் இதைக் கடுமையாக வெறுத்தார்கள்.

''விற்பனை செய்யும் பொருளில் குறை இருப்பதை அறிந்திருக்கிற எவரும் அதைத் தெளிவுபடுத்தாமல் விற்பது அனுமதிக்கப்பட்டதல்ல!'' என்று உக்பா இப்னு ஆமிர்(ரலி) கூறினார்.

2079. 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

''விற்பவரும் வாங்குபவரும் (அவ்விடத்திலிருந்து) பிரியாமலிருக்கும் வரை வியாபாரத்தை முறித்துக் கொள்ளும் உரிமை இருவருக்கும் உண்டு! அவ்விருவரும் உண்மை பேசிக்குறைகளைத் தெளிவுபடுத்தியிருந்தால் அவர்களின் வியாபாரத்தில் பரக்கத் (அருள் வளம்) அளிக்கப்படும்! குறைகளை மறைத்துப் பொய் சொல்லியிருந்தால் அவர்களின் வியாபாரத்தில் உள்ள பரக்கத் நீக்கப்படும்!''

என ஹகீம் இப்னு ஹிஸாம்(ரலி) அறிவித்தார்.

பகுதி 20

(பலரகப் பேரீச்சங்கனிகளும் கலந்திருக்கும்) பேரீச்சம் பழக் கலவையை விற்கலாமா?

2080. அபூ ஸயீத்(ரலி) அறிவித்தார்.

பலதரப்பட்ட பேரீச்சம் பழங்களின் கலவை எங்களுக்கு வழங்கப்படும்; அதை ஒரு ஸாவுக்கு இரண்டு ஸாவு என்ற அடிப்படையில் நாங்கள் விற்பனை செய்வோம். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'ஒரு ஸாவுக்கு இரண்டு ஸாவும் கூடாது; இரண்டு திர்ஹங்களுக்கு ஒரு திர்ஹமும் கூடாது!'' என்று கூறினார்கள்.

பகுதி 21

இறைச்சி வியாபாரம் செய்பவரும் (பிராணியை) அறுப்பவரும்.

2081. அபூ ஷுஐப் என்ற அன்ஸாரி, (பிராணியை) அறுத்துத் துண்டுபோடும் தம் ஊழியரிடம், 'ஐவருக்குப் போதுமான உணவை எனக்குத் தயார் செய்! ஐவரில் ஒருவராக நபி(ஸல்) அவர்களையும் நான் அழைக்கப் போகிறேன்; ஏனெனில், அவர்களின் முகத்தில் பசியை நான் உணர்ந்தேன்!'' என்று கூறிவிட்டு. ஐவரையும் அழைத்தார். அவர்களுடன் வேறு ஒரு மனிதரும் சேர்ந்து வந்தார். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'இந்த மனிதர் எங்களைப் பின்தொடர்ந்து வந்துவிட்டார். இவருக்கு அனுமதியளிக்க நீர் விரும்பினால் (அவ்வாறே) அனுமதி அளிப்பீராக! இவர் திரும்பி விட வேண்டும் என நீர் விரும்பினால் திரும்பி விடுவார்!'' என்று கூறினார்கள். அதற்கு அபூ ஷுஐப்(ரலி) 'இல்லை! அவருக்கு நான் அனுமதியளித்து விட்டேன்!'' என்றார்கள்.

பகுதி 22

குறைகளை மறைப்பதும் பொய் சொல்வதும் வியாபாரத்தை அழிக்கும்.

2082. 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

''விற்பவரும், வாங்குபவரும் (அவ்விடத்திலிருந்து) பிரியாமலிருக்கும்வரை வியாபாரத்தை முறித்துக் கொள்ளும் உரிமை இருவருக்கும் உண்டு! அவ்விருவரும் உண்மை பேசி(க் குறைகளைத்) தெளிவுபடுத்தியிருந்தால் அவர்களின் வியாபாரத்தில் பரக்கத் அளிக்கப்படும்! குறைகளை மறைத்துப் பொய் சொல்லியிருந்தால் அவர்களின் வியாபாரத்தில் உள்ள பரக்கத் நீக்கப்படும்!''

என ஹகீம் இப்னு ஹிஸாம்(ரலி) அறிவித்தார்.

பகுதி 23

அல்லாஹ் கூறினான்:

''நம்பிக்கையாளர்களே! நீங்கள் பன்மடங்காக இரட்டித்துக் கொண்டேயிருக்கும் வட்டியை உண்ணாதீர்கள்'' (திருக்குர்ஆன் 3:130)

2083. 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

''தாம் சம்பாதித்தது ஹலாலா ஹராமா என்று மனிதர்கள் பொருட்படுத்தாத ஒரு காலம் வரும்.''

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பகுதி 24

வட்டி உண்பவர், வட்டிக்கு சாட்சியாக இருப்பவர், வட்டிக்கு எழுத்தராக இருப்பவர்.

அல்லாஹ் கூறினான்.

''யார் வட்டி (வாங்கித்) தின்கிறார்களோ, அவர்கள் (மறுமையில்) ஷைத்தானால் தீண்டப்பட்ட ஒருவன் பைத்தியம் பிடித்தவனாக எழுவது போன்றல்லாமல் (வேறு விதமாய்) எழ மாட்டார்கள். (திருக்குர்ஆன் 02:175)

2084. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

பகரா அத்தியாயத்தின் கடைசி வசனம் அருளப்பட்டபோது அதை நபி(ஸல்) அவர்கள் பள்ளியில் வைத்து மக்களுக்கு ஓதிக் காட்டினார்கள். பின்னர் மதுபான வியாபாரத்தை ஹராமாக்கினார்கள்.

2085. 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

''இன்றிரவு (கனவில்) இரண்டு மனிதர்களைக் கண்டேன். அவர்கள் என்னிடம் வந்த தூய்மையான ஒரு நிலப்பகுதிக்கு என்னை அழைத்துச் சென்றனர். நாங்கள் நடந்து வந்தபோது இரத்த ஆறு ஒன்றை அடைந்தோம். ஆற்றில் ஒருவர் நின்றிருந்தார். ஆற்றின் நடுவில் இன்னொருவர் தமக்கு முன்னே கற்களை வைத்து நின்றிருந்தார். ஆற்றிலே உள்ளவர் வெளியேற முனையும்போது. அவர் வாயில் (ஆற்றின் நடுவில்) நின்றிருந்தவர் கல்லை எறிந்து அவர் முன்பு நின்ற இடத்திலேயே அவரைக் கொண்டுபோய் நிறுத்தினார். அவர் வெளியேற வரும் போதெல்லாம் இவர் அவரின் வாயில் கல்லை எறிய. அதனால் அவர் முன்பிருந்த இடத்திற்கே திரும்பிச் சென்று கொண்டிருந்தார்!

''அவர் யார்?' என்று (என்னை அழைத்துச் சென்றவர்களிடம்) கேட்டேன். அதற்கவர்கள் 'ஆற்றில் நீர் பார்த்தவர் வட்டி உண்பவராவார்!'' எனக் கூறினார்கள்.''

என ஸமுரா(ரலி) அறிவித்தார்.

பகுதி 25

வட்டி கொடுப்பவர்

அல்லாஹ் கூறினான்:

''நம்பிக்கையாளர்களே! நீங்கள் (உண்மையாகவே) நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கு அஞ்சி, எஞ்சியுள்ள வட்டியை வாங்காமல்விட்டு விடுங்கள்! இவ்வாறு நீங்கள் செய்யவில்லையென்றால் அல்லாஹ்விடமிருந்தும் அவனுடைய தூதரிடமிருந்தும் (உங்களுக்கெதிரான) போர் அறிவிப்பைப் பெறுங்கள்! நீங்கள் பாவமன்னிப்பு கேட்டு, (இப்பாவத்திலிருந்து) மீண்டுவிட்டால், உங்கள் மூலதனம் உங்களுக்கு உண்டு! (உங்களிடம் கடன் பட்டோருக்கு) நீங்கள் அநீதியிழைக்கக் கூடாது; உங்களின் மீதும் அநீதி இழைக்கப்பட மாட்டாது!'' (திருக்குர்ஆன் 02:278, 279)

''நபி(ஸல்) அவர்களுக்கு கடைசியாக அருளப்பட்ட (இறை)வசனம் இதுதான்!'' என்று இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்.

2086. அவ்ன் இப்னு அபீ ஜுஹைஃபா(ரஹ்) அவர்கள் கூறினார்:

இரத்தம் குத்தி, உறிஞ்சி எடுப்பதைத் தொழிலாகக் கொண்ட ஓர் அடிமையை என் தந்தை (அபூ ஜுஹைஃபா(ரலி)) விலைக்கு வாங்கினார்கள். (பிறகு, அவரின் தொழில் கருவிகளை உடைத்துவிட்டார்கள்.) இது தொடர்பாக அவர்களிடம் நான் (விளக்கம்) கேட்க, அவர்கள் 'நபி(ஸல்) அவர்கள் நாய் விற்ற கிரயத்தையும் இரத்தத்தின் கிரயத்தை (இரத்தம் குத்தி, உறிஞ்சி எடுப்பதற்குப் பெறுகிற கூலியை)யும் தடை செய்தார்கள்; பச்சை குத்துவதையும், பச்சை குத்திக் கொள்வதையும் தடை செய்தார்கள்; வட்டி உண்பதையும் வட்டி கொடுப்பதையும் தடை செய்தார்கள்! மேலும், உருவம் வரைபவனைச் சபித்தார்கள்!'' என்று பதிலளித்தார்கள்.

பகுதி 26

அல்லாஹ் கூறினான்:

''அல்லாஹ் வட்டியை (அதில் எந்த பரக்கத்தும் இல்லாமல்) அழித்து விடுவான்; இன்னும், தான தர்மங்களை (அருள் வளங்களைக் கொண்டு) பெருகச் செய்வான்! (தன் கட்டளையை) நிராகரித்துக் கொண்டிருக்கும் பாவிகள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை!'' (திருக்குர்ஆன் 02:276)

2087. 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

''(பொய்) சத்தியம் செய்வது சரக்கை (சுலபமாக) விற்பனை செய்ய உதவும்; ஆனால், பரக்கத் (எனும் அருள் வளத்)தை அழித்துவிடும்!''

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பகுதி 27

வியாபாரத்தில் செய்யக்கூடாத சத்தியம்.

2088. அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா(ரலி) அறிவித்தார்.

''ஒருவர் கடைவீதியில் விற்பனைப் பொருட்களைப் பரப்பினார்; அப்போது அவர் (கொள் முதல் செய்யும்போது) கொடுக்காத (பணத்)தைக் கொடுத்ததாக அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்தார்; முஸ்லிம்களைக் கவர்(ந்து அவர்களிடம் தம் பொருளை விற்பனை செய்)வதற்காக இப்படிச் செய்தார்! அப்போது 'தங்களின் உடன்படிக்கை மூலமும் சத்தியங்களின் மூலமும் அற்பக் கிரயத்தைப் பெற்றுக் கொள்கிறவர்...' என்னும் (திருக்குர்ஆன் 03:77) இறைவசனம் அருளப்பட்டது!''

பகுதி 28

பொற்கொல்லர்

'' ஹரம் எல்லையிலுள்ள புற்பூண்டுகளைக் கிள்ளக்கூடாது!' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியபோது, அப்பாஸ்(ரலி) 'இத்கிர் எனும் புல்லைத் தவிரவா? அது உலோகத் தொழிலாளர்களுக்குப் பயன்படுகிறதே!' என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'இத்கிரைத் தவிர!' என்று கூறினார்கள்!' என இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்.

2089. அலீ(ரலி) அறிவித்தார்.

''கனீமத் மூலம் கிடைத்த வயதான ஓர் ஒட்டகம் என்னிடம் இருந்தது; நபி(ஸல்) அவர்கள் குமுஸிலிருந்து இன்னொரு ஒட்டகத்தையும் எனக்குக் கொடுத்திருந்தார்கள்! நபி(ஸல்) அவர்களின் மகள் ஃபாத்திமாவுடன் (வீடு கூடி) இல்லறம் தொடங்க நான் நாடினேன்; (எனவே) என்னுடன் சேர்ந்து இத்கிர் (என்னும்) புல்லைக் கொண்டு வருவதற்காக பனூகைனுக்கா குலத்தைச் சேர்ந்த பொற்கொல்லர் ஒருவரை ஏற்பாடு செய்திருந்தேன். அந்தப் புல்லை பொற்கொல்லர்களுக்கு விற்றுவிட்டு அதன் (வருவாய்) மூலம் என் திருமண விருந்தை நடத்த நாடினேன்!''

2090. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

''நிச்சயமாக, அல்லாஹ் மக்காவைப் புனிதப்படுத்தியிருக்கிறான்! (இங்கு போரிடுதல்) எனக்கு முன் எவருக்கும் அனுமதிக்கப்படவில்லை! எனக்குக் கூட பகலில் சற்றுநேரம் தான் அனுமதிக்கப்பட்டது! இங்குள்ள புற்பூண்டுகளைக் கிள்ளக்கூடாது! இங்குள்ள மரங்களை முறிக்கக் கூடாது! இங்குள்ள வேட்டைப் பிராணிகளை விரட்டக்கூடாது! பிறர் தவறவிடும் பொருட்களை அறிவிப்புச் செய்பவர் தவிர, வேறெவரும் எடுக்கக்கூடாது!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அப்பாஸ்(ரலி) 'எங்கள் வீடுகளின் கூரைகளுக்கும் பொற்கொல்லர்களுக்கும் பயன்படும் இத்கிரைத் தவிரவா?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் 'இத்கிரைத் தவிர!'' என்றார்கள்.

''வேட்டைப் பிராணிகளை விரட்டுவது என்றால் என்னவென்று உமக்குத் தெரியுமா? நிழலில் படுத்திருக்கும் அதை விரட்டிவிட்டு அந்த இடத்தில் நீர் தங்குவதாகும்!'' என்று இக்ரிமா(ரஹ்) கூறினார்.

மற்றோர் அறிவிப்பில் 'எங்கள் கப்ருகளுக்கும் பொற்கொல்லர்களுக்கும்' என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.

பகுதி 29

பொற்கொல்லரும் கருமானும்.

2091. கப்பாப்(ரலி) அறிவித்தார்.

நான் அறியாமைக் காலத்தில் கருமானாக இருந்தேன். ஆஸ் இப்னு வாயில் என்பவன் எனக்குக் கடன் தர வேண்டியிருந்தது. அதை வாங்குவதற்காக அவனிடம் நான் சென்றேன். அப்போது அவன், 'நீ முஹம்மதை நிராகரிக்காமல் (ஏற்றுக் கொண்டு) இருக்கும்வரை (உன்னிடம் வாங்கிய கடனை) உனக்குத் (திருப்பித்) தர மாட்டேன்!'' என்றான். நான் 'அல்லாஹ் உன்னை மரணிக்கச் செய்து, திரும்ப நீ எழுப்பப்படும் வரை நான் முஹம்மதை நிராகரிக்க மாட்டேன்!' எனக் கூறினேன். அதற்கவன் 'நான் மரணித்து எழுப்பப்படும் வரை என்னை விட்டுவிடு! அப்போது பொருட் செல்வமும் குழந்தைச் செல்வமும் எனக்கு வழங்கப்படும்; அப்போது உன் கடனை நான் தீர்த்து விடுகிறேன்!'' என்றான். அப்போதுதான் 'நம்முடைய வசனங்களை நிராகரித்து, '(மறுமையிலும்) எனக்கு நிச்சயமாக பொருட் செல்வமும் குழந்தைச் செல்வமும் வழங்கப்படும்!' என்று கூறியவனை (நபியே!) நீர் பார்த்தீரா? (பின்னர் நடக்கவிருக்கும்) மறைவான விஷயத்தை அவன் முன்கூட்டியே தெரிந்து கொண்டானா? அல்லது (இப்படியெல்லாம் தனக்கு வழங்கப்படவேண்டுமென்று) கருணையாளான இறைவனிடத்திலிருந்து உறுதிமொழி (ஏதேனும்) பெற்றிருக்கிறானா?' என்ற (திருக்குர்ஆன் 19:77, 78) இறைவசனம் அருளப்பட்டது!''

பகுதி 30

தையல்காரன்.

2092. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

''ஒரு தையல்காரர் தாம் தயாரித்த விருந்துக்காக நபி(ஸல்) அவர்களை அழைத்தார். நானும் நபி(ஸல்) அவர்களுடன் அந்த விருந்துக்குச் சென்றேன். அவர் ரொட்டியையும் உலர்ந்த போடப்பட்ட குழம்பையும் நபி(ஸல்) அவர்களின் முன்னே வைத்தார்; நபி(ஸல்) அவர்கள் தட்டின் ஓரங்களில் சுரைக்காயைத் தேடுவதை பார்த்தேன். அன்றிலிருந்து நான் சுரைக்காயை விரும்பக் கூடியவனாகி விட்டேன்!''

பகுதி 31

நெசவுத் தொழிலாளி.

2093. அபூ ஹாஸிம்(ரஹ்) அறிவித்தார்.

ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) 'ஒரு பெண்மணி (நபி(ஸல்) அவர்களிடம்) புர்தாவைக் கொண்டு வந்தார்!' எனக் கூறிவிட்டு, 'புர்தா என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?' என்று கேட்டார்கள். 'ஆம்! அது ஓரப்பகுதி நெய்யப்பட்ட ஒரு சால்வை!'' என்று கூறப்பட்டது. தொடர்ந்து ஸஹ்ல்(ரலி) அறிவித்தார். அப்பெண்மணி, 'இறைத்தூதர் அவர்களே! உங்களுக்கு அணிவிப்பதற்காக இதை நான் என் கையால் நெய்தேன்!'' என்றார். நபி(ஸல்) அவர்கள் தமக்கு அது தேவைப்பட்டதால் அதைப் பெற்றார்கள். (அவர்கள் உள்ளே சென்றுவிட்டு) எங்களிடம் திரும்பி வந்தபோது அதை வேட்டியாக அணிந்திருந்தார்கள். அப்போது கூட்டத்தில் இருந்த ஒருமனிதர். 'இறைத்தூதர் அவர்களே! இதை நான் அணிவதற்காக எனக்குத் தாருங்கள்!'' என்றார். நபி(ஸல்) அவர்கள் 'சரி தருகிறேன்!'' என்று சொல்லிவிட்டு, சபையில் அமர்ந்திருந்தார்கள். பிறகு (உள்ளே சென்றுவிட்டுத்) திரும்பி வந்து அதைச் சுருட்டி, (அதைத் தமக்குத் தரும்படி) கேட்ட மனிதருக்கு அதை அனுப்பி வைத்துவிட்டார்கள். அப்போது அவரிடம் மக்கள், 'நீர் செய்தது நன்றன்று; கேட்பவரை வெறுங்கையாக திருப்பியனுப்ப மாட்டார்கள் என்று தெரிந்து கொண்டே அவர்களிடம் அதைக் கேட்டு விட்டீரே!' எனக் கூறினார். அதற்கு அம் மனிதர், 'நான் மரணிக்கும் நாளில் அது எனக்குக் கஃபனாக ஆக வேண்டும் என்பதற்காகவே அதைக் கேட்டேன்!'' என்றார். அது அவ்வாறே, அவரின் கஃபனாக ஆனது!

பகுதி 32

தச்சர்.

2094. அபூ ஹாஸிம் அறிவித்தார்.

சில மனிதர்கள் ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அவர்களிடம் வந்து நபி(ஸல) அவர்களின் மிம்பர் பற்றிக் கேட்டனர். அதற்கு ஸஹ்ல்(ரலி), 'நபி(ஸல்) அவர்கள் ஒரு பெண்மணியிடம் அப்பெண்மணியின் பெயரை ஸஹ்ல் கூறினார். 'தச்சு வேலை செய்யும் உன்னுடைய பணியாளரிடம் நான் மக்களுக்கு உரையாற்றும்போது அமர்ந்து கொள்வதற்கேற்ற மேடையைச் செய்து தரச் சொல்'' என்று சொல்லி அனுப்பினார்கள். அப்பெண் தம் பணியாளரிடம் இதைக் கூறினார். அப்பணியாளார் ஃகாபா எனும் பகுதியில் உள்ள மரத்தில் அதைச் செய்து வந்தார். அப்பெண் அதை நபி(ஸல்) அவர்களிடம் கொடுத்தனுப்பினார். அதை உரிய இடத்தில் வைக்குமாறு நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டு, அதன் மேல் அமர்ந்தார்கள்' என விடையளித்தார்.

2095. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.

அன்ஸாரிகளைச் சேர்ந்த ஒரு பெண்மணி நபி(ஸல்) அவர்களிடம், 'இறைத்தூதர் அவர்களே! என்னிடம் தச்சுவேலை தெரிந்த ஒரு பணியாளர் இருக்கிறார்; நீங்கள் அமர்ந்து கொள்வதற்கேற்ப ஒன்றை நான் உங்களுக்குச் செய்து தரட்டுமா?' என்று கேட்டார். 'உன் விருப்பம்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூற, அப்பெண்மணி நபி(ஸல்) அவர்களுக்காக மிம்பரைத் தயார் செய்தார். வெள்ளிக்கிழமை வந்ததும், அந்த மிம்பரில் நபி(ஸல்) அவர்கள் அமர்ந்தனர். அப்போது நபி(ஸல்) அவர்கள் முன்னர் நின்று உரை நிகழ்த்திய பேரீச்ச மரக்கட்டை இரண்டாகப் பிளந்து விடுமளவிற்குச் சப்தமிட்டது. நபி(ஸல்) அவர்கள் மேடையிலிருந்து இறங்கி அதைத் தொட்டுத் தம்முடன் அணைத்தார்கள். அமைதிப்படுத்தப்படும் குழந்தை அழுவது போல் அது அழுது, அழுகையை நிறுத்தியது. அப்போது நபி(ஸல்) அவர்கள் 'போதனையைக் கேட்டதால்தான் அது அழுதது'' என்றார்கள்.

பகுதி 33

தலைவர் தமக்குத் தேவையானவற்றைத் தாமே நேரடியாக வாங்குவது.

நபி(ஸல்) அவர்கள் உமர்(ரலி) அவர்களிடம் ஓர் ஒட்டகத்தை வாங்கினார்கள் என்று இப்னு உமர்(ரலி) கூறினார்.

இப்னு உமர்(ரலி) தமக்குத் தேவையானதை நேரடியாக வாங்கியிருக்கிறார்.

இணைவைப்பவர் ஒருவர் ஆட்டு மந்தையைக் கொண்டு வந்தபோது அவரிடமிருந்து நபி(ஸல்) அவர்கள் ஓர் ஆட்டை வாங்கினார்கள் என்று அப்துர் ரஹ்மான் இப்னு அபீ பக்ர்(ரலி) கூறினார்.

நபி(ஸல்) அவர்கள் ஜாபிர்(ரலி) அவர்களிடம் ஓர் ஒட்டகத்தை விலைக்கு வாங்கியிருக்கிறார்கள்.

2096. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

''நபி(ஸல்) அவர்கள் ஒரு யூதரிடம் கடனாக உணவுப் பொருளை வாங்கினார்கள்; தம் கவசத்தை அவரிடம் அடைமானமாக வைத்தார்கள்!''

பகுதி 34

கழுதை மற்றும் கால்நடைகளை வாங்குதல்.

உரிமையாளர் ஒட்டகத்தின் மீதோ வேறொரு கால்நடையின் மீதோ அமர்ந்திருக்கும் விலையில் ஒருவர் அதை வாங்கினால், உரிமையாளர் அதிலிருந்து இறங்குவதற்கு முன் அது வாங்கியவரின் கைக்குச் சென்றுவிட்டதாக ஆகுமா?

நபி(ஸல்) அவர்கள் உமர்(ரலி) அவர்களிடம் 'இந்த முரட்டு ஒட்டகத்தை எனக்கு விலைக்குத் தாரும்!'' என்றார்கள்.

2097. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.

நான் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு போரில் (பங்கெடுத்துவிட்டுத் திரும்பிக் கொண்டு) இருந்தேன்; அப்போது என்னுடைய ஒட்டகம் களைத்து பலமிழந்து போனதால் என்னைப் பின்தங்க வைத்துவிட்டது. நபி(ஸல்) அவர்கள் என்னிடம் வந்து. 'ஜாபிரா?' என்று கேட்டார்கள். நான் 'ஆம்!' என்றேன். 'என்ன விஷயம் (ஏன் பின்தங்கிவிட்டீர்)?' என்று கேட்டார்கள். 'என் ஒட்டகம் களைந்து பலமிழந்து போனதால் என்னைப் பின்தங்க வைத்துவிட்டது; அதனால் நான் பின்தங்கி விட்டேன்!' என்றேன். நபி(ஸல்) அவர்கள் கீழே இறங்கி தலைப்பகுதி வளைந்த ஒரு கைத்தடியால் என்னுடைய ஒட்டகத்தை; தட்டி (எழுப்பி)னார்கள். பிறகு 'ஏறுவீராக!' என்றார்கள். நான் (வாகனத்தில்) ஏறினேன். நபி(ஸல்) அவர்களை விட என்னுடைய ஒட்டகம் முந்தாதவாறு அதைக் கட்டுப்படுத்தினேன். அப்போது நபி(ஸல்) அவர்கள். 'நீர் மணமுடித்து விட்டீரா?' என்று கேட்டார்கள். நான் 'ஆம்!' என்றேன். 'கன்னியையா? வாழ்ந்த அனுபவமுள்ள பெண்ணைத்தான்!' என்றேன். நபி(ஸல்) அவர்கள், 'கன்னிப் பெண்ணை மணந்திருக்கக் கூடாதா? அவள் உம்முடனும் நீர் அவளுடனும் விளையாடலாமே!' என்று கூறினார்கள். நான், 'எனக்குச் (சிறிய வயதுடைய) சகோதரிகள் உள்ளனர்! அவர்களை அரவணைத்து, அவர்களுக்குத் தலைவாரி, அவர்களைப் பராமரிக்கக் கூடிய ஒரு பெண்ணை மணக்க வேண்டும் என்று விரும்பினேன்!' என்றேன். நபி(ஸல்) அவர்கள் 'இப்போது ஊருக்கு செல்லப் போகிறீர்! ஊர் சென்றதும் நிதானத்துடன் நடந்து கொள்வீராக!' நிதானத்துடன் நடந்து கொள்வீராக!' என்று கூறிவிட்டு பின்னர். 'உம்முடைய ஒட்டகத்தை எனக்கு விற்று விடுகிறீரா?' என்றார்கள். நான் 'சரி (விற்று விடுகிறேன்!)' என்றேன். அவர்கள் என்னிடமிருந்து, ஓர் ஊக்கியா எடை (தங்கத்து)க்குப் பகரமாக அதை வாங்கினார்கள். பிறகு, எனக்கு முன்பே நபி(ஸல்) அவர்கள் (மதீனாவுக்கு) சென்றார்கள். நான் மறுநாள் சென்றடைந்தேன். நாங்கள் பள்ளிவாசலுக்கு வந்தபோது அதன் நுழைவாயிலில் நபி(ஸல்) அவர்கள் நின்றிருந்தார்கள். 'இப்போதுதான் வருகிறீரா? என்று அவர்கள் (என்னைப் பார்த்துக்) கேட்டார்கள். நான் 'ஆம்!' என்றேன். 'உம்முடைய ஒட்டகத்தைவிட்டுவிட்டு உள்ளே சென்று இரண்டு ரக்அத்துகள் தொழுவீராக!' என்றார்கள். அவ்வாறே, நான் உள்ளே சென்று தொழுதேன். நபி(ஸல்) அவர்கள் எனக்காக ஓர் ஊக்கியா (தங்கத்தை) எடை போடுமாறு பிலால்(ரலி) அவர்களுக்கு உத்தரவிட்டார்கள். எனக்காக பிலால்(ரலி) எடை போட்டுச் சற்று தாரளமாகவே நிறுத்தார்கள். பிறகு நான் திரும்பிச் சென்று விட்டேன். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'ஜாபிரை என்னிடம் அழைத்து வாரும்!' என்றார்கள். நான் (மனத்திற்குள்) 'இப்போது என் ஒட்டகம் திருப்பித் தரப்பட்டு விடும் அதைவிட எனக்கு வெறுப்பானது வேறொன்றுமில்லை' என்று கூறிக் கொண்டேன். நபி(ஸல்) அவர்கள் 'உம்முடைய ஒட்டகத்தை எடுத்துக் கொள்வீராக! அதனுடைய விலையையும் நீரே வைத்துக் கொள்வீராக!' எனக் கூறினார்கள்.

பகுதி 35

அறியாமைக் காலத்தில் இருந்த கடைவீதிகளில் இஸ்லாம் வந்த பிறகும் மக்கள் வியாபாரம் செய்தனர்.

2098. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

உக்காழ், மஜன்னா, துல்மஜாஸ் ஆகியவை அறியாமைக் காலத்தில் கடைவீதிகளாக இருந்தன. இஸ்லாம் வந்ததும் 'அந்த இடங்களில் வியாபாரம் செய்வது பாவம்' என்று மக்கள் கருதினார்கள். அப்போது அல்லாஹ், 'உங்களுடைய இறைவனின் அருளைத் தேடிக் கொள்வது உங்களின் மீது குற்றமாகாது!'' என்னும் (திருக்குர்ஆன் 02:198) இறைவசனத்தை அருளினான்.

''இவ்வசனத்துடன் 'ஹஜ்ஜுக் காலங்களில்' என்ற வார்த்தையையும் இப்னு அப்பாஸ்(ரலி) சேர்த்து ஓதியிருக்கிறார்கள்!'' என்று அம்ர் இப்னு தீனார்(ரஹ்) கூறினார்.

பகுதி 36

அடங்காத் தாகமுள்ள ஒட்டகத்தையும் சிரங்கு பிடித்த ஒட்டகத்தையும் வாங்குதல்.

'அடங்காத தாகமுள்ளது' என்பதில் எல்லாப் பொருட்களிலும் நடுத்தரத்துக்கு மாற்றமானவையும் அடங்கும்.

2099. அம்ர் இப்னு தீனார்(ரஹ்) அறிவித்தார்.

இங்கே (மக்காவில்) நவ்வாஸ் என்ற பெயருடைய ஒருவர் இருந்தார். அவரிடம் அடங்காத்தாகமுடைய ஓர் ஒட்டகம் இருந்தது. இப்னு உமர்(ரலி) அந்த ஒட்டகத்தை நவ்வாஸுடைய கூட்டாளி ஒருவரிடமிருந்து வாங்கினார்கள். அந்தக் கூட்டாளி நவ்வாஸிடம் சென்று 'அந்த ஒட்டகத்தை நாம் விற்றுவிட்டோம்!'' என்றார். நவ்வாஸ் 'யாரிடம் விற்றீர்?' என்று கேட்டதற்கு அவர், 'இன்ன பெரியாரிடம் விற்றேன்!'' என்றார். அதற்கு நவ்வாஸ் 'உமக்குக் கேடு உண்டாகட்டும்! அல்லாஹ்வின் மீது ஆணையாக! அந்தப் பெரியவர் இப்னு உமர்(ரலி) தாம்!'' என்று கூறிவிட்டு இப்னு உமர்(ரலி) அவர்களிடம் சென்றார். 'என்னுடைய பங்காளி அடங்காத் தாகமுள்ள ஒட்டகத்தை உங்களிடம் விற்றுவிட்டார்; அவர் உங்களை யாரென்று அறியவில்லை!'' என்று கூறினார். அதற்கு இப்னு உமர்(ரலி) 'அப்படியானால், அதை ஓட்டிச் செல்வீராக!'' என்றார்கள். அவர் அதை ஓட்டிச் செல்லமுயன்றதும். இப்னு உமர்(ரலி) 'அதைவிட்டுவிடுவீராக! 'தொற்று நோய் கிடையாது!' என்ற நபி(ஸல்) அவர்களின் தீர்ப்பை நான் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறேன்! (இந்த நோயுள்ள ஒட்டகத்தினால் என்னுடைய ஏனைய ஒட்டகங்களுக்கு பாதிப்பு ஏற்படாது!)'' என்றார்கள்.

பகுதி 37

கலவரச் சூழ்நிலையிலும் இதர சூழ்நிலையிலும் ஆயுதங்களை விற்பது.

கலவரச் சூழ்நிலையில் ஆயுதங்கள் விற்பதை இம்ரான் இப்னு ஹுஸைன்(ரலி) வெறுத்திருக்கிறார்கள்.

2100. அபூ கதாதா(ரலி) அறிவித்தார்.

''நாங்கள் ஹுனைன் போரின்போது நபி(ஸல்) அவர்களுடன் புறப்பட்டோம். நான் (என்னுடைய) கவசத்தை விற்று. அதைக் கொண்டு பனூ ஸலமா குலத்தினர் வசிக்கும் பகுதியில் ஒரு தோட்டத்தை வாங்கினேன். நான் இஸ்லாத்திற்கு வந்த பின் வாங்கிய முதல் சொத்தாகும் அது!''

பகுதி 38

கஸ்தூரி மற்றும் நறுமணப் பொருள் வியாபாரம்.

2101. 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

''நல்ல நண்பனுக்கும் தீய நண்பனுக்கும் உதாரணம் கஸ்தூரி வைத்திருப்பவரும் கொல்லனின் உலையுமாகும்! கஸ்தூரி வைத்திருப்பவரிடமிருந்து உமக்கு ஏதும் கிடைக்காமல் போகாது  நீர் அதை விலைக்கு வாங்கலாம்: அல்லது அதன் நறுமணத்தையாவது பெறலாம்! கொல்லனின் உலை உம்முடைய வீட்டையோ உம்முடைய ஆடையையோ எரித்து விடும்; அல்லது அவனிடமிருந்து கெட்ட வாடையை நீர் பெற்றுக் கொள்வீர்!''

என அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.

பகுதி 39

இரத்தம் குத்தி, உறிஞ்சி எடுப்பவர்.

2102. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

''அபூ தைபா என்பவர் நபி(ஸல்) அவர்களுக்கு இரத்தம் குத்தி, உறிஞ்சி எடுத்தார்; அவருக்கு நபி(ஸல்) அவர்கள் ஒரு ஸாவு பேரீச்சம் பழம் கொடுக்குமாறு உத்தரவிட்டார்கள். (இரத்தம் குத்தி (உறிஞ்சி) எடுத்த அபூ தைபா (அடிமையாக இருந்தால்) அவரின் எஜமானர்களிடம் அவரின் நிலவரியைக் குறைக்குமாறு உத்தரவிட்டார்கள்!''

2103. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

''நபி(ஸல்) அவர்கள் (ஒருவரிடம்) இரத்தம் குத்தி எடுத்தார்கள். இரத்தம் குத்தி, உறிஞ்சி எடுத்தவருக்குக் (கூலி) கொடுத்தார்கள். அது ஹராமாக (தடை செய்யப்பட்டதாக) இருந்திருந்தால் (அவ்வாறு கூலி) கொடுத்திருக்க மாட்டார்கள்!''

பகுதி 40

ஆண்களும் பெண்களும் அணியத் தகாத ஆடைகளை விற்பது.

2104. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

கோடு போடப்பட்ட (மேலங்கியும் கீழங்கியும் அடங்கிய) ஒரு ஜோடிப் பட்டாடையை உமர்(ரலி) அணிந்திருப்பதைப் பார்த்த நபி(ஸல்) அவர்கள், 'இதை நீர் அணிவதற்காக நான் உம்மிடம் அனுப்பவில்லை! (மறுமையின்) பாக்கியமற்றவர்கள் தாம் இதை அணிவார்கள்! நீர் இதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்; அதாவது விற்க வேண்டும் என்பதற்காகவே உமக்குக் கொடுத்தனுப்பினேன்!'' என்று கூறினார்கள்.

2105. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நான் உருவங்கள் வரையப்பட்ட ஒரு தலையணையை விலைக்கு வாங்கினேன். அதை நபி(ஸல்) அவர்கள் பார்த்துவிட்டு வீட்டிற்குள் வராமல் வாசலில் நின்றுவிட்டார்கள். அவர்களின் முகத்தில் அதிருப்தியை நான் உணர்ந்தேன். அப்போது நான் 'இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் மன்னிப்புக் கேட்கிறேன்! நான் என்ன குற்றம் செய்தேன்?' என்று வினவினேன். நபி(ஸல்) அவர்கள் 'இது என்ன தலையணை?' என்று கேட்டார்கள். 'நீங்கள் இதன் மேல் அமர்வதற்காகவும் தலைக்கு வைத்துக் கொள்வதற்காகவும் உங்களுக்காக நான் இதை வாங்கினேன்!'' என்றேன். நபி(ஸல்) அவர்கள், 'இந்த உருவங்களை வரைந்தவர்கள் மறுமை நாளில் வேதனை செய்யப்படுவார்கள்; 'நீங்கள் படைத்தவற்றுக்கு உயிர் கொடுங்கள்!'' என்று அவர்களிடம் கூறப்படும். எந்த வீட்டில் உருவங்கள் இருக்கின்றனவோ அங்கே வானவர்கள் வர மாட்டார்கள்!'' எனக் கூறினார்கள்.

பகுதி 41

பொருள் வைத்திருப்பவரே விலை கூறுவதற்கு அதிக உரிமை படைத்தவர்.

2106. அனஸ்(ரலி) அறிவித்தார்.

''பனூ நஜ்ஜார் குலத்தினரே! உங்கள் தோட்டத்தை எனக்கு விலை கூறுங்கள்!'' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதிலே பேரீச்ச மரங்களும் பாழடைந்த கட்டிடங்களும் இருந்தன!''

பகுதி 42

வியாபாரத்தை எவ்வளவு நாள்களில் முறித்துக் கொள்ளலாம்?

2107. 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

''விற்பவரும் வாங்குபவரும் (வியாபாரம் பேசிய தலத்திலிருந்து) பிரியாமலிருக்கும் வரை வியாபாரத்தை முறித்துக் கொள்ள உரிமை படைத்தவர்களாவர்! 'வியாபாரத்தை உத்தரவாத காலத்திற்குள் முறிக்கலாம்' என முன்பே பேசிக் கொண்டால் முறித்துக் கொள்ளலாம்!''

என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

இப்னு உமர்(ரலி) தமக்கு விருப்பமான ஒரு பொருளை வாங்கினால் உடனே விற்றவரைப் பிரிந்து விடுவார் என்று நாஃபிவு கூறுகிறார்.

2108. 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

''விற்பவரும் வாங்குபவரும் (தலத்தை விட்டு) பிரிவதுவரை (வியாபாரத்தை முறித்துக் கொள்ள) உரிமை உண்டு.''

என ஹகீம் இப்னு ஹிஸாம்(ரலி) அறிவித்தார்.

பகுதி 43

வியாபாரத்தை முறித்துக் கொள்ள ஒரு காலக்கெடு கூறப்படாவிட்டால் அந்த வியாபாரம் செல்லுமா?

2109. 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

''விற்பவரும் வாங்குபவரும் பிரியாமலிருந்தாலும் அல்லது ஒருவர் மற்றவரிடம் (உறுதிப்படுத்துவதோ முறிப்பதோ) உம்முடைய விருப்பம் என்று கூறினாலும் முறித்துக் கொள்ளும் உரிமை படைத்திருக்கிறார்கள்.''

என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

பகுதி 44

விற்பவரும் வாங்குபவரும் பிரிவது வரை முறித்துக் கொள்ளும் உரிமை படைத்திருக்கிறார்கள்.

இப்னு உமர்(ரலி), ஷுரைஹ், ஷஅபீ , தாவூஸ், அதா, இப்னு அபீ முலைக்கா ஆகியோர் இவ்வாறே கூறுகின்றனர்.

2110. ''விற்பவரும் வாங்குபவரும் பிரியும்வரை (முறித்துக் கொள்ளும்) உரிமை படைத்திருக்கிறார்கள். அவ்விருவரும் உண்மை கூறி (பொருளின் குறையை)த் தெளிவுபடுத்தினால் அவர்களின் வியாபாரத்தில் அவர்களுக்கு பரக்கத் செய்யப்படும். அவ்விருவரும் பொய் கூறி(எதையேனும்) மறைத்தால் அவர்களுக்கு வியாபாரத்தின் பரக்கத் நீக்கப்படும்'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என ஹகீம் இப்னு ஹிஸாம்(ரலி) அறிவித்தார்.

2111. 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

''(எப்போது வேண்டுமானாலும் முறித்துக் கொள்ளலாம் என்று) உரிமை வழங்கப்பட்ட வியாபாரத்தைத் தவிர மற்ற வியாபாரங்களில் விற்பவரும் வாங்குபவரும் பிரியும் வரை ஒவ்வொருவரும் முறித்துக் கொள்ளும் வரை படைத்திருக்கிறார்கள்.''

என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

பகுதி 45

வியாபாரம் முடிந்தபின் ஒருவர் மற்றவருக்கு முறித்துக் கொள்ளும் உரிமை வழங்கினால் (அவர் முறித்துக் கொள்ளாவிட்டால்) வியாபாரம் ஏற்பட்டுவிட்டது.

2112. 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

''இரண்டு நபர்கள் ஒருவருக்கொருவர் வியாபாரம் செய்தால் அவ்விருவரும் பிரியாமல் சேர்ந்து இருக்கும் வரை முறித்துக் கொள்ளும் உரிமை படைத்துள்ளார்கள். ஒருவர் மற்றவருக்கு முறித்துக் கொள்ளும் உரிமையை வழங்கி அதை அவர் பயன்படுத்தாமல் இருவரும் ஒப்பந்தம் செய்தால் வியாபாரம் ஏற்பட்டுவிட்டது; இருவரும் ஒப்பந்ததைத் முடித்தபின் வியாபாரத்தை முறிக்காமல் பிரிந்துவிட்டால் அப்போதும் வியாபாரம் ஏற்பட்டுவிட்டது.''

என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

பகுதி 46

விற்பவருக்கு மட்டும் முறித்துக் கொள்ளும் உரிமை வழங்கப்பட்டால் அந்த வியாபாரம் செல்லுமா?

2113. 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

''விற்கக் கூடியவரும் வாங்கக் கூடியவரும் பிரியும்வரை அவர்களுக்கிடையே வியாபாரம் ஏற்படவில்லை; முறித்துக் கொள்ள உரிமை வழங்கப்பட்டு அதைப் பயன்படுத்தாவிட்டால் தவிர''

என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

2114. 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

''விற்பவரும் வாங்குபவரும் பிரியும்வரை முறித்துக் கொள்ளும் உரிமை உண்டு' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

''விற்பவரும் வாங்குபவரும் உண்மை கூறி (குறைகளைத்) தெளிவுபடுத்தினால் அவர்களின் வியாபாரத்தில் பரக்கத் செய்யப்படும்' அவர்கள் பொய் சொல்லி மறைத்தால் அவர்களுக்கு லாபம் கிடைக்கலாம். ஆனாலும் வியாபாரத்தின் பரக்கத் அழிக்கப்பட்டுவிடும்'' என்றும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

என ஹகீம் இப்னு ஹிஸாம்(ரலி) அறிவித்தார்.

நான் பதிவு செய்த ஏட்டில் இவ்வாறு இதன்மூன்று முறை உரிமையைப் பயன்படுத்தலாம் என்று உள்ளது என்று (அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஹம்மாம் கூறுகிறார்.

பகுதி 47

ஒருவர் ஒரு பொருளை விலைக்கு வாங்கி, விற்றவர் ஆட்சேபிக்காத நிலையில் இருவரும் பிரிவதற்கு முன்னால் உடனே அன்பளிப்பாக வழங்குதல்; ஓர் அடிமையை வாங்கி உடனேயே விடுதலை செய்தல்.

ஒருவர் விற்பவரின் திருப்தியுடன் ஒரு பொருளை வாங்கி, பிறகு அவர் அதை விற்றால் அந்த வியாபாரம் செல்லும்; இலாபம் இரண்டாவதாக விற்றவருக்கு உரியது என்று தாவூஸ் கூறுகிறார்.

2115. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தோம்; நான் (என் தந்தை) உமர்(ரலி) அவர்களுக்குச் சொந்தமான முரட்டு ஒட்டகத்தின் மீது இருந்தேன். அது என்னை மீறிக் கூட்டத்தினருக்கு முன்னால் சென்றது. உமர்(ரலி) அதை அதட்டிப் பழைய இடத்திற்குத் திருப்பியனுப்பினார்கள். மீண்டும் அது முன்னே சென்றது. அப்போதும் உமர்(ரலி) அதை அதட்டிப் பழைய இடத்திற்குத் திருப்பியனுப்பினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் உமர்(ரலி) அவர்களிடம், 'இதை எனக்கு விற்று விடுவீராக!' என்றார்கள். உமர்(ரலி) 'இறைத்தூதர் அவர்களே! இது தங்களுக்கு உரியது!' என்றார்கள். நபி(ஸல்) அவர்கள், 'எனக்கு இதை விலைக்குத் தாரும்!'' என்றார்கள். உமர்(ரலி) நபி(ஸல்) அவர்களுக்கு அதை விற்றார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் (என்னிடம்) 'உமர் மகன் அப்துல்லாஹ்வே! இது உமக்குரியது! நீர் விரும்பியவாறு இதைப் பயன்படுத்திக் கொள்!'' என்றார்கள்.

2116. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

நான் அமீருல் மூமினீன் உஸ்மான்(ரலி) அவர்களிடம் 'வாதில் குரா எனும் இடத்தில் உள்ள என்னுடைய சொத்தை கைபரில் அவருக்கு இருந்த ஒரு சொத்திற்குப் பகரமாக விற்றேன். நாங்கள் வியாபாரம் பேசி முடித்ததும் உடனடியாக அவரின் வீட்டிலிருந்து வெளியேறி, வந்தவழியே திரும்பி விட்டேன். 'அவர்கள் வியாபாரத்தை முறித்து விடுவார்கள்' என்ற அச்சமே இதற்குக் காரணமாகும்; (ஏனெனில்) '(வியாபாரம் பேசிய தலத்தைவிட்டுப்) பிரியும் வரை விற்பவருக்கும் வாங்குபவருக்கும் (வியாபாரத்தை) முறித்துக் கொள்ளும் உரிமை உள்ளது' என்பது நபிவழியாக இருந்தது! வியாபாரம் முடிவானதும் அவருக்கு நான் துரோகம் செய்துவிட்டதாகக் கருதினேன்; ஏனெனில், மதீனாவிலிருந்து மூன்று இரவுகள் பயணத் தொலைவுள்ள ஸமூது குலத்தார் வசித்த பகுதிக்கு அவரை நான் தள்ளினேன்; அவர் (அங்கிருந்து) மூன்று இரவுகள் தொலைவுள்ள மதீனாவுக்கு என்னைத் தள்ளினார்!

பகுதி 48

வியாபாரத்தில் மோசடி கூடாது.

2117. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் தாம் வியாபாரத்தின்போது ஏமாற்றப்படுவதாகக் கூறினார்; அதற்கு நபி(ஸல்) அவர்கள். 'நீர் எதையேனும் விற்றால் அல்லது வாங்கினால் 'ஏமாற்றுதல் இருக்கக் கூடாது!'' என்று கூறிவிடுவீராக! (ஏமாற்றியது தெரியவந்தால் உமக்கு வியாபாரத்தை முறித்துக் கொள்ளும் உரிமையுண்டு!)'' என்றார்கள்.

பகுதி 49

கடைவீதிகள்

''நாங்கள் மதீனாவுக்கு வந்தபோது 'வியாபாரம் நடைபெறுகிற கடைவீதி ஏதேனும் (இங்கு) உண்டா?' என்று கேட்டேன். 'கைனுக்கா எனும் கடைவீதி இருக்கிறது!'' என்று ஸஅத்(ரலி) கூறினார்'' என அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) கூறினார்.

''எனக்குக் கடைவீதியைக் காட்டுங்கள்!'' என்று அப்துர் ரஹ்மான்(ரலி) கூறினார் என அனஸ்(ரலி) கூறினார்.

''கடை வீதியின் வியாபாரக் கொடுக்கல் வாங்கல்கள் இதை நான் அறிந்திட முடியாமல் என் கவனத்தை திசைதிருப்பிவிட்டன!'' என்று உமர்(ரலி) கூறினார்.

2118. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

''ஒரு படையினர் கஅபாவின் மீது படையெடுப்பார்கள்; வெட்ட வெளியான ஒரு பூமியில் அவர்கள் இருக்கும்போது அவர்களில் முதலாமவர் முதல் கடைசி நபர்வரை உயிருடன் பூமிக்குள் புதையுண்டு போவார்கள்!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். 'இறைத்தூதர் அவர்களே! அவர்களில் முதலாமவர் முதல் கடைசி நபர் வரை எவ்வாறு புதையுண்டு போவார்கள்? அங்கே அவர்களைச் சேராதவர்களும் இருப்பார்கள். கடைவீதிகளும் இருக்குமே!'' என கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'அவர்களில் முதலாமவர் முதல் கடைசி நபர் வரை புதையுண்டு போகத்தான் செய்வார்கள்; எனினும் (அதற்குப்) பின்னர் அவரவரின் எண்ணத்திற்கேற்ப எழுப்பப்படுவார்கள்!'' என்றார்கள்.

2119. 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

''உங்களில் ஒருவர் ஜமாஅத்துடன் தொழுவது அவரின் வீட்டிலோ கடைவீதியிலோ தனியாகத் தொழுவதை விட இருபதுக்கும் அதிகமான மடங்கு சிறந்ததாகும்! ஏனெனில், அவர் உளூச் செய்து, அதை அழகுறச் செய்து, பிறகு பள்ளிவாசலுக்கு வருகிறார். தொழுகையைத் தவிர வேறு எதையும் அவர் நாடவில்லை; தொழுகையைத் தவிர வேறு எதுவும் அவரை (பள்ளி வாசலுக்கு) எழுந்து செல்ல வைக்கவில்லை! அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடிக்கும் ஒரு படித்தரம் (அந்தஸ்து) அவருக்கு உயர்த்தப்படுகிறது; அல்லது ஒரு தவறு அவரைவிட்டு நீக்கப்படுகிறது! மேலும், உங்களில் ஒருவர் தொழக்கூடிய இடத்தில் அமர்ந்திருக்கும் வரை வானவர்கள் அவருக்காக பிரார்த்திக்கின்றனர்! அங்கே, அவரின் காற்றுப்பிரிந்து, உளூ நீங்கிவிடாமலிருக்கும் வரை (பிறருக்குத்) துன்பம் தரும் எதையும் அவர் செய்யாமலிருக்கும் வரை. 'இறைவா! இவர் மீது கருணை செய்வாயாக! இவருக்கு இரக்கம் காட்டுவாயாக!' என்று வானவர்கள் பிரார்த்திக்கிறார்கள்! உங்களில் ஒருவர் தொழுகைக்காகக் காத்திருக்கும் வரை அவர் தொழுகையிலேயே இருக்கிறார்!''

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

2120. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

(ஒரு முறை) நபி(ஸல்) அவர்கள் கடைவீதியில் இருந்தார்கள். அப்போது ஒருவர் 'அபுல் காஸிமே! (காஸிமின் தந்தையே!)'' என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள் அவரை நோக்கித் திரும்பினார்கள். அவர், (வேறொருவரைச் சுட்டிக் காட்டி) 'இவரைத்தான் அழைத்தேன்! (உங்களை அழைக்கவில்லை!)'' என்றார். அப்போது நபி(ஸல்) அவர்கள். 'என் பெயரை நீங்கள் சூட்டிக் கொள்ளுங்கள்! என்னுடைய சூன்யத்தை ('அபுல் காஸிம்' என்னும் என்னுடைய குறிப்புப் பெயரை) சூட்டிக் கொள்ளாதீர்கள்!'' என்று கூறினார்கள்.

2121. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

ஒருவர் பகீஃ எனுமிடத்தில் 'அபுல் காஸிமே!' என்று அழைத்தார்கள். நபி(ஸல்) அவர்கள் அவரை நோக்கித் திரும்பியபோது 'உங்களை அழைக்கவில்லை' என்றார். நபி(ஸல்) அவர்கள் 'என் பெயரைச் சூட்டிக் கொள்ளுங்கள். என் சூன்யத்தை ('அபுல்காஸிம்' என்னும் என்னுடைய குறிப்புப் பெயரை) சூட்டிக் கொள்ளாதீர்கள்!'' என்றார்கள்.

2122. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் ஒரு பகல் நேரத்தில் புறப்பட்டார்கள். அவர்கள் என்னுடன் பேசவில்லை. நானும் அவர்களுடன் பேசவில்லை. 'பனூ கைனுகா' கடைவீதிக்கு அவர்கள் வந்ததும் ஃபாத்திமா(ரலி) அவர்களின் வீட்டுத் திண்ணையில் அமர்ந்தார்கள். 'இங்கே அந்தப் பொடிப்பையன் இருக்கிறானா?' என்று கேட்டார்கள். ஃபாத்திமா(ரலி) தம் மகனைச் சற்று நேரம் தாமதப்படுத்தினார். 'அவர் தம் மகனுக்கு நறுமண மாலையை அணிவித்துக் கொண்டிருக்கிறார்' என்றோ அல்லது 'மகனைக் குளிப்பாட்டிக் கொண்டிருக்கிறார்' என்றோ நான் நினைத்தேன். அப்போது ஃபாத்திமா(ரலி) அவர்களின் மகன் (ஹஸன்(ரலி)) ஓடிவந்தார். உடனே, நபி(ஸல்) அவர்கள் அவரைக் கட்டியணைத்து முத்தமிட்டார்கள். 'இறைவா! இவனை நீ நேசி! இவனை நேசிப்பவர்களையும் நீ நேசி!'' என்று கூறினார்கள்.

2123. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

''நபி(ஸல்) அவர்களின் காலத்தில் மக்கள் உணவுப் பொருட்களைச் சந்தைக்குக் கொண்டுவரும் வியாபாரிகளிடம் வழிமறித்து வாங்கிக் கொண்டிருந்தனர். 'உணவுப் பொருட்களை, விற்பனை செய்யப்படும் இடத்திற்கு (சந்தைக்கு) கொண்டு சென்ற பின்புதான் விற்க வேண்டும். வாங்கிய இடத்திலேயே அவற்றை விற்கக் கூடாது!' என்று வியாபாரிகளைத் தடுப்பதற்காக நபி(ஸல்) அவர்கள் ஆட்களை அனுப்பி வைத்தார்கள்!''

2124. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

''உணவுப் பொருளை வாங்கினால், அது (முழுமையாக) கைக்கு வந்து சேருவதற்கு முன்பு அதை விற்பதற்கு நபி(ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்!''

பகுதி 50

கடைத்தெருவில் கத்திப்பேசி சச்சரவு செய்வது வெறுப்புக்குரியதாகும்.

2125. அதா இப்னு யஸார்(ரஹ்) அறிவித்தார்.

நான் அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி ஆஸ்(ரலி) அவர்களைச் சந்தித்து, 'தவ்ராத்தில் நபி(ஸல்) அவர்களைப் பற்றிக் கூறப்பட்டிருக்கும் வர்ணனையை எனக்குச் சொல்லுங்கள்!'' என்றேன். அவர்கள், 'இதோ சொல்கிறேன்! அல்லாஹ்வின் மீது ஆணையாக! குர்ஆனில் கூறப்படும் அவர்களின் சில பண்புகள் தவ்ராத்திலும் கூறப்பட்டுள்ளன. 'நபியே! நிச்சயமாக உம்மை சாட்சியாக அளிப்பவராகவும், நற்செய்தி கூறுபவராகவும், எச்சரிப்பவராகவும், எழுதப் படிக்கத் தெரியாத பாமரர்களின் பாதுகாவலராகவும் நாம் அனுப்பியிருக்கிறோம்! நீர் என்னுடைய அடிமையும் என்னுடைய தூதருமாவீர்! தம் எல்லாக் காரியங்களிலும் இறைவனையே நம்பியிருப்பவரென்று உமக்கு நான் பெயரிட்டுள்ளேன்!'' (இவ்வாறெல்லாம் கூறிவிட்டு, நபி(ஸல்) அவர்களின் அடையாளங்களைக் கூறும் விதத்தில்) 'அவர் கடின சித்தம் கொண்டவராகவோ, முரட்டுத்தனமுடையவராகவோ, கடைவீதிகளில் கத்திப் பேசி சச்சரவு செய்பவராகவோ இருக்க மாட்டார்! தீமைக்கு பதிலாகத் தீமையைச் செய்யமாட்டார்; மாறாக, மன்னித்து கண்டு கொள்ளாமல்விட்டு விடுவார்! அவர் மூலம் வளைந்த மார்க்கத்தை நிமிர்த்தும் வரை அல்லாஹ் அவ(ரின் உயி)ரைக் கைப்பற்ற மாட்டான்! மக்கள் 'லாயிலாஹ இல்லல்லாஹு' என்று கூறுவார்கள்; அதன் மூலம் குருட்டுக் கண்களும், செவிட்டுக் காதுகளும், மூடப்பட்ட உள்ளங்களும் திறக்கப்படும்!' என்று அதில் அவர்களைக் குறித்து வர்ணிக்கப்பட்டுள்ளது!'' என பதிலளித்தார்கள்.

பகுதி 51

அளந்து கொடுப்ப(தற்கான கூலியைத் தருவ)து விற்பவர் மற்றும் ஒப்படைப்பவர் (அல்லது கடனைச் செலுத்துபவர்) மீதும்தான் கடமையாகும்.

அல்லாஹ் கூறினான்.

''இவர்கள் மக்களுக்கு அளந்தோ, நிறுத்தோ கொடுத்தால் குறைத்து விடுகிறார்கள்!'' (திருக்குர்ஆன் 83:04)

''(நீங்கள் அளந்து வாங்கும் பொழுது உங்கள் விலையை முழுமையாகப் பெறும் விதத்தில்) நிறைவாக அளந்து வாங்குங்கள்!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

''நீர் விற்பனை செய்தால் அளந்து கொடும்! நீர் வாங்கினால் அளந்து வாங்கும்!'' என்று நபி(ஸல்) அவர்கள் உஸ்மான்(ரலி) அவர்களிடம் கூறினார்கள்.

2126. 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

''ஒருவர் உணவுப் பொருளை வாங்கினால் அது (முழுமையாக) அவரின் கைக்கு வந்து சேராமல் அதை அவர் விற்கக் கூடாது!''

என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

2127. ஜாபிர்(ரலி) அறிவித்தார்.

அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி ஹராம்(ரலி)தான் கடன்பட்ட நிலையில் மரணித்துவிட்டார்கள்; அவருக்குக் கடன் கொடுத்தவர்கள் அவரின் கடனில் சிறிது தள்ளுபடி செய்ய வேண்டும் என்பதற்காக நபி(ஸல்) அவர்களின் உதவியை நாடினேன். நபி(ஸல்) அவர்கள் (கடனைத் தள்ளுபடி செய்யுமாறு) கோரியபோது அவர்கள் அதைச் செய்யவில்லை. அப்போது நபி(ஸல்) அவர்கள் என்னிடம், 'நீர் சென்று உம்முடைய பேரீச்சம் பழத்தில் அஜ்வா எனும் ரகத்தைத் தனியாகவும் இப்னு ஸைத் எனும் ரகத்தைத் தனியாகவும் ஒவ்வொரு ரகத்தையும் தனித்தனியாகவும் வகைப்படுத்துவீராக! பிறகு என்னிடம் அனுப்புவீராக!'' என்றனர். அவ்வாறு நான் செய்து நபி(ஸல்) அவர்களிடம் அனுப்பினேன். நபி(ஸல்) அவர்கள் வந்து அதன் மேற்புறத்திலோ நடுப்புறத்திலோ அமர்ந்தார்கள். பிறகு என்னிடம் '(கடன் கொடுத்த) இக்கூட்டத்தினருக்கு அளந்து கொடுப்பீராக!'' என்றார்கள். அவர்களுக்குக் கொடுக்க வேண்டியதை முழுமையாக நான் அளந்து கொடுத்தேன். என்னுடைய பேரீச்சம் பழத்தில் எதுவும் குறையாமல் அப்படியே மீதமிருந்தது.

மற்றோர் அறிவிப்பில் 'பேரீச்சம் குலையை வெட்டிக் கடனை நிறைவேற்று!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என உள்ளது.

பகுதி 52

அளப்பது விரும்பத்தக்கது.

2128. 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

''உங்கள் உணவுகளை அளந்து கொள்ளுங்கள்; உங்களுக்கு பரக்கத் செய்யப்படும்.''

என மிக்தாம் இப்னு மஃதீ கரிப் அறிவித்தார்.

பகுதி 53

நபி(ஸல்) அவர்கள் காலத்தில் இருந்த ஸாவு, முத்து ஆகியவற்றில் பரக்கத் உள்ளது.

இது பற்றி நபி(ஸல்) அவர்கள் வழியாக ஆயிஷா(ரலி) அறிவிக்கும் ஹதீஸ் உள்ளது.

2129. 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

''இப்ராஹீம்(அலை) மக்காவைப் புனித நகராக்கினார்கள். அதற்காக பிரார்த்தித்தார்கள். இப்ராஹீம்(அலை) மக்காவைப் புனித நகராக்கியது போல் நான் மதீனாவைப் புனித நகராக்கினேன். இப்ராஹீம்(அலை) மக்காவிற்காக பிரார்த்தித்தது போல் நான் மதீனாவிற்காக அதன் ஸாவு, முத்து ஆகியவற்றில் (பரக்கத்துக்காக) பிரார்த்தித்தேன்.''

என அப்துல்லாஹ் இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார்.

2130. 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

''இறைவா! மதீனாவாசிகளின் முகத்தலளவையில் நீ பரக்கத்தை (அருள் வளத்தை) அளிப்பாயாக! குறிப்பாக அவர்களின் ஸாவு, முத்து ஆகியவற்றில் நீ பரக்கத்தை அளிப்பாயாக!''

என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

பகுதி 54

உணவுப் பொருட்களை விற்பதும் பதுக்குவதும்.

2131. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

''குத்துமதிப்பாக உணவுப் பொருட்களை வாங்கிக் கொண்டிருந்த மக்கள், அவற்றைத் தம் இருப்பிடங்களுக்குக் கொண்டு போய்ச் சேர்ப்பதற்கு முன்பு. வழியிலேயே விற்றதற்காக நபி(ஸல்) அவர்களின் காலத்தில் அடிக்கப்பட்டதை நான் பார்த்துள்ளேன்!''

2132. தாவூஸ்(ரஹ்) அறிவித்தார்.

'உணவுப் பொருள் கைக்கு வந்து சேர்வதற்கு முன்பு அதை விற்பதற்கு நபி(ஸல்) அவர்கள் தடைவிதித்தார்கள்!'' என்று இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார். 'அது எவ்வாறு?' என்று கேட்டேன். அதற்கு இப்னு அப்பாஸ்(ரலி) 'உணவுப் பொருள் அதை வாங்கியவரின் கைக்குப் போய்ச் சேராத (நிலையில் விற்கப்படுவ)தால் இது (உண்மையில்) காசுக்குக் காசை விற்பதாகும்'' என்று பதிலளித்தார்கள்.

2133. 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

''ஒருவர் ஓர் உணவுப் பொருளை வாங்கினால், அது அவரின் கைக்கு (முழுமையாக) வந்து சேரும் வரை அதை அவர் விற்கக்கூடாது!''

என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

2134. ஸுஹ்ரி(ரஹ்) கூறினார்:

''யாரிடமாவது சில்லறை இருக்கிறதா?' என்று மாலிக் இப்னு அவ்ஸ்(ரலி) கேட்டார்கள். அப்போது தல்ஹா(ரலி) 'என்னிடம் இருக்கிறது. என்றாலும் ஃகாபாவிலிருந்து கருவூலக் காப்பாளர் வரும்வரை தரமுடியாது!'' என்றார்கள்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

''தங்கத்திற்கு வெள்ளியை மாற்றிக் கொள்வது, உடனுக்குடன் மாற்றினாலே தவிர, வட்டியாகும்! தீட்டிய கோதுமைக்குத் தீட்டிய கோதுமையை மாற்றிக் கொள்வதும் வட்டியாகும்; உடனுக்குடன் மாற்றினாலே தவிர! பேரீச்சம் பழத்திற்குப் பேரீச்சம் பழத்தை மாற்றிக் கொள்வதும் வட்டியாகும். உடனுக்குடன் மாற்றினாலே தவிர! வாற்கோதுமைக்கு வாற்கோதுமையை மாற்றிக் கொள்வதும் வட்டியாகும்; உடனுக்குடன் மாற்றினாலே தவிர!'' என உமர்(ரலி) அறிவித்தார்.

பகுதி 55

உணவுப் பொருள் கைக்கு வந்து சேருவதற்கு முன் அதை விற்பதும் கைவசம் இல்லாததை விற்பதும்.

2135. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

''கைக்கு வந்து சேருவதற்கு முன் விற்கக் கூடாது!'' என்று நபி(ஸல்) அவர்கள் தடை விதித்தது, உணவுப் பொருட்களுக்குத் தான்! (ஆயினும்) எல்லாப் பொருட்களுக்கும் இவ்வாறுதான் என்று கருதுகிறேன்!''

2136. 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

''ஒருவர் உணவுப் பொருட்களை வாங்கினால், அது முழுமையாக அவரின் கைக்கு வந்து சேரும் வரை அதை அவர் விற்கக் கூடாது!''

என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

பகுதி 56

குத்துமதிப்பாக உணவுப் பொருட்களை வாங்கியவர், அதைத் தம் இருப்பிடத்திற்கு கொண்டு சேர்ப்பதற்கு முன்பு விற்கக் கூடாது என்பதும் அதற்கு முன்பே விற்பவரை தண்டித்து ஒழுக்கம் கற்பிப்பதும்.

2137. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

''நபி(ஸல்) அவர்கள் காலத்தில், குத்துமதிப்பாக உணவுப் பொருட்களை வாங்கிக் கொண்டிருந்த மக்கள், அவற்றைத் தம் இருப்பிடங்களுக்குக் கொண்டு போய்ச் சேர்க்காமல் அதே இடத்தில் விற்றதற்காக அடிக்கப்பட்டதை பார்த்திருக்கிறேன்!''

பகுதி 57

ஒரு பொருளையோ அல்லது கால் நடையையோ விலைக்கு வாங்குபவர் விற்றவரிடமே அதைவிட்டுவிட்டால் அல்லது கைக்கு வந்து சேருவதற்கு முன் அது இறந்துவிட்டால்..?

''வியாபார ஒப்பந்தம் ஏற்பட்டபோது உயிருடனும் முழுமையாகவும் இருந்தால் அதன் பிறகு ஏற்படும் சேதத்திற்கு வாங்கியவரே பொறுப்பாளி!'' என்று இப்னு உமர்(ரலி) கூறினார்.

2138. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் (மக்காவில் இருந்த காலத்தில்) காலையிலோ மாலையிலோ என் தந்தை அபூ பக்ர்(ரலி) அவர்களின் வீட்டிற்கு வராமல் இருந்த நாள்கள் மிகக் குறைவாகவே இருக்கும்! மதீனாவிற்கு (ஹிஜ்ரத் செய்து) புறப்பட நபி(ஸல்) அவர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டபோது, நண்பகலில் நபி(ஸல்) அவர்கள் எங்கள் வீட்டிற்கு வந்தது எங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. நபி(ஸல்) அவர்கள் வந்திருக்கும் விஷயம் அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் கூறப்பட்டது. அபூ பக்ர்(ரலி) 'புதிதாக ஏதோ பிரச்சினை ஏற்பட்டிருப்பதால் தான், இந்நேரத்தில் நபி(ஸல்) அவர்கள் நம்மிடம் வந்திருக்கிறார்கள்!'' என்று கூறினார்கள். அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் நபி(ஸல்) அவர்கள் வந்ததும், 'உங்களுடன் இருப்பவர்களை வெளியேற்றுங்கள்!'' என்று கூறினார்கள். 'இறைத்தூதர் அவர்களே! அஸ்மா, ஆயிஷா ஆகிய என்னுடைய இரண்டு புதல்வியர் மட்டுமே உள்ளனர்!'' என்று அபூ பக்ர்(ரலி) கூறினார். நபி(ஸல்) அவர்கள், '(மதீனாவிற்குப்) புறப்பட (ஹிஜ்ரத் செய்ய) எனக்கு அனுமதி அளிக்கப்பட்டுவிட்டது உமக்குத் தெரியுமா?' என்று கேட்டார்கள். அதற்கு அபூ பக்ர்(ரலி) 'இறைத்தூதர் அவர்களே! '(தாங்கள் புறப்படும் (ஹிஜ்ரத்தின்)போது நானும் தங்களுடன் வர விரும்புகிறேன்!'' என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் 'நீங்கள் என்னுடன் வருதை நானும் விரும்புகிறேன்!'' என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் 'நீங்கள் என்னுடன் வருவதை நானும் விரும்புகிறேன்!'' என்றார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நான் பயணத்திற்காகத் தயார்படுத்தி வைத்திருக்கும் இரண்டு ஒட்டகங்கள் என்னிடம் உள்ளன அவற்றில் ஒன்றை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்!' எனக் கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் 'அதை நான் விலைக்கு வாங்கிக் கொள்கிறேன்!'' என்றார்கள்.

பகுதி 58

ஒருவர் வியாபாரம் செய்து கொண்டிருக்கும்போது, தாம் வியாபாரம் செய்வதற்காக எவரும் குறுக்கிடக் கூடாது; ஒருவர் விலை பேசிக் கொண்டிருக்கும்போது மற்றொருவர் அதிக விலை பேசக் கூடாது; முன்பு விலை பேசியவர் அனுமதித்தால் அல்லது வியாபாரத்தை முறித்துவிட்டால் குறுக்கிடலாம்.

2139. 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

''ஒருவர் வியாபாரம் செய்து கொண்டிருக்கும்போது, தாம் வியாபாரம் செய்வதற்காக எவரும் குறுக்கிடக் கூடாது!''

என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

2140. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

''கிராமத்திலிருந்து (விற்பனைக்காகச் சரக்கு கொண்டு) வருபவருக்காக உள்ளூர்வாசி விற்றுக் கொடுக்க வேண்டாம்! வாங்கும் எண்ணமின்றி விலை ஏற்றி விடுவதற்காக அதிக விலைக்குக் கேட்க வேண்டாம்! விலை உயர்த்தி விற்பதற்காக, அதிக விலைக்குக் கேட்க வேண்டாம்! (விலை உயர்த்தி விற்பதற்காக, ஆளை ஏற்பாடு செய்து, அதிக விலைக்குக் கேட்கச் செய்வதும் கூடாது!) ஒருவர் வியாபாரம் செய்து கொண்டிருக்கும்போது, தாம் வியாபாரம் செய்வதற்காக எவரும் குறுக்கிட வேண்டாம்! ஒருவர் தம் (முஸ்லிம்) சகோதரர் பெண் பேசிக் கொண்டிருக்கும்போது, இடையில் குறுக்கிட்டுப் பெண் பேச வேண்டாம்! ஒரு பெண், தன் சகோதரியை தலாக் (விவாகரத்து செய்து) விடுமாறு (கணவனிடம்) கேட்டுத் தன்னுடைய பாத்திரத்தை நிரப்பிக் கொள்ள வேண்டாம்!'' என்று நபி(ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்!''

பகுதி 59

ஏலத்தில் விற்பது.

''கனீமத் பொருட்களை (ஏலம்விட்டு) அதிக விலைக்குக் கேட்பவரிடம் விற்பதை மக்கள் தவறாகக் கருதவில்லை!'' என்று அதா(ரஹ்) கூறினார்.

2141. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.

ஒருவர் தமக்குச் சொந்தமான அடிமை தம் மரணத்திற்குப் பின் விடுதலையாவார் என்று கூறியிருந்தார். அம்மனிதருக்குப் பொருள் தேவை ஏற்பட்டது. அப்போது நபி(ஸல்) அவர்கள் அந்த அடிமையைப் பெற்று, 'இவரை என்னிடமிருந்து வாங்கிக் கொள்பவர் யார்?' என்று கேட்டார்கள். அவரை நுஅய்கி இப்னு அப்தில்லாஹ்(ரலி) இன்ன விலைக்கு வாங்கினார்கள். நபி(ஸல்) அவர்கள், அவரிடம் அந்த அடிமையைக் கொடுத்தார்கள்.

பகுதி 60

'நஜ்ஷ்' வாங்கும் நோக்கமின்றி விலையை உயர்த்தி விடுவதற்காக (ஏலம் மற்றும் பிற பேரங்களின் போது) விலை அதிகமாகக் கேட்பது. (பின் குறிப்பை பார்க்க)

'(மேற்கூறியபடி) மோசடியாக விலையை ஏற்றிவிடுவது செல்லாது' என்று அறிஞர்கள் கருதுகின்றனர்.

''மோசடியாக விலையை உயர்த்தி விடுபவன் வட்டி உண்பவன் ஆவான்! இது மோசடியாகும்! செல்லாததும் அனுமதிக்கப்படாததாகும்!'' என்று இப்னு அபீ அவ்ஃபா(ரலி) கூறினார். (பின் குறிப்பைப் பார்க்க)

''மோசடி செய்பவர் நரகத்தில் இருப்பார்! நம்முடைய கட்டளையில்லாத ஒரு காரியத்தை யாரேனும் செய்தால் அது ஏற்றுக் கொள்ளப்படாது!'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

2142. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

''நபி(ஸல்) அவர்கள் மோசடியாக ஏலம் விடுவதைத் தடை செய்தார்கள்.

பகுதி 61

தன் கட்டுப்பாட்டில் இல்லாதவற்றையும், தன் உடைமையல்லாதவற்றையும் அளவோ, தரமோ, தன்மையோ தெரியாதவற்றையும் விற்பதும் பிறக்காத உயிரினத்தை விற்பதும்.

2143. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

''நபி(ஸல்) அவர்கள் பிறக்காத உயிரினத்தை விற்பதற்குத் தடை விதித்தார்கள். அறியாமைக் கால மக்கள் இத்தகைய வியாபாரம் செய்து வந்தனர்! 'இந்த ஒட்டகம் குட்டி போட்டு, அந்தக் குட்டிக்குப் பிறக்கும் குட்டியை நான் வாங்கிக் கொள்கிறேன்! (அல்லது விற்கிறேன்!)' என்று செய்யப்படும் வியாபாரமே இது!''

பகுதி 62

'முலாமஸா' எனும் வியாபாரம்.

இதை நபி(ஸல்) அவர்கள் தடை செய்ததாக அனஸ்(ரலி) கூறினார்.

2144. அபூ ஸயீத்(ரலி) அறிவித்தார்.

''நபி(ஸல்) அவர்கள் 'முனாபதா' வியாபாரத்தைத் தடை செய்தார்கள்! 'முனாபதா' என்பது. ஒருவர் தம் துணியை, வாங்குபவர் விரித்துப் பார்ப்பதற்கு முன் அதை வாங்குபவரை நோக்கி எறிந்து (விட்டால் அதை அவர் வாங்கியாக வேண்டும் என்ற நிபந்தனையுடன்) அவரிடம் விற்பதாகும்! மேலும், 'முலாமஸா' எனும் வியாபாரத்தையும் நபி(ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்! 'முலாமஸா' என்பது துணியை (விரித்துப் பார்க்காமலேயே அதை) தொட்டவுடன் (வியாபாரம் உறுதியாகிவிடும் என்ற நிபந்தனையுடன்) விற்பனை செய்வதாகும்!'' (பார்க்க பின் குறிப்பு)

2145. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

''நபி(ஸல்) அவர்கள் ஆடை அணியும் முறைகள் இரண்டை தடைசெய்தார்கள். அவற்றுள் ஒன்று. ஒரே துணியைப் போர்த்தி கைகளால் முழங்கால்களைக் கட்டி அமர்வதும் அதையே தோள் புஜத்தில் போட்டுக் கொள்வதுமாகும்! மேலும் 'முலாமஸா முனாபதா' என்ற வியாபார முறைகளையும் நபி(ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்!''

பகுதி 63

'முனாபதா' எனும் வியாபாரம்.

இதை நபி(ஸல்) அவர்கள் தடை செய்திருப்பதாக அனஸ்(ரலி) கூறினார்.

2146. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

''நபி(ஸல்) அவர்கள் 'முனாபதா, முலாமஸா' ஆகிய வியாபாரங்களைத் தடை செய்தார்கள்!''

2147. அபூ ஸயீத்(ரலி) அறிவித்தார்.

''நபி(ஸல்) அவர்கள் ஆடை அணியும் முறை இரண்டையும் 'முலாமஸா, முனாபதா' என்ற வியாபார முறைகளையும் தடை செய்தார்கள்!''

பகுதி 64

ஒட்டகம் மாடு, ஆடு மற்றும் கால்நடைகளை விற்பவர், பாலைக் கறக்காமல் (வைத்திருந்து) கனத்த மடியுடன் காட்டி விற்பனை செய்வது கூடாது.

2148. 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

''ஒட்டகம், ஆடு ஆகியவற்றை (அவற்றின் பாலைக் கறக்காமல் விட்டுவைத்திருந்து) மடிகனக்கச் செய்யாதீர்கள்! மடி கனக்கச் செய்த இத்தகைய பிராணிகளை வாங்கியவர் விரும்பினால் பால் கறந்து பார்த்து அதை வைத்துக் கொள்ளலாம்! விரும்பாவிட்டால் ஒரு ஸாவு பேரீச்சம் பழத்துடன் அதை விற்றவரிடமே திருப்பிக் கொடுத்து விடலாம்! இந்த இரண்டில் எதைச் செய்வதற்கும் அவருக்கு அனுமதி உண்டு!''

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

மற்றோர் அறிவிப்பில் '(விரும்பாவிட்டால்) ஒரு ஸாவு உணவுப் பொருளுடன் திருப்பிக் கொடுக்கும் இந்த உரிமை (பிராணியை வாங்கிய நாளிலிருந்து) மூன்று நாள்கள் வரையிலும் தான்!'' என்றும் காணப்படுகிறது.

'பேரீச்சம் பழத்தின் ஒரு ஸாவு' என்பதே அதிகமான அறிவிப்புகளில் காணப்படுகிறது.

2149. இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.

''மடி கனக்கச் செய்யப்பட்ட ஓர் ஆட்டை யாரேனும் வாங்கி, அதைக் திருப்பிக் கொடுப்பதாக இருந்தால் அத்துடன் ஒரு ஸாவு பேரீச்சம் பழம் சேர்த்துக் கொடுக்கட்டும்! மேலும், நபி(ஸல்) அவர்கள் (சந்தைக்கு வரும்) வியாபாரிகளை எதிர்கொண்டு (வழியிலேயே சந்தித்து) சரக்குகளை வாங்குவதைத் தடுத்தார்கள்!''

2150. 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

''(சரக்குகளை ஏற்றிக் கொண்டு) வாகனத்தில் வருபவர்களை எதிர்கொண்டு (வழியிலேயே சந்தித்து) சரக்குகளை வாங்காதீர்கள்! ஒருவர் வியாபாரம் செய்து கொண்டிருக்கும்போது, தாம் வியாபாரம் செய்வதற்காக எவரும் குறுக்கிடாதீர்கள்! வாங்கும் நோக்கமின்றி விலையை ஏற்றிவிடவேண்டும் என்பதற்காகவே விலைகேட்காதீர்கள்! (ஆளமர்த்தி அவ்விதம் விலைகேட்கச் செய்வதும் கூடாது!) கிராமத்திலிருந்து (சரக்கு கொண்டு) வருபவர்களுக்காக உள்ளூர்வாசிகள் விற்றுக் கொடுக்க வேண்டாம்!'' ஆடுகளின் (பாலைக் கறக்காமல் அவற்றின்) மடியை கனக்கச் செய்யாதீர்கள்! இத்தகைய ஆட்டை ஒருவர் வாங்கிப் பால் கறந்து, திருப்தியடைந்தால் வைத்துக் கொள்ளலாம்; திருப்தியடையாவிட்டால் அந்த ஆட்டை ஒரு ஸாவு பேரீச்சம் பழத்துடன் திருப்பிக் கொடுத்து விடலாம்! இவ்விரண்டில் ஒன்றைத் தேர்வு செய்யும் உரிமை வாங்கியவருக்கு உண்டு!''

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பகுதி 65

மடி கனக்கச் செய்யப்பட்ட பிராணியை வாங்கியவர் விரும்பினால் அதைத் திருப்பிக் கொடுத்து விடலாம்; ஆனால், (திருப்பித் தரும்போது) கறந்த பாலுக்காக ஒரு ஸாவு பேரீச்சம் பழம் கொடுக்க வேண்டும்.

2151. 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

''மடிக கனக்கச் செய்யப்பட்ட ஆட்டை யாரேனும் வாங்கினால் அதில் பால் கறந்து பார்த்துத் திருப்தியடைந்தால் வைத்துக் கொள்ளலாம்; திருப்தியடையாவிட்டால் கறந்த பாலுக்காக ஒரு ஸாவு பேரீச்சம் பழம் கொடுக்க வேண்டும்!''

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பகுதி 66

விபச்சாரம் செய்யும் அடிமையை விற்பது.

''விபச்சாரம் செய்யும் அடிமையை வாங்கியவர். விரும்பினால் விற்றவரிடமே திருப்பிக் கொடுத்துவிடலாம்!'' என்று ஷுரைஹ்(ரஹ்) கூறினார்.

2152. 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

''ஓர் அடிமைப் பெண் விபச்சாரம் செய்து, அது நிரூபணமானால் அவளுக்கு. எஜமானன் கசையடி கொடுக்கட்டும்! (அவளை தண்டித்துவிட்டதால்) குற்றம் சொல்ல வேண்டாம்! பிறகு மறுபடியும் அவள் விபச்சாரம் செய்தால் அவளுக்குக் கசையடி கொடுக்கட்டும்! குற்றம் சொல்ல வேண்டாம்! மூன்றாம் முறையும் விபச்சாரம் செய்தால் அவளை (அவளுடைய எஜமானன்) முடியாலான ஒரு கயிற்றுக்காகவாவாது விற்று விடட்டும்!''

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

2153 / 2154 அபூ ஹுரைரா(ரலி) ஸைத்பின் காலித்(ரலி) ஆகியோர் அறிவித்தார்கள்:

''ஓர் அடிமைப் பெண் கற்புடனிருக்காமல் விபச்சாரம் செய்தால்... (என்ன செய்ய வேண்டும்?)'' என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கவர்கள், 'அவள் விபச்சாரம் செய்தால் கசையடி கொடுங்கள்; (அதற்குப்) பிறகும் விபச்சாரம் செய்தால் கசையடி கொடுங்கள்; மீண்டும் விபச்சாரம் செய்தால் அவளை ஒரு முடிக் கற்றைக்காவது விற்றுவிடுங்கள்!'' என்றார்கள்.

''மூன்றாவது நான்காவது முறைக்கு மேல் என்னவென்று நான் அறிய மாட்டேன்!'' என்று இப்னு ஷிஹாப்(ரஹ்) கூறினார்.

பகுதி 67

ஆண்கள் பெண்களிடம் விற்பதும் வாங்குவதும்.

2155. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள்: (பரீரா என்ற அடிமைப் பெண்ணை விலைக்கு வாங்கி விடுதலை செய்வது சம்பந்தமான) விஷயத்தை அவர்களிடம் சொன்னேன். நபி(ஸல்) அவர்கள் 'நீ விலைக்கு வாங்கி விடுதலை செய்! (அந்த அடிமை மரணித்த பின்) அவருக்கு வாரிசாகும் உரிமை, விடுதலை செய்தவருக்குத் தான்!'' என்று கூறினார்கள். பிறகு, மாலை நேரத்தில் நபி(ஸல்) அவர்கள் எழுந்து அல்லாஹ்வை அவனுடைய தகுதிக்கேற்பப் புகழ்ந்து, 'அல்லாஹ்வின் வேதத்தில் இல்லாத நிபந்தனைகளைக் கூறுபவர்களுக்கு என்ன நேர்ந்தது? யார் அல்லாஹ்வின் வேதத்தில் இல்லாத நிபந்தனையை விதிக்கிறார்களோ அவர்களின் அந்த நிபந்தனை வீணானது; (செல்லாதது;) அவர்கள் நூறு நிபந்தனைகளை விதித்தாலும் சரியே! அல்லாஹ்வின் நிபந்தனைதான் நிறைவேற்றத் தக்கதும் உறுதியானதும் (கட்டுப்படுத்தும் வலிமையுடையதும்) ஆகும்!'' எனக் கூறினார்கள்.

2156. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

ஆயிஷா(ரலி) (அடிமையாயிருந்த) பரீராவை விலை பேசினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் தொழுகைக்குச் சென்றார்கள். அவர்கள் வந்ததும் ஆயிஷா(ரலி) 'பரீராவின் எஜாமானார்கள். 'பரீராவுக்கு வாரிசாகும் உரிமையைத் தங்களுக்கு வழங்கினாலே தவிர. அவரை விற்க மாட்டோம்' எனக் கூறுகின்றனர்!'' என்றார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'அடிமையின் (மரணத்திற்குப் பின் அவரின்) வாரிசாகும். உரிமை (அவரை) விடுதலை செய்தவருக்குத் தான்!' எனக் கூறினார்கள்.

''அப்பெண்ணின் கணவர் அடிமையாக இருந்தாரா? அல்லது சுதந்திரமானவராக இருந்தாரா?' என்று நாஃபிவு(ரஹ்) அவர்களிடம் கேட்டேன்; அதற்கவர் 'எனக்குத் தெரியாது!' என்று பதிலளித்தார்!'' என ஹம்மாம்(ரஹ்) கூறினார்.

பகுதி 68

கிராமத்திலிருந்து (சரக்கு கொண்டு) வருபவருக்காக உள்ளூர் வாசி கூலியேதும் பெறாமல் விற்றுக் கொடுக்கலாமா? அவருக்குத் துணை செய்யலாமா? அவருக்கு அறிவுரை கூறலாமா?

''உங்களில் ஒருவர் தம் சகோதரரிடம் ஆலோசனை கேட்டால் அவருக்கு அச்சகோதரர் ஆலோசனை வழங்கட்டும்!'' என்று நபி(ஸல்) அவர்கள் அவர்கள் கூறினார்கள்.

''இதற்கு அனுமதி உள்ளது!'' என்று அதாவு(ரஹ்) கூறினார்.

2157. ஜாரீர்(ரலி) அறிவித்தார்.

''வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை; முஹம்மத்(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதரவார்கள்' என்று உறுதியாக நம்புதல், தொழுகையை நிலை நாட்டுதல். ஸகாத் கொடுத்தல், தலைவரின் கட்டளைகளைச் செவியேற்றுக் கட்டுப்படுதல், எல்லா முஸ்லிம்களுக்கும் நல்லதை நாடுதல் ஆகிய விஷயங்களை ஏற்றுச் செயல்படுவதாக நபி(ஸல்) அவர்களிடம் நான் உறுதிமொழி கொடுத்தேன்!''

2158. 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

''(சந்தைக்கு வரும்) வணிகர்களை இடைமறித்து வாங்காதீர்கள்! கிராமத்திலிருந்து (சரக்கு கொண்டு) வருபவர்களுக்காக உள்ளூர்வாசி விற்றுக் கொடுக்க வேண்டாம்!''

என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

''கிராமத்திலிருந்து வருபவருக்காக உள்ளூர்வாசி விற்றுக் கொடுக்க வேண்டாம்!'' என்பதன் பொருள் என்ன?' என்று இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் கேட்டேன்; அதற்கு அவர்கள் 'இடைத் தரகராக ஆகக்கூடாது! (என்பதுதான் அதன் பொருள்!)' என பதிலளித்தார்கள்'' என்று தாவூஸ்(ரஹ்) கூறினார்.

பகுதி 69

கிராமத்திலிருந்து (சரக்குக் கொண்டு) வருபவருக்காக உள்ளூர்வாசி கூலி வாங்கிக் கொண்டு விற்றுக் கொடுக்கக் கூடாது.

2159. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

கிராமத்திலிருந்து (சரக்குக் கொண்டு) வருபவருக்காக உள்ளூர்வாசி விற்றுக் கொடுப்பதை நபி(ஸல்) அவர்கள் தடுத்தனர்.

இவ்வாறே இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்.

பகுதி 70

கிராமத்திலிருந்து வருபவருக்காக உள்ளூர்வாசி தரகராக நின்று வாங்கிக் கொடுக்கக் கூடாது.

விற்பவர் வாங்குபவர் இருவருக்குமே இடைத் தரகராக இருக்கக் கூடாது என்று இப்னு ஸீரின், இப்ராஹீம் ஆகியோர் கூறுகின்றனர்.

''அரபியா, 'எனக்கு இந்த ஆடையை வாங்கிக் கொடு!' என்று சொல்வதற்கு 'எனக்கு விற்றுக் கொடு!' என்று கூறுவதற்குப் பயன்படுத்தும் சொல்லை ('பிஃ லீ ஸவ்பன்' என்னும் வாக்கியத்தை) கையாள்வார்கள்!'' என இப்ராஹீம்(ரஹ்) கூறினார்.

2160. 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

''ஒருவர் வியாபாரம் செய்து கொண்டிருக்கும்போது தாம் வியாபாரம் செய்வதற்காக எவரும் குறுக்கிடக் கூடாது! (வாங்கும் நோக்கமின்றி) விலையை உயர்த்த வேண்டும் என்பதற்காகவே விலை கேட்காதீர்கள்! (விலையை உயர்த்துவதற்காக ஆளமர்த்தி அதிக விலை கேட்கச் செய்வதும் கூடாது!) கிராம வாசிகக்காக நகரவாசி விற்றுக் கொடுக்கக் கூடாது!''

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

2161. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

''கிராமத்திலிருந்து (சரக்கு கொண்டு) வருபவருக்காக உள்ளூர்வாசி விற்றுக் கொடுக்கக் கூடாது!'' என்று எங்களுக்குத் தடைவிதிக்கப்பட்டிருந்தது!''

பகுதி 71

(சந்தைக்குச் சரக்கு கொண்டு வரும்) வியாபாரிகளை எதிர்கொண்டு வாங்கக் கூடாது! இத்தகைய வியாபாரம் ரத்து செய்யப்படும்; ஏனெனில், இவ்வாறு செய்பவர் அறிந்து கொண்டே செய்தால் அவர் பாவியும் குற்றவாளியுமாவார். இது வியாபாரத்தில் செய்யும் மோசடியாகும். மோசடி கூடாத ஒன்றாகும்.

2162. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

வணிகர்களை எதிர் கொண்டு வாங்குவதையும் கிராமத்திலிருந்து சரக்குக் கொண்டு வருபவருக்காக உள்ளூர்வாசி விற்றுக் கொடுப்பதையும் நபி(ஸல்) அவர்கள் தடுத்தார்கள்.

2163. தாவூஸ் அறிவித்தார்.

''கிராமத்திலிருந்து வருபவருக்காக உள்ளூர்வாசி விற்றுத் தரக்கூடாது'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதன் பொருள் என்ன? என்று இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு இப்னு அப்பாஸ்(ரலி) 'இவர் அவருக்கு இடைத் தரகராகக் கூடாது' என்றார்.

2164. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

யாரேனும் மடி கனக்கச் செய்யப்பட்ட பிராணியை வாங்கினால் (திருப்பிக் கொடுப்பதாக இருந்தால்) அத்துடன் ஒரு ஸாவு (பேரீச்சம்பழம் அல்லது உணவுப் பொருள்) சேர்த்துக் கொடுக்கட்டும். வியாபாரிகளை எதிர்கொண்டு வாங்குவதை நபி(ஸல்) அவர்கள் தடுத்தனர்.

2165. 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

''ஒருவர் வியாபாரம் செய்து கொண்டிருக்கும்போது தாம் வியாபாரம் செய்வதற்காக எவரும் குறுக்கிடக் கூடாது; மேலும் விற்பனைப் பொருள்கள் சந்தைக்கு வந்து இறங்கு முன் வாங்காதீர்கள்.''

என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

பகுதி 72

வியாபாரிகளை எதிர் கொள்வதற்குரிய எல்லை.

2166. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

நாங்கள் (சரக்கு கொண்டுவரும்) வணிகர்களை எதிர்கொண்டு அவர்களிடம் உணவுப் பொருட்களை வாங்குவோம். நபி(ஸல்) அவர்கள் அதைக் கடைவீதிக்குக் கொண்டு செல்லாமல் (அதே இடத்தில்) விற்பதைத் தடை செய்தார்கள்.

வணிகர்களை எதிர்கொண்டது கடைவீதி துவங்கும் இடத்தில்தான் இதைப் பின்வரும் என புகாரி கூறுகிறேன்.

2167. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

''நபித்தோழர்கள் உணவுப் பொருட்களைக் கடை வீதி துவங்கும் இடத்தில் வாங்கி அதே இடத்தில் விற்று வந்தனர்; எனவே, கடைத் தெருவுக்குள் கொண்டு செல்லாமல் வாங்கிய இடத்திலேயே விற்பதை நபி(ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்!''

பகுதி 73

வியாபாரத்தின்போது அனுமதிக்கப்படாத நிபந்தனைகளை விதித்தால்...?

2168. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

(அடிமைப் பெண்ணாயிருந்த) பரீரா என்னிடம் வந்து, 'என்னுடைய எஜமானர்கள் ஆண்டிற்கு ஓர் ஊக்கியா வீதம் ஒன்பது ஊக்கியாக்கள் செலுத்திய பின் என்னை விடுதலை செய்து விடுவதாக எழுதித் தந்துள்ளனர்; அதற்கு நீங்கள் உதவ வேண்டும்! என்றார். நான் 'உன் மரணத்திற்குப் பின் உனக்கு வாரிசு தாரராகும் உரிமை எனக்கு இருக்க வேண்டும் என்பதை உன் எஜமானர்கள் ஒப்புக்கொண்டால் அவர்களுக்காக அந்தத் தொகையை நான் ஏற்பாடு செய்து தருகிறேன்!' எனக் கூறினேன். உடனே, பரீரா தம் எஜமானர்களிடம் சென்றார். அவர்களிடம் அவர் இதைக் கூறியபோது, அவர்கள் ஏற்க மறுத்துவிட்டனர். நபி(ஸல்) அவர்கள் அமர்ந்திருக்கும்போது பரீரா, தம் எஜமானர்களிடமிருந்து திரும்பி வந்து, 'விஷயத்தை எஜமானர்களிடம் கூறினேன்; அவர்கள் 'வாரிசுரிமை தமக்கே இருக்க வேண்டும்' எனக் கூறி, (நீங்கள் கேட்டதை) நிராகரித்துவிட்டனர்!'' என்று கூறினார். இதை நபி(ஸல்) அவர்கள் செவியுற்றார்கள். நானும் நபி(ஸல்) அவர்களிடம் விபரத்தைக் கூறினேன். நபி(ஸல்) அவர்கள். 'பரீராவை நீ வாங்கிக் கொள்! 'வாரிசுரிமை உனக்கே உரியது' என்று அவர்களிடம் உறுதியாகத் தெரிவித்துவிடு! ஏனெனில் (அடிமை இறந்த பின் அவனுக்கு) விடுதலை செய்தவருக்கே உரியது!' எனக் கூறினார்கள். நானும் அவ்வாறே செய்தேன். பின்னர், நபி(ஸல்) அவர்கள் மக்களிடையே எழுந்து, அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து, அல்லாஹ்வின் வேதத்தில் இல்லாத நிபந்தனையும் வீணானதே; அவை நூறு நிபந்தனைகளானாலும் சரியே! அல்லாஹ்வின் தீர்ப்பே நிறைவேற்றத்தக்கது! அல்லாஹ்வின் நிபந்தனையே உறுதியானது! (கட்டுப்படுத்தும் வலிமையுடையது!) நிச்சயமாக அடிமைகளுக்கு வாரிசாகும் உரிமை, விடுதலை செய்தவருக்குத் தான்!'' எனக் கூறினார்கள்.

2169. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

நம்பிக்கையாளர்களின் அன்னையான ஆயிஷா(ரலி) ஓர் அடிமைப் பெண்ணை விலைக்கு வாங்கி விடுதலை செய்ய விரும்பினார்கள். அடிமைப் பெண்ணின் எஜமானர்கள். 'இவளுக்கு வாரிசாகும் உரிமை எங்களுக்கே இருக்க வேண்டும்' என்ற நிபந்தனையின் அடிப்படையில் உமக்கு விற்கிறோம்!' எனக் கூறினார்கள். இதை ஆயிஷா(ரலி) நபி(ஸல்) அவர்களிடம் கூறியபோது, 'அவர்களின் நிபந்தனை உனக்குத் தடையாக இராது! ஏனெனில் அடிமைகளுக்கு வாரிசாகும் உரிமை (அவர்களை) விடுதலை செய்தவருக்குத்தான்!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

பகுதி 74

பேரீச்சம் பழத்திற்குப் பேரீச்சம் பழம் விற்பது.

2170. 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

''கோதுமைக்கு கோதுமையை மாற்றிக் கொள்வது வட்டியாகும்; உடனுக்குடக் மாற்றினாலே தவிர! வாற்கோதுமைக்கு வாற்கோதுமையை மாற்றிக் கொள்வதும் வட்டியாகும். உடனுக்குடன் மாற்றினாலே தவிர! பேரீச்சம் பழத்திற்குப் பேரீச்சம் பழத்தை மாற்றிக் கொள்வதும் வட்டியாகும்; உடனுக்குடன் மாற்றினாலே தவிர!'' என உமர்(ரலி) அறிவித்தார்.

பகுதி 75

உலர்ந்த திராட்சைக்கு உலர்ந்த திரட்சையை விற்பதும் உணவுப் பொருளுக்கு உணவுப் பொருளை விற்பதும்.

2171. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

''நபி(ஸல்) அவர்கள் 'முஸாபனா எனும் வியாபாரத்தைத் தடை செய்தார்கள். 'முஸாபனா' என்பது (மரத்திலுள்ள) பேரீச்சம் பழத்தை அளக்கப்பட்ட உலர்ந்த பேரீச்சம் பழத்திற்கு விற்பதும் (கொடியிலுள்ள) திராட்சைப் பழத்தை அளக்கப்பட்ட உலர்ந்த திராட்சைக்கு விற்பதுமாகும்!''

2172 / 2173 இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

''நபி(ஸல்) அவர்கள் 'முஸாபனா' எனும் வியாபாரத்தைத் தடை செய்தார்கள். 'முஸாபனா' என்பது, மரத்திலுள்ள பேரீச்சம் பழத்தை முகத்தலளவையில் (அளக்கப்பட்ட உலர்ந்த பேரீச்சம் பழத்திற்கு) விற்கும்போது 'அது அதிகமாக இருந்தால் அது என்னைச் சேர்ந்தது; அது குறைந்தாலும் என்னைச் சேர்ந்தது!'' என்று கூறி விற்பதாகும்!''

''நபி(ஸல்) அவர்கள் மரத்திலுள்ள கனிகளை (தோராயமாக) மதிப்பிட்டு விற்பதற்கு அராயாவில் (மட்டும்தான்) அனுமதி அளித்தார்கள்!'' என்று ஸைத் இப்னு ஸாபித்(ரலி) கூறினார். (அராயாவின் விளக்கம் பகுதி 84இல் காண்க)

பகுதி 76

வாற்கோதுமைக்கு வாற்கோதுமைக்கு விற்பது.

2174. மாலிக் இப்னு அவ்ஸ்(ரலி) அறிவித்தார்.

நான் நூறு தீனார்களை (திர்ஹமாக) மாற்றித் தருமாறு கேட்டேன். தல்ஹா இப்னு உபைதில்லாஹ்(ரலி) என்னை அழைத்தார்கள். அவர்களிடம் வியாபாரம் பேசியதும் என்னிடமிருந்து தங்க நாணயங்களைப் பெற்றுக் கொண்டு கையில் வைத்துக் குலுக்கினார்கள். பிறகு 'ஃகாபாவிலிருந்து நம்முடைய கருவூலக் காப்பாளர் வரும் வரை சில்லறை தர முடியாது!'' என்றார்கள். இதை உமர்(ரலி) கேட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! இவரிடமிருந்து சில்லறையைப் பெறாமல் நீர் பிரியக் கூடாது; ஏனெனில் நபி(ஸல்) அவர்கள் 'தங்கத்திற்குத் தங்கத்தை மாற்றிக் கொள்வது வட்டியாகும்; உடனுக்குடன் மாற்றினாலே தவிர! கோதுமைக்கு கோதுமையை மாற்றிக் கொள்வது வட்டியாகும் உடனுக்குடன் மாற்றிக் கொள்வது வட்டியாகும்; உடனுக்குடன் மாற்றினாலே தவிர! பேரீச்சம் பழத்திற்குப் பேரீச்சம் பழத்தை மாற்றிக் கொள்வது வட்டியாகும். உடனுக்குடன் மாற்றினாலே தவிர!'' என்று கூறினார்கள்!'' என்று உமர்(ரலி) சொன்னார்கள்.

பகுதி 77

தங்கத்திற்குத் தங்கத்தை விற்பது.

2175. 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

''சரிக்குச் சரியாகவே தவிர, தங்கத்திற்குத் தங்கத்தை விற்காதீர்கள்! சரிக்குச் சரியாகவே தவிர. வெள்ளிக்கு வெள்ளியை விற்காதீர்கள்! தங்கத்திற்கு வெள்ளியையும் வெள்ளிக்குத் தங்கத்தையும் விரும்பியவாறு விற்றுக் கொள்ளுங்கள்.''

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பகுதி 78

வெள்ளிக்கு வெள்ளியை விற்பது.

2176. ஸாலிம் இப்னு அப்தில்லாஹ் அறிவித்தார்.

உமர்(ரலி) சம்பந்தப்பட்ட முந்தைய ஹதீஸ் போன்று அபூ ஸயீத்(ரலி) இப்னு உமர்(ரலி)க்கு ஒரு ஹதீஸை அறிவித்தார். மற்றொரு சந்தர்ப்பத்தில் அபூ ஸயீதை இப்னு உமர்(ரலி) சந்தித்து, 'நீங்கள் நபி(ஸல்) அவர்கள் வழியாக என்ன அறிவித்தீர்கள்?' என்று கேட்டதற்கு அபூ ஸயீத்(ரலி), 'நாணயம் மாற்றும்போது தங்கத்திற்குத் தங்கத்தையோ வெள்ளிக்கு வெள்ளியையோ மாற்றினால் சரிக்குச் சரியாக இருக்க வேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதை செவியுற்றுள்ளேன்' என்றார்.

2177. 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

''சரிக்குச் சரியாகவே தவிர, தங்கத்திற்குத் தங்கத்தை விற்காதீர்கள்! ஒன்றை விட மற்றொன்றை அதிகமாக்கி விடாதீர்கள்! சரிக்கச் சரியாகவே தவிர வெள்ளிக்கு வெள்ளியை விற்காதீர்கள்! ஒன்றை விட மற்றொன்றை அதிகமாக்காதீர்கள்! ஒன்று ரொக்கமாகவும் மற்றொன்று தவணையாகவும் இருக்கும் நிலையில் விற்காதீர்கள்!

என அபூ ஸயீத்(ரலி) அறிவித்தார்.

பகுதி 79

தங்க நாணயத்திற்குத் தங்க நாணயத்தைக் கடனுக்கு விற்றல்

2178, 2179 அபூ ஸாலிஹ் அஸ் ஸய்யாத்(ரலி) அறிவித்தார்.

''தங்க நாணயத்திற்கு (தீனாருக்கு)த் தங்க நாணயத்தையும் வெள்ளி நாணயத்திற்கு (திர்ஹத்திற்கு) வெள்ளி நாணயத்தையும் விற்கலாம்!' என அபூ ஸயீத்(ரலி) கூறினார். அவரிடம் நான் இப்னு அப்பாஸ்(ரலி) இவ்வாறு கூறுவதில்லையே எனக் கேட்டேன். அதற்கு அபூ ஸயீத்(ரலி) 'நான் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் நீங்கள் இதை நபி(ஸல்) அவர்கள் வழியாகச் செவியுற்றீர்களா? அல்லது அல்லாஹ்வின் வேதத்தில் பார்த்தீர்களா? என்று கேட்டேன். அதற்கு இப்னு அப்பாஸ்(ரலி) அவ்வாறு நான் கூறவில்லை. என்னைவிட நீங்கள் அல்லாஹ்வின் தூதரைப் பற்றி நன்கறிந்தவர் என்றாலும், கடனில் தவிர வட்டி ஏற்படாது என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என உஸாமா எனக்கு கூறினார் என்று விடையளித்தார் எனப் பதிலளித்தார்.

பகுதி 80

தங்கத்திற்கு வெள்ளியைக் கடனாக விற்றல்

2180, 2181. அபுல் மின்ஹால் அறிவித்தார்.

பராஉ இப்னு ஆஸிப்(ரலி), ஸைத் இப்னு அர்கம்(ரலி) ஆகியோரிடம் நாணயமாற்று பற்றிக் கேட்டேன். நபி(ஸல்) அவர்கள் கடனாக வெள்ளிக்குத் தங்கத்தை விற்பதைத் தடை செய்தார்கள் என அவ்விருவரும் பதில் கூறினார். பிறகு இருவரும் மற்றவரைச் சுட்டிக் காட்டி, 'இவர் என்னைவிடச் சிறந்தவர்' என்றனர்.

பகுதி 81

தங்கத்திற்கு வெள்ளியை ரொக்கத்திற்கு விற்றல்.

2182. அபூ பக்ரா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் வெள்ளிக்கு வெள்ளியை  தங்கத்திற்குத் தங்கத்தைச் சரிக்கு சரியாகத் தவிர விற்கக் கூடாது என்று தடைவிதித்தார்கள். தங்கத்திற்கு வெள்ளியை நாங்கள் விரும்பியவாறு விற்பதற்கும் வெள்ளிக்குத் தங்கத்தை நாங்கள் விரும்பியவாறு விற்பதற்கும் அனுமதித்தார்கள்.

பகுதி 82

'முஸாபனா' எனும் வியாபாரம்

மரத்திலுள்ள பேரீச்சம் பழத்தை உலர்ந்த பேரீச்சம் பழத்திற்கு விற்பதும் கொடியிலுள்ள திராட்சையை உலர்ந்த திராட்சைக்கு விற்பதும் அராயா எனும் வியாபாரமும் முஸாபனா எனப்படும்.

நபி(ஸல்) அவர்கள் முஸாபனா முஹாகலா (பயிர் முற்றுவதற்கு முன்பே விற்பனை செய்தல்) ஆகிய வியாபாரங்களைத் தடை செய்ததாக அனஸ்(ரலி) கூறினார்.

2183,2184 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

''மரத்திலுள்ள கனிகள் பலன் உறுதிப்படும் நிலையை அடையும் வரை விற்க வேண்டாம்! மேலும், உலர்ந்த (கொய்யப்பட்ட) கனிகளுக்காக மரத்திலுள்ள கனிகளையும் விற்க வேண்டாம்!.

என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்கள்.

''இதன் பிறகு நபி(ஸல்) அவர்கள் மரத்திலுள்ள கனிகளுக்கு உலர்ந்த அல்லது செங்காயான பேரீச்சங்கனிகளை விற்பதற்கு 'அராயா'வில் அல்லாதவற்றில் அனுமதிக்கவில்லை!' என ஸைத் இப்னு ஸாபித்(ரலி) கூறினார்.

2185. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

''நபி(ஸல்) அவர்கள் முஸாபனாவைத் தடைசெய்தார்கள்! 'முஸாபனா' என்பது மரத்திலுள்ள பேரீச்சங்கனிகளை உலர்ந்த பேரீச்சம் பழங்களுக்கு முகத்தலளவையில் விற்பதும் கொடியிலுள்ள திராட்சையை உலர்ந்த திராட்சைக்கு முகத்தலளவையில் விற்பதுமாகும்!''

2186. அபூ ஸயீத்(ரலி) அறிவித்தார்.

''நபி(ஸல்) அவர்கள் 'முஸாபனா, முஹாகலா' எனும் வியாபாரங்களைத் தடை செய்தார்கள். 'முஸாபனா' என்பது மரங்களின் உச்சிகளிலுள்ள பேரீச்சம் பழங்களை உலர்ந்த பேரீச்சம் பழங்களுக்கு (பண்டமாற்று முறையில்) விற்பதாகும்!''

2187. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

''நபி(ஸல்) அவர்கள் 'முஹாகலா, முஸாபனா' ஆகிய வியாபாரங்களைத் தடை செய்தார்கள்!''

2188. ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அறிவித்தார்.

''நபி(ஸல்) அவர்கள் மரத்திலுள்ள கனிகளை குத்துமதிப்பாகக் கணக்கிட்டு விற்பதை அராயாவில் (மட்டும்) அனுமதித்தார்கள்!''

பகுதி 83

மரத்திலுள்ள கனிகளைத் தங்கம் அல்லது வெள்ளிக்கு விற்பது.

2189. ஜாபிர்(ரலி) அறிவித்தார்.

மரத்திலுள்ள கனிகள் பலன் உறுதிப்படும் நிலையை அடையும் வரை விற்பதற்கு நபி(ஸல்) தடை செய்தார்கள். மேலும், அவற்றில் எதையும் தீனார், திர்ஹம் ஆகியவற்றிற்கே தவிர விற்கக் கூடாது அராயாவைத் தவிர என்று கூறினார்கள்.

2190. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் அராயாவில் ஐந்து வஸக் அல்லது அதைவிடக் குறைந்த அளவிற்கு அனுமதி அளித்தார்கள்.

2191. ஸஹ்ல் இப்னு அபீ ஹஸ்மா(ரலி) அறிவித்தார்.

''நபி(ஸல்) அவர்கள் உலர்ந்த பேரீச்சம் பழங்களுக்காக மரத்திலுள்ள கனிகளை விற்பதைத் தடை செய்தார்கள். அராயாவில் (மட்டும்) அதற்கு அனுமதி வழங்கினார்கள். அராயாக்காரர்கள் (அராயா அடிப்படையில் மரங்களைப் பெற்றவர்கள்) மரத்திலுள்ள கனிகளை குத்துமதிப்பதாகக் கணக்கிட்டு விற்கலாம்! அதை வாங்கியவர்கள் செங்காயாக புசிக்கலாம்!

''நபி(ஸல்) அவர்கள் அராயாவில் (மட்டும்) குத்து மதிப்பாக விற்பதற்கு அனுமதி வழங்கினார்கள். அராயாக்காரர்கள் மரத்திலுள்ள கனிகளை விற்கலாம்! வாங்கியவர்கள் அதைச் செங்காயாக உண்ணலாம்!'' என்று மற்றோர் அறிவிப்பில் சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்) அறிவித்தார்.

''இந்த அறிவிப்பு (சொற்கள் வேறுபட்டாலும் பொருளில் முதல் அறிவிப்புக்கு) நிகரானதேயாகும்!'' என்று அலீ இப்னு அப்தில்லாஹ்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

நான் சிறுவனாக இருக்கும்போது, யஹ்யா(ரஹ்) அவர்களிடம் 'மக்காவாசிகள், அராயாவுக்கு நபி(ஸல்) அவர்கள் (எந்த நிபந்தனையுமின்றி) அனுமதி வழங்கியதாகக் கூறுகிறார்களே!'' என்று கேட்டேன். யஹ்யா(ரஹ்) அவர்கள் 'மக்காவாசிகளுக்கு என்ன தெரியும்?' என்று கேட்டார்கள். 'மக்காவாசிகள் ஜாபிர்(ரலி) வழியாக அறிவிக்கப்படும் ஹதீஸை ஆதாரமாகக் காண்பிக்கிறார்களே!'' என்று கூறினேன். இதைக் கேட்டு அவர் மௌனமானார். நான் ஜாபிர்(ரலி) அவர்களைக் குறிப்பிட்டதற்குக் காரணம். அவர் மதீனா வாசியாவார் என்பதேயாகும்!'' என்று சுஃப்யான்(ரஹ்) கூறினார்.

''பலன் உறுதிப்படும் நிலையை அடையும்வரை மரத்திலுள்ள கனிகளை விற்பதைத் தடை செய்தது இந்த அறிவிப்பில் இடம் பெறவில்லையா?' என்று சுஃப்யான்(ரஹ்) அவர்களிடம் கேட்கப்பட்டது. '(அது உண்மைதான் என்றாலும் இந்த அறிவிப்பில்) இடம் பெறவில்லை!'' என்று அவர்கள் பதிலளித்தார்கள்.

பகுதி 84

அராயாவின் விளக்கம்

ஒருவர் மற்றொருவருக்குப் பேரீச்ச மரத்தின் ஒருபோக விளைச்சலை (அன்பளிப்பாகக்) கொடுத்துவிட்டு, பெற்றவர்கள் பறிக்க வரும்போது சங்கடப்பட்டுக் கொண்டிருந்தார். எனவே, உலர்ந்த பேரீச்சம் பழத்தைக் கொடுத்துவிட்டு மரத்திலுள்ள கனிகளை வாங்குவதற்கு அனுமதிக்கப்பட்டது என்று மாலிக் கூறுகிறார்.

அராயா என்பது ரொக்கமாக உலர்ந்த பேரீச்சம் பழத்தை முகத்தலளவையில் கொடுப்பதில் மட்டுமே ஆகும். குத்துமதிப்பாகக் கொடுப்பதில் ஆகாது என்று இப்னு இத்ரிஸ் கூறுகிறார்.

ஐந்து வஸக் என்ற ஸஹ்ல் இப்னு அபீ ஹஸ்மாவின் அறிவிப்பு இப்னு இத்ரிஸ்(ரலி) உடைய கூற்றை உறுதிப்படுத்துகிறது.

அராயா என்பது ஒருவர் மற்றவருக்கு ஒன்று அல்லது இரண்டு மரங்களை அன்பளிப்பாக வழங்குவதாகும் என இப்னு உமர்(ரலி) கூறினார்.

அராயா என்பது ஏழைகளுக்கு அன்பளிப்பாக வழங்கப்படும் பேரீச்ச மரங்களாகும். ஏழைகள் (கனியும் வரை) காத்திருக்க சக்தி பெற மாட்டார்கள். எனவே, அவர்கள் உலர்ந்த கனிகளுக்காகத் தாம் விரும்பியவாறு விற்றுக் கொள்ளலாம் என்று அனுமதி அளிக்கப்பட்டது என்று சுஃப்யான் இப்னு ஹுஸைன் கூறுகிறார்.

2192. ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அறிவித்தார்.

அராயாவில் மரத்திலுள்ள கனிகளைக் குத்துமதிப்பாக மதிப்பீடு செய்து உலர்ந்த பழங்களை முகத்தலளவையில் பெற்று விற்பதற்கு அனுமதி அளித்தார்கள்.

அராயா என்பது அனைவருக்கும் தெரிந்த, குறிப்பிட்ட சில பேரீச்ச மரங்களாகும. யாரும் வந்து கனிகளை வாங்கிக் கொள்ளலாம் என்று மூஸா இப்னு உக்பா கூறுகிறார்.

பகுதி 85

பலன் உறுதிப்படும் நிலையை அடைவதற்கு முன் மரத்திலுள்ள கனிகளை விற்றல்.

2193. ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் காலத்தில் மக்கள் மரத்திலுள்ள கனிகளை விற்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். பழங்களைப் பறித்து வாங்குபவரிடம் ஒப்படைக்கும் நேரம் வந்ததும் வாங்கியவர், 'இது அழும்விட்டது; இது நோயால் தாக்கப்பட்டிருக்கிறது; இது செங்காயாக இருக்கிறது; இன்னும் பல குறைகள் இருக்கின்றன' எனக் கூறி சச்சரவு செய்வார். நபி(ஸல்) அவர்களிடம் இத்தகைய புகார்கள் பெருத்தபோது 'மரத்திலுள்ள கனிகள் பலன் உறுதிப்படும் நிலையை அடையும் வரை விற்காதீர்கள்!'' என்று ஆலோசனை போல் கூறினார்கள்.

ஸைத் இப்னு ஸாபித்(ரலி), ஸுரையா எனும் நட்சத்திரம் (தோன்றக் கூடிய, பேரீச்சம் பழம் கனியும் பருவமான இளவேனிற்காலம்) வரும்வரை தம் தோட்டத்திலுள்ள மரங்களின் கனிகளை விற்க மாட்டார்.

'அப்பருவத்தில் செங்காய் எது? பழுத்தது எது? என்று அடையாளம் தெரியும்' என அவரின் மகன் காரிஜா கூறுகிறார்.

2194. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் மரத்திலுள்ள கனிகள் பலன் உறுதிப்படும் நிலையை அடையும்வரை விற்பதற்குத் தடை விதித்தார்கள். இத்தடை விற்பவருக்கும் வாங்குபவருக்கும் உள்ளதாகும்.

2195. அனஸ்(ரலி) அறிவித்தார்.

பேரீச்ச மரத்திலுள்ள கனிகள் உண்பதற்கு ஏற்றவாறு சிவக்கும்வரை விற்பதை நபி(ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

2196. ஸயீத் இப்னு மீனா அறிவித்தார்.

'மரத்திலுள்ள கனிகள் பக்குவம் அடையும் வரை விற்பதற்கு நபி(ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்' என்று ஜாபிர்(ரலி) கூறினார். அவரிடம் 'பக்குவமாகுதல் என்றால் என்ன?' என்று கேட்கப்பட்டது. அதற்கவர், 'உண்பதற்கு ஏற்றவாறு சிவப்பாகவோ மஞ்சளாகவோ மாறுவது' என விடையளித்தார்:

பகுதி 86

பலன் உறுதிப்படும் நிலையை அடைவதற்கு முன் பேரீச்ச மரத்தை விற்பது.

2197. ஹுமைத் அறிவித்தார்.

'நபி(ஸல்) அவர்கள் பலன் உறுதிப்படும் நிலையை அடைவதற்கு முன் மரத்திலுள்ள கனிகளை விற்பதைத் தடை செய்தார்கள். 'மரத்திலுள்ள கனிகள் பக்குவம் அடையும் வரை பேரீச்ச மரத்தை விற்பதற்குத் தடை செய்தார்கள்' என்று அனஸ் இப்னு மாலிக்(ரலி) கூறினார். அவரிடம், 'பக்குவம் அடைவது என்றால் என்ன?' என்று கேட்கப்பட்டது. அதற்கு அனஸ்(ரலி), 'சிவப்பாகவோ மஞ்சளாகவோ மாறுவது' என்று விடையளித்தார்.

பகுதி 87

பலன் உறுதிப்படும் நிலையை அடைவதற்கு முன் பழங்களை விற்று, அதற்கேதும் ஆபத்து ஏற்பட்டால் விற்றவரே அதற்கு பொறுப்பாளி ஆவார்.

2198, 2199 அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

மரத்திலுள்ள கனிகள் பக்குவம் அடைவது வரை விற்பதற்கு நபி(ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள். நபி(ஸல்) அவர்களிடம் 'பக்குவமடைவது என்றால் என்ன?' என்று கேட்கப்பட்டதற்கு 'சிவக்கும்வரை'' என்று விடையளித்துவிட்டு, 'அல்லாஹ் மரத்திலுள்ள கனிகளை அழித்துவிட்டால்...? எந்த அடிப்படையில் உங்களில் ஒருவர் தம் சகோதரரின் பொருளை எடுத்துக் கொள்ள முடியும்?' எனக் கேட்டார்கள்.

ஒருவர் மரத்திலுள்ள கனிகளைப் பலன் உறுதிப்படும் நிலையை அடைவதற்கு முன் வாங்கி அதற்கேதேனும் தீங்கு ஏற்பட்டால் மரத்தின் உரிமையாளரே அதற்குப் பொறுப்பாளி ஆவார் என்று இப்னு ஷிஹாப் கூறுகிறார்.

''பலன் உறுதிப்படும் நிலை அடையும்வரை மரத்திலுள்ள கனிகளை விற்காதீர்கள்; மரத்திலுள்ள கனிகளை உலர்ந்த கனிகளுக்கு விற்காதீர்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

பகுதி 88

கடனுக்கு உணவுப் பொருள் வாங்குவது.

2200. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் ஒரு யூதரிடம் தம் கவசத்தை அடைமானம் வைத்து உணவுப் பொருளைக் கடனாக வாங்கினார்கள்.

பகுதி 89

மட்டமான பேரீச்சம் பழத்தை அதைவிடச் சிறந்த பேரீச்சம் பழத்திற்கு விற்பது.

2201, 2202 அபூ ஸயீத்(ரலி), அபூ ஹுரைரா(ரலி) ஆகியோர் அறிவித்தார்கள்:

நபி(ஸல்) அவர்கள் ஒரு மனிதரைக் கைபரின் ஆளுநராக நியமித்தார்கள். அவர் நபி(ஸல்) அவர்களிடம் உயர்ரகப் பேரீச்சம் பழங்களைக் கொண்டு வந்தார். நபி(ஸல்) அவர்கள், 'கைபரில் உள்ள பேரீச்சம் பழங்கள் அனைத்துமே இதே தரத்திலமைந்தவையா?' என்று கேட்டார்கள். அதற்கவர், அல்லாஹ்வின் மீது ஆணையாக! 'இல்லை; இறைத்தூதர் அவர்களே! மட்டமான பேரீச்சம் பழத்தில் இரண்டு ஸாவுக்கு இந்தத் தரமான பேரீச்சம் பழத்தில் ஒரு ஸாவையும், மட்டமான பேரீச்சம் பழத்தில் மூன்று ஸாவுக்கு இந்தப் பேரீச்சம் பழத்தில் இரண்டு ஸாவையும் நாங்கள் வாங்குவோம்' எனக் கூறினார். நபி(ஸல்) அவர்கள், 'இவ்வாறு செய்யாதீர்! மட்டமான பேரீச்சம் பழத்தைக் காசுக்கு விற்று, அந்தக் காசின் மூலம் தரமான பேரீச்சம் பழத்தை வாங்குவீராக!'' எனக் கூறினார்கள்.

பகுதி 90

மகரந்தச் சேர்க்கை செய்யப்பட்ட பேரீச்ச மரத்தையும் பயிர் செய்யப்பட்ட நிலத்தையும் விற்பதும் வாடகைக்கு விடுவதும்.

2203. நாஃபிவு(ரஹ்) அறிவித்தார்.

''மகரந்தச் சேர்க்கை செய்யப்பட்ட எந்த மரமாவது அதன் கனிகள் (யாருக்குச் சேரும் என்பது) பற்றிப் பேசப்படாமல் விற்கப்படுமானால் அவை மகரந்தச் சேர்க்கை செய்த(விற்ற)வருக்கே உரியவையாகும்! அடிமையும் பயன்படுத்தப்பட்ட நிலமும் கூட இவ்வாறே ஆகும்!''

2204. 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

''மகரந்தச் சேர்க்கை செய்யப்பட்ட பேரீச்ச மரத்தை யாரேனும் விற்றால் அதன் கனிகள் விற்றவருக்கே சேரும்; வாங்கியவர் (தமக்குச் சேர வேண்டுமென்று) நிபந்தனையிட்டிருந்தால் தவிர!''

என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

பகுதி 91

அறுவடை செய்யப்படாத கதிர்களை (முகத்தலளவையில்) அளக்கப்பட்ட உணவுப் பொருளுக்கு விற்பது.

2205. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

''நபி(ஸல்) அவர்கள் முஸாபானவைத் தடைசெய்தார்கள். 'முஸாபான' என்பது ஒருவரின் தோட்டத்திலுள்ள பேரீச்ச மரத்திலுள்ள கனிகளை அளக்கப்பட்ட உலர்ந்த பேரீச்சம் பழத்திற்கு விற்பதும் கொடியிலுள்ள திராட்சைகளை அளக்கப்பட்ட உலர்ந்த திராட்சைக்கு விற்பதும் கதிர்களிலுள்ள தானியங்களை அளக்கப்பட்ட உணவுப் பொருளுக்கு (பண்டமாற்று முறையில்) விற்பதுமாகும்! இவை அனைத்தையும் நபி(ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்!''

பகுதி 92

பேரீச்ச மரத்தை வேரோடு விற்பது.

2206. 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

''ஒருவர் பேரீச்ச மரத்திற்கு மகரந்தச் சேர்க்கை செய்து, அதை வேரோடு விற்றால் மகரந்தச் சேர்க்கை செய்வதருக்கே மரத்தின் கனி சேரும்.. வாங்கியவர் (அதன் கனி தமக்குச் சேர வேண்டும் என்று நிபந்தனையிட்டிருந்தால் தவிர!''

என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

பகுதி 93

முஃகாளரா வியாபாரம்.

(பலன் உறுதிப்படும் நிலையை அடைவதற்கு முன்பே கனிகளையும் காய்கறிகளையும் விற்பது.)

2207. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

முஹாகலா, முஃகாளரா, முலாமஸா முனாபதா, முஸாபனா ஆகிய வியாபாரங்களை நபி(ஸல்) அவர்கள் தடுத்தனர்.

2208. ஹுமைத்(ரஹ்) அறிவித்தார்.

''நபி(ஸல்) அவர்கள் மரத்திலுள்ள கனிகள் பக்குவமடைவதற்கு முன் அவற்றை விற்பதைத் தடை செய்தார்கள்!'' என அனஸ்(ரலி) கூறினார். நாங்கள் அனஸ்(ரலி) அவர்களிடம், 'பக்குவமடைதல் என்றால் என்ன?' என்று கேட்டோம். அதற்கவர்கள், 'சிவப்பாக, மஞ்சளாக மாறுவதாகும்!'' என்று பதிலளித்தார்கள். மேலும், 'அல்லாஹ் மரத்திலுள்ள கனிகளை அழித்துவிட்டால் 'உம் சகோதரரின் பொருளை எந்த அடிப்படையில் நீர் ஹலாலாக (உண்பதற்கு அனுமதிக்கப்பட்டதாக) கருதுவீர்?' என்றும் கேட்டார்கள்.

பகுதி 94

பேரீச்சம் பாளைக் குருத்தை விற்பதும் உண்பதும்.

2209. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் பேரீச்சங் குருத்தைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது அவர்களின் அருகில் நான் இருந்தேன். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'மரங்களில் ஒரு மரமிருக்கிறது; அது முஃமினுக்கு (இறை நம்பிக்கையுடையவனுக்கு) உவமையாகும்!'' என்றார்கள். நான் 'அது பேரீச்ச மரம் தான்!'' என்று சொல்ல நினைத்தேன். அப்போது, நான் அங்கிருந்தவர்களிலேயே வயதில் சிறியவனாக இருந்தேன்! (அதனால் நான் எதுவும் கூறவில்லை.) நபி(ஸல்) அவர்கள் 'அது பேரீச்சமரம்!'' என்று கூறினார்கள்.

பகுதி 95

வியாபாரம், வாடகை, அளவை, நிறுவை ஆகியவற்றில் மக்களுடைய வட்டார வழக்கப்படியும் அவர்களின் எண்ணப்படியும் நடைமுறைப்படுத்துதல்.

''உங்கள் வழக்கப்படி உங்கள் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளுங்கள்!'' என்று நெசவாளிகளிடம் ஷுரைஹ்(ரஹ்) கூறினார்கள்.

''பத்துக்கு வாங்கியதை பதினொன்றுக்கு விற்பதில் தவறில்லை; செலவிட்டதற்காக இலாபத்தை அடைந்து கொள்ளலாம்!'' என்று முஹம்மத்(ரஹ்) கூறினார்.

நபி(ஸல்) அவர்கள அபூ சுஃப்யானின் மனைவி ஹிந்த்(ரலி) அவர்களிடம், 'உனக்கும் உன் குழந்தைகளுக்கும் போதுமானதை நியாயமான முறையில் உன் கணவரிடமிருந்து எடுத்துக் கொள்!'' என்று கூறினார்கள்.

அல்லாஹ் கூறினான்:

''அவர் ஏழையாக இருந்தால் நியாயமான அளவு சாப்பிட்டுக் கொள்ளட்டும்!'' (திருக்குர்ஆன் 4:06)

ஹஸன் பஸாரீ(ரஹ்) அவர்கள் அப்துல்லாஹ் இப்னு மிர்தாஸிடமிருந்து, ஒரு கழுதையை வாடகைக்கு வாங்கினார்கள். 'கழுதைக்குரிய வாடகை என்ன?' என்று ஹஸன் பஸாரீ(ரஹ்) அவர்கள் கேட்டபோது, அப்துல்லாஹ் இப்னு மிர்தாஸ் 'ஒரு திர்ஹத்தில் மூன்றில் ஒரு பங்கு!'' என்றார். ஹஸன்(ரஹ்) அவர்கள் (ஒப்புக் கொண்டு) வாகனத்தில் ஏறிச் சென்றார்கள். பிறகு, மற்றொரு முறை ஹஸன்(ரஹ்) அவர்கள் வந்தார்கள். கழுதை வாடகைக்கு வேண்டுமென்று கேட்டு, வாடகை பேசாமல் அதில் ஏறிச் சென்றார்கள். எனவே, அரை திர்ஹத்தை அவருக்கு வாடகையாகக் கொடுத்து அனுப்பினார்கள்.

2210. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

(அடிமையாயிருந்த) அபூ தைபா(ரலி), நபி(ஸல்) அவர்களுக்கு இரத்தம் குத்தி, உறிஞ்சி எடுத்தார். அவருக்கு நபி(ஸல்) அவர்கள் ஒரு ஸாவு பேரீச்சம் பழம் கொடுக்குமாறு கட்டளையிட்டார்கள். மேலும், அவரின் எஜமானார்களிடம் அவர் செலுத்த வேண்டியுள்ள அன்றாட வரியைக் குறைக்குமாறும் கட்டளையிட்டார்கள்.

2211. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

முஆவியா(ரலி) அவர்களின் தயார் ஹிந்த்(ரலி), நபி(ஸல்) அவர்களிடம், '(என் கணவர்) அபூ சுஃப்யான் கஞ்சராக இருக்கிறார்; அவரின் பொருளை அவருக்குத் தெரியாமல் நான் எடுத்தால் என் மீது அது குற்றமாகுமா?' எனக் கேட்டார்கள். அதற்கு, 'உனக்குப் போதுமானதை நியாயமான முறையில் நீயும் உன் மக்களும் எடுத்துக் கொள்ளுங்கள்!'' என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

2212. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

''(அவ்வநாதைகளின் சொத்துக்களுக்குக் காப்பாளராகப் பொறுப்பேற்றவர்) செல்வந்தராக இருந்தால் (அச்சொத்திலிருந்து ஊதியம் பெறுவதைத்) தவிர்த்துக் கொள்ளட்டும்! அவர் ஏழையாக இருந்தால் நியாயமான அளவு சாப்பிட்டுக் கொள்ளட்டும்!'' என்ற (திருக்குர்ஆன் 04:06) இறை வசனம், அநாதைகளை (நிர்வகித்து, அவர்களின் செல்வத்தை)ப் பராமரிக்கும் காப்பாளர்களின் விஷயத்தில் அருளப்பட்டது. அவர் ஏழையாக இருந்தால் நியாயமான முறையில் (தம் உழைப்பிற்குக் கூலியாக) அனாதைகளின் பொருளை உண்ணலாம்.

பகுதி 96

இருவருக்குச் சொந்தமான சொத்தை இருவரில் ஒருவர் மற்றவருக்கு விற்றல்.

2213. ஜாபிர்(ரலி) அறிவித்தார்.

''பங்காளிக்குத்தான் விற்க வேண்டும் என்ற நிலை பிரிக்கப்படாத ஒவ்வொரு சொத்திலும் உள்ளது; எல்லைகள் வகுப்பட்டுப் பாதைகள் குறிக்கப்பட்டிருந்தால் பங்காளிக்குத்தான் விற்கவேண்டும் என்ற நிலை இல்லை' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் விதித்தார்கள்.

பகுதி 97

பிரிக்கப்படாத நிலம், கட்டங்கள் மற்றும் உடைமைகளை விற்றல்.

2214. ஜாபிர்(ரலி) அறிவித்தார்.

''பங்காளிக்குத்தான் விற்க வேண்டும் என்ற நிலை பிரிக்கப்படாத ஒவ்வொரு சொத்திலும் உள்ளது; எல்லைகள் வகுக்கப்பட்டுப் பாதைகள் குறிக்கப்பட்டிருந்தால் பங்காளிக்குத்தான் விற்க வேண்டும் என்ற நிலை இல்லை' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் விதித்தார்கள்.

பகுதி 98

ஒருவர் மற்றவருக்காக அவரின் அனுமதியின்றி ஒரு பொருளை வாங்கும்போது மற்றவர் அதில் திருப்தியுறுவது.

2215. 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

''(முன்காலத்தில்) மூன்று மனிதர்கள் நடந்து சென்றனர். அப்போது மழை பொழிந்தது. அவர்கள் மலையில் உள்ள குகையில் நுழைந்தனர். ஒரு பெரிய பாறை உருண்டு வந்து குகை வாசலை அடைத்தது. அப்போது அவர்கள் தமக்குள், 'நீங்கள் செய்த நல்லறங்களில் மிகச் சிறந்ததைக் கூறி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்றனர்.

அவர்களில் ஒருவர், 'இறைவா எனக்கு வயது முதிர்ந்த பெற்றோர் இருந்தனர்; நான் ஆடு மேய்க்க வெளியே சென்றுவிட்டுப் பிறகு வந்து, பால் கறந்து, பால் பாத்திரத்தைப் பெற்றோர்களிடம் கொண்டு வருவேன். அவர்கள் அருந்துவார்கள். பிறகு குழந்தைகளுக்கும் குடும்பத்தாருக்கும் என் மனைவிக்கும் கொடுப்பேன். ஓர் இரவு தாமதமாக வந்தேன். பெற்றோர் உறங்கிவிட்டனர். அவர்களை எழுப்புவதை நான் விரும்பவில்லை. குழந்தை பசியால் என் காலடியில் அழுதனர். விடியும்வரை இதே நிலை நீடித்தது. இறைவா! நான் இதை உன்னுடைய திருப்தியை நாடிச் செய்திருப்பதாக நீ அறிந்தால் நாங்கள் வானததைப் பார்க்கும் வகையில் ஓரிடை வெளியை ஏற்படுத்து' எனக் கூறினார். அவ்வாறு (பாறை விலகி) இடைவெளி உண்டானது.

மற்றொருவர், 'இறைவா! என்னுடைய தந்தையின் உடன் பிறந்தாரின் மகளை எந்த ஆணும் எந்தப் பெண்ணையும் விரும்புவதைவிட அதிகமாக விரும்பினேன் என்பதை நீ அறிவாய். அவள் தனக்கு நூறு தீனார் தரும்வரை தன்னை அடையமுடியாது என்றாள். நான் உழைத்து நூறு தீனாரைத் திரட்டினேன். அவளுடைய இரண்டு கால்களுக்கிடையே (தவறு செய்ய) நான் அமர்ந்தபோது, ‘அல்லாஹ்வை அஞ்சிக்கொள்! முத்திரையை அதற்குரிய (சட்டப்பூர்வ) உரிமை(யான திருமணம்) இல்லாமல் உடைத்துவிடாதே! என்று அவள் கூறினாள். உடனே அவளைவிட்டு நான் எழுந்து விட்டேன். இதை உன்னுடைய திருப்தியை நாடி நான் செய்திருப்பதாக நீ அறிந்தால் இந்தச் சிரமத்தைவிட்டு நீக்கு' எனக் கூறினார். அல்லாஹ் அவர்களைவிட்டும் மூன்றில் இரண்டு மடங்கு (சிரமத்தை) நீக்கினான்.

மற்றொருவர், 'இறைவா நான் மூன்று ஸாவு கேழ்வரகு கூலிக்கு ஒரு வேலையாளை அமர்த்தினேன். கூலியை நான் கொடுத்தபோது அதை அவர் மறுத்துவிட்டார். அந்தக் கேழ்வரகைப் பயிர் செய்தேன். அதன் வருமானத்தில் மாடுகளையும் அதை மேய்ப்பவரையும் விலைக்கு வாங்கினேன். பிறகு அவர் வந்து, அல்லாஹ்வின் அடிமையே! என்னுடைய கூலியைக் கொடு! என்றார். இந்த மாடுகள், அதை மேய்ப்பவர்கள் எல்லாம் உமக்குரியவை; எடுத்துச் செல்லும் என்று கூறினேன். அதற்கவர் என்னைக் கேலி செய்கிறீரா? என்று கேட்டார். நான் உம்மைக் கேலி செய்யவில்லை; இவை உமக்குரியவைதான் எனக் கூறினேன். இறைவா! இதை நான் உன்னுடைய திருப்தியை நாடிச் செய்திருப்பதாக நீ அறிந்தால் எங்களைவிட்டு இந்தச் சிரமத்தை நீக்கு' எனக் கூறினார். முழுமையாகச் சிரமம் விலகியது.''

என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

பகுதி 99

இணைவைப்போர்களிடமும் எதிரிகளிடமும் விற்பதும் வாங்குவதும்.

2216. அப்துர் ரஹ்மான் இப்னு அபீ பக்ர்(ரலி) அறிவித்தார்.

நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது உயரமான, தலை பரட்டையான, இணை வைப்பவரான ஒருவர் தம் ஆடுகளை ஓட்டி வந்தார். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'இது விற்பனைக்கா? அல்லது (யாருக்கேனும்) அன்பளிப்பாகக் கொடுப்பதற்காகவா?' என்று கேட்டார்கள். அவர், 'விற்பதற்குத் தான்' எனக் கூறினார். அவரிடமிருந்து நபி(ஸல்) அவர்கள் ஓர் ஆட்டை வாங்கினார்கள்.

பகுதி 100

எதிரிகளிடமிருந்து அடிமைகளை விலைக்கு வாங்குவதும் அன்பளிப்புச் செய்வதும் அந்த அடிமைகளை விடுதலை செய்வதும்.

நபி(ஸல்) அவர்கள் ஸல்மான் ஃபார்ஸி(ரலி) அவர்களிடம், 'உம்முடைய எஜமானரிடம் (உமக்குரிய விலையை சம்பாதித்துத் தந்து விடுதலை ஆகிவிடுவதாக எழுதிக் கொடுத்து) 'முகாதபர்' செய்து கொள்வீராக!'' எனக் கூறினார்கள்.

ஸல்மான்(ரலி) முன்னர் சுதந்திரமானவராக இருந்தார்கள். அவர்களை அநியாயமாகப் பிடித்து விற்றுவிட்டனர். அம்மார்(ரலி) ஸுஹைப்(ரலி), பிலால்(ரலி) ஆகியோரும் சிறைப்பிடிக்கப்பட்டு அடிமையானவர்களே!

அல்லாஹ் கூறினான்:

''அல்லாஹ் உங்களில் சிலரை, வேறு சிலரை விடச் செல்வத்தில் மேம்படுத்தி இருக்கிறான்; இவ்வாறு மேம்படுத்தப்பட்டவர்கள், தங்களின் செல்வத்தை, தம் ஆதிக்கத்தில் இருப்பவர்களிடம் கொடுத்து, 'அவர்களும் இவர்களுடைய செல்வத்தில் சமமான உரிமை உள்ளவர்கள்' என்று ஆக்கி விடுவதில்லை; (அவ்வாறிருக்க) அல்லாஹ்வின் அருட்கொடையையா இவர்கள் மறுக்கின்றனர்?' (திருக்குர்ஆன் 16:71)

2217. 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

''இப்ராஹீம்(அலை) அவர்கள் ஸாராவுடன் நாடு துறந்தார்கள். மன்னன் ஒருவன் அல்லது கொடுங்கோலன் ஒருவன் - ஆட்சி புரிந்த ஓர் ஊருக்குள் இருவரும் நுழைந்தனர். 'அழகான ஒரு பெண்ணுடன் இப்ராஹீம் வந்திருக்கிறார்!'' என்று (மன்னனிடம்) கூறப்பட்டது. மன்னன், இப்ராஹீம்(அலை) அவர்களை அழைத்துவரச் செய்து, 'இப்ராஹீமே! உம்முடன் இருக்கும் இந்தப் பெண் யார்?' எனக் கேட்டான். இப்ராஹீம்(அலை) 'என் சகோதரி' என்றார்கள். பிறகு ஸாராவிடம் திரும்பிய இப்ராஹீம்(அலை), 'நீ என் கூற்றைப் பொய்யாக்கி விடாதே! நீ என் சகோதரி என்று நான் அவர்களிடம் கூறியிருக்கிறேன். அல்லாஹ்வின் மீது ஆணையாக! உன்னையும் என்னையும் தவிர இந்தப் பூமியில் இறைநம்பிக்கையாளர் யாரும் இல்லை' என்றார்கள். பிறகு ஸாராவை மன்னனிடத்தில் அனுப்பினார்கள். அவன், அவரை நோக்கி எழுந்தான். ஸாரா எழுந்து உளூச் செய்து தொழுதுவிட்டு, 'இறைவா! நான் உன்னையும் உன் தூதரையும் நம்பிக்கை கொண்டிருந்தால், என்னுடைய பெண்மையைக் கணவனைத் தவிர மற்றவர்களிடமிருந்து காப்பாற்றியிருந்தால் இந்தக் காஃபிரை என்னை ஆட்கொள்ள விடாதே!' என்று பிரார்த்தித்தார். உடனே அவன் கீழே விழுந்து (வலிப்பினால்) கால்களால் உதைத்தான். மன்னனின் நிலையைக் கண்ட ஸாரா, 'இறைவா! இவன் செத்துவிட்டால் நானே இவனைக் கொன்றேன் என்று மக்கள் கூறுவர்' என்று கூறியவுடன் மன்னன் பழைய நிலைக்கு மீண்டு மறுபடியும் ஸாராவை நெருங்கினான். சாரா எழுந்து உளூச் செய்து தொழுதுவிட்டு, 'இறைவா! நான் உன்னையும் உன் தூதரையும் நம்பிக்கை கொண்டிருந்தால், என்னுடைய பெண்மையைக் கணவனைத் தவிர மற்றவர்களிடமிருந்து காப்பாற்றியிருந்தால் இந்தக் காஃபிரை என்னை ஆட்கொள்ள விடாதே!' என்று பிரார்த்தித்தார். உடனே அவன் கீழே விழுந்து கால்களால் உதைத்தான். மன்னனின் நிலையைக் கண்ட ஸாரா, 'இறைவா! இவன் செத்துவிட்டால் நானே இவனைக் கொன்றேன் என்று மக்கள் கூறுவர் என்று பிரார்த்தித்தார். இப்படி மன்னன் இரண்டு அல்லது மூன்று முறை வீழ்ந்து எழுந்து, 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! என்னிடம் ஒரு ஷைத்தானைத்தான் அனுப்பியிருக்கிறீர்கள். எனவே, இவரை இப்ராஹீமிடம் அழைத்துச் செல்லுங்கள். இவருக்கு (பணிப்பெண்ணான) ஆஜரைக் கொடுங்கள்' என்று (அவையோரிடம்) சொன்னான். ஸாரா இப்ராஹீம்(அலை) இடம் திரும்பி வந்து, அல்லாஹ் இந்தக் காஃபிரை வீழ்த்தி, நமக்குப் பணிபுரிய ஓர் அடிமைப் பெண்ணையும் தந்துவிட்டான் என்பது உங்களுக்குத் தெரியுமா?' என்று கேட்டார்.''

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

2218. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி), அப்து இப்னு ஸம்ஆ(ரலி) ஆகிய இருவரும் ஓர் இளைஞன் விஷயத்தில் வழக்கு கொண்டு வந்தனர். 'இறைத்தூதர் அவர்களே! இந்த இளைஞன் என் சகோதரர் உத்பா இப்னு அபீ வக்காஸின் மகனாவார். என் சகோதரர் (அவரின் மரணத்தின் போது) என்னிடம் இதை வலியுறுத்திக் கூறினார். இந்த இளைஞன் அவரைப் போன்றே இருப்பதை நீங்கள் கவனியுங்கள்' என்று ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) கூறினார். அவ்விளைஞனிடம் தெளிவாக உத்பாவின் சாயலைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் அப்துபின் ஸம்ஆ(ரலி) அவர்களிடம், 'அப்தே! ஒரு பெண் யாருடைய அதிகாரத்தின் கீழ் இருக்கிறாளோ அவருக்கே அவள் பெற்றெடுத்த குழந்தை உரியது! விபச்சாரம் செய்தவருக்கு இழப்புதான் உரியது!' எனக் கூறினார்கள். பிறகு தம் மனைவி ஸவ்தா(ரலி) அவர்களிடம், 'ஸவ்தாவே! இந்த இளைஞனிடத்தில் நீ ஹிஜாபைப் பேணிக்கொள்!'' என்று கூறினார்கள். அதற்குப் பிறகு ஸவ்தா(ரலி) ஒருபோதும் அந்த இளைஞரைக் கண்டதில்லை.

2219. இப்ராஹீம் இப்னு அப்திர் ரஹ்மான்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

(என் தந்தை) அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) ஸுஹைப்(ரலி) அவர்களிடம், 'நீர் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்வீராக! உம் தந்தையல்லாதவரைத் தந்தை எனச் சொல்லாதீர்!' எனக் கூறினார்கள். அதற்கு ஸுஹைப்(ரலி), 'என் தந்தையைல்லா அவரைத் தந்தை என்று நான் சொல்வதற்காக எவ்வளவு பொருட்களைக் கொடுத்தாலும் ஒப்பமாட்டேன்; என்றாலும், நான் சிறுவனாக இருக்கும்போது திருடப்பட்டு விட்டேன்! (அதனால் என் தந்தை யார் என்று தெரியவில்லை!)'' எனக் கூறினார்கள்.

2220. உர்வா இப்னு ஸுபைர்(ரலி) அறிவித்தார்.

ஹகீம் இப்னு ஹிஸாம்(ரலி) நபி(ஸல்) அவர்களிடம், 'இறைத்தூதர் அவர்களே! அறியாமைக் காலத்தில் என் சுற்றத்தாருடன் நல்லுறவு, அடிமைகளை விடுதலை செய்தல், தர்மம் செய்தல் ஆகிய நல்லறங்களைச் செய்து வந்தேன்; இவற்றிற்கு எனக்குக் கூலி உண்டா?' எனக் கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'நீர் செய்த நற்செயல்(களுக்கான நற்கூலி)களுடனேயே நீர் இஸ்லாத்தை ஏற்றுள்ளீர்!'' என்றார்கள்.

பகுதி 101

இறந்த மிருகத்தின் பதப்படுத்தப்படாத தோல்கள்.

2221. அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் ஒரு செத்த ஆட்டைக் கடந்து சென்றபோது, 'இதன் தோலை நீங்கள் பயன்படுத்தக் கூடாதா?' என்று கேட்டார்கள். நபித்தோழர்கள் 'இது செத்த ஆடாயிற்றே!'' என்றனர். அதற்கு 'அதை உண்பதுதான் தடை செய்யப்பட்டுள்ளது!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

பகுதி 102

பன்றிகளைக் கொல்வது.

நபி(ஸல்) அவர்கள் பன்றி வியாபாரத்தை (ஹராமாக்கித்) தடை செய்தார்கள்.

2222. 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

''என் உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது ஆணையாக! மர்யமுடைய மகன் (ஈஸா) உங்களிடம் நேர்மையான (தீர்ப்பு சொல்லும்) நீதிபதியாக இறங்கவிருக்கிறார்! அவர் சிலுவையை முறிப்பார்! பன்றியைக் கொல்வார்! ஜிஸ்யாவை (வரியை) நீக்குவார்! (அந்நாளில்) வாங்குவதற்கு ஆளில்லாத அளவிற்குச் செல்வம் பெருக்கெடுத்து ஓடும்!''

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பகுதி 103

செத்தவற்றின் கொழுப்பை உருக்கக் கூடாது; அவற்றின் (இறைச்சியிலிருந்து வடியும்) திரவக் கொழுப்பை விற்கக் கூடாது;

இதுபற்றி நபி(ஸல்) அவர்கள் கூறிய ஹதீஸை ஜாபிர்(ரலி) அறிவித்திருக்கிறார்.

2223. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

ஒருவர் மதுவை விற்பதாக அறிந்த உமர்(ரலி), 'அவரை அல்லாஹ் சபிப்பானாக! யூதர்களுக்குக் கொழுப்பு ஹராமாக ஆக்கப்பட்டபோது, அதை உருக்கி அவர்கள் விற்றதால் அல்லாஹ் அவர்களை அழிப்பானாக என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதை அவர் அறியவில்லையா?' எனக் கேட்டார்.

2224. 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

''யூதர்களை அல்லாஹ் சபிப்பானாக! அவர்களுக்குக் கொழுப்பு ஹராமாக்கப்பட்டபோது அதைவிற்று அதன் கிரயத்தை அவர்கள் சாப்பிட்டார்கள்.''

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பகுதி 104

உயிரில்லாதவற்றின் உருவங்களை விற்பதும் விற்கத்தகாத உருவங்களும்.

2225. ஸயீத் இப்னு அபில் ஹஸன் அறிவித்தார்.

நான் இப்னு அப்பாஸ்(ரலி) உடன் இருந்தபோது ஒருவர் வந்து, 'அப்பாஸின் தந்தையே! நான் கைத்தொழில் செய்து வாழ்க்கை நடத்தும் ஒரு மனிதன். நான் உருவங்களை வரைகிறேன்' எனக் கூறினார். அதற்கு இப்னு அப்பாஸ்(ரலி), 'நபி(ஸல்) அவர்களிடம் நான் செவியுற்றதையே உமக்கு அறிவிக்கிறேன். 'யாரேனும் ஓர் உருவத்தை வரைந்தால் வரைந்தவர் அதற்கு உயிர் கொடுக்கும்வரை அல்லாஹ் அவரை வேதனை செய்வான்; அவர் ஒருக்காலும் அதற்கு உயிர் கொடுக்க முடியாது'' என்று நபி(ஸல்) அவர்கள் கூற செவியுற்றுள்ளேன்' என்றார். கேட்டவர் அதிர்ச்சியுடன் பெருமூச்சுவிட்டார். அவரின் முகம் (பயத்தால்) மஞ்சள் நிறமாக மாறியது. அப்போது இப்னு அப்பாஸ்(ரலி), 'உமக்குக் கேடு உண்டாகட்டும்! நீர் உருவம் வரைந்துதான் தீர வேண்டும் என்றால் மரம் மற்றும் உயிரற்றவற்றை வரைவீராக!' என்றார்.

பகுதி 105

மதுபான வியாபாரம் (மதுபானத்தை விற்பதோ வாங்குவதோ) ஹராமாகும்.

மதுபான வியாபாரத்தை (மது விற்பதையும் வாங்குவதையும்) நபி(ஸல்) அவர்கள் ஹராமாக்கியதாக ஜாபிர்(ரலி) கூறினார்.

2226. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

பகரா அத்தியாயத்தின் (வட்டியைத் தடை செய்யும் வசனத்திலிருந்து இறுதி வசனம் வரை இறங்கியபோது நபி(ஸல்) அவர்கள் (மக்களிடம்) வந்து, 'மதுபான வியாபாரம் ஹராமாக்கப்பட்டுவிட்டது!'' என்றார்கள்.

பகுதி 106

சுதந்திரமானவரைப் பிடித்து விற்பது குற்றமாகும்.

2227. 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

''மறுமை நாளில் மூவருக்கெதிராக நான் வழக்காடுவேன்' என்று அல்லாஹ் கூறினான். ஒருவன் என் பெயரால் சத்தியம் செய்துவிட்டு, அதில் மோசடி செய்தவன்; இன்னொருவன் சுதந்திரமான ஒருவரை விற்று அந்தக் கிரயத்தைச் சாப்பிட்டவன்; மூன்றாமவன் ஒரு கூலியாளிடம் வேலை வாங்கிக் கொண்டு கூலி கொடுக்காமல் இருந்தவன்!''

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பகுதி 107

யூதர்களை மதீனாவிலிருந்து வெளியேற்றியபோது அவர்களின் நிலத்தை விற்குமாறு நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டது.

இதுபற்றி அபூ ஹுரைரா(ரலி) வழியாக ஒரு (நபிமொழி) அறிவிப்பு உள்ளது.

பகுதி 108

உயிரினத்திற்கு பதிலாக உயிரினத்தையும் அடிமைக்கு பதிலாக அடிமையையும் கடனாக (பிறகு தருவதாக) விற்பது.

'ஒட்டகத்தின் சொந்தக்காரர் தம் சொந்தப் பொறுப்பில் ரப்தா எனுமிடத்தில் அதைத் தம்மிடம் ஒப்படைக்க வேண்டும்' என்ற நிபந்தனையின் அடிப்படையில், இப்னு உமர்(ரலி) நான்கு ஒட்டகங்களைக் கொடுத்து பயணம் செய்தவற்கேற்ற ஓர் ஒட்டகத்தை விலைக்கு வாங்கினார்கள்.

''சில நேரங்களில் ஓர் ஒட்டகம் இரண்டு ஒட்டகங்களை விடச் சிறந்ததாக இருக்கலாம்!'' என இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்.

ராஃபிவு இப்னு கதீஜ்(ரலி) இரண்டு ஒட்டகங்களுக்குப் பகரமாக ஓர் ஒட்டகத்தை வாங்கினார்கள். அப்போது, ஓர் ஒட்டகத்தை மட்டும் கொடுத்துவிட்டு, 'மற்றொன்றை அல்லாஹ் நாடினால் தாமதமின்றி நாளை உம்மிடம் தருகிறேன்!'' என்று கூறினார்கள்.

''இரண்டு ஒட்டகத்திற்கு ஓர் ஒட்டகம் இரண்டு ஆட்டிற்கு ஒர் ஆடு என்று கடனாக வாங்கினாலும் உயிரினத்தில் வட்டி என்பதில்லை!'' என்று இப்னுல் முஸய்யப்(ரஹ்) கூறினார்.

''இரண்டு ஒட்டகத்திற்கு ஓர் ஒட்டகத்தைக் கடனாக வாங்குவதும் ஒரு திர்ஹத்துக்கு ஒரு திர்ஹத்தைக் கடனாக வாங்குவதும் தவறில்லை!'' என்று இப்னு ஸீரின்(ரஹ்) கூறினார்.

2228. அனஸ்(ரலி) அறிவித்தார்.

''(கைபர் போரில் பிடிக்கப்பட்ட) கைதிகளில் ஸஃபிய்யா(ரலி) அவர்களும் ஒருவராவார். அவர்கள் (முதலில்) திஹ்யா அல் கல்பி(ரலி) அவர்களுக்கு (போர்ச் செல்வத்தில் ஒரு பங்காகக்) கிடைத்தார்கள். பின்பு நபி(ஸல்) (அவர்கள் தங்களின் பங்காக அவர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள) அவர்களுக்கு உரியவர்களாய் ஆகிவிட்டார்கள்!'' (பார்க்க: பின்குறிப்பு)

பகுதி 109

அடிமைகளை விற்பது.

2229 அபூ ஸயீத்(ரலி) அறிவித்தார்.

நான் நபி(ஸல்) அவர்களுடன் அமர்ந்திருக்கும்போது, 'இறைத்தூதர் அவர்களே! எங்களுக்கு (பெண்) போர்க் கைதிகள் கிடைக்கின்றனர். அவர்களை நல்ல விலைக்கு விற்க நாங்கள் விரும்புவதால் (அவர்களுடன் உடலுறவு கொள்ளும் போது) நாங்கள் அஸ்ல் (உடலுறவின் போது) பெண்குறிக்குள் விந்தைச் செலுத்தாமல் வெளியேவிட்டுவிடும் செயலைச்) செய்யலாமா?' என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அப்படியா நீங்கள் செய்கிறீர்கள்? இதைச் செய்யாமலிருப்பது உங்களின் மீது கடமையல்ல! (அதாவது, நீங்கள் இப்படிச் செய்வதற்குத் தடை ஏதுமில்லை; ஆயினும், அஸ்ல் செய்யாமலிருப்பதே மேலானதாகும்!) ஏனெனில், உருவாக வேண்டுமென்று அல்லாஹ் விதித்துள்ள எந்த உயிரும் உருவாகாமல் இருப்பதில்லை!'' என்று கூறினார்கள். (பார்க்க: பின்குறிப்பு)

பகுதி 110

''என் மரணத்திற்குப் பின், நீ விடுதலையடைந்து விடுவாய்!'' என்று உரிமையாளரால் வாக்களிக்கப்பட்ட அடிமையை விற்பது.

2230. ஜாபிர்(ரலி) அறிவித்தார்.

''என்னுடைய மரணத்திற்குப் பின் நீ விடுதலையடைந்து விடுவாய்!'' என்று உரிமையாளரால் வாக்களிக்கப்பட்ட அடிமையை நபி(ஸல்) அவர்கள் விற்றார்கள்!''

2231. ஜாபிர்(ரலி) அறிவித்தார்.

''என்னுடைய மரணத்திற்குப் பின் நீ விடுதலையடைந்து விடுவாய்!'' என்று உரிமையாளரால் வாக்களிக்கப்பட்ட அடிமையை நபி(ஸல்) அவர்கள் விற்றார்கள்!''

2232, 2233 ஸைத் இப்னு காலித்(ரலி), அபூ ஹுரைரா(ரலி) ஆகிய இருவரும் கூறினார்கள்:

நபி(ஸல்) அவர்களிடம், விபச்சாரம் செய்கின்ற, திருமணமாகாத அடிமைப் பெண்ணைப் பற்றிக் கேட்கப்பட்டது. நபி(ஸல்) அவர்கள் 'அவளுக்குக் கசையடி கொடுங்கள்! மீண்டும் அவள் விபச்சாரம் செய்தால் மீண்டும் அவளுக்குக் கசையடி கொடுங்கள்! மூன்றாவது முறை அல்லது நான்காவது முறை விபச்சாரம் செய்தால் அதன் பிறகு அவளை விற்று விடுங்கள்!'' என்று பதிலளித்தார்கள்.

2234. 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

''உங்களில் ஒருவரின் அடிமைப் பெண் விபச்சாரம் செய்து, அது நிரூபணமானால் தண்டனையாக அவளுக்குக் கசையடி கொடுங்கள்! அவளைக் குறை கூற வேண்டாம்! மீண்டும் விபச்சாரம் செய்தால் தண்டனையாகக் கசையடி கொடுங்கள்! அவளைக் குறை சொல்ல வேண்டாம்! பிறகு மூன்றாம் முறை விபச்சாரம் செய்து, அது நிரூபணமானால் முடியாலான ஒரு கயிற்றுக்காவது அவளை விற்று விடுங்கள்!''

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பகுதி 111

ஒருவருக்கு அடிமைப் பெண் கிடைத்தால் அவளுடைய கருப்பையில் குழந்தை இல்லை என்பதை உறுதி செய்வதற்கு முன் அவளுடன் பயணம் செய்யலாமா?

''அவளைக் கட்டியணைப்பதும் முத்தமிடுவதும் தவறில்லை!'' என ஹஸன் பஸாரீ(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

''பிறரால் உடலுறவு கொள்ளப்பட்ட அடிமைப் பெண் அன்பளிப்பாகக் கிடைத்தாலோ, விற்கப்பட்டாலோ, விடுதலை செய்யப்பட்டாலோ (புதிய எஜமானன்) அவளுடைய கருப்பையில் கரு இல்லையென்பதை ஒரு மாதவிடய் மூலம் உறுதி செய்து கொள்ளட்டும்! கன்னிப் பெண்ணுக்கு இது அவசியம் இல்லை!'' என்று இப்னு உமர்(ரலி) கூறினார்.

''ஒருவர் பிறரால் கர்ப்பமான தம் அடிமைப் பெண்ணை உடலுறவைத் தவிர மற்ற காரியங்களுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்! 'மேலும் அவர்கள் (இறைநம்பிக்கையாளர்கள் எத்தகையவர்கள் எனில்) தங்கள் மனைவியரிடமோ, தங்களுக்குச் சொந்தமான அடிமைப் பெண்களிடமோ தவிர வெட்கத்தலங்களைப் பாதுகாத்துக் கொள்வார்கள்!'' என இறைவன் கூறுகிறான்'' (திருக்குர்ஆன் 23:06) என்று அதாவு(ரஹ்) அவர்கள் கூறினார்கள்.

2235. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் கைபருக்கு(ப் படையெடுத்து) வந்து, அல்லாஹ் (கமூஸ்) கோட்டையை அவர்களுக்குத் திறந்துவிட்டபோது, ஸஃபிய்யா பின்த் ஹுயை என்பவரின் அழகு பற்றிக் கூறப்பட்டது. புது மணப்பெண்ணாக இருந்த அவரின் கணவர் கொல்லப்பட்டுவிட்டார். அவரை நபி(ஸல்) அவர்கள் (போர்ச் செல்வத்தில்) தம் பங்காகப் பெற்றார்கள். அவரை (மணந்து) நபி(ஸல்) அவர்கள் தம்முடன் அழைத்துச் சென்றார்கள். 'சத்துர்ரவ்ஹா' எனுமிடத்தை நாங்கள் அடைந்தபோது அவர் மாதவிடாயிலிருந்து தூய்மையடைந்தார். நபி(ஸல்) அவர்கள் அவருடன் உறவு கொண்டார்கள். பிறகு (பேரீச்சம் பழம், நெய், பாலாடைக் கட்டி ஆகியவற்றைக் கலந்து) 'ஹைஸ்' எனப்படும் ஓர் உணவைத் தயாரித்து சிறிய தோல்விரிப்பில் வைத்தார்கள். நபி(ஸல்) அவர்கள் (என்னிடம்) 'உம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கு அறிவியும்!'' என்றார்கள். ஸஃபிய்யா(ரலி) அவர்களை மணந்ததற்காக நபி(ஸல்) அவர்கள் வழங்கிய மணவிருந்ததாக அது அமைந்தது! பிறகு நாங்கள் மதீனாவை நோக்கிப் புறப்பட்டோம். நபி(ஸல்) அவர்கள் ஒட்டகத்தின் மேல் ஒரு போர்வை (போன்ற அங்கி)யால் ஸஃபிய்யா(ரலி) அவர்களைச் சுற்றி திரை அமைத்தார்கள். பிறகு ஒட்டகத்தின் அருகில் அவர்கள் அமர்ந்தார்கள். ஸஃபிய்யா(ரலி), நபி(ஸல்) அவர்களின் முழங்கால் மீது தம் காலை வைத்து ஒட்டகத்தில் ஏறினார்கள்.

பகுதி 112

செத்தவற்றையும் உருவச் சிலைகளையும் விற்பது.

2236. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின்போது, நிச்சயமாக அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் மதுபானம், செத்தவை, பன்றி, உருவச் சிலைகள் ஆகியவற்றை விற்பனை செய்வதைத் தடை செய்துள்ளனர்!'' என்று கூறினார்கள். அப்போது அவர்களிடம், 'இறைத்தூதர் அவர்களே! செத்தவற்றின் கொழுப்புகள் கப்பல்களுக்குப் பூசப்படுகின்றன. தோல்களுக்கு அவற்றின் மூலம் மெருகேற்றப்படுகிறது; மக்கள் விளக்கெரிக்க அவற்றைப் பயன்படுத்துகின்றனர்; எனவே, அதைப் பற்றிக் கூறுங்கள்!' எனக் கேட்கப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'கூடாது! அது விலக்கப்பட்டது!' எனக் கூறினார்கள். அப்போது தொடர்ந்து, 'அல்லாஹ் யூதர்களை சபிப்பானாக! அல்லாஹ் யூதர்களுக்குக் கொழுப்பை ஹராமாக்கியபோது, அவர்கள் அதை உருக்கி விற்று, அதன் கிரயத்தை சாப்பிட்டார்கள்!'' என்று கூறினார்கள்.

பகுதி 113

நாய் விற்ற காசு.

2237. அபூ மஸ்வூத் அன்ஸாரி(ரலி) அறிவித்தார்.

''நபி(ஸல்) அவர்கள் நாய் விற்ற காசையும் விபச்சாரியின் கூலியையும் சோதிடரின் தட்சணையையும் தடை செய்தார்கள்!''

2238. அவ்ன் இப்னு அபீ ஜுஹைஃபா(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

''என் தந்தை (அபூ ஜுஹைஃபா(ரலி)) இரத்தம் குத்தி, உறிஞ்சி எடுப்பதைத் தொழிலாகக் கொண்ட ஓர் அடிமையை விலைக்கு வாங்கி, அவரின் தொழிற் கருவிகளை உடைக்கும்படி உத்தரவிட்டார்கள். அவ்வாறே, அவை உடைக்கப்பட்டன. அதுபற்றி நான் அவர்களிடம் கேட்டபோது, 'நபி(ஸல்) அவர்கள் இரத்தத்தின் கிரயம் (இரத்தம் குத்தி, உறிஞ்சி எடுப்பதற்காகப் பெறுகிற கூலி), நாயின் கிரயம், அடிமைப் பெண்ணின் சம்பாத்தியம் ஆகியவற்றைத் தடுத்தார்கள். பச்சை குத்திக் கொள்பவளையும், பச்சை குத்தி விடுபவளையும், வட்டி உண்பவனையும் (உயிரினங்களின்) உருவம் வரைபவனையும் சபித்தார்கள்!' என்று பதிலளித்தார்கள்!''
أحدث أقدم