எழுதியவர் : S.H.M. இஸ்மாயில் ஸலபி
இஸ்லாமிய போதனை மக்கா மண்ணில் ஆரம்பிக்கப்பட்ட வேளை அரேபியாமட்டுமன்றி அகில உலகுமே அறியாமை இருளில் மூழ்கியிருந்தது. இஸ்லாம் எனும் அறிவுத் தீபத்தை ஏற்ற வந்த அன்னல் நபி உம்மி (எழுத வாசிக்கத் தெரியாத) தூதராவார். அவர் இந்தத் தூதை எடுத்துச் சொன்ன சமூகம் (எழுத வாசிக்கத் தெரியாத) உம்மி சமூகமாகும் என்பதைக் குர்ஆன் குறிப்பிடுகிறது. வரலாற்று ஏடுகள் அக்காலத்தை ‘ஜாஹிலிய்யக்காலம்’ என அடையாளப் படுத்துகின்றன.
நபி(ஸல்) அவர்களது 23 வருடகால கடின முயற்சியின் பின்னர் அரேபியர்களிடையே கலாசார பண்பாட்டு ரீதீயான முன்னேற்றம் ஏற்பட்டது போல் மிகப் பெரிய அளவில் அறிவியல் பேரெழுச்சியும் ஏற்பட்டது. அரேபிய தீபகற்பத்தையும் தாண்டி ஐரோப்பிய உலகுக்கும் அறிவொளிகளை வழங்கும் அளவிற்கு மகத்தானதொரு மாற்றம் நிகழ்ந்தது. இஸ்லாத்தின் மீதும் முஸ்லிம்கள் மீதும் காழ்ப்புணர்வு கொண்டவர்களால் கூட புறக்கணித்து விட முடியாத அளவுக்கு அறிவியல் எழுச்சியின் உச்சத்தை அடைய அந்த சாதாரண ஆட்டுமந்தை மேய்த்தவர்களைத் தூண்டியது எது? இந்த திடீர் திருப்பத்திற்கான காரணங்கள் என்ன? அறிவியல் துறையில் முஸ்லிம்கள் நிகழ்த்திய சாதனைகள்? அதற்குச் சாதகமாக இருந்த காரணிகள், இன்றைய காலகட்டத்தில் இத்துறை முஸ்லிம்களுக்கு மத்தியில் வீழ்ச்சி அடைந்தற்கான காரணங்கள் என்பனவற்றை இங்கு நோக்குவோம்.
முஸ்லிம்களின் அறிவியல் எழுச்சி:
கி.பி. 500ம் ஆண்டு முதல் 1500ம் ஆண்டுவரையுள்ள காலம் மத்தியகாலம் என வரலாற்றில் அழைக்கப்படுகிறது. இருண்ட காலம் என்றும் வர்ணிக்கப்படும் இக்காலப் பிரிவில் ஐரோப்பிய நாடுகள் கூட கலை, கல்வி, கலாசார ரீதீயில் பெரிய வீழ்ச்சியைக் கண்டிருந்தன. இதே வேளை கிறிஸ்தவ உலகு அறிவியல் துறைக்கெதிரான அறிவிக்கப்படாத யுத்தத்தையே தொடங்கியிருந்தது.
கி.பி. 283ல் எகிப்திய ஆட்சிப்பீடத்திலேறிய இரண்டாம் தொலமி அலெக்சாந்திரியாவில் நிறுவிய பிரமாண்டமான நூல் நிலையத்தை தியோபிளஸ் எனும் பாதிரியின் தூண்டுதலால் கி.பி. 391ல் கிறிஸ்தவர்கள் தீயிட்டுக் கொழுத்தினர். அறிவியலை மதத்தின் பெயரால் எதிர்த்தவர்கள் அறிஞர்களையும் விட்டுவைக்கவில்லை. ‘இயேசு கிறிஸ்துவுக்குப்பின் எந்த விஞ்ஞானத்துக்கும் இடமில்லை, அவருடைய போதனைகளுக்குப் பின் எந்தவிதமான விஞ்ஞானப் போதனைகளும் தேவையில்லை. என்று போதிக்கப்பட்டதால் விஞ்ஞானிகள் பலர் மதப்பிரிவினரால் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். இவ்வாறு அறிவியலுக்கெதிரான போராட்டம் ஒருபக்கம் நடந்து கொண்டிருக்கையில் முஸ்லிம் உலகு அறிவுத்தாகம் கொண்டு, அறிவியலில் மோகம் கொண்டு பண்டைய அறிவியல் செல்வங்களைத் தேடி வந்து பெற்று அவற்றை மேலும் மெருகூட்டும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தது.
மேற்குறித்த நிலை பற்றி பிரபல வரலாற்றாசிரியரான H.G.Wells தனது நூலில், ‘முதல் முதலில் கிரேக்கரே தத்துவ விசாரணையை ஆரம்பித்தனர். அவர்களுக்குப் பின்னர் அரேபியர் அம் முறையைத் தொடர்ந்தனர். அரிஸ்டோடில் விதைத்த தத்துவம், அலெக்ஸாந்திரியாவில் புகழ்பெற்ற நூதனசாலையில் கவனிப்பாரற்றுக் கிடந்தது. இவை அரேபியரின் எழுச்சிக்குப் பின்னரே முளைவிட்டு பழம் தரத் துவங்கின என்று குறிப்பிடுகின்றார்.
அழிவின் விளிம்பிலிருந்த அறிவியலை முஸ்லிம்கள் பாதுகாத்திருக்காவிட்டால் பழம் பெரும் அறிவியல் முதுசங்கள் பல இன்றை உலகுக்குக்கிடைக்காது போயிருக்கலாம். அழிவிலிருந்து அறிவியலைப் பாதுகாத்தமை முஸ்லிம்கள் அறிவியல் உலகுக்குச் செய்த மிகப் பெரும் சேவையாகும். இது குறித்து பேராசிரியர் Stanislas Guyand அவர்கள் தனது Encyceopadie des science religieusus என்ற ஜேர்மனிய நூலில்,
‘மத்தியகால வரலாறுகளிலேயே இஸ்லாத்தின் வரலாறு நாகரிகத்தின் வரலாறாகவே விளங்குகிறது. புறக்கனிக்கப்பட்ட கிரேக்க விஞ்ஞானத்தையும் தத்துவ சாத்திரங்களையும் அழிவிலிருந்து பாதுகாத்து, மேற்குலகை எழுச்சிபெறச் செய்து அறிவியக்க வளர்ச்சிக்குக் காரணகர்த்தாக்களாக இருந்ததற்காக நாம் முஸ்லிம்களுக்கு மிகவும் கடமைப்படடுள்ளோம். ஏழாம் நூற்றாண்டில் பழைய உலகம் மரண வேதனை அனுபவித்துக் கொண்டிருந்தபோது அரேபியர்கள் பெற்ற வெற்றி இந்த உலகில் புதிய குருதியைப் பாச்சியது.’ என்று குறிப்பிடுவது மிகைப்படுத்தப்பட்டதொரு கூற்றல்ல.
இதே கருத்தை C.E. Storss என்ற அறிஞர் Many Greeds -One cross என்ற நூலில்,
‘இருள் அடைந்திருந்த யுகத்தில் விஞ்ஞானம், தத்துவம் போன்ற ஒளிச்சுடர்களை உயரப்பிடித்திருந்த பெருமை அரேபிய முஸ்லிம்களையே சாரும். அவர்களே அரிஸ்டோட்டில், பிளேட்டோ, இயுக்லித் தொலமி ஆகியோரின் நூல்களை அறபு மொழியில்பெயர்த்து பாதுகாத்தனர். அவர்களாலேயே இந்நூல்களை மறுமலர்ச்சிக்காலத்தில் ஐரோப்பியரும் தத்தம் மொழிகளில் பெற்றுக்கொள்ள முடிந்தது’
என்று குறிப்பிடுகின்றார்.
அன்று அரேபியர் ஏற்படுத்திய அறிவியல் எழுச்சிதான் இன்றைய ஐரோப்பாவின் அறிவியல் தொழிநுட்ப முன்னேற்றத்திற்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தது என்பதை மேற்படி கூற்றுக்கள் உறுதி செய்கின்றன. அன்றைய அவர்களது அறிவியல் தாக்கம் இன்றுவரை வியாபித்துள்ளததைக் காணலாம். இதனைப் பின்வரும் கூற்று உறுதிப்படுத்துகின்றது.
‘ஐரோப்பாவில் லௌகீகத் துறையிலும் ஆன்மீகத் துறையிலும், அறியாமை இருள் சூழ்ந்திருந்தபோது ஸ்பெயின் முஸ்லிம்கள் சிறப்பு வாய்ந்த நாகரிகத்தையும் ஸ்தீரமான பொருளாதார வாழ்க்கையையும் அமைத்திருந்தார்கள். கலை, விஞ்ஞானம், தத்துவம், கவிதை முதலிய துறைகளின் வளர்ச்சியில் முஸ்லிம் ஸ்பெயின் பெரும் பங்கெடுத்தது. அவர்களின் கருத்துக்களின் செல்வாக்கு 13ம் நூற்றாண்டில் வாழ்ந்த தோமஸ் அக்யனாஸ், தாந்தே போன்ற தத்துவ ஞானிகளின் சிந்தனைகளையும் தாக்கத் தவறவில்லை. முஸ்லிம் ஸ்பெயின் ஐரோப்பாவின் ஒளிவிளக்கைப் போல விளங்கியது.
இக்கூற்று அன்றைய அவர்களது அறிவியல் எழுச்சியின் தாக்கம் நீண்ட நெடிய வரலாறுடையது என்பதையும் ஐரோப்பாவின் மறுமலர்ச்சித் தொட்டிலாக திகழ்ந்தது ஸ்பெயினே என்பதையும் தெளிவுபடுத்துகின்றது.
இறுதியாகவும் ஒட்டுமொத்தமாகவும் முஸ்லிம்கள் அறிவியல் துறைக்காற்றிய பங்குபற்றிக் கூறுவதாயின், பேராசிரியர் பிலிப் கே. ஹிட்டி History of Arabs எனும் தனது நூலில் கூறுவது போன்று ‘மத்திய கால ஆரம்பத்தில் மனித இனத்தின் முன்னேற்றத்திற்காகப் பணியாற்றியவர்கள் அரேபியர்களைப் போல வேறு எவரும் இல்லை’ என்று கூறலாம்.
அறிவியல் துறையில் இவ்வாறு எழுச்சி பெற்ற முஸ்லிம்கள் அத்துறைக்கு ஆற்றிய பங்களிப்பு என்ன என்பதையும் ஓரளவு விரிவாக விளங்கிக்கொள்வது மேற்குறித்த கூற்றுக்களின் உன்னதத் தன்மையை உணர்ந்து கொள்ள வழிவகுக்கும். இவ்வகையில் முஸ்லிம்களின் அறிவியல்துறை சாதணைகள் பற்றி இங்கு நோக்கப்படுகிறது.
மருத்துவம்:
முஸ்லிம்கள் வளர்த்த அறிவியல் துறையில் மக்கள் வாழ்வுடன் மிக நெருங்கிய தொடர்புடைய மருத்துவம் முதன்மையானதாகும். கலீபா மாமூனின் காலத்தில் (மரணம் 833) தோற்றுவிக்கப்பட்ட பைத்துல் ஹிக்மா எனும் அறிவகத்தால் கிரேக்க மருத்துவ நூற்கள் சிரிய, அரேபிய மொழிகளுக்கு மொழிமாற்றம் செய்யப்பட்டன. கிரேக்க அறிஞர்களான கலன், ஹிபோகிரட்ஸ் போன்றோரின் நூற்கள் ஜிர்ஜிஸ் பின் ஜிப்ரீல் இப்னு பக்ரிசு (மரணம் 771), யுஹன்னா இப்னு மஸாவேஹ் (மரணம்857), அலி அத்தஹு, பரினைன் இப்னு இஸ்ஹாக் (மரணம் 877) ஈஸா இப்னு யஹ்யா, தாபித் இப்னு குற்றா(மரணம் 901) போன்ற அறிஞர்களால் மொழிமாற்றம் செய்யப்பட்டன. இதன் மூலம் கிரேக்க மருத்துவ அறிவியல் பாதுகாக்கப்பட்டது. இதற்கு உதாரணமாக உடற்கூறு பற்றி கலன் எழுதிய ஏழு நூல்களைக் குறிப்பிடலாம். கிரேக்க மொழியில் எழுதப்பட்ட இந்த நூற்கள் கால வெள்ளத்தால் அழிந்து போயின. எனினும், அறபு மொழிக்கு மாற்றம் செய்யப்பட்ட மொழி பெயர்ப்புக்கள் மூலமாகவே இந்நூல் பற்றி இன்று அறிய முடிகின்றது. இது மொழிபெயர்ப்புக்கள் மூலம் கிரேக்க அறிவியல் அழிவிலிருந்து பாதுகாக்கப்பட்டிருப்பதை உறுதி செய்கின்றது.
முஸ்லிம்கள் வெறும் மொழிபெயர்ப்பாளர்களாக மட்டுமன்றி சொந்த ஆய்வுகளையும் இத்துறையில் வெளியிட்டனர். இவ்வகையில் அலி அத்தபரி எழுதிய ஷபிர்தவ்ஸ் அல்ஹிக்மா’ எனும் நூல் குறிப்பிடத்தக்கது. இன்று கிடைக்கும் மிகப்பழைய அறபு மருத்துவ நூற்களில் இதுவும் ஒன்றாகும். பிரபல மொழிபெயர்ப்பாளாரான ஹுனைன் இப்னு இஸ்ஹாக் என்பவரும் ஷகிதாப் அல் மஸாஇல் பில் ஜன்’ எனும் கண் மருத்துவம் பற்றிய நூலை எழுதினார். கண் நோய் பற்றி இன்று கிடைக்கும் அறபு மொழியிலான மிகப்பழைய நூல் இவரது நூலே என்பர். தாபித் இப்னு குர்ராவும் ஷஅல்ழாஹிரா பீ இல்மித்திப்’ என்ற மருத்துவ நூலை எழுதினார். இவரது மருத்துவ நூல் 31 பிரிவுகளாக அண்மையில் எகிப்தில் வெளியிடப்பட்டது.
கிரேக்கர்களின் யூனானி மருத்துவ முறையை இன்றைய உலகுக்கு அளித்த பெருமை முஸ்லிம்களையே சாரும் என்பதை அனைவரும் அறிவர். ஆனால், அதுமட்டுமன்றி மேலைநாட்டு மருத்துவத்தின் தந்தையாகவும் முஸ்லிம்கள் திகழ்ந்தார்கள் என்பது பலரும் அறியாததாகும். மேலைநாட்டு மருத்துவத்தில் முஸ்லிம் மருத்துவ அறிஞர்கள் பலர் செல்வாக்கு செலுத்துகின்றனர். இவர்களுள்,
* அல்ஹாவி, அல் ஜுதரி, வல்ஹஸ்பா, கிதாபுத் திப்பி அல் மன்சூரி போன்றே நூல்களைத் தந்த அர்ராஸி(865-925). இவரது அல் ஹாவி என்ற நூல் ஷ17ம் நூற்றாண்டில் ஐரோப்பிய மருத்துவக் கல்லூரிகளில் பாடநூலாகப் பயன்படுத்தப்பட்டது என J.D. Bernal தனது Sciecnec is History என்ற நூலில் குறிப்பிடுகிறார்.
* மருத்துவ உலகின் பைபிள் என்று போற்றப்படும் ஷகானூன்பித்திப்பி’ எனும் அதிகமான மக்களால் வாசிக்கப்பட்ட மருத்துவ நூலைத் தந்த அலி இப்னுஸீனா(980 -1037) போன்ற பலரைக் குறிப்பிடலாம்.
இங்கு முஸ்லிம்கள் அறிவியல் உலகுக்குச் செய்த பணிகளைக் கூறுவது நோக்கமல்ல. அது ஆய்வுப் பணியின் பரப்பை விரிவாக்கிச் செல்லும். ஒட்டுமொத்தமாக முஸ்லிம் மருத்துவர்கள் மருத்துவத் துறைக்கு ஆற்றிய பங்கைத்தெளிபடுத்த பிரபல ஆங்கில நாட்டு வரலாற்றாசிரியர் H.G. Wells தனது The Out Line of History என்ற நூலில் குறிப்பிடும் பின்வரும் கூற்று போதுமானது.
‘மருத்துவத்துறையில் அவர்கள் மிகப்பெரும் அபிவிருத்தியை ஏற்படுத்தினார்கள். அவர்களின் மருத்துவ நூல் இன்றைய மருத்துவ நூலைப்போன்றே இருந்தது. அவர்களின் சிகிச்சை முறைகைள் பல இன்னும் எம்மிடையே உபயோகத்தில் இருக்கின்றன. அவர்களின் அறுவை மருத்துவர் மயக்க மருந்துகளின் உபயோகத்தைப் பற்றி அறிந்திருந்ததோடு, மிகச்சிக்கலான அறுவைச்சிகிச்சைகளையும் நிறைவேற்றினர். ஐரோப்பாவில் சமயச் சடங்குகளாலேயே நோய்களைக் குணப்படுத்த முடியும் என்று நம்பிச் செயலாற்றிய மதபீடத்தால் மருத்வத் தொழில் தடைசெய்யப்பட்டிருந்த காலத்தில் அரேபியர்கள் உண்மையான மருத்துவ முறையைப் பின்பற்றினர்.' இக்கூற்று முஸ்லிம் உலகு மருத்துவத்துறையில் அடைந்திருந்த முன்னேற்றத்தையும் அப்போதைய ஐரோப்பாவின் அறியாமையையும் எடுத்துக்காட்ட போதுமானது.
இரசாயனவியல்:
அறிவியல் துறையின் தலையாயதாகக் கருதப்படும் இரசாயனவியலைக் குறிக்கப் பயன்படும் கெமிஸ்ட்ரி (Chemistry) எனும் ஆங்கிலப் பதம் ஷகீமிய்யா’ எனும் அரபுச் சொல்லின் திரிபாக இருப்பது ஊடாக இத்துறைக்கு முஸ்லிம்கள் ஆற்றிய அளப்பரிய பங்கை ஊகிக்க முடிகிறது. எகிப்து நாட்டின் மண் கருமைத் தன்மையுடையதாக இருந்தது. இக்கலை அங்கு கண்டுபிடிக்கப் பட்டமையால் கீமிய்யா என்று பெயர் பெற்றது.
இக்கலையில் ஆய்வுகள் செய்த முஸ்லிம்கள் இரும்பை அதன் தாதிலிருந்து முகர்ந்து உணரவும், நிறக்கண்ணாடியைத் தயாரிக்கவும், தோல்களைப் பதனிடவும், மருந்து சாதனங்களைப் பெறவும், தாவரங்களிலிருந்து சாயங்களைப் பெறவும், வாசனைப் பொருட்களை உற்பத்தி செய்யவும் அறிந்திருந்தனர் என N. Glinka தனது General Chemistry என்ற நூலில் குறிப்பிடுகின்றார்.
இத்துறைக்கு முஸ்லிம்கள் ஆற்றிய பங்கு பற்றி E.J. Holmyard குறிப்பிடுகையில், இரசாயனத்துறையில் பரிசோதனைகள் செய்து அவற்றின் மூலம் இரசாயனத் தன்மைகளை உறுதிப்படுத்துவது கீரேக்க நாட்டில் அறியப்படாமலேயே இருந்து வந்தது. ஆனால், விஞ்ஞானத்தில் பரிசோதனைகள் செய்து ஆராயும் முறை அக்கால முஸ்லிம் விஞ்ஞானிகளின் மகத்தான சாதனையாகும். இராசாயனத்துறையில் அரேபியர்கள் எத்தகைய ஆதிக்கம் செலுத்தினர் என்பதற்கு அறபு மூலத்திலிருந்து வந்த பல இரசாயனவியல் பதங்கள் இன்னும் சான்று பகர்கின்றன. எனக் குறிப்பிட்டுள்ளார்.
முஸ்லிம்கள் இத்துறையில் பல ஆய்வுகளைச் செய்து எரிகாரம் போன்ற பதார்த்தங்களைக் கண்டுபிடித்ததுடன் பல உத்திகளைக் கையாண்டு இதனை வளர்த்தனர். இத்துறையில் காலித் இப்னு யசீத், இப்னு ஹய்யான், ஜாபிர்; அலி இப்னு சீனா, அப்துல்லாஹ் அல் காஸாஸீ போன்ற பல அறிஞர்களும் ஆய்வு நூல்களை வெளியிட்டுள்ளனர்.
முடிவாகக் கூறுவதாயின் ஹம்போல்ட் கூறுவது போல ‘தற்கால இரசாயனவியல் சந்தேகமின்றி முஸ்லிம்களின் கண்டுபிடிப்பேயாகும். இத்துறையில் அவர்கள் பெற்ற அடைபேறுகள் கவனத்தை ஈர்ப்பனவாக அமைந்திருந்தன’ என்று குறிப்பிடலாம்.
வானவியல்:
முஸ்லிம்கள் பிரகாசித்த அறிவியல்துறைகளில் வானவியலும் ஒன்றாகும். இந்திய, கிரேக்க வானவியல் நூல்களை மொழிபெயர்த்து கற்றதோடு தமது ஆய்வுமுயற்சிகளையும் முஸ்லிம்கள் முடுக்கிவிட்டனர். மிகக்குறுகிய காலத்திலேயே முஸ்லிம் உலகில் பல வானியல் ஆய்வாளர்கள் உருவாகினர். அவர்கள் வானவியல்துறையில் அதுவரைகாலம் நிலவி வந்த தவறான கருத்துக்களை விமர்சிக்கவும் தயங்கவில்லை. கலீபாக்களின் உதவியுடன் பல்வேறு இடங்களில் வானவியல் ஆய்வு நிலையங்களும் நிறுவப்பட்டன.
முஹம்மத் அல் பஸாரி, யாகூப் இப்னு தாரிக், அல் குவாறிஸ்மி (780-850), அலி இப்னு ஈஸா, அல் பர்கானி, அல் மஹானி, பனூ மூஸா, அபூ மஃ’ர் போன்ற பல அறிஞர்கள் இத்துறையில் பல நூல்களையும் ஆய்வுகளையும் வெளியிட்டுள்ளனர்.
கணிதம்:
நாகரிகத்தின் கண்ணாடியாகவும், பிரயோக விஞ்ஞானத்தின் தாயாகவும் கருதப்பட்ட கணிதத்துறைக்கு முஸ்லிம்கள் பெரியளவில் பங்காற்றியுள்ளனர். கிரேக்கர்களின் கணிதத்தை எடுத்து அவற்றை மெருகூட்டி இன்றைய உலகுக்கு வழங்கியவர்கள் முஸ்லிம்களே. உரோம எண்களைப் போட்டுக் குழம்பிப்போயிருந்த மேற்குலகுக்கு 1, 2, 3 என்று அழைக்கப்படும் (English Numbers) எனத்தவறாகக் குறிப்பிடப்படும் இலக்கங்களை முஸ்லிம்களே அறிமுகப்படுத்தினர். ஸைபஃர் என்னும் பூஜ்யத்தை அறிமுகப் படுத்தியதன் மூலம் எண்முறை கணிதத்தை (Arithmetic) அறிமுகப்படுத்தியதும் முஸ்லிம்களே. பூஜ்யத்தைக் குறிக்கப்பயன்படும் Zero என்ற ஆங்கிலச் சொல் Sifr எனும் அரபுச் சொல்லின் திரிபாக இருப்பது இதனையே உணர்த்துகின்றது.
அல்ஜிப்றா எனும் பெயரால் அழைக்கப்படும் அட்சரகணிதத்தைக் கண்டுபிடித்தவர்களும் முஸ்லிம்களே. அதுமட்டுமன்றி திரிகோண கணிதம், தளக் கேத்திரகணிதம், பரப்புக்கேத்திரகணிதம் போன்றவற்றைக் கண்டுபிடித்தவர்களும் முஸ்லிம்களேயாவர்.
இத்துறைக்கு, குவாறிஸ்மி (780-850), அல்கிந்தி(803-873), தாபித் இப்னு குரா(826-901), அல் பத்தாஸீ(850-929), அபூ காமலில்(850-960), அபுல் வபா(940-998), இப்னு ஹைதம்(965-1039), போன்ற அறிஞர்கள் இத்துறையில் ஆய்வு நூல்களை வெளியிட்டனர்.
புவியியல்:
முஸ்லிம்களால் வளர்க்கப்பட்ட அறிவியல் கலைகளுள் புவியியலும் முக்கியமானதாகும். புவியியல் தொடர்பாக அன்று நிலவிய பல தவறான நம்பிக்கைகளை நீக்கியவர்கள் முஸ்லிம்கள்தான். புவி தட்டையானது என்ற கருத்தை மறுத்து அது உருண்டையானது என்ற கருத்தை மேற்குலகுக்கு உணர்த்தியவர்கள் முஸ்லிம்களே. இதன் மூலம் கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடிக்க காரணமாக அமைந்தவர்களும் முஸ்லிம்களே.
அப்பாஸிய கலீபா மாஃமூனின் உத்தரவின் பெயரில் முதலாவது உலக வரைபடத்தை (First World map) வரைந்தவர்களும் முஸ்லிம்களே. அல்குவாறித்மி, அல் சுலமீ, இப்னு ஷஹ்றாயார், அல் பல்கீ, இப்னு ருஸ்த், இப்னு சராப்யூன் போன்ற பல்வேறு அறிஞர்கள் இத்துறைக்குப் பெரிதும் பங்காற்றியுள்ளனர்.
‘பூமியில் பயணித்து முன் சென்ற மக்களின் முடிவுகளைப் பாருங்கள்’ என்ற குர்ஆனின் கட்டளையை இப்னு பதூதா போன்ற முஸ்லிம் பயணிகள் உருவாகி புவியியல் குறித்த பல தகவல்களை உலகுக்கு வழங்கினர். உலக நாடுகள் பற்றிய நூற்களை வெளியிட்டனர்.
சாதகமாக அமைந்த காரணிகள்:
மேற்கூறப்பட்டவை தவிர பௌதீகவியல், உயிரியல், தொழிநுட்பம், இயற்பியல் போன்ற பல துறைகளிலும் முஸ்லிம்கள் மிகப் பாரியளவிலான பங்களிப்பைச் செய்திருந்தனர் என்பதை வரலாறு நிரூபிக்கின்றது. இத்தகைய மகத்தான சாதனைகளை முஸ்லிம்கள் சாதிக்க சாதகமான சூழ்நிலை உருவாவதற்குத் துணை நின்ற காரணிகள் எவை என்பதைப் பற்றி இங்கு நோக்கப்படுகிறது.
1. அறிவுதேடலை இஸ்லாம் ஆர்வப்படுத்தியமை:
அறியாமை இருளில் மூழ்கியிருந்த இந்தசமூகத்திற்கு அறிவு தேடலின் அவசியம் அல்குர்ஆன் சுன்னா மூலம் உணர்த்தப்பட்டது. இஸ்லாத்தின் ஆரம்பத் தூதே அறிவுதேடலின் அவசியத்தை உணர்த்தியதுடன் சீரிய உயரிய ஒரு சமூக அமைப்பை அறிவின் அடிப்படையில்தான் கட்டியெழுப்ப முடியும் என்பதையும் உணர்த்தியது.
ஆரம்பமாக அருளப்பட்ட அல் குர்ஆனின் ஐந்து வசனங்களும் இதனையே உணர்த்துகின்றன.
‘(நபியே! யாவற்றையும்) படைத்த உமது இரட்சகனின் பெயரைக் கொண்டு நீர் ஓதுவீராக!அவன் மனிதனை (கருவறைச் சுவரில்) ஒட்டிக்கொள்ளக் கூடியதிலிருந்து படைத்தான். நீர் ஓதுவீராக! உமது இரட்சகன் மிக கண்ணியமானவன். அவனே எழுதுகோல் கொண்டு கற்பித்தான். மனிதன் அறியாதவற்றை அவன் அவனுக்குக் கற்றுக் கொடுத்தான்’.
மேற்படி வசனங்களில் கற்றலுக்குத் தேவையான வாசிப்பு, எழுத்து, கற்பித்தல் என்ற அம்சங்கள் பற்றிப்பேசப்படுகின்றன. “இக்ரஃ” வாசிப்பீராக என்ற கட்டளை இருவிடுத்தங்களும் ‘அல்லம’ கற்பித்தான் என்ற வினைச்சொல் இருவிடுத்தங்களும் இடம்பெறுகின்றன. அந்த சமூகத்திற்கு ஏவ, எடுத்துக் கூற, தடுத்துவிட வேண்டிய விடயங்கள் எண்ணற்ற அளவில் இருந்தாலும் ஆரம்ப வசனங்களில் மீண்டும் மீண்டும் அறிவுடன் தொடர்புபட்ட விடயங்கள் பேசப்பட்டிருப்பது. ஒரு சமூக உருவாக்கத்திற்கு அறிவின் அவசியத்தையே எடுத்துக்காட்டுகின்றது.
மனித இனத்தின் உயர்வுகூட அறிவில்தான் தங்கியிருப்பதாக இஸ்லாம் உணர்த்துகின்றது. ஆதிபிதா ஆதமுக்கு அல்லாஹ் கற்றுக் கொடுத்ததையும் அவரது அறிவியல் ஆற்றல் நிரூபிக்கப்பட்ட பின்னரே மலக்குகள் அவருக்கு சுஜூது செய்ததையும் அதன் பின்னரே அவர் சுவனம் நுழைந்ததையும் அல் குர்ஆன் குறிப்பிடுகின்றது.
அல் குர்ஆனின் அனேக ஆயத்துக்கள் அறிவின் அவசியத்தை வலியுறுத்துகின்றன. அவ்வாறே ஹதீஸ்களும் அறிவை வலியுறுத்துவதைக் காணலாம். ‘எவர் ஒருவர் அறிவைத்தேடி புறப்படுகின்றாரோ அவருக்கு அல்லாஹ் சுவனத்தின் பாதையை எளிதாக்குகின்றான்.’
‘எவர் ஒருவர் அறிவைத் தேடி வீட்டைவிட்டு வெளியேறுகின்றாரோ அவர் வீடுதிரும்பும் வரை இறை பாதையில் உள்ளார்.’
இவ்வாறான ஏராளமான ஹதீஸ்கள் அறிவின் அவசியத்தை உணர்த்துகின்றன. இது குறித்து யூஸுப் அல் கர்ழாவி குறிப்பிடும் போது பின்வரும் தகவல்களைக் கூறுகின்றார்.
• ஸஹீஹுல் புகாரி ‘கிதாபுல் இல்ம்’ என்ற பாடத்தில் 102 அறிவுப்புக்களை உள்ளடக்கியுள்ளது.
• முஸ்லிம், முஅத்தா, திர்மிதி, அபூதாவூத், நஸஈ, இப்னு மாஜா போன்ற நூல்களும் அறிவு பற்றிய தனிப்பாடங்களை உள்ளடக்கியுள்ளன.
• பாஹுர் ரப்பானி என்ற நூல் முஸ்னத் அஹமதிலுள்ள அறிவுபற்றிய 81 அறிவுப்புக்களை உள்ளடக்கியுள்ளது.
• நூருத்தீன் ஹைதமியின் ‘மஜ்மஉஸ்ஸவாயித்’ என்ற நூலின் ‘கிதாபுல் இல்ம்’ என்ற பாடம் 84 பக்கங்களையும் ஒவ்வொரு பக்கங்களும் பல ஹதீஸ்களையும் உள்ளடக்கியுள்ளது. இவ்வாறு அறிவுபற்றிய செய்திகள் கடல் போன்று விரிந்தது என்பதைத்; தொடர்ந்து கர்ழாவி சுட்டிக்காட்டிச் செல்கிறார்.
இவ்வாறு இஸ்லாம் அறிவுதேடுவதை இஸ்லாமிய இபாதத்தாக ஏவியதால் உந்தப்பட்ட முஸ்லிம்கள் தாம் இறைவழிபாட்டில் ஈடுபடும் தூய உள்ளத்துடனும், வேகத்துடனும் அறிவைக் கற்றனர். இது அறிவியல் துறையில் மிகக் குறிகிய காலத்தில் மிகப் பெரிய சாதனைகளை அவர்கள் சாதித்துக் காட்டத் சாதகமான சூழலை உருவாக்கியது.
2. ஆய்வு செய்யப்பணித்தமை:
இஸ்லாம் அறிவை மட்டும் வலியுறுத்தாமல் ஆய்வு செய்வதையும் சிந்திப்பதையும் வலியுறுத்துவதையும் காணலாம். இது முஸ்லிம்களிடம் ஆய்வுக் கண்னோட்டத்தைத் திறந்துவிட்டது.
‘ஒட்டகம் எவ்வாறு படைக்கப் பட்டுள்ளது, வானம் எவ்வாறு உயர்த்தப்பட்டுள்ளது, மலைகள் எவ்வாறு நட்டப்பட்டுள்ளன, பூமி எவ்வாறு விரிக்கப் பட்டுள்ளது என்பதை அவர்கள் பார்க்க வேண்டாமா?'
இங்கே ஒட்டகத்தை அவர்கள் பார்க்க வில்லையா என வினவப்படுவது சாதாரணமாகப் பார்ப்பதையல்ல. ஒட்டகம் பார்க்காத அரேபியர் எவரும் இருக்கமாட்டர். அதை ஆய்வு செய்து பார்ப்பதைத்தான் இந்த வசனம் போதித்துள்ளது.
இவ்வாறு சூரியன், சந்திரன், நட்சத்திரம், காற்று, மழை, மேகம், பூமி, வானம், மலை, இரவுபகல் போன்ற பல அம்சங்கள் குறித்தும் நீங்கள் ஆய்வு செய்யவில்லையா, சிந்திக்கவில்லையா எனக்கூறி இவைபற்றி சிந்திப்பது முஸ்லிமின் மார்க்க உணர்வுடன் ஒட்டியதாக இருக்க வேண்டும் என்றும் அல் குர்ஆன் பணிக்கின்றது.
‘நிச்சயமாக வானங்கள் மற்றும் பூமியைப் படைத்ததிலும், இரவு பகல் மாறி மாறி வருவதிலும் சிந்தனையுடையோருக்கு பல அத்தாட்சிகள் இருக்கின்றன. அவர்கள் நின்ற நிலையிலும், அமர்ந்த வர்களாகவும், தங்களின் விலாப் புறங்களின் மீது (சாய்ந்தவர்களாகவு)ம் அல்லாஹ்வை நினைவு கூருவார்கள். மேலும், வானங்கள் மற்றும் பூமியின் படைப்புப் பற்றிச் சிந்தித்து ‘எங்கள் இரட்சகனே நீ இவற்றை வீணாகப் படைக்கவில்லை. நீ தூய்மையானவன். ஆகவே, நீ எங்களை நரக வேதனையிலிருந்தும் பாதுகாப்பாயாக!’ (என்றும் பிரார்த் திப்பார்கள்.)
இவ்வாறான அனேக ஆயத்துக்கள் படைப்புக்கள் பற்றி சிந்தனை செய்வது குறித்து பேசுகின்றன. நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வைப்பற்றி சிந்திக்காதீர்கள் அவனது படைப்புகளைப் பற்றிச் சிந்தியுங்கள் எனக் கூறி இத்துறையை ஊக்குவிதுள்ளார்கள். இவ்வகையில் இயற்கையை ஆய்வு செய்யுமாறு இஸ்லாம் தூண்டியமை முஸ்லிம் சமூகம் துரிதமாக அறிவியலில் முன்னேற்றம் காண வழிசெய்தது எனலாம்.
3. இஸ்லாமிய இபாதத்துக்கள்:
இஸ்லாம் பல்வேறுபட்ட வணக்க வழிபாடுகளை முஸ்லிம்கள் மீது விதித்துள்ளது. அவை கூட முஸ்லிம்களின் அறிவியல்துறை சார் முன்னேற்றத்திற்கு வழி வகுத்தது எனலாம்.
உதாரணமாக முஸ்லிமின் அடிப்படைக் கடமைகளில் பிரதானமானது தொழுகையாகும். இதனை நிறைவேற்ற கஃபாவின் திசையை அறிந்திருப்பது அவசியமாகும். வியாபாரத்துக்காக பயணம் செய்யும் முஸ்லிம்கள் உரிய நேரத்தில் தாம் இருக்கும் இடத்திலிருந்து கஃபாவை முன் நோக்கித் தொழுவதற்கு எடுத்த முயற்சி அவர்களுக்கு புவியியல் அறிவையும், வானவியல் நட்சத்திரங்களின் திசைகள் பற்றிய தெளிவையும் கொடுத்தது.
இவ்வாறே நீண்ட தூரங்களிலிருந்து ஹஜ்ஜுக்காகப் பயணம் வருபவர்கள் தமது பயணத்தை ஒழுங்கு படுத்திக்கொள்ள புவியியலையும் பருவ கால மாற்றங்களையும், வானத்தில் தோன்றும் நட்சத்திரங்களை வைத்து போகும் திசையை அறிந்து கொள்ளும் அறிவையும் பெற்றனர் எனலாம்.
ஸகாத் எனும் இஸ்லாமியக் கடமையூடாக கணக்கியல் பற்றிய ஓரளவான அறிவிவையாவது முஸ்லிம் பெற்றிருக்க வேண்டியதன் அவசியம் உணரப்பட்டது. இது இத்துறை வளர்ச்சிபெற உந்துதலாக இருந்தது எனலாம். இவ்வாறே இஸ்லாமியச் சட்டங்களில் வாரிசுரிமை என்பது பரந்துவிரிந்த பரப்பளவைக் கொண்டதாகும். இதற்கு கணக்கியல் பற்றிய தெளிவு அவசியமாகும். எனவே, இந்த சட்டத்தை நிறைவேற்ற முஸ்லிம்கள் கணக்கியலில் கவனம் செலுத்த நேர்ந்தது. இவ்வாறு நோக்கும் போது இஸ்லாமிய இபாதத்துக்கள், சட்டங்கள் என்பனவும் முஸ்லிம்கள் அறிவியல்துறையில் அபார வளர்ச்சியடைய ஏதுவாக அமைந்தன எனக் கூறலாம்.
4. இஸ்லாமிய இராஜ்ய விஸ்தரிப்பு:
முஸ்லிம்களால் குறுகியகால இடைவெளிக்குள் பல்வேறு நாடுகள் கைப்பற்றப்பட்டன. இதனால் பரந்து விரிந்ததொரு சாம்ராஜ்யம் கட்டியெழுப்பப்பட்டது. இது பல்வேறு விதத்திலும் அறிவியல் வளர்ச்சிக்கு வித்திட்டது எனலாம்.
முஸ்லிம்களால் பண்டைய நாகரிகங்களின் கேந்திரங்களாகத் திகழ்ந்த மொஸபத்தோமியா, உரோமம், பாரசீகம், எகிப்து, இந்தியா போன்ற நாடுகள் கைப்பற்றபட்ட போது அங்கு காணப்பட்ட அறிவியல் சார் முதுசங்கங்களை முஸ்லிம்கள் தத்தெடுத்து வளர்த்தனர்.
பரந்துபட்ட பேரரசை ஆள, ஒவ்வவொரு நாட்டு மக்களின் தனிப்பட்ட கலாசாரம் பற்றிய அறிவும் அவசியமாயின. எனவே ஆட்சியாளர்களால் அறிவியல்துறை ஆய்வுக்கு ஊக்கமளிக்கப்பட்டது. இவ்வகையில் இராஜ்ய விஸ்தரிப்பு முஸ்லிம்கள் அறிவியல் துறையில் பாரிய முன்னேற்றம் காணவழிவகுத்தது எனலாம்.
5. ஆட்சியாளர்களின் அனுசரணை:
ஆட்சியாளர்கள் அறிவியல் துறைக்களித்த ஆக்கமும் ஊக்கமும் இத்துறையில் அபரிமிதமான முன்னேற்றத்துக்கு வழி வகுத்தது. குலாபஉர்ராஷிதூன்கள் பொதுவாக சமய துறைசார் அறிவுகளை வளர்ப்பதில் கூடிய அக்கறை காட்டியிருப்பதை அவதானிக்கலாம். அவர்களது ஆட்சிக்காலமும், உமையா கிலாபத்தின் ஆரம்பகட்டமும் பெரும்பாலும் உள்நாட்டு வெளிநாட்டு படையெடுப்புக்களுக்கு அதிகம் முகம்கொடுக்க நேரிட்டமை இத்துறையில் அக்கறை செலுத்துவதற்கான போதியளவு வாய்ப்பைக் குறைத்திருக்கலாம்.
இருப்பினும் உமையாக்காலத்தில் இத்துறையில் ஓரளவு அக்கறை செலுத்தப் பட்டிருப்பதைக் காணலாம். அவர்கள் தமது அரசபையில் அறிஞர்களுக்கு இடம் கொடுத்ததுடன் அவர்களை கௌரவித்திருப்பதையும் காணலாம்.
கலீபா முஆவியா(ரழி) அவர்களது அரச வைத்தியர் இப்னு அதால் எனும் கிறிஸ்தவ மருத்துவர் கலீபாவுக்காக சிறிய மருத்துவ நூல்களை அரபு மொழியில் மொழிபெயர்த்து கொடுத்தார். கலீபா முஆவியாவின் பேரரும் முதலாம் யசீதின் மகனுமான காலித் அளவையியலிலும், இரசாயனவியலிலும் ஈடுபாடுடையவராகக் காணப்பட்டார். மருத்துவம், வானவியல் முதலிய துறைகளில் எழுதப்பட்ட கிரேக்க, கொப்டிக் மொழி நூற்களை முதன் முதலாவதாக அறபியில் மொழிபெயர்த்தவர் இவர் என்று கூறப்படுகின்றது. கலீபா இரண்டாம் உமர் ‘அந்தியாக்’ நகரில் மருத்துவக் கல்லூரி நிறுவினார். கலீபா வலீத் ஹிஸாம் போன்றோரும் இத்துறையில் பெரிதும் பங்காற்றியுள்ளார்கள்.
உமையாக்களுக்குப் பின்னர் ஆட்சிபீட மேறிய அப்பாஸிய ஆட்சிக்காலமே முஸ்லிம்களின் அறிவியல் ஆராய்ச்சியில் பொற்காலமாகத் திகழ்தது. அப்பாஸிய ஆட்சியாளர்கள் அறிவுத்தாகமுடையோராக இருந்த அதேவேளை, அறிவியல் ஆராய்ச்சியாளர்களுக்கு ஆதரவு நல்கி அவர்களின் முயற்சிகளுக்கு ஊக்கமும் அளித்தனர். ராஜ்யம் முழுவதும் கல்லூரிகளையும், ஆய்வகங்களையும் நிறுவினர். ஐரோப்பிய கல்லூரிகளுக்கும் பல்கலைக்கழகங்களுக்கும் அப்பாஸியர் நிறுவிய கலைக் கூடங்களே முன்னோடியாக அமைந்தன.
அப்பாஸிய ஆட்சியளர்களுள் ஹாரூன் ரஷீத், மாமூன், மன்சூர் ஆகியோர் இத்துறைக்கு அழுத்தமான பங்களிப்பை நல்கினர். இவர்கள் மட்டுமன்றி அப்பாஸிய ஆட்சியில் தோற்றம் பெற்ற சிற்றரசுகளும் கூட இத்துறைக்குப் பங்களிப்பு நல்கியிருப்பதை அவதானிக்க முடியம். இவ்வகையில் ஆட்சியளர்களின் அனுசரணை முஸ்லிம்கள் அறிவியல் துறையில் அபரிதமான முன்னேற்றம் காண காரணமாய் அமைந்தது என்று கூறலாம்.
மொழி பெயர்ப்புப் பணிகள்:
ஆட்சியாளர்களின் அனுசரணையுடனும், அறிஞர்களால் தனிப்பட்ட முறையிலும் அறிவியல்துறை சார் நூல்கள் மொழிபெயர்க்கப் பட்டன. இவை அறிவியல் துறையின் அபார வளர்ச்சிக்குப் பெரிதும் உதவின. உமையாக் கலீபா அப்துல் மலிக் அறபு மொழியை அரசகரும மொழியாகப் பிரகடனப் படுத்தியதால் அரபு மொழி விருத்தியடைந்தது அதுவரை காலமும் ஒவ்வொரு பிரதேசத்திலும் அவ்வப் பிரதேச மொழிகளில் பதியப்பட்ட அரச நடவடிக்கைகள் அரபு மொழியில் பதியப்பட்டன.
இஸ்லாம் பரவிய புதிய பிரதேசங்களிலும் அரபு மொழி செல்வாக்குச் செலுத்தியது. இஸ்லாத்தைத் தழுவிய அறிஞர்கள் இஸ்லாத்தைத் தெளிவாக அறிந்து கொள்ள அறபு மொழியைக் கற்றனர். இதனால் மாற்று மொழியில் காணப்பட்ட அறிவுப் பொக்கிசங்களை அறபு மொழிக்கு மாற்றுவது இலகுவானது.
மொழிபெயர்ப்புத் துறையில் கலீபா அல் மாமூனால் ஸ்தாபிக்கப்பட்ட அறிவியல் ஆராய்ச்சிக்கழகமான ‘பைத்துல் ஹிக்மா’ பெரும் பங்காற்றியது. இவரின் பணிப்பின் பெயரில் கல்லன், ஹிப்போகீரேத்ஸ், அறிஸ்டோட்டில், பிளேட்டோ, தொலமி, பைதகரஸ் போன்றோரின் அரிய நூற்கள் மொழிபெயர்க்கப்பட்டன. கிரேக்கர்களின் அறிவியல் நூற்களைப் பிற்காலத்தில் ஐரோப்பியர் அறிந்து கொள்ள இந்த மொழிபெயர்ப்புகள் உதவின.
இந்த மொழிபெயர்ப்புப்பணியில் முஸ்லிம்கள் மட்டுமன்றி யூத கிறிஸ்தவ அறிஞர்களும் ஈடுபடுத்தப்பட்டனர். பைத்துல் ஹிக்மா நிறுவன ரீதியாக இயங்குவதற்கு முன்னரே கலீபா மன்சூர், ஹாரூன் அர்ரஆ’த் ஆகியோரால் மொழிபெயர்ப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. இவ்வாறே மாமூனுக்குப் பிற்பட்ட முதவக்கில் முதலானோராலும் இப்பணி தொடரப்பட்டது.
மொழிபெயர்ப்புப் பணியூடாக பல்வேறுபட்ட சமூகங்களின் அறிவியல் முதுசங்கள் முஸ்லிம்களின் சொத்தாகின. இது முஸ்லிம்கள் அறிவியல் உலகில் பிரகாசிக்கப் பெரிதும் ஏதுவாக அமந்தது.
தேக்க நிலையும் அதற்கான காரணங்களும்
ஏலவே குறிப்பிட்டது போன்ற காரணங்களால் அறிவியலின் உச்சநிலையை அடைந்து அகில உலகெங்கும் அறிவொளி பாச்சிய முஸ்லிம்கள் படிப்படியாக இத்துறையில் செல்வாக்கை இழந்தனர். அதனைத் தொடர்ந்து ஐரோப்பியர் இத்துறையில் எழுச்சி பெற்றனர்.
அறிவியல்துறையில் முஸ்லிம்கள் தேக்க நிலையை அடைந்தமைக்குப் பல காரணங்களை இனங்காட்ட முடியுமாயினும் பிரதானமான காரணங்கள் இங்கு கோடிட்டுக்காட்டப்படுகின்றன.
1. அல் குர்ஆன், சுன்னா புறக்கணிக்கப்பட்டமை
முஸ்லிம் சமூகம் குர்ஆன் சுன்னாவை விட்டும் தூரமானது அல்லது அவற்றை ஆன்மீக தேவைகளுக்கு மட்டுமுரியதாக காணமுற்பட்டமை பிரதான காரணங்களில் ஒன்றாகும். முஸ்லிம்கள் இபாதத் என்ற பரந்த விடயத்தைக் குறிப்பிட்ட சில கிரிகைகளுக்குள் சுருங்கிக் கொண்டனர். வானம், பூமி, நட்சத்திரம், கோள்கள் பற்றியெல்லாம் சிந்திப்பதும், அல்லாஹ்வின் படைப்புக்களின் அற்புதங்களை ஆராய்வதும் இபாதத்தாக அவர்களால் நோக்கப்படவில்லை. அல் குர்ஆனையும், சுன்னாவையும் முழுமையாக ஆராய்வது குறைவடைந்தது. பிக்ஹ் மஸாயில்களுக்குத் தீர்வு காண்பதற்காக மட்டும் குர்ஆன் சுன்னாவை அலசி ஆராய்ந்தார்கள். அதன் மறுபக்கங்களை மறந்து போனார்கள்.
குறிப்பாகப் பிற்காலத்தில் ஏற்பட்ட மத்ஹபு வேறுபாடுகள் முஸ்லிம்களின் முழுக்கவனத்தையும் அதன்பாலே ஈர்த்துக் கொண்டமையால் குர்ஆன், சுன்னா உரிய முறையில் ஆராயப்படவில்லை. ‘இல்முல் கலாம்’ என்ற பெயரில் தர்க்கவாதத்தை உருவாக்கி தேவையற்ற விடயங்களில் மயிர் பிளக்கும் ஆய்வில் ஈடுபட்டனர். ஒரு அறிஞரிடம் முஸ்லிம்கள் அறிவியல் துறையில் பின்தங்கியிருப்பதற்கும் கிறிஸ்தவர்கள் அத்துறையில் முன்னேற்றம் கண்டிருப்பதற்குமான காரணம் வினவப்பட்டபோது ‘மார்க்கத்தைப் புறக்கணித்ததால்’ என ஒற்றைவார்த்தையில் பதில் கூறினார்.
கிறிஸ்தவர்கள் தமது மதப் பிரகாரம் வாழ்திருந்தால் அறிவியலில் அவர்கள் முன்னேற்றம் கண்டிருக்க முடியாது. முஸ்லிம்கள் இஸ்லாத்தைப் புறக்கணிக்காது இருந்திருந்தால் இந்த தேக்க நிலை ஏற்பட்டிருக்காது என்பதை இது உணர்த்துகின்றது.
2. அரசியல் பலவீனம் அல்லது வீழ்ச்சி:
பிற்கால இஸ்லாமிய அரசியல் நலிவுற்று இறுதியில் கிலாபத் வீழ்ச்சி கண்டமையும் அறிவியல்துறை தேக்கமடைந்தமைக்கான பிரதான காரணங்களில் ஒன்றாகும். ஏற்கனவே குறிப்பிட்டது போன்று ஆட்சியாளர்களின் அனுசரணை பிற்காலத்தில் இத்துறைக்குக் கிடைக்கவில்லை. அதற்குக் கலீபா மன்சூர், மாமூன், ஹாரூன் அல் ரஷீத் போன்ற கல்வித்தாகமுடைய கலீபாக்கள் இல்லாது போனமை முக்கிய காரணமாகும். அறிஞர் அபுல் அஃலா மவ்தூதி(ரஹ்) அவர்கள், ஆரம்பகால அப்பாஸிய கலீபாக்களைத் தொடர்ந்து வந்த ஆட்சியாளர்கள் இஸ்லாமிய கலைகள் விஞ்ஞானத்துறைகள் பற்றிய அறிவு அற்றவர்களாக இருந்தமையும் இத்துறையின் தேக்க நிலைக்கான காரணங்களில் ஒன்றாகக் குறிப்பிடுவது இங்கு நோக்கத்தக்கது.
இவ்வாறான ஆட்சியாளர்களின் ஆர்வமின்மை பலவீனம், இஸ்லாமிய கிலாபத் வீழ்ச்சி கண்டமை என்பன இத்துறை தேக்கமடைய காலாயமைந்தன.
3. யுத்தங்களும் படையெடுப்புக்களும்:
வரலாறு நெடுகிலும் இஸ்லாம் பல்வேறு படையெடுப்புக்களைச் சந்தித்து வந்துள்ளது. இஸ்லாம் அல்லாத வேறு எந்தக் கொள்கையோ கோட்பாடோ இத்தகைய சவால்களை எதிர்கொண்டிருந்தால் அதன் சாயல்கூட உலகில் இல்லாது அழிக்கப்பட்டிருக்கும். ஆயினும், இஸ்லாம் இந்தளவு சவால்களுக்கும் ஈடு கொடுத்து நிலைத்து நிற்பதே அதன் தனிச்சிறப்பும் அற்புதமுமாகும் என்றால் மிகையாகாது.
முஸ்லிம் உலகு சந்தித்த உள்நாட்டுக் குழப்பங்களும் வெளிநாட்டுப் படையெடுப்புக்களும் முஸ்லிம்களின் கவனத்தைத் திசைதிருப்பியது. இவற்றில் நூறாண்டுகளைத் தாண்டியும் நீண்டு சென்ற சிலுவை யுத்தங்கள் பிரதானமானவையாகும். அப்போது சிலுவை வீரர்களால் முஸ்லிம் தேசங்கள் சிதைக்கப்பட்டன. முஸ்லிம் உலகின் முழுக் கவனமும் இந்த சவாலை எதிர்கொள்வதன் பால் திரும்பியிருந்தது. சிலுவை வெறியர்களால் முஸ்லிம்களின் தனிச் சிறப்புக்களும், கலைக்கூடங்களும் அழிக்கப்பட்டன.
இவ்வாறே இஸ்லாமிய உலகு சந்தித்த மிகப்பெரும் சோதனைகளில் ஒன்றான தாத்தாரிய படையெடுப்பின் போதும் முஸ்லிம்கள் பெருமளவு பாதிக்கப்பட்டனர். அவர்களது அறிவியல் செல்வங்கள் அழிக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான நூல் நிலையங்களிலிருந்த லட்சக் கணக்கான ஆய்வு நூல்கள் எரிக்கப்பட்டன.
நைல் நதியில் முஸ்லிம்களின் ஆய்வு நூல்கள் பாலமாகப் போடப்பட்டதாகவும், நூல்கள் எழுதப்பட்ட மை கரைந்ததால் நைல் நதி நீர் நீண்ட நாட்களாகக் கரும் நிறத்தில் காட்சியளித்ததாகவும் கூறப்படுமளவுக்கு இந்த அழிவு இருந்தது. இதனால் ஆண்டாண்டு காலமாகப் பல்வேறுபட்ட அறிஞர்களின் கடின உழைப்பால் முஸ்லிம்கள் சேகரித்து வைத்திருந்த அறிவியல் முதுசங்கள் அழிக்கப்பட்டன.
படையெடுப்புக்கள் ஏற்படுத்திய பாதிப்பு, கையிருப்பில் இருந்த அறிவியல் பொக்கிசங்கள் பறிபோனமை என்பன இத்துறையில் தேக்க நிலையை ஏற்படுத்தியது எனலாம்.
ஈராக்கை ஆக்கிரமித்த அமெரிக்கா, நாகரீகத்தின் தொட்டிலாகத் திகழ்ந்த ஈராக்கின் அரும்பொருள் காட்சியகத்தைக் கொள்ளையிட்டமை தாத்தாரிய படையெடுப்பின் போது எப்படி இஸ்லாமிய இலக்கியங்களும் அறிவியல் பொக்கிஷங்களும் அழிக்கப்பட்டிருக்கும் என்பதற்கான நிதர்சன சான்றாகும்.
4. முஸ்லிம்கள் காலனித்துவத்துக்கு உட்பட்டமை
பிரான்ஸ், பிரித்தானியா, இத்தாலி, ஹோலாந் போன்ற ஏகாதியபத்திய நாடுகளின் ஆக்கிரமிப்புக்கு முஸ்லிம் நாடுகள் உள்ளாகின. நவீன காலனித்துவமானது 1798ல் நெப்போலியனால் எகிப்து ஆக்கிரமிக்கப் பட்டதிலிருந்து துவக்கம் பெறுவதாகக் கொள்வர். இவர்கள் நிலங்களை மட்டுமன்றி மனிதமனங்களையும் மூளைகளையும் ஆக்கிரமித்தனர். நிலங்களை அவர்கள் விட்டுப் போனபோதும் அவர்கள் ஆக்கிரமித்திருந்த மனங்களை விட்டு அவர்கள் போகவில்லை. இது குறித்து யூசுப் அல் கர்ழாவி குறிப்பிடும் போது ‘நிலங்களை ஆக்கிரமித்ததை விட மூளைகள் மீதான ஆக்கிரமிப்பு பாரதூரமானதாக இருந்தது' என்று குறிப்பிடுகின்றார்.
ஆக்கிரமிப்பாளர்கள் தாம் ஆக்கிரமித்த நிலம், மக்கள் அவர்களது மதம், கலாசாரம் என்பவற்றைக் கடுமையாக ஆராய்ந்து அவற்றின் தனிச்சிறப்பம்சங்களை இனங்கண்டு அவற்றை சிதைத்தார்கள். பலம் எது என அறிந்து அதைத்தகர்த்தனர். பலவீனம் எது என்பதை இனம் கண்டு அவற்றைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டனர். இவ்வகையில் முஸ்லிம் சமூகத்திற்கு மத்தியில் ஒழுக்கவீழ்ச்சியை ஏற்படுத்தியதுடன் அவர்களது அறிவியல் பொக்கிசங்களைத் திருடிச் சென்றனர்.
இந்த வகையில் காலனித்துவம் முஸ்லிம்களின் அறிவியல் துறைவளர்ச்சி தேக்கமடைய வழிவகுத்தது.
5. இஜ்திஹாத் தடைப்பட்டமையும் தக்லீத் கோட்பாடு தோற்றம் பெற்றமையும்
முஸ்லிம்கள் மத்தியில் பிற்காலத்தில் ஏற்பட்ட தனிமனித வழிபாடு, முன்னைய அறிஞர்களில் முழுமையாகத் தங்கி நிற்றல், சமகால அறிஞர்களின் தூய்மையற்ற வாழ்வினால் ஏற்பட்ட அவர்கள் மீதான அவநம்பிக்கை என்பன தக்லீத் கோட்பாடு ஆழமாக வேரூன்றவும், இஜ்திஹாத் புறக்கணிக்கப்படவும் வாய்ப்பளித்தது.
முன்னைய அறிஞர்களின் நூல்களுக்கு விளக்கம் எழுதுதல், பக்க, ஓரக்குறிப்புக்கள் வழங்குதல் என்பவற்றுடன் அறிஞர்கள் தமது பணியைச் சுருக்கிக் கொண்டனர். இதுவே பேணுதலானது என்றும் கருதினர். இதனால் முஸ்லிம்களது ஆய்வுக் கண் அடைக்கப்பட்டது. சிந்தனைச் சிறகுகள் முறிக்கப்பட்டன. இத்தகைய மந்த நிலை ஆரம்பத்தில் பிக்ஹ் துறையை ஆக்கிரமித்தாலும் போகப்போக அனைத்துத் துறைகளும் இந்த அவலத்திற்குள்ளாகின.
இதுகுறித்து விளக்க முனையும் உஸ்தாத் முஹம்மத் முபாரக்; ‘ஆரம்ப நூற்றாண்டுகளில் மார்க்கம், மற்றும் அறிவியல் துறைகளில் முஸ்லிம்களிடம் காணப்பட்ட முன்னேற்றம் தக்லீத் சிந்தனைப் போக்கினாலும், தனிமனித வழிபாட்டினாலும் வீழ்சியடைந்தன’ என்று குறிப்பிடுகின்றார்.
இதே கருத்தை அபுல் அஃலா மவ்தூதி பின்வருமாறு விளக்குகின்றார். ‘பேனா முனையாலும், வாட்களாலும் நீண்டகாலமாக ஆட்சிக்காகப் போராடிய முஸ்லிம்களிடம் சோர்வு நிலை தோhன்றியது. இதனால் ஜிஹாதின் வேகம் தணிந்தது, இஜ்திஹாத் செய்யும் திறனும் நலிவடைந்தது. இதனால் இயல்பாகவே தமக்கு அறிவொளியையும் செயற்திறனையும் வழங்கிய அல் குர்ஆனை புனிதப்பொருளாகக் கருதி உரைகளில் இட்டுப் பாதுகாத்தனர். மேலும் தமது நாகரிகத்தைச் செம்மைப்படுத்திய சுன்னாவைப் பின்பற்றாமல் விட்டுவிட்டனர். இதன் விளைவால் முஸ்லிம்களது முன்னேற்றம் தடைப்பட்டது. பலநூற்றாண்டுகள் பொருக்கெடுத்தோடிய நதி தேங்கி ஒரு குட்டையாக மாறியது. எனவே, முஸ்லிம்களிடம் இருந்த உலக தலைமைத்துவம் (இமாமத்) பறி போனது. ஏனைய சமூகங்களை மிஞ்சியிருந்த இவர்களது சிந்தனை, அறிவு, ஆற்றல் என்பன பலவீனமடைந்தன.
மேற்படி கூற்று இஜ்திஹாத் தடைப்பட்டமையும் தக்லீத் கோட்பாடு தலைதூக்கியமையும் முஸ்லிம் உலகில் ஏற்பட்ட அறிவியல் தேக்க நிலைக்கு முக்கிய காரணமாகும் என்பதைத் தெளிவுபடுத்துகின்றது.
6. இஸ்லாமியக் கோட்பாடுகள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டமை
இஸ்லாமிய நம்பிக்கைக் கோட்பாடுகள் தவறாகப் புரியப்பட்டமையும் அறிவியல் தேக்க நிலைக்கு வழிவகுத்தது. குறிப்பாக, கழாகத்ர் பற்றிய தவறான விளக்கம் விதியின் மீது பழியைப்போட்டு முடங்கிக் கிடக்கவும், ‘தவக்குல்’ பற்றிய தவறான எண்ணக்கரு முயற்சிகள் முடக்கப்படவும் வழிவகுத்தது. இவ்வாறான சிந்தனைகள் வலுப்பெற பிளேட்டோ, அரிஸ்டோட்டில் போன்றோரின் தத்துவங்கள் முஸ்லிம்களிடம் செல்வாக்குச் செலுத்தியமையும், முஸ்லிம் உலகில் அந்நிய கலாசார சிந்தனைத் தாக்கத்திற்குட்பட்ட சூபிகள் செல்வாக்குப் பெற்றமையும் முக்கிய காரணங்களாகும்.
இவர்கள் நோய்க்கு மருந்து செய்வதைவிட அல்லாஹ்வின் கழாவின் படியே நோய் ஏற்பட்டது. அந்தக் கழாவைப் பொருந்திக் கொள்வதே ஏற்றமானது என நம்பினர். எந்த முயற்சியும் இல்லாமல் வெறுமனே பிராத்தனையினால் எதனையும் சாதிக்கலாம் என நம்பினர். பிரபஞ்சம் பற்றிய இஸ்லாத்தின் கண்ணோட்டத்திற்கு மாற்றமான சிந்தனை இவர்களூடாக முஸ்லிம்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்றது. துறவற சிந்தனையும், தவறான ஆன்மீக நாட்டமும் பெருகியது. இது முஸ்லிம்களின் செயற்திறனை மட்டுமன்றி, அவர்களின் உற்சாகமான செயற்பாடுகள் அனைத்தையும் கட்டுப்படுத்தியது.
இவ்வகையில் கழாகத்ர், தவக்குல், துஆ, உலகம், மறுமை பறறிய தவறான நோக்கு மாற்றுக் கலாசார தாக்கத்தினால் இஸ்லாமிய உலகில் செல்வாக்குப்பெற்றதுவும் அறிவியல்துறையில் தேக்கத்தை ஏற்படுத்தியது எனலாம்.
முடிவுரை
வரலாறு என்பது கடந்கால பெருமை பேசுவதற்கான சாதனமல்ல. முஸ்லிம்கள் தமது கடந்தகால வரலாற்றையும், அவர்கள் வரலாற்றில் வகித்துவந்த மகோன்னத நிலையையும் அதற்கான காரணத்தையும் கண்டறிய வேண்டும். அத்தோடு தமது வீழ்ச்சிக்கு வழிவகுத்த அல்லது முன்னேற்றத்தை தடுத்த காரணிகளைக் கண்டறிந்து களைய வேண்டும். முன்னேற்றத்திற்கு வழிவகுத்த காரணிகளை ஏற்படுத்திக் கொள்ள அல்லது ஏற்படுத்த முடியாதவை இருப்பின் அதற்கு மாற்றீடான வழிமுறைகளை இனம்காண வேண்டும். அவற்றினூடாக இழந்த பெருமையை மீளப்பெறலாம். உலகின் தலைமைத்துவத்தைக் கையிலெடுத்து அதற்கு நல்ல முன்மாதிரியை வழங்கவும் முன்வரவேண்டும். அதற்கான முயற்சிகளை முடிந்தவரை முன்னெடுக்கத்தக்க அறிவும் ஆற்றலும் மிக்கதொரு குழுவின் செயற்பாட்டை காலம் கட்டாயப்படுத்திக் கொண்டிருக்கிறது. இத்தகையதொரு பாரிய பணிக்கு முஸ்லிம் சமூகத்தின் குறிப்பிட்ட சிலரையாவது ஆயத்தப்படுத்த அல்லாஹ் ஒருவனே போதுமானவனாவான்.