அல்லாஹ்வின் அழகிய பெயரும் உயர்ந்த பண்பும் அதில் கையாளக் கூடாத நான்கு வழிமுறைகளும்

ஏகத்துவத்துடன் இருக்கும் ஒரு முஃமின் அல்லாஹ்வின் அனைத்துப் பண்புகளையும் ஏற்றுக்கொள்பவனாக இருப்பான். அப்பண்புகள் எவ்வாறு அல்லாஹ்வின் மகத்துவத்திற்கும் மாட்சிமைக்கும் அமைய அவனுக்கென்று தனித்துவமானதாக இருக்கின்றதோ அவ்வாறே அந்த முஃமின் ஏற்று அதனை உறுதிப்படுத்துவான்.

சுத்தமான ஈமான் என்பது, அல்லாஹ்வின் பெயர் பண்பு விடயத்தில் "மறுக்கும்" போக்கிலிருந்தும், முரண்பட்டுப் போவதிருந்தும், கேள்விகளை எழுப்புவதிலிருந்தும், இன்னுமொன்றுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதிலிருந்தும் தவிர்ந்து கொண்டதாகும். 

எனவே அல்லாஹ்வின் பெயர் பண்பு விடயத்தில் அல்லாஹ்வும் அவனது தூதரும் உறுதிப்படுத்திக் காட்டியவற்றை நாமும் உறுதிப்படுத்த வேண்டும். 

தஃதீல், தஹ்ரீப், தகீப், தம்ஸீல் ஆகியவை அல்லாஹ்வின் பெயர் பண்பு விடயத்தில் கையாளக்கூடாத வழிகெட்ட வழிமுறையாகும்.

  • தஃதீல் (மறுப்பது) என்பது அல்லாஹ்வின் வேதத்திலும் நபிகளாரின் சுன்னாவிலும் வந்திருக்கும் அல்லாஹ்வின் பெயர் பண்புகளின் சத்தியமான நேரடி கருத்தை மறுப்பதாகும்.
  • அல்லாஹ்வின் பெயர் பண்பு விடயத்தில் தஹ்ரீப் (மாற்றுக் கருத்துக் கொடுப்பது) என்றால் குர்ஆனிலும் சுன்னாவிலும் வந்திருக்கும் அல்லாஹ்வின் பெயர்களுக்கும் பண்புகளுக்கும் உள்ளரங்கமான விளக்கங்களைக் கொடுத்து , அந்த பெயர்களின் பண்புகளின் கருத்தை அதற்குத் தகுதியற்ற கருத்தாக இருந்தாலும் அந்தக் கருத்தை அந்த பெயர் பண்புகளுக்கு விளக்கமாக நுழைத்து இன்னொரு கருத்தின் பால் திசைதிருப்பிவிடுவதாகும்.
  • தகீப் என்பது அல்லாஹ்வின் பண்புகள் விடயத்தில் ஆராய்ந்து பார்த்து இந்தப் பண்புகள் அல்லாஹ்வுக்கு எவ்வாறு இருக்க முடியுமென்று கேள்வியை எழுப்புவதாகும்.
  • தம்ஸீல் என்பது அல்லாஹ்வின் பண்புகளை படைப்புகளின் பண்போடு ஒப்பிட்டுப் பார்த்து விளக்கம் கொடுப்பதாகும்.

யார் அல்லாஹ்வின் பண்புகளில் ஒன்றையோ அதில் சிலவற்றையோ மறுப்பதற்கு முனைந்து விட்டாரோ அவர் நிச்சயமாக அல்லாஹ்வின் பண்புகள் விடயத்தில் " தஃதீல்" (மறுத்தல்) என்ற வழிகெட்ட வழிமுறையைக் கையாண்டுவிட்டார்.

தஃதீலைக் கையாண்டு அவர் மறுப்பதற்கு காரணம் " தஹ்ரீப் " (மாற்றுக் கருத்துக் கொடுத்தல் ) என்ற வழிமுறையையும் அவர் கையாண்டதாலாகும்.

அதே போன்று அவர், அப்பண்புகள் விடயத்தில் ,அது அல்லாஹ்வுக்கு எப்படி இருக்க முடியுமென்று கேள்வி எழுப்பி, அப்பண்புகளை படைப்புகளின் பண்புகளோடு ஒப்பாக்கி எடுத்துவிட்டாரென்றால், 

நிச்சயமாக அவர் " தகீப் " எனப்படும் கேள்வி கேட்கும் வழிமுறையையும் " தம்ஸீல் " எனப்படும் படைப்புகளோடு உவமானம் கூறும் வழிமுறையையும் கையாண்டுவிட்டார்.

எடுத்துக் காட்டிய அம்சங்களில் நாம் தெரிந்து கொள்வது என்னவென்றால் , அல்லாஹ்வின் பெயர் மற்றும் பண்பு விடயத்தில் நாம் தஃதீல் தஹ்ரீப் தகீப் தம்ஸீல் ஆகியவற்றைக் கையாளாமல் விளங்குவதில்தான் உண்மையாக அல்லாஹ்வை நம்புவதன் வழிமுறையே அமைந்திருக்கிறது.

யாரெல்லாம் இந்த அடிப்படையில் அல்லாஹ்வின் பெயர் பண்புகளை விளங்குவார்களோ அத்தகையவர்கள்தான் குர்ஆன் சுன்னா காட்டும் நேர்வழியை அடைந்தவர்களாக இருப்பார்கள். 

யார் இதற்கு மாற்றமாக விளங்குவார்களோ அத்தகையவர்கள் இஸ்திகாமத் எனும் உறுதியுடன் குர்ஆனையும் சுன்னாவையும் பின்பற்றுவதற்கு சாத்தியமற்றவர்களாக இருப்பார்கள்.

“ கல்வியில் ஆழ்ந்த அறிவுள்ளவர்கள் அதனைக்கொண்டும் நாங்கள் ஈமான் கொண்டோம். ஒவ்வொன்றும் எங்கள் இரட்சகனிடமிருந்தே ஆகும் எனக் கூறுவார்கள். (ஸுரா ஆலஇம்ரான் - 07)

-அஷ்ஷெய்க் அபூ அப்திர் ரஹ்மான் யஹ்யா ஸில்மி ஹபிழஹுல்லாஹ்
أحدث أقدم