- மதார்ஷா ஃபிர்தவ்ஸி
ஷஃபான் மாதம் 15ம் பிறை ‘பராஅத் இரவு’ என்று அனுஷ்டிக்கப்பட்டு இல்லாத பொல்லாத பல காரியங்கள் இன்று மார்க்கம் என்ற பெயரில் அப்பாவி முஸ்லிம்களுக்கு மத்தியில் அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த ‘பராஅத் இரவு’ என்றால் என்ன? இதனுடைய உண்மை நிலை என்ன? என்பது பற்றி தூய்மையான இஸ்லாத்தின் தகவல்களை இவர்களுக்கு வழங்கிட, நேரிய வழியின் பக்கம் வழிகாட்டிட நாம் பொறுப்பு சாட்டப்பட்டுள்ளோம்.
நபி(ஸல்) அவர்கள் ஷஃபான் முழுவதும் நோன்பு நோற்பார்கள் என்று சொல்கிற அளவுக்கு ஷஃபானின் மிக அதிகமான நாட்கள் நோன்பு நோற்பார்கள் என்று ஆயிஷா(ரலி) அவர்கள் கூறுகிறார்கள். நூல் : புகாரி
இவ்வாறாக ஷரீஅத்தில் ஷஃபான் மாதத்திற்கு சிறப்பு சொல்லப்பட்டதை வைத்து இந்த சிறப்பு விஷயத்தில் மக்களை ஆர்வப்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லாஹ்வோ அவனின் தூதரோ சொல்லாத பல பொய்யான தகவல்களை மார்க்கத்தின் பெயரால் பரப்புவதை ஒருபோதும் ஒரு முஸ்லிமால் தாங்கவோ, ஜீரணிக்கவோ இயலாது.
மேலும் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஷஃபான் மாதத்தின் நடுபாதி வந்துவிட்டால் ரமளான் மாதத்தை அடைகின்றவரை நீங்கள் நோன்பு வைக்க வேண்டாம். நூல் : திர்மிதி, இப்னுமாஜா
நபி(ஸல்) அவர்கள் சில அவசியமான நோக்கத்திற்காகவே இவ்வாறு அறிவுருத்தியுள்ளார்கள்.
ரமளான் மாதத்திற்கான ஒரு பயிற்சியை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக ஷஃபான் மாதத்தின் ஆரம்ப நாட்களில் நோன்பு நோற்க ஆர்வப்படுத்தியுள்ளார்கள்.
ரஜப் புனித மாதத்தைத் தொடர்ந்து மக்கள் ரமளான் மாதத்தை மாத்திரமே எதிர்நோக்குவதால் ஷஃபான் மாதத்தின் முக்கியத்துவத்தை கூறினார்கள்.
ரமளான் மாதத்தை எல்லா வகையிலும் எதிர்நோக்க வேண்டும். அதற்காக தயார் ஆகவேண்டும் வேண்டும். ஷஃபான் மாதத்தின் பிந்தைய பாதி நாட்களில் நோன்பு நோற்க தடைவிதித்தார்கள். (இது வாராந்திர திங்கள் மற்றும் வியாழக்கிழமையில் சுன்னத்தான் நோன்பை நோற்பவர்களுக்கோ, மாதத்தின் நடு மூன்று நோன்பை நோற்பவர்களுக்கோ, நேர்ச்சை செய்து நோற்பவர்களுக்கோ பொருந்தாது)
இவ்வாறு இல்லாமல் அல்லாஹ் ‘லைலதுல் கத்ர்’ சம்பந்தமாக சொல்யுள்ள செய்திகளை மற்றும் வசனங்களை கொண்டுவந்து இந்த ஷஃபான் மாதத்தின் 15ம் இரவோடு இணைத்து இந்த நாள்தான் லைலதுல் கத்ர் என்றோ அல்லது அதற்கு நிகரானதுபோன்றோ வாதிடுவது அப்பட்டமான அபத்தம்.
நிச்சயமாக நாம் அதனை பாக்கியமுள்ள இரவிலே இறக்கினோம். நிச்சயமாக (அதன் மூலம்) அச்சமூட்டி எச்சரித்துக் கொண்டே இருக்கின்றோம். அல்குர்ஆன் 44:3
என்ற வசனத்தில் அல்லாஹ் ஷஃபான் மாதத்தின் 15ம் இரவைத்தான் கூறுகின்றான் என்று கூறுவது குர்ஆன் வசனங்களுக்கும் ஹதீஸ்களுக்கும் எதிரானது. லைலதுல் கத்ர் இரவு குறித்து அல்லாஹ் கூறும்போது அது ரமலான் மாதத்தில் தான் உள்ளது என்பதை தெளிவுப்படக் கூறியுள்ளான்.
நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலதுல் கத்ர் என்ற) இரவில் இறக்கினோம்.
அல்குர்ஆன் 97:1
ரமளான் மாதம் எத்தகைய தென்றால் அதில் தான் மனிதர் களுக்கு வழிகாட்டியாகவும், நேரான மறுப்பு வழியை தெளிவாக்கக்கூடியதாகவும் (நன்மை லிதீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான குர்ஆன் இறக்கியருளப்பட்டது. அல்குர்ஆன் 2:185
இவ்வாறு அல்லாஹ் குர்ஆன் அருளப்பட்ட மாதம் ரமலான் மாதம் என்றும் லைலதுல் கத்ர் இரவு ரமலான் மாதத்தில் உள்ள ஒரு நாள் என்றும் மனிதர்களுக்கு விளக்கி விட்டான். ஆகவே திருக்குர்ஆனின் 44:3 வசனத்தில், பாக்கியமுள்ள இரவு என்று அல்லாஹ் குறிப்பிடுவது ரமலானில் வரும் லைலத்துல் கத்ர் இரவு தான். ஷஃபான் 15ம் இரவு அல்ல.
ஷஃபான் மாதத்தின் 15ம் பிறையை பராஅத் இரவு என்றோ அல்லது அதுவே லைலத்துல் கத்ர் இரவு என்றோ சொல்லி அந்த இரவில் விஷேச வழிபாடுகள் செய்வது முழுக்க முழுக்க மார்க்கத்திற்கு முரணானதாகும்.
அதற்காக இவர்கள் மேற்கோள் காட்டுகின்ற அத்தனை செய்திகளும் பலவீனமானவையாகும். குறிப்பாக ஷஃபான் மாதத்தின் 15ம் பிறை இரவு பராஅத் தொழுகை என்று சொல்லி நூறு ரக்அத்கள் தொழுவது, பாவமன்னிப்புக்கு, ஆயுள் நீட்டித்தரப்பட, செல்வம் பெருக என்ற நிய்யத்தில் அந்த இரவில் மூன்று யாசீன் ஒதுவது, பிரத்யேக துஆக்களை ஓதுவது, அடுத்தநாள் நோன்பு நோற்பது, வீடுகளை அலங்கரிப்பது, விஷேச உணவுகளை படைப்பது என்று அந்த பிறையின் இரவிலும் பகலிலும் இவர்கள் செய்கின்ற அத்தனை விஷயங்களும் மார்க்கத்தில் காட்டித்தரப்படாத வழிமுறைகள் வழிகேடுகள் ஆகும்.
பாராஅத் இரவுத் தொழுகை என்பது புதிதாக உருவாக்கப்பட்டது தான். பைத்துல் முகத்தஸில் எப்போது உருவானது என்பதை அபூஷாமா அவர்கள் கீழ்வருமாறு எழுதுகிறார்கள். பராஅத் தொழுகை உண்டானதற்கு வரலாற்று, பின்னனி என்னவெனில் ஹிஜ்ரி 448ல் இருந்துதான் இது துவங்கியது. இப்னு அபில் ஹம்ரா என்ற அழகிய முறையில் கிராஅத் ஓதும் ஒரு மனிதர் ஷஃபான் மாதம் நடு இரவில் பைதுல் முகத்தஸில் தொழுதார். அவருக்கு பின்னால் ஒரு வருக்கு பின் ஒருவராக கூடினர் அவர் தொழுகையை முடித்து பார்க்கை யில் மிகப்பெரும் ஜமாஅத்தில் அவர் இருந்தார் என்ற ஒரு சுருக்கமான வரலாறும் உண்டு. நூல் : அல்பாஇஸு அலா இன்காரில் பிதஇ
இவர்கள் பராஅத் இரவு என்றும் அந்த நாளில் பல விஷேச வழிபாடு கள் செய்ய வேண்டும் எனவும் எந்த ஹதீஸ்களை ஆதாரமாக காண்பிக்கின்றார்களோ அவைகள் அத்தனையும் பலவீனமானவை. இவர்கள் ஷஃபான் மாதத்தின் சிறப்புகள் குறித்து சொல்லுகின்ற பல ஹதீஸ்கள் பலவீனமானவை என்பதோடு பல ஹதீஸ்கள் இட்டுக்கட்டப் பட்டவையாகவும் உள்ளன. அவர்கள் சொல்லுகின்ற ஹதீஸ்களைப் பார்ப்போம்.
யா அல்லாஹ் ரஜப் மற்றும் ஷஃபான் மாதங்களில் எங்களுக்கு அருள் செய் மேலும் எங்களை ரமலான் மாதத்தினை அடையச் செய்.
நூல் : அஹ்மத்
ஷஃபான் மாதத்தின் சிறப்பு ஏனைய நபிமார்களில் எனக்குள்ள சிறப்பை போன்றதாகும்.
தத்கிரத்துல் மவ்ளூஆத்
ஷஃபான் மாதத்தின் நடு இரவைஅடைந்தால் அதன் இரவில் தொழுங்கள், மேலும் அதன் பகலில் நோன்புவையுங்கள்.
இப்னுமாஜா, அல்ஃபவாயிதுல் மஜ்மூஆ)
ஐந்து இரவுகள் உண்டு அதில் ஒரு போதும் துஆ மறுக்கப்படாது. ரஜப் மாதத்தின் முதல் இரவு, ஷஃபான் மாதத்தின் நடு இரவு, ஜும்ஆ தினத்தின் இரவு, இரு பெருநாட்களின் இரவுகள். (ஸில்ஸிலத்துல் அஹாதீஸ் அள்ளயீஃபா)
ஜீப்ரில்(அலை) அவர்கள் என்னிடம் வந்தார்கள். ஷஃபான் மாதத்தின் இந்த நடு இரவில் கல்ப் கோத்திரத்தின் ஆட்டின் ரோமங்கள் எண்ணிக்கையில் மனிதர்களை அல்லாஹ் நரகில் இருந்து விடுவிக்கின்றான் எனக் கூறினார்கள்.(இப்னுமாஜா, அல்ஃபவாயிதுல் மஜ்மூஆ)
அலியே! யார் ஒருவர் ஷஃபான் மாதத்தின் நடு இரவில் ஆயிரம் முறை குல்ஹுவல்லாஹ் (இக்லாஸ் அத்தியாயம்) ஓதி நூறு ரக் அத்கள் தொழுகின்றாரோ அந்த இரவில் அவர் வேண்டுகின்ற அத்தனை தேவைகளையும் அல்லாஹ் பூர்த்தி செய்கின்றான். (அல்மனாருல் முனீஃப்)
யார் ஒருவர் ஷஃபான் மாதத்தின் நடு இரவில் முன்னூறு ரக்அத்கள் (மற்றொரு அறிவிப்பில் பனிரெண்டு ரக்அத்கள்) ஒவ்வொரு ரக்அத்திலும் முப்பது முறை குல்ஹுவல்லாஹ் ஓதுகின்றாரோ அவர் நரகத்திற்கு விதியாக்கப்பட்ட பத்து நபர்கள் விஷயத்தில் பரிந்து பேசுவார். (தல்கீஸு கித்தாபில் மவ்ளூஆத்)
ஷஃபான் என்பது என்னுடைய மாதமாகும். (ஸில்ஸிலத்துல் அஹாதீஸ் அள்ளயீஃபா)
யார் இரு பெருநாட்களின் இரவுகளையும் ஷஃபான் மாதத்தின் நடு இரவையும் (அமல்களால்) உயிர்ப்பிப்பாரோ உள்ளங்கள் மரணிக்கின்ற நாள் அன்று அவரின் உள்ளம் மரணிக்காது. (மீஸானுல் இஃதிதால்)
யார் ஐந்து இரவுகளை (அமல்களால்) உயிர்பிப்பாரோ அவருக்கு சுவனம் கடமையாகிவிட்டது. தர்வியா இரவு, அரஃபா இரவு, இரு பெருநாட்களின் இரவுகள், ஷஃபான் மாதத்தின் நடு இரவு. (ஸில்ஸிலத்துல் அஹாதீஸ் அள்ளயீஃபா)
ஆக இப்படியாக இவர்கள் மேற்கொள் காட்டுகின்ற அத்தனை ஹதீஸ்களும் பலவீனமானவை மற்றும் இட்டுக்கட்டப்பட்டவை. எனவே ஷஃபான் மாதத்தின் நடு இரவு சம்பந்தமாக எந்த தெளிவான சஹிஹான ஹதீஸ்களும் கிடையாது. அது சம்பந்தமாக வரக்கூடிய அத்தனை ஹதீஸ்களும் பலவீனமானவை மற்றும் இட்டுக்கட்டப்பட்டவை.
அந்த நாளுக்கு மார்க்கத்தில் எந்த பிரத்யேக சிறப்புகளும் இல்லை. அந்த நாட்களில் பிரத்யேகமாக ஓதுவதோ, தொழுவதோ, ஜமாஅத் வைப்பதோ மார்க்கத்தில் சொல்த்தரப்பட்ட ஒன்று அல்ல. எவர்கள் இதனை புரியாமல் பிரத்யேக வழிபாடுகள் அந்த நாட்களில் செய்வார்களோ அவர்கள் அல்லாஹ்வோ அவனின் தூதரோ காட்டித்தராத வழிமுறையை செய்ததற்காக அல்லாஹ்விடம் குற்றம் பிடிக்கப்படுவார்கள் என்பதில் சந்தேகம் கிடையாது. இது குறித்து முற்கால அறிஞர்கள் பதிவு செய்து வைத்துள்ளவை நல்ல தீர்வாக அமையும்.
இமாம் இப்னு வள்ளாஹ் அவர்கள் (மரணம் 286ஹிஜ்ரி) தமது ‘அல்பிதஉ’ (பித்அத்துக்கள்) எனும் நூலில் பதிவு செய்திருப்பது: அப்துர் ரஹ்மான் பின் ஸைத் பின் அஸ்லம்(ரஹ்) அவர்கள் கூறினார்கள்: “நமது ஷைகுகளிலும் மார்க்க அறிஞர்களிலும் ஒருவரும் ஷஃபான் மாத நடு இரவின் பக்கம் திரும்பிப்பார்த்ததை நாம் கண்டதில்லை. மேலும் மக்ஹுல் அறிவிக்கும் (ஷஃபான் 15 இரவு குறித்த) ஹதீஸை அவர்களில் ஒருவரும் பேச நாம் கண்டதில்லை. மற்ற இரவுகளை விட அந்த இரவுக்கு தனிச்சிறப்பு இருப்பதாக ஒருவரும் கருதவில்லை”
இப்னு அபீஸைத் கூறினார்கள்: “மார்க்க அறிஞர்கள் அதைச் செய்வதில்லை” “ஷஃபான் 15வது இரவின் கூலி லைலத்துல் கத்ர் இரவின் கூலியைப்போன்றதாகும் என்று ஸியாத் அந்நுமைரீ கூறுகின்றார் என இப்னு அபீமுலைகா அவர்களிடம் சொல்லப்பட்டது. அப்போது இப்னு அபீ முலைகா அவர்கள், அவ்வாறு அவர் சொல்லும் போது என்கையில் தடியிருந்தால் அதன் மூலம் அவரை அடிப்பேன் என்று கூறினார்கள். ஸியாத் தீர்ப்பளிப்பவராக இருந்தார்” (பார்க்க : ‘அல்பிதஉ’ அசர் எண் 106,107)
இந்த தகவல்களையும் இன்னபிற ஆதாரங்களையும் வைத்து ஷாஃபிஈ மத்ஹபின் சிறப்புக்குரிய முற்கால அறிஞர்களில் ஒருவரான “அபூஷாமா அஷ்ஷாஃபிஈ” அவர்கள் ஷஃபான் 15ம் இரவில் நடைபெறுபவற்றை குறை கூறியுள்ளார்கள். (பார்க்க:அபூஷாமா அவர்களின், ‘அல்பாயிஸு அலா இன்காரில் பிதஇ’ எனும் நூல்)
சில அறிஞர்கள் ஷஃபான் 15ம் இரவு பற்றிய வேறுசில ஹதீஸ்கள் பலவீன மானவையாக இருந்தாலும் பல வழிகளில் அறிவிக்கப்படுவதால் ஏற்கத்தக்கவை என்ற நிலையை அடைவதாக கூறுகின்றனர். அடிப்படையில் லைலத்துல் கத்ருக்குஉரிய சிறப்பை இதில் கூறப்படுவதால் இக்கூற்று ஏற்புடையதல்ல. ஒரு வேளை இக்கூற்று சரி என்று வைத்துக் கொண்டால் கூட இன்றைக்கு நடைபெறும் பித்அத்களுக்கும் ஒன்று கூடல்களுக்கும் ஆதாரமாக ஆகாது. தனிப்பட்ட முறையில் அல்லாஹ்விடம் துஆ செய்வதற்கு வேண்டுமானால் ஆதாரமாக அமையும் என்று இக்கூற்றுக்குரியவர்கள் வாதிக்கலாம்.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: உனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தக் கூடியதை விட்டு சந்தேகத்துக்கு அப்பாற்பட்டதை எடுத்துக்கொள்! நூற்கள் : திர்மிதி, நஸாயீ, அஹ்மத்
நன்றி: அல்-ஜன்னத் மாத இதழ் – ஜுன் 2013