அத்தியாயம் 64/2 (நபிகளார் காலத்துப்) போர்கள்

ஸஹீஹுல் புகாரி
அத்தியாயம் 64

(நபிகளார் காலத்துப்) போர்கள் பகுதி 30-59


பகுதி 30

அகழ்ப்போர் - இதுவே 'அஹ்ஸாப்' போராகும். 171

இது (ஹிஜ்ரி) நான்காம் ஆண்டு ஷவ்வால் மாதம் நடைபெற்றதென மூஸா இப்னு உக்பா(ரஹ்) அறிவித்தார்.

4097. இப்னு உமர்(ரலி) கூறியதவது:

உஹுதுப் போரின்போது (படை வீரர்களைப் பார்வையிட்டு ஒழுங்குப்படுத்திக் கொண்டிருந்த) நபி(ஸல்) அவர்களிடம் நானாக முன்சென்று (என்னைப் படையில் சேர்த்துக் கொள்ளும்படி கேட்டேன். அப்போது எனக்குப் பதினான்கு வயது எனவே, என்னை நபி(ஸல்) அவர்கள் அனுமதிக்கவில்லை. பிறகு (அடுத்த ஆண்டு) அகழ்ப்போரின்போது நானாக முன்சென்று கேட்டேன். அப்போது எனக்கு வயது பதினைந்து. எனவே, என்னை அனுமதித்தார்கள். 172

4098. ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்

அகழ்ப்போர் சமயத்தில் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் நாங்கள் இருந்தோம். நபித்தோழர்கள் அகழ் தோண்டிக் கொண்டிருந்தனர். நாங்கள் எங்கள் தோள் மீது மண் சுமந்து கொண்டிருந்தோம். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'இறைவா! மறுமை வாழ்வைத் தவிர வேறு (நிரந்தர) வாழ்வு கிடையாது. எனவே, (அதற்காக உழைக்கும்) முஹாஜிர்களுக்கும் அன்சாரிகளுக்கும் மன்னிப்பருள்வாயாக!'' என்று (பாடிய படி) கூறினார்கள். 173

4099. அனஸ்(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அகழ் (வெட்டும் பணியைப் பார்வையிடுவதற்காக அந்த இடத்தை) நோக்கிப் புறப்பட்டார்கள். அப்போது குளிரான காலை நேரத்தில் முஹாஜிர்களும் அன்சாரிகளும் (அகழ்) தோண்டிக் கொண்டிருந்தனர். அவர்களுக்காக அந்தப் பணியைச் செய்வதற்கு அவர்களிடம் அடிமை (ஊழியர்)கள் எவரும் இருக்கவில்லை. அவர்கள் படும் பாட்டையும், பசியையும் கண்டபோது 'இறைவா! நிச்சயமாக (நிலையான) வாழ்க்கை என்பது மறுமை வாழ்க்கையே. எனவே, அன்சாரிகளுக்கும் முஹாஜிர்களுக்கும் மன்னிப்பு வழங்குவாயாக!'' என்று நபி(ஸல்) அவர்கள் (பாடிய வண்ணம்) கூறினார்கள். நபி(ஸல்) அவர்களுக்கு பதிலளிக்கும் விதத்தில் அவர்கள், நாங்கள் வாழும் காலமெல்லாம் அறப்போரில் ஈடுபடுவோம் என முஹம்மத்(ஸல்) அவர்களிடம் உறுதிமொழி வழங்கியுள்ளோம்'' என்று கூறினர். 174

4100. அனஸ்(ரலி) அறிவித்தார்

முஹாஜிர்களும், அன்சாரிகளும் மதீனாவைச் சுற்றிலும் அகழ் தோண்ட ஆரம்பித்தனர். அப்போது தம் முதுகுகளின் மீது மண் எடுத்துச் சென்ற வண்ணம் 'நாங்கள் வாழும் காலமெல்லாம் இஸ்லாத்தில் நீடித்திருப்போம்' என முஹம்மத்(ஸல்) அவர்களிடம் உறுதிமொழி வழங்கியுள்ளோம்'' என்று (பாடியபடி) கூறிக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு பதிலளிக்கும் விதத்தில் நபி(ஸல்) அவர்கள், 'இறைவா! மறுமையின் நன்மையைத் தவிர வேறு நன்மை எதுவுமில்லை. எனவே, (மறுமையின் நன்மையைப் பெற்றுக் கொள்வதற்காக உழைக்கும்) அன்சாரிகளுக்கும் முஹாஜிர்களுக்கும் நீ அருள்வளம் புரிவாயாக!'' என்று (பாடலிலேயே) கூறினார்கள். 175

அனஸ்(ரலி) கூறினார்: (அகழ் தோண்டிக் கொண்டிருக்கும்) அவர்களுக்கு என்னுடைய ஒரு கையளவு வாற்கோதுமை கொண்டு வரப்பட்டு, கெட்டுப் போன கொழுப்புடன் சேர்த்துச் சமைக்கப்பட்டு அந்த மக்களுக்கு முன் வைக்கப்படும். அப்போது அவர்கள் எல்லாரும் பசியுடன் இருப்பார்கள். அந்தக் கெட்டுப்போன கொழுப்பு நாற்றமடித்தபடி தொண்டையிலேயே சிக்கிக் கொள்ளும்.

4101. அய்மன் அல்ஹபஷீ(ரஹ்) அறிவித்தார்

நான் ஜாபிர்(ரலி) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள் (பின் வருமாறு) கூறினார்கள்: நாங்கள் அகழ்ப் போரின்போது அகழ் தோண்டிக் கொண்டிருந்தோம். அப்போது கெட்டியான பாறாங்கல்லொன்று வெளிப்பட்டது. (அதை எவ்வளவோ முயன்றும் எங்களால் உடைக்க முடியவில்லை. உடனே இது பற்றித் தெரிவிக்க) நபி(ஸல்), அவர்களிடம் சென்று, 'இதோ ஒரு பாறாங்கல் அகழில் காணப்படுகிறது'' என்று கூறினோம். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'நான் இறங்கிப் பார்க்கிறேன்'' என்று கூறிவிட்டு எழுந்தார்கள். அப்போது அவர்களின் வயிற்றில் ஒரு கல் கட்டப்பட்டிருந்தது. (ஏனெனில்), நாங்கள் மூன்று நாள்கள் எதையும் உண்ணாமலிருந்தோம். பிறகு நபி(ஸல்) அவர்கள் குத்தாலி எடுத்து பாறை மீது அடித்தார்கள். அது குறுமணலாக மாறியது. அப்போது நான், 'இறைத்தூதர் அவர்களே! வீடு வரை செல்ல அனுமதியுங்கள்'' என்று கேட்டேன். (அவர்கள் எனக்கு அனுமதி வழங்கினார்கள். பிறகு, நான் வீட்டுக்குச் சென்று) என் மனைவி (சுஹைலா பின்த் மஸ்ஊத்) இடம், 'நபி(ஸல்) அவர்கள் பசியோடிருப்பதை பார்த்தேன். அதைப் பார்த்துக்கொண்டு என்னால் பொறுத்திருக்க முடியவில்லை. உன்னிடம் ஏதேனும் (உணவு) இருக்கிறதா?' என்று கேட்டேன். அதற்கு அவள், 'என்னிடம் சிறிதளவு கோதுமையும் பெட்டையாட்டுக் குட்டி ஒன்றும் உள்ளது'' என்று கூறினாள். உடனே நான் அந்த ஆட்டுக் குட்டியை அறுத்தேன். என் மனைவி கோதுமையை அரைத்தாள். பிறகு நாங்கள் இறைச்சியை சட்டியிலிட்டோம். குழைத்த மாவு இளம் (பக்குவ நிலைக்கு) வந்தது. மூன்று கற்களலானா அடுப்புக்கு மேல் சட்டியிருந்தது. அது முழுமையாக வெந்து விடும் நிலையிலிருந்தது. இந்த நிலையில் நான் நபி(ஸல்) அவர்களிடம் வந்தேன். 'என்னிடம் கொஞ்சம் உணவு இருக்கிறது. இறைத்தூதர் அவர்களே! நீங்களும் (உங்களுடன்) இன்னும் ஒருவர்... அல்லது இருவர் வாருங்கள்'' என்று கூறினேன். நபி(ஸல்) அவர்கள், '(உன்னிடம்) எவ்வளவு உணவு இருக்கிறது?' என்று கேட்டார்கள். அவர்களுக்கு அதை (அதன் அளவை)க் கூறினேன். 'இதுவே அதிகம்; சிறந்ததும் கூட'' என்று கூறினார்கள். பிறகு நபி அவர்கள், 'நான் வரும் வரையில் (அடுப்பிலிருந்து) சட்டியை இறக்க வேண்டாம்; சட்டியிலிருந்து ரொட்டியையும் இறக்க வேண்டாம் என்று நீ உன் மனைவியிடம் சொல்'' என்று கூறினார்கள். பிறகு (அங்கிருந்த தம் தோழர்களிடம்) நபி(ஸல்) அவர்கள் '(எல்லாரும்) எழுந்திருங்கள்'' என்று கூறினார்கள். உடனே முஹாஜிர்களும் அன்சாரிகளும் எழுந்தனர். நான் என் மனைவியிடம் சென்றபோது, 'அடப்பாவமே! நபி(ஸல்) அவர்கள் தம்மோடு இருக்கும் முஹாஜிர்களுடனும் அன்சாரிகளுடனும் வருகிறார்கள்'' என்று கூறினேன். உடனே என் மனைவி '(உணவின் அளவு குறித்து) உங்களிடம் கேட்டார்களா?' என்று வினவியதற்கு நான், 'ஆம்'' என்று பதிலளித்தேன். (நபி - ஸல் - அவர்கள் தம் தோழர்களுடன் வந்து சேர்ந்து,) '(வீட்டிற்குள்) முண்டியடிக்காமல் நுழையுங்கள்'' என்று கூறினார்கள். பிறகு நபி(ஸல்) அவர்கள் ரொட்டியைப் பிய்த்து அதன் மீது இறைச்சியை வைத்தார்கள். அதிலிருந்து எடுத்தவுடன் சட்டியையும் அடுப்பையும் மூடி வைத்தார்கள். தம் தோழர்களுக்கு அருகில் அதை வைத்தார்கள். பிறகு (சட்டியிலிருந்து இறைச்சியை) எடுத்து (தம் தோழர்களுக்கு)க் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். ரொட்டியைப் பிய்த்தபடியும் (பாத்திரத்திலிருந்து இறைச்சியை எடுத்து (ரொட்டியின் மீது வைத்து)க் கொடுத்தபடியும் இருந்தார்கள். அவர்கள் வயிறு நிரம்ப உண்டனர். இறுதியில் சிறிது எஞ்சியது. பிறகு நபி(ஸல்) அவர்கள் (ஜாபிர் அவர்களின் மனைவியை நோக்கி), 'இதை நீயும் சாப்பிடு; அன்பளிப்பும் செய். ஏனெனில், மக்கள் பசியோடுள்ளனர்'' என்று கூறினார்கள்.

4102. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்

(போருக்காக) அகழ் தோண்டப்பட்டுக் கொண்டிருந்தபோது நபி(ஸல்) அவர்களின் வயிறு (பசியினால்) மிகவும் ஒட்டியிருப்பதைக் கண்டேன். உடனே நான் திரும்பி என் மனைவியிடம் வந்து, 'நபி(ஸல்) அவர்களின் வயிறு மிகவும் ஒட்டிப் போயிருப்பதைக் கண்டேன். உன்னிடம் ஏதேனும் (உண்ண) இருக்கிறதா?' என்று கேட்டேன். உடனே என்னிடம் என் மனைவி ஒரு பையைக் கொண்டு வந்தாள். அதில் ஒரு 'ஸாவு' அளவு வாற்கோதுமையிலிருந்தது. வீட்டில் வளரும் ஆட்டுக்குட்டி ஒன்றும் எங்களிடம் இருந்தது. அதை நான் அறுத்தேன். என் மனைவி அந்தக் கோதுமையை அரைத்தாள். நான் (அறுத்து) முடிக்கும்போது அவளும் (அரைத்து) முடித்துவிட்டாள். மேலும் அதனைத் துண்டுகளாக்கி அதற்கான சட்டியிலிட்டேன். இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் திரும்பி வந்தேன். (நான் புறப்படும் போது என் மனைவி,) 'இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கும் அவர்களுடன் இருப்பவர்களுக்கும் முன்னால் என்னை நீங்கள் கேவலப்படுத்திவிட வேண்டாம். ('உணவு கொஞ்சம் தானிருக்கிறது' என்று கூறிவிடுங்கள்)'' என்று சொன்னாள். நான் நபி(ஸல்) அவர்களிடம் வந்து இரகசியமாக, 'இறைத்தூதர் அவர்களே! நாங்கள் எங்களுக்குச் சொந்தமான ஆட்டுக் குட்டியொன்றை அறுத்து, எங்களிடம் இருந்த ஒரு 'ஸாவு' அளவு வாற்கோதுமையை அரைத்தும் வைத்துள்ளோம். எனவே, தாங்களும் தங்களுடன் ஒரு சிலரும் (என் இல்லத்திற்கு) வாருங்கள்'' என்று அழைத்தேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் உரத்த குரலில், 'அகழ்வாசிகளே! ஜாபிர் உங்களுக்காக உணவு தயாரித்துள்ளார். எனவே, விரைந்து வாருங்கள்'' என்று கூறினார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (ஜாபிர் - ரலி - அவர்களிடம்), 'நான் வரும் வரை நீங்கள் சட்டியை (அடுப்பிலிருந்து) இறக்கவேண்டாம். உங்கள் குழைத்த மாவில் ரொட்டி சுடவும் வேண்டாம்'' என்று கூறினார்கள். நான் திரும்பி வந்தேன். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (மக்களை அழைத்துக் கொண்டு) அவர்களுக்கு முன்னால் வந்து கொண்டிருந்தார்கள். நான் மனைவியிடம் வந்து சேர்ந்தேன். (நபி - ஸல் - அவர்கள் தோழர்கள் பலருடன் வருவதைப் பார்த்து என் மனைவி கோபமுற்று) என்னைக் கடிந்து கொண்டான். உடனே நான், 'நீ நபி(ஸல்) அவர்களிடம் சொல்லச் சொன்ன விஷயத்தை நான் (அவர்களிடம்) சொல்லிவிட்டேன்'' என்று கூறினேன். பிறகு நபி(ஸல்) அவர்களிடம் என் மனைவி குழைத்த மாவைக் கொடுத்தாள். நபி(ஸல்) அவர்கள் அதில் (தம் திரு வாயினால்) உமிழ்ந்தார்கள். மேலும், மாவில் பரக்கத் - பெருக்கம் ஏற்படப் பிரார்த்தித்தார்கள். பிறகு, எங்கள் இறைச்சிச் சட்டியை நோக்கி வந்தார்கள். பிறகு அதில் உமிழ்ந்து பரக்கத் - பெருக்கம் ஏற்படப் பிரார்த்தித்தார்கள். பிறகு நபி(ஸல்) அவர்கள், (என் மனைவியை நோக்கி), 'ரொட்டி சுடுபவள் ஒருத்தியை (உதவிக்கு) அழை. அவள் என்னோடு ரொட்டி சுடட்டும். உங்களுடைய பாத்திரத்திலிருந்து நீ அள்ளிக் கொடுத்துக் கொண்டிரு. பாத்திரத்தை இறக்கி வைத்து விடாதே'' என்று கூறினார்கள். அங்கு (வந்தவர்கள்) ஆயிரம் பேர் இருந்தனர்.

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவர்கள் அனைவரும் சாப்பிட்டுவிட்டு, அந்த உணவைவிட்டுத் திரும்பிச் சென்றனர். அப்போது எங்கள் சட்டி நிறைந்து சப்தமெழுப்பியவாறு கொதித்துக கொண்டிருந்தது. அது (கொஞ்சம் குறையாமல்) முன்பிருந்தது போன்றே இருந்தது. மேலும், எங்கள் குழைத்தமாவும் (கொஞ்சமும் குறைந்து விடாமல்) முன்பு போன்றே ரொட்டியாகச் சுடப்பட்டுக் கொண்டிருந்தது. 176

4103. ஆயிஷா(ரலி) அறிவித்தார்

''(பகைவர்கள்) உங்களு(டைய கணவாய்)க்கு மேற்புறமிருந்தும், உங்களு(டைய கணவாய்)க்கு கீழ்புறமிருந்தும் உங்களிடம் (படையெடுத்து) வந்ததை நினைவுகூருங்கள். அப்போது (உங்கள்) கண்கள் நிலைகுத்தி நின்றன. இதயங்கள் தொண்டைகளை அடைத்துக் கொண்டன... என்ற (திருக்குர்ஆன் 33:10-வது) இறைவசனம் குறிப்பிடும் சம்பவம் அகழ்ப்போர் தினத்தில் நடந்தது.

4104. பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்

அகழ்ப்போரின்போது (அகழ் வெட்டிக் கொண்டிருந்த சமயத்தில்) நபி(ஸல்) அவர்கள் மண்ணைச் சுமந்து கொண்டிருந்ததார்கள். மண் அவர்களின் வயிற்றி(ன் முடியி)னை மறைத்(துப் படிந்)திருந்தது ... அல்லது அவர்களின் வயிற்றில் புழுதி படிந்ததிருந்தது... அப்போது அவர்கள் இவ்வாறு (பாடிய வண்ணம்) கூறிக் கொண்டிருந்தார்கள்:

அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் இல்லாவிட்டால் நாங்கள் நேர்வழி அடைந்திருக்க மாட்டோம்; தர்மம் செய்திருக்கவும் மாட்டோம்; தொழுதிருக்கவும் மாட்டோம். நாங்கள் பகைவர்களைச் சந்திக்கும்போது எங்களின் மீது அமைதியை இறக்கியருள்வாயாக! இவர்கள் (குறைஷிகள்) எங்களின் மீது அக்கிரமம் புரிந்துவிட்டார்கள். இவர்கள் எங்களைச் சோதனையில் ஆழ்த்த விரும்பினால் அதற்கு நாங்கள் இடம் தர மாட்டோம்.

''நாங்கள் இடம் தரமாட்டோம்; நாங்கள் இடம் தரமாட்டோம்'' என்பதை உரத்த குரலில் கூறினார்கள். 177

4105. நபி(ஸல்) அவர்கள் (அகழ்ப் போரின் வெற்றிக்குப் பிறகு) கூறினார்கள்:

நான் ('ஸபா' என்னும்) கீழைக் காற்றின் வாயிலாக வெற்றி அளிக்கப்பட்டுள்ளேன்; 'ஆது' சமுகத்தார் ('தபூர்' என்னும்) மேலைக் காற்றினால் அழிக்கப்பட்டனர்.

என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். 178

4106. பராஉ இப்னு ஆஸிப் (ரலி) அவர்கள் அறிவித்தார்

அகழ்ப் போரின்போது இறைத்தூதர்(ஸல்) அவர்களும் அகழ் தோண்டினார்கள். அப்போது அவர்கள் மண்ணைச் சுமந்து எடுத்துச் சென்று கொண்டிருந்ததை பார்த்தேன். அவர்களின் வயிற்றின் தோலை என்னை விட்டும் மண் மறைத்து விட்டிருந்தது. நபி(ஸல்) அவர்கள் நிறைய உரோமம் உடையவர்களாக இருந்தார்கள். அப்போது அவர்கள் மண் சுமந்து கொண்டே இப்னு ரவாஹா அவர்களின் யாப்பு வகை(ப்பாடல்) வரிகளைப் பாடிக் கொண்டிருந்ததை கேட்டேன் (அந்தப் பாடல் இதுதான்:)

இறைவா! நீ இல்லாவிட்டால் நாங்கள் நேர்வழியடைந்திருக்க மாட்டோம்; தர்மம் செய்திருக்கவும் மாட்டோம்; தொழுதிருக்கவும் மாட்டோம். நாங்கள் பகைவர்களைச் சந்திக்கும்போது எங்களின் மீது அமைதியை இறக்கியருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவாயாக! இவர்கள் (குறைஷிகள்) எங்களின் மீது அக்கிரமம் புரிந்துவிட்டார்கள். இவர்கள் எங்களைச் சோதனையில் ஆழ்த்த விரும்பினால் அதற்கு நாங்கள் இடம் தரமாட்டோம். 179

''நபி(ஸல்) அவர்கள், ('நாங்கள் இடம் தரமாட்டோம்' என்ற) கடைசி வார்த்தையை நீட்டிய படி முழக்கமிட்டார்கள்'' என்று அறிவிப்பாளர் கூறுகிறார்.

4107. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்

நான் பங்கேற்ற முதல் (போர்த்) தினம் அகழ்ப்போர் தினமாகும். 180

4108. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்

நான் (என் சகோதரி) ஹஃப்ஸா(ரலி) அவர்களிடம் சென்றேன். அவர்களின் கூந்தலில் இருந்து தண்ணீர் சொட்டிக் கொண்டிருந்தது. நான் அவர்களிடம், 'மக்களின் (அரசியல்) விவகாரங்களில் நீங்கள் பார்ப்பது நடந்து கொண்டிருக்கிறது. எனக்கோ இந்த (ஆட்சியதிகார) விஷயத்தில் எந்தப் பங்கும் வழங்கப்படவில்லை. (இந்நிலையில், அவர்கள் கூட்டியுள்ள இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு நான் செல்லத்தான் வேண்டுமா?' என்று கேட்டேன். 181

அப்போது ஹஃப்ஸா(ரலி), '(நடந்து கொண்டிருக்கும் ஆலோசனைக் கூட்டத்திற்குப்) போய்ச் சேர். ஏனெனில், அவர்கள் உன்னை எதிர்பார்த்துக கொண்டிருப்பார்கள். நீ செல்லாமல் இருப்பதால் மக்களிடையே (மேலும்) பிளவு ஏற்பட்டு விடுமோ என்று நான் அஞ்சுகிறேன்'' என்று கூறினார்கள். நான் செல்லும் வரை என்னை அவர்கள் விடாமல் வற்புறுத்திக் கொண்டே இருந்தார்கள். (நானும் சென்றேன். அங்கே ஒருமித்த கருத்து உருவாகாமல்) மக்கள் பிளவுபட்டிருந்தபோது முஆவியா(ரலி) உரை நிகழ்த்தினார்கள். 182 அவர்கள் தங்களின் உரையில் (இப்னு உமர் - ரலி - அவர்களையும் கருத்தில் கொண்டு,) 'இந்த (ஆட்சிப் பொறுப்பு) விஷயத்தில் கருத்துச் சொல்ல விரும்புகிறவர் தன் தலையைக் காட்டட்டும். ஏனெனில், அவரை விடவும் அவரின் தந்தையை விடவும் நாமே ஆட்சிப் பொறுப்பிற்கு மிகவும் அருகதையானோர்'' என்று கூறினார்கள்.

ஹபீப் இப்னு மஸ்லமா(ரலி) கூறினார்:

நான் (இப்னு உமர் (ரலி) அவர்களிடம் 'நீங்கள் (அப்போது) முஆவியா(ரலி) அவர்களுக்கு எந்தப் பதிலும் அளிக்க வில்லையா?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள் 'அப்போது நான் என்னுடைய துண்டை அவிழ்த்து (உதறிப் போட்டு)க் கொண்டு '(உஹுத் மற்றும் 'கன்தக்' போர்களில் முஆவியாவே,) உங்களுடனும் உங்கள் தந்தை (அபூ சுஃப்யான்) உடனும் இஸ்லாத்திற்காகப் போரிட்ட (அலீ - ரலி - போன்ற)வரே இந்த (ஆட்சியதிகார) விஷயத்திற்கு உங்களை விடத் தகுதி வாய்ந்தவர்' என்று சொல்ல நினைத்தேன். ஆயினும், மக்களிடையே பிளவை ஏற்படுத்தி, இரத்தம் சிந்தச் செய்து விடும் ஒரு வார்த்தையை நான் கூறி விடுவேனா; நான் கூறிய வார்த்தைக்கு நான் நினைக்காத கருத்து கற்பிக்கப்பட்டு விடுமோ என்றெல்லாம் அஞ்சினேன். மேலும், சொர்க்கத்தில் (பொறுமையாளர்களுக்காக) அல்லாஹ் தயாரித்து வைத்துள்ளவற்றை எண்ணிப் பார்த்தேன் (அதனால் அவர்களுக்கு பதில் கூறவில்லை)'' என்று கூறினார்கள்.

அப்போது நான், '(நல்ல வேளை நீங்கள் கோப உணர்ச்சிக்கு ஆளாகாமல்) பாதுகாக்கப்பட்டீர்கள்'' என்று கூறினேன்.

4109. சுலைமான் இப்னு ஸுரத்(ரலி) அறிவித்தார்

அகழ்ப் போர் (முடிந்து குறைஷிகள் தோல்வியுற்றுத் திரும்பிச் சென்ற) தினத்தன்று நபி(ஸல்) அவர்கள், '(இனி போர்தொடுப்பதானால்), நாமே அவர்களின் மீது போர் தொடுக்க வேண்டும்; அவர்கள் நம் மீது (இனி) போர்தொடுக்க (சக்தி பெற) மாட்டார்கள்'' என்று கூறினார்கள்.

4110. சுலைமான் இப்னு ஸுரத்(ரலி) அறிவித்தார்

(அகழ்ப்போரில் தோல்வியுற்று எதிர்) அணியினர் நபி(ஸல்) அவர்களிடமிருந்து திரும்பியபோது 'இப்போது (போரிடுவதானால்) நாம் தாம் அவர்களுடன் போர் புரியவேண்டும்; (இனி) அவர்கள் நம்முடன் போர் புரியமுடியாது; நாம் தாம் அவர்களை நோக்கிச் செல்லவேண்டும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதை கேட்டேன். 183

4111 அலீ(ரலி) அறிவித்தார்

அகழ்ப் போரின்போது நபி(ஸல்) அவர்கள், 'எதிரிகளுடைய வீடுகளையும், புதைகுழிகளையும் அல்லாஹ் நெருப்பினால் நிரப்புவானாக! ஏனெனில், அவர்கள் சூரியன் மறையும் வரை நடுத் தொழுகை(யான அஸர் தொழுகை)யிலிருந்து நம்முடைய கவனத்தைத் திருப்பிவிட்டார்கள்'' என்று கூறினார்கள். 184

4112. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்

அகழ்ப்போரின்போது உமர்(ரலி) குறைஷிக்குல இறைமறுப்பாளர்களை ஏசிக் கொண்டே வந்து, 'இறைத்தூதர் அவர்களே! சூரியன் மறையத் தொடங்கும் வரை நான் அஸர் தொழ இயலவில்லை'' என்றார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! நானும் இதுவரை அஸர் தொழவில்லை'' என்று கூறினார்கள். பின்னர் 'புத்ஹான்' என்னும் பள்ளத்தாக்கிற்கு நபி(ஸல்) அவர்களுடன் நாங்கள் சென்றோம். அங்கே தொழுகைக்காக நபி(ஸல்) அவர்கள் உளூச் செய்தார்கள். நாங்களும் தொழுகைக்காக உளூச் செய்தோம். சூரியன் மறைந்த பிறகு அஸரையும் அதன் பின்னர் மஃக்ரிபையும் (எங்களுடன்) நபியவர்கள் தொழுதார்கள். 185

4113. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அவர்கள் அறிவித்தார்

''அகழ்ப்போரின்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'எதிரிகளின் செய்தியை (வேவு பார்த்துக்) கொண்டு வருபவர் யார்?' என்று கேட்டார்கள். ஸுபைர் இப்னு அவ்வாம்(ரலி), 'நான்'' என்று (முன்வந்து) கூறினார்கள். மீண்டும்; எதிரிகளின் செய்தியை அறிந்து எம்மிடம் கொண்டு வருபவர் யார்?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அப்போதும் ஸுபைர்(ரலி), 'நான்'' என்று கூறினார்கள். பிறகு, 'எதிரிகளின் செய்தியை எம்மிடம் கொண்டு வருபவர் யார்?' என்று (மீண்டும்) நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அப்போதும் ஸுபைர்(ரலி), 'நான்'' என்று கூறினார்கள். பிறகு நபி(ஸல்) அவர்கள், 'ஒவ்வோர் இறைத்தூதருக்கும் (பிரத்தியேகமான) உதவியாளர் உண்டு; என்னுடைய (பிரத்தியேக) உதவியாளர் ஸுபைராவார்'' என்று கூறினார்கள். 186

4114. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (அகழ்ப்போரில் எதிரிகள் தோல்வியுற்றுத் திரும்பியது தொடர்பாகக் குறிப்பிடும் போது) 'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை. அவன் தனித்தவன். தன் படையினரை அவனே கண்ணியப்படுத்தினான். தன் அடிமை(யாகிய என)க்கு அவனே உதவி புரிந்தான். (மக்கா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து திரண்டு வந்த எதிர்) அணியினரை அவனே தனியாக வென்றான். எனவே, அவனுக்குப் பின்னால் வேறு எதுவும் (நிலைக்கப் போவது) இல்லை'' என்று கூறினார்கள்.

4115. அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா(ரலி) அறிவித்தார்

(அகழ்ப்போரின்போது ஒன்று திரண்டு தாக்க வந்த எதிர்) அணியினருக்குக் கெதிராக இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பிரார்த்தனை புரிந்தார்கள். அப்போது, 'இறைவா! திருக்குர்ஆனை அருள்பவனே! விரைவாகக் கணக்கு வாங்குபவனே! (சத்திய மார்க்கத்தை வேரறுக்க ஒன்று திரண்டு படையெடுத்து வந்துள்ள இந்த) அணியினரைத் தோற்கடிப்பாயாக! இறைவா! இவர்களைத் தோல்வியுறச் செய்து நடுக்கத்திற்குள்ளாக்குவாயாக!'' என்று பிரார்த்தித்தார்கள். 187

4116. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் புனிதப் போரிலிருந்து, அல்லது ஹஜ்ஜிலிருந்து, அல்லது உம்ராவிலிருந்து திரும்பும்போது முதலில் மூன்று முறை, 'அல்லாஹு அக்பர்' (அல்லாஹ் மிகவும் பெரியவன்) என்று கூறிவிட்டுப் பிறகு பின்வருமாறு கூறுவார்கள்: வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணையானவர் எவருமில்லை. அவனுக்கே ஆட்சியதிகாரம் உரியது. அவனுக்கே புகழனைத்தும் உரியது. அவன் எல்லாவற்றின் மீதும் பேராற்றல் உடையோன். நாங்கள் பாவங்களிலிருந்து மீண்டு, பாவமன்னிப்புக் கோரியவர்களாகவும், வணக்கம் புரிந்தவர்களாகவும் திரும்புகிறோம். அல்லாஹ் தன் வாக்குறுதியை மெய்யாக்கிவிட்டான். தன் அடியாருக்கு உதவினான். தன்னந்தனியாக (எதிர்) அணியினரைத் தோற்கடித்துவிட்டான்.'' 188

பகுதி 31

நபி(ஸல்) அவர்கள் அகழ் யுத்த(க்கள)த்திலிருந்து (தம் வீடு) திரும்பியதும், அங்கிருந்து பனூ குறைழா குலத்தாரை நோக்கிப் புறப்பட்டுச் சென்று, அவர்களை முற்றுகையிட்டதும். 189

4117. ஆயிஷா(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள், அகழ்ப்போரிலிருந்து திரும்பி வந்து ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டுக் குளித்தார்கள். (அப்போது வானவர்) ஜிப்ரீல்(அலை) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'நீங்கள் ஆயுதங்களைக் கீழே வைத்து விட்டீர்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! (வானவர்களாகிய) நாங்கள் அதைக் கீழே வைக்கவில்லை. எனவே, அவர்களை நோக்கிப் புறப்படுங்கள்'' என்று கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'எங்கே (போவது)?' என்று கேட்டார்கள். அதற்கு ஜிப்ரீல்(அலை) அவர்கள், 'இதோ, இங்கே!'' என்று 'பனூ குறைழா' (என்னும் யூதக்) குலத்தினரை (அவர்கள் வசிக்குமிடம்) நோக்கி சைகை காட்டினார்கள். எனவே, நபி(ஸல்) அவர்களும் அவர்களை நோக்கிப் புறப்பட்டார்கள். 190

4118. அனஸ்(ரலி) அறிவித்தார்

(கஸ்ரஜ் குலத்தைச் சேர்ந்த) பனூ ஃகன்கி கிளையாரின் குறுகலான வீதியில் நபி(ஸல்) அவர்கள் 'பனூ குறைழா' குலத்தாரை நோக்கிச் சென்றபோது (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் தங்களின் படை பரிவாரங்களுடன் கம்பீரமாக பவனிவந்தததால் கிளம்பிய புழுதியை (இப்போது கூட) நான் பார்ப்பதைப் போன்றுள்ளது. 191

4119. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்

அகழ்ப் போர் (முடிந்து வந்த) தினம், நபி(ஸல்) அவர்கள், 'பனூ குறைழா குலத்தினர் வசிக்குமிடத்தை நீங்கள் அடையும் வரை (உங்களில்) எவரும் அஸ்ருத் தொழுகையைத் தொழவேண்டாம்'' என்று கூறினார்கள். 192 வழியிலேயே அஸ்ரு(த் தொழுகை) நேரத்தை அவர்கள் அடைந்தனர். அப்போது சிலர், 'பனூ குறைழாக் குலத்தினரை அடையும் வரை நாம் அஸ்ருத் தொழ வேண்டாம்'' என்று கூறினர். வேறு சிலர், '(தொழுகை நேரம் தவறிப் போனாலும் தொழவேண்டாம் என்ற) அந்த அர்த்தத்தில் நபி(ஸல்) அவர்கள் கூறவில்லை; ('வேகமாக அங்கு போய்ச் சேருங்கள்' என்ற கருத்தில் தான் இந்த வார்த்தையைக் கூறினார்கள்) எனவே, நாம் தொழுவோம்'' என்று கூறினர். நபி(ஸல்) அவர்களிடம் இரண்டு சாரார் குறித்தும் தெரிவிக்கப்பட்டபோது அவர்களில் எவரையும் அவர்கள் குறை கூறவில்லை. 193

4120. அனஸ்(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் 'பனூ குறைழா' மற்றும் 'பனூ நளீர்' குலத்தாரை வெற்றி கொள்ளும் வரை, நபி(ஸல்) அவர்களுக்கு, (அன்சாரிகள்) சிலர் பேரீச்ச மரங்களை(ப் பயன்படுத்திக் கொள்ளும்படி அன்பளிப்பாக)க் கொடுத்திருந்தனர். (பனூ குறைழா, பனூ நளீர் குலத்தினரை நபி -ஸல் அவர்கள் வெற்றி கொண்ட பின்னர் அன்சாரிகளிடமே அந்த மரங்களைத் திருப்பிக் கொடுத்துவிட்டார்கள். 194 அந்தச் சமயத்தில் என் குடும்பத்தார் என்னை நபி(ஸல்) அவர்கள் அந்த மரங்களை (பராமரிக்கும் பொறுப்பை தம் வளர்ப்புத்தாய்) உம்மு அய்மன்(ரலி) அவர்களிடம் கொடுத்திருந்தார்கள். (நான் அந்த மரங்களை நபி(ஸல்) அவர்களிடம் திரும்பத் தரும்படி கேட்டுக் கொண்டிருந்தபோது அங்கு) உம்மு அய்மன்(ரலி) வந்தார்கள். என்னுடைய கழுத்தின் மீது துணியைப் போட்டு, 'முடியாது! எவனைத் தவிர வேறு இறைவன் இல்லையோ அவன் மீது சத்தியமாக! நபி(ஸல்) அவர்கள் உங்களுக்கு (அவற்றைத்) தரமாட்டார்கள். (ஏனெனில்,) அவற்றை அவர்கள் எனக்கு (உரிமையாக்கித்) தந்துவிட்டார்கள்'' என்றோ... அல்லது இது போன்று வேறொரு வார்த்தையையோ கூறினார்கள்... நபி(ஸல்)அவர்கள் (உம்மு அய்மன் அவர்களைப் பார்த்து அவற்றைக் கொடுத்து விடுங்கள். அதற்குப் பகரமாக) உங்களுக்கு இந்த அளவு தருகிறேன்'' என்று கூறினார்கள். (அப்போது) உம்மு அய்மன்(ரலி) (என்னைப் பார்த்து), 'அல்லாஹ்வின் மீதாணையாக! அந்த அளவு நபி(ஸல்) அவர்கள் எனக்குத் தரும் வரை (அவற்றை உங்களிடம் திருப்பித் தர) முடியாது'' என்று கூறினார்கள்.

(அறிவிப்பாளர்களில் ஒருவரான சுலைமான் இப்னு தர்கான் - ரஹ் - அவர்கள் கூறுகிறார்கள்:)

அனஸ்(ரலி) 'அது போன்று பத்து மடங்கு (தருவதாக' இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் எனவோ) அல்லது அது போன்ற வேறொரு வார்த்தையைக் கூறினார்கள் எனவோ எண்ணுகிறேன்.

4121. அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்

ஸஅத் இப்னு முஆத்(ரலி) அவர்களின் தீர்ப்பை ஏற்பதாக ஒப்புக் கொண்டு (யூதர்களான) 'பனூ குறைழா' குலத்தார் (கைபரிலிருந்த தங்கள் கோட்டையிலிருந்து) இறங்கி வந்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் ஸஅத் இப்னு முஆத் அவர்களுக்கு ஆளனுப்பிட, அன்னார் கழுதையின் மீது (சவாரி செய்தபடி) வந்தார்கள். (நபிகளார் தாற்காலிமாக அமைத்திருந்த) தொழுமிடத்திற்கு அருகே அன்னார் வந்து சேர்ந்ததும், நபி(ஸல்) அவர்கள், 'உங்கள் தலைவரை... அல்லது உங்களில் சிறந்த வரை... நோக்கி எழுந்திரு(த்துச் சென்று அவரை வாகனத்திலிருந்து இறக்கி விடுங்கள்'' என்று அன்சாரிகளிடம் கூறினார்கள். பிறகு, '(சஅதே!) இவர்கள் உங்கள் தீர்ப்பின் மீது (இசைவு தெரிவித்து) இறங்கி வந்திருக்கிறார்கள். (நீங்கள் என்ன தீர்ப்பு அளிக்கப் போகிறீர்கள்?') என்று கேட்டார்கள். ஸஅத்(ரலி), 'இவர்களில் போரிடும் வலிமை கொண்டவர்களை நீங்கள் கொன்று விட வேண்டும்; இவர்களுடைய பெண்களையும் குழந்தைகளையும் நீங்கள் கைது செய்திட வேண்டும் என்று நான் தீர்ப்பளிக்கிறேன்'' என்றார்கள். நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வின் தீர்ப்புப்படியே நீங்கள் தீர்ப்பளித்தீர்கள்.''... அல்லது 'அரசனின் (அல்லாஹ்வின்) தீர்ப்புப்படியே நீங்கள் தீர்ப்பளித்தீர்கள்'' என்று கூறினார்கள். 195

4122. ஆயிஷா(ரலி) அறிவித்தார்

அகழ்ப்போரின்போது ஸஅத் இப்னு முஆத்(ரலி) தாக்கப்பட்டார்கள். அன்னாரின் கை நரம்பில் குறைஷிகளில் ஒருவனான ஹிப்பான் இப்னு அரிஃகா என்றழைக்கப்பட்டவன் அம்பெய்து (அவர்களைக் காயப்படுத்தி)விட்டான். அப்போது நபி(ஸல்) அவர்கள் அவரை அருகிலிருந்து நலம் விசாரிப்பதற்கு வசதியாக (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலிலேயே (அவருக்குக்) கூடாரமொன்றை அமைத்தார்கள். அகழ்ப் போரை முடித்துக் கொண்டு வந்த இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டுக் குளித்தார்கள். அப்போது ஜிப்ரீல்(அலை) அவர்கள் தங்களின் தலையிலிருந்து புழுதியைத் தட்டிய வண்ணம் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து, 'நீங்கள் ஆயுதங்களைக் கீழே வைக்கவில்லை. அவர்களை நோக்கி (படை நடத்தி)ச் செல்லுங்கள்'' என்று கூறினார்கள். அதற்கு 'எங்கே? என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அப்போது 'பனூ குறைழா' குலத்தினர் (வசிப்பிடம்) நோக்கி ஜிப்ரீல் (அலை) அவர்கள் சைகை செய்தார்கள். உடனே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், பனூ குறைழா நோக்கிச் சென்றார்கள். (பலநாள் முற்றுகைக்குப் பின்னர்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தீர்ப்புக்கு இறங்கி வந்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், தீர்ப்பை ஸஅத் பின் முஆத் (ரலி) அவர்களிடம் ஒப்படைத்தார்கள்.  ஸஅத் (ரலி) அவர்கள், “பனூ குறைழாக்களில் போர் புரியும் வலிமை கொண்டவர்கள் கொல்லப்பட வேண்டும்; குழந்தைகளும் பெண்களும் கைது செய்யப்பட வேண்டும்; அவர்களின் சொத்துகள் பங்கிடப்பட வேண்டும் என்று தீர்ப்பளிக்கிறேன்” என்று கூறினார்கள்.  (காயப்படுத்தப்பட்டு இரத்தம் வழிந் தோடிக்கொண்டிருந்த சமயம்) ஸஅத் (ரலி) அவர்கள், “இறைவா! உன்னுடைய தூதரை நம்பிக்கை கொள்ளாமல் அவர்களை (ஊரைவிட்டு) வெளியேற்றிய சமுதாயத்தாரை எதிர்த்து உன் பாதையில் போர் புரிவதே மற்ற எதையும்விட எனக்கு மிகவும் விருப்பமானது என்பதை நீ அறிவாய். இறைவா! எங்களுக்கும் (குறைஷியரான) அவர்களுக்கும் இடையிலான போரை நீ (இத்துடன்) முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டாய் என்று நான் எண்ணுகிறேன். குறைஷியருடனான போர் ஏதேனும் மீதியிருந்தால் அதற்காக என்னை உயிருடன் இருக்கச்செய். நான் உன் வழியில் போர் புரிவேன். போரை (இத்துடன்) நீ முடிவுக்குக் கொண்டு வந்திருந்தால் (காயும் நிலையில் இருக்கும் எனது காயத்தை) மீண்டும் (இரத்தம்) கொப்பளிக்கச் செய்து அதிலேயே எனக்கு மரணத்தை அளித்துவிடு” என்று பிரார்த்தித்தார்கள்.  அன்னாரது நெஞ்சுப் பகுதியிலிருந்து (இரத்தம்) பீறிட்டது. (அவர்களது கூடாரத்திற்கு அருகில்) கூடாரம் அமைத்திருந்த “பனூ ஃகிபார்' குலத்தாருக்கு சஅத் அவர்களின் கூடாரத்திலிருந்து தம்மை நோக்கி வழிந்தோடி வரும் இரத்தம்தான் அச்சத்தை ஏற்படுத்தியது. அப்போது மக்கள், “கூடாரவாசிகளே! உங்கள் தரப்பிலிருந்து எங்களை நோக்கி(ப் பாய்ந்து) வருகிறதே, இது என்ன? என்று கேட்டுக்கொண்டு, அங்கே பார்த்தபோது காயத்திலிருந்து இரத்தம் வழிய சஅத் (ரலி) அவர்கள் இருந்தார்கள். அந்தக் காயத்தாலேயே சஅத் (ரலி) அவர்கள் இறந்தார்கள். அல்லாஹ் அன்னார்மீது அன்பு கொள்வானாக! 196

4123. பராஉ(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள், ('பனூ குறைழா' நாளில் கவிஞர்) ஹஸ்ஸான் இப்னு ஸாபித்(ரலி) அவர்களிடம், 'இணைவைப்பவர்களைத் தாக்கி வசைக்கவி பாடுங்கள். ஜிப்ரீல் உங்களுடன் (உறுதுணையாக) இருப்பார்'' என்று கூறினார்கள். 197

4124. பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'பனூ குறைழா' போரின்போது ஹஸ்ஸான் இப்னு ஸாபித்(ரலி) அவர்களை நோக்கி, இணை வைப்பவர்களைத் தாக்கி வசைக் கவி பாடுங்கள். ஜிப்ரீல் உங்களுடன் (உறுதுணையாக) இருப்பார்'' என்று கூறினார்கள்.

பகுதி 32

'தாத்துர் ரிக்காஉ' போர். 198

இதுதான் 'முஹாரிபு கஸ்ஃபா' போராகும். இவர்கள் 'ஃகத்ஃபான்' குலத்தின் ஒரு பிரிவினரான 'பனூ ஸஅலபா' கூட்டத்தார் ஆவர். 199

இப்போரில் நபி(ஸல்) அவர்கள் 'நக்ல்' என்ற இடத்தில் (முகாமிட்டுத்) தங்கினார்கள். 200 இந்தப் போர் கைபருக்குப் பின்னால் நடந்தது. ஏனெனில், ('தாத்துர் ரிகாஉ' போரில் பங்கெடுத்தவர்களில் ஒருவரான) அபூ மூஸா(ரலி) கைபர் போருக்குப் பின்னால் தான் (அபிசீனியாவிலிருந்து மதீனாவிற்கு) வந்தார்கள்.

4125. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்

(நபி-ஸல் அவர்கள் செய்த) ஏழாவது போரான 'தாத்துர் ரிகாஉ' போரின்போது தம் தோழர்களுடன் நபி(ஸல்) அவர்கள் அச்ச நேரத்தொழுகையை தொழுதார்கள். 201

இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்:

நபி(ஸல்) அவர்கள் அச்ச நேரத் தொழுகையை 'தூ கரத்' என்னும் இடத்தில் தொழுதார்கள். 202

4126. ஜாபிர்(ரலி) அறிவித்தார்

முஹாரிப் மற்றும் ஸஅலபாப் போரின்போது 203 நபி(ஸல்) அவர்கள் தம் தோழர்களுடன் (அச்ச நேரத் தொழுகையைத்) தொழுதார்கள்.

4127. ஜாபிர்(ரலி) கூறினார்

(நஜ்த் பகுதி 'ஃகத்ஃபான்' குலத்தார் வசித்து வந்த) 'நக்ல்' என்னுமிடத்திற்கு 'தாத்துர் ரிகாஉ' போருக்காக நபி(ஸல்) அவர்கள் புறப்பட்டுச் சென்றார்கள். அப்போது 'ஃகத்ஃபான்' குலத்தாரின் ஒரு கூட்டத்தைச் சந்தித்தார்கள். மக்களில் சிலர் சிலரைக் கண்டு அஞ்சினர். அப்போது நபி(ஸல்) அவர்கள் (தம் தோழர்களுடன்) அச்ச நேரத் தொழுகை இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள்.

ஸலமா(ரலி) கூறினார்:

நபி(ஸல்) அவர்களுடன் நான் 'அல்காத்' போரில் கலந்து கொண்டேன்.

4128. அபூ மூஸா(ரலி) அறிவித்தார்

நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு போருக்காகச் சென்றோம். எங்களில் ஆறு பேருக்கு ஓர் ஒட்டகம் தான் இருந்தது. அதில் நாங்கள் முறைவைத்து சவாரி செய்தோம். (வாகனம் கிடைக்காமல் சவாரி செய்தோம். (வாகனம் கிடைக்காமல் நடந்தே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதால்) எங்களுடைய பாதங்கள் தேய்ந்துவிட்டன. என்னுடைய இரண்டு பாதங்களும் தேய்ந்து என் கால் நகங்கள் விழுந்துவிட்டன. அப்போது நாங்கள் எங்களுடைய கால்களில் கிழிந்த துணிகளைச் சுற்றிக் கொள்பவர்களாக இருந்தோம். இவ்வாறு கிழிந்த துணிகளை நாங்கள் கால்களில் கட்டியிருந்ததனால் தான் அந்தப் போருக்கு 'தாத்துர் ரிகாஉ - ஒட்டுத் துணிப்போர்' என்று பெயர் சூட்டப்பட்டது.

அறிவிப்பாளர் அபூ புர்தா இப்னு அபீ மூஸா(ரஹ்) கூறினார்:

இந்த ஹதீஸை அறிவித்த பின் அபூ மூஸா(ரலி), தாம் இதை அறிவித்ததைக் தாமே விரும்பாமல், 'நான் இதை (வெளியே) சொல்ல விரும்பாமல் தான் இருந்தேன்'' என்றார்கள். தம் நற்செயல் ஒன்றைத் தாமே வெளியே சொல்லிவிட்டதை அன்னார் விரும்பவில்லை போலும்.

4129. இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் 'தாத்துர் ரிகாஉ' போரில் பங்கெடுத்த (நபித்தோழர்களில்) ஒருவர் கூறினார்

நபி(ஸல்) அவர்கள் (அப்போரின் போது) அச்ச நேரத் தொழுகையைத் தொழுதார்கள். (எங்களில்) ஓர் அணியினர் நபி(ஸல்) அவர்களுடன் (தொழுகையில்) அணிவகுத்தனர். இன்னோர் அணியினர் எதிரிகளுக்கு எதிரே அணிவகுத்தனர். அப்போது நபி(ஸல்) அவர்கள், தம்முடன் இருப்பவர்களுக்கு ஒரு ரக்அத் தொழுகை நடத்திவிட்டு அப்படியே நின்றார்கள். (நபி - ஸல் - அவர்களுடன் தொழுகையை நிறைவேற்றிய) அந்த அணியினர் தங்களுக்கு (மீதியிருந்த இன்னொரு ரக்அத்தைத் தனியாகப்) பூர்த்தி செய்து திரும்பிச் சென்று எதிரிகளுக்கு எதிரே அணிவகுத்து நின்றார்கள். பிறகு, (அதுவரை எதிரிகளுக்கு எதிரே நின்றிருந்த) இன்னோர் அணியினர் வந்தனர். நபி(ஸல்) அவர்கள் தங்களின் தொழுகையில் மீதியிருந்த ஒரு ரக்அத்தை இவர்களுக்குத் தொழுகை நடத்திவிட்டு (அப்படியே) அமர்ந்து கொண்டிருந்தார்கள். (இரண்டாவது அணியினர்) தங்களுக்கு (மீதியிருந்த ஒரு ரக்அத்தைப்) பூர்த்தி செய்தார்கள். பிறகு அவர்களுடன் நபி(ஸல்) அவர்கள் சலாம் கொடுத்தார்கள்.

இதை ஸாலிஹ் இப்னு கவ்வாத்(ரஹ்) அறிவித்தார்.

4130. ஜாபிர்(ரலி) அறிவித்தார்

(நஜ்த் பகுதியின்) 'நக்ல்' என்னுமிடத்தில் நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் இருந்தோம். பிறகு - ஜாபிர்(ரலி) அச்ச நேரத்தொழுகையைப் பற்றி (முழுமையாக) அறிவித்தார்கள்.

இமாம் மாலிக்(ரஹ்) கூறினார்:

அது (ஸாலிஹ் இப்னு கவ்வாத்(ரஹ்) அவர்களின் அறிவிப்பில் வந்துள்ள அச்சநேரத் தொழுகை முறை) தான் அச்ச நேரத்தொழுகை பற்றி நான் கேள்விப்பட்டதிலேயே மிகச் சிறந்ததாகும். 204

காஸிம் இப்னு முஹம்மத்(ரஹ்) கூறினார்:

நபி(ஸல்) அவர்கள் அச்ச நேரத் தொழுகையை 'பனூ அன்மார்' போரின்போது தொழுதார்கள். 205

4131. ஸஹ்ல் இப்னு அபீ ஹஸ்மா(ரலி) கூறினார்

(அச்ச நேரத் தொழுகையில்) கிப்லாவை முன்னோக்கி இமாமும் அவருடன் அவர்களில் ஓர் அணியினரும் நிற்பர். இன்னோர் அணியினர் எதிரிகளை நோக்கித் தங்கள் முகங்கள் இருக்கும் வண்ணம் (தொழாமல்) நிற்பர். அப்போது இமாம் தம்முடன் இருப்பவர்களுக்கு ஒரு ரக்அத் தொழுகை நடத்துவார். பிறகு, அவர்கள் எழுந்து தங்களுக்கு (மீதிமிருக்கும்) ஒரு ரக்அத்தை அந்த இடத்திலேயே இரண்டு சஜ்தாக்கள் செய்து பூர்த்தி செய்து கொள்வர். பிறகு, இவர்கள் மற்றோர் அணியினரின் இடத்திற்குச் சென்றுவிடுவர். அந்த (இரண்டாவது) அணியினர் (இமாமிடம்) வருவார்கள். அவர்களுடன் சேர்ந்து இன்னொரு ரக்அத்தை இமாம் தொழுவார். இப்போது இமாமுக்கு இரண்டு ரக்அத்துக்களாகி விட்டது. பிறகு இவர்கள் (மீதமிருக்கும் ஒரு ரக்அத்தைத் தனியாக எழுந்து) ருகூஉ செய்து இரண்டு சஜ்தாக்கள் செய்து தொழுவார்கள்.

இதை ஸாலிஹ் இப்னு கவ்வாத்(ரஹ்) அறிவித்தார்.

... இன்னோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் ஸாலிஹ் இப்னு கவ்வாத்(ரஹ்) அவர்களின் (அச்ச நேரத் தொழுகை பற்றிய நபிமொழி) அறிவிப்பு வந்துள்ளது.

... ஸஹ்ல் இப்னு அபீ ஹஸ்மா(ரலி) அவர்களிடமிருந்து ஸாலிஹ் இப்னு கவ்வாத்(ரஹ்) அறிவிக்கும் (அச்ச நேரத் தொழுகை பற்றிய) அறிவிப்பு இன்னோர் அறிவிப்பாளர் தொடரிலும் வருகிறது.

4132. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்

('தாத்துர் ரிகாஉ') போருக்காக இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் நஜ்தை நோக்கி நாங்கள் புறப்பட்டுச் சென்றோம். அப்போது நாங்கள் எதிரிகளை எதிர்கொண்டு அவர்களுக்காக அணி வகுத்தோம். 206

4133. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இரண்டு அணிகளில் ஓரணியினருக்கு (அச்ச நேரத் தொழுகையைத்) தொழுகை நடத்தினார்கள். (அப்போது) மற்றோர் அணியினர் எதிரிகளுக்கு முன்னால் (நின்று கொண்டு) இருந்தனர். பிறகு முதல் அணியினர் திரும்பிச் சென்று தம் தோழர்கள் (இரண்டாம் அணியினர்) நின்றிருந்த இடத்தில் (எதிரிகளுக்கு முன்னால்) நின்று கொண்டனர். பிறகு இரண்டாம் அணியினர் (தொழுகைக்கு) வந்தனர். அவர்களுடன் நபி(ஸல்) அவர்கள் சேர்ந்து ஒரு ரக்அத் தொழுதுவிட்டு, அவர்கள் (தொழுகையில்) இருக்க நபியவர்கள் ஸலாம் கொடுத்தார்கள். பிறகு இந்த அணியினர் எழுந்து (மீதமிருந்த) தங்களின் ஒரு ரக்அத்தை நிறைவேற்றினர். முதல் அணியினரும் எழுந்து (மீதிமிருந்த) தங்களின் ஒரு ரக்அத்தை நிறைவேற்றினர்.

4134. ஜாபிர்(ரலி) அறிவித்தார்

நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் நஜ்தை நோக்கி ஒரு போருக்குச் சென்றேன்.

4135. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்

நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் நஜ்தை நோக்கி (தாதுர் ரிகாஉ) போருக்காக சென்றேன். (போரை முடித்துக் கொண்டு) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் திரும்பியபோது நானும் அவர்களுடன் திரும்பிக் கொண்டிருந்தேன். கருவேல முள் மரங்கள் நிறைந்த ஒரு பள்ளத்தாக்கை அடைந்தபோது மதிய (ஓய்வு கொள்ளும் நண்பகல்) நேரம் வந்தது. எனவே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (அங்கு) தங்கினார்கள். மக்கள் (ஓய்வெடுப்பதற்காக) மர நிழல் தேடி (பல திசைகளிலும்) பிரிந்து போய்விட்டனர். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஒரு முள் மரத்திற்குக் கீழே தங்கி ஓய்வெடுத்தார்கள்; அப்போது தம் வாளை அந்த மரத்தில் தொங்கவிட்டார்கள். நாங்கள் ஒரு தூக்கம் தூங்கியிருப்போம். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எங்களை அழைத்தார்கள். உடனே நாங்கள் அவர்களிடம் சென்றோம். அங்கே நபி(ஸல்) அவர்களுக்கு அருகில் ஒரு கிராமவாசி அமர்ந்து கொண்டிருந்தார். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'நான் தூங்கிக் கொண்டிருந்தபோது இவர் என்னுடைய வாளை (எனக்கெதிராக) உருவிக் கொண்டார். அந்த வாள் உருவப்பட்டு இவரின் கையிலிருந்த நிலையில் நான் கண்விழித்தேன். அப்போது இவர் என்னிடம், 'என்னிடமிருந்து உன்னைக் காப்பவர் யார்?' என்று கேட்டார். நான், 'அல்லாஹ்' என்று பதிலளித்தேன். இதோ அவர் இங்கே அமர்ந்திருக்கிறார்' என்று கூறினார்கள்.

பிறகு அவரை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தண்டிக்கவில்லை (மன்னித்துவிட்டுவிட்டார்கள்.) 207

4136. ஜாபிர்(ரலி) அறிவித்தார்

'தாத்துர் ரிகாஉ' போரில் நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் இருந்தோம். பிறகு (போரை முடித்துக் கொண்டு) நாங்கள் நிழல் நிறைந்த ஒரு மரத்தினருகே வந்தோம். அந்த மரத்தை நபி(ஸல்) அவர்களு(டைய மதிய ஓய்வு)க்காக விட்டுவிட்டோம். அப்போது இணைவைப்பவர்களில் ஒருவர் வந்தார். நபி(ஸல்) அவர்களின் வாள் அந்த மரத்தில் தொங்கவிடப்பட்டிருந்தது. உடனே அதை அவர் உருவிக் கொண்டு நபி(ஸல்) அவர்களை நோக்கி, 'எனக்கு நீர் அஞ்சுகிறீரா?' என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள் (கொஞ்சமும் அஞ்சாமல்) 'இல்லை'' என்று பதிலளித்தார்கள். அவர், 'இப்போது என்னிடமிருந்து உன்னைக் காப்பாற்றுவது யார்?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்'' என்று பதிலளித்தார்கள். அப்போது நபித்தோழர்கள் அவரைக் கண்டித்தார்கள்.

பிறகு தொழுகைக்காக 'இகாமத்' சொல்லப்பட்டது. அப்போது (தம் தோழர்களில்) ஓர் அணியினருக்கு நபி(ஸல்) அவர்கள் இரண்டு ரக்அத்துகள் (அச்ச நேரத் தொழுகை) தொழுகை நடத்தினார்கள். பிறகு இந்த அணியினர் பின்னால் விலகி கொள்ளவே (எதிரிகளைக் கண்காணித்துக் கொண்டிருந்த அணியினர் வந்தனர்.) அந்த அணியினருக்கு நபி(ஸல்) அவர்கள் இரண்டு ரக்அத்துகள் தொழுகை நடத்தினார்கள். நபி(ஸல்) அவர்களுக்கு நான்கு ரக்அத்துகளும், மக்களுக்கு இரண்டு ரக்அத்துகளும் ஆயின.

அந்த மனிதரின் பெயர் 'கவ்ரஸ் இப்னு ஹாரிஸ்' என்றும், இப்போரில் 'முஹாரிப் கஸஃபா' கூட்டத்தாரை நபி(ஸல்) அவர்கள் எதிர்கொண்டார்கள் என்றும் அபூ அவானா(ரஹ்) அவர்களிடமிருந்து முஸத்தத்(ரஹ்) அறிவித்தார்.

4137. ஜாபிர்(ரலி) அறிவித்தார்

(நஜ்த் பகுதியிலுள்ள) 'நக்ல்' என்னுமிடத்தில் நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது அவர்கள் அச்ச நேரத் தொழுகையைத் தொழுகை நடத்தினார்கள்.

அபூ ஹுரைரா(ரலி), 'நான் நபி(ஸல்) அவர்களுடன் நஜ்துப் போரின்போது அச்சநேரத் தொழுகையைத் தொழுதேன்'' என்று கூறுகிறார்கள்.

அபூ ஹுரைரா(ரலி) 'கைபர்' போரின்போது தான் நபி(ஸல்) அவர்களிடம் வந்தார்கள். 208

பகுதி 33

குஸாஆ குலத்தில் ஒரு பிரிவினரான பனூ முஸ்தலிக் (குலத்தாருடன் நடந்த) போர். இதுதான் 'முரைசீஉ' போர். 209

'இந்தப் போர் (ஹிஜ்ரி) ஆறாம் ஆண்டு நடந்தது' என்று இப்னு இஸ்ஹாக்(ரஹ்) கூறினார்.

(ஹிஜ்ரி) நான்காம் ஆண்டு நடந்ததாக மூஸா இப்னு உக்பா(ரஹ்) கூறினார். (ஆயிஷா - ரலி - அவர்களின் மீது கூறப்பட்ட) அவதூறுச் சம்பவம் (இந்த ) முரைசீஉ போரின்போது தான் நடந்தது என்று ஸுஹ்ரீ(ரஹ்) கூறினார்கள்.

4138. இப்னு முஹைரீஸ்(ரஹ்) அறிவித்தார்

நான் பள்ளிவாசலுக்குள் நுழைந்தேன். (அங்கு) நான் அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அவர்களைப் பார்த்தேன். அவர்களிடம் (சென்று) அமர்ந்து கொண்டு 'அஸ்ல்' பற்றிக் கேட்டேன்.210 அபூ ஸயீத்(ரலி) கூறினார்.

நாங்கள் அல்லாஹ்வின் தூதருடன் பனூ முஸ்தலிக் (குலத்திற்கெதிரான) போருக்குச் சென்றோம். அப்போது, அரபுகளிலிருந்து போர்க் கைதிகள் சிலர் எங்களுக்குக் கிடைத்தனர். நாங்கள் (அந்தக் கைதிகளிடையேயிருந்த) பெண்களை (உடலுறவு கொள்ள) விரும்பினோம். ஏனெனில், (எங்கள் மனைவியரைப் பிரிந்து) தனிமையில் இருந்தது எங்களை வாட்டியது. மேலும் (அந்தப் பெண்களுடன் உடலுறவு கொள்ளும் போது) 'அஸ்ல்' செய்ய நினைத்தோம். (ஆனால்,) நம்மிடையே இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இருக்க, அவர்களிடம் கேட்பதற்கு முன் நாம் அஸ்ல் செய்வதா?' என்று (எங்களுக்குள்) பேசிக் கொண்டு அது தொடர்பாக அல்லாஹ்வின் தூதரிடம் கேட்டோம். அதற்கு, 'நீங்கள் அதைச் செய்யாமலிருந்தால் தவறேதுமில்லையே! மறுமை நாள் வரை (இறை விதிப்படி) உருவாக வேண்டிய எந்த உயிரும் கட்டாயம். உருவாகியே தீரும்'' என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். 211

4139. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்

('தாத்துர் ரிகாஉ' எனும்) நஜ்துப் போருக்கு இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் நாங்கள் சென்றோம். (போரை முடித்துக் கொண்டு திரும்பிய போது) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கருவேல முள் மரங்கள் நிறைந்த ஒரு பள்ளத்தாக்கினை அடைந்தபோது மதிய (ஓய்வு கொள்ளும் நண்பகல்) நேரம் வந்தது. அவர்கள் ஒரு மரத்திற்குக் கீழே நிழல் பெற்று ஓய்வெடுத்தார்கள். தம் வாளை அந்த மரத்தில் தொங்கவிட்டார்கள். (ஆங்காங்கே இருந்த) மரங்களின் கீழே மக்கள் பிரிந்து சென்று நிழல் பெற்று (ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர். நாங்கள் இவ்வாறு இருந்து கொண்டிருந்தபோது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எங்களை அழைத்தார்கள். உடனே நாங்கள் (அவர்களிடம்) வந்தோம். அப்போது ஒரு கிராமவாசி இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு முன்னால் அமர்ந்து கொண்டிருந்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'நான் தூங்கிக் கொண்டிருந்தபோது என்னிடம் இவர் வந்து என்னுடைய வாளை உருவி எடுத்தார். உடனே நான் விழித்துக் கொண்டேன். என்னுடைய வாளை உருவிய நிலையில் என்னுடைய தலைமாட்டில் இவர் நின்றிருந்தார். 'என்னிடமிருந்து உங்களைக் காப்பது யார்?' என்று கேட்டார். நான், 'அல்லாஹ்'' என்று பதிலளித்தேன். உடனே அவர் வாளை உறையிலிட்டார். பிறகு அவர் அமர்ந்தார். அது இவர்தான்'' என்று கூறினார்கள்.

பிறகு அவரை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தண்டிக்காமல் (மன்னித்து)விட்டார்கள். 212

பகுதி 34

'அன்மார்' போர் 213

4140. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் அல் அன்சாரி(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் 'அன்மார்' போரின்போது தம் வாகனத்தின் மீதமார்ந்தவாறு கிழக்குத் திசையை நோக்கி உபரித் தொழுகையைத் தொழுவதை பார்த்தேன். 214

பகுதி 35

அவதூறு சம்பவம்215

(அரபி மொழியில்) 'இஃப்க்' அல்லது 'அஃபக்' என்றால் அவதூறு என்று பொருள். இதற்கு '(திசை) திருப்புதல்' என்பது சொற் பொருளாகும். இதே பொருளில் குர்ஆன் 51:9-வது வசனத்தில் இச்சொல் ஆளப்பட்டுள்ளது.

4141. இப்னு ஷிஹாப் (அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் அறிவித்தார்

என்னிடம் உர்வா இப்னு ஸுபைர், ஸயீத் இப்னு முஸய்யப், அல்கமா இப்னு வக்காஸ், உபைதுல்லாஹ் இப்னு அப்தில்லாஹ் இப்னி உத்பா இப்னி மஸ்வூத்(ரஹ்.. அலைஹிம்) ஆகியோர் நபி(ஸல்) அவர்களின் துணைவியானரான ஆயிஷா(ரலி) குறித்து அவதூறு கூறியவர்கள் சொன்னதைப் பற்றி அறிவித்தனர். அவர்கள் (நால்வரில்) ஒவ்வொருவரும் இச்சம்பவம் பற்றி ஆளுக்கொரு பகுதியினை அறிவித்தனர். அவர்களில் சிலர், சிலரை விட இந்தச் சம்பவத்தை நன்கு நினைவில் நிறுத்தியவர்களாகவும், அதை எடுத்துரைப்பதில் சிறந்தவர்களாகவும் இருந்தனர். ஆயிஷா(ரலி) அவர்களின் (இச்சம்பவம்) தொடர்பாக ஒவ்வொருவரும் அறிவித்த செய்தியை நான் மனனமிட்டுக் கொண்டேன். இவர்களில் சிலர் சிலரை விட இந்தச் சம்பவத்தை நன்கு மனனமிட்டவர்களாக இருந்தாலும் ஒருவரின் அறிவிப்பு மற்றவரின் அறிவிப்பை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது. அவர்கள் கூறினார்

ஆயிஷா(ரலி) கூறினார்:

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஒரு பயணம் புறப்பட விரும்பினால் தம் மனைவிமார்களிடையே (எவரைப் பயணத்தில் தம்முடன் அழைத்துச் செல்வது எனத் தீர்மானித்திட) சீட்டுக் குலுக்கிப் போடுவார்கள். அவர்களில் எவருடைய (பெயருள்ள) சீட்டு வருகிறதோ அவரைத் தம்முடன் அழைத்துக் கொண்டு பயணம் புறப்படுவார்கள். இவ்வாறே, அவர்கள் மேற்கொண்ட ('பனூ முஸ்தலிக்' என்ற) ஒரு புனிதப் போரின்போது (பயணத்தில் உடன் அழைத்துச் செல்ல) எங்களிடையே சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள். அதில் என்னுடைய (பெயருள்ள) சீட்டு வந்தது. எனவே, நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் (பயணம்) புறப்பட்டுச் சென்றேன். இது (பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய பர்தா என்னும்) ஹிஜாபின் சட்டம் அருளப்பட்ட பிறகு நடந்ததாகும். நான் என்னுடைய ஒட்டகச் சிவிகையில் வைத்து சுமந்து செல்லப்பட்டும் அதில் இருக்கும் நிலையிலேயே கீழே இறக்கி வைக்கப்பட்டும் வந்தேன்.

நபி(ஸல்) அவர்கள் எங்களுடன் அந்தப் போர் முடிந்து திரும்பிக் கொண்டிருந்த நிலையில் நாங்கள் மதீனாவை நெருங்கியபோது, இரவு நேரத்தில் (ஓரிடத்தில்) தங்கும் படி அறிவித்தார்கள். அப்போது நான் (சிவிகையிலிருந்து) எழுந்து (இயற்கைக் கடனை நிறைவேற்றுவதற்காக மறைவிடம் தேடி) படையைக் கடந்து சென்றேன். என் (இயற்கைத்) தேவையை நான் முடித்துக் கொண்ட பின் முகாமை நோக்கிச் சென்றேன். அப்போது என் நெஞ்சைத் தொட்டுப் பார்த்தேன். (என் கழுத்திலிருந்த யமன் நாட்டு) 'ழஃபாரி' நகர முத்து மாலையொன்று அறுந்து (விழுந்து) விட்டிருந்தது. எனவே, நான் திரும்பிச் சென்று என்னுடைய மாலையைத் தேடலானேன்; அதைத் தேடிக் கொண்டிருந்தது (நான் சீக்கிரம் திரும்பிச் சென்று படையினருடன் சேர விடாமல்) என்னைத் தாமதப்படுத்திவிட்டது. என்னை எடுத்துச் சென்று ஒட்டகத்தில் வைக்கும் குழுவினர் என் சிவிகைக்குள் நான் இருப்பதாக எண்ணிக் கொண்டு, அதைச் சுமந்து சென்று, நான் சவாரி செய்து வந்த என் ஒட்டகத்தின் மீது வைத்துக் கட்டிவிட்டனர். அந்தக் கால கட்டத்தில் பெண்கள் பருமனாக இன்றி மெலிந்தவர்களாக இருந்தனர். அவர்களுக்கு சதை போட்டிருக்கவில்லை. சிறிதளவு உணவையே அவர்கள் உண்பார்கள். எனவே, சிவிகையைத் தூக்கிய போதும், அதைச் சுமந்த போதும் அது கனமில்லாமல் இருந்ததை மக்கள் வித்தியாசமாகக் கருதவில்லை மேலும், நான் வயது குறைந்த இளம் பெண்ணாக இருந்தேன். அவர்கள் ஒட்டகத்தை (முன்னே) அனுப்பிவிட்டு நடக்கலானார்கள். படையினர் சென்ற பிறகு (தொலைந்து போன) என்னுடைய மாலை கிடைத்துவிட்டது. நான் அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு வந்தேன். (அங்கிருந்த அனைவரும் சென்றுவிட்டிருந்தனர்.) அங்கு அவர்களில் அழைப்பவரோ பதில் கொடுப்பவரோ எவரும் இருக்கவில்லை. நான் ஏற்கனவே தங்கியிருந்த இடத்தைத் தேடிப் போ(ய் அங்கு அமரலா)னேன். நான் காணாமல் போயிருப்பதைக் கண்டு படையினர் என்னிடம் திரும்பி வருவார்கள் என்று நான் கருதினேன். நான் என்னுடைய இடத்தில் அமர்ந்திருக்க, என் கண்ணில் உறக்கம் மிகைத்து விட, நான் தூங்கி விட்டேன். படை சென்றதற்குப் பின்னால் (படையினர் தவறவிட்டுச் சென்ற பொருள்களை எடுத்துச் செல்வதற்காக) ஸஃப்வான் இப்னு முஅத்தல் அஸ்ஸுலமீ அத் தக்வானீ என்பவர் அங்கு இருந்தார். நான் தங்கியிருந்த இடத்திற்கு அருகில் அவர் காலையில் வந்தார். அவர் (அங்கே) தூங்கிக் கொண்டிருந்த ஓர் உருவத்தை (என்னை)ப் பார்த்தார். பர்தாவுடைய சட்டம் அருளப்படுவதற்கு முன்னர் அவர் என்னைப் பார்த்திருந்தார். எனவே, என்னைப் பார்த்ததும் அவர் அடையாளம் புரிந்து கொண்டார். அவர், என்னை அறிந்து கொண்டு, 'இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் - நாம் அல்லாஹ்விற்கே உரியவர்கள்; மேலும், நாம் அவனிடமே திரும்பிச் செல்லவிருக்கிறோம்'' என்று கூறும் சப்தத்தைக் கேட்டு நான் கண் விழித்தேன். உடனே என்னுடைய முகத்திரையால் என் முகத்தை மறைத்துக் கொண்டேன். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நாங்கள் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. அவர் 'இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்'' என்று கூறியதைத் தவிர வேறெதையும் நான் அவரிடமிருந்து கேட்கவுமில்லை. பிறகு, அவர் விரைவாக தம் ஒட்டகத்தை மண்டியிடச் செய்து (நான் ஏறிக் கொள்ள வசதியாக) அதன் முன்னங்காலை (தன் காலால்) மிதித்துக் கொள்ள நான் எழுந்து சென்று அதில் ஏறிக் கொண்டேன். அவர் என்னுடன் ஒட்டகத்தை ஓட்டிக் கொண்டு நடக்கலானார். இறுதியில் நாங்கள் படையினரை வந்தடைந்தோம். அப்போது அவர்கள் (மதிய ஓய்வுக்காக) நடுப்பகல் நேரத்தில் (ஓரிடத்தில்) தங்கி விட்டிருந்தார்கள். (இப்போது எங்கள் இருவரையும் கண்டு அவதூறு பேசி என் விஷயத்தில்) அழிந்தவர்கள் அழிந்து போனார்கள். என் மீது அவதூறு (பிரசாரம்) செய்வதில் பெரும்பங்கு எடுத்துக் கொண்டிருந்தவன் அப்துல்லாஹ் இப்னு உபை இப்னு சலூல் (எனும் நயவங்சகர்களின் தலைவன்) ஆவான்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) கூறினார்: அந்தப் பழிச்சொல் பரப்பப்பட்டும், அப்துல்லாஹ் இப்னு உபை இப்னி சலூலிடம் பேசப்பட்டும் வந்தது. அப்போது அவன் அதை ஏற்று, காது தாழ்த்திக் கேட்டு, அதை (மேன் மேலும்) கிளறிவிட்டுக் கொண்டிருந்தான் - என்று எனக்குச் செய்தி கிடைத்து.

அறிவிப்பாளர் உர்வா(ரஹ்) மேலும் கூறுகிறார்கள்: அவதூறு கூறியவர்(களான முஸ்லிம்)களில் ஹஸ்ஸான் இப்னு ஸாபித், மிஸ்தஹ் இப்னு உஸாஸா, ஹம்னா பின்த் ஜஹ்ஷ் ஆகியோரைத் தவிர மற்ற சிலரின் பெயர்கள் எனக்குத் தெரியாது. ஆயினும் அல்லாஹ் (தன்னுடைய வேதத்தில், 'அவதூறு கற்பித்தவவர்களும் உங்களில் ஒரு குழுவினரே'' என்று 4:11-ம் வசனத்தில்) கூறியது போன்று அவர்கள் ஒரு குழுவினர் ஆவர். அ(ந்தச் சம்பவத்)தில் பெரும் பங்கெடுத்துக் கொண்டவன் அப்துல்லாஹ் இப்னு உபை இப்னி சலூல் ஆவான். தமக்கு முன்னால் ஹஸ்ஸான் அவர்கள் ஏசப்படுவதை ஆயிஷா(ரலி) விரும்பதாதவர்களாக இருந்தார்கள். மேலும், 'அந்த ஹஸ்ஸான் அவர்கள் தாம் இந்தக் கவிதையைச் சொன்னவர்'' என்று ஆயிஷா(ரலி) கூறுவார்கள்: '(பகைவர்களே!) என் தந்தையும், என் தந்தையின் தந்தையும், என்னுடைய மானமும் உங்களிடமிருந்து முஹம்மத்(ஸல்) அவர்களின் மானத்தைக் காக்கும் கேடயமாகும்''

(தொடர்ந்து) ஆயிஷா(ரலி) கூறினார்.

பிறகு நாங்கள் மதீனா வந்தடைந்தோம். அங்கு வந்து சேர்ந்து ஒரு மாத காலம் நான் நோயுற்று விட்டேன். மக்களோ அவதூறு கற்பித்தவர்களின் சொல்லைப் பரப்பிக் கொண்டிருந்தார்கள். இந்த அவதூறு பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. நான் நோயுற்றுபோது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னிடம் வழக்கமாகக் காட்டுகிற பரிவை (இந்த முறை நான் நோய்வாய்ப்பட்டிருந்தபோது) அவர்களிடம் காண முடியாமல் போனது எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அவர்கள் வருவார்கள்; சலாம் சொல்வார்கள்; பிறகு, 'எப்படி இருக்கிறாய்?' என்று கேட்பார்கள்; பிறகு போய் விடுவார்கள். அவ்வளவு தான் இதுதான் எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. (என்னைக் குறித்து வெளியே பேசப்பட்டு வந்த) அந்த தீய சொல்லில் ஒரு சிறிதும், நான் நோயிலிருந்து குணமடைந்து வெளியே செல்லும் வரை எனக்குத் தெரியாது. அப்போது நான் மிஸ்தஹின் தாயாருடன் நாங்கள் கழிப்பிடமாகப் பயன்படுத்தி வந்த 'மனாஸிஉ' (எனப்படும் புறநகர்ப் பகுதியை) நோக்கிச் சென்றோம். நாங்கள் இரவு நேரங்களில் மட்டும் இவ்வாறு செல்வோம். எங்கள் வீடுகளுக்கு அருகிலேயே கழிப்பிடங்களை அமைத்துக் கொள்வதற்கு முன்னால் நாங்கள் இவ்வாறு (புறநகர்ப் பகுதிகளுக்கு) சென்று கொண்டிருந்தோம். எங்களுடைய இந்த வழக்கம் முந்தைய அரபுகளின் வழக்கத்தை ஒத்ததாயிருந்தது. எங்கள் வீடுகளுக்கு அருகிலேயே கழிப்பிடங்கள் அமைப்பதை நாங்கள் தொந்தரவாகக் கருதி வந்தோம். நானும் உம்மு மிஸ்தஹும் சென்றோம். அவர் அபூ ருஹ்கி இப்னு முத்தலிப் இப்னி அப்து மனாஃப் அவர்களின் மகளாவார். அபூ பக்ர்(ரலி) அவர்களின் தாயின் சகோதரியான (சல்மா) பின்த் ஸக்ர் இப்னி ஆமிர் தான் உம்மு மிஸ்தஹின் தாயாராவார். உம்மு மிஸ்தஹின் மகனே, மிஸ்தஹ் இப்னு உஸாஸா இப்னி அப்பாத் இப்னு முத்தலிப் ஆவார். (இத்தகைய) உம்மு மிஸ்தஹும் நானும் எங்கள் (இயற்கைத்) தேவைகளை முடித்துக் கொண்டு என் வீடு நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தோம். அப்போது உம்மு மிஸ்தஹ் தன் ஆடையில் இடறிக் கொண்டார். உடனே அவர், 'மிஸ்தஹ் நாசமாகட்டும்'' என்று (தன் மகனை சபித்தவராகக்) கூறினார். நான், 'மிக மோசமான சொல்லைச் சொல்லிவிட்டீர். பத்ருப்போரில் பங்கெடுத்த ஒரு மனிதரையா ஏசுகிறீர்'' என்று கூறினேன். அதற்கு அவர், 'அம்மா! அவர் என்ன கூறினார் என்று நீங்கள் கேள்விப்படவில்லையா?' என்று கேட்டார். 'என்ன கூறினார்?' என்று நான் வினவ, அவதூறு கற்பித்தவர்கள் சொன்ன (அபாண்டத்)தை அவர் எனக்குத் தெரிவித்தார். அதைக் கேட்டு என் நோய் இன்னும் அதிகரித்துவிட்டது. நான் என் இல்லத்திற்குத் திரும்பி வந்தபோது (என் கணவர்) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் வந்து சலாம் கூறிவிட்டு 'எப்படி இருக்கிறாய்?' என்று கேட்டார்கள். அப்போது நான், 'என் தாய் தந்தையரிடம் செல்ல எனக்கு அனுமதி தருவீர்களா?' என்று கேட்டேன். (உண்மையிலேயே அப்படியொரு வதந்தி உலவுகிறதா என்று விசாரித்து, என் மீதான அவதூறுச்) செய்தியை என் பெற்றோரிடமிருந்து (அறிந்து) உறுதிப்படுத்திக் கொள்ள விரும்பினேன். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எனக்கு அனுமதியளித்தார்கள். (நான் என் தாய் வீட்டிற்குச் சென்றேன்) என் தாயாரிடம், 'அம்மா! மக்கள் (என்னைப் பற்றி) என்ன பேசிக் கொள்கிறார்கள்?' என்று கேட்டேன். என் தாயார், 'அன்பு மகளே! உன் மீது (இந்த விஷயத்தைப்) பெரிதுபடுத்திக் கொள்ளாதே அல்லாஹ்வின் மீதாணையாக! சக்களத்திகள் பலரும் இருக்க, (தன்) கணவரிடம் பிரியத்துக்குரியவளாக இருக்கும் அழகொளிரும் பெண்ணொருத்தியைக் குறித்து அவளுடைய சக்களத்திகள் அதிகமாக (வதந்திகள்) பேசத்தான் செய்வார்கள். அவ்வாறு பேசமாலிருப்பது (பெரும்பாலும்) குறைவேயாகும்'' என்று கூறினார்கள். நான், 'சுப்ஹானல்லாஹ்! (அல்லாஹ் தூயவன்) இப்படியா மக்கள் பேசிக் கொள்கிறார்கள்'' என்று (வியப்புடன்) கேட்டேன். அன்றிரவு காலை வரை அழுதேன் என் கண்ணீரும் நிற்கவில்லை; உறக்கமும் என்னைத் தழுவவில்லை. காலை நேரம் வந்த போதும் அழுதேன். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், தம் மனைவியை (என்னை)ப் பிரிந்து விடுவது குறித்து ஆலோசனை கேட்பதற்காக அலீ இப்னு அபீ தாலிப் அவர்களையும், உஸாமா இப்னு ஸைத் அவர்களையும் அழைத்தார்கள் அப்போது வஹீ (இறைச்செய்தி) (வேத வெளிப்பாடு - தாற்காலிகமாக) நின்று போயிருந்தது. உஸாமா அவர்களோ, நான் நிரபராதி என தாம் அறிந்துள்ளதையும், நபி(ஸல்) அவர்களின் குடும்பத்தார் மீது உள்ளத்தில் தாம் கொண்டிருந்த (பாசத்)தையும் வைத்து ஆலோசனை கூறினார்கள். '(இறைத்தூதர் அவர்களே!) தங்களின் துணைவியரிடம் நல்ல (குணத்)தைத் தவிர வேறெதையும் நான் அறியவில்லை'' என்று உஸாமா கூறினார்கள். அலீ அவர்களோ (நபி-ஸல் - அவர்களின் மனவேதனையைக் குறைக்கும் விதமாக), 'இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ் உங்களுக்கு எந்த நெருக்கடியையும் ஏற்படுத்தவில்லை. ஆயிஷா அன்றிப் பெண்கள் நிறையப் பேர் இருக்கின்றனர். பணிப்பெண்ணை (பாரீராவை)க் கேளுங்கள். அவள் உங்களிடம் உண்மையைச் சொல்வாள்'' என்று கூறினார்கள். எனவே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (பணிப்பெண்ணான) பாரீராவை அழைத்து, 'பாரீராவே! நீ (ஆயிஷாவிடம்) உனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தும் (செயல்) எதையாவது பார்த்திருக்கிறாயா?' என்று கேட்டார்கள். அதற்கு பாரீரா, 'தங்களை சத்திய (மார்க்க)த்துடன் அனுப்பியவன் மீதாணையாக! அவர் குழைத்த மாவை அப்படியே போட்டுவிட்டு உறங்கிப் போய் விடுவார்; வீட்டிலுள்ள ஆடு வந்து அதைத் தின்று விடும்; அத்தகைய (கவனக்குறைவான) இளவயதுப் பெண் என்பதைத் தவிர அவரைக் குறை சொல்லக் கூடிய விஷயம் எதையும் அவரிடம் நான் பார்க்கவில்லை'' என்று பதில் கூறினார்.

அன்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மிம்பரில் (மேடையில்) ஏறி நின்று அப்துல்லாஹ் இப்னு உபை இப்னி சலூலை தண்டிப்பதற்கு (தமக்கு) உதவும்படி (தம் தோழர்களிடம்) கோரினார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'முஸ்லிம்களே! என் வீட்டார் விஷயத்தில் (வதந்தி கிளப்பி) எனக்கு மனவேதனையளித்த ஒரு மனிதனை தண்டித்திட எனக்கு உதவி புரிபவர் யார்? அல்லாஹ்வின் மீதாணையாக! என் வீட்டாரிடம் நல்லதையே அறிவேன். அவர்கள் (அவதூறு கற்பித்த நயவஞ்சகர்கள்) ஒரு மனிதரை (என் மனைவியுடன் இணைத்து அவதூறு) கூறியுள்ளனர். ஆனால், அவரைப் பற்றி நல்லதையே அறிவேன். என்னோடுதான் அவர் என் வீட்டாரிடம் வந்திருக்கிறார் (தனியாக வந்ததில்லை)'' என்ற கூறினார்கள். உடனே பனூ அப்தில் அஷ்ஹல் கூட்டத்தைச் சேர்ந்த ஸஅத் இப்னு முஆத்(ரலி) எழுந்து நின்று, 'இறைத்தூதர் அவர்களே! அவனை தண்டிக்கத் தங்களுக்கு நான் உதவுகிறேன். அவன் (எங்கள்) அவ்ஸ் குலத்தைச் சேர்ந்தவனாயிருந்தால் நாங்கள் அவனுடைய கழுத்தைத் துண்டித்து விடுகிறோம். எங்கள் சகோதரர்களான கஸ்ரஜ் குலத்தைச் சேர்ந்தவனாக அவன் இருந்தால் (என்ன செய்ய வேண்டுமென்று) தாங்கள் எங்களுக்கு உத்தரவிடுங்கள். தங்கள் உத்தரவை நாங்கள் நிறைவேற்றுகிறோம்'' என்று கூறினார்கள். உடனே, 'கஜ்ரஜ்' குலத்தைச் சேர்ந்த ஒருவர் எழுந்தார். அவர் 'கஸ்ரஜ்' குலத்தின் தலைவரான ஸஅத் இப்னு உபாதா ஆவார். ஹஸ்ஸான் இப்னு ஸாபித் அவர்களின் தாயார், இவரின் குடும்பத்தில் ஒருவரும், இவருடைய தந்தையின் சகோதரின் மகளும் ஆவார். இவர் அதற்கு முன் நல்ல மனிதராகத்தான் இருந்தார். ஆயினும், குலமாச்சாரியம் அவரை உசுப்பிவிடவே ஸஅத் இப்னு முஆத் அவர்களைப் பார்த்து 'அல்லாஹ்வின் மீதாணையாக! தவறாகச் சொல்லிவிட்டீர்; அவனை நீர் கொல்லமாட்டீர். அது உம்மால் முடியாது. அவன் உம்முடைய குலத்தைச் சேர்ந்தவனாயிருந்தால் அவன் கொல்லப்படுவதை நீர் விரும்பமாட்டீர்'' என்று கூறினார். உடனே உசைத் இப்னு ஹுளைர்(ரலி) எழுந்து நின்று இவர், ஸஅத் இப்னு முஆத் அவர்களின் தந்தையின் சகோதரர் மகன் ஆவார். -ஸஅத் இப்னு உபாதா அவர்களிடம், 'நீர் தாம் தவறாகப் பேசினீர். அல்லாஹ்வின் மீதாணையாக! அவனை நாங்கள் கொன்றே தீருவோம். நீர் ஒரு நயவஞ்சகர். (அதனால்தான்) நயவஞ்சகர்களின் சார்பாக வாதிடுகிறீர்'' என்று கூறினார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மேடை மீது நின்று கொண்டிருக்க அவ்ஸ், கஸ்ரஜ் ஆகிய இரண்டு குலத்தாரும் ஒருவர் மீதொருவர் பாய்ந்து சண்டையிடத் தயாராகி விட்டனர். நபி(ஸல்) அவர்கள் (மேடையிலிருந்து இறங்கி) அவர்கள் மௌனமாகும் வரை அவர்களை அமைதிப்படுத்தினார்கள். பிறகு தாமும் மௌனமானார்கள். அன்றைய நாள் முழுவதும் நான் அழுது கொண்டிருந்தேன். என் கண்ணீரும் நிற்கவில்லை; என்னை உறக்கமும் தழுவவில்லை. காலையானதும் என் தாய் தந்தையர் என் அருகேயிருந்தனர். நானோ இரண்டு இரவுகள் ஒரு பகல் (முழுக்க), என் ஈரல் பிளந்து விடுமோ என்றென்ணும் அளவிற்கு அழுதிருந்தேன். என் கண்ணீரும் நிற்கவில்லை; என்னை உறக்கமும தழுவவில்லை. என் தாய் தந்தையர் என் அருகேயிருக்க நான் அழுது கொண்டிருந்தபோது அன்சாரிப் பெண்ணொருத்தி வந்து என்னிடம் உள்ளே வர அனுமதி கேட்டாள். நான் அவளுக்கு அனுமதியளித்தவுடன் என்னுடன் சேர்ந்து அவளும் அழுதபடி அமர்ந்து கொண்டாள். நாங்கள் இவ்வாறு இருந்து கொண்டிருக்கும்போது, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து சலாம் கூறிவிட்டு அமர்ந்தார்கள். (என்னைப் பற்றி) அவதூறு சொல்லப்பட்ட நாளிலிருந்து அவர்கள் என்னருகே அமர்ந்ததில்லை. ஒரு மாத காலம் வரை என் விஷயத்தில் (அல்லாஹ்விடமிருந்து தீர்ப்பு) எதுவும் அவர்களுக்கு வஹீயாக அருளப்படாமலேயே அவர்கள் இருந்து வந்தார்கள். பிறகு, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஏகத்துவ உறுதிமொழி கூறி இறைவனைப் புகழ்ந்துவிட்டு, 'நிற்க, ஆயிஷா! உன்னைக் குறித்து இன்னின்னவாறு எனக்குச் செய்தி வந்துள்ளது. நீ நிரபராதியாக இருந்தால் அல்லாஹ் விரைவில் உன்னை குற்றமற்றவள் என்று அறிவித்து விடுவான். நீ குற்றமேதும் செய்திருந்தால் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புகோரி அவன் பக்கம் திரும்பி விடு. ஏனெனில், அடியான் தன்னுடைய பாவத்தை ஒப்புக் கொண்டு (மனம் திருந்தி) பாவமன்னிப்புக் கோரினால் அவனுடைய கோரிக்கையை ஏற்று அல்லாஹ் அவனை மன்னிக்கிறான்'' என்று கூறினார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தங்களின் பேச்சை முடித்தபோது என்னுடைய கண்ணீர் (முழுவதுமாக) நின்று போய் விட்டிருந்தது. அதில் ஒரு துளியும் (எஞ்சியிருப்பதாக) நான் உணரவில்லை. நான் என் தந்தையார் (அபூ பக்ர் அவர்கள்) இடம், 'இறைத்தூதர் சொன்னதற்கு என் சார்பாக பதில் கூறுங்கள்'' என்று சொன்னேன். அதற்கு என் தந்தை, 'அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதரிடம் என்ன (பதில்) சொல்வது என்றே எனக்குத் தெரியவில்லை'' என்று கூறினார்கள். நான் என் தாயார் (உம்மு ரூமான்) இடம், 'இறைத்தூதர் சொன்னதற்கு (என் சார்பாக) பதில் கூறுங்கள்'' என்று சொன்னேன். அதற்கு என் தாயார், 'அல்லாஹ்வின் மீதாணையாக! இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு என்ன பதில் சொல்வது என்றே எனக்குத் தெரியவில்லை'' என்று கூறினார்கள். அதற்கு நான், 'நானோ வயது குறைந்த இளம்பெண் ஆவேன். குர்ஆனிலிருந்து நிறையத் தெரியாதவளும் ஆவேன். இந்நிலையில், அல்லாஹ்வின் மீதாணையாக! (மக்கள் என்னைப் பற்றிப் பேசிக் கொண்ட) இச்செய்தியை நீங்கள் கேட்டிருக்கிறீர்கள். அது உங்கள் மனத்தில் பதிந்து போய், அதை உண்மையென்று நீங்கள் நம்பி விட்டீர்கள் என்பதை அறிவேன். எனவே, நான் குற்றமற்றவள் என்று உங்களிடம் சொன்னால் நீங்கள் அதை நம்பப் போவதில்லை; நான் (குற்றம்) ஏதேனும் புரிந்திருப்பதாக ஒப்புக் கொண்டால் - நான் குற்றமற்றவன் என்பது அல்லாஹ்வுக்குத் தெரியும் - (நான் சொல்வதை அப்படியே உண்மையென்று ஏற்று) என்னை நம்பி விடுவீர்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! எனக்கும் உங்களுக்கும் (நபி) யூசுஃப்(அலை) அவர்களின் தன்தை (நபி - யஅகூப்-அலை) அவர்களையே உவமையாகக் கருதுகிறேன். (அதாவது:) (இதைச்) சகித்துக் கொள்வதே நல்லது; நீங்கள் புனைந்து சொல்லும் விஷயத்தில் அல்லாஹ்விடம் தான் நான் பாதுகாப்புக் கோர வேண்டும். (திருக்குர்ஆன் 12:18)'' என்று கூறினேன். 'நான் அப்போது குற்றமற்றவள் என்பதை அல்லாஹ் அறிவான்; (அந்த) அல்லாஹ் நான் குற்றமற்றவள் என நிச்சயம் அறிவிப்பான்'' என்ற நம்பிக்கையுடன் நான் என் படுக்கையில் (வேறுபக்கமாகத்) திரும்பிப் படுத்துக் கொண்டேன். அல்லாஹ்வின் மீதாணையாக! என் விஷயத்தில் (மக்களால்) ஓதப்படுகிற வஹீ (இறைச்செய்தி) - வேத வெளிப்பாட்டை - (திருக்குர்ஆனில்) அல்லாஹ் அருளுவான் என்று நான் நினைத்தும் பார்த்திருக்கவில்லை. அல்லாஹ் என் தொடர்பாக ஏதேனும் பேசுகிற அளவிற்கு நான் உயர்ந்தவள் அல்ல என்பதே என் மனத்தில் என்னைப் பற்றிய முடிவாக இருந்தது. மாறாக, 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னை அல்லாஹ் குற்றமற்றவள் என்று உணர்த்தும் ஏதேனுமொரு கனவைத் தம் உறக்கத்தில் காண்பார்கள்' என்றே எதிர் பார்த்துக் கொண்டிருந்தேன். அல்லாஹ்வின் மீதாணையாக! இறைத்தூதர்(ஸல்) அவர்கள், தாம் அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்திருக்கவுமில்லை; வீட்டார் எவரும் வெளியே செல்லவுமில்லை. அதற்குள் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் மீது (திருக்குர்ஆன் வசனங்கள்) அருளப்படத் தொடங்கிவிட்டன. உடனே (வேத வெளிப்பாடு வருகிற நேரங்களில்) ஏற்படும் கடுமையான சிரம நிலை நபிகளாருக்கு ஏற்பட்டது; அது கடும் குளிர் காலமாயிருந்தும் அவர்களின் மேனியிலிருந்து சின்னஞ்சிறு முத்துகளைப் போல் வியர்வைத் துளிகள் வழியத் தொடங்கின. அவர்களின் மீது அருளப்பட்ட (இறைச்) சொற்களின் பாரத்தினால் தான் (அவர்களுக்கு வியர்வை வழியும் அளவிற்குச் சிரம நிலை) ஏற்பட்டது. அந்த நிலை அல்லாஹ்வின் தூதரைவிட்டு விலகியவுடன் அவர்கள் சிரித்துக் கொண்டே பேசிய முதல் வார்த்தையாக, 'ஆயிஷா! அல்லாஹ் உன்னை குற்றமற்றவள் என அறிவித்துவிட்டான்'' என்று கூறினார்கள். உடனே என் தாயார், 'அல்லாஹ்வின் தூதரிடம் எழுந்து செல்'' என்று (என்னிடம்) கூறினார்கள். அதற்கு நான், 'மாட்டேன்; அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்களிடம் செல்ல மாட்டேன். அல்லாஹ்வை மட்டுமே புகழ்(ந்து, அவனுக்கே நன்றி செலுத்துவேன்'' என்றேன். (அப்போது) அல்லாஹ், '(ஆயிஷாவின் மீது) அவதூறு கற்பித்தவர்கள் உங்களில் ஒரு குழுவினர் தாம்'' என்று தொடங்கும் (திருக்குர்ஆன் 24:11 - 20) பத்து வசனங்களை அருளியிருந்தான். என் குற்றமற்ற நிலையைத் தெளிவுபடுத்தி அல்லாஹ் இதை அருளினான். (என் தந்தை) அபூ பக்ர் அஸ்ஸித்தீக்(ரலி), 'அல்லாஹ்வின் மீதாணையாக! (என் மகள்) ஆயிஷா குறித்து (அவதூறு) கூறிய பின்பு ஒருபோதும் மிஸ்தஹுக்காக நான் சிறிதும் செலவிட மாட்டேன்'' என்று (சத்தியமிட்டுக்) கூறினார்கள் - மிஸ்தஹ் இப்னு உஸாஸா, தம் உறவினர் என்பதாலும் அவர் ஏழை என்பதாலும், அவருக்காக அபூ பக்ர் அவர்கள் செலவிட்டு வந்தார்கள் - அப்போது அல்லாஹ், 'உங்களில் செல்வம் மற்றும் தயாள குணம் படைத்தோர் (தங்கள்) உறவினர்களுக்கோ, ஏழைகளுக்கோ, இறைவழியில் ஹிஜ்ரத் செய்தவர்களுக்கோ (எதுவும்) கொடுக்க மாட்டேன் என்று சத்தியம் செய்ய வேண்டாம். (அவர்களால் தங்களுக்கு ஏதும் வருத்தம் ஏற்பட்டிருந்தால்) அவர்கள் அதனை மன்னித்துப் (பிழைகளைப்) பொருட்படுத்தாமல் விட்டுவிடட்டும். அல்லாஹ் உங்களுக்கு மன்னிப்பளிப்பதை நீங்கள் விரும்ப மாட்டீர்களா? அல்லாஹ் மிகவும் மன்னிப்போனும் கிருபையுடையோனுமாய் இருக்கிறான்'' என்னும் (திருக்குர்ஆன் 24:22) வசனத்தை அருளினான். அபூ பக்ர்(ரலி), 'ஆம், அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் எனக்கு மன்னிப்பளிக்க வேண்டுமென்று விரும்புகிறேன்'' என்று கூறிவிட்டு, மிஸ்தஹ் அவர்களுக்கு ஏற்கனவே தாம் செலவிட்டு வந்ததைத் திரும்பவும் தொடரலானார்கள். 'அல்லாஹ்வின் மீதாணையாக! அவருக்கு(ச் செய்யும் இந்த உதவியை) ஒருபோதும் நான் நிறுத்தமாட்டேன்'' என்றும் கூறினார்கள். (திருக்குர்ஆனில் என்னுடைய கற்பொழுக்கம் பற்றிய வசனங்கள் அருளப்படுவதற்கு முன்னால்) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என் விஷயத்தில் (தம் இன்னொரு மனைவியான) ஸைனப் பின்த் ஜஹ்ஷ் அவர்களிடம் விசாரித்தார்கள். 'ஸைனபே! நீ (ஆயிஷாவைக் குறித்து) என்ன அறிந்திருக்கிறாய்?... அல்லது (அவர் விஷயத்தில்) என்ன பார்த்திருக்கிறாய்?... என்று (ஸைனபிடம்) கேட்டார்கள். அதற்கு அவர், 'இறைத்தூதர் அவர்களே! என் காதுகளையும் என் கண்களையும் (அவற்றின் மீது பழி சுமத்தாமல்) நான் பாதுகாத்து வைத்திருக்கிறேன். அல்லாஹ்வின் மீதாணையாக! ஆயிஷாவைக் குறித்து நல்லதையே அறிவேன்'' என்று பதிலளித்தார்கள். ஸைனப் அவர்கள் தாம், நபியவர்களின் துணைவியாரில் எனக்கு (அழகிலும் நபி-ஸல்-அவர்களின் அன்பிலும்) போட்டியாக இருந்தார்கள். ஆயினும், அல்லாஹ் அவர்களை (இறையச்சமுடைய) பேணுதலான பண்பையளித்துப் பாதுகாத்திருந்தான். 216 ஆனால், ஸைனபுக்காக அவரின் சகோதரி ஹம்னா (என்னுடன்) போரிடலானார். (என் விஷயத்தில் அவதூறு பேசி) அழிந்து போனவர்களுடன் அவரும் அழிந்து போனார்.

அறிவிப்பாளர் இப்னு ஷிஹாப்(ரஹ்) கூறினார்:

இதுதான் அந்த (நால்வர்) குழுவிடமிருந்து எனக்கு கிடைத்த அறிவிப்பாகும்.

ஆயிஷா(ரலி) கூறினார்:

அல்லாஹ்வின் மீதாணையாக! எவரைக் குறித்து (அந்தப் பழிச்சொல்) கூறப்பட்டதோ அந்த மனிதர் (-ஸஃப்வான், தம் அன்னையான என்னுடன் தம்மை இணைத்து அவதூறு பேசுவதைக் கேட்டு), 'சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்); என்னுடைய உயிர் எவன் கையில் உள்ளதோ அவன் மீது சத்தியமாக! நான் ஒருபோதும் எந்த (அந்நியப்) பெண்ணின் மறைவிடத்தையும் திறந்ததில்லை'' என்று கூறினார். அதன் பிறகு அவர் இறைவழியில் (உயிர்த் தியாகியாகக்) கொல்லப்பட்டார்.

இதை உர்வா(ரஹ்) அறிவித்தார்.

4142. இப்னு ஷிஹாப்(முஹம்மத் இப்னு முஸ்லிம்) அஸ் ஸுஹ்ரீ(ரஹ்) அறிவித்தார்

''அலீ(ரலி), ஆயிஷா(ரலி) மீது அவதூறு கூறியவர்களில் ஒருவர் என்று உங்களுக்கு செய்தி கிடைத்தா?' என என்னிடம் வலீத் இப்னு அப்தில் மலிக் கேட்டார். நான், 'இல்லை; (அலீ - ரலி - அவர்கள் அவ்வாறு கூறவில்லை.) மாறாக, 'தம் விஷயத்தில் அலீ(ரலி) மௌனம் சாதித்தார்கள்' என ஆயிஷா(ரலி) தங்களிடம் தெரிவித்தார்கள் என்று உங்கள் குலத்தைச் சேர்ந்த அபூ ஸலமா இப்னு அப்திர் ரஹ்மான்(ரஹ்) அவர்களும், அபூ பக்ர் இப்னு அப்திர் ரஹ்மான் இப்னி ஹாரிஸ்(ரஹ்) அவர்களும் என்னிடம் கூறினர்'' என்று பதிலளித்தேன்.

ஸுஹ்ரீ(ரஹ்) அவர்களிடம் (மற்ற அறிவிப்பாளர்கள் இன்னும் இது பற்றி அதிக விளக்கம் கேட்ட போது) அவர்கள் பதிலளிக்கவில்லை. மேலும், சந்தேகத்திற்கு இடமளிக்காத 'முஸல்லிமன் அலீ - ரலி- அவர்கள் மௌனமாகவே இருந்தார்கள்' என்ற வார்த்தையையே வலீத் அவர்களுக்கு ஸுஹ்ரீ(ரஹ்) பதிலாகக் கூறினார்கள். (வேறெதையும் அதிக பட்சமாகக் கூறவில்லை.)

4143. மஸ்ரூக் இப்னு அஜ்தஃ(ரஹ்) அறிவித்தார்

ஆயிஷா(ரலி) அவர்களின் தாயார் உம்மு ரூமான்(ரலி) என்னிடம் கூறினார்கள்:

நானும் ஆயிஷாவும் உட்கார்ந்திருந்தோம். அப்போது அன்சாரிப் பெண் ஒருத்தி எங்களிடம், 'இன்னாரை அல்லாஹ் நிந்திக்கட்டும். இன்னாரை அல்லாஹ் நிந்திக்கட்டும்'' என்று கூறியபடி வந்தாள். நான், 'ஏன் (இப்படிச் சொல்கிறாய்?)'' என்று கேட்டேன். அதற்கு அவள், '(அவதூறுச்) செய்தியைப் பேசியவர்களில் என் மகனும் ஒருவன்'' என்று பதிலளித்தாள். ஆயிஷா(ரலி), 'என்ன அது?' என்று கேட்டார்கள். அவள் 'இன்னின்னவாறு பேசப்படுகிறது'' என்றாள். ஆயிஷா(ரலி), 'இதை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் செவியுற்றார்களா?' என்று கேட்டார்கள். அவள், 'ஆம் (செவியுற்றார்கள்)'' என்று பதில் சொன்னாள். பிறகு, '(என் தந்தை) அபூ பக்ர்(ரலி) செவியுற்றார்களா?' என்று ஆயிஷா கேட்டார்கள் இதற்கும் அவள், 'ஆம்'' என்றாள். உடனே, ஆயிஷா(ரலி) மூர்ச்சையடைந்து விழுந்துவிட்டார்கள். பிறகு குளிர் காய்ச்சலுடன் தான் மூர்ச்சை தெளிந்து கண் விழித்தார்கள். நான் ஆயிஷாவின் மீது ஆடையொன்றைப் போர்த்தி மூடிவிட்டேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் வந்து, 'இவளுக்கென்ன நேர்ந்தது?' என்று கேட்டார்கள். நான், 'இறைத்தூதர் அவர்களே! இவளைக் குளிர் காய்ச்சல் பீடித்துள்ளது'' என்று பதிலளித்தேன். நபி(ஸல்) அவர்கள் ஒருவேளை இவளைப்பற்றிப் பேசப்பட்டு வரும் செய்தியின் காரணத்தால் (காய்ச்சல் ஏற்பட்டு) இருக்கலாம்'' என்று கூறினார்கள். நான், 'ஆம்'' என்றேன். உடனே ஆயிஷா (படுக்கையிலிருந்து எழுந்து) உட்கார்ந்து கொண்டு, 'அல்லாஹ்வின் மீதாணையாக! நான் சத்தியம் செய்தாலும் நீங்கள் என்னை நம்ப மாட்டீர்கள். 217 நான் என்ன தான் (சமாதானம்) சொன்னாலும் நீங்கள் ஒப்புக் கொள்ளமாட்டீர்கள். எனக்கும் உங்களுக்கும் உவமை, (நபி) யஅகூப் -அலை - அவர்கள் சொன்னது போன்றே) 'அல்லாஹ் தான் நீங்கள் (புனைந்து) கூறுபவற்றிற்கெதிராக உதவி கோரத் தகுதியானவன் ஆவான்'' என்று கூறினார்கள். உடனே (நபி(ஸல்) அவர்கள், ஒன்றும் சொல்லாமல் திரும்பிச் சென்றார்கள். பிறகு, ஆயிஷா நிரபராதி என (அறிவிக்கும் வசனத்தை) அல்லாஹ் அருளினான். அப்போது ஆயிஷா(ரலி) (நபி-ஸல் அவர்களிடம் 'இதற்காக) அல்லாஹ்வையே நான் புகழ்கிறேன்; வேறெவரையும் புகழமாட்டேன்; உங்களையும் புகழமாட்டேன்'' என்று கூறினார்கள். 218

4144. இப்னு அபீ முலைக்கா(ரஹ்) அறிவித்தார்

ஆயிஷா(ரலி), 'இப்பழியை (ஒருவரிடமிருந்து ஒருவராக) உங்கள் நாவுகளால் எடுத்துச் சொல்லிக் கொண்டு...'' என்னும் (திருக்குர்ஆன் 24:15) இறைவசனத்தை 'இஃத தலிக் கூனஹு..' என ஓதி வந்தார்கள். (இதன் மூலச் சொல்லான) 'வல்க்' (எடுத்துச் சொல்லுதல்) என்பதற்கு 'பொய்(யை எடுத்துச்) சொல்லுதல்' என்று பொருள்'' என (விளக்கம்) கூறி வந்தார்கள்.

மேலும், அறிவிப்பாளர் இப்னு அபீ முலைக்கா(ரஹ்), 'இந்த வசனத்தைப் பற்றி ஆயிஷா அவர்களுக்கே நன்கு தெரியும். ஏனென்றால், இந்த வசனம் அவர்கள் குறித்துத் தான் இறங்கியது'' என்று கூறினார்கள்.

4145. உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அறிவித்தார்

நான் ஹஸ்ஸான் இப்னு ஸாபித்(ரலி) அவர்களை ஏசிக் கொண்டே (என் சிற்றன்னை) ஆயிஷா(ரலி) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள், 'ஹஸ்ஸானை ஏசாதே. ஏனென்றால், அவர்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் தரப்பிலிருந்து (எதிரிகளின் வசைக் கவிதைகளுக்கு) பதிலடி தருபவராய் இருந்தார்கள். (ஒரு நாள்) ஹஸ்ஸான் அவர்கள், நபி(ஸல்) அவர்களிடம் வந்து இணைவைப்பவர்(களான குறைஷி)களுக்கெதிராக வசைக் கவி பாட அனுமதி கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், 'பிறகு என்னுடைய வமிசாவளியை என்ன செய்வீர்கள்?' என்று கேட்டார்கள். அதற்கு அவர், '(அவர்களைப் பற்றி நான் வசைக் கவி கூறும்போது) குழைத்த மாவிலிருந்து முடி உருவப்படுத்து போன்று உங்களை உருவி எடுத்து விடுவேன்'' என்று கூறினார். 219

உர்வா(ரஹ்) அவர்களின் இன்னோர் அறிவிப்பில், 'நான் ஹஸ்ஸான்(ரலி) அவர்களை ஏசினேன். ஏனெனில், ஆயிஷா(ரலி) மீது அவதூறு கூறுவதில் பெரும்பங்கு வகித்தவர்களில் அவரும் ஒருவராக இருந்தார்'' என்று அன்னார் கூறினார்கள் எனக் காணப்படுகிறது.

4146. மஸ்ரூக் இப்னு அஸ்தஉ(ரஹ்) அறிவித்தார்

(ஒருமுறை) நாங்கள் (அன்னை) ஆயிஷா(ரலி) அவர்களிடம் சென்றோம். அப்போது அவர்களுக்கு அருகில் (கவிஞர்) ஹஸ்ஸான் இப்னு ஸாபித்(ரலி) அமர்ந்து கவிபாடிக் கொண்டும் தம் பாடல்களால் கவிபாடிக் கொண்டும் தம் பாடல்களால் (ஆயிஷாவை) பாராட்டிக் கொண்டுமிருந்தார்கள். (தம் பாடல்களில்) ஹஸ்ஸான், ஆயிஷா(ரலி) அவர்களைப் பற்றி, '(அவர்கள்) கற்பொழுக்கம் மிக்கவர்கள்; கண்ணியம் நிறைந்தவர்கள்; எந்த சந்தேகத்தின் பேரிலும் குற்றம் சாட்டப்பட்ட இயலாதவர்கள். (புறமும் அவதூறும் பேசுவதன் மூலம்) அப்பாவிப் பெண்களின் மாமிசங்களைப் புசித்துவிடாமல் பட்டினியோடு காலையில் எழுபவர்கள்'' என்று பாடினார்கள். 220

அப்போது ஹஸ்ஸான் அவர்களைப் பார்த்து ஆயிஷா(ரலி), 'ஆனாலும், நீங்கள் அப்படியல்ல (என்னைப் பற்றி அவதூறு பேசுபவர்களுடன் சேர்ந்து கொண்டு நீங்களும் புறம் பேசினீர்கள்'') என்று கூறினார்கள்.

(தொடர்ந்து) அறிவிப்பாளர் மஸ்ரூக்(ரஹ்) கூறினார்:

நான் ஆயிஷா(ரலி) அவர்களிடம், 'ஹஸ்ஸான் அவர்களைத் தங்களிடம் வர ஏன் அனுமதிக்கிறீர்கள்? அல்லாஹ் (தன்னுடைய வேதத்தில்), 'அவர்களில் (அவதூறு பரப்புவதில்) பெரும் பங்கு வகித்தவருக்கு கடினமான வேதனையுண்டு'' என்று (திருக்குர்ஆன் 24:11ல்) கூறுகிறானே'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'குருடாவதை விடக் கொடிய வேதனை ஏது?' என்று கூறிவிட்டு, 'அவர் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சார்பில் பதிலளிப்பவராக... அல்லது இறைத்தூதர் சார்பில் (எதிரிகளுக்கு பதிலடியாக) வசைக் கவிபாடுபவராக... இருந்தார் என்று கூறினார்கள்.

பகுதி 36

ஹுதைபிய்யாப் போரும், '(நபியே!) இறை நம்பிக்கையாளர்கள் அந்த மரத்தடியில் உங்களிடம் உறுதிப் பிரமாணம் செய்தபோது மெய்யாகவே அல்லாஹ் அவர்கள் குறித்து திருப்தி கொண்டான்'' என்னும் (திருக்குர்ஆன் 48:18-வது) இறைவசனமும். 221

4147. ஸைத் இப்னு காலித்(ரலி) அறிவித்தார்

ஹுதைபிய்யா ஆண்டில் நாங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் புறப்பட்டுச் சென்றோம். ஓரிரவு எங்களுக்கு மழைபெய்தது. (அன்று காலை) நபி(ஸல்) அவர்கள் எங்களுக்கு ஸுப்ஹு தொழுகை நடத்தினார்கள். பிறகு எங்களை நோக்கி நேராகத் திரும்பி, 'உங்களுடைய இறைவன் என்ன கூறினான் என்பதை நீங்கள் அறிவீர்களா?' என்று கேட்டார்கள். 'அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்'' என்று நாங்கள் கூறினோம்.

அப்போது, 'என்னை விசுவாசிக்கக் கூடியவர்களும் என்னை நிராகரிக்கக் கூடியவர்களுமாக என் அடியார்கள் (இரண்டு பிரிவினராக) உள்ளனர். 'அல்லாஹ்வின் கருணையினாலும், அல்லாஹ் அளித்த வாழ்வாதாரத்தாலும், அவனுடைய அருட்கொடையினாலும் நமக்கு மழை பொழிந்தது' என்று கூறுபவர்கள் என்னை நம்பி நட்சத்திரத்திரத்தை மறுத்தவர்களாவர். 'இந்த நட்சத்திரத்தினால் தான் எங்களுக்கு மழை பொழிந்தது' எனக் கூறுபவர்கள் என்னை நிராகரித்து நட்சத்திரத்தை விசுவாசித்தவர்களாவர்' என்று அல்லாஹ் சொன்னான்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். 222

4148. கத்தாதா(ரஹ்) அறிவித்தார்

அனஸ்(ரலி), 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (தம் வாழ்நாளில்) நான்கு உம்ராக்கள் செய்தார்கள். அவற்றில் தம் ஹஜ்ஜின்போது செய்த உம்ராவைத் தவிர (மற்ற) அனைத்தையும் 'துல் கஅதா' மாதத்திலேயே செய்தார்கள்'' என்று என்னிடம் சொல்லிவிட்டு, அந்த நான்கையும் கூறினார்கள்:

1. ஹுதைபிய்யா நிகழ்வின்போது செய்த உம்ரா. இதை (ஹிஜ்ரி 6-ம் ஆண்டு) துல்கஅதா மாதத்தில் செய்தார்கள். 223

2. அதற்கு அடுத்த (ஹிஜ்ரி 7-ம்) ஆண்டு துல்கஅதாவில் செய்த உம்ரா.

3. ஹுனைன் போர்ச் செல்வங்களைப் பங்கிட்டுக் கொடுத்த 'ஜிஃரானா' என்னுமிடத்திலிருந்து சென்று (ஹிஜ்ரி 8-ம் ஆண்டு) துல்கஅதாவில் செய்த உம்ரா.

4. தம் ஹஜ்ஜுடன் (ஹிஜ்ரி 10-ம் ஆண்டு) செய்த உம்ரா. 224

4149. அபூ கதாதா(ரலி) அறிவித்தார்

ஹுதைபிய்யா ஆண்டில் நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் சென்றோம். அப்போது நபி(ஸல்) அவர்களின் தோழர்கள் 'இஹ்ராம்' உடையணிந்திருந்தார்கள். நான் (மட்டும்) அணியவில்லை. 225

4150. பராஉ(ரலி) கூறினார்

(''நிச்சயமாக நாம் உங்களுக்கு ஒரு மகத்தான வெற்றியளித்துள்ளோம்'' என்னும் 48:1-ம் வசனத்திலுள்ள) 'வெற்றி' என்பது மக்கா வெற்றி(யைத் தான் குறிக்கிறது) என்று நீங்கள் கருதுகிறீர்கள். மக்கா வெற்றியும் வெற்றியாகத்தானிருந்தது. (ஆனால்) நாங்கள் ஹுதைபிய்யா சமாதான ஒப்பந்த நாளில் (நடைபெற்ற) 'ரிள்வான்' உறுதிப் பிரமாணத்தையே பெரும் வெற்றியாகக் கருதுகிறோம். (அன்று) நாங்கள் (இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன்) ஆயிரத்து நானூறு பேர் இருந்தோம். ஹுதைபிய்யா என்பது ஒரு கிணறாகும். அந்தக் கிணற்றிலிருந்து ஒரு துளி நீரைக் கூட விட்டு விடாமல் நாங்கள் (தண்ணீரைச்) சேந்தி விட்டோம். இந்த விஷயம் நபி(ஸல்) அவர்களுக்கு எட்டியபோது அங்கு அவர்கள் வருகை தந்து அந்தக் கிணற்றின் ஓரத்தில் அமர்ந்தார்கள். பிறகு ஒரு பாத்திரம் தண்ணீர் கொண்டு வரும்படி கூறினார்கள். (அந்தத் தண்ணீரினால்) உளூச் செய்தார்கள். பின்னர் வாய் கொப்பளித்துவிட்டுப் பிரார்த்தித்தார்கள். பிறகு (உளூச் செய்து வாய் கொப்பளித்த) அந்தக் தண்ணீரைக் கிணற்றுக்குள் ஊற்றினார்கள். பின்பு சிறிது நேரம் அந்தக் கிணற்றை நாங்கள் அப்படியே விட்டுவிட்டோம். பின்னர் அந்தக் கிணறு நாங்களும் எங்கள் வாகனப் பிராணிகளும் (குடிக்க) விரும்பிய (அளவு) தண்ணீரைத் திருப்பித் தந்தது. 226

4151. பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்

ஹுதைபிய்யா தினத்தன்று இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் ஆயிரத்து நானூறு பேர்... அல்லது அதை விட(க் கொஞ்சம்) அதிகம் பேர்... இருந்தனர். அவர்கள் ஒரு கிணற்றருகில் தங்கினர். அப்போது அந்தக் கிணற்றிலிருந்து (எல்லா நீரையும்) இறைத்துவிட்டனர். (தண்ணீர் தீர்ந்து வட்ட போது) நபி(ஸல்) அவர்களிடம் வந்தனர். (அது பற்றிக் கூறினர்.) அப்போது, நபி(ஸல்) அவர்கள் அந்தக் கிணற்றுக்கு வந்து அதன் ஓரத்தில் அமர்ந்தார்கள். பின்பு, 'அந்தக் கிணற்று நீரிலிருந்து ஒரு வாளித் தண்ணீர் கொண்டு வாருங்கள்'' என்று கூறினார்கள். தண்ணீர் கொண்டு வரப்பட்டபோது அதில் உமிழ்ந்தார்கள். பிறகு பிரார்த்தனை புரிந்தார்கள். பிறகு (அதைக் கிணற்றுக்குள் கொட்டிவிட்டு), 'அதைக் கொஞ்ச நேரம் அப்படியேவிட்டு விடுங்கள்'' என்று கூறினார்கள். பின்பு (நபித்தோழர்கள்) தாங்களும் தங்கள் வாகனப் பிராணிகளும் தாகம் தணித்துக் கொண்டுப் புறப்பட்டுச் சென்றார்கள்.

4152. ஜாபிர்(ரலி) அறிவித்தார்

ஹுதைபிய்யா உடன்படிக்கையின்போது மக்களுக்குத் தாகம் ஏற்பட்டது. இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு முன்னால் தோலால் ஆன (நீர்க்) குவளை ஒன்று இருந்தது. அதிலிருந்து நபி(ஸல்) அவர்கள் உளூச் செய்தார்கள். அதன் பிறகு மக்கள் நபி(ஸல்) அவர்களை நோக்கி வந்தனர். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'உங்களுக்கு என்ன (நேர்ந்தது)?' என்று கேட்டார்கள். 'இறைத்தூதர் அவர்களே! தங்கள் குவளையிலிருக்கும் தண்ணீரைத் தவிர நாங்கள் உளூச் செய்வதற்கோ குடிப்பதற்கோ எங்களிடம் வேறு தண்ணீரில்லை'' என்று கூறினர். அப்போது நபி(ஸல்) அவர்கள் தங்களின் கரத்தை அந்தக் குவளைக்குள் வைத்தார்கள். அவர்களின் விரல்களுக்கிடையிலிருந்து ஊற்றுக் கண் போன்று தண்ணீர் பொங்கி வரத் தொடங்கியது.

அப்போது நாங்கள் அந்தத் தண்ணீரை அருந்தவும் செய்தோம். மேலும், உளூவும் செய்தோம்.

(அறிவிப்பாளர் சாலிம் இப்னு அபில் ஜஅத் - ரஹ் - அவர்கள் கூறுகிறார்கள்:) 'நான் ஜாபிர்(ரலி) அவர்களிடம், 'அன்று நீங்கள் எத்தனை பேர் இருந்தீர்கள்?' என்று கேட்டேன். 'நாங்கள் ஒரு லட்சம் பேராக இருந்திருந்தாலும் அந்தத் தண்ணீர் எங்களுக்குப் போதுமானதாக இருந்திருக்கும். நாங்கள் ஆயிரத்து ஐநூறு பேர் தாம் இருந்தோம்.'' என்று பதிலளித்தார்கள். 227

4153. கத்தாதா(ரஹ்) கூறினார்

நான் ஸயீத் இப்னு முஸய்யப்(ரஹ்) அவர்களிடம், 'அவர்கள் ஆயிரத்து நானூறு பேர் இருந்தார்கள்' என்று ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) கூறி வந்தார்கள்' என்று எனக்குச் செய்தி கிடைத்துள்ளதே'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள் என்னிடம், 'ஹுதைபிய்யா தினத்தன்று நபி(ஸல்) அவர்களிடம் உறுதிப் பிரமாணம் செய்து கொடுத்தவர்கள் ஆயிரத்து ஐநூறு பேர் இருந்தனர்' என்று ஜாபிர் அவர்களே எனக்கு அறிவித்தார்கள்'' என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸ் இன்னும் பல அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

4154. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்

ஹுதைபிய்யா தினத்தன்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எங்களிடம், 'பூமியிலிருப்பவர்களில் நீங்களே சிறந்தவர்கள்'' என்று கூறினார்கள். (அப்போது) நாங்கள் ஆயிரத்து நானூறு பேர் இருந்தோம். இப்போது (மட்டும்) எனக்குக் கண்பார்வை தெரியுமானால் அந்த (ரிள்வான் உறுதிப் பிரமாணம் நடைபெற்ற) மரத்தின் இடத்தைக் காண்பித்திருப்பேன்'' என்று கூறினார்கள்.

ஜாபிர்(ரலி) அவர்களின் இன்னோர் அறிவிப்பிலும் (அவர்கள்) ஆயிரத்து நானூறு பேர் (இருந்ததாகக் காணப்படுகிறது)

4155. அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா(ரலி) அறிவித்தார்

மரத்தினடியில் உறுதிப் பிரமாணம் செய்தவர்கள் (சுமார்) ஆயிரத்து முன்னூறு பேர் ஆவர். 228 (இதில்) 'அஸ்லம்' குலத்தினர் முஹாஜிர்களில் எட்டில் ஒரு பகுதியினராக இருந்தனர். 229

இந்த ஹதீஸ் இன்னோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

4156. மரத்தினடியில் உறுதிப்பிரமாணம் (பைஅத்துர் ரிள்வான்) செய்தவர்களில் ஒருவரான மிர்தாஸ் இப்னு மாலிக் அல் அஸ்லமீ(ரலி) கூறினார்.

நல்லவர்களில் முதன்மையானவர்கள் முதலாவதாகவும் அவர்களுக்கடுத்தவர்கள் அடுத்ததாகவும் (உயிர்) கைப்பற்றப்படுவர். (இவ்வாறு நல்லவர்கள் மறைந்த பின் இப்புவியில்) மட்டமான பேரீச்சம் பழத்தையும் வாற்கோதுமையையும் போன்ற தரம் தாழ்ந்த மக்களே எஞ்சியிருப்பர். அவர்களை அல்லாஹ் சற்றும் பொருட்படுத்த மாட்டான். 230

4157 / 4158 மர்வான் இப்னி ஹகம் அவர்களுக்கு மிஸ்வர் இப்னு மக்ரமா(ரலி) அவர்களும் அறிவித்தார்கள்

ஹுதைபிய்யா ஆண்டில் நபி(ஸல்) அவர்கள் (சுமார்) ஆயிரத்துக்கும் மேற்பட்ட தம் தோழர்களுடன் (மதீனாவிலிருந்து) புறப்பட்டுச் சென்றார்கள். துல்ஹுலைஃபாவுக்கு வந்ததும் தியாகப் பிராணியின் கழுத்தில் மாலை போன்றவற்றைக் தொங்கவிட்டு அடையாளமும் இட்டுவிட்டு, பின்னர் உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்தார்கள். 231

அறிவிப்பாளர்களில் ஒருவரான அலீ இப்னு அப்தில்லாஹ் அல் மதீனீ(ரஹ்) கூறினார்:

இந்த ஹதீஸை நான் சுஃப்யான்(ரஹ்) அவர்களிடமிருந்து எத்தனை முறை செவியேற்றேன் எனக் கணக்கிட்டுக் கூற முடியாது. மேலும் அன்னார், 'தியாகப் பிராணியின் கழுத்தில் மாலை போன்றவற்றைத் தொங்கவிட்டது, அடையாளம் இட்டது ஆகியன நடந்த இடம் குறித்து ஸுஹ்ரி(ரஹ்) அவர்களிடமிருந்து நான் அறியவில்லை'' என்றும் கூறினார்கள்.

4159. கஅப் இப்னு உஜ்ரா(ரலி) அறிவித்தார்

(நான் ஹுதைபிய்யா ஆண்டில் 'உம்ரா' வுக்காக 'இஹ்ராம்' அணிந்திருந்த போது) என் முகத்தில் பேன்கள் விழுந்து கொண்டிருக்க, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னைக் கண்டார்கள். அப்போது 'உன் (தலையிலுள்ள) பேன்கள் உனக்குத் துன்பம் தருகின்றனவா?' என்று கேட்டார்கள். நான், 'ஆம்'' என்றேன். அப்போது ஹுதைபிய்யாவிலிருந்த நபி(ஸல்) அவர்கள் என் தலையை மழிக்குமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள். மக்காவிற்குள் நுழைய வேண்டுமென்ற எதிர்பார்ப்பில் மக்கள் இருந்ததால் அவர்கள் ஹுதைபியாவிலேயே இஹ்ராமிலிருந்து விடுபடவேண்டுமென்று நபி(ஸல்) அவர்கள் கூறவில்லை. அப்போது, அல்லாஹ் (குற்றப்) பரிகாரம் சம்பந்தப்பட்ட (திருக்குர்ஆன் 02:196-வது) வசனத்தை அருளினான். உடனே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'ஒரு 'ஃபரக்' தானியத்தை ஆறுபேருக்கு வழங்க வேண்டும்; அல்லது ஓர் ஆட்டை குர்பானி செய்ய வேண்டும்; அல்லது மூன்று நாள்கள் நோன்பு நோற்க வேண்டும்'' என்று எனக்குக் கட்டளையிட்டார்கள். 232

4160 / 4161. (உமர் - ரலி- அவர்களால் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் அடிமை) அஸ்லம்(ரஹ்) அறிவித்தார்

நான் உமர் இப்னு கத்தாப்(ரலி) அவர்களுடன் கடைத்தெருவிற்குச் சென்றேன். அப்போது ஓர் இளம் பெண் உமர்(ரலி) அவர்களிடம் வந்து, 'இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! சின்னஞ்சிறு சிறுவர்களை விட்டுவிட்டு என் கணவர் இறந்து போய்விட்டார். அல்லாஹ்வின் மீதாணையாக! ஆட்டுக் கால் குளம்பைச் சமைப்பதற்குக் கூட அவர்களால் முடியாது. மேலும், எந்த வித விவசாய நிலமோ, (பால் கறப்பதற்குக்) கால் நடையோ அவர்களிடம் இல்லை. (பசியும்) பஞ்சமும் அவர்களை அழித்து விடுமோ என்று நான் அஞ்சுகிறேன். நான் குஅபாஃப் இப்னு ஈமா அல் ஃம்ஃபாரி என்பவரின் மகளாவேன். என் தந்தை இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் ஹுதைபிய்யாவில் பங்கெடுத்தவர்கள்'' என்று கூறினார். அங்கிருந்து நகராமல் அப்பெண்ணுடனே நின்றிருந்த உமர்(ரலி), 'நெருங்கிய உறவே வருக!'' என்று வாழ்த்துக் கூறினார்கள். பிறகு தம் வீட்டில் கட்டி வைக்கப்பட்டிருந்த சக்தி வாய்ந்த ஓட்டகம் ஒன்றை நோக்கித் திரும்பிச் சென்றார்கள். பின்பு உணவு தானியங்களை இரண்டு மூட்டைகளில் நிரப்பி, அந்த இரண்டையும் அந்த ஒட்டகத்தின் மீது ஏற்றி வைத்தார்கள். அந்த இரண்டு மூட்டைகளுக்குமிடையே (செலவுக்குத் தேவையான) காசுகளையும், ஆடைகளையும் ஏற்றினார்கள். பிறகு அதன் மூக்கணங் கயிற்றைப் பிடித்துக் கொண்டு, '(தற்போது) இதை ஓட்டிச் செல். இது தீர்ந்து போவதற்குள் அல்லாஹ் உங்களுக்கு நன்மையைத் தருவான்'' என்று (அப்பெண்மணியிடம்) கூறினார்கள். அப்போது ஒருவர், 'இறை நம்பிக்கையாளர்களின் தலைவரே! இந்தப் பெண்ணுக்கு அதிகமாகவே வழங்கி விட்டீர்கள்'' என்று கூறினார். (அதற்கு) உமர்(ரலி), 'உன்னை உன்னுடைய தாய் இழக்கட்டும். அல்லாஹ்வின் மீதாணையாக! இந்தப் பெண்ணின் தந்தையும் சகோதரரும் சிறிது காலம் ஒரு கோட்டையை முற்றுகையிட்டு அதனை அவர்களிருவரும் வெற்றி கொண்டதை பார்த்தேன். பிறகு அதில் (கிடைத்த போர்ச் செல்வத்தில்) நமக்குரிய பங்குகளைக் கோரலானோம்'' என்று கூறினார்கள்.

4162. முஸய்யப் இப்னு ஹஸன்(ரலி) அறிவித்தார்

(பைஅத்துர் ரிள்வான் என்னும் உறுதிப்பிரமாணம் நடைபெற்ற) அந்த மரத்தை பார்த்திருக்கிறேன். பின்பு (ஒரு முறை) அங்கு வந்தேன். அப்போது என்னால் அதனை அறிய முடியவில்லை.

முஹ்மூத் இப்னு ஃகைலான்(ரஹ்) அவர்களின் அறிவிப்பில் 'பிறகு அது எனக்கு மறந்து போயிற்று'' என முஸய்யப் இப்னு ஹஸன் (ரலி) அவர்கள் கூறினார்கள் எனக் காணப்படுகிறது.

4163. தாரிக் இப்னு அப்திர் ரஹ்மான்(ரஹ்) அறிவித்தார்

நான் ஹஜ்ஜுக்குச் சென்று கொண்டிருந்தபோது, தொழுது கொண்டிருந்த ஒரு கூட்டத்தினரைக் கடந்து சென்றேன். 'இது என்ன தொழுமிடம்?' என்று கேட்டேன். (அதற்கு) அவர்கள், 'இதுதான் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'பைஅத்துர் ரிள்வான்' எனும் உறுதிப் பிரமாணம் வாங்கிய மரம் இருந்த இடம்'' என்று கூறினர். பின்பு நான் ஸயீத் இப்னு முஸய்யப்(ரஹ்) அவர்களிடம் வந்து இது பற்றித் தெரிவித்தேன். அப்போது அவர்கள், 'அந்த மரத்தினடியில் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் உறுதிப் பிரமாணம் செய்து கொடுத்தவர்களில் ஒருவரான என் தந்தை (முஸய்யப் (ரலி) அவர்கள், '(உறுதிப் பிரமாணம் நடந்து முடிந்த) மறு ஆண்டு நாங்கள் அங்கு சென்றபோது அந்த மரத்தை நாங்கள் மறந்து விட்டோம். எங்களால் அதனை அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை'' என்று கூறினார்கள் எனத் தெரிவித்துவிட்டு, பிறகு ஸயீத்(ரஹ்), 'முஹம்மத்(ஸல்) அவர்களின் தோழர்களே அதனை அறியவில்லை. நீங்கள் அறிந்து விட்டீர்களா? அப்படியானால், நீங்களே அதிகம் தெரிந்தவர்கள்'' என்று (பரிகாசமாகக்) கூறினார்கள்.

4164. அந்த மரத்தினடியில் (பைஅத்துர் ரிள்வான்) உறுதிப் பிரமாணம் செய்தவர்களில் ஒருவரான முஸய்யப் இப்னு ஹஸன்(ரலி) கூறினார்

நாங்கள் மறு ஆண்டு அந்த இடத்திற்குத் திரும்பவும் சென்றோம். அப்போது அந்த இடம் (அடையாளம் காண முடியாதவாறு) எங்களுக்குக் குழம்பிவிட்டது.

4165. தாரிக் இப்னு அப்திர் ரஹ்மான்(ரஹ்) கூறினார்

ஸயீத் இப்னு முஸய்யப்(ரஹ்) அவர்களிடம் அந்த மரத்தைப் பற்றிக் குறிப்பிடப்பட்டது. அப்போது ஸயீத் அவர்கள் சிரித்துவிட்டு, அ(ந்தப் பிரமாணத்)தில் பங்கெடுத்தவரான என் தந்தை (அடுத்த ஆண்டே அந்த மரத்தை எங்களால் கண்டு பிடிக்க முடியவில்லை என்று) தெரிவித்ததாகக் கூறினார்.

4166. அம்ர் இப்னு முர்ரா(ரஹ்) அறிவித்தார்

அந்த மரத்தின(டியில் பைஅத்துர் ரிள்வான் செய்தவ)ர்களில் ஒருவரான அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா(ரலி) சொல்ல கேட்டேன்.

எவரேனும் ஒரு கூட்டத்தினர் தம் ஸகாத் பொருள்களைக் கொண்டு வந்தால் நபி(ஸல்) அவர்கள், 'இறைவா! இவர்களின் மீது கருணை புரிவாயாக!'' என்று பிரார்த்திப்பது வழக்கம். என் தந்தை (அபூ அவ்ஃபா(ரலி) தம் ஸகாத்தைக் கொண்டு வந்தார். அப்போது 'இறைவா! அபூ அவ்ஃபாவின் குடும்பத்தினருக்குக் கருணை புரிவாயாக!'' என்று பிரார்த்தித்தார்கள். 233

4167. அப்பாத் இப்னு தமீம்(ரஹ்) அறிவித்தார்

'ஹர்ரா' போரின்போது அப்துல்லாஹ் இப்னு ஹன்ழலா(ரலி) அவர்களிடம் மக்கள் உறுதிமொழி கொடுத்துக் கொண்டிருந்தபோது (அப்துல்லாஹ்) இப்னு ஸைத்(ரலி) மக்களிடம், 'எதற்காக இப்னு ஹன்ழலா உறுதிமொழி வாங்குகிறார்?' என்று கேட்டார்கள். 'மரணத்தைச் சந்திக்கத் தயாராயிருக்கும் படி (உறுதிமொழி வாங்குகிறார்)'' என்று அவர்களிடம் கூறப்பட்டது. (அப்போது) அவர்கள், 'இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு (ஹுதைபிய்யாவில் அளித்த உறுதி மொழிக்குப்) பின்னர் வேறெவரிடமும் இதற்காக நான் உறுதி மொழியளிக்க மாட்டேன்'' என்று கூறினார்கள். 234

இப்னு ஸைத்(ரலி) இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் ஹுதைபிய்யாவில் பங்கெடுத்தவராவார்.

4168. இயாஸ் இப்னு ஸலமா(ரஹ்) அறிவித்தார்

என் தந்தை (ஸலமா இப்னு அக்வஃ(ரலி) அவர்கள் அந்த மரத்தின(டியில் 'பைஅத்துர் ரிள்வான்' செய்தவ)ர்களில் ஒருவராவார். அவர்கள் என்னிடம் 'நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் (வெள்ளிக்கிழமை) 'ஜுமுஆ' தொழுதுவிட்டு (வீட்டிற்கு)த் திரும்புவோம். அப்போது நாங்கள் நிழலுக்காக ஒதுங்கும் அளவிற்குக் கூட, சுவர்களுக்கு நிழல் படிந்திருக்காது'' என்று கூறினார்கள்.

4169. யஸீத் இப்னு அபீ உபைத்(ரஹ்) அறிவித்தார்

நான், ஸலமா இப்னு அக்வஃ(ரலி) அவர்களிடம், 'ஹுதைபிய்யா தினத்தன்று (நபித் தோழர்களான) நீங்கள் எந்த விஷயத்திற்காக இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் உறுதிமொழியளித்தீர்கள்'' என்று கேட்டேன். (அதற்கு) அவர்கள், 'மரணத்தைச் சந்திக்கத் தயாராயிருப்பதாக நாங்கள் உறுதிமொழியளித்தோம்'' என்று பதிலளித்தார்கள். 235

4170. முஸய்யப் இப்னு ராஃபிஉ(ரஹ்) அறிவித்தார்

நான் பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அவர்களைச் சந்தித்து, 'தங்களுக்கு நல்வாழ்வு கிடைக்கட்டும். தாங்கள் நபி(ஸல்) அவர்களின் நட்பைப் பெற்றதோடு, அவர்களிடம் அந்த மரத்தினடியில் (பை அத்துர் ரிள்வான்) உறுதிப் பிரமாணமும் செய்து கொடுத்தீர்கள்'' என்று கூறினேன். அப்போது அவர்கள், 'என் சகோதரர் மகனே! (நபி -ஸல்) அவர்களுக்குப் பிறகு நாங்கள் உருவாக்கிவிட்டதை (எல்லாம்) நீ அறிய மாட்டாய்'' என்று (பணிவுடன்) கூறினார்கள். 236

4171. 'அந்த மரத்தினடியில் நான் நபி(ஸல்) அவர்களிடம் (பை அத்துர் ரிள்வான்) உறுதிப் பிரமாணம் செய்து கொடுத்தோம்'' என்று ஸாபித் இப்னு ளஹ்ஹாப்(ரலி) கூறினார்.

இதை அபூ கிலாபா அப்துல்லாஹ் இப்னு ஸைத்(ரஹ்) அறிவித்தார்.

4172. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்

''நிச்சயமாக, நாம் உங்களுக்கு ஒரு வெளிப்படையான வெற்றியினை அளித்துள்ளோம்'' என்னும் (திருக்குர்ஆன் 48:01) வசனம் ஹுதைபிய்யா (சமாதான ஒப்பந்தத்தைக் குறிக்கக் கூடியது) ஆகும்'' என்று கூறினேன். (அப்போது) நபி(ஸல்) அவர்களின் தோழர்கள், '(நபியவர்களே,) தங்களுக்கு இனிய வாழ்த்துகள். (தங்கள் பாவங்கள் அனைத்தையும் இறைவன் மன்னித்துவிட்டதாக அந்த வசனத்தின் தொடர்ச்சியில் கூறுகிறானே, அந்த வெற்றியினால்) எங்களுக்கு என்ன (பயன்)?' என்று கேட்டனர். அப்போது, 'இறைவிசுவாசிகளான ஆண்களையும் பெண்களையும் சொர்க்கங்களில் பிரவேசிக்கச் செய்வதற்காகவே (இவ்வாறு நாம் வெற்றியளித்தோம்); அந்த சொர்க்கங்களுக்குக் கீழே நதிகள் ஓடிக் கொண்டிருக்கும்'' என்னும் (திருக்குர்ஆன் 48:05) வசனத்தை அல்லாஹ் அருளினான்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஷுஅபா இப்னு ஹஜ்ஜாஜ்(ரஹ்) கூறினார்.

பிறகு நான் கூஃபாவுக்கு வந்து, இந்த ஹதீஸையெல்லாம் கத்தாதா(ரஹ்) அவர்களிடமிருந்து கேட்டதாக (அங்குள்ளவர்களிடம்) அறிவித்தேன். பிறகு நான் கூஃபாவிலிருந்து திரும்பி (கத்தாதா - ரஹ் - அவர்களிடம்) வந்து அவர்களிடம் இது பற்றிக் கூறினேன். அப்போது அவர்கள், 'நாம் உங்களுக்கு வெற்றியளித்தோம்'' என்னும் வசனம் ஹுதைபிய்யாவைக் குறிக்கிறது என்பதை எனக்கு அனஸ்(ரலி) அறிவித்தார். 'தங்களுக்கு இனிய வாழ்த்துகள்'' என்று (தொடங்கும் ஹதீஸை) இக்ரிமா(ரலி) அவர்களே எனக்கு அறிவித்தார்கள் (முழு ஹதீஸையும் ஒரே நபரிடமிருந்து நான் கேட்டு அறிவிக்கவில்லை)'' என்று கூறினார்கள்.

4173. மஜ்ஸஆ இப்னு ஸாஹிர் அல் அஸ்லமீ(ரஹ்) அறிவித்தார்

என் தந்தை ஸாயிர் இப்னு அல் அஸ்வத்(ரலி) அந்த மரத்தில் (நடந்த 'பை அத்துர் ரிள்வான் உறுதிமொழி ஏற்பில்) பங்கெடுத்தவர்களாவார். அன்னார் கூறினார்கள்.

கழுதை இறைச்சி (வெந்து கொண்டிருந்த) சட்டிக்குக் கீழே நான் (நெருப்பு) மூட்டிக் கொண்டிருந்தேன். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்களின் அறிவிப்பாளர், 'கழுதை இறைச்சியை (உண்ண வேண்டாமென) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் உங்களுக்குத் தடை விதிக்கிறார்கள்'' என்று அறிவித்தார்.

4174. மஜ்ஸஆ இப்னு ஸாஹிர் இப்னி அல் அஸ்லமீ(ரஹ்) அறிவித்தார்

என்னுடைய (பனூ அஸ்லம்) குலத்தைச் சேர்ந்த வரும், அந்த மரத்தின(டியில் 'பை அத்துர் ரிள்வான்' செய்தவ)ர்களில் ஒருவருமான உஹ்பான் இப்னு அவ்ஸ்(ரலி) அவர்களுக்கு முழங்காலில் வலி ஏற்பட்டிருந்தது. அவர்கள் (தொழுகையில் தரையில் முழங்கால் மூட்டு அழுந்தாமலிருப்பதற்காக) சஜ்தா செய்யும்போது தம் முழங்காலுக்குக் கீழே தலையணை ஒன்றை வைத்துக் கொள்வார்கள்.

4175. புஷைர் இப்னு யஸார்(ரஹ்) அறிவித்தார்

அந்த மரத்தின(டியில் 'பைஅத்துர் ரிள்வான்' செய்தவ)ர்களில் ஒருவரான சுவைத் இப்னு நுஅமான்(ரலி) '(கைபருக்கு அருகிலுள்ள 'ஸஹ்பா' என்னுமிடத்தில்) இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமும் அவர்களின் தோழர்களிடமும் மாவு கொண்டு வரப்பட்டது. அப்போது அதை அவர்கள் சாப்பிட்டார்கள்...'' என்று கூறினார்கள். 237

4176. அபூ ஜம்ரா நஸ்ர் இப்னு இம்ரான்(ரஹ்) அறிவித்தார்

நான், நபித்தோழர்களில் ஒருவரும், அந்த மரத்தின(டியில் ஃபை அத்துர் ரிள்வான்' செய்தவ)ர்களில் ஒருவருமான ஆயித் இப்னு அம்ர்(ரலி) அவர்களிடம், 'வித்ரு(த் தொழுகை) உடைக்கப்படுமா?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'ஆரம்பத்திலேயே நீ வித்ரு தொழுதிருந்தால் இறுதியில் நீ வித்ருத் தொழ வேண்டாம்'' என்று பதிலளித்தார்கள். 238

4177. (உமர் - ரலி - அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அவர்களின் முன்னாள் அடிமை) அஸ்லம்(ரஹ்) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ஓர் இரவில் பயணம் செய்து கொண்டிருந்தார்கள். 239 உமர் இப்னு கத்தாப்(ரலி) அவர்களும் நபியவர்களுடன் சென்று கொண்டிருந்தார்கள். அப்போது உமர்பின் கத்தாப்(ரலி) ஏதோ ஒன்றைக் குறித்து நபி(ஸல்) அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் கேட்டார்கள். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பதிலளிக்கவில்லை. மீண்டும் உமர் அவர்கள் பதிலளிக்கவில்லை. மீண்டும் உமர் அவர்கள் கேட்டார்கள். அப்போதும் அவர்களுக்கு நபிகளார் பதிலளிக்கவில்லை. பிறகு (மீண்டும்) அவர்கள் கேட்டார்கள். அப்போதும் அவர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் பதிலளிக்கவில்லை. 'உமரே! உன்னை உன் தாய் இழக்கட்டும். மூன்று முறை (கேள்வி கேட்டு) அல்லாஹ்வின் தூதரை வற்புறுத்தினாய். அந்த ஒவ்வொரு முறையும் அவர்கள் உனக்கு பதிலளிக்கவில்லையே'' (என்று தம்மை தாமே) உமர் அவர்கள் (கடிந்து) கூறினார்கள். மேலும் உமர்(ரலி), 'அதற்குப் பிறகு நான் என்னுடைய ஒட்டகத்தைச் செலுத்தி முஸ்லிம்களுக்கு முன்னால் வந்து சேர்ந்தேன். (அல்லாஹ்வின் தூதரிடம் இப்படி நான் நடந்து கொண்டதற்காக) என் விஷயத்தில் ஏதாவது குர்ஆன் (வசனம்) இறங்கிவிடுமோ என்று அஞ்சினேன். சற்று நேரத்திற்குள் என்னை ஒருவர் அழைப்பதைக் கேட்டேன். (நான் நினைத்தது போன்றே) என் விஷயத்தில் குர்ஆன் (வசனம்) இறங்கிவிட்டிருக்கும் என்று அஞ்சினேன் என்று சொல்லிக் கொண்டு, இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து அவர்களுக்கு சலாம் சொன்னேன். அப்போது அவர்கள், 'இந்த இரவு எனக்கு ஒரு (திருக்குர்ஆன்) அத்தியாயம் அருளப்பட்டுள்ளது. சூரியன் எதன் மீது உதயமாகிறதோ அ(ந்த உலகத்)தை விட எனக்கு அந்த அத்தியாயம் மிகவும் விருப்பமானதாகும்'' என்று கூறினார்கள். பிறகு, 'உங்களுக்கு நாம் வெளிப்படையான தொரு வெற்றியினை அளித்துள்ளோம்'' என்று (தொடங்கும் 48:1-ம் வசனத்தை) ஓதினார்கள்.

4178 / 4179 மிஸ்வர் இப்னு மக்ரமா(ரலி), மர்வான் இப்னி ஹகம் ஆகிய இருவரும் - ஒருவர் மற்றவரை விடக் கூடுதலாகக் கூறினார்

நபி(ஸல்) அவர்கள் 'ஹுதைபிய்யா' ஆண்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தோழர்களுடன் மதீனாவிலிருந்து புறப்பட்டு துல்ஹுலைஃபாவுக்கு வந்ததும் தியாகப் பிராணியின் கழுத்தில் மாலை போன்றவற்றைத் தொங்கவிட்டு அதற்கு அடையாளமும் இட்டார்கள். பின்னர் அங்கிருந்து உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்தார்கள். மேலும் நபி(ஸல்) அவர்கள் 'குஸாஆ' குலத்தாரில் (புஸ்ர் இப்னு சுஃப்யான் என்ற) ஒருவரை உளவாளியாக அனுப்பி வைத்தார்கள். 'ஃகதீருல் அஷ்தாத்' எனும் இடத்தில் நபியவர்கள் சென்று கொண்டிருந்தபோது, அவர்களின் உளவாளி வந்து, 'குறைஷிகள் உங்களைத் தாக்குவதற்காகப் பெரும் கூட்டத்தைக் கூட்டியுள்ளனர்; பல்வேறு குலத்தினரை (ஓரிடத்தில்) ஒன்று திரட்டி வைத்துள்ளனர். அவர்கள் உங்களுடன் போரிட்டு உங்களை இறையில்லம் (கஅபாவிற்குச்) செல்ல(வோ, மக்காவிற்குள் நுழையவோ) விடாமல் தடுப்பார்கள்'' என்று கூறினார். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'மக்களே! இறையில்லத்திற்குச் செல்ல விடாமல் நம்மைத் தடுக்க நினைக்கும் இவர்களின் குடும்பத்தாரிடமும் சந்ததிகளிடமும் நான் (போர் தொடுக்கச்) செல்ல வேண்டுமென நீங்கள் கருதுகிறீர்களா? நம்மிடம் அவர்கள் (போர் புரிய) வந்தால், (அதற்கு நாம் பொறுப்பல்ல. நாம் அனுப்பி வைத்த) உளவாளியை(யும்) அந்த இணை வைப்பாளர்களுக்குத் தெரியாமல் அல்லாஹ் ஆக்கிவிட்டான். 240 அவ்வாறு அவர்கள் வராவிட்டால் அவர்களை நாம் இழப்புக்குள்ளாக்கிவிட்டுச் செல்வோம்'' என்று கூறினார்கள். (அப்போது) அபூ பக்ர்(ரலி), 'இறைத்தூதர் அவர்களே! இந்த இறையில்லத்தை நாடித் தானே நீங்கள் வரவில்லையே. எனவே, இறையில்லத்திற்குச் செல்லவிடாமல் நம்மை எவன் தடுக்கிறானோ அவனிடம் நாம் போரிடுவோம்'' என்று (ஆலோசனை) கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வின் பெயரால் பயணத்தைத் தொடருங்கள்'' என்று கூறினார்கள். 241

4180 / 4181 மிஸ்வர் இப்னு மக்ரமா(ரலி) மர்வான் இப்னி ஹகம் ஆகிய இருவரும் ஹுதைபிய்யா (ஆண்டில் நடந்த) 'உம்ரா' (நிகழ்ச்சி) குறித்துக் கூறினார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஹுதைபிய்யா தினத்தன்று (குறைஷிகளின் தலைவரான) சுஹைல் இப்னு அம்ரிடம் ஒரு (குறிப்பிட்ட) கால வரம்பிட்டு சமாதான ஒப்பந்தம் (செய்து கொள்வதாக பத்திரம்) எழுதியபோது, சுஹைல் இப்னு அம்ர் (பின்வரும்) சில நிபந்தனைகளையும் விதித்தார்:

எங்களிடமிருந்து ஒருவர் உங்களிடம் வந்தால், அவர் உங்கள் மார்க்கத்தில் இருந்தாலும் சரி, அவரை எங்களிடம் திருப்பி அனுப்பியே ஆகவேண்டும்; அவரைவிட்டு நீங்கள் ஒதுங்கிவிட வேண்டும். இந்த நிபந்தனைகள் மீதே தவிர (வேறெதன் மீதும்) அல்லாஹ்வின் தூதரிடம் ஒப்பந்தம் செய்ய சுஹைல் மறுத்தார். (ஆனால், தங்களுக்குப் பாதகமான) இதனை இறைநம்பிக்கையாளர்கள் வெறுத்தார்கள். மேலும், (இதற்கு சம்மதிக்கச்) சிரமப்பட்டார்கள். அது பற்றி (வியந்து) பேசவும் செய்தார்கள். சுஹைல் இந்த நிபந்தனைகள் மீதே தவிர (வேறெதன் மீதும்) அல்லாஹ்வின் தூதரிடம் ஒப்பந்தம் செய்ய மறுத்துவிட்டபோது (அந்த நிபந்தனைகள் ஏற்று) அவருக்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (ஒப்பந்தப் பத்திரத்தை) எழுதினார்கள். எனவே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (தம்மிடம் வந்து சேர்ந்த) சுஹைலின் மகன் அபூ ஜந்தலை அன்றைய தினமே அவரின் தந்தை சுஹைல் இப்னு அம்ரிடம் திரும்ப ஒப்படைத்தார்கள். மேலும், அந்த (ஒப்பந்த)க் காலத்தில் தம்மிடம் வந்த எந்த ஆண் மகனையும் - அவர் முஸ்லிமாக இருந்தாலும் - இறைத்தூதர்(ஸல்) அவர்கள் திருப்பி அனுப்பிவிட்டார்கள். (அப்போது) இறை நம்பிக்கைகொண்ட பெண்கள் ஹிஜ்ரத் செய்தவர்களாக வந்தனர். இவ்வாறு இறைத்தூதர்(ஸல்) அவர்களை நோக்கிப் புறப்பட்டு (ஹிஜ்ரத் செய்து) வந்தவர்களில் உக்பா இப்னு அபீ முஐத்தின் மகள் உம்மு குல்ஸூமும் இருந்தார். அவர் இளம் பெண்ணாக இருந்தார். அவரைத் தங்களிடம் திருப்பியனுப்பிவிட வேண்டுமெனக் கோரியபடி அவர்களின் குடும்பத்தினர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்தனர். அப்போது, இறை நம்பிக்கை கொண்ட பெண்களின் விஷயத்தில் தன்னுடைய (திருக்குர்ஆன் 60:10-ம்) வசனத்தை அல்லாஹ் அருளினான். 242

இதை உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அறிவித்தார்.

4182. நபி(ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா(ரலி) அறிவித்தார்

''நபியே! இறைநம்பிக்கை கொண்ட பெண்கள் உங்களிடம் விசுவாசப் பிரமாணம் செய்வதற்காக வந்தால்...' என்னும் இந்த (திருக்குர்ஆன் 60:12-ம்) வசனத்தின் காரணத்தினால் (தம்மிடம்) ஹிஜ்ரத் செய்து வந்த இறை நம்பிக்கை கொண்ட பெண்களை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பரிசோதித்து வந்தார்கள்.

மேலும், அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு ஷிஹாப்(ரஹ்) தம் தந்தையின் சகோதரிடமிருந்து பின்வருமாறு அறிவித்தார்கள்:

''இணைவைப்பவர்களின் மனைவிமார்களில் ஹிஜ்ரத் செய்து வந்து (முஸ்லிம்களை மணமுடித்துக் கொண்டு)விட்டவர்களுக்காக அவர்களின் (இணை வைப்பாளர்களான) கணவன்மார்கள் (மஹ்ராகச்) செலவிட்டதை அவர்களுக்குத் திருப்பிக் கொடுத்து விட வேண்டும் என அல்லாஹ் தன் தூதருக்குக் கட்டளையிட்டான்'' இதைக் கூறிவிட்டு, தொடர்ந்து அபூ பஸீர்(ரலி) தொடர்பான அறிவிப்பையும் முழுமையாகக் கூறினார்கள். 243

4183. (இப்னு உமர் - ரலி - அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அன்னாரின் முன்னாள் அடிமை) நாஃபிஉ(ரஹ்) அறிவித்தார்

அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி), குழப்ப(ம் நிறைந்த கால)த்தில் உம்ராவிற்காக (மக்காவிற்குப்) புறப்பட்டுச் சென்றார்கள். 244 அப்போது அவர்கள், 'நான் கஅபாவிற்குச் செல்ல முடியாதவாறு தடுக்கப்பட்டால், நபி(ஸல்) அவர்களுடன் நாங்கள் (சென்று தடுக்கப்பட்ட ஹுதைபிய்யா சம்பவத்தின் போது) செய்தது போல் செய்வோம்'' என்று கூறிவிட்டு, உம்ராவிற்காக (இஹ்ராம் அணிந்து) 'தல்பியா' கூறினார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஹுதைபிய்யா ஆண்டில் உம்ராவிற்காக இஹ்ராம் அணிந்ததே இதற்குக் காரணமாகும். 245

4184. நாஃபிஉ(ரஹ்) அறிவித்தார்

அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) (குழப்பம் நிறைந்த காலத்தில் உம்ராவிற்காக) இஹ்ராம் அணிந்தார்கள். மேலும், (இறையில்லத்திற்குச் செல்ல முடியாமல்) நான் தடுக்கப்பட்டால் இறையில்லம் செல்லவிடாமல் (ஹுதைபிய்யா ஆண்டு) நபி(ஸல்) அவர்களை குறைஷிகள் தடுத்தபோது நபி(ஸல்) அவர்கள் செய்தது போன்று நானும் செய்வேன். 246 என்று கூறிவிட்டு, 'அல்லாஹ்வின் தூதரிடம் உங்களுக்கு அழகிய முன் மாதிரி உள்ளது'' என்னும் (திருக்குர்ஆன் 33:21-ம்) வசனத்தை ஓதினார்கள்.

4185. நாஃபிஉ(ரஹ்) அறிவித்தார்

(அப்துல்லாஹ் இப்னு ஸுபைர் - ரலி - அவர்களை ஹஜ்ஜாஜின் ராணுவம் முற்றுகையிட்டிருந்த குழப்பமான கால கட்டத்தில், உம்ராவிற்காக மக்காவிற்குச் செல்லத் திட்டமிட்டிருந்த) அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அவர்களிடம் அவர்களின் புதல்வர்களில் ஒருவர் - உபைதுல்லாஹ் இப்னு அப்தில்லாஹ், சாலிம் இப்னு அப்தில்லாஹ் ஆகிய இருவரும் என ஓர் அறிவிப்பில் காணப்படுகிறது- 'இந்த ஆண்டு தாங்கள் (உம்ராவிற்குச் செல்லாமல் இங்கேயே) தங்கிவிடலாமே. ஏனென்றால், நீங்கள் கஅபாவிற்குச் சென்று சேர மாட்டீர்கள் என்று நான் அஞ்சுகிறேன்'' என்று கூறினார். அதற்கு அவர்கள், 'நாங்கள் (ஹுதைபிய்யா ஆண்டு) நபி(ஸல்) அவர்களுடன் (உம்ரா செய்வதற்காக மக்கா) புறப்பட்டுச் சென்றோம்; அப்போது, குறைஷி குல இறைமறுப்பாளர்கள் எங்களை கஅபாவுக்குச் செல்லவிடாமல் தடுத்தனர். எனவே, நபி(ஸல்) அவர்கள் தங்களின் தியாகப் பிராணிகளை அறுத்துவிட்டுத் (தம்) தலையை மழித்துக் கொண்டார்கள். நபி(ஸல்) அவர்களின் தோழர்கள் தலைமுடியை குறைத்துக் கொண்டனர். (அனைவரும் இஹ்ராமிலிருந்து விடுபட்டனர்.)'' என்று கூறினார்கள். தொடர்ந்து அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி), 'நான் உம்ரா செய்ய முடிவு செய்து விட்டேன் என்பதற்கு உங்களை சாட்சியாக்குகிறேன். கஅபாவிற்குச் செல்ல எனக்கு வழி விடப்பட்டால் வலம் வருவேன். அங்கு செல்ல முடியாதவாறு நான் தடுக்கப்பட்டால், இறைத்தூதர்(ஸல்) அவர்கள் செய்தது போன்று நானும் செய்வேன்'' என்று கூறினார்கள். பின்னர் சிறிது நேரம் நடந்துவிட்டு, '(இஹ்ராமிலிருந்து விடுபடுகிற விஷயத்தில் ஹஜ், உம்ரா ஆகிய) அந்த இரண்டையும் நான் ஒன்று போன்றே கருதுகிறேன். நான் என் உம்ராவுடன் ஹஜ்ஜையும் (என் மீது) கடமையாக்கிக் கொண்டேன் என்பதற்கு உங்களை சாட்சியாக்குகிறேன்'' என்று கூறினார்கள். (பிறகு மக்காவிற்குப் போன போது) ஒரேயொரு தவாஃபும் ஒரேயொரு சஃயும் செய்து (ஹஜ் உம்ரா ஆகிய) இரண்டிலிருந்தும் விடுபட்டார்கள். 247

4186. நாஃபிஉ(ரஹ்) அறிவித்தார்

'உமர்(ரலி) அவர்களுக்கு முன்பே (அவர்களின் புதல்வரான) அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) முஸ்லிமானார்கள்' என்று மக்கள் பேசிக் கொள்கிறார்கள். (நடந்தது) அவ்வாறல்ல. மாறாக, ஹுதைபிய்யா தினத்தில் உமர்(ரலி) அன்சாரிகளில் ஒருவரிடமிருந்த தம் குதிரையை அதன் மீது (அமர்ந்து) போரிடுவதற்காக அதனை வாங்கி வருமாறு (தம் புதல்வர்) அப்துல்லாஹ்வை அனுப்பினார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அந்த மரத்தினருகில் (தம் தோழர்களிடம்) உறுதிமொழி வாங்கிக் கொண்டிருந்தார்கள். உமர்(ரலி) அவர்களுக்கு இது தெரியவில்லை. அப்போது அப்துல்லாஹ்(ரலி) நபி(ஸல்) அவர்களிடம் உறுதிமொழி கொடுத்தார்கள். பிறகு, போய் அந்த குதிரையை வாங்கி, அதனை உமர்(ரலி) அவர்களிடம் கொண்டு வந்தார்கள். அப்போது உமர்(ரலி) போருக்காக (தம் உருக்குச் சட்டையை) அணிந்து கொண்டிருந்தார்கள். அப்போது அவர்களிடம், இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அந்த மரத்தினடியில் உறுதிமொழி வாங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று அப்துல்லாஹ்(ரலி) தெரிவித்தார்கள். உடனே உமர்(ரலி) (தம் புதல்வர்) அப்துல்லாஹ்(ரலி) அவர்களுடன் சென்று இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் உறுதிமொழி கொடுத்தார்கள். இதைத் தான் மக்கள், 'உமர் அவர்களுக்கு முன்பாகவே (அவர்களின் புதல்வர்) இப்னு உமர் முஸ்லிமானார்' என்று பேசிக் கொள்கிறார்கள்.

4187. நாஃபிஉ(ரஹ்) அறிவித்தார்

ஹுதைபிய்யாவில் நாளில் நபி(ஸல்) அவர்களுடனிருந்த மக்கள், பல்வேறு மரங்களின் நிழலில் பிரிந்து சென்று (ஓய்வெடுத்துக் கொண்டு) இருந்தனர். அப்போது சிலர் நபி(ஸல்) அவர்களைச் சூழ்ந்து கொண்டிருந்தனர். அப்போது உமர்(ரலி) (தம் புதல்வரை நோக்கி), 'அப்துல்லாஹ்வே! மக்கள் அல்லாஹ்வின் தூதரைச் சூழ்ந்து கொண்டிருக்கிறார்கள். என்ன விஷயம் என்று பார்'' என்று கூறினார்கள். (அப்துல்லாஹ் - ரலி -அவர்கள் போய்ப் பார்த்தபோது அல்லாஹ்வின் தூதரிடம்) மக்கள் உறுதிமொழி கொடுத்துக் கொண்டிருப்பதைக் கண்டார்கள். உடனே, அப்துல்லாஹ்(ரலி) நபி(ஸல்) அவர்களிடம் உறுதிமொழி அளித்துவிட்டு பின்னர் உமர்(ரலி) அவர்களிடம் திரும்பி வந்தார்கள். (அவர்களிடம் விவரத்தைக் கூறவே) உடனே உமர்(ரலி) அவர்களும் புறப்பட்டுச் சென்று உறுதி மொழியளித்தார்கள்.

4188. அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் உம்ரா செய்தபோது நாங்களும் அவர்களுடனிருந்தோம். (மக்காவில் நுழைந்ததும் புனித கஅபாவை) வலம் வந்தார்கள். நாங்களும் அவர்களுடன் வலம் வந்தோம். அவர்கள் ஸஃபாவுக்கும் மர்வாவுக்கும் இடையே தொங்கோட்டம் ஓடினார்கள். (நாங்களும் ஓடினோம்.) அப்போது (இணைவைக்கும்) மக்காவாசிகளில் எவரும் அவர்களை எந்த விதத்திலும் தாக்கி விடக் கூடாது என்பதற்காக அவர்களை மறைத்துக் கொண்டு (அவர்களுக்கு பாதுகாப்பு அரணாக) இருந்தோம். 248

4189. அபூ வாயில் ஷகீக் இப்னு ஸலமா(ரஹ்) அறிவித்தார்

''ஸிஃப்பீன் சண்டையிலிருந்து ஸஹ்ல் இப்னு ஹுனைஃப்(ரலி) திரும்பி வந்தபோது நாங்கள் அவர்களிடம் (அன்னார் சண்டையில் ஈடுபட்டு காட்டாதது பற்றி) செய்தி அறியச் சென்றோம். அப்போது அவர்கள், '(நான் இந்தப் போரில் ஈடுபாடு கொள்ளாதது குறித்து என்னைக் குற்றம் சாட்டாதீர்கள். உங்கள்) எண்ணத்தையே குற்றம் சாட்டுங்கள். அபூ ஜஹ்ல் (அபயம் தேடி வந்த ஹுதைபிய்யா உடன்படிக்கையின்) நாளில், நபி(ஸல்) அவர்களின் கட்டளையை ஏற்க மறுப்பதற்கு என்னால் முடிந்திருந்தால் ஏற்க மறுத்திருப்பேன் - அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள் -(அத்தகைய மனநிலையில் அன்று நான் இருந்தேன். அன்று) எங்கள் தோள்களில் நாங்கள் எங்கள் வாட்களை (முடக்கி) வைத்துக் கொண்டது எங்களுக்குச் சிரமம் தரக்கூடிய விஷயமான போருக்கு அஞ்சியல்ல. நாங்கள் அறிந்த எளிய விஷயமான சமாதானத்தை அடைந்திட (முடக்கப்பட்ட) அந்த வாட்களே வழி வகுத்தன. ஆனால், இதுவெல்லாம் ஸிஃப்பீன் போருக்கு முன்னால் தான். (ஆனால், முஸ்லிம்களுக்கிடையிலேயே போர் மூண்டுவிட்ட இந்தச் சூழ்நிலையில்) நாங்கள் குழப்பத்தின் ஒரு மூலையை அடைக்கப் போனால் இன்னொரு மூலை பீறிட்டு வெடிக்கிறது. இதை எப்படிச் சமாளிப்பது என்று எங்களுக்குத் தெரியவில்லை'' என்று கூறினார்கள். 249

4190. கஅப் இப்னு உஜ்ரா(ரலி) அறிவித்தார்

ஹுதைபிய்யா சமயத்தில் (உம்ராவுக்காக நான் 'இஹ்ராம்' அணிந்திருந்த போது) நபி(ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். (அப்போது என் தலையிலிருந்து) பேன்கள் என் முகத்தின் மீது உதிர்ந்து கொண்டிருந்தன. அப்போது நபி(ஸல்) அவர்கள், 'உன்னுடைய தலையிலுள்ள பேன்கள் உனக்குத் துன்பம் தருகின்றனவா?' என்று கேட்டார்கள். நான், 'ஆம்'' என்று கூறினேன். அதற்கு, 'உன்னுடைய தலையை மழித்துக் கொள். பின்பு மூன்று நாள்கள் நோன்பு நோற்றுக் கொள். அல்லது ஆறு ஏழைகளுக்கு உணவளி. அல்லது (உன்னால் முடிந்த) ஏதாவது ஒரு தியாகப் பிராணியை அறுத்துக் குர்பானி செய்திடு. (இதுவே இஹ்ராம் அணிந்த நிலையில் தலையை மழித்ததற்கான பரிகாரமாகும்)'' என்று கூறினார்கள். 250

(இதன் அறிவிப்பாளர் வாரிசையில் வரும்) அய்யூப்(ரஹ்) கூறினார்.

(இந்த மூன்றில்) எதனை முதலில் நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள் என்று எனக்குத் தெரியவில்லை.

4191. கஅப் இப்னு உஜ்ரா(ரலி) அறிவித்தார்

நாங்கள் 'இஹ்ராம்' அணிந்தவர்களாக ஹுதைபிய்யாவில் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் இருந்தோம். எங்களை (கஅபாவிற்குச் செல்ல விடாமல்) இணை வைப்பவர்கள் தடுத்து விட்டிருந்தனர். எனக்கு (காது சோணை வரை) நிறைய தலைமுடி இருந்தது. (அதிலிருந்து) பேன்கள் என் முகத்தின் மீது (உதிர்ந்து) விழத் தொடங்கின. அப்போது நபி(ஸல்) அவர்கள் என்னைக் கடந்து சென்றார்கள். அப்போது அவர்கள், 'உன்னுடைய தலையிலுள்ள பேன்கள் உனக்குத் துன்பம் தருகின்றனவா?' என்று கேட்டார்கள். நான், 'ஆம்'' என்று கூறினேன். (அப்போதுதான், 'இஹ்ராம்' அணிந்தவர் 'இஹ்ராம்' அணிந்திருக்கும்போது செய்யக் கூடாத காரியங்களைச் செய்தால் அதற்கான பரிகாரம் என்ன என்பது தொடர்பாக), 'உங்களில் யாரேனும் நோயாளியாக, இருந்தால், அல்லது அவரின் தலையில் துன்பம் தரும் (பேன், பொடுகு, காயம் அல்லது நோய்) ஏதும் இருந்தால் (அதன் காரணத்தால் இஹ்ராம் அணிந்த நிலையிலேயே அவர் தம் தலையை மழித்துக் கொள்ள நேரிட்டால் அதற்குப்) பரிகாரமாக நோன்பு நோற்க வேண்டும்; அல்லது தர்மம் செய்ய வேண்டும்; அல்லது குர்பானி கொடுக்கவேண்டும்'' என்னும் இந்த (திருக்குர்ஆன் 02:196-ம்) வசனம் அருளப்பட்டது.

பகுதி 37

'உக்ல்' மற்றும் 'உரைனா' குலத்தாரில் சிலர் மதீனாவிற்கு வந்து நபி(ஸல்) அவர்களிடம், தாங்கள் இஸ்லாத்தை ஏற்பதாகப் பேசினர். அப்போது அவர்கள், 'இறைத்தூதர் அவர்களே! நாங்கள் பால்தரும் கால்நடைகள் வைத்திருப்பவர்கள். நாங்கள் விளைநிலங்கள் வைத்திருப்பவர்கள் அல்லர். (நாங்கள் பால்தரும் கால்நடைகளைக் காடுகளில் மேய்த்து அதன் பாலை அருந்துபவர்களாய் இருந்தோம்)'' என்று கூறினர். அவர்களுக்கு மதீனா(வின் தட்ப வெப்பம்) ஒத்துக்கொள்ளவில்லை. எனவே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள், (பத்துக்குட்பட்ட) ஒட்டகங்களையும் ஒரு மேய்ப்பரையும் அவர்களு(டைய உபயோகத்து)க்காக வழங்கும் படி உத்தரவிட்டார்கள். மேலும் 'ஒட்டகங்கள் (மேயும்) இடத்திற்குச் சென்று அந்த ஒட்டகங்களின் பாலையும் மூத்திரத்தையும் பருகிக் கொள்ளுங்கள் (இன்ஷா அல்லாஹ் நிவாரணம் கிடைக்கும்)'' என்று உத்தரவிட்டார்கள். அவ்வாறே அவர்கள் சென்றனர். (அவற்றின் பாலை அருந்தி நிவாரணமும் பெற்றுக் கொண்டனர்.) அவர்கள் (கருங் கற்கள் நிறைந்த) 'ஹர்ரா' பகுதியில் இருந்தபோது இஸ்லாத்திலிருந்து விலகி இறை மறுப்பாளர்களாக (மதம்) மாறிவிட்டனர். மேலும், நபி(ஸல்) அவர்களின் கால்நடை மேய்ப்பாளர் (யஸார் (ரலி) அவர்களைக் கொலை செய்துவிட்டு ஒட்டகங்களை (தங்களுடன்) ஓட்டிச் சென்று விட்டனர். இந்த விஷயம் நபி(ஸல்) அவர்களுக்கு எட்டியபோது, (அவர்களைப் பிடித்து வர) அவர்களைத் தொடர்ந்து ஆளனுப்பினார்கள். (அவர்கள் பிடிபட்டு மதீனாவுக்குக் கொண்டு வரப்பட்ட போது) அவர்களுக்குத் தண்டனை கொடுக்குமாறு நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். (மக்கள்) அவர்களின் கண்களில் பழுக்கக் காய்ச்சிய ஆணிகளால் சூடு போட்டார்கள். அவர்களின் கை கால்கள் வெட்டப்பட்டு, (மதீனாவின் புறநகரான) 'ஹர்ரா' பகுதியில் அவர்கள் விடப்பட்டனர். அவர்கள் அந்த நிலையிலேயே மாண்டுபோயினர். 253

அறிவிப்பாளர் கத்தாதா(ரஹ்) கூறினார்:

அதற்குப் பிறகு நபி(ஸல்) அவர்கள் (மக்களை) தர்மம் செய்யுமாறு தூண்டிக் கொண்டும் சித்திரவதை செய்யவேண்டாமென தடுத்துக் கொண்டும் இருந்தார்கள்.

கத்தாதா(ரஹ்) அவர்களின் அறிவிப்பில் '(நபி - ஸல் - அவர்களிடம் வந்தவர்கள்) உரைனா குலத்தினர் (மட்டுமே)' என்று காணப்படுகிறது.

அனஸ்(ரலி) அவர்களிடமிருந்து அபூ கிலாபா(ரஹ்) அவர்களின் (வழியாக வரும்) அறிவிப்பில், 'உக்ல குலத்தாரில் சிலர் (வந்தனர்)'' என்று இடம் பெற்றுள்ளது.

4193. (அபூ கிலாபா - ரஹ் - அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அன்னாரின் முன்னாள் அடிமை) அபூ ரஜாஉ(ரஹ்) அறிவித்தார்

நான் என் எஜமானர் அபூ கிலாபா அவர்களுடன் ஷாம் நாட்டிலிருந்தேன். (கலீஃபா) உமர் இப்னு அப்தில் அஸீஸ்(ரஹ்) ஒரு தினம் மக்களிடம், 'இந்த 'கஸாமா' விஷயத்தில் நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?' என்று ஆலோசனை கேட்டார்கள். 254 'அது இறைத்தூதர்(ஸல்) அவர்களும் உங்களுக்கு முன் (வந்த) கலீஃபாக்களும் தீர்ப்பளித்த உண்மை (விதி) தான்'' என்று மக்கள் பதிலளித்தனர். அபூ கிலாபா(ரஹ்), அப்போது உமர் இப்னு அப்தில் அஸீஸ்(ரஹ்) அவர்களின் அரியணைக்குப் பின்னால் இருந்தார்கள். அப்போது அன்பஸா இப்னு ஸயீத்(ரஹ்), 'உரைனா குலத்தார் பற்றிய அனஸ்(ரலி) அவர்களின் ஹதீஸ் எங்கே (போயிற்று)?' என்று கேட்டார்கள். 255 அப்போது அபூ கிலாபா(ரஹ்), '(உரைனா குலத்தார் பற்றி) எனக்கும் அனஸ்(ரலி) அறிவித்தார்'' என்று கூறினார்கள்.

அனஸ்(ரலி) அவர்களிடமிருந்து அப்துல் அஸீஸ் இப்னு ஸுஹைப்(ரஹ்) அறிவிக்கும் அறிவிப்பில், 'உரைனா குலத்தாரில் சிலர்' என்று காணப்படுகிறது.

அன்ஸ்(ரலி) அவர்களிடமிருந்து அபூ கிலாபா(ரஹ்) அறிவிக்கிற அறிவிப்பில், 'உக்ல் குலத்தாரில் சிலர்' (என்று கூறிவிட்டு) முழு நிகழ்ச்சியையும் கூறினார்கள்.

பகுதி 38

'தாத்துல் கரத்' போர்

அது, கைபருக்கு மூன்று நாள்களுக்கு முன்னால், நபி(ஸல்) அவர்களின் பால்தரும் ஒட்டகங்களை எதிரிகள் கடத்திச்சென்றபோது நடந்த போராகும். 256

4194. ஸலமா இப்னு அக்வஃ(ரலி) அறிவித்தார்

முதல் தொழுகை(யான ஃபஜ்ரு)க்கு அழைப்புக் கொடுக்கப்படுவதற்கு முன்பாகவே நான் (மதீனாவிலிருந்து சிரியா வழியிலுள்ள ஃகாபாவை நோக்கிப்) புறப்பட்டேன். 'தூகரத்' என்னுமிடத்தில் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் (பால் தரும்) ஒட்டகங்கள் மேய்ந்து கொண்டிருந்தன. அப்போது அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அவர்களுக்குரிய ஓர் அடிமை (வந்து) என்னைச் சந்தித்து, 'இறைத்தூதர்(ஸல்) அவர்களின் பால் தரும் ஒட்டகங்கள் பிடித்துச் செல்லப்பட்டுவிட்டன'' என்று கூறினான். நான், 'அவற்றை யார் பிடித்துச் சென்றது?' என்று கேட்டேன். அதற்கவன், 'கத்ஃபான் குலத்தார்'' என்று பதில் சொன்னான். உடனே நான் உரக்கச் சப்தமிட்டு, 'யா ஸபாஹா! (அதிகாலை ஆபத்து! உதவி! உதவி!) என்று மதீனாவின் இரண்டு மலைகளுக்கிடையிலிருந்த அனைவருக்கும் கேட்கும்படி மும்முறை கத்தினேன். பிறகு முகத்தைத் திருப்பாமல் நேராக விரைந்து சென்று அவர்களை அடைந்தேன். அவர்கள் (கொள்ளையடித்துச் சென்ற ஒட்டகங்களைக்) கையில் பிடித்துக் கொண்டு நீர் புகட்டிக் கொண்டிருந்தனர். 'நான் அக்வஃ உடைய மகன். இன்று பால் திருடர்கள் (தண்டனை பெறப்போகும்) நாள்'' என்று (பாடியபடி) கூறிக் கொண்டே அவர்களின் மீது அம்பெய்யத் தொடங்கினேன். நான் அம்பெய்வதில் தேர்ச்சி பெற்றவனாக இருந்தேன். மேலும், நான் 'ரஜ்ஸ்' எனும் யாப்பு வகைப் பாடலை பாடிக் கொண்டே அவர்களிடமிருந்து (சில) ஒட்டகங்களை விடுவித்தேன். (அவர்களை நான் விரட்டிச் சென்ற போது) அவர்கள் விட்டுவிட்டுப் போன முப்பது சால்வைகளை நான் எடுத்துக் கொண்டேன். (அப்போது) நபி(ஸல்) அவர்களும் மக்களும் (அங்கு) வந்(து சேர்ந்த)னர். நான், 'இறைத்தூதர் அவர்களே! அந்தக் கூட்டத்தினர் தாகமுடன் இருந்த போதும் அவர்கள் தண்ணீர் குடிக்க விடாமல் நான் தடுத்து விட்டேன். எனவே, (அவர்கள் ஓட்டிச் சென்ற மற்ற ஒட்டகங்களையும் விடுவிக்க) அவர்களை நோக்கி ஒரு படையை இப்போதே அனுப்புங்கள் என்று கூறினேன். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'அக்வஃ உடைய மகனே! (அவர்களை) நீ தோற்கடித்துவிட்டாய். எனவே, மென்மையாக நடந்து கொள்'' என்று கூறினார்கள். பிறகு நாங்கள் (மதீனாவிற்குத்) திரும்பி வந்தோம். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், மதீனாவிற்குள் நுழையும் வரையில் என்னைத் தமக்குப் பின்னே தம் ஒட்டகத்தின் மீது அமர்த்திக் கொண்டார்கள்.257

பகுதி 39

கைபர் போர் 258

4195. சுவைத் இப்னு நுஅமான்(ரலி) அறிவித்தார்

கைபர் போர் நடந்த வருடம், நபி(ஸல்) அவர்களுடன் நானும் புறப்பட்டேன். கைபருக்கு அருகிலுள்ள 'ஸஹ்பா' என்ற இடத்தை அடைந்ததும் நபி(ஸல்) அவர்கள் அஸ்ருத் தொழுகையைத் தொழுதார்கள். பின்னர், பயண உணவைக் கொண்டு வரும்படிக் கூறினார்கள். அப்போது, மாவைத் தவிர வேறு எதுவும் கொண்டு வரப்படவில்லை. அதைக் குழைக்கும் படி கட்டளையிட்டார்கள். அது குழைக்கப்பட்டதும் அதை நபி(ஸல்) அவர்களும் நாங்களும் சாப்பிட்டோம். பின்னர் மஃக்ரிப் தொழுகைக்காகச் சென்றார்கள். அப்போது வாயை (மட்டும்) கொப்பளித்தார்கள். நாங்களும் வாய் கொப்பளித்தோம். பின்னர் (புதிதாக) உளூச் செய்யாமலேயே தொழுதார்கள். 259

4196. ஸலமா இப்னு அக்வஃ(ரலி) அறிவித்தார்

நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் கைபரை நோக்கி(ப் போருக்காகப்) புறப்பட்டோம். இரவு நேரத்தில் நாங்கள் சென்று கொண்டிருந்தபோது ஒருவர், (என் தந்தையின் சகோதரர்) ஆமிர் இப்னு அக்வஃ(ரலி) அவர்களிடம், 'ஆமிரே! உங்கள் கவிதைகளில் சிலதை(ப் பாடி) எங்களுக்கு கேட்கச் செய்யமாட்டீர்களா?' என்று கூறினார். ஆமிர்(ரலி) கவிஞராக இருந்தார்கள். அவர்கள் தங்களின் வாகனத்திலிருந்து இறங்கி மக்களுக்காக (பின்வரும் யாப்பு வகைக் கவிதையைப்) பாடி அவர்களின் ஒட்டகங்களைப் பாய்ந்தோடச் செய்தார்கள். 'இறைவா! நீ இல்லையென்றால் நாங்கள் நேர்வழி பெற்றிருக்க மாட்டோம்; தொழுதிருக்கவும் மாட்டோம். உனக்காக (எங்களை) அர்ப்பணம் செய்கிறோம். (உன் கட்டளைகளில்) எதனை நாங்கள் கைவிட்டு விட்டோமோ அதற்காக எங்களை மன்னிப்பாயாக! நாங்கள் (போர்க் களத்தில் எதிரியைச்) சந்திக்கும்போது எங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவாயாக! எங்களின் மீது அமைதியைப் பொழிவாயாக! (அறவழியில் செல்ல) நாங்கள் அழைக்கப்பட்டால் நாங்கள் (தயாராக) வந்து விடுவோம். 260 எங்களிடம் மக்கள் அபயக்குரல் எழுப்பினால் (உதவிக்கு வருவோம்)'' என்று பாடிக் கொண்டிருந்தார்கள். (வழக்கம் போன்று பாடலைக் கேட்டு ஒட்டகங்கள் விரைந்தோடத் தொடங்கின.) அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'யார் இந்த ஒட்டகவோட்டி?' என்று கேட்டார்கள். 'ஆமிர் இப்னு அக்வஃ' என்று மக்கள் பதிலளித்தார்கள். அப்போது, 'அல்லாஹ் அவருக்கு அருள் புரிவானாக!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அந்த மக்களில் ஒருவர், 'இறைத்தூதரே! (அவருக்கு வீர மரணமும் அதையடுத்து சொர்க்கமும்) உறுதியாகிவிட்டது. அவர் (நீண்ட காலம் உயிர் வாழ்வதன்) மூலம் எங்களுக்குப் பயன் கிடைக்க (பிரார்த்தனை) செய்யக்கூடாதா? என்று கேட்டார். பிறகு நாங்கள் கைபருக்கு வந்து, கைபர் வாசிகளை முற்றுகையிட்டோம். அப்போது எங்களுக்குக் கடுமையான பசியேற்பட்டது. பிறகு உயர்ந்தோனான அல்லாஹ் அவர்களுக்கு எதிராக (எங்களுக்கு) வெற்றியளித்தான். வெற்றியளிக்கப்பட்ட அன்று மாலை, மக்கள் நிறைய நெருப்புகளை (ஆங்காங்கே) மூட்டினர். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'இது என்ன நெருப்பு? எதற்காக இதை மூட்டியிருக்கிறீர்கள்?' என்று கேட்டார்கள். 'இறைச்சி சமைப்பதற்காக'' என்று மக்கள் கூறினர். 'எந்த இறைச்சி?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். 'நாட்டுக் கழுதைகளின் இறைச்சி' என்று மக்கள் கூறினர். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அவற்றைக் கொட்டிவிட்டு, அந்தப் பாத்திரங்களை உடைத்து விடுங்கள்'' என்று கூறினார்கள். அப்போது ஒருவர், 'இறைத்தூதர் அவர்களே! இறைச்சிகளைக் கொட்டிவிட்டு அதன் பாத்திரங்களை கழுவிக் கொள்ளலாமா?' என்று கேட்டார். 'அப்படியே ஆகட்டும்'' என்று கூறினார்கள். (அன்றைய தினம் போருக்காக) மக்கள் அணிவகுத்து நின்றபோது ஆமிர்(ரலி) அவர்களின் வாள் குட்டையாக இருந்தது. (அதனால்) அவர்கள் குனிந்து, ஒரு யூதனின் காலை வெட்டப் போனபோது அன்னாரின் வாளின் மேற்பகுதி, அன்னாரின் முழங்காலையே திருப்பித் தாக்கிவிட்டது. அதனால் அவர்கள் இறந்துவிட்டார்கள். (கைபர் வெற்றிக்குப் பின் மதீனாவை நோக்கி) மக்கள் திரும்பியபோது - ஸலமா(ரலி) கூறினார். 'என்னுடைய கையைப் பிடித்துக் கொண்டு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னைப் பார்த்து, 'உங்களுக்கு என்ன நேர்ந்தது?' என்று கேட்டார்கள். 'என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும். (என் தந்தையின் சகோதரர்) ஆமிரின் நற்செயல்கள் (அமல்கள்) அழிந்துவிட்டன் (அவர் தம் வாளினால் தம்மைத் தாமே குத்திக் கொண்டு தற்கொலை செய்தார்)'' என்று மக்கள் எண்ணுகிறார்கள்.'' என்று தெரிவித்தேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'இதைக் கூறியவர் தவறிழைத்துவிட்டவர். ஆமிருக்கு நிச்சயமாக (நற்செயல் புரிந்த நன்மை, அறப்போர் புரிந்த நன்மை ஆகிய) இரண்டு நன்மைகள் உண்டு'' என்று கூறியவாறு, தம் இரண்டு விரல்களையும் நபி(ஸல்) அவர்கள் இணைத்துக் காட்டினார்கள். (தொடர்ந்து)'' அவர் துன்பங்களைத் தாங்கினார்; (இறைவழியில்) அறப்போரும் புரிந்தார். (துன்பங்களைத் தாங்கியதுடன் அறவழியில் போரும் புரிந்து) பூமியில் உலவிய இவரைப் போன்ற அரபுகள் மிகவும் குறைவானவர்களே'' என்று கூறினார்கள். 261

ஹாத்திம்(ரஹ்) அவர்களிடமிருந்து குதைபா(ரஹ்) அறிவிக்கும் அறிவிப்பில், '(இவரைப் போன்றவர்) பூமியில் பிறப்பது அரிது'' என்று இடம் பெற்றுள்ளது.

4197. அனஸ்(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இரவு நேரத்தில் கைபருக்கு வந்தார்கள் அவர்கள் ஒரு சமுதாயத்தாரிடம் இரவு நேரத்தில் (படையெடுத்துச்) செல்வார்களாயின் காலை நேரம் வரும் வரையில் அவர்களை நெருங்கமாட்டோம். அவ்வாறே காலையானதும் யூதர்கள் தம் மண்வெட்டியையும் (பேரீச்ச ஓலைகளாலான) கூடைகளையும் எடுத்துக் கொண்டு (வயல் வெளிகளை நோக்கி) வெளியேறி வந்தனர். இறைத்தூதர்(ஸல்) அவர்களை யூதர்கள் பார்த்தபோது, 'முஹம்மதும்,  அல்லாஹ்வின் மீதாணையாக! முஹம்மதும், (அவரின் ஐந்து அணிகள் கொண்ட) படையும் (வருகின்றனர்)'' என்று கூறினர். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'கைபர் பாழாகி விட்டது! நாம் ஒரு சமுதாயத்தின் களத்தில் (அவர்களுடன் போரிட) இறங்குவோமாயின் எச்சரிக்கப்பட்ட(வர்களான அந்தச் சமுதாயத்த)வர்களுக்கு அது மிகக் கெட்ட காலையாகும்'' என்று கூறினார்கள். 262

4198. அனஸ்(ரலி) அறிவித்தார்

அதிகாலை நேரத்தில் நாங்கள் (போரிடுவதற்காக) கைபருக்குச் சென்றோம். அந்த ஊர்வாசிகள் மண்வெட்டிகளை எடுத்துக் கொண்டு வெளியில் வந்தனர். அவர்கள் நபி(ஸல்) அவர்களைப் பார்த்தபோது, 'முஹம்மதும் - சத்தியமாக முஹம்மதும் -(அவரின் ஐந்தணிகள் கொண்ட) படையும் (வருகின்றனர்)'' என்று கூறினர். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ் அக்பர் அல்லாஹ் மிகப் பெரியவன். கைபர் பாழாகிவிட்டது. நாம் ஒரு சமுதாயத்தின் களத்தில் (அவர்களுடன் போரிட) இறங்குவோமாயின் எச்சரிக்கப்பட்ட அவர்களுக்கு அது மிகக் கெட்ட காலையாகும்'' என்று கூறினார்கள். அப்போது எங்களுக்குக் கழுதை இறைச்சி கிடைத்தது. எனவே, நபி(ஸல்) அவர்களின் அறிவிப்பாளர், 'கழுதை இறைச்சி உண்ண வேண்டாமென அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் உங்களைத் தடுக்கின்றனர். ஏனெனில், அது அசுத்தமாகும்'' என்று அறிவித்தார்.

4199. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்

(கைபர் போரின் போது) ஒருவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து, '(இறைத்தூதர் அவர்களே!) கழுதைகள் சாப்பிடப்பட்டுவிட்டன'' என்று கூறினார். அதற்கு (பதிலளிக்காமல்) நபி(ஸல்) அவர்கள் மௌனமாக இருந்தார்கள். பிறகு இரண்டாம் முறையும் அவர் வந்து, 'கழுதைகள் சாப்பிடப்பட்டுவிட்டன'' என்று கூறினார். அப்போதும் அவர்கள் மௌனமாகவே இருந்தார்கள். பிறகு மூன்றாம் முறையாக அவர் வந்து, 'கழுதைகள் தீர்ந்து போய்விட்டன'' என்று கூறினார். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'பொது அறிவிப்புச் செய்பவர் ஒருவருக்கு உத்தரவிட அவர், 'அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நாட்டுக் கழுதைகளை உண்ண வேண்டாமென உங்களுக்குத் தடை விதிக்கின்றனர்'' என்று மக்களிடையே அறிவித்தார். உடனே, இறைச்சி கொதித்துக் கொண்டிருந்த அந்தப் பாத்திரங்கள் கவிழ்க்கப்பட்டன.

4200. அனஸ்(ரலி) அறிவித்தார்

கைபருக்கு அருகே (ஓரிடத்தில்) நபி(ஸல்) அவர்கள் இருட்டிலேயே சுப்ஹுத் தொழுதுவிட்டு பிறகு, 'அல்லாஹ் மிகப் பெரியவன். கைபர் பாழாகி விட்டது. நாம் ஒரு சமுதாயத்தின் களத்தில் (அவர்களுடன் போரிட) இறங்குவோமாயின் எச்சரிக்கப்பட்ட அவர்களுக்கு அது மிகக் கெட்ட காலையாக அமையும்'' என்று கூறினார்கள்.

கைபர்வாசிகள் (முஸ்லிம் படைகளைக் கண்டதும்) வீதிகளில் ஓடினர். அப்போது நபி(ஸல்) அவர்கள் (தம்முடன்) போரிட்டவர்களைத் தாக்கினார்கள். அவர்களின் குடும்பத்தின(ரான பெண்கள், சிறுவர்கள் ஆகியோ)ரைத் கைது செய்தார்கள். கைதியாகப் பிடிக்கப்பட்டவர்களில் ஸஃபிய்யா பின்த் ஹுயை அவர்களும் ஒருவர். அவர்கள் (முதலில்) திஹ்யா அல் கல்பீ(ரஹ்) அவர்களிடம் (அன்னாரின் போர்ச் செல்வத்தின் பங்காகப்) போய்ச் சேர்ந்தார்கள். பிறகு ஸஃபிய்யா அவர்கள் நபி(ஸல்) அவர்களுக்கு சொந்தமானார்கள். அவரின் விடுதலையையே மஹ்ராக ஆக்கி(அவரை நபி -ஸல் - அவர்கள் மணமுடித்துக்) கொண்டார்கள்.

அப்துல் அஸீஸ் இப்னு சுஹைப்(ரஹ்) கூறினார்:

இந்த ஹதீஸை ஸாபித்(ரஹ்) அறிவிக்கும்போது அவர்களிடம், 'அபூ முஹம்மதே! நபி(ஸல்) அவர்கள் என்ன மஹ்ர் கொடுத்தார்கள் என்று அனஸ்(ரலி) அவர்களிடம் நீங்கள் தான் கேட்டீர்களா?' என்று கேட்டேன். அதற்கு ஸாபித் அவர்கள் தங்களின் கருத்தை உறுதிப்படுத்தும் விதமாக (''ஆம்'' என்று கூறுவது போன்று) தம் தலையை அசைத்தார்கள்.

4201 அனஸ்(ரலி) அறிவித்தார்

(கைபர் போரில்) ஸஃபிய்யா பின்த்ஹுயை அவர்களை நபி(ஸல்) அவர்கள் கைது செய்து, பின்னர் அவர்களை விடுதலை செய்து, தாமே அவர்களை மணமுடித்தும் கொண்டார்கள்.

அறிவிப்பாளர்களில் ஒருவரான ஸாபித்(ரஹ்) கூறினார்:

இச்செய்தியைக் கூறுகையில் அனஸ்(ரலி) அவர்களிடம் 'நபி(ஸல்) அவர்கள் என்ன மஹ்ர் கொடுத்தார்கள்'' என்று கேட்டேன். '(ஸஃபிய்யா (ரலி) அவர்களின் விடுதலையையே அவர்களின் மஹ்ராக ஆக்கினார்கள்'' என்று அனஸ்(ரலி) பதிலளித்தார்கள்.

4202. அபூ மூஸா அல் அஷ்அரீ(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கைபர் மீது போர் தொடுத்தபோது அல்லது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (கைபரை) நோக்கிச் சென்று (வெற்றி பெற்றுத்) திரும்பிய போது..., மக்கள் ஒரு பள்ளத்தாக்கில் (உள்ள மேடான பகுதியில்) ஏறுகையில், 'அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் - அல்லாஹ் மிகப் பெரியோன், அல்லாஹ் மிகப் பெரியோன், லாஇலாஹ இல்லல்லாஹ் - வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை'' என்று குரல்களை உயர்த்திக் கூறினர். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், '(மக்களே!) உங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். (அவசரப்படாதீர்கள் மென்மையாக, மெல்லக் கூறுங்கள்.) ஏனெனில், நீங்கள் காது கேட்காதவனையோ இங்கில்லாதவனையோ அழைப்பதில்லை. நன்கு செவியேற்பவனும் அருகில் இருப்பவனையுமே நீங்கள் அழைக்கிறீர்கள். அவன் உங்களுடனேயே இருக்கிறான்'' என்று கூறினார்கள். அப்போது, நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் வாகனப் பிராணிக்குப் பின்னால் இருந்து கொண்டு, இருந்து கொண்டு, 'லாஹவ்ல வலா ஃகுவ்வத்த இல்லா பில்லாஹ் - அல்லாஹ்வின் உதவியில்லாமல் (பாவங்களிலிருந்து) விலகிச் செல்லவோ (நல்லறங்கள் புரிய) ஆற்றல் பெறவோ (மனிதனால்) முடியாது'' என்று கூறுவதைக் கேட்டார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'அப்துல்லாஹ் இப்னு கைஸே!'' என்று அழைத்தார்கள். 'கூறுங்கள் இறைத்தூதர் அவர்களே!'' என்று நான் பதிலளித்தேன். அதற்கு அவர்கள், 'உனக்கு ஒரு வார்த்தையை நான் அறிவித்துத் தரட்டுமா? அது சொர்க்கத்தின் கருவூலங்களில் ஒரு கருவூலமாகும்'' என்று கூறினார்கள். நான், 'சரி (கட்டாயம் கூறுங்கள்) இறைத்தூதர் அவர்களே! என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்'' என்று கூறினேன். (அந்த வார்த்தை,) 'லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்'' - அல்லாஹ்வின் உதவியில்லாமல் (பாவங்களிலிருந்து) விலகிச் செல்லவோ (நல்லறங்கள் புரிய) ஆற்றல் பெறவோ (மனிதனால்) முடியாது'' என்று கூறுவதைக் கேட்டார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'அப்துல்லாஹ் இப்னு கைஸே!'' என்று அழைத்தார்கள். 'கூறுங்கள் இறைத்தூதர் அவர்களே!'' என்று நான் பதிலளித்தேன். அதற்கு அவர்கள், 'உனக்கு ஒரு வார்த்தையை நான் அறிவித்துத் தரட்டுமா?' அது சொர்க்கத்தின் கருவூலங்களில் ஒரு கருவூலமாகும்'' என்று கூறினார்கள். நான், 'சரி (கட்டாயம் கூறுங்கள்) இறைத்தூதர் அவர்களே!'' என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்'' என்று கூறினேன். (அந்த வார்த்தை,) 'லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்'' என்று கூறினார்கள். 263

4203. ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்களும் (யூத) இணைவைப்பாளர்களும் (கைபர் போரில்) சந்தித்துப் போரிட்டனர். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், (அன்றைய தினத்தின் போரை முடித்துக் கொண்டு) தம் படையினரிடமும், மாற்று அணியினர் அவர்கள் தம் படையினரிடமும் திரும்பியபோது, இறைத்தூதர்(ஸல்) அவர்களின் தோழர்களிடையே ('குஸ்மான்' என்றழைக்கப்பட்ட) ஒருவர் இருந்தார். அவர், (யூதர்களின் அணியிலிருந்து) பிரிந்து சென்ற (போரிடாத) எவரையும், (படையிலிருந்து விலகி) தனியாகப் போரிட்ட எவரையும் விட்டுவிடாமல் அவர்களைப் பின்தொடர்ந்து சென்று தம் வாளால் (வீராவேசமாக) வெட்டி வீழ்த்திக் கொண்டிருந்தார். அப்போது, 'இன்றைய தினம் இன்னவர் (உத்வேகத்துடன் போரிட்டு) தேவையை நிவர்த்தித்து போன்று வேறெவரும் நம்மில் தேவை தீரப் போரிடவில்லை'' என்று (மக்களால்) பேசப்பட்டது. அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'அவர் நரகவாசிகளில் ஒருவர்'' என்று கூறினார்கள். அப்போது மக்களில் (அக்ஸம் இப்னு அபில் ஜவ்ன் என்ற) ஒருவர், 'நான் (பின்தொடர்ந்து) அவருடன் செல்லப் போகிறேன்'' என்று கூறினார். (அவ்வாறே) அந்த மனிதருடன் இவரும் புறப்பட்டார்.

அவர் நிற்கும் போதெல்லாம் அவருடன் இவரும் நின்றார். அவர் விரைந்து சென்றால் அவருடன் இவரும் விரைந்து சென்றால். அந்த (குஸ்மான் என்ற) மனிதர் (அப்போரில் ஒரு கட்டத்தில்) கடுமையாக காயப்படுத்தப்பட்டார். அதனால் அவர் அவசரமாக இறந்து போக விரும்பி தன்னுடைய வாளை (அதன் கீழ் பகுதியை) பூமியில் வைத்து, அதன் கூரான மேல் பகுதியைத் தன் மார்புகளுக்கிடையில் வைத்து, பிறகு அந்த வாளின் மீது தன் உடலை அழுத்திக் கொண்டு தற்கொலை செய்தார். (பின்தொடர்ந்து சென்ற) அந்த மனிதர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து, 'தாங்கள் இறைத்தூதர் என்று நான் உறுதி கூறுகிறேன்'' என்றார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'என்ன அது?' என்று கேட்டார்கள். அதற்கு அவர், 'இவர் நரகவாசிகளில் ஒருவர் என்று ஒரு மனிதரைப் பற்றித் தாங்கள் சற்று முன்பு கூறினீர்களல்லவா? அதை மக்கள் பெரிதாகக் கருதினர். எனவே நான், 'அவர் விஷயத்தில் உங்களுக்கு நான் பொறுப்பு'' என்று (மக்களிடம்) கூறிவிட்டு அவரைத் தேடி நான் புறப்பட்டேன். (அவரைக் கண்டுபிடித்து பின்தொடர்ந்து சென்றேன்.) பிறகு அவர் மிகக் கடுமையாக (எதிரிகளால்) காயப்படுத்தப்பட்டார். எனவே, அவர் அவசரமாக இறந்து போக விரும்பி, தன்னுடைய வாளின் (கீழ்) முனையை பூமியில் (நட்டு) வைத்து அதன் மேல்முனையைத் தன் மார்புகளுக்கிடையில் வைத்துத் தன்னை அந்த வாளின் மீது அழுத்திக் கொண்டு தற்கொலை செய்தார்'' என்று கூறினார். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'மக்களின் வெளிப்பார்வைக்கு ஒருவர் சொர்க்கவாசிகளின் (நற்) செயலைச் செய்துவருவார். ஆனால், (உண்மையில்) அவர் நரகவாசிகளில் ஒருவராக இருப்பார். இன்னொரு மனிதர் மக்களின் வெளிப்பார்வைக்கு நரகவாசிகளின் (தீய) செயலைச் செய்து வருவார். ஆனால், (உண்மையில்) அவர் சொர்க்கவாசிகளில் ஒருவராக இருப்பார்'' என்று கூறினார்கள். 264

4204. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்

நாங்கள் கைபர் போரில் கலந்து கொண்டோம். அப்போது தம்முடன் இருந்தவர்களில், தன்னை முஸ்லிம் என்று கூறிக் கொண்ட ஒரு மனிதரைப் பார்த்து இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'இவர் நரகவாசிகளில் ஒருவர்'' என்று கூறினார்கள். போரிடும் நேரம் வந்தபோது, அந்த மனிதர் மிகக் கடுமையாகப் போரிட்டார். அவருக்கு நிறையக் காயங்கள் ஏற்பட்டுவிட்டன. மக்களில் சிலர், (நபி - ஸல் - அவர்களின் அச்சொல்லை) சந்தேகப்படலாயினர். அப்போது அந்த மனிதர் காயத்தின் வேதனையை உணர்ந்தார். எனவே, தம் அம்புக்கூட்டுக்குள் கையை நுழைத்து, அதிலிருந்து அம்புகளை எடுத்து, அவற்றால் தம்மை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்தார். (அதைக் கண்ட) முஸ்லிம்களில் சிலர் விரைந்து வந்து, 'இறைத்தூதர் அவர்களே! தாங்கள் சொன்னது உண்மை தான் என அல்லாஹ் உறுதிப்படுத்திவிட்டான். இன்ன மனிதர் தன்னை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்தார்'' என்று கூறினர். பிறகு, இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'இன்னாரே! நீங்கள் எழுந்து சென்று (மக்களிடையே), 'இறைநம்பிக்கையாளரைத் தவிர (வேறெவரும்) சொர்க்கத்தில் நுழைய முடியாது, அல்லாஹ், இந்த மார்க்கத்திற்குப் பாவியான மனிதனின் வாயிலாகவும் வலுவூட்டுகிறான்'' என்று பொது அறிவிப்புச் செய்யுங்கள்'' என்று கூறினார்கள். 265

4205. 'நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ஹுனைன் போரில் கலந்து கொண்டோம்...''

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

''கைபர் போரில் நபி(ஸல்) அவர்களுடன் பங்கெடுத்த ஒருவர் எனக்குக் கூறினார்...''

இதை உபைதுல்லாஹ் இப்னு கஅப்(ரஹ்) அறிவித்தார்.

இந்த ஹதீஸ் பல அறிவிப்பாளர் தொடர்வழியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

4206. யஸீத் இப்னு அபீ உபைத்(ரஹ்) கூறினார்

ஸலமா இப்னு அக்வஃ (ரலி) அவர்களின் காலில் ஒரு வெட்டுக் காயத்தின் அடையாளத்தை கண்டேன். அவரிடம், 'அபூ முஸ்லிமே! இது என்ன காயம்?' என்று கேட்டேன். 'இது கைபர் போர் தினத்தில் ஏற்பட்ட காயம். அப்போது மக்கள், 'ஸலமா தாக்கப்பட்டுவிட்டார்' என்று கூறினர். உடனே, நான் நபி(ஸல்) அவர்களிடம் வந்தேன். அவர்கள் அந்தக் காயத்தின் மீது மூன்று முறை இலேசாகத் துப்பினார்கள். (அதன்பின்னர்) இந்த நேரம் வரை (அதில்) எனக்கு நோவு ஏற்பட்டதில்லை'' என்று ஸலமா(ரலி) கூறினார்.

4207. ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்

ஒரு போரில் (கைபரில்) நபி(ஸல்) அவர்களும், யூத இணைவைப்பவர்களும் சந்தித்துப் போரிட்டுக் கொண்டனர். (போர் நடை பெற்றபோது ஒரு நாள் போரை நிறுத்திவிட்டு) முஸ்லிம்கள், யூதர்கள் ஆகியோரில் ஒவ்வொரு கூட்டத்தினரும் தத்தம் படையினர் (தங்கியிருந்த இடத்தை) நோக்கித் திரும்பினர். முஸ்லிம்களிடையே ஒருவர் இருந்தார். அவர் (போரின்போது யூதர்களான) இணைவைப்பவர்களின் அணியிலிருந்து பிரிந்து சென்ற (போரிடாத) எவரையும், (படையிலிருந்து விலகி) தனியாகப் போரிட்ட எவரையும்விட்டு விடாமல் பின்தொடர்ந்து சென்று, தன்னுடைய வாளால் (வீராவேசமாக) வெட்டி வீழ்த்திக் கொண்டிருந்தார். அப்போது, 'இறைத்தூதர் அவர்களே! (இன்றைய தினம்) இன்னவர் (உத்வேகத்துடன் போரிட்டு) தேவையை நிவர்த்தித்தது போன்று வேறெவரும் தேவை தீரப்போரிடவில்லை'' என்று (மக்களால்) பேசப்பட்டது. உடனே இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'அவர் நரகவாசிகளில் ஒருவர்'' என்று கூறினார்கள். '(வீரதீரத்துடன் கடுமையாகப் போரிட்ட) இவரே நரகவாசிகளில் ஒருவராயிருந்தால் எங்களில் யார் தான் சொர்க்கவாசி!'' என்று மக்கள் கூறினர். அந்த மக்களில் ஒருவர், 'நான் அவரைப் பின்தொடர்ந்து செல்லப்போகிறேன். அவர் விரைந்தாலும் மெதுவாகச் சென்றாலும் அவருடன் இருப்பேன்'' என்று கூறினார். (பிறகு அவரைத் தேடி கண்டு பிடித்துத் தொடர்ந்து சென்றார். வீரதீரமாகப் போரிட்ட) அந்த மனிதர் (போரில்) காயப்படுத்தப்பட்டார். (வலி தாங்க முடியாமல்) அவசரமாக இறந்து போக விரும்பி, தன்னுடைய வாளின் (கீழ்) முனையை பூமியில் (நட்டு) வைத்து, அதன் மேல் முனையைத் தன் மார்புகளுக்கிடையில் வைத்து, அதன் மீது தன்னை அழுத்திக் கொண்டு தற்கொலை செய்தார். (அவரைப் பின்தொடர்ந்து சென்று இந்த காட்சிகளைக் கண்டு வந்த) அந்த மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'தாங்கள் இறைத்தூதர் என நான் உறுதி கூறுகிறேன்'' என்று கூறினார். 'என்ன அது?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர் (கண்டு வந்ததை) நபி(ஸல்) அவர்களிடம் தெரிவித்தார். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'மக்களின் வெளிப்பார்வைக்கு ஒருவர் சொர்க்கவாசிகளின் (நற்) செயலைச் செய்து வருவார் ஆனால் உண்மையில் அவர் நரகவாசிகளில் ஒருவராக இருப்பார். (இன்னொரு மனிதர்) மக்களின் வெளிப்பார்வைக்கு நரகவாசிகளின் (தீய) செயலைச் செய்து வருவார். ஆனால், (உண்மையில்) அவர் சொர்க்கவாசிகளில் ஒருவராக இருப்பார்'' என்று கூறினார்கள். 266

4208. அபூ இம்ரான் (அப்துல் மலிக் இப்னு ஹபீப் அல் ஜவ்னீ(ரஹ்) அவர்கள் அறிவித்தார்

அனஸ்(ரலி) (ஒரு முறை) ஜுமுஆ நாளில் (பஸராவிலிருந்த ஒரு பள்ளிவாசலில்) மக்களை நோட்டமிட்டார்கள். அப்போது (அவர்களின் தலையில்) 'தைலசான்' என்னும் ஒரு வகை சால்வையைக் கண்டார்கள். 267 உடனே 'இப்போது இவர்கள் கைபர் யூதர்களைப் போன்று உள்ளனர்'' என்று கூறினார்கள்.

4209. ஸலமா இப்னு அக்வஃ(ரலி) அறிவித்தார்

கைபர் போரின்போது நபி(ஸல்) அவர்களுடன் (போருக்குச்) செல்லாமல் அலீ (இப்னு அபூதாலிப் (ரலி)) அவர்கள் பின்தங்கிவிட்டார்கள். அவர்களுக்குக் கண்வலி ஏற்பட்டிருந்தது. அப்போது அவர்கள், 'நான் நபி(ஸல்) அவர்களுடன் செல்லாமல், பின்தங்கிவிட்டேனே'' என்று (வருத்தத்துடன்) கூறினார்கள். பிறகு, நபி(ஸல்) அவர்களுடன் போய்ச் சேர்ந்தார்கள். (கைபர்) வெற்றி கொள்ளப்பட்ட நாளின் (முந்தைய) இரவில் நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நேசிக்கிற ஒரு மனிதரிடம் நாளை (இஸ்லாமிய சேனையின்) இந்தக் கொடியைத் தரப் போகிறேன்.''.. அல்லது, '(அத்தகைய) ஒருவர் நாளை இந்தக் கொடியைப் பிடித்திருப்பார்...'' (என்று சொல்லிவிட்டு,) 'அவருக்கு அல்லாஹ் வெற்றியளிப்பான்'' என்று கூறினார்கள். அதை (யாரிடம் கொடுக்கப் போகிறார்கள் என்று) நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். அப்போது, 'இதோ, அலீ!'' என்று கூறப்பட்டது. (இறைத்தூதர் - ஸல்) அவர்கள் (அலீ (ரலி) அவர்களிடம் (அக்கொடியைக்) கொடுக்க, நபியவர்கள் சொன்னவாறே) அவர்களுக்கு வெற்றியளிக்கப்பட்டது. 268

4210. ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) கூறினார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கைபர் நாளில் 'அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கின்ற, மேலும், அல்லாஹ்வினுடையவும் அவனுடைய தூதருடையவும் நேசத்தைப் பெற்ற ஒரு மனிதரிடம், நாளை (இஸ்லாமிய சேனையின்) இந்தக் கொடியைத் தரப் போகிறேன். அல்லாஹ் அவருக்கு வெற்றியளிப்பான்'' என்று கூறினார்கள். அந்தக் கொடி தங்களில் எவரிடம் தரப்படும் என்ற யோசனையில் மக்கள் அந்த இரவெல்லாம் மூழ்கியிருந்தனர். மறுநாள் காலையில் அவர்களில் ஒவ்வொருவரும் அது தம்மிடமே தரப்படவேண்டுமென்று ஆசைப்பட்டவர்களாக, இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்தனர். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'அலீ இப்னு அபீ தாலிப் எங்கே?' என்று கேட்டார்கள். 'இறைத்தூதர் அவர்களே! அவருக்குக் கண்வலி ஏற்பட்டுள்ளது'' என்று கூறப்பட்டது. நபி(ஸல்) அவர்கள், '(அவரை அழைத்து வரும்படி) அவரிடம் ஆளனுப்புங்கள்'' என்று கூறினார்கள். அலீ(ரலி) அழைத்து வரப்பட்டபோது அவர்களின் கண், அதற்கு முன்பு வலி எதுவுமே இல்லாதிருந்ததைப் போல் குணமாகி விட்டது. அப்போது முன்பு வலி எதுவுமே இல்லாதிருந்ததைப் போல் குணமாகி விட்டது. அப்போது நபி(ஸல்) அவர்கள், அலீ(ரலி) அவர்களிடம் அந்தக் கொடியைக் கொடுத்தார்கள். உடனே அலீ(ரலி), 'நம்மைப் போன்று அவர்களும் (ஒரே இறைவனுக்குக் கீழ்ப்படிந்தவர்களாய்) ஆகும் வரை நான் அவர்களுடன் போரிடட்டுமா?' என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'நிதானமாகச் சென்று, அவர்களின் களத்தில் இறங்குங்கள். பிறகு, அவர்களை இஸ்லாத்திற்கு அழைத்து (அதை ஏற்கும் பட்சத்தில்) அவர்களின் மீது கடமையாகின்ற, அல்லாஹ்விற்குச் செய்யவேண்டிய கடமைகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களின் மூலம் ஒரேயொவருவருக்கு அல்லாஹ் நேர்வழியளிப்பது (அரபுகளின் உயரிய செல்வமான) சிவப்பு ஒட்டகங்களை (சொந்தமாக்கிக் கொள்வதை) விட உங்களுக்குச் சிறந்ததாகும்'' என்று கூறினார்கள். 269

4211 அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்

நாங்கள் கைபருக்கு(ப் படையெடுத்து) வந்தோம். அல்லாஹ், நபி(ஸல்) அவர்களுக்கு ('கமூஸ்' என்னும்) கோட்டையின் வெற்றியைத் தந்தபோது, (போர்க் கைதியான) ஸஃபிய்யா பின்த் ஹுயை இப்னி அக்தப் அவர்களின் அழகு பற்றிக் கூறப்பட்டது. புது மணப் பெண்ணாக இருந்த ஸஃபிய்யாவின் கணவர் (போரில்) கொல்லப்பட்டுவிட்டார். அவரை நபி(ஸல்) அவர்கள் (போர்ச் செல்வத்தில் 'குமுஸ்'பங்கிலிருந்து) பெற்று (மணந்து) கொண்டார்கள். அவரைத் தம்முடன் அழைத்துக் கொண்டு புறப்பட்டார்கள். (கைபருக்கு அருகிலுள்ள) 'சத்துஸ் ஸஹ்பா' என்னுமிடத்தை நாங்கள் அடைந்தபோது மாதவிடாயிலிருந்து அவர் தூய்மையடைந்தார். பிறகு, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அவருடன் வீடு கூடினார்கள். அதன் பிறகு (பேரீச்சம் பழம், நெய், பாலாடைக் கட்டி ஆகியவற்றைக் கலந்து) 'ஹைஸ்' எனப்படும் ஓர் உணவைத் தயாரித்துச் சிறிய தோல் விரிப்பில் வைத்தார்கள்.

பிறகு நபி(ஸல்) அவர்கள் என்னிடம், 'உன் அக்கம் பக்கத்திலிருப்பவர்களுக்கு அறிவிப்புக் கொடு'' என்று கூறினார்கள். ஸஃபிய்யா(ரலி) அவர்களை மணந்ததற்காக நபி(ஸல்) அவர்கள் வழங்கிய வலீமா - மண(மகன்) விருந்தாய் அது அமைந்தது. பிறகு நாங்கள் மதீனா நோக்கிப் புறப்பட்டோம். அப்போது நபி(ஸல்) அவர்கள் ஒட்டகத்தின் மேல், ஒரு போர்வை (போன்ற அங்கி)யால் ஸஃபிய்யா(ரலி) அவர்களுக்குத் திரையமைத்தார்கள். பிறகு, தம் ஒட்டகத்தின் அருகில் நபி(ஸல்) அவர்கள் அமர்ந்து, தம் முழங்காலை வைக்க, அவர்களின் முழங்கால் மீது தம் காலை வைத்து (அன்னை) ஸஃபிய்யா(ரலி) ஒட்டகத்தில் ஏறியதை பார்த்தேன். 270

4212. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் ஸஃபிய்யா பின்த் ஹுயை அவர்களுடன் கைபர் வழியில் ('சத்துஸ் ஸஹ்பா' என்னும் இடத்தில்) மூன்று நாள்கள் தங்கி வீடு கூடினார்கள். ஸஃபிய்யா(ரலி) 'பர்தா' முறை விதியாக்கப்பட்டவர்களில் (-நபியவர்களின் துணைவியரில்-) ஒருவராக இருந்தார்கள். 271

4213. அனஸ்(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் கைபருக்கும் மதீனாவுக்கும் இடையில் (உள்ள 'சத்துஸ் ஸஹ்பா' என்னுமிடத்தில் ஸஃபிய்யா பின்த் ஹுயை அவர்களை மண முடித்து) மூன்று நாள்கள் தங்கினார்கள். அங்கு ஸஃபிய்யா அவர்களுடன் வீடு கூடினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்களின் வலீமா - மண விருந்துக்கு முஸ்லிம்களை அழைத்தேன். அந்த விருந்தில் ரொட்டியோ, இறைச்சியோ இருக்கவில்லை.

நபி(ஸல்) அவர்கள், பிலால்(ரலி) அவர்களிடம் தோல்விரிப்பைக் கொண்டு வருமாறு உத்தரவிட, அவ்வாறே அது கொண்டு வந்து விரிக்கப்பட்டது. பிறகு, அதில் பேரீச்சம் பழம், பாலாடைக் கட்டி, நெய் போன்றவற்றை இட்டார்கள். ('ஹைஸ் எனும் எளிமையான உணவு தயாரானது. அதை அங்கிருந்த முஸ்லிம்கள் உண்டனர்.) அப்போது முஸ்லிம்கள் 'ஸஃபிய்யா அவர்கள் இறை நம்பிக்கையாளர்களின் அன்னை (-நபியவர்களின் துணைவி)-யரில் ஒருவரா? அல்லது நபி(ஸல்) அவர்களின் அடிமைப் பெண்ணா?' என்று பேசிக் கொண்டனர். 'ஸஃபிய்யா அவர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் ஹிஜாப் - திரையிட்(டுக் கொள்ளும் படி கட்டளையிட்)டால், அவர் இறைநம்பிக்கையாளர்களின் அன்னையரில் (-நபியவர்களின் துணைவியரில்-) ஒருவர். அப்படி அவர்களுக்குத் திரை(யிட்டுக் கொள்ளும்படி கட்டளை)யிடாவிட்டால், அவர் அடிமைப் பெண்களில் ஒருவர்'' என்று (மக்களில் சிலர்) கூறினர். நபி(ஸல்) அவர்கள் தங்களின் வாகனத்தில் புறப்பட்டபோது தமக்குப் பின்னால் ஸஃபிய்யா அவர்களுக்காக இருக்கையமைத்து இடம் கொடுத்து (அவர்கள் அமர்ந்த பிறகு) திரையை இழுத்து (மூடி)விட்டார்கள். 272

4214. அப்துல்லாஹ் இப்னு முகஃப்பல்(ரலி) அறிவித்தார்

நாங்கள் கைபரை முற்றுகையிட்டுக் கொண்டிருந்தோம். அப்போது ஒருவர், கொழுப்பு அடங்கிய தோல் பை ஒன்றை எறிந்தார். நான் அதை எடுக்க பாய்ந்து சென்றேன். அப்போது நான் திரும்பிப் பார்த்தேன். அங்கே நபி(ஸல்) அவர்கள் இருந்தார்கள். (என் ஆசையை நபியவர்கள் தெரிந்துவிட்டதால்) நான் வெட்கமடைந்தேன். 273

4215 இப்னு உமர்(ரலி) அறிவித்தார்

கைபர் போரின்போது, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் வெள்ளைப் பூண்டையும் நாட்டுக் கழுதைகளின் இறைச்சிகளையும் உண்ண வேண்டாமெனத் தடை விதித்தார்கள். 274

நாஃபிஉ(ரஹ்) அவர்களின் அறிவிப்பில் மட்டுமே 'வெள்ளைப் பூண்டு உண்ண வேண்டாம்'' என்பது இடம் பெற்றுள்ளது.

நாட்டுக் கழுதைகளின் இறைச்சி (தொடர்பாக) சாலிம்(ரஹ்) அவர்களின் வாயிலாகவே அறிவிக்கப்பட்டுள்ளது.

4216. அலீ இப்னு அபீ தாலிப்(ரலி) அறிவித்தார்

கைபர் போரின்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'முத்அத்துன்னிஸா.''.. (கால வரம்பிட்டுச் செய்யப்படும் திருமணம்) செய்ய வேண்டாம் என்றும், நாட்டுக் கழுதைகளை உண்ண வேண்டாம் என்றும் தடை விதித்தார்கள். 275

4217. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்

நாட்டுக் கழுதைகளின் இறைச்சியை உண்ண வேண்டாமென நபி(ஸல்) அவர்கள் தடைவிதித்தார்கள்.

4219. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கைபர் போரின்போது (நாட்டுக்) கழுதைகளின் இறைச்சியை உண்ண வேண்டாம் எனத் தடைவிதித்தார்கள். குதிரைகளை (அவற்றின் இறைச்சியை உண்ணலாமென) அவர்கள அனுமதித்தார்கள்.

4220. இப்னு அபீ அவ்ஃபா(ரலி) அறிவித்தார்

கைபர் போர் அன்று எங்களுக்குப் பசியேற்பட்டது. அப்போது (சமையல் செய்யப்பட்டுக் கொண்டிருந்த) பாத்திரங்கள் கொதித்துக் கொண்டிருந்தன. அவற்றில் சில பாத்திரங்களில் (இருந்த இறைச்சி) வெந்தும்விட்டது. அப்போது நபி(ஸல்) அவர்களின் அறிவிப்பாளர் வந்து, 'கழுதைகளின் இறைச்சியில் சிறிதும் உண்ணாதீர்கள். அதனைக் கொட்டி விடுங்கள்'' என்று கூறினார்.

இதன் அறிவிப்பாளர் கூறுகிறார்:

அப்போது நாங்கள், 'அதை (உண்ண வேண்டாமென) நபி(ஸல்) அவர்கள் தடை விதித்ததற்குக் காரணம், அதில் நபி(ஸல்) அவர்களுக்குச் சேர வேண்டிய) குமுஸ் நிதி எடுக்கப்பட்டிருக்கவில்லை; (அதனால், தாற்காலிமாகத் தடைவிதித்துள்ளார்கள்)'' என்று பேசிக்கொண்டோம். எங்களில் சிலர், 'அறவே (நிரந்தரமாக உண்ண வேண்டாமென்றே) தடைவிதித்தார்கள். ஏனெனில், அவை மலத்தைத் தின்கின்றன'' என்று கூறினர். 276

4221 / 4222 (கைபர் போரில்) மக்கள் நபி(ஸல்) அவர்களுடன் இருந்து கொண்டிருந்தபோது அவர்களுக்கு (நாட்டு)க் கழுதைகள் கிடைத்தன. உடனே அவற்றை மக்கள் சமைத்தனர். அப்போது நபி(ஸல்) அவர்களின் அறிவிப்பாளர், 'பாத்திரங்களைக் கவிழ்த்து விடுங்கள்'' என்று பொது அறிவித்தார்.

இதை பராஉ(ரலி) அவர்களும் அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா(ரலி) அவர்களும் அறிவித்தார்கள்.

4223 / 4224. கைபர் போரின்போது மக்கள் (அடுப்புகளில்) பாத்திரங்களை வைத்து (நாட்டுக்கழுதை இறைச்சியை சமைத்து) விட்டிருக்க நபி(ஸல்) அவர்கள், 'பாத்திரங்களைக் கவிழ்த்து விடுங்கள்'' என்று கூறினார்கள்.

என பராஉ மற்றும் இப்னு அபீ அவ்ஃபா(ரலி) அவர்களும் அறிவித்தார்கள்.

4225 'நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் (கைபர்) போருக்குச் சென்றோம்...'' (என்று தொடங்கும்) முந்தைய ஹதீஸின் கருத்தில் அமைந்த பராஉ(ரலி) அவர்களின் இன்னோர் அறிவிப்பும் இடம் பெற்றுள்ளது.

4226. பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள், கைபர் போரின்போது நாட்டுக் கழுதைகளின் இறைச்சியை - அது பச்சையாயிருந்தாலும் சமைக்கப்பட்டிருந்தாலும் - எறிந்து விடுமாறு எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். அதற்குப் பின்பு அதனை உண்ணும்படி (அனுமதியளித்து) எங்களுக்கு அவர்கள் உத்தரவிடவேயில்லை.

4227. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்

நாட்டுக் கழுதைகளின் இறைச்சியைப் புசிக்க வேண்டாமென இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தடைவிதித்தற்குக் காரணம், அது மக்களைச் சுமந்து செல்லும் வாகனமாக இருப்பதனால் (அது உண்ணப்படும் பட்சத்தில்) அவர்களுக்கு வாகனம் இல்லாமல் போய் விடுவதை நபி(ஸல்) அவர்கள் வெறுத்தார்கள் என்பதாலா? அல்லது கைபர் போரின்போது நாட்டுக் கழுதைகளை (புசிக்க வேண்டாமென) அவர்கள் (நிரந்தரமாகத்) தடைசெய்துவிட்டார்களா என்று எனக்குத் தெரியாது.

4228. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கைபர் போரின்போது (போர்ச் செல்வத்திலிருந்து) குதிரைக்கு இரண்டு பங்குகளையும் காலாட்படை வீரருக்கு ஒரு பங்கையும் கொடுத்தார்கள்.

இந்த அறிவிப்பிற்கு நாஃபிஉ(ரஹ்), '(போரில் பங்கெடுத்த) ஒரு மனிதருடன் ஒரு குதிரையிருந்தால் (குதிரைக்காக இரண்டு பங்குகளும், உரிமையாளருக்காக ஒரு பங்கும் சேர்த்து) அவருக்கு மூன்று பங்குகள் கிடைக்கும். அவருடன் குதிரை இல்லாவிட்டால் அவருக்கு ஒரு பங்கு கிடைக்கும்'' என்று விளக்கம் அளித்தார்கள். 277

4229. ஜுபைர் இப்னு முத்யிம்(ரலி) அறிவித்தார்

நானும், உஸ்மான் இப்னு அஃப்பான்(ரலி) அவர்களும் நபி(ஸல்) அவர்களிடம் சென்று, '(இறைத்தூதர் அவர்களே!) கைபர் (போரில் கிடைத்த போர்ச் செல்வத்தின்) 'குமுஸ்' (ஐந்தில் ஒரு பாகம்) நிதியிலிருந்து பனூ முத்தலிப் கிளையினருக்குக் கொடுத்தீர்கள்; எங்களுக்குக் கொடுக்காமல் விட்டு விட்டீர்கள். நாங்களும் அவர்களும் உங்களுடன் ஒரே மாதிரியான உறவுமுறை உடையவர்கள் தாமே?' என்று கேட்டோம். அப்போது (இறைத்தூதர் - ஸல்) அவர்கள், 'பனூ முத்தலிபும் பனூ ஹாஷிமும் ஒருவர் தாம்'' என்று கூறினார்கள்.

(மற்றோர் அறிவிப்பில்,) 'பனூ அப்திஷம்ஸ் கிளையாருக்கும் பனூ நவ்ஃபல் கிளையாருக்கும் நபி(ஸல்) அவர்கள் (குமுஸில்) சிறிதும் பங்கு தரவில்லை'' என்று ஜுபைர்(ரலி) தெரிவித்துள்ளார்கள். 278

4230. அபூ மூஸா அல் அஷ்அரீ(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் (மக்காவைத் துறந்து மதீனாவை நோக்கி ஹிஜ்ரத்) புறப்பட்டுவிட்ட செய்தி, நாங்கள் யமன் நாட்டில் இருந்தபோது எங்களுக்குத் தெரியவந்தது. உடனே நானும் என் இரண்டு சகோதரர்களும் நபி(ஸல்) அவர்களை நோக்கி ஹிஜ்ரத் செய்யப் புறப்பட்டோம். அந்த என் இரண்டு சகோதரர்களில் ஒருவர் அபூ புர்தா ஆவார்; மற்றொருவர் அபூ ருஹ்கி ஆவார். நானே அவர்களில் வயதில் சிறியவன் ஆவேன்.

-அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூ புர்தா ஆமிர் இப்னு அபீ மூஸா(ரஹ்) கூறினார்:

''என்னுடைய (அஷ்அரீ) குலத்தாரில் ஐம்பத்திற்கும் மேற்பட்டவர்களுடன் சேர்ந்து நாங்கள் சென்றோம்'' என்றோ... 'ஐம்பத்திரண்டு பேர்களுடன்... அல்லது ஐம்பத்து மூன்று பேர்களுடன்... சேர்ந்து சென்றோம்.''..என்றோ (என் தந்தை அபூ மூஸா(ரலி)) கூறினார்கள்.

நாங்கள் ஒரு கப்பலில் ஏறி (மதீனா நோக்கிப்) பயணித்தோம். எங்கள் கப்பல் (திசைமாறி) அபிசீனியாவில் (மன்னர்) நஜாஷீயிடம் எங்களை (கொண்டு சென்று) இறக்கிவிட்டது. (அபிசினியாவில்) ஜஅஃபர் இப்னு அபீ தாலிப்(ரலி) அவர்களைத் தற்செயலாகச் சந்தித்தோம். (ஏற்னெவே அவர் மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்து வந்து, அவர் தம் சகாக்களுடன் அபிசீனியாவில் தங்கியிருந்தார்.) பிறகு (அவர் கேட்டுக் கொண்டதற்கிணங்க) அவருடன் நாங்களும் தங்கினோம். இறுதியில், நாங்கள் அனைவரும் சேர்ந்து (மதீனா) வந்து சேர்ந்தோம். நபி(ஸல்) அவர்கள் கைபரை வெற்றி கொண்டபோது அவர்களைச் சென்றடைந்தோம். 279

அப்போது சிலர், கப்பலில் வந்தவர்களான எங்களை நோக்கி, 'உங்களுக்கு முன்பே நாங்கள் ஹிஜ்ரத் செய்துவிட்டோம்'' என்று கூறலாயினர். எங்களுடன் (மதீனாவிற்கு) வந்தவர்களில் ஒருவரான (ஜஅஃபர் (ரலி) அவர்களின் துணைவியார் ஹஃப்ஸா(ரலி) அவர்களைச் சந்திப்பதற்காகச் சென்றார்கள். நஜாஷீ மன்னரை நோக்கி (அபிசீனியாவிற்கு) ஹிஜ்ரத் செய்தவர்களில் அஸ்மாவும் ஒருவராவார். பிறகு உமர்(ரலி) (தம் மகள்) ஹஃப்ஸா(ரலி) அவர்களின் இல்லத்திற்குச் சென்றார்கள். அப்போது ஹஃப்ஸா அவர்களுக்கு அருகில் அஸ்மா அவர்கள் இருந்தார்கள்.. உமர்(ரலி) அஸ்மா அவர்களைக் கண்டபோது, 'இவர் யார்?' என்று (தம் மகள் ஹஃப்ஸா அவர்களிடம்) கேட்டார்கள். '(இவர்) அஸ்மா பின்த் உமைஸ்'' என்று ஹஃப்ஸா(ரலி) அவர்கள் பதிலளித்தார்கள். உமர் (ரலி) அவர்கள், 'இவர், அபிசீனியரா? இவர் கடல் மார்க்கமாக (மதீனா) வந்தவரா?' என்று கேட்டார்கள். அதற்கு, 'ஆம்'' என்று அஸ்மா அவர்கள் பதிலளித்தார்கள். அப்போது உமர்(ரலி), 'உங்களுக்கு முன்பே நாங்கள் (மதீனாவிற்கு) ஹிஜ்ரத் செய்து வந்து விட்டோம். எனவே, உங்களை விட நாங்களே இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு மிகவும் உரியவர்கள் என்று கூறினார்கள். இது கேட்டு அஸ்மா(ரலி) கோபப்பட்டு, 'அல்லாஹ்வின் மீது மீதாணையாக! அப்படியில்லை. நீங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் இருந்தீர்கள். உங்களில் பசித்தவருக்கு அவர்கள் உணவளித்தார்கள். உங்களில் அறியாதவர்களுக்கு அவர்கள் அறிவூட்டினார்கள். (உடல் மற்றும் அறிவு ரீதியான நபியவர்களிடமிருந்து நீங்கள் உதவி பெற்று வந்தீர்கள்.) நாங்களோ வெகு தொலைவிலிருக்கும், பகைவர்கள் உள்ள அபிசீனிய நாட்டில்... அல்லது பூமியில்... இருந்தோம். அல்லாஹ்வுக்காகவும் அவனுடைய தூதருக்காகவுமே இதைச் செய்தோம். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீங்கள் சொன்னதை இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் தெரிவிக்கும் வரையில் நான் எதையும் உண்ணவோ குடிக்கவோ மாட்டேன். நாங்கள் துன்புறுத்தப்பட்டோம்; அச்சுறுத்தப்பட்டோம். நான் இதை நபி(ஸல்) அவர்களிடம் கூறி, அவர்களிடம் (நியாயம்) கேட்கப்போகிறேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் பொய் சொல்ல மாட்டேன்; திரித்துப் பேசவு மாட்டேன். நீங்கள் சொன்னதை விட கூட்டிச் சொல்லவும் மாட்டேன்'' என்று கூறினார்கள்.

4231. நபி(ஸல்) அவர்கள் வந்தபோது, அஸ்மா பின்த் உமைஸ்(ரலி), 'இறைத்தூதர் அவர்களே! உமர் அவர்கள் இன்னின்னவாறு கூறினார்கள்'' என்று கூறினார்கள். 'அவருக்கு நீ என்ன பதிலளித்தாய்?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டபோது, 'அவருக்கு இன்னின்னவாறு பதிலளித்தேன்'' என்று அஸ்மா அவர்கள் கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'உங்களை விட அவர் எனக்கு உரியவர் அல்லர். அவருக்கும் அவரின் சகாக்களுக்கும் ஒரேயொரு ஹிஜ்ரத் (செய்த சிறப்பு) தான் உண்டு. (அபிசினியாவிலிருந்து) கப்பலில் வந்தவர்களே! உங்களுக்கு (அபிசீனியாவிற்கு ஒன்றும், மதீனாவிற்கு ஒன்றுமாக) இரண்டு ஹிஜ்ரத் (செய்த சிறப்பு) உண்டு'' என்று கூறினார்கள்.

என அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.

4233. அபூ மூஸா(ரலி) அறிவித்தார்

(அபிசீனியாவிலிருந்து அஷ்அரீ குலத்தைச் சேர்ந்த) நாங்கள் கைபர் வெற்றிக்குப் பின் (ஜஅஃபர் (ரலி) அவர்களுடன்) நபி(ஸல்) அவர்களிடம் வந்தோம். அப்போது அவர்கள் (போர்ச் செல்வத்திலிருந்து) எங்களுக்கும் பங்கு தந்தார்கள். எங்களைத் தவிர (கைபர்) வெற்றியின்போது (படையில்) இருக்காத வேறெவருக்கும் நபி(ஸல்) அவர்கள் பங்கு தரவில்லை.

4234. அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் அறிவித்தார்

நாங்கள் கைபரை வெற்றி கொண்டோம். அப்போது நாங்கள் தங்கத்தையோ வெள்ளியையோ போர்ச் செல்வமாகப் பெறவில்லை. மாடு, ஒட்டகம், (வீட்டுப்) பொருள்கள், தோட்டங்கள் ஆகியவற்றையே போர்ச் செல்வமாகப் பெற்றோம். பிறகு நாங்கள், இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் (மதீனாவிற்கு அருகிலுள்ள) 'வாதில் குரா' என்னுமிடத்தை நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தோம். நபியவர்களுடன் 'மித்அம்' எனப்படும். ஓர் அடிமையும் இருந்தார். அவரை 'பனூளிபாப்' குலத்தாரில் (ரிஃபாஆ இப்னு ஸைத் என்ற) ஒருவர் நபி(ஸல்) அவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கியிருந்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்களின் சிவிகையை அந்த அடிமை இறக்கிக் கொண்டிருந்தபோது எங்கிருந்தோ வந்த ஓர் அம்பு அவரின் மீது பாய்ந்தது. 'அவருக்கு இறைவழியில் உயிர்த் தியாகம் செய்யும் பேறு கிடைத்து விட்டது. வாழ்த்துகள்!'' என்று மக்கள் கூறினர். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'இல்லை. என்னுடைய உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! போர்ச் செல்வங்கள் பங்கிடப்படும் முன் அவர் எடுத்துக் கொண்ட போர்வையே அவருக்கு நரக நெருப்பாகி எரிந்து கொண்டிருக்கிறது'' என்று கூறினார்கள்.

நபி(ஸல்) அவர்களிடமிருந்து இதைக் கேட்டபோது ஒருவர், ஒரு செருப்புவாரை... அல்லது இரண்டு செருப்புவார்களைக் ... கொண்டு வந்து, 'இது (போர்ச் செல்வம் பங்கிடப்படும் முன்) நான் எடுத்துக் கொண்ட பொருள்'' என்று கூறினார். அப்போது, இறைத்தூதர்(ஸல்) அவர்கள், '(இது சாதாரண செருப்பு வார் அல்ல. இதனைத் திருப்பித்தராமல் இருந்திருந்தால் இதுவே) நரகத்தின் செருப்பு வார்... அல்லது இரண்டு வார்கள்... ஆகும்'' என்று கூறினார்கள்.

4235. உமர் இப்னு கத்தாப்(ரலி) அறிவித்தார்

என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! பின்னால் வரும் மக்களை ஏதுமில்லாத வறியவர்களாக விட்டுச் சென்றுவிடுவோனோ என்ற அச்சம் எனக்கில்லையாயின், என்னுடைய ஆட்சிக் காலத்தில் எந்த ஊர் வெற்றி கொள்ளப்பட்டாலும் அதனை கைபர், நிலங்களை நபி(ஸல்) அவர்கள் பங்கிட்டுக் கொடுத்தது போன்று (தனி மனிதருக்கான வருவாய் மானியமாக) பங்கிட்டுக் கொடுத்திருப்பேன். எனினும், அவற்றை (எதிர்கால) மக்களுக்குக் கருவூலமாக (அறக் கொடையாக்கி)விட்டுச் செல்கிறேன். அதில் அவரவர் தத்தம் பங்கினைப் பெற்றுக்கொள்வர்.

4236. உமர்(ரலி) அறிவித்தார்

பின்னால் வரும் முஸ்லிம்கள் (உடைய ஏழ்மை பற்றிய அச்சம் எனக்கு) இல்லையாயின் எந்த ஊர் (என்னுடைய ஆட்சிக் காலத்தில்) வெற்றி கொள்ளப்படுகிறதோ அதனை, கைபர் நிலங்களை நபி(ஸல்) அவர்கள் பங்கிட்டுக கொடுத்தது போன்று நானும் பங்கிட்டுக் கொடுத்து விடுவேன்.

இதை அஸ்லம்(ரஹ்) அறிவித்தார். 281

4237. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்

(கைபர் வெற்றிக்குப் பிறகு) நான் நபி(ஸல்) அவர்களிடம் சென்று, '(போரில் கிடைத்த செல்வத்தில் எனக்கும் ஒரு பங்கு கொடுங்கள்'' என்று) கேட்டேன். அப்போது ஸயீத் இப்னு ஆஸ் உடைய மகன்களில் (அபான் என்றழைக்கப்பட்ட) ஒருவர் 'இவருக்குப் பங்கு கொடுக்காதீர்கள். இறைத்தூதர் அவர்களே!'' என்று கூறினார். உடனே நான், 'இவர் இப்னு கவ்கல் (என்ற நுஃமான் இப்னு மாலிக்) அவர்களை (உஹுதுப் போரில்) கொன்றவர்'' என்று கூறினேன். உடனே அவர் (என்னைப் பற்றி), 'என்ன ஆச்சரியம்! (தன்னுடைய 'தவ்ஸ்' குலத்தார் வசிக்கின்ற) 'ளஃன்' என்னும் மலை உச்சியிலிருந்து வந்திருக்கும் இந்தக் குழிமுயல் (ஒரு முஸ்லிமைக் கொன்றுவிட்டதற்காக என்னைக் குறை சொல்கிறதே!)'' என்று கூறினார். 282

4238. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள், அபான் இப்னு ஸயீத்) அவர்களை ஒரு போர்ப் படையில் (தளபதியாக) மதீனாவிலிருந்து நஜ்தை நோக்கி அனுப்பி வைத்தார்கள். பிறகு, கைபர் வெற்றிக்குப் பின் அங்கிருந்த நபி(ஸல்) அவர்களிடம் அபானும் அவரின் தோழர்களும் வந்தனர். அவர்களின் குதிரைகளின் சேணங்களெல்லாம் பேரீச்ச மர நார்களைப் போல் இருந்தன. (வெற்றிச் செல்வங்கள் ஏதுமின்றி வெற்றுடலாய் காணப்பட்டன.) அப்போது நான், 'இறைத்தூதர் அவர்களே! (கைபரில் கிடைத்த போர்ச் செல்வத்திலிருந்து) இவர்களுக்குப் பங்கிட்டுத் தராதீர்கள்'' என்று கூறினேன். அதற்கு அபான் அவர்கள், 'ளஃன்' மலை உச்சியிலிருந்து இறங்கி வந்த குழிமுயலே! நீயா இப்படி(ச் சொல்கிறாய்)?' என்று கேட்டார். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'அபானே! அமருங்கள்'' என்று கூறினார்கள். ஆனால், அவர்களுக்கு (போர்ச் செல்வத்தில்) பங்கு தரவில்லை.

4239. ஸயீத் இப்னு அம்ர்(ரஹ்) அறிவித்தார்

(கைபர் வெற்றிக்குப் பின்) அபான் இப்னு ஸயீத்(ரலி) நபி(ஸல்) அவர்களிடம் வந்து சலாம் கூறினார்கள். அப்போது அபூ ஹுரைரா(ரலி), 'இறைத்தூதர் அவர்களே! இவர் இப்னு கவ்கல் (என்ற நுஃமான் இப்னு மாலிக்) அவர்களைக் கொன்றவர்'' என்று கூறினார்கள். உடனே அபான் அவர்கள் அபூ ஹுரைரா அவர்களை நோக்கி, 'என்ன ஆச்சரியம்! 'ளஃன்' மலை உச்சியிலிருந்து துள்ளியோடி வந்திருக்கும். இந்தக் குழிமுயல் (நான் முஸ்லிமாகாமல் இருந்தபோது உஹுதுப் போரில் இப்னு கவ்கல் எனும் முஸ்லிமான) ஒரு மனிதரைக் கொன்றுவிட்டதற்காக என்னைக் குறை சொல்கிறதே! அல்லாஹ் என் கைகளால் (வீர மரணத்தை அவருக்கு வழங்கி) அவரை கண்ணியப்படுத்தியுள்ளான். (அப்போது என்னை அவர் கொன்றிருந்தால் நான் இழிவுக்குரியவனாகி இழப்புக்குள்ளாகிப் போயிருப்பேன். ஆனால்,) அவரின் கைகளால் என்னைக் கேவலப்படுத்தாமல் அல்லாஹ் தடுத்துவிட்டான்'' என்று கூறினார்கள். 283

4240 / 4241. ஆயிஷா(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்களின் மகள் ஃபாத்திமா(ரலி) (நபியவர்களின் மறைவுக்குப் பிறகு, கலீஃபா) அபூ பக்ர்(ரலி) அவர்களுக்கு ஆளனுப்பி, இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் ஒதுக்கித் தந்திருந்த மதீனா மற்றும் ஃபதக் சொத்திலிருந்தும், கைபரின் ஐந்தில் ஒரு பகுதி நிதியில் மீதியிருந்ததிலிருந்து தமக்குச் சேர வேண்டிய வாரிசுமையைத் கேட்டார்கள். 284 அதற்கு அபூ பக்ர்(ரலி), 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ('நபிமார்களான) எங்கள் சொத்துக்களுக்கு வாரிசாக யாரும் வர முடியாது. நாங்கள்விட்டுச் செல்பவையெல்லாம் தர்மம் செய்யப்பட வேண்டியவை ஆகும். இச்செல்வத்திலிருந்தே முஹம்மதின் குடும்பத்தினர் சாப்பிடுவார்கள்' என்று சொல்லியிருக்கிறார்கள். (எனவே,) அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இறைத்தூதர்(ஸல்) அவர்களின் தர்மச் சொத்தில் நான் எந்தச் சிறு மாற்றத்தையும் செய்ய மாட்டேன். இறைத்தூதர்(ஸல்) அவர்களின் காலத்தில் எந்த நிலையில் அச்சொத்துகள் இருந்து வந்தனவோ, அதே நிலையில் அவை நீடிக்கும். அதில் (அச்சொத்துக்களைப் பங்கிடும் விஷயத்தில்) நபி(ஸல்) அவர்கள் செயல்பட்டபடியே நானும் செயல்படுவேன்'' என்று (ஃபாத்திமா அவர்களுக்கு) பதில் கூறி(யனுப்பி)னார்கள். ஃபாத்திமா(ரலி) அவர்களிடம் அவற்றில் எதையும் ஒப்படைக்க அபூ பக்ர்(ரலி) மறுத்துவிட்டார்கள். இதனால் அபூ பக்ர்(ரலி) மீது மனவருத்தம் கொண்டு இறக்கும் வரையில் அவர்களுடன் ஃபாத்திமா(ரலி) பேசவில்லை. நபி(ஸல்) அவர்கள் இறந்த பின், ஆறுமாதகாலம் ஃபாத்திமா(ரலி) உயிர் வாழ்ந்தார்கள். ஃபாத்திமா(ரலி) இறந்தபோது, அவர்களின் கணவர் அலீ(ரலி), (இறப்படைவதற்கு முன் ஃபாத்திமா அவர்கள் கேட்டுக் கொண்டிருந்ததற்கிணங்க) இரவிலேயே அவர்களை அடக்கம் செய்தார்கள். அப்போது அபூ பக்ர்(ரலி) அவர்களுக்குக் கூட இது குறித்துத் தெரிவிக்கவில்லை. அலீ(ரலி) அவர்களே ஃபாத்திமா(ரலி) அவர்களுக்கு (ஜனாஸாத் தொழுகை) தொழுகை நடத்தினார்கள். ஃபாத்திமா(ரலி) வாழ்ந்த வரையில் அலீ(ரலி) மீது மக்களிடையே (மரியாதையுடன் கூடிய) தனிக்கவனம் இருந்து வந்தது. ஃபாத்திமா(ரலி) இறந்துவிட்ட பின் மக்களின் முகங்களில் (மரியாதையில்) மாற்றத்தை அலீ(ரலி) கண்டார்கள். 285 எனவே, (ஆட்சித் தலைவர்) அபூ பக்ரிடம் சமரசம் பேசவும் பைஅத் - விசுவாசப் பிரமாணம் செய்து கொள்ளவும் விரும்பினார்கள். அந்த (ஆறு) மாதங்களில் அபூ பக்ர்(ரலி) அவர்களுக்கு அலீ(ரலி) விசுவாசப் பிரமாணம் செய்து கொடுத்திருக்கவில்லை. எனவே, 'தாங்கள் (மட்டும்) எங்களிடம் வாருங்கள். தங்களுடன் வேறெவரும் வரவேண்டாம்'' என்று கூறி அலீ(ரலி) அபூ பக்ர்(ரலி) அவர்களுக்கு ஆளனுப்பினார்கள். (அபூ பக்ர்-ரலி - அவர்களுடன்) உமர்(ரலி) வருவதை அலீ(ரலி) விரும்பாததே (அலீ-ரலி அவர்கள் இவ்வாறு கூறக்) காரணமாகும. அப்போது உமர்(ரலி) (அபூ பக்ர் - ரலி - அவர்களிடம்), 'அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீங்கள் மட்டும் அவர்களிடம் தனியாகச் செல்லாதீர்கள் (உங்களுக்குரிய கண்ணியத்தை அவர்கள் கொடுக்காமல் இருந்து விடலாம்)'' என்று கூறினார்கள். அதற்கு அபூ பக்ர்(ரலி), என் விஷயத்தில் அவர்கள் அப்படி நடந்து கொள்வார்கள் என்றா நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்? அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவர்களிடம் நான் செல்லத்தான் செய்வேன்'' என்று கூறிவிட்டு, அவர்களிடம் சென்றார்கள். அப்போது அலீ(ரலி), ஏகத்துவ உறுதிமொழியைக் கூறி இறைவனைத் துதித்தார்கள். பிறகு, (அபூ பக்ர் - ரலி- அவர்களை நோக்கி) 'தங்கள் சிறப்பையும் தங்களுக்கு அல்லாஹ் வழங்கியிருக்கும் (ஆட்சித் தலைமைப்) பொறுப்பையும் நாங்கள் ஒப்புக் கொள்கிறோம். அல்லாஹ் உங்களுக்கு வழங்கியிருக்கும் இந்த (ஆட்சித் தலைமை எனும்) நன்மையைக் குறித்து நாங்கள் பொறமைப்படவில்லை. ஆயினும், இந்த (ஆட்சிப் பொறுப்பு) விஷயத்தில் (எங்களிடம் ஆலோசனை கலக்காமல்) தன்னிச்சையாகச் செயல்பட்டு விட்டீர்கள். ஆனால், இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் எங்களுக்குள் உறவு முறையின் காரணத்தால் (ஆட்சித் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில்) எங்களுக்குப் பங்கு உண்டு என நாங்கள் கருதிவந்தோம்'' என்று கூறினார்கள். (இது கேட்டு) அபூ பக்ர்(ரலி) அவர்களின் கண்கள் (கண்ணீரைச்) சொரிந்தன. அபூ பக்ர்(ரலி) பேசத் துவங்கியபோது, 'என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! என்னுடைய உறவினர்களுடன் உறவைப் பேணி நான் வாழ்வதை விட, இறைத்தூதர்(ஸல்) அவர்களின் உறவினர்களே எனக்கு மிகவும் உவப்பானவர்கள். இச்செல்வங்கள் தொடர்பாக எனக்கும் உங்களுக்குமிடையில் ஏற்பட்ட (கருத்து வேறுபாட்டின்) விவகாரத்தில் நான் நன்மை எதையும் குறைத்து விடவில்லை. இது விஷயத்தில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் செய்யக் கண்ட எதையும் நான் செய்யாமல் விட்டு விடவுமில்லை'' என்று கூறினார்கள். அப்போது அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் அலீ(ரலி), 'தங்களுக்கு விசுவாசப் பிரமாணம் செய்து கொடுப்பதற்கான நேரம் (இன்று) மாலையாகும'' என்று கூறினார்கள். பிறகு அபூ பக்ர்(ரலி) லுஹ்ருத் தொழுகையை முடித்ததும் மிம்பர் (மேடை) மீதேறி ஏகத்துவ உறுதிமொழி கூறி, இறைவனைப் புகழ்ந்த பிறகு அலீ(ரலி) குறித்தும், அவர்கள் தமக்கு விசுவாசப் பிரமாணம் செய்து கொடுக்கத் தாமதமானது குறித்தும், அதற்கு அலீ(ரலி) தம்மிடம் கூறிய காரணம் குறித்தும் எடுத்துரைத்தார்கள். பிறகு அலீ(ரலி) (இறைவனிடம்) பாவமன்னிப்புக் கோரிவிட்டு, ஏகத்துவ உறுதிமொழி கூறிய பின் அபூ பக்ர்(ரலி) அவர்களின் தகுதியைக் கண்ணியப்படுத்திப் பேசினார்கள். தொடர்ந்து அவர்கள், தாம் செய்த இக்காரியத்திற்குக் காரணம், அபூ பக்ர்(ரலி) மீது கொண்ட பொறாமையோ அல்லது அவர்களுக்கு அல்லாஹ் வழங்கிய சிறப்பை நிராகரித்தோ அல்ல மாறாக, (ஆட்சித் தலைமையைத் தேர்ந்தெடுக்கும்) இந்த விஷயத்தில் எங்களுக்கும் பங்கு உண்டு என (நபி - ஸல் - அவர்களின் குடும்பத்தினராகிய) நாங்கள் கருதியதேயாகும். ஆனால், அபூ பக்ர்(ரலி) (எங்களிடம் கேட்காமல்) தன்னிச்சையாகச் செயல்பட்டுவிட்டார்கள். அதனால் எங்களுக்கு மனவருத்தம் ஏற்பட்டது'' என்று கூறினார்கள். இதைக் கேட்டு முஸ்லிம்கள் மகிழ்ச்சியடைந்து (அலீ அவர்களைப் பார்த்து) 'நீங்கள் சரியாகவே சொன்னீர்கள்'' என்று கூறினர். தம் போக்கை அலீ(ரலி) திரும்பவும் இயல்பான நிலைக்குக் கொண்டு வந்துவிட்டபோது முஸ்லிம்கள் அலீ(ரலி) அவர்களுக்கு மிகவும் நெருக்கமானவர்களாக ஆகி விட்டனர். 286

4242. ஆயிஷா(ரலி) அறிவித்தார்

கைபர் வெற்றி கொள்ளப்பட்டபோது, 'இனி நம் வயிறு பேரீச்சங்கனிகளால் நிரம்பும்'' என்று நாங்கள் சொல்லிக் கொண்டோம்.

4243. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்

கைபரை வெற்றி கொள்ளும் வரையில் நாங்கள் வயிறு நிரம்பச் சாப்பிட்டதில்லை.

பகுதி 40

கைபர் வாசிகளுக்கு நபி(ஸல்) அவர்கள் அதிகாரி ஒருவரை நியமனம் செய்தது. 287

4244 / 4245 அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அவர்களும் அபூ ஹுரைரா(ரலி) அவர்களும் அறிவித்தார்கள்

(கைபர் வெற்றிக்குப் பின்) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (ஸவாத் இப்னு ஃகஸிய்யா என்றழைக்கப்படும்) ஒருவரை கைபரின் அதிகாரியாக நியமனம் செய்தார்கள். அங்கிருந்து அவர் உயர் ரகப் பேரீச்சங்கனிகளை இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கொண்டு வந்தார். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'கைபரின் பேரீச்சங்கனிகள் எல்லாமே இப்படி (உயர் ரகமானதாக)த் தான் உள்ளனவா?' என்று கேட்டார்கள். அதற்கவர், 'அல்லாஹ்வின் மீதாணையாக! இல்லை; அல்லாஹ்வின் தூதரே! மட்டமான பேரீச்சங்கனிகளில் இரண்டு “ஸாஉ'களுக்கு இந்த உயர் ரகப் பேரீச்சங்கனிகளில் ஒரு “ஸாஉ'வையும், மட்டமான பேரீச்சங்கனிகளில் மூன்று “ஸாஉ'களுக்கு இந்தப் பேரீச்சங்கனிகளில் இரண்டு “ஸாஉ'களையும் நாங்கள் வாங்கு வோம்” எனக் கூறினார். 288

4246 / 4247 அபூ ஸயீத்(ரலி) அவர்களும் அபூ ஹுரைரா(ரலி) அவர்களும் கூறினார்கள்

அன்சாரிகளில் பனூ அதீ குடும்பத்தின் சகோதரர் (ஸாவத் இப்னு ஃகஸிய்யா என்றழைக்கப்படும்) ஒருவரை கைபருக்கு அதிகாரியாக்கி நபி(ஸல்) அவர்கள் அனுப்பி வைத்தார்கள்...

இதே ஹதீஸ் இன்னோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இடம் பெற்றுள்ளது.

பகுதி 41

வயல்களில் பயிர் செய்ய கைபர் வாசிகளை நபி(ஸல்) அவர்கள் அனுமதித்து.

4248. அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவித்தார்

கைபர் பகுதியில் உள்ள நிலங்களை யூதர்களுக்கு, 'அவர்கள் அவற்றில் உழைத்து விவசாயம் செய்து கொள்ளலாம். அதிலிருந்து கிடைக்கும் விளைச்சலில் பாதி அவர்களுக்குரியது. (மீதிப் பாதியை மதீனாவின் இஸ்லாமிய அரசுக்குக் கொடுத்து விட வேண்டும்)' என்னும் நிபந்தனையின் போரில் நபி(ஸல்) அவர்கள் கொடுத்தார்கள். 289

பகுதி 42

கைபரில் நபி(ஸல்) அவர்களுக்கு விஷம் தோய்த்துக் கொடுக்கப்பட்ட ஆடு. 290

இது குறித்து ஆயிஷா(ரலி) அவர்களின் வாயிலாக உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அறிவித்தார்கள். 291

4249. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்

கைபர் வெற்றி கொள்ளப்பட்டபோது இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு விஷயம் கலந்த ஆடு ஒன்று அன்பளிப்பாக தரப்பட்டது. 292

பகுதி 43

ஸைத் இப்னு ஹாரிஸாப் போர் 293

4250. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள், உஸாமா இப்னு ஸைத்(ரலி) அவர்களை ஒரு படைக் குழுவினருக்குத் தளபதியாக்கி அனுப்பினார்கள். மக்களில் சிலர் ஸைத் அவர்களின் தலைமையைக் குறை கூறினாக்ள். அப்போது நபி(ஸல்) அவர்கள், '(இப்போது) இவரின் தலைமையை நீங்கள் குறை கூறுகிறீர்கள் என்றால்... (இது ஒன்றும் புதிதல்ல). இவருக்கு முன் (மூத்தா போரின் போது) இவருடைய தந்தையின் (ஸைத் அவர்களின்) தலைமையையும் நீங்கள் குறைகூறிக் கொண்டிருந்தீர்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் தலைமைப் பொறுப்புக்குத் தகுதியுடையவராகவே இருந்தார். மேலும், அவர் மக்களிலேயே எனக்கு மிகவும் விருப்பமானவராக இருந்தார். (அவரின் மகனான) இவர்தான் அவருக்குப் பின் எனக்கு மிகவும் பிரியமானவராவார்'' என்று கூறினார்கள். 294

பகுதி 44 295

உம்ரத்துல் களா

இது குறித்து நபி(ஸல்) அவர்களிடமிருந்து அனஸ்(ரலி) அறிவிப்புச் செய்துள்ளார்கள். 296

4251. பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் 'துல்கஅதா' மாதத்தில் உம்ரா செய்யச் சென்றபோது மக்காவாசிகள் அவர்களை மக்காவிற்குள் நுழைய விட மறுத்தார்கள். இறுதியில், நபி(ஸல்) அவர்கள், 'மக்காவில் (வரும் ஆண்டில்), தாம் (தம் தோழர்களுடன்) மூன்று நாள்கள் தங்க (அனுமதிக்க) வேண்டும்' என்னும் நிபந்தனையின் போரில் மக்காவாசிகளுடன் சமாதான ஒப்பந்தம் செய்தார்கள். ஒப்பந்தத்தை அவர்கள் எழுதியபோது, 'இது அல்லாஹ்வின் தூதரான முஹம்மத் அவர்கள் செய்த சமாதான ஒப்பந்தத்தின் ஷரத்துகள்' என்று எழுதினார்கள். உடனே மக்காவாசிகள், 'நாங்கள் இதை ஒப்புக் கொள்ள மாட்டோம். நீங்கள் இறைத்தூதர் தாம் என்று நாங்கள் நம்புவோமாயின் உங்களை (மக்காவில் நுழைய விடாமல்) தடுத்திருக்க மாட்டோம். ஆயினும், நீங்கள் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மது தான்'' என்று கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'நான் அல்லாஹ்வின் தூதராவேன்; அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மதும் ஆவேன்'' என்று பதிலளித்துவிட்டு, அலீ(ரலி) அவர்களை நோக்கி, 'இறைத்தூதர்' என்பதை அழித்து விடுங்கள்'' என்று கூறினார்கள். அலீ(ரலி), 'முடியாது. அல்லாஹ்வின் மீதாணையாக! நான் தங்கள் (அந்தஸ்தைக் குறிக்கும்) பெயரை ஒருபோதும் அழிக்க மாட்டேன்'' என்று கூறிவிட்டார்கள். உடனே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பத்திரத்தை எடுத்தார்கள் - அவர்களுக்கு எழுதத் தெரிந்திருக்கவில்லை-பிறகு, 'இது அப்துல்லாஹ்வின் குமாரர், முஹம்மத் செய்த சமாதான ஒப்பந்தம் ஆகும். அதன் விபரமாவது: முஸ்லிம்களில் எவரும்) உறையிலிட்ட வாளைத் தவிர வேறு ஆயுதங்களை மக்காவிற்குள் கொண்டு வரக் கூடாது. மக்கா வாசிகளில் எவரும் முஹம்மதைப் பின்தொடர்ந்து வர விரும்பினாலும் கூட, அவரை முஹம்மது தம்முடன் அழைத்துச் செல்லக் கூடாது. மேலும், தம் தோழர்களில் எவரும் மக்காவில் தங்கிவிட விரும்பினால் அவரை முஹம்மது தடுக்கக் கூடாது'' என்று எழுதி (விடுமாறு கூறி)னார்கள். (அடுத்த ஆண்டு) நபி(ஸல்) அவர்கள் மக்காவினுள் நுழைந்தபோது (அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட) தவணை(யான மூன்று நாள்கள்) முடிந்தவுடன் மக்காவாசிகள் அலீ(ரலி) அவர்களிடம் வந்து, 'உங்கள் தோழரிடம் எங்களை (எங்கள் நகரை)விட்டு வெளியேறும் படிக் கூறுங்கள். ஏனெனில், தவணைக் காலம் முடிந்துவிட்டது'' என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்களும் (மக்காவைவிட்டு) வெளியேறினார்கள். அப்போது (உஹுதுப் போரில் கொல்லப்பட்டிருந்த) ஹம்ஸா(ரலி) அவர்களின் (அனாதை) மகள், 'என் சிறிய தந்தையே! என் சிறிய தந்தையே!'' என்று (கூவிக் கொண்டே) நபி(ஸல்) அவர்களைப் பின்தொடர்ந்து வந்தாள். அலீ(ரலி) அச்சிறுமியை (பரிவோடு) எடுத்து அவளுடைய கையைப் பிடித்தார்கள். ஃபாத்திமா(ரலி) அவர்களிடம், 'இவளை எடுத்துக் கொள். (இவள்) உன் தந்தையின் சகோதரருடைய மகள். இவளைத் தூக்கி வைத்துக்கொள்'' என்று கூறினார்கள். அச்சிறுமியின் விஷயத்தில் அலீ(ரலி) அவர்களும், ஸைத் இப்னு ஹாரிஸா(ரலி) அவர்களும், ஜஅஃபர்(ரலி) அவர்களும் (ஒவ்வொருவரும், 'அவளை நான்தான் வளர்ப்பேன்' என்று) ஒருவரோடொருவர் போட்டியிட்(டு சச்சரவிட்டுக் கொண்ட)னர். அலீ(ரலி), 'நானே இவளுக்கு மிகவும் உரிமையுடையவன். ஏனெனில், இவள் என் சிறிய தந்தையின் மகள்'' என்று கூறினார்கள். ஜஅஃபர்(ரலி), 'இவள் என் சிறிய தந்தையின் மகள். மேலும், இவளுடைய சிற்றன்னை (அஸ்மா பின்த் உமைஸ்) என் மனைவியாவார்'' என்று கூறினார்கள். ஸைத்(ரலி), '(இவள், நபியவர்கள் ஏற்படுத்திய சகோதரத்துவத்தின் மூலம் வந்த) என் சகோதரரின் மகள்'' என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் அச்சிறுமியின் சிற்றன்னைக்கு சாதகமாக (சிற்றன்னையின் கணவரான ஜஅஃபர் - ரலி அவர்கள், அவளை வளர்க்கட்டும் என்று) தீர்ப்பளித்தார்கள். மேலும், 'சிற்றன்னை அன்னையின் அந்தஸ்தில் இருக்கிறாள்'' என்று கூறினார்கள். அலீ(ரலி) அவர்களை நோக்கி, 'நீங்கள் என்னைச் சேர்ந்தவர்; நான் உங்களைச் சேர்ந்தவன்'' என்று (ஆறுதலாகக்) கூறினார்கள். ஜஅஃபர்(ரலி) அவர்களை நோக்கி, 'நீங்கள் தோற்றத்திலும் குணத்திலும் என்னை ஒத்திருக்கிறீர்கள்'' என்று கூறினார்கள். மேலும், ஸைத்(ரலி) அவர்களை நோக்கி, 'நீங்கள் எம் சகோதரர்; எம்(மால் விடுதலை செய்யப்பட்ட, எம்முடைய பொறுப்பிலுள்ள) அடிமை (ஊழியர்)'' என்று கூறினார்கள். 297 அலீ(ரலி), 'தாங்கள் ஹம்ஸாவின் மகளை மணந்துகொள்ளக் கூடாதா?' என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அவள் பால்குடி உறவு முறையில் என் சகோதரரின் மகள் ஆவாள். (எனவே, நான் அவளை மணமுடிக்க முடியாது)'' என்று கூறினார்கள். 298

4245. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் உம்ரா செய்ய நாடியவர்களாக (மக்காவை நோக்கிப்) புறப்பட்டார்கள். குறைஷிகளில் இறைமறுப்பாளர்கள் அவர்களை இறையில்லம் கஅபாவிற்குச் செல்ல விடாமல் தடுத்தனர். எனவே, நபி(ஸல்) அவர்கள் ஹுதைபிய்யாவில் தம் தியாகப் பிராணியை அறுத்து (பலியிட்டு)விட்டுத் தம் தலையை மழித்துக் கொண்டார்கள். மேலும், அவர்களுடன், 'வரும் ஆண்டில் தாம் (தம் தோழர்களுடன்) உம்ராசெய்ய (அனுமதிக்கப்பட) வேண்டும்; வாள்களைத் தவிர வேறு ஆயுதங்களை நாங்கள் எடுத்து வர மாட்டோம்; குறைஷிகள் விரும்புகிற வரை மட்டுமே மக்காவில் தங்கியிருப்போம்' என்னும் நிபந்தனையின் போரில் சமாதான ஒப்பந்தம் செய்தார்கள். அவர்களிடம் செய்த சமாதான ஒப்பந்தத்தின் படியே அடுத்த ஆண்டு உம்ரா செய்ய நாடி, மக்கா நகரினுள் நுழைந்தார்கள். அங்கு மூன்று நாள்கள் தங்கி (முடித்து)விட்டபோது, குறைஷிகள் நபி(ஸல்) அவர்களை (மக்காவைவிட்டு) வெளியேறும் படி உத்தரவிட, நபி(ஸல்) அவர்களும் வெளியேறிவிட்டார்கள். 299

4253. முஜாஹித்(ரஹ்) அறிவித்தார்

நானும் உர்வா இப்னு ஸுபைரும் மஸ்ஜிது(ன் நபவீ)க்குச் சென்றோம். அங்கே ஆயிஷா(ரலி) அவர்களின் அறைக்கருகே அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அமர்ந்திருந்தார்கள். அவர்களிடம், 'நபி(ஸல்) அவர்கள் எத்தனை உம்ராக்கள் செய்துள்ளார்கள்?' என உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) கேட்டார்கள். அதற்கவர்கள், 'நான்கு; அவற்றில் ஒன்றை ரஜப் மாதத்தில் செய்தார்கள்'' என்றார்கள்.

4253. பிறகு, (அறையில்) ஆயிஷா(ரலி) பல்துலக்கும் சப்தத்தைக் கேட்டோம். அப்போது உர்வா(ரஹ்), 'இறைநம்பிக்கையாளர்களின் அன்னையே! அபூ அப்திர் ரஹ்மான் (இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுவதைச் செவியுற்றீர்களா? 'நபி(ஸல்) அவர்கள், நான்கு உம்ராக்கள் செய்தார்கள்; அவற்றில் ஒன்றை ரஜப் மாதத்தில் செய்தார்கள்' என்று இப்னு உமர் சொல்கிறார்கள்' எனக் கூறினார். ஆயிஷா(ரலி), 'நபி(ஸல்) அவர்கள் உம்ரா செய்யும் போதெல்லாம் அவர்களுடன் இப்னு உமரும் இருந்திருக்கிறார். (மறந்துவிட்டார் போலும்.) நபி(ஸல்) அவர்கள் ரஜப் மாதத்தில் உம்ரா செய்ததே இல்லை'' என்று கூறினார்கள். 300

4255. இப்னு அபீ அவ்ஃபா(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (ஹுதைபிய்யா சமாதான உடன் படிக்கையின் படி ஹிஜ்ரீ 7-ம் ஆண்டு) உம்ரா செய்தபோது, நபி(ஸல்) அவர்களைத் (தாக்கித்) துன்புறுத்தி விடாமலிருப்பதற்காக அவர்களை இணைவைப்போரிடமிருந்தும் அவர்களின் இளைஞர்களிடமிருந்தும் நாங்கள் (பாதுகாப்பு வளையம் அமைத்து) மறைத்துக் கொண்டோம். 301

4256. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் தோழர்களுடன் (உம்ரத்துல் களாவிற்காக மக்காவுக்கு) வந்தபோது, 'யஸ்ரிபின் ஜுரத்தால் (மதீனாவில் தோன்றிய காய்ச்சலால்) பலவீனப்பட்ட நிலையில் ஒரு குழு நம்மிடம் வந்துள்ளது'' என்று இணைவைப்போர் பேசிக் கொண்டனர். அப்போது (பலவீனப்படவில்லை எனக் காட்டுவதற்காக) நபி(ஸல்) அவர்கள் '(கஅபாவை வலம் வருகையில்) மூன்று சுற்றுகள் தோள்களைக் குலுக்கிய வாறு ஓட வேண்டும்' என்றும் 'ஹஜருல் அஸ்வக்கும் ருக்னுல் யமானிக்கும் இடையே நடந்து செல்ல வேண்டும்' என்றும் கட்டளையிட்டார்கள். '(வலம் வரும் போது) மொத்தச் சுற்றுக்களிலும் தோள்களைக் குலுக்கியவாறு ஓட வேண்டும்' என்று நபி(ஸல்) அவர்களின் மீது கொண்ட இரக்கமேயாகும். 302

''நபி(ஸல்) அவர்கள் பாதுகாப்புப் பெற்ற ஆண்டில் (உம்ரத்துல் களாவிற்காக) மக்காவிற்கு வந்தபோது (தம் தோழர்களை நோக்கி,) '(கஅபாவை வலம் வருகையில்) தோள்களைக் குலுக்கியவாறு ஓடுங்கள்; ஏனெனில், உங்கள் பலத்தை இணை வைப்போருக்கு நான் காட்டவேண்டும்'' என்று கூறினார்கள். அப்போது இணை வைப்பவர்கள், 'ஃகுஅய்கிஆன்' என்னும் மலையின் திசையில் (இருந்து எட்டிப் பார்த்துக் கொண்டு) இருந்தார்கள்'' என்று இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார் என இப்னு சல்மா(ரஹ்) அவர்களின் அறிவிப்பில், அதிகப்படியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

4257. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் இறையில்ல(ம் கஅபாவை வலம் வந்த நேர)த்திலும் ஸஃபா - மர்வா இடையேயும் தொங்கோட்டம் ஓடியதெல்லாம், இணைவைப்போருக்குத் தம் வலிமையைக் காட்டுவதற்காகத்தான்.

4258. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்

(ஹுதைபிய்யா உடன்படிக்கையின் படி ஹிஜ்ரி 7-ல் உம்ரா செய்வதற்காக) நபி(ஸல்) அவர்கள் இஹ்ராம் அணிந்திருந்த நிலையில் மைமூனா(ரலி) அவர்களை மணந்தார்கள். இஹ்ராமிலிருந்து விடுபட்ட நிலையில் அவர்களுடன் வீடு கூடினார்கள். பிறகு மைமூனா(ரலி) (மக்காவிலிருந்து சிறிது தொலையிலுள்ள) 'சாரிஃப்' என்னுமிடத்தில் இறந்தார்கள். 303

4259. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் (ஹிஜ்ரி 7-ல் செய்த) 'உம்ரத்துல களா'வின்போது (முந்தைய ஆண்டு விடுபட்ட உம்ராவை நிறை வேற்றிய போது) மைமூனா(ரலி) அவர்களை மணந்தார்கள்.

பகுதி 45

ஷாம் நாட்டில் நடைபெற்ற 'மூத்தா' போர். 304

4260. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்

மூத்தா போரின்போது நான் ஜஅஃபர்(ரலி) கொல்லப்பட்டு (விழுந்து) கிடக்க, அவர்களருகே நின்று (அவர்கள் அடைந்திருந்த) ஈட்டிக் காயங்களும் வாட்களின் காயங்களுமாக ஐம்பது காயங்களை எண்ணினேன். அவற்றில் ஒன்று கூட அவர்களின் முதுகில் (ஏற்பட்ட காயமாக) இருக்கவில்லை. (அனைத்தும் விழுப்புண்களாகவே இருந்தன.)

4261. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மூத்தா போரின்போது ஸைத் இப்னு ஹாரிஸா(ரலி) அவர்களைப் படைத் தளபதியாக நியமித்தார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'ஸைத் கொல்லப்பட்டால் ஜஅஃபர் (தலைமையேற்கட்டும்!) ஜஅஃபர் கொல்லப்பட்டால் அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (தலைமையேற்கட்டும்)'' என்று கூறினார்கள். நான் அந்தப் புனிதப் போரில் அவர்களுடன் (பங்கேற்று) இருந்தேன். நாங்கள் ஜஅஃபர் இப்னு அபீ தாலிப்(ரலி) அவர்களைத் தேடிச் சென்றபோது கொலையுண்டவர்களில் அவரைக் கண்டோம். அவர்களின் உடலில் இருந்த காயங்கள், ஈட்டிக் காயங்களும் அம்புக் காயங்களுமாக மொத்தம் தொண்ணூற்றுக்கும் அதிகமானவையாய் இருக்கக் கண்டோம். 305

4262. அனஸ்(ரலி) அறிவித்தார்

ஸைத் இப்னு ஹாரிஸா (ரலி) அவர்களும் ஜஅஃபர் இப்னு அபீ தாலிப் (ரலி) அவர்களும் (அப்துல்லாஹ்) இப்னு ரவாஹா(ரலி) அவர்களும் (மூத்தா போர்க்களத்தில்) கொல்லப்பட்டுவிட்ட செய்தியை, அது (மதீனாவிற்கு) வந்து சேர்வதற்கு முன்பே (இறைவனால் அறிவிக்கப் பெற்று மக்களுக்கு) நபி(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள். அப்போது கூறினார்கள்.

(முதலில் இஸ்லாமியச் சேனையின்) கொடியை ஸைத் பிடித்தார். அவர் கொல்லப்பட்டுவிட்டார். அடுத்து ஜஅஃபர் பிடித்தார். அவரும் கொல்லப்பட்டுவிட்டார். அடுத்து இப்னு ரவாஹா பிடித்தார். அவரும் கொல்லப்பட்டுவிட்டார்.

அறிவிப்பாளர் கூறுகிறார்: அப்போது நபி(ஸல்) அவர்களின் கண்கள் இரண்டும் கண்ணீரசை; சொரிந்து கொண்டிருந்தன. இறுதியில், அக்கொடியை அல்லாஹ்வின் வாட்களில் ஒரு வாள் (காலித் இப்னு வலீத்) எடுத்தது. அல்லாஹ் (அவரின் கரத்தில்) முஸ்லிம்களுக்கு வெற்றியை அளித்துவிட்டான்'' என்று கூறினார்கள். 306

4263. ஆயிஷா(ரலி) அறிவித்தார்

(மூத்தா போரில்) இப்னு ஹாரிஸா, ஜஅஃபர் இப்னு அபீ தாலிப், 'அப்துல்லாஹ் இப்னு ரவாஹா(ரலி) ஆகியோர் கொல்லப்பட்ட செய்தி வந்தபோது நபி(ஸல்) அவர்கள் கவலை கொண்ட முகத்தோடு அமர்ந்திருந்தார்கள். நான் கதவின் இடைவெளி வழியாக நபி(ஸல்) அவர்களைக் கவனித்துக் கொண்டிருந்தேன். அப்போது ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே!'' என்றழைத்து, ஜஅஃபர்(ரலி) வீட்டுப் பெண்கள் (ஒப்பாரி வைத்து) அழுவதாகக் கூறினார். நபி(ஸல்) அவர்கள் அப்பெண்கள் (அவ்வாறு அழுவதைத்) தடுக்கும்படி கட்டளையிட்டார்கள். அவர் சென்று மீண்டும் வந்து, 'அவர்களை நான் தடுத்தேன். ஆனால், அவர்கள் (என்னுடைய சொல்லிற்குக்) கட்டுப்படவில்லை'' என்றார். உடனே, நபி(ஸல்) அவர்கள், '(நீ சென்று அவர்களைத் தடுத்து நிறுத்து'' என) மீண்டும் கட்டளையிட்டார்கள். மீண்டும் அவர் சென்று திரும்பி வந்து, 'இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! எங்களை (அப்பெண்கள்) மிஞ்சிவிட்டனர்'' என்றார்.

''அப்பெண்களின் வாயில் மண்ணை அள்ளிப் போடுங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என நான் நினைக்கிறேன்.

பின்னர் நான் அம்மனிதரை நோக்கி, 'அல்லாஹ் உம் மூக்கை மண்கவ்வச் செய்வானாக! நபி(ஸல்) அவர்கள் உமக்குக் கட்டளையிட்டதையும் உம்மால் செய்ய முடியவில்லை; அவர்களைத் தொந்தரவு செய்வதையும் நீர் நிறுத்தவில்லை'' எனக் கூறினேன். 307

4264. ஆமிர் ஷஅபீ (ரஹ்) அறிவித்தார்

இப்னு உமர்(ரலி), ஜஅஃபர்(ரலி) அவர்களின் மகனா(ர் அப்துல்லாஹ் இப்னு ஜஅஃப)ருக்கு முகமன் கூறினால், 'இரண்டு சிறகுகள் உடையவரின் மகனே! உங்களின் மீது சாந்தி உண்டாகட்டும்' என்று கூறுவார்கள். 308

4265. காலித் இப்னு வலீத்(ரலி) அறிவித்தார்

மூத்தா போரின்போது (தீவிரமாகப் போர் புரிந்ததால்) என் கையில் இருந்த ஒன்பது வாட்கள் உடைந்து போயின. என்னுடைய அகலமான யமன் நாட்டு வாள் ஒன்று தான் என் கையில் உடையாமல் எஞ்சியிருந்தது.

4267. நுஅமான் இப்னு பஷீர்(ரலி) அறிவித்தார்

அப்துல்லாஹ் இப்னு ரவாஹா(ரலி) (மூத்தா போருக்கு முன்பு ஒரு முறை நோயின் காரணத்தால்) மூர்ச்சையுற்றுவிட்டார்கள். உடனே (அன்னார் இறந்துவிட்டார் என எண்ணிய என் தாயாரும்) அன்னாருடைய சகோதரி(யுமான) அம்ர்(ரலி) 'அந்தோ! மலையாக இருந்தவரே! அப்படி இருந்தவரே! இப்படி இருந்தவரே! என்று (பலவாறாகப் புலம்பி) அழத் தொடங்கினார்கள். அவரைப் பற்றி ஒவ்வொன்றாக எடுத்துச் சொல்லலலானார்கள்.

அப்துல்லாஹ் இப்னு ரவாஹா(ரலி) மூர்ச்சை நெளிந்(து கண் விழித்)தபோது, தம் சகோதரியை நோக்கி, 'நீ சொன்ன ஒவ்வொன்றுக்கம் என்னிடம், 'இவ்வாறுதான் நீ இருக்கிறாயா?' என்று (வானவர் ஒருவரால்) கேட்கப்பட்டது'' என்று (அழுது புலம்பியதைக் கண்டிக்கும் தொனியில்) கூறினார்கள்.

4268. நுஅமான் இப்னு பஷீர்(ரலி) அறிவித்தார்

அப்துல்லாஹ் இப்னு ரவாஹா(ரலி) அவர்களுக்கு (நோயின் காரணத்தால்) மூர்ச்சை ஏற்பட்டபோது இப்படி நடந்தது. எனவே, அவர்கள் (மூத்தா போரில்) இறந்துவிட்ட (செய்தி எட்டிய)போது, அவரின் சகோதரி (அவர் முன்பே கண்டித்திருந்த காரணத்தால்) அவருக்காக அழவில்லை.

பகுதி 46

ஜுஹைனா குலத்தைச் சேர்ந்த 'ஹுரக்கத்' கூட்டத்தாரிடம் நபி(ஸல்) அவர்கள் உஸாமா இப்னு ஸைத்(ரலி) அவர்களை அனுப்பியது. 309

4269. உஸாமா இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார்

எங்களை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'ஹுரக்கா' கூட்டத்தாரிடம் அனுப்பி வைத்தார்கள். நாங்கள் அந்தக் கூட்டத்தாரிடம் காலையில் சென்றடைந்தோம். (அவர்களுடன் நடந்த சண்டையில்) அவர்களைத் தோற்கடித்தோம். நானும் அன்சாரிகளில் ஒருவரும் அந்தக் கூட்டத்தைச் சேர்ந்த ஒருவரைக் கண்டோம். அவரைச் சுற்றி வளைத்துக் கொண்டபோது அவர், 'லா இலாஹ இல்லல்லாஹ் - அல்லாஹ் ஒருவனைத் தவிர வணக்கத்திற்குரியவர் வேறெவருமில்லை' என்று சொல்ல, அந்த அன்சாரி (அவரைக் கொல்லாமல்) விலகிக் கொண்டார். நான் என் ஈட்டியால் அவரைக் குத்திக் கொன்று விட்டேன். நாங்கள் (திரும்பி) வந்தபோது நபி(ஸல்) அவர்களுக்குச் செய்தி எட்டவே அவர்கள், 'உஸாமாவே! அவர், 'லா இலாஹ இல்லல்லாஹ்'' என்று (ஏகத்துவ வாக்கியத்தை) மொழிந்த பின்னருமா அவரை நீ கொன்றாய்?' என்று கேட்டார்கள். நான், '(நாங்கள் அவரைக் கொன்றுவிடாமல்) தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவே அவர் அவ்வாறு கூறினார்'' என்று சொன்னேன். (ஆனால், என் சமாதானத்தை ஏற்காமல்) நபி(ஸல்) அவர்கள் அந்தக் கேள்வியையே திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். எந்த அளவிற்கென்றால், நான், '(அந்தப் பாவத்தைச் செய்த) அந்த நாளுக்கு முன்பாக இஸ்லாத்தை ஏற்காமல் (அதற்குப் பிறகு ஏற்று) இருந்திருந்தால் நன்றாயிருந்திருக்குமே; (பாவம் மன்னிக்கப்பட்டிருக்குமே!) என்று கூட நினைத்தேன்.

4270. ஸலமா இப்னு அக்வஃ(ரலி) அறிவித்தார்

நான் நபி(ஸல்) அவர்களுடன் ஏழு புனிதப் போர்களில் கலந்து கொண்டேன். 310 அவர்கள் அனுப்பிக் கொண்டிருந்த படைப் பிரிவுகளில் பங்கெடுத்த ஒன்பது புனிதப் போர்களுக்குச் சென்றுள்ளேன். (அவற்றில்) ஒரு முறை எங்களுக்கு அபூ பக்ர்(ரலி) தளபதியாக நியமிக்கப்படடிருந்தார்கள். ஒரு முறை எங்களுக்கு உஸாமா(ரலி) தளபதியாக நியமிக்கப்பட்டிருந்தார்கள். 311

4271. ஸலமா இப்னு அக்வஃ(ரலி அவர்கள் அறிவித்தார்

நான் நபி(ஸல்) அவர்களுடன் ஏழு புனிதப் போர்களில் கலந்து கொண்டேன். அவர்கள் அனுப்பிக் கொண்டிருந்த படைப் பிரிவுகளில் பங்கெடுத்து ஒன்பது புனிதப் போர்களுக்குச் சென்றுள்ளேன். (அவற்றில்) ஒரு முறை எங்களுக்கு அபூ பக்ர்(ரலி) தளபதியாக நியமிக்கப்பட்டிருந்தார்கள். ஒரு முறை உஸாமா(ரலி) தளபதியாக நியமிக்கப்பட்டிருந்தார்கள்.

4272. ஸலமா இப்னு அக்வஃ(ரலி) அறிவித்தார்

நான் நபி(ஸல்) அவர்களுடன் ஒன்பது புனிதப் போர்களில் கலந்து கொண்டேன். 312 நான் (உஸாமா) இப்னு (ஸைத் இப்னு) ஹாரிஸா(ரலி) அவர்களுடன் புனிதப் போர் புரிந்துள்ளேன். நபி(ஸல்) அவர்கள் உஸாமா(ரலி) அவர்களை எங்களுக்குத் தளபதியாக நியமித்திருந்தார்கள்.

4273. யஸீத் இப்னு அபீ உபைத்(ரஹ்) அறிவித்தார்

ஸலமா இப்னு அக்வஃ(ரலி), 'நான் நபி(ஸல்) அவர்களுடன் ஏழு புனிதப் போர்களில் கலந்து கொண்டேன்'' என்று சொல்லிவிட்டு 'கைபர் போர், ஹுதைபிய்யா(வில் நடக்கவிருந்து தவிர்க்கப்பட்ட) போர், ஹுனைன் போர், தூகரத் போர் ஆகியவற்றைக் குறிப்பிட்டார்கள். அவற்றில் மீதியை நான் மறந்து விட்டேன்.

பகுதி 47

மக்கா வெற்றியின்போது நடந்த புனிதப் போரும் ஹாத்திப் இப்னு அபீ பல்தஆ(ரலி), நபி(ஸல்) அவர்கள் போர் தொடுக்கவிருக்கும் செய்தியை மக்காவாசிகளுக்கு (ஒரு பெண் மூலம் இரகசியமாக) அனுப்பி வைத்ததும். 313

4274. அலீ(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னையும் ஸுபைர் இப்னு அவ்வாம் அவர்களையும் மிக்தாத் இப்னு அஸ்வத் அவர்களையும், 'நீங்கள் 'ரவ்ளத்து காக்' எனும் இடம் வரை செல்லுங்கள். ஏனெனில், அங்கு ஒட்டகச் சிவிகையில் ஒரு பெண் இருக்கிறாள். அவளிடம் ஒரு கடிதம் இருக்கும். அதை அவளிடமிருந்து எடுத்துக் கொள்ளுங்கள்'' என்று கூறி அனுப்பினார்கள். (அவ்வாறே) நாங்கள் சென்றோம். எங்களைச் சுமந்து கொண்டு எங்கள் குதிரைகள் விரைந்தோடின. இறுதியில், நாங்கள் 'ரவ்ளா' எனும் அந்த இடத்தை அடைந்தோம். அங்கு ஒரு (சிவிகைப்) பெண்ணைக் கண்டோம். நாங்கள் (அவளிடம்), 'கடிதத்தை வெளியே எடு'' என்று கூறினோம். அவள், 'என்னிடம் கடிதம் எதுவுமில்லை'' என்று சொன்னாள். நாங்கள், 'ஒன்று நீயாகக் கடிதத்தை எடுத்து (கொடுத்து) விடு; இல்லையேல் (உன்) ஆடையை நாங்கள் கழற்றி (சோதனையிட்டு) விடுவோம்'' என்று சொன்னோம். உடனே, அவள் (இடுப்பு வரை நீண்டிருந்த) தன்னுடைய சடையின் பின்னல்களுக்கிடையேயிருந்து கடிதத்தை வெளியே எடுத்தாள். நாங்கள் அதை இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கொண்டு சென்றோம். அதில், ஹாத்திப் இப்னு அபீ பல்தஆ அவர்கள் மக்கா வாசிகளான இணைவைப்போரிடையேயுள்ள (பிரமுகர்கள்) சிலருக்கு, இறைத்தூதர்(ஸல்) அவர்களின் (ரகசியத்) திட்டங்கள் சிலவற்றை (முன்கூட்டியே) தெரிவித்திருந்ததைக் கண்டோம். உடனே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'ஹாத்திபே! என்ன இது?' என்று கேட்டார்கள். ஹாத்திப்(ரலி), 'இறைத்தூதர் அவர்களே! என் விஷயத்தில் அவசரப்பட்டு (நடவடிக்கை எடுத்து) விடாதீர்கள். நான் குறைஷிகளில் ஒருவனாக இருக்கவில்லை. அவர்களைச் சார்ந்து வாழ்ந்தவனாகவே இருந்து வந்தேன். தங்களுடன் இருக்கும் முஹாஜிர்களுக்கு அவர்களின் வீட்டாரையும் சொத்துக்களையும் பாதுகாப்பதற்கு மக்கா நகரில் உறவினர்கள் பலர் இருக்கிறார்கள். எனக்கு அவர்களிடையே அத்தகைய உறவினர்கள் (எவரும்) இல்லாததால், (இணைவைப்பவர்களான) மக்காவாசிகளுக்கு நான் உபகாரம் எதையாவது செய்து அதற்குப் பிரதியுபகாரமாக அவர்கள் அங்குள்ள என் (பலவீனமான) உறவினர்களைக் காப்பாற்றட்டும் என்று விரும்பினேன். (அதனால், இணைவைப்பவர்கள் கேட்டுக் கொண்டதால் இந்தத் தகவலைத் தெரிவித்தேன்.) நான் என் மார்க்க(மான இஸ்லா)த்தைவிட்டு வேறு மதத்தைத் தழுவுவதற்காகவோ, இஸ்லாத்தைத் தழுவிய பின் இறைமறுப்பை விரும்பியோ இவ்விதம் செய்யவில்லை' என்று கூறினார்கள். (இதைக் கேட்ட) இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'இவர் உங்களிடம் உண்மை பேசினார்'' என்று கூறினார்கள். அப்போது உமர்(ரலி) 'இறைத்தூதர் அவர்களே! என்னை விடுங்கள். இந்த நயவஞ்சகனின் கழுத்தை வெட்டி விடுகிறேன்!'' என்று கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'இவர் பத்ருப் போரில் கலந்து கொண்டிருக்கிறார். மேலும், உங்களுக்கென்ன தெரியும்? ஒரு வேளை, அல்லாஹ் பத்ருப் போரில் பங்கெடுத்தவர்களிடம் 'நீங்கள் விரும்பியதைச் செய்து கொள்ளுங்கள். உங்களை நான் மன்னித்து விட்டேன்' என்று கூறிவிட்டிருக்கலாம்'' என்று கூறினார்கள். 314

அப்போது அல்லாஹ் பின்வரும் (60-வது) அத்தியாயத்தை அருளினான்: இறைநம்பிக்கையாளர்களே! எனக்கும் உங்களுக்கும் பகைவர்களாக இருப்போரை நண்பர்களாக எடுத்துக் கொண்டு, நட்பின் காரணத்தினால் (உங்களின் இரகசியங்களை) அவர்களுடன் (பரிமாறிக் கொண்டு) உறவாட வேண்டாம்! அவர்கள், உங்களிடம் வந்துள்ள சத்திய (வேத)த்தை மறுத்துவிட்டவர்கள்... (திருக்குர்ஆன் 60:01)

பகுதி 48

ரமளான் மாதத்தில் நடந்த மக்கா வெற்றிப்போர். 315

4275. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் ரமளானில் மக்கா வெற்றிப் போருக்காக (மக்கா நோக்கி)ப் புறப்பட்டார்கள்.

இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களின் மற்றோர் அறிவிப்பில், 'அப்போது நபி(ஸல்) அவர்கள் நோன்பு வைத்திருந்தார்கள். 'கதீத்' எனும் இடத்தை - உஸ்ஃபானுக்கும் குதைதுக்கும் இடையே உள்ள நீர்ப்பகுதியை - அடைந்ததும் நோன்பைவிட்டுவிட்டார்கள். அந்த மாதம் கழியும் வரையிலும் கூட அவர்கள் நோன்பு நோற்கவில்லை'' என்று வந்துள்ளது. 316

4276. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தில் தம்முடன் முஸ்லிம்கள் பத்தாயிரம் பேரை அழைத்துக் கொண்டு (மக்கா வெற்றிப் போருக்காக) மதீனாவிலிருந்து மக்காவை நோக்கிப் புறப்பட்டார்கள்.

இது நபி(ஸல்) அவர்கள் மதீனாவிற்கு (ஹிஜ்ரத் செய்து) வருகை தந்ததிலிருந்து எட்டரை ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்றது.

நபி(ஸல்) அவர்களும் அவர்களுடன் இருந்த முஸ்லிம்களும் நோன்பு நோற்றபடி பயணம் செய்தார்கள். இறுதியில் 'கதீத்' என்னுமிடத்திற்குச் சென்று நேர்ந்தார்கள். - இந்த இடம் உஸ்ஃபானுக்கும் 'குதைத்' எனுமிடத்திற்குமிடையே உள்ள நீர்ப்பகுதியாகும் - (அங்கு) நபி(ஸல்) அவர்கள் நோன்பைவிட்டுவிட மக்களும் நோன்பை விட்டுவிட்டார்கள்.

ஸுஹ்ரீ(ரஹ்), 'இறைத்தூதர்(ஸல்) அவர்களின் கட்டளைகளில் பிந்தியது, அதற்கடுத்துப் பிந்தியது தான் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்'' என்று கூறுகிறார்கள். 317

4277. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தில் (மக்கா வெற்றிக்குப் பின்) ஹுனைன் நோக்கி (புனிதப் போருக்காகப்) புறப்ப(டத் திட்டமி)ட்டார்கள். அப்போது மக்கள் (நோன்பு நோற்கும் விஷயத்தில்) பல தரப்பட்டவர்களாயிருந்தனர். சிலர் நோன்பு நோற்றிருந்தார்கள்; சிலர் நோன்பு நோற்றிருக்கவில்லை. நபி(ஸல்) அவர்கள், தம் வாகனத்தில் நன்கு அமர்ந்து கொண்டபோது ஒரு பால் பாத்திரத்தை... அல்லது தண்ணீர்ப் பாத்திரத்தை... கெண்டு வரும்படிக் கூறி, அதைத் தம் உள்ளங்கையில்.. அல்லது தம் வாகனத்தில்... வைத்தார்கள். பிறகு மக்களைப் பார்த்தார்கள். உடனே நோன்பை விட்டுவிட்டவர்கள் நோன்பு நோற்றிருந்தவர்களிடம், 'நீங்களும் நோன்பை விடுங்கள்'' என்று கூறினார்கள்.

4278. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் மக்கா வெற்றி ஆண்டில் (ரமளான் மாதம்) புறப்பட்டார்கள்...

இது மற்றோர் அறிவிப்பாளர் தொடரிலும் வந்துள்ளது.

4279. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் (மதீனாவிலிரந்து மக்காவிற்குப்) பயணம் மேற்கொண்டார்கள். அப்போது அவர்கள் நோன்பு வைத்திருந்தார்கள். 'உஸ்ஃபான்' எனும் இடத்தை அடைந்ததும் தண்ணீர் உள்ள பாத்திரம் கொண்டுவரச் செய்து (ரமளானின்) பகல் பொழுதில் மக்கள் காணவேண்டுமென்பதற்காக அதை அருந்தி நோன்பை முறித்துக் கொண்டார்கள். மக்காவை அடையும் வரை நோன்பு நோற்கவில்லை.

இக்ரிமா(ரஹ்) கூறினார்:

''நபி(ஸல்) அவர்கள் (பயணத்தில்) நோன்பு நோற்றும் இருக்கிறார்கள்; நோன்பைவிட்டும் இருக்கிறார்கள். எனவே, (பயணத்தில் நோன்பு நோற்க) விரும்புபவர் நோன்பு நோற்கலாம்; நோன்பைவிட்டுவிட விரும்புபவர்விட்டுவிடவும் செய்யலாம்'' என்று இப்னு அப்பாஸ்(ரலி) கூறுவார்கள். 318

பகுதி 49

மக்கா வெற்றி நாளில் (இஸ்லலாமியச் சேனையின்) கொடியை நபி(ஸல்) அவர்கள் எங்கே நட்டு வைத்தார்கள்?

4280. உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அறிவித்தார்

மக்கா வெற்றி கொள்ளப்பட்ட ஆண்டில் (அதனை வெற்றி கொள்வதற்காக மதீனாவிலிருந்து) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பயணம் மேற்கொண்டபோது, அவர்கள் வருகிற செய்தி (மக்கா) குறைஷிகளுக்கு எட்டியது. உடனே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பற்றிய செய்தியை (உளவு) அறிவதற்காக அபூ சுஃப்யான் இப்னு ஹர்ப், ஹகீம் இப்னு ஹிஸாம், புதைல் இப்னு வர்கா ஆகியோர் (மக்காவிலிருந்து) புறப்பட்டனர். 319 அவர்கள் பயணம் மேற்கொண்டு 'மர்ருழ் ழஹ்ரான்' என்னும் இடத்திற்கு வந்து சேர்ந்தபோது (அங்கே பல இடங்களில் மூடப்பட்டிருந்த) நெருப்புகளைக் கண்டனர். அவை, அரஃபா(வில் ஹாஜிகள் மூட்டும்) நெருப்புகள் போன்றிருந்தன. அப்போது அபூ சுஃப்யான், 'இது என்ன நெருப்பு? இது அரஃபா நெருப்பைப் போன்றறே இருக்கிறதே'' என்று கேட்டதற்கு புதைல் இப்னு வர்கா, 'இது ('குபா'வில் குடியிருக்கும் 'குஸாஆ' எனப்படும்) பனூஅம்ர் குலத்தாரின் நெருப்புகள்'' என்று கூறினார். உடனே அபூ சுஃப்யான் (பனூ) அம்ர் குலத்தவரின் எண்ணிக்கை இதை விட மிகக் குறைவாகும். (எனவே, அவர்களின் நெருப்புகளாக இருக்க வாய்ப்பில்லை)'' என்று கூறினார். அப்போது அவர்கள் மூவரையும் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் காவலர்களில் சிலர் பார்த்துவிட்டனர். உடனே, அவர்களை அடைந்து, அவர்களைப் பிடித்து (கைது செய்து) இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கொண்டு வந்தனர். பின்பு அபூ சுஃப்யான் இஸ்லாத்தை ஏற்றார். அதற்குப் பிறகு இறைத்தூதர்(ஸல்) அவர்கள். (மக்காவை நோக்கி முன்னேறிச்) சென்றபோது அப்பாஸ்(ரலி) அவர்களிடம், 'குதிரைப் படை செல்லும்போது நெரிசல் ஏற்படக் கூடிய (குறுகலான) இடத்தில் அபூ சுஃப்யானை நிறுத்திவையுங்கள். அவர் முஸ்லிம்களைப் பார்க்கட்டும். (அவர்களின் படை பலத்தைப் புரிந்து கொள்ளட்டும்)'' என்று கூறினார்கள். (அவ்வாறே) அப்பாஸ்(ரலி) அவரை (அந்த இடத்தில்) நிறுத்திவைத்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்களுடன் அனைத்துக குலத்தாரின் படைகளும் ஒவ்வொன்றாக அபூ சுஃப்யானைக் கடந்து செல்லத் தொடங்கின. அவரை ஒரு படை கடந்து சென்றவுடன் 'அப்பாஸே! இவர்கள் யார்?' என்று அபூ சுஃப்யான் கேட்டதற்கு அப்பாஸ்(ரலி), 'இவர்கள் ஃகிஃபாரீ குலத்தினர்'' என்று பதிலளித்தார்கள். (உடனே,) 'எனக்கும் ஃகிஃபார் குலத்தாருக்கும் என்ன சம்பந்தம்? (எங்களுக்கிடையில் பூசலோ மோதலோ இல்லையே!)'' என்று அபூ சுஃப்யான் கூறினார். பிறகு ஜுஹைனா குலத்தார் அவரைக் கடந்து சென்றனர். அப்போது அபூ சுஃப்யான் முன் போன்றே கேட்டார். பிறகு (அவரைக் கடந்து) ஸஅத் இப்னு ஹுதைம் குலத்தினர் சென்றனர். அப்போதும் அவ்வாறே அபூ சுஃப்யான் கேட்டார். (பிறகு) சுலைம் குலத்தினர் சென்றனர். முன்பு போன்றே அபூ சுஃப்யான் கேட்டார். (அப்பாஸ் - ரலி அவர்களும் முன்பு போன்றே பதிலளித்தார்கள்.) கடைசியில் ஒரு (பெரிய) படை முன்னோக்கி வந்தது. அதைப் போன்ற (பெரும்) படையை அபூ சுஃப்யான் பார்த்திருக்கவில்லை. 'இவர்கள் யார்?' என்று அபூ சுஃப்யான் கேட்க, 'இவர்கள் தாம் அன்சாரிகள். ஸஅத் இப்னு உபாதா இவர்களின் தலைவர். அவருடன் தான் (அன்சாரிகளின்) கொடியிருக்கிறது'' என்று அப்பாஸ்(ரலி) பதிலளித்தார்கள்.

அப்போது ஸஅத் இப்னு உபாதா(ரலி), 'அபூ சுஃப்யானே! இன்று, (தப்பிக்க முடியாத மாபெரும்) யுத்த நாளாகும். இன்று கஅபாவி(ன் புனித எல்லையி)னுள்ளே கூட யுத்தம் அனுமதிக்கப்படும்'' என்று (உணர்ச்சி வசப்பட்டுக்) கூறினார்கள். அதற்கு அபூ சுஃப்யான் 'அப்பாஸே! அழிவு நாளில் இது மிக நல்ல நாள் (குறைஷிகளுக்கு ஆபத்தே; என்றாலும், நீங்கள் கருணை காட்டுவீர்கள் என்ற நம்பிக்கை உண்டு)'' என்று கூறினார்.

பிறகு, ஒரு படை வந்தது. அது (இதுவரை வந்த) படைகளிலேயே மிகவும் சிறியதாக இருந்தது. அவர்களிடையே இறைத்தூதர்(ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களும் இருந்தார்கள். நபி(ஸல்) அவர்களுக்குரிய கொடி, ஸுபைர் இப்னு அவ்வாம்(ரலி) அவர்களிடம் இருந்தது. அபூ சுஃப்யானைக் கடந்து இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சென்றபோது அவர், (இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம்) 'ஸஅத் இப்னு உபாதா என்ன கூறினார் என்பது உங்களுக்குத் தெரியாதா?' என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அவர் என்ன கூறினார்?' என்று கேட்டார்கள். இப்படி... இப்படி... எல்லாம் கூறினார்'' என்று அபூ சுஃப்யான் (விவரித்து) கூறினார். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'உண்மைக்குப் புறம்பானதை ஸஅத் கூறிவிட்டார்'' என்று சொல்லிவிட்டு, 'மாறாக, இந்த நாள் இறையில்லம் கஅபாவை அல்லாஹ் கண்ணியப்படுத்தும் நாள். கஅபாவிற்குத் திரை போர்த்தப்படும் (முக்கியமான) நாள்'' என்று கூறினார்கள். 320

அறிவிப்பாளர் உர்வா இப்னு ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அந்தக் கொடியினை (மக்காவின் பொது அடக்கத்தலத்திற்கு அருகிலுள்ள) 'ஹஜூன்' என்னும் இடத்தில் நட்டு வைக்கும்படி உத்தரவிட்டார்கள்.

(மக்கா வெற்றிக்குப் பின்) அப்பாஸ்(ரலி) ஸுபைர் இப்னு அவ்வாம்(ரலி) அவர்களிடம், 'அபூ அப்தில்லாஹ்வே!'' இங்கு தான் அந்தக் கொடியினை நட்டு வைக்கும்படி இறைத்தூதர்(ஸல்) அவர்கள் உங்களுக்கு உத்தரவிட்டார்கள்'' என்றார்கள். மேலும் நபி(ஸல்) அவர்கள் அன்றைய தினம் காலித் இப்னு வலீத்(ரலி) அவர்களை மக்காவின் மேற்பகுதியான 'கதா' என்னும் கணவாய் வழியாக (மக்காவிற்குள்) நுழையுமாறு உத்தரவிட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் 'குதா' வழியாக நுழைந்தார்கள். 321 அன்றைய தினம் காலித் இப்னு வலீத்(ரலி) அவர்களின் குதிரைப் படையினரில் இருவரான ஹுபைஷ் இப்னு அல் அஷ்அர்(ரலி) அவர்களும் குர்ஸ் இப்னு ஜாபிர் அல்ஃபிஹ்ரீ(ரலி) அவர்களும் (உயிர்த்தியாகிகளாகக்) கொல்லப்பட்டனர். 322

4281. முஆவியா இப்னு குர்ரா(ரஹ்) அறிவித்தார்

''இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மக்கா வெற்றி தினத்தில் தம் ஒட்டகத்தின் மீதமர்ந்தபடி 'அல்ஃபதஹ்' என்னும் (48-வது) அத்தியாயத்தை 'தர்ஜுஉ' என்னும் 323 ஓசை நயத்துடன் ஒதிக்கொண்டிருந்ததை கண்டேன்'' என்று அப்துல்லாஹ் இப்னு முகஃப்பல்(ரலி) கூற கேட்டேன். மக்கள் என்னைச் சுற்றிலும் திரண்டு விடுவார்கள் என்றில்லாவிட்டால் அப்துல்லாஹ் இப்னு முகஃப்பல் அவர்கள் 'தர்ஜுஉ' செய்து ஓதிக்காட்டியதைப் போல் நானும் ஓதிக்காட்டியிருப்பேன்.

4282. உஸாமா இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார்

மக்கா வெற்றியின்போது, 'அல்லாஹவின் தூதரே! நாம் நாளை (மக்காவில்) எங்கு தங்குவோம்?' என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், '(அபூ தாலிபின் மகன்) அகீல் நமக்கு வீடு எதையேனும் விட்டுச் சென்றுள்ளாரா?' என்று கேட்டார்கள். 324

4283. பிறகு நபி(ஸல்) அவர்கள், 'இறை நம்பிக்கையாளர், இறைமறுப்பாளருக்கு வாரிசாக மாட்டார்; அவ்வாறே இறைமறுப்பாளரும் இறைநம்பிக்கையாளருக்கு வாரிசாக மாட்டார்'' என்று கூறினார்கள்.

ஸுஹ்ரீ(ரஹ்) அவர்களிடம், 'அபூ தாலிபுக்கு யார் வாரிசானார்கள்?' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், 'அவருக்கு அகீலும் தாலிபும் வாரிசானார்கள்'' என்று பதிலளித்தார்கள். 325

ஸுஹ்ரீ(ரஹ்) அவர்களிடமிருந்து மஅமர்(ரஹ்) அறிவித்துள்ளதில் 'நபி(ஸல்) அவர்களின் ஹஜ்ஜின்போது நாளை நாம் எங்கு தங்குவோம்?' என்று கேட்டதாக இடம் பெற்றுள்ளது.

அறிவிப்பாளர் யூனுஸ் இப்னு யஸீத்(ரஹ்), ஹஜ்ஜின்போது என்றோ, மக்கா வெற்றியின்போது என்றோ (எதையும்) குறிப்பிடவில்லை.

4284. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்:

அல்லாஹ் (மக்கா மீது நமக்கு) வெற்றியளித்தால், இன்ஷா அல்லாஹ் அல்லாஹ் நாடினால் நாம் தங்கப்போகும் இடம் (பனூ கினானா குலத்தாரின் 'முஹஸ்ஸப்' என்னும்) பள்ளத்தாக்கு ஆகும். அந்த இடத்தில் தான் (குறைஷிகள்) இறைமறுப்பின் மீதே (நிலைத்து) இருக்கப் போவதாக சூளுரைத்தார்கள்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (மக்கா வெற்றி முடிந்து) ஹுனைன் (போருக்குச்) செல்ல திட்டமிட்டபோது, 'அல்லாஹ் நாடினால் நாளை நாம் தங்கப் போகும் இடம் 'பனூ கினானா' குலத்தாரின் (முஹஸ்ஸப் என்னும்) பள்ளத்தாக்கு ஆகும். அந்த இடத்தில் தான் (மக்கா குறைஷிகள்) இறைமறுப்பின் மீதே (நிலைத்து) இருக்கப் போவதாக சபதம் செய்தார்கள்'' என்று கூறினார்கள்.

4286. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் மக்கா வெற்றி தினத்தில் தலையில் இரும்புத் தொப்பியுடன் (மக்காவினுள்) நுழைந்தார்கள். அதை அவர்கள் கழற்றியபோது ஒருவர் வந்து, 'இப்னு கத்தல் என்பவன் கஅபாவின் திரைகளைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறான்' எனக் கூறினார். உடனே நபி(ஸல்) அவர்கள், 'அவனைக் கொன்று விடுங்கள்'' என்று உத்தரவிட்டார்கள். 326

மாலிக் இப்னு அனஸ்(ரஹ்), 'நாம் அறிந்தவரை நபி(ஸல்) அவர்கள் அன்று இஹ்ராம் அணிந்தவர்களாய் இருக்கவில்லை. இறைவனே மிக அறிந்தவன்'' என்று கூறினார்கள்.

4287. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்

கஅபாவைச் சுற்றிலும் முந்நூற்று அறுபது சிலைகள் இருக்க, நபி(ஸல்) அவர்கள் மக்கா நகருக்குள் நுழைந்தார்கள். அப்போது அவர்கள், 'சத்தியம் வந்துவிட்டது; அசத்தியம் அழிந்துவிட்டது. சத்தியம் வந்துவிட்டது; (இனி) அசத்தியம் மீண்டும் ஒருமுறை பிடிக்காது'' என்று கூறிக்கொண்டே, தம் கையிலிருந்து குச்சியால் அவற்றை (குத்தி) அடிக்கத் தொடங்கினார்கள். 327

4288. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்

(மக்கா வெற்றி நாளில்) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (மக்காவுக்கு) வந்தபோது, கஅபாவில் சிலைகள் இருந்ததால் உள்ளே நுழைய மறுத்து அவற்றை அப்புறப்படுத்துமாறு கட்டளையிட்டார்கள். உடனே அவை அப்புறப்படுத்தப்பட்டன. அச்சிலைகளில் (குறி பார்ப்பதற்குரிய) அம்புகளைக் கையில் தங்கியவாறு இருந்த (இறைத்தூதர்களான) இப்ராஹீம்(அலை), இஸ்மாயீல்(அலை) ஆகியோரின் உருவங்களும் அகற்றப்பட்டன. அப்போது நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ் இ(தைச் செய்த)வர்களை தன் கருணையைவிட்டு அப்பாற்படுத்துவானாக! அல்லாஹ்வின் மீது ஆணையாக! இவ்விருவரும் அம்புகளின் மூலம் குறிபார்ப்பவர்களாக ஒருபோதும் இருந்ததில்லை என்பதை இ(தைச் செய்த)வர்கள் அறிந்தே வைத்திருக்கிறார்கள்'' என்று கூறினார்கள். பிறகு, கஅபாவில் நுழைந்தார்கள். அதன் மூலைகளில் (நின்று) தக்பீர் கூறினார்கள். ஆனால், அதனுள் தொழாமல் வெளியேறிவிட்டார்கள்.

இன்னோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. 328

பகுதி 50

(மக்கா வெற்றியின் போது) நபி(ஸல்) அவர்கள் மக்காவின் மேற்பகுதியிலிருந்து ஊருக்குள் நுழைந்தது.

4289. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மக்கா வெற்றி நாளில் தம் வாகனத்தின் மீது உஸாமா இப்னு ஸைத்(ரலி) அவர்களை அமர வைத்துக் கொண்டு மக்காவின் மேற்பகுதியிலிருந்து முன்னேறிச் சென்றார்கள். அப்போது அவர்களுடன் பிலால்(ரலி) அவர்களும் கஅபாவின் பொறுப்பாளர்களில் ஒருவரான உஸ்மான் இப்னு தல்ஹா(ரலி) அவர்களும் இருந்தனர். நபி(ஸல்) அவர்களின் வாகனம் இறுதியில் பள்ளிவாசலில் சென்று மண்டியிட்டு அமர்ந்தது. நபி(ஸல்) அவர்கள், இறையில்லம் கஅபாவின் சாவியைக் கொண்டு வரும்படி உஸ்மான் இப்னு தல்ஹா(ரலி) அவர்களுக்கு உத்தரவிட்டார்கள். (சாவி கொண்டு வரப்பட்டதும்) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (கஅபாவைத் திறந்து கொண்டு) உஸாமா(ரலி), பிலால்(ரலி), உஸ்மான்(ரலி) ஆகியோருடன் உள்ளே நுழைந்தார்கள். அங்கே நீண்ட ஒரு பகல் நேரத்திற்குத் தங்கியிருந்தார்கள்; பிறகு வெளியே வந்தார்கள். மக்கள் கஅபாவினுள் நுழைய ஒருவரோடொருவர் போட்டியிட்டனர். நானே (அதனுள்) முதலில் நுழைந்தவன். அப்போது பிலால்(ரலி) (கஅபாவின்) வாசலுக்குப் பின்னே நின்று கொண்டிருக்கக் கண்டேன். உடனே அவர்களிடம், 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எங்கே தொழுதார்கள்?' என்று கேட்டேன். பிலால்(ரலி), நபி(ஸல்) அவர்கள் தொழுத இடத்தைச் சைகையால் சுட்டிக் காட்டினார்கள். நான் அவர்களிடம், 'எத்தனை ரக்அத்துகள் நபி(ஸல்) அவர்கள் தொழுதார்கள்'' என்று கேட்க மறந்து விட்டேன். 329

4290. ஆயிஷா(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் மக்கா வெற்றி ஆண்டில் மக்காவின் மேற்பகுதியிலிருந்த 'கதா' எனும் கணவாயின் வழியாக (மக்காவினுள்) நுழைந்தார்கள்.

இதே அறிவிப்பு மற்றொரு வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 330

4291. உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் மக்கா வெற்றி ஆண்டில் மக்காவின் மேற்பகுதியான 'கதா' எனும் கணவாய் வழியாக உள்ளே நுழைந்தார்கள்.

பகுதி 51

நபி(ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின்போது தங்கிய இடம்

4292. இப்னு அபீ லைலா(ரஹ்) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள், 'ளுஹா' தொழுகை தொழுததாக உம்முஹானீ(ரலி) அவர்களைத் தவிர வேறெவரும் எமக்கு அறிவிக்கவில்லை. ஏனெனில், நபி(ஸல்) அவர்கள் மக்கா நகரம் வெற்றி கொள்ளப்பட்ட நாளில் தம் வீட்டில் குளித்ததாகவும் பிறகு எட்டு ரக்அத்துகள் தொழுதததாகவும் உம்முஹானீ(ரலி) கூறினார். மேலும் அவர்கள், 'நபி(ஸல்) அவர்கள் அதை விட விரைவாகத் தொழுத வேறெந்தத் தொழுகையையும் நான் கண்டதில்லை. ஆயினும், அவர்கள் (அந்தத் தொழுகையிலும்) ருகூவையும் சுஜூதையும் பரிபூரணமாகச் செய்தார்கள்'' என்று கூறினார்கள். 331

பகுதி 52

4293. ஆயிஷா(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் தம் ருகூவிலும் சுஜூதிலும், 'சுப்ஹானக்கல்லாஹும்ம ரப்பனாவ பிஹம்திக்க அல்லாஹும்ம மஃக்ஃபிர் லீ - இறைவா! எம் அதிபதியே! உன்னைப் புகழ்ந்த படி உன் தூய்மையை நான் எடுத்துரைக்கிறேன். இறைவா! எனக்கு மன்னிப்பளிப்பாயாக!'' என்று பிரார்த்திப்பார்கள். 332

4294. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்

உமர்(ரலி) பத்ருப் போரில் பங்கெடுத்த புண்ணியவான்களுடன் எனக்கும் (தம் அவையில்) இடமளித்து வந்தார்கள். எனவே, அவர்களில் சிலர், 'எங்களுக்கும் இவரைப் போன்ற (வயது ஒத்த) பிள்ளைகள் இருக்க, (அவர்களையெல்லாம் விட்டுவிட்டு) இந்த இளைஞரை மட்டும் எதற்காக அமரச் செய்கிறீர்கள்?' என்று கேட்டார்கள். அதற்கு உமர்(ரலி), 'அவர் நீங்கள் அறிந்து வைத்துள்ள (கல்வித் தகுதி படைத்த)வர்களில் ஒருவர்'' என்று பதிலளித்தார்கள். பிறகு, ஒரு நாள் அவர்களையெல்லாம் அழைத்தார்கள். அவர்களுடன் என்னையும் அழைத்தார்கள்; அவர்களுடன் என்னையும் அழைத்தார்கள். அவர்களுக்கு என் (தகுதியி)னைப் பற்றி உணர்த்திக் காட்டுவதற்காகவே என்னை அவர்கள் அழைத்ததாகக் கருதுகிறேன். (அவர்களெல்லாம் வந்தவுடன் அவர்களிடம்) உமர்(ரலி), 'இதா ஜாஅ நஸ்ருல்லாஹி.. (நபியே!) இறைவனின் உதவியும் வெற்றியும் வந்து, மக்கள் கூட்டம் கூட்டமாக இறைமார்க்கத்தில் இணை வகை நீங்கள் பார்க்கும்போது உங்களுடைய இறைவனைப் புகழ்ந்து அவனுடைய தூய்மையை எடுத்துரையுங்கள்; மேலும், அவனிடம் பாவ மன்னிப்புக் கோருங்கள்)'' என்னும் (திருக்குர்ஆனின் 110-வது 'அந்நஸ்ர்') அத்தியாயத்தை, இறுதிவரை ஓதிக்காட்டி, 'இதற்கு நீங்கள் என்ன (விளக்கம்) கூறுகிறீர்கள்?' என்று கேட்டார்கள். அவர்களில் சிலர், 'நமக்கு உதவியும் வெற்றியும் அளிக்கப்படும்போது அல்லாஹ்வைப் புகழும்படியும் அவனிடம் பாவமன்னிப்புக் கோரும்படியும் நாம் கட்டளையிடப்பட்டுள்ளோம்'' என்று (விளக்கம்) கூறினர். சிலர், 'எங்களுக்குத் தெரியாது'' என்றனர். அல்லது அவர்களில் சிலர் எந்தக் கருத்தும் கூறவில்லை. பிறகு உமர்(ரலி) என்னிடம், 'இப்னு அப்பாஸே! நீங்களும் இப்படித் தான் கூறுகிறீர்களா?' என்று கேட்டார்கள். நான், 'இல்லை'' என்றேன். அவர்கள், 'அப்படியென்றால் நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?' என்று கேட்டார்கள். நான், 'அது, அல்லாஹ், தன் தூதர்(ஸல்) அவர்களுக்கு அவர்களின் ஆயுட்காலம் முடிந்து (இறப்பு நெருங்கி)விட்டதை அறிவிப்பதாகும். எனவே, 'அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் வந்து' என்பதில் உள்ள 'வெற்றி' என்பது மக்கா வெற்றியைக் குறிக்கும். மக்கா வெற்றி தான், (நபியே!) உங்கள் ஆயுட்காலம் முடியவிருப்பதற்கான அடையாளம். எனவே, நீங்கள் உங்கள் அதிபதியைப் புகழ்ந்து அவனுடைய தூய்மையை எடுத்துரைத்து, அவனிடம் பாவமன்னிப்புக் கோருங்கள். அவன் (நீங்கள் மன்னிப்புக் கோருவதை ஏற்று) உங்களுக்கு மன்னிப்பளிப்பவன் ஆவான்' என்பதே இதன் கருத்தாகும்'' என்று சொன்னேன். உமர்(ரலி), 'நீங்கள் இந்த அத்தியாயத்திலிருந்து என்ன (கருத்தை) அறிகிறீர்களோ அதையே நானும் அறிகிறேன்'' என்று கூறினார்கள். 333

4295. ஸயீத் இப்னு அபீ ஸயீத்(ரஹ்) அறிவித்தார்

(யஸீதின் ஆட்சியில் மதீனாவின் ஆளுநராயிருந்த) அம்ர் இப்னு ஸயீத், (அப்துல்லாஹ் இப்னு ஸுபைர் -ரலி-அவர்களுக்கு எதிராக), மக்காவை நோக்கிப் படைகளை அனுப்பியபோது அவரிடம் அபூ ஷுரைஹ் அல் அத்வீ(ரலி) கூறினார்:

தலைவரே! எனக்கு அனுமதி தாருங்கள். மக்கா வெற்றிக்கு மறு நாள், நபி(ஸல்) அவர்கள் கூறிய ஒரு செய்தியை உங்களுக்கு நான் கூறுகிறேன். என் காதுகள் அதைச் செவியுற்றன, என் உள்ளம் அதை நினைவில் வைத்திருக்கிறது; அவர்கள் அதைக் கூறும்போது என் கண்கள் அவர்களைப் பார்த்திருக்கின்றன. அப்போது நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்து போற்றிவிட்டு, 'அல்லாஹ்வே மக்காவிற்குப் புனிதத்தை வழங்கியவன். அதற்குப் புனிதத்தை வழங்கியவர்கள் மனிதர்கள் அல்லர். அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பக் கூடிய எவருக்கும் இங்கே இரத்தத்தைச் சிந்துவதோ இங்குள்ள மரத்தை வெட்டுவதோ அனுமதிக்கப்படவில்லை. இறைத்தூதர் இங்கு போரிட்டதால் இதைப் பொது அனுமதி என்று யாரேனும் கருதினால், 'அல்லாஹ் தன் தூதருக்குத் தான் அனுமதி வழங்கினான்; உங்களுக்கு அனுமதி வழங்கவில்லை'' என்று கூறிவிடுங்கள். எனக்குக் கூட பகலில் சிறிது நேரம் மட்டுமே (இங்கு போர் புரிய) அனுமதி அளிக்கப்பட்டது. இன்று அதன் புனிதத் தன்மை நேற்யை அதன் புனிதத் தன்மையைப் போல் மீண்டு வந்துவிட்டது. (இதை இங்கு) வந்திருப்போர் வராதவருக்குச் சொல்லி விடுங்கள்'' என்று கூறினார்கள்.

அபூ ஷுரைஹ்(ரலி) அவர்களிடம், 'இதற்கு அம்ர் உங்களுக்கு என்ன பதில் கூறினார்?' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், 'அபூ ஷுரைஹே! உம்மை விட இதைப் பற்றி நான் நன்கு அறிந்தவன். நிச்சயமாக, 'ஹரம்' (புனித பூமி) குற்றவாளிக்கும், கொலை செய்துவிட்டு, அல்லது கொள்ளை அடித்துவிட்டு ஒடி வந்தவனுக்கும் பாதுகாப்பு அளிக்காது' என அம்ர் கூறினார்கள்'' என்று பதிலளித்தார்கள். 334

4296. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்

மக்கா வெற்றி ஆண்டில் நபி(ஸல்) அவர்கள் மக்காவில் தங்கியிருந்தபோது, 'அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் மது வியாபாரத்தைத் தடை செய்துவிட்டார்கள்'' என்று அவர்கள் சொல்ல கேட்டிருக்கிறேன்.

பகுதி 53

மக்கா வெற்றியின்போது நபி(ஸல்) அவர்கள் மக்காவில் தங்கியிருந்தது.

4297. அனஸ்(ரலி) அறிவித்தார்

நாங்கள், நபி(ஸல்) அவர்களுடன் தொழுகையைச் சுருக்கி (கஸ்ரு செய்து) தொழுதவர்களாக (மக்கா நகரில்) பத்து நாள்கள் தங்கினோம். 335

4298. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் மக்கா நகரில் இரண்டு ரக்அத்துகள் (கஸ்ராகத்) தொழுதபடி பத்தொன்பது நாள்கள் தங்கியிருந்தார்கள்.336

4299. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்

நாங்கள் ஒரு பயணத்தின்போது நபி(ஸல்) அவர்களுடன் தொழுகையைச் சுருக்கித் தொழுதவர்களாக பத்தொன்பது நாள்கள் தங்கினோம்.

(பொதுவாக) நாங்கள் (பயணம் மேற்கொண்டு தங்கினால்) பத்தொன்பது நாள்கள் வரை சுருக்கித் தொழு(தபடி தங்கு)வோம். அதற்கு மேலும் நாங்கள் தங்கும்போது (சுருக்கித் தொழாமல் வழக்கப்படி) முழுமையாகத் தொழுவோம்.

பகுதி 54

4300 இப்னு ஷிஹாப் ஸுஹ்ரீ(ரஹ்) அறிவித்தார்

அப்துல்லாஹ் இப்னு ஸஅலபா இப்னி ஸுஜர்(ரலி) - அன்னாரின் முகத்தை நபி(ஸல்) அவர்கள் மக்கா வெற்றி ஆண்டில் (அன்போடு) தடவிக் கொடுத்திருந்தார்கள் - எனக்குத் தெரிவித்தார்கள்... 337

4301. ஸுஹ்ரீ(ரஹ்) அறிவித்தார்

நாங்கள் ஸயீத் இப்னு முஸய்யப்(ரஹ்) அவர்களுடன் இருந்தபோது, அபூ ஜமீலா சுனைன்(ரலி), தாம் நபி(ஸல்) அவர்களின் தோழமையைப் பெற்றிருந்ததாகவும் அவர்களுடன் மக்கா வெற்றி ஆண்டில் (மக்கா நோக்கி இஸ்லாமியச் சேனையில் ஒருவராகப்) புறப்பட்டதாகவும் கூறினார்கள்.

4302. அம்ர் இப்னு சலிமா(ரலி) அறிவித்தார்

நாங்கள் மக்கள் கடந்து செல்லும் பாதையிலிருந்த ஒரு நீர் நிலையின் அருகே இருந்தோம். வாகனத்தில் பயணிப்பவர்கள் எங்களைக் கடந்து சென்று கொண்டிருந்தார்கள். நாங்கள் அவர்களிடம், 'மக்களுக்கென்ன? மக்களுக்கென்ன? இந்த மனிதருக்கு (முஹம்மதுக்கு) என்ன?' என்று கேட்டுக் கொண்டிருந்தோம். அதற்கு அவர்கள், 'அந்த மனிதர் தன்னை அல்லாஹ் (இறைத்தூதராக) அனுப்பியிருப்பதாக... அல்லது அல்லாஹ் அவரை இன்ன (குர்ஆன்) போதனைகளைக் கொடுத்து அனுப்பியிருப்பதாகக்... கூறுகிறார்'' என்று (குர்ஆனின் சில வசனங்களை ஓதிக்காட்டி) கூறுவார்கள். உடனே நான் அந்த (இறை) வாக்கை மனப்பகுதி செய்து கொள்வேன். அது என் நெஞ்சில் பதிக்கப்பட்டது போன்று ஆகிவிட்டது. அரபுகள், தாங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள மக்கா வெற்றியை (தக்க தருணமாகக் கருதி) எதிர்பார்த்திருந்தார்கள். எனவே, அவர்கள், 'அவரை அவரின் குலத்தா(ரான குறைஷிய)ருடன் விட்டு விடுங்கள். ஏனெனில், அவர்களை அவர் வென்றுவிட்டால் அவர் உண்மையான இறைத்தூதர் தாம் (என்று நிரூபணமாகி விடும்)'' என்று கூறினார்கள். மக்கா வெற்றியாளர்கள் சம்பவம் நிகழ்ந்தவுடன் ஒவ்வொரு குலத்தாரும் விரைந்து வந்து இஸ்லாத்தை ஏற்றனர். என் தந்தை என் குலத்தாருடன் விரைந்து இஸ்லாத்தை ஏற்றார். நபி(ஸல்) அவர்களிடமிருந்து என் தந்தை திரும்பி வந்தபோது, 'அல்லாஹ்வீன் மீதாணையாக! நான் உண்மையிலேயே நபி(ஸல்) அவர்களிடமிருந்து உங்களிடம் வந்துள்ளேன். நபி(ஸல்) அவர்கள், 'இன்ன தொழுகையை இன்ன வேளையில் தொழுங்கள். இன்ன வேளையில் இப்படித் தொழுங்கள். இன்ன வேளையில் இப்படித் தொழுங்கள். தொழுகை (வேளை) வந்துவிட்டால் உங்களில் குர்ஆனை அதிகம் அறிந்து வைத்துள்ளவர் உங்களுக்குத் தலைமை தாங்கித் தொழுகை நடத்தட்டும்' என்று கூறினார்கள்' எனக் கூறினார்கள். எனவே, மக்கள் (குர்ஆனை அதிகம் அறிந்தவர் யார் எனத்) துருவிப் பார்த்தபோது நான் பயணிகளிடம் கேட்டு அறிந்துகொண்ட காரணத்தால் என்னை விட அதிகமாகக் குர்ஆனை அறிந்தவர்கள் எவரும், (எங்களிடையே) இருக்கவில்லை. எனவே, (தொழுகை நடத்துவதற்காக) என்னை அவர்கள் முன்னால் நிறுத்தினார்கள். நான் அப்போது ஆறு அல்லது ஏழு வயதுடைய (சிறு)வனாக இருந்தேன். நான் ஒரு சால்வையைப் போர்த்தியிருந்தேன். நான் சஜ்தா செய்யும்போது அது என் முதுகை (விட்டு நழுவிப் பின் புறத்தைக்) காட்டிவந்தது. எனவே, அந்தப் பகுதிப் பெண்மணியொருவர், 'உங்கள் ஓதுவரின் பின்புறத்தை எங்களிடமிருந்து மறைக்க மாட்டீர்களா?' என்று கேட்டார். எனவே, அவர்கள் (துணியொன்றை) வாங்கி வந்து எனக்குச் சட்டையொன்றை வெட்டித் தந்தார்கள். நான் அந்தச் சட்டையின் காரணத்தால் அடைந்த மகிழ்ச்சியைப் போன்று வேறெதனாலும் மகிழ்ச்சியடைந்ததில்லை.

4303. ஆயிஷா(ரலி) அறிவித்தார்

உத்பா இப்னு அபீ வக்காஸ் தம் சகோதரர் ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அவர்களிடம், 'ஸம்ஆவின் அடிமைப் பெண்ணுடைய மகன் என் மகன் தான்' என்று கூறி (மக்கா செல்லும் போது) அவனைப் பிடித்து(வைத்து)க் கொள்ளும்படி உறுதிமொழி வாங்கியிருந்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், மக்கா வெற்றியின் சமயம் மக்காவுக்கு (தம் தோழர்களுடன்) வருகை தந்தபோது, ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) ஸம்ஆவின் அடிமைப் பெண்ணுடைய மகனைப் பிடித்துக கொண்டு அல்லாஹ்வின் தூதரை நோக்கிச் சென்றார்கள். அவர்களுடன் ஸம்ஆவின் மகன் அப்து(ரலி) அவர்களும் சென்றார்கள். ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) நபி(ஸல்) அவர்களிடம், ஸம்ஆவின் அடிமைப் பெண்ணுடன் மகனைச் சுட்டிக் காட்டி), 'இவன் என் சகோதரரின் மகன்; இவனைத் தன் மகன் என்று (சொல்லி, இவனைப் பிடித்துக் கொள்ளும்படி என்னிடம்) என் சகோதரர் உறுதிமொழி வாங்கியுள்ளார்'' என்று கூறினார். அப்து இப்னு ஸம்ஆ, 'இறைத்தூதர் அவர்களே! இவன் என் சகோதரன். இவன் (என் தந்தை) ஸம்ஆவின் அடிமைப் பெண்ணுடைய மகன்; அவள் என் தந்தையின் அதிகாரத்தில் இருந்தபோது தான் இவன் பிறந்தான்'' என்று கூறினார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஸம்ஆவின் அடிமைப் பெண்ணுடைய மகனைக் கூர்ந்து பார்த்தார்கள். அவன் (மக்காவாசிகளிலேயே) உத்பா இப்னு அபீ வக்காஸுக்கு (தோற்றத்தில்) மிகவும் ஒத்திருந்தான். பிறகு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'இவன் உனக்குத் தான்; இவன் உன் சகோதரன் தான், அப்து இப்னு ஸம்ஆவே!'' என்று கூறினார்கள். அவன் ஸம்ஆவின் அதிகாரத்தில் (அவனுடைய தாய்) இருந்தபோது பிறந்த காரணத்தால் அப்படிக் கூறினார்கள். மேலும், இறைத்தூதர்(ஸல்) அவர்கள் உத்பா இப்னு அபீ வக்காஸின் சாயலில் அந்த இளைஞன் இருந்ததைப் பார்த்த காரணத்தால், (தம் துணைவியார் சவ்தா - ரலி அவர்களை நோக்கி, 'ஸம்ஆவின் மகள்) சவ்தாவே! இவனிடமிருந்து நீ திரையிட்டுக் கொள்'' என்று கூறினார்கள்.

இப்னு ஷிஹாப் ஸுஹ்ரீ(ரஹ்) கூறினார்கள்:

''இறைத்தூதர்(ஸல்) அவர்கள் '(ஒரு பெண்) யாருடைய அதிகாரத்தில் இருக்கும்போது குழந்தை பிறக்கிறதோ அவருக்கே அக்குழந்தை உரியது. விபசாரம் செய்தவருக்கு இழப்பு தான் உரியது' என்று கூறினார்கள்'' என ஆயிஷா(ரலி) கூறினார். 338

மேலும், அபூ ஹுரைரா(ரலி) நபி(ஸல்) அவர்களின் இந்தத் தீர்ப்பை (மக்களுக்கு) உரக்க அறிவித்து வந்தார்கள்.

4304. உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்களின் காலத்தில் மக்கா வெற்றிப்போரின்போது (மக்ஸூமி குலத்துப்) பெண்ணொருத்தி திருடிவிட்டாள். எனவே, அவளுடைய குலத்தார் (தண்டனைக்கு) அஞ்சி அவளுக்காகப் பரிந்துரைக்கும்படி கோரி, உஸாமா இப்னு ஸைத்(ரலி) அவர்களிடம் வந்தார்கள். உஸாமா(ரலி), 'எனக்காக (அல்லாஹ்விடம்) பாவமன்னிப்புக் கோரி பிரார்த்தியுங்கள், இறைத்தூதர் அவர்களே!'' என்று கூறினார்கள். மாலை நேரம் வந்தபோது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் உரையாற்றிட எழுந்து நின்று, அல்லாஹ்வை அவனுடைய தகுதிக்கேற்ற படி போற்றிப் புகழ்ந்துவிட்டுப் பிறகு, 'நிற்க, உங்களுக்கு முன்னிருந்த மக்களை அழித்ததெல்லாம் அவர்கள், தம்மிடையேயுள்ள உயர்ந்த(குலத்த)வன் திருடிவிடும்போது அவனை (தண்டிக்காமல்)விட்டு வந்ததும், பலவீனமான (பிரிவைச் சேர்ந்த)வன் திருடி விடும்போது அவனுக்கு தண்டனை கொடுத்து வந்ததும் தான். முஹம்மதின் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீதாணையாக! முஹம்மதின் மகள் ஃபாத்திமாவே திருடி விட்டிருந்தாலும் அவளுடைய கையையும் நான் வெட்டியிருப்பேன்'' என்று கூறினார்கள். பிறகு இறைத்தூதர்(ஸல்)அவர்கள் அந்தப் பெண்ணின் கையை வெட்டும்படி உத்தரவிட, அவ்வாறே அவளுடைய கை வெட்டப்பட்டது. அதன் பிறகு அவள் அழகிய முறையில் பாவமன்னிப்புக் கோரி (திருந்தி)விட்டாள்; மேலும் மணம் புரிந்தும் கொண்டாள்.

ஆயிஷா(ரலி) கூறினார்:

அதன் பிறகு அவள் என்னிடம் வந்து கொண்டிருந்தாள். நான் அவளுடைய தேவையை(ப் பூர்த்தி செய்யும்படி) இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் முறையிடுவேன். 339

4305 / 4306 முஜாஷிஉ இப்னு மஸ்வூத் இப்னி ஸஅலபா(ரலி) கூறினார்

மக்கா வெற்றிக்குப் பிறகு, நான் என் சகோதரர் (முஜாலித் இப்னு மஸ்வூத்(ரலி) உடன் நபி(ஸல்) அவர்களிடம் சென்று, 'இறைத்தூதர் அவர்களே! ஹிஜ்ரத் செய்வதற்கான உறுதிமொழியை என் சகோதரரிடம் தாங்கள் பெறவேண்டுமென்பதற்காக அவரை அழைத்துக் கொண்டு நான் தங்களிடம் வந்துள்ளேன்'' என்று சொன்னேன். நபி(ஸல்) அவர்கள், '(மக்கா வெற்றிக்கு முன்பு) ஹிஜ்ரத் செய்தவர்கள் அதிலுள்ள நன்மையை (முன்பே) கொண்டு சென்றார்கள்'' என்று பதில் கூறினார்கள். நான், '(அப்படியென்றால்) எதற்காக அவரிடம் தாங்கள் உறுதிமொழி பெறுவீர்கள்'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'இஸ்லாத்தின் படி நடக்கவும் இறை நம்பிக்கையில் நிலைத்திருக்கவும், (தேவைப்படும் போது) அறப்போர் புரியவும் நான் அவரிடம் உறுதிமொழி பெறுவேன்'' என்று பதிலளித்தார்கள். 340

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவான அபூ உஸ்மான் அந்நஹ்தீ(ரஹ்) கூறினார்கள்.

இதற்குப் பின் நான் (முஜாஷிஉ அவர்களின் சகோதரர்) மஅபத் (என்னும் முஜாலித்) அவர்களைச் சந்தித்தேன். அவரே சகோதரர்கள் இருவாரில் பெரியவராக இருந்தார். (இச்செய்தி பற்றி) அவரிடம் விசாரித்தேன். அவர், 'முஜாஷிஉ உண்மையே கூறினார்'' என்று கூறினார்.

4307 / 4308 முஜாஷிஉ இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்

ஹிஜ்ரத் செய்வதற்கான உறுதிமொழியைப் பெறுவதற்காக (என் சகோதரர்) அபூ மஅபத் (முஜாலித்) அவர்களை அழைத்துக் கொண்டு நபி(ஸல்) அவர்களிடம் சென்றேன். நபி(ஸல்) அவர்கள், 'ஹிஜ்ரத், அதற்குரியவர்களுக்குக் கடமையாகி (நிறைவேறி) முடிந்து விட்டது. இனி, இஸ்லாத்தின் படி நடந்திடவும் அறப்போர் புரிந்திடவும் தான் இவரிடம் நான் உறுதிமொழி பெறுவேன்'' என்று கூறினார்கள்.

இதன் அறிவிப்பாளர் அபூ உஸ்மான் அந்நஹ்தீ(ரஹ்) கூறினார்கள்:

(இதை எனக்கு அறிவித்த முஜாஷிஉ - ரலி - அவர்களின் சகோதரர்) அபூ மஅபத் (முஜாலித் (ரலி) அவர்களைப் பின்னர் நான் சந்தித்து, அவரிடம் (இச்செய்தி பற்றி விசாரித்தேன். அவர், 'முஜாஷி உண்மையே கூறினார்'' என்று கூறினார்.

அபூ உஸ்மான்(ரஹ்) முஜாஷிஉ(ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கிற மற்றோர் அறிவிப்பில், 'நான் என் சகோதரர் முஜாலிதுடன் நபி(ஸல்) அவர்களிடம் வந்தேன்'' என்று இடம் பெற்றுள்ளது.

4309. முஜாஹித் இப்னு ஜப்ர்(ரஹ்) அறிவித்தார்

நான் இப்னு உமர்(ரலி) அவர்களிடம், 'நான் ஹிஜ்ரத் செய்து, ஷாம் நாட்டிற்குச் செல்ல விரும்புகிறேன்'' என்று சொன்னேன். அதற்கு அவர்கள், '(மக்கா வெற்றிக்குப் பிறகு) ஹிஜ்ரத் என்பது இல்லை. ஆயினும், ஜிஹாத் - அறப்போர் உண்டு. எனவே, நீ சென்று (அறப்போரில் கலந்து கொள்ளும்) உன் (விருபத்தி)னை முன் வை! (அதற்கான வாய்ப்பு) எதுவும் உனக்குக் கிடைத்தால் அவ்வாறே சென்று அறப்போர் புரி இல்லையேல் திரும்பிவிடு'' என்று கூறினார்கள். 341

4310. முஜாஹித்(ரஹ்) அறிவித்தார்கள்.

நான் இப்னு உமர்(ரலி) அவர்களிடம் (நான் ஹிஜ்ரத் செய்து, ஷாம் நாட்டிற்குச் செல்ல விரும்புவதாகக்) கூறினேன். அதற்கு அவர்கள், 'இன்று... அல்லது இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்குப் பிறகு... ஹிஜ்ரத் என்பதே கிடையாது'' என்று முன்பு (அறிவித்ததைப்) போன்றே கூறினார்கள்.

4311. முஜாஹித் இப்னு ஜப்ர் அல் மக்கீ(ரஹ்) அறிவித்தார்

அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி), '(மக்கா) வெற்றிக்குப் பின் ஹிஜ்ரத் என்பதே கிடையாது'' என்று சொல்லிவந்தார்கள்.

4312. அதாஉ இப்னு அபீ ரபாஹ்(ரஹ்) கூறினார்

நான் உபைத் இப்னு உமைர் அல் லைஸீ(ரஹ்) அவர்களுடன் ஆயிஷா(ரலி) அவர்களைச் சந்தித்தேன். அவர்களிடம் ஹிஜ்ரத்தைப் பற்றி அவர் கேட்டதற்கு அவர்கள், 'இன்று (மக்கா வெற்றி கொள்ளப்பட்டுவிட்ட பிறகு) ஹிஜ்ரத் கிடையாது. (ஒரு காலத்தில்,) இறை நம்பிக்கையாளர்கள் (தம் மார்க்கத்தைப் பின்பற்ற முடியாதவாறு) தாம் சோதிக்கப்பட்டு விடுவோமோ என்று அஞ்சி, தம் மார்க்கத்துடன் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் (திருப்தியுறச் செய்வதை) குறிக்கோளாகக் கொண்டு (தம் தாய் நாட்டைத் துறந்து) ஓடி வந்தார்கள். ஆனால், இன்றோ அல்லாஹ் இஸ்லாத்தை ஓங்கச் செய்துவிட்டான். இன்று இறை நம்பிக்கையாளர், தான் விரும்பிய இடத்தில் தன் இறைவனை வணங்கலாம். ஆயினும், (ஹிஜ்ரத் தான் இனி இல்லையே தவிர) ஜிஹாத் (எனும் அறப்போர்) புரிவதும் (அதற்காகவும் பிற நற்செயல்களுக்காகவும்) நாட்டம் கொள்வதும் (இன்றும்) உண்டு'' என்று பதிலளித்தார்கள். 342

4313 . முஜாஹித்(ரஹ்) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின்போது (மக்களிடையே) எழுந்து நின்று, 'அல்லாஹ் வானங்களையும் பூமியையும் படைத்த போதே மக்காவைப் புனிதப்படுத்திவிட்டான். எனவே, அது அல்லாஹ் புனிதப்படுத்திய காரணத்தால் இறுதி நாள் வரை புனிதமானதாகும். எனக்கு முன்பும் எவருக்கும் இங்கு போரிடுதல் அனுமதிக்கப்படவில்லை. எனக்குப் பிறகும் எவருக்கும் அது அனுமதிக்கப்படாது. எனக்குக் கூட (மக்கா வெற்றி கொள்ளப்படும் இத்தருணத்தில்) சிறிது நேரம் மட்டுமே இங்கு போர் புரிய அனுமதிக்கப்பட்டது. இங்குள்ள வேட்டைப் பிராணிகளை விரட்டக் கூடாது. இங்குள்ள மரங்களை வெட்டக்கூடாது. இங்குள்ள புற்பூண்டுகளைக் கிள்ளக்கூடாது. பிறர் தவறவிட்ட பொருளை அதை அறிவிப்பவர் தவிர வேறவரும் எடுக்கக் கூடாது'' என்று கூறினார்கள். உடனே, அப்பாஸ் இப்னு அப்தில் முத்தலிப்(ரலி), 'இறைத்தூதர் அவர்களே! 'இத்கிர்' எனும் புல்லைத் தவிரவா? ஏனெனில், அது உலோகத் தொழிலாளர்களுக்கும் வீடுகளுக்கும் தேவைப்படுகிறதே'' என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள் (சிறிது நேரம்) மௌனமாயிருந்துவிட்டுப் பிறகு, 'இத்கிரைத் தவிரத் தான் ஏனெனில், அதை வெட்டிப் பயன்படுத்துவது அனுமதிக்கப்பட்டதாகும்'' என்று பதிலளித்தார்கள்.

இந்த ஹதீஸ் இன்னும் பல அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. 343

பகுதி 55

அல்லாஹ் கூறினான்:

(போர்க்)களங்கள் பலவற்றில் (உங்கள் எண்ணிக்கை குறைவாயிருந்தும்) நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு உதவியிருக்கிறான். எனினும், ஹுனைன் போரன்று உங்களை அகமகிழச் செய்து கொண்டிருந்த, உங்களுடைய அதிகமாக (மக்கள்) தொகை உங்களுக்கு எந்தப் பலனையும் அளிக்கவில்லை. பூமி இவ்வளவு விசாலமாயிருந்தும், (அப்போது அது) உங்களுக்கு நெருக்கடி மிக்கதாகத் தோன்றியது. அன்றி, நீங்கள் புறமுதும்ட்டு ஓடவும் முற்பட்டீர்கள்... (திருக்குர்ஆன் 09: 25-27)344

4314. இஸ்மாயீல் இப்னு அபீ காலித்(ரஹ்) அறிவித்தார்

இப்னு அபீ அவ்ஃபா(ரலி) அவர்களின் கையில் வெட்டுக்காயம் ஒன்றைக் கண்டேன். அவர்கள், 'ஹுனைன் போரில் நபி(ஸல்) அவர்களுடன் நான் இருந்தபோது இந்தக் காயம் எனக்கு ஏற்பட்டது.'' என்றார்கள். நான், 'ஹுனைன் போரில் நீங்கள் கலந்து கொண்டீர்களா?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், '(ஆம், அதிலும்) அதற்கு முன்பு நடந்த போர்களிலும் கலந்து கொண்டேன்'' என்றார்கள்.

4315. பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்

என்னிடம் ஒருவர் வந்து, 'அபூ உமாராவே! ஹுனைன் போரின்போது நீங்கள் (தோற்றுப்) பின்வாங்கி விட்டீர்களா?' என்று கேட்டார். நான், 'நபி(ஸல்) அவர்கள் தோற்றுப் பின் வாங்கிச் செல்லவில்லை என்பதற்கு நான் சாட்சியமளிக்கிறேன். ஆயினும், சமுதாயத்தில் அவசரக்காரர்கள் சிலர் (பதுங்கியிருந்த எதிரிகளைக் கவனிக்காது அவர்களின் போர்ச் செல்வங்களைச் சேகாரிப்பதில்) அவசரப்பட்டுவிட்டார்கள். அப்போது (அம்பெய்வதில் வல்லவர்களான) ஹவாஸின் குலத்தார் அவர்களின் மீது (சரமாரியாக) அம்பெய்தார்கள். அப்போது அபூ சுஃப்யான் இப்னு ஹாரிஸ்(ரலி) நபி(ஸல்) அவர்களின் 'பைளா' என்னும் வெள்ளைக் கோவேறுக் கழுதையின் தலையைப் பிடித்துக் கொண்டிருக்க, 'நான் இறைத் தூதர் தாம்; இது பொய்யல்ல. நான் அப்துல் முத்தலிபின் (மகனுடைய) மகன் ஆவேன்'' என்று நபி(ஸல்) அவர்கள் (பாடிய படி) கூறிக் கொண்டிருந்தார்கள். 345

4316. அபூ இஸ்ஹாக்(ரஹ்)அவர்கள் அறிவித்தார்

பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அவர்களிடம், 'நீங்கள் ஹுனைன் போரின்போது நபி(ஸல்) அவர்களுடன் தோற்றுப் பின்வாங்கிச் சென்றீர்களா?' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், '(எங்களில் சிலர் பின் வாங்கிச் சென்றது உண்மையே. ஆயினும்,) நபி(ஸல்) அவர்களோ பின்வாங்கிச் செல்லவில்லை. (எதிரிகளான) ஹவாஸின் குலத்தார் அம்பெய்வதில் தேர்ச்சி பெற்றவர்களாயிருந்தனர். நபி(ஸல்) அவர்கள், 'நான் இறைத்தூதர் தாம்; இது பொய்யல்ல. நான் அப்துல் முத்தலிபின் (மகனுடைய) மகன் ஆவேன்' என்று (பாடிய படிக்) கூறிக் கொண்டிருந்தார்கள்.

4317. பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்

கைஸ் குலத்தைச் சேர்ந்த ஒருவர் என்னிடம், 'நீங்கள் ஹுனைன் போரின்போது இறைத்தூதர்(ஸல்) அவர்களை (தனியே)விட்டு (புறமுதும்ட்டு) ஓடவிட்டீர்களா?' என்று கேட்டார். நான், '(எங்களில் சிலர் அப்படி ஓடியது உண்மைதான்;) ஆயினும், இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பின்வாங்கி ஓடவில்லை. ஹவாஸின் குலத்தார் அம்பெய்வதில் தேர்ச்சி பெற்றவர்களாயிருந்தனர். நாங்கள் அவர்களின் மீது (முதலில்) தாக்குதல் நடத்தியபோது அவர்கள் தோன்று (சிதறியயோடி)விட்டனர். எனவே, நாங்கள் போர்ச் செல்வங்களைச் சேகரிக்க விரைந்தோம். அப்போது நாங்கள் அம்புகளை எதிர்கொள்ள வேண்டியதாயிற்று. நான் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தங்களின் 'பைளா' என்னும் வெள்ளைக் கோவேறுக் கழுதையின் மீது அமர்ந்து கொண்டிருக்கக் கண்டேன். அபூ சுஃப்யான் இப்னு ஹாரிஸ்(ரலி) அதன் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டிருந்தார். நபி(ஸல்) அவர்கள், 'நான் இறைத்தூதர் தாம்; இது பொய்யல்ல...'' என்று (பாடியபடி) கூறிக் கொண்டிருந்தார்கள். 346...

அறிவிப்பாளர்களான இஸ்ராயீல் இப்னு யூனுஸ்(ரஹ்) மற்றும் ஸுஹைர் இப்னு முஆவியா(ரஹ்) ஆகியோர் மற்றோர் அறிவிப்பில், 'நபி(ஸல்) அவர்கள் தம் கோவேறுக் கழுதையிலிருந்து இறங்கினார்கள்'' என்று அறிவிக்கின்றனர். 347

4318 / 4319 மர்வான் இப்னி ஹகம் மற்றும் மிஸ்வர் இப்னு மக்ரமா(ரலி) அறிவித்தார்

ஹவாஸின் குலத்தின் தூதுக் குழுவினர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ('ஜிஇர்ரானா' என்னும் இடத்திற்கு) முஸ்லிம்களாக வந்தபோது நபி(ஸல்) அவர்கள் எழுந்திருந்தார்கள். (வந்தவர்கள்) நபியவர்களிடம் (முஸ்லிம்கள் ஹுனைன் போரில் கைப்பற்றிய) தம் செல்வங்களையும் போர்க் கைதிகளையும் திருப்பித் தந்து விடும்படி கேட்டார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'என்னுடன் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் இவர்களும் (இந்தப் போர் வீரர்களும்) இருக்கின்றனர். (இவர்களுக்கும் நான் போர்ச் செல்வத்தில் பங்குதர வேண்டியுள்ளது.) பேச்சில் எனக்கு மிகவும் பிரியமானது உண்மையான பேச்சேயாகும். போர்க் கைதிகள் அல்லது (உங்கள்) செல்வங்கள் இரண்டில் நீங்கள் விரும்பியதைத் திரும்பப் பெறுங்கள். நான் உங்களை எதிர்பார்த்து(க் கைதிகளைப் பங்கிடாமல்) இருந்தேன்'' என்று கூறினார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தாயிஃபிலிருந்து திரும்பியபோது பத்துக்கும் மேற்பட்ட நாள்கள் ஹவாஸின் குலத்தாரை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இரண்டிலொன்றைத் தான் திருப்பித் தருவார்கள் என்று அவர்களுக்குத் தெளிவாகிவிட்டபோது, 'உங்கள் கைதிகளையே நாங்கள் திரும்பப் பெற்றுக் கொள்கிறோம்'' என்று கூறினார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் முஸ்லிம்களிடையே எழுந்து நின்று, அல்லாஹ்வை அவனுக்குரிய முறையில் புகழ்ந்துவிட்டு, 'அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்த பின் கூறுகிறேன்: உங்களுடைய இந்தச் சகோதரர்கள் நம்மிடம் மனம் திருந்தியவர்களாக வந்துள்ளனர். இவர்களில் (நம்மிடம்) போர்க் கைதிகளாக இருப்பவர்களை இவர்களிடமே திருப்பிக் கொடுத்து விடுவதை நான் பொருத்தமானதாகக் கருதுகிறேன். உங்களில் மனப்பூர்வமாக இதற்குச் சம்மதிக்கிறவர் திருப்பித் தந்து விடட்டும்; அல்லாஹ், (இனி வரும் நாள்களில்) முதலாவதாக நமக்குத் தரவிருக்கும் (வெற்றி கொள்ளப்படும் நாட்டின்) செல்வங்களிலிருந்து அவருக்கு நாம் தருகிற வரை அவற்றைத் தம்மிடமே வைத்திருக்க விரும்புகிறவர் அவ்வாறே வைத்திருக்கட்டும்'' என்று கூறினார்கள். மக்கள், 'நாங்கள் மனப்பூர்வமாக (போர்க் கைதிகளைத்) திருப்பிக் கொடுக்கச் சம்மதிக்கிறோம், இறைத்தூதர் அவர்களே!'' என்று கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'உங்களில் இதற்கு யார் சம்மதிக்கிறார், யார் சம்மதிக்கவில்லை என்று எமக்குத் தெரியாது. எனவே, நீங்கள் திரும்பிச் சென்று விடுங்கள். உங்களிடையேயுள்ள தலைவர்கள் உங்கள் முடிவை எனக்குத் தெரிவிக்கட்டும்'' என்று கூறினார்கள். மக்கள் திரும்பிச் செல்ல, அவர்களிடம் அவர்களின் தலைவர்கள் பேசினார்கள். பிறகு, இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் தலைவர்கள் திரும்பி வந்து, மக்கள் மனப்பூர்வமாகச் சம்மதித்துவிட்டதாகத் தெரிவித்தார்கள்.

(அறிவிப்பாளர் இப்னு ஷிஹாப்(ரஹ்) கூறினார்:)

இதுதான் ஹவாஸின் குலத்தாரின் போர்க் கைதிகள் குறித்து நமக்கு எட்டிய செய்தியாகும். 348

4320. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்

நாங்கள் ஹுனைன் போரிலிருந்து திரும்பி வந்தபோது உமர்(ரலி), தாம் அறியாமைக் காலத்தில் நேர்ச்சை செய்திருந்த ஓர் 'இஃதிகாஃப்' தொடர்பாக நபி(ஸல்) அவர்களிடம் கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் அதை நிறைவேற்றும்படிக் கட்டளையிட்டார்கள்.

இதே ஹதீஸ் வேறு பல அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 349

4321. அபூ கத்தாதா(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் ஹுனைன் (போர் நடந்த) ஆண்டில் (போருக்காக) நாங்கள் புறப்பட்டோம். (எதிரிகளைப் போர்க் களத்தில்) நாங்கள் சந்தித்தபோது (ஆரம்பத்தில்) முஸ்லிம்கள் (சிலர்) இடையே உறுதியற்ற நிலை ஏற்பட்து. நான் இணைவைப்பவன் ஒருவனைப் பார்த்தேன். அவன் ஒரு முஸ்லிமின் மீது ஏறி உட்கார்ந்து கொண்டு அவரைக் கொல்ல முயன்றான். நான் அவன் பின்பக்கமாகச் சென்று வாளால் அவனுடைய (கழுத்துக்குக் கீழே) தோள் நரம்பில் வெட்டி அவனுடைய கவசத்தைத் துண்டித்து விட்டேன். உடனே, அவன் (அந்த முஸ்லிமை விட்டுவிட்டு) என்னை இறுக அணைத்துக் கொண்டான். அதனால் நான் மரணக் காற்றை சுவாசிக்கலானேன். பிறகு மரணம் அவனைத் தழுவ அவன் என்னை விட்டுவிட்டான். உடனே நான் உமர் இப்னு கத்தாப்(ரலி) அவர்களைச் சென்றடைந்து, 'மக்களுக்கு என்ன நேர்ந்தது? (இப்படிக் களத்திலிருந்து பின்வாங்கி ஓடுகிறார்களே)'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், '(எல்லாம்) அல்லாஹ்வின் ஏற்பாடு'' என்று பதிலளித்தார்கள். பிறகு, மக்கள் (அப்பாஸ் - ரலி - அவர்கள் அழைத்தால் போர்க் களத்திற்குத் திரும்பி வந்தார்கள். (தீரத்துடன் போராடி வென்றார்கள்.) பிறகு, நபி(ஸல்) அவர்கள் அமர்ந்து கொண்டு, 'போரில் (எதிரி) ஒருவரைக் கொன்றதற்கான ஆதாரம் எவரிடம் இருக்கிறதோ அவருக்கே அந்த எதிரியின் உடலிலிருந்து எடுத்த பொருள்கள் உரியவை'' என்று கூறினார்கள். அப்போது நான் எழுந்து நின்று, 'எனக்கு சாட்சி சொல்வார்?' என்று கேட்டேன். பிறகு உட்கார்ந்து கொண்டேன். மீண்டும் நபி(ஸல்) அவர்கள், 'போரில் (எதிரி) ஒருவரை; கொன்றதற்கான ஆதாரம் எவரிடம் இருக்கிறதோ அவருக்கே அந்த எதிரியின் உடலிலிருந்து எடுத்த பொருள்கள் உரியவை' என்று கூறினார்கள். உடனே, நான் எழுந்து நின்ற, 'எனக்கு எவர் சாட்சி சொல்வார்?' என்று கேட்டேன். பிறகு உட்கார்ந்து விட்டேன். பிறகு, (மூன்றாவது முறையாக) அதே போன்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே, நான் எழுந்தேன். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'அபூ கத்தாதாவே! உங்களுக்கென்ன நேர்ந்தது?' என்று கேட்டார்கள். (நடந்த நிகழ்ச்சியை) நான் அவர்களிடம் எடுத்துரைத்தேன். ஒருவர், 'இவர் உண்மையே கூறினார், இறைத்தூதர் அவர்களே! இவரால் கொல்லப்பட்டவரின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட பொருள்கள் என்னிடம் உள்ளன. எனக்காக அவரை (ஏதாவது கொடுத்துத்) திருப்திப்படுத்தி விடுங்கள்'' என்று கூறினார். அப்போது அபூ பக்ர்(ரலி), 'இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் சிங்கங்களில் ஒரு சிங்கம் அல்லாஹ்வின் சார்பாகவும் அவனுடைய தூதரின் சார்பாகவும் போரிட்டு, (தன்னால்) கொல்லப்பட்டவரின் உடலிலிருந்து எடுத்த பொருளை உனக்குக் கொடுத்து விடுவதை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஒருபோதும் விரும்பமாட்டார்கள்'' என்று கூறினார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள், '(அபூ பக்ர்) உண்மை கூறினார்'' என்று கூறிவிட்டு என்னிடம் கொடுக்குமாறு உத்தரவிட்டார்கள். அவ்வாறே அதை எனக்கே கொடுத்துவிட்டார்கள். நான் அந்தப் பொருளை விற்றுவிட்டு பனூ சலிமா குலத்தார் வாழும் பகுதியில் ஒரு பேரீச்சந்தோட்டத்தை வாங்கினேன். அதுதான் இஸ்லாத்தைத் தழுவிய பின் நான் தேடிய முதல் சொத்தாகும். 350

4322. அபூ கத்தாதா(ரலி) அறிவித்தார்

ஹுனைன் போரின்போது முஸ்லிம்களில் ஒருவர் இணைவைப்பவர்களில் ஒருவரோடு போரிட்டுக் கொண்டிருந்ததை கண்டேன். இணைவைப்பவர்களில் இன்னொருவர் அந்த முஸ்லிமைக் கொல்வதற்காக அவருக்குப் பின்னாலிருந்து ஒளிந்து ஒளிந்து வந்து கொண்டிருப்பதையும் கண்டேன். ஒளிந்தபடி அவரைத் தாக்க வந்தவரை நோக்கி (அவரைத் தடுப்பதற்காக) நான் விரைந்தோட, அவர் என்னைத் தாக்குவதற்காகத் தன் கையை ஓங்கினார். நான் அவரின் கையில் தாக்கி அதைத் துண்டித்து விட்டேன். பிறகு அவர் என்னைப் பிடித்துக் கொண்டு, நான் (என் உயிர் பிரிந்துவிடுமோ என்று) அஞ்சும் அளவிற்குக் கடுமையாக என்னைக் கட்டியணைத்தார். பிறகு என்னைவிட்டுவிட்டுப் பிடி தளர்ந்தார். பிறகு நான் அவரை(க் கீழே) தள்ளிக் கொன்று விட்டேன். (ஆனால்,) முஸ்லிம்கள் தோற்றுவிட்டனர். நானும் அவர்களுடன் தோற்றுப்போனேன். நான் அப்போது (தோற்ற) மக்களிடையே உமர் இப்னு கத்தாப்(ரலி) இருப்பதைக் கண்டேன். நான் அவர்களிடம், 'மக்களுக்கு என்னாயிற்று?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், '(எல்லாம்) அல்லாஹ்வின் ஏற்பாடு'' என்று கூறினார்கள். பிறகு மக்கள் நபி(ஸல்) அவர்களிடம் திரும்பி வந்து (தீரத்துடன் போரிட்டு வென்றார்கள். இறுதியில், தங்கள் போர்ச் செல்வத்தைக் குறித்துக்) கேட்டார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'தன்னால் கொல்லப்பட்ட (எதிரி) ஒருவரை, அவர்தான் கொன்றார் என்பதற்கு ஒரு சான்றைக் கொண்டு வருகிறவருக்கே கொல்லப்பட்டவரின் உடலிலிருந்து எடுக்கப்படும் பொருள்கள் உரியன'' என்று கூறினார்கள். எனவே, என்னால் கொல்லப்பட்ட வரை நானே கொன்றேன் என்பதற்கு சான்று தேடுவதற்காக நான் எழுந்தேன். ஆனால், எனக்காக சாட்சி சொல்பவர் எவரையும் நான் காணவில்லை. எனவே, உட்கார்ந்து கொண்டேன். பிறகு ஏதோ தோன்ற, நான் ஒருவரைக் கொன்றதை இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சொன்னேன். உடனே நபி(ஸல் அவர்களுடன் அமர்ந்திருந்தவர்களில் ஒருவர், '(இவரால் கொல்லப்பட்டதாக) இவர் சொல்கிற அந்த மனிதரின் ஆயுதம் என்னிடம் இருக்கிறது. நானே இதை எடுத்துக் கொள்ள அவரிடமிருந்து (எனக்கு) இசைவு பெற்றுத் தாருங்கள்'' என்று கூறினார். அப்போது அபூ பக்ர்(ரலி), 'அப்படி முடியாது. (கொல்லப்பட்டவரின்) அந்த உடைமைகளை, அல்லாஹ்வுக்காகவும் அவனுடைய தூதருக்காகவும் போரிடுகின்ற, அல்லாஹ்வின் சிங்கங்களில் ஒரு சிங்கத்தைவிட்டுவிட்டு குறைஷிகளின் (பலவீனமான) ஒரு குஞ்சுப் பறவைக்கு அதை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கொடுக்க மாட்டார்கள்'' என்று கூறினார்கள். உடனே இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எழுந்து எனக்கு அந்தப் பொருளைக் கொடுத்தார்கள். நான் அதை விற்று பேரீச்சந் தோட்டம் ஒன்றை விலைக்கு வாங்கினேன். அதுதான் நான் இஸ்லாத்திற்கு வந்த பின் தேடிக் கொண்ட முதல் சொத்தாக இருந்தது.

பகுதி 58

'அவ்தாஸ்' போர் 351

4323. அபூ மூஸா(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள், ஹுனைன் போரை முடித்துக் கொண்டு திரும்பியபோது, அபூ அமீர் அவர்களை (தளபதியாக்கி) 'அவ்தாஸ்' பள்ளத்தாக்கிற்கு ஒரு படையை அனுப்பி வைத்தார்கள். அப்போது அபூ ஆமிர் அவர்கள் (கவிஞன்) 'துரைத் இப்னு ஸிம்மா'வைச் சந்தித்தார்கள். (அவர்கள் இருவருக்குமிடையில் சண்டை நடந்தது. அதில்) துரைத் கொல்லப்பட்டான். அவனுடைய தோழர்களை அல்லாஹ் தோற்கடித்தான். அபூ ஆமிர் அவர்களுடன் என்னையும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (அந்தப் போருக்கு) அனுப்பியிருந்தார்கள். அப்போரின்போது அபூ ஆமிர் அவர்களின் முழங்காலில் அம்பு பாய்ந்தது. ஜுஷம் குலத்தைச் சேர்ந்த ஒருவனே அந்த அம்மை எய்து, அதை அவர்களின் முழங்காலில் நிறுத்தினான். உடனே நான் அவர்களுக்கு அருகில் சென்று, 'என் தந்தையின் சகோதரரே! உங்களின் மீது அம்பெய்தவன் யார்?' என்று கேட்டேன். 'என் மீது அம்பெய்து என்னைக் கொன்றவன் இதோ!'' என்று (அவனை நோக்கி) என்னிடம் சைகை காட்டினார்கள். நான் அவனை நோக்கிச் சென்று, அவனை அடைந்தேன். என்னைக் கண்டதும் அவன் புறமுதுகிட்டு ஓடலானான். அவனைப் பின்தொடர்ந்து நானும் ஓடிக் கொண்டே, '(என்னைக் கண்டு ஓடுகிறாயே) உனக்கு வெட்கமில்லையா? நீ நிற்க மாட்டாயா?' என்று கேட்டேன். உடனே அவன் (ஓடுவதை) நிறுத்திக் கொண்டான். பிறகு நாங்கள் இருவரும் வாளினால் மோதிக் கொண்டோம். அப்போது அவனை நான் கொன்று விட்டேன். பிறகு நான் அபூ ஆமிர் அவர்களிடம் (சென்று), 'உங்களைக் கொல்ல முயன்ற ஆளை அல்லாஹ் (என் மூலம்) கொன்றுவிட்டான்'' என்று கூறினேன். பிறகு, (''என்னுடைய முழங்காலில் பாய்ந்திருக்கும்) இந்த அம்மைப் பிடுங்கியெடு'' என்று அவர்கள் கூற, உடனே நான் அதைப் பிடுங்கினேன். அதிலிருந்து நீர் கொட்டியது. 'என் சகோதரரின் மகனே! நபி(ஸல்) அவர்களுக்கு (என்) சலாம் கூறி, எனக்காக (அல்லாஹ்விடம்) பாவ மன்னிப்புக் கேட்கும்படி கோரு'' என்று அபூ ஆமிர்(ரலி) கூறினார். பிறகு என்னைத் தம் பிரதிநிதியாக மக்களுக்கு நியமித்துவிட்டு, சிறிது நேரத்திற்குப் பின் அபூ ஆமீர்(ரலி) (வீர) மரணமடைந்தார்கள். பிறகு (அங்கிருந்து) நான் திரும்பி, நபி(ஸல்) அவர்களிடம் வந்தேன். அப்போது அவர்கள் தங்களின் வீட்டில் (பேரீச்சம் நாரினால் வேயப்பட்ட) கயிற்றுக் கட்டிலில் படுத்திருந்தார்கள். அதன் மீது விரிப்பு ஒன்று இருந்தது. 352 (எனினும்) கட்டிலின் கயிறு நபி(ஸல்) அவர்களின் முதுகிலும், இரண்டு விலாப்புறங்களிலும் அடையாளம் பதித்திருந்தது. பிறகு அவர்களிடம் எங்கள் செய்தியையும், அபூ ஆமிர் அவர்களின் செய்தியையும் கூறி, தமக்காகப் பாவமன்னிப்புக் கேட்கும்படி ஆமிர் அவர்கள் வேண்டியிருக்கிறார்கள் என்பது பற்றியும் கூறினேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் தண்ணீர் கொண்டு வரும்படிக் கூறி, அதில் உளூச் செய்தார்கள். பிறகு தம் இரண்டு கரங்களையும் உயர்த்தி, 'இறைவா! அபூ ஆமிர் உபைதுக்கு நீ மன்னிப்பு அளிப்பாயாக! மறுமை நாளில் உன் படைப்பினமான மனிதர்களில் பலரையும் விட (அந்தஸ்தில்) உயர்ந்தவராக அவரை ஆக்குவாயாக!'' என்று பிரார்த்தித்தார்கள். அப்போது அவர்களின் அக்குள்கள் இரண்டின் வெண்மையையும் பார்த்தேன். உடனே நான், 'எனக்காகவும் பாவமன்னிப்புக் கோருங்கள் (நபியே!)'' என்று கூறினேன். அதற்கவர்கள், 'இறைவா! அப்துல்லாஹ் இப்னு கைஸின் பாவத்தை மன்னித்து, மறுமை நாளில் கண்ணியம் நிறைந்த இருப்பிடத்திற்கு அவரை அனுப்புவாயாக! என்று பிரார்த்தித்தார்கள்.

அபூ புர்தா(ரலி) கூறினார்:

(நபி - ஸல் - அவர்கள் புரிந்த இரண்டு பிரார்த்தனைகளில்) ஒன்று அபூ அமீர்(ரலி) அவர்களுக்கும் மற்றொன்று அபூ மூஸா(ரலி) அவர்களுக்கும் உரியதாகும்.

பகுதி 57

ஹிஜ்ரி எட்டாமாண்டு ஷவ்வால் மாதம் நடந்த 'தாயிஃப்' போர். 353

இதை மூஸா இப்னு உக்பா(ரஹ்) அறிவித்தார்.

4324. (நபிகளாரின் துணைவியார்) உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார்

என்னிடம் (ஆணுமல்லாத பெண்ணுமல்லாத) 'அலி' ஒருவர் அமர்ந்திருந்தபோது நபி(ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். அந்த 'அலி', (என் சகோதரர்) அப்துல்லாஹ் இப்னு அபீ உமய்யாவிடம், 'அப்துல்லாஹ்வே! நாளை தாயிஃப் நகர் மீது உங்களுக்கு அல்லாஹ் வெற்றியளித்தால் நீ ஃகய்லானின் மகளை மணந்துகொள். ஏனென்றால், அவள் முன்பக்கம் நாலு (சதை மடிப்புகளு)டனும், பின்பக்கம் எட்டு (சதை மடிப்புகளு)டனும் வருவாள்'' என்று சொல்வதை செவியுற்றேன். 354 (இதைக் கேட்ட) நபி(ஸல்) அவர்கள், 'இந்த அலிகள் (பெண்களாகிய) உங்களிடம் ஒருபோதும் வர (அனுமதிக்க)க் கூடாது'' என்று கூறினார்கள். இப்னு உயைனா(ரஹ்), இப்னு ஜுரைஜ்(ரஹ்) ஆகியோரின் அறிவிப்பில் அந்த அலியின் பெயர் 'ஹீத்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 355

... மற்றோர் அறிவிப்பில், 'அப்போது நபி(ஸல்) அவர்கள் தாயிஃபை முற்றுகையிட்டுக் கொண்டிருந்தார்கள்'' என்று அதிகப்படியாக இடம் பெற்றுள்ளது.

4325. அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார் 356

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தாயிஃப் நகரத்தை முற்றுகையிட்டபோது அவர்களால் அம்மக்களை ஒன்றும் செய்ய முடியவில்லை. எனவே, 'இறைவன் நாடினால் நாம் (நாளை மதீனாவுக்குத்) திரும்பிச் செல்வோம்'' என்று அவர்கள் கூறினார்கள். அவர்கள் இப்படிச் சொன்னது நபித் தோழர்களுக்கு வருத்தமளித்தது. அவர்கள், 'இதை வெற்றி கொள்ளாமல் நாம் திரும்பிச் செல்வதா?' என்று பேசிக்கொண்டார்கள். நபி(ஸல்) அவர்கள் (மீண்டும்) ஒரு முறை, 'நாம் திரும்பிச் செல்வோம்'' என்று கூறினார்கள். பிறகு (தோழர்களின் தயக்கத்தைக் கண்டு) முற்பகலிலேயே போர் புரியுங்கள்'' என்று கூறினார்கள். அவ்வாறே அவர்கள் முற்பகலில் போர் புரிய, (அதனால்) (பலத்த) காயங்களுக்கு ஆளானார்கள். 357

அப்போது நபி(ஸல்) அவர்கள், 'இறைவன் நாடினால் நாளை நாம் (மதீனாவுக்குத்) திரும்பிச் செல்வோம்'' என்றார்கள். நபி(ஸல்) அவர்கள் இப்படிச் சொன்னது நபித்தோழர்களுக்கு (இப்போது) மகிழ்ச்சியை அளித்தது. (அவர்களின் மகிழ்ச்சியைக் கண்டு) நபி(ஸல்) அவர்கள் சிரித்தார்கள். 358

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்) இதை அறிவித்தபோது ஒரு முறை, 'நபி(ஸல்) அவர்கள் (சிரித்தார்கள்'' என்பதற்கு பதிலாக) புன்கைத்தார்கள்'' என்று அறிவித்தார்கள்.

4326 / 4327 நபி(ஸல்) கூறினார்கள்:

எவன் தெரிந்து கொண்டே தன்னைத்தானே தந்தையல்லாத (வேறு) ஒருவருடன் இணைத்து, (''நான் அவரின் மகன் தான்'' என்று) வாதாடுகிறானோ அவனுக்கு சொர்க்கம் (புகுவது) தடை செய்யப்பட்டதாகும்.

''இறைவழியில் ஓர் அம்பை முதன் முதலாக எய்தவரான ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அவர்களிடமிருந்தும் (புதிதாக இஸ்லாத்தைத் தழுவிய தாயிஃப் நகர மக்களின் அடிமைகள்) சிலரோடு தாயிஃப் கோட்டையின் சுவரைத் தாண்டிக் குதித்து நபி(ஸல்) அவர்களிடம் வந்த அபூ பக்ரா(ரலி) 359 அவர்களிடமிருந்தும் இதை செவியுற்றேன்'' என்று அபூ உஸ்மான் அப்துர் ரஹ்மான் அந்நஹ்தீ(ரஹ்) கூறினார்கள்.

இது, மற்றோர் அறிவிப்பாளர் தொடரிலும் வந்துள்ளது.

அறிவிப்பாளர் ஆஸிம் இப்னு சுலைமான்(ரஹ்), (தமக்கு இதை அறிவித்த அபுல் ஆலியா, அல்லது அபூ உஸ்மான்(ரஹ்) அவர்களிடம் 'உங்களிடம் (இந்த நபிமொழிக்கு) இருவர் சாட்சியம் பகர்ந்துள்ளனர்; அவர்கள் இருவரும் உங்களுக்குப் போதும்'' என்று கூறினார்கள். அதற்கு அவர்கள், 'ஆம்; அவ்விருவரில் ஒருவர் இறைவழியில் (முதன் முதலாக) ஓர் அம்பை எறிந்தவராவார். மற்றொருவரோ, நபி(ஸல்) அவர்களிடம் தாயிஃபிலிருந்து வந்து இருபத்து மூன்று போரில் மூன்றாமவராவார்'' என்று பதிலளித்தார்கள்.

4328. அபூ மூஸா(ரலி) அறிவித்தார்

மக்காவுக்கும் மதீனாவிற்குமிடையே 'ஜிஃரானா' என்னுமிடத்தில் பிலால்(ரலி) அவர்களுடன் நபி(ஸல்) அவர்கள் தங்கியிருந்தபோது நான் அவர்களிடம் இருந்தேன். 360 அப்போது கிராமவாசி ஒருவர் (நபி -ஸல் - அவர்களிடம்) வந்து, 'நீங்கள் எனக்கு வாக்களித்ததைக் கொடுக்கமாட்டீர்களா?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'நற்செய்தியைப் பெற்றுக் கொள்'' என்று கூறினார்கள். 361 அதற்கு அவர், 'இந்த நற்செய்தியைத் தான் எனக்கு நீங்கள் நிறையச் சொல்லிவிட்டீர்களே!'' என்று கூறினார். உடனே நபி(ஸல்) அவர்கள் கோபமடைந்தவரைப் போன்று என்னையும் பிலால்(ரலி) அவர்களையும் நோக்கி வந்தார்கள். 'இவர் (என்னுடைய) நற்செய்தியை ஏற்க மறுத்துவிட்டார். நீங்கள் இருவரும் அதை ஏற்றுக் கொள்ளுங்கள்'' என்று கூறினார்கள். நாங்கள் இருவரும், 'நாங்கள் ஏற்றுக் கொண்டோம்'' என்று கூறினோம். பிறகு தண்ணீருள்ள ஒரு பாத்திரத்தைக் கொண்டு வரச் சொல்லி, அதில் தம் இருகைகளையும் தம் முகத்தையும் கழுவி, அதில் உமிழ்ந்தார்கள் 362. பிறகு (எங்களிடம்), 'இதிலிருந்து சிறிது அருந்திவிட்டு, 'உங்கள் முகங்களிலும் உங்கள் மார்புகளிலும் ஊற்றிக் கொள்ளுங்கள்'' என்று கூறினார்கள். எனவே, நாங்கள் இருவரும் அந்தப் பாத்திரத்தை எடுத்து அவ்வாறே செய்தோம். அப்போது (நபிகளாரின் துணைவியார்) உம்மு ஸலமா(ரலி) திரைக்குப் பின்னாலிருந்து எங்கள் இருவரையும் அழைத்து, '(இறை நம்பிக்கையாளர்களான) உங்களின் அன்னை(யான என)க்காகவும் அதிலிருந்து சிறிது (தண்ணீரை) மீதி வையுங்கள்'' என்று கூறினார்கள். அவ்வாறே நாங்கள் இருவரும் அவர்களுக்காக அதில் சிறிது மீதி வைத்தோம்.

4329. ஸஃப்வான் இப்னு யஅலா(ரலி) அறிவித்தார்

(என் தந்தை) யஅலா இப்னு உமய்யா(ரலி), 'இறைத்தூதர்(ஸல) அவர்களின் மீது வஹீ (இறைச்செய்தி) (வேத வெளிப்பாடு) அருளப்படும்போது அவர்களைப் பார்க்கும் வாய்ப்புக் கிட்டதா என்று ஆசைப்பட்டு வந்தேன்'' என்று கூறுவது வழக்கம். ஒரு முறை, நபி(ஸல்) அவர்கள் (தாயிஃபீலிருந்து) திரும்பும் சமயம்) ஜிஃரானாவில் இருக்கும்போது அவர்களுக்குத் துணியால் (கூடாரம் அமைத்து) நிழல் கொடுக்கப்பட்டிருந்தது. அந்தத் துணிக் (கூடாரத்திற்)குள் நபி(ஸல) அவர்களுடன் அவர்களின் தோழர்கள் சிலரும் இருந்தனர். அப்போது வாசனைத் திரவியத்தில் தோய்ந்த, மேலங்கியொன்றை அணிந்து கொண்டு உம்ராவுக்காக வந்த ஒரு மனிதரைக் குறித்து நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?' என்று கேட்டார். உடனே உமர்(ரலி) யஅலா(ரலி) அவர்களை '(அருகில்) வாருங்கள்'' என்று கைகளால் சைகை செய்து அழைத்தார்கள். யஅலா(ரலி) தம் தலையை (கூடாரத்திற்கு) உள்ளே நுழைத்தார்கள். அப்போது (வேத வெளிப்பாடு அருளப்பட்டுக் கொண்டிருக்க) நபி(ஸல்) அவர்களின் முகம் சிவந்து, அவர்கள் அப்படியே சிறிது நேரம் குறட்டைவிட்ட படி இருந்தார்கள். பிறகு (சிறிது சிறிதாக) அந்த நிலை அவர்களைவிட்டு நீங்கியது. பிறகு அவர்கள், 'சற்று நேரத்திற்கு முன்பு என்னிடம் உம்ராவைப் பற்றிக் கேட்டவர் எங்கே?' என்று கேட்டார்கள். உடனே அந்த மனிதர், தேடி அழைத்து வரப்பட்டார். நபி(ஸல) அவர்கள், 'உம் மீதுள்ள வாசனைத் திரவியத்தை மூன்று முறை கழுவுக! (தைக்கப்பட்டு அணிந்துள்ள) மேலங்கியைக் கழற்றிவிடுக! பிறகு, உம்முடைய ஹஜ்ஜில் செய்வது போன்றே உம்முடைய உம்ராவிலும் செய்து கொள்க!'' என்று பதிலளித்தார்கள். 363

4330. அப்துல்லாஹ் இப்னு ஸைத் இப்னி ஆஸிம்(ரலி) அறிவித்தார்

அல்லாஹ், தன் தூதர்(ஸல்) அவர்களுக்கு ஹுனைன் நாளில் போர்ச் செல்வங்களை வழங்கியபோது உள்ளங்கள் இணக்கமாக்கப்பட வேண்டிய (மக்கா வெற்றியின்போது புதிதாக இஸ்லாத்தை; தழுவிய)வர்களிடையே (அவற்றைப்) பங்கிட்டார்கள். (மதீனாவாசிகளான) அன்சாரிகளுக்கு எதுவும் கொடுக்கவில்லை. மற்றவர்களுக்குக் கிடைத்தது போல் தமக்கும் கிடைக்காமல் போனதால் அவர்கள் கவலையடைந்தவர்களைப் போல் காணப்பட்டார்கள். எனவே, அவர்களிடையே (ஆறுதலாக) நபி(ஸல்) அவர்கள் உரையாற்றினார்கள். (அவ்வுரையில்), 'அன்சாரிகளே! உங்களை வழிதவறியவர்களாக நான் காணவில்லையா?' அல்லாஹ் என் மூலமாக உங்களுக்கு நேர் வழியை அளித்தான். நீங்கள் பிரிந்து (சிதறிக்) கிடந்தீர்கள். அப்போது அல்லாஹ் என் மூலமாக உங்களைப் பரஸ்பரம் நேசமுடையவர்களாக்கினான். நீங்கள் ஏழைகளாக இருந்தீர்கள். அல்லாஹ், என் மூலமாக உங்களுக்கு நேர்வழியை அளித்தான். நீங்கள் பிரிந்து (சிதறிக்) கிடந்தீர்கள். அப்போது அல்லாஹ் என் மூலமாக உங்களைப் பரஸ்பரம் நேசமுடையவர்களாக்கினான். நீங்கள் ஏழைகளாக இருந்தீர்கள். அல்லாஹ், என் மூலமாக உங்களைத் தன்னிறைவுடையவர்களாய் ஆக்கினான் (அல்லவா?)'' என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் (தம் வருகையால் அன்சாரிகள் அடைந்த நன்மைகளை) ஒவ்வொன்றாகச் சொல்லும் போதெல்லாம், 'அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே அதிக உபகாரம் புரிந்தவர்கள்'' என்று அன்சாரிகள் கூறினர். நபி(ஸல்) அவர்கள், 'அவ்வாறிருக்க, அல்லாஹ்வின் தூதருக்கு நீங்கள் பதிலளிக்கமாலிருப்பது எதனால்?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் ஒன்றைச் சொல்லும் போதெல்லாம் அவர்கள், 'அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே மிகப் பெரும் உபகாரிகள்'' என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், 'நீங்கள் விரும்பினால் இன்னின்னவாறெல்லாம் (நீங்கள் எனக்குச் செய்த உபகாரங்களை நினைவுபடுத்தும் வகையில்) சொல்ல முடியும். ஆனால், (இந்த) மக்கள் (நான் கொடுக்கும்) ஆடுகளையும் ஒட்டகங்களையும் (ஓட்டிக்) கொண்டு போக நீங்கள் உங்கள் இல்லங்களுக்கு இறைத்தூதரையே (என்னையே) உங்களுடன் கொண்டு செல்வதை விரும்பமாட்டீர்களா? ஹிஜ்ரத் (நிகழ்ச்சி) மட்டும் நடந்திருக்காவிட்டால் நான் அன்சாரிகளில் ஒருவனாய் இருந்திருப்பேன். மக்களெல்லாம் ஒரு கணவாயிலும் ஒரு பள்ளத்தாக்கிலும் சென்றாலும் நான் அன்சாரிகள் செல்லும் கணவாயிலும் பள்ளத்தாக்கிலும் தான் செல்வேன். அன்சாரிகள் (மேனியுடன் ஒட்டிய) உள்ளாடைகள் (போன்றவர்கள்) 364 நீங்கள் எனக்குப் பின்னால் விரைவிலேயே (ஆட்சியதிகாரத்தில்) உங்களை விடப் பிறருக்கு முன்னுரிமை தரப்படுவதைக் காண்பீர்கள். எனவே, (எனக்குச் சிறப்புப் பரிசாக மறுமையில் கிடைக்கவிருக்கும்) 'ஹவ்ள் (அல் கவ்ஸர்' என்னும்) தடாகம் அருகே என்னைச் சந்திக்கும் வரை (நிலை குலையாமல்) பொறுமையுடன் இருங்கள்'' என்று கூறினார்கள். 365

4331. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்

அல்லாஹ், தன் தூதர்(ஸல்) அவர்களுக்கு ஹவாஸின் குலத்தாரின் செல்வத்தை (வெற்றிப் பரிசாக) அளித்தபோது நபி(ஸல்) அவர்கள் (புதிதாக இஸ்லாத்தைத் தழுவிய) மக்களுக்கு நூறு ஒட்டகங்களைக் கொடுக்கலானார்கள். உடனே, (அன்சாரிகளில்) சிலர், 'இறைத்தூதர்(ஸல்) அவர்களை அல்லாஹ் மன்னிப்பானாக! (எதிரிகளான) குறைஷிகளின் இரத்தம் நம் வாட்களில் சொட்டிக் கொண்டிருக்க, (நமக்குக் கொடுக்காமல்) இவர்களுக்குக் கொடுக்கிறார்களே; ஆனால், (தியாகங்கள் பல புரிந்த) நம்மை விட்டு விடுகிறார்களே!'' என்று (கவலையுடன்) கூறினார்கள். அவர்களின் இந்தப் பேச்சு இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. உடனே, நபி(ஸல்) அவர்கள் அன்சாரிகளுக்கு ஆளனுப்பி அவர்களைப் பதனிடப்பட்ட தோலால், ஆன ஒரு கூடாரத்தில் ஒன்று திரட்டினார்கள். அவர்களுடன் மற்றவர்களை நபி (ஸல்) அவர்கள் அழைக்கவில்லை. அவர்கள் ஒன்றுகூடியதும் நபி (ஸல்) அவர்கள் எழுந்து நின்று, 'உங்களைக் குறித்து எனக்கு எட்டியுள்ள செய்தி என்ன? (உண்மை தானா?)'' எங்கள் தலைவர்கள் எதுவும் சொல்லவில்லை. எங்களில் இளவயதுடைய மக்கள் சிலர் தான், 'இறைத்தூதர்(ஸல்) அவர்களை அல்லாஹ் மன்னிப்பானாக! நம்முடைய வாட்களில் குறைஷிகளின் இரத்தம் சொட்டிக் கொண்டிருக்க, நம்மைவிட்டுவிட்டு அவர்களுக்குக் கொடுக்கிறார்களே!' என்று பேசிக் கொண்டனர்'' என்று கூறினார்கள். அப்போது, நபி(ஸல்) அவர்கள், 'இறை மறுப்பைவிட்டு இப்போது நான் புதிதாக இஸ்லாத்தில் இணைந்த சிலருக்கு கொடுக்கிறேன். (அதன் வாயிலாக) அவர்களடன் நான் இணக்கம் ஏற்படுத்திக் கொள்கிறேன். மக்கள் (பிற உலக) செல்வங்களை எடுத்துக் கொண்டு செல்ல, நீங்கள் உங்கள் இல்லங்களுக்கு இறைத்தூதரையே கொண்டு செல்வதை விரும்பவில்லையா? அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்கள் பெற்றுத்திரும்பும் செல்வங்களை விட நீங்கள் பெற்றுத் திரும்புவதே சிறந்ததாகும்'' என்று கூறினார்கள். அன்சாரிகள், 'இறைத்தூதர் அவர்களே! நாங்கள் (எங்களுடன் உங்களைக் கொண்டு செல்வதையே) விரும்புகிறோம்'' என்று கூறினார்கள். அப்போது அவர்களிடம் நபி(ஸல்) அவர்கள், 'விரைவில் (உங்களை விடப் பிறருக்கு ஆட்சியதிகாரத்தில்) அதிகமாக முன்னுரிமை வழங்கப்படுவதைக் காண்பீர்கள். எனவே, அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் (மறுமையில்) சந்திக்கும் வரை பொறுமையாயிருங்கள். ஏனெனில், அன்று நான் (எனக்கு வழங்கப்படவுள்ள சிறப்புப்பரிசான 'அல் கவ்ஸர்' எனும்) தடாகத்தின் அருகே இருப்பேன்'' என்று கூறினார்கள். ஆனால், மக்கள் பொறுமையாக இருக்கவில்லை. 366

4332. அனஸ்(ரலி) அறிவித்தார்

மக்கா வெற்றியின்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் குறைஷிகளுக்கிடையே போர்ச் செல்வங்களைப் பங்கிட்டார்கள். எனவே, அன்சாரிகள் (தமக்குப் பங்கு தரவில்லையே என்று) கோபித்துக் கொண்டார்கள். (இதையறிந்த) நபி(ஸல்) அவர்கள், 'மக்கள் உலகச் செல்வத்தை எடுத்துக் கொண்டு செல்ல, நீங்கள் அல்லாஹ்வின் தூதரையே உங்களுடன் கொண்டு செல்வதை விரும்பவில்லையா?' என்று கேட்டார்கள். அதற்கு அன்சாரிகள், 'ஆம், (அதைத் தான் விரும்புகிறோம்)'' என்று பதிலளித்தார்கள். நபி(ஸல்) அவர்கள், 'மக்கள் ஒரு கணவாயிலோ, பள்ளத்தாக்கிலோ சென்றால், நான் அன்சாரிகளின் கணவாயிலோ, பள்ளத்தாக்கிலோ தான் செல்வேன்'' என்று கூறினார்கள்.

4333 அனஸ்(ரலி) அறிவித்தார்

ஹுனைன் போரின்போது ஹவாஸின் குலத்தார் (நபி-ஸல் அவர்களைப்) போர்க்களத்தில் சந்தித்தனர். அப்போது நபி(ஸல) அவர்களுடன், (புனிதப் போர் வீரர்கள்) பத்தாயிரம் பேர் இருந்தனர். (மக்கா வெற்றியின் போது) மன்னிப்பளிக்கப்பட்டவர்களும் இருந்தனர். 367 அப்போது (ஹவாஸின் குலத்தாரின் அதிரடித் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல்) அவர்கள் பின்வாங்கிச் சென்றனர். நபி(ஸல்) அவர்கள், 'அன்சாரிகளே! (என்னாயிற்று உங்களுக்கு?)'' என்று கேட்க, அவர்கள், 'இறைத்தூதர் அவர்களே! உங்கள் அழைப்புக்கு பதிலளித்து உங்களுக்கு அடிபணிந்தோம். இதோ, உங்களுக்கு உதவக் காத்திருக்கிறோம். உங்கள் முன்னால் இருக்கிறோம்'' என்று பதிலளித்தனர். நபி(ஸல்) அவர்கள் (தம் வாகனத்தைவிட்டு இறங்கி, 'நான் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதருமாவேன்'' என்று கூறினார்கள். (பிறகு, அந்தப் போரில்) இணைவைப்பவர்கள் தோற்றுவிட்டனர். பின்னர், நபி(ஸல்) அவர்கள் (மக்கா வெற்றியில்) மன்னிப்பளிக்கப்ட்டு (புதிய முஸ்லிம்களாக) இருந்தவர்களுக்கும் முஹாஜிர்களுக்கும் (போர்ச் செல்வத்தில் பங்கு) கொடுத்தார்கள். அன்சாரிகளுக்கு எதையும் கொடுக்கவில்லை. அன்சாரிகள் (தமக்குக் கொடுக்காததைக் குறித்து அதிருப்தியுடன்) பேசினர். உடனே நபி(ஸல்) அவர்கள், அன்சாரிகளை அழைத்து (தாமிருந்த) கூடாரத்தினுள் இருக்கச் செய்து, 'இந்த மக்கள் ஆடுகளையும் ஒட்டகங்களையும் கொண்டு செல்ல, நீங்கள் அல்லாஹ்வின் தூதரையே கொண்டு செல்வதை விரும்பவில்லையா?' என்று கேட்டார்கள். பிறகு நபி(ஸல்) அவர்கள், 'மக்கள் ஒரு கணவாயில் நடந்து செல்ல, அன்சாரிகள் வேறொரு கணவாயில் சென்றால், நான் அன்சாரிகளின் கணவாயையே தேர்ந்தெடுப்பேன்'' என்று கூறினார்கள்.

4334. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் அன்சாரிகளில் சிலரை ஒன்று கூட்டி, '(இந்தக்) குறைஷிகள், அறியாமைக் கொள்கையை இப்போது தான் கைவிட்டுப் புதிதாக இஸ்லாத்திற்கு வந்தவர்கள்; (இஸ்லாத்தை ஏற்றதனால் நேரும்) சோதனைகளுக்குப் புதியவர்கள். எனவே, அவர்களுக்கு நிவராணம் வழங்கவும், (இஸ்லாத்துடன்) அவர்களுக்கு இணக்கத்தை ஏற்படுத்தவும் விரும்பினேன். மக்கள் உலகச் செல்வத்தைப் பெற்றுக் கொண்டு திரும்பிச் செல்ல, நீங்கள் அல்லாஹ்வின் தூதருடனேயே உங்கள் வீடுகளுக்குத் திரும்பிச் செல்வதை நீங்கள் விரும்ப வில்லையா?' என்று கேட்டார்கள். அன்சாரிகள், 'ஆம் (அதைத் தான் விரும்புகிறோம்)'' என்று பதிலளித்தார்கள். நபி(ஸல்) அவர்கள், 'மக்கள் ஒரு கணவாயில் செல்ல, அன்சாரிகள் வேறொரு கணவாயில் செல்வார்களாயின், நான் அன்சாரிகளின் கணவாயில் தான் அல்லது அன்சாரிகளின் பள்ளத்தாக்கில் தான்... செல்வேன்'' என்று கூறினார்கள்.

4335. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் ஹுனைன் போரில் கிடைத்த செல்வங்களை (மக்களிடையே) பங்கிட்டபோது அன்சாரிகளில் ஒருவர் 'இந்தப் பங்கீட்டில் நபியவர்கள் இறைத் திருப்தியை நாடவில்லை'' என்று (மனத்தாங்கலுடன்) பேசினார். நான் நபி(ஸல்) அவர்களிடம், சென்று (இதைத் தெரிவித்தேன். உடனே அவர்களின் முகம் (கோபத்தால் நிறம்) மாறிவிட்டது. பிறகு அவர்கள், '(இறைத்தூதர்) மூஸாவின் மீது அல்லாஹ் கருணை புரிவானாக! அவர்கள் இதை விட அதிகமாக மனவேதனைக்கு ஆளாக்கப்பட்டார்கள். ஆயினும், சகித்துக் கொண்டார்கள்'' என்று கூறினார்கள். 368

4336. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்

ஹுனைன் போரின்போது, நபி(ஸல்) அவர்கள் மக்கள் சிலருக்கு முன்னுரிமை (அளித்து அதிகமாக) வழங்கினார்கள். (புதிய முஸ்லிம்களில் ஒருவரான) அக்ரஉ இப்னு ஹாபிஸ் (ரலி) அவர்களுக்கு நூறு ஒட்டகங்களைக் கொடுத்தார்கள். உயைனா இப்னு ஹஸன் ஃபஸாரீ(ரலி) அவர்களுக்கும் அதே போன்று கொடுத்தார்கள். இன்னும் சிலருக்கும் கொடுத்தார்கள். அப்போது ஒருவர், 'இந்தப் பங்கீட்டில் அல்லாஹ்வின் திருப்தி நாடப்படவில்லை'' என்று கூறினார். 369 உடனே நான், 'இதை நிச்சயம் நான் நபி(ஸல்) அவர்களிடம் தெரிவிப்பேன்'' என்று சொன்னேன். (அவ்வாறே நபி(ஸல்) அவர்களிடம் சென்று நான் சொல்ல) அவர்கள், '(இறைத்தூதர்) 'மூஸாவுக்கு அல்லாஹ் கருணை புரியட்டும். இதை விட அதிகமாக அவர்கள் மனவேதனைக்கு ஆளாக்கப்பட்டார்கள். ஆயினும், சகித்துக் கொண்டார்கள்'' என்று கூறினார்கள். 370

4337. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்

ஹுனைன் போரின்போது ஹவாஸின் குலத்தாரும் கத்ஃபான் குலத்தாரும் மற்றவர்களும் தம் கால்நடைகளுடனும் குழந்தை குட்டிகளுடனும் (போர்க்களத்தில்) நபி(ஸல்) அவர்களை எதிர்கொண்டனர். அப்போது நபி(ஸல்) அவர்களுடன் பத்தாயிரம் பேர்களும் (மக்கா வெற்றியில்) மன்னிப்பளிக்கப்பட்டு (புதிய முஸ்லிம்களாக) இருந்தவர்களில் பலரும் இருந்தனர். அவர்கள் நபி(ஸல்) அவர்களை (தனியே)விட்டுப் பின்வாங்கிச் சென்றுவிட்டனர். இறுதியில் நபி(ஸல்) அவர்கள் மட்டும் தனியே எஞ்சி நின்றார்கள். அப்போது, அவர்கள் இரண்டு (முறை) அழைப்பு விடுத்தார்கள். இரண்டையும் கலந்து விடாமல் (இடைவெளி இருக்குமாறு) பார்த்துக் கொண்டார்கள். தம் வலப்பக்கம் திரும்பி, 'அன்சாரிகளே!'' என்று அழைக்க அவர்கள், 'இதோ, வந்துவிட்டோம், இறைத்தூதர் அவர்களே! நாங்கள் உங்களுடன் தான் இருக்கிறோம்; (கவலைப்படாமல்) மகிழ்ச்சியுடனிருங்கள்'' என்று கூறினார்கள். பிறகு நபி(ஸல்) அவர்கள் தம் இடப்பக்கம் திரும்பி, 'அன்சாரிகளே! என்று அழைத்தார்கள். அவர்கள் (மீண்டும்), 'இதோ, தங்கள் அழைப்புக்குக் கீழ்ப்படிந்து வந்தோம், இறைத்தூதர் அவர்களே! (கவலையின்றி) மகிழ்ச்சியுடனிருங்கள். நாங்கள் உங்களுடன் தான் இருக்கிறோம்'' என்று கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் தங்களின் 'பைளா' என்னும் வெள்ளைக் கோவேறுக் கழுதையின் மீது அமர்ந்திருந்தார்கள். பிறகு அதிலிருந்து இறங்கி, 'நான் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதருமாவேன்'' என்று கூறினார்கள். பிறகு, இணைவைப்பவர்கள் (அந்தப் போரில்) தோற்றுப்போனதால், ஏராளமான போர்ச் செல்வங்களை நபி(ஸல்) அவர்கள் பெற்றார்கள் அவற்றை முஹாஜிர்களிடையேயும் (மக்கா வெற்றியில்) மன்னிப்பளிக்கப்பட்டவர்களிடையேயும் பங்கிட்டார்கள். அன்சாரிகளுக்கு எதையும் கொடுக்கவில்லை. எனவே, அன்சாரிகள் (சிலர்), 'ஏதேனும் (போர் போன்ற) கடுமையான பிரச்சினை என்றால் (உயிரை அர்ப்பணித்து உதவிட) நாங்கள் அழைக்கப்படுகிறோம். ஆனால், (பிரிச்சனை தீர்ந்ததும்) மற்றவர்களுக்குப் போர்ச் செல்வங்கள் கொடுக்கப்படுகின்றன'' என்று (மனக் குறையுடன்) பேசிக் கொண்டார்கள். இவர்கள் இப்படிப் பேசிக் கொள்ளும் செய்தி நபி(ஸல்) அவர்களுக்கு எட்டியது. உடனே அன்சாரிகளை ஒரு கூடாரத்தில் ஒன்று கூட்டி, 'அன்சாரிகளே! உங்களைக் குறித்து எனக்கு எட்டிய இச்செய்தி என்ன? (உண்மைதானா)'' என்று கேட்டார்கள். அவர்கள் (உண்மை தான் என்பது போல்) மௌனமாயிருந்தார்கள். உடனே, நபி(ஸல்) அவர்கள், 'அன்சாரிகளே! மக்கள் உலகச் செல்வத்தைத் தங்களுடன் கொண்டு செல்ல, நீங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களை சொந்தமாக்கிக் கொண்டு உங்கள் இல்லங்களுக்குச் செல்வதை நீங்கள் விரும்பவில்லையா?' என்று கேட்டார்கள். அன்சாரிகள், 'ஆம் (நாங்கள் அதைத் தான் விரும்புகிறோம்) என்று பதிலளித்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'மக்களெல்லாம் ஒரு பள்ளத்தாக்கில் செல்ல, அன்சாரிகள் மட்டும் வேறொரு பள்ளத்தாக்கில் செல்வார்களாயின் நான் அன்சாரிகள் செல்லும் பள்ளத்தாக்கையே தேர்ந்தெடுப்பேன்'' என்று கூறினார்கள்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஹிஷாம் இப்னு ஸைத்(ரஹ்) (இதைத் தமக்கு அறிவித்த தம் பாட்டனாரான அனஸ் - ரலி - அவர்களிடம்,) 'அபூ ஹம்ஸாவே! நீங்கள் இந்நிகழ்ச்சியைப் பார்த்தீர்களா?' என்று கேட்க, 'அனஸ்(ரலி), 'நான் நபி(ஸல்) அவர்களை விட்டு எங்கே போவேன்'' என்று பதிலளித்தார்கள்.

பகுதி 58

'நஜ்த்' நோக்கி அனுப்பப்பட்ட படைப் பிரிவு. 371

4338. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் நஜ்த் பகுதியை நோக்கிப் படைப்பிரிவு ஒன்றை அனுப்பினார்கள். நான் அதில் இடம் பெற்றிருந்தேன். (அந்தப் போரில் கிடைத்த போர்ச் செல்வங்களில்) எங்கள் ஒவ்வொருவரின் பங்கும் பன்னிரண்டு ஒட்டகங்களாக இருந்தன. எங்கள் ஒவ்வொருவருக்கும் எங்களுக்குரிய பங்குக்கும் மேல் அதிகமாக ஒவ்வோர் ஒட்டகம் கொடுக்கப்பட்டது. ஆக, நாங்கள் (ஒவ்வொருவரும்) பதின்மூன்று ஒட்டகங்களைப் பெற்றுத் திரும்பினோம். 372

பகுதி 59

நபி(ஸல்) அவர்கள் காலித் இப்னு வலீத்(ரலி) அவர்களை பனூ ஜதீமா குலத்தாரிடம் அனுப்பியது. 373

4339. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள், காலித் இப்னு வலீத்(ரலி) அவர்களை பனூ ஜதீமா குலத்தாரிடம் அனுப்பினார்கள். அவர்களுக்கு அவர் இஸ்லாத்தை ஏற்கும்படி அழைப்புக் கொடுத்தார். அவர்களுக்கு 'அஸ்லம்னா - நாங்கள் இஸ்லாத்தை ஏற்றோம்' என்று திருத்தமாகச் சொல்ல வரவில்லை. எனவே, அவர்கள் (தங்களின் வழக்குப்படி) 'ஸபஃனா, ஸபஃனா' - நாங்கள் மதம் மாறி விட்டோம். மதம் மாறிவிட்டோம்'' என்று சொல்லானார்கள். உடனே காலித்(ரலி), அவர்களில் சிலரைக் கொல்லவும் சிலரைச் சிறை பிடிக்கவும் தொடங்கினார். அவர் (தம்முடன் வந்திருந்த) எங்களில் ஒவ்வொருவரிடமும் அவரவருடைய கைதியை ஒப்படைத்தார். ஒருநாள் காலித் (ரலி) அவர்கள், எங்களில் ஒவ்வொருவரும் தம்மிடமிருக்கும் கைதியைக் கொல்ல வேண்டுமென உத்தரவிட்டார். நான், “அல்லாஹ்வின் மீதாணையாக! என்னிடமுள்ள கைதியை நான் கொல்லமாட்டேன்; மேலும், என் சகாக்களில் எவரும் தம்மிடமிருக்கும் கைதியைக் கொல்லமாட்டார்கள்” என்று சொன்னேன். இறுதியில், நாங்கள் நபி(ஸல்) அவர்களிடம் சென்று, விஷயத்தைச் சொன்னோம். அப்போது நபி(ஸல்) அவர்கள் தம் கரங்களை உயர்த்தி, 'இறைவா! 'காலித் செய்த தவறுகளுக்கும் எனக்கும் தொடர்பில்லை' என்று உன்னிடம் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று இருமுறை கூறினார்கள்.
أحدث أقدم