அத்தியாயம் 64/1 (நபிகளார் காலத்துப்) போர்கள்

ஸஹீஹுல் புகாரி
அத்தியாயம் 64

(நபிகளார் காலத்துப்) போர்கள் பகுதி 1-29



பகுதி 1

'உஷைரா' அல்லது 'உஸைரா' போர்

முஹம்மத் இப்னு இஸ்ஹாக்(ரஹ்) கூறினார் நபி(ஸல்) அவர்கள் புரிந்த முதாவது போர் 'அல் அப்வா' ஆகும்; பிறகு 'புவாத்' ஆகும்; பிறகு 'உஷைரா' ஆகும். 2

3949. அபூ இஸ்ஹாக்(ரஹ்) அறிவித்தார்

நான் ஸைத் இப்னு அர்கம்(ரலி) அவர்களுக்கு அருகிலிருந்தபோது, 'நபி(ஸல்) அவர்கள் புரிந்த போர்கள் எத்தனை?' என்று அவர்களிடம் வினவப்பட்டது. 'பத்தொன்பது'' என்று அவர்கள் பதிலளித்தார்கள். 'நபி(ஸல்) அவர்களுடன் நீங்களும் பங்கெடுத்த போர்கள் எத்தனை?' என்று வினவப்பட்டபோது, 'பதினேழு'' என்றார்கள். 'இவற்றில் முதல் போர் எது?' என்று நான் அவர்களிடம் கேட்டேன். அவர்கள், 'உஸைரா' அல்லது 'உஷைர்' என்று பதிலளித்தார்கள்.

கதாதா(ரஹ்) அவர்களிடம் நான் கேட்டபோது அவர்கள், 'உஷைரா தான் (சரியான உச்சரிப்பு)'' என்றார்கள்.

பகுதி 2

பத்ருப் போரில் கொல்லப்படவிருந்த ஒருவன் குறித்த நபி(ஸல்) அவர்கள் (முன்னறிவிப்பாகக்) கூறியது.

3950. ஸஅத் இப்னு முஆத்(ரலி) வாயிலாக இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்

ஸஅத் இப்னு முஆத்(ரலி) (அறியாமைக் காலத்தில் இணைவைப்போரின் முக்கிய தலைவர்களில் ஒருவனான) உமய்யா இப்னு கலஃபுக்கு நண்பராயிருந்தார். உமய்யா, மதீனா வழியாக (ஷாம் நாட்டிற்கு வியாபாரத்திற்காக)ச் செல்லும்போது (மதீனாவில்) ஸஅத்(ரலி) அவர்களிடம் தங்குவான். (அதே போல்) மக்கா வழியாக ஸஅத்(ரலி) சென்றால் உமய்யாவிடம் தங்குவார்கள்.

(ஹிஜ்ரத் நடைபெற்று) நபி(ஸல்) அவர்கள் மதீனா வந்து சேர்ந்த சமயம், உம்ரா செய்யும் நோக்கத்தில் ஸஅத்(ரலி) மக்காவிற்குச் சென்றபோது உமய்யாவிடம் தங்கினார்கள். (அப்போது நடந்ததை ஸஅத்(ரலி) கூறினார்:) 'இறையில்லம் கஅபாவை வலம் (தவாஃப்) வருவதற்கு (ஏதுவாக) ஆள் நாடமாட்டமில்லாத (அமைதியான) ஒரு நேரத்தை எனக்குக் கூறு'' என்று நான் உமய்யாவிடம் கேட்டேன். (மக்கள் ஓய்வெடுக்கும்) நண்பகலுக்கு நெருக்கமான நேரத்தில் என்னுடன் உமய்யா புறப்பட்டார். (நான் வலம்வந்து கொண்டிருந்த போது) எங்களை அபூ ஜஹ்ல் சந்தித்து (உமய்யாவின் குறிப்புப் பெயரைச் சொல்லி) 'அபூ ஸஃப்வானே உன்னோடு இருக்கும் இவர் யார்?' என்று கேட்டார். உமய்யா, 'இவர்தான் ஸஅத்'' என்றார். அப்போது என்னிடம் அபூ ஜஹ்ல், 'மதம் மாறிச் சென்றவர்களுக்கு உதவி ஒத்தாசை புரிவதாக நினைத்துக் கொண்டு (அவர்களுக்கு மதீனாவில்) தஞ்சமளித்த நீங்கள் கொஞ்சமும் அஞ்சாமல் மக்கா(விற்குள்) வந்து (கஅபாவை) சுற்றிக் கொண்டிருப்பதை நான் காண்பதா...? அல்லாஹ்வின் மீதாணையாக! அபூ ஸஃப்வானோடு (மட்டும்) நீ இல்லாவிட்டால் நீ உன் வீட்டாரிடம் சுகமாகப் போய்ச் சேர்ந்திருக்க மாட்டாய்'' என்று கூறினார்.

அதற்கு அபூ ஜஹ்லைப் பார்த்து, நான் உரத்த குரலில், 'அல்லாஹ்வீன் மீதாணையாக!'' (கஅபாவைச்) சுற்ற விடாமல் மட்டும் என்னை நீ தடுத்தால், நீ (வாணிபக் குழுவுடன் கடந்து) செல்லும் மதீனாவின் தடத்தை நான் இடைமறிப்பேன். இதைவிட அது உனக்கு மிகவும் கடினமானதாயிருக்கும்'' என்று சொன்னேன்.

அப்போது என்னிடம் உமய்யா, 'ஸஅத்! (மக்காப்) பள்ளத்தாக்கில் வசிப்பவர்களின் தலைவரான அபுல் ஹகம் (அபூ ஜஹ்ல்) எதிரில் சப்தமிட்டுப் பேசாதே!'' என்று கூறினார்.

அதற்கு நான், 'உமய்யாவே! (அபூ ஜஹ்லுக்கு வக்கலாத்து வாங்காமல்) எம்மைவிட்டுவிடு. ஏனெனில், அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்கள் (நபித்தோழர்கள் உன்னைக் கொலை செய்வார்கள் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூற கேட்டேன்'' என்று சொன்னேன்.

''மக்காவிலா... (நான் கொல்லப்படுவேன்?)'' என்று உமய்யா கேட்டதற்கு, 'எனக்குத் தெரியாது'' என்று நான் பதிலளித்தேன்.

இதனால் உமய்யா மிகவும் பீதியடைந்தார். தன் வீட்டாரிடம் திரும்பி வந்தபோது, (தன் மனைவியிடம்), 'உம்மு ஸஃப்வானே! என்னைப் பார்த்து ஸஅத் என்ன கூறினார் தெரியுமா?' என்று கேட்டார்.

''அவர் (அப்படி) என்ன கூறினார்?' என்று அவள் கேட்டதற்கு உமய்யா, 'அவர்கள் (நபித்தோழர்கள்) என்னைக் கொலை செய்வார்கள் என்று அவர்களிடம் முஹம்மது தெரிவித்தாராம். நான், 'மக்காவிலா?' என்று (சஅதிடம்) கேட்டேன். 'தெரியாது' என்று ஸஅத் கூறினார்'' (என்று கூறிவிட்டு,) 'அல்லாஹ்வீன் மீதாணையாக! நான், 'மக்கா'வைவிட்டு (இனிமேல்) வெளியேறப் போவதில்லை'' என்றும் கூறினார்.

பத்ருப் போர் நாள் வந்தபோது, போருக்குப் புறப்படும் படி மக்களைத் தூண்டிக் கொண்டிருந்த அபூ ஜஹ்ல், 'உங்கள் வணிகக் குழுவைச் சென்றடையுங்கள் (அதைக் காப்பாற்றுங்கள்)'' என்று கூறினார்.

ஆனால், உமய்யா (மக்காவிலிருந்து) வெளியே செல்வதை வெறுத்தார். (இதை அறிந்த) அபூ ஜஹ்ல் அவரிடம் வந்து, 'அபூ ஸஃப்வானே! (மக்கா) பள்ளத்தாக்கின் தலைவரான நீங்களே (போருக்குச் செல்லாமல்) பின்வாங்குவதை மக்கள் கண்டால் உங்களுடன் அவர்களும் பின்வாங்கி (போருக்குச் செல்லாமல் இருந்து) விடுவார்களே'' என்று கூறினார். அபூ ஜஹ்ல், உமய்யாவிடம் இதை (வலியுறுத்திச்) சொல்லிக் கொண்டே இருந்தார்.

முடிவாக, உமய்யா 'இப்போது நீ, என்னை வென்றுவிட்டாய் (உன் கருத்தை ஏற்றுக் கொள்கிறேன்). எனவே, அல்லாஹ்வின் மீதாணையாக, நான் மக்கா நகர சாதி ஒட்டகம் ஒன்றை வாங்கப் போகிறேன்'' என்று கூறினார்; (தனக்கு ஏதாவது அசம்பாவிதம் ஏற்படும் நிலை வந்தால் தப்பி வந்து விடவேண்டும் என்ற எண்ணத்தில் ஒட்டகம் என்றும் வாங்கினார்.) பிறகு (தன் மனைவியிடம் வந்து) 'உம்மு ஸஃப்வானே! (போருக்குச் செல்லத் தேவையான சாதனங்களை) எனக்குத் தயார் செய் என்றார் உமய்யா. அப்போது அவள், 'அபூ ஸஃப்வானே! உங்கள் யஸ்ரிப் (மதீனா) நண்பர் (ஸஅத், நீங்கள் கொல்லப்படுவது குறித்து) உங்களிடம் சொன்னதை மறந்துவிட்டீர்களா? என்று கேட்டாள். அதற்கு உமய்யா, 'இல்லை. (மறக்கவில்லை.) இவர்களுடன் கடைசி ஆளாகச் செல்வதைத் தவிர வேறெந்த எண்ணமும் எனக்கில்லை'' என்றார்.

(பத்ருப் போருக்கு) உமய்யா புறப்பட்டுச் சென்றபோது (படையினர் முகாமிட்டுத்) தங்கும் ஒவ்வோர் இடத்திலும் (தப்பியோட ஆயத்தமாக தனக்கு அருகிலேயே) தன்னுடைய ஒட்டகத்தைக் கட்டி வைத்துக் கொள்ளலானார். பத்ருப்போர்க்களத்தில் உமய்யாவை வலிமையும் உயர்வும் மிகுந்த அல்லாஹ் (முஸ்லிம் படையால்) கொலை செய்யும் வரையில் தொடர்ந்து அவர் இப்படியே செய்து கொண்டிருந்தார். 3

பகுதி 3

பத்ருப் போர் சம்பவம் 4

அல்லாஹ் கூறினான்:

(இதற்கு முன்) நீங்கள் வலுவிழந்தவர்களாக இருந்தும் பத்ருப் போரில் அல்லாஹ் உங்களுக்கு உதவியிருந்தான். எனவே, அல்லாஹ்வை அஞ்சி (நடந்து) கொள்ளுங்கள். நீங்கள் (அல்லாஹ்வுக்கு) நன்றி செலுத்தியவர்களாகலாம்.

''உங்களுடைய இறைவன் மூவாயிரம் வானவர்களை இறக்கி உங்களுக்கு (பத்ரில்) உதவியது போதுமானதில்லையா?' என்று (நபியே!) நீங்கள் இறைநம்பிக்கையாளர்களிடம் கேட்டதை நினைவு கூருங்கள். - ஆம், நீங்கள் நிலை குலையாமலிருந்து இறைவனுக்கு அஞ்சி நடந்தால் எந்தக் கணக்கில் பகைவர்கள் உங்களின் மீது படையெடுத்து வருகிறார்களோ, அந்தக் கணத்தில் உங்களுடைய இறைவன் (மூவாயிரம் என்ன) போர் அடையாளமுடைய ஐயாயிரம் வானவர்களின் மூலம் உங்களுக்கு உதவுவான். நீங்கள் மகிழ்ச்சி அடைவதற்காகவும் உங்கள் இதயங்கள் அமைதி பெற வேண்டும் என்பதற்காகவுமே இதனை அல்லாஹ் ஆக்கினான்! வெற்றி என்பது மிக்க வலிமையுடையவனும், நுண்ணறிவாளனுமான அல்லாஹ்விடமிருந்தே கிடைக்கிறது. (அல்லாஹ்) இத்தகைய உதவியை உங்களுக்குச் செய்வதெல்லாம்,) நிராகரித்தவர்களில் ஒரு பகுதியினரை அழிப்பதற்காக, அல்லது அவர்களைப் படுதோல்வியில் ஆழ்த்தி அவர்கள் ஏமாற்றமடைந்தவர்களாய் திரும்பிச் செல்வதற்காகத் தான். (திருக்குர்ஆன் 03: 123-127)

வஹ்ஷீ இப்னு ஹர்ப்(ரலி) கூறினார்

பத்ருடைய தினத்தன்று ஹம்ஸா(ரலி) துஅய்மா இப்னு அதீ இப்னி கியாரைக் கொன்றார்கள். 5

மேலும், அல்லாஹ் கூறினான்:

இன்னும், இதனையும் நினைத்துப் பாருங்கள்: 'இரண்டு கூட்டத்தாரில் ஒரு கூட்டத்தார் நிச்சயம் உங்கள் கைக்குக் கிடைத்து விடுவர்' என்று அல்லாஹ் உங்களிடம் வாக்குறுதி அளித்தான். ஆனால், நிராயுதபாணிகளான கூட்டத்தினர் உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என நீங்கள் விரும்பினீர்கள். (திருக்குர்ஆன் 08:07)

3951. கஅப் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்

தபூக் போரைத் தவிர்த்து நபி(ஸல்) அவர்கள் புரிந்த எந்தப் போரிலும் நான் கலந்து கொள்ளாமல் இருந்ததில்லை. இது தவிர, நான் பத்ருப் போரிலும் கலந்து கொள்ளவில்லை. அதில் கலந்து கொள்ளாத எவரும் (அல்லாஹ்வினால்) கண்டிக்கப்படவுமில்லை. (ஏனெனில்) நபி(ஸல்) அவர்கள் குறைஷிகளின் வாணிபக் குழுவை (வழி மறிக்க) எண்ணியே போனார்கள். (போன இடத்தில்) போரிடும் எண்ணம் இல்லாமலேயே அவர்களையும் எதிரிகளையும் அல்லாஹ் (பத்ருக் களத்தில்) சந்திக்கும்படி செய்துவிட்டான்.

பகுதி 4

அல்லாஹ் கூறினான்:

உங்களுடைய இறைவனிடம் நீங்கள் உதவி தேடி முறையிட்டுக் கொண்டிருந்ததையும் நினைத்துப் பாருங்கள். அப்போது அவன் 'ஓராயிரம் வானவர்களைத் தொடர்ச்சியாக அனுப்பி, நிச்சயமாக உங்களுக்கு நான் உதவுவேன்'' எனப் பதிலளித்தான். அல்லாஹ் இதனை, உங்களுக்கு ஒரு நற்செய்தியாகவும் இதன் மூலம் உங்கள் இதயங்கள் நிம்மதியடைவதற்காகவுமே ஆக்கினான்! தவிர, வெற்றி (என்றைக்கும்) அல்லாஹ்விடமிருந்து தான் ஏற்படுகிறது. நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவனும் நுண்ணறிவாளனுமாவான்.

(நபியே! இதையும்) நினைத்துப் பாருங்கள்: அல்லாஹ் உங்களைச் சிற்றுறக்கம் கொள்ளச் செய்து தன் சார்பிலிருந்து உங்களுக்கு (மன) அமைதியை ஏற்படுத்தினான். மேலும், உங்களைத் தூய்மைப்படுத்துவதற்காகவும், ஷைத்தான் ஏற்படுத்திய அசுத்தங்களை உங்களைவிட்டு அகற்றுவதற்காகவும், உங்கள் இதயங்களை வலுப்படுத்துவதற்காகவும், அதன் மூலம் உங்கள் பாதங்களை நிலைப்படுத்துவதற்காகவும் வானத்திலிருந்து உங்களின் மீது மழையையும் பொழியச் செய்தான்.

(நபியே! இதனையும்) நினைவு கூருங்கள்: உங்களுடைய இறைவன் வானவர்களிடம் அறிவித்துக் கொண்டிருந்தான்: நிச்சயமாக நான் உங்களோடு இருக்கிறேன். எனவே நம்பிக்கைளயாளர்களை நீங்கள் உறுதியாக இருக்கச் செய்யுங்கள். இதோ! மறுத்து விட்டவர்களின் உள்ளங்களில் நான் பீதியை ஏற்படுத்தி விடுகிறேன். எனவே, (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் அவர்களின் பிடரிகளில் தாக்குங்கள். அவர்களின் ஒவ்வொரு விரல் மூட்டுகளிலும் அடியுங்கள். (என்று கூறுங்கள்.)

இதற்குக் காரணம், (இறை மறுப்பாளர்களான) அவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் எதிர்த்துக் கொண்டிருந்தது தான். மேலும், அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் யார் எதிர்க்கிறார்களோ (அவர்களை) நிச்சயமாக அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவனாய் இருக்கிறான். (திருக்குர்ஆன் 08: 9-13)

3952. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்

நான் மிக்தாத் இப்னு அஸ்வத்(ரலி) அவர்களின் அவைக்குச் சென்றேன். நான் அவர்களின் அவையில் (பங்கெடுத்த, அவர்கள் கூறும் விஷயங்களை எடுத்துரைப்பவனாக) இருப்பது, அதற்கு நிகரான(மற்ற அனைத்)தை விடவும் எனக்கு விருப்பானதாயிருக்கும்.

(மிக்தாத் இப்னு அஸ்வத் -ரலி - அவர்கள் என்னிடம் கூறினார்கள்:)

நான், நபி(ஸல்) அவர்கள் இணைவைப்போருக்கெதிராகப் பிரார்த்தித்துக் கொண்டிருந்தபோது சென்றேன். அப்போது நான், '(இறைத்தூதர்) மூஸாவின் சமுதாயத்தார், 'நீங்களும் உங்களுடைய இறைவனும் போய்ப் போரிடுங்கள்' என்று (நகைப்பாகக்) கூறியது போன்று நாங்கள் கூற மாட்டோம். மாறாக, நாங்கள் தங்களின் வலப்பக்கமும், இடப்பக்கமும், முன்னாலும், பின்னாலும் நின்று (தங்கள் எதிரிகளிடம்) போரிடுவோம்'' என்று சொன்னேன். (இதைக் கேட்டதும்) நபி(ஸல்) அவர்களின் முகம் ஒளிர்ந்ததை கண்டேன். (என்னுடைய சொல்) அவர்களை மகிழச் செய்தது. 7

3953. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்

பத்ருடைய தினத்தன்று (மிகக் குறைந்த எண்ணிக்கை கொண்ட தம் படையினரையும் மிகப்பெருந்தொகையினரான எதிரிகளையும் கண்ட) நபி(ஸல்) அவர்கள், 'இறைவா! (மறுப்பாளர்களுக்கெதிராக எங்களுக்கு நீ வெற்றியளிப்பதாக நீ அளித்த) உன்னுடைய உறுதி மொழியையும், வாக்குறுதியையும் (நிறைவேற்றித் தரும்படி) கோருகிறேன். (இறைவா! இந்த விசுவாசிகளை அழிக்க) நீ நினைத்தால், உன்னை (மட்டுமே) வழிபடுவோர் (இப்புவியில்) இல்லாமல் போய்விடுவர்'' என்று கூறினார்கள். அப்போது அபூ பக்ர்(ரலி) நபி(ஸல்) அவர்களின் கரத்தைப் பற்றிக் கொண்டு, 'போதும் (இறைத்தூதர் அவர்களே!)'' என்று கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் (தாம் தங்கியிருந்த கூடாரத்திலிருந்து)'' அந்தப் படையினர் தோற்கடிக்கப்படுவர். அவர்கள் புறமுதும்ட்டு ஓடுவர்'' என்று (திருக்குர்ஆன் 54:45-வது குர்ஆன் வசன வாசகத்தைக்) கூறிக் கொண்டே வெளியேறி வந்தார்கள்.

பகுதி 5

3954. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்

இறைவிசுவாசிகளில் இடையூறு எதுவுமின்றி அறப்போரில் கலந்து கொள்ளாமல் (தங்கள் இருப்பிடத்திலேயே) தங்கிவிடுகிறவர்களும், தம் உயிராலும் பொருளாலும் இறைவழியில் பேராடுகிறவர்களும் (அந்தஸ்தில்) சமமாகமாட்டார்கள்'' என்னும் (திருக்குர்ஆன் 04:95-ம்) இறை வசனம், பத்ருப் போருக்குச் செல்லாதவர்களையும் அதில் கலந்து கொள்ளச் சென்றவர்களையும் குறிப்பிடுகிறது.

பகுதி 6

பத்ருப் போரில் பங்கெடுத்தவர்களின் எண்ணிக்கை.

3955. பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்

நானும் இப்னு உமர்(ரலி) அவர்களும் (பத்ருப் போரின் போது) சிறுவர்களாகக் கருதப்பட்டோம். (அதனால் எனக்கும் அவருக்கும் பத்ருப் போரில் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்படவில்லை.)

3956. பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்

நானும் இப்னு உமர்(ரலி) அவர்களும் பத்ருப்போரின்போது சிறுவர்களாகக் கருதப்பட்டோம். பத்ரு போரில் அறுபதுக்கும் சற்றுக் கூடுதலான முஹாஜிர்களும் இரண்டு நூற்று நாற்பதுக்கும் சற்றுக் கூடுதலான அன்சாரிகளும் இருந்தனர். 8

3957. பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்

பத்ருப் போரில் பங்கெடுத்த நபித்தோழர்கள் என்னிடம் கூறினார்கள்: தாலூத் அவர்களுடன் ஆற்றைக் கடந்து சென்றவர்களான முன்னூற்றுப் பத்துக்கும் சற்றுக் கூடுதலான அவர்களின் தோழர்களின் எண்ணிக்கையில் நாங்கள் இருந்தோம். 9

மேலும், பராஉ(ரலி) கூறினார்:

அல்லாஹ்வின் மீதாணையாக! தாலூத் அவர்களுடன் இறைநம்பிக்கையாளர்களைத் தவிர வேறெவரும் ஆற்றைக் கடக்கவில்லை.

3958. பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்

முஹம்மத்(ஸல்) அவர்களின் தோழர்களான நாங்கள் பேசிக்கொள்வோம்.

பத்ருப் போரில் பங்கெடுத்தவர்களின் எண்ணிக்கையும், தாலூத் அவர்களுடன் ஆற்றைக் கடந்து சென்ற அவர்களின் தோழர்களின் எண்ணிக்கையும் முன்னூற்றுப் பத்துக்கும் சற்றுக் கூடுதலேயாகும். அவர்களுடன் இறை நம்பிக்கையாளர்களைத் தவிர வேறெவரும் ஆற்றைக் கடக்கவில்லை.

3959. பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்

''முன்னூற்றுப் பத்துக்கும் சற்றுக் கூடுதலாயிருந்த பத்ருப் போர் வீரர்களின் எண்ணிக்கை, தாலூத் அவர்களுடன் ஆற்றைக் கடந்து சென்ற அவர்களின் தோழாகளின் எண்ணிக்கையேயாகும். இறை நம்பிக்கையாளர்களைத் தவிர வேறெவரும் அவர்களுடன் ஆற்றைக் கடக்கவில்லை'' என்று நாங்கள் பேசிக்கொள்வது வழக்கம்.

பகுதி 7

குறைஷிக் குல இறை மறுப்பாளர்(களின் தலைவர்க)ளான ஷைபா, உத்பா, வலீத், அபூ ஜஹ்ல் இப்னு ஹிஷாம் போன்றோர்க்கெதிராக நபி(ஸல்) அவர்கள் பிரார்த்தனை புரிந்ததும் அவர்கள் (அனைவரும்) அழிந்து போனதும். 10

3960. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் இறையில்லம் கஅபாவை நோக்கி, குறைஷிக் குலத்தைச் சேர்ந்த ஷைபா இப்னு ரபீஆ, உத்பா இப்னு ரபீஆ, வலீத் இப்னு உத்பா, அபூ ஜஹ்ல் இப்னு ஹிஷாம் போன்ற சிலருக்கெதிராகப் பிரார்த்தனை புரிந்தார்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவர்கள் (நால்வரும்) சூரிய வெப்பத்தால் (உடல் உப்பி, நிறம் மாறி) உருமாறி (பத்ருப் போர்க்களத்தில்) மாண்டு கிடந்ததை கண்டேன். அன்றைய தினம் வெப்பம் நிறைந்த நாளாக இருந்தது. 11

பகுதி 8

அபூ ஜஹ்ல் கொல்லப்பட்டது. 12

3961. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்

பத்ருப் போரில் அபூ ஜஹ்லின் உயிர் ஊசலாடிக் கொண்டிருந்தபோது அவனிடம் வந்தேன். அப்போது அவன், 'நீங்கள் எவனைக் கொலை செய்தீர்களோ அவனை விடச் சிறந்தவன் ஒருவன் உண்டா?' என்று (தன்னைத் தானே புகழ்ந்தபடிச்) சொன்னான். 13

3962. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்

''அபூ ஜஹ்ல் என்ன ஆனான் என்று பார்த்து வருபவர் யார்?' என்று நபி(ஸல்) அவர்கள் (பத்ருப் போர் முடிந்த போது) கேட்டார்கள். உடனே இப்னு மஸ்வூத்(ரலி) (அவனைப் பார்த்து வரச்) சென்றார்கள். அப்போது அவனை அஃப்ராவின் இரண்டு புதல்வர்கள் (முஆத், முஅவ்வித் ஆகிய இருவரும பலமாகத்) தாக்கி விடவே, அவன் குற்றுயிராக இருக்கக் கண்டார்கள். அப்போது இப்னு மஸ்வூத்(ரலி) அவனுடைய தாடியைப் பிடித்துக் கொண்டு, 'அபூ ஜஹ்ல் நீ தானே!'' என்று கேட்டார்கள்.

''நீங்கள் கொன்றுவிட்ட ஒரு மனிதனுக்கு மேலாக... அல்லது தன்னுடைய (சமுதாயத்து) மக்களாலேயே கொல்லப்பட்டுவிட்ட ஒரு மனிதனுக்கு மேலாக... ஒருவன் உண்டா?' என்று (தன்னைத் தானே பெருமைப்படுத்தியபடி) அவன் கேட்டான். 14

3963. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்

பத்ருப் போர் (நடந்த) நாளில், 'அபூ ஜஹ்ல் என்ன ஆனான் என்று பார்த்து வருபவர் யார்?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். உடனே, இப்னு மஸ்வூத்(ரலி) (அவனைப் பார்த்து வரப்போனார்கள். அவனை அஃப்ராவின் இரண்டு புதல்வர்கள் (முஆத், முஅவ்வித் ஆகிய இருவரும் பலமாகத்) தாக்கிவிடவே அவன் குற்றுயிராக இருக்கக் கண்டார்கள். இப்னு மஸ்வூத்(ரலி) அவனுடைய தாடியைப் பிடித்துக் கொண்டு, 'அபூ ஜஹ்லே! நீயா?' என்று கேட்டார்கள். (அப்போது) அவன், 'தம் (சமுதாயத்து) மக்களாலேயே கொல்லப்பட்டுவிட்ட ஒரு மனிதனுககு மேலாக... அல்லது நீங்களே கொன்று விட ஒரு மனிதனுக்கு மேலாக... ஒருவன் உண்டா?' என்று கேட்டான்.

அனஸ்(ரலி) அவர்களிடமிருந்து இன்னோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இதே போன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

3964. பத்ருப் போரில் அஃப்ராவின் இரண்டு புதல்வர்கள் (முஆத், முஅவ்வித் ஆகியோர் அபூ ஜஹ்லைக் கொன்றது) தொடர்பான தகவல் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) வாயிலாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

3965. அலீ இப்னு அபீ தாலிப்(ரலி) அறிவித்தார்

(இறை மறுப்பாளர்கள் போரிட்டது தொடர்பாக) மறுமை நாளில் (பெருங் கருணையாளன்) ரஹ்மானுக்கு முன்னால் வழக்காடுவதற்காக மண்டியிடுபவர்களில் (இந்தச் சமுதாயத்திலேயே) நானே முதல் நபராக இருப்பேன். 15

கைஸ் இப்னு உபாத்(ரஹ்) கூறினார்கள்:

''இவர்கள் தங்களின் இறைவனின் (மார்க்க) விஷயத்தில் சண்டையிட்டுக் கொண்ட இரண்டு பிரிவினர் ஆவர்'' என்னும் (திருக்குர்ஆன் 22:19) இறைவசனம், பத்ருப்போரின்போது (களத்தில் இறங்கித்) தனித்து நின்று போராடிய (இஸ்லாமிய வீரர்களான) அலீ, ஹம்ஸா, உபைதா இப்னு ஹாரிஸ்(ரலி) ஆகியோர் மற்றும் (இறைமறுப்பாளர்களான) ஷைபா இப்னு ரபீஆ, உத்பா இப்னு ரபீஆ, வலீத் இப்னு உத்பா ஆகியோர் தொடர்பாகவே அருளப்பட்டது. 16

3966. அபூ தர்(ரலி) அறிவித்தார்

குறைஷிக் குலத்தைச் சேர்ந்த ஆறு நபர்களான அலீ, ஹம்ஸா உபைதா இப்னு ஹாரிஸ்(ரலி) ஆகிய முஸ்லிம்கள்), மற்றும் ஷைபா இப்னு ரபீஆ, உத்பா இப்னு ரபீஆ, வலீத் இப்னு உத்பா (ஆகிய இறைமறுப்பாளர்கள்) தொடர்பாகவே 'இவர்கள் தங்கள் இறைவனது (மார்க்க) விஷயத்தில் சண்டையிட்டுக் கொண்ட இரண்டு பிரிவினர் ஆவர்'' என்னும் (திருக்குர்ஆன் 22:19) இறைவசனம் அருளப்பட்டது.

3966. அபூ பக்ர்(ரலி) அறிவித்தார்

குறைஷிக் குலத்தைச் சேர்ந்த ஆறு நபர்களான அலீ, ஹம்ஸா, உபைதா இப்னு ஹாரிஸ்(ரலி- ஆகிய முஸ்லிம்கள்), மற்றும் ஷைபா இப்னு ரபீஆ, உத்பா இப்னு ரபீஆ, வலீத் இப்னு உத்பா (ஆகிய இறைமறுப்பாளர்கள்) தொடர்பாகவே 'இவர்கள் தங்கள் இறைவனது (மார்க்க) விஷயத்தில் சண்டையிட்டுக கொண்ட இரண்டு பிரிவினர் ஆவர்'' என்னும் (திருக்குர்ஆன் 22:19) இறைவசனம் அருளப்பட்டது.

3967. அலீ(ரலி) அறிவித்தார்

''இவர்கள் தங்கள் இறைவனது (மார்க்க) விஷயத்தில் சண்டையிட்டுக் கொண்ட இரண்டு பிரிவினர் ஆவர்'' என்னும் இந்த (திருக்குர்ஆன் 22:19) இறைவசனம் எங்கள் தொடர்பாகவே அருளப்பட்டது.

3968. கைஸ் இப்னு உபாத்(ரஹ்) அறிவித்தார்

''இந்த வசனங்கள் (திருக்குர்ஆன் 22: 19, 20, 21) பத்ருப் போரின்போது (முன்னின்று போரிட்ட) ஆறு பேர்கள் குறித்து அருளப்பட்டன...'' என்று அபூ தர்(ரலி) (அல்லாஹ்வின் மீது) ஆணையிட்டுக் கூறினார்கள். 17

3969. கைஸ் இப்னு உபாத்(ரஹ்) அறிவித்தார்

''இவர்கள் தங்கள் இறைவனுடைய (மார்க்க) விஷயத்தில் சண்டையிட்டுக் கொண்ட இரண்டு பிரிவினர் ஆவர்'' என்னும் இந்த (திருக்குர்ஆன் 22: 19) வசனம் பத்ருப் போரன்று (படைக்கு முன்னால் வந்து) தனித்து நின்று போராடிய ஹம்ஸா, அலீ, உபைதா இப்னு ஹாரிஸ்(ரலி) ஆகியோர் மற்றும் (இறை மறுப்பாளர்களான) உத்பா இப்னு ரபீஆ, ஷைபா இப்னு ரபீஆ, வலீத் இப்னு உத்பா ஆகியோர் தொடர்பாகவே அருளப்பட்டது.

3970. அபூ இஸ்ஹாக்(ரஹ்) அறிவித்தார்

பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அவர்களிடம் ஒருவர், 'அலீ(ரலி) பத்ருப் போரில் பங்கெடுத்தார்களா?' என்று கேட்டார். (''ஆம் பங்கெடுத்தார்கள்) கவசத்திற்கு மேல் கவசம் அணிந்து கொண்டு (களத்தில் இறங்கி) தனித்துப் போராடினார்கள்'' என்று பராஉ(ரலி) பதிலளித்தார்கள்.

3971. அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அறிவித்தார்

நானும் (மக்கா இறைமறுப்பாளர்களின் தலைவனான) உமய்யா இப்னு கலஃபும் (பரஸ்பரம் சொத்தையும், உறவினர்களையும் காப்பதென எங்களுக்குள்) எழுத்து பூர்வமான ஒப்பந்தம் செய்து கொண்டோம்.

பிறகு பத்ருப் போரில் உமய்யா கொல்லப்பட்டதையும் (எதிரிகளால்) தம் மகன் (அலீ இப்னு அப்திர் ரஹ்மான்) கொல்லப்பட்டதையும் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) குறிப்பிட்டுவிட்டு, அப்போது பிலால்(ரலி), 'உமய்யா பிழைத்துக் கொண்டால் நான் பிழைக்கப் போவதில்லை'' என்று கூறினார்கள் என்றும் குறிப்பிட்டார்கள். 18

3972. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் (மக்காவில்) 'அந்நஜ்கி' என்னும் (56-வது) அத்தியாயத்தை ஓதினார்கள். (ஓதி முடித்த) உடன் நபி(ஸல்) அவர்கள் 'ஸஜ்தா' செய்தார்கள். அங்கிருந்த ஒரு கிழவனைத் தவிர மற்ற அனைவரும் நபி(ஸல்) அவர்களுடன் 'ஸஜ்தா' செய்தனர். அவன் ஒரு கை மண்ணை அள்ளித் தன்னுடைய நெற்றிக்குக் கொண்டு சென்றுவிட்டு, 'இது எனக்குப் போதும்'' என்று (ஸஜ்தாவைக் கேலி செய்து) சொன்னான். பிறகு, அந்த மனிதன் இறைமறுப்பாளனாகவே (பத்ரில்) கொல்லப்பட்டதை கண்டேன். 19

3973. உர்வா(ரஹ்) அறிவித்தார்

(என் தந்தை) ஸுபைர் இப்னு அவ்வாம்(ரலி) அவர்களி(ன் உடலி)ல் வாளினால் ஏற்பட்ட மூன்று காயங்கள் இருந்தன. அவற்றில் ஒன்று அவர்களின் தோள்பட்டையில் இருந்தது. நான் (சிறுவனாயிருந்த போது) என்னுடைய விரல்களை (விளையாட்டாக) அந்தக் காயத்துக்குள் நுழைப்பவனாக இருந்தேன். (இதில்) இரண்டு காயங்கள் பத்ருப் போரிலும் இன்னொன்று 'யர்மூக்' போரிலும் ஏற்பட்டனவாகும். (என் சகோதரர்) அப்துல்லாஹ் இப்னு ஸுபைர் அவர்கள் கொல்லப்பட்ட சமயத்தில் (அவர்களின் வாள் கலீஃபா அப்துல் மலிக் இப்னு மர்வானிடம் இருந்தது.) என்னிடம் அப்துல் மலிக் இப்னு மர்வான், 'உர்வாவே! ஸுபைர் அவர்களின் வாளைத் தங்களுக்கு (அடையாளம்) தெரியுமா?' என்று கேட்டார். நான், 'ஆம்'' (தெரியும்) என்றேன். 'அதில் என்ன (அடையாளம்) உள்ளது?' என்று கேட்டார். 'பத்ருப் போரில் அதன் முனை முறிந்து போய்விட்டது. அந்த முறிவு தான் (அடையாளம்)'' என்றேன். 'உண்மை சொன்னீர்'' என்று அப்துல் மலிக் இப்னு மர்வான் கூறினார். (பிறகு, 'அவர்களின் வாட்கள் பல்வேறு படைகளில் - பங்கெடுத்து எதிரிகளின் வாட்களுடன் - மோதி முனைகள் முறிந்திருந்தன'' என்னும் நாபிஃகாவின் பிரபல கவிதையிலிருந்து ஓர் அடியைக் கூறினார். ) பிறகு அந்த வாளை என்னிடம் அப்துல் மலிக் இப்னு மர்வான் திருப்பிக் கொடுத்துவிட்டார்.

அறிவிப்பாளர்களில் ஒருவரான ஹிஷாம் இப்னு உர்வா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

பிறகு அந்த வாளை எங்கள் மத்தியில் மூவாயிரம் (திர்ஹம் ஃ தீனாருக்கு) விலை மதிப்பிட்டோம். எங்களில் ஒருவர் (என் சகோதரர் உஸ்மான்) அதை வாங்கினார். அதை நான் வாங்கியிருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.

3974. உர்வா(ரஹ்) அறிவித்தார்

யர்மூக் போரின் போது20 ஸுபைர் இப்னு அவ்வாம்(ரலி) அவர்களிடம், '(ரோம பைஸாந்தியர் மீது) நீங்கள் தாக்குதல் தொடுக்கக் கூடாதா? நாங்களும் உங்களுடன் சேர்ந்து தாக்குதல் தொடுப்போமே' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்களின் தோழர்கள் கூறினர். அப்போது ஸுபைர்(ரலி), 'நான் தாக்குதல் தொடுக்கும்போது நீங்கள் வாக்கை காப்பாற்ற மாட்டீர்கள் (நீங்களும் என்னோடு சேர்ந்து போரிட மாட்டீர்கள்)'' என்று கூறினார்கள். 'இல்லை. அப்படி நாங்கள் செய்ய மாட்டோம்'' என்று அவர்கள் கூறினர். பிறகு ஸுபைர்(ரலி) பைஸாந்தியவர்களின் மீது தாக்குதல் தொடுத்து, அவர்களின் அணிகளைச் சிதறடித்து, அவர்களைக் கடந்து கூறினார்கள். (ஒத்துழைப்பதாகச் சொன்ன) யாரும் (அப்போது) அவருடன் இருக்கவில்லை. பிறகு (தோழர்களை நோக்கி) அவர்கள் திரும்பி வந்து கொண்டிருந்தபோது அவர்களின் குதிரையின் கடிவாளத்தை பைஸாந்தியர்கள் பிடித்துக் கொண்டு அவர்களின் தோள் மீது வெட்டி இரண்டு காயங்களை ஏற்படுத்தினர். (ஏற்கெனவே) பத்ருப்போரில் ஏற்பட்ட ஒரு காயம் அந்த இரண்டுக்கும் மத்தியில் இருந்தது. நான் சிறுவனாக இருந்தபோது அந்த(க் காயத்தின்) தழும்புகளில் என்னுடைய விரல்களைவிட்டு விளையாடுபவனாயிருந்தேன். (யர்மூக் போர் நடந்த) அன்று ஸுபைர்(ரலி) அவர்களுடன் பத்து வயதுடைய (அவர்களின் மகன்) அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி) அவர்களும் இருந்தார். அவரை ஒரு குதிரையிலமர்த்தி அவருக்கு(ப் பாதுகாப்பாக) ஓர் ஆளையும் ஸுபைர்(ரலி) நியமித்திருந்தார்கள்.

3976. அபூ தல்ஹா(ரலி) அறிவித்தார்

பத்ருப் போர் (நடந்து முடிந்த) நாளில் நபி(ஸல்) அவர்கள், குறைஷித் தலைவர்களில் இருபத்தி நான்கு பேர்(களின் சடலங்)களை பத்ருடைய கிணறுகளில் அசுத்தமானதும், அசுத்தப்படுத்தக் கூடியதுமான (கற்களால் உட்சுவர் எடுக்கப்பட்ட) கிணறு ஒன்றில் தூக்கிப் போடுமாறு உத்தரவிட்டார்கள். (எதிரிக்) கூட்டத்தினர் எவரிடமாவது நபி(ஸல்) அவர்கள் போரிட்டு வெற்றி கண்டால் (போரிட்ட இடத்திலுள்ள) திறந்த வெளியில் மூன்று நாள்கள் தங்கிச் செல்வது அவர்களின் வழக்கமாக இருந்தது. பத்ர் முடிந்த மூன்றாம் நாள் தம் வாகன(மான ஒட்டக)த்தின் மீது அதன் சிவிகையை (ஏற்றிக்) கட்டுமாறு நபி(ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். எனவே, அதன் மீது அதன் சிவிகை கட்டப்பட்டது. பிறகு நபி(ஸல்) அவர்கள் (புறப்பட்டுச்) சென்றார்கள். அவர்களின் தோழர்களும் அவர்களைப் பின்தொடர்ந்தனர். நபி(ஸல்) அவர்கள் ஏதோ தம் தேவை ஒன்றிற்காகவே செல்கிறார்கள் என்றே நாங்கள் நினைத்தோம். இறுதியில், அந்தக் (குறைஷித் தலைவர்கள் போடப்பட்டிருந்த) கிணற்றருகில் நபியவர்கள் நின்றார்கள். (கிணற்றோரம் நின்றிருந்த) நபி(ஸல்) அவர்கள், (அதில் எறியப்பட்டிருந்த) அவர்களின் பெயர்களையும், அவர்களின் தந்தையாரின் பெயர்களையும் குறிப்பிட்டு, 'இன்னாரின் மகன் இன்னாரே! இன்னாரின் மகன் இன்னாரே! அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் நீங்கள் கீழ்ப்படிந்து நடந்திருந்தால் (இப்போது அது) உங்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் தானே! ஏனெனில், எங்களுடைய இரட்சகன் எங்களுக்கு வாக்களித்த (நன்மை)தனை உண்மையானதே என்று நாங்கள் கண்டு கொண்டோம். உங்களுக்கு உங்களுடைய இரட்சகன் வாக்களித்த (தண்டனை)தனை உண்மையானது தான் என்று நீங்கள் கண்டு கொண்டீர்களா?' என்று கூறினார்கள். உடனே (அருகிலிருந்த) உமர்(ரலி), 'இறைத்தூதர் அவர்களே! உயிரற்ற சடலங்களிடமா பேசுகிறீர்கள்?' என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'என்னுடைய உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீதாணையாக! நான் கூறுவதை (கிணற்றில் உள்ள) இவர்களை விட நன்கு செவியேற்பவர்களாக நீங்கள் இல்லை'' என்று கூறினார்கள்.

(இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களில் ஒருவரான) கதாதா(ரஹ்) கூறினார்கள்:

அவர்களை இழிவுபடுத்தி சிறுமைப் படுத்தி தண்டிப்பதற்காகவும், அவர்கள் (தமக்கு நேர்ந்துவிட்ட) இழப்பை எண்ணி வருந்துவதற்காகவும் நபி(ஸல்) அவர்களின் சொல்லைச் செவியேற்கச் செய்யும் முகமாக (அந்த நேரத்தில் மட்டும்) அல்லாஹ் அவர்களை உயிராக்கினான். 21

3977. அதாஉ இப்னு அபீ ரபாஹ்(ரஹ்) அறிவித்தார்

''அல்லாஹ்வின் அருட்கொடையை(ப் பெற்ற பின்பு அதனை) நன்றி கெட்ட போக்காக மாற்றி (தங்களுடன்) தம் சமூகத்தாரையும் அழிவுக்கிடங்கில் தள்ளிவிட்டவர்களை (நபியே!) நீங்கள் காணவில்லையா?' என்னும் (திருக்குர்ஆன் 14:28-ம்) இறைவசனம், அல்லாஹ்வின் மீதாணையாக! குறைஷிக் குல இறைமறுப்பாளர்களையே குறிக்கிறது'' என்று இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்.

''அவர்கள் குறைஷிகளாவர். 'அல்லாஹ்வின் அருட்கொடை' என்பது முஹம்மத்(ஸல்) அவர்களைக் குறிக்கும். 'அழிவுக் கிடங்கு' என்பது பத்ருடைய நாளில் (இறைத்தூதரை) எதிர்த்துப் போரிட்டு குறைஷிகள் வீழ்ந்த) நரகத்தைக் குறிக்கும்'' என்று அம்ர் இப்னு தீனார்(ரஹ்) கூறினார்கள்.

3978. உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அறிவித்தார்

''குடும்பத்தினர் (ஒப்பாரி வைத்து) அழுவதால் மண்ணறையில் (இருக்கும் அவர்களின் உறவினரான) இறந்தவர் வேதனை செய்யப்படுகிறார்'' என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னதாக இப்னு உமர்(ரலி) கூறினார் என்று ஆயிஷா(ரலி) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அப்போது ஆயிஷா(ரலி), '(நபி - ஸல் - அவர்கள் அப்படிச் சொல்லவில்லை), 'இறந்தவர் (தன் வாழ்நாளில் புரிந்த) சிறிய, பெரிய பாவங்களின் காரணத்தால் வேதனை செய்யப்படுகிறார். அவரின் குடும்பத்தினரோ, இப்போது அவருக்காக அழுது கொண்டிருக்கின்றனர்' என்றே இறைத்தூதர்(ஸல்) அவர்கள்'' என்று கூறினார்கள். 22

3979. (மேலும்) ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

இது எப்படியிருக்கிறதென்றால், '(குறைஷித் தலைவர்களான) இணைவைப்பவர்கள் பத்ரில் கொல்லப்பட்டு எறியப்பட்டிருந்த கிணற்றுக்கு அருகில் நின்று கொண்டு, அவர்களைப் பார்த்து நபி(ஸல்) அவர்கள் ஏதோ பேசினார்கள். (அப்போது நபி(ஸல்) அவர்களிடம், 'உயிரற்ற சடலங்களிடமா பேசுகிறீர்கள்?' என்று உமர்(ரலி) கேட்ட போது) 'நான் கூறுவதை அவர்கள் செவியேற்கிறார்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்ததாக இப்னு உமர் கூறியதைப் போன்றது தான் இதுவும். ஆனால், 'நான் அவர்களுக்குச் சொல்லி வந்ததெல்லாம் உண்மையென்று இப்போது அறிவித்தார்'' என்றே இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் (இப்போது நான் கூறுவதை அவர்கள் செவியேற்கிறார்கள்'' என்று நபியவர்கள் சொல்லவில்லை.)

பிறகு, (இறந்தவர்களை நாம் பேசுவதைச் செவியேற்பதில்லை என்ற தம் கருத்திற்குச் சான்றாக) ஆயிஷா(ரலி) (பின்வரும் வசனங்களை) ஓதினார்கள்:

(நபியே!) இறந்தவர்களை உங்களால் கேட்கச் செய்ய முடியாது. (திருக்குர்ஆன் 27:80)

(நபியே!) மண்ணறைகளில் இருப்பவர்களை உங்களால் செவியேற்கச் செய்யமுடியாது. (திருக்குர்ஆன் 35:22)

''நரகத்தில் அவர்கள் தங்களின் இருப்பிடங்களில் ஒதுங்கும்போது (இந்நிலை ஏற்படும்)'' என ஆயிஷா(ரலி) (விளக்கம்) கூறினார்கள்.

3980 / 3981 இப்னு உமர்(ரலி) கூறினார்

பத்ரின் கிணற்றருகில் நபி(ஸல்) அவர்கள் நின்று கொண்டு (உள்ளே கிடந்த இறை மறுப்பாளர்களின் சடலங்களை நோக்கி), 'உங்களுக்கு உங்களுடைய இறைவன் வாக்களித்த (தண்டனை)தனை உண்மையானது தான் என்று கண்டு கொண்டீர்களா?' என்று கூறினார்கள். பிறகு, 'இவர்கள், நான் கூறுவதை இப்போது செவியேற்கிறார்கள்'' என்றும் கூறினார்கள். (''இறந்தவர்கள் செவியேற்கிறார்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னதாக இப்னு உமர்(ரலி) கூறினார் என்ற) தகவல் ஆயிஷா(ரலி) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டபோது, 'நான் அவர்களுக்குச் சொல்லி வந்த (கொள்கைகள்) எல்லாம் உண்மையென்று இப்போது அவர்கள் அறிகிறார்கள்' என்றே (நபி - ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என்று ஆயிஷா(ரலி) கூறினார்.

பிறகு (தம் கருத்திற்குச் சான்றாக), '(நபியே!) இறந்தவர்களை உங்களால் கேட்கச் செய்ய முடியாது'' என்னும் (திருக்குர்ஆன் 35:22) இறை வசனத்தை (இறுதிவரை) ஓதினார்கள். 23

பகுதி 9

பத்ருப்போரில் பங்கெடுத்தவர்களின் சிறப்பு.

3982. அனஸ்(ரலி) அறிவித்தார்

இளைஞராயிருந்த ஹாரிஸா இப்னு சுராகா அல் அன்சாரீ(ரஹ்) பத்ருப் போரில் கொல்லப்பட்டார்கள். எனவே, அவர்களின் தாயார் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! என்னிடம் ஹாரிஸாவுக்கு உள்ள அந்தஸ்தைத் தாங்கள் அறிந்திருக்கிறீர்கள். (இப்போது) ஹாரிஸா சொர்க்கத்தில் இருந்தால் நான் நன்மையை நாடி பொறுமை காப்பேன். (இதுவன்றி) வேறு நிலையாக இருப்பின், நான் என்ன செய்வேன் என்பதைத் தாங்களே ஊகிக்கலாம்'' என்று கூறினார்கள். அதற்கு, நபி(ஸல்) அவர்கள், 'அடப்பாவமே! இழந்து தவிக்கிறாயோ!'' (என்று கூறிவிட்டு) 'சொர்க்கம் ஒன்றே ஒன்று தான் உள்ளதா? சொர்க்கம் பல உண்டு. (உன் மகன்) ஹாரிஸா (உயர்ந்த சொர்க்கமான) 'ஜன்னத்துல் பிர்தௌஸ்' என்னும் சொர்க்கத்தில் இருக்கிறார்'' என்று கூறினார்கள். 34

3983. அலீ(பின் அபீ தாலிப் (ரலி) அவர்கள் அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் குதிரை வீரர்களான என்னையும், அபூ மர்ஸத் (கினாஸ் இப்னு ஹுஸைன்) அவர்களையும், ஸுபைர் இப்னு அவ்வாம் அவர்களையும், 'நீங்கள் 'ரவ்ளத்து காக்' என்னுமிடம் வரை செல்லுங்கள்; ஏனெனில், அங்கு (ஒட்டகச் சிவிகையில் இணைவைப்பவர்களில் ஒருத்தி இருக்கிறாள். இணைவைப்பவர்(களின் தலைவர்)களுக்கு ஹாதிப் இப்னு அபீ பல்தஆ அனுப்பியுள்ள (நம்முடைய ரகசியத் திட்டங்களைத் தெரிவிக்கும்) கடிதம் ஒன்று அவளிடம் இருக்கும்; (அவளிடமிருந்து கடிதத்தைக் கைப்பற்றி வாருங்கள்)'' என்று கூறினார்கள். (பிறகு நாங்கள் புறப்பட்டுப் போனோம்.) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் குறிப்பிட்ட இடத்தில் அந்தப் பெண் தன்னுடைய ஒட்டகத்தில் சென்று கொண்டிருக்க, அவளை நாங்கள் அடைந்தோம். அவளிடம், 'கடிதம் (எங்கே? அதை எடு)'' என்று கேட்டோம். அவள், 'எம்மிடம் கடிதம் எதுவுமில்லை'' என்று பதிலளித்தாள். (அவள் அமர்ந்திருந்த) ஒட்டகத்தை நாங்கள் படுக்க வைத்து (அந்தக் கடிதத்தைத்) தேடினோம். எந்தக் கடிதத்தையும் நாங்கள் காணவில்லை. அப்போது, 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பொய் சொல்லமாட்டார்கள். ஒன்று, நீயாக கடிதத்தை எடு(த்துக் கொடு); அல்லது உன்னை(ச் சோதிப்பதற்காக உன்னுடைய ஆடையை) நாங்கள் கழற்ற வேண்டியிருக்கும்'' என்று நாங்கள் சொன்னோம். விடாப் பிடியாக (நாங்கள்) இருப்பதை அவள் கண்டபோது, (கூந்தல் நீண்டு தொங்கும்) தன்னுடைய இடுப்புப் பகுதிக்கு அவள் கையைக் கொண்டு சென்றாள். அவள் ஒரு துணியை இடுப்பில் கட்டியிருந்தாள். (அங்கிருந்து) அ(ந்தக் கடிதத்)தை வெளியில் எடுத்தாள். அந்தக் கடிதத்துடன் இறைத்தூதர்(ஸல்) அவர்களை நோக்கி நடந்தோம். அப்போது உமர்(ரலி), 'இறைத்தூதர் அவர்களே! அவர் (ஹாதிப் இப்னு அபீ பல்தஆ) அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும், இறை நம்பிக்கையாளர்களுக்கும் துரோகமிழைத்துவிட்டார். என்னை விடுங்கள்; அவரின் கழுத்தைக் கொய்துவிடுகிறேன்'' என்று கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் (ஹாதிப் அவர்களை நோக்கி), 'ஏன் இப்படிச் செய்தீர்கள்!'' என்று கேட்டார்கள். 'அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் விசுவாசமில்லாதவனாக நடந்து கொள்ள வேண்டுமென்பது என் நோக்கமல்ல. இணைவைப்பாளர்(களுக்கு நான் செய்யும் இந்த உதவியால் அவர்)களிடம் எனக்கு ஒரு செல்வாக்குக் கிடைத்து, அதன் மூலம் அல்லாஹ் (மக்காவிலிருக்கும்) என் மனைவி மக்களையும், என் செல்வத்தையும் பாதுகாக்கவேண்டும் என்றே நான் நினைத்தேன். தங்கள் தோழர்கள் அனைவருக்குமே மக்காவில் அவர்களின் மனைவி மக்களையும், அவர்களின் செல்வத்தையும் எவரின் மூலமாக அல்லாஹ் பாதுகாப்பானோ அத்தகைய உறவினர்கள் இருக்கின்றனர்'' என்று கூறினார். (இதைக் கேட்ட) நபி(ஸல்) அவர்கள், 'இவர் உண்மை கூறினார். இவரைப் பற்றி நல்லதையே சொல்லுங்கள்'' என்று (தோழர்களைப் பார்த்துக்) கூறினார்கள். அப்போது உமர்(ரலி), 'இவர் அல்லஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும், இறைநம்பிக்கையாளர்களுக்கும் துரோகமிழைத்துவிட்டார். என்னை விடுங்கள்; இவரின் கழுத்தைக் கொய்து விடுகிறேன்'' என்று (மீண்டும்) கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'இவர் பத்ருப் போரில் பங்கெடுத்தவர் அல்லவா? பத்ரில் பங்கெடுத்தவர்களை நோக்கி அல்லாஹ், 'நீங்கள் விரும்பியதைச் செய்யுங்கள். உங்களுக்கு சொர்க்கம் உறுதியாகிவிட்டது'... அல்லது 'உங்கள் பாவங்களை நான் மன்னித்து விட்டேன்'... என்று கூறி விட்டிருக்கலாம் அல்லவா?' என்று கூறினார்கள். 25 இதைக் கேட்ட உமர்(ரலி) தம் கண்கள் கண்ணீர் உகுத்துக் கொண்டிருக்க, 'அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்'' என்று கூறினார்கள். 26

பகுதி 10

3984. அபூ உஸைத் (மாலிக் இப்னு ரபீஆ (ரலி) அவர்கள் அறிவித்தார்

பத்ருப் போரின்போது நபி(ஸல்) அவர்கள் எங்களிடம், '(எதிரிகளான) அவர்கள் உங்களை நெருங்கி வந்தால் அவர்களின் மீது அம்பெய்யுங்கள். (அவர்கள் துரத்திலிருக்கும்போது அம்புகளை எய்து வீணாக்கி விடாமல்) உங்கள் அம்புகளை மிச்சப்படுத்திக் கொள்ளுங்கள்'' என்று கூறினார்கள். 27

3985. அபூ உஸைத் (மாலிக் இப்னு ரபீஆ(ரலி) அறிவித்தார்

பத்ருப் போரின்போது நபி(ஸல்) அவர்கள் எங்களிடம், '(எதிரிகளான) அவர்கள் உங்களை நெருங்கி வந்தால் அவர்களின் மீது அம்பெய்யுங்கள். (அவர்கள் துரத்திலிருக்கும்போது அம்புகளை எய்து வீணாக்கி விடாமல்) உங்கள் அம்புகளை மிச்சப்படுத்திக் கொள்ளுங்கள்'' என்று கூறினார்கள். 27

3985. அபூ உஸைத்(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள், பத்ருப் போரின்போது எங்களிடம், '(எதிரிகளான) அவர்கள் உங்களை நெருங்கி வந்தால் - அதாவது அதிக எண்ணிக்கையில் உங்களை அவர்கள் சூழ்ந்து கொண்டால் - அம்பெய்யுங்கள். (எதிரிகளை அம்பு தாக்காது என்றிருப்பின், வீணாக்கிவிடாமல்) உங்கள் அம்புகளை மிச்சப்படுத்திக் கொள்ளுங்கள்'' என்று கூறினார்கள்.

3986. பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்

உஹுதுப் போரின்போது நபி(ஸல்) அவர்கள், (மலைக் கணவாயில் நிறுத்தப்பட்ட) அம்பெய்யும் வீரர்களுக்கு அப்துல்லாஹ் இப்னு ஜுபைர்(ரலி) அவர்களை(த் தலைவராக) நியமித்தார்கள். (அந்தப் போரின்போது முஸ்லிம்களாகிய) எங்களில் எழுபது பேர்களை (இணைவைப்பவர்களான) அவர்கள் கொன்றனர். (அதற்கு முன் நடந்த) பத்ருப் போரின்போது நபி(ஸல்) அவர்களும், அவர்களின் தோழர்களும் இணைவைப்பவர்களில் எழுபது பேர்களைக் கைது செய்து இன்னும் எழுபது பேர்களைக் கொன்று, (ஆக மொத்தம்) நூற்றி நாற்பது பேர்களை வீழ்த்தினார்கள். (இதைப் பற்றி) அபூ சுஃப்யான் கூறினார்: இந்த (உஹுதுப் போரின்) நாள் பத்ருடைய நாளுக்கு பதிலாகும். போர் என்பதே (கிணற்று) வாளிகள் தாம். (மாறி மாறி தான் இறைக்க முடியும்.)''28

3987. நன்மை என்பது அல்லாஹ் (இந்த உஹுதுப் போருக்குப்) பின்பு நமக்குக் கொணர்ந்த நன்மையும், (இரண்டாம்) பத்ருப் போருக்குப் பிறகு அல்லாஹ் நமக்களித்த நம்முடைய வாய்மைக்கான பரிசும் (கைபர், மக்கா வெற்றிகளும்) ஆகும். 29

''இதை (என் தந்தை) அபூ மூஸா அல் அஷ்அரீ(ரலி), நபி(ஸல்) அவர்களிடமிருந்து கேட்டு அறிவித்தார்கள் என்று எண்ணுகிறேன்'' என அபூ புர்தா(ரஹ்) கூறினார்.

3988. அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அறிவித்தார்

நான் பத்ருப் போரின்போது (படை) அணியில் நின்று கொண்டிருந்தேன். திரும்பிப் பார்த்தபோது என் வலப்பக்கத்திலும் இடப்பக்கத்திலும் இளவயதுடைய இரண்டு இளைஞர்கள் (நின்று கொண்டு) இருந்தனர்.

அந்த இருவர் (அருகில்) இருப்பது குறித்து நான் அஞ்சினேன். 30 அப்போது அந்த இருவரில் ஒருவர் தம் தோழரிடமிருந்து மறைவாக என்னிடம், 'என் பெரிய தந்தையே! அபூ ஜஹ்லை எனக்குக் காட்டுங்கள்'' என்று கூறினார். அப்போது நான், 'என் சகோதரர் மகனே! அவனை என்ன செய்யப் போகிறாய்?' என்று கேட்டேன். அதற்கு அவர், 'அவனை நான் கண்டால் (ஒன்று,) அவனை நான் கொலை செய்வேன்; அல்லது அதற்காக(ப் போராடி) மடிவேன் என்று அல்லாஹ்விடம் சபதம் எடுத்துக் கொண்டுள்ளேன்'' என்றார். அப்போது மற்றொரு வரும் தம் சகாவிடமிருந்து மறைவாக, முதலமாவரைப் போன்றே கூறினார்.

அவர்களைப் போன்ற இருவருக்கிடையே நான் இருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை. எனவே, அவ்விருவருக்கும், அபூ ஜஹ்லை சமிக்கை செய்து காட்டினேன். அந்த இருவரும் இராஜாளிப் பறவைகள் போன்று பாய்ந்து அவனைப் பலமாகத் தாக்கினர். அந்த இருவரும் 'அஃப்ரா'வின் இரண்டு புதல்வர்கள் (முஆத், முஅவ்வித்) ஆவர். 31

3989. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பத்துப் பேர்களை உளவுப்படையாக (ஓரிடத்திற்கு) அனுப்பிவைத்தார்கள். இப்படைக்கு உமர் இப்னு கத்தாப்(ரலி) அவர்களின் மகன் ஆஸிமின் (தாய் வழிப்)பாட்டனார் ஆஸிம் இப்னு ஸாபித் அல் அன்சாரி(ரலி) அவர்களைத் தலைவராக்கினார்கள். அவர்கள் (மதீனாவிலிருந்து புறப்பட்டு வந்து) மக்காவிற்கும் உஸ்ஃபானுக்கும் இடையிலுள்ள 'ஹத்தா' என்ற இடத்தில் இருந்தபோது 'ஹுதைல்' குலத்தைச் சேர்ந்த 'பனூ லிஹ்யான்' எனும் கிளைக் குலத்தாருக்கு அவர்களைப் பற்றித் தெரிவிக்கப்பட்டது. உடனே அக்கிளையினர் (அவர்களைப் பிடிப்பதற்காக) அம்பெய்யும் வீரர்கள் சுமார் நூறு பேருடன் திரண்டு, உளவுப்படையினரின் பாதச் சுவடுகளைப் பின்தொடர்ந்து வந்தனர். அவர்கள் இறங்கித் தங்கி, சாப்பிட்டுவிட்டுச் சென்றிருந்த இடத்தில் பேரீச்சம் பழங்களைக் கண்டனர். '(இது) யஸ்ரிப் (மதீனா) நகரின் பேரீச்சம் பழம்'' என்று (தங்களுக்குள்) பேசிக் கொண்டனர். எனவே, அவர்களின் பாதச் சுவடுகளைப் பின்தொடர்ந்தனர். இவர்களின் வரவு ஆஸிம் அவர்களுக்கும், அவர்களின் தோழர்களுக்கும் தெரிந்தபோது அவர்கள் (மலைப் பாங்கான) உயரமான ஓரிடத்தில் தஞ்சம் புகுந்தனர். அப்போது (துரத்தி வந்த) அந்தக் கூட்டத்தினர் அவர்களைச் சுற்றி வளைத்துக் கொண்டு அவர்களைப் பார்த்து, 'இறங்கி வந்து சரணடைந்து விடுங்கள். உங்களில் யாரையும் கொல்ல மாட்டோம் என்று உங்களுக்கு உறுதிமொழியும் வாக்குறுதியும் தருகிறோம்'' என்று கூறினர். அப்போது ஆஸிம் இப்னு ஸாபித் அவர்கள் (தம் சகாக்களை நோக்கி), '(என்) சமூகத்தாரே! நான் ஓர் இறை மறுப்பாளனின் (வாக்குறுதியை) நம்பி அவனுடைய) பொறுப்பில் இறங்கிச் செல்ல மாட்டேன்'' (என்று கூறிவிட்டு), 'இறைவா! எங்களைப் பற்றிய செய்தியை உன் தூதருக்குத் தெரிவித்து விடு'' என்று கூறினார்கள். அந்த இறைமறுப்பாளர்கள், உளவுப்படையினாரின் மீது அம்பெய்து ஆஸிமை(யும், மற்றும் அறுவரையும்) கொன்றுவிட்டனர். பிறகு குபைப், ஸைத் இப்னு தஸினா மற்றும் இன்னொரு மனிதர் (ஆகிய மூவரும்) அவர்களின் உறுதிமொழி மற்றும் வாக்குறுதியின் பேரில் இறங்கி வந்தனர். அவர்கள் (மூவரும்) தங்கள் கையில் கிடைத்தவுடன் நிராகரிப்பாளர்கள் தம் விற்களின் நாண்களை அவிழ்த்து அதன் மூலம் அவர்களைப் பிணைத்தனர். (இதைக் கண்ட) அந்த மூன்றாம் மனிதர், 'இது முதல் துரோகம். அல்லாஹவின் மீதாணையாக! நான் உங்களுடன் வரமாட்டேன். இவர்களிடம் எனக்கு நல்ல பகுதி இருக்கிறது'' (என்று) கொல்லப்பட்ட தன்னுடைய சாக்களைக் கருத்தில் கொண்டு கூறினார். அவர்கள் அவரை (அடித்துத்) துன்புறுத்தி இழுத்துச சென்றனர். அவர் அவர்களுடன் செல்ல மறுத்தார். (எனவே, அவரைக் கொன்றுவிட்டனர்.) பிறகு, குபைப் அவர்களையும், ஸைத் இப்னு தஸினா அவர்களையும் கொண்டு சென்று பத்ருப் போர் நடந்து முடிந்திருந்த (அந்தச்) சமயத்தில் (மக்காவில்) விற்றுவிட்டனர். பனூ ஹாரிஸ் இப்னு ஆமிர் இப்னி நவ்ஃபல் என்னும் குலத்தார் குபைப்(ரலி) அவர்களை (பழி தீர்ப்பதற்காக) விலைக்கு வாங்கிக் கொண்டனர். (ஏனெனில்) குபைப் அவர்கள் (இக்குலத்தாரின் தலைவர்) ஹாரிஸ் இப்னு ஆமிரை பத்ருப் போரின்போது கொலை செய்திருந்தார். (புனித மாதங்கள் முடிந்து பழிக்குப் பழியாக) தம்மைக் கொலை செய்ய அவர்கள் ஒன்று திரளும் (நாள் வரும்) வரை பனூ ஹாரிஸ் குலத்தாரிடம் குபைப் கைதியாக இருந்து வந்தார். (கொலை செய்யப் போகும் நாள் நெருங்கியபோது தன்னுடைய மறைவான உறுப்புகளிலிருந்து முடிகளை) மழிப்பதற்காக ஹாரிஸின மகள் ஒருத்தியிடம் சவரக்கத்தி ஒன்றை குபைப் இரவலாகக் கேட்டார். அவளும் இரவல் தந்தாள். அப்போது, அவள் கவனிக்காமல் இருக்க. அவளுடைய சிறிய மகன் (விளையாடிக் கொண்டே) தவழ்ந்து குபைபிடம் வந்து சேர்ந்தான். குபைப் தன்னுடைய மடியில் அவனை அமர்த்திக் கொண்டிருக்க, அந்தக் கத்தி அவரின் கையிலிருக்கும் நிலையில் அவரை அவள் பார்த்தாள்.

அந்தப் பெண் (ஸைனப் பின்த் அல் - ஹாரிஸ்) கூறுகிறாள்: (கத்தி அவர் கையிலும் குழந்தை அவரின் மடியிலும் இருப்பதைப் பார்த்து எங்கே அவனை அவர் கொன்று விடுவாரோ) என்று நான் அஞ்சி நடுங்கினேன். என்னுடைய அச்சத்தை குபைப் புரிந்து கொண்டார். அப்போது அவர், 'அவனை நான் கொன்றுவிடுவேன் என்று அஞ்சுகிறாயா? நான் அப்படிச் செய்பவன் அல்லன்'' என்று கூறினார்.

(பின்னொரு நாளில், தாம் இஸ்லாத்தை ஏற்றபின் இந்த நிகழ்ச்சியை நினைவு கூர்ந்தபடி அந்தப் பெண்) கூறினார்: 'குபைபை விடச் சிறந்த ஒரு கைதியை நான் (என் வாழ்நாளில்) ஒருபோதும் கண்டதில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! ஒரு நாள் திராட்சைப் பழக் குலையொன்றை தம் கையில் வைத்து அவர் சாப்பிட்டுக கொண்டிருப்பதை பார்த்தேன். அப்போது அவர் இரும்புச் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்தார். (அந்தப் பருவத்தில்) மக்காவில் எந்தப் பழங்களும் இருக்கவில்லை. 'அது குபைபுக்கு அல்லாஹ் வழங்கிய உணவு'' என்று அந்தப் பெண் கூறி வந்தார். (அவரைக் கொலை செய்வதற்காக மக்காவின்) புனித எல்லைக்கு வெளியே உள்ள இடத்திற்கு அவரைக் கொண்டு வந்தபோது, 'என்னை இரண்டு ரக்அத்கள் தொழ விடுங்கள்'' என்று (குபைப்) கேட்டார். அவர்களும் அனுமதித்தபோது இரண்டு ரக்அத்கள் தொழுதார். பிறகு, 'மரணத்தை அஞ்சித் தான் நான் (நீண்ட நேரம் தொழுகிறேன்) என்று நீங்கள் எண்ணாவிட்டால் நான் (தொழுகையை) அதிகமாக்கியிருப்பேன்'' என்று கூறினார். பின்பு, 'இறைவா! இவர்களை நீ எண்ணி வைத்துக் கொண்டு இவர்களை நீ தனித்தனியாகக் கொன்று விடு. இவர்களில் ஒருவனைக் கூடவிட்டு வைக்காதே'' என்று (அவர்களுக்கெதிராக) குபைப் பிரார்த்தனை புரிந்தார். அதன் பிறகு, 'நான் முஸ்லிமாகக் கொல்லப்படும்போது எதைப் பற்றியும் நான் பொருட்படுத்த மாட்டேன். எந்த இடத்தில் நான் இறந்தாலும் நான் இறைவனுக்காகவே கொல்லப்படுகிறேன் (என்பதில் எனக்கு மகிழ்ச்சியே) நான் கொலையுறுவது அல்லாஹ்வின் திருப்தியைப் பெறுவதற்காகத் தான் எனும்போது, அவன் நாடினால் என்னுடைய துண்டிக்கப்பட்ட உறுப்புகளின் இணைப்புகளின் மீது கூட (தன்) அருள்வளத்தைப் பொழிவான்'' என்று கவிபாடினார்கள்.

பிறகு, 'அபூ சிர்வஆ - உக்பா இப்னு ஹாரிஸ்' என்பவன் குபைப் அவர்களிடம் வந்து, அவர்களைக் கொலை செய்தான். (அன்றிலிருந்து அடைத்து வைத்து அல்லது கட்டி வைத்துக் கொல்லப்படும் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் (கொல்லப்படுவதற்கு முன் இரண்டு ரக்அத்கள்) தொழுவதை முன்மாதிரியாக்கிவிட்டவர் குபபைப் அவர்களே என்றாயிற்று. மேலும், நபி(ஸல்) அவர்கள் தம் தோழர்களுக்கு உளவுப் படையினர் (கொல்லப்பட்ட) செய்தியை அவர்கள் கொல்லப்பட்ட அன்றே (இறையறிவிப்பின் மூலம்) தெரிவித்தார்கள். ஆஸிம் இப்னு ஸாபித் அவர்கள் கொல்லப்பட்டுவிட்ட செய்தி குறைஷிகளுக்குக் கிடைத்தபோது அவர்களில் சிலர் (கொல்லப்பட்டது ஆஸிம் தான் என்று) அடையாளம் தெரிந்து கொள்ள அவரின் (முக்கிய) உறுப்புகளில் ஒன்றை (வெட்டிக்) கொண்டு வருமாறு ஆளனுப்பி வைத்தனர். (ஏனெனில்) ஆஸிம்(ரலி) (பத்ருப் போரின் போது) அவர்களின் தலைவர் ஒருவரைக் கொன்று விட்டிருந்தார். (அவரின் உடலின் முக்கிய உறுப்பொன்றை வெட்டியெடுத்து வரப்போன போது) ஆஸிம் அவர்களுக்காக (அவர்களைப் பாதுகாக்கும் நோக்கில்) அல்லாஹ் மேகத்தைப் போன்று ஆண்தேனீக் கூட்டமொன்றை அனுப்பினான். அவை குறைஷிகளின் தூதர்களிடமிருந்து ஆஸிம் அவர்களை பாதுகாத்தன. அவர்களின் உடலிலிருந்து எதையும் வெட்டியெடுத்துச் செல்ல அவர்களால் முடியவில்லை. 32

கஅப் இப்னு மாலிக்(ரலி) கூறினார்: 'முராரா இப்னு ரபீஉ அம்ரீ(ரலி) அவர்களும் ஹிலால் இப்னு உமைய்யா அல் வாக்கிஃபீ(ரலி) அவர்களும் பத்ருப் போரில் பங்கெடுத்த நல்ல மனிதர்கள்'' என்று என்னிடம் மக்கள் கூறினர். 33

3990. நாஃபிஉ(ரஹ்) அறிவித்தார்

பத்ருப்போரில் பங்கெடுத்தவரான 34 ஸயீத் இப்னு ஸைத் இப்னி அம்ர் இப்னி நுஃபைல்(ரலி) வெள்ளிக்கிழமை நோய் வாய்ப்பட்டார்கள். எனவே (அவர்களைக் கவனித்துக் கொள்ள) பகல் பொழுது உயர்ந்த பின் 'ஜும்ஆ (தொழுகை)' நேரம் நெருங்கி விட்டிருந்த நிலையில், இப்னு உமர்(ரலி) ஸயீத்(ரலி) அவர்களிடம் புறப்பட்டுப் போனார்கள். மேலும் ஜும்ஆத் தொழுகையை இப்னு உமர் விட வேண்டியதாயிற்று. 35

3991. உபைதுல்லாஹ் இப்னு அப்தில்லாஹ்(ரஹ்) கூறினார்

என் தந்தை அப்துல்லாஹ் இப்னு உத்பா அவர்கள், உமர் இப்னு அப்தில்லாஹ் இப்னி அர்கம் அஸ்ஸுஹ்ரீ அவர்களுக்கு கடிதம் எழுதினார்கள். அதில் சுபைஆ பின்த் ஹாரிஸ் அல் அஸ்லமிய்யா(ரலி) அவர்களிடம் சென்று, இறைத்தூதர்(ஸல) அவர்களிடம் சுபைஆ மார்க்கத்தீர்ப்பு கேட்டது பற்றியும், அதற்கு அவர்கள் அளித்த பதில் பற்றியும் கேட்டு எழுதுமாறு பணித்திருந்தார்கள். (அதன்படி, சுபைஆ -ரலி அவர்களிடம் சென்று) உமர் இப்னு அப்தில்லாஹ் அவர்கள் (கேட்டறிந்து என் தந்தை) அப்துல்லாஹ் இப்னு உத்பா அவர்களுக்கு(ப் பின்வருமாறு பதில்) செய்தி அனுப்பினார்கள்.

சுபைஆ பின்த் அல்ஹாரிஸ் அவர்கள் 'பனூ ஆமிர் இப்னு லுஅய்' குலத்தைச் சேர்ந்த ஸஅத் இப்னு கவ்லா(ரலி) அவர்களுக்கு வாழ்க்கைப்பட்டிருந்தார். ஸஅத்(ரலி) பத்ருப்போரில் பங்கெடுத்தவராவார். 'விடைபெறும்' ஹஜ்ஜின்போது ஸஅத்(ரலி) இறந்துவிட்டார்கள். அப்போது 'சுபைஆ' கர்ப்பமுற்றிருந்தார். ஸஅத் அவர்கள் இறந்த நீண்ட நாள்கள் ஆகியிருக்கவில்லை; (அதற்குள்) சுபைஆ பிரசவித்துவிட்டார். (பிரசவத்திற்குப் பின் ஏற்படும்) உதிரப் போக்கிலிருந்து சுபைஆ அவர்கள் சுத்தமானபோது, பெண் பேச வருபவர்களுக்காகத் தன்னை அலங்கரித்துக் கொண்டார். அப்போது, பனூ அப்தித் தார் குலத்தில் ஒருவரான 'அபுஸ் ஸனாபில் இப்னு பஅக்கக்(ரலி) சுபை ஆ அவர்களிடம் வந்து, 'திருமணம் புரியும் ஆசையில் பெண் பேச வருபவர்களுக்காக உங்களை நீங்கள் அலங்கரித்திருப்பதை காண்கிறேன். அல்லாஹ்வின் மீதாணையாக! (கணவன் இறந்த ஒரு பெண் அவனுடைய இறப்புக்குப் பின் இருக்க வேண்டிய 'இத்தா' காலமாகிய) நான்கு மாதம் பத்து நாள்கள் முடியும் வரையில் நீங்கள் (மறு) மணம் புரிந்து கொள்ள முடியாது'' என்று கூறினார்கள். சுபைஆ(ரலி) கூறினார்: இதை அபுஸ்ஸனாபில் என்னிடம் சொன்னதையடுத்து நான் மாலை நேரத்தில் என்னுடைய உடையை உடுத்திக் கொண்டு இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சென்றேன்.. அப்போது நபி(ஸல்) அவர்களிடம் இது பற்றிக் கேட்டேன். அதற்கு, 'நீ பிரசவித்துவிட்டபோதே (மணந்து கொள்ள) அனுமதிக்கப்பட்டவளாக ஆகி விட்டாய். நீ விரும்பினால் (மறு)மணம் செய்து கொள்' என்று நபி(ஸல்) அவர்கள் மார்க்கத் தீர்ப்பு வழங்கினார்கள்.

மற்றோர் அறிவிப்பில், பத்ரில் பங்கெடுத்த இயாஸ் இப்னு புகைர்(ரலி) தமக்கு அறிவித்தாக முஹம்மத் இப்னு இயாஸ்(ரஹ்) தெரிவத்தார்கள்.

பகுதி 11

பத்ருப்போரில் வானவர்கள் பங்கெடுத்தது. 36

3992. நபி(ஸல்) அவர்களிடம் (வானவர்) ஜிப்ரீல்(அலை) அவர்கள் வந்து, 'உங்களிடையே பத்ருப்போரில் பங்கெடுத்தவரைப் பற்றி என்ன கருதுகிறீர்கள்?' என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், '(பத்ரில் கலந்து கொண்டோர்) முஸ்லிம்களில் சிறந்தவர்கள்'' என்றோ அல்லது அது போன்ற வேறொரு வார்த்தையையோ கூறினார்கள். (உடனே) ஜிப்ரீல்(அலை) அவர்கள், 'இவ்வாறுதான் வானவர்களில் பத்ருப்போரில் பங்கெடுத்தவர்கள் (எங்களில் சிறந்தவர்கள் என்று நாங்களும் கருதுகிறோம்)'' என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸை பத்ருப்போரில் பங்கெடுத்தவரான ரிஃபாஆ இப்னு ராஃபிஉ அஸ்ஸுரகீ(ரலி) அவர்களிடமிருந்து அவர்களின் புதல்வர் முஆத் இப்னு ரிஃபாஆ(ரஹ்) அறிவித்தார்.

3993. முஆத் இப்னு ரிஃபாஆ(ரஹ்) அறிவித்தார்

'அகபா' விசுவாசப் பிரமாணம் செய்தவர்களில் ஒருவரான ராஃபிஉ(ரலி), பத்ருப்போரில் பங்கெடுத்தவர்களில் ஒருவரான தம் மகன் ரிஃபாஆ(ரலி) அவர்களிடம், 'அகபா வாக்குப் பிரமாணத்திற்குப் பிரதியாக பத்ரில் நான் கலந்து கொள்வது எனக்கு மகிழ்ச்சியளிக்குமா?' என்று கேட்பது வழக்கம்.

''ஜிப்ரீல்(அலை) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் (பத்ருப் போரில் பங்கெடுத்தவர்களைப் பற்றி முந்தைய ஹதீஸில் உள்ளபடி) கேட்டார்கள்'' என்றும் ராஃபிஉ(ரலி) கூறினார்.

3994. முஆத் இப்னு ரிஃபாஆ(ரஹ்) அறிவித்தார்

வானவர் ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் (முந்தைய ஹதீஸில் உள்ளபடி) கேட்டார்.

அறிவிப்பாளர் யஹ்யா இப்னு ஸயீத்(ரஹ்) கூறினார்:

இந்த ஹதீஸை முஆத் இப்னு ரிஃபாஆ(ரஹ்) எனக்கு அறிவித்த நாளில் யஸீத் இப்னு அல்ஹாத்(ரஹ்) அவர்களுடன் நான் இருந்தேன். '(நபி-ஸல்- அவர்களிடம்) கேள்வி கேட்டவர் (வானவர்) ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள்தாம்'' என ரிஃபாஆ(ரஹ்) கூறினார்கள் என்று யஸீத் கூறினார்கள்.

3995. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்

பத்ருப் போரின்போது நபி(ஸல்) அவர்கள், 'இதோ ஜிப்ரீல்! போர்த் தளவாடங்களுடன் தம் குதிரையின் தலையை (அதன் கடிவாளத்தை)ப் பிடித்துக் கொண்டிருக்கிறார்'' என்று கூறினார்கள்.

பகுதி 12

3996. அனஸ்(ரலி) அவர்களிடம் அறிவித்தார்

அபூ ஸைத்(ரலி) (தமக்குப் பின்) எந்தச் சந்ததியையும்விட்டுச் செல்லாமல் இறந்தார்கள். மேலும், அவர்கள் பத்ருப்போரில் பங்கெடுத்தவராயிருந்தார்கள். 37

3997. அப்துல்லாஹ் இப்னு கப்பாப(ரஹ்) அறிவித்தார்

அபூ ஸயீத் இப்னு மாலிக் அல்குத்ரீ(ரலி) ஒரு பயணத்திலிருந்து திரும்பியபோது, அவர்களின் துணைவியார் குர்பானி இறைச்சியை (சாப்பிடுவதற்காகக்) கொண்டு வந்து அவர்களுக்கு முன்னால் வைத்தார். அப்போது அவர்கள், 'இது பற்றி நான் (மார்க்கத் தீர்ப்புக்) கேட்காத வரையில் இதை உண்ண மாட்டேன்'' என்று கூறினார்கள். உடனே, அவர்கள் தம் தாய் வழிச் சகோதரரான கதாதா இப்னு நுஅமான்(ரலி) அவர்களிடம் சென்றார்கள். அவர் பத்ருப்போரில் பங்கெடுத்தவராயிருந்தார். 38 (அவரிடம் சென்று) இது பற்றிக் கேட்டார்கள். அதற்கு கதாதா(ரலி), 'குர்பானி இறைச்சியை மூன்று நாள்களுக்கு மேல் (சேமித்து வைத்து) எவரும் சாப்பிடக் கூடாது என்ற சட்டத்தை மாற்றும் உத்தரவு நீங்கள் (பயணம்) சென்றதற்குப் பின்னால் வெளியானது' என்று கூறினார்கள். 39

3998. ஸுபைர் இப்னு அவ்வாம்(ரலி) அறிவித்தார்

பத்ருப்போரின்போது நான் உபைதா இப்னு ஸயீத் இப்னி ஆஸ் என்பவனைச் சந்தித்தேன். அவன் தன்னுடைய இரண்டு கண்களைத் தவிர வேறெதுவும் வெளியில் தெரியாத விதத்தில் தன் உடல் முழுவதையும் ஆயுதங்களால் மூடி மறைத்திருந்தான். அவன் 'அபூ தாத்தில் காரிஷ்' (மக்கள் பலம் மிக்கவன்) என்னும் குறிப்புப் பெயரால் அறியப்பட்டு வந்தான். (போர்க்களத்தில் அவன்) நான் 'அபூ தாத்தில் காரிஷ்' (என்று பெருமையாகச்) சொன்னான். நான் அவன் மீது ஈட்டியைப் பாய்ச்சி அவன் கண்களில் தாக்கினேன். உடனே அவன் இறந்துவிட்டான்.

''நான் அவன் மீது என்னுடைய காலை வைத்து மிதித்து மிகவும் சிரமப்பட்டு அந்த ஈட்டியை இழுத்தெடுத்தேன். அதன் இரண்டு ஓரங்களும் வளைந்து போயிருந்தன'' என்று ஸுபைர்(ரலி) சொன்னதாக ஹிஷாம் இப்னு உர்வா(ரஹ்) அறிவித்தார்.

அறிவிப்பாளர்களில் ஒருவரான உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) கூறினார்:

அந்த ஈட்டியை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஸுபைர்(ரலி) அவர்களிடம் (இரவலாகக்) கேட்கவே, ஸுபைர்(ரலி) அதைக் கொடுத்தார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இறந்தபோது ஸுபைர்(ரலி) அதை (திரும்ப) எடுத்தார்கள். பிறகு அதை அபூ பக்ர்(ரலி) (இரவலாகக்) கேட்க, அதை அவர்களுக்கு ஸுபைர்(ரலி) கொடுத்தார்கள். அபூ பக்ர்(ரலி) இறந்தபோது, அதனை உமர்(ரலி) (இரவலாகக்) கேட்டார்கள். அதனை ஸுபைர் அவர்கள் உமர்(ரலி) அவர்களுக்குக் கொடுத்தார்கள். உமர்(ரலி) இறந்தபோது அதை ஸுபைர் அவர்கள் எடுத்து (தம்மிடம் வைத்து)க் கொண்டார்கள். பிறகு அவர்களிடம் உஸ்மான்(ரலி) அதைக் கேட்க, அவர்களுக்கும் அதை ஸுபைர்(ரலி) கொடுத்தார்கள். உஸ்மான்(ரலி) கொலை செய்யப்பட்டபோது, அந்த ஈட்டி அலீ(ரலி) அவர்களி(ன் குடும்பத்திரி)டம் வந்தது. அதனை, ஸுபைர்(ரலி) அவர்களின் மகன் அப்துல்லாஹ், (அலீ - ரலி அவர்களின் பிள்ளைகளிடம்) கேட்டார்கள். அப்துல்லாஹ்(ரலி) கொல்லப்படும் வரையில் அது அவர்களிடமே இருந்து வந்தது.

3999. பத்ருப்போரில் பங்கெடுத்தவரான உபாதா இப்னு ஸாமித்(ரலி) 40 அவர்கள் அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'என்னிடம் வாக்குறுதிப் பிரமாணம் தாருங்கள்'' என்று கூறினார்கள். 41

4000. நபி(ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் பத்ருப்போரில் பங்கெடுத்தவர்களில் ஒருவரான அபூ ஹுதைஃபா(ரலி) சாலிமைத் தம் வளர்ப்பு மகனாக ஆக்கினார்கள். அவருக்குத் தம் சகோதராரின் மகளான ஹிந்த பின்த் வலீத் இப்னு உத்பாவைத் திருமணமும் செய்து வைத்தார்கள். சாலிம் ஓர் அன்சாரிப் பெண்ணின் அடிமையாக இருந்தவர். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஸைதை வளர்ப்பு மகனாக ஆக்கிக் கொண்டது போன்று (சாலிமை, அபூ ஹுதைஃபா - ரலி - அவர்கள் வளர்ப்பு மகனாக்கிக் கொண்டார்கள்.) மேலும், அறியாமைக் காலத்தில் ஒருவரை அவரின் வளர்ப்புத் தந்தை(யின் பெயர்) உடன் இணைத்து மக்கள் அழைப்பதும் அவரின் சொத்துக்கு வாரிசாக (வளர்ப்பு மகனை) ஆக்கும் பழக்கமும் இருந்து வந்தது. 'வளர்ப்புப் புதல்வர்களை அவர்களின் சொந்தத் தந்தை(யின் பெயர்) உடன் இணைத்து அழையுங்கள்'' என்னும் (திருக்குர்ஆன் 33:05) வசனத்தை அல்லாஹ் அருளும் வரையில் (இந்தப் பழக்கம் நீடித்தது.) 42

''பிறகு (அபூ ஹுதைஃபாவின் துணைவியார்) சஹ்லா (பின்த் சுஹைல் (ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் வந்தார்கள்...'' என்று (தொடங்கும்) ஹதீஸை (அறிவிப்பாளர் அபுல் யமான் -ரஹ் - அவர்கள்) முழுமையாகக் கூறினார்கள். 43

4001. ருபய்யிஉ பின்த் முஅவ்வித்(ரலி) அறிவித்தார்

எனக்குத் திருமணம் நடந்த அன்று காலை நபி(ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். (இந்த ஹதீஸைக் கேட்டுக் கொண்டிருந்த காலித் இப்னு தக்வான் - ரஹ் - அவர்களிடம்) 'எனக்கருகில் நீங்கள் அமர்ந்திருப்பது போன்று நபி(ஸல்) அவர்கள் என்னுடைய விரிப்பின் மீது அமர்ந்திருந்தார்கள்'' (என்று ருபய்யிஉ கூறினார்கள்) அங்கு சில (முஸ்லிம்) சிறுமிகள் (சலங்கையில்லா) கஞ்சிராக்களை அடித்துக் கொண்டு பத்ருப் போரில் கொல்லப்பட்ட தங்கள் முன்னோர்களைப் புகழ்ந்து (இரங்கல்) பாடிக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒரு சிறுமி, 'எங்களிடையே ஓர் இறைத்தூதர் இருக்கிறார். அவர் நாளை நடக்க விருப்பதையும் அறிவார்'' என்று கூறினாள். உடனே நபி(ஸல்) அவர்கள், 'இப்படிச் சொல்லதே. (இதைவிடுத்து) முன்பு நீ சொல்லிக் கொண்டிருந்ததை (வேண்டுமானால்) சொல்'' என்று கூறினார்கள்.

4002. இறைத்தூதர்(ஸல்) அவர்களின் தோழரும், இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் பத்ரில் பங்கெடுத்தவருமான அபூ தல்ஹா (ஸைத் அல் அன்சாரீ(ரலி) அவர்கள் கூறினார்

''எந்த வீட்டினுள் நாயோ உருவப் படமோ உள்ளதோ அந்த வீட்டினுள் (இறையருளைச் சுமந்து வரும்) வானவர்கள் நுழைய மாட்டார்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

உயிரினங்களின் சிலைகளையும், உருவப்படங்களையும் கருத்திற் கொண்டே நபி(ஸல்) அவர்கள் (இப்படிக்) கூறினார்கள்'' (என்று இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்.) 44

4003. அலீ(ரலி) அறிவித்தார்

பத்ருப்போரின்போது போரில் கிடைத்த செல்வத்திலிருந்து என்னுடைய பங்காக வயதான ஒட்டகம் ஒன்று எனக்குக் கிடைத்திருந்தது. நபி(ஸல்) அவர்களும் (தமக்குக் கிடைத்த நிதியான ஐந்தில் ஒரு பாகமான) குமுஸில் இருந்து எனக்கு (மற்றொரு கிழட்டு ஒட்டகத்தைத்) தந்திருந்தார்கள். நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் மகள் ஃபாத்திமாவுடன் (முதன் முறையாக) வீடு கூட விரும்பிய பாது பனூ கைனுகா குலத்தைச் சேர்ந்த பொற்கொல்லர் ஒருவரை, என்னுடன் வந்து 'இத்கிர்' புல்லை நாங்கள் கொண்டு வருவதெனச் சொல்லியிருந்தேன். அந்தப் புல்லைப் பொற்கொல்லர்களுக்கு விற்று அந்தப் பணத்தை என் மணவிருந்துக்குப் பயன்படுத்திக் கொள்ள விரும்பினேன். நான் என் ஒட்டகங்களுக்கான சேண இருக்கைக்களையும், தீவனப் பைகள் மற்றும் கயிறுகளையும் சேகரிக்கலானேன். அப்போது என் இரண்டு ஒட்டகங்களும் அன்சாரி ஒருவரின் அறையின் அருகே மண்டியிட்டு அமரச் செய்யப்பட்டிருந்தன. நான் சேகரிக்க விரும்பியவற்றைச் சேகரித்துவிட்டபோது (திரும்பி வந்தேன். அப்போது) என் இரண்டு ஒட்டகங்களின் திமில்களும் துண்டிக்கப்பட்டிருந்தன. அவற்றின் (அடிவயிற்று) இடுப்புப் பகுதி (கத்தியால்) பிளக்கப்பட்டிருந்தது. அவற்றின் ஈரல் குலைகள் பிடுங்கப்பட்டிருந்தன. அவற்றின் (இந்த அவலக்) காட்சியைக் கண்டபோது என்னால் என் கண்களைக் (கண்ணீர் சிந்த விடாமல்) கட்டுப்படுதத முடியவில்லை. நான், 'இதை(யெல்லாம்) செய்தவர் யார்?' என்று கேட்டேன். மக்கள், 'ஹம்ஸா இப்னு அப்தில் முத்தலிப் தான் இப்படிச் செய்துவிட்டார். அவர் இந்த வீட்டில் அன்சாரிகளின் மது அருந்தும் குழு ஒன்றில் தான் இருக்கிறார். அவருடன் அவரின் நண்பர்களும் பாடகியொருத்தியும் உள்ளனர். அந்தப் பாடகி தம் பாடலினிடையே, 'ஹம்ஸாவேஸ இந்தக் கொழுத்த கிழம் ஒட்டகங்களைக் கொன்று (உங்கள் விருந்தாளிகளுக்குப் பாரிமாறி) விடுங்கள்'' என்று பாடினாள். உடனே ஹம்ஸா தம் வாளை நோக்கிப் பாய்ந்து (எடுத்து வந்து) அந்த இரண்டு ஒட்டகங்களின் திமில்களை வெட்டி இடுப்பைப் பிளந்தார். மேலும், அதன் ஈரல் குலைகளை வெளியே எடுத்தார்.'' என்று பதிலளித்தனர்.

(அலீ (ரலி) அவர்கள் தொடர்ந்து கூறுகிறார்கள்:) உடனே நான் நபி(ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்களுடன் ஸைத் இப்னு ஹாரிஸா அவர்களும் இருந்தார்கள். நான் சந்தித்த (வேதனை) தனை நபி(ஸல்) அவர்கள் புரிந்து கொண்டு, 'உங்களுக்கு என்ன நேர்ந்தது?' என்று கேட்டார்கள். நான், 'இறைத்தூதர் அவர்களே! இன்றைய நாளைப் போன்ற (பயங்கரமான) ஒரு நாளை (ஒருபோதும்) நான் பார்த்ததில்லை. ஹம்ஸா, என் இரண்டு ஒட்டகங்களையும் (அநியாயமாகத்) தாக்கி அவற்றின் திமில்களை அறுத்துவிட்டார். அவற்றின் (அடி வயிற்று) இடுப்புப் பகுதிகளை (வாளால்) பிளந்துவிட்டார். அவர் இப்போது ஒரு வீட்டில் மது அருந்தும் (நண்பர்கள்) குழுவுடன் இருக்கிறார்'' என்று சொன்னேன். உடனே நபி(ஸல்) அவர்கள் தங்களின் அங்கி ஒன்றைக் கொண்டு நடந்து செல்ல, அவர்களை நானும் ஸைத் இப்னு ஹாரிஸாகவும் பின்தொடர்ந்து சென்றோம். ஹம்ஸா இருந்த வீட்டிற்கு வந்தவுடன் நபி(ஸல்) அவர்கள் செல்ல அனுமதி கேட்டார்கள். நபிகளாருக்கு அனுமதியளிக்கப்பட்டது. அப்போது நபி(ஸல்) அவர்கள் ஹம்ஸாவை, அவர் செய்த காரியத்திற்காகக் கண்டிக்கத் தொடங்கினார்கள். ஹம்ஸாவின் இரண்டு கண்களும் சிவந்திருக்க அவர் போதையிலிருந்தார். ஹம்ஸா, அல்லாஹ்வின் தூதரைப் பார்த்தார். பிறகு (தம்) பார்வையை உயர்த்தி அவர்களின் இரண்டு முழங்கால்களையும் பார்த்தார். பிறகு பார்வையை உயர்த்தி நபி(ஸல்) அவர்களின் முகத்தைப் பார்த்தார். பிறகு, 'நீங்கள் எல்லாம் என் தந்தையின் அடிமைகள் தாமே?' என்று கேட்டார்.

அவர் போதையில் இருக்கிறார் என்பதைப் புரிந்து கொண்டு, (திரும்பாமல்) அப்படியே பின் வாங்கிய வண்ணம் தாம் வந்த வழியே இறைத்தூதர்(ஸல்) அவர்கள் வெளியேறினார்கள். நாங்களும் அவர்களுடன் வெளியேறினோம். 45

4004. அப்துல்லாஹ் இப்னு மஅகில் அல்முஸ்னீ(ரஹ்) அறிவித்தார்

ஸஹ்ல் இப்னு ஹுனைஃப் (ரலி அவர்கள் இறந்த போது) அவர்களுக்கு (ஜனாஸா தொழுகை நடத்திய) அலீ(ரலி) (வழமையான தக்பீரை விடக் கூடுதலாக ஒரு முறை) தக்பீர் கூறினார்கள். (இது பற்றி அவர்களிடம் கேட்கப்பட்டபோது) 'ஸஹ்ல் இப்னு ஹுனைப்ஃப் - ரலி அவர்கள் பத்ருப் போரில் பங்கெடுத்தார்கள். (பத்ருப் போரில் பங்கெடுத்தவருக்கு பிறரை விடச் தனிச் சிறப்பு உண்டு. அதனால் கூடுதலாக தக்பீர் கூறினேன்)'' என்று அலீ(ரலி) பதிலளித்தார்கள். 46

4005. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்

உமர் இப்னு கத்தாப்(ரலி) (தம் மருமகன்) குனைஸ் இப்னு ஹுதாஃபா அஸ்ஸஹ்மீ(ரலி) இறந்துவிட்டதால் (மகள்) ஹஃப்ஸா விதவையானபோது (அவர்களை வேறொவருக்குத் திருமணம் முடித்து வைக்க எண்ணினார்கள்.)

-குனைஸ் அவர்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் தோழர்களில் ஒருவரும், பத்ருப்போரில் பங்கெடுத்தவருமாயிருந்தார்கள். மேலும், மதீனாவில் இறந்தார்கள். 47

உமர்(ரலி) கூறினார்:

எனவே, நான் உஸ்மான் இப்னு அஃப்பான் அவர்களைச் சந்தித்து (என் மகள்) ஹஃப்ஸாவைக் குறித்து எடுத்துக் கூறி, 'நீங்கள் விரும்பினால் என் மகள் ஹஃப்ஸாவை உங்களுக்குத் திருமணம் செய்து வைக்கிறேன்' என்று கூறினேன். (அதற்கு) உஸ்மான்(ரலி), '(உங்கள் மகளை நான் மணந்து கொள்ளும்) இந்த என் விஷயத்தில் நான் யோசிக்க வேண்டியுள்ளது; (யோசித்த பின் என்னுடைய முடிவைக் கூறுகிறேன்)'' என்று கூறினார்கள். சில நாள்கள் பொறுத்திருந்தேன். பிறகு (நான் உஸ்மானைச் சந்தித்த போது) அவர் 'இப்போது திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என்றே எண்ணியுள்ளேன்'' என்று கூறினார்கள். எனவே, நான் அபூ பக்ர் அவர்களைச் சந்தித்தேன். (அவர்களிடம்) 'நீங்கள் விரும்பினால் என் மகள் ஹஃப்ஸாவைப் பெண் கேட்டார்கள். எனவே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஹஃப்ஸாவைத் திருமணம் செய்து வைத்தேன். பிறகு (ஒரு நாள்) அபூ பக்ர் அவர்கள் என்னைச் சந்தித்தபோது, 'நீங்கள் என்னிடம் ஹஃப்ஸா அவர்களைக் குறித்துச் சொன்னபோது நான் உங்களுக்கு பதில் எதுவும் கூறாததால் உங்களுக்கு என் மீது மன வருத்தம் இருக்கக் கூடும்' என்று கூறினார்கள். நான், 'ஆம்'' என்று கூறினேன். (அதற்கு அபூ பக்ர் (ரலி) அவர்கள் 'நீங்கள் கூறியபோது நான் உங்களுக்கு பதில் கூறாததற்குக் காரணம், இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஹஃப்ஸா அவர்களை (தாம் மணப்பது) பற்றிப் பேசியதை நான் அறிந்திருந்தேன். இறைத்தூதர்(ஸல்) அவர்களின் இந்த ரகசியத்தை நான் வெளிப்படுத்தவும் விரும்பவில்லை. (எனவேதான், உங்களுக்கு பதிலேதும் கூறவில்லை. நபி(ஸல்) அவர்கள் ஹஃப்ஸாவை (திருமணம் செய்யாமல்) விட்டிருந்தால் உறுதியாக அவர்களை நான் (மனைவியாக) ஏற்றுக் கொண்டிருந்திருப்பேன்'' என்று கூறினார்கள்.

4006. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

ஒருவர் தன் குடும்பத்தினருக்காகச் செய்யவும் செலவும் தர்மமே ஆகும்.

இதை பத்ருப் போரில் பங்கெடுத்தவரான அபூ மஸ்வூத்(ரலி) அறிவித்தார். 48

4007. கூஃபாவின் ஆளுநர் முஃகீரா இப்னு ஷுஅபா(ரலி) (ஒரு நாள்) அஸ்ருத் தொழுகையைத் தாமதப்படுத்திவிட்டார்கள். அப்போது ஸைத் இப்னு ஹஸன்(ரஹ்) அவர்களின் பாட்டனாரும் பத்ருப்போரில் பங்கெடுத்தவருமான அபூ மஸ்வூத் உக்பா இப்னு அம்ர் அல் அன்சாரி(ரலி) வந்து, '(முஃகீரா அவர்களே!) ஜிப்ரீல்(அலை) அவர்கள் இறங்கி (ஐவேளைத் தொழுகைகளையும் அவற்றுக்குரிய நேரங்களில்) தொழுதார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்களும் ஐந்து (நேரத்) தொழுகைகளை (அவ்வாறே) தொழுதார்கள். பிறகு, ஜிப்ரீல்(அலை) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம்,) 'இவ்வா(று குறித்த நேரங்களில் தொழுது காட்டுமா)றே நான் பணிக்கப்பட்டுள்ளேன் என்று (கூறியதெல்லாம்) உங்களுக்குத் தெரியுமே!'' என்று கேட்டார்கள்.

உமர் இப்னு அப்தில் அஸீஸ்(ரஹ்) அவர்களின் ஆட்சிக் காலத்தில் (ஒரு நாள், அன்னார் தொழுகையைத் தாமதப்படுத்திய போது) அவர்களிடம் உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) இந்த ஹதீஸைத் தெரிவித்தார்கள். 49

4008. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

'அல்பகரா' அத்தியாயத்தின் இறுதி இரண்டு (திருக்குர்ஆன் 02:285 - 286) வசனங்களை இரவு நேரத்தில் ஓதுகிறவருக்கு (மனிதன் மற்றும் ஜின் இனத்தாரின் தீங்குகளிலிருந்து பாதுகாக்கப்) போதுமானதாக அவை ஆகிவிடும்.

இதை பத்ருப்போரில் பங்கெடுத்தவரான அபூ மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.

அறிவிப்பாளர் அப்துர் ரஹ்மான் இப்னு யஸீத்(ரஹ்) கூறினார்.

அபூ மஸ்வூத்(ரலி) இறையில்லம் கஅபாவை வலம் வந்து கொண்டிருந்தபோது அவர்களை நான் சந்தித்து இந்த ஹதீஸ் குறித்துக கேட்டேன். அப்போது (அல்கமா - ரஹ்- அவர்களிடம் கூறியது போன்றே) என்னிடமும் அதைக் கூறினார்கள்.

4009. 'நபி(ஸல்) அவர்களின் தோழரும், அன்சாரிகளில் பத்ருப்போரில் பங்கெடுத்தவருமான இத்பான் இப்னு மாலிக்(ரலி), 'நான், இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்தேன்...'' (என்று கூறித் தொடங்கும்) இந்த ஹதீஸின் முழுவடிவத்தை மஹ்மூத் இப்னு ரபீஉ(ரலி) அறிவித்தார். 50

4010. இப்னு ஷிஹாப் (அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் அறிவித்தார்

பனூ சாலிம் குலத்தில் ஒருவரும் அவர்களில் சிறப்புக்குரியவருமான ஹுஸைன் இப்னு முஹம்மத்(ரலி) அவர்களிடம் இத்பான் இப்னு மாலிக்(ரலி) குறித்து முஹ்மூத் இப்னு ரபீஉ(ரலி) அறிவித்த ஹதீஸைப் பற்றி நான் கேட்டபோது, அதை அவர்கள் உறுதிப்படுத்தினார்கள். 51

4011. முஹம்மத் இப்னு முஸ்லிம் அஸ்ஸுஹ்ரீ(ரஹ்) அறிவித்தார்

பனூ அதீ குலத்தில் பெரியவரும், நபி(ஸல்) அவர்களுடன் பத்ருப்போரில் பங்கெடுத்த ஆமிர் இப்னு ரபீஆ(ரலி) அவர்களின் மகனுமான அப்துல்லாஹ் இப்னு ஆமிர் இப்னு ரபீஆ(ரஹ்) என்னிடம் (பின்வருமாறு) அறிவித்தார்கள்.

(கலீஃபா) உமர்(ரலி) குதாமா இப்னு மழ்வூன்(ரலி) அவர்களை பஹ்ரைன் (நாட்டின்) ஆளுநராக நியமித்தார்கள். அவர் பத்ருப்போரில் பங்கெடுத்தவராவார். மேலும் அவர் (உமர்(ரலி) அவர்களின் மகன்) அப்துல்லாஹ் இப்னு உமருக்கும், (உமர்(ரலி) அவர்களின் மகள்) ஹஃப்ஸாவுக்கும் தாய் மாமன் ஆவார். அல்லாஹ் இவர்கள் அனைவரைக் குறித்தும் திருப்தி கொள்வானாக!

4012 / 4013. ராஃபிஉ இப்னு கதீஜ்(ரலி) அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அவர்களிடம் அறிவித்தார்

''இறைத்தூதர்(ஸல்) அவர்கள் விளைநிலங்களைக் குத்தகைக்கு விடுவதைத் தடைசெய்தார்கள்'' என்று பத்ருப்போரில் பங்கெடுத்தவர்களான என் தந்தையின் இரண்டு சகோதரர்கள் (ளுஹைர், முளஹ்ஹர்) கூறினர். 52

இதை சாலிம் இப்னு அப்தில்லாஹ்(ரஹ்) அறிவித்தார்.

இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ(ரஹ்) கூறினார்:

நான் சாலிம் அவர்களிடம், 'நீங்கள் விளை நிலங்களைக் குத்தகைக்கு விடுகிறீர்களா?' என்று கேட்டேன். அதற்கவர், 'ஆம்'' என்று கூறிவிட்டு, 'ராஃபிஉ தன் மீது சிரமத்தை ஏற்படுத்திக் கொண்டார்'' என்று கூறினார்கள்.

4014. அப்துல்லாஹ் இப்னு ஷத்தாத் இப்னி ஹாதீ அல்லைஸீ(ரஹ்) அறிவித்தார்

நான் பத்ரில் பங்கெடுத்தவரான ரிஃபாஆ இப்னு ராஃபிஉ அல் அன்சாரி(ரலி) அவர்களைப் பார்த்தேன். 53

4015. மிஸ்வர் இப்னு மக்ரமா(ரலி) அறிவித்தார்

பனூ ஆமிர் இப்னு லுஅய் குலத்தாரின் ஒப்பந்த நண்பரும் நபி(ஸல்) அவர்களுடன் பத்ருப் போரில் பங்கெடுத்தவருமான அம்ர் இப்னு அவ்ஃப்(ரலி) எனக்குக் கூறினார்கள்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அபூ உபைதா இப்னு ஜர்ராஹ்(ரலி) அவர்களை பஹ்ரைனிலிருந்து ஜிஸ்யா (காப்பு வரியை) வசூலித்துக் கொண்டு வரும்படி (அரசு அதிகாரியாக்கி) அனுப்பியிருந்தார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (நெருப்பு வணங்கிகளான) பஹ்ரைன் வாசிகளுடன் சமாதான ஒப்பந்தம் செய்து அவர்களுக்கு அலா இப்னு ஹள்ரமீ(ரலி) அவர்களைத் தலைவராக ஆக்கியிருந்தார்கள். அபூ உபைதா அவர்கள் பஹ்ரைனிலிருந்து நிதியுடன் வந்தார்கள். அபூ உபைதா அவர்கள் வந்திருப்பதைக் கேள்விப்பட்டு அன்சாரிகள் (வந்து) நபி(ஸல்) அவர்களுடன் ஃபஜ்ருத் தொழுகையை நிறைவேற்றினார். நபி(ஸல்) அவர்கள் (தொழுகையை முடித்துத்) திரும்ப அன்சாரிகள் நபியவர்களிடம் சைகையால் கேட்டார்கள். (ஆர்வத்துடனிருந்த) அவர்களைக் கண்டவுடன் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் புன்னகைத்துவிட்டு, 'அபூ உபைதா ஏதோ கொண்டு வந்திருக்கிறார் என்று நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள் என நான் நினைக்கிறேன்'' என்று கூற, அன்சாரிகள், 'ஆம், இறைத்தூதர் அவர்களே!'' என்று பதிலளித்தார்கள். 'அப்போது நபி(ஸல்) அவர்கள் 'உங்களுக்கு நற்செய்தி! உங்களுக்கு மகிழ்வைத் தரும் நிகழ்ச்சி நடக்குமென்று நம்புங்கள்'' என்று கூறிவிட்டு, 'அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களுக்கு வறுமை ஏற்பட்டு விடும் என்று நான் அஞ்சவில்லை. மாறாக, உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களுக்கு உலகச் செல்வம் அதிகமாகக் கொடுக்கப்பட்டதைப் போல் உங்களுக்கும் அதிகமாகக் கொடுக்கப்பட்டு, அவர்கள் அதற்காகப்  அதிகமாகப் போட்டியிட்டதைப் போல் நீங்களும் போட்டியிட, அது அவர்களை அழித்துவிட்டதைப் போல் உங்களையும் அழித்து விடுமோ என்றே நான் அஞ்சுகிறேன்'' என்று கூறினார்கள். 54

4016. இப்னு உமர்(ரலி) எல்லாப் பாம்பு(வகை)களையும் சொல்பவர்களாக இருந்தார்கள்.

4017. 'வீடுகளில் வசிக்கும் ஜின்(களான) பாம்புகளைக் கொல்ல வேண்டாம்' என்று நபி(ஸல்) அவர்கள் தடை விதித்துள்ளார்கள்'' என்று பத்ருப் போரில் பங்கெடுத்தவரான அபூ லுபாபா (என்ற ரிஃபாஆ இப்னு அப்தில் முன்திர் (ரலி) அவர்கள் கூறியபோது அதனைக் கொல்வதை நிறுத்திக் கொண்டார்கள். 55

என நாஃபிஉ(ரஹ்) அறிவித்தார்.

4018. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்

அன்சாரிகளில் சிலர் அல்லாஹ்வின் தூதரிடம், (பத்ருப்போரில் கைதியாகப் பிடிக்கப்பட்டிருந்த அப்பாஸ் - ரலி அவர்களின் விடுதலை தொடர்பாக) 'எங்கள் சகோதாரி மகன் அப்பாஸ் அவர்களிடமிருந்து பிணைத் தொகை பெறாமல் நாங்கள் (அவரை)விட்டு விடுகிறோம்; நீங்கள் எங்களுக்கு அனுமதி கொடுங்கள்'' என்று அனுமதி கோரினார்.

நபி(ஸல்) அவர்கள், 'அவரிடமிருந்து ஒரு வெள்ளி நாணயத்தைக் கூட (வாங்காமல்) ஒருபோதும் விட்டு விடாதீர்கள்'' என்று கூறினார்கள். 56

4019. உபைதுல்லாஹ் இப்னு அதீ இப்னி கியார்(ரஹ்) கூறினார்

பனூ ஸுஹ்ரா குலத்தாரின் ஒப்பந்த நண்பராயிருந்தவரும், இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் பத்ரில் பங்கெடுத்தவருமான மிக்தாத் இப்னு அம்ர் அல்கிந்தீ(ரலி), இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம், 'இறைமறுப்பாளன் ஒருவனை நான் சந்தித்து, நாங்கள் இருவரும் சண்டையிட்டோம். அப்போது அவன் என் கை ஒன்றை வாளால் துண்டித்துவிட்டான். பிறகு, அவன் என்னைவிட்டுப் போய் ஒரு மரத்தில் அபயம் தேடிக் கொண்டு, 'அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்(து இஸ்லாத்தில் இணைந்)தேன்' என்று சொன்னான். இதை அவன் சொன்னதற்குப் பிறகு நான் அவனைக் கொல்லலாமா? இறைத்தூதர் அவர்களே!'' என்று கேட்டார்கள். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், '(வேண்டாம்.) அவனைக் கொல்லாதே'' என்று பதிலளித்தார்கள். அதற்கு மிக்தாத்(ரலி), 'இறைத்தூதர் அவர்களே! அவன் என் கை ஒன்றைத் துண்டித்துவிட்டான். அதைத் துண்டித்த பிறகு தானே இதைச் சொன்னான்!'' என்று கேட்க, இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'அவனை நீ கொல்லாதே! அவ்வாறு நீ அவனைக் கொன்றுவிட்டால் அவனைக் கொல்வதற்கு முன்பு நீயிருந்த (குற்றமற்ற) நிலைக்கு அவன் வந்துவிடுவான். அந்த வார்த்தையைச் சொல்வதற்கு முன்பு அவனிருந்த (குற்றவாளியான) நிலைக்கு நீ சென்று விடுவாய்' என்று கூறினார்கள்.

4020. அனஸ்(ரலி) அறிவித்தார்

''அபூ ஜஹ்ல் என்ன ஆனான் என்று பார்த்து வருபவர் யார்?' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பத்ருப்போர் (நடந்த) நாளில் கேட்டார்கள். உடனே, இப்னு மஸ்வூத்(ரலி) (அவனைத் தேடிச்) சென்றார்கள். அப்போது அஃப்ராவின் இரண்டு புதல்வர்கள் (முஆத், முஅவ்வித் ஆகிய இருவரும் பலமாக) அவனைத் தாக்கிவிடவே அவன் குற்றுயிராக இருக்கக் கண்டார்கள். (அவனை நோக்கி), 'அபூ ஜஹ்லே! நீயா?' என்றும் கேட்டார்கள்.

அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு உலய்யா(ரஹ்)அவர்கள் கூறுகிறார்கள்:

''இப்படித் தான் இந்த நிகழ்ச்சியினை (எனக்கு) அனஸ்(ரலி) அறிவித்தார்'' என்று சுலைமான் இப்னு தர்கான்(ரஹ்) கூறினார்கள். மேலும், 'இப்னு மஸ்வூத் அவர்கள் (அபூ ஜஹ்லை நோக்கி), 'அபூ ஜஹ்லே நீயா?' என்று கேட்டபோது, 'நீங்களே கொன்றுவிட்ட ஒரு மனிதனுக்கு மேலாக... அல்லது தம் சமுதாயத்தாராலேயே கொல்லப்பட்டுவிட்ட ஒரு மனிதனுக்கு மேலாக.. யாரும் உண்டா?' என்று (தன்னத்தானே புகழ்ந்தவனாக) அபூ ஜஹ்ல் சொன்னான்'' என சுலைமான்(ரஹ்) அறிவித்தார். 57

அபூ மிஜ்லஸ்(ரஹ்) அவர்களின் அறிவிப்பில், 'விவசாயி அல்லாத ஒருவன் என்னைக் கொன்றிருந்தால்... (நன்றாயிருந்திருக்குமே!)'' என்று அபூ ஜஹ்ல் கூறினார்கள் என இடம் பெற்றுள்ளது. 58

4021. உமர்(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் இறந்தபோது நான் அபூ பக்ர்(ரலி) அவர்களிடம், 'என்னுடன் நம் அன்சாரித் தோழர்களிடம் (பனூ சாஇதா சமுதாயக் கூடத்துக்கு) வாருங்கள்'' என்று கூறினேன். (நாங்கள் போய்க் கொண்டிருந்தோம்.) அப்போது அன்சாரிகளில் பத்ருப் போரில் பங்கெடுத்தவர்களான இரண்டு நல்ல மனிதர்கள் எங்களைச் சந்தித்தார்கள். 59

அறிவிப்பாளர்களில் ஒருவரான உபைதுல்லாஹ் இப்னு அப்தில்லாஹ்(ரஹ்) கூறினார்: (இந்த ஹதீஸை) நான் உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அவர்களிடம் கூறியபோது, 'உவைஸ் இப்னு சாஇதா(ரலி), மஅன் இப்னு அதீ(ரலி) ஆகியோரே அந்த இருவர்' என்று அவர்கள் கூறினார்கள். 60

4022. கைஸ் இப்னு அபீ ஹாஸிம்(ரஹ்) அறிவித்தார்

பத்ருப் போரில் பங்கெடுத்தவர்களின் (வருடாந்திர உதவித்) தொகை (நபர் ஒன்றுக்கு, தீனார்/திர்ஹம்) ஐயாயிரம், ஐயாயிரமாக இருந்தது. உமர்(ரலி) (தம் ஆட்சிக் காலத்தின் போது), '(உதவித் தொகையை) மற்றவர்களை விட இவர்களுக்கு அதிகமாக்கித் தருவேன்'' என்று கூறினார்கள்.

4023. ஜுபைர் இப்னு முத்யிம்(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் மஃக்ரிப் தொழுகையில் 'அத்தூர்' (என்னும் 56-வது) அத்தியாயத்தை ஒதிக் கொண்டிருக்க கேட்டேன். இதுதான் இறைநம்பிக்கை என்னுடைய இதயத்தில் இடம் பிடித்த முதல் சந்தர்ப்பமாகும். 61

4024. நபி(ஸல்) அவர்கள் பத்ருப்போரில் பிடிபட்ட கைதிகள் தொடர்பாகக் கூறினார்கள்:

முத்யிம் இப்னு அதீ உயிரோடியிருந்து இந்த அசுத்தம் பிடித்தவர்களை (பிணைத் தொகை வாங்காமலேயே)விட்டுவிடும்படி அவர் என்னிடம் (பரிந்து) பேசியிருந்தால், நான் அவருக்காக இவர்களை (பிணைத் தொகை வாங்காமலேயே)விட்டு விட்டிருப்பேன். 62

என ஜுபைர் இப்னு முத்யிம்(ரலி) அறிவித்தார்.

ஸயீத் இப்னு முஸய்யப்(ரலி) கூறினார்

முதல் குழப்பமான உஸ்மான் (ரலி) அவர்களின் படுகொலை நடைபெற்றது. அது பத்ர் போரில் கலந்துகொண்டவர்களில் ஒருவரையும் விட்டுவைக்கவில்லை.63 பிறகு இரண்டாம் குழப்பமான “அல்ஹர்ரா போர்' நடைபெற்றது. அது ஹுதைபியா உடன்படிக்கையில் பங்கு கொண்ட ஒருவரையும் விட்டுவைக்கவில்லை.64 பிறகு மூன்றாவது (குழப்பம்) நடைபெற்றது. மக்களுக்கு ஆற்றல் இருந்தும் (அந்தக் குழப்பம்) விலகவே இல்லை.65

4025. முஹம்மத் இப்னு முஸ்லிம் அஸ்ஸுஹ்ரீ(ரஹ்) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா(ரலி) அவர்களின் (மீது சொல்லப்பட்ட அவதூறு) நிகழ்ச்சி குறித்து உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்), ஸயீத் இப்னு முஸய்யப்(ரஹ்), அல்கமா இப்னு வக்காஸ்(ரஹ்), உபைதுல்லா இப்னு அப்தில்லாஹ்(ரஹ்) ஆகியோரிடம் செவியேற்றேன். (அவர்களில்) ஒவ்வொருவரும் நிகழ்ச்சியின் ஒரு பகுதியை எனக்கு அறிவித்தனர்.

ஆயிஷா(ரலி) கூறினார்: நானும் (அபூ ருஹ்மின் மகள்) உம்மு மிஸ்தஹும் (இயற்கைக் கடனை நிறைவேற்றுவதற்காக) சென்று கொண்டிருந்தோம். உம்மு மிஸ்தஹ் (மிஸ்தஹின் தாயார்) தம் கம்பளி அங்கியில் இடறிக் கொண்டார். அப்போது அவர், (அவதூறில் பங்கெடுத்த தம் மகன் மிஸ்தஹை சபித்தவராக) 'மிஸ்தஹ் நாசமாகட்டும்'' என்று கூறினார். நான், 'மிக மோசமான சொல்லைச் சொல்லிவிட்டீர். பத்ருப் போரில் பங்கெடுத்த ஒரு மனிதரையா ஏசுகிறீர்.'' என்று கூறினேன்... பிறகு அவதூறு பற்றிய ஹதீஸை (முழு வடிவத்துடன்) அறிவிப்பாளர் ஸுஹ்ரீ(ரஹ்) கூறினார்கள். 66

4026. மூஸா இப்னு உக்பா(ரஹ்) அறிவித்தார்

(இறைத்தூதர்(ஸல்) அவர்களின் புனிதப் போர்கள் குறித்து அறிவிப்புச் செய்ததற்குப் பின்னால்) இப்னு ஷிஹாப் (அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள், 'இவை தாம் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் புனிதப் போர்கள்'' என்று கூறினார்கள். அப்போது (பத்ருப்போரில் மாண்டு போன குறைஷித் தலைவர்களின் சடலங்களைக் கிணற்றில்) எறிந்துவிட்டு அவர்களை நோக்கி இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'உங்களுடைய இரட்சகன் உங்களுக்கு வாக்களித்ததை உண்மையானதாகக் கண்டு கொண்டீர்களா?' எனக் கேட்டார்கள் என்று (பத்ருப் போர் பற்றிய) ஹதீஸையும் கூறினார்கள்.

அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) கூறினார்:

நபி(ஸல்) அவர்களின் தோழர்களில் சிலர், 'இறந்த மக்களை நோக்கியா பேசுகிறீர்கள்? இறைத்தூதர் அவர்களே!'' என்று கேட்டனர். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'அவர்களிடம் நான் கூறியதை, அவர்களை விட நீங்கள் நன்கு செவியேற்பவர்களாக இல்லை'' என்று கூறினார்கள். 67

(அறிவிப்பாளர் இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ-ரஹ்-அவர்கள் கூறுகிறார்கள்:)

குறைஷி(முஸ்லிம்)களில் (ஏதேனும் தகுந்த காரணத்தினால்) பத்ருப்போரில் கலந்து (கொள்ளாத போதிலும், பங்கெடுத்ததாகத் கருதப்பட்டு போர்ச் செல்வத்தில்) பங்கு வழங்கப்பட்டவர்கள் மொத்தம் எண்பத்தியொரு பேராகும்.

''(போர்ச் செல்வத்தில்) குறைஷிகளின் பங்கு பிரித்துக் கொடுக்கப்பட்டது; நூறு பேர் இருந்தனர். 'அல்லாஹ்வே மிக அறிந்தவன்' என்று ஸுபைர் இப்னு அவ்வாம்(ரலி) கூறினார்' என்று உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) கூறுவது வழக்கம்.

4027. ஸுபைர் இப்னு அவ்வாம்(ரலி) அறிவித்தார்

பத்ருப் போரின்போது முஹாஜிர்களுக்கு (போர்ச் செல்வத்திலிருந்து) நூறு பங்குகள் ஒதுக்கப்பட்டன.

என உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அறிவித்தார். 68

பகுதி 13

அபூ அப்தில்லாஹ் (புகாரி) அவர்கள் 'அல்ஜாமிஉ' (என்னும் இந்)நூலில் குறிப்பிட்டுள்ள பத்ருப்போர் வீரர்களின் (அரபி) அகரவரிசையிலான பெயர்கள் (பட்டியல்). 69

1. நபி முஹம்மத் இப்னு அப்தில்லாஹ் அல் ஹாஷிமீ(ஸல்) அவர்கள்

2. இயாஸ் இப்னு புகைர். 70

3. அபூ பக்ர் அஸ் ஸித்தீக் அல்குரஷீ அவர்களால் விடுதலை செய்யப்பட்ட பிலால் இப்னு ரபாஹ். 71

4. ஹம்ஸா இப்னு அப்தில் முத்தலிப் அல் ஹாஷிமீ.

5. குறைஷியரின் நட்புக் குலத்தைச் சேர்ந்த ஹாத்திப் இப்னு அபீ பல்தஆ. 72

6. அபூ ஹுதைஃபா இப்னு ரபீஆ அல்குரஷீ

7. ஹாரிஸா இப்னு ருபய்யிஉ அல் அன்சாரி - இவர் பத்ருப்போரின்போது கண்காணிப்பாளர்களில் ஒருவராயிருந்தபோது கொலை செய்யப்பட்டார் - இவர்தான் ஹாரிஸா இப்னு சுராகா ஆவார். 74

8. குபைப் இப்னு அதீ அல் அன்சாரி. 75

9. குனைஸ் இப்னு ஹுதாஃபா அஸ் ஸஹ்மீ.

10. ரிஃபாஆ இப்னு ராஃபிஉ அல் அன்ஸாரீ.

11. ரிஃபாஆ இப்னு அப்தில் முன்திர் அபூ லுபாபா அல் அன்சாரீ. 76

12. ஸுபைர் இப்னு அவ்வாம் அல்குரஷீ 77

13. ஸைத் இப்னு ஸஹ்ல் அபூ தல்ஹா அல்அன்சாரீ

14. அபூ ஸைத் (கைஸ் இப்னு சக்கன்) அல் அன்சாரீ

15. ஸஅத் மாலிக் அஸ் ஸுஹ்ரீ

16. ஸஅத் இப்னு ஃகவ்லா அல் குறஷீ

17. ஸயீத் இப்னு ஸைத் இப்னி அம்ர் இப்னி நுஃபைல் அல் குறஷீ

18. ஸஹ்ல் இப்னு ஹுனைஃப் அல் அன்சாரீ 78

19. ளுஹைர் இப்னு ராஃபிஉ அல் அன்சாரீ

20. அவரின் சகோதரர் (முளஹ்ஹர் இப்னு ராஃபிஉ அல் அன்சாரீ)

21. அப்துல்லாஹ் இப்னு உஸ்மான் அபூ பக்ர் அல்குறஷீ

22. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் அல் ஹுதலீ 79

23. உத்பா இப்னு மஸ்வூத் அல் ஹுதலீ80

24. அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் அஸ் ஸுஹ்ரீ.

25. உபைதா இப்னு ஹாரிஸ் அல் குறஷீ

26. உபாதா இப்னு ஸாமித் அல் அன்சாரீ

27. உமர் இப்னு கத்தாப் அல் அத்வீ

28. உஸ்மான் இப்னு அஃப்பான் அல்குறஷீ

- இவரை நபி(ஸல்) அவர்கள், (நோய் வாய்ப்பட்டிருந்த) தம் மகளை கவனித்துக் கொள்வதற்காக (பத்ருப்போரின்போது மதீனாவிலேயே)விட்டுச் சென்றிருந்தார்கள். போர்ச் செல்வத்தில் அவருக்கும் பங்கு ஒதுக்கினார்கள்.

29. அலீ இப்னு அபீ தாலிப் அல் ஹாஷிமீ

30. பனூ அமீர் இப்னு லுஅய் குலத்தாரின் நட்புக் குலத்தைச் சேர்ந்த அம்ர் இப்னு அவ்ஃப்

31. உக்பா இப்னுஅம்ர் அல் அன்சாரீ,

32. ஆமிர் இப்னு ரபீஆ அல் அன்ஸீ

33. ஆஸிம் இப்னு ஸாபித் அல் அன்சாரீ. 81

34. உவைம் இப்னு சாஇதா அல் அன்சாரீ.

35. இத்பான் இப்னு மாலிக் அல் அன்சாரீ82

36. குதாமா இப்னு மழ்வூன்.

37. கத்தாதா இப்னு நுஅமான் அல் அன்சாரீ

38. முஆத் இப்னு அம்ர் இப்னி ஜமூஹ்

39. முஅவ்வித் இப்னு அஃப்ரா.

40. அவரின் சகோதரர் (முஆத் இப்னு அஃப்ரா)

41. மாலிக் இப்னு ரபீஆ அபூ உஸைத் அல் அன்சாரீ

42. முராரா இப்னு ரபீஉ அல் அன்சாரீ

43. மஅன் இப்னு அதீ அல் அன்சாரீ

44. மிஸ்தஹ் இப்னு உஸாஸா இப்னி அப்பாத் இப்னி அப்தில் முத்தலிப் இப்னி அப்தி மனாஃப்.

45. பனூ ஸுஹ்ரா குலத்தாரின் நட்புக்குலத்தைச் சேர்ந்த மிக்தாத் இப்னு அம்ர் அல் கிந்தீ83

46. ஹிலால் இப்னு உமய்யா அல் அன்சாரீ

இவர்கள் அனைவரைக் குறித்தும் அல்லாஹ் திருப்தி கொள்வானாக!

பகுதி 14

'பனூ நளீர்' குலத்தார் பற்றிய செய்தியும் (பனூ அமீர் குலத்தாரில் கொலையுண்ட) இருவருக்கான உயிரீட்டுத் தொகை தொடர்பாக (பனூ நளீர் குலத்தாரிடம் உதவி நாடி நபி(ஸல்) அவர்கள் சென்றதும்

மேலும், இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு வஞ்சகம் செய்ய அவர்கள் திட்டம் தீட்டியதும், 84

''பத்ருப் போர் நடந்த ஆறாவது மாதத்தின் தொடக்கத்தில் உஹுதுக்கு முன்பாக இந்த (பனூர் நளீர்) போர் நடந்தது'' என்று உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) கூறினார்கள் என ஸுஹ்ரீ(ரஹ்) அறிவித்தார். 85

மேலும், 'அவனே வேதக்காரர்களில் மறுப்பாளர்களை அவர்களின் இல்லங்களிலிருந்து முதல் படையெடுப்பிலேயே வெளியேற்றினான்'' என்று அல்லாஹ் கூறினான். (திருக்குர்ஆன் 59:02)

இப்னு இஸ்ஹாக்(ரஹ்) இந்தப் போர், 'பிஃரு மஊனா' போருக்கும் உஹுதுப் போருக்கும் பின்னால் நடந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்கள். 86

4028. (மதீன யூதர்களான பனூ) நளீர் குலத்தாரும் (பனூ) குறைழா குலத்தாரும் (நபி - ஸல் அவர்களின் மீது) போர் தொடுத்தனர். எனவே, பனூ நளீர் குலத்தாரை நபி(ஸல்) அவர்கள் நாடு கடத்தினார்கள். (பனூ) குறைழா குலத்தார் (வருத்தம் தெரிவித்ததால் அவர்கள்) மீது கருணை காட்டி (மன்னித்து) அவர்களை அங்கேயே (வசிக்க)விட்டுவிட்டார்கள். (ஆனால், பனூ) குறைழா குலத்தினரும் போர் தொடுத்தபோது அவர்களின் ஆண்களைக் கொலை செய்தார்கள். மேலும், அவர்களின் பெண்களையும் அவர்களின் குழந்தைகளையும், அவர்களின் உடைமைகளையும் முஸ்லிம்களுக்கு மத்தியில் (போர்ச் செல்வமாகப்) பங்கிட்டுக் கொடுத்தார்கள். நபி(ஸல்) அவர்களுடன் வந்து சேர்ந்து கொண்ட (பனூ குறைழாக்கள்) சிலருக்கு அவர்கள் பாதுகாப்பாக மாறிவிட்டனர். அப்துல்லாஹ் இப்னு சலாம்(ரலி) அவர்களின் குலத்தாரான 'பனூ கைனுகா' கூட்டத்தாரையும் பனூ ஹாரிஸா (குலத்தாரான) யூதர்களையும், மதீனா நகரத்தைச் சேர்ந்த யூதர்கள் அனைவரையும் (ஆக) மதீனாவிலிருந்த எல்லா யூதர்களையும் நாடு கடத்திவிட்டார்கள். 87

4029. ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) அறிவித்தார்

நான் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம், '(திருக்குர்ஆனின் 59-வது அத்தியாயத்தின் பெயரை) 'அல்ஹஷ்ர்' அத்தியாயம் எனக் குறிப்பிட்டேன். (அப்போது)  அவர்கள் 'அந்நளீர்' அத்தியாயம் என்று கூறுங்கள் என்றார்கள். 88

இந்த ஹதீஸ் இன்னோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

4030. (பனூ) குறைழா, (பனூ) நளீர் குலத்தாரை வெற்றி கொள்ளும் வரையில் (அன்சாரிகளில்) சிலர் நபி(ஸல்) அவர்க(ளின் செலவுக)ளுக்காக பேரீச்ச மரங்களை (அன்பளிப்பாக)க் கொடுத்திருந்தார்கள். அதற்குப் பிறகு நபி(ஸல்) அவர்கள் அவற்றை அவர்களிடமே திருப்பிக் கொடுத்துவிட்டார்கள்.

என அனஸ்(ரலி) அறிவித்தார். 89

4031. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (தேசத் துரோகிகளும் கொடுஞ் செயலாளர்களுமான) பனூ நளீர் குலத்தாரின் பேரீச்ச மரங்களை (போர்க் கால நடவடிக்கையாக) எரித்துவிட்டார்கள். இன்னும் (சிலவற்றை) வெட்டிவிட்டார்கள். 90 அது 'புவைரா' என்னும் இடமாகும். 91 எனவேதான் 'நீங்கள் சில பேரீச்ச மரங்களை வெட்டியதும், அல்லது அவற்றின் வேர்களில் நிற்கும்படி விட்டுவிட்டதும் எல்லாமே அல்லாஹ்வின் அனுமதியுடன் தான் நடந்தன. அல்லாஹ் தீயவர்களை இழிவிலும் கேவலத்திலும் ஆழ்த்தி விடுவதற்காகவே (இந்த அனுமதியை அளித்தான்)'' என்னும் (திருக்குர்ஆன் 59:05) இறைவசனம் அருளப்பட்டது. 92

என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

4032. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் பனூநளீர் குலத்தாரின் பேரீச்ச மரங்களை (புவைரா எனுமிடத்தில்) எரித்தார்கள்.

இந்த (புவைரா) சம்பவம் குறித்தே (கவிஞர்) ஹஸ்ஸான் இப்னு ஸாபித்(ரலி) பின்வருமாறு பாடினார்கள். 'புவைராவில் கொழுந்து விட்டெரிந்த நெருப்பு - பனூ அய் (குறைஷிக்) குலத்தாரின் தலைவர்களுக்கு (அதை அணைக்க இயலாமல் வாளாவிருப்பது) எளிதாகி விட்டது'' அப்போது (முஸ்லிமாகாமலிருந்த) அபூ சுஃப்யான் இப்னு ஹாரிஸ், ஹஸ்ஸான்(ரலி) அவர்களுக்கு (கவிதையிலேயே பின்வருமாறு) பதிலளித்தார்.

அந்த (தீயினால் எரிக்கும்) வேலையை அல்லாஹ் நிரந்தரமாக்குவானாக! அதன் சுற்று வட்டாரங்களிலும் நெருப்பு (பற்றி) எரியட்டும. புவைராவிலிருந்து நம்மில் யார் தொலைவில் இருக்கிறார்கள் என்பதை வெகு விரைவில் நீ அறிவாய். நம்மிருவரின் ஊர்களில் எது சேதமடையும் என்பதையும் நீ அறிவாய்''

என இப்னு உமர்(ரலி) அறிவித்தார். 93

4033. மாலிக் இப்னு அவ்ஸ் அந்நஸ்ரீ(ரலி) அறிவித்தார்

உமர் இப்னு கத்தாப்(ரலி) என்னைக் கூப்பிட்(டு ஆளனுப்பி விட்)டார்கள். (நான் அவர்களிடம் சென்று அமர்ந்து கொண்டிருந்த போது) அவர்களிடம் அவர்களின் மெய்க்காவலர் 'யர்ஃபஉ' என்பவர் வந்து, 'உஸ்மான் இப்னு அஃப்பான்(ரலி), அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி), ஸுபைர் இப்னு அவ்வாம்(ரலி), ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) ஆகியோர் தங்களைச் சந்திக்க அனுமதி கேட்கிறார்கள். தங்களுக்கு (அவர்களைச் சந்திப்பதில்) இசைவு உண்டா? என்று கேட்டார். உமர்(ரலி), 'ஆம் (இசைவு உண்டு); அவர்களை உள்ளே வரச் சொல்லுங்கள்'' என்று கூறினார்கள். பிறகு 'யர்ஃபஉ' சற்று நேரம் தாமதித்து வந்து, 'அலீ(ரலி) அவர்களும் அப்பாஸ்(ரலி) அவர்களும் (உள்ளே வர) அனுமதி கேட்கிறார்கள். தங்களுக்கு இசைவு உண்டா?' என்று கேட்டார் அதற்கு உமர்(ரலி) 'ஆம் (இசைவு உண்டு)'' என்று கூற, அவ்விருவரும் உள்ளே நுழைந்தபோது அப்பாஸ்(ரலி), 'இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! எனக்கும் இவருக்கும் (அலீக்கும்) இடையே தீர்ப்பளியுங்கள்'' என்று கூறினார்கள். அல்லாஹ், தன் தூதர்(ஸல்) அவர்களுக்கு பனூ நளீர் குலத்தாரின் செல்வத்திலிருந்து ('ஃபய்உ' நிதியாக) ஒதுக்கிக் கொடுத்த சொத்துகள் தொடர்பாக இருவரும் சச்சரவிட்டு வந்தனர். அப்போது அலீ(ரலி) அவர்களும் அப்பாஸ்(ரலி) அவர்களும் ஒருவரையொருவர் குறைகூறிக் கொண்டனர். அப்போது (உஸ்மான் - ரலி - அவர்கள் மற்றும் அவர்களின் தோழர்களின்) குழு, 'இறை நம்பிக்கையாளர்களின் தலைவரே! இவர்களுக்கிடையே தீர்ப்பளித்து, ஒருவரை மற்றவரின் பிடியிலிருந்து விடுவித்து விடுங்கள்'' என்று கூறியது. உமர்(ரலி), 'பொறுங்கள். எந்த அல்லாஹ்வின் கட்டளையால் வானமும் பூமியும் நிலைபெற்றிருக்கின்றனவோ அவன் பொருட்டால் கேட்கிறேன்: இறைத்தூதர்(ஸல்) அவர்கள், '(நபிமார்களான) எங்களுக்கு எவரும் வாரிசாக மாட்டார். நாங்கள் விட்டுச் செல்வதெல்லாம் தர்மமே'' என்று தம்மைக் குறித்துக் கூறியதை நீங்கள் அறிவீர்களா?' என்று கேட்டார்கள். அதற்கு அந்தக் குழுவினர், 'அவர்கள் அவ்வாறு சொல்லத் தான் செய்தார்கள்'' என்று பதிலளித்தனர். உடனே, உமர்(ரலி), அலீ(ரலி) அவர்களையும் அப்பாஸ்(ரலி) அவர்களையும் நோக்கி, 'அல்லாஹ்வின் பொருட்டால் உங்கள் இருவரிடமும் கேட்கிறேன்: இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அவ்வாறு சொன்னதை நீங்கள் அறிவீர்களா?' என்று கேட்டார்கள். அவ்விருவரும், 'ஆம், (அவ்வாறு சொல்லியிருக்கிறார்கள்)'' என்று பதிலளித்தனர். உமர்(ரலி), 'அவ்வாறெனில், உங்களிடம் இந்த விஷயத்தைக் குறித்துப் பேசுகிறேன். (போரிடாமல் கிடைத்த) இச்செல்வத்திலிருந்து சிறியதைத் தன் தூதருக்கு உரியதாக அல்லாஹ் ஆக்கியுள்ளான். அவர்களைத் தவிர வேறெவருக்கும் அவன் அதைக் கொடுக்கவில்லை.''. (என்று கூறிவிட்டு), 'அல்லாஹ், எச்செல்வத்தை எதிரிகளின் பிடியிலிருந்து விடுவித்துத் தன் தூதரிடம் திருப்பிக் கொடுத்தானோ அச்செல்வம் உங்கள் குதிரைகளையும் ஒட்டகங்களையும் (அறப்போரிடுவதற்காக) நீங்கள் ஒட்டிச் சென்றதால் கிடைத்தல்ல. மாறாக அல்லாஹ், தான் நாடுகிறவர்களின் மீது தன்னுடைய தூதர்களுக்கு அதிகாரம் வழங்குகிறான். மேலும், அல்லாஹ் அனைத்தின் மீதும் பேராற்றல் உள்ளவனாக இருக்கிறான்'' என்னும் (திருக்குர்ஆன் 59:6-வது) இறைவசனத்தை ஓதினார்கள். தொடர்ந்து, 'எனவே, இது இறைத் தூதருக்கென ஒதுக்கப்பட்ட செல்வமாகும். அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களைவிட்டுவிட்டு அதை அவர்கள் தமக்காகச் சேகரித்துக் கொள்ளவில்லை. அதை உங்களை விடப் பெரிதாகக் கருதவுமில்லை. உங்களுக்கு அதைக் கொடுத்தார்கள்; உங்களிடையே அதைப் (பரவலாகப்) பங்கிட்டார்கள். இறுதியில், அதிலிருந்து இச்செல்வம் மட்டுமே மீதமாயிற்று. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இச்செல்வத்திலிருந்து தம் வீட்டாரின் ஆண்டுச் செலவை அவர்களுக்குக் கொடுத்து வந்தார்கள். அப்படிக் கொடுத்த பிறகு மீதமுள்ளதை எடுத்து, அல்லாஹ்வின் (பாதையில் செலவிடும்) செல்வத்தை எந்த இனங்களில் செலவிடுவார்களோ அவற்றில் செலவிடுவார்கள். இவ்வாறே இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் வாழ்நாளில் செயல்பட்டு வந்தார்கள். பிறகு நபி(ஸல்) அவர்கள் இறந்தபோது அபூ பக்ர்(ரலி), 'நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் (ஆட்சிக்குப்) பிரதிநிதியாவேன் என்று கூறி, அ(ந்தச் செல்வத்)தைத் தம் கைவசம் எடுத்தார்கள். அ(ந்தச் சொத்)து விஷயத்தில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் செயல்பட்ட விதத்தில் தாமும் செயல்பட்டார்கள்'' என்று உமர்(ரலி) கூறினார். பிறகு அலீ(ரலி) அவர்களையும் அப்பாஸ்(ரலி) அவர்களையும் நோக்கி, 'நீங்களும் அப்போது இருந்தீர்கள்; இந்நிலையில் (இப்போது வந்து) நீங்கள் கூறுவது போன்று அபூ பக்ர்(ரலி) செயல்பட்டார்கள் என்று கூறுகிறீர்களே!'' என்று கேட்டார்கள். பிறகு, 'அபூ பக்ர் அவர்கள் அது விஷயத்தில் வாய்மையாகச் செயல்பட்டார்கள்; நல்ல விதமாக நடந்து கொண்டார்கள்; நேரான முறையில் நடந்து, உண்மையையே பின்பற்றினார்கள் என்பதை அல்லாஹ் அறிவான். பிறகு அபூ பக்ர் அவர்களையும் அல்லாஹ் அழைத்துக் கொண்டான். அப்போது நான் 'அல்லாஹ்வின் தூதருடையவும் அபூ பக்ர் அவர்களுடைவும் பிரதிநிதியாவேன்'' என்று கூறி, அதை என் ஆட்சிக் காலத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு என் கைவசம் எடுத்துக் கொண்டு, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அதில் நடந்து கொண்ட முறைப்படியும் அபூ பக்ர்(ரலி) நடந்து கொண்ட முறைப்படியும் நானும் செயல்பட்டு வந்தேன். நான் அது விஷயத்தில் வாய்மையாகச் செயல்பட்டேன்; நல்ல விதமாக நடந்து கொண்டேன்; நேரான முறையில் நடந்து கொண்டேன்; உண்மையையே பின்பற்றினேன் என்பதை அல்லாஹ் அறிவான். பிறகு, நீங்கள் இருவருமே என்னிடம் வந்து பேசினீர்கள்; உங்கள் இருவரின் கோரிக்கையும் ஒன்றாகவே இருந்தது. அப்பாஸே! நீங்கள் என்னிடம் (உங்கள் சகோதரர் மகனிடமிருந்து உங்களுக்குச் சேரவேண்டிய வாரிசுப் பங்கைக் கேட்டபடி) வந்தீர்கள். நான் உங்கள் இருவரிடமும், 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள், '(நபிமார்களான நாங்கள்விட்டுச் செல்லும் சொத்துக்களில்) எங்களுக்கு எவரும் வாரிசாவதில்லை. நாங்கள்விட்டுச் செல்வதெல்லாம் தர்மமே' என்று கூறினார்கள்' என்றேன். எனினும், 'அதை உங்கள் இருவரிடமே கொடுத்து விடுவது (தான் பொருத்தமானது)' என்று எனக்குத் தோன்றியபோது நான், 'நீங்கள் இருவரும் விரும்பினால் அல்லாஹ்விடம் செய்த ஒப்பந்தமும் அவனுக்களித்த உறுதி மொழியும் உங்கள் பொறுப்பாக இருக்க, நீங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எப்படி அதன் விஷயத்தில் செயல்பட்டார்களோ, அபூ பக்ர்(ரலி) எப்படி அதன் விஷயத்தில் செயல்பட்டார்களோ, நான் (ஆட்சிப்) பொறுப்பேற்றதிலிருந்து அதன் விஷயத்தில் எப்படிச் செயல்பட்டேனோ அதன்படியே நீங்கள் இருவரும் செயல்படுவீர்கள் என்னும் நிபந்தனையின் அடிப்படையில் உங்கள் இருவரிடமும் கொடுத்து விடுகிறேன். அதன் அடிப்படையில் என்னிடம் பேசுவதாயிருந்தால் பேசுங்கள் என்று கூறினேன். அதற்கு நீங்கள் இருவரும், 'எங்களிடம் இதே அடிப்படையில் அதைக் கொடுத்து விடுங்கள்' என்று சொன்னீர்கள். அதன்படியே அதை உங்கள் இருவரிடமும் கொடுத்து விட்டேன்'' (என்று சொல்லிவிட்டு) '(தற்போது) இதைத் தவிர வேறொரு தீர்ப்பை நீங்கள் என்னிடமிருந்து கோருகிறீர்களா? எவனுடைய அனுமதியுடன் வானமும் பூமியும் நிலைபெற்றுள்ளனவோ அவன் மீது சத்தியமாக! மறுமை நாள் வரை, நான் இந்த விஷயத்தில் இதைத் தவிர வேறெந்தத் தீர்ப்பையும் தர மாட்டேன். உங்கள் இருவராலும் அதைப் பராமரிக்க முடியவில்லை என்றால் என்னிடம் அதைக் கொடுத்து விடுங்கள். அதை உங்களுக்கு பதிலாக நானே பராமரித்துக் கொள்வேன்'' என்று கூறினார்கள். 94

4034. (மேற்கண்ட ஹதீஸின் அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஸுஹ்ரி(ரஹ்) அறிவித்தார்.

இந்த ஹதீஸை நான் உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அவர்களிடம் கூறியபோது உர்வா அவர்கள், 'மாலிக் இப்னு அவ்ஸ்(ரலி) உண்மையே கூறினார்கள்'' என்று கூறி, இறைத்தூதர்(ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா(ரலி) (பின்வருமாறு) கூறினார்கள் என அறிவித்தார்கள்:

(அபூ பக்ர் - ரலி அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற போது) நபி(ஸல்) அவர்களின் துணைவியர் உஸ்மான்(ரலி) அவர்களை அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் அனுப்பி, அல்லாஹ் தன் தூதருக்கு ஒதுக்கித் தந்த (போர் புரியாமல் கிடைத்த ஃபய்உ எனும்) வெற்றிச் செல்வத்திலிருந்து தங்களுக்குச் சேரவேண்டிய எட்டில் ஒரு பகுதியைக் கேட்டனர். நான் அவர்களைத் தடுத்துக் கொண்டிருந்தேன். 'நீங்கள் அல்லாஹ்வை அஞ்சமாட்டீர்களா? நபி(ஸல்) அவர்கள், '(நபிமார்களான நாங்கள்விட்டுச் செல்லும் சொத்தில்) எங்களுக்கு எவரும் வாரிசாவதில்லை. நாங்கள்விட்டுச் செல்வதெல்லாம் தர்மமே' என்று தம்மை(யும் தம் ஃபய்உ சொத்தையும்) கருத்தில் கொண்டு கூறக் கூடிறயவர்களாக இருந்தார்கள் என்பது உங்களுக்குத் தெரியாதா? மேலும், 'முஹம்மதின் குடும்பத்தார் இச்செல்வத்திலிருந்து (சிறிதளவைத்) தான் உண்பார்கள்; (இச்சொத்து முழுவதும் அவர்களுக்கு மட்டுமே உரியதன்று)' என்றும் நபியவர்கள் கூறினார்கள் (என்பதும் நீங்கள் அறியாததா?)'' என்று நான் எடுத்துரைத்தவற்றைக் கேட்டு நபி(ஸல்) அவர்களின் துணைவியர் (தங்களின் கருத்தை மாற்றிக் கொண்டு பங்கு கேட்பதை) நிறுத்திக் கொண்டார்கள்.

அறிவிப்பாளர் உர்வா(ரஹ்) கூறினார்:

இது (தர்மச் சொத்து) அப்போது அலீ(ரலி) அவர்களி கையில் இருந்தது. அலீ(ரலி) அச்சொத்தை (பராமரிக்கும் அதிகாரத்தை) அப்பாஸ்(ரலி) அவர்களுக்கு (தர) மறுத்தார்கள். அச்சொத்தின் (பராமரிப்பு) விஷயத்தில் அப்பாஸ்(ரலி) அவர்களை விட அலீ(ரலி) கூடுதல் அதிகாரம் செலுத்தி வந்தார்கள். பிறகு, அந்தப் பொறுப்பு அலீ(ரலி) அவர்களின் (மூத்த) மகன் ஹஸன்(ரலி) அவர்களின் கைவசம் வந்தது. அதற்குப் பிறகு அலீ அவர்களின் (இளைய) மகன் ஹுஸைன்(ரலி) அவர்களின் கரத்திற்கு வந்துது. அதற்குப் பிறகு ஹுஸைன்(ரலி) அவர்களின் மகன் அலீ(ரஹ்) என்பவரின் கரத்திலும், ஹஸன்(ரலி) அவர்களின் மகன் ஹஸன்(ரஹ்) என்பவரின் கரத்திலும் (கூட்டாக) இருந்து வந்தது. அவர்கள் இருவரும் முறைவைத்துக் கொண்டு மாறிமாறி அதனைப் பராமரித்து வந்தனர். பிறகு ஹஸன்(ரஹ்) அவர்களின் மகன் ஸைத்(ரஹ்) அவர்களின் கரத்தில் இருந்து வந்தது. (இவர்கள் அனைவரும் அச்சொத்தின் பராமரிப்பிற்குப் பொறுப்பாளர்களாக மட்டுமே இருந்தார்கள். அதை உடைமையாக ஆக்கிக் கொள்ளவில்லை) உண்மையாக இது இறைத்தூதர்(ஸல்) அவர்களின் தர்மச் சொத்தாகும். 95

4035. ஆயிஷா(ரலி) அறிவித்தார்

ஃபாத்திமா(ரலி) அவர்களும், அப்பாஸ்(ரலி) அவர்களும் 'ஃபதக்' கிலிருந்த நபி(ஸல்) அவர்களின் நிலத்தையும் கைபரிலிருந்த நபி(ஸல்) அவர்களின் (குமுஸ்) பங்கையும் தங்களின் வாரிசுச் சொத்தாகக் கோரியவர்களாக அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் சென்றனர். 96

4036. அப்போது அபூ பக்ர்(ரலி), '(நபிமார்களான) எங்களுக்கு எவரும் வாரிசாக ஆகமாட்டார்கள். நாங்கள் விட்டுச் செல்வது தர்மம் ஆகும். முஹம்மதின் குடும்பத்தினர் இச்செல்வத்திலிருந்து சிறிதளவைத்தான் உண்பார்கள்' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்” என்று சொல்லிவிட்டு, 'அல்லாஹ்வின் மீதாணையாக! என்னுடைய உறவினர்களுடன் உறவைப் பேணி வாழ்வதை விட இறைத்தூதர்(ஸல்) அவர்களின் உறவினர்களே எனக்கு உவப்பானவர்கள்'' என்று கூறினார்கள். 97

பகுதி 15

கஅப் இப்னு அஷ்ரஃப் (என்ற யூதன்) கொல்லப்படுதல். 98

4037. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'கஅப் இப்னு அஷ்ரஃபைக் கொல்வதற்கு (தயாரயிருப்பவர்) யார்? ஏனெனில், அவன் அல்லாஹ்வுக்கும், அல்லாஹ்வின் தூதருக்கும் தொல்லை கொடுத்துவிட்டான்'' என்று கூறினார்கள். உடனே முஹம்மது இப்னு மஸ்லமா(ரலி)99 எழுந்து, 'நான் அவனைக் கொல்ல வேண்டுமென்று தாங்கள் விரும்புகிறீர்களா? இறைத்தூதர் அவர்களே!'' என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள், 'ஆம்'' என்று பதிலளித்தார்கள். உடனே, முஹம்மத் இப்னு மஸ்லமா(ரலி), 'நான் (அவனைக் குதூகலப்படுத்தி நம்ப வைப்பதற்காக உங்களைக் குறைகூறி) ஏதேனும் சொல்ல எனக்கு அனுமதி தாருங்கள்'' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், '(சரி) சொல்'' என்றார்கள். உடனே முஹம்மத் இப்னு மஸ்லமா(ரலி) கஅப் இப்னு அஷ்ரஃபிடம் சென்று, 'இந்த மனிதர் (முஹம்மத் - ஸல்), எங்களிடம் (மக்களுக்குத் தருவதாக) தர்மம் கேட்டார். எங்களுக்குக் கடும் சிரமம் தந்துவிட்டார்'' என்று (நபி - ஸல் அவர்களைக் குறை கூறி சலித்துக் கொள்ளும் விதத்தில்) கூறிவிட்டு, 'உன்னிடத்தில் கடன் கேட்பதற்காக நான் வந்துள்ளேன்'' என்றும் கூறினார்கள். கஅப் இப்னு அஷ்ரஃப், 'அல்லாஹ்வின் மீதாணையாக! இன்னும் அதிகமாக நீங்கள் அவரிடம் சலிப்படைவீர்கள்'' என்று கூறினான். (அதற்கு) முஹம்மத் இப்னு மஸ்லமா அவர்கள், 'நாங்கள் (தெரிந்தோ தெரியாமலோ) அவரைப் பின்பற்றி விட்டோம். அவரின் விவகாரம் எதில் முடிகிறது என்று பார்க்காமல் அவரைவிட்டு (விலகி) விட நாங்கள் விரும்பவில்லை. (எனவேதான் அவருடன் இன்னும் இருந்து கொண்டிருக்கிறோம்)'' என்று (சலிப்பாகப் பேசுவது போல்) கூறிவிட்டு, 'நீ எங்களுக்கு ஒரு வஸக்கு... அல்லது இரண்டு வஸக்கு... (பேரீச்சம் பழம்) கடன் தர வேண்டுமென்று நாங்கள் விரும்புகிறோம்'' என்று கூறினார்கள்.

அப்போது கஅப் இப்னு அஷ்ரஃப், 'சரி! (நான் கடன் தரத் தயார்.) என்னிடம் (எதையேனும்) அடைமானம் வையுங்கள்'' என்று கூறினான். அதற்கு அவர்கள், 'நீ எதை விரும்புகிறாய் (கேள்)?' என்று கூறினர். கஅப் இப்னு அஷ்ரஃப், 'உங்கள் பெண்களை என்னிடம் அடைமானமாக உன்னிடம் தர முடியும். நீயோ அரபுகளிலேயே மிகவும் அழகானவன். (அடைமானம் வைத்துத் தான் பெண்களை அடைய வேண்டிய அவசியம் உனக்கு இல்லை)'' என்று கூறினார்கள்'' (அப்படியானால்) உங்கள் ஆண் மக்களை என்னிடம் அடைமானம் வையுங்கள்'' என்று கூறினான். அதற்கு அவர்கள், 'எங்கள் ஆண் மக்களை உன்னிடம் எப்படி அடைமானம் வைப்பது? அவர்களில் ஒருவன் (கலந்துறவாடும் போது) ஏசப்பட்டால் அப்போது, 'இவன் ஒரு வஸக்கு அல்லது இரண்டு வஸக்குகளுக்கு பதிலாக அடைமானம் வைக்கப்பட்டவன்' என்றல்லவா ஏசப்படுவான்? இது எங்களுக்கு அவமானமாயிற்றே! எனவே, உன்னிடம் (எங்கள்) ஆயுதங்களை அடைமானம் வைக்கிறோம்'' என்று கூறினார்கள். (அவன் சம்மதிக்கவே) முஹம்மத் இப்னு மஸ்லமா(ரலி), அவனிடம் (பிறகு) வருவதாக வாக்களித்துவிட்டுச் சென்றார்கள். (பிறகு) அவர்கள் தம்முடன் அபூ நாயிலா(ரலி) இருக்க இரவு நேரத்தில் கஅபிடம் வந்தார்கள். - அபூ நாயிலா(ரலி), கஅப் இப்னு அஷ்ரஃபிற்கு பால்குடிச் சகோதரராவார் - அவர்களைத் தன்னுடைய கோட்டைக்கு (வரச் சொல்லி) கஅப் இப்னு அஷ்ரஃப் அழைத்தான். பிறகு அவர்களை நோக்கி அவனும் இறங்கிவந்தான். அப்போது கஅபின் மனைவி அவனிடம், 'இந்த நேரத்தில் எங்கே போகிறீர்கள்?' என்று கேட்டாள். அதற்கவன், அவர் (வேறுயாருமல்ல) முஹம்மத் இப்னு மஸ்லமாவும் என்னுடைய (பால்குடிச்) சகோதரர் அபூ நாயிலாவும் தான்'' என்று பதிலளித்தான்.

அப்போது முஹம்மத் இப்னு மஸ்லமா(ரலி) (தம் சகாக்களிடம்), 'கஅப் இப்னு அஷ்ரஃப் வந்தால் நான் அவனுடைய (தலை) முடியை பற்றியிழுத்து அதை நுகருவேன். அவனுடைய தலையை என்னுடைய பிடியில் கொண்டு வந்துவிட்டேன் என்று நீங்கள் கண்டால் (அதை சைகையாக எடுத்துக் கொண்டு) அவனைப் பிடித்து (வாளால்) வெட்டி விடுங்கள்'' என்று (உபாயம்) கூறினார்கள்.

பிறகு கஅப் இப்னு அஷ்ரஃப் (தன்னுடைய ஆடை அணிகலன்களை) அணிந்து கொண்டு நறுமணம் கமழ இறங்கி வந்தான். அப்போது முஹம்மத் இப்னு மஸ்லமா(ரலி), 'இன்று போல் நான் எந்த உயர்ந்த நறுமணத்தையும் (நுகர்ந்து) பார்த்ததில்லை'' என்று கூறினார்கள்''

மேலும், முஹம்மது இப்னு மஸ்லமா(ரலி), '(கஅபை நோக்கி) உன் தலையை நுகர்ந்து பார்க்க என்னை அனுமதிக்கிறாயா?' என்று கேட்டார்கள். அவன், 'சரி (நுகர்ந்து பார்)'' என்று கூறினான். அப்போது முஹம்மத் இப்னு மஸ்லமா அவர்கள் அவனுடைய தலையை நுகர்ந்தார்கள். பிறகு தம் சகாக்களையும் நுகரக் கூறினார்கள். '(மீண்டுமொருமுறை நுகர) என்னை அனுமதிக்கிறாயா? என்று கேட்டார்கள். அவன் 'சரி (அனுமதிக்கிறேன்)'' என்று கூறினான். முஹம்மத் இப்னு மஸ்லமா அவர்கள் அவனைத் தம் வசம் கொண்டு வந்தபோது, 'பிடியுங்கள்'' என்று கூறினார்கள். உடனே (அவர்களின் சகாக்கள்) அவனைக் கொன்றுவிட்டனர். பிறகு அவர்கள் (அனைவரும்) நபி(ஸல்) அவர்களிடம் வந்து நடந்ததைத் தெரிவித்தனர். 100

(இந்த ஹதீஸில் இடையிடையே காணப்படும் வாசக மாற்றங்கள் தொடர்பாக அறிவிப்பாளர்கள் தெரிவித்துள்ள தகவல்கள் கீழே இடம் பெறுகின்றன...)

அறிவிப்பாளர் சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்) கூறினார்:

அம்ர் இப்னு தீனார்(ரஹ்) பல முறை இந்த ஹதீஸை எமக்கு அறிவித்தார்கள். ஆயினும், அப்போது அவர்கள் 'ஒரு வஸக்கு, இரண்டு வஸக்கு (அளவை)' சம்பந்தமாகக் கூறவில்லை. அன்னாரிடம் நான், 'இந்த அறிவிப்பில் ஒரு வஸக்கு, இரண்டு வஸக்கு சம்பந்தமாக (ஏதேனும்) இடம் பெற்றுள்ளதா?' என்று கேட்டேன். அதற்கவர்கள், 'அதில் ஒரு வஸக்கு, இரண்டு வஸக்கு பற்றி இடம் பெற்றுள்ளது என எண்ணுகிறேன்'' என்று பதிலளித்தார்கள்.

-(அறிவிப்பாளர் சுஃப்யான் - ரஹ் கூறுகிறார்கள்:)

அம்ர் இப்னு தீனார்(ரஹ்) அல்லாத இன்னொருவரின் அறிவிப்பில், 'குருதி சொட்டுவது போன்ற ஒரு சப்தத்தை கேட்கிறேன்'' என்று கஅபின் மனைவி (ஏதோ ஆபத்து நேரவிருப்பதை உணர்த்தும் விதத்தில்) கூற அவன், 'அவன் என் சகோதரர் முஹம்மது இப்னு மஸ்லமாவும், என் பால்குடிச் சகோதரர் அபூ நாயிலாகவும் தான். ஒரு கண்ணியவான் இரவு நேரத்தில் (ஈட்டி) எறிய அழைக்கப்பட்டாலும் அவன் அந்த அழைப்பை ஏற்றுக் கொள்ளவே செய்வான்'' என பதிலளித்ததாகவும் இடம் பெற்றுள்ளது.

-முஹம்மத் இப்னு மஸ்லமா(ரலி) தம்முடன் இருந்த இரண்டு மனிதர்களடன் (கஅப் இப்னு அஷ்ரபின் வீட்டுக்கு) உள்ளே நுழைந்தார்கள்.

அறிவிப்பாளர்களில் ஒருவராக சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்) அவர்களிடம், 'அம்ர் இப்னு தீனார்(ரஹ்), அந்த இரண்டு மனிதர்களின் பெயர்களையும் குறிப்பிட்டாரா?' என்று கேட்கப்பட்டது. அதற்கு சுஃப்யான்(ரஹ்), 'அவர்களில் சிலரின் பெயரை மட்டும் அம்ர் குறிப்பிட்டார். 'இரண்டு மனிதர்கள் தம்முடனிருக்க முஹம்மத் இப்னு மஸ்லமா(ரலி) வந்தார்கள்' என்றே அம்ர் அறிவித்தார்'' என்று பதிலளித்தார்கள்.

அம்ர் அல்லாத மற்ற அறிவிப்பாளர்கள், '(முஹம்மத் இப்னு மஸ்லமாவுடன் வந்தவர்கள்) அபூ அப்ஸ் இப்னு ஜப்ர்(ரலி), ஹாரிஸ் இப்னு அவ்ஸ்(ரலி), அப்பாத் இப்னு பிஷ்ர்(ரலி) ஆகியோர் தாம்'' என்று கூறினர்.

அம்ர் இப்னு தீனார்(ரஹ்), 'தம்முடன் இருவரிருக்க முஹம்மத் இப்னு மஸ்லமா(ரலி) வந்தார்கள்'' என்று அறிவித்தார்கள்.

-அறிவிப்பாளர் அம்ர்(ரஹ்) ஒரு முறை, '(முஹம்மத் இப்னு மஸ்லமா - ரலி- அவர்கள் தம் சகாக்களை நோக்கி) 'பிறகு அவனுடைய தலையை உங்களையும் நான் நுகரச் செய்வேன்' என்று கூறினார்கள்'' என்று அறிவித்தார்கள்.

-அம்ர்(ரஹ்) அல்லாத மற்றவர்களின் அறிவிப்பில், 'என்னிடம் அரபுப் பெண்களிலேயே நறுமணம்மிக்கவளும், அரபுகளிலேயே முழுமையானவளும் இருக்கிறாள்'' என்று கஅப் இப்னு அஷ்ரஃப் கூறினான் எனக் காணப்படுகிறது.

பகுதி 16

அபூ ராஃபிஉ அப்துல்லாஹ் இப்னு அபில் ஹுகைக் (என்ற யூதத் தலைவன்) கொல்லப்படுதல். 101

இவனுக்கு (இன்னொரு பெயர்) சல்லாம் இப்னு அபில் ஹுகைக் என்றும், இவன் கைபாரில் வசித்து வந்தான் என்றும் சொல்லப்படுகிறது. ஹிஜாஸ் பிரதேசத்தில் தன்னுடைய கோட்டையொன்றில் வசித்து வந்தான் என்றும் சொல்லப்படுகிறது.

''கஅப் இப்னு அஷ்ரஃப் கொல்லப்பட்ட பிறகே இவன் கொல்லப்பட்டான்'' என்று ஸுஹ்ரீ(ரஹ்) கூறினார்கள். 102

4038. பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (அன்சாரிகளில்) ஒரு குழுவினரை (யூதனான) அபூ ராஃபிஉ என்பவனிடம் அனுப்பினார்கள். அப்துல்லாஹ் இப்னு அத்தீக்(ரலி) (கோட்டைக்குள்ளிருந்த) அவனுடைய வீட்டிற்குள் இரவு நேரத்தில் நுழைந்து அவன் தூங்கிக் கொண்டிருக்கும்போது அவனைக் கொன்றுவிட்டார்கள். 103

4039. பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அன்சாரிகளில் சிலரை அபூ ராஃபிஉவிடம் அனுப்பினார்கள். அவர்களுக்கு அப்துல்லாஹ் இப்னு அத்தீக்(ரலி) அவர்களைத் தலைவராக நியமித்தார்கள். அபூ ராஃபிஉ இறைத்தூதர்(ஸல்) அவர்களைப் புண்படுத்தி வந்ததுடன், அவர்களுக்கெதிராக(ப் பகைவர்களுக்கு) உதவியும் செய்து வந்தான்.104 அவன் ஹிஜாஸ் பிரதேசத்திலிருந்து தன்னுடைய கோட்டையில் இருந்தான். எனவே, அன்சாரிகள் அந்தக் கோட்டையை நெருங்கினார்கள். அப்போது சூரியன் மறைந்து விட்டிருந்தது. மக்கள் தங்கள் மேய்ச்சல் கால்நடைகளுடன் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது அப்துல்லாஹ் இப்னு அத்தீக்(ரலி) தம் சகாக்களிடம், 'நீங்கள் இங்கேயே அமர்ந்திருங்கள். நான் காவலனிடம் சென்று ஏதாவது தந்திரம் செய்து (கோட்டைக்கு) உள்ளே நுழைய முடியுமா என்று பார்த்து வருகிறேன்'' என்று கூறினார். உடனே அவர் சென்று கோட்டை வாசலை நெருங்கினார். பிறகு, தம் ஆடையினால் தம்மை மூடிக் கொண்டு இயற்கைக்கடனை நிறைவேற்றுவது போல் (கோட்டைக்கு வெளியே ஓரிடத்தில்) அமர்ந்தார். (கோட்டை வாசிகளான) மக்கள் (அனைவரும்) உள்ளே நுழைந்துவிட்டனர். அப்போது காவலன், 'அல்லாஹ்வின் அடியானே! (கோட்டைக்கு) உள்ளே நுழைய விரும்பினால் நுழைந்து கொள். நான் வாசலை மூடப் போகிறேன்'' என்று கூறினான். உடனே நான் உள்ளே நுழைந்து (ஓரிடத்தில்) பதுங்கிக் கொண்டேன் மக்கள் (அனைவரும்) நுழைந்ததும் அவன் வாசலை மூடிவிட்டான். பிறகு சாவிகளை ஒது கொழுவி(கொக்கி)யில் தொங்கவிட்டான். நான் சாவிகளை நோக்கிச் சென்று அவற்றை எடுத்துக் கொண்டேன். பிறகு வாசலைத் திறந்தேன். அபூ ராஃபிஉவிடம் இராக்கதை சொல்லப்பட்டுக் கொண்டிருந்தது. அப்போது அவன் தன்னுடைய மாடியறையில் இருந்தான். அவனுடைய இராக்கதை நண்பர்கள் அவனைப் பிரிந்து (விடைபெற்றுச்) சென்றபோது அவனை நோக்கி நான் (ஏணியில்) ஏறினேன். (கோட்டையின்) ஒவ்வொரு வாசலையும் திறக்கும் போதும் உள்ளிருந்து நான் தாழிட்டுக் கொண்டே சென்றேன். மக்கள் என்னை இனம் கண்டு கொண்டாலும் அபூ ராஃபிஉவை நான் கொன்று விடும் வரையில் அவர்கள் என்னை வந்தடைய போவதில்லை'' என்று நான் (என் மனத்திற்குள்) கூறிக் கொண்டேன். பிறகு அவனிடம் போய்ச் சேர்ந்தேன். அவன் இருட்டான ஓர் அறையில் தன் குடும்பத்தாருக்கிடையே இருந்தான். அந்த வீட்டில் அவன் எங்கே இருக்கிறான் என்று எனக்குத் தெரியவில்லை. அப்போது நான், 'அபூ ராஃபிஉவே!'' என்று அழைத்தேன். அவன், 'யார் அது?' என்று கேட்டான். குரல் வந்த திசையை நோக்கிக் குறிவைத்து வாளால் பதற்றத்துடன் ஒரு வெட்டு வெட்டினேன். (இருப்பினும், என் நோக்கம்) எதையும் நான் நிறைவேற்றி (விட்)ட(தாகத் கருத)வில்லை. அப்போது அவன் கூச்சலிட்டான். உடனே நான் அந்த வீட்டிலிருந்து வெளியேறி விட்டேன். சிறிது நேரம் தாமதித்து மீண்டும் அவனிடம் வந்து, 'அபூ ராஃபிஉவே! இது என்ன சத்தம்'' என்று (அவனுக்கு உதவ வந்தவன் போல்) கேட்டேன். அதற்கு அவன், 'உன்னுடைய தாய்க்குக் கேடு நேரட்டும்! எவனோ ஒருவன் வீட்டில் (நுழைந்து) சற்றுமுன் என்னை வாளால் வெட்டினான்'' என்று கூறினான். உடனே நான் ஆழப்பதியும் படி இன்னொரு வெட்டு வெட்டினேன். (அப்போதும்) அவனை நான் கொல்ல (முடிய) வில்லை. பிறகு வாள் முனையை அவன் வயிற்றில் வைத்து அழுத்தினேன். அது முதுகு வழியே வெளியேறியது. அப்போது நான் அவனைக் கொன்று விட்டேன் என்று அறிந்து கொண்டேன். பிறகு ஒவ்வொரு கதவாக எல்லாக் கதவுகளையும் திறந்து கொண்டே சென்று அவனுடைய ஏணிப்படியை அடைந்தேன். (ஏணியில் இறங்கலானேன்.) தரைக்கு வந்து விட்டேன் என்று நினைத்துக் கொண்டு என்னுடைய காலை வைத்தேன். (ஆனால்,) நிலவு காயும் (அந்த) இரவில் நான் விழுந்து விட்டேன். அப்போது என்னுடைய கால் உடைந்துவிட்டது. உடனே நான் தலைப்பாகதை(த் துணி)யால் அதற்குக் கட்டுப்பாட்டேன். பிறகு நடந்து வந்து (கோட்டை) வாசலில் அமர்ந்து கொண்டேன். 'நான் அவனைக் கொன்று விட்டேன் என்று (உறுதியாக) அறியும் வரையில் நான் இந்த இரவில் (இங்கிருந்து) நரக மாட்டேன்'' என்று (எனக்கு நானே) சொல்லிக் கொண்டேன். பிறகு, அதிகாலையில் சேவல் கூவியபோது மரணச் செய்தி அறிவிப்பவன் கோட்டைச் சுவர் மீது நின்று, 'ஹிஜாஸ் வாசிகளின் (பிரபல) வியாபாரி அபூ ராஃபிஉ இறந்துவிட்டார்'' என்று அறிவிப்புச் செய்தான். உடனே நான் என் சகாக்களிடம் வந்து, 'விரைவாகச் செல்லுங்கள். அபூ ராஃபிஉவை அல்லாஹ் கொன்றுவிட்டான்'' என்று கூறினேன். பிறகு நபி(ஸல்) அவர்களை அடைந்து நடந்ததை அவர்களுக்குத் தெரிவித்தேன். அப்போது அவர்கள், 'உன்னுடைய காலை நீட்டு'' என்று கூறினார்கள். நான் என் காலை நீட்டினேன். அதில் (தம் கரத்தால்) தடவிவிட்டார்கள். (என்னுடைய கால் குணமடைந்து) ஒருபோதும் நோய் காணாதது போல் அது மாறிவிட்டது.

4040 பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அபூ ராஃபிஉவிடம் அப்துல்லாஹ் இப்னு அத்தீக்(ரலி) அவர்களையும், அப்துல்லாஹ் இப்னு உத்பா(ரலி) அவர்களையும் அவர்களுடன் இன்னும் சிலரையும் அனுப்பி வைத்தார்கள். அவர்கள் சென்று கோட்டையை நெருங்கியபோது அவர்களை நோக்கி (தலைவர்) அப்துல்லாஹ் இப்னு அத்தீக்(ரலி), 'நான் சென்று பார்த்து வரும் வரையில் நீங்கள் (இங்கேயே) இருங்கள்'' என்று கூறினார்கள். அப்போது (கோட்டை வாசிகளுக்குத் தெரியாமல்) கோட்டைக்குள் நுழைவதற்காக நான் உபாயம் செய்தேன். அப்போது அவர்களின் கழுதையொன்று காணாமல் போய்விட்டது. அதைத் தேடிய வண்ணம் தீப்பந்தத்துடன் அவர்கள் (கோட்டையிலிருந்து) வெளியேறினர். நான் அடையாளம் கண்டு கொள்ளப்பட்டுவிடுவேனோ என்று அஞ்சினேன். நான் இயற்கைக் கடனை நிறைவேற்றுவது போன்று (என்னுடைய ஆடையால்) என் தலையையும் காலையும் மூடிக் கொண்டேன். பிறகு காவலன், 'யார் (கோட்டைக்குள்) நுழைய விரும்புகிறார்களோ அவர்கள் நான் கதவை மூடுவதற்கு முன் நுழைந்து கொள்ளட்டும்'' என்று கூறினான். உடனே நான் நுழைந்து கோட்டைவாசலுக்கு அங்கிலிருந்த கழுதைத் தொழுவம் ஒன்றில் பதுங்கிக் கொண்டேன். அப்போது (யூத) மக்கள் அபூ ராஃபிஉவிடம் இரவுச் சாப்பாட்டை உண்டனர். பிறகு இரவின் ஒரு பகுதி முடியும் வரையில் (கதை) பேசிக் கொண்டிருந்தனர். பிறகு மக்கள் தத்தம் வீடுகளுக்குத் திரும்பினர். பின்னர் ஆரவாரங்கள் அடங்கி, எந்த அரவமும் கேட்காமலிருந்தபோது நான் (பதுங்கியிருந்து இடத்திலிருந்து) வெளியேறினேன். (கோட்டையின்) காவலன் மாடத்தில் கோட்டையின் சாவியை வைத்ததை நான் (பதுங்கிக் கொண்டிருந்தபோது) பார்த்திருந்தேன். அதை நான் எடுத்துக் கோட்டைக் கதவைத் திறந்தேன். நான் (என் மனத்திற்குள்) 'மக்கள் என்னை இனம் கண்டு கொண்டால் நிதானமாக(த் தப்பி)ச் சென்றுவிடவேண்டும்'' என்று சொல்லிக் கொண்டேன். பிறகு, அந்த மக்கள் தங்கியிருந்த அறைகளின் கதவுகளை வெளியிலிருந்து பூட்டினேன். பிறகு அபூ ராஃபிஉ (தங்கியிருந்த மாடியறை) நோக்கி ஏணிவழியாக ஏறினேன். அப்போது அவனுடைய அறை இருள் சூழ்ந்திருந்தது. அதன் விளக்கு அணைக்கப்பட்டிருந்தது. அந்த மனிதன் எங்கே (இருக்கிறான்) என்று என்னால் அறிய முடியவில்லை. உடனே நான், 'அபூ ராஃபிஉவே!'' என்று அழைத்தேன். அவன், 'யார் அது?' என்று கேட்டான். உடனே நான் சப்தம் வந்த திசையைக் குறி வைத்து அவனை வெட்டினேன். அவன் கூச்சலிட்டான். அது (நான் நினைத்த) பலனைத்தரவில்லை. பிறகு அவனுக்கு நான் உதவுவது போன்று 'அபூ ராஃபிஉவே! உனக்கு என்ன நேர்ந்தது?' என்று என் குரலை அவன், 'உனக்கு நான் ஆச்சரியமாகத் தெரிகிறேனா? உன் தாய்க்குக் கேடுண்டாகட்டும். என்னிடம் ஒருவன் வந்து வாளால் என்னை வெட்டினான்'' என்று கூறினான். மீண்டும் (குரல் வந்த திசையைக்) குறி வைத்து அவனை நான் வெட்டினேன். (நான் நினைத்த படி) அப்போதும் எந்தப் பலனும் கிடைக்கவில்லை. மீண்டும் அவன் கூச்சலிட்டான். அவனுடைய வீட்டார் எழுந்திருத்துவிட்டனர். பிறகு அவனுக்கு உதவுபவனைப் போன்று (பாசங்கு செய்தபடி) குரலை மாற்றிக் கொண்டு (அவனுக்கு அருகில்) வந்தேன். அப்போது அவன் மல்லாந்து படுத்திருந்தான். உடனே (என்னுடைய) வாளை அவனுடைய வயிற்றில் வைத்து சுழற்றினேன். அப்போது (அவனுடைய) எலும்பின் (மீது என் வாள் குத்துகின்ற) சப்தத்தை கேட்டேன். பிறகு பதறிக் கொண்டே (அவனுடைய அறையிலிருந்து) வெளியேறி ஏணிப்படிக்கு வந்தேன். இறங்க விரும்பினேன். (ஆனால்,) அதிலிருந்து நான் விழுந்துவிட்டேன். என்னுடைய கால் முறிந்துவிட்டது. நான் அதை (என்னுடைய தலைப்பாகைத் துணியால்) கட்டினேன். பிறகு கோட்டைக்கு வெளியிலிருந்த) என் சாகக்களிடம் நொண்டிக் கொண்டே வந்து அவர்களை நோக்கி, 'நீங்கள் (விரைவாகச்) சென்று இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் (காரியம் முடிந்துவிட்ட) நற்செய்தியைச் சொல்லுங்கள். (மரணச் செய்தி அறிவிப்பவனிடமிருந்து அபூ ராஃபிஉவின் மரணச்) செய்தியை நான் கேட்கும் வரையில் நான் (இங்கிருந்து) நகரமாட்டேன்'' என்று கூறினேன். பிறகு, அதிகாலை நேரத்தில் மரணச் செய்தி அறிவிப்பவன் (கோட்டைச் சுவர் மீது) ஏறி, 'அபூ ராஃபிஉ இறந்துவிட்டார்'' என்று அறிவிப்புச் செய்தான். உடனே நான் எழுந்து நடக்கலானேன். (அளவு கடந்த மகிழ்ச்சியினால்) எனக்கு வலி கூடத் தெரியவில்லை. என் சகாக்கள் நபி(ஸல்) அவர்களிடம் சென்று சேர்வதற்கு முன் நான் சகாக்களைச் சென்றடைந்து விட்டேன். எனவே, நானே நபி(ஸல்) அவர்களிடம் (அந்த) நற்செய்தியைச் சொன்னேன். 105

பகுதி 17

உஹுதுப் போர் 106

அல்லாஹ் கூறினான்:

(நபியே! உஹுதுப்) போருக்காக நம்பிக்கையாளர்களை (உரிய) இடங்களில் நிறுத்தும் பொருட்டு நீங்கள் உங்கள் இல்லத்திலிருந்து அதிகாலையில் புறப்பட்டதை (நினைவு கூர்வீராக!) அல்லாஹ் மிக்க செவியுறுவோனும் நன்கு அறிவோனுமாவான். (திருக்குர்ஆன் 03:121)

மேலும், அல்லாஹ் கூறினான்:

நீங்கள் மனம் தளர்ந்து விடாதீர்கள்; கவலையும் கொள்ளாதீர்கள். நீங்கள் (உண்மையிலேயே) இறை நம்பிக்கையுடையவராயின், நீங்களே மேலோங்குவீர்கள். (இப்பொழுது உஹுதுப் போரில்) உங்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளதென்றால், (இதற்கு முன்னர் - பத்ருப்போரில் உங்கள்) எதிரணியினருக்கும் இதே போன்ற காயம் ஏற்படத்தான் செய்தது. இவையெல்லாம் கால(த்தின் மாற்ற)ங்கள் ஆகும். இவற்றை மக்களிடையே நாம் மாறி மாறி வரச் செய்கிறோம். (உங்களுக்கு இப்படியொரு சந்தர்ப்பம் வரக் காரணம்) உங்களில் உண்மையான நம்பிக்கையுடையவர்கள் யார் என்பதனை அல்லாஹ் கண்டறிந்து உங்களில் இருந்து உயிர்த்தியாகிகளை அவன் உண்டாக்குவதற்காகத் தான். அக்கிரமக்காரர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை. (இவ்வாறெல்லாம் சோதனை செய்வதன் மூலம்) நம்பிக்கையாளர்களை பிரித்துத் தேர்ந்தெடுக்கவும் மறுப்போரை நசுக்கவும் (அல்லாஹ் நாடியிருந்தான்.) உங்களில் யார் (அவனுடைய பாதையில் முனைப்போடு) போராடுபவர்கள் என்பதை அல்லாஹ் அறியாமலும், உங்களில் நிலை குலையமால் நிற்பவர் யார் என்பதை அவன் அறியாமலும் நீங்கள் (எளிதில்) செர்க்கம் புகுந்து விடலாம் என்று எண்ணிக் கொண்டீர்களா? நீங்கள் (இறைவழியில்) இறப்பைச் சந்திப்பதற்கு முன்னர், அதனை அடைய ஆர்வம் கொண்டிருந்தீர்கள். (இப்பொழுது) அதனை நீங்கள் கண்கூடாகப் பார்த்துக் கொண்டீர்கள். (திருக்குர்ஆன் 03:139 - 143)

மேலும், அல்லாஹ் கூறினான்:

அல்லாஹ் உங்களுக்கு (உதவுவதாகக் கூறிய) தன்னுடைய வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டான். (துவக்கத்தில்) அவனுடைய அனுமதியின் படி அவர்களை நீங்கள் தாம் (போரில்) வெட்டி வீழ்த்தினர்கள்! ஆனால் இறுதியில் நீங்கள் ஊக்கமிழந்து உங்களுடைய பணிகள் குறித்து ஒருவருக்கொருவர் பிணங்கிக் கொண்டீர்கள்; மேலும் நீங்கள் மோகம் கொண்டிருந்தவற்றை (போர்ப் பொருட்களை) அல்லாஹ் உங்கள் கண்ணெதிரே காட்டிய உடனேயே (உங்கள் தலைவரின் கட்டளைக்கு) நீங்கள் மாறு செய்தீர்கள் - ஏனெனில் உங்களில் சிலர் இம்மையை விரும்புவோராய் இருந்தனர்; வேறு சிலர் மறுமையை விரும்புவேராய் இருந்தனர். பிறகு அல்லாஹ் உங்களைச் சோதிக்கும் பொருட்டு (இறை மறுப்பாளர்களை எதிர்த்து நிற்கமுடியாத வண்ணம்) அவர்களைவிட்டு உங்களை திசை திருப்பிவிட்டான் (இதன் பிறகும்) அவன் உங்களை மன்னித்தருளினான். ஏனெனில், அல்லாஹ் இறை நம்பிக்கையுடையோர் மீது பெரிதும் கருணை பொழிபவனாக இருக்கிறான். (திருக்குர்ஆன் 03:152)

மேலும், அல்லாஹ் கூறினான்:

இறைவழியில் கொல்லப்பட்டவர்களை, இறந்தோர் என்று ஒருபோதும் நீங்கள் எண்ணவேண்டாம்... (திருக்குர்ஆன் 03: 169)

4041. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்

உஹுதுப் போரின்போது நபி(ஸல்) அவர்கள், 'இதோ, ஜிப்ரீல் போர்த் தளவாடங்களுடன் தம் குதிரையின் தலையை (அதன் கடிவாளத்தை)ப் பிடித்துக் கொண்டிருக்கிறார்' என்று கூறினார்கள். 107

4042. உக்பா இப்னு ஆமிர்(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (உஹுதுப் போர் நடந்து) எட்டு ஆண்டுகளுக்குப் பின் உஹுதில் கொல்லப்பட்டவர்களுக்காக (ஜனாஸாத்) தொழுகை நடத்தினார்கள். (அது) உயிரோடுள்ளவர்களிடம் இறந்தவர்களிடமும் (மறுமைப் பயணத்திற்கு) விடைபெறுவது போலிருந்தது. பிறகு அவர்கள் மேடை மீது ஏறி, 'நிச்சயமாக நான் உங்களுக்காகக் காத்திருப்பேன். உங்களுக்கு நான் சாட்சியும் ஆவேன். (என்னைச் சந்திக்க) உங்களுக்கு வாக்களிக்கப்பட்டுள்ள இடம் (கவ்ஸர் எனும்) தடாகம் ஆகும். நான் இங்கிருந்தே (மறுமையில் எனக்குப் பரிசளிக்கப்படவுள்ள) அந்தத் தடாகத்தைக் காண்கிறேன். நிச்சயமாக! (என்னுடைய மரணத்துக்குப் பின்னால்) நீங்கள் இணை வைப்பவர்களாக ஆகிவிடுவீர்களோ என்று நான் அஞ்சவில்லை; ஆனால், உலகத்திற்காக நீங்கள் ஒருவரோடொவருர் (போட்டியிட்டு) மோதிக் கொள்வீர்களோ என்றே அஞ்சுகிறேன்'' என்று கூறினார்கள். 108

நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களைப் பார்த்த இறுதிப் பார்வையாக அது அமைந்தது.

இணைவைப்போரை அன்றைய (உஹுதுப் போர்) தினத்தில் நாங்கள் சந்தித்தோம். நபி(ஸல்) அவர்கள் (ஐம்பது) அம்பெய்யும் வீரர்களை (உஹுத் மலைக் கணவாயில்) அமர்த்தினார்கள். அவர்களுக்கு அப்துல்லாஹ் இப்னு ஜுபைர்(ரலி) அவர்களைத் தலைவராக நியமித்து, '(எதிரிகளான) அவர்களை நாங்கள் வெற்றி கொள்வதைப் பார்த்தாலும் நீங்கள் (இந்த இடத்திலிருந்து) நகராதீர்கள். எங்களை அவர்கள் வெற்றி கொள்வதைப் பார்த்தாலும் நீங்கள் (இந்த இடத்திலிருந்து) நகர வேண்டாம்; நீங்கள் எங்களுக்கு உதவி செய்ய (எண்ணி கீழே வர) வேண்டாம்'' என்று கூறினார்கள். நாங்கள் அவர்களை (களத்தில்) சந்தித்தபோது அவர்கள் (தோல்வியுற்று) வெருண்டோடிவிட்டனர். பெண்களெல்லாம் (தம் கால்களில் அணிந்திருந்த) கால் தண்டைகள் வெளியில் தெரிய மலையில் ஓடிக் கொண்டிருப்பதை பார்த்தேன். அப்போது (அம்பெய்யும் குழுவினரான) அவர்கள், '(நமக்கே வெற்றி!) போர்ச் செல்வம்! போர்ச் செல்வம்! (சேகரிப்போம், வாருங்கள்)'' என்று கூறலாயினர். அப்போது அப்துல்லாஹ் இப்னு ஜுபைர்(ரலி) (தம் சகாக்களை நோக்கி), 'என்னிடம் நபி(ஸல்) அவர்கள், 'இந்த இடத்தைவிட்டும் (எந்தச் சூழ்நிலையிலும்) நகராதீர்கள்' என அறுதியிட்டுக் கூறினார்கள். (எனவே, போர்ச் செல்வங்களை எடுப்பதற்காக இங்கிருந்து நரக வேண்டாம்) என்று கூறினார்கள். ஆனால் சகாக்கள் ஏற்க மறுத்துவிட்டனர். அவர்கள் மறுத்து விடவே (எங்கு செல்கிறோம் என்று தெரியாதவாறு) திசைமாறிப் போயினர். (இறுதியில் முஸ்லிம்களில்) எழுபது பேர் கொல்லப்பட்டனர். 109 (அப்போது எதிரணித்தலைவர்) அபூ சுஃப்யான் முன்வந்து '(உங்கள்) கூட்டத்தில் முஹம்மது இருக்கிறாரா?' என்று (பலமுறை) கேட்டார். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'அவருக்கு நீங்கள் பதில் தரவேண்டாம்'' என்று கூறிவிட்டார்கள். பிறகு, 'கூடடத்தில் கத்தாபின் மகன் (உமர்) இருக்கிறாரா?' என்று கேட்டுவிட்டு (பிறகு தம் தோழர்களின் பக்கம் திரும்பி) 'இவர்களெல்லாம் கொல்லப்பட்டுவிட்டனர்; இவர்கள் உயிருடன் இருந்தால் (என் அறை கூவலுக்குப்) பதிலளித்தார்கள்'' என்று சொன்னார். (இதைக் கேட்டு) உமர்(ரலி) தம்மைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல், 'தவறாகச் சொன்னாய், அல்லாஹ்வின் பகைவனே! உனக்கு கவலை தரும் செய்தியைத் தான் உனக்காக அல்லாஹ் வைத்துள்ளான்'' என்று பதிலடி கொடுத்தார்கள். அதற்கு அபூ சுஃப்யான், '(கடவுள்) ஹுபலே! உன் கட்சி மேலோங்கிவிட்டது.'' என்று கூறினார். அப்போது, நபி(ஸல்) அவர்கள், 'அவருக்கு பதிலளியுங்கள்'' என்று கூறினார்கள். '(இறைத்தூதர் அவர்களே!) நாங்கள் என்ன (பதில்) சொல்வது?' என்று மக்கள் கேட்டனர். 'அல்லாஹ்வே மிக உயர்ந்தவன். மிக மகத்துவமிக்கவன்'' என்று கூறுங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். (அவ்வாறே பதில் தரப்பட்டது) அபூ சுஃப்யான், 'எங்களுக்குத் தான் 'உஸ்ஸா' (எனும் தெய்வம்) இருக்கிறது; உங்களிடம் 'உஸ்ஸா' இல்லையே'' என்று கூறினார். அப்போது, நபி(ஸல்) அவர்கள், 'அவருக்குப் பதிலளியுங்கள்'' என்று கூறினார்கள். மக்கள், 'நாங்கள் என்ன (பதில்) சொல்வது?' என்று வினவ நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ் எங்களின் உதவியாளன்; உங்களுக்கு (அப்படியொரு) உதவியாளன் இல்லையே!'' என்று சொல்லுங்கள் என்று பதிலளித்தார்கள். (அவ்வாறே முஸ்லிம்கள் பதிலளித்தனர்.) 'இந்த (உஹுதுடைய) நாள், பத்ருப்போர் (நடந்த) நாளுக்கு பதிலாகும். யுத்தம் என்பதே (கிணற்று) வாளிகள் தாம். (மாறி மாறித் தான் இறைக்க முடியும். உங்கள் தோழர்களில்) அங்கங்கள் சிதைக்கப்பட்டவர்களைக் காண்பீர்கள். அப்படிச் செய்யும்படி நான் கட்டளையிடவுமில்லை. அது எனக்கு மனத்துன்பத்தையளிக்கவும் செய்யாது'' என்று அபூ சுஃப்யான் கூறினார். 110

4044. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) கூறினார்

(மது விலக்கு அமலுக்கு வரும் முன் நடந்த) உஹுதுப் போர் அன்று காலையில் சிலர் மது அருந்தினார்கள். பிறகு (அந்தப் போரில்) உயிர்த் தியாகிகளாகக் கொல்லப்பட்டார்கள். 111

4045. இப்ராஹீம் இப்னு அப்திர் ரஹ்மான் இப்னி அவ்ஃப்(ரஹ்) அறிவித்தார்

(என் தந்தை) அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அவர்களிடம் (அவர்கள் நோன்பை நிறைவு செய்யும் நேரத்தில்) உணவு கொண்டு வரப்பட்டது. (அன்று பகல்) அவர்கள் நோன்பு நோற்றிருந்தார்கள். அப்போது அவர்கள் (உஹுதுப் போரில்) கொல்லப்பட்டார்கள் - அவர் என்னை விடச் சிறந்தவர் - அவர் ஒரு சால்வையால் கஃபனிடப்பட்டார். (அந்த சால்வையால்) அவரின் தலை மூடப்பட்டால், அவருடைய இரு கால்கள் வெளியே தெரிந்தன. அவருடைய இரு கால்கள் (அதனால்) மூடப்பட்டால், தலை வெளியில் தெரிந்தது” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் இப்ராஹீம்(ரஹ்) கூறினார்:

மேலும், அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி), (பின்வருமாறு) கூறினார்கள் என எண்ணுகிறேன்.

ஹம்ஸா இப்னு அப்தில் முத்தலிப்(ரலி) (உஹுதுப் போரில்) கொல்லப்பட்டார்கள். அவர் என்னை விடச் சிறந்தவர். (அவரும் அதுபோன்றே பற்றாக்குறை மிக்க சிறிய சால்வையாலேயே கஃபனிப்பட்டார்) பிறகு (அந்த ஏழ்மை நிலை நம்மைவிட்டும் நீங்கி, இதோ, நீங்கள் காண்கிறீர்களே) இந்த அளவுக்கு நமக்கு இந்த உலகின் வசதி வாய்ப்புகள் வழங்கப்பட்டன. அல்லது இந்த உலக(ச் செல்வத்)திலிருந்து (இதோ, நீங்கள் காண்கிறீர்களே) இந்த அளவுக்கு நமக்கு தரப்பட்டது - நாங்கள் புரிந்த நல்லறங்களுக்குப் பிரதிபலன் மிக விரைவாக (இவ்வுலகிலேயே) நமக்குக் கொடுக்கப்பட்டுவிட்டதோ என்று நாம் அஞ்சுகிறோம்'' என்று கூறினார்கள். பிறகு (தமக்காகப் கொண்டு வரப்பட்ட) உணவை (உண்ணாமல் அப்படியே)விட்டுவிட்டு அழலானார்கள். 112

4046. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அர்கள் கூறினார்

உஹுதுப் போரின்போது ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம், 'நான் கொல்லப்பட்டால் எங்கே (இருப்பேன்)?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'சொர்க்கத்தில் என்று பதிலளித்தார்கள். (அந்த மனிதர்) தம் கையிலிருந்த பேரீச்சங் கனிகளை உடனே தூக்கி எறிந்துவிட்டு (களத்தில் குதித்து), தாம் கொல்லப்படும் வரையில் போரிட்டார். 113

4047. கப்பாப் இப்னு அரத்(ரலி) அறிவித்தார்

நாங்கள் அல்லாஹ்வின் திருப்தியை நாடியவர்களாக இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் ஹிஜ்ரத் செய்தோம். எங்களுக்கான பிரதிபலனை அளிப்பது அல்லாஹ்வின் பொறுப்பாகிவிட்டது. எங்களில் சிலர் தங்கள் பிரதிபலனை (இவ்வுலகத்தில்) அனுபவிக்காமலேயே சென்றுவிட்டனர். அவர்களில் ஒருவர் தாம், முஸ் அப் உமைர்(ரலி) அவர் உஹுதுப் போர் நாளில் கொல்லப்பட்டார். அவர் கோடுபோட்ட வண்ணத்துணி ஒன்றை மட்டுமே விட்டுச் சென்றார். அதைக் கொண்டு அவரின் தலையை நாங்கள் மறைத்தால் அவரின் இரண்டு கால்கள் வெளியில் தெரிந்தன கால்களை மறைத்தால் தலை வெளியில் தெரிந்தது. அப்போது எங்களிடம் நபி(ஸல்) அவர்கள் 'அவரின் கால் மீது சிறிது 'இத்கிர்' புல்லைப் போடுங்கள்'' என்று கூறினார்கள்.

(உஹுதுப் போரில் பங்கெடுத்த) எங்களில் வேறு சிலர் இருக்கிறார்கள். அவர்களின் (தியாகத்திற்கான) பிரதிபலன் (இந்த உலகிலும்) கனிந்துவிட்டது. அதை அவர்கள் பறித்து (அனுபவித்து)க் கொண்டார்கள். 114

4048. அனஸ்(ரலி) அறிவித்தார்

என் தந்தையின் சகோதரர் (அனஸ் இப்னு நள்ர் (ரலி) அவர்கள் பத்ருப்போரில் கலந்து கொள்ளாமல் எங்கோ சென்றார். அன்னார் (திரும்பி வந்தவுடன்), '(இணை வைப்பவர்களுடன்) நபி(ஸல்) அவர்கள் நடத்திய முதல் போரில் நான் கலந்து கொள்ள முடியவில்லை. நபி(ஸல்) அவர்களுடன் என்னையும் அல்லாஹ் பங்கு பெற வைத்திருந்தால் நான் கடும் முயற்சியெடுத்து (வீரமாகப்) போரிடுவதை அல்லாஹ் நிச்சயம் பார்த்திருப்பான்'' என்று கூறினார். அவர் உஹுதுப் போரைச் சந்தித்தார். (அதில் பங்கெடுத்தார். அந்தப் போரில்) மக்கள் தோல்வியுற்றனர். அப்போது அவர், 'இறைவா! இந்த முஸ்லிம்கள் செய்த (பின்வாங்கிச் சென்ற) செயலுக்காக உன்னிடம் நான் மன்னிப்புக் கோருகிறேன். இணைவைப்பவர்கள் செய்த (நபியவர்களுக்கெதிரான) இந்தப்போருக்கும் எனக்கும் தொடர்பில்லை என்று அறிவிக்கிறேன்'' என்று கூறிவிட்டு, பிறகு (போர்க்களத்தில்) தம் வாளுடன் முன்னேறிச் சென்றார். பிறகு, (உடல் முழுதும் சிதைந்து போனதால்) அடையாளம் அறியப்படாத நிலைமையில் கொல்லப்பட்டார். அவரை அவரின் சகோதாரி மச்சத்தை வைத்தோ... அல்லது அவரின் கைவிரல் நுனிகளை வைத்தோ...அடையாளம் கண்டு கொண்டார். அவரின் உடலில் (வாளால்) வெட்டப்படும், (ஈட்டியால்) குத்தப்பட்டும், அம்பால் துளைக்கப்பட்டும் எண்பதுக்கும் மேற்பட்ட காயங்கள் இருந்தன. 115

4049. ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அறிவித்தார்

(உஸ்மான் இப்னு அஃப்பான்(ரலி) அவர்களின் உத்தரவுப்படி) நாங்கள் திருக்குர்ஆனைப் (பல ஏடுகளில்) பிரதியெடுத்துக் கொண்டிருந்தபோது, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஓத, நான் கேட்டிருந்த 'அல் அஹ்ஸாப்' (என்னும் 33-வது) அத்தியாயத்தின் ஒரு வசனம் எனக்குக் கிடைக்கவில்லை. எனவே, அதை நாங்கள் தேடிப் பார்த்தபோது அது குஸைமா இப்னு ஸாபித்(ரலி) அவர்களிடம் இருக்கக் கண்டோம். (அந்த வசனம் இதுதான்:)

இறை நம்பிக்கையாளரில் இத்தகையவர்களும் இருக்கின்றனர்: அல்லாஹ்விடம் தாங்கள் கொடுத்த வாக்குறுதியை அவர்கள் மெய்ப்படுத்திக் காட்டி விட்டிருக்கிறார்கள். அவர்களில் சிலர் தம் இலட்சியத்தை நிறைவேற்றிவிட்டார்கள்; இன்னும் சிலர் (அதை நிறைவேற்ற தருணம்) எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். (திருக்குர்ஆன் 33:23)

உடனே அந்த வசனத்தைத் திருக்குர்ஆனில் அதற்குரிய அத்தியாயத்தில் (எழுதிச்) சேர்த்து விட்டோம். 116

4050. ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அறிவித்தார்

உஹுதுப்போருக்காக நபி(ஸல்) அவர்கள் புறப்பட்டுச் சென்றபோது, நபி(ஸல்)அவர்களுடன் புறப்பட்டுச் சென்றவர்களில் சிலர் (நயவஞ்சகர்கள்) திரும்பி வந்துவிட்டனர். 117 (இவர்களின் மீது எப்படி நடவடிக்கை எடுப்பது என்னும் விஷயத்தில்) நபி(ஸல்) அவர்களின் தோழர்கள் இரண்டு பிரிவினராகப் பிரிந்துவிட்டார்கள். ஒரு பிரிவினர், '(திரும்பி ஓடியவர்களைக்) கொன்று விடுவோம்'' என்று கூறினர். மற்றொரு பிரிவினர், 'அவர்களை நாம் கொலை செய்யக் கூடாது'' என்று கூறினர். (அவர்கள் கருத்து வேறுபட்டு பிரிந்தனர்.) அப்போது பின்வரும் வசனம் அருளப்பட்டது.

உங்களுக்கு என்ன நேர்ந்துவிட்டது? நயவஞ்சகர்களின் விஷயத்தில் இரண்டு (வகையான கருத்துக் கொண்ட) பிரிவினர்களாய் ஆகி விட்டீர்கள்! ஆயினும் அல்லாஹ் அவர்கள் சம்பாதித்துக் கொண்ட தீவினைகளின் காரணமாக அவர்களைத் தலைகீழாகப் புரட்டி விட்டிருக்கிறான். (திருக்குர்ஆன் 04:88)

மேலும், நபி(ஸல்) அவர்கள், 'மதீனா தூய்மையானது; நெருப்பு, வெள்ளியின் அழுக்கை நீக்குவதைப் போல் அது பாவங்களைப் போக்கிவிடுகிறது'' என்று கூறினார்கள். 118

பகுதி 18

உங்களில் இரண்டு குழுவினருக்கு அல்லாஹ் பாதுகாவலான இருக்க, அவர்கள் தைரியம் இழக்க முனைந்த நேரத்தையும் (நபியே! நினைவு கூருக!) இறைநம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வையே சார்ந்திருக்கட்டும்! (என்ற 3:122-வது இறைவசனம்)119

4051. ஜாபிர்(ரலி) அறிவித்தார்

''(உஹுதுப் போரில்) உங்களில் இரண்டு பிரிவினர் தைரியம் இழக்க முனைந்த நேரத்தையும்...'' என்னும் இந்த (திருக்குர்ஆன் 03:122-ம்) இறைவசனம், பனூ சலிமா மற்றும் பனூ ஹாரிஸா கூட்டத்தாராகிய எங்களைக் குறித்தே இறங்கியது. மேலும், இந்த வசனம் இறங்காமலிருந்திருக்கக் கூடாதா என்று நான் ஆசைப்படமாட்டேன். (ஏனெனில்) அல்லாஹ், 'அவ்விரு பிரிவாருக்கும் அல்லாஹ்வே பாதுகாவலனாக இருந்தான்'' என்று (எங்களை மேன்மைப்படுத்திக்) கூறுகிறான். 120

4052. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவித்தார்

என்னிடம் இறைத்தூதர்(ஸல்)அவர்கள், 'திருமணம் முடித்துக் கொண்டாயா? ஜாபிரே!'' என்று கேட்டார்கள். நான், 'ஆம்'' என்று கூறினேன். 'கன்னி கழிந்த பெண்ணையாக? கன்னிப் பெண்ணையா?' என்று கேட்டார்கள். நான், '(கன்னிப் பெண்ணை) அல்ல கன்னி கழிந்த பெண்ணைத்தான் (மணந்தேன்)'' என்று கூறினேன். 'உன்னோடு கொஞ்சிக் குலவும் கன்னிப் பெண்ணை மணந்திருக்கக் கூடாதா?' என்று கேட்டார்கள். நான், 'இறைத்தூதர் அவர்களே! என் தந்தை (அப்துல்லாஹ் - ரலி அவர்கள்) ஒன்பது பெண்மக்களை விட்டுவிட்டு உஹுதுப் போரின்போது (உயிர் தியாகியாகக்) கொல்லப்பட்டார்கள். அவர்கள் (ஒன்பது பேரும்) என் சகோதாரிகளாக இருந்தனர். எனவே, பக்குவமில்லாத அவர்களைப் போன்ற இன்னொருத்தியை அவர்களுடன் சேர்த்து விடுவதை நான் வெறுத்தேன். மாறாக, அவர்களுக்குத் தலை வாரிவிட்டு, அவர்களை (கருத்தாகப்) பராமரித்துவரும் ஒரு பெண்ணை (திருமணம் செய்ய நினைத்தே இவ்வாறு தேர்ந்தெடுத்தேன்)'' என்று கூறினேன். நபி(ஸல்) அவர்கள், 'நீ செய்தது சரிதான்'' என்று கூறினார்கள்.

4053. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:  தம்மீது கடன் இருக்கும் நிலையில் ஆறு புதல்வியரை (அநாதைகளாக) விட்டுவிட்டு என் தந்தை உஹுத் போரில் உயிர்த் தியாகியாகக் கொல்லப்பட்டார். பேரீச்சம்பழங்களைக் கொய்யும் (அறுவடைக்) காலம் வந்தபோது, நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று, “என் தந்தை உஹுத் போரில் உயிர்த் தியாகியாகக் கொல்லப்பட்டார் என்பது தங்களுக்குத் தெரியும். அவர் நிறையக் கடனையும் விட்டுச்சென்றுள்ளார். கடன்காரர்கள் தங்களைச் சந்திக்க வேண்டுமென நான் விரும்புகிறேன்” என்று கூறினேன்.  அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீ சென்று எல்லாப் பேரீச்சங்கனிகளையும் களத்தில் ஒரு மூலையில் (தனித் தனியாகக்) குவித்து வை!” என்று கூறினார்கள். நான் அவ்வாறே செய்தேன். பிறகு நபி (ஸல்) அவர்களை நான் அழைத்தேன். நபி (ஸல்) அவர்களைக் கடன்காரர்கள் கண்டபோது என்னால் ஆத்திரமூட்டப்பட்டவர்களைப் போல அந்த நேரத்தில் தெரிந்தார்கள். கடன்காரர்கள் (கடுமையாக) நடந்துகொள்வதை நபி (ஸல்) அவர்கள் கண்டபோது, அதில் பெரிய குவியலை மூன்று முறை சுற்றிவந்து அதன் அருகே அமர்ந்தார்கள். பிறகு, “உன் (கடன்காரத்) தோழர்களைக் கூப்பிடு” என்று கூறினார்கள்.  (பிறகு) நபி (ஸல்) அவர்கள் (பேரீச்சங் கனிகளை) அவர்களுக்கு அளந்து கொடுத்துக்கொண்டேயிருந்தார்கள். என் தந்தையின் (கடன்) பொறுப்பை அல்லாஹ் நிறைவேற்றிவிட்டான். நானோ, “அல்லாஹ், என் தந்தையின் (கடன்) பொறுப்பை நிறைவேற்றினால் போதும். என் சகோதரிகளிடம் ஒரு பேரீச்சம் பழத்துடன் திரும்பிச் செல்லாவிட்டாலும்கூடப் பரவாயில்லை' என்று திருப்திப்பட்டுக் கொண்டிருந்தேன். அந்தப் பேரீச்சம் பழக் குவியல்கள் முழுவதையும் (தீர்ந்து போகாமல்) அல்லாஹ் பாதுகாத்தான். எந்த அளவுக்கென்றால் நபி (ஸல்) அவர்கள் அமர்ந்திருந்த அந்தக் குவியலில் ஒரு பேரீச்சங்கனிகூட குறையாமலிருந்ததை நான் பார்த்தேன்.121

4054. ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அறிவித்தார்

உஹுதுப் போரின்போது இறைத்தூதர்(ஸல்) அவர்களை பார்த்தேன் அவர்களுடன் இரண்டு மனிதர்கள் இருந்தார்கள். அவ்விருவரும் நபியவர்களுக்காகக் கடுமையாகப் போரிட்டுக் கொண்டிருந்தார்கள் அவர்கள் வெள்ளை நிற உடையணிந்திருந்தார்கள். அதற்கு முன்போ அதற்குப் பின்போ அவ்விருவரையும் நான் பார்த்ததில்லை. 122

4055. ஸஅத் இப்னு அபீ வாக்காஸ்(ரலி) அறிவித்தார்

உஹுதுப் போரின்போது நபி(ஸல்) அவர்கள் தங்களின் அம்புக் கூட்டிலிருந்து எனக்காக (அம்புகளை) உருவிக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அப்போது (என்னிடம்), 'அம்பெய்யுங்கள். என் தந்தையும் என் தாயும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும்'' என்று கூறினார்கள்.

4056. ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அறிவித்தார்

உஹுதுப் போரின்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், எனக்காகத் தம் தாயையும் தந்தையையும் ஒன்று சேர்த்து, (''என் தந்தையும் என் தாயும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும்'' என்று) கூறி (போர் புரிய உற்சாகமூட்டி)னார்கள் 123

4057. ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அறிவித்தார்

உஹுதுப் போரின்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் பெற்றோர் இருவரையும் ஒன்று சேர்த்து எனக்காக (அர்ப்பணிப்பதாகக்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் ஸயீத் இப்னு முஸய்யப்(ரஹ்) கூறினார்.

தாம் போர் புரிந்து கொண்டிருக்கும்போது, 'என் தந்தையும் என் தாயும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும்'' என்று தம்மிடம் நபி(ஸல்) அவர்கள் கூறியதைப் பற்றியே இவ்வாறு ஸஅத்(ரலி) குறிப்பிடுகிறார்கள்.

4058. அலீ இப்னு அபீ தாலிப் (ரலி) அவர்கள் அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் தம் பெற்றோர் இருவரையும் ஒன்று சேர்த்து ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அவர்களைத் தவிர வேறு யாருக்கும் (அர்ப்பணிப்பதாகக்) கூறியதை நான் கேட்டதில்லை.

4059. அலீ(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் தம் பெற்றோர் இருவரையும் ஒன்று சேர்த்து ஸஅத் இப்னு மாலிக்(ரலி) அவர்களைத் தவிர 124 வேறு யாருக்கும் (அர்ப்பணிப்பதாகக்) கூறியதை நான் கேட்டதில்லை. ஏனெனில், நான் உஹுது (போர் நடந்த) நாளில், 'சஅதே! அம்பெய்யுங்கள். என் தந்தையும் என் தாயும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறுவதைக் கேட்டேன்.

4060 / 4061 அபூ உஸ்மான்(ரஹ்) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் (உஹுதில்) போரிட்டு வந்த அந்த நாள்களில் ஒன்றில், தல்ஹா இப்னு உபைதில்லாஹ்(ரலி) அவர்களையும் தவிர்த்து (முஹாஜிர்களில் வேறு யாரும்) அவர்களுடன் எஞ்சியிருக்கவில்லை.

இது குறித்து தல்ஹா(ரலி) அவர்களும், ஸஅத்(ரலி) அவர்களும் (நேரடியாக) அறிவித்த ஹதீஸையும் அபூ உஸ்மான்(ரஹ்) அறிவித்தார்கள். 125

4062. சாயிப் இப்னு யஸீத்(ரஹ்) அறிவித்தார்

அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப், தல்ஹா இப்னு உபைதில்லாஹ், மிக்தாத் இப்னு அஸ்வத், ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) ஆகியோருடன் நான் தோழமை கொண்டிருந்தேன். அவர்களில் ஒருவரும் நபி(ஸல்) அவர்களிடமிருந்து (நபிமொழி எதையும்) அறிவிப்பதை நான் கேட்டதில்லை. ஆயினும், தல்ஹா(ரலி) (மட்டும்) உஹுதுப் போர் நாள் பற்றி அறிவிப்பதை கேட்டுள்ளேன். 126

4063. கைஸ் இப்னு அபீ ஹாஸிம்(ரஹ்) அறிவித்தார்

நான் தல்ஹா இப்னு உபைதில்லாஹ்(ரலி) அவர்களின் செயலிழந்து போன கையைப் பார்த்தேன். உஹுத் நாளில் அந்தக் கையால் நபி(ஸல்) அவர்களை அன்னார் காத்தா (போது எதிரிகளால் வெட்டப்பட்டா)ர்கள். 127

4064. அனஸ்(ரலி) அறிவித்தார்

உஹுதுப் போரின்போது நபி(ஸல்) அவர்களை (தனியே)விட்டுவிட்டு மக்கள் தோற்று (ஓடி)விட்டனர். அபூ தல்ஹா(ரலி) நபி(ஸல்) அவர்களைத் தம் தோல் கேடயத்தால் மறைத்துக் கொண்டு பாதுகாத்தபடி நின்றார்கள்.

மேலும், அபூ தல்ஹா(ரலி) வில்லின் நாணை நன்கு இழுத்து வேகமாக அம்பெய்யக் கூடியவர்களாக இருந்தார்கள். அன்று அவர்கள், இரண்டு அல்லது மூன்று விற்களை உடைத்துவிட்டார்கள். எவரேனும் ஒருவர் அம்புக் கட்டுடன் செல்வதைக் கண்டால் நபி(ஸல்) அவர்கள், 'அதை அபூ தல்ஹாவிடம் போடு'' என்று சொல்வார்கள். அந்த நேரத்தில் நபி(ஸல்) அவர்கள் மேலேயிருந்து மக்களை (தலையை உயர்த்தி) எட்டிப் பார்க்க, அபூ தல்ஹா அவர்கள், 'இறைத்தூதர் அவர்களே! உங்களுக்கு என் தந்தையும் என் தாயும் அர்ப்பணமாகட்டும். எட்டிப் பார்க்காதீர்கள். எதிரிகளின் அம்புகளில் ஏதேனும் ஒன்று தங்களைத் தாக்கி விடலாம். (தாங்கள் எட்டிப் பார்க்காமலிருந்தால்) என் மார்பு தங்கள் மார்புக்கு முன்னால் (கேடயம் போன்று உங்களுக்குப் பாதுகாப்பாக) இருக்கும்'' என்று கூறினார்கள்.

அபூ பக்ர்(ரலி) அவர்களின் மகள் ஆயிஷா(ரலி) அவர்களும் (என் தாயார்) உம்மு சுலைம்(ரலி) அவர்களும் (காயமுற்றவர்களுக்கு) மும்முரமாக (பணிவிடைகள் செய்) இருப்பதை கண்டேன். அவர்கள் (தண்ணீர் நிரம்பிய) தோல் பைகளைத் தங்கள் முதுகுகளில் சுமந்து கொண்டு எடுத்துச் சென்று (காயமுற்று வீழ்ந்து கிடக்கும்) மக்களின் வாய்களில் ஊற்றிவிட்டு, பிறகு திரும்பிச் சென்று, அவற்றை (மீண்டும்) நிரப்பிக் கொண்டு வந்து, அவர்களின் வாய்களில் மீண்டும் ஊற்றிக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களின் கால் கொலுசுகளை கண்டேன். அபூ தல்ஹா(ரலி) அவர்களின் கரத்திலிருந்து இருமுறையோ மும்முறையோ வாள் (கீழே தவறி) விழுந்தது. 128

4065. ஆயிஷா(ரலி) அறிவித்தார்

உஹுதுப் போரின் (தொடக்கத்தின்)போது இணைவைப்பாளர்கள் தோற்கடிக்கப்பட்டனர். அப்போது இப்லீஸ், அல்லாஹ் அவனைக் தன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துவானாக! 'அல்லாஹ்வின் அடியார்களே! உங்களுக்குப் பின்னால் இருப்பவர்களைக் கவனியுங்கள்'' என்று கத்தினான். உடனே, முஸ்லிம்களில் முன் அணியினர் (எதிரிகள் என்றெண்ணி, பின் அணியினரை நோக்கித்) திரும்பிச் செல்ல, பின் அணியினருடன் (மோலேற்பட்டுப்) போரிட்டுக் கொண்டனர். அப்போது ஹுதைஃபா(ரலி), தம் தந்தை யமான் அவர்கள் அங்கே (முஸ்லிம்களின் தாக்குதலுக்கு ஆளாக) இருப்பதைக் கண்டார்கள். எனவே, 'அல்லாஹ்வின் அடியார்களே! என் தந்தை! என் தந்தை!'' என்று (உரக்கக்) கூவினார்கள். (ஆனால்) அல்லாஹ்வின் மீதாணையாக! அவரைக் கொன்ற பின்புதான் அவர்கள் (அவரைவிட்டும்) நகர்ந்தார்கள். அப்போது ஹுதைஃபா(ரலி) (தம் தந்தையைக் கொன்றவர்களை நோக்கி), 'அல்லாஹ் உங்களை மன்னிப்பானாக!'' என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர்களில் ஒருவரான உர்வா(ரஹ்) கூறினார்.

அல்லாஹ்வின் மீதாணையாக! ஹுதைஃபா(ரலி) (இவ்வாறு மன்னித்தால் அவர்கள்) அல்லாஹ்வைச் சந்திக்கும் வரை அவர்களிடம் நல்ல பலன் இருந்து கொண்டேயிருந்தது. 129

பகுதி 19

''இரண்டு படைகள் மோதிக் கொண்ட நாளில் உங்களில் யார் புறங்காட்டி ஓடினார்களோ, அவர்கள் செய்த சில தவறுகள் காரணமாகத் தான் ஷைத்தான் அவர்களை அடிசறுக்கச் செய்தான். (எனினும்) அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மன்னித்துவிட்டான். நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பு வழங்குபவனும் சகிப்புத் தன்மையுடையவனுமாய் இருக்கிறான்'' என்னும் (திருக்குர்ஆன் 03: 155) இறைவசனம்.

4066. உஸ்மான் இப்னு மவ்ஹப்(ரஹ்) அறிவித்தார்

இறையில்லம் கஅபாவில் ஹஜ் செய்ய (எகிப்து வாசியான) ஒருவர் வந்தார். அப்போது ஒரு கூட்டத்தார் (அங்கே) அமர்ந்திருப்பதைக் கண்டு, 'இந்தக் கூட்டத்தார் யார்?' என்று கேட்டார். மக்கள், 'இவர்கள் குறைஷிகள்'' என்று கூறினர். அவர், '(இவர்களில்) முதிர்ந்த அறிஞர் யார்?' என்று கேட்டார். மக்கள், 'அப்துல்லாஹ் இப்னு உமர் அவர்கள்'' என்று பதிலளித்தனர். பிறகு அவர் இப்னு உமர்(ரலி) அவர்களிடம் சென்று, '(இப்னு உமர் அவர்களே!) நான் தங்களிடம் ஒரு விஷயம் பற்றிக் கேட்பேன். நீங்கள் எனக்கு அதைப்பற்றி (பதில்) சொல்வீர்களா? இந்த இறையில்லத்தின் புனிதத்தை முன்வைத்து தங்களிடம் கேட்கிறேன்; உஸ்மான் இப்னு அஃப்பான் உஹுது போர் நாளில் (போர்க்களத்திலிருந்து) வெருண்டோடியத்தைத் தாங்கள் அறிவீர்களா?' என்று கேட்டதற்கு இப்னு உமர்(ரலி), 'ஆம் (அறிவேன்)'' என்று பதிலளித்தார்கள். அவர், 'உஸ்மான்(ரலி), பத்ருப்போரில் கலந்து கொள்ளாமல் இருந்துவிட்டார் என்பது உங்களுக்குத் தெரியுமா?' என்று கேட்க, இப்னு உமர்(ரலி), 'ஆம் (தெரியும்)'' என்று பதிலளித்தார்கள். அந்த மனிதர், 'அவர் (ஹுதைபிய்யாவில் நடந்த) 'பைஅத்துர் ரிள்வான்' சத்தியப் பிரமாணத்திலும் கலந்து கொள்ளவில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா?' என்று கேட்க, இப்னு உமர்(ரலி), 'ஆம் (தெரியும்)'' என்று பதிலளித்தார்கள். (இவற்றைக் கேட்டுவிட்டு) அந்த மனிதர், (உஸ்மான்(ரலி), தாம் நினைத்திருந்தது போன்றே இவ்வளவு குறைகளையும் கொண்டவர்கள் தாம் என்று தொனிக்கும்படி) 'அல்லாஹ் அக்பர் அல்லாஹ் மிகப் பெரியவன்'' என்று கூறினார்.

இப்னு உமர்(ரலி) கூறினார்: 'வா! (இவற்றிற்கெல்லாம் உஸ்மான்(ரலி) ஏன் பங்கு பெறவில்லையென்று) நீ கேட்டது பற்றி உனக்கு நான் விளக்குகிறேன்.

உஸ்மான்(ரலி) உஹுதுப போரின்போது வெருண்டோடிய சம்பவமோ, அது சம்பந்தமாக அல்லாஹ் அவரை மன்னித்துவிட்டான் என்று நானே சாட்சியம் கூறுகிறேன்.

பத்ருப் போரில் அவர்கள் கலந்து கொள்ளாததற்குக் காரணம், இறைத்தூதர்(ஸல்) அவர்களின் மகள் (ருகய்யா - ரலி - அவர்கள்) உஸ்மானுடைய மனைவியாக இருந்தார்கள். அப்போது அவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்தார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், உஸ்மான்(ரலி) அவர்களிடம், 'பத்ருப் போரில் பங்கெடுத்த ஒரு மனிதருக்குரிய (மறுமைப்) பலனும் (போர்ச் செல்வத்தில்) அவரின் பங்கும் உங்களுக்குக் கிடைக்கும். (நீங்கள் உங்கள் மனைவியைப் போய்க் கவனியுங்கள்)' என்று கூறினார்கள். (எனவேதான் அவர்கள் அதில் கலந்து கொள்ள முடியவில்லை.)

பைஅத்துர் ரிள்வான் சத்தியப் பிரமாண நிகழ்ச்சியில் அவர்கள் கலந்து கொள்ளாததற்குக் காரணம், உஸ்மான்(ரலி) அவர்களை விட கண்ணியம் வாய்ந்த ஒருவர் (மக்கா பள்ளத்தாக்கில் இல்லை. அப்படி) இருந்திருந்தால் உஸ்மான் அவர்களுக்கு பதிலாக அவரை நபி(ஸல்) அவர்கள் (குறைஷிகளிடம் பேச மக்காவிற்குத் தம் தூதுவராக) அனுப்பியிருப்பார்கள். (அப்படி ஒருவரும் இல்லை;) எனவேதான், உஸ்மான்(ரலி) அவர்களை அனுப்பினார்கள். மேலும், இந்த சத்தியப் பிரமாண நிகழ்ச்சி உஸ்மான்(ரலி) மக்காவிற்குப் போன பின்புதான் நடைபெற்றது. அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் வலக்கையைச் சுட்டிக் காட்டி, 'இது உஸ்மானுடைய கை' என்று சொல்லி அதைத் தம் இடக்கையின் மீது தட்டினார்கள். பிறகு, '(இப்போது நான் செய்த) இந்த சத்தியப் பிரமாணம் உஸ்மானுக்காகச் செய்யப்படுவதாகும்'' என்று கூறினார்கள்.'' (இவ்வாறு இப்னு உமர்(ரலி) கூறிவிட்டு, உஸ்மான்(ரலி) அவர்களைப் பற்றித் தாழ்வாக எண்ணி வைத்திருந்த) அந்த மனிதரிடம், 'நான் சொன்ன இந்த பதில்களை எடுத்துக் கொண்டு இப்போது நீ போகலாம்'' என்று கூறினார்கள். 130

பகுதி 20

''இறைத்தூதர் உங்கள் பின்னாலிருந்து உங்களை அழைத்துக கொண்டிருக்க, நீங்கள் யாரையும் திரும்பிப் பார்க்காதவாறு வெகுதூரம் சென்று கொண்டிருந்ததை (நினைத்துப் பாருங்கள்.) இதன் விளைவாக, அல்லாஹ் உங்களுக்குத் துக்கத்திற்கு மேல் துக்கத்தைக் கொடுத்தான். ஏனெனில், உங்களைவிட்டு நழுவிப் போனவை பற்றியும், உங்களுக்குத் துன்பம் ஏற்பட்டது பற்றியும், (இனிமேல்) நீங்கள் வருந்தக் கூடாது என்பதற்காகத்தான். அல்லாஹ் நீங்கள் செய்கிறவற்றை ஆழ்ந்து கவனிப்பவன் ஆவான்'' (என்ற 3:153-வது இறைவசனம்)

4067. பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்

உஹுதுப் போரின்போது நபி(ஸல்) அவர்கள், (அம்பெய்யும்) காலாட்படையினருக்கு அப்துல்லாஹ் இப்னு ஜுபைர்(ரலி) அவர்களை (தலைவராக) ஆக்கினார்கள். மேலும் அடிப்படையினர் தோற்றுப் போய் ஓடிவிட்டார்கள். 'இறைத்தூதர் உங்கள் பின்னால் இருந்து உங்களை அழைத்துக் கொண்டிருக்க...'' என்னும் (திருக்குர்ஆன் 03:153-ம்) வசனம் இதையே குறிக்கிறது. 131

பகுதி 21

''பின்னர் இந்தத் துக்கத்திற்குப் பிறகு (மன) அமைதி தருகிற சிற்றுறக்கத்தை அவன் உங்களின் மீது இறக்கினான். அது உங்களில் ஒரு பிரிவினரை ஆட்கொண்டது. மற்றொரு பிரிவினரோ, அவர்களின் மனங்கள் அவர்களைப் பற்றியே கவலையை உண்டாக்கின. உண்மைக்குப் புறம்பாக அல்லாஹ்வைப் பற்றி அறிவீனர்கள் எண்ணுவதைப் போன்று எண்ணிக் கொண்டிருந்தனர். 'இந்தக் காரியத்தில் எங்களுக்கு ஏதேனும உரிமையுண்டா?' என்று கூறுகின்றனர். 'அனைத்து உரிமையும் அல்லாஹ்வுக்கே உண்டு'' என (நபியே!) கூறுக! உம்மிடம் வெளிப்படுத்த முடியாத (பல) விஷயங்களைத் தம் உள்ளங்களில் மறைத்து வைத்துள்ளனர். 'இந்தக் காரியத்தில் எங்களுக்கு உரிமை இருந்திருக்குமாயின், நாங்கள் இங்கே கொல்லப்பட்டிருக்க மாட்டோம்'' என்றும் அவர்கள் கூறுகின்றனர். (நபியே!) நீர் கூறுக: 'நீங்கள் உங்கள் இல்லங்களில் தங்கியிருந்திருப்பினும், யார் மீது இறப்பு எழுதப்பட்டுவிட்டதோ அவர்கள், தாம் இறக்க வேண்டிய இடங்களை நோக்கி வந்தேயிருப்பார்கள். மேலும், அல்லாஹ் உங்கள் நெஞ்சங்களில் உள்ள (விசுவாசத்)தைச் சோதிக்கவும், உங்கள் இதயங்களில் உள்ள (சந்தேகத்)தை (அகற்றி) தூய்மைப்படுத்தவுமே (இவ்வாறு செய்தான்.) இன்னும் அல்லாஹ் உங்கள் உள்ளங்களில் உள்ளதை நன்கறிந்தவன்'' (என்ற 3:154வது இறைவசனம்)

4068. அபூ தல்ஹா (ஸைத் (ரலி) அவர்கள் அறிவித்தார்

உஹுதுப் போரின்போது சிற்றுறக்கம் ஆட்கொண்டவர்களில் நானும் ஒருவனாக இருந்தேன். எந்த அளவுக்கென்றால் என்னுடைய வாள் என்னுடைய கையிலிருந்து பலமுறை (நழுவி) விழுந்துவிட்டது. அது விழ, நான் அதை எடுப்பேன். (மீண்டும்) அது விழ, அப்போதும் நான் அதை எடுப்பேன். 132

பகுதி 22

''அல்லாஹ் அவர்களை மன்னிக்கும் வரை, அல்லது அவர்கள் அக்கிரமக்காரர்களாக இருப்பதால் அவர்களை அவன் வேதனை செய்யும் வரை (அவர்களுக்குத் தண்டனை வழங்குமாறு கூற, நபியே) உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை' (என்ற 3:128-வது இறைவசனம்)

அனஸ்(ரலி) கூறினார்

உஹுதுப் போரன்று நபி(ஸல்) அவர்கள் காயப்படுத்தப்பட்டார்கள். அப்போது 'தம் நபியையே காயப்படுத்திவிட்ட ஒரு சமூகம் எப்படி வெல்லும்?' என்று (மனமுடைந்தவர்களாக) நபிகளார் கூறினார்கள். அப்போதுதான் '(நபியே!) உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை...'' என்ற (திருக்குர்ஆன் 03:128-வது) வசனம் அருளப்பட்டது. 133

4069. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) கூறினார்

(உஹுத் போரில் காயம் ஏற்பட்டதற்குப் பிறகு) ஃபஜ்ருத் தொழுகையின் கடைசி ரக்அத்தில் ருகூவிலிருந்து தலையை உயர்த்தி, 'சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹு - ரப்பனா வல(க்)கல் ஹம்து' என்று கூறியதற்குப் பின்னால், நபி(ஸல்) அவர்கள், 'இறைவா! இன்னான், இன்னான், இன்னானை உன் அருளிலிருந்து அப்புறப்படுத்துவாயாக!'' என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ், 'அல்லாஹ் அவர்களை மன்னிக்கும் வரை, அல்லது அவர்கள் அக்கிரமக்காரர்களாக இருப்பதால் அவர்களை அவன் வேதனை செய்யும் வரை (அவர்களுக்குத் தண்டனை வழங்குமாறு கூற, (நபியே!) உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை'' என்னும் (திருக்குர்ஆன் 03: 128-வது) வசனத்தை இறக்கியருளினான்.

4070. சாலிம் இப்னு அப்தில்லாஹ்(ரஹ்) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (உஹுதுப் போரில் காயப்படுத்தப்பட்டபோது எதிரிகளான) ஸஃப்வான் இப்னு உமய்யா, சுஹைல் இப்னு அம்ர், ஹாரிஸ் இப்னு ஹிஷாம் ஆகியோருக்கெதிராகப் பிரார்த்தித்தார்கள். அப்போது, 'அல்லாஹ் அவர்களை மன்னிக்கும் வரை, அல்லது அவர்கள் அக்கிரமக்காரர்களாக இருப்பதால் அவர்களை அவன் வேதனை செய்யும் வரை (அவர்களுக்குத் தண்டனை வழங்குமாறு கூற, நபியே) உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை (என்ற 3:129-வது வசனம்) அருளப்பட்டது. 134

பகுதி 23

உம்மு சலீத்(ரலி) பற்றிய குறிப்பு 135

4071. ஸஅலபா இப்னு அபீ மாலிக்(ரலி) அறிவித்தார்

மதீனாவாசிகளான பெண்களில் சிலரிடையே உமர் இப்னு கத்தாப்(ரலி) பட்டாடைகளை (அல்லது கம்பளி ஆடைகளை) பங்கிட்டார்கள். அதில் தரமானதோர் ஆடை எஞ்சிவிட்டது. உமர்(ரலி) அவர்களுக்கு அருகில் இருந்த சிலர், 'இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! இதனைத் தங்களிடமிருக்கும் (தங்களின் துணைவியாரான) இறைத்தூதர்(ஸல்) அவர்களின் (மகளின்) மகளுக்குக் கொடுத்து விடுங்கள்'' என்று கூறினர். அலீ(ரலி) அவர்களின் மகளான உம்மு குல்ஸூம்(ரலி) அவர்களைக் கருத்தில் கொண்டே (இப்படிக்) கூறினர். அப்போது உமர்(ரலி), 'உம்மு குல்ஸூமை விட உம்மு சலீத் அவர்களே இதற்கு மிகவும் தகுதி வாய்ந்தவர்கள். மேலும், உம்மு சலீத் அவர்கள், இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் விசுவாசப் பிரமாணம் செய்து கொடுத்த அன்சாரிப் பெண்களில் ஒருவராவார்.'' என்று கூறினார்கள். (மேலும்) 'அவர் எங்களுக்காக உஹுதுப் போர் நடந்த நாளில் தோலினால் ஆன தண்ணீர் பைகளைச் சுமந்து கொண்டு வந்து கொண்டிருந்தார்'' என்றும் உமர்(ரலி) கூறினார். 136

பகுதி 24

ஹம்ஸா இப்னு அப்தில் முத்தலிப்(ரலி) கொல்லப்பட்ட நிகழ்ச்சி 137

4072. ஜஅஃபர் இப்னு அம்ர் இப்னி உமய்யா அள்ளம்ரீ(ரஹ்) அறிவித்தார்

நான் (ஒரு பயணத்தில்) உபைதுல்லாஹ் இப்னு அதீ இப்னி கியார்(ரலி) அவர்களுடன் புறப்பட்டுச் சென்றேன். நாங்கள் ஹிம்ஸு (நகரு)க்கு138 வந்து சேர்ந்தபோது என்னிடம், உபைதுல்லாஹ் இப்னு அதீ அவர்கள், '(உஹுதுப் போரின்போது ஹம்ஸா - ரலி - அவர்களைக் கொன்றவரான) வஹ்ஷீ அவர்களைச் சந்திக்க உங்களுக்கு விருப்பமுண்டா? (நாம் அவர்களைச் சந்தித்து) ஹம்ஸா(ரலி) அவர்களைக் கொன்றது பற்றிக் கேட்போமே!'' என்று கூறினார்கள். நான், சரி என்றேன். வஹ்ஷீ அவர்கள் ஹிம்சில் வசித்துக் கொண்டிருந்தார். (நாங்கள் அங்கு போய் அங்குள்ளவர்களிடம்) அவரைப் பற்றி விசாரித்தோம். 'அவர் தம் அந்த கோட்டைக்குள் இருக்கிறார். அவர் தண்ணீரால் நிரப்பப்பட்ட பெரிய தோல்பை போன்று (பருமனாக) இருப்பார்'' என்று எங்களிடம் கூறப்பட்டது.

பிறகு நாங்கள் (அவரிடம்) வந்தோம். சிறிது நேரம் அவரருகில் நின்றோம். பிறகு, அவருக்கு சலாம் சொன்னபோது, அவர் (எங்களுக்கு) பதில் சலாம் கூறினார்.

உபைதுல்லாஹ்(ரலி) தம் தலைப்பாகைத் துணியினால், தம் இரண்டு கண்களையும் கால்களையும் தவிர வேறெவதையும் வஹ்ஷீ அவர்கள் பார்க்காத முடியாத அளவிற்கு சுற்றிக் கட்டியிருந்தார். அப்போது, உபைதுல்லாஹ்(ரலி), 'வஹ்ஷீ அவர்களே! என்னை உங்களுக்கு அடையாளம் தெரிகிறதா?' என்று கேட்டார்கள்.

அப்போது வஹ்ஷீ, உபைதுல்லாஹ் அவர்களைப் பார்த்தார். பிறகு, 'அல்லாஹ்வின் மீதாணையாக!'' இல்லை. (உங்களை எனக்கு அடையாளம் தெரியவில்லை.) ஆயினும், எனக்கு இது தெரியும்: அது பின்கியார் ஒரு பெண்ணைத் திருமணம் முடித்தார். 139 அவருக்கு, 'உம்மு கித்தால் பின்த் அபில் ஈஸ்' என்று சொல்லப்படும். அதீ அவர்களுக்கு (மனைவி) உம்மு கித்தால் மக்காவில் வைத்து ஓர் ஆண் குழந்தையைப் பிரசவித்தார். அப்போது, அந்தக் குழந்தைக்கு பாலூட்டும் செவிலித் தாயை நானே தேடினேன். (பாலூட்டுபவளைக் கண்டுபிடித்த பிறகு) நான் அந்தக் குழந்தையைச் சுமந்து கொண்டு, அதன் தாயுடன் சென்று அந்தக் குழந்தையைப் பாலூட்டுபவளிடம் ஒப்படைத்தேன். (அந்தக் குழந்தையின் பாதங்களை அப்போது பார்த்தேன்.) உன் இரண்டு பாதகங்களைப் பார்த்தல் அது போன்றே இருக்கிறது'' என்று கூறினார். அப்போது உபைதுல்லாஹ்(ரலி), மூடியிருந்த தம் முகத்தைத் திறந்தார்கள். பிறகு, 'ஹம்ஸா(ரலி) அவர்களை நீங்கள் கொன்றது பற்றி எங்களுக்கு அறிவிக்கக் கூடாதா?' என்று கேட்டார்கள். வஹ்ஷீ, 'சரி'' (சொல்கிறேன்)'' என்று கூறினார். (பிறகு, கொலைச் சம்பவத்தைப் பற்றிப் பின்வருமாறு கூறினார்:) ஹம்ஸா(ரலி) பத்ருப்போரில் (என் எஜமான் ஜுபைருடைய தந்தையின் சகோதரரான) துஐமா இப்னு அதீ இப்னி கியார் என்பாரைக் கொலை செய்தியிருந்தார். எனவே, என் எஜமான் ஜுபைர் இப்னு முத்யிம் என்னிடம், 'என் சிறிய தந்தை(யின் கொலை)க்குப் பதிலாக ஹம்ஸாவை நீ கொன்றால் நீ (அடிமைத் தளையிலிருந்து) விடுதலையாவாய்'' என்று கூறினார்.

எனவே, அய்னைன் (உஹுது) ஆண்டில் - அய்னைன் என்பது உஹுது மலைக்கருகிலுள்ள ஒரு மலையாகும். இந்த இரண்டு மலைகளுக்குடையில் ஒரு பள்ளத்தாக்கு உண்டு (குறைஷி) மக்கள் (போருக்காகப்) புறப்பட்டுச் சென்றபோது அம்மக்களுடன் போர்(க் களம்) நோக்கி நானும் சென்றேன். மக்கள் போருக்காக அணிவகுத்து நின்றபோது சிபாஉ இப்னு அப்தில் உஸ்ஸா என்பவன் (அணியைவிட்டு) முன்னால் வந்து, '(என்னோடு) தனியே மோதுபவர் உண்டா?' என்று கேட்டான். அவனை நோக்கி ஹம்ஸா பின்அப்தில் முத்தலிப்(ரலி) கிளம்பி வந்து, பெண்களுக்கு விருத்தசேதனம் செய்யும் உம்மு அன்மாரின் மகனே! சிபாஉவே! நீ அல்லாஹ்வுடனும் அவனுடைய தூதருடனும் (பகைத்துக் கொண்டு) மோத வந்திருக்கிறாயா?' என்று கேட்டார்கள்.

பிறகு ஹம்ஸா(ரலி) அவன் மீது (பாய்ந்து) கடுமையாகத் தாக்கினார்கள். அவன் கழிந்து போய்விட்ட நேற்யை தினம் போல் (மடிந்தவனாக) ஆகிவிட்டான். நான் ஹம்ஸா (அவர்களைக் கொல்லத் தருணம் எதிர்பார்த்து) அவர்களுக்காக ஒரு பாறைக்கு அடியில் ஒளிந்து கொண்டேன். ஹம்ஸா அவர்கள் என்னை (க் கவனிக்காமல்) நெருங்கி வந்தபோது, என்னுடைய ஈட்டியை அவரின் மர்மஸ்தானத்தை நோக்கி எறிந்தேன். அது (பாய்ந்து) அவரின் புட்டத்திற்கிடையிலிருந்து வெளியேறியது. அதுதான் ஹம்ஸா அவர்களின் வாழ்நாள் முடிவிற்குக் காரணமாக அமைந்தது. பிறகு குறைஷிகள் (உஹுதிலிருந்து மக்காவை நோக்கி) திரும்பிச் சென்றபோது நானும் அவர்களுடன் திரும்பினேன். மக்காவிற்குப் போய் அங்கு (வெற்றி கிடைத்து) இஸ்லாம் பரவும் வரையில் தங்கினேன். (மக்கா வெற்றி கொள்ளப்பட்ட பின்) அங்கிருந்து வெளியேறி தாயிஃபிற்கு (ஓடிச்) சென்று விட்டேன். தாயிஃப் வாசிகள் (இஸ்லாத்தை அறிந்து கொள்ளவும், அதை ஏற்று நடக்கவும் கருதி) தங்கள் தூதுக் குழுவினரை இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் அனுப்பி வைத்தனர். 140 அப்போது, என்னிடம், 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (தம்மிடம் வரும்) தூதுவர்களுக்குத் தொல்லை தரமாட்டார்கள்: (எனவே, தூதுக் குழுவினருடன் சேர்ந்து நீங்களும் செல்லுங்கள்)'' என்று கூறப்பட்டது. எனவே, தூதுக் குழுவினருடன் நானும் புறப்பட்டு, இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து சேர்ந்தேன். என்னை அவர்கள் கண்டபோது, 'நீ வஹ்ஷி தானே?' என்று கேட்டார்கள். நான், 'ஆம்'' என்று கூறினேன். 'நீ தானே ஹம்ஸாவைக் கொன்றாய்?' என்று கேட்டார்கள். நான், 'உங்களுக்கு எட்டியபடி விஷயம் நடந்தது உண்மைதான்'' என்று கூறினேன். அப்போது அவர்கள், '(உன்னைக் காணும்போது என் பெரிய தந்தை ஹம்ஸாவின் நினைவு வரும், எனவே,) என்னைவிட்டும் உன் முகத்தை மறைத்துக் கொள்ள முடியுமா?' என்று கேட்டார்கள். உடனே, நான் (அங்கிருந்து) புறப்பட்டுவிட்டேன்.

நபி(ஸல்) அவர்கள் இறந்துவிட்டபோது, (தன்னை ஒரு நபி என்று வாதிட்ட வண்ணம்) பொய்யன் முஸைலிமா கிளம்பினான். (அவன் நபித்தோழர்களிடம் போரிடுவதற்காகப் பெரும்படை ஒன்றைத் திரட்டலானான். அவனை முறியடிப்பதற்காக அபூ பக்ர் ஸித்தீக்(ரலி) அவர்களும் படை திரட்டி அதற்கு காலித் இப்னு வலீத்(ரலி) அவர்களைத் தளபதியாக நியமித்தார்கள்) நான் (என் மனத்திற்குள்), 'நிச்சயம் நான் முஸைலிமாவை நோக்கிப் புறப்பட்டுச் செல்வேன். அவனை நான் கொல்ல (வாய்ப்புக் கிடைக்க)லாம். அதன் மூலம், (முன்பு) நான் ஹம்ஸா(ரலி) அவர்களைக் கொன்தற்கு(ப் பிரயாசித்தம் தேடி) ஈடுசெய்யலாம்'' என்று கூறிக் கொண்டேன். (அபூ பக்ர் - ரலி அவர்கள் அனுப்பிய போர்ப்படையிலிருந்து) மக்களுடன் நானும் புறப்பட்டுச் சென்றேன். அப்போதுதான்அவனுடைய விஷயத்தில் நடந்தது நடந்து முடிந்தது. 141

அப்(போரின்)போது ஒரு மனிதன் ஒரு சுவரின் இடைவெளியில் நின்றிருந்தான். அவன் தலைவிரி கோலத்துடன் (போரின் புழுதி படிந்து) சாம்பல் நிற ஒட்டகம் போன்றிருந்தான். அவன் மீது (ஹம்ஸா அவர்களைக் கொலை செய்த அதே) என்னுடைய ஈட்டியை எறிந்தேன். நான் அந்த ஈட்டியை அவனுடைய இரண்டு மார்புகளுக்கு மத்தியில் பாய்ச்சினேன். அது அவனுடைய பின் தோள்களுக்கிடையிலிருந்து வெளியேறியது. அவனை நோக்கி அன்சாரிகளில் ஒருவர் ஓடி வந்தார். தம் வாளால் அவனுடைய உச்சந்தலை மீது ஓங்கி வெட்டிவிட்டார். (அவன்தான் முஸைலிமா)

அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) கூறினார்:

(முஸைலிமா கொல்லப்பட்ட போது) ஒரு சிறுமி வீட்டின் முகட்டிலிருந்து கொண்டு, 'அந்தோ! நம்பிக்கையாளர்களின் தலைவரை ஒரு கறுப்பு அடிமை (வஹ்ஷீ) கொலை செய்துவிட்டான்'' என்று (உரக்கச் சப்தமிட்டுச்) சொன்னாள்.

பகுதி 25

உஹுத் நாளில் நபி(ஸல்) அவர்களுக்கு ஏற்பட்ட காயங்கள். 142

4073. இறைத்தூதர்(ஸல்) அவர்கள், (உஹுதுப் போரில் உடைக்கப்பட்ட) தம் (முன் வாய்ப்பற்களில், கீழ்வரிசையில் வலப்புறம் இருந்த) பல்லைச் சுட்டிக்காட்டி 143 'நபியை (இப்படிச்) செய்துவிட்ட சமுதாயத்தின் மீது அல்லாஹ்வின் கோபம் மிகக் கடுமையாகிவிட்டது'' என்று கூறினார்கள். (மேலும், 'இறைவழியில் (அறப்போரில்) இறைத்தூதர் தம் கரத்தால் எவனைக் கொன்று விடுவார்களோ அவன் மீது(ம்) அல்லாஹ்வின் கோபம் மிகக் கடுமையாகிவிட்டது'' என்று கூறினார்கள்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

4074. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்

''இறைவழியில் நபி(ஸல்) அவர்கள் எவனைக் கொன்றுவிட்டார்களோ அவன் மீது அல்லாஹ்வின் கோபம் மிகக் கடுமையாகிவிட்டது. (மேலும்) நபி(ஸல்) அவர்களின் முகத்தில் இரத்தக் காயம் ஏற்படுத்தியவர்களின் மீது அல்லாஹ்வின் கோபம் மிகக் கடுமையாகிவிட்டது. 144

4075. அபூ ஹாஸிம் ஸலமா இப்னு தீனார்(ரஹ்) அறிவித்தார்

ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அவர்களிடம், இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு (உஹுதுப் போரின் (போது) ஏற்பட்ட காயங்கள் பற்றிக் கேட்கப்பட்டது. அப்போது அவர்கள், 'அல்லாஹ்வின் மீதாணையாக! இறைத்தூதர்(ஸல்) அவர்களின் காயத்தைக் கழுவி விட்டவரையும், (கழுவுவதற்காகத்) தண்ணீரை ஊற்றிவிட்டுக் கொண்டிருந்தவரையும், மருந்துக்குப் பயன்படுத்தப்பட்ட பொருளையும் அறிவேன்'' என்று கூறிவிட்டு (பின்வருமாறு விளக்கிச்) கூறினார்கள்: 'இறைத்தூதர்(ஸல்) அவர்களின் மகள் ஃபாத்திமா(ரலி) அந்தக் காயத்தைக் கழுவி விட்டுக் கொண்டிருந்தார்கள். அலீ இப்னு அபீ தாலிப்(ரலி) (தம்) கேடயத்தில் (தண்ணீர் நிரப்பி வந்து அந்தக் காயத்தைக் கழுவுவதற்காக) நீர் ஊற்றிக் கொண்டிருந்தார்கள். தண்ணீர் மேன்மேலும் இரத்தத்தை அதிகமாக்குவதையே கண்டபோது, ஃபாத்திமா(ரலி) பாயின் ஒரு பகுதியை எடுத்து வந்து (சாம்பலாகும் வரை) அதைச் கரித்து, அதனைக் காயத்தின் மீது அழுத்தி வைத்தார்கள். இரத்தம் (வருவது) நின்றுவிட்டது. அன்றைய (உஹுதுப் போர்) தினத்தில் நபி(ஸல்) அவர்களின் கீழ்ப்பல் உடைக்கப்பட்டது. மேலும், அவர்களின் முகம் காயப்படுத்தப்பட்டது. மேலும் (அவர்களின்) தலைக்கவசம் அவர்களின் தலையின் மீதே வைத்து நொறுக்கப்பட்டது.

4076. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்

''ஒரு நபி எவனைக் கொன்றுவிட்டார்களோ அவன் மீது அல்லாஹ்வின் கோபம் மிகக் கடுமையாகிவிட்டது. மேலும், இறைத்தூதர்(ஸல்) அவர்களின் முகத்தில் இரத்தக் காயம் ஏற்படுத்தியவன் மீதும் அல்லாஹ்வின் கோபம் மிகக் கடுமையாகிவிட்டது.

என இக்ரிமா(ரஹ்) அறிவித்தார். 145

பகுதி 26

''அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதரின் அழைப்பை ஏற்றவர்கள்... (என்னும் 3:172-ம் இறைவசனம்)

4077. உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அறிவித்தார்

''தமக்கு(ப் போரில்) படுகாயங்கள் எற்பட்ட பின்னரும் கூட அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதரின் அழைப்பை அவர்கள் ஏற்றார்கள். நன்மை புரிந்து, தீமையிலிருந்து தம்மைக் காத்துக் கொண்ட இத்தகையோருக்கு மகத்தான பிரதிபலன் உண்டு'' என்னும் (திருக்குர்ஆன் 03:172 -வது) வசனத்தை (என் சிற்றன்னை) ஆயிஷா(ரலி) ஓதிவிட்டு என்னிடம், 'என் சகோதாரி மகனே! உன் தந்தை ஸுபைர்(ரலி) அவர்களும் (என் தந்தையும் உன் பாட்டனாருமான அபூ பக்ர்(ரலி) அவர்களும் (அந்த அழைப்பை ஏற்ற) அவர்களில் உள்ளவர்கள் தாம். உஹுத் நாளில் இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்குக் காயங்கள் ஏற்பட்டபோது இணைவைப்பவர்கள் திரும்பிச் சென்றுவிட்டனர். அவர்கள் மீண்டும் திரும்பி வந்து விடுவார்களோ என்று நபி(ஸல்) அவர்கள் அஞ்சினார்கள். (அப்போது) 'அவர்களுக்குப் பின்னால் (அவர்களை அச்சுறுத்துவதற்காக அவர்களைத் துரத்திச்) செல்பவர்கள் யார்?' என்று கேட்டார்கள். (உஹுதில் பங்கெடுத்த) நபித்தோழர்களில் எழுபது பேர் (அவர்களைத் துரத்தியடிக்க) முன்வந்தனர்'' என்று கூறினார்கள்.

அவர்களில் அபூ பக்ர்(ரலி) அவர்களும், ஸுபைர் இப்னு அவ்வாம்(ரலி) அவர்களும் இருந்தனர். 146

பகுதி 27

உஹுத் நாளில் கொல்லப்பட்ட முஸ்லிம்கள். 147

ஹம்ஸா இப்னு அபத்தில் முத்தலிப், யமான், அனஸ் இப்னு நள்ர், முஸ்அப் இப்னு உமைர்(ரலி) ஆகியோர் அவர்களில் அடங்குவர். 148

4078. கதாதா(ரஹ்) அறிவித்தார்

அன்சாரிகளை விட, அதிக உயிர்த் தியாகிகள் கொண்ட, மறுமை நாளில் ஒளி மிகுந்த வேறெந்தக் குலத்தாரையும் அரபுக் குலங்களுக்கிடையே நாம் அறியவில்லை.

அனஸ் இப்னு மாலிக்(ரலி) கூறினார்

உஹுதுப் போரில் அன்சாரிகளில் எழுபது பேர் கொல்லப்பட்டனர். 'பிஃரு மஊனா' போரின்போது எழுபது பேரும் யமாமா போரின்போது எழுபது பேரும் கொல்லப்பட்டனர். அறிவிப்பாளர் கத்தாதா(ரஹ்) கூறினார்:

இறைத்தூதர்(ஸல்) அவர்களின் காலத்தில் 'பிஃரு மஊனாப்' போர் நடந்தது. 149 பொய்யன் முஸைலிமாவின் மீதாண யமாமாப் போர் அபூ பக்ர்(ரலி) அவர்களின் (ஆட்சிக்) காலத்தில் நடந்தது. 150

4079. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்

''உஹுதுப் போரில் (உயிர்த்தியாகிகளாகக்) கொல்லப்பட்டவர்களை இரண்டிரண்டு பேராக ஒரே துணியில் சேர்த்து வைத்து(க் கஃபனிட்டு) இவர்களில் குர்ஆனை அதிகம் அறிந்தவர் யார்?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்பார்கள். ஒருவர் சுட்டிக்காட்டப்பட்டதும் அவரின் உடலை உட்குழியில் முதலில் வைப்பார்கள். மேலும், 'மறுமை நாளில் இவர்களுக்கு நானே சாட்சியாக்குவேன்'' என்று கூறிவிட்டு, அவர்களின் இரத்தத்துடனேயே அவர்களை அடக்கம் செய்யும்படி உத்தரவிட்டார்கள். அவர்களுக்காக நபி(ஸல்) அவர்கள் (ஜனாஸாத் தொழுகை) தொழவுமில்லை; அவர்கள் நீராட்டப்படவுமில்லை. 151

4080. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவித்தார்

என் தந்தை (அப்துல்லாஹ் உஹுதுப் போரில்) கொல்லப்பட்டபோது நான் அழ ஆரம்பித்தேன். மேலும், அவரின் முகத்திலிருந்த துணீயை விலக்க முனைந்தேன். அப்போது நபி(ஸல்) அவர்களின் தோழர்கள் என்னைத் தடுக்கத் தொடங்கினர். நபி(ஸல்) அவர்கள் (என்னைத்) தடுக்கவில்லை. மேலும் நபி(ஸல்) அவர்கள், 'அவருக்காக நீ அழவேண்டாம்... அல்லது அவருக்காக நீ ஏன் அழுகிறாய்?... ஜனாஸா (அந்த இடத்திலிருந்து) தூக்கப்படும் வரை, வானவர்கள் தங்கள் இறக்கைகளை விரித்து அவருக்கு நிழல் கொடுத்துக் கொண்டிருப்பார்கள்'' என்று கூறினார்கள். 152

4081. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

நான் ஒரு கனவு கண்டேன். (அதில்) நான் ஒரு வாளை அசைத்தேன். அதன் முனை முறிந்துவிட்டது. உஹுதுப போரின்போது இறைநம்பிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட இழப்பை அது குறித்தது. பிறகு மீண்டுமொரு முறை அதை நான் அசைத்தேன். அது முன்பிருந்ததை விட மிக அழகாக மாறிவிட்டது. அது அல்லாஹ் (அதே உஹுதுப போரில்) கொணர்ந்த உறுதிப்பாட்டையும், (சிதறி ஓடிய) இறைநம்பிக்கையாளர்கள் (மீண்டும்) ஒன்று திரண்டதையும் குறித்தது. அந்தக் கனவில் நான் சில காளை மாடுகளை (அவை அறுக்கப்படுவது போல்) கண்டேன். (உஹுதுப போரில் கொல்லப்பட்டவர்களுக்கு) அல்லாஹ் வழங்கிய அந்தஸ்து (அவர்கள் இவ்வுலகில் இருந்த நிலையை விட அவர்களுக்குச்) சிறந்தது ஆகும். எனவே, (அந்த மாடுகள்) உஹுத் நாளில் கொல்லப்பட்ட இறை நம்பிக்கையாளர்களைக் குறிப்பவையாகும்.

என அபூ மூஸா அஷ்அரீ(ரலி) அறிவித்தார். 153

4082. கப்பாப்(ரலி) அறிவித்தார்

நாங்கள் அல்லாஹ்வின் திருப்தியை நாடியவர்களாக இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் ஹிஜ்ரத் செய்தோம். எங்களுக்குரிய பிரதிபலன் அல்லாஹ்வின் பொறுப்பாகி விட்டது. எங்களில் சிலர் தமக்குரிய பிரதிபலனில் எதையுமே (இவ்வுலகத்தில்) அனுபவிக்காமல் சென்றுவிட்டனர். அவர்களில் ஒருவர் தாம், முஸ்அப் இப்னு உமைர்(ரலி). அவர் உஹுத் நாளில் கொல்லப்பட்டார். அவர் கோடுபோட்ட வண்ணத்துணி ஒன்றை மட்டுமே விட்டுச் சென்றார். அவரின் தலையை நாங்கள் அதனால் மறைத்தால் அவரின் இரண்டு கால்கள் வெளியில் தெரிந்தன கால்களை மறைத்தால் தலை வெளியில் தெரிந்தது. அப்போது எங்களிடம் நபி(ஸல்) அவர்கள், 'அவரின் தலையைத் துணியால் மறைத்துவிட்டு அவரின் மீது 'இத்கிர்' புல்லையிடுங்கள்... அல்லது அவரின் கால் மீது 'இத்கிர்' புல்லைப் போடுங்கள்...'' என்று கூறினார்கள்.

(உஹுதுப் போரில் பங்கெடுத்த) எங்களில் வேறு சிலரும் உள்ளனர். அவர்களின் (பிரதிபலன் இந்த உலகிலும்) கனிந்துவிட்டது. அதை அவர்கள் (இவ்வுலகிலும்) பறித்து (அனுபவித்து)க் கொண்டார்கள். 154

பகுதி 28

''உஹுத் மலை நம்மை நேசிக்கிறது; நாமும் அதனை நேசிக்கிறோம்.''

இதை நபி(ஸல்) அவர்களிடமிருந்து அபூ ஹுமைத்(ரலி) அவர்களும், அபூ ஹுமைத்(ரலி) அவர்களிடமிருந்து அப்பாஸ் இப்னு ஸஹ்ல்(ரலி) அவர்களும் அறிவித்தார்கள். 155

4083. அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் அறிவித்தார்

''இந்த (உஹுத்) மலை நம்மை நேசிக்கிறது. நாமும் அதனை நேசிக்கிறோம்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். 156

4084. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்

(கைபர் போரிலிருந்து நாங்கள் திரும்பி வந்து கொண்டிருந்த போது) உஹுத் (மலை) நபி(ஸல்) அவர்களுக்குத் தென்பட்டது. அப்போது அவர்கள், 'இந்த மலை நம்மை நேசிக்கிறது; நாமும் அதனை நேசிக்கிறோம். இறைவா! இப்ராஹீம்(அலை) அவர்கள் மக்காவைப் புனிதமானதாக அறிவித்தார்கள். நான் இரண்டு (கருங்கற்கள் நிறைந்த) மலைகளுக்கிடையிலுள்ள பகுதியை (மதீனாவை)ப் புனிதமானதாக அறிவிக்கிறேன்'' என்று கூறினார்கள். 157

4085. உக்பா பிர் ஆமிர்(ரலி) அறிவித்தார்

ஒரு நாள் நபி(ஸல்) அவர்கள் புறப்பட்டு வந்து, இறந்தவர்களுக்காக (ஜனாஸா தொழுகை) தொழுகை நடத்தியதைப் போன்று உஹுதுப் போர் உயிர்த்தியாகிகளுக்காக (ஜனாஸா தொழுகை) தொழுகை நடத்தினார்கள். பிறகு மேடைக்கு (மிம்பருக்கு) வந்து, 'நிச்சயமாக நான் உங்களுக்காகக் காத்திருப்பேன். உங்களுக்கு நான் சாட்சி ஆவேன். மேலும், நான் இப்போது (கவ்ஸர் எனும்) என்னுடைய தடாகத்தைக் காண்கிறேன். எனக்கு பூமியினுடைய கருவூலங்களின் திறவு கோல்கள்... அல்லது பூமியின் திறவு கோல்கள்... கொடுக்கப்பட்டள்ளன. அல்லாஹ்வின் மீதாணையாக என(து இறப்பு)க்குப் பின்னால் நீங்கள் இணைவைப்பவர்களாக ஆகி விடுவீர்களோ என்று நான் பயப்படவில்லை; ஆனால், (உலகத்திற்காக) நீங்கள் ஒருவரோடொவர் (போட்டியிட்டுக் கொண்டு) மோதிக் கொள்வீர்களோ என்றே பயப்படுகிறேன்'' என்று கூறினார்கள். 158

பகுதி 29

ரஜீஉ, ரிஃல், தக்வான், பிஃரு மஊனா ஆகிய போர்களும் அளல், காரா குலத்தார் குறித்த செய்தியும் ஆஸிம் இப்னு ஸாபித்(ரலி), குபைப்(ரலி) மற்றும் அவர்களின் தோழர்கள் குறித்த செய்தியும். 159

'ரஜீஉ' போர், உஹுதுப் போருக்குப் பின்னால் நடைபெற்றது' என ஆஸிம் இப்னு உமர்(ரஹ்) கூறினார்கள் என இப்னு இஸ்ஹாக்(ரஹ்) அறிவித்தார்.

4086. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் (பத்துப் பேர் கொண்ட) உளவுப் படையொன்ற (ஓரிடத்திற்கு) அனுப்பினார்கள். உமர் இப்னு கத்தாப்(ரலி) அவர்களின் புதல்வர் ஆஸிமீன்(தாய் வழிப்)பாட்டனார் ஆஸிம் இப்னு ஸாபித்(ரலி) அவர்களை அப்படையினருக்குத் தலைவராக்கினார்கள். அவர்கள் (மதீனாவிலிருந்து புறப்பட்டு வந்து) மக்காவுக்கும் உஸ்ஃபானுக்கும் இடையிலுள்ள ('ஹத்தா' என்ற) இடத்தில் இருந்தபோது 'ஹுதைல்' குலத்தைச் சேர்ந்த பனூ லிஹ்யான் என்றழைக்கப்பட்ட கிளையினருக்கு அவர்களைப் பற்றித் தெரிவிக்கப்பட்டது. அவர்கள், அம்பெய்யும் வீரர்கள் சுமார் நூறு பேருடன் (கிளம்பி, உளவுப்படையினரைப் பிடிப்பதற்காக) அவர்களின் பாதச்சுவடுகளைப் பின்தொடர்ந்து வந்தனர். உளவுப்படையினர் இறங்கித் தங்கியிருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தனர். படையினர் மதீனாவிலிருந்து உணவாகக் கொண்டுவந்திருந்த பேரீச்சம் பழங்களின் கொட்டைகளை அங்கே கண்டனர். அப்போது 'இது 'யஸ்ரிப்' (மதீனா நகரின்) பேரீச்சம் பழம்'' என்று சொல்லிக் கொண்டனர். எனவே, உளவுப்படையினாரின் பாதச்சுவடுகளைப் பின்தொடர்ந்து வந்து, இறுதியில் அவர்களை அடைந்தேவிட்டனர். ஆஸிம்(ரலி) அவர்களும், அவர்களின் நண்பர்களும் இதை அறிந்தபோது (மலைப்பாங்கான) உயரமான ஓரிடத்தில் தஞ்சம் புகுந்தனர். அப்போது (துரத்தி வந்த) அந்தக் கிளையினர் அவர்களைச் சுற்றி வளைத்துக் கொண்டு அவர்களைப் பார்த்து, 'நீங்கள் எங்களிடம் இறங்கி வந்துவிட்டால், உங்களில் யாரையும் நாங்கள் கொலை செய்ய மாட்டோம் என்று உங்களுக்கு உறுதிமொழியும் வாக்குறுதியும் தருகிறோம்'' என்று கூறினர். அப்போது ஆஸிம் பின் ஸாபித்(ரலி), 'நான் ஓர் இறை மறுப்பாளனின் (வாக்குறுதியை நம்பி அவனுடைய) பாதுகாப்பில் இறங்கிச் செல்ல மாட்டேன். இறைவா! எங்களைப் பற்றிய செய்தியை உன் தூதருக்குத் தெரிவித்து விடு'' என்று கூறினார்கள். அப்போது அக்கிளையினர் உளவுப்படையினருடன் சண்டையிட்டு ஆஸிம்(ரலி) அவர்கள உட்பட ஏழுபேரை அம்பெய்து கொன்றுவிட்டனர். இறுதியில் குபைப், ஸைத்(ரலி), மற்றொருவர் மட்டுமே 160 எஞ்சியிருந்தனர். இம்மூவருக்கும் உறுதிமொழியும் வாக்குறுதியின் பேரில் இறங்கி வந்தனர். அவர்கள் (மூவரும்) தங்கள் கையில் கிடைத்தவுடன் (எதிரிகள்) தங்களின் அம்பின் நாணை அவிழ்த்து அதன் மூலம் அவர்களைப் பிணைத்தனர். (இதைக் கண்ட) அந்த மூன்றாம் மனிதர், 'இது முதலாவது நம்பிக்கைத் துரோகம்.'' என்று கூறி, அவர்களுடன் வர மறுத்துவிட்டார், எனவே, அவரை (அடித்து)த் துன்புறுத்தி தம்முடன் வரும்படி நிர்பந்தித்தனர். ஆனால், அவர் உடன்படவில்லை. எனவே, அவரை அவர்கள் கொலை செய்துவிட்டனர். பிறகு, குபைப்(ரலி) அவர்களையும், ஸைத் இப்னு தஸினா(ரலி) அவர்களையும் கொண்டு சென்று மக்காவில் விலைக்கு விற்றுவிட்டனர். ஹாரிஸ் இப்னு ஆமிர் இப்னி நவ்ஃபல் என்பவருடைய மக்கள், குபைப்(ரலி) அவர்களை (பழிதீர்ப்பதற்காக) விலைக்கு வாங்கிக் கொண்டனர். (ஏனெனில்,) குபைப்(ரலி) ஹாரிஸ் இப்னு ஆமிரை பத்ருபபோரின்போது கொன்றிருந்தார். ஹாரிஸின் மக்களிடத்தில் குபைப்(ரலி) (புனித மாதங்கள் முடிந்தது) அவரைக் கொல்ல அவர்கள் ஒன்று திரளும் (நாள் வரும்) வரையில் கைதியாக இருந்தது வந்தார். (கொல்லப்படும நாள் நெருங்கியபோது தன்னுடைய மறைவான உறுப்புகளிலிருந்த முடிகளை) மழிப்பதற்காக ஹாரிஸின் மகள் ஒருத்தியிடம் சவரக்கத்தி ஒன்றை குபைப்(ரலி) இரவலாகக் கேட்டார். அவளும் அவருக்கு இரவலாகத் தந்தாள். (அதற்குப் பின் நடந்ததை அப்பெண்மணியே விளக்கிக்) கூறுகிறார்கள்: நான் என்னுடைய சிறிய மகனைக் கவனிக்காமல் இருந்துவிடவே, அவன் (விளையாடிக் கொண்டே) தவழ்ந்து குபைப் அவர்களிடம் வந்து சேர்ந்தான். அவனை குபைப் அவர்கள் தங்களின் மடியில் வைத்தார்கள். (இந்நிலையில்) அவரை நான் பார்த்து பலமாக அதிர்ந்தேன். இதை அவர் புரிந்து கொண்டார். அவரின் கையில் கத்தி இருந்தது. அப்போது அவர், 'இவனை நான் கொன்று விடுபவன் என்று அஞ்சுகிறாயா? அல்லாஹ்வின் நாட்டப்படி நான் அப்படிச் செய்பவன் அல்லன்'' என்று கூறினார். குபைபை விடச் சிறந்த ஒரு கைதியை நான் (என் வாழ்நாளில்) கண்டதில்லை. ஒரு நாள் அவர் தம் கையிலிருந்த திராட்சைப் பழக் குலையிலிருந்து (பழங்களைப் பறித்து) சாப்பிட்டுக் கொண்டிருக்கக் கண்டேன். அந்நாளில் மக்காவில் எந்தப் பழவகையும் இருக்கவில்லை. மேலும், அப்போது அவர் இரும்புச் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்தார். (பிற்காலத்தில் அந்த நிகழ்ச்சியை நினைவு கூர்ந்து)'' அது குபைபுக்கு அல்லாஹ் வழங்கிய உணவு'' என்று அந்தப் பெண் கூறிவந்தார். (அவரைக் கொல்வதற்காக - மக்காவின்) புனித எல்லைக்கு வெளியே அவரை அவர்கள் கொண்டு வந்தபோது, 'இரண்டு ரக்அத்துகள் நான் தொழுது கொள்ள என்னை விடுங்கள்'' என்று குபைப் கேட்டார். (அவர்களும் அனுமதிக்க, குபைப் இரண்டு ரக்அத்துகள் தொழுதார்.) பிறகு, அவர்களின் பக்கம் திரும்பி, 'நான் மரணத்தைக் கண்டு அஞ்கிறேன் என்று நீங்கள் எண்ணி விடுவீர்கள் என்ற அச்சம் எனக்கில்லாமல் இருந்திருந்தால் நான் (தொழுகையை) அதிகமாக்கியிருப்பேன்'' என்று கூறினார். அவர்தான் (இறைவழியில்) கொல்லப்படுவதற்கு முன் இரண்டு ரக்அத்கள் தொழுவதை முன்மாதிரியாக்கியவராவார். பிறகு 'இறைவா! இவர்களை நீ எண்ணி வைத்துக் (கொண்டு, தனித்தனியாக இவர்களைக் கவனித்துக்) கொள்வயாக!'' என்று பிரார்த்தித்தார். அதன் பிறகு? 'நான் முஸ்லீமாகக் கொல்லப்படும்போது எதைப் பற்றியும் நான் பொருட்படுத்தமாட்டேன். எந்த இடத்தில் நான் இறந்தாலும் இறைவனுக்காகவே நான் கொல்லப்படுகிறேன் (என்பதில் எனக்கு மகிழ்ச்சியே). நான் கொலையுறுவது அல்லாஹ்வின் திருப்தியைப் பெறுவதற்காகத் தான் எனும்போது, அவன் நாடினால் என்னுடைய துண்டிக்கப்பட்ட உறுப்புகளின் இணைப்புகளின் மீது தன் அருள்வளத்தைப் பொழிவான்'' என்று (கவிபாடிக்) கூறினார்கள்.

பிறகு, உக்பா இப்னு ஹாரிஸ் என்பவன் குபைப்(ரலி) அவர்களிடம் வந்து, அவர்களைக் கொன்றுவிட்டான். மேலும், (ஆஸிம் இப்னு ஸாபித்(ரலி) கொல்லப்பட்டுவிட்ட செய்தி குறைஷிகளுக்குக் கிடைத்தபோது அவர்கள் அவரை அடையாளம் கண்டு கொள்வதற்காக அவரின் உடலில் ஓர் உறுப்பை எடுத்து வரும்படி ஆளனுப்பினார்கள். (ஏனெனில்,) ஆஸிம்(ரலி) பத்ருப் போரின்போது அவர்களின் தலைவர்களில் ஒருவரை கொலை செய்திருந்தார். (அவரின் உடலின் ஒரு முக்கிய உறுப்பை வெட்ட போன போது) ஆஸிம்(ரலி) அவர்களுக்கு மேல் (அவர்களைப் பாதுகாக்கும் நோக்கில்) அல்லாஹ் மேகத்தைப் போன்று ஆண் தேனீக்களை அனுப்பினான். குறைஷிகளின் தூதர்களிடமிருந்து ஆஸிம்(ரலி) அவர்களை (சூழ்ந்து கொண்டு) அவை பாதுகாத்தன. எனவே, அவரிடமிருந்து எதையும் எடுக்க அவர்களால் இயலவில்லை. 161

4087. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் -ரலி அவர்கள் அறிவித்தார்

அபூ சிர்வஆ' (உக்பா இப்னு ஹாரிஸ்) என்பவனே குபைப்(ரலி) அவர்களைக் கொன்றான்.

4088. அனஸ் இப்னு மாலிக் - ரலி அவர்கள் கூறியாவது:

நபி(ஸல்) அவர்கள் எழுபது பேர்களை ஒரு தேவைக்காக அனுப்பி வைத்தார்கள். அவர்கள் 'குர்ராஃ' (திருக்குர்ஆனை நன்கறிந்தவர்கள்) என்று அழைக்கப்பட்டனர். அப்போது பனூ சுலைம் குலத்தைச் சேர்ந்த ரிஃல் மற்றும் தக்வான் ஆகிய இரண்டு கூட்டத்தார், 'பிஃரு மஊனா' என்றழைக்கப்படும் ஒரு கிணற்றுக்கு அருகில் அவர்களை இடைமறித்தனர். அப்போது அந்த நபித்தோழர்கள், 'அல்லாஹ்வின் மீதாணையாக! (உங்களிடம் போரிடுவதற்காக) உங்களை நாடி நாங்கள் வரவில்லை. நபி(ஸல்) அவர்களின் ஒரு தேவைக்காகவே நாங்கள் சென்று கொண்டிருக்கிறோம்'' என்று கூறினர். ஆயினும், அவர்கள் அந்த நபித் தோழர்களைக் கொன்றுவிட்டனர். எனவே, நபி(ஸல்) அவர்கள் அவர்களுக்கெதிராக ஒரு மாத காலம் அதிகாலைத் தொழுகையில் பிரார்த்தித்தார்கள். இதுவே (தொழுகையில்) 'குனூத்' (என்னும் துஆ ஓதுவ)தின் துவக்கமாகும். நாங்கள் அதற்கு முன் 'குனூத்' ஓதுபவர்களாக இருக்கவில்லை. 162

அறிவிப்பாளர் அப்துல் அஸீஸ் இப்னு ஸுஹைப்(ரஹ்) கூறினார்:

ஒருவர் அனஸ்(ரலி) அவர்களிடம், குனூத் குறித்து, 'அது ருகூவிற்குப் பின்பா? அல்லது கிராஅத் ஓதி முடித்த பின்பா? (எப்போது அதை ஓத வேண்டும்)'' என்று கேட்டதற்கு 'அல்ல; கிராஅத் ஓதி முடித்த பின்புதான்'' என்று அனஸ்(ரலி) பதிலளித்தார்கள்.

4089. அனஸ்(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ஒரு மாதம் (ஃபஜ்ர் தொழுகையில்) ருகூவிற்குப் பின்னால் அரபுக் குலத்தினர் பலருக்கெதிராகப் பிரார்த்தித்து 'குனூத்' (என்னும் சிறப்பு துஆ) ஓதினார்கள்.

4090. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்

ரிஃல், தக்வான், உஸய்யா மற்றும் பனூ லிஹ்யான் குலத்தினர் 163 (வந்து தங்களின்) பகைவர்களுக்கு எதிராக (படை தந்து) உதவும் படி இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கோரினர். அப்போது அவர்களுக்கு அன்சாரிகளில் எழுபது பேர்களை அனுப்பித் தந்து நபி(ஸல்) அவர்கள் உதவினார்கள். அந்தக் காலத்தில் அவர்களை (அந்த எழுபது பேர்களை) நாங்கள் 'குர்ராஃ - திருக்குர்ஆனை நன்கறிந்தவர்கள்' என்று பெயாரிட்டு அழைத்து வந்தோம். அவர்கள் பகலில் (பிழைப்பிற்காக) விறகு கேசகாரிப்பவர்களாகவும் இரவில் தொழக்கூடியவர்களாகவும் இருந்து வந்தனர். இவர்கள் (பயணம் செய்து) 'பிஃரு மஊனா' என்னுமிடத்தை அடைந்தபோது (பனூ சுலைம் குலத்தைச் சேர்ந்த) அவர்கள், இவர்களை வஞ்சித்துக கொன்றுவிட்டனர். இச்செய்தி நபி(ஸல்) அவர்களை எட்டியபோது ஒரு மாத காலம் சுப்ஹுத் தொழுகையில் அரபுக் குலங்களான ரிஃல், தக்வான், உஸய்யா மற்றும் பனூ லிஹ்யான் குலத்தினருக்கெதிராக பிரார்த்தித்து 'குனூத்' (எனும் சிறப்பு துஆ) ஓதினார்கள். இவர்கள் குறித்து (அருளப்பட்டிருந்த) குர்ஆன் (வசனமொன்றை) ஓதி வந்தோம். பின்னாளில் அது (இறைவனால்) நீக்கப்பட்டுவிட்டது. 'நாங்கள் எங்கள் இறைவனிடம் சென்று சேர்ந்து விட்டோம். அவன் எங்களைக் குறித்து திருப்தியடைந்துவிட்டான்; எங்களை அவன் திருப்தியுறச் செய்தான்' என்று எங்களைப் பற்றி எங்கள் சமுதாயத்தாரிடம் தெரிவித்து விடுங்கள்'' என்பதே அந்த வசனமாகும். 164

அனஸ்(ருலி) அவர்களிடமிருந்து கத்தாதா(ரஹ்) கூறினார்:

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஒரு மாத காலம் வரையில் சுப்ஹுத் தொழுகையில் அரபுக் குலங்களைச் சேர்ந்த ரிஃல், தக்வான், உஸய்யா, மற்றும் பனூ லிஹ்யான் கூட்டத்தினருக்கு எதிராக 'குனூத்' பிரார்த்தனை புரிந்தார்கள்.

அனஸ்(ரலி) அவர்களிடமிருந்து இதே கருத்தில் அறிவிக்கப்படும் இன்னோர் அறிவிப்பில், 'அன்சாரிகளான அந்த எழுபது பேரும் பிஃரு மஊனாவில் கொல்லப்பட்டார்கள்'' என்று காணப்படுகிறது.

4091. அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் அறிவித்தார்

(என் தாயார்) உம்மு சுலைம் அவர்களின் சகோதரர், என் தாய் மாமா (ஹராம் இப்னு மில்ஹான் (ரலி) அவர்களை (குர்ஆனை நன்கறிந்தவர்களான எழுபது) பயணிகளில் ஒருவராக நபி(ஸல்) அவர்கள் அனுப்பி வைத்தார்கள். இணைவைப்பவர்களின் தலைவம் ஆமிர் இப்னு துஃபைல், பின்வரும் மூன்று விஷயங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும்படி (நபி - ஸல் - அவர்களிடம்) கூறினான்:

கிராமப்புற மக்கள் உங்களுக்குச் சொந்தம்; (அவர்களுக்கு ஆட்சியாளராக நீங்கள் இருங்கள்;) நகர்ப் புற மக்கள் எனக்குச் சொந்தம். (நான் அவர்களுக்கு ஆட்சியாளராக இருப்பேன்.)

அல்லது நான் உங்களுக்கு கலீஃபாவாக -பிரதிநிதியாக இருப்பேன்.

அல்லது ஆயிரக்கணக்கான கத்ஃபான் குலத்தனிருடன் (வந்து) உங்களிடம் போர் தெடுப்பேன்'' என்று கூறினான்.

பிறகு இன்னாரின் தாய் வீட்டில் 'ஆமிர்' கொள்ளை நோயினால் பீடிக்கப்பட்டான். 165 அப்போது அவன், 'இன்னாரின் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் வீட்டில் வாலிப ஒட்டகத்திற்கு ஏற்படும் கொள்ளை நோய் போன்று (எனக்கும்) ஏற்பட்டுவிட்டது. எனவே, என்னுடைய குதிரையை என்னிடம் கொண்டு வாருங்கள்'' என்று கூறினான். பிறகு அவன் தன்னுடைய குதிரையின் முதுகின் மீதே இறந்தான்.

(என் தாய்) உம்மு சுலைம் அவர்களின் சகோதரர் ஹராம் இப்னு மில்ஹான்(ரலி) அவர்களும், கால் ஊனமுற்றவர் ஒருவரும், இன்னாரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களில் ஒருவரும் 166 (நபி - ஸல் அவர்களின் ஆணையின் பேரில் பனூ ஆமிர் குலத்தாரை நோக்கி) நடந்தார்கள். அப்போது ஹராம் அவர்கள், '(தம்மிரு சகாக்களை நோக்கி) 'நீங்கள் இருவரும் (எனக்கு) அருகிலேயே இருங்கள். நான் பனூ ஆமிர் குலத்தாரிடம் செல்கிறேன். அவர்கள் எனக்குப் பாதுகாப்பளித்தால் நீங்கள் (அப்படியே) இருங்கள். என்னை அவர்கள் கொன்றுவிட்டால் நீங்கள் உங்கள் சகாக்களிடம் சென்று (தெரிவித்து) விடுங்கள்'' என்று கூறினார்கள். (பிறகு, பனூ ஆமிர் குலத்தாரிடம் சென்று, அவர்களை நோக்கி,) 'எனக்குப் பாதுகாப்பளித்தால் நீங்கள் (அப்படியே) இருங்கள். என்னை அவர்கள் கொன்றுவிட்டால் நீங்கள் உங்கள் சகாக்களிடம் சென்று (தெரிவித்து) விடுங்கள்'' என்று கூறினார்கள். (பிறகு, பனூ ஆமிர் குலத்தாரிடம் சென்று, அவர்களை நோக்கி,) 'எனக்குப் பாதுகாப்புத் தருவீர்களா? இறைத்தூதர்(ஸல்) அவர்களின் தூதுச் செய்தியைத் தெரிவிக்கிறேன்'' என்று கேட்டுவிட்டு அவர்களிடம் (அச்செய்தியைப்) பேசலானார்கள். அப்போது அக்குலத்தார் ஒருவனுக்கு சைகை செய்ய, அவன் ஹராம்(ரலி) அவர்களுக்குப் பின்னால் வந்து அவர்களை (ஈட்டியால்) குத்திவிட்டான். அறிவிப்பாளர் ஹம்மாம் இப்னு யஹ்யா(ரஹ்) கூறினார்: 'ஈட்டியால் குத்தி (மறுபக்கம் வரை) செலுத்தினான்' என்று கூறினார்கள் என எண்ணுகிறேன். உடனே ஹராம் அவர்கள், 'அல்லாஹு அக்பர் அல்லாஹ் மிகப்பெரியவன், கஅபாவின் அதிபதி மீதாணையாக! நான் வெற்றி பெற்று விட்டேன்'' என்று கூறினார்கள். பிறகு அன்னாரின் உயிர் பிரிந்தது. கால் ஊனமுற்றவரைத் தவிர மற்ற அனைவரும் கொல்லப்பட்டனர். அந்த நேரத்தில் அந்த ஊனமுற்றவர் மலை உச்சியில் இருந்தார். பிறகு, (இச் சம்பவத்தில் உயிர்நீத்தவர்கள் தொடர்பாக) அல்லாஹ் எங்களின் மீது (ஒரு வசனத்தை) அருளினான். பிறகு அந்த வசனம் (அல்லாஹ்வின் ஆணையின்படி) நீக்கப்பட்டுவிட்டது. 'நாங்கள் எங்கள் இறைவனிடம் சென்று சேர்ந்து விட்டோம். அவன் எங்களைக் குறித்து திருப்தியடைந்தான். (அருள் வளங்களை அள்ளித் தந்து) எங்களை அவன் திருப்தியடையச் செய்தான்'' (என்பதே அந்த வசனம்). எனவே, நபி(ஸல்) அவர்கள், அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் விரோதமாக நடந்து கொண்ட ரிஃல், தக்வான், பனூ லிஹ்யான், மற்றும் உஸய்யா குலத்தாருக்கெதிராக முப்பது நாள் காலை(த் தொழுகை)யில் பிரார்த்தனை புரிந்தார்கள். 167

4092. அனஸ்(ரலி) அறிவித்தார்

'பிஃரு மஊனா' சம்பவத்தின்போது, என்னுடைய தாய்மாமாவாகிய ஹராம் இப்னு மில்ஹான்(ரலி) (ஈட்டியால்) குத்தப்பட்ட சமயத்தில், தம் காயத்திலிருந்து - இதோ இப்படி - ரத்தத்தை அள்ளி தம் முகத்தின் மீதும் தலையின் மீதும் தெளித்துக் கொண்டு, 'கஅபாவின் அதிபதி மீதாணையாக! நான் வெற்றி பெற்று விட்டேன்'' என்று கூறினார்கள்.

4093. ஆயிஷா(ரலி) அறிவித்தார்

(மக்கா இறைமறுப்பாளர்கள் கொடுத்த) தொல்லை கடுமையானபோது (மதீனாவுக்கு ஹிஜ்ரத்) புறப்பட அபூ பக்ர்(ரலி) நபி(ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், '(சற்று) பொறுங்கள்'' என்று கூறினார்கள். உடனே அவர்கள், 'இறைத்தூதர் அவர்களே! (அல்லாஹ்வின் தரப்பிலிருந்து நீங்கள் ஹிஜ்ரத் செல்ல) தங்களுக்கு அனுமதி வழங்கப்படுவதை எதிர்பார்க்கிறீர்களா?' என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், (''ஆம்'') நான அதனை நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறேன்'' என்று கூறிவந்தார்கள்.

ஆயிஷா(ரலி) கூறினார்: அபூ பக்ர்(ரலி) நபி(ஸல்) அவர்களை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தார்கள். பின்பு ஒரு நாள் இறைத்தூதர்(ஸல்) அவர்கள், லுஹர் நேரத்தில் அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் வந்து அவர்களை அழைத்தார்கள். மேலும் '(அபூ பக்ர் அவர்களே! நான் ரகசியம் பேசவேண்டும்) உங்களுடன் இருப்பவர்களை வெளியே செல்லும்படிக் கூறுங்கள்'' என்றும் கூறினார்கள். அதற்கு அபூ பக்ர்(ரலி) (என்னுடனிருக்கும்) இந்த இருவரும் என்னிரு பெண்மக்கள் (ஆயிஷாவும், அஸ்மாவும் தாம்'' என்று பதிலளித்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் (ஹிஜ்ரத் செய்து, மக்காவிலிருந்து) புறப்பட எனக்கு அனுமதி வழங்கப்பட்டுவிட்டது. உங்களுக்குத் தெரிந்ததா?' என்று கேட்டார்கள். அதற்கு, '(ஆம்) உடன் வருவதை விரும்புகிறேன்'' என்று கூறினார்கள். 'இறைத்தூதர் அவர்களே! என்னிடம் இரண்டு ஒட்டகங்கள் இருக்கின்றன. அவற்றை முன்கூட்டியே (ஹிஜ்ரத்) புறப்பட்டுச் செல்வதற்கென ஆயத்தமாக்கி வைத்துள்ளேன்'' என்று அபூ பக்ர்(ரலி) கூறினார். பின்பு, அவற்றில் ஒன்றை இறைத்தூதர்(ஸல்) அவர்கள். பின்பு, அவற்றில் ஒன்றை நபி(ஸல்) அவர்களுக்குக் கொடுத்தார்கள். அந்த ஒட்டகத்திற்கு 'ஜத்ஆ' என்று பெயர். பிறகு இருவரும் ஒளிந்து கொண்டனர். ஆமிர் இப்னு ஃபுஹைரா, என் தாய்வழிச் சசோகதரர் துஃபைல் இப்னு அப்தில்லாஹ் இப்னி சக்பரா அவர்களுக்கு அடிமையாக இருந்தார். மேலும் (என் தந்தை) அபூ பக்ர் அவர்களிடம் பால் தரும் ஒட்டகம் ஒன்றிருந்தது. ஆமிர் இப்னு ஃபுஹைரா அந்த ஒட்டகத்தை மக்காவாசிகளுடன் மதிய வேளையிலும் காலை வேளையிலும் ஓட்டிச் செல்லக் கூடியவராக இருந்தார். காலை நேரத்தில் மக்காவாசிகளுடன் இருக்கும் அவர், இரவின் கடைசி நேரத்தில் நபி(ஸல்) அவர்களிடமும் அபூ பக்ர்(ரலி) அவர்களிடமும் (அவர்களுக்கு ஒட்டகப் பால் தருவதற்காகச்) செல்வார். பிறகு அந்த ஒட்டகத்தை (மேய்ப்பதற்கு) ஓட்டிச் செல்வார். ஆனால், இடையர்களில் யாருக்கும் இது தெரியாது. நபி(ஸல்) அவர்கள் (குகையிலிருந்து அபூ பக்ருடன்) புறப்பட்டபோது அவ்விருவருடன் ஆமிர் இப்னு ஃபுஹைராகவும் புறப்பட்டார். மதீனா போய்ச் சேரும் வரையில் அவர்கள் இருவரும் (முறைமாற்றி) ஆமிரைத் தமக்குப் பின் அமர்த்திக் கொண்டனர். (பின்பு) பிஃரு மஊனா நாளில் ஆமிர் இப்னு ஃபுஹைரா கொல்லப்பட்டார். 168

உர்வா இப்னு ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

பிஃரு மஊனாவில் இருந்த (குர்ஆனை நன்கறிந்த)வர்கள் கொல்லப்பட்டு அம்ர் இப்னு உமய்யா அள்ளம்ரீ(ரலி) கைது செய்யப்பட்டபோது அன்னாரைப் பார்த்து ஆமிர் இப்னு துஃபைல், கொல்லப்பட்டுக் கிடந்த (உயிர்த் தியாகிகளில் ஒருவரைச் சுட்டிக்காட்டி, 'இவர் யார்?' என்று கேட்டான். அதற்கு அம்ர் இப்னு உமய்யா(ரலி)அவர்கள், 'இவர் ஆமிர் இப்னு ஃபுஹைரா'' என்று கூறினார். அதற்கு ஆமிர் இப்னு துஃபைல் 'இவர் கொல்லப்பட்ட பின்பு இவர் வானத்திற்கு உயர்த்தப்படுவதை கண்டேன். எந்த அளவுக்கென்றால் வானத்தை நான் நோக்கியபோது, வானத்திற்கும் பூமிக்கும் இடையில் அவர் இருந்தார். பிறகு அவர் (பூமியில்) வைக்கப்பட்டார்'' என்று கூறினான்.

(கொல்லப்பட்ட) அவர்களின் செய்தி நபி(ஸல்) அவர்களுக்கு (ஜிப்ரீல் - அலை - மூலம்) எட்டியது. அவர்கள் கொல்லப்பட்ட செய்தியினைத் தம் தோழர்களுக்கு (பின்வருமாறு) நபி(ஸல்) அவர்கள் தெரிவித்தார்கள். உங்கள் தோழர்கள் கொல்லப்பட்டுவிட்டனர். அவர்கள் தங்கள் இறைவனிடம், 'இறைவா! நாங்கள் உன்னைக் குறித்து திருப்தி கொண்டோம். நீ எங்களைக் குறித்து திருப்தி கொண்டாய்; எங்களைப் பற்றிய இச்செய்தியை எங்கள் சகோதரர்களுக்கு தெரிவித்துவிடுவாயாக!'' என்று கூறினர். எனவே, இறைவன் அவர்களைப் பற்றிய செய்தியை நமக்கு அறிவித்தான்.

அறிவிப்பாளர் உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) கூறினார்:

(பிஃரு மஊனா நிகழ்ச்சி நடந்த) அந்நாளில் அவர்களில் உர்வா இப்னு அஸ்மா இப்னி ஸல்த்(ரலி) அவர்களும் கொல்லப்பட்டார்கள். எனவேதான், (ஸுபைர் - ரலி - அவர்களின் மகனாகிய) எனக்கு அவரின் பெயர் சூட்டப்பட்டது. (அன்று) முன்திர் இப்னு அம்ர்(ரலி) அவர்களும் கொல்லப்பட்டார்கள். எனவேதான், (என் சகோதரர் முன்திர் இப்னு ஸுபைருக்கு) 'முன்திர்' எனப் பெயரிடப்பட்டது.

4094. அனஸ்(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் ஒரு மாத காலம் (தொழுகையில்) ருகூவிற்குப் பின்னால் 'குனூத்' (என்னும் சிறப்பு துஆ) ஓதினார்கள். (அதில்) ரிஅல், தக்வான் குலத்தாருக்கெதிராகப் பிரார்த்தித்தார்கள். மேலும், 'உஸய்யா குலத்தார் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்துவிட்டனர்'' என்று கூறுவார்கள்.

4095. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்

பிஃரு மஊனாவில் தம் தோழர்களைக் கொலை செய்தவர்களுக்கெதிராக நபி(ஸல்) அவர்கள் முப்பது நாள் காலை(த் தொழுகை)யில் பிரார்த்தித்தார்கள். அப்போது, அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்த உஸய்யா, ரிஅல், தக்வான், (பனூ) லிஹ்யான் குலத்தாருக்கெதிராகப் பிரார்த்தித்தார்கள்.

அனஸ்(ரலி) கூறினார்:

எனவே, இறைவன் தன்னுடைய தூதர்(ஸல்) அவர்களுக்கு பிஃரு மஊனாவில் கொல்லப்பட்டவர்களின் விஷயத்தில் குர்ஆன் வசனம் ஒன்றை அருளினான். அதை நாங்கள் ஓதிவந்தோம். பின்னர் (இறைவனால் அந்த வசனம்) நீக்கப்பட்டுவிட்டது.

(அந்த வசனம் இதுதான்:) 'நாங்கள் எங்கள் இறைவனைச் சந்தித்து விட்டோம். அவன் எங்களைக் குறித்துத் திருப்தியடைந்தான். நாங்களும் அவனைக் குறித்துத் திருப்தியடைந்தோம்' என்று எங்கள் சமுதாயத்தாரிடம் தெரிவித்து விடுங்கள். 169

4096. ஆஸிம் அல் அஹ்வல்(ரஹ்) அறிவித்தார்

நான், அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்களிடம் தொழுகையில் குனூத் (என்னும் சிறப்பு துஆ நபிகளார் காலத்தில் இருந்ததா என்பது) குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள், 'ஆம்'' என்று பதிலளித்தார்கள். உடனே நான், 'ருகூவிற்கு முன்பா? அல்லது பின்பா?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'ருகூஉவிற்கு முன்புதான்'' என்று பதிலளித்தார்கள். உடனே நான், 'தாங்கள் ருகூவிற்குப் பின்னால் தான் என்று சொன்னதாக இன்னார் எனக்குத் தெரிவித்தாரே'' என்று கேட்டேன். அதற்கு 'அவர் தவறாகக் கூறினார். நபி(ஸல்) அவர்கள் ருகூவிற்குப் பிறகு(ம் கூட) ஒரு மாத காலம் தான் குனூத் ஓதினார்கள். (அது எப்போது நடந்ததென்றால்) நபி(ஸல்) அவர்கள் 'குர்ரா திருக்குர்ஆனை நன்கறிந்தவர்கள்' என்று கூறப்பட்டு வந்த சிலரை - அவர்கள் எழுபது பேர் ஆவர் - இணைவைப்பவர்கள் சிலரிடம் அனுப்பி வைத்தார்கள். இவர்களின் தரப்பிலிருந்து நபி(ஸல்) அவர்களுக்கும் இவர்களுக்கும் இடையே (பரஸ்பரப் பாதுகாப்பு) ஒப்பந்தம் ஏற்பட்டிருந்தது. (இவ்வாறு) அல்லாஹ்வின் தூதருடன் ஒப்பந்தம் செய்து கொண்டிருந்த இவர்களின் கையோங்கி (அந்த 70 பேர்களையும் கொன்று)விட்டனர். எனவேதான், அவர்களுக்கெதிராக ஒரு மாத காலம் ருகூவிற்குப் பின்பு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'குனூத் ஓதினார்கள்'' என்று அனஸ்(ரலி) பதிலளித்தார்கள். 170

أحدث أقدم