- ஹசன் அலீ உமரி
இஜ்மா என்பது இஸ்லாமிய மார்க்கத்தில் மிக முக்கியமான ஓர் அம்சமாகும். அல்குர்ஆன், சுன்னாவிற்கு அடுத்து மூன்றாவது ஆதாரமாக இது குறிப்பிடப்படும்.
இஜ்மாவை குறித்த சில முக்கியமான தகவல்களை நாம் அறிந்திருப்பது அவசியமாக இருப்பதினால், அதுபற்றிய விபரங்களை இனி பார்ப்போம்,
1 - இஜ்மாவின் வரைவிலக்கணம்,
اتفاق جميع العلماء المجتهدين من أمة محمد صلى الله عليه وسلم بعد وفاته في أي عصر من العصور على أمر من امور الدين.
மார்க்க அம்சங்களில் ஏதேனும் ஒன்றின் மீது, நபி ஸல் அவர்களின் மரணத்திற்கு பிறகு, ஏதேனும் ஒரு காலத்தில், அவர்களின் உம்மத்தில் இருந்து முஜ்தஹித் அறிஞர்கள் அனைவரும் ஒன்றிணைவதற்கு பெயரே இஜ்மா ஆகும்.
2 - இஜ்மாவிற்கான ஆதாரம்,
ஆதாரம் (1)
وَمَنْ يُّشَاقِقِ الرَّسُوْلَ مِنْ بَعْدِ مَا تَبَيَّنَ لَـهُ الْهُدٰى وَ يَـتَّبِعْ غَيْرَ سَبِيْلِ الْمُؤْمِنِيْنَ نُوَلِّهٖ مَا تَوَلّٰى وَنُصْلِهٖ جَهَـنَّمَ وَسَآءَتْ مَصِيْرًا
இன்னும், நேரான வழி இன்னதென்று தனக்குத் தெளிவானதன் பின்னர் எவர், (நம்முடைய) இத்தூதருக்கு மாறு செய்து விசுவாசிகளின் வழியல்லாத (வேறுவழியான)தைப் பின்பற்றுகிறாரோ அவரை நாம், அவர் திரும்பிய (தவறான) வழியிலேயே திருப்பிவிடுவோம், (பின்னர்) அவரை நரகத்தில் புகுத்திவிடுவோம், அது சென்றடையுமிடத்தில் மிகக் கெட்டது.
(அல்குர்ஆன் : 4:115)
இந்த வசனத்தில்
(سبيل المؤمنين)
முஃமின்கள் என்று பன்மையாக குறிப்பிட்டு, அவர்களின் பாதையை பின்பற்றாமல் முரண்பட்டு செல்பவர்களின் பாதை, நரகத்திற்கு கொண்டு செல்லும் தவறான பாதையாகும் என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான். எனவே முஃமின்கள் எந்த விஷயங்களில் (இஜ்மா) ஒன்றுபடுகின்றார்களோ, அதனை கட்டாயமாக ஏற்க வேண்டும் என்பதை அறிய முடிகிறது.
ஆதாரம் (2)
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اَطِيْـعُوا اللّٰهَ وَاَطِيْـعُوا الرَّسُوْلَ وَاُولِى الْاَمْرِ مِنْكُمْ فَاِنْ تَنَازَعْتُمْ فِىْ شَىْءٍ فَرُدُّوْهُ اِلَى اللّٰهِ وَالرَّسُوْلِ اِنْ كُنْـتُمْ تُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَالْيَـوْمِ الْاٰخِرِ ذٰ لِكَ خَيْرٌ وَّاَحْسَنُ تَاْوِيْلًا
விசுவாசங்கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படியுங்கள், (அவனது) தூதருக்கும் கீழ்ப்படியுங்கள், இன்னும் உங்களில் (அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கீழ்ப்படிந்து நடக்கும்) அதிகாரம் உடைய (தலைவர்களுக்கும்) கீழ்ப்படியுங்கள், ஆனால் யாதொரு விஷயத்தில் நீங்கள் பிணங்கிக்கொண்டால், அதனை அல்லாஹ்விடமும் அவனது தூதரிடமும் திருப்பி ஒப்படைத்து விடுங்கள், (அவர்களுடைய தீர்ப்பை நீங்கள் திருப்தியாகவே ஏற்றுக் கொள்ளுங்கள்) மெய்யாகவே நீங்கள், அல்லாஹ்வையும் இறுதி நாளையும் விசுவாசங்கொண்டவர்களாக இருந்தால், இதுதான் நன்மையாகவும் மிக அழகான முடிவாகவும் இருக்கும்.
(அல்குர்ஆன் : 4:59)
இந்த வசனத்தில் அல்லாஹ், ஏதேனும் ஒரு விஷயத்தில் நீங்கள் கருத்து வேறுபாடு கொண்டால், அதனை அல்லாஹ்விடமும், அவனது தூதரிடமும் திருப்பி விடுங்கள் என்கிறான். இதற்கு மாற்றமாக கருத்து வேறுபாடு கொள்ளாமல், அனைவரும் ஒன்றிணைந்து விட்டால், அதனை ஆதாரமாக கொள்ள வேண்டும் என்பதை இந்த வசனத்திலிருந்து அறியலாம்.
ஆதாரம் (3)
عَنْ ابْنِ عُمَرَ رضي الله عنهما أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : ( إِنَّ اللَّهَ لَا يَجْمَعُ أُمَّتِي عَلَى ضَلَالَةٍ
அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் கூறினார்கள், நிச்சயமாக அல்லாஹ், எனது உம்மத்தை வழிகேட்டில் ஒன்றிணைக்க மாட்டான். (நூல்: திர்மிதி 2167 ஹசன்)
இந்த உம்மத்திலுள்ள அறிஞர்கள் அனைவரும், ஒரு விஷயத்தில் ஒன்றுபடுகிறார் எனில், அந்த விஷயம் சத்தியமானதாக தான் இருக்க வேண்டும். இதற்கு மாற்றாக அசத்தியத்தின் மீது, அவர்கள் அனைவரும் ஒன்றுபடுவது சாத்தியமற்றதாகும். ஏனெனில், அல்லாஹ் இந்த உம்மத்தை சிறந்த சமுதாயமாக ஆக்கி உள்ளான். அத்தகைய சிறப்பை பெற்ற அனைவரும், அசத்தியத்தின் மீது ஒன்றிணைவது சாத்தியமற்றதாகும்.
ஆதாரம் (4)
இஸ்லாமிய துறை சார்ந்த நூல்கள் அனைத்திலும், அஹ்லுஸ் ஸுன்னா அறிஞர்கள் இஜ்மாவை, ஆதாரமாக குறிப்பிட்டுள்ளார்கள். மேலும் மன்ஹஜ் ஸலஃப்பில், இஜ்மாவுஸ் ஸஹாபா பிரதான ஆதாரமாக இருக்கிறது.
ஆதாரம் (5)
மார்க்கத்தில் அவசியமாக அறியப்பட வேண்டிய அம்சங்களை குறித்த உறுதியான ஆதாரங்களை கொண்ட
(قطعي)
இஜ்மாவை, மறுப்பவர்களை, காஃபிர்கள் என அறிஞர்கள் தீர்ப்பளித்துள்ளார்கள்.
மேலே குறிப்பிட்ட ஆதாரங்களிலிருந்து இஜ்மாவின் முக்கியத்துவத்தை அறியலாம்.
3 - இஜ்மாவை ஆதாரமாக ஏன் ஏற்க வேண்டும்?
அல்குர்ஆன், சுன்னாவிலிருந்து தான் மார்க்க ஆதாரங்களை எடுக்க வேண்டும் என்றிருக்கும் போது, இஜ்மாவை ஆதாரமாக ஆக்க வேண்டிய அவசியமென்ன? என்ற கேள்விக்கு, இரண்டு முக்கியமான காரணங்களை குறிப்பிடலாம்.
முதலாவது: மார்க்க ஆதாரங்கள் அனைத்தையும் எல்லோராலும் அறிந்து கொள்ள முடியாது. எனவே இதுபோன்ற நிலையில், குறிப்பிட்ட ஓர் அம்சத்தின் மீது இஜ்மா உள்ளது என்று கூறப்பட்டால், அதில் தீர்க்கமான முடிவிற்கு அனைவரும் வந்து விட வேண்டும்.
இரண்டாவது: குறிப்பிட்ட ஓர் அம்சத்தின் மீது இஜ்மா உள்ளது என்று நிருபிக்கப்பட்டு விட்டால், அதில் முரண்படுவதற்கு யாருக்கும் அனுமதி இல்லை.
ஏனெனில் குறிப்பிட்ட அந்த விஷயத்தில், பின்வரக் கூடியவர்கள் முரண்படுவதற்கு அனுமதி உண்டென்றால், முன்சென்றவர்கள் ஏகமனதான ஒரு முடிவுக்கு வந்தே இருக்க மாட்டார்கள்.
உதாரணமாக அல்லாஹ், கணவனை இழந்த பெண்களுக்கான இத்தாவின் காலம் நான்கு மாதங்கள் மற்றும் பத்து நாட்கள் என்கிறான். பார்க்க அல்குர்ஆன் (2:234)
கணவனை இழந்த பெண், இளமையாக இருந்தாலும் சரியே! முதுமையை அடைந்திருந்தாலும் சரியே! கர்ப்பிணிகளை தவிர மற்ற அனைவருக்குமான இத்தா காலம் 4 மாதங்கள் மற்றும் 10 நாட்கள் ஆகும். இதில் இஜ்மா உள்ளது.
ஒருவர் ஆய்வு செய்கிறேன் என்ற பெயரில், கணவனை இழந்த பெண் முதுமையை அடைந்து விட்டால், அவர்களின் இத்தா காலம் 3 மாதங்கள் தான் என்று தீர்ப்பளிக்கிறார். அதற்கு ஆதாரமாக (65:4) வசனத்தை காட்டுகிறார்.
அவருக்கு பதிலளிக்கும் விதமாக, கணவனை இழந்த பெண் முதுமையை அடைந்தால், அவருக்கும் 4 மாதங்களும், 10 நாட்கள் தான் இத்தா என்பதில் இஜ்மா உள்ளது என்பதை தான் ஆதாரமாக காட்டப்படும். மேலும் இஜ்மாவிற்கு முரண்படக் கூடாது என்று எச்சரிக்கையும் செய்யப்படும்.
ஆக எந்தந்த விஷயங்களில், இஜ்மா ஏற்பட்டுள்ளது என்பது நிருபிக்கப்படுமோ, அத்தகைய அம்சங்களில், அனைவரும் ஒன்றுபட வேண்டும். அதற்கு முரண்படக் கூடாது என்பதே இஜ்மாவின் பிரதான அம்சமாகும்.
4 - இஜ்மாவை மறுத்தவர்கள்,
அஹ்லுஸ் ஸுன்னாவை சேர்ந்த அறிஞர்கள் அனைவரும், இஜ்மாவை முக்கியமான ஓர் ஆதாரமாக குறிப்பிட்டுள்ளார்கள். அவர்களில், எந்த ஒருவரும் இஜ்மாவை நிராகரிக்கவில்லை.
இஸ்லாமிய வரலாற்றில், கவாரிஜ்கள், ராபிழாக்கள், முஅதஜிலாக்கள் போன்ற வழிதவறிய கூட்டத்தினர் தான், அடிப்படையில் இஜ்மா என்ற ஒன்று இல்லவே இல்லை என்றும், அது நிகழ்வதற்கான வாய்ப்பும் இல்லை என்றும், அதனுடைய அசலையே மறுத்துள்ளார்கள்.
எனவே இஜ்மா என்ற அசலையே ஒருவர் மறுப்பது, வழிதவறி சென்றவர்களின் நிலைபாட்டை சரிகாண்பது போல் ஆகும்.
மார்க்கத்தில், இந்தளவு முக்கியத்துவம் அளிக்கப்பட இஜ்மாவை, அஹ்லுஸ் ஸுன்னா வழியில் ஆதாரமாக கொண்டு, நேர்வழியில் பயணிப்போம்!
அல்லாஹ் அருள்புரிவானாக!
40 ஆண்டுகால தடம் புரளாத சத்திய (?) பிரச்சாரமும் - தடம் தெரியாமல் ஆக்கப்பட்ட இஜ்மாவும்!
1 - இஜ்மா, மார்க்கத்தில் முக்கியமான ஓர் ஆதாரமாகும். நேர்வழியில் இருந்து தடம் புரளாமல் இருப்பதற்கான கேடயமாகும். அஹ்லுஸ் ஸுன்னா இமாம்கள் அனைவரும் இதனை ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.
வழிதவறி போன ஷியாக்கள், கவாரிஜ்கள், முஅதஜிலாக்கள் தான், இஜ்மாவை மறுத்தவர்கள்.
2 - இமாம் அஹ்மத் பின் ஹம்பல் ரஹ், ஷெய்க் அல்பானி ரஹ் போன்ற அறிஞர்கள், இஜ்மாவை ஏற்க மறுத்தார்கள் என்று சிலரால் கூறப்படும்.
இது பிழையான கருத்தாகும். இமாம் அஹ்மத் பின் ஹம்பல் ரஹ் அவர்கள், இஜ்மாவை ஆதாரமாக ஏற்று உள்ளார்கள் என்பதற்கு பல சான்றுகள் உள்ளது.
உதாரணத்திற்கு: ஸஹாபாக்கள் அனைவரும் ஒரு கருத்தில் ஒன்றிணைந்து விட்டால், அதனை ஏற்பது கட்டாயமாகும் என்று இமாம் அவர்கள் கூறியுள்ளார்கள்.
கருத்து வேறுபாடுகள் உள்ள விஷயத்தில், முறையான ஆய்வில்லாமல் இஜ்மா உள்ளது என்று கூறப்பட்ட இஜ்மாவை தான் அவர்கள் மறுத்தார்கள்.
ஷெய்க் அல்பானி ரஹ் அவர்கள் தன்னுடைய உரைகளிலும், நூல்களிலும் இஜ்மாவை ஆதாரமாக ஏற்கவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்கள்.
3 - தமிழகத்தில் PJ & TNTJ அமைப்பினர் இஜ்மாவை மறுத்தது போல், JAQH அமைப்பினரும் இஜ்மாவை மறுத்துள்ளார்கள்.
ஜாக் அமைப்பினர் தங்களின் 40 ஆண்டுகால தாவா களத்தில், இஜ்மாவை உறுதிப்படுத்தி பிரச்சாரம் செய்யவில்லை. PJ அவர்களை விட்டு பிரிந்து சென்ற பிறகும் கூட அல்குர்ஆன் மற்றும் சுன்னாவை மட்டுமே மார்க்கத்தின் ஆதாரமாக பிரச்சாரம் செய்து வந்தார்கள்.
2006 ஆம் ஆண்டு ஜம்மிய்யதே அஹ்லே ஹதீஸ் அமைப்பின் அறிஞர்களாகிய ஷெய்க் அனீஸுர் ரஹ்மான் மதனி ஹஃபிலஹுல்லாஹ், ஷெய்க் ஆர்.கே நூர் முஹம்மத் ரஹிமஹுல்லாஹ் ஆகியோரின் முயற்சியினால், மன்ஹஜ் ஸலஃபை ஏற்றுக் கொள்வதாக அறிவிப்பு செய்தார்கள்.
ஒருபுறம் மன்ஹஜ் ஸலஃபை ஏற்பதாக கூறிக் கொண்டு, மறுபுறம் மன்ஹஜ் ஸலஃபில் பிரதான ஆதாரமாக காட்டப்படும் இஜ்மாவை உறுதிப்படுத்தாமல், அதனை மறுக்கின்ற விதமாக தான் தங்களின் பிரச்சாரத்தை அமைத்துக் கொண்டார்கள்.
ஸஹீஹான ஹதீஸ்களை மறுக்கும் PJ விற்கு மறுப்பளிக்கும் போது, நீங்களும் இஜ்மாவை ஆதாரமாக ஏற்பதில்லை. நாங்களும் இஜ்மாவை ஆதாரமாக ஏற்பதில்லை என்று JAQH அமைப்பின் ஒரு மௌலவி மக்கள் முன்னிலையில் பிரகடனம் செய்வார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு, இப்போது மாநில பொறுப்பில் இருக்கும் ஓர் ஆலிம், கணவனை இழந்த வயதான பெண்களின் இத்தா காலம் 3 மாதங்கள் தான் என்று தீர்ப்பளித்தார். இந்த தகவல் எனக்கு கிடைத்ததும் நான் அவரை தொடர்பு கொண்டு, கணவனை இழந்த அனைத்து பெண்களுக்குமான (கர்ப்பிணிகளை தவிர) இத்தா காலம் 4 மாதங்கள் மற்றும் 10 நாட்கள் ஆகும். இதற்கு தெளிவான ஆதாரங்கள் (2: 234) உள்ளது. மேலும் இதில் இஜ்மாவும் உள்ளது என்று கூறினேன்.
அதற்கு அந்த ஆலிம், 3 மாதங்கள் தான் என்பதற்கு என்னிடம் ஆதாரம் (65:4)உள்ளது என்றார். அதற்கு நான் நீங்கள் குறிப்பிட்ட வசனம் தலாக் பற்றி பேசுகிறது. கணவனை இழந்த பெண்களை பற்றி பேசவில்லை. இது ஓர் இஜ்மாவான அம்சம் என்று திரும்ப திரும்ப கூறியதற்கு பிறகும், இஜ்மாவிற்கு முரண்பட கூடாது என்பதை அறியாமல், அந்த ஆலிம் 3 மாதங்கள் தான் இத்தா என்று தன்னுடைய கருத்தையே திரும்ப திரும்ப கூறினார்.
ஜாக் அமைப்பில் இருக்கும் ஆலிம்களே, இஜ்மாவை பற்றி தெளிவில்லாமல் இருக்கிறார்கள் என்றால், அதில் அங்கம் வகிக்கும் பாமர மக்களின் நிலையை பற்றி என்ன சொல்வது?
4 - இஜ்மாவை ஏற்காமல் மறுத்துக் கொண்டு, 40 ஆண்டுகால தடம் புரளாத சத்திய பிரச்சாரம் என்று சொல்லிக் கொள்வதினால், அது சத்திய பிரச்சாரமாக ஆகிவிடாது.
العبرة ليست بالمسميات العبرة بالحقائق
ஜாக்கில் இருக்கும் பல ஆலிம்கள், பொது மக்கள் இஜ்மாவை ஏற்காமல் இருந்தாலும், தற்போதுள்ள ஒரு சில இளம் ஆலிம்கள், இஜ்மாவை அறிந்து ஏற்று உள்ளார்கள். (அல்ஹம்து லில்லாஹ்)
இஜ்மாவை பற்றிய தெளிவை, ஜாக் அமைப்பினர் அறிந்து, அதனடிப்படையில் சத்திய பிரச்சாரத்தை செய்ய வேண்டும்.
அல்லாஹ் அருள்புரிவானாக!
இஜ்மாவை அறிவதின் அவசியம்!
தமிழகத்தில், தவ்ஹீத் பேசும் இயக்கங்கள் இஜ்மாவை ஆதாரமாக ஏற்காமல், அதனை நிராகரித்துள்ளார்கள். இதனால் தவ்ஹீத் பேசும் மக்களிடம், பல வழிகேடுகள் உருவாகி விட்டது. உதாரணத்திற்கு: அல்லாஹ்வின் பண்புகளுக்கு மாற்று பொருள் தருவது, ஹதீஸ் நிராகரிப்பு கொள்கை.
எனவே இஜ்மா பற்றிய அடிப்படையான தகவல்களை அறிஞர்கள் அறிந்திருப்பது போல், மற்ற முஸ்லிம்களும் அறிய வேண்டும்.
அதற்கான காரணங்கள்,
1 - இஜ்மா என்பது, மூல ஆதாராமா? அல்லது துணை ஆதாரமா? என்பதில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அது முக்கியமான ஓர் ஆதாரம் என்பதை அனைவரும் ஒப்புக் கொண்டுள்ளனர். எனவே அந்த ஆதாரத்தை பற்றிய அடிப்படையான அம்சங்களை அறிந்து, அதற்கு முரண்படாமல் இருப்பது அனைவருக்கும் அவசியமாகும்.
2 - மன்ஹஜ் ஸலஃப்பில் இஜ்மாவுஸ் ஸஹாபா பிரதானமான ஓர் ஆதாரமாகும். பொது மக்களுக்கு மன்ஹஜ் ஸலஃப்பை சொல்லும் போது, இஜ்மாவையும் தெரியப்படுத்துவது அவசியமாக இருக்கிறது. இஜ்மாவை தெரியப்படுத்தாமல், மன்ஹஜ் ஸலஃப்பை விளக்க முடியாது.
3 - இஜ்மா நிருபணமான அம்சங்களின் மீது உறுதித்தன்மை பலமாகும். மேலும் அதற்கு முரண்படுவது வழிகேட்டில் தள்ளும் என்பதை, அறிஞர்களுடன் அவாம்களும் அறிந்திட வேண்டும். அப்போது தான் அவர்கள், நேர்வழியில் தடம் புரளாமல் இருக்க முடியும்.
4 - தமிழக தாவா களத்தில், மன்ஹஜ் ஸலஃப்பையும், இஜ்மாவையும் முறையாக கூறப்படாமல் விட்டதே, தவ்ஹீத் பெயரில் பல குழப்பங்கள் தோன்றுவதற்கு காரணமாக அமைந்து விட்டது.
உதாரணத்திற்கு: புகாரி மற்றும் முஸ்லிமில் வந்துள்ள ஹதீஸ்களில் விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சில ஹதீஸ்களை தவிர்த்து, மற்ற அனைத்து ஹதீஸ்களும் ஆதாரப்பூர்வமானவை. மேலும் அந்த ஹதீஸ்கள் அனைத்தும், இமாம் புகாரி மற்றும் இமாம் முஸ்லிமின் நிபந்தனைகளுக்கு உட்பட்டவை என்பதில், இந்த உம்மத்தின் இஜ்மா உள்ளது. இதனை அனைவருமே ஏற்றுக் கொண்டுள்ளார்கள். இதற்கு முரண்படக் கூடாது.
இந்த சத்திய பிரச்சாரத்தை தமிழ் பேசும் மக்களிடம் அன்றே செய்திருந்தால், PJ வின் ஹதீஸ் மறுப்பு கொள்கை தோன்றிய போதே, மக்கள் அதனை தூக்கி குப்பையில் போட்டிருப்பார்கள். ஹதீஸ் மறுப்பு கொள்கையை விட்டு மக்கள் விலகி இருந்திருப்பார்கள்.
குறிப்பு: அந்த விரல் விட்டு எண்ணக்கூடிய ஹதீஸ்களில் கூட ஒன்றிரண்டை தவிர, இமாம் புகாரி ரஹ் மற்றும் இமாம் முஸ்லிம் ரஹ் அவர்களின் நிபந்தனைக்குட்பட்டவை அல்ல என்று தான் விமர்சிக்கப்பட்டுள்ளது. ஆதாரமற்றவை என்று விமர்சிக்கப்படவில்லை.
5 - இஜ்திஹாத் தரத்தை அடைந்த அறிஞர்கள், மார்க்கத்தில் ஒரு விஷயத்தின் மீது ஆய்வு செய்து ஒன்றிணைந்து விட்டார்கள் என்பதை, முஸ்லிம் பொது மக்கள் அறிந்து கொண்டால் அதனை ஏற்பதுடன், அதற்கு முரண்படாமல் இருப்பது அவசியமாகும்.!