மார்க்க கல்வி

ரிஸ்(Z)க் என்ற நிஃமத்தை தேடுகிறேன் என்ற பெயரில் மகத்தான நிஃமத்தை மறந்துவிட வேண்டாம். அந்த மகத்தான நிஃமத் என்பது எது?

அல்லாஹ்வுடைய நிஃமத்துக்கள் இரண்டு வகைப்படும். 
نعمة مطلقة பொதுவான அருட்கொடை
نعمة مقيدة குறிப்பான அருட்கொடை

காபிர்கள் கூட அல்லாஹ்வின் நிஃமத்தை கொண்டுதான் இந்த உலகில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் உண்ணுவதும் பருகுவதும் ஆடைகள் அணிவதும் வாழ்வதும் அல்லாஹ்வின் அருட்கொடைகள் ஆகும். காஃபிர்களாக இருந்தாலும் சரி அல்லது முஸ்லிம்களாக இருந்தாலும் சரி அனைவருமே அல்லாஹ்வின் அருளை கொண்டே இந்த உலகத்தில் வாழ்கிறார்கள். இதற்குப் பெயர்தான் பொதுவான அருட்கொடை (نعمة مطلقة) ஆகும். 

ஆனால் அல்லாஹ் நம்மிடமிருந்து எதிர்ப்பார்க்கும் அருட்கொடை (நிஃமத்) என்னவென்றால், அதுதான் குறிப்பான அருட்கொடை (نعمة مقيدة) ஆகும். இந்த நிஃமத்தை தான் அல்லாஹ் ஸுபஹானஹு வ தஆலா அல் குர்ஆனில் குறிப்பிட்டு காட்டுகிறான்:

وَأَتۡمَمۡتُ عَلَيۡكُمۡ نِعۡمَتِي وَرَضِيتُ لَكُمُ ٱلۡإِسۡلَٰمَ دِينٗاۚ 

என் அருளையும் (நிஃமத்) உங்கள் மீது முழுமையாக்கி வைத்துவிட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கு மார்க்கமாக பொருந்திக் கொண்டேன். (அங்கீகரித்துக் கொண்டேன்).
[அல் குர்ஆன் 5:3]

அல்லாஹ் பரிபூரணம் செய்து தந்த நிஃமத்துதான் அவனுடைய தீன் ஆகும். இது குறிப்பான அருட்கொடை (نعمة مقيدة) ஆகும். இந்த நிஃமத்தை அடைவதற்கு முயற்சிக்க வேண்டும். அதற்காக அதைத் தேடி கற்றுக்கொண்டு நமது வாழ்க்கையில் அதன்படி நடக்க முயற்சிக்க வேண்டும். இந்த நிஃமத்தை அல்லாஹ் தான் நாடியவருக்கு மட்டும் வழங்குகிறான். இந்த நிஃமத்தை அல்லாஹ் யாருக்கு வழங்கி விட்டானோ அவர் மேலான ஒரு நிஃமத்தை அடைந்தவராக ஆகிவிடுவார். யாருக்கு இந்த நிஃமத்தை அல்லாஹ் வழங்கவில்லையோ அவர் இந்த உலகத்திலும் நஷ்டவாளி நாளை மறுமையிலும் நஷ்டவாளி ஆகிவிடுவார். والعياذ بالله. அல்லாஹ் தான் நம் அனைவரையும் அதிலிருந்து பாதுகாக்க வேண்டும்.

எனவே அல்லாஹ் தந்த இந்த நிஃமத்தை (அல் குர்ஆன், அஸ் ஸுன்னா - அல் இஸ்லாம்) நாம்  பாதுகாத்து கொள்ள வேண்டும். இதைவிட வேறு பெரிய அருட்கொடை இருக்க முடியாது.

நாம் அல்லாஹ்விடமிருந்து நிஃமத்துக்களை  எதிர்பார்க்கின்றோம். உதாரணத்திற்கு, 

ஒருவர் தன்னுடைய வியாபாரத்தில் பரக்கத் வேண்டி அந்த எண்ணத்துடன் பஜர் தொழுகையை ஜமாஅத்துடன் தொழுகிறார். ஆனால் உண்மையான முஸ்லிம் அல்லாஹ்வின் பொருத்தத்தை தேடி வணக்க வழிபாடுகளை செய்யக் கூடியவராக இருப்பார்.

ரிஸ்க் என்ற நிஃமத்தை அல்லாஹ்விடமிருந்து எதிர்பார்க்கிறோம்; ஆனால் அதை தேடுகிறேன் என்ற பெயரில்  இந்த மேலான நிஃமத்தாகிய அவனுடைய தீனை மறந்துவிடக்கூடாது. பரக்கத்திலே மிகச்சிறந்த பரக்கத் அல்லாஹ்வுடைய தீனை கற்றுக்கொண்டு அமல் செய்வதாகும்.

ரசூலுல்லாஹ் ﷺ அவர்கள் கூறினார்கள்:

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ طَلَبُ الْعِلْمِ فَرِيضَةٌ عَلَى كُلِّ مُسْلِمٍ

224 سنن ابن ماجه  

மார்க்க கல்வி கற்பது ஒவ்வொரு முஸ்லிம் மீதும் கடமை.
இப்னு மாஜா 224

ஆகவே மார்க்க கல்வி கற்பது ஒவ்வொரு முஸ்லிம் மீதும் கடமையாகும். இத்தகைய கட்டாயக் கடமையான மார்க்கக் கல்வியை கற்பதற்கு தினமும் நாம் எத்தனை மணி நேரம் ஒதுக்குகிறோம்.?

رَّبِّ زِدۡنِي عِلۡمٗا

‘‘என் இறைவனே! என் கல்வி ஞானத்தை மேலும் அதிகப்படுத்து'' 
அல்குர்ஆன் 20: 114

கல்வி என்ற ஆயுதம் தான் பாதுகாக்கும்

அஷ்ஷைய்க் ஸாலிஹ் அல் ஃபவ்ஸான் (ஹஃபிளஹுல்லாஹ்) கூறினார்கள்:

கல்வி  என்பது சந்தேகத்திற்குரிய விடயங்களை அறிந்து கொள்ளும் ஆயுதமாகும்...

உன்னுடைய ஆயுதமாக நீ குர்ஆனை-யும் சுன்னாவை-யும் எடுத்துக் கொண்டால் ஒருபோதும் தோல்வியடைய மாட்டாய்...

ஆனால் உன்னிடம் கல்வி (எனும் ஆயுதம்) இல்லையென்றால் நீ முதல் சந்தேகத்திலேயே தோற்கடிக்கப்படுவாய்..
ஷர்ஹு நூநிய்யதில் ஃபவ்ஸான் 176/1

قال الشيخ صالح بن فوزان الفوزان
حفظه الله

العلم سلاح في معركة الشبهات .

فإذا تسلحت بالكتاب و السنة  فأنت لاتغلب أبدا.

لكن إذا لم  يكن عندك علم تذهب مع أول شبهه .

 شرح النونية الفوزان176/1

قناة.العلامة.الفقيه.صالح.بن.الفوزان .حفظه.الله.tt
تهتم بنشر كل مايتعلق بالشيخ من علوم

மார்க்கக் கல்வியை கற்றுக் கொடுக்கும் ஆசிரியருடன் நடந்து கொள்ள வேண்டிய வழிமுறைகளும் ஒழுக்கங்களும்:

அறிவைக் கற்றுக் கொடுப்பவருடன் மரியாதையாக நடந்து கொள்ளுதல்; அவர் கற்றுத் தரும் விடயங்கள் தனக்கு மிக அவசியமானவைகள் என்று வெளிக்காட்டுதல் போன்ற வழிமுறைகள் அறிவைத் தேடும் ஒவ்வொரு மாணவரிடமும் இருக்க வேண்டிய முக்கியமான ஒழுக்கங்களாகும்.

ஹழிர் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அறிவைத் தேடிச் சென்ற போது அவருடன் நடந்து கொண்ட முறை எமக்கு இப் பாடத்தை மிக அழகிய வடிவில் கற்றுத் தருகிறது.

மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஹழிர் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடன் உரையாடிய அழகிய வார்தைகள், அவர்களுடன் நடந்து கொண்ட ஒழுக்க விழுமியங்களை பின்வருமாறு அல்லாஹ் தபாரக வதஆலா தெளிவுபடுத்துகிறான் :

قَالَ لَهٗ مُوْسٰى هَلْ اَتَّبِعُكَ عَلٰٓى اَنْ تُعَلِّمَنِ مِمَّا عُلِّمْتَ رُشْدًا‏
((உங்களுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்ட பயனளிக்கக்கூடியவற்றை நீங்கள் எனக்குக் கற்பிக்கும் பொருட்டு, உங்களை நான் பின் தொடரட்டுமா? என்று அவரிடம் மூஸா கேட்டார்.)) [சூரா அல் கஹ்ப்: 66]

இமாம் அப்துல் ரஹ்மான் இப்னு நாஸிர் அஸ் ஸஃதீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்:

மேற் குறிப்பிடப்பட்ட இவ் வசனமானது அறிவைக் கற்றுத்தருபவருடன் ஒழுக்கமான முறையில் நடந்து கொள்ள வேண்டும் என்பதை உணர்த்துகிறது, மேலும் கற்றுக் கொள்பவர் மிக மென்மையான வார்த்தைகளை கொண்டு கற்பிப்பவருடன் உரையாட வேண்டும் என்ற விடயத்தையும் உணர்த்துகிறது. மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய கூற்றைப் போன்று:
((உங்களுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்ட பயனளிக்கக்கூடியவற்றை நீங்கள் எனக்குக் கற்பிக்கும் பொருட்டு, உங்களை நான் பின் தொடரட்டுமா?)) 

எனவே இங்கு மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தன்னுடைய வேண்டுகோளை மரியாதையுடனும் மேலும் ஆலோசனை வடிவிலும் வெளிப்படுத்தியுள்ளார். மேலும் அதற்கு நீங்கள் எனக்கு அனுமதி அளிப்பீர்களா, இல்லையா என்றும் வினவியுள்ளார்; அதற்கு அவரிடம் இருந்து கற்றுக் கொள்ளலாம் என்று (ஹழிர் அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் ஒப்புக் கொண்டார்கள். 

முட்டாள்தனமான மேலும் ஆணவம் கொண்டவர்களுக்கு மாறாக; தாம் அறிவின் பக்கம் தேவையுடையவர்கள் என்பதை; கற்றுக் கொடுக்கும் ஆசானிடம் வெளிப்படுத்தாதவர்கள் இவர்களுக்கு (மூஸா அலைஹிஸ்ஸலாம்) மாற்றமாக இருந்துள்ளார்.

ஆனால் இவர்களோ! அவர் அவர்களுடனும் அவர்கள் அவருடனும் ஒத்துழைப்புடன் நடந்து கொள்வதாக  கூறுகின்றார்கள், மாறாக சிலர் நான்தான் ஆசானுக்கு கற்றுக் கொடுப்பதாகக் கூட எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவரோ மிக முட்டாளாக, மிக (ஜாஹில்) அறியாதவராகவே இருக்கிறார். 

ஆசிரியருக்கு மறியாதை செலுத்தி, அவர் கற்றுக் கொடுக்கக் கூடிய விடயங்கள் தனக்கு மிக அவசியமானவைகள் என்று வெளிக்காட்டுவது இல்மை கற்றுக் கொள்ளும் மாணவருக்கு மிக பயனுள்ள விடயமாகும்.

நூல்: தைசீர் அல் கரீமுர் ரஹ்மான் 482 பக்கம்.

மார்க்கக் கல்வியை சுமக்கும் உலமாக்களின் முக்கியத்துவமும் அவர்கள் இல்லாமல் போவதால் ஏற்படும் வழிகேடுகளும்:

ரசூலுல்லாஹ் ﷺ அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ், மக்களி(ன் மனங்களி)லிருந்து கல்வியை ஒரேயடியாகப் பறித்துக்கொள்ள மாட்டான். மாறாக, உலமாக்களை கைப்பற்றிக் கொள்வதன் மூலம் கல்வியைக் கைப்பற்றுகிறான். இறுதியில் ஒரு ஆலிம் கூட அவன் விட்டுவைக்காதபோது, மக்கள் அறிவீனர்களையே தலைவர்களாக ஆக்கிக்கொள்வார்கள். அவர்களிடம் கேள்வி கேட்கப்படும். அறிவில்லாமலேயே அவர்கள் தீர்ப்பு வழங்குவார்கள். (இதன் மூலம்) தாமும் வழிதவறி, பிறரையும் வழிதவறச் செய்வார்கள்.

நூல்: முஸ்லிம் 5191

கட்டாயக் கடமையான மார்க்கக் கல்வியை யாரிடமிருந்து கற்றுக் கொள்கிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில் தவறான கல்வி கற்க நேரிடும்:

தாபிஈ இமாம் முஹம்மத் இப்னு சீரீன் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்:

إن هذا العلم دين، فانظروا عمن تأخذون دينكم

 நிச்சயமாக இந்த கல்வியென்பது தீன் ஆகும். எனவே, உங்களுடைய மார்க்க கல்வியை எவரிடமிருந்து எடுக்கின்றீர்கள் என்பதை பார்த்துக் கொள்ளுங்கள். 

நூல்: ஸஹீஹ் முஸ்லிம், முன்னுரை.

நீங்கள் யாரிடம் இருந்து கல்வியை எடுக்கின்றீர்கள்?  அவரை குறித்து முன்சென்ற ஸலஃப்  உலமாக்கள் என்ன கூறி உள்ளார்கள்?:

முஆத் இப்னு ஜபல் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மரணத்தருவாயில்; சில சஹாபாக்களும் தபியீன்களும் தங்களுக்கு உபதேசம் செய்யுமாறு வேண்டிக் கொண்டார்கள்; நீங்கள் அனைவரும் உட்காருங்கள் என்று கூறினார்; பின்பு மாணவர்களான தாபியீன்களுக்கு பின்வருமாறு உபதேசம் செய்தார்கள்:

நிச்சயமாக அறிவும் ஈமானும் அதன் இடங்களில் உறுதியாக இருக்கிறது. யாரெல்லாம் அதை தேடிச் செல்கிறார்களோ அதை அவர்கள் அடைந்து கொள்வார்கள். என்று மூன்று முறை கூறினார்கள்;

பிறகு, உவைமிர் அபூ-தர்தா, ஸல்மான் அல்-பாரிஸி, அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத், மேலும் யூதராக இருந்த அப்துல்லாஹ் இப்னு ஸலாம் ரலியல்லாஹு அன்ஹும் போன்ற நான்கு ஸஹாபா உலமாக்களைக் கூறி அவர்களிடம் சென்று நீங்கள் அறிவைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று கூறினார்கள். 

நூல்: திர்மிதி 3804, அஹ்மத் 22104


ரசூலுல்லாஹ் ﷺ முன்னறிவித்த மார்க்க அறிவற்ற மடையர்கள் "ருவைபிலா" பேசுகிறார்கள் உஷார்!:

 أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ 

سَيَأْتِي عَلَى النَّاسِ سَنَوَاتٌ خَدَّاعَاتُ يُصَدَّقُ فِيهَا الْكَاذِبُ وَيُكَذَّبُ فِيهَا الصَّادِقُ وَيُؤْتَمَنُ فِيهَا الْخَائِنُ وَيُخَوَّنُ فِيهَا الْأَمِينُ وَيَنْطِقُ فِيهَا الرُّوَيْبِضَةُ قِيلَ وَمَا الرُّوَيْبِضَةُ قَالَ الرَّجُلُ التَّافِهُ فِي أَمْرِ الْعَامَّةِ

4036 سنن ابن ماجه كتاب الفتن باب شدة الزمان

3277 المحدث الألباني خلاصة حكم المحدث صحيح في صحيح ابن ماجه

ரசூலுல்லாஹ் ﷺ கூறினார்கள்:

மக்கள் மீது ஒரு காலம் வரும் அந்த குழப்பமான காலத்தில் அமானிதங்கள் பாழ்படுத்தப்படும். மோசடிக்காரர்கள் அமானிதத்தை பேணுபவர்களாக பார்க்கப் படுவார்கள். அமானிதத்தைப் பேணுபவர்கள்  மோசடிக்காரர்களாக பார்க்கப்படுவார்கள். அந்த காலத்தில் பொய் பேசக் கூடியவன் உண்மை பேசப்படுவதாக கருதப்படுவான்; உண்மை பேசுபவன் பொய்யனாக கருதப்படுவான். அந்தக் காலத்தில் ருவைபிலா பேசுவார்கள். ருவைபிலா என்றால் யார்? என்று கேட்கப்பட்டது, "மக்களுடைய பொது விஷயங்களை குறித்து மார்க்க அறிவு இல்லாமல் பேசும் மடையன்" என்று ரசூலுல்லாஹ் ﷺ கூறினார்கள்.

நூல்: இப்னு மாஜா 4036, தரம்: ஸஹீஹ், ஷெய்க் அல்பானி

மார்க்க அறிவை உயர்த்த வேண்டும்;  அதை பரப்ப வேண்டும்; அதை கொண்டு தலையை தூக்க வேண்டும். இதில்தான் கண்ணியமும் பாதுகாப்பும் இருக்கிறது:

فنعش العلم ثبات الدين والدنيا

மார்க்க அறிவை கற்று அதனை மக்கள் மத்தியில் பரப்பினால்; அல்லாஹ் எங்களை கண்ணியப்படுத்துவான் மேலும் காபிர்களுக்கு மத்தியில் நாம் தலை நிமிர்ந்து வாழலாம். அதுவரையில் எம்மால் கண்ணியத்தையும் தலை நிமிர்ந்து வாழ்வதையும் எதிர்பார்க்க முடியாது. மார்க்க அறிவை கொண்டுதான் இம்மை மறுமையின் பாதுகாப்பு இருக்கிறது. (இமாம் அஸ் ஸூஹ்ரி ரஹிமஹுல்லாஹ், الاعتصام بالسنة نجاة )

أحدث أقدم