துல் கஃதஹ் மாதம் இஸ்லாமிய அறபி மாதங்களில் (11) பதினோராவது மாதமாகும்.
துல் கஃதஹ் மாதம் என்பதன் அர்த்தம்: அமர்ந்திருப்பதற்குரிய மாதம் என்பதாகும்.
அரேபியர்கள் இம்மாதத்தில் யுத்தத்தை நிறுத்தி அடங்கியிருப்பார்கள்; ஹஜ்ஜுக்காகத் தயாராவார்கள் என்பது இப்பெயர் வருவதற்கான காரணமாகக் குறிப்பிடப்படுகிறது.
யுத்தம் செய்வதற்குத் தடை செய்யப்பட்ட நான்கு மாதங்களின் வரிசையில் முதலாவதாக இடம்பெறுவது இம்மாதமாகும். பார்க்க: புகாரி 3197, முஸ்லிம் 1679
யுத்தம் தடை செய்யப்பட்ட மாதங்களாவன: துல் கஃதஹ்(11), துல் ஹிஜ்ஜஹ்(12), முஹர்ரம்(1), றஜப்(7) ஆகிய மாதங்களாகும்.
பார்க்க: அல்குர்ஆன் 9:36
யுத்தம் தடை செய்யப்பட்ட மாதங்களில் பாவம் செய்வது ஏனைய மாதங்களில் பாவம் செய்வதை விடப் பாரதூரமானதாகும் என்று மேற்படி குர்ஆன் வசனத்திலிருந்து பல முபஸிர்கள் விளக்கியுள்ளார்கள்.
அதேபோன்று இது ஹஜ்ஜுக்குரிய இஹ்றாமை ஆரம்பிக்க முடியுமான ஹஜ்ஜுடைய மூன்று மாதங்களில் ஒரு மாதமாகும்.
ஹஜ்ஜுடைய மூன்று மாதங்களாவன: ஷவ்வால்(10), துல் கஃதஹ்(11), துல் ஹிஜ்ஜஹ்(12) ஆகியவையாகும்.
பார்க்க: அல்குர்ஆன் 2:197, புகாரி 1560 ஹதீஸுக்கு முன் உள்ள தலைப்பு மற்றும் ஃபதுஹுல் பாரி.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நான்கு முறை உம்றஹ் செய்திருக்கிறார்கள். அவற்றில் மூன்று முறைகள் இந்த துல் கஃதஹ் மாதத்தில் தான் செய்திருக்கிறார்கள். நான்காவது முறையானது அவர்கள் செய்த ஹஜ்ஜுடன் செய்த உம்றாவாகும். அதற்கான இஹ்றாமும் இம்மாதத்தில் தான் ஆரம்பிக்கப்பட்டது.
1. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவர்களுடைய முதலாவது உம்றஹ்வை ஹிஜ்றஹ்வுக்குப் பிறகு ஆறாவது ஆண்டு நிறைவேற்றச் சென்றார்கள். எனினும் அவர்களை முஷ்ரிக்கள் ஹுதைபியஹ் எனுமிடத்தில் வைத்து அந்த வருடம் மக்கஹ்விற்குள் நுழையவிடாமல் தடுத்தார்கள். இந்த இடத்தில் தான் மக்கஹ் முஷ்ரிக்களுடன் ஹுதைபியஹ் ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது. பின்னர், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அந்த இடத்தில் இஹ்றாமை முடித்துவிட்டார்கள். இது ஒரு உம்றஹ்வாகக் கருதப்படுகிறது. இதனை உம்றதுல் ஹுதைபியஹ் என அழைக்கப்படும்.
2. இரண்டாவது உம்றஹ் ஹிஜ்ரி ஏழாவது ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இது ஆறாவது ஆண்டு தடுக்கப்பட்ட உம்றஹ்வுக்குப் பாகரமாக நிறைவேற்றப்பட்டதனால் இதனை உம்றதுல் களா அல்லது உம்றதுல் களிய்யஹ் என அழைக்கப்படுகின்றது.
3. மூன்றாவது உம்றஹ் மக்கஹ் வெற்றி கொள்ளப்பட்ட ஹிஜ்ரி எட்டாவது ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இதனை உம்றதுல் ஜிஃعْறானஹ் என்று அழைக்கப்படும். ஏனெனில், நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்கஹ் வெற்றிக்குப் பிறகு, ஹுனைன், தாஇஃப் யுத்தங்களை முடித்துக் கொண்டு மக்கஹ்வின் ஹறம் எல்லைக்கு வெளியிலுள்ள அல்-ஜிஃعْறானஹ் என்ற இடத்தில் பல நாட்கள் தங்கியிருந்தார்கள். பின்னர் கனீமத் பொருட்களைப் பங்கு வைத்துவிட்டு, அங்கிருந்து இஹ்றாம் செய்து கொண்டு, மக்கஹ் சென்று இரவோடு இரவாக உம்றஹ் செய்துவிட்டு ஜிஃعْறானஹ்வுக்குத் திரும்பி வந்தார்கள். அங்கிருந்து மதீனஹ் புறப்பட்டுச் சென்றார்கள்.
4. நான்காவது உம்றஹ்வானது ஹிஜ்ரி பத்தாவது ஆண்டு அவர்கள் ஹிஜ்ராத்திற்குப் பின்னர் செய்த ஒரே ஹஜ்ஜான ஹஜ்ஜதுல் வதாஃவுடன் கிறான் முறையில் செய்யப்பட்ட உம்றஹ்வாகும். இதற்கான இஹ்றாம் துல் கஃதஹ் மாதத்தில் தான் ஆரம்பிக்கப்பட்டது. பார்க்க: புகாரி 4148, முஸ்லிம் 1253
இந்த மாதத்தில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பல உம்றஹ்கள் செய்திருப்பது இந்த மாதத்திற்குரிய சிறப்பாகக் கருதப்படுகின்றது.
அதேபோன்று இது ஜாஹிலிய்யஹ் கால மக்களுக்கு முரண்படுகின்ற ஒரு செயலாகவும் அமைந்திருக்கிறது. ஏனெனில் இந்த மாதத்தில் உம்றஹ் செய்வதை அவர்கள் மிகப்பெரும் பாவமாகக் கருதினார்கள். அவர்களாக உருவாக்கிக் கொண்ட இந்த சட்டம் பிழையானது; இம்மாதத்தில் உம்றஹ் செய்வது ஆகுமானது என்பதை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம்முடைய செயல்பாட்டினால் விளக்கியிருக்கிறார்கள்.
எனவே ஹஜ்ஜுக்குரிய மாதங்களில் உம்றஹ் செய்வது சிறப்பானதாகக் கருதப்படுகின்றது. பார்க்க: ஸதுல் மஆத் 2 / 90, 91
குறிப்பு:
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் றஜப் மாதத்தில் ஒரு உம்றஹ் செய்தார்கள் என்ற இப்னு உமர் (றளியல்லாஹு அன்ஹுமா) அவர்களின் கருத்து தவறானதாகும். அந்தக் கருத்தைப் பற்றி வினவப்பட்ட ஆஇஷஹ் (றளியல்லாஹு அன்ஹா) அவர்கள் அழகான அணுகுமுறையில் அதனை மறுத்துவரைத்தார்கள். அதைச் செவிமடுத்துக் கொண்டிருந்த இப்னு உமர் (றளியல்லாஹு அன்ஹுமா) அவர்கள் ஆஇஷஹ் (றளியல்லாஹு அன்ஹா) அவர்களுக்கு எந்த பதிலையும் சொல்லவில்லை. எனவே அவர்கள் அந்தக் கருத்தை தவறுதலாகக் கூறியிருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
பார்க்க: புகாரி 1775, முஸ்லிம் 1255
அதேபோன்று ஜிஃعْறானஹ் என்ற இடத்தில் இருந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உம்றஹ்வை மேற்கொண்டதை இப்னு உமர் (றளியல்லாஹு அன்ஹுமா) அவர்கள் மறுத்தார்கள். அதற்குக் காரணம் அவர்களுக்கு அது தெரியவில்லை. அவர்களுக்கு மாத்திரமல்லாமல் பல நபித்தோழர்களுக்கும் அது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதற்குக் காரணம் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் இரவோடு இரவாக அந்த உம்றஹ்வை மேற்கொண்டு காலையில் அந்த இடத்திற்குத் திரும்பி வந்து விட்டார்கள். சில நபித் தோழர்களே அவர்களுடன் இருந்திருப்பார்கள். பார்க்க: புகாரி 3144, முஸ்லிம் 1656, திர்மிதி 935
-Sunnah Academy