ஆசிரியர்: ஷைஹுல் இஸ்லாம் இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்)
தமிழாக்கம்: எஸ். கமாலுத்தீன் மதனி
வெளியீடு: ஹிரா பப்ளிகேஷன்ஸ்
முன்னுரை:
சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்னால் டமாஸ்கஸில் பிறந்து தனது வாழ்நாள் முழுவதையுமே இஸ்லாத்திற்காக அர்ப்பணித்த மாபெரும் மேதை தான் இமாம் “இப்னு தைமிய்யா” அவர்களாவார். “ஷைகுல் இஸ்லாம்” என்று அக்கால அறிஞர்கள் எல்லோராலும் அழைக்கப் பட்டார்கள். இஸ்லாமிய மார்க்கத்தை தங்கள் சுயலாபத்திற்காகப் பயன்படுத்திக் கொண்டிருந்த போலிகளிடமிருந்து மீட்டி, அதன் தூய்மையான வடிவை மக்களுக்குக் காட்ட வேண்டுமென்பதையே தனது இலட்சியமாகக் கொண்டு வாழ்ந்தார்கள்.
இஸ்லாத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் போதித்துத் தந்தது போன்று மக்களுக்கு எடுத்தியம்புவதை விட்டு விட்டு தங்கள் மனோ இச்சைக்குத் தக்கவாறும் அரசர்களை திருப்திப்படுத்த வேண்டு மென்பதற்காகவும், தங்கள் விருப்பப்படியெல்லாம் இஸ்லாத்தின் சத்திய போதனைகளை கூட்டிக்குறைத்து, மாற்றி மறைத்து வந்த உலமாக்களை வன்மையாகக் கண்டித்தார்கள். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் இமாம் அவர்களை சிறையில் தள்ளவும் தயங்கவில்லை.
இஸ்லாமியப் பிரச்சாரப் பாதையில் இமாம் அவர்களின் சேவை எண்ணிலடங்காதது. அவர்களின் எழுத்துச்சேவையில் சுமார் 300-க்கும் மேற்பட்ட நூற்களை எழுதியுள்ளார்கள். அவற்றில் அதிகமானவை ஒன்றிற்கு மேற்பட்ட பாகங்களைக் கொண்டவை. அவர்கள் எழுதிய மிகப்பிரசித்திப் பெற்ற நூற்களில் ஒன்றுதான் இப்பொழுது உங்கள் கரங்களில் இருக்கும் மிக அற்புதமான இந்நூலாகும். சுமார் எழுநூறு ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட இந்நூல் அக்கால மக்களின் நிலையைப் படம் பிடித்துக் காட்டுகின்றது. இக்காலத்தில் அவ்லியாக்கள் என்ற பெயரில் தாண்டவமாடும் அனாச்சாரங்கள் யாவும் அன்றும் தலைவிரித்தாடின என்பதை இப்புத்தகத்தைப் படிக்கின்றவர்கள் உணரமுடியும். ஒவ்வொரு காலத்திலும் இஸ்லாத்தில் வேடதாரிகள் நுழைந்து அதைச் சின்னாபின்னப்படுத்த முயலும் போது அவர்களை எதிர்த்துப் போராடும் தியாகிகளை அல்லாஹ் உருவாக்கியே இருக்கின்றான் என்பதற்கு ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்களின் இந்த நூலும் நல்லதோர் சான்றாகும்.
இந்த நூலில் இறை நேசர்கள் சம்பந்தமாக குர்ஆன், ஹதீஸ் கூறும் உண்மைகளை மிகத் தெளிவாக தக்க ஆதாரங்கள் கூறி விளக்குகின்றார். ஒரு சாரார் இறை நேசர்கள் மற்றொரு சாரார் ஷைத்தானின் தோழர்கள். ஒரு மனிதன் ஒன்றில் இறை நேசனாக இருக்க வேண்டும். அல்லது ஷைத்தானின் நேசனாக இருக்க வேண்டும். இது அல்லாமல் மூன்றாவது சாரார் மனிதர்களில் இல்லை. என்ற உண்மையை இந்த புத்தகத்தைப் படிக்கும் ஒவ்வொருவரும் அறிய முடியும். உண்மையான இறை நேசர்களின் மகத்துவம் என்ன என்பதையும், அவ்லியாக்கள் என்ற போர்வையை போர்த்திக் கொண்டு சமுதாயத்தை ஏய்த்துப் பிழைத்த எத்தர்களின் அவலநிலை என்ன ஆனது என்பதையும் மிகத் தெளிவாக இந்நூலில் விளக்கப்பட்டுள்ளது. இந்நூலை தமிழ் உலகிற்கு தருவதில் நான் பெரிதும் பெருமை கொள்கின்றேன். நடு நிலைமையோடு இந்தப் புத்தகத்தைப் படிக்கின்றவர்களுக்கு குர்ஆன், ஹதீஸ் கூறும் உண்மைகள் தெளிவாகும். இந்நூலை என்னால் இயன்ற அளவு எளிய தமிழில் மொழி பெயர்த்துள்ளேன். ஒரு சில இடங்களில் இலக்கண விஷயங்களை வாசகர்களுக்கு தேவையில்லை என்பதற்காக அவற்றை மொழிபெயர்க்கவில்லை. அந்த இடங்களில் அடிக்குறிப்பில் அதை நான் சுட்டிக் காட்டியுள்ளேன்.
இந்த புத்தகத்தை பார்வையிட்ட பேராசிரியர் டாக்டர் V.அப்துற்றஹீம் M.A Phd அவர்களுக்கும், சகோதரர் மவ்லவி அப்துற்றவூப் பாகவி. சகோதரர் அம்சா கபீர் M.A ஆகியோருக்கும். இதை நல்ல முறையில் அச்சிட்டுத்தந்த .A.M பிரிண்டிங் ஏஜென்ஸி அச்சக்கத்தாருக்கும் எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் எல்லாம் வல்ல அல்லாஹ் இந்நூலைப் படிக்கின்றவர்களுக்கு பயனுள்ளதாக ஆக்கியருள்வானாக!
S.கமாலுத்தீன் மதனி,
கோட்டாறு.
உட் பொதிந்தவைகள்:
இறைநேசச் செல்வர்களும் ஷைத்தானின் தோழர்களும்
இறைநேசர்களுக்கு அல்லாஹ்வின் ஆதரவு
இறைநேசர்களின் பண்பு
விலாயத் என்பதன் பொருள்
இறைநேசர்களில் சிறந்தவர் யார்?
இறைத்தூதரைப் பின்பற்றுபவனே உண்மையான வலி
பிற சமூகங்களின் வழிகேடு
ஸஹாபாக்கள் உண்மையான இறைநேசர்களாவார்கள்
திண்ணைத் தோழர்கள்
ஈமானின் கடமைகள்
மூமின்களின் பண்புகள்
திருக்குர்ஆன் கூறும் 'துல்கர்னைன்’ மன்னர் யார்?
குர்ஆனைப் பின்பற்றாதவன் ஷைத்தானின் தோழனாவான்
நயவஞ்சகனின் அடையாளங்கள்
மறுமையில் மக்கள் மூன்று பிரிவினராக எழுப்பப்படுவார்கள்
அல்லாஹ்வோடு நெருங்கிய நல்லடியார்களின் சிறப்பு
நல்லவர்களின் பண்பு
அல்லாஹ்வோடு நெருங்கியவர்களின் பண்பு
முஹம்மத் (ஸல்) அவர்களின் உம்மத்தினர் மூன்று சாரார்களாவர்
இறைத்தூதர்களை நம்புவதின் அவசியம்
ஈமான் இருவகைப்படுகின்றது
அந்தஸ்துகளில் நபிமார்களிடையே உள்ள ஏற்றத் தாழ்வுகள்
அல்லாஹ்வுக்கு வழிபடாதவன் இறைநேசனல்லன்
பைத்தியக்காரன் இறைநேசனாக முடியாது
நபி வழியே இறைநேரசர்களின் வழி
கடமைகளை நிறைவேற்றாதவன் இறைநேசனாக இருக்க முடியாது
இறைநேசர்களுக்கென குறிப்பிட்டஉடை கிடையாது
சூஃபிய்யாக்கள் என்போர் யார்?
இறையச்சத்தால் மட்டுமே மனிதன் சிறப்படைசின்றான்
ஃபகீர் என்பதின் பொருள்
நற்செயல்களில் சிறந்தது இறை விரோதிகளை எதிர்ப்பதாகும்
ஹலரத் முஆத் (ரலி)அவர்களுக்கு செய்யப்பட்ட உபதேசம்
நபிமார்கள் மட்டுமே பாவத்திலிருந்து பாதுகாக்கப்பட்டவர்கள்
உண்மையை நம்பவேண்டும். தவறை விட்டு விட வேண்டும்.
கலீபா உமர் (ரலி) அவர்களின் சிறப்பு
நபிக்கும் நபியல்லாதவர்களுக்குமிடையிலுள்ள
வேறுபாடு
நபிமார்களை நம்புவதன் அவசியம்
குர்ஆன், ஹதீஸ் ஆதாரமின்றிக் கூறப்படும் எல்லாச் சொல், செயல்களும் தவறானவையே
அகில உலக இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள்
அற்புதத்தைக் காட்டுவது இறைநேசத்திற்கு ஆதாரமன்று
பாவிகளும் அற்புதங்களைக் காட்டுவார்கள்
ஷைத்தானுடைய தோழர்களின் பண்புகள்
இறைநேரசர்களின் பண்புகள்
ஹகீகத், ஷரீஅத் என்பதின் பொருள்
எல்லா நபிமார்களுடைய மார்க்கம் இஸ்லாம்
அவ்லியாக்களை விட நபிமார்களே சிறந்தவர்கள்.
மிகச் சிறந்த சமுதாயம்
நபியை விட வலி சிறந்தவர் என்ற தவறான கூற்று
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சிறப்பு
நபிமார்கள் எல்லோரும் இறைநேசர்களாவர்
தத்துவவாதிகளின் நோக்கில் நபித்துவத்தின்
பண்புகள்
கிரேக்க தத்துவவாதிகளின் கொள்கை
இப்னு அரபி என்பவர் கூறும் கற்பனை
குர்ஆன் கூறும் மலக்குகளின் பண்புகள்
ஜிப்ரில் (அலை) அவர்களின் பண்புகள்
தத்துவவாதிகள் ஈமானின் அடிப்படைகளை மறுக்கின்றனர்
இறைநேசர் (மூமின்களுக்கு) மலக்குகளின் உதவி
ஷைத்தானின் உரையாடல்
இப்னு அரபி என்பவர் நபிமார்களைக் குறை கூறினார்
குர்ஆன் முழுவதும் ஷிர்க் என்று கூறும் கூட்டம்
எல்லாம் இறைவன் என்னும் கூற்று
நபித்துவம் முற்றுப் பெறவில்லையா?
அல்லாஹ்வின் கூட்டு
ஸஹாபாக்கள், இமாம்களின் கொள்கை
அல்லாஹ்தான் எல்லாப் படைப்புகளின் அதிபதி
பாவங்களில் மிக் கொடியது அல்லாஹ்விற்கு இணை கற்பித்தலாகும்
பாவ மன்னிப்புத் தேடுதல்
நற்செயல்களுக்குப் பகரமாக யாரும் சுவர்க்கம் செல்வதில்லை
விதியைத் தவறுகளுக்கு ஆதாரமாக எடுப்பது கூடாது
துன்பங்கள் ஏற்படும் போது மனிதனின் நிலை
தலைமை இஸ்திஃபார் (பாவமன்னிப்பு) பிரார்த்தனை!
இறைச்சட்டமும், மனிதசட்டமும்
நபியை பின்பற்றாமல் அல்லாஹ்வை அடைய முடியுமா?
இமாம்களின் கருத்தும், ஷரீஅத் சட்டமும்
அல்லாஹ்வுடைய நாட்டமும், அவனுடைய கட்டளையும்
இறைநேசர்களுக்கும், ஷைத்தானின் தோழர்களுக்குமிடையிலுள்ள வேறுபாடுகள்
ஜிப்ரீல் (அலை) அவர்களின் சிறப்பு
நபிகள் நாயகம்(ஸல்) அவர்களைப் பின்பற்றுபவரே உண்மையான இறைநேசர்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முஃஜிஸாக்கள்
சில ஸஹாபாக்களிடமிருந்து நிகழ்ந்த கராமத்துகள்
ஹலரத் அபூமுஸ்லிமில் கூலானி (ரலி) யின் கராமத்துகள்
ஆமிர்பின் அப்துகைஸ் (ரலி) யின் கராமத்துகள்
தாபியீன்களிடமிருந்து நிகழ்ந்த கராமத்துகள்
அப்துல்லாஹ் பின் சய்யாத் என்பவனின் பித்தலாட்டங்கள்
ஹலரத் அலாவுபின் ஹள்ரமி (ரலி) யின் கராமத்துகள்
ஷைத்தானை விரட்ட ஆயத்துல் குர்சி
கராமத்திற்கும் ஷைத்தானுடைய வேலைகளுக்கும் இடையிலுள்ள வேறுபாடுகள்
சமாதிகள் உள்ள இடங்களைப் பள்ளிவாசல்களாக ஆக்கக் கூடாது
சிலை வணக்கத்தின் ஆரம்பம்
தர்க்காக்களில் ஷைத்தானின் வேலைகள்
அற்புதங்களை நம்புவதில் மனிதர்களின் தராதரம்
வெறுக்கத்தக்க கேலிக்கூத்துக்கள்
அற்புதங்கள் பலவிதம்
ஷைத்தானின் மூலம் ஏற்பட்ட சில அற்புதங்கள்
முஹம்மத் (ஸல்) அவர்கள் மனித, ஜின் இனம் முழுவதிற்கும் நபியாக வந்தார்கள்
நல்ல ஜின்களும், கெட்ட ஜின்களும்
ஷைகுமார்களின் தோற்றத்தில் ஷைத்தான்கள்
இறைநேசச் செல்வர்களும் ஷைத்தானின் தோழர்களும்
எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரித்தாகுக!
அவனிடமே நாம் உதவி தேடுகிறோம். அவனிடமே பிழை பொறுக்கத் தேடுகிறோம். நமது ஆத்மாவின் தீங்கிலிருந்தும், கெட்ட செயல்களிலிருந்தும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகிறோம். அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்டுகின்றானோ, அவர்களை யாராலும் வழிகெடுக்க முடியாது. யாரை வழி கெடுக்க நாடினானோ, அவர்களுக்கு எவராலும் நேர்வழி காட்ட முடியாது. வணக்கத்திற்குத் தகுதியுடையவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருமில்லை. அவன் இணை துணையற்றவன் என்றும், நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும், அவனது தூதரும் ஆவார்கள் என்றும் நாம் சான்று பகர்கிறோம்.
சன்மார்க்கத்தையும், நிறைந்த ஞானத்தையும் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் அருளி, எல்லா மதங்களையும் கொள்கை கோட்பாடுகளையும் விட இஸ்லாத்தை மேலோங்கச் செய்ய வேண்டுமென்பதற்காக அவர்களைத் தன்தூதராக அனுப்பினான். அவர்கள் இறைத்தூதர் என்பதற்கு அல்லாஹ்வே சான்று பகர்கின்றான். யுக முடிவு காலத்திற்கு அண்மையில், நல்லோருக்கு சுவனப்பேற்றைக் கொண்டு நல்வாழ்த்துக் கூறி, தீயோரை நரகத்தால் அச்சுறுத்தி எச்சரிக்கை செய்பவர்களாய் அவர்கள் அனுப்பப்பட்டார்கள். அல்லாஹ்வின் உத்தரவிற்கிணங்க இஸ்லாமிய மார்க்கத்தை நோக்கி மக்களை அழைத்தார்கள்.
அந்தக் காலத்தில் வாழ்ந்த மக்களுக்கு ஒளி விளக்காகத் திகழ்ந்தார்கள் அவர்களின் மூலம் வழிகேட்டிலிருந்த மக்கள் நேர்வழி பெற்றனர். மூடிக்கிடந்த கண்களும், செவிகளும் திறந்தன. உணர்வற்றிருந்த உள்ளங்கள் உணர்வு பெற்றன.
உண்மை இது, பொய் இது என்றும்; நேர்வழி இது, வழிகேடு இது என்றும்; சரி இது, தவறு இது என்றும் நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்களின மூலம் அல்லாஹ் தெளிவுபடுத்தினான். விசுவாசிகளுக்கு, நிராகரிப்போருக்குமிடையேயும்; சொர்க்கவாசிகளான பாக்கியவான்களுக்கும், நரகவாசிகளான துர்பாக்கியவான்களுக்குமிடையேயும் உள்ள வேறுபாட்டைத் தெளிவுபடுத்திக் காட்டினான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் யாரை இறைநேசர் என்று கூறி சான்று பகர்கிறார்களோ அவர் இறைநேசர் ஆவார். யாரை இறைவிரோதி என்று கூறினார்களோ அவரே அல்லாஹ்வின் விரோதியும் ஷைத்தானின் தோழரும் ஆவார்.
மனிதர்களில் இறைநேசர்களும் இருக்கிறார்கள்; ஷைத்தானின் தோழர்களும் இருக்கிறார்கள் என்பதை குர்ஆனும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் தெளிவாக விளக்கியுள்ளார்கள். இறைநேசர்களுக்கும், ஷைத்தானின் தோழர்களுக்குமிடையேயுள்ள வேறுபாட்டைப் பின்வரும் வசனங்களில் அல்லாஹ் விளக்குகின்றான்:
இறைநேசர் (அவ்லியாக்) களுக்கு நிச்சயமாக எந்தப் பயமுமில்லை; அவர்கள் எதற்கும் கவலைப்படவுமாட்டார்கள் என்பதை அறிந்துகொள்ளுங்கள். அவர்கள் (உண்மையாக) விசுவாசித்து, அவனுக்கு அஞ்சியும் வந்தனர். அவர்களுக்கு இவ்வுலக வாழ்விலும், மறு உலக வாழ்விலும் நல் வாழ்த்துக்கள்: உண்டு. அல்லாஹ்வுடைய வாக்கில் எவ்வித மாற்றமும் ஏற்படுவதில்லை. அதுவே மகத்தான மாபெரும் வெற்றியாகும். (திருக்குர்ஆன்-10: 62,63,64)
அல்லாஹ்வே உண்மை விசுவாசியின் வலி (நேசன்) ஆவான். அவனே அவர்களை இருளிலிருந்து வெளியேற்றி, பேரொளியின் பால் செலுத்துகின்றான். நிராகரிப்போரின் அவ்லியாக்களோ (நேசர்களோ) ஷைத்தான்கள்தான். அவை அவர்களைப் பேரொளியிலிருந்து வெளியேற்றி இருளின்பால் கொண்டு செல்கின்றன. அவர்கள் நரகவாசிகளாவர். அதில் அவர்கள் நிரந்தரமாகத் தங்குவர்.(திருக்குர்ஆன்-2:257),
விசுவாசிகளே! யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் உங்கள் அவ்லியாக்களாக எடுத்துக்கொள்ளாதீர்கள். (உங்களுக்குத் தீங்கு செய்வதில்) அவர்கள்; ஒருவருக்கொருவர் துணையாக இருக்கின்றனர். உங்களில் அவர்களைத் தனக்கு நேசர்களாக ஆக்கிக் கொள்பவன் நிச்சமாக அவர்களைச் சார்ந்தவனே ஆவான். அல்லாஹ் இந்த அநியாயக்கார மக்களை (அவர்களின் தீய செயல்களின் காரணமாக) நேரான வழியில் செலுத்தமாட்டான். (திருக்குர்ஆன்-5:51)
எவர்களுடைய உள்ளங்களில் நயவஞ்சக நோய் இருக்கிறதோ, அவர்கள் அந்த (அநியாயக்கார) மக்களிடம் (தோழமை கொள்வதற்காக) விரைந்து செல்வதை (நபியே) நீர் காண்கிறீர். (நாங்கள் அவர்களை விரோதித்துக் கொண்டால்) எங்களுக்கு ஏதாவது ஆபத்து ஏற்படுமென்று நாங்கள் அஞ்சுகின்றோம் என்று அவர்கள் கூறுகின்றனர். அல்லாஹ் தன்னிடமிருந்து வெற்றியையோ அல்லது ஒரு (நல்ல) காரியத்தையோ (உங்களுக்கு) அளிக்கலாம். அப்போது அவர்கள் தங்கள் உள்ளங்களில் மறைத்து வைத்திருந்த கருத்தைக் குறித்து கவலை கொள்வர். (திருக்குர்ஆன்-5:52)
விசுவாசிகள் மறுமையில் இவர்களைப் பார்த்து நிச்சயமாக நாங்கள் உங்களுடன்தான் இருப்போம் என அல்லாஹ்வின் மீது உறுதியான சத்தியம் செய்து கூறிக்கொண்டிருந்தவர்கள் இவர்கள்தானா? என்று கேட்பார்கள். இவர்களுடைய நற்செயல்கள் யாவும் அழிந்துவிட்டன. ஆகவே, இவர்கள் நஷ்டவாளர்களாய் ஆகிவிட்டனர் (திருக்குர்ஆன்-5:53)
"விசுவாசிகளே! உங்களில் எவரேனும் தன்மார்க்கத்திலிருந்து திரும்பிவிட்டால், வேறு மக்களை அல்லாஹ் கொண்டு வருவான். அவன் அவர்களை நேசிப்பான். அவர்களும் அவனை நேசிப்பார்கள். அவர்கள் விசுவாசிகளிடம் பணிவாகவும், நிராகரிப்போரிடம் கடுமையாகவும் நடந்து கொள்வார்கள். அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிவார்கள். பழிப்போரின் பழிச் சொல்லிற்கெல்லாம் அஞ்சமாட்டார்கள். இது அல்லாஹ்வின் அருளாகும். அவன் விரும்பியவர்களுக்கு இதனை அளிக்கின்றான். அல்லாஹ் மிக விசாலமானவனும், யாவற்றையும் நன்கறிந்தோனுமாய் இருக்கின்றான். (திருக்குர்ஆன்-5:54)
"அல்லாஹ்வும் அவனுடைய தூதரும், இன்னும் எவர் (உண்மையாக) விசுவாசங்கொண்டு அல்லாஹ்வின் கட்டளைக்குத் தலை சாய்த்தவர்களாக தொழுகையை கடைப்பிடித்தும், ஸகாத்துக் கொடுத்தும் வருகின்றனரோ, இவர்கள் தான் நிச்சயமாக உங்கள் அவ்லியாக்கள் ஆவர். மேலும் எவர் அல்லாஹ்வையும், அவனது தூதரையும் மற்றும் விசுவாசிகளையும் தங்களுடைய அவ்லியாக்களாக எடுத்துக் கொள்கின்றார்களோ அவர்கள்தாம் (ஹிஸ்புல்லாஹ்) அல்லாஹ்வின் கட்சியினர் ஆவர். அல்லாஹ்வின் கட்சியினரே வெற்றி பெறுவர். (திருக்குர்ஆன்-5 :55, 56)
"உண்மையான பரிபாலனப் பொறுப்பு (விலாயத்) அல்லாஹ் ஒருவனுக்கே உரியது அவன் கூலி கொடுப்போரில் அவனே மேலானவன்" மிக்க மேலானவன். முடிவு செய்வதிலும்.(திருக்குர்ஆன்-18:44)
ஷைத்தானின் தோழர்களைப்பற்றி அல்லாஹ் பின்வரும் வசனங்களில் விளக்குகின்றான்
நபியே! நீர் குர்ஆன் ஒத ஆரம்பிக்கும் போது எடுத்தெறியப்பட்ட ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடிக் கொள்ளும். எவர் அல்லாஹ்வை நம்பி அவனிடமே தங்கள் காரியங்களை ஒப்படைக்கின்றார்களோ, அவர்களிடத்தில் ஷைத்தானுக்கு எந்த அதிகாரமுமில்லை. அவனுடன் தோழமை கொண்டவர்களிடமும், அல்லாஹ்வுக்கு இணை வைப்பவர்களிடமுமே அவனுடைய அதிகாரம் செல்லும். (திருக்குர்ஆன்-16 :98-100)
உண்மை விசுவாசிகள் அல்லாஹ்வின் பாதையில் போர் புரிகின்றனர். நிராகரிப்போர் ஷைத்தானுடைய பாதையில் போர் புரிகின்றனர். ஆகவே, ஷைத்தானுடைய தோழர்களை (அவ்லியாவுஷ் ஷைத்தான்௧ளை) எதிர்த்து, நீங்கள் போர் தொடுங்கள். நிச்சயமாக ஷைத்தானுடைய சூழ்ச்சி மிகவும் பலவீனமானது. (திருக்குர்ஆன்-4 : 76)
மலக்குகளை நோக்கி "ஆதமுக்குச் சிரம் பணியுங்கள் என்று நாம் கூறியபோது, இப்லீஸைத் தவிர மற்ற மலக்குகள் யாவரும் சிரம் பணிந்தார்கள். இப்லீஸ் என்பவன் ஜின் இனத்தைச் சார்ந்தவனாக இருந்தான். அவன் தன் இறைவனுடைய கட்டளைக்கு மாறு செய்துவிட்டான். ஆகவே, (மனிதர்களே) நீங்கள் என்னை விட்டு விட்டு, அவனையும், அவனது சந்ததிகளையும் உங்கள் அவ்லியாக்களாக எடுத்துக் கொள்கிறீர்களா? அவர்களோ உங்கள் விரோதிகளாக இருக்கின்றார்கள். அக்கிரமக்காரர்கள் என்னை விட்டுவிட்டு, ஷைத்தானை தங்கள் வலியாக (தோழனாக) எடுத்துக் கொண்டது மிக மோசமான செயலாகும். (திருக்குர்ஆன்-18 :50)
எவன் அல்லாஹ்வையன்றி ஷைத்தானை தனக்கு (வலியாக), தோழனாக ஆக்கிக் கொள்கின்றானோ, அவன் நிச்சயமாக பகிரங்கரமான நஷ்டத்தையே அடைந்து விட்டவனாவான். (திருக்குர்ஆன்-4 :119),
ஒரு சிலர் மூஃமின்களிடம் வந்து "உங்களுக்கு விரோதமாக போர்புரிய எல்லா மக்களும் ஒன்று திரண்டுள்ளனர். எனவே. அவர்களை அஞ்சிக் கொள்ளுங்கள்" என்று கூறிய போது, அவர்களுக்கு இறை நம்பிக்கையே அதிகமானது. மேலும் “அல்லாஹ்வே எங்களுக்குப் போதுமானவனும், சிறந்த பாதுகாவலனாகவும் இருக்கின்றான்" என்றும் கூறினார்கள்.
எனவே அவர்கள் அல்லாஹ்வின் அருட்கொடையையும் நற்பேற்றிணையும் பெற்றுத் திரும்பினார்கள். அவர்களை எந்த தீங்கும். அணுகவில்லை. ஏனென்றால் அவர்கள் அல்லாஹ்வின் விருப்பத்தையே
பின்பற்றிச் சென்றார்கள் அல்லாஹ் மகத்தான கொடையாளனாக இருக்கிறான்.
இவ்வாறு விசுவாசிகளை அச்சுறுத்த முயன்றவன் ஷைத்தானே ஆவான். அவன்தன் தோழர்களைப் பயமுறுத்துகின்றான். ஆகவே (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் உண்மை விசுவாசிகளாக இருந்தால், அவர்களுக்கு அஞ்சிடவேண்டாம். எனக்கே அஞ்சுங்கள். (திருக்குர்ஆன்-3: 175),
"நம்பிக்கை கொள்ளாதவர்களுக்கு ஷைத்தான்களை அவ்லியாக்களாக நாம் ஆக்கினோம். இவர்கள் ஒரு கெட்ட காரியத்தைச் செய்யும்போது (அதை யாராகிலும் தடை செய்தால்), எங்கள் மூதாதையர்களும் இவ்வாறே செய்யக் கண்டோம் என்றும், இவ்வாறு செய்ய அல்லாஹ் எங்களுக்கு கட்டளையிட்டுள்ளான்"' என்றும் கூறினர். (நபியே! அவர்களை நோக்கி) நிச்சயமாக அல்லாஹ் மானக்கேடான காரியங்களைச் செய்யும்படி ஏவவே மாட்டான். அல்லாஹ்வின் மீது நீங்கள் அறியாதவற்றை இட்டுக் கட்டிக் கூறலாமா? என்று கூறும்.
மேலும் என் இறைவன் நீதியை நிலை நாட்டும்படி கட்டளையிடுகின்றான். தொழும்போது நீங்கள் உங்கள் முகத்தை அல்லாஹ்வின் பக்கமே திருப்பித் தொழுங்கள். நீங்கள் அவனுக்கு முற்றிலும் வழிபட்டு, கலப்பற்ற மனதோடு அவனிடமே உங்கள் தேவைகளைக் கேளுங்கள். அவன் உங்களை எப்படிப் படைத்தானோ, அப்படியே அவன் பக்கம் மீளுவீர்கள்" என்றும் கூறுவீராக! உங்களில் சிலரை அவன் நேரான வழியில் செலுத்தியிருக்க, வேறுசிலர் மீது வழிகேட்டை விதிக்கக் காரணம், அவர்கள் அல்லாஹ்வையன்றி, ஷைத்தான்களை தங்கள் தோழர்களாக (அவ்லியாக்களாக) எடுத்துக் கொண்டதுதான். மேலும் நாங்கள் நேரான வழியில் இருக்கின்றோம்' என்றும். அவர்கள் எண்ணிக் கொண்டனர். (திருக்குர்ஆன், 7 :27-30),
நிச்சயமாக ஷைத்தான்கள் தங்கள் அவ்லியாக்களை ஏவி உங்களுடன் தர்க்கிக்குமாறு தூண்டுகின்றனர். (திருக்குர்ஆன்-6:21)
நபி இப்ராஹீம் (அலை) தன் தந்தையிடம் பின்வருமாறு கூறியதாக குர்ஆன் கூறுகிறது :-
என் தந்தையே! அல்லாஹ்வுடைய வேதனை உங்களைப் பிடித்துக் கொள்ளுமோ என்று நிச்சயமாக நான் அஞ்சுகிறேன். அல்லாஹ்வுக்கு நீங்கள் மாறு செய்தால் ஷைத்தானின் தோழராய் ஆகி விடுவீர்கள்.
(திருக்குர்ஆன்-19 :45)
நம்பிக்கையாளர்களே! எனக்கும் உங்களுக்கும் பகைவர்களாக இருப்பவர்களை உங்கள் தோழர்களாய் ஆக்கிக்கொண்டு: நேசத்தோடு அவர்களிடம் உறவாட வேண்டாம். (ஏனென்றால்) அவர்கள் உங்களிடம் வந்த சத்தியவேதத்தை நிராகரித்துவிட்டார்கள். நீங்கள் உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வை நம்பினீர்கள் என்பதற்காக, உங்களையும் நம் தூதரையும் வெளியேற்றினார்கள். (நம்பிக்கையாளர்களே! நீங்கள் என்னுடைய திருப்தியை விரும்பி, என்னுடைய பாதையில் போர் புரிய உண்மையாகவே நீங்கள் (உங்கள்) இல்லங்களிலிருந்து வெளியேறி இருந்தால், அவர்களுடன் இரகசியமாக உறவாடிக் கொண்டிருப்பீர்களா? நீங்கள் உங்கள் உள்ளத்தில் மறைத்திருப்பதையும் வெளிப்படுத்துவதையும் நான் நன்கு அறிவேன். இவ்வாறு உங்களில் எவரேனும் செய்தால் நிச்சயமாக அவன் நேரான பாதையிலிருந்து
தவறிவிட்டவனாவான்.
அவர்களுக்கு சந்தர்ப்பம் ஏற்படும்போது (பகிரங்கமாகவே) உங்களுக்குப் பகைவர்களாகித் தங்களுடைய கைகளாலும், நாவுகளாலும் உங்களுக்குத் தீங்கிழைப்பார்கள். மேலும், நீங்கள் நிராகரிப்போராய் ஆகிவிட வேண்டும் என்றும் அவர்கள் விரும்புகின்றனர். உங்களுடைய சந்ததிகளும், உங்களுடைய உறவு முறைகளும் மறுமை நாளில் உங்களுக்கு எந்தப் பயனுமளிக்கா, (அந்நாளில் அல்லாஹ்) உங்கள் மத்தியில் தீர்ப்பளிப்பான். நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் உற்று நோக்குபவனாய் இருக்கின்றான்.
நபி இப்ராஹீமிடத்திலும், அவருடன் இருந்தவர்களிடத்திலும் உங்களுக்கு ஒர் அழகிய முன்மாதிரி நிச்சயமாக இருக்கின்றது. அவர்கள் தம் மக்களை நோக்கி திண்ணமாக நாங்கள் உங்களையும், அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்கிக் கொண்டிருப்பவற்றையும் விட்டு விலகி விட்டோம். அல்லாஹ் ஒருவனை நீங்கள் விசுவாசம் கொள்ளும் வரையில் எங்களுக்கும் உங்களுக்குமிடையில் விரோதம் ஏற்பட்டு விட்டது” என்று கூறினார்கள். மேலும் இப்ராஹிம் (தன் சொல்லைக் கேளாத) தந்தையை நோக்கி, "அல்லாஹ்விடத்தில் உமக்காக (அவனுடைய வேதனையில்) எதையும் தடுக்க எனக்கு சக்தி கிடையாது. ஆயினும் உமக்காக அவனிடத்தில் பின்னர் நான் மன்னிப்புக் கோருவேன்"' என்று கூறி, எங்கள் இறைவனே! உன்னையே நாங்கள் நம்பினோம். உன்னிடமே எல்லோரும் திரும்பிவர வேண்டியவர்களாய் இருக்கின்றோம். எங்கள் இறைவா! நீ எங்களை நிராகரிப்போரின் துன்பத்திற்கு. உள்ளாக்கி விடாதே, எங்களை நீ மன்னிப்பாயாக! எங்கள் இறைவா! நிச்சயமாக நீதான் யாவற்றையும் மிகைத்தவன். ஞானமுடையவன்" (என்றும் பிரார்த்தித்தார்), (திருக்குர்ஆன்- 60:5-6)
இறை நேசர்களின் பண்பு
மேலே கொடுக்கப்பட்டுள்ள இறை வசனங்களிலிருந்து மனிதர்களில் இறைநேசர்களும் இருக்கின்றனர். ஷைத்தானின் தோழர்களும் இருக்கின்றனர் என்பதைத் தெளிவாக அறிந்து விட்டோம். இனி இவ்விரு சாரர்களையும் அல்லாஹ்வும் அவனது தூதரும் பிரித்துக் காண்பித்திருப்பது போல் நாமும் பிரித்தறிவது அவசியமாகும்.
"இறைநேசர்களுக்கு நிச்சயமாக எந்த பயமுமில்லை. அவர்கள் எதற்கும். கவலைப்படவுமாட்டார்கள்'' என்பதை (விசுவாசிகளே!) நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். அவர்கள் அல்லாஹ்வை உண்மையாக விசுவாசித்து அவனுக்கு அஞ்சியும் வந்தனர். (திருக்குர்ஆன்-10 :62-63),
என்று அல்லாஹ் கூறியுள்ளான். இவ்வசனத்திற்கொப்ப அல்லாஹ்வை நம்பி, அவனுக்கு முற்றிலும் அஞ்சி நடப்பவர்களே இறைநேரசர்களாவார்கள் என்பதைத் தெளிவுற அறிகின்றோம்.
இறை நேசர்களுக்கு அல்லாஹ்வின் ஆதரவு
இமாம் புகாரி (ரஹ்) அவர்கள் அறிவிக்கும் ஒரு ஹதீஸ் குத்ஸ் அல்லாஹ் கூறியதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள் :-
அல்லாஹ் கூறுகின்றான்: எனது நேசரை விரோதிக்கக் கூடியவன் என்னோடு பகிரங்கமாகப் போர் தொடுத்துவிட்டவனாவான். அவன் முடிவு அழிவுதான்-என் அடியான் மீது நான் கடமையாக்கியிருக்கின்றவற்றை அவன் செய்வதின் மூலம் என் பக்கம் அவன் நெருங்குவதைப் போன்று வேறு எந்த நற்செயல்கள் மூலமும் நெருங்க முடியாது என் நேசத்தைப் பெற வேண்டுமென்பதற்காக மேலதிகமான (நபிலான) வணக்கங்களை நிறையச் செய்யும்போது அவனை நான் நேசிக்கின்றேன். நான் அவனை நேசித்துவிட்டால் அவன் கேட்கும் செவியாகவும், அவன் பார்க்கும் பார்வையாகவும், அவன் பிடிக்கும் கையாகவும், அவன் நடக்கும் காலாகவும் ஆகிவிடுகிறேன் அவன் என்னிடத்தில் கேட்டால் நிச்சயமாக அவனுக்கு கொடுப்பேன், அவன் என்னிடம் பாதுகாவல் தேடினால் நிச்சயமாக அவனுக்குப் பாதுகாவல் அளிக்கிறேன் மூஃமினான என் அடியானுடைய உயிரைக் கைப்பற்றும் விஷயத்தில் தயங்குவது போன்று என்னுடைய வேறு எந்த விஷயத்திலும் நான் தயங்குவதில்லை. அவன் மரணத்தை வெறுக்கின்றான் - அவனை மரணம் வந்தடைந்தே தீரும் அவனுக்கு ஏற்படுகின்ற மரண வேதனையை நான் போக்குகின்றேன்' என்று அல்லாஹ் கூறுகின்றான்.
இறை நேசர்களைப் பற்றி அறிவிக்கப்பட்டுள்ள ஹதீஸ்களில் இது மிக ஸஹீஹானதாகும்.
“அல்லாஹ்வுடைய நேசர்களைப் பகைத்துக் கொள்பவன் அல்லாஹ்வோடு போர் தொடுத்து விட்டவனாவான்" என நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்கள் இந்த ஹதீஸில் விளக்கமாகக் கூறியுள்ளார்கள். மற்றொரு ஹதீஸில் வந்துள்ளதாவது:
"கோபமூட்டப்பட்ட சிங்கம் தன் எதிரியிடம் பழிக்குப்பழி வாங்குவது போல் என் அவ்லியாக்களின் விரோதிகளை நான் பழி வாங்குவேன்" என, அல்லாஹ் கூறுகின்றான்.
ஏனெனில் இறைநேசர்கள் என்போர் அல்லாஹ்வையே முற்றிலும் நம்பி அவனையே தங்களின் பரிபாலகனாக ஆக்கிக் கொள்கிறார்கள். அல்லாஹ் நேசிப்பதை அவர்கள் நேசிக்கின்றார்கள். அவன் 'விரோதிப்பதை அவர்களும் விரோதிக்கின்றார்கள். அவன் விரும்புவதை அவர்களும் விரும்புகிறார்கள். அவன் வெறுப்பதை அவர்களும் வெறுக்கின்றார்கள். அவன் ஏவியவற்றை அவர்களும் ஏவுகின்றார்கள். அவன் விலக்கியவற்றை அவர்களும் விலக்குகின்றார்கள். அவன் யாருக்குக் கொடுக்க வேண்டுமென்று விரும்புகின்றானோ அவனுக்கே கொடுக்கின்றார்கள். அவன் யாருக்குத் தடுக்க விரும்புகின்றானோ. அவனுக்குக் கொடுப்பதை இவர்களும் தடுத்துக் கொள்கிறார்கள் "ஈமானின் வளையங்களில் உறுதியானது அல்லாஹ்விற்காகவே நேசிப்பதும். அல்லாஹ்விற்காகவே வெறுப்பதுமாகும்” என, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் (திர்மிதி)
எவன் அல்லாஹ்வுக்காகவே நேசித்து அல்லாஹ்வுக்காகவே வெறுத்து அல்லாஹ்வுக்காகவே தடுக்கின்றானோ அவன் தனது ஈமானை முழுமைப்படுத்திக் கொண்டான்" எனவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மற்றொரு ஹதீஸில் கூறியுள்ளார்கள். (அபூதாவூது)
விலாயத் என்பதன் பொருள்
விலாயத் என்னும் சொல்லுக்கு நேசம், நெருக்கம் என்பது பொருள். விலாயத் என்னும் சொல்லின் எதிர்பதம் "அதாவத்"' என்பதாகும். அதாவது வெறுப்பு, தூரம், தொலைவு என்பது பொருள். வலி என்னும் சொல்லுக்கு இறை வழிபாடுகளைக் கடைபிடித்து நடப்பவன் எனவும் வேறொரு பொருள் கூறப்படுகிறது. ஆனால் முதலில் கூறப்பட்ட பொருளே சரியானதாகும்.
வலி என்றால் நெருக்கமானவர் என்று பொருள். இந்தப் பொருள் கொண்ட ஒரு ஹதீஸில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள்.
“வாரிசுச் சொத்தை அதற்குரியவருக்குக் கொடுத்து விடுங்கள். மீதமுள்ளது இறந்தவருக்கு வலியான (மிக நெருக்கமான) ஆணிற்குரியதாகும்”.
இந்த ஹதீஸில் (அவ்லா ரஜுலின் தகரின்) என்ற சொற்றொடர் வந்துள்ளது. இதில் அவ்லா (மிக நெருக்கமானவர்) என்ற சொல் வலி என்ற சொல்லிலிருந்து பிறந்ததாகும். இதிலிருந்து வலி என்பதன் பொருள் நெருக்கமானவர் என்று ஹதீஸ் ஆதாரத்தின் மூலம் அறிந்து கொண்டோம். "வலியுல்லாஹ்" என்றால், அல்லாஹ்வுக்கு மிக நெருக்கமானவர். அல்லாஹ்வின் நேசர் என்று பொருள்.
அல்லாஹ்வின் விருப்பு, வெறுப்பிற்கேற்ப நடந்து, ஏவல் விலக்கல்களில் அவனை முற்றிலும் பின்பற்றியொழுகக் கூடியவர்தான் உண்மையான இறைநேசராவார். இந்தப் பண்புடைய இறைநேசரைப் பகைக்கக் கூடியவன் அல்லாஹ்வை பகைக்கக் கூடியவனாய் ஆகி விடுகின்றான். எனவே அல்லாஹ் கூறுகின்றான் :-
விசுவாசிகளே! எனக்கும் உங்களுக்கும் விரோதிகளாய் இருப்பவர்களை நீங்கள் உங்கள் நேசர்களாக எடுத்துக் கொண்டு நேசத்துடன் அவர்களிடம் உறவாட வேண்டாம்.
(திருக்குர்ஆன்-60: 1)
இறைநேசர்களைப் பகைக்கக் கூடியவன் அல்லாஹ்வைப் பகைத்துவிட்டான். யார் அல்லாஹ்வைப் பகைத்து விட்டானோ அவன் அல்லாஹ்வை எதிர்த்துவிட்டான். எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மேற்கூறப்பட்ட ஹதீஸை நமக்குக் கூறினார்கள்.
இறைநேசர்களில் சிறந்தவர் யார்?
அல்லாஹ்வுடைய நெருங்கிய நேசர்களில் சிறந்தவர்கள் நபிமார்களாவர், நபிமார்களில் சிறந்தவர் ரசூல்மார்களாவர். ரசூல்மார்களில் சிறந்தவர் "உலுஸ்அஸ்ம்"' என்று சொல்லப்படக்கூடிய ஊக்கமும், உறுதியும் உடைய ரசூல்மார்களான நூஹ், இப்ராஹீம், மூஸா, ஈஸா, முஹம்மது அலைஹி முஸ்ஸலாம் என்பவர்களாவர்.
அல்லாஹ் கூறுகின்றான்:
“நபி நூஹுக்கு எதனை அல்லாஹ் போதித்தானோ, அதனையே உங்களுக்கும் அவன் மார்க்கமாக்கியிருக்கின்றான் ஆகவே, (நபியே!) நாம் உமக்கு வஹீ மூலம் அறிவிப்பதும். இப்ராஹீம், மூஸா, ஈஸா ஆகியோருக்கு நாம் போதித்ததும் என்னவென்றால் நீங்கள் எல்லோரும். மார்க்கத்தை நிலை நிறுத்துங்கள்.அதில் பிளவுபட்டுவிடாதீர்கள் என்பதாகும்” (திருக்குர்ஆன் -42 :19)
மேலும் அல்லாஹ் கூறுகின்றான் :-
(நபியே!) நம்முடைய தூதை எடுத்துரைக்கும்படி நபிமார்களிடமும், உம்மிடமும் நூஹ், இப்ராஹீம், மூஸா, மர்யமுடைய மகன் ஈஸாவிடமும் வாக்குறுதி வாங்கிய சமயத்தில், மிக்க. உறுதியான வாக்குறுதியையே அவர்களிடம் நாம் எடுத்துக் கொண்டோம். (என்பதை நினைத்துப் பார்ப்பீராக!) ஆகவே உண்மை சொல்லும் (தூதர்களாகிய) அவர்களிடம் அவர்கள் (கூறிய தூதின்) உண்மைகளைப் பற்றி அல்லாஹ் கேள்வி கணக்கு கேட்பான்; அவர்களை நிராகரித்தோருக்குத் துன்புறுத்தும் வேதனையை அவன் தயார்
செய்து வைத்திருக்கின்றான்'. (திருக்குர்ஆன்-33 :7-8).
உறுதியான ஐந்து இறைத்தூதர்களில் சிறந்தவர் நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்களாவார்கள். இவர்கள் இறுதி நபியுமாவார்கள். இவர்கள் முத்தகீன்கள் என்னும் அல்லாஹ்வை அஞ்சி நடப்பவர்களுக்கு இமாமாவார்கள். மனித குலத்தின் தலைவராவார்கள். நபிமார்கள் ஒன்று சேரும்போது அவர்களுக்கு இமாமாக இருப்பார்கள். அல்லாஹ்வை நபிமார்கள் சந்திக்கும்போது, அவர்களின் பிரதிநிதியாகப் பேசுவார்கள். உலக மக்கள் யாவரும் எந்த இடம் தங்களுக்கு கிடைக்க வேண்டுமென்று ஆசைப்படுகின்றனரோ அத்தகைய உயர்ந்த மேன்மையான "மகாமே மஹ்மூத்" என்ற இடத்திற்குரியவராவார்கள். "லிவாவுல் ஹம்த்" என்னும். புகழுக்குரிய கொடிக்குச் சொந்தக்காரர்களாவார்கள். மறுமையில் "ஹவ்ளுல் கவ்தர்" என்னும் நீர் தடாகத்துக்குரியவர்களாவார்கள். மறுமையில் மக்களுக்காக அல்லாஹ்விடம் மன்றாடும் தகுதிக்குரியவர்களாவார்கள். பெரும் பெரும் சிறப்பிற்கும், புகழுக்குமுரியவர்களாவார்கள்.
அல்லாஹ் இறக்கிய வேதங்களில் மிகச் சிறந்த திருகுர்ஆனை அல்லாஹ் அவர்களுக்கு அருளினான். அல்லாஹ்வின் ஷரீஅத்துச் சட்டங்களில் மிகச் சிறந்த ஷரீஅத்தை அல்லாஹ் அவர்களுக்குக் கொடுத்தான். அவர்களுடைய உம்மத்தினரை சிறந்த. சமூகமாக ஆக்கினான். முன்னால் தோன்றி மறைந்த எந்த சமூகத்திற்கு மில்லாத பல சிறப்புகளை இவர்களுக்கு அருளிச் சிறப்பித்தான்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய சமூகத்தினர் இறுதியாக உலகில் படைக்கப்பட்ட சமூகத்தினர் என்றாலும் அவர்களே முதன் முதலில் எழுப்பப்படுவார்கள். எனவே, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு ஸஹீஹான ஹதீஸில் சொன்னார்கள்
நாம் இறுதியாகப் படைக்கப்பட்டவர்களாவோம். மறுமையில் மற்ற உம்மத்தினரைவிட முந்திச் செல்லக் கூடியவர்களும் நாம் தான். ஆனால், நமக்கு முன்னுள்ளவர்களான யூதர்களும். கிருஸ்தவர்களும் நமக்கு முள்னே வேதம் அருளப்பட்டார்கள். நாம் அவர்களுக்குப் பின் வேதம் அருளப்பட்டோம். வெள்ளிக்கிழமை யாருக்குரியது என்ற விஷயத்தில் அவர்கள் வேறுபட்டுக் கொண்டார்கள். அல்லாஹ் அத்தினத்தை நமக்கருளி நம்மைப் பின்தொடரக்கூடியவர்களாய் அவர்களை ஆக்கினான். அதாவது வெள்ளிக்கிழமையை அடுத்த சனிக்கிழமை யூதர்களுக்குரிய நாள். சனிக்கிழமையை அடுத்த ஞாயிற்றுக்கிழமை கிருஸ்தவர்களுக்குரிய நாள்"
(புகாரி, முஸ்லிம்,)
"மறுமை நாளில் சூர் (எக்காளம்) ஊதப்பட்டு, பூமியிலிருந்து எல்லோரும் வெளியாகி வருவார்கள். இவர்களில் முதன்முதலாக வெளிவரக்கூடியவன் நான் தான்" என, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அபூதாவூது.
"மறுமையில் நான் சுவர்க்க வாசலில் வந்து நின்று அவ்வாசலைத் திறக்குமாறு சுவர்க்கத்தின் அதிபதியிடம் கூறுவேன். அப்போது அவர், "நீர் யார்?" என்று கேட்பார். நான்தான் முஹம்மத் என்று சொல்வேன். உனக்கு முன்னர் வேறு யாருக்கும் இவ்வாசலைத் திறக்க எனக்கு அனுமதியில்லை"
என அவர் கூறுவார் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(முஸ்லிம்)
இறை தூதரைப் பின்பற்றுபவனே உண்மையான வலி
'நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடையவும், அவர்களின் உம்மத்தினருடையவும் சிறப்புக்கள் ஏராளமாக உள்ளன. அண்ணலாரை அல்லாஹ் நபியாக அனுப்பியது முதற்கொண்டே இறைநேசர்களுக்கும் இறை விரோதிகளுக்குமிடையில் பிரித்துக் காட்டக் கூடியவர்களாக அவர்களை ஆக்கினான்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய தூதை நம்பி, அவர்களை அகத்திலும் புறத்திலும் முழுமையாகப் பின்பற்றாதவன் ஒருபோதும் இறைநேசனாக இருக்க முடியாது. நான் அல்லாஹ்வை நேசிக்கின்றேன் நான் அல்லாஹ்வின் வலி என்று கூறி பிதற்றிக் கொண்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பின்பற்றாதவன் இறைநேசனாக ஒருபோதும் இருக்க முடியாது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மாறு செய்யக் கூடியவன் அல்லாஹ்வின் விரோதியாகவும், ஷைத்தானின் தோழனாகவும் ஆகி விடுகிறான்.
நீங்கள் உண்மையாகவே அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருந்தால், என்னைப் பின்பற்றுங்கள். என்று (நபியே, மனிதர்களிடம்) கூறும். (திருக்குர்ஆன்-3 :31)
நாங்கள் அல்லாஹ்வை அதிகம் நேசிக்கின்றோம்"' எனச் சிலர் கூறிக் கொண்டிருந்தனர். அவர்களைப் பரிசோதிக்கவே அல்லாஹ் இவ்வசனத்தை இறக்கினான்" என்று ஹஸனுல்பஸரீ (ரஹ்) அவர்கள்
கூறினார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பின்பற்றி நடக்க கூடியவன். அல்லாஹ்வை நேசிக்கின்றான் என்றும், யார் நாங்கள் அல்லாஹ்வை நேசிக்கின்றோம் என்று கூறிவிட்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பின்பற்றவில்லையோ, அவர்கள் ஒருபோதும் இறை நேசர்களாய் இருக்கமுடியாது, என்றும் அல்லாஹ் இவ்வசனத்தில் தெளிவாகக் கூறியுள்ளான்.
பிற சமூகங்களின் வழிகேடு
சிலர் தங்களை இறைநேசர்கள் என்று எண்ணிக் கொண்டிருப்பதாலோ அல்லது பலர் ஒருவரைப் பார்த்து இவர் வலி என்று கூறி விடுவதாலோ அவர் இறைநேசராய் ஒருபோதும் ஆகிவிட முடியாது. யூதர்களும், கிருஸ்தவர்களும் தங்களை இறைநேசர்கள் என்றும் அல்லாஹ்வின் குமாரர்கள் என்றும் கூறி, தங்களைத் தவிர வேறு எவரும் சுவர்க்கம் செல்ல முடியாது என்றும் எண்ணிக் கொண்டிருந்தனர். அவர்களைப் பற்றி அல்லாஹ் கூறும்போது :-
நீங்கள் எண்ணிக் கொண்டது போன்று, நீங்கள் அல்லாஹ்வுடைய குமாரர்களாகவும், அவனது நேசர்காளாகவுமிருந்தால், நீங்கள் செய்யும் தவறுகளுக்காக அவன் உங்களை ஏன் துன்புறுத்துகின்றான்? உண்மை அவ்வாறன்று. நீங்களும் படைக்கப்பட்ட மற்ற மனிதர்களைப் போன்றவர்களே" என்று (நபியே!) அவர்களிடம் கூறும்" (திருக்குர்ஆன்-5:18)
யூதனாகவோ அல்லது கிருஸ்தவனாகவோ இருப்பவனைத் தவிர (மற்றெவரும்) சுவர்க்கம் நுழையமாட்டார்கள், என அவர்கள் கூறுகின்றார்கள். இது அவர்களுடைய ஆசைகளே தவிர (உண்மையல்ல, ஆதலால் அவர்களிடம்) நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால் உங்களுடைய (இவ்வாதத்திற்குரிய) ஆதாரத்தைக் கொண்டு வாருங்கள். (என்று நபியே! நீர் கூறும்!) உண்மை அவ்வாறன்று. எவன் (அல்லாஹ்விற்காக) நன்மை செய்து விடுகின்றானோ, அவனுக்கு அவனுடைய கூலி இறைவனிடமிருந்து கிடைக்கும். மேலும், இத்தகையோருக்கு எவ்வித அச்சமுமில்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்"(திருக்குர்ஆன்-2 :111, 112)
மக்காவில் வாழ்ந்த பல தெய்வக் கொள்கையுடையோர், தாம் மக்காவில் அல்லாஹ்வின் ஆலயத்தின் அருகில் இருப்பதால் தங்களை அல்லாஹ்வின் சொந்தக்காரர்கள் என்று கூறிப் பிறரிடம் பெருமை பேசி கர்வம் கொண்டு வந்தனர். எனவே அல்லாஹ் கூறினான்.
“நிச்சயமாக என்னுடைய வசனங்கள் உங்களுக்கு ஒதிக் காண்பிக்கப் பட்ட போதெல்லாம் நீங்கள் புறங்காட்டிச் சென்று கொண்டிருந்தீர்கள். நீங்கள் கர்வம்கொண்டு உங்கள் இராக்கதைகளிலும் இதைப் பற்றிப் பேசிப் பிதற்றிக் கொண்டிருந்தீர்கள்"' (திருக்குர்ஆன்-23 :6)
"'(நபியே!) உம்மைச் சிறை செய்ய அல்லது உம்மைக் கொலை செய்ய, அல்லது உம்மை ஊரைவிட்டு வெளியேற்ற உமக்கு விரோதமாக நிராகரிப்போர் சூழ்ச்சி செய்து கொண்டிருந்த நேரத்தை நினைத்துப்பாரும். அவர்கள் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தனர். அவர்களுக்கு எதிராக அவர்களை நாசப்படுத்த அல்லாஹ் விரும்பினான். சூழ்ச்சி செய்வோரின் சூழ்ச்சியையெல்லாம் அல்லாஹ் நன்குணர்ந்து அவற்றை முறியடிக்கக் கூடியவனாய் இருக்கின்றான்.
நம்முடைய வசனங்கள் அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப்படுமானால், அதற்கவர்கள் "நிச்சயமாக நாம் இதனைச் செவியுற்றுள்ளோம், நாங்கள் நினைத்தால் இதுபோன்ற வசனங்களை கூறுவோம். இவை முன்னோரின் கட்டுக்கதைகளேயன்றி வேறில்லை" என்று கூறுகின்றனர். மேலும் "அல்லாஹ்வே உன்னிடமிருந்து வந்தது இது என்பது உண்மையானால், எங்கள் மீது வானத்திலிருந்து கல்மாரியைப் பொழி; அல்லது துன்புறுத்தும் வேதனையை எங்கள் மீது இறக்கு" என்று அந்நிராகரிப்போர் கூறியதையும் (நபியே!) நீர் நினைத்துப்பாரும்; ஆனால், நீர் அவர்கள் மத்தியில் இருக்கும் போதெல்லாம் அல்லாஹ் அவர்களை வேதனை செய்யமாட்டான். மேலும், அவர்கள் மன்னிப்புச் கோரிக் கொண்டிருக்கும் நிலையிலும் அல்லாஹ் அவர்களை வேதனை செய்யமாட்டான். (இவ்விரு காரணங்களும் இல்லாதிருக்கும் போது) அல்லாஹ் அவர்களை வேதனை செய்யாமலிருக்க எந்த தடையுமில்லை. அவர்களோ அல்லாஹ்வின் ஆலயப் பரிபாலகர்களாய் இல்லாதிருக்க அவன் ஆலயத்திற்குள் (முஸ்லிம்கள்) செல்வதைத் தடுக்கின்றனர். அல்லாஹ்வை அஞ்சி நடப்பவர்களைத் தவிர எவரும் அதற்குப் பரிபாலகர்களாய் ஆக முடியாது" (திருக்குர்ஆன்-8 :31-34)
பல தெய்வக் கொள்கைக்காரர்கள் அல்லாஹ்வின் நேசர்களல்லர்: அவனுடைய ஆலயத்தின் பரிபாலகர்களும் அல்லர் என்றும் உண்மையாக அல்லாஹ்வைப் பயந்து நடப்பவர்களே இறைநேசர்களாவார்கள் என்றும் அல்லாஹ் இத்திருவசனத்தில் விளக்கமாகக் கூறியுள்ளான்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஸ்லாத்தைத் தழுவாதிருந்த தன் உறவினர் சிலரைக் குறிப்பிட்டுக் கூறி; "இவர்கள் என்னுடைய நேசர்களல்லர். அல்லாஹ்வும் உண்மை விசுவாசிகளுமே என்னுடைய நேசர்கள்" என்று வெளிப்படையாகக் கூறியதை நான் செவியுற்றேன் என்று அம்ருபின் ஆஸ் (ரலி) என்னும் நபித்தோழர் ஒரு ஹதீஸில் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்!) கீழ்க்காணும் இறைவசனமும் இதற்கொப்பவே அமைந்துள்ளது.
“நிச்சயமாக அல்லாஹ்வும், ஜிப்ரீலும் விசுவாசிகளில் நல்லவர்களுமே முஹம்மத் (ஸல்) அவர்களின் நேசர்களாவார்கள்" (திருக்குர்ஆன்-66: 4)
விசுவாசிகளில் சிறந்தவர்கள் அல்லாஹ்வை நம்பி, அவனுக்கு அஞ்சி நடந்த அவனது நேசர்களாவார்கள்.
ஸஹாபாக்கள் உண்மையான இறைநேசர்களாவர்
ஸஹாபாக்களில் சிறந்தவர்களான அபூபக்கர் (ரலி), உமர் (ரலி, உஸ்மான் (ரலி), அலீ (ரலி) ஆகியோரும் மற்றும் மரத்தடியில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் (பைஅத்துர் ரிழ்வான்) ஒப்பந்தம் செய்த ஆயிரத்து நானூறு ஸஹாபாக்களும் இறை நேசர்களாவர். இவர்கள் எல்லோரும் சுவர்க்கம் செல்லக் கூடியவர்கள் என வாழ்த்துக் கூறப்பட்டவர்களுமாவர்.
“மரத்தடியில் பைஅத்துச் செய்த யாரும் நரகம் செல்லமாட்டார்கள்" என, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக ஸஹீஹான ஹதீஸில் வந்துள்ளது. (முஸ்லிம்)
“யாராக இருந்தாலும், எங்கிருந்தாலும் எனக்கு முற்றிலும் அஞ்சி நடப்பவர்களே என் நேசர்களாவார்கள்” என, அல்லாஹ் கூறுவதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறிவித்தார்கள். (அபூதாவூது)
இறை நிராகரிப்பாளர்களில் சிலரும் கூட தங்களை இறைநேசர்கள் என்று கூறிக்கொள்கின்றனர். இவ்வாறே தங்களை முஸ்லிம்களெனக் கூறி, கலிமாவை மொழிந்து, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மனித, ஜின் வர்க்கம் முழுவதிற்கும் தூதராக அனுப்பப்பட்டவர்கள் என்றெல்லாம் வெளிப்படையாகக் கூறி விட்டு உள்ளத்தில் இதற்கு நேர் மாற்றமாக நம்பக் கூடிய நயவஞ்சகர்களும் இறைநேசர்களாக மாட்டார்கள்.
உதாரணமாக இவர்கள் வெளிப்படையில் முஹம்மத் (ஸல்) அவர்களை நபி என ஏற்றுவிட்டு உள்ளத்தில் அதற்கு மாறாக அந்நபியவர்கள் பிற மன்னர்களைப் போன்று தம் கருத்திற்கிணங்க மக்களை ஆட்சி செய்கின்ற மன்னராகவே இருந்தார்கள் என்று, நம்புவார்கள். அல்லது அவர்கள் வேதமளிக்கப்படாதவர்களுக்கு மட்டுமே நபியாக அனுப்பப்பட்டவர்கள் வேதமுடையவர்களுக்கல்ல என்று பெரும்பாலான யூத கிறிஸ்தவர்கள் கூறுவதைப் போன்று நம்புவார்கள்.
அல்லது அவர்கள் பொது மக்களுக்குத்தான் நபியாக அனுப்பப்பட்டார்கள். அல்லாஹ்வுக்குக் குறிப்பிட்ட சில நேசர்கள் உள்ளனர். இவர்களுக்கு அவர்கள் நபியல்லர். இவர்கள் நபியின் பால் தேவையற்றவர்களுமாவர். ஆனால், இவர்களுக்கு சில தரீக்காக்கள் (வழிமுறைகள்) உள்ளன. அவை மூலமாக நபியின் உதவியின்றியே அல்லாஹ்வோடு தொடர்பு கொள்கிறார்கள். எவ்வாறு நபி மூஸாவுடைய உதவியின்றி கிள்ர் (அலை) அவர்கள் அல்லாஹ்விடமிருந்து அறிவு பெற்றார்களோ. அதைப் போன்று தாமும் பெறுவதாக நம்புவார்கள். அல்லது நபியுடைய உதவியின்றித் தங்களுக்குத் தேவையானயாவற்றையும், அல்லாஹ்விடம் நேரடியாகப் பெற்றுக் கொள்ளக் கூடியவர்கள் என்றும் நம்புவார்கள்.
அல்லது நபியவர்கள் வெளிப்படையான சட்டங்களைக் கொடுத்து அனுப்பப்பட்டார்கள் அதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம், ஆனால் பல அந்தரங்க விஷயங்கள் உள்ளன அவை நபியவர்களுக்குக் கொடுக்கப்படவில்லை. அவற்றை அவர்கள் அறியவுமாட்டார்கள் என்று கூறுவர். அல்லது இது போன்ற அந்தரங்க விஷயங்கள் அந்த ஷேக்மார்களுக்கு அதிகம் தெரியும் என்றோ, இவற்றை நபியவர்கள் எதன் மூலம் அறிந்து கொண்டார்களோ அதன் மூலம் அல்லாமல் வேறு முறைகள் மூலம் அவர்கள் தெரிந்து கொள்கிறார்கள் என்றோ நம்புவார்கள். இப்படிப்பட்ட நம்பிக்கையுடையவர்கள் எல்லோரும் நயவஞ்சகர்களும், அல்லாஹ்வின் விரோதிகளும், ஷைத்தானின் தோழர்களுமாவர்.
திண்ணைத் தோழர்கள்
மதீனாவில் மஸ்ஜிதுந் நபவீ என்று சொல்லப்படுகின்ற நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய பள்ளிவாசலின் திண்ணையில் வசித்து வந்த திண்ணைத் தோழர்கள் நபிகளின் பால் தேவையற்றவர்களாய்த் திகழ்ந்தார்கள். அவர்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நபியாக அனுப்பப்படவில்லை என்றெல்லாம் மேற்கூறப்பட்ட கொள்கையுடையோரில் சிலர் கூறுகின்றனர். இவர்களில் வேறு சிலர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிஃராஜ் என்னும் இறை உரையாடலுக்காக விண்ணுலகம் சென்ற போது அல்லாஹ் அவர்களுக்கு அறிவித்தவற்றை திண்ணைத் தோழர்களுக்கும் இரகசியமான முறையிலே அல்லாஹ் அறிவித்துக் கொடுத்தான்.
எனவே திண்ணைத் தோழர்களும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய தகுதியை அடைந்து விட்டார்கள் என்று புலம்புகின்றனர். இவர்களின் மடமை எந்த எல்லையை அடைந்துவிட்டதென்றால், மிஃராஜ் மக்காவில் வைத்து நடந்தது என்பதைக் கூட இவர்களால் அறிந்து கொள்ள முடியவில்லை.
அல்லாஹ் கூறுகின்றான் :-
தன் அடியாரான (முஹம்மத்(ஸல்) அவர்களை (கஃபா என்னும்) மக்காவிலுள்ள) சிறப்புப் பள்ளிவாசலிலிருந்து (பலஸ்தீனிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஒரே இரவில் அழைத்துச் சென்ற அல்லாஹ் மிகத் தூய்மையானவன். இந்த அக்ஸா பள்ளிவாசலைச் சுற்றிலுமுள்ள நிலப்பரப்பை சிறப்பித்தோம். நமது அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காகவே. (அவரை அழைத்துச் சென்றோம்) நிச்சயமாக அந்த இறைவன் மிக செவியுறுவோனும், மிக உற்று நோக்குவோனுமாயிருக்கிறான்" (திருக்குர்ஆன்- 17:1)
திண்ணைத் தோழர்கள் வசித்து வந்த திண்ணை மதீனாவிலேயே இருந்தது. மஸ்ஜிதுந் நபவியின் வடபாகத்தில் இருந்தது. தங்களுக்கு தங்க வசதி செய்து கொடுக்கும் குடும்பமோ, தோழர்களோ இல்லாமல் தனித்து இருந்தவர்களே இத்திண்ணையில் தங்கி வந்தார்கள். மூஃமின்களும் மதீனாவிற்கு ஹிஜ்ரத்துச் செய்து சென்ற போது தமக்குத் தங்குவதற்குரிய வீடு கிடைத்தவர்கள் அதில் தங்கினார்கள். வீடு கிடைக்காதவர்கள் தங்குவதற்குரிய வசதியான இடம் கிடைக்கும்வரை பள்ளிவாசலிலேயே தங்கி வந்தார்கள்
திண்ணைத் தோழர்கள் என்போர் நிரந்தரமாகத் திண்ணையில் தங்கி வரும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையுடையவர்களாய் இருக்கவில்லை, அவர்களின் எண்ணிக்கை சிலவேளை குறைந்தும் வேறு சில வேளைகளில் கூடியும் காணப்பட்டது. சிலர் குறிப்பிட்ட சில நாட்கள் தங்கி விட்டு பின்னர் அங்கிருந்து மாறிவிட்டனர். திண்ணைத்
தோழர்கள் என்போர் பிற முஸ்லிம்களைப் போன்றவர்களே. அறிவிலோ மார்க்கப் பற்றிலோ அவர்களுக்கென எந்தத் தனிச் சிறப்புமிருக்கவில்லை, மாறாக இவர்களில் சிலர் இஸ்லாத்திலிருந்து விலகியுமிருக்கின்றனர். அவர்களைக் கொலை செய்யுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
கட்டளையிட்டார்கள்.
"ஹனிய்யூன்" என அறியப்பட்ட சிலர் தங்கள் ஊரிலிருந்து மதீனாவிற்கு வந்திருந்தனர்.
மதீனா வந்ததும் தட்ப வெப்பநிலையின் மாற்றத்தின் காரணத்தால் நோய்வாய்ப்பட்டு விட்டார்கள். இந்நோய்க்கு, ஒட்டகத்தின் பாலையும் அதன் சிறுநீரையும் அருந்துமாறு அவர்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அவ்வாறே அவர்கள் ஒட்டகத்தின் பாலையும், அதன் சிறுநீரையும் அருந்தித் தங்களுடைய நோயிலிருந்து நிவாரணம்
அடைந்தனர். பிறகு ஒட்டகம் மேய்ப்பவர்களைக் கொலை செய்துவிட்டு ஒட்டகங்களைத் தம்முடன் எடுத்துச் சென்று விட்டனர். இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறிந்ததும் அவர்களைப்
பிடித்துக் கொண்டுவருமாறு கட்டளையிட்டார்கள்.
அதன்படி அவர்கள் கொண்டு வரப்பட்டதும் அவர்களுடைய கைகளையும், கால்களையும் வெட்டி, அவர்களுடைய கண்களைப் போக்கி, "ஹர்ரா" என்ற இடத்தில் போட்டு தாகத்தால் அவர்களை மரணிக்கச் செய்யுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். இந்த ஹதீஸ் புகாரி, முஸ்லிமில் அனஸ் (ரலி)அவர்கள் வாயிலாக
அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஹனிய்யூன், என்பவர்களும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய பள்ளிவாசலின் திண்ணையில் தங்கியவர்களே, என்று அந்த ஹதீஸில் குறிபிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஸஹாபாக்களில் சிறந்து விளங்கிய ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி), அபூஹுரைரா (ரலி) போன்றவர்களும் அத்திண்ணையில் தங்கியவர்கள்தாம். ஸஅத் பின் அபீவக்காஸ் என்பவர் மிகச் சிறந்தவராவார். இவர் அதில் சில தினங்கள்
தங்கிவிட்டு வேறு இடத்திற்கு மாறிச் சென்று விட்டார்கள். திண்ணையில் தங்கியவர்களின்
வரலாற்றை "அபூ அப்திர் ரஹ்மான்” என்பார் ஒன்று சேர்த்து ஒரு நூலாகவே எழுதியுள்ளார்.
அன்சாரிகளில் யாரும் திண்ணைத் தோழர்களாய் இருக்கவில்லை. இவ்வாறே கலீபாக்களான அபூபக்கர், உமர், உதுமான், அலீ மற்றும் தல்ஹா, சுபைர், அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப், அபூ உபைதா (ரலியல்லாஹு அல்ஹும்) போன்ற முஹாஜிரின்களில் பிரபலமான எவரும் திண்ணைத் தோழர்களாய் இருக்கவில்லை.
திண்ணைத்தோழர்களில் முனாகரத் பின் ஷுஃபா என்ற ஸஹாபியின் அடிமை ஒருவர் இருந்ததாகவும் அவரைப் பற்றி "இவர் எழுவரில் ஒருவர்" என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாகவும் அறிவிக்கப்படும் ஹதீஸ், அறிஞர்களின் ஒருமித்த முடிவின்படி பொய்யாக இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸாகும். அபூநுஅய்ம் என்பார் தமது “ஹுல்யத்துல் அவ்லியா” என்ற நூலில் இந்த ஹதீஸை அறிவித்திருந்த போதிலும் அது பொய்யான ஹதீஸேயாகும்,
அவ்லியாக்கள், அப்தால்கள், நுகபாக்கள், நுஜபாக்கள் அவ்தாத்கள். அக்தாப்கள் என்பவர்களைப் பற்றி கூறும் போது அவர்கள் நான்கு பேர்கள் என்றும், அல்லது
ஏழுபேர் என்றும் பன்னிரெண்டு, நாற்பது, எழுபது, முன்னூறு, முன்னூற்றுப் பதிமூன்று என்றும் பலவாறாக ஹதீஸில் வந்ததாகக் கூறப்படக் கூடியவை அனைத்தும் ஆதாரமற்றவை, இவைப்பற்றி ஆதாரப்பூர்வமான (ஸஹீஹான) ஹதீஸ்கள் எதிலும் அறிவிக்கப்படவில்லை. அப்தால் என்ற சொல்லைத் தவிர வேறு எந்தர் சொல்லைப் பற்றியும் முன்னோர்கள் யாரும் கூறவில்லை,
ஒரு ஹதீஸில் அப்தால்கள் நாற்பதுபேர் என்றும், அவர்கள் ஷாம் நாட்டில் உள்ளவர்கள் என்றும் இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) அவர்களின் ஹதீஸ் தொகுப்பில் அலீ (ரலி) அவர்கள் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஹதீஸை அறிவித்தவர்களின் தொடர் துண்டிக்கப்பட்டுள்ளது. அதாவது முன்கதிஃ ஆன ஹதீஸ். எனவே அது ளயீப் என்று சொல்லப்படக் கூடிய பலவீனமான ஹதீஸாகும். அலீ (ரலி) அவர்களும் அவர்களுடனிருந்த ஸஹாபாக்களும் முஆவியா (ரலி) அவர்களையும்
அவர்களுடன் ஷாம் நாட்டில் உள்ளவர்களையும்
விட மேலானவர்கள் என்பது தெரிந்த விஷயமாகும். எனவே முஆவியா (ரலி) அவர்களின் படையில் உள்ளவர்கள், அலி (ரலி) அவர்களின் படையில் உள்ளவர்களை விடச்சிறந்தவர்களாக இருக்க முடியாது.
‘முஸ்லிம்கள் வேறுபட்டு வாழும் சமயத்தில், ஒரு கூட்டம் குழப்பம் செய்து மார்க்கத்திலிருந்து வெளியேறும் அக்குழப்பவாதிகளை இரு கூட்டத்தினரில் உண்மையை நிலைநாட்டும் கூட்டம் அழித்தொழிக்கும்' என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஸயீத் (ரலி) அவர்கள் அறிவித்த ஹதீஸ் புகாரி, முஸ்லிமில் இடம் பெற்றுள்ளது.
இக்குழப்பவாதிகள் ஹரூரிய்யா என்ற ஊரைச் சேர்ந்த காரிஜிய்யாக்களாவர். அலீ (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் முஸ்லிம்களுக்கிடையில் பிரிவினை ஏற்பட்ட போது, இவர்கள் குழப்பம் செய்தார்கள். இவர்களை அலீ (ரலி) அவர்களும், அவர்களின் தோழர்களும் அழித்து ஒழித்தார்கள். உண்மையை நிலைநாட்டுவதில் முஆவியாவையும், அவருடைய தோழர்களையும் விட அலீ (ரலி) அவர்களும், அவர்களின் தோழர்களும் மேலானவர்கள் என்பது இந்த நிரூபணமான 'ஸஹீஹான’ ஹதீஸின் மூலம் தெரிய வருகின்றது. அவ்வாறாயின் அப்தால்
என்பவர்கள் மேலான சிறந்தவர்களுடனில்லாமல் அவர்களை விட தாழ்ந்தவர்களுடன் எவ்வாறு இருக்க முடியும்? எனவே அப்தால்களைப் பற்றி அவர்கள் ஷாம் நாட்டில் உள்ளவர்கள் என்று அறிவிக்கப்பட்ட ஹதீஸ் பலவீனமானது என்பது புலனாகின்றது.
மற்றொரு பொய்யான அறிவிப்பில் :-
ஒருவர் தன் கனியில் "மனோ இச்சை என்கின்ற பாம்பு என் ஈரலைத் தீண்டிவிட்டது. இதை குணப்படுத்த எந்த மருத்துவனுமில்லை. ஓதிப் பார்க்க கூடிய மந்திரவாதியுமில்லை. நான் நேசித்துவிட்ட என் தோழரிடத்தில் தான் இதன் மருந்து இருக்கிறது"
என்று பாடினாராம். இதைக் கேட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உணர்ச்சி வசப்பட்டு அவர்களின் தோளிலிருந்த போர்வை கீழே விழுந்து விட்டது என்று கூறப்பட்டுள்ளது. அது பொய்யாகப் புனைந்து கூறப்பட்ட செய்தியாகும் என ஹதீஸ் கலை வல்லுனர்கள் ஏகோபித்துக் கூறியுள்ளர்.
இதைவிட மிகப் பொய்யான மற்றொரு அறிவிப்பு என்ன வென்றால், அக்கவியைக் கேட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது ஆடையைத் துண்டு துண்டாக ஆக்கினார்களாம். அதில் ஒரு துண்டை
ஜிப்ரீல் (அலை) அவர்கள் எடுத்துச் சென்று அல்லாஹ்வின் அர்ஷில் தொங்கவிட்டார்களாம்.
இவை போன்ற அறிவிப்புகள் அபாண்டமான பொய் என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றி போதிய அறிவுள்ளவர்கள் நன்குணர்வர்.
இவ்வாறே "நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், அபூபக்கர் (ரலி) அவர்களும் பேசிக் கொண்டிருக்கும் போது அவர்களுக்கிடையில் நான் ஒரு நீக்ரோவைப் போல் இருந்தேன்" என்று உமர் (ரலி) அவர்கள் கூறியதாக அறிவிக்கப்படும் ஹதீஸும் பொய்யானதாகும் என்று ஹதீஸ் கலை
வல்லுனர்கள் ஏகோபித்துக் கூறியுள்ளனர். இது போன்ற பொய்யாகப் புனையப்பட்ட ஹதீஸ்கள் ஏராளம் உள்ளன.
இங்கு நாம் குறிப்பிட விரும்புவது என்னவென்றால் நபிகள் நாயகம் (ஸல்)அவர்களுடைய தூதை வெளிப்படையாக மட்டும் நம்பிவிட்டு உள்ளத்தில் அதற்கு முரணான நம்பிக்கை வைத்திருக்கக் கூடியவன் நயவஞ்சகனாய் ஆகி விடுகின்றான். இவனைப் போன்றவர்கள் வேண்டுமென்றோ அல்லது அறியாமையின் காரணத்தினாலோ நபிகள்
நாயகம் (ஸல்) அவர்கள் கொண்டுவந்த வழிமுறைகளுக்குத் தம் அ௧ வாழ்வில் மாறு செய்துவிட்டு, தங்களை இறைநேசர்கள் என்று கூறிக் கொள்கிறார்கள்.
இவர்களைப் போன்றுதான் பல கிருஸ்தவர்களும் யூதர்களும் தங்களை இறை நேசர்கள் என்று நம்பியிருந்தார்கள். முஹம்மத் அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் நம்பியிருந்தார்கள்.
ஆனால் முஹம்மத் (ஸல்) அவர்கள் வேதம் அருளப்படாதவர்களுக்கே தூதராக அனுப்பப்பட்டார்கள். நாங்கள் அவர்களைப் பின்பற்றவேண்டிய அவசியமில்லை. ஏனெனில், அவர்களுக்கு முன்னர் எங்களுக்கு இறைவன் பல தூதர்களை அனுப்பியுள்ளான்" என்று யூதர்களும்
கிருஸ்தவர்களும் நம்பினார்கள். தங்கள் கூட்டத்தாருக்கிடையே தங்களை இறைநேசர்கள் என்று இவர்கள் கூறிக் கொண்ட போதிலும் இவர்கள் எல்லோரும் காபிர்களேயாவர். உண்மையான இறைநேசர்கள் யார் என்றால் அல்லாஹ் கீழ்க்காணும் இறைவசனத்தில் கூறியுள்ள பண்புடையவர்களேயாவர்.
"நிச்சயமாக அல்லாஹ்வுடைய நேசர்கள் எதற்கும் பயப்படமாட்டார்கள். எதற்கும் கவலைப்படவுமாட்டார்கள். அவர்கள் அல்லாஹ்வை நம்பி, அவனுக்கு முற்றிலும் அஞ்சி வழிப்பட்டும் வருவார்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள். (திருக்குர்ஆன்-10 :62)
ஈமானின் கடமைகள்
ஈமான் என்னும் இறை நம்பிக்கை முழுமை பெற வேண்டுமானால் அல்லாஹ்வையும், அவனது மலக்குகளையும், அவன் இறக்கிய எல்லா வேதங்களையும். அவன் அனுப்பிய எல்லாத் தூதர்களையும், மறுமை நாளையும். நன்மையும், தீமையும் அல்லாஹ்வின் நாட்டப்படியே நடக்கின்றன என்பதையும் நம்ப வேண்டும் அப்போது தான் ஈமான் சரியானதாக ஆகும். அல்லாஹ்கூறுகிறான்:
"அல்லாஹ்வையும், எங்களுக்கு அருளப் பெற்ற (குர்ஆன்) என்னும் வேதத்தையும், இப்ராஹீம், இஸ்மாமீல், இஸ்ஹாக், யஃகூப் முதலியவர்களுக்கும், இவர்களுடைய சந்ததிகளுக்கும் அருளப் பெற்றவற்றையும், மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் கொடுக்கப்பட்டவற்றையும் நாங்கள் விசுவாசிக்கின்றோம். அவர்களுக்கிடையில் நாங்கள் பாகுபாடு செய்யமாட்டோம். மேலும் அவனுக்கே நாங்கள் முற்றிலும் வழிப்படுவோம் என்று (முஸ்லிம்களே) நீங்கள் கூறுங்கள்.
(முஸ்லிம்களே!) நீங்கள் எதை விசுவாசங் கொண்டீர்களோ, அதைப் போல் (பிறமதத்திலுள்ள) அவர்களும் விசுவாசங் கொண்டால், நிச்சயமாக அவர்களும் நேரான வழியை அடைந்து விடுவார்கள். அவர்கள் புறக்கணித்து விட்டால் நிச்சயமாக அவர்கள் விதண்டாவாதத்தில் தான் இருக்கின்றார்கள்.
உங்களுக்கு அல்லாஹ் போதுமானவன். மேலும், அவன் அதிகம் செவியுறுவோனும், நன்கறிவோனுமாய் இருக்கின்றான்" (திருக்குர்ஆன்-2 :137)
மேலும் அல்லாஹ் கூறுகின்றான் :-
"நம்முடைய தூதர் தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப் பெற்ற வேதத்தை விசுவாசித்தார். அதை மற்ற மூஃமின்களும் விசுவாசித்தனர். இவர்கள் எல்லோரும் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும் விசுவாசித்தனர். மேலும் "அவனுடைய தூதர்களில் சிலரை நம்பி வேறு சிலரை நம்பாமல் அவர்கிளுக்கிடையில் எந்தப் பாகுபாடும் காட்டமாட்டோம். "எங்கள் இறைவா! நாங்கள் உனது மன்னிப்பைக் கோருகின்றோம். உன்னிடமே நாங்கள் சேர வேண்டியிருக்கிறது'' என்றும் அவர்கள் கூறினார்கள்.
அல்லாஹ் எந்த ஆத்மாவையும் அதன் சக்திக்கு மேல் நிர்ப்பந்திப்பதில்லை. அது தனக்குத் தேடிக் கொண்ட நன்மை அதற்கே (பயனளிக்கும்.), அது தனக்குத் தேடிக் கொண்ட தீமை அதற்கே (கேடு விளைவிக்கும்). எங்கள் இறைவா! நாங்கள் (எங்கள்) கடமைகளைச் செய்யும் போது மறந்துவிட்டால் அல்லது தவறு செய்து விட்டால் அதற்காக நீ எங்களைத் தண்டிக்காதே; இறைவா! எங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது கடுமையான கட்டளைகளை நீ சுமத்தியது போன்று எங்கள் மீதும் சுமத்தி விடாதே; எங்களை மன்னித்தருள்வாயாக! எங்களைப் பொறுத்தருள்வாயாக! எங்களுக்குக் கிருபை செய்வாயாக! நீதான் எங்கள் அதிபதி! எனவே உன்னை நிராகரிக்கும் மக்கள் மீது (நாங்கள் வெற்றி பெற) நீ எங்களுக்கு உதவி புரிவாயாக!
(என்று பிரார்த்திப்பார்கள்)" (திருக்குர் ஆன்-2 :286)
மூஃமின்களின் பண்புகள்
அல்லாஹ் கூறுகின்றான் :-
அலிஃப், லாப், மீம் இது (திருக்குர்ஆன்) வேத நூலேயாகும். இதில் சந்தேகமே இல்லை. பயபக்தியுடையவர்களுக்கு இது நேரான வழிகாட்டுகிறது. இந்த பயபக்தியுடையவர்கள் எத்தகைய(பண்புடை)யோர் என்றால் மறைவானவற்றை நம்புவார்கள் நாம் அவர்களுக்கு
அளித்தவற்றிலிருந்து (நல்வழியில்) செலவு செய்வார்கள், தொழுகையைக் கடைப்பிடித் தொழுகுவார்கள், மேலும் உமக்கு அருளப் பெற்ற இவ்வேதத்தையும், உமக்கு முன் (இருந்த. நபிமார்களுக்கு) அருளப்பட்ட வேதங்களையும் விசுவாசங்கொள்வார்கள். இப்பண்புடையோர்தான் தங்கள் இறைவனின் நேரான வழியில் இருக்கிறார்கள். இவர்களே வெற்றி பெற்றவர்களும் ஆவர். (திருக்குர்ஆன்-2 :1,5)
ஈமான் முழுமையானதாக ஆக வேண்டுமானால், நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்களை இறுதி நபி என்றும், அவர்களுக்குப் பின்னால் நபி வரவுமில்லை; இனி வரப் போவதுமில்லை என்றும் அல்லாஹ் அவர்களை மனித ஜின் இனங்கள் முழுமைக்கும் தூதராக அனுப்பினான் என்றும் நம்புவது அவசியமாகும். நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் கொண்டு வந்தவற்றை முழுமையாக நம்பாதவன் மூமினாக இருக்க முடியாது என்றிருக்க எவ்வாறு அவன் அல்லாஹ்விற்கு அஞ்சிய அவனது நேசனாக ஆகமுடியும்? நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கொண்டு வந்த போதனைகளில் சிலவற்றை நம்பி வேறு சிலவற்றை நம்பாதவன் ஒருபோதும் மூமினாக இருக்கமுடியாது. அவன் நிராகரிப் போனாகவே கருதப்படுவான். இதை அல்லாஹ் பின்வருமாறு தன் திருமறையில் விளக்குகின்றான் :-
நிச்சயமாக, எவர்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதர்களையும் நிராகரித்துவிட்டு, அல்லாஹ்வுக்கும், அவனது தூதர்களுக்குமிடையில் பிரிவினை செய்யக்கருதி, (தூதர்களில்) சிலரை நம்புவோம்.
சிலரை நிராகரிப்போம் எனவும் கூறி (நிராகரிப்பு, விசுவாசம் ஆகிய) இவற்றிற்கு மத்தியில் ஒரு பாதையை ஏற்படுத்த விரும்புகிறார்களோ, அவர்கள் நிச்சயமாக நிராகரிப்போர்களேயாவர். நிராகரிப்போருக்கு இழிவுபடுத்தும் வேதனையை நாம் தயார் செய்து வைத்துள்ளோம். எவர்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதர்களையும் விசுவாசித்து, அவர்களில் எவருக்கிடையிலும் பிரிவினை செய்யாமல் இருக்கின்றார்களோ, அவர்களுக்கு அவர்களுடைய கூலியை (அல்லாஹ் மறுமையில்) கொடுப்பான். அல்லாஹ் மிக்க (பிழை) பொறுப்போனும், 'கிருபை செய்வோனுமாயிருக்கின்றான்"'
(திருக்குர்ஆன்-4: 150,152),
அல்லாஹ்வின் ஏவல்களையும் அவனுடைய லிலக்கல்களையும், அவனுடைய வாக்குறுதிகளையும், அவனுடைய எச்சரிக்கைகளையும், அவன் ஆகுமாக்கியவற்றையும், அவன் தடை செய்தவற்றையும் மக்களுக்கு எத்திவைப்பதில் அல்லாஹ்விற்கும் அவனுடைய அடியார்களுக்குமிடையில் ஒரு தொடர்பாக நபிமார்கள் இருந்தார்கள். என்று நம்புவது ஈமானில் ஒரு பகுதியாகும். அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஆகுமாக்கியவையே (ஹலால்) ஆகுமானவையாகும். அவர்கள் கூடாது என்று விலக்கியவையே (ஹராம்) கூடாதவையாகும். அவர்கள் எதைச் சட்டமாக்கினார்களோ அதுவே மார்க்கமாகும் என்று நம்புவது ஈமானில் ஒரு பகுதியாகும்.
நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்களைப் பின்பற்றாமல் அல்லாஹ்விடம் நேரடியாக அவ்லியாக்கள் தொடர்பு கொள்ள முடியும். என்று எவனாவது நம்பினால், அவன் காபிராகவும் ஷைத்தானின் தோழனாகவும் ஆகிவிடுகின்றான்.
சிருஷ்டிகளைப் படைப்பதும், அவர்களுக்கு உணவளிப்பதும், அவர்களுடைய அழைப்புக்குப் பதில் கொடுப்பதும், அவர்களின் உள்ளங்களை நேர்வழிப்படுத்துவதும், அவர்களுக்கு, அவர்களுடைய எதிரிகளுக்கு எதிராக உதவுவதும், லாபமோ நஷ்டமோ ஏற்படுத்துவதும், இவை அனைத்தையும் அல்லாஹ் ஒருவனே தன் இஷ்டப்படியே தான் நாடிய காரணங்களால் செய்கின்றான். இவ்விஷயங்களில் இறை தூதர்களுக்கோ அவ்லியாக்களுக்கோ எந்தப் பங்குமில்லை.
ஒருவன் பெரிய ஞானியாகவும், உலக ஆசாபாசத்தை விரும்பாதவனாகவும், வணக்க வழிபாடுகள் செய்வதில் உச்சநிலை எட்டிய வனாகவும் இருந்து கொண்டு நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்)அவர்கள்
கொண்டு வந்த போதனைகளை முழுமையாக நம்பவில்லையானால் அவன் மூமினாக இருக்க முடியாது. இறைநேசனாகவும் ஆக முடியாது. இப்படிப்பட்டவர்கள் யூத, கிருஸ்துவ துறவிகளைப் போன்றவர்களேயாவர் தங்களை அறிவாளிகள் என்றும், வணக்கசாலிகள் என்று, கூறிக்கொண்ட அரேபியா, இந்தியா, துருக்கிப் போன்ற நாட்டில் உள்ள பல தெய்வக் கொள்கையுடையோரும்
இப்படிப்பட்டவர்களே. இவர்களுக்கு அறிவும் ஞானமும், தங்களுடைய மதத்தில் பற்றுமிருக்கலாம் ஆனால் இவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய போதனைகள் அனைத்தையும் நம்பிச் செயல்படவில்லையானால் அவர்கள் இறை
நிராகரிப்போராகவும், இறை விரோதிகளாகவுமே
கருதப்படுவார்கள்.
பாரசீக ஞானிகளாக இருந்த நெருப்பு வணங்கிகளும்
அரிஸ்டாட்டில் போன்ற பல தெய்வக் கொள்கையுடையோரான கிரேக்க அறிஞர்களும் தங்களை இறைநேசர்கள் என்று எண்ணிக் கொண்ட
போதிலும் அவர்கள் இறை விரோதிகளேயாவர். ஏனெனில், இவர்கள் விக்கிரகங்களையும், நட்சத்திரங்களையும் வணங்கி வந்த முஷ்ரிகீன்களான இணைவைப்பவர்களாவர்.
திருக்குர்ஆன் கூறும் "துல்கர்னைன்" மன்னர் யார்?
நபி ஈஸா (அலை) அவர்கள் பிறப்பதற்கு சுமார் மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்னர் "அரிஸ்டாட்டில்" என்பவர் வாழ்ந்தார். இவர் "அலெக்சாண்டர்" (இஸ்கந்தர் அல்மக்தூனி) என்ற மன்னருக்கு
மந்திரியாக இருந்தார். இவரது இறப்பை வைத்து தான் ரோமானியர்களும், கிரேக்கர்களும், யூத, கிருஸ்தவர்களும் தங்கள் காலண்டரைக் கணக்கிட்டனர். இந்த அலெக்சாண்டர் என்பவர் தான் அல்லாஹ் குர்ஆனில் கஹ்ப் என்ற 18வது அத்தியாத்தில் கூறியுள்ள துல்கர்னைன் என்ற மன்னராவார் என சிலர் நினைக்கின்றனர். இது தவறாகும். அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறியுள்ள துல்கர்னைன் என்பவரின் பெயரும் அலெக்சாண்டர் (இஸ்கன்தர்) என்பதாக இருக்கலாமெனக் கருதி இதைக் காரணமாகக் கொண்டு துல்கர்னைன் என்பவர்தான் அலெக்சாண்டர் என்பவர், அவருக்குத்தான் அரிஸ்டாட்டில் என்பவர் மந்திரியாக
பணியாற்றினார் என அவிசென்னா (இப்னுசீனா) என்பவரும் வேறு சிலரும் கூறுகின்றனர். இது முற்றிலும் தவறாகும். அரிஸ்டாட்டில் யாருக்கு,
மந்திரியாகப் பணியாற்றினாரோ அந்த அலெக்சாண்டர் என்பவர் (முஷ்ரிக்) பல தெய்வக் கொள்கையுடையவரும். அல்லாஹ் குர்ஆனில்
கூறிய துல்கர்னைன் என்பவருக்குப் பின்னர் தோன்றியவருமாவார். அவர் அல்லாஹ் குர்ஆனில் கூறியது போன்று யாஜுஜ். மஃஜுஜ் என்பவர்கள்
வாழ்ந்த ஊருக்குச் சென்றவருமல்லர். அங்கு அவர் சுவர் எழுப்பியவருமல்லர். அரிஸ்டாட்டில்
யாருக்கு மந்திரியாக இருந்தாரோ, அந்த அலெக்சாண்டரின் பிறப்பை வைத்துத்தான் ரோமானியர்கள் தங்கள் காலண்டரைக்
கணக்கிடுகின்றனர்.
குர்ஆனைப் பின்பற்றாதவன் ஷைத்தானின் தோழனாவான்
அரேபியா, இந்தியா, துருக்கி, கிரேக்கம் போன்ற நாடுகளில் வாழ்ந்த முஷ்ரிகீன்களில் (பல தெய்வக் கொள்கைக்காரர்களில்) கூட அறிவிலும், வணக்க வழிபாடுகளிலும், ஞானத்திலும் சிறந்த, சுயநிர்ணயத் தகுதி பெற்றவர்கள் பலர் இருந்தனர். ஆனால் இவர்கள் இறைத்தூதர்களைப் பின்பற்றக் கூடியவர்களாய் இருக்கவில்லை. அவர்கள் கொண்டு வந்த வழிமுறைகளை நம்பக் கூடியவர்களாய் இருக்கவில்லை: அவர்கள் அறிவித்தவற்றை உண்மைப்படுத்தவுமில்லை; அவர்கள் ஏவியவற்றை
எடுத்து நடக்கவுமில்லை. இவர்கள் அறிவாளியாக இருந்த போதிலும் இறை விசுவாசிகளாகவும், இறை நேசர்களாகவுமிருக்கவில்லை.
இவர்களோடு ஷைத்தான் சேர்ந்து, இவர்களிடம் குடி கொண்டு சில மறைவான விஷயங்களை வெளிப்படுத்திக் காட்டுகின்றான். சூனியத்தின் வகையைச் சார்ந்த சில அற்புதங்களைக் காட்டும் ஆற்றலையும் இவர்கள் பெற்றிருந்தார்கள். இவர்கள் ஜோதிடர்கள். சூனியக்காரர்களின் இனத்தைச்
சார்ந்தவர்களாவர். இப்படிப்பட்டவர்கள் மீதுதான் ஷைத்தான் இறங்குகின்றான் என அல்லாஹ்
பின்வரும் வசனத்தில் விளக்குகின்றான்.
(விசுவாசிகளே) ஷைத்தான்கள் யார் மீது இறங்குகின்றன என்பதை நான் உங்களுக்கு அறிவித்துத் தரட்டுமா? பொய் சொல்லும் ஒவ்வொரு பாவியின் மீதும் அவன் இறங்குகின்றான். தாங்கள் செவியுற்றவற்றை (அவர்களுக்குக்) கூறுகின்றன. அவர்களில் பெரும்பாலோர் பெரும் பொய்யர்களேயாவர். (திருக்குர்ஆன்-26 :221,223)
இப்பப்பட்டவர்கள் தங்களுக்கு மறைவான விஷயங்கள் தெரியும் என்றும், தங்களிடமிருந்து அற்புதங்கள் ஏற்படுகின்றன என்றும் கூறுகின்றனர். இவர்கள் இறைத் தூதர்களைப் பின்பற்றாத வரை இறைத்தூதர்களைப் பொய்யாக்கியவர்களாகவே கருதப்படுவர். இவர்களோடு உள்ள ஷைத்தான்களும் அவர்களைப் பொய்யாக்குகின்றனர். இப்படிப்பட்டோர் இணைவைத்தல், அநீதி, அருவருக்கத்தக்கச் செயல்கள். வரம்பு மீறுதல். வணக்கத்தில் நூதனமானவற்றைச் செய்தல் போன்ற பாவச் செயல்களைச் செய்வது அவர்கள் தம் இயல்பேயாகும். இதன் காரணத்தினால் தான் ஷைத்தான்கள் இவர்கள் மீது இறங்கி இவர்களோடு சேர்ந்து கொள்கின்றன. அப்போது இவர்கள் ஷைத்தானின் தோழர்களாக
ஆஃகிவிடுகின்றனர். இவர்கள் ஒரு போதும் இறைநேசர்களாக ஆக முடியாது.
அல்லாஹ் கூறுகின்றான் எவன் அல்லா(ஹ்)வுடைய திக்ர் என்னும் குர்ஆனைப் புறக்கணித்துப் புறமுதுகு காட்டுகின்றானோ, அவனுக்கு நாம் ஒரு ஷைத்தானைத் தோழனாகச் சாட்டிவிடுகிறோம். இவன் அவனுக்கு இணைபிரியாத் தோழனாக ஆகி விடுகின்றான். (திருக்குர்ஆன்-43: 36)
இவ்வசனத்தில் (திக்ருற்றஹ்மான்) அல்லாஹ்வுடைய திக்ர் என்பதன் பொருள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட திருக்குர்ஆனை நம்பி அதை மெய்ப்பித்து அதன் கட்டளைகளுக்கு எவன் சிரம் சாய்க்கவில்லையோ அவன் அதை விட்டும் புறமுதுகு காட்டியவனாக ஆகிவிடுகின்றான். அப்போது அல்லாஹ் அவன் மீது சாட்டி விடுகின்றான்.
திருக்குர்ஆனைப்பற்றி அல்லாஹ் கூறும்போது
இந்த பரிசுத்த குர்ஆன் பாக்கியமுடைய நல்லுபதேசமாகும். அதை நாம் இறக்கி வைத்தோம். (திருக்குர்ஆன்-21:50),
மேலும் அல்லாஹ் கூறுகின்றான் :-
எவன் என்னுடைய திக்ர் என்னும் நல்லுபதேசத்தைப் புறக்கணிக்கின்றானோ அவனுக்கு நிச்சயமாக நெருக்கடியான வாழ்க்கை இருக்கிறது. மறுமைநாளில் நாம் அவனை குருடனாக எழுப்புவோம். அப்போது அவன் என் இறைவா! நீ ஏன் என்னைக் குருடனாக எழுப்பினாய்? நான் (உலகத்தில்) பார்வையுடையவனாகவல்லவா இருந்தேன்? என்று கேட்பான். அதற்கு நம்
வசனங்கள் உன்னிடம் வந்த போது நீ அவற்றை மறந்து விட்டாய். அவ்வாறே இன்றைய தினம் நீயும் மறக்கப்பட்டு விட்டாய் என்று அல்லாஹ் பதில் கூறுவான். (திருக்குர்ஆன-20 :124,125)
அல்லாஹ்வுடைய திக்ர் என்பதன் பொருள் அவன் இறக்கிய திருவசனங்களாகும் என்பது
இதன் மூலம் தெரியவருகின்றது. எனவே ஒருவன் இரவு பகலாக மிக பக்தியோடு அல்லாஹ்வை நினைவு கூர்ந்து, மிக உருக்கமான முறையில் அல்லாஹ்வுடைய வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டுக் கொண்டு. அவன் இறக்கிய குர்ஆனுடைய போதனைகளைப் பின்பற்றவில்லையானால், அவன் வஷைத்தானின் தோழனாக ஆகி விடுகின்றான். அவன் வானத்தில் பறந்தாலும் சரி, தண்ணீரில் நடந்தாலும் சரியே, இவை எல்லாம் ஷைத்தானின் மூலம் ஏற்படுவனவாகும் என்பதை அறிய வேண்டும். இதைப் பற்றி வேறு இடங்களில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது
நயவஞ்சகனின் அடையாளங்கள்
சில மனிதர்களிடத்தில் ஈமான் இருப்பதுடன் நயவஞ்சகத்தின் ஒரு பகுதியும் காணப்படுகிறது. இதுபற்றி அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் மூலம் அறிவிக்கப்பட்ட ஒரு ஸஹீஹான ஹதீஸில் கூறப்பட்டிருப்பதாவது :-
"பேசினால் பொய்யே பேசுவான். வாக்குறுதிக்கு மாறு செய்வான், நம்பிக்கைக்கு துரோகம் செய்வான், ஒப்பந்தத்திற்கு சதிமோசம் செய்வான். இந்நான்கு அடையாளங்களும் யாரிடம் இருக்கின்றனவோ அவன் முழு நயவஞ்சகனாக ஆகிவிடுகின்றான். இந்நான்கு குணங்களில் ஏதேனும் ஒன்று ஒருவனிடத்தில் குடிகொண்டாலும் அவனிடத்தில் நயவஞ்சுகத்தின் ஒரு தன்மை குடி கொண்டு விடுகிறது என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(புகாரி, முஸ்லிம்)
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கும் மற்றொரு ஸஹீஹான ஹதீஸில் கூறப்பட்டிருப்பதாவது :-
“ஈமான் எழுபதிற்கு அல்லது அறுபதிற்கு மேற்பட்ட கிளைகளாகப் பிரிகிறது. அதில் மிக உயர்ந்தது. லாயிலாஹ இல்லல்லாஹ் என்னும் திருக்கலிமாவாகும். அதில் மிகத் தாழ்ந்தது. நடை பாதைகளில் கிடக்கின்ற மனிதர்களுக்குத் தொல்லை கொடுக்கும் பொருட்களை அகற்றுவதாகும். வெட்கம் ஈமானின் ஒரு கிளையே” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
நயவஞ்சகளின் குணங்களில் ஏதேனும் ஒன்று ஒருவனிடத்தில் இருக்குமானால், அவனிடம் நயவஞ்சகத் தன்மை ஒன்று குடி கொண்டு விடுகிறது. அத்தன்மையை அவன் எப்பொழுது விட்டு விடுகின்றானோ, அப்போது தான் நயவஞ்சகத்தை விட்டும் தூய்மையானவனாய் அவன் ஆகிறான் என விளக்கியுள்ளார்கள்.
மற்றொரு ஸஹீஹான ஹதீஸில் வந்துள்ளது
சிறந்த மூமின்களில் ஒருவரான அபூதர் (ரலி) அவர்களைப் பார்த்து உம்மிடத்தில் அறியாமைக்கால (ஜாஹிலிய்யாக்) காலப் பண்பு ஒன்று இருக்கிறது என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அதற்கு
அவர்கள் என்னுடைய முதிர்ந்த இந்த வயதிலுமா அது இருக்கிறது யாரகுலுல்லாஹ்? என்று கேட்டார். அதற்கு ஆம் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
மற்றொருஸஹீஹான ஹதீஸில் :-
குலப்பெருமை, பிற வம்சாவழிகளை இழிவுபடுத்துதல், இறந்தவர்கள் மீது ஒப்பாரி வைத்தல், நட்சத்திரம் தோன்றுவதின் காரணமாக மழை பொழிகின்றது என்று நம்புதல், இந்நான்கு விஷயங்களும் என் சமூகத்தில் உள்ள அறியாமைக் காலச் செயல்களாகும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(முஸ்லிம்)
அபூஹுரைரா (ரலி) அறிவிக்கும் மற்றொரு ஸஹீஹான ஹதீஸில் :- நயவஞ்சகனின்
அடையாளங்கள் மூன்று. பேசினால்
பொய்யே பேசுவான். வாக்குறுதி அளித்தால் அதற்கு மாறு செய்வான் நம்பிக்கைக்கு துரோகம் செய்வான். அவன் நோன்பு நோற்றாலும் தொழுதாலும், தன்னை முஸ்லிம் என்று எண்ணிக் கொண்டாலும் சரியே. இத்தன்மைகள் அவனிடம் இருக்கும் போதெல்லாம் அவன் நயவஞ்சகனே ஆவான் என, மற்றொரு அறிவிப்பில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. (முஸ்லிம்)
இமாம் புகாரி (ரலி அவர்கள் அறிவிக்கின்ற ஒரு ஹதீஸில் இப்னு அபீ முலைக்கா என்பார் கூறுகிறார் :- முஹம்மத் (ஸல் )அவர்களுடைய தோழர்களில் முப்பது பேர்களைப் பார்த்திருக்கின்றேன். அவர்கள் எல்லோருமே தங்களிடம் நயவஞ்சகத்தன்மை குடி கொண்டுவிடுமோ என அஞ்சினார்கள்.
அல்லாஹ் கூறுகின்றான் :-
இரு படைகளும் சந்தித்த (உஹதுப் போர்) அன்று உங்களுக்கு ஏற்பட்ட நஷ்டம் அல்லாஹ்வின் கட்டளைப்படியே தான் (ஏற்பட்டது). உண்மை விசுவாசிகளையும், நயவஞ்சகர்களையும் பிரித்தறிவித்து விடுவதற்காகவே (அவன் இவ்வாறு) செய்தான். வாருங்கள் அல்லாஹ்வுடைய பாதையில் போர் செய்யுங்கள். அல்லது (நிராகரிப்போரைத்) தடுத்து நிறுத்துங்கள் என்று அந்நயவஞ்சர்களுக்குக் கூறப்பட்டால், இதனை நாங்கள் போர் என்று
கருதியிருந்தால், நிச்சயமாக நாங்கள் உங்களைத் தொடர்ந்து வந்திருப்போம் என்று கூறினார்கள். அன்றைய தினம் அவர்கள் விசுவாசத்தைவிட நிராகரிப்புக்கே மிகவும் சமீபத்தில் இருந்தனர். (திருக்குர்ஆன்-3:166,167)
நயவஞ்சகர்கள் நிராகரிப்பின்பால் நெருங்கியவர்கள்
என்று அல்லாஹ் கூறியதிலிருந்து இவர்களிடம் விசுவாசமும் நிராகரிப்பும் கலந்திருக்கிறது. ஆனால் நிராகரிப்பே உறுதியானதாக இருக்கிறது என்றும்,
மற்றவர்களிடம் விசுவாசமும் நிராகரிப்பும் கலந்திருந்தாலும் அவர்களின் விசுவாசமே உறுதியானதாக இருக்கிறது என்றும் தெரியவருகிறது.
அல்லாஹ்வை நம்பி: அவனை முற்றிலும் பயந்து; அவனுக்கு வழிப்பட்டு நடப்பவர்களே இறைநேசர்களாவர். ஒருவனிடத்தில் எந்த
அளவிற்கு ஈமானும், இறையச்சமும் முழுமையானதாக இருக்கிறதோ அந்த அளவிற்கு அவனுடைய இறைநேசம் முழுமையானதாக இருக்கும்.
இறை நேசத்தில் மக்கள் அவரவர்களுடைய ஈமான் தக்வாவிற்கு ஏற்றவாறு ஏற்றத் தாழ்வுடையவர்களாய் இருக்கின்றார்கள். இவ்வாறே, அவர்களுடைய நிராகரிப்பு, நயவஞ்சகத்திற்கு ஏற்றவாறு அவர்கள் இறைவன் மீது கொண்டிருக்கும் பகைமையும் ஏற்றத்தாழ்வுடையதாக இருக்கிறது. எனவே, அல்லாஹ் கூறுகின்றான்.
"ஒரு (புதிய) அத்தியாயம் அல்லாஹ்விடமிருந்து அருளப் பெற்றால் உங்களில் யாருடைய விசுவாசத்தை இது அதிகப்படுத்தியது?
என்று (பரிகாசமாகக்) கேட்க் கூடியவர்களும் அவர்களில் இருக்கின்றனர். எவர்கள் விசுவாசங் கொண்டிருக்கின்றார்களோ அவர்களுடைய விசுவாசத்தை இது அதிகப்படுத்திவிட்டது.. (இதனைப் பற்றி) அவர்கள் மகிழ்ச்சியடைகின்றனர்.
ஆனால், எவர்களுடைய உள்ளங்களில் (நயவஞ்சகம் என்னும்) நோய் இருக்கிறதோ, அவர்களின் (உள்ளத்திலுள்ள) அசுத்தத்துடன் மேலும் அசுத்தத்தையே அது அவர்களுக்கு அதிகப்படுத்திவிட்டது. அவர்கள் நிராகரித்தவர்களாகவே இறந்தும்விட்டனர்." (திருக்குர்ஆன்-9:124,125)
மேலும் அல்லாஹ் கூறுகின்றான் :-
(போர் செய்யக் கூடாதென்று தடுக்கப்பட்டுள்ள மாதங்களை அவர்கள் தங்கள் விருப்பப் படி) முன்பின் ஆக்குவதெல்லாம் நிச்சயமாக நிராகரிப்பையே அதிகப்படுத்துகிறது". (திருக்குர்ஆன்-9 :37),
எவர்கள் நேரான வழியில் செல்கின்றார்களோ அவர்களுக்கு நேர்வழியை அதிகப்படுத்தி தக்வா என்னும் பரிசுத்த தன்மையையும் அல்லாஹ் அளிக்கிறான் (திருக்குர்ஆன்-47 :17)
நயவஞ்சகர்களைப் பற்றிக் கூறும்போது :
அவர்களுடைய உள்ளங்களில் (நயவஞ்சகம் என்னும்) நோய் இருக்கிறது. அவர்களுக்கு அந்நோயை அல்லாஹ் அதிகப்படுத்துகின்றான் (திருக்குர்ஆன் - 2 :10)
ஒரே மனிதனிடத்தில் அவனுடைய ஈமானுக்குத் தக்கவாறு இறை நேசமும். அவனது இறை நிராகரிப்புக்கும், நயவஞ்சகத்திற்கும் தக்கவாறு இறை விரோதமும் ஒன்று சேருகின்றன என்பதை அல்லாஹ் தெளிவுபடுத்தியுள்ளான்.
“விசுவாசங் கொண்டோரின் விசுவாசத்தை (அவ்விசுவாசம் அதிகப்படுத்துகிறது” (திருக்குர்ஆன் -74 :31)
"இவர்கள் நம்பிக்கைக்கு மேல் நம்பிக்கை அதிகரிக்கப்பட்டவர்களாய் ஆகுவதற்காக மூமின்களின் உள்ளங்களில் நிம்மதியை அளித்தான்."(திருக்குர்ஆன்-48 ;4)
என்றும் கூறி அல்லாஹ் பல இடங்களில் ஈமான் செயலிற்கேற்றவாறு கூடவும் குறையவும் செய்கின்றது என்பதாகக் கூறியுள்ளான்.
மறுமையில் மக்கள் முன்று பிரிவினராக எழுப்பப்படுவார்கள்.
இறைநேசர்கள் இருசாரராக இருக்கின்றனர். ஒரு சாரார் நற்செயல்களை அதிகமாகச் செய்வதில் முந்திச் சென்ற அல்லாஹ்வுக்கு நெருங்கியவர்கள். இரண்டாம் சாரார் தங்கள் மீதுள்ள கடமைகளை மட்டும் நிறைவேற்றக் கூடிய வலதுசாரிகள்.
இவர்களைப் பற்றி அல்லாஹ் பல இடங்களில் கூறியுள்ளான். "வாகிஆ" என்ற அத்தியாத்தின்
ஆரம்பத்திலும், அதன் கடைசியிலும். "இன்சான்" "முதப்பிபீன்" "பாதிர்"' என்ற அத்தியாயங்களிலும் இவர்களைப் பற்றி விளக்கியுள்ளான். வாகிஆ என்ற அத்தியாயத்தின் ஆரம்பத்தில் மறுமைநாளைப் பற்றியும். அதன் கடைசியில் மரணத்தைப் பற்றியும் விளக்கும்போது பின்வருமாறு கூறுகிறான்:
(யுகமுடிவு என்னும்) மாபெரும் சம்பவம் நிகழும் போது அச்சம்பவத்தைப் பொய்யாக்குவோர் யாருமில்லை. அது (நிராகரிப்போரின் நிலையைத்) தாழ்த்தி விடும். (விசுவாசிகளின் நிலையை) உயர்த்திவிடும்; அப்போது மிகப்பயங்கரமான பூமி அதிர்ச்சி ஏற்படும்; மலைகள் தூள்தூளாக நொறுங்கும்; அவை தூவப்பட்ட தூளாகப் பறந்துவிடும் (அந்நாளில்) நீங்கள் மூன்று பிரிவினர்களாய்ப் பிரிந்து விடுவீர்கள் (முதல் பிரிவினர்) வலது சாரிகள், வலதுசாரிகள் யார்? (அவர்கள்தான் பாக்கியம் பெற்றவர்கள்.) (இரண்டாவது பிரிவினர் இடது சாரிகள் இடது சாரிகள் யார்? (அவர்கள்தான் துர்பாக்கியசாலிகள்) மூன்றாவது பிரிவினர் நன்மை செய்வதில் போட்டி போட்டுக் கொண்டு) முந்திச் சென்றவர்கள். அவர்கள் தான் அல்லாஹ்வோடு மிகவும் நெருங்கியவர்கள். இன்பங்கள் நிறைந்த சுவர்க்கத்தில் (இவர்கள்) இருப்பார்கள். முதல் பிரிவினரில் பெரும்பாலானவர்களும், மூன்றாவது பிரிவினரில் கொஞ்சத் தொகையினரும் சுவர்க்கத்தில் இருப்பார்கள். (திருக்குர்ஆன்-56:1-14)
அல்லாஹ் எல்லா மக்களையும் ஒன்று திரட்டும் மறுமை நாளில் மனிதர்கள் இவ்வாறு மூன்று சாராராகப் பிரிகின்றனர். இவர்களை அல்லாஹ் குர்ஆனில் பல இடங்களில் வர்ணித்துள்ளான். மரணத்தைப் பற்றிக் கூறும்போது இதே வாகிஆ என்ற அத்தியாத்தின் கடைசியில் பின் வருமாறு கூறுகிறான்:
(உங்களில் ஒருவரின் மரணவேளையில் அவன் உயிர் தொண்டைக் குழியை அடைந்திருக்கும் அந்நேரத்தில் (இறப்பவர்களின் சமீபத்திலிருக்கும்) நீங்கள் திகைத்தவர்களாகப் பார்க்கின்றீர்கள்; நாமோ உங்களைவிட அவருக்கு மிக சமீபமாக இருக்கின்றோம். ஆனால் உங்களால் பார்க்க முடியாது. நீங்கள் யாருடைய கேள்வி கணக்கிற்கும் உட்படாத (சுதந்திரர்களாக) இருந்து, இது விஷயத்தில் நீங்கள் உண்மையானவர்களய் இருந்தால் (இறந்து போன அவனுடைய உயிரைத்) திரும்ப் பெறச் செய்யுங்கள் பார்க்கலாம். இறந்தவரோ (அல்லாஹ்வுக்கு மிக்க) நெருங்கியவராக இருந்தால் அவருக்கு நல்ல நிம்மதியும் திருப்தியும் இன்பமும் அளிக்கும் சுவர்க்கமுண்டு. அவர் வலது சாரியைச்
சார்ந்தவராக இருந்தால் வலது சாரியைச் சார்ந்தவரே! உமக்கு சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக (என்று கூறப்படும்) அவன் வழிகெட்ட பொய்யர்களில் நின்றும் உள்ளவனாக இருந்தால், (வயிற்றைப் பிளக்கும்) கொதி நீரே அவனுக்கு விருந்தாகக் கொடுக்கப்படும். மேலும், அவன் நரகத்தில் தள்ளப்படுவான். நிச்சயமாக இது சந்தேகமற்ற உண்மையென்பது உறுதி!
ஆகவே, (நபியே!) நீர் மகத்தான உமதிறைவனின் திருநாமத்தை (க்கூறி)த் துதி செய்து கொண்டிருப்பீராக. (திருக்குர்ஆன்-56: 83, 96)
நிச்சயமாக மனிதனுக்கு நேரான வழியைக் காண்பித்தோம். (அவர்களில் அதைப் பின்பற்றி நமக்கு) நன்றி செலுத்துவோருமிருக்கின்றனர்; அதனை நிராகரிப்போருமிருக்கின்றனர். நிராகரிப்போருக்கு நாம் சங்கிலிகளையும், விலங்குகளையும், நரகத்தையும் நிச்சயமாக தயார் செய்து வைத்திருக்கின்றோம். திண்ணமாக நல்லவர்கள் கோப்பைகளிலுள்ள கற்பூரம் கலந்த பானத்தை அருந்துவார்கள். அது அல்லா(ஹ்)வுடைய நல்லடியார்கள் அருந்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட ஒர் ஊற்றின் நீராகும். அதை அவர்கள் (தாங்கள் விரும்பியவாறு) ஓடச் செய்வார்கள். இவர்கள் (அல்லாஹ்விற்குச் செய்த) நேர்ச்சைகளை நிறைவேற்றி வைத்தனர். நீண்ட வேதனையுடைய நாளுக்கு அஞ்சிக் கொண்டிருந்தனர். மேலும் அல்லாஹ்வின் மீதுள்ள அன்பின் காரணமாக ஏழைகளுக்கும், அனாதைகளுக்கும், கைதிகளுக்கும் ஆகாரமளித்து வந்தனர். தானம் (பெறுவோரை நோக்கி) அல்லாஹ்வின் முகத்தை நாடியே நாம் உங்களுக்கு ஆகாரமளிக்கின்றோமே தவிர உங்களிடம் நாங்கள் எந்தக் கூலியையோ அல்லது (நீங்கள் எங்களுக்கு) நன்றி செலுத்த வேண்டுமென்பதையோ எதிர்பார்த்தல்ல. மாறாக முகங்களை சுளிக்கச் செய்யும் மிகக் கடுமையான மறுமை நாளைக் குறித்து அல்லா(ஹ்)வுக்கு நாங்கள் அஞ்சுகின்றோம் (என்றும் கூறினார்கள்) எனவே, அல்லாஹ் அந்த நாளின் தீங்கிலிருந்து அவர்களைக் காப்பாற்றி அவர்களுடைய முகத்தில் மகிழ்ச்சியையும், செழிப்பையும் கொடுத்தான். அவர்கள் பொறுமை செய்ததின் காரணமாக சுவர்க்கத்தையும், பட்டு ஆடைகளையும் கூலியாகக் கொடுக்கின்றான்.
(திருக்குர்ஆன்-76 :3,12)
அல்லாஹ்வோடு நெருங்கிய நல்லடியார்களின் சிறப்பு
முதப்பிபீன் என்னும் அத்தியாத்தில் அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான் :
நிச்சயமாக பாவிகளின் (பாவச் செயல்கள் யாவையும் பற்றி எழுதப்பட்ட), புத்தகம் சிஜ்ஜீன் என்னும் தாழ்ந்த நெருக்கமான இடத்தில் இருக்கிறது. (நபியே!) சிஜ்ஜீன் என்றால் என்னவென்று நீர் அறிவீரா? அது அழிக்க முடியாத பதிவுப் புத்தகமாகும். (அது தீயோர்களின் வினைச்சுவடி) இதைப் பொய்யாக்குவோருக்கு மறுமை நாளில் கேடுதான். இவர்கள் கூலிகொடுக்கும் (மறுமை) நாளையும் பொய்யாக்குகிறார்கள். வரம்பு மீறிய பாவிகள் ஒவ்வொருவரையும் தவிர (மற்றெவரும்) அதனைப் பொய்யாக்கமாட்டார். அவனுக்கு நம்முடைய வசனங்கள் ஒதிக் காண்பிக்கப்பட்டால், இது முன்னோரின் கட்டுக்கதை தான் என்று அவன் கூறுகின்றான். நிச்சயமாக அவ்வாறன்று. அவர்கள் செய்து கொண்டிருந்த தீவினையே அவர்களின் உள்ளங்களின் மீது உருவாக்கப்பட்டு விட்டது. (எனவே அவன் இவ்வாறு கூறுகின்றான்.) மறுமை நாளில் அல்லாஹ்வின் திருமுகத்தை இவர்கள் பார்க்க முடியாமல் திரையிடப்படுவார்கள். பின்னர் இவர்கள் நரகத்தில் தள்ளப்படுவார்கள். பின்னர் நீங்கள் பொய்யாக்கிக் கொண்டிருந்தது இதுதான் என்று (இவர்களை நோக்கிக்) கூறப்படும். நிச்சயமாக நன்மை செய்த நல்லவர்களின் ஏடு 'இல்லிய்யூன்' என்ற மேலான இடத்தில் இருக்கும். இல்லிய்யூன் என்றால் என்னவென்று (நபியே) உமக்குத் தெரியுமா? அது (நல்லவர்களின் பெயர்கள் பதிக்கப்பட்டிருக்கும்) ஒரு பதிவுப்புத்தகமாகும்.
அல்லாஹ்விற்கு நெருக்கமான மலக்குகள் அதனைப் பாதுகாப்பாகப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்,
ஆகவே நிச்சயமாக நல்லவர்கள் (அந்நாளில் சுவனபதியின்) பேரின்பத்தில் (உயர்ந்த ஆசனங்கள் மீது) சாய்ந்த வண்ணம் (சுவர்க்கக் காட்சிகளைப்) பார்த்துக் கொண்டிருப்பார்கள். அவர்களின்
முகங்களில் சுவர்க்கத்தின் செழிப்பை நீர் அறிவீர். முத்திரையிடப்பட்டிருக்கும் கலப்பற்ற திராட்சை ரசம் அவர்களுக்குப் புகட்டப்படும். அது கஸ்தூரியால் முத்திரையிடப்பட்டிருக்கும். எனவே அதைப் பெறுவதற்காக (நற்செயல்கள் செய்வது மூலம்) ஆசிப்போர் அதனை ஆசிக்கட்டும். அதில்'தஸ்னீம்'என்ற சுவர்க்கத்தின் உயர்ரக பானம் கலந்திருக்கும். அது அல்லா(ஹ்)வோடு நெருங்கியவர்கள் அருந்துவதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு சுனையின் நீராகும். (திருக்குர்ஆன்-83 :7,28)
வலது சாரியினருக்கு ஒரு வித கலப்புப் பானம் கொடுக்கப்படும். ஆனால் அல்லாஹ்வோடு நெருங்கிய நல்லடியார்கள் கலப்பற்ற, தூய பானத்தைப் பருகுவார்கள் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களைப் போன்ற பெரியார்கள் கூறியுள்ளார்கள். இது உண்மைதான். ஏனென்றால்,
மேற்குறிப்பிடப்பட்ட வசனத்தில் அல்லாஹ்வோடு நெருங்கியவர்களுக்காக தயார் செய்யப்பட்டுள்ள தஸ்னீம் பானத்தைப் பற்றிக் கூறும் போது எஷ்ற புபிஹா அதை அவர்கள் குடிப்பார்கள் என்று கூறினான். எஷ்றபுமின்ஹா அதிலிருந்து கொஞ்சம் குடிப்பார்கள் என்று கூறவில்லை. இவ்விரு சொற்றொடருக்குமிடையில் வேறுபாட்டைக் காணமுடியும். அதைக் குடிப்பார்கள் என்ற சொற்றொடர் வயிறு நிரம்ப அதையே குடிப்பார்கள். வேறு பானத்தின்பால் தேவையாக மாட்டார்கள் என்ற
பொருள் கொடுக்கிறது அதிலிருந்து கொஞ்சம் குடிப்பார்கள் என்ற சொற்றொடர் அதையும் குடிப்பார்கள் அது அல்லாத மற்ற பானத்தையும் குடிப்பார்கள் என்று பொருள் கொடுக்கின்றது.
இதிலிருந்து நாம் அறிந்து கொள்வது என்னவென்றால். அல்லாஹ்வோடு நெருங்கிய நல்லடியார்கள் அப்பானத்தை வயிறு நிரம்பக் குடிப்பார்கள். அதனுடன் வேறு எதுவும் அவர்களுக்கு
தேவைப்படுவதில்லை. அதனால்தான் இதை மட்டும் குடிக்கிறார்கள். ஆனால் வலதுசாரிகள் அப்படியல்ல. அவர்களுக்கு ஒரு வித கலப்புப்பானமே
கொடுக்கப்படும். எனவே அல்லாஹ் கூறுகிறான் :-
கற்பூரம் கலந்த ஒரு வித பானத்தைப் பருகுவார்கள் அது அல்லாஹ்வின் நல்லடியார்கள் குடிப்பதற்காகவே ஏற்படுத்தப்பட்ட ஊற்று நீராகும் அதை அவர்கள் விரும்பியவாறு ஒடச் செய்வார்கள்.
(திருக்குர்ஆன்-76: 6)
அல்லாஹ்வின் அடியார்கள் என்று இவ்வசனத்தில் குறிப்பிட்டவர்கள் யார் என்றால், இதே அத்தியாயத்தில் முன்னர் குற்றிப்பிடப்பட்ட அல்லாஹ்வோடு மிக நெருங்கிய நல்லடியார்களாவர். ஒருவர் ஒரு நன்மையைச் செய்தால், அந்த நன்மையின் இனத்திலிருந்தே அவனுக்குக் கூலி கொடுக்கப்படும். ஒருவன் ஒரு தீமையைச் செய்தால், அத்தீமையின் இனத்திலிருந்தே தண்டனை கொடுக்கப்படும். எனவே, நபிகள் நாயகம். (ஸல்) அவர்கள் ஒரு ஹதீஸில் பின்வருமாறு கூறினார்கள்.
எவனாவது ஒருவன் மற்றொரு மூமினான அடியானுடைய உலகத் துன்பங்களில் ஒன்றை நீக்கி விடுவானாயின் அவனுக்கு மறுமையில்
ஏற்படும் துன்பங்களில் ஒன்றை அல்லாஹ் நீக்கி விடுகிறான். இல்லாத ஒருவனுக்குக் கொடுத்துதவுவானாயின் அவனுடைய ஈருலக் காரியங்களை அல்லாஹ் இலேசாக்கிக் கொடுக்கின்றான். ஒரு முஸ்லிமுடைய குறையை மறைத்து விடுவானாயின் அவனுடைய குறையை அல்லாஹ் ஈருலகிலும் மறைத்து விடுகின்றான். ஒருவன் தனது சகோதரனுக்கு உதவியாக இருக்கும் போதெல்லாம் அல்லாஹ் அவனுக்கு உதவுகின்றான். கல்வி கற்பதற்காக ஒருவன் ஒரு வழியைக் கையாளுவாளாயின் அதன் மூலம் அல்லாஹ் அவனுக்கு சுவர்க்கத்தின் ஒரு வழியை இலேசாக்கிக் கொடுக்கின்றான். ஒரு கூட்டத்தினர் அல்லாஹ்வுடைய வீடான ஒரு பள்ளிவாசலில் ஒன்று சேர்ந்து அவனுடைய குர்ஆனை ஓதி அதன் விளக்கத்தை ஒருவருக்கொருவர் தெரிந்து கொள்வார்களானால் அவர்கள் மீது அமைதி இறங்குகிறது. அல்லாஹ்வுடைய அருள் அவர்களைச் சூழ்ந்து கொள்கிறது. அமரர்கள் அவர்களைச் சூழ இருந்து அவர்களுக்காகப் பிரார்த்திக்கின்றனர். அவர்களை அல்லாஹ் தன்னுடனுள்ள மலக்குகளுக்கு அறிமுகப்படுத்தி நினைவு கூருகின்றான். ஒருவனுடய செயல் அவனைப் பிற்படுத்திவிடுமானால், அவனுடைய குலம் அவனை முன்னேறச் செய்து விடுவதில்லை. (முஸ்லிம்)
மேலும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரக்க முடையவர்கள் மீது அல்லாஹ் இரங்குகின்றான். எனவே பூமியில் உள்ளவர்கள் மீது இரக்கம் காட்டுங்கள். வானத்தில் உள்ள அல்லாஹ்
உங்கள் மீது இரக்கம் காட்டுவான். (திர்மிதி)
அல்லாஹ் கூறுவதாக ஒரு ஸஹீஹான ஹதீஸில் நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்.
நான் (ரஹ்மான்) இரக்கமுடையவன். ரஹ்ம் என்ற ரத்தபந்த உறவை நானே படைத்தேன். அதனுடைய பெயரை என்னுடைய ரஹ்மான் என்ற பெயரிலிருந்துதான் எடுத்தேன். எனவே யார் இந்த பந்தத்தார்களோடு சேர்ந்து வாழ்கிறார்களோ, அவர்களை நான் சேர்த்துக் கொள்வேன். யார் அவர்களைத் துண்டித்து விடுகிறார்களோ,
நான் அவர்ளை துண்டித்து விடுகின்றேன்.
மற்றோர் அறிவிப்பில் யார் குடும்ப உறவினர்களோடு இணைந்து, வாழ்கிறார்களோ அவர்களை அல்லாஹ் தன்பக்கம் இணைத்துக் கொள்கின்றான் யார் குடும்பத்தில் பிளவு ஏற்படுத்துகிறார்களோ அவர்களை அல்லாஹ் துண்டித்து விடுகின்றான். (புகாரி. முஸ்லிம்) இது போன்ற ஹதீஸ்கள் ஏராளம்.
நல்லவர்களின் பண்பு
இறை நேசர்கள் இருவகைப்படுவர். ஒருவகையினர் அல்லாஹ்வுடன் நெருங்கியவர்கள்; மற்றொரு வகையினர் வலது சாரிகள். இதன் விளக்கம் முன்னர் கொடுக்கப்பட்டுள்ளது. இவ்விரு பிரிவினரின் செயல்களைக் குறித்து இறைநேசர்களைப் பற்றி அறிவிக்கப்பட்டுள்ள ஹதீஸில் பின்வருமாறு வந்துள்ளது:
அல்லாஹ் கூறுகிறான் என் நேசரை விரோதிக்கக் கூடியவன் என்னோடு பகிரங்கமாகப் போர் தொடுத்தவனாவான். எனது அடியான் அவன் மீது நான் கடமையாக்கியிருக்கின்றவற்றைச் செய்வதன் மூலம் எந்த அளவு என்பக்கம் நெருங்குகின்றானோ அதைப் போன்று வேறு எந்த நற்செயல்கள் மூலமும் என்னை அவன் நெருங்க முடியாது. என் நேசத்தைப் பெறுவதற்காக மேல் மிச்சமான நற்செயல்களை அதிகம் செய்வது அவசியமாகும். எனது நேசத்தை அவன் விரும்பும்போது, அவனை நான் நேசித்துவிடுகின்றேன். நான் அவனை நேசித்துவிட்டால், அவன் செவியுறும் கேள்வியாகவும், பார்க்கும் பார்வையாகவும், அவன் பிடிக்கும் கரமாகவும். அவன் நடக்கும் காலாகவும் நான் ஆகிவிடுகிறேன்.
வலது சாரியினர் என்ற நல்லவர்கள் தங்கள் மீதுள்ள கடமையான காரியங்களைச் செய்வதின் மூலம் அல்லாஹ்வின் பால் நெருங்குவார்கள். அல்லாஹ் அவர்கள் மீது எதைக் கடமையாக்கியிருக்கின்றானோ அதைச் செய்வார்கள். எதை விட்டும் அல்லாஹ் விலக்கியிருக்கின்றானோ அதை விட்டும் விலகிக் கொள்வார்கள். மேல் மிச்சமான வணக்கங்களை அதிகம் செய்து தங்களுக்கு எவ்விதக் கஷ்டமும் கொடுக்க மாட்டார்கள். அவசியமானவைகளைச் செய்வதை விட்டும் விலகிக் கொள்ளவும் மாட்டார்கள்.
அல்லாஹ்வோடு நெருங்கியவர்களின் பண்பு
அல்லாஹவோடு நெருங்கியவர்கள் தங்கள் மீது கடமையான நற்செயல்களை நிறைவேற்றுவதுடன் மேல்மிச்சமான வணக்கங்களையும். அதிகமதிகம் செய்து அல்லாஹ்வின் பால் நெருங்குவார்கள் ஹராமான வெறுக்கத் தக்க செயல்களை விட்டு விலகிக் கொள்வார்கள். தங்களால், முடியக்கூடியதும் அல்லாஹ்வுக்கு விருப்பமானதுமான எல்லா வணக்க வழிபாடுகளையும் செய்து அல்லாஹ்வின் பக்கம் நெருங்கும் போது அல்லாஹ் அவர்களை முழுமையாக நேசித்து விடுகின்நான். எனவே அல்லாஹ் கூறுகின்றான் :- என்னுடைய நேசத்தைப் பெறுவதற்காக மேல் மிச்சமான வணக்கங்களை அதிகமதிகம் செய்யும்போது அவனை நான் நேசித்து விடுகின்றேன். அதாவது முழுமையாக அல்லாஹ் நேசித்து விடுகின்றான்.
(யா அல்லாஹ்!) எவர்கள் மீது உன் பூரண அருட்கொடையைச் சொரிந்துள்ளாயோ, அவர்களுடைய நேரான பாதையை எங்களுக்கு நீ காண்பித்துத் தந்தருள்வாயாக! அந்தப் பாதை உன் கோபத்திற்குள்ளானவர்களுடைய பாதையுமன்று, வழி தவறியவர்களுடைய பாதையுமன்று. திருக்குர்ஆன்- 1:6,7)
என்ற வசனத்தில் அல்லாஹ் கூறியதைப் போன்று அவர்களைப் பூரணமாக நேசித்து, தன் பேரருளையும் சொரிந்து விடுகின்றான். எனவே அல்லாஹ் கூறுகிறான் :-
அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் முற்றிலும் வழிப்படுகின்றவர்களே, அல்லாஹ்வின் அருளைப் பெற்ற நபிமார்கள், சத்திய சீலர்கள் தியாகிகள், நல்லொழுக்கமுடையவர்கள் முதலானவர்களுடன் (மறுமையில்), இருப்பார்கள். இவர்கள் தான் மிக்க அழகான தோழர்களாவர். (திருக்குர்ஆன்- 4 :69)
அல்லாஹ்வோடு நெருங்கிய இவர்களிடத்தில் சாதாரணச் செயல்கள் கூட வணக்கமாக ஆகிவிடுகின்றன. அவற்றை செய்வதன் மூலம் அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பெறுகின்றார்கள். எனவே. இவர்களின் செயல்கள் முழுவதுமே வணக்கமாக மாறி விடுகின்றன. இவர்கள் எவ்வாறு அல்லாஹ்விற்கு மட்டும் கலப்பற்ற முறையில்
வணக்கங்களைச் செய்தார்களோ அவ்வாறே சுவர்க்கத்தில் கலப்பற்ற பானத்தைப் பருகுவார்கள். வணக்கத்தில் நடுநிலையாக இருந்தவர்களோ, தங்கள் மீதுள்ள கடமைகளை நிறைவேற்றுவதுடன் சில செயல்களை தங்கள் மன இச்சையைக் கருதிச் செய்தார்கள். இதனால் அவர்கள் தண்டிக்கப்படுவதில்லை. அந்தச் செயலுக்குக் கூலியும் கிடைப்பதில்லை. எனவே சுவர்க்கத்தில் கலப்பற்ற பானத்தைப் பருகமாட்டார்கள். உலகில் தங்கள் அமல்களை எந்த அளவு கலப்புச் செய்தார்களோ, அவ்வாறே அவர்கள் ஒரு கலப்புப் பானத்தைப் பருகுவார்கள். இவர்களைப் போன்றுதான் நபிமார்களும் இருவகையினராக இருக்கின்றனர். ஒரு வகையினர் தூதரும் அடிமையுமானவர்கள்,
மற்றொரு வகையினர் தூதரும் அரசருமானவர்கள். இவ்விரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்குமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் கட்டளையிட்டான். தூதராகவும் அடிமையாகவும் இருப்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தேர்ந்தெடுத்தார்
நபி தாவூத் (அலை), நபி சுலைமான் (அலை) போன்றவர்கள் தூதரும் அரசருமானவர்களாவர். இதை அல்லாஹ் குர்ஆனில் சுலைமான் (அலை) அவர்களுடைய வரலாற்றைப் பற்றிக்கூறும் போது பின்வருமாறு கூறுகின்றான்.
என் இறைவா! என்னுடைய குற்றங்களை மன்னித்து விடுவாயாக! எனக்குப் பின்னர் எவருமே அடைய முடியாத ஒர் ஆட்சியை எனக்கு நீ நல்குவாயாக! நிச்சயமாக நீயே பெரும் கொடையாளியாக இருக்கின்றாய் என்று, (நபி சுலைமான்) பிரார்த்தனை செய்தார். ஆதலால் (அவர் விரும்பிய ஆட்சியைக் கொடுத்துக்) காற்றையும் அவருக்கு வசப்படுத்திக் கொடுத்தோம். அது அவருடைய கட்டளையின்படி அவர் செல்லக்கூடிய இடங்களுக்கெல்லாம் மிக: இலேசாக (அவரைச் சுமந்து) சென்று கொண்டிருந்தது. மேலும் ஷைத்தான்களில் உள்ள எல்லாச் சிற்பிகளையும், முத்துக் குளிப்பவர்களையும், சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்த வேறு (ஜின்கள்) பலரையும் (நாம் அவருக்கு வசப்படுத்திக் கொடுத்தோம்). பின்னர் அவரை (நோக்கி) இவையெல்லாம் நம்முடைய கொடையாகும். ஆகவே, (இவற்றைத் தானமாகக் கொடுத்து) நன்றி செய்யும் அல்லது (இவற்றை உம்மிடமே) வைத்துக்கொள்ளும். அது உமது விருப்பத்தைப் பொறுத்த விஷயம். (நீர்கொடுத்தீரா இல்லையா என்று உம்மிடம்) கணக்குக் கேட்கப்படமாட்டாது. திருக்குர்ஆன்-38 : 35-39)
அதாவது சுலைமானே! நீர் கொடுக்க நாடியவருக்கு கொடும், நீர் கொடுக்க நாடாதோருக்கு கொடுக்காமல் இரும். அதுபற்றி நீர் கணக்கு கேட்கப்படமாட்டீர். தூதரும் அரசருமானவர் தன்மீது அல்லாஹ் கடமையாக்கியவற்றை செய்வார். அல்லாஹ் விலக்கியவற்றிலிருந்து விலகிக் கொள்வார். தன் ஆட்சியிலும், தன் பொருளிலும். தாம் விரும்புவது போன்று செய்வார். அதனால் அவர் மீது எந்தக் குற்றமும் ஏற்படுவதில்லை
ஆனால், தூதரும் அடிமையானவரோ தன் இறைவனின் கட்டளையின்றி யாருக்கும் கொடுப்பதில்லை. தான் விரும்பியவருக்குக் கொடுக்கவோ தடுக்கவோ முடியாது. அல்லாஹ் யாருக்கு கொடுக்குமாறு கட்டளையிடுகின்றானோ, அவருக்கே கொடுப்பார். யாரை அதிகாரியாக ஆக்க வேண்டுமென்று கட்டளையிடுகின்றானோ அவரையே அதிகாரியாக்குவார். அவர் செய்யும் செயல்கள் முழுவதுமே இறை வணக்கமாகவே இருக்கும்.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கும் புகாரியில் உள்ள ஒரு ஸஹீஹான ஹதீஸில்:-
அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் என் இஷ்டப்படி யாருக்கும் கொடுக்கவோ தடுக்கவோ செய்வதில்லை. நான் பங்கிடக் கூடியவனாக இருக்கின்றேன். எதை யாருக்குக் கொடுக்க வேண்டுமென்று கட்டளையிடப்படுகின்றேனோ அவ்வாறே செய்கின்றேன் என, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)
எனவே, ஷரீஅத் தொடர்பான செல்வத்தைப் பற்றி அல்லாஹ் கூறும் போது; அதை தன்னோடும், தன் தூதரோடும் இணைத்துக் கூறுவதைக் காணலாம்.
போரில் கிடைத்த பொருள்கள் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் சொந்தமானவை என்று (நபியே)
நீர் சொல்வீராக... (திருக்குர்ஆன்- 8 : 1).
அந்த ஊர்க்காரர்களிடமிருந்து போர் மூலம் அல்லாஹ் தன் தூதருக்குக் கொடுத்த பொருட்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கு சொந்தமானவை (திருக்குர்ஆன்- 59 :7),
(விசுவாசிகளே) நீங்கள் போரில் பெற்ற பொருட்களில் ஐந்தில் ஒரு பங்கு அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் உரியதாகும் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். (திருக்குர்ஆன்- 8 : 41)
இது போன்ற வசனங்களில் போரில் கிடைத்த பொருளைத் தன்னோடும். தன் தூதரோடும் இணைத்து அல்லாஹ் கூறியுள்ளான். எனவே இந்த பொருட்களை முஸ்லிம்களின் பொறுப்பை ஏற்றுச் செயல்படுகின்ற இமாம்களின் சுயநிர்ணயத்தின் கீழ் அல்லாஹ்வும். அவன் தூதரும் விரும்புகின்ற வழியிலேயே செலவிடவேண்டும் என்பது மார்க்க அறிஞர்களில் பெரும்பாலானவர்களின் கருத்தாகும். இவ்வாறே இமாம் மாலிக் (ரஹ்) போன்ற முன்னோர்களும் கூறியுள்ளனர். இமாம் அஹ்மத் (ரஹ்) அவர்களும் இவ்வாறே கருத்துத் தெரிவித்துள்ளார்கள் என்று கூறப்படுகிறது. போரில் கிடைத்த
பொருளில் அல்லாஹ்வுக்கும், அவனுடைய
தூதருக்கும் சொந்தமானது என்று கூறப்படும் ஐந்தில் ஒரு பங்கை ஐந்து சாரார்களுக்குப் பங்கிட்டுக் கொடுக்க வேண்டுமென இமாம்
ஷாபிஇ (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள். இதுவே இமாம் அஹ்மதின் பிரபலமான கருத்துமாகும். மூன்று சாராருக்குக் கொடுத்தால் போதுமென
இமாம்அபூஹனீபா (ரஹ்) கூறியுள்ளர்கள்.
இங்கு நாம் குறிப்பிட விரும்புவது என்னவென்றால் தூதரும் அடிமையுமானவர் தூதரும் அரசருமானவரை விடச் சிறந்தவராவார். ரசூல்மார்களான இப்ராஹீம் (அலை), மூஸா (அலை), ஈஸா (அலை), முஹம்மத் (ஸல்) இவர்கள் எல்லோரும் நபி யூசுப் (அலை), நபி தாவூது (அலை), நபி சுலைமான் (அலை) போன்ற இவர்கள் அனைவரையும் விடச் சிறந்தவர்களாவர்.
இது போன்ற நற்செயல்கள் செய்வதில், முந்திச் செல்கின்ற அல்லாஹ்விற்கு நெருக்கமானவர்கள் வலது சாரிகளான நல்லவர்களைவிடச் சிறந்தவர்களாவார்கள். இந்த வலதுசாரிகளும் நல்லவர்கள் தான். என்றாலும் நற்செயல்களை அதிகமதிகம் செய்வதில் இவர்கள் முந்திச்செல்வதில்லை. யார் அல்லாஹ் தங்கள்மீது கடமையாக்கியவற்றை நிறைவேற்றுவதுடன்
அல்லாஹ் விரும்பும் ஆகுமான செயல்களையும் செய்கிறார்களோ, அவர்களே வலதுசாரிகளாவர். யார் அல்லாஹ் விரும்பி ஏற்றுக் கொள்கின்ற செயல்களைச் செய்வதுடன், ஆகுமாக்கப்பட்ட செயல்களை, கடமையான செயல்களை நிறைவேற்றுவதற்குரிய உபகரணமாக ஆக்கிக் கொள்கிறார்களோ அவர்களே அல்லாஹ்வோடு மிக நெருங்கியவர்களாவர்.
முஹம்மத் (ஸல்) அவர்களின் உம்மத்தினர் முன்று சாரார்களாவர்.
அல்லாஹ் கூறுகின்றான்:
பின்னர் நம்முடைய அடியார்களில் நாம் தேர்ந்தெடுத்தவர்களை இவ்வேதங்களுக்கு உரியவர்களாக்கி வைத்தோம். எனினும் அவர்களில் சிலர் (இதற்கு மாறுசெய்து) தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்டனர்; அவர்களில் (வேறு) சிலர் நடு நிலையான வழியில் சென்றனர். அவர்களில் மற்றும் சிலரோ அல்லாஹ்வுடைய கட்டளைப்படி நன்மையான செயல்களைச் செய்வதில் முந்திக் கொள்கின்றனர். இவ்வாறு செய்வதே மிகப்பெரும் பாக்கியமாகும். அவர்கள் நிலையாக சுவர்க்கங்களுக்குச் செல்வார்கள். முத்துப் பதிக்கப்பட்ட பொற்காப்புகள் அங்கு அவர்களுக்கு அணிவிக்கப்படும். அதில் அவர்களுடைய ஆடைகள் யாவும் பட்டாலானவையாகவே இருக்கும். மேலும், உங்களை விட்டு (சகல) கவலைகளையும் போக்கிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்
உரித்தாகட்டும். நிச்சயமாக எங்கள் இறைவன் மிக்க மன்னிப்போனும் நன்றியுடையோனுமாய் இருக்கின்றான். அவனே தன்னுடைய அருளால் (மிக்கமேலான) தங்கும் இல்லத்தில் எங்களை அமர்த்தினான், அதில் எந்த கஷ்ட மும் எங்களைத் தொடுவதில்லை, எந்த சோர்வும் எங்களுக்கு அதில்
ஏற்படுவதில்லை என்றும் கூறுவர். (திருக்குர்ஆன் -35 :32-35)
மேல் மிச்சமான வணக்கங்களை அதிகமதிகம் செய்து முந்திச் செல்கின்ற இறைநேசர்களையும், கடமையான வணக்கங்களைச் செய்வதோடு மட்டும் போதுமாக்கிக் கொள்ளும் நடுத்தரவாதிகளையும் மேலே கூறப்பட்ட வசனத்தில் அல்லாஹ் குறிப்பிட்டுள்ளான். இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ள மூன்று பிரிவினர் முஹம்மத் (ஸல்) அவர்களுடைய உம்மத்தினரில் மட்டுமே உள்ளார்கள் என்பதைப் பின்வரும் வசனத்தில் விளக்குகின்றான்
பின்னர், நம்முடைய அடியார்களிடமிருந்து நாம் தெரிந்தெடுத்தவர்களை அவ்வேதங்களுக்கு உரியவர்களாக்கி வைத்தோம். எனினும் அவர்களி்ல் சிலர் (அதற்குமாறு செய்து) தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொள்கின்றனர் அவர்களில் (மற்றும்) சிலரோ அல்லாஹ்வுடைய கட்டளைப்படி உண்மையான செயல்களில் முந்திக் கொள்கின்றனர் இவ்வாறு செய்வதே மாபெரும் பாக்கியமாகும். திருக்குர்ஆன் (35 :32)
முன் சென்ற உம்மத்தினர்களுக்குப் பின்னர் வேதம் கொடுக்கப்பட்டவர்கள் நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்களுடைய உம்மத்தினரேயாவார்கள். வேதத்தை அனந்தரமாகப் பெற்றவர்கள் என்று கூறப்படுபவர்கள் குர்ஆனை மனனம் செய்பவர்கள் மட்டுமல்லர். குர்ஆனை நம்பக் கூடியவர்களும் இதில் உட்பட்டவர்களேயாவர். இவர்களைத் தன் ஆத்மாவிற்குத் தீங்கிழைத்தவர்கள், நடுத்தரவாதிகள்,
நற்செயல்கள் செய்வதில் முந்திச் செல்கின்றவர்கள் என மூன்று பிரிவினராக அல்லாஹ் பிரித்துள்ளான். ஆனால், 'வாகிஆ' (56), முதஃப்பிஃபீன் (83), இன்பிதார் (82) என்ற அத்தியாயங்களில் மக்களை மூன்று பிரிவினராகப் பிரித்திருப்பதில் எல்லா உம்மத்தினரும் உட்படுவர். மேற்கூறப்பட்ட வசனத்தில் கூறப்படும் தன் ஆத்மாவிற்கு அநீதி இழைத்தவர்கள் என்போர் பாவச் செயல்களைத் துணிந்து செய்கின்ற பாவிகளாவர். நடுத்தரவாதிகள் என்போர் தங்கள் மீது கடமையானவற்றை செய்வதுடன் விலக்கப்பட்ட செயல்களை விட்டும் விலகிக் கொள்வார்கள். மூன்றாவது பிரிவினர் தங்கள் கடமைகளை நிறைவேற்றுவதுடன் மேல்மிச்சமான நற்செயல்களைச் செய்வதில் முந்திச் செல்லக் கூடியவர்களாவர். எந்த விதமான பாவச்செயல்களைச் செய்தாலும், அதற்காக உண்மையான முறையில் பாவமன்னிப்புக் கோரி வருத்தப்படுவோரின் பாவத்தை அல்லாஹ் மன்னித்து விடுகின்றான். பாவம் செய்து அதற்காக மன்னிப்புக் கோரியதின் காரணத்தால், அவனது சிறப்பிற்கு எந்தப் பங்கமும் ஏற்படுவதில்லை. இதை அல்லாஹ் பின்வரும் வசனத்தில் விளக்குகின்றான்.
உங்கள் இறைவனின் மன்னிப்பின்பாலும், வானங்கள், பூமி அளவிலான சுவர்க்கத்(தை அடையத் தேவையான நல் அமல்களைச் செய்வ)தின் பாலும் விரைந்து செல்லுங்கள். அது பயபக்தியுடைவர்களுக்காகவே தயார் செய்யப்பட்டுள்ளது. இவர்கள் எத்தகை(ய பண்புடை)யோர் என்றால், செல்வ நிலையிலும், வறுமை நிலையிலும், தானம் செய்து கொண்டேயிருப்பார்கள். கோபத்தை விழுங்கி விடுவார்கள். மற்றவர்(கள் தங்களுக்கு செய்த தீங்கு)களை மன்னித்து விடுவார்கள். அல்லாஹ் (இத்தகைய) நல்லோரை நேசிக்கின்றான்.
மேலும், இவர்கள் ஏதாவது மானக்கேடான பாவத்தை செய்து விட்டால், அல்லது தங்களுடைய ஆத்மாவிற்குத் தாங்களே தீங்கேதும் இழைத்துக் கொண்டால் உடனடியாக அல்லா(ஹ்)வை நினைத்துத் தங்கள் பாவங்களை மன்னிக்கும் படி அவனிடமே கோருவார்கள். (அல்லாஹ்வும் அவர்களை மன்னித்து விடுவான்) அல்லாஹ்வையன்றி பாவங்களை மன்னிப்பவன் யார்?அவர்கள் செய்த (தவறான) காரியத்தை(த் தவறென்று) அவர்கள் அறிந்து கொண்டால், (அதில்), நிலைத்திருக்கவும் மாட்டார்கள், இத்தகைய பண்புடையோருக்குரிய நற்கூலி இறைவனின் மன்னிப்பும், நீரருவிகள் சதா ஒடிக்கொண்டிருக்கும் சுவர்க்கங்களுமேயாகும். அதில் அவர்கள் நிரந்தரமாகத் தங்குவார்கள். நன்மை
செய்தோரின் கூலி நல்லதாகவே இருக்கும். திருக்குர்ஆன் (3 :133-136)
அத்ன் என்ற சுவர்க்கங்களில் அவர்கள் நுழைந்து செல்வார்கள். திருக்குர்ஆன். (18:23) என்று மற்றொரு வசனத்தில் கூறுகின்றான்.
இத்திருவசனங்களை ஆதாரமாகக் கொண்டு ஷிர்க்கான செயல்களைச் செய்யாத ஏக தெய்வக் கொள்கையுடைய மூமின்கள் அவர்கள் செய்த பாவங்களுக்காக நரகத்தில் சில காலம் தண்டிக்கப்பட்டாலும், இணைவைப்போர்களைப்
போன்று அவர்கள் நரகத்தில் நிரந்தரமாக நிலைத்திருப்பதில்லை என்பது நமது சுன்னத் ஜமாஅத்தார்களுடைய கொள்கையாகும்
பெரும் பாவங்களைச் செய்த மூமின்களில் பலர் நரகம் புகுவார்கள் என்பதும், அவர்கள் தங்கள் பாவத்திற்குரிய தண்டனையை நரகத்தில்
அனுபவித்த பின்னர் நரகத்தை விட்டும் வெளியேற்றப்படுவார்கள்' என்பதும், பாவம் செய்து நரகம் சென்ற மூமின்களுக்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், மற்றவர்களும் பரிந்துரை (ஷபாஅத்) செய்து தங்கள் பரிந்துரையின் மூலம் நரகத்தில் வேதனை செய்யப்படுகின்றவர்களை வெளியேற்றுவார்கள் என்பதும் (முதவாத்திர்) பரவலாக அறியப்பட்ட ஆதாரப்பூர்வமான ஹதீஸின் மூலம் நிரூபணமான ஒன்றாகும். பெரும் பாவம் செய்தவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும் அவர்கள் நரகத்திலேயே நிரந்தரமாகத் தங்கி விடுவர் என்று முஃதஸிலா கூறுகின்றனர். முஹம்மத் (ஸல்) அவர்களுடைய உம்மத்தினரில் உள்ள மூன்று பிரிவினரில் நற்செயல்கள் அதிகமதிகம் செய்து முந்திக் கொண்டவர்கள் மட்டுமே சுவர்க்கம் செல்வர்; மற்ற இரு பிரிவினரும் சுவர்க்கம் செல்வதில்லை என்றும் கூறுகின்றனர்
‘முஃதஸிலா’ என்பவர்களுக்கு நேர்மாற்றமாக மூர்ஜிஆ என்பவர்கள் கூறுகின்றனர், அதாவது பெரும்பாவம் செய்தவர்கள் நரகம் புகுவார்கள் என்று திட்டவட்டமாக இவர்கள் கூறவில்லை சிலவேளை இவர்கள் எல்லோருமே தங்கள் பாவத்திற்குரிய தண்டனையை அடையாமல் நேரடியாகவே சுவர்க்கம் செல்வார் என்றும் கூறுகின்றனர்.
இவ்விரு சாராரின் கூற்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறிவித்த பரவலாக அறியப்பட்ட (முதவாத்திரான) ஹதீஸிற்கும் இமாம்களின் ஏகோபித்த முடிவிற்கும் முற்றிலும் மாற்றமானதாகும் இவ்விரு சாராரின் கருத்தும் தவறானது என்பதை இரு இறைவசனங்கள் பின்வருமாறு அறிவிக்கின்றன.
நிச்சயமாக தனக்கு இணைவைப்பதை அல்லாஹ் மன்னிக்கவே மாட்டான்; இது அல்லாத மற்ற பாவங்களைத் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான்" திருக்குர்ஆன் (4:48)
ஷிர்க்கான செயல்களைச் செய்துவிட்டு அதற்காக பாவமன்னிப்புக் கோராமல் ஒருவன் இறந்துவிட்டால் அதை மறுமையில் மன்னிக்கவே மாட்டான். 'ஷிர்க் அல்லாத பாவங்களுக்காக மன்னிப்புக் கோராமல் இறந்தால் அந்த பாவங்களை அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு மறுமையில் மன்னிக்கின்றான்' என்று இறை வசனத்தில் அறிவித்துள்ளான்.
ஷிர்க்கான செயல்களுக்காக உலகில் மன்னிப்புக் கோரினாலும் கூட அல்லாஹ் மறுமையில் அவர்களை மன்னிப்பதில்லை என்று முஃதஸிலாக்கள் கூறுவது தவறாகும். ஏனெனில். ஷிர்க்கானாலும், வேறு எந்தப் பாவமானாலும் அதற்காக உலகில் பாவமன்னிப்புக் கோரி வருத்தப்பட்டு மீண்டுவிட்டால், அவற்றை அல்லாஹ் மன்னித்து விடுகின்றான். மன்னிப்புக் கோரியதன் பின்னர் அவன் நாடியவர்களுக்கு,
மன்னிப்பான் மற்றவர்களுக்கு மன்னிப்பதில்லை என்ற பேச்சிற்கே இடமில்லை. எனவே, மன்னிப்புக் கோரக் கூடியவர்களுடைய எல்லாப் பாவங்களையும் மன்னித்து விடுவதாக பின்வரும் வசனத்தில் அல்லாஹ் கூறுகின்றான் :-
தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட எனது அடியார்களே! அல்லாஹ்வின் அருளிலிருந்து நீங்கள் நிராசையாகி நம்பிக்கையிழந்துவிட வேண்டாம். (நீங்கள் செய்த பாவத்திற்காக வருந்தி மன்னிப்புக் கோரினால்), நிச்சயமாக அல்லாஹ் உங்களுடைய பாவங்கள் எல்லாவற்றையும் மன்னித்து விடுவான். ஏனென்றால் நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்போனும், கிருபையுடையோனுமாக இருக்கின்றான் என்று (நான் கூறுவதாக நபியே!) நீர் கூறும்! திருக்குர்ஆன்(39:53).
இவ்வசனத்தில் எல்லாப் பாவங்களையும் மன்னித்து விடுவதாகக் கூறியுள்ளான். ஷிர்க்கான செயலாக இருந்தாலும் சரி, அல்லது எவ்வளவு பெரியபாவமாக இருந்தாலும் சரி, அதற்காக வருத்தப்பட்டுப் பாவ மன்னிப்புக் கோரக்கூடியவனுக்கு அல்லாஹ் மன்னிப்பளிக்கின்றான் என்று பொதுவாகக் கூறியுள்ளான். ஆனால், முன்னர் கொடுக்கப்பட்ட 4:48 என்ற வசனத்தில் ஷிர்க்கான செயலை மட்டும் மறுமையில் மன்னிப்பதில்லை என்றும் மற்ற பாவங்களை தாம் நாடியவர்களுக்கு மன்னிப்பதாகவும் கூறுகின்றான்.
எனவே இதிலிருந்து, அல்லாஹ் எந்த பாவத்தையும் மறுமையில் மன்னிக்கமாட்டான் என்ற முஃதஸிலாக்களுடைய கூற்றும். எல்லாப் பாவத்தையும் எல்லோருக்கும் மன்னித்துவிடுவான் என்ற முர்ஜியாக்களுடைய கூற்றும் தவறானதாகும் என்பதை அறிந்து கொள்ளலாம். எல்லாப் பாவிகளுக்கும் அல்லாஹ் மன்னிப்பளிப்பான் என்று திட்ட வட்டமாகக் கூறக் கூடியவர்களுடைய கூற்றும் தவறானதே என்பதையும் இது அறிவிக்கின்றது. மேலும் ஷிர்க்கை மன்னிக்க மாட்டான் என்று கூறியதிலிருந்து இதைவிடப் பெரிதான கடவுளே இல்லை என்னும் கருத்தைக் கூறக்கூடியவனையும், எந்த பாவத்தைச் செய்தாலும் அதற்குத் தண்டனை கிடையாது என்று சொல்லக் கூடியவனையும், அல்லாஹ் ஒருபோதும் மன்னிக்கமாட்டான்
என்பதையும் அறிந்து கொள்ளலாம்.
இவர்களுடைய கூற்று சரியானதாக இருக்குமானால், சிலரை மன்னிப்பான்; வேறு சிலரை மன்னிப்பதில்லை; என்று அல்லாஹ் கூறியிருக்கமாட்டான். மேலும், பாவத்தைச் செய்கின்றவர்கள் அதற்கு பரிகாரமாகப் பாவமன்னிப்புக் கோராமலும், பாவத்தை அழிக்கும் நற்செயல்களைச் செய்யாமலும், மன்னிக்கப்படுவார்கள் என்றிருக்குமானால், தான் நாடியவர்களை மட்டும் மன்னிப்பான் என்று கூறியிருக்க மாட்டான்.
ஷிர்க் அல்லாத பாவங்களைத் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான் என்று அல்லாஹ் கூறியிருப்பதிலிருந்து சிலரை மன்னிப்பான் வேறு சிலரை மன்னிப்பதில்லை என்று தெரிய வருகிறது. இதன் மூலம் மறுமையில் அல்லாஹ் யாரையும் மன்னிப்பதில்லை என்று கூறுவதும், எல்லாப் பாவத்தையும் எல்லோருக்கும் மன்னிப்பான் என்று கூறுவதும் தவறாகும் என்பதும் புலனாகின்றது.
இறை தூதர்களை நம்புவதின் அவசியம்
அல்லாஹ்விற்கு அஞ்சும் உண்மை விசுவாசிகளே இறை நேசர்களாவார்கள். இவர்கள் தம் தக்வாவிற்கும், ஈமானுக்கும் தக்கவாறு ஏற்றத்தாழ்வுடையவர்களாக இருக்கின்றார்கள். இந்த ஏற்றத்தாழ்விற்கொப்பவே அவர்களுடைய இறைநேசமும் அமைகின்றது. இவ்வாறே, இறை நிராகரிப்பிலும், நயவஞ்சகத்திலும் மனிதர்களின் ஏற்றத்தாழ்விற்குத் தக்கவாறு அவர்களுடைய இறை விரோதமும் ஏற்றத்தாழ்வுடையதாக இருக்கிறது.
இறைத் தூதர்களை நம்புவதே ஈமான், தக்வா இவ்விரண்டின் அடிப்படையாகும். இறுதித் தூதரான முஹம்மத் (ஸல்) அவர்களை நம்புவது எல்லாத் தூதர்களையும் நம்புவது போன்றதாகும். ஒருவன்
முஹம்மத் (ஸல்) அவர்களை இறுதித்தூதர் என்று நம்பும் போது அல்லாஹ் அனுப்பிய எல்லாத் தூதர்களையும், அவன் இறக்கிய எல்லா வேதங்களையும் நம்பியவனாக ஆகின்றான்.
இறைத்தூதர்களையும் அவர்களின் போதனைகளையும் நிராகரிப்பது தான், இறை நிராகரிப்பு மற்றும் நயவஞ்சகத்தின் அடிப்படையாகும். மறுமையின் தண்டனையை அடைவதற்கு இந்நிராகரிப்பே காரணமாக அமைகின்றது. இறைத்தூதர்களைப் பற்றிய செய்தி கிடைக்காதவர்களை அல்லாஹ் மறுமையில் தண்டிப்பதில்லை. இறைத்தூதர் அனுப்பப்படுவது வரை எந்தச்சமூகத்தையும் நாம் வேதனைப்படுத்துவதில்லை என அல்லாஹ் கூறுகின்றான்.
(நபியே!) நூஹுக்கும் அவருக்குப் பின்னர் வந்த நபிமார்களுக்கும் நாம் வஹி அறிவித்தவாறே உமக்கும் நாம் வஹீ அறிவித்தோம். மேலும் இப்ராஹீம், இஸ்மாயில், இஸ்ஹாக், யாஃகூப் ஆகியவர்களுக்கும், அவர்களுடைய சந்ததிகளுக்கும், ஈஸா, ஐயூப், யூனுஸ், ஹாரூன், சுலைமான் முதலியவர். களுக்கும் (இவ்வாறே) நாம் வஹீ அறிவித்திருக்கின்றோம். தாவூதுக்கு ஸபூர் என்னும் வேதத்தை நாம் அளித்தோம் பல தூதர்களின் வரலாறுகளை இதற்கு முன்னர் உமக்குக் கூறியுள்ளோம். இன்னும் பல தூதர்களின் வரலாறுகளை நாம் உமக்கு கூறவில்லை. மூஸாவுடன் அல்லாஹ் பேசியுமிருக்கிறான் இறைத்தூதர்களை அனுப்பிய பின்னால் அல்லாஹ்வின் மீது குற்றம் கூற மனிதர்களுக்கு எந்த வழியுமில்லாமலிருப்பதற்காக, (சுவர்க்கம் உண்டு என) நற்செய்தி அளிக்க கூடியவர்களாகவும், (நரகத்தைக் குறித்து), எச்சரிக்கின்றவர்களாக இறைத் தூதர்களை நாம் அனுப்பினோம். திருக்குர்ஆன் (4: 163,164,165).
நரகவாசிகளைப் பற்றிக் கூறும்போது அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான்:
இதில் (நரகத்தில்) ஒரு கூட்டம் எறியப்படும் போதெல்லாம் அதன் காவலர்கள், அவர்களை நோக்கி (இவ்வேதனையைப் பற்றி) எச்சரிக்கை செய்பவர் உங்களிடம் வரவில்லையா? என்று கேட்பார்கள். அதற்கு அவர்கள் ஆம் (மெய்தான்) அச்சமூட்டி எச்சரிப்பவர் எங்களிடம் வரத்தான் செய்தார். எனினும் நாங்கள் அவரைப் பொய்யர் என மறுத்து அல்லாஹ் (உம்மீது) எதையும். இறக்கி வைக்கவில்லை. திண்ணமாக நீர்பெரும் வழிகேட்டில் தான் உள்ளீர் என்று (அவரை நோக்கி) நாங்கள் கூறினோம் என்று
கூறுவார்கள் திருக்குர்ஆன் (67: 8,9)
நரகத்தில் ஒரு கூட்டம் போடப்படும் போது, “இந்நரகத்தைப் பற்றி எச்சரிக்கின்ற தூதர்கள் எங்களிடம் வந்தார்கள் அவர்களை நாங்கள்
பொய்யர்கள் என்று கூறினோம்" என்று அவர்கள் தங்கள் குற்றத்தை எற்றுக் கொள்வார்கள் என அல்லாஹ் இவ்வசனம் மூலம் அறிவிக்கின்றான். இறைத் தூதர்களைப் பொய்யர்கள் என்று கூறி மறுத்தவர்கள், நாரகத்தில் போடப்படுவார்கள் என்பதை இது அறிவிக்கின்றது.
இப்லிஸிடம் அல்லாஹ் பின்வருமாறு கூறினான் :- "(இப்லீஸே) உன்னாலும் உன்னைப் பின்பற்றியவர்களாலும் நான் நரகத்தை நிரப்புவேன்"
திருக்குர்ஆன் (38 :85)
இப்லீஸாலும் அவனைப் பின்பற்றியவர்களாலும் நரகத்தை நிரப்புவதாக அல்லாஹ் கூறுகின்றான். அது அவர்களால் நிறைந்து விட்டால், மற்றவர்கள் அதில் நுழைவதில்லை. ஷைத்தானைப் பின்பற்றியவர்கள் மட்டுமே நரகம் செல்வார்கள் என்றும், பாவம் செய்யாதவர்கள் நரகம் செல்லமாட்டார்கள் என்பதுடன், அவர்கள் ஷைத்தானைப் பின்பற்றியவர்களுமல்லர் என்றும் இதிலிருந்து தெளிவாகின்றது.
நபிமார்களின் எச்சரிக்கையும், அவர்கள் அளித்த நற்செய்தியும் கிடைத்த பின்னரும் மாறு செய்கின்ற மக்களே நரகம் செல்வார்கள் என்பதை முன்னர் குறிப்பிட்ட இறைவசனங்கள் தெளிவுபடுத்துகின்றன.
ஈமான் இருவகைப்படுகின்றது
விசுவாசிகளுடைய ஈமான் இருவகைப்படுகிறது. ஒன்று பொதுவான ஈமான், மற்றொன்று விரிவான ஈமான். மனிதர்களில் சிலர் இறைத்தூதர்களைப் பொதுவாக நம்புகின்றனர். விரிவான நம்பிக்கையுடையவருக்கு இறைத்தூதர்கள் கொண்டு வந்த போதனைகளில் அதிகமானவை கிடைத்து இருக்கும். அவற்றில் சில போதனைகள் மட்டுமே அவருக்குத் தெரியாமலிருக்கும். அத்தூதர்கள் மூலம் தமக்குக் கிடைத்த எல்லா விஷயங்களையும் அவர் நம்புவார். கிடைக்காதவற்றை அவர் அறிவதில்லை. இவ்விஷயங்களும் அவருக்குக் கிடைத்திருந்தால், அவற்றையும் நம்பியிருப்பார். ஆனால் அவருக்குக் கிடைக்காத விஷயங்களைக் கூட அவர் பொதுவாக நம்புவார்.
இந்த நம்பிக்கையுடையவர் அல்லாஹ்
ஏவிய கடமைகளைச் செய்வது தம்மீது கடமையென அறிந்து, அதன்படி நம்பிக்கையோடும், உள்ளச்சத்தோடும் அல்லாஹ்வை அஞ்சிச் செயல்படும்போது, இறைநேசர்களில் ஒருவராய் ஆகிவிடுகின்றார். அவருடைய தக்வா, ஈமானிற்குத் தக்கவாறு இறைநேசம் அவரிடம் இடம் பெறுகிறது சில விஷயங்களுக்குரிய ஆதாரங்களை அவர் அறியவில்லையானால், அதைத் தெரிந்தே தீரவேண்டுமென அல்லாஹ் அவரைச் சிரமப் படுத்துவதில்லை அதை அவர் அறியாமல் இருப்பதின் காரணமாக அவரை அல்லாஹ் தண்டிப்பதும் இல்லை. ஆனால், எந்த அளவிற்கு இது பற்றிய அறிவு குறைகிறதோ. அந்த அளவிற்கு அவருடைய இறைநேசத்தின் முழுமையிலும் குறை ஏற்படுகிறது.
இறைத்தூதர்கள் கொண்டுவந்த போதனைகளை அறிந்து அதை விரிவாக நம்பிச் செயல்படுகின்றவர் அவற்றைப் பொதுவாக நம்பிச் செயல்படக் கூடியவரைவிட ஈமானிலும், இறைநேசத்திலும் முழுமையடைந்தவராவார். எனினும் அவ்விருவரும் இறைநேசர்களே! ஆனால், அவர்களின் இறைநேசத்தில் ஏற்றத்தாழ்வு இருக்கிறது
சுவர்க்கம் மிகப்பெரிய ஏற்றத்தாழ்வுடைய
படித்தரத்தைக் கொண்டதாக இருக்கிறது.
அல்லாஹ்வை நம்பி, அவனை அஞ்சி நடந்த உண்மை விசுவாசிகள், இறைநேசர்கள் தங்கள் தக்வா, ஈமானிற்குத் தக்கவாறு சுவர்க்கத்தில் தங்கள் தகுதியிலும் ஏற்றத்தாழ்வுடையவர்களாய் இருக்கிறார்கள்
எவர்கள் (மறுமையைப் புறக்கணித்துவிட்டு) இம்மையை மட்டும் விரும்புகிறார்களோ, அவர்களில் நாம் நாடியவர்களுக்கு நாம் நாடியதை இம்மையிலேயே கொடுத்து விடுகின்றோம். பின்னர் (மறுமையில்) நரகத்தைத்தான் அவர்களுக்குத் தயார் செய்து வைத்திருக்கின்றோம். அவர்கள் சபிக்கப்பட்டவர்களாகவும், இழிவுபடுத்தப்பட்டவர்களாகவும் அதில் நுழைவார்கள். எவர்கள் மறுமையை விரும்பி, அதற்காகப் பெரும் கஷ்டத்தையும் எடுத்துக் கொண்டு, இறை நம்பிக்கையுடையவர்களாகவும்
இருக்கின்றனரோ, அவர்களின் முயற்சிகள் நன்றியுடன் அங்கீகரிக்கப்படும். (இம்மையை விரும்பும்), அவர்களுக்கும் (மறுமையை விரும்பும்) இவர்களுக்கும்- ஆக எல்லோருக்கும். உம் அதிபதியின் கொடையின் மூலமே நாம் உதவி செய்கின்றோம். உம் இறைவனின் கொடை (இவ்விருவரில் எவருக்குமே) தடை செய்யப்படவில்லை. (நபியே! இம்மை வாழ்வில் இவர்களில்) சிலரைச் சிலர்மீது எவ்வாறு மேன்மையாக்கி வைத்திருக்கின்றோம் என்பதை நீர் கவனித்துப் பார்ப்பீராக! மறுமை (வாழ்க்கை)யோ, பதவியில் எவ்வளவோ பெரியதும், சிறப்பில் எவ்வளவோ மேன்மையானதுமாய்த் திகழ்கின்றது. திருக்குர்ஆன் (17 :18,21)
உலக வாழ்க்கையை விரும்புவோருக்கு அவர்களுக்கு ஏற்ற வாறும். மறுஉலக வாழ்க்கையை விரும்புவோருக்கு அவர்களுக்கு ஏற்றவாறும் அல்லாஹ் தன் அருட்கொடையிலிருந்து கொடுக்கின்றாள். நல்லவன் கெட்டவன் என்ற பாகுபாடின்றி எல்லோருக்கும் உலகில் அவனுடைய அருட்கொடை கிடைக்கிறது என்று கூறிவிட்டு, உலகில் சிலரைச் சிலர் மீது எவ்வாறு நாம் மேன்மையாக்கி வைத்திருக்கின்றோம்
என்பதை நீர்கவனிப்பீராக! மறுமை வாழ்க்கை பதவியிலும், சிறப்பிலும் மிகப்பெரிய ஏற்றத்தாழ்வுடையதாக இருக்கிறது என்று கூறி உலகில் மனிதர்கள் மத்தியில் உள்ள ஏற்றத்தாழ்வை விட அதிகமாக மறுமையில் உள்ளவர்களுடைய ஏற்றத்தாழ்வு அமைந்திருக்கிறது என்றும் சுவர்க்த்தில் உள்ள தகுதிகள், சிறப்புகள், உலகில் உள்ள தகுதிகளைவிட மிக உயர்ந்தவை; மிக மேலானவை என்றும் அல்லாஹ் விளக்கியுள்ளான்.
அந்தஸ்துகளில் நபிமார்களிடையே உள்ள ஏற்றத்தாழ்வுகள்
மூமின்கள் எவ்வாறு தகுதிகளில் ஏற்றத்தாழ்வுகளுடையவர்களாய் இருக்கின்றார்களோ, அவ்வாறே நபிமார்களும் தமக்கிடையே ஏற்றத் தாழ்வுகளுடையவர்களாக இருக்கின்றனர் என்பதை அல்லாஹ் பின்வரும் வசனங்களில் விளக்கியுள்ளான்.
(நாம் அனுப்பிய) தூதர்களில், சிலரைச் சிலரைவிட 'நாம் மேன்மை யாக்குகின்றோம். அவர்களில் சிலருடன் அல்லாஹ் பேசியுமிருக்கிறான். அவர்களில் சிலரை (ச் சிலரைவிடப்) பதவிகளில் உயர்த்தியுமிருக்கிறான். மேலும் மர்யமுடைய மகன் ஈஸாவுக்கு நாம் தெளிவான அத்தாட்சிகளைக் கொடுத்து (ஜிப்ரீல் என்னும்) பரிசுத்த ஆன்மாவைக் கொண்டு அவருக்கு உதவி செய்தோம். திருக்குர்ஆன் (2 :253).
திண்ணமாக, நபிமார்களில் சிலரைச் சிலரைவிட நாம் மேன்மையாக்கி வைத்து, தாவூது நபிக்கு ஸபூர் என்னும் வேதத்தை நாம் கொடுத்தோம் திருக்குர்ஆன் (17 :55) என்று கூறியுள்ளான்.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஒரு ஸஹீஹான ஹதீஸில் :-
உறுதியான மூமின் பலவீனமான மூமினைவிடச் சிறந்தவனாகவும் அல்லாஹ்விடத்தில் மிக நேசத்திற்குரியவனாகவும் இருக்கிறான். அவ்விருவரிடமும் நலன் இருக்கத்தான் செய்கிறது. உனக்குப் பயன் அளிக்கும் விஷயங்களில் நீ ஆசைக் கொள்! அல்லாஹ் ஒருவனிடமே உதவிதேடு! நீ பலவீனமாகி நிராசையடைந்து விடாதே! உனக்கு ஏதாவது துன்பம் ஏற்படும்போது; நான் இப்படிச் செய்திருந்தால், அது அப்படி ஆசியிருந்திருக்கும் என்று சொல்லாதே! அல்லாஹ்வின் நாட்டப்படியே எல்லாம் நடந்தன என்று சொல்! அப்படிச் செய்தால் இப்படி ஆகியிருக்கும் இப்படிச் செய்தால்; அப்படி ஆகியிருக்கும். என்றெல்லாம் சொல்வது ஷைத்தானிய செயல்பாடுகளுக்கு வழிவகுக்கின்றது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(முஸ்லிம்)
மேலும், ஸஹீஹான ஹதீஸில் அபூஹுரைரா (ரலி) அம்ர்பின் ஆஸ்(ரலி) ஆகியோர் அறிவித்திருப்பதாவது: மார்க்கச் சட்டங்களில் சுயஆய்வு (இஜ்திஹாத்) செய்து தீர்ப்புக் கூறக்கூடிய ஒருவர் (அதிகாரி) சரியான முறையில் தீர்ப்பு வழங்குவாரானால், அவருக்கு இருகூலிகள்' கிடைக்கின்றன. தன் முயற்சியில் தவறி விடுவாரேயானால் அவருக்கு ஒரு, கூலி கிடைக்கிறது என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி, முஸ்லிம்
அல்லாஹ் கூறுகின்றான் :-
உங்களில் (மக்காவின்) வெற்றிக்கு முன்னர், தன் பொருளைச் செலவு செய்து போர்புரிந்து; மகத்தான வெற்றி பெற்ற இவர்களுக்கு (அவ்வெற்றிக்குப்) பின்னர் (தன்) பொருளைச் செலவு செய்து போர் செய்தவர்கள் சமமாகமாட்டார்கள். எனினும் இவ்விருவருக்கும் அல்லாஹ் நன்மையே
வாக்களித்திருக்கின்றான். (திருக்குர்ஆன் - 57:10)
விசுவாசிகளில் நோய் போன்ற
தக்ககாரணங்களின்றி (போருக்குச்செல்லாது) இருந்து கொண்டவர்கள் (போருக்குச் சென்று) தங்களுடைய பொருட்களையும், உயிர்களையும் அல்லாஹ்வின் பாதையில் தியாகம் செய்வோருக்குச் சமமாக மாட்டார்கள். (ஏனென்றால்) தங்கள் பொருள்களையும் உயிர்களையும் தியாகம் செய்து போர் புரிந்தோரின் பதவியை (போருக்குச் செல்லாது) தங்கிவிட்டவர்களைவிட அல்லாஹ் மேன்மையாக்கி வைத்திருக்கிறான். எனினும் இவர்கள் எல்லோருக்கும், நன்மையே அல்லாஹ் வாக்களித்திருக்கிறான். ஆயினும், போர் செய்தோருக்கு மகத்தான கூலியை அருளி (போருக்குச் செல்லாது) தங்கி விட்டவர்களை
விட அவர்களை மேன்மையாக்கி வைத்திருக்கின்றான் மேலும் அவர்களுக்குத்), தன்னிடமுள்ள (மகத்தான) பதவியையும், மன்னிப்பையும் அன்பையும் அருளுகின்றான், அல்லாஹ் மிக்க மன்னிப்போனும் அன்புடையோனுமாய் இருக்கிறான். திருக்குர்ஆன். (4:95, 96)
அல்லாஹ்வையும், இறுதிநாளையும் நம்பி அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவோருக்குச் சமமாக ஹாஜிகளுக்குத் தண்ணீர் புகட்டுவோரையும், திருமக்காவின் இறை இல்லத்திற்கு ஊழியஞ் செய்வோரையும் நீங்கள் ஆக்கிவிட்டீர்களா? அல்லாஹ்விடத்தில் இவ்விருசாராரும் சமமாகமாட்டார்கள். அல்லாஹ் அநியாயக்கார மக்களை நேரான வழியில் செலுத்துவதில்லை. எவர்கள் இறை நம்பிக்கை கொண்டு தங்கள் ஊர்களிலிருந்து புறப்பட்டுச் சென்று அல்லாஹ்வுடைய
பாதையில் தங்கள் பொருட்களையும், உயிர்களையும் தியாகம் செய்து போர் புரிகின்றனரோ அவர்கள், அல்லாஹ்விடத்தில் மகத்தான பதவி பெற்றவர்களாவர். இவர்கள்தான் நிச்சயமாக வெற்றி பெற்றவர்கள்.
அவர்களுக்கு அவர்களுடைய இறைவன் தன் அன்பையும், திருப்தியையும் அளித்து, சுவனபதியையும் அவர்களுக்குக் கொடுப்பதாக நற்செய்தி கூறுகிறான். அவர்களுக்கு அச்சுவனபதிகளில் என்றென்றும் நிலையான இன்பங்களுண்டு! என்றென்றும் அவற்றில் அவர்கள் நிலை பெற்றிருப்பார்கள்! (இதனையன்றி) அல்லாஹ்விடத்தில் மகத்தான கூலியும் அவர்களுக்கு நிச்சயம் உண்டு. திருக்குர்ஆன் (9 :21,22)
யார் மறுமை நாளைக் குறித்து அஞ்சி, தன் இறைவனின் அருளை எதிர்பார்த்து, இரவில் (தொழுகைக்காக) நின்றவனாகவும், சிரம் பணிந்தவனாகவும் அல்லாஹ்வை வணங்கிக் கொண்டிருக்கின்றானோ அவன் இறை
நம்பிக்கைக் கொள்ளாத நிராகரிப்பவனைப் போலாவானா?. நபியே! நீர் கேளும் அறிந்த (கல்வியுடைய)வர்களும், அறியாத (கல்வியற்ற)வர்களும் சமமாவார்களா? கல்வியறிவுடையோரே (இந்தத் திருக்குர்ஆன் மூலம்) நல்லுபதேசம் பெறுகின்றார். திருக்குர்ஆன் (39 :9)
உங்களில் விசுவாசிகளுக்கும், கல்லி அறிவுடையோருக்கும் அல்லாஹ் பதவிகளை உயர்த்துகின்றான். நீங்கள் செய்பவற்றையும். அல்லாஹ் நன்கறிந்தவனாக இருக்கின்றான்"
திருக்குர்ஆன் (58: 11).
மேலே கொடுக்கப்பட்டுள்ள இறை வசனங்களை நன்றாக கவனிப்போமானால் இறைவிசுவாசிகள் தங்கள் தகுதிகளில் ஏற்றத் தாழ்வுடையவர்களாக இருக்கிறார்கள் என்பதை அறியலாம். இறை விசுவாசிகளின் கல்வி அறிவிற்கும், அவர்களின் நற்செயல்களுச்கும். ஏற்றவாறு அவர்களுடைய
பதவியும் அல்லாஹ்விடத்தில் உயர்கிறது என்பதையும் இவ்வசனங்கள் விளக்குகின்றன.
அல்லாஹ்வுக்கு வழிபடாதவன் இறை நேசனல்லன்
அல்லாஹ்வை நம்பி; அவனுக்கு முற்றிலும் அஞ்சி நடந்து வரும் அவனது நேசர்கள் வேறு எதைக் குறித்தும் அஞ்சுவதில்லை. எதற்கும் கவலைப்படுவதுமில்லை (10 :62) என்ற இறை வசனத்திற்கொப்ப அல்லாஹ்வை மெய்யாகவே நம்பி அவனுக்கு முற்றிலும் வழிப்பட்டவர்கள் மட்டும்தான் அவனது நேசர்களாக ஆகிறார்கள்.
முன்னர் கொடுக்கப்பட்ட பிரபலமான ஸஹீஹான ஹதீஸ் குதுசியில் என் அடியான் கடமையல்லாத மேல் மிச்சமான வணக்கங்களைச் செய்து, என் பக்கம் நெருங்கும் போது, அவனை நான் நேசிக்கின்றேன்
என, அல்லாஹ் கூறியுள்ளான்.
தன் மீது கடமையானவற்றைச் செய்து அல்லாஹ்வின்பால் நெருங்கும் வரை எவனும் உண்மை மூமினாக ஆக முடியாது இவ்வாறு
ஒருவன் உண்மை மூமினாக ஆகும்போது, அல்லாஹ்வின் நல்லடியார்களாக வலது சாரிகளைச் சார்ந்தவனாய் ஆகிவிடுறான். இதற்குப் பின்னர் மேலதிகமான (நஃபிலான) நற்செயல்களைச் செய்யும்போது, நற்செயல்களை அதிகம் செய்து முந்திக் கொண்ட அல்லாஹ்வோடு நெருங்கிய அடியார்களைச் சார்ந்தவனாக ஆகிவிடுகிறான்.
நிராகரிப்போரும், நயவஞ்சகர்களும் ஒருபோதும் இறைநேசர்களாக ஆகிவிட முடியாது. இவ்வாறே யாருடைய மார்க்க நம்பிக்கையும் செயலும் சரியில்லையோ, அவர்களும் இறைநேசர்களாக ஆகிவிட முடியாது. அவர்கள் குற்றமற்றவர்கள் என்றிருந்தாலும் சரிதான். அவர்கள்
காபிர்களின் குழந்தைகளையும், இஸ்லாமிய பிரச்சாரம் எட்டாதவர்களையும் போன்றவர்களாவர் என்றும், அவர்களுக்குத் தூதர்கள் அனுப்பப்படுவது வரையில் அவர்கள் வேதனைப்படுவதில்லை என்று இருந்தபோதிலும் சரிதான் -உண்மையாக அல்லாஹ்வை நம்பி அவனுக்கு அஞ்சி நடந்தாலொழிய அவர்கள் இறைநேசர்களாக ஆக முடியாது.
எவன் நற்செயல்களைச் செய்து, தீய காரியங்களை விட்டும் விலகி, அல்லாஹ்வின்பால் நெருங்கிட முடியவில்லையோ, அவன் ஒரு போதும் அல்லாஹ்வின் நேசனாக ஆக முடியாது. இவ்வாறே பைத்தியக்காரர்களும் நன்மை தீமையைப் பிரித்தறிய முடியாத குழந்தைகளும் இறைநேசர்களாய் ஆகிவிட முடியாது.
பைத்தியக்காரன் சுயஅறிவு பெறும் வரையிலும், குழந்தை பருவம் அடையும் வரையிலும், தூங்குபவன்
தன் தூக்கத்திலிருந்து எழும் வரையிலும் இம்மூவர் செய்யும் தவறுகளைப் பற்றி அவர்கள் கேட்கப்படமாட்டார்கள் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
ஆயிஷா (ரலி) அவர்களும், அலி (ரலி) அவர்களும் இந்த ஹதீஸை அறிவித்துள்ளதாக ஹதீஸ்கலை வல்லுனர்கள் கூறியுள்ளனர். ஹதீஸ்கலை ஞானமுடையவர்களும் இதை ஏற்றுள்ளனர். ஆனால் விபரமுள்ள குழந்தைகள் செய்யும் வணக்கங்கள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. அதற்காக அவர்கள் கூலியும் கொடுக்கப்படுவார்கள் என்றும் பெரும் பாலான அறிஞர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். பைத்தியக்காரன் செய்யும் எந்த வணக்கமும் சரியானதில்லை என்று அறிஞர்கள் ஏகோபித்துக் கூறியுள்ளனர்.
பைத்தியக்காரன் இறைநேசன் ஆக முடியாது
பைத்தியக்காரனுடைய ஈமானும், அவனுடைய நிராகரிப்பும், அவனது தொழுகையும், மற்ற அவனுடைய எந்தச் செயலும் சரியான தன்று. தொழில், வியாபாரம் போன்ற அவன் செய்யும் உலக கொடுக்கல் வாங்கல் கூட சரியானதாகாது என்பது அறிவுடையோர் அறிந்த விஷயம். அவன் துணி வியாபாரியாகவோ, அத்தர் வியாபாரியாகவோ, கொல்லனாகவோ. தச்சனாகவோ செயல்படுவதற்குக் கூடத் தகுதியற்றவனாவான். அவன் செய்யும் ஒப்பந்தங்களும், கொடுக்கல் வாங்கல்களும், அவன் செய்யும் திருமணம், அவனது விவாகரத்து, அவன் சொல்லும் சாட்சி, இதுபோன்ற எந்தச் செயல்களும் சரியானதாய் ஆகாது.
பைத்தியக்காரன் உள்ளத்தால் நம்பவேண்டியதில்லை என்று ஒருவன் நம்புகிறான். அல்லது நபிமார்கள். காண்பித்த வழிமுறைகளைத் தவிர அல்லாஹ்வை அடைய வேறு வழிகள் உள்ளன என்று நம்புகிறான். அல்லது நபிமார்கள் காட்டிய பாதை மிக நெருக்கமானது; அவர்கள் பாமர மக்களுக்கு மட்டுமே முன்மாதிரியாக வாழ்ந்தார்கள். எங்களைப் போன்ற குறிப்பிட்ட சிலருக்கு. முன் மாதிரியாக வரவில்லை, என்று நம்புகிறான். இது போன்ற கொள்கைகளைக் கூறிக்கொண்டு தங்களை அவ்லியாக்கள் என்று கூறிப் பிதற்றுகின்றனர் சிலர். இந்நம்பிக்கை ஈமானுக்கே முரணானதாய் இருக்க, இந்நம்பிக்கையை உடையவன் எப்படி இறைநேசன் ஆக முடியும்?
இதுபோன்ற நம்பிக்கையுடையவர்கள் வழக்கத்திற்கு மாற்றமான சில செயல்களைச் செய்து காண்பிக்கின்றார்கள் என்பதற்காக அவர்கள் இறைநேசர்களாவார்கள் என்று எவனாவது
நம்புவானாயின். அவன் யூதர்கள், கிருஸ்தவர்களைவிட
வழி தவறியவனாக ஆகிவிடுகிறான்.
இவ்வாறே இறைநேரசத்திற்கு நிபந்தனையாக இருக்கின்ற ஈமான் மற்றும் இதரவணக்க வழிபாடுகள் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு ஒருவரின் பைத்தியம் தடையாக இருப்பதால், பைத்தியக்காரனும் இறைநேசன் ஆகமுடியாது.
ஒருவன் சிலநேரங்களில் சுயஅறிவு பெற்றவனாக இருக்கிறான், அந்நேரத்தில் அல்லாஹ்வையும். ரசூலையும் நம்புகிறான்; கடமைகளை நிறைவேற்றுகிறான். விலக்கப்டடவற்றை விட்டு விலகிக் கொள்கிறான். ஆனால் வேறுசில நேரங்களில் பைத்தியக்காரனாக ஆகிவிடுகிறான். இந்நிலையில் உள்ளவன். தன் சுய அறிவுடன் இருக்கும் நேரத்தில் செய்த நற்செயலுக்குரிய கூலியைப் பெறுவதற்கு அவனுடைய பைத்தியம் தடையாக இருப்பதில்லை. இந்நிலையில் உள்ளவனுக்குக் கூட அவனுடைய நிலைக்கு ஏற்றவாறு இறைநேசம் அவனிடம் இடம் பெறுகிறது.
இவனைப் போன்றுதான் ஒருவன் அல்லாஹ்வை நம்பி, அவனுக்கு அஞ்சி வாழும் நிலையில் பைத்தியக்காரனாக ஆகிவிடுவானாயின்.
அவன் தன் சுயஅறிவுடைய நிலையில் கொண்ட இறை நம்பிக்கை, பயபக்திக்குத் தக்கவாறு அல்லாஹ் அவனுக்குக் கூலி கொடுக்கிறான். அவன் அறியாத விதத்தில் ஏற்பட்டுவிட்ட பைத்தியத்தின் காரணமாக
பேசும் எல்லாப் பேச்சுக்களும் வீணானவையாகவே கருதப்படும். அவனது பேச்சை வைத்து எந்த ஷரீஅத்துச் சட்டமும் செயல்படுத்தப்பட மாட்டாது. இது போன்ற செயல்களினால் அவனுக்கு எந்த நன்மையும் இல்லை, எந்த தண்டனையுமில்லை.
ஆனால், விபரமுள்ள சில குழந்தைகளின் சில பேச்சுக்கள் சில சந்தர்ப்பங்களில் ஏற்றுக் கொள்ளத்தக்கனவாய் இருக்கின்றன, என
அறிஞர்கள் ஏகோபித்துக் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
பைத்தியக்காரனுடைய ஈமானும், அவனுடைய தக்வாவும், அவன் செய்யும் கடமையான செயல்களும். மேல்மிச்சமான செயல்களும் சரியானவையாயும், ஏற்றுக் கொள்ளப்பட்டனவாவுமில்லை என்றிருக்க, அவன் எப்படி இறைநேசனாக இருக்க முடியும்? பைத்தியக்கார கோலமுடையவனைப் பார்த்து அவன் இறைநேசன் என்று நம்ப விடக்கூடாது. குறிப்பாக அவன் ஏதாவது ஜாலவித்தைகளைக் காட்டினால் கூட அவனை நம்பிவிடக்கூடாது. உதாரணமாக சிலமறைவானவற்றை கூறிவிடுவதாலோ, அல்லது ஒருவனின் பக்கம் தன் கையால் சுட்டிக்காட்டி அவனை வீழ்த்தி விடுவதாலோ அவன் இறைநேசனாக ஆகிவிடமுடியாது! ஏனென்றால், காபிர்களும், முஷ்ரிக்களும், நயவஞ்சகர்களும். யூதக்கிருஸ்தவர்களும் சில ஜாலவித்தைகளையும் ஷைத்தானிய வேலைகளையும் செய்யும் ஆற்றலுடையவர்களாய் இருக்கின்றனர்.
ஜோதிடர்கள், சூனியக்காரர்கள், பல தெய்வக் கொள்கையுடையவர்களில் வணக்கசாலிகள், வேதத்தையுடையவர்கள் இம்மாதிரியான பலர் வழக்கத்திற்கு மாற்றமான சில அற்புத ஜாலச் செயல்களைச் செய்த காட்டுவார்கள். இதை ஒருவர் செய்துவிட்டார் என்பதற்காக அதை மட்டும் ஆதாரமாக வைத்துக் கொண்டு, அவரை இறைநேசராக ஆக்கிவிடக் கூடாது. இறை நேசத்திற்கு முரணானவற்றைச் செய்து அவற்றை நம்பக்கூடியவன் எப்படி இறைநேசனாய் ஆகமுடியும்?
நபிவழியே இறைநேசர்களின் வழி
அகத்திலும், புறத்திலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பின்பற்றுவது கடமையாகும் என்பதை நம்பாமல், வெளிப்படையான ஷரீஅத்துச் சட்டத்தை மட்டும் நம்பிச் செயல்பட்டால் போதும். அவனுடைய நற்செயல்கள் அழிந்து விடுவதில்லை. ஒருவன் பைத்தியக் காரனாக இருக்கும் போது அந்நிலையில் அவன் செய்கின்ற செயல்களைப் பற்றி மறுமையில் கேட்கப்படமாட்டான்.
கடமைகளை நிறைவேற்றாதவன் இறைநேசனாக இருக்க முடியாது.
மேற்கூறப்பட்ட அடிப்படையில் யாராவது ஒருவன் தன்னை ஓர் இறைநேசன் என்று கூறிக்கொண்டு, அல்லாஹ்வுக்கு நிறைவேற்ற வேண்டிய கடமைகளை நிறைவேற்றாமல் தவறுகளை விட்டும் விலகிக்கொள்ளாமல், தவறான முறையில் நடப்பானாயின், அவனை ‘வலி' என்று யாரும் நம்பிவிடக் கூடாது. இந்நிலையில் தன்னை வலி என்று வாதாடக் கூடியவன். உண்மையாகவே பைத்தியக்காரனாக இல்லாவிட்டாலும் கூட, அவன் தன்னைப் பைத்தியக்காரனாக ஆக்கிக் கொள்கிறான்.
அல்லது ஒருவன், சில நேரங்களில் உண்மையாகவே புத்தி மாறிய பைத்தியக்காரனாக ஆகிவிடுகிறான்; வேறு சில நேரம் சுய உணர்வு பெறுகின்றான். சுய உணர்வு பெறுகின்ற போது தன் மீதுள்ள கடமைகளை அவன் நிறைவேற்றுவதில்லை; நபிகள் நயாகம் (ஸல்) அவர்களைப் பின்பற்றுவது தன்மீது கடமையில்லை என்று அவன் நம்புகிறான் எனில் இப்படிப்பட்டவன் ஒருவன் அகத்திலும் புறத்திலும் பைத்தியக்காரனாக
ஆகிவிடுவானாயின், அவனிடமிருந்து நிகழும் தவறுகளைப் பற்றி மறுமையிலும் அவன் கேட்கப்படமாட்டான். ஆனால், காபிர்களுக்குரிய
தண்டனை இவனுக்கு இல்லை என்றாலும் ஈமான், தக்வாவுடையவர்களுக்கு அல்லாஹ் கொடுக்கின்ற தகுதியை இவன் அடைய முடியாது. இவ்விரு நிலைகளிலுமுள்ளவனைப் பார்த்து அவன் வலி என்று யாரும் கருதிவிடக் கூடாது.
விட்டு விட்டுப் பைத்தியம் ஏற்படக் கூடிய ஒருவன் தன் சுய அறிவுள்ள நிலையில் இறை நம்பிக்கையும், பயபக்தியும் உடையவனாக இருப்பானாயின்,
அவனுடைய நம்பிக்கைக்கு ஏற்றவாறு அவனிடம்
இறைநேசம் இடம் பெறுகிறது. ஆனால், ஒருவன் தன் சுய அறிவுள்ள நிலையில் நிராகரிப்போனாகவும், நயவஞ்சகனாவும் இருந்து அந்நிலையில் அவனுக்குப் பைத்தியம் ஏற்படுமானால் இந்தப் பைத்தியத்தின்
காரணமாக அவன் தன் சுயநிலையில் செய்த தவறுகளுக்கு தண்டனை அடையாமல் இருக்கப் போவதில்லை. தான் செய்த தீய செயலின் கூலியை அடைந்தே தீருவான். தன் பைத்தியத்தைக் காரணமாகக் கூறித் தப்பிக்க முடியாது.
இறைநேசர்களுக்கென குறிப்பிட்ட
உடை கிடையாது.
ஆகுமாக்கப்பட்ட விஷயங்களில் மற்ற மனிதர்களை விட்டும் இறை நேசர்களைத் தனியாகப் பிரித்துக் காட்டக் கூடிய வெளிப்படையான அடையாளங்கள்
எதுவும் அவர்களுக்குக் கிடையாது. அணிவதற்கு ஆகுமாக்கப்பட்டுள்ள உடைகளில் அவர்களுக்கென தனி உடைகள் கிடையாது. அவ்லியாவாக
இருந்தால் தலை முடியை மழிக்கவேண்டுமென்பதோ, தலைமுடியை நீளமாக வளர்த்து விட்டிருக்க
வேண்டுமென்பதோ, சடைமுடி இருக்க வேண்டுமென்பதோ கிடையாது.
"எத்தனையோ நல்லவர்கள் சாதாரண உடை அணிந்திருக்கிறார்கள். எத்தனையோ கெட்டவர்கள் மார்க்க அறிஞர்கள் போர்த்தும் போர்வையைப் போர்த்தியிருக்கிறார்கள்" என்றொரு முதுமொழி உண்டு. அதற்கொப்ப "அவ்லியா" என்று வேறுபடுத்திக் காட்டும் எந்த உடையும் இஸ்லாத்தில் இல்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய உம்மத்தினரிடையே தவறுகளையும். நூதன நடைமுறைகளையும் வெளிப்படையாகச் செய்யாத எல்லாப் பிரிவினரிலும் இது போன்ற ஆடையை அணிகின்றவர்கள் இருக்கத்தான் செய்கின்றார்கள்.
குர்ஆனை மனனம் செய்தவர்களிலும், அறிவு ஞானமுடையவர்களிலும் இப்படிப்பட்டவர்கள் இருக்கிறார்கள். போர் புரியக்கூடியவர்களிலும். தொழில் செய்யக் கூடியவர்களிலும், விவசாயிகளிலும் இருக்கிறார்கள். எனவே, போர்வையைப் போர்த்தியிருப்பவரைப் பார்த்து அவர் 'வலி' என யாரும் கருதி விட வேண்டாம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பின்பற்றுகிறவர்களுடைய சமூக (உம்மத்)தினரின் தராதரத்தைப் பின்வரும்
வசனத்தில் அல்லாஹ் விளக்குகிறான்.
(நபியே!) நிச்சயமாக நீரும் உம்மோடு இருப்போரில் ஒரு கூட்டத்தினரும். இரவில் மூன்றில் இரண்டு பாகத்திற்கு குறைவாக அல்லது பாதி அல்லது.
மூன்றில் ஒரு பாக நேரம் (இரவில் தொழுகையில்) நின்று வணங்குகிறீர்கள் என்பதை நிச்சயமாக உமது இறைவன் நன்கறிவான். இரவு பகலை அல்லாஹ்வே
கணக்கிடுகிறான். நீங்கள் அதைச் சரிவர கணக்கிட முடியாதென்பதை அவன் நன்கறிகிறான். எனவே, உங்களை அவன் மன்னித்து விட்டான். ஆகவே, (நீங்கள் தொழும்போது) உங்களால் முடிந்த அளவு ஓதுங்கள். ஏனென்றால், உங்களில் நோயாளிகள் இருப்பார்கள் என்பதையும் வேறு சிலர் அல்லாஹ்வின் அருளான பொருளைத் நேடி பூமியின் பல பாகங்களிலும் செல்ல வேண்டியிருக்கும் என்பதையும், இன்னும் சிலர் அல்லாஹ்வுடைய பாதையில் போர்
செய்யச் செல்ல வேண்டியிருக்கும் என்பதையும் அவன் நன்கறிவான். எனவே உங்கள் வசதிக்கேற்ப (குர்ஆனை அதிகமாகவோ, குறைவாகவோ) ஓதுங்கள். திருக்குர்ஆன் (73 ;20)
சூஃபியாக்கள் என்போர் யார்?
'சூஃபிய்யா' என்ற சொல் ‘சூஃப்’ என்ற சொல்லிலிருந்து பிறந்ததாகும். சூஃப் என்றால் கம்பளி என்று பொருள். சூபிஃய்யா என்றால் ‘கம்பளி அணிந்தவன்' என்று பொருள். இதுதான் 'சூஃபிய்யா' என்ற சொல்லின் உண்மையான கருத்தாகும்.
இதைத் தவிர வேறு பல கருத்துக்களும் கூறப்பட்டுள்ளன. ஃபிக்ஹு ஞானமுள்ளவர்களில் சிறந்தவர் என்று சூஃபிய்யாவிற்கு சிலர் பொருள் கூறுகின்றனர். சப்ஃவத் பின் முர்ரு பின் உத்துபின் தாஃபிகா என்ற அரபிய வம்சத்தைச் சார்ந்தவர்களே இவர்கள், இவர்கள் இறை வழிபாட்டில் சிறந்து விளங்கினார்கள் என்று வேறு சிலர் கூறுகின்றனர்.
நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் பள்ளிவாசலின் திண்ணையில் வாழ்ந்த திண்ணைத் தோழர்களைச் சார்ந்தவர்களே இவர்கள் என்று இன்னும் சிலர் கூறியுள்ளனர். தூய்மையுடையவர்கள் என்றும், அல்லாஹ்வின் பால் நெருங்கிச் செல்வதில் முன்வரிசையில் உள்ளவர்கள் என்றும் சிலர் கூறுகின்றனர். இவை அனைத்தும் ஆதாரமற்ற கருத்துக்களாகும்.
ஃபுகரா, ஃபகீர்கள் என்ற பெயர் வணக்க வழிபாடு உடையவர்களுக்குச் சொல்லப்படும் பெயர்களாகும் எனக் கருதப்பட்டு வருகிறது. இது பிற்காலத்தில் கொடுக்கப்பட்ட கருத்தாகும். சூஃபி சிறந்தவரா? ஃபகீர் சிறந்தவரா? என்பதில் கருத்து வேறுபாடுகள் உள்ளன. இவ்வாறே நன்றியுள்ள செல்வந்தன் சிறந்தவனா? பொறுமையுடைய ஏழை சிறந்தவனா? என்பதிலும் கருத்து வேறுபாடுகள் உள்ளன. 'இது ஜுனைதுல் பக்தாதி என்பவருக்கும் அபுல் அப்பாஸ் பின் அதா என்பவருக்குமிடையில் ஏற்பட்ட பழைய தர்க்கமாகும். இது பற்றி இமாம் அஹ்மது பின் ஹன்பல் (ரஹ்) அவர்கள் இரு கருத்துக்கள் கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது விஷயத்தில் உண்மை எதுவென்றால், அல்லாஹ் பின்வரும். வசனத்தில் கூறியுள்ளதேயாகும்.
மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஒர் ஆண் ஒரு பெண்ணி லிருந்துதான் படைத்தோம். பின்னர் ஒருவர் மற்றவரை அறிந்து கொள்வதற்காக உங்களைக் குடும்பங்களாகவும், குலங்களாகவும் ஆக்கினோம். (எனவே, உங்களில் ஒருவர் மற்றவரைவிடச் சிறந்தவரென்று பெருமைப்படுவதற்கில்லை என்றாலும்) உங்களில் எவன் மிகவும் பயபக்தியுடையவனாக இருக்கின்றானோ அவன்தான் அல்லாஹ்விடத்தில் கண்ணியத்திற்குரியவனாவான். திருக்குர்ஆன் (49 :13)
இறையச்சத்தால் மட்டுமே மனிதன் சிறப்படைகிறான்
அபூஹாுரரரா (ரலி) அவர்கள் ஒரு ஸஹீஹான ஹதீஸில் அறிவிக்கிறார்கள்: 'மனிதர்களில் சிறந்தவர் யார்?' என நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வினவப்பட்டபோது, 'அல்லாஹ்விற்கு மிக அஞ்சி நடக்க கூடியவன் தான் மனிதர்களில் சிறந்தவன்' என பதில் கூறினார்கள். இதைப் பற்றி நாங்கள் கேட்கவில்லை யாரசூலல்லாஹ்! என்று ஸஹாபாக்கள்
கூறினார்கள். 'நபி யஃகூபுடைய மகன் நபி யூசுப் மனிதர்களில் சிறந்தவர்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதைப் பற்றியும் நாங்கள்
கேட்கவில்லை. என்று ஸஹாபாக்கள் கூறினார்கள் 'அரபியரின் சுரங்கங்களைப் பற்றியா என்னிடம்
கேட்கிறீர்கள்?' என்று நபிகள் நாயகம்
(ஸல்) அவர்கள் கூறிவிட்டு ‘தங்கம்
வெள்ளிச்சுரங்கங்களைப் போன்று மனிதர்களும் சுரங்கங்களாக இருக்கிறார்கள். மெளட்டீக
காலத்தில் சிறந்தவர்களாக அறிவு ஞானமுடையவர்களாக இருந்தால், இஸ்லாத்திலும்
சிறந்தவர்களாய் ஆகிவிடுகிறார்கள்’ என்று கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
மேலும், ஒரு ஹதீஸில் அறியாமைக் கால கர்வத்தை அல்லாஹ் உங்களை விட்டுப் போக்கிவிட்டான். தங்கள் தாய் தந்தையரைக் கொண்டு
பெருமைப்படுவதையும் ஒழித்து விட்டான், மனிதர்கள் இரு பிரிவினராக இருக்கின்றார்கள். ஒரு பிரிவினர் அல்லாஹ்வை அஞ்சி நடக்கும் இறை நம்பிக்கையாளர்கள், மற்றொரு பிரிவினர் குற்றங்களைப் புரிகின்ற துர்பாக்கியவான்கள்” என, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி)
இவ்விரு பிரிவினரில் அல்லாஹ்வை அதிகம் அஞ்சுகின்றவர்களே அல்லாஹ்விடம் மிகச் சிறந்தவர்களாவர். அல்லாஹ்வை வழிப்படும் விஷயத்தில் இரு பிரிவினரும் சமமாக இருப்பார்களானால், அவர்களுடைய தகுதியிலும் சமமானவர்களாகவே இருப்பார்கள்.
ஃபகீர் என்பதின் பொருள்
‘பகீர்' என்ற சொல்லிற்கு செல்வம் இல்லாதவன், அல்லாஹ்விடம் தேவையானவன், ஏழை என்றெல்லாம் ஷரீஅத்தில் பொருள் கொடுக்கப்படுகிறது.
அல்லாஹ் கூறுகின்றான்.
தானங்கள் யாவும் (ஃபகீர்கள் என்ற) ஏழைகளுக்கும், (மிஸ்கீன்கள் என்ற) வசதியில்லாதோருக்கும் உரியனவாகும். திருக்குர்ஆன் (9:60)
மனிதர்களே! நீங்கள் அல்லாஹ்வின் (உதவியின்) பால் (பகீர்களாக) தேவையுடையவர்களாக இருக்கிறீர்கள்
இருவிதமான ஃபகீர்களை அல்லாஹ் குர்ஆனில் புகழ்ந்து கூறியுள்ளான். அவர்கள் சதகா என்னும் தர்மத்தைப் பெறத் தகுதியானவர்களும் கனீமத்துப் பொருளை (போரில் கிடைத்த பொருளைப்) பெறத் தகுதியானவர்களுமாவர். முதல் சாராரைப் பற்றி அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான் :-
சிலர் அல்லாஹ்வுடைய மார்க்கத்திற்கென்றே தங்களை (முற்றிலும் அர்ப்பணம் செய்து) ஒதுக்கிக் கொண்டதால், (தங்கள் சொந்த) வாழ்க்கைக்குத் தேவையானதைத் தேடிட வாய்ப்பைபெற முடியாதவர்களாய் இருக்கின்றனர்.” மேலும் அவர்கள் யாரிடமும் யாசிக்காததால் (அவர்களின் தரித்திர நிலையை) அறியாதோர், அவர்களைச் செல்வந்தர்கள் என எண்ணிக் கொள்கின்றனர்.
அவர்களுடைய (வறுமையின்) அடையாளங்களைக் கொண்டு நீங்கள் அவர்களை அறிந்து கொள்ளலாம். அவர்கள் மனிதர்கள் எவரிடத்திலும் கெஞ்சி யாசிக்க மாட்டார்கள். இவர்களுக்கே தானம் உரித்தானது. திருக்குர்ஆன் (2 :273)
இரண்டாவது சாராரைப் பற்றிப் பின்வருமாறு கூறுகின்றான்:
தங்கள் வீடுகளை விட்டும் தங்கள் பொருட்களை விட்டும் (அநியாயமாக) வெளியேற்றப்பட்டு, ஹிஜ்ரத்துச் செய்து வந்த முஹாஜிர்களிலுள்ள ஏழைகளுக்கு (தர்மத்தில் பங்குண்டு) அவர்கள் அல்லாஹ்வுடைய அருளையும், அவனுடைய திருப்தியையும் பெறக்கருதி, (தங்கள் உயிர், பொருளைத் தியாகம் செய்து) அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் உதவி செய்கின்றனர் இவர்கள்தான் உண்மையாளர்கள். திருக்குர்ஆன் (59:9).
இவ்வசனத்தில் கூறப்பட்ட இரண்டாவது சாரார் முதல் சாராரை விடச் சிறந்தவர்களாவார்கள். தீய செயல்களை விடுத்து நல்ல செயல்களின் பால் சென்று அல்லாஹ்வின் விரோதிகளை அகத்திலும், புறத்திலும் எதிர்த்துப் போராடுகின்ற முஹாஜிரீன்களைக் குறித்தே அல்லாஹ் மேற்கண்டவாறு புகழ்ந்துரைத்துள்ளான்.
"தங்கள் உயிர்பொருளுக்கு ஆபத்து விளைவிப்பதை விட்டும் எவனைக் குறித்து அச்சமற்றவர்களாய் இருக்கிறார்களோ. அவனே உண்மையான இறை விசுவாசி" என்றும், தன் கரத்தாலும், நாவினாலும் பிற முஸ்லிம்களுக்குத் துன்பம் விளைவிக்காதவன் தான் உண்மையான முஸ்லிம், அல்லாஹ் விலக்கியவற்றிலிருந்து விலகிக் கொள்ளக்
கூடியவன் தான் உண்மையான முஹாஜிர், அல்லாஹ்வின் அன்பைப் பெறுவதற்காக யார் தன் ஆன்மாவோடு போர் செய்கிறாரோ அவரே உண்மையான முஜாஹித், என்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள். (புகாரி, முஸ்லிம்)
நற்செயல்களில் சிறந்தது இறைவிரோதிகளை எதிர்ப்பதாகும்.
'தபூக் யுத்தம் முடிந்ததும் சிறிய போரிலிருந்து பெரிய போரின்பால் நாம் திரும்பியிருக்கின்றோம்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னதாகக் கூறப்படும் ஹதீஸ் ஆதாரமற்றதாகும். நபிகள் நாயகத்தின் சொல் செயல்களைப் பற்றி நன்கறிந்த யாரும் இந்த ஹதீஸை அறிவிக்கவில்லை. மனிதன் தன்னை இறைவனுக்காக அர்ப்பணிக்கும்
விஷயங்களில் இறை நிராகரிப்பாளர்களுடன் போர் புரிவதே மிகவும் சிறந்ததாகும். அதுவே ஏனைய அமல்களைவிட மிக விசேஷமானதுமாகும். எனவே அல்லாஹ் கூறுகின்றான்:-
இறை விசுவாசிகளில் நோய் போன்ற தக்க காரணங்களின்றி (போருக்குச் செல்லாது) இருந்து கொண்டவர்கள், (போருக்குச் சென்று) தங்களுடைய பொருள்களையும், உயிர்களையும் அல்லாஹ்வின் பாதையில் தியாகம் செய்வோருக்குச் சமமாக மாட்டார். (ஏனென்றால் தங்கள்) பொருள்களையும், உயிர்களையும் தியாகம் செய்து போர் புரிந்தோரின் பதவியை (போருக்குச் செல்லாமல்) தங்கிவிட்டவர்களை விட அல்லாஹ் மேன்மையாக்கி வைத்திருக்கிறான். இவர்கள் எல்லோருக்கும் நன்மையையே அல்லாஹ் வாக்களித்திருக்கிறான் (மேலும் அவர்களுக்குத்) தன்னிடமுள்ள (மகத்தான) பதவியையும், மன்னிப்பையும், அன்பையும் அருளுகிறான். அல்லாஹ் மிக மன்னிப்போனும்,
அன்புடையோனுமாய் இருக்கிறான்" திருக்குர்ஆன் (4:95,96).
அல்லாஹ்வையும், இறுதிநாளையும் நம்பி, அல்லாஹ்வுடைய பாதையில் போர் புரிவோருக்குச் சமமாக ஹாஜிகளுக்குத் தண்ணீர் புகட்டுவோரையும்
திருமக்காவிலுள்ள இறை இல்லத்திற்கு ஊழியஞ் செய்வோரையும் நீங்கள் ஆக்கிவிட்டீர்களா? அல்லாஹ்விடத்தில் இவ்விரு சாராரும் சமமாகமாட்டார்கள். அல்லாஹ் அநியாயக்கார மக்களை நேரான வழியில் செலுத்துவதில்லை. எவர்கள் இறைநம்பிக்கை கொண்டு (தங்கள்) ஊர்களிலிருந்து புறப்பட்டுச் சென்று அல்லாஹ்வுடைய பாதையில் தங்கள் பொருட்களையும் தியாகம் செய்து போர் புரிகின்றனரோ, அவர்கள் அல்லாஹ்விடத்தில் மகத்தான பெரும் பதவி பெற்றவர்களாவார்கள். இவர்கள்தான் திண்ணமாக வெற்றி பெற்றவர்களாவர்.
அவர்களுக்கு அவர்களுடைய இறைவன் தன் அன்பையும், திருப்தியையும் அளித்து சுவனபதிகளையும் அவர்களுக்குக் கொடுப்பதாக வாழ்த்துக் கூறுகின்றான். அவர்களுக்கு அச்சுவனபதிகளில் என்றென்றும் நிலையான இன்பங்களுண்டு. என்றென்றும் அவற்றில் அவர்கள் நிலை பெற்றிருப்பார்கள். (இதனைவிட) அல்லயாஹ்விடத்தில் திண்ணமாக மகத்தான கூலியும். அவர்களுக்கு உண்டு. திருக்குர்ஆன் (9 :19-22),
நுஃமான் பின் பஷீர் (ரலி), அவர்கள் ஒரு ஸஹீஹான ஹதீஸில் கூறுகிறார்கள் :-
நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பக்கத்தில்
உட்கார்ந்து கொண்டிருந்தேன். அப்பொழுது ஒரு மனிதர் வந்து. "நான் இஸ்லாத்தைத் தழுவிய பின்னர், எந்த நற்செயலும் செய்ய வேண்டியதில்லை ஹாஜிகளுக்குத் தண்ணீர் புகட்டி வந்தால் மட்டும் போதும்" என்று கூறினார். மற்றொருவர் வந்து, நான் இஸ்லாத்தைத் தழுவியதின் பின்னர் திருமக்காவிலுள்ள இறை இல்லத்தைப் பரிபாலித்தால் மட்டும் போதும்; வேறு எந்த நற்செயலும் செய்ய வேண்டியதில்லை என்று கூறினார். அப்போது அலீ (ரலி) அவர்கள்
அவ்விருவரையும் பார்த்து "அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவது நீங்கள் இருவரும் கூறியதைவிடச் சிறந்ததாகும்" என்று கூறினார்கள். இதைக் கேட்டுக் கொண்டிருந்த உமர் (ரலி) அவர்கள் எழுந்து ரசூலுல்லாஹ்வுடைய மிம்பர் (பிரசங்க மேடை) பக்கம் நின்று "உங்கள் சப்தங்களை உயர்த்தாதீர்கள்
தொழுகை முடிந்ததும் அது பற்றி ரசூலுல்லாஹ்விடம் கேளுங்கள் என்று கூறினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்ததின் பின்னர் அவர்களிடம் இது விஷயமாகக் கேட்கப்பட்டபோது மேற்கூறப்பட்ட இறைவசனத்தை அல்லாஹ் இறக்கினான். (முஸ்லிம்)
அப்துல்லாஹ் பின் மஸ்வூது (ரலி) அறிவிக்கும் ஒரு ஸஹீஹான ஹதீஸில் "அல்லாஹ்விடத்தில் நற்செயல்களில் சிறந்தது, எது யாரசூலல்லாஹ்?" என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடத்தில் கேட்கப்பட்டபோது "தொழுகையை அதனுடைய நேரத்தில் தொழுவதுதான் நற்செயல்களில் சிறந்து" என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இதை அடுத்து எந்த நற்செயல் சிறந்தது? என்று கேட்கப்பட்ட போது, தாய் தந்தையருக்குப் பணிவிடை செய்வதாகும், என்று கூறினார்கள்.
இதை அடுத்து எந்த நற்செயல் சிறந்தது? என்று கேட்கப்பட்ட போது 'அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவது' என்று கூறினார்கள். இவற்றை நாயகம் (ஸல்) அவர்கள் எனக்கு அறிவித்தார்கள். மேலும் நான் கேட்டிருந்தால் மேலும் பதில் கூறியிருப்பர்கள் என
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூது (ரலி) கூறினார்கள். (புகாரி, முஸ்லீம்)
மற்றொரு ஸஹீஹான ஹதீஸில் :-
நற்செயல்களில் சிறந்தது எது? என, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்ட போது "அல்லாஹ்வை நம்பி அவன் பாதையில் போர் புரிவதாகும்" என்று கூறினார்கள். அதை அடுத்து எந்த நற்செயல்? என்று கேட்கப்பட்டபோது, "ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்" என்று கூறினார்கள். (புகாரி. முஸ்லிம்)
மற்றொரு ஸஹீஹான ஹதீஸில் :-
ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடத்தில் வந்து, யாரசூலல்லாஹ்! அல்லாஹ்வுடைய பாதையில் போர் புரிவதற்கு நிகரான ஓர் நற்செயலை எனக்குக் கூறுங்கள், என்று கேட்டார். "அதற்கு நிகரான நற்செயலை உம்மால் செய்ய முடியாது" என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மீண்டும் அம்மனிதர் அவ்வாறு கேட்கவே, அவரைப் பார்த்து "நீர் இறைவனுடைய பாதையில் போர் புரிவதற்காகப் புறப்படுவீரானால், நோன்பு நோற்று, சரிவர உம்மால் தொழுகையை நிறைவேற்ற முடியுமா? என, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். (புகாரி, முஸ்லிம்)
ஹலரத் முஆத் (ரலி) அவர்களுக்கு செய்யப்பட்ட உபதேசம்
ஹலரத் முஆத் (ரலி) அவர்களை எமன் நாட்டிற்கு மார்க்கப் பிரச்சாரத்திற்காக அனுப்பும் போது, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பின்வருமாறு
உபதேசித்தார்.
"முஆதே! நீர் எங்கிருந்தாலும், எந்நிலையிருந்தாலும் அல்லாஹ்விற்கு அஞ்சும்! உம்மிடமிருந்து ஏதாவது தவறு நிகழ்ந்து விடுமானால், அதைத் தொடர்ந்து ஒரு நன்மையான காரியத்தைச் செய்யும் அது அந்தத் தவறை அழித்து விடும். மனிதர்களிடம் நற்குண சீலராக நடந்து கொள்ளும்"(திர்மிதி)
முஆதே! உம்மை நான் நேசிக்கிறேன். எனவே ஒவ்வொரு தொழுகையின் பின்னர் "அல்லாஹும்ம அஃமின்னீ வஷுக்ரிக வஹுஸ்னி அலாதிக்ரிக இபாததிக, யா அல்லாஹ்!" எப்பொழுதும் உன்னை நினைப்பதற்கும், உனக்கு நன்றி செலுத்துவதற்கும், அழகான முறையில் உன்னை வணங்குவதற்கும் எனக்கு உதவி புரிந்தருள்வாயா, என்ற துஆவை ஓத தவறிவிடாதீர். (அபூதாவூத்)
முஆதே! மனிதர்கள் அல்லாஹ்விற்குச் செய்ய வேண்டிய கடமை எது என்று உமக்குத் தெரியுமா? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்க, அல்லாஹ்வும் அவனது தூதருமே நன்கறிவார்கள் என ஹலரத் முஆத் (ரலி) பதில் கூறினார்கள். அல்லாஹ் ஒருவனை மட்டும் வணங்கி அவனுக்கு எதையும் இணை கற்பிக்காமலிருப்பது தான் மனிதர்கள் அல்லாஹ்வுக்குச் செய்ய வேண்டிய கடமையாகும். அடியார்கள் இவ்வாறு செய்யும்போது அல்லாஹ் அவர்களுக்கு கொடுக்கக்கூடிய கூலி என்னவென்று உமக்குத் தெரியுமா? என்று நாயகம் கேட்க, அல்லாஹ்வும் அவனது தூதருமே நன்கறிவார்கள், என்று ஹலரத் முஆத் (ரலி) பதில் கூறினார்கள். "அடியார்கள் தங்களுடைய இறைவனாகிய அல்லாஹ்விற்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் சரிவரச் செய்யும் போது, அல்லாஹ் அவர்களை வேதனைப்படுத்தாமலிருப்பதுதான் அவன் அடியார்களுக்குச் செய்யும் கடமையாகும்" என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
“இஸ்லாம் மிகத் தலையாய காரியமாகும், தொழுகை இஸ்லாத்தின் தூணாகும். அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவது இஸ்லாத்திள் சிகரமாகும்" என்று ஹலரத் முஆதிடம் ரசூலுல்லாஹி (ஸல்) அவர்கள்
கூறிவிட்டு, முஆதே! நன்மையின் வாயில்களை உமக்கு நான் அறிவித்துத் தரட்டுமா? நோன்பு கேடயமாகும், தண்ணீர் நெருப்பை அணைத்துவிடுவது போன்று ஏழைகளுக்கு தர்மம் செய்வது பாவங்களை அழித்துவிடுகிறது. நடு இரவில் நின்று தொழுவது, இவையெல்லாம் நன்மையின் வாயில்களாகும், என்று கூறி, பின்வரும் இறைவசனத்தை ஓதினார்கள்.
அவர்கள் (இரவில்) தங்கள் படுக்கைகளைவிட்டு விலகி, (தூக்கத்தைக் குறைத்துக் கொண்டு) தங்கள் இறைவனின் (அருட்கொடை) மீது நம்பிக்கை வைத்தும் (அவனது வேதனைக்கு) அஞ்சியவர்களாகவும் அவனை அழைத்துப் பிரார்த்திப்பார்கள். மேலும் நாம் அவர்களுக்குக் கொடுத்த (செல்வத்)திலிருந்து அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்வார்கள். அவர்கள் செய்த நற்செயல்களுக்குக் கூலியாக அவர்களுக்கென தயார் செய்து மறைத்து வைக்கப்பட்டிருக்கிற கண்ணைக் குளிரச் செய்யும் பிரதிபலன்களை யாரும்
அறியமாட்டார்கள். திருக்குர்ஆன் (32 :16:17)
என்ற வசனத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஓதிவிட்டு, முஆதே! இவற்றில் உம்மால் செய்ய முடிந்த ஒரு விஷயத்தை கூறட்டுமா? என்று கேட்டுவிட்டு, தமது நாக்கை வெளியில் காட்டி “இதை நீர் பேணிக்கெள்ளும்", என்று கூறினார்கள். இதைக் கேட்ட ஹலரத் முஆத் (ரலி) "நாங்கள் பேசக்கூடிய விஷயங்களிலுமா கேள்வி கேட்கப்படுவோம் யா ரசூலல்லாஹ்?" என்று வியப்புடன் கேட்டார். அதற்கு, "மனிதர்கள் தங்களின் நாவினால் ஏற்படும் பாவங்களினாலேயே தவிர வேறு எதனாலும் நரகத்தில் முகம் குப்புற தள்ளப்படுவதுண்டா!" என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பதிலுக்கு வினவினார்கள். (திர்மிதி)
“அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பக் கூடியவன் நல்ல விஷயங்களையே பேசட்டும் அல்லது வாய்மூடிஇருக்கட்டும்." (புகாரி, முஸ்லிம்) என்று வேறொரு ஸஹீஹான ஹதீஸில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளது மேற்கூறப்பட்ட ஹதீஸுக்கு விளக்கமாக அமைந்துள்ளது.
நல்ல விஷயங்களைப் பேசுவது அவற்றைப் பேசாமல் வாய் மூடி இருப்பதைவிடச் சிறந்தாகும். தீயவற்றைப் பேசுவதை விட்டு வாய்மூடி இருப்பது அவற்றைப் பேசுவதை விட சிறந்ததாகும். எப்போதும்
வாய்மூடி இருப்பது வெறுக்கப்பட்ட விஷயமாகும். இது போன்றுதான் ரொட்டி, இறைச்சி போன்றவற்றை சாப்பிடாமல் இருப்பதும், தண்ணீர் குடிக்காமலிருப்பதும் இவையெல்லாம் வெறுக்கப்பட்ட செயல்களாகும்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ஓரு ஸஹீஹான ஹதீஸில் கூறுகிறார்கள்:
ஒரு மனிதர் வெயிலில் நின்று கொண்டிருப்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பார்த்த போது "இந்த மனிதர் யார்?" எனக் கேட்டார்கள். அதற்கு, "இவர்தான் அபூஇஸ்ராயீல், வெயிலில் நிற்பதாகவும் நிழல் அவர் மேல்படாமலிருக்கவும், யாருடனும் பேசாமலிருப்பதாகவும், நேர்ச்சை செய்திருக்கிறார் என்று ஸஹாபாக்கள் கூறினார்கள். அவர் உட்காருமாறும், நிழலில் இருக்குமாறும், மற்றவகளுடன் பேசுமாறும், நோன்பை நிறைவு செய்யுமாறும் அவருக்கு கூறுங்கள்" என, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)
அனஸ் (ரலி) அவர்கள் ஒரு ஸஹீஹான ஹதீஸில் பின் வருமாறு அறிவிக்கின்றார்கள்:
சிலர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்யும் வணக்க வழிபாடுகளைப் பற்றி மிக ஆர்வத்துடன் கேட்டுச் செவியுற்று அவற்றை மிகக் குறைவாகக் கருதிவிட்டு, அவர்கள் எவ்வளவு பெரிய அந்தஸ்துடையவர்கள், அவர்களே இவ்வளவு குறைவாக வணக்கம் புரிகின்றார்களே! என்று தமக்குள் பேசிக்கொண்டார்கள். பின்னர் அவர்களில் ஒருவர் எழுந்து, 'நான் என்றும் நோன்பு நோற்றுக் கொண்டேயிருப்பேன், நோன்பை ஒருபோதும் விடமாட்டேன்' என்று கூறினார். மற்றொருவர், 'நான் இரவு முழுவதும் நின்று வணங்குவேன், தூங்கவே மாட்டேன்' என்று கூறினார். 'மூன்றாமவர் நான் இனிமேல் இறைச்சி சாப்பிட மாட்டேன்' என்றார். நான்காமவர், 'நான் திருமணம் செய்யமாட்டேன்' என்றார். இதை செவியுற்ற நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிலர் நான் அப்படிச் செய்வேன். இப்படிச் செய்வேன் என்றெல்லாம் கூறுகிறார்களே! அவர்களுக்கு என்ன நேர்ந்து விட்டது? நானோ (சிலநாட்கள்) நோன்பு நோற்கிறேன், (வேறு சில நாட்கள்) நோன்பை விட்டு விடுகின்றேன், இறைச்சி சாப்பிடுகிறேன், திருமணம் செய்கிறேன். என் வழிமுறையை எவன் வெறுக்கிறானோ, அவன் என்னைச் சார்ந்தவனல்லன்" எனக் கூறினார்கள்.
அதாவது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காண்பித்த வழி முறைகளைவிட மற்ற வழிமுறைகளை சிறந்தவை என்று யாராவது கருதிச் செயல்படுவானாயின், அப்படிப்பட்டவன் அல்லாஹ்வுடைய பொறுப்பிலிருந்தும் அவனது தூதருடைய
பொறுப்பிலிருந்தும் நீங்கிவிடுகின்றான்.
“தன்னைத்தானே மூடனாக்கிக் கொண்டவனைத் தவிர (நபி) இப்ராஹீமுடைய (இஸ்லாமிய) மார்க்த்தைப் புறக்கணிப்பவன் யார்? திருக்குர்ஆன் (2 :130) என அல்லாஹ் கேட்கிறான்.
பேச்சுக்களில் சிறந்தது அல்லாஹ்வுடைய கலாமான பரிசுத்தக் குர்ஆன் என்றும், வழிமுறைகளில் சிறந்தது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய வழிமுறை என்றும் நம்புவது ஒவ்வொரு முஸ்லிமின் மீது
கடமையாகும். இதை நபிகள் நாயகம் (ஸல் அவர்கள் ஒவ்வொரு குத்பா பிரசங்கத்திலும் கூறிவந்தார்கள் என்று ஸஹீஹான ஹதீஸில் வந்துள்ளது.
நபிமார்கள் மட்டுமே பாவத்திலிருந்து பாதுகாக்கப்பட்டவர்கள்
இறைநேசராக இருப்பவர், பாவத்திலிருந்து தூய்மையானவராக இருக்க வேண்டும், தவறு எதுவும் செய்யக்கூடாது என்பது நிபந்தனையன்று. இறை நேசராக இருப்பவருக்குச் சில ஷரீஅத் சட்டங்கள்
கூடத் தெரியாமல் இருக்கலாம் மார்க்க விஷங்களில் தனக்குச் சந்தேகம் ஏற்படும்போது சந்தேகத்திற்குரிய விஷயங்களை இது அல்லாஹ் ஏவியது என்றோ, அல்லது இது அல்லாஹ் விலக்கியது என்றோ கூட அவர் கருதிவிடக் கூடும். வழக்கத்திற்கு மாற்றமான சில அற்புதச் செயல்களைக் கண்டதும் இது இறை நேசர்கள்காட்டும்(கராமத்)அற்புதச்செயல் என்று கூட அவர் எண்ணி விடலாம். ஆனால் அவ்வழக்கத்திற்கு மாற்றமான அற்புதச்செயலோ இந்த இறை நேசரின் தகுதியைக் குறைக்க ஷைத்தான் செய்த சூழ்ச்சியாகும் என்பதை அவர் அறிந்து கொள்வதில்லை. இதன் காரணத்தால் அவர் இறைநேசத்தை விட்டும் வெளியேறியவராகக் கருதப்படமாட்டார். ஏனெனில் தவறுதலாகவும், மறதியாகவும் நிர்ப்பந்த்தின் பேரிலும் இந்த உம்மத்தினர் செய்யும் செயல்களைப் பற்றி அல்லாஹ் அவர்களை மறுமையில் கேட்க மாட்டான். எனவே, அல்லாஹ் கூறுகிறான்.
"நம்முடைய திருத்தூதர் தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பெற்ற வேதத்தை விசுவாசித்தார். அதை மற்ற மூமின்களும் விசுவாசித்தார்கள். எல்லோரும் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும் நம்பினார்கள். மேலும், அவனுடைய தூதர்களில் சிலரை நம்பி, வேறு சிலரை நம்பாமல் அவர்களுக்கிடையில் எந்தப் பாகுபாடும் காட்டமாட்டோம். மேலும் இறைவா! (உன் வேத வாக்குகளை) நாங்கள் செவியுற்றோம்! அதற்கு நாங்கள் வழிபட்டோம்! எங்கள் இறைவா! நாங்கள் உனது மன்னிப்பைக் கோருகின்றோம். உன்னிடடே நாங்கள் சேர வேண்டியிருக்கிறது என்று அவர்கள் கூறினார்கள்.
அல்லாஹ் எந்த ஆத்மாவையும் அதன் சக்திக்கு மேல் நிர்பந்திப்பதில்லை. அது தனக்குத் தேடிக் கொண்ட நன்மை அதற்கே (பயனளிக்கும்) அது தனக்குத் தேடிக் கொண்ட தீமையும் அதற்கே (கேடு விளைவிக்கும்) எங்கள் இறைவா! நாங்கள் (எங்கள் கடமைகளைச் செய்ய) மறந்து விட்டாலும் அல்லது தவறு செய்து விட்டாலும் அதற்காக நீ எங்களைத் தண்டிக்காதே. இறைவா! எங்களால் தாங்க முடியாத துன்பங்களை எங்கள் மீது நீ சுமத்தி விடாதே! எங்களை மன்னித்து எங்கள் பிழைகளைப் பொறுத்தருள்வாயாக! எங்களுக்குக் கருணை புரிவாயாக! நீ தான் எங்களின் அதிபதி. எனவே (உன்னை) நிராகரிக்கும் மக்கள் மீது (நாங்கள் வெற்றி பெற) நீ எங்களுக்கு உதவி புரிவாயாக! (என்று பிரார்த்திப்பார்கள்) திருக்குர்ஆன் (2 :285, 286)
இவ்வசனத்தில் உள்ள துஆவை அல்லாஹ் அங்கீகரித்துவிட்டதாக ஒரு ஸஹீஹான ஹதீஸில் வந்துள்ளது. (முஸ்லிம்)
ஹலரத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ஒரு ஸஹீஹான ஹதீஸில் பின்வருமாறு அறிவிக்கின்றார்கள் :
உங்கள் உள்ளத்தில் உள்ளதை நீங்கள் வெளிப்படுத்தினாலும், அவற்றை மறைத்துக் கொண்டாலும் அவற்றைப் பற்றியும் அல்லாஹ்
உங்களை விசாரணை செய்வான்; அவன் விரும்பியவர்களை மன்னிப்பான். அவன் விரும்பியவர்களை வேதனை செய்வான். மேலும் அல்லாஹ் யாவற்றின் மீதும் மிக்க ஆற்றலுடையவனாக இருக்கின்றான் (2:284) என்ற வசனம் இறங்கியதும் ஸஹாபாக்களுடைய உள்ளங்களில் அதுவரை இல்லாத ஒருவித மனச்சஞ்சலம் ஏற்பட்டது. இதை அறிந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸஹாபாக்களைப் பார்த்து "நாங்கள் அல்லாஹ்வின் கட்டளையைச் செவிமடுத்தோம்; அதற்கு வழிப்பட்டோம் அதை ஏற்றுக் கொண்டோம்" என்று கூறுங்கள் எனக் கூறினார்கள். (முஸ்லிம்)
எனவே, அல்லாஹ் ஸஹாபாபாக்களுடைய உள்ளங்களில் விசுவாசத்தை ஏற்படுத்தினான். அப்பொழுது முன்னர் குறிப்பிடப்பட்ட (2:285, 286) வசனங்களை இறக்கி அதில் உள்ள பிரார்த்தனையை அங்கீகரித்து, அதன்படி செய்து கொடுப்பதாக அல்லாஹ் கூறினான் என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
மற்றொரு வசனத்தில் அல்லாஹ் பின்வருமாறு கூறினான்:
தெரியாமல் நீங்கள் செய்துவிட்ட தவறுகளைப் பற்றி உங்கள் மீது எந்தக் குற்றமுமில்லை, ஆனால், நீங்கள் மனப்பூர்வமாக வேண்டுமென்றே செய்வது (குற்றமாகும்). திருக்குர்ஆன் (3:5),
அபூஹுரைரா (ரலி) அவர்களும் அம்ர்பின் ஆஸ் (ரலி) அவர்களும் அறிவிக்கும் ஒரு ஸஹீஹான ஹதீஸில் பின்வருமாறு கூறப்படுகிறது. "தீர்ப்பு வழங்கக்கூடிய ஒருவர், ஒரு விஷயத்தில் முயற்சி செய்து ஆராய்ந்து சரியாகத் தீர்ப்பு வழங்குவாரானால் அவருக்கு இரு
நன்மைகள் உள்ளன. அவர்தம் முயற்சியில் தவறி விடுவாரானால் அதற்கும் நன்மை உண்டு. என நாயகம் (ஸல்) அவர்கள்கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
முஜ்தஹித் என்கிற சுய ஆய்வுத்திறன் பெற்றவர் தனது முயற்சியில் தவறி விட்டால், அவருக்கு அதனால் எந்தக் குற்றமுமில்லை. மாறாக அவருடைய முயற்சிக்காக ஒரு நன்மையே கொடுக்கப்படுகிறது. அவருடைய தவறு மன்னிக்கப்படுகிறது. அதே நேரத்தில் அவர் தனது சுய ஆய்வில் (இஜ்திஹாதில்) சரியானதை அடைந்து விடுவாராயின் அவருக்கு இரு நன்மைகள் கொடுக்கப்படுகின்றன. தன் முயற்சியில் தவறிவிடுகின்றவரை விட இவர் சிறந்தவராக ஆகிவிடுகின்றார்.
எனவே, இறை நேசராக இருக்கின்றவர் கூட தவறு செய்யக் கூடும் என்பது பொது நியதியாக இருக்கின்றபோது இறைநேசர் சொல்லும் எல்லாவற்றையும் நம்பவேண்டுமென்பது அவசியமில்லை. ஆனால், நபியாக இருக்கிறவர் .
சொல்லக் கூடிய எல்லாவற்றையும்
நம்பியே ஆகவேண்டும்
உண்மையை நம்ப வேண்டும், தவறை விட்டுவிட வேண்டும்.
இறை நேசராக இருக்கின்றவர் தனது உள்ளத்தில் ஏற்படுகின்ற எல்லாவித எண்ணங்கள், ஊசலாட்டங்கள் மீது நம்பிக்கை கொண்டுவிடக்கூடாது.
எது இஸ்லாத்தில் சரியானதெனக் கருதப்படுகின்றதோ அதையே நம்ப வேண்டும். தனது உள்ளத்தில் ஏற்படுவது தெய்வீக உதிப்பு அல்லது இறைவனின் உரையாடல் என்று அவருக்குத் தோன்றுமானால், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கொண்டு வந்த ஷரீஅத்திற்கு ஏற்றதுதானா என்று சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். அதற்கு ஏற்ப இருக்குமானால் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். அதற்கு முரணானதாக இருக்குமானால் அதைத் தூக்கி எறிந்து விட வேண்டும். அது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய ஷரீஅத்திற்கு ஒத்ததா அல்லது முரணானதா. என்று தெரியவில்லையானால், அதன்படி செயல்படுவதை நிறுத்திவிட வேண்டும்.
இது விஷயத்தில் மக்கள் மூன்று பிரிவினராக உள்ளனர். சிலர் ஒருவரை இறைநேசர் என்று நம்பிவிட்டால், தன்னுடைய உள்ளத்தில் உதிப்பதெல்லாம் இறைவன் எனக்கு அறிவிக்கும் விஷயங்களாகும் என்று அவர் நம்புகின்றவற்றையெல்லாம் சீர்தூக்கிப் பார்க்காமல் அப்படியே நம்பி விடுகின்றனர். வேறு சிலர், இறைநேசராக இருக்கின்ற ஒருவர், ஷரீஅத்திற்கு மாறான ஒரு செயலைச் செய்துவிட்டதற்காக அவர்
இறைநேசரல்லர் என்று தீர்ப்பு வழங்கி விடுகின்றனர். அவர் தன் முயற்சியில் தவறி விட்ட சுய ஆய்வுத்திறன் பெற்ற முஜ்தஹிதாக இருந்தாலும் கூட அவரை ஏற்றுக்கொள்வதில்லை. காரியங்களில் சிறந்தது நடுத்தரமானது என்று கூறுவது போல் மூன்றாவது பிரிவினர் நடுத்தரவாதிகளாவர். ஒருவர் இறைநேசராக இருப்பதால் அவர் பாவத்தை விட்டுத் தூய்மையாகிவிடுகின்றார் என்றோ, தன் முயற்சியில் தவறிவிடுவதால் அவர் குற்றவாளியாகி விடுகின்றார் என்றோ இவர்கள் கூறுவதில்லை. அவர் சொல்வதையெல்லாம் பின்பற்றுவதுமில்லை. அவர் சுய ஆய்வுத்திறன் பெற்றவராக இருக்கும்போது அவரை காஃபிர் என்றோ, ஃபாசிக் (பாவி) என்றோ கூறிவிடுவதுமில்லை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எதைக் காட்டிச் சென்றார்களோ. அதைப் பின்பற்றுவதுதான் மக்கள் மீது கடமையாகும். இறைநேசராக இருப்பவர், ஃபுகஹாக்கள் என்னும் மார்க்க அறிஞர்கள் சிலருடைய கருத்திற்கு மாறு செய்து, வேறு சில (ஃபுகஹாக்கள்) அறிஞர்களுடைய கருத்திற்கு ஒப்ப இருக்கும் போதெல்லாம் அவர் ஷரீஅத்திற்கு மாறு செய்து விட்டார் என்று யாரும் கூறிவிடக் கூடாது.
கலீபா உமர் (ரலி) அவர்களின் சிறப்பு
உங்களுக்கு முன்னர் உள்ள சமூகங்களின் தெய்வீக உதிப்புப் பெற்றவர்கள் இருந்திருக்கிறார்கள்; என்னுடைய உம்மத்தில் அவ்வாறு யாரும் இருப்பார்களானால் உமர் அவர்களில் ஒருவராவார். என நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறியதாக ஒரு ஸஹீஹான ஹதீஸில் வந்துள்ளது. (புகாரி, முஸ்லிம்)
நான் உங்களுக்கு நபியாக அனுப்பப்பட்டிருக்க வில்லையானால் உமர் நபியாக அனுப்பப்பட்டிருப்பார். (திர்மிதி)
உமரின் நாவு மூலமும், அவருடைய உள்ளத்தின் மூலமும் அல்லாஹ் உண்மையை வெளிப்படுத்தினான்.
எனக்குப் பின்னால் நபி கிடையாது யாராவது நபியாக இருக்க வேண்டுமானால், அந்த நபி உமராகத்தான் இருந்திருப்பார் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி)
மன அமைதியை ஏற்படுத்தக் கூடியவை உமருடைய நாவிலிருந்து வெளியாகுவதை நாங்கள் வியப்பாகக் கருதுவதில்லை என அலி (ரலி) அவர்கள் கூறினார்கள். (பைஹகீ), இது இமாம் ஷாபியீ மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு விஷயத்தைப் பற்றி இது இப்படி இருக்க வேண்டுமென்று உமர் (ரலி) அவர்கள் சொல்வார்களானால் அது அவர்கள் கூறியது போன்றே இருக்கும் என அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
உமர் (ரலி) அவர்களின் நாவு வழியாக ஒரு மலக்கு பேசுகிறாரோ? என்று கூட நாங்கள் பேசிக் கொள்வதுண்டு என கைல் பின் தாரிக் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
அல்லாஹ்வை மிக அஞ்சி நடப்பவர்களின் வாயிலிருந்து வெளியாகும் விஷயத்தை மிகக் கூர்மையாகக் கேளுங்கள். உண்மையான சில விஷயங்கள் அவர்களிடமிருந்து வெளியாகின்றன.
என, உமர் (ரலி) அவர்கள் சொல்லி வந்தார்கள்.
உமர் (ரலி) அவர்கள் கூறிய அல்லாஹ்வை அஞ்சி நடப்பவர்களின் வாயிலிருந்து வெளியாகும் உண்மையான விஷயங்கள் என்பது அல்லாஹ் அவர்களுக்கு வெளிப்படுத்திக் கொடுக்கும் சில விஷயங்களாகும். இறை நேசர்களுக்கு அல்லாஹ்வோடு சில உரையாடல்களும், கஷ்ஃபுகள் என்ற சில இறை உதிப்புக்களும் இருக்கின்றன.
இந்த உம்மத்தில் இப்படிப்பட்ட இறைநேசர்களில் மிகச் சிறந்தவர் ஹலரத் அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்களாவார்கள். அவர்களை அடுத்து உமர் (ரலி) அவர்களாவார்கள். பொதுவாக முஹம்மது (ஸல்) அவர்களுடைய உம்மத்தில் மிகச்சிறந்தவர்கள் அபூபக்கர் (ரலி) அவர்களும், உமர் ரலி,
அவர்களுமாவார்கள்.
உமர் (ரலி) அவர்கள் இந்த உம்மத்தில் தெய்வீக உதிப்புப் பெற்றவர்களாய்த் திகழ்ந்தார்கள் என்பது மேலே சொன்ன ஸஹீஹான ஹதீஸின் மூலம் தெரிய வருகின்றது. இந்த உம்மத்தில் உமர் (ரலி) அவர்களுக்குப் பின்னர் யாராவது தெய்வீக உதிப்புக் பெற்றவர்கள் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொண்டால்கூட, அவர்கள் எல்லோரையும் விட உமர் (ரலி) அவர்கள் மிகச் சிறந்தவர்களாக இருக்கிறார்கள் என்பது புலனாகிறது. இந்த தனிச் சிறப்பிற்குரியவர்களாய் உமர் (ரலி) அவர்கள் இருந்தும்கூட, அவர்கள் தன் மீது கடமையான அமல்களைச் செய்தே வந்தார்கள். தனக்கு ஏதாவது சுயகருத்துக்கள் தோன்றும் போது அவை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டிய வழிமுறைகளுக்கு ஏற்ப இருக்கின்றதா என்று அவர்கள் பார்ப்பார்கள். சில சந்தர்ப்பங்களில் நபிகள் நாயகத்தின் வழிமுறைக்கு உமருடைய கருத்து பொருந்தி இருக்கும். இது உமர் (ரலி) அவர்களின் சிறப்பின்பாற்பட்டதாகும்.
உதாரணமாக, சில சந்தர்ப்பங்களில் உமர் (ரலி) அவர்களிள் கருத்திற்கொப்ப திருக்குர்ஆன் வசனங்கள் இறங்கியிருக்கின்றன. வேறு சில சந்தர்ப்பங்களில் அவர்களின் கருத்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிமுறைக்கு மாற்றமானதாக இருக்கும். அப்போது தனது கருத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்வார்கள். உதாரணமாக ஹுதைபிய்யா உடன்படிக்கையின் போது நடந்த நிகழ்ச்சியை எடுத்துக் கொள்ளலாம்.
ஹிஜ்ரி ஆறாம் ஆண்டு உம்ரா செய்வதற்காக மரத்தடியில (பைஅத்) ஒப்பந்தம் செய்த சுமார் 140 முஸ்லிம்களுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருமதீனாவிலிருந்து புனித மக்காவிற்குப் புறப்பட்டு
சென்றார்கள். ஹுதைபிய்யா என்ற இடத்தை அடைந்ததும் அவர்களை மக்காவிற்குள் செல்லாதவாறு முஷ்ரிகீன்கள் தடுத்து நிறுத்தினார்கள்.
அப்பொழுது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முஷ்ரிகீன்களோடு பல பேச்சுவார்த்தைகள் நடத்திய பின்னர் அந்த ஆண்டு மதீனா திரும்பிச் சென்று விட்டு.
அடுத்த ஆண்டு உம்ராவிற்கு வருவதாக ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். முஷ்ரிகீன்கள் சில நிபந்தனைகள் விதித்தார்கள். நாயகம் (ஸல்) அவர்கள் அவற்றை அப்படியே ஏற்றுக் கொண்டார்கள். அந்நிபந்தனைகளில் சில வெளிப்படையில் முஸ்லிம்களுக்கு பாதகமானவையாகத் தெரிந்தன. பெரும்பாலான முஸ்லிம்களுக்கு அது வேதனையாகவும் இருந்தது. அவ்வுடன்படிக்கையிலுள்ள நலனை அல்லாஹ்வும், தூதருமே நன்கு அறிவார்கள்- இந்நிபந்தனைகளை
வெறுத்தவர்களில் உமர் (ரலி) அவர்களும் ஒருவராவார்கள். இவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து. “யாரசூலல்லாஹ்! நாம் உண்மையிலும் முஷ்ரிகீன்கள் தவறிலுமல்லவா இருக்கிறார்கள்?” என்று கேட்க, அதற்கு “ஆம்' என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நம்மில் போரில் மரணமடையக் கூடியவர் சுவர்க்கத்திற்கும் முஷ்ரிகீன்களில் போரில் மரணமடையக்கூடியவன் நரகத்திற்குமல்லவா செல்வர், என்று உமர் (ரலி) கேட்க. அதற்கும் 'ஆம்' என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள். அப்படியானால் நமது மார்க்க விஷயத்தில் அவர்களுக்கு விட்டுக்கொடுத்து நாம் ஏன் தாழ்ந்து செல்லவேண்டும்?' என்று உமர் (ரலி) அவர்கள் கேட்டபோது, 'நான் அல்லாஹ்வுடைய தூதராக இருக்கிறேன். அவன் எனக்கு உதவி
செய்வான்; அவனுக்கு நான் மாறு செய்ய மாட்டேன்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள். கஃபாவிற்குச் சென்று தவாப் செய்வோம் என்றல்லவா எங்களை அழைத்து வந்தீர்கள் என உமர் (ரலி) கேட்க. அதற்கு 'ஆம்' என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பதில் கூறிவிட்டு இந்த ஆண்டு நீர் தவாப். செய்வீர் என்றா உமக்குச் சொன்னேன்? என்று கேட்டார்கள். 'இல்லை' என உமர் பதில் கூறினார்கள். நிச்சயமாக நீர் கஃபாவிற்குச் சென்று தவாப் செய்யத்தான் போகிறீர் என உமரை பார்த்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
தன்னுடைய கருத்திற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஆதரவு கிடைக்காமல் போனபோது, அபூபக்கர் (ரலி)அவர்களிடம் சென்று நபிகள் நாயகத்திடம் எதைக் கூறி வாதாடினார்களோ, அதையே அவர்களிடமும் கூறி உமர் (ரலி) அவர்கள் வாதாடினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடமிருந்து என்ன பதில் கிடைத்ததோ அதே
பதில்தான் ஹலரத் அபூபக்கர் (ரலி) அவர்களிடமிருந்தும் கிடைக்கப் பெற்றார்கள். அபூபக்கர் (ரலி) அவர்களுக்கோ நாயகம் (ஸல்) அவர்கள் என்ன பதில் கூறினார்கள் என்பது தெரியாது.
அல்லாஹ்வும், அவனது திருத்தூதரும் கூறுபவற்றை எந்த மறுப்பும், தெரியப்படுத்தாமல் அப்படியே ஏற்றுக் கொள்வது அபூபக்கர் (ரலி) அவர்களின் பண்பாகும், எனவே உமர் அவர்கள் தமது கருத்தைத் திரும்பப் பெற்றுக் கொண்டார்கள். நபிகள் நாயகத்துடன் நான் இவ்வாறு நடந்து கொண்டதற்குப் பரிகாரமாக எத்தனையோ நற்செயல்களைச் செய்தேன் என்று உமர் (ரலி) அவர்கள் பின்னொரு நாள் கூறினார்கள். (புகாரி)
இவ்வாறே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உலகைப் பிரிந்து இறையடி சேர்ந்த செய்தியை முதன் முதலாகச் செவியுற்ற உமர் (ரலி) அவர்கள், இறைவன் மீது ஆணையாக அல்லாஹ்வின் தூதர் மரணமடையவில்லை என்று கூறி நாயகத்தின் மரணத்தை மறுத்தார்கள்.
அச்சமயம் அபூபக்கர் (ரலி) அவர்கள் வந்து நாயகத்தின் உடலைப் பார்த்து விட்டு, ரசூலுல்லாஹ்
உலகைப் பிரிந்து விட்டார்கள் என்ற செய்தியை
மக்களிடையே சொன்னதன் பின்னர் தான் முதலில் தாம் சொன்னது தவறு என உமர் (ரலி) அவர்கள் உணர்ந்தார்கள்.
இது போன்றே அபூபக்கர் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் சிலர் ஜகாத் கொடுக்க மறுத்தனர். எனவே, அவர்களோடு போர் தொடருமாறு அபூபக்கர் (ரலி) அவர்கள் கட்டளையிட்டார்கள். அப்போது
"மக்கள் லாயிலாஹ இல்லலாஹ் முஹம்மதுர் ரசூலல்லாஹ் கலிமாவைக் கூறிச் சான்று பகர்ந்து விடுவார்களானால் -இக்கலிமாவைக் கூறுவதால் விதியாகும். கடமைகளை விட்டாலேயொழிய அவர்களுடன் போர் செய்வது விலக்கப்பட்டதாக ஆகிவிடுகிறது. அவர்களுடைய உயிர், பொருளுக்குப் பாதுகாப்பளிப்பது கடமையாகிவிடுகிறது என்றல்லவா
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள். ஜகாத் கொடுக்க மறுத்ததற்காக நீர்எப்படி அவர்களோடு போர் செய்யமுடியும்? என உமர் (ரலி) அவர்கள் அபூபக்ர் (ரலி) யிடம் கேட்டார்கள். அதற்கு, கலிமாவைக் கூறுவதால் விதியாகும் கடமைகளைத் தவிர என ரசூலுல்லாஹ் கூறவில்லையா? ஜகாத் கொடுப்பது கலிமா சொன்னவன் மீது கடமையாகி விடுகிறது, ரசூலுல்லாஹ்வுடைய காலத்தில் அவர்கள் கொண்டு வந்த ஜகாத் பொருளில் ஒட்டகம் கட்டும் ஒரு கயிற்றைக் கூட அவர்கள் தர மறுப்பார்களேயானால், அதை அவர்கள் கொடுக்கின்ற வரை அவர்களுடன் போரிடுவேன்' என, அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
இதைக்கேட்டதும் அபூபக்கர் (ரலி) அவர்களின் உள்ளத்தை அல்லாஹ் தன் பாதையில் போர் புரிவதற்காக விசாலப்படுத்தியுள்ளான். எனவே அவர்கள் கூறுவதுதான் உண்மை என நான் அறிந்தேன் என்று உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
(புகாரி, முஸ்லிம்)
உமர் (ரலி) அவர்கள் தெய்வீக உதிப்புப் பெற்றவர்களாய் இருந்தும் கூட அவர்களைவிட அபூபக்ர் (ரலி) அவர்களின் தகுதி மேலானது என்பதற்கு எத்தனையோ சான்றுகள் உள்ளன. சித்தீக் (மெய்ப்பிப்பவர்) என்ற பெயர் பெற்ற அபூபக்கர் (ரலி) அவர்கள் தெய்வீக உதிப்புப் பெற்றவர் என்ற பெயர் கொண்ட உமர் (ரலி) அவர்களை விடச் சிறந்தவர்களாவர்.
அபூபக்கர் சித்தீக் அவர்கள் பாவத்தை விட்டும்
தூய்மையான ரசூலுல்லாஹ்வின் சொல், செயல்களை எந்த மறுப்புமின்றி அப்படியே ஏற்றுச் செயல்படுகின்றார். தெய்வீக உதிப்புப் பெற்றவரோ தன் உள்ளத்தில் சில விஷயங்கள் உதயமாகக் காண்கிறார். ஆனால் தன் உள்ளம் பாவத்தை விட்டுத் தூய்மையான நபியின் வழிமுறையோடு ஏறிட்டுப் பார்க்க வேண்டியது அவசியமாகி விடுகின்றது.
எனவே உமர் (ரலி) அவர்கள் சில மார்க்க விஷயங்களில் ஸஹாபாக்களோடு கலந்தாலோசனை செய்து அதில் அவர்கள் சர்ச்சையும் செய்துள்ளார்கள். ஸஹாபாக்கள் சில விஷயங்களில்
உமர் (ரலி) அவர்களை எதிர்ப்பார்கள். அப்போது ஹலரத் உமர் (ரலி) அதற்கு ஆதாரம் கூறுவார்கள். அந்த ஆதாரம் சரியில்லை என்று கூறி குர்ஆன்
ஹதீஸிலிருந்து ஸஹாபாக்கள் ஆதாரங்களை
எடுத்துக் காட்டுவார்கள்.
அப்போது ஸஹாபாக்கள் செய்யும் தர்க்கங்களையும், ஆதாரங்களையும், உமர் (ரலி) ஏற்றுக் கொள்வார்களேயொழிய. நான் தெய்வீக உதிப்பு பெற்றவன். இறைவனின் உரையாடல்கள் எனக்கு உண்டு. எனவே நீங்கள் நான் சொல்வதையெல்லாம் ஏற்றுக் கொள்ள வேண்டுமே தவிர அதற்கு
எந்த மறுப்பும் தெரிவிக்கக் கூடாது என்று உமர் (ரலி)அவர்கள் ஒருபோதும் சொன்னதில்லை.
யாராவது ஒருவன் தன்னை இறை நேசன் என்று கூறி. அல்லது பிறர் அவரை இறைநேசன் என்று கூறி, அவரைப் பின்பற்றுகின்றவர்கள் அவர் சொல்லுகின்ற எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்; அவருக்கு எந்த மறுப்பும் தெரிவிக்கக் கூடாது அவர் கூறக் கூடியவை குர்ஆன் ஹதீஸிற்கு ஏற்றது தானா என்றெல்லாம் கேட்காமல் அப்படியே நம்பிவிட வேண்டும் என்று வாதித்தால் அவன் முற்றிலும் வழி தவறியவனாவான். இவனைப் போன்றவர்கள் தான் மக்களை வழிகெடுக்கிறார்கள் என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும்.
உமர் (ரலி) அவர்கள் சிறந்த இறைநேசராக விளங்கினார்கள். அமீருல் மூமினாக இருந்தார்கள். அவ்வாறு இருந்தும் முஸ்லிம்கள் அவர்களை சில விஷயங்களில் எதிர்த்திருக்கிறார்கள். அவர்கள் அனைவருமே திருக்குர்ஆன், ஹதீஸிற்கு முற்றிலும் வழிப்பட்டவர்களாக இருந்தார்கள். யாராக இருந்தாலும் சரி. அவர்கள் சொல்வது சரியானதாக இருக்குமானால் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். தவறாக இருக்குமாயின் அதை விட்டு விடவேண்டும் ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்வதை மட்டும் எவ்விதக் கேள்வியுமின்றி ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று முஸ்லிம்கள் எல்லோரும் ஏகோபித்துக் கூறியுள்ளார்கள்.
நபிக்கும், நபியல்லாதவர்களுக்குமிடையிலுள்ள வேறுபாடு
நபிமார்களுக்கும், மற்றவர்களுக்குமிடையில் பல வேறுபாடுகள் உள்ளன. அல்லாஹ் கூறியதாக நபிமார்கள் அறிவிக்கின்ற எல்லாவற்றையும் நம்பி ஈமான் கொள்வது அவசியமாகும். ஆனால் அவ்லியாக்கள் என்பவர்கள் இடுகின்ற எல்லாக் கட்டளைகளுக்கும் வழிப்பட வேண்டுமென்பதோ அவர்கள் அறிவிக்கின்ற எல்லாவற்றையும் நம்ப வேண்டுமென்பதோ, அவசியமில்லை. இவர்கள் கூறக் கூடியவற்றை குர்ஆன், ஹதீஸ் என்ற தராசில் எடை போட்டுப் பார்க்கவேண்டும். அவ்விரண்டிற்கும் ஒப்பானவற்றை ஏற்றுக் கொள்ள வேண்டும். அவ்விரண்டிற்கும் முரணானவற்றைத் தூக்கி எறிந்துவிட வேண்டும். ஒருவர் இறை நேசராகவும், முஜ்தஹித் என்ற சுய ஆய்வுத் திறன் பெற்றவராகவும் இருந்து தனது முயற்சியில் தவறி விட்டாலும் கூட
அவருடைய முயற்சிக்காக ஒரு நன்மை இருக்கிறது. ஆனால், அவர் கூறக்கூடியவை குர்ஆன், ஹதீஸுக்கு மாற்றமாக இருக்குமானால் அவர் தவறு செய்தவராக ஆகிவிடுகிறார். அல்லாஹ்வைத் தன்னால் இயன்ற அளவு வணங்கி வழிபடக் கூடியவராக இருப்பாராயின், அவருடைய இந்த தவறை அல்லாஹ் மன்னித்து விடுவான். எனவே அல்லாஹ் கூறுகிறான்:
உங்களால் இயன்ற அளவு அல்லாஹ்வுக்கு
அஞ்சி; அவனுக்கு வழிப்பட்டு நடங்கள். திருக்குர்ஆன் (64:16).
இவ்வசனம் கீழ்க்காணும் வசனத்திற்கு விளக்கமாக
இருக்கிறது.
விசுவாசிகளே! நீங்கள் அல்லாஹ்விற்கு மெய்யாகவே அஞ்சி, வழிப்பட்டு நடங்கள். திருக்குர்ஆன் (3 :102)
மெய்யாகவே அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள் என்பதன் பொருள் அல்லாஹ்வுக்கு வழிப்பட்டு; அவனுக்கு மாறு செய்யாமலிருக்க வேண்டும். அவனை மறக்காமலிருக்க வேண்டும்; அவனுக்கு நன்றி
செலுத்தி; அவனை நிராகரிக்காமலிருக்க வேண்டும். இவற்றை எல்லாம் உங்களால் இயன்ற அளவு செய்ய வேண்டும். மனிதனால் செய்ய முடியாதவற்றைச் செய்யுமாறு ஏவி அல்லாஹ் மக்களுக்குச் சிரமம் கொடுப்பதில்லை என்பதுதான் மேற்கூறப்பட்ட
வசனத்தின் பொருளாகும். என அப்துல்லாஹ் பின்மஸ்வூத் (ரலி! அவர்கள் கூறினார்கள்.
அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவையும் அதன் சக்திக்கு மேல் நிர்பந்திப்பதில்லை. அது தேடிக் கொண்ட நன்மை அதற்கே (பயனளிக்கும். அவ்வாறே)
அது தேடிக் கொண்ட தீமை அதற்கே கேடு விளைவிக்கும். திருக்குர்ஆன் (2:286)
எவர்கள் இறைநம்பிக்கை கொண்டு, நற்செயல்களைச் செய்கின்றார்களோ அவர்களில் ஒருவரையும் அவரது சக்திக்கு மேல் நாம் நிர்பந்திப்பத்தே இல்லை. இத்தகையோர் தாம் சுவனவாசிகளாவர். அதில் அவர்கள் என்றென்றும் தங்கி விடுவார்கள். திருக்குர்ஆன் (7:42)
மேலும் அல்லாஹ் கூறுகின்றான் :-
அளவை நிறைவாக இடுங்கள், எடையை நீதமாக நிறுங்கள். எந்த ஆத்மாவையும் அதன் சக்திக்கு மேல் நாம் நிர்ப்பந்திப்பது இல்லை. திருக்குர்ஆன் (6:152)
மனிதனால் செய்ய முடியாதவற்றைச் செய்யுமாறு, அல்லாஹ் ஏவுவதில்லை. என்பதை மேற்கூறப்பட்ட இறை வசனங்களிலிருந்து அறிய முடியும்.
நபிமார்களை நம்புவதன் அவசியம்
நபிமார்களையும் அவர்கள் கொண்டு வந்த போதனைகளையும் நம்புவதின் அவசியத்தைப் பற்றித் திருக்குர்ஆனில் பல இடங்களில் அல்லாஹ் கூறுகின்றான் :-
அல்லாஹ்வையும், எங்களுக்கு அருளப் பெற்ற இவ்வேதத்தையும், இப்றாஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் முதலியவர்களுக்கும், இவர்களுடைய சந்ததிகளுக்கும் அருளப் பெற்ற யாவற்றையும், மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் கொடுக்கப்பட்டிருந்ததையும், மற்ற நபிமார்களுக்கு அவர்களின் இறைவனிடமிருந்து கொடுக்கப்பட்டிருந்தவற்றையும் நாங்கள் விசுவாசிக்கின்றோம். அவர்களுக்கிடையில் நாங்கள் வேறுபடுத்திக் காட்டமாட்டோம். மேலும் அவனுக்கே நாங்கள் முற்றிலும் வழிபட்டோம் என்று விசுவாசிகளே! கூறுங்கள். திருக்குர்ஆன் (2 :136)
மேலும், அல்லாஹ் கூறுகின்றான் அலிப்ஃ, லாம், மீம் அது (குர்ஆன்) வேத நூலேயாகும் இதில் சந்தேகமே இல்லை. பயபக்தியுடைவர்களுக்கு இது நேரான வழியைக் காட்டுகிறது. இத்தகைய பயபக்தியுடையவர்கள் எத்தகைய (பண்புடை)யோர் என்றால், மறைவானவற்றை நம்புவார்கள். தொழுகையைக் கடைப்பிடித்தொழுவார்கள்; நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (இறை வழியில்) செலவு செய்வார்கள்; மேலும் உமக்கு அருளப்பெற்ற
இவ்வேதத்தையும், உமக்கு முன்னர் இருந்த நபிமார்களுக்கு அருளப்பட்ட வேதங்களையும் விசுவாசங்கொள்வார்கள். இப்பண்புடையோர் தான் தங்கள் இறைவனின் நேரான வழியில் இருக்கின்றார்கள். இவர்களே வெற்றி பெற்றவர்களுமாவர். திருக்குர்ஆன் (2 :1-5)
மேலும் அல்லாஹ் கூறுகின்றான்:
உங்கள் முகங்களை மேற்கு நோக்கியோ, கிழக்கு நோக்கியோ நீங்கள் திருப்புவது மட்டும் நன்மையானதாக ஆகிவிடாது. ஆனால் யார் அல்லாஹ்வையும், இறுதி நாளையும், மலக்குகளையும், வேதத்தையும், நபிமார்களையும் மெய்யாகவே விசுவாசித்து, பொருளை அல்லாஹ்வுடைய விருப்பத்தைப் பெறுவதற்காக உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும், யாசகர்களுக்கும், விடுதலை விரும்பியவர்களுக்கும், கொடுத்துதவி, தொழுகையையும் கடைப்பிடித்து, ஜகாத்தும் கொடுத்து வருகின்றாரோ அவரும், வாக்குறுதி செய்த சமயத்தில் தங்கள் வாக்குறுதியைச் சரிவர நிறைவேற்றுபவர்களும், நஷ்டத்திலும், கஷ்டத்திலும், கடுமையான போர் நேரத்திலும் பொறுமையைக் கடைபிடித்தவர்களும், ஆகிய இவர்களும் தான் நல்லோர்கள். மேலும் இவர்கள் தான் உண்மையானவர்களும் பயபக்தியுடையவர்களுமாவர்.
திருக்குர்ஆன் (2 :177)
இறை நேசர்களாய் இருப்பவர்கள் குர்ஆன், ஹதீஸை முற்றிலும் பின்பற்றியொழுகுவது அவசியமாகும்.
இறைநேசர்கள் பாவத்தை விட்டுத் தூய்மையானவர்கள் அல்லர், எனவே அவர்களின் உள்ளங்களில் உதிப்பவற்றைக் குர்ஆன், ஹதீஸுடன் ஒத்துப்பார்க்காமல் நம்புவது கூடாது.
இது இறைநேசர்கள் எல்லோரும் ஏகோபித்துக் கூறியுள்ள விஷயமாகும். இதற்கு மாற்றமாகக் கூறக் கூடியவன் உண்மையான இறைநேசனாக இருக்கமுடியாது. ஒன்று அவன் காஃபிராக இருக்க வேண்டும். அல்லது அவன் முழு மடையனாக இருக்க வேண்டும். இதையே சூஃபிய்யாக்களில் பலர் கூறியுள்ளனர்.
குர்ஆன், ஹதீஸ் ஆதாரமின்றிக் கூறப்படும் எல்லா சொல், செயல்களும் தவறானவையே. சூஃபிய்யாக்களுடைய உள்ளங்களில் எழுவதுபோன்ற சில விஷயங்கள் என்னுடைய உள்ளத்திலும் எழுவதுண்டு. அவ்வாறு எழும்போது அது உண்மையென்று குர்ஆன், ஹதீஸ் என்ற இரு சாட்சிகள் சான்று பகன்றாலேயொழிய அதை நான் ஏற்றுக் கொள்வதில்லை இவ்வாறு அபூசுலைமான் அத்தாரானி (ரஹ்) என்பவர் கூறியுள்ளார். எங்களுடைய அறிவு, குர்ஆன். ஹதீஸ் என்ற இவ்விரண்டிற்கும் உட்பட்டதாகவே இருக்கிறது.
குர்ஆனை ஓதாமலும், ஹதீஸை அறியாமலுமிருப்பவன் எங்களுடைய அறிவைப் பற்றிப் பேசுவதற்குத் தகுதியற்றவனாவன். இப்படிப்பட்டவனைப் பின்பற்றுவது கூடாது என்று ஷைக் அபுல் காஸிம் ஜுனைதுல் பக்தாதி (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
யார் சுன்னத் என்னும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிமுறைகளைத் தனது சொல் செயல்களில் செயல்படுத்தி, அதைத் தனது
ஆத்மாவின் அதிகாரியாக ஆக்கிக் கொள்கின்றானோ, அவன் பேசுவதெல்லாம் ஹிக்மத் என்னும் ஞானமாகவே இருக்கும். யார் தன் மன
இச்சையைத் தன் ஆத்மாவின் அதிகாரியாக ஆக்கிக் கொள்கிறானோ அவன் பேசுவதெல்லாம் பித்அத் என்றும், நூதன வழிமுறைகளாகவே இருக்கும். ஏனெனில் நீங்கள் நபிக்கு வழிப்பட்டால் நேர்வழி பெறுவீர்கள் என்று அல்லாஹ் கூறியுள்ளான். என அபூ உஸ்மான் நைசா பூரி (ரஹ்) என்பார் கூறியுள்ளார்.
குர்ஆன், ஹதீஸ் ஆதாரமின்றி ஏற்படும் எல்லா நிலை மாற்றங்களும் தவறானவை என்று அபூ உமர் பின் நஜீத் என்ற பெரியார் கூறியுள்ளார்.
இறைநேசர்கள் விஷயத்தில் அதிகமான மக்கள் தவறிழைத்து விடுகின்றனர். ஒரு மனிதரை அல்லாஹ்வின் வலி என்று எண்ணி விடுவார்களானால், அவர் சொல்லக் கூடிய எல்லாவற்றையும் ஏற்றுக்
கொள்ள வேண்டும் என்றும்; அவருடைய சொல்,
செயல் குர்ஆன். ஹதீஸிற்கு மாற்றமாக இருந்தாலும் கூட, அவற்றிற்குத் தலைசாய்த்து அந்த வலிக்கு இசைந்துப்போக வேண்டுமென்றும் எண்ணுகின்றனர்.
இதனால் எல்லா மனிதர்களும் கடமையாக நம்பிப் பின்பற்ற வேண்டிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கொண்டு வந்த ஷரீஅத்திற்கு அவர்கள் மாறு செய்கின்றனர். இறை நேசர்களையும், இறை விரோதிகளையும் பாகுபடுத்திக் காட்டக் கூடியவர்களாக நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்களை அல்லாஹ் ஆக்கினான். இவ்வாறே சுவர்க்கவாசிகளையும். நரகவாசிகளையும், மோட்சமடைந்தவர்களையும், மோட்சமிழந்தவர்களையும் பாகுபடுத்திக் காட்டக் கூடியவர்களாகவும் ஆக்கினான். நபிகள் நாயகம்
(ஸல்) அவர்களைப் பின்பற்றி நடப்பவர்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி அவனுடைய நேசர்களாய் ஆகிவிடுகிறார்கள். வெற்றிவாகை சூடும் அல்லாஹ்வின் சேனையாகவும் மாறி விடுகிறார்கள். இப்படிப்பட்டவர்கள் அல்லாஹ்வின் நல்லடியார்களாய்
கருதப்படுகிறார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பின்பற்றாதவர்கள்
நஷ்டமடைந்த குற்றவாளிகளாகவும், அல்லாஹ்வின் விரோதிகளாகவும் ஆகிவிடுகின்றார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மாறு செய்து. இறை விரோதிகளுக்கு வழிப்பட்டு நடப்பவன் முதன் முதலாக பித்அத் எனும் வழிகேட்டின் பால் இழுத்து செல்லப்படுகின்றான். இறுதியாக வஞ்சம், இறை நிராகரிப்பு இவற்றின்பால் அது அவனைக்
கொண்டு செல்கிறது. இப்படிப்பட்டவர்கள் கீழ்க்காணும் இறைவசனங்களில் கூறப்பட்டவர்களுடன் சேர்ந்து விடுகிறார்கள்.
மறுமை நாளில் அக்கிரமக்காரன் தன் இரு கைகளையும் கடித்துக் கொண்டு இறைத்தூதருடன் நானும் (நேரான) வழியைப் பின்பற்றிச் சென்றிருக்க வேண்டியிருந்ததே! என்று கூறுவான். (மேலும்) அந்தோ (பாவம் செய்யும்படி என்னைத் தூண்டிய) இன்னவனை நான் என்னுடைய தோழனாக ஆக்கிக் கொள்ளா திருக்க வேண்டியிருந்ததே! என்னிடம் நல்லுபதேசம் வந்த பின்னரும் அதிலிருந்து அவன் தான் என்னை வழிகெடுத்து விட்டான். ஷைத்தான் மனிதனுக்குப் பெரும் சதிகாரனாக இருந்தான் (என்று சொல்லிப் பிரலாபிப்பான்).. திருக்குர்ஆன் (25 :27-29),
அவர்களுடைய முகங்கள் புரட்டிப் புரட்டிப் பொசுக்கப்படும் நாளில், அந்தோ! நாங்கள் அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் வழிபட்டிருக்க வேண்டாமா? என்று கூறிக் கதறுவார்கள். மேலும் எங்கள் இறைவா! நிச்சயமாக நாங்கள் எங்கள் தலைவர்களுக்கும், எங்கள் பெரியார்களுக்குமே வழிப்பட்டோம். அவர்கள் எங்களைத் தவறான வழியில் செலுத்தி விட்டார்கள். எனவே, எங்கள் இறைவா! நீ அவர்களுக்கு இருமடங்கு வேதனையைக் கொடுத்து, .
அவர்கள் மீது மிகப்பெரிய சாபத்தை இடுவாயாக கூறுவார்கள். திருக்குர்ஆன் (3 :66-68)
அல்லாஹ் அல்லாதவர்களை அவனுக்கு இணையாக எடுத்துக் கொண்டு, அல்லாஹ்வை நேசிப்பது போல அவர்களையும் நேசிப்பவர்கள் மனிதர்களில் பலர் இருக்கின்றனர். ஆனால், இறை விசிவாசகளோ
அல்லாஹ்வையே அதிகம் நேசிக்கின்றனர். மேலும் இவ்வக்கிரமக்காரர்கள் வேதனையை தங்கள்
கண்களால் காணும்போது, வேதனை செய்வதில்
அல்லாஹ் மிகவும் கடுமையாக இருப்பதுடன், எல்லா வல்லமையும் அவன் ஒருவனுக்கு மட்டுமே உண்டு என்றும் அறிந்துகொள்வார்கள். இவர்களுக்கு தவறான வழியைக் காட்டியவர்களும் (மறுமையில்) வேதனையை, காணும்போது தங்களைப் பின்பற்றியவர்களை (முற்றிலும் கைவிட்டு) விலகி
கொள்வார்கள். அவர்களுக்கு(ம் அவர்களைப் பின்பற்றிய இவர்களுக்குமிடையில்) இருந்த தொடர்புகள் (யாவும்) அறுபட்டுவிடும். தவிர (அவர்களைப்) பின்பற்றிய இவர்கள் மற்றொருமுறை நாம் (உலகத்திற்குத்) திரும்பச்செல்ல கூடுமாயின் (எங்களுக்குத் தவறான வழி காட்டிய) அவர்கள் (இப்பொழு முற்றிலும்) எங்களைக் கைவிட்டு விலகிக்கொண்டதைப் போன்றே நாங்களும் அவர்களை விட்டு நிச்சயமாக விலகிக் கொள்வோம் என்று கூறுவார்கள். இவ்வாறே அவர்கள் துக்கமடைவதற்காக அவர்களுடைய (தீய) செயல்களை அல்லாஹ் அவர்களுக்கு எடுத்துக் காண்பிப்பான். தவிர, அவர்கள் (நரக) நெருப்பிலிருந்து மீளவே மாட்டார்கள்.
திருக்குர்ஆன் (2 :165-167)
மேற்கூறப்பட்ட வசனங்களில் கூறப்பட்டவர்களைப் போன்றவர்கள் கீழ்கண்ட வசனத்தில் அல்லாஹ் கூறியது போல் கிருஸ்தவர்களுக்கு ஒப்பானவர்களாக ஆகிவிடுகிறார்கள். (கிருஸ்தவர்கள்) அல்லாஹ்வையன்றித் தங்கள் துறவிகளையும், சந்நியாசிகளையும், மர்யமுடைய மகன் மஸீஹையும் தங்கள் தெய்வங்கள எடுத்துக் கொண்டனர், எனினும் அல்லாஹ் ஒருவனைத் தவிர, மற்றெவலாம் வணங்கக் கூடாதென்றே இவர்கள் (யாவரும்) ஏவப்பட்டிருக்கின்றனர். வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறுயாருமில்லை. அவர்கள் இணைவைக்கும் இவர்களை விட்டும் அவன் மிகவும் பரிசுத்தமானவன். திருக்குர்ஆன் (9:31)
இவ்வசனத்திற்கு விளக்கமாக இமாம் அஹ்மதுபின் ஹம்பல் (ரஹ்) அவர்களுடைய ஹதீஸ் தொகுப்பில் ஒரு ஹதீஸ் பின்வருமாறு வந்துள்ளது.
அதீபின் ஹாதம் என்பவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் மேற்கூறப்பட்ட வசனத்திற்கு விளக்கம் கேட்கும் போது, யாரசூலுல்லாஹ்! கிறிஸ்தவர்கள் தங்கள் துறவிகளையும், ஈசா (அலை) அவர்களையும்
வணங்கவில்லையே என்று கூறினார் அப்போது "அவர்களின் துறவிகள் அல்லாஹ் ஹராமாக்கியவற்றை; அவர்களுக்கு ஹலாலாக்குகின்றார்கள். அல்லாஹ் ஹலாலாக்கியதை அவர்கள் மீது ஹராமாக்குகின்றார்கள். இதை அம்மக்கள் ஏற்றுச் செயல்படவும் செய்கிறார்கள். இவ்வாறு செய்வது
அவர்களை வணங்குவதாக ஆகிவிடுகின்றது" என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கம் கூறினார்கள். (திர்மிதி)
இவர்களைப் போன்றவர்கள் அடிப்படை விஷயங்களைப் பற்றிய போதிய அறிவை இழந்து விடுவதால் இலட்சியத்தையே இழக்க நேரிடுகின்றது.
அகில உலக இறைக் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள்
அடிப்படை விஷயங்களில் மிக முக்கியமானது யாதெனில், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கொண்டு வந்த எல்லாப் போதனைகளையும் முழுக்க முழுக்க நம்பிச் செயல்படுவதாகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அகில உலகத்திற்காகவும், மனித சமுதாயங்கள் அனைத்திற்காகவும் இறைத் தூதராக வந்தார்கள் என்று நம்புவது அவசியமாகும். மனிதர்கள், ஜின்கள், அரபியர்கள், அரபியல்லாதவர்கள், அறிஞர்கள், வணக்கசாலிகள், அரசர்கள். ஆண்டிகள் எல்லோருக்கும் அவர்கள் இறைத் தூதராவார்கள்.
சிருஷ்டிகளில் யாராவது அல்லாஹ்வை அடையவேண்டுமானால், நபிகள் நாயகம்(ஸல்) அவர்களை அகத்திலும், புறத்திலும் பின் பற்றுவதின்
முலம் அடைய முடியுமே தவிர வேறு எந்த வழியிலும் அடைய முடியாது. நபி மூஸா (அலை), நபி ஈஸா (அலை) போன்ற நபிமார்கள் உயிரோடு இருப்பார்களேயானால், அவர்களும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பின்பற்றுவது அவர்கள் மீது கடமையாகிவிடுகிறது. இதை அல்லாஹ் பின்வரும் வசனத்தில் விளக்குகிறான்.
நபிமார்(கள் மூலம் உங்கள் மூதாதை)களிடம்
அல்லாஹ் வாக்குறுதி வாங்கிய சமயத்தில் (அவர்களை நோக்கி) வேதத்தையும், ஞானத்தையும் நான்
உங்களுக்குக் கொடுத்திருக்கின்றேன்.. (இதற்குப்) பின்னர் உங்களிடமுள்ள (வேதத்)தை உண்மைப்படுத்தும் ஒரு தூதர் உங்களிடம் வருவாரேயானால், அவரை நீங்கள் உண்மையாக விசுவாசித்து, நிச்சயமாக அவருக்கு உதவிசெய்ய வேண்டும். (என்று கூறி இதனை) நீங்களும் உறுதிப்படுத்திளீர்களா? என்னுடைய இக்கட்டளையை எடுத்துக் கொண்டீர்களா? என்று கேட்டதற்கு அவர்கள், நாங்கள் (அதனை) அங்கீகரித்துக் கொண்டோம் என்று
கூறினார்கள். அதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்.
நானும் உங்களுடன் சாட்சியாளர்களில் ஒருவனாக இருக்கின்றேன், என்று அல்லாஹ் கூறினான்,
இதற்குப் பின்னரும் எவரேனும் புறக்கணித்தால் நிச்சயமாக அவர்கள் பாவிகளேயாவர்." திருக்குர்ஆன் (3 :81-82)
ஒவ்வொரு நபியும் நபியாக அனுப்பப்படும் முன்னர்."அவர்கள், உலகில் இருக்கும் காலத்தில் நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்கள் நபியாக அனுப்பப்படுவார்களானால் அவர்களை நம்பி, அவர்களுக்கு உதவியும் செய்வோம்" என்ற வாக்குறுதியை வாங்கிய தன் பின்னர் தான் அல்லாஹ்
அவர்களை நபிமார்களாக அனுப்பினான்.
இவ்வாறே ஒவ்வொரு நபியும் தம் உம்மத்தினரிடமிருந்து இவ்வாக்குறுதியை வாங்க வேண்டுமென்று அல்லாஹ் அவர்களுக்குக் கட்டளையிட்டான்' என்பதாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள். இவ்வாக்குறுதி ஆலமுல் அர்வாஹில் வைத்து வாங்கப்பட்ட தாகும்.
(நபியே! உம்மீது இறக்கி அருளப்பட்ட (இவ்வேதத்)தையும், உமக்கு முன்னர் அருளப்பட்டுள்ள (வேதங்கள்) யாவற்றையும் மெய்யாகவே தாங்கள் விசுவாசிப்பதாக வாதிக்கின்ற சிலரை நீர்பார்க்கவில்லையா? எந்த ஷைத்தானை அவர்கள் நிராகரித்து விட வேண்டுமென்று கட்டளையிடப்
பட்டிருக்கின்றார்களோ அந்த ஷைத்தானை (தங்களுக்குத்) தீர்ப்புக் கூறுவோனாக
ஆக்கிக் கொள்ள அவர்கள் விரும்புகின்றனர். (விஷமத்தனம் நிறைந்த) அந்த ஷைத்தானோ அவர்களை வெகுதூரமான வழிகேட்டில்
கொண்டு செல்ல விரும்புகிறான்.
(நியாயம் பெற நீங்கள் விரும்பினால்) அல்லாஹ் அருளிய (வேதத்)தின் பாலும், அவனது தூதரின்பாலும் நீங்கள் வாருங்கள், என்று அவர்களுக்குக் கூறப்பட்டால், அந்நயவஞ்சகர்கள் உம்மை விட்டும் புறமுதுகு காட்டித் திரும்பிச் செல்வதையே நீர்காண்பீர்.
அவர்களாகவே தேடிக்கொண்ட தீவினையின் காரணமாக அவர்களுக்குத் துன்பம் நேர்ந்த சமயத்தில் (அதைப் போக்கிக் கொள்ள முடியாமலான போது அவர்களின் இழிநிலை எப்படி இருந்தது (என்பதை நபியே! நீர் கவனியும்) பின்னர் அவர்கள் உம்மிடமே வந்து பகைவர்களிடம் நாங்கள் சென்றதெல்லாம்! நன்மையையும், ஒற்றுமையையும் கருதியே அன்றி; வேறொன்றையும் நாங்கள் நாடவில்லை என்று அல்லாஹ்வின் பெயரால் சத்தியம் செய்கின்றனர். இத்தகையோரின் உள்ளங்களில் உள்ளவற்றை அல்லாஹ் நன்கறிந்தே இருக்கின்றான். எனவே (நபியே! நீர் அவர்களின் குற்றங்களைப் புறக்கணித்து, அவர்களுக்கு நல்லுபதேசம்
செய்வீராக! மேலும் (அவர்களின் தவறுகளை)
அவர்களின் உள்ளங்களில் படியும்படி, தெளிவாக எடுத்துரைப்பீராக!
அல்லாஹ்வின் ஆணைக்கு கட்டுப்படுவதற்காகவேயன்றி எந்தத் தூதரையும்
(மனிதர்களுக்கு) நாம் அனுப்பிவைக்கவில்லை. எனவே அவர்கள் தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்டு (பின்னர்) உம்மிடம் வந்து, அல்லாஹ்விடம்
பாவமன்னிப்பு கோரும்படி வேண்டி, அவர்களுக்காக அல்லாஹ்வுடைய தூத(ராகிய நீ)ரும் பாவமன்னிப்பைக் கோரினால் அல்லாஹ் கருணையோடு மன்னிப்போனாகவே இருக்கின்றான்.
ஆனால், உமது இறைவன் மீது ஆணையாக,
அவர்கள் தங்களுக்குள் ஏற்படும் பிரச்சினைகளுக்கு,
உம்மை நீதிபதியாக அங்கீகரித்து, நீர் வழங்கும்.
தீர்ப்பை தங்கள் உள்ளத்தில் எவ்வித அதிருப்தியுமின்றி அங்கீகரித்து முற்றிலும். உமக்கு வழிப்படாத வரை உண்மை விசுவாசிகளாக ஆக மாட்டார்கள். திருக்குர்ஆன்(4 :60)
அற்புதத்தைக் காட்டுவது இறைநேசத்திற்கு ஆதாரமன்று
ஒருவன், ஒருவரை இறைநேசர் என எண்ணி அவர் கூறுவதையெல்லாம் சீர்தூக்கிப்பார்க்காமல் அப்படியே நம்பிப் பின்பற்றும் போது, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிமுறைகளுக்கு மாறுசெய்து விடுகின்றான். இதற்குக் காரணம் என்னவென்றால், அம்மனிதர் அல்லாஹ்வுடைய வலி என்ற நம்பிக்கை அவனது உள்ளத்தில் பதிந்து விட்டதேயாகும், எனவே அவர் சொல்வதையெல்லாம் நம்பிப் பின்பற்றி விடுகின்றான்.
உண்மையான இறைநேசர் ஒருபோதும் அல்லாஹ்விற்கும், அவனது தூதருக்கும் மாறு செய்யமாட்டார். தன்னை வலி எனக் கூறிக்கொள்பவர் - ஸஹாபாக்கள், தாபியீன்கள் போன்ற பெரும் பெரும் இறைநேசர்களைப் போன்று அம்மனிதர் இருந்தாலும் கூட குர்ஆன், ஹதீஸிற்கு மாற்றமான எதுவும் அவரிடமிருந்து ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்றிருக்க, இவர்களைவிட தரத்தில் தாழ்ந்தவர்கள் சொல்வதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?
பெரும்பாலான மக்கள் ஒருவரை வலி என நினைத்து அவர் மீது நம்பிக்கை வைக்கக் காரணம் என்னவென்றால் அவர் மறைவான சில விஷயங்களை வெளிப்படுத்திக் காட்டியிருப்பார். அல்லது வழக்கத்திற்கு மாற்றமான சில செயல்களைச் செய்திருப்பார். உதாரணமாக, ஒருவரின் பக்கம் தன்கையால் சுட்டி காட்டியதும் அவர் மயங்கி விழுந்து விடுகிறார், காற்றில் மக்கா போன்ற ஊர்களுக்கு தூக்கிச் செல்லப்படுகிறார். சிலவேளை தண்ணிரில் நடந்து செல்வார். ஒரு கூஜாவில் காற்றை நிரப்பிப் பறக்க விடுவார். அல்லது மறைவானவற்றைக் காண்பதில் தன் நேரத்தில் ஒரு பாகத்தைச் செலவு செய்வார். சில வேளை மனிதர்களின் கண்களை விட்டும் மறைந்து விடுவார்: அல்லது மறைவாகவோ, மய்யித்தாகவோ இருக்கையில் அவரிடம் சிலர் அபயம் தேடியதும் அவர் வந்து தேவைகளை நிறைவேற்றுகிறார். களவு போன பொருட்கள் இருக்கும் இடத்தை அறிவிக்கின்றார். மறைந்து போனவர்களுடையவும், நோயாளிகளுடையவும் நிலைமைகளைத் தெரிவிக்கிறார். இது போன்ற விஷயங்களை அவர் செய்கின்றார் என்றெல்லாம் கூறி அவர் ஒரு வலி என்று எண்ணி அவர் மீது நம்பிக்கை வைக்கின்றனர் ஆனால் மேற்கூறப்பட்ட விஷயங்களில் எதையேனும் ஒருவர் செய்து விடுவது அவர் இறைநேசர் என்பதற்கு ஆதாரமாக ஆகிவிடாது.
ஒருவன் காற்றில் பறந்து விடுவதால் அல்லது தண்ணீரின் மேல் நடந்துவிடுவதால் அதைக் கண்டு யாரும் ஏமாந்துவிட வேண்டாம். இவ்வாறு செய்யக் கூடியவன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிமுறைகளைப் பின்பற்றுகின்றானா? அவர்கள் ஏவியவற்றை எடுத்து நடக்கின்றானா அவர்கள் விலக்கியவைகளிலிருந்து விலகிக் கொள்கின்றானா? என்பதைப் பார்த்த பின்னர்தான் அவன் காண்பிக்கும் அற்புதத்தை நம்பவேண்டும்; என்பதே முஸ்லிம்களின் ஏகோபித்தக் கருத்தாகும்.
பாவிகளும் அற்புதங்களைக் காட்டுவார்கள்.
இறைநேசர்களின் கராமத் என்பது மேற்கூறப்பட்ட தந்திரங்களையெல்லாம் விட மிக மகத்தானதாகும். இவ்வற்புதங்களைக் காண்பிப்பவர், இறைநேசராகவும் இருக்கலாம். இறை விரோதியாகவும் இருக்கலாம்.
காபிர்கள் பலதெய்வக் கொள்கையுடையோர் வேதக்காரர்கள், நயவஞ்சகர்கள் போன்ற எத்தனையோ பேர் அற்புதங்களைக் காட்டுகின்றனர். பித்அத் என்னும் நூதன அனுஷ்டானங்களைச் செய்பவர்களும்கூட காட்டுவார்கள். ஷைத்தான்களிடமிருந்தும் சிலவேளை அற்புதங்கள் நிகழும்.
அற்புதங்கள் யார் யாரிடமிருந்து நிகழ்கிறதோ அவர்கள் எல்லோருமே இறைநேசர்கள் என்று
யாரும் எண்ணிவிடக் கூடாது. குர்ஆனும், ஹதீஸும் கூறியுள்ள இறை நேசர்களின் பண்புகள், செயல்கள்,
நிலைகள் முதலியவற்றை வைத்து உண்மையான
இறை நேசரை அறிந்து கொள்ளலாம். குர்ஆன், ஈமான் ஆகியவற்றின் ஒளியினாலும், அந்தரங்க ஈமானின் உண்மைகளின் வாயிலாகவும், வெளிப்படையான இஸ்லாமிய ஷரீஅத்தைப் பின்பற்றுவதன் மூலமும் உண்மையான இறைநேசர்களை அறிந்து கொள்ளலாம்.
மேற்கூறப்பட்ட அற்புதங்கள் சிலரிடமிருந்து நிகழ்கின்றன. அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்றால் அவர்கள் உளூ செய்வதில்லை. கடமையான தொழுகைகளைக் கூட நிறைவேற்றுவதில்லை. எப்பொழுதும் அசுத்தத்துடனேயே இருப்பார்கள்; நாய்களுடன் காணப்படுவார்கள். குப்பைக் கூளங்கள் போடப்படும் இடங்களையும், கப்ருகள் இருக்கும் இடங்களையும் விரும்புவார்கள், அவர்களிடமிருந்து துர்நாற்றம் வெளியாகும், ஷரீஅத் கூறும் விதத்தில் அவர்கள் தம்மைத் தூய்மை செய்து கொள்வதில்லை.
நாயும், ஜுனுபாளியும், பெருந்துடக்குள்ளவனும் இருக்கும் வீட்டில் மலக்குகள் நுழைவதில்லை
என நபிகள் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் (அபுதாவுத்)
கழிப்பறைகளில் ஷைத்தான் வந்து குடிகொள்கிறான். என்றும் அண்ணலார் கூறியுள்ளார்கள்.
வெங்காயம், வெள்ளைப்பூண்டு இவ்விரண்டு துர்நாற்றமுள் செடிகளை யார் சாப்பிடுகிறார்களோ, அவர்கள் துர்வாடையோடு நம்முடைய பள்ளிவாசல்களுக்கு வரவேண்டாம், மனிதர்களுக்கு
துன்பம் தருபவை மலக்குகளுக்கும் துன்பம் தருகின்றன என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்).
அல்லாஹ் நல்லவன்: நல்லதைத் தவிர வேறு எதையும் அவன் ஏற்றுக் கொள்வதில்லை. (முஸ்லிம்)
அல்லாஹ் பொறுமையானவன். தூய்மையையே அவன் விரும்புகின்றான் (திர்மிதி)
பாம்பு, எலி, காகம், பருந்து, நாய் இந்த ஐந்து பிராணிகளும் கெட்டவையாகும். உயிர்ப்பிராணிகளைக் கொல்வது தடையான இடமாக இருந்தாலும் சரி, தடை இல்லாத இடமாக இருந்தாலும் சரி இவற்றைக் கொன்றுவிட வேண்டும் என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள்கூறினார்கள். (முஸ்லிம்). நாய்களைக் கண்டால் கொன்று விடுமாறும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள்.
விவசாயத்தையும், கால்நடைப் பிராணிகளையும் பாதுகாப்பதற்கன்றி வேறு எதற்காகவும் நாயை யாராவது வளர்ப்பானாகில், அவருடைய ஒவ்வொரு நாளின் நற்செயலில் இருந்தும் ஒரு பகுதி குறைந்த கொண்டேயிருக்கிறது.(புகாரி, முஸ்லிம்)
யாருடன் நாய் இருக்கிறதோ, அவனுடன்
மலக்குகள் இருக்கமாட்டார்கள். (முஸ்லிம்)
உங்களுடைய பாத்திரத்தில் நாய் நக்கிவிடுமானால், அதை ஏழுமுறை கழுவ வேண்டும். அதில் ஒருமுறை மண்ணால் கழுவ வேண்டும். (முஸ்லிம்) என்றெல்லாம் நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் கூறியுள்ளார்கள். இவ்வாறிருக்க நாயுடன் இருப்பவன் எவ்வாறு இறைநேசனாக இருக்கமுடியும்?
அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான் :-
என்னுடைய கருணையாகிறது எல்லாவற்றையும்
தன்னுள் அடக்கியுள்ளது. ஆகவே, எவர்கள் எனக்கு அஞ்சியும், ஜகாத்து கொடுத்தும் வருகிறார்களோ அவர்களுக்கும், எவர்கள் நம்முடைய வசனங்களை (மெய்யாகவே) விசுவாசிக்கிறார்களோ, அவர்களுக்கும் (என் கருணையை) நான் கொடுப்பேன்.
எழுத்து வாசனையற்ற நமது தூதராகிய நபியைப் பின்பற்றுகிறவர்கள் தங்களிடமுள்ள தவ்றாத்திலும், இன்ஜீலிலும் இந்நபியைப் பற்றி எழுதப்பட்டிருப்பதைக் காண்பார்கள். (இத்தூதரோ) அவர்களை நன்மையான செயல்களை (ச் செய்யுமாறு) ஏவி, பாவமான செயல்களிலிருந்து அவர்களை
விலக்குகிறார், நல்லவற்றை அவர்களுக்கு ஆகுமாக்குகிறார். கெட்டவற்றை அவர்களுக்குத் தடை செய்கிறார். மேலும் அவர்களை அழுத்திக் கொண்டிருந்த சுமைகளை அவர்களைவிட்டு இறக்கிவைக்கின்றார். அவர்களைப் பிணைத்திருக்கும் விலங்குகளை உடைத்தெறிகின்றார். எனவே எவர்கள் அவரை (உண்மையாகவே) விசுவாசித்து, அவரைப் பலப்படுத்தி அவருக்கு உதவி செய்து, அவர்மீது அருளப்பட்ட ஒளிமிக்க (இவ்வேதத்)தைப் பின்பற்றுகிறார்களோ அவர்களே வெற்றி பெற்றவர்களாவர். திருக்குர்ஆன் (7 :156, 157),
ஷைத்தானுடைய தோழர்களின் பண்புகள்
இவர்கள் ஷைத்தான்கள் விரும்புகின்ற அசுத்ததங்களுடன் இருப்பார்கள். ஷைத்தான்கள் குடிகொள்கின்ற குளியலறைகள், கழிப்பறைகள் போன்றவற்றை நேசிப்பார்கள். பாம்பு, தேள், வண்டு முதலியவற்றைச் சாப்பிடுவார்கள். கெட்ட மிருகம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய நாய்களின் காதுகளைச் சாப்பிடுவார்கள். ஷைத்தான்கள் விரும்புகின்ற சிறுநீர் போன்ற அசுத்தங்களைக் குடிப்பார்கள், அல்லாஹ் அல்லாத சிருஷ்டிகளிடம் அபயம் தேடுவார்கள். தங்களின் (ஷைகு) குரு இருக்கும் திசையைப் பார்த்து சுஜுது செய்வார்கள். தங்கள் வணக்கங்களை அல்லாஹ்வுக்கு மட்டுமே உரியதாய் ஆக்கி வைக்கமாட்டார்கள். நாய்களுடனும், அசுத்தங்கள் இருக்கும் இடங்களிலும் இருப்பார்கள். யூதர்கள், கிறிஸ்தவர்கள், முஷ்ரிகீன்கள், காஃபிர்கள் முதலியோரின் கப்ருகள் இருக்கும் இடங்களில் இருப்பார்கள் திருக்குர் ஆனைச் செவியுறுவதை வெறுப்பார்கள் பாட்டுகள், கவிகளை விரும்பிக் கேட்பார்கள். அல்லாஹ்வின் பரிசுத்த வேதமான திருக்குர்ஆனைச் செவியுறுவதைவிட ஷைத்தான்களின் பாட்டுகள், இசைகள்
முதலியவற்றை அதிகமாக நேசிப்பார்கள்.
இவை எல்லாம் ஷைத்தானின் தோழர்களுடைய அடையாளங்களாகும். இவற்றில் எதுவும் இறை நேசர்களுடய பண்பன்று.
“ஒருவன் திருக்குர்ஆனை நேசிப்பானாயின் அவன் அல்லாஹ்வை நேசிக்கின்றான் திருக்குர்ஆனை வெறுப்பானாயின் அல்லாஹ்வையும், அவனது ரசூலையும் வெறுத்தவனாகிறான்" ௭ன அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.
“நமது உள்ளங்கள் தூய்மையானவையாய் இருக்குமானாம் அல்லாஹ்வின் பரிசுத்த வேதமான திருக்குர்ஆனைச் செவியுறுவதை போதும் என்று ஒரு போதும் அவை சொல்வதில்லை" என உத்மான் பின் அஃபான் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள். அல்லாஹ்வை நினைவு கூர்வது தண்ணீர் எவ்வாறு செடிகளை வளர்க்கின்றதோ அவ்வாறு உள்ளத்தில் ஈமானை வளர்க்கின்றது. இசைகளைச் செவியுறுவது உள்ளத்தில் நயவஞ்சகத்தை வளர்க்கின்றது. என அப்துல்லாஹ் பின் மஸ்வூது (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.
இறைநேசர்களின் பண்புகள்
ஒருவர் உள்ளத்தால் நம்ப வேண்டிய ஈமானின் உண்மைகளை நன்கு அறியக்கூடிய திறமையுள்ளவராகவும், அல்லாஹ்வினால் ஏற்படும் விஷயங்களையும் ஷைத்தானினால் ஏற்படும் விஷயங்களையும் பிரித்தறிய ஆற்றல் உள்ளவராகவும் இருப்பாரானால், அவருடைய உள்ளத்தில் அல்லாஹ், தன்னுடைய ஒளியில் ஒரு பகுதியைக் குடியேற்றியுள்ளான் என்பதைத் தெரிந்து கொள்ளலாம். அல்லாஹ் கூறுகின்றான்.
"அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி அவனுடைய இத்தூதரையும் நம்புங்கள். உங்களுக்கு அவனுடைய
அருளிலிருந்து இரண்டு பங்கு கூலி கொடுப்பான். உங்களுக்கு (திருக்குர்ஆன் என்னும்) ஒளியையும் கொடுப்பான். அதன் பிரகாசத்தில் நீங்கள் (நேர்வழி பெற்று) நடை போடலாம். உங்களுடைய குற்றங்குறைகளையும் மன்னித்து விடுவான். அல்லாஹ் மிக்க மன்னிப்போனும் கிருபையுடையோனுமாய்
இருக்கின்றான். திருக்குர்ஆன் (57 :28)
"(நபியே!) இவ்வாறே உமக்கு நம்முடைய கட்டளைகளில் உயிரூட்டும் குர்ஆனை வஹீ மூலம் அறிவித்தோம். (உமக்கு வஹீ அறிவிப்பதற்கு முன்னர்), எது வேதம் என்றும், எது ஈமான் என்றும் தெரியாதவராக இருந்தீர். ஆயினும் (இவ்வேதத்தை உமக்கு நாம் வஹீ மூலம் அறிவித்து) இதனை ஓர் ஒளியாகவும் ஆக்கி; நம் அடியார்களில் நாம் விரும்பியவர்களுக்கு இதன் மூலம் நேரான வழியைக் காண்பிக்கிறோம்". திருக்குர்ஆன் (42 :52).
இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ள மூமின்களைப் பற்றித் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறியதாக அபூசயீதில் குத்ரி (ரலி) அவர்கள்
ஒரு ஹதீஸில் அறிவிக்கிறார்கள்
மூமினுடைய பார்வையை அஞ்சிக் கொள்ளுங்கள். ஏனென்றால் நிச்சயமாக அவன் அல்லாஹ்வுயடைய ஒளியால் பார்க்கிறான்" என நபிகள்நாயகம்(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (திர்மிதி)
எனவே முன்பு நாம் குறிப்பிட்ட ஒரு ஹதீஸ் குத்ஸியில் என்னுடைய அடியான் (நஃபிலான) மேல் மிச்சமான வணக்கங்களின் மூலம் என் பக்கம் நெருங்கும்போது அவனை நான் நேசித்து விடுகின்றேன், அவனை நான் நேசித்து விட்டால், அவன் கேட்கும் கேள்வியாகவும், அவன் பார்க்கும் பார்வையாகவும், அவன் பிடிக்கும்.
கையாகவும், அவன் நடக்கும் காலாகவும் நான் ஆகிவிடுகிறேன், என்னைக் கொண்டே அவன் கேட்கிறான், என்னைக் கொண்டே அவன் பார்க்கிறான், என்னைக் கொண்டே
பிடிக்கிறான், என்னைக் கொண்டே நடக்கிறான், என்னிடம் அவன் கேட்கக் கூடியவற்றை
நான் கொடுக்கிறேன். என்னிடம் அவன் பாதுகாவல் தேடினால் அவனுக்குப் பாதுகாப்பளிக்கிறேன். மூமினானவன் விஷயத்தில் நான் பின் வாங்கியது போல் வேறு எந்த விஷயத்திலும் நான் பின் வாங்கியதில்லை. அவன் மரணத்தை
வெறுக்கிறான். ஆனால் நான் அவனுக்கு ஏற்படும் கஷ்டத்தைப் போக்குகிறேன் என அல்லாஹ் கூறியுள்ளான்.
இந்நிலையை ஒருவன் எட்டிவிடும் போது, அவனால் இறைநேசர்களையும் ஷைத்தானின் தோழர்களையும் வேறுபடுத்தி அறியமுடியும். பொற்கொல்லன் நல்ல தங்கத்தையும், போலித் தங்கத்தையும் பிரித்தறிவது போன்றும் குதிரை லாயத்தில் உள்ளவன் நல்ல குதிரையையும், மோசமான குதிரையையும் வேறுபடுத்தி அறிவதைப் போன்றும், குதிரை ஓட்டத் தெரிந்தவன் வீரனையும், கோழையையும் பிரித்தறிவதைப் போன்றும் மேற்கூறப்பட்ட நிலையை எட்டியவன் உண்மையான இறைநேசனையும், ஷைத்தானுடைய தோழனையும் பிரித்தறிகிறான்.
இவ்வாறே உண்மையான நபியையும், பொய்யனையும் அவன் வேறுபடுத்தி அறிகின்றான். அல்லாஹ்வின்
திருத்தூதரும் நேர்மையானவர்களுமான முஹம்மத் (ஸல்), மூஸா (அலை), ஈஸா (அலை) போன்ற நபிமார்களையும் தங்களை நபிமார்களென வாதாடிய பொய்யர்களான முஸைலமா, அஸ்வதுல் அனஸி, துலைஹா, ஹாரிதுத்திமஷ்சி, பாபாரும்
போன்றவர்களுக்குமிடையிலுள்ள வேறுபாட்டையும் அறிகிறான். அல்லாஹ்வின் உண்மையான நேசர்களையும் ஷைத்தானின் தோழர்களான வழிகெட்டவர்களையும் பிரித்தறிந்து கொள்கிறான்.
ஹிஜ்ரி 12 ம் ஆண்டு கலீபா அபூபக்கர் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் காலித் பின் வலீத் (ரலி) அவர்களின் தலைமையில் சென்ற படையினரால் (முஸைலமா) கொல்லப்பட்டான்.
அஸ்வதுல் அனசி என்பவன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களி்ன் காலத்தில் வாழ்ந்தான். இவன் எமன் நாட்டைச் சார்ந்தவன். முதலில் இஸ்லாத்தைத் தழுவினான். பின்னர் இஸ்லாத்தில் இருந்து மதம் மாறிவிட்டான். இவன்தான் இஸ்லாத்திலிருந்து முதன் முதலாக மதம் மாறியவனாவான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உலகைப் பிரிவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னர் கொல்லப்பட்டான். இவன் தன்னை நபி என்று கூறி வாதாடினான்.
துலைஹா என்பவர் ஹிஜ்ரி 9ம்ஆண்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து இஸ்லாத்தைத் தழுவினார். பின்னர் இஸ்லாத்திலிருந்து மதம் மாறி, தன்னை நபி எனக் கூறினார். உமர் (ரலி) அவர்களிள் காலத்தில் மதீனா வந்து இஸ்லாத்தை மீண்டும் ஏற்றுக் கொண்டார். நஹாவந்த் போரில் ஷஹீதாக மரணமடைந்தார்.
ஹாரிதுத்திமஷ்கி என்பவன் டமாஸ்கஸ் நகரைச் சார்ந்தவன், இவன் தன்னை நபி எனக் கூறி வாதாடினான். இவன் ஹிஜ்ரி 69ம் ஆண்டு கலீபா அப்துல் மலிக் பின் மர்வான் என்பவருடைய காலத்தில் கொல்லப்பட்டான்.
"ஹகீகத்" "ஷரீஅத்" என்பதின் பொருள்
எல்லா இறைத் தூதர்களும், நபிமார்களும் ஒருமித்து தவ்ஹீத் என்னும் ஏக தெய்வக் கொள்கையின் பால்மக்களை அழைத்தார்கள். இந்த ஏக தெய்வக்கொள்கையே ஹகீகத் எனப்படும். இதுவே தெய்வீக மார்க்கமான இஸ்லாமிய மார்க்கத்தின் உண்மை இலட்சியமுமாகும். எல்லா நபிமார்களும் ஏகதெய்வக் கொள்கையின் பால் மக்களை அழைப்பதில் ஒருமித்திருந்தாலும், அவர்கள் ஒவ்வொருவரின் காலத்திற்குத் தகுந்தாற் போல் ஒவ்வொருவருக்கும் ஷரீஅத் என்ற ஒரு வழிமுறையை-சட்டத் தொகுப்பை- அல்லாஹ் ஆக்கிக் கொடுத்தான்.
இதை அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான்:-
"உங்களில் ஒவ்வொரு சமூகத்திற்கும் ஒரு தனிச்சட்டத்தையும், வழிமுறையையும் நாம் ஏற்படுத்திக்கொடுத்தோம்”. திருக்குர்ஆன் (5 :48).
மேலும் அல்லாஹ் கூறுகின்றான் :-
நபியே! மார்க்கத்தின் தெளிவான ஒருபாதையில் நாம் உம்மை ஆக்கினோம். எனவே, அதனையே நீர் பின்பற்றி நடப்பீராக! அறிவற்றவர்களின் வழிகேடுகளை நீர் பின்பற்றாதீர். நிச்சயமாக அல்லாஹ்விற்கு விரோதமாக இவர்கள் உமக்கு எந்த உதவியும் செய்துவிட முடியாது. நிச்சயமாக
அநியாயக்காரர்களில் சிலர் அவர்களில் சிலருக்குத் தோழர்களாக இருக்கிறார்கள். அல்லாஹ்வோ பயபக்தியுடையவர்களின் நேசனாக இருகின்றான்.
திருக்குர்ஆன் (45 :18,19),
மேலும் அல்லாஹ் கூறுகின்றான் :-
மார்க்கத்தின் நேரான வழியில் அவர்கள் உறுதியாக இருப்பார்களானால், தடையின்றி அவர்களுக்கு நாம் மழையைப் பொழிவித்துக் கொண்டிருப்போம். அதில் அவர்களை நாம் பரிசோதிக்கின்றோம். எவன் தன் இறைவனை நினைவு கூர்வதைப் புறக்கணிக்கின்றானோ, அவனைக் கடினமான
வேதனையில் அல்லாஹ் புகுத்திவிடுகின்றான்.
திருக்குர்ஆன் (72 :16,17)
ஆற்றிற்குச் செல்லும் சிறு ஓடைக்கு "ஷரீஅத்" என்று
அகராதியில் பொருள் கூறப்படுகிறது. மின்ஹாஜ் என்பதற்கு நடந்து செல்லும் பாதை என்றும் கூறப்படுகிறது. ஷரீஅத் என்ற சொல்லிற்கு
புழக்கத்தில் மார்க்க சட்டங்கள் "இஸ்லாமிய வழிமுறைகள்" என்ற பொருள் வழங்கப்படுகிறது.
அல்லாஹ் ஒருவனை மட்டும் வணங்கி வழிப்பட்டு அவனுக்கு எதையும், யாரையும் இணைகற்பிக்காமலிருப்பது தான் இஸ்லாம்
மார்க்கத்தின் (ஹகீகத்) உள்ளமையாகும். அதாவது ஒருவன் தன்னை அல்லாஹ்வுக்காக அர்ப்பணித்து விடுவதும். வேறு யாருக்கும் சிரம்
சாய்க்காமலிருப்பதுமாகும். அல்லாஹ் அல்லாத
வேறு யாருக்கும் சிரம் சாய்த்து விடுவானாயின், அவன் முஷ்ரிக்காக ஆகிவிடுகின்றான், தனக்கு இணைவைப்பதை அல்லாஹ் ஒரு போதும் மன்னிப்பதில்லை என அல்லாஹ் கூறியுள்ளான். எவன் அல்லாஹ்வுக்கு சிரம் பணியாமல் பெருமையடிக்கின்றானோ அவன் நரகத்திற்கே செல்வான்.
நிச்சயமாக எவர்கள் என்னை வணங்காது பெருமையடிக்கின்றார்களே, அவர்கள் சிறுமைப்பட்டவர்களாக நரகம் புகுவார்கள். திருக்குர்ஆன் (40:60)
தவ்ஹீத் என்னும் ஏக தெய்வக் கொள்கையாகிறது ஹகீகத் என்னும் இஸ்லாமிய மார்க்கத்தின் இலட்சியமாகும். இந்த இலட்சியத்தை அடையும் பாதையே ஷரீஅத் என்பதாகும்.
எல்லா நபிமார்களுடைய மார்க்கம் இஸ்லாம்
அல்லாஹ் அனுப்பிய நபிமார்கள், இறைத்தூதர்கள் அனைவரும் இஸ்லாமிய மார்க்கத்தையே பின்பற்றினார்கள். அதன்பாலே மக்களை அழைத்தார்கள்.
இஸ்லாத்தையன்றி வேறொரு மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் அவனிடமிருந்து அது ஒருபோதும் அங்கீகரிக்கப்பட மாட்டாது, திருக்குர்ஆன் (3: 85) இது எல்லாக் காலத்திற்கும், எல்லா இடத்திற்கும் பொதுவானதாகும்.
நபிமார்களான நூஹ், இப்றாஹீம், யஃகூப், இவர்களுடைய சந்ததிகளான நபி மூஸா, ஈஸா (அலை), "ஹவாரிய்யூன்" என்னும் அவர்களைப் பின்பற்றியவர்கள் எல்லோரும் முஸ்லிம்களாகவே இருந்தார்கள்.
அதாவது அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே
வணக்க வழிபாடுகளைச் செய்ய வேண்டும். அவனுக்கு எதையும், யாரையும் இணை வைக்கக் கூடாது என்ற இஸ்லாமிய அடிப்படையிலேயே எல்லா நபிமார்களும் வாழ்ந்தார்கள். அல்லாஹ், நபி நூஹ் (அலை) அவர்களைப் பற்றிக் கூறும்போது அவர்கள் கூறியதைப் பின்வருமாறு எடுத்துரைக்கின்றான்.
என்னுடைய மக்களே! நான் உங்களிடையே
இருப்பதும், நான் உங்களுக்கு அல்லாஹ்வுடைய வேதத்தை ஓதிக் காண்பிப்பதும் உங்களுக்குப்
பெரிய பாரமாகத் தோன்றி (நீங்கள் எனக்குத் தீங்கிழைக்க நாடி)னால் இது விஷயத்தை நான் அல்லாஹ்விடமே ஒப்படைக்கின்றேன். (எனக்கு எதிராக சதி செய்வதற்காக) நீங்கள் எடுத்துக் கொண்ட முடிவை உறுதிப்படுத்தி, உங்கள் தோழர்களையும் ஒன்று சேர்த்துக் கொள்ளுங்கள். அம்முடிவு உங்கள் மீது மறைக்கப்பட்டதாக இருக்க வேண்டாம். (வெளிப்படையாகவே இருக்கட்டும்) பின்னர் அம்முடிவை நீங்கள் செயல்படுத்துங்கள். அதில் நீங்கள் தாமதம் செய்ய வேண்டாம். (உங்கள் சதியிலிருந்து அல்லாஹ் என்னைக் காப்பாற்றக்
கூடியவனாக இருக்கின்றான்.) இதன் பின்னரும் (என் போதனைகளை) நீங்கள் புறக்கணித்தால், (அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை, ஏனென்றால்)
என்னுடைய போதனைகளுக்காக நான் உங்களிடத்தில் எந்தக் கூலியும் கேட்கவில்லை, என்னுடைய கூலியை அல்லாஹ்வே எனக்குக் கொடுப்பான். நான் (அவனுக்கு முற்றிலும் வழிப்பட்டு நடக்கும்) முஸ்லிம்கள் குழுவில் இருக்குமாறே ஏவப்பட்டுள்ளேன். திருக்குர்ஆன் (10 :71-73)
மேலும் கூறுகின்றான்.
தன்னைத்தானே மடையனாக்கிக் கொண்டவனைத் தவிர இப்றாஹீமுடைய (இஸ்லாமிய) மார்க்கத்தைப் புறக்கணிப்பவன் யார்? நிச்சயமாக நாம் அவரை இவ்வுலகில் தேர்ந்தெடுத்தோம், மறுமையிலும் நிச்சயமாக அவர் நல்லடியார்கள் குழுவிலேயே இருப்பார். மேலும் அவருடைய இறைவன்
அவரிடத்தில் நீர் எனக்கு வழிப்படும் என்று கூறியபோது (எவ்விதத் தயக்கமுமின்றி) அகிலங்களைப் படைத்துப் பரிபாலிக்கும் (உனக்கு) நான் வழிப்பட்டேன் எனக் கூறினார்.
இதையே இப்றாஹீம் தன்னுடைய சந்ததிகளுக்கும் இறுதிப் போதனை செய்தார் மேலும், யஃகூபும் (இவ்வாறே போதித்துத் தன்னுடைய சந்ததியை நோக்கி) என் சந்ததிகளே உங்களுக்காக அல்லாஹ் இஸ்லாமிய மார்க்கத்தைத் தேர்ந்தெடுக்கின்றான். எனவே நீங்கள் உண்மைய முஸ்லிம்களாகவேயன்றி இறந்துவிட வேண்டாம் (என்று கூறினார்). திருக்குர்ஆன் (2: 130,132)
மேலும் அல்லாஹ் கூறுகிறான்.
மூஸா (தன் மக்களை நோக்கி) என்னுடைய மக்களே! நீங்கள் உண்மையாகவே அல்லாஹ்வை விசுவாசித்து அவனுக்கு வழிப்பட்ட முஸ்லிம்களாக இருந்தால் அவனிடமே உங்கள் காரியங்கள் யாவையும் ஒப்படையுங்கள் கூறினார் திருக்குர்ஆன் (10: 84)
மூஸா (அலை) அவர்களை நம்பிவிட்ட சூனியக்காரர்களை ஃபிர்அவ்ன் பயமுறுத்தியபோது, அச்சூனியக்காரர்கள் பின்வருமாறு கூறினார்கள்:
எங்கள் இறைவா! எங்கள் மீது பொறுமையைச் சொரிந்தருள்வாயாக உனக்கு முற்றிலும் வழிப்பட்ட முஸ்லிம்களாக எங்களை மரணிக்கச்
செய்வாயாக! திருக்குர்ஆன் (7: 129)
இறைவா! என்னை முஸ்லிமாகவே மரணிக் செய்து நல்லடியார்களுடன் என்னைச் சேர்த்தருள்வாயாக! திருக்குர்ஆன் (12:101) என நபியூசுப் (அலை) அவர்கள் பிரார்த்தித்தார்கள்.
"சுலைமானுடன் அகிலங்களைப் படைத்துப் பரிபாலிக்கும் அல்லாஹ்விற்கு முற்றிலும் வழிப்பட்ட முஸ்லிமாக நானும் ஆகி விட்டேன்" திருக்குர்ஆன்
(27: 44) என்று பல்கீஸ் (அலை) அவர்கள் பிரார்த்தித்தார்கள்.
அல்லாஹ்விற்கு முற்றிலும் வழிப்பட்ட முஸ்லிம்களாக நபிமார்கள் தவ்ராத் வேதத்தைக் கொண்டு யூதர்களுக்குத் தீர்ப்பளித்து வந்தார்கள். அவர்களுடைய ஞானிகளும், குருமார்களும் அல்லாஹ்வுடைய வேதத்தைக் காப்போர்களாக இருந்து (அதனைக் கொண்டு தீர்ப்பளித்து) அதற்குச் சான்று பகரக் கூடியவர்களாகவும் இருந்தார்கள். திருக்குர்ஆன் (5:4) என, அல்லாஹ் கூறுகின்றான்
உண்மையாகவே அல்லாஹ்வை நாங்கள் விசுவாசித்தோம். எனவே. நிச்சயமாக நாங்கள் அவனுக்கு முற்றிலும் வழிப்பட்ட முஸ்லிம்களே, என்பதை (ஈஸாவே) நீர் சான்று கூறும்." திருக்குர்ஆன் (3 :52)
என்று நபி ஈஸாவுடைய தோழர்களான ஹவாரிய்யூன்கள் கூறியுள்ளார்கள். மேற்கூறப்பட்ட இறை வசனங்களிலிருந்து எல்லா நபிமார்களும்
இஸ்லாமிய மார்க்கத்திலேயே இருந்தார்கள் என்று அறிகிறோம். ஆனால், அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட ஷரீஅத்துச் சட்டங்கள் மட்டும்
காலத்திற்குத் தக்கவாறு மாறுபட்டவையாக இருந்தன.
ஒரு ஸஹீஹான ஹதீஸில்:
நாங்கள் நபிமார்கள் கூட்டம்; எங்கள் எல்லோருடைய மார்க்கமும் ஒன்றே என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (புகாரி, முஸ்லிம்)
(விசுவாசிகளே!) நபி நூஹிற்கு எதனை அல்லாஹ் போதித்தானோ அதனையே உங்களுக்கும் அவன் மார்க்கமாக்கியிருக்கின்றான். ஆகவே
(நபியே!) நாம் உமக்கு வஹீ மூலம் அறிவிப்பதும், இப்றாஹீம், மூஸா, ஈஸா ஆகியோருக்கு நாம் போதித்ததும் என்னவென்றால் நீங்கள் (ஏக தெய்வக்
கொள்கையுடைய) இறை மார்க்கத்தை நிலைநாட்டுங்கள் அதில் (அந்த மார்க்கத்தில் கருத்துபேதம் கொண்டு) நீங்கள் பிரிந்து போய் விடாதீர்கள் என்பதாகும். திருக்குர்ஆன் (4: 169)
மேலும் அல்லாஹ் கூறுகின்றான் :-
(நாம் அனுப்பிய ஒவ்வொரு தூதரையும் நோக்கி) என்னுடைய தூதர்களே! நீங்கள் பரிசுத்தமானவற்றையே புசியுங்கள். நற்காரியங்களையே செய்யுங்கள். நிச்சயமாக நான் நீங்கள் செய்பவற்றை நன்கறிபவனாகவே
இருக்கின்றேன். திண்ணமாக உங்களுடைய இந்தச் சமுதாயமே ஒரே சமுதாயம் தான். நானே உங்களுடைய இறைவன். ஆகவே, நீங்கள் எனக்கே அஞ்சுங்கள் என்று கட்டளையிட்டோம். எனினும் (யூதர்கள்) தங்களுடைய மார்க்கக் காரியங்களில் பல பிரிவுகளாகப் பிரிந்து கொண்டு, ஒவ்வொரு வகுப்பாரும். தங்களிடம் உள்ள பிரிவைக் கொண்டு மகிழ்ச்சியடைகின்றனர். திருக்குர்ஆன் (23 :51-53)
இந்த வசனங்கள் மூலம் எல்லா நபிமார்களும் ஒரே மார்க்கத்தைப் பின்பற்றக் கூடிய ஒரே சமுதாயமாகவே இருந்தார்கள் என்பதை அறிகின்றோம்.
அவ்லியாக்களை விட நபிமார்களே சிறந்தவர்கள்
நபிமார்கள் அவ்லியாக்களைவிடச் சிறந்தவர்களாவர் என்று எல்லா ஸஹாபாக்களும், எல்லா இமாம்களும். எல்லா இறைநேசர்களும் ஒருமித்துக் கூறியுள்ளனர்.
மோட்சமடைந்தவர்களான நற்பாக்கியம் பெற்ற தன் நல்லடியார்களைப் பின்வரும் வசனத்தில் நான்கு தரத்தினராகப் பிரித்து வரிசைப்படுத்திக் கூறியுள்ளான்.
அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் முற்றிலும் வழிப்படுகின்றவர்களே அல்லாஹ்வின் அருளைப் பெற்ற நபிமார்கள், சத்தியசீலர்கள் தியாகிகள், நல்லொழுக்கமுடையவர்கள் முதலானவர்களுடன் (மறுமையில்), இருப்பார்கள். இவர்கள் தான் மிக்க அழகான தோழர்களாவார்கள். திருக்குர்ஆன்(4 :69)
மிகச் சிறந்த சமுதாயம்
"ரசூல்மார்களுக்கும், நபிமார்களுக்கும் பின்னர் மனிதர்களில் கலீபா அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்களை விடச் சிறந்த எந்த மனிதர் மீதும் சூரியன் உதித்ததோ மறைந்ததோ இல்லை” என ஹதீஸில் வந்துள்ளது.
உலகில் தோன்றிய சமுதாயங்களில் (உம்மத்துக்களில்) மிகச் சிறந்த சமுதாயம் முஹம்மத் (ஸல்) அவர்களுடைய சமுதாயமாகும்.
உலகில் தோன்றிய சமுதாயங்களில் நீங்கள் சிறந்த சமுதாயமாக ஆகி விட்டீர்கள் என, அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறியுள்ளான். நமது அடியார்களில் நாம் தேர்ந்தெடுத்தவர்களை இவ்வேதத்திற்குரியவர்களாய் ஆக்கினோம், என்று வேறு ஒரு வசனத்தில் கூறி இச்சமுதாயத்தைத் தேர்ந்தெடுக்கப்பட்ட சமுதாயம் என அல்லாஹ் கூறியுள்ளான்.
நீங்கள் எழுபது சமுதாயங்களைக் கடந்து விட்டீர்கள். நீங்கள் அல்லாஹ்விடத்தில் அவர்களைவிடச் சிறந்தவர்களாகவும், சங்கைக் குரியவர்களாகவும் இருக்கின்றீர்கள்” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய உம்மத்தில் சிறந்தவர்கள் யாரெனில், முதல் தலைமுறையில் வாழ்ந்த முஸ்லிம்களாவர்.
தலைமுறைகளில் சிறந்தது நான் நபியாக அனுப்பப்பட்ட தலைமுறையாகும். பின்னர் அதை அடுத்துள்ள தலைமுறை, பின்னர் அதை அடுத்துள்ள தலைமுறை, என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் (புகாரி, முஸ்லிம்)
மற்றொரு ஸஹீஹான ஹதீஸில் வந்துள்ளது :-
“என்னுடைய தோழர்களான ஸஹாபாக்களை ஏசாதீர்கள், அல்லாஹ்வின் மீது ஆணையாக! உஹது மலை அளவிற்குத் தங்கத்தை உங்களில் ஒருவர் தர்மமாகக் கொடுத்தால் கூட, என் தோழர்களில்
ஒருவருடைய சிறப்பில் ஒரு முத்து அளவையோ அல்லது அதில் பகுதியையோ கூட அவரால் அடைய முடியாது” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
இஸ்லாத்தை முதல்முதலாக ஏற்றுத்தழுவிய முஹாஜிரீன்களும், அன்சாரிகளும் இதர ஸஹாபாக்களை விடச் சிறந்தவர்களாக
இருக்கிறார்கள். இதை அல்லாஹ் பின்வரும் வசனத்தில் விளக்குகின்றான்.
உங்களில் மக்கா வெற்றிக்கு முன்னர் (தன் பொருளைச் செலவு செய்து, போரும் புரிந்து மகத்தான பதவியடைந்த்த இத்தகையவர்களுக்கு, அதற்குப். பின்னர் (தன் பொருளைச் செலவு செய்து போர்புரிந்தவர்கள் சமமாகமாட்டார்கள் என்றாலும் இவ்விருவருக்கும் அல்லாஹ் நன்மையையே
வாக்களித்திருக்கின்றான்.. திருக்குர்ஆன் (57 :10)
மேலும் அல்லாஹ் கூறுகின்றான் :-
முஹாஜிர்களிலும், அன்சாரிகளிலும் எவர்கள் இஸ்லாத்தில் முதலாவதாக முந்திக் (கொண்டு விசுவாசங்) கொண்டார்களோ அவர்களையும், இவர்களை உண்மையாகவே பின்பற்றியவர்களையும் பற்றி திருப்தியடைந்தான். அவர்களும் அல்லாஹ்வைப் பற்றித் திருப்தியடைந்தனர். திருக்குர்ஆன் (9 :100),
இவ்வசனத்தில் முதலாவதாக முந்திக் கொண்டவர்கள் யார்? என்றால், அவர்கள் ஹுதைபிய்யா உடன்படிக்கைக்கு முன்னர் அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்து, போரும் புரிந்தவர்களாவர்.
ஹுதைபிய்யா உடன்படிக்கைதான் மக்கா வெற்றிக்கு அடிகோலுவதாக அமைந்தது. எனவே அதைப் பற்றி அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான்:
நிச்சயமாக நாம் உமக்கு மிகப்பெரிய பகிரங்கமான ஒரு வெற்றியைத் தந்தோம். அதற்காக நீர் உமது இறைவனுக்கு நன்றி செலுத்தும். அதனால் உமது முன் பின்னுள்ள தவறுகளை அல்லாஹ் உமக்கு மன்னித்து விடுவான் திருக்குர்ஆன் (48:1,2)
ஹுதைபிய்யா உடன்படிக்கை வெற்றிகரமானதாகக் கருதப்படுமா யாரசூலல்லாஹ்? என்று ஸஹாபாக்கள் கேட்டபோது "ஆம்" என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள்.
முதல் முதலாக முந்திக் கொண்டவர்கள்
என்று முன்னர் குறிப்பிடப்பட்ட வசனத்தில் கூறப்பட்டவர்களில் சிறந்தவர்கள் நான்கு கலீபாக்களுமாவர். இந்நான்கு கலீபாக்களிலும் சிறந்தவர் அபூபக்கர் சித்தீக்(ரலி) அவர்களாவார்கள் இந்த விஷயம் ஸஹாபாக்கள், தாபியீன்கள், இமாம்கள் மூலம் அறியப்பட்ட விஷயமாகும். இதற்கு பல ஆதாரங்களும் உள்ளன.
இவ்விஷயங்களைப் பற்றி நான் எழுதிய "மின்ஹாஜு அஹ்லில் ஸுன்னத்" என்ற நான்கு பாகங்கள் கொண்ட நூலில் தெளிவாக விளக்கியுள்ளேன்.
நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்களுக்குப் பின்னர், இந்த சமுதாயத்தில் மிகச் சிறந்தவர் நான்கு கலிபாக்களில் ஒருவராவார் என்று சுன்னத் ஜமாஅத்தினரும், ஷிஆக்களும் ஏகோபித்துக் கூறியுள்ளளர்.
ஸஹாபாக்களுக்குப் பின்னர் அவர்களைவிடச் சிறந்தவர்கள் யாரும் இருக்க முடியாது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கொண்டு வந்த மார்க்கத்தைப் பூரணமாக அறிந்து; அதை முழுக்க முழுக்கப் பின்பற்றி நடந்த ஸஹாபாக்களைவிடச் சிறந்த இறை நேசர்கள் யாரும் இருக் முடியாது. ஏனெனில், இஸ்லாமிய மார்க்கத்தைப் பூரணமாக அறிந்த செயல்படக் கூடியவர்தான் இறை நேசர்களில் சிறந்தவராவார்.
அபூபக்கர் (ரலி) அவர்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கொண்டுவந்த மார்க்கத்தைப் பூரணமாக அறிந்து அதன்படிச் செயல்பட்டார்கள். எனவே அவர்கள் இறை நேசர்களில் மிகச் சிறந்தவராக கருதப்படுகிறார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய உம்மத் எவ்வாறு சிறந்த உம்மத்தோ அவ்வாறே இவ்வும்மத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தோழர்களே சிறந்தவர்கள். இத்தோழர்களில் மிகச் சிறந்தவர் அபூபக்கர்
(ரலி) அவர்களாவார்கள்
நபியை விட வலி சிறந்தவர் என்ற தவறான கூற்று
நபிமார்களுக்கெல்லாம் கடைசியாக வந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எவ்வாறு எல்லா நபிமார்களையும் விடச் சிறந்தவர்களாக
இருக்கிறார்களோ, அவ்வாறே வலிமார்களில் கடைசியானவரும் மற்ற வலிமார்களைவிடச் சிறந்தவராக இருக்கிறார் என்று ஒரு கூட்டத்தினர்
தவறாகக் கருதியுள்ளனர். முற்காலத்தில்
உள்ள ஷைகுமார்களில் யாரும்இ றுதி வலி என்று பேசவே இல்லை. ஆனால்மு ஹம்மது பின் அலி அல்ஹகீம் அத்திர்மதி என்பவர் இறுதி வலி என்பதைப் பற்றிக் கூறியுள்ளார். அவர் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார் அதில் பல இடங்களில் பல தவறான கருத்துக்களைக் கூறியுள்ளார்.
பிற்காலத்தில் தோன்றிய ஒரு கூட்டத்தில்
ஒவ்வொருவரும் தன்னையே இறுதி வலி என்று கருதினர், அல்லாஹ்வைப் பற்றி அறிவதில் இறுதி நபியைவிட இறுதி வலியே சிறந்தவர் என்றும் இந்த இறுதி வலியிடமிருந்துதான் நபிமார்கள் அல்லாஹ்வைப் பற்றிய தங்கள் அறிவைப் பெறுகின்றனர் என்றும் இப்னு அரபி என்பவர் கருதியுள்ளார். இதை அவர் தனது அல்புதூஹாத்துல்
மக்கிய்யா, புசூசுல் ஹகிம் போன்ற நூற்களில்
கூறியுள்ளார். இவருடைய இக்கூற்று ஷரீஅத்திற்கும், அறிவிற்கும் முற்றிலும் மாற்றமானதாய் உள்ளது. இதன்மூலம் அவர் எல்லா நபிமார்களுக்கும், எல்லா அவ்லியாக்களுக்கும் மாறு செய்துள்ளார். இவருடைய கூற்று கீழே இருந்து மேல் முகடு விழுந்தது என்று சொல்லக் கூடியவனைப் போன்று புத்திக்குப்
பொருந்தாததாக அமைந்துள்ளது.
'இப்னு அரபி' தன்னை இறுதி வலி என்றும், எல்லா நபிமார்களும் இவரிடமிருந்துதான் அல்லாஹ்வைப் பற்றிய அறிவைப் பெறுவதாகவும், காலத்தால் மட்டுமே நபிமார்கள் சிறந்தவர்கள் என்றும் கூறி நபிமார்களை விட தாம் சிறந்தவரென வாதாடுகிறார். இவருக்கும் எத்தனையோ காலங்களுக்கு முன்னர் தோன்றி மறைந்த நபிமார்கள் இவரிடமிருந்து எப்படி அறிவைப் பெற்றிருக்க முடியும்?
நபிமார்களில் கடைசியாக வந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏனைய நபிமார்களை விடச் சிறந்தவர்களாக இருப்பது போன்று வலிமார்களில் கடைசியாக வந்தவர் எல்லா வலிமார்களையும் விடச் சிறந்தவராக இருக்கமுடியாது. இறுதிநாள் வரை வலிமார்கள் இருப்பர் என்றிருக்க, இவர் எப்படி இறுதிவலியாக முடியும்?
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சிறப்பு
நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்களுடைய சிறப்பு ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
நான் ஆதமுடைய மக்களின் தலைவராக இருக்கின்றேன். அதில் எனக்கு எந்தப் பெருமையுமில்லை என, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
மறுமையில் நான் சுவர்க்கத்தை திறக்குமாறு கூறுவேன். அப்போது சுவர்க்கத்தின் அதிபதி, “நீர் யார்?” என்று கேட்பார். “நான் தான் முஹம்மத்" என்று சொல்வேன். உங்களுக்கு முன்னதாக யாருக்கும் இந்த வாசலைத் திறந்து கொடுக்க எனக்கு அனுமதி இல்லை, என்று சுவர்க்கத்தின் அதிபதி கூறுவார். என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
மிஃராஜிற்குச் சென்ற அந்த இரவு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய தகுதியை அல்லாஹ் எல்லா நபிமார்களுடைய தகுதியை விடவும் உயர்த்தியுள்ளான்.
"இறைத்தூதர்களில் சிலரை, சிலரைவிடச் சிறந்தவர்களாக நாம் ஆக்கியிருக்கின்றோம். அவர்களில் சிலருடன் அல்லாஹ் பேசியுமிருக்கின்றான். அவர்களில் சிலரைப் பதவிகளில் உயர்த்தியுமிருக்கிறான்" திருக்குர்ஆன் (2: 253) என, அல்லாஹ் கூறுகின்றான்.
இவ்வசனத்தில் கூறப்பட்டது போன்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மேன்மைக்குரியவர்களாய்த் திகழ்கிறார்கள். இது போன்ற ஏராளமான ஆதாரங்கள் மூலம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய சிறப்பு நிரூபிக்கப்பட்டுள்ளது. எல்லா நபிமார்களுக்கும் அல்லாஹ்விடமிருந்து வஹீ வந்துள்ளது. குறிப்பாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் அல்லாஹ் வஹீ அறிவித்திருக்கின்றான்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் நபித்துவத்தில் பிறர்பால் தேவையுடையவர்களாய் இல்லை; அவர்களுடைய ஷரீஅத், முன்னால் உள்ள நபிமார்களின்பாலும், அவர்களுக்குப் பின்னால் உள்ளவர்களின்பாலும் எந்த விதத்திலும் தேவையுடையவர்களாய் இல்லை. ஆனால் நபி ஈஸா (அலை) அவர்களோ தவ்ராத்தில் இருந்த பல ஷரீஅத்துச் சட்டங்களின்பால் தேவையுடையவர்களாய் இருந்தார்கள். தவ்ராத்தில் இருந்த சட்டங்களை முழுமைப்படுத்திடவே ஈஸா (அலை) அவர்கள் வந்தார்கள். எனவே கிருஸ்தவர்கள் ஈஸா (அலை) அவர்களுக்கு முன்புள்ள வேதமான தவ்ராத், ஸபூர் மற்றுமுள்ள ரசூல்மார்களின் ஷரீஅத்தின்பாலும் தேவையுடைவர்களாய் இருந்தார்கள்.
நமக்கு முன்னர் உள்ள உம்மத்தினர் தெய்வீக உதிப்புப் பெற்றவர்களின்பால் தேவையுடையவர்களாய் இருந்தார்கள். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய உம்மத்தைத் தெய்வீக உதிப்புப் பெற்றவர்களின் பால் தேவையற்றவர்களாய் அல்லாஹ் ஆக்கிவிட்டான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் வேறு எந்த நபியும் தேவையில்லை. தெய்வீக உதிப்புப் பெற்றவர்களும் அவசியமில்லை. ஏனென்றால் வேறு எந்த நபிமார்களுக்குமில்லாத பல பெரும் சிறப்புக்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் ஒருங்கிணைத்துக் கொடுத்துள்ளான்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் குர்ஆனைக் கொஞ்சம் கொஞ்சமாக வானவரின் வாயிலாக இறக்கிக் கொடுத்துச் சிறப்பித்துள்ளான். மனிதர்களுடைய வாயிலாக இறக்கவில்லை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய தூது பற்றிய செய்தி ஒருவனுக்குக் கிடைத்து விடுமானால் அவன் அவர்களைப் பின்பற்றி நடக்காதவரை ஒரு போதும்
அவன் இறைநேசனாக ஆக முடியாது. ஏனெனில் அவன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாயிலாகவே நேர்வழியடைந்தான். அவர்களின் மூலமாகவே உண்மையான மார்க்கத்தை அவன் தெரிந்து கொண்டான்.
இவ்வாறே ஓர் இறைத்தூதரைப் பற்றிய செய்தி ஒருவனுக்குக் கிடைத்து விட்டால், தனக்கு அனுப்பப்பட்ட அத்தூதரைப் பின்பற்றி நடந்தாலேயொழிய அவன் இறைநேசனாக ஆக
முடியாது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய இறைத்தூது பற்றிய செய்தி ஒருவனுக்குக் கிடைத்த பின்னர், அல்லாஹ்வை அடைவதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பின்பற்ற வேண்டிய தேவையில்லை என்று ஒருவன் கூறுவானாயின் அவன் காஃபிராக ஆகிவிடுகிறான். அல்லது வெளிப்படையான விஷயங்களில் மட்டும் தான் நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின்பால் தேவையுள்ளவனாக இருக்கின்றேன். அந்தரங்கமான அறிவு விஷயத்தில் நான் அவர்கள்பால் தேவையாவதில்லை. என்றோ, அல்லது, ஷரீஅத் சம்பந்தமான விஷயங்களில் மட்டும் தான் நான் அவர்களின்பால் தேவையாகின்றேனே தவிர ஹகீகத்
சம்பந்தமான விஷயங்களில் அல்ல, என்றோ ஒருவன்
கூறினால் அவன் யூதர்கள், கிருஸ்தவர்களைவிட மிக மோசமானவனாக ஆகிவிடுகின்றான்.
ஏனெனில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வேதம் அருளப்படாதவர்களுக்கு மட்டும் தான் நபியாக அனுப்பப்பட்டார்களேயொழிய. வேதத்தையுடையவர்களுக்கல்ல என்று யூதர்களும், கிருஸ்தவர்களும் கூறினார்கள். இவர்கள் திருக்குர்ஆனில் உள்ள சிலவற்றை நம்பி, வேறு சிலவற்றை மறுத்ததினால், இவர்களைக் காஃபிர்கள் என்று அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறிவிட்டான். இவ்வாறே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வெளிப்படையான அறிவைப்-பற்றிய விஷயங்களுக்கே
நபியாக அனுப்பப்பட்டார்கள். அந்தரங்கமான விஷயங்களுக்கல்ல என்று கூறக் கூடியவனும் குர்ஆனில் உள்ள சிலவற்றை நம்பிவிட்டு வேறு
சிலவற்றை மறுப்பவனாக ஆகிவிடுகின்றான். இவன் யூதர்கள் கிருஸ்தவர்களைவிட (குப்ஃரில்) நிராகரிப்பில் படுமோசமானவனாக ஆகிவிடுகிறான்.
ஏனெனில், அந்தரங்க அறிவு என்பது உள்ளத்தில் உள்ள ஈமானைப், பற்றிய அறிவாகும்- இது அந்தரங்க ஈமானைப் பற்றிய அறிவுமாகும். இந்த அறிவு இஸ்லாத்தின் வெளிப்படையான அமல்களைப் பற்றிய அறிவைக் காட்டிலும் சிறந்தாகும்.
"நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வெளிப்படையான விஷயங்களை, மட்டும் தான் அறிந்திருந்தார்கள். ஈமானின் உண்மைகளை அவர்கள் அறியவில்லை" என்றும், ஈமானின் உண்மைகளை குர்ஆன், ஹதீஸ் மூலம் நான் பெறவில்லை என்றும் கூறி ஒருவன் வாதாடுவானாயின் அவன் திருக்குர்ஆனில் சிலவற்றை நான் நம்புவேன் வேறு சிலவற்றை நம்பமாட்டேன் என்று கூறக் கூடியவனை விட மிக மோசமானவனாக ஆகிவிடுகிறான்
இதைப் போன்ற நம்பிக்கையுடைய இறை நிராகரிப்பாளர்களும் நபித்துவத்தை விட ‘விலாயத்’ சிறந்தது என்று வாதாடி, மக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை உண்டாக்கி விடுகின்றனர். நான் வலி, என்னுடைய விலாயத் நபியின் நுபுவ்வத்தைவிடச் சிறந்தது என்று கூறி நபித்துவம் இறைத் தூதிற்கு மேலும் விலாயத்திற்குக் கீழும் உள்ளது என்று தங்கள் கவிகளில் பாடி நபியைவிட வலி சிறந்தவர் என்று கூறியுள்ளனர். மேலும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய இறைத் தூதை விட மிகச்சிறந்ததாக இருக்கின்ற அவர்களுடைய விலாயத்தில் நாங்கள் பங்கு பெற்றுள்ளோம். என்றும் கூறுகின்றனர். இது இவர்களுடைய மாபெரும் வழிகேட்டினையே
அறிவிக்கின்றது. ஏனெனில், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய இறைநேசத்திற்கு (விலாயத்திற்கு) யாரும் நிகராக முடியுமா? நபி இப்ராஹீம் (அலை), நபி மூஸா (அலை) போன்ற நபிமார்களே நிகராக முடியாமல் இருக்கும்போது முடியும்? வழிகெட்டவர்கள்
எப்படி நிகராக ஆக முடியும்.
நபிமார்கள் எல்லோருமே இறைநேசர்களாவர்
ஒவ்வொரு இறைத்தூதரும் வலியாகவும், நபியாகவும் இருக்கிறார். இறைத் தூதராக இருக்கக்கூடிய ஒருவருடைய இறைத் தூதில் நபித்துவம் அடங்கி விடுகிறது. அந்நபித்துவத்தில் விலாயத் என்னும் இறைநேசம் உள்ளடங்கி விடுகிறது. விலாயத் என்னும் இறைநேசமின்றி ஒருவருக்கு அல்லாஹ் வஹீ அறிவிப்பது ஒரு போதும் முடியாத காரியமாகும்.
ஒருவருக்கு அல்லாஹ் வஹீ அறிவிக்கும் போது
இவர் இறைநேசராக இருப்பது அவசியமாகும். விலாயத் என்னும் இறைநேசமின்றி நபியாக மட்டும் ஒருவர் இருக்க முடியாது. அப்படியே ஆக முடியும் என்று வைத்துக்கொண்டாலும் நபிகள் நாயகத்துடைய விலாயத்துக்கு நிகராக யாருடைய விலாயத்தும் இல்லையே?
நபித்துவத்தைவிட விலாயத் சிறந்தது என்று கூறக் கூடியவர்; அல்லாஹ்வுடைய தூதருக்கு வஹீ கொண்டு வருகின்ற மலக்கான ஜிப்ரீல், யாரிடமிருந்து வஹீயைப் பெறுகின்றாரோ அந்த அல்லாஹ்விடமிருந்து நேரடியாக எங்களுடைய அறிவைப் பெறுகின்றோம் என்று கூறுகின்றனர். இதை 'புகுசுல்ஹிகம்' என்ற புத்தகத்தில் இப்னு அரபி என்பவர் கூறியுள்ளார். இதற்குக் காரணம் இவர்கள் கிரேக்கத் தத்துவவாதிகளுடைய கொள்கைகளை நம்பி, அவற்றையெல்லாம் முகாஷபாஃ என்ற பெயரில் வெளியிட்டார்கள்.
கிரேக்கத் தத்துவ ஞானிகளில் ஒருவரான அரிஸ்டாட்டில் என்பவர் பூகோளங்கள் யாவும் ஆரம்பமாக உண்டானவை, சுயமாகவே
தோன்றியவை; அவற்றிற்கு ஒரு மூலகாரணம் இருக்கிறது. அதன்மூலம் அவை உருவெடுத்துள்ளன என்று கூறினார். அவற்றிற்கு தன்னைத்தானாகவே வெளியாக்கும் சக்தி உண்டு என்ற அவிசென்னா போன்றவர்கள் கூறினர். வானங்கள் பூமியை ஆறு நாட்களில் படைத்தவனும்
தன்னுடைய சக்தியால் தன் நாட்டப்படி சிருஷ்டிகளைப் படைக்கச் கூடியவனுமான அல்லாஹ்தான், பூகோளங்கள் யாவையும் படைத்தான் என்று கிரேக்க தத்துவ ஞானிகள் யாரும் கூறவில்லை. காரணம் அல்லாஹ் சிறிய சிறிய விஷயங்ளைப் பற்றிய விவரங்களையெல்லாம் அறிவதில்லை என்று இவர்கள் நம்புகின்றனர்.
இவர்கள் ஒன்று, அரிஸ்டாட்டில் கூறியது போன்று அல்லாஹ்வின் அறிவை முழுமையாக மறுக்க வேண்டும், அல்லது அவிசென்னா கூறியது போன்று அல்லாஹ் பெரிய பெரிய விஷயங்களைத்
அறிவானேயொழிய, தான் சிறிய சிறிய விவரங்களை அறிய மாட்டான் என்று கூறவேண்டும். இவ்வாறு கூறுவது பூகோளத்தைப் பற்றிய அல்லாஹ்வின் அறிவை மறுப்பதாகும். வெளியில் தோற்றமளிக்கின்ற ஒவ்வொரு பொருளும் கோளங்களின் குறிப்பிட்ட ஒரு பாகமாகவே இருக்கிறது. இவ்வாறே எல்லாத் திடப்பொருள்களும், அதன் பண்புகளும், அதன் செயல்களும் உள்ளன.
இவைகளைப் பற்றிய விரிவான விளக்கத்தை “ரத்து தஆருளுல் அக்லி வந்நக்ல்' என்ற எனது நூலில்
கூறியுள்ளேன்.
யூதர்கள், கிருஸ்தவர்கள் அரபிய நாட்டில் வாழ்ந்த பல தெய்வக் கொள்கைக்காரர்களுடைய நிராகரிப்பைவிட, தத்துவஞானிகளுடைய நிராகரிப்பு மிக மோசனமானதாகும். ஏனெனில் வானங்கள், பூமி மற்றும் இதர படைப்புகளையும் அல்லாஹ் தனது நாட்டத்தாலும், தன் சக்தியாலுமே படைத்தான் என்று யூதர்களும், கிருஸ்தவர்களும் நம்புகின்றனர். அரிஸ்டாட்டில், போன்ற கிரேக்கத் தத்துவஞானிகள்
நட்சத்திரங்களையும், சிலைகளையும் வணங்கி வந்தார்கள். இவர்கள் மலக்குகளைப் பற்றியும், நபிமார்களைப் பற்றியும் தெரிந்திருந்தும்கூட அரிஸ்டாட்டிலுடைய நூல்கள் எதிலும் இதுபற்றிய விளக்கங்கள் காணப்படவில்லை. தத்துவஞானிகளுடைய பெரும்பாலான அறிவும் இயற்கை விஷயங்களைப் பற்றியதாகவே இருந்தது.
தெய்வீக விஷயங்களைப் பற்றி இவர்கள் கூறிச் சென்றவற்றில் அதிகமானவை தவறான கருத்துக்களாகும், ஏதோ ஒரு சில கருத்துக்களே
சரியாக உள்ளன. தவ்ராத். இஞ்ஜீல் வேதங்களில் மனிதக்கரம் பட்டு அவற்றில் மாற்றங்கள் செய்யப்பட்டதின் பின்னால் வாழ்ந்த யூதர்களும், கிருஸ்தவர்களும் இறையியல் தொடர்பான விஷயங்களில் கிரேக்கத் தத்துவ ஞானிகளை விட அதிகம் அறிந்தவர்களாய் இருந்தார்கள்.
தத்துவஞானிகளில் பிற்காலத்தில் தோன்றிய அவிசென்னா போன்றவர்கள். இறைத்தூதர்கள் கொண்டு வந்த இறையியல் உண்மைகளைத் தவறான ஞானிகளுடைய கொள்கைகளுடன் இணைக்க
முயன்றனர். இதன் காரணத்தால் ஜஹமிய்யா, முஃஸிலா போன்ற பிரிவினர்களுடைய அடிப்படைகளில் பல விஷயங்களையும். தத்துவ வாதிகளுடைய கொள்கைகளில் பல விஷயங்களையும் எடுத்து இணைத்து அதைத் தங்கள் கொள்கையாக ஆக்கிக் கொண்டனர். இவர்களுடைய கொள்கையின் குழப்பத்தை வேறு நூல்களில் விளக்கியுள்ளேன்.
நபிமார்களான மூஸா, ஈஸா, முஹம்மது (ஸல்) போன்றவர்களுடைய செய்தி உலகம் முழுவதும் பரவிட ஆரம்பித்ததைத் தத்துவவாதிகள் கண்டபோது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு வஹீ என்னும்
தெய்வீகச் செய்தியின் மூலம் கொடுக்கப்பட்டு, உலகைத் தட்டி எழுப்பிய அவர்களின் இறைத்தூதை இவர்கள் ஏற்றுக் கொண்டனர்.
மலக்குகள், ஜின்களைப் பற்றி நபிமார்கள் அறிவித்தவற்றை இவர்கள் அறிந்த போது இதற்கும் கிரேக்கத் தத்துவவாதிகளுடைய கொள்கைகளுக்குமிடைமில், இணைத்து கூற முயன்றனர். ஆனால் கிரேக்கத் தத்துவவாதிகளோ
அல்லாஹ்வைப் பற்றிய அறிவை விட்டும் அவனுடைய மலக்குகள். வேதங்கள், தூதர்கள், மறுமை நாள் போன்றவற்றைப் பற்றிய அறிவை விட்டும் வெகு தொலைவில் இருந்தார்கள்.
கிரேக்கத் தத்துவவாதிகள், "பத்து அறிவுகள்" என்று ஒன்று உண்டு என நிருப்பித்தார்கள். அவற்றிற்கு "முஃபாரகாத்" "முஜர்ரதாத்"' என்று பெயர்கள் கூறினர். முஃபாரகாத் என்பதற்குப் பிரிந்திருத்தல் என்பது
பொருள். இது “நப்சு" என்ற ஆத்மா உடலை விட்டும் பிரிதல் என்ற அடிப்படையிலிருந்து எடுக்கப்பட்டதாகும். உடலை விட்டும் ஆத்மா வேறுபட்டதாக இருப்பதின் காரணத்தால், அதற்கு"முஃபாரகா" என்று கூறினர். ஒவ்வொரு கோளத்திற்கும் ஒரு ஆத்மா உண்டு என்று இவர்கள்
கூறினர். இவர்களில் பலர், அந்த ஆத்மா ஜடப் பொருள் என்றும், வேறு சிலர் அது தோற்றமற்றது. என்றும் கூறுகின்றனர்.
‘முஜர்ரதா' என்பதற்கு தனித்திருப்பது என்பது பொருள். தனித்திருப்பவை என்று தத்துவவாதிகள் கூறுவது என்னவென்றல். சில விஷயங்கள் உள்ளன அவற்றை மனத்திற்குள் சிந்தித்துப் பார்க்க முடியுமேயல்லாது வெளியில் அது உண்டாகியிருப்பதில்லை.
அவ்விஷயங்களையே தத்துவவாதிகள் தனித்திருப்பவை என்று கூறுகின்றனர்.
உதாரணமாக "பித்தாகரஸ்" என்பவரின் தோழர்களில் சிலர் தனித்த சில எண்களை நிருபித்தனர். பிளேட்டோ என்பவரின் தோழர்கள் உருவமற்ற சில பொருட்கள் உண்டு என்று கூறினர். இவற்றையெல்லாம் உள்ளத்தில் சிந்தித்துப் பார்க்க முடியுமே தவிர வெளி உலகில் அவை காணப்படமாட்டாது, என்று தத்துவவாதிகளில் உள்ள சில புத்திசாலிகள் கூறியுள்ளனர்.
தத்துவவாதிகளின் பார்வையில் நபித்துவத்தின் பண்புகள்
அவிசென்னா போன்ற, பிற்காலத்தில் தோன்றியவர்கள் நபித்துவத்தைத் தத்துவவாதிகளின் அடிப்படைக்கொப்ப இணைத்துக் கூறவேண்டுமென்பதற்காக நபித்துவத்திற்கு மூன்று பண்புகள் உண்டு என்றும், யாரிடம் இந்த மூன்று பண்புகளும் ஒன்று சேருகின்றனவோ, அவர் நபியாக ஆகி விடுகின்றார். என்றும் கருதுகின்றனர். அம்மூன்று
அடிப்படைப் பண்புகள் யாதெனில்:
1, அறிவியல் சக்தி பெற்றவராக இருக்க வேண்டும் இதற்குத் தெய்வீக சக்தி என்றும், இந்த சக்தியின் மூலம் கற்காமலே கல்வியை பெறலாம் என்றும் கூறுகின்றனர்.
2. கற்பனை சக்திபெற்றவராக இருக்க வேண்டும் அதாவது தனது மனதிற்குள் எழுகின்றவற்றைக் கற்பனை செய்ய வேண்டும். தனது மனதிற்குள் தூங்கும் போது ஏற்படுவது போன்ற சில உருவங்களைக் காண்பான். அல்லது தன் மனதில் சில பேச்சுகளைக் கேட்பான். ஆனால்
இவ்வுருவமும் பேச்சும் வெளித்தோற்றத்தில் காணப்படுவதில்லை, இவ்வாறு உள்ளத்தில் தோன்றுகின்ற உருவங்களை அல்லாஹ்வுடைய மலக் என்றும் உள்ளத்தில் எழும் சம்பவங்களை அல்லாஹ்வுடைய பேச்சு என்றும் கருதுகின்றனர்.
3. உலகைக் கவரும் அளவிற்கு ஓர் அற்புத
சக்திபெற்றவராக இருக்க வேண்டும்.
ஆக, இம்மூன்று இயல்புகளும் யாரிடம் இருக்கின்றனவோ, அவர் நபி எனத் தத்துவவாதிகள் கூறியுள்ளனர்.
நபிமார்களின் முஃஜிசாக்களும், வலிமார்களின் கராமத்துக்களும், சூனியக்காரர்களின் அற்புதங்களும் மனோ சக்தியால் ஏற்படுபவைகளே என, இவர்கள் கருதுகின்றனர். நபிமார்களின் முஃஜிசாக்களில் தங்கள் கொள்கைக்கு ஏற்றவாறு பிரம்பைப் பாம்பாக மாற்றுதல், போன்ற விஷயங்களை மட்டும் ஏற்றுக்
கொள்கின்றனர். சந்திரனைப் பிளக்கச் செய்தல் போன்ற தங்கள் அடிப்படைக்கு ஒவ்வாதவற்றை மறுக்கின்றனர். தத்துவவாதிகளின் மேற்கண்ட கொள்கைகள் தவறானவை என்பதை விளக்கமாக வேறு நூல்களில் கூறியுள்ளேன்.
ஒருவன் நபியாக ஆகுவதற்குத் தத்துவவாதிகள் கூறியுள்ள மூன்று பண்புகளும், அதைவிட மிக நல்ல பண்புகளும் நபியைப் பின்பற்றுகின்ற
சாதாரண மனிதனிடத்தில் கூட இருப்பதைக் காண்கிறோம். நபிமார்கள் அறிவித்த மலக்குகள் உயிருள்ளவர்களாகவும், பேசும் ஆற்றல் உள்ளவர்களாகவும் இருக்கிறார்கள். இம்மலக்குகள் அல்லாஹ்வுடைய (படைப்பு)களில் மிகப்பெரியவர்களாவர். இவர்கள் ஏராளமாக
இருக்கின்றனர். அல்லாஹ்வின் பட்டாளமான மலக்குகளின் எண்ணிக், அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறிய முடியாது என அல்லாஹ்வே கூறியுள்ளான். தத்துவவாதிகள் கூறியது போன்று மலக்குகள் பத்து, பேர்களுமல்லர், உருவமற்றவர்களாகவுமல்லர்.
கிரேக்கத் தத்துவவாதிகளின்
கொள்கை
முதல் முதலாக உலகில் தோன்றியது ‘முதல் அறிவு’ என்பதாகும் இந்த அறிவிலிருந்துதான் மற்ற எல்லாச் சிருஷ்டிகளும் தோன்றின மிக ஆற்றல் பெற்ற பத்தாவது அறிவுதான் சந்தரகோளத்தின் கீழ் இருக்கின்ற எல்லாவற்றிற்கும் இரட்சகன், என்பது தான் கிரேக்கத்தத்துவவாதிகளின் கொள்கை. இது தவறான கொள்கை என்பதை இதைத்தூதர்களின் போதனை மூலம் அறியமுடியும். மலக்குகளில் யாரும் எதையும் படைக்கவில்லை. ஆனால், கீழ்காணும் பொய்யாக புனையப்பட்ட ஹதீஸை தத்துவவாதிகள் தங்களுடைய கொள்கைக்கு ஆதாரமாக
எடுத்துக் கொள்கின்றனர்.
அல்லாஹ் முதலாவதாக அறிவைப் படைத்து; அதனிடத்தில் முன்னே வா என்று சொன்னான். முன்னே வந்தது. பின்னே போ என்று சொன்னான். பின்னே சென்றது. என் கண்ணியத்தின் மீது ஆணையாக உன்னை விட என்னிடத்தில் மிக கண்ணியமான எந்தப் பொருளையும் நான் படைக்கவில்லை, நான் கொடுப்பதும், எடுப்பதும் உன் காரணத்தினால்தான், நற்கூலியும், தண்டனையும், மனிதனுக்குக் கிடைக்கிறது” என அல்லாஹ் கூறினான்.
இது பொய்யாகப் புனையப்பட்ட ஹதீது என்று ஹதீஸ் கலை வல்லுனர்கள் கூறியுள்ளனர்.
மற்றொரு ஹதீஸில் :-
அல்லாஹ் முதல் முதலாக எழுதுகோலைத் தான் படைத்தான் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு அறிவுக்கு எழுது கோல் என்றும் பொருள் கொடுக்கின்றனர். முதல் முதலாகப் படைக்கப்பட்டது அறிவுதான் என்று கூறப்பட்டுள்ள அறிவிப்பு இட்டுக்கட்டப்பட்ட
பொய்யான ஒன்று. அபூஹாதிம் அல்புஸ்தி, தாரகுத்னி, இப்னு ஜவ்ஸி போன்ற இமாம்கள் அது பொய்யான அறிவிப்பு என்று நிரூபித்துள்ளனர்.
முக்கியமான ஹதீஸ் தொகுப்புகள் எதிலும் இந்த ஹதீஸ் இடம் பெறவில்லை. இந்த ஹதீஸ் உண்மையானது என்று வைத்துக் கொண்டால் கூட, அது அவர்களுக்குப் பாதகமாகவே உள்ளது. ஏனென்றால், அல்லாஹ் அறிவைப் படைத்த முதல் நேரத்தில் அதனுடன் உரையாடினான் என்றுதான் பொருள் கொடுக்கின்றதே தவிர, அறிவு சிருஷ்டிகளில்
முதல் முதலாகப் படைக்கப்பட்டது என்று பொருள்
கொடுக்கவில்லை மேலும் அந்த ஹதீஸில் "என்னிடத்தில் உன்னைவிடச் சிறந்த வேறு எந்தப் பொருளையும் நான் படைக்கவில்லை" என்று அறிவைப் பார்த்து அல்லாஹ் கூறியதாக வந்துள்ளது. இதிலிருந்து அறிவைப் படைப்பதற்கு முன்னால்
அல்லாஹ் பல பொருட்களையும் படைத்துள்ளான் என்பது புலனாகின்றது. மேலும், நான் எடுப்பதும்.
கொடுப்பதும், தண்டனை கொடுப்பதும் உன் காரணத்தினால்தான் என்று அறிவிடத்தில் அல்லாஹ் கூறியதாக வந்துள்ளது. இந்த நான்கு விஷயங்களும் கண்ணால் பார்க்க முடியாதவை. உருவமற்றவை உலகத்திலுள்ள ஜடப்பொருட்களும் அறிவு என்ற மூலப் பொருளிலிருந்து பிறந்தவையே என்ற தத்துவ வாதிகளின் கூற்றிற்கு இது மாற்றமானதாகும்.
இவ்விஷயத்தில் கிரேக்கத் தத்துவவாதிகள் தவறி விடக்காரணம் என்னவென்றால் அறிவு (அக்ல்) என்ற சொல்லிற்கு முஸ்லிம்கள் என்ன பொருள் கொடுக்கின்றனார்களோ, அந்தப் பொருளைத் தத்துவவாதிகள் கொடுப்பதில்லை. முஸ்லிம்களிடத்தில் அகல் என்ற அறிவு அறிந்தான்
அகல என்ற வினை சொல்லின் பிறப்பிடமாகும். அக்ல் (அறிவு) சொல் இடம் பெற்றுள்ள சில இறைவசனங்களைக் என்ற கீழே காண்போம்.
"(இறைத் தூதர்களுக்கு) நாங்கள் செவி சாய்த்து, அவர்கள் கூறியவைகளைச் சிந்தித்து அறிந்து (அதன்படி நடந்து) இருந்தால், நாங்கள்
நாகவாசிகளாய் ஆகியிருக்கவே மாட்டோம்." திருக்குர்ஆன் (67 :10)
சிந்தித்து அறிகின்றவர்களுக்கு நிச்சயமாகப் பல அத்தாட்சிகள் அதில் இருக்கின்றன. திருக்குர்ஆன் (13 :4)
அவர்கள் பூமியில் சுற்றித் திரிந்து (அதில் உள்ளவற்றைப்) பார்க்கவில்லையா? அவ்வாறு பார்ப்பார்களாயின்) சிந்தித்து அறிந்து கொள்ளக்கூடிய உள்ளங்கள் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும். அல்லது (நல்லுபதேங்களை) செவியுறக் கூடிய காதுகள் அவர்களுக்கு உண்டாயிருக்கும். நிச்சயமாக அவர்களுடைய கண்கள் குருடாகவில்லை. ஆனால் நெஞ்சங்களில் இருக்கும் இதயங்களே குருடாகிவிட்டன. திருக்குர் ஆன் (22: 46)
எந்த ஒரு இயல்பை அல்லாஹ் மனிதனுள் படைத்து அதன்மூலம் அறிய வைக்கின்றானோ அந்த இயல்பிற்கும் ‘அக்ல்’ என்று கூறப்படுவதுண்டு, ஆனால் தத்துவவாதிகளிடத்தில் அக்ல் என்பது தன்னில் சுயமாக நிற்கின்ற ஒரு பொருள் என்று கருதப்படுகிறது. அவர்களுடைய இக்கூற்று குர்ஆனுக்கும், இறைத்தூதர்களின் போதனைகளுக்கும் புறம்பானதாகும்.
சிருஷ்டிகளின் உலகத்தை, உடல்களின் உலகம் (ஆலமுல் அஜ்சாம்) என்று இமாம் கஸ்ஸாலி கருதியுள்ளார். 'அக்ல்' என்னும் அறிவையும் ‘நப்ஸ்' என்ற ஆத்மாவையும் ஏவுகின்ற உலகம் ஆலமுல் அம்ர் என்று கூறுகிறார்கள். அறிவை (ஆலமுல் ஜபரூத்) என்றும், நஃப்சை (ஆலமுல் மலகூத்) என்றும், உடல்களை (ஆலமுல் முல்க்) என்றும் சிலவேளை கூறுகின்றனர்.
குர்ஆனிலும் ஹதீஸிலும் வந்துள்ள மலக், மலகூத், ஜபரூத் என்பதெல்லாம் தத்துவவாதிகளுடைய கூற்றிற்கு ஒப்பானததாகும் என்று குர்ஆன், ஹதீஸுடைய விளக்கத்தையும், இறைநேசர்களுடைய நோக்கத்தையும் அறிந்தவன் ஒரு போதும் கூறமாட்டான்.
கோளங்கள் புதிதாக உண்டானவை. அதாவது அவை தோன்றுவதற்கு ஒரு காரணம் உண்டு, அத்துடன் அக்கோளங்கள் பழமையானவை; ஆரம்பமற்றவை என்றெல்லாம் தத்துவவாதிகள் கூறுகின்றனர்.
இவர்களுடைய இக்கூற்று முற்றிலும் தவறானதாகும். அரபி மொழியில் புதிதாக இல்லாமையிலிருந்து தோன்றிய ஒரு பொருளுக்கு பழமையானது, ஆரம்பமற்றது என்று கூறப்படமாட்டாது.
அல்லாஹ்வே எல்லாச் சிருஷ்டிகளையும்
படைத்தான் என்று, அவன் அறிவித்துள்ளான்.
படைக்கப்பட்டவை அனைத்தும் புதிதாக உண்டானவையாகும். புதிதாக உண்டானவை யாவும் இல்லாமையிலிருந்து தோன்றியவையாகும். ஆனால். அஹ்லுல்கலாம், என்ற தர்க்கக்கலையைத் தங்கள் ஆதாரமாக எடுத்துக்கொண்ட ஜஹமிய்யா, முஃதஸிலா போன்றவர்கள் தத்துவவாதிகளுடன்
கடுமையான வாக்குவாதங்கள் செய்தனர். இதன்மூலம்
அவர்கள் தங்கள் எதிரிகளை வெல்லவுமில்லை.
மாறாக தத்துவவாதிகருடைய தவறான கொள்கைகளில் சிலவற்றுடன் இணைந்தே சென்றனர். இவர்கள் தத்துவவாதிகளுடன் சில உண்மையான அறிவியல் தொடர்பான விஷயங்களில் தர்க்கம் புரிந்தனர். அத்தர்க்கங்களில் இவர்கள் குர்ஆன், ஹதீஸை மட்டும் தங்களுக்கு ஆதாரமாக அமைத்துக் கொள்ளாத காரணத்தினால் தத்துவவாதிகள் தங்கள் வழி கேட்டில் வலிமை பெற்றனர்.
இப்னு அரபி என்பவர் கூறும் கற்பனை
நபியின் உள்ளத்தில் ஏற்படுகின்ற ஒரு விதக் கற்பனை தான் ஜிப்ரீல். இக்கற்பனை அறிவிற்கு ஏற்றதாக இருக்கும் எனத் தத்துவவாதிகள் கருதுகின்றனர்.
இப்னு அரபி போன்ற, தங்களை இறைநேசர்கள் என்றும், அவ்லியாக்கள் என்போர் நபிமார்களை விடச் சிறந்தவர்கள் என்றும் கூறிக் கொள்கின்றவர்கள் தத்துவவாதிகளுடைய கொள்கைகளுக்கு ஆதரவு கொடுத்தனர். அவ்லியாக்கள் மலக்கின் உதவியின்றி நேரடியாக அல்லாஹ் விடமிருந்து தங்கள் அறிவைப் பெறுகிறார்கள் என்ற இப்னு அரபியுடைய கூற்றுக்கள் அவர் எழுதிய அல்புதூஹாத்துல் மக்கிய்யா புசூசுல்ஹிகம் போன்ற நூல்களில் அதிகமாக இடம் பெறுவதைக் காணலாம்.
இப்னு அரபி என்பவர் தனது நூலில் கூறும்போது எந்தச் சுரங்கத்திலிருந்து வஹீ என்னும் இறைச் செய்தியை மலக்கு எடுத்துக் கொண்டுவந்து இறைத்தூதருக்கு அறிவிக்கின்றாரோ, அந்தச் சுரங்கத்திலிருந்து நேரடியாக, தாம் அறிவைப் பெறுவதாகக் கூறியுள்ளார்.
இப்னு அரபியிடத்தில் சுரங்கம் என்பது “அக்ல்" என்னும் அறிவும், மலக்கு எனும் கற்பனையுமாகும். இக்கற்பனை அறிவிற்கு ஏற்றதாக இருக்கிறது. என
இவர் கருதுகிறார் அதாவது தாம் கற்பனையின் மூலத்திலிருந்துது அறிவைப் பெறுவதாகவும் நபி, கற்பனையிலிருந்து தன் அறிவைப் பெறுவதாகவும் இப்னு அரபி கருதுகிறார். எனவே அவர் தன்னை, நபியைவிட மேலானவர் என்று நினைத்தார்.
தத்துவவாதிகள் கூறிய பண்புகள் தான் நபியுடைய பண்புகள் என்று வைத்துக் கொண்டால்கூட, இப்னு அரபி இடத்தில் அப்பண்புகள் கூட இல்லையே! எனவே, அவர் எப்படி நபியைவிட மேலானவராக ஆகமுடியும்? நபியாக ஆவதற்கு அவர்கள் கூறிய பண்புகள் சாதாரண மனிதர்களிடத்தில் கூட பார்க்க முடிகிறது. நபித்துவம் என்பது இவர்கள் கூறிய பண்புகளுக்கெல்லாம் அப்பாற்பட்டதாகும்.
இப்னு அரபி போன்றவர்கள் தங்களை சூஃபிய்யாக்கள் என்று கூறிப் பிதற்றுகின்றனர். ஆனால் இவர்கள் சாதாரண சூஃபிய்யாக்களாகக் கூட இல்லாமலிருக்கும்போது குர்ஆன், ஹதீஸின் வழி நடந்த ஷைக்குமார்களான. ஃபுளைல்பின் இயாள் (ரஹ்), இப்ராஹீம் பின் அத்ஹம் (ரஹ்), அபூசுலைமான் அத்தாரானி(ரஹ்), மஃருபுல்கர்கி(ரஹ்), ஜுனைதுல் பக்தாதி(ரஹ்), சஹ்ல் பின் அப்துல்லாஹ் அத்தஸ்தரி(ரஹ்) போன்ற உத்தமர்களின் குழுவில் உள்ளவராக இப்னு அரபி போன்றவர்கள் எப்படிக் கருதப்படமுடியும்? இப்னு அரபியைப் போன்றவர்கள் கிரேக்க தத்துவங்களைப் படித்த நாத்திகர்களான குஃபிய்யாக்களேயொழிய உண்மையான சூஃபிய்யாக்கள் அல்லர்.
குர்ஆன் கூறும் வானவர் (மலக்கு)களின் பண்புகள்
தத்துவாதிகள் கூறியதற்கு முற்றிலும் மாற்றமாகத் திருக்குர்ஆன் மலக்குகளைப் பற்றி பின்வருமாறு வர்ணித்துள்ளது.
ரஹ்மானான அல்லாஹ் தனக்குச் சந்ததியை எடுத்துக் கொண்டான் என்று (நிராகரிப்போர்)கூறினர், அவனோ மிகப்பரிகத்தமானவன். (மலக்குகள் அவனுடைய சந்ததிகள்) அல்லர். அவர்கள் (அவனுடைய) கண்ணியமிக்க அடியார்களாவர். அவர்கள் எந்த வார்த்தையையும் அல்லாஹ்வை மீறிப் பேசமாட்டார்கள். அவனுக்குப் பயந்து நடுங்கிக் கொண்டேயிருப்பார்கள். அல்லாஹ்வைத் தவிர நானும் வணங்கப்பட வேண்டியவன்தான் என்று அவர்களில் யாராவது கூறினால் அவனுக்கு நரகத்தையே நாம் கூலியாக கொடுப்போம். அக்கிரமக்காரர்களுக்கு இவ்வாறே நாம் கூலி கொடுப்போம். திருக்குர்ஆன் (21:26, 29).
மேலும் அல்லாஹ் கூறுகிறான் :-
வானங்களில் எத்தனையோ மலக்குகள் இருக்கின்றனர். அல்லாஹ் விரும்பி யாரைப்பற்றித் திருப்தியடைந்து, அவன் அனுமதி கொடுக்கின்றானோ, அவரைத் தவிர வேறு யாருக்காகவும் இவர்கள் பரிந்து பேசுவது எந்தப் பயனும் அளிக்காது. திருக்குர்ஆன் (21: 28)
மேலும் அல்லாஹ் கூறுகின்றான்:
வானங்களிலும், பூமியிலும் உள்ள யாவும் அல்லாஹ்விற்குரியவையே! அவனிடத்தில் இருக்கக்கூடிய மலக்குகள் அவனை வணங்காது பெருமையடிக்கவோ, சோர்வுறவோ மாட்டார்கள். அவர்கள் இரவு, பகல் இடைவிடாது அவனைத் துதி செய்து போற்றிக்கொண்டேயிருப்பார்கள் திருக்குர்ஆன் (21: 19,20).
மேலும் அல்லாஹ் கூறுகின்றான் :-
(நபியே!) நீங்களும் அல்லாஹ்வையன்றி எவற்றை நீங்கள் (தெய்வங்களாக) எண்ணிக் கொண்டீர்களோ, அவற்றை நீங்கள் அழைத்துப் பாருங்கள். வானங்களிலோ பூமிமிலோ அவற்றுக்கு ஒர் அணுவளவும் அதிகாரமில்லை. மேலும், அவ்விரண்டையும் படைப்பதில் அவற்றுக்கு எந்தப் பங்குமில்லை. அவற்றில் அவனுக்கு உதவியாளர்களும் யாருமில்லை, அவனிடம் அனுமதி பெற்றவர்களைத் தவிர (மற்றெந்த மலக்கும்) அவனிடத்தில் பிறருக்காகப் பரிந்து பேசுவதும் பயனளிக்காது. திருக்குர்ஆன் (34 :22).
மேற்கூறப்பட்ட வசனங்களில் அல்லாஹ் மலக்குகளின் தன்மைகளை விளக்கிக் கூறியுள்ளான்.
நபி இப்றாஹீம் (அலை) அவர்களிடம் வந்த மலக்கும், மர்யம் (அலை) அவர்களிடம் வந்த மலக்கும் மனித உருவிலேயே வந்தார்கள். திஹ்யதுல் கல்பி என்ற சஹாபியுடைய தோற்றத்திலும், காட்டரபியுடைய
தோற்றத்திலும் ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வருவார்கள். அப்போது எல்லா ஸஹாபாக்களும் அவர்களைக் காண்பார்கள்.
ஜிப்ரீல் (அலை) அவர்களின் பண்புகள்
ஜிப்ரீல் (அலை) அவர்கள் வலிமையுடையவர் என, அல்லாஹ் வர்ணித்துக் கூறுகிறான்:
ஜிப்ரீல் மிக்க வலிமையுடையவர், அர்ஷுடையோனிடத்தில் பெரும் மதிப்புடையவர், அவர் மலக்குகளின் தலைவரும், கீழ்ப்படிதலுக்குரியவருமாய் இருக்கிறார்.
திருக்குர்ஆன் (81: 20,21)
நபிகள்நாயகம்(ஸல்) அவர்கள் ஜிப்ரீல் (அலை) அவர்களை மேல் வானத்தில் பார்த்தார்கள்.
"நிச்சயமாக அவர், ஜிப்ரீலைத் தெளிவான
விளிம்பில் கண்டார்."திருக்குர்ஆன் (38 :23)
என அல்லாஹ் கூறுகின்றான். மேலும் ஜிப்ரீல் அலை அவர்களைப் பின்வருமாறு அல்லாஹ் வர்ணித்துக் கூறுகின்றான் :-
ஜிப்ரீல் (என்னும்) சக்தி வாய்ந்தவரே இந்த குர்ஆனை அவருக்குக் கற்றுக் கொடுக்கிறார். அவர் மிக்க சக்தியுடையவர். (தன் இயற்கையுருவத்தில்
நமது தூதரின் முன்) அவர் தோன்றினார். அவர் உயர்ந்த (வானத்தின்) ஒரு கோடியிலிருந்து (இறங்கி) நபியின் பக்கம் நெருங்கி, அவர் அருகே வந்தார்.
(வளைந்த) வில்லின் இருமுனைகளைப் போல், அல்லது அதைவிடச் சமீபமாக அவர் நெருங்கினார். (அல்லாஹ்) அவருக்கு அறிவித்ததையெல்லாம் அவனுடைய (நபியாகிய) அடியாருக்கு அவர் வஹீ மூலம் அறிவித்தார். நபியுடைய உள்ளம், தான் கண்டதைப் பற்றி பொய்கூறவில்லை. அவர் கண்ட விஷயத்தில் நீங்கள் சந்தேகித்து அவருடன் தர்க்கிக்கின்றீர்களா? நிச்சயமாக
அவர் மற்றொரு முறையும் ஜிப்ரீலை 'சித்ரத்துல் முன்தஹா" என்னும் இடத்தில் (மிஃராஜாக்குச் சென்றிருந்தபோது) பார்த்தார். சித்ரத்துல் முன்தஹா என்னும் இடத்தில் தான் 'ஜன்னத்துல் மஃவா' (சுவர்க்கம்) இருக்கிறது. சித்ரத்துல் முன்தஹா என்னும் மரத்தை சூழ வேண்டியவை அதனைச் சூழ்ந்து கொண்டன. (அதிலிருந்து அவருடைய) பார்வை விலகவுமில்லை. அவர் தன் இறைவனின் மிகப்பெரிய அத்தாட்சிகளை உண்மையாகவே கண்டார். திருக்குர்ஆன் (53 :5-18)
ஜிப்ரீல் (அலை) அவர்களை அவர்களுடைய சுயதோற்றத்தில் இரு முறைதான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பார்த்தார்கள்: ஒரு முறை
மிஃராஜாக்குச் செல்லும்போது; இரண்டாவது முறை சித்ரதுல் முன்தஹா என்னும் இடத்தில் வைத்து என, ஒரு ஸஹீஹான ஹதீஸில்வந்துள்ளது. (புகாரி, முஸ்லிம்)
ஜிப்ரீல் (அலை) அவர்களை ரூஹுல் அமீன் - நேர்மையான ஆன்மா என்றும், ரூஹுல் குதுஸ் - பரிசுத்த ஆன்மா என்றும் அல்லாஹ் வர்ணித்துக் கூறியுள்ளான். இதிலிருந்து, உயிரும், அறிவுமுள்ள படைப்புகளில் ஜிப்ரீல் (அலை) அவர்கள் மிகப் பெரியவர்கள் என்றும், அவர்கள் சுயமாக இயங்கிக் கொண்டிருக்கக் கூடியவர்கள் என்றும் தெரியவருகிறது. தங்களை இறைநேசர்கள் என்றும் நபிமார்களை விட அதிகம் தெரிந்தவர்கள் என்றும் கூறும் தத்துவவாதிகள் நம்புவது போன்று ஜிப்ரீல் என்பவர்கள் நபியின் உள்ளத்தில் எழும் கற்பனையல்லர் என்பது தெரியவருகிறது.
தத்துவவாதிகள் ஈமானின் அடிப்படைகளை மறுக்கின்றனர்
தத்துவவாதிகள் இவ்வாறு கூறுவதின் மூலம் ஈமானின் அடிப்படைகளான அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகள், வேதங்கள், தூதர்கள், மறுமைநாள் முதலியவற்றையும் நம்புவதை மறுக்கின்றனர். இறுதியாக இவர்கள் அல்லாஹ்வையே மறுக்கின்றனர். படைத்தவனும், படைக்கப்பட்டவையும் எல்லாம் ஒன்றுதான் என்று இவர்கள் நம்புகிறார்கள்.
படைத்தவனையும், படைக்கப்பட்டவற்றையும், இவர்கள் வேறுபடுத்துவதில்லை. (இவ்வாறு வேறுபடுத்துவதை ஷிர்க்காகக் கருதுகிறார்கள்)
உலகில் தோன்றியுள்ள படைப்புகள் எல்லாம் அவை தோன்றியிருக்கின்றன என்பதில் மட்டுமே கூட்டாக இருக்கின்றனவேயொழிய, வேறு எதிலும் அவை எல்லாம் ஒன்று என்று கூறமுடியாது. உதாரணமாக ‘இன்சான்' என்ற சொல்லிற்கு மனிதன் என்று பொருள். இன்சான் என்ற சொல் பொதுவான சொல்லாகும். இச்சொல்லில் உலகில் உள்ள எல்லா மனிதர்களும் எல்லா மிருகங்களும் அடங்கி
விடுகின்றன. மனிதனிடத்திலும் மிருகத்தன்மை இருக்கத்தான் செய்கிறது. ஆனால், அவனிடத்தில் உள்ள அத்தன்மை குதிரையிலுள்ள மிருகத்தன்மையைப் போன்றதன்று.
வானம் இருக்கிறது, மனிதனும் இருக்கிறான். இதனால் வானம் இருப்பதுதான் மனிதன் இருப்பதும் என்று கூறமுடியாது. காரணம் உண்டாகியிருக்கிறது என்பதில் மட்டுமே இரண்டும் கூட்டேயொழிய மற்றவைகளில் இரண்டும் வெவ்வேறு படைப்புகளாகும். இது போன்றுதான் படைத்தவன் உண்டாகியிருப்பதற்கும், படைக்கப்பட்டவை உண்டாகயிருப்பதற்குமிடையில் வேறுபாடு இருக்கிறது. எனவே, படைத்தவனும்
படைக்கப்பட்டவையும் ஒன்றுதான்
என்று ஒரு போதும் கூற முடியாது.
படைத்தவனும், படைக்கப்பட்டவையும் ஒன்றே, இரண்டும் வெவ்வேறானவைகள் அல்ல, என்று தத்துவவாதிகள் கூறுவதைத்தான் ஃபிர்அவ்னும்
கூறினான். கண் முன்னால் காணப்படுகின்ற
படைப்புக்களை அவன் மறுக்கவில்லை, ஆனால் இப்படைப்புகள் படைப்பவனின்றித்தானாகவே
உண்டாயின என்றுதான் கருதினான். தத்துவவாதிகளும் இவ்வாறுதான் கூறினார்கள். அது மட்டுமல்லாமல் படைத்தவனும், படைக்கப்பட்டவையும் எல்லாம் ஒன்றுதான் என்று கூறும்போது ஃபிர்அவ்ன் தான் அல்லாஹ் என்று
கூறவேண்டியதாகிறது. எனவே வழிகெட்ட ஃபிர்அவ்னை விட இவர்கள் மிகக் கீழ்த்தரமானவர்களாவர். மேலும் எல்லாம் ஒன்றே என்று கூறும்போது சிலைகளை வணங்கியவர்கள் அல்லாஹ்வையே வணங்கினார்கள் என்றுதானே இது
அறிவிக்கின்றது.
ஆட்சியும் அதிகாரமும் தன்கையில் இருந்ததினால் தான் ஃபிர்அவ்ன் ‘நான் உங்களுடைய பெரிய இறைவன்' என்று மக்களிடம் கூறி வந்தான். அதாவது ஏதோ ஒரு விதத்தில் எல்லோருமே இறைவனாக
இருந்தாலும், வெளிப்படையில் உங்களை அதிகாரம் செய்கின்ற பொறுப்பு என்னிடம் இருப்பதாலேயே நான் உங்களுடைய பெரிய இறைவன் என்று ஃபிர்அவ்ன் கூறினான். இதைச் சரியென்று ஃபிர்அவ்னுடைய சூனியக் காரர்கள் ஒப்புக் கொண்டனர் எனவே, உன்னால் இயன்றதை நீ செய்து கொள் நீ செய்யக் கூடியதெல்லாம் இவ்வுலக வாழ்க்கையில்தான் (20:22) என்று அல்லாஹ்வை நம்பியவர்கள் கூறினார்கள். எனவே. ஃபிர்அவ்ன் 'நான்தான் பெரிய இறைவன்' என்று கூறியது சரிதான் என்று தத்துவவாதிகள் கூறி ஃபிர்அவ்னை இறைவனாக ஆக்கிவிட்டனர்.
மேலும், இந்தத் தத்துவவாதிகள் மறுமை நாளை மறுத்தார்கள். சுவர்க்கவாசிகள் சுகம் அனுபவிப்பதைப் போன்று நரகவாசிகளும் சுகம் அனுபவிப்பார்கள் என்று இவர்கள் நம்புகிறார்கள். இதனால் அவர்கள் மறுமை நாளையும், அல்லாஹ்வின் மலக்குகளையும், அவனது தூதர்களையும் நம்பாத காஃபிர்களாக ஆகிவிடுகிறார்கள். இவர்கள் தங்களை இறைநேசர்களில் மிகச் சிறந்தவர்கள் என்றும், நபிமார்களைவிட தகுதியில் உயர்ந்தவர்கள் என்றும் கூறிக்கொண்ட போதிலும், இவர்கள் அல்லாஹ்விடத்தில் இறை நிராகரிப்பாளர்களாகவே கருதப்படுவார்கள்.
தத்துவவாதிகளின் நாத்திகத்தையும், இறை நிராகரிப்பையும் இங்கு விளக்க விரும்பவில்லை. என்றாலும் இறைநேசர்களைப் பற்றியும், இறைநேசர்களுக்கும், ஷைத்தானின் தோழர்களுக்குமிடையிலுள்ள
வேறுபாட்டைப் பற்றியும் இங்கு விளக்க வேண்டிய அவசியம் ஏற்பட்ட போது, தத்துவவாதிகளைப் பற்றிய சில விளக்கங்களையும் இங்கு குறிப்பிட்டேன்.
ஏனென்றால், கிரேக்கத் தத்துவங்களைப்ப டித்தவர்கள் தங்களைப் பெரிய இறைநேசர்கள் என்று கூறிப் பிதற்றுகின்றனர். ஆனால், இவர்களோ ஷைத்தானுடைய தோழர்களில் மிகச் சிறந்தவர்களாய் இருக்கிறார்கள். எனவே. இவர்களுடைய அதிகமான பேச்சுக்களும் அவர்களுடைய ஷைத்தானிய நிலையில் கூறப்பட்டவையே!
இப்னு அரபி என்பவர் தனது ”அல்புதூஹாதுல் மக்கிய்யா” என்ற புத்தகத்தில் “உண்மை பூமியைப் பற்றிப் பேசும் பாடம்" என்று ஒரு பாடத்தைக் கூறியுள்ளார். இதன் விளக்கத்தை அவருடைய தோழர்கள் கூறும் போது அதுதான் கற்பனை பூமி என்று கூறுகின்றனர். தங்களின் உள்ளங்களில் தோன்றும் கற்பனையைத் தான் ஹகீகத் என்று இவர்கள் நம்புகின்றனர். ஆனால், கற்பனையோ ஷைத்தானுடைய உறைவிடமாக இருக்கிறது. ஷைத்தான் தான் காரியங்களை அதற்கு நேர்மாற்றமாகக் கற்பனை செய்து மனிதர்களுக்குக் காண்பிப்பான்.
இதை அல்லாஹ் பின்வரும் வசனங்களில் விளக்குகிறான்:
எவன், ரஹ்மானான அல்லாஹ்வுடைய நல்லுபதேசத்திலிருந்து தன் கண்ணை மூடிக் கொள்கின்றானோ, அவனுக்கு நாம் ஒரு ஷைத்தானை(த் தோழனாக)ச் சாட்டி விடுவோம். அவன் அவனுக்கு இணைபிரியாத தோழனாக ஆகிவிடுகிறான். நிச்சயமாக அந்த ஷைத்தான்கள் அவர்களை நேரான பாதையிலிருந்து தடுத்து விடுகின்றனர். ஆனால், அவர்களோ தாங்கள் நேரான
பாதையில் இருப்பதாகவே எண்ணிக் கொள்கிறார்கள். அவர்கள் நம்மிடம் வந்த பின்னரோ அவர்களில் ஒருவர் மற்றவரை நோக்கி எனக்கும் உனக்குமிடையில் உதய கோடிக்கும், அஸ்தமன கோடிக்குமிடையில் உள்ள தூரம் இருந்திருந்தால் நன்றாயிருந்திருக்குமே என்றும் (எங்களை வழிகெடுத்த எங்களுடைய) இந்தத்
தோழன் மிகக்கெட்டவன் என்றும் கூறுவார்கள்.
அப்போது (அவர்களை நோக்கி) நீங்கள் அநியாயம் செய்ததின் காரணத்தால் இன்றைய தினம் உங்களுக்கு (எதுவும் பயனளிக்காது) நிச்சயமாக நீங்கள் வேதனையை அனுபவிப்பதில்
(அந்த ஷைத்தான்களுக்குக்) கூட்டானவர்களாக, இருக்கிறீர்கள். திருக்குர்ஆன் (43: 36-39)
மேலும், அல்லாஹ் கூறுகின்றான் :-
நிச்சயமாகத் தனக்கு இணைவைப்பதை அல்லாஹ் மன்னிக்கவே மாட்டான். இதனைத் தவிரவுள்ள (பாவத்)தைத் தான் விரும்பியவர்களுக்கு மன்னிப்பான்.
எனவே, அல்லாஹ்வுக்கு இணைவைக்கக் கூடியவன்
வெகு தூரமான வழிகேட்டிலேயே இருக்கின்றான்... ஆகவே, எவன் அல்லாஹ்வையன்றி ஷைத்தானை தனது தோழனாக எடுத்துக் கொள்கின்றானோ, அவன்
நிச்சயமாகப் பகிரங்கமான நஷ்டத்தை அடைந்து
விட்டான். அந்தஷைத்தான் அவர்களுக்கு வாக்களிக்கிறான். அவர்களுக்குப் பொய் நம்பிக்கையையும் ஊட்டுகிறான். ஆனால், ஷைத்தான் ஏமாற்றுவதற்கன்றி வேறு எதற்கும் அவர்களுக்கு வாக்களிப்பதில்லை". திருக்குர்ஆன் (4 :116,120)
மேலும் அல்லாஹ் கூறுகிறான் :-
குற்றவாளிகளைப் பற்றி (மறுமையில்) தீர்ப்புக் கூறப்பெற்றதின் பின்னர், ஷைத்தான் (அவர்களை நோக்கி) "நிச்சயமாக அல்லாஹ் (இவ்வேதனையைத் தருவதாக) உங்களுக்கு உண்மையாகவே வாக்களித்திருந்தான். (அதை நிறைவேற்றியும் விட்டான்) நானும் உங்களுக்கு (பொய்யாக) வாக்களித்தேன். ஆனால் நான் அவ்வாக்குறுதிக்கு மாறு செய்து (உங்களை வஞ்சித்து) விட்டேன்.
நான் உங்களை (வழிகேட்டின் பால்) அழைத்தேன். நீங்கள் என்னைப் பின்பற்றினீர்களே தவிர, உங்கள் மீது எனக்கு எந்த அதிகாரமும் இருக்கவில்லை. எனவே, உங்களை நீங்களே நிந்தித்துக் கொள்ளுங்கள். (இப்போது), நான் உங்களுக்கு எந்த உதவியும் செய்யமுடியாது. இதற்கு முன்னர்
(உலகத்தில்) நீங்கள் என்னை (அல்லாஹ்வுக்கு) இணையாக்கிக் கொண்டிருந்ததை நிச்சயமாக நான் நிராகரித்துவிட்டேன், நிச்சயமாக அநியாயக்
காரர்களுக்கு துன்புறுத்தும் வேதனையுண்டு" என்று கூறுவான். திருக்குர்ஆன் (14 :22).
மேலும் அல்லாஹ் கூறுகின்றான் ஷைத்தான், அவர்களுடைய (தீய) செயல்களை அவர்களுக்கு அழகாகக் காண்பித்து; ‘எந்த மனிதராலும் இன்று உங்களை வெல்ல முடியாது. நிச்சயமாக நானும் உங்களுக்கு (ப் பக்க) பலமாக நிற்பேன்’ என்று கூறிக்
கொண்டிருந்ததையும் (நபியே!) நீர் நினைத்துப்பாரும். (இவ்வாறு கூறிக் கொண்டிருந்த) அவன், இருபடைகளும் நேருக்கு நேர் சந்தித்த போது; புறமுதுகு காட்டி ஓடிப் பின்சென்று, "நிச்சயமாக நான் உங்களை விட்டும் விலகிக் கொண்டேன். நீங்கள் பார்க்க முடியாத ஒன்றை நான் பார்க்கிறேன். நிச்சயமாக நான் அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறேன். வேதனை செய்வதில் அல்லாஹ் மிக்
கடுமையானவன் என்றுகூறினான்". திருக்குர்ஆன் (8 :48),
இறைநேசர் (மூமின்)களுக்கு மலக்குகளின்
உதவி
பத்ருப் போரில் ஜிப்ரீல் (அலை) அவர்கள், பிற மலக்குகளுக்குப் போர் செய்யும் முறையைச் சொல்லிக் கொடுப்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பார்த்தார்கள். என ஒரு ஸஹீஹான ஹதீஸில் வந்துள்ளது. (முவத்தா)
அல்லாஹ் தன் நல்லடியார்களுக்குத் தனது மலக்குகளை அனுப்பி ஆதரவு அளிப்பதை ஷைத்தான்கள் பார்க்கும் போது, அவ்விடத்தை விட்டு வெருண்டோடுகின்றனர். மூமினான தன் நல்லடியார்களுக்கு மட்டும் அல்லாஹ் மலக்குகளை அனுப்பி உதவி புரிகிறான். இதை அல்லாஹ் பின்வரும் வசனங்களில் விளக்குகிறான்.
நிச்சயமாக நான் உங்களுடன் இருக்கிறேன். எனவே, நீங்கள் இறை விசுவாசிகளை உறுதிப்படுத்துங்கள் என்று மலக்குகளிடத்தில் உமது இறைவன் அறிவித்ததை (நபியே!) நீர்நினைத்துப்பாரும்"
திருக்குர்ஆன் (8 :12),
விசுவாசிகளே! உங்கள் மீது அல்லாஹ் புரிந்திருக்கும் அருட்கொடைகளை நினைத்துப் பாருங்கள். உங்கள் மீது (விரோதிகளின்) படைகள் அணி அணியாகப் படையெடுத்து வந்த சமயத்தில், புயல் காற்றையும் உங்கள் கண்ணுக்கு புலப்படாத படைகளையும் அவர்கள் மீது நாம் அனுப்பினோம்." திருக்குர்ஆன் (33 :9)
தன்னுடன் (குகையில்) இருந்த தோழ(ராகிய அபூபக்க)ரை நோக்கி; 'நீர் கவலைப்படாதீர், நிச்சயமாக அல்லாஹ் நம்முடன் இருக்கிறான்" என்று அவர் ஆறுதல் கூறிய பின்னரும் அல்லாஹ் அவருக்கு தன்னுடையசாந்தியை அளித்தான். நீங்கள் காண முடியாத படைகளைக் கொண்டு அவருக்கு
உதவியும் செய்தான். திருக்குர்ஆன் (9 :40),
(நபியே!) நீர் இறை விசுவாசிகளை நோக்கி, (வானத்திலிருந்து) அனுப்பப்பட்ட மூவாயிரம் மலக்குகளைக் கொண்டு, உங்கள் இறைவன். உங்களுக்கு உதவி செய்வது உங்களுக்குப்
போதாதா? என்று கூறியதையும் நினைத்துப் பாரும். ஆம், நீங்கள் (அல்லாஹ்வுக்கு) அஞ்சி, பொறுமையுடன் இருந்தால், இதே சமயத்தில் அடையாளம் போடப்பட்ட ஐயாயிரம் மலக்குகளைக்
கொண்டு உங்கள் இறைவன் உங்களுக்கு உதவி செய்வான். திருக்குர்ஆன்(3 :124,125)
ஷைத்தானின் உரையாடல்:
சிலைகள், நட்சத்திரங்களை வணங்குகிறவர்களிடத்தில் ஷைத்தான் களுடைய ஆத்மாக்கள் வந்து உரையாடுவது போல் தத்துவவாதிகளிடத்திலும் ஜின், ஷைத்தான்களின் ஆவிகள் வந்து உரையாடும். அவ்வாறு உரையாடும் ஷைத்தான்களை மலக்குகள் என்று இவர்கள் எண்ணிக் கொள்கிறார்கள்.
இது போன்ற கொள்கைகளை இஸ்லாத்தில் முதல் முதலாகப் புகுத்தியவன் முக்தார் பின் அபீ உபைது அத்ஃதகபி என்பவனாவான்.
இவனைப் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு ஸஹீஹான ஹதீஸில் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.
தஃகீப் வம்சத்தில் ஒரு பொய்யனும். ஓர் அக்கிரமக்காரனும் தோன்றுவார்கள் எனக் கூறி, முன் அறிவிப்புக் கொடுத்துள்ளார்கள். (முஸ்லிம்)
முக்தார் பின் அபீ உபைது அத்ஃதகபி என்பவன் தன்னை நபி எனக் கூறி வாதாடிய பொய்யனாகவும், ஹஜ்ஜாஜ் பின் யூசுபு என்பவன் அக்கிரமக்காரனாகவும் இருந்தார்கள். இவ்விருவரும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய தஃகீப் வம்சத்தைச் சார்ந்தவர்களாவர்.
“முக்தார் பின் அபீ உபைது அத்ஃதகபி என்பவன் தனக்கு வானத்திலிருந்து செய்தி வருவதாக வாதாடுகின்றானே இதைக் குறித்து என்ன சொல்கிறீர்கள்?” என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமும், அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமும் கேட்கப்பட்டபோது. “ஆம்! அவன் கூறியது உண்மைதான். ஷைத்தான் அவனுக்கு வானத்திலிருந்து செய்தியைக் களவு செய்து கொண்டு வருகின்றான்” என்று கூறி பின்வரும் வசனத்தை ஓதினார்கள்.
(விசுவாசிகளே!) யார் மீது ஷைத்தான்கள் இறங்குகின்றனர் என்பதை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? பொய் சொல்லும் ஒவ்வொரு பாவியின் மீதும் இறங்குகின்றனர். திருக்குர்ஆன்(26: 221,222),
மற்றொரு தடவை இவ்வாறேஇப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டபோது, பின்வரும் இறை வசனத்தை ஓதினார்கள்.
உங்களுடன் தர்க்கிக்குமாறு, நிச்சயமாக ஷைத்தான்கள் தங்களுடைய நண்பர்களைத் தூண்டுகின்றனர் திருக்குர்ஆன் (8:12)
இது போன்ற ஷத்தானிய ஆத்மாக்களைத்தான், தனக்கு செய்தி கொண்டுவரும் ஆத்மாவாக
இப்னு அரபி என்பவர் கருதினார். அவர் எழுதிய '“அல்புதூஹாத்துல் மக்கிய்யா” என்ற நூலில் எழுதியுள்ளவை இந்த ஆத்மா கொண்டு வந்த விஷயங்களேயாகும் எனவும் கருதியுள்ளார். எனவே சில குறிப்பிட்ட உணவுகளை உண்டு, பலவகையான (கல்வத்) தனி அறைகளில் தனியாக இருந்து தியானித்தல் என்பதைத் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு சில குறிப்பிட்ட
உணவுகளை உண்டு கல்வத்களில் (தனிமையில்) இருக்கும்போது ஜின் ஷைத்தான்களோடு தொடர்பு ஏற்படுகிறது. இதை அவ்லியாக்களின் கராமத் என்று
இவர்கள் எண்ணி விடுகின்றனர். அவை ஷைத்தானிய
நிலைகளாகும் என்பதை இவர்கள் அறிவதில்லை.
இது போன்ற ஷைத்தானிய நிலைகளையுடைய சிலரை நான் நன்றாக அறிவேன். இவர்களில் சிலரை ஷைத்தான்கள் காற்றில் தூக்கிச் சென்று தொலைவிலுள்ள குறிப்பிட்ட சில இடங்களுக்கு கொண்டு சென்று விட்டுத் திரும்பக் கொண்டு வந்துவிடும். வேறு சிலருக்கு ஷைத்தான் சில
இடங்களிலிருந்து பணத்தைக் களவு செய்து
கொண்டு வந்து கொடுக்கும், வேறு சிலருக்கு ஷைத்தான் களவு போன பொருள இருக்கும் இடத்தை அறிவித்துக் கொடுக்கும் அப்போது மக்கள் அவருக்கு அன்பளிப்புக் கொடுப்பார்கள். இது போன்ற செயல்களைக் கராமத் என இவர்கள் நினைத்துக் கொள்கின்றனர்.
இப்னு அரபி என்பவர் நபிமார்களை குறை கூறினார்
இவர்களுடைய இந்நிலைகள் ஷைத்தானிய நிலைகளாக இருப்பதின் காரணத்தினால் தான் இறைத்தூதர்கள் கூறிய போதனைகளுக்கு மாறாகக் கூறியுள்ளார்கள். ஃபுசூசுல் ஹிகம், அல்புதூஹாத்துல் மக்கிய்யா போன்ற இப்னு அரபியுடைய நூல்களில், நபி நூஹ் (அலை) நபி ஹுத் (அலை) இவர்களின் கூட்டத்தினரான காபிர்களையும் ஃபிர்அவ்னையும் புகழ்ந்து கூறியுள்ளார். நூஹ் (அலை)? இப்ராஹீம் (அலை), மூஸா (அலை), ஹாரூன் (அலை) போன்ற இறைத்தூதர்களை குறை கூறியுள்ளார். முஸ்லிம்களிடையே புகழப்பட்ட உண்மையான இறை நேசர்களான ஜுனைதுல் பக்தாதி (ரஹ்), ஸஹல்பின் அப்துல்லா அக் தஸ்திரி (ரஹ்) போன்றவர்களைக் கேவலமாகப் பேசியுள்ளார். முஸ்லிம்களால் இகழப்பட்ட ஹல்லாஜ் போன்றவர்களைப் புகழ்ந்து பேசுகிறா். இவ்விஷயங்களை இப்னு அரபி தனது ஷைத்தானிய கற்பனை உதிப்புகளில் குறிப்பிடுகிறார்.
ஜுனைதுல் பக்தாதி (ரஹ்) அவர்கள் நேர்வழி சென்ற சீரிய இமாம்களில் ஒருவராகத் திகழ்ந்தார்கள். தவ்ஹீதைப் பற்றி அவர்களிடத்தில் கேட்கப்பட்ட போது படைத்தவனையும், படைக்கப்பட்டவற்றையும் வேறுபடுத்திக் காட்டுவது தான் தவ்ஹீத் என்று கூறினார்கள். இதை இப்னு அரபி தனது ஃபுகுசுல்ஹிகம் என்ற நூலில் மறுத்து, தனது ஷைத்தானிய கற்பனை உரையாடலில்
பின்வருமாறு கூறுகிறார்:
ஜுனைதே! படைத்தவனையும்,
படைக்கப்பட்டவற்றையும் மூன்றாவது
ஒருவனல்லாமல் பிரித்துக் காட்டமுடியுமா படைத்தவனையும் படைப்பினங்களையும் வேறுபடுத்திக் காட்டியதால் ஜுனைத் தவறிவிட்டார் என்பதாகக் குறிப்பிடுகிறார்.
ஏனென்றால் இப்னு அரபியிடத்தில் படைத்தவனும். படைக்கப்பட்டவையும் ஒன்றுதான், காண்பதெல்லாம் கடவுள்தான் என்பதே இவர் கொள்கை. எனவே அல்லாஹ்வின் திருநாமங்களில் ஒன்று ‘அல் வலிய்யு’ என்ற நாமத்தைப் பற்றிக் கூறும்போது எங்கும் அவனாகவே இருக்க அவன் யார் மீது உயர்ந்தவன்?, எதிலே உயர்கிறான்? அவன் அவனாகவே இருக்கிறான். அவன் தன் மீது உயர்வதென்பது பிரபஞ்சத்தில் காணப்படுகின்ற தோன்றியிருக்கின்ற படைப்புக்களேயாகும். புதிதாக தோன்றியவை என்று கூறப்படுகிற படைப்பு(சிருஷ்டி)களும் தன்னில் உயரந்தவைதாம் அப்படைப்புகளும் அவன் தான். இவ்வாறிருக்க அவன் யார் மீது உயர்ந்தவன்? உள்ளே உள்ளதும் அவன்தான். வெளியில் காணப்படுவதும் அவன்தான். காண்கிறவர்கள் அவனையே காண்கிறார்கள். யார் படைத்தவனைப் பற்றிப் பேசுகிறாரோ. அவரும் படைத்தவனாகவே இருக்கிறார். அபூசமீதுல் கர்ராஸ் என்ற பெயர் உள்ளவரும் அவன்தான். எல்லாமே அவன் தான் என்று இப்னு அரபி தனது 'ஃபுசூசுல்ஹிகம்"என்ற நூலில் கூறியுள்ளார்.
இந்நாத்திகக் கொள்கையுடையவருக்குக் கூறவேண்டியது என்ன வென்றால் இரு பொருள்களுக்கிடையில் அறிவாலோ அல்லது சொல்லாலோ வேறுபடுத்திக் காட்டக்கூடியவன் அவ்விரு பொருளில் ஒன்றல்லாமல் மூன்றாவது ஒருவனாக இருக்க வேண்டும். அதே நேரத்தில் இருமனிதர்கள் ஒருவர் மற்றவரை தன்னை விட்டும் பிறித்தறிவதற்கு மூன்றாவது ஒருவர் தேவைப்படுவதில்லை. மனிதர்களில் ஒவ்வொருவரும் தனக்கும் மற்றவருக்குமிடையில் வேறுபடுத்தி அறிகிறான். சர்வ வல்லமையுள்ள அல்லாஹ் தனக்கும் தன்னுடைய சிருஷ்டிகளுக்குமிடையில் வேறுபடுத்தி அறிகிறான். தான் அவர்களுடைய இரட்சகன்
என்றும், அவர்கள் தனது அடியார்கள் என்றும் அறிகிறான். இதைத் திருக் குர்ஆன் பல இடங்களில் தெளிவுபடுத்தியுள்ளது. அகத்திலும் புறத்திலும் குர்ஆனை ஏற்றுக் கொண்ட உண்மை விசுவாசிகளே அதன் ஆதாரங்களை ஏற்றுக் கொள்வார்கள்.
குர்ஆன் முழுவதும் ஷிர்க் என்று கூறும் கூட்டம்
இந் நாத்திகவாதிகள் தங்களின் குருவான “தில்மஸானி” என்பவனுடைய கொள்கையையே
பின்பற்றினார்கள். இவனுடைய கொள்கையையே மற்றவர்களும் நம்பினார்கள். இவனிடத்தில் இப்னு அரபி எழுதிய புசுசுல்ஹிகம் என்ற நூலைப்
படித்துக் காண்பித்து. இது குர்ஆனுக்கு முற்றிலும் மாறுபட்டதாகவல்லவா இருக்கிறது? என்று கேட்கப்பட்டபோது “குர்ஆன் முழுவதும் ஷிர்க்காக இருக்கிறது. நாங்கள் கூறுவதுதான் தவ்ஹீது" என்று கூறினான். மேலும் அவனிடம் படைத்தவனும் படைக்கப் பட்டவையும் ஒன்றுதான், தோன்றியுள்ள எல்லாம் ஒன்றே, இரண்டு என்பதற்கே வழியில்லை என்று கூறுகிறீர்களே, அப்படியானால் ஏன் மனைவியோடு உறவாடுவதை ஹலாலாகவும், சகோதரியை ஹராமாகவும் ஆக்கப்பட்டுள்ளது? என்று கேட்கப்பட்ட போது, எல்லாமே எங்களுக்கு ஹலால்தான்; எதுவுமே எங்களுக்கு ஹராமானதாக இல்லை. திரையிடப்பட்டவர்கள் (மறைவானவற்றை அறியாதவர்கள்) சில விஷயங்களை ஹராம் என்று கூறுவார்களானால், அது அவர்களுக்குத்தான் ஹராமேயொழிய எங்களுக்கல்ல; எங்களுக்கு எல்லாமே ஹலால்தான் என்று கூறினான்.
இவ்வாறு இவன் கூறுவது பெரிய நிராகரிப்பாக இருப்பதுடன். வெளிப்படையில் இக்கூற்று முன்னுக்குப்பின் முரணானதாகவும் இருக்கிறது அதாவது இவன் கூறுவது போன்று எல்லாமே ஒன்றாக இருந்தால், திரை யார்? திரையிடப்பட்டவர்கள் யார்? எல்லோரும் எல்லாவற்றையும் காண முடியுமே.
எனவே, இக்கூட்டத்தினுடைய ஷைகு தனது முரீதுகளிடத்தில் இப்பிரபஞ்சத்தில் அல்லாஹ்வைத் தவிர வேறு பொருள் உண்டு என்று யாராவது உன்னிடத்தில் கூறினால், அவன் பொய் சொல்லி விட்டான் என்று கூறினார். அப்போது எல்லாமே
அல்லாஹ்வாக இருந்தால். அந்தப் பொய் சொல்லக் கூடியவன் யார்? என்று முரீது ஷைக்கிடத்தில் கேட்டபோது அதற்கு பதில் கூறமுடியாமல் ஷைக் திகைத்தார்.
மற்றொரு ஷைகு, தன் முரீதிடத்தில் காணப்படுகின்றவையாவும் அல்லாஹ்வுடைய வெளிப்பாடாகவே இருக்கிறது என்று கூறினார். அப்போது வெளிப்பாடாக இருப்பதும் வெளியாக்கியவனும் வெவ்வேறா? அல்லது அவ்விரண்டும் ஒன்றா? இரண்டும் வெவ்வேறென்றால் அவ்விரண்டிற்குமிடையிலுள்ள வேறுபாட்டை ஏற்றுக் கொண்டீர்கள். ஒன்று என்றால், இரண்டிற்குமிடையில் வேறுபாடில்லையே? என்று முரீது கூறினார்.
இது போன்ற மூடக் கொள்கையுடையவர்களின் இரகசியங்களை வேறு நூற்களில் விரிவாக விளக்கியுள்ளேன்!
எல்லாம் இறைவன் என்னும் கூற்று
படைத்தவனும் படைக்கப்பட்டவையும் ஒன்றுதான் என்று சொல்லக்கூடியவர்கள் 'ஹுலூல்' என்று சொல்லக் கூடிய படைத்தவன் படைக்கப்பட்டவற்றில்
புகுந்து விட்டான் என்று நம்பக்கூடிய கூட்டத்துடன் சேருவதில்லை. காரணம் நுழைந்தது நுழைக்கப்பட்டது என்று இரு வெவ்வேறான பொருள்களாக ஆகிவிடுகிறது. இது அவர்களுடைய எல்லாம் ஒன்றுதான் என்ற கொள்கைக்கு மாற்றமானதாகும்?
இவ்வாறே 'இத்திஹாத்' என்ற சொல்லைவிட்டும் வெருண்டோடுகிறார்கள். அதாவது படைத்தவன் படைக்கப்பட்டவற்றுடன் நீருடன் கலந்த சீனி போன்று பிரித்தறிய முடியாத அளவிற்கு ஒன்றோடொன்று கலந்து எங்கும் வியாபித்திருக்கிறான், என்று நம்பும் கூட்டத்தினருடனும் சேருவதில்லை, காரணம் இரண்டு பொருட்கள் இருந்தால் தானே ஒன்றோடொன்ற கலக்க முடியும்? இவர்களின் கொள்கையில் இரண்டு
என்பதற்கே இடமில்லையே, எல்லாம் இறைவன் என்பது தான் இவர்களின் கொள்கை.
கிருஸ்தவர்கள் நபி ஈஸாவை அல்லாஹ் என்று நம்பியதனாலேயே காபிர்களாகக் கருதப்பட்டார்கள். எல்லாம் அல்லாஹ் என்று நம்பியிருப்பார்களானால், காபிர்களாகக் கருதப்பட்டிருக்க மாட்டார்கள் என்று இந்த நாத்திகர்கள் கூறுகிறார்கள்.
இவ்வாறே, சிலைகளை வணங்கியவர்கள் சிலைகளை மட்டும் வணங்கியதாலேயே தவறி விட்டார்கள். எல்லாவற்றையும் வணங்கியிருப்பார்களானால், தவறியிருக்கமாட்டார்கள், என்றும் கூறுகின்றனர். இவர்களைப் பொறுத்தவரை ஒரு பெரிய அறிவுள்ள ஞானி சிலை வணக்கம் புரிவதில் எந்தத் தவறுமில்லை. இவர்களுடைய இக்கூற்றுக்கள் மாபெரும் இறை நிராகரிப்பாக இருப்பதுடன் முன்னுக்குப்பின் முரணான வையாகவும் இருக்கின்றன
ஆனால், இந்நாத்திகர்கள் கூறுகிறார்கள் :-
எந்தெந்த இழுக்கான பண்புகளால் படைப்புகளை வர்ணிக்கிறாமோ அந்தப் பண்புகளால் அல்லாஹ்வும் வர்ணிக்கப்படுகிறான்.
இவ்வாறே எந்தெந்த பரிபூரணமான தூய்மையான பண்புகளால் அல்லாஹ் வர்ணிக்கப்படுகிறானோ, அவ்வாறே படைப்புகளும் வர்ணிக்கப் படுகிறார்கள் என்று!
அல்லாஹ் தனக்குத்தானே உயர்ந்தவன் என்பதின் பொருள் என்ன வெனில், உண்டாயிருக்கிற எல்லாவிதமான பண்புகளையும் அல்லாஹ்
தன்னில் கொண்டுள்ளான். அப்பண்புகள் மனிதர்களின் பழக்கத்திலும் அறிவிலும் ஷரீஅத்திலும் புகழப்பட்டாலும் சரி. இகழப்பட்டாலும் சரி. இத்தன்மை அல்லாஹ் ஒருவனுக்கே சொந்தமானது" என்ற தவறான கொள்கையை இப்னு அரபி தனது 'ஃபுசூசுல் ஹிகம்' என்ற நூலில் கூறியுள்ளார். இக்கூற்று இறை நிராகரிப்பாக இருப்பதுடன். முன்னுக்குப் பின் முரணானதாகவும் இருக்கிறது. ஏனென்றால், புகழுக்குரிய பண்புகளும், இகழுக்குரிய பண்புகளும் ஒன்றானவை அல்ல; வேறுபட்டவையாகும். என்பதைச் சாதாரண மனிதனும் அறிந்து கொள்ள முடியும்.
புத்திக்குப் பொருந்தாத சில விஷயங்கள் எங்களுக்கு வெளிப்பட்டுள்ளன. அவற்றை யாராவது அறிய விரும்பினால், புத்தியையும், ஷரீஅத்தையும் எடுத்தெறிந்துவிட்டு எங்களிடம் வரட்டும் என்று இவர்களில் முக்கியமானவனான தில்மசானி என்பவன் கூறியுள்ளதையே அவனுடைய சீடர்களான மேலே குறிப்பிடப்பட்டவர்களும் கூறுகின்றனர்.
இவர்களைச் சார்ந்த ஒருவனிடத்தில்
நான் கூறியதாவது நபிமார்களுக்கு எந்த விஷயங்கள் வெளிப்படுத்தப்பட்டனவோ அவை மற்றவர்களுக்கு வெளிப்படுத்தப்பட்ட விஷயங்களைவிட பெரிய விஷயங்களாகும், என்பது எல்லோரும் அறிந்த ஒன்றாகும். நபிமார்கள் அறிவித்தவைகள் மற்றவர்கள்
அறிவித்த விஷயங்களை விட மிக உண்மையான விஷயங்களுமாகும்.
மனிதர்களுடைய அறிவினால் அறிய இயலாத சில விஷயங்களை நபிமார்கள் அறிவித்துள்ளார்கள்.
அதே நேரத்தில் ஒரு விஷயத்தை இது முடியாத காரியம் என்று தங்கள் அறிவின் மூலம் தீர்மானித்த விஷயங்களை நபிமார்கள் கூறவில்லை. புத்திக்குப் பொருந்தக் கூடிய விஷயங்களைக் கூறுவார்களேயொழிய, புத்திக்குப் புரியாத விஷயங்களைக் கூறுவதில்லை. புத்திக்குப்
பொருந்தாத எந்த விஷயமும் இறைதூதர்கள் அறிவித்தவற்றில் இருக்கமுடியாது. உறுதியான இரு ஆதாரங்கள் ஒன்றுக்கொன்று முரணானவையாக இருக்க முடியாது. அந்த ஆதாரங்கள் அறிவு கூறும் ஆதாரங்களாக இருந்தாலும் சரி, தெய்வீக ஆதாரமாக இருந்தாலும் சரியே. அல்லது, ஒன்று அறிவியல் ஆதாரமாகவும், மற்றொன்று தெய்வீக ஆதாரமாகவும் இருப்பினும் சரியே. இவ்வாறிருக்க, அறிவிற்கும், ஷரீஅத்திற்கும் முரணான விஷயங்கள் தனக்கு வெளியாக்கப்படுவதாகக் கூறக் கூடியவனை
எவ்வாறு நம்ப முடியும்?
சில சந்தர்ப்பங்களில் இவர்கள் வேண்டுமென்றே பொய் கூறுவதில்லை. ஆனால் இவர்களுடைய உள்ளங்களில் சில விஷயங்கள் கற்பனையாக எழும். அதை உண்மை என நம்பிவிடுகின்றனர். சில
விஷயங்கள் வெளிப்படையில் நடப்பதாகக் காணும்போது அவை நல்லவர்களின் கராமத் என்பதாக எண்ணி விடுகிறார்கள். ஆனால் அவை ஷைத்தான்களின் சதிமோசத்தால் ஏற்படுபவை என்பதை இவர்கள் அறிவதில்லை
நபித்துவம் முற்றுப் பெறவில்லையா?
எல்லாம் ஒன்று, எல்லாம் இறைவன் என்ற கொள்கையுடையவர்கள், அவ்லியாக்கள் என்ற இறைநேசர்கள் என்போர், நபிமார்களைவிடச் சிறந்தவர்களாவர் என்றும் நுபுவ்வத் முற்றுப் பெறவில்லை என்றும் கூறுகின்றனர். இவ்வாறு இப்னு சப்யீன் என்பவரும் மற்றவர்களும் நம்புவதாகக் கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு மனிதனுக்கும் மூன்று விதமான நிலைகள் உள்ளன என்று கூறுகின்றனர். அவன் தன் முதல் நிலையில் வழிபடவும் செய்கிறான், பாவமும் செய்கிறான். அடுத்த நிலையில் வழிபடுகிறான், பாவம் செய்வதில்லை. மூன்றாவது நிலையில் வழிபடுவதுமில்லை, பாவம் செய்வதுமில்லை என்பதாக மனிதனின் நிலையைப் பிரிக்கின்றனர். முதல்நிலை உண்மையான நிலை. அதாவது வழிப்பாட்டையும், பாவங்களையும் வேறுபடுத்தி அறியும் நிலை. இரண்டாவது நிலையை விதியின் நிலை என்பதாகக் கூறுகின்றனர். இவர்களில் சிலர் 'பாவம் செய்யும் இரட்சகனைக் கொண்டு நான் காபிராக ஆகிவிட்டேன்' என்றும்
கருதுகின்றனர் இவ்வாறு நம்பக் கூடியவர்கள், பாவம் என்பது அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறு செய்வதன்று; அவனது பொதுவான நாட்டத்திற்கு
மாறு செய்வதாகும் என்றும், சிருஷ்டிகள் எல்லாம் அல்லாஹ்வின் நாட்டத்திற்குட்பட்டேயிருக்கின்றன என்றும் நம்புகிறார்கள். இவர்களுடைய புலவர்களில் ஒருவர் பின்வருமாறு குறிப்பிடுகிறார் :-
இறைவா! நீ என்னிடமிருந்து தேர்ந்தெடுக்கின்றவற்றை என்னை
அறியாமலேயே நான் அவற்றைச் செய்யக் கூடியவனாக ஆகி விடுகிறேன். என்னுடைய சரியான தவறான எல்லாச் செயல்களும், வழிபாடுகளாகவே இருக்கின்றன.
இக்கூற்று இறைவசனங்களுக்கும், இறைதூதர்களின் போதனைகளுக்கும், முற்றிலும் மாறுபட்டதாகும், காரணம் ஒருவன் அல்லாஹ்வும் அவன் தூதரும் இட்ட கட்டளைகளுக்கு மாறு செய்வதின் காரணத்தினாலேயே அல்லாஹ்வுடைய தண்டனைக்கு இரையாகிறானேயொழிய, அவனுடைய நாட்டத்திற்கு மாறு செய்வதால் அன்று. எனவே தான் அல்லாஹ் கூறுறுகிறான் :
இவை அல்லாஹ்வின் (சட்டங்களென்னும்) வரம்புகளாகும். எவர்கள் (இவ் விஷயங்களில்) அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் வழிப்பட்டு
நடக்கிறார்களோ, அவர்களை நீரருவிகள் ஒடிக் கொண்டிருக்கும் சுவர்க்கங்களில் அவன் புகுத்தி விடுகிறான். அவர்கள் என்றென்றும் தங்கி விடுவார்கள். இது மகத்தான பெரும் பாக்கியமாகும், எவன் (இவ்விஷயங்களில்) அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறுசெய்து, அவன் விதித்த சட்டங்களை
மீறுகின்றானோ, அவனை அல்லாஹ் நரகத்தில் புகுத்தி விடுகிறான். அதில் அவர்கள் என்றென்றும் தங்கி விடுவார்கள். மேலும் இழிவுபடுத்தும் வேதனையும் அதில் அவர்களுக்கு உண்டு. திருக்குர்ஆன் (4: 13,14)
அல்லாஹ்வுடைய நாட்டத்திற்கும், அவனுடைய கட்டளைகளுக்குமிடையிலுள்ள வேறுபாட்டைப் பின்னர் விளக்குவேன்.
ஒவ்வொரு மனிதனுக்கும் மூன்று விதமான நிலைகளை இவர்கள் பிரித்திருப்பது, சில சூஃபிய்யாக்களிடத்தில் சந்தேகத்தைக் கிளப்பியுள்ளது. இதை ஜுனைதுல் பக்தாதி (ரஹ்) அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள். இது விஷயத்தில்
யார் ஜுனைத் (ரஹ்) அவர்கள் கூறியதைப் பின்பற்றுகிறாரோ, அவர் நேர்வழியில் இருக்கிறார். எவர்கள் ஹலரத் ஜுனைதுல் பக்தாதி (ரஹ்) அவர்களுக்கு மாறுசெய்கிறார்களோ, அவர்கள் வழி தவறி விடுகிறார்கள்.
எல்லாக் காரியங்களும் அல்லாஹ்வின் நாட்டப்படியும், அவன் விதித்துள்ள விதியின்படியுமே நடக்கின்றன, என்று நம்புவதும், இவ்வாறு, சான்று பகருவதுமே
தவ்ஹீது ஆகும். இது தான் எங்களின் முதல் நிலை என்று சூஃபிய்யாக்கள் கூறுகின்றனர். இவர்களுக்கு ஹலரத் ஜுனைத் (ரஹ்) இதை விளக்கிக் கூறும்போது, நீங்கள் முதல் நிலையை நம்பியது போன்று, இரண்டாவது நிலையையும் நம்புவது அவசியமாகும். அதாவது எல்லாக் காரியங்களும் அல்லாஹ்வின் நாட்டப்படியே நடக்கின்றன. அவை அவனுடைய படைப்பிற்கும். அவனுடைய விதிக்கும், அவனுடைய நாட்டத்திற்கும் உட்பட்டனவாய் இருக்கின்றன என்று சான்று பகருவதுடன், அல்லாஹ் நேசித்து விரும்பிச் செய்யுமாறு ஏவுகின்ற விஷயங்களையும் அவன் கோபப்பட்டு வெறுத்து விலக்குகின்ற விஷயங்களையும் பிரித்தறிவதும் அவசியமாகும் என்றும் கூறினார்கள்.
அல்லாஹ் கூறுகிறான்:
(நமக்கு முற்றிலும் வழிப்படும்) முஸ்லிம்களை (பாவம் செய்யும்) குற்றவாளிகளைப் போல் நாம் ஆக்கிவிடுவோமா? உங்களுக்கு என்ன நேர்ந்துவிட்டது? (இருவரும் சமமென) எப்படித் தீர்ப்பளிக்கிறீர்கள்?. திருக்குர்ஆன் (68 :35,36)
மேலும் அல்லாஹ் கூறுகிறான் :-
விசவாசங்கொண்டு நற்கருமங்களைச் செய்பவர்களை பூமியில் அக்கிரமம் செய்பவர்களைப் போல் நாம் ஆக்கிவிடுவோமா? அல்லது பயபக்தியுடையவர்களை, பாவம் புரிபவர்களைப் போல் நாம் ஆக்கிவிடுவோமா?
திருக்குர்ஆன் (38 :28)
எவர்கள் தீய செயல்களைச் செய்தார்களோ, அவர்கள் விசுவாசங் கொண்டு, நற்கருமங்களைச் செய்தவர்களைப் போன்று தாமும் ஆகிவிடலாம்
என்று எண்ணிக் கொண்டனரா? அவர்கள் உயிருடன் இருப்பதும், அவர்கள் இறந்து விடுவதும் சமமே.(இதற்குமாறாக) அவர்கள் எடுத்துக்கொண்ட முடிவு
கெட்டதாகும். திருக்குர்ஆன் (45 :21)
மேலும் அல்லாஹ் கூறுகிறான் :-
குருடனும், பார்வையுடையவனும் சமமாகமாட்டார்கள். அவ்வாறே விசெவாசங்கொண்டு நற்கருமங்கள் செய்வோரும் (விசுவாசங் கொள்ளாது) பாவம் செய்வோரும் சமமாக மாட்டார்கள். நீங்கள் மிக் குறைவாகவே இதன் மூலம் நல்லுணர்ச்சி பெறுகிறீர்கள். திருக்குர்ஆன் (40: 9)
இவ்வசனங்களில் நற்செயல்கள் புரியும் நல்லோரையும் தீய செயல்கள் செய்யும் தீயோரையும் வேறுபடுத்திக் கூறியுள்ளான். எனவே, ஸலபுஸ் ஸாலிஹீன்கள் எனும் முன் சென்ற நல்லடியார்களுடைய கொள்கை இதுதான். அல்லாஹ் எல்லாவற்றையும் படைத்தான். அவனே எல்லாவற்றின் இரட்சகனாகவும், அரசனாகவும் இருக்கின்றான். அவனுடைய நாட்டப்படியே எல்லாம் நடக்கின்றன. அவனது நாட்டமின்றி எதுவும் நடப்பதில்லை.
அவனைத் தவிர வேறு இரட்சகனில்லை தனக்கு வழிபட்டு நடக்குமாறு அவன் மனிதர்களுக்கு கட்டளையிட்டுள்ளான்.
அவன் குழப்பத்தை விரும்புவதில்லை. தன் அடியார்கள் காஃபிர்களாக ஆகுவதை அவன் விரும்புவதில்லை, தவறான கெட்ட செயல்களை செய்யுமாறு அவன் ஏவுவதுமில்லை. தவறுகள் அவனுடைய பொதுவான நாட்டப்படியே நடக்கின்றன என்றாலும், அவற்றை அவன் நேசிப்பதில்லை; விரும்புவதுமில்லை. மாறாக அவற்றை அவன் வெறுக்கிறான் அவற்றைச் செய்யக் கூடியவர்களை இழிவுபடுத்தித் தண்டனையும் கொடுக்கிறான். இதுவே ஸலபுஸ்ஸாலிஹீன்களுடைய கொள்கையாகும் இதுவே இஸ்லாமிய கொள்கையுமாகும்.
இப்னு அரபி போன்றவர்கள் கூறிய மூன்று நிலைகளில், மூன்றாவது நிலை, வழிபாடோ, பாவமோ செய்யாத நிலை, இந்நிலையில் உள்ளவனே, உண்டாகியிருக்கிற எல்லாம் ஒன்றே (படைத்தவனும், படைக்கப்பட்டவையும் ஒன்றே) என்று காண்கிறான். இந்நிலையை அடைவது தான் இவர்களின் இறுதி நோக்கம். அதுவே இறைநேசமும் என இவர்கள் நம்புகின்றனர்.
ஆனால், உண்மையில் இக்கொள்கை அல்லாஹ்வின் திருப்பெயர்களையே மறுப்பதாகும், இறை விரோதமுமாகும் ஏனெனில் இந்நிலையில் உள்ளவர்கள் யூதர்களையும், கிருஸ்தவர்களையும், ஏனைய காபிர்களையும் தங்கள் இறைநேசர்களாக எடுத்துக் கொள்கிறார்கள். இவர்களைப் பற்றிப் பின்வரும் வசனத்தில் அல்லாஹ் கூறுகின்றான்:
(யூதர்களையும், கிருஸ்தவர்களையும்) யார் தனது நேசனாக எடுத்துக் கொள்கிறானோ அவனும் அவர்களைச் சார்ந்தவனாக ஆகி விடுகின்றான். திருக்குர்ஆன் (5: 51)
இப்படிப்பட்டவர்கள் ஷிர்கான செயல்களை விட்டுத் தப்பித்தவர்களாகக் கருதப்படமாட்டார்கள். மாறாக மில்லத்தே இப்றாஹீம் என்ற இஸ்லாமிய மார்க்கத்திலிருந்து வெளியேறிவிடுகிறார்கள்.
அல்லாஹ் கூறுகிறான் :
இப்றாஹீமிடத்திலும், அவர்களுடன் இருந்தவர்களிடத்திலும் உங்களுக்கு ஒர் அழகிய முன்மாதிரி நிச்சயமாக இருக்கிறது. அவர்கள், தமது மக்களை நோக்கி; 'நிச்சயமாக நாங்கள் உங்களை விட்டும், அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்கிக் கொண்டிருப்பவற்றை விட்டும் விலகி விட்டோம். நிச்சயமாக நாங்கள் உங்களையும் (இவற்றையும்) நிராகரித்து விட்டோம். அல்லாஹ் ஒருவன் மீதே நீங்கள் விசுவாசம் கொள்ளும் வரையில், எங்களுக்கும் உங்களுக்குமிடையில் விரோதமும், குரோதமும் ஏற்பட்டுவிட்டது' என்று கூறினார்கள். திருக்குர்ஆன் (60:4)
இப்றாஹீம் (அலை) அவர்கள் பல தெய்வக் கொள்கையுடையோரைப் பார்த்து பின்வருமாறு கூறினார்கள். நீங்கள் வணங்குபவர்ளையும், உங்களுக்கு முன்னிருந்த உங்கள் மூதாதைகள் வணங்கி வந்தவர்களையும் நீங்கள் பார்க்கவில்லையா? நிச்சயமாக இவர்கள் எனக்கு விரோதிகளே, உலகைப் படைத்துப் பரிபாலிப்பவனே என் இறைவன். திருக்குர்ஆன் (26 :75-77)
மேலும் அல்லாஹ் கூறுகிறான் :-
எவர்கள் அல்லாஹ்வையும், மறுமை நாளையும் உண்மையாகவே நம்பினார்களோ, அவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு
செய்பவர்களை நேசிக்கமாட்டார்கள். அவர்கள் தங்கள் மூதாதையர்களாகவோ, தங்களுடைய சந்ததிகளாகவோ, தங்களுடைய தங்களுடைய பந்துக்களாகவோ சகோதரர்களாகவோ, இருந்த போதிலும் சரியே. அவர்களுடன் இவர்கள் உறவாடுவதை நீர் காணமாட்டீர். இத்தகையோரின் உள்ளங்களில் அல்லாஹ் இறை நம்பிக்கையைப் பதிய வைத்து, தன்னுடைய சக்தியால் அவர்களைப் பலப்படுத்தினான். திருக்குர்ஆன் (58 :22)
முன்னர் கூறப்பட்ட நிலைகளைக் கூறியவர்கள், தங்களின் கொள்கைக்கேற்ப நூல்களும், கவிகளும் கோர்வை செய்துள்ளனர்.
இவர்களில் ஒருவரான இப்னுல் பாரிஸ் என்பவர் நள்முஸ்ஸுலூக என்ற பெயரில் ஒரு கவியைக் கோர்வை செய்துள்ளார். அதில் அல்லாஹ்வை, ஒரு பெண்ணாகக் கற்பனை செய்து, பின்வருமாறு கூறியுள்ளார். ‘நான் தொழும் தொழுகையெல்லாம் அவளுக்காகவே தொழுகிறேன். அதில் அவள் எனக்குத் தொழுவதாகக் காண்கிறேன். நாங்கள் இருவரும் ஒரே தொழுகையாளி. நாங்கள் இருவரும் ஒவ்வொரு தொழுகையிலும் இணைகிறோம். நானே எனக்காகத் தொழுவேன். என்னுடைய தொழுகை வேறு யாருக்காகவுமில்லை' என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகிறார் -
நான் அவளாகவும், அவள் நானாகவும் ஆகிவிட்டோம் என் உடல் இருவருக்குமிடையில் எந்த வேறுபாடுமில்லை. எனக்கே தொழுதது, நானே எனக்குத் தூதனாக இருக்கின்றேன். என் உடல் என்னுடைய அத்தாட்சிகளைக்கொண்டு என்மீது ஆதாரமாக ஆக்கிக் கொண்டது. நான் அழைக்கப்பட்டேனாயின் அதற்குப் பதில் கொடுக்கிறேன், என்னை அழைப்பவனுக்கு அவள் பதிலளிக்கிறாள் என கூறியுள்ளார். இன்னும் இது போன்ற பலவற்றைக் கூறிப் புலம்பியுள்ளார்.
எனவே, இவர் மரணத்தருவாயில் சைசேதப்பட்டுத் தன் சீடர்களைப் பார்த்து பின்வருமாறு பாடுகிறார்.
“நான் உங்களிடத்தில் மிக நேசிக்கப்பட்டவனாகவும், உயர் தகுதி உள்ளவனாகவும் இருந்தேன். சில நாட்களாக எனது நப்ஸ் என்னும் ஆத்மாவில் வெற்றி கொண்டிருந்த மேலெண்ணங்கள் எனது வாழ் நாட்களை வீணாக்கி விட்டன. இன்றோ அவ்வெண்ணங்களைப் பகற் கனவுகளாகவே கருதுகின்றேன்"
இவ்வாறு பாடியுள்ள இப்னுல் பாரிஸ் என்பவர் தன்னை அல்லாஹ் என்று கருதினார். உயிரைக் கைப்பற்ற அல்லாஹ்வின் அமரர்கள் வந்தபோது தான் கருதியது தவறு என்று உணர்ந்தார்.
அல்லாஹ் கூறுகின்றான்
வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அல்லாஹ்வை தஸ்பீஹு செய்கின்றன (துதிக்கின்றன); அவன் (யாவரையும்) மிகைத்தவன், ஞானம் மிக்கவன். (திருக்குர்ஆன் 59: 1).
வானங்கள் பூமியில் உள்ளவை எல்லாம் அல்லாஹ்வைத் துதிசெய்து, கொண்டிருக்கின்றனவேயொழிய
அவை அல்லாஹ்வாக விளங்கவில்லை
மேலும் அல்லாஹ் கூறுவதாவது :
வானங்கள், பூமியின் ஆட்சியும் அவனுக்குரியதே, அவனே உயிர்ப்பிக்கிறான், அவனே மரிப்பிக்கிறான், அவன் யாவற்றின் மீதும் மிக்க ஆற்றலுடையோனாக இருக்கிறான். ஆதியும் அவனே, அந்தமும் அவனே, வெளியாகியிருப்பவனும் அவனே, மறைந்திருப்பவனும் அவனே, அவன் சகலவற்றையும் நன்கறிந்தவனாக இருக்கிறான். திருக்குர்ஆன் (57: 2,3)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது பிரார்த்தனையில் பின்வருமாறு கூறிவந்தார்கள் என்று ஒர் ஸஹீஹான ஹதீஸில் வந்துள்ளது.
ஏழு வானங்களுக்கும், மகத்தான அர்ஷுக்கும் இரட்சகனே! எங்களுடைய அதிபதியே! எல்லாப் பொருட்களையும் படைத்துப் பராமரிப்பவனே! விதைகளைப் பிளக்கச் செய்பவனே! தவ்ராத், இஞ்சீல், திருக்குர்ஆன் ஆகிய வேதங்களை இறக்கியவனே! உனது பிடியில் இருக்கின்ற எல்லா உயிர்ப்பிராணிகளின் தீங்குகளிலிருந்தும் உன்னைக் கொண்டு காவல் தேடுகிறேன். நீயே ஆதியானவன், உனக்கு முன்னர் எதுவுமில்லை. நீயே உயர்ந்தவன், உனக்கு மேல் எதுவுமில்லை. நீயே அந்தரங்கமானவன், உன்னைவிட நெருக்கமானவன் யாருமில்லை. என் மீது உள்ள கடனை அடைத்து விடுவாயாக! ஏழ்மையை விட்டும் என்னைக் காப்பாற்றுவாயாக!"
என்பதாகப் பிரார்த்தித்து விட்டு, பின்வரும் இறை வசனத்தை ஓதுவார்கள். அல்லாஹ் தான் வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான். பின்னர் அர்ஷின் மீது அமைந்தான். பூமியில் ஊடுருவிச் செல்வதையும், அதிலிருந்து வெளியாகுவதையும், வானத்திலிருந்து இறங்கு வதையும், அதில் ஏறுவதையும் அவன் நன்கு அறிவான். நீங்கள் எங்கிருந்தாலும், அவன் உங்களுடன் இருக்கிறான். நீங்கள் செய்யக் கூடியவை யாவையும் அல்லாஹ் உற்று நோக்கிக் கொண்டிருக்கிறான்". திருக்குர்ஆன் (57 :4)
வானங்களும், பூமியும், அவ்விரண்டிற்கும் இடையில் உள்ளவையும் அல்லாஹ்வினால் படைக்கப்பட்டவை என்றும், அவை அல்லாஹ்வைத் துதி செய்து கொண்டிருக்கின்றன என்றும். அல்லாஹ் அவை எல்லாவற்றையும் அறிந்து கொண்டிருக்கிறான் என்றும் இவ்வசனத்தில் கூறியுள்ளான்.
அல்லாஹ்வின் கூட்டு
மேற்கூறப்பட்ட வசனத்தில் (வஹுவ மஅகும்) 'அல்லாஹ் உங்களுடன் இருக்கிறான் என்று அல்லாஹ் கூறியுள்ளான்’ இவ்வசனத்தில் உள்ள 'மஅ' அதாவது உடன் என்ற சொல் குர்ஆனில் பொதுவான பொருளுக்கும் குறிப்பான பொருளுக்கும் வந்துள்ளது. இச்சொல் கீழேயுள்ள இறைவசனத்தில் பொதுவான பொருளைக் கொடுக்கிறது.
நீங்கள் அல்லாஹ்விற்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள் மேலும் உண்மையாளர்களுடன் இருங்கள் திருக்குர்ஆன் (9:119).
முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லா ஹ்வின் திருத்தூதராக இருக்கிறார்கள். அவர்களுடன் இருப்பவர்கள் நிராகரிப்போர் விஷயத்தில் கடுமையானவர்களாய் இருப்பார்கள். (திருக்குர்ஆன் 48:29)
"இதற்குப் பின்னர் (மக்காவாசிகளில்) எவர்கள் இறை நம்பிக்கை கொண்டு (தங்கள்) ஊரை விட்டுப் புறப்பட்டு, உங்களுடன் சேர்ந்து போர்
புரிகின்றார்களோ அவர்களும் உங்களைச் சேர்ந்தவர்களே. (திருக்குர்ஆன் 8:75)
வானங்களிலும் பூமியிலுள்ளவை யாவற்றையும் அல்லாஹ் நன்கறிந்தவனாக இருக்கிறான், என்பதை (நபியே!) நீர்கவனிக்கவில்லையா? அவர்களில் மூன்றுபேர்கள் (கூடிப்பேசம்) இரகசியத்தில் அவன் அவர்களில் நான்காவதாக இருக்கிறான். ஐந்து பேர்களில் அவன் ஆறாவதாக இருக்கிறான்.
இதை விடக் குறைவாகவோ அல்லது அதிகமாகவோ உள்ள(வர்கள்கூடிப்பேசும் இரகசியத்திலும்) அவர்களுடன் அவன் இருக்கிறான். பின்னர் அவர்கள்
செய்தவற்றைப் பற்றி அவர்களுக்கு மறுமைநாளில் அறிவித்து, (அதற்குரிய கூலியையும் கொடுத்து) விடுகிறான். நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும்
நன்கறிந்தவனாக இருக்கிறான். திருக்குர்ஆன்(58:7)
இவ்வசனத்தில் அல்லாஹ் நன்கறிந்தவனாக இருக்கிறான் என்று ஆரம்பித்து அதே சொற்றொடராலேயே இவ்வசனத்தை முடித்திருக்கிறான். எனவே, இப்னு அப்பாஸ் (ரலி), ளஹ்ஹாக் (ரலி), சுப்யானுத்தவ்ரி (ரலி), அஹ்மதுபின் ஹம்பல் (ரஹ்), ஆகிய இப்பெரும் இமாம்களெல்லாம்
அல்லாஹ் அவர்களுடன் இருக்கிறான் என்ற இறைவசனத்திற்கு அல்லாஹ் தனது அறிவால் அவர்கள் செய்யும் எல்லாவற்றையும் அறிந்தவனாக இருக்கிறான் என்பதுதான் பொருள் என்று கூறியுள்ளார்கள்.
‘மஅ' என்ற சொல் பின்வரும் வசனங்களில் குறிப்பான பொருளுக்கு வந்துள்ளது. நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடக்கிறார்களோ, அவர்களுடனும், பிறருக்கு உபகாரம் செய்கிறவர்களுடனும் தான் அல்லாஹ் இருக்கிறான். திருக்குர்ஆன் (16 :128)
நபி மூஸா (அலை) அவர்களிடமும், நபி ஹாரூன் (அலை) அவர்களிடமும் பின்வருமாறு அல்லாஹ் கூறுகிறான் :
நான் உங்கள் இருவருடனும் இருந்து கேட்டுக் கொண்டும், பார்த்துக் கொண்டும் இருக்கிறேன் திருக்குர்ஆன் (20 :46)
தன்னுடன் (குகையில்) இருந்த தன் தோழரை நோக்கி) நீர் கவலைப்பட வேண்டாம், அல்லாஹ் நம்முடன் இருக்கிறான் என்று கூறினார். திருக்குர்ஆன் (9 :40)
மேற்கூறப்பட்ட இறை வசனங்களிலிருந்து அல்லாஹ் நபி மூஸா (அலை), நபி ஹாரூன் (அலை) அவர்களுடன் இருக்கிறான்; ஃபிர்அவ்னுடனில்லை. நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுடனும், அவர்களுடைய தோழருடனும் இருக்கிறான்; அபூஜஹ்லுடனும்
நபியுடைய எதிரிகளுடனுமில்லை; அல்லாஹ்வுக்கு அஞ்சியவர்களுடனும், கருணையுடையவர்களுடனும் இருக்கிறான். அநீதவான்களுடனும் வரம்பு மீறக்கூடியவர்களுடனுமில்லை என்பதை அறிகிறோம்.
அல்லாஹ் அவர்களுடன் இருக்கிறான் என்ற இறை வசனத்தின் பொருள் அல்லாஹ் தானாகவே எல்லா இடத்திலும் இருக்கிறான் என்றிருக்குமானால், மேலே கொடுக்கப்பட்ட பொதுவான பொருளுக்கு வந்திருக்கும் வசனங்களுக்கும், குறிப்பான பொருளுக்கு வந்திருக்கும் வசனங்களுக்குமிடையில் முரண் ஏற்பட்டுவிடும். எனவே, அல்லாஹ் அவர்களுடன் இருக்கிறான். என்பதன் பொருள் அல்லாஹ்வின் உதவியும், அவனது ஆதரவும் அவர்களுடன் இருக்கிறது: மற்றவர்களுடனில்லை, என்பதே குறிப்பான பொருளுக்கு வந்திருக்கும் வசனங்களின் விளக்கமாகும் என்பதை அறிய வேண்டும்.
அல்லாஹ் கூறுகிறான்:
வானத்திலும் அவன்தான் இறைவன்; பூமியிலும் அவன்தான் இறைவன். திருக்குர்ஆன் (43 :84)
அதாவது வானத்தில் உள்ளவர்களுக்கும், பூமியில் உள்ளவர்களுக்கும்அவனே இறைவன்.
வானங்களிலும், பூமியிலும் மிகமேலான உதாரணம் அவனுக்குரியதாக இருக்கிறது. அவன் (யாவற்றையும்) மிகைத்தோனும், மிக்க ஞானமுடையோனுமாக இருக்கிறான். திருக்குர்ஆன்(30:27)
வானத்திலும், பூமியிலும் அல்லாஹ்வே இறைவனாக இருக்கிறான். திருக்குர்ஆன் (6: 3)
வானத்தில் இருப்பவர்களாலும், பூமியில் இருப்பவர்களாலும் வணங்கப்படுவதற்குத் தகுதியானவன் அல்லாஹ் ஒருவனே. என்று இவ்வசனத்திற்கு இமாம் அஹ்மது பின் ஹம்பல் (ரஹ்) போன்ற பெரும் மேதைகள் விளக்கம் கொடுத்துள்ளனர்.
ஸஹாபாக்கள், இமாம்களின் கொள்கை
அல்லாஹ்வும், படைப்புகளும் வெவ்வேறாக உள்ளனர். அல்லாஹ் சிருஷ்டிகளை விட்டும் வேறானவனாய் இருக்கிறான். அவன் தன்னை எந்தெந்தப் பண்புகளால் வர்ணித்துள்ளானோ அப்பண்புகளாலும், அவனுடைய தூதர் அவனை எந்தெந்தப் பண்புகளால் வர்ணித்துள்ளார்களோ அப்பண்புகளாலுமே அவனை நாம் வர்ணிக்க வேண்டும். அதில் கூட்டவோ குறைக்கவோ செய்யக் கூடாது. அப்பண்புகளுக்கு உருவம், வடிவம் ஏற்படுத்துவதும் கூடாது. அல்லாஹ்வுக்கும், அவனுடைய பேச்சிற்கும், அவனுடைய பரிபூரணப் பண்பிற்கும் நிகர் எதுவுமில்லை.
இதுவே ஸலபுஸ்ஸாலிஹீன் என்று சொல்லப்படும் ஸஹாபாக்கள் தாபியீன்கள், இமாம்களின் கொள்கையாகும். அதுவே, இஸ்லாத்தின் உண்மையான கொள்கையாகும். அல்லாஹ் கூறுகிறான்:
அல்லாஹ் ஒருவன்தான் (வணக்கத்திற்குத் தகுதியானவன்) அவன் எவருடைய தேவையுமற்றவன். அவன் எவரையும் பெறவுமில்லை. (எவராலும்)
அவன் பெறப்படவுமில்லை. அவனுக்கு ஒப்பாக யாருமில்லை. என்று நபியே நீர் கூறும். திருக்குர்ஆன் (12 :1-4)
இந்த அத்தியாத்தில் “ஸமத்” என்ற சொல் இடம் பெற்றுள்ளது. இதன் பொருள் தன் அறிவிலும். தன் மகத்துவத்திலும், சக்தியிலும், தன் நுண்ணறிவிலும். தன் தலைமைத்துவத்திலும் பூரணத்துவமும் முழுமையும் பெற்றவன் என்பதாகும் என அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அவன் ஏகன், நிகரற்றவன். எல்லாப் பூரணப் பண்புகளாலும் வர்ணிக்கப்பட்டவன், இழுக்கான குணங்களை விட்டும் தூய்மையானவன், என்ற பொருளையும் 'ஸமத்' என்ற சொல் உள்ளடக்கியுள்ளது. அவனுக்கு உவமை கிடையாது. என்பதை 'அஹது' என்ற சொல் உள்ளடக்கியுள்ளது என்று அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.
இக்லாஸ், என்ற மேற்கூறப்பட்ட அத்தியாயத்தைப் பற்றித் தனியாக ஒரு தப்ஸீர் எழுதியுள்ளேன். அதில் விரிவான விளக்கங்கள் கொடுத்துள்ளேன்.
அல்லாஹ்தான் எல்லா படைப்புக்களின் அதிபதி
அல்லாஹ் இப்பிரபஞ்சங்களைப் படைத்திருக்கிறான் இப்படைத்தலையும், மார்க்க அடிப்படையில் நம்பி செயல்படுவதற்காக அவன் விதித்துள்ள சில கட்டளைகளையும் அதிகமானவர்கள் வேறுபடுத்தி அறிவதில்லை. படைப்பதும், படைப்புகளுக்குக் கட்டளையிடுவதும் அல்லாஹ் ஒருவனுக்கே சொந்தமாகும். அல்லாஹ் கூறுகிறான்: -
நிச்சயமாக உங்கள் இறைவனாகிய
அல்லாஹ்தான் வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்து; அர்ஷின் மீது அமைந்தான். அவனே, இரவில் பகலை மூடுகிறான். அது தீவிரமாகவே அதனைப் பின் தொடர்கிறது.
சூரியனும், சந்திரனும், நட்சத்திரங்களும் அவன் கட்டளைக்கு உட்பட்டிருக்கின்றன. படைத்தலும், அதன் ஆட்சியும் அவனுக்குரியனவே என்று அறிந்து கொள்ளுங்கள். அகில உலகங்களையும் படைத்துப் பரிபாலிக்கும் அல்லாஹ் தூய்மையானவன். திருக்குர்ஆன் (7 :54)
அல்லாஹ்வே எல்லாப் பொருள்களையும் படைத்தான். அவனே எல்லாவற்றிற்கும் இரட்சகன், எல்லாவற்றிற்கும் அரசனும் அவனே. அவனைத் தவிர படைப்பவன் வேறு யாருமில்லை. அவன் நினைப்பது நடக்கிறது. அவன் நாட்டமின்றி எதுவும் நடப்பதில்லை. இப்பிர பஞ்சத்திலுள்ள ஆடலும், அசைவும், தூசும், துரும்பும் எல்லாம் அவன் விதியின்படியும், அவனது நாட்டத்தின்படியும், அவனது சக்தியாலும், அவன் படைப்பதின் மூலமுமே உண்டாகின்றன.
தனக்கும், தன் தூதருக்கும் வழிப்பட்டு நடக்குமாறு அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான். அவனுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்வதை விலக்கியுள்ளான். அவனைத் தன் வணக்கத்தில் இணை துணையற்றவனாய், ஏகனாய் ஏற்றுச் செயல்படும்படியும். அவனுக்கு மட்டுமே உரியதாய் தன் வணக்கங்களை ஆக்கிக் கொள்ளுமாறும் கட்களையிட்டுள்ளான். அவனுக்கு இணைவைப்பதை விலக்கியுள்ளான். நல்ல காரியங்களில் மகத்தானது தவ்ஹீத் என்னும் வணக்கத்தால் அல்லாஹ்வை ஏகத்துவப்படுத்துவதாகும். கெட்ட காரியங்களில் மிக
மோசமானது அல்லாஹ்விற்கு இணை கற்பிப்பதாகும். அல்லாஹ் கூறுகிறான் :-
நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணை கற்பிப்பதை மன்னிக்கவே மாட்டான், இதனையல்லாத மற்ற பாவங்களைத் தான் நாடியவர்களுக்கு
மன்னிப்பான். திருக்குர்ஆன் (4 :16).
மனிதர்களில் பலர் அல்லாஹ் அல்லாதவர்களை அவனுக்கு இணையாக எடுத்துக் கொண்டு, அல்லாஹ்வை நேசிப்பது போல் அவர்களையும்
நேசிக்கின்றனர், ஆனால் விசுவாசிகளோ அல்லாஹ்வையே அதிகமாக நேசிப்பார்கள். திருக்குர்ஆன் (2 :165),
பாவங்களில் மிகக் கொடியது அல்லாஹ்விற்கு இணை கற்பித்தலாகும். அப்துல்லாஹ் பின் மஸ்வூது (ரலி) அவர்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடத்தில் 'யாரசூலுல்லாஹ்! பாவங்களில் பயங்கரமானது எது?" என்று கேட்டார்கள். அதற்கு “உம்மை அல்லாஹ் படைத்திருக்க, நீர் அவனுக்கு இணை கற்பித்தலாகும்' என நாயகம் (ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள். 'இதை அடுத்து பெரிய பாவம் எது?" என்று கேட்ட போது, "உம்முடன் உணவருந்துவதை அஞ்சி உமது குழந்தையை நீர்கொலை செய்வதாகும்' என்று கூறினார்கள். "இதை அடுத்து பெரிய பாவம் எது?' என்று கேட்ட போது, “உமது அண்டை வீட்டான் மனைவியுடன் நீர் விபச்சாரம் செய்வதாகும்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு ஸஹீஹான ஹதீஸில் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
இதை மெய்ப்பிக்கும் வண்ணம் அல்லாஹ் பின்வரும் வசனத்தை இறக்கினான். அல்லாஹ்வின் நல்லடியார்களின் பண்புகளைப் பற்றிக் கூறும் வரிசையில் பின்வருமாறு கூறியுள்ளான்.
மேலும், அவர்கள் அல்லாஹ்வுடன் வேறெவரையும் வணக்கத்திற்குரியவன் என்று அழைக்க மாட்டார்கள். (கொலை செய்யக் கூடாதென்று) அல்லாஹ் தடுத்திருக்கும். எந்த மனிதனையும் அவர்கள் நியாயமின்றிக் கொலை செய்யவுமாட்டார்கள். எனவே, எவனாவது இவற்றைச் செய்ய முற்பட்டால்,
அவன் அதற்குரிய தண்டனையை அடைந்தே தீருவான். மறுமை நாளில் அவனுடைய வேதனை இரட்டிக்கப்படும். இழிவுபட்டவனாகவே அதில் என்றென்றும் அவன் தங்கி விடுவான். என்றாலும் (அவர்களில்) எவர்கள் பாவத்திலிருந்து விலகி, மன்னிப்புக்கோரி, விசுவாசங் கொண்டு நற்கருமங்களைச் செய்கிறார்களோ, அத்தகையோருடைய பாவங்களை அல்லாஹ். (மன்னிப்பது மட்டுமல்லாமல் அதனை) நன்மையாகவும் மாற்றிவிடுகிறான். அல்லாஹ் மிக்க மன்னிப்போனும், கிருபையுடையோனுமாய் இருக்கிறான். திருக்குர்ஆன் (25 :68-70)
நீதம், கருணை, ஏழை எளிய உறவினர்களுக்குக் கொடுத்துதவுதல் போன்ற கருமங்களைச் செய்யுமாறு அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான், கெட்டவை, வெறுக்கத்தக்க செயல்கள், அநீதி முதலியவற்றைச் செய்வதை விட்டும் நம்மை விலக்கியுள்ளான். அல்லாஹ்வுக்கு அஞ்சி நடப்பவர்களையும், கருணையாளர்களையும், நீதவான்௧ளையும், தான் செய்த பாவத்திற்காக வருந்தி மன்னிப்புக் கோருபவர்களையும், பரிசுத்தவான்களையும், நெருக்கமான கட்டிடத்தைப் போன்று நின்று போர் புரிகிறவர்களையும் உறுதியாக நின்று அவன் பாதையில் போர் புரிகிறவர்களையும் அல்லாஹ் நேசிப்பதாகக் குர்ஆனில் பல இடங்களில் கூறியுள்ளான். அல்லாஹ் விலக்கியுள்ள தீயசெயல்களை அவன் வெறுக்கிறான். ஏனெனில், விலக்கப்பட்ட செயல்கள் யாவும் அல்லாஹ்விடத்தில் வெறுக்கப்பட்டவை, அல்லாஹ்வுக்கு இணைகற்பிப்பதையும், தாய் தந்தையருக்கு இன்னல் விளைவிப்பதையும். வீண்விரயம் செய்வதையும், கஞ்சத்தனத்தையும், தன்னிடமுள்ள எல்லாப் பொருள்களையும் செலவு செய்துவிட்டு முழங்கால்களைக் கட்டிக்கொண்டு கவலைப்படுவதையும், அநீதியாகப் பிறரைக் கொலை செய்வதையும். அனாதைகளின் பொருளை அநீதமாக உண்பதையும், அல்லாஹ் விலக்கியுள்ளான். என்பதாகக் கூறி விட்டுக் கடைசியில்,
(நபியே) இவை யாவும் உமது இறைவனிடத்தில் வெறுக்கப்பட்ட தீய செயல்களாகும்' என்கிறான்.
திருக்குர்ஆன் (17 :38)
பாவமன்னிப்புத் தேடுதல்
அல்லாஹ் அக்கிரமத்தை நேசிப்பதில்லை. தன் அடியார்கள் காபிர்களாக ஆகுவதை அவன் விரும்புவதில்லை. அடியான் எப்போதும் தன் பாவத்திற்காக வருத்தப்படுமாறு ஏவப்பட்டுள்ளான்.
விசுவாசிகளே! நீங்கள் எல்லோரும் வெற்றி பெற்றவர்களாய் ஆகுவதற்கு அல்லாஹ்விடம் உங்கள் பாவங்களுக்காகப் பாவன்னிப்புக் கோரி வருத்தப்பட்டு மீளுங்கள்' திருக்குர்ஆன் (24: 31),
ஒரு ஸஹீஹான ஹதீஸில் வந்துள்ளது
“மனிதர்களே! உங்கள் பாவங்களுக்காக உங்கள் இறைவனிடம் (வருத்தப்பட்டு) மீளுங்கள். என் ஆத்மா யார் கையில் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக ஒரு நாள் ஒன்றிற்கு எழுபது முறைகளுக்கு
அதிகமாக நான் அல்லாஹ்விடத்தில் பிழைபொறுக்கத்தேடி பாவ மன்னிப்புக் கோருகிறேன்' என, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(புகாரி)
மற்றொரு ஸஹீஹான ஹதீஸில் :-
‘என்னுடைய உள்ளத்தில் ஒருவிதத் திரை ஏற்படும் போது அன்றைய தினம் சுமார் நூறு முறைக்கு அதிகமாக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருவேன்' என, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் (முஸ்லிம்)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒவ்வொருமுறை உட்காரும் போதும் இறைவா! என் பாவத்தை மன்னித்தருள்வாயாக! நீயே பவங்களை மன்னிக்கக் கூடியவனாகவும், இரக்கமுடையவனாகவும் இருக்கிறாய் என்று நூறு முறை அல்லது அதற்கும் அதிகமாகக் கூறுவதை நாங்கள் எண்ணியிருக்கிறோம் என அப்துல்லாஹ்பின் உமர் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள் (அபூதாவூது, திர்மிதி)
நற்செயல்களின் அமல்களின் கடைசியில் இஸ்திஃபார் (பாவமன்னிப்பு) கோருமாறு அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்ததும்
யா அல்லாஹ்! நீயே சாந்தியாக இருக்கிறாய், உன்னிடமிருந்தே சாந்தி உண்டாகிறது. கண்ணியமும் மகத்துவமுமுள்ள நீ தூய்மையாகிவிட்டாய். என்று கூறுவார்கள்' என, ஒரு ஸஹீஹான ஹதீஸில் வந்துள்ளது (முஸ்லிம்)
நல்லவர்களின் பண்புகளை அல்லாஹ் கூறும்போது, 'இரவின் பிற்பகுதியில் பாவமன்னிப்புக்கோரி வருத்தப்படுவார்கள்' என்று கூறி, இரவு வேளைகளில் அல்லாஹ்வைத் தொழுது அவனிடம் பிழை பொறுக்கத் தேடுமாறு கட்டளையிட்டுள்ளான். இவ்வாறே முஸ்ஸம்மில் என்ற அத்தியாயத்தின் கடைசியிலும் கட்டளையிட்டுள்ளான்.
(ஹஜ்ஜுக்குச் சென்ற) நீங்கள் அரஃபா மைதானத்திலிருந்து திரும்பினால் (முஸ்தலிபாவிலுள்ள) மஷ்அருல்ஹராம் என்னும் இடத்தில் அல்லாஹ்வை திக்ரு செய்யுங்கள் மேலும், நீங்கள் இதற்கு முன்னர் வழி தவறியவர்களாய் இருந்தபொழுது உங்களுக்கு அவன் நேரான வழியை அறிவித்ததற்காக மேலும் அவனை திக்ரு செய்யுங்கள், பின்னர் (முஸ்தலிபா எனும்) இடத்திலிருந்து, நீங்களும் பிற மனிதர்களுடன் (மினாவுக்குத்)
திரும்பவந்து, அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோருங்கள். நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்போனாகவும், பேரன்புடையோனாகவும் இருக்கின்றான்.திருக்குர்ஆன் (2 :199)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது இறுதி போரான தபூக்போரை முடித்து விட்டுத்திரும்பும் போது அல்லாஹ் பின்வரும் வசனத்தை இறக்கினான் :-
நபியின் மீது நிச்சயமாக அல்லாஹ் அருள் புரிந்தான். (அவ்வாறே) துன்பவேளையில் அவரைப் பின்பற்றிய முஹாஜிரீன்கள் மீதும் அன்சாரிகள் மீதும் அருள் புரிந்தான். அவர்களில் ஒரு சாராருடைய உள்ளங்கள் தடுமாறிக் கொண்டிருந்த பின்னரும் அவர்களை மன்னித்தான். நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் மீது அன்பும் கிருபையும் உடையவனாக இருக்கிறான்.
(அல்லாஹ்வின் உத்தரவை எதிர்பார்த்துத் தீர்ப்புக் கூறாது) விட்டு வைக்கப்பட்டிருக்கும் மூவரையும் (அல்லாஹ் மன்னித்து விட்டான்) பூமி இவ்வளவு விசாலமானதாக இருந்தும் கூட அது அவர்களுக்கு மிக நெருக்கடியாகி; அவர்கள் உயிர் வாழ்வதும் மிகக் கடினமாகி விட்டது. அல்லாஹ்வையன்றி, அவனை விட்டு தப்புமிடம் அவர்களுக்கு இல்லை என்பதையும், அவர்கள் அறிந்து கொண்டனர். எனவே, அவர்கள் (பாவத்திலிருந்து) விலகிக் கொள்வதற்காக அவர்(களுடைய பாவங்)களை மன்னித்தான். நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்போனும் கிருபையுடையோனுமாக இருக்கிறான். திருக்குர்ஆன்(9:18)
இதுதான் இறுதியாக இறங்கிய இறைவசனம் என்று சிலர் கூறியுள்ளனர். வேறு சிலர் ‘நஸ்ர்' என்னும் பின்வரும் அத்தியாயம் தான் இறுதியாக இறங்கியது என்று கூறியுள்ளனர்.
(நபியே! உமக்கு) அல்லாஹ்வுடைய உதவியும் (மக்கா) வெற்றியும் கிடைத்து, அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாகச் சேருவதை நீர் காணும்போது, உமது இறைவனைப் புகழ்ந்து, துதி செய்து அவனுடைய மன்னிப்பையும் கோருவீராக! நிச்சயமாக அவன் பாவமன்னிப்புக் கோருதலை அங்கீகரிப்பவனாக இருக்கிறான். திருக்குர்ஆன் (110 : 1-3)
ஒவ்வொரு செயலின் இறுதியிலும் அல்லாஹ்வைத் துதித்து. அவனிடம் பிழை பொறுக்கத் தேடுமாறு அல்லாஹ் தனது நபிக்குக் கட்டளையிட்டுள்ளான். இவ்வசனத்தில் உள்ள அல்லாஹ்வின் கட்டளையைச் செயல்படுத்தும் வண்ணம் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் தொழுகையின் ருகூவிலும், ஸுஜூதிலும்,
இறைவா! நீ தூய்மையாகி விட்டாய், மேலும் உன்னுடைய புகழின் பொருட்டால் எனக்கு மன்னிப்பு அளித்தருள்வாயாக!' என்று கூறி வந்தார்கள் (புகாரி, முஸ்லிம்)
நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் பின்வரும் துஆவை அதிகமாக ஒதி வந்துள்ளார்கள் என, ஒரு ஸஹீஹான ஹதீஸில் வந்துள்ளது. யா அல்லாஹ்! என் பாவத்தையும் என் அறியாமையையும், என் காரியத்தில் நான் வரம்பு மீறுவதையும், நீ என்னிடமிருந்து அறிந்த எல்லா தவறுகளையும் மன்னித்தருள்வாயாக! யா அல்லாஹ்! எனது இயலாமை, பலவீனம், தவறு, வேண்டுமென்றே செய்தல், இவை எல்லாம் என்னிடம் உள்ளன, இவை அனைத்தையும் நீ மன்னித்தருள்வாயாக! யாஅல்லாஹ் நான் முன்னர் செய்த பாவம், பின்னர் செய்யும் பாவம், இரகசியமாகவும், பகிரங்கமாகவும்செ ய்த பாவம் எல்லாவற்றையும் மன்னித்தருள்வாயாக! உன்னைத் தவிர வணங்குவதற்குத் தகுதியானவன் வேறு யாருமில்லை, (புகாரி, முஸ்லிம்)
யாரசூலல்லாஹ்! நான் எனது தொழுகைக்குப் பின்னர் ஓதுவதற்காக ஒரு துஆவை எனக்குக் கற்பித்துத் தாருங்கள், என அபூபக்கர் (ரலி)அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்ட போது அவருக்குப் பின்வரும் துஆவைச் சொல்லிக் கொடுத்தார்கள்.
யா அல்லாஹ்! நான் எனது ஆன்மாவுக்கு அதிகமான தீங்கிழைத்துக் கொண்டேன், உன்னைத் தவிர பாவங்களை மன்னிப்பவன் வேறு யாருமில்லை. எனவே எனது பாவங்களை உன்னிடமுள்ள
மன்னிக்கும் அருட்குணத்தால் பொறுத்தருள்வாயாக! எனக்கு இரங்குவாயாக! நீ மிக்க மன்னிப்போனும் மிக இரக்கமுடையோனுமாய் இருக்கிறாய். (புகாரி, முஸ்லிம்)
நான் காலையும், மாலையும் பிரார்த்திப்பதற்குரிய ஒரு துஆவை எனக்குக் கற்பித்துத் தாருங்கள் என மற்றொரு தடவை ஹலரத் அபூபக்கர் (ரலி) அவர்கள் கேட்ட போது பின்வரும் துஆவை நபிகள்(ஸல்) அவர்கள் சொல்லிக் கொடுத்தார்கள்:
'வானங்கள், பூமியைப் படைத்த இறைவா! கண்முன் உள்ளவற்றையும், மறைவானவற்றையும் அறியக் கூடியவனே! எல்லாப் பொருட்களின் இரட்சகனே! அவற்றின் அரசனே! உன்னைத் தவிர வணக்கத்திற்குத் தகுதியானவன் வேறுயாருமில்லை, என நான் சான்று பகருகிறேன். என் ஆத்மாவுடைய தீங்கை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். ஷைத்தானுடைய தீங்கிலிருந்தும் அவனுடைய ஷிர்க்கான செயல்களிலிருந்தும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். எனக்கு நான் தீங்கு விளைவிப்பதையும் ஒரு முஸ்லிம் சகோதரனுக்கு நான் தீங்கு செய்வதையும் விட்டு உன்னிடம் காவல்தேடுகிறேன்.
இந்த துஆவை காலையிலும், மாலையிலும் இரவு படுக்கைக்கு செல்லும்போதும் ஓதி வருவீராக! என, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி)
பாவங்களிலிருந்து மன்னிப்புக்கோரி அல்லாஹ்விடம் வருத்தப்படுவதை விட்டுத் தேவையற்றவன் என்று தன்னையாரும் எண்ணிக் கொள்ள வேண்டாம். ஒவ்வொரு மனிதனும் பாவ மன்னிப்புக் கோருவதின்பால் எப்போதும் தேவையுடையவனாகவே இருக்கிறான். எனவே, அல்லாஹ் கூறுகிறான்.
(அல்லாஹ்வுடைய பொறுப்பு என்னும் அமானிதத்தை ஏற்று நடப்பதாகக் கூறி) மனிதன் அதை சுமந்து கொண்டான், எனவே நிச்சயமாக அவன் தனக்குத்தானே தீங்கிழைத்துக் கொண்டான். (அத்தகைய பொறுப்பை ஏற்று; அதற்கு மாறாக நடக்கும்) நயவஞ்சக ஆண்களையும், பெண்களையும், அல்லாஹ்வுக்கு இணைவைக்கும் ஆண்களையும், பெண்களையும் நிச்சயமாக அல்லாஹ் வேதனை செய்வான், (அப்பொறுப்பை ஏற்று நடக்கும்) விசுவாசிகளாகிய ஆண்களையும், பெண்களையும் (அவர்களுடைய பாவங்களை) மன்னித்து விடுகின்றான். அல்லாஹ் மிக்க மன்னிப்போனும் கிருபையுடையோனுமாய் இருக்கிறான்.
திருக்குர்ஆன் (33 :72,73)
மனிதன் அநீதவானாகவும், அறியாதவனாகவும் இருக்கிறான். எனவே, பாவத்திலிருந்து, வருத்தப்பட்டு மீள்வது மூமினான ஆண் பெண்ணுடைய இலட்சியமாக இருக்கிறது. தன் நல்லடியார்களின் மன்னிப்புத் தேடலை ஏற்றுக் கொள்வதாகவும், அவர்களுக்கு மன்னிப்பளிப்பதாகவும் திருக்குர்ஆனில் பல இடங்களில் அல்லாஹ் கூறியுள்ளான்.
நற்செயல்களுக்குப் பகரமாக யாரும் சுவர்க்கம் செல்வதில்லை
ஒரு ஸஹீஹான ஹதீஸில் வந்துள்ளது. தன்னுடைய நற்செயல்களுக்குப் பகரமாக யாரும் சுவர்க்கம் செல்வதில்லை" என, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியபோது, “நீங்கள்கூட நற்செயல்களுக்குப் பகரமாக சுவர்க்கம் செல்லமாட்டீர்களா யாரசூலல்லாஹ்?” என்று ஸஹாபாக்கள் கேட்டார்கள். அதற்கு, “அல்லாஹ்வின் கருணை, அவன் நல்லுபகாரத்தினால்தான் நான்; சுவர்க்கம் 'செல்வேனே தவிர என்னுடைய செயல்களுக்குப் பகரமாக அல்ல” என, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
ஒருவன் செய்யும் நற்செயல் அவன் சுவர்க்கம் செல்ல காரணமாக இருக்கிறதேயொழிய - நற்செயல்களுக்குப் பகரமாக அல்லாஹ் சுவர்க்கத்தை அவனுக்குக் கொடுப்பதில்லை ஏனெனில், ஒருவன் எவ்வளவுதான் நற்செயல்கள் செய்தாலும். அவை சுவர்க்கத்திற்கு ஈடானவையாய் ஆகாது! எனவே தான் அல்லாஹ் பின்வருமாறு கூறினான்:
(சுவர்க்கவாசிகளை நோக்கி) சென்ற நாட்களில் நீங்கள் சேகரித்து வைத்தவற்றின் (செய்த செயல்களின்) காரணமாக மிக சுகபோகத்துடன் இவற்றைப் புசித்து அருந்துங்கள். (என்று கூறப்படும்).
திருக்குர்ஆன் (69:24)
உலகில் நீங்கள் செய்த நற்செயல்களின் காரணமாக சுவர்க்கத்தில் உண்டு, குடித்து சுகம் பெறுங்கள் என்பது தான் இவ்வசனத்தின் பொருளே தவிர. அவர்களின் அமல்களுக்குப் பகரமாக சுவர்க்கம் கொடுக்கப் படுகிறது என்பது பொருள் அன்று.
அல்லாஹ் ஒரு மனிதரை நேசித்துவிட்டால், அவர் செய்யும் பாவம் அவருக்கு எந்தத் தீங்கும் அளிப்பதில்லை எனச் சிலர்கூறியுள்ளனர்.
இதன் பொருள், அல்லாஹ் ஒருவரை நேசித்து விடும்போது அவர்செய்த பாவத்திற்காக பாவமன்னிப்புக் கோரும் எண்ணத்தை அவருடைய
உள்ளத்தில் அல்லாஹ் ஏற்படுத்துகிறான். இதனால் அவன் பாவமன்னிப்புக் கோருகிறான். தன் பாவச்செயலில் பிடிவாதமாக இருப்பதில்லை, என்பதாகும்.
தன்னுடைய பாவத்தில் பிடிவாதமாக இருக்கக் கூடியவனுடைய பாவம் எந்தத் தீங்கும் விளைவிப்பதில்லை, என்று எவராவது நினைப்பாராயின் அது பெரிய வழிகேடாகும். குர்ஆன், ஹதீஸிற்கும், இமாம்களின் ஏகோபித்த கருத்திற்கும் முரணானதாகும். ஒருவன் கடுகளவு நன்மையைச் செய்தாலும் அதனுடைய பிரதிபலனைப் பெற்றுக் கொள்வான். ஒருவன் ஒரு கடுகளவு தீமையைச் செய்தாலும் அதனுடைய பிரதிபலனையும் மறுமையில் அடைந்தே தீருவான். பின்வரும் இறைவசனத்தில் கூறப்பட்டுள்ள பண்புடையவர்களே புகழுக்குரிய நல்லடியார்களாவார்கள்.
உங்கள் இறைவனின் மன்னிப்பின்பாலும், வானங்கள், பூமியின் அகலத்திற்கொப்பாகவுள்ள சுவர்க்கத்தின் பாலும் விரைந்து செல்லுங்கள். அது, பயபக்தியுடைவர்களுக்காகவே தயார் செய்யப்பட்டுள்ளது. அவர்கள் எத்தகையவர்கள் என்றால், செல்வநிலையிலும், வறுமை நிலையிலும் அவர்கள் தானம் செய்து கொண்டேயிருப்பார்கள். கோபத்தை விழுங்கி விடுவார்கள். மனிதர் (கள் செய்யும் தவறு)களை மன்னித்து விடுவார்கள். அல்லாஹ் (இத்தகைய) நல்லோரை நேசிக்கின்றான். மேலும் அவர்கள் ஏதாவது ஒரு தீய செயலைச் செய்துவிட்டால், அல்லது தங்களுக்குத் தாங்களே தீங்கிழைத்துக் கொண்டால் உடனடியாக அல்லாஹ்வை நினைத்து (அவனிடமே) தங்களுடைய பாவங்களை மன்னிக்கும்படி வேண்டுவார்கள் (அல்லாஹ் அவர்களை மன்னித்து விடுவான்) அல்லாஹ்வைத் தவிர பாவங்களை மன்னிப்பவன் யார்? அவர்கள் செய்த (தவறான) செயலை (த்தவறென்று) அவர்கள் அறிந்து கொண்டால், அதில் நிலைத்திருக்கவும் மாட்டார்கள். (உடனே அதை விட்டுவிடுவார்கள்). திருக்குர்ஆன் (3:133,136).
விதியைத் தவறுகளுக்கு ஆதாரமாக எடுப்பதுகூடாது.
பாவம் செய்கிறவன் அல்லாஹ்வின் விதியின் படிதான் செய்கிறான் என்று கூறி விதியைத் தனது பாவச் செயல்களுக்கு ஆதாரமாக எடுத்துக் கொள்ளக் கூடியவன் அல்லாஹ் பின்வரும் வசனத்தில் கூறும் முஷ்ரிகீன்களைப் போல் ஆகிவிடுகிறான்.
அல்லாஹ் நாடியிருந்தால் நாங்களும், எங்களுடைய மூதாதைகளும். (அல்லாஹ்வுக்கு எதையும்) இணை வைத்திருக்க மாட்டோம். (அல்லாஹ் ஆகுமாக்கிய) எதையும் (ஆகாதென்று) தடுத்திருக்க மாட்டோம் என்று முஷ்ரிகீன்கள் கூறுவார்கள். திருக்குர்ஆன் (6 :148),
இவ்வாறு கூறக் கூடியவர்களை மறுத்து அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான்
இவர்கள் கூறுவது போன்றே, இவர்களுக்கு முன் இருந்தவர்களும் நம்முடைய வேதனையை அனுபவிக்கும் வரையில் (நபிமார்களைப்) பொய் என்று மறுத்து வந்தனர். (எனவே, நபியே! நீர் அவர்களை நோக்கி, இதற்கு) உங்களிடம்
ஆதாரம் ஏதும் உண்டா? இருந்தால் அதை எங்களிடம் கொண்டு வாருங்கள். நீங்கள் வீண் கற்பனைகளை பின்பற்றி (உங்களுடைய) வீண் எண்ணத்தில் மூழ்கிக் கிடப்போரேயன்றி வேறில்லர் என்று கூறுவீராக! மேலும் நீர் கூறும். மிகைக்கக் கூடிய ஆதாரம் அல்லாஹ்விடமே இருக்கிறது (அவர்கள் கூறுவது முற்றிலும் தவறு) அல்லாஹ் நாடியிருந்தால் உங்கள் யாவரையும் நேரான வழியில் செலுத்தியிருப்பான். திருக்குர்ஆன் (6:148,149)
ஒருவன் செய்யும் பாவத்திற்கு விதி ஆதாரமாக இருக்குமானால் இறைத் தூதர்களைப் பொய்யர்கள் என்று கூறி மறுத்தவர்களை அல்லாஹ் ஏன் வேதனைப்படுத்த வேண்டும்? வரம்பு மீறுகிறவர்கள் மீது ஏன் அதற்குரிய தன்டனைகளை விதிக்கவேண்டும்? அல்லாஹ்வின் வழிகாட்டுதலை எடுத்து நடக்காமல் தன் மன இச்சைகளுக்கிணங்க நடப்பவனே, தன் தீய செயல்களுக்கு விதியை ஆதாரமாக எடுத்துக் கொள்வான். இவர்கள் கூறுவது போன்று பாவம் செய்கிறவர்களுக்கு விதி ஆதாரமாக இருக்குமானால், அந்தப் பாவத்திற்கு எந்தத் தண்டனையும் கிடைக்கக்
கூடாதல்லவா? எனவே இப்படிக் கூறுபவன் யாராவது தன்னை வரம்பு மீறி அடிக்கவோ, தன் பொருளுக்கும் தனது உயிருக்கும் ஆபத்து விளைவிக்கவோ செய்தால் அவனுக்கு எந்த தண்டனையும் கொடுக்க கூடாது. ஏனெனில், இதுவும் விதியின் படித்தான் நடக்கிறது என்பதுதானே அவன் நம்பிக்கை! இதை யாராவது ஏற்றுக் கொள்வார்களா? இவ்வாறு கூறக் கூடியவனிடத்தில் இன்பமும் துன்பமும் ஒன்றுதான். தனக்கு நன்மை செய்யக் கூடியவனுக்கும், தனக்கு தீங்கு செய்யக்கூடியவனுக்குமிடையில் எந்த வேறுபாடும் அவனிடம் இருக்காது. இது அறிவிற்கும் ஷரீஅத்திற்கும் பொருந்தாத ஒன்றாகும்.
பின்வரும் இறை வசனங்களைக் கவனியுங்கள் :
இறை நம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் புரிவோரை, பூமியில் அக்கிரமம் செய்பவர்களைப் போல், நாம் ஆக்கிவிடுவோமா? அல்லது பயபக்தியுடையவர்களைப் பாவிகளைப் போல் நாம் ஆக்கிவிடுவோமா? திருக்குர்ஆன் (38 :29)
(நமக்கு வழிப்பட்டு நடக்கும்) முஸ்லிம்களை (பாவம் செய்யும்) குற்றவாளிகளைப் போல் நாம் ஆக்கிவிடுவோமா? திருக்குர்ஆன் (68 :35).
எவர்கள் தீவினைகளைத் தேடிக் கொண்டார்களோ அவர்கள் இறை நம்பிக்கை கொண்டு நற்செயல், செய்தவர்களைப் போல் தாமும் ஆகிவிடலாம் என்று எண்ணிக் கொண்டனரா? அவர்கள் உயிருடன் இருப்பதும், அவர்கள் இறந்துவிடுவதும் சமமே (இதற்குமாறாக) அவர்கள் செய்து கொண்ட தீர்ப்பு மிகக் கெட்டதாகும். திருக்குர்ஆன் (45 :24)
நாம் உங்களை வீணுக்காகவே படைத்தோமென்றும், நீங்கள் நம்மிடம் திரும்பி வரவே மாட்டீர்கள் என்றும் எண்ணிக் கொண்டிருந்தீர்களா? திருக்குர்ஆன் (23 :19)
(எந்த ஏவலும், விலக்கலுமின்றி) சும்மா விட்டுவிடப்பட்டோம் என்று மனிதன் எண்ணிக் கொண்டானா? திருக்குர்ஆன் (75 :36)
ஒரு ஸஹீஹான ஹதீஸில் பின்வருமாறு வந்துள்ளது.
ஆதம் (அலை) அவர்களும், மூஸா (அலை) அவர்களும் விதி விஷயத்தில் தர்க்கித்துக் கொண்டார்கள். மூஸா (அலை) அவர்கள், ஆதம் அலை அவர்களிடத்தில் ஆதமே! நீங்கள் மனிதர்களின் தந்தையாக இருக்கிறீர்கள், உங்களை அல்லாஹ் தன் கையால் படைத்தான், தன் ரூஹிலிருந்து உங்கள் மீது ஊதினான் மலக்குகளை உங்களுக்கு ஸுஜூது
செய்வித்தான். இவ்வாறு இருந்தும் உங்களையும், எங்களையும் சுவர்க்கத்திலிருந்து வெளியேற்றி விட்டீர்களே! என்று கேட்டார்கள். அதற்கு ஆதம் (அலை!) அவர்கள் மூஸாவே! உம்முடன் அல்லாஹ்
நேரடியாகப் பேசி, உம்மைத் தேர்ந்தெடுத்துள்ளான், உமக்கு அருளப்பட்ட தவ்ராத் வேதத்தைத் தன் கையாலேயே எழுதினான். நான் படைக்கப்படுவதற்கு எத்தனை வருடங்களுக்கு முன்னர். ஆதம் தனது இறைவனுக்குப் பாவம் செய்து விட்டார் (திருக்குர்ஆன் 20: 121) என்று எழுதப்பட்டதாகப் பெற்றீர்? என்று கேட்டார்கள். அதற்கு நாற்பது வருடங்களுக்கு முன்னதாக என மூஸா (அலை) அவர்கள் கூறினார்கள். அப்போது நான் படைக்கப்படுவதற்கும் நாற்பது வருடங்களுக்கு முன்னர் அல்லாஹ் விதித்த ஒரு விஷயத்திற்காக என்னை ஏன் நீர் பழிக்கிறீர்? என்று ஆதம் (அலை) மூஸா (அலை) அவர்களிடம் கேட்டார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிவிட்டு மூஸா(அலை) அவர்களை ஆதம் (அலை)
தம் ஆதாரத்தால் மிகைத்து விட்டார்கள்' என்று கூறினார்கள். (புகாரி. முஸ்லிம்)
இந்த ஹதீஸை விளங்குவதில் இரு சாரார் தவறிவிட்டனர். ஒருவன் தன் பாவச் செயலிற்காக விதியை ஆதாரமாகக் கொண்டு, அதனால் அவனுடைய பாவச் செயலிற்குரிய தண்டனை கிடைக்காமல் போய் விடுவதாக இந்த ஹதீஸ் அறிவிக்கிறது. எனவே இது பொய்யான ஹதீஸ் என்று ஒருசாரார் கூறியுள்ளனர். மற்றொரு சாரார், தாம் செய்யும் எல்லாச் செயல்களும் விதியின்படியே நடக்கின்றன. அவர்களாக எந்தச் செயலையும் செய்யவில்லை என்று இந்த ஹதீஸ் அறிவிக்கிறது, எனக் கூறி விதியைத் தங்களுடைய எல்லாச் செயல்களுக்கும் ஆதாரமாக எடுத்துக் கொள்கிறார்கள். இவர்கள் முதல் சாராரை
விட மிக வழிகெட்டவர்களாவார்கள்.
ஆதம் (அலை) அவர்கள் மூஸா (அலை) அவர்களுடைய தந்தையாக இருப்பதாலேயே மிகைத்தார்கள் என்றும், அவர்கள் தனது பாவத்திற்காக வருத்தப்பட்டு விட்டதாலேயே
மிகைத்தார்கள் என்றும், பாவம் ஒரு ஷரீஅத்திலும் பழிவேறொரு ஷரீஅத்திலும் என்றும் அல்லது இச்சம்பவம் உலகில் நடந்தது என்றும் இவ்வாறாக பலவிதமான விளக்கங்களை மேற்கூறப்பட்ட ஹதீஸிற்குக் கொடுக்கின்றனர். இவ்விளக்கங்கள் எல்லாமே தவறானவை.
ஹதீஸின் உண்மையான விளக்கம் என்னவென்றால், ஆதம் (அலை) அவர்கள் தமக்கு விலக்கப்பட்டிருந்த மரத்தின் கனியைப் புசித்ததினால், மக்களுக்கு (முஸீபத்) துன்பமும் சோதனையும் ஏற்பட்டு விட்டது என்பதற்காகவே மூஸா (அலை) அவர்கள் ஆதம் (அலை) அவர்களைப் பழித்தார்கள். ஆதமே! உம்மையும் எங்களையும் ஏன் சுவர்க்கத்திலிருந்து வெளியேற்றினீர்? என்று கேட்டார்கள். ஆதம் (அலை)
அவர்கள் ஒரு பாவத்தைச் செய்து விட்டு அதிலிருந்து வருத்தப்பட்டு மீண்டதற்காக அவர்களை மூஸா (அலை) பழிக்கவில்லை. ஒருவன் ஒரு பாவத்தைச் செய்துவிட்டு அதற்காக பாவமன்னிப்புக்கோரி மீண்டு
விட்டால், அவன் பழிக்கப் படமாட்டான் என்பது நபி மூஸா (அலை) அவர்களுக்கு நன்கு தெரியும். ஆதம் (அலை) அவர்கள் தமது பாவத்திற்காக பாவ மன்னிப்புக் கோரி வருந்தி மீண்டுவிட்டார்கள்.
பாவச் செயல்கள் விதியின்படியே நடக்கின்றன. எனவே, பாவம் செய்பவன் பழிக்கப்படமாட்டான் என்று ஆதம் (அலை) அவர்கள் நம்பியிருப்பார்களானால், பின்வருமாறு அல்லாஹ்விடம் தவ்பா செய்திருக்கமாட்டார்கள்.
எங்கள் இறைவா! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம். நீ எங்களை மன்னித்து எங்களுக்கு அருள் புரியாவிட்டால், நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாய் ஆகிவிடுவோம். திருக்குர்ஆன் (7 :23).
துன்பங்கள் ஏற்படும்போது மனிதனின் நிலை
துன்பம் ஏற்படும்போது அவற்றைப் பொறுமையுடன் சகித்துக் கொண்டு, அல்லாஹ்விடம் அதை நீக்கும் பொறுப்பை ஒப்படைத்து விடுமாறு மூமினான அடியான் ஏவப்பட்டுள்ளான். பாவம் செய்து விட்டால் அதற்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக்கோரி மீளுமாறு அவன் கட்டளையிட்டுள்ளான்.
(நபியே) நீர்(துன்பங்களைச் சகித்துக் கொண்டு) பொறுமையாக இரும்! நிச்சயமாக அல்லாஹ்வுடைய வாக்குறுதி உண்மையானது. நீர் உம்முடைய தவறுகளுக்காக (அல்லாஹ்ளிடம்) பாவமன்னிப்புக் கோரும்!திருக்குர்ஆன்(40:55)
துன்பத்தைப் பொறுத்திடுமாறும், தவறுகளுக்காக மன்னிப்புக் கோருமாறும் தனது நபிக்கு அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான்.
அல்லாஹ்வுடைய அனுமதியின்றி எந்தத் தீங்கும் (எவரையும்), வந்தடையாது. ஆகவே, எவன் அல்லாஹ்வை நம்புகின்றானோ அவனுடைய உள்ளத்தை (சகிப்பு, பொறுமை என்னும்) நேரான வழியில் அவன் செலுத்துகிறான். திருக்குர்ஆன் (64: 11)
இவ்வசனத்தில் கூறப்பட்டவன் எத்தகையவன் என்றால், தனக்குத் துன்பம் ஏற்படும்போது அது அல்லாஹ்விடமிருந்து ஏற்பட்டது என அறிந்து அதைப் பொறுமையுடன் ஏற்றுக் கொள்வான் என அப்துல்லாஹ் பின் மஸ்வூது (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.
நோய் ஏழ்மை, இழிவு போன்றவை மூமினான அடியானுக்கு ஏற்படும்போது அது அல்லாஹ்வின் நியதி என்று நினைத்து அதனை அவன் பொறுத்துக் கொள்வான். பிறருடைய பாவத்தின் காரணத்தினால் அவை ஏற்பட்டாலும் சரியே! உதாரணமாக ஒருவனுடைய தந்தை, தனது செல்வம் முழுவதையும் பாவச் செயல்களில் செலவு செய்கிறார் இதனால்
அவருடைய மக்கள் ஏழைகளாகி விடுகின்றனர். இந்நிலையில் தங்களுக்கு ஏற்பட்ட ஏழ்மையை அவனது மக்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும். தம் தகப்பனின் செயலிற்காக அவரை அவரது மக்கள் பழிக்கும்போது. அது அல்லாஹ்வின் விதியின்படி நடந்தது என்று அவரது மக்களுக்கு ஆறுதல் கூறவேண்டும்.
இதுபோன்ற நிலைகளில் பொறுமை செய்ய வேண்டும் என்று அறிஞர்கள் ஏகோபித்துக் கருத்துத் தெரிவித்துள்ளனர். இதைவிட மேலானது என்னவென்றால், அல்லாஹ்வின் நியதியைத் திருப்தியுடன் ஒப்புக் கொள்ள வேண்டும். அவ்வாறு திருப்திப்படுவது விரும்பத்தக்கதாகும். இதை விடவும் மேலானது என்னவென்றால், துன்பம் ஏற்படும் போது அதற்காக அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்த வேண்டும். ஏனெனில் துன்பங்களைப் பாவத்திற்குப் பரிகாரமாக அல்லாஹ் ஆக்கி விடுகிறான். அவற்றின் வாயிலாக அடியானின் தகுதியை உயர்த்துகிறான். இத்துன்பங்களால் மனிதன் அல்லாஹ்வுக்கு அஞ்சி. அவனிடம் பாவமன்னிப்புக் கோருகிறான். அல்லாஹ் ஒருவனிடமே தன் காரியங்களை ஒப்படைப்பான். அவன் ஒருவனுக்கே தூய்மையாக வணக்கம் புரிவான்.
ஆனால், வழிகேடர்களோ, தங்கள் மனஇச்சைப்படி செய்த தங்கள் பாவச் செயல்களுக்கு விதியை ஆதாரமாக எடுத்துக் கொள்வார்கள். அல்லாஹ் அவர்களுக்கு நன்மையைச் செய்திட வாய்ப்பு அருளினாலோ அதனைத் தாமாகவே செய்வதாகக் கருதுவார்கள்.
எனவே இத்தகையோரிடத்தில், நீ வழிபாட்டில் 'கத்ரிய்யாவாகவும்', பாவம் புரியும் போது 'ஜப்ரிய்யாவாகவும் இருக்கிறாய்’ என்று கூற வேண்டும். அதாவது உன்னுடைய மனம் விரும்பும் போக்கை நீ ஏற்றுக் கொள்கிறாய் என சில அறிஞர்கள் கூறியுள்ளனர்.
நேர்வழி பெற்றவர்கள் நல்ல காரியங்களைச் செய்வார்களானால். இது அல்லாஹ் நமக்கு செய்த அருட்கொடை என கருதுவார்கள். அல்லாஹ்தான் அவர்களைத் தொழுகையை நிலை நாட்டக்கூடியவர்களாய் ஆக்கினான். பயபக்தியை அவனே அவர்களுடைய உள்ளத்தில் உதிக்கச் செய்தான் அல்லாஹ்வினாலன்றி வேறு எதற்கும் எந்த சக்தியுமில்லை, என்றெல்லாம் நம்புவார்கள்.
அல்லாஹ் விதித்துள்ள விதியை இவர்கள் நம்பும்போது அகங்காரம், பிறருக்கு இன்னல் விளைவித்தல், பிறருக்குச் செய்த உபகாரத்தைச் சொல்லிக் காட்டுதல் போன்ற தீய குணங்கள் அவர்களை விட்டு மாறிவிடுகின்றன. ஒரு தவறான செயலைச் செய்து விடுவார்களானால், அதற்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி அவனிடம்
மீண்டுவிடுவார்கள்.
தலைமை இஸ்திஃக்பார் (பாவமன்னிப்புப் பிரார்த்தனை)
கீழ்காணும் துஆவைத் தலைமை இஸ்திஃக்பார் என நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறியதாக ஒரு ஸஹீஹான ஹதீஸில் வந்துள்ளது.
"யா அல்லாஹ்! நீயே என்னுடைய இரட்சகன் உன்னைத் தவிர வணங்கப்படுவதற்குத் தகுதியானவன் வேறு யாருமில்லை; நீயே என்னைப் படைத்தாய்.
நான் உனது அடிமை உன்னிடத்தில் எடுத்துக் கொண்ட வாக்குறுதியையும், ஒப்பந்தத்தையும் நிறைவேற்றக் கூடியவனாக நான் இருக்கிறேன்.
நான் செய்த தீங்கிலிருந்து என்னைக் காக்கும்படி உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். நீ எனக்கு எண்ணற்ற அருட்கொடைகளை அருளினாய்
என, நான் ஒப்புக் கொள்கிறேன். எனவே, என்னுடைய பாவங்களை மன்னித்தருள்வாயாக! பாவங்களை மன்னிப்பவன் உன்னைத்தவிர வேறு யாருமில்லை'
இந்த இஸ்திஃக்பாரை ஒருவன் காலையில் உளத் தூய்மையோடு ஓதிவிட்டு அன்றிரவு இறந்து விடுவானாயின், அவன் சுவர்க்கம் செல்வான்,
என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(புகாரி)
ஒரு ஹதீல் குத்ஸியில் பின்வருமாறு அல்லாஹ் கூறியதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
"என்னுடைய அடியார்களே! அநீதி செய்வதை என் மீது நான் ஹராமாக்கிக் கொண்டேன். நீங்கள் ஒருவருக்கொருவர் அநீதி இழைப்பதையும் ஹராமாக்கி விட்டேன். எனவே, நீங்கள் ஒருவருக்கொருவர் அநீதி இழைக்காதீர்கள். என் அடியார்களே! நீங்கள் இரவு பகலாக தவறு செய்து கொண்டிருக்கிறீர்கள். நானோ எல்லாப் பாவங்களையும் மன்னித்து விடுகிறேன் அவ்வாறு மன்னிப்பதை நான் பெரிதாகக் கருதுவதில்லை. எனவே, என்னிடம் பாவமன்னிப்புக் கோருங்கள். நான் உங்களுக்கு மன்னிப்பளிக்கிறேன் என் அடியார்களே!
நான் யாருக்கு உணவளித்தேனோ. அவனைத் தவிர மற்றவர்கள் எல்லோரும் பசித்தவர்களே! எனவே, என்னிடமே உணவு கோருங்கள். நான் யாருக்கு உடை அணிவித்தேனோ அவளைத் தவிர மற்றவர்கள்
எல்லோரும் நிர்வாணிகளே! எனவே என்னிடமே உடையை வேண்டுங்கள். நான் உங்களுக்கு உடை அணிவிக்கிறேன். என் அடியார்களே! நான்
யாருக்கு நேர்வழி காட்டினேனோ, அவர்களைத் தவிர மற்றவர்கள் அனைவரும் வழி கெட்டவர்களே! எனவே. என்னிடமே நேர்வழி காட்டும்படி கோருங்கள், உங்களுக்கு நான் நேர்வழி காட்டுவேன்.
என் அடியார்களே! நீங்கள் எனக்கு எந்தத் தீங்கும் செய்ய முடியாது, எந்த நன்மையும் செய்ய முடியாது. என் அடியார்களே! உங்களில் ஆரம்ப முதல் கடைசிவரை மனிதர்களும் ஜின் வர்க்கமும் ஒரு தூய்மையான பயபக்தியுடைய மனிதனின் உள்ளத்தில் ஒன்று சேர்ந்து விடுவார்களானால், அது என்னுடைய அரசாட்சியில் எதையும் அதிகப்படுத்தி விடுவதில்லை. என் அடியார்களே! உங்களில் ஆரம்பம் முதல் கடைசிவரை உள்ள மனிதர்களும், ஜின் வர்க்கமும் ஒரு கெட்டவனுடைய உள்ளத்தில் ஒன்று சேர்ந்து விடுவார்களானால், அது என் அரசாட்சியில் எதையும் குறைத்து விடப் போவதில்லை. என் அடியார்களே! உங்களில் ஆரம்பம் முதல் கடைசிவரையில் உள்ள
மனிதர்களும், ஜின்களும் ஒரு மைதானத்தில் ஒன்று சேர்ந்து, கொண்டு என்னிடத்தில் அவர்களுடைய தேவைகளைக் கோருவார்களானால் ஒவ்வொருவருக்கும் அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவேன் அவ்வாறு நிறைவேற்றிவிடுவதால், என்னிடமுள்ளதில் எதுவும் குறைந்துவிடப் போவதில்லை. ஒருவன் கடலில் ஓர் ஊசியை ஒரு தடவை முக்கியெடுத்தால் எந்த அளவு தண்ணீர் கடலில் குறையுமோ அந்த அளவே என்னிடமுள்ளதில் குறைகிறது.
என் அடியார்களே! உங்களுடைய செயல்களைக் கணக்கிட்டு அதற்குரிய பிரதிபலனை இன்று (மறுமையில்) உங்களுக்குக் கொடுக்கிறேன். யார் தங்களுடைய பிரதிபலனை நற்கூலியாகப் பெற்றுக் கொள்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்வைப் புகழட்டும்! யார் இதற்கு மாற்றமாகப் பெற்றுக் கொள்கிறார்களோ அவர்கள் தங்களுடைய ஆத்மாவையே பழித்துக் கொள்ளட்டும். (முஸ்லிம்)
ஒர் அடியான் நல்லவற்றைப் பெற்றுக் கொள்ளும் போது அதற்காக அல்லாஹ்வைப் புகழ வேண்டும். தீயவற்றைப் பெற்றுக் கொள்ளும் போது தன் ஆத்மாவையே பழித்துக் கொள்ள வேண்டும். என இந்த ஹதீஸில் அல்லாஹ் விளக்கியுள்ளான்.
இறைச் சட்டமும், மனிதச்சட்டமும்
ஹகீகத் ஹகீகத் என்று அதிகமானவர்கள் பேசுவார்கள். ஆனால், அதன் உண்மையை அவர்கள் விளங்குவதில்லை, இப்பிரபஞ்சத்தையும், அதில் உள்ளவற்றையும் அல்லாஹ் முதல்முதலாகப் படைக்கும் போது யுக முடிவு நாள்வரை இப்படி இப்படித் தான் நடக்கும் என்று பொதுவாக அவன் நாடியுள்ளான். இந்த அவனுடைய நாட்டத்தால் ஏற்படுகிறவற்றையும், அவன் நேசித்து விரும்பி, ஏவும் கட்டளைகளையும் அதிகமானவர்கள் பிரித்தறிவதில்லை. இவ்வாறே அல்லாஹ் தன் தூதர்கள் மூலம் ஏவியுள்ள கட்டளைகளுக்கொப்ப நடப்பவர்களையும், குர்ஆன் ஹதீஸைப் பொருட்படுத்தாமல் தன் விருப்பத்திற்கொப்ப மனம் போல் நடப்பவர்களையும் வேறுபடுத்தி அறிவதில்லை.
இது போன்றே ஷரீஅத் என்ற சொல்லை அதிகமானவர்கள் உபயோகிப்பதுண்டு. ஷரீஅத்தைப் பின்பற்றுவதாகவும் அவர்கள் கூறுவார்கள். ஆனால், அவர்கள் அல்லாஹ் தன் ரசூலான நபிகள் நாயகம்
(ஸல்) அவர்களின் மூலம் அனுப்பிய ஷரீஅத்தான குர்ஆன், ஹதீஸையும், உலக ஆட்சியாளர்கள் இயற்றியிருக்கும் சட்டங்களான மனிதச் சட்டத்தையும் பிரித்தறிவதில்லை.
அல்லாஹ்வின் ஷரீஅத்திற்கு யாரும் மாறு செய்ய முடியாது. ஆனால், ஓர் அதிகாரி எவ்வளவுதான் அறிவாளியாகவும், நேர்மையானவராகவும் இருப்பினும், அவருடைய தீர்ப்பு நேர்மையாகவும் அமையலாம். தவறாகவும் இருக்கலாம், எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நீதிபதிகள் மூன்று வகையினராக இருக்கிறார்கள். அவர்களில் இருவகையினர் நரகம் செல்கிறார்கள். ஒரு சாரார் சுவர்க்கம் செல்கின்றனர். உண்மையை அறிந்து அதன்படி தீர்ப்பளிக்கக் கூடிய நீதிபதி சுவர்க்கம் செல்கிறார். தன் அறியாமையைக் கொண்டு தீர்ப்பளிப்பவரும், உண்மை இதுதான் என, அறிந்தும் அதற்கு மாற்றமாகத் தீர்ப்பளிப்பவரும் நரகம். செல்கிறார்கள். (திர்மிதி, அபூகாவத்)
உலகிலுள்ள நேர்மையான நீதிவான்களிலெல்லாம் மிகச் சிறந்தவர்களும், மனிதகுலத் தலைவருமான நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்:
வாதி, பிரதிவாதிகளிடமிருந்து கேட்பதை ஆதாரமாக வைத்து, அதற்கொப்ப நான் தீர்ப்பளிப்பேன். நடந்த நிகழ்ச்சி என்னுடைய தீர்ப்புக்கு மாற்றமாக இருக்குமானால், நான் யாருக்குச் சாதகமாகத் தீர்ப்பளித்தேனோ, அவர் அத்தீர்ப்பை எடுத்துக் கொள்ளக் கூடாது. அவ்வாறு எடுத்துக் கொள்ளக் கூடியவன் நரக நெருப்பின் ஒரு துண்டையே தனக்காக எடுத்துக் கொள்கிறான். (புகாரி, முஸ்லிம்)
அதாவது நீதிபதியாக இருப்பவர், வாதி, பிரதிவாதிகளிடமிருந்து ஆதாரங்களைக் கேட்டு எது சரியென அவருக்குப் புலப்படுகிறதோ அதன்படி தீர்ப்பளிக்கிறார். ஆனால் அத்தீர்ப்பு உண்மைக்குப் புறம்பானதாக இருக்கலாம். இந்நிலையில் யாருக்குச் சாதகமாக நீதிபதியுடைய தீர்ப்பு அமைந்ததோ அவர் அத்தீர்ப்பை எடுத்துக் கொள்ளக் கூடாது. அத்தீர்ப்பை எடுத்துக் கொள்ளக் கூடியவன் நரகத்தின் நெருப்புத் துண்டையே எடுத்துக்கொள்கிறான்.
பொதுச் சொத்துக்கள் விஷயத்தில் தீர்ப்பளிக்கும் போது, இந்த மரபையே கடைப்பிடிக்க வேண்டும். என அறிஞர்கள் ஒருமித்து கருத்துத் தெரிவித்துள்ளனர். ஒப்பந்தங்களிலும், கொடுக்கல் வாங்கல்களிலும் கூட இதுவே சட்டமாகும் என, இமாம்களான மாலிக் (ரஹ்), ஷாபியீ(ரஹ்), அஹமத் ஹம்பல் (ரஹ்) ஆகியோரும், மற்றும் அதிகமான இமாம்களும் கூறியுள்ளனர். இமாம் அபூஹனீபா (ரஹ்) அவர்கள் பொதுச் சொத்துக்களையும், கொடுக்கல் வாங்கல்களையும் வேறுபடுத்தி ஒவ்வொன்றுக்கும் தனித்தனிச் சட்டங்கள் கூறியுள்ளார்கள்.
‘ஷரீஅத்' என்ற சொல்லிற்கு, குர்ஆன் ஹதீஸுடைய சட்டங்கள் என்று பொருள் கொடுப்போமானால், அவ்லியாவாக இருந்தாலும் சரி, மற்ற யாராக இருந்தாலும் சரி யாரும் அதில் கடுகளவு மாற்றம் செய்யவோ அதற்கு முரணாக நடக்கவோ முடியாது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அகத்திலும், புறத்திலும் பின்பற்றாமல் அவ்லியாக்கள் அல்லாஹ்வை நேரடியாக அடைகிறார்கள் என்று யாரும் எண்ணி அண்ணலார் அவர்களைப் பின்பற்றவில்லையானால் அவன் காஃபிராக ஆகிவிடுகிறான் என்பதில் சந்தேகமில்லை.
நபியைப் பின்பற்றாமல் அல்லாஹ்வை அடைய முடியுமா?
நபியைப் பின்பற்றாமல் அல்லாஹ்வை அடையலாம் எனக் கூறுபவர்கள் நபி மூஸா (அலை) ஹலரத் கிள்ர் (அலை) ஆகிய இருவரும் சந்தித்த நிகழ்ச்சியை ஆதாரமாக எடுத்துக்கொள்கின்றனர்.
இந்நிகழ்ச்சியை ஆதாரமாகக் கொண்டுதான் நபியைப் பின்பற்றாமல் அல்லாஹ்வை அடையலாம், அவனிடமிருந்து அறிவை நேரடியாகப் பெறலாம். என சூபிய்யாக்களில் ஒரு சாரார் கூறியுள்ளனர். இது முற்றிலும் தவறு என்பதை இரு ஆதாரங்கள் மூலம் விளக்கலாம்.
ஒன்று: மூஸா (அலை) அவர்கள் கிள்ர் (அலை) அவர்களுக்கு நபியாக அனுப்பப்படவில்லை. எனவே, கிள்ர் (அலை) அவர்கள் நபி மூஸாவைப் பின்பற்றவேண்டிய அவசியமில்லை, மூஸா (அலை)
அவர்கள் இஸ்ரவேலர்களுக்கு மட்டுமே நபியாக அனுப்பப்பட்டார்கள். ஆனால் முஹம்மது (ஸல்) அவர்களோ மனித ஜின் வர்க்கம் முழுவதற்கும் பொதுவான இறைத் தூதராக அனுப்பப்பட்டார்கள். கிள்ர் (அலை) அவர்களைவிடச் சிறந்தவர்களான நபி இப்றாஹீம் (அலை), நபி மூஸா (அலை) நபி ஈஸா (அலை) போன்றவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய காலத்தில் வாழ்ந்திருப்பார்களேயானால், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பின்பற்றுவது அவர்கள் மீதும் கடமையாகி விட்டிருக்கும். இவ்வாறிருக்க, கிள்ர் (அலை) அவர்கள் நபியாக இருந்தால் என்ன? வலியாக இருந்தால் தான் என்ன? அவர்களும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பின்பற்றியே ஆக வேண்டும்.
எனவேதான், கிள்ர் (அலை) அவர்கள் நபி மூஸா (அலை) அவர்களைப் பார்த்து அல்லாஹ் தன்னுடைய அறிவிலிருந்து எனக்கு அறிவித்துத் தந்த அறிவு என்னிடமிருக்கிறது அதை நீர்அறியமாட்டீர். அவனுடைய அறிவிலிருந்து உமக்கு அறிவித்துத் தந்த அறிவு உம்மிடம் இருக்கிறது. அந்த அறிவை நான் அறியமாட்டேன் என்று கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்.)
மனித ஜின் வர்க்கத்திலிருந்து ஒருவருக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய தூதின் செய்தி கிடைத்த பின்னர் கிள்ர் (அலை) அவர்கள்
மூஸா (அலை) அவர்களிடம் கூறியது போன்று அவர் கூறுவது கூடாது.
இரண்டு: கிள்ர்(அலை) அவர்கள் செய்த செயல்கள், மூஸா (அலை) அவர்களுடைய ஷரீஅத்திற்கு மாற்றமானவையாய் இருக்கவில்லை. கிள்ர் (அலை) அவர்கள் எந்தக் காரணங்களுக்காக அச்செயல்களைச் செய்தார்களோ, அந்தக் காரணங்களை மூஸா (அலை) அறியவில்லை. பின்னர் அக்காரணங்களை கிள்ர் (அலை) அவர்கள் அறிவித்தபோது அதை மூஸா (அலை) அவர்கள் ஏற்றுக் கொண்டார்களேயொழிய எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை.
கப்பலை ஓட்டையிட்டு விட்டு, பின்னர் அதற்குத் துண்டுபோட்டு ஒட்டியதின் காரணம், நல்ல கப்பலாக இருக்குமானால் வழியில் உள்ள அக்கிரமக்காரர்கள் அதை அபகரித்துக் கொள்வார்கள். என்ற அறிவு அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. எனவே, கப்பலில் உள்ளவர்களின் நலனைக் கருதி அவர்களுக்கு உபகாரமாகவே இதைச் செய்தார்கள். இவ்வாறு செய்வது ஆகுமாக்கப்பட்டதுதான்.
கிள்ர் (அலை) அவர்கள் சிறு பையனைக் கொலை செய்ததின் காரணம் என்னவெனில், அவன் பெரியவனாய் ஆகி தன் தாய் தந்த யருக்குத் துன்பங்கள் விளைவிப்பான் என்ற அறிவு அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. எனவே. அச்சிறுவனைக் கொன்றார்கள். இது
அவர்களுக்கு ஆகுமாக்கப்பட்டிருந்தது.
‘நஜ்ததுல் ஹரூரி’ என்பவர் சில சிறுவர்கள் தீயகுணமுடையவர்களாய் வாழ்கிறார்கள் என்பதற்காக அச்சிறுவர்களைக் கொன்று
விடலாமே? என்று இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் கேட்டார். அதற்கு கிள்ர் (அலை) எந்தப் பையனைக் கொன்றார்களோ அந்தப் பையனின் எதிர்கால நிலையைப் பற்றி அவர்கள் அறிந்தது போன்று நீரும் இச்சிறுவர்களின் எதிர்காலத்தைப் பற்றி அறிந்திருப்பீரானால் அவர்களை கொன்று விடும். அந்த அறிவு உமக்கு இல்லையானால் அவர்களைக் கொல்வது கூடாது என, இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் (புகாரி)
கிள்ர் (அலை) அவர்கள் சுவரை வீழ்த்தக்காரணம் என்னவெனில், அந்தச் சுவர் ஒரு நல்ல மனிதருடைய இரு அனாதைக் குழந்தைகளுக்குரியதாய் இருந்தது. அதன் அடியில் ஒரு புதையல் இருப்பதை பற்றிய அறிவு அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. அப்புதையலை அவ்விரு குழந்தைகளும் எடுத்துப் பயன் பெற வேண்டும் என நாடியே அச்சுவரை இடித்தார்கள். இவ்வாறு அனாதைகளுக்கு உபகாரம் செய்வது நற்செயல்களைச் சேர்ந்ததாகும்.
இவ்வாறே. பசியின்போது "பொறுமை செய்வதும் நற்செயல்களைச் சார்ந்ததே! கிள்ர்(அலை) அவர்களுடைய இது போன்ற செயல்கள் அல்லாஹ்வின் ஷரீஅத்திற்கு மாறுபட்டவையாய் இருக்கவில்லை.
இமாம்களின் கருத்தும், ஷரீஅத் சட்டமும்
'ஷரீஅத்' என்ற சொல்லிற்கு 'நீதிபதியின் தீர்ப்பு' என்ற பொருள் கொடுக்கப்படுமானால், நீதிபதி நேர்மையானவராகவும் இருக்கலாம், அநீதவாளாகவும் இருக்கலாம். தனது தீர்ப்பில் சரியாகவும் தீர்ப்பளிக்கலாம், தனது தீர்ப்பில் தவறவும் செய்யலாம்.
ஹலரத் அபூஹனீபா (ரஹ்), சுப்யான் தவ்ரி (ரஹ்), மாலிக் (ரஹ்), அவ்ஸாயி (ரஹ்), லைஸ்பின்சஅத் (ரஹ்), ஷாபியீ (ரஹ்), அஹ்மத் (ரஹ்), இஸ்ஹாக் (ரஹ்) தாவூது (ரஹ்) போன்ற மார்க்க அறிஞர்களான இமாம்களுடைய கருத்திற்கும் 'ஷரீஅத்' என்று கூறப்படுவதுண்டு. இவர்கள் தங்களுடைய கருத்துக்களை குர்ஆன், ஹதீஸ் என்ற இரு ஆதாரங்களின் அடிப்படையிலேயே அறிவிக்கின்றனர். குர்ஆன். ஹதீஸ் ஆதாரத்தின் அடிப்படையில் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கின்ற இவர்கள் அல்லாத மற்ற இமாம்களையும் பின்பற்றலாம். அதாவது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இவ்வும்மத்தினர் பின்பற்றுவது அவர்கள் அனைவர் மீதும் கடமையாவது போன்று உம்மத்தினர் அனைவரும் ஒரு இமாமைப்
பின்பற்ற வேண்டும் என்பது அவர்கள் மீது கடமையாகாது. அறிவில்லாதவர்களைப் பின்பற்றுவதே ஹராமாகுமேயொழிய குர்ஆன், ஹதீஸ்
அடிப்படையில் இமாம்களில் ஒருவரின் கருத்துப்படி செயல்படுவது ஹராம் என்று கூறமுடியாது. ஆதாரம் தெரியாமல் கண்மூடிப் பின்பற்றுவது விலக்கப்பட்டதாகும்.
ஷரீஅத்தில் இல்லாத பொய்யான ஹதீஸை அதில் புகுத்துபவனும், குர்ஆன், ஹதீஸிற்குத் தன் விருப்பப்படி பொருள் கொடுப்பவனும், அல்லாஹ்வுடைய ஷரீஅத்தில் மாற்றம் செய்பவர்களாவர். எனவே அல்லாஹ் இறக்கி வைத்த ஷரீஅத்தையும், மக்கள் தன் மன இச்சைக்கிணங்க மாற்றிய ஷரீஅத்தையும் பிரித்தறிவது அவசியமாகும். குர்ஆன், ஹதீஸை ஆதாரமாகக் கொண்ட விஷயங்களையும், தனது நப்ஸிற்கு நல்லதெனத் தெரியும் விஷயங்களையும் வேறுப்டுத்தி அறிவதும் அவசியமாகும்.
அல்லாஹ்வுடைய நாட்டமும், அவனுடைய கட்டளையும்
நாட்டம், கட்டளை, தீர்ப்பு, அனுமதி, விலக்கல், அனுப்புதல், பேச்சு, ஆக்கல், இது போன்ற சொற்கள் அல்லாஹ்வுடன் இணைத்து குர்ஆனில்
பல இடங்களில் வந்துள்ளன. அதாவது அல்லாஹ்வுடைய நாட்டம், அல்லாஹ்வுடைய கட்டளை, அல்லாஹ்வுடைய தீர்ப்பு என்பது! போன்று...!
இவற்றையும், அல்லாஹ் பிரபஞ்சத்தை முதன் முதலாகப் படைக்கும்போது, யுகமுடிவு நாள் வரை இப்படி இப்படித் தான் நடக்கும் என்று விதித்துள்ளானே அந்த விதியையும் பிரித்து அல்லாஹ் குர்ஆனில் பல இடங்களில் கூறியுள்ளான்.
உலகில் நடக்கின்ற தீமைகள் அல்லாஹ் விதித்த விதியின்படிதான் நடக்கின்றன. ஆனால் அத்தீமைகளைச் செய்யுமாறு அல்லாஹ் ஏவலில்லை. அவற்றை அவன் நேசிக்கவுமில்லை. அதை செய்கிறவர் களுக்கு நற்கூலி கொடுப்பதுமில்லை. தனது நேசர்களின் குழுவில் அவர்களைச் சேர்ப்பதுமில்லை. மார்க்கத்தின் அடிப்படையில் சிலவற்றை கட்டளையிடுகிறான். அக்கட்டளையை எடுத்து நடப்பவர்களுக்கு அல்லாஹ் நற்கூலியைக்
கொடுக்கிறான். அவர்களைக் கண்ணியப்படுத்துகிறான் அவர்களை தன்
நேசர்களாய் ஆக்குகிறான். வெற்றிபெற்ற தன் அடியார்களோடு சேர்த்துவிடுகிறான். எதிரிகளை மிகைக்கின்ற தனது பட்டாளத்தில் உள்ளவர்களாகவும் அவர்களை ஆக்கிவிடுகிறான்.
இறைநேசர்களையும் ஷைத்தானின் தோழர்களையும் பிரித்தறிவிக்கிற விஷயங்களில் இது மிகமுக்கியமானதாக இருக்கிறது.
அல்லாஹ்வுக்கு விருப்பமான அவன் நேசிக்கிற அமல்களைச் செய்து மரணமமடையக் கூடியவன் அல்லாஹ்வின் நேசனாக ஆகிவிடுகிறான்.
அல்லாஹ்வுக்கு கோபமூட்டுகிற, அவன் வெறுக்கின்ற செயல்களைச் செய்து மரணமடையக்கூடியவன் அல்லாஹ்வின் விரோதியாகவே மரணமடைகிறான்.
அல்லாஹ்வுடைய நாட்டம் இருவகையாக இருக்கிறது. ஒன்று. படைப்புகள் அனைத்தையும் அவன் படைப்பதற்கு முன்னால், இப்படி இப்படித்தான் எல்லாம் நடக்கும் என்ற அவனுடைய பொதுவான நாட்டம், அவனுடைய இந்நாட்டத்திற்கப்பால் எதுவுமில்லை.
இரண்டாவது நாட்டம். மார்க்க அடிப்படையில் உள்ள அவனது நாட்டம் அல்லாஹ் சில கட்டளைகளை விதித்து, அவற்றைச் செய்யுமாறு ஏவி, அதை மார்க்கமாகவும் ஷரீஅத்தாகவும் ஆக்கியிருக்கிறான். அவனுடைய இந்நாட்டம், அவனது நேசத்திற்கும் அவனது விருப்பத்திற்கும் உட்பட்டதாக இருக்கிறது. ஈமான், நற்செயல்கள் தொடர்பானவற்றிற்கு மட்டுமே அல்லாஹ்வின் இந்நாட்டம் சொந்தமாக இருக்கிறது. அல்லாஹ்வின் பொதுவான நாட்டம் இடம் பெற்றுவந்துள்ள திருக்குர் ஆனின் சில வசனங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைக் கவனியுங்கள்
அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்ட நாடுகிறானோ அவருடைய உள்ளத்தை, இஸ்லாத்தின்பால் செல்வதற்காக அவன் விசாலப்படுத்துகிறான். யாரை அவனுடைய வழிகேட்டிலேயே விட்டுவிட நாடுகிறானோ, அவனுடைய உள்ளத்தை வானத்தில் ஏறக்கூடியவனுடைய உள்ளத்தின் கஷ்டத்தைப் போன்று. சுருங்குமாறு ஆக்கிவிடுகிறான். திருக்குர்ஆன் (6 :126),
நபி நூஹ் (அலை) அவர்கள் தம்முடைய கூட்டத்தினரிடம் பின் வருமாறு கூறியதாக அல்லாஹ் கூறுகிறான்.
உங்களை வழிகேட்டிலேயே விட்டுவிட வேண்டுமென்று அல்லாஹ் நாடிமிருந்தால், நான் உங்களுக்கு நல்லுபதேசம் செய்யக் கருநினாலும் என்னுடைய நல்லுபதேசம் உங்களுக்கு எந்தப் பயனும் அளிக்காது. திருக்குர்ஆன் (11:34)
மேலும் அல்லாஹ் கூறுகிறான் :
அல்லாஹ் ஒரு கூட்டத்தினருக்குத் தீங்கிழைக்க நாடினால், அதனைத் தடுப்போர் ஒருவருமில்லை. அவர்களுக்கு உதவி செய்வோனும் அவனையன்றி வேறு யாருமில்லை. திருக்குர்ஆன் (13 :11)
மார்க்க அடிப்படையில் உள்ள அல்லாஹ்வின் நாட்டத்தைப் பின்வரும் வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான் :-
ரமலான் மாதத்தில் உங்களில் யாராவது நோயாளியாகவோ, அல்லது பிரயாணத்திலோ இருந்தால், ரமலான் அல்லாத நாட்களில் (விட்டுப்போன நோன்பைக்) கணக்கிட்டு நோற்று விட வேண்டும். அல்லாஹ் உங்களுக்கு இலகுவான கட்டளையைக் கொடுக்க நாடுகின்றானே தவிர, உங்களுக்குச் சிரம் கொடுக்க அவன் நாடவில்லை. திருக்குர்ஆன் (2 :185).
தூய்மையைப் பற்றிக்கூறும்போது:
உங்களுக்குக் கஷ்டத்தைக் கொடுக்க அல்லாஹ் விரும்பவில்லை. ஆனால், அவன் உங்களை பரிசத்தமாக்கி வைக்கவும், தன் அருட்கொடையை உங்கள் மீது பூரணமாக்கி வைக்கவுமே விரும்புகிறான். இதற்காக நீங்கள் அவனுக்கு நன்றி செலுத்துவீர்களாக! (5 :6) என்று கூறுகிறான்.
திருமணத்தில் ஆகுமானதையும், விலக்கப்பட்டதையும் கூறி விட்டுப் பின்வருமாறு கூறுகிறான்.
அல்லாஹ் தன்னுடைய (போதனைகளை) உங்களுக்குத் தெளிவாக்கி முன்னிருந்த (நல்ல)வர்கள் சென்ற வழியில், உங்களையும் செலுத்தி; (உங்கள்) குற்றங்களை மன்னித்து; உங்கள் மீது அன்பு புரிவதையே நாடுகிறான். அல்லாஹ் நன்கறிந்தோனும், ஞானமுடையோனுமாயிருக்கிறான். எனவே நீங்கள் பாவத்திலிருந்து மீளுவதையே அல்லாஹ் நாடுகிறான். எனினும் தங்கள் மனோ இச்சைகளைப் பின்பற்றி நடப்பவர்களோ, நீங்கள் நேரான வழியிலிருந்து தவறிவிடுவதையே விரும்புகின்றனர். மேலும், அல்லாஹ்(தன் கட்டளைகளை) உங்களுக்கு இலேசாக்கவே விரும்புகிறான். ஏனெனில் மனிதன் பலவீனனாகவே படைக்கப்பட்டுள்ளான். திருக்குர்ஆன் (4 :26-28)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய புனிதத் துணைவியருக்கு, ஏவப்பட்டுள்ள விஷயங்களையும். அவர்களுக்கு விலக்கப்பட்டுள்ள விஷயங்களையும் கூறிவிட்டுப் பின்வருமாறு அல்லாஹ் கூறுகிறான் :-
இறைத்தூதரின் இல்லத்தாரே! உங்களை விட்டு சகல அசுத்தங்களையும் நீக்கி, உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்கிவிடவே அல்லாஹ் நாடுகிறான். திருக்குர்ஆன் (33 :33).
அதாவது நபியுடைய வீட்டுக்காரர்களே! ரிஜ்ஸ் என்னும் அருவருப்பானவற்றை உங்களை விட்டும் போக்கி உங்களைச் சுத்தப் படுத்துவதற்குரிய விஷயங்களை உங்களுக்கு கட்டளையிட்டுள்ளான். யார் அல்லாஹ்வின் இந்தக் கட்டளையை எடுத்து நடக்கிறார்களோ. அவர்களை விட்டு அவன் அசுத்தத்தைப் போக்கிவிடுகிறான். அவர்கள் பரிசுத்தவான்களாய் ஆகிவிடுகிறார்கள். அவனுடைய கட்டளைக்கு மாறு செய்யக் கூடியவன் அவ்வாறு ஆக முடியாது.
அல்லாஹ்வின் நாட்டம் எவ்வாறு இருவகையாக இருக்கிறதோ, அவ்வாறே அவனுடைய கட்டளையும் இருவகையாக இருக்கிறது. ஒன்று இந்த பிரபஞ்சத்தைப் படைக்கும்போது அவன் இட்ட பொதுவான கட்டளை. இக்கட்டளையைச் சார்ந்ததுதான் பின்வரும் வசனங்களில் உள்ள கட்டளைகளும்.
நாம் ஏதாவது ஒரு பொருளை உண்டு பண்ண நாடினால், அதற்குக் கூறுவதெல்லாம் 'ஆகுக' என்ற கட்டளையினைத்தான். உடனே அது ஆகிவிடும். திருக்குர்ஆன் (16 :40).
(எதாவது ஒரு பொருளை நாம் படைக்க நாடினால்) கண் சிமிட்டுவது போல் உள்ள ஒரு கட்டளையை நாம் இட்டவுடன் அது ஆகி விடும். திருக்குர்ஆன் (54 :50)
அச்சமயம் இரவிலோ, பகலிலோ நம்முடைய கட்டளை(யினால் ஓர் ஆபத்து) வந்து, அதனால் அவை நேற்றைய தினம் அவ்விடத்தில் இருக்கவே இல்லை, என்று எண்ணக் கூடியவாறு அவற்றை நாம் அழித்துவிடுவோம். திருக்குர்ஆன் (10 :24)
இரண்டாவது உள்ள அவன் கட்டளை மார்க்க அடிப்படையிலுள்ள கட்டளை. இக்கட்டளைகளை எடுத்து நடக்குமாறு அவன் தன் அடியார்களுக்கு கட்டளையிட்டுள்ளான். இக்கட்டளையைப் பின்வரும் வசனங்களில் காணலாம்.
(விசுவாசிகளே!) நீங்கள் நீதி வழங்கும் படியும், நன்மை செய்யும் படியும் (ஏழை) உறவினர்களுக்குப் பொருள் கொடுத்து உதவி செய்யும்படியும் நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிட்டுள்ளான். மாடக்கேடான செயல்கள், வெறுக்கப்பட்ட காரியங்கள் அக்கிரமம்ஆகியவற்றிலிருந்து (உங்களை) அவன் தடை செய்கிறான். (இவற்றை) நீங்கள் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுமாறும் அவன் உங்களுக்கு நல்லுபதேசம் செய்கிறான்' திருக்குர்ஆன் (16:90)
விசுவாசிகளே! உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதப் பொருட்களை அவற்றின் சொந்தக்காரர்களிடம் நீங்கள் ஒப்படைத்து விடும்படியும், மனிதர்களுக்கிடையில் நீங்கள் தீர்ப்புக்கூறினால் (பாரபட்சமின்றி) நீதமாகவே
தீர்ப்பளிக்குமாறும் அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான். உங்களுக்கு அல்லாஹ் செய்யும் இவ்வுபதேசம் மிகச்சிறந்ததாகும். நிச்சயமாக அல்லாஹ் செவியுறுவோனாகவும், உற்று நோக்கக் கூடியவனாகவும் இருக்கிறான். திருக்குர்ஆன். (4:58)
அல்லாஹ்வின் அனுமதியும் இருவகையாக இருக்கின்றது: ஒன்று பொதுவான அவனது நாட்டத்தின் போதுள்ள அனுமதி.
உதாரணமாக:
அல்லாஹ்வின் அனுமதியின்றி, அச்சூனியத்தைக் கொண்டு அச்சூனியக்காரர்கள் ஒருவருக்குமே தீங்கிழைத்து விட முடியாது! என அல்லாஹ் கூறுகிறான்.
அதாவது, இப்படித்தான் நடக்கும், என்ற அவனுடைய நாட்டத்தையும், அவனுடைய சக்தியையும் கொண்டல்லாமல் நடப்பதில்லை. என்பதுதான் இவ்வசனத்தின் பொருள். ஏனெனில், சூனியம் செய்வதை அல்லாஹ் ஒரு போதும் அனுமதிப்பதில்லை. மார்க்கத்தின் அடிப்படையிலுள்ள அவனுடைய அனுமதிக்குப் பின்வரும் வசனங்களை உதாரணமாகக் கொள்ளலாம்.
அல்லாஹ் அனுமதிக்காத எதனையும் அவர்களுக்கு மார்க்கமாக ஆக்கக் கூடிய கூட்டுக்காரர்களும் அவர்களுக்கு இருக்கின்றனரா? திருக்குர்ஆன் (42 :21)
நபியே! நிச்சயமாக நாம் உம்மை (மனிதர்களுக்குச்) சாட்சியாகவும், நற்செய்தி கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவும் அனுப்பி வைக்கிறோம். மேலும் அல்லாஹவுடைய அனுமதியின்படி (மக்களை) நீர் அன்போடு அழைப்பவராகவும் ஒளிவீசும் மணிவிளக்காகவும் இருக்கிறீர். திருக்குர்அன் (33 :45, 46)
அல்லாஹ்வின் அனுமதியின் பேரில் அவன் கட்டளைக்கு வழிப்படுவதற்காகவேயன்றி, (மனிதர்களிடம்) நாம் எந்த தூதரையும் அனுப்பி வைக்கவில்லை. திருக்குர்ஆன் (4: 64).
இறை நம்பிக்கயாளர்களே! நீங்கள் (யூதர்களுடைய) பேரீச்சங்களை வெட்டியதும், அல்லது (வெட்டாது) வேருடன் (இருந்தவாறே தன்வேரின் மீது) நின்றிருக்கும்படி நீங்கள் அவற்றை விட்டுவைத்ததும், அந்தப் பாவிகளை இழிவுபடுத்தும் பொருட்டு அல்லாஹ்வின் அனுமதிப்படியே (நடைபெற்ற காரியங்களாகும்). திருக்குர்ஆன் (59 :5).
களா (விதித்தல்) என்ற சொல்லும் இருவகையாக இருக்கிறது. ஒன்று பொதுவான களா, இதற்கு உதாரணம் :
பின்னர், அவற்றை அவன் ஏழு வானங்களாக இரு தினங்களில் படைத்தான். திருக்குர்ஆன் (81: 12)
அவன் எதை(ப் படைக்கக் கருதி) முடிவு செய்தாலும், அதனை 'ஆகுக' என கூறிய உடனே அது ஆகிவிடுகிறது. திருக்குர்ஆன் (2:117)
மார்க்க அடிப்படையிலுள்ள அவனுடைய களாவிற்கு உதாரணம் பின்வரும் இறைவசனமாகும்:
(நபியே!) உமதிறைவன் தன்னைத்தவிர (மற்றெவரையும்) வணங்கக் கூடாதென்றும் கட்டளையிட்டான். திருக்குர்ஆன் (17 :23)
இவ்வசனத்தில். உள்ள 'களா' என்ற சொல்லிற்கு 'கட்டளையிட்டான்' என்பது பொருள். இங்கு அச்சொல்லிற்கு 'விதித்தான்' என்பது பொருளன்று. ஏனெனில், பின்வரும் வசனத்தில் கூறப்பட்டது போன்று உலகில் அல்லாஹ் அல்லாதவர்களும் வணங்கப்பட்டுள்ளார்கள் என்பதை அல்லாஹ் பல இடங்களில் கூறியுள்ளான். இணைவைப்போர், தங்களுக்கு எந்த நன்மையும், தீமையும் செய்ய
முடியாத அல்லாஹ் அல்லாதவர்களை
வணங்குவதுடன், இவர்கள் அல்லாஹ்விடத்தில் எங்களுக்காகப் பரிந்துரை செய்வார்கள் என்றும் கூறுகின்றனர். திருக்குர்ஆன் (10:18)
நபி இப்றாஹிம் (அலை) அவர்கள், தனது கூட்டத்தாரிடத்தில், பின்வருமாறு கூறினார்கள் என, அல்லாஹ் கூறுகிறான்.
நீங்கள் வணங்குபவற்றையும் உங்களுக்கு முன்னிருந்த உங்கம் மூதாதையர்கள் வணங்கியவற்றையும் நீங்கள் கவனித்தீர்களா? நிச்சயமாக இவை எனக்கு விரோதிகளே! அகிலங்கள் யாவையும் போஷித்து பரிபாலிப்பவனே (எனது இறைவன்). திருக்குர்ஆன்(26:75-77)
மேலும் அல்லாஹ் கூறுகிறான் :-
இப்றாஹிமிடத்திலும், அவருடன் இருந்தவர்களிடத்திலும் உங்களுக்கு ஓர் அழகிய முன்மாதிரி நிச்சயமாக இருக்கிறது. அவர்கள் தன் கூட்டத்தினரை நோக்கி, 'நிச்சயமாக நாங்கள் உங்களிலிருந்தும், அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்கிக் கொண்டிருப்பவற்றிலிருந்தும் விலகி விட்டோம். நிச்சயமாக நாங்கள் உங்களையும் (அவர்களையும்) நிராகரித்து விட்டோம், அல்லாஹ் ஒருவனை மட்டும் நீங்கள் விசுவாசம் கொள்ளும் வரையில் எங்களுக்கும் உங்களுக்குமிடையில் விரோதமும், குரோதமும், ஏற்பட்டு விட்டது' என்று கூறினார்கள். மேலும் இப்றாஹிம் தம் (சொல்லைக் கேளாத தம்) தந்தையை நோக்கி அல்லாஹ்விடத்தில் உமக்காக (அவனுடைய வேதனையில்) யாதொன்றையும் தடுக்க எனக்கு சக்தி கிடையாது என்று கூறினார்கள். திருக்குர்ஆன் (60 :4)
மேலும் அல்லாஹ் கூறுகிறான் :-
(நபியே! நிராகரிப்போரை நோக்கி) நீர்கூறும்; நிராகரிப்போரே! நீங்கள் வணங்கக் கூடியவற்றை நான் வணங்க மாட்டேன். நான் வணங்குபவனை நீங்கள் வணங்கவில்லை. (அவ்வாறே) நீங்கள், வணங்குபவற்றை நான். வணங்குபவனல்லன்; நான் வணங்குபவனை நீங்களும் வணங்குபவர்களல்லர். உங்களுடைய (வினைக்குரிய) கூலி உங்களுக்கும், என்னுடைய (செயலுக்குரிய), கூலி எனக்கும் கிடைக்கும். திருக்குர்ஆன் (109 :1-6).
இவ்வாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியது, நிராகரிப்போரின் மார்க்கத்திலிருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒதுங்கிக் கொண்டதையும், அவர்களுடைய சிலை வணக்கத்திற்குத் தான் பொறுப்பல்ல என்று தெரிவித்ததையுமே அறிவிக்கிறது.
இதை பின்வரும் வசனத்தில் அல்லாஹ் வலியறுத்திக் கூறுகிறான்:
(நபியே!) உம்மைப் பொய்யரென அவர்கள் கூறினால் (நீர் அவர்களை நோக்கி) என் செயலின் பலன் எனக்குரியது. (அவ்வாறே) உங்கள் செயலின் பலன் உங்களுக்குரியது. என் செயலின் பலனிலிருந்து நீங்கள் விலகிவிட்டீர்கள், உங்கள் செயலின் பலனிலிருந்து நான் விலகிவிட்டேன் என்றும் கூறும்.
திருக்குர்ஆன் (10 :41)
அல்லாஹ் நிராகரிப்போரின் மார்க்கத்தை ஏற்றுக் கொண்டதாக இந்த அத்தியாயம் அறிவிக்கிறது எனச் சில நாத்திகர்கள் எண்ணுகின்றனர். இப்படிப்பட்டவர்கள் மிகப் பெரிய பொய்யர்களும், நிராகரிப்போரில் மிகக் கொடியவர்களுமாவார்கள். இவ்வாறே முன்பு குறிப்பிடப் பட்ட 'வகளாரப்புக' என்று தொட ங்குகின்ற 17 :23ம் வசனத்தில் உள்ள 'களா' என்ற சொல்லிற்கு 'விதித்தான்' என்று பொருள் கொடுப்பவர்களும் நிராகரிப்போரேயாவர். ஏனெனில் அல்லாஹ் ஒரு விஷயத்தை விதித்து விடுவானாயின். அது நடந்தே தீரும். இவர்களின் கூற்றுப்படி இவ்வசனத்திற்குத் தன்னைத் தவிர வேறு யாரையும் வணங்கக் கூடாது என்று அவன் ‘விதித்தான்' என்று பொருள் கொடுக்கும் போது, சிலைகளை வணங்கியவர்களும் அல்லாஹ்வையே வணங்கினார்கள் என்று ஆகி விடும். அல்லது சிலை வணக்கம் அவனுடைய பொதுவான நாட்டத்திற்கு
அப்பாற்பட்டதும். அவனுடைய அனுமதிக்குட்பட்டதும் என்றும் ஆகிவிடும்.
நாம் அனுப்பினோம் என்று அல்லாஹ் குர்ஆனில் பல இடங்களில் கூறியுள்ளான். இதுவும் இருவகையாக உள்ளது ஒன்று பொதுவானது.
உதாரணமாக :- அல்லாஹ் கூறுவதாவது :
அவ்விரண்டில் முதல் தவணை வந்த சமயத்தில் நம் அடியார்களில் பெரும் சக்தி வாய்ந்த மனிதர்களை உங்கள் மீது நாம் அனுப்பினோம். (அவர்கள் பைத்துல்
முகதஸ்ஸிலிருந்து உங்கள்) வீடுகளுக்குள் ஊடுருவிச் சென்று, (அதிலுள்ளவற்றையெல்லாம் நாசமாக்கி) விட்டார்கள். (அதனால் பைத்துல் முகதஸ்ஸிலிருந்த ஆலயமும் அவ்வூரும் அழிந்து நாசமாயின, இவ்வாறு நம்முடைய) வாக்கு நிறைவேறியது. திருக்குர்ஆன் (17 :5)
அனுப்பினான் என்பதற்கு இரண்டாவது பொருள் மார்க்க அடிப்படையிலுள்ள பொருளாகும். உதாரணமாக
அவன்தான், எழுத்தறிவில்லா மக்களிடம் அவனுடைய வசனங்களை ஓதிக்காட்டி, அவர்களைப் பரிசுத்தமாக்கி, அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்பிக்கும் படியான தூதரை அவர்களிலிருந்தே அனுப்பி வைத்தான்; அவர்களோ, அதற்கு முன்னர் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருந்தனர். (அல்குர்ஆன்: 62:2)
மெய்யாகவே நாம் ஒவ்வொரு சமூகத்தாரிடத்திலும், “அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள்; ஷைத்தான்களை விட்டும் நீங்கள் விலகிச் செல்லுங்கள்” என்று (போதிக்குமாறு) நம் தூதர்களை அனுப்பி வைத்தோம்; எனவே அ(ந்த சமூகத்த)வர்களில் அல்லாஹ் நேர்வழி காட்டியோரும் இருக்கிறார்கள்; வழிகேடே விதிக்கப்பெற்றோரும் அவர்களில் இருக்கிறார்கள்; ஆகவே நீங்கள் பூமியில் சுற்றுப்பயணம் செய்து, பொய்யர்களின் முடிவு என்ன ஆயிற்று என்பதைக் கவனியுங்கள்.
(அல்குர்ஆன்: 16:36)
காஃபிர்களை (வழி கேட்டில் செல்லும்படித்) தூண்டிக் கொண்டிருப்பதற்காகவே நிச்சயமாக ஷைத்தான்களை நாம் அனுப்பியிருக்கிறோம் என்பதை நீர் பார்க்க வில்லையா?
(அல்குர்ஆன்: 19:83)
இன்னும், அவன்தான் தன்னுடைய கிருபை (மழை)க்கு முன்னே காற்றுகளை நன்மாராயமாக அனுப்பி வைக்கின்றான்; மேலும், (நபியே!) நாமே வானத்திலிருந்து தூய்மையான நீரையும் இறக்கி வைக்கிறோம்.
(அல்குர்ஆன்: 25:48)
நபியே! நாம் நிச்சயமாக உம்மைச் சாட்சியாகவும்; நன்மாராயங் கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிப்பவராகவுமே அனுப்பியுள்ளோம்.
(அல்குர்ஆன்: 33:45)
நிச்சயமாக நாம் நூஹை, அவருடைய சமூகத்தாரிடம்: “நீர் உம் சமூகத்தாருக்கு நோவினை செய்யும் வேதனை அவர்கள் மீது வருவதற்கு முன்னர் (அதுபற்றி) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக” என (ரஸூலாக) அனுப்பினோம்.
(அல்குர்ஆன்: 71:1)
நிச்சயமாக ஃபிர்அவ்னிடம் தூதரை நாம் அனுப்பியது போல், உங்களிடமும், உங்கள் மீது சாட்சி சொல்பவராகிய தூதரை நாம் அனுப்பி வைத்தோம்.
(அல்குர்ஆன்: 73:15)
அல்லாஹ் மலக்குகளிலிருந்தும், மனிதர்களிலிருந்தும் தூதர்களை தேர்ந்தெடுத்துக் கொள்கிறான்! நிச்சயமாக அல்லாஹ் (எல்லாவற்றையும்) செவியேற்பவன்; பார்ப்பவன்.
(அல்குர்ஆன்: 22:75)
நாம் ஆக்கினோம் என்று அல்லாஹ் கூறுவதற்கும் இரு பொருள்கள் உள்ளன, ஒன்று பொதுவான பொருள். உதாரணம்:
(அநியாயக்கார மக்களை) நரகத்திற்கு அழைக்கக் கூடிய தலைவர்களாகவே நாம் அவர்களை ஆக்கி வைத்தோம். திருக்குர்ஆன் (28 :41),
இரண்டாவது பொருள் மார்க்க அடிப்படையிலுள்ள பொருள். அதற்கு உதாரணம்:
உங்களில் ஒவ்வொரு வகுப்பாருக்கும் ஒவ்வொரு மார்க்கத்தையும், வழியையும் நாம்தாம் ஆக்கினோம். திருக்குர்ஆன் (5 :48)
மேலும் அல்லாஹ் கூறுகிறான் :-
பஹீரா, ஸாயிபா, வஸீலா, ஹாம் முதலிய (கால்நடைகள்) இவை யெல்லாம் அல்லாஹ் ஆக்கியவை அல்ல. திருக்குர்ஆன் (5 :103).
இவ்வாறே நாம் ஹராமாக்கினோம் என்று அல்லாஹ் கூறுவதற்கும் இரு பொருள்கள் உள்ளன. ஒன்று பொதுவான பொருள்.
உதாரணமாக :
இதற்கு முன்னதாக அக்குழந்தை (யான மூஸா) எவருடைய பாலையும் அருந்துவதையும் அதன்மீது ஹராமாகக்கினோம்.. திருக்குர்ஆன் (28 :12).
மேலும் அல்லாஹ் கூறுகிறான் :-
(ஃபலஸ்தீன் என்ற) அந்த இடம் நாற்பது ஆண்டுகள் வரையில் அவர்களுக்கு திண்ணமாக ஹராமாக்கப்பட்டது. (அதுவரையில்) அவர்கள் பூமியில் தட்டழிந்து அலைவார்கள். திருக்குர்ஆன் (5 :26),
இரண்டாவது பொருள் மார்க்க அடிப்படையிலுள்ள
பொருள்: உதாரணமாக,
(விசுவாசிகளே!) தானாகச் செத்தவையும், இரத்தம், பன்றி இறைச்சி, அல்லாஹ் அல்லாதவர்களின் பெயர் கூறி அறுக்கப்பட்டவை முதலியன யாவும்....
உங்களுக்கு ஹராமாக்கப்பட்டிருக்கின்றன. திருக்குர்ஆன் (5: 3).
மேலும் அல்லாஹ் கூறுகிறான் :-
உங்கள் தாய்மார்களும், உங்கள் புதல்விகளும், உங்கள் சகோதரிகளும், உங்கள் தகப்பனின் சகோதரிகளும், உங்கள் தாயின் சகோதரிகளும், உங்கள் சகோதாரின் புதல்விகளும், உங்கள் சகோதரியின் புதல்விகளும்... உங்கள் மீது
ஹராமாக்கப்பட்டுள்ளனர். திருக்குர்ஆன் (4 :23),
"கலிமாத்” என்னும் அல்லாஹ்வுடைய வாக்குகள் என்பதற்கும் இரு, பொருள்கள் உள்ளன. ஒன்று பொதுவான பொருள் (மர்யம் என்ற) அவள் தன் இறைவனின் வணக்கங்களையும், வேதங்களையும் உண்மையென ஏற்றுக் கொண்டதுடன், (இறைவனுக்கு) முற்றிலும் வழிப்பட்டவர்களில் ஒருத்தியாகவும் இருந்தான். திருக்குர்ஆன் (6 :12)
அல்லாஹ் படைத்த படைப்புகளின் தீங்குகளிலிருந்தும். அவனுடைய கோபத்திலிருந்தும். அவனுடைய தண்டனையிலிருந்தும். அடியார்களுடைய தீங்கிலிருந்தும். அவை வந்து அணுகுவதிலிருந்தும். அவனுடைய எல்லாக் கலிமாத் (வாக்குகளைக்) கொண்டும் நான் பாதுகாவல் தேடுகிறேன் என்று நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் ஓதிவந்ததாக ஒரு ஸஹீஹான ஹதீஸில் வந்துள்ளது. (முஅத்தா)
மற்றொரு ஹதீஸில் :-
அல்லாஹ் பூமியில் படைத்தவற்றின் தீங்கிலிருந்தும். பூமியிலிருந்தும் வெளியாகக் கூடியவற்றின் தீங்கிலிருந்தும். இரவு, பகலுடைய
தீங்கிலிருந்தும், இரவில் -நல்லதைக் கொண்டு வரக்கூடியவர்களைத் தவிர -தீயதைக் கொண்டு வரக்கூடியவர்களுடைய தீங்கிலிருந்தும், எந்த
உன்னுடைய வாக்குகளிலிருந்து நல்லவர்களும், தீயவர்களும் தப்பிக்க முடியாதோ அந்த உன்னுடைய பூரணமான வாக்குகளைக் கொண்டு இறைவா! உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிவந்தார்கள்.
(தபரானி)
அல்லாஹ்வின் எந்த வாக்குகளுக்கு நல்லவர்களும், கெட்டவர்களும் உட்பட்டவர்களாய் இருக்கிறார்களோ, அந்த வாக்குகளாலேயே அல்லாஹ் பிரபஞ்சங்களைப் படைத்தான். அல்லாஹ்வுடைய இந்தப் பொதுவான நாட்டத்திலிருந்து யாரும் தப்பிக்க முடியாது. எல்லாமே அவனுடைய நாட்டப்படியே நடக்கின்றன.
மார்க்க அடிப்படையிலான அல்லாஹ்வின் வாக்குகள் என்பது அவனுடைய வேதங்களும் அதில் உள்ள ஏவல்களும் விலக்கல்களுமாகும். நல்லவர்கள் அதை எடுத்துச் செயல்பட்டார்கள்; கெட்டவர்கள் அதற்கு மாறுசெய்தார்கள். அல்லாஹ்வை அஞ்சி நடந்த அவனுடைய நேசர்கள் மார்க்க அடிப்படையிலுள்ள அவனுடைய வாக்கிற்கும், அவனது அனுமதிக்கும், அவனது நாட்டத்திற்கும் வழிப்பட்டவர்களாவர்.
பிரபஞ்சங்களை எந்த வாக்குகளால் அல்லாஹ் படைத்தானோ. அந்த வாக்குகளிலிருந்து படைப்புகள் யாரும் வெளியாக முடியாது. எல்லாம் அந்த
வாக்குகளின்படியே நடக்கின்றன. இப்லீசும், அவனுடைய பட்டாளமும். காபிர்களும், நரகத்திற்குச் செல்லக் கூடியவர்களும் மற்றும் எல்லோரும் இவ்வாக்கிற்கு உட்பட்டவர்களாகவே இருக்கிறார்கள். சிருஷ்டிகள் எல்லாமே அல்லாஹ்வின் நாட்டத்திற்குட்பட்டவர்களாய் இருந்தபோதிலும், அல்லாஹ்வின் ஏவல் விலக்கல்களிலும், அவனுக்கு விருப்பமானவற்றிலும் அவனுக்கு வெறுப்பூட்டுவனவற்றிலும் மக்கள் இருபிரிவினராய் இருக்கிறார்கள்.
ஒரு பிரிவினர் அல்லாஹ்வின் கட்டளைகளை எடுத்து நடந்து அவன் விலக்கியவற்றை விட்டுத் தவிர்ந்து; அல்லாஹ்வின் விதியினால் ஏற்படும் விஷயங்களைப் பொறுமையுடன் சகித்துக் கொள்வார்கள். இவர்கள்தான் அல்லாஹ்வை அஞ்சிய அவனுடைய நேசர்களாவர். இவர்களை அல்லாஹ் நேசிக்கிறான், இவர்களும் அல்லாஹ்வை நேசித்தார்கள். அல்லாஹ் இவர்களைப் பற்றித் திருப்தியடைந்து கொண்டான் இவர்களும் அல்லாஹ்வைப் பற்றித் திருப்தியடைந்து
கொண்டார்கள்.
இரண்டாவது பிரிவினர், அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு மாறு செய்தவர்களாவார்கள் இவர்கள் அல்லாஹ்வின் பொதுவான நாட்டத்திற்கு உட்பட்டவர்களாக இருந்த போதிலும் இவர்களுடைய செயல்களை அல்லாஹ் விரும்பவில்லை. இவர்கள் மீது கோபப்படுகிறான். இவர்களைச் சபிக்கிறான். இத்தகையோர் தான் அல்லாஹ்வின் விரோதிகளும். ஷைத்தானின் தோழர்களுமாவார்கள்.
இதைப் பற்றித் தெளிவாக வேறு நூல்களில் விளக்கியுள்ளேன். இறைநேசர்களையும், ஷைத்தானின் தோழர்களையும் வேறுபடுத்தி காட்டக் கூடியவற்றில் இது பெரியதாக இருப்பதினால் தான் இங்கு இதைச் சுட்டிக் காட்டினேன்.
இறைநேசர்களுக்கும், ஷைத்தானின்
தோழர்களுக்குமிடையிலுள்ள
வேறுபாடுகள்
எவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப்பின்பற்றி நடக்கிறார்களோ அவர்களே இறைநேசர்களாவார்கள். எவர்கள் நபிகள் நாயகம் (ஸல் )அவர்களுக்கு மாறு செய்கிறார்களோ அவர்கள் ஷைத்தானின்
தோழர்களாவர். அல்லாஹ் தன்னுடைய நேசர்களான நற்பாக்கிய வான்களையும். தன் விரோதிகளான துர்பாக்கியவான்களையும், சுவர்க்க வாசிகளான தன் நேசர்களையும், நரகவாசிகளான தன் விரோதிகளையும், நேர்வழி பெற்ற தன் நேசர்களையும், வழிகெட்ட தன் விரோதிகளையும், அல்லாஹ்வின் அருளால் ஈமான் நிரம்பப்பெற்ற தன் நேசர்களையும், ஷைத்தானுடைய கூட்டமான தன் விரோதிகளையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மூலம் அல்லாஹ் வேறுபடுத்திக் காட்டினான். அல்லாஹ் கூறுகிறான் :-
(நபியே!) எவர்கள் அல்லாஹ்வையும், மறுமை நாளையும் (மெய்யாகவே) நம்பிக் கொண்டிருக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்பவர்களை நேசிக்க மாட்டார்கள். திருக்குர்ஆன் (58 :2)
(நபியே!) உமது இறைவன் மலக்குகளை நோக்கி; நிச்சயமாக நான் உங்களுடன் இருக்கிறேன். ஆகவே, நீங்கள் இறை விசுவாசிகளை உறுதிப்படுத்துங்கள், (என்று கட்டளையிட்டு) நிராகரிப்போருடைய உள்ளங்களில் நாம் அச்சத்தை உண்டு பண்ணுவோம் (என்று கூறி விசுவாசிகளை நோக்கி) நீங்கள் அவர்களுடைய பிடரிகளின் மேல்வெட்டுங்கள், அவர்களைத் துண்டு துண்டாக வெட்டுங்கள் என்று அறிவித்ததை நினைத்துப் பார்ப்பீராக!
திருக்குர்ஆன் (8 :12)
அல்லாஹ் தனது விரோதிகளைப் பற்றி பின்வரும் வசனங்களில் கூறுகிறான் :-
உங்களுடன் தர்க்கிக்குமாறு நிச்சயமாக ஷைத்தான்கள் தங்களுடைய நண்பர்களைத் தூண்டுகின்றன. திருக்குர்ஆன் (6:122)
இவ்வாறே ஒவ்வொரு நபிக்கும், மனித, ஜின்னிலுமுள்ள ஷைத்தான்களை நாம் விரோதிகளாக்கியிருந்தோம், அவர்களில் சிலர் சிலரை ஏமாற்றும் பொருட்டு, அலங்காரமான பொய்க் கூற்றுக்களை இரகசியமாகக் கூறிக் கெடுத்துக் கொண்டிருந்தனர். திருக்குர்ஆன் (6: 13)
(விசுவாசிகளே!) யார் மீது ஷைத்தான்கள் இறங்குகின்றன என்பதை நான் உங்களுக்கு அறிவித்துத் தரட்டுமா? பொய் சொல்லும் ஒவ்வொரு பாவியின் மீதும் இறங்குகின்றன, தாங்கள் கேள்விபட்டதை (எல்லாம். அவர்களுக்கு) கூறுகின்றனர். அவர்களில் பெரும்பாலோர் பெரும் பொய்யர்களேயாவர். கவிஞர்களை வழி கெட்டவர்களையன்றி யாரும் பின்பற்றுவதில்லை. நிச்சயமாக அவர்கள் ஒவ்வொரு (கற்பனை) பள்ளத்தாக்கிலும் தடுமாறித் திரிகின்றனர். என்பதை (நபியே!) நீர்பார்க்கவில்லையா? நிச்சயமாக அவர்கள் செய்யாத காரியங்களைச் செய்ததாகக் கூறுகிறார்கள் என்றாலும் எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்கருமங்களைச் செய்து (தங்கள் கவிகளில்) அல்லாஹ்வை அதிகமாக தியானம் செய்து, அநீதி இழைக்கப்பட்டதன் பின்னர், வெற்றியடைந்தார்களோ அவர்களைத் தவிர (மற்றவர்கள் குற்றவாளிகளே!) அக்கிரமம் செய்தவர்கள் தாங்கள் எங்கு திரும்பச் செல்ல வேண்டுமென்பதை மிக விரையில் அறிந்து கொள்வர். திருக்குர்ஆன் (26 :221-227)
மேலும் அல்லாஹ் கூறுகின்றான் :-
(மனிதர்களே!) நீங்கள் பார்ப்பவை மீதும், நீங்கள் பார்க்காதவை மீதும் சத்தியமாக, இது மிக கண்ணியம் நிறைந்த ஒரு தூதரால் கூறப்பட்டதாகும். இது ஒரு கவிஞருடைய சொல் அன்று, ஆனால் நீங்கள் மிகச் சொற்பமாகவே விசுவாசிக்கிறீர்கள்! இது ஒரு குறி சொல்லக் கூடியவனுடைய சொல்லுமன்று; இதன் மூலம் மிகச்சொற்பமாகவே உபதேசம் பெறுகிறீர்கள். அகிலங்கள் யாவையும் படைத்துப் பரிபாலிப்பவனால் இது அருளப்பட்டதாகும். அவர் நம்மீது, ஏதாவது வாக்கியத்தைக் கற்பனை செய்து பொய்யாகக் கூறினால், அவருடைய வலக்கரத்தை நாம் பலமாகப் பிடித்துக் கொண்டு, அவருடைய உயிர் நாடியை நாம் துண்டித்து விடுவோம். அப்படி (அவரைச்) செய்வதை விட்டும் (அவனை) நீங்கள் தடுத்துவிட முடியாது. நிச்சயமாக இது பயபக்தியுடையோருக்கு நல்லுபதேசமாகவே இருக்கிறது. என்றாலும் உங்களில் அதனைப் பொய்யாக்குகிறவர்களும் இருக்கின்றனரென்பதை நிச்சயமாக நாம் நன்கறிவோம்; நிச்சயமா இது நிராகரிப்போருக்குத் துக்கத்தைத் தரக்கூடியதாகவே இருக்கிறது. எனினும் இது சிறிதும் சந்தேகமற்ற உண்மையாகும். ஆகவே
(நபியே) நீர் மகத்தான உமதிறைவனின் திருநாமத்தைத் துதி செய்து கொண்டிருப்பீராக!
திருக்குர்ஆன் (69 :38-52).
மேலும் அல்லாஹ் கூறுகிறான்:
(நபியே) உமதிறைவனின் அருளால் நீர் குறி சொல்வோருமல்லர். பைத்தியக்காரருமல்லர், என்பதை (நிராகரிப்போருக்கு) நீர் நினைவூட்டும். திருக்குர்ஆன் (52 :29)
ஷைத்தான்கள் வந்து அணுகக்கூடிய ஜோதிடர்கள், கவிஞர்கள், புலவர்கள், பைத்தியக்காரர்கள் முதலியவர்களை விட்டும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அல்லாஹ் தூய்மையாக்கி விட்டான். குர்ஆனை அல்லாஹ்விடமிருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் கொண்டு வந்தவர் அல்லாஹ்வினால் தேர்ந்தெடுக்கப்பட்ட கண்ணியத்துக்குரிய மலக்கான ஜிப்ரீல்(அலை) அவர்களாவார்கள் என்றும் விளக்கியுள்ளான்
ஜிப்ரீல் (அலை) அவர்களின் சிறப்பு
ஜிப்ரீல் (அலை) அவர்களை மலக்குகளிலிருந்து தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் என, அல்லாஹ் குர்ஆனில் புகழ்ந்து கூறியுள்ளான். அவர்களை, நேர்மையான ஆத்மா என்று பின்வரும் வசனத்தில் வர்ணித்துக் கூறுகிறான்.
அகிலங்களைப் படைத்த அல்லாஹ்வினால்தான் நிச்சயமாக அந்தக் குர்ஆன் அருளப்பட்டது. (மனிதர்களுக்கு) நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காகத் தெளிவான அரபி மொழியில், ரூஹுல் அமின் (நேர்மையான நம்பிக்கைக்குரிய ஆன்மா என்னும் ஜிப்ரீல்)இதனை உமது உள்ளத்தில்) இறக்கி வைத்தார். இதைப் பற்றிய முன்னறிவிப்பு, முன்னுள்ள வேதங்களிலும் இருக்கிறது. திருக்குர்ஆன் (26 :192-196)
உங்களில் யார் ஜிப்ரீலுக்கு விரோதியாக இருக்கிறார்? என, (நபியே நீர் யூதர்களை)க் கேளும். நிச்சயமாக அவர் அல்லாஹ்வின் கட்டளையின்படியே உமது உள்ளத்தில் இதை இறக்கி வைத்தார். திருக்குர்ஆன் (2 :97),
நபியே! நீர்குர்ஆனை ஒத ஆரம்பித்தால் (அதற்கு முன்னதாக) விரட்டப்பட்ட ஷைத்தானை விட்டுக்காக்கும்படி அல்லாஹ்விடம் கோரிக் கொள்ளும்... மெய்யாகவே இந்த குர்ஆன் உம் இறைவனிடமிருந்து ரூஹுல் குத்ஸ் (பரிசுத்த ஆன்மா என்னும் ஜிப்ரீல்) இறக்கிவைத்தார் என்று நீர் கூறுவீராக! திருக்குர்ஆன்(1:6 98-102)
ஜிப்ரீல் (அலை) அவர்களை, அல்லாஹ் நேர்மையான ஆன்மா, பரிசுத்த ஆன்மா என்றெல்லாம் புகழ்ந்து கூறியுள்ளான்.
மேலும் அல்லாஹ் கூறுகிறான்:
வேகமாகச் சென்று காலையில் மனிதர்களுடைய கண்களுக்குத் தெரியாமல் மறைந்திருந்து, இரவு நேரத்தில் காட்சிதரும் கிரகங்களின் மீது ஆணையாக, பின்நோக்கிச் செல்லும் இரவின் மீது ஆணையாக, உதயமாகும் காலையின் மீது ஆணையாக, நிச்சயமாக(திருக்குர்ஆன் என்னும்) இதுமிக்க கண்ணியமுள்ள (ஜிப்ரீல் என்னும்) தூதர் மூலம் இறக்கப்பட்டதாகும். அவர் மிகப் பலம் வாய்ந்தவர், அர்ஷுக்குரியவனிடத்தில் மதிப்புக்குரியவர். அவர் மலக்குகளின் தலைவரும், மிக்க நம்பிக்கையுடையவருமாக இருக்கிறார். (மனிதர்களே!) உங்களுடைய தோழராக இருக்கக் கூடிய (நம்முடைய தூது)வர் பைத்தியக்காரர் அல்லர்.
திருக்குர்ஆன் (81 :15-22)
அதாவது மலக்குகளைப் பார்ப்பதற்குச் சக்தியில்லாத உங்களுக்கு, உங்கள் இனத்திலிருந்தே உங்களுடன் இருக்கிற ஒருவரைத் தூதராக அனுப்பி, உங்களுக்கு அருள் புரிந்தானே, அந்தத் தூதர் பைத்தியக்காரரல்லர்.
மேலும் அல்லாஹ் கூறுகிறான் :
(இவர் உண்மையான தூதர்தான் என்று சான்று பகருவதற்கு) அவகுக்காக ஒரு மலக்கு அனுப்பப்பட வேண்டாமா) என்று அவர்கள் கூறுகின்றனர். அவர்களின் (விருப்பத்திற்கிணங்க நாம் ஒரு மலக்கை
அனுப்பிவைத்திருந்தால், அவர்களின் கோரிக்கை நிறைவேறி, பின்னர் அதில்: அவர்களுக்கு அவகாசம் கிடைத்திருக்காது. (உடனே அவர்கள் அழிந்திருப்பார்கள்) அல்லது நம்முடைய தூதரை ஒரு மலக்காகவே அனுப்புவதாக இருந்தால் (அவர்களுக்கு மலக்குகளைக் காணும் சக்தி இல்லாததினால்) அவரையும் ஒரு மனிதனுடைய வடிவத்தில் தான் நாம் அனுப்புவோம். திருக்குர்ஆன் (6:8,9)
மேலும் அல்லாஹ் கூறுகிறான் :-
நிச்சயமாக (நமது தூதராகிய) அவர் ஜிப்ரீலைத் தெளிவான அடி வானத்தில் உண்மையாகவே கண்டார். அவர் கண்ட மறைவானவற்றை அறிவிப்பதில் அவர் (பொய்யரோ) உலோப்பித்தனம் செய்பவரோ அல்லர். அது விரட்டியடிக்கப்பட்ட ஷைத்தானின் சொல்லுமல்ல. திருக்குர்ஆன் (81 :23,25).
தன் அறிவைப் பிறருக்கு எவ்விதப் பிரதியுபகாரமுமின்றி எடுத்துக் கூறாத கஞ்சராக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இல்லை என்று அல்லாஹ் கூறியுள்ளான். மேலும், கவிஞராகவோ, ஜோதிடராகவோ இருப்பதை விட்டுட நபிகள் நாயகம்(ஸல்) அவர்களை அல்லாஹ் எவ்வாறு தூய்மையாக்கினானோ, அவ்வாறே ஷைத்தானாக இருப்பதை விட்டும் ஜீப்ரீல் (அலை) அவர்களை அல்லாஹ் தூய்மைப்படுத்தியுள்ளான்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பின்பற்றுபவரே உண்மையான இறைநேசர்!
யார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை முற்றிலும் பின்பற்றி, அவர்கள் ஏவியவற்றை செய்தும், அவர்கள் விலக்கியவற்றிலிருந்து விலகியும், அண்ணலார் எந்த விஷயங்களில் தன்னைப் பின்பற்ற வேண்டுமென்று சொன்னார்களோ. அவற்றில் அவர்களைப் பின்பற்றி நடக்கிறார்களோ, அவர்களே அல்லாஹ்வை அஞ்சிய அவனது நேசர்களாவார்கள். இத்தகையோருக்குத் தான் அல்லாஹ் தன் மலக்குகளையும், தன் உதவியையும் அருளி ஆதரவளிக்கிறான். அவர்களுடைய உள்ளங்களில் தனது ஒளியை ஏற்படுத்துகிறான். இவர்களிடமிருந்து தான் கராமத் என்னும் அற்புதங்கள் நிகழ்கின்றன. இவ்வற்புதங்கள் மூலமாகத் தன்னை அஞ்சி நடக்கும் தன் நேசர்களை அல்லாஹ் கண்ணியப்படுத்துகிறான்.
"இவர்கள் தங்கள் கராமத்துகளை மார்க்க நலனுக்காகவும், முஸ்லிம்களின் தேவைகளுக்காகவுமே பயன்படுத்துவார்கள். நபிமார்களின் முஃஜிஸாத்துக்களும் இவ்வாறே அமைந்திருந்தன. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பின்பற்றி நடந்ததின் பரக்கத்தினாலேயே அவ்லியாக்களுக்கு, கராமத்துக்கள் ஏற்பட்டன. இந்த கராமத்துக்கள் நபிகள் நாயகத்தின் முஃதிஸாத்துக்களுக்கு உட்பட்டவையாகவே இருக்கின்றன.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முஃஜீஸாக்கள்
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் சந்திரனை இரண்டாகப் பிளக்கச் செய்தார்கள்.
அவர்களுடைய கையிலிருந்து கற்கள் தஸ்பீஹ் செய்தன.
ஒரு மரத்திடம் நடந்து வருமாறு கூறினார்கள். அப்போது அம்மரம் நடந்துவந்தது.
குத்பாமேடை செய்யப்பட்டிருந்த பேரீத்த மரத்தின் மட்டை அதற்குரிய இடத்திலிருந்து அகற்றப்பட்டபோது அது அழுதது.
மிஃராஜிற்கு சென்ற இரவு பைத்துல் முகத்தஸைப் பற்றி மக்கா குறைஷிகள் கேட்ட கேள்விகளுக்குச் சரியான பதிலைக் கூறினார்கள்.
நடந்தவை, நடப்பவற்றை அல்லாஹ்வின் அனுமதிப்படி அறிவித்தார்கள். மிகப் பெரிய அற்புதமான திருக்குர்ஆனைக் கொண்டு வந்தார்கள்.
சிறிது உணவையும், சிறிது தண்ணீரையும் அதிகரிக்கச் செய்தார்கள். அகழ் யுத்தத்தின் போது ஒரு சிலருக்குக்கூட போதாமலிருந்த உணவை நூற்றுக்கணக்கானோர் புசித்தும் கூட அவ்வுணவு சற்றும் குறையவில்லை. கைபர் யுத்தத்தின் போது ஒரு சிறு தோல்பையிலிருந்த தண்ணீரை முப்பதாயிரம் படைவீரர்கள் பருகியும் அது கொஞ்சமும் குறையவில்லை. பல முறை அவர்களுடைய திருக்கரத்தின் விரல்களிலிருந்து தண்ணீர்
ஊற்று சுரந்து, அதைத் தன்னுடன் இருந்த ஆயிரத்தி நானூறுக்கும் அதிகமானோர் பருகினார்கள். இச்சம்பவம் ஹுதைபிய்யா உடன் படிக்கையின் போது நடந்தது.
அபூபக்கர் (ரலி) அவர்கள் ஒரு யுத்தத்தில் கலந்துபோர் செய்து கொண்டிருந்த போது எதிரியின் தாக்குதலின் காரணமாக அவர்களுடைய கண் வெளியே வந்து கன்னத்தில் தொங்கிக் கொண்டிருந்தது. அதைக் கண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அக்கண்ணைத் தமது புனிதக் கரத்தால் எடுத்து அதற்குரிய இடத்தில் வைத்துப் பிரார்த்தித்தார்கள். உடனே அக்கண் முன்பிருந்ததை விட அழகானதாய் ஆகிவிட்டது.
"கஃஅப்பின் அஷ்ரப்” என்பவரைக் கொலை செய்வதற்காக முஹம்மது பின் மஸ்அலா (ரலி) அவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுப்பி வைத்தார்கள். நாயகத்தின் கட்டளையை நிறை வேற்றச் சென்ற அந்த ஸஹாபி கீழே விழுந்து அவருடைய கால் முறிந்துவிட்டது. அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது புனிதக் கரத்தால் தடவினார்கள். உடனே அந்தக்கால் குணமாகிவிட்டது.
ஒருசிறு துண்டு சுட்ட ஆட்டுக்கறியிலிருந்து நூற்றி முப்பது பேர் வயிறு நிரம்பப் புசித்தும் அது குறையாமல் அப்படியே இருந்தது
ஹலரத் ஜாபிர் (ரலி) அவர்கள் ஒரு யூதனிடமிருந்து முப்பது குவியல் பேரீத்தம் பழம் கடன் வாங்கியிருந்தார்கள் அந்தக் கடனை ஹலரத் ஜாபிர் (ரலி) அவர்களால் திருப்பிக் கொடுக்க முடியாமலான
போது, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம்மிடமிருந்த பேரீத்தம் பழத்தை அளக்காமல் அப்படியே எடுத்துச் செல்லுமாறு அந்த யூதனிடம் கூறினார்கள். ஆனால் அவன் அதற்குச் சம்மதிக்கவில்லை. உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது புனிதக் கால்களால் அந்தப் பேரீத்தம் பழக்குவியலில் நடந்து சென்றுவிட்டு, இப்போது யூதனுக்குக் கொடுக்க வேண்டியதை இதிலிருந்து அளந்து கொடும் என ஹலரத் ஜாபிர் அவர்களிடம் கூறினார்கள். யூதனுக்குக் கொடுக்க வேண்டிய முப்பது குவியல்களை அளந்து கொடுத்ததின் பின்னர், பதினேழு குவியல்கள்
மீதமாயின என்று ஹலரத் ஜாபிர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
இது போன்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட அற்புதங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடமிருந்து நிகழ்ந்துள்ளன.
சில ஸஹாபாக்களிடமிருந்து நிகழ்ந்த கராமத்துகள்
ஸஹாபாக்களிடமிருந்தும், அவர்களுக்குப் பின்னர் வந்த தாபியீன்களிடமிருந்தும் ஏராளமான கராமத்துக்கள் நிகழ்ந்துள்ளன.
ஹலரத் ஹுஸைன் பின் ஹுளைர் (ரலி) என்ற சஹாபி ஒரு முறை குர்ஆனிலிருந்து ‘கஹ்ஃப்' என்னும் அத்தியாயத்தை ஓதிக் கொண்டிருக்கும் போது, அவர்களுடைய ஓதலைச் செவியுறுவதற்காக, குடைகளும், அதில் விளக்குகளும் இருப்பது போன்ற தோற்றத்தில் மலக்குகள் வானத்திலிருந்து இறங்குவதைப் பார்த்தார்கள்.
இம்ரான் பின் ஹுலைன் (ரலி) என்ற ஸஹாபிக்கு மலக்குகள் ஸலாம் சொன்னார்கள்.
ஹலரத் சல்மான் (ரலி), ஹலரத் அபுத்தர்தா (ரலி) என்ற இரு ஸஹாபிகளும் ஒரு தட்டிலிருந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது. தட்டிலிருந்த உணவு தஸ்பீஹ் செய்வதைச் செலியுற்றார்கள்.
அப்பாது பின்பிஷ்ர்(ரலி) அவர்களும், உசைதுபின் ஹுளைர் (ரலி) அவர்களும் ஓர் இரவில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஏதோ பேசிவிட்டு அவர்களுடைய இல்லத்திலிருந்து வெளியே வந்து தங்கள் வீடுகளை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். அந்த இரவோ மிக இருள் சூழ்ந்திருந்தது. அப்போது ஒரு சாட்டையைப் போன்ற தோற்றத்தில் ஓர் ஒளி அவர்களுக்கு வெளிச்சம் கொடுத்துக் கொண்டே சென்றது. அவர்கள் ஒவ்வொருவரும் தம் வீடுகளுக்கு பிரிந்து சென்ற போது அந்த ஒளியும் பிரிந்து இருவருடனும் சென்றது.
ஹலரத் அபூபக்ரு (ரலி) அவர்கள் ஒருமுறை மூன்று விருந்தினரைத் தங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்றார்கள். அவர்கள் தம் சாப்பாட்டுத் தட்டின்மேல் உள்ள உணவை சாப்பிட்டுக் கொண்டிருக்க அடிப்பகுதியிலிருந்து உணவு அதிகரித்துக் கொண்டே இருந்தது. அவர்கள் எல்லோரும் சாப்பிட்டு முடிந்தும் அபூபக்ரு(ரலி) அவர்களும் அவர்களின் மனைவியும் சாப்பாடு இருந்த தட்டைப் பார்த்த போது
முன்பிருந்ததைவிட அதிகமான உணவு அப்போது இருப்பதைக் கண்டார்கள். உடனே அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கொண்டுவந்து கொடுத்தார்கள். அதைப் பலர் வயிறு நிரம்பப் புசித்தனர்.
ஹலரத் குபைப் பின் அதிய் (ரலி) என்ற ஸஹாபியை மக்கா நகர முஷ்ரிகீன்கள் கைது செய்து சிறையில் அடைந்திருந்தார்கள். அது திராட்சைப்பழம் விளையாத பருவமாக இருந்தது. அப்போது அவர்களிடம் சிறைக்குள் திராட்சைப் பழம் இருப்பதைக் கண்டார்கள் முஷ்ரிகீன்கள்.
ஹலரத் ஆமிர் பின் ஃபுஹைர் (ரலி) என்ற ஸஹாபி ஒரு யுத்தத்தில் ஷஹீதாகக் கொல்லப்பட்டபோது, அவர்களுடைய உடலை மலக்குகள் வானத்திற்கு உயர்த்திச் செல்வதை ஆமிர் பின்துஃபைல் (ரலி) என்ற சஹாபி பார்த்தார்கள்.
ஹலரத் உம்மு அய்மன் (ரலி) என்ற சஹாபிப் பெண்மணி மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்யப் புறப்பட்டார்கள். அவர்களுடன் எந்த உணவும் இருக்கவில்லை. குடிப்பதற்குத் தண்ணீர் கூட இருக்க வில்லை. அன்றோ அவர்கள் நோன்பு நோற்றிருந்த காரணத்தால் தாகம் அதிகரித்து மயங்கிக் கீழே விழுந்து விட்டார்கள். நோன்பு துறக்கும் நேரம் வந்தபோது தலையில் ஏதோ தட்டுவது போன்று ஒருவித உணர்ச்சி பெற்று தலையை உயர்த்திப் பார்த்தார்கள். அப்போது தண்ணீர் நிறைந்த ஒரு வாளி தொங்கிக் கொண்டிருந்தது. அதிலிருந்து தாகம் தீரும் வரை பருகினார்கள். அன்று முதல் அவர்கள் தாகித்ததே இல்லை என்பதாகக் கூறப்படுகிறது
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விடுதலை செய்த அடிமை “சபீனா" என்ற ஸஹாபி, ஒரு தடவை பாதையில் ஒரு சிங்கம் வருவதைக் கண்டார்கள். அதைப் பார்த்து, 'நான் அல்லாஹ்வுடைய தூதரின் தூதர் என்று கூறினார்கள். உடனே அந்தச் சிங்கம் அவர்களுக்குத் துணையாக மாறி அவர்கள் விரும்பும் இடம்வரை அவர்கள் கூடவே சென்றது.
ஹலரத் பர்ரா பின்மாலிக் (ரலி) என்ற ஸஹாபி அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து அல்லாஹ்விடம் ஒன்றைக் கேட்பார்களானால், அது உடனே அங்கீகரிக்கப்படும். ஒரு தடவை ஒரு போர்க்களத்தில் ஸஹாபாக்கள் பர்ராவைப் பார்த்து, “பர்ராவே! அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்யும்!” என்றார்கள். உடனே யா அல்லாஹ்! எதிரிகள் மீது, எங்களை மிகைக்கச் செய்வதற்காக உன் மீது சத்தியம் செய்து கேட்கிறேன்!' என்று கூறினார்கள். உடனே எதிரிகள் வெருண்டோடி விட்டனர் என்று கூறப்படுகிறது. காதிசிய்யா யுத்தத்தின்போதும் இதுபோன்று கூறிவிட்டு, யா அல்லாஹ்! என்னை முதல் ஷஹீதாக ஆக்குவாயாக! என்று வேண்டினார்கள். அவ்வாறே அவர்கள் அந்த யுத்தத்தில் ஷஹீதாக மரணமடைந்தார்கள்.
“காலித்பின் வலீத்" (ரலி) அவர்கள் ஒரு கோட்டையை முற்றுகையிட்டபோது, எதிரிகள் அவர்களிடம் விஷத்தைக் கொடுத்து இதை நீர் குடித்தால்தான் கோட்டையை ஒப்படைப்போம் என்று கூறினார்கள். உடனே அவ்விஷம் கலந்த பானத்தை, காலித் அவர்கள் அல்லாஹ்வின் பெயர் கூறி குடித்தார்கள். அவர்களை அவ்விஷம் ஒன்றும் செய்யவில்லை.
ஹலரத் சஅதுபின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கேட்கும் துஆ உடனடியாக அங்கீகரிக்கப்பட்டது. இவர்கள்தான் கிஸ்ராவின் சேனையை விரட்டி இராக் நாட்டை வெற்றி கொண்டார்கள்.
ஹலரத் உமர் (ரலி) அவர்கள் யுத்தத்திற்காக ஒரு படையை அனுப்பி, அதில் 'சாரியா' என்பவரை அமீராக நியமித்தார்கள். இப் படையை அனுப்பியதன் பின்னர் ஒரு நாள் உமர் (ரலி) அவர்கள் மஸ்ஜிதுந் நபவியில் குத்பாப் பேருரை நிகழ்த்திக் கொண்டிருந்த போது, 'சாரியாவே! மலையின் பக்கம் செல்லும், சாரியாவே! மலையின் பக்கம் செல்லும்!' என்று சப்தமிட்டார்கள். அந்தப் படையின் தூதர் மதீனா வந்தபோது, அவரிடம் போரைப்பற்றி உமர் (ரலி) அவர்கள் விசாரித் தார்கள். அதற்கு அவர் அமீருல் மூமினீன் அவர்களே! நாங்கள் எதிரிகளுடன் போராடிக் கொண்டிருக்கும் சமயத்தில் எங்களை அவர்கள் மிகைத்து விட்டார்கள். அந்நேரம் சாரியாவே, மலையின் பக்கம் செல்லும், என்று ஒருவர் சப்தமிடுவதைச் செவியுற்றோம். உடனே. நாங்கள் மலையின் பக்கம் எங்கள் முதுகைக் காட்டிய வண்ணம் திரும்பி நின்றோம். அதன் காரணமாக அல்லாஹ் எதிரிகளை வீழ்த்தினான் என்று கூறினார்.
ஹலரத் ஸனீரா (ரலி) என்ற சஹாபிப் பெண்மணி இஸ்லாத்தைத் தழுவியதன் காரணமாக முஷ்ரிக்குகள் அவர்களுக்குச் சொல்லொணாத் துன்பங்கள் கொடுத்து இஸ்லாத்தை விட்டுவிடுமாறு கூறினார்கள். ஆனால் அதற்கு அவர்கள் மறுத்துவிட்டார்கள். பின்னர் அவர்களுடைய கண்பார்வை போய் விட்டது. எனவே, லாத், உஸ்ஸா என்ற தெய்வங்களே அவளுடைய பார்வையைப் பறித்தன என்று முஷ்ரிக்குகள் கூறினார்கள். அதற்கு அவர்கள் அல்லாஹ்வின் மீது ஆணையாக! இல்லவே இல்லை என்று கூறினார்கள். உடனே அல்லாஹ் அவர்களுக்குப் பார்வையைத் திரும்பக் கொடுத்து விட்டான்
“அர்வா பிந்து ஹகம்” என்ற ஒரு பெண், ஹலரத் சயீதுபின் சைது (ரலி) என்ற ஸஹாபியின் மீது பொய்சொல்லி விட்டாள். உடனே 'யாஅல்லாஹ்! இவள் என்மீது பொய் சொல்லக் கூடியவளாக இருந்தால், அவளுடைய பார்வையைப் போக்கிவிடு; அவளை அவளுடைய இடத்திலேயே மரணிக்கச் செய்துவிடு! என அந்த ஸஹாபி பிரார்த்தித்தார்கள். எனவே அவள் பார்வை இழந்து அவளுடைய இடத்திலேயே ஒரு பள்ளத்தாக்கில் விழுந்து இறந்தாள். (முஸ்லிம்)
ஹலரத் அலாவுபின் ஹள்ரமி (ரலி)யின் கராமத்கள்
பஹ்ரைன் நாட்டு நிர்வாகத்தைக் கவனித்துக் கொள்வதற்காக அல் 'அலாபின் ஹள்ரமி' என்ற ஸஹாபியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நியமித்திருந்தார்கள். இந்த ஸஹாபி அல்லாஹ்விடம் துஆ கேட்கும் போது யாஅஸீசு, யாஹலீமு, யாஅலிய்யு, யா அளீமு என்று கூறி அல்லாஹ்விடம் தனது தேவையைக் கேட்பார்கள். உடனே அவர்களுடைய துஆ அங்கீகரிக்கப்பட்டுவிடும். ஒரு தடவை இந்த ஸஹாபிக்கும், அவர்களுடன் இருந்தவர்களுக்கும் உளூச்செய்வதற்கும், குடிப்பதற்கும் தண்ணீர் இல்லாமலிருந்த போது, அல்லாஹ்விடம் தஆ செய்தார்கள். உடனே அவர்களுக்கு தண்ணீர் கிடைத்து விட்டது.
ஒரு தடவை ஹலரத் ‘அலாவுபின் ஹள்ரமி' (ரலி) அவர்களும், அவர்களுடைய தோழர்களுமாகக் குதிரையில் போய்க் கொண்டிருக்கும்போது, கடல் குறுக்கிட்டு அதைத் தாண்டிச் செல்ல முடியாமலாகி விட்டது. உடனே அல்லாஹ்விடம் பிரார்த்தித்தார்கள். கடல் விலகிக் கொடுத்தது. அவர்களும் அவர்களுடைய குதிரையும் கொஞ்சம்கூட தண்ணீரில் படாமல் கடலைத் தாண்டிச் சென்றார்கள்.
இவர்கள், ‘யாஅல்லாஹ்! நான் இறந்த பின்னர் சடலத்தை எதிரிகளின் பார்வையை விட்டும் காப்பாற்றுவாயாக! என, அல்லாஹ்விடம் துஆ செய்தார்கள். எதிரிகள் அவர்களுடைய கப்ரைத் தோண்டிப் பார்த்தபோது அங்கு அவர்களின் உடல் காணப்படவில்லை.
ஹலரத் அபூ முஸ்லிமில் கூலானி (ரலி)யின் கராமத்துகள்
ஹலரத் 'அபூமுஸ்லிமில் கூலானி' (ரலி) என்பவர்கள் ஒரு முறை தமது தோழர்களுடன் மிக வேகமாக ஓடும் திஜ்லா (டைக்ரீஸ்) நதியில் நடந்து சென்றார்கள். நதியின் கரையைச் சென்றடைந்ததும் தம் தோழர்களிடத்தில் உங்களில் யாருக்காவது ஏதாவது பொருள் நதியில் காணாமல் போயிருக்கிறதா? சொல்லுங்கள் நான் அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறேன். என்று கூறினார்கள் உடனே ஒருவர், 'என்னுடைய ஒட்டகத்திற்கு ஆகாரம் வைக்கும் கூடை ஒன்று காணாமல் போய் விட்டது' என்று சொன்னார். உடனே அல்லாஹ்விடம் பிரார்த்தித்தார்கள். அக்கூடை கிடைத்து விட்டது.
'அஸ்வதுல் அனசி' என்பவன் தன்னை நபியெனக் கூறிவாதாடினான். ஒரு முறை இவன் அபூமுஸ்லிமில் கூலானி (ரலி) அவர்களை அழைத்து, 'என்னை இறைத்தூதர் என்று ஏற்றுக் கொள்கிறீரா?' என்று
கேட்டான். அதற்கு அவர்கள், 'நான் செவிமடுக்கவில்லை' என்றார்கள். முஹம்மதை இறைத்தூதர் என்று ஏற்றுக் கொள்கிறீரா?' என்று கேட்டான். 'ஆம்' என, பதில் கூறினார்கள். உடனே, அவர்களைத் தீயில் இடுமாறு, கட்டளையிட்டான். அவ்வாறே அவர்கள் தீயில் போடப்பட்டார்கள். அதில் அவர்கள் தொழுது கொண்டிருப்பதை எதிரிகள் கண்டார்கள். அந்தத் தீ அவர்களுக்குக் குளிர்ச்சியாக மாறிவிட்டது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உலகைப் பிரிந்த பின்னர் ஒரு முறை இவர் மதீனா வந்தபோது அவரைத் தமக்கும், ஹளரத் அபூபக்கர் (ரலி) அவர்களுக்குமிடையில் ஹளரத் உமர் (ரலி) அவர்கள் உட்கார வைத்து நபி இப்றாஹீம் (அலை) அவர்கள் தீயில் போடப்பட்டது போன்று முஹம்மத் (ஸல்) அவர்களுடைய உம்மத்திலிருந்தும் தீயில் போடப்பட்ட ஒருவரை நான் பார்க்கும் வரையில் என்னை மரணிக்கச் செய்யாத அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் என்று உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
ஒரு முறை ஓர் அடிமைப்பெண் உணவில் விஷத்தைக் கலந்து அவருக்குக் கொடுத்தாள். அதை அவர் புசித்தும்கூட அவ்விஷம் அவரை ஒன்றும் செய்யவில்லை. ஒரு முறை ஒரு பெண் இந்த ஸஹாபியின் மனைவிக்குத் தீங்கிழைக்க நாடியபோது, அவளுக்குக் கேடாகப் பிரார்த்தித்தார்கள். எனவே அவளுடைய பார்வை போய்விட்டது. பின்னர் அப்பெண் அவர்களிடம் வந்து மன்னிப்புக் கோரியபோது; அவளுக்காகப் பிரார்த்தித்தார்கள். மீண்டும்பார்வையை அல்லாஹ் அவளுக்குக் கொடுத்தான்.
ஆமிர் பின் அப்துகைஸ் (ரலி)யின் கராமத்கள்
ஹலரத் ஆமிர் பின் அப்துகைஸ் என்ற ஸஹாபி தன்னுடைய ஊதியத்திலிருந்து ஆயிரம் திர்ஹம்களை எடுத்துச் செல்வார்கள். பாதையில் கேட்கும் ஏழைகளுக்கு எண்ணாமலேயே அள்ளிக் கொடுப்பார்கள். வீட்டிற்கு வந்து எண்ணிப் பார்க்கும்போது அதில் ஒரு திர்ஹம் கூடக் குறைவதில்லை.
ஒருமுறை அவர்கள் நடந்து சென்று கொண்டிருக்கும் போது பயணக்கூட்டம் ஒன்றை ஒரு சிங்கம் வழி மறித்துக் கொண்டிருந்ததைக் கண்டு, அவ்விடத்திற்கு விரைந்து சென்று தன் துணியால் சிங்கத்தைப்
பிடித்து, தன்காலை அதனுடைய கழுத்தில் வைத்துக் கொண்டு நீ அல்லாஹ்வுடைய நாய்களில் ஒன்று, அல்லாஹ்வைத் தவிர வேறு எதற்கும் பயப்படுவதற்கு நான் வெட்கப்படுகிறேன் என்று கூறினார்.
பயணக் கூட்டம் சிங்கத்தின் தீங்கிலிருந்து தப்பியது.
குளிர்காலங்களில் தண்ணீரில் உளூ செய்வதிலுள்ள கஷ்டத்தை இலேசாக்கித் தருமாறு அல்லாஹ்விடம் துஆச் செய்வார். அப்போது வெந்நீர் தன் பக்கத்தில் இருப்பதை காண்பார். தொழுகையில் நிற்கும் போது ஷைத்தான் தன்னுடைய உள்ளத்தில் வந்து ஊசலாட்டங்கள் போட்டு தொல்லை கொடுப்பதிலிருந்து காப்பாற்றுமாறு அல்லாஹ்விடம் துஆ கேட்டார். எனவே, ஷைத்தானால் அவரை ஒன்றும் செய்திட முடியவில்லை.
தாபியீன்களிடமிருந்து நிகழ்ந்த கராமத்துகள்
"ஹளரத் ஹஸனுல் பசரி” (ரலி) அவர்களைப் பிடித்துக் கைது செய்வதற்காக ஆறுமுறை ஹஜ்ஜாஜ் பின் யூசுஃபுடைய கூட்டத்தினர், அவர்கள் இருந்த இடத்திற்குச் சென்றனர். அவர்களுடைய கண்களை விட்டும் தன்னை மறைத்துவிடுமாறு ஒவ்வொரு முறையும் அல்லாஹ்விடம் பிரார்த்தித்தார்கள். உடனே அல்லாஹ் அவர்களை எதிரிகளின் கண்களை விட்டு மறைத்து விட்டான்.
ஒருமுறை இவர்களுக்குத் துன்பம் விளைவித்த காரிஜிய்யாக் கூட்டத்தைச் சார்ந்த ஒருவனுக்குப் பாதகமாக துஆச் செய்தார்கள். உடனே அவன் மையித்தாக விழுந்துவிட்டான்.
ஹளரத் 'வஸ்லத் பின் அஷீம்' (ரலி) என்ற தாபியீ ஒரு முறை போர் செய்து கொண்டிருக்கும்போது அவருடைய குதிரை இறந்து விட்டது. அல்லாஹ்விடம் பிரார்த்தித்தார்கள். உடனே குதிரை உயிர்பெற்று எழுந்தது. அதில் ஏறித் தம்முடைய இல்லத்தை வந்தடைந்ததும், தம் மகனிடம் மகனே! இந்தக் குதிரை இரவலாகத் தரப்பட்டது. இதைப் பிடித்துச் செல், என்றார்கள். அவன் அதைப் பிடித்ததும் அக்குதிரை இறந்து விட்டது.
'அஹவாஸ்' என்னும் ஊரில் இருக்கும் போது ஒருமுறை அவர்களுக்குப் பசி ஏற்பட்டபோது அல்லாஹ்விடம் பிரார்த்தித்தார்கள். உடனே தமக்குப் பின்னால் ஒரு பட்டுத் துணியில் பேரீத்தம் பழம் இருப்பதைக் கண்டார்கள். அதிலிருந்த பேரீத்தம் பழத்தைப் புசித்து விட்டு, அந்தப் பட்டுத் துணியைத் தம்முடைய மனைவியிடம் கொடுத்தார்கள். அது நீண்ட காலமாக அவர்களிடம் இருந்ததாகக் கூறப்படுகிறது.
ஒருமுறை அவர்கள் இரவு நேரத்தில் காட்டில் தொழுது கொண்டிருக்கும்போது, ஒரு சிங்கம் அவர்களின் பக்கம் வந்தது. அவர்கள் தொழுகையை முடித்ததும் அதைப் பார்த்து 'வேறு இடங்களில் போய் உனது உணவைத் தேடு' என்று சொன்னார்கள். அது கர்ஜித்துக் கொண்டே திரும்பிச் சென்றுவிட்டது.
ஹலரத் 'சமீது பின் முசய்யப்' (ரலி) என்ற பெரிய தாபியீ 'ஹர்ரா' என்ற போர் நடந்த நாட்களில் மஸ்ஜிதுந் நபவியில் தனியாக உட்கார்ந்திருக்கும்போது, தொழுகை நேரத்தில் ரசூலுல்லாஹ்வுடைய கப்ரிலிருந்து பாங்கு சப்தம் வருவதைப் பல தடவை செவியுற்றார்கள்.
'நகஃவு' என்ற வம்சத்தைச் சார்ந்த ஒருவர் பிரயாணம் செய்து கொண்டிருக்கும்போது, வழியில் அவர் சவாரி செய்து சென்ற கழுதை இறந்து விட்டது. அவருடனிருந்த பிரயாணத் தோழர்கள் அவருடைய சாமான்களைப் பகிர்ந்து தங்களுடைய கழுதைகளில் வைத்துக் கொள்வதாக் கூறினார்கள். அதற்கு அவர் கொஞ்சம் பொறுங்கள்! என்று சொல்லி விட்டு உளூச் செய்து. இரு ரக்அத்துகள் தொழுது, அல்லாஹ்விடம் துஆக்கேட்டார்கள். அல்லாஹ் அவர்களுடைய துஆவை அங்கீகரித்துக் கழுதையை உயிர்பெறச் செய்தான். அதில் அவர் தமது சாமான்களை
ஏற்றிச் சென்றார்.
உவைசுல்கர்னி (ரஹ்) என்ற தாபியீ இறந்தபோது அவர்களுடைய சட்டையில் கபன்துணி இருப்பதைக் கண்டார்கள். அதற்கு முன்னர் அவருடன் அத்துணி இருக்கவில்லை. அவர்களுக்காக ஒரு பாறையில்
ஒரு கப்று தோண்டப்பட்டு தயாராக இருப்பதைக் கண்டார்கள். எனவே, அந்தத் துணியில் அவர்களுக்கு கஃபனிட்டு, அந்த கப்ரிலேயே அவர்களை அடக்கம் செய்தார்கள்.
அம்ர் பின் உக்பா (ரஹ்) என்பவர்கள் ஒருமுறை வெயிலில் நின்று தொழுது கொண்டிருக்கும்போது மேகம் நிழல் கொடுத்தது. அவர்கள் தமது தோழர்களின் வாகனங்களை மேய்த்துக் கொண்டிருக்கும் போது, கொடிய மிருகங்கள் அவர்களுக்குப் பாதுகாப்பளித்தன.
முத்ரிப்பின் அப்துல்லாஹ் பின் சுகைய்யிர் (ரஹ்) என்ற தாபியீ ஒருமுறை தன் வீட்டிற்குள் நுழைந்தபோது அவர்களுடைய பாத்திரங்கள் தஸ்பீஹ் செய்வதைச் செவியுற்றார்கள். இவர்களும், இவர்களுடைய தோழர் ஒருவருமாக இருள் சூழ்ந்த ஓர் இரவில் சென்று கொண்டிருந்த போது ஒரு சாட்டையின் ஒளிவந்து வெளிச்சம் கொடுத்தது.
‘அஹ்னஃப் பின் கைஸ்' என்ற தாபியீ இறந்தபோது, அவர்களை அடக்கம் செய்வதற்காக கப்ரில் வைத்த சமயத்தில் ஒருவருடைய தொப்பி கப்ரில் விழுந்துவிட்டது. அதை எடுப்பதற்காக அவர் கப்ரில் இறங்கிய போது பார்வை எட்டும் அளவிற்கு அவருடைய கப்ர் விசாலமாய் இருப்பதைக் கண்டார்.
‘இப்றாஹீம் அத்தமீமி' (ரஹ்) என்ற தாபியீ ஓரிரு மாதங்கள் வரை ஒன்றும் சாப்பிடாமலேயே இருப்பார்கள். ஒரு தடவை தம் குடும்பத்திற்குரிய ஆகாரங்களைத் தேடிப் பார்த்தார்கள். ஒன்றும் கிடைக்காமல் வீடு திரும்பிக் கொண்டிருக்கும்போது, பாதையில் கிடந்த சிகப்பு நிற மணலில் கொஞ்சம் எடுத்துச் சென்று வீட்டிற்குள் போய்ப் பார்த்த போது அது சிகப்பு நிறக்கோதுமையாக இருந்தது. அதை விவசாயம் செய்தபோது கொத்துக் கொத்தாக விளைந்தது.
"உத்பதுல் குலாம்' (ரஹ்) என்ற தாபியீ தமக்கு இனிமையான குரலையும். அதிகமான கண்ணீரையும், சிரமமின்றி உணவு கிடைப்பதற்கும் அல்லாஹ்விடம் வேண்டினார். எனவே அவர் குர்ஆன் ஓதும் போதும் தானும் அழுது பிறரையும் அழவைப்பார். அவர் தமது வீட்டிற்குள் நுழையும் போது, அவருக்காக அங்கு உணவு தயாராக இருப்பதைக் காண்பார். அவ்வுணவு எங்கிருந்து வரும் என்பது அவருக்குத் தெரியாது.
'அப்துல்வாஹித் பின்சைது' (ரஹ்) என்பவர்களுக்கு வாத நோய் ஏற்பட்டது. உளூ செய்யும் நேரத்தில் தம் உடல் உறுப்புக்களுக்குச் சுகத்தைக் கொடுக்குமாறு அல்லாஹ்விடம் வேண்டினார். அதற்கு இணங்க அவருடைய உறுப்புக்கள் உளூ செய்யும் நேரத்தில் மட்டும் சுகம் பெறும்; அதற்குப் பிறகு முன்பிருந்ததைப் போன்று ஆகி விடும்.
இவை நமது காலத்திற்கு முன்புள்ள காலத்தில் நடந்தவை என நாம் கேள்விபட்டவையாகும். இது மிகப்பெரிய விசாலமான விஷயமுமாகும். அவ்லியாக்களின் கராமத்துக்களைப் பற்றி வேறு இடங்களில் விளக்கியுள்ளோம். ஆனால், இக்காலத்தில் நம் கண்ணால் காணுகின்ற கராமத்துகள் ஏராளம் உள்ளன.
இங்கு நாம் முக்கியமாக அறிய வேண்டியது என்னவென்றால், மனிதனுடைய தேவைக்கேற்றவாறே கராமத்துகள் ஏற்படுகின்றன. பலவீனமான ஈமானுடைய ஒரு மனிதன் கராமத்தின்பால் தேவைப்படும்போது அவனுடைய ஈமானைப் பலப்படுத்துவதற்குத் தேவையான அளவே கராமத்கள் வெளியாகின்றன. இவ்வாறே தேவையுள்ள மனிதனுக்கு அவனது தேவைக்கேற்ப கராமத்கள் வெளியாகின்றன.
பூரணமான இறை நேசத்தைப் பெற்றவர் இதுபோன்ற கராமத்களின் பால் தேவையற்றவராக இருக்கிறார். காரணம் இவர் விலாயத்தில் உயர் தகுதியைப் பெற்றதினால் கராமத் காட்ட வேண்டும் என்ற அவசியமில்லை, அவர் கராமத்களை வெளிப்படுத்தாததின் காரணத்தால் அவர் இறைநேரசத்தில் குறைந்தவர் என்று கூறிவிட முடியாது. எனவே, தகுதியில் உயர்ந்த ஸஹபாக்களை விட தாபியீன்களிடத்திலேயே அதிகமான கராமத்கள் ஏற்பட்டன. அதே நேரத்தில் மக்களுக்கு நேர்வழி காட்டுவதற்காகவும். அவர்களுடைய தேவைகளுக்காகவும் அற்புதங்களைக் காட்டக் கூடியவர் உயர்ந்த தகுதி உடையவராக இருக்கிறார். இப்படிப்பட்டவர்கள் தங்களுடைய தேவைகளுக்காகக் கராமத்துகளை வெளிப்படுத்துவதில்லை. மக்களுடைய தேவைகளுக்காகவும், அவர்களை நேர்வழி படுத்துவதற்காகவுமே கராமத்களைப் பயன்படுத்துகிறார்கள்.
அப்துல்லாஹ் பின் சய்யாத் என்பவனின் பித்தலாட்டங்கள்
மேற்கூறப்பட்ட கராமத்களுக்கு நேர் மாற்றமானது தான் ஷைத்தானுடைய வேலைகள். இந்த ஷைத்தானிய வேலைகளில் ஈடுபட்டவர்களில் ஒருவன் தான் 'அப்துல்லாஹ் பின் சய்யாத்' என்பவன். இவன் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுடைய காலத்தில் வெளியானான். இவனைத் தஜ்ஜால் என்று கூட சில ஸஹாபிகள் கருதினார்கள். ஆனால், நாயகம் (ஸல்) அவர்கள் இவனுடைய விஷயத்தில் எந்த முடிவிற்கும் வரவில்லை. இவன் தஜ்ஜால் அல்ல, ஒரு பெரிய சோதிடன் என்பது பின்னர் தெரிய வந்தது. இவனைப் பார்த்து, 'நான் உனக்காக ஒன்றை மறைத்து வைத்திருக்கிறேன்' என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அதற்கு அவன் 'துகான்' என்ற அத்தியாயமா? என்று சொல்ல முயன்றான். ஆனால் அதை அவனால் பூரணமாகச் சொல்ல முடியாமல் 'துக்துக்' என்று கூறினான்.அப்போது 'நீ தலை குனிந்து செல்! உன்னுடைய (வேலைகள் இனி பலிக்கப் போவதில்லை' என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அப்துல்லாஹ் பின் சய்யாத் என்ற இவன் ஒரு பெரிய சோதிடனாக இருந்தான். ஒவ்வொரு சோதிடனுக்கும் ஷைத்தான்களில் ஒன்று துணையாக இருக்கும். இந்த ஷைத்தான்கள் வானத்திலிருந்து மறைவான செய்திகளைத் திருடிக் கொண்டு வந்து, ஜோதிடர்களிடத்தில் அறிவிக்கின்றன. அவர்கள் பொய்யையும், மெய்யையும் கலந்துவிடுகிறார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு ஸஹீஹான ஹதீஸில் பின்வருமாறு கூறினார்கள் :-
மலக்குகள் மேகங்களில் இறங்கி வரும்போது, அல்லாஹ் விதித்த விஷயங்களைத் தங்களுக்குள் கூறிக்கொள்வார்கள். இதில் சிலவற்றை ஷைத்தான்கள் திருட்டுத்தனமாகச் செவியுற்று அவற்றை தங்களுடைய தோழர்களான சோதிடர்களிடம் கொண்டு வந்து கொடுக்கும். அவர்கள் அத்துடன் நூறு பொய்களைக் கலந்து சொல்வார்கள். (புகாரி)
ஒருமுறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சில அன்சாரித் தோழர்களுடன் உரையாடிக் கொண்டிருக்கும் போது ஒரு நட்சத்திரப் பிழம்பு வானத்திலிருந்து எறியப்பட்டு, அதிலிருந்து வெளிச்சம் வந்ததைப் பார்த்தார்கள், அப்போது 'இஸ்லாத்திற்கு முன்புள்ள அறியாமைக் காலத்தில் இதுபோன்ற நட்சத்திரப் பிழம்பு வானத்திலிருந்து எறியப்பட்டு அதிலிருந்து வெளிச்சம் வந்ததைப் பார்த்தபோது அதைக் குறித்து நீங்கள் என்ன கருதி வந்தீர்கள்? என்று அன்சாரிகளிடம் நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் கேட்டார்கள். அதற்கு யாராவது ஒரு பெரிய மனிதர் இறந்ததற்கு அல்லது ஒரு பெரிய மனிதர் பிறப்பதற்குரிய அறிகுறி' எனக் கருதி வந்தோம், என்று கூறினார்கள். அப்போது யாருடைய இறப்பிற்காகவோ, அல்லது யாருடைய பிறப்பிற்காகவோ அது எறியப்படுவதில்லை ஆனால் அல்லாஹ் ஒரு விஷயத்தைக் கட்டளையிடும்போது
அல்லாஹ்வின் அர்ஷைச் சுமந்து நிற்கின்ற மலக்குகள் தஸ்பீஹ் சொல்லுவார்கள். பின்னர் ஏழாவது வானத்தில் உள்ளவர்கள் அர்ஷைச் சுமந்திருக்கும் மலக்குகளிடத்தில் 'நமது இரட்சகன் என்ன சொன்னான்?' என்று கேட்பார்கள். அப்போது அவர்கள் அல்லாஹ் விதித்த கட்டளையைக் கூறுவார்கள். இவ்வாறாக ஒவ்வொரு வானத்தில் உள்ளவர்களும் கேட்டுக் கடைசியாக, பூமியை அடுத்துள்ள வானத்தில் உள்ளவர்களுக்குச் செய்தி கிடைக்கும். அப்போது ஷைத்தான்கள் அச்செய்தியைத் திருட்டுத் தனமாகச் செவியுறும் போது. தீப்பிழம்புகள் அந்த ஷைத்தான்கள் மீது எறியப்படுகின்றன. அவை திருடிய சோதிடர்களிடம் வந்து கொடுக்கின்றன. எந்தச் செய்தியை வானத்திலிருந்து கேட்டார்களோ, அது
செய்தியைத் தங்களுடைய தோழர்களான
உண்மை. ஆனால் அத்தோடு பல பொய்களையும் சோதிடர்கள் சேர்த்துக் கூறுவார்கள். என நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
அறியாமைக் காலத்தில் வானத்திலிருந்து தீப்பிழம்பு எறியப் படுமா?” என்று இமாம் ஸுஹ்ரி (ரஹ்) அவர்களிடம் முஅம்மர் (ரலி) அவர்கள் கேட்டபோது ஆம்" ஆனால், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நபியாக அனுப்பப்பட்டதிலிருந்து ஷைத்தான்கள் மீது தீப்பிழம்பு எறிவது அதிகரித்தது' என்று அவர்கள் கூறினார்கள்.
தன்னை நபி என வாதாடிய 'அஸ்வதுல் அனசி' என்பவரிடம் பல ஷைத்தான்கள் இருந்தன. சிலமறைவான விஷயங்களை அவனுக்கு
அவை அறிவிக்கும், முஸ்லிம்கள் அவனைக் கொலை செய்ய நாடிய போது, தங்கள் விஷயங்களை ஷைத்தான்கள் அவனிடத்தில் சென்று கூறிவிடுமோ என்று கூட அஞ்சினார்கள். அவன் காஃபிராகி விட்டான் என்பது அவனுடைய மனைவிக்குத் தெரிந்ததும் அவனைக் கொலை செய்யும் விஷயத்தில் முஸ்லிம்களுக்குத் துணையாக அவள் இருந்தாள்.
தன்னை நபி என வாதாடிய “முஸைலமா”
என்பவனுடனும் பல ஷைத்தான்கள் இருந்தன. அவை அவனுக்கு மறைவான சில விஷயங்களை அறிவித்து வந்தன.
இவர்களைப் போன்றவர்கள் ஏராளமாக இருக்கிறார்கள். உமய்யா கலிபாக்களில் ஒருவரான 'அப்துல் மலிக் பின் மர்வான்' என்பவருடைய காலத்தில் வாழ்ந்த 'ஹாரிதுத் திமஷ்கி' என்பவன் தன்னை நபி எனக்கூறி, வாதாடினான். அவன் கட்டி வைக்கப்பட்டால், ஷைத்தான்கள் அவனை அவிழ்த்து விட்டுவிடும். ஆயுதங்கள் அவன் உடலைத் தாக்காத அளவுக்கு ஷைத்தான்கள் தடுத்து விடும். பளிங்குக்கல்லை அவன் தனது கையால் தடவினால் அது தஸ்பீஹ் சொல்லும். ஆகாயத்தில் சிலர் குதிரையின் மீது இருப்பதாக மக்களுக்குக்காட்டி இவை மலக்குகள் என்று கூறுவான். ஆனால் அவை அவனுக்கு வழிப்பட்ட ஜின்களேயாகும், அவனைக் கொலை செய்வதற்காக முஸ்லிம்கள் பிடித்தபோது, அவனை ஒருவர் ஈட்டியால் குத்தினார். ஆனால் ஈட்டி அவனுடைய உடலில் ஏறவில்லை. குத்தியவரிடத்தில், நீர் பிஸ்மி ஓதி குத்தவில்லை. இப்போது பிஸ்மி ஓதிக் குத்தும் என்று கலீபா அப்துல் மலிக் கூறினார். அவ்வாறே அவர் பிஸ்மி ஓதிக் குத்தி அவனைக் கொன்றார்.
ஷைத்தானை விரட்ட ஆயத்துல் குர்சி
ஷைத்தானை வசப்படுத்தி ஷைத்தானிய வேலைகளைச் செய்யக் கூடியவரிடத்தில் 'ஆயத்துல் குர்சி'போன்ற இறைவசனங்களை ஓதினால், ஷைத்தான் ஓடி விடுகின்றான். ஸஹீஹான ஹதீஸில் வந்துள்ளது.
ஃபித்ரா ஸகாத்தைச் சேகரித்துப் பாதுகாப்பாக வைக்கும் பொறுப்பை ஸஹாபி அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒப்படைத்திருந்தார்கள். ஷைத்தான் ஒவ்வொரு இரவும் ஸகாத்துப் பொருளிலிருந்து திருடிச் செல்வான். அப்பொழுது அவனை அபூஹுரைரா (ரலி) அவர்கள் கட்டிப் போடுவார்கள். “இனிமேல் நான் வரவே மாட்டேன் என்னை விட்டுவிடுங்கள்" என்று கூறி ஷைத்தான் மன்னிப்புக் கோருவான். அப்போது அவனை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அவிழ்த்து விட்டு விடுவார்கள். மறுநாள் காலை அபூஹுரைரா (ரலி) அவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சந்தித்தபோது, “நேற்று இரவு நீர் கட்டிப்போட்ட கைதி எங்கே?” என்று கேட்டார்கள். “இனிமேல் நான் வரமாட்டேன் என்று கூறி மன்னிப்புக் கேட்டான். எனவே அவனை நான் விட்டுவிட்டேன்" என்று அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள். ‘உம்மிடம் அவன் பொய் சொல்லிவிட்டான். நிச்சயமாக அவன் திரும்பவும் வருவான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அவ்வாறே மூன்றாவது நாளும் ஷைத்தான் வந்தான். அவனை அபூஹுரைரா (ரலி) அவர்கள் கட்டிப் போட்டபோது, “என்னை விட்டுவிடும்? உமக்குப் பயனுள்ள ஒரு விஷயத்தைப் போதித்துத் தருகிறேன்” என்று ஷைத்தான் கூறி விட்டு, “நீர் தூங்குவதற்காகப் படுக்கைக்குச் சென்றதும் “ஆயத்துல் குர்சி' என்னும் வசனங்களை ஆரம்பத்திலிருந்து கடைசி வரை ஓதுவீரானால், அல்லாஹ்வின் பாதுகாப்பு உமக்கு இருந்துவரும். நீர்காலையில் எழும்வரை ஷைத்தான் உம்மிடம் வரமாட்டான் என்று கூறி சென்றுவிட்டான். இச்சம்பவத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடத்தில் அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியபோது, “உம்மிடம் வந்து இந்த விஷயத்தைக் கூறிச் சென்றவன் ஷைத்தானாவான். இவன் மிகப் பெரிய பொய்யனாக இருந்தும் கூட இது விஷயத்தில் அவன் உண்மை சொல்லிவிட்டான்" என, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(புகாரி)
எனவே ஷைத்தானிய வேலைகளைச் செய்யக் கூடியவர்களிடத்தில் ஆயத்துல் குர்சியை உண்மையாகவே ஓதினால், அவர்களுடைய வேலைகள் ஒன்றும் பலிப்பதில்லை. உதாரணமாக ஷைத்தானிய நிலையில் தீயில் குதிப்பவன் அல்லது ஊத்து ஊதி கை தட்டிச் சிலவேலைகளைக் காட்டக்கூடியவன் இப்படிப்பட்டவர்கள் மீது
ஷைத்தான்கள் இறங்கி அவர்களின் நாவு வழியாகப் பேசுவான், தாம் என்ன பேசுகிறோம் என்பது அவர்களுக்கே தெரியாது. கூடியிருப்பவர்களின் மனத்திலுள்ள சில விஷயங்களை வெளிப்படுத்துவார்கள். சில சமயம் பல மொழிகளில் பேசுவார்கள். ஜின் பிடித்து மயங்கி விழுந்தவனுடைய நாவின் மூலமாக, ஜின் பேசுவதைப் போன்று பேசுவார்கள். ஷைத்தானிய நிலையில் உள்ளவனுக்கு நாம் என்ன பேசுகிறோம். என்ன செய்கிறோம் என்பதெல்லாம் புலப்படாது. ஷைத்தானிய நிலையிலிருந்து மாறி சுய உணர்வு அவனுக்கு வந்ததும் நான் அவ்வாறு கூறவில்லை என்று தான் பேசியவற்றையெல்லாம் மறுப்பான் ஜின் பிடித்த மனிதனை எவ்வளவு அடித்தாலும் அந்த அடி அவன் உடலைத் தாக்குவதில்லை ஏனெனில். அந்த அடிகள் அவனைப் பிடித்திருக்கும் ஜின்களின் மீது
படுகின்றனவேயொழிய அவன் மீது படுவதில்லை. எனவே, ஜின் அவனை விட்டு மாறி சுய உணர்வு பெற்றதும் நடந்தது எதுவுமே தனக்குத்
தெரியாது என்று சொல்லுவான்.
ஜின், ஷைத்தான்௧ளை வசப்படுத்தி வைத்திருப்பவர்களுக்கு, அவர்களுடைய ஊரில் இல்லாத பழவர்க்கங்கள், இனிப்புப் பொருட்களை ஷைத்தான் கொண்டுவந்து கொடுப்பான். இவர்களில் சிலரை ஜின்கள் தூக்கிச் சென்று மக்கா பைதுல் முகத்தஸ் போன்ற இடங்களுக்குக் கொண்டு செல்லும், சிலரை அரஃபா தினத்தன்று இரவு, அரஃபாவிற்குத் தூக்கிச் சென்று அதே இரவிலேயே திருப்பிக் கொண்டுவந்து அவர்களுடைய ஊரில் விட்டுவிடும். இப்படி தூக்கிச் செல்லப் பட்டவர்களை அரஃபாவில் வைத்துப் பார்க்கிறவர்கள் அவன் உண்மையாக ஹஜ் செய்ததாகவே எண்ணிக் கொள்வார்கள். ஆனால், அவனோ முறைப்படியுள்ள ஹஜ் செய்வதில்லை. எல்லையில் இஹ்ராம் அணிவதில்லை, தாம் அணிந்திருந்த உடையிலேயே கொண்டு செல்லப்படுவான். தல்பியா சொல்வதில்லை, முஸ்தலிபாவில் தங்குவதில்லை, தவாஃப் செய்வதில்லை. சஃபா மர்வா மலைக் குகையில் சயீ செய்வதில்லை. ஜம்ராத்களை கற்களால் எறிவதில்லை, தாம். அணிந்திருந்த அதே ஆடையோடு அரஃபாதில் நிற்பான். பின்னர் அதே இரவே திரும்பத் தன் ஊருக்குக் கொண்டு வந்து விடப்படுவான். இப்படிப்பட்டவனுடைய ஹஜ் ஷரீஅத் முறைப்படியுள்ள ஹஜ்ஜாக ஆகாது, என்று முஸ்லிம்கள் ஏகோபித்துக் கூறியுள்ளனர். இவன் உளூவின்றி கிப்லாவை முன்னோக்காமல் தொழக் கூடியவனுக்குச்
சமமாவான்.
இவ்வாறு அரஃபாத் மைதானத்திற்கு ஜின் மூலம் கொண்டு செல்லப்பட்டவர்களில் ஒருவர் பின்வருமாறு கனவு காண்கிறார் :- மலக்குகள் ஹாஜிகளின் பெயர்களை எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது என்னுடைய பெயரை எழுத மாட்டீர்களா? என்று கேட்கிறார். அதற்கு நீர் ஷரீஅத் முறைப்படி ஹஜ் செய்யவில்லை என்று மலக்குகள் பதில் கூறுகிறார்கள்.
கராமத்திற்கும், ஷைத்தானுடைய வேலைகளுக்கும் இடையிலுள்ள வேறுபாடுகள்
இறைநேசர்களின் கராமத்களுக்கும், ஷைத்தானின் தூண்டுதலால் ஏற்படுகிற செயல்களுக்குமிடையில் எத்தனையோ வேறுபாடுகள் உள்ளன. இறைநேசர்களுடைய கராமத்கள் இறை நம்பிக்கை, பயபக்தி ஆகியவற்றின் காரணத்தினால் ஏற்படுகின்றன, ஆனால் ஷைத்தானியச் செயல்களோ அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் விலக்கியவற்றைச் செய்வதின் காரணத்தால் ஏற்படுகின்றன.
எனவே அல்லாஹ் கூறுகிறான். (நபியே!) நீர்கூறும், நிச்சயமாக என்னுடைய இறைவன் கூடாதென விலக்கியிருப்பதெல்லாம், பகிரங்கமாகவோ, இரகசியமாகவோ செய்யப்படும் மானக்கேடான செயல்களையும், மற்ற பாவங்களையும் நியாயமின்றி (ஒருவர் மீது மற்றவர்) கொடுமை செய்வதையும், எந்த அத்தாட்சியுமின்றி அல்லாஹ் விற்கு நீங்கள் இணைவைப்பதையும், நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்வின் மீது(இட்டுக்கட்டிக்) கூறுவதையும் தான்” திருக்குர்ஆன்(7:3)
அறிவில்லாமல் அல்லாஹ்வைப், பற்றிப் பேசுவதும், ஷிர்க்கான காரியங்களைச் செய்வதும். அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் விலக்கிய கெட்ட செயல்களைச் செய்வதும், கராமத்கள் வெளிப்படுத்துவதற்குக் காரணமாக இருக்க முடியாது
தொழுகை, அல்லாஹ்வை ஞாபகம் செய்தல், குர்ஆன் ஓதுதல் போன்ற நல்லகாரியங்களால் ஏற்படாமல் ஷைத்தானுக்கு விருப்பமான, படைப்புகளை அழைத்து அபயம் தேடுதல், படைப்புகளுக்கு அநீதி
விளைவிப்பதற்காக மற்ற சிருஷ்டிகளிடம் உதவிதேடுதல், வெறுக்கத்தக்க கெட்ட செயல்களைச் செய்தல், போன்ற காரியங்களால் ஏற்படும் அற்புதச் செயல்கள் ஷைத்தானால் ஏற்படுகின்றனவே தவிர, அவை அல்லாஹ்வின் நேசர்களுக்கு ஏற்படும் கராமத்துகள் அல்ல, என்பதை, அறிந்து கொள்ளலாம்.
ஷைத்தானியச் செயல்களைக் காட்டுகிறவர்களில் சிலர், கை தட்டும் சப்தத்தையும், இசைக்கருவி ஊதப்படும் ஓசையும் செவியுறும்போது அவர்கள் மீது அவர்களுடைய ஷைத்தான்கள் இறங்கி, அவர்களைக் காற்றில் தூக்கிக் செல்லுகின்றன. அப்போது அல்லாஹ்வின் நேசர்கள் அந்த இடத்தில் வந்து விடுவார்களானால், ஷைத்தான் வெருண்டோடி, விடுகிறான். காற்றில் தூக்கிச் செல்லப்பட்டவன் கீழே விழுந்து விடுகிறாள். இது போன்ற சம்பவங்கள் பலருக்கும் நிகழ்ந்துள்ளன.
இவர்களில் சிலர், உயிரோடு மறைவாக இருப்பவர்களையோ, அல்லது இறந்த மனிதர்களையோ அழைத்து உதவி தேடுகின்றனர். அழைக்கப்படுபவன் முஸ்லிமாகவோ, முஷ்ரிக்காகவோ இருப்பினும் சரியே. இவ்வாறு அழைக்கும் போது அழைக்கப்பட்டவனுடைய உருவத்தில் ஷைத்தான் வந்து அழைத்தவனுடைய தேவைகளில் சிலவற்றை நிறைவேற்றுகிறான். அப்போது, யாரை அழைத்து உதவி தேடினானோ அந்த மனிதர் உயிர்பெற்றுவந்து தன் தேவையை நிறைவேற்றிச் சென்றதாக அவன் நினைத்துக் கொள்கிறான். அல்லது அழைக்கப்பட்டவருடைய தோற்றத்தில் ஒரு மலக்கு தான் வந்துவிட்டார் என அவன் எண்ணிக் கொள்கிறாள். ஆனால், உண்மையில் அவனிடம் வந்து உதவிச் சென்றவர் அவன் யாரை அழைத்தானோ அந்த மனிதருமல்லர்; மலக்குமல்லர்: மாறாக, அவன் இறந்தவர்களை அழைத்து உதவிதேடி, ஷிர்க்கான செயலைச் செய்ததினால் ஷைத்தான் அவனை வழிதவறச் செய்து விட்டான்.
இவ்வாறே வணங்கப்படுகிற சிலைகளின் உள்ளே ஷைத்தான் நுழைந்து; வணங்குகின்ற முஷ்ரிகீன்களோடு உரையாடுவான். ஷைத்தானிற்கு வழிப்பட்டவர்களிடம் ஷைத்தான் வந்து நான்தான் 'கிளர் நபி’ என்று சொல்லுவான். மறைவான சில விஷயங்களையும் கூறுவான். அவர்களுடைய தேவைகளில் சிலவற்னறப் பூர்த்தியும் செய்வான். இது போன்ற சம்பவங்கள் முஸ்லிம்கள் முஸ்லிம் அல்லாத யூதர்கள், கிருஷ்தவர்கள், காபிர்கள் பலருக்கும் கிழக்கிலும் மேற்கிலும் பல பாகங்களிலும் நடந்துள்ளன.
ஒரு வீட்டில் ஒருவர் இறந்துவிடுவார் அவரை அடக்கம் செய்து விடுவார்கள். அல்லது இந்திய காஃபிர்களைப் போன்றுஅவரைத் தீயிலிட்டு எரித்து விடுவார்கள். அதன் பின்னர் ஷைத்தான் இறந்துபோன அந்த மனிதனுடைய தோற்றத்தில் வந்து இறந்தவர் மீது கடமையாக இருந்த கடன் போன்ற காரியங்களை நிறைவேற்றிச் செல்வான். அவருடைய மனைவியிடத்திலும் வந்து செல்வான். இதை கண்டதும் இறந்த மனிதர் தான் உயிர்பெற்று எழுந்துவிட்டார் என்று அந்த வீட்டில் உள்ளவர்கள் நினைத்துக் கொள்கிறார்கள்.
எகிப்து நாட்டில் ஒரு ஷைக் இருந்தார். இவர் இறப்பதற்கு முன்பாக “நான் இறந்த பின்னர் யாரும் என்னைக் குளிப்பாட்ட வேண்டியதில்லை. நான் வந்து, என்னை நானே குளிப்பாட்டிக் கொள்வேன்” என்று தனது வேலைக்காரனிடம் சொன்னார். அவர் இறந்த பின்னர் அவருடைய தோற்றத்தில் ஒரு மனிதன் வீட்டிற்குள் நுழைந்து, ஜனாஸாவைக் குளிப்பாட்டி விட்டுச் சென்று விட்டான்.
வேறு சிலர், ஆகாயத்தில் ஒரு சிம்மாசனம் இருப்பது போன்றும் அதன்மேல் ஒருவித ஒளி இருந்து “நான்தான் உன் இறைவன்” என்ற சொல்வது போன்றும் காண்பார்கள். இவ்வாறு காணக் கூடியவன் உண்மையான இறைஞானமுடையவனாக இருந்தால் அவ்வாறு கூறுவது. ஷைத்தான் தான் என்று அறிந்து, அவனைவிரட்டி, அவனை விட்டு அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுவான். அப்போது அவன் இவனை விட்டு மறைந்துவிடுவான்.
வேறு சிலரிடத்தில் ஷைத்தான் மனிதக் கோலத்தில் வந்து தன்னை நபி என்றும், ஸித்தீக் என்றும், ஷைக் என்றும், கூறுவான். இதுபோல் பல சம்பவங்கள் நடந்து உள்ளன.
வேறு சிலர் ஏதாவது ஒரு கப்ரை ஸியாரத்துச் செய்யச் செல்லும் போது அந்த கப்ர் வெடித்து; அதிலிருந்து ஓர் உருவம் வெளியாவது போன்று காண்பார்கள். வெளியான உருவம் அந்த கப்ரில் அடக்கப் பட்டவர்தான் என்று பார்ப்பவர்கள் எண்ணிக் கொள்வார்கள். ஆனால், கப்ரிலிருந்து வெளியான உருவம் 'ஜின்' இனத்தைச் சார்ந்தது என்பதை இவர்கள் அறிவதில்லை.
வேறு சிலர், ஒரு குதிரைவீரன் கப்ரிலிருந்து வெளியாகுவது போன்று, அல்லது கப்ரின் உள்ளே செல்வது போன்று காண்பார்கள். உண்மையில் ஷைத்தானே அவ்வாறு செய்கிறான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறந்த பின்னர் அவர்களைத் தன் கண்களால் பார்த்ததாக யாராகிலும் வாதாடுவானாயின், அவன் கற்பனையிலேயே அவ்வாறு பார்த்தானேயொழிய உண்மையில் அவன் கண்களால் பார்த்திருக்க முடியாது.
வேறு சிலர் தங்களுடைய கனவில் ஏதோ ஒரு பெரியார் வந்து தன் தலை முடியை வெட்டுவது போன்றும், அல்லது முடி முழுவதையும் இறக்கி விடுவது போன்றும். அல்லது அந்தப் பெரியார் தனது தலையிலுள்ள தொப்பியோ தனது சட்டையையோ இவருக்கு அணிவிப்பது போன்றும் காண்பார். காலையில் தூக்கம் விழித்ததும் தனது கனவில் கண்டது போன்று இருக்கக் காண்பார். இவ்வாறு செய்வது ஜின்களேயாகும்.
குர்ஆன், ஹதீஸுடைய போதனைகளுக்கு அப்பாற்பட்டு வாழக் கூடியவர்களுக்கே இது போன்ற சம்பவங்கள் நிகழ்கின்றன. இப்படிப் பட்டவர்கள் பலதரத்தில் உள்ளனர். இவர்களுடன் சேர்ந்துள்ள ஜின்கள், இவர்களின் இனத்தைச் சார்ந்தவைகளாகவும். இவர்களின் கொள்கையுடையவைகளாகவும் இருக்கின்றன. ஜின் இனத்தில் நல்ல ஒழுக்க மானவையும் இருக்கின்றன. தவறு செய்யக் கூடிய கெட்டவையும் இருக்கின்றன. மனிதன் காஃபிராகவோ, கெட்டவனாகவோ இருந்தால், அவனுடன் சேர்ந்துள்ள ஜின்னும் அவனைப் போன்று வழிகேட்டில் போய்விடுகிறது. தனது கொள்கையுடன் இணைந்து போவதாகச் சம்மதிக்கும் மனிதர்களுக்குச் சில வேளை ஜின்கள் உதவியும் புரியும்.
உதாரணமாகத் தங்களைக் கண்ணியப்படுத்தும் ஜின்களின் பெயரைக் கூறி சத்தியம் செய்தல். சூரத்துல்ஃபாத்திஹா. சூரத்துல் இக்லாஸ்,
ஆயத்துல் குர்சி, அல்லாஹ்வின் திருநாமங்களை அசுத்தமான பொருட்களால் எழுதச் செய்தல் போன்ற செயல்களைச் செய்வதின் மூலம் அம்மனிதன்
இவற்றைச் செய்யும்படி ஏவிய ஜின்னிற்குக் கட்டுப்பட்டவனாய் ஆகி விடுகிறான். எனவே அம்மனிதன் விரும்புவது போன்று ஓர் இடத்தில் உள்ள தண்ணீரை மற்ற இடத்திற்குக் கொண்டு செல்லுதல். அல்லது அவன் விரும்பும் பெண்களையோ, குழந்தைகளையோ தூக்கிக் கொண்டுவந்து
அவனிடம் கொடுத்தல் போன்ற செயல்களை அந்த ஜின் செய்கிறது.
இதுபோன்ற பலசம்பவங்களை நம்பிவிடுவது அல்லாஹ் விலக்கியுள்ள தாகூத் என்னும் ஷைத்தான்களை நம்புவது போன்றதாகும்.
ஒருவன் அகத்திலும், புறத்திலும் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் வழிப்பட்டு நடப்பானாயின் தவறான விஷயங்களில் ஜின்களுக்கு
ஒருபோதும் அடிபணிய மாட்டான்.
சமாதிகள் உள்ள இடங்களைப் பள்ளிவாசல்களாக ஆக்க கூடாது
அல்லாஹ்வின் ஆலயங்களான பள்ளிவாசல் முஸ்லிம்களின் வணக்கத்தலங்களாய் இருப்பதால், அவற்றில் வணக்கம் புரியக் கூடியவர்கள் ஷைத்தானிய நிலைகளை விட்டு மிகத் தூரமானவர்களாய் இருக்கிறார்கள். ஷிர்க்கான செயல்களையும், நூதன நடைமுறைகளையும் செய்யக் கூடியவர்களே கப்ருஸ்தான்௧களையும், இறந்தவர்களின் சமாதிகளையும் கண்ணியப்படுத்துவார்கள். இறந்தவர்களை அழைத்து அவர்களின் பொருட்டால் உதவித் தேடுவார்கள். கப்ர் அடியில் கேட்கப்படும் துஆ அங்கீகரிக்கப்படும் என்று நம்புவார்கள். இப்படிச் செய்வது ஷைத்தானிய நிலைகளுக்கு மிக நெருக்கமானதாகும்.
“தங்களுடைய நபிமார்களின் சமாதிகளைப் பள்ளிவாசல்களாக ஆக்கியதினாலேயே யூதர்களையும், கிருஸ்தவர்களையும் அல்லாஹ் சபித்தான்'என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு ஸஹீஹான ஹதீஸில் கூறியுள்ளார்கள். (புகாரி, முஸ்லிம்)
“தன்னுடைய தோழமையிலும், கொடுத்து உதவுவதிலும் என் மீது மிக நம்பிக்கையானவர் அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்களாவார்கள், நான் உலகில் யாரையாவது தோழராக ஆக்கிக் கொள்ள விரும்பியிருந்தால் அபூபக்கரை ஆக்கியிருப்பேன். ஆனால் உங்கள் தோழர் அல்லாஹ்வுடைய தோழராக இருக்கிறார். மஸ்ஜிதுந் நபவியில் இருக்கும் எல்லா ஜன்னல்களும் அடைக்கப்பட்டுவிடும். அபூ பக்கர் (ரலி) அவர்களுடைய ஜன்னல் மட்டும் அடைக்கப்படமாட்டாது. உங்களுக்கு முன்னர் வாழ்ந்தவர்கள் சமாதிகளைப் பள்ளி வாசல்களாக ஆக்கினார்கள். அறிந்துகொள்ளுங்கள் சமாதிகள் உள்ள இடங்களைப் பள்ளிவாசல்களாக ஆக்கி விடாதீர்கள். அதைவிட்டும் உங்களை நான் தடுக்கிறேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது மரணத்திற்கு ஐந்து நாட்களுக்கு முன்னர் கூறியதாக ஒரு ஸஹீஹான ஹதீஸில்வந்துள்ளது. (முஸ்லிம்)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணப்படுக்கையில் கிடக்கும் போது, அபீசினியாவில் உள்ள கிருத்தவக் கோவில்களில் காணப்பட்ட உருவங்களைப் பற்றி அவர்களிடம் கூறப்பட்டபோது அம்மக்களில் உள்ள நல்ல மனிதர் இறந்து விட்டால் அவருடைய சமாதியில் பள்ளிவாசல் கட்டி அதில் உருவங்களை எழுப்புவார்கள். மறுமைநாளில் அல்லாஹ்விடத்தில் மிகமோசமானவர்கள் இவர்கள்தான் என நபிகள் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
“யுகமுடிவுக் காலத்தில் வாழக்கூடியவர்களும், சமாதிகளைப் பள்ளிவாசல்களாக ஆக்கியவர்களுமே படைப்பினங்களிலேயே மிக மோசமானவர்கள்” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என
இமாம் அஹ்மதுடைய முஸ்னதிலும். இமாம் அபூஹாதிமுடைய ஸஹீஹான தொகுப்பிலும் வந்துள்ளது. (இப்னு ஹிப்பான்)
“கப்ருகள் மீது உட்காராதீர்கள். அதன் அருகில் தொழாதீர்கள்" எனக்கூறி, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள் என ஒரு, ஸஹீஹான ஹதீஸில் வந்துள்ளது.
“யா அல்லாஹ்! வணங்கப்படும் சிலை போன்று என்னுடைய கப்ரை ஆக்கிவிடாதே! நபிமார்களின் சமாதிகளைப் பள்ளிவாசல்களாக ஆக்கிய கூட்டத்தார் மீது அல்லாஹ்வுடைய கோபம் அதிகமாகி விட்டது” எனவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
“என்னுடைய கப்ரை விழாக் கொண்டாடும் இடம் போன்று ஆக்கி விடாதீர்கள்! நீங்கள் இருக்குமிடத்திலிருந்தே என்மீது ஸலவாத்துச்
சொல்லுங்கள். அது எனக்கு எத்தி வைக்கப்படுகிறது” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூதாவூத், நஸயீ, திர்மிதீ, இப்னுமாஜா)
“என்மீது ஒருவன் சலாம் சொல்லும்போது அவனுடைய சலாத்திற்குப் பதில் கொடுப்பதற்காக என் ரூஹை அல்லாஹ் எனக்குத் திருப்பித் தருகிறான்” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அபூதாவூது)
“எனது உம்மத்தினர் என்மீது சொல்லும் சலாமை எனக்கு எத்தி வைப்பதற்காகச் சில மலக்குகளை என் கப்ரில் அல்லாஹ் நியமித்துள்ளான்” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
“வெள்ளிக்கிழமை இரவிலும் பகலிலும் என்மீது அதிகமாக சலவாத்துச் சொல்லுங்கள், உங்கள் சலவாத்துக்கள் எனக்கு எடுத்துக் கூறப்படுகின்றன” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியபோது. “யாரசூலல்லாஹ்! நீங்கள் இறந்த பின்னர் எங்கள் சலவாத்துகள் உங்களுக்கு எப்படி எடுத்துக்காட்டப்படும்?” என்று ஸஹாபாக்கள் கேட்டார்கள். அதற்கு நபிமார்களின் உடல்களைத் தின்பதை பூமியின் மீது அல்லாஹ் ஹராமாக்கிவிட்டான்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூதாவூத்)
சிலை வணக்கத்தின் ஆரம்பம்
நபி நூஹ் (அலை) அவர்களுடைய காலத்தில் வாழ்ந்த முஷ்ரிகீன்கள் பல தெய்வக் கொள்கையுடையோரைப் பற்றி அல்லாஹ் கூறும்போது பின்வருமாறு கூறுகிறான்
(இந்த முஸ்ரிகீன்களில் சிலர் சிலரைப் பார்த்து) நீங்கள் உங்கள் தெய்வங்களை விட்டுவிடாதீர்கள். வத், ஸுவாவு, யஊக், நஸர் ஆகிய விக்கிரகங்களையும் விட்டுவிடாதீர்கள் என்று கூறினார். திருக்குர்ஆன் (71 :23).
இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ள வத், ஸுவாவு, யஊக், நஸர் என்பது நபி நூஹ் (அலை) அவர்களுடைய காலத்தில் வாழ்ந்த அல்லாஹ்விற்கு வழிப்பட்ட நல்லவர்களாவர். அவர்கள் இறந்த பின்னர் மக்கள் அவர்களுடைய சமாதிகளுக்குச் சென்று, மண்டியிட்டு, அவர்களுக்குச் சிலைகளையும் எழுப்பினர். பின்னர் அச்சிலைகளை மக்கள் வணங்க ஆரம்பித்தனர். இதுவே சிலை வணக்கத்தின் ஆரம்பமாகும் என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களும், ஸலஃபுஸ் ஸாலிஹீன்களும் கூறியுள்ளார்கள்.
ஷிர்க்கான செயல்கள் நுழைந்துவிடும் என்று அஞ்சியே கப்ருஸ்தான்களைப் பள்ளிவாசல்களாக ஆக்குவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள்.
சூரியன் உதயமாகும்போதும், அஸ்தமிக்கும் போதும் ஷைத்தான் அதன்முன் தோன்றுகின்றான். அந்நேரம் முஷ்ரிகீன்கள் சூரியனை ஆராதிக்கின்றனர். அந்நேரத்தில் நாம் தொழும்போது வணக்கத்தில் அவர்களோடு ஒப்புமை ஏற்பட்டுவிடும் என்பதை அஞ்சியே அந்நேரத்தில் தொழுவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள். ஷைத்தான் தன்னால் இயன்ற அளவு மனிதர்களை வழிகெடுத்துக் கொண்டிருக்கிறான். எனவே சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் ஆகியவற்றை யார் ஆராதிக்கிறார்களோ, அவர்களின் மீது ஷைத்தான் இறங்கி அவர்களோடு சில விஷயங்களைப் பேசுகிறான். இதை 'நட்சத்திர ரூஹானி' என்று கூறுகின்றனர். ஆனால், அந்த ஷைத்தான் மனிதனுடைய சில நோக்கங்களை நிறைவேற்ற உதவும்போது அதைவிட பன்மடங்கு தீமையைச் செய்யவே இவ்வாறு உதவுகிறான் என்பதை அறியவேண்டும். ஷைத்தானுக்கு வழிப்பட்டவனுடைய கதி தீயதாகவே முடிகிறது. அல்லாஹ் அவனுக்குப் பாவமன்னிப்பளித்தாலேயொழிய அவன் மோட்சமடைய முடியாது.
சிலைகளை வணங்கக் கூடியவர்களோடு ஷைத்தான் சில சந்தர்ப்பங்களில் உரையாடுவான். இவ்வாறே இறந்தவர்களிடமும், கண்ணுக்கு மறைவானவர்களிடமும் உதவி தேடக் கூடியவர்களிடத்திலும், கப்ரடியில் கேட்கப்படும் துஆ, பள்ளி வாசல்களில் கேட்கப்படும் துஆவை விடச் சிறந்தது என்று எண்ணக் கூடியவனிடமும் சில சந்தர்ப்பங்களில் ஷைத்தான் உரையாடுவான்.
“சில விஷயங்களை விளங்கிக் கொள்வது உங்களுக்குச் சிரமமாக இருக்குமானால் அதுபற்றி சமாதியில் உள்ளவர்களிடம் கேளுங்கள்" என்று ஒரு பொய்யை இட்டுக்கட்டி ஷிர்குடைய வாசலைத் திறந்து விட்டவர்களே இந்த ஹதீஸைப் புனைந்து கூறியுள்ளனர். இது பொய்யானது என்று ஹதீஸ் கலையில் தேர்ந்தவர்கள் எல்லோரும் ஏகோபித்துக் கூறியுள்ளனர்.
தர்காக்களில் ஷைத்தானின் வேலைகள்
கிருஸ்தவர்கள், வழிகெட்ட முஸ்லிம்கள் ஆகியோருக்கு தர்காக்களில் அற்புத நிகழ்ச்சிகள் ஷைத்தானால் ஏற்படுகின்றன. இவற்றை "கராமத்' என்று ஷிர்க்கான செயல்களையும், நூதன நடைமுறைகளையும் செய்யக் கூடியவர்கள் எண்ணிக் கொள்கிறார்கள்.
உதாரணமாக, கப்ரடியில் ஒரு பைஜாமாவை வைத்து விட்டுப் பின்னர். போய்ப்பார்த்தால் அந்த பைஜாமா முடிச்சு போடப்பட்டிருக்கும் அல்லது கப்ரடியில் பேய் பிடித்தவனை வைத்தால், ஷைத்தான் அவனை விட்டுபோய் விட்டதைப் போல் காண்பார்கள். அல்லது கப்ரு வெடித்து. அதிலிருந்து ஒருமனிதன் வெளியே செல்வது போன்று காண்பார்கள். அப்போது இறந்தவன் தான், உயிர்பெற்று வெளியே வந்துவிட்டான் என்று நினைத்துக் கொள்வார்கள். ஆனால் இவை அனைத்தும் ஷைத்தானுடைய வேலைகளாகும்.
மனிதர்களை வழிகெடுக்கவே அவன் இவ்வாறு செய்கிறான். இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்ற இடத்தில் மனத்தூய்மையோடு 'ஆயத்துல் குர்சியை' ஓதினால் ஷைத்தானின் வேலைகள் ஒன்றும் பலிக்காது. தவ்ஹீது என்னும் ஏக இறை நம்பிக்கை ஷைத்தானை விரட்டி விடுகிறது. எனவே சிலரை ஷைத்தான் ஆகாயத்தில் தூக்கிச் சென்றபோது அவர்கள் 'லாயிலாஹ இல்லல்லாஹ்' என்னும் தவ்ஹீத் கலிமாவை ஒதியதும் கீழே விழுந்துவிட்டார்கள். கப்ரு வெடித்து அதிலிருந்து ஒரு மனிதன் வெளியாவதைக் காண்பார். அப்போது மைய்யித்து தான் வெளியே வந்துவிட்டது என்று நினைப்பர். ஆனால் அது ஷைத்தானேயாகும். இது போன்ற சம்பவங்கள் ஏராளம் உள்ளன. அவை எல்லா
வற்றையும் இங்கு கூறி முடிக்க முடியாது.
குகைகளிலும், பாலைவனங்களிலும் தனித்திருப்பது அல்லாஹ்வும், அவனது ரசூலும் அனுமதிக்காத நூதனச் செயலாகும். எனவே ஷைத்தான் இதுபோன்ற குகைகளிலும், மலைகளிலும் வசிக்கிறான்.
உதாரணமாக: காஸியூன் மலையில் உள்ள இரத்தக்குகை, ஷாம் கடலோரத்தில் உள்ள லெபனான் மலை, எகிப்தில் அஸ்வான் என்ற இடத்தில் உள்ள வெற்றிமலை, மேலும் ஈரான், ரோமில் உள்ள மலைகள், அரேபிய தீபகற்பத்தில் உள்ள மலைகள், லக்லாக் மலை, அஹ்யஷ் மலை, அர்தபீல் என்ற ஊரை அடுத்துள்ள சோலான் மலை, திப்ரீஸ் என்ற ஊரை அடுத்துள்ள ஷஹனக் மலை, அக்ஷ்வான் என்ற ஊரில் உள்ள மாஷ்கோ மலை, நஹாவந்து மலை
இது போன்ற மலைகளில் நல்ல மனிதர்கள் வாழ்வதாகவும், அவர்கள் மறைவான மனிதர்கள் என்றும் சிலர் கருதுகின்றனர். ஆனால், அங்கே வசிப்பது ஜின் இனத்தைச் சார்ந்த ஆண்களேயொழிய, மனித இனத்தைச் சார்ந்த எவருமில்லை, என்பதை
அறிய வேண்டும். மனித இனத்தில் ஆண்கள் இருப்பது போல் ஜின் இனத்திலும் ஆண்கள் உள்ளனர். இதை அல்லாஹ் குறிப்பிடும் போது பின்வருமாறு கூறுகிறான்
மனித இனத்தில் உள்ள ஆண்கள் பலர் ஜின் இனத்திலுள்ள பல ஆண்களிடம் தங்களை இரட்சிக்கும்படி வேண்டினர். இதனால் அவற்றின் கர்வம் அதிகரித்து விட்டது. திருக்குர்ஆன் (72 :6)
இந்த ஜின்களில் சில ஆட்டுத் தோல் போர்த்தியவரைப் போன்று முடி மனிதராக வெளிவரும். இதை அறியாதவன், அது மனித இனத்தைச் சார்ந்தது தான் என்று எண்ணி விடுகிறான். மேற்கூறப்பட்ட மலைகளில் நாற்பது 'அப்தால்கள்' இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் அம்மலைகளில் உள்ளவை ஜின்களே. இது பல வழிகளில் அறியப்பட்டுள்ளது. இது பெரிய விசாலமான விஷயமாகும். நமக்குத் தெரிந்தவற்றையெல்லாம் இங்கு கூறி முடித்து விட முடியாது. நாம் கண்ணால் பார்த்த, கேட்ட எண்ணற்ற விஷயங்களையெல்லாம் அவ்லியாக்களைப் பற்றி விளக்குமாறு கேட்டுக் கொண்டவருக்காக எழுதிய இச்சிறுநூலில் கூறி முடித்து விட முடியாது.
அற்புதங்களை நம்புவதில் மனிதர்களின் தராதரம்
வழக்கத்திற்கு மாற்றமான முறையில் நிகழ்கிற அற்புதங்களை நம்புவதில் மக்கள் மூன்று வகையினராக உள்ளனர்.
நபிமார்களிடமிருந்தே அன்றி வேறு யாரிடமிருந்தும் அற்புதங்கள் நிகழ்வதில்லை என்று ஒரு சாரார் கூறுகின்றனர். இவர்கள் பொதுவான முறையில் அற்புதங்களை நம்பியிருப்பர். நபிமார்கள் அல்லாதவர்களிடமிருந்து நிகழும் அற்புதங்களைப் பற்றிக் கூறும்போது, அவற்றை இவர்கள் நம்புவதில்லை. காரணம் அந்த அற்புதங்களை நடத்தியவர் இறைநேசர்கள் அல்லர் என்பதே இவர்களுடைய கருத்தாகும்.
மற்றொரு வகையினர் வழக்கத்திற்கு மாறான அற்புதங்களைக் காட்டுகிறவர்கள் எல்லோரும் அவ்லியாக்கள் என்று எண்ணி விடுகின்றனர்.
இவ்விருசாராருடைய கூற்றும் தவறானதாகும்.
காரணம், முஷ்ரிகீன்களுக்கும், வேதத்தையுடையவர்களுக்கும் சில உதவியாளர்கள் இருக்கிறார்கள். முஸ்லிம்களை எதிர்த்து அவர்கள் போர் செய்யும்போது அவ்வுதவியாளர்கள் அவர்களுக்குச் சாதகமாக உதவி செய்கின்றனர். இவர்களும் இறை நேசர்களே என இரண்டாவது சாரார் கூறுகின்றனர். முதல் சாரார் இதைப் பொய்யாக்குகின்றனர்.
ஆனால் உண்மை எதுவென்றால் முஷ்ரிக்குகளோடும் வேதத்தையுடையவர்களோடும் அவர்களுடைய இனத்தைச் சார்ந்த உதவியாளர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் அவர்கள் இறைநேசர்களல்லர். எனவே அல்லாஹ் கூறுகின்றான்:
விசுவாசிகளே! யூதர்களையும், கிருஸ்தவர்களையும், உங்களுடைய நேசர்களாக எடுத்துக் கொள்ளாதீர்கள். (உங்களுக்குத் தீங்கு செய்வதில்) அவர்களில் சிலர், சிலருக்குத் துணையாக இருக்கிறனர். உங்களில் யாராவது அவர்களைத் தனக்கு நேசர்களாக எடுத்துக் கொண்டால், நிச்சயமாக அவனும் அவர்களைச் சார்ந்தவன்தான். திருக்குர்ஆன் (5 :51)
அல்லாஹ்வையும், அவனது தூதரையும் நேசித்து அவர்களுடைய கட்டளைகளைப் பின்பற்றாத வணக்கசாலி ஒருபோதும் இறைநேசராக இருக்க முடியாது. இப்படிப்பட்டவர்களுடன் ஷைத்தான் சேர்ந்து கொள்கிறான். இவர்கள் ஒவ்வொருவருக்கும் அவருடைய ஷைத்தானிய நிலைக்கத் தக்கவாறு அற்புதங்கள் ஏற்படுகின்றன. அவற்றில் சில வேறு சிலவற்றிற்கு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் உண்மையான இறைநேசர் யார் என்பதை அறிந்துகொள்ளும் ஆற்றல் பெற்றவர்கள் இவர்களின் தவறுகளை எளிதில் கண்டு கொள்வர்.
இதுபோன்ற ஷைத்தானிய வேலைகளைச் செய்யக் கூடியவர்கள் அறியாமையினாலோ அல்லது வேண்டுமென்றோ பொய் சொல்வார்கள். தன்னுடனுள்ள ஷைத்தானிற்கு ஏற்றவாறு பாவங்களையும் செய்வார்கள், இதன் மூலம் அல்லாஹ் தனது உண்மையான நேசர்களையும், ஷைத்தானிய தோழர்களையும் வேறுப்படுத்திக்காட்டுகிறான். எனவே அல்லாஹ் கூறுகிறான்.
(விசுவாசிகளே!) யார் மீது ஷைத்தான்கள் இறங்குகின்றன என்பதை நான் உங்களுக்கு அறிவித்துத் தரட்டுமா? பொய் சொல்லும் ஒவ்வொரு பாவியின் மீதும் இறங்குகின்றன. திருக்குர்ஆன் (26 - 221,222).
இசைகளையும். கேலிக்கூத்துகளையும் செவியுறுவது ஷைத் தானிய நிலைக்கு வலுவூட்டுகிறது. இவ்வாறு செய்வது மக்காவில் வாழ்ந்த முஷ்ரிகீன்களுடைய வணக்கமாக இருந்தது. இதைப் பற்றி அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான்.
மக்காவிலுள்ள இறை இல்லத்தில் அவர்கள் புரிந்த வணக்கமெல்லாம் சீட்டியடிப்பதும், கைதட்டுவதுமாகவே இருந்தது. திருக்குர்ஆன்(8:35)
கைதட்டுவதையும், சீட்டியடிப்பதையும் முஷ்ரிக்குகள் வணக்கமாகக் கருதிச் செய்து வந்தார்கள் என இப்னு அப்பாஸ் (ரலி) இப்னு உமர் (ரலி) போன்றவர்கள் கூறியுள்ளனர்.
அல்லாஹ் கட்டளையிட்டுள்ள தொழுகையை நிறைவேற்றுதல், குர்ஆன்ஓதுதல், திக்ர்செய்தல் போன்றவை தான் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுடையவும், ஸஹபாக்களுடையவும் வணக்கங்களாக இருந்தன, ஷரீஅத்தில் அனுமதிக்கப்பட்ட கூட்டங்களையே அவர்கள் கூட்டினார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், அவர்களுடைய தோழர்களும் ஒருபோதும் இசைகளைச் செவிடுமடுக்கவில்லை. கைதட்டவுமில்லை, தாயிரா அடிக்கவுமில்லை. இவற்றைச் செவியுற்று அவர்களுடைய உள்ளம் உருகவுமில்லை. ஒருவர் கவிபாடியபோது அதைச் செவியுற்ற
நாயகம் (ஸல்) தோள் மீதிருந்த போர்வை கீழே விழுந்துவிட்டது என்று கூறப்படும் ஹதீஸ் பொய்யானதாகும் என ஹதீஸ்கலை அறிஞர்கள் ஏகோபித்துக் கூறியுள்ளனர்.
ஸஹாபாக்கள் ஓர் இடத்தில் ஒன்று கூடுவார்களானால், அவர்களில் ஒருவரை குர்ஆன் ஓதுமாறு கூறுவார்கள் மற்றவர்கள் அதை உள்ளச்சத்தோடு செவியுறுவார்கள். எங்கள் இறைவனை எங்களுக்கு நினைவுபடுத்துவீராக! என்றுஉமர் (ரலி) அவர்கள் அபூமூஸா அஷ்அரீ (ரலி) அவர்களிடம் கூறுவார்கள். அப்பொழுது அபூமூஸா (ரலி) குர்ஆன் ஓதுவார்கள். மற்றவர்கள் செவி தாழ்த்திக் கேட்பார்கள்.
ஒருமுறை அபூமூஸல் அஷ்அரீ (ரலி) அவர்கள் குர்ஆனை ஓதிக் கொண்டிருக்கும்போது. அவ்வழியாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சென்று அவருடைய ஓதலைச் செவியுற்றுச் சென்றார்கள். மறுநாள் ஹளரத் அபூமூஸாவை நாயகம் (ஸல்) அவர்கள் சந்தித்த போது, நேற்று நீர் குர்ஆனை ஓதிக் கொண்டிருக்கும்போது அவ்வழியாக நான் சென்றேன். அப்போது உமது ஓதலை நான் செவியுற்றேன் என்று கூறினார்கள். நீங்கள் எனது ஓதலைச் செவியுறுகிறீர்கள் என்று நான் அறிந்திருந்தால், உங்களுக்காக இன்னும் மிக அழகிய முறையில் ஓதியிருப்பேன் என, அபூமூஸல் அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
'உங்கள் குரல்களால் குர்ஆனை அழகுபடுத்துங்கள்' என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூதாவூது)
'இசைபாடுகின்ற அடிமைப்பெண்ணின் இசையை அவளது தலைவன் எவ்வாறு இனிமையாகக் கேட்பானோ அதைவிட அதிகமாக, அழகிய குரலில் குர்ஆன் ஓதக்கூடியவனுடைய ஓதலை அல்லாஹ் செவியுறுகிறான்' என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (இப்னு மாஜா)
எனக்கு, திருக்குர்ஆனை ஓதிக் காண்பிப்பீராக' என அப்துல்லாஹ் பின் மஸ்வூது (ரலி) அவர்களிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு முறை கூறினார்கள். அப்போது, 'உங்கள் மீது குர்ஆன் இறங்கியிருக்க நான் உங்களுக்கு ஓதிக் காண்பிப்பதா யா ரசூலுல்லாஹ்?' என இப்னு மஸ்வூது (ரலி) அவர்கள் கேட்டார்கள். அதற்கு பிறர் ஓதுவதை நான் செவியுற விரும்புகிறேன் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
கூறினார்கள். உடனே, 'அந்நிஸா' என்னும் அத்தியாயத்தின் ஆரம்பத்திலிருந்து ஹலரத் இப்னு மஸ்வூது (ரலி) அவர்கள் ஓத ஆரம்பித்தார்கள்.
(நபியே!) ஒவ்வொரு சமூகத்திலிருந்தும் (அவர்களுடைய நபியாகிய) சாட்சியை நாம் கொண்டு வரும்போது (உம்மை நிராகரித்த) இவர்கள் எல்லோருக்கும் (விரோதமான) சாட்சியாக உம்மை நாம் கொண்டுவந்தால் (உம்மை நிராகரித்த இவர்களுடைய நிலமை) எப்படி இருக்கும்? திருக்குர்ஆன்(4 :47)
என்ற வசனம் வரை ஓதியதும் அழுகையினால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய கண்களிலிருந்து கண்ணீர் ததும்பியது. உடனே ‘போதும்.. போதும்' என்று இப்னு மஸ்வூது (ரலி) அவர்களிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி. முஸ்லிம்)
இது போன்று, அல்லாஹ்வின் பரிசுத்த வாக்கைத்தான் நபிமார்களும். அவர்களைப் பின்பற்றுபவர்களும் செவியுறுவார்கள். இதை அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான்.
இவர்கள் எல்லோரும் அல்லாஹ் அருள்புரிந்த நபிமார்களாவார்கள். இவர்கள் ஆதமுடைய சந்ததியிலும், நூஹுடன் நாம் (கப்பலில்) ஏற்றிக் கொண்டவர்களின் சந்ததியிலும், இப்றாஹீமுடைய சந்ததியிலும், இஸ்ராயீல் (என்னும் யாஃகூப்) உடைய சந்ததியிலும் உள்ளவர்களாவர். மேலும் நாம் தேர்ந்தெடுத்து நேரானவழியில் நடத்தியவர்களிலும் உள்ளவர்கள். அவர்கள் மீது கருணைமிக்க அல்லாஹ்வின் வசனங்கள் ஒதிக் காண்பிக்கப்பட்டால், அழுதவர்களாய்ச் சிரம்பணிவார்கள். திருக்குர்ஆன்(19:58)
அறிவு ஞானமுடையோரைப் பற்றிக் கூறும்போது பின் வருமாறு கூறுகிறான்:
அவர்கள் (எனது) தூதர்மீது அருளப்பட்டவற்றைச் செனியுற்றால், உண்மையை அவர்கள் உணர்வதன் காரணமாக அவர்களின் கண்கள் (தாரை தாரையாக) கண்ணீர் வடிப்பதைக் காண்பீர். திருக்குர்ஆன் (5: 83)
குர்ஆனைச் செவியுறுகிறவர்களை அல்லாஹ் புகழ்ந்து கூற யுள்ளான். காரணம் இதனால் அவர்களுடைய ஈமான் அதிகரிக்கிறது அவர்களுடைய உடல் அல்லாஹ்வின் பயத்தால் சிலிர்க்கிறது. கண்ணீர் வடிகிறது. இதை அல்லாஹ் கூறும்போது :-
அல்லாஹ் மிக அழகிய செய்தியையே இந்த வேதத்தில் இறக்கியிருக்கிறான். இதிலுள்ள வசனங்கள் ஒன்றை மற்றொன்று ஒப்பானதாகவே
இருக்கின்றன. (மனதில் பதிய வேண்டுமென்பதற்காக) ஒரே விஷயம் திரும்பத் திரும்பக் கூறப்பட்டுள்ளது. எவர்கள் தங்கள் இறைவனுக்குப் பயப்படுகிறார்களோ (அவர்கள் அதனைச் செவியுறும் போது) அவர்களுடைய ரோமம் சிலிர்த் துவிடுகிறது. பின்னர் அவர்களுடைய தோல்களும், உள்ளங்களும் அல்லாஹ் வுடைய எண்ணத்திலேயே இலகுகின்றன. திருக்குர்ஆன் (39 :23)
மேலும் ஓர் இடத்தில் அல்லாஹ் கூறுகிறான் :-
உண்மை விசுவாசிகள் யார் என்றால், அல்லாஹ்வுடைய திருநாமம் அவர்கள் முன் கூறப்பட்டால் அவர்களுடைய உள்ளங்கள் பயந்து நடுங்கிவிடும். அவனுடைய வசனங்கள் அவர்களுக்கு ஒதிக்காண்பிக்கப்பட்டால் அவர்களுடைய விசுவாசம் மேலும் அதிகரிக்கும். அவர்கள் தங்கள் இறைவனையே முற்றிலும் நம்பியிருப்பார்கள். அவர்கள் தொழுகையையும் கடைப்பிடித் தொழுகுவார்கள். நாம் அவர்களுக்குக் கொடுத்த பொருளிலிருந்து தான தர்மமும் செய்வார்கள். இத்தகையோர் தாம் உண்மையான விசுவாசிகளாவர்.. அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடத்தில் பல உயர் பதவிகளும், பாவமன்னிப்பும் உண்டு. மேலும் சிறப்பான உணவும் அவர்களுக்கு உண்டு.
திருக்குர்ஆன் (8 :2,4)
வெறுக்கத்தக்க கேலிக் கூத்துக்கள்
கைதட்டுதல், தாயிரா அடித்தல், தஃப் அடித்தல், கம்படித்தல், இவை போன்றவற்றைச் செவிமடுத்தல் ஆகிய அனைத்தும் வெறுக்கத்தக்க
கேலிக் கூத்துக்களாகும். ஸஹாபாக்களும், தாபியீன்களும், பெரும் பெரும் இமாம்களும் இது போன்ற செயல்களை அல்லாஹ்வை அடைவதற்குரிய வழிகளாகக் கருதவில்லை. இவற்றை வணக்கமாகவோ. வழிபாடாகவோ அவர்கள் கருதவுமில்லை இவற்றை வெறுக்கப்பட்ட நூதனச் செயல்கள் என்றே கருதினர்.
குர்ஆனை விட்டும் மக்களைத் திசை திருப்புவதற்காக 'ஸனாதிகா' என்ற கூட்டத்தினரால் ஏற்படுத்தப்பட்டவையே இத்தீயசெயல்கள். இவற்றிற்கு 'தஃகயீர்' என்று பெயர் கூறினர். இவற்றை பக்தாதில் உள்ளவர்கள் செய்ய நான் கண்டேன். என, இமாம் ஷாஃபியீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.
அறிவு ஞானமுள்ள இறைநேசர்கள் இதை நன்கு அறிவார்கள். இதுபோன்ற செயல்களில் ஷைத்தான் அதிகம் பங்கு பெறுகிறான் என்றும் அறிவார்கள். எனவே, இதுபோன்ற செயல்கள் நடைபெறும் இடங்களுக்குத் தற்செயலாகச் சென்ற நல்லோர்கள் அதற்காகப் பாவமன்னிப்புக்கோரினர்.
யார் அறிவு ஞானத்தைவிட்டுத் தூரமாகவும், இறைநேசம் முழுமை பெறாதவனாகவும் இருக்கிறானோ அவனிடம் ஷைத்தான் அதிகமாக இடம் பெறுகிறான்.
இப்படிப்பட்டவனிடத்தில் ஷைத்தான் மதுபானத்தைப் போன்று, மது எவ்வாறு போதையை உண்டாக்குகிறதோ அதை விட மேலாக மயக்கத்தை ஏற்படுத்தி விடுகிறான். எனவே ஷஷைத்தான் குடிகொண்டவர்களிடம், மயக்கம் ஏற்பட்டு அது அதிகரிக்கும்போது, அவர்கள் மீது ஷைத்தான்கள் இறங்குகின்ற இவர்கள் நாவு மூலம் அவன்
பேசுகிறான். சிலரைக் காற்றில் தூக்கிச் செல்வான். இதுபோன்ற போதை ஏற்பட்ட மனிதர்களுக்கிடையில் சிலசமயம், மது அருந்தியவர்களுக்கிடையில் ஏற்படுவது போன்ற சண்டையும், விரோதமும் ஏற்படும், அப்பொழுது அவர்களில் இருக்கும் ஷைத்தான் மிக சக்தி பெற்றவனாக இருப்பான். எனவே இவன் மற்றவனைக் கொன்றும் விடுவான். இதைப் பார்க்கிற அறிவீனன் இது அவ்லியாக்களின் கராமத் என்று நினைத்து விடுகிறான், ஆனால், இது அல்லாஹ்வை விட்டுத் தூரமாக்கும் செயலாகும், ஏனென்றால் ஒரு முஸ்லிமைத் தக்க காரணமின்றிக் கொலை செய்வது கூடாது என்று இருக்கும்போது. பாவம் செய்யாத ஒருவனைக் கொலை செய்வது எப்படிக் கராமத்தாக முடியும், 'கராமத்' என்பது அல்லாஹ் தனது மூமினான அடியார்களைக் கண்ணியப்படுத்துவதற்காகக் கொடுக்கும் அற்புதமல்லவா? அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபட்டு நடப்பதாலேயே கராமத்துக்கள் ஏற்படுகின்றன. அல்லாஹ். தான் விரும்பி நேசிக்கிற விஷயங்களில் உதவி, தன் அடியானைக் கண்ணியப் படுத்துவது போன்று வேறு எந்த விஷயங்கள் மூலம் கண்ணியப் படுத்துவதில்லை. அவன் விரும்பி நேசிக்கிற செயல்களே அவன் பக்கம் சேர்த்துவைக்கின்றன. இதனால்தான் அவனுடைய தகுதியை அல்லாஹ் உயர்த்துகிறான்.
அற்புதங்கள் பலவிதம்
அற்புதங்கள் பலவிதமாக உள்ளன. அவற்றில் சில மறைவான விஷயங்களை வெளிப்படுத்திக் கூறுவதுபோன்ற அறிவு தொடர்பானவை. வேறு சில அற்புதங்கள் சக்தி அதிகாரம் தொடர்பானவை. உதாரணமாக, வழக்கத்திற்கு மாற்றமான சில செயல்களைத் தனது அரசு மூலமோ தனது ஆதிக்கத்தின் மூலமோ செய்து காண்பித்தல் போன்றது. வேறு சில அற்புதங்கள் செல்வத்தால் ஏற்படுகின்றன.
உதாரணமாக: சில மனிதர்கள் வழமைக்கு மாற்றமான அறிவுச் செல்வம் கொடுக்கப் பட்டிருப்பார்கள்; வேறு சிலர் பணச்செல்வமும், இன்னும் சிலர் அதிகார பலமும் கொடுக்கப்பட்டிருப்பார்கள். அல்லாஹ் தனது அடியானுக்குக் கொடுக்கிற இது போன்ற விஷயங்களை அல்லாஹ்வின் அன்பையும், அவனது திருப்தியையும் பெறும் வழியிலும், அவன் பால் நெருங்குவதற்குக் காரணமானவற்றிலும், அல்லாஹ்வும் அவனது தூதரும் ஏவிய விஷயங்களிலும் பயன் படுத்துவானாயின், அவனுடைய தகுதியும், மதிப்பும் அல்லாஹ்விடம் உயர்கிறது. எனவே அவன் அல்லாஹ்வின் பக்கம் நெருங்கியவனாக ஆகிவிடுகிறான். இதற்குமாற்றமாக, அல்லாஹ் கொடுத்த இந்த அற்புதங்களை ஷிர்க்கான செயல்கள். அநீதம், வெறுக்கத்தக்கவை போன்றவற்றிக்காகப் பயன்படுத்துவானாயின் அதனால் இழிவையும், அல்லாஹ்வின் தண்டனையையும் அடைகிறான். இத்தீய செயலுக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோர வேண்டும். அல்லது பாவத்தைப் போக்கும் நல் அமல்களைச் செய்ய வேண்டும். இல்லையானால், அவன் மிகப்பெரும் பாவியாகி விடுகிறான்.
எனவே. இதுபோன்ற அற்புதங்கள் கொடுக்கப்பட்டவர்களை அல்லாஹ் திடீர் திடீர் எனத் தண்டிக்கிறான். சில வேளை அவர்களுக்குக் கொடுத்த அற்புதங்களைப் பிடுங்கிக் கொள்கிறான். அல்லது அவனுக்குக் கொடுத்த அரச பதவியிலிருந்து அவனை மாற்றி விடுகிறான். அவன் அறிஞனாக இருந்தால். அவனுக்குக் கொடுத்த அறிவைப் போக்கி விடுகிறான். வேறு சிலவேளை அவனுடைய மேல் மிச்சமான வணக்கங்களைக் குறைத்து; சாதாரண இறைநேசனாக ஆக்கி விடுகிறான்.
அல்லது அவனை மிகக் கெட்ட மனிதனுடைய தகுதிக்கு இறக்கி விடுகிறான். சிலவேளை அவன் இஸ்லாத்திலிருந்து வெளியேறி விடுகிறான் வழமைக்கு மாற்றமான அற்புதங்கள் கொடுக்கப்பட்டவர்களில் அதிகமானவர்கள் மதம் மாறி இருக்கின்றனர். இது ஷைத்தானுடைய வேலை என்று அவர்கள் எண்ணுவதில்லை; இது இறைநேசர்களுக்கு ஏற்படும் கராமத் என்று கருதிக் கொள்கின்றனர்.
இப்படிப்பட்டவர்களில் சிலர் அல்லாஹ் கொடுக்கும் அற்புதங்களைப் பற்றி மறுமையில் கேட்கப்பட மாட்டார்கள் என்று நினைக்கிறார்கள். இவர்களைப் போன்றுதான் அரசு அல்லது செல்வம் கொடுக்கப்பட்டவர்களும், தாம் அது பற்றிக் கேட்கப்படமாட்டோம் என்று எண்ணுகின்றனர். இத்தகையோர் எல்லோரும் ஷைத்தானின் தோழர்களேயாவார்கள்.
அற்புதங்கள் கொடுக்கப்பட்ட சிலர் தங்களுடைய அற்புதங்களை, அல்லாஹ் ஏவாத, அவன் விலக்கவும் செய்யாத ஆகுமான விஷயங்களுக்காகப் பயன்படுத்துகின்றனர். இவர்கள் பொதுவான இறை நேசர்களாவர். இப்படிப்பட்டவர்கள் நடுத்தரவாதிகளான நல்லவர்களுமாவார்கள். ஆனால், நற்செயல்கள் செய்வதில் முந்திச் சென்று அல்லாஹ்வை நெருங்குகிறவர்கள் அவர்களை விட உயர் தகுதியும்முடையவர்களாவர். அதாவது சாதாரண அடிமையாகவும், இறைத் தூதராகவும் இருக்கிறவர். நபியாகவும் அரசராகவும் இருக்கிறவரைவிட எவ்வாறு சிறந்தவராக இருக்கிறாரோ அதைப் போன்று அல்லாஹ்விடம் நெருங்கியவர், சாதாரண வலியைவிடச் சிறந்தவராவார்.
வழக்கத்திற்கு மாற்றமான மேற்கூறப்பட்ட அற்புதங்கள் யாருக்குக் கொடுக்கப்படுகிறதோ அவர்கள் மற்றவர்களை விட தகுதி குறைந்த ழவர்களாகவே இருப்பர். எனவே, அதிகமான நல்லோர்கள் இதுபோன்ற அற்புதங்களால் ஏற்படும் தீங்கிற்காக மனம் வருந்தி அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோரியுள்ளனர். விபச்சாரம், களவு போன்ற பாவங்களுக்காக மன்னிப்புக்கோருவது போன்று, அதற்காகவும் அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோரினர். சிலருக்கு இது போன்ற அற்புதங்கள் நிகழ்ந்தபோது அதைத் தன்னை விட்டுப் போக்கிவிடுமாறு அல்லாஹ்விடம் வேண்டினர்
நல்லோரிடமிருந்து ஏற்படுகிற அற்புதங்கள், கராமத்தாகவே கருதப்படும், என்று இவர்கள் அறிந்திருந்தும் அவற்றைப் பெரிதாகக் கருதி; அவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பெருமைப்பட்டுவிடக் கூடாது என்று தங்கள் சீடர்களுக்குப் போதித்துள்ளார்கள்.
இந்நிலையில் ஷைத்தானின் மூலம் ஏற்படும் அற்புதங்களிலிருந்து எந்த அளவு நாம் தவிர்ந்து கொள்ள வேண்டும் என்பதை உணர முடியும்.
ஷைத்தானின் முலம் ஏற்பட்ட சில அற்புதங்கள்
சில செடி, கொடிகள் தமக்குள்ள குணாதிசயங்களைக் கூறி சிலருடன் உரையாடி உள்ளன என்பதை நான் அறிவேன். ஆனால் உண்மையில் அந்தச் செடிகொடிகள் தாமாகவே பேசவில்லை. அதன் உள்ளே நுழைந்து ஷைத்தான் தான் பேசினான். மரமும் சிலருடன் உரையாடின. அவர்களைப் பார்த்து அல்லாஹ்வுடைய வலியே! உமக்கு நல்வாழ்த்துக்கள் உண்டாவதாக! என்று கூறின. அப்பொழுது ஆயத்துல் குர்சியை ஓதியபோது ஷைத்தான் போய் விட்டான். இந்நிகழ்ச்சி யாருக்குச் சம்பவித்ததோ அந்த மனிதரை நான் அறிவேன்.
பறவைகளை வேட்டையாடச் சென்ற சிலருடன் குருவிகள் உரையாடின. என்னைப் பிடித்துச் செல்லும்! ஏழைகள் என்னைச் சாப்பிடட்டும்! என்று கூறின. இவர்களையும் நான் அறிவேன். உண்மையில் குருவிகள் பேசவில்லை. அவற்றின் உள்ளே நுழைந்து கொண்ட ஷைத்தானே அவ்வாறு கூறினான். ஷைத்தான் மனிதனின் உள்ளே நுழைந்து உரையாடுவதைப் போன்று மனிதனல்லாதவற்றிலும் நுழைந்து உரையாடுவான்.
சிலர் பூட்டப்பட்ட வீட்டின் உள்ளே இருப்பார்கள், ஆனால் அவர் வெளியே இருப்பது போன்று சிலர் காண்பார்கள் இதற்கு நேர் மாற்றமாகவும் நடக்கும், ஜின்களே இவ்வாறு செய்கின்றன. வேறு சிலருக்கு. ஷைத்தான் ஒளிகளைக் காட்டுவான். அவர்கள் யாரை விரும்பு கிறார்களோ அவரைக் கொண்டு வந்து அவர்களின் முன் நிறுத்துவான். அப்பொழுது ஆயத்துல் குர்சியைத் தொடர்ந்து ஓதிக் கொண்டிருந்தால் ஷைத்தான் ஓடிவிடுவான்.
வேறு சிலரிடம் ஒருவர் வந்து 'நான் அல்லாஹ்வின் கட்டளையின்படி வந்தவன், என்று கூறுவார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறிவித்த 'மஹதி' தான் வந்து விட்டார் என்று மற்றவர்கள் கருதி விடுவார்கள். வந்தவர் சில அற்புதங்களையும் காட்டுவார். உதாரணமாகச் சில பறவைகளை, அவர் எந்த திசைக்குச் செல்ல வேண்டுமென்ற நாடுகிறாரோ அந்த திசைக்கு அப்பறவைகள் செல்லும்' அல்லது அவர் இருந்த இடத்திலிருந்து கொண்டே சில கால் நடைகளைத் தூங்கும்படியோ, எழுந்து செல்லும்படியோ சொன்னால் அவ்வாறே அவை செய்யும். சில மிருகங்கள் அவரை மக்காவிற்குத் தூக்கிக்கொண்டு செல்லும்; திரும்ப கொண்டு வந்து அவருடைய இடத்தில் விடும்.
நல்ல அழகு நிறைந்த சில மனிதர்கள், அவர் முன் தோன்றி நாங்கள் 'கர்ரூபிய்யூன்' என்ற மலக்குகள், உம்மைத் தரிசிக்க வந்தோம். என்று கூறுவார்கள். இவர் தன் மனதிற்குள் இவர்கள் முடி முளைக்காத இளைஞர்களுடைய தோற்றத்தில் அல்லவா இருக்கிறார்கள்! என்று நினைத்து விட்டுத் திரும்பத் தன் தலையை உயர்த்திப் பார்ப்பார், அப்பொழுது அவர்களுக்குத் தாடி முளைத்திருக்கக் காண்பார். அவர்கள் இவரிடத்தில் நீர் மஹதி, அதற்கு அடையாளம், உமது உடலில் ஒரு மரு முளைக்கும். இது போன்று எத்தனையோ விஷயங்கள் நடக்கும். இவை எல்லாம் ஷைத்தானின் சதியும், அவனது வழிகெடுத்தலுமாகும். இது மிக நீண்ட விஷயம். எல்லாவற்றையும் எழுதி முடிப்பதானால், ஒரு பெரிய நூலே எழுதிவிடலாம்.
அல்லாஹ் கூறுகிறான் மனிதனை அவனுடைய இறைவன் சோதிக்க வேண்டுமென்பதற்காக அவனுக்கு அருள் புரிந்து, அவனை கண்ணியப்படுத்தினால், என்னுடைய இறைவன் என்னைக் கண்ணியப்படுத்தினான் என்று பெருமையாகக் கூறுகிறான். ஆனால் இறைவன் அவனைச் சோதிக்க வேண்டுமென்பதற்காக: அவனுடைய (ரிஸ்கில்) கொடையில் கொஞ்சம் குறைத்து விட்டாலோ, என்னுடைய இறைவன் என்னை இழிவுப்படுத்திவிட்டான், என்று குறை
கூறுகிறான். திருக்குர்ஆன் (89: 15,16)
ஆனால், விஷயம் அம்மனிதன் கூறிக் கொண்டது போன்றன்று, எனக் கூறி அவ்வாறு கூறுகிற மனிதர்களை அல்லாஹ் எச்சரிக்கிறான்.
அல்லாஹ் உலக பாக்கியங்களில் எதையேனும் ஒருவனுக்குக் கொடுப்பானாயின். அது அல்லாஹ் அவனுக்கு கொடுத்த கராமத்தாகவும் அதனால் அல்லாஹ் அவனைக் கண்ணியப்படுத்துவதாகவும் கருதி விடக் கூடாது. ஒருவனுக்கு உலக பாக்கியங்களை அல்லாஹ் கொடுக்காததினால், அவன் அல்லாஹ்விடத்தில் இழிவுக்குரியவன் என்று யாரும் கருதிவிடக் கூடாது. இன்பங்களாலும், துன்பங்களாலும், அல்லாஹ் மனிதனைச் சோதிக்கிறான். தாம் நேசிக்காதவனுக்கும் சிலவேளை உலகப் பேறுகளைக் கொடுக்கத் தான் செய்கிறான். இதனால், அவன் அல்லாஹ்விடத்தில் கண்ணியத்திற்குரியவன் என்பது பொருள் அல்ல. உலகில் அவனைச் சோதிக்கவே அவ்வாறு கொடுக்கிறான் என்பதை அறிய வேண்டும்.
அல்லாஹ் தான் நேசிக்கிற நேசர்களுக்கு உலக பாக்கியங்களைக் கொடுக்காமல் அவர்களைப் பாதுகாப்பான். இந்த உலக பாக்கியங்களின் காரணமாக அல்லாஹ்விடத்தில் அவர்களின் தகுதி குறைந்துவிடக் கூடாது என்பதற்காகவும் இதனால் அவன் வெறுக்கிற தவறுகள் அவர்களிடமிருந்து நிகழ்ந்துவிடக்கூடாது என்பதற்காகவுமே உலக பாக்கியங்களை அவர்களுக்குக் கொடுக்காமல் அதைவிட்டும் அல்லாஹ் அவர்களைப் பாதுகாக்கிறான்.
ஈமான் தக்வா இவ்விரண்டின் காரணத்தினால்தான் இறை நேசர்களின் அற்புதங்கள் நிகழ்கின்றன. இறை நிராகரிப்பு, பாவங்கள் செய்தல் முதலியவற்றின் காரணமாக உண்டாகும் அற்புதங்கள் அல்லாஹ்வின் விரோதிகளிடமிருந்து நிகழாது. தொழுதல், குர்ஆன் ஓதுதல், திக்ர் செய்தல், இரவில் நின்று வணங்குதல், அல்லாஹ்விடம் பிரார்த்தித்தல், போன்ற நற்கருமங்களால் அற்புதம் ஏற்படாமல் இறந்தவர்களையும், மறைவானவர்களையும் அழைத்து உதவிதேடுதல், பாவமான செயல் களைச் செய்தல். பாம்பு, வண்டு. பூச்சி, இரத்தம் போன்ற பொருட்களையும், அசுத்தமான பொருட்களையும் புசித்தல், இசை, நடனம், குறிப்பாக மாற்றுப் பெண்களோடும், இளம் வாலிபர்களோடும் நடனம் ஆடுதல் போன்ற வெறுக்கத்தக்க செயல்களைப் புரிவதினால் ஒருவனிடமிருந்து அற்புதம் ஏற்படுமானால் அவன் ஷைத்தானேயாவான்.
இவனைப் போன்றவன் குர்ஆனைச் செவியுறும்போது, அவனுடைய அற்புதங்கள் குறைகின்றன. ஷைத்தானுக்கு விருப்பமான கேளிக்கைகளைச் செவியுறும்போது அவனுடைய அற்புதங்கள் கூடுகின்றன, வலுவடைகின்றன.
இக்கேலிக் கூத்துக்களிலேயே இரவு முழுவதையும் கழித்து விட்டு தொழுகையின் நேரம் வந்ததும் உட்கார்ந்தவனாகத் தொழுவான். அல்லது அவசர அவசரமாக கோழிக் கொத்துவது போன்று தொழுவான். குர்ஆனைச் செலியுறுவதை வெறுப்பான். அதைக் கஷ்டமாகவும். வெறுப்பானதாகவும் கருதுவான். அதில் அவனுக்கு ஆசையுமிருக்காது. அதில் அவனுக்கு இன்பமும் இருக்காது. கைதட்டுவதையும், சீட்டி அடிப்பதையும் செவியுறுவதை விரும்புவான். அவனிடத்தில் சில நிலை மாற்றங்கள் ஏற்படும். அது ஷைத்தானுடைய வேலையாகும். இப்படிப்பட்டவர்களைப் பற்றி
பின்வருமாறு அல்லாஹ் கூறுகிறான்
எவன் ரஹ்மானுடைய நல்லுபதேசத்திலிருந்து கண்ணை மூடிக் கொள்கிறானோ அவனுக்கு நாம் ஒரு ஷைத்தானைத் தோழுனாகச் சாட்டிவிடுவோம். அவன் அவனுக்கு இணைபிரியாத நண்பனாக ஆகிவிடுகிறான். திருக்குர்ஆன்(43:36)
குர்ஆன் அல்லாஹ்வை நினைவூட்டக் கூடியதாக இருக்கிறது என அல்லாஹ் கூறுகிறான்.
எவன், என்னுடைய குர்ஆன் என்னும் நல்லுபதேசத்தைப் புறக்கணிக்கிறானோ, அவனுடைய வாழ்க்கை நிச்சயமாக நெருக்கடியானதாகவே இருக்கும். மறுமை நாளிலோ நாம் அவனைக் குருடனாகவே எழுப்புவோம், (அவ்வாறு மறுமையில் குருடனாக எழுப்ப்படும்) அவன் என் இறைவனே! நீ ஏன் என்னைக் குருடனாக எழுப்பினாய்? நான் உலகத்தில் பார்வையுடையவனாக இருந்தேனே, என்று கேட்பான். (அதற்கு) இவ்வாறே நம் வசன உன்னிடத்தில் வந்தபோது, நீ அவற்றை(க்கவனத்தில் வைக்காது) மறந்துவிட்டாய் அவ்வாறே இன்றைய தினம் நீயும் (கவனி, படாமல்) மறக்கப்பட்டுவிட்டாய்! என்று கூறுவான். திருக்குர்அன் (20 :124-126).
முஹம்மத்(ஸல்)அவர்கள் மனித, ஜின் இனம் முழுவதற்கும் நபியாக வந்தார்கள்.
முஹம்மது (ஸல்) அவர்களை அல்லாஹ் மனித, ஜின் இனம் முழுவதிற்கும் தூதராக அனுப்பினான். அவர்களை விசுவாசித்து அவர்களைப் பின்பற்றுவது மனித ஜின் இனம் அனைத்தின் மீதும் கடமையாகும். அவர்கள் அறிவித்தவை அனைத்தும் உண்மையென ஏற்று அவர்கள் கட்டளையிட்டவற்றை எடுத்து நடப்பது கடமையாகும்.
முஹம்மத் (ஸல்) அவர்களின் தூது மனித, ஜின் இனத்தில் உள்ளவர்களுக்குக் கிடைத்த பின்னர் யாராவது ஒருவன் அவர்களை நம்பவில்லையானால், காபிராக ஆகிவிடுகிறான். என்றும் முஹம்மது (ஸல்) அவர்கள் மனித, ஜின் இனம் முழுவதிற்கும் தூதராக அனுப்பப்பட்டார்கள் என்றும் முஸ்லிம்கள் அனைவரும் ஏகோபித்துக் கூறியுள்ளனர். குர்ஆன் ஓதப்பட்டபோது அதை ஜின்கள் செவி தாழ்த்திக் கேட்டு, அதைத் தனது கூட்டத்தினருக்குக் கூறி அவர்களை எச்சரித்தன. இச்சம்பவம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாயிப் நகரிலிருந்து மக்காவிற்குத் திரும்பிக் கொண்டிருக்கும்போது வழியில் 'பதனுள் நஃக்லா' என்ற இடத்தில் நிகழ்ந்தது இச்சம்பவத்தைப் பற்றி அல்லாஹ் பின்வரு மாறு கூறுகிறான்:
(நபியே!) இந்த குர்ஆனைச் செனியுறுவதற்காக ஜின்களில் சிலரை நாம் உம்மிடம் வருமாறு செய்தோம். அவர்கள் அங்கு வந்த பொழுது (தங்கள் இனத்தாரை நோக்கி) நீங்கள் வாய்மூடி அமைதியாக இதனைச் செவியுறுங்கள் என்று கூறினார்கள். அது ஓதி முடிக்கப்பட்டதும், தங்கள் இனத்தாரிடம் சென்று, அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யலானார்கள். (அவர்களை நோக்கி) எங்களுடைய இனத்தாரே! நிச்சயமாக, நாங்கள் ஒரு வேதத்தைச் செவியுற்றோம். அது மூஸாவிற்குப் பின்னர் அருளப்பட்டிருக்கிறது. அது தனக்கு முன்னுள்ள வேதங்களையும் உண்மைப்படுத்துகிறது. அது சத்தியத்தின்பாலும் நேரான வழியின்பாலும் செலுத்துகிறது.
எங்களுடைய இனத்தாரே! அல்லாஹ்வின் பக்கம் அழைப்போருக்குப் பதில்கூறி, அவரை நம்புங்கள்,உங்களுடைய பாவங்களை உங்களுக்கு (அல்லாஹ்) மன்னித்து விடுவான். துன்புறுத்தும் வேதனையிலிருந்தும் உங்களைக் காத்துக் கொள்வான். எவன் அல்லாஹ்வின் பக்கம் அழைப்போருக்குப் பதில் கூறவில்லையோ, அதனால் அல்லாஹ்வை அவன் தோற்கடித்துவிட முடியாது. அல்லாஹ்வையன்றி அவனை பாதுகாப்போர் யாருமில்லை, அவர்கள் பகிரங்கமான வழிகேட்டில்தான் இருப்பர் என்று கூறினர்.
இவ்வசனங்களுக்குப் பின்னர் பின்வரும் வசனங்களை அல்லாஹ் இறக்கினான்.
(நபியே!) நீர் கூறும் வஹீமூலம் எனக்கு அறிவிக்கப்பட்டுள்ள இவ்வேதத்தை ஜின்களில் சிலர் செளியுற்று (த்தங்கள் இனத்தாரிடம் சென்று, அவர்களை நோக்கி), நிச்சயமாக நாங்கள் மிக ஆச்சரியமான ஒரு குர்ஆனைச் செவியுற்றோம். அது நேரான வழியை அறிவிக்கிறது. ஆகவே, அதனை நாங்கள் விசுவாசித்தோம். இனி நாங்கள் எங்கள் இறைவனுக்கு ஒருவனையும் 'இணையாக்கமாட்டோம். நிச்சயமாக எங்கள் இறைவன் மிக மகத்துவமிக்கவன். அவன் எவரையும் (தன்னுடைய) மனைவியாகவோ, மக்களாகவோ எடுத்துக் கொள்ளவில்லை, என்று கூறினார்கள். நிச்சயமாக நம்மிலுள்ள மடையர்கள் அல்லாஹ்வின் மீது (அவனுடைய பரிசுத்தத் தன்மைக்குத்) தகாத விஷயங்களைக் கற்பித்துக் கூறுகின்றனர். மனிதர்களும், ஜின்களும் நிச்சயமாக அல்லாஹ்வின் மீது பொய் கூறமாட்டார்களென்று உண்மையாகவே (இதுவரையில்) நாங்கள் எண்ணிக் கொண்டிருந்தோம். மனித இனத்திலுள்ள ஆண்கள் பலர், ஜின்களிலுள்ள பல ஆண்களிடம் தங்களை இரட்சிக்க வேண்டுகின்றனர். இதனால் அவர்களுடைய (ஜின்களுடைய) கர்வம் அதிகரித்து விட்டது. திருக்குர்ஆன் (72 :1-6)
மனிதர்களில் யாராவது ஒருவர் ஒர் ஓடையின் பக்கமாகவோ, அல்லது ஒரு மலைப்பாதையின் பக்கமாகவோ செல்லும்போது, இந்த ஓடையினுடைய பெரியவனைக் கொண்டு அவனுடைய மடக்கூட்டத்தின் தீங்கிலிருந்து அந்தப் பெரியவனிடமே காவல் தேடுகிறோம் என்று சொல்லி வந்தார்கள் என இமாம்கள் பலர் கூறியுள்ளனர்.
மனிதர்கள், ஜின்களைக் கொண்டு காவல் தேடும்போது, ஜின்கள் வழிகேட்டிலும், நிராகரிப்பிலும் ஊறிச் செல்கின்றன. எனவே அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான் :-
மனித இனத்திலுள்ள ஆண்களில் பலர், ஜின்களிலுள்ள பல ஆண்களிடம் தங்களை இரட்சிக்கக் கோருகின்றனர். இதனால் அந்த ஜின்களுடைய கர்வம் அதிகரித்துவிட்டது. நீங்கள் எண்ணுவது போன்றே அவர்களும் (இறந்த பின்னர்) அல்லாஹ் யாரையும் (உயிர் கொடுத்து) எழுப்பமாட்டான் என்று எண்ணிக் கொண்டனர். நிச்சயமாக நாங்கள் வானத்தைத் தடவிப் பார்த்தோம். அது பலமான அரணாலும், எரி நட்சத்திரங்களாலும் நிரப்பப்பட்டிருப்பதை நாங்கள் கண்டோம். திருக்குர்ஆன் (72 :6-8).
குர்ஆன் அருளப்படுவதற்கு முன்னர் ஷைத்தான்கள் செய்தியைக் களவு செய்வதற்காக வானத்திற்குச் செல்லும், அப்போது அவர்களைத் தீப்பிழம்பால் மலக்குகள் எறிகின்றனர். ஆனால், சில சமயங்களில் தீப்பிழம்பு அவற்றின் மீது படுவதற்கு முன்னர் சில செய்திகளைத் தங்கள் காதுகளால் கேட்டுத் திருடி வருகின்றன. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நபியாக அனுப்பப்பட்டவுடன் ஷைத்தான்கள் வானத்திற்குச் செல்ல முடியாதவாறு கடும் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. தீப்பிழம்பு ஷைத்தானை எதிர் நோக்கிக் காத்துக் கொண்டிருந்தது. இதைப் பற்றி ஷைத்தான்கள் தமக்குள் கூறிக் கொண்டதை அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான் :
(வானத்தில் நடக்கும் விஷயங்களைச்) செவியுறக் கூடிய பல இடங்களில் முன்னர் நாங்கள் அமர்ந்திருந்தோம். ஆனால் இப்போதோ அவற்றைச் செவியுற எவரேனும் சென்றால் நெருப்பின் ஒரு கங்கு அவனை (அடிப்பதற்காக) எதிர்பார்த்திருப்பதை அவன் காண்பான். திருக்குர்ஆன் (72 :9),
மேலும் ஓர் இடத்தில் அல்லாஹ் கூறுகிறான்
(இவர்கள் கூறிக்கொள்வது போன்று) இவ்வேதத்தை ஷைத்தான்கள் கொண்டுவரவுமில்லை. அது அவர்களுக்குத் தேவையுமில்லை. அதற்குரிய சக்தியும் அவர்களிடமில்லை. இதனை அவர்கள் (காதால்) கேட்பதை விட்டுத் தடுக்கப்பட்டுள்ளார்கள். திருக்குர்ஆன் (26: 210-212),
வானத்தில் நடைபெறுகின்ற விஷயங்களைக் களவு செய்வதற்காக இப்பொழுது எங்களில் யாராவது சென்றால், அவனை அடிப்பதற்காக நெருப்பின் ஒரு கங்கு காத்துக் கொண்டிருக்கிறது என்று ஜின்கள் கூறின. இதனால் பூமியிலுள்ளவர்களுக்குத் தீங்கு விரும்பப்படுகிறதோ அல்லது அவர்களின் இறைவன் இதனால் அவர்களுக்கும் நன்மையை நாடியிருக்கின்றானோ என்பதை நிச்சயமாக நாங்கள் அறியமாட்டோம். நிச்சயமாக நம்மில் நல்லோர் சிலரும் இருக்கின்றனர். நல்லவர்கள் அல்லாதவர்கள் சிலரும் இருக்கின்றனர். நாம் பல பிரிவுகளாகப் பிரிந்திருந்தோம் என்று ஜின்கள் கூறின. திருக்குர்ஆன் (72 :10.10)
அதாவது ஜின்களிலும் பல கொள்கையுடையவை இருக்கின்றன, முஸ்லிமாகவும், முஷ்ரிக்காகவும், யூதனாகவும். கிருஸ்தவனாகவும், ஸுன்னியாகவும், பிதயியாகவும் இவ்வாறு பலசாராராக ஜின்கள் இருக்கின்றன, என இமாம்கள் கூறியுள்ளனர்.
மேலும் ஜின்கள் கூறின :-
நிச்சயமாக பூமியில் அல்லாஹ்வைத் தோற்கடிக்க முடியாதென்பதையும், (பூமியிலிருந்து) ஒடி, அவனை விட்டுத்தப்பித்துக்கொள்ள முடியாதென்பதையும் உறுதியாக அறிந்து கொண்டோம். திருக்குர்ஆன் (72: 12)
பூமியில் இருந்தாலும், பூமியை விட்டு ஓடினாலும் அல்லாஹ்வை அவர்களால் பலவீனப்படுத்த முடியாது என ஜின்கள் ஒப்புக் கொண்டுள்ளன. தங்களுக்குள் நல்லோரும் இருக்கின்றனர், தீயோரும் இருக்கின்றனர். என்பதையும் ஜின்கள் ஒப்புக் கொண்டுள்ளன என்பதை அல்லாஹ் பின்வரும் வசனங்களில் கூறுகிறான்:
குர்ஆனில் உள்ள நேரான வழியை நாங்கள் செவியுற்றவுடனேயே அதனை நாங்கள் விசுவாசித்து விட்டோம். எவன் தன் இறைவனை விசுவாசிக்கிறானோ அவன் (தனக்கு) நஷ்டம் ஏற்படுவதையும், அநீதி ஏற்படுவதையும் பற்றி அஞ்சமாட்டான் (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லிம்கள் பலர் நிச்சயமாக நம்மில் இருக்கின்றனர். வரம்பு மீறியோரும் நம்மில் பலர் இருக்கின்றனர். எவர்கள் முற்றிலும் வழிப்பட்டு நடக்கின்றார்களோ அவர்களே நேரான வழியை அடைந்தவர்களாவர். வரம்பு மீறியவர்களோ, நகரத்தின் எரிகட்டையாகி விட்டார்கள். என்றும் கூறினர்.
நபியே! இந்த மக்கவாசிகள் மார்க்க வழியில் உறுதியாக இருந்தால் தடையின்றி அவர்களுக்கு மழையைப் பொழிவித்துக் கொண்டிருப்போம். இதில் அவர்களை நாம் சோதிப்போம். ஆகவே எவன் தன் இறைவனை நினைப்பதைப் புறக்கணிக்கிறானோ, அவனைக் கடினமான வேதனையில் அவன் புகுத்தி விடுவான். நிச்சயமாக மஸ்ஜிதுகளெல்லாம் அல்லாஹ்வின் வணக்கத்திற்காகவே உள்ளன. ஆகவே (அவற்றில்) அல்லாஹ்வுடன் மற்றெவரையும் அழைக்காதீர்கள். நிச்சயமாக அல்லாஹ்வுடைய அடியாரான நம்முடைய தூதர் தொழுவதற்காக நின்று. அவனை அழைக்கும் போது மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து அவரைச் சூழ்ந்து கொள்கின்றனர் (அவர்களுக்கு) நபியே! நீர் கூறும் :- நான் பிரார்த்தனை செய்து அழைப்பதெல்லாம் என் இறைவனையே! அவனுக்கு ஒருவரையும் நான் இணையாக்க மாட்டேன். உங்களுக்கு நன்மையோ தீமையோ செய்திட நான் ஒரு சிறிதும் சக்தியற்றவன் என்றும் கூறுவீராக!
நிச்சயமாக அல்லாஹ்வை விட்டும் யாரும் என்னை இரட்சித்துக் கொள்ள முடியாது. அவனைத் தவிர வேறு ஒதுங்குமிடமும் எனக்குக் கிடையாது. அல்லாஹ் எனக்கருளிய, அவனுடைய தூதின் செய்திகளை எடுத்துரைப்பதைத் தவிர (எனக்கு) வேறு வழி இல்லை ஆகவே, எவன் அல்லாஹ்வுக்கும். அவனுடைய தூதருக்கும் மாறு செய்கிறானோ, அவனுக்கு நிச்சயமாக நரக நெருப்புதான் கூலியாக இருக்கிறது. அதில் அவர்கள் நிரந்தரமாகத் தங்கி விடுவார்கள்' என்றும் (நபியே) நீர்கூறும்.
அவர்களுக்கு அச்சுறுத்தப்பட்ட வேதனையை அவர்கள் (கண்ணால்), காணும் சமயத்தில், எவருடைய உதவியாளர்கள் மிக பலவீனமானவர்கள் என்பதையும், (எவருடைய உதவியாளர்கள்) மிக குறைந்த தொகையினர். என்பதையும் சந்தேகமின்றி அறிந்து கொள்வார். (திருக்குர்ஆன் 72 :24)
'நுஸைபீன்' என்ற இடத்தில் உள்ள ஜின்கள் குர்ஆனைச் செவியுற்றபோது, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து ஈமான் கொண்டன என ஒரு ஸஹீஹான ஹதீஸில் வந்துள்ளது.
‘அப்துல்லாஹ் பின் மஸ்வூது' (ரலி) அவர்கள் ஒருமுறை ஜின்களுக்கு அர்ரஹ்மான் என்ற அத்தியாத்தை ஓதிக் காண்பிக்கும் போது, 'ஃபபி அய்யி ஆலாயிரப்பிகுமா துகத்திப்பான்', என்ற வசனத்தை ஓதியவுடன் எங்கள் இறைவா! உன்னுடைய அத்தாட்சிகளில் எதையும் நாங்கள் பொய்யென மறுக்கவில்லை. உனக்கே புகழ் அனைத்தும் என்று ஜின்கள் கூறின.
ஒருமுறை ஜின்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, தங்களுக்குரியவும், தங்களின் வாகனங்களுக்குரியவும் ஆகாரம் எது? என்று கேட்டன. அதற்கு அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கப்பட்ட கால்நடைகளின் எலும்புகள் உங்களுடைய உணவாக இருக்கின்றன. இறைச்சி நிறைந்ததாக அதை நீங்கள் பெற்றுக் கொள்வீர்கள் வாகனங்களின் எரு உங்கள் கால்நடைகளில் ஆகாரமாகும். என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
எனவே மற்றொரு ஹதீஸில்:-
"எலும்பும், எருவும் உங்களுடைய சகோதர்களான ஜின்களுக்கு ஆகாரமாக உள்ளன. எனவே. அவ்விரண்டால் சிறுநீர் சுத்தம் செய்யாதீர்கள்' என. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(முஸ்லிம்)
இவ்வாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விலக்கி இருப்பது பலர் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே அவ்விரண்டால் சிறுநீர்சுத்தம் செய்யக் கூடாது என, இமாம்கள் கூறியுள்ளனர்.
ஜின்களுடையவும், அவற்றின் கால்நடைகளுடையவும் ஆகாரமான எலும்பு, எரு மூலம் சுத்தம் செய்வது தடையாக இருக்கும் போது. மனிதனுக்காகவும், அவனுடைய கால்நடைகளுக்காகவும் உள்ள ஆகாரங்களால் சுத்தம் செய்வது ஏற்றமான முறையில் தடை செய்யப்பட வேண்டியதாகும், என மார்க்க அறிஞர்கள் கூறியுள்ளனர்.
நபி சுலைமான் (அலை) அவர்களுக்கு ஜின்களை வசப்படுத்தி கொடுக்கப்பட்டதின் மூலம் அவர்களுக்குக் கிடைத்த சிறப்பைவிட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய தகுதி மிக மேலானதாகும். ஏனெனில், இவர்கள் மனித இனம், ஜின் இனம் முழுவதிற்கும் தூதராக அனுப்பப்பட்டார்கள்.
நபி சுலைமான் (அலை) அவர்கள் மலக்குகளுடைய கட்டளையின் பிரகாரமே ஜின்களை இயக்கினார்கள். ஆனால், நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்களோ. ஜின்களுக்குத் தூதராக அனுப்பப்பட்டார்கள். அல்லாஹ்வும், அவனது தூதரும் விதித்த கட்டளைகளைச் செய்யுமாறு அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள். ஏனெனில், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாராகவும்,
அவனது திருத்தூதராகவும் இருக்கிறார்கள். அல்லாஹ்வின் தூதராகவும், அவனது அடிமையாகவும் இருப்பவருடைய தகுதி, அரசராகவும், நபியாகவும் இருக்கிறவருடைய தகுதியைவிடச் சிறந்ததாகும்.
நல்ல ஜின்களும், கெட்ட ஜின்களும்
காஃபிரான ஜின்கள் நரகம் செல்லும், என்பது ஆதாரப்பூர்வமாக நிரூபணமான ஒன்றாகும். ஜின்களில் மூமினானவை சுவர்க்கம் செல்லும் என அதிகமானவர்கள் கூறியுள்ளார்கள்.
இறைத் தூதர்கள் அனைவரும் மனித இனத்திலிருந்துதான் அனுப்பப்பட்டுள்ளார்கள். ஜின் இனத்திலிருந்து இறைத்தூதர்கள் அனுப்பப்படவில்லை. ஆனால், அவர்களில் அச்சமூட்டி எச்சரிக்கை செய்யக் கூடியவர்கள் இருந்தார்கள் என்று மார்க்க அறிஞர்கள் கூறியுள்ளனர். இவை வேறு இடங்களில் விளக்கப்பட்டுள்ளன.
ஜின்கள் மனிதர்களுடன் பல நிலைகளில் உள்ளன. எந்த மனிதன் தன்னுடனுள்ள ஜின்களை அல்லாஹ்வும். அவனது தூதரும் ஏவிய கட்டளைகளை எடுத்து நடக்குமாறு ஏவி, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு கட்டுப்படுமாறு கட்டளையிடுகிறானோ, அந்த மனிதனும். அவனுடனிருக்கும் ஜின்னும் நற்கருமங்களைச் செய்வதுடன், பிறரையும் செய்யத் தூண்டுவார்களேயானால் அந்த ஜின்னும், அந்த மனிதனும் சிறந்த இறைநேசர்களாகவும், நல்லவற்றைப் போதிப்பதில் ரசூலுல்லாஹ்வின் பிரதிநிதிகளாகவும் ஆகிவிடுகிறார்கள்.
எவன் ஜின்களை அனுமதிக்கப்பட்ட, ஆகுமான காரியங்களுக்காகப் பயன்படுத்துகிறானோ அவன், ஆகுமான காரியங்களுக்காக மனிதனைப் பயன்படுத்தியவனைப் போலாவான். உதாரணமாக, ஜின்களின் மீது கடமையானவற்றைச் செய்யுமாறு அவற்றைத் தூண்டுவது. அவற்றிற்கு விலக்கப்பட்டவற்றை விட்டுவிடு மாறு அவற்றை விலக்குவது, தனக்கு அனுமதிக்கப்பட்ட விஷயங்களுக்காக ஜின்னைப் பயன்படுத்துவது ஆகிய இது போன்ற செயல்களை ஒருவன் செய்யும்போது, இது போன்ற செயல்களைச் செய்த அரசர்களுடைய தகுதியை அவன் அடைகிறான்.
அல்லாஹ்வுடைய நேசனாக இருக்கக் கூடியவன் மட்டுமே இந்த தகுதியை அடையமுடியும். இப்படிப்பட்டவன் சாதாரண ஓர் இறை நேசனாகக் கருதப்படுகிறான். இவனுக்கும் அல்லாஹ்வோடு நெருங்கிய அவனது அவ்லியாக்களுக்குமிடையிலுள்ள வேறுபாடு நபியாகவும் அரசராகவும் இருந்த நபி சுலைமான் (அலை) நபி யூசுப் (அலை) ஆகிய இவ்விருவருக்கும், தூதராகவும் அடிமையாகவும் இருந்த நபிமார்களான இப்ராஹீம், மூஸா, ஈஸா, முஹம்மத் (அலைஹிமுஸ்ஸலாம்) ஆகிய
இவர்களுக்குமிடையிலுள்ள வேறுபாட்டைப் போலாகும்.
அல்லாஹ்வும், அவனது தூதரும் விலக்கிய ஷிர்க்கான காரியங்களைச் செய்வது, நிரபராதிகளை கொலை செய்வது. அல்லது அவர்களை நோய்வாய்ப்படுத்தி அவர்களுடைய அறிவை மறக்கடிப்பது போன்ற வரம்பு மீறிய வெறுக்கப்பட்ட செயல்களுக்காக ஜின்களைப் பயன்படுத்தியவனாக ஆகுகின்றான். எவன் ஜின்னை குஃப்ரான செயல்ளுக்காகப் பயன்படுத்துகிறானோ அவன் பாவியாக ஆகிவிடுகிறான்.
இஸ்லாமிய ஷரீஅத்தைப் பற்றிய பூரண அறிவில்லாத காரணத்தால், கராமத் என நினைத்து சில தவறான காரியங்களைச் செய்யக் கூடியவன் ஜின்களால் ஏமாற்றப்பட்டு சூழ்ச்சிக்குள்ளாக்கப்பட்டவன் ஆவான்.
உதாரணமாக : ஹஜ் செய்வதற்காக அரஃபாத்திற்குத் தன்னைத் தூக்கிச் செல்லுமாறு ஜின்னிடம் வேண்டுவான். அவன் ஷரீஅத்தில் கூறப்பட்ட முறையான ஹஜ்ஜைச் செய்வதில்லை! அல்லது வெறுக்கப்பட்ட வேடிக்கைக் கூத்துக்கள் நடக்கும் இடங்களுக்குத் தூக்கிச் செல்லுமாறு சொல்லுவான். அல்லது ஓர் ஊரை விட்டு மற்றொரு ஊருக்குத் தூக்கிச் செல்லுமாறு வேண்டுவான். இதுபோன்ற செயல்களுக்காக ஜின்களிடம் உதவி தேடிவிட்டு அவை கராமத் என்று கருதுவானாயின், அது ஜின்களால் செய்யப்பட்ட சதிமோசமாகும் என்று அறிவது அவசியமாகும். இப்படிப்பட்டவர்களில் அதிகமானவர்கள் அச்செயல்கள் ஜின்களால் ஏற்பட்டவை என்று அறிவதில்லை.
அல்லாஹ்வின் அவ்லியாக்களுக்கு கராமத்கள் உண்டு, அவர்களிடமிருந்து வழக்கத்திற்கு மாற்றமான பல செயல்கள் நிகழ்கின்றன என்று பொதுவாக இவர்கள் கேள்விப்பட்டிருப்பார்கள். அல்லாஹ்வின் உதவியால் ஏற்படுகிற கராமத்களையும். ஷைத்தானின் சதியினால் ஏற்படும் செயல்களையும் பிரித்தறிவதற்குத் தேவையான குர்ஆனின் அறிவும், ஈமானிய உண்மைகளும் இவர்களிடம் கிடையாது. எனவே இவர்களுடைய கொள்கைக்கொப்ப ஷைத்தான் இவர்களை ஏமாற்றுகிறான்.
சிலைகளையும். நட்சத்திரங்களையும் வணங்கக் கூடியவனாக இருந்தால், அவ்வணக்கம் அவனுக்குப் பலனளிக்கும் என்ற எண்ணத்தை (ஷைத்தான்) அவனுடைய உள்ளத்தில் போடுவான். அப்போது மலக், அல்லது நபி, அல்லது நல்ல மனிதர்கள் ஆகியோரின் உருவங்களில் செய்யப்பட்ட சிலைகளிடமிருந்து சிபாரிசு-பரிந்து பேசுதலை-நாடுவான். இதன் மூலம், யாருடைய உருவத்தில் சிலை எழுப்பப்பட்டுள்ளதோ
அவரிடமிருந்து சிபாரிசு தேடுவதாக இவன் நினைத்துக் கொள்கிறான். ஆனால் உண்மையில் அவன் ஷைத்தானிடமிருந்தே சிபாரிசு தேடுகிறான்.
இதை அல்லாஹ் பின்வரும் வசனத்தில் விளக்கிக் கூறுகிறான்:
(மலக்குகளை வணங்கிக் கொண்டிருந்த) அவர்கள் எல்லோரும் ஒன்று சேர்க்கப்படும் (மறுமை) நாளில் மலக்குகளை நோக்கி, இவர்கள் தானா உங்களை வணங்கிக் கொண்டிருந்தார்கள்? என்று அல்லாஹ் கேட்பான். அதற்கவர்கள் (எங்கள் இறைவா!) நீ மிகப் பரிசுத்தமானவன்; நீதான் எங்கள் இரட்சகன்; இவர்கள் எங்களை வணங்கவில்லை, ஜின்களையே
வணங்கிக் கொண்டிருந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் ஜின்களையே விசுவாசித்தும் இருந்தனர் என்று கூறுவார்கள். திருக்குர்ஆன் (34 :40,41),
ஷைகுமார்களின் தோற்றத்தில் ஷைத்தான்கள்
சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் முதலியவற்றிற்குச் சாஷ்டாங்கம் செய்கிறவர்கள் அவற்றையே தாம் வணங்குவதாக எண்ணிக் கொள்கின்றனர். ஆனால் அவர்கள் அவற்றுக்குச் சாஷ்டாங்கம் செய்கிறபோது அவற்றின் முன் ஷைத்தான் தோன்றி, அவர்களுடைய வணக்கம் தனக்குரியதாய் ஆகவேண்டுமென விரும்புகிறான். எனவே முஷ்ரிகீன்கள் யாரைக் கொண்டு அபயம் தேடுகிறார்களோ அவருடைய உருவத்தில் ஷைத்தான் தோன்றுகிறான். அபயம் தேடுபவன் கிருஸ்தவனாக இருந்தால், ஜர்ஜிஸ் என்பவரைக் கொண்டு அபயம் தேடுவான். அப்போது ஷைத்தான் ஜர்ஜிஸாடைய உருவத்தில் தோன்றுவான், அல்லது யாரைக்கொண்டு அபயம் தேடுகிறானோ அவனுடைய உருவத்தில் தோன்றுவான். முஸ்லிமாக இருந்தால் முஸ்லிம் ஷைகுமார்களில் யார்மீது நம்பிக்கை வைத்திருக்கிறானோ அந்த ஷைக்கைக் கொண்டு அபயம் தேடுவான். அப்போது ஷைத்தான் அந்த ஷைகுடைய உருவத்தில் தோன்றுவான். இந்தியாவிலுள்ள முஷ்ரிக்காக இருந்தால் அவன் யாரைக் கண்ணியப்படுத்தி அழைக்கிறானோ, அவனுடைய உருவத்தில் ஷைத்தான் தோன்றுவான்.
எந்த ஷைகை அழைத்து உதவி தேடுகிறானோ அந்த ஷைகு இஸ்லாமிய ஷரீஅத்தைப் பற்றிய அறிவுஞானமுடையவராக இருந்தால், அவரை அழைத்தவர்களிடம் அவருடைய உருவத்தில் தோன்றிய ஷைத்தான் இதைப் பற்றிஅந்த ஷைக்கிடம் தெரிவிப்பதில்லை. ஆனால் அபயம் கோரப்பட்ட ஷைக் இஸ்லாமிய அறிவுஞானமிழந்தவராக
இருந்தால் எவர்கள் அவரை அழைத்தார்களோ, அவர்கள் கூறியவற்றை அந்த ஷைக்கிடம் ஷைத்தான் கூறுவான். ஷைகு கூறுவதை அவர்களிடம்
கூறுவான். அப்போது நமது ஷைகு மிகத்தூரத்தில் இருந்தும்கூட நம் அழைப்பை ஏற்று பதில் அளித்துள்ளார் என்று அவர்கள் நினைத்துக் கொள்வார்கள். ஆனால், இதையெல்லாம் செய்தது ஷைத்தானே என்பதை அவர்கள் அறிவதில்லை.
மேற்கூறப்பட்டதைப் போன்ற சில சம்பவங்கள் சில ஷைகுமார்களுக்கு நிகழ்ந்துள்ளன. ஓர் உருவம் தோன்றித் தன்னுடன் உரையாடுவதாக ஒரு ஷைகு கண்டுள்ளார். தண்ணீர், அல்லது கண்ணாடி போன்ற மின்னக்கூடிய ஒரு பொருளை ஜின்கள் அவரிடம் காண்பித்து, அவர் விரும்பக் கூடிய விஷயங்களை அதில் தோன்றச் செய்யும். அவ்விஷயங்களை அவர் மக்களுக்கு அறிவிப்பார். அவரைக் கொண்டு அபயம் தேடி அவருடைய சீடர்களின் பேச்சுக்களை அவருக்கு ஜின்கள் அறிவிக்கும். அதற்கு அவர் கூறும் பதிலையும் அவர்களுக்கு ஜின்கள் கூறும். இவ்வாறு எந்த ஷைகிற்கு நிகழ்ந்ததோ, அந்த ஷைகே இதைப் பற்றி என்னிடம் அறிவித்துள்ளார்.
இது போன்ற வழமைக்கு மாற்றமான அற்புதச் செயல்கள் பல ஷைகுமார்களிடமிருந்து நிகழ்துள்ளன. அதன் உண்மைகளைப் புரிந்துகொள்ள முடியாதவன் அந்த ஷைகுமார்களிடத்தில் நீங்கள் இது போன்ற செயல்களைத் தந்திரமான முறையில் செய்தீர்கள். அதாவது தவளையின் எண்ணெய் போன்றவற்றை உடம்பில் தடவி, தீயில் நுழையக்கூடியவனைப் போன்று நீங்களும் தந்திரமாகச் செய்கிறீர்கள் என்று கூறி அவற்றைப் பொய்யென மறுக்கும் போது, அந்த ஷைகுகள் வியப்படைந்து அல்லாஹ்வின் மீது ஆணையாக, நாங்கள் எந்தத் தந்திரங்களையும் கையாளவில்லை என்று கூறுவார்கள். ஆனால் இவற்றைப் பற்றிய உண்மைகளை நன்கறிந்தவன். அந்த ஷைகுமார்களிடம். எந்த தந்திரத்தின் மூலமும் அற்புதங்களை நாங்கள் செய்யவில்லை என்று நீங்கள் கூறுவது உண்மைதான். ஆனால் அவை ஷைத்தானிய நிலைகளால் ஏற்படுவதாகும், என்பதை நீங்கள் அறிவதில்லை என்று கூறுவான். அப்போது அவன் கூறுவது உண்மைதான் என நம்பி தன்னிடமிருந்து ஏற்பட்ட தவறுகளுக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரிய ஷைகுமார்களும் உண்டு.
தன்னிடமிருந்து நிகழ்ந்த அற்புதங்கள் ஷைத்தானால் ஏற்பட்டவையாகும் என்பது பின்னர் அவர்களுக்குத் தெரிய வந்துள்ளது. அது ஷைத்தானுடைய வேலைதான் என்பதைக் கண்ணால் கண்டும் இருக்கின்றனர்.
இதுபோன்ற அற்புதங்கள் அல்லாஹ்வுக்கு பாவம் செய்வதின் மூலமும் ஷரீஅத்தில் வெறுக்கப்பட்டுள்ள நூதன நடைமுறைகளைச் செய்வதின் மூலமுமே ஏற்படுகின்றன. அல்லாஹ்வும் அவனது தூதரும் விரும்புகிற ஷரீஅத்தில் அனுமதிக்கப்பட்ட வணக்கங்களைச் செய்வதின் மூலம் ஏற்படுவதில்லை என்பதை அந்த ஷைகுமார்கள் உணரும் போது அவை ஷைத்தான் தன் தோழர்களை ஏமாற்றுவதற்காக காட்டும் ஜாலலித்தைகளேயொழிய அல்லாஹ் தன் நேசர்களுக்கு, அருளும் 'கராமத் அல்ல' என்பதை நன்கு அறிந்து கொள்கிறார்கள்.
சரியானவற்றை அல்லாஹ்வே நன்கு அறிந்தவனாக இருக்கிறான். அவனிடமே நாம் செல்லவேண்டும்.
அல்லாஹ்வின் தூதர்கள், அவனது நபிமார்கள் எல்லோருக்கும் தலைவரான நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்கள் மீதும், அவர்களின் குடும்பத்தார் மீதும், அவர்களின் தோழர்கள் மீதும், அவர்களின் ஆதரவாளர்களின் மீதும், அவர்களைப் பின்பற்றுவோர் மீதும், அவர்களின் பிரதிநிதிகள் அனைவர் மீதும் நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்களின் ஷஃபா அத்தைப் பெறுவதற்குக் காரணமாக இருக்கும் ஸலவாத்தையும், ஸலாமையும் அல்லாஹ் பொழிந்தருள்வானாக! ஆமீன்.