அல்லாஹ்வின் பெயர்கள் மற்றும் பண்புகளின் விடயத்தில் அஹ்லுஸ் ஸுன்னாஹ் வல்ஜமாஅத்தினரின் வழிமுறையை பொதுவான விதத்தில், சுருக்கமாக எடுத்துரைக்கும் அடிப்படைகள்

-அஷ்ஷைஃக் ஸாலிஹ் ஸின்தி

அல்லாஹ்வின் பெயர்கள் மற்றும் பண்புகளின் விடயத்தில் அஹ்லுஸ் ஸுன்னாஹ் வல் ஜமாஅத்தினரின் வழிமுறையை பொதுவான விதத்தில், சுருக்கமாக எடுத்துரைக்கும் பதினொறு அடிப்படைகளை நான் - அல்லாஹ் உங்களைப் பாதுகாப்பானாக - உங்களுக்கு குறிப்பிடுகிறேன். இந்த அடிப்படைகளை - நீங்கள் விரும்பினால் இவற்றிற்கு விதிகள் என்று பெயர் சூட்டிக் கொள்ளுங்கள், மேலும் நீங்கள் விரும்பினால் கோட்பாடுகள் என்று பெயர் சூட்டிக் கொள்ளுங்கள். (இதைக்கொண்டு) நாடப்படுவது என்னவென்றால், இவை அல்லாஹ்வின் பெயர்கள் மற்றும் பண்புகளின் விடயத்தில் அஹ்லுஸ் ஸுன்னாஹ் வல் ஜமாஅத்தினரின் நம்பிக்கையை உங்களுக்கு ஒன்றுசேர்த்து, தெளிவான சாராம்சத்தை சுருக்கமாக எடுத்துரைக்கும்.

1. முதலாவது (அடிப்படை): 

(பெயர்கள் மற்றும் பண்புகளிலிருந்து) எவற்றையெல்லாம் அல்லாஹ் தனக்கு (இருப்பதாக) உறுதிப்படுத்தினானோ, மேலும் அவனது தூதர் ﷺ அவர்கள் அவனுக்கு எவற்றையெல்லாம் (இருப்பதாக) உறுதிபடுத்தினார்களோ, அவை யாவற்றையும் அஹ்லுஸ் ஸுன்னாஹ் வல் ஜமாஅத்தினர் உறுதிப்படுத்துகின்றனர். 

"அல்-இஸ்பாத்" (உறுதிப்படுத்துவது) என்பதன் பொருளை நீங்கள் அறிந்துள்ளீர்கள். அதாவது, அப்பண்புகள் அல்லாஹ்வின் உள்ளமையுடன் நிலை பெற்றிருப்பதை நம்பிக்கை கொள்வதாகும். (அப்பண்புகள் அல்லாஹ்வுக்கு இருப்பதை ஈமான் கொள்வதாகும்). மேலும் குர்ஆன் மற்றும் ஸுன்னாஹ்வில் வந்திருக்கும் இவ்வழகியப் பெயர்களை நிச்சயமாக அல்லாஹ் தனக்கு சூட்டிக்கொண்டான் என்றும் நம்பிக்கை கொள்வதாகும். 

2. இரண்டாவது (அடிப்படை): 

எவற்றையெல்லாம் அல்லாஹ் தனக்கு (இல்லையென) மறுத்துள்ளானோ, மேலும் அவனது தூதர் ﷺ அவர்கள் அவனுக்கு எவற்றையெல்லாம் (இல்லையென) மறுத்துள்ளார்களோ, அவை யாவற்றையும் அஹ்லுஸ் ஸுன்னாஹ் வல் ஜமாஅத்தினர் மறுக்கின்றனர்.

மேலும் இந்த பாடத்தில் வரக்கூடிய ஒவ்வொரு மறுத்தலும், அதைக்கொண்டு நாடப்படுவதென்பது, அதனுடைய (மறுக்கப்பட்ட பண்புடைய) எதிர்மறையான (பண்பின்) பரிபூரணத்துவத்தை உறுதிப்படுத்துவதாகும். (உதாரணத்திற்கு இயலாமையை அல்லாஹ்வை விட்டும் மறுக்கும் போது அதற்கு எதிர்மறையான, முழுமையான பேராற்றலை உறுதிபடுத்துவதாகும்). 

3. மூன்றாவது (அடிப்படை): 

(அஸ்மா வஸ்ஸிஃபாத் விடயத்தில்) அஹ்லுஸ் ஸுன்னாஹ் வல் ஜமாஅத்தினர் குர்ஆன், ஹதீஸை மீறிச் செல்ல மாட்டார்கள்.

எனவே, இந்தப் பாடம் அவர்களிடத்தில் "தவ்கீஃபி" ஆகும். அதாவது, அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா அவனது பெயர்கள், பண்புகளைக் கொண்டே தவிர அறியப்படமாட்டான். அவனது பெயர்கள், பண்புகளோ வஹியின் வாயிலாகவே தவிர அறியப்படமாட்டாது. 

 [குறிப்பு: 'தவ்கீஃபிய்யாஹ்' என்றால் குர்ஆன் மற்றும் ஸுன்னாஹ்வின் ஆதாரங்களை மீறிச் செல்லாமல் இருப்பதாகும்].  

ஆக, இப்பாடமானது "தவ்கீஃபிய்யான பாடம்" ஆகும். இதிலே அல்லாஹ்வின் (பின்வரும்) கூற்றை அஹ்லுஸ் ஸுன்னாஹ் வல் ஜமாஅத்தினர் பின்பற்றுகின்றனர்.

اتَّبِعُواْ مَا أُنزِلَ إِلَيْكُم مِّن رَّبِّكُمْ وَلَا تَتَّبِعُواْ مِن دُونِهِ أَوْلِيَاء
(மனிதர்களே!) உங்களுக்காக உங்கள் இறைவன் அருளியதையே பின்பற்றுங்கள். அவனையன்றி (மற்றெவரையும் உங்களுக்குக்) பொறுப்பாளர்(களாக ஆக்கி, அவர்)களை நீங்கள் பின்பற்றாதீர்கள். [07: 03]

4. நான்காவது அடிப்படை: 

அல்லாஹ், (எந்தவொரு கோணத்திலும் குறை என்பது அறவே இல்லாத) முழுமையான பரிபூரணத்துவத்தைக் கொண்டுள்ளான் என்றும், மேலும் இந்த பரிபூரணத்துவத்திற்கு முரணான (அனைத்தையும்) விட்டு அவன் பரிசுத்தமானவன் என்றும், அஹ்லுஸ் ஸுன்னாஹ் வல் ஜமாஅத்தினர் நம்பிக்கை கொள்கின்றனர். 

(குறையேதும் இல்லாத) முழுமையான பரிபூரணத்துவத்தை அஹ்லுஸ் ஸுன்னாஹ் வல் ஜமாஅத்தினர் அல்லாஹ்விற்கு உறுதிப்படுத்துகின்றனர். எனவே, பரிபூரணத்துவத்தின் உச்சமென்பது அல்லாஹ்வுக்கு இருக்கின்றது. மேலும் இதற்கு (இந்த பரிபூரணத்துவத்துடன்) முரண்படுபவை, நிச்சயமாக அஹ்லுஸ் ஸுன்னாஹ்விடத்தில் மறுக்கப்பட்டதாக இருக்கின்றது. அதாவது, அஹ்லுஸ் ஸுன்னாஹ் வல் ஜமாஅத்தினர் இந்த உறுதிப்படுத்துதலுக்கு மறுபக்கமாக, இரு விடயங்களை விட்டும் அல்லாஹ்வைப் பரிசுத்தப்படுத்துகின்றனர்.

முதலாவதாக, அவனது பரிபூரணத்துவத்திற்கு முரணான ஒவ்வொரு குறையை விட்டும் (அவனை பரிசுத்தப்படுத்துகின்றனர்). அல்லாஹ்வின் பரிபூரணத்துவத்திற்கு தகாத எந்தவொரு குறையும், நிச்சயமாக அவனை விட்டும் முற்றிலும் மறுக்கப்பட்டதாக இருக்கின்றது.

இரண்டாவதாக, அல்லாஹ்வின் பரிபூரணத்துவத்தில் அவனுக்கு யாரேனும் இணையாளராக இருப்பதை விட்டும் அவனைப் பரிசுத்தப்படுத்துகின்றனர். அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே முழுமையான பரிபூரணத்துவமென்பது உள்ளது. அவன் தனித்தவன்; அவனுக்கு இணையேதும் இல்லை. இந்த பரிபூரணத்துவத்தில் அல்லாஹ்வுடன் எந்த ஒருவரும் இணையாக மாட்டர்.

5. ஐந்தாவது அடிப்படை:

எந்த ஒன்றைப் பற்றி உறுதிப்படுத்துதல் அல்லது மறுத்தல் என்பது (குர்ஆன், ஸுன்னாஹ்வில்) வரவில்லையோ, அதைப் பற்றி திட்டமாக அவர்கள் மௌனம் காப்பர்.  

(அது விடயத்தில்) மறுத்தலோ, உறுதிப்படுத்துதலோ என்பது கிடையாது. இறைவன் தொடர்பான விடயங்களுடைய இந்த மகத்தான பாடத்தில் எந்த ஒன்றைக் (குறித்து) உறுதிப்படுத்துதல் அல்லது மறுத்தல் (குர்ஆன், ஸுன்னாஹ்வில்) வரவில்லையோ, அஹ்லுஸ் ஸுன்னாஹ் வல் ஜமாஅத்தினர் (அதுவிடயத்தில்) மௌனம் காத்து நின்று விடுவார்கள். அதாவது, (அது விடயத்தில்) உறுதிப்படுத்துதலும் கிடையாது, மறுத்தலும் கிடையாது. (அவற்றை) உறுதிப்படுத்தவும் மாட்டார்கள், மறுக்கவும் மாட்டார்கள்.

அதாவது, நாம் அல்லாஹ்வுக்கு கண்(கள்) இருப்பதை உறுதிப்படுத்துவோமா, இல்லையா என்று கேட்கப்பட்டால், நாம் என்ன கூறுவோம்? பதிலளியுங்கள் மக்களே! ஆம், நாம் உறுதிப்படுத்துவோம். சரி.

அல்லாஹ்விற்கு நாம் தூக்கத்தை மறுப்போமா, இல்லையா? ஆம். நாம் மறுப்போம். ஏனெனில், (கண் தொடர்பான) இந்த உறுதிப்படுத்துதல் (மார்க்க ஆதாரங்களில்) வந்துள்ளது, 
மேலும் (தூக்கம் தொடர்பான) இந்த மறுத்தல் (என்பதும் மார்க்க ஆதாரங்களில்) வந்துள்ளது. சரி.

அல்லாஹ்விற்கு 'காது' (இருப்பதை) நாம் உறுதிப்படுத்துவோமா? உறுதிப்படுத்த மாட்டோம். சரி, அல்லாஹ் காதினைக் கொண்டு வர்ணிக்கப்பெற மாட்டான் என்று கூறி, அல்லாஹ்விற்கு காது இல்லை என்று மறுப்போமா? உங்களுடைய கருத்தென்ன? அதை நாம் மறுத்துவிடுவோமா? ஹா? (அதை) உறுதிப்படுத்தவும் மாட்டோம், மறுக்கவும் மாட்டோம்.

எந்த ஒன்றைக் குறித்து உறுதிப்படுத்துதல் அல்லது மறுத்தல் (குர்ஆன் மற்றும் ஸுன்னாஹ்வின் ஆதாரங்களில்) வரவில்லையோ அவற்றில் ஈடுபடுவதற்கு, நமக்கு எந்தவொரு தேவையும் இல்லை. அதே நேரத்தில், அவனது பரிபூரணத்துவத்திற்கும், அவனது தேவைகளற்று இருக்கும் தன்மைக்கும் முரணான ஒவ்வொரு விடயமும் அவனுக்கு மறுக்கப்பட்டதாகும் என்றும் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம்.

(இந்த பண்பைப் பற்றி) பேசக்கூடியவரே! நீங்கள் குறிப்பிடும் இந்த பண்பை பொருத்தமட்டில், அது (அல்லாஹ்விற்கு) இருக்கின்றது என்பதற்கான எந்தவொரு ஆதாரத்தையும் நான் அறியமாட்டேன், மேலும் அது இல்லை என்பதற்கான எந்தவொரு ஆதாரத்தையும் நான் அறியமாட்டேன். எனவே (இது விடயத்தில் நம்மீது) எது கடமை? உறுதிப்படுத்துதல், மறுத்தல் என எந்தவொன்றையும் கொண்டு (இதில்) ஈடுபடாமல், (குர்ஆன் மற்றும் ஸுன்னாஹ்வில் வந்திருப்பவற்றுடன்) நின்று கொள்வதே இவ்விடயத்தில் கடமையாகும். 

6. ஆறாவது அடிப்படை: 

ஒரு நலவுடைய தேவையின் பொழுது, நல்ல அல்லது கெட்டதல்லாத சொல்லைப் பயன்படுத்தி அல்லாஹ்வைப் பற்றி அறிவிப்பது என்பது, அவர்களிடத்தில் (அஹ்லுஸ் ஸுன்னாஹ் வல் ஜமாஅத்தினரிடத்தில்) அனுமதிக்கப்பட்டதாகும்.

அதாவது, (பயன்படுத்தப்படும் சொல்) குறைந்த பட்சம் கெட்டதல்லாத சொல்லாக இருத்தல் வேண்டும். இதன் காரணமாகவே, அஹ்லுஸ் ஸுன்னாஹ் வல் ஜமாஅத்தினர் அல்லாஹ்வைப் பற்றி "அவன் படைப்பினங்களை விட்டும் தனியாக இருக்கின்றான்" (என்று) அறிவிப்பதன் மீது பயணித்துள்ளனர். அவ்வாறு இல்லையா?

நீங்கள் குர்ஆனில் தேடிப்பார்த்தால் இந்த வார்த்தையைக் கண்டு கொள்ளமாட்டீர்கள். என்றாலும் இது ஒரு நலவு அவசியமாக்கிய சொல்லாகும். மேலும் இது (இவ்வார்த்தையானது) தன்னகத்தே உண்மையான, சரியான பொருளை (உடையதாகும்). அதில் எவ்வித பிரச்சனையும் இல்லை.  

அஹ்லுஸ் ஸுன்னாஹ் வல் ஜமாஅத்தினரின் சத்திய மத்ஹபானது அவர்களுடன் முரண்படும் ஹுலுலிய்யா, இத்திஹாதிய்யா ஆகிய மதாஹிபுகளை விட்டும் இதைக் கொண்டு தனித்து விளங்குகின்றது. எனவே, நலவின் தேவை எதனை அவசியமாக்கியது? அதனைக் (அந்த வார்த்தையைக்) குறிப்பிடுவதை (அவசியமாக்கியது), மேலும் அதனால் எந்தவொரு தீங்கும் ஏற்பட போவதில்லை.

எனவே, ஒரு நலவுடைய தேவை அதை அவசியமாக்கும் பொழுது, நல்ல அல்லது கெட்டதல்லாத சொல்லைக் கொண்டு அஹ்லுஸ் ஸுன்னாஹ் வல் ஜமாஅத்தினர் அல்லாஹ்வைப் பற்றி அறிவிக்கக் கூடும்.

(அவ்வாறு செய்வது) அவர்களிடத்தில் சத்தியத்தை தெளிவுபடுத்துவதாக அல்லது அசத்தியத்திற்கு ஒரு மறுப்பாக அமைவதற்கு வழிவகுக்கும்.

7. ஏழாவது அடிப்படை:

அல்லாஹ்வுடைய பண்புகள் ஒரு கண்ணோட்டத்தில் அறியப்பட்டவையாகவும், மற்றொரு கண்ணோட்டத்தில் அறியப்படாதவையாகவும் இருக்கின்றது.

மொழி ரீதியான அசல் பொருளின் கண்ணோட்டத்தில், (அவை) அறியப்பட்டவையாக உள்ளன. இது எந்தவொரு சந்தேகமுமற்ற உறுதியான விடயமாகும். ஏன்? ஏனெனில், இப்பண்புகள் விளங்கிக் கொள்ளப்படுவதற்காகவும், அறிந்து கொள்ளப்படுவதற்காகவுமே தெளிவான அரபி மொழியில் அல்லாஹ்வுடைய வேதத்திலும், அவனது தூதர் ﷺ அவர்கள், ஸுன்னாஹ்விலும் வந்துள்ளன. இவ்வாறே அல்லாஹ்வின் வேதம் காட்டியுள்ளது.

அல்லாஹ் தனது வேதத்தை (அதில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றை) முழுமையாக சிந்திக்குமாறு நம்மை ஏவியுள்ளான். இதிலிருந்து எந்த ஒன்றிற்கும், குறிப்பாக்கியோ அல்லது வரையறுத்தோ (விதிவிலக்கு) கொடுக்கப்படவில்லை.

كِتٰبٌ اَنْزَلْنٰهُ اِلَيْكَ مُبٰرَكٌ لِّيَدَّبَّرُوْۤا اٰيٰتِهٖ وَلِيَتَذَكَّرَ اُولُوا الْاَلْبَابِ
(நபியே! குர் ஆனாகிய இது, அதன் நன்மைகள் பன்மடங்காக்கப்பட்டதாக இருக்க) பாக்கியமிக்க வேதமாகும், இதனுடைய வசனங்களை அவர்கள் சிந்திப்பதற்காகவும், (இதனை கொண்டு) அறிவுடையோர் நல்லுபதேசம் பெறுவதற்காகவும் நாம் இதை உம்மீது இறக்கிவைத்தோம். (அல்குர்ஆன் : 38:29).

ஆகவே, அல்லாஹ்வின் வேதம் முழுவதும் விளங்கிக்கொள்வதற்கும், அதன் பொருளை  புரிந்துகொள்வதற்கும் இயலுமானவற்றிலிருந்து உள்ளதாகும். 

எனவே, அல்லாஹ்வின் பண்புகள் மொழி ரீதியான அசல் பொருளின் கண்ணோட்டத்தில் அறியப்பட்டவையாக உள்ளன. ஆனால், அவை மற்றொரு கண்ணோட்டத்தில் அறியப்படாதவையாக உள்ளன. 

அது, அவை எவ்வாறு (அல்லாஹ்வுக்கு) இருக்கின்றன என்பதாகும். அது (அவற்றினுடைய) உண்மைத்தன்மை மற்றும் யதார்த்தத்தன்மையாகும். (அதனை அல்லாஹ் மட்டுமே அறிவான்).

இதன் காரணமாகவே, உங்களுக்கு நான் முன்னர் குறிப்பிட்ட அடிப்படையை அஹ்லுஸ் ஸுன்னாஹ் வல் ஜமாஅத்தினரின் அறிஞர்கள் ஒரு விதியாக வகுத்துள்ளனர். அது, அஹ்லுஸ் ஸுன்னாஹ் வல் ஜமாஅத்தினரிடத்தில் அல்லாஹ்வுடைய பண்புகளை உறுதிப்படுத்துவதென்பது, (அப்பண்புகள் அவனுக்கு உண்மையாகவே) இருக்கின்றது என்று உறுதிப்படுத்துவதாகும், (மாறாக அவனுக்கு) எவ்வாறு இருக்கின்றது என்று கற்பனை செய்து உறுதிப்படுத்துவதல்ல. 

8. எட்டாவது அடிப்படை: 

(அல்லாஹ்வுடைய) பண்புகளின் பாடத்தில் நான்கு ஆபத்தான விடயங்களை விட்டும் எச்சரிக்கையாக இருக்கின்றனர். 
அவை: தஃதீல், தஹ்ரீஃப், தக்யீஃப் மற்றும் தம்ஸீல் ஆகும்.

'தஃதீல்' என்றால் 'மறுத்தல்'. (இங்கு அதைக்கொண்டு நாடப்படுவது) அல்லாஹ்விடமிருந்து (அவனது) பண்பை முற்றிலுமாக மறுப்பது,(உதாரணத்திற்கு ஏதேனுமொரு பண்பினை குறிப்பிட்டு) அல்லாஹ்வுக்கு இந்த பண்பு 
கிடையாது என்று கூறுவதாகும்.

ஒரு மனிதன் அல்லாஹ்வின் பண்பை வெளிப்படையாக மறுக்க முனைவதென்பது, அல்லாஹ்வின் மீதும், அவனது வஹீ (என்னும் இறைச்செய்திக்கும்) மீதான துணிச்சல் ஆகும். இது ஒரு வெறுக்கத்தக்க மிகப்பெரும் துணிச்சலாகும்.

மார்க்க ஆதாரங்களின் (ஒன்றான) 'ஆஹாது' என்ற வகையில்  உறுதியானவற்றிலேயே தவிர (மற்றவற்றில்) இது (இவ்வாறு வெளிப்படையாக மறுப்பது) எந்த ஒரு முஸ்லிமிடமிருந்தும் வெளிப்படவில்லை.

 [குறிப்பு: அறிவிப்பாளர்களின் எண்ணிக்கையைக் கவனித்து ஹதீஸ்கள் முதவாதிர், ஆஹாத் என இரண்டு வகையாகப் பிரிக்கப்படும். 

அறிவிப்பாளர் வரிசையில் ஒவ்வொரு தலைமுறையிலும், ஒரு பெரிய எண்ணிக்கையிலான கூட்டத்தார் மற்றொரு கூட்டத்தாரிடம் இருந்து - அவர்கள் அனைவரும் பொய்யான ஒரு விடயத்தில் ஒத்துப்போவதற்கு சாத்தியமற்ற நிலையில் - அறிவிக்கப்பட்ட ஹதீஸ்களுக்கு முதவாதிர் என கூறப்படும். 

முதவாதிரான ஹதீஸ்களின் நிபந்தனைகளை பூர்த்தி செய்யாத அனைத்து ஹதீஸ்களும் ஆஹாத் வகையை சார்ந்ததாகும்]. 

இரண்டாவது விடயம்: அவர்கள் (அல்லாஹ்வின் பண்புகளை) தஹ்ரீஃப் செய்வதை (திரிப்பதை) விட்டும் எச்சரிக்கையாக இருப்பார்கள்.

இதையே (தஹ்ரீஃபையே) பிற்காலத்தில் வந்த (அறிஞர்கள்) 'தஃவீல்' என்று அழைப்பதன் மீது புழங்கியுள்ளனர். எனவே, 'தஹ்ரீப்ஃ' என்பது பிற்காலத்தில் வந்தவர்களிடத்தில் இருக்கும் 'தஃவீல்' என்பதன் பொருளை உடையதாகும்.

மேலும் தஹ்ரீஃபுடைய முடிவானது 'தஃதீல்' என்பதே நிதர்சனம். 'தஹ்ரீப்ஃ' என்பது 'தஃதீலுக்கு' இட்டுச் செல்லக்கூடியது. ஏனென்றால், தெளிவான தஃதீல் என்பது நான் (முன்னர்) உங்களுக்கு குறிப்பிட்டது போன்று, ஒரு குறிப்பிட்ட வரையரையிலேயே தவிர (அதாவது 'ஆஹாது' வகை ஆதாரங்களில் செய்வதைப் போன்றே தவிர) வெளிப்படையாக மறுப்பதற்கு அவர்கள் துணிச்சல் கொள்ளவில்லை.

ஆனால் 'நேர்முகமாக இல்லாத தஃதீல்' என ஒன்றுள்ளது. (இதில் ஈடுபடும்) இவர்கள் அல்லாஹ் தனக்கு உறுதிப்படுத்தியவற்றின் யதார்த்தத்தை  மறுத்துவிட்டு, வேறொன்றை உறுதிப்படுத்துகின்றனர். இது 'தஃவீல்' எனும் அடிப்படையின் மூலமாக (செய்கின்றனர்).  

எனவே, இவர்கள் நிதர்சனத்தில் அல்லாஹ்வுக்கு 'கை' இல்லையென்று கூறும் பொழுது, (குர்ஆன் மற்றும் ஸுன்னாஹ்வின் ஆதாரங்களில் அவனுக்கு) 'கை' இருப்பதை உறுதிப்படுத்தி வந்திருப்பவற்றைக் கொண்டு நாடப்படுவதெல்லாம் 'ஆற்றல்' மட்டும் தான் (என்று கூறுகின்றனர்).

நிதர்சனம் என்னவென்றால், எதனை அல்லாஹ் தனக்கு உறுதிபடுத்தினானோ அதை இவர்கள் மறுத்து விட்டார்கள், உறுதிப்படுத்தவில்லை. அவ்வாறு இல்லையா?! அல்லாஹ் தனக்கு உறுதிபடுத்திய (கை என்ற) இந்த பண்பை இவர்கள் உறுதிப்படுத்தவில்லை.

எதை மட்டும் தான் அவர்கள் உறுதிப்படுத்தினார்கள்?! (அல்லாஹ் உறுதிபடுத்தாத) வேறு ஒன்றைதான். எனவே, அவர்களின் இறுதி முடிவானது 'தஃதீல்' (எனப்படும் மறுத்த)லில் விழுந்ததாகும். ஆனால் நேர்முகமாக இல்லாது மறைமுகமாக (அதில் விழுந்து விட்டார்கள்).

எனவே, 'தஃதீல்' மற்றும் 'தஹ்ரீப்ஃ' ஆகிய இரண்டுக்கும் மத்தியில் உள்ள தொடர்பானது, ஒரு இலக்கிற்கு (அதற்கு இட்டுச் செல்லும்) வழியுடன் இருக்கும் தொடர்பாகும். எனவே, 'தஹ்ரீப்ஃ' என்பது 'தஃதீலுக்கு' இட்டுச் செல்லக்கூடியது.

'தக்யீஃப்' என்றால் - நாம் அறிந்திருப்பது போல - அல்லாஹ்வின் பண்புகளுக்கு இன்னின்ன விதம் உண்டு என்று (நாமாக கற்பனை செய்து) நம்புவது அல்லது அதை (நாவால்) விவரிப்பதாகும்.

மேலும் 'தம்ஸீல்' என்றால் படைப்பாளன் மற்றும் படைப்புகளின் பண்புகளுக்கு மத்தியில் ஒப்புமை உள்ளதாக நம்புவதாகும்.

9. ஒன்பதாவது அடிப்படை: 

அவர்கள் (அஹ்லுஸ் ஸுன்னாஹ் வல் ஜமாஅத்தினர்) அல்லாஹ்வுடைய பெயர்கள் யாவும் மிகவும் அழகானவை என்று நம்பிக்கை கொள்கின்றனர்.

அவை 'அஃலாம்' மற்றும் 'அவ்ஸாஃப்'. அவர்கள் அல்லாஹ்வுடைய பெயர்கள் யாவும் மிகவும் அழகானவை என்று நம்பிக்கை கொள்கின்றனர்.

அவையனைத்தும் மிகவும் அழகானவை. அதாவது, அழகில் அவை உச்சத்தை அடைந்து விட்டன. அழகிலிருந்து எது மிகவும் உயர்ந்ததாக இருக்குமோ, அது அல்லாஹ்வுடைய பெயர்களுக்கு இருக்கின்றது. மேலும் இந்த அழகானது, அதன் மீளுமிடம்  மூன்று விடயங்களின் பக்கம் இருக்கின்றது.

முதலாவது: அவை பெயர்சூட்டப்பட்டவற்றில் மிகவும் மகத்தானவனான அல்லாஹ்வைக் குறிக்கும் பெயர்களாக இருப்பது.

இரண்டாவது: (அவை) அர்த்தங்களிலேயே மிகவும் அழகான மற்றும் மிகவும் மகத்தானவற்றை உள்ளடக்கி இருப்பது. 

மூன்றாவது: அவை ஒவ்வொரு குறையையும் விட்டு, மேலும் அல்லாஹ்வுடைய பரிபூரணத்துவத்திற்கு தகாதவற்றையும் விட்டு பரிசுத்தமானதாக இருப்பது.

ஆக, அல்லாஹ்வுடைய பெயர்கள் யாவும் மிகவும் அழகானவை. அவை 'அஃலாம்' மற்றும் 'அவ்ஸாஃப்' ஆகும்.

(அவை) 'அஃலாம்', அதாவது அல்லாஹ்வின் உள்ளமையைக் குறிக்கின்றன. மேலும் (அவை) 'அவ்ஸாஃப்', அதாவது அப்பெயர்களிலிருந்துள்ள ஒவ்வொரு பெயரும் அல்லாஹ்விற்கென ஒரு பண்பினை கொண்டுள்ளது.

முதலாவது கண்ணோட்டத்தில், அவை ஒரே விடயத்தைக் காட்டுபவை (அதாவது, அனைத்து பெயர்களும் அல்லாஹ்வின் உள்ளமையையே காட்டுகின்றன), மேலும் இரண்டாவது கண்ணோட்டத்தில் (அவை) வெவ்வேறு விடயத்தைக் காட்டுபவை (அதாவது, அவை ஒவ்வொன்றும் அல்லாஹ்வின் வெவ்வேறு பண்புகளைக் காட்டுகின்றன).

10. பத்தாவது அடிப்படை: 

அவர்களிடத்தில் (அல்லாஹ்வின்) பண்புகளுடைய ஆதாரங்களானது, மனதில் முதலாவதாகத் தோன்றக்கூடிய, அவற்றின் வெளிப்படையான (பொருளின்) மீது எடுத்துக்கொள்ளப்படும். அதை விட்டும் (மாற்று விளக்கங்களின் பக்கம்) திருப்பப்படமாட்டாது. 

மேலும், இது அனைத்து ஷரீஅத்தின் விடயங்களிலும் அஹ்லுஸ் ஸுன்னாஹ் வல் ஜமாஅத்தினரின் கோட்பாடாகும். அவர்கள் மார்க்க ஆதாரங்களை அவற்றின் வெளிப்படையான (பொருளின்) மீதே எடுத்துக் கொள்கிறார்கள். ஆதாரம் ஏதேனும் இருந்தாலே தவிர, இந்த வெளிப்படையான (பொருளை) விட்டும் வெளியேறமாட்டார்கள். 

11. பதினோராவது மற்றும் கடைசி அடிப்படை: 

இந்தப் பாடத்தில் ஸலஃபுடைய மன்ஹஜைப் பற்றி பிடிப்பதென்பது கட்டாயமாகும் என்று அவர்கள் (அஹ்லுஸ் ஸுன்னாஹ் வல் ஜமாஅத்தினர்) நம்பிக்கை கொள்கின்றனர். இதில் (யாருக்கும்) எந்த சுயதேர்வும் கிடையாது.

ஏனெனில், அதுவே மிகவும் பாதுகாப்பான, மிகவும் அறிவுப்பூர்வமான, மிக்க ஞானமிக்க, மேலும் மிகவும் நேரானவற்றிற்கு வழிகாட்டக் கூடியதுமாகும்.

இதைப் பற்றி பேசுவதற்கு அதிகமான விளக்கங்கள் தேவைப்படுகிறது. ஆனால் நமக்கு இது (அதற்கான) இடம் கிடையாது. எது எவ்வாறு இருப்பினும், இவை அல்லாஹ்வின் பெயர்கள் மற்றும் பண்புகளின் விடயத்தில் அஹ்லுஸ் ஸுன்னாஹ் வல் ஜமாஅத்தினருடைய நம்பிக்கையின் புரிதலை பொதுவான விதத்தில் உங்களுக்கு நெருக்கமாக்கி வைக்கும் அடிப்படைகளாகும். அல்லாஹ்வே மிக அறிந்தவன். ஆம்.

குறிப்பு: அடிப்படைகளிளும், விரிவுரைகளிலிலும் இருந்து சில விடயங்கள் சுருக்கமும், எளிதும் கருதி நீக்கப்பட்டுள்ளது.

- மக்தபாஹ் அஸ்ஸுன்னாஹ் வ அஸ்ஸலஃபிய்யாஹ், மேலப்பாளையம்.

أحدث أقدم