நோயாளி மற்றும் இறந்தவரின் உறவினரிடம் கூற வேண்டியவை!

 -மௌலவி M.J. முஹம்மது லாஃபிர் மதனி (அபூ அரீஜ்)

உம்முஸலமா (ரலி) அறிவிக்கின்றார்கள்:

‘நோயாளியிடமோ அல்லது இறந்தவரிடமோ நீங்கள் இருக்க நேரிட்டால், நல்லதைக் கூறுங்கள். நீங்கள் சொல்லக் கூடியவற்றிற்கு வானவர்கள் ‘ஆமின்’ கூறுகிறார்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (என் கணவர்) அபூஸலமா (ரலி) இறந்தபோது, நான் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ”இறைத்தூதர் அவர்களே! அபூஸலமா இறந்து விட்டார்கள்” என்று கூறினேன். ”அல்லாஹுமஹ்ஃபிர்லீ வலஹு, வஅஹ்கிப்னீ மின்ஹு உக்பன் ஹஸனதன் (இறைவனே! என்னையும், அவரையும் மன்னிப்பாயாக, அவரை விட சிறந்த துணையை எனக்கு ஏற்படுத்துவாயாக)’ என்று நீ கூறு! என நபி(ஸல்) கூறினார்கள். அதை நான் கூறினேன். அவரை விட சிறந்தவர்களான முஹம்மத் (ஸல்) அவர்களை எனக்கு அல்லாஹ் துணையாக்கினான். (முஸ்லிம்)

உம்முஸலமா (ரலி) அறிவிக்கின்றார்கள்:

”ஒரு மனிதனுக்கு சோதனை ஏற்பட்டதும் ”இன்னாலில்லாஹி வஇன்னா இலய்ஹி ராஜிஊன். அல்லாஹும்ம அஜிர்னீ ஃபீமுஸீபத்தீ வக்லிஃப்லீ கய்ரன் மின்ஹா (நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்குரியவர்கள். நாம் அவன் பக்கமே மீளுபவர்களாக உள்ளோம். இறைவனே! என் சோதனையில் எனக்கு கூலியைத் தருவாயாக! அதைவிட சிறந்ததை எனக்குப் பகரமாக்குவாயாக) என்று கூறினால், அவருக்கு அல்லாஹ் அவரின் சோதனைக்கு கூலியைத் தந்து, அதைவிட சிறந்ததை அவருக்கு பகரமாக்காமல் இருப்பதில்லை என்று நபி(ஸல்) கூறினார்கள். (என் கணவர்) அபூஸலமா(ரலி) இறந்தபோது நபி(ஸல்) அவர்கள் எனக்கு கட்டளையிட்டபடிக் கூறினேன். அவரையும் விட சிறந்த நபி(ஸல்) அவர்களையே எனக்கு கணவராக ஆக்கினான். (முஸ்லிம்)

அபூமூஸா(ரலி)அறிவிக்கின்றார்கள்:

”ஓர் அடியானின் குழந்தை இறந்துவிட்டால், வானவர்களிடம் அல்லாஹ், ”என் அடியானின் குழந்தை (உயிரை) கைப்பற்றினீர்களா?” என்று கேட்பான். ”ஆம்” என அவர்கள் கூறுவார்கள். ”என் அடியானின் இதயத்தைக் கைப்பற்றினீர்களா? என்று அல்லாஹ் கேட்பான். ”ஆம்” என அவர்கள் கூறுவார்கள். ”என் அடியான் என்ன கூறினான்? என்று கேட்பான். ”உன்னைப் புகழ்ந்தான். ”இன்னாலில்லாஹி வஇன்னா இலய்ஹி ராஜிஊன் எனக் கூறினான்” என்று வானவர்கள் கூறுவார்கள். ”சொர்க்கத்தில் என் அடியானுக்கு வீடு கட்டுங்கள். அதற்கு ”புகழுக்குரிய வீடு” என்றறு பெயரிடுங்கள்!” என்று அல்லாஹ் கூறுவான். (திர்மிதீ)

அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்:

”ஓர் இறை நம்பிக்கை கொண்ட அடியானின் குழந்தையை இவ்வுலகில் நான் கைப்பற்றி, அவன் அதை பொறுமையாக எடுத்துக் கொண்டால், அவனுக்குக் கூலியாக சொர்க்கத்தைத் தவிர வேறில்லை’ என்று அல்லாஹ் கூறியதாக நபி(ஸல்) கூறினார்கள். (புகாரி)

உஸாமா இப்னு ஸைத் (ரலி) அறிவிக்கின்றார்கள்:

‘நபி(ஸல்) அவர்களின் பெண் மக்களில் ஒருவர் (ஜைனப் (ரலி)) தன் மகன் இறந்து விட்டதாக நபி(ஸல்) அவர்களுக்குச் செய்தி அனுப்பினார். அப்போது வந்தவரிடம் நபி(ஸல்) அவர்கள் ”என் மகளிடம் செல். நிச்சயமாக அல்லாஹ்வுக்கு எடுத்துக் கொள்ளவும், கொடுக்கவும் உரிமை உண்டு என்று அவரிடம் கூறு! அல்லாஹ்விடம் உள்ள ஒவ்வொன்றிற்கும் ஒரு குறிப்பிட்ட தவணை உண்டு. அவர் (என் மகள்) பொறுமையாக இருந்து, நன்மையை நாடும்படி அவருக்கு கட்டளையிடு” என்று கூறினார்கள். (இது நீண்ட ஹதீஸின் ஒரு பகுதியாகும்). (புகாரி, முஸ்லிம்)

أحدث أقدم