குர்’ஆன் நபி (ஸல்) அவர்களைக் கண்ணியப்படுத்துகிறது

அல்லாஹ் (சுபஹ்) தன்னுடைய தூதர்களை (அலை)பற்றி மிகவும் அற்புதமான முறையில் பேசுகிறான். இருப்பினும், அல்லாஹ் (சுபஹ்) நம் அருமை நபி (ஸல்) அவர்கள் பற்றி ஒரு குறிப்பிட்ட முறையில் பேசுகிறான். அவர்களுடைய பெயர் நான்கு முறை தான் இடம்பெற்றிருந்தாலும், அவர்கள் மற்ற அனைவரையும் விட வித்தியாசமான முறையில் குறிப்பிடப்படுகிறார்கள். அல்லாஹ் (சுபஹ்) நபி (ஸல்) அவர்களைப் பற்றி எப்படி பேசுகிறான்?

அகிலத்தாருக்கெல்லாம் அருட்கொடை

முதலில் நம் மனதில் வரக்கூடியது, அடிக்கடி கூறப்படுமொரு குர்’ஆன் வசனம் தான் (நபியே!) “நாம் உம்மை அகிலத்தாருக்கு எல்லாம் ரஹ்மத்தாக – ஓர் அருட் கொடையாகவேயன்றி அனுப்பவில்லை..” [அல் குர்’ஆன் 21:107]. வேறு எந்த மனிதருக்கும் கொடுக்கப்படாத ஒரு உயர்ந்த புகழ்ச்சியில் இது ஒன்று. அல்லாஹ் தன்னை ‘அர்ரஹ்மான் – மிகவும் கருணையுள்ளவன்’ என்று அழைக்கிறான், தனக்கு மிகவும் பிரியமான அடியாரையும் ‘அகிலத்தாருக்கெல்லாம் அருட்கொடை (கருணை)’ என்று அழைக்கிறான். இது நபி (ஸல்) உலகிற்கு என்ன கொண்டு வந்தார்கள் – கருணை – என்பதையும், அவருடைய பணி மறுமையில் எதற்கு வாக்களிக்கிறது – மீண்டும் கருணை – என்பதையும் சுருக்கமாக கூறுகிறது.

மிக உயர்ந்த பண்பு

நபி (ஸல்) அவர்கள் பற்றி அல்லாஹ் கூறும் இன்னொரு வியக்கும்படியான புகழ்ச்சி குர்’ஆனுடைய ஆரம்ப கால சூராக்களில் ஒன்றில் வருகிறது. மக்கள் அவர்களை பைத்தியம் என்று அழைத்து, அவருடைய நோக்கங்களையும், அறிவாற்றலையும் கேள்விக்கிடமாக்கியபோது, அல்லாஹ் அவர்களுக்கு ஆறுதல் அளித்தான் . மேலும், (நபியே) நிச்சயமாக நீர் மிக உயர்ந்த மகத்தான நற்குணம் உடையவராக இருக்கின்றீர். [அல் குர்’ஆன் 68:4]— உலகில் வாழ்ந்தவர்களில் மிகவும் சிறந்த மனிதராக அவர் விதிக்கப்பட்டிருக்கிறார் என்பதை பிரகடனப்படுத்தும் ஒரு மிகவும் அழுத்தமான வசனம் இது.

அவர்களுடைய குணம் மிகவும் உயர்ந்த தரத்தில் இருந்தது – மிகவும் நன்மையாளர், மிகவும் பொறுமையாளர், மிகவும் அன்புடையவர், மிகவும் பண்புடையவர், மனிதர்களிலேயே மிகவும் கருணையாளர், தன் மனைவிகளிட்த்தில் சிறந்தவர், நண்பர்களிடத்தில் சிறந்தவர், குடும்பத்தாரிடம் சிறந்தவர், நேர்மையாளர், நம்பிக்கையாளர், இன்னும் என்னென்ன நற்பண்புகள் உண்டோ அத்தனையும்! அவருடைய எதிரிகள் கூட அதற்கு சாட்சி பகர்ந்தார்கள். அவர்களுடைய குணநலன் எத்தனை உயர்ந்த்தாக இருந்தது என்றால் அல்லாஹ்வே அவருடைய உயர்வைக் குறிப்பிட்டுள்ளான்!

நபி (ஸல்) அவர்கள் மேலே பார்த்தார்கள், ஒரு வசனம் அருளப்பட்டது

நபி (ஸல்) அவர்கள் முதன் முதலில் மதினாவுக்கு இடம்பெயர்ந்து சென்ற போது, கிப்லா மக்காவை நோக்கி இல்லாமல் ஜெருஸலத்தை நோக்கியே இருந்தது. அவர்கள் தொழும்போது மக்காவின் திசையில் முதுகைக் காட்டிக் கொண்டு தொழுவதை மிகவும் சிரமமாக நபி (ஸல்) அவர்கள் உணர்ந்தார்கள். ஒரு நாள், அவர்கள் தொழுகையில் வானை நோக்கினார்கள். அவர்கள் துவாவோ, கோரிக்கையோ எதுவும் செய்யவில்லை, மேலே பார்த்தார்கள் அவ்வளவு தான். அவர்களுடைய உள்ளம் நாடியதை அல்லாஹ் அருளியது மட்டுமல்லாமல், அதை குர்’ஆனிலும் குறிப்பிட்டுள்ளான். அல்லாஹ் தன் தூதரின் மேல் தனக்குள்ள அன்பை வெளிப்படையாக குர்’ஆனில் பிரகடனப்படுத்துகிறான்.

(நபியே!) நாம் உம் முகம் அடிக்கடி வானத்தை நோக்கக் காண்கிறோம்; எனவே நீர் விரும்பும் கிப்லாவின் பக்கம் உம்மைத் திடமாக திருப்பி விடுகிறோம்; ஆகவே நீர் இப்பொழுது (மக்காவின்) மஸ்ஜிதுல் ஹராம் பக்கம் உம் முகத்தைத் திருப்பிக் கொள்ளும். (முஸ்லிம்களே!) இன்னும் நீங்கள் எங்கிருந்தாலும் (தொழுகையின் போது) உங்கள் முகங்களை அந்த (கிப்லாவின்) பக்கமே திருப்பிக் கொள்ளுங்கள்; நிச்சயமாக எவர்கள் வேதம் கொடுக்கப்பட்டிருக்கின்றார்களோ அவர்கள், இது அவர்களுடைய இறைவனிடமிருந்து வந்த உண்மை என்பதை நிச்சயமாக அறிவார்கள்; அல்லாஹ் அவர்கள் செய்வது பற்றிப் பாராமுகமாக இல்லை. [அல் குர்’ஆன் 2:144]

அல்லாஹ் (சுபஹ்) அவர்களுக்கு ஆறுதல் அளிக்கிறான்

பல சந்தர்ப்பங்களில் நபி (ஸல்) அவர்கள் கவலையிலோ, துக்கத்திலோ இருக்கும்போது, அல்லது நெருங்கிய உறவினரின் மறைவால் பாதிக்கப்பட்டிருக்கும்போது, அல்லாஹ் அவர்களுக்கு ஆறுதல் அளிக்கக்கூடிய வசனங்களை அருளினான். சூரா துஹா, சூரா ஷர்ஹ், சூரா தாஹா, சூரா யூசுஃப், சூரா மர்யம் போன்றவைகள் நபியவர்களின் மனதிற்கு ஆறுதல் அளிப்பதற்காகவே அருளப்பட்டன. ஏழு வானுக்கு அப்பாலிருந்து இறங்கிய அல்லாஹ்வுடைய சொந்த வார்த்தைகளால் இதயம் ஆறுதல் பெறும் அளவிற்கு அத்தனை உயரிய கண்ணியத்துக்குரியவர்களாக அவர்கள் இருந்தார்கள்.

அல்லாஹ் நபியவர்களை பெயர் சொல்லி அழைக்கவில்லை

குர்’ஆனுடைய ஆச்சரியங்களில் ஒன்று, அல்லாஹ் (சுபஹ்), தாவூது, மூஸா, ஸக்கரியா (அலை) போன்ற நபிமார்களை பல முறை நேரடியாக அழைத்துள்ளது போல், நபி (ஸல்) அவர்களை ஒரு முறை கூட குர்’ஆனில் நேரடியாக, ‘யா முஹம்மது’ என்று அழைக்கவில்லை. மாறாக, அல்லாஹ் (சுபஹ்) “நபியாக இருப்பவரே”, “போர்வை போர்த்திக் கொண்டிருப்பவரே”, “போர்த்திக் கொண்டிருப்பவரே” போன்ற அன்பான வார்த்தைகளாலேயே அழைக்கிறான்.

அல்லாஹ் (சுபஹ்) நபி (ஸல்) அவர்களுடைய குடும்பத்தாரையும், அவர்களைப் பின்பற்றுபவர்களையும் பாதுகாக்கிறான்

அல்லாஹ் (சுபஹ்) பல முறை குர்’ஆனில் நபி (ஸல்) அவர்களை பொய்யான குற்றச்சாட்டுகளிலிருந்து காத்துள்ளான். அது மட்டுமல்ல, அவன் நபியவர்களின் குடும்பத்தினரையும், நண்பர்களையும் கூட குறிப்பிட்டு அவர்களையும் பாதுகாத்துள்ளான். நபி (ஸல்) அவர்களுடைய மனைவிமார்களை நோக்கி, “விசுவாசிகளின் தாய்மார்கள்” என்ற கௌரவமான அடைமொழியுடன் பேசும் வசனங்கள் உள்ளன. அதே போல, அவர்களுடைய வளர்ப்பு மகன் ‘ஸைத்’ (ரலி) அவர்களின் பெயரும் குர்’ஆனில் உள்ளது. அன்னை ஆயிஷா (ரலி) அவர்களைப் பற்றிய அவதூறு சம்பவத்தின் போது, அல்லாஹ் (சுபஹ்) அவர்கள் குற்றமற்றவர்கள் என்பதை சூரா நூரில் 20 வசனங்களுக்கு மேலாக அருளி அவர்களுடைய கண்ணியத்தைக் காப்பாற்றினான்.
அல்லாஹ் (சுபஹ்) எப்படி தன்னுடைய தூதரும், நம் அருமை நபியுமாகிய முஹம்மது (ஸல்) அவர்களை பாதுகாத்துள்ளான் என்பதற்கான சில உதாரணங்களே இவை. நபி (ஸல்) அவர்கள், நமக்கு வழிகாட்டும் ஒளியாக இருந்தார்கள், மேலும், அவர்களைப் பற்றி எத்தனை அதிகமாக நாம் அறிகிறோமோ, அத்தனை அதிகம் அவர்களை நேசிக்கத் தொடங்குவோம். நாம் குர்’ஆனையும், நபி (ஸல்) அவர்களின் வாழ்வையும் பற்றி அறிந்து கொள்ள முனைவோம்.
أحدث أقدم