- அஷ்ஷய்க்: எம். ஜே.எம். ரிஸ்வான் (மதனி)
புகழ் அனைத்தும் அகிலங்களின் அதிபதி அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தானது. அவனது அருளும், சாந்தியும் நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும், அவர்களின் குடும்பத்தவர் அனைவர் மீதும் நிலையாக உண்டாகட்டுமாக!
மதிப்புக்குரிய இஸ்லாமிய சகோதரர்களே! ‘சுபஹ்’ குனூத் ஓதப்பட வேண்டுமா? வேண்டாமா? என்ற கேள்விக்கு அது நபிவழிக்கு அப்பாற்பட்ட ஒரு நடைமுறைதான் என்பதை இஸ்லாமிய மூலாதாரங்களை அடிப்படையாகவும், தலைசிறந்த இமாம்களின் நூற்களின் தீர்ப்புக்களை ஆதாரமாகக் கொண்டும் ‘சுபஹ் குனூத் ஓர் ஆய்வு’ என்ற இத்தொடரில் விரிவானதோர் ஆய்வை சமர்ப்பித்துள்ளோம்.
இதனை சாதாரண பிரச்சினை என அலட்சியம் செய்யும் இஸ்லாமிய இயக்க காவலாளிகளும், நவீன அழைப்பாளர்களும் இதுபோன்ற மார்க்க அம்சங்களுக்கான சரியான தீர்வை முன்வைக்காது, தம்மை ஒதுக்கிக் கொள்வதால் சாதாரண இந்த விடயத்தில் மக்கள் மத்தியில் காணப்படும் முரண்பாட்டை நீக்க வேண்டிய அவசியத்தை உணரவில்லை என எண்ணத் தோன்றுகிறது.
முஸ்லிம் மக்கள் மத்தியில் பாரிய சர்ச்சைகளையும், வேற்றுமையையும் தோற்றுவித்துள்ள ‘சுபஹ் குனூத்’திற்கான சரியான தீர்வு இஸ்லாமிய அழைப்பாளர்களால் முன்வைக்கப்படுகின்ற போது அல்லாஹ்வின் அருளால் சமுதாய ஐக்கியம் பேணப்படுவதுடன், அதனால் தோன்றும் குழப்பங்களும் அகன்று, சமூக மறுமலர்ச்சியும் ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை.
பல நூறு வருடங்களுக்கு முன்னால் வாழ்ந்த இஸ்லாமிய அறிஞர்களால் இதுபோன்ற பிரச்சினைகளுக்கு ஆய்வின் அடிப்படையில் தரப்பட்டுள்ள தீர்வை சீர்திருத்தவாதிகள் கருத்தில் கொண்டால் அந்தப் பெருமக்களின் சமுதாய அக்கறையை மதிப்பிட்டுக் கொள்ளலாம்.
அந்த வகையில் இதுபோன்ற பிரச்சினைகள் நம்போன்றோருக்கு வேண்டுமானால் புதிதாகவும், சிறியதாகவும், சில்லறையாகவும் காட்சியளிக்கலாம். ஆனால் நபித்தோழர்கள், அவர்களின் வழிவந்த இமாம்கள் மத்தியில் பெரிதாகவே கணிக்கப்பட்டிருக்கிறது.
இது பற்றிய முழுவிபரங்களையும் ஹதீஸ் நூற்களிலும், இது தொடர்பான இமாம்களின் மறுப்புக்களில் இருந்தும் அறியலாம். அவர்களின் வழிமுறைகளைத் தழுவி நாமும் இந்த ஆய்வை முன்வைத்துள்ளோம். நடுநிலையுடன் அதனை அணுகும்படி இஸ்லாமிய சகோதரர்களை வேண்டிக் கொள்கிறோம். அல்லாஹ் அனைவருக்கும் அருள் செய்யப் போதுமானவன்.
அல்குர்ஆனையும், அஸ்ஸுன்னாவையும் ஆய்வு செய்து அதன் சட்டங்களை அகழ்ந்தெடுத்து தீர்வு சொல்வதே இமாம்களின் பணியாக இருந்துள்ளது என பிரச்சாரம் செய்யும் மத்ஹப் சார்ந்த மௌலவிகளால் அல்குர்ஆன், அஸ்ஸுன்னா வழி நின்று மார்க்கப் பிரச்சினைகளுக்கான தீர்வை முன்வைக்கும் திறமை இல்லாத காரணத்தாலும், அவற்றின் அடிப்படையில் முன்வைக்கப்படும் சரியான தீப்புக்களை ஏற்று, அமுல் செய்யும் மனோபக்குவம் இல்லாமையினாலும், தாம் படித்த ஓரிரு நூல்களை முன்னிலைப்படுத்தி வழங்கப்படும் தீர்ப்புக்கள் சரியானவையா? பிழையானவையா? என்ற எந்தவிதமான ஆய்வுமின்றி முன்வைப்பதாலும் தீர்ப்புக்கள் குழப்பமாகவும், குதர்க்கமாகவும் தரப்படுவதை அவதானிக்க முடிகிறது.
‘சுபஹ்குனூத்’ விஷயத்திலும் இவர்களின் நிலைப்பாடும் இதுவே. எனவேதான் அதன் உண்மை நிலை பற்றி நமது இத்தொடரில் ஆய்வு செய்ய இருக்கிறோம். நான் ‘ஷாபிஈ மத்ஹப்’ சார்ந்தவனாக இருப்பதால் அதைப்பற்றி நான் ஏன் அலட்டிக் கொள்ள வேண்டும்? எனது ஊரில் உள்ளவர்கள் எப்படி நடக்கிறார்களோ, எனது மௌலவிகள் என்ன போதித்தார்களோ அவ்வாறுதான் நானும் நடப்பேன் என்பது போன்ற அலட்சியமான சிந்தனைகளை விட்டுவிட்டு ‘சுபஹ்குனூத்’ பற்றி என்னதான் எடுத்தெழுதப்படுகின்றது என்பதைக் கொஞ்சம் சிந்தித்து, பின்னர் முடிவு செய்யும்படி உங்களிடம் வினயமாக வேண்டிக் கொள்கின்றோம்.
நவீன காலத்தில் மார்க்கத்தின் பெயரால் எழுந்துள்ள பல பிரச்சனைகள் ஒரு தலைப்பட்சமாக நோக்கப்படுவதால் இஸ்லாத்தின் தூய்மையான கருத்தை சில நேரம் நம்மை அறியாமலே நாம் புறம் தள்ளுகின்றோம். எனவே கருத்து யாரிடம் இருந்து வந்தாலும் நமக்கு முரணானது என்று பார்ப்பதை விடுத்து, அது இஸ்லாமிய மாக்கத்தின் தூய்மையைக் காப்பதாக இருந்தால் அதற்கு நான் துணை நிற்பேன் என்ற நல்லெண்ணத்துடன் வாழ்வதே ஒரு முஸ்லிமின் உயரிய பண்பாகும்.
மொழி வழக்கில் குனூத் :-
மொழி அடிப்படையில் ‘குனூத்’ என்ற சொல் வழிப்படுதல், நின்று வணங்குதல், இறையச்சம், தொழுகையில் -பேசாது- மௌனம்காத்தல், தொழுகை, பிரார்த்தனை போன்ற பல விரிவான பொருளைத் தரும் சொல்லாக அல்குர்ஆனிலும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பொன்மொழிகளிலும் ஆளப்பட்டிருப்பட்டிருப்பதை பின்வரும் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு விளங்கலாம்.
இந்த அடிப்படையில் அல்குர்ஆனில் إِنَّ إِبْرَاهِيمَ كَانَ أُمَّةً قَانِتًا لِلَّهِ النحل120 ‘நிச்சயமாக இப்ராஹீம் (அலை) அவர்கள் அல்லாஹ்வுக்கு வழிப்பட்ட சமுதாயமாகத் திகழ்ந்தார் என்றும்,
இரவெல்லாம் நின்று வணங்குபவனுக்கு (சமமாவானா?) என்றும் (39:9)
وَمَنْ يَقْنُتْ مِنْكُنَّ لِلَّهِ وَرَسُولِهِ وَتَعْمَلْ صَالِحًا الأحزاب31 (நபியின் மனைவியரே)! உங்களில் எவர் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் வழிப்படுகின்றார்களோ என்றும்.
43 ‘மர்யமே! உனது இரட்சகனுக்கு பணிந்து நடப்பாயாக! என்றும் وَقُومُوا لِلَّهِ قَانِتِينَ البقرة 238 (மௌனமாக) பணிந்தவர்களாக அல்லாஹ்வை நின்று வணங்குங்கள்’ என்றும் திருமறை குர்ஆனிலும்
أفضل الصلاة طول القنوت ‘தொழுகையில் சிறந்தது நீண்ட நிலைகளையுடைய தொழுகையாகும்’ (முஸ்லிம்) என்றும், مثل المجاهد في سبيل الله كمثل القانت الصائم ‘இறைபாதையில் போரிடும் போராளிக்கு உதாரணம் இரவில் தொழுது பகல் காலங்களில் நோன்பு நோற்று, நின்று வணங்குபவனுக்கும் உரிய உதாரணம் போன்றதாகும். (புகாரி) என்றும் இடம் பெறும் சொற்பிரயோகங்களை அவதானித்தால் ‘குனூத்’ என்ற வேர்ச்சொல்லில் இருந்து பிறந்த கிளைச்சொற்களில் பல பொருட்கள் ஆளப்பட்டிருப்பதை அறியலாம்.
(ஆதார நூல்: இமாம் சைலயீ (ரஹ்) அவர்களின் நஸபுர்ராயா. பாகம்: 02- பக்கம்: 132 -ஐ பார்க்கவும்). மேலதிக விளக்கங்களுக்கு பத்ஹுல்பாரி ஹதீஸ் இலக்கம் 1004ன் விளக்கம். ‘லிஸானுல் அரப். பாகம்: 02- பக்கம்: 73 ‘முக்தாறுஸ்ஸிஹாஹ் பாகம்: 1-பக்கம்: 230 ஆகிய நூல்களைப் பார்வையிடவும்.
இஸ்லாமிய வழக்கில் குனூத்:
இஷாவுடைய சுன்னத்தின் பின், அல்லது நள்ளிரவில் தொழப்படும் இரவுத் தொழுகையை ‘வித்ர்’ ஒற்றைப்படையாக தொழுது, அதன் இறுதி ரகஅத்தில் ஹதீஸில் இடம் பெறும் குறிப்பிட்ட சில வாசகங்களை ஓதுவதற்கும், முஸ்லிம்களுக்கு குழப்பமான சூழ்நிலைகள் உருவாகின்றபோது ஐவேளைத் தொழுகையின் இறுதியிலும் வேண்டப்படும் பிரார்த்தனைக்கும் ‘குனூத்’ என கூறப்படுகின்றது.
மக்காவில் குனூத்:
மக்காவில் ஐவேளைத் தொழுகை கடமையாக்கப்பட்டது முதல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உட்பட மக்கா வாழ் முஸ்லிம்கள் அனைவரும் இரண்டு, இரண்டு ரகஅத்துக்களாகவே தொழுது வந்துள்ளனர், என்பதை புகாரி, முஸ்லிம் உள்ளிட்ட பல ஹதீஸ் கிரந்தங்கள் உறுதி செய்கின்றன.
عن عائشة أم المؤمنين قالت فرض الله الصلاة حين فرضها ركعتين ركعتين في الحضر والسفر فأقرت صلاة السفر وزيد في صلاة الحضر (بخاريمسلم
ஊரிலும், பயணத்திலும் அல்லாஹ் தொழுகையை கடமையாக்கியபோது இரண்டு, இரண்டு ரகஅத்துக்களாகவே கடமையாக்கினான். பயணத் தொழுகை அதே நிலையில் அங்கீகரிக்கப்பட்டது, ஊர் தொழுகையில் (ரகஅத்தின் எண்ணிக்கை) அதிகரிக்கப்பட்டது என அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஆதார நூல்கள்: புகாரி, முஸ்லிம்)
மேற்படி ஹதீஸிலோ, அல்லது அதன் பொருளில் அமைந்த வேறு ஹதீஸ்களிலோ மக்காவின் எந்த தொழுகையிலும் முஸ்லிம்கள் ‘குனூத்’ ஓதிவந்ததாக எவ்வித செய்தியும் இடம் பெற்றிருக்கவில்லை என்பதை கவனிக்கலாம்.
மதீனாவில் குனூத்:
மதீனாவிற்கு ஹிஜ்ரத் வந்த பின்பும் நபித்தோழர்கள் எழுபது பேர் ‘டீபிஃர் மவூனா’ எனும் இடத்தில் காபிர்களால் கொலை செய்யப்பட்டு கொலையாளிகளைக் கண்டித்தும், சபித்தும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஐவேளைத் தொழுகைகளில் பிரார்த்திக்கின்ற வரை ‘குனூத்’ பற்றி முஸ்லிம்கள் அறியாதவர்களாகவே இருந்து வந்தனர், என்பதை பின்வரும் நிகழ்வு உறுதி செய்கின்றது.
குனூத் இடம்பெறக் காரணமான நிகழ்வு:
‘ஆமிர் பின் மாலிக்’ என்பவன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதர் அவர்களே! மார்க்கத்தை (வேறு அறிவுப்புகளில் அல்குர்ஆனையும், உங்கள் வழிமுறையையும்) போதிப்பதற்காக ‘நஜ்த்’ பிரதேசத்தவரிடம் உங்கள் தோழர்களில் சிலரை அனுப்பினால் என்ன? எனக் கேட்டார். அதற்கு அப்பிரதேச மக்களை நான் அஞ்சுகிறேன். (அனுப்ப முடியாது) என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அவர்களுக்கு நான் பாதுகாப்பு உத்தரவாதம் தருகிறேன். என அவர் கூறியதற்கமைவாக ‘அல்முன்திர் பின் அம்ரு’ என்ற நபித்தோழரின் தலைமையில் எழுபது பேர் கொண்ட ‘குர்ராக்களை’ -குர்ஆனைக் கற்றறிந்த ஹாபிள், மேதைகளை- அனுப்பி வைத்தார்கள். முஸ்லிம்களில் சிறந்தவர்களாகக் காணப்பட்ட இம்மக்கள் பகலில் விறகு வெட்டி அதனை விற்று ‘அஹ்லுஸ்ஸுஃப்பா’ தமது குடும்பத்தினரையும், திண்ணைவாசிகளுக்கு உணவளிப்பவர்களாகவும், குர்ஆனைப்படித்தும், பாராயணம் செய்தும் இரவில் வணங்குபவர்களாகவும் இருந்தனர். ‘பிஃருமவூனா’ வை இக்குழுவினர் அடைந்ததும் ‘உம்மு சுலைம்’ (ரலி) அவர்களின் சகோதரர் ஹராம் பின் மில்ஹான் (ரழி) அவர்களை அல்லாஹ்வின் விரோதியான ‘ஆமிர் பின் துபைல்’ என்பவன் அவர்களில் ஒருவனை ஏவி முதுகில் குத்திக் கொலை செய்தான். உடனே அவர்கள் தனது முதுகில் இருந்து பீறிட்டுப்பாய்ந்த இரத்தத்தை எடுத்து தனது தலையிலும் முகத்திலும் பூசியவர்களாக
فُزْتُ وَرَبِّ الْكَعْبَةِ ‘கஃபாவின் இரட்சகள் மீது ஆணையாக நான் வெற்றி பெற்றுவிட்டேன்’ எனக் கூறியவாறு உயிர் நீத்தார்கள். பின் இந்த ஆமிர் ‘டீபனூ ஆமிர்’ கூட்டத்தாரிடம் மற்றவர்களையும் கொலை செய்யும்படி கட்டளையிட்டான். ‘அபூபரா’ வின் பாதுகாப்பில் இவர்கள் இருக்கின்ற காரணத்தால் அவர்கள் அதற்கு பதிலளிக்கவில்லை. பின் ‘பனூசலீம்’ கோத்திரத்தை அழைத்தான். அதற்கு உஸைய்யா, ரஃல், தக்வான் போன்ற குழுக்கள் பதில் அளித்தனர். இதில் எழுபது நபித்தோழர்கள் கொலை செய்யப்பட்;டனர். இந்த குரூர நிகழ்வு அல்லாஹ்வின் தூதர் அவர்;களுக்கு ‘வஹி’ மூலம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சம்மந்தப்பட்டவர்களை சபித்தும், திட்டியும் ஒரு மாதகாலம் ‘குனூத்’ ஓதினார்கள். இதுவே ‘குனூத்’ இடம்பெறக் காரணமான சரியான நிகழ்வாகும். (பார்க்க: ஸாதுல் மஆத் பத்ஹுல்பாரி, ஷரஹ் முஸ்லிம்)
இந்நிகழ்வை அனஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கும் பின்வரும் செய்தி உறுதி செய்கின்றது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘குர்ராக்கள்’ எனப் போற்றப்படும் எழுபது பேரை ஒரு தேவையின் நிமிர்த்தமாக அனுப்பி வைத்தார்கள். ‘பனூ ஸலீம்’ கோத்திரத்தை சார்ந்த ‘ரஃல்’ ‘தக்வான்’ ஆகிய இரு குழுவினர் ‘டீபிஃர் மவூனா’ என்ற இடத்தில் அவர்களைக் குறுக்கிட்டனர். அவர்களிடம் இம்மக்கள் ஓ கூட்டத்தாரே! நாம் நபியின் தேவையின் நிமித்தம் இப்பகுதியைக் கடந்து செல்கிறோம். எனக் கூறியும் அக்குழுவினர் அவர்களை (ஈவிரக்கிமின்றி) கொலை செய்தனர். எனக் குறிப்பிடும் அனஸ் (ரழி) அவர்கள்
فدعا النبي صلى الله عليه وسلم عليهم شهرا في صلاة الغداة وذلك بدء القنوت وما كنا نقنت ….صحيح البخاري 3860
இந்நகிழ்வை ஒட்டி ஒருமாத காலம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘ஃபஜ்ர்” தொழுகையில் பிரார்த்தனை செய்தார்கள். இதுவே குனூத்தின் ஆரம்பம். நாம் குனூத் ஓதுபவர்களாக இருந்ததில்லை. எனக் குறிப்பிடுகின்றார்கள் (புகாரி: ஹதீஸ் இல: 3860).
நபித்தோழர் டீபரா இப்னு ஆஸிப், மற்றும் அனஸ் (ரழி) ஆகியோர் அறிவிக்கும் வேறு அறிவிப்பில் ஃபஜ்ரிலும், மஃரிபிலும் ‘குனூத்’ ஓதியுள்ளார்கள் என இடம் பெற்றுள்ளது. (புகாரி: ஹதீஸ் இல:765. முஸ்லிம். ஹதீஸ் இல: 678).
அபூதாவூத், அஹ்மத், ஹாகிம் போன்ற கிரந்தங்களில் ஐவேளைத் தொழுகையிலும் நபி (ஸல்) அவர்கள் ‘குனூத்’ ஓதியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பு:- ஷாபிஈ மத்ஹப் சார்ந்த பள்ளிகளில் ஓதப்படும் குனூத்திற்கும் இந்த குனூத்திற்கும் இடையில் எவ்வித சம்மந்தமும் கிடையாது என்பதை இதன் மூலம் அறியலாம்.
இக்குனூத் தொடர்ந்ததா? துண்டித்ததா?
மேற்படி குனூத் வருடம் தோறும் ஓதப்பட்டதற்கான எவ்வித சான்றுகளும் இல்லை என்பதை பின்வரும் செய்தியின் மூலம் உறுதி செய்ய முடிகிறது.
عن عاصم عن أنس قال سألته عن القنوت قبل الركوع أو بعد الركوع فقال قبل الركوع قال قلت فإن ناسا يزعمون أن رسول الله صلى الله عليه وسلم قنت بعد الركوع فقال إنما قنت رسول الله صلى الله عليه وسلم شهرا يدعو على أناس قتلوا أناسا من أصحابه يقال لهم القراء صحيح مسلم 677
அனஸ் (ரழி) அவர்களிடம்; ‘குனூத்’ பற்றி அது ருகூவிற்கு முன்னாலா? அல்லது பின்னாலா? (ஓதவேண்டும்) என நான் கேட்டேன். ருகூவிற்கு முன்புதான் எனக் கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் ருகூவிற்கு பின்பு ‘குனூத்’ ஓதியதாக சிலமக்கள் தவறாக நம்புகின்றனரே! எனச் சொன்னேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘குர்ராக்கள்’ என அழைக்கப்படும் அவர்களின் தோழர்களைக் கொலை செய்த கொலையாளிகளுக்கு எதிராக ‘குனூத்’ ஓதியது ஒருமாத காலம் தான் என பதிலளித்ததாக ஆஸிம் என்பவர் குறிப்பிடுகிறார். (முஸ்லிம்: 677)
ஒருமாத காலமே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு பிரார்த்தித்துள்ளார்கள், அதைவிட அதிகரிக்கவில்லை என்பதை இந்த ஹதீஸில் இருந்து விளங்க முடியும். இந்த செய்தியை அறிவிப்பவர் அனஸ் (ரழி) அவர்கள் என்பதை நீங்கள் கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.
இக்குனூத்தில் பிரயோக்கிக்கப்பட்ட வாசகங்கள்
நாம் எடுத்துக்காட்டிய ஹதீஸ்களை ஆதாரமாகக் கொண்டு சிலர் சுபஹ் தொழுகையில் ‘குனூத்’ இருப்பதாக வாதிடுகின்றனர். ஆனால் அதன் வாசகங்களை கவனித்தால் முஸ்லிம்களுக்கு சோதனை என்ற ஒன்று வரும்போது அந்த நிகழ்வையும், அதற்கு சூத்திரதாரிகளாக இருந்தோரையும் கண்டித்தே ‘குனூத்’ ஓதப்பட்டுள்ளதை அறிய முடியும்.
அந்த அடிப்படையில் அமைந்த பின்வரும் நபிமொழிகளைக் கவனியுங்கள்:
عن خفاف بن إيماء الغفاري قال قال رسول الله صلى الله عليه وسلم في صلاة اللهم العن بنى لحيان ورعلا وذكوان وعصية عصوا الله ورسوله غفار غفر الله لها وأسلم سالمها الله بخاري : 2517
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு தொழுகையில் ‘பனூலிஹ்யான்’ ‘ரஃல்’ ‘தக்வான்’ மற்றும் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் மாறு செய்தல் என்ற பொருளைத்தரும் ‘உஸைய்யா’ கூட்டத்தரையும் சபித்தும், (பாவமன்னிப்பு என்ற பொருளில் அமைந்த) ஃகிபார் கூட்டத்தாருக்கு அல்லாஹ் மன்னிப்பு வழங்குவானாக!, என்றும், (ஈடேற்றம் என்ற பொருளில் அமைந்த) அஸ்லம் கூட்டத்தாரை அல்லாஹ் ஈடேற்றமாக வாழவைப்பானாக! என்றும் பிரார்த்தனை செய்தார்கள் என ஹகுபாகுப் பின் ஈமாஃ அல்கிபாரி (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஆதார நூல்: புகாரி, 2517)
புகாரியில் 675 வது இலக்க நபிமொழியில் முஸ்லிம்கள் சிலரின் பெயரைக் குறிப்பிட்டு அவர்களை பாதுகாக்கும்படியும், காபிர்கள் சிலரைக் குறிப்பிட்டு அவர்களைக் கடுமையாக பிடிக்குமாறும், மற்றும் சிலரை சபிக்குமாறும் கூறியமைக்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கண்டித்து ஆலுஇம்ரான் 128 வது வசனம் இறங்கும் வரை பிரார்த்தித்ததாக இடம் பெற்றுள்ளது.
இந்த ஹதீஸிற்கும், இதன் பொருளில் வரும் நபிமொழிகளுக்கும் ஷாபிஈ மத்ஹபைச் சார்ந்தோரால் ஓதப்படும் ‘சுபஹ்’ குனூத்திற்கும் இடையில் எவ்வித தொடர்பும் கிடையாது என்பதை விளங்கிக் கொள்ளலாம்.
‘சுபஹ் குனூத் ‘ ஆதாரங்களும் அவதாரங்களும்:
‘சுபஹ் குனூத்’ இற்கு ஆதாரம் சமர்ப்பிப்போரின் ஆதாரங்களையும், அவர்கள் தரும் விளக்கங்களையும், அதற்கான நம்மால் முன்வைக்கப்படும் விமர்சனங்களையும் ஹதீஸ்கலை அறிஞர்களின் விளக்கத்தை தழுவி இத்தொடரில் தருகிறோம். முடிவு செய்வது உங்கள் கைகளிலேயே தங்கி இருக்கிறது.
முதலாவது ஆதாரம்:-
عن محمد قال : قلت لأنس هل قنت رسول الله صلى الله عليه وسلم في صلاة الصبح قال نعم بعد الركوع يسيرا .( مسلم 677
முஹம்மத் என்பவர் குறிப்பிடுகிறார். நான் அனஸ் (ரழி) அவர்களிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சுபஹ் (தொழுகையி)ல் ‘குனூத்’ ஓதினார்களா? என்று கேட்டேன். ஆம். சொற்ப நேரம் (ஓதியுள்ளார்கள்) எனப் பதிலளித்தார்கள். (ஆதார நூல் முஸ்லிம். 677).
மறுப்பு:- மேற்படி ஆதராத்திற்கு பின்வரும் அமைப்பில் மறுத்துரைக்க முடியும்.
(01) இருட்டடிப்பு. மேற்படி ஹதீஸை இருட்டடிப்புச் செய்யும் மௌலவிகள் பலர் இதனை ஒரு ஆதாரமாகக் காட்டி பொதுமக்களை சமாளித்தும், ஏமாற்றியும் வருகின்றனர். இவர்கள் சார்ந்திருக்கும் மத்ஹப் அறிஞரான இமாம் நவவி (ரஹ்) என்பவர் இமாம் முஸ்லிம் (ரஹ்) அவர்களின் ஹதீஸ் கிரந்தத்திற்கு பாட, மற்றும் அத்தியாயத் தலைப்பிட்டவர்கள், என்பதை இன்றும் இவர்கள் அறியாதிருக்கலாம்.
இந்த ஹதீஸ் இடம் பெறும் இடத்தில் (باب استحباب القنوت إذا نزل بالمسلمين نازلة) ‘முஸ்லிம்களுக்கு சோதனை ஏற்பட்டால் குனூத் ஓதுதல் சுன்னத் என்ற பாடம்’ என இதற்கு தலைப்பிட்டுள்ளார்கள்.
ஆகவே இது இந்தச் செய்தியானது ‘சுபஹ்’ குனூத்தைக் குறிக்கும் என வாதிடுவது இமாம்களின் தீர்ப்பை மதிப்பதாகக் கூறிக்கொள்வோருக்கு அழகில்லை. மாத்திரமின்றி இது ஹதீஸில் திரிபு செய்வோரின் செயலாகவும் கருதப்படும்.
மறுப்பு:- (02) ஹதீஸ் பற்றிய தெளிவின்மை. ஏனெனில் ஒரு நபிமொழி ஒரு இடத்தில் சுருக்கமாக, அல்லது மூடுதலாக இடம்பெற்றால் அது வேறு அறிவிப்புக்களில் தெளிவுபடுத்தப்படுவது இயல்பானது.
உதாரணமாக ஒரு ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையில் ‘சுஃப்யான்’ என்பவர் மொட்டையாக இடம் பெற்று, மற்றொரு அறிவிப்பில் ‘சுஃப்யான் அஸ்ஸெளரி’ என தெளிவுபடுத்தப்பட்டு வரும்போது அவர் ‘சுப்யான் அஸ்ஸெளரி’தான் என்பதை எவ்வாறு புரிந்து கொள்கிறோமோ, அதே போன்றுதான் இந்த ஹதீஸ் நபித்தோழர்கள் எழுபது பேர் காபிர்களால் கொலை செய்யப்பட்ட பின் நபி (ஸல்) அவர்கள் கொலையாளிகளைக் கண்டித்து ‘குனூத்’ ஓதிய நிகழ்வைக் குறிப்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். இதனை பின்வரும் அறிவிப்புகள் மூலம் இன்னும் தெளிவாக விளங்க முடியும்.
عن أنس بن مالك قنت رسول الله صلى الله عليه وسلم شهرا بعد الركوع في صلاة الصبح يدعو على رعل وذكوان ويقول عصية عصت الله ورسوله صحيح مسلم 677
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சுபஹ் (தொழுகையி)ல் ருகூவிற்குவிற்குப்பின் ‘ரஃல்’ ‘தக்வான்’ (மாறு செய்தல் என்ற பொருளில் அமைந்த) அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்த ‘உஸைய்யா’ கூட்டத்தார் ஆகியோருக்கு எதிராக ஒருமாத காலம் பிரார்த்தித்தார்கள். என அனஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஆதார நூல் முஸ்லிம். 677).
ஒரு மாதகாலம் என வரையறை செய்யப்பட்டுள்ளதை பின்வரும் மற்றொரு அறிவிப்பில் இருந்தும் விளங்கலாம்.
عن عاصم عن أنس قال سألته عن القنوت قبل الركوع أو بعد الركوع فقال قبل الركوع قال قلت فإن ناسا يزعمون أن رسول الله صلى الله عليه وسلم قنت بعد الركوع فقال إنما قنت رسول الله صلى الله عليه وسلم شهرا يدعو على أناس قتلوا أناسا من أصحابه يقال لهم القراء صحيح مسلم 677
அனஸ் (ரழி) அவர்களிடம்; குனூத் பற்றி அது ருகூவிற்கு முன்னாலா அல்லது பின்னாலா (ஓதவேண்டும்) என நான் கேட்டேன். ருகூவிற்கு முன்புதான் எனக் கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் ருகூவிற்கு பின்பு ‘குனூத்’ ஓதியதாக சிலமக்கள் தவறாக நம்புகின்றனரே! எனச் சொன்னேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘குர்ராக்கள்’ என அழைக்கப்படும் அவர்களின் தோழர்களைக் கொலை செய்த கொலையாளிகளுக்கு எதிராக ‘குனூத்’ ஓதியது ஒருமாத காலம்தான் எனப் பதிலளித்தாக ஆஸிம் என்பவர் குறிப்பிடுகிறார். (முஸ்லிம்: 677)
இரண்டாவது ஆதாரம்:-
عن أنس بن مالك قال : ما زال رسول الله صلى الله عليه وسلم يقنت في صلاة الصبح حتى فارق الدنيا الدر اقطني، المستدرك
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உலகைப்பிரியும் வரை ‘சுபஹ்’ தொழுகையில் குனூத் ஓதிக்கொண்டே இருந்தார்கள். (ஆதார நூல்கள்: தாரகுத்னி, ஹாகிம்.)
‘சுபஹ்’ தொழுகையில் குனூத் ஓதுவோர் மேற்படி செய்தியை ஆதாரமாகக் கொண்டு ‘குனூத்’ ஓதுவதாக வாதிடுகின்றனர். இது சுபஹ் குனூத்தை நிலைநாட்ட அவர்கள் எடுத்துக் கொள்ளும் பிரதான செய்தியுமாகும்.
மறுப்பு:- (1) ஒரு ஹதீஸ் புகாரி, முஸ்லிம் அல்லாத வேறு கிரந்தங்களில் இடம் பெறுமானால் அதனை ஆய்வின்றி உலகில் எந்த அறிஞரும் ஏற்றுக் கொள்வதில்லை. இன்றுவரை அது ஒரு பொதுவிதியாக அறிஞர்கள் மத்தியில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த விதி ‘சுபஹ்குனூத்’ ஓதுவோருக்கு வேண்டுமானால் தெரியாதிருக்கலாம்.
ஆகவே ‘தாரகுத்னி’ ‘முஸ்தத்ரக் அல்ஹாகிம்’ போன்ற நூல்களில் இடம் பெறும் இந்தச் செய்தியின் உண்மை நிலைபற்றி அதுசார்ந்த அறிஞர்களின் விளக்கங்களின் துணையுடன் அணுகுவது அவசியமாகும். அதன் அடிப்படையில் மாமேதை இமாம் சைலயி (ரஹ்) அவர்கள் தனது ‘நஸபுர்ராயா பாகம்:2- பக்:132 ல் தரும் விளக்கத்தையும், மற்றும் பல அறிஞர்களின் விளக்கங்களையும் எடுத்து நோக்குவோம்.
… وضعفه ابن الجوزي في كتاب التحقيق وفي العلل المتناهية فقال هذا حديث لا يصح فإن أبا جعفر الرازي واسمه عيسى بن ماهان قال بن المديني كان يخلط وقال يحيى كان يخطئ وقال أحمد بن حنبل ليس بالقوي في الحديث وقال أبو زرعة كان يهم كثيرا وقال بن حبان كان ينفرد بالمناكير عن المشاهير انتهى . ورواه الطحاوي في شرح الآثار وسكت عنه إلا أنه قال وهو معارض بما روي عن أنس أنه عليه السلام إنما قنت شهرا يدعو على أحياء من العرب ثم تركه انتهى (نصب الراية ج2 ص132)
இமாம் இப்னுல் ஜவ்ஸி அவர்கள் ‘அத்தஹ்கீக்’ ‘அல்இலலுல் முதனாஹியா’ ஆகிய நூல்களில் இந்தச் செய்தி பலவீனமானது எனக் குறிப்பிட்டுள்ளதுடன், هذا حديث لا يصح ‘இது ஆதாரமற்ற செய்தியாகும்’, என்றும் தீர்பபுக் கூறியுள்ளார்கள். ஏனெனில் இதன் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெறும் ‘அபூஜஃபர் அல்ராஸி, அவரது பெயர் ‘ஈஸா இப்னு மாஹான்’ என்பதாகும். இவரை இப்னுல் மதீனி அவர்கள் குழம்பிப்போனவர் என்றும், யஹ்யா அவர்கள் ‘இவர் தவறிழைப்பவர்’ என்றும் ‘அஹ்மத் பின் ஹன்பல்’ அவர்கள் ‘ஹதீஸில் இவர் உறுதியற்றவர்’ ‘தடுமாறுபவர்’ என்றும், அபூசுர்ஆ அவர்கள் (ஹதீஸை அறிவிப்பதில்) அதிகமாக சந்தேகப்படுபவர், (தடுமாறுபவர்) என்றும், இப்னுஹிப்பான் அவர்கள் பிரபல்யமானவர்களைப் பயன்படுத்தி மறுத்துரைக்கப்பட வேண்டிய தகவல்களை அறிவிப்பவர் என்றும் விமர்சித்துள்ளனர். என்றும் சுட்டிக்காட்டியபின் இமாம் தஹாவி (ரஹ்) அவர்கள் ‘ஷரஹ் முஷ்கிலில் ஆதார்’ என்ற தனது நூலில் இந்தச் செய்தியை எடுத்தெழுதிய பின் விரிவாக எதுவும் கூறாது மௌனமாக இருந்தாலும் அரபுக்களில் ஒரு சில குலத்தாருக்கு எதிராக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒருமாத காலம் ‘குனூத்’ ஓதி, பின்னர் அதனை விட்டுவிட்டதாக அனஸ் (ரழி) அவர்கள் மூலம் அறிவிக்கப்படும் ஆதாரபூர்வமான செய்திக்கு இது முரணாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்கள். எனக் குறிப்பிடும் இமாம் சைலயீ (ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸ் பற்றிய தனது நிலைப்பாட்டை விளக்குகின்றபோது
قلت ويعارض أيضا بما رواه الطبراني في معجمه حدثنا عبد الله بن محمد بن عبد العزيز ثنا شيبان بن فروخ ثنا غالب بن فرقد الطحان قال كنت عند أنس بن مالك شهرين فلم يقنت في صلاة الغداة انتهى نصب الراية ج2 ص132
‘நான் அனஸ் பின் மாலிக் அவர்களுடன் இரண்டு மாதங்கள் இருந்திருக்கிறேன். அவர்கள் ஃபஜ்ர் தொழுகையில் குனூத் ஓதவில்லை’ என இமாம் தபரானி அவர்கள் தனது முஃஜமில் (நூலின் பெயர்) காலிப் பின் ஃபர்கத் அத்தஹ்ஹான் என்பவர் ஊடாக அறிவிக்கும் செய்தியில் குறிப்பிட்டுள்ள செய்திக்கு இது முரணாக அமைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்கள்.
أبو جعفر الرازي وكنيته ماهان أبو عيسى ، يروى عن عطاء والربيع بن أنس، ….. كان ممن ينفرد بالمناكير عن المشاهير، لا يعجبنى الاحتجاج بخبره إلا فيما وافق الثقات، ولا يجوز الاعتبار بروايته إلا فيما لم يخالف الاثبات. المجروحين 2 120
இப்னு ஹிப்பான் (ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் அபூஜஃபர் அர்ராஸி, பற்றிக் குறிப்பிடும் போது இவரது பட்டப்பெயர் மாஹான் அபூ ஈஸா. இவர் அதா, மற்றும் ரபீஃபின் அனஸ், போன்றோர் வழியாக செய்திகளை அறிவிப்பார். (ஹதீஸ்கலையில்) பிரபல்யமானவர்களைப் பயன்படுத்தி, மறுத்துரைக்கப்பட வேண்டிய செய்திகளை தனித்து அறிவிப்பார். இவர் நம்பகமானவர்களுக்கு ஒத்த கருத்தை அறிவித்தாலே தவிர இவரது செய்தியைக் கொண்டு ஆதாரம் எடுப்பது எனக்கு வியப்பளிக்கவில்லை. நம்பகமானவர்களின் செய்திக்கு முரண்படாத வகையில் அறிவிக்கும் இவரது அறிவிப்பையே படிப்பினைக்காக (ஆதாரத்திற்கு அல்ல) கொள்ளமுடியும் எனக் குறிப்பிட்டுள்ளார்கள். (பார்க்க: அல்மஜ்ரூஹீன். பாகம் : 2- பக்கம். 120)
இமாம் இப்னு ஹஜர் அல்அஸ்கலானி (ரஹ்) அவர்கள் ‘நதாயிஜுல் அஃப்கார்’, மற்றும் ‘தல்ஹீஸுல் ஹபீர'; ஆகிய நூல்களில் அபூஜஃபர் அர்ராஸியின் விபரம் பற்றிய பல விபரங்களை தந்துள்ளார்கள் என்பதைக் கவனத்தில் கொள்ளவும். மத்ரஸாக்களில் கற்பிக்கப்படுகின்ற ‘சுபுலுஸ்ஸலாம்’ என்ற நூலிலும் சுபஹ் பற்றிய செய்தியின் பலவீனம் பற்றி எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் சுபஹ் குனூத்திற்குரிய பெரிய ஆதாரமாக முன்வைக்கப்படும் ஒரேயொரு இந்த ஆதாரத்தின் குறை என்னவென்பது வெளிச்சத்திற்கு வந்தாலும் மக்கள் மத்தியில் முன்வைக்கப்படும் மற்றொரு ஆதாரத்தையும் கவனிப்போம்.
இப்படியும் ஒரு புலம்பல் :- நமது நாட்டில் உள்ளவர்கள் ஜோர்தானைச் சேர்ந்த ‘அலிஹஸன் ஸக்காப்’ என்பவரின் ‘சுபஹ் குனூத்’ பற்றிய ஆய்வில் இருந்து அடித்த காப்பியை பெரிய ஆதாரமாக எடுத்து வைக்கின்றனர். அதன் போலித்தன்மை பற்றியும் நாம் இங்கு விளக்கமளிப்பது பொருத்தமானதாகும்.
வாதம்:- மேற்படி அறிவிப்பாளர் வரிசையில் அறிஞர்களால் குறைகாணப்படும் ‘அபூஜஃபர் அர்ராஸி’ என்பவர் ‘முகீரா’ என்பவர் வழியாக அறிவித்தால் மாத்திரமே அவரது அறிவிப்பு பலவீனமானது.(செல்லுபடி அற்றது) அவர் தவிர்ந்த வேறு அறிவிப்பாளர் மூலமாக அறிவிக்கப்படும் அவரது அறிவிப்புகள் ஏற்புடையது. எனவே சுபஹ் குனூத்தில் இந்த அபூஜஃபர் அர்ராஸி என்பவர் முகீரா ஊடாக அறிவிக்கவில்லை. ஆகவே ‘சுபஹ் குனூத்’ பற்றிய செய்தி ஸஹீஹ் -ஆதாரபூர்வமான செய்தி – என்பதை முடிவு செய்யலாம். என சுபஹ் குனூத்தை நியாயப்படுத்துவோர் கூறுகின்றனர்.
மறுப்பு:- இதன் ஆதாரத்தின் போலித்தன்மை பற்றி தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும் அல்லவா ? இப்போது அபூஜஃபர் அர்ராஸி என்பவரின் நிலை பற்றி ஸக்காபை விட பண்மடங்கு படித்த இமாம்களின் தீர்ப்புக்கள் என்ன என்பதை அறிந்தால் ஸக்காஃபின் திருகுதாளங்களையும், அவரது அபிமானிகளின் கண்மூடித்தனமான முடிவையும் உணர்ந்து கொள்ளலாம்.
وروى حاتم بن إسماعيل، وهاشم أبو النضر، وحجاج بن محمد، وغيرهم، عن أبي جعفر الرازي، عن الربيع بن أنس، عن أبي العالية، عن أبي هريرة أو غيره، عن النبي صلى الله عليه وسلم حديثا طويلا في المعراج فيه ألفاظ منكرة جدا. ميزان الاعتدال 3 320
இமாம் தஹபி என்ற அறிஞர் இவர் பற்றி குறிப்பிடும்போது ‘ஹாதம் பின் இஸ்மாயீல்’ ‘ஹாஷிம் அபுன்னள்ர்’ ‘ஹஜ்ஜாஜ் பின் முஹம்மத்’ மற்றும் பலர் அபூஜஃபர் அர்ராஸி என்பர் மூலம் அறிவிக்கின்றனர். அபூஜஃபர் அர்ராஸி ரபீஃ பின் அனஸ், மற்றும், அபூஹுரைரா (ரழி) போன்றவர்கள் வழியாக ‘மிஃராஜ்’ பற்றிய நீண்ட ஒரு செய்தியை அறிவிக்கின்றார். அதில் மறுக்கப்பட வேண்டிய பலவாசகங்கள் இடம் பெறுகின்றது எனக் குறிப்பிடுகிறார்கள் (பார்க்க: மீஸானுல் இஃதிதால். பாகம்-03; பக்: 320).
அவர்கள் என்ன வாதத்தை முன்வைத்தார்களோ அது இங்கு பொய்பிக்கப்படுவதை அறியலாம். அதாவது ‘அபூஜஃபர் அர்ராஸி’ என்பவர் ‘முகீரா’ வழியாக அறிவித்தால் மாத்திரமே அவரது அறிவிப்பு பலவீனமானது. அவர் தவிர்ந்த வேறு அறிவிப்பாளர் மூலமாக அறிவிக்கப்படும் அவரது அறிவிப்புகள் ஏற்புடையது என்பதே அவர்களின் வாதம். இங்கு அபூஜஃபர் அர்ராஸி ரபீஃபின் அனஸ் வழியாகவும் பொய்யான செய்திகளை அறிவிப்பவர் என்பது தெளிவாகவில்லையா?
இது மாத்திரமின்றி அந்த செய்தி பொய்ப்பிக்கப்பட்டிருக்கிறதே! இது பற்றி என்ன கூறுவார்கள்.?
தெளிவு:- ‘சுபஹ் குனூத்’ ஹதீஸ் பற்றிய இமாம்களின் தீர்ப்புக்களையும், விமர்சனங்களையும் அவதானித்தால் இரண்டு வழிகளில் அந்த ஹதீஸ் குறை காணப்பட்டுள்ளதை அறியலாம்.
1) ‘ஸனத்’ எனும் அறிவிப்பாளர் வரிசை.
(2) ‘மதன்’ எனும் அது தாங்கி நிற்கும் கருப்பொருள், அல்லது பிரதான செய்தி.
ஒரு ஹதீஸில் ‘ஸனத்’ அறிவிப்பாளர் வரிசை தக்க சான்றுகளுடன் குறை காணப்பட்டாலே அந்தச் செய்தி பலவீனமான செய்திதான் என்பதை நிரூபிக்க போதுமான சான்றாகும். இந்தச் செய்தியோ ஸனதும், மதனும் இணைந்து விமர்சிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை எந்த வகையில் ஆதாரமாகக் கொள்ளலாம் என்பதை சிந்தித்துப் பாருங்கள்.
2) இதனை அல்பானி (ரஹ்) அவர்கள் பலவீனமாக்கவில்லை. மாற்றமாக ஷாபிஈ மத்ஹப் மௌலவிகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட இமாம்களான சைலயீ, இமாம் இப்னுல் ஜவ்ஸி இமாம் இப்னு ஹஜர் அல்அஸ்கலானி போன்ற அறிஞர்களே பலவீனமான செய்தியாக குறிப்பிட்டுள்ளனர். இந்த தீர்ப்பையாவது இவர்கள் ஏற்றுக்கொண்டால் ‘சுபஹ் குனூத்’ பற்றிய குழப்பங்களுக்கு தீர்வு கட்டமுடியும்.
மறுப்பு:- 03: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உலகைப்பிரியும் வரை ‘ஃபஜ்ர்’ தொழுகையில் ‘குனூத்’ ஓதியதாக அனஸ் (ரழி) அவர்கள் மூலம் அறிவிக்கப்படும் செய்தியை அறிஞர்கள் பலவீனப்படுத்திய அதே நேரத்தில், அனஸ் (ரழி) அவர்கள் அதனை மறுத்துள்ளதை ஊர்ஜிதம் செய்திருப்பதை நம்நாட்டு ஆலிம்களும் அறிந்திருக்கும் இமாம் இப்னுஹஜர் அல்அஸ்கலானி (ரஹ்) அவர்களின் பின்வரும் தீர்ப்பு உறுதி செய்கின்றது.
… عن عاصم بن سليمان قلنا لأنس إن قوما يزعمون أن النبي صلى الله عليه وسلم لم يزل يقنت في الفجر فقال كذبوا إنما قنت شهرا واحدا يدعوا على حي من أحياء المشركين (تلخيص الحبير ج1 ص245
அனஸ் (ரழி) அவர்களிடம் சிலர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘ஃபஜ்ர்’ தொழுகையில் ‘குனூத்’ ஓதுபவர்களாக இருந்ததாக ஒரு கூட்டத்தார் நம்புகின்றனரே! என நாம் கூறினோம். ‘அவர்கள் பொய்யுரைத்துள்ளார்கள்’ எனக் கூறிய அனஸ் (ரழி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தனது தோழர்களைக் கொலை செய்த கொலையாளிகளுக்கு எதிராக ‘குனூத்’ ஓதியது ஒருமாத காலம்தான் எனப் பதிலளித்தாக ஆஸிம் என்பவர் வழியாக கைஸ் பின் ரபீஃ அவர்கள் அறிவிப்பதாக அல்ஹாபிழ் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் தனது ‘தல்ஹீசுல் ஹபீர்’ பாகம்: 1-பக்: 245-ல் குறிப்பிட்டுள்ளார்கள்.
அனஸ் (ரழி) அவர்கள் மூலம் ‘சுபஹ் குனூத்’ மறுத்துரைக்கப்பட்டிருப்பதால் ‘சுபஹ் குனூத்’ ஓதப்பட்டதாக அவர்கள் வழியாக அறிவிக்கப்படும் செய்தியின் தராதரத்தை இப்போது நீங்களே எடைபோட்டுக் கொள்ளுங்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவசியம் ஏற்படும்போது பொதுவாக தொழுகையில் பிரார்த்தித்துள்ளார்கள் என்பதை காரணம் காட்டி காலம் முழுவதும் ‘சுபஹ் குனூத்’ ஓத முடியாது என்பதை அபூஹுரைரா (ரழி) அவர்கள் வழியாக அறிவிக்கப்படும் பின்வரும் செய்தியில் இருந்து அறியலாம்.
عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم كان إذا أراد أن يدعو على أحد أو يدعو لأحد قنت بعد الركوع . صحيح البخاري 4284
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு (காபிர்) சமுதாயத்தினருக்கு எதிராக, அல்லது ஒரு (முஸ்லிம்) சமுதாயத்தினருக்கு சார்பாக பிரார்த்தித்தால் ருகூவிற்குப்பின் ‘குனூத்’ ஓதுபவர்களாக இருந்துள்ளார்கள். (ஆதார நூல்: புகாரி).
மூன்றாவது ஆதாரம்:- அறிவிப்பாளர் வரிசைதான் பலவீனமானது. ஆனால் அதன் உள்ளடக்கம் ஆதாரபூர்வமானது.
மறுப்பு:- இவர்கள் இந்த ஹதீஸிற்கு மாத்திரம் இந்தக் கூற்றை முன்வைக்கவில்லை. மாற்றமாக அறிவிப்பாளர் வரிசை குறைகாணப்படும் சகல ஹதீஸ்களுக்கும் நீண்ட நெடுங்காலமாக இதை பெரிய ஒரு ஆதாரமாக நினைத்து முன்வைத்து வருகின்றனர். பலவீனமான செய்திகளை இவர்கள் ஆதாரமாகக் கொள்வதன் இரகசியமும் இதுதான்.
ஒரு ஹதீஸ் ஆய்வு செய்யப்படும்போது அதன் ‘ஸனத்’ அறிவிப்பாளர் வரிசை, ‘மதன்’ அதன் உள்ளடக்கம், அல்லது கருப்பொருள் ஆகிய இருவழிகளில் அத்துறை சார்ந்த திறணாய்வுக் கலை வல்லுனர்களால் ஆய்வுக்கு உட்படுத்தப்படும். அப்போது அவர்கள் முன்வைத்துள்ள அளவுகோளின்படி இரண்டையுமோ, அல்லது இரண்டில் ஒன்றையோ குறைகாணும் பட்சத்தில் குறைகளுக்கு ஏற்ப அதன் பெயர்களை வழங்கி தள்ளுபடுபடி செய்வர். அல்லது ஏற்பர்.
இவர்களோ தமக்கென புதிய வழிமுறையை வகுத்துக் கொண்ட காரணத்தால் இவ்வாறு கூறத் தலைப்படுகின்றனர். மார்க்கம் அங்கீகரிக்காத அம்சங்களுக்கு விதிகள் அமைத்துச் செயல்படும் இவர்களிடம் இவ்வாறான வழிமுறைகள் காணப்படுவது ஆச்சரியமான ஒன்றல்ல.
ஷாபிஈ மத்ஹபைச் சார்ந்த கதீபுல் பக்தாதி என்பவர் மீது இப்னுல் ஜவ்ஸி என்பவரின் விசனம்:
அனஸ் (ரழி) அவர்கள் வழியாக அறிவிக்கப்படும் ‘சுபஹ் குனூத்’ பற்றிய செய்தியை ஹதீஸ்துறை சார்ந்த அறிஞரான இமாம் கதீப் அல்பக்தாதி (ரஹ்) அவர்கள் எவ்வித ஆய்வும் செய்யாது அதனை ‘ஸஹீஹ்’ ஆன செய்தி போன்ற சித்திரம் கொடுத்து ‘குனூத்’ என்ற அவரது நூலில் எடுத்தெழுதியதைக் கண்டித்து இமாம் ‘இப்னுல் ஜவ்ஸி’ அவர்கள் தெரிவித்துள்ள விசனம் நமது பிரதேச மௌலவிகளுக்கும் பொருத்தமானதாக இருக்கின்ற காரணத்தால் அதனை இங்கு முன்வைக்கிறோம்.
قال وسكوته عن القدح في هذا الحديث واحتجاجه به وقاحة عظيمة وعصبية بادرة وقلة دين لأنه يعلم أنه باطل قال بن حبان دينار يروي عن أنس آثارا موضوعة لا يحل ذكرها في الكتب إلا على سبيل القدح فيه .
‘கதீப்’ அவர்கள் இந்த ஹதீஸின் தரம் பற்றி எதுவும் பேசாது மௌனமாக இருப்பதும், அதை ஆதாரமாகக் கொள்வதும் வெட்கம் அற்ற பாரதூராமன செயலும், தெளிவான (மத்ஹப்) வெறியும், மார்க்க குறைவுமாகும். ஏனெனில் இவர் இது ஆதாரத்திற்கு கொள்ளமுடியாத செய்தி என்பதை நன்கு அறிந்தவராக இருக்கின்றார், (அந்த ஹதீஸ் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெறும்) ‘தீனார்’ என்பவர் ‘அனஸ்’ (ரழி) அவர்கள் வழியாக புனைந்துரைக்கப்பட்ட செய்திகளை அறிவிப்பவர், அப்படிப்பட்டவர்களின் குறை பற்றி எடுத்துக்காட்டுவதற்காகவே அன்றி, நூல்களில் அந்தச் செய்திகளை குறிப்பிடுவது கூட கூடாது, என இப்னுஹிப்பான் அவர்கள் கூறியதாக குறிப்பிட்ட பின் தொடரும் இப்னுல் ஜவ்ஸி (ரஹ்) அவர்கள்
فواعجبا للخطيب أما سمع في الصحيح من حدث عني حديثا وهو يرى أنه كذب فهو أحد الكذابين وهل مثله إلا كمثل من أنفق نبهرجا ودلسه فإن أكثر الناس لا يعرفون الصحيح من السقيم وإنما يظهر ذلك للنقاد فإذا أورد الحديث محدث واحتج به حافظ لم يقع في النفوس إلا أنه صحيح ،،،
கதீப் (அல்பக்தாதியில்) இருந்து ஏற்படும் இந்தச் செயல் ஆச்சரியத்தை தருகிறது ‘எவன் ஒருவன் என்னைப் பற்றி ஒரு செய்தியை அது பொய் என்று தெரிந்தும் அறிவிக்கின்றானோ அவன் பொய்யர்களில் ஒருவனே!’ என ஸஹீஹான செய்தியாக இடம் பெறும் நபிமொழி பற்றி இவர் கேள்விப்படவில்லையா? இவருக்கான உவமானம் அழுக்கடைந்த (குறையுள்ள) ஆபரணத்தை விற்பனை செய்யும்போது அதன் குறையை மறைத்து செய்தவனின் உவமானத்தை தவிர வேறு உவமானமாக இருக்க முடியுமா? மக்களில் பெரும்பாலானவர்கள் பலவீனமான செய்தி, சரியான செய்தி பற்றி அறியாதவர்களாக இருக்கின்றனர். அதன் குறைகள் ஹதீஸ்கலை விமர்சகர்களுக்கே புலப்படும். ஹதீஸ்கலை சார்ந்த ஒரு அறிஞன் ஒரு செய்தியை ஒரு நூலில் இடம் பெறச் செய்ய, அதனை மற்றொரு அறிஞர் ஆதாரமாகக் கொண்டால், ‘ஸஹீஹ்’ ஆக இருப்பதால்தானே ஆதாரமாகக் கொண்டுள்ளார் என பொதுமக்கள் மனதில் இழையோடும் அல்லவா? (இவ்வாறான தவறை ஹதீப் செய்யலாமா) எனக் குறிப்பிடும் இப்னுல் ஜவ்ஸி அவர்கள்
ولكن عصبية ، ومن نظر في كتابه الذي صنفه في القنوت وكتابه الذي صنفه في الجهر ومسألة الغيم واحتجاجه بالأحاديث التي يعلم بطلانها اطلع على فرط عصبيته وقلة دينه ثم ذكر له أحاديث أخرى كلها عن أنس أن النبي صلى الله عليه وسلم لم يزل يقنت في الصبح حتى مات وطعن في أسانيدها
இருந்தாலும் தான் சார்ந்துள்ள மத்ஹப் வெறி!!! ‘குனூத்’ சம்மந்தமாக இவர் தொகுத்து வழங்கிய நூலையும், (தொழுகையில்) சப்தமாக ‘பிஸ்மில்லாஹ்’ கூறுவது பற்றிய அவரது நூலையும், ‘மஸ்அலுதுல் ஙைம்’ (மேக மூட்டங்களால் வானம் சூழப்பட்ட நிலையில் நடந்துகொள்வதன் மார்க்க சட்டம்) பற்றிய ஆய்வையும், ஆதாரமற்றவை என அவர் அறிந்திருக்கும் பல செய்திகளை ஆதாரமாகக் கொள்வதையும் ஒருவர் அவதானித்தால் அவரது எல்லைமீறிய மத்ஹப் வெறியையும், அவரது மார்க்கக் குறைவையும் சரியாக புரிந்துகொள்வார் எனக் குறிப்பிட்ட பின்னர் ‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உலகைப்பிரியும் வரை ‘சுபஹ்’ தொழுகையில் குனூத் ஓதிக்கொண்டே இருந்தார்கள் என ‘அனஸ்’ (ரழி) அவர்கள் வழியாக அறிவிக்கப்படும் சகல செய்திகளையும் எடுத்துக்கூறி அதன் அறிவிப்பாளர் வரிசைகளை விமர்சித்துள்ளார்கள். (ஆதாரநூல்: நஸபுர்ராயா. பா: 1. பக்: 136)
சகோதரர்களே! ஷாபிஈ மத்ஹப் மௌலவிகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட இமாம் சைலயீ (ரஹ்) அவர்கள்தான் இந்தச் செய்தியை சொன்னார்கள். நாமாக எதையும் எமது விருப்பு வெறுப்பின் அடிப்படையில் எழுதவில்லை. அவர்களிடம் நாம் குறிப்பிடும் இந்த நூல்களாவது இருக்கிறனவா? எனக் கேளுங்கள்.
குறிப்பு:- ‘சுபஹ்குனூத்’ பற்றிய மேலதிக விபரங்களுக்கு அதனுடன் தொடர்புடைய ஹதீஸ் பலவீனமானதுதான் என்பதை ஆணித்தரமாக நிரூபிக்கும் அல்ஹாபிழ் இப்னு ஹஜர் அல்அஸ்கலானி (ரஹ்) அவர்களின் ‘தல்ஹீசுல் ஹபீர்’ நூல், பாக: 1-ன் 245, 249 ஆகிய பக்கங்களை பார்வையிடவும்
இப்படியும் ஒரு மழுப்பல்: வித்ரு தொழுகையில் ஓதப்படும் குனூத்தில் ‘அல்லாஹும்மஹ்தினீ’ எனக் கூறி பிரார்த்தனை செய்கிறோமே இது ஆதாரமாகாதா?
விளக்கம்:- குனூத் பற்றிய அறிவில்லாத மக்களிடம் இப்படியும் மழுப்பி, அவர்களை குழப்பத்தில் ஆழ்த்தி ‘சுபஹ்’ குனூத்தை நிலை நாட்டிட படாதபாடுபடுவர்.
‘வித்ர்’ தொழுகையில் ஓதப்படும் ‘குனூத்’ பற்றி ஆய்வு செய்த அறிஞர்களில் ஷாபிஈ மத்ஹபினர் ஏற்றுக் கொள்ளும் இமாம் இப்னு ஹஜர் அல்அஸ்கலானி (ரஹ்) அவர்களும் ஒருவர். இவர் தனது ‘தல்ஹீஸுல் ஹபீர்’ (பா:1.பக்:489 – ல்) இது பற்றி குறிப்பிடும்போது:
(فَائِدَة ) رَوَى الْحَاكِمُ فِي الْمُسْتَدْرِكِ مِنْ طَرِيقِ عَبْدِ اللَّهِ بْنِ سَعِيدٍ الْمَقْبُرِيِّ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ : { كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إذَا رَفَعَ رَأْسَهُ مِنْ الرُّكُوعِ فِي صَلَاةِ الصُّبْحِ فِي الرَّكْعَةِ الثَّانِيَةِ ، رَفَعَ يَدَيْهِ فَيَدْعُو بِهَذَا الدُّعَاءِ : اللَّهُمَّ اهْدِنِي فِيمَنْ هَدَيْتَ ، وَعَافِنِي فِيمَنْ عَافَيْتَ ، وَتَوَلَّنِي فِيمَنْ تَوَلَّيْتَ ، وَبَارِكْ لِي فِيمَا أَعْطَيْتَ ، وَقِنِي شَرَّ مَا قَضَيْتَ ، إنَّك تَقْضِي وَلَا يُقْضَى عَلَيْكَ ، إنَّهُ لَا يَذِلُّ مَنْ وَالَيْتَ ، تَبَارَكْتَ وَتَعَالَيْتَ } قَالَ الْحَاكِمُ : صَحِيحٌ ، وَلَيْسَ كَمَا قَالَ فَهُوَ ضَعِيفٌ لِأَجْلِ عَبْدِ اللَّهِ ، فَلَوْ كَانَ ثِقَةً لَكَانَ الْحَدِيثُ صَحِيحًا ، وَكَانَ الِاسْتِدْلَال بِهِ أَوْلَى مِنْ الِاسْتِدْلَالِ بِحَدِيثِ الْحَسَنِ بْنِ عَلِيٍّ الْوَارِدِ فِي قُنُوتِ الْوِتْرِ . وَرَوَى الطَّبَرَانِيُّ فِي الْأَوْسَطِ مِنْ حَدِيثَ بُرَيْدَةَ نَحْوَهُ ، وَفِي إسْنَادِهِ مَقَالٌ أَيْضًا) التلخيص الحبير في تخريج أحاديث الرافعي الكبير – (ج 1 ص 489
கவனிக்க: நபி (ஸல்) அவர்கள் ‘சுபஹ்’ தொழுகையில் இரண்டாவது ரகஅத்தில் ருகூவில் இருந்து நிலைக்கு வந்ததும் இந்த ‘அல்லாஹும்மஹ்தனீ பீமன் ஹதைத்த… என்ற துஆவை ஓதுவார்கள். என அறிவித்துவிட்டு, ‘இமாம் ஹாகிம்’ அவர்கள் தனது ‘முஸ்தத்ரக்’ எனும் நூலில் அது சரியான அறிவிப்பு, எனக் கூறினாலும் ‘ஹாகிம் இமாம் கூறியதைப் போன்று அது சரியான அறிவிப்பு அல்ல. மாற்றமாக அந்த அறிவிப்பாளர் தொடரில் ‘அப்துல்லாஹ் பின் ஸயீத் அல்மக்புரி’ என்பவர் இடம் பெறுவதால் அது பலவீனமானதாகும். அவர் நம்பகமானவராக இருந்தால் அந்த ஹதீஸ் ஸஹீஹானதாக இருந்திருக்கும். மாத்திரமின்றி ‘வித்ர் குனூத்’ பற்றி ‘ஹஸன் பின் அலி’ (ரழி) அவர்கள் மூலம் அறிவிக்கப்படும் செய்தியைக் கொண்டு ஆதாரம் எடுப்பதைவிடவும் இந்த அறிவிப்பின் மூலம் ஆதாரம் எடுப்பது ஏற்றமானதாக இருந்திருக்கும். மேலும் புரைதா (ரழி) அவர்கள் மூலம் இது பற்றி இமாம் தபரானி அவர்கள் ‘அல்முஃஜம் அல்அவ்ஸத்’ எனும் நூலில் எடுத்தெழுதி இருந்தாலும் அதிலும் விமர்சனம் உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்கள். (பார்க்க: தல்ஹீஸுல் ஹபீர். (பா:1.பக்:489)
இதை ஆழ்ந்து அவதானித்தால் சுபஹ் குனூத் பற்றிய இமாம் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்களின் தீர்க்கமான முடிவு பற்றி அறிந்து கொள்வதோடு, வித்ர் குனூத்தையும் இமாமவர்கள் சரிகாணவில்லை என்பதை விளங்கிக் கொள்ளலாம். இதன் பின்னரும் அந்த ஆதாரம், இந்த ஆதாரம் எனக் கூறுவது அறைகுறைகளின் உருட்டலும் பிரட்டலும்தான்.
இன்னொரு ஆதாரம்: முஸ்லிமில் இடம் பெறும் பின்வரும் ஹதீஸையும் அதுபற்றிய அறிவின்றி மற்றொரு ஆதாரமாகக் கொள்வர்.
عَنْ الْبَرَاءِ قَالَقَنَتَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْفَجْرِ وَالْمَغْرِبِ (صحيح مسلم
பஜ்ரிலும், மஃரிபிலும் நபி (ஸல்) அவர்கள் குனூத் ஓதுபவர்களாக இருந்தார்கள். (முஸ்லிம்) என்பதுதான் அந்தச் செய்தி. இது பிஃறு மஊனா சம்பவத்துடன் தொடர்புடையதாகும். ஸஹபாக்கள் பலர் கொலை செய்யப்பட்ட நிகழ்வைப் பின்னணியாகக் கொண்டே நபி (ஸல்) அவர்கள் இந்த குனூத்தை ஓதியுள்ளார்கள். அதிலும் சுபஹ் தொழுகையில் மாத்திரம் குனூத் ஓதியதாக இல்லை. இந்த ஹதீஸை சுபஹ் குனூத்திற்கு ஆதாரமாக ஏற்றுக்கொள்வார்களானால் மஃரிப் தொழுகையிலும் ஏற்று அதிலும் ஓதியாகவேண்டும். அப்படிச் செய்யத் தயாரா?
கலீஃபாக்களின் நடைமுறையிலும் காணப்படாத குனூத்:
عن أبي مالك الأشجعي سعد بن طارق قال قلت لأبي يا أبت إنك قد صليت خلف رسول الله صلى الله عليه وسلم وأبي بكر وعمر وعثمان وعلي ها هنا بالكوفة نحوا من خمس سنين فكانوا يقنتون في الفجر فقال أي بني محدث سنن ابن ماجه 1241 قال الحافظ ابن حجر إسناده حسن (تلخيص الحبير ج1 ص245)
அபூமாலிக் அல்அஷ்ஜயீ (ரழி) அவர்கள் தனது தந்தையிடம் தந்தையே! தாங்கள் முஹம்மத் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னாலும், அபூபக்ர், (ரழி) உமர், (ரழி) உஸ்மான், (ரழி) கூபாவில் கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் அலி (ரழி) ஆகியொருக்குப் பின்னாலும் தொழுதிருக்கிறீர்கள், அவர்களில் ஒருவராவது பஃஜ்ரில் குனூத் ஓதினார்களா? எனக் கேட்டேன். அதற்கு மகனே! அது புதிய வழிமுறையாகும் எனப் பதிலளித்தார்கள் என்ற செய்தியினை இமாம்களான இப்னுமாஜா, பைஹகி, தயாலிஸி, நஸயி, (ரஹ்) ஆகியோர் தமது கிரந்தங்களில் பதிவு செய்துள்ள அறிவிப்பாளர் வரிசையின் தரம் பற்றிக் குறிப்பிடும் இமாம் இப்னு ஹஜர் அல்அஸ்கலானி (ரஹ்) அவர்கள் ‘இது ‘ஹஸன்’ (ஆதாரத்திற்கு கொள்ள முடியுமான) தரத்தில் அமைந்தாகும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்கள். (பார்க்க: ‘தல்ஹீசுல் ஹபீர்’ பாக: 1- பக் : 245)
‘சுபஹ் குனூத்’ ஓதும் மௌலவிகளே! அல்லாஹ்வின் தூதரோ! அவர்களின் நல்வழி நடந்த நாட்பெரும் கலீபாக்களோ சுபஹ் தொழுகையில் ‘குனூத்’ ஓதவில்லை என அறிவிக்கும் நபித்தோழரின் செய்தியை அமுல் செய்யாது நீங்கள் சார்ந்திருக்கும் மத்ஹபின் தீர்ப்பை அமுல் செய்வது பெரும் கொடுமை அல்லவா ?
மத்ஹபுகளுக்குள்ளும் தீர்க்க முடியாத முரண்பாடு:
குர்ஆனையும், ஹதீஸையும் ஆதாரமாகக் கொண்டு செயல்படுவதாகக் கூறிக்கொள்ளும் மத்ஹபுகளுக்கிடையில் முரண்பட்ட கருத்துக்கள் காணப்படலாமா? இரு மத்ஹபுகள் சுபஹ் குனூத்திற்கு ஆதாரம் இல்லை என அடித்துக் கூறும் அதே நேரத்தில் அடுத்த இருமத்ஹபுகள் ஆதாரம் இருப்பதாக வாதிடுகின்றன.
ஒரு மார்க்க விஷயத்தில் இரு முரண்பட்ட கருத்துக்கள் காணப்பட்டால் ஆய்வின் பின் ஊர்ஜிதம் செய்யப்படும் கருத்தே அதில் ஏற்றுக் கொள்ளப்படும் நிலையில் ஒவ்வொரு பிரிவினரும் தமது கருத்தே சரியானது, தமது கருத்தே சரியானது என வாதிட்ட போதிலும் அதில் சரியானது என முடிவு செய்யும் அதிகாரம் ஹதீஸ் கலை அறிஞர்களுக்கே உண்டு.
அதன் அடிப்படையில் ‘சுபஹ் குனூத்’ பற்றிய ஹதீஸின் தரம் பலவீனமானது, ஆதாரத்திற்கு கொள்ள முடியாதது என அறிஞர்களால் விளக்கப்பட்ட பின்பும் ஷாபிஈ மத்ஹப் மௌலவிகள் பலர் வலித்து, வலித்து அதனை ஆதாரபூர்வமான செய்தியாக சித்தரிப்பதை அவதானிக்கிறோம்.
இவர்கள் தங்களை அறியாமலே அவர்களால் கொள்கையளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ‘ஹனபி’ மற்றும் ‘ஹன்பலி’ ஆகிய மத்ஹபினருக்கு மறுப்புக் கூறுகின்றனர், அவர்களைச் சாடுகின்றனர் அது பித்அத் என்றும் கூறுகின்றனர்.
ஹனபி மத்ஹப் அறிஞரின் சாட்டை:
சுபஹ் குனூத்தை மறுதலிக்கும் முல்லா அலிகாரி (ரஹ்) என்ற ஹனபி மத்ஹப் சார்ந்த அறிஞர் தனது கூற்றிற்கு துணையாக விளங்கும் அறிஞர்களின் விபரங்களை தந்த பின் தனது முடிவு பற்றி பின்வருமாறு அறிவிப்பதைப் பார்க்கின்றோம்.
وقد ذكرنا عن ابن عمر وابن عباس أن القنوت في الصبح بدعة وقد ذكرنا أن ابن عمر كان ينكر على من يقنت وقد ذكرنا من التابعين الذين لا يرون القنوت عمرو بن ميمون والأسود والشعبي وسعيد بن جبير وإبراهيم وطاووسا حتى قال طاووس القنوت في الفجر بدعة وحكي عن الزهري أيضا. عمدة القاري جزء 7 – صفحة 23
‘சுபஹ் குனூத் பித்அத் ஆகும்’ என்பதை இப்னு உமர் (ரழி) அவர்கள் மூலமாகவும், இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் மூலமும் நாம் எடுத்துக் கூறியதுடன் ‘இப்னு உமர் (ரழி) அவர்கள் சுபஹில் குனூத் ஓதியவரை கண்டித்ததையும் எடுத்தெழுதியுள்ளோம். மேலும் அம்று பின் மைமூன், அல்அஸ்வத், ஷஅபி, ஸயீத் பின் ஜுபைர், இப்ராஹீம், தாவூஸ் போன்ற தாபியீன்கள் மூலமும் எடுத்துக் கூறியுள்ளோம். தாவூஸ் என்பவர் ‘ஃபஜ்ரில் குனூத் ஓதுவது பித்அத்’ எனக் கூறியுள்ளார்கள். இமாம் சுஹ்ரி அவர்கள் மூலமும் இக்கருத்து எடுத்தெழுதப்பட்டுள்ளது. (உம்ததுல் காரி. பாகம்: 7- பக்கம். 23)
ஹனபி மத்ஹப் சார்ந்தோர் ஷாபிஈ மத்ஹபினர் குனூத்திற்காக ஆதாரமாகக் கொள்ளும் செய்தியை அங்கீகரிக்காதது மட்டுமின்றி, அதனை விமர்சித்தும் உள்ளனர். அவர்களின் கூற்றே சரியானதும் கூட. இந்நிலையில் எது? யாரின் கூற்று சரியானது? என்பதை ஷாபிஈ மத்ஹப் மௌலவிகளே தீர்ப்புக் கூற வேண்டும் .
சுபஹ் குனூத்தின் பெயரால் இழைக்கப்படும் தவறுகள்.
சுபஹ் குனூத்தின் பெயரால் இழைக்கப்படும் தவறுகளில் முக்கியமான சிலவற்றை இங்கு கவனிப்போம்.
அல்லாஹ்வின் தூதரின் போதனைகள் புறக்கணிக்கப்படுதல். ‘சுபஹ் குனூத்’ ஓதுவோர் ஹதீஸ் பலவீனமான செய்தி என அறிந்திருந்தும் தமது மத்ஹபின் கருத்தை விட்டு விலகி, முஹம்மத் (ஸல்) அவர்களின் கருத்திற்கு விடையளிப்பது பெரும்பாவமாக போதிக்கப்பட்டிருக்கிறது. இன்றும் இவர்களுக்கு அரபு மத்ரஸாக்களில் போதிக்கப்படுவதை இவர்கள் மறுக்க முடியாது என்பதை பின்வரும் இமாமின் கூற்றில் இருந்து அறியலாம்.
لا يجوز تقليد ما عدا المذاهب الأربعة ولو وافق قول الصحابة والحديث الصحيح ، والآية. فالخارج عن المذاهب الأربعة ضال مضل.ربما أداه ذلك إلى الكفر.لأن الأخذ بظواهر الكتاب ، والسنة من أصول الكفر . (حاشية الصاوي على تفسير الجلالين .310 ط. إحياء التراث العربي.
‘நான்கு மத்ஹப் அல்லாத எந்த ஒருவழிமுறையையும் கண்மூடித்தனமாக பின்பற்றுதல் கூடாது. அது ஸஹபாக்களின் தீர்ப்பையும், ஸஹீஹான நபிவழியையும், குர்ஆன் வசனத்தையும் ஒத்ததாக இருந்தாலும் சரியே! (மத்ஹபையே பற்றிக் கொள்ள வேண்டும்). ஏனெனில் நான்கு மத்ஹபுகளுக்கும் அப்பாற்பட்டவன் வழிகெட்டவனும், வழிகெடுப்பவனுமாவான். அது சிலவேளை இறை மறுப்பின் பக்கம் இட்டுச்செல்லலாம். குர்ஆன், மற்றும் ஹதீஸில் வெளிப்படையாக தெரிவதை எடுப்பது (அமுல் செய்வது) குஃப்ரின் அடிப்படைகளில் ஒன்றாக இருக்கிறது. (ஆதார நூல்: ஹாஷியதுல் அல்லாமா அல்ஸாவி அலல்ஜலாலைன். பாக: 3- பக்கம். 10).
குர்ஆனையும், நபிவழியையும், நபித்தோழர்களின் தீர்ப்பையும் அவமதிக்குமாறு போதனை செய்யும் மத்ஹபுகளின் சித்தாந்தங்களுக்கு வக்காலத்து வாங்கும் மௌலவிகளிடம் இன்றும் இந்த தீர்ப்பே மேலோங்கி இருப்பதைக் காணுகிறோம் .
அதே நேரத்தில் இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் இதற்கு மாற்றமான தீர்ப்பை கூறியுள்ளதை பார்க்கிறோம்.
இமாம் ‘ஷாஃபிஈ (ரஹ்) அவர்களின் தீர்ப்பு:
إذا قلت قولا يخالف كتاب الله تعالى وخبر الرسول صلى الله عليه وسلم فاتركوا قولي ) . ( الفلاني في الإيقاظ ص 50 )
அல்லாஹ்வின் வேதத்திற்கும், அல்லாஹ்வின் தூதரின் கூற்றிற்கும் மாற்றமான ஒரு தீர்ப்பை நான் கூறினால் எனது தீர்ப்பை விட்டு விடுங்கள். பார்க்க: (இமாம் ஃபல்லானி அவர்களின் அல்ஈகாழ். பக்கம்50)
أجمع المسلمون على أن من استبان له سنة عن رسول الله صلى الله عليه وسلم لم يحل له أن يدعها لقول أحد ) . ( الفلاني ص 68 )
‘நபியின் வழிமுறை யாருக்கு தெளிவாகிவிட்டதோ அவர் அதனை யாரின் சொல்லுக்காகவும் விடுவது ஆகுமானது அல்ல (இமாம் ஃபல்லானி அவர்களின் அல்ஈகாழ். பக்கம் 64).
( إذا وجدتم في كتابي خلاف سنة رسول الله صلى الله عليه وسلم فقولوا بسنة رسول الله صلى الله عليه وسلم ودعوا ما قلت ) ( وفي رواية ( فاتبعوها ولا تلتفتوا إلى قول أحد ) . ( النووي في المجموع 163 )
எனது கிரந்தத்தில் நபி (ஸல்) அவர்களின் கூற்றிற்கு முரணானதை நீங்கள் கண்டால் நபியின் வழிமுறையைக் கூறுங்கள். நான் சொன்னதை விட்டு விடுங்கள். மற்றொறு அறிவிப்புபடி ‘நபியின் வழிமுறையை பின்பற்றுங்கள். யாருடைய கூற்றின் பக்கமும் ஏறிட்டும் பார்க்காதீர்கள். (இமாம் நவவியின் மஜ்மூஃ பாகம்: 1. பக்: 63).
(إذا صح الحديث فهو مذهبي ) . ( النووي في المجموع ) 163 )
‘ஹதீஸ் ஆதாரபூர்வமானதாக ஆகிவிட்டால் அதுவேதான் என் மத்ஹப்,’ இதுவே இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்களின் நிலைப்பாடு. அப்படியானால் ‘மத்ஹப்’ பக்தர்கள் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்.?
சுபஹ் குனூத் ஓதுவோர் தனிமையில் சிலர் ஓதிவரும் ‘வித்ர்’ குனூத்தின் வாசகங்களையே ஓதிவருகின்றனர். இது இவர்களிடம் காணப்படும் இரண்டாவது முரண்பாடாகும்.
இதன் மூலம் எவ்வாறு ‘சுபஹ் குனூத்’திற்கு ஆதாரம் கிடையாதோ அதைபோன்று இந்த வாசகங்களை அதில் ஓதுவதற்கும் ஆதாரம் கிடையாது என்பதை விளங்கலாம்.
இமாம் ஷஃபிஈ (ரஹ்) அவர்களை மதிப்பதாக கூறிக்கொள்ளும் இவர்கள் இமாமின் தீர்ப்பை முதுகுக்குப் பின் வீசி உள்ளனர். அதனால் குர்ஆனையோ, அல்லது ஆதாரபூர்வமான நபிவழியையோ, ஏன் இமாமின் தீர்ப்பையோ தாம் மதிக்க தயாரில்லை. நாம் விரும்பியதையே செய்வோம் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கின்றனர்
துணை நூல்கள்.
1) நஸபுர்ராயா. ஆசிரியர்:- இமாம் சைலயீ (ரஹ்)
2) தல்ஹீசுல் ஹபீர். ஆசிரியர்:- இமாம் இப்னு ஹஜர் (ரஹ்)
3) ஃபத்ஹுல் பாரி. ஆசிரியர்:- இமாம் இப்னு ஹஜர் (ரஹ்)
4) ஸாதுல் மஆத். ஆசிரியர்:- இமாம் இப்னுல் கைய்யிம் (ரஹ்)
5) ஷரஹ் ஸஹீஹ் முஸ்லிம். ஆசிரியர்:- இமாம் நவவி (ரஹ்)
6) லிஸானுல் அரப். ஆசிரியர்:- இமாம் இப்னு மன்ழூர் (ரஹ்)
7) முக்தாறுஸ்ஸிஹாஹ். ஆசிரியர்:- முஹம்மத் அபீபக்கர் அல்ராஸி (ரஹ்)
8) மீஸானுல் இஃதிதால். ஆசிரியர்: இமாம் தஹபி (ரஹ்)
9) அல்மஜ்ரூஹீன் . ஆசிரியர்:- இப்னு ஹிப்பான் அல்பிஸ்தி. (ரஹ்)
10) ஈகாழுள் ஹிமம். ஆசிரியர்:- இமாம். ஃபல்லானி (ரஹ்)
11) உம்ததுல் காரி ஆசிரியர்: இமாம் முல்லா அலி அல்காரி (ரஹ்)