ஹிஜ்ரீ ஆறாம் ஆண்டின்போது மதீனா வந்தடைந்திருந்தார் ஓர் இளைஞர். இஸ்லாம் அவரை அவர் பிறந்து வளர்ந்த ஊரைவிட்டு அங்கு இழுத்து
வந்திருந்தது. திருமணம் ஆகாத இள வயதினரான அவருக்கு இருந்த ஒரே உறவு வயதான அவரின் தாய். நபியவர்கள் மதீனாவுக்குப் புலம்பெயரும் முன்பே அந்த இளைஞர் இஸ்லாத்தை ஏற்றிருந்தாலும் அவரின் அம்மா மட்டும் ‘அந்தப் புது மதம் உன்னுடனே இருக்கட்டும்; எனக்கு வேண்டாம்’ என்று இருந்துவிட்டார். ஆனால் சும்மா இல்லை. கோபம் இருந்தது; தன் மகன் தமது மூதாதையர் மார்க்கத்திலிருந்து வழிதவறிப் போய்விட்டானே என்று நிறைய கோபம் இருந்தது.
அதே நேரத்தில் மகனுக்கோ அம்மாவின் மீது அளவற்ற அக்கறை. இறைவனுக்கு இணைவைத்து, உருவ வழிபாட்டில் மூழ்கிப்போயிருக்கும் தன் தாய், மறுமையில் நிரந்தர நட்டத்தை அடையப்போவதை அவரால் கற்பனைகூட செய்து பார்க்க முடியவில்லை. நாள்தோறும் தவறாமல், “அம்மா! ஏக இறைவனை ஏற்றுக்கொள்ளுங்கள். முஹம்மது நபி அல்லாஹ்வின் இறுதித்தூதர் என்பதை உணருங்கள்” என்று வாய்ப்பாடுபோல் அறிவுறுத்திக்கொண்டே இருந்தார் அவரும்.
அதையெல்லாம் கேட்டு ஆத்திரம்தான் அதிகமாகும் அம்மாவுக்கு. முகம் வேகமாக மறுபுறம் திரும்பிக்கொள்ளும். அதைக்கண்டு தொந்தரவு செய்யாமல் வருத்தத்துடன் சென்றுவிடுவார் மகன். பிறகு, அன்றோ, அடுத்த நாளோ அதே கதை மீண்டும் தொடரும்.
ஒருநாள்-
கோபத்தில், முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அவச்சொல் சொல்லிவிட்டார் அந்த மாது. அனைவரையும்விட, அனைத்தையும்விட நபியவர்கள்மேல் அப்பட்ட பாசமும் நேசமும் கொண்டிருந்த அந்த இளைஞர் அப்படியே துடிதுடித்துப்போனார். தம்மைத் திட்டியிருந்தால்கூட பொருட்டற்றுப் போயிருக்கும் அவருக்கு. துடைத்துவிட்டுப் போயிருப்பார். அல்லாஹ்வின் தூதரைப்பற்றிய அவச்சொல் கேட்க நேர்ந்த அவலத்தில் அவருக்கு ஆத்திரத்திலும் கைச்சேதத்திலும் கண்ணிலிருந்து பொத்துக்கொண்டு கொட்டியது நீர். இன்னது செய்வது என்று அறியாமல் நபியவர்களிடம் ஓட,
“ஏன் இந்த விம்மலும் அழுகையும்?” என்று கரிசனமாய் விசாரித்தார்கள் நபியவர்கள்.
“அல்லாஹ்வின் தூதரே! எப்படியும் என் தாய் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று நான் தொடர்ந்து முயன்று கொண்டேயிருந்தேன். அவரும் விடாது நிராகரித்துக்கொண்டே இருந்தார். ஆனால் இன்று தங்களைப் பற்றி அவதூறு சொல்லிவிட்டார். அவரது மனத்தை இஸ்லாத்தை நோக்கித் திருப்ப அல்லாஹ்விடம் இறைஞ்சுங்கள்” என்று கண்ணீர் கொப்பளிக்க விண்ணப்பித்தார் மகன்.
இறைஞ்சினார்கள் நபியவர்கள். பாரம் இறங்கி, மனம் இலேசானது அவருக்கு. இல்லம் திரும்பினார்.
வந்தால், வீட்டின் கதவு அடைத்திருந்தது. உள்ளே ஏதோ நீர் சிதறும் அரவம். ஒன்றும் புரியாதவர் வீட்டின் உள்ளே நுழைய முயல, உத்தரவு வந்தது, “உள்ளே வராதே. அங்கேயே நில்!”
திகைத்துப்போய் நின்ற இடத்திலேயே நின்றார் அவர்.
oOo
அரேபியாவில் தவ்ஸ் என்றொரு கோத்திரம் இருந்தது. தெற்குப் பகுதியில் செங்கடலின் கரையோரம் அமைந்திருந்தது அவர்களது ஊர். அந்தக் கோத்திரத்தின் முக்கியப்புள்ளி துஃபைல் பின் அம்ரு ரலியல்லாஹு அன்ஹு. இவரது வரலாற்றை முன்னரே பார்த்தோம். இருந்தாலும் சற்றுச் சுருக்கமாய் அதை இங்கு நினைவுபடுத்திக் கொள்வோம்.
மக்காவிலுள்ள குரைஷிகளின் பேச்சைக் கேட்டு, நபியவர்களின் பிரச்சாரம் தப்பித்தவறிக்கூட காதில் விழுந்துவிடக்கூடாதே என்று பஞ்சை எடுத்து அடைத்துக்கொண்டு கஅபாவிற்குச் சென்றவர் அவர். ஆனால் அதையும்மீறி உண்மை அவர் செவியுள் நுழைய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்.
மட்டுமல்லாது, “அல்லாஹ்வின் தூதரே! என் குலத்தவர் என்னைப் பெரிதும் மதிக்கக்கூடியவர்கள். நான் இப்பொழுது அவர்களிடம் சென்று அவர்களையெல்லாம் இஸ்லாத்திற்கு அழைக்கப் போகிறேன். அனுமதி தாருங்கள்" என்று நபியவர்களிடம் விடைபெற்றுக் கொண்டு திஹாமாவுக்குத் திரும்பினார் துஃபைல்.
மக்காவில் தாம் கண்டுணர்ந்து வந்ததை அவர் பிரமிப்பாய் விவரித்துக் கூறியதைக் கேட்டு அவரின் தந்தை, மனைவி தவிர வேறு யாரும் பெரிதாய் அலட்டிக் கொள்ளவில்லை. அவர் சொல்வதைக் காதிலும் போட்டுக் கொள்ளவில்லை. ஆனால் ஓர் இளைஞர் இருந்தார். அவர் பெயர் அப்துல் ஷம்ஸ். படு சூட்டிகை, கெட்டி. அவர் மட்டும் சட்டென்று பிடித்துக் கொண்டார் அந்தச் செய்தியை.
"இது எனக்குப் புரிகிறது. உன்னதம் இது. நான் ஏற்றுக் கொள்கிறேன் துஃபைல்”
சில காலம் கழித்து துஃபைல் பின் அம்ரு, அப்துல் ஷம்ஸையும் அழைத்துக் கொண்டு நபியவர்களைச் சந்திக்க மக்காவுக்கு வந்தார். அப்பொழுதுதான் அந்த இளைஞருக்கு நபியவர்களுடனான முதல் நேரடி அறிமுகம் ஏற்பட்டது.
"இந்த இளைஞர் யார்?" விசாரித்தார்கள் நபியவர்கள்.
"என் கோத்திரம்தான். புத்திசாலிப் பையன். உடனே ஏற்றுக் கொண்டார்" என்று அறிமுகப்படுத்தினார் துஃபைல்.
"உன் பெயர் என்ன?"
"அப்துல் ஷம்ஸ்."
அதன் பொருள் சூரியனின் அடிமை என்பதால், "அது வேண்டாம். இன்றிலிருந்து உன் பெயர் அப்துர் ரஹ்மான்" ‘அருளாளனின் அடிமை’ என்று பெயர் மாற்றினார்கள் நபியவர்கள்.
"என் தந்தையும் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும் அல்லாஹ்வின் தூதரே! நான் இன்றிலிருந்து அப்துர் ரஹ்மான்" என்று உவந்துபோனார் - பிற்காலத்தில் அபூஹுரைரா என்ற பெயரில் மிகவும் பிரபல்யமடையப் போகும் அவர். ரலியல்லாஹு அன்ஹு.
அப்துர் ரஹ்மான், அபூஹுரைராவாக மாறியது? அது ஒரு பூனைக்குட்டியால் நிகழ்ந்தது.
அவர் இளவயதில் பூனைக்குட்டி ஒன்றை வளர்த்து வந்தார். அதன்மீது அலாதிப் பிரியம். அதனுடன் விளையாடுவது, எங்குச் சென்றாலும் அதைக் கொண்டு செல்வது என்று பூனையும் கையுமாக இருந்துவர, அவரின் நண்பர்கள் செல்லமாக அபூஹுரைரா என்று பெயர் சூட்டிவிட்டார்கள். ஹுரைரா என்றால் பூனைக்குட்டி. அரபுகுலத்தில் இன்னாரின் தந்தை என்று அழைப்பதற்கும் இன்னதின் பிரியர் எனக் குறிப்பதற்கும் 'அபூ' எனும் சொல் வழக்கிலிருந்ததது. அதனால் பூனைக்குட்டியின் பிரியர்.
பிற்காலத்தில் அவர் மதீனாவில் வாழும்போது நபியவர்கள் இவரை அவ்வப்போது "அபூஹிர் (பூனைப் பிரியரே!)" என்று செல்லமாய் அழைக்க, அபூஹுரைராவுக்கு அது மிகவும் பிடித்துப்போனது. அப்படியே பூனைக்குட்டியின் பிரியராகப் பெயர்பெற்றுப் போனார் அபூஹுரைரா.
ஒருநாள் அப்துல்லாஹ் இப்னு ராஃபி என்பவர் இதுபற்றி அபூஹுரைராவிடம் கேட்டார். “உங்களுக்கு அபூஹுரைரா எனும் செல்லப்பெயர் எப்படி?”
“என்னைக் கண்டு திகிலடைகிறீர்களோ?” என்று பதில் கேள்வி கேட்டார் அபூஹுரைரா.
“நிச்சயமாக இல்லை. ஆனால் தங்கள்மீது எனக்குப் பெருமதிப்பு உண்டு” என்றார் அப்துல்லாஹ்.
“ஒருகாலத்தில் என் குடும்பத்தின் நிமித்தம் நான் ஆடுகளைப் பேணிவந்தேன். அப்பொழுது என்னிடம் பூனைக்குட்டி ஒன்று இருந்தது. அதனால் எனக்கு இந்தச் செல்லப்பெயர் வந்து ஒட்டிக்கொண்டது.”
அப்படிவந்து ஒட்டிக்கொண்ட அந்தப் பெயர் இஸ்லாமிய வரலாற்றின் புகழ்பெற்றப் பெயராக அமைந்து ஹதீத் நூல்கள் அனைத்திலும் மிகமுக்கியமான பெயராக நிலைத்துப்போனது. அது, பெயர் காரணத்தினால் அல்ல. கல்வியின் நிமித்தம் அவர் காட்டிய காட்டுத்தனமான உழைப்பு, அர்பணிப்பு என்று அப்பெயருக்குப் பின்னால் சில அம்சங்கள் ஒளிந்து கொண்டுள்ளன. பார்ப்போம். அதற்குமுன் -
அவர் மதீனாவுக்கு வந்துசேர்ந்து துவக்கிய வாழ்க்கையைப் பார்த்துவிடுவோம்.
oOo
துஃபைல் பின் அம்ருவுடன் மக்காவுக்குச் சென்று நபியவர்களைச் சந்தித்த அபூஹுரைரா, திஹாமாவுக்கே திரும்பிவிட்டார். வந்தவர் ஆடு மேய்ப்பதும் தம் வயிற்றுப்பாட்டைக் கவனிப்பதுமாக இருந்து கொண்டிருந்தார். அந்தக் காலகட்டத்தில் அவரது வாழ்க்கையில் பிரமாதமாய் எதுவும் நிகழ்ந்துவிடவில்லை. தகுந்த தருணத்திற்காகக் காத்துக்கொண்டிருந்தது அவரது வாழ்க்கை.
இங்கு மக்காவில் பல நிகழ்வுகள். பிறகு நபியவர்கள் மக்காவிலிருந்து மதீனா புலம்பெயர்ந்து, அடுத்த ஆறு ஆண்டுகள் அங்கும் பல நிகழ்வுகள். ஹிஜ்ரீ ஆறாம் ஆண்டு, ஒருநாள் தவ்ஸ் குலத்து மக்களின் குழுவொன்று நபியவர்களைச் சந்திக்க மதீனாவுக்குக் கிளம்பியது. பல குல-கோத்திரங்களின் மக்கள், இஸ்லாமிய ஒழுக்க நெறியைக் கேள்விப்பட்டு, உணர்ந்து, அதுபற்றி மேலும் அறிய மதீனா சென்று நபியவர்களைச் சந்தித்துக் கொண்டிருந்தனர். அப்படிக் கிளம்பிய தம் தவ்ஸ் மக்களுடன் அபூஹுரைராவும் இணைந்துகொண்டு மதீனாவுக்குப் புலம்பெயர்ந்தார்.
வயதான தாய் மட்டுமே அப்பொழுது அவருக்கு இருந்த உறவு. மனைவி, பிள்ளைகள் என்று யாரும் இல்லாததால் இளைஞர் அபூஹுரைரா தமது வாழ்க்கையை நபியவர்களின் சேவைக்கு என்று அர்ப்பணித்துக்கொண்டு 'திண்ணை'யில் வந்து தங்கிவிட்டார். தாயாருக்குச் சிறுகுடில்; இவருக்குப் பள்ளிவாசலின் திண்ணை. குர்ஆன் மூச்சாகவும், நபியவர்கள் ஆசானாகவும் வழிகாட்டியாகவும் ஆகிவிட, அவரது மதீனா வாசம் துவங்கியது.
இறைத்தூதரின் மீது பாசம் என்றால் பாசம், அப்படியொரு பாசம் தோன்றி உருவானது அபூஹுரைராவுக்கு. அவர்களைப் பார்த்துக் கொண்டிருப்பதில் அவர் கண்கள் அயர்வதே இல்லை. நபித்தோழர்கள் அனைவரிடமும் இத்தகு குணாதிசயம் பொதுவாய்ப் பரவி இருந்ததாகத்தான் வரலாறு அறிவிக்கிறது. “இறைத்தூதர் (ஸல்) அவர்களின் முகத்தைவிட அழகானவற்றையோ, ஒளி நிரம்பியவற்றையோ நான் கண்டதே இல்லை; சூரிய ஒளியே அவர்கள் முகத்தில் மிளிர்வதுபோலிருக்கும்” என்பது அபூஹுரைராவே உரைத்த வருணனை.
இது பாக்கியம்; இறைத்தூதருடன் வாழ நேர்ந்தது நற்பாக்கியம்; கிடைத்தற்கரிய பேறு என்பதை உள்ளார்ந்து உணர்ந்தவர் சதா சர்வகாலமும் அல்லாஹ்வைப் புகழ்வதும் அவனுக்கு நன்றி கூர்பவருமாகவே ஆகிப்போனார்.
“அபூஹுரைராவை இஸ்லாத்தை நோக்கிச் செலுத்திய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். அபூஹுரைராவுக்கு குர்ஆனைக் கற்பித்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். அபூஹுரைராவை முஹம்மது நபி (ஸல்) அவர்களின் தோழராக்கி வைத்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.”
இவ்வாசகங்களைப் படிக்கும்போது அவை ஏதோ உணர்ச்சி பிரவாகத்தில் கூறப்பட்டதாக நமக்குத் தோன்றலாம். நிச்சயமாக இல்லை. ஒவ்வொரு வார்த்தையையும் எழுத்தையும் ஆழ உணர்ந்தே அவர் உரைத்ததை அவரது வாழ்க்கை நமக்குத் தெரிவிக்கிறது.
ஒரு பெரிய மனிதரின் அல்லது ஓர் அறிஞரின் அறிமுகமோ, தொடர்போ கிடைத்தாலே புளங்காகிதமடைந்து போகிறதில்லையா நம் மனம். எனில், அகில உலக அதிபதி அல்லாஹ்வால் தேர்ந்தெடுக்கப்பட்ட தூதர், அப்பழுக்கற்ற மாமனிதர், வானவர் மூலம் அந்த சர்வலோக அதிபதியின் வசனங்களைப் பெற்றுக்கொண்டிருப்பவரை நேரில் சந்திக்க, பழக, பேச, அதே காலகட்டத்தில் வாழ வாய்ப்பு அமைந்துவிட்டதைத் தெளிவான சித்தத்துடன் உணர்ந்த அவர் என்ன செய்வார்? இறைவனுக்கு நன்றி உரைத்தார்.
இந்தளவு இஸ்லாத்தின்மீதும் நபியவர்களின்மீதும் நம்பிக்கையும் பாசமும் கொண்டவர் தம் தாய் இதை ஏற்காமல் இருப்பதை எவ்வளவு நாள் பொறுத்துக்கொள்ள முடியும்? இஸ்லாத்தைப் பற்றித் தொடர்ந்து தன் தாயிடம் சொல்லிக்கொண்டே இருப்பார். ‘வந்துவிடுங்கள் அம்மா’ என்று அழைத்துக் கொண்டே இருப்பார். தாயாருக்கோ அவரின் மூதாதையர் மதமும் வழிபாடுமே உசத்தியாக இருந்ததே தவிர அதைத்தாண்டி யோசிக்க அவர் தயாராயில்லை. இன்னும் சொல்லப்போனால் தன் மகன் வழிதவறிப்போய் விட்டானே என்றுதான் ஏகப்பட்ட கோபம் அவருக்கு.
ஒருநாள்-
கோபத்தில் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அவச்சொல் சொல்லிவிட்டார் அபூஹுரைராவின் தாய். அனைவரையும்விட, அனைத்தையும்விட நபியவர்கள்மேல் அப்பட்ட பாசமும் நேசமும் கொண்டிருந்த அபூஹுரைரா அப்படியே துடிதுடித்துப்போனார். தம்மைத் திட்டியிருந்தால்கூட பொருட்டற்றுப் போயிருக்கும் அவருக்கு. துடைத்துவிட்டுப் போயிருப்பார். அல்லாஹ்வின் தூதரைப்பற்றிய அவச்சொல் கேட்க நேர்ந்த அவலத்தில் அவருக்கு ஆத்திரத்திலும் கைச்சேதத்திலும் கண்ணிலிருந்து பொத்துக்கொண்டு கொட்டியது நீர். இன்னது செய்வது என்று அறியாமல் நபியவர்களிடம் ஓடினார்.
“ஏன் இந்த விம்மலும் அழுகையும் அபூஹுரைரா?” என்று கரிசனமாய் விசாரித்தார்கள் நபியவர்கள்.
“அல்லாஹ்வின் தூதரே! எப்படியும் என் தாய் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று நான் தொடர்ந்து முயன்று கொண்டேயிருந்தேன். அவரும் விடாது நிராகரித்துக்கொண்டே இருந்தார். ஆனால் இன்று தங்களைப் பற்றி அவதூறு சொல்லிவிட்டார். அவரது மனத்தை இஸ்லாத்தை நோக்கித் திருப்ப அல்லாஹ்விடம் இறைஞ்சுங்கள்” என்று கண்ணீர் கொப்பளிக்க விண்ணப்பித்தார்.
“யா அல்லாஹ்! அபூஹுரைராவின் தாயை நேர்வழியில் செலுத்துவாயாக!” என்று இறைஞ்சினார்கள் நபியவர்கள்.
பாரம் இறங்கி, மனம் இலேசானது அவருக்கு. இல்லம் திரும்பினார். வந்தால், வீட்டின் கதவு அடைத்திருந்தது. உள்ளே நீர் சிதறும் அரவம். ஒன்றும் புரியாதவர் வீட்டின் உள்ளே நுழைய முயல, உத்தரவு வந்தது, “உள்ளே வராதே. அங்கேயே நில் அபூஹுரைரா!”
சற்று நேரம் கழித்து கதவு திறந்தது. குளித்து, உடைமாற்றி, புத்துணர்வுடன் இருந்தார் அபூஹுரைராவின் தாய். அடுத்து அவர் கூறியதுகேட்டு, அபூஹுரைராவின் உடலைத் தொற்றியது அந்தப் புத்துணர்வு.
“வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறில்லை. முஹம்மது அல்லாஹ்வின் தூதர்”
தம் தாய் கூறிய வாசகம் கேட்டு மீண்டும் கண்களில் கண்ணீருடன் ஓடினார் இறைத் தூதரிடம். இம்முறை வழிந்தது ஆனந்தக் கண்ணீர்.
”அல்லாஹ்வின் தூதரே! நற்செய்தி அறியுங்கள். அல்லாஹ் தங்களின் பிரார்த்தனையை அங்கீகரித்தான். அபூஹுரைராவின் தாயை இஸ்லாத்தை நோக்கிச் செலுத்திவிட்டான். என்னையும் என் தாயையும் இறை நம்பிக்கைக் கொண்டவர்களின் அன்பிற்கு உரியவர்களாக ஆக்கி வைக்கும்படி அல்லாஹ்விடம் இறைஞ்சுங்கள்.”
நபியவர்கள் இறைஞ்சினார்கள். “யா அல்லாஹ். உன்னுடைய இந்த அடிமையையும் அவன் தாயையும் உன் நம்பிக்கையாளர்களுக்கு உவப்பானவர்களாக ஆக்கு. நம்பிக்கையாளர்களை இந்த இருவருக்கும் உவப்பானவர்களாக ஆக்கு.”
இந்நிகழ்வை பிற்காலத்தில் அபூகாதிர் அஸ்-ஸஹ்மீ என்பவரிடம் அபூஹுரைரா குறிப்பிட்டு, “அல்லாஹ்வின் மீது ஆணையாக! என்னைப் பற்றி அறியவரும் இறை நம்பிக்கையாளர் எவரும் என்மீது நேசம் கொள்ளாமல் இருக்க மாட்டார்.”
இஸ்லாமியக் குடும்பங்களில் முஸ்லிமாகவே பிறந்தவர்களுக்கு அபூஹுரைராவின் மகிழ்வும் குதூகலமும் அதிகம் உணர முடியாமல் போகலாம். ஆனால் இஸ்லாத்தை வாழ்வியல் நெறியாய்த் தேர்ந்தெடுத்து உள்நுழைந்து, அதன் சத்தியத்தில் திளைப்பவர்கள், தம் தாய், இரத்த பந்தங்களின் ஈடேற்றத்திற்காகக் கலக்கமுற்று, கவலைப்பட்டுக் கிடக்கிறார்கள் இல்லையா, அவர்களால்தான் இந்தச் செய்தியின் தாக்கத்தைச் சிறப்பாய் உணரமுடியும்.
பின்னர் வாழ்நாளெல்லாம் ஆத்மார்த்த பாசத்துடன் தம் தாயிடம் அக்கறை செலுத்திவந்தார் அபூஹுரைரா. எங்கேனும் வெளியே செல்ல வேண்டுமெனில், தம் தாயின் அறைவாசலுக்குச் சென்று, “அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உம்மீது உண்டாவதாக” என்பார்.
தாயும் ”வஅலைக்கும் ஸலாம்” என்று பதில் முகமன் கூறுவார்.
“நான் சிறு பிள்ளையாக இருந்தபோது, என்னைப் பரிவோடு தாங்கள் வளர்த்ததுபோல், அல்லாஹ்வும் உங்களுக்குக் கிருபை செய்வானாக.”
“நான் முதுமையடைந்தபோதும் நீ என்னைக் கனிவுடன் நடத்துவதைப்போல், அல்லாஹ்வும் உனக்குக் கிருபை செய்வானாக” என்று தாயிடமிருந்து பதில் வாழ்த்து வரும்.
விடைபெறுவார் அபூஹுரைரா. பிறகு வீடு திரும்பியதும் அதே போன்ற உரையாடல் நிகழும். குர்ஆனில் மூழ்கி வாழ்ந்த நெஞ்சங்கள் குர்ஆன் வாசகங்களாய்த்தான் யதார்த்த உரையாடலையும் அமைத்துக் கொண்டன.
தாம் தாயிடம் பாசம் பேணுவது மட்டுமல்லாது, மற்றவர்களும் தத்தம் பெற்றோரிடம் கனிவாய் நடந்துகொள்ள வேண்டும், உறவினர்களிடம் தயாள குணத்துடன் பழக வேண்டும் என்று வற்புறுத்துவது அபூஹுரைராவின் வழக்கம்.
ஒருநாள், இருவர் நடந்து சென்று கொண்டிருந்தனர். அதில் ஒருவர் மற்றவரைவிட வயதில் மூத்தவர். அவர்களில் இளையவரிடம் கேட்டார் அபூஹுரைரா, “இவர் உங்களுக்கு என்ன உறவு?”
“என் தந்தை.”
அடுத்து அன்புடன் அறிவுரை அளிக்க ஆரம்பித்துவிட்டார் அபூஹுரைரா. “அவரைப் பெயர் சொல்லி அழைக்காதே. அவரை முந்திக்கொண்டு நடக்காதே. அவர் அமருமுன் நீ அமராதே.”
பெற்றோரிடமும் பெரியோரிடமும் பாசமும் மரியாதையும் வழக்கொழிந்துவரும் இக்காலகட்டத்தில் நாம் அனைவரும் படித்து அறிய வேண்டிய ‘நச்’ வசனங்கள் அவை.
oOo
நபியவர்களுடன் ஏற்பட்டுவிட்ட பிணைப்பும் பாசமும், அவர்களைவிட்டு அகலா திண்ணை வாசமும் அபூஹுரைராவின் மார்க்கப் புலமைக்கு அப்படியே பலமான அடித்தளம் அமைத்துவிட்டன. அபூஹுரைராவின் பிரதான வேட்கை, ‘இறைக் கல்வி ஞானம்’ என்றாகிப்போனது. மற்றவர்களெல்லாம் ஞானைத்தை நபியவர்களிடமிருந்து கையேந்திப் பருகினார்கள் என்றால் இவர் மூழ்கிப் பருகினார் என்றுதான் சொல்லவேண்டும். செவிமடுத்தல்; கற்றல்; சேகரித்தல் என்று அசுரத்தனமான உழைப்பு.
ஒருமுறை முஹம்மது நபி (ஸல்) பிரசங்கம் புரிந்துகொண்டிருந்தபோது, ”நான் நிகழ்த்திக் கொண்டிருக்கும் இந்த உரை முடியும்வரை யாரெல்லாம் தங்களது ஆடைகளை விரித்துவைத்து பிறகு அதைத் திரட்டி வைத்துக்கொள்கிறார்களோ, அவர்கள் நான் சொல்வதையெல்லாம் நினைவில் வைத்திருப்பார்கள்” என்று கூற, உடனே அபூஹுரைரா தமது ஆடையை விரித்துவைத்துக் கொண்டார். நபியவர்களின் சொற்பொழிவு முடிந்ததும் தம் ஆடையைச் சுருட்டிக்கொள்ள அது அவரது நெஞ்சை அணைத்துக் கொண்டது. பிற்காலத்தில் இதை அவர் விவரிக்கும்போது, அதன் பின்னர் நபியவர்களின் கூற்றை நான் மறக்கவே இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
இதெல்லாம் எதற்கு வித்திட்டது? நபிமொழிகள் சேகரம் ஆகி நிலைபெற்றுப்போகும் அபூஹுரைராவின் நினைவாற்றலுக்கு.
இஸ்லாமிய ஞானத்திற்காகவும் இறைத்தூதரை விடாது பின்தொடர்ந்து நபிவழிமுறைகளை அறிந்து கொள்வதற்காகவும் அவர் எதிர்கொண்ட சிரமங்கள், கொஞ்சநஞ்சமல்ல. அப்படியான பல நிகழ்வுகளை அவரே விவரி்த்திருக்கிறார்.
உண்பதற்கு எதுவுமே இல்லாமல் கடுமையான பசியும் வாட்டமுமாய்ப் பல பொழுதுகளை அவர் கழிக்க வேண்டியிருந்திருக்கிறது. பசி தாளாமல் என்ன செய்வாரென்றால், குர்ஆன் வசனங்களுக்கு விளக்கம் கேட்பதுபோல் சில தோழர்களை அணுகுவார். அதற்கான விளக்கங்கள் இவருக்கு ஏற்கெனவே தெரிந்திருக்கும். இருந்தாலும் பசி! பேச்சுக் கொடுத்தால் அந்தத் தோழர் தம் வீட்டிற்கு அழைத்துச் சென்று ஏதாவது ஆகாரம் அளித்து உபசாரம் புரிய மாட்டாரா என்ற எதிர்பார்ப்பு. உரிமையுடன் கேட்டாலே மறுக்கப்போவதில்லை நபித் தோழர்கள். இருந்தாலும் அது யாசகமாகிவிடுமோ என்ற கவலையும் கூச்சமுமே அபூஹுரைராவை தடுத்து இவ்விதம் செய்யத் தூண்டின.
ஒருநாள் அடக்கமுடியாத பசி. உண்பதற்கு எதுவுமே இல்லை. நல்ல தட்டையான மூன்று பாறைக் கற்களை எடுத்து, தம் வயிற்றில் இணைத்துக் கட்டிக்கொண்டு, நபித் தோழர்கள் நடமாடும் முக்கிய பாதையின் ஓரமாய்ச் சென்று அமர்ந்துகொண்டார் அபூஹுரைரா. அப்பொழுது அவ்வழியே வந்தார் அபூபக்ரு (ரலி). முகமன் கூறி, அவரிடம் பேச்சுக்கொடுத்து குர்ஆன் வசனம் ஒன்றின் விளக்கம் கேட்க ஆரம்பித்தார் இவர். ‘வாங்க அபூஹுரைரா. வீட்டிற்குப்போய் உணவருந்திக்கொண்டே சாவகாசமாகப் பேசலாம்’ என்று அபூபக்ரு சொல்ல வேண்டும் என்று அவர் முகத்தையே ஆர்வமுடன் பார்த்துக்கொண்டிருந்தன கண்கள். அப்போதைக்கு அதுமட்டுமே அபூஹுரைராவின் ஒரே எதிர்ப்பார்ப்பாய் இருந்தது. ஆனால் அபூபக்ரு அந்த வசனத்திற்கு வியாக்கியானமும் விளக்கமும் அளித்துவிட்டுச் சென்றுவிட்டாரே தவிர, இவரது எதிர்பார்ப்பை உணரவில்லை.
சோர்ந்து அமர்ந்துவிட்டார் அபூஹுரைரா. சற்று நேரம் கழித்து அவ்வழியே வந்தார் உமர் (ரலி). அவரிடமும் அதே முயற்சி. அதே பதில். அதே ஏமாற்றம். பிறகு அவ்வழியே வந்தார்கள் நபியவர்கள்.
இவரை அங்குக் கண்டு ஆச்சரியத்துடன், ”அபூஹுரைரா!” என்று அழைக்க,
“அல்லாஹ்வின் தூதரே! உத்தரவிடுங்கள்” என்று விரைந்து வந்தார். அவர்களிடம் வேறு எதுவும் கேட்கவில்லை.
தாமாகவே அவரைத் தமது இல்லத்திற்கு அழைத்துச் சென்றார்கள் நபியவர்கள். அங்கு பெரியசாடி ஒன்றில் பால் இருந்தது. “ஏது இது?” என்று விசாரிக்க, யாரோ அதை நபியவர்களுக்கு அன்பளிப்பாக அனுப்பிவைத்ததைத் தெரிவித்தார்கள் அன்னை.
அடுத்து நிகழ்ந்ததுதான் வேடிக்கை! குடலைப் புரட்டியெடுக்கும் பசியுடன் ஆவலுடன் பால் சாடியையே பார்த்துக்கொண்டிருந்த அபூஹுரைராவிடம், ”அபூஹுரைரா. பள்ளிவாசலில் தங்கியிருக்கும் ஏழை மக்களை இங்கு அழைத்து வாருங்கள். பசியுடன் இருப்பார்கள். இதை அளிப்போம்” என்று நபியவர்கள் தெரிவிக்க, பரிதாபகரமாகிப் போனது அவர் நிலை.
மற்றவர்களை அழைத்து வரும்முன் நபியவர்கள் தமக்கு அந்தப் பாலில் சிறிது அளித்தால் அருந்திவிட்டுத் தெம்பாகவே செல்லலாம் என்று அவரது ஆழ்மனம் ஏங்கியது. ஆனால், நபியவர்களின் உத்தரவிற்கு அப்படியே அடிபணிந்து பள்ளிவாசலுக்கு விரைந்தார் அபூஹுரைரா. மனம் வியந்தது, “அந்தச் சாடியில் உள்ளது இந்த மக்கள் அனைவருக்கும் எப்படி? ஆளுக்குச் சில துளிகள்தான் கிடைக்குமோ?”
ஏழை மக்கள் நபியவர்களின் இல்லத்திற்கு வந்தார்கள். அனைவரும் அமர்ந்துகொள்ள, அபூஹுரைராவிடமே மீண்டும் கூறினார்கள் நபியவர்கள். “அபூஹுரைரா. அந்தச் சாடியை எடுத்து அவர்களிடம் கொடுங்கள். அவர்கள் பருகட்டும்.”
பங்கிட்டுக் குடிக்கப்போவதில்கூட தமக்கு முதல் வாய்ப்பு அமையவில்லையே என்று ஏமாற்றத்தை அடக்கிக்கொண்டு, அருகில் இருந்தவரிடம் சாடியைக் கொடுத்தார் அபூஹுரைரா. அவருக்கும் நல்ல பசி போலிருக்கிறது. வயிறு நிறையுமளவு குடித்தவர், அதை அடுத்தவருக்குக் கொடுத்தார். அந்த அடுத்தவரும் தம் வயிறு நிறையுமளவு குடித்துவிட்டு அடுத்தவருக்குக் கொடுத்தார். இப்படியே அனைவரிடமும் ஒரு சுற்று சுற்றி வந்தது பால் நிறைந்திருந்த அந்தச் சாடி. இறுதியில் தம்மிடம் வந்த சாடியை நபியவர்களிடம் நீட்டினார் அபூஹுரைரா. அவரை நோக்கிப் புன்னகைத்த நபியவர்கள், “நாமிருவர்தான் பாக்கி“ என்றார்கள்.
“ஆம் அல்லாஹ்வின் தூதரே.”
“எனில் நீங்கள் முதலில் பருகுங்கள்” என்று நபியவர்கள் சொல்ல ஆர்வமுடன் பாலை குடிக்க ஆரம்பித்தார். நபியவர்களுக்கும் மிச்சம் இருக்க வேண்டுமே என்ற அச்சத்தில் சிறிது குடித்துவிட்டு நபியவர்களிடம் நீட்ட, ‘மேலும் அருந்துங்கள்’ என்றார்கள் அவர்கள். ஒவ்வொருமுறை நீட்டும்போதும் அப்படியே சொல்லிக்கொண்டிருந்தார்கள்.
அபூஹுரைராவின் வயிறு முற்றிலும் நிறைந்து போனது. “மேலும் அருந்துங்கள்” என்று நபியவர்கள் கூற, “தங்களைச் சத்தியத்துடன் அனுப்பி வைத்த அந்த ஒருவன் மீது ஆணையிட்டுச் சொல்கிறேன். என் வயிறு நிறைந்துவிட்டது. இதற்குமேல் என்னால் அருந்த முடியாது” என்றார் அபூஹுரைரா. அதன் பின்னரே அதை வாங்கி மீதமிருந்ததை தாம் அருந்தி முடித்தார்கள் நபியவர்கள்.
ஒரு சாடிப் பால் அனைவரின் பசியாற்றிய இறை அற்புதம் இந்தச் செய்தி எனும் உண்மை ஒருபுறமிருக்க, பசியில் அல்லாடிய போதும் நபியவர்களின் சொல்லுக்கு முற்றிலுமாய்க் கட்டுப்பட்டுக் கிடந்த அபூஹுரைராவின் அடிபணிதல்; அப்படி வருந்திக் கிடந்து அவர் கற்றுத் தேறிய இஸ்லாமிய ஞானம்; என்று நமக்கு இதில் புதைந்துள்ள பாடங்கள் ஏராளம். நன்றாகச் சாய்ந்தமர்ந்து கொண்டு, நமது வயிற்றை நாம் தடவிவிட்டுக் கொண்டே நிதானமாய் யோசித்துப் பார்க்கலாம்.
இவ்விதம் மாய்ந்து மாய்ந்து கற்றுக் கொண்ட ஞானத்தை என்ன செய்தார் அபூஹுரைரா? தாம் பெற்ற இன்பம் இவ்வையகமும் உய்ய வேண்டும் என்றுதான் மெய் வருத்தம் அடைந்துகிடந்தார்!
பிற்காலத்தில் ஒருநாள் மதீனாவின் கடைவீதி வழியே சென்று கொண்டிருந்தவருக்கு, அங்கு மக்கள் எப்படி உலக வாழ்க்கையில் மும்முரமாகிக் கிடக்கிறார்கள் என்பதைக் கண்டு அச்சமும் திகைப்பும் ஏற்பட்டுவிட்டன. வாங்குவதும், விற்பதும், பேரம் பேசுவதும் என்று கலகலப்பாய் இருந்தது கடைவீதி. முகத்தையும் மனத்தையும் கவலை சூழ்ந்தது.
அனைவரின் கவனத்தையும் கவரும் வகையில் உரத்த குரலில் அறிவிப்பு ஒன்று வெளியானது அபூஹுரைராவிடமிருந்து.
“மதீனத்து மக்களே! எவ்வளவு பயனற்றவர்களாகிவிட்டீர்கள் நீங்கள்?”
மக்கள் கூட்டம் அவரைச் சூழ்ந்தது. “அப்படி என்ன நாங்கள் பயனற்றுப்போனோம்?” அவரிடம் வினவினார் ஒருவர்.
“அல்லாஹ்வின் தூதருடைய மொத்தச் சொத்தும் அங்கே பிரித்துக் கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. நீங்கள் சென்று உங்களது பங்கைப் பெற்றுக் கொள்ளவில்லையே ஏன்?”
“எங்கே அபூஹுரைரா, எங்கே?” பரபரத்தது கூட்டம்.
“அங்கே, பள்ளிவாசலில்.”
ஓடினார்கள் அனைவரும். கடைவீதியில் அங்கேயே அப்படியே நின்று கொண்டிருந்தார் அபூஹுரைரா. ஓடியவர்கள் அதே வேகத்தில் திரும்பி வருவார்கள் என்று அவருக்கு நன்றாகத் தெரியும்.
சென்றவர்கள் சென்ற வேகத்தில் திரும்பி வந்தார்கள்.
“அபூஹுரைரா நாங்கள் பள்ளிவாசலுக்குச் சென்றோம். உள்ளேயும் சென்று பார்த்தோம். அங்கு யாரும் எதையும் பங்கிட்டுக் கொடுப்பதாய்த் தெரியவில்லையே.”
“பள்ளிவாசலினுள் யாரேனும் இருந்தார்களா?” கேட்டார் அபூஹுரைரா.
“ஆம் மக்கள் இருந்தனர். சிலர் தொழுது கொண்டிருந்தனர். சிலர் குர்ஆன் ஓதிக் கொண்டிருந்தனர். சிலர் பாடம் கற்றுக் கொண்டிருந்தனர்.”
“எவ்வளவு அற்பமானவர்கள் நீங்கள்? அவைதான் இறைத்தூதரின் சொத்து.”
திகைத்து நின்றது கூட்டம்.
oOo
நபியவர்களின் மரணத்திற்குப்பின் கலீஃபாக்களின் ஆட்சியில் இஸ்லாமிய ஆட்சி விரிவடைய, போரில் கைப்பற்றப்பட்ட செல்வம் ஏகப்பட்டவை இஸ்லாமிய கருவூலத்துக்கு வந்து சேர்ந்தன. அவை முறையே அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட, அபூஹுரைராவுக்கும் ஓரளவு வீடு, வாசல், நிலம் என உடைமையாகியது. அப்பொழுதுதான் அவருக்கும் திருமணம் என ஒன்று நடைபெற்று, மணவாழ்க்கையைத் துவக்கினார்.
அவருக்கான பங்காய் வந்தடைந்த ஏராளமான பொருட்செல்வம் எதுவுமே அவரது நேர்மையையும் நல்லொழுக்கத்தையும் சிறிதுகூட தீண்ட முடியவில்லை. அதற்கு மாறாய்த் தமது பழைய வாழ்க்கையை மறவாமல் அதிகமதிகம் நினைவு கூர்ந்துகொண்டிருப்பது அவர் வழக்கம்.
“நான் தந்தை இல்லாமல் வளர்க்கப்பட்டேன். வறுமையின்போது ஹிஜ்ரத் மேற்கொண்டேன் (புலம் பெயர்ந்தேன்). எனது தினசரி உணவுக்காக புஷ்ரா பின்த் கஸ்வானிடம் கூலி வேலை பார்த்தேன். பயணிகளுக்கு சேவை புரிவதும், அவர்கள் பயணத்தைத் தொடர அவர்களது வாகன மிருகங்களைப் பராமரிப்பதும் என் அலுவலாக இருந்தது. பின்னர் நான் யாரிடம் பணியாளாக வேலை பார்த்தேனோ அந்த புஷ்ராவையே எனக்கு மனைவியாக ஆக்கிவைத்தான் அல்லாஹ். இஸ்லாத்தை என் வாழ்வியல் நெறியாகவும், என்னை ஒரு தலைவனாக உயர்த்தியும் வைத்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் நன்றியும் உரியன.”
தலைவன் என்கிறாரே? யாருக்குத் தலைவன்?
கலீஃபா உமர் ரலியல்லாஹு அன்ஹு அபூஹுரைராவை பஹ்ரைனின் ஆளுநராக நியமித்திருந்தார். ஆளுநர்களைத் தேர்ந்தெடுப்பது, நியமிப்பது, அவர்களது செயல்பாடுகளைக் கண்காணிப்பது என்பதில் உமரின் தரக்கட்டுப்பாடு மிக மிகக் கடினமானவை. அவருக்கும் ஆளுநர்களுக்கும் இடையே நடைபெற்ற நிகழ்வுகளெல்லாம் பல அத்தியாயங்கள் எழுதப்படக்கூடிய அளவிற்கான சுவையான நிகழ்வுகள். அபூஹுரைராவின் தகுதியும் அவர் மீது உமருக்கு இருந்த அபார நம்பிக்கையுமே அவரை ஆளுநராக்கியிருந்தன.
தமது பதவிகாலம் முடிந்து பஹ்ரைனிலிருந்து அபூஹுரைரா மதீனா திரும்பும்போது அவர் வசம் பத்தாயிரம் தீனார்கள் இருந்தன. தம் ஆளுநர்களின் மீது தீவிர கண்காணிப்பு செலுத்தி வந்த உமருக்கு, இது ஆச்சரியமளிக்க, “உமக்கேது இவ்வளவு சொத்து?” என்று கேள்வி கேட்டார்.
“அல்லாஹ்வுக்கோ குர்ஆனுக்கோ மாறுபுரியம் எதிரியல்ல நான். ஆனால் அவனுக்கும் குர்ஆனுக்கும் எதிரானவர்களுக்கு நான் கடும் எதிரி. குதிரைகளைப் பராமரித்தேன்; விற்றேன். என்னிடமிருந்த அடிமைகளை விற்றேன். தவிர எனக்குச் சில அன்பளிப்புகள் கிடைத்தன. அவற்றின் மூலம் கிடைத்த பணம் இது” தாம் தமது பதவியை எவ்வகையிலும் துர்ப்பிரயோகம் செய்யவில்லை என்று விளக்கம் அளித்தார் அபூஹுரைரா. அதை விசாரித்து உறுதிபடுத்திக் கொண்டார் உமரும். நாளை இறைவனுக்குப் பதில் அளிக்க வேண்டிய கவலை அவருக்கு.
பிறகு சிலகாலம் கழித்து அவரை மீண்டும் ஆளுநராக நியமிக்க உமர் அழைப்பு விடுத்தபோது, நிராகரித்து விட்டார் அபூஹுரைரா.
“நீர் இந்தப் பதவியை வேண்டாம் என்று மறுக்கிறீரே, உம்மைவிடச் சிறந்தவர் - யூஸுஃப் அலைஹிஸ்ஸலாம் - பதவியைக் கேட்டுப் பெறவிலலையா?” என்று மடக்கினார் உமர்.
அதற்கு அபூஹுரைரா பதில் அளித்தார். “யூஸுஃப் அல்லாஹ்வின் தூதர்; தூதரின் மகன்; அவர் தந்தை ஒரு தூதரின் மகன். நான் வெறும் அபூஹுரைரா. பல விஷயங்களைக் கண்டு நான் அஞ்சுகிறேன்.”
“அதில் எனக்கு ஐந்து விஷயங்களைச் சொல்லும் பார்ப்போம்.”
“நான் அறியாத விஷயத்தை சொல்வதைவிட்டு அஞ்சுகிறேன். மதியின்றி நீதி உரைப்பதில் அஞ்சுகிறேன். என் முதுகு அடிவாங்குவதை நினைத்து அஞ்சுகிறேன். என் செல்வம் பறிக்கப்படுமோ என்று அஞ்சுகிறேன். என் பெயருக்குக் களங்கம் ஏற்படுமோ என்று அஞ்சுகிறேன்.”
பிற்காலத்தில் முஆவியா ரலியல்லாஹு அன்ஹு அபூஹுரைராவை மதீனாவின் ஆளுநராக ஒன்றுக்கும் மேற்பட்டமுறை நியமித்தார்.
ஆனால் ஆட்சி அதிகாரம், பதவி, செல்வாக்கு என்பதெல்லாம் அபூஹுரைராவின் மனநிலையில் எதுவொன்றையும் மாற்றவில்லை. அவரது பண்பு மாசுறாமல் நீடித்தது. இன்னும் சொல்லப்போனால் மேன்மை அடைந்தது.
கரடுமுரடான நீண்ட விறகுக்கட்டைகளை முதுகில் சுமந்து கொண்டு மதீனாவின் குறுகிய வீதிகளில் செல்வார் ஆளுநர் அபூஹுரைரா. சேவகர்கள் இல்லை; வாகனங்கள் கிடையாது. மக்களோடு மக்களாய் ஒரு மனிதர். ஒருமுறை அவ்விதம் இவர் செல்லும்போது தஅலபா பின் மாலிக் வழியில் குறுக்கிட, நகைச்சுவை புதைந்த கட்டியம் கூறினார் அபூஹுரைரா. “இளவரசர் வருகிறார் பராக். வழிவிடு மாலிக்கின் மகனே!”
திகைத்து ஒதுங்கிய தஅலபா பின் மாலிக், “அல்லாஹ்வின் கருணை உம்மீது பொழிவதாக! நீர் கடந்து செல்லும் அளவு வீதி விசாலமாக இல்லையா என்ன? நானா பாதையை அடைக்கிறேன்?”
“இளவரசருக்கும் அவர் முதுகில் உள்ள விறகுக்கட்டுக்கும் வழிவிடப்பா” என்று சொல்லிக் கொண்டே கடந்தார் ஆளுநர் அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு.
அளவிட்டுச் சொல்லமுடியாத தன்னடக்கம் மட்டுமல்ல, ஆழ்ந்த இறைபக்தி்; இறையச்சம் பொருந்திக்கிடந்தார். அதிகமதிகமான உபரி நோன்புகள், இரவின் பெரும்பகுதியில் கண்விழித்துத் தொழுகை என்று இறைவழிபாடே அவருக்கு வாழ்க்கையாகிப் போனது.
இரவுத் தொழுகைக்கென வித்தியாசமான ஒரு கால அட்டவணையைப் பின்பற்றியது அபூஹுரைராவின் குடும்பம். இரவின் மூன்றின் ஒருபகுதியில் விழித்திருந்து தொழுவார் அபூஹுரைரா. பின்னர் தம் மனைவியை எழுப்பிவிட்டு உறங்கிவிடுவார் அவர். அடுத்து இரவின் மூன்றில் ஒரு பகுதியில் தொழும் அவரின் மனைவி தம் மகளை எழுப்பிவிட்டு உறங்கச் செல்வார். அவர்களின் மகள் இரவின் மிச்சப் பகுதியைத் தொழுது முடிப்பார். இப்படியாக அபூஹுரைராவின் இல்லத்தில் முழு இரவும் தொழுகை நடைபெற்றுக் கொண்டிருந்தது; குர்ஆன் வசனங்கள் ஒலித்துக்கொண்டிருந்தன.
இறைபக்தி இப்படி என்றால், இறையச்சம் வேறு பரிமாணமாயிருந்தது. அபூஹுரைரா தம்பதியரிடம் ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த அடிமைப்பெண் ஒருத்தி இருந்தாள். ஒருநாள் அவள் அபூஹுரைராவை இகழ்ந்து பேசியும், அவர் மனைவியிடம் பணிவற்றும் நடந்துகொண்டாள். அது எக்கச்சக்கக் கோபத்தை ஏற்படுத்திவிட்டது அபூஹுரைராவுக்கு. சாட்டை ஒன்றை எடுத்து அவளை அடிக்கக் கையை ஓங்கியவர், சட்டென நிறுத்திக்கொண்டார்.
“இதோ பார். மறுமை நாளின் தண்டனை என்ற ஒன்று மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் நீ எனக்கு இழைத்த தீங்கின் அளவிற்கு நான் உன்னை காயப்படுத்தியிருப்பேன். அதற்குப் பதிலாய் என்ன செய்யப்போகிறேன் தெரியுமா? நான் உன்னை விற்றுவிடப் போகிறேன். அவன் உனது விலைமதிப்பை எனக்கு முழுஅளவில் தருவான்; அது எனக்கு மிகவும் தேவைப்படுகிறது. போ! அல்லாஹ்விடம் உன்னை விற்றுவிட்டேன். அவன் பொருட்டு உனக்கு விடுதலை.”
இன்னா செய்தாரை மன்னிப்பது நற்குணம் என்றால், இன்னா செய்த அடிமையையே அல்லாஹ்வின் பொருட்டு விடுவிப்பதற்கு நினைக்கவியலாத இறையச்சமும் பெருங்குணமும் பொறுமையும் அமைந்திருக்க வேண்டும். கொட்டிக் கிடந்தன அவை யாவும் அபூஹுரைராவிடம்.
அவர்தான் செல்வத்தைத் தீண்டாமல் எளிய வாழ்க்கையில் மூழ்கிக் கிடந்தார் என்றால் குடும்பத்தினரையும் அவ்விதமே பழக்கியிருந்தார். ஒருநாள் அபூஹுரைராவின் மகள், “தந்தையே! ‘உன் தந்தை உன் மேல் ஏன் பாசமின்றி இருக்கிறார். உன்னிடம் தங்க நகை எதுவும் இல்லையே’ என்று சிறுமிகள் என்னைக் கேலி பேசுகிறார்கள்” என்று வந்து முறையிட்டார்.
”பகட்டு, இறுமாப்பு போன்ற காரணங்களுக்காக தன் மகள் நரக நெருப்பின் வேதனைக்கு ஆளாகிவிடுவாளோ என்று உன் தந்தை அஞ்சுகிறார் என்று அவர்களிடம் சொல்.”
ஒருவேளை மிதமிஞ்சிப்போன சிக்கனத்தால் உருவாகிப்போன கருமித்தனமோ என்று சந்தேகம் எழுந்தால் அப்படியெல்லாம் இல்லவே இல்லை என்று சான்று பகர்கின்றன இதரச் செயல்கள். இறைவழியில் செலவு செய்ய வேண்டும் என்றால் பரோபகாரியாய் வாழ்ந்திருக்கிறார் அவர்.
அபூஹுரைராவின் தன்னலமற்ற தான தர்மத்தைப் பற்றிக் கேள்விபட்டு அதை பரிசோதிக்க, ஓரிலட்சம் தங்க தீனார்களை அவருக்கு அனுப்பிவைத்தார் உமைய்யா கலீஃபா மர்வான் இப்னுல் ஹகம்.
பின்தொடர்ந்து மறுநாள் ஒரு தகவல் வந்தது.
“அந்த தீனார்களை நான் வேறு ஒருவருக்கு அளிக்கச் சொல்லியிருந்தேன். என் சேவகன் தவறு செய்துவிட்டான். தீனார்களை திருப்பி அனுப்புங்கள்.”
குழம்பித் திகைத்துப் போன அபூஹுரைரா, “அல்லாஹ்வுக்காக நான் அதை உடனே தானமளித்துவிட்டேன். என்னிடம் ஒரு தீனார் கூட பாக்கியில்லை. கருவூலத்திலிருந்து எனக்கு வரவேண்டிய ஊதியத்தில் தயவுசெய்து பிடித்துக் கொள்ளுங்கள்” என்று பதில் கோரிக்கை அனுப்பினார்.
நூறல்ல, ஆயிரமல்ல, இனாமாய்க் கிடைத்த இலட்சம் தீனார்களை, சல்லிக்காசு பாக்கியில்லாமல், ஒரே நாளில், ஒரே ஒரு நாளில் ஒருவர் தானமளித்துத் தீர்க்க முடியுமென்றால் அந்த இறைபக்தியும் மறுமை நோக்கும் எத்தகையதாக இருந்திருக்கும்?
oOo
ஏறத்தாழ 1600 ஹதீஸ்களை அபூஹுரைரா அறிவித்துள்ளதாகக் கணக்கிட்டுள்ளார்கள். அபூஹுரைராவின் அறிவிப்பு இடம்பெறாத ஹதீஸ் நூல்களே இருக்க முடியாது. நபியவர்களின் இறுதிக் காலத்தில், நான்கு ஆண்டுகள் மட்டுமே உடன் இணைந்திருந்தவருக்கு இது எப்படி சாத்தியமானது? முஹாஜிர்கள், அன்ஸாரிகளில் ஒரேயொருவர்கூட இந்த அளவு அறிவிக்கவில்லையே எப்படி?
இக்கேள்வி அவரிடமே கேட்கப்பட்டபோது, பதிலளித்தார் அபூஹுரைரா. “முஹாஜிர்களைச் சேர்ந்த என்னுடைய சகோதரர்கள் கடைவீதிகளில் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தனர். நானோ ‘என் வயிறு நிரம்பினால் போதும்’ என்று கிடைப்பதை உண்டுகொண்டு நபியவர்களுடனேயே இருந்து வந்தேன். அவர்களெல்லாம் நபியவர்களிடம் இல்லாத நேரத்திலும் நான் நபியவர்களுடனேயே இருப்பேன். நபிமொழிகளை அவர்கள் மறந்து விடலாம். ஆனால் நான் மனனம் செய்து கொள்வேன்!
“என்னுடைய அன்ஸாரிச் சகோதரர்கள் தங்கள் செல்வங்களின் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்; நானோ பள்ளிவாசலின் திண்ணையில் வசித்துக்கொண்டிருந்த ஏழைகளில் ஓர் ஏழை. அன்ஸாரிச் சகோதரர்கள் தங்கள் பணியில் கவனம் திரும்பி, நபியவர்களின் போதனைகளை மறந்து விடலாம். ஆனால் நான் மனனம் செய்து கொள்வேன்!
“இதெல்லாம் ஒருபுறமிருக்க ஒருமுறை நபியவர்கள், ‘நான், என்னுடைய இந்த வாக்கைச் சொல்லி முடிக்கும்வரை தன்னுடைய ஆடையை விரித்து வைத்திருந்து, பிறகு அதைத் தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொள்கிறவர் நான் சொல்பவற்றை மனனம் செய்யாதிருக்கமாட்டார்!’ எனக் கூறினார்கள். உடனே நான் என் மீது கிடந்த ஒரு போர்வையை விரித்து, நபியவர்கள் தங்களின் வாக்கை முடித்ததும் போர்வையை எடுத்து என் நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொண்டேன்; அதன் பின்னர் நபியவர்களின் அந்த வாக்கில் எதனையும் நான் மறக்கவில்லை!”
ஒருமுறை அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹாவைச் சந்திக்கச் சென்றார் அபூஹுரைரா. அப்பொழுது அவர்களும் கேட்டார்கள், “நீங்கள் அல்லாஹ்வின் தூதரிடம் கற்றதாய் அதிகம் அறிவிக்கிறீர்களே!”
“ஆம் அன்னையே! நான் அப்பொழுது திருமணம் ஆகாதவன். ஆதலால் குடும்ப பாரம் எனக்கு இருக்கவில்லை. தவிர என்னை நானே கவனித்துக் கொள்ள, ஒப்பனைகள் செய்து கொள்ள என்று அவகாசம் ஏற்படுத்திக் கொள்ளவில்லை. அதற்கான நேரத்தை விரயம் செய்யவில்லை” என்றார் அபூ ஹுரைரா.
மர்வான் இப்னுல் ஹகம் அபூஹுரைராவின் நினைவாற்றலைப் பரிசோதிக்க விரும்பினார். ஒருமுறை அவரைத் தம் அவைக்கு அழைத்தவர், நபியவர்களின் போதனைகள் சிலவற்றைத் தமக்கு அறிவிக்கச் சொன்னார். கலீஃபா கேட்கிறாரே என்று அபூஹுரைரா சில ஹதீஸ்கள் அறிவித்தார். அதையெல்லாம் எழுதி வைத்துக்கொள்ள திரை மறைவில் ஒரு சேவகனை அமர்த்தியிருந்தார் மர்வான்.
ஓராண்டிற்குப் பிறகு அபூஹுரைராவைத் தம் அவைக்கு மீண்டும் அழைத்துவரச் செய்த மர்வான், அதே நபிமொழிகளைப் பற்றிக் கேட்க, ஒரு வார்த்தை ஓர் எழுத்து வித்தியாசமில்லாமல் வெளிவந்தன அதே ஹதீஸ்கள்.
இவ்விதமாக தனியானதொரு சிறப்புத் தகுதி ஏற்பட்டுப் போயிருந்தது அபூஹுரைராவுக்கு. ரலியல்லாஹு அன்ஹு!
oOo
அபூஹுரைராவை இறுதிக் காலம் நெருங்கியது. உடல் நலம் குன்றி படுக்கையில் கிடந்தவருக்கு கண்ணீருடன் அழுகை வெளிப்பட்டது. அருகிலிருந்தவர்கள் கவலையுடன் விசாரித்தார்கள், ”ஏன் அழுகிறீர் அபூஹுரைரா?”
“இவ்வுலகத்தின் மீதுள்ள ஆசையில் அழவில்லை நான். ஏன் அழுகிறேன் என்றால் என் எதிரே மிக நீண்ட பாதை காத்திருக்கிறது. என்னிடம் உள்ளதோ மிகக் குறைவான முன்னேற்பாடுகள். சாலை இரண்டாகப் பிரியும் இடத்தில் நிற்கிறேன் நான். ஒரு பாதை சொர்க்கத்திற்கு இட்டுச் செல்லும்; மற்றொன்று நரக நெருப்பிற்கு. எனக்கானது எந்தப் பாதை என்பதுதான் எனக்குத் தெரியவில்லை.”
இத்தகு இறை அச்சத்தை எப்படி விவரிப்பது? எப்படி எழுதுவது? ஒருவேளை எழுதுகோலில் கண்ணீர் நிரப்பினால் சாத்தியமாகலாம்.
மரணப்படுக்கையில் இருந்தவரைச் சந்திக்க வந்தார் மர்வான் இப்னுல் ஹகம். “அல்லாஹ் உமக்கு உடல் நலத்தை மீட்டுத்தருவானாக அபூஹுரைரா!” என்று இறைஞ்சினார்.
அதைக் கேட்ட அபூஹுரைரா, “யா அல்லாஹ்! நான் உன்னுடன் இருக்கவே விரும்புகிறேன். தயவுசெய்து நீ என்னை உன்னுடன் வைத்துக்கொள்ள விரும்புவாயாக” என்று இறைஞ்சினார்.
பிறகு மர்வான் கிளம்பி சற்று தூரம்கூட சென்றிருக்க மாட்டார். தமது 78ஆம் வயதில், ஹிஜ்ரீ 59ஆம் ஆண்டு இவ்வுலகை நீங்கினார் அபூஹுரைரா.
ரலியல்லாஹு அன்ஹு.
oOo
வெளியீடு: சத்தியமார்க்கம்.காம்