நபிகள் நாயகத்தின் ‘அரஃபா’ பேருரையும் உரிமைகள் பிரகடனமும்

 எம். ஜே. எம். ரிஸ்வான் மதனி (இலங்கை)



முஹம்மத் நபி அவர்கள் உயர்குலமான குரைஷிப்பரம்ரையில் ஆமினா என்ற பெண்ணுக்கு கி.பி. 571ல் மக்கா நகரில் பிறந்தார்கள். இவர்கள் தாயின் வயிற்றில் இருக்கும் போது தந்தை அப்துல்லாஹ்வையும், பிறந்து சில மாதங்களில் தனது தாய் ஆமினாவையும் இழந்தார்கள். அநாதையான இவரை அவர்களின் சிறிய தந்தை அபூதாலிப் என்பவர் பெறுப்பேற்று வளர்த்தார்கள். 

பொதுவாக அநாதையாக வாழும் குழந்தைகளுக்கு சிறுவர் துஷ்பிரயோகங்கள், மற்றும் சீரில்லாத நடத்தைகளுக்கு ஆட்படுவதுண்டு. ஆனால் முஹம்மத் நபி அவர்கள் அவ்வாறான எவ்வித தீய நடத்தைகளையும் சந்திக்கவுமில்லை. அரங்கேற்றவுமில்லை. மக்காவில் வாழ்ந்த மக்கள் அவர்களை நற்பண்புள்ளவர், நம்பிக்கையாளர், உண்மையாளர் என அழைத்ததன் மூலம் இதை நாம் அறிந்து கொள்ளலாம்.

இவர்கள் பிறந்த காலத்தில் மக்கள் கடவுளின் நேரடியான வழிகாட்டல்களை விட்டும் திசைதிரும்பிய மிருகங்களாக வாழ்ந்து வந்தனர், பெண் குழந்தைகளை உயிருடன் புதைத்தனர், மது குடித்தனர், மனித உயிர்களை துச்சமாக மதித்தனர், பெண்களை வெறுத்தனர், சாதராண விஷயத்திற்காக பலஆண்டுகள் தொடராக சண்டை இட்டுக் கொண்டனர், நிறவெற, கோத்திரவெறி, தேசியவாதம், சாதியம் போன்ற தீய பண்புகளால் மனிதர்களை அடிமையாக்கி வாழ்ந்தனர்.

விடிவைத்தேடியும், நிம்மதியைத்தேடியும் மக்கள் அலைந்திரியும் இந்த கால கட்டத்தில்தான் முஹம்மத் நபி அவர்கள் ஏக இறைவனின் தூதராக வந்து அம்மக்களுக்குப் போதனை செய்தார்கள். மக்கா என்ற ஊரில் இருந்து கருத்துரிமை பறிக்கப்பட்ட இவர்கள் மதீனா என்ற நகரைத் தேர்வு செய்து அங்கு இஸ்லாமிய அரசையும் நிறுவினார்கள்.

நல்ல பல திட்டங்களை அறிமுகப்படுத்தி சாதி, நிற, கோத்திர வேறூடற்ற சமூகமாகவும், சகோதரர்களாகவும் அவர்களை மாற்றினார்கள். ஆரம்பத்தில் அவர்களை எதிர்த்த மக்களின் பல்லாயிரக் கணக்கானோர் பிற்காலத்தில் இஸ்லாத்தை தமது வாழ்க்கை நெறியாக ஏற்று முஹம்மத் நபியுடன் இணைந்தார்கள்.

மதீனாவில் 10 ஆண்டுகள் வாழ்ந்த முஹம்மத் நபி அவர்கள் இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமையை மதீனா சென்ற பத்தாவது வருடம் துல்ஹஜ் என்ற மாதத்தில் நிறைவேற்றப்போவதாக அறிவிப்பு விடுத்தார்கள். பல்லாயிரக்கணக்கனானோர் அதில் கலந்து கொள்ள மதீனா வந்தனர். அவர்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு மக்கா வந்து அங்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்து முடித்த பின்னர் மக்காவில் இருந்து கிட்டத்தட்ட 16 கி. மீட்டர்களுக்கு அப்பால் உள்ள அரஃபா என்ற முற்றவெளியில் ஒரு பள்ளத்தாக்கருகில் துல்ஹஜ் பிறை ஒன்பதில் அவர்களை ஒன்றிணைத்து ஒரு பேருரையும் நிகழ்த்தினார்கள். அதில் மனித உரிமை, கொலையாளிகளை மன்னித்தல், வட்டித்தொழிலுக்குத் தடை விதிப்பு, நிற, கோத்திர, குலப்பேதங்களுக்கு முடிவு போன்ற பல அம்சங்கள் உள்ளடங்கி இருந்தன. அவை பற்றி இங்கு சுருக்கமாகக் கவனிப்போம்.

1- மற்றவர் மானம், மரியாதை, சொத்துக்கள் புனிதமானவை

மக்களே அறிந்து கொள்ளுங்கள்! இந்த தினம் எவ்வளவு புனிதமாதோ, இந்த இந்தப் பிரதேசம் எவ்வளவு புனிதமானதோ அதே போன்று உங்களது இரத்தங்களும், உங்களது செல்வங்களும் மற்றவர் மீது -ஹராம்- முழுமையாக விலக்கப்பட்டுள்ளது. இந்த அறிவுரையை நபித்தோழர்களுக்கு அன்றுதான் போதித்தார்கள் என்று விளங்கிக் கொள்ளக் கூடாது. மாற்றமாக இருபத்தி மூன்று ஆண்டுகள் அவர்களுக்கு பல சந்தர்ப்பங்களில் இது பற்றி எச்சரித்திருக்கின்றார்கள்.

ஹுதைபியாவில் ஒரு நிகழ்வு: 
ஹிஜ்ரி ஆறாம் ஆண்டு ஹுதைபியா என்ற இடத்தில் நபிகள் நாயகம் அவர்களுக்கும், மக்கா இறை நிராகரிப்பாளர்களுக்கும் இடையில் ஓர் சமரச நிகழ்வு கையெழுத்தானது. உர்வா பின் மஸ்ஊத் அஸ்ஸகஃபி என்பவர் (இஸ்லாத்தைப் பின்புகு ஏற்றவர்) மக்காவாசிகள் சார்பாக கலந்து கொண்டார். அவர் சமரச நிகழ்வின் இடையில் பாசமாக நபிகள் நாயகத்தின் முகத்தை தடவ தனது கையைக் கொண்டு சென்றார். முகீரா பின் ஷுஃபா என்ற நபித்தோழர் இவரது கையை ஒரு முறைக்குப் பலமுறை தட்டிவிடுகின்றார். இதை அவதானித்த அவர், யார் இவர் ? எனக் கேட்டபோது , (இவரைத்தெரியாதா) இவர்தான் உங்கள் சகோதரரின் மகன் முகீரா என்று கூறப்பட்டது. உடனே அவர்! ஏ! மோசடிக்காரனே! உனது மோசடி விஷயமாக நான் பல தடவைகள் முயற்சி செய்து பலனற்றுப் போனது உனக்கு நினைவில்லையோ எனக் கூறினார். இந்த முகீரா என்பவர் இஸ்லாத்திற்கு வருவதற்கு முன்னால் ஜாஹிலிய்ய மக்களுடன் பயணம் சென்று, அவர்களின் பணங்களைத் திருடிக் கொண்டு இஸ்லாத்தில் இணைந்திருந்தார். இஸ்லாத்தை நான் அங்கீகரிக்கின்றேன், ஆனால் அந்த பொருள் தொடர்பானதற்கு நான் பொறுப்பல்ல என நபி (ஸல்) அவர்கள் அழுத்தமாகக் கூறினார்கள். (புகாரி).

பிறிதொரு சந்தர்ப்பத்தில் தனது தோழர்களிடம் உங்களில் யாராவது மற்ற சகோதரனுக்கு மானம், மற்றும் அதுவல்லாத எதிலாவது அநீதி இழைத்திருப்பின் அதிலிந்து இவ்வுலகியே நிரபராதியாகிக் கொள்ளுங்கள். மரணத்தின் பின் வரும் அந்நாளில் தீர்ப்பளிக்கப்படுகின்ற போது உங்களிடம் உள்ள தங்கம், வெள்ளிக் காசுகளைக் கொடுத்து விடுதலை பெறமுடியாது எனக் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்).

இஸ்லாமில் ஒரு முஸ்லிம் மனிதர்களுக்கும், பிற படைப்பினங்களுக்கும் அநீதி செய்வது முழுமையாக் தடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவுரையின் அடிப்படையில் நடப்பவர்கள் உண்மை முஸ்லிம்கள். இவ்வளவு பெரிய அறிவுரையை 1500 ஆண்டுகளுக்கு முன்னால் நபிகள் நாயகம் அவர்கள் பிரகடனம் செய்தார்கள். அவர்கள் தனது இருபத்தி மூன்று ஆண்டு கால நபித்துவ வாழ்க்கையில் பத்தொன்பது போர்கள் புரிந்தார்கள். அதில் 1220 பேர் வரைதான் கொல்லப்பட்டதாக வரலாறு சொல்கின்றது. ஆனால் 1990ல் ஈராக் மீது அமெரிக்கா கொண்டு வந்த பொருளாதாரத் தடையால் மாத்திரம் 500,000. (ஐந்து இலட்சம்) குழந்தைகள் மரணித்தார்கள்.

2003ல் உலக நாடுகளின் காதுகளில் பூச்சுற்றிய அமெரிக்காவின் ஆக்கிரிமிப்பால் 17 இலட்சத்திற்கும் அதிகமான ஈராக்கியர்கள் மாண்டிருக்கின்றார்கள். நாள்தோரும் பல உயிர்கள் காவு கொள்ளப்படுகின்றது. நூற்றுக்கணக்கானோர் அங்கவீனர்களாக்கப்படுகின்றனர். இப்படியான செயற்பாடுகளை நபிகள் நாயகம் அவர்கள் வன்மையாகக் கண்டித்துள்ளார்கள்.

ஒரு போர் களத்தில் கற்பமான ஒரு பெண்ணை ஒருவர் அடிமையாக சிறைப்பிடித்து தனது கூடாரத்தினுள் கட்டிவைத்திருந்தார். இவரது நோக்கம் இந்தப் பெண்ணுடன் பாலியல் துஷ்பிரயோகம் செய்வதாக இருந்தது. இதனை அவதானித்த நபிகள் நாயகம் அவர்கள் என்ன இவர் இந்தப் பெண்ணுடன் உடலு உறவில் ஈடுபட நாடி இருக்கின்றார் போலும் என அங்குள்ள மக்களிடம் கேட்டார்கள். அவர்கள் ஆம் ! அல்லாஹ்வின் தூதரே! என்றார்கள். எனக்கு அறிந்துதான் இதைக் கேட்டேன். இவர் இந்தப் பெண்ணுடன் நடந்து தனது வாரிசல்லாத ஒருவரை தனக்குரிய வாரிசு எனக் கூறப்போகின்றாரா? அல்லது மற்றவன் வாரிசை தனதாக்கிக் கொள்ளப்போகின்றாரா? என உரத்த குரலில் பேசி விட்டு, இவர் அவ்வாறு நடந்திப்பின் நான் சாபத்தைச் செய்திருப்பேன்; அது அவரை மண்ணறைக்குக் கொண்டு சென்றிருக்கும் எனக் கூறினார்கள். (முஸ்லிம்).

ஜனநாயகம், முதலாளித்துவம் என்றெல்லாம் வாய்கிளியப் பீற்றிக் கொள்ளும் அமெரிக்கப்படைகள் ஈராக்கிலுள்ள அபூகிரைப் சிறைக்கைதிகளுடன், குவாண்டனாமோவிலுள்ள கைதிகளுடன், ஆப்கானில் பாக்ராமிலுள்ள கைதிகளுடன் நடந்து கொள்ளும் முறை பற்றி உலகம் காறித்துப்பியது. நடுநிலையான மீடியாக்களும், நாளேடுகளும் பக்கம் பக்கமாக வெளிச்சம் போட்டுக்காட்டின. இவ்வளவும் மற்றநாடுகளின் வளங்களைக் கொள்ளையடிப்பதற்காக வீணாக ஓட்டப்பட்ட இரத்தங்களாகும் என்பதை உலகுக்குத் தெரியும் என்பதை அமெரிக்கர்கள் தெரிந்து கொண்டே இந்தக் கொள்ளையிலும், கொலையிலும் தம்மை வெட்கமின்றி ஈடுபடுத்திக் கொண்டனர்.

2- குல, கோத்திர, நிற, சாதிவேறுபாடு, அல்லாஹ்வுக்கு தரகர் ஏற்படுத்துதல் போன்ற அறியாமைக்கால அனைத்து பண்பாடுகளும் மண்ணோடு மண்ணாகப் புதைக்கப்பட்டு விட்டதை அறிவித்தமை.

நிரம், கோத்திரம், சாதி வேறுபாடுகளுடன், மனிதர்களை அடிமையாக்குதல், மற்றவர்களின் உரிமைகளைப் பறித்தல், வீட்டோ பவர் நடைமுறையை ஒத்த நடைமுறை, மற்றவர்களைக் கேவலமாக நினைத்தல், அல்லாஹ்வுக்கு இடைத்தரகர்களை உண்டு பண்ணி அவனது கண்ணியத்தைக் குறைத்தல் போன்ற தரம் கெட்ட வேலைகள் ஜாஹிலிய்யப் பண்பாடு என்றே அழைக்கப்படுகின்றது. இவ்வாறான அனைத்து விதமாகன பழக்கங்களும் புதை குழிக்கு அனுப்பப்படுவதாகக் கூறினார்கள்.

ஒரு தாய் மக்கள் நாமென்போம் என்ற உண்மையினை 1500 ஆண்டுகளுக்கு முன்னால் அண்ணல் நபி அவர்களால் முன்னெடுக்கப்பட்டது. நீங்கள் ஒவ்வொரும் ஆதாமின் பிள்ளைகள், ஆதாம் மண்ணில் இருந்து படைக்கப்பட்டார்,

அபீஸீனியக் கருப்பு அடிமையான பிலால் (ரழி) அவர்கள் அதான் எனப்படும் தொழுகை அழைப்பிற்கு தலைமை முஅத்தினாக நியமிக்கப்பட்டிருந்தார்கள். இஸ்லாமல்லாத மதத்தில் பல சாதிகள் இருக்கின்றனர். அவர்களில் ஒருவர் மற்றவரது கோயிலுக்குக் கூட செல்லமுடியாத நிலை. இந்தியாவில் தலித்துக்கள் என்ற பிரிவினர் தீண்டத்தகாதர்களாக கருதப்படுகின்றனர். இவர்கள் கிரிஸ்தவ மதத்திற்கோ, அல்லது புத்த மதத்திற்கோ சென்றாலும் அவர்களின் சாதி ஒழிவதில்லை. நேற்றுவரை முடிவெட்டிக் கொண்டிருந்த ஒருவன் இஸ்லாத்தின் இணைந்த மறு நிமிடமே முஸ்லிம் செல்வந்தரின் திருமண நிகழ்ச்சியில் கலந்து ஒன்றரக்கலந்து உறவாடுகின்றான்.

நிற, கோத்திர, தேசிய வெறிகளும், வாதங்களும் இஸ்லாத்தில் இருந்து ஓரம் கட்டப்பட்டவையாகும். உலகுக்கு நாகரீகத்தைக் கற்றுக் கொடுப்பதாகக் கூறும் அமெரிக்காவில் இருக்கும் வெள்ளை மாளிகை என்ற பெயர் கருப்பின மக்களுக்கு எதிராக சூடப்பட்டதாகும் என்பதாக மால்கம் எக்ஸ் என்ற அறிஞர் பற்றிய ஆய்வின் குலாம் முகம்மத் என்ற எழுத்தாளர் குறிப்பிடுகின்றார்.

நெல்சன் மண்டேலா தென்னாபிரிக்க கருப்பின மக்களின் விடுதலைக்காக 27 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தார். கிரிஸ்தவர்கள் மத்தியில் புரொடெஸ்டான்ட், கத்தலிக் என்ற இரு வர்க்க முரண்பாட்டடினால் பல ஆண்டுகள் சண்டை நடைபெற்றதாக வரலாறு சொல்கின்றது.

3- தனது குடும்பக் கொலையாளிகளை முதலாவதாக மன்னித்ததாக அறிவித்தமை.

நபிகள் நாயகத்தின் அரஃபாத்தின பேருரையில் உரையில் உள்ளடங்கி இருந்து அம்சங்களில் கொலை குற்றம் புரிந்தோரை மன்னித்ததாக பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் அறிவித்ததும் ஒன்றாகும். இதை சம்பிரதாய அறிவிப்பாகவோ, அல்லது பிறரின் குற்றவாளிகளை மன்னித்தாகவோ விளங்கிக் கொள்ளக் கூடாது.

மாற்றமாக தனது உறவினர்களில் ஒருவரைக் கொலை செய்தமைக்கான மன்னிப்பாகும். இயாஸ் பின் ரபீஆ என்பவர் சிறு வயதில் பனூஸஃத் கோத்திரத்தில் செவிலித்தாய் மூலம் பால்குடித்து வாழ்ந்து கொண்டிருந்த போது ஹுஸைல் என்ற கோத்திரத்தினர் இவரைக் கொலை செய்து விடுகின்றனர். இதற்கு குழுமக் கொலை என்று சொல்வார்கள். இவருக்காக அந்தக் கோத்திரத்தினர் நபிகள் நாயகத்தின் கை ஓங்கி இருப்பதால் நாம் கொலை செய்யப்படுவோம் என்ற பீதியில் வாழ்ந்து வந்தனர். பலிக்குப்பலி தீர்ப்பு தொடர்பில் நமது இரத்தம் தொடர்பானதை முதலவதாக தாம் மன்னித்ததாக நபி நாயகம் அவர்கள் அறிவிப்புச் செய்தததை எவ்வளவு பெரிய மனித நேயப் பண்பாடு என்று சிந்தியுங்கள்.

குஜ்ராத் முஸ்லிம்களை தீயிலிட்டுக் கொழுத்தி, பெண்களின் கற்புகளைச் சூரையாடி இந்து வெறியர்களை அதன் பின்பு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் கொல்லப்பட்டவர்களை முஸ்லிம்கள் மனித நேயத்துடன் நடத்தவில்லையா?

இன்று, ஒரு முஸ்லிம் நாடு மற்றொரு நாட்டையோ, அல்லது ஒரு நாட்டில் வாழும் முஸ்லிம்கள் சக சமுதாயத்தவரையோ ஆக்கிரிமிதட்ததாகவோ, குண்டுவைத்துக் கொண்டார்கள் என்றோ ஒரு ஆதாரம் கூட இல்லாத நிலையிலும் உலகில் கருணையையும், அன்பையும் போதித்த நபிகள் நாயகத்தையும், அவரைப் பின்பற்றும் முஸ்லிம்களையும் பயங்கரவாதிகளாக சித்தரிப்பதில் மீடியாக்கள் போட்டி போட்டுக்கொள்கின்றன.

மாவோஸ்டிகள், நக்ஸலைட்டுகள், குஜ்ராத் குண்டர்கள், புலிப்பயங்கரவாதிகள் பற்றி மௌனமாக இருக்கும் பத்திரிக்கைகள் முஸ்லிம்களை எப்படி சீண்டுகின்றார்கள் என்று பாருங்கள்.

4- வட்டி என்ற வன்கொடுமை ஒழிப்புப் பிரகடனம்.

மனிதனை கெளரவமாக ஏமாற்றும் யூதத் தொழில்தான் வட்டி, வட்டித்தொழிலை உலகில் ஆரம்பித்தவர்கள் யூதர்களே! ஏழை மனிதர்களின் உதிரங்களை உரிஞ்சி, அவர்களைக் கசைந்து பிழியும் பாதுகாப்புடன் நடந்தேறும் மிகப் பெரும் கொள்ளை. இந்தக் கொள்ளையால் எத்துணை தற்கொலைகள், எத்துணை குடும்பத்தகராறுகள், எத்துணை சமூகக் கொடுமைகள் நாளாந்தம் அரங்கேறுகின்றன என்பதை நாம் அறிவோம்.

இதையும் மண்ணோடு புதைக்கப்படுகின்றது என அறிவித்து தனது சிறிய தந்தையர்களில் ஒருவரான அப்பாஸ் என்பவர் கொடுத்த வட்டியைத் தள்ளுபடி செய்வதாக தனது குடும்பத்தில் இருந்தே ஆரம்பம் செய்தார்கள்.

இந்தியாவில் வருடந்தோறும் விவசாசிகள் பலர் தற்கொலை செய்து கொள்கின்றனர், காரணம் வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாத நிலை என்கின்றனர், ஒன்றோ குலம், ஒருவனே தேவன் என வாயளவிலும், ஏட்டளவிலும் கோட்பாடுகள் புதைந்து போய் இருப்பதும், ஒருவனுக்குச் செய்கின்ற பண உதவிக்காக பல ரூபாய்களை கொள்ளை அடிப்பதும் இதற்கான காரணங்களில் ஒன்றாகும்.

வட்டித் தொழில் அல்லாஹ்வோடும், அவனது தூதரோடும் போராடுவதற்குச் சமமான பெரும் பாவங்களில் ஒன்று என இஸ்லாம் ஆணித்தராமகக் கூறுவதுடன் வட்டி என்றோ ஒரு நாள் அழிக்கப்படும், தர்மம் உயிர் வாழும், கடனாளியை மன்னிப்பதால் மறுமையில் அல்லாஹ்வின் நிழலின் கீழ் கௌரவம். கடனாளி திருப்பித் தரமுடியாமல் இருப்பின் காலக்கெடு வழங்குதல், ஈ அல்லது அரைவாசியை மன்னித்து, மீதியைப் பெறுதல் போன்ற மனிதர்களுக்கு ஏதுவான பல நடைமுறைகளை அறிமுகம் செய்துள்ளதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

வட்டி என்றோ ஒரு நாள் நஷ்டத்தைத் தழுவும் என்பதை அமெரிக்காவில் இந்த வருடத்தில் மாத்திரம் 123 வட்டி வங்கிகள் மூடப்பட்டிருப்பதும், வட்டி வங்கிகளின் ஒரு அங்கமாக அமைக்கப்படுவதும், இஸ்லாமியப் பொருளாதார முறை பற்றி அடிக்கடி பேசப்படுவதும் வட்டியின் தாக்கங்களில் உள்ளவையாகும்.

5- பெண்களின் உரிமைகளைப் பேணுமாறு உரைத்தமை.

நபிகள் நாயகம் அவர்கள் அரஃபா தினப் பேருரையில் : பெண்கள் விஷயத்தில் அல்லாஹ்வை நீங்கள் அஞ்சிக் கொள்ளுங்கள், நிச்சயமாக நீங்கள் அவர்களை அல்லாஹ்வின் அமானிதமாகக் கைப்பிடித்துள்ளீர்கள், அவர்களின் மர்மஸ்தானங்களை அல்லாஹ்வின் வார்த்தை மூலம் ஆகுமாக்கிக் கொண்டீர்கள், நீங்கள் நியாயமான முறையில் அவர்களுக்கு ஆடைய வாங்கிக் கொடுப்பதும், உண்ணக் கொடுப்பதும் உங்கள் மீதுள்ள கடமையாகும். நீங்கள் விரும்பாதவர்களை உங்கள் வீடுகளில் நுழைவிப்பது அவர்களுக்கு ஆகுமானதல்ல, உங்களை மீறி செயல்பட்டால் காயம் ஏற்படாதவாறு அவர்களை நீங்கள் அடியுங்கள் எனப் பிரஸ்தாபித்தார்கள்.

ஆண்கள் பெண்களை நடாத்தும் முறை, அவர்கள் மீது கணவன்மாருக்குரிய கடமைகள், மனைவியர் கணவன் விஷயத்தில் நடந்து கொள்ளும் முறை பற்றி மேலும் பல வழிமுறைகள் இஸ்லாத்தில் கூறப்பட்டுள்ளன. அவை அனைத்தும் ஒரு குடும்பத்தின் சுபீட்சமான வாழ்வை அடிப்படையாகக் கொண்டவையாகும்.

நவீன பெண்ணியம் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள், அது இஸ்லாத்தின் எதிரிகளின் மிகப்பெரிய ஆயுதம். இஸ்லாமியப் பெண்ணியம் என்ற புதிய சொற்றடர் அமெரிக்காவில் பரவலாக பேசப்படுகின்றது.

பெண்களைப் பாவிகளாக, உயிரற்ற சடங்களாக மதிக்கின்ற மதநூல்களைப்படித்துவிட்டு இஸ்லாத்திலும் இப்படித்தான் இருக்கும் என்ற தப்பெண்ணத்தில், இஸ்லாத்தில் பெண்களுக்கு உரிமைகள் வழங்கப்படவில்லை, அடிமைகள் போல நடத்தப்படுகின்றார்கள் என்றெல்லாம் தப்புப் பிரச்சாரம் செய்கின்றனர். அதனால் இஸ்லாமியப் பெண்ணியம் பற்றி அடிக்கடி அலட்டிக் கொள்கின்றனர். அதனால் என்ன விரும்புகின்றார்கள்.! பெண்களின் விடுதலையா என்றால் ஆம், ஆனால் பின்வருமாறு.

  • முறையற்ற திருமண முறை. இதை அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜேர்மனி போன்ற நாடுகளில் ‘ஒற்றைப் பெற்றோர் முறை’ என்கிறார்கள். (Single parenthood).
  • கருப்பைச் சுதந்திரம். (கண்டவனுடன் படுத்து உறங்கும் உரிமை, பெண்களை பெண்கள் திருமணம் செய்யும் உரிமை)
  • பெண் தான் விரும்பும் இடம் செல்ல அனுமதித்தல்
  • அன்னிய ஆடவர் ஒருவனுடன் தனிமையில் இருந்து சல்லாபம் செய்தல்,
  • மதம், மொழிகளுக்கு அப்பால் நின்று கணவனைத் தெரிவு செய்தல் போன்ற பெண்ணின் கௌரவத்தைக் குறைத்து நடுவீதியில் சீரழிய வைக்கும் நாகரிகம்.

பெண்ணுரிமைப் பற்றி பேசுவோர் பெண்களை மதித்த விதம் தெரியுமா?

  • ஆதாமைக் கெடுத்தது ஏவாள். (பைபிள்)
  • பெண் தீமைகளின் ஊற்றுக்கண். (கிரேக்கர்களின் ஆரம்ப கால நம்பிக்கை)
  • பெண்களுக்கு ஆண்மா உண்டா ? இல்லையா ? என்ற கட்டயப் பஞ்சாயத்து.
  • ஹிஜாப் அணியும் பெண்ணுக்கு அபராதம் விதிக்கும் ஃபிரான்ஸில் 1939 வருடம் வரை ஒரு பெண் விற்பதும், வாங்குவதும் குற்றமாகும். கணவனே அதைச் செய்ய முழு உரிமையுடைவன், அதில் கணவனின் உத்தரவின்றி எவ்வித கையாடலும் செய்யமுடியாது என்ற சட்டம் நடைமுறையில் இருந்து வந்தது. பின்பு ஆணாதிக்கத்தைப் பிரதிபலிக்கும் சில நிபந்தனைகளுடன் அது மாற்றமடைந்தது.
  • ஒரு பெண் சொத்துக்களை தனக்கென வைத்திருக்க முடியாது என்ற நடைமுறை ஜேர்மனியில் 1959 வருடம் வரை நிலவியது. மட்டுமின்றி, அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளில் கடைப்பிடிக்கப்படும் சம்பள முறையே அங்கும் பின்பற்றப்படுகின்றது. அதாவது: ஒரு பெண்ணிண் ஊதியம் ஒரு ஆணின் ஓதியத்தின் அரைவாசி என்ற நடை முறை. பிரட்டனில் இன்றும் ஆண்களுக்கு சரிசமமான பதவிகளில் இருக்கும் 75 வீதம் பேர் பெண்களின் ஊதியம் ஆண்களின் ஊதியத்தை விட அரைவாசியாகும் என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
  • இந்தியாவில் உயர்ஜாதியினரின் நாய்க்கு உணவு கொடுத்த தலித் பெண்ணுக்கு ரூபா பதினைந்தாயிரம் அபராதம். நாயும் அவள் வீட்டில் விடப்பட்டது என்ற அசிங்கமான நடைமுறை, இது இவ்வாண்டின் ஹாட் நிவ்ஸ்.

உனது மனைவியின் வாயில் நீ ஊட்டி விடுகின்ற ஒரு கவள உணவும் தர்மமே! போதனை செய்கின்ற மார்க்கம் இஸ்லாம். தலாக் என்ற விவாகரத்து செய்யப்படும் பெண் அவளது விவாகம் ரத்தாகியதா? இல்லையா என்பதை நீதிபதி தீர்மானிப்பதற்கு முன்னால் அவள் தனது கணவனின் பொறுப்பில், அவனது செலவில் பராமரிக்கப்பட வேண்டும், அவனே குடியிருப்பு வசதி செய்து தர வேண்டும் என்றும் கூறும் இந்த அற்புதமான மார்க்கத்தில் பெண்களுக்கு எப்படி எல்லாம் உரிமைகள் வழங்கப்பட்டிருக்கும் என்பதை நடுநிலையோடு சிந்தியுங்கள்.

அல்லாஹ்வால் விசாரிக்கப்படுவதை அஞ்சியமை
இதுவும் நபிகள் நாயகத்தின் உரையில் இறுதியாக உள்ளடங்கி இருந்த அம்சமாகும். இப்படியாதொரு நடைமுறை உலகில் எந்தத் தலைவரிடமும் காணமுடியாதாகும். என்ன சொன்னார்கள் என்பதைக் கவனியுங்கள்!

நான் இவ்வாண்டின் பின் உங்களை சந்திப்பேனா என்பது எனக்குத் தெரியாது. மறுமையில் அல்லாஹ் உங்களிடம் என்னைப் பற்றிக் கேட்பான், நீங்கள் என்ன பதில் கூறுவீர்கள் எனக் கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் உங்கள் பணியை சரியாகவும், நிரப்பமாகவும் செய்தீர்கள் என்று அல்லாஹ்விடம் நாம் சாட்சி கூறுவோம் எனக் கூறினார்கள், அதற்கு அல்லாஹ்வின் தூதர் அவர்கள், வானின் பக்கமாக தனது ஆட்காட்டி விரலை அசைத்து, பின்பு அதை மக்கள் பக்கம் காட்டடியவர்களாக அல்லாஹ்வே! நீயே சாட்சியாக இரு! நீயே சாட்சியாக இரு! நீயே சாட்சியாக இரு! மூன்று தடவைகள் அல்லாஹ்வை வேண்டி விடை பெற்றார்கள்.

أحدث أقدم