முத்திரை குத்தப்பட்ட உள்ளங்கள்


சூறதுல் பகரா -04

எஸ்.எச்.எம் இஸ்மாயில் (ஸலபி)
﴿إِنَّ ٱلَّذِینَ كَفَرُوا۟ سَوَاۤءٌ عَلَیۡهِمۡ ءَأَنذَرۡتَهُمۡ أَمۡ لَمۡ تُنذِرۡهُمۡ لَا یُؤۡمِنُونَ.
خَتَمَ ٱللَّهُ عَلَىٰ قُلُوبِهِمۡ وَعَلَىٰ سَمۡعِهِمۡۖ وَعَلَىٰۤ أَبۡصَـٰرِهِمۡ غِشَـٰوَةࣱۖ وَلَهُمۡ عَذَابٌ عَظِیمࣱ﴾ 

“நிச்சயமாக எவர்கள் நிராகரித்தார்களோ, அவர்களை நீர் எச்சரிக்கை செய்வதும் அல்லது அவர்களை எச்சரிக்கை செய்யா திருப்பதும் சமமே! அவர்கள் நம்பிக்கை கொள்ளமாட்டார்கள்."

"அவர்களின் உள்ளங்களிலும், அவர்களின் செவிப்புலனிலும் அல்லாஹ் முத்திரையிட்டு விட்டான். அவர்களின் பார்வைகள் மீது திரையும் இருக்கின்றது. மேலும், அவர்களுக்குக் கடுமையான வேதனையுமுண்டு, " (2:6,7)

நிராகரிப்பவர்களில் சிலருக்கு சொல்வதும் சொல்லாமல் விடுவதும் சமமானதே! அவர்களில் சிலரது உள்ளங்களிலும் செவிப்புலனிலும் அல்லாஹ் முத்திரை குத்திவிட்டான். அவர்கள் ஈமான்கொள்ளமாட்டார்கள். அவர்களுக்கு வேதனை உண்டு என்று இந்த வசனங்கள் கூறுகின்றன.

அல்லாஹ்வே அவர்களது உள்ளங் களுக்கு முத்திரை குத்திவிட்டு அவர்கள் ஏற்க மாட்டார்கள், அவர்களுக்குத் தண்டனை உண்டு என்று கூறுவது முரண்பாடு போன்று தெரியலாம். அல்லாஹ் அவர்களது உள்ளங்களில் முத்திரை குத்தாது  விட்டிருந்தால்  அவர்களுக்கும் சத்தியம் புரிந்திருக்குமே என்று சிலருக்குத் தோன்றலாம். ஏன் அவர்களது உள்ளங்கள் சத்தியத்தைப் புரிந்து கொள்ளாத முடியாத விதத்தில் முத்திரை குத்தப்பட்டது என்பதைப் புரிந்து கொண்டால் ஐயம் நீங்கிவிடும்.

" அவர்கள்தாம் நேர்வழிக்கு பதிலாக வழிகேட்டையும்; மன்னிப்பிற்கு பதிலாக வேதனையையும் விலைக்கு வாங்கிக் கொண்டவர்கள். இவர்களை நரக நெருப்பைச் சகித்துக் கொள்ளச் செய்தது எது?)
(2:175)
நேர்வழி வேண்டாம்.எமக்கு வழிகேடே வேண்டும்  எனக் கேட்டு வாங்கிக் கொண்டவர்கள் அவர்கள். 

"அவர்கள் தங்களது உடன்படிக்கையை முறிந்ததினாலும், அல்லாஹ்வின் வசனங்களை அவர்கள்
நிராகரித்ததினாலும், நபிமார்களை அவர்கள் அநியாயமாகக் கொலை செய்ததினாலும், 'எமது உள்ளங்கள் மூடப்பட்டுள்ளன என்று அவர்கள் கூறியதினாலும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்.) மேலும், அவர்களின் நிராகரிப்பின் காரணமாக அவற்றின் மீது அல்லாஹ் முத்திரையிட்டு விட்டான். எனவே, அவர்கள் குறைவாகவே அன்றி நம்பிக்கை கொள்ளமாட்டார்கள்."
(4:155)

"நிச்சயமாக அவர்கள் நம்பிக்கை கொண்டு, பின்னர் நிராகரித்ததே இதற்குக் காரணமாகும். எனவே, அவர்களது உள்ளங்கள் மீது முத்திரை குத்தப்பட்டுவிட்டது. ஆகவே, அவர்கள் விளங்கிக் கொள்ள மாட்டார்கள்."(63:3)

"எனது சமூகத்தினரே! நிச்சயமாக நான் உங்களிடம் (அனுப்பப்பட்ட) அல்லாஹ்வின் தூதர் என்பதை நீங்கள் அறிந்திருந்தும் ஏன் என்னை நோவினை செய்கின்றீர்கள் என மூஸா தன் சமூகத்தாரிடம் கேட்டதை (நபியே! நீர் எண்ணிப்பார்ப்பீராக!) அவர்கள் (சத்தியத்தை விட்டும்) விலகிச் சென்ற போது, அல்லாஹ்வும் அவர்களது உள்ளங்களை விலகச்செய்தான். அல்லாஹ் பாவிகளான இக்கூட்டத்தாரை நேர்வழியில் செலுத்தமாட்டான்." (61.5)

"அவர்களின் உள்ளங்களில் (சந்தேகம் எனும்) நோய் உள்ளது. எனவே, அல்லாஹ் அவர்களுக்கு நோயை அதிகப்படுத்தி விட்டான். அவர்கள் பொய் சொல்பவர்களாக இருந்ததினால், அவர்களுக்கு நோவினை தரும் வேதனையுமுண்டு." (2:10)

இவ்வாறு பல்வேறுபட்ட அல்குர்ஆன் வசனங்கள் யாருடைய உள்ளங்களுக்கு முத்திரை குத்தப்பட்டது என்பதைத் தெளிவாகக் கூறுகின்றன. நிராகரிப்பு, சத்தியத்தை எதிர்த்தல், தூதர்களை அவமதித்தல், சந்தேகம் என பல குற்றங்களும், முரட்டுத்தனமான பிடிவாதமும் கொண்டவர்களது உள்ளங்களில்தான் முத்திரை குத்தப்பட்டது என்று மேற்படி வசனங்கள் கூறுவதால் முத்திரை குத்தப்படும் நிலைக்கு இம்மக்கள் சென்றதற்கு அவர்களது தீய நடவடிக்கைகளே காரணமாக அமைகின்றன.

எனவே, அல்லாஹ்வே முத்திரை குத்திவிட்டு நேர்வழியில் செல்லாததற்காக அல்லாஹ்வே தண்டிப்பதா? என்ற கேள்விக்கு இடமில்லாது போய்விடுகின்றது.
தொடரும் இன்ஷா அல்லாஹ்
أحدث أقدم