பல் துலக்குவதின் முக்கியத்துவம்

-அரீஜா அப்துர்ரஹ்மான் (தாருத் தவ்ஹீத் அஸ்ஸலபீய்யா பெண்கள் பிரிவு முதலாம் வருடம்)


عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: لَوْلَا أنْ أشُقَّ علَى أُمَّتي أوْ علَى النَّاسِ لَأَمَرْتُهُمْ بالسِّوَاكِ مع كُلِّ صَلَاةٍ

(اخرجه البخاري ومسلمd)

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்," என் சமுதாயத்திற்கு அல்லது மனிதர்களுக்கு கஷ்டம் இல்லை என்று இருந்தால் ஒவ்வொரு தொழுகையின் போதும் பல் துலக்குமாறு நான் அவர்களை ஏவியிருப்பேன். 

(ஆதாரம் புகாரி, முஸ்லிம்) 


அறிவிப்பாளர் பற்றிய சிறு குறிப்பு:

அபூஹுரைரா (ரழி) அவர்கள் பிரபலமான நபித்தோழர்களில் ஒருவராவார். இவர் எமன் நாட்டைச் சேர்ந்தவர். தெளத் கோத்திரத்தைச் சேர்ந்த இவர் இஸ்லாத்தில் இணையும் முன் அப்துஷ்ஷம்ஸ்  (சூரியனின் அடிமை) எனும் பெயரைக் கொண்டிருந்தார். இஸ்லாத்தில் ஹிஜ்ரி ஆறாம் ஆண்டின் இறுதி அல்லது ஏழாம் ஆண்டின்  ஆரம்பத்தில் ஹுதைபிய்யா உடன்படிக்கையின் பின் நுழைந்த இவருக்கு, நபி அவர்கள் அப்துல் ரஹ்மான் (அளவற்ற அருளாளனின் அடிமை) எனும் பெயரை சூட்டினார்கள். இவரது முழுப் பெயர் அப்துர் ரஹ்மான் இப்னு ஸக்ர் என்பதாகும். இவர் இளவயது முதல் பூனை குட்டியுடன் விளையாடுபவர்களாகவும் பிரியம் வைத்தவர்களாகவும் இருந்தமையால் நபியவர்கள் இவருக்கு அபூஹுரைரா (பூனைக்குட்டியின் தந்தை) எனும் புனை பெயரை சூட்டினார்கள். இவர் மக்கள் மத்தியில் இப்பெயராலேயே அழைக்கப்பட்டார். இவர் நபியவர்களிடம் மார்க்கக் கல்வியை கற்க பெரும் ஆர்வம் கொண்டவராக இருந்தார். இதனால் நபியவர்களை தொட்டும் அதிகமான ஹதீஸ்களை அறிவித்துள்ளார்கள். 5374 ஹதீஸ்களை அறிவித்து, சஹாபாக்களில் மிக அதிகமான ஹதீஸ்களை அறிவித்தவர் எனும் சிறப்பை பெற்றுள்ளார்கள் இவர்கள் ஹிஜ்ரி 57-ல் தனது 78 வது வயதில் மதினாவில் மரணித்து  பகீஃ மையவாடியில் அடக்கம் செய்யப்பட்டார்.


இந்த ஹதீஸ் ஸிவாக் செய்வதன் முக்கியத்துவத்தை நமக்கு எடுத்துக்காட்டுகிறது. நபியவர்களின் சுன்னாக்களில் மிக முக்கியமான ஒரு சுன்னாவாக இந்த சிவாக் செய்வது காணப்படுகின்றது. எனினும் நம் முஸ்லிம் சமூகத்திற்கு மத்தியில் இந்த சுன்னா அலட்சியமாக விடப்பட்டிருக்கின்றமையை காணலாம். சிவாக் செய்வது பற்றி இமாம் முலக்கின் (ரஹ்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள் "கிட்டத்தட்ட 100 ஹதீஸ்கள் ஒரே ஒரு சுன்னா (நபி வழியான) சிவாக் தொடர்பாக பேசுகிறது என்றால் எவ்வளவு பெரிய ஆச்சரியம். பொது மக்களிடம் மாத்திரம் அல்ல மார்க்கத்தில் ஈடுபாடு காட்டும் மார்க்க விளக்கமுடையவர்களும் இதில் அலட்சியமாக இருக்கின்றனர். இது கவலைப்பட வேண்டிய ஒன்றாகும். இந்நிலையில் இருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகின்றோம்" என்று கூறினார்கள். இவ்வளவு ஹதீஸ்களில் வலியுறுத்தப்பட்டிருக்கும் இந்த சுன்னா எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த ஹதீஸை ஆழமாக ஆராயும் போது இதிலிருந்து நமக்கு பல விடயங்களை கற்றுக் கொள்ள முடிகின்றது.

முதலாவது இந்த ஹதீஸின் மூலம் நமக்கு புலப்படுவது யாதெனில் எமது உயிரிலும் மேலான பெருமானார் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது உம்மத்தினர் மீது கொண்டிருந்த அளவு கடந்த பாசத்தை வெளிப்படுத்துகின்றது. ஏனெனில் தனது உம்மத்தினர் மீது ஒவ்வொரு தொழுகையின் போதும் சிவாக் செய்வதை கடமையாக்கி இருந்தால் அது அவர்களுக்கு கஷ்டமானதாக அமையும் என்ற காரணத்திற்காக அதை கடமையாக்காமல் அதன் முக்கியத்துவத்தை மாத்திரம் வலியுறுத்தி கூறியுள்ளார்கள். எல்லா சந்தர்ப்பங்களிலும் தன் உம்மத்தை பற்றி அக்கறை கொள்ளக் கூடியவர்களாக இருந்துள்ளார்கள் என்பதனை இந்த ஹதீஸ் மாத்திரமில்லாத இன்னும் பல ஹதீஸ்களும், திருமறை வசனங்களும் எடுத்துக்காட்டாக உள்ளன. அதற்கு ஒரு உதாரணமாக பின்வரும் அல்குர்ஆன் வசனத்தை குறிப்பிடலாம்.

لَقَدْ جَاءَكُمْ رَسُولٌ مِّنْ أَنفُسِكُمْ عَزِيزٌ عَلَيْهِ مَا عَنِتُّمْ حَرِيصٌ عَلَيْكُم بِالْمُؤْمِنِينَ رَءُوفٌ رَّحِيمٌ

(விசுவாசிகளே!) உங்களிலிருந்தே திட்டமாக ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கின்றார்; (உங்களுக்கு யாதொரு துன்பம் ஏற்பட்டு) நீங்கள் கஷ்டப்படுவது அவருக்கு மிக வருத்தமாக இருக்கும்; உங்கள் மீது மிக்க பேராசை கொண்டவர்; விசுவாசிகளோடு மிக இரக்கமுள்ளவர்; மிகக்கிருபையுடையவர் (9:128)


சிவாக் என்றால் என்ன? 

சிவாக் எனும் அரபுப் பதம் பல் துலக்குதல் எனும் கருத்தைக் கொண்டிருக்கின்றது. நபி (ஸல்) அவர்கள் பல் துலக்குவதற்காக அராக் எனும் மரத்தின் குச்சியை பயன்படுத்தி உள்ளார்கள். அக்குச்சி அவர்களது காலத்தில் பல் துலக்கும் சாதனமாக காணப்பட்டது. பல் துலக்குவது ஒரு சுன்னாவாகும். எனினும் சிலர் மிஸ்வாக் என்பதை தவறாக புரிந்து கொண்டுள்ளனர். அன்று நபியவர்கள் பயன்படுத்திய மிஸ்வாக் குச்சியை கொண்டு பல் துலக்குவதே சுன்னா என கருதுகின்றனர். ஆனால் அவ்வாறல்ல.  மிஸ்வாக் எனும் பதம் பல் துலக்கும் கருவியை குறிப்பிடக் கூடியதே தவிர மிஸ்வாக் குச்சியை மாத்திரம் குறிக்கும் பதமல்ல. இந்த பல் துலக்கும் கருவி காலத்துக்கு காலம் வேறுபடலாம் இதற்கு உதாரணமாக தற்காலத்தில் பயன்படுத்தக்கூடிய பற்துரிகையை குறிப்பிடலாம். இது தவிர ஆலங்குச்சி, வேப்பங்குச்சி, விரல் போன்றவற்றையும் மிஸ்வாக் என குறிப்பிடலாம்.

 பல் துலக்குவதை அதிகப்படுத்துவதும் சுன்னாவாகும்.

مع كل صلاة என்று நபி (ஸல்) கூறுவதின் மூலம் எல்லா தொழுகையின் போதும் அதாவது லுஹ்ர், அஸர், மஃரிப், இஷா, சுப்ஹ் ஆகிய எல்லாவற்றின் போதும் சிவாக் செய்ய வேண்டும் என்பதை குறிக்கின்றது. அது மட்டுமல்லாமல் சிவாக் செய்வதில் எவ்வளவு அதிகப்படுத்திக் கொள்ள முடியுமோ அந்த அளவிற்கு அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் நபியவர்கள் சொல்லியும் உள்ளார்கள். இதனை பின்வரும் ஹதீஸ் தெளிவு படுத்துகின்றது 

( قال رسول الله صلى الله عليه وسلم أَكْثَرْتُ علَيْكُم في السِّوَاكِ  )رواه البخاري

பல் துலக்குவது பற்றி நான் உங்களிடம் பலமுறை வலியுறுத்துள்ளேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

[அறிவிப்பாளர் அனஸ் (ரலி)]

(ஆதாரம்: புகாரி )


சிவாக் செய்வதின் சிறப்புகளும் சந்தர்ப்பங்களும்:

நாம் விளக்கத்திற்கு எடுத்திருக்கக்கூடிய ஹதீஸில் சிவாக் செய்வது எவ்வளவு முக்கியமானது என்பதையும் அதனை பயன்படுத்தக்கூடிய பல சந்தர்ப்பங்களில் ஒரு சந்தர்ப்பத்தை, அதாவது ஒவ்வொரு தொழுகையின் போதும் சிவாக் செய்வதை குறிப்பிட்டுள்ளார்கள் இதுபோன்று சிறப்புகளையும் சந்தர்ப்பங்களையும் பல ஹதீஸ்களில் கூறியும் உள்ளார்கள். ஒரு ஹதீஸில் அதன் சிறப்பை பற்றி கூறும் போது

قال رسول الله صلى الله عليه وسلم }السِّوَاكُ مَطْهَرَةٌ لِلْفَمِ مَرْضَاةٌ لِلرَّبِّ ( رواه النسائي) 

பல் துலக்குவது வாயை சுத்தப்படுத்தும். இறைவனின் திருப்பொருத்தத்தை பெற்று தரும். என நபி (ஸல்) கூறினார்கள். 

[அறிவிப்பாளர்:ஆயிஷா (ரழி)] 

(ஆதாரம்: நஸாஈ)


நபியவர்கள் சிவாக் செய்த சந்தர்ப்பங்கள் பல இருந்தாலும் ஓரிரு சந்தர்ப்பங்களை உதாரணமாக நோக்கலாம்.


வீட்டினுள் நுழைந்தால்:

நபி (ஸல்) அவர்கள் வீட்டினுள் நுழைந்தால் பல் துலக்குவதை கொண்டு ஆரம்பிக்க கூடியவர்களாக இருந்தார்கள் 

[அறிவிப்பாளர் ஆயிஷா(ரலி)]

(ஆதாரம்:முஸ்லிம்)


தூங்கி எழுந்தால்:

நபி (ஸல்) அவர்கள் தூக்கத்திலிருந்து எழுந்தால் பல் துலக்குவதைக் கொண்டு வாயை சுத்தப்படுத்துபவர்களாக இருந்தார்கள்.

 [அறிவிப்பாளர் ஹுதைபா (ரலி)]

(ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)


தவறான புரிதல்:

நாம் விளக்கத்திற்கு எடுத்துக்கொண்ட இந்த ஹதீஸை சிலர் தவறாக புரிந்ததன் விளைவாக தொழுகைக்காக ஸப்பில் வந்து நின்று கொண்டு பல் துலக்குவதை காணக்கூடியதாக இருக்கின்றது. ஆனால் இது ஒரு தவறான புரிதலாகும். இதை சரியாக புரிந்து கொள்வதற்கு நபி (ஸல்) அவர்களின் வேறு சில ஹதீஸ்களை கவனிப்பது அவசியமாகிறது.

 முஸ்லிம் கிரந்தத்திலே வரக்கூடிய ஒரு அறிவிப்பில் நபி (ஸல்) அவர்களுக்கு பல் துலக்குவதற்கும், வுழு செய்வதற்கும் ஏற்பாடு செய்து வைத்திருக்கும். அல்லாஹ் நாடிய அளவு தூங்கி எழுந்து, பல் துலக்கி, வழு செய்து தொழுவார்கள் என ஆயிஷா ரழி அவர்கள் அறிவிக்கின்றார்கள்

(நூல்: முஸ்லிம்)

மேற்குறிப்பிட்ட நீண்ட ஹதீஸில் ஒரு பகுதியான பல் துலக்கி வுழு செய்து தொழுவார்கள் என்ற வாசகம் முறையே பல் துலக்கி, வுழு செய்து பின்பே தொழுதுள்ளார்கள் என்பதை விளக்குகிறதே தவிர தொழுகைக்காக எழுந்து நின்று கொண்டு பல் துலக்குவதை விளங்கப்படுத்தவில்லை. எனவே பல் துலக்கி விட்டு வுழு செய்து தொழ வேண்டும் என்ற சரியான புரிதலை புரிந்து கொள்ள வேண்டும்.


 பல் துலக்குவது தூய்மையின் வெளிப்பாடாகும்:

விளக்கத்திற்கு எடுத்துக் கொண்ட ஹதீஸில் விளங்க வேண்டிய ஒரு பகுதி பல் துலக்குவது தூய்மையின் ஒரு வெளிப்பாடாகும். தூய்மை என்பது ஈமானின் வெளிப்பாடாகும்.

قال رسول الله صلى الله عليه وسلم :الطُّهورُ شطْرُ الإيمانِ

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் சுத்தம் இமானின் பாதியாகும் (அறிவிப்பாளர் முஸ்லிம்)

எனவே ஒரு முஃமின் எப்பொழுதும் தூய்மையை கடைப்பிடிப்பவனாக இருக்க வேண்டும். ஏனென்றால் இயல்பிலேயே அவன் தூய்மையானவன். புகாரி முஸ்லிமிலே வரக்கூடிய ஒரு ஹதீஸில் நிச்சயமாக முஃமின் அசுத்தமாக மாட்டான் என நபியவர்கள் கூறினார்கள் எனவே தூய்மையை கடைப்பிடிப்பதையும் இந்த ஹதீஸ் வலியுறுத்துகின்றது.

 எனவே மங்கிக் கொண்டு செல்லும் சிவாக் எனும் நபிவழியை மக்களிடையே உயிரோட்டம் உள்ளதாக மாற்ற நாம் அனைவரும் இச்சுன்னாவை கடைபிடித்து ஈருலகிலும் ஈடேற்றத்தை பெறுவோமாக !

أحدث أقدم