வட்டிப் பணத்தால் பரக்கத்தில் இழப்பு ஏற்படும்


يَمْحَقُ اللّٰهُ الرِّبٰوا وَيُرْبِى الصَّدَقٰتِ‌ وَاللّٰهُ لَا يُحِبُّ كُلَّ كَفَّارٍ اَثِيْمٍ‏
அல்லாஹ் வட்டியை (அதில் எந்த பரக்கத்தும் இல்லாமல்) அழித்து விடுவான்; இன்னும் தான தர்மங்களை (பரக்கத்துகளைக் கொண்டு) பெருகச் செய்வான்; (தன் கட்டளையை) நிராகரித்துக் கொண்டிருக்கும் பாவிகள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை.
(அல்குர்ஆன் : 2:276)

விளக்கம்:

அல்லாஹ் வட்டியை அழித்து, அதன் பரக்கத்தையும் மனிதன் மீதான அதன் தாக்கத்தையும் நீக்குகிறான். தர்மம் (ஸதக்கா) மூலம் பணத்தை வளர்த்து, அதன் பரக்கத்தை அதிகரிக்கிறான். ஒரு ஹதீஸில் வருகிறது: "வட்டி அதிகமாக இருந்தாலும், அதின் முடிவு குறைதான் (ஏழ்மையாக மாறும்)." 
நூல்: (அஹ்மத்)

குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ள "பரக்கத்" என்பது எண்களின் வளர்ச்சியைக் குறிக்கவில்லை; மாறாக, பணத்தின் தாக்கம் மன அமைதி, போதுமான தன்மை, தன்னிறைவு மற்றும் சிறிதளவு பணத்திலும் தேவைகள் எளிதாக நிறைவேறுதல் ஆகியவற்றில் வெளிப்படுகிறது. ஏனெனில், பணம் மகிழ்ச்சி மற்றும் ஆறுதலுக்காகத் தேடப்படுகிறது. ஆனால் அனேகமான ஹராம் (தடை செய்யப்பட்ட) பணத்தைச் சேர்த்தவர்கள் எண்களின் வளர்ச்சியில் மயங்கி, அது அவர்களுக்கு கவலை, மன அழுத்தம் மற்றும் ஆன்மாவிற்குத் துன்பத்தைத் தருகிறது. அவர்களின் பணத்தின் காரணமாக, அல்லாஹ் அவர்களுக்கு எதிரிகளையும், உறவுகளின் முறிவுகளையும் உண்டாக்குகிறார். மேலும், அவர்கள் சிறு சிறு தொகைகளைப் பின்தொடரும் படி அல்லாஹ் அவர்களை ஆக்கிவிடுகிறார்.  

இது அவர்களுக்கு துன்பத்தையே தருகிறது. அவர்கள் ஏழைகளாக இருந்திருந்தால், அது அவர்களுக்கு இதைவிட சுலபமாக இருந்திருக்கும். மிகப் பெரிய வேதனைகளில் ஒன்று என்னவென்றால், "நன்மையால் வரும் வேதனை" அல்லாஹ் ஒரு நபருக்கு அருளைக் கொடுத்து, அதைப் பிடித்துக்கொள்ளும்படி செய்து, அதனால் அவரை வேதனைப்படுத்துகிறான். அவர் அதை விட்டுவிட விரும்பாததால், அவரது வேதனை தொடர்கிறது. அவரால் அதை விட்டுவிட முடியாது. 

வேதனை, பிரச்சினைகள் அல்லது நோய்களால் வரும் துன்பத்தைவிட இது வேறுபட்டது. ஏனெனில், மனிதன் அதிலிருந்து விடுபட ஆரோக்கியத்தையும் நலத்தையும் நாடுகிறான். ஆனால் பணத்தால் வேதனைப்படும் ஒரு பணக்காரர், ஏழ்மையின் வாசல் திறக்கப்பட்டாலும், அதை நோக்கி நடக்க மாட்டார். இவ்வாறு, அல்லாஹ் அவரை அவரது பணத்தால் வேதனைப்படுத்துகிறான், அவர் அதைப் பிடித்துக்கொண்டே இருக்கிறார்.  

அத்தப்ஸீர் வல்பயான் லி அஹ்காமில் குர்ஆன் - (546)

- ஷெய்க் அப்துல் அஸீஸ் தரீபி 

தமிழில் : Ahsan Asman Muhajiri
Previous Post Next Post