அபூ துஜானா ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் ஒரு சம்பவம் வலைதளங்களில் பரவி வருகிறது அதன் உண்மை நிலை என்ன

-உஸ்தாத் SM இஸ்மாயீல் நத்வி

//////
அதிகாலைத் தொழுகையை அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் நின்று கூட்டாகத் தொழுவதை வழமையாக் கொண்டவர் அபூதுஜானா (ரலி).

ஆயினும் அதில் சின்ன சிக்கல் என்னவென்றால்… தொழுகை முடிந்த உடனேயே பள்ளிவாசலை விட்டு வேகமாக வெளியேறிவிடுவார்.

இதனை நபி (ஸல்) அவர்களும் கவனித்தார்கள். 

ஒருநாள் அவ்வாறு வெளியேறும்போது அபூதுஜானாவை நிறுத்தி நபிகளார் கேட்டார்கள்:
"அபூதுஜானா… உமக்கு அல்லாஹ்விடம் கேட்பதற்கு எதுவுமே இல்லையா?”

அபூதுஜானா (ரலி): "ஏன் இல்லை, அவனிடம் கேட்பதற்கு நிறைய இருக்கிறது அல்லாஹ்வின் தூதரே! ஒரு கண நேரம்கூட அவனுடைய உதவியின்றி என்னால் வாழ முடியாது”.

நபிகளார்: "அவ்வாறெனில் தொழுகை முடித்து நாங்கள் வெளியேறும்போது எங்களுடன் ஒன்றாக வெளியேறலாமே. அல்லாஹ்விடம் உமது தேவைகளையும் கேட்கலாமே…”

அபூதுஜானா (ரலி): "அல்லாஹ்வின் தூதரே! காரணம் என்ன தெரியுமா? என்னுடைய அண்டை வீட்டுக்காரர் ஒரு யூதர். அவர் வீட்டு பேரீத்த மரத்தின் கிளைகள் என் வீட்டு முற்றத்தில் உள்ளது. இரவில் காற்றடித்து அம்மரத்தின் பழங்கள் என் வீட்டு  முற்றத்தில் விழுகின்றது. தொழுகை முடிந்தவுடன் பள்ளிவாசலைவிட்டு  நான் ஏன் வேகமாக வெளியேறுகிறேன் தெரியுமா? என் குழந்தைகள் தூக்கத்திலிருந்து எழுவதற்குள் அந்தப் பழங்களை எல்லாம் பொறுக்கி ஒன்று சேர்த்து அதன் உரிமையாளரிடம் கொடுத்துவிட வேண்டும் என்பதற்காகத்தான்.

இல்லையென்றால்.. பசியுடன் இருக்கும் என் குழந்தைகள் நான் செல்வதற்குள் எழுந்து அவற்றைப் பொறுக்கி சாப்பிட்டுவிடுவார்கள்.
இறைத் தூதரே! அல்லாஹ்வின் மீது ஆணையாக! ஒருநாள் என் பிள்ளைகளில் ஒருவர் நான் செல்வதற்குள் ஒரு பேரீத்தம் பழத்தை எடுத்து சாப்பிடத் துவங்கிவிட்டது. வாயில் விரலை விட்டு அதனை வெளியே எடுத்து தூர வீசினேன். அவன் அழுதான். நான் கூறினேன்: மறுமையில் அல்லாஹ்வுக்கு முன்னால் உனது தந்தை திருடன் என்ற பட்டத்துடன் நிற்பது குறித்து உனக்கு வெட்கமாக இல்லையா?”

அது கேட்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கலங்கினார்கள்.

அபூதுஜானா (ரலி) கூறிய இந்தச் செய்தியை அறிந்த அபூபக்கர் (ரலி), நேராக அந்த யூதனிடம் சென்று, அந்தப் பேரீத்த மரத்தை விலைக்கு வாங்கி அதனை அபூதுஜானா (ரலி) மற்றும் அவருடைய குழந்தைகளுக்கு அன்பளிப்பாக வழங்கினார்.

அபூபக்கர் (ரலி) அந்த மரத்தை விலைக்கு வாங்கியதன் உண்மையான காரணத்தை அறிந்த அந்த யூதர் என்ன செய்தார் தெரியுமா…?

தமது குடும்பத்தாரை அழைத்துக்கொண்டு வேகமாக நபிகளாரைச் சந்திக்க விரைந்தார். தானும் தமது குடும்பமும் இஸ்லாத்தில் நுழைவதாக அறிவித்தார்.

(அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்!)

யூதருடைய பேரீத்தம் பழங்களை தமது பிள்ளைகள் சாப்பிட்டுவிடக் கூடாதே…அது ஹராம் அல்லவா என்று அபூதுஜானா (ரலி) அஞ்சினார். குழந்தையின் வாயில் விரலைவிட்டு சாப்பிட்ட பழத்தை வெளியே எடுத்து தூர வீசினார்/////

அபூ துஜானா ஸிமாக் பின் கர்ஷஹ் ரழியல்லாஹு அன்ஹு ஓர் அன்சாரி ஸஹாபி ஆவார்கள் ,ஹிஜ்ரி 12 ல் வஃபாத் ஆனார் , பத்ரு,உஹது போன்ற போர்களிலும் கலந்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது,

இந்த சம்பவத்தை ஸுஃபூரி என்ற இலக்கியவாதி ஒருவர் தனது புத்தகமாகிய 
نزهة المجالس ومنتخب النفائس" (1/ 206)
"நுஸ்ஹதுல் மஜாலிஸ் வ முன்தகபுன் நஃபாயீஸ் " 
என்ற புத்தகத்தில் (206/1)ல் குறிப்பிடுகிறார்,

அல்பக்ரி தனது புத்தகமான இஆனதுத் தாலிபீன் 
(اعانة الطالبين لحل الفاظ فتح المعين)
என்ற புத்தகத்திலும் ஆதாரங்கள் குறிப்பிடப்படாமல் பதிந்திருக்கிறார்.

ஆனால் இந்த சம்பவத்திற்கு எந்தவித ஆதாரமும் இல்லை, இந்த சம்பவத்திற்கு உரிய ஸனதும் இல்லை,

இந்த புத்தகத்தை எழுதிய ஸுஃபூரி என்பவர் மார்க்க அறிஞர் அல்ல அவர் ஒரு அரபி இலக்கியவாதி,
தற்கால தாயிகலில் (இஸ்லாமிய அழைப்பாளர்களில்) ஒருவராக கருதப்படக்கூடிய எகிப்து நாட்டைச் சேர்ந்த அம்ரு காலித் போன்றவர்கள் தங்களது சொற்பொழிவுகளிலும் , புத்தகங்களிலும் மேற்கோள் காட்டுகிறார்கள் ஆனால் எந்த ஆதாரமும் இந்த சம்பவத்திற்கு இல்லை ,

முஸ்னத் அஹ்மத் , இப்னு ஹப்பானிலும் அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் மூலம் அறிவிக்கப்பட்ட இமாம் முஸ்லிம் அவர்களின் நிபந்தனைப்படி ஸஹீஹான ஒரு நபிமொழி அபூ தஹ்தாஹ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் தொடர்பாக வருகிறது அதுவும் பேரிச்சம்பழம் தொடர்புடைய ஒரு நபிமொழி ஆனால் அதிலும் அபூ துஜானா ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் சம்பவம் அதில் வரவில்லை.

روى أحمد في المسند (12482)، وابن حبان (7159)، عَنْ أَنَسٍ، أَنَّ رَجُلًا قَالَ: " يَا رَسُولَ اللهِ: إِنَّ لِفُلَانٍ نَخْلَةً، وَأَنَا أُقِيمُ حَائِطِي بِهَا، فَأْمُرْهُ أَنْ يُعْطِيَنِي حَتَّى أُقِيمَ حَائِطِي بِهَا، فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ( أَعْطِهَا إِيَّاهُ بِنَخْلَةٍ فِي الْجَنَّةِ ) فَأَبَى، فَأَتَاهُ أَبُو الدَّحْدَاحِ فَقَالَ: بِعْنِي نَخْلَتَكَ بِحَائِطِي ، فَفَعَلَ، فَأَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا رَسُولَ اللهِ، إِنِّي قَدِ ابْتَعْتُ النَّخْلَةَ بِحَائِطِي. قَالَ: فَاجْعَلْهَا لَهُ، فَقَدْ أَعْطَيْتُكَهَا. فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ( كَمْ مِنْ عَذْقٍ رَدَاحٍ لِأَبِي الدَّحْدَاحِ فِي الْجَنَّةِ ) قَالَهَا مِرَارًا.

وصححه محققو المسند على شرط مسلم.

அல்லாஹ் அஃலம்
Previous Post Next Post